திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2000 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்

1. ஆசிரியரிடமிருந்து!

2. குடும்ப விளக்கு

3. அற்புதங்களும், அடையாளங்களும்!

4. லூத்தரின் கேட்டி

5. கிறிஸ்தவக் கோட்பாடுகள்

6. திரித்துவம்

7. இன்று கர்த்தர் சுகமளிக்கிறாரா?

8. விசுவாச ஜெபமா?

ஆசிரியரிடமிருந்து!

இவ்விதழில் அற்புதங்கள், அடையாளங்கள் பற்றி வேதம் போதிக்கும் உண்மை என்ன? என்பதை ஆராய்ந்துள்ளோம். அதனுடன் தொடர்புடைய வேறு சில போதனைகளையும் (கர்த்தர் இன்று சுகமளிக்கிறாரா?, விசுவாச ஜெபம்) ஆராய்ந்துள்ளோம். இவை பற்றி சரியான வேதவிளக்கமில்லாமல் கிறிஸ்தவ உலகு தொடர்ந்தும் குழம்பிப் போயிருக்கின்றது. கண்மூடித்தனமான நம்பிக்கைகளோடும், குருட்டு விசுவாசத்தோடும் வாழ்வது கிறிஸ்தவரல்லாவர்களின் வாழ்க்கை முறை. அவர்களுக்கு எதை விசுவாசிக்கிறோம்? ஏன் விசுவாசிக்கிறோம் என்று தெரியவில்லை. தேவனின் வெளிப்படுத்தலையும், சித்தத்தையும் அவர்கள்  அறியாதிருக்கிறார்கள். ஆனால், நாமோ அத்தகைய வாழ்க்கையை வாழவில்லை. தேவன் தனது வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ள சித்தத்தை நாம் அறிந்திருக்கிறோம். குருட்டுத்தனமாக வாழ்வதற்காக கர்த்தர் நம்மை அழைக்கவில்லை. எங்கு போகிறோம் என்று புரியாமல் நாம் வாழவில்லை. ஆகவே, வேதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஜெபத்துடன் இவ்வாக்கங்களை ஆராய்ந்து ஆத்தும விடுதலை அடையுங்கள்.

போதகர் அலன் டன்னின் திரித்துவம் பற்றிய விளக்கங்கள் இவ்விதழுடன் நிறைவு பெறுகின்றன. திரித்துவக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகள். அப்போதனைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கிறிஸ்தவ வாழ்வில் நாம் உயர்வடைவோம். தொடர்ந்து விசுவாச அறிக்கையின் ஏனைய பகுதிகளுக்கான விளக்கங்களை இனி வரும் இதழ்களில் தரவிருக்கிறோம்.

மார்டின் லூத்தரின் அன்பு மனைவி கெத்தரினின் (லூத்தர் கேட்டி என்று அழைப்பது வழக்கம்) படம் அட்டையை அலங்கரிக்கின்றது. குடும்பத்தில் விளக்காக இருக்க வேண்டிய மனைவியின் தன்மைகளை இவ்விதழில் ஆராய்வதால் கெத்தரினின் படம் இவ்விதழை அலங்கரிப்பது பொருத்தமே. வேதம் விபரிக்கும் குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணாக லூத்தரின் அன்பு மனைவி வாழ்ந்தாள் என்று வரலாறு போதிக்கின்றது. குடும்பப் பெண்களுக்கும், மணமுடிக்கவிருக்கும் மங்கையருக்கும் இவ்வாக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இன்னுமொரு இதழை எழுத்தில் வடித்து வெளியிட எம்மை வழிநடத்திய தேவனுக்கு எமது நன்றிகள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இவ்விதழும் உங்கள் ஆத்மீக வாழ்க்கை வளம்பெறத் துணையாக இருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

- ஆசிரியர்.

குடும்ப விளக்கு

இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.

குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்று கடந்த இதழில் பார்த்தோம். கணவன் குடும்பத் தலைவன் என்றால், மனைவியைக் குடும்ப விளக்கு என்று கூறுவது நியாயமே. மனைவி குடும்பத்தில் விளக்கைப்போல ஒளியேற்றி வைக்க வருபவள். ஒரு நல்ல கிறிஸ்தவ மனைவி விளக்கைப்போல குடும்பத்திற்கு ஒளி கொடுப்பவள் மட்டுமல்ல, சுயநலமற்ற தனது வாழ்க்கையின் மூலம் திரியாக எரிந்து அதில் இன்பம் காண்பவள். நமது சமுதாயத்தின் புலவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகப் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள் என்றால் அதற்குப் பெண்களின் குணம்தான் காரணம். ஆனால், பெண்ணுக்கு எழுத்தின் மூலம் மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு நடைமுறையில் நம் மக்கள் மதிப்புக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெண்ணுக்கு இருந்த நிலை தொடர்ந்தும் நிலவுகிறது என்று கூறுவது பெரிதுபடுத்துவதாகாது. ஒவ்வொரு ஆணும் பெண்களைப்பற்றித் தன் மனத்தில் கொண்டுள்ள எண்ணத்தில் இன்றும் அதிக மாற்றமடையவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள அளவிற்கு தமிழ் மக்களின் எண்ணங்களில் இந்த விஷயத்தில் துரித மாற்றங்கள் ஏற்படவில்லை. இவ்விதழில், வேதம் குடும்பத்தில் கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றிப் போதிக்கும் முக்கியமான வேதப் பகுதிகளாக எபேசி. 5:22-23; கொலோ. 3:18-21;  1 பேதுரு 3:1-7; தீத்து 2:3-5; 1 தீமோத். 5:9-16 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.

ஆதியில் ஆணையும், பெண்ணையும் படைத்த தேவன் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தும் விதமாக ஆணைத் தலைவனாகவும், பெண் அவனுக்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்கும்படியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் வாசிக்கிறோம். ஆனால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்தபின் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து தொடர்ந்து பணிபுரிய முடியாமல் ஆண், பெண்ணை அடக்கியொடுக்கி வைப்பதைப் பணியாகவும், பெண் கணவனுக்குக் கட்டுப்படாமல் நடப்பதைத் தன் நிலையாகவும் கொண்டு இன்றும் வாழ்ந்து வருவதை வேதம் சுட்டிக் காட்டுகின்றது. இந்த நிலையில் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் கணவனும், மனைவியும் தங்களுக்கு ஆரம்பத்தில் தேவன் கொடுத்த கட்டளையின்படி வாழ வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து தரும் இரட்சிப்பு கணவன், மனைவி இருவரையும் வேதபூர்வமாக சிந்தித்து வாழ வேண்டிய பெரும் பொறுப்பிற்கு உட்படுத்துகிறது. அதன்படி கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் பார்த்தோம். இனி மனைவியினுடைய நிலையைப் பார்ப்போம்.

கணவனின் ஆத்மீகத் தோழி!

வேறு எவரும் அளிக்க முடியாத தோழமை உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். கர்த்தருக்கும் நமக்கும் இருக்கும் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டும். திருமணத்தின் மூலம் இதையே கர்த்தர் குடும்ப வாழ்வில் எதிர்பார்க்கிறார். இதுவரை தனது நண்பர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அடைந்திராத ஓர் ஐக்கியத்தை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் அளிக்க வேண்டும். அவர்கள்கூடி வாழும் காலம் முழுவதும் இது அவர்களிடத்தில் காணப்பட வேண்டும். இத்தகைய உறவிற்காகவே ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாவம் இவ்வாறு வாழ்வதைப் பாதித்திருக்கிறது. கிறிஸ்தவக் கணவனும், கிறிஸ்தவ மனைவியும் கர்த்தரின் குழந்தைகளாக இருப்பதால் பாவத்திற்கு இடம் கொடுக்காமல் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலைத்திருக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வுறவிற்குப் பாதகமாக வரும் எதற்கும் அவர்கள் இடமளிக்கக்கூடாது.

இத்தகைய Companionship க்கு இடைஞ்சலாக வரக்கூடிய எதையும் அவர்கள் உதறித் தள்ள வேண்டும். அடுப்பறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே மனைவி என்று வாழும் கணவன்களும், மனைவிகளும் இன்று இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். திருமணத்தின் மூலம் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலவுகிறதா என்று வேதபூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வயது வந்துவிட்டது என்பதற்காகவும், பெற்றோர்களுக்காகவும், சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவும் திருமணம் என்ற நிலை மாறி, மனைவி கணவனுக்கு வேறு யாரும் அளிக்க முடியாத ஒன்றை குடும்ப வாழ்வின் மூலம் அளிக்கும் ஓர்  ஐக்கிய வாழ்விற்காக உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மையை உணர வேண்டும். கிறிஸ்தவ மனைவிமார்களே, இத்தகைய ஆத்மீக உறவை நீங்கள் உங்கள் கணவனுக்கு அளிக்கிறீர்களா? அத்தகைய உறவை உங்கள் கணவனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் கணவன் மட்டுமே உங்களுடைய Soul-mate ஆக இருக்கத் தேவையான அனைத்தையும் செய்து அவ்வுறவைப் பாதுகாத்து வருகிறீர்களா?

கணவனுக்கு தகுந்த துணைவி (Help-meat).

ஆதாமுக்குத் துணையாக இருக்கவே ஏவாளைத் தேவன் படைத்தார். ஆகவே, மனைவி கணவனுக்கு அவனுடைய அனைத்துக் காரியங்களிலும் துணையாக இருக்க வேண்டும். வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவது மட்டுமன்றி கணவனுடைய ஏனைய காரியங்கள் அனைத்திலும் அக்கறை காட்டிக் கணவனுக்குத் துணைபுரிய வேண்டும்.

கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு பக்கத்து வீட்டாரோடு அரட்டையடிப்பதும், வீட்டு வேலைகளைச் செய்யாமல் டீ. விக்கு முன்னால் உட்கார்ந்திருப்பதும் நல்ல மனைவி செய்யும் செயல்களல்ல. கணவன் வீட்டுக்கு வெளியில் உழைத்துக் குடும்பத்தை நடத்தும் பொறுப்பைக் கொண்டவனாக இருப்பது போல் மனைவி வீட்டில் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் பொறுப்போடு செய்ய வேண்டும். கணவன் மனம் மகிழும் விதத்திலும், பாராட்டும் விதத்திலும் இக்காரியங்களைச் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மனைவி சோம்பேறியாக இருக்கமாட்டாள். கணவனை மற்றவர்கள் பாராட்டும்விதத்தில் குடும்ப வேலைகளை அக்கறையுடன் செய்பவளாக இருப்பாள்.

நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப்போல் வாழ்பவளே நல்ல மனைவி. அவ்வேதப் பகுதி ஒரு நல்ல மனைவி எப்படி இருப்பாள் என்று தெளிவாகப் போதிக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அந்தக்காலத்திலும்கூட குடும்பத்திற்காக அந்தப்பெண் பெருங்காரியங்களைச் செய்தாள். அவள் செய்த காரியங்கள் எதுவும் கணவனின் தலைமையையோ, மதிப்பையோ குறைப்பதாக இருக்கவில்லை. சோம்பலுடன், அரட்டை அடிப்பதில் மட்டும் காலத்தை செலுத்தும் பெண்ணாக அவள் இருக்கவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்தி கணவனுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அனைத்தையும் செய்து, வீட்டுக்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரித்தும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி தன் கணவனை மாற்றார் பாராட்டும் விதத்தில் நடந்து கொண்டாள். இந்நீதிமொழியை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது என்னடா? இவள் மட்டும் மாடுபோல் உழைக்க, கணவன் வெறுமனே மரத்தடியில் இருந்து வேடிக்கை பார்த்தானோ? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இவ்வேதப்பகுதி அந்த மனைவி நேரத்தைப் பயன்படுத்திக் கர்த்தரையும் தன் கணவனையும் பிரியப்படுத்தும் விதத்தில் எவ்வாறு நடந்து கொண்டாள் என்று மட்டுமே போதிக்கின்றது. தன் குடும்பவளத்திற்காக அவள் செய்யத்துணியாத காரியங்கள் இல்லை. அவளுடைய செய்கைகள் அனைத்தும் கணவனுக்குப் பெருமையையே தேடித்தந்தன.

கணவனுடைய காரியங்களில் அக்கறை எடுத்து அவனுக்குத் தேவையான நேரங்களில் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும் மனைவி இருக்க வேண்டும். கிறிஸ்தவ மனைவி கணவன் மீது ஆதிக்கம் செலுத்த முயலாமல் தகுந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகளையும் தருபவளாக இருக்க வேண்டும். மனைவியின் நல்ல ஆலோசனைகளைத் தட்டி உதறும் கணவன் நல்ல கணவனாக இருக்க முடியாது.

கணவனுக்கு அடங்கி நடப்பவள்.

பவுல் எபேசியர் 5 இல் மனைவி தன் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் (கீழ்ப்படியுங்கள்) என்று சொல்கிறார். இதையே பேதுருவும் போதிக்கிறார் (1 பேதுரு 3:1). அதாவது, குடும்பத்தில் கணவனின் தலைமையை ஏற்று அவனுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்பது இதற்குப் பொருள். கணவனுடைய தலைமைத்துவத்தை பாவகரமானதொரு ஆதிக்கமாக மனைவி நினைத்துவிடக்கூடாது. கர்த்தர் கணவனிடம் எதிர்பார்ப்பது அன்போடு கூடிய நல்ல தலைமையையே என்றுணர்ந்து அத்தகைய அன்புத் தலைமைக்கு மனைவி கட்டுப்பட வேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காத மனைவி நல்ல கிறிஸ்தவ மனைவியாக இருக்க முடியாது. கிறிஸ்து தன் சபைமேல் அன்பு செலுத்தி ஆள்வது போல் கணவன் தன் குடும்பத்தை ஆள வேண்டிய கடமையைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஆளுகைக்கு மனைவி தன்னை ஒப்புக்கொடுத்து குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன பெண்ணியல்பு சார்புக் கொள்கைகள் இப்போதனையை எதிர்க்கின்றன. கணவனுக்கு சமமாக எல்லாக் காரியங்களையும் மனைவி செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால், கிறிஸ்தவ குடும்பங்களில் இத்தகைய போட்டி மனப்பான்மைக்கோ, போராட்டத்திற்கோ இடமில்லை. மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது வேதபோதனை. கர்த்தரே அத்தகைய தலைமையைக் குடும்பத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்றுணர்ந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். கணவனின் தலைமைத்துவத்திற்கு எந்தவித ஊறும் ஏற்படாத விதத்திலேயே மனைவி கணவனுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும். “இந்தப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பெண்களும் நடந்து கொண்டார்கள்” என்று பேதுரு போதிக்கிறார். சாராளும், தன் கணவனை “ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்” என்றும் பேதுரு சொல்கிறார். பவுல் 1 கொரி. 14 ஆம் அதிகாரத்தில் பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்றும், அவர்கள் எந்தக் காரியத்தையும் தங்களுடைய புருஷர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிப்பதற்கும் கர்த்தர் கணவனுக்குக் கொடுத்திருக்கும் தலைமைப் பொறுப்பே காரணம். ஆண்களும், பெண்களும் கூடிவரும் சபைக்கூட்டங்களில் பெண்கள் எழும்பிப் பேசுவதும், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதும் வேதத்திற்கு முரணான காரியம். இது கர்த்தர் கணவனுக்குத் தந்திருக்கும் தலைமைப் பதவியை உதாசீனம் செய்யும் காரியமாகும். மனைவி தன் கணவனைத் தவிர வேறு மனிதர்களிடத்தில் தனிமையில் ஆத்மீகக் காரியங்களில் ஆலோசனை பெறப் போகக்கூடாது. சபைப்போதகர்களிடம் கணவனோடு போய் ஆலோசனை பெறுவதே முறையானது.

ஒரு கிறிஸ்தவ மனைவி கிறிஸ்தவனல்லாத கணவனுடன் வாழும் நிலை ஏற்படும்போது அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இதைப்பற்றி பேதுரு தனது முதலாம் நிருபத்தில் மூன்றாவது அதிகாரத்தில் விளக்குகிறார் (3:1, 2). இத்தகைய சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ மனைவி தன்னுடைய நல்ல நடத்தையால் கணவன் தன்மீது நம்பிக்கை வைக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டும். பயபக்தியுள்ள கற்புடைய நடத்தை கொண்ட மனைவியைப் பார்த்து கணவன் திருந்தக்கூடிய வாய்ப்பிருப்பதைப் பேதுரு எடுத்துக் காட்டுகிறார். ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவி தனக்கு எல்லாம் தெரியும் என்று கணவனுக்கு போதிக்க முற்படுவதோ, அல்லது மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ சரியல்ல. தன்னுடைய நல்ல நடத்தையால் கணவனை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே வேதம் போதிக்கின்றது. தேவனுடைய பார்வையில் விலைமதிப்புள்ளது பெண்ணின் நல்ல குணமே என்று பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 3:4).

நல்ல தாயாக இருப்பவள்.

மனைவி நல்ல தாயாக இருப்பது அவசியம். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோடு அப்பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இருப்பது அவசியம். கணவன் வேலைக்குப் போனபின் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவிடுவது மனைவியே. ஆகவே, பிள்ளைகளைக் கண்டித்து சரியான வழியில் வளர்க்கும் பெரும் பொறுப்பை மனைவி தேவ பக்தியோடு செய்வதவசியம். கணவனும் மனைவியும் இதில் இணைந்து ஈடுபடுதல் அவசியம். இப்பொறுப்பு மனைவியுடையது என்று கணவன் பாராமுகமாக இருக்கக்கூடாது. கணவன் இக்காரியத்தில் மனைவிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். முக்கியமான ஒழுங்கு நடவடிக்கைகளில் கணவன் இதில் முன்னின்று வழி காட்ட வேண்டும். கணவன் வீட்டில் இல்லாத வேளைகளில் மனைவி இப்பொறுப்பை நல்லபடியாக ஏற்று நடத்த வேண்டும். பிள்ளைகளை, நீங்கள் எப்படியாவது போங்கள் என்று விரட்டிவிட்டு அடுப்பறை வேலை, துணி துவைத்தல் என்று வீட்டு வேலைகளில் மட்டும் கவனமாக இருந்துவிடும் தாய் கர்த்தருக்கு முன் பெருந்தவறு செய்கிறாள். பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் நன்றாகப் படிக்கிறார்களா என்று வீட்டுக்கு வந்தபின் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்கள் பாடங்களில் அக்கறை எடுத்து அவர்களுக்குத் துணை செய்ய வேண்டும். அவர்கள் ஒழுக்கத்துடன் வளர்வதற்கான அனைத்துக் காரியங்களிலும் ஈடுபட வேண்டும். அவர்களுடைய நண்பர்கள் யார்? அவர்களுடைய பொழுது போக்கு என்ன? என்பதிலெல்லாம் அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகள் நல்ல பேச்சு பேசுகிறார்களா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் மற்ற பிள்ளைகளிடம் இருந்து கற்று வரும் தவறான நடத்தையையும், பேச்சையும் திருத்தி நல்ல வழியில் செல்ல பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். எத்தனையோ வீட்டு வேலைகள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு எப்படி இவ்வளவு நேரத்தைக் கொடுப்பது என்று கேட்கும் பெண்கள் நல்ல தாய்களாக இருக்க முடியாது. சூசானா வெஸ்லிக்கு பத்தொன்பது பிள்ளைகள் இருந்தன. அவர் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரத்தை தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருடனும் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அதிக வேலையாட்கள் இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அவர் தவறவில்லை.

வீட்டில் டெலிவிஷன் இருந்தால் அதில் பிள்ளைகள் அதிகம் நாட்டம் காட்டிவிடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் டெலிவிஷனே கதி என்றிருந்தால் பிள்ளைகள் அதுவே தெய்வம் என்று போகாமல் வேறு என்ன செய்வார்கள். இன்று போதகர்களும், அவர்களுடைய மனைவிமார்களும் இக்காரியத்தில் அதிக கவனமாக இருப்பதோடு சபை மக்களுக்கு முன் மாதிரியாகவும் இருக்க வேண்டும். டெலிவிஷனால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் அதிகரித்து வரும்போது கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றாடம் குடும்ப ஜெபத்தைக் கணவன் நடத்தும் போது அதில்  அதிக அக்கறைகாட்டி கணவனுக்கு துணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் படுக்கப்போகுமுன் தனித்தனியாக ஜெபித்து அவர்களை படுக்கைக்கு அனுப்புவதும் அவசியம். தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டுமானால் அதற்காகப் பெற்றோர்கள் இப்போதே உழைப்பது அவசியம். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி. 22:6) என்ற நீதிமொழிகளின் போதனையை நாம் மறக்கக்கூடாது.

மனைவி கணவனின் மகிமையாக இருக்கிறாள்.

இவ்வுண்மையை குறிப்பாக 1 கொரி. 11:7ம், உள்ளடக்கமாக எபேசியர் 5:22-33ம் போதிக்கின்றன. ஆதாமுக்குத் துணையாக இருக்க ஏவாளைப் படைத்த கர்த்தர், அவள் ஆதாமின் மகிமையாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். கணவனின் சரீரத் தேவைகளையும், பிள்ளைகளின் தேவைகளையும் மட்டும் நிறைவேற்றும் மனித இயந்திரமாக இருக்கும்படியாக பெண்ணைக் கர்த்தர் படைக்கவில்லை. நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப் போல வாழ்ந்து அவள் தன் கணவனின் மகிமையாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் சித்தம். கிறிஸ்தவ மனைவியால் மட்டுமே இவ்வாறு வாழமுடியும். ஆகவே, கிறிஸ்தவ கணவன்மார் தங்களுடைய மனைவி இப்படி வாழ்வதற்கான எல்லா உதவிகளையும் அவர்களுக்கு செய்து தர வேண்டும். மனைவியரும் தங்களுடைய ஆத்மீக வாழ்வில் அக்கறை எடுத்து வேதத்தை முறையாகப் படித்து விசுவாச வாழ்க்கை நடத்த வேண்டும். சபைக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். வேதப்பாடங்களிலும் கலந்து கொண்டு வேத அறிவில் வளர்ந்து கர்த்தருடைய சித்தத்தைத் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும்.

கடைசியாக போதகர்களுக்கும், போதகர்களின் மனைவிகளுக்கும் ஒரு வார்த்தை. இன்று அநேக போதகர்களின் குடும்ப வாழ்க்கை வேதபூர்வமாக  அமையவில்லை. சபைக்குப் போதிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நாம் நமது குடும்ப வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. சொல்லைவிட செயல் அதிக பலன் தரும் என்று கூறுவார்கள். நமது வாழ்க்கை நன்றாக இருந்தால் நமது மக்கள் நமது போதனைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆகவே, போதகர்களின் மனைவிமார் தங்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கணவனுக்கு அதிக மரியாதை செலுத்துவதோடு, சபை மக்களுடன் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சபையின் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் கீழ்ப்படிவுடன் நடந்து கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கீழ்ப்படியாவிட்டால் சபை மக்களுக்கு பிள்ளை வளர்ப்பைப் பற்றி எப்படிப் போதிக்க முடியும்?

போதகர்கள் விருந்துபசாரத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியிருப்பதால், போதகர்களின் மனைவிமார் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் வீட்டிற்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதற்காக எல்லோருக்கும் சாப்பாடு போட வேண்டுமென்று நான் கூறவரவில்லை. தம்மை நாடி வருபவர்களை அன்போடு உபசரித்து வரவேற்கும் வீடாக போதகர்களின் வீடு இருக்க வேண்டும். சபை மக்களுக்கு அது எப்போதும் திறந்திருக்க வேண்டும். இக்கடமையில் குடும்பப் பெண்ணுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இதில் சிறக்காத போதகரின் மனைவி அப்போதகனின் ஊழியத்திற்கு ஆபத்தைத்தான் தேடித்தருவார்.

அற்புதங்களும், அடையாளங்களும்!

இன்று கிறிஸ்தவ உலகெங்கும் சுகமளித்தல் கூட்டங்களுக்குக் குறைவில்லை. தங்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஜெபிப்பது மட்டுமன்றி சுகமளிப்புக் கூட்டங்கள் எங்கு நடக்கின்றன என்று தேடி அங்கெல்லாம் ஓடி அலைவதும் அநேகருடைய வழக்கமாக இருக்கின்றது. பெனிஹின்னிலிருந்து தமிழகத்து தினகரன் வரை அநேகர் தங்களை சுகமளிக்கும் மன்னர்களாக எண்ணி அதையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். படித்தவர்கள் முதல் பாமரர்வரை இவர்களது பிடியில் அகப்படாதவர்கள் மிகச் சிலர். பெனிஹின்னையும், தினகரனையும் கிறிஸ்துவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் சிந்திக்கத் தெரியாத பலவீனமுள்ள மக்கள் கூட்டத்தை இப்புதிய நூற்றாண்டிலும் பார்க்கிறோம். எது வளர்ந்தாலும், சீர்திருந்தினாலும் எம் சிந்தனை சீர்திருந்தாது என்ற வைராக்கியத்தோடு இவர்கள் வாழ்வதுபோல் தெரிகிறது. பெனிஹின்னின் வாய் திறந்தால் முத்து உதிரும் என்று மயங்கிக் கிடக்கும் ஒரு மாது எனக்கு அறிமுகமானவர். வேதம் புரியாமல் மனித மாயைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் வாழும் வாழ்க்கை பரிதாபம். ஆனால், அது அவருக்குப் புரிவதுமில்லை, தெரிவதுமில்லை. தினகரனின் வார்த்தையில் மயங்கித் தேவன் கூடத் தேவையில்லை என்ற, அவரது - இயேசு அழைக்கிறார் - பத்திரிகை மட்டுமே வேதம் என்று வாழ்ந்து பின்னால் அறிவு தெளிந்து அப்பத்திரிகைகளைக் குப்பையில் எறிந்த ஒரு பெரியவரைப்பற்றி மலேசிய நண்பர் ஒருவர் எனக்குக் கூறியிருக்கிறார். உங்கள் கால்கள் நீளமாக வளர வேண்டுமா? எங்கள் கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் ஜோன் விம்பர். கிறிஸ்தவர்கள் இத்தகைய அழைப்புகளை நம்பி அக்கூட்டங்களுக்குப் போவது அவசியமா?

இப்படியெல்லாம் நான் எழுதுவதால், என்ன இந்த மனிதருக்கு கர்த்தரின் வல்லமையில் நம்பிக்கை இல்லையோ என்று எண்ணிவிட வேண்டாம். கர்த்தரின் வல்லமைக்கும், சாதாரண மனித வல்லமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் வல்லமையுள்ளவர், சுகமளிக்கிறவர், அற்புதங்கள் செய்கிறவர் என்பதை புத்தியுள்ள எந்தக் கிறிஸ்தவனும் மறுக்க மாட்டான். கர்த்தருடைய வல்லமைக்கு எவரும் தடைபோட்டுவிட முடியாது. ஆனால், சரீர சுகத்திற்காகவும், ஆத்மீகத் தேவைகளுக்காகவும் கர்த்தரிடம் போவதை விட்டுவிட்டு சாதாரண மனிதனை நாடி ஓடி அவனே கதி என்று வாழும் புத்தியற்ற வாழ்க்கையைத்தான் நான் சரியில்லை என்று கூறவருகிறேன்.

வேதம் ஓரிடத்திலாவது மனிதன் மனிதனுக்கு சுமகளிக்க முடியும் என்றோ, அவனது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியுமென்றோ போதிப்பதை நாம் பார்க்க முடியாது. தனி மனிதன் ஒருவனுக்கு இத்தகைய அற்புதங்களைச் செய்யும் வரங்கள் இன்று இருப்பதாக வேதம் எங்கும் போதிக்கவில்லை. உடனேயே சிலர் பவுல் அப்படிச் செய்யவில்லையா? பேதுரு குணமாக்கவில்லையா? என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இங்கேதான் முழு பிரச்சனையும் இருக்கிறது. முதலில் நாம் பவுல் யார்? பேதுரு யார்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பவுலும் பேதுருவும் ஏன் அத்தகைய அற்புதங்களைத் தங்கள் காலத்தில் செய்ய நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பவுலோடும், பேதுருவோடும் இக்காலத்து மனிதர்கள் தங்களை ஒப்பிட முடியுமா? என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு யாரும் சுகமளிக்கலாம் என்று கூறுவது பொருந்தாது.

இதற்கெல்லாம் சரியான விடை வேண்டுமானால் கர்த்தருடைய வேதத்தை நாடி வருவதைத் தவிர வேறு வழியில்லை. கர்த்தருடைய வேதம் மட்டுமே இதற்கெல்லாம் சரியான பதிலை அளிக்கிறது. இன்று அநேகர் கர்த்தருடைய வேதத்தை ஒரு மாயவித்தை செய்யும் மந்திரக்கோலாகக் கருதிப் பயன்படுத்துகிறார்கள். அதில் எழுதியிருப்பதெல்லாம் எக்காலத்திலும் நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நம்புகிறார்கள். அவர்களுக்கு வேதத்தை எப்படிப் படிப்பது?, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதிலெல்லாம் அக்கறை இல்லை. பேதுரு தண்ணீரில் நடந்தான், அதனால் நாமும் இன்று தண்ணீரில் நடக்க முடியும், பவுலைப் பாம்பு கடிக்கவில்லை ஆகவே, நம்மையும் பாம்பு கடிக்கக்கூடாது என்ற விதத்தில் வேதத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறவர்களுக்கு வேதம் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இவ்விதழை வாசிக்கும் கிறிஸ்தவ அன்பர்கள் வேதத்திற்கும், வேதத்தின் அடிப்படையில் அமைந்த கிறிஸ்தவத்திற்கும் மட்டுமே மதிப்புக் கொடுப்பவர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே நாம் பார்த்த கேள்விகளுக்கு வேதத்திலிருந்து மட்டுமே நான் விடை கொடுக்கப் போகிறேன்.

பழைய ஏற்பாட்டின் அற்புதங்கள்

வேதத்திலே யோசேப்புவையே அற்புத வரங்கள் பெற்றிருந்த முதல் மனிதனாக நாம் பார்க்கிறோம். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்தி வரலாற்றில் நடக்கபோகும் நிகழ்ச்சிகளை அவனால் முன்கூட்டியே அறிவிக்க முடிந்தது. கர்த்தர் தன் சித்தத்தை அவன் மூலம் தன் மக்களுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய தீர்க்கதரிசனப் பணியின் காரணமாகவே அவனுக்கு அற்புத வரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கர்த்தரின் செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே யோசேப்புவுக்கு அத்தகைய வரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதற்கடுத்தபடியாக பழைய ஏற்பாட்டில் அற்புதங்களைச் செய்து காட்டிய முதல் மனிதனாக நாம் மோசேயைப் பார்க்கிறோம். மோசேயே இத்தகைய அற்புதங்களைச் செய்த மனிதர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறார். அதனால்தான் வேதம், “கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும், அற்புதங்களையும், . . . சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால் . . . மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்” (உபாகமம் 34:10-12) என்று கூறுகின்றது. கர்த்தர் ஏன் மோசேயை இத்தகைய அற்புதங்கள் செய்யும்படியாக அனுப்பினார்? என்ற கேள்விக்கு யாத்தி. 4:1-5 பதில் தருகின்றது. எகிப்தியனொருவனைக் கொன்றதன் காரணமாக மோசே தனது மக்களின் நம்பிக்கையை இழந்திருந்தான். அவர்களை வழி நடத்தத் தனக்குத் தகுதி இல்லை என்று எண்ணினான். இஸ்ரவேலர்கள் தன்னைத் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக நம்பி ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் என்று கர்த்தரிடம் முறையிட்டான். நான் இஸ்ரவேலரின் புத்திரர்களிடத்தில் போய், “உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு  என்ன சொல்வேன்” என்று கேட்டான். (யாத்தி. 3:13). “அவர்கள் என்னை நம்பார்கள் என் வாக்குக்குச் செவி கொடார்கள் கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். (யாத்தி. 4:1).

இஸ்ரவேலர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் மோசேக்குத் தரிசனமானதை நம்புவதற்கு அடையாளமாகவே (யாத்தி. 4:5) கர்த்தர் மோசேக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமையை அளித்தார் என்பதை இவ்வேதப்பகுதி தெளிவாக விளக்குகிறது. மோசே, தேவனுடைய செய்தியோடு தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அற்புதங்கள் செய்யும் வரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே, மோசே செய்த அற்புதங்கள் அவர் வெளிப்படுத்திய செய்தி தேவனுடைய செய்தி என்பதற்கு சாட்சியாக இருந்தன. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் அத்தகைய அற்புதங்களுக்கும் இவ்விதி பொருந்தும். அவை கர்த்தருடைய செய்திக்கு சாட்சியமளிப்பவையாகவே இருந்தன. ஆகவே கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே அவருடைய செய்தியோடு வந்ததுமட்டுமன்றி, அற்புதங்களும் செய்தவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய வரங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தன.

தீர்க்கதரிசியாகிய எலியா, கர்மேல் பர்வதத்தில் தனது பலிகளை அக்கினியால் எரிக்க வேண்டும் என்று கர்த்தரை நோக்கி வேண்டிக் கொண்டதற்குக் காரணம், தான் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான். அதனால்தான், “தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்று, இந்த ஜனங்கள் அறியும்படிக்கு நீர் என்னைக் கேட்டருளும்” என்றார். (1 இராஜாக்கள் 18:36). அன்று அங்கு நடந்த அற்புதம் எலியா கர்த்தரின் தீர்க்கதரிசி என்பதை மக்களுக்கு நிரூபிக்கும் சாட்சியமாக இருந்தது. எலியாவுக்கு தான் பெயர் அடைய வேண்டும், மக்களால் பாராட்டப்பட வேண்டும் என்ற சுயநல நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற கர்த்தரின் செய்தியை அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே எலியாவுக்கு இருந்தது.

நாம் இதுவரை பார்த்த உண்மைகளை உறுதிப்படுத்தும் ஒரு வேதப் பகுதியாக சங்கீதம் 74:9 அமைகின்றது. இச்சங்கீதத்தில், கர்த்தருடைய மக்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கர்த்தரிடம் முறையிடும் சங்கீதக்காரன், “எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை. இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை” என்று கர்த்தரிடம் கூறுகிறான். பழைய ஏற்பாட்டு சங்கீதத்தைப் படிக்கும்போது அதன் சிறப்பம்சங்களை நாம் கவனத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மேலே பார்த்த வசனத்தில் மூன்று வாக்கியங்களைப் பார்க்கிறோம். இம்மூன்று வாக்கியங்களும் ஒரே பொருளை வெவ்வேறுவிதமாக உணர்த்துகின்றன. அதேவேளை, ஒவ்வொன்றும் உணர்த்தப்படும் பொருளுக்கு மேலும் விளக்கம் கொடுக்கின்றன. இன்னொருவிதமாகக் கூறினால், கர்த்தருடைய மக்கள் மத்தியில் அடையாளங்கள் இல்லாமலிருப்பதும், அவர்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள் இல்லாமலிருப்பதும் ஒரே காரியத்தைப் புலப்படுத்தும் இரு வாக்கியங்கள். இவை இரண்டும் அவ்வசனத்தின் மூன்றாவது கேள்வியான, “எதுவரைக்கும் கர்த்தர் எம்மத்தியில் இல்லாதிருப்பார்” என்பதற்கு அதிகாரபூர்வமாக, ஆணித்தரமான பதிலை அளிக்கின்றன. சங்கீதத்தின் இவ்வசனம் நமக்குப் புலப்படுத்தும் உண்மை என்னவென்றால், தீர்க்கதரிசிகள் மட்டுமே அற்புதங்கள் செய்யக்கூடியவர்கள் என்பதுதான். எங்கே அற்புதங்கள் காணப்படுகின்றதோ அங்கே தேவனால் அருளப்பட்ட வார்த்தையை நாம் கேட்கக்கூடியதாக இருக்கும். எங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி இல்லையோ அங்கே அடையாளங்களோ, அற்புதங்களோ இருக்காது. ஆகவே, கர்த்தருடைய வெளிப்படுத்தலுக்கும், அற்புதங்களுக்கும் பெருந்தொடர்பிருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேசியாவும், அற்புதங்களும்

பழைய ஏற்பாட்டு அற்புதங்கள் எந்த நோக்கத்திற்காகத் தரப்பட்டனவோ அதே நோக்கத்தையே புதிய ஏற்பாட்டு அற்புதங்களும் நிறைவேற்றுகின்றன. இவ்வுண்மையை ஆணித்தரமாக வெளிப்படுத்தும் அநேக ஆதாரங்கள் காணப்படுகின்றன. இங்கே நாம் பழைய, புதிய ஏற்பாடுகள் இரண்டிற்கும் இடையில் உள்ள ஒற்றுமையையும் நினைவில் கொள்வது அவசியம். உபாகமம் 18:15 இல், “உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு இராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள் இருக்கிற ஒருவனையே உன்மேல் இராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்” என்ற தீர்க்கதரிசனம் போதிக்கும் பெரும் தீர்க்கதரிசி தானே என்பதை நிரூபிக்கும் வகையில் அநேக அற்புதங்களை இயேசு இவ்வுலகில் செய்தார். இயேசு மட்டுமே மோசேயைப் போல அற்புதங்கள் செய்தவராக இருந்தார். அத்தோடு அவர் மோசே செய்த அற்புதங்களையும்விடப் பெரும் அற்புதங்களைத் தன் வாழ்நாளில் செய்தார். இயேசு செய்த அநேக அற்புதங்களின் மூலம் மக்கள் பெரும் நன்மைகளை அடைந்தபோதும், அவ்வற்புதங்கள் மக்களுக்கு சரீர சுகத்தையும், நன்மைகளையும் அளிக்க வேண்டுமென்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இயேசுவின் தெய்வீகச் செய்தியின் அதிகாரத்தை மக்களுக்குத் தெரிவிப்பதையே அவ்வற்புதங்கள் பிரதானமான நோக்கமாகக் கொண்டிருந்தன. இதை நாம் மறந்துவிடக்கூடாது.

யோவான் தனது சுவிசேஷத்தை இயேசுவின் அற்புதங்களின் பட்டியலாகவே கருதுகிறார். யோவான் 20:30, 31 இல், “இந்தப்புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும், இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்” என்று கூறும் யோவான், அவ்வற்புதங்களை ஏன் இயேசு செய்தார் என்று விளக்கும்போது, “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றது” என்று கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது, இயேசுவே கிறிஸ்து என்றும், இதுவரை உலகம் கண்டுள்ள தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் மேலான தீர்க்கதரிசி என்றும் உணர்ந்து அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றைத் தான் பட்டியலிட்டுத் தந்திருப்பதாக யோவான் தெரிவிக்கிறார்.

நிக்கொதேமு உள்ளத்தில் பல கேள்விகளோடு இயேசுவைத்தேடி வந்தபோது, “ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்பதை அறிந்திருக்கிறோம்” (யோவான் 3:2) என்று இயேசுவைப் பார்த்துக் கூறினான். இத்தகைய ஒரு முடிவுக்கு நிக்கொதேமுவால் எப்படி வர முடிந்தது? உள்ளத்தை உறுத்தும் தனது கேள்விகளுக்கு அதிகாரத்துடன் ஒரு தீர்க்கதரிசி போல் இயேசுவால் பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கை வேத பண்டிதனான நிக்கொதேமுவுக்கு எப்படி ஏற்பட்டது? யோவான் 3:2 இதற்கான பதிலைத் தெளிவாக அளிக்கின்றது. நிக்கொதேமு, இயேசுவைப் பார்த்து, “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான்” என்றான். இயேசு அற்புதங்கள் செய்பவராக இருந்தால் அவரால் தனது ஆத்மீகக் கேள்விகளுக்கு நிச்சயமாக அதிகாரபூர்வமாக பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கை நிக்கொதேமுவுக்கு இருந்தது. ஆகவே, இதிலிருந்து வேத சத்தியங்களை வெளிப்படுத்தியவர்கள் மட்டுமே அற்புதங்கள் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நிக்கொதேமுவின் வார்த்தைகளில் இருந்தது புரிந்து கொள்கிறோம்.

இதே உண்மையைப் போதிக்கும் இன்னுமொரு வேதப் பகுதியைப் பார்ப்போம். இயேசு ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக உணவளித்ததைப் பார்த்த மக்கள் எத்தகைய முடிவுக்கு வந்தார்கள்? “மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்” என்று யோவான் 6:14 கூறுகின்றது. இயேசு செய்த அற்புதங்களின் அடிப்படையிலேயே அவர்கள் அம் முடிவுக்கு வந்தார்கள். ஆகவே, ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே அற்புதங்கள் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக இப்பகுதி போதிக்கிறது.

அப்போஸ்தலப் பணியும், அற்புதங்களும்

புதிய ஏற்பாட்டில் இயேசுவைத்தவிர அற்புதங்கள் செய்த வேறு மனிதர்களும், தாம் தேவ செய்தியோடு வந்த அதிகாரபூர்வமான தீர்க்கதரிசிகள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் தீர்க்கதரிசிகள் என்பதை நிரூபித்தன. 1 கொரி. 12:12 இல் பவுல், அற்புதங்களை அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் என்று கூறுகிறார். அத்தோடு, “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்று கூறித் தனது அப்போஸ்தலப் பணியையும் நியாயப்படுத்துகிறார். ஆகவே, அற்புதங்கள் செய்யும் வல்லமை அப்போஸ்தலப் பணிக்கான ஒரு  அடையாளம் என்று பவுல் விளக்குவதைப் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளைப்போல, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களே கர்த்தரின் அதிகாரபூர்வமான செய்தியை அறிவிப்பவர்களாகவும், வேதத்தை எழுதியவர்களாகவும் இருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் அப்போஸ்தலர்களுக்கான சில இலக்கணங்கள் இருந்தன. அதாவது ஒருவர் அப்போஸ்தலராக இருப்பதானால் இவ்வடையாளங்கள் அவசியம். இவ்வடையாளங்களைக் கொண்டிராதவர்கள் அப்போஸ்தலர்களாக இருக்க முடியாது. இவ்விலக்கணங்களை நாம் விதிக்கவில்லை. அவற்றைக் கர்த்தரே ஏற்படுத்தி யிருப்பதோடு வேதத்தில் விளக்கமாக நாம் அறிந்து கொள்ளும்படியாகத் தந்திருக்கிறார். இவ்விலக்கணங்கள் யாவை?

  1. அப்போஸ்தலர்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய பேச்சை ஒருவரும் உதாசீனம் செய்ய முடியாது. அவர்களுடைய போதனையைக் கிறிஸ்து தரும் போதனையாக அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அவர்களுடைய போதனைப்படி சபை நடவடிக்கைகள்

அமைய வேண்டும். இத்தகைய அதிகாரத்தை இன்று ஒருவரும் கொண்டிருக்கவில்லை. (1 கொரி. 13:37-38; 2 தெச. 3:18). இத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும் அவ்வதிகாரத்தை அப்போஸ்தலர்கள் மிகவும் கவனத்துடனேயே நடைமுறைப்படுத்தினார்கள்.

  1. அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு விளக்க மளிக்கக் கூடியவர்களாகவும், அவருடைய வார்த்தையை அறிவிக்கிறவர்களாகவும் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வேதப்பகுதிகளுக்கு அப்போஸ்தலர்கள் தந்த விளக்கங்களை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இவ்விளக்கங்கள்

அதிகாரபூர்வமானவை. இவற்றைக் கர்த்தரே அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய விளக்கங்களை அளிக்கக் கூடியவர்களாக அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தனர். அத்தோடு கர்த்தர் தனது சித்தத்தையும், செய்திகளையும் அப்போஸ்தலர்கள் மூலமே வெளிப்படுத்தினார். அவை வேறு எவர் மூலமும் வெளிப்படுத்தப்படவில்லை.

  1. இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற நாள் தொடக்கம், அவர் உயிரே எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை அவரோடு இருந்த ஒருவரே அப்போஸ்தலராக நியமிக்கப்பட வேண்டும் என்று வேதம் சொல்கிறது. யூதாஸின் இடத்தில் அவன் இறந்தபின் நியமிக்கப்பட்டவர் இந்த இலக்கணத்தைக் கொண்டவராகவே இருந்தார் (அப்போஸ். 1:22).
  2. அத்தோடு, அப்போஸ்தலன் கிறிஸ்து உயர எடுத்துக்கொள்ளப்பட்டதை நேரில் தன் கண்களால் பார்த்த ஒருவராகவும் இருக்க வேண்டும் (அப்போஸ். 1:22).
  3. அப்போஸ்தலர்கள் கர்த்தரால் நேரடியாக அப்பணிக்கு அழைக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அப்போஸ். 1:21-24 வரையிலான வசனங்கள் இவ்வுண்மையைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. பேதுரு தனது ஜெபத்தில் கர்த்தர் அத்தகைய மனிதனைக் காட்டும்படியாக மன்றாடுவதைப் பார்க்கிறோம். ஆகவே, பேதுருவிற்கு இந்த விஷயத்தில் தன் மனவிருப்பப்படி எதையும் செய்யும் அதிகாரம் இருக்கவில்லை. அன்று மேலறையில் இருந்தவர்கள் சீட்டுப் போட்டுப் பார்த்தபோது கர்த்தர் தான் விரும்பினவன் தெரிவு செய்யப்படும்படியாக சீட்டின் மூலம் அவர்களுக்கு வழி காட்டினார்.
  4. அற்புதங்களும், அடையாளங்களும் - அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை வாசிக்கும்போது பலர் தவறாக ஏதோ அக்காலத்தில் வாழ்ந்த எல்லாக் கிறிஸ்தவர்களுமே அற்புதங்களும், அடையாளங்களும் செய்தார்கள் என்று எண்ணிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்போஸ்தலர்களே அக்காலத்தில்

அத்தகைய அற்புதங்களைச் செய்தவர்களாக இருந்தார்கள். அப்போஸ். 2:43; 5:12; 15:12; ரோமர் 15:17-19; 2 கொரி. 12:12;  எபிரெ. 2:3, 4 ஆகிய வேதப்பகுதிகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். இவ்வேதப்பகுதிகள் அப்போஸ்தலர்களே அத்தகைய அற்புதங்களைச் செய்தார்கள் என்று போதிக்கின்றது. அப்போஸ்தலர்கள் மூன்று காரியங்களைச் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை வேதம் போதிக்கின்றது. முதலாவதாக, அவர்கள் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் நோய்களைக் குணப்படுத்தியபோது அவை அரைகுறை செயல்களாக இருக்கவில்லை. அத்தோடு, இறந்தவர்களுக்கு அவர்களால் யிரளிக்கவும் முடிந்தது. இரண்டாவதாக, அப்போஸ்தலர்கள் அற்புதங்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். மூன்றாவதாக, அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ஜெபித்து மற்றவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமையை அளிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நாம் இதுவரை பார்த்த இலக்கணங்களைக் கொண்டவர்கள் மட்டுமே அப்போஸ்தலர்களாகத் தெரிவு செய்யப்பட்டதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். ஆனால், பவுல் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்ததையும் பார்க்கிறோம். பவுலைக் கிறிஸ்துவே நேரடியாக சந்தித்துப் பேசி அந்நியர்களுக்கான அப்போஸ்தலனாகவும் தெரிவு செய்தார். இவர்களைத் தவிர வேறு அப்போஸ்தலர்களை வேதத்தில் நாம் பார்க்க முடியாது.

அப்போஸ்தலர்களைத் தவிர வேறுபலரும் புதிய ஏற்பாட்டில் அற்புதங்களைச் செய்தவர்களாக வாசிக்கிறோம். ஸ்தேவானும், பிலிப்பும் அத்தகைய அற்புதங்களைச் செய்யக் கூடியவர்களாயிருந்தார். இவர்கள் இருவருக்கும் அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ஜெபித்து இவ்வல்லமையைத் தந்தார்கள். ஆனால், இவ்விதமாக அற்புதங்கள் செய்யும் வல்லமையை பெற்றுக் கொண்ட இவர்களால் வேறு எவருக்கும் அவ்வல்லமையைக் கரம் வைத்து ஜெபித்துக் கொடுக்க முடியவில்லை.

கொரிந்து சபையில் இருந்தவர்களால் அந்நிய பாஷையில் பேசவும், அற்புதங்கள் செய்யவும் முடிந்தது என்று வாசிக்கிறோம். அவர்களால் அவற்றை எப்படிச் செய்ய முடிந்தது என்பதற்குப் பவுலே 2 கொரி. 12:12 இல் விளக்கமளிக்கிறார். “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் . . . அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும் உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டது” என்று பவுல் கூறுகிறார். அதாவது, கொரிந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள் கரம் வைத்து ஜெபித்ததனாலேயே அச்சபையில் உள்ளவர்களுக்கு அவ்வல்லமை கிடைத்தது.  ஆகவே, அந்நிய பாஷை பேசுதலும், அற்புதங்கள் செய்யும் வல்லமையும் அப்போஸ்தலர்களாலேயே மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே அந்நியபாஷை பேசும் வரம் நேரடியாக கர்த்தரிடம் இருந்து மக்களுக்கு வந்துள்ளது என்பதை வேதம் விளக்குகிறது. அவ்விரண்டு சந்தர்ப்பங்களும் தனித்தனியாக வேதத்தில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. முதலாவதாக, பெந்தகொஸ்தே நாளில் அவ்வற்புதம் நிகழ்ந்தது. அடுத்ததாக கொர்நேலியுவின் வீட்டில் அவ்வற்புதம் நிகழ்ந்தது. இவ்விரு சந்தர்ப்பங்களையும் தவிர ஏனைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்போஸ்தலர்களின் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை தரப்பட்டுள்ளதை வேதம் விளக்கிக் காட்டுகிறது.

ஆனால் இவ்வற்புதங்களையும் அடையாளங்களையும் அப்போஸ்தலர்கள் செய்ததற்கு என்ன காரணம்? அவர்கள் கர்த்தரின் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்ததாலேயே அவர்களுக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை கர்த்தரால் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு, அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை எழுதியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் போதனைகளை அறிந்தவர்களாகவும் இருந்தார்கள்.

வெளிப்படுத்தலும் அற்புதங்களும்

நாம் இதுவரை பார்த்தவற்றிலிருந்து அற்புதங்களும், அடையாளங்களும் ஒரு குறிப்பிட்ட பிரதான நோக்கத்திற்காக கர்த்தரால் கொடுக்கப் பட்டிருந்ததாக பழைய, புதிய ஏற்பாடுகளின் போதனைகளில் இருந்து அறிந்து கொள்கிறோம். கர்த்தரின் சித்தத்தையும், செய்தியையும் மக்களுக்கு வெளிப்படுத்திய தீர்க்கதரிசிகளாக பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் இருந்ததாலேயே அவர்களால் அற்புதங்களைச் செய்ய முடிந்தது. ஆகவே, தேவ செய்திக்கும் அற்புதங்கள், அடையாளங்களுக்கும் பெருந்தொடர்பிருந்ததாக வேதம் போதிக்கின்றது. தேவ செய்தியை கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு என்று அறிந்து உணர்ந்து மக்கள் அவற்றை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே அற்புதங்கள் தீர்க்கதரிசிகளாலும், அப்போஸ்தலர்களாலும் நடத்தப்பட்டுள்ளன.

ஆகவே, இவ்வுண்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு முக்கிய கேள்விகளுக்கு நாம் பதிலளித்தாக வேண்டும்.

  1. கர்த்தரின் சித்தம் இன்று தொடர்ந்தும் தனி மனிதர்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றதா?
  2. அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்பவர்களாக இன்று தம்மை இனங்காட்டிக்கொள்ளும் மனிதர்களை நாம் கர்த்தரின் தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

முதலாவது கேள்விக்கு நாம் அளிக்கும் பதிலிலேயே இரண்டாவது கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கின்றது. கர்த்தர் தமது சித்தத்தை எப்படி வெளிப்படுத்தினார் என்று எபிரெயர் 1:1-3 வரையிலான வசனங்கள் விளக்குகின்றன. ஆதி முதல் பல்வேறு விதங்களில் தனது சித்தத்தை வெளிப்படுத்தி வந்த கர்த்தர் இறுதியில் அவற்றை கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தினார். இதற்குப் பொருள் என்னவென்றால் கர்த்தர் தொடர்ந்தும் தனது சித்தத்தை வெவ்வேறுவிதங்களில் வெளிப்படுத்த மாட்டார் என்பதுதான். அவரது சித்தம் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவுக்குள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே கர்த்தரின் இறுதி வெளிப்படுத்தல். கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் அவரது சித்தத்தையும் போதனைகளையும் பெற்றிருந்த அப்போஸ்தலர்கள் அவற்றை புதிய ஏற்பாடாக எழுதி உலகத்திற்குத் தந்துள்ளார்கள். ஆகவே, கர்த்தரின் சித்தமனைத்தும் இன்று பழைய, புதிய ஏற்பாடுகளிலேயே அடங்கியிருக்கினறன. அவற்றைப் படித்தே கிறிஸ்தவர்கள் தமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் போதனைகளின்படியே கிறிஸ்தவர்கள் நடக்க வேண்டும். அவற்றைக் கைக்கொள்ளுவதன் மூலமே அவர்கள் கிறிஸ்துவின்மேல் அன்பு செலுத்துகிறார்கள். கர்த்தரின் சித்தம் இன்று வேறுவிதங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. பழைய, புதிய ஏற்பாடுகள் எழுத்தில் முழுமையாக கொடுக்கப்படாத காலங்களில் நேரடியாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமும் கர்த்தர் பேசினார். வேதம் எழுத்தில் வடிக்கப்பட்டபின் கர்த்தர் வேதத்தின் மூலமே நம்மோடு பேசி வழி நடத்துகிறார். இதுவே வேதத்தின் மூலம் கர்த்தர் நமக்குக் காட்டும் வழி. ஆகவே, கர்த்தர் இன்று தனி மனிதர்களின் மூலம் பேசி தனது சித்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. தீர்க்கதரிசிகளும் இன்று அவசியமில்லை. ஏனெனில் வேதமே தீர்க்கதரிசிகளின் பணியை இன்று தொடர்ந்து செய்கிறது.

இரண்டாவதாக, தன்னால் தெரிவு செய்யப்பட்டு, தனது கருவியாக இருந்து, தனது சித்தத்தை வெளிப்படுத்திய தேவமனிதர்களான தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்களுக்கே அற்புதங்களையும், அடையாளங் களையும் செய்யும் வரத்தைக் கர்த்தர் கொடுத்திருந்தார். அவ்வற்புதங்களும், அடையாளங்களும் அம்மனிதர்கள் தேவ செய்தியுடன் வந்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியமளித்தன. அம்மனிதர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு அவ்வல்லமையைக் கொடுக்க முடிந்தது. அவ்வல்லமையைப் பெற்றுக் கொண்டவர்களால் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை. ஆகவே, ஆதி சபையிலுள்ளவர்களெல்லாம் அற்புதங்கள், அடையாளங்களைச் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள் என்று எண்ணுவது தவறு. அத்தோடு, அவ்வரங்கள் தீர்க்கதரிசனத்தோடு தொடர்புடையவையாக இருந்தபடியால் தீர்க்கதரிசனம் முழுமையாக கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்ட பின்னர் அவற்றிற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. தேவனுடைய சித்தம் இன்று முழுமையாக எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடியால் வேறு தீர்க்கதரிசனம் அவசியமில்லை. அத்தோடு, தேவ செய்தியை நிரூபிக்கும்படியான அற்புதங்களும் அவசியமில்லை. அற்புதங்களோ, அடையாளங்களோ மனிதனுடைய சரீரத்தேவைகளைத் தீர்ப்பதைப் பெரு நோக்காகக் கொண்டு நிகழ்த்தப்படவில்லை என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆகவே, இன்று தீர்க்கதரிசிகளும், அற்புதங்கள் செய்பவர்களும் எப்படி இருக்க முடியும்? இவர்கள் பேசுவதும், செய்வதும் உண்மையானால் வேதம் பொய்யாய்விடும். பெனிஹின்னும், ஜோன் விம்பரும், தினகரனும் செய்வதும், சொல்வதும் உண்மையானால் வேதத்தில் கர்த்தர் தனது சித்தத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை என்றுதான் பொருள். ஆனால், கர்த்தரின் சித்தம் முழுமையாகக் கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்டுவிட்டதாக வேதம் போதிக்கிறது. ஆகவே, இன்று தனி மனிதர்கள் மூலமாக கர்த்தர் தனது சித்தத்தை வெளிப்படுத்துவதுமில்லை, அற்புதங்கள் அடையாளங்கள் செய்வதுமில்லை. கிறிஸ்தவர்கள் வேதத்திற்கு மதிப்புக் கொடுப்பவர்களாக இருந்தால் இம்மனிதர்களை நம்புவதை விட்டுவிட்டு, அதிசயங்களைத் தேடி அலைவதை விட்டுவிட்டு வேதத்தை ஆழமாகப் படித்து கர்த்தரின் சித்தத்தை அறிந்து அதன்படி வாழப் பழக வேண்டும். வரலாற்றுக் கிறிஸ்தவத்தைப் பார்த்தால் தனிமனிதனால் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டு கர்த்தர் அவற்றின் மூலம் பேசினார் என்பதை நாம் வாசிக்க முடியாது. லூத்தரோ, கல்வினோ, ஓவனோ, பனியனோ, ஸ்பர்ஜனோ இத்தகைய காரியங்களை அறிந்திருக்கவில்லை. அவர்கள் காலத்தில் இல்லாத சிறப்பான கிறிஸ்தவமா நம்காலத்தில் இருக்கின்றது? அவர்கள் அறிந்திராத வேத சத்தியங்களையா பெனிஹின்னும், தினகரனும் அவர்களைப்போன்ற மற்றவர்களும் அறிந்திருக்கிறார்கள்?

இதற்காக கர்த்தர் நமது நோய்களைக் குணப்படுத்தமாட்டார் என்று நான் சொல்லவரவில்லை. நமது தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் நேரடியாக ஜெபிக்கலாம். சபை மூப்பர்களிடம் சொல்லி அவர்கள் ஜெபிக்கும்படியாக அழைக்கலாம். இதற்கு மேல் வேறு எந்த தனி மனிதனிடமும் போக வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் நேரடியாகவே ஜெபம் கேட்கிறவராக இருக்கிறார். அவர் இன்று எந்தவொரு தனி மனிதன் மூலமாகவும் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை.

லூத்தரின் கேட்டி

கத்தோலிக்க மதகுருக்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த எரிமலையாம் லூத்தரின் வாழ்வில் வசந்தகால வானம்பாடியாக சங்கீதமிசைத்தார் கேட்டி.

மார்டின் லூத்தருடைய வாழ்க்கையில் திருமணம் எதிர்பாராத விதமாகவே நடந்தது. கத்தோலிக்க மடத்தில் இருந்து பெண்கள் தப்புவதற்காக லூத்தர் உதவி வந்தார். அவ்வாறு ஒரு முறை அவர் உதவி செய்த பெண்கள் குழுவில் கெத்தரின் வான் போரா இருந்தார். லூத்தர் கெத்தரினை தனது நண்பர்களில் ஒருவருக்கு மணமுடித்து வைப்பதில் பெரு முயற்சி செய்தார். ஆனால், கெத்தரின் அவரைத் திருமண முடிக்க மறுத்து லூத்தரை மணமுடிப்பதில் ஆர்வம் காட்டினார். இறுதியில் லூத்தரே கெத்தரினை மணமுடித்தார். லூத்தரின் திருமணத்தில் ஐரோப்பா முழுவதுமே ஆர்வம் காட்டினது. அதை எதிர்த்துப் பழித்துப் பேசியவர்களும் அநேகம். ஆனால், லூத்தர் எல்லையில்லாத மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். லூத்தர் ஆசையாக தனது அன்பு மனைவியை எப்போதும் கேட்டி என்று கூப்பிடுவது வழக்கம். கேட்டி லூத்தரின் வாழ்வில் பெருமாறுதல்களைக் கொண்டு வந்தார். திருமணத்திற்கு முன் லூத்தரின் வேலை மிகுதியால் ஒரு வருடம் அவருடைய கட்டில் சீர் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலைமையில் கேட்டியின் வருகை லூத்தருக்கு எத்தகைய சந்தோஷத்தை அளித்திருக்கும்.

கேட்டி நன்றாகப் படித்திருந்ததோடு மிகுந்த புத்திசாலியாகவும் இருந்தார். வீட்டு வேலையிலும், பன்றி வளர்ப்பிலும் பெரும் ஆர்வம் காட்டினார். வீட்டுப் பொருளாதாரத்தைத் திறம்பட நடத்திவந்தார். அதிகாலையில் எழுந்து தனது பெரியவீட்டின் அனைத்துத் தேவைகளையும் திறமையாக நிறைவேற்றி வந்தார். லூத்தரின் வீட்டுக்கு அநேகர் வந்து போவது வழக்கமாக இருந்தது. சீர்திருத்தத்தின் அதிகாலை நட்சத்திரமாக இருந்த மார்டின் வீட்டிற்கு அநேகர் வந்து சென்றதில் ஆச்சரியமில்லை. அப்படி வருவோரனைவரையும் மனங்கோணாமல் உபசரித்து அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் கேட்டி வல்லவராக இருந்தார். பிள்ளைகளையும் இவை எல்லாவற்றிற்கும் மத்தியிலும் கவனத்தோடு வளர்த்து வந்தார்.

கணவனுடைய காரியங்களிலும் கேட்டி அதிக ஆர்வம் காட்டி தேவையான உதவிகளைச் செய்து வந்தார். மார்டின் நோய் வாய்ப்பட்டிருந்த காலங்களில் சிரத்தையோடு கவனித்துக் கொண்டதோடு, தவறாது வேதத்தின் பல பகுதிகளை ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்களுக்கு வாசித்துக் காட்டினார்.

கேட்டியின் பக்தியைக்குறித்து லூத்தர் பல முறைக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வேத அறிவும் சிறந்ததாக இருந்தது. கேட்டி வீட்டையும், பொருளாதாரத் தேவைகளையும் திறமையாகக் கவனித்துக் கொண்டதால் லூத்தரால் சீர்திருத்தப்பணிகளில் கவலையற்று ஈடுபட முடிந்தது. லூத்தர் இதற்காகத் தன் மனைவியைப் பலமுறை பாராட்டத் தவறவில்லை. லூத்தரின் கடிதங்கள் இதற்கு தொடர்ந்தும் சாட்சி பகருகின்றன.

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 42: கடவுள், மனிதனிடமிருந்து எத்தகைய கடமையை எதிர்பார்க்கிறார்?

பதில்: கடவுள் தான் வெளிப்படுத்தியுள்ள சித்தத்தை மனிதன் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.

பிரசங்கி 12:13-14, மீகா 6:8

கேள்வி 43: மனிதன் கீழ்ப்படிவதற்காக படைப்பில் கடவுள் வெளிப்படுத்திய விதி என்ன?

பதில்: மனிதன் கீழ்ப்படிவதற்காக கடவுள் படைப்பில் ஒழுக்க நியதிகளை வெளிப்படுத்தினார்.

ரோமர் 2:14-15

கேள்வி 44: ஒழுக்க நியதிகள் (Moral Law) எங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன?

பதில்: ஒழுக்க நியதிகள் பத்துக்கட்டளைகளில் சுருக்கமாக அடங்கியுள்ளன. உபாகமம் 10:4, மத்தேயு 19:17

கேள்வி 45: பத்துக்கட்டளைகள் எதைப் போதிக்கின்றன?

பதில்: பத்துக்கட்டளைகள், நாம் நமது தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், முழு மனத்தோடும் அன்பு கூருவதோடு நம்மில் நாம் அன்புகூருகிறது போல் பிறரிடத்திலும் அன்புகூர வேண்டும் என்று போதிக்கின்றன.

மத்தேயு 22:37-40

விளக்கக்குறிப்பு:

இதுவரை நாம் பார்த்த வினாவிடைகளில் இருந்து கடவுளைப்பற்றி நாம் எதை விசுவாசிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டோம். இனிக் கடவுள் நம்மிடம் எத்தகைய கடமையை எதிர்பார்க்கிறார் என்பதை நாம் ஆராய வேண்டும். ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் இருந்து இவை இரண்டையும் நாம் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கீழ்ப்படிவில்லாத ஒரு விசுவாசம் இருக்க முடியாது. மெய்யான விசுவாசம் இல்லாமல் ஒருவரும் கீழ்ப்படியவும் முடியாது. விசுவாசம் இல்லாமல் நாம் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது என்று எபிரெயர் 11:6 இல் வாசிக்கிறோம். யாக்கோபு தனது நிருபத்தில் கிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று கூறுகிறார்.

கடவுள் படைப்பாளியாகவும், மனிதன் படைக்கப்பட்டவனாகவும் இருப்பதால், மனிதன் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அவனுடைய கடமையாக இருக்கின்றது. கடவுள் மனிதனைப் படைத்திருப்பதால், மனிதன் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். உரிமை கடவுளுக்கு இருக்கிறது. மனிதன் படைக்கப்பட்டவனாக இருப்பதால் அவன் தன் வழியில் போகும் உரிமை அவனுக்கு இல்லை. கடவுளின் வழிகளில் செல்வது மட்டுமே மனிதன் செய்யக்கூடிய முறையான காரியம். ஆகவே, கடவுளின் சித்தத்தின்படி மனிதன் நடக்க வேண்டியவனாக இருக்கிறான். கடவுள் தனது சித்தத்தை ஒழுக்க நியதிகள் மூலம் மனிதனுக்கு வெளிப்படுத்தியிருப்பதாக நமது வினாவிடை போதிக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இவ்வொழுக்க நியதிகள் பத்துக்  கட்டளைகளுக்குள் உள்ளடக்கித் தரப்பட்டுள்ளதாகவும் வினா விடை போதிக்கின்றது. இப்பத்துக்கட்டளைகள் சுருக்கமாக இரண்டு பெரும் கட்டளைகளுக்குள் தரப்பட்டுள்ளன என்றும் வேதம் போதிக்கின்றது. இப்போதனையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முயல் வேண்டும்.

  1. கடவுளின் சித்தத்தின் வெளிப்பாடாக ஒழுக்க நியதிகள் காணப்படுகின்றன.
  2. இவ்வொழுக்க நியதிகள் பத்துக்கட்டளைகளுக்குள் அடங்கியுள்ளன.
  3. இப்பத்துக் கட்டளைகள் கிறிஸ்துவின் இரண்டு பெரும் கட்டளைகளுக்குள் அடங்கியுள்ளன.

ஆகவே, கர்த்தர் ஆதாம் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படியாக அவனுக்கு  ஒழுக்க நியதிகளைத் தந்தார். அவ்வொழுக்க நியதிகள் பின்னால் பத்துக் கட்டளைகளாகத் தரப்பட்டன. அப்பத்துக் கட்டளைகள் ஒருபெரும் கட்டளைகளாக சுருக்கமாக கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டன. ஆகவே, ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுக்க நியதிகளும், பத்துகட்டளைகளும், கிறிஸ்து பின்பு அளித்த இரு பெரும் கட்டளைகளும் ஒன்றே. ஆதாம் பெற்றுக் கொண்ட ஒழுக்க நியதிகள் பத்துக் கட்டளைகளைப்போல அமைந்து இருக்காவிட்டாலும் அவற்றின் சாராம்சம் ஒன்றே. இவையனைத்தும் ஒரே காரியத்தையே குறிக்கின்றன.

நியாயப்பிரமாணம் அனைவரையும் குற்றம் சாட்டுகின்றது.

நாம் மேலே பார்த்த உண்மையையே பவுலும் போதிக்கின்றார் (ரோமர் 2:14,15). தேவனை அறியாதவர்களிடம் நியாயப்பிரமாணம் இல்லை. அவர்களிடம் பத்துக் கட்டளைகளும் எழுத்து வடிவில் இல்லை. ஆனால், நியாயப்பிரமாணம போதிக்கும் காரியங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்கிறார்கள். இதனால் அவர்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று பொருளல்ல. அவர்கள் பத்துக் கட்டளைகளைத் தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்கிறார்கள் என்று மட்டுமே பொருள். ஆகவே, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். இதனால், நியாயப்பிரமாணத்தின் போதனைப்படி அவர்களுடைய குற்றங்களையும், செயல்களையும் தட்டிக் கேட்கும் ஒரு மனச்சாட்சியை அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். இம்மனச்சாட்சி அவர்கள் இந்நியாயப்பிரமாணத்தின்படி வாழ முயற்சிக்காத போது அவர்களை எப்போதும் தட்டிக் கேட்கின்றது. இதனாலேயே பவுல் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகளை தங்கள் இருதயத்தில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள் என்று கூறுகிறார். ஆகவே, நியாயப்பிரமாணம் அல்லது பத்துக்கட்டளைகளை அவர்கள் எழுத்தில் பெற்றுக் கொண்டிராவிட்டாலும் அதன் கிரியைகள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே, தேவனை அறியாதவர்கள் நியாயப்பிரமாணத்தை எழுத்து வடிவில் பெற்றுக் கொண்டிராவிட்டாலும் அதன் சாராம்சம் வேறு உருவில் அவர்களிடம் காணப்படுகின்றது. இதுவே பத்துக் கட்டளைகளின் மூலம் கொடுக்கப்பட்டது. இதனை ஆதாம் தன் மனச்சாட்சிக்குள் அறிந்திருந்தான். இதனை எல்லா மனிதர்களும் ஆதாமிடத்திலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் பத்துக் கட்டளைகள்?

ஆரம்பத்திலிருந்தே மனிதனின் மனச்சாட்சிக்கு ஏற்கனவே நியாயப் பிரமாணத்தைப்பற்றித் தெரிந்திருந்தால், அது அவன் தவறு செய்யும் போதெல்லாம் அவனைச் சுட்டுக் கொண்டிருந்தால் மறுபடியும் கர்த்தர் ஏன் பத்துக் கட்டளைகளை அளிக்க வேண்டும்? மனிதனின் பாவமே இதற்குக் காரணம். பாவத்தில் வீழ்ந்துள்ள மனிதன் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறான். இதனாலேயே மனிதன் சத்தியத்தை அடக்கி வைக்கப் பார்க்கிறான் என்று பவுல் கூறுவதைப் பார்க்கிறோம் (ரோமர் 1:18), அவர்கள் சத்தியத்தைப் பொய்யாக மாற்றுகிறார்கள் (1:25), அவர்களுடைய இருதயம் இருளடைந்துள்ளது (1:21), மனிதன் இத்தனையைச் செய்தும்கூட நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் அவனுடைய இருதயத்தில் எழுதப்பட்டே இருக்கின்றது. அதனால்தான் மனிதர்கள் கர்த்தருக்குமுன் எந்தவித சாக்குப் போக்கும் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள் (1:20). இருந்தபோதும் மனிதன் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக இத்தனையும் செய்வதால், அவன் தெளிவாக தனது சித்தத்தை அறிந்து கொள்ளும்படியாக கர்த்தர் பத்துக்கட்டளைகளை எழுத்து வடிவில் கொடுத்தார். பாவத்தைப்பற்றிய அறிவு நியாயப்பிரமாணத்தின் மூலமே வருகின்றது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 3:20). அந்நியாயப்பிரமாணமே கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்துகிற பள்ளி ஆசிரியராய் இருக்கிறது (ரோமர் 3:24). சிலர் இப்பத்துக்கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாகவும், இவற்றைக் கடைபிடிக்கும் இஸ்ரவேலர் இரட்சிப்பை அடைவார்கள் என்றும் போதிக்கிறார்கள். ஆனால் இத்தகைய எண்ணங்கள் தவறு என்று வேதம் போதிக்கின்றது. பத்துக் கட்டளைகள் பழைய, புதிய ஏற்பாட்டு மனிதர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

பவுல் பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிற தென்று கூறுகிறார் (ரோமர் 3:20). நியாயப்பிரமாணம் மனிதகுலமனைத் திற்கும் அவசியம். பாவத்தை மக்களுக்கு தொடர்ந்து உணர்த்த அது அவசியம் தேவையாக இருக்கின்றது. ஆனால், மனிதர்கள் கிறிஸ்துவிட மிருந்தே இரட்சிப்பை அடைகிறார்களே தவிர நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பதால் அல்ல. நியாயப்பிரமாணம் மனிதர்களின் பாவத்தை உணர்த்தி அவர்களைக் கிறிஸ்துவிடம் வழி நடத்துகின்றது. நியாயப்பிரமாணத்தினால் ஒருபோதும் எவரும் இரட்சிப்புப் பெறமுடியாது. கிறிஸ்து மட்டுமே நம்மை இரட்சிக்கிறவராயிருக்கிறார். ஆகவே, கிறிஸ்துவையே நாம் எப்போதும் முதன்மைப்படுத்த வேண்டும்.

நியாயப்பிரமாணம் நமக்கு என்றும் தேவை.

அடுத்ததாக, நியாயப்பிரமாணம் இன்னுமொரு விதத்தில் தொடர்ந்து நம்மிடம் இருக்க வேண்டும். நாம் இரட்சிப்பைப்பெற்றுக் கொண்டபின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். சிலர் நியாயப்பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு இன்று தேவையில்லை என்று தவறாகப் போதிக்கிறார்கள். இன்று எழுந்துள்ள ஒரு புதிய கூட்டம் இதனை மிகவும் புத்திசாலித்தனமாக போதித்து வருகின்றது. ஆனால், இவர்களுடைய போதனையில் உண்மையில்லை. கிறிஸ்தவன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்று இவர்கள் தவறாக அறிவுறுத்தி வருகிறார்கள். நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து தனக்குள் நிறைவேற்றி எமக்கு நீதியைத் தேடித்தந்திருப்பதோடு, அவரே நமக்குள் இருந்து அதை நிறைவேற்றி வருவதால் நியாயப்பிரமாணத்தை நாம் ஏன் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கிறார்கள். ஆனால், என்னை நேசிப்பீர்களானால் என்னுடைய கட்டளைகளை அவர் நமக்குள் நிறைவேற்றுவதாக இங்கே கூறவில்லை. அவற்றை நாம் கிடைப்பிடிக்க வேண்டும் என்றுதான் கட்டளையிட்டுள்ளார். நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் கட்டளைகளின் சுருக்கம். நியாயப்பிரமாணத்தில் இல்லாத எந்த ஒழுக்கக் கோட்பாட்டையும் புதிய ஏற்பாடு கொண்டிருக்கவில்லை. புதிய ஏற்பாடு பத்துக்கட்டளைகளின் போதனைகளை மேலும் விபரமாகத் தருகின்றது. பத்துக்கட்டளைகளின் மூலம் கர்த்தர் தன் சித்தத்தை வெளிப்படுத்தி இருப்பதால் அதைக் கடைபிடிக்காமல் இருப்பது கர்த்தரின் சித்தத்திற்கு எதிராக நடப்பதாகும்.

இறுதியாக, வேதத்தில் பத்துக் கட்டளைகளைத் தவிர்த்த வேறு கட்டளைகளும் இருக்கின்றன. இஸ்ரவேலர் கர்த்தரை ஆலயத்தில் வழிபடுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த பலி, மற்றும் சடங்குகள் சம்பந்தமான பிரமாணங்களை நாம் இன்று கடைபிடிக்கத் தேவையில்லை. அவை இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததோடு, கிறிஸ்து வருவதற்குமுன் அவரது வருகையைக் குறிப்பதாகவும் அமைந்திருந்தன. கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து சிலுவையில் தன்னைப் பலியாகக்கொடுத்து இவற்றைத் தன்னில் நிறைவேற்றியிருப்பதால் இனியும் இவற்றை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதேபோல், இஸ்ரவேல் தேசத்திற்குத் தரப்பட்டிருந்த நாட்டு வழமைச் சட்டங்களையும் இன்று நாம் கைடைப்பிடிக்கத் தேவையில்லை. ஆனால், ஒழுக்க நியதிகளான பத்துக் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

திரித்துவம்

1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 2: பாகம் 4)

விளக்கம்: அலன் டன்

  1. அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில் பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளியல்வு (சாரம்), வல்லமை, நித்தியம், ஆகியவற்றில் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். பிதாவானவர் வேறெந்த உயிரினத்திலும் இருந்து பெறப்படவில்லை, அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலும் இருந்தும் தோற்றுவிக்கப்படவில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார். மூவருமே தொடக்கமற்றவர்களாகவும் அதேவேளை எல்லையற்ற ஒரே கடவுளாயும் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத்தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பல்வகையான செயல்கள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. கடவுளோடு நமக்குள்ள எல்லா ஐக்கியத்திற்கும், அவரில் நாம் தங்கியிருப்பதால் நாம் பெறும் ஆறுதலுக்கும் திரித்துவத்தைக் குறித்த இந்தக்கோட்பாடே அடிப்படையாக அமைகின்றது.

யாத்தி. 3:14; மத். 28:19; யோவான் 1:14, 18; 15:26; 1 கொரி. 8:6; 2 கொரி. 13:14; கலா. 4:6; 1 யோவான் 5:7.

அ. திரித்துவக் கோட்பாடு.

  1. மூன்று தெய்வீக நபர்களில் காணப்படும் ஒற்றுமை.

கடவுளின் உள்ளியல்பைப்பற்றி வர்ணிக்கும் இப்பகுதி கடவுளைப்பற்றிய மிகவும் ஆழமான சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரே கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதோடு அம்மூவரும் நாம் பிரித்துப் பார்க்கக்கூடிய தனித்தன்மைகளையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இப்பகுதி போதிக்கின்றது. அத்தோடு விசுவாச அறிக்கை கடவுளின் வேறுபல குணாதிசயங்களை இம்மூவரோடும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றது. உள்ளியல்பு, வல்லமை, நித்தியம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பிதா, குமாரன், ஆவி மூவருமே அவற்றைத் தங்களிடத்தில் முழுமையாகக் கொண்டுள்ளார்கள். இக்குணாதிசயங்களைக் கடவுளின் இறை அம்சங்கள் என்று அழைக்கலாம். இக்குணாதிசயங்களே சிருஷ்டியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை. இதையே பவுல் ரோமர் 1:20ல் விளக்குகிறார். கடவுளில் காணப்படும் இவ்வடிப்படைக் குணாதிசயங்களை பிதா, குமாரன், ஆவி ஆகிய மூவரும் தமக்குள் கொண்டுள்ளார்கள். அம்மூவரும் இவற்றைப் பகுதி பகுதியாக தமக்குள் கொண்டுள்ளார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பிதா முழுமையான தேவனாக இருக்கிறார். அதேபோல், குமாரனும், ஆவியும் தமக்குள் முழுமையான தேவனாக இருக்கிறார்கள். தெய்வீகத்தன்மையில் ஒருவர் மற்றவரைவிட எந்தவிதத்திலும் குறைவானவர்களல்ல. சகல பரிபூரணமும் கடவுளுக்குள் தங்கியிருப்பதாக பவுல் கூறுகிறார் (கொலோ. 1:20, 1:9). இதை திரித்துவ அங்கத்தவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் காணலாம். சிலர் கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்களை வணங்குவதாக விபரம் புரியாமல் பேசுவார்கள். புதிய ஏற்பாடு இரட்சிப்பைக் கடவுள் எவ்வாறு நிறைவேற்றினார் என்று போதிக்கும்போது அதில் பிதா, குமாரன், ஆவி ஆகியோருக்கு உள்ள பங்கைப்பற்றிப் பேசுகிறது. தனது மக்களின் இரட்சிப்பை எவ்வாறு கடவுள் நிறைவேற்றினார் என்பது பற்றிய விளக்கங்களின் மத்தியிலேயே கடவுளைப்பற்றிய விபரங்களும் நமக்குப் புதிய ஏற்பாட்டில் தரப்பட்டுள்ளன. புதிய உடன்படிக்கையில் இரட்சிப்பு பிதாவினால் திட்டமிடப்பட்டு, குமாரனால் நிறைவேற்றப்பட்டு, ஆவியின் மூலமாக அளிக்கப்படுகின்றது என்று வேதம் போதிக்கின்றது. ஆகவே, இரட்சிக்கப்பட்டவர்கள் திரித்துவக் கடவுளிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் திரித்துவத் தேவனை அறிக்கையிடுகிறவர்களாக இருக்க வேண்டும். திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. ஆனால், இவ்வார்த்தை வேதத்தில் காணப்படாவிட்டாலும் இதுபற்றிய போதனை வேதத்தில் காணப்படுவதாக நமது விசுவாச அறிக்கை (அதிகாரம் 1:6) போதிக்கின்றது. கடவுளின் இரட்சிப்பை நிறைவேற்றும் செயல்களில் இருந்து நாம் அவருள் மூன்று நபர்கள் இருப்பதை அறிந்து கொள்கிறோம். இயேசுவின் திருமுழுக்கைக் குறித்துப் பேசும் வேதப்பகுதி கடவுள் திரித்துவத் தேவன் என்பதை விளக்குகின்றது. (மத். 3:16, 17). மத்தேயு 28:16-20 இல் தரப்பட்டுள்ள சுவிசேஷக் கட்டளை கடவுள் திரித்துவத் தேவன் என்பதைத் தீர்க்கமாகப் போதிக்கின்றது. பவுல் 2 கொரி. 13:14 இல் அளிக்கும் வாழ்த்துக்களைக் திரித்துவத் தேவன் மூலமாக அளிப்பதையும் வாசிக்கலாம்.

ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தின் இரண்டாம் வசனம் தேவன் திரித்துவத் தேவன் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. அத்தோடு அதே பகுதியில் கடவுள் எவ்வாறு ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினார் என்று போதிக்கும்போது அங்கே திரித்துவத் தேவனைப்பற்றி வாசிக்கிறோம் (ஆதி. 1:27). இவற்றோடு ஆதி. 11:5-7; யாத்தி. 23:20; சங். 51:11; யோவான் 17 ஆகிய வேதப்பகுதிகளும் இப்போதனையை அளிப்பதை உதாரணத்திற்குச் சுட்டிக்காட்டலாம். ஆகவே, தேவன் ஒருவரே, ஆனால் அவருள் மூன்று நபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை வேதம் தெளிவாகப் போதிப்பதை நாம் உணர வேண்டும்.

  1. திரித்துவத் தேவனின் மூன்று நபர்களின் தனித்தன்மைகள்.

“பிதாவானவர் வேறெந்த உயிரினத்திலும் இருந்தும் பெறப்படவில்லை; அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலும் இருந்தும் தோற்றுவிக்கப்படவுமில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார்.”

இப்பகுதி திரித்துவத்தைப் பற்றிய மிக ஆழமான சத்தியங்களை விளக்குவதாக இருக்கின்றது. சீர்திருத்தவாதிகளின் காலத்துக்கு முன்னால் 325 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் திரித்துவத்தைப் பற்றிய போதனையில் கருத்துச் செலுத்திய சில இறையியலறிஞர்கள் தேவைக்கு மீறிய சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். கடவுளின் தோற்றத்தைக் குறித்தும், கிறிஸ்துவின் தோற்றத்தைக் குறித்தும் விளக்கும் முயற்சிகளில் அவர்கள் வேத போதனையை மீறிப்போகக்கூடிய நிலை ஏற்பட்டது. இத்தகைய போக்கு தமக்குள் பின்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே நமது மூதாதையர்கள் விசுவாச அறிக்கையில் கடவுளின் தன்மையைக் குறித்த இவ்வார்த்தைகளைக் கவனத்தோடு எழுதி வைத்தார்கள். இதனாலேயே இப்பகுதியில் பிதா வேறெந்த உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படவில்லை என்றும், குமாரன் நித்தியமாக தந்தையிடமிருந்து தோன்றியவராக இருக்கிறார் என்றும் விளக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய விளக்கங்களினால் ஏற்படும் ஒரு ஆபத்து என்னவெனில் தவறாக சிலர் குமாரனைப் பிதாவிற்கு குறைந்த நிலையிலும், ஆவியைக் குமாரனைவிடக் குறைந்த நிலையிலும் எண்ணப்பார்க்கும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் நாம் அத்தகைய தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக்கூடாது. இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “பெறப்படவில்லை”, “தோற்றுவிக்கப்படவில்லை” ஆகிய வார்த்தைகள் திரித்துவத் தேவர்களுக்கிடையில் காணப்படும் உறவை விளக்கிக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டுமே. திரித்துவத்தின் மூன்று நபர்களும் எப்போதும் இருந்தவர்கள், இருப்பவர்கள். அவர்கள் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் தன் மக்களுக்கு இரட்சிப்பு அளிப்பதைத் தேவன் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தினார் என்பதை விளக்கும்போது திரித்துவ அங்கத்தவர்களுக்கு அதில் எத்தகைய பங்கிருந்தது, அதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதைப் போதிக்கும்போதே இத்தகைய விளக்கங்களுக்கு அவசியமேற்பட்டது.

இயேசு பிதாவின் ஒரே பேறானவர் “Only begotten” (யோவான் 1:14, 18; 3:16, 18; 1 யோவான் 4:9) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இது இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றிப் போதிக்கவில்லை. இது பிதாவுடன் அவருக்கு இருந்த உறவை மட்டுமே விளக்குகின்றது. நித்திய தேவனில் குமாரன் மட்டுமே கடவுளின் ஒரே பேறானவர். இத்தகைய உறவே பிதாவிற்கும் குமாரனுக்குமிடையில் இருந்தது. இத்தகைய உறவை அவர்கள் தம் மக்களுக்கு இரட்சிப்பை நிறைவேற்றித்தரும் செயலுக்காக ஏற்றுக்கொண்டார்கள். அவர் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பும் ஒரே பேறானவராக இருந்தார். ஆகவே, நாம் தவறாக இப்பதம் இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுவதாக எண்ணிவிடக்கூடாது. இப்பதத்தை இயேசுவின் பிறப்பைக் குறித்துப் போதிக்கும் பதமாக எண்ணி விளக்கமளிக்கவும் கூடாது. இது வேதத்தின் திரித்துவப் போதனையையே சீர்குலைத்துவிடும்.

இதேபோல் ஆவி, தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் வெளிப்படுகிறவராய் இருக்கிறார் என்று வாசிக்கிறோம் (யோவான் 15:26). இது கிறிஸ்து தன் மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ள இரட்சிப்பை அவர்களுக்கு அளிக்க புதிய ஏற்பாட்டில் இவ்வுலகில் தோன்றும் ஆவியின் வருகையைக் குறிக்கிறது. கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளிக்க ஆவி வந்தார். ஆவியானவரும் ஏனைய திரித்துவ அங்கத்தவர்களைப் போல எப்போதும் இருந்தவராக இருந்தபோதும் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்த இவ்வுலகிற்கு வந்தவராக வேதம் விளக்குகிறது. இயேசு, ஆவியானவரை அனுப்புவேன் என்று தன் சீடர்களிடத்தில் சொன்னார். அதன்படி ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் வந்ததை அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 2 எடுத்துக் கூறுகிறது.

பிதாவைப்பற்றிப் பேசும் விசுவாச அறிக்கை அவர் பெறப்படாதவர் என்றும், தோற்றமில்லாதவர் என்றும் விளக்குகிறது. இது திரித்துவ நபர்களில் ஒருவரான பிதாவின் தனித்தன்மையை விளக்குவதற்காகவும் மற்ற அங்கத்தவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்காகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளதே தவிர பிதாவை மற்றவர்களைவிட உயர்த்திக்காட்டு வதற்காகவோ அல்லது பெருமைப்படுத்துவதற்காகவோ அல்ல. பிதாவும், குமாரன், ஆவியைப்போலத் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தார் என்பதை மட்டுமே இது விளக்குகிறது. அதேவேளை மூவரும் ஒருவரே. ஆகவே, இம்மூன்று திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் காணப்படும் அன்பின் உறவை வேதம் போதிக்கும்விதமாக மட்டுமே நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். எந்தவிதத்திலும் அவர்களை நாம் மூன்று கடவுள்களாக எண்ணிவிடக்கூடாது. ஒருவரை மற்றவரைவிடத் தரத்திலும் தன்மையிலும் குறைத்துப் பார்க்கக்கூடாது. அதேநேரம், மூவரும் ஒரே தேவன் என்ற ஆழமான சத்தியத்தையும் உணர்ந்து ஒரே தேவனை நாம் விசுவாசித்து ஆராதிக்க வேண்டும்.

ஆ. திரித்துவக் கோட்பாடுபற்றிய விளக்கம்

“மூவருமே தொடக்கமற்றவர்களாகவும் அதேவேளை எல்லையற்ற ஒரே கடவுளாயும் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத்தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடை யிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பல்வகையான உறவுகள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.”

இந்தப்பகுதியை வாசிக்கும்போது இது ஏற்கனவே போதிக்கப்பட்ட உண்மைகளைப்பற்றி மறுபடியும் விளக்குவதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் இவ்வாக்கியங்கள் திரித்துவத்தைப்பற்றிய மேலும் ஒரு உண்மையைப் போதிக்கின்றன. இதை எழுதியவர்கள் அக்காலத்தில் அத்தனேசியஸ், அகஸ்தீன், ஜோன் கல்வின் ஆகியோரின் போதனைகளை மனதில் கொண்டு கவனத்தோடு இவற்றை எழுதி வைத்துள்ளார்கள். அத்தோடு திரித்துவக் கடவுளின் தெய்வீகத்தன்மைக்கு எந்த ஊறும் நேர்ந்துவிடாதபடி தமது விளக்கங்களைத் தருவதிலும் கவனமெடுத்துள்ளார்கள். இப்பகுதி முக்கியமாக திரித்துவப்போதனை சம்பந்தமான பணிவடக்கக் கோட்பாடு Subordinationism என்ற இறையியல் போதனையை விளக்க முயல்கிறது. அதாவது, திரித்துவ அங்கத்தவர்களிடம் முதலாமவருக்கும் இரண்டாம், மூன்றாம் அங்கத்தவர்களுக்கும் இடையில் உயர்வு தாழ்வு உண்டா என்பதைப் பற்றி இப்போதனை ஆராய்கிறது. மூன்றுவிதமான பணிவடக்கக் கோட்பாடுகளை நாம் இங்கு ஆராய்வோம்.

  1. முதலாவதாக, திரித்துவ அங்கத்தவர்கள் படைப்பின்போதும், மீட்பின் செயல்களை நிறைவேற்றுதலிலும் தங்களுக்கிடையில் வெவ்வேறான பணிகளை மேற்கொண்டார்கள் என்று பார்க்கிறோம். படைப்பின்போது பிதா தனது குமாரனாகிய வார்த்தையின் மூலம் ஆவியின் வல்லமையால் அனைத்தையும் படைத்தார் என்று பார்க்கிறோம். அங்கே அம்மூவரிடத்திலும் அவர்களுடைய செயல்களைப் பொருத்தவரையில் பணிவடக்கம் காணப்பட்டது. அத்தகைய பிரிவை அவர்கள் தமக்குள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இதையே மீட்பிலும் பார்க்கிறோம். பிதா திட்டமிட, குமாரன் அதை நிறைவேற்ற, ஆவி அதனை மக்களுக்கு அளிக்கிறார். இத்தகைய பணிவடக்கத்தை திரித்துவ அங்கத்தவர்கள் தமக்குள் ஏற்றுக்கொண்டிருந்ததை வேதம் வெளிப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இதனை Economic subordination என்பர்.
  2. இரண்டாவதாக, சிலர் திரித்துவ அங்கத்தவர்கள் மத்தியில் ஒருவித செயலளவிலான உயர்வு தாழ்வு இருந்ததாகக் கருதுவர். நாம் ஏற்கனவே அவர்களுடைய தன்மை, உள்ளியல்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் எந்தவித உயர்வு தாழ்வும் இல்லை என்று கூறியுள்ளோம். இங்கே நாம் பார்க்கும் உயர்வு தாழ்வு அவர்களுடைய உள்ளியல்பிலோ, தன்மையிலோ இல்லாமல் அவர்களுடைய செயல்களைப் பொறுத்ததாக இருக்கிறது. உதாரணமாக பிதா என்ற வார்த்தையையும் குமாரன் என்பதையும் எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தைகளுக்கிடையில் உள்ள வேறுபாடு புரியாதவர்கள் இருக்க முடியாது. பிதா என்ற வார்த்தை குமாரனைவிடத் தகுதியில் உயர்ந்தது. ஆகவே, இவ்வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதன் மூலம் திரித்துவ அங்கத்தவர்கள் தமக்குள் இத்தகைய பணிவடக்கத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போதனையை நாம் எந்தவிதத்திலும் திரித்துவ அங்கத்தவர்களின் தெய்வீக அம்சத்தில் காணப்படும் பிரிவாகவோ, உயர்வு தாழ்வாகவோ கருதிவிடக்கூடாது. இப்போதனையை ஆங்கிலத்தில் Hypostatic subordination என்பார்கள். ஆள் அல்லது நபர் என்ற வார்த்தையைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த ஆங்கில வார்த்தை பிறந்தது.
  3. மூன்றாவதாக, சிலர் திரித்துவத்தில் ஒரு கட்டாயப் பணிவடக்கம் காணப்படுவதாகப் போதிப்பர். அதாவது குமாரனும், ஆவியும் பிதாவைவிடத் தாழ்ந்தவர்கள் என்பது இதற்குப் பொருள். இப்போதனையை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும். இதனை Essential subordination என்பர்.

இ. திரித்துவப் போதனை கற்றுத் தரும் பாடம்

திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையாகும். இப்போதனை கடவுளோடு நமக்கிருக்கும் ஐக்கியத்திற்கும் அடிப்படை யானதாகும். திரித்துவத் தேவனே நம்மை இரட்சிக்கிறார். ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவிடம் இருந்து இரட்சிப்பை அடையும் நாம் ஆவியினால் பிதாவோடும், குமாரனோடும் ஐக்கியத்தில் வருகிறோம். ஆகவே, கர்த்தரோடுள்ள நமது ஐக்கியம் திரித்துவ ஐக்கியம். நமது ஆராதனையும் திரித்துவ ஆராதனையாக இருக்கிறது. திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் இருக்கும் உறவு தெரியாமல் நாம் கர்த்தரை ஒருபோதும் ஆராதிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் திரித்துவத்தைப்பற்றிய தெளிவான போதனைகளைப் பெற்றுக்கொண்டு திரித்துவத் தேவனை எப்போதும் மகிமைப்படுத்த வேண்டும்.

இன்று கர்த்தர் சுகமளிக்கிறாரா?

வி சுவாசத்தின் மூலம் சுகமளிக்கிறேன் என்று தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு தனி மனிதன் மூலமும் (பெனிஹின், ஜோன் விம்பர், தினகரன் போன்றோர்) கர்த்தர் இன்று அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்வதைக் கெரிஸ்மெட்டிக் கூட்டம் தவறாகப் புரிந்து கொள்வது வழக்கம். இத்தனி மனிதர்களைப் பயன்படுத்திக் கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை என்றுதான் நாம் சொல்கிறோமே தவிர, கர்த்தர் அற்புதங்கள் செய்வதில்லை, சுகமளிப்பதில்லை என்று நாம் சொல்லவில்லை. தனது சித்தத்தை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திய கர்த்தர் அவ்வார்த்தை எழுத்தில் முழுமையாகக் கொடுக்கப்படுமுன் அநேக அற்புதங்களைத் தனது தீர்க்கதரிசிகளின் மூலமும், அப்போஸ்தலர்களின் மூலமும் செய்தார் என்று (அற்புதங்களும், அடையாளங்களும்) ஏற்கனவே பார்த்தோம். இன்று கர்த்தரின் சித்தம் முழுமையாக எழுத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை உறுதிப்படுத்தும்படியான அற்புதங்களை கர்த்தர் செய்வதில்லை. வேதம் தனக்கே சாட்சியாக இருப்பதால் அதற்கு வேறு சாட்சி இன்று தேவையில்லை. ஆனால், சர்வவல்லவரான கர்த்தர் தொடர்ந்தும் வல்லமைகளை நிகழ்த்தக் கூடியவராக இருக்கின்றார். நமது சரீரத் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றார். ஆகவே, கர்த்தர் தொடர்ந்து தனது மக்களின் வியாதிகளையும், துன்பங்களையும் போக்கக்கூடியவராக இருக்கின்றார்.

கர்த்தர் எவ்வாறு சுகமளிக்கிறார்?

கர்த்தர் எவ்வாறு இன்று தனது மக்களின் துன்பங்களைப் போக்குகின்றார் என்பது பற்றிப் பலருக்கும் விளக்கமில்லாமல் இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் தமது தேவைகளை கர்த்தருக்கு முன் கொண்டுவருவதற்காக கர்த்தர் அவர்களை ஜெபிக்கும்படியாகப் பணித்திருக்கிறார். மத்தேயு 6 இல் எவ்வாறு நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு போதிப்பதைப் பார்க்கிறோம். நமது ஜெபங்களின் ஒரு பகுதியாக நமது சரீரத் தேவைகளை நாம் கர்த்தருக்கு முன் கொண்டுவருதல் அவசியம் (மத்தேயு 6:10-13). மற்றவர்களின் சரீரத்தேவைகளுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பவுல் கூறுவதை வாசிக்கிறோம் (பிலி. 4:6). கர்த்தரோடு பேசுவதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி ஜெபம். ஆகவே, எந்த ஒரு தனி மனிதனிலும் நம்பிக்கை வைக்காமல் கர்த்தரோடு நாம் நேரடியாகப் பேசலாம், நமது தேவைகளை அவர் முன்வைக்கலாம்.

நாம் கேட்பதையெல்லாம் கர்த்தர் உடனடியாகத் தருகிறாரா?

ஜெபத்தில் நமது தேவைகளையெல்லாம் தன் முன் கொண்டுவர வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் நாம் கேட்பதையெல்லாம் அவர் உடனடியாகத் தந்தவிடுகிறாரா? அப்படி நாம் கேட்பதை அவர் உடனடியாகத் தந்துவிட வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? இக்கேள்வியை நாம் வேதபூர்வமாக ஆராய வேண்டியது அவசியம். கிறிஸ்தவர்களில் பலரும் இன்று கர்த்தரை இந்துக் கோவில்களில் இருக்கும் சிலைபோல் எண்ணி வாழ்ந்து வருகிறார்கள். புறமதத்தவர்கள் கண் தெரியாமல், அறிவீனத்தில் தாம் கடவுளாக எண்ணி வழிபடும் சிலைகள் தாம் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று தரையில் விழுந்து புரளுவது வழக்கம். ரோமன் கத்தோலிக்க மதத்தவரும் அவ்விதமாக தமது உடலை வருத்திக் கடவுளிடம் காரியம் சாதித்துக்கொள்ள முயன்று வருகிறார்கள். உபவாசம் எடுத்தும், இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தும், கடவுளுக்கு காணிக்கை அளித்தும் வந்தால் அவர் தமது தேவைகளை நிறைவேற்றி வைப்பார் என்ற தப்பான எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களில் பலரும் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் புறமதத்தவருக்கும் எந்த வேறுபாடும் இல்லாமலிருக்கிறது.

ஆனால், நாம் கேட்பதையெல்லாம் கர்த்தர் தந்துவிடுகிறார் என்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. நாம் எதையும் அவரிடம் கேட்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால், நாம் கேட்பதையெல்லாம் அவர் உடனடியாகக் கொடுத்துவிட வேண்டுமென்ற அவசியமில்லை. இதற்குக் காரணமென்ன?

  1. பாவம் உலகத்தில் இருக்கும்வரை எல்லா மனிதரும் துன்பங்களை

அனுபவித்தே ஆகவேண்டும்.

வேதம் போதிக்கும் இவ்வுண்மையை கெரிஸ்மெட்டிக் கூட்டம் புரிந்து கொள்வதில்லை. நமது துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை தருவதைப் பெரு நோக்கமாகக்கொண்டு கிறிஸ்து இவ்வுலகிற்கு வரவில்லை. நமக்கு ஆத்மீக விடுதலை அளிப்பதைப் பெருநோக்கமாகக்கொண்டே அவர் இவ்வுலகிற்கு வந்தார். மனிதனுக்கு அவனுடைய பாவத்திலிருந்து விடுதலை அளிப்பதே அவருடைய முதன்மை நோக்கமாக இருந்தது. கிறிஸ்துவுக்குள் பாவவிடுதலை பெற்றுக்கொள்ளும் மனிதன் தன்னுடைய சரீரத் துன்பங்களனைத்திலும் இருந்து உடனடியாக விடுதலை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. பாவம் உலகில் தொடர்ந்திருக்கும் வரை எல்லா மனிதர்களும் ஏதாவதொருவகையில் தம் வாழ்க்கையில் ஏதோவொரு துன்பத்தை அனுபவித்தேயாக வேண்டும். முழு சிருஷ்டியும் பாவத்தினால் பிரசவ வேதனையை அனுபவித்துத் தனது விடுதலைக்காக காத்திருப்பதாக பவுல் கூறுகிறார் (ரோமர் 8:20, 21).

  1. கிறிஸ்தவர்கள் சரீரத்துன்பங்கள் அனுபவிக்காமல் வாழ்வார்கள் என்று

வேதம் போதிக்கவில்லை.

கிறிஸ்துவிடம் பாவ விடுதலை பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்துன்பங்களில் இருந்து முழுமையாக உடனடியாக விடுதலை பெறுவார்கள் என்றோ அல்லது பின்பு அத்தகைய விடுதலையைப் பெற்றுக் கொள்வார்களென்றோ எதிர்பார்ப்பது தவறு. கெரிஸ்மெட்டிக் கூட்டம், ஏசாயா 53:5 இல் நாம் வாசிக்கும் வசனமான, அவருடைய தழும்புகளால் குணமாகின்றோம் என்பதைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் சரீரத்துன்பங்களில் இருந்து விடுதலையுண்டு என்று தவறாகப் போதித்து வருகிறார்கள். இது வேதவசனங்களை எப்படிப் படித்துப் புரிந்துகொள்வது என்று தெரியாததால் வந்த வினை. இவ்வசனம் கிறிஸ்தவர்கள் சரீரத்துன்பங்கள் அனுபவிக்க மாட்டார்கள் என்றோ அல்லது ஒருபோதும் வாழ்க்கையில் நோய் நொடியினால் துன்பப்படமாட்டார்கள் என்றோ போதிக்கவில்லை. நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின்  பெற்றுக்கொள்ளக்கூடிய ஆத்மீக, சரீர, மன விடுதலைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பதையே இது விளக்குகிறது. ஆனால், இதை வைத்துக்கொண்டு நாம் இனி வாழ்க்கையில் சரீரத்துன்பங்களை அடைய வழி இல்லை என்று போதிப்பது குருட்டுத்தனமான செயலாகும். இவ்வசனத்திற்கு புதிய ஏற்பாட்டில் விளக்கம் கொடுக்கும் பேதுரு, “நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” என்று கூறி கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் பாவநிவாரணத்தையே ஏசாயா விளக்குவதாகப் போதிக்கிறார்.

  1. கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் சரீரத்துன்பங்களை சில வேளைகளில் கர்த்தர் அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்கள் வாழ்வில் பின்னால் பெரும் ஆத்மீக நன்மைகளைக் கொண்டு வருவதற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

நோயே இருக்கக்கூடாது, சரீர துன்பமே ஏற்படக்கூடாது என்று நாம் அலைவோமானால் யோபுவின் வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும். யோபுவைப் பிடித்திருந்த துன்பங்கள் எல்லாம் கர்த்தர் அவனைத் தன் மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுப்பப்பட்டவை என்பதை வேதம் எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு, யோபு தன் ஆத்மீக வாழ்க்கையில் அவற்றின் மூலம் மேலும் வளம் பெற முடிந்தது. யோபு எத்தனை பெரிய விசுவாசி என்பதை அவன் தன் துன்பங்களைத் தாங்கிக் கொண்டவிதம் நமக்குப் புரிய வைக்கிறது. இதை விட்டுவிட்டு யோபு தன் சரீர சுகத்திற்காக மட்டும் சுகமளிக்கும் கூட்டங்களை நாடி ஓடி இருந்தால் எப்படி இருந்திருக்கும். அப்படி அவன் செய்ததாக நாம் வாசிப்பதில்லை. யோபு தனது கஷ்டங்களை சகித்துக்கொண்டவிதம், சரீர துன்பங்களைப்பற்றி அவன் வேதபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்தான் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது. ரூத்தினுடைய புத்தகத்தில் நாம் கர்த்தரை விசுவாசித்த நகோமி தன் வாழ்க்கையில் அடைந்த துன்பங்களைப்பற்றி வாசிக்கிறோம். அவள் தன் கணவனையும், பிள்ளைகளையும் இழக்க நேர்ந்தது. இருந்தபோதும் அவளுடைய துன்பங்கள் உடனடியாக விலகவில்லை. கர்த்தர் அவற்றைப் பயன்படுத்தி நகோமியின் ஆத்மீக வாழ்க்கையில் அவள் பல உண்மைகளை அறிந்து கொள்ளவும், வளரவும் துணை செய்தார். நகோமி அற்புதங்கள் செய்யும் மனிதர்களை நாடி ஓடவில்லை. அவள் அடைந்த துன்பங்கள் அவளுடைய வாழ்க்கையில் கர்த்தரின் சித்தம் நிறைவேறப் பயன்படுத்தப்பட்டன. விசுவாசத்தில் உயர்ந்தவர்களும், நமது {q}ரோக்களுமான பழைய ஏற்பாட்டு மூதாதையர்களைப்பற்றி எழுதும் எபிரெயர் நிருபத்தை எழுதியவர், அவர்கள் “குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்திரங்களிலேயும், மலைகளிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்கள் எல்லோரும் விசுவாசத்திலே நற்சாட்சி பெற்றார்கள்” என்று கூறுவதைப் பார்க்கிறோம் (எபிரெ. 11:38, 39). இவர்களில் எவரும் தமது துன்பங்களில் இருந்து விடுதலை பெற அற்புதங்கள் செய்பவர்களை நாடி ஓடவில்லை. அப்படி ஓடி இருந்தால் அவர்கள் மெய்விசுவாசிகளாக இருந்திருக்க முடியாது. இத்துன்பங்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே ஏற்பட்டன என்ற நம்பிக்கையில் அவர்கள் ஜெபத்தில் தரித்திருந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாடி நின்றதோடு, அத்துன்பங்களில் இருந்து அநேக பாடங்களையும் தங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்டார்கள். இத்தகையவர்களே விசுவாசத்தில் {q}ரோக்களாக இருக்க முடியும்.

  1. நமது சரீரத் துன்பங்களிலிருந்து கர்த்தர் தனது சித்தப்படியே நமக்கு விடுதலை அளிக்கிறார்.

நோய் நொடிகளை நாம் இவ்வுலக வாழ்வில் சந்திக்க நேர்வது இயற்கை என்றும், அந்நிலைமைகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவைகளைக் கர்த்தருக்கு முன் ஜெபத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் பார்த்தோம். அவ்வாறு நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் நமது தேவைகளை உடனடியாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஜெபம் கேட்கும் கர்த்தர் நமது தேவைகளை தனது சித்தத்தின்படி தனது சொந்த மகிமைக்காக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றே கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்க வேண்டும். கர்த்தரின் சித்தம் நம்மில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு இருக்குமானால் சுயநலத்தோடு நாம் ஜெபிக்கக் கூடாது. சர்வவல்லவரான கர்த்தர் நமக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்திருக்கிறார். நமது துன்பங்கள் என்ன காரணத்திற்காக ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் அறிந்தவராக இருக்கின்றார். ஆகவே, கர்த்தரின் சித்தப்படி நமது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடக்காவிட்டால் கர்த்தரின் சித்தப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்.

சில வேளைகளில் நமது நோய்கள் தீராமலேயே போகலாம். அதனால் கர்த்தரால் நம் நோயைத்தீர்க்க முடியவில்லை என்றோ, அல்லது நமது ஜெபத்தில் பலவீனம் இருப்பதாகவோ எண்ணிவிடக்கூடாது. ஒரு நல்ல நோக்கத்திற்காகவே நமது துன்பங்களை கர்த்தர் அனுமதித்திருக்கிறார் என்றும் அந்நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காகவே அதனை அவர் தீர்க்கவில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. நமக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் துன்பங்களும் இவ்வாழ்வில் உடனடியாக ஓடிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்த்து வாழ்வது விசுவாச வாழ்க்கை இல்லை. கர்த்தரின் இறை ஆண்மையையும், அவரின் செயல்களையும் வேதத்தில் இருந்து சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களே ஒரு மந்திரவாதியைப் போல கர்த்தர் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்த்து வீண் போகிறார்கள். பவுலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முள்ளைக் கர்த்தர் எடுத்துவிடவில்லை. பவுல் மூன்று முறை ஜெபித்தும் கர்த்தர் அதனை அதற்றவில்லை. “என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாக அது இருக்கின்றது” என்று அம்முள்ளைப்பற்றி பவுல் கூறுகிறார் (2 கொரி. 12:7). கர்த்தரும், என் கிருபையால் அதனை உன்னால் சகித்துக்கொள்ள முடியும் என்று பவுலுக்கு உணர்த்தினார். மேலும் பவுல், நாம் இவ்வுலகில் படும்பாடுகளை வர்ணிக்கும்போது அவற்றை  “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம்” என்று கூறகிறார். அதாவது, அவ்வுபத்திரவங்களை நாம் இவ்வுலகில் மட்டுமே அனுபவிப்போம், பரலோகத்தில் அவற்றிற்கு இடமில்லை என்பதே இதற்குப் பொருள். அதுமட்டுமல்லாமல் அவை “நம்மில் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகின்றன” என்றும் கூறுகிறார் (2 கொரி. 12:17). இவ்வாறே நாமும் நமது துன்பங்களின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விசுவாச ஜெபமா?

“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கின்றது.” (யாக்கோபு 5:14-17).

யாக்கோபு ஐந்தாம் அதிகாரத்தின் இவ்வசனங்கள் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு மிகவும் பரிச்சயமான வசனங்களாகும். Faith Healers என்று தம்மை அழைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு சுகம்கொடுக்க முன் வந்திருக்கும் பல கெரிஸ்மெட்டிக் பச்சோந்திகள் தங்கள் செயல்களை நிரூபிக்க இவ்வசனங்களை உதாரணம் காட்டுவார்கள். இவ்வசனங்களின் அடிப்படையில் தம்மிடம் வருபவர்களுக்கு எண்ணெய் பூசி விசுவாச ஜெபம் செய்து சுகமளிக்க முயலும் கைங்கரியத்தை ரோமன் கத்தோலிக்க குருக்களும், பல கெரிஸ்மெட்டிக் சபைகளும், ஏன், சுவிசேஷக் கிறிஸ்தவ சபைகளும்கூடத் தொழிலாகக் கொண்டுள்ளன. இவர்கள் எந்தளவுக்கு வேதம் புரியாமல் இக்காரியத்தை செய்து வருகிறார்கள் என்பதை இவ்வசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

வேதத்தைப் படிக்கும்போது எப்போதும் நாம் சில முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வேதம் நம்மிடம் எதிர்பார்க்கின்றது. இவ்விதிகளைப் பின்பற்றாமல் நாம் வேதத்தையும் அது விளக்கும் கர்த்தரின் சித்தத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இவ்விதிகள் தான் என்ன? ஒரு வேதப்பகுதியை அது காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு படிக்கும்போது அப்பகுதியின்  வார்த்தைகளுக்கிடையில் உள்ள தொடர்பு, அவற்றின் அமைப்பு, பொருள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். இவ்வாய்வுகளின் மூலம் அப்பகுதியைப் படித்து அதிலிருந்து நாம் புரிந்துகொண்டிருக்கும் போதனையைப்பற்றி வேதத்தின் ஏனைய பகுதிகள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில், வேதம் தனக்கு முரணாக எதையும் போதிக்காது.  இவ்விதிகள் எந்த வேதப்பகுதியை ஆராயவும் அவசியம். கெரிஸ்மெட்டிக் கூட்டம் வேதத்தை அலட்சியப்படுத்துவதால் இவ்விதிகளுக்கு முக்கியம் கொடுப்பதில்லை. வேதத்தையும் படிப்பதில்லை. ஆகவே, தம்மனம் போன போக்கில் வேதத்திற்கு அவர்கள் தங்களுடைய சொந்த விளக்கத்தைக் கொடுக் கிறார்கள். நாம் பார்த்த இவ்விதிகளைப் பயன்படுத்தி இவ்வசனங்களை ஆராய்ந்து இவை என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

இவ்வசனங்கள் மூன்று காரியங்களைப் பற்றிப் பேசுகின்றன.  (1) விசுவாச ஜெபம், (2) எண்ணெய் பூசுதல், (3) பாவ மன்னிப்பு.

(1) “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்“ என்ற வசனத்தை முதலில் ஆராய்வோம். இம்மூன்று வசனங்களிலும் (14-16) ஒரே ஒரு முறை மட்டுமே “விசுவாசம்” என்ற வார்த்தை காணப்படுகின்றது. இவ்வார்த்தைக்கு இவ்வசனத்தில் என்ன பொருள் என்று அறிந்து கொள்ள வேண்டும். அவ்வார்த்தை வேதத்தில் ஒவ்வொரிடத்திலும் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பார்த்தே அவ்விடங்களில் அதன் பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முயலும்போது இங்கு காணப்படும் மேலும் சில காரியங்களை மனதில் கொள்ள வேண்டும். இப்பகுதியில் தன் பாவத்தை உணர்ந்து அதற்கு மன்னிப்பு நாடி நிற்கும் ஒரு மனிதனைப்பற்றி நாம் வாசிக்கிறோம். அம்மனிதனின் பாவத்திற்கும், அவனது நோய்க்கும் இடையில் தொடர்பிருப்பதாகவும் இப்பகுதி போதிப்பதைப் பார்க்கிறோம். அத்தோடு, யாக்கோபு இப்பகுதியில் நாம் அனைவரும் நமது பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்கொருவர் ஜெபம் செய்து நமது பிணிகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதையும் பார்க்கிறோம். ஆகவே, ஒரு தனி மனிதனுடைய அற்புதமான விசேஷ ஜெபத்தால் நம் பிணிகள் தீர்ந்துவிடும் என்று யாக்கோபு நிச்சயமாகப் போதிக்கவில்லை. நமது பாவங்களை ஒருவருக்கொருவர் இருதயசுத்தத்தோடு அறிக்கையிட்டு ஜெபம் செய்வோமானால் அச்ஜெபங்களைக் கர்த்தர் கேட்டு நமது பிணிகளைத் தீர்க்கலாம் என்றுதான் யாக்கோபு கூறுகிறார்.

யாக்கோபு இப்பகுதியில் ஆழமான விசுவாசத்தைப்பற்றியோ அல்லது அற்புதமான விசுவாசத்தைப் பற்றியோ போதிக்கவில்லை. நாம் நூறுவீதம் ஆழமான, அற்புதமான விசுவாசத்தோடு ஜெபிப்போமானால் நமது பிணிகள் தீரும் என்று கெரிஸ்மெட்டிக் கூட்டம் கூறிவருகிறது. இது உண்மையானால் நமது விசுவாசமே நமது நோய்களைத் தீர்க்கின்றது என்றாகிவிடும். இதனால்தான் கெரிஸ்மெட்டிக் கூட்டம் நோய்தீராதவர்களிடம் ஆழமான விசுவாசமில்லை என்று கூறுகிறது. நமக்கு  கர்த்தரிடம் ஆழமான விசுவாசமிருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அவரிடம் பூரணமான நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதிலும் எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஆனால், ஆழமான விசுவாசமும்  பூரணமான விசுவாசமுமில்லாததால்தான் பலருக்கு நோய்தீர்வதில்லை என்று கூறுவது பெருந்தவறு. அப்படியானால் யோபுவுக்கு ஆழமான விசுவாசமிருக்கவில்லையா? பவுலின் முள்ளை கர்த்தர் எடுத்துப் போடாததற்குக் காரணம் அவருக்கு பூரணமான விசுவாசமில்லாததாலா?

பக்தியுள்ள எல்லா மனிதர்களின் ஜெபங்களுக்கும் கர்த்தர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாக வேதம் போதிக்கின்றது. இதை யோவானின் முதலாவது நிருபத்தில் வாசிக்கிறோம். நாம் எதையாகிலும் அவரது சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று யோவான் கூறுகிறார். எல்லா மனிதர்களும் கர்த்தரின் சித்தத்தை அவருடைய வார்த்தையில் இருந்து மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்று வேதம் போதிக்கின்றது. ஒரு தனி மனிதனோ, நமது உணர்வுகளோ, கனவுகளோ கர்த்தரின் சித்ததை வெளிப்படுத்தாது. வேதம் மட்டுமே கர்த்தரின் சித்ததை முழுமையாக வெளிப்படுத்துகிறது. நமது தேவைகளைத் தன்னிடம் ஜெபத்தில் கொண்டுவரும்படிக் கர்த்தர் கூறுகிறார். அது அவருடைய சித்தம். அவரது சித்தத்தை அறிந்து நாம் நமது தேவைகளை அவரிடம் ஜெபத்தில் கூறவேண்டும். தமது சித்தத்தின்படி ஜெபிப்பவர்களின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்கிறார்.

நாம் இரண்டு முக்கியமான காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். முதலாவதாக, நமது ஆத்மீகத் தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். கர்த்தர் அவற்றை ஆசீர்வதிக்கிறார். ஏனெனில் கிறிஸ்துவை நாம் பின்பற்றி பக்தியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருக்கின்றது. இரண்டாவதாக, நமது இவ்வுலகத் தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். இவை நமது தொழில், நோய் நொடிகள், குடும்பத் தேவைகள், பரீட்சை, திருமணம், குழந்தைகள் என்று பலவற்றையும் உள்ளடக்கும். இவற்றையும் தம்மிடம் ஜெபத்தில் கேட்கும்படியாக கர்த்தர் நம்மைப் பணித்திருக்கிறார். ஆனால், நாம் ஜெபித்து முடித்த பின்போ இவற்றைக் கர்த்தர் நிறைவேற்றி வைப்பாரா என்று நமக்கு உடனடியாகத் தெரியாது. நாம் ஜெபிக்கும் இக்காரியங்கள் நமக்கு நன்மையைக் கொண்டு வருமா? அல்லது தீமையைக் கொண்டு வருமா? என்றும் நமக்குத் தெரியாது. கர்த்தர் ஒருவரே அவை நன்மையில் முடியுமா? அல்லது தீமையில் முடியுமா? என்று அறிந்திருக்கிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் இவற்றிற்காக ஜெபிக்கும்போது கர்த்தர் தமக்குச் சித்தமானதை செய்யும்படியாகக் கேட்டு ஜெபிக்க வேண்டும். எங்களுடைய சித்தமல்ல உமது சித்தம் நிறைவேற வேண்டும் என்றே ஜெபிக்க வேண்டும். வேதத்தில் நாம் வாசிக்கும் ஜெபங்கள் அனைத்தும் இவ்விதமாகவே இருக்கின்றன. நாம் கேட்பதை, நாம் கேட்கும் விதத்திலேயே நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்பது தவறு. தேவ சித்தம் நம்மில் நிறைவேற வேண்டுமானால் அவரது சித்தப்படி நமது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு கர்த்தருடைய சித்தத்திற்குக் கட்டுப்பட்டு நாம் ஜெபிக்கும்போது எல்லாமே இறுதியில் (அவரது சித்தப்படி) நன்மையாகவே முடியும் என்ற நம்பிக்கையுடனேயே ஜெபிக்கிறோம்.

அடுத்ததாக இவ்வேதப்பகுதியில் நாம் வாசிக்கும் பிணியாளனின் பிணியைத் தீர்க்கும் விசுவாச ஜெபம், நாம் ஜெபித்த உடனேயே அம்மனிதனின் பிணிதீர்ந்துவிடக்கூடிய ஆழமான விசுவாசத்தைப் பற்றியதாக இருக்க முடியாது. யாக்கோபு இங்கே கர்த்தரை நாம் விசுவாசிப்பதில் உறுதியாக இருக்க வேண்டுமென்றுதான் போதிக்கிறாரே தவிர நமது ஜெபம் நிச்சயம் காரியங்களை சாதிக்கும் என்ற நம்பிக்கையையும், அத்தகைய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கவில்லை. சில வேளைகளில் நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் நமது ஜெபத்தைக் கேட்கிறார், அதன்படி காரியங்கள் நடக்கும் என்ற உணர்வுகள் நமக்கு ஏற்படலாம். ஆனால் கர்த்தர் நிச்சயம் நமது ஜெபத்தைக் கேட்டு ஆசீர்வதிப்பார் என்பதற்கு நாம் இத்தகைய உணர்வுகளில் தங்கியிருக்காமல் கர்த்தருடைய சர்வவல்லமையுடைய சித்தத்திலேயே தங்கியிருக்க வேண்டும். இதை வேதத்தில் நாம் பார்க்கும் மூன்று காரியங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

அ. இயேசு கெத்செமனே தோட்டத்தில் தன் பிதாவிடத்தில் ஜெபித்தபோது, பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார். அவ்வாறு கிறிஸ்து ஜெபித்தபோது அவருடைய விசுவாசம் குறைவாயிருக்கவில்லை. தன் பிதாவுடன் உறுதியான ஐக்கியத்தில் இருந்தும், அவரில் அதிக விசுவாசத்துடனுமே இயேசு அன்று ஜெபித்தார். அவருடைய ஜெபத்தில் ஊக்கத்திற்கும், உணர்ச்சிக்கும் குறைவிருக்கவில்லை. அவர் அதிக வியாகூலத்துடன் ஜெபித்ததாக (லூக்கா 22:44) வாசிக்கிறோம். அத்தோடு தமது பிதா தனது ஜெபங்களை நூறுவீதம் கேட்டு ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. இருந்தபோதும் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்த இயேசுவின் ஜெபம் நிறைவேறவில்லை. இயேசு சிலுவைத் துன்பத்தை தேவ சித்தப்படி அனுபவிக்க நேர்ந்தது. ஆகவே, நாம் அதிக விசுவாசத்துடன் ஊக்கத்தோடு கேட்பதையெல்லாம் கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று யாக்கோபு போதிக்கவில்லை. அதிக விசுவாசம் இருந்தால் நமது நோய்கள் தீர்ந்துவிடும் என்று யாக்கோபு போதிக்கவில்லை. கர்த்தரிடம் இருந்து காரியங்கள் சாதித்துக் கொள்வதற்கு அதிக விசுவாசத்தை நாம் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று யாக்கோபு நிச்சயமாகப் போதிக்கவில்லை.

ஆ. தாவீது தனது குழந்தையின் வாழ்விற்காக அதிக வியாகூலத்தோடும், ஊக்கத்தோடும் ஜெபித்தபோதும் அவனுடைய குழந்தை வாழவில்லை  (2 சாமுவேல் 12:16-19). இங்கே தாவீதின் விசுவாசத்திற்கோ, ஊக்கத்திற்கோ குறைவிருக்கவில்லை.

இ. பவுல் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஓர் இடர் அகற்றப்பட வேண்டுமென்று ஜெபித்தும் அது அகற்றப்படவில்லை. பவுலின் விசுவாசத்தில் எந்தக்குறையும் இருக்கவில்லை. இவ்விடர் தன் வாழ்க்கையில் இருந்து அகற்றப்படாதது பவுலுக்குப் பெரும் மனச்சங்கடத்தைத் தந்தது. பவுல் மூன்று தடவைகள் ஊக்கத்தோடும், விசுவாசத்தோடும் ஜெபித்தும் அது அகற்றப்படவில்லை. என்னுடைய கிருபை உனக்குப் போதுமானது என்று மட்டுமே கர்த்தர் பவுலுக்குக் கூறினார். இதனால் பவுல் சரியாக ஜெபிக்காததால்தான் அவரது ஜெபம் கேட்கப்படவில்லை என்று யாராவது கூற முடியுமா?

ஆகவே, துன்பங்களே இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றின் விடுதலைக்காக மட்டும் அலைந்து கொண்டிராமல், சில வேளைகளில் அவை நமது நன்மைக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்து நமது வாழ்க்கையை சீர்செய்து பவுலைப்போல் நமது துன்பங்களின் மத்தியிலும் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும். விசுவாச ஜெபம் என்பது கர்த்தர் தன் சித்தத்திற்கேற்றபடி எப்போதும் நன்மையானதையே செய்வார் என்ற நம்பிக்கையில், அவரது சித்தத்திற்கு மனமகிழ்வோடு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதாகும். யாக்கோபு 15ல் காணப்படும் விசுவாச ஜெபம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு நாம் விசேஷமான ஒரு உட்பொருளைக் கொடுக்காமல் இருந்தால் யாக்கோபுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. இலக்கணத்தின்படி பார்த்தாலும் நாம் இவ்வார்த்தைகளுக்கு வேதத்தின் ஏனைய பகுதிகளின் போதனைகளுக்கு முரணான எந்தவொரு தனிப் பொருளையும் கொடுக்க முடியாது. யாக்கோபு நிச்சயமாக விசுவாச ஜெபம் செய்தால் நமக்கு வாழ்வில் இனி நோயே ஏற்படாது என்று போதிக்க வில்லை. கெரிஸ்மெட்டிக் கூட்டம் இதனை மறந்து இவ்வார்த்தைக்கு வேதத்தில் இல்லாத ஒரு உட்கருத்தைக் கொடுக்க முயல்கிறது.

இவ்வேதப்பகுதி போதிக்கும் உண்மைதான் என்ன?

நமது பாவங்களுக்கும் சிலவகையான நோய்களுக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றி இப்பகுதி (யாக்கோபு 5:14-16) விளக்குகிறது. சில வேளைகளில் இவை இரண்டிற்கும் இடையில் வேறு ஒரு தொடர்பும் இருப்பதை நாம் அறிவோம். அதாவது, எயிட்ஸ் வியாதி முக்கியமாக தவறான உடலுறவின் காரணமாக ஏற்படுகின்றது. மனிதனின் வயிற்றில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட குடல்வியாதி நேரடியாக குடியினால் ஏற்படுகின்றது. ஆனால், இயற்கையாக நமது பாவச் செய்கைகளால் ஏற்படும் இத்தகைய தொடர்பைப்பற்றி இவ்வேதப்பகுதி விளக்கவில்லை. இப்பகுதி நமது பாவங்களுக்குத் தண்டனையாக சில வேளைகளில் கர்த்தர் அனுமதிக்கும் வியாதிகளைப்பற்றிப் பேசுகிறது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரை எடுத்துக் கொண்டால், அவர்களுடைய கீழ்ப்படியாத் தன்மைக்காகவும் பாவங்களுக்காகவும் அவர்களைத் தண்டித்த தேவன் அவர்கள் மத்தியில் பல வியாதிகளைக் கொண்டு வந்தார் (சங். 106:15, 29). கொரிந்தியர்கள் தமது பாவச் செய்கைகளால் திருவிருந்தை அலட்சியப்படுத்தி நடந்துவந்ததால் அவர்களில் சிலர் வியாதிகளினால் தொல்லையடைந்தார்கள். சிலர் இறந்தும் போனார்கள் என்று வாசிக்கிறோம் (1 கொரி. 11:30). கொரிந்தியர்கள், இவ்வியாதிகள் தங்கள் பாவச் செய்கைகளினால் ஏற்பட்டதென்பதை உணர்ந்து, சுயபரிசோதனையில் ஈடுபட்டு மனந்திருந்தி கர்த்தரிடம் மன்னிப்புப் பெற வேண்டும் என்று பவுல் அந்நிருபத்தில் போதிக்கிறார்.

உங்களில் ஒருவர் நெடுங்காலமாக கர்த்தருக்கு விரோதமாக பாவத்தில் வாழ்ந்து, அதன் காரணமாக கர்த்தரின் தண்டனையாகக் கடும் நோயை அனுபவித்துக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யாக்கோபு சொல்கிறார், உடனடியாக சபை மூப்பர்களை வரவழைத்து உங்களுக்காக எண்ணெய் பூசி ஜெபிக்கச் சொல்ல வேண்டும். சபை மூப்பர்களை ஏன் வரவழைக்க வேண்டும்? ஏனெனில், சபையைச் சேர்ந்த இம்மனிதன் இத்தனை காலமாக பாவத்தில் வாழ்ந்து அதற்காக கர்த்தரிடம் இருந்து தண்டனையாக இந்நோயை அனுபவித்து வந்திருக்கிறான். இப்போது அதிலிருந்து அவனுக்கு விடுதலை வந்திருக்கிறதென்பதை சபைத்தலைவர்கள் சபை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எண்ணெய் எதற்கு? எண்ணெய் இங்கே மருத்துவரீதியாக பாவிக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. அது மருத்துவரீதியாகவும் பாவிக்கப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால், இங்கே கர்த்தர் தன் வல்லமையால் இம்மனிதனுக்கு விடுதலைதர முன்வந்திருக்கிறார் என்பதை அடையாளமாக உணர்த்துவதற்காக எண்ணெய் பாவிக்கப்பட்டிருக்கிறது. இம்மனிதன் பரிசுத்த ஆவியை பல காலமாக துக்கப்படுத்தி வந்திருக்கிறான். அவ்வாவியானவர் மறுபடியும் இம்மனிதனில் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். இம்மனிதனுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை சாதாரணமாக கிறிஸ்தவர்களின் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு காரியமல்ல. அசாதாரணமாக நடக்கப்போகும் ஒரு காரியத்தின் அடையாளமாகவே எண்ணெய் பூசுதல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மனிதன் பெற்றுக்கொண்ட விடுதலையை சாதாரண மனிதர்களால் கொடுக்க முடியாது. வெறும் மருந்துகளாலும் அளிக்க முடியாது. கர்த்தர் மட்டுமே இம்மனிதனின் பாவவிடுதலைக்காக அம்மனிதனைச்சுற்றி நின்று (தன் பாவத்தை உணர்ந்து வருந்தி அதற்குப் பரிகாரம் தேடும் எம்மனிதனுக்கும் விடுதலை தர கர்த்தர் ஆயத்தமாயிருக்கிறார் என்ற) அசையாத விசுவாசத்துடன் ஜெபம் செய்யும் சபை மூப்பர்களின் மூலமாக அவ்விடுதலையை அளிக்க முடியும். இப்பகுதியில் யாக்கோபு, “ஜெபம் பிணியாளனை இரட்சிக்கும்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். தன் பாவத்தை இம்மனிதன் உணர்ந்து வருந்தி அதற்கு கர்த்தரிடம் பரிகாரம் நாடி வந்திருப்பதால் கர்த்தர் அவனை இரட்சித்தார். அவன் பாவத்தை மன்னித்தார். இவ்வார்த்தை (இரட்சிப்பு) அம்மனிதன் பெற்றுக் கொண்ட ஆத்மீக விடுதலையைக் குறிக்கிறது. அம்மனிதன் தொடர்ந்து தன் பாவத்தில் நிலைத்திருந்தால் அவன் வீணாய்ப்போயிருப்பான். ஆனால், கர்த்தருடைய சிட்சை (திருத்துதல்) அவன் தன்னுடைய பாவத்தை உணரச் செய்துள்ளது. அம்மனிதன் கர்த்தருடைய செயலை ஏற்று மனந்திருந்தி, தனக்காக ஜெபிக்கும்படியாக சபை மூப்பர்களைக் கேட்டுக் கொண்டான். கர்த்தர் அவனுக்கு சமாதானத்தை அளித்தார்.

யாக்கோபு (15 ஆம் வசனத்தில்) கர்த்தர் அவனை எழுப்புவார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். அவனை எழுப்பியது மூப்பர்களோ அல்லது விசுவாசமோ அல்ல. கர்த்தரே அவனை எழுப்பினார். யாக்கோபு, அவன் பாவஞ் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்று கூறுகின்றார். ஆகவே, யாக்கோபுவின் வார்த்தைகளில் இருந்து (பாவஞ்செய்திருந்தால்) அம்மனிதனுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை பற்றிய முன்னறிவு அவர்களுக்கு இருக்கவில்லை என்பது தெரிகிறது. நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த அம்மனிதன் தான் செய்துள்ள பாவங்களை ஆராய்ந்து பார்த்து, தன் நோய்க்கு அப்பாவங்கள் தான் காரணமாக இருந்து அதன் காரணமாகக் கர்த்தர்தான் தன்னைத் தண்டிக்கிறார் என்று எண்ணி மூப்பர்களுக்கு செய்தி அனுப்புகிறான். மூப்பர்கள் அவனோடு பேசி விபரங்களை அறிந்துகொண்டபின் அவனுக்கு எண்ணெய் பூசிஜெபித்த போது அம்மனிதனுக்கு தன் பாவங்களைக் கர்த்தர் மன்னித்துவிட்டார் என்ற நிச்சயம் ஏற்பட்டது. அத்தோடு அவனைப் பிடித்திருந்த நோயிலிருந்தும் விடுதலை கிடைத்தது. ஆகவே, இப்பகுதி முழுவதும் கிறிஸ்தவர்கள் சதாரணமாக தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களைப் பற்றியும் அதற்கான பரிகாரத்தையும்பற்றிப் பேசவில்லை. பாவத்தில் வீழ்ந்து அதற்குப் பரிகாரம் தேடாமல் கர்த்தரின் மனத்தையும், சபையையும் வருத்தி  நோயில் வாடிக் கெண்டிருந்த ஒரு மனிதனின் அசாதாரண வாழ்க்கையைப் பற்றியும் அவன் மனந்திரும்பிய விதத்தையும் பற்றியே போதிக்கின்றது.

யாக்கோபு (16 ஆம் வசனத்தில்) நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். யாக்கோபு இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்ன? இப்பகுதியில் நாம் வாசிக்கும் மனிதனுடைய வாழ்க்கை பாழானதற்குக் காரணம் அவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டு மனந்திருந்தாததே. அவன் ஜெபத்திலும் கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தங்களுடைய குற்றங்களை, அவை எவருக்கெதிராக செய்யப்பட்டதோ, அவர்களிடம் கூறி ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டும், கர்த்தரிடம் அன்றாடம்  ஜெபத்தில் மன்னிப்பு கேட்டும் வருபவர்கள் வாழ்வில் சமாதானம் குடியிருப்பதோடு, இப்பகுதியில் நாம் பார்க்கும் மனிதன் அனுபவித்த துன்பங்களையும் அனுபவிக்கத் தேவையில்லை என்று யாக்கோபு கூறுகிறார். இதுவே இப்பகுதி தரும் போதனை.

வேதம் புரியாதவர்கள் விசுவாச ஜெபம் என்ற பெயரில் மாயாஜால வித்தை போன்று நம் வாழ்வில் காரியங்கள் சாதித்துக்கொள்ளவும், நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும் ஒருவகை ஜெபம் இருப்பதாகக் கதை புனைந்து கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.