திருமறைத்தீபம் 2000 -ம் ஆண்டு 3,4 இதழ்
1. ஆசிரியரிடமிருந்து!
2. குழந்தைச் செல்வம்
3. இந்திய வேதங்களில் இயேசுவா?
4. குடும்ப ஆராதனை
5. கிறிஸ்தவக் கோட்பாடுகள்
6. மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வுநாள்!
7. யெகோவாவின் சாட்சிகள் யார்?
8. வில்லியம் டின்டேல்
9. வில்லியம் கேரி
10. வேதனையளிக்கும் சாதனைகள்!
11. 1 கொரிந்தியர் 12-14
ஆசிரியரிடமிருந்து!
தவிர்க்க முடியாத காரணங்களால் இவ்வருடத்தில் ஜூலை-செப்டம்பர் இதழைத் தனியாக வெளியிட முடியவில்லை. அநேகர் ஏன் இன்னும் பத்திரிகை வரவில்லை? என்று கேட்டு எழுதியிருந்தார்கள். ஆர்வத்தோடு பத்திரிகைக்காக காத்திருக்கும் உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். போதக ஊழியத்தோடு எழுத்து வேலையும் செய்வதென்பது இலகுவான ஒரு காரியமல்ல என்றாலும் இந்நாள்வரைத் தேவன் எம்மைக் கைவிடாமல் ஒவ்வொரு இதழையும் வெளியிட அனுமதித்தார். ஆனால் வருடம் முடியுமுன் ஓரிதழாவது உங்களை வந்தடையட்டும் என்பதற்காக இம்முறை இரு இதழ்களையும் ஒன்றினைத்து மேலதிக பக்கங்களோடு வெளியிட்டுள்ளோம். அடுத்த வருடத்தில் எல்லா இதழ்களையும் தவறாது வெளியிட தேவன் எம்மை அனுமதிக்க எம்மோடு சேர்ந்து ஜெபியுங்கள்.
பத்திரிகை அடுத்த வருடத்தில் தனது ஆறாவது வயதை எட்டுகிறது. கடந்த ஐந்து வருடத்தில் வெளிவந்துள்ள இதழ்களை (1995-1999) நல்ல முறையில் அழகாகத் தொகுத்து குறைந்தளவு பதிப்பாக (Limited Edition) ஹார்ட்கவரில் வெளியிட்டுள்ளோம். இவற்றை இறையியல் கல்லூரிகளுக்கு மட்டும் இலவசமாக அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளோம்.
திருமறையா? திராவிட சமயமா? என்ற தலைப்பில் 1995 இல் ஒரு நூலை வெளியிட்டோம். அது கைவசமில்லாத போதும் அநேகர் தொடர்ந்து கேட்டு எழுதி வந்தார்கள். அதை மேலும் விரிவுபடுத்தி 76 பக்கங்களில் இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். இந்நூல் தேவையானவர்கள் எமக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பலர் சந்தர்ப்பவாதிகளாக இத்தகைய போதனைகளுக்கு இரையாகி தமிழகத்தில் கிறிஸ்துவின் பெயருக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்து வருகிறார்கள். இவர்களின் முகத்திரை கிழிய கிறிஸ்துதாமே இந்நூலைப் பயன்படுத்த ஜெபியுங்கள். அத்தோடு எல்லோரோடும் இணைந்து போக வேண்டுமென்பதற்காக சத்தியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனநிலையில் இருந்து கிறிஸ்தவப் போதகர்களும், கிறிஸ்தவர்களும் விடுபடவும் இந்நூல் துணை செய்ய வேண்டுமென்பது எமது விருப்பம். இந்நூலின் ஒரு அதிகாரத்தை இவ்விதழில் வெளியிட்டுள்ளோம்.
ஆண்டவருடைய நாளான ஓய்வுநாளைப்பற்றி அதிகமானோர் அக்கறை கொள்ளுவதில்லை. அதுபற்றி வேதம் என்ன போதிக்கின்றது என்று விளக்கும் ஆக்கங்களையும் சுமந்து இவ்விதழ் வெளிவருகின்றது. எப்போதும் போல் தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள். இவ்விதழ் உங்கள் கரத்தில் கிடைக்கும்போது புத்தாண்டு மலர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- ஆசிரியர்
குழந்தைச் செல்வம்
இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.
குடும்பத்திற்கு தலைவன் கணவன், குடும்பத்திற்கு விளக்கு மனைவி என்று பார்த்தோம். குடும்பம் சிறக்க கணவனும் மனைவியும் எம்முறையில் கூடி வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கும் போதனைகளை இதுவரை ஆராய்ந்துள்ளோம். “படிப்பது வேதம் இடிப்பது சிவன் கோவில்” என்ற முறையில் கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது. கிறிஸ்தவத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. நமது போலித்தனமான பண்பாட்டிற்குப்பில் மறைந்து நின்று நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்தவ கணவனும் மனைவியும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி வாழ அவசியமான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
கணவனும் மனைவியும் தம் மத்தியில் நல்லுறவேற்படுத்திக்கொண்டு நல்வாழ்வு வாழ்வது இன்னுமொரு முக்கியமான காரியத்திற்கு அவசியம். கர்த்தர் குடும்பங்களுக்கு ஈவாக அளிக்கும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு கணவனும் மனைவியும் நல்லுறவோடிருப்பது அவசியம். ஆதியாகமம் குடும்பம் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது (ஆதி. 1:22, 28). சில வேளைகளில் கர்த்தருக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் சில குடும்பங்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் போகலாம். ஆனால், பொதுவாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும்போது கணவனுக்கும் மனைவிக்கும் பெற்றோராகும் ஒரு புது பொறுப்பு ஏற்படுகின்றது. இப்பொறுப்போடு அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் மேலும் இறுக்கமடைகின்றது. கணவன் இப்போது தந்தை யாகவும், மனைவி தாயாகவும் மாறுகிறாள். பிறந்த பிள்ளையை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு அவர்களை வந்தடைகின்றது.
பிள்ளை பெறுதல்
பிள்ளைகளை எப்போது பெற்றுக்கொள்வது? எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது? என்ற கேள்விக்கும் நாம் பதிலளித்தாக வேண்டும். தமிழர்கள் மத்தியில் பண்பாடு என்ற பெயரில் இதைப்பற்றிய பல தவறான எண்ணங்கள் உலவி வருவதை நாம் அறிவோம். திருமணமான முதல் வருடமே பிள்ளையில்லாத மனைவியை மலடி என்று பட்டம் கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் அவளுக்கு ஏதோ சரியில்லை என்று ஊர் பேசும். இப்படிப் பேசுவது பொதுவாக கர்த்தரை அறியாத மனிதர்களின் மனப்போக்கு. இத்தகைய எண்ணங்களுக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் மனத்தில் இடம் கொடுக்கக் கூடாது. பிள்ளையில்லாத மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்து கொள் என்று மனங்கூசாமல் சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தேவனை அறியாத மக்கள் செய்யும் காரியங்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படி எண்ணமாட்டார்கள்.
ஒரு குடும்பத்திற்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல்போனால் அதைப் பெண்ணின் தவறாகக் கருதிவிடக்கூடாது. இதற்கு ஆணும் காரணமாக இருக்கலாம். கணவனோ, மனைவியோ யார் இதற்குக் காரணமாக இருந்தாலும் இது கர்த்தர்விட்ட வழி என்று எண்ணி அவர்கள் தொடர்ந்து இணைந்து மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்த வேண்டும். பிள்ளை வேண்டும் என்றால் ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ளலாம். கணவன் மனைவியை விவாகரத்து செய்வதோ அல்லது இதற்காக மனைவியைத் துன்புறுத்துவதோ கர்த்தருக்கு அடுக்காத செயல். இவை கிறிஸ்தவர்கள் செய்யும் காரியங்களல்ல. கிறிஸ்தவர்கள் அல்லாத பெற்றோர்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவ தம்பதிகளுக்கு அப்பெற்றோர்கள் இத்தகைய தவறான ஆலோசனைகளை வழங்குவது நாம் அறிந்ததொன்றே. இதனால்தான் கிறிஸ்தவ தம்பதிகள் தம் குடும்ப வாழ்க்கையில் வேறு யாரும் தலையிடுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரையும் நம்மைவிடப் பெரியவர்களையும் நாம் மதிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் குடும்பத்தைக் கெடுத்துவிடக்கூடிய, கிறிஸ்துவுக்கு எதிரான எந்த ஆலோசனையை யார் சொன்னாலும் அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
எப்போது பிள்ளை பெற்றுக் கொள்வது? திருமணத்திற்குப் பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. ஆகவே, திருமணமானதும் உடனடியாகப் பிள்ளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. வேதபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் இருந்தால் தவிர அதனைத் தள்ளிப் போடக்கூடாது. எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது? ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கும், மனைவியின் சரீர சுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். உடல் நலமில்லாத ஒரு குடும்பத் தலைவியால் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். சரீர நலம் கருதி பிள்ளை பெறுவதை அவர் நிறுத்திக் கொள்ள நேரிடலாம். ஆகவே, எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் வேதபூர்வமாக சிந்தித்து தங்கள் வசதிக்கேற்றவாறு தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மேல் நாடுகளில் இதைக் குறித்த புதிய போதனை ஒன்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கர்த்தர் பல்கிப் பெருகு என்று கூறியிருக்கிறார், ஆகவே அதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்றும், கர்த்தரை நம்பி ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ள வேண்டும் என்று இவர்கள் போதித்து வருகிறார்கள். தங்கள் சபை மக்களில் குறைந்தளவு பிள்ளைகளை உடையவர்களுக்கு விசுவாசம் போதாது என்று இவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய எண்ணங்கள் முரட்டுத்தனமானவை. யாருக்கு எத்தனை பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதை சபையோ, தனி ஒரு மனிதனோ தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு குடும்பமும் கர்த்தரை விசுவாசித்து தங்கள் நிலைமைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களும், உடல் நலம் குறைந்தவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதுவும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், வருமானப்பற்றாக் குறைவாலும் நடக்கும் அட்டூழியங்களான பெண் குழந்தைகளைப் பிறக்குமுன் கருச்சிதைவு செய்வது, பிறந்த குழந்தைகளை வீதியில் எறிந்துவிடுவது போன்ற செயல்கள் நிகழும் இந்திய நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.
குடும்பக் கட்டுப்பாடு
குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது சரியா? இதற்காகக் கருத்தடைச் சாதனைங்களைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கும் நாம் பதிலளிக்க வேண்டும். சிலர் எக்காரணத்தை கொண்டும் குடும்பக் கட்டுப்பாடு இருக்கக்கூடாது, அதற்கான சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுவர். இவர்கள் தங்கள் வாதத்திற்கு வேதத்தையும் ஆதாரமாகக் காட்டுவர். நல்ல பல கிறிஸ்தவர்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டுள்ளார்கள். இப்படி இலகுவாக பதில் கூறிவிடுவதால் இப்பிரச்சனையை சுலபமாக தீர்த்துவிட முடியாது. ஏனெனில், வேதம் இதைக் குறித்து அதிகாரத்தோடு நேரடியாகப் போதிக்காமல் பொதுவான போதனைகளை மட்டுமே தருகின்றது.
குடும்பக் கட்டுப்பாடு கூடாது என்று வாதிடுபவர்கள் ஆதியாகமம் 38:8-10 ஐ உதாரணமாகக் காட்டுவர். ஆனால் இந்த வேதப்பகுதியில் ஓனான் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது தன் தமையனுக்கு சந்ததி உண்டாவதில் விருப்பமின்றித் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் என்று வாசிக்கிறோம். கர்த்தர் இதன் காரணமாக அவனைத் தண்டித்தார். ஓனான் தன் தமையனுக்கு சந்ததி வராதபடி செய்ததனாலேயே கர்த்தர் அவனைத் தண்டித்ததாக இப்பகுதி போதிக்கிறதே தவிர ஓனான் கடைபிடித்த குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்காக அல்ல. லேவியராகமம் 15:16-18 இன் அடிப்படையில் இந்த விளக்கமே பொருந்துவதாக அமைகிறது. லேவியராகமப் பகுதியில் தீட்டுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி வாசிக்கிறோம். அங்கே இந்திரியம் கழிந்தவன் தண்ணீரில் முழுக வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறதே தவிர அவன் பலிகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இந்திரியம் கழித்ததனால் ஒருவன் தீட்டுப்பட்டவனாக இருக்கிறானே தவிர பாவம் செய்தவனாகிறான் என்று இப்பகுதி போதிக்கவில்லை. உண்மையில் பாவம் செய்பவர்கள் பலிகள் கொடுக்க வேண்டும் என்று லேவியராகம விதிகள் கூறுகின்றன. இவ்வாறு தீட்டுப்பட்டவன் அத்தகைய பலிகள் செய்ய வேண்டுமென்று இப்பகுதி எதிர்பார்க்கவில்லை.
இதனால் குடும்பக் கட்டுப்பாடு செய்வது எச்சூழ்நிலையிலும் தவறானது என்ற வாதத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரோமன் கத்தோலிக்க மதம் குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்க்கிறது. அதற்கு அவர்கள் வேதபூர்வமான எந்த விளக்கத்தையும் கொடுப்பதில்லை. இயற்கை விதிகளின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் இதை எதிர்க்கிறார்களே தவிர வேதபூர்வமாக அல்ல.
குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள்
இதைக் குறித்தும் வேதம் வெளிப்படையாக நேரடியான போதனைகளை அளிப்பதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் வழக்கில் காணப்படும் எல்லாவகையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது. வேதத்திற்கு முரணான முறைகளும், சரீரத்திற்கு பாதகம் விளைவிக்கும் முறைகளும்கூட பின்பற்றப்படுவதால் எதையும் தீர ஆராய்ந்து பொதுவான வேதபோதனைகளோடு ஒத்துப்போவதாக இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்துப் பின்பற்ற வேண்டும்.
கருச்சிதைவு செய்வதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக சில நாடுகளில் ஏற்றுக் கொள்கிறார்கள. ஆனால் வேதம் அதைக் கொலைக்கு ஒப்பிடுகின்றது. சிசுக் கொலை மலிந்த நம் நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. கருப்பையில் இருக்கும் சில வாரக் குழந்தை உயிருடன் இருக்கும் முழு ஜீவன் என்பதை அறிவீனத்தால் பலர் உணர்வதில்லை. அதனைக் கருச்சிதைவு செய்வது உயிரை அழிப்பதாகும். ஜோன் கல்வின், யாத்திராகமம் 21:21-25 ற்கு விளக்கம் கொடுக்கும்போது, கருத்தரித்திருக்கும் தாயை ஒருவன் தாக்கி அவளுள் இருக்கும் குழந்தை உயிரிழந்தால் அத்தாயைத் தாக்கியவன் உயிரிழக்க வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தை ஜீவனுடன் இருப்பதால் அதை அழிப்பது கொடூரமான கொலையாகும். இது ஒருவனை வயல் வெளியில் கொல்லாமல் அவனுடைய வீட்டிலேயே வைத்துக் கொல்வதற்கு ஒப்பானதாகும். ஆகவே பத்துக் கட்டளையின் ஆறாம் கட்டளையான உயிர்க்கொலை செய்யாதே என்ற கட்டளையோடு இப்பகுதி தொடர்புடையதென்று கல்வின் விளக்குகிறார்.
கருச்சிதைவு செய்வதை வேதம் உயிர்கொலையாகக் கருதுவதால் எக்காரணத்தாலும் கிறிஸ்தவர்கள் அதற்கு உடன்படக் கூடாது. இது பற்றிப் போதகர்கள் தம் சபை மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். இதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பின்பற்றுவது பெரிய அறிவீனமும், அநியாயமும் ஆகும்.
அடுத்ததாக செயற்கை மலடாக்குதலும் (Sterelization) குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நிரந்தரமாக ஒருவருக்கு பிள்ளை பெறும் வாய்ப்பை அழித்துவிடும். ஆண், பெண் இருவரும் இதனை செய்து கொள்கின்றனர். பிறக்கப்போகும் பிள்ளை குறையுள்ளதாகப் பிறந்துவிடும் என்ற காரணத்திற்காகவும், சமுதாய, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், பிள்ளை பெறுவது பெண்ணுக்கு உயிராபத்தானது என்ற காரணத்திற்காகவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்தியாவில் சமுதாய, பொருளாதார காரணங்களுக்காக தவறியும் பிள்ளை பிறந்துவிடக்கூடாது என்பதற்காக இம்முறை நிச்சயமானது என்று கருதிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இக்காரணங்கள் எதுவும் மலடாக்குதல் வேதபூர்வமானதா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக இல்லை. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அதுவே முக்கியமான கேள்வியாகும். சமூக, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், வசதிக்காகவும், நாம் எதையும் செய்ய முனையக்கூடாது. முதலில் வேதத்தோடு அவை பொருந்திப் போகின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.
வேதத்தில் மலடுகளைக் குறித்து வாசிக்கிறோம். யூதர்கள் மலட்டுத்தன்மை பெறுவதற்கு அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் உபாகமம் 23:1 இன்படி மலடுகள் ஆராதனைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியில்லை. இதற்குக் காரணம் கர்த்தர் படைத்ததற்கு மாறாக அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டிருப்பதே. பிள்ளை பெறாமையை கர்த்தர் முகச்சுளிப்போடு பார்த்ததோடு (சாபக் கேடாகவும் கருதினார்), மலடாக்குதல் மூலம் கருத்தரியாமல் இருப்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
வேறு பல குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் வழக்கில் இருப்பதால் மலடாக்குதல் முறையை கிறிஸ்தவர்கள் நாடாமல் இருப்பது நல்லது என்பதே என்னுடைய கருத்து. மேலும் சிலரின் தன்நம்பிக்கையை இது பாதிக்கக் கூடியது. வேறு சிலருக்கு சரீரக்கோளாறுகளும் இதனால் ஏற்படலாம். ஆகவே பிள்ளை பெறுவதால் ஒருவருக்கு உயிராபத்து ஏற்படும் என்ற நிலையும், வேறு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்றிருந்தாலொழிய செயற்கை மலடாக்கும் முறையை எவரும் நாடுவதை நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாக கிறிஸ்தவர்கள் வேறு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.
நாம் இங்கே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றித்தான் ஆராய்கிறோமே தவிர குறிப்பாக கருத்தடைச் சாதனங்களைப் பற்றி மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் நீங்கள் பல்கிப் பெருகுங்கள் என்றுதான் போதிக்கின்றது. ஆதியாகமம் 1:28, “நீங்கள் பல்கிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” என்று சொல்கிறது. இங்கே பல்கிப் பெருகுவதை வேதம் நம் வாழ்வில் ஓர் ஆசீர்வாதமாகக் குறிப்பிடுகிறது. ஆகவே கர்த்தர் நாமடையும் ஆசீர்வாதமாகக் கருதும் பல்கிப் பெருகுதலை குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் வாழ்நாள் முழுதும் தடை செய்து பிள்ளைகள் இல்லாமலிருப்பது வேதத்திற்கு முரணானதாகும்.
இந்திய வேதங்களில் இயேசுவா?
இவ்வருடத்தில் இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற தலைப்பில் நாம் வெளியிட்டுள்ள ஒரு புதிய நூலின் அத்தியாயத்தை இங்கே வழங்குகிறோம். இந்திய வேதங்களின் மூலமும், தமிழ்ச் சமயங்கள் மூலமும் இயேசுவைக் கண்டு கொள்ளலாம் என்ற போதனையை இந்நூல் ஆராய்கிறது.
இந்திய இந்து மத வேதங்களான இருக்க, யசுர், சாமம், அதர்வனம் ஆகிய வேதங்கள் இயேசு கிறிஸ்துவையே கடவுளாகப் போதிக்கின்றன என்ற போதனையை அளித்து வருபவர் சாது செல்லப்பா. இவர் தமிழ்நாட்டில் ஆசிரமம் அமைத்து, இந்து மத சாதுக்களைப் போல உடை தரித்து, கிறிஸ்தவத்தின் பெயரில் இந்துக்களைக் கவரும் விதத்தில் ஊழியம் செய்து வருகிறார். தான் அணியும் காவி உடைக்கும்கூட இவர் கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கத் தவறவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தப் பலியை காவி உடை விளக்குவதாக இவர் கொடுக்கும் விளக்கம் எந்த அளவுக்கு இந்து மத வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கமளித்து இந்துக்களைக் கவர இவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்று தெரிந்து கெள்ளலாம். “இந்திய வேதங்களில் இயேசு” என்ற பெயரில் இவரது போதனைகள் கெசட்டுகளில் விற்பனையாகின்றன. இது தவிர “சுத்திகரிக்கும் அக்னி” என்ற பெயரில் ஒரு மாதாந்தர பத்திரிகையையும் இவர் நடத்துவதோடு, இப்போதனைகளின் அடிப்படையில் ஒரு சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். கெரிஸ்மெட்டிக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சாது செல்லப்பா வெளிநாடுகளுக்கும் தனது போதனைகளை ஏற்றுமதி செய்து அங்கு வாழும் அப்பாவித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இப்போதனை சரிதானா? வேதபூர்வமானதா? என்று எப்படி முடிவு செய்வது? இந்திய வேதங்களையும், வரலாற்று சான்றுகளையும் ஆராய்ந்து அவை உண்மையில் இப்போதனையை அளிக்கின்றனவா? என்று பார்ப்பது ஒரு முறை. அல்லது வேதத்தை ஆராய்ந்து அவ்வேதத்தின் அடிப்படையில் இத்தகைய போதனைகளுக்கு கர்த்தர் இடம் கொடுத்துள்ளாரா? என்று பார்ப்பது இன்னுமொரு முறை. நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இவ்விரண்டு முறைகளில் ஒன்றைத் தீர்மானிக்க முடியும்.
ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரையில் முதலாவது முறை மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில், கர்த்தருடைய வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது என்று விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள் எப்போதனையையும் அதன் அடிப்படையில் ஆராயாமல் வேறு நூல்களின் அடிப்படையில் ஆராய்வது வேதத்தை நிராகரிப்பதற்கே வழி வகுக்கும். இத்தகைய வழிமுறையையே வலியுறுத்துகிறது Neo-orthodoxy. வரலாற்றுக் கிறிஸ்தவ பாரம்பரியங்களுக்கு முரணாக திருமறையை சந்தேகக் கண்ணோடு அணுகுதலையே நியோ ஓதர்டொக்ஸி என்று அழைப்பர். இன்று கிறிஸ்தவர்களில் பலர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் லிபரலிஸமேயாகும். திருமறையை சத்தியவேதமாக ஏற்றுக் கொள்ளாது, அதை மனித ஞானத்தையும், வரலாற்று சான்றுகளையும் கொண்டு நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டு, திருமறையின் போதனைகளுக்கு உலக ஞானத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கும் இறையியல் ஆராய்ச்சி முறையே இத்தகைய நிலைமைக்கு வித்திட்டுள்ளது. மனித சிந்தனையின் அடிப்படையில், மனிதனால் உருவாக்கப்பட்ட, தேவ அதிகாரமற்ற இந்திய வேதங்களை ஆராய்ந்து அது கிறிஸ்துவைப் போதிக்கின்றது என்று காட்ட முயல்வது கிறிஸ்துவை நிரூபித்ததாகாது. திருமறை போதிக்கும் கிறிஸ்துவை நாம் நிரூபிக்க வேண்டும் என்று திருமறை போதிக்கவில்லை. மாறாக அதை நாம் நம்ப வேண்டும் என்று மட்டுமே கூறுகின்றது. இது புரியாமல் அநேகர் இத்தகைய சிந்தனைப்போக்கிற்குத் தங்கள் வாழ்வில் இடம் கொடுத்துள்ளனர். ஆனால், இவ்வாராய்ச்சி முறை திருமறைக்குப் புறம்பானது. ஆகவே, நாம் முன்கூறிய இரண்டாவது முறையைக் கவனிப்போம்.
இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப்போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும். இதனால் நாம் புதை பொருள் ஆய்வுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அலட்சியம் செய்வதாக எண்ணிவிடக்கூடாது. சில வேளைகளில் அவை வேத வரலாற்றை நிரூபிக்கும் சாட்சியங்களை அளிக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவை வேதம் எத்தனை உண்மை என்பதையே பறைசாற்றுவனவாக இருக்கின்றன. ஆனால், அக்கண்டுபிடிப்புகள் வேத சத்தியங்களுக்கு மாறாக அமையும்போது நாம் வேதத்தைத்தான் நம்ப வேண்டுமே தவிர மனிதர்களின் கண்டுபிடிப்புகளையல்ல.
ஆகவே, திருமறைக்கும், கர்த்தருக்கும் மகிமையளிக்கும் இவ்விரண்டாம் முறையின் அடிப்படையில் சாது செல்லப்பாவின் போதனைகளை நாம் ஆராய்வோம். சுருக்கமாகச் சொல்லப்போனால், இம்மனிதரைப் பொறுத்தவரையில் இந்துமதம் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் இன்னுமொரு வெளிப்பாடு (Revelation). இந்திய வேதங்களைக் கிறிஸ்தவ வேதத்திற்கு சமமானதாகவே இம்மனிதர் கருதுகிறார். சிலை வணக்கத்தை மட்டும் இவர் நிராகரித்தாலும், இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவையே குருவாகவும், ஒரே தேவனாகவும் காட்டுகின்றன என்று வாதிடுகிறார். அதுமட்டுமல்லாமல் வேதபோதனை என்ற பெயரில் நாயன்மார்களின் தேவார, திருவாசகங்களை ஓதி அவற்றிற்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்துவருகிறார். பிராமணர்களே ஆதி இந்திய வேதங்களை மறைத்து தந்திரமாக புராணங்களைக் கட்டிவிட்டு சத்தியத்தை மறைத்தார்கள் என்று போதிக்கிறார். ஆகவே, இந்துக்களைப் பார்த்து, நீங்கள் பகவத் கீதையையும், இந்திய வேதங்களையும் படியுங்கள். தேவார திருவாசகங்களைப் படியுங்கள். இவைகளில் நீங்கள் இயேசுவைக் கண்டு கொள்ளலாம் என்று கூறுகிறார். இவ்வாறு இவர் போதித்ததை நான் என் காதாலேயே கேட்டிருக்கிறேன்.
உதாரணத்திற்கு, “குரு யார்?” என்ற வினாவை எழுப்பி இவரால் எழுதப்பட்ட ஒரு சிறு நூலை இவரது ஆராய்ச்சி முறையை விளக்க எடுத்துக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவே மெய்யான குரு என்பது இந்நூலின் போதனை. இதனை விளக்க இந்து மதம் போதிக்கும் குருத்துவத்தை சிவஞானபேதம், குருகீதை, சித்தர் பாடல்கள், அருணகிரியார் பாடல்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி இவை போதிக்கும் “குரு” உண்மையில் வேதம் போதிக்கும் கிறிஸ்துவே என்று விளக்கம் கொடுக்கிறார். இந்நூல்களும் பாடல்களும் போதிக்கும் குருத்துவ இலக்கணங்கள் கொண்டவர் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும் என்பது இவரது போதனை. வெறும் வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் இத்தகைய ஆராய்ச்சி துறை எத்தனை மோசமானது என்பதைக் கவனித்துப் பார்ப்போம். இந்து மதத்தைச் சேர்ந்த இப்பாடலாசிரியர்கள் எங்கும் தாம் இயேசுவைக் குறித்துப் பாடியதாகவோ, பேசியதாகவோ தெரிவிக்கவில்லை. இவற்றிக்கு செல்லப்பாதான் இப்படி விளக்கம் கொடுக்கிறாரே தவிர பாடலாசிரியர்கள் இக்கருத்துடன்தான் பாடினார்கள் என்பதற்கோ அவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கோ எந்தவித சான்றுகளுமே இல்லை.
நாம் ஏற்கனவே கூறியவாறு, வேத அடிப்படையில் இந்நூலை ஆராய்ந்தால், சாது செல்லப்பா விடும் முதலாவது தவறு, அவர் வேதத்திற்குச் சமமாக இந்து மதப் பெரியவர்களின் பாடல்களையும் போதனைகளையும் ஒப்பிட்டு கிறிஸ்துவைத் தேவனாகக்காட்ட முயல்வதுதான். இம்முறையை வேதம் முற்றாக நிராகரிக்கிறது. கிறிஸ்துவைத் தேவனாகக்காட்ட வேதத்தைத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு மதப் போதனைகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அம்மதங்கள் கிறிஸ்துவைத்தான் போதிக்கின்றன என்று சொல்லத் துணியும் போதே கிறிஸ்தவத்திற்கு அழிவு ஏற்பட்டு விடுகிறது. ஏனெனில், அந்நிய மதங்கள் ஒன்றின் மூலமாவது கிறிஸ்து வெளிப்படுத்தப்படவில்லை, பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களின் மூலம் மட்டுமே அவர் வெளிப்படுத்தப்பட்டுள்ளார் என்று வேதம் போதிக்கின்றது.
புறமத எழுத்துக்கள் கிறிஸ்தவப் போதனையைத் தழுவி எழுதப்பட் டிருக்கலாம். அத்தகைய வழக்கம் ஆதியில் இருந்தே வந்திருக்கின்றது. இன்றும் இந்து மதப்போதனைகளில் கிறிஸ்தவ விளக்கங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியத் தலைவரான காந்தி கூட கிறிஸ்தவ வேதத்தைப் பயன்படுத்தி உரைகள் அளித்துள்ளார். இன்னும் பலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இஸ்லாமியரின் குரானும் பழைய ஏற்பாட்டைத் தழுவி எழுதப்பட்டது என்பது அதை வாசிப்பவர்களுக்குப் புரியும். அதற்காக, குரானைக் கர்த்தருடைய வெளிப்படுத்தல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஜொஸுபஸ் என்ற வரலாற்று அறிஞன் கிறிஸ்தவத்தின் தோற்றத்தைப்பற்றி தனது நூலில் பல விளக்கங்களை அளித்துள்ளார். கிறிஸ்தவரல்லாத ஜொஸுபஸ் கிறிஸ்தவ வரலாற்றை பற்றிய விளக்கத்தைத் தந்துள்ளதால் அவருடைய நூலைப்படித்து கிறிஸ்துவை அறிந்துகொள்ளலாம் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான வாதம். ஜொஸுபஸின் எத்தனையோ வரலாற்று அவதானங்கள் சரியானதுமல்ல. ஆகவே புறமதப் போதனைகளும், எழுத்துக்களும், கிறிஸ்தவத்தைத் தழுவிய போதனைகளைக் கொண்டிருக்கின்றன என்பதற்காக அவற்றை வாசிப்பதன் மூலம் கிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம் என்று கூறுவது ஆபத்து. புற மதப் போதனைகளுக்கும், வேதத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. அவ்விடைவெளி என்ன? வேதம் கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு (The revealed will of God) என்பதுதான். ஏனைய மதப் போதனைகளும், எழுத்துக்களும் இத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு என்றால் என்ன? கர்த்தர் தன்னைப்பற்றியும் கிறிஸ்துவின் மூலம் பாவிகளை இரட்சிக்க, தான் ஏற்படுத்தியிருக்கும் வழிகளைப்பற்றியும் வேதத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான். வேதத்தின் போதனைகளை முழுமையாகக் கொண்டு வேதத்தை நூறுவீதம் தழுவி ஒரு நூல் எழுதப்பட்டிருந்து, அந்நூலால் அநேகர் பயன்பட முடிந்தாலும் அந்நூல் வேதத்திற்கு சமமான அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியாது. வேதம் மட்டுமே இரட்சிக்கும் கர்த்தரை கிறிஸ்துவுக்குள்ளாக வெளிப்படுத்தி பாவியான மனிதனை இரட்சிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது. இந்த வல்லமையும் அதிகாரமும் வேறு எந்த எழுத்துக்களுக்கும் நூல்களுக்கும் இல்லை. ஜோன் பனியனுடைய மோட்சப் பயணம் வேதபோதனைகளை மட்டும் கொண்டு அமைந்தது. அதனை வாசித்து அநேகர் பயன்பட முடியும். அதற்காக, அதுவே வேதமாகிவிட முடியாது.
சாது செல்லப்பாவைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ வேதத்திற்கும், இந்துமத வேதங்களுக்கும் இடையில் எந்தவித வித்தியாசமுமில்லை. இவரைப் பொறுத்தவரையில் ஒரு இந்து கிறிஸ்துவை அறிந்து கொள்ள அதிகமாக செய்யவேண்டியது ஒன்றுமேயில்லை. ஓர் இந்து தான் இதுவரை வணங்கியது கிறிஸ்துவைத்தான் என்று நம்பி சிலை வணக்கத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும். ஆனால், கிறிஸ்தவமோ, எவரும் வேதசத்தியத்தினாலும், ஆவியானவரின் கிரியையினாலும் மட்டுமே கிறிஸ்துவுக்குள் மறுபிறப்பை அடைய முடியும் என்று போதிக்கின்றது.
சாது செல்லப்பா 1996 ம் ஆண்டு நியூசிலாந்தில் ஒரு கிறிஸ்தவ வானொலிக்குக் கொடுத்த பேட்டியின் மூலத்தை அப்படியே இங்கே தருகிறேன். இவரது போதனை எவ்வளவு தூரம் கிறிஸ்தவத்திற்கு முரணானது, பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல் சுவிசேஷத்திற்கே எதிரானது என்றும் அறிந்து கொள்ள முடியும்.
“இந்திய வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரே கடவுளைப் பற்றிப் பேசுகின்றன. அத்தோடு “இருக்கு வேதம்” கடவுள் மனிதனாக அவதரித்து பாவ நிவாரணியாகத் தன்னைப் பலி கொடுப்பார் என்றும் போதிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் பாவமற்றவராக இருப்பார் என்றும் “இருக்கு வேதத்தில்” ஒரு வசனம் சொல்கிறது. சமஸ்கிருத மொழியைப் படிப்பவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு வந்த அநேக மிஷனரிகள் வீணாக எபிரெய, கிரேக்க மொழிகளைப் படித்து காலத்தை வீணாக்கிக் கொண்டார்கள். அவர்கள் சமஸ்கிருத பாஷையைக் கற்றுக் கொண்டிருந்தார்களெனில் இந்திய வேதங்கள் இயேசுவைப் போதிப்பதை அவர்களால் அறிந்து கொண்டிருக்க முடியும்.” “நான் ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி எதுவுமே தெரியாமலிருந்தேன். அக்காலத்தில் பிராமணனாக இருந்த போதும் அதில் என்னால் கடவுளைப் பார்க்க முடியவில்லை. கடவுளே இல்லை என்ற முடிவுக்கும் நான் வந்தேன். எல்லோரும் என்னை வெறுக்கும் நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் என் வாழ்வை முடித்துக்கொள்ள
எண்ணியிருந்தபோது ஒரு கிறிஸ்தவ பிரசங்கி எமது பாவங்களுக்காக மரித்த ஒருவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்டேன். இவர் நான் “இருக்கு வேதத்தில்” வாசித்த பிரஜாபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து ஆனந்தப்பட்டேன். இவ்வாறே நான் தேவனை அறிந்து கொண்டேன்.”
“இந்திய வேதங்களைப் படித்தே நான் கிறிஸ்துவை அறிந்து கொண்டேன். கிறிஸ்தவ வேதத்தைப் படித்து அல்ல, பிராமணனாக இருந்த நான் சமஸ்கிருத மொழியில் இருக்கும் இந்திய வேதத்தைப் படித்தே கடவுளை அறிந்து கொண்டேன். ஏனெனில், இவ்வேதங்கள் ஒரே கடவுளைப்பற்றிப் போதிக்கின்றன. வேதம் கடவுள் யூதர்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல, அந்நியருக்கும் சொந்தமானவர் என்று தெரிவிக்கின்றது.”
“பிரஜாபதியான கடவுளை நான் அறிந்து கொண்டபோது இந்து மதத்தை விட்டு விலகுகிறேன் என்ற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. “இருக்கு வேதத்தின்” பிரஜாபதியின் மூலமாகவே கடவுள் தன்னை எனக்கு வெளிப்படுத்தினார். கடவுள் யூதர்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல, அந்நியர்களுக்கும் சொந்தமானவர் என்று வேதம் தெரிவிக்கின்றது. ஆகவே, கடவுளை மனிதர்கள் தங்களுடைய சொந்த மதத்திலேயே கண்டு கொள்ளலாம். பின்பு, நான் முதன் முதலில் கிறிஸ்தவ வேதத்தில் பழைய ஏற்பாட்டைப் படித்தபோது இதையேதான் இந்து மதமும் போதிக்கின்றது என்று அறிந்துகொண்டேன். இந்து மதத்தின் பலிகொடுக்கும் முறைகளையும் உருவ வணக்கத்தையும் மத்திய கிழக்கில் இருந்து வந்த ஆரியர்களே ஏற்படுத்தினார்கள். இந்து மதம் ஆரம்பத்தில் இப்படி இருக்கவில்லை.”
“நான் அப்போஸ்தலர் நடபடிகளைப் படித்தபோது பவுலின் வாழ்க்கையை வாசித்து அதிசயித்தேன். பவுல், தான் யூதர்களுக்கு யூதனாகவும், கிரேக்கர்களுக்கு கிரேக்கனாகவும் எல்லாருக்கும் எல்லாமானேன் என்று கூறுவதைப் பார்த்தேன். ஆகவே, இந்தியர்களுக்கு பிரசங்கம் செய்ய காவி உடை அணிந்து பிரசங்கிக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் அநேகர் பிரசங்கம் கேட்க வருகிறார்கள். அத்தோடு இந்திய வேதங்களோடு
கிறிஸ்தவ வேதத்தை ஒப்பிட்டு இந்தியர்கள் மத்தியில் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது அநேகர் சபைக்கு வரத்தொடங்கினார்கள்.”
“என்னுடைய போதனையின் முக்கிய அம்சம், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த வேதத்தைப் படித்து அது போதிக்கும் பிரஜாபதியான கடவுளை அறிந்து கொள்ள முடியும் என்பதுதான். அப்படிச் செய்பவர்கள் கடவுளை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் இந்து மதத்தைவிட்டு விலகாமலே இந்திய வேதங்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறே நானும் கடவுளை அறிந்து கொண்டேன்.”
சாது செல்லப்பாவின் இப்பேட்டியை வாசிக்கும் போது இந்திய வேதங்கள் இப்படியெல்லாம் போதிக்கின்றனவா என்ற எண்ணம் பலருக்கு ஏற்படலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உண்மையை அறிந்து கொள்ளவும் துடிக்கலாம். ஆனால், அப்படி செய்வதன் மூலம் நாம் விடும் பெரும் தவறு கிறிஸ்தவ வேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கையை இழப்பதுதான். இந்திய வேதங்கள் மற்றும் தேவாரத் திருவாசகங்களுக்கு இவ்வாறாகப் பொருள் கொடுப்பது ஒன்றும் இயலாத காரியம் அல்ல. வேதத்தில் நம்பிக்கையிழந்தவர்களே செல்லப்பாவின் வழிமுறைகளை இன்று கடைபிடித்து வருகிறார்கள். இப்பேட்டியில் காணப்படும் வேதத்திற்கு முரணான அம்சங்களை இப்போது பார்ப்போம்.
- சாது செல்லப்பா வேத போதனைகளுக்கு முரணாக அந்நிய மதங்களின் மூலம் இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்று போதிக்கிறார். இது லிபரலிஸம், புளூரலிசக் (Pluralism) கோட்பாடுமாகும். எல்லா மதங்களிலும் சத்தியத்தைக் காணும் கோட்பாட்டையே புளூரலிசம் என்று அழைப்பார்கள். வேதம் வேறு சமயங்களின் மூலம் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளலாம் என்று எங்கேயும் போதிக்கவில்லை; மாறாக அந்நிய மதங்களுடன் உள்ள எத்தொடர்பையும் முற்றாக வெறுக்கிறது (யாத்திராகமம் 20).
- செல்லப்பா வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது, அதன் மூலம் மட்டுமே கடவுளைக் காணலாம் என்ற தெளிவான வேத போதனையில் நம்பிக்கையற்றவராகக் காணப்படுகிறார்.
- அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை விட்டு விலகத் தேவையில்லை என்ற செல்லப்பாவின் போதனை முழு வேதத்திற்கும் எதிரானது.
- அந்நிய மதங்களையும் அதன் போதனைகளையும் படித்து அவற்றைப் பயன்படுத்தி கிறிஸ்துவைப் போதிக்க வேண்டும் என்பது கிறிஸ்தவத்தை அழிக்க முனையும் பணியாகும். இது அநேகரைக் கவரக்கூடிய ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் கர்த்தரைப் பொறுத்தவரையில் இது பாவத்தின் வாசல் கதவைத் தட்டுவதாகும்.
- எல்லோருக்கும் எல்லாமானேன் என்று பவுல் 1 கொரிந்தியர் 9:7இல் கூறியுள்ளதை சாது செல்லப்பா தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும்போது அவர்கள் மனம் புண்படும்படி எதையும் செய்துவிடாமல், அதே வேளை வேதப்போதனைகளுக்கு எந்தவித ஊறும் ஏற்படாமலும் நற்செய்தியைச் சொல்வேன் என்பதே பவுலின் போதனை. அவர்களுக்காக வேதப் போதனைகளை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிப் பிரசங்கிப்பேன் என்று சாது செல்லப்பா செய்வதைப் பவுல் கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை.
- வேத வசனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு வேதத்தின் பெயரைச் சொல்லி, இந்து மத சாதுக்களைப் போல உடையணிவது, திருவாசகம் பாடுவது கர்த்தருக்கே அடுக்காத காரியம். இம்முறையை இந்தியாவிற்கு வந்து ஊழியம் செய்துள்ள கத்தோலிக்க மதகுருக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளனர். ஆங்கிலேய மத குருவான டொம் பீட் கிரிபித்ஸ் (Dom Bede Griffiths) தமிழகத்து திருச்சிராப்பள்ளியில் ஒரு ஆசிரமத்தை அமைத்தார். இவரைப் பின்பற்றி வேறு மத குருக்கள் காவேரி நதிக்கரையில் இன்னுமொரு ஆசிரமத்தை 1950ல் நிறுவியதோடு, இந்துக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள வசதியாக சந்நியாசிகளைப் போல மஞ்சள் நிற காவி உடையையும் அணிந்தனர். கிரிபித்ஸ் இந்து மதக்கோட்பாடுகளையும், கிறிஸ்தவத்தையும் கலந்து, கிறிஸ்தவத்தின் பெயரில் ஒரு ஆராதனை முறையை ஏற்படுத்தினார். ஆகவே, இம்முறைக்கு சாது செல்லப்பா வேதத்தில் நியாயம் தேட முடியாது. சமய சமரசப் போக்கைப் பின்பற்றியோரே (Ecumenism) இதற்கு முன்னால் இவ்வழியைப் பயன்படுத்தியுள்ளனர். வேதமோ, இம்முறைகளை வன்மையாகக் கண்டித்து நிராகரிக்கிறது.
* The Inter-Faith Movement, The New Age enters the Church by Hernert J. Pollitt, Banner of Truth Trust, Pg. 42-43.
கிறிஸ்தவ ஒற்றுமை
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், சத்தியத்தை விற்பவர்களுடனும், வேதத்திற்கு முரணான கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுடனும் கூட்டுச் சேருவதால் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அழிவுதான் ஏற்படும். உண்மையான ஒற்றுமையை சத்தியத்திற்கு மதிப்புக் கொடுப்பவர்கள் மத்தியில்தான் பார்க்க முடியும். ஒற்றுமை, ஒற்றுமை என்று கரடியாய்க் கத்துவதைவிட சத்தியத்தை வளர்ப்பதற்காகப் பாடுபட்டால் ஒற்றுமை தானே வளரும்.
குடும்ப ஆராதனை
குடும்ப ஆராதனைப்பற்றி இதுவரை வந்த ஆங்கங்களில் அதன் பல அம்சங்களைக் கவனித்தோம். இத்தொடரின் இவ்விறுதி ஆக்கத்தில் குடும்ப ஆராதனையை எவ்வாறு நடத்துவது என்பதுபற்றிய நடைமுறைக்கு அவசியமான சில ஆலோசனைகளைத் தருகிறோம். இவற்றைப்பின்பற்றி குடும்பம் சிறக்கவும், கர்த்தரின் நாமம் மகிமையடையவும் குடும்ப ஆராதனையை நடத்த வாசகர்கள் முயல வேண்டும்.
குடும்ப ஆராதனை நடத்தும் முறை
குடும்ப ஆராதனை குடும்பங்களில் நடத்தப்பட வேண்டும் என்று பார்த்தோம். வீட்டுத் தலைவனே பெரும்பாலும் அதை முன்னின்று நடத்த வேண்டும் என்றும் அறிந்துகொண்டோம். வீட்டுத் தலைவன் இல்லாத போது அதைத் வீட்டுத் தலைவி நடத்த வேண்டும். யார் யார் குடும்பத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவனின் கீழ் இவ்வாராதனையில் கலந்துகொள்ள வேண்டும். இது சிறு குழந்தைகளையும் வீட்டில் வேலைக்கு இருப்பவர்களையும் உள்ளடக்கும்.
குடும்ப ஆராதனை அதில் கலந்துகொள்ளும் அனைவருமே குழந்தைகள் உட்பட அதில் பங்குகொள்ளும் விதமாக நடத்தப்பட வேண்டும். வீட்டுப் பெண்களும் அதில் நிச்சயமாகப் பங்கு பெற வேண்டும். சபையில்தான் பெண்கள் பேசுவதற்கும், ஜெபிப்பதற்கும் வேதம் அனுமதி தரவில்லையே தவிர, குடும்ப ஆராதனையில் அவர்கள் பேசக்கூடாது என்று வேதம் போதிக்கவில்லை. ஆகவே, வீட்டுத் தலைவிகள் நிச்சயமாக வீட்டுத் தலைவனோடு இணைந்து இதில் ஈடுபட வேண்டும்.
குடும்ப ஆராதனை சிறப்பாக நடக்க வேண்டுமானால் தொடர்ந்தும், வசதிக்கேற்றவிதத்திலும் அதை நடத்தும் அணுகுமுறை நிச்சயம் அவசியம். ஒரு நாள் மட்டும் நடத்திவிட்டு வாரம் முழுவதும் அதை அலட்சியம் செய்யக் கூடாது. தடையில்லாமல் அது தொடர்ந்து குடும்பங்கள் தோறும் நடக்க வேண்டும். அத்தோடு காலையில் வேலை இருந்ததால் குடும்ப ஆராதனை நடத்த முடியவில்லை என்று முழு நாளையும் வீணாக்கிக் கொள்ளக் கூடாது. காலையில் முடியவில்லை என்றால் மாலையிலாவது அதை எப்படியும் நடத்திவிட வேண்டும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு நாளும் இரு தடவை குடும்ப ஆராதனை நடத்தியுள்ளார்கள்.
எவ்வளவு நேரம் குடும்ப ஆராதனை நடத்த வேண்டும்? என்ற கேள்வி நிச்சயம் எழும். அது குடும்பத்தின் அமைப்பையும், குடும்ப அங்கத்தவர்களின் வசதியையும் பொறுத்து அமைய வேண்டும். சிறு குழந்தைகளால் அதிக நேரம் பொறுமையாக இருக்க முடியாது. அதேபோல் பாலருந்தும் பருவக் குழந்தைகளின் வசதியையும் பார்க்க வேண்டும். இதுவரை குடும்ப ஆராதனையில் ஈடுபடாதவர்கள் ஆரம்பத்தில் இருபது நிமிடங்கள் அல்லது முப்பது நிமிடங்களாவது செலவழிப்பது நல்ல ஆரம்பமாக அமையும். சிறிதாக ஆரம்பித்து பெரிய பலன்களை எதிர்காலத்தில் அடைவது சிறந்தது. பெரும் ஆர்வத்துடன் ஆரம்பத்திலேயே ஒருமணி நேரத்திற்கு குடும்ப ஆராதனை நடத்த முயன்றால் அதில் இதுவரை ஈடுபட்டுப் பழக்கமில்லாத குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். ஆகவே, ஆரம்பத்தில் அரை மணி நேரம் போதுமானது. நாளாக ஆக நேரத்தைக் கூட்டிக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்களாவது குடும்ப ஆராதனை செய்யலாம். சங்கீதம் பாடி, வேதவாசிப்போடு வேறு விஷயங் களையும் படித்து ஜெபத்தில் வருவதற்கு நேரம் தேவை. இதை ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தேவைக்கேற்பத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளின் எந்த பகுதியில் குடும்ப ஆராதனை செய்வது என்பதையும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வசதிக்கேற்பத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு காலை வேளையும் ஏனையோருக்கு மாலை வேளையும் பயன்படும். ஆகவே, இதைத் தங்கள் குடும்ப வசதிக்கேற்ப ஒவ்வொரு குடும்பமும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத் தலைவர்களுக்கான குடும்ப ஆராதனை நடத்தும் வழிமுறைகள்
- குடும்ப ஆராதனையை நேரம் தவறாமல் ஒவ்வொரு நாளும் அதற்காகத் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். கர்த்தருடைய காரியங்களை சிரத்தையோடும் பக்தியோடும் செய்ய வேண்டியது அவசியமாதலால் குடும்ப ஆராதனைக்கு குடும்பத்தில் முக்கியமான இடத்தை அளிப்பது அவசியம். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஆராதனையில் தவறாது கலந்துகொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டாலொழிய குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் எப்போதும் ஆராதனை நேரம் வீட்டில் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆராதனையை எப்போதும் ஜெபத்துடன் ஆரம்பிக்க வேண்டும். ஆரம்ப ஜெபம் சுருக்கமானதாக அமைவது சிறந்தது.
- வேத வசனப் பகுதிக்கு ஏற்றவிதத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டதும் குடும்ப அங்கத்தவர்களுக்குப் பிரியமானதுமான சங்கீதங்கள், கீர்த்தனைகளை குடும்பமாக சேர்ந்து பாட வேண்டும். சபையால் பயன்படுத்தப்படும் ஆராதனைப் பாடல்களுக்கு இதில் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். பாடல்களை சிந்தித்துப் பாடுதல் அவசியம். குடும்பத் தலைவர்கள் மிகச் சுருக்கமாக அப்பாடல்களின் கருத்தையும் குடும்ப அங்கத்தவர்களுக்கு விளக்கலாம்.
- அடுத்ததாக, வாசிக்க வேண்டிய வேதப் பகுதியை கவனத்தோடு எல்லோரும் கேட்கக்கூடியதாக வாசிக்க வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வேதப் புத்தகத்தை திறந்து வைத்திருந்து வாசிக்கப்படும் பகுதியைக் கவனிக்க வேண்டும். வாசிக்க எடுத்துக்கொண்ட வேதப் பகுதியைக் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே சிறு சிறு பகுதியாக வாசிக்கும்படிச் செய்யலாம். கூடியிருக்கும் சிறு பிள்ளைகளும் புரிந்துகொள்ளக் கூடியதாக வேதப்பகுதி தெளிவாக நிறுத்தி வாசிக்கப்படுவது அவசியம்.
- வாசித்து முடித்தபின் குடும்பத் தலைவர் அப்பகுதியைத் தெளிவாக அனைவருக்கும் விளக்க வேண்டும். இவ்வேளையில் சிறு குழந்தைகளின் ஆர்வம் குன்றிவிடாதபடி விளக்கங்கள் அளிக்க வேண்டும். இடையில் நிறுத்திக் கேள்விகள் கேட்பதும், நல்ல உதாரணங்களைத் தந்தும் விளக்குவதும் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள உதவும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இதில் பங்குகொள்ளும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். விளக்கங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். வேதப் பகுதியில் யாருக்காவது ஏதேனும் கேள்விகள் இருக்குமானால் அவற்றிற்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கமளிக்க வேண்டும். இதன் காரணமாக குடும்பத் தலைவர்கள் ஏற்கனவே
அன்றைய நாள் வாசிக்க வேண்டிய பகுதியைக் குறித்து சிந்தித்து ஆராதனைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வது அவசியம்.
- வேத வாசிப்புக்குப்பின் நல்ல நூல்களின் சில பகுதிகளை வாசித்தல், வினாவிடைப் போதனைகள், வேத வசனத்தை மனனம் செய்து ஒப்புவித்தல் போன்றவற்றையும் குடும்ப ஆராதனையின்போது சேர்ந்துக்கொள்ளலாம். இவையெல்லாவற்றையும் தேவ பயத்துடன் எல்லோரும் பங்குபெறும் வகையில் நடத்த வேண்டும்.
- இதன்பின் குடும்பம் முழுவதும் ஜெபத்தில் ஈடுபடுதல் அவசியம். இதுபற்றி ஏற்கனவே சுருக்கமாக விளக்கியுள்ளோம். குடும்பத் தலைவர் ஜெபக் குறிப்புகளை எல்லோருக்கும் கொடுத்து அவற்றை விளக்கி குடும்ப அங்கத்தவர்களின் வயதிற்கும், ஆத்மீக வளர்ச்சிக்கும் தகுந்த வகையில் அக்குறிப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு அனைவரும் ஜெபத்தில் ஈடுபட வேண்டும். எப்போதும் ஜெபத்தில் தேவ இராஜ்யத்தின் வளர்ச்சிக்கும், ஆத்மீகத் தேவைகளுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அக்குடும்பம் அங்கத்துவம் வகிக்கும் திருச்சபையின் ஊழியங்களுக்கும், அங்கத்தவர்களின் ஆத்மீகத் தேவைகளுக்கும், திருச்சபையோடு தொடர்புள்ள ஏனைய சபைகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும், திருச்சபை அமைக்கும் பணிக்காக அனுப்பப்பட்டிருப்பவர்களுக்கும், நமது சொந்த ஆத்மீக, சரீர மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும். ஜெபங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும்படியும் இருக்க வேண்டியது அவசியம். நீண்ட ஜெபங்கள் ஜெபிப்பவரின் ஆத்மீக முதிர்ச்சிக்கு அடையாளம் என்று எண்ணிவிடக் கூடாது. ஜெபங்கள் நீண்டதாக அமைந்து சிறுபிள்ளைகள் அக்கறை இழந்துவிடும்படியாக இருக்கக் கூடாது. நாம் ஜெபிக்கும்போது மற்றவர்களும் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு நமது ஜெபங்கள் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருக்கும்படியாக ஒவ்வொருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப அங்கத்தவர்களில்
தேவனை அறியாதவர்கள் இருந்தால் அவர்களும் ஜெபத்தில் கலந்து கொள்ளும்படி அனுமதிக்க வேண்டும். அவர்கள் ஜெபிப்பதைத் தடை செய்யக்கூடாது. முக்கியமாக சிறு பிள்ளைகள் ஜெபம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். குடும்பத் தலைவர் ஜெபத்தை ஆரம்பித்து வைத்து, தானோ அல்லது வேறு எவராவது ஜெபத்தை முடித்து வைக்க வழி நடத்த வேண்டும். எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அங்கத்தவர் தொகையைப் பொறுத்தும், அவர்கள் ஜெபிக்கப்போகும் காரியங்களைப் பொறுத்தும் அமையும்.
- இறுதியில் ஒரு சங்கீதம் அல்லது கீர்த்தனையோடு குடும்ப ஆராதனையை முடிக்கலாம்.
முடிவாக
கிறிஸ்தவக் குடும்பமும், திருச்சபை வாழ்வும் சீரடைய குடும்ப ஆராதனை எத்தனை அவசியம் என்பதில் நமக்கு இனியும் தெளிவில்லாமல் இருக்க முடியாது. குடும்ப ஆராதனை நடத்துவது குடும்பத்தில் இறையியல் கல்லூரி போல் அமைந்து முழுக் குடும்பத்தையும் வேத அறிவில் வளர்க்கும் என்று எவரோ சொல்லியிருப்பது அப்பட்டமான உண்மை. நம் முன்னோர்கள் கிறிஸ்துவின் அன்பிலும், வேத ஞானத்திலும் சிறந்திருக்கப் பேருதவி புரிந்துள்ள குடும்ப ஆராதனை நம் குடும்பங்களிலும் ஒளியேற்றட்டும்.
கிறிஸ்தவக் கோட்பாடுகள்
கேள்வி 46: பத்துக்கட்டளைகள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன?
பதில்: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே என்ற வார்த்தைகளுடன் பத்துக்கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
யாத்திராகமம் 20:2
கேள்வி 47: பத்துக்கட்டளைகளின் அறிமுக வார்த்தைகள் எதை நமக்குப் போதிக்கின்றன?
பதில்: கர்த்தர் நம் ஆண்டவராகவும், தேவனாகவும், மீட்பராகவும் இருப்பதால் அவருடைய அனைத்துக் கட்டளைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பத்துக்கட்டளைகளின் அறிமுக வார்த்தைகள் நமக்குப் போதிக்கின்றன.
சங்கீதம் 100:2-3, எரேமியா 10:7, உபாகமம் 11:1, லூக்கா 1:74-75
விளக்கக்குறிப்பு:
இவ்வினாவிடைகள் இரண்டு முக்கிய அம்சங்களை நமக்குப் போதிக்கின்றன.
- அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகின்றது.
- ஒரு மனிதன் தேவனாகிய கிறிஸ்துவை விசுவாசித்தபின் அவன் நியாயப்பிரமாணத்தைத் தன் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டிய கடமைப்பாடுடையவனாக இருக்கிறான் என்பதாகும். இவ்விருபெரும் உண்மைகளும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இவ்வுண்மைகளை நிராகரிப்பவர்கள் சில போலிப் போதனைகளை உருவாக்கியுள்ளார்கள். ஆகவே இவற்றை இன்று நம்மத்தியில் காணப்படும் போலிப் போதனைகளுடன் தொடர்புபடுத்தி நாம் ஆராய வேண்டியது அவசியமாகிறது.
அன்பும் நியாயப்பிரமாணமும்
நாம் மேற்குறிப்பிட்ட இரு உண்மைகளையும் நிராகரிப்பவர்கள் அன்புக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடிருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவை இரண்டும் சேர்ந்திருக்க முடியாது என்பது அவர் மலைப்பிரசங்கத்தில் இயேசு தான் நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல, அதனை நிறைவேற்றுவதற்காகவே வந்துள்ளதாக எல்லா யூதர்களும் கேட்கும்படியாகத் தெரிவித்தார் (மத்தேயு 5:17). நியாயப்பிரமாணத்திற்கு எதிராக ஒருவரும் செயல்படக்கூடாதென்றும் இயேசு தனது சீடர்களைப்பார்த்து எச்சரித்தார் (மத்தேயு 5:19). அத்தோடு அவர் மலைப்பிரசங்கத்தில் பல கட்டளைகளுக்கு மெய் விளக்கமளித்தார். பரிசேயர்களின் பாரம்பரிய வழக்கங்களையும், அவர்கள் நியாயப்பிரமாணத்துடன் சேர்த்துக்கொண்டிருந்த அநேக புதிய விதிகளையும் இயேசு கடுமையாக எதிர்த்ததுடன் அவற்றைக் கடைபிடிக்கவும் மறுத்தார். அத்தோடு நியாயப்பிரமாணம் அழியாதது என்பதையும் அதைப் பூரணமாகக் கடைபிடிப்பது எவ்வளவு அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் (மத்தேயு 5:48). அன்பு நியாயப்பிரமாணத்திற்கு எதிரானது என்ற வாதத்தைப் பொய்யாக்கும் வகையில் அன்பு இருந்தாலேயே ஒருவனால் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்க முடியும் என்பதைத் தெளிவாகப் போதித்தார். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார் (யோவான் 14:15). என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான் என்றார் இயேசு (யோவான் 14:21). அதனால் தான் அப்போஸ்தலனாகிய யோவானும் நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம் என்று எழுதினார் (1 யோவான் 5:3)
இயேசு பூரணமாக வாழ்ந்து காட்டியவர். அவரைப் போல பூரணமாக அன்பு காட்டியவர் ஒருவருமிலர். மாற்றானையும் தன்னைப்போல அவர் நேசித்தார். அவ்வன்பு நியாயப்பிரமாணத்திற்கு எதிராக அவரைச் செயல்பட வைக்கவில்லை. வேதம் அவர் நம்மைப் போலவே சோதனைகளை வாழ்வில் சந்தித்தபோதும் அவரில் எந்தப்பாவமும் இருக்கவில்லை என்று போதிக்கிறது (எபிரெயர் 4:15). பாவமே நியாயப்பிரமாணத்திற்கு எதிரானது (1 யோவான் 3:4). ஆகவே, நியாயப்பிரமாணத்தை யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் அன்பைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நாம் நம்மை மட்டுமே முழு இருதயத்தோடு நேசிப்போமானால் கர்த்தருக்கு எதிரான காரியங்களைச் செய்ய முற்படுவோம். அதேபோல் நாம் மாற்றாரில் மட்டும் அதிக அன்பு செலுத்தும் போது நமக்கு கர்த்தரின் கட்டளைகளை மீறும் எண்ணமும் தோன்றும். ஆனால் கர்த்தரை நாம் முழு இருதயத்தோடும் நேசித்து, மாற்றாரிலும் அன்பு கூருவோமானால் கர்த்தருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கும் ஆர்வமே நமக்கு ஏற்படும்.
பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள ஒற்றுமை
இன்று அநேக கிறிஸ்தவர்கள் பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்ற போலிப்போதனையைப் பின்பற்றி வருகிறார்கள். இவர்கள் பத்துக்கட்டளைகள் பழைய ஏற்பாட்டில் ஒரு விதத்திலும், புதிய ஏற்பாட்டில் இன்னுமொரு விதத்திலும் விளக்கப்பட்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது பழைய ஏற்பாட்டு யூதர்கள் முதலில் பத்துக் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்த்ததாகவும் அதன் பின்பு அவர்களுடைய விசுவாச செயலுக்கு வெகுமதியாக கர்த்தர் அவர்களுக்கு இரட்சிப்பை அளித்ததாகவும் இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான எண்ணம். பத்துக் கட்டளைகளைக் கர்த்தர் கொடுக்கும் முன்பே யூத மக்களை அவர் எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்தார் என்று பழைய ஏற்பாடு போதிக்கிறது. அதன் பின்பே அவர்களுக்கு பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டது. ஆகவே, பத்துக் கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் இரட்சிப்பை அடைய முடியும் என்று கர்த்தர் போதிக்கவில்லை. அவரை விசுவாசித்தவர்கள் மட்டுமே பத்துக்கட்டளைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க முடியும் என்பது தேவனின் போதனை. இதையே புதிய ஏற்பாடும் போதிக்கின்றது. ஆகவே, பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் இப்போதனைபற்றி எந்தவித வேறுபாடுமில்லை. இரண்டும் ஒரே போதனையையே அளிக்கின்றன.
விசுவாசிகளுக்கு நியாயப்பிரமாணம் அவசியமில்லை (Antinomianism)
பழைய, புதிய ஏற்பாட்டிற்கிடையில் உள்ள ஒற்றுமை புரியாதவர்கள் நியாயப்பிரமாணம் இன்று நமக்கு அவசியமில்லை என்ற போலிப் போதனையைப் பின்பற்றுகிறார்கள். இது ஒரு மோசமான போதனை என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இதனை ஆங்கிலத்தில் “அன்டிநோமியனிசம்” என்று அழைப்பர். அதாவது நியாயப்பிரமாணத்திற்கு எதிரானவர்கள் என்பது இதற்குப் பொருள். மார்டின் லூத்தர் வாழ்ந்த காலத்தில் இப்போதனை இருந்ததை அவர் உணர்ந்து அதற்கு எதிராக அவர் போதித்தார். அவருக்குப்பின் பதினேழாம் நூற்றாண்டிலும் இப்போதனை தலைதூக்கியது. நமது பியூரிட்டன் பிதாக்களும் இதற்கெதிராகப் போராடியுள்ளார்கள். அவர்கள் வெளியிட்ட விசுவாச அறிக்கைகள் இப்போதனைகளை நிராகரித்து நியாயப்பிரமாணம் பற்றி வேதம் போதிக்கும் சத்தியங்களை விளக்கு முகமாக நியாயப்பிரமாணம், கர்த்தரின் உடன்படிக்கை ஆகிய தலைப்புக்கொண்ட அதிகாரங்களை உள்ளடக்கியிருந்தன. அன்டிநோமியனிசம் அன்றாடம் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு பாவத்தோடு போராடி வெற்றி பெறும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையை நிராகரித்து ஒழுக்கக் குறைவான வாழ்க்கையை வாழத்தூண்டியது. சீர்திருத்தவாதிகள் இதனை முற்றாக நிராகரித்தனர். இதனைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பற்றிய தவறான, வேதத்திற்கு முரணான எண்ணங்களைக் கொண்டுள்ளார்கள்.
புதிய உடன்படிக்கை இறையியல் (New Covenant Theology or Doctrinal Antinomians)
இன்று “அன்டிநோமியனிசம்” வேறு பெயர்களில் தலைதூக்கியுள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் சில பாப்திஸ்துகள் இதற்கு “புதிய உடன்படிக்கை இறையியல்” என்ற பெயரைக் கொடுத்து பழம் போலிப் போதனைக்கு உயிரளிக்க ஆரம்பித்துள்ளார்கள். எபிரெயர் 8 இன் அடிப்படையில் புதிய ஏற்பாட்டு புதிய உடன்படிக்கை, பழைய ஏற்பாட்டுப் பழைய உடன்படிக்கையைவிட முற்றிலும் வேறானது. ஆகவே கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தையும் பத்துக் கட்டளைகளையும் இன்று கடைபிடிக்கத் தேவையில்லை, புதிய உடன்படிக்கை அவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று போதிக்கிறார்கள். ஜோண் ரைசிங்கர் (John Reisinger) என்பவர் அமெரிக்காவில் இப்போதனையை பாப்திஸ்துகள் மத்தியில் பெரிதும் பரப்பி வருகிறார். இவரது போதனையின்பாடி பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைக்கும், பத்துக் கட்டளைகளுக்கும் நமக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அவை பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமானவை. இன்று அவை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. இப்போதனையும் அன்டிநோமியனிசத்தைப் போலவே ஓய்வுநாளை நாம் இன்று கடைபிடிக்கத் தேவையில்லை என்றும் போதிக்கின்றது.
இப்போதனையை அளிப்பவர்கள் நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்தவர்கள் பாவம் செய்வதை நிராகரித்த போதும் இறையியல் அடிப்படையில் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றிய தவறான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். தவறான இறையியல் கோட்பாடு வாழ்க்கையில் தவறான வழிமுறைகளுக்கே இட்டுச் செல்லும் என்ற உண்மையை இவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.
இனி வரப்போகும் இதழ்களில் பத்துக் கட்டளைகளில் ஒவ்வொன்றையும் நாம் படிப்படியாக ஆராய்வோம். இப்பொழுது அக்கட்டளைகளை முழுமையாக ஒன்று சேர்த்துப் பார்ப்போம். அவ்வாறு பார்க்கும்போது இக்கட்டளைகள் பற்றிய மூன்று முக்கிய அமசங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
(1) இப்பத்துக்கட்டளைகளும் நமக்கு கர்த்தரின் சித்தத்தை முழுமையாக வெளிப்படுத்துகின்றன. இவற்றைத் தவிர நமக்கு வேறு கட்டளைகள் தேவையில்லை. இவற்றோடு நாம் வேறு எந்தக் கட்டளைகளையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பழைய புதிய ஏற்பாட்டு போதனைகளனைத்தையும் இவை உள்ளடக்கியதாக உள்ளன. இவற்றைக் கர்த்தரின் ஒழுக்க விதிகளின் சுருக்கம் (The Summary of the Moral law of God) என்றும் அழைப்பர். அதாவது கர்த்தரின் ஒழுக்க விதிகளை இப்பத்துக்கட்டளைகள் சுருக்கமாக உள்ளடக்கி வெளிப்படுத்துகின்றன. இக்கட்டளைகள் ஒவ்வொன்றையும் நாம் முறையாக விரிவாகப்படித்தால் இவை மட்டுமே நமக்குப் போதும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
(2) இரண்டாவதாக இக்கட்டளைகள் அருமையாக படிப்படியான ஒரு ஒழுங்கோடு அமைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இது ஒரு தெய்வீக ஒழுங்கே தவிர மனிதனால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. முதல் நான்கு கட்டளைகளும் நாம் கர்த்தருக்கு செய்ய வேண்டிய கடமைகளை விபரிக்கின்றன. இவற்றை பத்துக்கட்டளைகளின் முதல் பாகம் என்று கூறலாம். இவற்றின் இரண்டாம் பாகம் நாம் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை விளக்குகின்றன.
முதலாவது கட்டளை நாம் யாரை ஆராதிக்க வேண்டும் என்று விளக்குகிறது. அதாவது நாம் கர்த்தரை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்பது இதன் போதனை. இரண்டாவது கட்டளை, நாம் கர்த்தரை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறது. அதாவது, நமது சுய சிந்தனைகளைப் பயன்படுத்தி அவரை நாம் ஆராதிக்கக் கூடாது என்பது இக்கட்டளையின் போதனை. மூன்றாம் கட்டளை நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது சுத்த இருதயத்தோடும், பயபக்தியோடும், அன்போடும் ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறது. நான்காவது கட்டளை நாம் கர்த்தரை எந்நாளில் ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறது. அதாவது, கர்த்தர் ஏழு நாட்களில் ஒரு நாளை நமது ஆராதனைக்காகத் தந்துள்ளார் என்பது இதன் போதனை. அந்நாள் ஆண்டவருடைய நாளாகும். அதுவே வாரத்தின் முதல் நாளாகும். பத்துக்கட்டளைகளின் ஏனைய கட்டளைகள் நாம் இதுவரை பார்த்தவற்றின் அடிப்படையில் சக மனிதர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளைக் குறித்துப் பேசுகின்றன.
இப்பத்துக் கட்டளைகளைகள் எவற்றைப் போதிக்கின்றன என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் கீழ்வரும் அட்டவனை மூலம் விளக்கலாம்:
- நாம் ஆராதிக்க வேண்டிய கர்த்தர்
- நாம் ஆராதிக்க வேண்டிய முறை
- ஆராதனையின் போது இருக்க வேண்டிய மனப்பான்மை
- ஆராதனையின் நாள்
- கர்த்தரால் நியமிக்கப்பட்ட அதிகாரத்திற்கு கீழ்ப்படிதல்
- மனிதனில் இருக்கும் கர்த்தரின் சாயலுக்கு மரியாதை
- திருமணத்தில் பரிசுத்தம்
- உடமைகளில் பரிசுத்தம்
- பேச்சில் பரிசுத்தம்
- போதுமான மனத்தைக் கொண்டிருப்பதன் அவசியம்
இதன் மூலம் பத்துக்கட்டளைகளில் ஒரு முறையான தெய்வீக ஒழுங்கிருப்பதைப் பார்க்கலாம். இவ்வொழுங்கைத் தேவனே ஏற்படுத்தித் தந்துள்ளார்.
(3) பத்துக்கட்டளைகள் பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. அவற்றில் அசைக்க முடியாத ஒற்றுமை காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றை நாம் பிரித்தாலும் முழுதும் பிரிந்துவிடும் (யாக்கோபு 2:10). இக்கட்டளைகளைப் பிரிக்க முனைவது கர்த்தருக்கு எதிராக நடப்பதற்கு ஒப்பானது. கர்த்தர் இணைத்துத் தந்துள்ள இக்கட்டளைகளை நாம் பிரிக்க முனையக்கூடாது. இக்கட்டளைகளைப் பிரிக்கவும் அழிக்கவும் வரலாற்றில் மனிதன் எப்போதும் முயற்சி செய்திருக்கிறான். அத்தகையோர் இன்றும் நம்மத்தியில் இருக்கிறார்கள். இவர்களுடைய செய்கைக்கு பாவத்தைத்தவிர வேறு காரணமில்லை. பாவமே மனிதனைக் கர்த்தருக்கு எதிராகச் செயல்படும்படித் தூண்டுகிறது. பாவமே மனிதனைப் பிசாசின் வழியில் போகும்படி வழி நடத்துகின்றது.
பத்துக்கட்டளைகள் இன்று ஒவ்வொரு நாட்டுக்கும் தேவையான தேவ கட்டளைகள். இவற்றிற்கு மதிப்புக் கொடுக்கத் தவறியதாலேயே பல தேசங்களும், இஸ்ரவேலரைப் போலவே துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் இவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்து தன் பாவத்தை உணர்ந்து கிறிஸ்துவை நாடி இரட்சிப்பை இலவசமாகப்பெற்று அதன் மூலம் இக்கட்டளைகளைப் பின்பற்றும் வல்லமையையும் பெற்று அவற்றைக் கடைபிடித்தால் மட்டுமே கர்த்தரின் ஆசீர்வாதத்தை அடையலாம்.
இனிவரும் பாடங்களில் ஒவ்வொரு கட்டளையையும் நாம் விரிவாகப் படிக்கும்போது கர்த்தர் தாமே நம்மை வழி நடத்தி அவரது கட்டளைகளை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டு அவர் வழிப்படி நடக்க நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வுநாள்!
ஓய்வுநாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? அந்நாளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
கிறிஸ்தவ ஓய்வுநாளான வாரத்தின் முதல் நாளைப் பல பெயர்களில் கிறிஸ்தவர்கள் அழைப்பார்கள். ஆண்டவருடைய நாளென்றும் (Lord’s Day), கிறிஸ்தவ சபத்து நாள் (Christian Sabbath) என்றும் அது பொதுவாக அறியப்படுகின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டு சபத்து நாளுக்கும் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற ஒரு போலிப்போதனை இன்று நேற்றென்றிராமல் இருந்திருக்கின்றது. அத்தோடு வாரத்தின் இறுதி நாளை ஓய்வுநாளென்று, பழைய ஏற்பாட்டின்படி செவன்த் டே அன்வென்டிஸ்ட்ஸ் கூட்டம் இன்றும் பின்பற்றி வருகின்றது. ஆண்டவருடைய நாள் ஒரு வசதிக்குத்தான் ஓய்வுநாளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை நாம் ஒன்றும் பெரிதுபடுத்தக்கூடாது என்றும் எல்லா நாளும் ஆண்டவரின் நாள்தான் என்ற தொனியில் வாரத்தின் முதல் நாளை மற்ற நாட்களைப்போலப் பயன்படுத்தி தாம் நினைத்ததை அந்நாளில் செய்பவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில் வேதம் இந்நாளைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்பதுதான் நமது நோக்கம். பத்துக் கட்டளைகளில் ஒன்றான நான்காம் கட்டளை இந்நாளை நாம் ஆராதனை நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என்று போதிக்கின்றது. இவ்விதழின் கிறிஸ்தவக் கோட்பாடுகள் பகுதியில் பத்துக் கட்டளைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்கியுள்ளோம் (பக்கங்கள் 700-705). நமது முன்னோர்கள் 1689 விசுவாச அறிக்கையில் ஒரு அதிகாரத்தை இதற்காக ஒதுக்கி ஆண்வருடைய நாள் என்ற தலைப்பில் இதுபற்றி விளக்கமான போதனையளித்துள்ளார்கள். வரலாற்றில் எழுந்த சீர்திருத்த வினாவிடையும் விளக்கமாக இதுபற்றிப் போதிக்கின்றது.
கிறிஸ்தவ சபத்து நாளான ஓய்வுநாளைப்பற்றிப் பார்க்கும்போது முதலில் பழைய ஏற்பாட்டின் ஒரு வேதப்பகுதியை விரிவாக ஆராய்வோம். ஏசாயா புத்தகத்தின் 58:13-14 வசனங்களை விளக்கமாகப் பார்ப்போம். இங்கே ஏசாயா தீர்க்கதரிசி ஓய்வுநாளைக்குறித்து கர்த்தர் பேசிய வார்த்தைகளை இவ்வாறாக நம்முன் வைக்கிறார்.
“என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளென்றும் சொல்லி அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மன மகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிப் பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்திரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.”
கர்த்தரின் இவ்வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இஸ்ரவேலர் கர்த்தரை அவருடைய வார்த்தையைப் பின்பற்றி ஆராதிக்கும் முறையைக் கைவிட்டுவிட்டார்கள். அத்தோடு அவர்கள் ஓய்வுநாளையும் களங்கப்படுத்தினார்கள். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பதைவிட்டு அந்நாளில் தாம் நினைத்ததைச் செய்தார்கள். ஓய்வுநாளை ஏனைய நாளைப் போலக் கருதி செயல்பட்டார்கள். அந்நாளில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் அலட்சியப்படுத்தினார்கள். ஏசாயா 52:2-6 வரையிலான வசனங்கள் இஸ்ரவேலரின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் ஓய்வுநாளைக் கைவிட்டுவிட்டதுதான்.
ஓய்வுநாளை மட்டும் இஸ்ரவேலர் கைவிட்டுவிடவில்லை. அவர்கள் விசுவாசமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். பரிசேயர்களைப்போல போலித்தனமான மதப்பற்றைக் கொண்டிருந்து ஆராதனையின் தேவனை அலட்சியப்படுத்தினார்கள். இருதயம் கல்லாய்ப்போய் கர்த்தருக்கு எதிராக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்முன் பலிகளையும் செலுத்தி வந்தார்கள். இவ்வாறாக எங்கே மெய்யான வழிபாடு இல்லையோ அங்கெல்லாம் ஓய்வுநாளுக்கு மதிப்பு இருக்காது. மெய்யான தேவ வழிபாடும் ஓய்வுநாளைக் கடைபிடிப்பதும் இணைந்தே இருக்கும். அவற்றைப் பிரிக்க முடியாது.
எனவே கர்த்தர் இவ்வார்த்தைகள் மூலம் இஸ்ரவேலரைக் கண்டிக்கிறார். மெய்யான வழிபாடு எது என்று இவ்வார்த்தைகளின் மூலம் அவர்களுக்கு விளக்குகிறார். இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று விளக்குகிறார்.
இவ்வார்த்தைகளின் மூலம் கர்த்தர் தன் மக்களுக்கு வாக்குத்தத்தம் செய்து தரும் மூன்று முக்கிய ஆசீர்வாதங்களையும் அவற்றை நாம் அனுபவிப்பதற்காக அவர் விதித்துள்ள நிபந்தனையையும் இனிப்பார்ப்போம்.
- முதலாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருந்தால் அவருடனான உறவில் கர்த்தருடைய பிள்ளைகள் மகிழ்ந்திருப்பார்கள் என்று கர்த்தர் சொன்னார்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடன் எப்போதுமே உறவிருக்கும். அத்தகைய உறவை அவர்கள் கிறிஸ்துவுக்குள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே கர்த்தர் அவ்வுறவில் அவர்கள் மேலதிகமாக அடையக்கூடிய ஆசீர்வாதத்தையும், மனமகிழ்ச்சியையும் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரிடமிருந்து இத்தகைய மேலான ஆசீர்வாதத்தையும், ஆனந்தத்தையும் ஓய்வுநாளைக் கடைபிடிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று கர்த்தர் கூறுகிறார். 14 ம் வசனம், “நீ மனமகிழ்ச்சியாயிருப்பாய்” என்று கூறுகிறது. 13வது வசனம் அம்மனமகிழ்ச்சி எவ்வாறு கிடைக்கும் என்று கூறுகிறது. “என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப் பேச்சைப் பேசாமலுமிருந்தால்” என்னோடு அதிக மனமகிழ்சியுடன் நீ ஐக்கியத்தில் இருக்க முடியும் என்று கர்த்தர் கூறுகிறார்.
இங்கே கர்த்தர் வாக்குத்தத்தம் செய்து கொடுப்பது நாம் ஏற்கனவே அவரிடம் இருந்து பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களைவிட அதிகமானது. இவ்வாசீர்வாதம் கிறிஸ்தவனுக்கு மட்டுமே உரியது. கிறிஸ்தவன் இரட்சிப்பின் மூலம் கிறிஸ்துவுக்குள் இவ்வாசீர்வாதத்தை அடையும் பாக்கியத்தை ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளான். ஆனால் ஓய்வுநாளை முறையாக கர்த்தரின் வார்த்தையின்படிக் கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய கர்த்தருக்குள்ளான மனமகிழ்ச்சியை அவன் அனுபவிக்க முடியும். எவரும் தவறாக இதைக் கெரிஸ்மெட்டிக் கூட்டம் போதிக்கும் ஒரு புதிய ஆசீர்வாதமாக எண்ணிவிடக்கூடாது. இது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உடமையானது. இதை அனுபவிக்கும் தகுதியை அவன் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் அடைந்துவிட்டான். ஆனால், அதன் பலனை ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
14ஆம் வசனம் போதிக்கும் மனமகிழ்ச்சி கர்த்தருக்குள் அனுபவிக்கக்கூடிய நெருக்கமான, ஆழமான, அழகான, ஆனந்தமான மனமகிழ்ச்சியைக் குறிக்கிறது. இதை எவ்வாறு ஒரு கிறிஸ்தவனால் அனுபவிக்க முடியும்? கர்த்தருடைய பரிசுத்தமான ஓய்வுநாளை அவருடைய வார்த்தையின்படி வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். இதையே ஏசாயா மூலம் கர்த்தர் நினைவுபடுத்துகிறார். கர்த்தர் ஓய்வுநாளில் எதைச் செய்யும்படிச் சொல்லியிருக்கிறாரோ அவற்றைக் கீழ்ப்படிவுடன் நீங்கள் செய்வீர்களானால் கர்த்தருக்குள் நீங்கள் மனமகிழ்ச்சியாயிருக்கலாம். அவ்வாறு நீங்கள் கீழ்ப்படிய மறுத்தால் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்து தந்திருக்கும் இத்தகைய மனமகிழ்ச்சியை நீங்கள் அவரிடம் இருந்து பெற்றனுபவிக்க முடியாது. இதற்காக நீங்கள் உங்களுடைய இரட்சிப்பை இழந்துவிடமாட்டீர்கள்; தொடர்ந்தும் விசுவாசியாகவே இருப்பீர்கள். ஆனால், இவ்வுலக வாழ்வில் உங்களுடைய ஆழமான பக்திவிருத்திக்காகவும், தம்மோடு இருக்கவேண்டிய ஆழமான, நெருக்கமான உறவிற்காகவும் கர்த்தரே ஏற்படுத்தித் தந்திருக்கும் அருமையான நாளைப் பரிசுத்தமாக வைத்திராததால் அதிலிருந்து வரக்கூடிய பலனை நீங்கள் அடைய முடியாது. உதாரணத்திற்கு ஒரு தகப்பனையும் அவருடைய மகனையும் எடுத்துக் கொள்வோம். தகப்பன் மகனைப் பார்த்து, “மகனே! நீ இன்று ஸ்கூலிலிருந்து வந்தவுடன் நான் சொல்கிற வேலையை செய்தால் உனக்கு ஒரு பரிசு கொடுக்கப்போகிறேன்” என்று சொல்கிறார். அப்பரிசை அவர் தன் மகனுக்கு மட்டுமே கொடுக்க நிச்சயித்திருக்கிறார். அதை வேறு யாரும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மகன் தகப்பன் சொன்ன வேலையை செய்தால் மட்டுமே அப்பரிசை அனுபவிக்க முடியும். தந்தையின் மனதைக் குளிர வைக்க முடியும். அவ்வேலையை மகன் செய்யாமல் விட்டால் அவனுக்கும் தகப்பனுக்கும் உள்ள உறவு அழிந்துவிடாது. தகப்பன் தொடர்ந்தும் அவனை நேசிப்பார். ஆனால், மகன் தகப்பன் சொன்னதை செய்யாமல் போவதால் தான் அடையக்கூடிய பரிசையும், தன்னுடைய கீழ்ப்படிதலைப் பார்த்து தகப்பன் அடையக்கூடிய ஆனந்தத்தையும் இழந்து போகலாம். இதேபோலத்தான் ஓய்வுநாளை நாம் பரிசுத்தமாக வைக்காமல் போவதால் கர்த்தருக்குள் நாம் மனமகிழ்ச்சியாயிருக்க முடியாது.
- இரண்டாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்குகர்த்தர் அவர்களுடைய எதிரிகள் மீது வெற்றியைத் தருவதாக வாக்குத்தத்தம் செய்கிறார்.
ஏசாயா 58:14 வது வசனத்தில் “பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணுவேன்” என்று கர்த்தர் கூறுகிறார். இது எதிரிகள் மீதான வெற்றியைக் குறிக்கும் அடையாள வார்த்தைகள். இத்தகைய வெற்றியைத் தன் மக்களுக்குத் தரப்போவதாக கர்த்தர் கூறுகிறார். இதே உண்மையைப் போதிக்கும் அடையாள மொழியை நாம் வேறு பகுதிகளிலும் வாசிக்கலாம். உதாரணத்திற்கு இரு வேதப்பகுதிகளைப் பார்ப்போம். உபாகமம் 32:12-13, “கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவனோடே இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறிவரப் பண்ணினார். வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படிச் செய்தார்”. இது இஸ்ரவேலருக்கு கர்த்தரளிக்கும் வெற்றியைக் குறிக்கும் அடையாள மொழி. இதேபோல் உபாகமம் 33:29 இல், “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; . . . உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை நீ மிதிப்பாய்” என்று வாசிக்கிறோம்.
புதிய ஏற்பாடும் கிறிஸ்தவர்கள் அடையும் வெற்றியைக் குறித்துப் பேசுகிறது. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் (8:37) “நாம் இவை யெல்லாவற்றிலும் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” என்று கிறிஸ்தவ வாழ்க்கையில் நாமடையும் வெற்றியைக் குறித்துப் பேசுகிறார். பவுல் இதே நிருபத்தில் நாம் பிசாசுடனும், பாவத்துடனுமான போராட்டத்தில் அடையக்கூடிய வெற்றியையும் பற்றிப் பேசுகிறார். பழைய ஏற்பாடு கிறிஸ்தவர்கள் அடையக்கூடிய இத்தகைய வெற்றியை இஸ்ரவேலர் எதிரிகளை வென்று அந்நிய தேசத்திலிருந்து திரும்பி வரும் காட்சியின் மூலம் படம் பிடித்துக்காட்டுகிறது.
ஏசாயா 58:14, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தர் இத்தகைய வெற்றிகளைத் தருவார் என்று கூறுகின்றது. ஆண்டவருடைய நாளான ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நாம் பாவத்தில் மரித்து பரிசுத்த வாழ்க்கையில் வளர்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஓய்வுநாளைக் கர்த்தரின் வார்த்தையின்படிக் கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதன் மூலம் பாவத்திற்கு மரண அடி கிடைக்கின்றது. கிறிஸ்தவன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்கிறான்; பெலமடைகிறான்; எதிரிகள் பயங்கொள்ளும்படி உயர்கிறான்.
- மூன்றாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்குகர்த்தர் இரட்சிப்பின் பலாபலன்களை ஆழமாக அனுபவிக்கும் ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.
ஏசாயா 58:14 இல் கர்த்தர், “உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்” என்று கூறுகிறார். அதாவது யாக்கோபு அடைந்த சொத்துக்களின் மூலம் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார். இத்தகைய மொழிநடை இஸ்ரவேலர், கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை அனுபவிப்பார்கள் என்பதை விளக்குகின்றது. கர்த்தர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பலன்களை இஸ்ரவேலர் அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார்.
சங்கீதம் 144:12-15 ஆகிய பழைய ஏற்பாட்டு வசனங்கள் கர்த்தரின் ஜனங்கள் அடையக்கூடிய பாக்கியங்களை விளக்குகிறது. “அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக் கன்றுகளைப் போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரம் தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களையும் போலவும் இருப்பார்கள். எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாய் இருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப் போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.”
இத்தகைய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக நமக்கும் அவற்றிற்கும் தொடர்புண்டு. இவை பழைய ஏற்பாட்டு மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் அல்ல. இவை நமக்காகவும் தரப்பட்டவை. கர்த்தருடைய பிள்ளைகளுக்காகக் கொடுக்கப்பட்டவை. பழைய ஏற்பாட்டில் கர்த்தரை மகிமைப்படுத்திய மக்கள் இவற்றை அனுபவித்தது போல் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவரை மகிமைப்படுத்துபவர்கள் இவற்றை அனுபவிப்பார்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான இரட்சிப்பின் பலன்களான நமது ஐசுவரியங் களையும் ஆசீர்வாதங்களையும் எபேசியர் முதலாவது நிருபத்தில் பவுல் பட்டியல் போட்டுத் தருவதைக் கவனித்துப் பாருங்கள். அவை கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றுக்கொண்டுள்ள ஐசுவரியங்கள். தெரிந்து கொள்ளல் (1:4), சுவீகாரப்புத்திரத்துவம் (1:6), பாவமன்னிப்பாகிய மீட்பு (1:7), அவருடைய சித்தத்தின் இரகசியத்தின் வெளிப்பாடு (1:10), முன்குறிக்கப்பட்டோம் (1:12), கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரர் (1:12), பரிசுத்த ஆவி (1:13). இத்தகைய ஆசீர்வாதங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. நாம் இவற்றை அன்றாடம் வாசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக வேதத்தில் கொடுக்கப்படவில்லை. நாம் ஆவிக்குள் அனுபவிப்பதற்காக இவை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் ஒவ்வொரு நாளும் பங்கெடுக்க வேண்டும். இவற்றின் நிச்சயம் நம்மில் தொடர்ந்திருக்க வேண்டும். அந்நிச்சயத்தின் ஆனந்தத்தில் நாம் அன்றாடம் திளைக்க வேண்டும். இது எவ்வாறு ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நிகழ்கிறது? கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய நன்மைக்காக கர்த்தர் தந்துள்ள ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருந்து அந்நாளில் கர்த்தர் செய்யும்படியாகக் கூறியுள்ள காரியங்களை செய்யும் போது இவ்வாவிக்குரிய ஐசுவரியங்களில் அவர்கள் பங்கு கொள்கிறார்கள். அவற்றில் நிச்சயத்துவத்தைப் பெறுகிறார்கள். இவற்றில் நாம் ஒவ்வொரு நாளும் பங்குகொண்டு மனமகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் ஓய்வுநாளில் இவற்றில் அளப்பரிய மனமகிழ்ச்சியடைகிறோம். ஏசாயா 58:14, “கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” என்று கூறுகிறது. அதாவது கர்த்தர் இவற்றை நாம் அனுபவிப்போம் என்று உறுதி கூறியிருக்கிறார். ஆகவே, ஓய்வுநாளை நாம் பரிசுத்தமாக வைப்போமானால் நமது ஆவிக்குரிய ஐசுவரியங்களில் நாம் விசேடமான முறையில் பங்கு கொண்டு மனமகிழ்ச்சியடைவது நிச்சயம். கர்த்தரின் வாய் இப்படிச் சொல்கிறது.
- நான்காவதாக, இவ்வாசீர்வாதங்களைத் தமது பிள்ளைகள் அனுபவிப்பதற்காக கர்த்தர் விதித்துள்ள நிபந்தனைகளை ஆராய்வோம்.
கர்த்தர் தந்துள்ள வாக்குத்தத்தங்களை நாமனுபவிக்க வேண்டுமானால் நமக்கு ஓய்வுநாளைப் பற்றிய நல்லறிவு இருத்தல் வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளென்று ஒன்றிருக்கும் உணர்வில்லாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஓய்வுநாளைப்பற்றி அறிந்திருப்பவர்களும் அந்நாளை ஒரு நேர ஆராதனைக்காக சபைக்குச் செல்லும் ஒரு நாளாக மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இது ஓய்வுநாளைப்பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். இன்று ஓய்வுநாளைக் குறித்த சீர்திருத்தம் தமிழ்க் கிறிஸ்தவர்களிடத்திலும், தமிழ்க் கிறிஸ்தவ சபைகளிடத்திலும் ஏற்பட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது.
இனிக் கர்த்தர் இப்பகுதியில் விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்ப்போம். ஏசாயா 58:13 ஆவது வசனம் இந்நிபந்தனைகளை விளக்குகிறது.
- உனக்கு இஷ்டமானதைச் செய்யாமல் உனது காலை விலக்கிக் கொள்.
இதை இன்னுமொருவிதமாகக் கூறப்போனால் ஓய்வுநாள் கர்த்தருடைய பரிசுத்த நாளாக இருப்பதால் அந்நாளில் நீ நினைத்ததைச் செய்யாமல் இருப்பாயாக. இம்முதலாவது நிபந்தனை நாம் நினைத்ததை அந்நாளில் செய்யக்கூடாதென்ற தடையை ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் அந்நாள் கர்த்தருடைய பரிசுத்தமான நாள். ஆதியாகமம் 2:2, கர்த்தர் அனைத்தையும் படைத்தபின் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று கூறுகிறது. 3 ஆம் வசனம் அவர் அந்நாளில் தனது கிரியைகளையெல்லாம் முடித்தபின் ஓய்ந்திருந்தபடியால் அந்நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று கூறுகின்றது. அதேபோல் யாத்திராகமம் 20:8 இல் கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் ஒன்றான நான்காம் கட்டளை, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைத்திருப்பாயாக என்று கூறுகிறது. இங்கே 10, 11 ஆம் வசனங்கள் அந்நாளில் செய்யக்கூடாத காரியங்கள் என்ன என்று பட்டியலிட்டுத் தருகின்றன. அத்தோடு அந்நாளைக் கர்த்தர் பரிசுத்தமான நாளாக்கியிருப்பதாலேயே அந்நாளில் பல காரியங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரணமளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுநாள் ஆராதனையின் நாளாக இருப்பதால் அந்நாளில் நாம் பணம் சம்பாதிப்பதற்கான எந்த வேலையும் செய்வதைக் கர்த்தர் தடை செய்துள்ளார். வழமையாக மற்ற நாட்களில் நாம் வெளியில் செய்யும் வேலை, வீட்டில் செய்யும் வேலை எதையும் இந்நாளில் செய்யக்கூடாது. அந்நாளில் வியாபாரம் செய்வது, மற்றவர்களை வீட்டில் வேலைக்கு வைப்பது, விளையாட்டிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுவது போன்ற காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் தடைசெய்துள்ளார். இந்நாளில் நாம் களியாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. டெலிவிஷனில் நேரத்தைக் கழிப்பது, செய்திப்பத்திரிகையில் தலையைக் கவிழ்த்துக்கொள்வது போன்ற பரிசுத்தமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அளிக்கமுடியாத காரியங்கள் செய்வதை இந்நாளில் தவர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே நம் வழிகளில் நடவாமலும், நமக்கு விருப்பமானதைச் செய்யாமலும் இந்நாளில் கர்த்தர் தன் வார்த்தையில் கூறும் விதமாக மட்டும் நடக்க முயல வேண்டும்.
- உன் சொந்தப் பேச்சைப் பேசாதே.
அத்தோடு ஏசாயா இப்பகுதியில் உன் சொந்தப் பேச்சையும் பேசாதே என்று கூறுகிறார். தேவையற்ற, ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாத பேச்சை இந்நாளில் பேசக்கூடாது. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு போன்ற காரியங்களைப் பற்றிப் பேசி அரட்டை அடிப்பது கர்த்தருக்கு விரோதமான செயல். நம் சொந்தப் பேச்சைப் பேசாமல் வேத பூர்வமான பேச்சைப் பேச வேண்டும். கர்த்தரைப் பற்றி அவரது வார்த்தைகளைப்பற்றி, ஓய்வுநாளில் நாம் படித்த பாடங்களைப் பற்றி, கேட்ட வசனங்களைப் பற்றிப் பேச வேண்டும்.
இத்தகைய காரியங்களிலிருந்து விலகி கர்த்தரின் ஆராதனையில் ஈடுபட்டு அவருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்பதையே அவர் விரும்புகிறார். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருக்க முடியாத காரியங்களை இந்நாளில் நாம் செய்ய முனைவது நமக்கு இஷ்டமான காரியங்களைச் செய்வதாகும். அதிலிருந்து விலகு என்று கர்த்தர் கூறுகிறார். இன்று பல கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் குறைவாக இருக்கின்றது. ஓய்வுநாளில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய விசுவாசத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். சிலர் இப்படியெல்லாம் வாழ்ந்தால் குடி முழுகிப்போய்விடும் என்று எந்த வேலையையும் செய்யத் துணிவார்கள். சிலர் இது நடைமுறைக்கு ஒத்துவராது என்று ஓய்வுநாளை உதாசீனப்படுத்துவார்கள். கர்த்தரின் பிள்ளைகளுக்கு தேவ பயம் முதலில் இருக்க வேண்டும். உங்களுக்கு தேவ பயம் இருக்கிறதா? தேவ பயமிருந்தாலொழிய நீங்கள் கர்த்தரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு நடக்கமாட்டீர்கள். தேவ பயமிருக்கும் இடத்தில்தான் ஞானம் இருக்கும். ஞானமிருப்பவர்களே கர்த்தர் சொன்னதை மட்டும் செய்யும் மனப்பக்குவத்தைக் கொண்டு அதன்படி வாழ முற்படுவார்கள். இஸ்ரவேலருக்கு தேவ பயமிருக்கவில்லை. ஞானமும் இருக்கவில்லை. அதனால்தான் தங்கள் வழியில் நடந்து கர்த்தரின் வழிகளை அலட்சியப்படுத்தினார்கள்.
ஓய்வுநாளின் முழுப்பகுதியையும் நாம் சபை ஆராதனைகளில் கலந்து கொள்வதில் செலவிட வேண்டும். அதன்பின் இருக்கும் நேரத்தை நாம் வீட்டில் குடும்பத்தோடு செலவிட்டு குடும்ப ஆராதனை, மற்றும் தனி வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இதற்கும் மீறி இருக்கும் நேரத்தை கிறிஸ்தவ நண்பர்களுடன் வேதக் காரியங்களைப் பேசுவதில் செலவிடலாம். நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் வைத்திய சாலைகளில் இருந்தால் அவர்களைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லலாம். இந்நாளில் கருணைக்குரிய காரியங்களையும் செய்ய கர்த்தர் அனுமதி அளித்திருக்கிறார். ஆனால் இவற்றை மீறி உலகப்பிரகாரமான காரியங்களில் ஆண்டவருடைய நாளில் ஈடுபடுவது அவரது கட்டளையை மீறி நடப்பதாகும். ஓய்வுநாளை நாம் ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(வளரும்)
யெகோவாவின் சாட்சிகள் யார்?
யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நீங்கள் அவசியம் எழுத வேண்டும், அவர்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை என்று பலர் கேட்டிருந்தனர். இக்கூட்டத்தைக் குறித்து இப்பகுதியில் விளக்கமாகப் பார்ப்போம். முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பிடித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றஞ்சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் “புதிய உலக மொழிபெயர்ப்பு” வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.
இவர்கள் போதிப்பதென்ன?
யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.
- காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.
- கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற கடவுள் இல்லை என்பது இவர்களின் விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனேயொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.
- பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்லமையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.
இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.
- மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.
- நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.
- கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.
- மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.
இது ஒரு போலிப்போதனை
கிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு போலிப்போதனை. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
தமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைபிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடுத்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.
தமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.
இவர்களைத் தவிர்ப்பதெப்படி?
வேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.
இக்கூட்டத்திற்குத் தம்மைப் பலி கொடுத்தவர்களை எப்படிக் காப்பது?
யெகோவாவின் சாட்சிகள் சிந்திக்க முடியாத ஒரு மனநிலையை வளர்த்துக் கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசும்போது நாம் கிறிஸ்துவைப் பற்றியும், உயிர்த்தெழுதல் பற்றியும், திரித்துவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் தெளிவாக வேதத்தைத் திறந்து வைத்துப் பேச வேண்டும். இப்போதனைகளுக்கு ஆதாரமான வேத வசனங்களை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும். அவர்கள் இவ்வசனங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர்கள் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்குத் தாவ முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் மீண்டும் அவர்களை நாம் பேசும் பொருளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும். முதல் நாளிலேயே அவர்கள் நாம் கூறுவதைக் கேட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. இக்கூட்டத்தில் சேர்ந்து சிந்தித்து ஆராயும் பக்குவத்தை இழந்து மற்றவர்களை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் மன நிலையை இவர்கள் பெற்றுக் கொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து அவர்களுடன் பேசி வேத போதனைகளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்யவேண்டும். இவர்களுடன் பேச முயல்பவர்களுக்கு நல்ல வேத அறிவு இருப்பதோடு சுருக்கமாகவும், தெளிவாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடிய பக்குவமும் இருக்க வேண்டும்.
இவற்றோடு நமது ஞானத்திலும், வல்லமையிலும், திறமையிலும் தங்கியிருக்காமல் நாம் கூறும் வேத வசனங்களைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மனந்திரும்பும்படிச் செய்யுமாறு நாம் ஜெபத்துடன் இப்பணியில் ஈடுபட வேண்டும். கர்த்தர் மட்டுமே இக்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கும் விடுதலை கொடுக்க முடியும். கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிச் செய்ய முடியும்.
வில்லியம் டின்டேல்
இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரெய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 - 1521 வருடங்களில் ஆக்ஸ்பர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவே இல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்தைத் தன் கரத்தில் வைத்திருந்த ரோமன் கத்தோலிக்க சபை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மொழியிலும் வேதத்தை மொழிபெயர்க்க அனுமதி தராது என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறு வேதத்தை இலத்தீன் மொழியில் இருந்து இன்னுமொரு மொழியில் மொழிபெயர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயலாக இல்லாமலிருந்தாலும் அக்காலத்தில் ஆண்டவருடைய ஜெபத்தையும், பத்துக் கட்டளைகளையும், அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கையையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் போதித்த காரணத்திற்காக ஏழு பேர் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர்.
மதகுரு ஒருவருடைய துணையும் பாதுகாப்பும் இல்லாமல் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட முடியாதென்று உணர்ந்த டின்டேல் லண்டன் பிஷப் டன்ஸ்டலின் துணையை நாடி லண்டனுக்கும் 1523இல் சென்றார். ஆனால் அரசியல் நிலவரங்களால் அத்தகைய உதவியை அளிக்க பிஷப் டன்ஸ்டல் தயங்கினார். இங்கிலாந்தில் இருந்து மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடுவது முடியாத காரியமென்று உணர்ந்த டின்டேல் 1524 இல் ஜெர்மனிக்குப் போகத் தீர்மானித்தார். அரசருடைய அனுமதியையும் பெறாமல் ஜெர்மனியில் விட்டன்பர்க் என்ற இடத்தை அடைந்தார் டின்டேல். ஜெர்மனியை அடையுமுன் இரகசியமாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்திருந்தார் டின்டேல். விட்டன்பர்க்கில் இருந்து கொலோனை அடைந்த டின்டேல் தனது மொழிபெயர்ப்பை அச்சிடும் பணியில் ஈடுபட்டார்.
அச்சுப்பணி பாதி முடியுமுன்பே அது அச்சிடப்படுகின்றது என்பதை அறிந்த கத்தோலிக்கர்கள் டின்டேலுக்கு பெருந்துன்பத்தை விளைவித்தனர். இதனால் கொலோனில் இருந்து தனது மொழிபெயர்ப்போடு எதிரிகளிடம் இருந்து தப்பி டின்டேல் வேர்ம்ஸ் என்ற இடத்தை அடைந்தார். அங்கே இறுதியாக தனது வேத மொழிபெயர்ப்பை அச்சிட்டு முடித்தார். வேர்ம்ஸிலேயே டின்டேலின் முதல் புதிய ஏற்பாட்டுப் பிரதி வெளியானது. அரசனுடையதும், அதிகாரிகளுடையதும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இப்புதிய ஏற்பாடு இங்கிலாந்தை 1526 இல் அடைந்தது. ஜெர்மனியில் இருந்த இங்கிலாந்து வியாபாரிகள் மூலமாக டின்டேலின் புதிய ஏற்பாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தின் நகரங்கள், கிராமங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது. பிஷப் டின்ஸ்டல் இப்பிரதிகளைக் கைப்பற்றி அழிக்க பெரு முயற்சி செய்தார். இதைக் கேள்விப்பட்ட டின்டேல், “புதிய ஏற்பாட்டை எரிப்பதன் மூலம் நான் எதிர்பார்க்காததை அவர்கள் செய்துவிடவில்லை; அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள். கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்” என்றார்.
இவ்வெதிர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள், அதன் மறுபதிப்புகள், திருத்தப்பதிப்புகள் என்று டின்டேலின் புதிய ஏற்பாடு இங்கிலாந்தின் நாடு நகரங்கள் எல்லாம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்க மதகுருக்கள் இதைத் தடுப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர். பணம் கொடுத்து அனைத்துப் பிரதிகளையும் வாங்கினால் அவை மக்களை அடைவதைத் தடுத்துவிடலாம் என்று முடிவு செய்து அவ்வாறே செய்தனர். இதனால் இப்பிரதிகளை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்த வியாபாரிகளால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடிந்தது. மதகுருக்கள் எரிப்பதற்கும் அதிக புதிய ஏற்பாடுகள் கிடைத்தன. டின்டேல் புதிதாக ஒரு திருத்திய புதிய ஏற்பாட்டை வெளியிடுவதற்குத் தேவையான பணமும் கிடைத்தது. இப்புதிய ஏற்பாடு என்றுமில்லாத வகையில் இங்கிலாந்து மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் நல்ல வேத விருந்தளித்தது.
1611 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இன்றும் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வரும் கிங் ஜேம்ஸ் வேதம் (King James Version) தொண்ணூறு வீதம் டின்டேலின் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. டின்டேல் தனது எதிரிகளின் கரங்களில் பிடிபடாமல் தொடர்ந்து எழுதியும், மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தும் வந்தார். இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு பிரசல்ஸில் ஒரு கோட்டையில் வைக்கப்பட்டார். சிறை பிடிக்கப்பட்டு பதினாறு மாதங்களுக்குப் பின்பு ஆகஸ்ட் 1536 இல் டின்டேலுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தன் செயல்களுக்காக மன்னிப்பு கேட்கும்படி டின்டேலை அவரது எதிரிகள் வற்புறுத்தினர். அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் டின்டேலை சித்திரவதை செய்து உயிரோடு எரித்தனர். இறப்பதற்கு முன் டின்டேல், இங்கிலாந்து அரசரின் கண்கள் திறக்க வேண்டும் என்று ஜெபித்து மடிந்தார்.
சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த அநேக கிறிஸ்தவர்களில் டின்டேலும் ஒருவர். வேதத்தை நாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையும் அவ்வேதத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் தம் உயிரைத் தந்த டின்டேலை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வில்லியம் கேரி
கேரியின் குடும்பம்
கேரி ஊழியத்தில் எதிர்கொள்ள நேரிட்ட பல இடறல்கள் மத்தியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் கேரி பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிட்டது. கேரி தன் மனைவி டொரத்தியை இழந்தார். டொரத்தியின் வாழ்க்கையின் இறுதி 5 வருடங்களில் அவரது மனநிலை பெரு மோசமடைந்தது. தன் மனநிலை பாதிப்பால் சுற்றி இருந்தவர்களை யார்? எவர்? என்று புரிந்து கொள்ளும் திறனுமின்றி டொரத்தி அவர்களைத் தாக்கவும் தொடங்கினார். இதைப் பார்த்த டேனிஸ் அதிகாரிகள் டொரத்தியை மனநிலை வைத்தியசாலைக்கு அனுப்பும்படி கேரியைக் கேட்டுக் கொண்டனர். இரண்டு முறை டொரத்தி கேரியைக் கொல்லவும் முயன்றார். ஆனால் அக்காலத்து மனநிலை வைத்தியசாலைகளின் மோசமான நிலைபற்றி நண்பரொருவர் மூலம் கேள்விப்பட்ட கேரி, டொரத்தியைக் வீட்டிலேயே வைத்து கவனித்துக் கொள்ளத் தீர்மானித்தார். கேரி ஒரு நல்ல தாதியைப் போலத் தன் மனைவிக்கு இறுதிவரை பணி செய்தார். 1807 ஆம் ஆண்டு தன்னுடைய மனக் கவலைகளில் எல்லாம் இருந்து விடை பெற்று டொரத்தி கர்த்தருடைய திருப்பாதங்களை சென்றடைந்தார். அவருடைய பெயர் நிச்சயமாக ஜீவ புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
தன் மனைவியைப் பறிகொடுத்தது மட்டுமல்லாமல் கேரி தன் மகனான பீலிக்ஸையும் விட்டுப் பிரிந்திருக்க நேரிட்டது. 1807 ஆம் ஆண்டில் செட்டர் பீலிக்ஸைத் தன்னுடன் பர்மாவுக்கு அனுப்பும்படிக் கேரியை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். பீலிக்ஸ்க்கும் மற்ற பிரதேசங்களுக்கு ஊழியம் செய்யப்போகும் வாஞ்சை இருந்தது. பீலிக்ஸ் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்று வைத்தியத் துறையில் பயிற்சி பெற்று நற்குணங்கள் நிரம்பப்பெற்று இருபத்தொரு வயதிலேயே ஊழியப்பணிக்கு சபையால் நியமிக்கப்பட்டிருந்தார். கேரிக்கு மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு பீலிக்ஸின் உதவி தேவையாக இருந்தபோதும் பர்மாவுக்கு பீலிக்ஸ் போவதற்கு அவர் தடையாக இருக்கவில்லை. பீலிக்ஸ்க்கும், செட்டருக்கும் கேரி அதிக ஆலோசனைகளைத் தந்து ஆசீர்வதித்தார்.
கேரியையும், வார்டையும் பிரிந்து செல்வது பீலிக்ஸ்க்கு அதிக வருத்தத்தைத் தந்தது. பர்மாவிலிருந்து அவர்களுக்கு எதையாவது அனுப்பி வைக்க பீலிக்ஸ் தவறவில்லை. பர்மீய வைஸ்ராய் மிஷன் ஊழியங்களில் அக்கறை காட்டினார். நோய்களுக்கு மிஷனரிகள் தந்த மருந்து மக்களுக்கு உதவியாயிருந்தது. சுவிசேஷ ஊழியமும், சமூகப் பணியும் ஒன்றிணைந்து பர்மீய மக்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும், சரீரத்திற்கும் புத்துணர்வளிக்கும் வழி பிறந்தது. ஆனால் போர் மேகங்கள் பர்மாவைக் கவ்விப் பிடிக்க மிஷனரிகள் இந்தியாவிற்குத் திரும்ப நேரிட்டது. ஆனால் மறுபடியும் பீலிக்ஸ் பர்மாவிற்கு விரைவிலேயே திரும்பினார். இந்நேரத்தில் தன் மனைவி பிரசவத்தின் போது இறந்த செய்தி பீலிக்ஸை எட்டியது. தொல்லைகள் பலவற்றிற்கும் மத்தியில் பீலிக்ஸ் தன் ஊழியப்பணியைத் தொடர்ந்தார்.
இக்காலத்தில் பர்மீய மொழியான பாலி மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் பெருந் தொடர்பிருந்ததை பீலிக்ஸ் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பு கேரிக்குப் பெரு மகிழ்ச்சி தந்து அவரது சமஸ்கிருத வேத மொழிபெயர்ப்பின் திருத்தத்திற்கு மேலும் உதவியது. பீலிக்ஸ் பாலி மொழியைப் பயின்றதோடு சுவிசேஷ ஊழியத்திலும் அதிக அக்கறை காட்டினார். தண்டனை பெற்று இறக்கும் தருவாயிலிருந்த ஒரு மனிதனுக்காக வைஸ்ராயிடம் வாதாடி அவனை மீட்டு, அவன் காயங்களுக்கு மருந்திட்டு பீலிக்ஸ் காப்பாற்றினார். அவரது இத்தகைய நற்பணிகள் பர்மீய மக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. இவையெல்லாம் கேரிக்கு அதிக ஆனந்தத்தை அளித்தது.
1808 ஆம் ஆண்டில் கேரி மறுமணம் செய்து கொண்டார். டேனிஸ் பெண்ணான சார்ளட் (Charlotte) நடக்க முடியாமல் இருந்ததோடு நோயுற்றவரா யுமிருந்தார். இந்தியாவுக்கு வந்த அவருக்கு கவர்னர் வேண்டுதலின்படி கேரி ஆங்கிலம் கற்றுத் தந்தார். அத்தோடு கிறிஸ்துவைப்பற்றியும் கேரி அவருக்கு எடுத்துக் கூறினார். கிறிஸ்துவை விசுவாசித்து சார்ளட் திருமுழுக்கும் பெற்றுக் கொண்டார். பல மொழிகள் அறிந்திருந்த சார்ளட் கேரியின் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அதிக துணையாக இருந்தார்.
இதே வருடத்தில் கேரியின் இரண்டாவது மகனான வில்லியமும் ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டார். கேரிக்கும் இது அதிக ஆனந்தத்தை அளித்தது. கர்த்தருக்கு அவர் பெருநன்றி செலுத்தினார். கேரி ஆரம்ப காலங்களில் வங்காளத்தில் ஊழியம் செய்த இடத்திலேயே சுவிசேஷம் அறிவிக்க வில்லியம் நியமிக்கப்பட்டார். ஆர்வத்துடன் வில்லியத்திற்கு தேவையான ஆலோசனைகளை அளிக்க கேரி தவறவில்லை. பீலிக்ஸ்க்கு அறிவுரைகள் தந்தது போலவே, “மகனே! நீ ஊழியத்திற்கு உன்னை முழுவதுமாக அர்ப்பணி. உறுதியாக இரு. உன் அழைப்புக்கிணங்க பாடுபடு. கிறிஸ்துவின் ஊழியத்திற்காக முதன் முதலாக அனுப்பப்பட்டிருக்கும் நம்மில் அவ்வூழியம் அதிகம் தங்கியிருக்கிறது” என்றெல்லாம் கூறி வில்லியத்தை ஆசீர்வதித்தார் கேரி.
கேரி தன் மகனோடு அதிகமான கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அக்கடிதங்கள் அனைத்தும் அன்பொழுக எழுதப்பட்டிருந்தன. இருந்தபோதும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து எழுதவும் கேரி தவறவில்லை. அக்கடிதங்களில் பெரும்பாலானவற்றை கேரி சேகரித்து வைத்திருந்தார். அவற்றில் அநேகமானவை அழியாமல் தப்பி இன்றும் இருக்கின்றன.
1811 ஆம் ஆண்டில் வில்லியம் கட்வாவுக்கு (Katwa) வரவேண்டியதாயிற்று. கட்வாவின் சபைப் பொறுப்பை வில்லியம் ஏற்றார். தான் சுவிசேஷப் பணிக்கே தகுதியுள்ளவன் சபைப் போதகனாக சபையை ஆள்வதற்கு தனக்கு தகுதி இல்லை என்றெல்லாம் வில்லியம் ஆரம்பத்தில் மறுப்புச் சொன்னாலும் கர்த்தரின் அழைப்பின்படி அப்பணியை ஏற்றுக்கொண்டார். தனது தகுதியைப் பற்றிய சந்தேகத்துடனும் அதிக சரீர பலவீனத்துடனும் இருந்த வில்லியம் இருபது வருடங்களுக்கு மேலாக அச்சபையை வழி நடத்தினார். தனது சுவிசேஷப் பணி ஆர்வத்தை சிறிதும் இழக்காமல், அநேக ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து. கல்லூரிகளை நிறுவி நல்லூழியம் செய்தார் வில்லியம். ஆத்மீக ஊழியங்கள் செய்தது மட்டுமன்றி காப்பித் தோட்டங்களையும் வில்லியம் நிறுவினார். தமது ஊழியத் தேவைகளை சந்திக்க அவசியமான உடு துணிகள், பருத்தி, சக்கரை, இன்திகோ (Indigo) போன்றவைகளையும் வில்லியம் தயாரித்தார். கல்கத்தாவிலிருந்து ஒரு தோணி நிரம்பிய காப்பிச் செடிகளை கேரி வில்லியத்திற்கு அனுப்பி வைத்தார்.
தன்னோடிருந்த மிகப்பயனுள்ள மிஷனரிகளில் வில்லியமும் ஒருவர் என்று கேரி தன் நண்பரொருவருக்கு எழுதினார். வில்லியத்திற்கு ஊர் மக்களின் வங்காள மொழி நன்றாகத் தெரிந்திருந்தது. வங்காள மக்கள் தங்கள் மொழியை மிக நன்றாக தங்களைப் போலவே பேசும் வெள்ளையரான வில்லியத்தின் பேச்சைக் கேட்க மிக ஆர்வத்துடன் வந்தார்கள் என்று கேரியின் சக ஊழியரொருவர் எழுதினார்.
கேரியின் சுகவீனம்
1809 ஆம் ஆண்டில் வெயில் கொடுமை தாங்கமுடியாது கேரி நோய்வாய்ப்பட்டார். வங்காள வேதத்தின் இரண்டாம் பதிப்பைக் வெளியிடுவதற்காக அவர் மிகவும் உழைத்திருந்தார். ஜூனில் அதன் அச்சுத்திருத்தம் முடிந்திருந்தது. அவரது சக ஊழியர்கள் இனி வேறு என்ன செய்யப்போகிறோம் என்று கேரியைப் பார்த்துக் கேட்டபோது, இன்னும் இருபது வருடங்களுக்கு தனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் இருப்பதாக கேரி அறிவித்தார். அந்நாள் மாலையிலேயே கேரிக்கு கடும் ஜ்ரம் உண்டானது. கேரி ஜ்ரத்தால் படும் பாட்டைப் பார்த்த எல்லோரும் அவர் இறந்துவிடுவார் என்றே எண்ணினர். வில்லியம், ஜேபஸ் (Jabez), வார்ட், ஜொனத்தன் (Jonathan) என்று எல்லோருமே கேரிக்கு இக்காலங்களில் அதிக பணிவிடைகள் செய்தனர். வங்காள மொழி வேத மொழிபெயர்ப்பே கேரியின் இறுதி ஊழியப்பணி என்று எண்ணி எல்லோருமே அவரது முடிவை எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் கேரிக்கு அதிக வல்லமை இருந்தது. ஜ்ரத்தால் பிதற்றி பெருந் துன்பமடைந்தபோதும் இறுதியில் கேரி அதை வென்று உயிர் பிழைத்தார். அதை ஓர் அற்புதமாகவே எல்லோரும் எண்ணினர்.
1811 ஆம் ஆண்டில் பீலிக்ஸ் மறுமணம் செய்துக் கொண்டார். அவரது முதல் மனைவி இறந்து மூன்று வருடங்களாகி இருந்தது. பர்மாவிலேயே பிறந்திருந்த அவருடைய புதிய மனைவி பிரித்தானிய கப்பல் தலைவரொருவரின் மகள். அவருடைய பர்மீய மொழி அறிவும், பர்மீய கலாச்சார பழக்க வழக்கங்களில் இருந்த பரிச்சயமும் பீலிக்ஸின் ஊழியத்திற்கு பேருதவியாக அமைந்தன.
இவ்வாறாக வங்காளத்திலும் பர்மாவிலும் கேரி, மார்ஷ்மன், வார்ட், பீலிக்ஸ், வில்லியம் மற்றும் அவர்களோடு இணைந்து பணிபுரிந்த உள்ளூர் பண்டிதர்கள், ஊழியர்கள், மக்கள் அனைவருடைய மொழிபெயர்ப்புப் பணிகளும் சுவிசேஷப் பணிகளும் தொடர்ந்தன. நம்காலத்தில் நாம் சந்திக்காத பல இடற்பாடுகளையும், துன்பங்களையும், வசதிக்குறைவையும் அவர்கள் சந்திக்க நேரிட்டபோதும் இயேசுவின் அன்பினால் கட்டப்பட்டு அதிக மன வைராக்கியத்தோடு தன்னலம் கருதாது கர்த்தரின் மகிமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இம்மிஷனரிகள் ஹிந்துஸ்தானில் ஊழியம் புரிந்தனர். இக்காலத்து ஊழியக்காரர்கள் இவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்துப் படிக்க வேண்டிய பாடங்கள்தான் எத்தனை!
வேதனையளிக்கும் சாதனைகள்!
ஒரு மனிதனின் சாதனைகள் வேதனை தருவதாக இருக்கக்கூடாது. அவற்றால் மக்கள் பயனடைய வேண்டும். அவை கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். கர்த்தரை மகிமைப் படுத்தாத எதுவும் பெரும் சாதனையாகிவிட முடியாது. இதை ஏன் கூறுகிறேன் என்றால் சாதனைகள் பலவற்றைத் தன் வாழ்க்கையில் செய்த ஒரு நல்ல மனிதர் அவற்றால் கர்த்தர் மகிமைப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை இழந்துவிட்ட வேதனை தரும் செயலை இப்பகுதியில் எழுதப்போவதால்தான். யார் இந்த மனிதர் என்று நீங்கள் சிந்திக்கலாம். உலகமறிந்த, குறிப்பாக தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பில்லி கிரேகம்தான். நாம் 2000 த்தைத் தாண்டி நின்றாலும் பில்லி கிரெகம் என்ற தனி மனிதனின் பாதிப்பு கிறிஸ்தவ உலகை இன்றும் சூழ்ந்திருக்கின்றது. பில்லி கிரேகமின் பெயரில் கட்டிடங்கள் இல்லாத தமிழ்க் கிறிஸ்தவ சபைகள், இறையியல் கல்லூரிகள் இன்று இருக்க முடியாது. கீழைத்தேய மேலைத்தேய நாடுகளில் இருந்து பில்லி கிரேகம் இவெஞ்ஜலிக்கல் அசோசியேஷன் வருடாந்தரம் நடத்தும் சுவிசேஷ ஊழியர் பயிற்சி மகாநாட்டிற்கு எதிர்பார்ப்போடு ஆயிரக்கணக்கில் இன்றும் போய்க் கொண்டி ருக்கிறார்கள். வீடறிந்த, நாடறிந்த சுவிசேஷ ஊழியர் பில்லி கிரேகம்.
இளம் வயதிலேயே ஆர்வத்துடன் கிறிஸ்தவ சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லி ஆரம்பித்து, கிறிஸ்துவுக்காக வாலிபர்கள் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அதிவிரைவிலேயே வளர்ச்சியடைந்து பில்லி கிரேகம் இவென்ஜலிக்கல் அசோசியேஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து உலகமுழுதும் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லும் பணியைச் செய்தவர் பில்லி கிரேகம். அமெரிக்காவின் சார்ள்ஸ் பினி, மூடி போன்றவர்களுக்குப் பின் அவர்களையும் மிஞ்சும் அளவுக்கு பெரும் கூட்டத்திற்கு சுவிசேஷத்தை சொன்னவர் பில்லி கிரேகம். பல நாட்டுப் பெரும் தலைவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உறவாடும் பெருமையையும் பெற்றவர். தன் நாடான அமெரிக்காவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிபர்களின் நல்ல நண்பராகவும் இருக்கும் வாய்ப்பையும் அடைந்தவர்.
ரூத்தை திருமணம் செய்து அவர் மூலம் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் தகப்பனாயிருந்தார். அவர்களும் கூட இப்போது கிறிஸ்தவ ஊழியத்திலேயே ஈடுபட்டுள்ளனர். உலகில் பல சுவிசேஷ ஊழியர்களும் தன்னைப் பின்பற்றும் அளவுக்குப் புகழ் சேர்த்துக்கொண்ட பில்லி கிரேகம் இன்றைய சுவிசேஷ ஊழியர்களைப்போல பணம் சேர்த்து தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. ஜிம் பேக்கர், ஜிம்மி கூசகர்ட் போன்ற சுவிசேஷ ஊழியர்களைப் போலத் தவறான பெண் தொடர்பால் தன் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. குடும்ப வாழ்க்கையில் அமைதியையும், ஆனந்தத்தையும் அவர் கண்டார்.
இன்று வயது எழுபதைத் தாண்டி பார்க்கின்சன் வியாதியின் பாதிப்பால் தொடர்ந்தும் ஊழியம் செய்யமுடியாத நிலையில் முடிந்த சிறு காரியங்களை மட்டும் செய்து வாழ்ந்து வருகிறார் பில்லி கிரேகம்.
சாதனைகளைப் பொறுத்தவரையில் பில்லி கிரேகம் இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. இத்தனை நல்லம்சங்களைத் தன் வாழ்வில் கொண்டுள்ள பில்லி கிரேகம் செய்த வேதனை தரும் காரியங்கள்தான் என்ன? இந்தக் கேள்வி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பில்லி கிரேகம் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? என்றுகூட அங்கலாய்க்கலாம். கிறிஸ்தவத் திற்கு கிரேகமின் பங்களிப்பென்ன? என்பதை இனி ஆராய்வோம்.
அர்ப்பண அழைப்பு (Altar Call) சுவிசேஷ ஊழியம்
பெரும் கூட்டத்தைக் கூட்டி சுவிசேஷத்தை அறிவித்து கூட்ட இறுதியில் மக்களைக் கூட்டத்தின் முன் வரவழைத்து கர்த்தரை ஏற்றுக்கொள்ளும் வகையில் கரமுயர்த்தி தீர்மானம் எடுக்க வைக்கும் வழியைத் தன் முன்னோடியான சார்ள்ஸ் பினியைப் பின்பற்றித் தொடர்ந்தவர் பில்லி கிரேகம். இத்தகைய அர்ப்பண அழைப்பு (Altar Call) முறையில் பில்லி பெரு நம்பிக்கை வைத்திருந்தார். இதற்குக் காரணம் பில்லி கிரேகம் பின்பற்றிய இறையியல் கோட்பாடுதான். பாவத்தினால் மனிதனின் சித்தம் பாதிக்கப்படவில்லை என்றும் அது சுதந்திரமாக இயங்கக்கூடிய வல்லமையைக் கொண்டு மனிதன் கர்த்தரை ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தியுள்ளதென்றும் பில்லி கிரேகம் உறுதியாக நம்பினார். இந்தப் போதனையை ஆர்மீனியனிசம் என்று அழைப்பார்கள். இது வேதத்திற்கு முரணான போதனை. இப்போதனையின் அடிப்படையில் ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தரின் வல்லமையில் தங்கியிருக்க வேண்டும் என்ற வேதபோதனையை நிராகரித்து மனிதன் தனது சித்தத்தைப் பயன்படுத்தி கர்த்தரிடம் வருவதற்கு அவசியமான, தனது சரீரத்தின் மூலமாக செய்யக்கூடிய செயலில் பில்லி கிரேகம் பெரு நம்பிக்கை காட்டினார். இதைக் குறிக்கும் வகையிலேயே அவருடைய பிரசங்கங்களும் இருந்தன. “இவ்வளவு தூரம் வந்துவிட்டு நீங்கள் திரும்பிப் போகலாமா? கர்த்தருக்கும் உங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்திருக்கிறது. உங்களை நேசித்ததாலேயே கிறிஸ்து கல்வாரிக்குப் போனார். இந்த மேடைக்கு முன் வருவதற்கு உங்களால் முடியாதா? உடனடியாக இப்போதே வாருங்கள்” என்றும், “எனக்குக் கூட்டங்களில் பொதுவான அழைப்புக் கொடுப்பதில் விருப்பமில்லை, கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் பெற்றுக் கொள்வதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் உணரும்படியாக உறுதியான அழைப்புக் கொடுப்பதையே நான் கடமையாகக் கொண்டுள்ளேன்” என்றும் கிரேகம் கூறினார் [Evangelicalism Divided by Iain Murray, BTP. Page 52]. இவ்வார்த்தைகள், தனது சித்தத்தைப் பயன்படுத்தி மனிதன் கர்த்தரைத் தன் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கிரேகமின் உறுதியான நம்பிக்கையை விளக்குகின்றன. கிறிஸ்தவன் யார்? என்று விளக்கும் வேதத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலேயே கிரேகமிற்கு சரியான விளக்கம் இருக்கவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல அர்ப்பண அழைப்பு அநேகருக்கு இரட்சிப்பை அளிக்கவில்லை என்பது கிரேகமிற்குப் புரிந்தது. இருந்தபோதும் அவரால் அவ்வாறு அழைப்புக் கொடுப்பதை நிறுத்த முடியவில்லை. கிரேகம் இதனைத் தொடர்ந்து பின்பற்றியதற்கு ஒரு காரணமிருந்தது. அதை விளக்கும் கிரேகம், “சாதாரண அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அழைப்பை ஏற்றுக் கூட்டத்தில் முன்னோக்கி வருவதைப் பார்க்கும் போது சுவிசேஷத்தைக் குறித்து சிந்திக்கத் தொடங்குவார்கள்” என்றார் [Evangelicalism Divided by Iain Murray, BTP. Page 76]. ஆகவே, பில்லி கிரேகமைப் பொறுத்தவரையில் ஏதோ ஒருவிதத்தில் அர்ப்பண அழைப்பு உதவுவதாக இருந்தது. வேதம் அதைச் செய்யும்படிப் போதிக்கிறதோ இல்லையோ தனது நோக்கங் களுக்கு அது துணை செய்வதாக இருந்ததால் பில்லி கிரேகம் அதைப் பின்பற்றினார்.
கிரேகம் ஒரு சமய சமரசவாதி (Ecumenist)
பில்லி கிரேகம் கத்தோலிக்க மதத்துடனும் வேதத்தை நிராகரிக்கும் லிபரல் இறையியலாளருடனும் இணைந்து ஊழியம் செய்யத் தொடங்கினார். கத்தோலிக்க மத குருக்கள் அவருடைய கூட்டங்களை ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார்கள். கூட்டங்களில் கரமுயர்த்தி கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள் கத்தோலிக்க சபைகளுக்கு சீடத்துவத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். தனது சுவிசேஷக் கூட்டங்களில் கத்தோலிக்க மத குருக்களை கவுன்சலர்களாகவும் பில்லி கிரேகம் நியமிக்கத் தயங்கவில்லை. அதேபோல் லிபரல் இறையியலாளருடன் கிரேகம் பெருந் தொடர்பு வைத்திருந்தார். அவரது கூட்ட மேடைகளை அவர்கள் அதிகளவில் அலங்கரித்தனர். லண்டனில் பெரும் பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் 1954 இல் கிரேகமின் பெரும் லண்டனில் சுவிசேஷக் கூட்டத்திற்கு ஆதரவு தரமறுத்ததுடன், கிரேகம் கத்தோலிக்க, லிபரல் தொடர்புகளை அறுத்துக் கொண்டு அர்ப்பண அழைப்புக் கொடுப்பதைக் கைவிட்டால்தான் அக்கூட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கிரேகமிடம் நேரடியாகக் கூறினார். ஆனால், அதற்குப் பின்பு பதிலெழுதிய பில்லி கிரேகம், இவற்றைக் கைவிட்டால் தனது நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று மட்டும் எழுதினார். [Evangelicalism Divided by Iain Murray, BTP. Page 75]
லிபரல், கத்தோலிக்கத் தொடர்பு கிரேகமை அதிகளவு பாதித்தது. போப்பரசர் லூயியை ஒரு அருமையான மனிதரென்று கூறிய கிரேகம், கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒரே சுவிசேஷத்தையே நம்புவதாகக் கூறினார். வேத போதனைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கையும் குறையத் தொடங்கியது. கர்த்தரின் சிருஷ்டி ஆறு நாட்களில் நிகழ்ந்ததாக தன்னால் நம்ப முடியாதென்று கிரேகம் ஒரு முறை கூறியுள்ளார். இதையும் விட மோசமானது இந்துக்களும், புத்தமதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தைக் கேட்காமலேயே கர்த்தரை அறிந்து கொள்ள முடியும் என்று கிரேகம் விசுவாசிப்பதுதான். ரொபட் சுளர் என்ற லிபரல் போதகர் கிரேகமைப் பார்த்து, “கிறிஸ்தவ சுவிசேஷத்தையோ, வேதத்தையோ அறியாத மனிதர்களின் இதயத்தில் இயேசு குடிபுக முடியுமென்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது கிரேகம் அதற்குப் பதிலாக “ஆம், அதை நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று பதிலளித்தார். [Evangelicalism Divided by Iain Murray, BTP. Page 74]
காலம் செல்லச் செல்ல கிரேகம் படிப்படியாகத் தனது ஆரம்பகால வேத நம்பிக்கைகளைக் கைவிட்டார். வேதக்கோட்பாடுகளைப் பின்பற்றி சத்தியத்திற்காகப் போராடுவது என்ற சுவிசேஷக் கோட்பாட்டின் நிலையை மாற்றி எம்மதமும் சம்மதம், எக்கோட்பாடும் நற்கோட்பாடு என்ற சமய சமரசக் கோட்பாட்டைக் (Ecumenism) கிரேகம் உறுதியாகப் பின்பற்றத் தொடங்கினார்.
பில்லி கிரேகமைப் பொறுத்தவரையில் எந்த சமயக் குழுவும், சபையும் எதைப் பின்பற்றினாலும் கவலை இல்லை. அவர்களுடைய கோட்பாட்டிற்கு எதிராகத் தான் நிற்பதில்லை என்ற முடிவுடன் தனது ஊழியங்களை கிரேகம் நடத்தினார். இவ்வாறு நடந்து கொண்டால் மட்டுமே தனது சுவிசேஷக் கூட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள், வருவார்கள் என்பது கிரேகமுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, விசுவாசம் என்ற பெயரில் எந்தளவுக்குக் குறைவான சத்தியத்தைப் பின்பற்ற வேண்டுமோ அதை மட்டுமே கிரேகம் செய்தார். இதையே ஒவ்வொரு சமய சமரசவாதியும் செய்வான். கிரேகமிற்கு பெண்கள் ஊழியத்தைக் குறித்தும் எந்தவித வேத பூர்வமான விசுவாசமும் இருக்கவில்லை. தனது நிறுவனம் நடத்தும் சுவிசேஷ ஊழியர்கள் பயிற்சி மகா நாடுகளில் தனது மகளைப் பிரசங்கம் செய்ய கிரேகம் அனுமதித்தார். சமீபத்தில் நிகழ்ந்த அத்தகைய மகாநாட்டில் கிரேகமின் மகளே பேசினார்.
பில்லி கிரேகமின் வருகையால் சுவிசேஷ ஊழியத்திற்கு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று அறுபது, எழுபதுகளில் நம்பியவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி கிரேகம் தனது சந்தர்ப்பவாத செயல்முறைகளாலும், குறைந்தளவிலான இறையியல் கோட்பாட்டு விசுவாசத்தாலும் சுவிசேஷ இயக்கத்திற்கே மாசேற்படுத்தினார். தனது வாழ்வின் இறுதி நாட்களை நோய்வாய்ப்பட்டு அமைதியாகக் கழித்துக் கொண்டிருக்கும் கிரேகம் தனது செயல்களை எண்ணிப் பார்த்து தான் சுவிசேஷ உலகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆவியின் வழி நடத்தலால் உணரும் வாய்ப்பு ஏற்படுமா? வேதத்தை ஆராய்ந்து பார்த்து அதன் போதனைகளைப் பின்பற்றாமல், எத்தனை நல்ல மனிதனாக இருந்தாலும், தனி மனிதனொருவரின் செல்வாக்கிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது எத்தனை ஆபத்து என்பதை பில்லி கிரேகமின் ஊழியம் எடுத்துக் காட்டுகின்றது.
1 கொரிந்தியர் 12-14
- ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய விளக்கம் -
இதற்கு முன் வந்த இதழில், 1 கொரிந்தியர் 13 அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று அதற்கு விளக்கம் கொடுத்தோம். அவ்விளக்கத்தில் தூதர் பாஷை என்று ஓன்றில்லை என்று தெளிவாக விளக்கியிருந்தோம். வேதத்தை ஏனோதானோவென்று படித்துப் புரிந்துகொள்ள முடியாது. இவ்வாறு படிப்பதனாலேயே கெரிஸ்மெட்டிக் கூட்டம் இன்று தூதர் பாஷை என்று ஒன்றிருப்பதாக கதை கட்டிவிட்டிருக்கிறது.
அன்பின் பெருமை
இவ்வதிகாரத்தில் 8 வரையிலான வசனங்கள் அன்பின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. அன்பு எத்தகையது என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன. அன்பைக் கொண்டிருப்பவர்கள் இப்பகுதி போதிக்கும் விதத்தில் நடப்பார்கள். அன்பு என்பது வெறும் உணர்வலையல்ல. சந்தோஷப்படுவது மனித வாழ்க்கையின் ஓர் அம்சம். அது ஓர் உணர்ச்சி, ஓர் அனுபவம். அதுமட்டுமல்லாது அது மாறும் தன்மை கொண்டது. ஆனால், அன்பு இதைவிட வேறுபட்டது. அன்பு இருப்பவர்கள் குறிப்பிட்டவிதத்தில் நடக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கின்றது. சந்தோஷப்படுகிறவன் அதைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தன் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் அன்பு சில இலக்கணங்களைக் கொண்டிருந்து அன்பு இருப்பவர்கள் அவ்விலக்கணங்களின்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நான் அன்புள்ளவன் ஆனால் இவ்விலக்கணங்களின்படி நடக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒருவரும் கூற முடியாது. ஆகவே அன்பு வெறும் மாறும் தன்மை கொண்ட ஓர் உணர்வலை என்ற தவறான எண்ணத்தை எவரும் கொண்டிருக்கக் கூடாது.
இங்கே பவுல் அன்பின் தன்மையைப்பற்றிப் பேசும்போது கிறிஸ்துவையே அடையாளமாகக் காட்டுகிறார். கிறிஸ்துவின் அன்பு பரிசுத்தமானது. இயேசு அன்பின் உருவமாக இவ்வுலகில் தோன்றி அது இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று காட்டினார். யூதர்கள் மத்தியில் அக்காலத்தில் இருந்த பரிசேயர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. அவர்களுடைய பேச்சில் இருந்த அன்பு செயலில் இல்லை. அவர்களுடைய இருதயத்தில் அன்பு குடி புகுந்திருக்கவில்லை. கிறிஸ்து நம் வாழ்வில் குடிபுகுந்திருந்தால் மட்டுமே பவுல் போதிக்கும் இவ்வன்பு நம்மில் இருக்க முடியும். கிறிஸ்துவை அறியாதவர்களால் இத்தகைய அன்பைக் கொண்டிருக்க முடியாது.
அன்பு விட்டுக்கொடுக்கும். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு விசுவாசத்தில் உறுதியாக உள்ளவர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்று போதித்தார். அன்பு எரிச்சலடையாது, பொறாமை கொள்ளாது. அது இருக்குமிடத்தில் தாழ்மை இருக்கும். இன்று மேடை ஏறித் தற்பெருமை அடித்துக் கொள்ளும் பிரசங்கிகள் இதைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேநேரம் அன்பு இருக்கும் இடத்தில் பொய் இருக்காது. பொய்யான நடத்தை, முகத்தாட்சண்யத்திற்காக எதையும் செய்தல், முகத்திற்கு முன்னால் சிரித்துப் பேசி பின்னால் புறம் பேசுதல் போன்ற பழக்கங்களுக்கும் அன்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்பு இருக்கும் இடத்தில் உண்மை இருக்கும், சத்தியம் இருக்கும். அன்பு சந்தேகப்படாது. சந்தேகிக்கும் வகையில் நடந்துகொள்ளாது. அன்பு தவற்றைச் சுட்டிக்காட்டும், கண்டிக்கும். தவறு செய்பவர்களைத் திருத்த முயலும். ஆனால், தவற்றைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துவிடுவதுதான் நாட்டு வழக்கம் என்று பலர் நடந்துகொள்வார்கள். இதற்கும் அன்புக்கும் தொடர்பில்லை. தவற்றைச் சுட்டிக்காட்டி அதை அன்போடு திருத்த முயலாதவர்களுக்கு அன்பென்றால் என்னவென்றே தெரியாது. பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனை சபை கண்டித்து தண்டிக்க வேண்டும் என்று பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதினார். அது அன்பான நடவடிக்கை, அன்பு இருந்ததால்தான் அவர்கள் தவறான வாழ்க்கை வாழ்ந்ததை பவுலால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. “கர்த்தர் தாம் அன்புகூருகிறவர்களை சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” என்று எபிரெயர் 12:6 வசனத்தில் வாசிக்கிறோம். ஆகவே, அன்பு சக சகோதரனை சிட்சித்து திருத்த முயலும்.
இப்பகுதியை நாம் வெறுமனே வாசித்துவிட்டு இருந்து விடமுடியாது. இவை சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய வசனங்கள். இவ்வசனங்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் நாம் நடந்துகொள்ளவில்லையா? இவற்றின்படி நடக்காத விசுவாசி கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர முடியுமா? நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பவர்கள் மத்தியில் அன்பு இருக்கும் என்று இயேசு சொன்னார். என்னில் அன்பு செலுத்துபவர்கள் அதைக் கடைபிடிப்பார்கள் என்று இயேசு சொன்னார். இப்பகுதியில் பவுல் போதிக்கும் சத்தியங்கள் நம் வாழ்க்கையில் இல்லையெனில் அங்கு அன்பு எப்படி இருக்க முடியும்? அந்நியபாஷையை பேசுவதும், தீர்க்கதரிசனம் சொல்லுவதும் அன்பு இருப்பதற்கு அடையாளங்கள் அல்ல. அந்நியபாஷை பேசுவதால் ஒருவன் பரலோகம் போய்விட முடியாது. ஆனால், அன்பைத் தன்னில் கொண்டிருப்பவன் நிச்சயம் பரலோகம் போக முடியும். ஏனெனில் அன்பைக் கொண்டிருப்பவன் வாழ்வில் இயேசு இருக்கிறார். அந்நிய பாஷைக்காக அலைவதைவிட கர்த்தரின் கிருபையின் துணையுடன் அன்பின் இலக்கணங்கள் நம் வாழ்க்கையில் அன்றாடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை.
அன்பு நிரந்தரமானது
13 ஆம் அதிகாரத்தின் இறுதி வசனங்கள் (13:8-13) மிகமுக்கியமான வசனங்கள். இதுவரை அன்பின் பெருமையைப்பற்றிக் கூறிவந்துள்ள பவுல் இப்போது அன்பு நிரந்தரமானது என்று கூறுகிறார். அன்பு ஒருக்காலும் அழியாது. அதாவது, இவ்வுலகில் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது. அது எப்போதும் தொடர்ந்திருக்கும் என்பது இதற்குப் பொருள். பரலோகத்திலும் அன்பு இருக்கும். ஆனால் இவ்வுலகில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாத வேறு சில கிருபைகள் உள்ளன. அவை என்ன என்று கூறி அவற்றை அன்போடு ஒப்பிட்டு விளக்கமளிக்கிறார் பவுல்.
மூன்று வரங்களை பவுல் இங்கு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறார். தீர்க்கதரிசனங்கள், அந்நியபாஷைகள், அறிவு என்பவையே இம்மூன்று உதாரணங்களாகும். அன்பு ஒருபோதும் அழிந்துபோகாது என்று கூறும் பவுல் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு காலத்தில் இல்லாமல் போகும் என்றும் கூறுகிறார். இம்மூன்று வரங்களைப்பற்றியும் பவுல் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
முதலாவது வரமான தீர்க்கதரிசனம் ஒரு காலத்தில் “ஒழிந்துபோம்” என்று பவுல் கூறுகிறார் (13:8). அதாவது, அது ஒரு காலத்தில் இவ்வுலகில் ஒருவரும் பயன்படுத்த முடியாதபடி இல்லாமல் போகும் என்பது இதற்குப் பொருள். இதே வார்த்தையே அறிவைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தை அன்பைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையோடு ஒப்பிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பவுல் பயன்படுத்துகிற “ஒழிந்துபோம்” என்ற வார்த்தையை நாம் கவனமாகப் பார்த்தல் அவசியம். இத்தமிழ் வார்த்தை மூல மொழியில் இவ்வார்த்தைக்கான பொருளைத் தெளிவாக விளக்குவதாக இல்லை. மூலத்தில், வருங்காலத்தில் இது “அழிக்கப்படும்” அல்லது “அகற்றப்படும்” (will be abolished or done away with) என்ற பொருளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கணத்தின்படி (future middle tense like the future passive tense) யாரோ ஒருவர் இதனை இல்லாமல் போகும்படிச் செய்வார் அல்லது அகற்றுவார் என்பது இதற்குப் பொருள். ஆகவே இதன் மூலம் நாம் அறிந்துகொள்வதென்னவெனில் தீர்க்கதரிசனமும், அறிவும் தற்காலிகமாக ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த உலகில் இருக்குமாறு கொடுக்கப்பட்டிருந்தன என்பதுதான். அன்பு நிரந்தரமானது. ஆனால் இவை இரண்டும் தற்காலிகமானவை. இப்பொருளை ஆங்கில மொழிபெயர்ப்போ அல்லது தமிழ் மொழிபெயர்ப்போ தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்குவதாக இல்லை.
அதேநேரம் அந்நியபாஷையைக் குறித்து வேறு ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்நியபாஷைகள் “ஓய்ந்து போகும்” (will cease or will come to an end) என்று பவுல் கூறுகிறார் (13:8). இந்த வார்த்தை ஏற்கனவே மற்ற இரு வரங்களையும் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைவிட வித்தியாசமானது (simple future tense). இவ்வார்த்தைக்கு மூலத்தில் “அழிந்துபோகும்” அல்லது “ஒரு முடிவுக்கு வரும்” என்பது பொருள். அதாவது இதற்கு முன் கொடுக்கப்பட்டிருந்த வரமாகிய அந்நியபாஷை நின்று போய்விடும். அது ஒரு முடிவுக்கு வரும் என்று பவுல் இதன் மூலம் கூறுகிறார்.
இங்கு இன்னுமொரு உண்மையையும் கவனிக்க வேண்டும். பவுல் தீர்க்கதரிசனமும், அறிவும் ஒழிந்துபோகும் என்று கூறுகிற போது அவை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று கூறுவதாக விளக்கினேன். ஆனால் ஓய்ந்து போகப்போகிற அந்நியபாஷையோ தானே நின்று போய் விடும் என்று பவுல் கூறுகிறார். அது எப்படி? எப்போது நடக்கும்? என்பதை நாம் பிறகு பார்ப்போம். இவ்வரங்கள் இல்லாமல் போகும் என்று பவுல் கூறும்போது அவற்றிற்கு மறுபடியும் எவரும் உயிரளிக்க முடியும் என்று கூறவில்லை. பெந்தகொஸ்தே இயக்கம் இந்த விதமாகவே போதிக்கிறது. ஆனால் இல்லாமல் போகப்போகிற ஒன்றிற்கு ஒருவரும் உயிரளிக்க முடியாது. அந்தப் பொருளிலேயே இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மூன்றையும் பவுல் இணைத்துப் போதிப்பதால் இவை எல்லாமே ஒரே நேரத்தில் இல்லாமல் போகும் என்று அறிந்துகொள்கிறோம். அதாவது இந்த வரங்கள் எல்லாம் ஒரே காலத்தில், ஒரே சூழ்நிலையில் ஒவ்வொன்றாக இல்லாமல் போகும்.
பவுல் போதிக்கும் இப்போதனைகள் பவுலினுடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டு பரிசுத்த ஆவி மூலம் கர்த்தர் தரும் போதனைகளையே பவுல் இங்கே தருகிறார். பெந்தகொஸ்தே இயக்கம் வேதத்திற்கு துப்புரவாக இடம் கொடுக்காததால் இவற்றைக் கவனித்துப் படிப்பதோ அவற்றின்படி நடப்பதோ இல்லை.