திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2001 -ம் ஆண்டு முதல் இதழ்

1. ஆசிரியரிடமிருந்து!

2. அறியாமல் பிசாசுகளை உபசரிப்பதா? – மொரிஸ் ‍ரொபட்ஸ்

3. ரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக

4. 1689 விசுவாச அறிக்கை

5. மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

6. வில்லியம் கேரி

7. 1 கொரிந்தியர் 12-14

ஆசிரியரிடமிருந்து!

மூன்றாம் மிலேனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்கள் உருண்டோடிவிட்டன. கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்து தனது சபையைக் கட்டி எழுப்பி இரண்டு மிலேனியங்கள் கடந்துவிட்டன. இத்தனைக் காலங்களிலும் கிறிஸ்துவின் சபை கத்தோலிக்க மதத்தின் கடுந்தாக்குதலையும் பல்வேறு போலிப்போதனைகளையும் சந்தித்து வெற்றிகரமாக அவற்றை முறியடித்து தொடர்ந்தும் தலை நிமிர்ந்து வருகின்றது. கர்த்தரின் அருளால் பல எழுப்புதல்களையும் கிறிஸ்துவின் சபை வரலாற்றில் சந்தித்துள்ளது. மார்டின் லூதர், ஜோண் கல்வின் போன்றோர் மட்டுமன்றி ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரையும் கொண்டு தன்னை அலங்கரித்துக்‍ கொண்டது கிறிஸ்துவின் சபை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சபை சந்தித்த இடர்பாடுகளில் இரண்டாக சார்ள்ஸ் பினியின் அர்ப்பண அழைப்பு முறையையும், கெரிஸ்மெட்டிக் இயக்கத்தையும் கருதலாம். இரண்டுமே போலித்தனமான ஆத்மீக உணர்வலைகளைக் கொண்ட ஒரு கூட்டத்தை திருச்சபைக்கு அறிமுகப்படுத்தின. இவற்றின் பாதிப்பு இன்றும் சபையை விட்டபாடில்லை.

மூன்றாம் மிலேனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் இன்று ஒரு பழைய எதிரியை அடையாளம் கண்டு விழிப்போடு இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பன்னிரண்டு நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தைத் தொலைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்க சபையே அவ்வெதிரி. போப்பரசர் ஜோண் போல் பலவிதங்களில் கிறிஸ்தவ சபையின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த அமைதியான பல நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் எடுத்து வந்துள்ளார். இங்கிலாந்தின் ஆங்கிலேய திருச்சபை (Church of England) பல காலங்களாகவே கத்தோலிக்க மதத்தோடு நெருக்கமாக உறவாடி வந்துள்ளதோடு, அதோடு இணையத் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதையும் அதன் செயல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவின் திருச்சபை பட்டபாடுகளையும், கொடுமைகளையும் இன்று பலரும் மறந்துவிட்டிருப்பது மட்டுமன்றி வரும் ஆபத்தையும் உணராமல் கத்தோலிக்கத்தோடு உறவாட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தமிழ்க் கிறிஸ்தவ உலகில் கத்தோலிக்க மதத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தமிழ் சுவிசேஷ கிறிஸ்தவம் ஆபத்தறியாது அதோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதாலும் இவ்விதழில் கத்தோலிக்க மதத்தின் போதனைகளை பலருக்கும் உதவுமுகமாக ஆராய்ந்தளித்துள்ளோம்.

முகத்தாட்சண்யம் பார்த்து எல்லோருக்கும் ஆமாம் சாமி போடும் கூட்டம் தமிழ் கிறிஸ்தவர்களின் மத்தியில் இன்று அதிகம். மொரிஸ் ரொபட்ஸ் அவர்களின் தலைப்புக் கட்டுரை மரத்துப்போன இதயங்களை வெட்டிப் பிளந்து சத்தியத்திற்காக சுத்தமாகப் பேசும் வைராக்கியத்தை ஏற்படுத்தட்டும். கள்ளப் போதகர்களுக்கு விருந்து வைப்பவர்களின் கழுத்துக்கு இக்கட்டு‍ரை ஒரு நல்ல பட்டாக்கத்தி.

– ஆசிரியர்

அறியாமல் பிசாசுகளை உபசரிப்பதா? – மொரிஸ் ‍ரொபட்ஸ்

தவறைத் தவறு என்று கண்டிக்காமல் எந்தவொரு கிறிஸ்தவனும் சத்தியத்தை எடுத்துக் கூற முயற்சிக்கக் கூடாது. ஒரு காரியத்தை சத்தியமானது என்று நாம் எடுத்துக் கூறும்போது அதற்கு எதிரானதைப் போலி என்று அறிவிக்கிறோம். ஒரு காரியத்தை உண்மையானது என்று எடுத்துக் கூறும்போது அதற்கு எதிரானதைக் கண்டிக்காமல் அது சரியானதாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயல்வது சத்தியத்தைத் தட்டிக் கழிக்க முயல்வதற்கு ஒப்பானதாகும். இப்படிச் செய்வது சத்தியத்தோடு விளையாடும் செயலாகும். சத்தியம் உயர்வானது. நமது மனதையும், மனச்சாட்சியையும் நாம் சத்தியத்தால் நிரப்பிக் கொள்ள வேண்டும். சத்தியம் கர்த்தருக்கு சொந்தமானதால் அது எப்போதுமே பரிசுத்தமானது.

இன்று கிறிஸ்தவ திருச்சபையின் பெரும்பகுதியை ஒரு போலித்தனமான முகத்தாட்சண்யம் காட்டும் வழக்கம் பற்றிக் கொண்டிருக்கிறது. சுவிசேஷ இயக்கப் பிரசங்கிகளும், இறையிலாளர்களும் வேதத்தின் போதனைகளை எடுத்துக் கூறத் தயாராக இ‍ருந்தபோதும் அதற்கு எதிரானவற்றைக் கண்டித்துக்கூறத் தயங்குகிறார்கள்.1 இதனால் விசுவாசிகள் மத்தியில் எது ‍உண்மை எது பொய் என்று தெரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இக்குழப்பத்திற்குக் காரணமென்ன என்பதை நாம் ஆராயத் தான் வேண்டும். நமது விசுவாசத்தோடும், கிறிஸ்தவ‍த்தோடும் தொடர்புடைய எந்தக் காரியத்தையும் தராசில் வைத்து ஆராய்வதற்குப் பலரும் இன்று விருப்பமற்றிருப்பது தெரிகின்றது. அதாவது சத்தியம் எது என்று போதித்தால் மட்டும் போதும் ஆனால் அதற்கு முரணான எதையும் போலி என்று கூறிவிடக் கூடாது என்ற மனப்பான்மை இருப்பதாகத் தெரிகின்றது. இப்படி நடந்து கொள்வதால் எல்லாமே சத்தியம், எதுவுமே போலி இல்லை என்ற சூழ்நிலையைத்தான் நாம் ஏற்படுத்துகிறோம். இன்னுமொருவிதத்தில் கூறினால் நாம் எதையும் போலிப்போதனை என்று கூறத்தயங்கி முகத்தாட்சண்யம் காட்டுகிறோம்.

இத்தகைய ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் தாம் வாழ்ந்த காலத்தில் தவறைத் தவறு என்று ஆணித்தரமாக அடித்துக்கூறியிருப்பதை புதிய ஏற்பாட்டில் வாசித்துப் பார்க்கும்போது பெரும் புல்லரிப்பு ஏற்படுகின்றது.

மலைப்பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே இயேசு, “வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 5:20) என்று எல்லோரையும் பார்த்துக் கூறினார். பரிசேயர்களை மட்டும் குறிப்பிட்டு கிறிஸ்து ஏன் இவ்வாறு கூற வேண்டும்? அவர்களைக் குத்திக்காட்டி மனவருத்தத்தை ஏற்படுத்தாமல் தான் சொல்ல வந்ததை வேறுவிதமாகக் கூறியிருக்கலாமே. ஆனால், தவறான விசுவாசமற்ற வாழ்க்கை எது என்பதை எடுத்துக் காட்ட இயேசு பரிசேயர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார். அவர் எது சரி என்பதை மட்டும் எடுத்துக் காட்டாமல் எது போலித்தனமானது என்பதையும் வெளிப்படுத்தினார். பரிசேய வாழ்க்கை போலியானது என்று கூறி அதை உயரத்தூக்கி ஒளி விளக்கில் எல்லோரும் பார்க்குமாறு காட்டி அனைவரையும் இயேசு எச்சரித்தார்.

இதேவிதமாக மத்தேயு 15 இல் பரிசேயப் பாரம்பரியத்திற்கு எதிராக வேதத்தின் அதிகாரத்தை விளக்கும் இயேசு, போலிப்போதனையைப் பின்வருமாறு தாக்குகின்றார்: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறார்” என்று கூறினார். இயேசு பரிசேயர்களை ஓரளவுக்குப் பாராட்டி இருந்திருக்கலாம். அவர்கள் வேதத்தை மதித்து அதைக் கவனமாகப் படித்தார்கள். ஆனால், அவர்கள் வேதத்தோடு பராம்பரியத்தை இ‍ணைத்து வேதவாழ்க்கையைப் பாழாக்கினார்கள். நமது ஆண்டவர் அவர்களை இங்கோ அல்லது வேறு எங்குமோ பாராட்டவில்லை. பாரம்பரியத்தின் அடிப்படையில் சத்தியத்திற்கு விளக்கம் கொடுக்க முயன்ற அவர்களுடைய போதனை பேராபத்தானதாக இருந்ததால் அதையும், அவர்களையும் கடுமையாகக் கண்டித்துத் திருத்துவது அவசியம் என்று இயேசு கருதினார். இவ்வாறு செய்ய மறுப்பது தேவ மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கும் என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

பரிசேயர்கள் என்ன நினைப்பார்களோ? என்று இயேசுவின் சீடர்கள் எப்போதும் தயங்கினார்கள். வேதஞானமுள்ள பரிசேயர்களின் முகங்களை சீடர்களுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இயேசு பரிசேயர்களைப் பார்த்து, மாயக்காரர்களே! என்று அழைத்தது பரிசேயர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்பது சீடர்களுக்குத் தெரிந்தது. பேதுருவும், யோவானும் மற்றவர்களும் இயேசுவைச் சூழ்ந்து கொண்டு. “பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறியீரா?” என்றார்கள் (மத்தேயு 15:12). இயேசு தாக்கியதைப் போல் சீஷர்கள் ஒருபோதும் பரிசேயர்களைத் தாக்கிப் பேசியிருக்க மாட்டார்கள். இய‍ேசு இப்படி வெளிப்படையாகத் தாக்கிப் பேசியது பரிசேயர்களின் இதயத்தைக் காயப்படுத்திவிட்ட‍தே என்று சீஷர்கள் வருத்தப்பட்டார்கள்.

இயேசு இந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்க வேண்டியது அவசியம். முதலில் அவர் சீடர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பின்வருமாறு கண்டித்தார்: “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழி காட்டுகிற குருடராக இருக்கிறார்கள்; குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில் விழுவார்களே” என்றார். இதன் மூலம் இயேசு, போலிப்போதனை அளிப்பவர்கள் தேவனுடைய தோட்டத்தில் காணப்படும் களைகள் என்று வர்ணித்தார். அவர்களைப் பரமபிதா நடாததால் அவர்கள் தோட்டத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட வேண்டியவர்கள். அத்தோடு, இயேசு அவர்களை குருடர்களுக்கு வழி காட்டும் குருடர்களோடு ஒப்பிடுகிறார். ஏனெனில், அவர்களால் தங்களுக்கோ அல்லது அவர்கள் வழி காட்ட முனையும் குருடர்களுக்கோ எந்த நன்மையுமில்லை.

போலிப்போதனையளிப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு தூரம் படித்தவர்களாக இருந்தாலும் மனிதர்களுடைய ஆத்துமாவுக்கு அவர்களால் ஆபத்தே ஏற்படும். அவர்களுக்கு சபையில் இடமளிக்கக்கூடாது. அவர்களை விட்டுவிடுங்கள் என்று இயேசு எச்சரிக்கிறார் (வசனம் 14). அவர்களுக்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் கிறிஸ்துவின் மக்களின் போதகர்களாக இருக்க முடியாது. அவர்கள் மனித பாரம்பரியங்களைத் தேவனுடைய வார்த்தையோடு இணைக்க முயல்வதால் கர்த்தருடைய பெயரில் போதிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

மேலே நாம் பார்த்த வேதப்பகுதி ஆத்துமாக்களுக்கு அநேக போதனைகளை அளிக்கின்றது. சத்தியத்தை மட்டும் போதிக்கும் போதகர்களை நாம் வரவேற்று அதிக மரியாதை அளிப்போம். அதிக வரங்களைக் கொண்டிராதவர்களுக்கு நாம் மரியாதை அளிப்போம்.வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து சத்தியத்தை மட்டும் போதிப்பவர்களாக இருந்தால் நாம் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தவறானதைப் போதித்து, மனித பாரம்பரியத்தை வேதத்தோடு இ‍ணைத்தோ அல்லது வேதம் போதிப்பவற்றிற்கு எதிரானவற்றைப் போதித்தாலோ அவர்களை நமது வீட்டுக்குள்ளும், சபைக்குள்ளும் நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தேவனால் அனுப்பப்படவில்லை. ஆத்துமாக்கள் பரலோகம் போகும்படி அவர்களால் வழி நடத்த முடியாது. அவர்களும், அவர்களால் வழி நடத்தப்படுபவர்களும் நரகத்திற்கே போவார்கள்.

நான் சொல்வதெல்லாம் இன்று கடுமையான போதனைகளாகத் தெரியும். எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று பேசியும், முகத்தாட்சண்யம் பார்த்தும் பழகிப்போன நமக்கு எதையும் ஆணித்தரமாக எதிர்த்துப் பேசுவது கஷ்டமாக இருக்கின்றது. “அந்த ஐயா, கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பையும், உயிர்த்தெழுதலையும் நம்புவதில்லை ஆனால், ரொம்ப நல்ல மனிதர்” என்று கூறுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. “அந்தப் போதகர் கொஞ்சம் தாராளவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் ஆனால், அவர் பேச்சு கேட்பதற்கு நன்றாயிருக்கும்” என்று நாக்கூசாமல் சொல்கிறோம். “அவர் இப்போது கத்தோலிக்க மதத்தில் ‍சேர்ந்து விட்டார் ஆனால், அவர் எழுதும் நூல்களால் நல்ல பயனுண்டு” என்று பேசிப் பேசி நமக்குப் பழகிவிட்டது.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான பேச்சையெல்லாம் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் கிறிஸ்துவின் நடத்தை, பேச்சு என்பவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மனிதன் எத்தனை பெரும் படிப்புப் படித்தவனாக இருந்தபோதும் அவனது போதனைகள் வேதத்திற்கு முரணானதாக இருந்தபோது நமது இரட்சகர் அம்மனிதனை எப்போதாவது பாராட்டிப் பேசி இருக்கிறாரா? ஒரு போதகனோ அல்லது இறையியல் கல்லூரி விரிவுரையாளனோ கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சந்தேகமெழுப்பினாலோ, அவருடைய உயிர்த்தெழுதலை மறுத்துப் பேசினாலோ, அல்லது வேதத்தின் எந்தவொரு முக்கிய போதனைக்கு எதிரான போதனையை அளித்தாலோ அம்மனிதனுடைய ஊழியத்தை நாம் எப்படி ஆதரிக்க முடியும்? அத்தகைய மனிதர்களை குருடர்களுக்கு வழிகாட்டும் குருட்டு வழிகாட்டிகளாக அல்லவா நாம் கருத வேண்டும்.

சத்தியத்தின் மேல் கிறிஸ்துவுக்கு இருந்த வைராக்கியத்தையும், போலிப்போதனைகளை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் ஏனைய எல்லா நற்செய்திப் பகுதிகளையும் விட மத்தேயு 23 அருமையாக எடுத்துக் காட்டுகின்றது. குழப்பமான இன்றைய ஆத்மீக சூழ்நிலையில் போதகர்களும், போதக ஊழியத்திற்கு தம்மைத் தயார் செய்து கொள்ளுகிறவர்களும், இறையியல் கல்லூரியில் போதிப்பவர்களும் இப்பகுதியை ஆழமாகப்படித்து, மனப்பாடம் செய்து அதன்படி நடந்து கொள்ளுவது அவசியம். கிறிஸ்துவுக்கு நம் மெல்லோரையும்விட மனிதர்களின் இருதயத்தில் உள்ள இரகசியங்களை ஆராய்ந்து அறியும் வல்லமை இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இருந்தபோதும், போலித்தனமான அனைத்தையும் ஒதுக்குவதோடு, அவற்றை மற்றவர்களும் அறிந்து தம்மைக் காத்துக் கொள்ளும்படி வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இப்பகுதி உதாரணமாக இருந்து போதிக்கிறது.

அதிகம் கவனம் செலுத்திப் படிக்கப்படாத இந்த வேதப்பகுதியில் கிறிஸ்து அவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது என்ன? என்று பார்ப்போம். நேர்மையின்மை, நடிப்பு, ஆத்மீகக் காரியங்களில் அலட்சியம், ஆத்மீகக் காரியங்களில் கோமாளித்தனமாக நடந்துகொள்ளுதல், மனிதர்களின் பாராட்டை நாடி அலைதல், சுயநல நோக்கு, ஒரே சத்தியத்தில் தரித்து நிற்காதிருத்தல், சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த கிறிஸ்தவத்திற்கு எதிராக நடந்து, கர்த்தரின் குழந்தைகளை துன்புறுத்துதல் போன்ற பெரும் அவலங்களை இப்பகுதி வெளிப்படுத்துகிறது. இப்பகுதியில் கிறிஸ்து வெளிப்படுத்தும் பரிசேயர்களையும், சதுசேயர்களையும்போல நடந்து கொள்ளும் போதகர்களையும், பிரசங்கிகளையும் கொண்ட நாடுகள் சபிக்கப்படட்டும்! பெரும் படிப்பையும் சபைப் பதவியையும் கொண்டிருந்தபோதும் தங்களுடைய சொந்த நலன்களில் மட்டும் நாட்டம் செலுத்தி ஆத்துமாக்களின் நலனில் அக்கறை கொள்ளாத போதகர்களையும், பிரசங்கிகளையும் கொண்டிருக்கும் சந்ததி சபிக்கப்படட்டும்! பரிசேயர்களும், சதுசேயர்களும் பேசுவதைப் போல பேசி நடிக்கும் போதகர்களும், பிரசங்கிகளும் இருக்கும் சபைகளை மட்டும் நாடிப்போகும் ஆத்துமாக்கள் சபிக்கப்படட்டும்! காரணமில்லாமலா கிறிஸ்து, “உங்கள் வீடு உங்களுக்குப் பாழக்கி விடப்படும்” என்று கூறினார் (23:38). போலித்தனமாக நடந்துகொள்ளும் பிரசங்கிகளுக்கு இடம் கொடுக்கும் நாடுகளில் மெய்யான கிறிஸ்தவம் இருக்க முடியாது. அத்தயை செயல் கர்த்தரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே வழிவகுக்கும். இதையே யூதர்கள் 70ம் ஆண்டில் அனுபவித்தனர். அன்றுமுதல் பல நாடுகளும் அத்தகைய சாபத்தை அனுபவித்துள்ளன.

போலிப்போதனைகளையும், போலித்தனமாக நடந்துகொள்பவர்களையும் கிறிஸ்து ‍வெறுத்தொதுக்கியதைப் போலவே அப்போஸ்தலர்களும் நடந்துகொண்டனர். அப்போஸ்தலனான பவுல் அத்தகையோரை, கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தல‍ரின் வேஷத்‍தைத் தரித்துக் கொண்டவர்கள் என்று வர்ணித்துள்ளார் (2 கொரிந்தியர் 11:13). மேலும், பவுல் அவர்களை சாத்தானின் ஊழியக்காரர்கள் என்றும், அவர்கள் முடிவு அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும் என்றும் கூறுகிறார் (23:15). அதாவது, அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று இதற்குப் பொருள். பவுல் போலிப் போதகர்களிடம் கொரிந்தியர்கள் அசமந்தமாக நடந்து கொள்வதைப் பார்த்து, “நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோசமாய்ச் சகிக்கிறீர்களே” என்று கண்டிக்கிறார். மோசமான போதகர்களும், பிரசங்கிகளும் புத்தியில்லாதவர்கள். அத்தகையோரின்‍ பேச்சைக் கேட்டு சகித்துக் கொண்டிருப்பவர்கள் புத்தியில்லாதவர்களாயிருப்பதோடு சிந்திக்கும் பக்குவத்தையும் இழந்து நிற்கிறார்கள். போலிப் போதகர்களை எவ்வளவு தூரம் மரத்துப் போய்க் கிறிஸ்தவர்கள் சகித்துக் கொள்ளப் பழகி இருக்கிறார்கள் என்பதைப் பவுல் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே” என்கிறார்.

வேதத்திற்கு எதிரான பாரம்பரியங்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியும், வேதத்தை நாம் வாசித்துப் புரிந்துகொண்டு கர்த்தருக்கு மட்டுமே அடிபணியும் நமது சுதந்திரத்தைப் பறித்தும் நம்மை முகத்தில் அறையும் மனிதர்களுக்கு நாம் முகத்தாட்சண்யம் காட்டுவது எந்தவிதத்தில் அன்பு காட்டுவதாகும்? இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக எழுந்து நிற்பதை விட்டுவிட்டு அநேகர் வாளாவிருந்து விடுகிறார்கள். ஒருவித எதிர்ப்பும் காட்டாமல் இரகசியமாக இத்துன்புறுத்தல்களுக்கு தம்மை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

கேடான மனிதர்களை அவர்களுக்குப் பொருத்தமான பெயரில் அழைக்கும் அப்போஸ்தலரின் தைரியத்தை நாம் புதிய ஏற்பாடெங்கும் பார்க்கலாம். சுவிசேஷத்திற்கு விரோதமானதொரு சுவிசேஷத்தைப் போதிப்பவர்களை சபிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள் என்று பவுல் கூறுகிறார் (கலாத்தியர் 1:8, 9). அவர்களுடைய போலித்தனத்தை மட்டும் நாம் சபிக்க வேண்டும் என்று பவுல் கூறவில்லை. அவர்களையே நாம் சபிக்க வேண்டும் (அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான்) என்று பவுல் கூறுகிறார். போலிப்போதனைகள் நம் மத்தியில் டெலிபோன் வயர்கள் மூலம் வருவதில்லை. அதை போதிக்கும் மனிதர்களின் இருதயத்தில் இருந்தும் வாயிலிருந்தும் வருகின்றன. அவற்றைப் போதிப்பவர்கள் பிசப், பெருமதிப்புக்குரியவர், போதகர், பேராசிரியர் என்ற எத்தனை பெயர்களைச் சூட்டிக் கொண்டிருந்தாலும் சுவிசேஷத்திற்கு எதிரான போதனையை அளித்தால் அவர்களைப் பாராட்டும் சுதந்திரம் நமக்கில்லை. அவர்களை சபிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதே நமது கடமை. அப்படிச் செய்யாவிட்டால் அப்போஸ்தலன் பவுலுக்கு எதிராக நாம் நடந்துகொள்கிறோம்.

கிறிஸ்துவும் நமக்கு உதாரணமாக இருந்து, தவறு செய்த பேதுருவை நோக்கி, பின்னால் போ சாத்தானே என்று கூறினார் (மத்தேயு 16:23). கிறிஸ்து தாம் செய்ய வந்த பணியில் இருந்து அவரைத் திருப்பப் பேதுரு செய்த காரியம் சுவிசேஷத்தை அழித்து மனித வர்க்கத்தையே தொலைக்கும் செயலாகும். ஆத்துமாக்களின் மேல் இருந்த அன்பே உண்மையும், நேர்மையும் கொண்ட கிறிஸ்துவைத் தன்னுடைய சீடனான பேதுருவையே பரிசுத்தமான கோபத்தோடு கண்டிக்க வைத்தது.

இவ்வனுபத்தால் நல்லதொரு பாடத்தைப் படித்த பேதுரு பின்பு போலிப்போதனைகளுக்கும், நேர்மையற்ற செயல்களுக்கும் எதிராகப் பேசத் தவறவில்லை. போலிப்போதனைகளுக்கு இடம் கொடுத்து போலிப் போதகர்களுக்கு பாராட்டு வழங்குபவர்கள் பேதுரு எழுதிய இரண்டாம் நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தை ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டும். இவ்வதிகாரம் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும், கள்ளப் போதகர்களுக்கும் எதிராக எழுதப்பட்டது (2:1). அவர்கள் வேதத்திற்கு முறையான விளக்கத்தைக் கொடுக்க முனையாமல் கேட்டுக்கேதுவான வேதப் புரட்டுக்களைத் தந்திரமாய் நுழைக்கப் பார்ப்பார்கள் (2:1). அவர்கள் கெட்ட நடத்தையுடையவர்களாயிருப்பார்கள் (2:2). அவர்கள் தந்திரமான வார்த்தைகளைப் பேசி (2:3), ஆத்துமாக்களைத் தங்களுக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளுவார்கள். பூர்வ காலமுதல் அவர்களுக்காக விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது (2:3). கறைகளும், இச்சைகளுமாய் இருந்து அவர்கள் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்பவர்கள் (2:13). உறுதியில்லாத ஆத்துமாக்களை அவர்கள் தந்திரமாகப் பிடித்துக்கொள்வார்கள் (2:14). அவர்கள் சாபத்தின் பிள்ளைகளும், பிலேயாமைப் போன்றவர்களுமாவர் (2:14).

அவர்களுடைய கேடான செயல்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல் காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயுமிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது (2:17). இக்கள்ளத்தீர்க்கதரிசிகளும், போதகர்களும் நாக்கில் இனிப்போடு பேசக்கூடியவர்கள், ஆனால் அவர்களுடைய வார்த்தைகள் விஷத்தையே கக்கும். அவர்கள் “அகந்தையோடு” பேசுவார்கள் ஆனால் அவர்களுடைய பிரசங்கம் ‍வெறும் “வீண் வார்த்தைகளே” (2:18).

இத்தகைய ஆணித்தரமான கண்டித்துப் பேசும் பேச்சு முதலாம் நூற்றாண்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. போலிப்போதனைகளையும், கள்ளப் போதகர்களையும் வெளிப்படுத்தும் கடமையில் நமக்குத் துணை புரிவதற்காக இத்தகைய பேச்சை பரிசுத்த ஆவியானவரே வேதத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். இத்தகைய வெளிப்படையான பேச்சு இன்று நம் மத்தியில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், ஒன்று போலிப்போதனைகளும், போலிப்போதகர்களும் நம்மத்தியில் இல்லாமல் இருக்க வேண்டும் (!) அல்லது சத்தியத்தில் நமக்கிருக்கும் அன்பு குறைந்து போயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் சத்தியத்தில் இருந்த ஆர்வத்தையும், வைராக்கியத்தையும் சீர்திருத்தவாத எழுப்புதலினால் சபை மறுபடியும் சந்தித்தது. 1520 இல் மார்டின் லூதர் ரோமன் கத்தோலிக்க சபையால், சபையில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார். அப்படி லூதர் செய்த தவறுதான் என்ன? இராஸ்மஸ் சொன்னார் – “லூதர் போப்பரசரின் தரையில் உள்ள மணிமு‍டியைத் தாக்கி, குருமார்களின் வயிற்றில் அடித்தார்” என்று. “ஒரு மதகுரு (லூதர்) போப்பரசரின் கட்டளையை தீயில் எரித்தார் என்ற ‍செய்தி கேட்டதும் ஜெர்மனி முழுவதுமே மனங்குளிர்ந்தது” என்று மார்டின் லூதரைப் பற்றி எழுதிய ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டார். இதே நூலாசிரியர், “இன்று சீர்திருத்தம் தோன்றிவிட்டது — 10 டிசம்பர் 1520, காலை 9 மணிக்கு” என்று எழுதினார்.

லூதரின் வெளிப்படையான பேச்சை சீர்திருத்தவாதிகள் அனைவரிலும் காணலாம். கல்வின் இவர்களுக்குகெல்லாம் உதாரணமாக இருந்தார். “சத்தியத்தை எடுத்துரைப்பது நமது போதிக்கும் பணியின் ஒருபாதி மட்டுமே; அதன் மறுபாதி பிசாசின் எல்லா தீய காரியங்களையும் ஒழிப்பதாகும்” (எரேமியா நூல் !!!, 423) என்கிறார் கல்வின். அவர் மேலும், கள்ளப் போதகர்களைக் கட்டுப்பாடில்லாமல் ஆளவிட்டால் கள்ளபோதனைகள் தானாகவே வளரும் (சகரியா-மல்கியா, பக்கம் 380), ஒரு வேத வல்லுனன் தவறிப்போனால் மற்றவர்கள் கூண்டோடு அவன் பின்னால் போவார்கள் (தெசலோனிக்கேயர் பக்கம் 390) என்றும் எழுதினார்.

நாம் வெறும் பேச்சுக்காக ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் நாம் ஏடாகூடமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வேதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தவறைத் தூக்கி எறிந்து சத்தியத்தை மட்டும் பாராட்ட வேண்டும் என்று வேதம் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. சத்தியத்தை பாராட்டினால் மட்டும் போதாது. அதற்கு எதிரானவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஜோண் பிளேவல் என்ற பியூரிட்டன் பெரியவர்: தவறான போதனைகளை வரவேற்பதன் மூலம், பலர் அறியாமல் பிசாசுகளை உபசரித்திருக்கிறார்கள் என்று சரியாகவே சொன்னார். அறியாமல் பிசாசுகளை உபசரிக்கும் வேலை இன்று அதிகமாகவே நடந்து வருகின்றது.

  1. வேத சத்தியத்தை மட்டும் எடுத்துப் போதிக்கும் சுவிசேஷ இயக்கப் பிரசங்கிகளும், இறையியல் கல்லூரிப் பேராசிரியர்களும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் குறைவு. திரு. ரொபட்ஸ் மேலைத்தேய (Western) கிறிஸ்தவ உலகை மனதில் வைத்தே இவ்வசனத்தை எழுதியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக

கத்‍தோலிக்க சபை கிறிஸ்தவத்திற்குத் தந்த தொல்லைகள், கழுவிலேற்றி, உயிரோடெரித்த கிறிஸ்தவத் தலைவர்களின் எண்ணிக்கை, கிறிஸ்தவ வேதத்தை மக்கள் வாசிக்கவிடாமல் செய்ய எடுத்த நடவ‍டிக்கைகள் தாம் எத்தனை! இவற்றை நாம் மறந்தாலும் வரலாறுதான் மறக்குமா? இன்று கத்தோலிக்க சபை எந்நிலையில் இருக்கிறது? என்று ஆராய்கிறது இக்கட்டுரை.

ரோமன் கத்தோலிக்க சபை

– புலி பதுங்குவது பாய்வதற்காக –

கத்தோலிக்க சமயம் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தொடர்ந்தும் ஒரு முக்கிய சமயமாக இருந்து வருகின்றது. கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள் அதனை கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாகத் தொடர்ந்தும் கருதி வருகிறார்கள். தமிழ் சுவிசேஷக் கிறிஸ்தவர்களின் பெரும்பாலானோரும் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகத் தவறாக இன்றும் கருதி வருகிறார்கள். கத்தோலிக்க மதத்தைப் பற்றிக் கிறிஸ்தவர்கள் சரியான தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். கிறிஸ்தவத்தின் எதிரிகள் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆக்ரோசமாக பணி புரிந்து வரும் இந்நாட்களில் கத்தோலிக்க மதத்தோடு இணைந்து செயல்படுவதை விட்டுவிட்டு பழையதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? என்று யாரும் கேட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நாம் செய்ய வேண்டிய எத்தனையோ பெரிய காரியங்கள் இருக்க ஏன் இந்தச் சாதாரண விசயத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? என்று கேட்டாலும் நான் வியப்படைய மாட்டேன். இவர்களுக்கு இப்படியான சிந்தனைகள் ஏற்படுவதற்கு என்னைப் பொருத்தவரையில் நான்கு காரணங்களுண்டு.

  1. வரலாறு பற்றிய விளக்கம் இல்லை – முதலாவதாக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவ வரலாறு பற்றிய முறையான அறிவு இல்லை. அதுபற்றிய போதனையே சபைகளில் கொடுக்கப்படுவதில்லை. வரலாற்றிற்கும் கிறிஸ்தவத்திற்கும் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அழுத்தமான ஒரு தொடர்பிருப்பதை கிறிஸ்தவர்களில் பலர் அறியாமலிருக்கிறார்கள். எந்தவிதமான ஆழமான வேதபோதனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் இயங்கி வரும் ‍கெரிஸ்மெட்டிக் இயக்கம் வரலாற்றைக் கிறிஸ்தவத்தின் எதி‍ரியாகக் கருதித் தள்ளி வைத்துள்ளது. இதனால் கிறிஸ்தவத்திற்கு வரலாற்றுடன் இருக்கும் இணைபிரியாத உறவு தெரியாமல் அநேக கிறிஸ்தவர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள இணைக்க முடியாத வேறுபாடு தெரியாது. அத்தோடு, கிறிஸ்தவ வரலாறு என்ற பெயரில் தமிழில் காணப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை ரோமன் கத்தோலிக்க சமயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால் அவை கத்தோலிக்க மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதில்லை. லிபரல் (Liberal-தாராளவாத) இறையியலாளர்களும் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஓர் அங்கமாகக் கருதி, சீர்திருத்தவாதக் கிறிஸ்தவ சபைகளை அதிலிருந்து வந்த பிரிவுகளாகக் காட்டி உண்மையைத் ‍திரித்து வைத்திருப்பதால் அநேகருக்கு சீர்திருத்தவாதக் கிறிஸ்தவத்தைப்பற்றிய உண்மை தெரியவில்லை. இதனால் பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாகத் தொடர்ந்து தவறாக எண்ணி வருகின்றனர்.
  2. சமய சமரசக் கோட்பாடு – இரண்டாவதாக, தமிழர் மத்தியில் காணப்படும் சுவிசேஷ கிறிஸ்தவம் (Evangelical Christianity), சமய சமரசக் கோட்பாட்டினைப் (Ecumenical) பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்ற போக்கில் நடந்துவருவதால் அவ்வியக்கத் தலைவர்கள் அனைவரும் கத்தோலிக்க சமயத்தோடு உறவாடித் தமது மக்களைத் தவறான பாதையில் வழிநடத்தி வருகின்றனர். கெரிஸ்மெட்டிக் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் (Para-church organization) நடத்தும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு வந்து இயேசுவுக்காகத் “தீர்மானம்” எடுப்பவர்கள் கத்தோலிக்க சபைகளுக்கே மறுபடியும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இத்தகைய கூட்டங்களில் “தீர்மானம்” எடுப்பவர்களுக்கு ஆலோசனை கூறும் கவுன்சலர்களாக இருப்பவர்களில் கத்தோலிக்கர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் கத்தோலிக்க குருமார்கள் பிரசங்கம் செய்தும், பாடங்கள் நடத்தியும் வருகின்றனர். சுவிசேஷக் கூட்டங்களையும் கத்தோலிக்க குருமார்கள் அலங்கரித்து வருகின்றனர். இதனால் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க சபை பற்றிய உண்மை தெரியாமலிருக்கின்றது. இப்பத்திரிகையில் கடந்த வருடம் (ஜனவரி – மார்ச் 2000) நாம் திறனாய்வு செய்த “தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் – ஓர் ஆய்வு” என்ற நூலை எழுதிய அ. மா. சாமி கிறிஸ்தவரல்லாத ஒரு பத்திரிகையாளர். அந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து ஆசீர்வாதம் தந்தவர்கள் கத்‍தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் சுவிசேஷ இயக்கத் தலைவர்கள். அந்நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கருதி ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதை எந்தவொரு தமிழ் சுவிசேஷ இயக்கத் தலைவரும் திருத்தவோ கண்டிக்கவோ இல்லை; மாறாக தென்னிந்திய திருச்சபைத் தலைவர்களிலிருந்து தலித் தளபதி எஸ்ரா சற்குணம் வரை இதற்குப் பாராட்டுரை எழுதியிருக்கின்றனர். இதிலிருந்து தமிழர் மத்தியில் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று புரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இக் குழப்பத்தாலேயே அநேகருக்கு கத்தோலிக்க சமயம் என்பது என்ன? என்பதும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத, கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணானவற்றைப் போதிக்கும் ஒரு மதம் என்பதும் தெரியாமலிருக்கின்றது.
  3. கெரிஸ்மெட்டிக் இயக்கத்திற்கு கத்தோலிக்க மதத்தோடு உள்ள உறவு – மூன்றாவதாக, கெரிஸ்மெட்டிக் இயக்கம் தோன்றிய நாள் முதல் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் அதற்கிருந்த செல்வாக்கைக் கவனித்த கத்தோலிக்க சபை தனது சபை மக்களை கெரிஸ்மெட்டிக் இயக்கம் சுரண்டிவிடக் கூடாதென்ற காரணத்தால் அவ்வியக்கத்திற்கு தனது சபைகளில் இடமளிக்கத் தொடங்கியது. எந்த இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும் அமையாத ‍கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இதனை வரவேற்றுத் தன்னைக் கத்தோலிக்க மதத்துடன் இணைத்துக் கொண்டது. இதனாலேயே கத்தோலிக்க சபைகளில் நாம் கெரிஸ்மெட்டிக் கூட்டத்தையும் (Catholic Charismatics), கெரிஸ்மெட்டிக் கூட்டங்களில் கத்தோலிக்க குருமார்களையும் பார்க்க முடிகின்றது. உதாரணத்திற்கு பெர்க்மன் பாதரை எடுத்துக் கொள்வோம். அவருடைய பாடல்களைக் கெசட்டுகளில் கேட்டு மகிழும் விவஸ்தை இல்லாத கிறிஸ்தவர்கள் பலர் (அவருடைய ஆட்டம் பாடல்களையெல்லாம் தூக்கியெறிந்து விடும்). ஆனால், ஒருவராவது அம் மனிதர் ஏன் தொடர்ந்தும் குரு உடையோடு இருக்கிறார் என்று எண்ணிப் பார்ப்பது இல்லை. அவரை ஏன் தொடர்ந்தும் பெர்க்மன் பாதர் என்று அழைக்க வேண்டும் என்று கேட்பதும் இல்லை (அவருடைய கெசட்டுகளில் பெர்க்மன் பாதர் என்றே எழுதி இருக்கிறது). இப்பாதிரியார் கிறிஸ்துவையும், வேதம் போதிக்கும் உண்மைகளையும் அறிந்து கொண்டிருந்தால் தனது குரு உடையையும், பழைய பழக்கங்களையும் தலையைச் சுற்றிக் காவிரி ஆற்றில் அல்லவா எறிந்திருக்க வேண்டும். தொடர்ந்தும் ஏன் அவர் கத்தோலிக்க குருவாக உலா வர வேண்டும்? இதற்குக் காரணம் கத்தோலிக்க சமயத்திற்கும் கெரிஸ்மெட்டிக் கூட்டத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்புத்தான். கெரிஸ்மெட்டிக் கூட்டம் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே, கெரிஸ்மெட்டிக் இயக்க நம்பிக்கைகளின்படி கத்தோலிக்க குருவான பெர்க்மன் கத்தோலிக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. கத்தோலிக்க சமயத்திற்கும் இதனால் எந்த இழப்புமில்லை. ஏனெனில், பெர்க்மன் இன்னும் ஒரு பாதிரியா‍ரே. அவர் கத்தோலிக்க சபையிலும் பாடலாம், ஆடலாம், கெரிஸ்மெட்டிக் கூட்டங்களிலும் பாடலாம், ஆடலாம்.
  4. ‍இறையியல் கல்லூரிகள் – நான்காவதாக தமிழ் கிறிஸ்தவ உலகில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை கத்தோலிக்க மதத்துடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. சில கல்லூரிகளில் கத்தோலிக்க குருமார்களும் போதிக்கிறார்கள். சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த கல்லூரிகள் (Evangelical Bible Colleges) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இறையியல் கல்லூரிகளும்கூட கிறிஸ்துவுக்கு எதிரியான கத்தோலிக்க மதத்துடன் உறவாடி அநேக இறையியல் மாணவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி போதக ஊழியத்திற்கு அனுப்பி வைக்கின்றன. தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், மலேசியாவிலும் உள்ள பல ‍இறையியல் கல்லூரிகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

மேல்வரும் காரணங்களால் தமிழ்க் கிறிஸ்தவ உலகம் குழம்பிப் போய் உண்மை புரியாமல் இருந்து வருகிறது. கத்தோலிக்க சமயம் என்றால் என்ன? அது பின்பற்றி வரும் கோட்பாடுகள் என்ன? அதனால் கிறிஸ்தவத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் யாவை? என்பதைப்பற்றி நாம் இனி ஆராய்வோம். முதலில் கத்தோலிக்க சபையின் ஆரம்ப வரலாற்றைக் குறித்து நாம் சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியம்.

கத்தோலிக்க சபையின் தோற்றமும் வளர்ச்சியும்

கத்தோலிக்க மதத்தின் ஆரம்ப வரலாற்றை ஆராயும்போது, அதன் தொடக்கமாக நான்காம் நூற்றாண்டையே வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுவர். அக்காலத்தில் ரோமன் ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்த கொன்ஸ்டன்டைன் வேறு நாடுகளுடன் போரில் ஈடுபட்டிருந்தான். கொன்ஸ்டன்டைன் தேவனை அறியாத ஒரு மனிதன். ஒரு நாள் அவன் தூங்கும்போது சிலுவைக் குறிகொண்ட கவசத் தொப்பியை அணிந்து போரிட்டால் வெற்றி பெறலாம் என்று ஒரு கனவு கண்டான். காலையில் எழுந்த கொன்ஸ்டன்டைன் அக்கனவின்படி சிலுவைக் குறியிட்ட கவசத்தொப்பியை அணிந்து போரிட்டு அதில் வெற்றியும் கண்டான். சிலுவைக்குறி கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அறிந்திருந்த ‍கொன்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்கள் வழிபடும் கடவுளால்தான் தனக்கு வெற்றி கிடைத்தது என்று நம்பி அதற்கு வெகுமதியாக கிறிஸ்தவம் தனது சாம்ராஜ்யத்தின் மதமாகக் கருதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அந்நாள் முதல் கிறிஸ்தவம் அதிகாரபூர்வமான மதம் என்ற நிலையைப் பெற்றது. ஆனால், அது மெய்க் கிறிஸ்தவத்திற்கு பேராபத்தாகவும் அ‍மைந்தது. ஏனெனில், கிறிஸ்துவை விசுவாசிக்காத பேரரசன், நாட்டு மக்கள் எல்லோரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்ததால் ஒரு போலிக்கிறிஸ்தவம் உருவாயிற்று. அத்தோடு அரசனுக்கு மரியாதை செலுத்தி துதி பாடியவர்களெல்லாம் உயரிடங்களிலும், சபைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதனால் கர்த்தருக்கும், வேதத்திற்கும் மட்டும் அடிபணிந்து நடந்து வந்தவர்களெல்லாம் அரசனுக்‍கெதிரானவர்கள் என்று கருதப்பட்டு தண்டனைக்குள்ளாயினர். மேலும் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணான சிலை வணக்கம் போன்றவையெல்லாம் துரிதமாக சபைகளில் நுழைந்து கிறிஸ்தவ ஆராதனையின் அங்கங்கள் என்ற பெயரை அடைந்தன. இதுவே கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்ட ஆரம்பத் தீங்கு.

இக்கால முதல் நாடும், சபையும் இணைந்து இயங்கும் வழக்கமும், நாட்டரசன் சபைத் தலைவனாகக் கருதப்படும் வழக்கமும் ஏற்பட்டது. அதேநேரம் சபைத் தலைவரும் பெரும் செல்வாக்கும், அதிகாரமும் உள்ள ஒரு மனிதராகவும் கருதப்பட்டார். அரசு சபையை அங்கீகரித்திருப்பதால் சபைத் தலைவர் மக்களால் மதிக்கப்பட வேண்டியவராக இருந்தார். மெய்க்கிறிஸ்தவம் போதிக்கும் தாழ்மையும், எளிமையும் படிப்படியாக சபைத் தலைவர்களிடமிருந்தும், அரச அங்கீகாரம் பெற்றிருந்த போலிக் கிறிஸ்தவத்திடமிருந்தும் அகலத் தொடங்கின. இதுவே ரோமன் கத்தோலிக்க மதத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது.

இதன்பின் படிப்படியாக வேதத்திற்கெதிரான அனைத்தும் அரச அங்கீகாரம் பெற்று கிறிஸ்தவ சபை என்ற போலிப்போர்வையில் மறைந்திருந்த சபையை அலங்கரிக்கத் தொடங்கின. போப்பரசர் (Pope) என்ற பெயர் சபையின் பிரதம தலைவருக்கு சூட்டப்பட்டது. வேதம் போதிக்கும் போதகர், மூப்பர் என்ற தாழ்மையையும், வேத இலக்கணங்களையும் அணிகலன்களாகக் கொண்ட சபைத் தலைமை அலட்சியப்படுத்தப்பட்டது. கி.பி. 402 இல் இனொசன்ட் (Innocent) என்ற ரோம சபை பிசப் ஐரேப்பாவிலுள்ள எந்த சபையும் ரோம சபையின் அங்கீகாரமில்லாமல் எந்தவித முக்கிய சபைத் தீர்மானங்களும் நிறைவேற்ற முடியாது என்று கட்டளையிட்டார். இதற்குப் பின் வந்த போப்பரசர் ரோம சபை எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் எவரும் எதிர்க்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். இவ்வாறே சபைத்தலைவராக இருந்த போப்பரசர் பேரதிகாரமுள்ள ஒரு மனிதராக படிப்படியாக மாறினார். அத்தோடு இவர் தலைமை வகித்த போலிச் சபையும் ரோமன் கத்தோலிக்க சபை அல்லது ரோம சபை என்ற பெயரைப் பெற்றது.

காலம் போகப்போக போப்பரசருக்கும் அரசுக்கும் இடையில் உறவு கெட்டு சில வேளைகளில் போப்பரசர் நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதும், சில வேளைகளில் அரசன் ரோம சபை மீது அதிகாரம் செலுத்துவதும் வழக்கமாகியது. போப்பரசர்கள் நாட்டின் மீது அதிகாரம் செலுத்திய காலங்களில் தங்களுக்கெதிரானவர்களை அவர்கள் கொலை செய்யவும் தயங்கவில்லை. போப்பரசர்கள் மனிதர்களைவிட மேலான தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாகவும், மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உடையவர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால், கர்த்தருடைய செயலால் பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத்தின் கொட்டம் சீர்திருத்தவாதத்தால் ஒடுக்கப்பட்டது. கத்தோலிக்க மதம் கொண்டிருந்த அரசியல் அதிகாரம் அழிக்கப்பட்டது. மக்களுக்கு மத சுதந்திரம் கிட்டியது. சாதாரண மக்கள் வேதத்தை வாசித்து கர்த்தரை அறிந்து கொள்ளவும், அவர் வழிப்படி சுதந்திரமாக ஆராதிக்கவும் முடிந்தது.

கத்தோலிக்க சபை பின்பற்றும் கோட்பாடுகள்

கீழே நாம் தரவிருக்கும் ரோமன் கத்தோலிக்க சபைப் போதனைகளை அச்சபை அங்கீகரித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான வெளியீடுகளான டிரென்ட் கவுன்சில் போதனைகள், இரண்டாம் வத்திக்கான் வெளியீடுகள், கத்தோலிக்க கெட்டகிசம் ஆகியவற்றிலிருந்து தந்துள்ளோம். இப்போதனைகளில் இருந்து கத்தோலிக்க மதம் இன்று வரை எந்தவிதத்திலும் தனது போதனைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும் அது கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முற்றிலும் முரணான போதனைகளைப் பின்பற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

  1. பரிசுத்த வேதமும், பாரம்பரியமும்

கத்தோலிக்க மதம் பரிசுத்த வேதமும் சபைப் பாரம்பரியங்களும் சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாகப் போதிக்கின்றது. வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்று சுவிசேஷக் கிறிஸ்தவம் ஆணித்தரமாக அறிக்கையிட, ரோமன் கத்தோலிக்க மதம் தனது பாரம்பரிய சபைப் போதனைகளை அதிகாரபூர்வமானதாக இணைத்துக் கொண்டு தனது சபை மக்கள் அவற்றைக் கர்த்தருடைய போதனைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தன்னுடைய வார்த்தையான திருமறையோடு (பழைய, புதிய ஏற்பாடுகளிலே உள்ள அறுபத்தி ஆறு நூல்கள் மட்டும்) வேறு எந்த மனித போதனைகளையும் இணைக்கக்கூடாது என்று இயேசு ஆணித்தரமாகக் கூறியுள்ளார் (மத்தேயு 5:18).

  1. ஆசாரியர்கள் (Priests)

அப்போஸ்தலர்களுக்குப்பின் அவர்கள் வழியில் தெய்வாம்சமும் அதிகாரமும் கொண்ட ஒரு ஆசாரியர் கூட்டத்தை கிறிஸ்து ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்க மத டிரென்ட் கவுன்சிலும், கெட்டகிசமும் போதிக்கின்றன. இவ்வாசாரியர் கூட்டத்திற்கு பேதுரு வழியில் வரும் தலைவரே போப்பரசரான திருத்தந்தை என்பது அவர்களுடைய போதனை. மத்தேயு 16:18 இல் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குத் தவறான விளக்கங் கொடுத்து பேதுருவை மூலைக்கல்லாகக் கொண்டு சபை நிறுவப்பட்டதாக போதிக்கின்றனர்.

ரோமன் கத்தோலிக்க ஆசாரியர்கள் (குருமார்கள்) இவ்வுலகில் இரண்டு முக்கிய காரியங்களைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மதக் கெட்டகிசம் போதிக்கின்றது. அதாவது மாஸைக் கொடுப்பதற்கும், மக்களுடைய பாவங்களைக் கேட்டு அப்பாவங்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்குமாக அவர்கள் கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் போதிக்கிறார்கள்.

ஆனால், வேதத்தில் போப்பரசர் என்ற திருத்தந்தையையே பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டு வழிப்படியான பலிகள் கொடுத்து பாவநிவாரணம் செய்வதற்காக ஆசாரியர்கள் ஏற்படுத்தப்படவில்லை. தனது மக்களின் எல்லாப் பலிகளையும் கிறிஸ்துவே செலுத்தி அவர்களது பாவங்களுக்கு நிவாரணம் தந்துள்ளார் என்றே புதிய ஏற்பாடு போதிக்கின்றது. பலி கொடுக்கும் முறை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக எபிரேயர் 10 போதிக்கின்றது. இப்படியிருக்க ரோமன் கத்தோலிக்க குருமார் எப்படி இப்பலிகளைத் தொடர்ந்து மக்கள் கொடுக்கும்படிச் செய்ய முடியும். ரோமன் கத்தோலிக்க குருமார் மாஸ் நடக்கும்போது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அம்மதக் கோட்பாடு (டிரென்ட் கவுன்சில்) போதிக்கிறது. அத்தோடு ஒவ்வொரு முறை மாஸ் நடக்கும்போதும் கிறிஸ்து கல்வாரியில் கொடுத்த பலி மறுபடியும் குருமார்களின் மூலம் நிகழ்த்தப்படுவதாகவும் அது போதிக்கின்றது. ஆனால், வேதமோ, கிறிஸ்து “பாவங்களுக்காக என்றென்றைக்குமாக ஒரே பலியைச் செலுத்தினார்” என்று போதிக்கின்றது (எபிரேயர் 10:12). கிறிஸ்துவின் பலி மறுபடியும் நிகழ்த்தப்படவோ, எந்தச் சபைத்தலைவரும் அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய அவசியமோ இல்லை. (எபிரேயர் 7 முதல் பத்துவரை உள்ள வேதப் பகுதிகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்).

பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் கர்த்தருக்கும், மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்தார்கள். ஆனால், எபிரேயர் 7:11-24 வரையுள்ள வசனங்கள் அத்தகைய மத்தியத்துவம் வகிக்கும் ஆசாரியத்துவ முறை இல்லாமலொழிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவாகப் போதிக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் அத்தகைய மத்தியத்துவத்தைக் கிறிஸ்துவே தனது கல்வாரி மரணத்தின் மூலம் செய்து கர்த்தருடைய கட்டளைகளை என்றைக்குமாக நிறைவேற்றியிருப்பதால்தான் (எபிரேயர் 7:12, 7:18-19, 7:24). கிறிஸ்துவின் மத்தியத்துவப் பணியை வேறு எவரும் செய்யவோ பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. அப்படிச் செய்ய முயற்சிப்பது கர்த்தருடைய வார்த்தைக்கு எதிரான செயல்.

  1. மாஸ் (Mass)

கத்தோலிக்க மதம், கிறிஸ்துவின் கல்வாரி மரணம் இவ்வுலகில் தங்கள் சபை கடைப்பிடிக்கும் மாஸின் மூலம் தொடர்ந்தும் நடைபெறுவதாகப் போதிக்கிறது. மாஸ் நடக்கும்போது இரத்தம் சிந்தப்படாவிட்டாலும் அது நடக்கும் ஒவ்வொருமுறையும் குருவானவர் கிறிஸ்துவை இவ்வுலகுக்கு வ‍ரச்செய்து மறுபடியும் மரிக்கச் செய்வதாகவும், அதில் பங்கு பெறுபவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொள்வதாகவும் கத்தோலிக்க மதம் போதிக்கிறது. அதாவது, மாஸில் கலந்து கொள்பவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களை அடைந்து தங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பது கத்தோலிக்க மதப்போதனை.

  1. யூகரிஸ்ட் (Eucharist)

கத்தோலிக்கர்கள் திருவிருந்தை யூகரிஸ்ட் என்று அழைக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின் அதிகாரபூர்வமான கெட்டகிசம், யூகரிஸ்ட் சபை ஆராதனைகளில் முக்கியமானது. ஏனெனில், ஆகவே கிறிஸ்து என்று போதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவருடைய இரட்சிப்புக்கு அது அவசியமானது என்று கத்தோலிக்க மதம் போதிக்கிறது. இத்திருவிருந்தைப் பற்றிய கத்தோலிக்க மதப் போதனையை ஆங்கிலத்தில் Transubstantiation என்று அழைப்பர். கத்தோலிக்கப் போதனையின்படி தெய்வீக அம்சமுள்ள பாதிரியார் திருவிருந்து கொடுக்கும்போது திருவிருந்தின் ரொட்டியும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், திருஇரத்தமாகவும் மாற்றமடைகின்றன. இதனையே Transubstantiation என்ற பதம் விளக்குகிறது. ஆகவே, கத்தோலிக்கப் போதனைப்படி பாதிரியார் திருவிருந்து கொடுக்கும் ஒவ்வொருமுறையும் திருவிருந்தெடுப்பவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் அவர்கள் சுவைக்கும்படி கிறிஸ்துவையே அவர்களுக்கு வழங்குகிறார். இப்போதனை கிறிஸ்தவ வேதம் போதிக்கும் ஒரு போதனையல்ல. கிறிஸ்தவ வேதம் திருவிருந்தில் பயன் படுத்தப்படும் ரொட்டியும், திராட்சை இரசமும் எந்தவிதமான மாற்றத்தையும் அடைவதில்லை என்றும், திருவிருந்தெடுக்கும்போது கிறிஸ்துவின் கல்வாரி மரணத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தினால் ஆத்மீக பெலத்தை மட்டுமே பெறுகிறார்கள் என்றும் போதிக்கின்றது.

  1. பாவ அறிக்கையும், பாவ மன்னிப்பும்

கத்தோலிக்க மதம், கிறிஸ்து இவ்வுலகில் அப்போஸ்தலருக்குப் பின்பு அவர்கள் வழியில் ஆசாரியர்களை நியமித்து மக்களின் பாவங்களைத் தீர்ப்பதற்கு வழியேற்படுத்தியிருப்பதாகப் போதிக்கிறது. இவ்வாசாரியர்கள் மனிதர்களாக இருந்தபோதும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாக மக்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் கடவுளோடு உறவை ஏற்படுத்திக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கிறவர்களாக இருப்பதாகப் போதிக்கிறது. மக்கள் தங்கள் பாவங்களை இவ்வாசாரியர்களிடம் அறிக்கையிட்டு அப்பாவங்களுக்கான பலிகளைச் செலுத்துவதன் மூலம் மட்டுமே பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கத்தோலிக்க மதப் போதனை. நற்கிரியைகள், ஜெபங்கள், உபவாசம், மாஸ் மற்றும் ஆராதனைகளில் கலந்து கொள்ளல், கருணைக்கேதுவான காரியங்கள் செய்தல், பலிகள் செலுத்துதல் என்பவற்றின் மூலம் ஒரு தனி மனிதன் தனது பாவங்களில் இருந்து விடுதலை தேடிக் கொள்ள முடியும் என்று கத்தோலிக்க மதம் போதிக்கிறது. அவ்வாசாரியர்கள் கர்த்தரின் இடத்திலிருந்து தங்கள் பணிகளைச் செய்வதாக இம்மதம் போதிக்கிறது. கிறிஸ்தவமோ எந்தவொரு தனிமனிதனும் சுயமாக தன் பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியாதென்றும், எந்தக் கிரியைகளின் மூலமும் இரட்சிப்பை அடைய முடியாதென்றும், கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் மட்டுமே அவரிடமிருந்து பாவநிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் போதிக்கின்றது (எபேசியர் 2:8-10).

  1. திருமுழுக்கு

ரோமன் கத்தோலிக்க மதம், திருமுழுக்குப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒரு மனிதன் மறுபிறப்பை அடையலாம் என்று போதிக்கின்றது. அதாவது திருமுழுக்கின் மூலம் ஒரு மனிதன் கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் நுழைகிறான் என்கிறது இம்மதம். இப்போதனையை ஆங்கிலத்தில் Baptismal Regeneration என்பார்கள். இப்போதனை பரிசுத்த வேதத்திற்கு முரணான போதனை. திருமுழுக்கு ஒருபோதும் ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியாது. கிறிஸ்து இலவசமாக அளிக்கும் இரட்சிப்பை பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் பாவத்திலிருந்து மனம் திரும்பும் ஒருவன் பெற்றுக்கொள்கிறானே தவிர, திருமுழுக்கின் மூலம் பெற்றுக் கொள்வதில்லை. இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிசுத்த வேதம் போதிக்கின்றது (மத்தேயு 28:18-20).

தனது பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் ஒருவன் இரட்சிப்பை அடைய முடியாது. திருமுழுக்கு ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்காது. 1 யோவான் 3:9 – “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான் . . . அவன் தேவனால் பிறந்தபடியால் பாவஞ் செய்யமாட்டான்” என்று போதிக்கின்றது. அதாவது பாவத்தைத் தொடர்ந்து செய்ய மாட்டான் என்பது இதற்கு கிரேக்க மொழியில் பொருள். ஒருவன் பாவத்தைத் தொடர்ந்து செய்யாமலிருக்க அவன் முதலில் தேவனால் பிறந்திருக்க வேண்டும். இதனையே மறுபிறப்பு என்று கூறுகிறோம். திருமுழுக்கு ஒருவனுக்கு மறுபிறப்பைக் கொடுக்க முடியாது. தேவனால் பிறக்காமல் திருமுழுக்கை மட்டும் பெற்றுக்கொண்ட மனிதன் பாவத்தில் தொடர்ந்திருந்து, பாவத்தை மட்டுமே செய்து கொண்டிருப்பான். திருமுழுக்கு பற்றிய ரோமன் கத்தோலிக்க மதப்போதனை வேதத்திற்கு எதிரானதாகும்.

  1. ஆன்மா திருத்தமடையும் இடம் (Purgetory)

ரோமன் கத்தோலிக்க மதம் பாவத்தை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கிறது. மனிதன் அடிக்கடி திருந்தக்கூடிய சாதாரண பாவங்கள், எளிதாக திருந்த முடியாத பெரும் பாவங்கள் என்று பாவத்தை அவர்கள் பிரிக்கிறார்கள். சபையில் திருமுழுக்குப் பெற்ற ஒருவன் தன் பாவத்திலிருந்து விடுதலை ‍அடைகிறான் என்றும், அவன் மறுபடியும் சாதாரண, சிறிய பாவங்களைச் செய்யும்போது குருமாரிடம் தன் பாவத்தை அறிக்கையிட்டு பாவமன்னிப்புப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இம்மதம் போதிக்கின்றது. அதே வே‍ளை அவன் பெரும் பாவங்களைச் செய்து விடுவானானால் தான் திருமுழுக்கின் மூலம் பெற்றுக்கொண்ட கிருபையை இழந்துவிடுகிறான் என்றும் இம்மதம் போதிக்கின்றது. இழந்துபோன கிருபையை அவன் மீண்டும் அடைய ஏற்படுத்தப்பட்டதே Penance. அதாவது, பாவம் செய்தவன் அதிலிருந்து விடுதலை அடைய மதகுருவிடம் அறிக்கையிட்டு தன் ஆத்ம சாந்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மதகுரு அத்தகைய மன்னிப்பு வழங்கும் வல்லமையைக் கொண்டுள்ளதாக ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால், இம்மதப்போதனையின்படி திருமுழுக்குப் பெற்று பாவமன்னிப்பைப் பெற்றவர்கள் இறந்தவுடன் உடனடியாகக் கர்த்தரை அடைவதில்லை. அவர்கள் தங்களுடைய பூரண பாவநிவாரணத்திற்காக ஆத்மா சாந்தியடையும் இடத்தை (Purgotary) தற்காலிகமாக அடைவார்கள். இவ்வுலகில் இருக்கும் அவனுடைய உறவினர்கள் செய்யும் நற்‍கிரியைகள், ஜெபங்களின் மூலம் அவன் ஆத்மா சாந்தி பெற்று பின்பு கர்த்தரை அடையும் என்பது ‍இம்மதப் போதனை. ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கும் இப்போதனையை நாம் வேதத்தில் எங்குமே பார்க்க முடியாது.

கத்தோலிக்க மதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

இதுவரை ரோமன் கத்தோலிக்க மதத்தின் முக்கிய போதனைகளை ஆராய்ந்தோம். அவை கிறிஸ்தவ வேதம் போதிக்கும் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபாடானவை என்று அறிந்து கொண்டோம். டிரெண்ட் கவுன்சில் போதனைகளையும், சபைப் பாரம்பரியங்களையும், தனது கெட்டகிசத்தின் மூலம் வெளிப்படையாக போதிக்கப்படும் பரிசுத்த வேதத்திற்கு முரணான போதனைகளையும் தொடர்ந்து போதித்துவரும் ரோமன் கத்தோலிக்க மதம் இன்று மாற்றமடைந்துள்ளது, அல்லது மாறுகிறது போல் தோன்றுகிறது என்றும், சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் இன்று அப்படி‍யொரு பெரிய வித்தியாசமுமில்லை என்றும் பல கிறிஸ்தவர்கள் இன்று பேசி வருகிறார்கள். சில முக்கிய சுவிசேஷ இயக்கத் தலைவர்கள்கூட இதை நம்பி, ரோமன் கத்தோலிக்க மதத்துடன் பல காரியங்களில் நாம் இணைந்தியங்க முடியும் என்று நம்பிக்கையில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும், சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள கோட்பாட்டொற்றுமை என்று அறிவிக்கும் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 1998 இல் வட அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுவிசேஷ இயக்கத் தலைவர்கள் ஒன்றுகூடி இந்தக் கைங்கரியத்தைச் செய்தனர். இக்கூட்டறிக்கைக்கு ஆதரவளித்து கையொப்பமிட்டவர்களில் தேவ சபைத் தலைவர்கள் (Assemblies of God), அமெரிக்காவின் சதர்ன் பாப்திஸ்து (Southeren Baptist) தலைவர்கள், அ‍மெரிக்காவில் இயங்கும் புளர், விட்டன் இறையியல் கல்லூரிகள் Fuller and Whitton Theological Colleges), கெம்பஸ் குருசேட் (Campus Crusade), பிரிசின் மினிஸ்ட்ரியின் சக் கோல்சன் Prison Ministry – Chuck Colson) ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

ரோமன் கத்தோலிக்க மதம் மாறி வருகின்றதா? என்ற கேள்விக்கு நாம் ஆணித்தரமாக இல்லை என்ற பதிலளிக்க வேண்டியுள்ளது. தான் எப்போதும் பின்பற்றி வந்துள்ள போதனைகளில் இருந்து சிறிதும் மாறாது, போப்பரசர் தெய்வீகப் பிறவி என்றும், சபை மூலமும், கிரியைகளின் மூலமுமே இ‍ரட்சிப்பு என்ற போதனையையும், சிலை வணக்கத்தையும் வற்புறுத்திவரும் இம்மதத்தைக் கிறிஸ்தவத்துடன் ஒப்பிடுவது எப்படித் தகும்?

கத்தோலிக்க மதத்தால் கிறிஸ்தவத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்து?

கிறிஸ்தவத்திற்கு ரோமன் கத்தோலிக்க மதத்தால் என்ன ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சபை வரலாறு தெரிந்தவர்களுக்கு பதில் தெரியும். வேதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மனித சிந்தனைப்படி உருவான ஒரு மதமே ரோமன் கத்தோலிக்க மதம். ‍வெறுமனே கிறிஸ்துவின் பெயரை அது தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டாலும் கிறிஸ்துவுக்கும் அம்மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தன் பாவத்திற்குப் பரிகாரம் தேட வேண்டிய தனியொரு மனிதனான போப்பரசரைத் தலைவனாகக் கொண்டு வேதத்திற்கு விரோதமாக இயங்கிவரும் மதமே ‍‍ரோமன் கத்தோலிக்க மதம். இம்மதத்தோடு இணைந்து கிறிஸ்தவர்கள் செயல்படுவது என்ற பேச்சு மறுபடியும் கிறிஸ்தவர்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியே. இதனால் கிறிஸ்தவத்திற்கு பேராபத்தும், ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு நல்ல காலமுமே ஏற்படும்.

தங்களுடைய இரத்தத்தையும், உயிரையும் பலியாகக் கொடுத்து மாண்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், லூதர், கல்வின், நொக்ஸ் போன்ற சீர்திருத்தவாதத் தலைவர்கள், பியூரிட்டன் பெரியோர்கள் அனைவரும் உயிர் கொடுத்துப்போராடிப் பெற்ற சுதந்திரத்தை ஒரே நொடியில் இழப்பதற்கு பலர் இன்று தயாராய் இருப்பது ஆச்சரியமே! இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் ஆராயத்தான் வேண்டும். முதற் காரணம், இன்று நம்மத்தியில் மெய்யான வேத அடிப்படையில் உள்ள கிறிஸ்தவம் அரிதாகக் காணப்படுவதே. வெறும் உதட்டுச் சாயம் பூசிய, கண்ணுக்கு அழகாகத் தெரியும் கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒரு போலிக் கூட்டம் உலவுகிறதே தவிர, கர்த்தருக்கும், அவருடைய வேதத்திற்கும் பயந்து, இருதய சுத்தத்தோடு கிறிஸ்துவைப்பின் பற்றும் மக்களை இக்கூட்டத்தில் பார்க்க முடியாதிருக்கிறது. மெய்க் கிறிஸ்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். இரண்டாவதாக, நான் ஏற்கனவே கூறியதுபோல் அநேகருக்கு வரலாறு என்பதே தெரியவில்லை. ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவறாக கிறிஸ்தவமாகப் பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலைமை மாற கிறிஸ்தவர்கள் சபை வரலாற்றைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு மெய்ச்சபையும் தன் மக்களுக்கு சபை வரலாற்றைப் போதிக்க வேண்டும். மூன்றாவதாக, அநேக கிறிஸ்தவர்களுக்கு வேதம் போதிக்கும் இறையியல் தெரிந்திருக்கவில்லை. சுவிசேஷக் கிறிஸ்தவர்களில் பலர் கூட ஆன்மா சாந்தியடையும் இடமென்‍றொன்றிருப்பதாக தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் வேதம் போதிக்கும் சத்தியங்களை இன்று ஆழமாகப் படிக்க வேண்டும். தர்க்கம் செய்வதற்காகப் ப‍‍டிக்காமல் கிறிஸ்துவில் வளர்வதற்காகப் படிக்க வேண்டும். வேத அறிவில் தேர்ந்து ஆத்மவிருத்தி பெறுவதற்காகப் படிக்க வேண்டும்.

இதெல்லாம் நடந்தாலொழிய நாம் போலிப் போதனைகளில் இருந்து தப்புவது இலேசல்ல. இனியாவது ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அதோடு கண்ணாமூச்சி விளையாடும் வேலையைக் கிறிஸ்தவர்கள் விட்டுவிடுவது நல்லது.

1689 விசுவாச அறிக்கை

கடவுளின் ஆணை

அதிகாரம் 8 – பாகம் 1

விளக்கம்: லமார் மார்டின்

கடவுளின் ஆணையைப்பற்றிப் போதிக்கும் பாப்திஸ்து விசுவாச அறிக்கையின் மூன்றாம் அதிகாரத்தை இப்போது ஆராய்வோம். முதலாவதாக இவ்வதிகாரம் கடவுளின் ஆணையைப் பற்றிய பொதுவான விளக்கமொன்றை அளிக்கிறது. முதலிரு பாராக்களிலும் இதைக் காணலாம். மூன்றாம் பாராவில் இருந்து ஏழாம் பாராவரை கடவுளின் முன்குறித்தலைப்பற்றிய விளக்கங்களைப் பார்க்கலாம். ஆகவே, முதலில் இவ்வதிகாரத்தின் முதலிரு பாராக்களும் தரும் கடவுளின் ஆணை பற்றிய பொதுவான விளக்கத்தைப் பார்ப்போம்.

பாரா 1: கடவுள் தனது பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட சுய சித்தத்தின் ஆலோசனையினால் இனி நிகழப்போகிற அ‍னைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் நித்தியத்திலிருந்து தாமே தமக்குள்ளாகத் தீர்மானித்திருக்கிறார். (அதாவது எவற்றாலுமே உந்தப்படாது அவர் தன் திட்டங்களை செயற்படுத்துவது மட்டுமன்றி அணுவளவும் மாற்றமின்றி அவரது நோக்கங்கள் அனைத்துமே நிறைவேற்றப்படுகின்றன). அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக் கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக் காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அனைத்துமே அவரால் நிலைநிறுத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின்மீதும் ஆணை செலுத்தி அமைவுறச்செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத்தன்மையைக் ‍குறிக்கும்).

(ஏசாயா 46:10; எபேசியர் 1:11; எபிரேயர் 6:17; ரோமர் 9:15, 18; யாக்கோபு 1:13-15; யோவான் 1:5; அப்போஸ். 4:27-28; யோவான் 19:11; எண்ணாகமம் 23:19; எபேசியர் 1:3-5.)

பாரா 2: நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடைபெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.

(அப்போஸ். 15:18, ரோமர் 9:11-18.)

முதலாவது பாராவின் ஆரம்ப வசனத்தில் கடவுளின் ஆணைபற்றிய பொதுவான விளக்கம் காணப்படுகின்றது. இதுபற்றி நாம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும். கடவுள் எதை ஆணையிட்டுள்ளார்? எப்போது ஆணையிட்டார்? எவ்வாறு ஆணையிட்டார் என்பதே அக்கேள்விகள்.

முதலாவதாக, கடவுள் எதை ஆணையிட்டார்? நமது விசுவாச அறிக்கை இதற்குப் பதிலாக கடவுள் தமக்குள்ளாக இனி நிகழப்போகின்ற அனைத்துக் காரியங்களையும் தீர்மானித்துள்ளார் என்று கூறுகின்றது. அதாவது, இதற்கு முன்போ அல்லது இனியோ எக்காலத்திலும் கடவுளால் தீர்மானிக்கப்படாமல் எதுவும் எவ்வேளையிலும் நிகழ்ந்ததுமில்லை, இனி நிகழப்போவதுமில்லை. கடவுள் தீர்மானித்திருப்பதாலேயே எதுவுமே நிகழ்கின்றது.

எபேசியர் முதலாம் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்வதிகாரம் இரட்சிப்போடு தொடர்புடைய காரியங்களைப்பற்றிப் பேசுகின்றது. இருந்தபோதும் இவற்றிற்கு மத்தியில் கடவுளின் ஆணைபற்றிய பொதுவான விளக்கமொன்றை பவுல் அளிப்பதைப் பார்க்கிறோம். 1:12 இல் – “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்” என்று பவுல் கூறுகிறார். இவ்வசனம் போதிக்கும் கடவுள் தனது சித்தத்தின்படி நடப்பிக்கும் “எல்லாவற்றின்” ஒரு பகுதியாக கிறிஸ்துவின் மக்களின் இரட்சிப்பு காணப்படுகின்றது. இந்தப் பகுதியின்படி தனது மக்களின் மீட்பை மட்டும் கடவுள் நடப்பிக்கவில்லை. அவர் “எல்லாவற்றையும்” தனது சித்தப்படி நடப்பிக்கிறார். உலகை அதிர வைக்கும் காரியங்களில் இருந்து மிகச் சாதாரணமான காரியங்கள் வரை அனைத்தையும் கடவுள் நடப்பிக்கிறார், ஆணையிட்டுள்ளார். ஆகவேதான் இயேசுவும் மத்தேயு 10:29 இல் “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அடைக்கலான் குருவிகளில் ஒன்றும் தரையில் விழாது” என்றார். மிகச் சாதாரண பறவைகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்கூட கர்த்தரின் திட்டப்படி அவர் நடப்பிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடங்கியுள்ளன. ஒரு பறவை கூட அவருடைய ஆணைக்குள் அடங்கியிராமல் தரையில் விழ முடியாது.

அடுத்ததாக எப்போது கடவுள் ஆணையிட்டார்? என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். நித்தியத்திலிருந்து கடவுள் அனைத்தையும் தமக்குள் தீர்மானித்திருக்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. இதுவரை நடந்தவை, இனி நடக்கப் போகின்றவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய கடவுளின் திட்டங்கள், ஆணைகள், நோக்கங்கள் எல்லாவற்றையும் கடவுள் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு நடத்தவில்லை. கடவுள் நித்தியமானவராக இருப்பதால் அவருடைய ஆணைகளும் நித்தியமானவையாயிருக்கின்றன.

ஏசாயா 46 ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். பாபிலோனிய கட்டுப்பாட்டுக்குள் இருந்து இஸ்ரவேலர் விடுதலை செய்யப்படப் போவதையும் பாபிலோனிய ராஜ்ய வீழ்ச்சியையும் குறித்து இப்பகுதி தீர்க்கதரிசனம் கூறுகிறது. பாபிலோனிய விக்கிரகங்களான பேலும், நோபோவும் முதலாம் வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர். யெகோவாவும், கள்ளக் கடவுளர்களும் அப்பகுதியில் ஒப்பிடப்படுகின்றனர். இப்பகுதியின் 9-10 வசனங்களில் பின்வருமாறு வாசிக்கிறோம்: “முந்திப் பூர்வ காலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானம் இல்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும் இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன். . .” என்று கர்த்தர் சொல்கிறார். 10ஆம் வசனம் இவ்வாறு ஆரம்பிக்கிறது – அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற் கொண்டும் – என்று. எப்போது கடவுள் ஆணையிட்டார்?, எப்போது தன் திட்டங்களை உருவாக்கினார்?, எப்போது தன் ஆலோசனைகளை நியமித்தார்? கடவுள் இப்பகுதியில் சொல்கிறார், தான் ஆதியில் இருந்தே இவற்றை செய்திருப்பதாக. இதைத்தான் விசுவாச அறிக்கை, நித்தியத்திலிருந்து அவர் அனைத்தையும் செய்திருப்பதாகப் போதிக்கிறது. இதேபோல் எபேசியர் 3:11 இல் பவுல் கர்த்தருடைய நித்திய திட்டங்களைப் பற்றி பேசுகிறார். ஆகவே வேதம் கர்த்தர் நித்தியத்திலிருந்து இருப்பதுபோல அவரது ஆணைகளும் நித்தியத்திலிருந்தே இருக்கின்றன என்று போதிக்கின்றது.

அடுத்ததாக கர்த்தர் எவ்வாறு ஆணையிட்டுள்ளார்? என்ற‍ கேள்விக்கான பதிலைப் பார்க்க வேண்டும். விசுவாச அறிக்கை, கடவுள் “தனது சுயசித்தத்தின் பேரறிவும், பரிசுத்தமுமான திட்டத்தினால். . . அனைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் தீர்மானித்திருக்கிறார்” என்று கூறுகின்றது. முதலாவதாக, கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் அவருடைய சுயசித்தத்தின் பேரறிவாலும், பரிசுத்தமுமான திட்டங்களினாலும் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுகின்றது. எவற்றைக் கர்த்தர் ஆணையிட விரும்பினாரோ அவற்றை அவர் ஆணையிட்டார். அதைச் செய்வதற்கு அவருக்கு யாருடைய துணையோ, உந்துதலோ தேவைப்படவில்லை. ‍எல்லாவற்றையும் அவர் தமக்குள்ளும் தனது சித்தப்படியும் ஆணையிட்டார். பவுல் ரோமர் 9:15 இலும் 9:18 இலும், அவர் எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார் என்றும் எவன் மேல் உருக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன்‍ மேல் உருக்கமாயிருக்கிறார் என்றும் கர்த்தரைப்பற்றிப் பேசுகிறார். நாம் ஏற்கனவே பார்த்த ஏசாயா பகுதி 46:10இல் கர்த்தர் என் ஆலோசனைகள் நிலைத்து நிற்கும், எனக்கு சித்தமானவைகளைச் செய்வேன் என்று கூறுகிறார். சங்கீதம் 33:11 – “கர்த்தருடைய ஆலோசனைகள் நித்திய காலமாக நிற்கும்” என்று கூறுகின்றது. எபிரேயர் 6:17 – “அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்கிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஒரு ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்” என்று கூறுகின்றது. வேதம் கர்த்தருடைய மாறாத்தன்மையையும், அவருடைய ஆணைகளின் மாறாத்தன்மையையும் சரிசமமாக அமைத்துப் பேசுகின்றது. கர்த்தர் மாறாதவராக இருப்பதால் அவரது ஆணைகளும் ஒருபோதும் மாறாதவை. இதுவரை முதலாம் பாராவின் முதல் வசனம் கர்த்தரின் ஆணையைப்பற்றிய பொதுவான போதனையைத் தந்ததைப் பார்த்தோம். கர்த்தர் எதை ஆணையிட்டார் – நிகழப்போகிற அனைத்துக் காரியங்களையும். எவ்வாறு கர்த்தர் இவற்றை ஆணையிட்டார்? – பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட தனது சுயசித்தத்தின் ஆலோசனையினால்.

இதுவரை நாம் பார்த்த உண்மைகள் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. நாம் இதுவரை சொன்னவை உண்மையானால் அவை கர்த்தரைப் பாவத்தின் காரணகர்த்தாவாக அல்லவா சுட்டிக் காட்டும்? அவருடைய சிருஷ்டியான மனிதன் சுயசித்தத்தைக் கொண்டிருந்து பாவம் ‍செய்பவனாக இருந்தால், இதுவரை நாம் பார்த்த உண்மைகள் அதோடு எப்படிப் பொருந்தும்?

இக்கேள்விக்கு விடையளிப்பதற்காகவே விசுவாச அறிக்கை மேலும் சில விளக்கங்களைத் தருகிறது. இப்பகுதியை நாம் மிகவும் கவனமாக ஊன்றிப்படிக்க வேண்டும். “அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக்கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக் காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அவரால் நிலைநாட்டப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின் மீதும் ஆணை செலுத்தி அமைவுறச் செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நே‍ர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத் தன்மையைக் குறிக்கும்).”

விசுவாச அறிக்கை கடவுள் எந்தவிதத்திலும் பாவத்திற்குக் காரணகர்த்தாவோ அல்லது அதைச் செய்வதற்கு எவருக்கும் அவர் துணைபோவதோ இல்லை என்று போதிக்கிறது. ஆனால் மனித ஞானமோ வேறுவிதமாக வாதிடும்.

கடவுள் எல்லாவற்றையும் ஆணையிட்டு நிறைவேற்றுபவராக இருந்தால் அவர் நிச்சயம் பாவத்திற்குக் காரணமானவராகத்தான் இருக்க வேண்டும் என்று அது வாதிடும். ஆனால், விசுவாச அறிக்கையை எழுதிய நமது முன்னோர்கள் அது முழுத்தவறு என்று கூறுகின்றனர். கடவுள் நடக்கப்போகும் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஆணையிட்டிருந்தாலும் அவர் பாவத்திற்குக் காரணமானவரல்ல என்பது அவர்களது வாதம். விசுவாச அறிக்கை இங்கே வேதம் போதிப்பதையே வலியுறுத்திக் கூறுகிறது. சங்கீதம் 5:4 – நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை என்று கர்த்தரைப்பற்றிக் கூறுகிறது. அத்தோடு ஆபகூக் 1:13; யோவான் 1:5 ஆகிய வசனங்களையும் வாசிக்கவும். கர்த்தர் பாவத்திற்குக் காரணமானவரா? என்ற கேள்விக்கு யாக்கோபு அளிக்கும் பதிலைப் பாருங்கள். யாக்கோபு 1:13 – “சோதிக்கப்படுகிற எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவரையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என்கிறார் யாக்கோபு.

யாக்கோபு தெளிவாகவே கர்த்தர் பாவத்துக்குக் காரணகர்த்தா அல்ல என்று போதிக்கின்றார். ஆனால், மனித ஞானம் இதை ஏற்றுக்கொள்ளாது இதற்கு எதிராகவே பேசும். இருந்தாலும் எல்லாம் தெரிந்த வேதம் கூறுவதே உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் ஆணைபற்றிய உண்மையையும், கர்த்தர் பாவத்திற்குக் காரணகர்த்தா அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள சிறிது கஷ்டப்படலாம். நமது அறிவு கர்த்தருடைய ஞானத்தைவிடக் குறைவானது. அதற்காக நாம் கர்த்தருடைய வார்த்தையைக் குறை காணமுயலக் கூடாது. மனித ஞானத்தைவிட பரிசுத்த வேதமே சத்தியமானதும், நம்மேல் அதிகாரம் செலுத்துவதாகவும் உள்ளது. ஆகவே, இந்த இரு உண்மைகளையும் வேதம் போதிக்கும் சத்தியமாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய ஆணைபற்றிய போதனை இன்னுமொரு கேள்வி‍யையும் எழுப்புகிறது. அதாவது, கர்த்தருடைய ஆணை மனிதனுடைய சித்தத்திற்கு மாறாக நடப்பதாக அல்லவா தெரிகிறது? என்பதே அக்கேள்வி. கர்த்தர் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஆணையிட்டிருந்தால் மனிதன் சாவி கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை போல அல்லவா நடந்து கொள்வான் என்று கேட்கலாம். விசுவாச அறிக்கை படைப்புயிர்களின் சித்தத்திற்கு கர்த்தருடைய ஆணை எந்தவிதத்திலும் ஊறேற்படுத்துவதில்லை என்று போதிக்கின்றது. துணைப் பொருட்கள் அல்லது இடைக்காரணங்கள் எதுவும் அவரது ஆணையால் தடைசெய்யப்படாமல் சுதந்திரமாகவே இயங்குகின்றன. மனிதன் பாவத்தைச் செய்யும்போது, அது கர்த்தருடைய ஆணைக்குட்பட்டிருந்த போதும், மனிதன் தனது பாவத்திற்குத் தானே காரணமானவனாக இருந்து தான் விரும்பியதையே செய்கிறான்.

அப்போஸ்தல நடபடிகள் 2:22 இல் பேதுரு இஸ்ரவேலரைப் பார்த்து, “கிறிஸ்து மனிதர்களால் சிலுவையில் அறையும்படிக்கு கடவுள் தனது சித்தத்தின்படி முன்கூட்டியே தீர்மானித்துள்ளார்” என்று கூறுகிறார். கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்‍கள் தாம் விரும்பியதை, தமது பாவத்தின் காரணமாகச் செய்தபோதும், கிறிஸ்துவின் சிலுவை மரணம் கர்த்தருடைய ஆணைக்குள் அடங்கியிருக்கிறது என்ற வேத உண்மையை நாம் இங்கே பார்க்கிறோம். இதே உண்மையைப் போதிக்கும் அப்போஸ். 4:27, 28; மத்தேயு 18:7 ஆகிய வசனங்களையும் பார்க்கவும்.

கர்த்தரின் ஆணையின் காரணமாக மனிதர்கள் தங்களுடைய சித்தத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணிவிடக்கூடாது. மனிதர்கள் ‍எப்போதும் தாம் விரும்பியதை விரும்பியபடி தொடர்ந்து செய்துவருகிறார்கள். இதுவே வேதம் போதிக்கும் உண்மை. அதுமட்டுமல்லாமல் மனிதன் தன்னுடைய விருப்பப்படி செய்யும் காரியங்களையும் கர்த்தர் தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. இது கர்த்தருடைய மகா ஞானத்தை விளக்குவதாக அமைகிறது. இது கர்த்தரால் மட்டுமே ஆகும் காரியம். உலகில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. அனைத்திற்குப் பின்னாலும் தேவன் இருக்கிறார்.

கர்த்தருடைய ஆணையைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள், அவர் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவரால் அனைத்தையும் ஆணையிட முடிகிறது என்று கூறுவர். மனிதன் என்ன செய்யப்போகிறான் என்பதை முன்கூட்டியே பார்த்து அவை நடக்கப்போகின்றன என்று தெரிந்திருந்ததால்தான் கர்த்தரால் அவற்றை பின்பு நடக்கும்படியாக ஆணையிட முடிந்தது என்று இவர்கள் கூறுவர். இந்தச் சிந்தனைப்போக்கு தப்பானது. இவ்வகையில் சிந்திப்பவர்களே ‍பெலேஜியன், ஆர்மீனியன் கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாப்திஸ்துகளின் (General Baptist) பலரும் இதை நம்பினர். இதனை நம்புபவர்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று அதிகமாகவே இருக்கிறார்கள். இரண்டாம் பாரா இப்போதனையை மறுத்து அதற்குத் தகுந்த பதிலை அளிக்கிறது. அதை அடுத்த இதழில் விபரமாகப் பார்ப்போம்.

மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? அந்நாளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்து கடந்த இதழில் பார்த்தபோது பழைய ஏற்பாட்டில் ஏசாயா மூலம் கர்த்தர் அந்நாளின் சிறப்பம்சங்களைப் பற்றியும், அந்நாளைக் கைக்கொள்வதால் கர்த்தருடைய மக்கள் அடையக்கூடிய பயன்களையும் குறித்துப் போதித்த உண்மைகளைப் பார்த்தோம். இவ்விதழில் அந்நாள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு நாளல்ல, கிறிஸ்தவர்கள் அனைவருமே எக்காலத்திலும் பின் பற்ற வேண்டிய ஒரு நாள் என்பதற்கான வேத ஆதாரங்களைப் பார்ப்போம். ஓய்வு நாளை இன்று நாம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேதத்திற்கு முரணாக சிலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியும், நடந்தும் வருவது கிறிஸ்தவர்கள் அறிந்த உண்மை. முக்கியமாக Dispensationalism, New Covenant Theology போன்ற போதனைகள் ஓய்வு நாளை எதிர்க்கிறன. இப்போதனைகள் சரிதானா? என்பதையும் நாம் ஆராய்வது அவசியம். வேதம் போதிக்கும் சத்தியத்தை எடுத்து விளக்கும்போது, அதற்கெதிரான போதனைகளை வெளிப்படுத்துவதும் சத்தியத்தைப் போதிப்பதன் மறுபகுதி என்று இவ்விதழின் தலைப்புக் கட்டுரையில் மொரிஸ் ரொபட்ஸ் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

படைப்பில் உருவாக்கப்பட்ட நாள்

ஓய்வு நாள் படைப்பில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்களை நான்கு வேதப் பகுதிகள் தருகின்றன. அவை: ஆதியாகமம் 2:1-3; யாத்திராகமம் 20:8-11; மாற்கு 2:27, 28; எபி‍ரேயர் 4:1-11 ஆகியவை.

  1. ஆதியாகமம் 2:1-3

தம்முடைய நற்கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் என்று இப்பகுதி கூறுகிறது. மூன்றாம் வசனத்தில், தேவன் அந்நாளிலே ஓய்ந்திருந்தபடியால் அந்நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று வாசிக்கிறோம். இவ்வாறாக தேவன் படைப்பில், நீங்கள் ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் தானே ஒரு உதாரணமாக இருந்து அந்நாளில் ஓய்வெடுத்து முழு மனித குலமும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வேதத்தின் மூலம் அறிவிக்கிறார்.

படைப்பில் ஏற்படுத்தப்பட்ட (Creation Ordinances) மூன்று காரியங்களாக தொழில், திருமணம், ஓய்வு நாள் ஆகியவை அமைந்துள்ளன. இம்மூன்றும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றி முழு மனித வர்க்கமுமே கடைப்பிடிக்கும்படியாகப் படைப்பின் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளன.

கர்த்தர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை. ஆனால் அவ்வாறு நாம் ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துமுகமாக தானே ஓய்வெடுத்து நமக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கர்த்தர் அந்நாளை ஆசீர்வதித்து, பரிசுத்தமாக்கினார் என்று வாசிக்கிறோம். கர்த்தர் இப்படிச் செய்ததன் மூலமாக அந்நாளின் அவசியத்தையும் பெருமையையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார். அந்நாளை ஏனைய நாட்களில் இருந்து பிரித்துப் பரிசுத்தப்படுத்தியது எதற்காக? எல்லா நாட்களுமே நல்ல நாட்களாகவும், அவசியமானவையாகவும் இருந்தபோதும் ஏழாம் நாள் இன்னொரு விதத்தில் முக்கிய நாளாக இருக்கிறது ஏனெனில், அதை மக்களுடைய ஓய்வு நாளாக மாற்றியிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக கர்த்தர் இப்படிச் செய்தார். தானே அந்நாளில் ஓய்வெடுத்துக் காட்டியதன் மூலம் கர்த்தர் அந்நாளை எந்தவிதத்தில் மதிக்கிறார், நாம் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக உணர்த்துகிறார்.

  1. யாத்திராகமம் 20:8-11

இப்பகுதி ஆதியாகமம் 2 ஆவது அதிகாரம் அறிவித்த, கர்த்தர் ஓய்வு நாளை ஏற்படுத்திய காரியத்தை அப்படியே கூறுகிறது. 11 ஆம் வசனம் ஆதியாகமப் பகுதியை விளக்குகிறது. இலக்கணத்தின்படி இவ்வசனம் ஏற்கனவே நடந்ததை அறிவிக்கும் முறையில் எழுதப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறோம் (Hebrew perfect is used here to indicate that it is a reference to creation ordinance). ஓய்ந்திருந்தார், ஆசீர்வதித்தார், பரிசுத்தமாக்கினார் ஆகிய வார்த்தைகள் ஆதியாகமப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தைகள். ஆதியாகமப் பகுதியைத்தவிர வேறு எதையும் இப்பகுதி கருத்தில் கொள்ளவில்லை என்பதை இப்பகுதியின் இலக்கண அமைப்பு தெளிவாக்குகின்றது. இவ்வேதப்பகுதி படைப்பில் ஓய்வு நாள் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதோடு கர்த்தர் ஏற்படுத்தித் தந்துள்ள ஓய்வு நாள் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதி ஏழாம் நாள் (Seventh Day) என்றால் என்ன என்றும் தெளிவாக விளக்குகின்றது. படைப்பில் கர்த்தர் ஏற்படுத்திய ஏழாம் நாளைப் பற்றித்தான் இங்கு பேசப்படுகிறது என்பதை விளக்குவதற்காக ஆதியாகமம் 2-ல் பயன்படுத்தப்பட்ட வார்த்தையையே இங்கும் பயன்படுத்தி, வாரத்தில் ஒருநாள் ஓய்வு நாளாக கருதப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அது மட்டுமல்லாமல் இப்பகுதியின் ஆரம்பத்தில் இவ்வேழாம் நாள் “ஓய்வு நாள்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. அதாவது இது தொடர்ந்தும் எக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நாள் என்பதை இவ்விரண்டு வார்த்தைகளும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தெரிவிக்கின்றது. ஆகவே, வாரத்தில் ஒரு நாளை ஓய்வு நாளாகக் கடைப் பி‍டிக்க வேண்டும் என்று கர்த்தரால் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட நியதியை இப்பகுதி மேலும் உறுதிப்படுத்துகிறது.

மாற்கு 2:27

இப்பகுதி பலர் அளிக்கும் தவறான விளக்கங்களுக்கு மாறாக படைப்பில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வு நாளை மேலும் உறுதிப்படுத்துகிறது. இப்பகுதி குறித்த ஐந்து உண்மைகளைக் கவனிப்போம்.

1.இப்பகுதி கர்த்தர் ஓய்வுநாளை உருவாக்கினார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஓய்வு நாள் “உண்டாக்கப்பட்டது” என்ற வார்த்தை படைப்பில் அந்நாள் உருவாக்கப்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது. இவ்வார்த்தையை நாம் யோவான் 1:1-3 வரையிலுள்ள வசனங்களில் சந்திக்கிறோம். இது அங்கே படைப்பைக் குறித்து பயன்படுத்தப்பட்டள்ளது. கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட எபிரேய ‍வேதமான LXX ல் இதே வார்த்தை மனிதனின் படைப்பைக் குறித்துப் பய்னபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதி ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

  1. இப்பகுதி ஓய்வு நாளின் பயனை எடுத்துக் காட்டுவதற்காக எழுதப்பட்டது. மனுஷனுக்காக அந்நாள் உண்டாக்கப்பட்டதாக இயேசு கூறுகிறார். அவர் இப்படிக் கூறுவதற்குக் காரணமென்ன? ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் அந்நாள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டது என்ற வாசிக்கிறோம். அதற்குக் காரணம் அந்நாள் மனிதனுக்கு நன்மையளிக்க வேண்டுமென்பதற்காத்தான். இதை மனதில் வைத்தே இயேசு இங்கு பேசினார்.
  2. இப்பகுதி ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது என்று கூறகிறது. “மனுஷன்” என்ற இவ்வார்த்தை முழு மனித குலத்தையும் குறிக்கும் கிரேக்க வார்த்தை. இதே வார்த்தையையே ஆதியாகமத்தில் ஆதாமைக் கர்த்தர் ப‍டைத்தபோது அவனைக் குறித்துப் பயன்படுத்தினார் (ஆதி. 1:27; 2:7, 8, 15, 18 & LXX). ஆகவே இயேசு இப்பகுதியில் ஓய்வுநாள் ஆதாமுக்காக, அதாவது மனித குலத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெளிவாக்குகிறார்.
  3. இப்பகுதியில் கிறிஸ்து “ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை” என்று கூறுகிறார். இதற்குக் காரணமென்ன? இதேவகையில் பவுல் மனிதனைக் குறித்துப் பேசியிருப்பதை நாம் 1 தீமோத்தேயு 2:12, 13; 1 கொரிந்தியர் 11:8, 9 ஆகிய வேதப்பகுதிகளில் காணலாம். இப்பகுதிகளில் பவுல் பெண்ணின் மேல் ஆணுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறுகிறார். ஏனெனில், படைப்பில் ஆணுக்கே எல்லா அதிகாரத்தையும் கர்த்தர் கொடுத்து ஆணுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ளார். இதேவிதமாகவே இயேசு இங்கு ஓய்வு நாளுக்காக மனிதன் உண்டாக்கப்பட வில்லை, ஆனால் மனிதனுக்காக (மனிதனே படைப்பில் சிறப்பானவன்), அவனது நன்மைக்காகவே ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டது என்று கூறுகிறார்.
  4. “மனுஷகுமாரன் ஓய்வு நா‍ளுக்கு ஆண்டவராயிருக்கிறார்” என்ற வசனம் ஓய்வு நாளைக் கர்த்தர் அழிக்க வந்தார் என்று கூறுவதாக பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், அந்தப்பொருளில் இயேசு இங்கே பேசவில்லை. ஓய்வு நா‍ள் உட்பட அனைத்தின் தேவனாகவும், தலைவனாகவும் இயேசு இருக்கிறார் என்ற பொருளிலேயே அவர் இங்கு பேசுகிறார். இங்கே இயேசு பரிசேயர்களையும், சதுசேயர்களையும் மனதில் கொண்டு ‍அவர்களுடைய போதனைக்கு எதிராகப் பேசுவதை நாம் உணர வேண்டும். இவர்கள் ஓய்வு நாளை வேதத்திற்கு புறம்பான விதத்தில் பயன்படுத்தி வந்ததையே இயேசு இப்பகுதி மூலம் கண்டிக்கிறார். மிகச் சிறந்த வேத அறிஞரான ஜோண் மரே இவ்வசனத்தைக் குறித்து விளக்கும்போது, “ஓய்வு நாள் கிறிஸ்துவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் அது மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயேசு ஓய்வு நாளின் ஆண்டவராக இருப்பதால் அவ்வோய்வு நாளை பரிசேயர்களின் தவறான போதனைகளில் இருந்து பாதுகாத்து மனிதனுக்கு முழுமையாகப் பயன்படும்படியாகச் செய்வதே கிறிஸ்துவின் நோக்கம். கிறிஸ்து ஓய்வு நாளின் ஆண்டவராதலால் மனிதன் அதன் பயனை அடையாமல் செய்வது அவரது நோக்கமாக இருந்திருக்க முடியாது. மாறாக அந்நாளில் அத்தனைப் பயன்க‍ளையும் அவன் அடையும்படிச் செய்ய கிறிஸ்து அந்நாளின் ஆண்டவராக இருக்கிறார்.” (Collected Writings Vol.1, page 208) என்று கூறி ஜோண் மரே மிக அருமையாக இவ்வுண்மையை விளக்குகிறார்.

எபிரேயர் 4:1-11

இப்பகுதியின் நான்காம் வசனத்தில் ஆதியாகமம் 2:2 தரப்பட்டிருக்கிறது. இப்பகுதி கர்த்தர் படைப்பில் ஏற்படுத்திய ஓய்வு நாளை இனி வரப்போகும் நித்திய ஓய்வோடு ஒப்பிடுகிறது. கானான் தேச ஓய்வு வாராந்தர ஓய்வோடும், இனி வரப்போகும் நித்திய ஓய்வோடும் இப்பகுதியில் ஒப்பிடப்படுகிறது (3-5, 9, 10).

வாராந்தர ஓய்வு நாள் வரப்போகும் நித்திய ஓய்வைக் குறிப்பிட்டுக் காட்டும் அடையாளமாக இருக்கிறது (9). வரப்போகும் நித்திய ஓய்வு இங்கே இளைப்பாறுதலாக (Sabbath-rest) வர்ணிக்கப்படுகின்றது. ஆகவே, வாராந்தர இளைப்பாறுதல் வரப்போகும் நித்திய இளைப்பாறுதலுக்கு அடையாளமாக இருக்கின்றது. வாராந்தர ஓய்வு நாள் (இளைப்பாறுதல் – Rest) நித்திய ஓய்வுக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க வேண்டிய அவசியமில்லை. வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதை வற்புறுத்தினால் வரப்போகும் நித்திய ஓய்வை அது சுட்டிக்காட்டுவதை மறுத்ததாகிவிடும் என்ற விளக்கம் தவறானது. படைப்பில் உண்டாக்கப்பட்ட வாராந்தர ஓய்வுநாள் வரப்போவதின் அடையாளமாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது வரலாறு முடிவடைந்து ஆதாம் உயர்ந்த ஒரு நிலையை அடைந்து நித்திய ஓய்வை அடைவதைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பகுதி நித்திய ஓய்வைக் குறித்து மட்டுமே பேசுகிறது. இப்பகுதிக்கும் வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும் முறைக்கும் சம்பந்தமேயில்லை என்று கூறுபவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களுக்கு பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் எப்படி ஒப்பிட்டுப் படிப்பது என்பது புரிவதில்லை.

படைப்பில் உண்டாக்கப்பட்ட வாராந்தர ஓய்வு நாள் அளிக்கும் போதனை என்ன?

நாம் இதுவரை பார்த்தவற்றில் இருந்து மூன்று முக்கிய காரியங்களை படிக்கிறோம்.

  1. படைப்பில் உண்டாக்கப்பட்ட ஓய்வு நாள், உலகில் வாராந்தர ஓய்வு நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டு‍மென்பதை வலியுறுத்துகிறது.

படைப்பின் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் புதிய ஏற்பாட்டு மக்கள் பொதுவாகவே கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதியாக இருக்கின்றன. மத்தேயு 19:4-8 வரையுள்ள வசனங்கள் இதைக் குறித்துப் போதிப்பதைக் கவனியுங்கள்.

இங்கே இயேசு விவாகரத்தைக் குறித்துப் போதிக்கும் போது, “ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லை என்று கூறுகிறார்”. ஆகவே, ஆதியில் அவர் ஏற்படுத்தியவை எக்காலத்துக்கும் தொடர்ந்து இவ்வுலகில் கடைப்பிடிக்கப்பட வேண்டு‍மென்பது ‍இயேசுவின் போதனை. ஆகவே,வாராந்தர ஓய்வு நாளைப் பின்பற்றக்கூடாது என்று கூறுபவர்களை நாம் இயேசு சொல்வதுபோலவே, ஆதி முதலாய் அப்படியே இருந்தது. ஆகவே, எப்போதும் அப்படிய இருக்க வேண்டும் என்று திருத்த வேண்டும். இதேபோல் தான் பவுலும், பெண்களைப்பற்றிய போதனைகளை அளிக்கும்போது படைப்பை உதாரணம் காட்டி வாதிடுகிறார் (1 கொரி. 11:7-12; 1 தீமோ. 2:13). அப்படியே இன்று நாமும் செய்ய வேண்டும். படைப்பில் உண்டாக்கப்பட்டவைகள் இன்று நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தேவையற்றவையாக இருந்தால் இயேசுவும், பவுலும் இவ்விதமாக வாதா‍டியிருக்கமாட்டார்கள்.

  1. படைப்பில் ஏற்படுத்தப்பட்டு தெய்வீக உதாரணத்துடன் அமைந்த வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும் முறை அதை எதிர்ப்பவர்களின் ஒரு முக்கிய வாதத்தைத் தவிடு பொடியாக்குகின்றது.

ஓய்வு நாள் இன்று இல்லை என்று வாதாடுபவர்கள், புதிய ஏற்பாட்டில் நாம் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வெளிப்படையான போதனை இல்லாததால் அதைப் பின்பற்றத் தேவையில்லை என்பார்கள். இவர்களுக்கு நாம் எத்தகைய பதிலை அளிப்பது?

கிறிஸ்தவ ஓய்வு நாளை நாம் பின்பற்ற புதிய ஏற்பாட்டில் வெளிப்படையான போதனை இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் இவர்களுக்கு நாமளிக்க வேண்டிய சரியான பதில். கர்த்த‍ரே படைப்பில் ஓய்வு நாளை, வெளிப்படையான விளக்கம் எதுவும் அளிக்காமல், தானே உதாரணமாக இருந்து ஏற்படுத்தியிருக்கும்போது, அவர் கிறிஸ்தவ ஓய்வு நாளை வெளிப்படையான போதனைகள் எதையும் தராமல் தனது உதாரணத்தின் மூலம் மட்டும் ஏற்படுத்த ஏன் முடியாது? நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று கர்த்தரைக் கேள்வி கேட்க நாம் யார்? அதற்கு நமக்கென்ன அதிகாரம் இருக்கிறது? நாம் பின்பற்ற வேண்டிய கடமைகள், ஒழுக்க விதிகள் எல்லாம் வெளிப்படையான போதனைகள் மூலம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறுவது முழுத்தவறு. ஆதியாகமத்தில் ஒருவன் ஒரே மனைவியை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்று ‍வெளிப்படையான போதனையா கொடுக்கப்பட்டிருக்கிறது? அப்போதனையை இயேசு பழைய ஏற்பாட்டில் உதாரணத்தின் மூலம் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்கிறார். பெண்கள், ஆண்களுக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆதியாகமம் 2ல் எங்கே வெளிப்படையான கட்டளை மூலம் போதிக்கப்பட்டிருக்கிறது? ஆனால், பவுல் அதை நாம் என்றும் பின்பற்ற வேண்டிய கடமையாகத்தான் கருதி விளக்குகிறார்.

  1. படைப்பில் ஏற்படுத்தப்பட்ட வாராந்தர ஓய்வு நாள் அடையாளமாகப் போதிக்கும் உண்மைகள் கிறிஸ்துவின் வருகையோடு அந்நாள் புதிய ஏற்பாட்டில் வாரத்தின் முதல் நாளாக மாறுவதை அனுமதிக்கின்றது. வரலாற்றின் முடிவில் மனித குலம் இறுதியாக நித்திய ஓய்வை அடைவதற்காகவே உருவாக்கப்பட்டது. படைப்பின் இந்த இலக்கு ஆதாமின் பாவத்தால் தடைப்பட்டது. கிறிஸ்து தனது மீட்பின் செயலினால் படைப்பைப் புதுப்பித்து மீட்கிறார். அவர் படைப்பை அதன் ஆரம்ப நிலைக்குக் கொண்டு வருகிறார். அவரது மீட்புப்பணி கல்வாரியில் நிறைவேற்றப்பட்டாலும் அது உலக முடிவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது (ரோமர் 8). ஆகவே, வாராந்தர (ஏழாம் நாள்) ஓய்வு நாள் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வாரத்தின் முதல் நாளாக மாறியது பொருத்தமானது. பழைய ஏற்பாட்டில் கர்த்தர் வாக்குத்தத்தம் மூலம் நமக்குத் தந்த நித்திய ஓய்வு கிறிஸ்துவின் மூலம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டள்ளது. ஆகவே, வாராந்தர ஓய்வு நாளும் முறையாகவே மாற்றம் பெற்றது. அது இன்று நமது வாரத்தை முடித்து வைக்காமல் ஆரம்பித்து வைப்பதாக இருக்கின்றது. ஓய்வை அடைவதற்காக நாம் இன்று உழைப்பதில்லை. கிறிஸ்துவால் பெற்றுத் தரப்பட்டுள்ள ஓய்வின் அ‍டிப்படையில் இப்போது நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

(வளரும்)

வில்லியம் கேரி

அச்சுப் பதிப்பகத்தை அழித்த பெருந் தீ

மார்ச் 12, 1812, வியாழக்கிழமை கல்கத்தாவில் தன் வீட்டுக்குள் நுழைந்த மார்ஷ்மனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சமீப காலமாக கேரியையும் அவரது நண்பர்களையும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. கடந்த நான்கு மாதங்களில் அவர்கள் ஐந்து பேரை அடக்கம் செய்ய வேண்டியிருந்தது. இத்துன்பங்களின் சாயல் அகலுமுன் பேரிடியாக வந்தது அவர்களுடைய அச்சுப் பதிப்பகத்தை அழித்த தீ.

அநேக அச்சுப்பிரதிகள் வேறொரு கட்டிடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போதும் பல வருடங்களாக உழைத்துத் தயாரித்த மொழிபெயர்ப்பு வேலைகள் தீக்குப் பறிகொடுக்கப்பட்டன. இலக்கண நூல்கள், சொல் விளக்க அகராதிகள் எல்லாம் இல்லாமல் போயிற்று. கேரியின் இழப்பு வார்த்தையால் வர்ணிக்க முடியாததொன்று. கேரி அப்போது அங்கில்லாததால் மார்ஷ்மன் கேரிக்கு செய்தியைக் கொண்டு சென்றார். தீ தொடாதது ஒன்றுமில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு சிங்கள, தமிழ் புதிய ஏற்பாட்டு அச்சுப் பதிப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரீம் தாள்கள் அழிந்து சாம்பலாயிருந்தன. வேறோரு அறையிலிருந்த ஐந்து அச்சு இயந்திரங்களைத்தவிர ஏனைய அனைத்தும் முற்றாக அழிந்தன. புதிதாக அவர்கள் செய்திருந்த தமிழ், சீன அச்சுக்கள் பறிபோயின. ஆக மொத்தத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாதிருந்தபோதும் அவர்களுடைய பல வருட உழைப்பு ஒரே இரவில் எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்குப் பறிபோனது. தீ எப்படிப் பிடித்தது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.

வேறு எவருமாக இருந்திருந்தால் இதைக் கேட்டு இடிந்து போயிருப்பது மட்டுமன்றி தங்கள் ஊழியத்தையே முடித்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், கேரியும் அவரது நண்பர்களும் அதிசயப் பிறவிகள். அழிந்து போனவற்றிற்கு நிச்சயம் உயிர் கொடுத்தே தீருவோம் என்ற வைராக்கியத்துடன் அவர்கள் மறுபடியும் வேலையை ஆரம்பித்தார்கள். கேரி, யோவான் 15வது அதிகாரத்தில் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் அதிக மன தைரியத்தை அடைந்தார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நடந்த காரியத்தை கர்த்தரின் வழியாக ஏற்று கேரி அவரில் தங்கியிருந்தார்.

மிஷன் கட்டிடத்திற்கு ஏற்பட்டிருந்த அழிவு பாரதூரமானதாக இருந்தபோதும் வார்ட் தளர்ந்து போய்விடவில்லை. ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு அவர் தீயினால் எரிந்து போயிருந்தவற்றைப் புரட்டிப் பார்த்து பதினான்கு இந்திய மொழிகளில் அச்சிட உதவும் உருக்கிலான அச்சுக்கள் எரிந்து போகாமல் தப்பியிருந்ததைக் கண்டார். வார்டின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவ்வச்சுக்கள் அவர் பத்து வருடங்கள் உழைத்துச் செய்தது. இப்படி அச்சிட உதவும் மேலும் பல முக்கிய பொருட்களும் அழியாமல் தப்பி இருந்தன. இதனால் ஒரு மாதத்தில் மறுபடியும் அச்சு வேலையைத் தொடங்கும் வழி இருந்தது.

கட்டிடத்தை மறுபடியும் கட்டி முடிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. கடந்த சனிக்கிழமைதான் மிஷனுக்கு சொந்தமான கட்டிடமொன்றை வாடகைக்கு எடுத்திருந்த ஒரு கம்பெனி அதை வேண்டாமென்று விட்டிருந்தது. அப்போது வாடகை போய்விட்டதே என்று மிஷனரிகள் வருந்தியபோதும் இப்போது அக்கட்டிடமே தங்கள் அச்சு வேலைகளுக்கு வசதியாக இருந்ததை எண்ணி மிஷனரிகள் மகிழ்ந்தார்கள். இக்கட்டிடம் எரிந்து போனது எதிர்கால கட்டிட விஸ்தரிப்பு வேலைகளுக்கும் வசதியாக இருந்தது. கர்த்தரே இப்படியாக வழிகாட்டியுள்ளார் என்று மிஷனரிகள் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினர்.

மறுபடியும் எல்லா வேலைகளையும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்துவைத்த பின்னர் கேரியும் நண்பர்களும் தங்களுடைய இழப்பைக் கணக்குப் பார்க்கத் தொடங்கினர். அவர்களுடைய இழப்பு பத்தாயிரம் பவுண்கள்வரை இருந்தது. இருந்த போதும் விலை மதிப்பில்லாத இழப்பாக இருந்தவை கேரியின் கடும் உழைப்பினால் பல வருடங்கள் செலவிடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டிருந்த அனைத்து நூல்களுமே. கேரி மறுபடியும் இவற்றை மொழிபெயர்க்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

அன்று மாலையே தங்களுடைய இழப்பைப்பற்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கர்த்தர் அளித்துள்ள ஆசீர்வாதங்களை மிஷனரிகள் எண்ணிப் பார்த்தார்கள். பதினொரு அங்கத்தவர்களைக் கொண்டிருந்த அவர்களுடைய வங்காள சபை பன்னிரண்டு வருடங்களுக்குள் பதினொரு சபைகளைக் கட்டியிருந்தது. அவர்கள் இருபது சுதேச சுவிசேஷகர்களைப் பயிற்றுவித்திருந்தனர். கல்கத்தா சபையின் அங்கத்தவர் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருந்தது. அவர்களுடைய இலவச போர்த்துக்கேய கல்லூரியில் 350 மாணவர்கள் பயின்று வந்தனர். இவை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும், பர்மாவிலும்கூட அவர்களுடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்து கொண்டிருந்தனர். கேரியின் இளைய மகனான ஜொனத்தனும் திருமுழுக்குப் பெற்று ஊழியத்தில் தனக்கிருந்த நாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தான். மிஷனின் அச்சு வேலைகளை அழித்திருந்த தீயால் இவற்றை அழிக்க முடியவில்லை.

மிஷன் கட்டிடம் தீயினால் அழிந்த செய்தி ரைலன்டையும், புளரையும் உடனடியாக எட்டவில்லை. ஆறுமாதங்களுக்குப் பின்பே அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. பிரிட்டன் அக்காலத்தில் நெப்போலியனோடு தன் உறவில் மோசமான நிலையை அடைந்திருந்தது. அமெரிக்கா பிரிட்டனின் கப்பல்களை மூழ்கடித்துக் கொண்டிருந்ததோடு, உணவு விலைகளும் வானத்தை எட்டியிருந்தன. இத்தனைக்கும் மத்தியில் ரைலன்டும், புளரும் சபைகள் மூலம் கேரிக்கு உதவி செய்ய பெரு முயற்சி எடுத்தனர். கேரியின் இழப்புகளை சபைகள் இரண்டு மாதங்களில் நிவர்த்தி செய்தன.

தீயின் சேதம் பிரிட்டனின் அநேக சபைகளுக்கு எட்டி பலரும் இது எப்படி நிகழ்ந்தது என்று ஆச்சரியப்பட்டனர். அதைவிட இதன் மூலம் கேரியும் மற்றவர்களும் இந்தியாவில் செய்து வந்த பேரூழியத்தின் அருமை பெருமைகளையும் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அழிவு பெரிதாகவும் வருந்தக் கூடியதாகவும் இருந்தபோதும் அவ்வழிவின் மூலம் கேரியின் மொழிபெயர்ப்பு வேலை பற்றிய செய்தி எங்கும் பரவி அவ்வூழியத்தின் அருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் நிலை உருவாகியது.

இதுபற்றி புளர் எழுதும்போது, “இனியும் இத்தகைய இழப்புக்கள் தொடர்ந்து ஏற்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். எத்தனை இழப்புகள் ஏற்பட்ட போதும் நாம் தாழ்மையோடு கர்த்தரை நெருங்கி நிற்போமானால் நாம் பயப்பட வேண்டியது எதுவுமேயில்லை” என்று குறிப்பிட்டார்.

ஊழியத்திற்கு மறுபடியும் எதிர்ப்பு

கடந்த ஆறு வருடங்களாக இங்கிலாந்திலிருந்து ஊழியத்திற்கு எவரும் வர முடியாதிருந்தது. 1811 ஆம் ஆண்டில் ஊழியத்திற்கு இருந்த தடைகள் நீங்கிவிடும் என்று கேரி எதிர்பார்த்தார். ஆனால், அவருடைய எண்ணங்கள் தவிடு பொடியாகின. இந்தியாவை ஆண்டு வந்த பிரித்தானிய நிர்வாகம் சுவிசேஷ ஊழியத்தை மறுபடியும் எதிர்த்து இயங்கத் தொடங்கியது. பல மிஷனரிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க மிஷனரிகளை கிழக்கிந்திய கம்பெனி முதலில் எதிர்த்தது. அமெரிக்காவுடன் பிரிட்டனுக்கு உறவு சரியில்லாதிருந்ததால் இப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் பிரிட்டனிலிருந்து வந்த மிஷனரிகளையும் விட்டு வைக்கவில்லை. அவர்களால் முடிந்திருந்தால் செராம்பூர் மிஷனரிகளையும் திருப்பி அனுப்பி வைத்திருந்திருப்பார்கள். அதுவும் செராம்பூருக்கு அமெரிக்க பாப்திஸ்து மிஷனரிகளுடன் இருந்த தொடர்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

தெளிப்பு ஞானஸ்நானக் கொள்கைகளோடு இந்தியாவுக்கு வந்த அடோனிராம் ஜட்சனும் (Adoniram Judson), லூத்தர் ரைஸ்ம் (Luther Rice) இந்தியாவில் சபைகளை நிறுவுவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்காக புதிய ஏற்பாட்டை மேலும் ஊன்றிப் படித்தனர். அப்படிப் படித்தபோது அவர்கள் பாப்திஸ்துக் கோட்பாடான விசுவாசிகளுக்கு மட்டுமே திருமுழுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது சரியானதே என்பதைப் புரிந்து கொண்டனர். அவர்கள் செராம்பூருக்கு வந்தபோது திருமுழுக்குபற்றிய அவர்களுடைய விசுவாசம் மேலும் வளர்ந்து 1812 ஆம் ஆண்டில் கல்கத்தாவின் லால் பசார் சபையில் இருவருமே திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர்.

எல்லா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கேரியின் ஊழியம் பல்கிப் பெருகியது. இதுவரை கேரியும், நண்பர்களும் ஐந்நூறுக்கு மேற்பட்டோருக்கு திருமுழுக்குக் கொடுத்திருந்தனர். 5 பிராமணர்கள் சமீபத்தில் வேதத்தைப் படித்து கர்த்தரை அறிந்து கொண்டிருந்தனர். இப்பிராமணர்கள் தங்களுடைய மாவட்டத்தில் தங்களுக்குத் தெரிந்த மேலும் நூறு பேர்வரை இயேசுவை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பதாகக் கூறினர். கேரியும் நண்பர்களும் பதினெட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு வேலைகளை மேற்கொண்டிருந்ததோடு, பதினைந்து மொழிகளில் அவற்றை அச்சிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான 8 அச்சு இயந்திரங்களும் இத்தனை வேலைகளையும் தாக்குப்பிடிக்க முடியாமல் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்தன. எதிர்ப்புகள் பெருகப் பெருக அதற்கீடாக ஊழியமும் வளர்ந்து கிறிஸ்துவுக்கு இந்தியாவில் பெருமையும் மகிமையும் சேர்த்து வந்தது.

1 கொரிந்தியர் 12-14

- ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய விளக்கம் -

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்

இப்பகுதியின் 10வது வசனம் “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்” என்று கூறுகின்றது. முதலில், அறிவும், தீர்க்கதரிசனமும், அந்நியபாஷையும் குறைவுள்ளது என்பதை அறிந்துகொள்கிறோம். அதாவது, அவற்றால் நாம் பெற்றுக்கொள்ளும் எதுவும் முழுமையானவையல்ல என்பதே இதற்குப் பொருள். ஆகவே, இங்கே நிறைவானது, குறைவானது என்ற பதங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மை என்ன என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்நியபாஷை, தீர்க்கதரிசனம், அறிவு என்பனவற்றின் மூலம் நாம் குறைந்தளவானதொன்றைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், முழுமையாகவே அது கிடைக்கப்போகும் காலம் வருகின்றது என்றும், அவ்வாறாக முழுமையாக நமக்கு அது கிடைக்கும் காலத்தில் அந்நியபாஷை, தீர்க்கதரிசனம், அறிவு ஆகியவை தேவையற்றவையாகிவிடும் என்று பவுல் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

இங்கே மூன்று கேள்விகளை 9, 10 வசனங்கள் எழுப்புகின்றன. முதலில், நிறைவானது என்பது என்ன? அடுத்ததாக அது எப்போது வரும்? இறுதியாக, அது வரும்போது மற்றவை இல்லாமல் போக வேண்டிய அவசியம் என்ன? முதல் கேள்விக்கு நாமளிக்கும் பதிலிலேயே மற்ற இரண்டுக்குமான விடைகள் தங்கியிருக்கின்றன.

நிறைவானது என்பதற்கு சிலர் தந்துள்ள விளக்கம்

  1. நிறைவானது என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கிறது என்று சிலர் கூறுவார்கள். கிறிஸ்துவே பூரணமானவர். அவர் வந்தவுடன் ஆவிக்குரிய வரங்கள் இனியும் நமக்குத் தேவைப்படாது. அவர் வரும்வரையும் அவை நமக்குத் தொடர்ந்து தேவைப்படும் என்று இவர்கள் கூறுவார்கள். இதுவே பொதுவாக பெந்தகொஸ்தே இயக்கத்தார் தரும் விளக்கம். இவர்களுடைய விளக்கம் பல வினாக்களுக்குப் பதிலளிக்கவில்லை. முதலில் நாம் ஆவிக்குரிய வரங்களின் மூலம் எதைப் பெற்றுக்கொள்கிறோம்? இயேசுவின் வருகை எதைப் பூரணமாகத் தரப்போகின்றது? அவர் வரும்வரையும் நம்மிடம் இல்லாமலிருப்பது எது? என்பது போன்ற கேள்விகளுக்கு இவ்விடை பதிலளிக்கவில்லை.
  2. வேறு சிலர், நிறைவானது என்பது பரலோக வருகையைக் குறிக்கின்றது. ஆகவே, பரலோகம் வரும்வரையும் நமக்கு ஆவிக்குரிய வரங்கள் தேவை என்று கூறுவர். இப்பதில் சரியா? என்று ஆராய்ந்து பார்த்தால், வேதம், பரலோகத்திற்கு நாம் போகத்தான் போகிறோமே தவிர பரலோகம் ஒருபோதும் நம்மைத் தேடி வராது என்று போதிப்பதைப் பார்க்கிறோம்.

இவ்விரண்டு விடைகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. முதலில் “நிறைவானது” (teleon) என்ற பதத்தை இலக்கணப் பூர்வமாக ஆராய்வோம். கிரேக்க மொழியில் உள்ள இவ்வார்த்தையின் தமிழாக்கம் நிறைவானது அல்லது பூரணமானது (perfect) என்பதாகும். இவ்வார்த்தை இலக்கணத்தின்படி பொருட்பாலில் (neuter gender) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஆண்பால், பெண்பாலாக இல்லாமல் அஔறிணையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “பூரணமானது” என்ற வார்த்தை கிறிஸ்துவின் வருகையைக் குறிப்பதாக இருந்தால் இவ்வார்த்தை ஆண்பாலில் பூரணமானவர் என்றிருந்திருக்க வேண்டும். ஆனால், அஔறிணையிலேயே அது அமைந்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டில் பதினெட்டு தடவைகள் பயன்படுத்தப்பட்டிருந்தும் ஒரு முறையாவது கிறிஸ்துவையோ அல்லது பரலோகத்தையோ குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. கிறிஸ்துவையோ, பரலோகத்தையோ குறித்துப் பவுல் விளக்குவதாக இருந்திருந்தால் அவர் அவ்வார்த்தைகளை ஏன் பயன்படுத்தவில்லை? ஆகவே, இது கிறிஸ்துவின் வருகையையோ, பரலோக வருகையையோ குறிப்பதாக இல்லை. அதுமட்டுமல்லாமல் நாம் ஏற்கனவே எழுப்பிய வேறு முக்கிய கேள்விகளுக்கும் இவ்விளக்கங்கள் பதிலளிக்கத் தவறுகின்றன.

உண்மையில் நிறைவானது என்பது என்ன?

இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கிய வேத விளக்க விதியைப் பயன்படுத்த வேண்டும். வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க வேண்டும் என்பதுதான் அவ்விதி (பார்க்க பக்கம் 20). இவ்விதியின்படி ஆராய்வதானால் நாம் “நிறைவானது” என்ற வார்த்தை வேதத்தின் ஏனைய பகுதிகளில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று ஆராய வேண்டும். அவற்றின் அடிப்படையிலேயே இவ்வார்த்தையைப் புரிந்துகொண்டு இங்கும் பயன்படுத்த வேண்டும். இது வேத விளக்க விதியில் ஒன்று. வேதத்தில் எந்த வார்த்தையையும் அது எந்தப்பகுதியில் இருந்தாலும் நாம் நினைத்தவிதத்தில் அதற்கு விளக்கம் கொடுக்க முனையக்கூடாது.

இனி “நிறைவானது” என்ற இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டில் வேறு இடங்களில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பார்ப்போம். யாக்கோபு 1:25 வசனத்தில் “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து” என்றிருக்கிறது. இப்பகுதியில் உள்ள “பூரணப்பிரமாணம்” என்ற வார்த்தை 1 கொரிந்தியர் 13:10 வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே வார்த்தை (teleon) என்பதை அறிந்துகொள்ளலாம். இப்பகுதியில் இது வேதத்தைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வேதமே கர்த்தரின் வெளிப்படுத்தல். அந்த வேதம் பூரணமானது என்பதை அறிந்துகொள்கிறோம்.

இன்னுமொரு வேதப் பகுதியான 2 தீமோத்தேயு 3:11-17 வசனங்களைப் பார்ப்போம். “வேத வாக்கியங்களெல்லாம் வேத ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று வாசிக்கிறோம். இது பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபம். தீமோத்தேயு தேறியவனாக தேவனுடைய மனிதனாக மாறுவதற்கு துணைபுரியக்கூடிய ஒரே சாதனம் வேதம் என்று பவுல் கூறுகிறார். இங்கே “தேறியவனாக” என்ற வார்த்தை “பூரணமானவனாக” (perfect) என்று பொருள்படும். 1 கொரிந்தியர் 13:10 வசனத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கிரேக்க வார்த்தையே (teleon) இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தீமோத்தேயுவை பூரணமானவனாக (complete) மாற்றக்கூடியது பூரணமான வேதம் மட்டுமே. வேறு எதனாலும் அதைச் செய்ய முடியாது. அத்தோடு கர்த்தரின் வெளிப்படுத்தலான வேதம் பூரணமடையும் என்ற எதிர்பார்ப்பு பவுலுக்கும் இருந்துள்ளதை இப்பகுதி தெளிவாக விளக்குகிறது.

கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தின் இறுதி அதிகாரத்தில் 20:18-20 வசனங்களில், தனது வேதத்தோடு எதையும் எவரும் கூட்டவோ அல்லது அதிலிருந்து எதையும் அகற்றவோ கூடாதென்றும், அப்படிச் செய்பவர்களுக்கு அழிவே மிஞ்சும் என்றும் கர்த்தர் கூறுகிறார். இப்பகுதி மூலமும் நாம் வேதம் இறுதியாக முழுமை பெறுவதைப் பார்க்கிறோம். கர்த்தரே தனது வெளிப்படுத்தலை பூரணமான நிலைக்குக் கொண்டு வருகிறார். இதிலிருந்து எபிரெயர் 1:13 வசனத்தில் கூறியுள்ளபடி பங்குபங்காகவும், வகைவகையாகவும் கொடுக்கப்பட்டு வந்துள்ள கர்த்தரின் சித்தமாகிய வெளிப்படுத்தல் ஒரு காலத்தில் முழுமையடையும், பூரணமடையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்துள்ளதையும் அதை வேதமே தெளிவாக வெளிப்படுத்துவதையும் காண்கிறோம்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது 1 கொரிந்தியர் 13:10 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையான “நிறைவானது” கர்த்தரின் வெளிப்படுத்தலைக் குறிக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வெளிப்படுத்தலே பூரணமானது. “நிறைவானது” என்ன என்பதற்கு இவ்விளக்கம் மட்டுமே பொருந்தி வருவதாக இருக்கின்றது. 9, 10 ஆகிய இரு வசனங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது இது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. பவுல் கொரிந்தியருக்கு இந்நிருபத்தை எழுதிய காலங்களில் கர்த்தரின் வெளிப்படுத்தல் முழுமை பெறவில்லை. அக்காலத்தில் ஆவிக்குரிய வரங்களான அறிவு, தீர்க்கதரிசனம், அந்நியபாஷை ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தல் பங்குபங்காக கொரிந்தியருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. கர்த்தரின் வெளிப்படுத்தலை சபைக்கு அறிவிக்க கர்த்தர் பயன்படுத்திய கருவிகளே நாம் மேலே பார்த்த வரங்கள். வெளிப்படுத்தல் ஒரு காலத்தில் பூரணமாகக் கொடுக்கப்படும்போது வெளிப்படுத்தலைப் பங்குபங்காக அளித்து வந்த அவ்வரங்களால் எந்தப் பயனுமிருக்காது. அவை இல்லாமல் போய்விடும். இதையே பவுல் 8, 9 ஆகிய வசனங்கள் மூலம் போதிக்கிறார்.

இயேசுவையோ அல்லது பரலோக வருகையையோ நிறைவானது என்ற வார்த்தை சுட்டிக்காட்டுமானால், கர்த்தரின் வார்த்தையான வெளிப்படுத்தலை, அதாவது அவருடைய சித்தத்தை விசுவாசிகள் கிறிஸ்து வரும்வரை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. வெளிப்படுத்தல் அதுவரை அரைகுறையாகவே இவ்வுலகில் தொடர்ந்திருக்கும் என்று தவறாகப் பொருள்படும். அதாவது, கர்த்தரின் சித்தத்தை ஒருவரும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாமல் போகும். கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ளாமல் விசுவாசி இந்த உலகில் இறக்கும்வரை பூரணத்துவத்தை இலக்காகக் கொண்டு எவ்வாறு வாழமுடியும்? தன்னுடைய சித்தத்தைப் பூரணமாக வெளிப்படுத்தாமல் தன்னுடைய மக்கள் பூரணமான வாழ்க்கையை வாழும்படி கர்த்தர் எதிர்பார்ப்பாரா? ஆகவே, 1 கொரிந்தியர் 13:10 வசனத்தில் “நிறைவானது” என்ற வார்த்தை கர்த்தரின் வேதம் பூரணமாகக் கொடுக்கப்படுவதைக் குறித்துப் பேசுகிறது என்ற விளக்கமே பொருந்தி வருவதாக இருக்கின்றது.

இதுவரை வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளைக் கொண்டு முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டு பூரணத்துவம் அடையப் போகிறது என்பதையும், அப்போது வெளிப்படுத்தலோடு தொடர்புடைய வரங்கள் இல்லாமல் போய்விடும் என்பதையும் பார்த்தோம்.

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.