திருமறைத்தீபம் 2001 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. ஆசிரியரிடமிருந்து!
2. பிரசங்கம் தயாரித்தல்
3. போதகா! உன் கடமை
4. கடவுளின் ஆணை
5. கிறிஸ்தவக் கோட்பாடுகள்
6. ஜோர்ஜ் விட்பீல்ட்’
7. மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வுநாள்
8. வில்லியம் கேரி
9. 1 கொரிந்தியர் 12-14
ஆசிரியரிடமிருந்து!
இன்று பிரசங்கத்திற்கு சபைகளில் அதிக இடம் கொடுக்கப்படுவதில்லை. அதாவது, வேதப்பூர்வமான பிரசங்கத்திற்கு இடம் கொடுக்கப்படுவதில்லை என்றே சொல்ல வருகிறேன். போதகர்கள் பாடுவதற்கு எடுக்கும் பயிற்சியையும் முயற்சியையும் பிரசங்கம் தயாரிப்பதற்கு கொடுப்பதில்லை. இது இன்றைய தமிழ் சபைகளைப் பிடித்துள்ள ஒரு பெருவியாதி. கெரிஸ்மெட்டிக் சபைகளிலோ பேய் விரட்டுவதும், நோய் தீர்ப்பதுமே பலருக்கு வேலையாய்ப் போய்விட்டது. நமது மக்களுக்கு வேதம் என்றால் என்ன என்று புரியாமல் இருப்பதற்கும், கர்த்தருடைய வழிகளைவிட பிசாசின் தந்திரங்கள் அவர்களையும் சபைகளையும் ஆட்டிப்படைப்பதற்கும் இதுவே காரணம்.
வேதப்பூர்வமான பிரசங்கம் இல்லாத சபையிலும் நாட்டிலும் இருப்பது இடுகாட்டில் இருப்பது போன்றது. ஏனெனில், பிரசங்கத்தால் வளராத வாழ்க்கை உயிரற்ற ஜடத்தைப் போன்றது. கர்த்தருடைய ஆராதனையில் அதிமுக்கிய இடத்தைப் பெற்று ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளிக்கும் பிரசங்கத்தை தள்ளிவைத்துவிட்டு ஆத்மவிரோத காரியங்களை சபைகளில் செய்துவரும் போதகர்களுக்கு என்ன தண்டனை தந்தாலும் தகும். இடி போன்ற பிரசங்கத்தால் அடி கொடுத்து விரட்டப்பட வேண்டிய பாவத்திற்கு, காதுக்கினிய பாடல்களால் கீதமிசைத்துக் கொண்டிருக்கும் சபைகளுக்கு கர்த்தரின் தண்டனை நிச்சயம் காத்திருக்கிறது.
இவ்விதழின் தலைப்புக் கட்டுரை பிரசங்கம் தயாரிப்பதில் பிரசங்கிகள் செலுத்த வேண்டிய கவனத்தைப் பற்றியது. போதிப்பவர்களுக்கும், பிரசங்கம் கேட்பவர்களுக்கும் அது பெருந்துணை புரிய கர்த்தர் அருள்புரியட்டும்.
பிரசங்கத்தோடு நெருங்கிய தொடர்புடைய பிரிக்கமுடியாத ஊழியம் போதக ஊழியம், போதக ஊழியத்தை அறியாத பிரசங்கம் ஆத்துமாக் களுக்கு எந்த ஆசீர்வாதத்தையும் அளிக்க முடியாது. அதேவேளை, ஆத்துமாக்களுக்கு பிரசங்கத்தால் உணவிடுவதைத் தவிர்க்கும் போதக ஊழியத்தை வேதத்தில் பார்க்க முடியாது. போதகர் எட்வர்ட் டொனலி அருமையாக இதை தனது ஆக்கத்தில் விளக்குகிறார். இவ்விரு ஆக்கங்களையும் நாம் படிப்பது மட்டுமல்லாமல் இத்தகைய ஊழியத்தைக் கர்த்தர் நம்மத்தியில் ஏற்படுத்த ஜெபிக்க வேண்டியதும் நமது கடமையாகிறது. வேதபூர்வமான பிரசங்கமும் அதோடு இணைபிரியாமல் நிற்கும் போதக ஊழியமும் நம் சபைகளை அலங்கரிக்க கர்த்தர் கருணைகூருவாராக. இவ்விதழின் ஆக்கங்கள் போதகர்களுக்காக மட்டும் எழுதப்பட்டவையல்ல. ஒவ்வொரு விசுவாசிக்காகவும் எழுதப்பட்டவை. சத்தியத்தால் விசுவாசிகளின் கண்கள் திறந்து அவர்கள் வேதப்பூர்வமான பிரசங்கத்தையும், போதக ஊழியத்தையும் நாடி ஓடும்போதுதான் நம் மக்கள் மத்தியில் நல்ல சபைகள் உருவாக வாய்ப்புண்டு. இது நான் காணும் கனவாக மட்டும் இருந்துவிடாமல் நனவாகும் நாளும் வருமா?
- ஆசிரியர்
பிரசங்கம் தயாரித்தல்
- மொரிஸ் ரொபட்ஸ் -
பிரசங்கம் தயாரித்தல் ஒரு போதகனுடைய வாழ்க்கையில் அதி முக்கியமான பணி. போதகன் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மந்தையை சரியாக மேய்ப்பதற்குப் பயன்படுத்தும்முக்கிய கருவிகளில் ஒன்று பிரசங்கம். அதை எப்படித் தயாரிப்பது என்று விளக்குகிறது இவ்வாக்கம்.
பி ரசங்கம் தயாரிப்பது பிரசங்கிகளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கடமை என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஆராதனையின் அதி உயர்ந்த அம்சமாக பிரசங்கம் மாத்திரமே அமைந்திருப்பதால் பிரசங்கிப்பவர்கள் மட்டுமல்லாமல் பிரசங்கத்தைக் கேட்பவர்களும் அதில் பெரும் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கர்த்தருடைய சபையிலே கொடுக்கப்படுகின்ற பிரசங்கங்கள் கர்த்தரை அறிந்து கொண்டவர்களுடைய ஆத்துமாக்களுக்கும், கர்த்தரை அறியாதவர்களுடைய ஆத்துமாக்களுக்கம் நல்லதையோ அல்லது கெடுதலையோ செய்யக் கூடியவையாக இருக்கின்றன. நாம் இக்காலத்திலே கேட்கின்ற பிரசங்கங்களினால் நமது சந்ததி மாற்றமடைவது மட்டுமன்றி, அத்தகைய பிரசங்கங்களினால் வருங்கால சந்ததியும் கூட பாதிப்புற்று நல்லதாகவோ அல்லது கேடானதாகவோ அமைந்துவிடக்கூடியதாக இருக்கின்றது. நமது வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் ஆத்மீக பாதிப்புகளே நமது வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ அதே போலவே நமது குழந்தைகளும் எதிர்காலத்தில் இருக்கப் போகிறார்கள்.
ஆகவே, பிரசங்கம் தயாரித்தலாகிய இவ்விடயம் நமது ஆத்மீக வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பெற வேண்டும். ஒரு கிறிஸ்தவ சபையின் வல்லமை அது வாராவாரம் கேட்கும் பிரசங்கங் களினாலேயே வளரக்கூடியதாகவோ அல்லது அழிந்து போகக் கூடியதாகவோ இருக்கின்றது. வரலாறு நாம் சொல்வது எத்தனை உண்மை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. கர்த்தரிடமிருந்து விசுவாசமுள்ள மிகச் சிறந்த பிரசங்கிகளைப் பெற்றுக் கொண்டிருந்தாலேயொழிய ஒரு சபை உயர முடியாது. சபை வாழ்க்கையில் பிரசங்கம் இரண்டாந்தரமான நிலையை அடையும்போது அச்சபை சீக்கிரமே விழுந்துபோகும் நிலை ஏற்படும். சபை வரலாற்றின் இருண்ட காலங்கள் (Middle Ages) இதற்கு சாட்சியாக இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுகளின் ஒரு பகுதியும் - மத்திமமான காலம் - இதற்கு உதாரணமாக இருக்கின்றது. அதேபோலவே நாம் வாழும் இக்காலத்தின் பெரும் பகுதியும் இரண்டாந்தரமான பிரசங்கிகளையே கேட்டு அனுபவித்து வந்துள்ளது. ஆனாலும், இதற்கு விதி விலக்காக ஆங்காங்கு சில விசுவாசமுள்ள பிரசங்கிகளை நாம் பார்க்க முடிவது நம் பாக்கியமே.
எந்தவொரு தனிப்பட்ட விதியாலும் ஒரு ஞானியை உருவாக்கிவிட முடியாது. கர்த்தர் சில பிரசங்கிகளுக்குக் கொடுத்துள்ள அதிவிசேடமான தாலந்துகளை பிரசங்கம் பற்றிய எந்தவிரிவுரையும் ஒருவருக்குக் கொடுத்துவிட முடியாது. விட்பீல்ட், ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றவர்கள் போல பிரசங்கம் செய்யக்கூடியவர்களுக்கு நாம் இப்பகுதியில் தரப்போகும் ஆலோசனைகள் எந்தவொரு பெரிய உதவியையும் செய்து விட முடியாது. அத்தகைய மனிதர்கள், அவர்கள் பெற்றிருந்த தாலந்துகளைக் கொண்டிராத நம் போன்ற ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு உற்சாகத்தைத் தரும்படியாக கர்த்தரால் எழுப்பப்பட்டவர்கள்.
இது உண்மையாக இருந்தபோதும், தனது பிரசங்கத்தைத் தயாரிக்கும் முறையில் அதிக கவனம் செலுத்தும் எந்தவொரு பிரசங்கியும் அவ்வூழியத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். அக்கறையோடு கூடிய படிப்பும், ஆர்வத்தோடுகூடிய உழைப்பும் ஒருவரை ஞானியாக மாற்றாவிட்டாலும், அவருடைய பிரசங்கத்தை இன்னுமொரு படிக்கு உயர்த்தத் தவறுவதில்லை. தான் பிரசங்கம் தயாரிக்கும் முறையில் ஒரு பிரசங்கி கவனம் செலுத்துவானானால் அது அவனது பிரசங்கத்தைத் தொடர்ச்சியாக நல்ல நிலையிலும், அவ்வப்போது அதிசிறப்பாக அமையும்படியும் செய்யும். அதே நேரத்தில் ஒரு மனிதன் மிகச் சிறப்பான தாலந்துகளைக் கொண்டிருந்தாலும் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் மோசமான முறைகளைக் கையாளுவானெனில் தனது முழு ஊழியத்தையும் வீணாக்கிக் கொள்வான்.
சில அடிப்படை ஊகங்கள்
நாம் இதுவரை சொன்னவை முக்கியமான சில ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை. அவற்றில் ஒன்றிரண்டை நாம் மேலும் சிறிது விளக்கமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
நாம் எப்போதுமே ஆராதனையின் மிக உயர்ந்த அம்சமாக பிரசங்கத்தைக் கருதுகிறோம். புதிய ஏற்பாடு பிரசங்கத்திற்கு அதிமுக்கிய இடத்தை அளிப்பதை நாம் மிக உறுதியாகவே அறிந்துள்ளோம். அப்போஸ்தலர்களும், ஆதி சபைப் பிரசங்கிகளும் பிரசங்கத்திற்கே தம்மை அர்ப்பணித்துள்ளனர். ஆதி அப்போஸ்தல சபைகளில் பிரசங்கத்திற்கு மாறாக வேறு எதையும் ஆராதனையில் திணிக்கும் எந்த முயற்சிக்கும் இடமிருக்கவில்லை. ஆகவே, கிறிஸ்தவ சபைகளில் எப்போதுமே பிரசங்கத்திற்கே அதிமுக்கிய இடமளிக்கப்பட வேண்டும்.
ஆகவே, ஒரு பிரசங்கி பிரசங்க மேடைக்கு போகும் போது எப்போதுமே தன் கையில் பிரசங்கக் குறிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது, தான் கொடுக்கப் போகும் பிரசங்கத்தைத் தன் மனதில் முழுதாக மனப்பாடம் செய்தோ அல்லது அதை முழுவதுமாகவோ அல்லது அதன் அடிப்படை அம்சங்களையோ மேடைக்குப் போகுமுன் எழுதிவைத்து கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். பெரும்பாலான பிரசங்கிகள் தங்கள் பிரசங்கங்களை எழுதி எடுத்துச் செல்வர். ஏனெனில், சராசரியான எந்த மனிதனும் எல்லாவற்றையும் முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வல்லமையுள்ளவனாக இருக்க மாட்டான். ஆகவே, ஒரு பிரசங்கம் எப்படி அமைந்திருக்க வேண்டுமென்றால் - ஆத்துமாக்கள் ஏன் சில உண்மைகளை உறுதியாக நம்பி அவற்றைப்பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்கான ஆணித்தரமான வாதங்களை படித்துத் தயாரிக்கப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும்.
ஆகவே, சாதாரணமாக ஒரு பிரசங்கி பிரசங்கக் குறிப்பு கையிலில்லாமல் பிரசங்க மேடைக்குப் போகக் கூடாது. பிரசங்கம் செய்யும்போது நாம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நாற்பது அல்லது அதற்கு சிறிது கூடுதலான கால அளவில் ஏற்கனவே நாம் முறையாகப் படித்துத் தயாரித்துள்ள வேத வாதங்களை நாம் மிகத் தெளிவாகவும், திறமையுடனும், வல்லமையுடனும் எடுத்துச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பிரசங்க மேடையை அடைந்தவுடன் கர்த்தர் நமது இதயத்தில் திடீரென ஒரு பிரசங்கப் பொருளைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்து நாம் ஒருபோதும் பிரசங்க மேடைப் பக்கம் போகக் கூடாது. தேவைக்குக் குறைந்தளவான பிரசங்கக் குறிப்புத் தயாரிப்புடன் நாம் மேடைக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் எப்போதாவது ஆயிரத்தில் ஒரு தடவைதான் ஏற்படும். ஆனால், இத்தகைய சந்தர்ப்பம்கூட பிரசங்கத் தயாரிப்புக்கான சாதாரணமான விதியை மேலும் உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. அச்சாதாரணமான விதி என்னவெனில், நாம் அடுத்த வாரம் பிரசங்கிக்கப் போகுமுன் அதற்கான பிரசங்கப் பொருளைத் தேவையான அளவிற்கு முறையாகப் படித்துத் தயாரித்து வைத்திருக்க வேண்டுமென்பதுதான்.
நமது இரண்டாவது எதிர்பார்ப்பு என்னவெனில் பிரசங்கி தனது பிரசங்கத்தின் மூலம் எப்போதும் சபையிலுள்ள ஆத்துமாக்களை ஆவிக்குரிய அனுபவத்திலும், கீழ்ப்படிவிலும் தன்னால் முடிந்தளவுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. ஒரு பிரசங்கி ஆத்துமாக்களைத் திருப்தி செய்வதையே தன்னுடைய தொழிலாகக் கொண்டு அவர்களை சிரிக்கவைப்பவனாக இருந்துவிடக் கூடாது. உண்மையில் ஒரு நல்ல பிரசங்கம் சபை மக்களுக்கு விருந்து போன்றதுதான். ஆனால், அது ஒரு மிக உன்னதமான விருந்து!
ஜோர்ஜ் விட்பீல்டினுடைய பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஈர்த்து இழுத்தது என்னவெனில் அவர்கள் உலகத்தில் வேறு எங்குமே அனுபவிக்க முடியாத ஓர் ஆனந்தத்தை விட்பீல்டினுடைய பிரசங்கத்தில் அனுபவித்ததுதான். நாம் சொல்ல வருவது என்னவென்றால், ஒரு பிரசங்கியின் தொழில் தனது பிரசங்கத்தைக் கேட்பவர்களைச் சிரிக்க வைப்பது அல்ல; ஆனால், இவ்வுலகத்திலும், பரலோகத்திலும் சேவை செய்யக் கூடிய பரிசுத்தவான்களாக தன்னால் முடிந்தவரை அவர்களைக் கர்த்தரின் துணையோடு மாற்ற முயல்வதுதான்.
பிரசங்கக் குறிப்பு தயார் செய்தல்
இப்பகுதியில் நாம் இதுவரை கூறியது போன்ற பிரசங்கத்திற்கான குறிப்பை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒரு பிரசங்கி இதை எங்கு ஆரம்பிக்க வேண்டும்? பிரசங்கத்திற்கான செய்தியை எங்கிருந்து பெற வேண்டும்? அவன் எதைக் குறித்துப் பேச வேண்டும், பிரசங்க தயாரித்தல் என்பது விஞ்ஞானமல்ல; அது ஒரு கலை. நாம் எதிர்பார்ப்பதெல்லாம் இங்கே நாம் தரப்போகும் விளக்கங்கள், பிரசங்கம் தயாரிப்பதில் உதவி நாடி நிற்பவர்களுக்கும், அவர்களுடைய பிரசங்கங்களைக் கேட்க வருபவர்களுக்கும் துணை புரிய வேண்டுமென்பதுதான்.
- பிரசங்க வாக்கியம்
பிரசங்கம் எப்பொழுதும் வேதத்தின் ஒரு பகுதியை விளக்குவதாக அமைந்திருக்க வேண்டும். இதை நாம் பொதுவாக “பிரசங்க வாக்கியம்“ என்று கூறுவோம். இப்பிரசங்க வாக்கியம் வேதத்தின் ஒரு அதிகாரமாகவோ அல்லது அவ்வதிகாரத்தின் ஒரு பகுதியாகவோ இருக்கும். பெரும்பாலான வேளைகளில் அது வேதத்தின் ஒரு வசனத்தைக் கொண்டதாக இருக்கும்.
பிரசங்கி தனது பிரசங்க வாக்கியத்தை கீழ்வரும் வழிகளில் ஒன்றின் மூலமாகப் பெற்றுக் கொள்கிறான். ஒன்றில், ஓய்வுநாள் வருவதற்கு முன்பாக முழு வாரமும் தொடர்ந்து ஜெபத்தில் கர்த்தருக்கு முன் தரித்திருந்து வேதத்தைத் தியானித்து பிரசங்க வாக்கியத்தைப் பெற்றுக் கொள்கிறான். அல்லது, ஒரு தலைப்பின் அடிப்படையில் தொடர்ச்சியாக வாராவாரம் பிரசங்கம் செய்கிறான். அல்லது அநேக பியூரிட்டன் போதகர்கள் செய்தது போல் வேதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது அதிகாரத்தைத் தொடர்ச்சியாக வாராவாரம் பிரசங்கிக்கிறான்.
இவற்றில் எந்தவொரு முறையைப் பிரசங்கி பின்பற்றினாலும், தான் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டுள்ள வசனத்தின் அடிப்படையில் போதிக்கப் போகும் போதனைகளைக் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பிரசங்கம் என்பது ஓரிரு வேத வசனங்களை அடிப்படையில் நடத்தப்படும் சிந்தனைப்பூர்வமான ஒரு வாக்குவாதம். அது பிரசங்கம் கேட்கும் மக்களுக்கு உயர்ந்த தேவ ஞானத்தை அளிப்பதாகவும், அவர்களை கிருபையின் ஸ்தானத்தில் பலபடிகள் உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். இக்காரணத்தினால், பிரசங்கியின் கடமை பேச எடுத்துக்கொண்டிருக்கும் வசனங்களை வெறுமனே விளக்குவது மட்டுமே என்று கருதிவிடக்கூடாது. அவ்வசனங்கள் போதிக்கும் அடிப்படைப் போதனையை முன்னெடுத்து வைப்பதே பிரசங்கியின் கடமையாகும். இதைச் செய்தவுடன் பிரசங்கி அவ்வடிப்படை போதனையை உதாரணங்களுடனும், ஆதாரங்களுடனும் மேலும் விளக்கி அதன் மூலம் கர்த்தர் கேட்பவர்களிடம் எதை எதிர்பார்க்கின்றார் என்றும் விளக்க வேண்டியது அவசியம். ஒரு பிரசங்கத்தின் வல்லமை அதனை விளக்கும் முறையிலும், அது எத்தகைய கடமைகளைக் கேட்பவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது என்று விளக்குவதிலும் தங்கியிருக்கின்றது. வல்லமையான பிரசங்கங்கள் அவற்றைக் கேட்பவர்களை அதிகமாகப் பாதித்து, அவர்கள் அதி உயர்ந்த ஆனந்தத்தை அடையவோ அல்லது, ஆழமாகப் பாதிக்கப்பட்டு மனந்திருந்தவோ செய்யக் கூடியவையாக இருக்கின்றன. ஒரு பிரசங்கி தனது பிரசங்கம் இதைச் செய்ய வேண்டும் என்பதிலேயே கருத்தாக இருப்பான். பிரசங்கி கேட்பவர்களை சீர்திருத்துபவனாகவும் அவர்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதை ஒரு பிரசங்கி ஆவியின் மூலமாக அளிக்கப்படும் பிரசங்கத்தின் மூலமாக மட்டுமே செய்யக் கூடியவனாக இருக்கிறான்.
- பிரசங்க வாக்கியத்தின் பிரிவுகள்
பிரசங்கத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரசங்க வாக்கியம் முறையாக பிரிக்கப்பட வேண்டும் (2 தீமோத்தேயு 2:15). அதன் பிரிவுகள் மிகத் தெளிவாகவும், ஒழுங்காகவும் விளக்கப்பட வேண்டும். அப்பிரிவுகள் அளவுக்கு அதிகமாக அமைந்துவிடக்கூடாது. பொதுவாக மூன்று பிரிவுகள் போதுமானது. பெரும்பாலான ஆத்துமாக்கள் ஒரு பிரசங்கததில் மூன்று அல்லது நான்கு பிரிவுகளையே தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
பிரசங்க வாக்கியத்தின் பிரிவுகளும் அதற்கான தலைப்புகளும் இயற்கையாக பிரசங்கிக்கப் போகும் வசனத்திலோ அல்லது வசனப் பகுதியிலோ இருந்தே எடுக்கப்பட வேண்டும். அவை செயற்கைத் தன்மை கொண்டதாகவோ அல்லது பிரசங்க வாக்கியத்தோடு தொடர்பற்றதாகவோ இருந்துவிடக் கூடாது. பிரசங்கத்தின் பொருள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதன் பல பிரிவுகளும் அவ்வொரே பொருளின் அடிப்படையில் அமைந்ததாகவும், அப்பொருளை விளக்கும் பகுதிகளாகவும் இருக்கும். ஒரு பெருமரத்தில் பல கிளைகள் காணப்படுவதுபோல் பிரசங்கப் பிரிவுகள் பிரசங்கமாகிய மரத்தில் இருந்து புறப்பட்டுவரும் கிளைகளாகக் காணப்படும்.
பிரசங்கத்தின் உள்ளடக்கம், முகவுரை போன்ற முக்கியமான பகுதிகளைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பிரசங்கத்தின் பிரிவுகளும், அப்பிரிவுகளின் தலைப்புகளும் தீர்மானிக்கப்பட வேண்டும் (முகவுரை எப்போதுமே கடைசியிலேயே எழுதப்பட வேண்டும்),
- பிரசங்க வியாக்கியானமும் வளர்ச்சியும்
இப்போது பிரசங்கி தனது பிரசங்க வாக்கியத்தையும், அதன் மூன்று அல்லது நான்கு பிரிவுகளையும் அதற்கான தலைப்புகளையும் தெரிவு செய்து ஒரு தாளில் எழுதிக் கொண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதற்குப் பிறகு அவர் செய்ய வேண்டியது என்ன? இதுவரை தயாரித்துள்ள மூன்று அல்லது நான்கு பிரிவுகளுக்கான தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு தலைப்புகளின் அடிப்படையிலும் விளக்கப் போகும் போதனைகளுக்கான உப தலைப்புகளை (Sub headings) பிரசங்கி இப்போது தாளில் முறையாக எழுதிக் கொள்ள வேண்டும்.
அத்தலைப்புகளின் கீழ் கொடுக்கப் போகும் வியாக்கியானம் பின்வருமாறு அமைந்திருக்கும்: (1) முதலாவது, அத்தலைப்பு பற்றிய விளக்கம். அத்தலைப்பு என்ன சொல்லுகிறது என்றும், எதைப் போதிக்கவில்லை என்றும் விளக்குவதாக இருக்கும். (2) உதாரணங்கள்: நாம் அனைவருமே எதையும் ஒரு காட்சிபோல் பார்க்கப் பழகிக் கொண்டுள்ளோம். காட்சிகள் எப்போதும் மனதில் பதிந்திருக்கும். ஆகவே, மனதில் பதியக்கூடிய வசனங்கள், உதாரணங்கள் மூலம் பிரசங்கப் பொருளை விளக்க வேண்டும். (3) நிரூபனம்: இப்பகுதியில் நாம் போதிக்கும் போதனையை வேதப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதாவது, இப்பகுதியில் நாம் விளக்கும் போதனையை ஏனைய வேதப்பகுதிகளும் விளக்குகின்றன என்று அதற்கான மூன்று அல்லது நான்கு வேதப்பகுதிகளை ஆதாரங்களாக இங்கே தர வேண்டும். (கேட்பவர்களுக்கு வேதம் போதிக்கும் உண்மைகளை சரியாகவும், தெளிவாகவும் முறையாகவும் போதிப்பதே பிரசங்கியின் கடமை).
- செயல்முறைக்கான விளக்கம் (Application)
பிரசங்கம் என்பது ஒரு விரிவுரை அல்ல; அது கேட்பவர்களின் மனதையும், மனச்சாட்சியையும் தொடக் கூடிய ஒரு ஆயுதமாகும். ஆகவே, எபிரெயர் நிருபம் கேட்பவர்களின் இதயத்தைத் தொடும் பல செயல் முறைக்கான விளக்கங்களைப் பல பகுதிகளில் தொடர்ந்து அளிப்பதுப்போல், ஒவ்வொரு பிரசங்கமும் செய்ய வேண்டும்.
மெய்யான பிரசங்கம் எப்போதும் முதலில் அது போதிக்க எடுத்துக் கொண்டுள்ள போதனையைத் தெளிவாக விளக்க முனைய வேண்டும். இரண்டாவதாக, அப்போதனையை உதாரணங்களுடன் விளக்கி அது வேதப்பூர்வமானது என்று நிரூபிப்பது அதன் கடமை. மூன்றாவதாக, ஆத்துமாக்களின் செயல்முறைக்கான விளக்கங்களை அது அளிக்க வேண்டும். இது மூன்றும் ஒவ்வொரு பிரசங்கத்திலும் தவறாது காணப்பட வேண்டும்.
அநேக இளம் பிரசங்கிகள் அதிக நேரத்தைப் பிரசங்கத்தில் கொடுக்கப் படும் போதனைக்கான விளக்கத்தில் செலுத்திவிட்டு, ஆத்துமாக்களின் மனதைத் தொட்டு அவர்கள் எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறை விளக்கத்தைக் கொடுப்பதில் நேரம் செலுத்துவதில்லை. இதனாலேயே, ஆத்துமாக்கள் அடிக்கடி பிரசங்கம் கேட்பதில் சோர்வடைகிறார்கள். இதை சரி செய்வதற்கான வழி -போதனையை தெளிவாகச் சொல்லிவிட்டு, ஆத்துமாக்களின் மனதைத் தொடும் விதத்தில் இது போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்களா, மற்றவர்களால் இதை உங்களுடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறதா? இந்தக் கிருபையின் அடையாளம் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிறதா? என்று கேட்க வேண்டும். (எப்போதும் “உங்கள்” வாழ்க்கையில் காணப்படுகின்றதா என்று கேட்பதைப் பிரசங்க விதியாக வைத்திருக்க வேண்டும். “நம்“ வாழ்க்கையில் காணப்படுகின்றதா என்று பொதுவாகக் கேட்பது பெருந்தவறு).
- முடிவுரை
பிரசங்கத்தின் கடைசி நிமிடங்களை நாம் பிரசங்கத்தைக் கேட்பவர் களுக்காகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ஏற்கனவே பிரசங்கத்தில் நாம் போதனையைக் கொடுத்து விட்டோம். அதை உதாரணங்களோடு நிரூபித்து விளக்கிவிட்டோம். இனி பிரசங்கத்தின் கடைசி சில நிமிடங்களில் கொடுக்கப்பட்ட அப்போதனைகள் கேட்பவர்களின் மனதில் ஆழமாகப் பதியும்படியாகச் செய்ய வேண்டியது அவசியம். தீக்கோள் நெருப்பில் காய வைக்கப்பட்டு இரத்தச் சிவப்புடன் தயாராக இருக்கிறது. கலைஞன் அதைப் பயன்படுத்தி தயாராக உள்ள மரத்துண்டில் எழுத்தோவியத்தைத் தீட்ட வேண்டும். அதேபோல், பிரசங்கி ஆர்வத்துடனும், ஆவியின் அனலுள்ளவனாகவும் பிரசங்கத்தில் கொடுக்கப்பட்ட வேத போதனைகளை கேட்பவர்களின் மனதில் பதியும்படிச் செய்ய வேண்டும். கர்த்தரின் போதனைகள் பயறுகளை வைத்து ஊதியெறியும் குழலில் இருந்து புறப்படும் பயறுகளைப் போல அல்லாமல் பீரங்கியில் இருந்து புறப்படும் பீரங்கிக் குண்டுகளைப் போல வெளிப்பட வேண்டும்.
தனது கடைசி நிமிடப் பிரசங்கத்தின் போது பிரசங்கி பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் அநேக ஆத்துமாக்களின் ஆவியற்ற நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். தானும் அவர்களோடு சேர்ந்து கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளைச் சந்திக்க வேண்டியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்நேரத்தில் தனது குரல் தளுதளுத்தாலோ, முகத்தில் இருந்து கண்ணீர் வடித்தாலோ, தனது ஆக்ரோஷத்தால் மேடையைக் குத்தினாலோ அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. எதிர்பார்த்ததற்கு மேலாக சில நிமிடங்களை அதிகமாக செலவிட்டு பாவிகளை வரப்போகும் தேவ கோபத்திலிருந்து தப்பிக் கொள்ளும்படி வற்புறுத்த நேரிட்டாலும் அதற்காக வெட்கப்படத் தேவையில்லை. அநேக பிரசங்கங்களில் இன்று உணர்ச்சியே இல்லாததால் கேட்பவர்கள் அவற்றில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஒரு பிரசங்கத்தினால் ஏற்படக்கூடிய மாபெரும் பயன் பிரசங்கம் செய்யப்படும்போது ஏற்படுகிறதே ஒழிய, கேட்பவர்கள் பின்பு அதை நினைத்துப்பார்க்கும் நேரத்தில் அல்ல.
- முகவுரை
அடுத்தபடியாக நாம் பிரசங்கத்தின் முகவுரையைக் கவனிக்க வேண்டும். முகவுரையை எப்போதுமே பிரசங்கத்தைத் தயாரித்து முடித்தபின் இறுதியாக எழுத வேண்டும். முகவுரையின் நோக்கம் எப்போதுமே கேட்பவர்களின் ஆர்வத்தைத் தட்டியெழுப்பி நாம் பிரசங்கத்தில் இனி மேலும் சொல்லப் போகும் காரியங்களைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்களில் எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு நல்ல முகவுரை நாம் கொடுக்கப் போகும் பிரசங்கத்தைக் கேட்கும்படியாக ஆத்துமாக்களை வரவேற்று, நாம் சொல்லப் போவதை கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு முகவுரை நீண்டதாக அமைந்துவிடாமல், கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்பதுபோல் பிரசங்கம் கொடுக்கப்படுவதற்கு முன் பிரசங்கிக்கும் ஆத்துமாக்களுக்கும் இடையில் ஒரு நட்புப்பாலத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
- உதாரணங்கள்
அநேக பிரசங்கிகள் தங்கள் பிரசங்கத்தில் உதாரணங்களைப் பயன் படுத்தத் தவறிவிடுகிறார்கள். இதனால் கேட்பவர்களால் அவர்களுடைய பிரசங்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமலிருப்பதோடு மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கும் வழியில்லாமலிருக்கிறது. பிரசங்கத்தோடு பொருந்தாத எந்த உதாரணமும் காரணமில்லாமல் கொடுக்கப்பட்ட உதாரணமாக இருந்துவிடும். பிரசங்கத்தோடு பொருந்திவரும் உதாரணங்கள் பிரசங்கத்தில் கொடுக்கப்படும் போதனைகளை மேலும் தெளிவாக விளக்குவதாக அமையும். பிரசங்கம் முழுவதும் அங்குமிங்குமாக சிறு உதாரணங்களைக் கொடுப்பதால் கேட்பவர்கள் அனைவரும், அதிலும் சிறுவர் சிறுமியர் பிரசங்கத்தில் அதிக கவனம் செலுத்தத் துணை புரியும்.
பிரசங்கத்தை முடிக்கும்போது கடைசியாக ஒரு பெரிய உதாரணத்துடன் முடிக்கப் பார்ப்பது நல்லது. அதன் மூலம் பிரசங்கத்தையும் அதன் முக்கிய போதனைகளையும் கேட்பவர்கள் மனதில் பதியும்படி ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம். பிரசங்கத்தால் ஆத்துமாக்களின் ஆர்வத்தை நாம் கிளரப் பார்க்க வேண்டும். நமது பிரசங்க்த்தால் அவர்களில் சிலருடைய கண்களில் கண்ணீர் வருமானால் அது மிகவும் நன்மையானதே. பிரசங்கத்தில் தரப்படும் சத்தியத்தைக் கேட்டு ஆத்துமாக்கள் திகைத்துப் போய் அதிசயித்து வியந்து நின்றால் நமது பிரசங்கம் வீண் போகவில்லை என்று நாம் உறுதியாக நம்பலாம்.
ஓ! ஆவியானவரே, நமது மக்கள் தலைகீழாக மாறி நிற்கும்படியாக நமது பிரசங்க மேடைகளை நீரே அலங்கரியும்.
இங்கே இக்கட்டுரை ஆசிரியர் பெரும்பாலும் சீர்திருத்தப் பிரசங்கிகளை (Preachers of reformed churches) மனதில் வைத்துப் பேசுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அநேக சீர்திருத்த பிரசங்கிகள் பிரசங்கத்தில் அதிகமாக போதனைகளை அளிக்கிறார்கள். ஆனால் அந்த ஆர்வத்தில் அவற்றை உதாரணங்களுடன் விளக்கத் தவறிவிடுகிறார்கள். தமிழில் பிரசங்கிப்பவர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலானோருக்கு பிரசங்கம் முழுவதும் கதை சொல்லுவதும், அவசியமற்ற பிரசங்கத்தோடு பொருந்திவராத உதாரணங்களை அளிப்பதுமே தொழிலாக இருக்கிறதே ஒழிய தெளிவான வேத போதனைக்கு அவர்களுடைய பிரசங்கத்தில் வழியில்லை.
போதகா! உன் கடமை
கர்த்தருடைய மந்தையை மேய்ப்பதைப் போதகன் தன் கடமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கின்றது. அதை எப்படி செய்வது? என்பதில் ஒரு போதகன் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. இவ்வாக்கம் அப்பெரும்பணியை அக்கறையுடன் செய்யுமாறு போதகர்களுக்கு அறைகூவலிடுகிறது.
போதகர் என்ற வார்த்தை மேய்ப்பன் என்ற வார்த்தையின் இலத்தீன் மொழிபெயர்ப்பாகும். 1 பேதுரு 5:2 வசனத்தில், போதகர்களின் முக்கியமான கடமையை பின்வரும் வார்த்தைகளின் மூலம் பேதுரு படம்பிடித்துக் காட்டுகிறார். “மந்தையை மேய்ப்பாயாக” இதன் மூலம் பேதுரு தனக்கு கிறிஸ்து கொடுத்த கட்டளையை நினைவுகூர்ந்து (யோ. 21:16) இவ்வூழியத்தில் அடங்கியிருப்பது எது என்று தெளிவாக விளக்குகிறார். இதை ஒவ்வொரு மேய்ப்பனும் தன்னுடைய மந்தையின் ஆத்துமாக்களுக்கு செய்ய வேண்டியது அவசியம்.
மேய்ப்பனைக் குறித்த வேத போதனை மிகவும் ஆழமானதும் அழகானது மாகும். இதற்கான சில உதாரணங்களை மட்டும் இங்கே தருகிறேன்.
சங். 80:1 கர்த்தர் தன் மக்களின் மேய்ப்பனாக இருக்கிறார்
ஏசா. 53:6 அவர்கள் ஆடுகளைப் போல வழி தவறிப்போகும் நிலையில் இருக்கிறார்கள்.
சங். 23:2 மேய்ப்பன் தன் ஆடுகளுக்கு தண்ணீர் வார்த்து உணவையும் அளிப்பான்.
சங். 23:3,4 அவன் ஆடுகளை வழிநடத்தி அவைகளைப் பாதுகாப்பான்.
லூக். 15:4-6 அத்தோடு ஆடுகள் தொலைந்து போனால் அவைகளைத் தேடி அலைவான்.
2 சாமு. 5:2 பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, மனிதர்கள் மேய்ப்பர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
யோ. 10:11 ஆனால், எல்லா மேய்ப்பர்களுக்கும் மேலான மேய்ப்பர் தனது ஆடுகளுக்காக தன்னையே அளித்த இயேசு கிறிஸ்து மட்டுமே.
நாம் இதுவரை பார்த்த வேத பகுதிகளில் இருந்தும் வேறு பகுதிகளில் இருந்தும் மூப்பர்கள் தங்களுடைய ஊழியத்தின் கடமைகளைப் படித்துப் புரிந்துகொள்ளலாம். மேய்ப்பனைப் பற்றி வேதம் போதிக்கும் சத்தியங்களை ஆழமாகக் கவனித்துப் படிப்பதன் மூலம் போதகர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்கிறார்களா என்று ஆராய்ந்து பார்த்துக்கொள்ளலாம்.
- போதகனின் கடமை சிறப்புத் தன்மை வாய்ந்தது “மந்தையை மேய்”
மூல வார்த்தைகளில், அதாவது கிரேக்க மொழியில் இதன் பொருள் விசேஷமானது (poimanate to poimnion). இதை ஆங்கிலத்திலோ தமிழிலோ அதேவிதமாக மொழிபெயர்ப்பது கடினம். “மந்தையை மேய்” என்பதே மிகவும் பொருத்தமான நெருங்கிவரக்கூடிய தமிழ் மொழிபெயர்ப்பு. இவ்விரு பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும் ஒரே மூல வார்த்தை யிலிருந்தே புறப்படுகின்றன. மேய்ப்பன் செய்ய வேண்டிய கடமையும், அவன் யாருக்கு அக்கடமையை செய்ய வேண்டுமோ அவை இரண்டுமே முடிந்தவரை மிகவும் நெருக்கமான முறையில் இவ்வார்த்தைகளின் மூலம் விளக்கப்படுகின்றன.
நாம் தேவைக்கு மேல் இவ்வுண்மையை வலியுறுத்தத் தேவையில்லை. போதகனின் ஊழியம் அவன் ஊழியம் செய்ய வேண்டிய சபை மக்களின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாகவே போதிக்கின்றன. அவன் செய்யும் அனைத்துக் காரியமும் அவர்களை மனதில் வைத்தே செய்யப்பட வேண்டும். என்னுடைய மக்கள் யார்? அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களுடைய தேவை என்ன? அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்? இத்தகைய கேள்விகளை ஒரு போதகன் தனது கடமையைச் செய்யும் போது அவசியம் கேட்க வேண்டும். ஒரு போதகனுடைய கடமையில் எதுவுமே நடைமுறைக்குப் பொருந்தாத தாக இருக்காது. அவனது அனைத்து வேலைகளும் தனது மந்தைகளின் நலத்தைக் கருத்தில் கொண்டே இருக்கும்.
மெய்யான போதகன் வாரத்தின் பல மணி நேரங்களைத் தனது படிப்பகத்தில் செலவிடுவான். அவனது ஊழியத்தின் கருவியாக இறையியல் நூல்களும், வேதத்தை விளக்க உதவும் விதிகள் பற்றிய நூல்களும், சபை சரித்திரம் பற்றிய நூல்களும் வேறு பல நூல்களும் அமையும். இவற்றை அவன் ஆனந்தத்தோடு படிப்பான். இதற்கெல்லாம் மேலாக வேத தியானத்தில் அதிக நேரத்தை அவன் செலவிடுவான். ஆனால் படிப்பு மட்டுமே அவனது தொழிலாக அமைந்து விடாது. இத்துறையில் பாண்டித்தியம் பெற்று பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக அவன் படிக்க மாட்டான். தனது படிப்பின் மூலம் பெற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்க வேண்டு மென்பதே அவனது முழு நோக்கமாக இருக்கும். இதுவே எப்போதும் போதகனின் கடமையாக இருக்கும்.
போதகனின் பிரசங்கம் எப்போதும் போதகப் பிரசங்கமாக இருக்கும். அவன் பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது தனது மக்களை மனதில் வைத்தே அவற்றைத் தயாரிப்பான். தன்னுடைய வேத விளக்கங்கள் அருமையானதாக, கேட்பவர்கள் பாராட்டும்படியாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் அவன் பிரசங்கங்களைத் தயாரிப்பதில்லை. அவனுடைய நோக்கம் நடைமுறைக்குப் பொருத்தமானதாக இருக்கும். தனது மக்களை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்று அவர்களைக் கிறிஸ்துவிடம் ஆறுதல் பெறவைத்து தைரியப் படுத்துவதே அவனது பெரு நோக்கமாக இருக்கும்.
தனது சபை மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பிரசங்கத்தை வேறொரு இடத்தில் பிரசங்கிப்பதற்கு தயங்குவது ஒரு நல்ல போதக பிரசங்கியின் அடையாளமாக இருக்கும். ஏனெனில் அவனது பிரசங்கங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக அவர்களுடைய தேவைகளுக்காகத் தயாரிக்கப்பட்டவை. அம்மக்களுடைய தேவைகளை மனதில் வைத்து அவற்றிற்கேற்றவிதத்தில் அப்போதகன் அப்பிரசங்கங்களைத் தயார் செய்திருக்கிறான். வேறொரு இடத்தில் அவற்றை அவன் பிரசங்கிக்க வேண்டுமானால் அவற்றை அவன் முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். அவனது பிரசங்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அவன் வேறு இடங்களில் பிரசங்கிக்க் முடியும். புதிய உடை தேவை என்று விருப்பப்படுபவர்களுக்கு எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே சைஸ் உடை என்ற விளம்பரம் அதிக ஆர்வத்தையோ நம்பிக்கையையோ அளிக்காது. அதேபோல், தனது மக்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் போதகனின் பிரசங்கங்களைப் போல “ரெடிமேட்” பிரசங்கங்கள், எல்லா சபை மக்களுக்கும் ஒத்துப் போகாது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் போதக ஊழியமும், பிரசங்கமும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. சபை மக்கள் அவர்களுடைய போதகர்கள் படிக்க வேண்டிய நேரத்தைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவ வேண்டும். போதகர்கள் எந்தவித இடையூறுமில்லாமல் பிரசங்கத்தை முறையாக சபை மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் தயாரிக்க சபையார் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். சபை மக்கள் போதகர்களை தங்களின் எடுபிடி வேலை செய்யும் கையாட்களாகப் பயன்படுத்தி அவர்கள் குரல் கொடுக்கும் நேரத்திற்கெல்லாம் போதகர்கள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், சில போதகர்கள் பிரசங்கம் செய்ய வேண்டுமென்பதற்காக போதக ஊழியத்தையே அலட்சியம் செய்துவிடுகிறார்கள். தங்களுடைய ஆத்துமாக்களைப் போய்ப்பார்த்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற அவர்கள் தவறிவிடுகிறார்கள். தங்களுக்கு அதற்கு நேரமில்லை என்று அவர்கள் காரணம் கூறுகிறார்கள். இத்தகைய போதகர்களைக் குறித்துத்தான் “வாரத்தின் ஆறு நாட்களுக்கு ஆத்துமாக்களின் கண்ணில் படமாட்டார்கள். அதனால், வாரத்தின் முதல் நாளில் ஆத்துமாக்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது” என்று சொல்லுவார்கள்.
சில போதகர்களின் இத்தகைய போக்கு போதக ஊழியத்தைப் பற்றிய அவர்களுடைய தவறான எண்ணத்தால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது சோம்பேறித்தனத்தாலோ, சமூக உறவில் முதிர்ச்சியின்மையினாலோ ஏற்பட்டிருக்கலாம். நமது மக்களை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால் தொடர்ந்து வாராவாரம் அவர்களுடைய தேவைக்கேற்றவிதத்தில் நம்மால் பிரசங்கம் செய்ய முடியாது. போதகன் தனது மக்களை அவர்கள் இருக்கும் இடத்தில் போய் பார்க்கும் போதுதான் அவர்களுடைய குறைகளையும் தேவைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவ்வேளையிலேயே தனது பிரசங்கங்களை அவர்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இது அந்த போதகன் நல்ல முறையில் தொடர்ந்து பிரசங்கம் செய்ய உதவும். அப்போதுதான் அவன் பிரசங்க மேடையில் நிற்கும்போது தனது மக்களின் தேவையறிந்து அவர்களுக்கு உணவளிக்க முடியும். ஆகவே, போதக ஊழியமும், பிரசங்க ஊழியமும் ஒன்றையொன்று வலியுறுத்துகின்றன.
போதக ஊழியத்தைப்பற்றி எழுதப்பட்டுள்ள அநேக நூல்களில் முக்கியமானதொன்று ரிச்சட் பெக்ஸ்டர் (Richard Baxter) எழுதிய சீர்திருத்த போதகன் (Reformed Pastor) என்ற நூலாகும். ரிச்சட் பெக்ஸ்டர் இங்கிலாந்தில் கிடர்மின்ஸ்டர் என்ற இடத்தில் 1647-1661 வரை சபைப் போதகராக இருந்தார். இவரது நூல், போதகர்கள் தம்முடைய மக்களின் வீடுகளுக்குப் போய் அவர்களுக்கு வேத போதனையளிக்க வேண்டும் என்று கூறுகின்றது. ரிச்சட் பெக்ஸ்டர் இந்நூலில் இத்தகைய செயலை வலியுறுத்தி 22 காரணங்களைத் தந்துள்ளார். அவற்றில் ஒன்றைக் கீழே காணலாம்:
இது நமது பிரசங்கத்தை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள உதவும். உங்களுடைய பிரசங்க ஊழியத்தை இழந்துபோகாதபடி இந்த ஊழியத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மக்களை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ளலாம். அதன் மூலம் அவர்களுடைய அன்பையும், மரியாதையையும் அடையலாம். ஒரு போதகனுக்கு தனது மக்களைத் தெரியாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு அவனைத் தெரியாதது போல் மனதில்பட்டாலோ அந்த போதகனால் அவர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. சபை மக்களைப் போய்ப் பார்ப்பதன் மூலம் அவர்களுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய தேவைகளைப் புரிந்துகொள்வதோடு, ஒவ்வொருவருக்கும் ஏற்றவிதத்தில் மேய்த்தல் ஊழியத்தை செய்யவும் முடியும். அத்தோடு அவர்களுடைய மனநிலை, குறை பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு அவர்கள் கேட்கத் தேவையான பிரசங்கங்களை அவர்களுக்கு அளிக்க முடியும். (பக்கம் 177-8)
ஆகவே ஒரு போதகன் நல்ல போதகனாக இருக்க வேண்டுமா? அல்லது நல்ல பிரசங்கியாக இருக்க வேண்டுமா? இரண்டும் அவசியம். கர்த்தர் இணைத்துள்ள எதையும் நாம் பிரிக்கக்கூடாது. ஓய்வுநாளில் நம் மக்கள் நம்மைப் புரிந்து கொள்ள முடியாதபடி இருப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் வாரத்தின் ஆறு நாட்களிலும் அவர்கள் கண்ணில் படும்படியாக இருக்க வேண்டும்.
போதக ஊழியத்தைக் குறித்த இத்தகைய மனநிலை போதகனின் ஏனைய எல்லாக் கடமைகளிலும் இருக்க வேண்டும். ஒரு போதகன் தன்னுடைய ஆடுகளை எப்போதும் மேய்க்கிறான். அவன் எல்லாவற்றையும் அவர்களுடைய நன்மையை மனதில் வைத்தே செய்கிறான்.
இதனால் போதகர்கள் ஊழியத்திற்கு தயார் செய்யப்பட வேண்டு மென்பது இதன் மூலம் தெளிவாகப் புலனாகும். ஆடுகளைக் கவனித்து வளர்த்தவர்களால் மட்டுமே போதக ஊழியத்திற்கு எவரையும் தயார் செய்ய முடியும். ஆகவே, போதக ஊழியத்திற்கு வர இருப்பவர்களை போதக ஊழியத்தில் இருந்து ஏற்கனவே அனுபவப்பட்டவர்களே பயிற்சியளிக்க வேண்டும். இன்று பல இடங்களிலும் போதக ஊழியத்தில் இருந்து எந்த அனுபவத்தையும் அடையாத மனிதர்களிடம் போதக ஊழியத்திற்கு வருபவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. இது நாம் மிகவும் வருந்த வேண்டிய காரியம். அத்தகைய மனிதர்களின் படிப்பும், பட்டங்களும் பெரிதாக இருக்கலாம். அவர்களுடைய போதனையும்கூட வேதபூர்வமானதாக இருந்து விடலாம். இதையெல்லாம் நாம் குறை கூறவில்லை. ஆனால் அவர்கள் போதக ஊழியத்தில் எந்தவிதமான அனுபவத்தையும் அடையாதபடியால் அவர்கள் போதிக்கும் எதுவும் போதக ஊழியமாகிய நிலத்தில் விதைத்துப் பண்படுத்த முடியாததாக இருக்கும். போதக ஊழியத்தில் நல்ல அனுபவமில்லாதவர்களிடத்தில் அவ்வூழியத்திற்கு வருபவர்களைப் பயிற்சிக்கு அனுப்புவது மிகப் பெரிய தவறு.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியைப் (Princeton Seminary) பற்றி எழுதிய தனது நூலில் டேவிட் கல்ஹூன் (David B. Calhoun) கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இறையியல் கல்லூரியில் எத்தகைய பாடங்கள் இருக்க வேண்டும் என்று எழுந்த வாதத்தில் இப்பிரச்சனை பற்றி பேசப்பட்டதாகக் கூறுகிறார். பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியில் எப்போதுமே ஆரம்பத்தில் இருந்தே நல்ல இறையியல் போதனை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலம் போகப்போக நடைமுறைக்குத் தேவையான பாடங்களும் அளிக்கப்பட வேண்டும் என்ற ஒரு வாதமும் பின்னால் எழுந்தது. இதற்குக் காரணம் அங்கு வெறும் புத்தகப் பூச்சிகள் உருவாகத் தொடங்கியதுதான். கல்ஹூன் இன்னுமொரு முக்கிய காரணத்தையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கல்லூரியின் ஆரம்பப் பேராசிரியர்களாக இருந்த ஆர்ச்சிபால்ட் அலெக்சாண்டர் (Archibald Alexander), சாமுவேல் மிலர் (Samuel Miller) ஆகியோர் இங்கு போதிக்க வருவதற்கு முன் இருபது வருடங்களுக்குக் குறையாமல் போதக ஊழியத்தில் அனுபவம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களுக்குப் பின்னால் போதிக்க வந்தவர்களுக்கு அத்தகைய போதக ஊழிய அனுபவமில்லாததால் அவர்களால் போதக ஊழியத்திற்கு ஏற்றவிதத்தில் மாணவர்களைத் தயார் செய்ய முடியவில்லை.
போதகர்கள் தாம் சிறப்பம்சம் வாய்ந்த ஊழியக்காரர்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஊழியத்தின் சிறப்பம்சம் சபை ஆடுகளைக் கவனித்து வளர்க்க வேண்டுமென்பதுதான். போதகர்கள் இப்பணியில் இருந்து தம்மைப் பிரிக்கக்கூடிய வேறு எந்த காரியத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
- போதகருடைய கடமை அளப்பரிய பொறுப்பு வாய்ந்தது - “தேவனுடைய மந்தை”
“தேவனுடைய மந்தை” இவ்வார்த்தைகள் போதகர்களாகிய நாம் ஊழியம் செய்ய வேண்டிய மக்களை வர்ணிக்கின்றன. இவ்வர்ணணைதான் எத்தனை அருமையானது! அவர்கள் கர்த்தருக்கு சொந்தமான மந்தைகள், கர்த்தருடைய மக்கள், நித்தியத்திலிருந்து அவரால் அன்புகூரப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள். மந்தை மேய்த்தலாகிய விவசாயக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒரு மனிதனுடைய மதிப்பிலடங்காத சொத்து அவனது மந்தையே. அவற்றை அவன் மிகக் கவனமாகப் பராமரித்து உயிரைக் கொடுத்துப் பாதுகாத்து வருவான். இதைக் குறித்து பழைய ஏற்பாடு “கர்த்தர் தன் மந்தைகளைப் பராமரிக்கிறார்” என்று போதிக்கின்றது (சங். 78:52; ஏசா. 40:11; எசே. 34:11-16).
எத்தனை ஆழமாக கர்த்தர் தன் மந்தைகளை நேசிக்கிறார்! அவர்களுடைய நலனில் எத்தனை அக்கறை வைத்திருக்கிறார்! இந்த மந்தைகளே போதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. தேவனுடைய பிள்ளைகளை நாம் வெறுக்கக்கூடாது. அவர்களிடம் நாம் பொறுமையில்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. அவர்களை உதாசீனப் படுத்தக் கூடாது. நம்முடைய பெருமைக்காக அவர்கள் வாழவில்லை. நம்முடைய பெரும் திட்டங்கள் வெற்றியடைவதற்கு அவர்கள் படிக்கற்கள் அல்ல. அவர்கள் மந்தைகள் . . . அவர் தன்னுடைய இரத்தத்தை விலையாகக் கொடுத்து பெற்றுக்கொண்ட தேவனின் சபை (அப். 20:28). சீ. எஸ். லூயிஸ் (C. S. Lewis) சொன்னது போல், கிறிஸ்து பேதுருவிடம் தனது ஆடுகளுக்கு உணவளிக்கச் சொன்னாரே ஒழிய தனது எலிகளுக்கு புதிய வித்தைகளைக் கற்றுக்கொடுக்கும்படிச் சொல்லவில்லை. நமது மந்தைகள் யார் என்பதையும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெரும் பொறுப்பையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இஸ்ரவேலின் விசுவாசமற்ற மேய்ப்பர்களை கடினமான வார்த்தைகளைக் கொண்டு எசேக்கியலில் கர்த்தர் கடிந்து கொண்டபோது அவரது வார்த்தைகள் இருதயத்தைப் பிளக்கும் கூரான கத்திபோல் “என்னுடைய மந்தை” என்று அவர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகளையே சுற்றி அமைந்தன (எசே. 34:6-10).
இதை எப்போதுமே மனதில் வைத்திருப்பது இலகுவான தல்ல. ஏனெனில் ஒரு சபை தேவனுடைய மந்தையைப்போலத் தோற்றமளிக்காமலும் நடந்துகொள்ளாமலும் இருந்துவிடலாம். அவர்களுடைய வித்தியாசமான நடத்தை மோசமாகத் தெரியலாம். அவர்களுடைய பலவீனங்களும், அலைந்து திரியும் போக்கும் அவர்களுக்குத் துணைபுரியப் போகிறவர் களை ஆயாசப்படுத்தலாம். முக்கியத்துவமில்லாத ஒரு கூட்டத்திற்காக தனது நேரத்தையும், சக்தியையும் வீணாக்கிக் கொண்டிருப்பதாகக்கூட ஒரு போதகர் எண்ணலாம். அவ்வேளைகளில் அவர் மேலும் அதிக நேரத்தை ஜெபத்தில் செலவிட்டு கிறிஸ்துவின் கண்களோடு அம்மக்களைத் தான் பார்க்கக்கூடியதாக இருக்கும்படி மன்றாட வேண்டும். இத்தகைய உணர்வு மட்டுமே கர்த்தருடைய சபையை அக்கறையுடன் கவனிக்க ஒரு போதகருக்கு துணை செய்யும்.
இயேசு பேதுருவை போதக ஊழியத்திற்கு அனுப்பும் போது, பேதுருவைப் பார்த்து, என் ஆடுகளை நேசிக்கிறாயா? என்று கேட்கவில்லை. பேதுரு ஆத்துமாக்களை நேசிக்க வேண்டியது அவசியமானாலும், ஊழியத்திற்கு ஆத்துமாக்களின் மேல் அவன் வைக்கும் அன்பு மட்டும் போதாது. ஆகவே, இயேசுவின் கேள்வி “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்றிருந்தது (யோ. 21:16). இக்கேள்வியில் காணப்படும் இரகசியம் என்ன? நாம் நமது இரட்சகரை நேசித்தால் மட்டுமே, அவரது ஆடுகளை நம்மால் மேய்க்க முடியும் என்பதுதான். அவ்வாடுகள் சில வேளைகளில் கண்ணுக்கு எத்தனை அவலட்சணமாக தெரிந்தபோதும் அவைகள் அவருடைய ஆடுகளாக இருப்பதால் அவருக்காக நாம் அவற்றை நேசிப்போம்.
- போதகருக்கு மந்தைகளோடு நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும் - “உங்களிடத்திலுள்ள தேவனின் மந்தை”
ஆர்.சி.எச். லென்ஸ்கி (R.C.H. Lenski) என்ற வேத விளக்கவுரையாளர் இவ்வாக்கியத்தை “உங்களுடைய பாதுகாப்பிலுள்ள” என்று மொழிபெயர்த் திருக்கிறார். N.I.V. ஆங்கில மொழிபெயர்ப்பும் இதை ஒத்திருக்கிறது. ஆனால் பழைய மொழிபெயர்ப்பே சிறந்தது. இதே வாக்கியமே முதலாவது வசனத்திலும் இருப்பதால் அங்கே “உங்கள் பாதுகாப்பிலிருக்கும்” என்று வாசிப்பது பொருந்திவராது. “உங்களிலுள்ள மூப்பருக்கு” என்று வாசிப்பதே சரி. தமிழில் இது சரியாக இரண்டிடங்களிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. சபை மக்களுக்கு தங்களுடைய மூப்பர்களைத் தெரிந்திருந்தது. மூப்பர்களைத் தெரிவு செய்யுமுன் அவர்கள் அம்மூப்பர்களின் குணாதிசயங்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை, வரங்கள் ஆகியவற்றை ஏற்கனவே ஆராய்ந்து பார்த்துவிட்டனர். ஆகவே, அவ்வாறாக தெரிவு செய்யப்பட்டவர்கள் முகமறியாத மனிதர்களல்ல, நெருக்கமான நண்பர்கள். அதேபோல், மேய்ப்பர்களும் தங்களுடைய மந்தைகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்கள் தங்களுடைய பொறுப்பிலுள்ள மந்தைகளில் அக்கறை செலுத்தி, அவர்களை சுற்றி வந்து, அவர்களுடைய வாழ்க்கையில் அதிக தொடர்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் அம்மந்தைகளை விட்டு விலகிப்போவதில்லை. அம்மந்தைகளை அவர்கள் ரிமோட் கண்ட்ரோலினால் செயற்கையாக செயல்படச் செய்வதில்லை. அவ்வூழியம் தொலைபேசித் தொடர்புச் சாதனங்களினால் செய்யப்படுவதில்லை. மந்தைகளுக்கு அருகில் நெருக்கமாக இருந்து செய்யப்படும் ஊழியம் அது.
இப்பகுதியில் பேதுரு மேய்ப்பர்கள் கண்காணிகளாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். கண்காணியானவர் காவலாளி போன்றவர். ஒரு கட்டிட வேலையை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வையாளன் என்பதே கிரேக்க மொழியில் இதன் பொருள். யோசியாவின் காலத்தில் கர்த்தரின் ஆலயக்கட்டிட வேலை நடந்தபோது அவ்வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை மேற்பார்வை செய்தவர்களை கண்காணிகள் என்று அழைத்தனர் (2 நாளா. 34:12). மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும் வேலையைக் கவனிக்க வேண்டியது அக்கண்காணிகளுடைய பொறுப்பாக இருந்தது.
புதிய ஏற்பாடும் இதே பொருளிலேயே கண்காணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. எபிரெயருக்கான நிருபத்தை எழுதியவர், “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கு . . . எச்சரிக்கையாயிருங்கள்” என்று எழுதி யிருக்கிறார் (எபி. 12:15, 16). இதை ஏன் சுட்டிக்காட்டுகின்றேன் என்றால் 1 பேதுரு 5:3 வசனத்தில் காணப்படும் “கண்காணிப்புச் செய்யுங்கள்” என்ற வார்த்தைகளும் எபிரெயர் 12 ஆம் அதிகாரத்திலுள்ள நாம் பார்த்த “எச்சரிக்கையாயிருங்கள்” என்ற வார்த்தைகளும் ஒரே கிரேக்க மூலத்தின் மொழிபெயர்ப்புகள். பி.எஔப். வெஸ்ட்கொட் (B.F. Westcott) என்பவர் இதைப்பற்றி விளக்கும்போது, இவ்வார்த்தைகள் “பொறுப்புள்ள பதவியைக் கொண்டிருப்பவர்கள் கவனத்தோடு செய்ய வேண்டிய ஊழியத்தை” விளக்குவதாக கூறியுள்ளார். ஆகவே, கண்காணியானவன் ஆராய்ந்து பார்க்க வேண்டிய, ஊன்றிக் கவனிக்க வேண்டிய, கவனித்துப் பார்க்க வேண்டிய, எச்சரிக்கையாயிருக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளான்.
ஆகவே, ஒரு போதகன் தனது கடமையைச் செய்வதற்காக தனது ஆத்துமாக்களைப்பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். ஒவ்வொரு விசுவாசியும் ஆசாரியனாக இருந்து கர்த்தரை எவருடைய துணையுமில்லாமல் அணுக முடியும் என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை யின் வளர்ச்சிக்கு பொறுப்பாளியாக இருக்கிறான் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். சில போதகர்கள் விசுவாசியின் வாழ்க்கையில் தங்களுக்கு சம்பந்தமில்லாத, தலையிடக்கூடாத காரியங்களில் எல்லாம் தலையிட்டு எதேச்சதிகாரமாக நடந்துகொண்டுள்ளார்கள் என்பதும் உண்மை. ஒரு விசுவாசியினுடைய சொந்த வாழ்க்கையின் அந்தரங்கமான விஷயங்களில் எவருக்கும் தலையிட உரிமையில்லை. அத்தகைய தலையிடுதல்களை நாம் எப்போதுமே நிராகரித்துவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய தலையீடுகள், நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் என்ற உண்மைக்கு எதிரானதாக அமைகின்றது (ரோமர் 14:12).
ஆனால் நாம் வாழும் இன்றைய கலாச்சாரப் பின்னணி விசுவாசியின் இத்தனிமனித சுதந்திரத்தை மிகவும் மோசமானதும் முட்டாள்தனமுமான ஒரு நிலைக்குக் கொண்டுபோய் விட்டது. அதாவது, இன்னும் பிறக்காமல் வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தை அல்லது வயதானவர்களைத் தவிர வேறு எந்த ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் நாம் எந்த விதத்திலும் தலையிடக்கூடாது என்று பலர் இன்று எண்ணுகிறார்கள். இன்றைய உலகம் அதிகாரத்தை, அது எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்க்கிறது. தமது சொந்த ஆலோசனைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் வேறு எந்த ஆலோசனையையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து வெறுப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கே ஒரு சட்டத்தை வைத்துக் கொண்டு தனது சொந்த ஆலோசனைக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கிறான். கர்த்தரால் மகிமையோடு உருவாக்கப்பட்ட தனி மனிதன் இன்று ஒரு பயங்கரமான பூதத்தைப் போல மாறிவிட்டான்.
அதிகாரத்தை எதிர்க்கும் தனிமனிதனின் இத்தகைய அகங்காரப்போக்கு இன்று சபையையும் பாதித்துள்ளது. போதகன் தன்னுடைய சபை மக்களுடைய வாழ்க்கையில் எந்தவிதத்திலும் தலையிடக்கூடாது என்று இன்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். சபை மக்கள் எதைச் செய்யத் தீர்மானித்தாலும் அதற்கும் போதகர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறிவருகிறார்கள். சபையாரைப்பற்றி போதகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை என்று பேசி வருகிறார்கள். போதகன் பிரசங்கம் செய்வதோடும், எல்லோருக்கும் பொதுவானவிதத்தில் அதன் பயன்களை எடுத்துச் சொல்வதோடும், கூப்பிடுகிறபோது மட்டும் வந்து போவதோடும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இவற்றிற்கு மேலாக எதையும் ஒரு போதகன் செய்தால் அவன் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறான் என்று கூச்சலிடுகிறார்கள்.
ஒரு மேய்ப்பன் தனது மந்தைகளை எவ்வாறு மேய்க்கிறான்? அவன் தன் ஆடுகளுக்கு அருகில் போய் அவற்றின் நிலையை ஆராய்கிறான். அவ்வாடுகளின் சரீரத்தில் ஏதாவது காயங்கள், வீக்கம் அல்லது நோய் இருக்கிறதா என்று கவனித்துப் பார்க்கிறான். தனது கரங்களை ஆட்டின் தோலில் வைத்துத் தடவிப்பார்த்து, அதன் தலையை நிமிர்த்தி அதன் கண்களுக்குள்ளாக ஊடுருவிப்பார்த்து அதற்கு ஏதாவது நோயோ அல்லது பலவீனமோ ஏற்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறான். ஒவ்வொரு ஆட்டையும் தனித்தனியாக இவ்வாறாக அடிக்கடி ஆராய்ந்து பார்க்காமல் அவனால் தனது கடமையைச் செய்ய முடியாது. ஆடுகள் மேய்ப்பனின் இத்தகையை அக்கறையான போக்கை விரும்பாமல் அவன் கரத்திலிருந்து விடுபட்டு நழுவப்பார்க்கலாம். ஆனால், மேய்ப்பன் கொடூரமாக நடந்துகொள்ள முயலவில்லை. அவன் ஆட்டின் மேல் தனக்கிருக்கும் அன்பாலும், அக்கறையாலுமே இவ்வாறாக நடந்துகொள்கிறான். இவ்வாறாக மந்தைகளுக்கு உதவி செய்தலும், கண்காணிப்பதும் அவனது பொறுப்புகளில் முக்கியமான பங்கை வகிக்கின்றன.
அதேபோல் தனது ஆத்துமாக்களின் மேல் அக்கறை செலுத்துவது ஒரு போதகனின் கடமை. அவனுடைய ஆத்துமாக்களின் வாழ்க்கையின் அநேக விஷயங்களில் அவனுக்கு எந்த சம்மந்தமும் இல்லாமலிருப்பதோடு அவ்விஷயங்களில் அவன் தலையிடவும் மாட்டான். ஆனால் தனது ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏதாவது நோய் அல்லது வளர்ச்சியின்மைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றதா என்று அவன் நிச்சயம் கவனிப்பான். அவர்களிடம் ஏதாவது அலைந்து திரியும் மனப்போக்கு காணப்பட்டால் அவன் அதைக் கவனிக்காமல் விடமாட்டான். வீண் வம்பிழுக்கும் குணம் கொண்டவர்களையும் மற்றவர்களோடு சேராமல் தனிமையை நாடி நிற்கும் தனது ஆத்துமாக்களைக் குறித்து அவன் கவலை கொள்ளுவான். அவசியமானபோது அவர்களைத் திருத்தத் தேவையான நடவடிக்கைகளை உறுதியுடன் எடுப்பான். இதையெல்லாம் செய்வதற்கு அவன் ஆத்துமாக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். போதகனின் இந்நடவடிக்கைகளை சிலவேளைகளில் ஆத்துமாக்கள் விரும்பாமல் போகலாம். அவர்கள் போதகன் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் குறுக்கிடுவதாகக்கூட நினைக்கலாம். ஆனால், காலம் செல்லும்போது தங்களைப் பாவத்தில் தொடர்ந்திருக்கும்படி விட்டுவிடாமல் தங்கள் மேல் அதிக அன்பு செலுத்தி திருத்தவும், தேவைகளை நிறைவேற்றவும் முனைந்த போதகனின் தைரியத்திற்காகவும் கருணைக்காகவும் அவர்கள் அவனுக்கு நன்றி செலுத்தாமல் போகமாட்டார்கள்.
மேய்த்தலோடும் கண்காணிப்போடும் தொடர்புடைய பொறுப்புக்கள் ஊழியத்தில் சமநிலையை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய மக்களுக்கு அன்போடு உணவிடாத ஒரு போதகன் அவர்களைக் கண்காணிக்கும் தகுதியை இழந்து விடுகிறான். அதேவேளை, தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அறிந்துகொண்டு கண்காணிக்க முயலாத போதகனால் அவர்களுடைய தேவைக்கேற்ற முறையில் உணவிட முடியாது. அத்தகைய மனிதன் போதகன் என்ற பெயரைச் சூட்டிக்கொள்ளவே தகுதியில்லாதவன்.
- கர்த்தர் தனது இறையாண்மையின் மூலம் போதகனுக்கு அவனுடைய பொறுப்புக்களை அளித்துள்ளார் - “உங்களுடைய கரத்திலே கொடுக்கப்பட்டவர்கள்”
கிரேக்க மூலத்திலிருந்து ஆங்கில வேதத்தில் “those entrusted to you” 1 Peter 5:2 (NKJV), “Those allotted to your charge” (NASV) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் தமிழ் மொழிபெயர்ப்பிலே காணப்படாத “கொடுக்கப்பட்டவர்கள்” என்பதாகும் (Literal translation of this word is “the losts”). இதே பதம் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இஸ்ரவேலர்கள் மத்தியில் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தையான inheritance இதே வார்த்தைக் குழுவைச் சேர்ந்தது (எண். 26:55, 56).
ஒரு மேய்ப்பனுடைய நிலம் ஒரே விதத்தில் அமைந்திருக்காது. சில இடங்கள் வறண்டதாகவும் வேறு சில பகுதிகள் நல்ல நீருள்ள பசுந்தரையாகவும் காணப்படும். அவனுடைய ஆடுகளில் சில கொழுத்து நல்ல நிலையில் உள்ளவையாகவும், வேறு சில நோயுற்றவையாகவும் பலவீனமானதாகவும் காணப்படும்.
இஸ்ரவேலர்கள்கூட சில நேரங்களில் அடுத்த கோத்திரத்து மக்களின் நிலையைப்பார்த்து அவர்கள் தங்களுடைய கோத்திரத்தில் இல்லையே என்று எண்ணியதுண்டு. அவர்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தபோது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்து கர்த்தருடைய இறை ஞானத்தின் மூலமாகவே கொடுக்கப்பட்டதென்பதைப் புரிந்து கொண்டிருந்தனர். வாக்குத் தத்தமாகக் கொடுக்கப்பட்ட கானான் தேசத்தில் வறுமையின் கோட்டில் இருந்த குடும்பமும்கூட அதிக ஆசீர்வாதமுள்ளது. அக்குடும்பத்தை அவர்கள் நன்றியோடு பெற்று கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுகுறித்து முறுமுறுப்பது பெருந்தீய செயலாகும்.
போதகர்கள் தங்களுடைய பொறுப்புக்களைக்குறித்து நினைத்துப் பார்க்கும்போது நாம் மேலே பார்த்த உதாரணங்கள் நல்ல பயன்தரும். அவர்கள் ஊழியம் செய்யும்படி கர்த்தரால் கொடுக்கப்பட்டவர்கள். ஒரு முழு சபை மக்களாகவோ அல்லது ஒரு சபையின் ஒரு குறிப்பிட்ட பகுதியினராகவோ இருக்கலாம். தூரத்தில் இருக்கும் நிலங்கள் கண்ணுக்குப் பச்சையாகத் தெரிந்து, மற்றவர்களுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்புகளை எண்ணிப்பார்த்து இலகுவாக மனம் பாதிக்கப் பட்டு எரிச்சலடையலாம். இன்னொரு சகோதரருடைய பெரிய சபையையும், அவருக்குக் கிடைத்துள்ள அநேக ஊழியங்களையும், ஊழியக்காரர்களையும், அவர்கள் மத்தியில் காணப்படும் ஐக்கியத்தையும், ஜெப வாஞ்சையையும் பார்க்க நேரிடலாம். அதைப் பார்த்து தனது சிறிய சொந்த ஊழியத்தோடு அதை ஒப்பிட்டு வருத்தமடையலாம். ஒரு மூப்பர் தனது பிரசங்க வல்லமையால் பெருங் கூட்டத்தை அசைக்கும்போது இன்னொரு மூப்பர் சபையின் ஒரு பகுதியினருக்கு ஆலோசனை கூறும் ஓர் ஊழியத்தை மட்டுமே கொண்டிருக்கலாம். இந்நிலைமைகளால் எரிச்சல், பொறாமை, சுயவெறுப்பு, பேராசை என்பவை மிக எளிதாக மூப்பர்களை ஆண்டுவிடக்கூடிய ஆபத்து உண்டு.
ஆனால், கர்த்தர் நாம் எங்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அந்த இடத்திலேயே நம்மை நியமித்திருகிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நாம் செய்ய வேண்டிய ஊழியத்தை நமக்குத் தந்திருக்கிறார். அந்த ஊழியத்தை நாம் விசுவாசத்துடன் கொண்டு நடத்த வேண்டும். அவ்வூழியத்தில் கஷ்டமான சூழ்நிலைகள் ஏற்படும்போது நாம் மனந்தளர்ந்துவிடக்கூடாது. கர்த்தர் தனது தேர்ந்த திறமையான மனிதர்களையே ஆபத்து நிறைந்ததும், ஒன்றுமே நிகழாததுமான இடங்களுக்கு அனுப்புகிறார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நமது வாக்குத்தத்தத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நிலத்தில் இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் ஆசீர்வாதத்தை அடைந்திருக்கிறோம். அழியப்போகும் எகிப்தின் பசுமையான சமதரையில் இன்பம் காண்பதைவிட இஸ்ரவேலின் கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தில் நாம் உழைப்பது எத்தனை மேன்மையானது! ஒவ்வொரு போதகனும் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து தாவீதுடன் இணைந்து, “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்கு பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” என்று கூற வேண்டும் (சங். 16:5, 6).
கொலம்பா என்ற அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், ஆறாம் நூற்றாண்டில் மேற்கு ஸ்காட்லாந்திற்கு இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு போனார். அவருடைய ஜெபங்களில் ஒன்று அவர் பரலோகத்தை எதிர் நோக்கி இருந்த காட்சியை வர்ணிக்கின்றது. அவர் அநேகமாக சங்கீதம் 84:10 வசனத்தைத் தன் ஜெபத்தில் நினைவுகூர்ந்திருக்கலாம், “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்.” கொலம்பாவின் ஜெப வர்ணணைகள், இவ்வுலகத்தில் தேவனுடைய சபை ஊழியத்தைக் கருத்தில் கொண்டிருக்கும் போதகனுக்குப் பொருத்தமானது.
கிறிஸ்து தன்னுடைய விலைமதிப்பற்ற மந்தைக்காக ஏற்படுத்தியிருக்கும் ஊழியத்தில் பங்கேற்பதும், அவருக்காக அவருடைய மந்தைக்கு ஊழியம் செய்வதுமே போதகனின் கடமையாகும். இது மகிமையுள்ளதும் அளப்பரியதுமான பொறுப்பாகும்.
கடவுளின் ஆணை
- 1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 8 - பாகம் 2) –
விளக்கம்: லமார் மார்டீன்
நாம் இப்போது கடவுளின் ஆணையைப் பற்றி விசுவாச அறிக்கை தரும் போதனைகளின் இரண்டாம் பாராவைக் கவனிப்போம். சிலர் கடவுள், நடக்கப்போகிற எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவரால் எல்லாவற்றையும் ஆணையிட முடிகிறது என்று கூறுவர். கடவுள், எதிர்காலத்தில் மனிதன் எதைச் செய்யப் போகிறான் என்று உற்று நோக்கிப் பார்த்து, அவ்வறிவின் அடிப்படையிலேயே தனது ஆணைகளையிட்டார் என்று இவர்கள் கூறுவர். இந்தவிதத்திலேயே கடவுளின் ஆணைகளுக்கு இவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். பெலேஜியன், ஆர்மீனியன் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் இவ்வாறே சிந்திக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாப்திஸ்துகளில் சிலரும் இவ்வாறே சிந்தித்தனர் (General Baptist). இன்று கிறிஸ்தவ உலகில் இதைத் தவறாகத் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர். இரண்டாவது பாரா என்ன சொல்கிறது என்று முதலில் பார்ப்போம்.
பாரா 2: நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடைபெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.
(அப்போஸ். 15:18, ரோமர் 9:11-18).
விளக்கக்குறிப்பு
அனைத்தைப்பற்றிய அறிவையும் தன்னுள் கொண்டிருக்கிற கடவுள், எது? எங்கே? எப்படி? நடக்கப்போகிறது என்று நிச்சயமாகவே தெரிந்து வைத்திருக்கிறார். அவர் அறியாத சூழ்நிலைகளோ, சந்தர்ப்பமோ இல்லை. மத்தேயு 11:21 இல், “கோரோசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்” என்று இயேசு சொன்னதை வாசிக்கிறோம். இயேசு இங்கே ஒன்று நடந்திருந்தால் மற்றதும் நிச்சயமாக நடந்திருக்கும் என்று கூறுகிறார். ஆனால், அப்படி நடக்கவில்லை. “நடந்திருந்தால்” என்று அவர் கூறுவதைக் கவனிக்கவும். இதேவிதமாக 23 ஆம் வசனத்திலும், “கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்“ என்று இயேசு கூறியிருப்பதை வாசிக்கிறோம். இது நடந்திருக்குமானால் மற்றதும் அதைத்தொடர்ந்து நடந்திருக்கும் என்று கர்த்தருக்குத் தெரிந்திருந்தது. ஆகவேதான், விசுவாச அறிக்கை, “அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடை பெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருக்கிறார்” என்று கூறுகிறது.
தொடர்ந்து விசுவாச அறிக்கை, “எதிர்காலத்தில் அவற்றை (அவை இப்படித்தான் நடக்கும் என்று) முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் (அடிப்படையில்) அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை” என்று விளக்குகின்றது. அதாவது, சில சந்தர்ப்பங்களின் அடிப்படையில் எதிர் காலத்தில் இப்படித்தான் காரியங்கள் நடக்கப் போகின்றன என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்து கடவுள் தனது ஆணைகளையிடவில்லை என்று விசுவாச அறிக்கை விளக்குகின்றது.
உதாரணத்திற்கு ரோமர் 9 ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இவ்வதிகாரம் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலைப்பற்றிப் பேசுகிறது. இவ்வதிகாரத்தின் 11 ஆம் வசனத்தில் பவுல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். ஈசாக்கின் இரு பிள்ளைகளான யாக்கோபுவையும் ஏசாவையும் பற்றி எழுதும் பவுல், “பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலை நிற்கும்படிக்கு . . . சொல்லப்பட்டது” என்று கூறுகிறார். ஆகவே, இப்பகுதியின்படி தேவனின் ஆணைகள் யாக்கோபோ, ஏசாவோ செய்த எந்த நல்வினை, தீவினைகளின் அடிப்படையிலும் அமையவில்லை. தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் அவர்கள் இருவரிலும் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் அமையவில்லை என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன. கடவுள் ஏன் யாக்கோபு மீது அன்பு வைத்து ஏசாவை நிராகரித்தார் என்பதல்ல இங்கு பிரச்சனை. அவர் யாக்கோபைத் தெரிந்து கொண்டதும், ஏசாவை நிராகரித்ததும் அவர்களில் காணப்பட்ட எந்த நல்லது கெட்டதின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள், எப்படி வாழப்போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டதாலோ அல்ல என்பதைத்தான் இப்பகுதி ஆணித்தரமாக நம்முன் எடுத்து வைக்கிறது.
கடவுள் 13 ஆம் வசனத்தில் சொல்கிறார், “யாக்கோபுவை சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்” என்று. அவர்களில் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் இல்லாமல் தனது சொந்த இரக்கத்தின் அடிப்படையிலேயே கடவுள் இப்படிச் செய்தார் என்பதை 16 ஆம் வசனம் தெளிவாக விளக்குகிறது. “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” அத்தோடு 18 ஆம் வசனத்தில், “தேவன் எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்” என்று வாசிக்கிறோம். இவ்வசனங்கள் கடவுள் தனக்குப் பிரியமானபடி யாராலும் எவற்றாலும் உந்தப்படாமல் தனது ஆணைகளையிட்டுள்ளார் என்று போதிக்கின்றன.
ஜீ. ஐ. வில்லியம்சன் (G. I. Williamson) என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தில் எழுதியிருப்பதில் ஒரு பகுதியைப் பார்ப்போம்:
“எதுவுமே நடப்பதற்குமுன் அவை நிச்சயமாக நடக்கும் என்று கடவுள் அறிந்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் ஆமாம் என்றுதான் பதில் கூறுவார்கள். ஒரு காரியம் நடப்பதற்கு முன் அது நிச்சயமாக நடக்கும் என்பதைக் கடவுள் அறிந்து வைத்திருப்பாரானால், அக்காரியம் நிச்சயமாக நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது யார்? என்று நாம் கேட்கலாம். இதற்கு ஒரே பதில்தான் இருக்க முடியும் - அதாவது, கடவுளே அதை நடக்கும்படிச் செய்கிறார் என்பதே அப்பதில். ஆகவே, கடவுளுக்கு நிச்சயமாக எதுவும் நடக்கும் என்று தெரிந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் நிகழ்வுக்கு அவரே காரணமாக இருப்பதுதான். இந்த உண்மை தவிர்க்க முடியாதது. தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாக பரிசுத்தமாக இருப்பார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். இவ்வாறாக அவர் அறிந்திருப்பதற்குக் காரணம் அவரே உலகத் தோற்றத்திற்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான். தனது முன்குறித்தலே தன்னுடைய மக்களுடைய பரிசுத்தத்திற்குக் காரணமாயிருக்கிறது என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவரை நாம் விசுவாசிக்கப் போகிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதால் அவர் நம்மைத் தெரிந்து கொள்ளவில்லை. அவர் நம்மைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான் நாம் அவரை நிச்சயமாக விசுவாசிப்போம் என்பதைத்தான் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இங்கே மனிதனின் எந்தவிதமான கிரியைகளுக்கும் இடமில்லை. ஆகவே, கர்த்தரே எல்லா மகிமையையும் அடையட்டும்.”
(இக்கட்டுரை ஆசிரியர் லமார் மார்டின் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் உள்ள திரித்துவ பாப்திஸ்து சபையில் போதகராக இருக்கிறார்).
கிறிஸ்தவக் கோட்பாடுகள்
கேள்வி 50: முதலாவது கட்டளை எதைத் தடை செய்கிறது?
பதில்: முதலாவது கட்டளை மெய்யான தேவனை, நிராகரிப்பதையும், அவரை நமது தேவனாக ஏற்று ஆராதிக்காமலும், மகிமைப்படுத்தாமலும் இருப்பதையும், அவருக்கு மட்டுமே உரிய அத்தகைய ஆராதனையையும், மகிமையையும் வேறு எவருக்குமோ அல்லது எதற்குமோ அளிப்பதையும் தடை செய்கிறது.
சங்கீதம் 14:1, ரோமர் 1:20-21, சங்கீதம் 81:10-11, ரோமர் 1:25-26
கேள்வி 51: ‘என்னையன்றி’ என்ற பதத்தின் மூலம் முதலாவது கட்டளை எதை சிறப்பாகப்
போதிக்கின்றது?
பதில்: அனைத்தையும் பார்த்துக் கொண்டும், அவற்றைக் கவனிக்கவும் செய்கின்ற கடவுள், எவரும் வேறு தேவர்களை வைத்து வணங்கும் பாவத்தை வெறுப்பவராய் இருக்கிறார் என்பதை ‘என்னையன்றி’ என்ற பதத்தின் மூலம் முதலாவது கட்டளை சிறப்பாகப் போதிக்கின்றது. சங்கீதம் 44:20-21
விளக்கக்குறிப்பு:
தேவன் ஒருவராகவும், ஜீவனுள்ளவராகவும் இருக்கிறார். அவரை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும். அவர் தனது வார்த்தையின் மூலம் தம்மைத் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதால் நாம் எந்தவிதத்திலும் அவரை உருவங்களோடு தொடர்புபடுத்தி ஆராதிக்க முயலக்கூடாது. இங்கேயே பலர் தவறிழைத்துவிடுகிறார்கள்.
எல்லா மதங்களையும் ஒன்றிணைத்து எல்லா மதமும் ஒரே போதனையையே அளிக்கின்றன என்றும், அவை ஒரே தேவனையே ஆராதிக்கும்படி போதிக்கின்றன என்று கூறும் போலிப்போதனை எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. ஒன்றுசேர முடியாதவற்றை இணைத்துப் பார்க்கும் முறையை சமரசப் பண்பு என்பர். இக்கோட்பாட்டை இறையியலில் பயன்படுத்துபவர்களை சமய சமரசப் பண்பாளர் என்று கூறுவர். இதையே முதலாவது கட்டளை கண்டிக்கிறது. சமய சமரசக் கூட்டமும் (Ecumenical movement) இதையே பின்பற்றுகிறது. இவர்கள் இந்து, முஸ்லீம், யூதன் கிறிஸ்தவன் எல்லோரும் இணைந்து கர்த்தரின் பெயரில் ஐக்கியத்தில் வரலாம், ஜெபம் செய்யலாம் என்று போதிக்கிறார்கள்.
இன்று ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவ மதமாகக் கருதி அதோடு இணைந்து உறவாடும் பல பாரம்பரிய சபைகள் மற்றும் கெரிஸ்மெட்டிக் கூட்டம் செய்யும் காரியங்களையும், சாது செல்லப்பா போன்றவர்களைப் பின்பற்றி இந்து மதப்போதனைகளைப் பயன்படுத்தி கிறிஸ்தவ விளக்கம் தருவதையும், இந்து மதமும் கிறிஸ்தவமும் ஒன்றுதான் என்று புலவர் தெய்வநாயகம் போன்றோர் சொல்வதைப் பின்பற்றி கம்பராமாயணத்தையும், கலியுக புராணங்களையும் பாடித்திரிவதையும் கர்த்தரின் முதலாவது கட்டளை ஆணித்தரமாக கண்டிக்கின்றது, வெறுக்கிறது. இத்தகைய மோசமான சமய சமரச முயற்சியில் கிறிஸ்தவர்கள் ஈடுபடக்கூடாது என்பதை பல கிறிஸ்தவர்கள் உணராதிருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்தவம் எது? என்ற உண்மை புரியாமல் மனக்குழப்பமடைந்திருக்கிறார்கள். காதுக்கு இனிமையாயிருக்கும் போலிப்போதனையைவிட கர்த்தரின் தெளிவான வார்த்தையே நமக்கு எது கிறிஸ்தவம் என்று உணர்த்துவதாயிருக்கிறது.
ஒரு ரோமன் கத்தோலிக்க குருவும், யூதனும், இந்து மதக்குருவும் இணைந்து ஒரே மேடையில் ஜெபம் செய்ய முடியாது. அப்படிச் செய்வது சமய சமரசக் குளறுபடியாகும். அன்னை மேரியை தெய்வமாகக் காணும் ஒரு மதகுருவுக்கும், கிறிஸ்துவை மட்டுமே தேவனாகக் காணும் நமக்கும் ஒரே மேடையில் என்ன வேலை? வேதத்திற்கு மதிப்புக் கொடுக்கும் மெய்க் கிறிஸ்தவன் அம்மேடைப்பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான்.
இதேபோல் இன்னுமொரு போலித் தத்துவமும் உலவி வருகிறது. அதாவது, நாம் நம்மத்தியில் காணப்படும் வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும் என்பதே அப்போலித்தத்துவம். இது கேட்பதற்கு இனிப்பாய்த்தான் இருக்கிறது. ஆனால், இத்தகைய போதனையை வேத்தில் பார்க்க முடியுமா? என்று ஆராய வேண்டும். மெய்யான கிறிஸ்தவர்கள், வேத சத்தியங்களின் அடிப்படையில் அதை விசுவாசித்து ஒன்று கூடி வருமிடத்தில் மட்டும்தான் ஐக்கியம் இருக்கும் என்று வேதம் போதிக்கிறது (எபேசியர் 4). நம் மத்தியில் காணப்படும் வேறுபாடுகள் என்று கூறும்போது அவை எத்தகைய வேறுபாடுகள் என்று கவனிக்க வேண்டும். அவை வேதம் போதிக்கும் சத்தியங்களுக்கு முரணானவையாக இல்லாமல் நாம் உண்ணும் உணவோ, உடையோ சம்பந்தப்பட்டவையாக இருந்தால் அவை கிறிஸ்தவ ஒற்றுமைக்குத் தடையாக இருக்கக்கூடாது. ஆனால், கிறிஸ்தவ வேதத்திற்கு முரணானவையாக இருந்தால் நாம் கூடி வரும வாய்ப்பில்லை.
அத்தோடு மதில் மேல் பூனை என்ற நிலையிலும் சிலர் இருக்கப் பார்ப்பார்கள். இயேசு, என்னோடு இராதவன் எனக்கு விரோதி என்றார் (லூக்கா 11:23). இங்குமில்லாமல் அங்குமில்லாமல் இருக்க முடியாது. கிறிஸ்துவை அறிக்கையிடுகிறவர்கள் அவரே தேவன், வேறு எவரும் தேவனில்லை என்று வெளிப்படையாக பேசத்தான் வேண்டும். அவரைக்கூடைக்குள் ஒளித்து வைக்கப்பார்ப்பவர்களும், கிறிஸ்தவத்தோடு சம்பந்தமற்ற மதங்களோடு உறவாடுபவர்களும் முதலாவது கட்டளையை மீறும் சந்தர்ப்பவாதிகள். கிறிஸ்தவன் கிறிஸ்து மட்டுமே தேவன் என்று அறிக்கையிட்டுத்தான் ஆக வேண்டும். இதை இக்கட்டளை வலியுறுத்துகிறது.
ஜோர்ஜ் விட்பீல்ட்
பதினெட்டாம் நூற்றாண்டில் உலகின் தலை சிறந்த பிரசங்கிகளில் ஒருவராக இருந்தவர் ஜோர்ஜ் விட் பீல்ட். 1735 ஆம் ஆண்டில் இருபது வயதாயிருக்கும்போது விட்பீல்ட் தனது பாவத்தை உணர்ந்து கர்த்தரின் கிருபையின் மூலமாக விசுவாசத்தை அடைந்தார். ஆனால், இயேசுவை அறிந்து கொள்வதற்கு முன்பே இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபை அங்கத்தவராக இருந்தார். விட்பீல்ட், வெஸ்லி சகோதரர்களோடு இணைந்து வேதத்தைப் படித்ததோடு பிரசங்கமும் செய்து வந்தார். ஆனால், கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பு அவருக்கு பின்பே ஏற்பட்டது. 1736 இல் அவர் பிரசங்கிக்கும்படியாக ஊழியத்திற்கு நியமிக்கப் பட்டார். அவரது ஆரம்பப் பிரசங்கம் பதினைந்து பேரை அசைத்திருந்தது.
தன் வாழ்நாளில் பிரித்தானியா மற்றும் பதின்மூன்று அமெரிக்க கொலனிகளில் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்தார். இவ்வூழியத்தில் அவர் முப்பத்தைந்து வருடங்கள் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் வெஸ்லி சகோதரர்களோடு இணைந்து செயல்பட்டபோதும் பின்பு அவர் பிரிந்து தனியாக ஊழியம் செய்து வந்தார். விட்பீல்ட் ஆரம்பத்திலிருந்தே கல்வினித்துவ போதனைகளை வேதப்பூர்வமான போதனைகளாக அறிந்து அதன்படி பிரசங்கம் செய்துவந்தார். அவருடைய இறையியல் பழுத்த கல்வினித்துவமாயிருந்தது. ஆனால், வெஸ்லி சகோதரர்கள் ஆர்மீனியப் போதனைகளைப் பின்பற்றத் தொடங்கினர். ஜோன் வெஸ்லி வேதம் போதிக்கும் கர்த்தருடைய அநாதித் தீர்மானத்தின் மூலமான தெரிந்து கொள்ளுதலாகிய போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அது சம்பந்தமாக விட்பீல்ட் எவ்வளவோ பேசிப்பார்த்தும் வெஸ்லி மனம்மாற மறுத்தார். அத்தோடு வெஸ்லி ஒரு கிறிஸ்தவன் இவ்வுலகில் பாவமற்ற பூரணமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் தவறாக நம்பி வந்தார். இக்காரணங்களால் விட்பீல்ட் தனது வழியில் போய் கர்த்தரின் ஊழியத்தை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வெஸ்லி சகோதரர்கள் பின்பு மெதடிஸ்ட் சபைகளை ஏற்படுத்தினர்.
திறந்தவெளிப் பிரசங்கத்தை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஜோர்ஜ் விட்பீல்டே. ஜோன் வெஸ்லிக்கு இது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அக்காலத்தில் ஆங்கிலிக்கன் திருச்சபை உறுதியுடன் இம்முறையை எதிர்த்ததுடன் அவர்கள் இதைப் பின்பற்றத் தவறியதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, பிரசங்கம் கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதால் எந்த ஒரு கட்டடமும் போதாததாக இருந்தது. இரண்டாவதாக, அநேக ஆங்கிலிக்கன் சபை குருமார்கள் பிரசங்கம் கேட்க வந்த மக்களின் ஆர்வத்தை தவறானதாகக் கருதி தம் சபைகளுக்கு அத்தகைய ஆர்வத்துடன் வருபவர்களை விட மறுத்தனர். அவர்கள், சபைக் கட்டிடத்திற்கு வெளியில் இருந்து எதன் மூலமும் அல்லது எவர் மூலமும் ஒரு ஆத்துமாவும் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்பினர். ஆனால், அத்தனை எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜோர்ஜ் விட்பீல்டின் கூட்டங்கள் மூலம் அநேகர் அதிரடிப் பிரசங்கத்தைக் கேட்டு கர்த்தரை அறிந்து கொண்டனர். தான் போகுமிடங்களுக்கெல்லாம் விட்பீல்ட் சுமந்து செல்லக்கூடிய ஒரு பிரசங்க மேடையைக் கொண்டு சென்றார். பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகத்தூரத்தில் இருந்து எந்தவித ஒலி பெருக்கி சாதனமும் இல்லாமல் தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருந்த அற்புதமான குரலை ஆசீர்வாதமாகப் பெற்றிருந்தார் விட்பீல்ட். கர்த்தரின் நியாயப்பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும் தெளிவாகப் பிரசங்கித்து அதில் பெரும் வெற்றி கண்டார் விட்பீல்ட்.
இங்கிலாந்தில் பிரிஸ்டல், இலண்டன் ஆகிய இடங்களில் அவர் முக்கியமாக ஊழியம் செய்து வந்தார். 1742 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவிற்கு அருகில் இருந்த கம்பஸ்லோங்க் என்ற இடத்தை மையமாக வைத்து எழுந்த எழுப்புதலோடும் விட்பீல்டுக்குத் தொடர்பிருந்தது. ஸ்கொட்லாந்து மக்கள் விட்பீல்டின் பிரசங்கத்தைக் கேட்பதிலும் அவருடைய கல்வினித்துவ போதனைகளைக் கேட்பதிலும் அதிக ஆர்வம் காட்டினர்.
வேல்ஸ் தேசத்தில் விட்பீல்ட் ஹொவல் ஹெரிஸ் என்ற வேல்ஸ் தேசப் பிரசங்கியோடு அதிக தொடர்பு வைத்திருந்தார். ஹெரிஸ் சிறந்த பிரசங்கியாக இருந்ததோடு அவரது பிரசங்கத்தின் மூலம் வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்டிருந்தது. விட்பீல்ட் ஹெரிஸ்க்கு வேல்ஸிலும், ஹெரிஸ் விட்பீல்டிற்கு இங்கிலாந்திலும் பிரசங்கம் செய்யத்துணை புரிந்தனர். இக்காலத்தில் டேனியல் ரோலன்ட்ஸ் என்ற அற்புதமான ஒரு பிரசங்கியையும் வேல்ஸ் தேசம் பெற்றிருந்தது. இவர் கார்டிகன்சையரைச் சேர்ந்த லங்கித்தோ என்ற இடத்தைச் சேர்ந்தவர். பொன்டிகிளின் என்ற இடத்தைச் சேர்ந்த வில்லியம் வில்லியம்ஸ் என்ற புகழ்பெற்ற பாடலாசிரியர் கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுத அவை ரோலன்ட்ஸின் கூட்டங்களில் மக்களால் கர்த்தரைத் துதித்துப் பாடப்பட்டன. இதே காலத்தில் வட வேல்ஸ் தேசத்தில் பாலா என்ற இடத்தைச் சேர்ந்த தோமஸ் சார்ள்ஸ் என்ற இன்னுமொரு சிறந்த பிரசங்கியும் இருந்தார். இன்று மெத்தடிஸ்ட் சபைகள் ஆர்மீனிய, லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றிப் போவதைப்போல வேல்ஸில் அக்காலத்தில் மெத்தடிஸ்ட் சபைகள் இருக்கவில்லை. அவை தீவிரமாக கல்வினித்துவக் கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றி எழுந்தவை.
செலீனா என்ற ஹன்டிங்டன் கவுன்டஸ் விட்பீல்டின் ஊழியங்களுக்கு அநேக உதவிகள் புரிந்தார். விட்பீல்டின் கல்வினித்துவப் போதனைகளில் அதிக ஆர்வம் காட்டிய இவர் பல ஆராதனைக் கூட்டங்களை நடத்தவும், இறையியல் கல்லூரிகளையும் கட்டவும் உதவினார். இங்கிலாந்தின் அரசராக அப்போதிருந்த மூன்றாம் ஜோர்ஜ், தனது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஹன்டிங்டன் கவுன்டஸைப் போல ஒரு பெண்ணிருந்தால் தன் நாட்டிற்குப் பெரும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
விட்பீல்ட் தன் ஊழியத்தில் அடைந்த ஆசீர்வாதங்களுக்கு அவருடைய பிரசங்க வல்லமை பெருங் காரணமாக இருந்தது. அவரது குரல் வளத்தை அன்று வேறொருவர் பெற்றிருக்கவில்லை. விட்பீல்ட் பிரசங்கிக்கும்போது ஓ என்ற வார்த்தையை உச்சரிப்பது போன்ற தாலந்தைப் பெற்றுக் கொள்ள நூறு பவுண்டுகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஒரு புகழ் பெற்ற நடிகர் அக்காலத்தில் கூறியிருந்தார். கேட்பவர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் அளவுக்கு விட்பீல்டால் வார்த்தைகளை உச்சரித்துப் பேச முடிந்தது. ஆனால் பேச்சு வல்லமையால் மட்டும் எவரும் மனிதர்களை மனம் கரைய வைத்து பாவத்திலிருந்து மனந்திருந்த வைக்க முடியாது. விட்பீல்ட் எப்போதும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தையும், துணையையும் தன் ஊழியத்தில் நாடி நின்றார். அத்தோடு அவருடைய இணையற்ற தாலந்துகளுக்கு இணையாக அவருடைய தாழ்மை எப்போதுமே மேலோங்கி நின்றது.
திடமான வேதப்பூர்வமான கல்வினித்துவ இறையியலும், அதன் அடிப்டையிலான ஆழமானதும், தெளிவானதுமான அதிரடி வேதப் பிரசங்கமும், ஆவியின் அனுக்கிரகத்தையும் கொண்டிருந்த விட்பீல்ட் காலத்து ஊழியத்தால் எழுப்புதல் ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. ஆனால், ஆடியும், பாடியும், பிரசங்கமென்ற பெயரில் வெறும் உணர்ச்சிகளை மட்டும் குற்றால அருவியாகக் கொட்டி, காசுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பிரசங்கிகளின் ஊழியத்தால் மனிதன் பாவ உணர்வு பெற்று கர்த்தரிடம் கதறியோடிவரும் மெய்யான எழுப்புதலின் அடிச்சுவடுகூட தெரியாமலிருப்பதிலும் எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. விட்பீல்ட் எங்கே? இன்று நாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய போலிப் பிரசங்கிகள் எங்கே?
விட்பீல்ட் தனது 55 ஆவது வயதில் 1770 ஆம் ஆண்டில் கர்த்தரடி சேர்ந்தார். இவ்வுலகம் கண்ட மாபெரும் சுவிசேஷப் பிரசங்கியாக வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்தியவர் ஜோர்ஜ் விட்பீல்ட்.
மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வுநாள்
ஓய்வுநாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
உலக மக்கள் அனைவரும் பின்பற்றக் கூடியதாக கர்த்தர் படைப்பில் ஏற்படுத்திய மூன்று காரியங்களில் (திருமணம், தொழில், வாரந்தர ஓய்வுநாள்) ஒன்று ஓய்வுநாள் என்பதை விபரமாக கடந்த இதழில் பார்த்தோம்.
புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகப் போதிக்கும் புதிய ஏற்பாட்டின் வேதப்பகுதிகளுக்கு சிலர் தவறாக விளக்கம் கொடுத்து வரும் காரியம் இன்று நேற்றாக இல்லாமல் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அத்தகைய வேதப்பகுதிகளில் முக்கியமானவற்றை இவ்விதழில் ஆராய்ந்து அவை என்னதான் கூறுகின்றன என்று பார்க்க வேண்டியது நமது கடமை.
மத்தேயு 12:8; மாற்கு 2:27; லூக்கா 6:5
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்று இயேசு மத்தேயு 12:8 இல் கூறுகிறார். மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது என்று மாற்கு 2:27 இல் வாசிக்கிறோம். லூக்கா சுவிசேஷமும் இவ்வசனங்களை உறுதிப்படுத்துகின்றது. இவ்வசனங்களின் அடிப்படையில் கிறிஸ்து ஓய்வுநாளை இல்லாமலாக்கியிருக்கிறார் என்று தவறாக சிலர் விளக்கம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சுவிசேஷக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோரும் இன்றும் இப்படியே நம்பி வருகிறார்கள். ஆனால் இவ்வசனங்களை நாம் முறையாகப் படித்தால் அத்தகைய போதனை தவறானது என்று புரிந்து கொள்ளலாம்.
இவ்வேதப்பகுதிகளைப் புரிந்து கொள்ள நாம் ஒரு உண்மையை மனதில் கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் பின்பற்றிய ஏழாம் நாளான ஓய்வுநாளுக்கும் புதிய ஏற்பாட்டின் ஓய்வுநாளுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கடந்த இதழ்களில் நாம் இதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம். ஏழாம் நாளான ஓய்வுநாள் வாரத்தின் முதல் நாளுக்கு கிறிஸ்துவால் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் அதிகாரத்தின்படி அப்போஸ்தலர்கள் ஆதி சபையில் வாரத்தின் முதல் நாள் கூடி கர்த்தரை ஆராதிக்கத் தொடங்கினார்கள். இவ்வாண்டவருடைய நாளே புதிய ஏற்பாட்டில் ஓய்வுநாளாக பின்பற்றப்படுகின்றது.
இதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வேதப்பகுதிகளை நாம் படிக்க வேண்டும். இப்பகுதிகளில் இயேசு பரிசேயர்கள் ஓய்வுநாளில் ஒருவன் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று ஏற்படுத்தியிருந்த விதிகளைக் கண்டிக்கிறார். பரிசேயர்கள் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் போதித்ததற்கும் மேலான பல விதிகளை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர். ஓய்வுநாளில் உணவில்லாமல் போகும் ஒருவனுக்கு உணவு கொடுப்பதும், அந்நாளில் காயப்பட்டிருப்பவனுக்கு உதவி செய்வதும், நோயுற்றிருப்பவனுக்கு மருத்துவ வசதி அளிப்பதும் ஓய்வுநாளைப் பின்பற்றுவதற்கு முரணான செயல்கள் அல்ல. அவை கருணையின் காரியங்கள் என்றும் அத்தகைய காரியங்களை ஓய்வுநாளில் செய்வது தவறில்லை என்பதை பழைய ஏற்பாடே போதிக்கின்றது.
ஆனால், இவற்றை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளாததோடு மேலும் கடுமையான, பழைய ஏற்பாட்டிற்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத பல காரியங்களைச் செய்யும்படி இஸ்ரவேல் மக்களை வற்புறுத்தினர். இதையே இப்பகுதிகளில் கிறிஸ்து எதிர்க்கிறார். தானே ஓய்வுநாளின் ஆண்டவராய் இருக்கிறேன் என்று கூறியதன் மூலம், தானே மேசியா என்றும், படைப்பின் ஆண்டவராகிய தான், அனைத்திற்கும் ஆண்டவராயிருக்கும் தான், ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறேன் என்று தெள்ளத்தெளிவாக பரிசேயர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். ஆண்டவர் என்ற வார்த்தை அனைத்தையும் இறை ஆண்மையுடன் ஆள்கிறவர் என்று பொருள்படும். இயேசு அத்தகைய ஆண்டவராய் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.
சிலர் போதிப்பது போல் அவர் ஓய்வுநாளை அழிக்க வந்திருக்கிறார் என்று இப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்க முனைவது அத்தகைய போதனையை இப்பகுதிகளுக்குள் திணிக்க முனைவதாகும். அத்தகைய பொருளை ஆண்டவருடைய வார்த்தைகள் கொண்டிருக்கவில்லை என்பதை மத்தேயு 12:8 ஐயும் மாற்கு 2:27 ஐயும் சேர்த்துப் படிக்கும்போது புரிந்து கொள்ளலாம். மாற்கு 2:27 இல், கிறிஸ்து ஓய்வுநாள் மனுஷனுக்காக ஏற்படுத்தப்பட்டது என்று போதிக்கிறார். அதுவே உண்மை. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, மனுஷனுக்காகவே ஓய்வுநாள் உருவாக்கப்பட்டது. மனுஷன் அந்நாளில் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்நாள் உருவாக்கப்பட்டது. அந்நாளில், ஆபத்துக் காலத்தில் தாவீது தேவனுடைய ஆலயத்தில் அப்பத்தைப் புசித்தது தவறான செயலல்ல என்று இயேசு விளக்குகிறார். அது கருணையின் காரியம். ஓய்வுநாளை ஏற்படுத்திய நானே அதற்கும் அனுமதியளித்திருக்கிறேன். இன்று தொடர்ந்தும் அவ்வோய்வு நாளுக்கு ஆண்டவராயிருந்து என் சீடர்கள் பசியாயிருந்த போது அந்நாளில் வழியில் இருந்ததை உணவாகக் கொண்ட தையும் அனுமதிக்கிறேன் என்றே இயேசு இங்கு போதிக்கிறார். இதைத்தவிர வேறு போதனைகளை இப்பகுதியில் நுழைக்க முனைவது தவறு.
ரோமர் 14:1-6; கலாத்தியர் 4:8-11; கொலோசெயர் 2:16, 17
புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைப் பின்பற்றத் தேவையில்லை என்று தவறாகப் போதிப்பவர்கள் மேல்வரும் வசனங்களை அடிக்கடி உதாரணம் காட்டுவர். ஏனெனில், இப்பகுதிகள் பழைய உடன்படிக்கையின் ஓய்வுநாள் ஒழிக்கப்படுவதைப் போதிக்கின்றன.
இவ்வசனங்களின் அடிப்படையில் பொதுவாக சில தவறான போதனைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றை முதலில் ஆராய்ந்து அவை சரியானவையா? என்று பார்ப்போம்.
(1) புதிய ஏற்பாட்டின்படி எந்த ஒரு நாளையும் விசேஷமான நாளாகப் பின்பற்றத் தேவையில்லை என்று சிலர் கூறுவர்.
கிறிஸ்தவ சுதந்திரம் என்ற பெயரில் சிலர் ரோமர் 14:5; கலாத்தியர் 4:10, 11 ஐப் பயன்படுத்தி இப்படியாக விளக்கம் தருவர். ஆனால் அத்தகைய விளக்கம் தவறு. முதலில் அத்தகைய விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க வேண்டும் என்ற (the analogy of faith) வேதவிதிக்கு முரணானது. நமது சீர்திருத்தவாத பெரியோர்கள் வேதத்தைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய இவ்விதிமுறையை நமது விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்தில் ஒன்பதாவது பாராவில் எழுதி வைத்துள்ளார்கள். ஒரு வேதப்பகுதி எதைச் சொல்கிறது என்பதில் நமக்கு சந்தேகமேற்பட்டால் அது பற்றித் தெளிவாகப் போதிக்கும் ஏனைய பகுதிகளை வைத்தே அதைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே அவ்விதி. ஆகவே எந்தவொரு நாளையும் நாம் விசேஷமாகப் பயன்படுத்தக்கூடாது என்ற போதனை, பவுலின் போதனையை அவருடைய ஏனைய நிருபங்களோடும், யோவானுடனும் மோதும்படியாகச் செய்கிறது. புதிய ஏற்பாடு வாரத்தின் முதல் நாள் விசேஷமான நாள் என்பதைத் தெளிவாகப் போதிக்கின்றது. கிறிஸ்தவன் வாரத்தின் ஒருநாளை நிச்சயமாக விசேஷமான நாளாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றது. இதுபற்றி சிறந்த இறையியல் வல்லுனரான ஜோன் மரே பின்வருமாறு கூறுகிறார்: “ரோமர் 14:5 நாட்கள் பற்றிய எல்லா விசேஷமான அம்சங்களையும் இல்லாமல் செய்கிறது என்று கூறினால் வாரத்தின் முதல் நாளை விசேஷமான நாளாகப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனைக்கே இடமில்லாமல் போய்விடும். ஆகவே, புதிய ஏற்பாடு போதிக்கும் வாரத்தின் முதல் நாளை விசேஷமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனையை நாம் மாற்ற முடியாததோடு, எந்தவொரு நாளையும் விசேஷமான நாளாகக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற போதனையையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது”. (Romans Vol. 2, Pg 258, 259)
(2) இப்பகுதிகள், கிறிஸ்தவ ஓய்வுநாள் என்று ஒன்றிருந்த போதும் மற்றவர்கள் ஓய்வுநாளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நாம் குறைகாணக்கூடாது என்று போதிக்கின்றன என்பர் சிலர்.
இவ்விளக்கம் முக்கியமாக கொலோசெயர் 2:16 இன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. “ஓய்வுநாளைக் குறித்தாவது உங்களை ஒருவனும் குற்றப்படுத்தாதிருப்பானாக.” இங்கே பவுல் இவ்வசனங்களின் மூலம் நாம் பின்பற்றக்கூடாது என்று கூறும் காரியங்கள் கிறிஸ்தவன் செய்ய வேண்டிய கடமைகள் அல்ல. அதனால்தான் அதைக் குறித்து மற்றவர்கள் உங்களைக் குறைகூறும்படி விடாதீர்கள் என்று பவுல் கூறுகிறார். ஒரு கடமையில் நாம் தவறும்போது நிச்சயமாக மற்றவர்கள் நம்மைக் குறைகூறத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு நம்மீது அன்பில்லை என்று தான் அர்த்தம். கிறிஸ்தவன் என்று நம்மை அழைத்துக் கொண்டு ஓய்வுநாளில் நாம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாலோ, டி.வியைப் பார்த்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாலோ, அவசியமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாலோ யாரும் குறைகூறினால், அவர்கள் நம்மைக் குறைகூறக்கூடாது என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?
(3) இப்பகுதிகள் வாராந்தர ஏழாம் நாளான ஓய்வுநாளைக் குறித்துப் பேசவில்லையென்பது இன்னொரு வாதம்.
பவுல் இப்பகுதிகளில் நிச்சயமாக பழைய ஏற்பாட்டு சடங்குகளைப்பற்றிப் பேசியபோதும், வாராந்தர ஓய்வுநாளையும் உள்ளடக்கியே பேசுகிறார். பவுல் யூதக் கேலண்டரின்படியான விசேஷ நாட்களை மனதில் வைத்தே இங்கு பேசுகிறார். யூத கிறிஸ்தவர்களில் சிலர் ஓய்வுநாளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வேறு நாட்களுக்கும் கொடுத்து வந்தனர். இங்கு பவுல் வாராந்தர ஏழாம் நாளான ஓய்வுநாளைக் குறித்துப் பேசுகிறார் என்று கூறுவது புதிய ஏற்பாட்டில் நாம் பின்பற்ற வேண்டிய ஓய்வுநாளை நிராகரிக்கும்படி செய்துவிடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள் ஆனால், அது தவறு.
(4) இப்பகுதிகள் வாராந்தர ஏழாம் நாளைக்குறித்துப் பேசுவதால் புதிய ஏற்பாட்டு ஓய்வுநாளை பழைய ஏற்பாட்டு ஓய்வுநாளோடு எந்தவிதத்திலும் தொடர்புபடுத்த முடியாது என்பதும் ஒரு வாதம்.
மேற் கூறியவிதத்தில் வாதிடுபவர்களும் நாம் மூன்றாவதாக சுட்டிக் காட்டிய கருத்தோடு இணைந்தே பேசுகிறார்கள். இக்கருத்தும் புதிய ஏற்பாட்டில் ஓய்வுநாளைக் குறித்த போதனையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. பழைய ஏற்பாட்டு ஓய்வுநாளுக்கும் புதிய ஏற்பாட்டு ஓய்வுநாளுக்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை என்ற இக்கருத்து வேதபோதனையோடு பொருந்திப் போகவில்லை.
இதுவரை ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட புதிய ஏற்பாட்டுப் பகுதிகளுக்கு சிலரளிக்கும் தவறான விளக்கங்களைப் பார்த்தோம். இனி இப்பகுதிகள் மூலம் பவுல் உண்மையில் போதிப்பதென்ன என்று பார்ப்போம்.
இப்பகுதிகள் அனைத்திலும் பவுல் பழைய ஏற்பாட்டு சடங்குமுறைகளை மனதில் வைத்தே அறிவுரை கூறியுள்ளார். பவுல் இப்பகுதிகளில் புதிய ஏற்பாட்டு வழிமுறைகளை மனதில் வைத்துப் பேசவில்லை. புதிய ஏற்பாட்டில் ஒரு நாள் ஓய்வுநாளாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது புதிய ஏற்பாடு தெளிவாகப் போதிக்கும் உண்மை. ஆனால், இப்பகுதிகளில் பவுல் அதைக் குறித்து வாதாடவில்லை. இப்பகுதிகளுக்கும் அப்போதனைக்கும் தொடர்பு இல்லை. வாரத்தின் முதலாம் நாளை பரிசுத்தமாக வைத்திருக்கக்கூடாது என்று வாதிடுவதற்காக இப்பகுதிகளைப் பயன்படுத்துவது மூடத்தனம்.
கலாத்தியர் 4:8-11 வரையுள்ள வசனங்களைப் பார்த்தால் இதைப்புரிந்து கொள்ளலாம். “பெலனற்றதும், வெறுமையானதுமான அவ்வழிபாடுகள்” என்று பவுல் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளையே. கொலோசெயர் 2 இல் பவுல் கொலோசெயர் எதிர்நோக்கிய பல தவறான போதனைகளைக் கண்டிக்கிறார் 8, 20, 16, 11, 18.
ஆகவே, இப்பகுதிகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் மனதில் வைத்தே எழுதப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அவற்றை இன்று பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
பவுல் இப்பகுதிகளின் மூலம் பழைய எற்பாட்டு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றக்கூடாதென்று வலியுறுத்திப் போதிப்பதற்கான காரணமென்ன?
பவுல் கொலோசெயர் 2:17ல் “அவை வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது” என்று கூறுகிறார். பழைய ஏற்பாட்டு வாரந்தர ஏழாம் நாளான ஓய்வுநாள் வரப்போவதை நிழலாகக் காட்டுகிறது. ஆகவே நிழலாகக் காட்டும் எதையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பழைய ஏற்பாடு நிழலாகக் காட்டிய கிறிஸ்து ஏற்கனவே வந்து தனது செயல்களை முடித்துக் கொண்டுள்ளார். ஆகவே, நாம் தொடர்ந்து அவருடைய வருகையை நிழலாக நினைவுபடுத்தும் பழைய ஏற்பாட்டு வாராந்தர ஏழாம் நாளான ஓய்வுநாளைப் பின்பற்றத் தேவையில்லை. ஆகவேதான் இன்று நாம் வாரத்தின் முதல் நாளை ஓய்வுநாளாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில் பின்பற்றுகிறோம்.
ஆகவே, பவுல் விசேஷ நாட்களைப் பற்றியோ, ஓய்வுநாளைப் பற்றியோ இப்பகுதிகளில் கவலைப்படவில்லை. நிழலாகக் காட்டும் எச்செயலையும் தொடர்ந்து பின்பற்றுவதை மட்டுமே பவுல் எதிர்க்கிறார். ஓய்வுநாட்களைப் (பழைய ஏற்பாட்டு விசேஷ தினங்கள்) பின்பற்றுவதைப் பவுல் இங்கே பரிசேயத்தனமாகக் கருதவில்லை, மூட நம்பிக்கையாகவே கருதுகிறார்.
“ஓய்வுநாள்” என்ற பதம் பழைய ஏற்பாட்டு ஏழாம் நாள் வழிபாட்டு முறையைக் குறிக்கும் பொதுவான பதம். இது பழைய ஏற்பாட்டு முறையைக் குறிக்கும் பதமே தவிர விசேஷ நாட்களைக் கடைபிடிப்பதைக் குறித்துப் பேசும் பதம் அல்ல. ஆகவே, வாராந்தர ஏழாம் நாளாகிய ஓய்வுநாள் இல்லாமல் போவதால் ஆண்டவருடைய நாள் இன்று இல்லை என்று சொல்லுவதோ, ஆண்டவருடைய நாளை ஒரு பரிசுத்தமான நாளாக நாம் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதோ முறையானதல்ல.
ஆண்டவருடைய நாளை நாம் இன்று பரிசுத்தமாக வைத்திருப்பதனால் அது நிழலானதாகவோ அல்லது வரப்போகும் எதையும் சுட்டிக் காட்டுவதாகவோ இருக்கவில்லை. அது நமக்கு நித்திய வாழ்வைப் பெற்றுத் தந்த கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலுக்கு அடையாளமாகவே இருக்கின்றது. அது இன்று இருண்ட நிழலாகத் தோற்றமளிக்கவில்லை. கிறிஸ்து நிறைவேற்றியுள்ள அனைத்திற்கும் சாட்சியாக அமைந்திருக்கின்றது. பழைய ஏற்பாட்டு வாராந்தர ஏழாம் நாளான ஓய்வுநாளுக்கும், ஆண்டவருடைய நாளுக்கும் ஒரு தொடர்புண்டு. அதாவது அவை இரண்டும் ஒரு ஒழுக்க நியதியைத் தன்னுள் கொண்டமைந்துள்ளன. இருந்தபோதும் அவை இரண்டும் வெவ்வேறு விதமான வழிபாட்டு நாட்கள். அதாவது, ஒன்று கிறிஸ்துவின் வருகையைச் சுட்டிக் காட்டுகின்றது. மற்றது அப்படிச் செய்யவில்லை. இவ்வேறுபாடு அந்நாட்கள் பரிசுத்தமான ஓய்வுநாட்களாக இருக்க வேண்டுமா என்ற வினாவோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.
எபிரெயர் 4:1-9
இப்பகுதியையும் ஓய்வுநாளை எதிர்ப்பவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். நித்திய இளைப்பாறுதலைப் பற்றி ஆரம்பத்தில் விளக்கும் இப்பகுதி விசுவாசிகள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்நித்திய இளைப்பாறுதலை சுட்டிக் காட்டும் வேறு இளைப்பாறுதல்களைப்பற்றியும் விளக்கி (படைப்பின் இளைப்பாறுதல், ஏழாம் நாள் இளைப்பாறுதல், யோசுவாவின் இளைப்பாறுதல்) பின்பு வேறொரு இளைப்பாறுதலும் இருப்பதாகக் கூறுகிறது. எட்டாம் வசனத்தில் “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே” என்று வாசிக்கிறோம். இங்கே அந்த வேறொரு நாள் எந்த நாள் என்பதை ஒன்பதாம் வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் இளைப்பாறுதலைப் பற்றிப் பேசும் ஆசிரியர் “இளைப்பாறுதல்” என்ற வார்த்தைக்கு பழைய ஏற்பாட்டில் ஏழாம் நாளான வாராந்தர ஓய்வுநாளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தையையே பயன்படுத்தியுள்ளார். இப்பகுதியின் ஏனைய இடங்களில் இளைப்பாறுதல் என்ற வார்த்தைக்கு அவர் வேறு வார்த்தையை மூலத்தில் (katapausis 3:11; 4:1; 4:3; 4:5; 4:8; 4:10) பயன்படுத்தியுள்ளார். தமிழில் எல்லா இடங்களிலும் “இளைப்பாறுதல்” என்றே இருக்கிறது. ஆனால், 4:9 இல் அது “ஓய்வுநாள்” (சபத்து - Sabbatismos) என்றிருக்க வேண்டும். இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டில் இங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. (There remaineth therefore a sabbath rest for the people of God - RV). அதாவது பழைய ஏற்பாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டது போன்ற ஒரு சபத்து நாள் இன்று புதிய ஏற்பாட்டு மக்கள் பின்பற்றுமாறு கொடுக்கப்பட்டுள்ளதென்பதே இப்பகுதி போதிக்கும் தெளிவான உண்மை. A. W. Pink தனது The Christian Sabbath என்ற சிறு நூலில் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆகவே, இப்பகுதி நாம் நித்திய இளைப்பாறுதலை எதிர்நோக்கி இருந்தபோதும் இவ்வுலகில் இருக்கும்வரை நாம் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய வாராந்தர ஓய்வுநாள் இருப்பதையும் அது வரப்போகும் நித்திய ஓய்வுநாளை எதிர்நோக்கி இருப்பதையும் நினைவுபடுத்துகிறது. ஆனால் ஓய்வுநாளை எதிர்ப்பவர்கள் இங்கே நித்திய ஓய்வைப்பற்றி மட்டுமே விளக்கப்பட்டிருக்கின்றது என்று தவறாக, இவ்வேதப்பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டு ஆராயாமல் விளக்க முனைகிறார்கள்.
இன்று ஓய்வுநாளைக் கவனத்துடன் கடைபிடிப்பதன் மூலம் நித்திய ஓய்வை நாம் ஆனந்தத்துடன் எதிர்பார்த்து நிற்கிறோம்.
வில்லியம் கேரி
செராம்பூர் கல்லூரி
செராம்பூர் மிஷனரிகள் 1794 ஆம் ஆண்டிலிருந்தே வருங்காலத்தில் இந்திய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் ஒரு கல்லூரியை எழுப்பி அவர்கள் எல்லாத் துறைகளிலும் பாண்டித்தியம் அடைய உதவ வேண்டும் என்ற வாஞ்சை கொண்டிருந்தனர். 1802 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்து அதை இங்கிலாந்திலிருந்த சபைகளோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களது திட்டம் இத்தகைய கல்லூரிப் படிப்பை இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. அத்தோடு இத்திட்டத்தை உறுதியுடன் உடனேயே செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணினர். பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தக்கால சபை வரலாற்றை அவர்கள் படித்து தங்கள் நோக்கத்தில் மேலும் உறுதி கொண்டனர். இத்தகைய கல்லூரிப் பணியில் வெளிநாட்டவர்களைப் பயன்படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இங்கிலாந்தில் விக்ளிப்பும், டின்டேலும் தோன்றியதைப் போல் இந்தியாவிலும் இந்தியர்களுக்கு மத்தியில் விக்ளிப்புகளும், டின்டேல்களும் உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடில்லாமல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப்பற்றுடன் அனைவரும் இத்தகைய கல்வியைப் பெறுவதுடன், போதிக்கும் தகுதி பெற்றவர்களாகவும் மாற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
அத்தோடு செராம்பூர் மிஷனரிகள் ஆங்கிலத்தில் அமைந்த மேலைத்தேய கல்வியை இந்தியர்களுக்கு அளிப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அத்தகைய கல்வியிலே பலரும் ஆர்வம் காட்டுவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனெனில், ஆங்கிலத்தில் மேலைத்தேய கல்வி கற்று அரசாங்கத்தில் வேலை செய்யவேண்டுமென்பதே பெரும்பாலானோருக்கு மோகமாக இருந்தது. அத்தகைய கல்வி அதிக பணத்தையும் கொண்டுவரும் என்றும் மிஷனரிகள் அறிந்திருந்தனர். ஆனால், கர்த்தருடைய சுவிசேஷ ஊழியத்திற்கு முதன்மை அளித்த மிஷனரிகள் இந்தியர்களை இங்கிலாந்து தேசத்தையும் அதன் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுபவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக இந்தியர்கள் இந்தியர்களாகவே இருந்து தங்களுடைய பண்பாட்டைப் பலி கொடுத்துவிடாமல் தங்களுடைய சொந்த மக்களைத் தாங்களே கர்த்தரிடம் கொண்டு வருபவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
இக்கல்லூரி மூலம் வெறும் மருத்துவர்களையும், வக்கீல்களையும், விரிவுரையாளர்களையும், கல்லூரி ஆசிரியர்களையும் உருவாக்குவதை மட்டும் அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. நல்ல பிரசங்கிகளையும் போதகர்களையும் உருவாக்குவதே அவர்களது பெரு நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப 200 மாணவர்களைக் கொண்ட ஒரு கல்லூரியை அமைக்க அவர்கள் தீர்மானித்தனர். இவர்களில் 10 வீதமானோர் மட்டுமே பிரசங்கிகளாக வரும் வாய்ப்பு இருக்கும் என்றும் அவர்கள் எண்ணினர்.
பாடங்கள் எல்லாம் இந்திய மொழிகளிலேயே இருக்க வேண்டும் என்றும், நன்றாக ஆங்கிலத்தில் படிக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் போதனை என்றும் அவர்கள் தீர்மானித்தனர். இந்திய கலாச்சார பண்பாட்டை வெளிப்படுத்துவதாக பாடங்கள் இருக்க வேண்டும் என்றும், அவற்றின் மூலம் மாணவர்கள் தங்கள் மக்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மிஷனரிகள் ஆர்வமாக இருந்தனர். வெறும் வேதப்படிப்பு மட்டும் ஒருவனைப் போதகனாகவோ, பிரசங்கி யாகவோ மாற்றிவிடாது. வேதத்தை அவன் தன் மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டுமானால் தன்னுடைய சொந்த மொழியிலும், பண்பாட்டிலும் அவனுக்குத் தேர்ச்சி இருக்க வேண்டும் என்று மிஷனரிகள் உறுதியாக நம்பினர். அக்காலத்தில் சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்க அனுமதியிருக்கவில்லை. ஆனால், அதை முக்கிய பாடமாக தம் கல்லூரியில் அனைவரும் படிக்க மிஷனரிகள் வசதி ஏற்படுத்தினர்.
இறையியல் கல்வி கற்பவர்களும் இதே கல்லூரியிலேயே அதைப் பெற வேண்டியிருந்தது. அவர்களும் மற்றவர்களோடு இணைந்து ஏனைய பாடங்களையும் கற்க வேண்டியிருந்தது. அத்தோடு, இறையியல் போதனை பெறுபவர்கள் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டியதாக அப்போதனைகள் அமைந்திருந்தன. கிரேக்க மொழி தெரியாமல் பவுலோ, லூக்காவோ, அப்பொல்லோவோ இருக்கவில்லை. இலத்தீன், கிரேக்க, எபிரெய மொழிகள் தெரியாமல் சீர்திருத்தவாதிகள் இருக்கவில்லை. ஆகவே, மற்றவர்கள் குறைகூறாதபடி அம்மொழிகளில் இறையியல் மாணவர்கள் பாண்டித்தியம் அடைந்திருக்க வேண்டும் என்று மிஷனரிகள் எதிர்பார்த்தனர்.
இக்கல்லூரிக்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட போது கேரிக்கு 60 வயதாயிருந்தது. மிக உயர்ந்த வேதப்பூர்வமான நோக்கங்களைக் கொண்டிருந்த கேரியின் கல்லூரி எங்கே? இன்று இந்தியாவில் இறையியல் கல்லூரிகள் என்ற பெயரில் உலவும் இறை போதனையையே சாகடித்துக் கொண்டிருக்கும் கல்லூரிகள் எங்கே? கேரி உருவாக்கிய செராம்பூர் கல்லூரிகூட இன்று வேதப்பூர்வமான இறைபோதனையை அளிக்காமல் வேதபோதனை என்ற பெயரில் பிசாசின் போதனைகளை அளித்து வருகின்றது. கேரியின் உயர்ந்த நோக்கங்களையும், உறுதியையும், காலத்துக்கேற்ற கொள்கைகளையும் கொண்ட போதகர்கள் இந்தியாவில் இனி என்று தோன்றுவார்களோ?
1 கொரிந்தியர் 12-14
- ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய விளக்கம் -
இதுவரை வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளைக் கொண்டு முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டு பூரணத்துவம் அடையப் போகிறது என்பதையும், அப்போது வெளிப்படுத்தலோடு தொடர்புடைய வரங்கள் இல்லாமல் போய்விடும் என்பதையும் பார்த்தோம். “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” (13:10) என்று பவுல் கூறும்போது அங்கே “நிறைவானது” என்பது வேதமே என்றும் இதுவே ஏற்றுக்கொள்ளக் கூடிய வேதபூர்வமான விளக்கம் என்றும் விளக்கினோம். இவ்விளக்கத்தின்படி இன்று சபைகளில் தீர்க்கதரிசனம் சொல்ல முயல்வதும், தனி மனிதன் அற்புதங்கள் செய்ய முயல்வதும், அந்நியபாஷை பேச முயல்வதும் வெறும் கேலிக்கூத்தே. வேதத்தைக் கவனமாகப் படித்தால் இவற்றிற்கு இன்று இடமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நிறைவானதும், நமக்கு கர்த்தரை வெளிப்படுத்துவதும், நாம் கிறிஸ்தவ வாழ்க்கையை இவ்வுலகில் முறையாக வாழத் துணைபுரிவதும், தேவ சித்தத்தை சுத்தமாக வெளிப்படுத்துவதும் வேதம் மட்டுமே. அதைவிட்டுவிட்டு வெறும் உணர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்டு கண்ணால் காண்பதெல்லாம் கர்த்தரின் செயல் என்று அலைபவர்களுக்கு வேதத்தின் அருமையும், கிறிஸ்தவத்தின் மகிமையும் புரியாது.
நான் குழந்தையாய் இருந்தபோது . . .
தான் இதுவரை விளக்கிய உண்மையை சிலர் புரிந்துகொள்ளாமல் போகலாம் என்பது பவுலுக்கு அன்றே தெரிந்திருந்தது. ஆகவே, அதனை மேலும் புரியும்படிச் செய்வதற்காக சில உதாரணங்களைப் பவுல் தருகிறார். அவற்றில் முதலாவது உதாரணத்தை 11வது வசனத்தில் பார்க்கிறோம். அதில், “நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போல சிந்தித்தேன்; புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்” என்று பவுல் கூறுகிறார்.
இந்த உதாரணம் பவுல் 10வது வசனத்தில் போதித்த உண்மையை விளக்குவதற்காகப் பயன்படுகிறது. அதாவது குழந்தையாய் இருக்கும்போது செய்கிற காரியங்கள் அனைத்தையும் நாம் வளரும்போது தொடர்ந்து பின்பற்றுவதில்லை. குழந்தைப் பருவத்திலேயே அவற்றை நாம் விட்டுவிடுகிறோம். குழந்தைத்தனமான காரியங்களை எவரும் தொடர்ந்து பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றுவது இயற்கைக்கே முரணானது. குழந்தை வளர்ந்து புருஷனாக மாறுகிறபோது புருஷனுக்குரிய தகைமைகளையே கொண்டிருக்கும். மனிதனாக வளர்ந்தபின் எவரும் தங்களுடைய குழந்தைத்தனமான சிந்தனைகளையும், செயல்களையும் ஒழித்துவிடுவார்கள். இங்கே தமிழ் வேதத்தில் “புருஷன்” என்று கூறப்படுவது மனிதனையே. “புருஷன்” என்ற வார்த்தை மனிதனைக் குறிக்கும் பழைய வடமொழி வார்த்தை.
இந்த உதாரணத்தின் மூலம் பவுல் விளக்குவது என்ன? முதலில் உதாரணங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது அவ்வுதாரணத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருள் கொடுக்க முயலக்கூடாது என்பது வேத விளக்க விதி. அவ்வுதாரணத்தின் கருப்பொருளைத்தான் நாம் புரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். வேதம் முழுமை பெறாமல் “பழைய ஏற்பாடு மட்டும்” இருந்தபோது நாம் கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ள நமக்கு தீர்க்கதரிசிகள், அற்புதங்கள், அந்நியபாஷைகள் என்பன தேவைப்பட்டன. அவற்றின் மூலம் கர்த்தர் நமக்கு தனது சித்தத்தை வெளிப்படுத்தி நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் துணை புரிந்தார். தீர்க்கதரிசனம். அந்நியபாஷை, அற்புதங்கள் என்பன தேவன் இருக்கிறார் என்று நாம் தொடர்ந்து விசுவாசிக்கவும் அவருடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ளவுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், வேதம் நிறைவடைந்தபோது (முழுதாக எழுதி முடிக்கப்பட்ட பின்பு) தேவ சத்தியத்தை நாம் அறிந்துகொள்ளக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனம், அந்நியபாஷை, அற்புதங்கள் என்பனவற்றின் அவசியம் இல்லாமல் போய்விட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய வேதம் நாம் இவ்வுலகில் வாழும் காலத்தில் அறிந்துகொள்ள அவசியமான தேவ சித்தத்தை முழுமையாக வெளிப்படுத்துவதால் அதனை இதுவரை வெளிப்படுத்தி வந்த கருவிகளின் அவசியம் இல்லாமல் போய்விட்டது. இவ்வுண்மையையே இவ்வுதாரணம் நமக்கு விளக்குகிறது. தீர்க்கதரிசனத்தையும், அந்நியபாஷையையும் இன்று நாம் தொடர்ந்து நாடி ஓடினால் அது மனிதனாக வளர்ந்தபின் ஒருவன் குழந்தையைப் போல சிந்திக்கவும், பேசவும் ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும். இதையே பவுல் இங்கு விளக்குகிறார்.
இப்போது நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்
முதல் உதாரணத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் பவுல் இன்னுமொரு உதாரணத்தையும் தருகிறார். இரண்டாவது உதாரணத்தை 12வது வசனத்தில் பார்க்கலாம். “இப்பொழுது கண்ணாடியிலே நாம் நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்.” இதன் மூலம் பவுல் விளக்குவது என்ன? பவுல் இதை எழுதிய காலத்தில் வேதம் முழுமையாக எழுத்தில் இருக்கவில்லை. பழைய ஏற்பாடு மட்டுமே எழுத்தில் இருந்தது. புதிய ஏற்பாடு அப்போதுதான் கொடுக்கப் பட்டு வந்தது. ஆகவே, கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளத் தேவையான அனைத்து சத்தியங்களும் அவர்கள் கரத்தில் முழுமையாக இருக்கவில்லை. இதை விளக்கத்தான் பவுல் இவ்வுதாரணத்தைப் பயன்படுத்துகிறார். அக்காலத்தில் கண்ணாடி நம் காலத்துக் கண்ணாடியைப் போலத் தெளிவாக இல்லாமல் மங்கலாக, நிழலாட்டமான தோற்றத்தை மட்டுமே அளிக்கக்கூடியதாக, கண்ணாடியின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கண்ணாடி இன்று வளர்ச்சி பெற்று பூரணத்துவத்தை எட்டிவிட்டது. அக்காலத்து மக்கள் கண்ணாடியில் தங்களைப் பார்க்கும்போது தங்களுடைய மங்கலான தோற்றத்தைத்தான் பார்க்க முடிந்தது. இன்று போல் தெளிவாகக் கண்ணாடியில் தங்களை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதேபோல் அன்று கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை மட்டுமே வைத்திருந்ததால் அவர்களால் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கிற, தெரிந்துகொள்ள முடிகிற அனைத்தையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அநேக சத்தியங்கள் நிழலாட்டமாக மட்டுமே தெரிந்தன. மங்கலான கண்ணாடியில் முகம் பார்க்கும்போது நமது தோற்றம் எப்படித் தெரியுமோ அப்படியே அவர்களுக்கு பல சத்தியங்களில் நிழலாட்டமான அறிவு மட்டும் இருந்தது.
அப்போது முகமுகமாய்ப் பார்ப்போம்
தனது விளக்கத்தைத் தொடரும் பவுல் “அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன். அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” என்று கூறுகிறார். பெந்தகொஸ்தே இயக்கத்தார் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்நிய பாஷையும், அற்புதங்களும் நாம் பரலோகம் போகும்வரையும் தொடர்ந்திருக்கும் என்று தவறாகப் போதிப்பார்கள். இவர்கள் “முகமுகமாய்ப் பார்ப்போம்” என்பது இயேசுவை நாம் பரலோகத்தில் முகமுகமாய் பார்ப்பதைக் குறிக்கிறது என்பார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் 10வது வசனத்தில் நாம் பார்த்த “நிறைவானது” என்ற வார்த்தை பரலோகத்தைக் குறிப்பதாகும். ஆனால், அது பரலோகத்தைக் குறிக்கவில்லை, வேதம் முழுமை பெறுவதைக் குறிக்கிறது என்று ஏற்கனவே விளக்கமாகப் பார்த்துவிட்டோம்.
பவுல் கூறும் “முகமுகமாய்ப் பார்ப்போம்” என்ற வார்த்தைகளை நேரடியாக ஒருவரை ஒருவர் சந்திப்பது என்ற பொருளிலும் பலர் விளங்கிக்கொள்கின்றனர். ஆனால், வேதம் இவ்வார்த்தைகளை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறது என்று அவர்கள் சிந்தித்துப் படிப்பதில்லை. இங்கே பவுல் பயன்படுத்தும் இவ்வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் காணப்படும் முக்கியமான வார்த்தைகள். பழைய ஏற்பாட்டில் இவை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அதேவிதமாகத்தான் நாம் அவற்றை புதிய ஏற்பாட்டில் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தைப் படித்துப் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்த வேண்டிய வேத விளக்க விதிகளில் இதுவும் ஒன்று. பழைய ஏற்பாட்டில் இப்பதங்களை யாத்திராகமம் 33:11 வசனத்தில் பார்க்கலாம். ஒரு நண்பனோடு பேசுவது போல் கர்த்தர் மோசேயுடன் முகமுகமாய்ப் பேசினார் என்று இப்பகுதி கூறுகிறது. இங்கே நாம் பார்க்கும் “முகமுகமாய்” என்ற வார்த்தைகளை நாம் நேரடியாகப் பார்ப்பது என்ற பொருளில் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், கர்த்தரை ஒருவரும் நேரடியாகப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தவர்கள் உயிரோடு இருக்க முடியாது. கர்த்தரே இதை யாத்திராகமம் 33:20வது வசனத்தில் மோசேக்கு கூறுகிறார். கர்த்தர் மோசேக்கு தனது மகிமையை ஒருவிதத்தில் காட்டினாலும் தனது முகத்தை அவன் பார்க்கும்படிச் செய்யவில்லை. ஆகவே, இப்பகுதியின் அடிப்படையில் “முகமுகமாய்” என்ற வார்த்தையை ஒருவரின் முகத்தை நேரில் பார்ப்பது என்று எடுத்துக்கொள்வது தவறு.
இவ்வார்த்தை ஒருவரின் முகத்தைப் பார்ப்பது என்ற அர்த்தத்தைக் கொண்டிராவிட்டால் இது வேறு எதைக் குறிக்கிறது என்று பார்க்கவேண்டும். இதற்கு பதில் எண்ணாகமம் 12:5-9 வசனங்களில் கிடைக்கின்றது. இங்கே கர்த்தர் தன் சேவகனான மோசேயுடன் முகமுகமாய்ப் பேசுவதாகக் கூறுகிறார் (6-8). இப்பகுதியின்படி இவ்வார்த்தைக்கு நேரடியாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி பேசுவது என்பதுதான் பொருள்; நேரடியாக ஒருவரைப் பார்ப்பது என்பது பொருளல்ல. மோசேக்கும் கர்த்தருக்கும் நெருக்கமான உறவிருந்தது. மோசேயுடன் கர்த்தர் ஒளிவு மறைவில்லாமல், புதிர்போடாமல், தெளிவாக, விளக்கமாக எப்போதும் பேசினார். அத்தோடு, கர்த்தர் மோசேயுடன் இவ்வுலகத்தில்தான் அப்படித் தெளிவாகப் பேசினார், பரலோகத்தில் அல்ல. ஆகவே, “முகமுகமாய்” என்ற வார்த்தை தங்குதடையற்ற தெளிவான கருத்துப் பரிமாறல்களைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். அந்த விதத்திலேயே இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம் 33:11; எண்ணாகமம் 12:59; உபாகமம் 34:10 ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வார்த்தையையே பவுல் இங்கே கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் பயன்படுத்துகிறார். இவ்வார்த்தை இங்கும் பழைய ஏற்பாட்டில் நாம் பார்த்த அதே கருத்துடனேயே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு மாறான கருத்தைக் கொடுக்கப் பார்ப்பது வேத விளக்க விதிகளுக்கு முரணானது. ஆகவே, இதன் மூலம் பவுல் போதிப்பது என்ன? பூரணமானதாக வேதம் நமக்குக் கிடைக்கும்போது நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நன்றாகத் தெரியவரும் என்று பவுல் கூறுகிறார். தொடர்ந்து 12வது வசனத்தில் பவுல் “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” என்று கூறுகிறார். இங்கே பவுல் புதிதாக இன்னுமொரு உதாரணத்தைத் தரவில்லை. மாறாக, இவ்வார்த்தைகளை நாம் ஏற்கனவே பவுல் 12வது வசனத்தில் கூறியுள்ள உதாரணத்துடன் தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். இப்போது நாம் கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்ப்பதால் நமக்கு குறைந்த அறிவே இருக்கிறது. முகமுகமாய்த், தெளிவாய் அறிந்துகொள்கிற காலம் வேதம் பூரணமாய்க் கிடைக்கும்போது வரும். அப்போது நாம் எல்லாவற்றையும் தெளிவாக, விளக்கமாக தங்குதடையின்றிப் புரிந்துகொள்வோம். வேதமே இத்தகைய அறிவையும், கர்த்தரோடு நெருக்கமான, தடையற்ற நல்லுறவை வைத்துக்கொள்ளக்கூடிய ஆசீர்வாதத்தையும் அளிக்கிறது.