திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2002 -ம் ஆண்டு முதல் இதழ்

1. அன்புக்குரிய வாசகர்களே!

2. கிறிஸ்தவ ஒற்றுமை

3. ஆவிக்குரிய ஐக்கியத்தை ஏனைய சபைகளோடு எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

4. வேதவசனத்தின் வல்லமை

5. ஆதி சபை சந்தித்த கள்ளப் போதனைகள்

6. அமெரிக்கா மீது தாக்குதல்!

7. தமிழ் கிறிஸ்தவ உலகில் புதிய-சுவிசேஷ இயக்கம்

8. 1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 4)

அன்புக்குரிய வாசகர்களே!

அன்புக்குரிய வாசகர்களே! ஏழு வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையின் அமைப்பை நாம் மாற்றி அமைத்திருக்கிறோம். பத்திரிகையை சுலபமாகக் கையில் கொண்டு போவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவும், பத்திரிகை போகும் வழியில் உருமாற்றமடையாமல் எல்லா நாடுகளையும் போய்ச்சேர வேண்டுமென்பதற்காகவும் இந்தமாற்றத்தைச் செய்திருக்கிறோம். இப்புதிய வடிவம் பலவிதங்களில் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்புகிறோம். பத்திரிகையின் உருவத்தில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர அதன் உள்ளடக்கங்களிலும், சத்தியத்திலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சீர்திருத்த போதனைகளை கர்த்தரின் மகிமைக்காக திருமறைத்தீபம் பலரும் அறிய வெளிப்படுத்தி வரும்.

கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றி அநேகர் பேசுகிறார்கள். இதைப்பற்றி வேதமும் போதிப்பதால் அதுபற்றி நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. சத்தியத்தை மனச்சாட்சியின்றி விற்பவர்களோடும், மதில்மேல் பூனைபோல் இருந்து எதற்கும் ஆமா சாமி போடுபவர்களோடும், சமய சமரசக்கோட்பாட்டைப் பின்பற்றி யாரோடு சேர்வது, சேரக்கூடாது என்ற சிந்தனையே இல்லாமல் செயல்படுபவர்களோடும் நாம் இணைந்து உழைக்க முடியுமா? உழைப்பதுதான் நியாயமா? இவ்விதழில் அதை ஆழமாக, வேதபூர்வமாக ஆராய்ந்திருக்கிறோம். அத்தோடு யாரோடு இணைந்து உழைக்க வேண்டும் என்று வேதம் காட்டும் வழியையும் விளக்கியிருக்கிறோம். அது உங்களை சிந்திக்க வைக்கட்டும்.

வேத வசனத்தை இன்று பலர் புதிர் போலப் பயன்படுத்துகிறார்கள். அதன் மெய்யான வல்லமை பற்றியும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் இவ்விதழில் விளக்கியிருக்கிறோம். புதிய-சுவிசேஷக் கோட்பாடு இன்று சத்தியம் இருக்க வேண்டிய இடத்தை அநேக சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் பிடித்திருக்கிறது. அதை அடையாளங்கண்டு கொள்ளாவிட்டால் “வைரஸைப்” போல நம்மையும் தின்று தீர்த்துவிடும். அதுபற்றியும் எழுதியிருக்கிறோம். படைப்பைப்பற்றி பலருக்கு டார்வின் சொன்னதுதான் தெரிகிறது. வேதம் சொல்வதை இவ்விதழில் வாசிக்கலாம். வழமையான ஆக்கங்களும் தொடர்கின்றன. பத்திரிகையின் புதிய தோற்றமும், ஆக்கங்களும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-ஆசிரியர்.

கிறிஸ்தவ ஒற்றுமை

கிறிஸ்தவர்கள் ஐக்கியத்தை வளர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், கிறிஸ்தவ சபைகளும், நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் பேச்சை தமிழ் கிறிஸ்தவ உலகில் இன்று கேட்க முடிகின்றது. பல எழுப்புதல் கூட்ட மேடைகளிலும் ரோமன் கத்தோலிக்க குருக்கள், கெரிஸ்மெட்டிக் தலைவர்கள், பாரம்பரிய சபைகளைச் சேர்ந்த தாராளவாதக் கொள்கைகளைப் (Liberalism) பின்பற்றும் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து கிறிஸ்தவ ஒற்றுமை இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு சொல்லி வருகிறார்கள். இத்தலைவர்களோடும், இவர்கள் வழிநடத்தும் சபைகளோடும், சுயாதீன நிறுவனங்களோடும் (Para-Church organizations) எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பாது செயல்பட்டு வரும் சபைகளை சிலர் ஒற்றுமைக்கு விரோதிகள் என்ற முறையில் பார்த்தாலும் அதில் வியப்பில்லை.

இதனால் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் பற்றி வேதம் என்ன ‍சொல்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் வேதத்திற்கு விரோதமாக நடப்பவர்களோடு ஒரே மேடையில் சீர்திருத்த போதகர்கள் அமரலாமா? அத்தகைய கூட்டங்களை சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஆதரிக்கலாமா? தமிழகத்தில் தினகரனும், பாதர் பேர்க்மனும், ரோமன் கத்தோலிக்க தலைவர்களும், சாம் ஜெபத்துரையும், தலித் தளபதிகளும் சரிசமமாக அமர்ந்து நடத்தும் கூட்டங்களில் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன வேலை? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதிலளித்துத்தான் ஆக வேண்டும். சத்தியத்திற்கு பல கோணங்கள் உள்ளதா? சத்தியத்தை விற்று சமய சமரசப் பணியில் ஈடுபடலாமா? என்ற மனதைத்துளைக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றி சபை நடத்தி வருபவர்கள் வேதபூர்வமாக யாரோடு சேர்ந்து ‍உழைக்க வேண்டும் என்பதையும் வேதபூர்வமாக ஆராய வேண்டும்.

யோவன் 17ம் கிறிஸ்தவ ஒற்றுமையும்

அநேகர் கிறிஸ்தவ ஒற்றுமையைக் குறித்துப் பேசும்போது யோவான் 17ஆம் அதிகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். யோவான் 17இல் இயேசு கிறிஸ்தவ ஒற்றுமைக்காக பிதாவிடத்தில் ஜெபிக்கிறார். ஆனால், அங்கே கிறிஸ்து ஜெபிக்கும் ஒற்றுமை அவருடைய சரீரமாகிய சபையில் விண்ணுலகில் இருக்கும் ஒற்றுமையே தவிர இவ்வுலகில் இருக்கக்கூடிய ஒற்றுமை அல்ல. கிறிஸ்துவின் சரீரத்தில் பரலோகத்தில் இந்த ஒற்றுமை பூரணமாகக் காணப்படுகின்றது. அவ்வொற்றுமையை எவராலும் குழைக்க முடியாது. அவ்வொற்றுமை பாவத்தால் பாதிக்கப்படாது. ஏனெனில், பரலோகத்தில் பாவம் இல்லை. இயேசுவும், பிதாவும் ஒன்றாயிருப்பது போல் விசுவாசிகள் ஒன்றாயிருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார் (17:21-23). இயேசுவின் இவ்வார்த்தைகள் பூரணமான கிறிஸ்தவ ஒற்றுமையை விளக்குகின்றன. இத்தகைய பூரணமான கிறிஸ்தவ ஒற்றுமை இவ்வுலகில் இருக்கும் என்று வேதத்தில் நாம் எங்கும் வாசிப்பதில்லை. பாவம் இவ்வுலகில் இருக்கும்வரை கிறிஸ்தவர்களை பாவம் பாதிக்காமல் இருக்காது. அவர்களுடைய உறவு உலகத்தாரின் உறவைவிட மேலானதாக இருந்தபோதும் இயேசு ஜெபித்துக் கேட்டுக்கொண்டதைப்போல் பூரணமாக இருக்க முடியாது. அப்படியானால் இயேசுவின் ஜெபம் நிறைவேறியதா? அவருடைய ஜெபத்தை பிதா கேட்டு ஆசீர்வதித்தாரா? இயேசுவின் ஜெபம் நிச்சயமாக பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டது. எங்கு ஆசீர்வதிக்கப்பட்டது? அது பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது. பரலோகத்திற்கு மெய்யான விசுவாசிகள் மட்டுமே போகமுடியும். அங்கே மெய்யான விசுவாசிகளின் மத்தியில் பூரணமான ஒற்றுமை காணப்படுகின்றது. இது புரியாமல் இயேசுவின் வார்த்தைகளை சமயசமரச நோக்கம் கொண்டவர்கள் (Ecumenist) தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

யோவான் 17 இல் இயேசு வேண்டிக்கொண்ட ஜெபம் பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது. விசுவாசிகளிடம் அத்தகைய ஒற்றுமை பரலோகத்தில் நிச்சயம் காணப்படுகின்றது. அவ்வொற்றுமை இவ்வுலகத்தில் விசுவாசிகளிடம் இருக்க (அவர்கள் பாவத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோதும்கூட) அவர்களால் முடிந்ததை செய்ய முடிகிறது. ஆனால், இயேசு ஜெபித்த பூரணமான ஒற்றுமை இவ்வுலகத்தில் விசுவாசிகளிடம் ஒருபோதும் இருப்பதற்கு இடமில்லை. அதை நாடி உழைப்பதிலும் எந்தப்பயனுமில்லை. சத்தியத்தை பூரணமாக விசுவாசித்து, பாவமே இல்லாமலிருந்தால் மட்டுமே விசுவாசிகள் இயேசு ஜெபித்த ஒற்றுமையை இந்த உலகத்தில் அனுபவிக்க முடியும். ஆனால், பாவத்தால் கறைபடிந்த இந்த உலகத்தில் அவர்களால் அப்படி வாழ முடியாது.

வேதம் போதிக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை

நாம் மேலே கூறியவற்றை வைத்து இவ்வுலகில் கிறிஸ்தவர்களிடம் இருக்க வேண்டிய கிறிஸ்தவ ஒற்றுமைப்பற்றி வேதம் எதையும் போதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நிச்சயம் யோவான் 17 அத்தகைய ஒற்றுமையையும் மறைமுகமாக வலியுறுத்துகிறது. யோவான் 17 இன் அடிப்படையில் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் வேதபூர்வமான ஒற்றுமையை, அது பூரணமானதாக இல்லாவிட்டாலும்கூட அனுபவிக்க முடியும். அத்தகைய ஒற்றுமைப்பற்றி எபேசியர் 4 ஆம் அதிகாரத்தில் பவுல் போதிப்பதைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தில் பவுல் எந்தவித சந்தேகமுமில்லாமல் கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றி விளக்குகிறார். இப்பகுதியில் பவுல் போதிக்கும் முதலாவது, உண்மை என்னவெனில், கிறிஸ்தவ ஒற்றுமை ஏற்கனவே விசுவாசிகளிடம் இருக்கிறது என்பதுதான். 3ஆம் வசனத்தில் பவுல் ஆவியின் ஒற்றுமையைக் காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். ஆவியின் ஒற்றுமையை உருவாக்குங்கள் என்று அவர் சொல்லவில்லை. கிறிஸ்தவ ஒற்றுமை ஏற்கனவே இயேசு கிறிஸ்துவால் ஒருவாக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து அவருடைய மரணத்தின் பலன்களை அனுபவித்தவர்கள் கிறிஸ்துவின் அன்பை ருசி பார்த்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏற்கனவே ஒற்றுமை நிலவுகிறது. அதைக் கிறிஸ்து தனது பரிசுத்த இரத்தத்தை சிந்தி ஏற்படுத்தியிருக்கிறார். கிறிஸ்தவ ஒற்றுமை மனிதனால் உருவாக்கக் கூடியதல்ல. அதைத் தேவனால், அவரது ஆவியால் மட்டுமே உருவாக்க முடியும். இயேசுவை மெய்யாகவே விசுவாசிக்கிறவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.

இரண்டாவதாக இப்பகுதியில் பவுல் போதிக்கும் உண்மை, விசுவாசிகள் கிறிஸ்தவ ஒற்றுமையை ஜாக்கிரதையாக காத்துக் கொள்ள வேண்டுமென்பதாகும் (3). இயேசு உருவாக்கியிருக்கும் ஒற்றுமையை விசுவாசிகள் மிகக் கவனத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் மேலும் விளக்கமாகப் பார்ப்பதற்கும் முன் இதைப் பவுல் எபேசிய சபைக்கு எழுதினார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை எழுதும்போது பவுல் உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களையும், எல்லா சபைகளையும் இணைத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. எபேசிய சபையில் இருந்த விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைதான் பவுல் தன் மனதில் கொண்டிருந்தார்.

சபையில் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டுமானானல் அதற்கு மூன்று காரியங்கள் சபை மக்களிடம் காணப்பட வேண்டும் என்று பவுல் விளக்குகிறார். இம்மூன்று காரியங்களும் இல்லாத இடத்தில் ஒற்றுமைக்கு இடமில்லை. 5ஆம் வசனம் இம்மூன்று காரியங்களையும் விளக்குகிறது. முதலாவது சபை மக்கள் ஒரே கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் ஒருவரே, அவர் யார்ஈ எப்படி இருப்பார் என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. பத்துக் கட்டளைகளின் முதல் மூன்று கட்டளைகளும் கர்த்தர் யார் என்பதை விளக்குகின்றன. அவரை வேறு மதங்களின் மூலம் இனங்கண்டுகொள்ள முடியாது. வேற்று மதங்களில் அவரைக் காணமுடியாது. வேதம் மட்டு‍மே கர்த்தர் யார் என்று சொல்கிறது. வேதம் போதிக்கும் நமது கர்த்தர் இறை ஆண்மை உள்ளவர். உலகத்தோற்றத்திற்கு முன்பாக தான் கொண்டிருந்த மீட்பின் திட்டங்களை நிறைவேற்றத் தனது ஒரே குமாரனைக் கர்த்தர் இவ்வுலகிற்கு அனுப்பி தனது மக்களின் மீட்‍பை நிறைவேற்றினார் என்று வேதம் போதிக்கிறது. கர்த்தரின் குமாரனான இயேசு தானும் பிதாவும் ஒன்றே என்று வேதத்தில் போதிக்கிறார். பிதாவும், குமாரனும் திரித்துவத்தின் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அதன் மூன்றாம் அங்கத்தவராக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். இம்மூவரும் ஒரே தேவன் என்று வேதம் போதிக்கிறது. நமது தேவனை நாம் கல்லிலும், முள்ளிலும் காண முடியாது. ரோமன் கத்தோலிக்க மதமும், புற மதங்களும் நமது தேவனைப் போதிப்பதில்லை. அம்மதப்போதனைகளுக்கும் நமது தேவனுக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை. கர்த்தர் ஒருவரே தேவன். அவருடைய குமாரனான இயேசுவின் கிருபையால் விசுவாசத்தின் மூலம் மட்டுமே எவரும் இரட்சிப்பை அடைய முடியும். கிரியைகளும், உலக ஞானமும் ஒருவருக்கும் மீட்பை அளிக்க முடியாது, பரலோக வாழ்வைக் கொடுக்க முடியாது. இந்த சத்தியங்களை சபை மக்கள் விசுவாசித்தால் மட்டுமே சபையில் ஒற்றுமை இருக்க முடியும். கர்த்தரையும் இயேசுவையும் பற்றி வேதம் போதிக்கும் இந்த சத்தியங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படைச் சத்தியங்கள். கிறிஸ்துவின் மூலம் மீட்பை அடையாதவர்களும், இந்த சத்தியங்களை விசுவாசிக்காதவர்களும் மெய்யான விசுவாசிகளாக இருக்க முடியாது.

இரண்டாவதாக, ஞானஸ்நானம் ஒற்றுமைக்கு அவசியம் என்று பவுல் இப்பகுதியில் போதிக்கிறார் (5). இங்கே பவுல் முழுக்கு ஞானஸ்நானத்தை வலியுறுத்தாவிட்டாலும் அதையும் இவ்வசனம் அடையாளம் காட்டாமலில்லை. எந்த ஞானஸ்நானத்தை இவ்வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம். கிறிஸ்துவினால் பரிசுத்தமாக்கப்படும் ஞானஸ்நானத்தையே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். யோவான் 17:19 “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்கு நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” என்று இயேசு தனது கல்வாரி மரணத்தைப்பற்றி பேசுகிறார். இயேசு தனது மரணத்தின் மூலம் ஏற்படும்மிய மீட்பின் அடிப்படையில் அவரை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள். சத்தியத்தால் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள் (யோவான் 17:17) இவர்களே பரிசுத்த ஆவியையும் இரட்சிப்பின்போது அடைந்தவர்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசி அடையும் மறுபிறப்பாகிய அனுபவத்தையே பவுல் இங்கே ஞானஸ்நானம் என்று குறிப்பிடுகிறார். இந்த ஞானஸ்நானமாகிய அனுபவத்தை அடையாதவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. இந்த அனுபவத்தையே முழுக்கு ஞானஸ்நானமும் விளக்குகிறது. அதனால்தான் முழுக்கு ஞானஸ்நானத்தைத் தவிர்த்த வேறு எந்த ஞானஸ்நானமுறையும் மறுபிறப்பாகிய அனுபவத்தை வேதபூர்வமாக விளக்க முடியாது.

பவுல் ஒற்றுமைக்கு அடிப்பபடையாக இன்னுமொரு அம்சத்தையும் 5ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார். அதுதான் ஒரே விசுவாசம் (ஒரே கர்த்தரும், ஒரே ஞானஸ்நானமும், ஒரே விசுவாசமும்). மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் இருக்க ஒரே கர்த்தரையும், ஒரே ஞானஸ்நானத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். அத்தோடு ஒரே விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். விசுவாசத்திற் பல கோணங்களில்லை. தத்துவத்திற்கு பல கோணங்களுண்டு. தத்துவம் நிலையான சத்தியத்தைப் போதிப்பதில்லை. அதைப் பல உருவங்களில் பார்க்கலாம். இந்துமப் போதனைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பல கோணங்களுண்டு. கிறிஸ்தவ வேதம் தத்துவமல்ல. அது நிலையானது. அது ஒரே சத்தியத்தை உறுதியாக, தெளிவாகப் போதிக்கின்றது. அதற்குப் பல கோணங்களிருக்க முடியாது. அதற்கு நாம் நினைத்தவாறு பலவிதமான விளக்கங்களைக் கொடுக்க முடியாது. கர்த்தர் யார்? என்றும், கிறிஸ்துவின் மீட்பையும் வேதம் தெளிவாக விளக்குகின்றது. வேதத்தின் எந்தப் போதனைக்கும் இரண்டு அல்லது மூன்றுவிதமான விளக்கங்களை நாம் ஒருபோதும் கொடுக்க முடியாது. இதைத்தான் பவுல் ஒரே விசுவாசம் என்று, இங்கே குறிப்பிடுகிறார். வேதத்தை, வேதம் போதிக்கும் முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாராளவாதக் கோட்பாடும் (Liberalism), சமய சமரசக் கோட்பாடும் (Ecumenism), புதிய சுவிசேஷக் கோட்பாடும் (Neo-Evangelicalism) வேதம் ஒரே சத்தியத்தைப் போதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போதனைகள் வேதத்தின் உறுதியான, நிலையான போதனைகளுக்கு பலவிதங்களில் விளக்கங்கொடுக்கவோ, அவற்றை நிராகரிக்கவோ முயல்கின்றன. இத்தகைய “இஸங்களின்” ஆபத்துக்களிலிருந்து நம்மையும் சபையையும் பாதுகாப்பதற்குத்தான் நமது சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியோர்கள் நமக்கு விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதித் தந்தார்கள். அவை நிலையான, உறுதியான வேதபோதனைகளை அளிக்கின்றன. ஒரே விசுவாசத்தை சபை மக்கள் கொண்டிராவிட்டால் அங்கு ஒற்றுமை இருக்க முடியாது. பெலேஜியனிச, செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிச, கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே போதனைகளும், தாராளவாத சமய சமரசப் போதனைகளும் தங்கு தடையில்லாமல் பவனிவரும் சபைகளில் கிறிஸ்தவ ஒற்றுமை, ஐக்கியம் என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. அதனால்தான் 14ஆம் வசனத்தில், “நாம் இனிக்குழந்தைகளாயிராமல் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல் . . . சத்தியத்தைக் கைக்கொண்டு நாம் வளர்கிறவர்களாயிருக்க வேண்டும்” என்று பவுல் சொன்னார். விசுவாசம் ஒன்றே! என்பதை பவுல் இதன் மூலம் ஆணித்தரமாக அ‍டித்துப் போதிக்கிறார்.

இப்பகுதியில் பவுலின் போதனையின்படி சபைகளில் கிறிஸ்தவ ஒற்றுமை இருக்க வேண்டுமானால் சபைகள் ஒரே கர்த்தரை விசுவாசித்து, ஒரே ஞானஸ்நானத்தைப் பெற்று, ஒரே விசுவாசத்தைக்கொண்டு அமைந்திருக்க வேண்டும். இவை இல்லாத இடத்தில் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இடமில்லை. இன்று வேத போதனைகளுக்கு இடம் கொடுக்காமல் அனுபவத்தின் அடிப்படையில் சேர்ந்திருக்கும் அநேக கூட்டங்களை வேதபூர்வமான திருச்சபைகளாகக் கொள்ள முடியாது. அக்கூட்டங்களில் சேர்ந்திருப்பவர்கள் மத்தியில் மெய்யான ஒற்றுமை இல்லை. தங்களுடைய சொந்த நலனுக்காகவும், சரீர சுகத்தையும், போலி அனுபவங்களையும் நாடி அவர்கள் போகிறார்களே தவிர சத்தியத்தின் மீது இருக்கும் ஆவலாலோ அல்லது கிறிஸ்துவின் மீட்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டதாலோ அல்ல. இதையே கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டங்களில் பார்க்கிறோம்.

கிறிஸ்தவ ஒற்றுமைக்கு சபைக்கூட்டு அவசியமா?

கிறிஸ்தவ ஒற்றுமை வளரவும், பாதுகாக்கப்படவும் சபைக்கூட்டு உதவும் என்று சிலர் நினைக்கின்றனர். சத்தியத்தின் அ‍டிப்படையில் ஏற்பாடாத எந்தக்கூட்டுத் உருப்படாது. இவ்வாறு தோன்றியதே World Council of Churches. இது சத்தியத்தின் அடிப்படையில் ஏற்படாத ஒரு போலித்தனமான கூட்டம். இன்று உலகெங்கும் Denominational சபைகளையும் பார்க்கிறோம். வேதத்தை எப்படிப்படித்துப் பார்த்தாலும் புதிய ஏற்பாட்டில் Denominationஐ நாம் பார்க்க முடியாது. ஒவ்வொரு சபையும் தனக்கென்று சபைத்தலைவர்களைக் கொண்டு சுயமாக இயங்கி சத்தியத்தின் அடிப்படையில் வளரும் ஏனைய சபைகளோடு முடிந்தவரையுல் தொடர்பேற்படுத்திக் கொண்டு இயங்கி வந்ததாகத்தான் புதிய ஏற்பாடு போதிக்கிறது. அச்சபைகள் தமது சபைகளுக்கு வெளியில் அதிகாரம் கொண்ட ஒரு குழுடிவ ஏற்படுத்தி அக்குழுவின் தலைமையில் இயங்கி வந்ததாக வேதத்தில் எங்குமே பார்க்க முடியாது. சபைக்கு வெளியில் உள்ள இக்குழுவின் அங்கத்தவர்களாயிருப்பவர்கள் சத்தியத்தை உதறிவிடும்போது எல்லா சபைகளும் பாதிக்கப்படுவதை வரலாறு தொடர்ந்து சந்தித்து வருகின்றது. இதனால்தான் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் Denomination சத்தியத்தைவிட்டு விலகிப்போனபோது ஜோர்ஜ் விட்பீல்ட் சபைக்கு வெளியில் கூட்டங்களில் சத்தியத்தைப் பிரசங்கிக்க நேரிட்டது. தான் இணைந்திருந்த பாப்திஸ்து அமைப்பு (Baptist Denomination) சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டதாலேயே ஸ்பர்ஜன் தனது சபையை அதிலிருந்து விலக்கிக்கொண்டார். தன் வாழ்நாளில் இறுதிவரை அவர் எந்த அமைப்போடும் சேரவில்லை. ஆங்கிலிக்கன் சபை இன்று மீள முடியாத அளவுக்கு மோசமடைந்திருக்கிறது. இதே போக்கில்தான் சீ. எஸ். ஐ சபைகள் தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் இயங்கி வருகின்றன. ஸ்ரீ லங்காவில் பாப்திஸ்து Denomination னும் இப்போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இன்று உலகெங்கும் காணப்படும் பல Denomination அமைப்பைக்கொண்ட சபைகளில் சத்தியத்திற்கு இடமில்லை. அவைகளால் நடத்தப்படும் இறையியல் கல்லூரிகளும் விஷத்தைக் கக்கிக் கொண்டிரு‍க்கின்றன. இச்சபை அமைப்பு முறை (Denomination) ஆரம்பத்தில் ஒற்றுமையை வளர்ப்பதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டெழுந்திருந்தபோதும் அதனால் அதைச் செய்ய முடியவில்லை.

போலியான ஒற்றுமை

கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் இன்று அநேக சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களும் (Para-church Organizations), சபைகளும் இணைந்து சுவிசேஷ கூட்டங்கள் நடத்துவதும், எழுப்புதல், உபவாசம் மற்றும் ஜெபக்கூட்டங்கள் நடத்துவதும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கின்றது. இவர்கள் எல்லோரும் ஒரே சத்தியத்தை விசுவாசிப்பதில்லை. அப்ப‍டியானால் அவர்கள் கூட்டுச் சேருவதற்கு காரணமென்ன? தாம் விசுவாசிக்கும் காரியங்கள் வேறுபட்டிருந்த போதும் சுவிசேஷத்தை எல்லோருக்கும் சொல்லும் காரியத்தில் நாம் கூட்டுச் சேருவதில் தப்பில்லை என்று இவர்கள் சொல்வார்கள். தாம் விசுவாசிக்கும் காரியங்களில் ஒற்றுமை இல்லாதபோது இவர்களால் எப்படி ஒரே சுவிசேஷத்தை இணைந்து போதிக்க முடியும் என்பது தெரியவில்லை. ரோமன் கத்தோலிக்க சபைத்தலைவர்களும், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே தலைவர்களும், சீ. எஸ். ஐ சபைத் தலைவர்களும், பாப்திஸ்து, லூத்தரன் சபைத்தலைவர்களும் ஒரே மேடையில் இருந்து சொல்லும் சுவிசேஷம் எப்படிப்பட்ட சுவிசேஷமாக இருக்கும்? சத்தியத்திற்கு வீசை என்ன விலை? என்று கேட்கக்கூடிய இச்சபைத்தலைவர்களால் வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை உள்ளது உள்ளபடியே போதிக்க முடியுமா? ஒரே சத்தியத்தைப் பின்பற்றி ஒரே ஆண்டவரை வழிபடாத இவர்களால் எப்படி சேர்ந்து ‍ஜெபிக்க முடியும்? இவர்கள் கூட்டும் கூட்டங்களால் எழுப்புதல் எழத்தான் முடியுமா? இத்தகைய கூட்டடையே சமய சமரச்கூட்டு (Ecumenism) என்று சொல்லுவார்கள். இதைச் சேர்ந்தவர்கள் எந்த சத்தியத்தையும் உறுதியாகப் பின்பற்றாததால் எவரோடு சேர்வதிலும் இவர்களுக்கு தயக்கமில்லாமல் இருக்கிறது. தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் இன்று பரவிக்காணப்படும் சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களும், இறையியல் கல்லூரிகள் அனைத்துமே சமய சமரசக் கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. சமயசமரசப் போக்கால் மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை ஒரு நாளும் உருவாக்க முடியாது.

மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கும் விதம்

மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்ப்பதெப்படி? இதற்கு நாம் வரலாற்றையோ, மற்றவர்கள் காட்டியுள்ள உதாரணங்களையோ பார்க்காமங்ல வேதம் போதிக்கும் உண்மையை அலசிப்பார்க்க முன்வருவோம். முதலில், கிறிஸ்தவ ஒற்றுமை வேதபூர்வமாக இருக்க சபைகள் ஒழுங்கானதாக இருக்க வேண்டும். சபைகள் வேதபூர்வமாக அமைந்து, இயங்கி சுவிசேஷ ஊழியத்தை செய்து, ஒழுங்குக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி நடக்கும்போது சபையில் கிறிஸ்தவ ஒற்றுமையைப்பாதுகாக்கவும், வளர்க்கவும் முடிகிறது. இங்கே நான் முக்கியமாக சீர்திருத்த போதனைகளில் ஆர்வம் காட்டி சபை நடத்தி வருகிறவர்களை மனிதல் வைத்தே இதை எழுதுகிறேன். சபைப்போதகர் சத்தியத்தில் வளரவும், பிரசங்கிக்கவும் தவறும்போது சபை மக்கள் கூடிய சீக்கரமே சத்தியத்தைத் தூக்கி எறிந்து விடுவார்கள். சத்தியம் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அடிப்படை சபை சத்தியத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும். சத்தியத்தைக் காக்க வேண்டும். இதில் தவறும் கூட்டத் சபையாக இருக்க முடியாது. இதனால்தான் இன்று விசுவாச அறிக்கையும், வினாவிடைப் போதனைகளும் சபைகளுக்குத் தேவைப்படுகின்றது. ஒரே சத்தியத்தை விசுவாசித்து, போதித்து வளராத சபைகள் கிறிஸ்தவ ஒற்றுமையை நினைத்தும் பார்க்க முடியாது. ஒரே சத்தியத்தைப் பின்பற்றும் போது சபையில் ஆடுகள் மட்டுமே இருக்கும். ஓநாய்கள் ஓடிவிடும். இன்று பல போதகர்கள் நெஞ்சில் திறமில்லாமல் ஆடுகளையும், ஓநாய்களையும் சபையில் சேர்த்து வளர்க்கப் பார்க்கிறார்கள். விரைவில் ஓநாய்கள் ஆடுகளைத் தின்று தீர்த்துவிடும் என்பது இவர்களுக்குப் புரியாமல் இருக்கின்றது. சத்தியத்தைப் பின்பற்றும்போது அங்கே பெருங்கூட்டம் இருக்காது. இது அநேக போதகர்களுக்கு பிரியமில்லாததொன்று. இவர்கள் கூட்டமில்லாவிட்டால் தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்று நினைக்கிறார்கள். அதனால் சபையாரைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்வதை மட்டுமே இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். நம் ஆண்டவரின் ஊழியத்தின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் தொகை மிகக்குறைவு. கூட்டம் சேர்ப்பதற்காக அலையும் ஓநாய்களுக்கும் சீர்திருத்தப் போதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. வேதபோதனையின்படி அமைந்த சபையாக இருந்து அங்கு மந்தைகள் குறைவானதாக இருந்தாலும், அது கர்த்தரின் கூட்டமாக சத்தியத்திலும், கிறிஸ்துவின் சமாதானத்திலும் வளரும் சபையாக இருக்கும்.

இரண்டாவதாக கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் வளர ஆத்துமாக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். எபேசியர் 4 இல் பவுல் கூறுவதைக் கவனியுங்கள். “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்” என்கிறார் பவுல். இயேசுவின் அன்பை அறிந்து சபை மக்கள் மேல் அன்பு வைக்காதவர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் தள்ளி நின்று பழகக் கூடாது. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் “எங்களுக்கு இடங்கொடுங்கள்” என்கிறார். இது மூல மொழியான கிரேக்கத்தில் “உங்கள் இருதயங்களை எங்களுக்குத் திறந்து வையுங்கள்” என்றிருக்கிறது. ஒளிவு, மறைவு இல்லாமல் உண்மையான அன்போடு என்னிடம் பழகுங்கள் என்கிறார் பவுல்.

மூன்றாவதாக, கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் இருக்க ஆத்துமாக்கள் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் பவுல் (எபேசியர் 4:15). காற்றால் அலையும் இலைகளைப்போல் போலிப் போதனைகளின் பின் அலையாமல் இயேசுவை நேசித்து சத்தியத்தை அன்போடு பின்பற்ற வேண்டும். சத்தியம் நாம் பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் பார்த்து இரசிப்பதற்காக இது கொடுக்கப்படவில்லை. பின்பற்ற முடியாத எதுவும் சத்தியமாக இருக்க முடியாது. சபை மக்கள் சத்தியத்தில் வளருபவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் எந்தளவுக்கு சத்தியத்தில் வளர்ந்திருக்கிறோம் என்று நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. சத்தியம் முறையாகப் போதிக்கப்படாத சபையில் நாம் இருக்கத் தேவையில்லை. வாராவாரம் வியாதிகளுக்கு ஜெபிப்பதாலும், சரீரத் தேவைகளுக்காக உபவாசம் எடுப்பதாலும் பரிசுத்த வாழ்க்கையில் வரை முடியாது. சத்தியம் வல்லமையோடு பிரசங்கிக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, கிறிஸ்தவ ஒற்றுமை சபையில் காணப்பட ஆத்துமாக்கள் பக்திவிருத்தியில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிறார் பவுல் (எபேசியர் 4:16). 15ஆம் வசனத்தில் பவுல் “சபை கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு எல்லாவற்றிலும் வளர்வதாயிருக்க வேண்டும்” என்கிறார். வளர்ச்சியடையாதது சபையாக இருக்க முடியாது. ஆனால், சபை எதில் வளர வேண்டும்? சிலர் அது எண்ணிக்கையில் வளர வேண்டும் என்று துடியாய் இருக்கிறார்கள். பவுல் இங்கு எண்ணிக்கையைப்பற்றியே கவலைப்படவில்லை. “எல்லாவற்றிலேயும் நாம் வளர வேண்டும்” என்று கூறும் பவுல், நாம் எதில் வளர வேண்டும் என்றும் இப்பகுதியில் விளக்குகிறார். சபை சத்தியத்தில் வள‍ை வேண்டும் (15) என்று ஏற்கனவே பார்த்தோம். சபை அன்பில் வளர வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம் (2). ஒருவருக்கொருவர் நாம் செய்யும் கிரியைகளில் வளர வேண்டும் என்றும் பார்த்தோம் (2, 16). அத்தோடு சபை பக்திவிருத்தியில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும் பவுல் சொல்கிறார் (16). ஆத்துமாக்கள் சத்தியத்தில் வளர்ந்து, சக ஆத்துமாக்களின் மேல் அன்பு செலுத்தி தங்களுக்கு கர்த்தர் அளித்துள்ள கிருபையின்படி தன் தன் அளவுக்குத் தக்கதாக கிரியை செய்து வளரும்போது பக்திவிருத்தியில் சபை வளர்கிறது என்று பவுல் சொல்கிறார். பக்திவிருத்தி என்பது தன் சம்பந்தப்பட்ட காரியம் என்றும் அதில் சக ஆத்துமாக்களுக்கு சம்பந்தமில்லை என்றும் தவறாக பலர் எண்ணி வருகிறார்கள். ஆகானின் வாழ்க்கையில் இருந்த பாவம் சக ஆத்துமாக்களைப் பாதித்தது பற்றி நாம் யோசுவாவில் வாசிக்கவில்லையா? ஆத்துமாக்கள் பரிசுத்த வாழ்க்கையை யாருக்கும் தெரியாமல் காட்டில் போய் வாழ வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. பலரறிய சபையில் பல ஆத்துமாக்களுக்கு மத்தியில் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று வேதம் சொல்கிறது. தனியொரு ஆத்துமா பரிசுத்தத்தில் வளரும்போது சக ஆத்துமாக்கள் அதனால் பலனடைகின்றன. ஒரு ஆத்துமா பரிசுத்தத்தில் குன்றும்போது சக ஆத்துமா அதனால் பாதிப்படைகின்றது. சபை கிறிஸ்தவ ஒற்றுமையில் சிறக்க ஆத்துமாக்கள் பரிசுத்த வாழ்க்கையில் வளர்கிறவர்களாயிருக்க வேண்டும். பாவத்தைக் கட்டிலுக்கு அ‍டியில் மறைத்து வாழ்பவர்களாயிருக்கக்கூடாது. பாவத்தை உடனுக்குடன் அழித்து பரிசுத்தத்தில் வளர்பவர்களாயிருக்க வேண்டும்.

இன்று அநேக இளைஞர்கள் இன்டர்நெட்டின் (Internet) அவலத்திற்கு தம்மை சுலபமாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். பாவத்தை செய்துவிட்டு என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். இன்டர்நெட் அநேக நன்மைகளைக் கொண்டுவந்துள்ளபோதும் விபச்சாரத்தையும், வேசித்தனத்தையும் வீட்டிற்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது. பலவீனமான கிறிஸ்தவ இறைஞர்களும், வாலிபப் பெண்களும் இன்டர்நெட் மையங்களுக்குப் போகாமலிருப்பது நல்லது. உங்கள் இருதயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதற்கு தேவையானதையெல்லாம் அம்மையங்களை நடத்துபவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இமேயிலைவிட (Email) நமது இருதயம் முக்கியமானது. இமெயில் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட முடியும். உலகம் தொடரத்தான் போகிறது. ஆனால், உன் இருதயத்தைக் கெடுத்துக் கொண்டு நீ பரலோகம் போக முடியாது நண்பனே!

பரிசுத்தமில்லாமல் இன்று அழிந்து கொண்டிருக்கும் போதகர்கள் அநேகர். ஜீம்மி சுவகர்ட், ஜிம் பேக்கர் போன்ற மாயமான்கள் செய்யக்கூடாத பாவத்தை செய்துவிட்டு இன்று மறுப‍டியும் ஊழியத்திற்கு வந்துவிடுகிறார்கள். கர்த்தர் மனந்திரும்புகிறவர்களை நிச்சயம் மன்னிக்கிறார். பெரும் பாவங்களைச் செய்தவர்கள் உண்மையில் மனந்திரும்பினால் அவர்கள் அதில் மீண்டும் விழுந்துவிடாமல் இருக்க சபை துணை செய்ய வேண்டும். அத்தகையோர் சபைக்கட்டுப்பாட்டை ஏற்று போதகர்களின் துணையைப் பெற்றுத் திருந்தி வாழ வேண்டும். ஆனால், வேசித்தனத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்த ஒரு ஊழியக்காரன் மறுபடியும் ஊழியத்திற்கு வருவது அடுக்காது. அவன் திருந்திவிட்டான் என்பதால் தொடர்ந்து ஊழியம் செய்யலாம் என்பது வேதம் போதிக்கும் உண்மையல்ல. திருடன் திருந்தி விட்டான் என்பதால் அவனுக்கு யாராவது பேங்க் ‍மெனேஜர்‍வேலை கொடுப்பார்களா? நெஞ்சில் ஈரமில்லாவர்கள் மட்டுமே இன்று மாம்ச தைரியத்தோடு மறுபடியும் பிரசங்க மேடைக்கு வருவார்கள். இம்மாதிரியான மனிதர்களுக்கு பிரசங்க மேடையைத் திறந்துவிடும் சபைகள் சாத்தானின் குகைகளாகத்தான் இருக்க முடியும். அத்தகைய சபைகளில் நாம் ஒழுங்கு நடவடிக்கையை ஒருபோதும் பார்க்க முடியாது. பரிசுத்த வாழ்க்கையை தேவ பயத்தோடு வாழ முடியாத கூட்டத்தில் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு இடமில்லை. பரிசுத்தத்திற்கு இடம் கொடுக்காத மனிதர்களோடு நாம் கிறிஸ்தவ ஒற்றுமையை ஒருக்காலும் அனுபவிக்க முடியாது.

சபைக்கு வெளியில் கிறிஸ்தவ ஒற்றுமை

இருவரை சபைக்குள் இருக்க வேண்டிய கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றிப் பார்த்தோம். கிறிஸ்தவ ஒற்றுமையை கிறிஸ்துவே ஏற்படுத்தயிருக்கிறார். அதை வேதபோதனைகளின்படி வளர்க்க வேண்டியதே நமது கடமை என்று அறிந்து கொண்டோம். இனி நமது சபைக்கு வெளியில் உள்ள ஏனைய சபைகளோடு இவ்வொற்றுமையை நாம் எப்படி அனுபவிப்பது என்று பார்ப்போம்.

சபைக்குள் கிறிஸ்தவ ஒற்றுமையிருக்க எந்த அடிப்படை அம்சங்களை பவுல் எபேசியர் 4 இன் மூலம் நம்முன் வைத்தாரோ அவற்றின் அ‍டிப்படையில்தான் நாம் சபைக்கு வெளியில் உள்ளவர்களோடும் உறவேற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறான உறவு நமது ஆத்துமாவுக்கு தீங்கிழைக்கும். இதற்காக எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்த்து தள்ளி வைத்துவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கண் மூடித்தனமாக எல்லோரோடும் ஐக்கியத்தில் வருவதையே வேதம் கண்டிக்கிறது. முக்கியமாக சபைப்போதகர்கள் தவறான கூட்டத்தோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளக்கூடாது. பல சபைப்போதகர்கள் எவரையும் தங்களுடைய பிரசங்க மேடையில் பேச விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து எந்த மனிதனையும் இவர்கள் சபை மேடையை அலங்கரிக்கவிடுவார்கள். இது சபையின் ஆத்மீக அழிவுக்குத்தான் வழி வகுக்கும். பிரசங்க மேடை தேடி அலைந்து கொண்டிருக்கும் அநேக சுய ஊழியம் நடத்தும் பச்சோந்திகளை நாம் இனங்கண்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரே கர்த்தரான நம் ஆண்டவரையும், கிறிஸ்துவின் மீட்பின் செயல்களிலும் நம்பிக்கையில்லாதவர்களுடன் நாம் கிறிஸ்தவ உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோமே தவிர அவர்களோடு நாம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வர முடியாது. போப் இரண்டாம் போல் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோரை வழிநடத்திக் கொண்டிருந்தாலும் தான் போகும் வழிகளைத்துறந்து கிறிஸ்துவை விசுவாசிக்காதவரை அவரோ அவரைச் சேர்ந்தவர்களா பரலோகம் போகமுடியாது.

அதேபோல், சத்தியத்தை விற்றுப்பிழைப்பவர்களுடனும் நாம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வர முடியாது. சமய சமரசத்தைப் பின்பற்றுவோர், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே போதனைகளைப் பின்பற்றுவோருடன் நாம் ஐக்கியத்தில் வர முடியாது. இவர்கள் வேதத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் சரீரசுகத்தையும், அற்புதங்களையும், போலி அனுபவங்களையும் நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வேதம் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், கர்த்தர் தொடர்ந்து வெளிப்படுத்தல்களைக் கொடுப்பதில்லை என்பதையும் இவர்கள் விசுவாசிப்பதில்லை. வேதபோதனைகளுக்கு இவர்கள் தம்மை ஒப்புக்கொடுக்கமல் வேதத்தை தாம் நினைத்தபடி தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களோடு நாம் ஒருபோதும் ஐக்கியத்தில் வர முடியாது.

சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தனித்தியங்கிக் கொண்டிருக்கும் சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் நமக்கும் தொடர்பிருக்க முடியாது. இவர்கள் மீகாவைப்போல (நியாயாதிபதிகள் 17) வேதபோதனைக‍ளைப் பின்பற்றாமல் கர்த்தருக்கு தாம் நினைத்தவிதத்தில் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுவிசேஷத்தை சொல்லி ஆத்துமாக்களை வளர்த்தெடுக்க வேண்டிய சபைகளை தங்களுடைய சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே இந்நிறுவனங்களின் வேலையாக இருக்கின்றது. இவை மொத்தமாக சமயசமரசப் (Ecumenism) போக்குள்ளவை. தமிழ் கிறிஸ்தவ உலகு முழுவதும் இவர்களால் இன்று நிரம்பிப் போயிருக்கின்றது.

வேதத்தில் தொடர்ந்து பிழை கண்டுபிடித்து அதன் அதிகாரத்தைத் துவம்சம் செய்து கொண்டிருக்கும் இறையியல் கல்லூரிகளுடன் நமக்குத் தொடர்பிருக்க முடியாது. இறையியல் கல்லூரி என்ற பெயர் கொண்ட அநேக கல்லூரிகள் சமய சமரச கல்லூரிகளாகவும், தாராளவாதத்தைத் தாராளமாக அள்ளி வழங்கும் வேத விரோத கல்லூரிகளாகவுமே இயங்கி வருகின்றன. சீர்திருத்த போதனைகளில் நாட்டம் கொண்டவர்களுக்கு இக்கல்லூரிகளுடன் தொடர்பிருக்க முடியாது.

யாரோடு நாம் ஐக்கியத்தில் வரவேண்டும்?

எவரையும் சொதித்துப் பார்க்காது, கிறிஸ்தவர்கள் என்றும் கிறிஸ்தவ சபைகள் என்றும் தம்மை அழைத்துக் கொள்பவர்களோடெல்லாம் நாம் ஐக்கியத்தில் இருக்க வேண்டும் என்று வேதம் எங்கும் போதிக்கவில்லை. பவுலும், பேதுருவும், ஏனைய அப்போஸ்தலர்களும் சத்தியத்திற்கு மதிப்புக் கொடுத்து உழைத்தவர்களோடும், அத்தகைய சபைகளோடும் மட்டுமே ஐக்கியத்தில் இருந்துள்ளார்கள். சத்தியத்திற்கு மாறாக நடந்தவர்களை அவர்கள் முகத்தைப் பார்த்து (அவர்கள் அப்போஸ்தலர்களாக இருந்த போதும்) அப்போஸ்தலர்கள் கண்டிக்கத் தவறவில்லை. சத்தியத்தை நாடி அதன் அடிப்படையில் வாழ்ந்து ஊழியம் செய்பவர்களோடும், அத்தகையோரின் சபைகளில் இருப்பவர்களோடும் நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இவர்களோடு இருக்கும் ஐக்கியமே கிறிஸ்தவ ஒற்றுமை வளர உதவும். கிறிஸ்தவ ஒற்றுமை ஜாக்கிரதையாக பாதுகாத்து வளர்க்கப்பட வேண்டியது. அதை வளர்ப்பதனால் நாம் யாரோடு கூட்டுச் சேருகிறோம் என்பதில் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது.

எந்த சத்தியத்தையும் கோட்பாடுகளையும் நாம் பின்பற்றி வருகிறோமோ அவர்களோடு நமக்கு கிறிஸ்தவ ஒற்றுமையும், கிறிஸ்தவ ஐக்கியமும் இருக்க வேண்டும். மந்தைகளுக்கு உணவிட்டு, ஓநாய்களை விரட்டிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களுடன் நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இவர்கள் கர்த்தருக்காக உழைக்கும் கடமைப்பாடுடைய செயல் வீரர்கள். சீர்திருத்த போதனைகளை விசுவாசித்து மனத்தாழ்மையோடு சபை நடத்திக் கொண்டிருப்பவர்களோடு நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டும். இத்தகையோரைக் கண்டறிந்து அவர்களோடு நாம் நல்லுறவேற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவித போலித்தனமும் இல்லாத அன்பை அடிப்படையாகக் கொண்ட எறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தியத்தை மட்டும் விசுவாசிக்கும் போதகர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து ஆழமான உண்மையான அன்பைத் தமக்குள் வளர்த்துக் கொள்ளாதவரையில் அவர்களுடைய சபைகளுக்கிடையில் உண்மையான ஐக்கியம் இருக்க முடியாது. இன்று அநேக போதகர்கள் இத்தகைய ஆழமான உறவை மற்ற போதகர்களோடு வளர்த்துக் கொள்வதில்லை. இத்தகைய உறவும் அன்பும் இல்லாவிட்டால் சபைத்தேவைகளுக்காக அன்போடு எப்படிப் போதகர்களால் ஜெபிக்க முடியும். சில போதகர்களுக்கு தள்ளி நின்று பழகுவதே வாழ்க்கையாக இருக்கின்றது. இவர்களால் மற்றவர்களோடு நெருங்கிய உண்மையான நட்பை வளர்த்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. சிலருக்கு மற்றவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதே வழமையாக இருக்கின்றது. சுயநலத்தாலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இவர்களால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. இவர்கள் சமூக உறவில் தேர்ச்சி அடைய வேண்டியவர்கள்.

சபையோடு சபை இணைந்து செயல்பட வேண்டுமானால் அதற்கு நிச்சயம ஒரு அசோசியேஷன் வேண்டும் என்று சிலர் இன்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சபை ஒற்றுமை அசோசியேஷனால் வளர்ந்ததாக வேதத்தில் எங்குமே வாசிக்க முடியாது. ஒரு சீர்திரத்த சபை இன்னொரு சீர்திருத்த சபையோடு சேர்ந்து உழைப்பதற்கு ஒரு அசோசியேஷனோ (Association) அல்லது கமிட்டியோ (Committe) இருக்க வேண்டிய அவசியமில்லை. சபைக்கு வெளியில் எந்த அசோசியேஷனையும் வேதத்தில் பார்க்க முடியாது. அத்தகைய அசோசியேஷன்களால் உள்ளூர் சபையின் அதிகாரத்திற்குத்தான் எப்போதும் ஆபத்து வந்திருக்கிறது. அசோசியேஷனை நாடுகிறவர்கள் மத்தியில் பதவி ஆசை நிறைந்தவர்களும், ஏனைய சபைகள் மேல் ஆட்சி செலுத்தும் நோக்கம் கொண்டவர்களுமே அதிகம். வெறும் அசோசியேஷன்களாலும், கமிட்டிகளாலும், கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்க முடியாது. இவையெல்லாம் இல்லாமல் கிறிஸ்தவ ஒற்றுமை சீர்திருத்த சபைகள் மத்தியில் வளர முடியும்.

சீர்திருத்த போதகர்கள் மிகுந்த மனத்தாழ்மையுடன் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி சத்தியத்தில் வளர்ந்து ஜெபத்தில் கூடிவர வேண்டும். ஒருவருக்கொருவரும், தங்களுடைய சபைத் தேவைகளுக்காகவும், ஜெபிக்கலாம். முடிந்தவரை வேதபோதனையின்படி சபைகள் இணைந்து செயல்படலாம். கிறிஸ்துவின் அன்பும், நம்பிக்கையும், சத்தியமும் இணைப்பதுபோல் வேறு எதுவும் நம்மை இணைக்க முடியாது. இத்தகைய கிறிஸ்தவ ஒற்றுமையை நான் பல போதகர்களுடனும், பல சபைகளுடனும், சபையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எங்களை சத்தியம் இணைத்திருக்கின்றது. சீர்திருத்த போதனைகள் இணைத்திருக்கின்றது. ஒருவரில் ஒருவருக்கு இருக்கும் அன்பும், நம்பிக்கையும் இணைத்திருக்கிறது. அங்கே மாயங்களுக்கும், போலித்தனத்திற்கும் இடமில்லை. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் எம்மை சேர்த்து வைத்திருக்கின்றது. அசோசியேஷனோ, கமிட்டியோ எங்கள் மத்தியில் இல்லை. ஆனால், அவற்றாலெல்லாம் ஏற்படுத்த முடியாத விலை மதிப்பில்லாத அன்பும், நம்பிக்கையும், ஐக்கியமும் எங்களிடம் இருக்கின்றது.

சீர்திருத்தப் போதனைகளை இதுவரை அறிந்திராது, ஆனால் சுவிசேஷத்தை முழு இருதயத்தோடு பிரசங்கித்துக் கொண்டிருக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையோரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் சத்தியத்தில் மேலும் தெளிவு பெறும் நாள் வரத்தான் செய்யும். இவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே கூட்டத்தால் ஏற்படும் தீமைகளை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். சபைகளில் ஆடல் பாடல்களுக்கு இவர்கள் இடமளிப்பதில்லை. பிரசங்கத்தை தேவ பயத்தோடு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்கின்றது. இத்தகையோருடன் நாம் நிச்சயம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வளரலாம். நமது ஐக்கியத்தின் மூலம் இவர்களுக்கு சீர்திரத்தப் போதனைகளை நாம் தெளிவுப்படுத்தலாம். சத்தியத்தை நாடும் இவர்கள் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். சத்தியத்தில் இவர்கள் மேலும் ஆழமாக அறிவு பெறும் நாட்கள் வரத்தான் போகின்றது.

கிறிஸ்தவ சபை ஐக்கியத்தைப் பொறுத்தவரையில் தமிழ் கிறிஸ்தவ உலகில் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு இந்நாட்களில் ஐக்கியத்தில் வருமளவுக்கு பெருந்தொகையான போதகர்களோ, மந்தைகளோ இல்லை. இருந்தபோதும் இவர்கள் தொகை அதிகரித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது அவர் ஐக்கியத்தில் வந்தோருடைய எண்ணிக்கை மிகவும் குறைவு. சத்தியம் எப்போதுமே பெருங்கூட்டத்தால் பின்பற்றப்படவில்லை.

இறுதியாக ஒரு வார்த்தை

சீர்திருத்தப் போதனைகளை விசுவாசித்து ஆர்வத்துடன் சபை நடத்துபவர்கள் அதிக மனத்தாழ்மையுடன் உழைக்க வேண்டிய நாட்கள் இவை. சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம் என்ற இறுமாப்பு நமக்கு இருக்கக்கூடாது. அதை வெளிப்படுத்திய கர்த்தருக்கு நாம் தினசரி நன்றி கூற வேண்டும். சீர்திருத்த போதனைகளில் நாம் வளர்ந்து கொண்டிருக்கும்போது அதைப் புதிதாக அறிந்து கொள்கிறவர்களோடும், சபைகளோடும் நாம் மிகவும் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் நம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தளவுக்கு வேத அறிவில் வளர்கிறோமோ அந்தளவுக்கு தாழ்மை நம்மிடம் இருக்க வேண்டும். யோவான் ஸ்நானன் கூறியது போல், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்ற மனப்பான்மை நமக்கிருக்க வேண்டும் (யோவான் 3:30). இன்று, அரைகுறை அறிவு சிலரது கண்களை மறைத்து அவர்கள் இருதயத்தைப் பாதித்திருக்கிறது. தாழ்மை இல்லாதவர்கள் ஒருபோதும் மெய்விசுவாசிகளாக இருக்க முடியாது. நமக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தைவிட நமக்குள் இருந்து ஏற்படும் ஆபத்திலிருந்து நம்மை முதலில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வேதம் போதிப்பதுபோல் மாம்சத்திற்கேதுவான அனைத்தையும் நம் சரீரத்திலிருந்தும், ஆத்துமாவிலிருந்தும் அன்றாடம் அழித்துவிட வேண்டும். கர்த்தர் இயேசுவின் அன்பில் நாம் வளர வேண்டும். மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமைக்கு சபையிலும், சபைக்கு வெளியிலும் ஊறு வந்துவிடாதபடி அதை நாம் கட்டிக்காத்து வளர்ப்போம்.

ஆவிக்குரிய ஐக்கியத்தை ஏனைய சபைகளோடு எவ்வாறு வளர்த்துக்கொள்வது? – அலன் டன் (Alan Dunn)

இப்பகுதியில் நாம் ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றி ஆவிக்குரிய அன்போடு ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து, வளர்ந்து கொண்டிருக்கும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகளை மனதில் வைத்தே இதை எழுதுகிறோம். ஒரே கோட்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு இவை பொருந்தாது.

  1. பொதுவான கடிதத் தொடர்பை ஏற்படுத்தி நம்மோடு ஐக்கியத்திலுள்ள சபை நமது சபையையும், சபைக் காரியங்களையும் பற்றி அறிந்து ஐக்கியத்தில் வர துணை செய்தல் அவசியம்.

அ. அப்போஸ்தலரின் உதாரணம் – அப்போஸ். 15:31; 16:4. எருசலேம் சபையில் இருந்து மற்ற சபைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம். கொலோ. 4:16 – லவோடீசியா சபையோடு இருந்த கடிதத் தொடர்பு. அப்போஸ்தலர்கள் சபைத் தலைவர்களாக இருந்த தனிநபர்களான தீமோத்தேயு, தீத்து போன்றவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களே இன்று புதிய ஏற்பாட்டுப் பகுதிகளாக உள்ளன.

ஆ. தனிப்பட்டவர்கள் பற்றிய அறிமுகக் கடிதங்கள் – அப்போஸ்தலர்கள் தனிநபர்களை அறிமுகக் கடிதத்துடன் ஏனைய சபைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

  1. அப்போஸ். 18:27 அப்போலோ அறிமுகம். ரோமர் 16:1, 2 அறிமுகப்படுத்தப்படல். கொலோ. 4:10, 11 ஜோன் மார்க் அறிமுகம். 1 கொரி. 16:3 – சபையால் தகுதியுள்ளவர்கள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அப்போஸ்தலர்கள் மற்ற சபைகளுக்கு அறிமுகப்படுத்தினர். 2 கொரி. 3:1 – கொரிந்தியர்களைப் பார்த்து பவுல் உங்களுக்கு எங்களைப்பற்றிய அறிமுகக் கடிதம் தேவையா? என்று கேட்கிறார்.

இ. ஐக்கியத்திலுள்ள சபைகளை நேரடியாகப் போய்ப் பார்த்தல் – தொடர்ச்சியான கடிதத் தொடர்பு இருந்தாலும் நேரடியாக பார்த்துப் பழகுவதைப் போல் வராது. ஐக்கியம் வளர இது அவசியம்.

  1. அப்போஸ். 15:32 – யெரூசெலேம் சபையும் அந்தியோகியா சபையும் பிரசங்கிகளைப் பகிர்ந்து கொண்டனர். எபேசி. 6:21, 22ல் டைகீகஸ் எபேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக வாசிக்கிறோம். கொலோ. 4:7-9ல் டைகாகஸ், ஒனேசிமஸ், மார்க்கு, இயேசு ஆகியோர் கொலோசே சபைக்கு அனுப்பப்பட்டிருந்ததைப் பார்க்க முடிகிறது. பவுல் பல சபைகளுக்குப் போயிருந்ததை நாம் பல இடங்களில் வாசிக்கிறோம் அப்போஸ். 14:21; 15:3, 36; 16:4, 5; 18:22, 23; 21:17-19.
  2. சபை ஐக்கியம் வளர பவுல் பின்பற்றிய வழிகளைப் பார்த்து நாம் வியக்காமல் இருக்க முடியாது. ரோமர் 16:3-16ப் பாருங்கள். இப்பகுதியில் தனிப்பட்டவர்களின் பெயர்களைத் தந்து அவர்களுடைய தகுதி பற்றி பவுல் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். இது அக்காலத்தில் சபைகளுக்கிடையில் இருந்த அன்பின் அடிப்படையில் இருந்த ஆத்மீக ஐக்கியத்தை விளக்குகிறது. சபைகளுடன் நெருங்கிய தொடர்பிருந்ததாலேயே இத்தகைய உறவை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.
  3. ஏனைய சபைகளோடு இணைந்து சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடுதல்.

அ. சபைகளால் தெரிவு செய்யப்பட்டோர் தீர்மானிக்கப்பட்ட ஒரு ஊழியத்தில் இணைந்து செயல்படுதல். – இத்தகைய குழுக்கள் சமயாசமயம் தேவையானபோது மட்டுமே நிறுவப்பட்டதோடு அவை எந்தவித அதிகாரத்தையும் தம்மில் கொண்டிருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற அவை நிறுவப்பட்டதோடு அத்தேவை நிறைவேறியபின் அவை உடனடியாகக் கலைக்கப்பட்டன. குழு கலைக்கப்பட்டபின் அதிலிருந்தவர்கள் தங்கள் தங்கள் சபைகளில் தொடர்ந்திருந்து செயல்பட்டனர். அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டபோது தங்கள் சபை மூப்பர்களின் வழிகாட்டலின்படியே செயல்பட்டனர். ஒரு பாரா-சர்ச் (Para-Church) இயக்கம் போல் அவர்கள் தொடர்ந்து சபைகளில் இருந்து செயல்படவில்லை. சபை செய்ய வேண்டிய எத்தனையோ ஊழியங்களை ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றும் சபைகள் இணைந்து போதகர்களின் வழி நடத்தலின்படி செய்ய முடியும். இவற்றைச் செய்ய சபைக்கு வெளியில் ஒரு அசோசியேஷன் அவசியம் இல்லை. செலவும் குறைவு.

  1. 1 கொரி. 16:3, 4 பவுலோடு போவதற்காக கொரிந்து சபையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. 2 கொரி. 8:16-24 ல் தனி நபர்கள் வேறு சில சபைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டதாகப் பார்க்கிறோம். அப்போஸ். 20:4-6ல், பல சபைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9 பேல் பவுலோடு போகும்படியாகத் தெரிவு செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.
  2. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் இத்தகைய சுவிசேஷ ஊழியக்குழுக்களை தாங்களே முன்வந்து ஏற்படுத்தினர். யாரும் அவர்களை வற்புறுத்தவில்லை. கர்த்தர் தன்னுடைய பராமரிப்பின் மூலம் இவ்வாறாக சபைகளை வழிநடத்தி சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடும்படிச் செய்கிறார். ஒரே கோட்பாட்டைப் பின்பற்றாத சபைகள் இவ்வாறு இணைந்து ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து இயங்க முடியாது.

ஆ. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் இணைந்து ஒருவருக்கொருவர் பண உதவியும் செய்து கொண்டதை புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம்.

  1. பிலிப். 4:15, 16ல். பவுல் தெசலோனிக்காவில் சபை நிறுவும் ஊழியத்திற்காக பிலிப்பியர் சபை பண உதவி செய்ததைப் பார்க்கிறோம். 2 கொரி. 11:9ல், பவுல் கொரிந்தில் இருந்தபோது மசிதோனியரிடம் இருந்து ஊழியத்திற்காக பண உதவி பெற்றதாக வாசிக்கிறோம். 3 யோவானில் ஊழியத்திற்கான இத்தகைய பண உதவியை யோவான் உற்சாகப்படுத்தி எழுதுகிறார்.
  2. இத்தகைய பண உதவியை சபைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியமில்லை. பவுல் பல சபைகளிடம் இருந்து உதவி பெற்றபோதும் உள்ளூர் சபையே சுவிசேஷ ஊழியத்தைப் பொறுப்பேற்று அதற்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
  3. கடிதத் தொடர்பு வைத்திருப்பதும், சபைகளோடு இணைந்து பணியாற்றுவதும் ஜெபத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  4. உதாரணம்: மத்தாயஸை அப்போஸ்தலனாக நியமிக்க அப்போஸ். 1:14 இல் சபை ஜெபித்தது. அப்போஸ். 2:42இல் ஜெபம் சபையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததைக் கவனிக்கலாம். பிரசங்கத்திற்கு முன் ஜெபம் செய்யப்படுவதை 4:31இல் பார்க்கிறோம் (29-31). அப்போஸ். 10இல் பேதுருவும், கோர்னேலியஸீம் ஜெபத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். 12:5இல் சபை சிறையிலிருக்கும் பேதுருவுக்காக ஜெபிப்பதைப் பார்க்கிறோம். பிரசங்கிகள் அனுப்பப்படுவதற்கு முன் 13:3 இல் சபை ஜெபித்தது.
  5. அப்போஸ்தலர்கள் ஜெபிக்கும்படி சபையை வழிநடத்தியுள்ளார்கள். தன்னுடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படி ரோமர் 15:30-32ல் பவுல் கேட்டுக்கொள்கிறார். 2 கொரி. 1:11ல் பவுல் விடுதலைக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். எபேசி. 6:18-20 விசுவாசிகளுக்காகவும், பிரசங்கத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி பவுல் போதிக்கிறார். பிலிப். 1:19இல் விடுதலைக்காக ஜெபிக்கும்படி பவுல் கேட்கிறார்.
  6. மத்தேயு 9:36-38. சுவிசேஷ ஊழியத்தைக் கர்த்தரே ஆசீர்வதிக்கிறார். அதற்காக ஜெபம் செய்யப்பட வேண்டும்.

சீர்திருத்த சபைகளுக்கிடையில் நெருங்கிய உறவேற்படுவதற்கு சபை ஜெபக்கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மோடு உறவேற்படுத்திக் கொண்டுள்ள சபைகளுடைய தேவைகளுக்காக நாம் அன்போடும், நம்பிக்கையோடும் ஜெபிக்கும்போது அவர்களோடு நமது உறவு வளர்கிறது. அவ்வாறு ஜெபிக்கும்போது ஆவியானவர் நமது இருதயத்தில் அவர்கள்மீது நமக்கிருக்கும் அன்பை வளர்த்து அவர்களுடைய தேவைகளை சந்திக்கம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இவ்வாறு ஜெபிக்கும்போதே நாம் உறவு வைத்திருக்கும் சபைகளின் ஊழியங்களின்மீது நமக்கு ஒரு வாஞ்சையை கர்த்தர் ஏற்படுத்தி அவர்களோடு சேர்ந்து உழைக்கும்படிச் செய்கிறார்.

  1. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் ஒருவருக்கொருவர் இணைந்து ஆலோசிப்பதோடு ஆலோசனையும் கூறிக் கொள்ள வேண்டும்.
  2. தனி மனிதர்களைப்போலவே சபைகளுக்கு மத்தியிலும், முதிர்ச்சியடைந்த, நமக்கிருப்பதைவிட அதிக வரங்களைக் கொண்ட, அனுபவத்தை அதிகமாகப் பெற்ற சபைகள் காணப்படும். அவற்றை நாம் பயன்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

அ. 1 தெச. 1:7 வேத வசனங்களை எவ்வாறு ஆர்வத்தோடு அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்கு தெசலோனிக்கேயர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தனர். அதேபோல் தெசலோனிக்கேயர் யூதியாவில் இருந்த கிறிஸ்தவர்களைப் பின்பற்றி எதிர்ப்புகளையும், உபத்திரவங்கயையும் பொறுத்துக்கொண்டார்கள் (2:14).

ஆ. வேதபூர்வமான உதாரணத்துடன் செயல்படும் சபை மற்ற சபைகளுக்கு பெருந்துணையாக இருக்கின்றது. அத்தகைய சபைகள் தகுந்த ஆலோசனைகளை மற்ற சபைகளுக்கு அளிக்க முடியும்.

  1. இந்தியோகியா, யெருசெலேமில் இருந்த சபைகள் இதற்கு உதாரணம். (அப்போஸ். 15).

அ. அப்போஸ். 15ஆம் அதிகாரம் டினோமினேசன்களை ஏற்படுத்துவதற்கும், அசோசியேஷன்களை உருவாக்குவதற்கும், சபைகளுக்கு வெளியில் சபைகள் மேல் அதிகாரம் செலுத்தும் கமிட்டிகளை ஏற்படுத்துவதற்கும் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. அநேகர் இப்பகுதியைத் தவறாகப் புரிந்து கொண்டு வேதம் போதிக்காத செயல்களை செய்து வருகிறார்கள். அப்போஸ். 15ல் நாம் அப்போஸ்தலர்கள் அதிகாரபூர்வமாக செய்த செயலைப் பற்றி வாசிக்கிறோம். அப்போஸ்தலர்களுக்கிருந்த அதிகாரம் இன்று ஒருவருக்கும் இல்லை.

  1. இப்பகுதியில் வேத சத்தியம் பற்றிய ஒரு பிரச்சனையையும், இரு உள்ளூர் சபைகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனையையும் பற்றி வாசிக்கிறோம். அந்தியோகியா சபையிலிருந்த சிலர் எருசலேம் சபைக்குத் தொல்லை கொடுத்தனர்.
  2. அப்போஸ்தலர்கள் வேத சத்தியங்களை தெளிவுபடுத்தி சபைகள் நடந்து கொள்ள வேண்டிய முறைபற்றி ஆலோசனை தந்தனர்.
  3. 15:30, 31 வசனங்கள் ஏனைய சபைகளைப்போலவே அந்தியோகியா சபையும் அப்போஸ்தலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது. இவ்வாலோசனைகளைப் பெற்றுக்கொண்ட சபைகள் அவை அப்போஸ்தல அதிகாரம் கொண்டுள்ளதைப் புரிந்து ஏற்றக்கொண்டனர். அவை அப்போஸ்தல அதிகாரம் கொண்டபடியாலேயே இன்று அவை வேதத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன.

ஆ. அப்போஸ். 15 இன்படி உலக முழுதும் பரவியிருக்கும் சபைகளுக்கு அதிகாரபூர்வமாக கட்டளையிடக்கூடிய தகுதி அப்போஸ்தல அதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. ஆகவே, அப்போஸ். 15 இன்படி சபைகளுக்க வெளியே அதிகாரமுள்ள எந்த அமைப்பையும் ஏற்படுத்துவது அப்போஸ்தல அதிகாரத்தை மறுபடியும் ஏற்படுத்தும் முயற்சியாகும். கர்த்தருடைய வார்த்தையின்படி இன்று உள்ளூர் சபை மேல் ஆட்சி செய்யக்கூடிய எந்த அமைப்பும் இல்லை.

  1. இன்று அப்போஸ்தல அதிகாரம் வேதத்திற்கு மட்டுமே உள்ளபடியால் வேதம் போதிக்கும் சத்தியங்களை நாம் புரிந்து கொண்டு நம்மோடு தொடர்புள்ள சபைகளுடைய ஆலோசனைகளை நாம் பெற்று நடக்க வேண்டும்.

அ. அப்போஸ். 11:22 இல் அந்தியோகியாவில் இருந்த சபையார் அனுபவத்தில் மதிர்ந்த எருசலேமில் இருந்து வந்த பர்னபாவின் ஆலோசனையையும் பவுலின் ஊழியத்தையும் ஏற்றுக் கொண்டனர்.

ஆ. தேவ மக்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய தகுதியுள்ளவர்களின் பொறுப்புக்களைப் பற்றி நீதிமொழிகளில் அதிகமாகப் பார்க்கலாம்.

  1. நாம் அப்போஸ்தல அதிகாரத்துடன் எழுதப்பட்டுள்ள வேத சத்தியத்திற்கும், மற்றவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய ஆலோசனைகளுக்குமிடையில் இருக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். (1 கொரி. 7:25; 2 கொரி. 8:10-11). ஆலோசனை கட்டளைகளிலிருந்து வேறுபடுகின்றது. ஒரு ஒழுக்க விதி பற்றிய கட்டளை அவ்வொழுக்க விதியை எப்படி நடைமுறையில் கொண்டுவர வேண்டும் என்று நாம் தரக்கூடிய ஆலோசனையில் இருந்து வேறுபடுகின்றது. சீர்திருத்த சபைகள் தாம் நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் சபைகளிடம் இருந்து சபை நடத்துவதற்கான தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது வேத பூர்வமான செயலாகும்.

சபை ஐக்கியம்

“சபைகளுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமை அன்பினால் கட்டி எழுப்பப்பட வேண்டும். ஏனெனில், சபை ஐக்கியம் அன்பின் ஆத்மீக ஐக்கியமாக இருக்கின்றது. இத்தகைய ஒற்றுமை ஆவியினால் உருவாகின்றது. உலகப்பிரகாரமான செயல்களாலும், அசோசியேஷன் போன்ற அமைப்புகளாலும் சபைகளுக்கிடையில் ஆவியால் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய அன்பின் ஐக்கியத்தை ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.”
– அலன்டன் (கிறேஸ் கவனன்ட் சபை, நியூ ஜேர்சி, யூ. எஸ். ஏ)

“சபைகளுக்கிடையில் மெய்யாக இருக்க வேண்டிய உறவை சபைப் போதகர்கள் தங்களுக்கிடையில் இருக்கும் நெருங்கிய நட்பின் மூலம் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடியும். இத்தகைய சூதுவாதில்லாத உளமார்ந்த நட்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் சபைகளுக்கிடையிலான ஐக்கியத்தைப் பற்றிப் பேச முடியாது. சத்தியத்தைப் பின்பற்றாதவர்களோடும், சபைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாதவர்களோடும் நமக்கு உறவு இருக்க முடியாது. உறவுல்லாத இடத்தில் நட்புக்கு இடமில்லை. ஒருவர் சபைப் போதகர் என்பதற்காக அவரை நாம் கேள்வி முறையில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் எங்கும் சொல்லவில்லை. அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் நம்மைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். போதகர்களுக்கிடையில் நல்லுறவும் நம்பிக்கையும் இருக்க வேண்டுமானால் போதகர்கள் அதற்கான வழிவகைகளை நாட வேண்டும். ஒருவரோடொருவர் ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றப் போதகர்கள் நம்மை நன்றாகப் புரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். இவற்றின் மூலம் ஆவியானவர் ஏற்படுத்தித் தரும் ஆழமான ஐக்கியத்தை வெறும் அசோசியேஷன்களோ, கமிட்டிகளோ உருவாக்கிவிட முடியாது.”

-ஆசிரியர்

வேதவசனத்தின் வல்லமை

வேத வசனம் வல்லமையுள்ளதாய் இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அது தேவனுடைய வசனமாக இருப்பதால் உலகத்து மனிதர்களின் எழுத்துக்களைவிட மேன்மையுள்ளதாய் இருக்கிறது. வேத வசனத்தால் மனிதன் ஜீவனை அடைய முடியும். வேறு நூல்களால் அதை அளிக்க முடியாது. வேத வசனம் ஆத்துமாக்களை பரலோக வாழ்வில் வழி நடத்தக்கூடியதாய் இருக்கிறது. வேத வசனம் ஆத்துமாவின் பாவத்தை கண்டித்து உணர்த்தி கர்த்தரின் வழியில் செல்ல உதவக்கூடியதாய் இருக்கிறது. அதை உலகத்தில் காணப்படும் சாதாரண மனிதர்களின் எழுத்துக்களால் செய்ய முடியாது. இது நம்மில் அநேகர் அறிந்த சத்தியம். ஆனால், வேத வசனங்கள் ஆத்துமாவில் இவற்றை எப்படிச் செய்கின்றன என்ற உண்மை சிலருக்குப் புரியாமலிருக்கின்றது.

சமீபத்தில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாதாந்தர தினசரி தியான இதழில் (அன்றன்றுள்ள அப்பம், அக்டோபர் 2001 – சாம் ஜெபத்துரை) பின்வரும் செய்தி இருந்தது. அதை எழுதிய ஆசிரியர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். “நான் வருமானவரி இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இடைவிடாமல் ஊழியம்செய்து கொண்டிருந்தேன். அதனால் அலுவலகத்தில் பிரமோஷனுக்காக படிப்பதற்கு நேரமில்லாமல் போனது. அப்போது நடந்த தேர்வுகளில் இரண்டுமுறை நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு நான் என்னுடைய மனைவி பிலிப்பியர் 4:13ஐ எனக்கு வாசித்து காண்பித்து, இந்த வேத வசனத்தை உறுதியாய் பி¬த்துக்கொண்டு படியுங்கள். நிச்சயமாகவே வெற்றி பெறுவீர்கள் என்றாள். நான் அந்த வசனத்தை படித்தேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே இந்த பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு எனக்கு பெலண்டு, ஞானமும் உண்டு என்று திரும்பத் திரும்ப விசுவாச அறிக்கை செய்தேன். படிப்பதற்கு புத்தகத்தைத் திறக்கும்போதெல்லாம் இந்த வசனம் என்னை பெலப்படுத்தியது. விசுவாசம் எனக்குள் வந்தது. அப்படியே அந்தத் தேர்வில் வெற்றி பெற கர்த்தர் எனக்கு உதவி செய்தார்.” என்று அவர் எழுதியிருந்தார். அத்தோடு “ஒவ்வொரு பக்தர்களையும் பெலப்படுத்தக்கூடிய வாக்குத்தத்த வசனங்கள் வேதத்தில் உண்டு” என்றும் சொல்லியிருந்தார்,.

இந்த ஊழியர் மேலே விளக்கிய தனது அனுபவத்தை இன்று அநேகர் நம்பிப் பின்பற்றி வருகிறார்கள். வேத வசனங்களை இந்தவிதமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வசனத்தைத் தெரிவு செய்து அந்த வசனத்தை விசுவாசித்து தொடர்ந்து தியானித்து வந்தால் தமக்குள் விசுவாசம் ஏற்படும் என்றும், தாம் செய்ய நிச்சயித்திருக்கும் காரியம் நிச்சயமாக வெற்றி அடையும் என்றும் எண்ணி வருகிறார்கள். வேத வசனம் இந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வேதம் போதிக்கிறதா? வேத வசனம் வல்லமையுள்ளது என்று நாம் கூறும்போது, வாழ்க்கையில் நடக்க வேண்டிய காரியங்களில் வெற்றி பெற இந்தவகையில் அது உதவுகிறது என்றா கூறுகிறோம்? என்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

முதலில், மேலே நாம் பார்த்தவிதமாக வேத வசனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனையை பிரபலப்படுத்திய மனிதரை நாம் அடையாளங்கண்டு கொள்வது நல்லது. தென் கொரியாவைச் சேர்ந்த முன்பு போல் யாங்கி சோ (Paul Yonggi Cho) என்று அழைக்கப்பட்டு இப்போது தன் பெயரை டேவிட் யொங்கி சோ (David Yonggi Cho) என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் மனிதர்தான் எழுபதுகளில் இப்போதனையை பிரபலப்படுத்தினார். தனது “நான்காம் பரிமாணம்” (Fourth Dimension) என்ற நூலில் வேத வசனம் இந்தவிதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று டேலிட் யொங்கி சேத விளக்குகிறார். அது வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ உதவும் என்பது இந்த மனிதரின் போதனை, வசனம் என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் இரு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று லோகொஸ் (Logos), இன்னொன்று ரேமா (Rema) இதில் லோகொஸ் வசனத்தைக் குறிக்கும் பொதுவான ஒரு வார்த்தை என்றும், ரேமா கர்த்தரிடம் இருந்து நமக்குக் கொடுக்கப்படும் விசேஷமான வார்த்தை என்றும் டேவிட் யொங்கி சோ விளக்கட் கொடுக்கிறார். ரேமாவைக் கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் விசுவாசத்தை அடைந்து வாழ்க்கையில் வெற்றிகளை அடையலாம் என்றும் விளக்குகிறார். ஆனால், இந்த இரு வார்த்தைகளும் வேதத்தில் யொங்கி சோ கூறும்விதமாக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. வேத வல்லுனர்கள் ஒருவராவது இந்தவகையில் இவ்வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்ததில்லை. உண்மையில் இந்த இரு வார்த்தைகளுக்கும் இடையில் கிரேக்க மொழியில் அப்படி ஒரு பெரிய வித்தியாசமில்லை. லோகொஸ் என்ற வார்த்தை முக்கியமாக இயேசு கிறிஸ்துவை குறித்துப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (யோவான் 1). அவர் தெய்வீக வார்த்தையாய் இருக்கிறார் என்பதால் இப்படி விளக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் பொதுவாக வசனத்தைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டள்ளது. லோகொஸ், ரேமா என்ற இரு வார்த்தைகளுமே வேத வசனத்தைக் குறிக்கும் ஒரே பொருளுடைய இரு வார்த்தைகளாகவே பெரும்பாலும் புதிய ஏற்பாடெங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைவைத்து வார்த்தை ஜாலம் செய்து ஒரு போதனையை உருவாக்குவது பெருந்தவறு. வெறும் வார்த்தைகளை வைத்து இறையியல் போதனைகளை உருவாக்குவதை வேதம் எப்போதும் அடியோடு நிராகரிக்கிறது. அவ்வாறு செய்வது வேதவிளக்க விதிகளுக்கெல்லாம் எதிரானது.

யொங்கி சோவின் வேதத்திற்குப் புறம்பான போதனை எழுபதுகளிலும், எண்பதுகளிலும் அநேக கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே சபைகளால் பின்பற்றப்பட்டது. தனக்கு ஒரு கார் வேண்டும் என்பதற்காக அதைப்பெற்றுக்கொள்வதற்காக ஒரு வேத வசனத்தைக் கர்த்தர் தந்திருக்கிறார் என்று சொல்லி அவ்வசனத்தை வைத்து அன்றாடம் கார் கிடைத்துவிடும் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஒரு போதகரையும் நான் எண்பதுகளில் சந்தித்திருக்கின்றேன். இப்போதனை அன்றிருந்தளவுக்கு இன்று பிரபலமடைந்திராவிட்டாலும் தொடர்ந்தும் விசுவாசிகளைப் பாதித்து வருகின்றது என்பதற்கு அன்றாட அப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் ஒரு உதாரணம். (யொங்கி சோவின் நூலான நான்காம் பரிமாணத்தை ஆராய்ந்த நாம் ஒரு சிறு நூலை சில வருடங்களுக்கு முன் “போல் யொங்கி சோவின் நான்காம் பிரமாணம்” என்ற தலைப்பில் வெளியிட்டோம். அது தேவையானவர்கள் எமக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்).

இனி வேத வசனத்தை இப்படிப்பயன்படுத்தலாமா? உண்மையில் அதை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதை இனிப்பார்ப்போம்.

“அன்றாட அப்பத்தில்” நாம் பார்த்தவிதத்தில் வேத வசனங்களை நாம் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வேத வசனங்கள் அலாவுதீனின் அற்புத விளக்கைப்போல் வேலை செய்யாது. அது மாஜிக் போல நாம் நினைத்தபோது கேட்பதைக் கொடுத்துவிடும் என்று வேதம் புரியாத அநேக விசுவாசிகள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதாவது ஒரு வேத வசனத்தைத் தேடிப்போவது பலருடைய வழக்கமாக இருக்கின்றது. தமிழ் கிறிஸ்தவ உலகம் அறிந்துள்ள அநேக பிரசங்கிகளே இப்பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் வேதத்தை இவர்கள் தெளிவாகப் போதிக்காது இம்மாதிரியான வாக்குத்தத்த வசனங்களைக் கொடுத்து அப்பாவி விசுவாசிகளை ஏமாற்றி வருகிறார்கள். இந்தவிதமாக வேதத்தைப் பயன்படுத்துவது தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் வல்லமையானதுதான், ஆனால் அது நாம் கேட்பது கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டிய மாஜிக் புத்தகம் அல்ல.

இதேபோல் ஒரு வேதவசனத்தை எடுத்துக்கொண்டு கர்த்தர் அதை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருக்கிறார் என்று கூறும் வழக்கத்தையும் அநேக பிரசங்கிகளிடம் பார்க்கலாம். அவ்வசனத்தைக் கர்த்தர் அவர்களைத் தனிப்பட்டவிதத்தில் சந்தித்துக் கொடுத்ததுபோல் அவர்கள் பிரசங்கம் செய்யவும், எழுதவும் செய்வார்கள். ஒரு மாதாந்தர ஜெபக்குறிப்பு (பண வசூல் செய்யும்) பத்திரிகை ஒவ்வொரு மாதமும் இவ்வாறு ஒரு வசனத்தை வாசிப்பவர்களுக்கு வாக்குத்தத்தமாக முதல் பக்கத்தில் கொடுத்து வருகிறது. வாசிப்பவர்கள் அதை அம்மாதம் முழுவதும் தொடர்ந்து மந்திரம் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும் வந்தால் அது வெற்றியளிக்கும் என்பது அப்பத்திரிகையை வெளியிடுபவரின் போதனை. கிராமத்து மக்கள் மட்டுமல்லாது நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் கூட இம்மாதிரியான மாயாஜால வித்தைகளுக்கு பலியாகிவிடுவதுதான் பெரும் புதுமை! இது பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த இருண்டகால சூழ்நிலையைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. அன்று ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை மக்கள் வாசிக்க முடியாதபடி செய்து அவர்களுடைய ஆத்மீக மீட்புக்கு எந்த வழியுமில்லாமல் செய்து வைத்திருந்தது. இன்று, வேதத்தை கண்கட்டி வித்தை செய்யும் மந்திரக்கோலைப் போல் பயன்படுத்தி அநேக பிரசங்கிகள் ஆத்துமாக்களின் அறிவுக்கண்களைத் தொடர்ந்து இருட்டில் வைத்திருக்கிறார்கள்.

வேதத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தி ஆத்துமாக்களைப் பலர் ஏமாற்றி வருகிறார்கள் என்று பார்த்தோம். ஆனால் வேதத்தை நாம் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். இதை வாசிக்கும் ஆத்துமாக்களாவது தம்மைக்காத்துக்கொள்ள இது உதவட்டும். முதலில், வேதம் வல்லமையுள்ள கர்த்தரின் வசனம் என்று நாம் கூறும்போது, அதிலுள்ள வசனங்கள் தீடிரெனக் குதித்தெழுந்து அற்புதங்கள் செய்யும் என்று நாம் சொல்லவில்லை. வேத வசனங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று, கலாச்சார, சமூக அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வசனங்கள் போதிக்கும் சத்தியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் அவ்வசனங்களை அவை கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தின் அடிப்படையில் இலக்கணபூர்வமாகவும், கலாச்சார வரலாற்றடிப்படையிலும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முறையாக ஆராய்ந்து படிக்கும்போது அவ்வசனங்கள் உண்மையில் எதைப் போதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படிப் படித்துப் புரிந்து கொண்ட பின்பே அவ்வசனங்களின் மூலம் கர்த்தர் நாம் வாழ்க்கையில் எதைச்செய்யும்படி எதிர்பார்க்கிறார் என்று உணர்ந்து அதன்பின் ஜெபத்தோடு நடக்க வேண்டும். சாதாரண கடிதங்களையும், நூல்களையும் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்த வேண்டிய முறைகளை வேதத்தைப் படிக்கவும் பயன்படுத்த வேண்டும். ஒரு வசனத்தைப் புரிந்து கொள்ள அந்த வசனம் எந்த வரலாற்று, கலாச்சார, சமூக சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது? அதற்கும் முழு வேதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? அது பழைய ஏற்பாட்டு வசனமாக இருந்தால் புதிய ஏற்பாடு அதைப்பற்றி என்ன சொல்கிறது? என்ற கேள்விகளையெல்லாம் முதலில் கேட்க வேண்டும். வேதம் நாம் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண உலக மொழியில் இலக்கண சுத்தத்தோடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் கவனமாக கர்த்தரின் ஆவியின் துணையோடு முறையாகப்படித்தால் மட்டுமே அதன் போதனையை எவரும் அறிந்து கொள்ள முடியும். கஷ்டப்பட்டுக் கவனத்தோடு படிக்காமல் வேத சத்தியங்களை புரிந்து கொண்ட எந்த மனிதனும் இந்த உலகத்தில் பிறந்ததோ, வாழ்ந்ததோ இல்லை. இனிப்பிறக்கப் போவதும் இல்லை. இயேசு கூட தான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பழைய ஏற்பாட்டிற்கு விளக்கம் கொடுத்தபோது நாம் மேலே பார்த்த விதிகளுக்கு உட்பட்டே விளக்கங் கொடுத்துள்ளார். அவர் தேவனாக இருந்தபோதும்கூட பழைய ஏற்பாட்டின் எந்தப் பகுதியையோ அல்லது வசனத்தையோ அவர் மந்திரம் சொல்வதுபோல் பயன்படுத்தியது இல்லை. இயேசுவின் மலைப்பிரசங்கத்தை உதாரணத்திற்கு வாசித்துப் பாருங்கள் (மத்தேயு 5-7).

நாம் வேதப்பகுதிகளை ஜெபத்தோடு வாசித்து தியானிக்க வேண்டும். தியானிப்பது என்றால் வேதத்தை விசுவாசத்தோடு ஜெபத்தோடும் படிப்பது என்றுதான் பொருள். அப்படித் தியானிக்கும்போது அவ்வசனங்களின் மூலம் கர்த்தர் நம்மோடு பேசி நமக்கு ஆவிக்குரிய பெலத்தை அளிக்கிறார். அப்போதே நாம் கிறிஸ்துவுக்குள் நமது விசுவாசத்தில் உறுதியடைகிறோம். ஆத்மீக விருத்திக்காக ஜெபத்தோடும், கருத்தோடும் வேதத்தைப் படிப்பவர்கள் மட்டுமே கர்த்தரின் சித்தத்தை வேதத்தின் மூலம் எப்போதும் அறிந்து கொள்கிறார்கள். இதெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமான அனுபவம் அல்ல. வேதத்தை வாசிக்கும் எல்லா விசுவாசிகளும் இதை அனுபவிக்க முடியும். ஒரு போதகரோ, ஊழியக்காரரோ, சக விசுவாசியோ நாம் வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கு தந்திர வித்தைபோல (Magic formula) வாக்குத்தத்த வசனம் தர வேண்டிய அவசியமில்லை. ஆவியின் துணையோடு நாம் வேதத்தைப் படிக்க வேண்டும். அப்போது அது கர்த்தரின் வழியில் நம்மை வழிநடத்தி உயிர்ப்பிக்கிறது. இதையே சங்கிதக்காரன் 119ம் சங்கீதத்தில் வலியுறுத்துகிறான்.

கிறிஸ்தவர்கள் இனிப் பரீட்சையில் தேற வாக்குத்தத்த வசனங்களைத் தேடி அலையாமல் கஷ்டப்பட்டு பரிட்சைக்குத் தம்மைத் தயார் செய்து கொள்வது நல்லது. கஷ்டப்பட்டுப் படிக்காமல் பரிட்சையில் தேறியவர்கள் ஒருவருமில்லை. நிச்சயம் பரிட்சைக்காக ஜெபிக்கலாம். உழைக்க விரும்பாத சோம்பேரியின் ஜெபம் அவன் இருக்கும் வீட்டுக்கூரைக்கு மேல் போகாது. வேதத்தை மந்திரக்கோல் போல் பயன்படுத்துவதை விசுவாசிகள் கைவிட வேண்டும். அவ்வாறு பயன்படுத்துகிறவர்களின் பிரசங்கங்களையும். பத்திரிகைகளையும் நாடக்கூடாது. மாறாக, வேதத்தை ஜெபத்தோடு படித்துத் தியானிப்பது நல்லது. வேதவசனங்கள் வல்லமையுள்ளவைதான். அவற்றை முறையாக ஆவிக்குரிய விதத்தில் படித்துத் தியானித்துப் பயன்படுத்தும்போதே அவற்றின் வல்லமையை நாம் அனுபவிக்க முடியும்.

ஆதி சபை சந்தித்த கள்ளப் போதனைகள்

இரண்டாம் நூற்றாண்டில் அநேக கள்ளப்போதனைகள் தலைதூக்கி வளர்ந்தன. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நாசரீயர்கள் (Nazareans)

ஆரம்பத்தில் கிறிஸ்தவ திருச்சபை இப்பெயரால் அழைக்கப்பட்டது. பின்பு பவுலுக்குத் தொல்லைதந்த, ஆரம்பகால யூதர்களைப் பின்பற்றிய ஒரு கூட்டம் இப்பெயரில் அழைக்கப்பட்டது. கி.பி. 70களில் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு யூத கிறிஸ்தவர்கள் யோர்தானைத்தாண்டி பீலா என்ற இடத்தில் பாதுகாப்பு கருதி அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் வழி வந்தவர்கள் ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் கைவிட்டுவிட்ட யூத கலாச்சாரத்தையும், வழிமுறைகளையும் விடாப்பிடியாகப் பின்பற்றி வந்தனர். இவர்கள் மோசேயினுடைய நியாப்பிரமாணத்தை எழுத்து பூர்வமாகப் பின்பற்றியதோடு, விருத்தசேதனத்தையும், யூத சபத்து சம்பந்தமான ரபாய்களுடைய விதிமுறைகளையும் பின்பற்றி வந்தனர். இவர்களுடைய தாக்கம் பெருமளவில் இல்லாதபோதும் நான்காம் நூற்றாண்டு முடிவுவரை இவர்களைப் பின்பற்றியோர் இருந்து வந்துள்ளனர். இவர்களுடைய வழிமுறைகள் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணாயிருந்தன. கிறிஸ்தவம் யூத சமய சம்பந்தமான கட்டளைகளைத் தொடர்ந்து பின்பற்றும்படிப் போதிக்கவில்லை.

எபியனைட்ஸ் (Ebionites)

இவர்கள் நாசரீயர்களைப் பெருமளவிற்கு ஒத்துக்காணப்பட்டபோதும் பலவிதங்களில் அவர்களைவிடக் கடுமையாக யூதப்பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து வந்தனர். கிறிஸ்தவர்கள் அவற்றை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இவர்கள் பவுலினுடைய நிருபங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு சுவிசேஷ நூல்களில் மத்தேயுவை மட்டுமே ஏற்றுக்கொண்டனர். மத்தேயு சுவிசேஷத்தில் கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு பற்றிய போதனைகளையும், கிறிஸ்துவின் நித்திய குமாரத்துவம், கிறிஸ்து பிதாவுடன் எப்போதும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தையும் அகற்றிவிட்டனர். அடுத்து நாம் பார்க்கப்போகிற நொஸ்டிஸிசத்தைப் பின்பற்றியவர்களைப்போலவே இவர்களும் கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோதே ஆவி அவர்மேல் இறங்கி தெய்வீக அம்சத்தை அடைந்தாக நம்பினர். அத்தோடு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முன்பு ஆவி அவரைவிட்டு அகன்றதாகவும், வெறும் சாதாரண மனிதனே சிலுவைத்துன்பங்களை அனுபவித்து மரித்தாகவும் இவர்கள் போதித்தனர்.

நொஸ்டிஸிசம் (Gnosticism)

இதுவரை காணப்பட்ட எந்த போலிப்போதனைகளையும்விட இது மிகவும் ஆபத்தானதாகவும், கபடமுள்ளதாகவும் இருந்தது. இது அதிகமாகப் பரவத்தோடங்கி, மூன்றாம் நூற்றாண்டில் ரோம ராஜ்யத்தில் இருந்த அதிகம் படிப்பறிவு கொண்டிருந்த கிறிஸ்தவ சபைகளை ஏதோ ஒருவிதத்தில் பாதித்திருந்தது. இனிபலவிதமான போதனைகளைப் பின்பற்றி பல உருவங்களில் காணப்பட்ட இக்கள்ளப்போதனையின் சில குறிப்பிட்ட அம்சங்களைப் பார்ப்போம். இப்போதனை கிரேக்கம், எகிப்து, பேர்சியா, இந்தியா போன்ற தேசங்களில் காணப்பட்ட சமய தத்துவங்களைப் பின்பற்றி கிறிஸ்தவ வேதத்தோடு எந்தவித சம்பந்தமுமில்லாத முறையில் கிறிஸ்துவின் செயல்களைப் பற்றிய விளக்கங்களைத் தந்தனர். நொஸ்டிக் என்ற பதம் கிரேக்க வார்த்தையான கிநோஸிஸ் (ஞானம்) என்ற பதத்தில் இருந்து உருவானது. நொஸ்டிஸிசத்தைப் பின்பற்றியோர் தமக்குக் கிடைத்துள்ள ஞானத்தை எல்லாரும் பெற்றுக்கொள்ள முடியாததென்றும், ஆவியை அடைந்துள்ள சில விசேஷ மனிதர்கள் மட்டுமே அதை அடைய முடியும் என்றும் விளக்கினர். இவர்களுக்குக் கீழ் விசுவாசத்தை மட்டுமே கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். இவர்களால் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இக்குழுவில் ஏனைய நல்ல யூதர்களும், தீர்க்கதரிசிகளும் இருந்தனர். இவர்களைத்தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் சாத்தானின் பிடியிலும், தங்களுடைய சொந்த ஆசாபாசங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் என்று இப்போதனை விளக்குகிறது. இது பொருமளவுக்கு இந்து மத தத்துவங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

நொஸ்டிஸிசம், பொருளானது (Matter) முழுமையாக தீமையானது என்றும் இதை வெற்றி கொள்வதிலும், இல்லாமல் செய்வதிலுமே மனிதனின் இரட்சிப்பு தங்கியுள்ளது என்றும் போதிக்கின்றது. விசேஷ ஞானத்தைப் பெற்ற ஆவிக்குரியவர்களாலும், தமது ஆசாபாசங்களை அடக்கும் வல்லமை பெற்றவர்களாலும் மட்டுமே இது முடியும் என்று நொஸ்டிஸிசம் போதிக்கிறது. பொருளை அடக்கி வெற்றி கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்கள் எந்தவிதமான லௌகீக சுகங்களுக்கும் தம்மை ஒப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் கடுமையான கட்டுப்பாடுள்ள வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தனர். இயற்கைக்கு மாறான வாழ்க்கையை இவர்கள் வாழ முயன்றதால் தமது ஆசாபாசங்களை அடக்க முடியாமல் இழிவான ஒழுக்கக்கேடான காரியங்களிலும் இவர்கள் ஈடுபட நேர்ந்தது.

இவர்களில் மிகவும் திறமைவாய்ந்த நொஸ்டிக் போதனையாளர்களாக வெலன்டைனசும் (Valentinus), பெசிலிடசும் (Basilides) இருந்தனர். இவர்கள் இருவரும் இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். கி.பி. 170 இல் ரோமில் இறந்த மார்கியன் இன்னுமொரு முக்கிய போதனையாளராக இருந்தார். மார்கியன் வேதபூர்வமான கிறிஸ்தவத்தை அதிகம் பின்பற்றியபோதும் பழைய ஏற்பாட்டை நிராகரித்து, பழைய ஏற்பாட்டுக் கடவுள் இயேசு கிறிஸ்துவின் பிதா அல்ல என்று போதித்தார். மார்கியன் சபையில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டார். இருந்தபோதும் இம்மனிதனுடைய வாழ்க்கை காரணமாக பலர் இவரைப் பின்பற்றினார்கள்.

நொஸ்டிஸிசம் கடவுள் தன்னிறைவுடையவரென்றும், அறிந்து கொள்ளப்பட முடியாதவரென்றும் போதித்தது. காலம், மாற்றங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கடவுள் எந்தவித குணாதிசயங்களும் அற்றவர் என்றும் இது போதித்தது. பைதொஸ் என்ற பெயரால் தாம் அழைத்த கடவுள், தீமையானது என்று கருதி தாம் தள்ளி வைத்த பொருளை எப்படி உருவாக்கி அதனைத் தள்ளிவைத்திருக்க முடியும் என்பது இவர்களுக்கு பிரச்சனையாயிருந்தது.

நொஸ்டிக் போதனைகள் மிகவும் குழப்பமானதும், மனித சிந்தனைக் குதிரையோட்டத்தின் வேகத்தாலும் உருவானவை. கிறிஸ்தவ போதனைபோல் தோற்றமளிக்க முயலும் இப்போதனைகள் வேதத்தை தலைகீழாகத் திருப்பி பழைய ஏற்பாட்டுக் கடவுள் மிகவும் மோசமானவர் என்று போதிக்கின்றது. ஆதி சபையை இப்போதனைகள் பாதித்ததாலேயே அப்போஸ்தலன் யோவான் போன்றோர் தங்களுடைய நிருபங்களில் இதைத் தாக்கி எழுதியுள்ளனர். இதற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மொன்டமனிசம் (Montanism)

மொன்டனிசப் போதனைகள் தலைதூக்கியபோது திருச்சபையின் நிலமை அத்தனை சரியாக இருக்கவில்லை. நொஸ்டிஸிசம் கிறிஸ்தவத்தின் அடித்தளத்தை இக்காலத்தில் தாக்கிக் கொண்டிருந்தது. அப்போஸ்தலர்கள் எல்லோரும் மரித்துப் போய் திருச்சபையை அலங்கரித்துக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் அற்புத வரங்கள் படிப்படியாக நின்று போயிருந்தன. அநேக போலித் தீர்க்கதரிசிகள் தலை தூக்கியிருந்தனர். தீர்க்கதரிசனங்களை பலரும் சந்தேகக் கண்களோடு பார்க்கத் தொடங்கியிருந்தனர். திருச்சபை வல்லமையற்று வெறும் உலகப்பிரகாரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. முதல் நூற்றாண்டில் சபையை அலங்கரித்த ஆவியின் வல்லமைகொண்ட ஆத்மீக உணர்வுகள் மடிந்துபோய் சபை வலிமையற்று வெறும் சடங்குகளைப்பின்பற்றி வாழ்ந்து கொண்டிருந்தது. இக்காலத்தில் மொன்டனிசம் இத்தகைய சபை வாழ்க்கை முறைக்கு எதிராக குரல் கொடுத்து எழுந்தது. முக்கியமாக நொஸ்டிசிஸப் போதனைகளைத் தாக்கியது. பரிசுத்த ஆவியின் வல்லமையை இழந்து நின்ற சபைக்கு அதை நினைவுபடுத்த மொன்டனிசத்தைப் போன்ற ஒரு இயக்கம் அக்காலத்தில் தேவைப்பட்டபோதும், மொன்டனிசமும் நொஸ்டிஸிசத்தைப் போலவே மனித சிந்தனைகளில் உருவான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து கர்த்தருடைய வேதத்திற்கு சமாதி கட்டத் தொடங்கியது.

இவ்வியக்கம் மிசியாவின் ஆர்டபா என்ற இடத்தைச் சேர்ந்த மொன்டனஸ் என்ற மனிதனால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மனிதன் பரிசுத்த ஆவியிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்றிருப்பதாகக் கூறி, கட்டற்ற காட்டாறு போன்ற உணர்ச்சிகளுக்கு உணவிட்ட ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தினான். தம் கணவர்களைக் கைவிட்ட செல்வந்தர்களாக இருந்த இரு பெண்களும் இம்மனிதனுடன் சேர்ந்து கொண்டனர். மொன்டனஸ் ஏற்படுத்திய இவ்வியக்கம் கடந்த நூற்றாண்டுகளில் பிரிட்டனில் வாழ்ந்த எர்வர்ட் இர்விங்கின் கூட்டத்தைப் போலவும், நாசரீயர்களைப் போலவும், அமெரிக்காவில் தோன்றி எழுந்து இன்று எங்கும் பரவி இருக்கும் பெந்தகோஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தைப் போலவும் பெருமளவு தோற்றமளித்தது. மொன்டனிசம் பல கடுமையான சபை ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருந்தது. எவரும் இரண்டாம் தடவை திருமணம் செய்வதை இவர்கள் தடை செய்ததோடு, திருமண வாழ்க்கையைவிட திருமணம் செய்யாமல் வாழ்வதே மேன்மையானது என்றும் போதித்தனர். ஆணவம் அதிகம் தலைக்கேரி தங்களுடைய போதனைகள் கிறிஸ்துவின் போதனைகளைவிட மேன்மையானது என்றும் கூறத் தொடங்கினர். கார்த்தேஜைச் சேர்ந்த டேர்டூலியன் இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தது இவர்களுடைய பெரும் வெற்றியாக இருந்தது. இருந்தபோதும் இக்கூட்டம் ஆபிரிக்காவைவிட்டு கி.பி. 370 களிலும், ஏனைய இடங்களில் இருந்து ஆறாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்திலும் அடியோடு மறையத்தொடங்கியது.

இவர்கள் கடுமையான சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி பாவங்களை மன்னிக்கப்படக்கூடிய பாவங்கள், மன்னிக்கப்பட முடியாத பாவங்கள் என்று இருகூறுகளாகப் பிரித்தனர். இது ரோமன் கத்தோலிக்க சபை பாவங்களைப்பட்டியல் போட்டுப் பிரித்ததற்கு ஒப்பாயிருந்தது. கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் சபைத்தலைவர்கள் கிறிஸ்துவின் செயல்களைத் திருநியமங்களின் மூலம் இவ்வுலகில் தொடர்ந்து செய்து வருவதாகப் போதித்தனர். இதனால் சபைப் போதகர்கள் அசாதாரண மனிதர்களாக கருதப்பட்டனர். சிப்பிரியனின் காலத்திற்கு பின்பு சபைப் போதகர்கள் கிறிஸ்துவின் பலிகளைத் தொடர்ந்து இவ்வுலகில் செய்து வருகின்றனர் என்ற போதனை நிலைபெறத்தொடங்கியது.

மொன்டனிஸத்தைப் பின்பற்றியவர்கள் பிரசங்கத்தையும் அடியோடு சபைகளில் இருந்து அகற்றினர். உணர்வலைகளுக்குத் தூபமிடும் சகலவிதமான செயல்களையும் சபைகளில் அனுமதித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு பிரசங்கம் செய்வது சபைகளில் இல்லாமல் போயிருந்தது. இதன் காரணமாக சபைத் தலைவர்கள் தெய்வீக அம்சமுடையவர்களாகக் கருதப்பட்டு அவர்கள் செய்யும் பலிகளின் மூலமே கடவுளோடு மனிதன் தொடர்பு கொள்ள முடியும் என்ற எண்ணம் வளர்ந்து வந்தது. சபைக்கு வெளியில் இரட்சிப்புக்கு வழியில்லை என்ற கொள்கை இவர்களல் உருவானது. அப்போஸ்தலர் காலத்தில் காணப்பட்ட எளிமையான, வேதபூர்வமான, ஆவியின் வல்லமை கொண்ட கிறிஸ்தவம் இக்காலத்தில் பரவலாகக் காணப்படவில்லை. இத்தனை விரைவாக இரண்டாம் நூற்றாண்டிலேயே வேதபூர்வமான கிறிஸ்தவம் போலிப்போதனைகளின் அதி பயங்கரத்தாக்குதல்களுக்கு உள்ளானது.

மொன்டனிசப் போதனைகளைப் பார்க்கும்போது, நம்மால் இன்று நம்மத்தியில் இருக்கும் பரவசக்குழுக்களை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மொன்டனிசமே கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் ஆரம்பப் பள்ளி என்று கூறுவது வரலாற்று பூர்வமான உண்மை. இன்று பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தில் காணப்படும் பலவிதமான தவறான போதனைகளை அன்று மொன்டனிசத்தில் காணமுடிந்தது. சபைத் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும் அசாதாரண மனிதர்களாகக் கருதப்படும் வழக்கத்தையும் இன்று பரவசக்குழுக்களில் காணலாம். ரோமன் கத்தோலிக்கத்தோடு பரவசக்குழுக்கள் உவறாடுவதற்கு மொன்டனிசம் அன்றே வித்திட்டிருந்தது. பிரசங்கத்தை அலட்சியம் செய்து அதைக் கேலிக்கூத்தாக பரவசக்குழுக்கள் இன்று மாற்றியிருப்பதற்கும் மொன்டனிசம்தான் காரணம். வேதத்தைவிட சபைத்தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் இழிவான முறையையும் மொன்டனிசம் மறுபடியும் ஏற்படுத்தியது. இன்று பரவசக்குழுக்கள் அதைப்பின்பற்றி ஆத்துமாக்களை சீரழித்து வருகின்றனர். ஆத்துமாக்களின் உணர்ச்சிகளுக்குத் தூபம் போட்டு நவீன மொன்டனிஸ்டுகளாக பவனி வருகின்றனர். வரலாறு ஒப்போதும் பொய் சொல்லாது. வரலாறு படித்தவர்கள் இன்றைய பரவசக்குழுக்களின் தோற்றத்திற்கான காரணத்தை மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

அமெரிக்கா மீது தாக்குதல்!

செப்டெம்பர் 11, 2001ல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் விண்ணுயர்ந்து நின்ற இரட்டைக் கட்டடங்களை முற்றாகவும், பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் ஒரு பகுதியையும் பயணிகள் விமானத்தை வைத்துத் தாக்கி அழித்த அல் கையிடா இயக்கத்தின் தலைவன் பின் லாடன் மனித வர்க்கத்தில் பிறந்துள்ள ஒரு சமூகத்துரோகி. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை ஒரே நாளில் ஈவு இரக்கமின்றி அழித்துள்ள பின் லாடன் உலக நாடுகளை தீவிரவாதத்திற்கு எதிராக இன்று ஒன்று திரட்டியிருக்கிறான். அமெரிக்காவுக்கு இழைக்கப்பட்ட தீங்கு அனைத்து உலக நாடுகளுக்கு எதிராகவும் இழைக்கப்பட்டதாகும். உலகம் இன்று இன்னுமொரு கொடூரத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும், ஏனைய நாடுகளும் தொடுத்துள்ள போரினால் பின்லாடனுக்கு புகலிடமளித்த ஆப்கானிஸ்தானின் டெலிபான் ஆட்சியாளர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வர அமெரிக்கா கங்கனம் கட்டி அல் கையிடா இயக்கத்தில் மிஞ்சி இருப்பவர்கள் மீது சக்திமிக்க குண்டு மழை பொழிந்து ஆப்கானிஸ்தான் மலைப்பிரதேசங்களில் போரிட்டு வருகின்றது. கத்தியெடுத்தவன் கத்தியாலேயே மடிவான் என்ற பழமொழி அல் கையிடாவைப் பொறுத்தவரையில் சரியாகவே இருக்கின்றது.

இங்கிலாந்திலிருந்து போன பியூரிட்டன் பிதாக்கள் குடியேறி உருவாக்கிய அமெரிக்கா முன்னாள் தலைவர் கிளின்டன் காலத்தில் ஒழுக்கத்தில் கீழான நிலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது ஆட்சி மாறி ஜோர்ஜ் புஷ் தலைவராக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்கா சரியான நேரத்தில் தகுதியான ஒரு தலைவரை அடைந்திருக்கின்றது. அவரது செயல்களும், தலைமையும் இன்று அமெரிக்க மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளை முன்னின்று வழி நடத்தி வருவதுபோல் ஆத்மீகத்துறையிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்குமா என்று காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

பின் லாடனின் செயல் அமெரிக்காவை இன்று என்றுமில்லாதவகையில் உலுக்கி இருக்கிறது. இத்தகைய செயல் அமெரிக்காவில் நடந்தது இதுவே முதல் தடவை. அமெரிக்க மக்களை இது மிகவும் அசைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் இப்படியொரு சம்பவம் ஒருபோதும் நடக்க முடியாது என்று அமெரிக்கர்கள் நம்பிவந்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையைத் தவிடுபொடியாக்குவதுபோல் யாரும் நெருங்கமுடியாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த பென்சில்வேனியாவின் பென்டகன்மீதும், அமெரிக்காவின் இதயம் என்று கருதப்படும் நியூயோர்க் நகரின் வர்த்தகக் கோட்டையான மென்ஹேட்டன் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. நியூயோர்க்கின் விண்ணை பெருமிதத்துடன் அலங்கரித்துக் கொண்டிருந்த பல கட்டடங்கள் இன்று இல்லை. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட எண்பது நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்று உயிரோடில்லை. தங்கள் நாட்டில் நடந்துவிட்ட இக்கொடூர சம்பவம் அமெரிக்க மக்களின் நினைவைவிட்டு ஒருபோதும் அகலாது. அதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் அந்நாட்டு மக்களனைவரையும் என்றுமில்லாத வகையில் இன்று ஒன்று சேர்த்திருக்கிறது.

நாக்கில் நரம்பில்லாமல் சிலர் இன்று அமெரிக்காவுக்கு இது தேவைதான் என்ற முறையில் பேசி வருகின்றனர். அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல்கொள்கையே இதற்குக் காரணம் என்றும் இவர்கள் கூறுவர். அமெரிக்கா ஒருபோதும் தவறே செய்துவிடவில்லை என்று எவருமே கூறமாட்டார்கள். அதற்காக அமெரிக்கா உலக நாடுகளுக்கு செய்திருக்கும் நன்மைகளை எவரும் மறந்துவிடவோ, உலக நாடுகளின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அமெரிக்கா அளிக்கக்கூடிய பங்கையும் நாம் நிராகரித்துவிட முடியாது. உலகின் பல நாடுகளின் வறுமையைப்போக்க அமெரிக்க தன்னால் முடிந்ததை எப்போதும் செய்யத் தவறவில்லை.

உலக நாடுகள் மத்தியில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்க கிறிஸ்தவர்களும், சபைகளும் பெரும்பங்ளித்துள்ளனர். அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் இன்று உலகெங்கும் இயேசுவின் அன்பைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். பியூரிட்டன் பிதாக்களினால் உருவான அமெரிக்காவின் இறையியல் கல்லூரிகளில் பயின்று பயன்பெற்றவர்கள் அநேகர். அமெரிக்க கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியத்தினால் நன்மைகள் அடைந்த நாடுகள் அநேகம்.

இத்தனை நன்மைகளைச் செய்திருக்கும் அமெரிக்காவில் கிறிஸ்தவம் இன்று தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க மக்களின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க இது கர்த்தரால் அனுமதிக்கப்பட்டிருக்குமோ? என்று சிந்திக்காத அமெரிக்க கிறிஸ்தவர்கள் இல்லை. எது எப்படி இருந்தபோதும் நடந்த சம்பவம் இறை ஆண்மையுள்ள கர்த்தருக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. அமெரிக்க மக்களையும். ஏன் உலக மக்களனைவரையும் அவர் தன்னைப் பற்றி இச்சம்பவத்தின் மூலம் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கிறார். வாழ்க்கையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் பல கேள்விகளைக் கேட்க வைத்திருக்கிறார். இச்சம்பவத்தின் மூலம் அமெரிக்க மக்கள் மத்தியில் ஆத்மீக மனமாற்றம் ஏற்படுமானால் அது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பெரு நன்மையளிக்கும். இக்கொடுஞ்செயல் அப்பெரு நாட்டு மக்களைக் கர்த்தரின் மேன்மையையும், அவர் மட்டுமே அளிக்கக்கூடிய இரட்சிப்பையும் பற்றிச் சிந்திக்க வைக்குமானால் அது மேலானதே. அமெரிக்க மக்கள் இன்று அதிகமாக கடவுளின் பெயர்ச் சொல்லுகிறார்கள். அதிகமாக வேதப்புத்தகத்தை வாங்கி வாசிக்கிறார்கள். இதெல்லாம் உதட்டளவில் இருந்துவிடாமல் இதயபூர்வமானதாக இருக்குமானால் அமெரிக்க மக்களுக்கு பெரு விமோசனமுண்டு. கர்த்தர் அமெரிக்காவையும், அதன் தலைவர்களையும் இச்சோதனை மிகுந்த நேரத்தில் ஆசீர்வதித்து வழிநடத்தட்டும்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் புதிய-சுவிசேஷ இயக்கம்

இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தின் பெரும்பகுதி திருமறையின் அதிகாரத்தில் நம்பிக்கையற்றதாகக் காணப்படுகின்றது. திருமறைக்கு வெளியில் இருந்தும் சத்தியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் பின்பற்றி வரும் கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே சபைகளுக்கும், தனிநபர் ஊழியங்களுக்கும் தமிழர்கள் மத்தியில் குறைவே இல்லை. இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் ஊழியங்கள் திருமறைக்கு வெளியில் இருந்து வரும் தனிமனித அனுபவத்தின் அடிப்படையில் எதையும் சத்தியமாக ஏற்றுக் கொள்வதில் ஆச்சரியமில்லை. கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே குழுக்களைச் சாராதவர்களும் திருமறையின் மெய்த்தன்மை பற்றிய அறிவும், திருமறையில் ஆழ்ந்த நுண்ணிய ஞானமும் அற்றவர்களாக இருப்பதால் எதையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். திருச்சபைப் போதகர்கள் மத்தியில் வேதஞானம் மிகக் குறைவாக இருப்பதையும் பிரசங்கங்கள், கதா காலாட்சேயபங்களைப் போல காதைக் குளிர வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதையும் யாரால் மறுக்க முடியும்? சுவிசேஷ இயக்கம், சுவிசேஷ சபைகள் என்ற மாயத்தோற்றதில் தமிழ் கிறிஸ்தவ உலகம் முழுதும் இன்று புதிய சுவிசேஷ இயக்கத்தால் நிரம்பி வழிகின்றது. புதிய சுவிசேஷ இயக்கம் என்பது மெய்ச்சுவிசேஷ இயக்கத்திற்கு எதிரான, முரணான ஒரு கூட்டம். இது எப்படி உருப்பெற்றது, இதனால் நம்மத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன? என்று பார்ப்போம்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் “லிபரலிசம்”

1921ம் ஆண்டில் அமெரிக்க இறையியலறிஞரான கிரேசம் மேகன் “கிறிஸ்தவமும், லிபரலிசமும்” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் அவர் லிபரலிசம் எவ்வாறு அமெரிக்க கிறிஸ்தவ உலகைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று விளக்கியுள்ளார். இந்த லிபரல் கோட்பாடுகளே தமிழ் உலகிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு இன்று கிறிஸ்தவ சபைகளையும், ஊழியங்களையும் பெருமளவிற்குப் பாதித்து வருகின்றது.

லிபரலிசத்திற்கு விளக்கம் கொடுக்கும் கிரேசம் மேகன், “லிபரலிசம், கிறிஸ்தவத்தின் பொதுவான அம்சங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும், அதன் விசேஷ அம்சங்களான கிறிஸ்துவைப்பற்றிய போதனை, அவரது மரணத்தாலும், உயிர்த்தெழுதலாலும் ஏற்படும் மீட்பு ஆகியவை தற்காலிகமான அடையாளங்களே என்றும் தெரிவிக்கின்றது. அதாவது, கிறிஸ்தவத்தின் விசேஷ அம்சங்களைப்பற்றிய விஞ்ஞான ரீதியிலான எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதன் பொதுவான அம்சங்கள் மட்டுமே கிறிஸ்தவத்தின் சாராம்சமாகக் கருதப்பட வேண்டுமென்று லிபரல் இறையியலாளன் கருதுகிறான்.” என்று கூறுகிறார்.

அத்தோடு, கிறிஸ்தவ திருமறை போதிக்கும் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் அனுபவம் மட்டுமே முக்கியமானது என்றும், அதன் வரலாற்று அம்சங்களைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது என்றும் போதிக்கிறது லிபரலிசம். ஆகவே, லிபரல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களைப் பொறுத்தவரையில் திருமறையின் பொதுவான போதனை மட்டுமே சத்தியம்; அதன் ஏனைய போதனைகளைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இதிலிருந்து திருமறையைப்பற்றி வரலாற்றுக் கிறிஸ்வம் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு மாறான எண்ணங்களை லிபரலிசம் கொண்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

லிபரலிசம், திருமறையைக் கர்த்தருடைய சர்வ அதிகாரம் கொண்ட ஒரே வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. திருமறையைக் குறைபாடற்ற, முற்றும் நிறைவான, எக்காலத்திற்கும் போதுமான தேவனுடைய வெளிப்பாடாக லிபரலிசம் கருதுவதில்லை. ஆகவே, கிறிஸ்தவத்தைப்பற்றிய அதன் அணுகுமுறையும் வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு மாறானதாக இருக்கின்றது. திருமறை போதிக்கும் கிறிஸ்தவ அனுபவத்தை ஏற்றுக்கொள்ளும் லிபரலிசம், அவ்வனுபவம் திருமறை போதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை முற்றாக நிராகரிக்கின்றது. அதாவது, கிறிஸ்தவ அனுபவம்தான் முக்கியமே தவிர, ஒருவர் கிறிஸ்துவின் இறப்பைப்பற்றியும், உயிர்த்தெழுதலைப்பற்றியும் திருமறை போதிக்கும் அதே நம்பிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமில்லை என்பது லிபரலிசத்தின் போதனை.

இப்போதனையினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை நாம் ஆராய வேண்டும். இதன் மூலம் திருமறையின் மெய்த்தன்மையை லிபரலிசம் நிராகரிக்கின்றது. அதன் முழு அதிகாரத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவ அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் லிபரலிசம் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அது ஒரு போலியான, திருமறைக்கு மாறான ஒரு அனுபவத்தை கிறிஸ்தவத்தின் பேரில் அறிமுகப்படுத்துகிறது. மெய்யான கிறிஸ்தவ அனுபவம், எப்போதும் திருமறை போதிக்கும் கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் ஏற்படும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அமையும், அதாவது, கிறிஸ்துவைப் பற்றி திருமறை போதிக்கும் சத்தியங்களுக்கு முரணான எந்த அனுபவமும் கிறிஸ்தவ அனுபவமாக இருக்க முடியாது. அனுபவத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருமறையின் போதனைகளை நிராகரித்தால் அது சாத்தானின் வழிகளில் போவதற்கே துணைபுரியும். இதைத்தான் லிபரலிசம் செய்து வருகிறது.

கிறிஸ்தவ அனுபவம் பழைய, புதிய ஏற்பாட்டுப் போதனைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். அவ்வனுபவத்தைக் கர்த்தர் தனது வார்த்தையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே அளிக்கிறார் (ரோமர் 10). கர்த்தருடைய வார்த்தை மட்டுதே இரட்சிப்பைப் பற்றிய நற்செய்தியை அளிக்கிறது. அதனை வேறு எதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது. அதுவும், ஆவியானவர் அந்நற்செய்தியையே நமது மனந்திரும்புதலுக் கேதுவாகப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவ இரட்சிப்பின் அனுபவத்தை வேறு எதன் மூலமாகவும் அளிப்பதில்லை. திருமறையின் அதிகாரத்திற் கெதிராகப் பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் செயல்படுவதில்லை. திருமறை போதிக்கும் இச்சத்தியங்களுக்கெல்லாம் முரணான போதனைகளையே லிபரலிசம் அளிக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம், லிபரலிசம் திருமறையில் எந்தக்குறைபாடோ, தவறோ இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான். அதன் வரலாற்று அம்சங்கள் நம்பத்தகுந்தவகையில் இல்லை என்ற எண்ணத்தால் அவற்றை உவமைகளாகக் கருதி விளக்கங் கொடுக்க முயல்கிறது லிபரலிசம். வேதம், நாம் நம்பிக் கடைப்பிடிக்க வேண்டிய தவறிழைக்கவியலாத கர்த்தரின் கட்டளைவிதி என்ற எண்ணமே லிபரல் கோட்பாட்டாளனிடத்தில் இல்லை. இதனால், லிபரல் இறையியலாளன் கிறிஸ்துவையும், மனிதனையும், பாவத்தையும், திருமறையின் ஏனைய சத்தியங்களையும் எப்போதும் சந்தேகக் கண்களுடனேயே ஆராய்றி£ன். லிபரல் இறையியலாளனுடைய அடிப்படை அணுகுமுறையே (Presupposition) தவறானதாக இருப்பதால் அவனைப் பொறுத்தவரை திருமறையைச் சந்தேகிப்பது அவனுக்குத் தவறானதாகப்படவில்லை.

இறையியல் கல்லூரிகளில் லிபரலிசம்

இன்று நம்மத்தியில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் லிபரல் கொள்கைகளின் அடிப்படையிலேயே வருங்கால போதகர்களுக்கு வேத ஞானம் வழங்கப்படுகின்றது. திருமறையைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதிலும், தங்களுடைய ஆன்மீக வாழ்விற்கு அழிவைத்தேடிக் கொள்வதிலுமே நான்கு வருடங்களை வீணாக்கிக் கொள்ளும் அநேக இளம் வாலிபர்களை இவ்விறையியல் கல்லூரிகளில் காணலாம். இந்து மதத்தை ஒரு முக்கிய பாடமாகவும், பிற மதத்தினரோடு கலந்துரையாடல் (Diologue) செய்வதை ஒரு முக்கிய சுவிசேஷ முறையாகவும் பல கல்லூரிகள் போதித்து வருகின்றன. இதற்குச் சான்றாக தயானந்தன் பிரான்ஸிசின் “தமிழ்ச் சைவம்”, குலொஸ்டமாயரின் “கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இந்திய இறையியல்” ஆகிய நூல்களைக் கூறலாம். இன்றைய தமிழக, இந்திய இறையியல் சிந்தனைப் போக்கை இந்நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

மேலும், இக்கல்லூரிகள் வேதப்படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அமெரிக்காவின் மெக்காவரன் (Donald McGavran) ஏற்றுமதி செய்த சபை வளர்ச்சி முறைகளுக்கும் (Church Growth Principles), சமய சமரசக் கோட்பாட்டிற்கும் (Ecumenism) முக்கியத்துவம் கொடுத்து இறையியல் போதனைகளை அளிப்பதால் வருங்காலப் போதகர்கள் அத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே போதக ஊழியத்தை ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மெக்காவரனின் போதனைகள் நற்செய்தி ஊழியத்தில் சூழிசைவுக் கோட்பாட்டை (Contextualisation) வற்புறுத்துகிறது. இப்போதனை, நற்செய்தி ஊழியக்காரர் தாம் ஊழியம் செய்யும் மக்கள் காணப்படும் காலச்சாரப் பண்பாடு, சமய நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகும் விதத்தில் கிறிஸ்தவ போதனையை அளித்து சபை நிறுவ ஊக்குவிக்கிறது. மெக்காவரனின் போதனைகள் Cross-cultural ministryயையும் பெரிதும் வற்புறுத்துகிறது. இம்முறைகள் திருமறையின் சத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநலவாதத்தின் (Humanism) அடிப்படையில் அமைந்த வழிகளின் மூலம் கர்த்தருக்கு ஆள் சேர்ப்பதையே தீவிரமாக வலியுறுத்துகின்றன. திருமறை, இவ்வாறான போதனைகளை அளிக்கவில்லை. கிறிஸ்து எங்குமே Cross-cultural ministry பற்றிப் போதிக்கவில்லை. அந்நிய மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு நாம் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். அவர்கள் மத்தியில் திருமறைக்கு எதிரானதாக அமையாத பழக்க வழக்கங்களை அங்கீகரிக்க வேண்டியதும் அவசியதே (உதாரணம்: வீட்டிற்குள் நுழையுமுன் காலணியை வெளியில் வைத்தல் போன்றவை). இதற்கு மேலாக எதையும் செய்யுமாறு வேதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மெக்காவரனின் போதனைகள் சூழிசைவுக் கோட்பாடு என்ற பெயரில் வேதம் அங்கீகரிக்காத அந்நிய மத, பண்பாட்டு வழக்கங்களைப் பயன்படுத்தி நற்செய்தி ஊழியம் செய்வதை வலியுறுத்துகிறது. இப்போதனைகளுக்கே இன்று இந்திய இறையியல் கல்லூரிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்து மதத்தின் மூலமும், திராவிட சமயத்தின் மூலமும் அம்மதங்களை விட்டு விலகாமலேயே கிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம் என்ற போதனை இன்று சூடுபிடித்திருப்பதற்கு மெக்காவரன் போன்றோரின் போதனைகள் இறையியல் கல்லூரிகளையும், திருச்சபைகளையும் ஊடுருவியிருப்பதே காரணம்.

தமிழ் கிறிஸ்தவ உலகின் சமய சமரசப் போக்கு

லிபரலிசம் மட்டுமல்லாது இன்றைய தமிழ் கிறிஸ்தவ உலகை சமயசமரசக் கோட்பாடும் (Ecumenism) பாதித்துள்ளது. ஐக்கியத்தின் பெயரில் எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் கிறிஸ்தவ திருச்சபைகள், நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் போக்கு பரவலாகக் காணப்படுகின்றது. கிறிஸ்தவ இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிறிஸ்தவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சுவிசேஷ ஊழியத்திற்கு இடைஞ்சலை உருவாக்கும் என்ற மனப்பான்மை தமிழ் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோரின் இரத்தத்தில் ஊறிக்காணப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

மேலை நாடுகளில் உருவாகித் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு இறக்குமதி செய்யப்பட்ட லிபரலிசத்தைப்போன்ற இன்னுமொரு போலித்தனமான இறையியல் நம்பிக்கையே சமயசமரசக் கோட்பாடு ஆகும். இது கிறிஸ்தவ சமயக் குழுக்களுடன் ரோமன் கத்தோலிக்க மதத்தையும் இணைத்தே பார்க்கிறது. தமிழ் கிறிஸ்தவ சமயக்குழுக்களின் அநேகமானவை இன்று ரோமன் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கணிக்கின்றன.

லிபரலிசம் திருமறையில் கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததால், இறையியல் போதனைகளற்ற ஒரு போலிச்சமயம் கிறிஸ்தவத்தின் பெயரில் உருவாகி சமய சமரசப்போக்கிற்கும் எந்தத்தடையும் இருக்கவில்லை. திருமறையில் நம்பிக்கைவைத்து இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதே சமய சமரசப்போக்கிற்கு ஆபத்து ஏற்படுகின்றது. தமிழ் கிறிஸ்தவ உலகின் அனைத்து சமயக்குழுக்களும், நிறுவனங்களும் இன்று சமய சமரசத்தை வற்புறுத்தி வருகின்றன.

இறையியல் போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, அவற்றை வலியுறுத்தி அவற்றின் அடிப்படையில் ஐக்கியத்தை நாடக்கூடாது, ஐக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் எந்த இறையியல் கோட்பாட்டையும் சக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது, திருமறையிலிருந்து ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத குறைந்தபட்ச போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பவைகளே சமய சமரச இயக்கத்தின் போதனை.

ஏற்கனவே நாம் விளக்கிய மெக்காவரனின் திருச்சபை வளர்ச்சிக் கோட்பாடுகள் இத்தகைய சமய சமரசக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவையே. இது ஒரு நாட்டின் மத, கலாச்சார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் சபைகளை அமைப்பதை வலியுறுத்துகிறதே தவிர திருமறைத்கோ அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கோ மதிப்பளிப்பதில்லை. ரோமன் கத்தோலிக்க சபை, லிபரலிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்படும் சமயக்குழுக்கள், கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே ஊழியங்கள் அனைத்தையும் எந்தவித வேறுபாடுமின்றி கிறிஸ்தவ சபைகளாக ஏற்றுக்கொள்ளும் சமய சமரசப்போக்குடைய இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்திய திருச்சபை வளர்ச்சி இயக்கமும் நடை போடுகின்றது (Indian Church Growth Movement).

கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே இயக்கங்கள்

தமிழ் கிறிஸ்தவ உலகை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே இயக்கங்களை நாம் புதிய சுவிசேஷ இயக்கத்தின் ஒரு பகுதி என்று நாம் தயங்காமல் இனங்கண்டு கொள்ள முடியும். வேதத்தின் சர்வ அதிகாரத்தை இவ்வியக்கங்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. கர்த்தர் தொடர்ந்து தனிமனிதனுக்கு தனது சித்தத்தை வெளிப்படுத்துகிறார் என்று கூறி கர்த்தரின் வெளிப்படுத்தல் வேதம் முழுமையாகக் கொடுக்கப்பட்டதுடன் முடிவடைந்துவிட்டது என்பதை இவ்வியக்கங்கள் மறுதலிக்கின்றன. வெறும் மனித அனுபவத்திற்குத் தொடர்ந்து தீனி போட்டு வேதவிரோதமான செயல்களை இவ்வியக்கங்கள் செய்து வருகின்றன. ஆராதனை என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் கர்த்தருக்கு இவர்கள் அளிக்கும் அந்நிய நெருப்பு வேத சத்தியங்களை இவர்கள் ஆராதனையில் பின்பற்றுவதில்லை. வேத ஆராய்ச்சிக்கும், தெளிவான வேத பிரசங்கத்திற்கும் இவர்கள் இயக்கத்தில் இடமில்லை. தமிழ்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு பெருங்குழப்பத்தையும், மயக்கத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கும் இவ்வியக்கங்கள் புதிய சுவிசேஷ இயக்கத்தின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் பலரிருப்பதே தமிழ்க்கிறிஸ்தவ உலகில் நிலவும் குழப்ப நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

புதிய சுவிசேஷ இயக்கத்தின் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவதெப்படி?

  1. இதற்கு எந்தவிதமான குறுக்கு வழியும் இல்லை. நாம் “மறுபடியும் வேதம்” என்று குரலெலுப்பி பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளைப்போல வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும், அதிலிருப்பவற்றைப் பிரசங்கிப்பதிலும் ஆர்வமும், ஊக்கமும் காட்ட வேண்டும். வேதத்திற்கு மதிப்பளிக்காதவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்கக்கூடாது. வேதத்தை வைத்தே வேதத்திற்கு எதிராக செயல்படும் “பிலேயாம்” களை இனங்கண்டு அவர்களுடைய முகத்திரையைக் கிழிக்க வேண்டும். பச்சோந்திகள் நிரம்பி வழியும் நம் சூழ்நிலையில் உண்மையோடும், நேர்மையோடும் நடந்து கொள்ள வேண்டும்.
  2. போதகர்கள் வேதத்தை நன்றாகப் படித்து பிரசங்கங்களும், போதனைகளும் வேதபூர்வமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேதத்திற்கு மட்டுமே நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள் என்பது உங்களுடைய சபை மக்களுக்குத் தெரியவேண்டும். வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து பிரசங்கிக்காதவர்களை சபையின் பிரசங்க மேடைப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு சமூகத்தில் எத்தனை மதிப்பு இருந்தபோதும் அவர் வேதபூர்வமாக பிரசங்கிக்காதவராக இருந்தால் நமது சபைகளில் இடமளிக்கக்கூடாது.
  3. நமது சபையில் ஊழிய வாஞ்சையுடையவர்களை ஏதாவதொரு இறையியல் கல்லூரிக்கு அனுப்பிவிடாமல் சபையில் போதித்து, ஊழியத்தில் பயன்படுத்தி வளர்க்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் 90%மான இறையியல் கல்லூரிகள் புதிய சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவை. நமது இளைஞர்களை அங்கே அனுப்பி அவர்களது வாழ்க்கையையும் ஊழியத்தையும் நாமே கெடுத்தால் கர்த்தர் நம்மை சும்மா விடமாட்டார். அக்கல்லூரிகளுக்குப் போய் புதிய சுவிசேஷ இயக்க போதனைகளை பெற்றுடிவருகிறவர்கள் ஆத்துமாக்களுக்கு சத்தியத்தை அல்ல விஷத்தையே கொடுக்க முடியும். சீர்திருத்தப் போதனைகளை விசுவாசிக்கும் சபைகளும் போதனைகளும் தமிழ் மக்கள் மத்தியில் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சமய சமரச இறையியல் கல்லூரிகளை முற்றாக நிராகரிக்க வேண்டும். நமது மக்களுக்கு அவற்றின் சுயரூபத்தை வெளிப்படுத்தி அவற்றால் ஏற்படும் ஆபத்தை உணர்த்த வேண்டும். இதைச் செய்யத் துணிவில்லாத போதகன் சீர்திருத்தப் போதகனாக இருக்க முடியாது.
  4. நீங்களும் சபை மக்களும் சத்தியத்தில் நிலைத்திருக்க சபையாக விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொண்டு இதைத்தான் நாம் விசுவாசிக்கிறோம் என்று ஊரறிய வெளிப்படுத்த வேண்டும். 1689 விசுவாச அறிக்கையும், வினாவிடை போதனைகளும் சபை சத்தியத்தில் ஊறி வளரப் பெருந்துணை செய்யும். அவற்றை சபை மக்களுக்கு தொடர்ந்து போதிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் சபையின் அங்கத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சபையில் அங்கத்தவர்களாக சேர்பவர்கள் இவற்றை படித்து விசுவாசித்து, ஏற்று அங்கத்தவர்களாக சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய சபை மக்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு போதகன் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. புதிய சுவிசேஷ இயக்கத்தை நமது விசுவாச அறிக்கையும், வினா-விடைப்போதனைகளும் முற்றாக நிராகரிக்கின்றன. இவற்றை ஏற்க மறுப்பவர்களோடும், இவை இல்லாமல் சபை நடத்த முடியும் என்று பேசுபவர்களோடும் நாம் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாம் விசுவாசிப்பதை அறிக்கையிடவும், வெளிப்படையாக சொல்லவும் மறுப்பவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள். அவர்களால் நமது சபைகளுக்கு எந்தப்பிரயோசனமும் இருக்க முடியாது.
  5. போதகர்களும், உதவிக்காரர்களும் நேர்மையாகவும், உண்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இன்று சபைகளில் அத்தகைய ஊழியக்காரர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கின்றது. சத்தியத்திற்காக உயிர் கொடுத்து உழைப்பவர்கள் நாம் என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ளும்படி நமது வாழ்க்கையும், ஊழியமும் இருக்க வேண்டும். இப்படி வாழ முயல்வதால் அநேகர் நம்மை வெறுக்கலாம், சபைக்கு வருவதை பலர் நிறுத்திக்கொள்ளலாம். வெளியில் நம்மை அநேகர் குறை கூறுவார்கள். ஆனால், அத்தகைய ஊழியக்காரர்களையே கர்த்தர் நேசிக்கிறார். அத்தகைய ஊழியம் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 4)

படைப்பு

எழுதியவர்: டேவிட் சான்ஸ்கி
தமிழில்: ஆசிரியர்

  1. ஆதியிலே கடவுளாகிய பிதா, குமாரன், ஆவி ஆகியோர் தம்முடைய மகிமையுள்ள நித்திய வல்லமை, ஞானம், நற்குணம் ஆகியவற்றின் வெளிப்பாட்டிற்காக ஆறு நாட்களில் உலகத்தையும் காணக்கூடியதும், காணமுடியாததுமான அதிலுள்ள அனைத்தையும் படைக்கத் திருவுளங்கொண்டார். அவையனைத்தும் மிக நல்லவையாக இருந்தன.

யோவான் 1:2-3; எபிரேயர் 1:2; யோபு 26:23; ரோமர் 1:20; கொலோசேயர் 1:16; ஆதியாகமம் 1:31.

  1. கடவுள் மற்ற எல்லா படைப்புயிர்களையும் படைத்தபின்பு, அறிவுள்ளதும் அழியாததுமான ஆன்மாக்களோடு, ஆணும் பெண்ணுமாக மனித இனத்தை அவருக்காக வாழ வேண்டிய வாழ்க்கையைக் கொடுத்துப் படைத்தார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, அறிவையும், நேர்மையையும், மெய்யான பரிசுத்தத்தையும் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் வல்லமையுடையவர்களாய் இருந்தார்கள். அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஆதியாகமம் 1.26, 27; 3:6; பிரசங்கி 7:29; ரோமர் 2:14, 15.

  1. இருதயத்திலே எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், நன்மை தீமை அறியக்கூடிய மரத்திலிருந்து எதையும் உணவாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. இக்கட்டளையைக் கடைப்பிடித்தவரை அவர்கள் கடவுளோடு ஆனந்தமாக ஐக்கியத்தை அனுபவித்ததுடன் எல்லாப் படைப்புயிர்கள்மீதும் தன்னாதிக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஆதியாமம் 2:17; 1:26, 28.

படைத்தவர் – விசுவாச அறிக்கை முதலில் படைப்பைப் பற்றி விளக்காமல் நம்மைப் படைத்தவரைப் பற்றி விளக்குகிறது. நம்மைப் படைத்தவர் திரியேகக்கடவுளாயிருக்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. பிதா அனைத்தையும் படைத்ததுமல்லாமல் அவற்றைத் தனது குமாரன் மூலமாக படைத்தார். இதையே யோவான் 1:1-3 வரையிலுள்ள வசனங்கள் போதிக்கின்றன. குமாரன் பிதாவின் ஏஜன்டாக இருந்து அனைத்தையும் படைத்தார். படைப்பில் பிதாவுடன் நேரடியாக ஈடுபட்டிருந்தார் குமாரன்.

பரிசுத்த ஆவிக்கும் படைப்பில் பங்கிருந்தது. ஆதியாகமம் 1:2 வசனம் பரிசுத்த ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்று கூறி பரிசுத்த ஆவி படைப்பில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக் காட்டுகின்றது. அதனால்தான் யோபுவால், தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சரப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று (யோபு 26:13) என்று கூற முடிந்தது. எலிகூ, தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வ வல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது (யோபு 33:4) என்கிறார்.

படைப்பிற்கான காரணம்: விசுவாச அறிக்கை கர்த்தர் ஏன் அனைத்தையும் படைத்தார் என்பதற்கான காரணத்தையும் தெரிவிக்கிறது. மனிதனுடைய நன்மைக்காக மட்டும் அவர் அனைத்தையும் படைக்கவில்லை. தன்னுடைய மகிமைக்காகவும், தனது வல்லமையும், ஞானமும், நன்மைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அவர் அனைத்தையும் படைத்தார். உலகத்தையும் அதில் காணப்படும் அனைத்தையும் பார்க்கும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து அவை அனைத்தையும் படைத்த கர்த்தரின் மகிமையும் வல்லமையும் நமக்குப் புரிகிறது. அதனால்தான் பவுல் ரோமர் 1:20இல், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை என்கிறார்.

படைப்பு – கர்த்தர் அனைத்தையும் படைத்தார் என்று விசுவாச அறிக்கை சொல்லும்போது, அவர் எல்லாவற்றையும் எவருடைய துணையுமில்லாமல், எதனைப்பயன்படுத்தியும் படைக்கவில்லை என்று சொல்கிறது. கர்த்தர் தனது படைப்பை வெறுமையில் இருந்து உருவாக்கினார். மண்ணை உருவாக்குவதற்கு அவருக்கு எதுவும் தேவைப்படவில்லை. ரோமர் 4:17, கர்த்தர் இல்லாமவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவராயிருக்கிறார் என்கிறது. இவ்வுலகமும், அதிலுள்ளவைகளும் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட எதுவும் அதற்கு முன்பு இருக்கவில்லை. கர்த்தர் பேசியபோது அவை உருவாயின. எபிரேயர் 11:3, விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (சங்கீதம் 33:6, 8, 9).

அத்தோடு வேதம் கர்த்தர் உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தார் என்று சொல்கிறது (அப்போஸ். 17:24). கர்த்தர் மட்டுமே அனைத்தையும் படைத்தார். அவரோடு இணைந்து வேறு என்தக் கடவுள்களும் படைப்பில் ஈடுபடவில்லை (கொலோ. 1:16).

படைப்பின் நன்மை – கர்த்தர் அனைத்தையும் படைத்தபோது அவர் அவற்றைப் பார்த்து நல்லது என்றார். ஆதியாகமம் 1:31, தேவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிருந்தது என்கிறது. அவை அவரது படைப்பு அனைத்தும் நல்லவையாக இருந்தன. ஆணும், பெண்ணுமாக சிருஷ்டிக்கப்பட்ட நமது முதல் பெற்றோரும் நல்லவர்களாக, பாவமற்றவர்களாக இருந்தனர்.

படைப்பின் சிகரமாக மனிதன் – விசுவாச அறிக்கையின் இவ்வதிகாரத்தின் இரண்டாம் பாரா படைப்பின் சிகரமான மனிதனின் சிருஷ்டியைப்பற்றி விளக்குகிறது. மனிதனின் படைப்பைப்பற்றிய பல விபரங்களை வேதம் நமக்குத் தருகின்றது. (1). கர்த்தர் எல்லாவற்றையும் படைத்தபின்பு மனிதனைக் கடைசியாகப் படைத்தார். படைப்பின் இறுதி நாளில், மிருகங்கள் அனைத்தையும் படைத்தபின்பு கர்த்தர் மனிதனைப் படைத்தார் (ஆதியாகமம் 1:24-27). அத்தோடு, கர்த்தர் மனிதனை வித்தியாசமான முறையில், தனித்துவமான விதத்தில் படைத்தார். மோசே இதைப்பற்றி சொல்லுகிறான், தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7).

கர்த்தர் மனிதனைப் படைத்தபோது அவனுடைய ஜீவனை அவனுக்குள் ஊதினார் என்று வாசிக்கிறோம். அதன் பிறகு அவன் ஜீவாத்துமாவாக மாறினான். மிருகங்களும் ஒரு விதத்தில் சிந்திக்கக்கூடியவையாக இருந்தபோதும், மனிதனுக்கு உள்ளதுபோல அவற்றிற்கு ஆத்துமா இல்லை. மனிதனால் மட்டுமே கர்த்தரைப் புரிந்து கொள்ளவும், அவரோட உறவாடவும் முடியும். மனிதன் மட்டுமே அழிவில்லாத ஆத்துமாவைக் கொண்டிருக்கிறான். மிருகங்கள் அழிந்து இல்லாமல் போகின்றன. கர்த்தர் மனிதனுக்கு அழிவில்லாத ஆவியைக்கொடுத்திருப்பதால் இறந்தபிறகும் மனிதன் வாழக்கூடியவனாக இருக்கிறான். இதனால்தான் பிரசங்கி 12:7 இல், “மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்தில் நினை” என்று கூறுகிறான். இதனால்தான் இயேசுவும், சிலுவையில் இருந்த கள்ளனைப்பார்த்து. “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் (பரலோகத்தில்) என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்” என்றார் (லூக்கா 23:43). விசுவாச அறிக்கை, “மனிதனுக்கு கடவுள் சிந்திக்கக்கூடியதும், அழிவற்றதுமான ஆவியைக் கொடுத்திருக்கிறார்” என்று விளக்குகிறது. அதனால், மனிதன் இவ்வுலகில் கர்த்தரை அறிந்து அவரோடு ஐக்கியத்தில் வந்து, இறந்தபிறகு தொடர்ந்து நித்தியத்திற்கும் புதிய உலகத்தையும், புதிய வானங்களையும் கொண்டமைந்து வரப்போகிற தேவ இராஜ்யத்தில் அவரோடு அவ்வைக்கியத்தில் இருக்க முடிகிறது. விசுவாச அறிக்கை சொல்லுகிறதுபோல், “மனிதன் கொண்டுள்ள சிந்திக்கக்கூடியதும், அழிவற்றதுமான ஆவி” கர்த்தர் “அவனுக்காக ஏற்படுத்தியிருக்கிற வாழ்க்கையை” வாழ வைக்கிறது.

ஆணும் பெண்ணும் – ஆதியாகமம் 1:27, கர்த்தர் மனிதனை ஆணாகவும், பெண்ணாகவும் படைத்தார் என்று கூறுகிறது. ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம் கர்த்தர் மனிதனை எவ்வாறு படைத்தார் என்று விளக்கமாகக் கூறுகிறது. அப்பகுதி கர்த்தர் மனிதனை மண்ணில் இருந்து படைத்ததாகவும் (7). பெண்ணை மனிதனின் விலாவிலிருந்து அவர் எடுத்த எலும்பைக் கொண்டுபடைத்ததாகவும் விளக்குகிறது (20-23). ஆணும், பெண்ணும் தேவனுடைய சாயலைக்கொண்டு அவருடைய படைப்பின் சிகரமாக விளங்கினர். அதுமட்டுமல்லாமல் ஆதியாகமம் கர்த்தர் ஆணையே பெண்ணுக்குத் தலையாகப் படைத்தார் என்றும் போதிக்கிறது. இதையே பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 11:3, 8-9 பகுதியில் மேலும் விரிவாக விளக்குகிறார். இப்பகுதி ஆண் பெண்ணுக்குத் தலைவனாக இருப்பதாகவும், பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. அத்தோடு, பெண் அமைதியாக இருந்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேதம் விளக்குகிறது. பவுல், தான் பெண் ஆணுக்குப் போதிக்கிற ஊழியத்தையும், அவன் மேல் அதிகாரம் செலுத்தும்படியும் நியமிக்கவில்லை என்று 1 தீமோத்தேயு 2:11-13ல் விளக்குகிறார். இதனால், ஆண் பெண்ணைவிட மேலானவன் என்றும், சிறப்பானதொரு சிருஷ்டி என்றும் பொருள் கொள்ளக்கூடாது. இருவருமே தேவனின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரையும் படைத்தபோது கர்த்தர் ஆணே தலைமைப் பொறுப்பைக் கொண்டிருக்குமாறு படைத்தார்.

சரீரமும் ஆத்துமாவும் – விசுவாச அறிக்கை ஆணும், பெண்ணும் “அறிவுள்ளதும் அழியாததுமான” ஆன்மாக்களோடு படைக்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. மனிதனின் ஆத்துமா அழிவில்லாததாக இருப்பதால் அவன் மகிமையின் நிலையிலோ அல்லது தண்டனையை அனுபவிப்பவனாகவோ நித்தியத்திற்கும் வாழ்வான் (அதிகாரம் 31ம் 32ம்). இதையே இயேசு மத்தேயு 10:28 இல் உணர்த்துகிறார்.

மனிதன் சரீரத்தை மட்டுமோ அல்லது ஆவியை மட்டுமோ கொண்டிருக்கவில்லை. மனிதன் சரீரம், ஆவி ஆகிய இரண்டையும் கொண்டிருக்கிறான். படைக்கப்பட்டவுடன் மனிதன் ஜீவாத்துமாவாக இருக்கவில்லை. கர்த்தர் அவனுடைய சரீரத்துடன் ஆவியை இணைத்தபோதே அவன் ஜீவாத்துமாவாக மாறினான் (ஆதியாகமம் 2:7). 1). வேதம் நமது சரீரமும், ஆவியும் இரட்சிப்பைப் பெறக்கூடியதாக படைக்கப்பட்டுள்ளன என்று போதிக்கிறது (ரோமர் 8:23). 2) வேதம், நமது சரீரமும், ஆவியும் கடவுளோடு ஐக்கியத்தை அனுபவிக்கக் கூடியதாக உள்ளன என்று போதிக்கின்றது (1 கொரிந்தியர் 6:13, 15). அத்தோடு, வேதம் நமது சரீரத்தை பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கூறுகிறது (1 கொரிந்தியர் 6:19). கடவுள் தான் மனிதனுடைய சரீரத்தை மிகவும் உயர்வானதாகக் கருதுவதால் நாமும் அதை அப்படியே நடத்த வேண்டும்.

விசுவாச அறிக்கை மனிதனை சரீரம், ஆத்துமா, ஆவி (Body, Soul – Spirit) என்று மூன்று கூறுகளாகப் பிரிக்காமல் சரீரம், ஆத்துமா (Body – Soul) என்ற இரண்டு கூறுகளாக மட்டும் பார்ப்பதேன்? என்ற கேள்வி நிச்சயம் எழக்கூடும். மனிதன் சரீரம், ஆத்மா என்ற இரு கூறுகளைக் கொண்டவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பதாக வேதம் போதிப்பதால் விசுவாச அறிக்கையும் அதன்படியே விளக்குகிறது. ஆத்துமா, ஆவி (Soul – Spirit) என்ற இரண்டு பதங்களையும் வேதம் ஒரே பொருளைக் குறிக்கவே பயன்படுத்துகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனை மூன்று கூறுகளாக விளக்கும் போதனை வேதத்தில் காணப்படாத போலிப் போதனை. ஆதியாகமம் 2:7ஐ விட வேறு பகுதிகளும் மனிதனை சரீரம், ஆத்துமா ஆகிய இருகூறுகளைக் கொண்டவனாகவே விளக்குகின்றன (பிரசங்கி 12:17; தானியேல் 7:15; மத்தேயு 10:28; அப்போஸ்தலர் 2:31; 1 கொரிந்தியர் 7:34; யாக்கோபு 2:26 ஆகிய பகுதிகளைப் படிக்கவும்).

தேவசாயல் – மனிதன் தேவனுடைய சாயலாக இருக்கிறான் என்று வேதம் சொல்கிறது (ஆதியாகமம் 1:26-27). ஒரு மனிதனின் புகைப்படம் அவனுடைய சாயலாக இருப்பதுபோல் மனிதன் கடவுளின் சாயலாக இருக்கிறான். கர்த்தருடைய குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவனாக மனிதன் இருக்கிறான். தன்னைப் பற்றி வெளிப்படுத்துவதற்காக மனிதனைக் கர்த்தர் உருவாக்கினார். இதற்காக நாம் மனிதனை சிலை செய்து வணங்கக்கூடாது. எல்லா படைப்புயிர்களும் கர்த்தரின் மகிமைக்காகப் படைக்கப்பட்டதுபோல் மனிதனும் கர்த்தரின் மகிமைக்காகப் படைக்கப்பட்டான். மனிதனைப் பார்க்கும்போது அவன் நமக்கு தேவ குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு மனிதனின் ஞானத்தைப் பார்ப்போம். அது தேவஞானத்தைவிட மேலானதாக இல்லாமலிருந்தபோதும், மனிதனுக்கு கடவுள் கொடுத்துள்ள ஞானம் நமக்கு கர்த்தரின் எல்லையற்ற ஞானத்தை நினைவுபடுத்துகிறது.

மனிதனில் காணப்படும் தேவ சாயலை நினைவுபடுத்தும் இன்னுமொரு அம்சம் மனிதன் ஒழுக்கமுள்ளவனாக படைக்கப்பட்டிருக்கிறான் என்பதாகும். மிருகங்கள் இவ்வாறாகப் படைக்கப்படவில்லை. மிருகங்களால் நல்லது கெட்டதை செய்யமுடியாது. எது சரி, தவறு என்பது மிருகங்களுக்குப் புரியாது. மனிதனால் நீதியானவனாக வாழ்ந்து நல்லதைச் செய்ய முடியும். பரிசுத்தமாக இருக்க முடியும். மனிதன் பாவத்தில் விழுந்த நாள் தொடக்கம் கர்த்தர் அவனுக்கு புதிய இருதயத்தைத் தந்தால் தவிர அவனால் பரிசுத்தமாக வாழ முடியாது. ஆரம்பத்தில் மனிதன் நீதியானவனாகவும், பரிசுத்தமானவனாகவும் படைக்கப்பட்டிருந்தான். மனிதன் பாவத்தினால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

மனிதன் பாவத்தில் விழுந்தபோது அவனில் தேவ சாயல் தொடர்ந்திருந்ததா? சில கிறிஸ்தவர்கள் இதற்கு “இல்லை” என்று பதில் கூறுவார்கள். வேதம் “ஆம்” என்றே பதில் கூறுகிறது. பாவத்தில் வீழ்ந்த மனிதன் தொடர்ந்தும் தேவ சாயலில் எப்படி இருக்க முடியும்? இதற்கு வேதம் யாக்கோபு 3:9 மூலம் பதிலளிக்கிறது. “தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற மனுஷனை அதினாலேயே சபிக்கிறோம்.” இவ்வசனத்தில் காணப்படும் தேவனுடைய “சாயல்” என்ற வார்த்தையே ஆதியாகமம் 1:26ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் மனிதர்களை சபிக்கும்போது தேவ சாயலில் உள்ளவர்களை சபிக்கிறோம் என்று யாக்கோபு கூறுகிறார். அதனால்தான் மனிதன் மனிதனை சபிப்பது பாவமாக இருக்கிறது. ஆகவே, பாவித்திலிருக்கும் மனிதன், நீதிமானாகவும், பரிசுத்தமாகவும் இல்லாதபோதும் தொடர்ந்து தேவ சாயலைக் கொண்டிருக்கிறான்.

மனிதன் பாவத்தில் விழுந்தபோது தேவ சாயல் கறைபடிந்து போனது. உதாரணமாக, வீதியில் இருக்கும் ஒரு பெயர்ப்பலகை வண்டியில் அடிபட்டு விழுந்த விட்டது என்று வைத்துக் கொள்வோம். அது உடைந்து உருமாறிப்போனாலும் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியாவிட்டாலும், பயனில்லாத நிலையிலிருந்தாலும் உடைந்து நொருங்கிப்போன பெயர்ப்பலகையாக இருக்கிறது. இதுபோல்தான் நாம் மனிதனில் உள்ள தேவ சாயலைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும்போது தேவ சாயல் அவனில் பிரகாசதடைகின்றது.

மனிதனின் ஒழுக்கக் குணாதிசயம் – மனிதனின் ஒழுக்கக்குணாதிசயமே கடவுளை அவன் பிரதிபலிக்கும்டிச் செய்கிறது. விசுவாச அறிக்கை இரண்டாம் பாராவில் மனிதனில் காணப்படும் சில குணாதிசயங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. ஒழுக்க முள்ளவனாக மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான். அவனில் அறிவும், நீதியும், பரிசுத்தமும் இருந்தது. இதனால் நாம் மனிதன் கடவுளுக்கு சமமானவன் என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் சிறப்பான குணாதிசயங்களோடு படைக்கப்பட்டிருந்தபோது அவனுடைய குணாதியசங்களுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால், கடவுளின் நீதிக்கும், பரிசுத்தத்திற்கும் எல்லை இல்லை (ஏசாயா 6:2-3).

மனிதன் ஒழுக்கக்குணாதிசயத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவனுடைய இருதயத்திற்குள் அதைக் கர்த்தர் எழுதி வைத்திருப்பதால்தான். பவுல் ரோமர் 2:14-15ல் இதை விளக்குகிறார். அதனால் பாவியாகிய மனிதன், இதுவரை பத்துக் கட்டளைகளைக் கேள்விப்பட்டிராதபோதும் எது சரி எது தவறு என்று அறிந்து கொண்டிருக்கிறான். அதை கடவுளே அவனுடைய இருதயத்திற்குள் எழுதி வைத்திருக்கிறார்.

மனிதனில் இருக்கும் ஒழுக்கக் குணாதிசயம் மனிதனுக்கு கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் வல்லமையைக் கொடுக்கிறது. ஆதாம் படைக்கப்பட்டபோது கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் வல்லமை அவனுக்கு இருந்தது. அவனால் பாவத்தை செய்யாமலிருக்க முடிந்தது. பாவம் அவனது இருதயத்தைக் கறைபடுத்தியிருக்கவில்லை.

ஆதாமும், ஏவாளும் பாவத்தை செய்யாதபடிக்கு வல்லமை கொண்டிருந்த போதும், பாவத்தில் விழுந்துவிட முடியாதளவுக்கு வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பாவமில்லாத நிலையில் தொடர்ந்திருப்பார்கள் என்ற நிச்சயம் இருக்கவில்லை. விசுவாச அறிக்கை இதுபற்றி விளக்கும்போது, அவர்கள் “அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.” என்று கூறுகிறது. அம்முறையில் அவர்கள் பாவத்தில் விழுந்த வரலாற்றை ஆதியாகமம் 3:6ல் வாசிக்கிறோம். பாவம் இல்லாமலிருந்த மனிதன் பாவத்தில் எப்படி விழுந்தான் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்,. அவன் பாவத்தில் விழுந்து தனது தூய்மையை இழந்து போனதை வேதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

கர்த்தரின் விசேஷ கட்டளை – விசுவாச அறிக்கையில் படைப்பு பற்றி விளக்கும் அதிகாரத்தின் கடைசிப் பாரா, கடவுள் நமது முதல் பெற்றோருக்குக் கொடுத்த கட்டளையை நினைவுறுத்துகிறது. “நன்மை தீமை அறியக்கூடிய மரத்திலிருந்து எதையும் உணவாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது”. அவர்கள் ஏற்கனவே நியாயப்பிரமாணத்தை தங்கள் இருதயத்தில் கொண்டிருந்தார்கள். அதற்கு மேலாக கடவுள் இன்னுமொரு கட்டளையையும் தந்தார். இதை ஆதியாகமம் 2:16-17 விளக்குகிறது. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்,. ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” இக்கட்டளை ஆதாமை சோதிக்கக் கொடுக்கப்பட்டது. இவ்விதத்தில் இது வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை. கடவுள் மேல ஆதாமுக்கிருக்கும் அன்பும், கீழ்ப்படிவும் இக்கட்டளையைப் பின்பற்றுவதில் தங்கியிருந்தது. இதைக் கடவுள் ஏனையோருடைய வாழ்க்கையிலும் செய்திருக்கிறார். ஆபிரகாமை இவ்வாறு கர்த்தர் சோதித்தார். அக்கட்டளையைக் கீழ்ப்படிந்து நடந்வரை நமது முதல் பெற்றோர் சமாதானத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். அனைத்தையும் ஆண்டு வந்துள்ளனர். எல்லாவற்றையும் ஆண்டு அனுபவிக்கும் வல்லமையையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்தார்.

கடவுளின் கட்டளைபடி மிருகங்களை மனிதன் ஆண்டு அனுபவித்தான். மிருகங்கள் மனிதனின் சேவகர்கள். அவற்றை மனிதன் தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது. அவற்றை அவன் தன்னுடைய சகல நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். (மிருகங்களை உணவாகக் கொள்ளக்கூடாதென்று சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்). அதே நேரம் மனிதன் உணவாகவும், வேறு வழிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும்படிப் படைக்கப்பட்ட மிருகங்களை தெய்வமாக வழிபடும் மனிதனுடைய முட்டாள்தனத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.

இறுதியாக இப்பாரா நமது முதல் பெற்றோர் இக்கட்டளையைக் கடைப்பிடித்தவரை கடவுளோடு சமாதானத்துடனும், அன்போடும் வாழ்ந்தனர் என்று கூறுகின்றது. அவர்களுடைய பாவமே கடவுளோடு அவர்களுக்கிருந்த அந்நல்லுறவை அழித்தது.

படைப்பின் காலம் – படைப்பின் காலத்தைப் பற்றி விசுவாச அறிக்கை இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. 1) படைப்பு ஆதியில் நடந்ததாக வேதம் போதிக்கிறது. காலம் ஆரம்பமானபோது கடவுள் அனைத்தையும் படைத்தார். ஆனாதி காலத்தில் இருந்து உலகமும், அதிலுள்ள அனைத்தும் இருந்து வருவதை அநேக தத்துவ ஞானிகளும், இறையியல் அறிஞர்களும் நிராகரித்து வந்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் வேதத்திற்கும், அறிவுக்கும் முரணானவை. 2) வேதம், கடவுள் அனைத்தையும் 24 மணி நேரத்தைக் கொண்ட ஆறுநாட்களில் படைத்தார் என்று கூறுகிறது. சார்ள்ஸ் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை வளர்த்துவிட்ட நாள் முதல் அநேகர் இவ்வேத போதனையை நிராகரித்து வந்துள்ளனர். சிலர் ஆறு நாள் படைப்பு பற்றிய போதனையை வெறும் கட்டுக் கதை என்று நிராகரித்துள்ளார்கள். வேறு சிலர் அந்த ஆறு நாட்களும் கோடிக்கணக்கான வருடங்களைக் குறிக்கும் அடையாள மொழி என்பர். ஆனால், இத்தகைய விளக்கங்களைக் கண்டு நாம் வேத போதனையை நிராகரிக்கத் தேவையில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு பணிந்து போய் வேதத்தை நாம் நிராகரித்துவிடக்கூடாது. வேதத்தின் சத்தியத்தை எந்த விஞ்ஞானமும் பொய்யாக்கிவிட முடியாது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எப்போதும் நிலையாக இருந்ததில்லை. விஞ்ஞானிகள் சாதாரண மனிதர்களே. அவர்களின் ஆய்வுகள் எப்போதும் பூரணமானதாக இருந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் வேதத்திற்கு அடிமை.

ஆறுநாட்களில் அனைத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் நமது தேவன். ஆதியாகமத்தில் நாட்கள் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 24 மணு நேரத்தைக்கொண்ட நாட்களையே குறிப்பிடுகின்றதே தவரி கோடிக்கணக்கான ஆண்முளைக்கொண்ட நாட்களை அல்ல. அதேவேளை ஏழாம் நாளைப் படைத்த தேவன் அதை 24 மணி நேரம் கொண்ட நாளாகத்தான் படைத்தார். இஸ்ரவேலர் ஏழாம் நாள் சபத்தைக் கொண்டாடியபோது அதை 24 மணி நேரம் கொண்ட நாளாகத்தான் அறிந்து கொண்டார்கள். அதை அடையாள மொழியாக அவர்கள் கருதவில்லை. வேதம் கர்த்தர் அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்ததாகத்தான் போதிக்கின்றது. இன்று லிபரல் கோட்பாடுகள் பரவிக்காணப்படும் இறையியல் கல்லூரிகளிலும், லிபரல் போதகர்களைக் கொண்ட சபைகளிலும் படைப்பைப் பற்றி வேதபூர்வமான போதனை கொடுக்கப்படுவதில்லை. இத்தகைய அவிசுவாசப் போக்கில் இருந்து கர்த்தர் நம்மையும் நமது சபைகளையும் காப்பாற்றுவாராக!

நான் உரத்த சத்தத்துடனும், தெளிவான விளக்கங்களுடனும் வேதத்தின் எல்லாப்பகுதிகளையும் ஒன்றுவிடாமல் பிரசங்கித்தாலும், பிசாசும், உலகமும் இந்நேரத்தில் தாக்கிக் கொண்டிருக்கிற அந்த ஒரு சிறு சத்தியத்திற்காக நான் போராடாவிட்டால், எத்தனை தைரியமாக நான் கிறிஸ்துவை அறிக்கையிட்ட போதும் அவருக்கு நான் சாட்சியாக இருக்கவில்லை. எங்கே போர் கடுமையாக இருக்கிறதோ அங்கேயே போர்வீரனின் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. வேறு எந்தப் போர்க்களத்தையும் இருவரை தைரியமாக எதிர்நோக்கியிருந்தாலும் இந்த சிறு சத்தியத்திற்காக போராடாதவன் ஒரு அவமானச் சின்னமே!
– மார்டின் லூதர்

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.