திருமறைத்தீபம் 2004 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற
2. பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம் (2)
3. கிறிஸ்துவின் பாடுகள்
4. திருச்சபை வரலாறு
5. டிஸ்பென்சேஷனலிசம்
6. பிரசங்கத்தில் “பயன்பாடுகள்”
7. கிறிஸ்தவக் கோட்பாடுகள்
8. கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள்
9. அறிவுக்கேற்ற வைராக்கியம்
தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற
தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற உள்நாட்டுத் தேர்தல்கள் நிகழவிருக்கின்றன. இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் நிகழவிருக்கும் தேர்தல்களைத்தான் சொல்லுகிறேன். இரண்டு நாடுகளிலும் நடக்கவிருக்கும் தேர்தல்கள் முக்கியமானவை. பொருதாளாதாரத்துறையில் முன்னேற்றம் கண்டுவரும் இந்தியாவைத் தொடர்ந்து பாரதீய ஜனதாதான் ஆள வேண்டுமா? என்ற கேள்விக்கு இந்தத் தேர்தல் பதிலளிக்கும். ஸ்ரீலங்காவைப் பொருத்தவரையில் தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் நாடாளும் அரசுக்கும் உள்ள உறவு எந்தவகையில் அமையப்போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக அங்கு நடக்கவிருக்கும் தேர்தல் அமையும். நாட்டு நிகழ்வுகளில் கிறிஸ்தவர்களுக்கும் நிச்சயம் பங்கிருக்கின்றது. இரு நாடுகளிலுமே கடந்த சில வருடங்களாக கிறிஸ்தவத்திற்கெதிரான செயல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சி இந்தியாவை இந்து நாடாகக் காணும் தனது திட்டத்தை ஒருபோதுமே மறைத்து வைக்கவில்லை. அதன் ஆட்சியில் கிறிஸ்தவர்களின் நிலை கவலை தரும்படியே இருந்து வந்திருக்கிறது. ஸ்ரீலங்காவில் சமீபகாலமாக புத்தமத எழுச்சிக்காகப் போராடுபவர்கள் தலைதூக்கி யிருப்பதைக் காணமுடிகின்றது. ஸ்ரீ லங்காவின் வரலாற் றில் முதல் தடவையாக புத்தபிக்குகள் கட்சி அமைத்து தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்திருக்கும் ஜனதாவிமுக்தி பெரமுன ஓர் மார்க்ஸீயக் கட்சி. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளைப்போல அரசுக்கெதிராக தெற்கில் ஆயுதம் ஏந்திய கூட்டம். அவர்கள் கிறிஸ்தவத்தின் நண்பர்கள் அல்ல. இரு நாடுகளிலும் காணப்படும் இந்த சூழ்நிலை நடக்க விருக்கும் தேர்தல்களால் எந்தவகையில் மாறப்போகின்றது என்று இருநாட்டு கிறிஸ்தவ சமுதாயங்களும் நிச்சயம் எதிர்பார்ப்புகளோடு காத்திருக் கும் என்பதில் சந்தேகமில்லை. இரு நாடுகளுக்காகவும் உலகெங்கும் இருக்கும் தமிழ் கிறிஸ்தவர்கள் ஜெபிப்பது அவசியம். தேசங்களுக்கெல்லாம் சொந்தக்காரராக இருந்து ஆண்டுவரும் இறையாண்மையுள்ள கர்த்தரின் சித்தம் இந்தத் தேர்தல்களின் மூலம் இந்நாடுகளில் நிறைவேறவும், கிறிஸ்தவர்கள் சமாதானத்துடன் வாழவும், சுவிசேஷம் தடையின்றி அறிவிக்கப்படவும், சபைகள் வளரவும் ஜெபியுங்கள். கர்த்தரின் கிருபையால் இன்னு மொரு இதழைத் தயாரித்து உங்கள் முன் வைக்கிறேன். இந்த இதழில் வந்திருக்கின்ற ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் ஆதரவுக்கு எமது இலக்கியக் குழுவின் சார்பாக எனது நன்றிகள்.
– ஆசிரியர்!
பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம் (2)
பெந்தகொஸ்தே தினத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து கடந்த இதழில் விளக்கமாகப் பார்த்தோம். இதுவரை நாம் பார்த்துள்ள விளக்கங்களின்படி பெந்தகொஸ்தே நாள் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க நாள்; சுவிசேஷ இரகசியம் பகிரங்கமாக உலகெங்கும் அறி விக்கப்பட்ட ஆரம்ப நாள்; பரிசுத்த ஆவியின் உலகளாவிய ஊழியம் ஆரம் பித்த நாள்; புதிய ஏற்பாட்டில் என்றுமிருந்திராதவகையில் விசுவாசிகளான யூதர்களையும், புறஜாதியாரையும் கொண்டு திருச்சபை அமைக்கப்பட்ட நாள். இத்தன்மைகளால் பெந்தகொஸ்தே நாள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாளாக இருக்கிறது. மேலே நாம் விளக்கிய அம்சங்கள் ஏற்கனவே வரலாற்றில் ஆரம்பமாகி நிகழ்ந்து கொண்டிருப்பதால் மறுபடியும் பெந்தகொஸ்தே நாள் தொடர்ந்தும் வரலாற்றில் இருக்க வேண்டும் என்று கூறுவது வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானதொரு விளக்கம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். பெந்தகொஸ்தே நாளின் மெய்த் தன்மையை அறியாதவர்களே இந்தத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தபோதும் முதல் நூற்றாண்டில் பெந்தகொஸ்தே தினத்தில் இயேசு கிறிஸ்துவால் ஆதிசபை அமைக்கப்பட்ட காலத்தில் நாம் மேலே பார்த்த திருச்சபை அமைப்போடு தொடர்புடைய வரலாற்று அம்சங்கள் எருசலேமி லேயே ஆரம்பித்து அங்கிருந்த மக்களுக்கும், அங்கு வந்திருந்த பெருந்தொகை யினரான மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. எருசலேமுக்கு வெளியில் இருந்தவர்களுக்கும், உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தவர்களுக்கும் திருச்சபை சம்பந்தமான இந்த வரலாற்று அம்சங்கள் நிகழ்ந்ததோ அல்லது அவற்றின் தவிர்க்க முடியாத அவசியமோ உடனடியாகத் தெரியாதிருந்தது. திருச்சபை தொடர்ந்து உலகமெங்கும் பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நிறுவப்படவிருந்ததால் அந்நிகழ்ச்சிகளை முழு உலகும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. பெந்தகொஸ்தே தினத்தில் நடந்த நிகழ்ச்சிகளை உலகம் அறியாமல் இருந்தால் சுவிசேஷப் பிரசங்கத்தால் எருசலேமுக்கு வெளியில் நிறுவப்படும் சபைகள் எருசலேமில் நிறுவப்பட்ட சபைகளைவிட வித்தியாசமான முறையில், அவற்றிற்கு எதிரானவையாகக்கூட அமைந்துவிடும் ஆபத்து இருந்தது. இயேசு கிறிஸ்து, ஏற்கனவே அப்போஸ்தலர்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் தனக்கு சாட்சியாக இருப்பார் கள் என்று வாக்குறுதி தந்திருந்தார் (அப்போஸ். 1:8). அவர்கள் அந்தவிதமாக கிறிஸ்துவுக்கு சாட்சியாக உலகம் முழுவதிலும் இருக்கவேண்டுமானால், அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் திருச்சபைகள் உலகின் ஏனைய பகுதிகளில் அமையவேண்டுமானால், அந்தப்பணிக்கு அடிப்படையான பெந்தகொஸ்தே நிகழ்ச்சிகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆகவே, அதிகாரபூர்வமான பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நேரடித் தலையீட்டினாலேயே பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்ற உண்மையை உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். உலகம் முழுவதிலும் கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அப்போஸ்தலர்களின் வழிப்படி திருச்சபை அமையும்படியாக பெந்தகொஸ்தே தின நிகழச்சிகளை உலகம் எப்படி அறிந்து கொண்டது என்பதைத்தான் இனிப்பார்க்கப் போகிறோம். அப்படிப் பார்க்கின்றபோது பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகள் நான்கு தடவைகள் மட்டும் உலகத்தில் மறுபடியும் நிகழவேண்டிய அவசியம் இருந்தது என்பதையும், அவை அந்தவிதமாக உலகின் ஏனைய பகுதிகளில் நிகழ்ந்ததற்கான காரணம் என்ன என்பதையும் இனி நாம் சந்தேகமறத் தெளிவாக விளங்கிக் கொள்ளப் போகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் “உலகம்”
இந்த விளக்கங்களுக்கு ஆரம்பகட்டமாக அப்போஸ்தலர் நடபடிகளில் உலகம் எப்படி வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். அபோஸ்தலர் 1:8-ல் இயேசு, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும் அப்போஸ்தலர்களைச் சாட்சியாக இருக்கும்படிச் செய்வதாக வாக்குறுதி அளித்திருப்பதைப் பார்க்கிறோம். இயேசு இங்கு இந்தவிதமாக பல நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் அவை முழு உலகத்தையும் குறிப்பனவாக இருந்ததால்தான். அதாவது இந்தப் பிரதேசங்களிலெல்லாம் அப்போஸ்தலர் கள் சாட்சியாக இருந்தால் அவர்கள் முழு உலகத்திற்கும் சாட்சியாக இருப் பார்கள் என்பது அர்த்தம். உலகின் இந்தப் பிரதேசங்களின் பெயர்களுக்குள் இயேசு முழு உலகத்தையும் அடக்குகிறார். இந்தப் பெயர்கள் எருசலேமையும், யூதேயாவையும், யூத மக்களனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கின்றன. யூதர்களைத் தவிர்த்த, அவர்கள் எந்த உறவும் வைத்திராத சமாரிய இனத்தவரை சமாரியா உள்ளடக்கியது. இந்த இருபிரிவினரையும் தவிர்ந்த மக்களை உலகத்தின் ஏனைய பிரதேசங்களில் பார்க்கலாம். இந்தவிதமாக உலகம் முழுவதும் இந்தப் பெயர்களில் அடங்குகிறது. இந்த மூன்று இனத் தவர்களும் பெந்தகொஸ்தே நாளில் அதிகாரபூர்வமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வது அவசியம். இல்லாவிட்டால் இவர்கள் மத்தியில் நடக்கும் சுவிஷேச ஊழியத்தால் திருச்சபை எருசலேமில் அமைந்ததுபோல் அதிகாரபூர்வமாக அமையாமல் போய்விடும். இந்த மூன்று இனத்தவர்களும் பெந்தகொஸ்தே நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டால் இந்த இடங்களில் திருச்சபை அப்போஸ்தலர்களின் வழிப்படி அமையமுடியும். அப்படி அமையும்போது முழு உலகத்திலும் இயேசுவின் வார்த்தைகளின்படி (அப்போஸ். 1:8) அப்போஸ்தலர்கள் சாட்சியாக இருக்கும் வாக்குத் தத்தமும் நிறைவேறிவிடும்.
யூதர்கள் மத்தியில் திருச்சபை
பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வருகை கிறிஸ்துவைப் பற்றிய அப்போஸ்தலர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தி, அதன் விளைவாக பேதுரு தந்த பிரசங்கத்தை எருசலேமுக்கு வந்திருந்த பல தேசத்து யூதர்களும் கேட்டு அன்றைய தினத்தில் 3000 பேர் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகள் இரண்டாம் அதிகாரம் விளக்குகிறது. அப்போஸ்தலரின் சுவிசேஷ ஊழியம் சுவிசேஷம் சொல்வதோடு நின்று விடவில்லை. விசுவாசிகளைக் கொண்டு யூதர்கள் மத்தியில் முதன் முதலாக புதிய ஏற்பாட்டு சபை அமைக்கப்பட்டது. அன்று சபையில் 3120 பேர் அங்கத்தவர்களாக இணைந்தனர் (அப்போஸ் 2:40-42). எருசலேம் தேவால யத்தில் ஆராதனைக்காக உலகின் பல தேசங்களில் இருந்து வந்திருந்த யூத மக்களில் பலரும் அன்று கர்த்தரை விசுவாசித்திருக்கிறார்கள். இவர்கள் மூலமாக யூதர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் சுவிஷேசம் அறிவிக்கப்படக் கூடிய செயலும் ஆரம்பமானது. ஆகவே, பெந்தகொஸ்தே தினத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் எருசலேமில் திருச்ச¬யின் ஆரம்பத்திற்கும், அமைப்பிற்கும் வித்திட்டது மட்டுமல்லாமல் யூத இனம் வாழ்ந்த யூதேயா, மற்றும் உலகின் வேறு பகுதிகளிலெல்லாம் அதிகாரபூர்வமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபை ஆரம்பிக்கப்படுவதற்கும் வழி ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போஸ் தலர் 1:8-ல் இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குத் தந்த வாக்குறுதியின் முதலாவது கட்டம் நிறைவேறியிருப்பதை அறிந்து கொள்கிறோம். இதன் மூலம் உலகத்தில் யூத குலத்தின் மத்தியில் கிறிஸ்துவின் இராஜ்யம் திருச்சபை மூலமாக ஆரம்பமானது.
சமாரியர்கள் மத்தியில் திருச்சபை
கிறிஸ்துவின் வாக்குத்தத்ததின்படி (அப்போஸ். 1:8) முதலில் யூதர்கள் மத்தியில் பெந்தகொஸ்தே தினத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு திருச்சபை அமைக்கப்பட்டதைப் பார்த்தோம். இனி அந்த வாக்குத்தத்தத்தின்படி சமாரியர்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு திருச்சபை நிறுவப்பட வேண்டியது அவசியம். சுவிசேஷம் உலகம் முழுவதையும் அடைந்து திருச்சபை எல்லா நாடுகளிலும் அமைக்கப்படும் பணியின் அடுத்த கட்டம் இதுவே. அத்தோடு, பிதாவின் வாக்குத்தத்தத்தின்படி பெந்தகொஸ்தே தினத்தில் பரிசுத்த ஆவியானவர் வருகை தந்து செய்த காரியங்களையும் சமாரியர்கள் அறிந்து கொள்வது அவசியம். முக்கியமாக சமாரியர்கள் மத்தியில் அமையும் சபை எருசேலம் சபையைப்போல அப்போஸ்தலர்களின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் வழிப்படி நடப்பது அவசியம். இதெல்லாம் நிறைவேறும்படியாக கர்த்தரின் திட்டப்படி காரியங்கள் நிகழ ஆரம்பித்தன.
எருசலேமில் இந்தக்காலத்தில் திருச்சபைக்கு பெருந்துன்பம் உண்டானது. ஏற்கனவே ஸ்தேவான் கொலை செய்யப்பட்டான். சவுல் தொடர்ந்து வீடு வீடாக கிறிஸ்தவர்களைத் தேடித் துன்புறுத்த ஆரம்பித்தான் (அப்போஸ். 8:3). ஆகவே, அப்போஸ்தலர்கள் மட்டும் எருசலேமில் தங்கியிருக்க பெருந்தொகையினரான கிறிஸ்தவர்கள் யூதேயா, சமாரியா ஆகிய நாடுகளுக் குப் போய் வாழ ஆரம்பித்தார்கள். அவர்களால் எருசலேமில் வாழ முடிய வில்லை. இதுவும் கர்த்தரின் திட்டங்களில் ஒன்று. இப்படிப்போன மக்களால் சுவிசேஷம் யூதேயா, சமாரியப் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்டது (அப்போஸ். 8:4). பிலிப்பு (திருச்சபை உதவிக்காரர்களில் ஒருவர்) சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்துக்குப்போய் அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கித்தான். அனேகர் அவன் சொன்னதை உன்னிப் பாகக் கவனித்துக் கேட்டு ஆராய்ந்தார்கள். கர்த்தரும் அவர்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்தார். அந்நாட்டில் மாய வித்தைகள் செய்து வந்திருந்த சீமோன் என்பவனும் ஆச்சரியப்படும்படியாக கர்த்தரின் கிரியைகள் நடந்தன. சீமோன் தீய நோக்கத்தோடு கிறிஸ்துவை விசுவாசித்த அனேகரோடு சேர்ந்து தானும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான்.
இந்த செய்திகள் எல்லாம் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களுடைய காதுகளுக்கு எட்டின. சமாரியர்களில் அனேகர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் உணர்ந்ததால் அப்போஸ்தலர்களான பேதுருவை யும், யோவானையும் தாங்கள கேள்விப்பட்டது உண்மையா என்பதை அறிந்துகொள்ள சமாரியாவுக்கு அனுப்பினார்கள் (அப்போஸ். 8:14). இந்த இடத்தில் அப்போஸ்தலர்கள் இதை ஏன் செய்தார்கள் என்று சிந்தி¢த்துப் பார்ப்பது அவசியம். அப்போஸ்தலர்களே கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். அவர்களைக் கொண்டே கிறிஸ்து தன்னுடைய சபையை நிறுவ ஆரம்பித்தார். ஆகவே, அக்காலத்தில் எங்கு சபைகள் தோன்றினாலும் அவை அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருந்தது. அத்தோடு அப்போஸ்தலர்களுக்கே கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் தெரிந்திருந்தபடியால் சபைகள் கிறிஸ்துவின் போதனைகளின்படி அமைய அப்போஸ்தலர்களின் துணை எல்லாச் சபைகளுக்கும் தேவைப்பட்டது.
மேலும் சமாரியா யூதர்களை வெறுத்து வந்த இனம். பழைய ஏற்பாட்டுப் போதனைகளைத் திரித்து தங்களுக்கென ஒரு மதத்தை சமாரியர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். சமாரியப் பெண் கிறிஸ்துவிடம் யோவான் 4-ல் இதைக்குறித்து கேள்விகள் கேட்பதைப் பார்க்கிறோம். ஏற்கனவே கிறிஸ்துவைப் பற்றி அவள் மூலம் சமாரியர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது அவர்கள் மத்தியில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் மேலும் உருவாக ஆரம்பித்தபடியால் சமாரியாவில் சபை நிறுவப்படுவது அவசியமாயிற்று. அத்தோடு அந்த சபை அப்போஸ்தலர்களின் போதனை களின்படி எருசலேம் சபையைப் போல இருக்க வேண்டியதும் அவசியம். இவையெல்லாம் முறைப்படி நடக்க வேண்டுமானால் அப்போஸ்தலர்கள் நேரடியாகத் தலையிட்டு அக்காரியங்களை முறையாக நடத்தி வைப்பது அவசியம். இல்லாவிட்டால் யூதர்களுக்கெதிராக பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தி சமாரியர்கள் ஒரு மதத்தை ஏற்படுத்திக் கொண்டதைப்போல் கிறிஸ்துவின் பெயரில் எருசலேம் சபைக்கெதிரானதொரு சபை சமாரியாவில் ஆரம்பமாவதைத் தடுக்க முடியாது. அத்தகைய ஆபத்தைத் தவிர்க்குமுகமாக அப்போஸ்தலர்கள் பேதுருவையும், யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்போஸ். 8:15-ல் சொல்லப்பட்டிருப்பதை நாம் கவனமாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். “இவர்கள் வந்தபொழுது (பேதுருவும், யோவானும்) அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை மட்டும் பெற்றிருந்தவர் களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி ஜெபம் பண்ணினார்கள்” என்று இந்த வசனத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். வரலாற்று, இலக்கண ரீதியாக இதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பெந்தகொஸ்தேகாரர்கள் விசுவாசிகள் ஆவியைப் பெற்றுக்கொள்ளுவதற்காக தொடர்ந்தும் ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதன் மெய்க்கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் படிமுறையாக ஒரு உண்மையைப் புலப்படுத்த விரும்புகிறேன்.
(1) பரிசுத்த ஆவியினாலன்றி ஒரு ஆத்துமாவும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது.
(2) விசுவாசிக்கின்ற அனைவரும் கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசத்தை யும், பரிசுத்த ஆவியையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.
(3) இயேசுவை விசுவாசிக்காத எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. (மாய வித்தைகள் செய்து வந்த சீமோன் மட்டும் மனந் திருந்தியதாக நடித்து தவறுதலாக ஞானஸ்நானம் பெற்றிருந்தான்).
இந்த உண்மைகளின் அடிப்படையில் மெய்யாகக் கிறிஸ்துவை விசுவா சித்த அனைவரும் பரிசுத்த ஆவியானலேயே விசுவாசத்தையும் ஆவியையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு மறுபடியும் பரிசுத்த ஆவியை அப்போஸ்தலர்கள் ஜெபித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் அப்போஸ்தலர்களான பேதுருவும், யோவானும் எதற்காக அவர்கள் மேல் கைவைத்து ஜெபித்தார்கள்? இதற்குக் காரணம் பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிதான். சபை நிறுவப்படுவதற்காக அன்று பரிசுத்த ஆவியானவரின் வரலாற்று வருகை நிகழ்ந்தது. கிறிஸ்துவின் சபை ஆரம்பமானது. இப்போது சமாரியாவிலும் அதேமுறையில் சபை அமைக்க வேண்டிய அவசியம் இருந் தது. சமாரியாவில் அமைக்கப்பட வேண்டிய சபை எருசலேம் சபையைப் போல இருக்கவேண்டுமானால், இரண்டும் ஒன்றுதான் என்று சமாரியரும் விசுவாசிக்க வேண்டுமானால், பெந்தகொஸ்தே நாளில் வந்ததுபோல் பரிசுத்த ஆவியானவர் சமாரியர் மீதும் வந்திறங்குவது அவசியம். பெந்த கொஸ்தே நாள் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் எருசலேமுக்கு வெளியில் எங்கும் பரவிக் கொண்டிருந்தன. ஆகவே, சமாரியர் மீதும் பரிசுத்த ஆவி வந்திறங்கும்போது சமாரியர்கள் கிறிஸ்துவின் திருச்சபைக்கு விசுவாசத்துடன் தம்மை ஒப்புக் கொடுப்பார்கள். அதற்காகவே பேதுருவும், யோவானும் சமாரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அத்தோடு, சமாரியர்களுக்கு சுவிசேஷம் அறிவித்த பிலிப்புவால் இதை செய்திருக்க முடியாது. ஏனெனில், அன்று அப்போஸ்தலர்களை அடித்தளமாகக் கொண்டே ஆதிசபை நிறுவப்பட்டது. அத்தோடு, அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவியை இ¢ந்தவிதமாக இறங்கச் செய்யும் அதிகாரமும் இருந்தது. இதிலிருந்து இந்த பரிசுத்த ஆவியானவர் சமாரிய விசுவாசிகள் மீது வந்திறங்கியதற்கான காரணத்தை அறிந்து கொள்கிறோம். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அர்த்தம் புரியாமல், வேதத்தை எப்படிப் படித்துப் புரிந்து கொள்வது என்பதும் தெரியாமல், விசுவாசிகளுக்கெல்லாம் இரண்டாம் முறையாக பரிசுத்த ஆவி வேண்டுமென்று இன்று தவறாக ஜெபித்துக் கொண்டிருக்கின்றன பெந்தகொஸ்தே சபைகள்.
இங்கே இன்னுமொரு முக்கிய உண்மையையும் கவனிக்கத் தவறக்கூடாது. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்திறங்கியபோது நடந்த பல சம்பவங்கள் சமாரியர்மேல் அவர் வந்திறங்கியபோது நடக்கவில்லை. பலத்த காற்று, இடி முழக்கம் போன்ற இரைச்சல், 120 பேர் மேல் இறங்கிய அக்கினி போன்ற நாவுகள், அந்நிய பாஷை பேசுதல் போன்ற ஒன்றுமே சமாரியாவில் நிகழவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் சிலர், பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த அனைத்தும் பரிசுத்த ஆவி வந்த ஒவ்வொரு முறையும் நிச்சயம் நிகழ்ந்தன, ஆனால், லூக்கா அவற்றைத் திரும்பத்திரும்ப எழுத வேண்டிய அவசியமிருக்கவில்லை என்பார்கள். இந்த முறையில் வேதவிளக்கம் கொடுக்க முடியாது. இது வெறும் ஊகம் மட்டுமே. ஒவ்வொரு பகுதியிலும் சொல்லியிருப்பவற்றின் அடிப்படையில் மட்டுமே அந்தப்பகுதி தரும் போதனையை அதோடு தொடர்புடைய ஏனைய பகுதிகளுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் சமாரியாவில் நிகழவில்லை என்பது தெளிவு. அத்தோடு, சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவர் வந்த பொழுது அந்நிய பாஷை பேசினார்கள் என்றும் நிரூபிக்க முடியாது. இதற்குக் காரணம் பரிசுத்த ஆவியின் வருகையைத்தான் அந்த நிகழ்ச்சிகள் பெந்தகொஸ்தே நாளில் குறிப்பவையாக இருந்தன. அதுவும் முதன்முறையாக வரலாற்றில் பரிசுத்த ஆவி பெந்தகொஸ்தே தினத்தில் வந்ததாலும், எருசலே மில் பலநாடுகளிலும் இருந்து வந்து, பல மொழிகளைப் பேசிய, ஆயிரக் கணக்கில் கூடியிருந்த யூதர்களின் கவனத்தைக் கவர வேண்டியிருந்ததாலும் அந்த அற்புதங்களைக் கர்த்தர் நிகழ்த்திக் காட்டினார். அத்தகைய நிலமை சமாரியாவில் இருக்கவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் சமாரியாவில் நிச்சயமாக நடந்தது. அதாவது எல்லோரும் பார்த்து அறிந்துகொள்ளும்படியாக பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார். இதை எப்படி அறிந்துகொள்கிறோம்? அப்போஸ். 8:18, “அதை சீமோன் கண்டபொழுது” என்று விளக்குகிறது. சீமோன் பரிசுத்த ஆவியின் வருகையைப் பார்த்தது மட்டுமல்லாமல் அப்போஸ்தலர்களுக்கு பணத்தைக் கொடுத்து “பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்” என்றான். ஏதோவொரு முறையில் சீமோன் பார்த்து விளங்கிக்கொள்ளக்கூடியதாக பரிசுத்த ஆவியின் வருகையும், அன்று அவருடைய வருகைக்குக் காரணமாக அப்போஸ்தலருடைய அதிகாரமும் இருந்திருக்கிறது. இதற்குமேல் இந்த நிகழ்ச்சிக்கு நாம் விளக்கங் கொடுக்க முற்பாட்டால் அது ஊகிப்பதில்தான் போய் முடியும்.
இதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களும், அவரைச் சேர்ந்தவர்களும் இணைந்து செய்த சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக ஆதிசபை நிறுவப்படுவதற்காக, அதன் ஆரம்ப கட்டமாக பிதாவின் வாக்குத் தத்தத்தின்படி எருசேலமில் பெந்தகொஸ்தே நாளில் வந்திறங்கியதோடு, எருசலேமைப்போலவே சமாரியர் மத்தியிலும் சபை அமைக்கப்படுவதற்காக சமாரியாவில் இருந்த விசுவாசிகள் மேலும் வந்திறங்கி அதிகாரபூர்வமாக அங்கு சபை அமைக்கப்பட வழி செய்தார் என்று விளங்கிக் கொள்கிறோம்.
இதன் மூலம் சுவிசேஷம் உலகில் இரண்டு பெரும் இனத்தைப் போய்ச் சேர்ந்து அவ்வினங்களின் மத்தியில் சபைகள் தோன்றின. இனி உலகின் ஏனைய பகுதிகளையும் அப்போஸ்தலர் 1:8-ன் படி சுவிசேஷம் போய்ச்சேர வேண்டும். அங்கெல்லாம் சபைகள் நிறுவப்பட வேண்டும். அப்படி பூமியெங் கும் சபைகள் அமைய சுவிசேஷம் போய்ச்சேரவிருந்த மீதி இனம் புறஜாதி யினர் மட்டுமே. யூதர்கள் மத்தியில் சபை ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு விரோதிகளாக இருந்த சமாரியர்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் தோன்ற வழி ஏற்பட்டாயிற்று. இனி மிகுதி இருந்த இனம் புறஜாதி யினர் மத்தியிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, விசுவாசிக்கிறவர்கள் மேல் பெந்தகொஸ்தே தினத்தில் நடந்ததுபோல் பரிசுத்த ஆவியானவர் இறங்கி விட்டால் புறஜாதியினர் மத்தியிலும் சபைகள் அமைய வழியேற்பட்டுவிடும். இதன் மூலம் உலகம் முழுவதும் கிறிஸ்துவின் வார்த்தையின்படி அப்போஸ் தலர்கள் தங்கள் காலத்தில் சாட்சியாக இருக்கும் பணி நிறைவேறிவிடும். புறஜாதியினர் மத்தியில் எவ்வாறு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபை அமை யும் வழி ஏற்பட்டது என்பதை இனி அடுத்த இதழில் பார்க்கப்போகிறோம்.
1-ம் நூற்றாண்டில் அப்போஸ்தலர் தலைமையில் உலகம் முழுவதும் திருச்சபை அமைய பரிசுத்த ஆவியின் வருகை
1-ம் கட்டம்
யூதர்கள்
சுவிசேஷம் பெந்தகொஸ்தே நாளில் யூதர்களை அடைந்து எருசலேமில் சபை ஏற்படுதல்
– அப்போஸ். 2
2-ம் கட்டம்
சமாரியர்
சுவிசேஷம் பிலிப்பு மூலம் சமாரியரை அடைந்து அப்போஸ்தலரால் ஆவியானவர் அவர்கள் மேலிறங்கி சபை தோன்றல்
– அப்போஸ். 8:1-25
3-ம் கட்டம்
புறஜாதியினர்
யோவான் ஸ்நானனின் சீடர்கள்
அப்போஸ்தலர் 1:8, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
இந்த வார்த்தைகள் அப்போஸ்தலர்கள் வல்லமையோடு கிறிஸ்துவைப் பிரசங்கித்து அவருக்கு சாட்சியாக இருப்பார்கள் என்று மட்டும் சொல்லாமல் அவர்கள் கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக இருந்து உலகெங்கும் சபைகளை அமைக்கக்கூடிய அதிகாரமுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற சத்தியத்தையும் விளக்குவதாக இருக்கிறது. இன்று அப்போஸ்தல அதிகாரம் ஒருவருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அப்போஸ்தலர்களின் போதனைகளின்படி சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் நாடெங்கும் சபை அமைக்கும் பணி திருச்சபைக்கும், சபைப்போதகர்களுக்கும் தரப்பட்டிருக்கிறது.
(வரைபடத்தின் முதலிரு கட்டங்களை இந்த இதழில் விளக்கியிருக்கிறோம். அடுத்த இரு கட்டங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.)
கிறிஸ்துவின் பாடுகள்
மெல் கிப்சனின் (கத்தோலிக்க) படம்
Mel Gibson’s, The Passion of the Christ
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகரான மெல் கிப்சனின் (Mel Gibson) சொந்தத் தயாரிப்பான “கிறிஸ்துவின் பாடுகள்” (The Passion of the Christ). படம் வெளிவருமுன்பே இந்தப்படம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது படம் கீழைத் தேய நாடுகளுக்கும் வந்து கிறிஸ்தவர்கள் அலைமோதிக் கொண்டு தியெட் டர்களை நாடி ஓடிப் படத்தைப் பல தடவை பார்த்து முடித்திருப்பார்கள். பல சபைகளும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் இந்தப் படத்திற்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து அனேகரை வழி அனுப்பி வைத்திருப்பார்கள். இந்தப் படத்தை சபையில் காட்டுவதற்குக் கூட அனேகர் ஏற்பாடு செய்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது. திருமணமும் நடந்து, விருந் தெல்லாம் முடிந்த பின் இந்தப் படம் பற்றிய விமர்சனம் எதற்கு? என்ற எண்ணமும் எனக்குத் தோன்றியது. இருந்தாலும் இதற்குப் பிறகும் இப்படி யான காரியங்கள் நடக்கும்போது கிறிஸ்தவர்கள் எந்தவிதத்தில் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காகவாவது பயன்படுமே என்ற நோக்கத்தில் மெல் கிப்சனின் படத்தைப் பற்றிய இந்த விமர்சனத் தொகுப்பை அளிக்க முடிவெடுத்தேன்.
மெல் கிப்சன் கிறிஸ்தவரல்ல. அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். படத்தைப் பற்றிக் கருத்துக்கூறியுள்ள கிப்சன், “படம் என்னுடைய தனிப் பட்ட ஆத்மீக நம்பிக்கைகளைக் குறிக்கின்றது. அதை நான் இதுவரை வெளிப் படையாக விளக்கியதில்லை” என்று கூறியுள்ளார். கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஓர் இன்டர்நெட் பத்திரிகை ஆசிரியர், “கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரலாற்றுச் சந்தர்ப்பம் இது” என்று கிப்சனின் படத்தை வர்ணித்துள்ளார். படமும் அதற்குத் தகுந்தபடி ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஓர் விஷேட நாளான “சாம்பல் புதன்கிழமையில்” அமெரிக்காவெங்கும் வெளியிடப்பட்டது. படத்தை வெளியிட்ட கிப்சனின் நோக்கம் இத்தனைத் தெளிவாக இருந்தபோதும் சுவிஷேச கிறிஸ்தவர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்கிற பில்லி கிரெகமும், ஜேம்ஸ் டொப்சன் போன்றவர்களும் முன்வந்து படத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவில் செட்டில்பேக் (Saddle back) திருச்சபையின் போதகரான ரிக் வாரன் (Rick Warren) ஏழு தியெட்டர் களில் 18,000 டிக்கெட்டுகளை வாங்கி கிறிஸ்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். சிந்திப்பதை மூட்டைகட்டி வைத்துவிட்டு உணர்ச்சி வெள்ளத்தில் நீச்சலடிக்கத் துடியாய்த் துடிக்கும் மக்களைக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவம் எந்தளவுக்கு இந்தப் படத்தால் பாதிக்கப் படப்போகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது என்னால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. சில ஆத்துமாக்களாவது சிந்திக்கும் தேவகுழந்தைகளாக மாறட்டும் என்ற நப்பாசையில் இந்தப் படத்தைப் பற்றிய சில குறைபாடுகளை உங்கள் முன்வைக்கிறேன்.
- படத்தை எடுப்பதில் பங்கெடுத்த அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதவிசுவாசிகள். தயாரிப்பாளரான மெல் கிப்சன் மட்டுமல்ல, படத்திற்கு ஆலோசனை கூறியவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக, படத்திற்கு ஆலோசனை தந்தவர்கள் ரோமன் கத்தோலிக்க மத இறையியல் ஆலோசகர்கள். போப் ஜோன் போல் மிமி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “அன்று நடந்ததைப் பார்ப்பதுபோல் இருக்கிறது” என்று பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இயேசுவை அடிப்படை யாக வைத்து இதுவரை வந்துள்ள படங்களைவிட இது வித்தியாசமானது. ஏனெனில், இது கத்தோலிக்க மதத்தவரால் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இயேசுவாக நடித்துள்ள நடிகர், “நான் இயேசுவின் பாத்திரத்தில் நடிப்பதால் ஒவ்வொரு நாளும் ‘மாஸில்’ கலந்து கொண்டேன்” கூறியிருக்கிறார். அத்தோடு, “இந்த மனிதனின் பாத்திரத்தில் நடிப்பதால் எனக்குள் சாக்கிரமன்ட்ஸ் (Sacraments) இருப்பது நல்லது என்று நான் மெல் கிப்சனிடம் கூறினேன். அவர் அதற்கு உடனடி யாக ஏற்பாடு செய்தார்” என்று இந்த நடிகர் டெலிவிஷனுக்கு பேட்டியளித்திருந்தார். இது வத்திக்கனின் (Vatican) ஆதரவு பெற்ற கத்தோலிக்க மதப்பிரச்சாரப் படம்.
- படத்தின் கதை வசனம் முழுவதும் வேதாகமத்தில் இருந்து பெறப் பட்டதல்ல. படத்தின் பெரும்பகுதி கத்தோலிக்க தியான நூல்களில் கொடுக் கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பல பகுதிகள் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கத்தோலிக்க பெண் துறவியான சகோதரி ஆன் எமரிக் (Sister Anne Emmerich) என்பவர் எழுதிய தியான நூலொன்றின் (The Dolorous Passion of Christ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பவற்றை இந்தப் பெண்துறவி கனவுகளின் மூலம் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். படத்தைத் தயாரிப்பதற்கு இந்த நூலே எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது என்று மெல் கிப்சன் பேட்டியளித்திருக்கிறார். வேதாகமத்தில் இல்லாத வற்றையும், கிறிஸ்துவின் வாயில் இருந்து ஒரு போதுமே வந்திராதவற்றையும் படத்தில் சேர்த்து கிறிஸ்து தன் வாழ்நாளில் அனுபவித்ததுபோல் காட்டுவது வேதம் போதிக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்களுக்கு முரணான தாகும். வேதாகமத்தில் இல்லாதவற்றைப் படத்தில் சேர்த்திருப்பது மட்டு மல்ல அதில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பவையும் படத்தில் சேர்க்கப்பட வில்லை. “படத்தைப் பார்ப்பவர்கள் கிறிஸ்துவின் துயரங்களை பலிபீடத்தில் கொடுக்கப்படும் பலியோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டுமென்பதே படத்தின் நோக்கம். ஏனெனில், இரண்டும் ஒன்றுதான்” என்று தீவிர ரோமன் கத்தோலிக்க மதத்தவரான மெல் கிப்சன் தெளிவாகவே டெலிவிஷன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதச்சடங்கான மாஸில் (Mass) நிகழ்வதும், கிறிஸ்துவின் கல்வாரி சிலுவைப்பலியும் ஒன்றுதான் என்று படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பதே படத்தைத் தயாரித்த வர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மாஸ் சடங்கு மூலம் கிறிஸ்து தொடர்ந்தும் பலியாகக் கொடுக்கப்படுவதை வேதாகமம் முற்றாக நிராகரிக்கிறது. ஒருமுறை மட்டுமே வரலாற்றில் மரித்த இயேசு தொடர்ந்தும் எந்தவிதத்திலும் மரித்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் தொடர்ந்தும் பலியிடப்படுவதாகப் போதிப்பது பிசாசின் போதனை. என்னுடைய வார்த்தையோடு எதையும் சேர்க்கக் கூடாது, அதில் இருந்து எதையும் குறைக்கவும் கூடாது என்ற இயேசுவின் வார்த்தைகளையும் மெல் கிப்சனின் படத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.
- இந்தப் படத்தின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனைகள் வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணானவை.
(அ) வேதாகமம் போதிக்கும் திருவிருந்தில் அது நிகழும் ஒவ்வொரு முறையும் கிறிஸ்து பிதாவுக்கு முன் பலியிடப்படுவதில்லை. இயேசு, (யோவான் 19:30) தான் சிலுவையில் மரிக்கின்றபோது “முடிந்தது” என்று கூறி தன் தலையைச் சாய்த்தார். அவர் முடிந்துவிட்டதாக அறிவித்த செயல் தொடர்ந்தும் நிகழ்வதாக ரோமன் கத்தோலிக்க மதம் பொய்ப் போதனை செய்து வருகிறது. கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களுக்கு ரோமன் கத்தோலிக்க மதம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிறிஸ்து ஒவ்வொரு முறையும் மாஸ் நடக்கும்போது தொடர்ந்தும் பலியிடப்படுவ தாக அது நம்புவதால்தான். இதனால்தான் கத்தோலிக்க மதம் தன்னுடைய குரு மடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் துயரங்களைச் சித்தரிக்கும் படங்களை அதிகமாக வரைந்து வைத்திருக்கும். கத்தோலிக்க தியானங்களிலும், ஜெபங்களிலும் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல வெள்ளிக் கிழமைக்கு முன் லெந்து காலத்தில் நாற்பது நாட்களுக்கு விரதம் இருந்து வேதம் போதிக்காததையெல்லாம் செய்து கிறிஸ்துவின் சரீரப்பாடுகளை நினைவு கூறும்படி சொல்கிறது கத்தோலிக்க மதம். இவற்றின் மூலம் மாஸ் பற்றிய தன்னுடைய போதனைகளை மக்கள் மனத்தில் பதியவைப்பதே அம்மதத்தின் நோக்கமாக இருக்கிறது. இதனால்தான் இந்தப் படத்தில் கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களைத் தத்ரூபமாகப் படமாக்குவதில் (வேதாகமத்திற்குப் புறம்பான போதனைகளையும் இணைத்து) அதிக கவனம் செலுத் தப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மாஸ் பற்றிய இந்தப் பொய்யையே மெல் கிப்சனின் படம் வலியுறுத்துகிறது. இதை எப்படி மெய்க்கிறிஸ்தவ சுவிசே ஷத்தை அறிவிக்கப் பயன்படுத்த முடியும்?
(ஆ) அடுத்ததாக வேதாகமம் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம் அவர் சிலுவையில் அடைந்த துன்பங்களில் தங்கியிருப்பதாக ஒருபோதும் போதிக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்யும் கிருபாதாரப் பலியாக இருந்தார் என்பதே வேதபோதனை. கிருபா தாரப் பலி என்பது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தேவகோபத்தைத் தம்மேல் சுமந்து, நமது பாவங்களைத் தன்னுடைய கணக்கில் ஏற்று நமக்கு விடுதலை பெற்றுத்தந்ததைக் குறிக்கிறது (1 யோவான் 4:10). இதை மெல் கிப்சனின் படம் எங்குமே சுட்டிக்காட்டவோ விளக்கவோ இல்லை. மாறாக தத்ரூபமாக கிறிஸ்துவின் சரீரப்பாடுகள் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதப்பிரச்சாரத்திற்காகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
(இ) கிறிஸ்துவின் சிலுவை மரணப் பரிகாரப்பலி அவருடைய கீழ்ப்படிவின் ஒருபகுதி மட்டுமே. அதன் மறுபாதி படத்தில் தலைகாட்டவில்லை. ஏனெனில், ரோமன் கத்தோலிக்க மத இறையியலில் அதற்குப் பங்கில்லை. அதாவது, கிறிஸ்து தன்னுடைய பிதாவின் நியாயப்பிரமாணத்தை ஒன்று விடாமல் பூரணமாகக் கைக்கொண்டார் என்பதே அதன் மறுபாதி. பாவிகள் மீதிருக்கும் தேவகோபம் நீக்கப்பட கிறிஸ்துவின் சிலுவை மரணம் மட்டும் போதாது. கிறிஸ்து பிதாவின் அத்தனைக் கட்டளைகளையும் ஒன்றுவிடா மல் பரிபூரணமாகத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் எவரும் நீதிமான்களாக பிதாவால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் (2 கொரிந்தியர் 5:21). இயேசு கிறிஸ்து இந்த இரண்டையும் தவறாது தன் வாழ்வில் நிறைவேற்றினார். இந்தப் போதனைக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தில் இடமில்லை; படத்திலும் பங்கில்லை. மெய்க்கிறிஸ்தவ சுவிசேஷத்தை விளக்க இந்தப் படம் ஒரு போதும் பயன்படாது.
- சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த அனேக போதகர்கள் இந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று துள்ளிக்குதிக்கிறார்கள். ஒரு போதகர், “இந்தக் காலத்தில் ஓய்வு நாட்களில் விரிவுரைகளை சபைகளில் கேட்டு ஆத்துமாக்களுக்கு அலுத்துப் போய் விட்டது. இந்த நவீன காலத்தில் சத்தியத்தை விளக்க இந்தப் படம் தான் சரியான வழி” என்று யெரபோகாமைப்போல பேசியிருக்கிறார். “வாழ்நாள் பூராவும் கொடுக்கப்படும் பிரசங்கங்களை ஒரே படத்தில் பார்க்கிறேன்” என்று பில்லி கிரெகம் கூறியிருக்கிறார். உருவச் சிலைகளோ, அடையாளங்களோ, நாடகங்களோ, நடனமோ, படமோ, காட்சிகளோ அல்ல, பிரசங்கம் மட்டுமே மனித இதயத்தைப் பிளந்து, பாவத்தை உணர வைக்கக்கூடிய சக்தி படைத்தது என்பது இந்த ஊழியக்காரர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. கத்தோலிக்க மதம் மக்கள் வேதத்தை வாசிக்க முடியாமல் செய்து, சிலைகளின் மூலமும், உருவங்களின் மூலமும், காட்சிகள் மூலமும் கர்த்தரை வணங்கச் செய்த, வரலாற்றுச் சீர்திருத்தவாத காலத்திற்கு முற்பட்ட காலங்களில், மக்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டு சத்தியம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை நாம் மறக்கக்கூடாது. படங்களும், காட்சிகளும் சுவிசேஷ சத்தியத்தைக்குறித்து பாவிகளை சிந்திக்கவைக்க முடியாது. காட்சி கண்களைக் கவரும், உணர்ச்சிகளைத்தாக்கும், தற்காலிகமானதோர் அனுபவத்தைக் கூட அளிக்கும். ஆனால், விசுவாசத்துக்குரிய ஏதுக்களை அதனால் ஒருபோதும் கொடுக்க முடியாது. அதற்கு கர்த்தர் தன் வார்த்தையையே தந்திருக்கிறார். வார்த்தை ஆவியின் வல்லமையோடு தரக்கூடிய நித்திய ஜீவனை மெல் கிப்சனின் படத்தால் ஒருபோதும் தர முடியாது. பிரசங்கத்தைக் கேட்காமல் ஒருவனும் கிறிஸ்துவை அறிக்கையிட முடியாது என்று ரோமர் 10ல் பவுல் கூறியிருக்கிறார். “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டா லும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு . .” என்று பவுல் திமோத்தேயுவுக்கும், நமக்கும் அறிவுரை செய்கிறார் (2 தீமோத்தேயு 4:2-4). நமது பணி இன்று மக்களுக்கு சினிமா காட்டுவது அல்ல, வார்த்தைகளினால் சுவிசேஷப் பிரசங்கம் செய்வது. ஏனெனில், பிரசங்கம் எதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதை நிறைவேற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறது என்று கர்த்தரே சொல்லியிருக்கிறார் (ஏசாயா 55:9-11). பிரசங்கத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நாம் வெளியிட்டுள்ள “பிரசங்கம் ஏன்!” என்ற நூலை உடனடியாகப் பெற்று வாசியுங்கள்.
- கிறிஸ்து கமலஹாஷனைப் போல அழகாக இருந்தார் என்று யார் சொன்னது? அவர் கவுன்டமணியைப்போலக்கூட இருந்திருக்கலாம். வேதம் சொல்லுகிறது, “அவருக்கு அழகுமில்லை; சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:2) என்று. மெல்கிப்சனின் படத்தில் இயேசுவாக நடிக்கும் நடிகர் (Jim Caviezel) உருவத்தில் மிகவும் ஆரோக்கியமும், அழகும் கொண்ட மனிதன். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு இயேசு இனி இந்த ரூபத்தி லேயே அவர்கள் கண்களை மூடுகிறபோது தோன்றுவார். புதிய ஏற்பாடு முழுவதிலும் கிறிஸ்துவின் உருவத்தைப் பற்றிய விளக்கங்களையே நாம் பார்க்க முடியாது. அவருடைய உருவத்தோற்றத்தை நாம் அறிந்து கொள்வது அத்தனை முக்கியமானதாக இருந்தால் புதிய ஏற்பாடு தேவையான அளவுக்கு நமக்கு அந்த விளக்கங்களைத் தந்திருக்கும். மாறாக, ஆவியோடும், சத்தியத்தின் மூலமுமாகவுமே நாம் கர்த்தரை ஆராதிக்க வேண்டியிருப்பதால் புதிய ஏற்பாடு இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களைத் தர வில்லை. அத்தோடு, அவர் தேவனாகவும் இருந்திருப்பதால் தெய்வீக மயமான தேவமனிதனை நாம் முழுமையாக படத்தில் காட்டிவிட முடியாது.
இதுவரை படத்தைப் பற்றிய ஐந்து குறைபாடுகளைப் பார்த்தோம். இனி இந்தப் படத்திற்கு கிறிஸ்தவர்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பதற்கான கீழ்வரும் நான்கு காரணங்களைத் தருகிறேன். இவற்றை ஆராய்ந்து பார்த்து நீங்களே ஒரு முடிவெடுங்கள்.
- இந்தப்படம் நம்முடைய மனதில் இயேசு கிறிஸ்து பற்றிய அரைகுறையான காட்சியைப் பதிய வைக்கும்.
தவறான இறையியல் கருத்துக்களை நாம் கொண்டிருந்தால் வேதத்தைப் படித்து அவற்றை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம். ஆனால், தவறான ஒரு காட்சியை நம் மனதில் பதியவைத்துக் கொண்டிருந் தால் அதை அகற்றி விடுவது சுலபமான காரியமல்ல. காட்சி வலிமைமிக்கது. இந்தப் படத்தில் இயேசுவாக நடிப்பவரின் பிம்பம் எத்தனை ஆத்துமாக்கள், இளைஞர்களுடைய மனங்களில் ஆழமாகப் பதியப்போகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். இயேசு இப்படிததான் இருந்திருப்பார் என்று ஆழமாகப் பதியப்போகும் எண்ணத்தை அவர்கள் தங்களுடைய மனதில் இருந்து அகற்றிக் கொள்வது சுலபமானதல்ல. ஜெபிக்கும்போதெல்லாம் படத்தில் இயேசுவாக நடிக்கும் மனிதர்தான் கண்முன்னால் வந்து நிற்பார். எந்தவித உருவச்சிலைகள், அடையாளங்கள், காட்சிகளை வைத்து தன்னை நினைவு படுத்திக் கொள்ளவும், ஆராதனை செய்யவும் கூடாது என்று பத்துக் கட்டளைகளின் இரண்டாம் கட்டளை மூலமாக கர்த்தர் தந்துள்ள போதனையை நாம் கடைப்பிடிக்க இந்தப் படம் இடறலாக அமையும்.
- இந்தப்படம் வேத வரலாறு பற்றிய அரைகுறையான விளக்கத்தை மக்கள் முன் வைக்கிறது.
இந்தப்படத்தின் நிகழ்ச்சிகள், வசனங்கள், கருத்துக்கள் அனைத்திற்கும் ஆதாரம் 18ம் நூற்றாண்டு ஆகஸ்தீன் குருத்துவத்தைச் சேர்ந்த ஆன் எமரிக் (Sister Anne Emmerich) எழுதிய தியான நூல் என்பதை மெல் கிப்சன் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். வேதத்தோடு தொடர்பில்லாத, ஒரு பெண் துறவியின் கற்பனைகலந்த நூலொன்றைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரித்து அதை வரலாற்று நிகழ்ச்சியாகக் காட்ட முனைந்திருப்பதால் கிறிஸ்துவின் வரலாற்றைப் பற்றிய மிகத்தவறான விளக்கங்களையே மக்கள் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது.
- இந்தப்படம் வேத சத்தியத்தைப் பற்றிய அரைகுறையான விளக்கங்களை மக்கள் முன் வைக்கின்றது.
ஏற்கனவே நாம் பார்த்ததுபோல் இந்தப் படம் கிறிஸ்துவின் பாடுகளை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டி அதுவே கிறிஸ்துவின் வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகக் காட்டுகிறது. ஆனால், வேதம் அதை வலியுறுத்திப் பேசவில்லை. கிறிஸ்துவின் மரணம் பாவிகள் பாவநிவாரணமடைய அவசியம். கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் அவர்கள் நீதிமான்களாக அவசியம். இவற்றைப் படம் எந்தவிதத்திலும் விளக்கவில்லை. கத்தோலிக்கர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் மட்டுமே பெரிது படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வேதம் வலியுறுத்தும் கிறிஸ்துபற்றிய போதனைகளை பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள முடியாமல் போவது மட்டுமல்ல, சத்தியமும் முரண்பாடானவிதத்தில் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
- இந்தப் படம் வேதத்திற்குப் புறம்பான ஆத்மீக அனுபவங்களை ஆத்துமாக்களுக்கு அளிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பிரமாதமாக இருக்கும் என்று சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால், இதனால் பெரிய ஆபத்துதான் காத்திருக்கிறது. ஏற்கனவே சினிமாவிற்கு அடிமையாகி, உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவரும் தமிழ் மக்கள் நவீன டிஜிட்டல் ஒலி, ஒளித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்களையும், காதுகளையும், மனதையும் அசைத்துப் பிழியும் வகையில் இரத்தம் சிந்துகிற கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் நடிகரைப் பார்க்கிறபோது கண்கள் கலங்கி, உணர்ச்சிகள் தாக்கப்பட்டு தற்காலிகமான போலியான தோர் அனுபவத்தை தியெட்டரில் பெற்று அதைத் தவறாகத் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆத்மீக அனுபவமாகக் கருதிவிடக்கூடிய பேராபத்து இருக்கின்றது. தமிழகத்தில் “அம்மன்” படம் வெளிவந்தபோது மக்கள் அதைப் பார்த்து விட்டு தியெட்டரில் சாமியாடியதைப்போல இந்தப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஆத்மீக அனுபவத்தை அடைந்ததாக சொல்லுபவர்களுக்கு சபைகள் திருமுழுக்கு கொடுக்க ஆரம்பித்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது.
சமீபத்தில் பிறேசில் நாட்டில் இந்தப் படம் வெளியிடப்பட்டபோது 56 வயது மாது ஒருவரும், 43 வயது பிரஸ்பிடீரியன் போதகர் ஒருவரும் தியேட்டரில் படம் பார்க்கும்போது மாரடைப்பால் மரணமாயிருக்கிறார்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுக்கு மீறிய வன்செயலே (Violence) இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. விசுவாசிகளே! கர்த்தரை அறியாத மெல் கிப்சன் பணம் சேர்க்கும் நோக்கத்திற்காக இரத்தம் சொட்டச்சொட்டத் தயாரித்திருக்கும் இந்தப்படத்தால் கர்த்தர் எப்படி மகிமையடைய முடியும்?
திருச்சபை வரலாறு
கிரெகரி 1 முதல் சார்ளிமன்வரை
From Greogry I to Charlemagne
இஸ்லாமின் வளர்ச்சி
இஸ்லாமின் வளர்ச்சி கிறிஸ்தவத்திற்கு பெரும் ஆபத்தாக அமைந்ததோடு உலக வரலாற்றையும் பாதித்தது. இஸ்லாமை நிறுவிய முகமது 570-ல் மெக்கா வில் பிறந்து சிறுவயதிலேயே பெற்றோரையும் இழந்தார். வாலிபனாக வளர் ந்த பின்பு முகமது வனாந்தரத்தில் தனிமையில் அதிகநேரம் தியானத்தில் ஈடுபட்டிருப்பது வழக்கம். அப்படி தியானத்தில் இருக்கும்போது தான் உணர் விழந்ததாகவும், அந்த நிலையில் சில ஒசைகளைக் கேட்டதாகவும் கூறியிருக் கிறார். அவர் யூதர்களையும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட, தள்ளுபடி ஆகமங்களை நம்பிய சில வேதவிரோதிகளையும் சந்தித் திருக்கிறார். அவர்களுடைய சந்திப்பு கடவுள் ஒருவரே என்ற உண்மையை முகமதுவுக்கு புலப்படுத்தியபோதும், அவர்களுடைய வாழ்க்கை அவரைக் கவரவில்லை. இது முகமது கிறிஸ்தவராக வருவதற்கு தடையாக இருந் திருக்கலாம். அவர் அரேபியாவில் அன்றிருந்த பலதெய்வ வழிபாட்டைக் கூண்டோடு அழித்து அல்லாவின் பெயரில் ஒரே மதத்தை நிறுவ கங்கணம் கட்டினார். முகமது தன்னை அல்லாவின் தீர்க்கதரிசியாகக் கருதினார்.
தன்னுடைய செயல்களுக்கு மிகுந்த எதிர்ப்பு ஏற்பட்டதால் தன்னைப் பின்பற்றிய இருநூறுபேரோடு 622-ல் முகமது மதீனாவுக்கு ஓடிப்போய் வாழ வேண்டியிருந்தது. இந்த “ஹிஜ்ரா” அல்லது “ஹஜீரா”வே முகமதுவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லீம்கள் தங்களுடைய நாட்களை இதை வைத்தே கணிக்கிறார்கள். ஒன்பது வருடங்களுக்கு இப்படி யாக மதீனாவில் வாழ்ந்த பிறகு முகமது மறுபடியும் மெக்காவுக்கு வெற்றிகர மாகத் திரும்பினார். 632-ல் முகமது இறக்கும்போது தான் கங்கணம் கட்டி யிருந்ததுபோல் அரேபியா முழுவதையும் வெற்றி கண்டிருந்தார்.
தனக்கு நாற்பது வயதாகவிருந்தபோது முகமது முஸ்லீம்களின் மதிப்புக் குரிய நூலான “குரானை” எழுத ஆரம்பித்தார். அதில், தான் கேப்பிரியல் என்ற தேவ தூதனிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிப்படுத்தல்களை எழுதி வைத்திருப்பதாக முகமது கூறினார். முகமதுவின் குணாதிசயங்கள் முரண் பட்டவிதத்தில் அமைந்திருந்ததாக சொல்லப்படுகின்றது. சில வேளைகளில் அவர் நட்போடும், கருணையோடும் நடந்துகொள்வார். சிலவேளைகளில் கோபக்காரராகவும் தன்னுடைய எதிரிகளைக் கொடுமைப்படுத்துபவராகவும் இருந்திருக்கிறார். அதேநேரம், மிகவும் உறுதிமிக்கவராகவும், இருந்திருக்கிறார். 622-ல் மெக்காவில் இருந்து அவர் போன தொன்னூரு வருடங்களுக் குள் அவர் நிறுவிய இஸ்லாமிய மதம் இந்தியாவில் இருந்து அத்திலாந்திக் கடல்வரை பரவியிருந்தது. விரைவில் அது மத்திய ஆசியாவுக்குள்ளும், சீனாவுக்குள்ளும் நுழைந்தது. பின்பு தென்னாசியாவெங்கும் பரவி மலேசியா வரை தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.
இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பினால் திருச்சபைக்கு ஏற்பட்ட தீங்கின் விஸ்தரிப்பை எண்ணிப் பார்க்கும்போது நமது மனம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அந்தியோகியா, எருசலேம், அலெக்சாந்திரியா ஆகிய பிரதேசங்களிலும் மற்றப் பிரதேசங்களிலும் பரவியிருந்த கிறிஸ்தவ சபையில் ஒரு சில மட்டுமே இந்த ஆக்கிரமிப்புக்குத் தப்பியிருந்தன. சிரியாவில் மட்டும் 10,000 சபைகள் அழிக்கப்பட்டோ அல்லது பள்ளிவாசல்களாகவோ மாறின. வட ஆபிரிக்கா வில் டர்டூலியன், சிப்பிரியன் ஆகஸ்தீன் ஆகிய முக்கிய கிறிஸ்தவ தலைவர் களை நினைவுறுத்திக் கொண்டிருந்த சபை முற்றாக அழிவைச் சந்தித்தது. இந்த முறையில் மத்தியதரைக்கடல் பிரதேசத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த சபைகள் சந்தித்த அழிவு வெளிப்படுத்தல் நடபடிகளில் 2:5-ல் காணப்படும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைத்தான் நினைவுபடுத்துகிறது. “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திருந்தாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.”
ஸ்பெயினைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் 732-ல் பிரான்ஸிற்குள் நுழைந்தது. ஐரோப்பா முழுவதுமே இஸ்லாமின் ஆக்கிரமிப்புக்கு உட்படும் பேராபத்து இருந்தது. இக்காலத்தில் பிரெங்கிஸ் (Frankish) அரசனுடைய அரண்மனை மேயராக இருந்த சார்ள்ஸ் மார்டல் (Charles Martel) கிறிஸ்தவ படைகளை ஒன்றுசேர்த்து எதிர்த்து வருகின்ற இஸ்லாமியப் படைகளை டுவர்ஸ் (Tours) என்ற இடத்தில் தாக்கி அவர்களுக்கு பெரும் அழிவை உண்டாக்கினார். இந்தப் போர் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மிக முக்கிய மான போர். இதன் காரணமாக ஐரோப்பாவில் தொடர்ந்தும் கிறிஸ்தவம் நிலை நிற்க முடிந்ததோடு இஸ்லாமியப் படைகள் தோல்வியைச் சந்தித்து திரும்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜெர்மானிய ஆதிவாசிகள் மத்தியில் கிறிஸ்வம்
திருச்சபை ஆதியில் உருவான பகுதிகளில் எல்லாம் அதற்குப் பெருந் தீங்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை ரைனைச் (Rhine) சுற்றி இருந்த பகுதிகளில் வாழ்ந்த ஜெர்மனிய ஆதிவாசிகளின் மத்தியில் சுவிசேஷ ஊழியம் நடைபெற ஆரம்பித்தது. இந்த ஊழியத்தில் பிரித்தானிய மிஷனரிகள் பெரும் பங்கு வகித்தனர். இதற்கு முன்னர் கொலம்பானாஸ் (Columbanus) என்பவர் செய்திருந்த பணியினால் உந்தப்பட்டு பிரித்தானியாவின் செல்டிக் சபையைச் சேர்ந்த துறவிகள் கூட்டம் கூட்டமாக ஐரோப்பாவுக்கு ஊழியம் செய்யப் போனார்கள். ஜெர்மானிய ஆதிவாசிகள் மத்தியில் ஊழியம் செய்த வர்களில் இரண்டு ஆங்கிலேயர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். முதலாவது யோர்க்கைச் (York) சேர்ந்த வில்லிபுரோட் (Willibroad). இவர் 690-ல் பிரிசியா வுக்கு (Frisia) மிஷனரியாகப் போனார். ஆரம்பத்தில் புறஜாதியினரால் இவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இவற்றிற்கெல்லாம் மத்தியில் இவர் அனேக ஆதிவாசிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்து அவர்கள் மனம்மாறக் காரணமாக இருந்தார். இவரது பணிகளால் இவருடைய வாழ்நாளிலேயே பிரெங்கிஸ் பிரிசியா முழுவதும் கிறிஸ்தவத்தின் ஆளுகைக்குள் வந்தது. 695-ல் இவர் உட்ரெக்டின் (Utecht) பிசப்பாக நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆங்கிலேய மிஷனரித் துறவி பொனிபேஸ் (Boniface). இவரை வின்பிரித் என்றும் அழைப்பார்கள். இவர் “ஜெர்மனியின் அப்போஸ்தலர்” என்றும் அழைக்கப்பட்டார். டெவன் என்ற இடத்தைச் சேர்ந்த இவர் மிகவும் திறமைவாய்ந்த நிர்வாகஸ்தராக இருந்ததோடு ரோமன் சபைக்குப் பயனுள்ளவராகவும் இருந்தார். துரிங்கியா, பவேரியா, ஹெஸ் ஆகிய இடங் களில் இவரது நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. 732-ல் இவர் ஆர்ச் பிசப்பாக நியமிக்கப்பட்டார். போப்புக்கு மிகவும் அடிபணிந்து ஊழியம் செய்த இவர் 753-ல் வட பிரிசியாவில் இரத்த சாட்சியாக மரித்தார்.
8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சாக்சனியில் (Saxony) சுதந்திர விரும்பிகளான அப்பிரதேச மக்கள் கத்திமுனையில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. போப்பின் ஆதரவு பெற்றிருந்த சார்ளிமனுடைய (Charlemagne) பெயருக்கு இந்த சம்பவம் ஊறுவிளைவித்தது. சாக்சன்கள் அடிக்கடி அடிபணிய மறுத்து மதகுருமார்களைக் கொன்று, குருமடங்களையும் தீ வைத்து அழித்தனர். இவர்கள் கிறிஸ்தவத்தை எதிர்த்ததற்குக் காரணம் அது அவர்களுடைய எதிரிகளான பிராங்க்ஸின் மூலமாக அவர்கள் மீது திணிக் கப்பட்டதுதான். இவர்களுடைய செயல்களுக்குத் தண்டனையாக சார்ளி மன் ஒரே நாளில் 4500 சாக்சன்களுடைய தலையைத் துண்டித்தான். முப்பது வருடங்கள் போர் (772-803) தொடர்ந்து நடந்தபின் இறுதியில் சமாதானம் ஏற்பட்டது. அதன்பின் மிஷனரிகள் அனுப்பிவைக்கப்பட்டு எல்ப் (Elbe) வரையும் ஜெர்மனி பெயரளவில் கிறிஸ்தவ நாடாக இருந்தது. மிஷனரிகள் சார்ளிமனுடைய கத்தியைவிட கர்த்தரின் வார்த்தையைப் பயன்படுத்தி ஊழியம் செய்ததால் சாக்சன்கள் இறுதியில் கர்த்தருக்குள் வரமுடிந்தது.
பிரெங்கிஸ் ஆட்சியாளரும், ரோம சாம்ராஜ்யமும்
8-ம் நூற்றாண்டில் போப்புக்கும், பிரெங்கிஸ் அரசர்களுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் பொதுவாக உலகத்திலும், சபையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. ரோமுக்குள்ளும், லொம்பார்டுகளினாலும் தனக் கேற்பட்ட எதிர்ப்புகளை பெப்பின், சார்ளிமன் ஆகிய பிரெங்கிஸ் அரசர்களுடைய ஆதரவின் மூலம் போப்பால் எதிர்க்க முடிந்தது. அதே போல் போப்பின் ஆதரவு இந்த அரசர்களுக்கும் பெருமளவில் உதவியது. 800-ம் ஆண்டில் கிரிஸ்துமஸ் நாளன்று போப் திடீரென்று சார்ளிமனை மேற்கு ரோம சாம்ராஜ்யத்தின் அதிபதியாக பிரகடனம் செய்து மூடிசூட்டினார். இது மிகவும் கவனமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பிற்காலத்தில் இச்செயல் பல நூற்றாண்டுகள்வரை ஐரோப்பாவையும் திருச்சபையையும் பெருமளவில் பாதித்தது. இந்தப் புது சாம்ராஜ்யம் ஏற்பட்டதனால் இனி அரசும், திருச்சபையும் ஒன்று என்ற எண்ணமும், கர்த்தரின் மகிமைக்காக வும், மக்களின் நன்மைகாகவும் இனி அரசனும், போப்பும் இணைந்து செயல் பட வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. சார்ளிமனுடைய காலத்தில் இந்தப் புதிய உறவு பிரச்சனை இல்லாமல் தொடர்ந்தது. இருந்தாலும் அரசன் தானே போப்புக்கும், சகலருக்கும் அரசன் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தான்.
சார்ளிமனை ரோம சாம்ராஜ்யப் பேரரசனாக மூடிசூட்டியதன் மூலம் போப் தானே அந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்தாக உரிமை பாராட்டி னார். ஆனால், அரசன் தான் ஏற்கனவே பேரரசனாக இருந்து வந்திருக் கிறேன் என்று போப்பின் கூற்றை மறுத்தான். இது பிற்காலத்தில் அரசுக்கும், போப்புக்குமிடையில் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. போப் அரச காரியங்களில் தொடர்ந்து தலையிட அரசன் திருச்சபை காரியங்களை நேரடியாக நடத்திவந்தான். சபை பிசப்புக்கள் எவ்வாறு வாழவேண்டும் பணிபுரிய வேண்டுமென்பதையெல்லாம் அரசனே தீர்மானித்தான்.
கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக வணக்கம்
7-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழி படவோ, வழிபாட்டுக்குத் துணயாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. 8-ம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும் என்றெல்லாம் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே.
726-ல் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 2-ம் லியோ விக்கிரக ஆராதனை மோசமான நிலையை அடைந்துவிடாமல் இருக்க சபைகளில் படங்களையும், விக்கிரகங்களையும் மிக உயரமான இடங்களில் வைக்கும்படிக் கட்டளையிட்டான். வழிபாட்டுக்கு வருகிறவர்கள் அவற்றிற்கு முத்தம் கொடுப்பதைத் தடுப்பதற்காக அரசன் இதைச் செய்தான். ஆனால், கொன்ஸ் தாந்திநோபிலின் அதிகாரிகளும், கிரீஸ், சிரியாவில் இருந்தவர்களும் இதற் கெதிராக குரல் கொடுத்தனர். உடனே பெரும் சச்சரவு ஏற்பட்டதால் சபைகளில் இருந்து அத்தனை படங்களையும், விக்கிரகங்களையும் அகற்றும்படிப் பேரசன் கட்டளையிட்டான். இதனால் பெரும் போராட்டம் வெடித்தது. போப் 3-ம் கிரெகரி அரசனைக் கண்டித்து விக்கிர ஆராதனைக்கு மிக வும் ஆதரவாகப் பேசினார். இந்த சமய வழிபாட்டுப் பிரச்சனை வரலாற்றில் ஐக்கனோகிளாஸ்டிக் சச்சரவு (Iconoclastic) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை விக்கிரகங்கள் உடைத்தலைக் குறிக்கிறது.
754-ல் பேரரசன், 5-ம் கொன்ஸ்டன்டைன் ஒரு பெரும் சினட்டைக் கூட்டி விக்கிரக ஆராதனை வேதத்திற்கு முரணானது என்றும், அது புறஜாதியாரின் வழிபாட்டு முறையென்றும் தீர்மானம் நிறைவேற்றி அதைத் தடை செய்தான். இந்தக் காலப்பகுதியில் ஏற்கனவே விக்கிரக ஆராதனை சபையில் நுழைந்து, அவற்றிற்கு தூபாராதனை காட்டும் வழக்கமும் வழக்கில் இருந்தது. கொன்ஸ்டன்டைனுக்குப் பிறகு பதவியேற்ற 4-ம் லியோவின் விதவை 787-ல் இரண்டாம் நைசியா கவுன்சிலைக்கூட்டி, போப் 3-ம் லியோவின் கட்டளையை நீக்கினாள். அத்தோடு, இயேசு கிறிஸ்து, கன்னி மேரி, தேவ தூதர்கள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் சிலைகளை வைக்கவும் அனுமதி அளித்தாள். இரண்டாம் நைசியா கவுன்சில் விக்கிரகங்களுக்கு மரியாதையுடனான வழிபாடு அளிக்கும்படி சிபாரிசு செய்தது. இருந்தாலும் மேற்குப் பிராந்தியத்தில் அங்கிருந்த போப் விக்கிரக ஆராதனையை வலியுறுத்திய போதும், சார்ளிமனும், பிரெங்கிஸ் பிசப்புக்களும் 794-ல் பிராங்பட்டில் (Frankfort) கூடிய கவுன்சிலின் மூலம் விக்கிரக ஆராதனையை கடுமையாகக் கண்டித்து அதை எதிர்த்து வந்தனர். மேற்கின் பேரரசன் சார்ளிமன் தனது நூலில், “கர்த்தரை மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும். பரிசுத்தவான்களுக்கு மரியாதை மட்டுமே அளிக்க வேண்டும். விக்கிரகங்களை ஒரு போதும் வணங்கக் கூடாது”என்று எழுதி வைத்திருந்தான்.
டிஸ்பென்சேஷனலிசம்
தோற்றமும், வளர்ச்சியும் (2)
அப்போஸ்தலர் காலத்தில் ஆதிசபையிலும் அதற்குப் பின் சீர்திருத்த வாதிகளின் காலத்திலும், தூய்மைவாதிகளின் காலத்திலும் இருந்தி ராத டிஸ்பென்சேஷனலிசம் ஜோன் நெல்சன் டார்பியினால் ஆரம் பிக்கப்பட்டு எப்படி இங்கிலாந்தில் வளர்ந்தது என்பதையும், வேதத் தில் காணமுடியாத அதனுடைய கோட்பாடுகளையும் கடந்த இதழில் ஆராய்ந்தோம். இனி அது எப்படி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு வளர்ந்தது என்பதை இந்த இதழில் ஆராயப் போகிறோம்.
அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசம்:
ஆயிரம் வருட அரசாட்சிக் கோட்பாட்டில் டிஸ்பென்சேஷனலிசத்தின் ஊடுருவல்
அமெரிக்காவில் பிரிமில்லேனியலிசத்தைப் பின்பற்றியோர் மத்தியில் 1843-ல் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இவர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த வில்லியம் மில்லர் (1792-1849) (William Miller) இயேசு கிறிஸ்து 1843-ல் வரப்போவதாக தீர்க்க தரிசனம் சொன்னார். இந்தத் தீர்க்கதரிசனத்தினால் இவரைச்சுற்றிப் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், இயேசு கிறிஸ்து 1843-ல் வராததால் இந்தக் கூட்டம் பிசுபிசுத்துப் போய் ‘மிலரிசம்’ பேரடி வாங்கியது. இதனால் பிரிமில்லேனியலிசக் கோட் பாடு பெரும் பாதிப்புக்குள்ளானது. முக்கியமாக வரலாற்றுப் பிரிமில்லேனிய லிசம் இதனால் பாதிக்கப்பட்டது. 1260 வருட/நாட்களுக்கு மில்லர் அளித்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அவருடைய தீர்க்கதரிசனமும் அமைந் திருந்ததால் அந்தத் தீர்க்கதரிசனம் பொய்யாய்ப்போனபோது அனைத்துப் பிரிமில்லேனியலிசப் பிரிவினரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதன் காரணமாக எதிர்காலத்தின் அடிப்படையில் முடிவுகால நிகழச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கும் முறை டின்பென்சேஷனலிசத்தின் முக்கிய அம்சமாக விளங்கு வதற்கு இந்த நிகழ்ச்சி பாதை வகுத்துத் தருவதாக அமைந்தது.
இந்தக் காலப்பகுதியில் ஜோன் நெல்சன் டார்பி 1862 முதல் 1877 வரை ஆறு தடவைகள் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் வந்துபோனார். அமெரிக்க கிறிஸ்தவர்கள் தன்னுடைய கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும் டார்பியினுடைய ஆரம்ப முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. முக்கியமாக கிறிஸ்தவ உலகத்தின் மோசமான நிலமைக்கு பாரம் பரிய சபைகளே மூலகாரணமென்றும், அதனால் விசுவாசிகள் சபைகளைப் புறக்கணித்து சகோதரர்களாக கிறிஸ்துவின் பெயரில் எல்லா இடங்களிலும் கூடிவரவேண்டுமென்ற இவருடைய போதனை அமெரிக்க கிறிஸ்தவர்களிடம் விற்பனையாகவில்லை. அமெரிக்க கிறிஸ்தவ சபைகள் முழுவதும் உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்கிற சபைகளாக இருக்கின்றன என்றும் அதுவே அவர்கள் மத்தியில் தனது கோட்பாடுகள் செல்லுபடியாகாதற்குக் காரணம் என்றும் டார்பி குற்றஞ்சாட்டினார். ஆனால், டார்பியின் விடாமுயற்சி 1870-வதுகளில் அவருக்குக் கைகொடுக்கக் ஆரம்பித்தது. செயின்ட் லூயிஸ். சிக்காகோ, நியூயோர்க், பொஸ்டன் ஆகிய அமெரிக்க நகரங்களில் அவருடைய கோட்பாடுகள் சிறிது சிறிதாக பிரபல்யமடைய ஆரம்பித்தன. செயின்ட் லூயிசில் ஜேம்ஸ் புரூக்ஸ் என்ற பிரஸ்பிடீரியன் சபைப் போதகர் டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் போதிக்கும் முக்கிய போதகராக உருவானார். சிக்காகோவில் டார்பிக்கு டி. எல் மூடியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஆனால், டார்பியால் தன்னு டைய டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைப் பரப்பும் முக்கிய பிரச்சார கராக டீ. எல். மூடியை மாற்ற முடியவில்லை. பொஸ்டனில் எப். ஜீ. பிரவுன் என்பவர் சகோதரத்துவ கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார். ஜோன் நெல்சன் டார்பி கடைசித் தடவையாக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த 1877-ம் ஆண்டில் அங்கே எண்பத்தி எட்டு சகோதரத்துவ குழுக்கள் இருந்தன. ஆனால், இவையனைத்துமே சிறு தொகையினரான விசுவாசி களை மட்டுமே கொண்டிருந்தன. (சகோதர்கள் கூடிவரும் கூட்டத்தை நான் குழுக்கள் என்று அழைப்பதற்குக் காரணம் சகோதரத்துவ கோட்பாட்டாளர் திருச்சபையை ஓர் அமைப்பாக ஏற்றுக் கொள்ளாததால்தான். அவர் களுடைய கோட்பாட்டின்படி சகோதர்கள் கூடிவரும் நிரந்தரமற்ற, பெயரில் லாத கூட்டமே சகோதரத்துவ குழுக்கள். வேதபோதனையின்படி அவர்கள் சபை அமைப்பைக் கொண்டிராததால் அவர்களுடைய கூட்டத்தை சபை என்று அழைப்பது முறையல்ல.) இங்கிலாந்தில் பிலிமத் சகோதரர்கள் பிரபல் யம் பெற்றிருந்ததுபோல் அமெரிக்காவில் அவர்கள் என்றுமே பிரபல்யமான ஒரு இயக்கமாக இருக்கவில்லை. ஆனால், டின்பென்சேஷனலிசம் மட்டும் பிரபல்யமடைந்தது.
இதே காலப்பகுதியில் அமெரிக்காவில் ஆயிரம் வருட அரசாட்சி பற்றிய விளக்கங்கள் தரும் இதழ்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தன. அவற்றில் பல எதிர்கால அடிப்படையிலான பிரிமில்லேனியல் விளக்கங்களைத் தருவதாகவும், சில டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகவும் இருந்தன. புரொபடிக் டைம்ஸ் Prophetic Times (1863-1881), வேமார்க் இன் த வில்டர்னர்ஸ் Waymark in the Wilderness (1854-1857, 1864-1872) ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இரண்டாவதன் ஆசிரியராக இருந்த இங்லிஸின் (Inglis) எழுத்துக்களில் அமெரிக்க டிஸ்பென்சேஷனலிசத்திற்கே உரிய குணாதிசயங்களைப் பார்க்க முடிகின்றது. இவர் ஜோன் நெல்சன் டார்பியின் சகோதரத்துவக் கோட்பாடுகளையும், கூட்டுச்சேராத் தன்மையையும் முழுமையாக நிராகரித்து அவருடைய டிஸ்பென்சேஷனலிசக் கோட் பாடுகளையும், கிறிஸ்துவின் இரகசிய வருகை போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார்.
தீர்க்கதரிசனத்துக்கு முக்கியத்துவம் தந்த வேத ஆராய்ச்சி மகாநாடுகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளில் பிரிமில் லேனியலிசம் பல தீர்க்கதரிசன வேத ஆராய்ச்சி மகாநாடுகளை (Prophetic Bible Conferences) நடத்தி ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நயாகரா வேத ஆராய்ச்சி மகாநாடு (Niagara Bible Conference) இந்த மகாநாடுகளுக் கெல்லாம் தாயாக அமைந்தது. இது 1868-ல் நியூ யோர்க் நகரில் ஆரம்ப மானது. இதில் பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்களாக ஜேம்ஸ் இங்லிஸ் (James Inglis), டேவிட் இங்லிஸ் (David Inglis), சார்ள்ஸ் கெம்பல் (Charles Campbell) போன்றோரிருந்தனர். இதில் 120 பிரபல்யமான பிரிமில்லேனியல் இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மகாநாடுகள் தொடர்ந்து நடந்தன. இவற்றில் பங்கு கொண்டு உரையாற்றிய சிலர் டிஸ்பென்சேஷ னலிசக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்களாகவும் வேறு சிலர் ஆரம்பத்தில் டார்பியின் பிரி-டிரிபியுலேசன் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு பின்பு அதைக் கைவிட்டவர்களாகவும் இருந்தனர். டிஸ்பென்சேஷனலிசத்திற்கே இந்த மகாநாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோதிலும் ஆரம்ப காலங்களில் பிரிமில்லேனியலிசத்தைச் சேர்ந்த பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களும் இணைந்து செயல்பட்டனர்.
ஹென்றி வார்ட் பேச்சர் (Henry Ward Becher) என்பவர் வேத போதனை களுக்கு இயற்கை ரீதியிலான “லிபரல்” விளக்கம் அளித்த பேச்சிற்குப் பின்பே நயாகரா மகாநாடு நடைபெற்றது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஹென்றி வார்ட் பேச்சரின் பேச்சு அனேகரை வசீகரிக்க ஆரம்பித்ததால் அதற் கெதிராக நயாகரா மாகாநாட்டுத் தலைவர்கள் கூட்டுச் செர்ந்தனர். 1878-ல் நடந்த நயாகரா மகாநாடு, லிபரலிசத்திற்கெதிராக வேதத்தின் அடிப்படைப் போதனைகளை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தவகையில் அது பாராட்டத் தகுந்த நடவடிக்கையே. ஆனால், மகாநாட்டில் வெளியிடப்பட்ட பதின்னான்கு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்னதான கிறிஸ்துவின் வருகையும் ஒன்றாக இருந்தது. மகாநாட்டுத் தலைவர்கள் அனைவரும் டிஸ்பென்சேஷனலிசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக இருந்தபோதும், ஆயிரம் வருட அரசாட்சிக் கோட்பாட்டைத் தனியொரு கோட்பாடாகப் பார்க்காமல் தங்களுடைய ஏனைய அடிப்படை வேதநம்பிக்கைகளோடு இணைந்த ஒரு கோட்பாடாகவே கருதினர். ஆகவே, பின்பு வரலாற்றில் உருவான அடிப்படைவாதத்திற்கு (Fundamentalism) இந்தப்போக்கு அடித்தளமிடுவதாக அமைந்தது.
இந்த மகாநாடுகள் லிபரலசத்திற்கெதிரான வேதக்கோட்பாடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் இந்த மாகாநாட்டுத் தலைவர்கள் சத்தியப் பாதுகாவலர்களாக பெயர்பெற ஆரம்பித்தனர். ஆனால், அதே நேரம், இவர்கள் அனைவரும் டிஸ்பென்சேஷனலிசத்தைத் தழுவியவர்களாக இருந்ததால் அதற்கு எங்கும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. டிஸ்பென்சேஷன லிசம் இந்தவகையில் அமெரிக்காவில் ஆதரவு பெற ஆரம்பித்தற்குக் காரணம் இதன் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதிதான் (Literal Interpretation). இக்காலத்தில் லிபரலிசம் வேதத்தின் அற்புதங்களை அடியோடு நிராகரித்து இயற்கைரீதியிலான விளக்கத்தை அளித்தது. அதற்கு மாறாக டிஸ்பென் சேஷனலிசம் எழுத்துபூர்வமான விளக்கமளிப்பதை வற்புறுத்தி அற்புதங் களை அற்புதங்களாக விளக்கியது. லிபரலிசத்தை எதிர்த்த சுவிசேஷ இயக்கத் தவர்கள் இதனால் டிஸ்பென்சேஷனலிசத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.
லிபரலிசத்தை எதிர்த்து நிற்பதற்குக் கைகொடுத்த டிஸ்பென்சேஷனலிசத்தின் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதிமுறை காலம் போகப்போக அதன் அடிப்படைக் கோட்பாடாக உருப்பெற்றது. இப்போதனைப்படி, தீர்க்கதரிசனங்கள் அது கொடுக்கப்பட்டுள்ளபடியே எழுத்துபூர்வமாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். வேதத்தில் இஸ்ரவேலை யூதர்களாக மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டும். தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அந்த எண்கள் குறிக்கும் காலப்பகுதிகளாக மட்டுமே கருதப்பட வேண்டும். அத்தோடு, அடையாளங்களாக வேதத்தில் தரப்பட்டுள்ளவைகளும்கூட வரலாற்றில் வாழ்ந்துள்ள வேத மனிதர்களை அல்லது சம்பவங்களைக் குறிப்பவையாக மட்டுமே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் வரலாற்றில் நடந்துள்ள, நடக்கப்போகும் சம்பவங்களாக தெளிவாகவும், தீர்க்கமாகவும் விளங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் இந்த டிஸ்பென்சேஷனலிச எழுத்துபூர்வமான வேத விளக்க முறை போதித்தது.
இந்த முறையில் வேதத்திற்கு விளக்கங் கொடுத்த டிஸ்பென்சேஷனலிஸ்ட் தலைவர்களின் மாகாநாட்டுப் பிரசங்கங்கள் வித்தியாசமான வகையில் அமைந்திருந்தன. அவர்கள் “பிரசங்கம்” என்பதை “வேதவாசிப்பு” (Bible reading) என்ற பெயரில் அழைத்தார்கள். இந்த வேத வாசிப்பிலும் வித்தியாசமான முறையைக் கடைப்பிடித்தார்கள். அதாவது, எந்த உதாரணங்களையும் தராமல், அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கங்களைத்தராமல் வேத வசனங்களுக்கு நேரிடையாக உள்ளது உள்ளபடி எழுத்துபூர்வமான ஒருசில விளக்கத்தை மட்டும் அளித்தனர் (like a running commentary). இது வேதப்படிப்பிற்கு அதிக மரியாதை தரும் முயற்சிபோலத் தென்பட்டாலும் இந்த முறையில் ஆபத்து இருந்தது. ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தி ஒரு பகுதிக்கான விளக்கத்தை வேதத்தின் பல பகுதிகளைப் பயன்படுத்தி போகிற போக்கில் கிரிக்கெட் காமென்டரி கொடுப்பதுபோல் ஒரு சில விளக்கங்களை மட்டும் அளிப்பதை பிரசங்கம் என்று கூற முடியாது. இந்த வகையில்தான் இவர்களுடைய “வேதவாசிப்பு” அமைந்திருந்தது. ஆனால், இந்த முறை அக்காலத்து அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்படி வேதத்திற்கு எழுத்துபூர்வமான விளக்கத்தை அளித்தவர்கள் தாங்கள் சாதாரண மனிதர்களுக்கு சாதாரண விளக்கங்களை அளிப்பவர்கள் என்று மார்தட்டிக் கொண்டனர். வேத வசனங்களில் இரகசியமான, கண்ணுக்குப் புலப்படாதவற்றைப் பார்க்கக்கூடாதென்றும், நேரடியாக நாம் வாசிக்கும்போது தெரிகிறவற்றை மட்டுமே விளக்க வேண்டும் என்று 1886 மகாநாட்டில் கூறப்பட்டது. இதுவே சாதாரண மக்களால் விளங்கிக் கொள்ளக்கூடிய வேதத்தின் சாதாரண விளக்கங்கள் என்றும் விளக்கப்பட்டது. வேதவிளக்க விதிகள் பற்றிய டிஸ்பென்சேஷனலிசத் தலைவர்களின் இத்தகைய பேச்சுக்கள் அக்காலத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றதற்கு இன்னுமொரு முக்கிய கரணம் இருந்தது. 1820-ல் இருந்து ஒரு நூற்றாண்டு காலம்வரை அமெரிக்காவில் பொதுஅறிவு மெய்த்தன்மை (Scottish common Sense Realism) என்ற தத்துவம் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தது. இதுவே அன்றைய அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்பட்டு வந்தது. இது ஓர் அமெரிக்க தத்துவம். இந்தத்தத்துவம், கர்த்தருடைய சத்தியம் ஒருங்கிணைக்கப்பட்ட, வரைமுறை கொண்ட தனி யூனிட் என்றும் அதை விளங்கிக்கொள்வதற்கு பொதுஅறிவு இருந்தாலே போதும் என்றும் விளக்கியது. டிஸ்பென்சேஷனலிசத்தின் எழுத்துபூர்வமான வேதவிளக்கங் களுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு தந்ததற்கு அவர்கள் மத்தியில் காணப்பட்ட இந்தத் தத்துவமே பெரும்பாலும் காரணமாக இருந்தது. “நூற்றில் தொன்னூற்றொன்பது தடவைகள் சாதாரண மனிதன் ஒருவன் வேதத்தைப் படித்து விளங்கிக் கொள்ளக்கூடிய சத்தியம் மட்டுமே சரியானது” என்ற ஆர். ஏ. டோரியின் (R. A. Torrey), வார்த்தைகள் இவர்களுக்கு மிகவும் பொருளுள்ளதாகப்பட்டது. ஆகவே, டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகளின் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதி அமெரிக்கர்களைப் பாதித்திருந்த “பொதுஅறிவுத்” தத்துவத்தின் அருமையான வெளிப்பாடாக இருந்தது.
டி. எல். மூடியும் (Dwight L. Moody), செங்கியும் (Ira Senkey)
இதுவரை நாம் பத்தோன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்த அம்சங்களை ஆராய்ந்து வந்துள்ளோம். அத்தோடு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இன்னுமொரு முக்கிய மனிதரைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. அந்த மனிதர்தான் டி. எல். மூடி (Dwight L. Moody) இவருடைய சுவிசேஷக்கூட்டப் பணிகள் டிஸ்பென்சேஷனலிசம் அமெரிக்காவில் வளரப் பெருங்காரணமாக இருந்துள்ளன. இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் மூடி பெரும் பிரசங்கியாகக் கருதப்பட்டார். அவருடைய செய்தி எப்போதும் தேவனுடைய அன்பைக் குறித்ததாக இருந்தது. மூடியினுடைய இறையியல், அடிப்படையில் வேத இறையியலாக இருந்தபோதும், தெளிவற்றதாகவும், உறுதியற்றதாகவும் இருந்தது. மூடி இறையியல் சச்சரவுகளை எப்போதுமே வெறுத்தார். அத்தோடு, மூடி பாரம் பரிய சபைத்தொடர்பற்றவராக, எந்தவித சபைத்தொடர்புமே இல்லாத வராக இருந்தார். அவர் சபையின் அடிப்படையில் சுவிசேஷப்பணி செய்வதைத் தவிர்த்து சபைக்குப் புறத்தில் ஸ்தாபனங்களின் கூட்டுச் சேர்க்கையோடு (Para-church Organizations) தன்னுடைய சுவிசேஷ சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதில் நாட்டம் காட்டினார்.
1873-ல் பிரிட்டனில் (Britain) சுவிசேஷப் பணி செய்யும்படி அவருக்கு அழைப்பு வந்தது. மூடி, ஐரா செங்கியைத் (Ira Senkey) தனக்குத் துணையாகவும், கூட்டங்களில் பாட்டுப்பாடுவதற்காகவும் அழைத்துச் சென்றார். அவர்களுடைய கூட்டங்கள் எவரும் நினைத்தும் பார்க்காதவிதத்தில் வெற்றி பெற்றன. இக்கூட்டங்கள், முக்கியமாக ஸ்கொட்லாந்தில் ஏற்பட்ட “எழுப்புதல்” அவர்களை உலகப்பிரசித்தமடையச் செய்தன. அதற்குப் பிறகு 1874-ல் அவர்கள் இருவரும் மறுபடியும் பிரிட்டிஸ் தீவுகளுக்குப் போய்வந்தபின் அமெரிக்காவில் தேசீயத் தலைவர்கள்போல அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் இலகுவாக ஊகித்து விடலாம். அமெரிக்க கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் தங்கள் கூட்டங்களில் வந்து பேசும்படி அழைத்து, அவர்கள் இருவரையும் வைத்துத் கூட்டங்கள் நடத்த அலைமோதினர். மூடி தன்னுடைய முதலாம் சுற்று சுவிசேஷக் கூட்டங்களை நடத்துவதற்கு சிக்காகோ வேதாகமப் பயிற்சிக் கல்லூரி போன்றவற்றின் வசதியுள்ள கட்டிடங்களைப் பயன்படுத் திக் கொண்டார். இந்தக் கல்லூரி நகர்ப்புற சுவிசேஷப்பணிக்காக விசுவாசிகளைத் (Laymen) தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1880-ல் இருந்து 1899-ல் தான் இறக்கும்வரை மூடி மசாசுசெட்ஸில் உள்ள நோர்த்பீல்டைத் தன்னுடைய வசிப்பிடமாகத் தெரிந்துகொண்டிருந்தார். அங்கே மூடி நடத்திய வசந்தகாலக் கூட்டங்கள் சகலவிதமான மக்களையும் கவர்வதாக அமைந்திருந்தது. மூடியின் இந்தக் கூட்டங்களின் விளைவாக உருவானதே அமெரிக்காவின் Student Volunteer Movement. இந்த மாணவர் இயக்கம் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ஆயிரக் கணக்கானோரை வெளிநாட்டு மிஷனரி ஊழியத்துக்குப் போகும்படி உற்சாகமூட்டி அமெரிக்காவில் அதுவரை இருந்திராதவகையில் மிஷனரி ஆர்வத்தை ஏற்படுத்தியது.
மூடி டிஸ்பென்சேஷனலிசத்துக்கு அளித்த பங்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (1) தன்னுடைய கூட்டங்களில் டிஸ்பென்சேஷனலிசத் தலைவர்களுக்கு மூடி முக்கிய இடத்தை அளித்தார். (2) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளை அளிக்கின்ற, பரப்புகின்ற ஸ்தாபனங்களை அவர் நிறுவினார். (3) இங்கிலாந்திலிருந்து கெசிக் பரிசுத்தவாத போதனைகளை (Keswick Holiness Teaching) அமெரிக்கா வில் பரப்புவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.
(1) மூடியும் டிஸ்பென்சேஷனலிசமும் – மூடி டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைத் தன்னுடைய பிரசங்கங்களில் நேரடியாகப் பயன்படுத்தியிரா விட்டாலும், பிரிமில்லேனியலிசப் போதனைகளை அடிக்கடி தந்திருக்கிறார். இது அவர் வாழ்ந்த நோர்த்பீல்டில் இருந்த பிரிமில்லேனியலிசக் கோட்பாடு களைப் பின்பற்றியவர்களுக்கு சுவிசேஷ இயக்கத்தில் தங்களுடைய முத்திரையைப் பதிக்க அருமையானதொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. மூடி டார்பியின் போதனைகளால் நேரடியாக பாதிக்கப்படாமல் இருந் தாலும் டார்பி பிரபல்யமாவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த சீ. எச். மெக்கின்டொச் (C. H. Mackintoch) என்பவரின் எழுத்துக்களைப் பெரிதும் மதித்தார். தன்னுடைய வேத அறிவுக்கு அவையே மூல காரணம் என்று மூடி கூறியிருக்கிறார். ஆகவே, மூடி டிஸ்பென்சேஷனலிசத்தை நிச்சயம் ஆதரித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால்தான் பிரிமில்லேனியலிசத்தைப் பின்பற்றியவர்களையும் டிஸ்பென்சேஷனலிசத்தைப் பின்பற்றியவர்களையும் இந்தக் காலத்தில் ஒரே மேடையில் பார்க்க முடிந்திருக்கிறது. அத்தோடு, டீ. எல். மூடிக்குப்பிறகு அவருடைய இடத்தில் வைத்துப் பேசப்படும் ஆர். ஏ. டோரி (R. A. Torrey) டிஸ்பென்சேஷனலிசத்தின் சாம்பியன் என்று அழைக்கப்படுகிறவர். ஆகவே, தெரிந்தோ தெரியாமலோ டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சிக்கு காரண மானவர்களில் முதன்மை பெறுகிறவராக மூடி இருந்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது.
(2) மூடியும் வேதாகமப் பயிற்சி நிலையங்களும் – டிஸ்பென்சேஷனலிசத்துக்கு மூடியளித்திருந்த இன்னுமொரு வரப்பிரசாதம் வேதாகமக் கல்லூரிகள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பல சுவிசேஷ இயக்கத் தலைவர்கள் சபை அதிகாரிகளைவிட ஆர்வமுள்ள விசுவாசிகளுக்கு குறைந் தளவான இறையியல் போதனைகளை அளித்து ஊழியத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்தினால் மிஷனரி ஊழியம் வளரும் என்று நம்பினர். 1866-ல் டபிள்யூ. ஜே. ஏர்ட்மன் (W. J. Erdman), டபிள்யூ. ஜீ. முவர்ஹெட் (W. G. Moorhead) மற்றும் சகோதரி எமா டிரையர் (Miss. Emma Dryer) ஆகியோர் இணைந்து ஒரு வேதபோதனையளிக்கும் நிறுவனத்தை நிறுவினர். இதற்கு மூடி முழு ஆதரவளித்தார். இவர்களில் எமா டிரையர் ஒரு டிஸ்பென்சேஷனலிஸ்ட். 1898 அக்டோபரில் இது ஆர். ஏ. டோரியை சுப்ரின்டென்டன்டாகக் கொண்டு முழுநேர போதனை யளிக்க ஆரம்பித்தது. மூடியின் மறைவுக்குப்பிறகு இந்த நிறுவனம் மூடி வேதாகம நிறுவனம் (Moody Bible Institute) என்ற பெயரைப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவுப்பகுதியில் ஏ. ஜே, புரொஸ்ட் (A. J. Frost), வில்லியம் பெல் ரைலி (William Bell Riley) ஆகியோர் தலைமையில் நோர்த் வெஸ்டர்ன் வேதாகம பயிற்சிப் பாடசாலை (North Western Bible Training School) ஆரம்ப மானது. அதற்குப் பிறகு வெகுவிரைவிலேயே லொஸ் ஏன்ஜலீஸ் வேதாகம நிறுவனம் (Bible Institute of Los Angeles), டோரான்டோ வேதாகம பயிற்சிப் பாடசாலை (Toronto Bible Training School), பிலடெல்பியா வேதாகம நிறுவனம் (Philadelphia Bible Institute) ஆகியன நிறுவப்பட்டன. ஒரு சிலவற்றைத் தவிர அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த வேதாகமக் கல்லூரிகள் அனைத்தும் டிஸ்பென்சேஷனலிசத்தைப் பரப்புவதற்கு அடித்தளமாக அமைந்தன.
(3) மூடியும் கெசிக் போதனைகளும் – மூன்றாவதாக மூடி அனேக டிஸ்பென்சேஷனலிஸ்டுகளுக்கு கெசிக் பரிசுத்தவாதப் போதனைகளை (Keswick Holiness teaching) அறிமுகப்படுத்தி வைத்தார். 1891 அளவில் மூடி பிரெட்ரிக் பீ. மேயரை (F. B. Meyer) நோர்த்பீல்டுக்கு அழைத்துவந்தபோது கடுமையான எதிர்ப்பு தோன்றியது. நோர்த்பீல்ட் மகாநாட்டில் பேச வந்திருந்த அனேக நயாகரா மகாநாட்டுத் தலைவர்கள் அதற்கு முன் சார்ள்ஸ் பினி (Charles Finney), ஆசா மேகன் (Asa Mahan) ஆகியோருடைய ஒபர்லின் பூரணப் பரிசுத்தப் போதனைகளை (Oberlin Perfectionism) கடுமை யாக எதிர்த்திருந்தபடியால் மேயர் அந்தப் போதனைகளில் இருந்து தன்னை விலக்கிக் காட்ட வேண்டியிருந்தது. கெசிக் இயக்கம் 1873-ல் இங்கிலாந்தில் கெசிக் என்ற இடத்தில் எச். டபிள்யூ வெப் பெப்லோ (H. W. Webb Peploe) என்பரின் தலைமையில் கூட ஆரம்பித்தது. இது மெத்தடிஸ்ட் பூரணத்துவத் தில் இருந்து விலகி வந்த இயக்கம். ஜோன் வெஸ்லியின் போதனையான, விசுவாசிகள் இந்த உலகத்தில் தங்களுடைய பாவ சரீரத்தில் பரிசுத்தத்தில் பூரணத்துவத்தை அடைய முடியும் என்ற போதனையை கெசிக் இயக்கம் நிராகரித்தது. இருந்தாலும் விசுவாசிகளின் பாவ சரீரத்தின் வல்லமையைக் கிறிஸ்து தன்னுடைய மரணத்தின் மூலம் பெற்றுத்தந்துள்ள நீதி மட்டுப் படுத்தி விட்டது என்ற போதனையையும் அவர்கள் நிராகரித்தனர். விசுவாசிகளின் வாழ்க்கையில் பாவத்துடனான போராட்டம் நடப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை ஒரு முரண்பாடாக அவர்கள் கருதி அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். விசுவாசி தன்னு டைய வாழ்க்கையில் இரண்டு கட்டங்களைக் கடக்க வேண்டியிருப்பதாக அவர்கள் போதித்தனர். அதாவது, உலகப்பிரமாணமான கிறிஸ்தவன் (carnal Christian), ஆதமீகமயமான கிறிஸ்தவன் (spiritual Christian) என்ற இரண்டு கட்டங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் தன் வாழ்க்கையில் சந்திக்க நேரும் என்பது கெசிக்கின் போதனை. ஒரு விசுவாசி உலகப்பிரமாணமான வாழ்க்கையில் இருந்து விலகி ஆத்மீகமயத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் அடைய அவனுக்கு “விசுவாசம்” அல்லது பரிசுத்தப்படுத்தல் அவசியம் என்பது இதன் போதனை. இந்தப் பரிசுத்தப்படுத்தலை அவர்கள் முழுமையாக ஒப்புக்கொடுத்தல் (absolute surrender) அல்லது கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தல் (yielding to Christ) என்ற பெயர்களிலும் அழைத்தனர். ஒரு விசுவாசி யினுடைய வாழ்க்கையில் ஏதாவதொரு சமயத்தில் திடீரென நிகழும் இந்த அனுபவத்தால் அவன் வெற்றியுள்ள வாழ்க்கையை (Victorious life) வாழ முடியும் என்று கெசிக் இயக்கம் போதித்தது. இந்த “இரண்டா வது ஆசீர்வாதம்” என்ற அனுபவத்தை மூடி, தன் வாழ்க்கையில் 1871-ல் பெற்றுக்கொண்ட தாகக் கூறி, இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் (Baptism of the Holy Spirit) பற்றிப் பிரசங்கிக்க வேண்டும் என்று டோரிக்கும் அறிவுரை செய்தார். டோரியும் அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. ஏனைய டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் தொடர்ந்து கெசிக் போதனைகளை ஆதரித்து வந்தனர். 1913-ல் சார்ள்ஸ் டிரம்புல் (Charles Trumbull) அமெரிக்க கெசிக் மகாநாட்டைக் கூட்டினார். இவர், சீ. ஐ. ஸ்கோபீல்ட்டைப்பற்றித் தான் எழுதிய வாழ்க்கை சரிதத்தில் ஸ்கோபீல்டை யும், தன்னையும் பவுலும் தீமோத்தேயுவுமாக வர்ணித்து எழுதியிருந்தார். இது டிஸ்பென்சேஷனலிசத்துக்கும் கெசிக் இயக்கத்துக்கும் இடையில் இருந்த இறுக்கமான உறவைச் சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் கெசிக் போதனைகளை ஸ்கோபீல்ட் தன்னுடைய வேதாகமக் குறிப்புகளில் (Scofield Bible Notes) படிமுறையாக சேர்த்து விளக்கியிருக்கிறார். பரிசுத்த ஆவியின் கிரியைகள் நிகழும் முக்கியமான காலம் சபையின் காலம் என்று கருதும் டிஸ்பென்சேஷனலிஸ்டுகளை கெசிக்கின் இந்தப்போதனைகள் அதிகமாகக் கவர்ந்தன. பரிசுத்த ஆவி சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் இறுதிக்காலம் வருவதற்குமுன் உலகம் முன்னேறும் என்ற எண்ணத்தைப் பிரிமில்லேனியலிஸ்டுகள் கைகழுவிவிட, கெசிக் இயக்கமோ ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியின் மூலமாக முழுமையான ஆத்மீக வெற்றியைத் தன் வாழ்க்கையில் அடையமுடியும் என்று போதித்தது.
இதுவரை நாம் அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசம் பரவ ஜோன் நெல்சன் டார்பியும், மூடியும் அளித்த பங்கைப்பற்றி அறிந்து கொண்டோம். ஆயிரம் வருட ஆரசாட்சிக்கு முன்னதாக கிறிஸ்துவின் வருகை, டிஸ்பென் சேஷனலிசம், கிறிஸ்துவின் பெயரில் விசுவாசிகள் திருச்சபை அமைப்பை நிராகரித்து தங்களுடைய சுயவிருப்பத்தின்படி எங்கும் கூடுதல், கெசிக் பரிசுத்தவாத போதனை, விசுவாசிகள் சபைக்கட்டுப்பாடின்றி மிஷனரி ஊழியத்தில் ஈடுபடலாம் என்ற போக்கு, அழைப்பே பெற்றிராத விசுவாசி களுக்கெல்லாம் குறைந்தளவு இறையியல் போதனைகளை அளித்து சுவிஷேச ஊழியத்திற்கு அனுப்பும் வேதாகமப் பயிற்சி நிலையங்கள் ஆகிய அனைத் தும் ஜோன் நெல்சன், டார்பி, மூடி, டோரி ஆகியோரின் கைங்கரியத்தினால் வளர்ந்து அமெரிக்க கிறிஸ்தவத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. இனி டிஸ்பென்சேஷனலிசம் எவ்வாறு மேலும் தீவிரமடைந்தது, எங்கும் பரவ ஆரம்பித்தது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.
பிரசங்கத்தில் “பயன்பாடுகள்”
பிரசங்கத்தில் “பயன்பாடுகள்”
– The Place of Applications in Biblical Preaching –
பிரசங்கிகள் பிரசங்கிக்க வேண்டிய செய்திக்கான ஒரு வரைபடத் தைத் தயாரித்து (Outline), அதன் அடிப்படையில் பிரசங்கத்திற்கான சரீரத்தை (body of the sermon), முறையாகத் தயாரிப்பது எப்படி என்று கடந்த இதழில் பார்த்தோம். இவற்றைச் செய்து முடித்ததோடு பிரசங்கத்தை முழுமையாகத் தயாரித்து விட்டதாக எண்ணிவிடக்கூடாது. பிரசங்கத்தின் சரீரத்தைத் தயாரித்து விட்டால் மட்டும் போதாது. அதற்குத் தலையும், நடப்பதற்கு கால்களும் தேவை. அதாவது பிரசங்கத்தின் பயன்பாட்டு அம்சங்களையும் (Application), முகவுரையையும் (Introduction) தயாரிக்க வேண்டும். இவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதை இனிப்படிப்படியாகப் பார்ப்போம். முதலாவதாக, பிரசங்கத்தின் பயன்பாடுகளை (Sermon Applications) எப்படித் தயார் செய் வது என்பதை ஆராய்வோம். பெரும்பாலான பிரசங்கிகள் இந்தப் பயன் பாடுகளை முடிவுரைபோல பிரசங்கத்தின் இறுதியில் சுருக்கமாகக் கொடுத்து விடுவதுண்டு. அவர்கள் பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நான் பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தனியாகப் பிரித்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். பிரசங்கத்தின் பயன்பாடுகளை வெறும் முடிவுரையாகக் கருதி அலட்சியப் படுத்திவிடாமல் அதைப் பிரசங்கத்தின் சரீரத்துக்கு அடுத்த முக்கிய பகுதி யாகக் கருதித் தயாரிக்க வேண்டியது அவசியம். ஒரு பிரசங்கத்தில் எத்தனை நல்ல போதனைகள் இருந்தாலும் அதில் பயன்பாடுகளும், அந்தப் பயன்பாடு கள் அழுத்தமானதாகவும், தெளிவானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தை அசைப்பனவாகவும் இருக்காவிட்டால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
பிரசங்கத்தில் பயன்பாடுகள் (Applications)
பயன்பாடு பற்றிய சில தவறான எண்ணங்கள் நம்முடைய பிரசங்கங்கள் ஏனைய அவசியமான அனைத்து அம்சங் களையும் கொண்டிருந்து, அதன் பயன்பாடு என்ன என்பதை விளக்காமல் இருந்தால் அந்தப் பிரசங்கங்களால் கேட்பவர்களுக்கு எந்தப் பயனும் இருக் காது. அந்தப் பிரசங்கங்கள் நல்ல செய்தியைக் கொண்டிருக்கலாம். வேதப் பகுதிகளை முறையாக, தவறில்லாமல் விளக்குவனவாகவும், நல்ல உதாரணங் களையும், கொண்டிருப்பவனவாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆத்துமாக்கள் அவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அந்தப் பிரசங்கத்தின் மூலம் அவர்கள் கர்த்தரை எவ்வாறு மகிமைப்படு¢த்த வேண்டும் என்பதை விளக்கத் தவறு மானால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. சில பிரசங்கிகள் வேதத்தை விளக்குவது மட்டும்தான் தங்களுடைய பணி, அவற்றை ஆத்து மாக்களின் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டியது பரிசுத்த ஆவியின் பணி என்ற தவறான எண்ணத்தில் ஆத்துமாக்கள் அந்தப்பிரசங்கத்தைக் கேட்டு செய்ய வேண்டியது என்ன என்பதை உறுதியாக விளக்கத் தவறி விடுகின்றனர். இப்படி நம்பிச் செயல்படும் சில பிரசங்கிகளை நானறிவேன்.
வேறு சில பிரசங்கிகள் ஆத்துமாக்களுக்கு எந்தப் பிரச்சனையும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்திலும், அவர்கள் தங்களைப் பற்றித் தப்பாக எண்ணிவிடக்கூடாது என்ற எண்ணத்திலும் இனிப்பான பிரசங்கங்களையே எப்போதும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு, பிரசங்கத்தில் பயன்பாடுகள் பற்றிப் பேசுவதையே விட்டுவிடுகின்றனர். சில பிரசங்கிகள், ஒவ்வொரு வேதவசனத்தின் மூலமும் கிறிஸ்துவை ஆத்துமாக்கள் காணும்படிச் செய்வது மட்டுமே பிரசங்கியின் தொழில், ஆகவே ஒழுக்க ரீதியான எந்த விளக்கத்தையும் வேதவசனங்களில் இருந்து பிரசங்கிக்கக் கூடாது என்று கருதுகின்றனர். இவர்களுடைய தவறான இறையியல் கண்ணோட்டமே இவர்கள் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியி லும், வசனத்திலும் இருந்து கிறிஸ்துவைப்பற்றி மட்டுமே விளக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, புதிய ஏற்பாடு அந்தக் கிறிஸ்துவின் வரலாற்றை விளக்குவதால் அவரைப்பற்றி மட்டுமே அதன் மூலம் விளக்க வேண்டும் என்பார்கள். ஆகவே, பழைய ஏற்பாட்டில் இருந்து ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையைப்பற்றிப் பிரசங்கித்து நாம் எப்படி கர்த்தருக்கு விசுவாசமாக வாழ்வது என்று பிரசங்கிப்பது, இவர்களைப் பொறுத்தவரையில் தவறு. இத்தகைய தவறான இறையியல் பார்வையால் இவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகளுக்கு இடமிருக்காது. பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், தங்கள் வாழ்க்கையில் இறை வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இம்முறையிலான பிரசங்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
நாம் முக்கியமாக தமிழ்ப்பிரசங்கிகளுக்கு உதவுமுகமாக இந்த ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பதால் அவர்கள் மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக்குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீதம் தமிழ்ப்பிரசங்கிகள் வேத வசனங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பிரசங்கிக்கும் வழக்கத்தைக் கொண்டிராத தால் அவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகள் வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அவர்கள் பிரசங்கப் பயன்பாடுகள் என்ற பெயரில், ஆத்துமாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதை பிரசங்கத்தில் திட்டித் தீர்த்துவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரசங்கத்தின் பயன்பாடுகள் அனைத்தும் பிரசங்கத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர பிரசங்கி தான் ஆத்துமாக்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவற்றை பிரசங்கத்தைப் பயன்படுத்தி சொல்ல முயற்சிக்கக் கூடாது. உதாரணத்திற்கு, விசுவாசிகள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை பிரசங்கம் பொருளாகக் கொண்டிருக்குமானால் அதைவைத்துக் கொண்டு, ஆத்துமாக்கள் போதகர்களுக்கு எந்தவிதத்தில் முகங்கோணாமல் கீழ்ப்படிய வேண்டும், சபைக்கு எந்தவிதத்தில் விசுவாசமாக காணிக்கைகளை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு பிரசங்கிக்கக்கூடாது. இது பெரும்பாலும் இன்று வழக்கில் இருக்கும் ஒரு முறை. வேத வசனங்களை ஆராய்ந்து தயாரிப்பவர்கள் பிரசங்கப் பயன்பாடுகளை அந்த வசனத்தில் இருந்தே பெற்றுக்கொள்வார்கள். பிரசங்கப் பொருளுக்கும், பிரசங்கப் பயன் பாட்டிற்கும் இடையில் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி இருந்தால் அது பிரசங்கமாகாது.
பிரசங்கப் பயன்பாடு குறித்து நம்மத்தியில் இருக்கும் இத்தகைய நடை முறைக்கு மத்தியில் நாம் பிரசங்கத்தில் காணப்பட வேண்டிய பயன்பாடுகளைப்பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வெளிப்படையாகக் கூறப்போனால் பயன்பாடுகளைக் கொண்டிருக்காத பிரசங்கத்தை ஒருபோதும் பிரசங்கமாகவே கருத முடியாது. மேலே நாம் பார்த்தவிதத்தில் பிரசங்கிப்பவர்கள் பிரசங்கத்தைப் பற்றிய தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
பிரசங்கத்தில் பயன்பாடுகளின் அவசியம்
ஜெப்ரி தொமஸ் (Geoffrey Thomas) என்ற வேல்ஸ் தேசத்து பிரசங்கி, “பிரசங்கத்தின்மூலம் வேத சத்தியத்தின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதே வேதபூர்வமான, சீர்திருத்த விசுவாசப் பிரசங்கங்களின் இருதயமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் (John Angell James) எனும் பழம் போதகர், “வேத வசனங் களை முறையாக, தெளிவாக ஆராய்ந்து, அந்த ஆய்வின் அடிப்படையிலேயே நம்முடைய பிரசங்கங்கள் அனைத்தும் அமைய வேண்டும் என்றும், இருந்தபோதும் அத்தகைய முறையான, தெளிவான ஆய்விற்கும் மேலான அம்சங்களை பிரசங்கம் கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார். அதாவது, “அறிவைத் தருவதாக மட்டும் இல்லாமல் இதயத்தை அசைப்பதாகவும், மனச்சாட்சியை விளிக்க வைப்பதாகவும் நமது பிரசங்கம் இருக்க வேண்டும்” என்று ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் கூறுகிறார். போதகர் அல்பர்ட் என். மார்டின் (Albert N. Martin) இதை பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்: “பிரசங்கத்தின் பயன்பாடு என்பது நமது தலையிலிருந்து இதயத்தை நோக்கிச் செல்லும் பிரதான பாதையாக இருக்கிறது. வேதபூர்வ மான சத்தியத்தையும், அந்த சத்தியத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களில் ஏற்படும் நேர்மையான உணர்வுகளுக்கும் இடையில் பாலமாக அமைவது தான் பிரசங்கத்தின் பயன்பாடுகள். ஆத்துமாக்கள் வேத ஞானத்தை மட்டு மல்லாமல், இருதயத்துக்கு தேவையான உணவையும் பெற்றுக்கொள்ளச் செய்வதே முறையான பயன்பாடுகளைக் கொண்டுள்ள பிரசங்கமாக அமை கின்றது” என்கிறார்.
பிரசங்கத்தின் பயன்பாடுகளின் அவசியத்தை நாம் இத்தனை தூரம் வலியுறுத்தி சொல்வதற்குக் காரணம் அவை இல்லாமல் பிரசங்கம் பிரசங்கமாக இருக்க முடியாது என்பதற்காக மட்டுமல்ல, அவற்றைக் கொண்டிராத பிரசங்கங்களால் ஆத்துமாக்களுக்கு எந்தப்பயனுமில்லை என்பதால்தான். பயன்பாடுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாமல் மேழெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களைப் பற்றிக்கூறும் அல்பர்ட் என். மார்டின், “மேலெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும், எல்லோருக்கும் பொதுவான பிரசங்கங்களால் ஒருவருக்கும் எந்தப் பயனு மில்லை” என்கிறார். எல்லோருக்கும் பொதுவானவிதத்தில் சத்தியத்தைப் பிரசங்கித்து, ஆத்துமாக்கள் தாங்களாகவே அந்தப் போதனையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்துப் பயன்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிடுவது தவறான செயல். இப்படிச் செய்யும்போது ஆத்துமாக்கள் அந்தப் போதனைகள் ஏனையோருக்குத்தான் பொருந்தும், தங்களுக்குப் பொருந்தாது என்ற விதத்தில்தான் சிந்திப்பார்கள். ஆத்துமாக்களுக்கு பாவத்தைப் பற்றிய வெறும் ஞானத்தை மட்டும் கொடுத்தால் போதாது. அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதற்கு பிரசங்கம் வழி வகுக்க வேண்டும். அதேபோல் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் தங்களுக்குத்தான் என்பதில் அவர்கள் ஆறுதலடைய வேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் தங்கள் பாவம் கழுவப்படும் என்ற நம்பிக்கையில் உறுதிபெற வேண்டும். இதைப் பிரசங்கம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். “கிறிஸ்துவின் ஆடுகளில் தாங்களும் ஒருவரா என்பதை, நியாயத்தீர்ப்பு நாளின் தீவிரத்தோடு ஆத்துமாக்கள் உணர்வுபூர்வமாக ஆராய்ந்து அறியும்படியாக சத்தியம் பிரசங்கத்தின் மூலம் இதயத்தை தாக்குவதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்யாத பிரசங்கங்கள் வேதபூர்வமான பிரசங்கங்களாக இருக்க முடியாது” என்கிறார் அல்பர்ட் என். மார்டின்.
பிரசங்கங்களில் பயன்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள்
பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் பிரசங்கிகள் ஏன் அதிகம் ஊக்கம் காட்ட வேண்டும் என்பதற்கு நிராகரிக்க முடியாத இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, அதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்துகிறது. 2 தீமோத்தேயு 3:16-4:2 ஐக் கவனியுங்கள்.
“வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட் டிருக்கின்றது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும், மரித்தவர் களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும், அவருடைய இராஜ்யத்தையும் சாட்சியாக வைத்து கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.”
இந்த வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் வேத வாக்கியங்கள் உபதேசத்துக்கு மட்டும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றது என்று கூறவில்லை. பவுல் அத்தோடுவிட்டிருந்தால் நாம் பிரசங்கத்தின் பயன்பாடுகளில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமிருக்காது. ஆனால் பவுல், அந்த வேதவாக்கியங்களை நாம் எந்தவகையில் ஆத்துமாக்களின் முன் பிரசங்கிக்க வேண்டும் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளக்கத் தவறவில்லை. பிரசங்கிகளுடைய கடமை உபதேசத்தைக் கொடுப்பது மட்டுமல்ல என்பதை இந்த வசனங்களைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். உபதேசங்கள் ஆத்துமாக்களின் இருதயத்தை அசைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டிய முறையை ஆணித்தரமாக விளக்குவதாக இருக்க வேண்டும். அதனால்தான் பவுல், பிரசங்கத்தின் மூலம் பிரசங்கிகள் வேத உபதேசங்களை சரியாகப் போதித்து ஆத்துமாக்களைத் தேவையான வேளைகளில் கண்டனம் செய்தும், கடிந்தும், அவர்கள் நேர்மையுள்ளவர்களாகவும், நீதிக்குரிய செயல்களைச் செய்பவர்களாகவும் சீர்திருந்தும்படிப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்கிறார். ‘கடிந்து’, ‘கண்டனம் செய்து’ என்ற வார்த்தைகளை வெறுமனே திட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. உபதேசங்களைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறிழைத்துவிடாமல் இருக்கும்படி நீடிய சாந்தத்தோடு கண்டித்துப் பிரசங்கிப்பதைத்தான் பவுல் இங்கே குறிப்பிடுகிறார். பிரசங்கத்தில் பயன்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. பயன்பாடுகளைக் கொண்டிராத பிரசங்கத்தால் ஒருபோதும் ஆத்துமாக்களை நீதிக்குரிய செயல்களில் வழிநடத்த முடியாது.
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்கள் பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களாக இருந்தன. ஏசாயாவின் பிரசங்கங்களை இங்கே உதாரணத்திற்குக் காட்டலாம். இஸ்ரவேலரின் தவறுகளை ஏசாயா வெளிப் படுத்தி, அவர்கள் எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிவிக்கத் தவறவில்லை. மல்கியா கர்த்தருடைய செய்தியை இஸ்ரவேலருக்கு பிரசங்கித்தபோது, “நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை தவறானது என்று மட்டும் பிரசங்கிக்கவில்லை. நீங்கள் கர்த்தருடைய பணத்தைத் திருடிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் வீடுகளை நல்ல முறையில் கட்டிக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தை உதாசீனப் படுத்துகிறீர்கள், கர்த்தருடைய ஆராதனையை அலட்சியப்படுத்தி உங்கள் சொந்த வழியில் அவரை ஆராதிக்கிறீர்கள்” என்று வரிசைக்கிரமமாக அவர் களுடைய தவறான வாழ்க்கைமுறையை வேதரீதியில் அவர்கள் முன் திறந்து வைத்ததை மல்கியாவில் வாசிக்கலாம். பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கம் (Applicatory preaching) எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.
யோவான் ஸ்நானன் ஏரோதைப் பார்த்து ஒழுக்கமற்ற வாழ்க்கையை வேதம் நிராகரிக்கிறது என்று மட்டும் கூறவில்லை. அத்தோடு நிறுத்தியிருந்தால் அது மெய்யான பிரசங்கமாக இருந்திராது. வெறும் உபதேசமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், யோவான் ஸ்நானன், நீ உன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு வைத்திருக்கும் தொடர்பை உடனடியாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்று பிரசங்கித்தான் (மாற்கு 6:17-18). அதுவே பயன்பாடுள்ள பிரசங்கம். இயேசு கிறிஸ்துவின் எல்லாப் பிரசங்கங்களும் இதே முறையிலேயே அமைந்திருந்தன. அவர் வெறும் உபதேசத்தை மட்டும் கொடுக்கவில்லை. அவற்றின் பயன்பாடுகளை ஆணித்தரமாக நிலைநிறுத்தினார். உதாரணத்திற்கு, மத்தேயு 23ல் அவர் பரிசேயர்களைப் பார்த்து செய்த பிரசங்கத்தைக் கவனியுங்கள்.
இத்தகைய பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களின் அவசியத்தை வெளிப்படையான போதனைகள் மூலமும், உதாரணங்களின் மூலமும் வேதம் வலியுறுத்திக் காட்டுவது மட்டுமல்ல சபை வரலாறும் அதை வலியுறுத்துகிறது. சபை வரலாற்றில் பெருமைமிக்க போதகர்களான தூய்மை வாதிகள், பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களை அளிப்பதில் உதாரண புருஷர்களாக இருந்தனர். அவர்களுடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் 50, 60 பயன்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன. எடுத்துக் கொண்டுள்ள வேதவசனங்களைத் துல்லியமாக ஆராய்ந்து அதில் காணப்படும் பயன்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆத்துமாக்களுடைய இதயத்தைப் பிழியும் வகையில் பிரசங்கிப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். இந்த முறையிலான பிரசங்கங்களுக்கு ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel) , தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) ஆகியோரின் பிரசங்கங்களை உதாரணத்திற்குக் காட்டலாம்.
ஆத்துமாவின் இதயத்தைத் தாக்காமல், அவர்களுடைய தலைக்குமேல் போகும்படிப் பிரசங்கிப்பதைத் தூய்மைவாதிகள் அறியாதிருந்தனர். அவர்க ளுடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு இருதயத்தைத் தாக்குவனவாயிருந்தன. 17ம் நூற்றாண்டில் திருச்சபைகளின் நன்மைகருதி ஆராதனை முறைகள்பற்றி வெளியிடப்பட்ட வெஸ்ட் மின்ஸ்டர் ஆராதனைக் கோட்பாடுகளில் பிரசங்கத்தைப்பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.
“பிரசங்கி பொதுவான போதனைகளை அளிப்பதில் மட்டும் தங்கியிராமல், அந்தப் போதனைகளின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளும்படிப் பிரசங்கிக்க வேண்டும். இந்தவகையில் பயன் பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிப்பதற்கு பிரசங்கி அதிக ஞானத்தோடும், உற்சாகத்தோடும், தியானத்தோடும் கடுமையாக உழைப்பது அவசியம். பிரசங்கத்தின் அத்தகைய பயன்பாடுகள் பிரசங் கங்களைக் கேட்கும் ஆத்துமாக்களுக்கு இனிப்பானவையாக இல்லாம லிருக்கலாம். ஆனால், கர்த்தரின் வார்த்தை அவர்களில் வல்லமையாகக் கிரியைசெய்து , அவர்களுடைய இருதயத்தை சோதிப்பதோடு, அவிசுவாசிகள் யாராவது இருந்தால் அவர்களுடைய இருதயங் களிலுள்ள இரகசியங்களையும் வெளிப்படுத்தி கர்த்தருக்கு அவர்கள் மகிமைதரும்படியாகப் பிரசங்கியார் பிரசங்கம் செய்ய வேண்டும்.”
தூய்மைவாதிகளைப்போலவே, 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும் பிரசங்கங்களில் பயன்பாடுகள் நிறைந்திருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள். ஜோன் கல்வின் தனது பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது அவற்றின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகமாக நேரத்தை செலவிட்டதாகச் சொல்லுவார்கள். பழைய ஏற்பாட்டு நூலான யோபுவில் அவர் செய்துள்ள பிரசங்கங்கள் இதற்கு நல்ல உதாரணம். இதேவகையில் தான் ஜொனத்தன் எட்வர்ட்சும் பிரசங்கித்தார். தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜனுடைய (Charles Spurgeon) பிரசங்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பயன்பாடுகள் ஆற்றுநீரைப்போலத் துள்ளியோடுவதையும், நெஞ்சைத் தொடுபவையாகவும் இருப்பதைக் கவனிக்கலாம். அதேநேரம் பிசப் ஜே. சி. ரைலினுடைய (Bishop J. C. Ryle) பிரசங்கங்களைக் குறிப்பிடாமலும் இருக்க முடியாது. ரைலின் பிரசங்கங்கள் தூய்மைவாதிகள், சீர்திருத்தவாதிகளின் பிரசங்கங்களைப் போலவே பயன்பாடுகள் நிறைந்து காணப்படும்.
பிரசங்க ஊழியத்தில் வித்தர்களாக இருந்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட தூய்மைவாதிகளுடையதும், சீர்திருத்தவாதிகளினுடையதும், ஸ்பர்ஜனுடைய தும், ரைலினுடையதுமான பிரசங்கங்களை நாம் வாசித்துப் பார்த்தால் அவர்கள் எந்தவிதத்தில் தங்கள் பிரசங்கங்களில் பயன்பாடுகளைப் பயன் படுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தகைய படிப்பு பிரசங்க ஊழியத்தில் பிரசங்கிகள் நல்ல தேர்ச்சிபெறத் துணை செய்யும்.
பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க நமக்கிருக்க வேண்டிய தகுதிகள்
போதகனின் பக்திவிருத்தி பொதுவான உபதேசத்தை மட்டும் அளிக்காமல் ஆத்துமாக்கள் தங்களு டைய வாழ்க்கையை சோதித்துத் திருத்திக்கொள்ள வேண்டியவிதத்தில் பயன்பாடுகள் நிறைந்த பிரசங்கங்களை அளிக்கவேண்டுமானால் பிரசங்கியினுடைய வாழ்க்கை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கர்த்தரோடு தனக்கிருக்கும் உறவில் வளர்ந்து, பக்திவிருத்தியில் சிறந்திருக்கும் போதகனாலேயே பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க முடியும். தன்னுடைய வாழ்க்கையில் பல குறைபாடுகளைக் கொண்டு, அவற்றைத் திருத்திக் கொள்ளாமலும், பக்தியில் வளராமலும் இருக்கும் போதகனால் ஆத்துமாக்கள் பயனடைகிறமுறையில் சுத்தமான இருதயத்தோடு பயன்பாடுகளைத் தயாரித்துப் பிரசங்கிக்க முடியாது. பண ஆசையில் மனம் நிலைதடுமாறிக் கொண்டிருந்தாலோ, ஊழியத்தை வெறும் வர்த்தகமாக நடத்திக் கொண்டிருந்தாலோ, இருதயத்தில் ஆத்துமாக்களின் மேல் மெய்யான அன்பு இல்லாமலிருந்தாலோ ஒருவரால் ஆத்துமாக் களுடைய வாழ்க்கையில் நேர்மையான அக்கறைவைத்து உழைத்துப் பிரசங்கிக்க முடியாது.
சபை ஆத்துமாக்களுடன் அந்நியோன்னியம்
அடுத்ததாக, பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் ஒரு போதகனுக்கு ஆத்துமாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். ஆத்துமாக்களின் ஆத்மீகத் தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அறிந்திருந்தால்தான் அவர்களுக்குப் பயன்படும் முறையில் பிரசங்கப் பயன்பாடுகளைத் தயாரிக்க முடியும். அதுமட்டு மல்லாமல் அவற்றை நேர்மையுடனும், நெஞ்சுரத்துடனும், மனித பயமில்லாமலும் பிரசங்கிக்க வேண்டுமானால் ஆத்துமாக்களுக்கு பிரசங்கி யில் அன்பும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். சட்டசபை எம். பியைப் போல ஆத்துமாக்களைத் தூரத்தில் தள்ளிவைத்துப் பழகும் பிரசங்கிகளுக¢கு ஆத்துமாக்களில் எந்த அன்பும் இருக்காது; அவர்களுடைய தேவைகளில் அக்கறையும் இருக்காது. ஆத்துமாக்களோடு வர்த்தக உறவுமுறை (professional relationship) மட்டும் வைத்திருப்பவர்களுக்கு பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களைக் கனவிலும் கொடுக்க முடியாது.
அறிவு விருத்தி
பயன்பாடுகள் நிறைந்த நல்ல பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய ஞானத்தைப் பெருக்கிக்கொள்ள நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். நாம் ஏற்கனவே கூறியதுபோல் சீர்திருத்தவாதிகளினதும், தூய்மைவாதிகளினதும் பிரசங்கங்களை வாசிப்பதும் அவசியம். ஜோன் பனியனின் ‘மோட்ச பிரயாணத்தை’ பல தடவை வாசிப்பது அவசியம். பனியனின் எல்லா நூல்களுமே சிறந்தவை. வேதம் மட்டும் போதும், படிப்பு அவசியமில்லை என்பவர்களால் அன்றாடக் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு மனநிம்மதிக்காக ஆராதனைக்கு வருபவர்களுக்கும், திருமண வாழ்க்கையில் இடர்களைச் சந்தித்து அதற்கு வழிதேடி மனச்சமா தானத்திற்காக பிரசங்கம் கேட்க வருபவர்களுக்கும், வேலைத்தளத்தில் பிரச்சனை மிகுதியால் நிம்மதியில்லாமலிருப்பவர்களுக்கும் அவரவர் தேவைகளுக்குத் தகுந்தபடி ஞானத்தோடு வேதத்திலிருந்து தகுந்த விளக்கங்களையும், நடைமுறைக்குப் பயன்படும் ஆலோசனைகளையும் கொடுத்து, அவர்களுடைய மனதைத்தொட்டு, அசைத்து, திருத்தி, ஊக்கப்படுத்திப் பிரசங்கிப்பதென்றால் நல்ல நூல்களை வாசிக்காமலும், நம்மைவிட ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்டுப் பயனடையாமலும் அதைச் செய்ய முடியுமா?
பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிக்க நாமெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
- பிரசங்கிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிற வேதவசனங்களை சரியாக ஆராய்ந்து, அவை தரும் போதனை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பின்பே அப்பகுதியின் பயன்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்க வேண்டும். பயன்பாடுகள் பிரசங்கப்பகுதியில் இருந்து வரவேண்டி யிருப்பதால் இது அவசியம். பிரசங்கப் பகுதியை ஆராயாமல் இதுதான் இந்தப்பகுதியின் பயன்பாடு என்று நாமே ஏதோ ஒன்றை ஆலோசனையாக சொல்லுவது பெருந்தவறு. இதை இன்று அனேகர் செய்து வருகிறார்கள்.
- பயன்பாடுகள் எப்போதும் நாம் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதியில் இருந்து வெளிப்படையாகப் புறப்படுபவையாக இருக்க வேண்டும். அதாவது, பிரசங்கப்பகுதியில் பயன்பாடுகளை ஆள்விட்டுத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பயன்பாடுகளுக்கும¢ பிரசங்கப் பகுதிக்கும் சந்பந்தமில்லாதிருக்குமானால் பிரசங்கத்தயாரிப்பில் நாம் எங்கோ தவறுவிட்டுவிட்டோம் என்றுதான் அர்த்தம்.
- பயன்பாடுகளை நாம் பிரசங்கத்தில் விளக்கும் சத்தியத்தின் ஒவ்வொரு தலைப்பின் கீழுமோ அல்லது பிரசங்கத்தின் இறுதியில் வரிசைக்கிரம மாகவோ கொடுக்கலாம். சில பிரசங்கங்களில் ஒவ்வொரு பகுதியையும் விளக்குகிற வேளையிலேயே அதற்குரிய பயன்பாட்டை உடனடியாக வலியுறுத்த நேரிடும். வேறு சில பிரசங்கங்களில் பயன்பாடுகளை வரிசையாக பிரசங்கத்தின் இறுதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வலியுறுத்தி விளக்கவேண்டிவரும். சில வேளைகளில் பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே இருதயத்தை அசைக்கக் கூடிய ஒரு கேள்வியாக அமைந்த ஒரு பயன்பாட்டோடு பிரசங்கம் ஆரம்பமாகலாம். பிரசங்கங்களுக்குத் தகுந்த முறையில் பயன்பாடுகளை நாம் பயன்படுத்த வேண்டும்.
- பிரசங்கத்தின் பயன்பாடுகள் கேள்விகளாக அமைந்திருந்தால் அவை நாம் வலியுறுத்தும் பயன்பாட்டைக் குறித்து, கேட்பவர்களை சிந்திக்க வைப்ப தாக இருக்கும். உதாரணமாக, ஜெபத்தை வலியுறுத்தும்போது “நீங்கள் அன்றாடம் ஜெபிக்கிறீர்களா?” என்று கேள்வியாக இதயத்தைத் துளைப்பது போல் கேட்பது அவசியம். பயன்பாடுகளாக பிரசங்கி கொடுக்கும் ஆலோசனைகள் கேள்விகளையும் உள்ளடக்கி இருந்தால் அந்த ஆலோசனை கள் அழுத்தமாக இருதயத்தில் பதியும்.
- பயன்பாடுகள் மேலெழுந்தவாரியாகவும், பொதுவானவையாகவும் இருக்கக்கூடாது. பயன்பாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆத்துமா இது பக்கத்திலிருப்பவருக்குத்தான் பொருந்தும் என்று நினைப்பதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அது எனக்கு அவசியமானது என்று அந்த ஆத்துமா நினைக்கும்படியாக பயன்பாடுகள் இருக்கவேண்டும். ஆகவே, பிரசங்கி பயன்பாடுகளை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பொருந்துகிறவிதத்தில் ஆணித்தரமாகவும், அழுத்தத்தோடும் பிரசங்கத்தில் விளக்க வேண்டும்.
- பயன்பாடுகளை பிரசங்கத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தையும், (முகவுரையைத் தவிர) தயாரித்த பின்னரே கவனத்தோடு தயாரிக்க வேண்டும்.
- பயன்பாடுகள் சுருக்கமானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தில் ஊன்றிப் பதியக்கூடியவனவாகவும் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்பாடுகள் நீண்டுவிடக்கூடாது. ஆகவேதான், அவற்றைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளைத் தயாரிப்பது அவசியம்.
பிரசங்கப் பயன்பாட்டிற்கு ஓர் உதாரணம்
பிரசங்கத்தின் பயன்பாடுகள் எந்தவகையில் பிரசங்க வசனங்களில் இருந்து வெளிப்பட்டு தெளிவாக அமையவேண்டும் என்பதற்கு உதாரணமாக லூக்கா 15:1-7 வரையுள்ள வசனங்களைப் பயன்படுத்தி நான் கீழே தந்துள்ள பிரசங்கக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரசங்கப் பொருள்: லூக்கா 15:1-7, காணாமல்போன ஆடு
அறிமுகம்: இது ஒரு உவமை. இந்த உவமையின் எல்லாப்பகுதிகளுக்கும் நாம் விளக்கங் கொடுக்கக்கூடாது. இந்த உவமை காணாமற்போன தன்னுடைய ஆட்டை விடாப்பிடியாகத் தெடிக்கண்டுபிடித்த ஒரு மேய்ப்பன் அதைத் தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறான் என்பதாகும். அதேவிதமாக கர்த்தர் இழந்துபோன தன்னுடைய ஆடாகிய பாவியைத் தேடிக்கண்டுபிடித்து மகிழ்கிறார் என்பதே இந்த உவமையின் போதனையாகும். இந்த உவமையை இயேசு ஏன் சொன்னார் என்பதை உவமையின் ஆரம்ப வசனங்கள் விளக்குகின்றன. பாவிகளைக்குறித்த பரிசேயர்களின் தீங்கான எண்ணத்தை திருத்துமுகமாகவே இயேசு இந்த உவமையைச் சொன்னார்.
பிரசங்கத்தின் சரீரம்:
- நீதிமான்களென்று நம்பிய நீதியற்றவர்கள் (2, 7)
— சுயநீதியும், தற்பெருமையும் கொண்ட பரிசேயர்கள்
(உவமையில் கூறப்படும் தொன்னூற்றொன்பது பேரும் விசுவாசிகளல்ல, அவர்கள் பரிசேயர்களைப் போன்றவர்கள்.)
- காணாமல்போய் மனந்திரும்பிய பாவி
— காணாமல் போனான் (பாவத்தால் கர்த்தரை அறியாது இருக்கும் நிலை) மனந்திரும்புகிறான் (பாவமன்னிப்பும், விசுவாசமும்)
- இழந்த ஆட்டைத் தேடும் மேய்ப்பன்
– தேடுகின்ற கர்த்தர் (சுவிசேஷ அழைப்பின் மூலம்)
– ஆட்டைக் கண்டுபிடிக்கும் கர்த்தர் (ஆவியின் கிரியை)
– ஆடு திரும்பியதால் பரலோகத்தில் ஆனந்தம் –
பிரசங்கத்தின் பயன்பாடுகள்:
- போலித்தனமான பரிசேய வாழ்க்கை வாழ்கிறவர்கள் நீதிமான்களல்ல –அனேகர் இன்று சபைகளில் பரிசேயர்கள் போல் நீதியற்றவர்களாயிருந்தும் நீதிமான்கள் என்ற நம்பிக்கையில் தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண் டிருக்கலாம். கர்த்தரோடு தங்களுக்கு ஐக்கியம் இருந்ததாக பரிசேயர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களில் இரட்சிக்கும் விசுவாசம் இருக்கவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் வெறும் உயிரற்ற கிரியைகள் மட்டுமிருந்து இயேசு கிறிஸ்துமேல் எந்த அன்பும், கர்த்தரை அறியாதவர்கள் மீது சுவிசேஷ அனுதாபமும் இல்லாதிருக்குமானால் நீங்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. விசுவாசத்துக்கும் உங்களுக்கும் வெகுதூரம். போலித்தனமான பரிசேய வாழ்க்கையை இன்றே தூக்கி எறிந்துவிட்டு மனந்திரும்பி கிறிஸ்து இயேசுவை விசுவாசியுங்கள்.
- பாவிகள் மனந்திரும்ப வேண்டும் –பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷம் பாவிகள் பாவிகளாயிருப்பதனால் ஏற்பட்டதல்ல, பாவியொரு வன் மனந்திரும்பியதால் ஏற்பட்டது. ஆகவே, பாவியாகிய மனிதன் மனந் திரும்ப வேண்டியது அவனுடைய தவிர்க்க முடியாத பொறுப்பு. மனந்திரும் பாத எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. வெறும் ஒழுக்கமும், உலகப் பிரகாரமான அன்றாட சமய சடங்காச்சாரியங்களும் ஒரு மனிதனை நீதிமானாக்காது. எத்தனை ஒழுக்கமுடையவனாக இருந்தாலும், கர்த்தருக்கு பணத்தை வாரிக்கொடுப்பவனாக இருந்தாலும், மனந்திரும்பாதவன் போகிற இடம் நரகத்தைத் தவிர வேறில்லை. மனந்திரும்பினால் மட்டுமே பரலோகம்.
- சுவிசேஷத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் சொல்லுவது விசுவாசியின் கடமை –தன்னுடைய ஆடுகளைத் தேடிக்கொண்டிருக்கும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலமாக அவர்களை அழைக்கிறார். அந்தச் சுவி சேஷத்தை கர்த்தருக்கிருப்பது போன்ற அடங்காத்தாகத்துடன் பாவிகளோடு பகிர்ந்து கொள்கிறீர்களா? அது உங்களுடைய கடமை. தன்னுடைய ஆட் டைத் தேடுகிற கர்த்தரில் நாம் காணும் அன்பும், ஆர்வமும், தீவிரமும், விடாப்பிடியான முயற்சியும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் கடமைப் பாட்டைக் கொண்டுள்ள நம்மில் இருக்கிறதா?
கிறிஸ்தவக் கோட்பாடுகள்
கேள்வி 82: பத்தாவது கட்டளை என்ன?
பதில்: பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும் பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது பத்தாவது கட்டளையாகும்.
(யாத்திராகமம் 20:17)
கேள்வி 83: பத்தாவது கட்டளை மூலமாக என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
பதில்: நாமிருக்கிற நிலையில் முழுமையான திருப்தியோடு இருக்க வேண்டும் என்றும். நம்முடைய அயலானைக்குறித்தும், அவனது உடமைகளைக் குறித்தும் நியாயமான இரக்கமுள்ள மனநிலை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பத்தாவது கட்டளை எதிர்பார்க்கிறது.
(எபிரேயர் 13:5; ரோமர் 12:15; 1 கொரிந்தியர் 13:4-6)
கேள்வி 84: பத்தாவது கட்டளை எதைத் தடைசெய்கிறது?
பதில்: நமது நிலையைக் குறித்து திருப்தியற்றிருப்பதையும், அயலானுடைய நலத்திலே பொறாமை கொள்ளுதலையும், மற்றும் அவனுடைய எந்தவொரு பொருளின் மீதும் தகாத ஆசைகளையும், விருப்பங்களையும் வைத்திருப்பதையும் பத்தாவது கட்டளை தடை செய்கிறது.
(1 கொரிந்தியர் 10:10; கலாத்தியர் 5:26; கொலொசேயர் 3:5; பிரசங்கி 7:20; ஆதியாகமம் 8:21; யாக்கோபு 3:28)
விளக்கவுரை: கர்த்தரின் நியாயப்பிரமாணம் நாம் வெளிப்படையாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைவிட உள்ளத்தின் ஆழத்தில் நாம் பக்திக்குரிய ஆத்மீக மாற்றங்களை அடைந்திருக்கிறோமா என்பதிலேயே அக்கறை காட்டுகிறது. பத்தாவது கட்டளை இதை சிறப்பாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஏனைய ஒன்பது கட்டளைகளும் நாம் நமது வாழ்க்கையில் வெளிப்படையாக செய்யும் காரியங்களிலும், உள்ளத்தின் ஆழத்தில் கொண் டிருக்கிற எண்ணங்களிலும் அக்கறை காட்டுகின்றன. ஆனால், இந்தப் பத்தாவது கட்டளை நமது உள்ளத்தின் ஆத்மீகத் தன்மையில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது. இதனால்தான் பவுல் அப்போஸ்தலன், “பாவம் இன்னதென்று நான் நியாயப்பிரமாணத்தினால் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாதிருப்பேனே.” (ரோமர் 7:7) என்கிறார். பரிசேயனாகவிருந்த பவுல் நியாயப்பிரமாணத்தை வார்த்தை தவறாமல் வெளிப்புறமாக கைக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனால்தான், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப் படாதவன் (பிலி. 3:6) என்று அவரால் கூறமுடிந்தது. பிறர் குற்றங்காணும்படி பவுலின் வாழ்க்கையில் வெளிப்புறமாக விபச்சாரத்தையோ, கொலை செய்வதையோ, களவெடுப்பதையோ காணமுடியவில்லை. ஆனால், இந்தப் பத்தாவது கட்டளை மற்றவர்களுக்குத் தெரியாமல் பவுலின் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்திருந்த இச்சையை வெளிப்படுத்தியது. இந்தக்கட்டளை மனித உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து நிற்கும் இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
உண்மையில் ஏனைய எல்லாப் பாவங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது இச்சைதான். யாக்கோபு, “¢அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்¢ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” என்று விளக்குகிறார் (யாக்கோபு 1:14, 15). ஒருவருடைய உள்ளத்தில் இச்சை இருக்குமானால் பத்துக்கட்டளைகளில் ஒன்பது கட்டளைகளையும் அவர் பொதுவாக உடனடியாக மீறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதேன் தோட்டத்தில் கைவைக்கக்கூடாத மரத்தின் கனியைப் பார்த்து ஆசைப்பட்டதே ஆதாம், ஏவாளின் பாவத்தின் ஆரம்பமாக இருந்தது. அந்த இச்சையே அவர்கள் வெளிப்படையாக கர்த்தருக்கெதிரான பாவத்தைச் செய்ய வழிநடத்தியது. அதன் மூலம் அவர்கள் ஏனைய ஒன்பது கட்டளைகளையும் மீறினார்கள்.
இந்தக் கட்டளை நாம் என்னென்ன பொருட்களில் இச்சை வைக்கக் கூடாது என்று பட்டியலிட்டுத் தருகிறது. இப்படியாக உலகப்பொருட்களைப் பற்றி இந்தக்கட்டளை பேசுவதற்குக் காரணம், நாம் இருதயத்தில் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற சமாதானத்துடன் வாழாத போதே இச்சை ஏற்படுகிறது என்பதால்தான். நம்மைவிட மற்றொருவர் அதிகமாக வைத்திருக்கிறார் என்று நாம் அவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறபோதே இச்சை தோன்றுகிறது. இயேசு சொன்னார், “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல”. தனக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் பொருட்களில் ஒருவன் திருப்தியோடு வாழ மறுக்கிறபோது அவனுடைய வாழ்க்கையில் பாவங்கள் வெள்ளம் போல் பெருக ஆரம்பிக்கும். இது இன்றைக்கு நாம் பெருமளவில் எங்கும் பார்க்கக்கூடிய பாவமாக இருக்கின்றது. டெலிவிஷனும், கேபிள் டீவியும், இன்டர்நெட்டும், கிரெடிட் கார்டுகளும், ஆயிரக்கணக்கான விளம்பரங் களும் புதிது, புதிதாக நாம் எதையாவது வாங்க வேண்டுமென்று அன்றாடம் தூண்டிக்கொண்டிருக்கின்றன. சமுதாயத்தில் நாம் பார்க்கின்ற, சகல வசதிகளையும் கொண்டிருக்கிறவர்களே நல்ல வாழ்க்கை வாழ்கிறவர்களாக பொதுவாகவே எல்லோரும் எண்ணுகின்றனர். இன்று தமிழினத்தில் இப்படி ‘வசதிக்காக’ வாழ்கின்ற பெருந்தொகையான ஊழியக்காரர்கள் பத்தாம் கட்டளையை மீறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான வாழ்க்கை பவுல் கொண்டிருந்த எண்ணங்களுக்கு மாறானவையாக இருக்கின்றன. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்க வும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.” என்று பவுல் தன்னுடைய வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறார். இதுவே வேதம் போதிக்கும் வாழ்க்கைநெறி. கர்த்தர் கொடுத்திருப்பவற்றில் முழுத்திருப்தி யுடன் வாழ்வதே அந்த நெறி.
ஒவ்வொருவரும் உழைத்துத் தாமிருக்கும் நிலையில் உயர்வது நியாய மானது. அப்படிச் செய்யாமல் அக்கறையற்றோ அல்லது சோம்பேரியாகவோ வாழ்வதைத்தான் வேதம் வெறுக்கிறது. “சோம்பற் கையால் வேலை செய்கிற வன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.” என்கிறது, நீதிமொழிகள் 10:4. சோம்பேரியாக இருப்பவன் சாப்பிடத் தகுதி யில்லாதவன். உழைத்து சாப்பிட விரும்பாதவன் அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படுகிறவன். இதை இந்தப் பத்தாவது கட்டளை கண்டிக்கிறது. இன்று முழுநேர ஊழியக்காரர்கள் என்ற பெயரில் முழுநேர சோம்பேரிகள் தமி ழினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். உழைத்துத் தங்களையும், குடும்பத்தை யும் கவனிப்பதைவிட்டுவிட்டு, ஐந்து, ஆறு ஆத்துமாக்களை மட்டும் வைத்துக் கொண்டு பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் வேதபோதனை களின்படி முழுநேரத் திருடர்களே. முழுநேர ஊழியம் என்பதை இந்த மனிதர்கள் பெருமைமிக்க ஒரு தொழிலாக மட்டுமே நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், வேதபோதனைகளின்படி முழுநேரத்தையும் பயன் படுத்தும் அளவுக்கு ஒரு ஊழியக்காரனுக்கு ஆத்மீகவேலை இல்லாவிட் டால் அவன் முழுநேர ஊதியம் வாங்குவதற்கு தகுதியில்லாதவன். ஆகவே, வெறும் ஐந்து, ஆறு ஆத்துமாக்களை மட்டும் வைத்திருப்பவர்கள் முழுநேர ஊழியத்தை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு வாழ்க்கை யில் நேரம் அதிகமாக இருப்பதால் சோம்பேரித்தனம் வளரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதோடு, பணத்திற்காக பிச்சை கேட்டு அலைய வேண்டிய நிலைமையும் ஏற்படும். இதைத்தவிர்த்து மனத்தூய்மையுடன் கர்த்தருக்கு விசுவாசமாயிருக்க அவர்கள் ஒரு பகுதி நேரத்தொழிலைச் செய்தால் தங்க ளுடைய மானத்தையும் குடும்பமானத்தையும் காத்துக் கொள்ளலாம். சபை வளர்ந்து ஆத்துமாக்கள் அதிகரிக்கிறபோதே அந்த மனிதன் முழுநேரத்தையும் ஆத்துமாக்களுக்கு கொடுக்கவேண்டிவரும். அதுவரை முழுநேர ஊதியத்தை ஆத்துமாக்களிடமோ, சபைக்கு வெளியிலோ தேடப்பார்ப்பது அநீதியானது. பத்தே ஆத்துமாக்களை மட்டும் கொண்டிருக்கும் சிலர் தங்களுடைய முழுநேர ஊழியத்தை நியாயப்படுத்துவதற்காக தகுதிக்கும், வரம்புக்கும் மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். நாடு முழுவதிலும் தங்களை ஊழியம் செய்ய கர்த்தர் அழைத்திருப்பதுபோல் பேசுவார்கள், ஊர் ஊராக அலையப்பார்ப்பார்கள். இருக்கும் பத்துப்பேரையும் கவனிக்கமாட்டார்கள். இப்படி நடந்து கொள்கிற மனிதனால் தன்னுடைய குடும்பத் தேவைகளை சந்திக்க முடியாது. அவன் மனைவி பிள்ளைகளை அன்றாடம் நிராகரிக்கிற வனாகத்தான் இருப்பான். “என்னுடைய கணவன் ஊழியம், ஊழியம் என்று ஊர் ஊராகத் திரிகிறார். வீட்டில் குழந்தைகளுடன் நான் படும் கஷ்டமே அவருக்குத் தெரிவதில்லை” என்று சொல்லி கண்கலங்குகிற ஊழியக்காரர் களின் மனைவிகள் நம்மத்தியில் அதிகம். இந்த அநியாயமெல்லாம் நடப்பதற்குக் காரணம் நூற்றுக்கணக்கான வேதஞானமற்ற சோம்பேரிகள் இன்று ஊழியம் செய்யப்புறப்பட்டிருப்பதால்தான். இதற்கெல்லாம் மாறாக வேதம், இந்தக் கட்டளையின் மூலம் ஒவ்வொரு விசுவாசியும் நேரத்தை வீணாக்காமலும், மற்றவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக அபகரிக்க முயலாமலும் நேர்மையோடு உழைத்து வாழ்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
தன்னுடைய செல்வத்தை நீதியான வகையில் பெருக்கிக் கொள்ள வேதம் விசுவாசிக்கு அனுமதியளிக்கிறது. ஆகவே, விசுவாசிகள் தங்களுடைய திறமை களை நீதியானவிதத்தில் பயன்படுத்த வேண்டும். கர்த்தர் தருகின்ற நல்ல சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதேநேரம், நம்முடைய திறமையிலும், கிடைத்துள்ள சந்தர்ப்பங்களிலும் திருப்தியுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். நம்மைவிட இன்னொருவர் உயர்வாக இருக்கிறாரே என்று ஆதங்கப்படக்கூடாது, முறுமுறுக்கக்கூடாது. நம்முடைய இருதயத்தில் கசப்பான வைராக்கியமும், விரோதமும் இருக்கக் கூடாது என்கிறார் யாக்கோபு (5:14). மற்றவர்களுடைய வசதிகளைக் குறித்து நமக்கு கசப்பான எண்ணங்கள் இருந்தால் கலகமும் சகல துர்ச்செய்கை களும் உண்டாகும் என்று எச்சரிக்கிறார் யாக்கோபு (5:15). உலகத்தில் எல்லோரும் சமமான தரத்தில் இருப்பதில்லை. கர்த்தர், சிலர் மற்றவர்களைவிட அதிகமானவற்றை அனுபவிக்கும்படி அனுமதித்திருக்கிறார். ஆகவே, கர்த்தர் நமக்குத் தந்திருப்பதில் திருப்தியுடன் இருப்பது நமது கடமை.
கர்த்தர் நமக்குத் தந்திருப்பவற்றுடன் நாம் எப்படித் திருப்தியுடன் இருப் பது என்ற கேள்விக்கு பதிலளிப்பது அவசியம். கர்த்தரை நம்முடைய வெகு மதியாக நாம் கருதுகிறபோதே போதுமென்ற மனத்தோடு நாம் திருப்தியாக வாழ முடியும். நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுமுன்பு அவர்கள் கர்த்தரில் முழுச்சமாதானத்துடன் இருந்தார்கள். அவர்கள் அநாவசியமாக எதற்கும் ஆசைப்படவில்லை. சாத்தானின் பிடியில் அவர்கள் விழுந்தபோது இச்சை ஏற்பட்டது. உலகப் பொருள்களில் மனிதன் என்றும் முழுத்திருப்தி அடைய முடியாது. கர்த்தர் மனிதனை அந்த முறையில் சிருஷ்டிக்கவில்லை. கர்த்தரில் மட்டுமே மனிதன் முழுத்திருப்தியையும், சமாதானத்தையும் அனுபவிக்க முடியும். இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவனை அடையும்போதே மனிதன் உலக இச்சையில் இருந்து விடுபடும் வாழ்க்கையை அடைகிறான். இயேசு சொன்னார், “பூமியில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். . . உங்கள் பொக்கிஷம் எங்கே யிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:19-21). இந்த உலகம் நிலையானதல்ல என்பது மெய்விசுவாசிக்குத் தெரியும் (2 பேதுரு 3:12). ஆகவே, பவுல் சொல்லுகிறார், “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த துண்டானால் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவை களையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.” (கொலோசேயர் 3:1-3).
முதலாவதாக வருபவர்கள் கடைசியிலும், கடைசியில் வருபவர்கள் முத லாவது இடத்தையும் பிடிப்பார்கள் என்று இயேசு போதித்திருக்கிறார். இதன் அடிப்படையில் இந்த உலகத்தில் அதிகம் அனுபவிக்காத விசுவாசிகள் பரலோகத்தில் அதிக வெகுமதிகளைப் பெறாமல் போகமாட்டார்கள் என்பதை மத்தேயு 25:14-30 போன்ற பகுதிகள் போதிப்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையின் மூலம் கர்த்தருக்கே சகல மகிமையும் சேரும்படி வாழுவோம்.
கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள்
நமக்காக கல்வாரியில் மரித்த இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள் உண்மையிலேயே நமக்குப் போதிப்பதென்ன என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் இயேசுவின் சிலுவைப்பாடுகளை மனதில் நினைத்து உருகிக் கண்ணீர்விட வேண்டுமென்று வேதத்தின் எந்தப்பகுதியாவது போதிக்கின்றதா என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? காலங்காலமாக ரோமர் கத்தோலிக்க மதம் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்துவின் சிலுவைத்துன்பங்களை கத்தோலிக்கர்கள் தங்கள் சரீரத்தில் அனுபவித்து ஆத்மீகபெலன் அடையவேண்டுமென்ற நோக்கத்தில் லெந்து காலத்தில் நாற்பது நாற்களுக்கு உபவாசம் செய்து, தியானத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். அத்தோடு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் மரச்சிலுவையைத் தோலில் சுமந்து நகர் ஊர்வலம் வந்து ஆத்மீக அனுபவம் என்ற பெயரில் உடலை வருத்திக் கொள்வார்கள். இதுவும் போதாதென்று லெந்து காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களைச் சித்தரிக்கும் நாடகங்களையும், கூத்துக்களையும் கிராமங்களிலும் நகரங்களிலும் நடத்தி லெந்துக் காலங்களில் ஒரு பெரு விழாவையே நடத்தி முடித்துவிடுவார்கள். இதையெல்லாம் கத்தோலிக்க மதம் செய்வதற்குக் காரணம் என்ன என்பதையே சிந்தித்துப் பார்க்காமல், வேத அறிவு என்பதே துல்லியமும் இல்லாமல் தமிழர்கள் மத்தியில் சீ. எஸ். ஐ சபைகளும், மெத்தடிஸ் மற்றும் பாப்திஸ்து, பெந்தகொஸ்தே சபைகளும் லெந்து காலங்களில் உபவாசம் இருப்பதோடு கத்தோலிக்க மதம் செய்யும் அத்தனை காரியங்களையும் செய்து வருகிறார்கள். லெந்துகால தியானத்திற்காக எழுதப்பட்டுள்ள விசேட நூல்கள்கூட இவர்கள் மத்தியில் விற்பனைக்கு உண்டு.
கத்தோலிக்க மதம் சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கு விரோதி என்ற உண்மையே தெரியாமல் சுவிசேஷ இயக்க சபைகள் கத்தோலிக்க மதக்கோட்பாடு களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருவது தமிழினத்தின் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தை பிடித்திருக்கும் மாபெரும் சாபம். பத்துக் கட்டளைகள் மூலம் தன்னைத் தவிர வேறு எவரையும் அல்லது எதையும் வணங்கக் கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருப்பதோடு தன்னை வணங்கும்போது ஆத்துமாக்கள் சத்தியத்தின் அடிப்படையிலும், ஆவியின் மூலமும் மட்டுமே வணங்க வேண்டும் என்று சொல்லியிருக்க அதன் அர்த்தமே புரியாது கர்த்தரை அவருடைய வார்த்தைக்கு விரோதமாக வணங்கி வரும் சுவிசேஷ சபைகள் கர்த்தருக்கு பெருவிரோதிகள்.
இயேசு கிறிஸ்து இன்றைக்கும் சிலுவையில் தொடர்ந்து துன்பப்பட்டு வருகிறார் என்பது கத்தோலிக்க மதப்போதனை. அந்த மதத்தின் போதனை களுக்கும் நடைமுறைப் பயிற்சிகளுக்கும் அந்த நம்பிக்கையே அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்து தன் சரீரத்தில் அனுபவித்த துன்பங்களுக்கு அது அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால், சுவிசேஷ இயக்கம் கிறிஸ்து அனுபவித்த துயரங்கள் இன்றும் தொடர்வதாக நம்பவில்லை. அவை என்றோ வரலாற்றில் முடிந்து போய்விட்ட நிகழ்ச்சி. இன்றைக்கு ஜீவிக்கும் கிறிஸ்துவை, தேவ இராஜ்யத்தை ஆளும் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி சுவிசேஷ செய்தி எல்லோரையும் அழைக்கிறது. கிறிஸ்து வின் துன்பங்களை நாம் எழுத்துபூர்வமாக அனுபவிக்கும்படி சத்திய வேதம் எந்தப்பகுதியிலும் போதிக்கவில்லை. அதை நினைவுபடுத்திக் கொண் டாடும்படி வேதம் எங்குமே வலியுறுத்தவில்லை. கிறிஸ்துவின் சரீரப்பாடு களை நமது சரீரத்தில் அனுபவிப்பதற்காக விஷேட காலங்களை ஏற்படுத்தி கூத்துக்களை நடத்தி விழாக்கொண்டாடும்படி வேதத்தின் எந்தப்பகுதி யிலும் போதனைகள் தரப்படவில்லை. இப்படிச் செய்வதால் நாம் ஒருவிதத் திலும் நம் வாழ்க்கையில் பரிசுத்தமடையப் போவதுமில்லை, பக்திவிருத்தி யில் வளரப்போவதுமில்லை. இதையெல்லாம் செய்துகொண்டிருப்பவர்கள் சத்தியமே தெரியாத சுவிசேஷப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் எட்டப்பக் கூட்டமே தவிர வேறில்லை.
அப்படியானால் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளைப்பற்றி வேதம் நமக்கு எதைப்போதிக்கின்றது? என்பதை இனி ஆராய்வோம்.
- கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் கிறிஸ்து யார் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.
கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் அவர் யார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்படி அழைக்கின்றன. கிறிஸ்து சாதாரணமான மனிதரோ அல்லது விசேஷ அவதாரமோ அல்ல. அவர் தேவனால் அனுப்பப்பட்ட, அவருடைய தெய்வீகக் குமாரன். அதுமட்டுமல்ல அவர் திரித்துவத்தின் இரண்டாம் நபர். பிதாவின் தன்மைகள் அனைத்தையும் தன்னில் கொண்டிருக்கும் தேவகுமாரன். யூதர்களைப்பார்த்து இயேசு சொன்னார், நானும் அவரும் ஒருவரே, என்று. மத்தேயு 16:13-16ல் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்” என்று கேட்டபோது பலரும் பலவிதமாக பதிலளித்தார்கள். ஆனால், பேதுரு மட்டும், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று தெளிவாக பதிலளித்தான். அதாவது, நீரே கர்த்தர், உன்னதத்தில் வாசம் செய்யும் தேவன். தேவனால் அனுப்பப்பட்டு வந்திருக்கும் தேவகுமாரன் என்ற தெளிவான பதிலை அளித்தான் பேதுரு. இயேசு அவனைப் பார்த்து “சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்று சொன்னார். 21-ம் வசனம் அதுமுதல் இயேசு தாம் படப்போகிற பாடுகளைப்பற்றி தம்முடைய சீடர்களுக்கு சொல்லத் தொடங்கினார் என்று வேதத்தில் எழுதியிருப்பதை வாசிக்கிறோம். கிறிஸ்துவின் பாடுகள் கிறிஸ்து யார் என்பதை நமக்கு விளக்குகின்றன. நாம் கிறிஸ்துவின் மெய்த்தன்மையை ஆராய்ந்து பார்க்கும்படி அழைக்கின்றன. அவர் எதற்காக, யாருக்காக சிலுவையில் துன்பப்பட நேர்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்படி அறைகூவலிடுகின்றன. அவராலன்றி எந்த மனிதனுக்கும் வேறு எவர் மூலமாகவும் இரட்சிப்பில்லை என்ற சத்தியத்தை புலப்படுத்துகின்றன. அவருக்காக இரக்கப்பட்டு, வருத்தப்பட்டு அழவேண்டுமென்று சிலுவை நமக்குப் போதிக்கவில்லை. கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பார்த்து அழுவதால் பரலோகம் போன மனிதன் இந்த உலகத்தில் ஒருவருமே இல்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மட்டுமே பரலோகம் போகமுடியும். பேதுரு சொன்ன பதில் அவன் விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட பதில்.
- கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களுக்கும், மரணத்துக்கும் யார் காரணம் என்பதை அவருடைய சிலுவைத் துயரங்கள் விளக்குகின்றன.
இயேசு கிறிஸ்துவை யூதர்கள் கொன்றார்களா? அல்லது ரோமர்கள் கொன்றார்களா? என்பது முக்கியமேயல்ல. யூதர்களும், ரோமரும் கர்த்தரால் பயன்படுத்தபபட்ட மனித கருவிகள் மட்டுமே. உண்மையில், கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கு மூல காரணம் கர்த்தரே. ஏசாயா 53:6, “கர்த்தரோ நம்மெல்லோருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” என்கிறது. ரோமர் 8:32, “தம்முடைய சொந்தக் குமாரரென்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர்” கர்த்தர் என்று விளக்குகின்றது. அப்போஸ்தலர் 4:27, “உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரொதும், பொந்திபிலாத்தும், புறஜாதிகளோடும், இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம் பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங் கூடினார்கள்” என்கிறது. இயேசுவின் மரணம் உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே கர்த்தரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது. யூதர்களும், ரோமர்களும் கர்ததருடைய கரத்தில் வெறும் கருவிகளே. இதற்காக யூதர்களும், ரோமரும் தாங்கள் செய்த பாவத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஆனால், இயேசுவின் மரணத்திற்கு மூல காரணம் யார் என்பதையும், கர்த்தர் தன்னுடைய பரிசுத்த திட்டங்களை நிறைவேற்ற தன்னுடைய ஒரே குமாரனைப் பலிகொடுத்தார் என்பதையும் கிறிஸ்துவின் சிலுவைத் துன்பங்கள் நினைவுபடுத்துவதை நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கான வேத காரணங்களை எண்ணிப் பார்க்காமல் அதற்காக கண்ணீர் வடிப்பதும், அதை நினைத்து உபவாசம் இருப்பதும், சிலுவையைத் தோளில் சுமந்து உடலை வருத்திக் கொள்வதும் வடிகட்டின முட்டாள்த்தனம்.
- கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் சிலுவையில் கிறிஸ்து உண்மையில் எதை அனுபவித்தார் என்ற சத்தியத்தை விளக்குகின்றன.
சிலுவையில் கிறிஸ்துவின் கரங்களிலும், கால்களிலும் ஆணிகளைப் பொருத்தினார்கள். அவருடைய தலையில் முற்கிரீடத்தை வைத்து அழுத்தி னார்கள். அவருடைய சரீரத்தில் இருந்து இரத்தம் கொட்டியது. கிறிஸ்து சாதாரண மனிதனால் தாங்க முடியாத கொடுமைகளை சிலுவையில் தாங்கி னார் என்பது பேருண்மை. ஆனால், அவற்றை மட்டும் பெரிதுபடுத்துவதால் உண்மையிலேயே கிறிஸ்து சிலுவையில் எதை அனுபவித்தார் என்று வேதம் முக்கியத்துவம் தந்து போதிக்கும் சத்தியத்தை நாம் தவிர்த்துவிட நேரிடும்.
கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்குப் போதிக்கும் அந்த சத்தியம் என்ன? மாற்கு 14:34-ல் கெத்செமனே தோட்டத்தில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் “என்னுடைய ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்றார். அதற்குப்பின் அவர் தன்னுடைய பிதாவை நோக்கி, “எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்தில் இருந்து எடுத்துப் போடும்” என்று ஜெபித்துக் கேட்டார். இயேசு கெத்செமனே தோட்டத்தில் தனிமையில் இருந்தார். சிலுவையைச் சந்திக்குமுன்பதாகவே அவருடைய இருதயம் மரண வேதனையை அனுபவித்தது. எத்தகைய மரண வேதனை அது? உயிர் சரீரத்தை விட்டுப் பிரியும் வேதனை மட்டும் அல்ல. அதற்கும் மேலாக நரகதுன்பத்தை தேவனாகிய இயேசு தன்னுடைய இருதயத்தில் அனுபவித்தார். நரகத்தையே தொட்டிராத நம்முடைய தேவன் நமது பாவநிவாரணத்திற்காக நரகவேதனையை, நரகத்திற்குப் போகாமலேயே அனுபவிக்க நேர்ந்தது. நரகத்தின் கொடுமையையும், அதன் கொடூர இருளையும், தனிமையும், பிதாவின் ஐக்கியத்தை இழந்த நிலையையும் தன்னுடைய இருதயத்திலே அனுபவித்தார் இயேசு கிறிஸ்து. அதனால்தான் “இந்தப் பாத்திரத்தை (இந்தத் துன்பத்தை) என்னிடத்தில் இருந்து எடுத்துப் போடும்” என்று பிதாவிடம் ஜெபித்தார் இயேசு. சிலுவையில் இறக்கும்போது, “தேவனே, தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அவர் கதறியதற்கும் இதுதான் காரணம். சிலுவைத் துன்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக் கும் ரோமன் கத்தோலிக்க மதம் இந்த சத்தியத்தை மறைத்துவிடுகிறது. நரககொடுமைகளில் இருந்து நம்மை விடுவிக்க கிறிஸ்து நமது பாடுகளைத் தன்னில் தாங்க வேண்டியிருந்தது. கலாத்தியர் 3:13, “கிறிஸ்து நமக்காக சாபமானார்” என்று இதைக்குறித்துத்தான் பேசுகிறது. 2 கொரிந்தியர் 5:21, “பாவமறியாத அவர் நமக்காக பாவமானார்” என்று இந்த சத்தியத்தைத்தான் விளக்குகிறது. 1 பேதுரு 2:24, “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார்” என்று சிலுவைப்பாடுகளை மட்டுமல்ல, அவருடைய ஆத்துமா அனுபவித்த நரகவேதனையைக் குறித்தும் பேசுகிறது. சிலுவையில் நமக்காக மரித்த கிறிஸ்து இந்த உலகமே இதுவரை கண்டிராத மிகப்பெரிய பாவியாக நமக்காக மரித்தார். நம்மீதிருந்த தேவகோபம் அத்தனையும் அவர்மேல் இறங்கியது. அந்தக் கோபத்தை தாங்கும் கொடுமையை இயேசு அனுபவித்தார் என்ற சத்தியத்தை அவருடைய சிலுவைத் துயரங்கள் நமக்கு விளக்குகின்றன.
- கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் அவருடைய மரணத்திற்குப்பின் நிகழவிருக்கும் உயிர்த்தெழுதலை சுட்டிக்காட்டுகின்றன.
கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளில் மட்டும் தங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் அவசியத்தை மறந்துவிடுகிறார்கள். கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவருடைய சிலுவைத் துன்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பெரிது படுத்துவது வேதபோதனைகளைத் திரிபுபடுத்துவதாகும். தேவ குமாரனாகிய இயேசு, கிறிஸ்துவாக இல்லாமலிருந்திருந்தால், அவர் உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் அவருடைய சரீரத்தின் சாம்பல் மட்டுமே இன்றும் கல்லறையில் தொடர்ந்திருந்திருக்கும். இயேசு, கிறிஸ்துவாகவும், தேவகுமாரனாகவும் இருந்ததால்தான் வரலாற்றில் அவருடைய சிலுவை மரணம் அவசிய மானது. அதுமட்டுமல்லாமல் அவருடைய சிலுவை மரணத்தின் முக்கியத்துவமே அவருடைய உயிர்த்தெழுதலில்தான் தங்கியிருந்தது. அவர் உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? இன்றைக்கு பாவிகள் மனந் திரும்புவதற்கு வழியே இருந்திருக்காது. சத்தியம் இப்படியிருக்க இயேசுவின் சிலுவைப் பாடுகளை மட்டும் பெரிதுபடு¢த்துவது எத்தனை பெரிய தவறு. இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் அவருடைய உயிர்த்தெழுதலுக்கே தங்களுடைய பிரசங்கங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கலாம். ஸ்தேவானும், பேதுருவும், பவுலும் அதற்கே முக்கியத்துவம் தந்து பிரசங்கித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம் அவருடைய உயிர்த்தெழுதலில் தங்கியிருந்ததால்தான். நமக்காக மரித்த தேவன் இன்று கல்லறையில் இல்லை. அவர் ஜீவிக்கிறார். அவர் உயிர்த் தெழுந்து ராஜாவாக தேவராஜ்யத்தை ஆண்டுவருகிறார்.
அதுமட்டுமல்லாமல், கத்தோலிக்க மதம் கிறிஸ்துவின் சிலுவைத் தியாகம் முடிந்துவிட்டதாகக் கருதுவதில்லை. இது மிகப் பெருந்தவறு. இயேசு சிலுவையில் இறந்தபோது, “முடிந்தது” என்று உறுதியாகச் சொல்லித் தன்னுடைய ஆவியைத் துறந்தார் (யோவான் 19:30). பிதாவின் கட்டளைகள் எல்லாவற்றை யும் நிறைவேற்றி, அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருக்கும் பாவ நிவாரணப் பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து தேவகோபத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும் பணி நிறைவேறிவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம். கிறிஸ்துவின் சிலுவைத் துன்பங்களை மட்டும் நாம் பெரிதுபடுத்தி கண்ணீர்வடித்து, உபவாசம் செய்தால் கிறிஸ்துவின் கிருபாதாரப் பலிச்செயல் நிறைவேறிவிட்டதை நாம் அலட்சியப்படுத்துகிறவர்களாகிவிடுவோம். விசு வாசிகள் இனி அழவேண்டியவர்களல்ல; ஆனந்தப்பட வேண்டியவர்கள். நம் தேவன் இன்று வெற்றிவீரராக, ஆள்கிறவராக பரலோகத்தில் வீற்றிருக்கிறார்; விசுவாசிகளைத் தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கிறார்.
- கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் பாவிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி அறைகூவி அழைக்கின்றன.
கிறிஸ்து தன்னுடைய சிலுவைத் துன்பங்களின் மூலம் பாவிகளின் பாவ நிவாரணத்துக்கு வழி ஏற்படுத்தித் தந்திருப்பதால், பாவிகள் இன்று நித்திய ஜீவனை அடைவதற்காக மனந்திரும்புவது அவசியம். கிறிஸ்து நம்முடைய அனுதாபத்தை ஒருபோதும் நாடி நிற்கவில்லை. கண்ணீரால் தம்மை நனைக் கும்படிக் கேட்கவில்லை. அவரைப்போல நாமும் சரீரத்தில் இரத்தம் சிந்த வேண்டுமென்று கேட்கவில்லை. மனந்திரும்பி தம்மை விசுவாசிக்கும்படி மட்டுமே நம்மை அழைக்கிறார் (மாற்கு 1:15). அதையே அப்போஸ்தலர் களும் பிரசங்கித்தனர் (அப்போஸ் 20:21). “மனந்திரும்புதல் நமது இருதயத்தில் இருந்து வெளிப்படும் வாந்தி” என்று பரிசுத்தவான்களில் ஒருவர் கூறியிருக்கிறார். தன்னுடைய பாவத்திற்காக முழுமனத்தோடு வருந்தி அதிலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மட்டுமே பரலோகம் போக முடியும் என்கிறது வேதம். ஆகவே, அநாவசியமாக கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை, வேதபோதனைகளுக்கு மாறாகப் பெரிதுபடுத்தி, விஷேட காலங்களை ஏற்படுத்தி கிறிஸ்துவுக்கு விழாக்காணுவதை விட்டுவிட்டு சிலுவைப் பிரசங்கத்தின் மூலம் பாவிகள் மனந்திரும்புவதற்கு ஏதுவானதை செய்வதே திருச்சபைகள் இன்று செய்ய வேண்டிய பெரும் பணி. பாவிகள் மனந்திரும்புவதற்கு ஏதுவாக சுவிசேஷப் பிரசங்கங்களைத் தெளிவாக அளிக்காத சபை தேவனுடைய சபையாக இருக்க முடியாது. அன்பர்களே! பாவத்தைவிட்டு விலகியோடுங்கள், கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.
அறிவுக்கேற்ற வைராக்கியம்
பவுல் அப்போஸ்தலன் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேலரைப்பற்றி எழுதும்போது “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கிய மில்லை” என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 10:2). அதாவது, இஸ்ரவேலருக்கு கடவுளைப்பற்றிய வைராக்கியம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அவர்க ளுடைய வைராக்கியத்துக்கும் கர்த்தரின் வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதுதான் பவுலின் வார்த்தைகளின் பொருள். நாம் மேலே பார்த்த வசனத்தில் வைராக்கியம் என்ற வார்த்தைக்கு ‘மனத்தில் உண்டாகும் ஆர்வம்’ (Zeal) என்பது அர்த்தம். இது கர்த்தரில் நமக்கு ஏற்படு கின்ற ஆர்வத்தைக் குறிக்கிறது. அத்தோடு, இந்த வசனத்தில் ‘அறிவு’ என்ற வார்த்தை உலக ஞானத்தைக் குறிக்கவில்லை. வேதத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வேதஞானத்தைக் குறிக்கிறது. வேதபோதனைகளின் அடிப்படையில் இல்லாமல் கர்த்தரின் மேல் எவருக்கும் வைராக்கியம் இருக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்க முடியும். அப்படியானதொரு வைராக்கியத்தைத்தான் நாம் இன்று பெந்தகொஸ்தே காரர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற அனேக தமிழர்கள் மத்தியிலும் பார்க்கிறோம். இந்த வைராக்கியம் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படுகிற மெய்யான வைராக்கியம் அல்ல.
இவர்களுடைய வைராக்கியத்தில் என்ன குறை என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பவுல் கூறுவதுபோல் இவர்களுடைய வைராக்கியம் வேத போதனைகளில் இருந்து உருவாகவில்லை. வேத அடிப்படையிலில்லாமல் ஒரு மனிதன் கர்த்தர்மேல் வைராக்கியங்கொள்ள முடியும், அன்பு வைக்க முடியும். அனேக ஆத்மீக காரியங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்களை யும் செய்யமுடியும். இதற்கு யூதாஸ் ஓர் நல்ல உதாரணம். அவன் இயேசு வைக் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்மேல் வைராக்கியமுடைய வனாக இருந்தான். இதேபோல்தான் பரிசேயர்கள் யெகோவாவின் மேல் வைராக்கியமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பழைய ஏற் பாட்டைக் கரைத்துக் குடித்தவர்கள். இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை யில் மெய்யான விசுவாசம் இருக்கவில்லை. வைராக்கியம் இருந்தது, ஆத்மீக வலிமை இருக்கவில்லை. கர்த்தர்மேல் வாஞ்சை இருந்தது ஆனால், விசுவா சம் இருக்கவில்லை. பரிசுத்த ஆவியைப் பணம் கொடுத்து வாங்க முயன்ற சீமோனுக்கு அதை அடைய வேண்டும் என்ற வைராக்கியமிருந்தது (அப்போஸ் 8:18, 19). அவன் ஏற்கனவே ஞானஸ்நானம் கூடப்பெற்றிருந்தான். ஆனால், அவனுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்கவில்லை.
பவுல், இந்தப் போலியான வைராக்கியம் ஆபத்தானது என்கிறார். இது கர்த்தரின் மேல் மெய்யான வாஞ்சையுள்ள வைராக்கியமல்ல. இது மதச் சடங்குகளைப்போன்ற ஆத்மீக வலிமையற்ற, சரீர உணர்ச்சிகளின் வெளிப் பாடு மட்டுமே. இதற்கு கர்த்தரின் வேதமோ, பரிசுத்த ஆவியின் செயல்களோ ஆதாரமாக இருப்பதில்லை. ஆகவே, இந்த வசனத்தில் இரண்டு உண்மை களை பவுலின் வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
(1) வேதஞானம் இல்லாமல் நாம் விசுவாசியாக இருக்க முடியாது – சரீரத்திற்கு எலும்புகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது கிறிஸ்தவ அனுபவத்திற்கு வேதபோதனைகள். நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அனைத்தையும் குறித்த சரியான வேதஞானம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். மெய்யான சத்தியங்களின் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அமைந்திருப்பது அவசியம். கிறிஸ்துவின் சீடன் அவரைப் பற்றிய சத்தியங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியாது. நாம் எப்போதும் நமது கிறிஸ்தவ அனுபவங்கள் வேதம் போதிக்கும்படியாக அமைந்திருக் கின்றனவா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். வேதம் அனுமதிக்காத அனுபவங்கள் கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவ போதனைகளில் கவனம் செலுத்தாத ஆத்துமா விசுவாச முள்ள விசுவாசியாக இருப்பது கடினம். “ஜெபத்தோடு கூடிய ஊக்கமான வேதப்படிப்பு ஒருபோதும் எந்த ஆத்துமாவையும் வேதவிரோதியாக மாற்றிய தாக வரலாறில்லை” என்கிறார் ஏர்னஸ்ட் ரைசிங்கர் (Ernest C. Reisinger). ஆகவே, விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனை போன்றவைகளைப் பயன்படுத்தி வேதபோதனைகளைப் பெற்று வேத அறிவில் தேர்ச்சி பெறு வது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாகிறது.
(2) வேதஞானம் மட்டுமே நம்மில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் – நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்கள் நம்மில் மெய்யான வைராக்கியத்தை யும், நீதியான பரிசுத்தத்தையும், சுயவெறுப்பையும், சுவிசேஷ ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகள் அத்தகைய வைராக்கியத்தை நம்மில் ஏற்படுத்தாவிட்டால் அவைகளை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் அல்லது அலட்சியப்படுத்தி வருகிறோம் என்று தான் பொருள். கிருபையின் போதனைகளும், சீர்திருத்தவாத பேரறிஞர் களின் போதனைகளும் நாம் கர்த்தரையும் வேதத்தையும் ஜெபத்தோடு நேசித்து, பரிசுத்தமாக வாழ்வதில் அக்கறையுள்ளவர்களாக இருந்து, வைராக்கியத்தோடு கர்த்தருடைய சபை வாழ்க்கையில் ஆர்வம் செலுத்தி சுவிசேஷத்தை அறிவிப்பவர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. அதைத்தான் நாம் கல்வினிலும், லூதரிலும், ஸ்பர்ஜனிலும், பனியனிலும் பார்க்கிறோம். ஆழமான வேதசத்தியங்களை அறிவுபூர்வமாக படிக்கும்போது அவை நாம் கிறிஸ்தவ அனுபவத்தில் வளரப் பயன்படுவதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும் படிக்கக்கூடாது. இதனால்தான் விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ இறையியலையும் படிக்கும்போது அவற்றோடு சேர்த்து ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’, வின்ஸ்லோவின் ‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ போன்ற நூல்களையும் சேர்த்து வாசிப்பது அவசியம். இறையியல் நமக்கு இறை போதனைகளை வழங்க, இந்த நூல்கள் நம் இதயத்தில் கிறிஸ்துவில் வாஞ்சையை வளர்க்கும். இவை இரண்டுமே விசுவாசிக்கு அவசியம். அறிவு மட்டும் இருந்து வைராக்கியம் இல்லாமல் இருந்தால் அந்த அறிவு அடுப்பெரிக்கத்தான் உதவும். வைராக்கியம் மட்டும் இருந்து அறிவு இல்லாமலிருந்தால் அது நம்மை வெறும் மதவெறியனாக மாற்றிவிடும். கிறிஸ்துவில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ இறையியலைக் கொண்டிருப்பவன் மட்டுமே கிறிஸ்தவ விசுவாசி.