திருமறைத்தீபம் 2009 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. ஜோன் ஓவன்
3. வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை
வாசகர்களே!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய வருடத்தின் இந்த ஆரம்ப இதழில் பியூரிட்டன் பெரியவரும், தலை சிறந்த கிறிஸ்தவ இறையியலறிஞருமான ஜோன் ஓவன் பற்றிய போதகர் ஜெரமி வோக்கரின் ஆக்கம் தொடர் கிறது. அத்தோடு இந்த இதழை நம் காலத்தில் கர்த்தரால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற சீர்திருத்த பிரசங்கியும், போதகருமான அல்பர்ட் என். மார்டினின் ஊழியத்தை சிறப்பிக்கும் வகையில் வெளியிடுவதால் வழமையாக வரும் ஆக்கங்கள் இதில் இடம்பெறவில்லை.
கர்த்தரால் பெரும் பிரசங்கியாக உயர்த்தப்பட்டு திரித்துவ பாப்திஸ்து திருச்சபை மூலம் கடந்த நாற்பத்தி ஆறு வருடங்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்துட னும், ஆவியின் பெரு வல்லமையுடனும் சிறப்பாகப் பணிபுரிந்து போதகர் அல்பர்ட் என். மார்டின் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார். அவருடைய திருச்சபை ஊழியப் பணிக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்து முகமாக இந்தப் பாராட்டிதழ் வெளிவருகிறது. போதகர் மார்டின் திரித்துவ பாப்திஸ்து சபை ஊழியத் திலிருந்து ஓய்வு பெற்றாலும் கர்த்தரின் பணியில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.
அவர் எழுதிய ஓர் ஆக்கம் இந்த இதழில் “வெற்றி கரமான கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற தலைப்பில் வந்திருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய வேதபூர்வமான அனுபவத்தையும், அறிவையும் கொண் டிராமல் தமிழினத்து கிறிஸ்தவர்களில் அநேகர் கிறிஸ்துவின் பெயரில் போலி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஒருபுறம் கல்லைக் கடவுளென்று நம்பிக் கண் தெரியாமல் அதை மனிதன் அறிவற்று வணங்கி வருகிறானென்றால் மறுபுறம் நம்மில் பலர் கிறிஸ்துவை நம்புகிறோம் என்று கூறி கிறிஸ்துவின் வேதத்துக்கு புறம்பான வழிகளில் கிறிஸ்தவ அனுபவத்தை நாடியும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் தொடர்ந்தும் முயன்று வருகிறார்கள். கிறிஸ்தவனைப் பொறுத்த வரையில் அறியாமை இருக்கக்கூடாது; அறியாமை கிறிஸ்தவனுக்கு அழிவையே கொண்டு வரும். நல்ல நண்பரும், போதகருமான அல்பர்ட் என். மார்டினின் இந்த ஆக்கம் உங்களை அறிவுபூர்வமான அனுபவத் தின் வழியில் அழைத்துச் செல்லும். - ஆசிரியர்.
ஜோன் ஓவன்
- இறையியலறிஞர்களின் இளவரசன் -
ஜெரமி வோக்கர்
[திருச்சபை வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத கால திருச்சபை எழுப்புதலுக்குப் பிறகு பதினேழாம் நூற்றாண்டு பெற்றுத்தந்த பெருமகன்களே பியூரிட்டன் பிதாக்களாகும் (Puritan Fathers). இங்கிலாந்தில் அரச ஆதரவாளராக இருந்து செயல்பட்ட ஆங்கிலேயத் திருச்சபை (Church of England) வேதத்தின் அதிகாரத்தை மட்டும் மதித்து நடக்காமல் அதற்குப் புறம்பான போதனைகளைப் பின்பற்றும்படி வற்புறுத்தியதால் அதனை எதிர்த்து நின்று பெருந்துன்பங்களுக்கு முகம் கொடுத்தவர்களே பியூரிட்டன் பிதாக்கள். திருச்சபையைத் தூய்மையாக வேத அடிப்படையில் மட்டுமே நடத்தவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வாழ்ந்துகாட்டிப் போதனை செய்ததால் பியூரிட்டன்கள் (தூய்மைவாதிகள்) என்ற பெயரில் மற்றவர்களால் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயத் திருச்சபை ஒரு ஜெப நூலை வெளியிட்டு அதிலிருப்பவைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதால் அதை எதிர்த்த பியூரிட்டன்களும் ஏனையோரும் ஒத்துழையாவாதிகள் (Non-conformist) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர். ஜெப நூலைப் பின்பற்றி ஆங்கிலேயத் திருச்சபையின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட மறுத்ததால் இவர்கள் மீது அரசினதும் ஆங்கிலேயத் திருச்சபை யினதும் கொடுமைகள் அதிகரித்து 2000க்கும் அதிகமான போதகர்கள் ஆங்கிலேயத் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டதுடன் அநேகமானோர் நாட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். இன்னும் அதிகமானவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டது. இதெல்லாம் வேதத்தை விசுவாசித்துப் பின்பற்றியதற்கு அவர்கள் கொடுத்தவிலை.
இந்தப் பியூரிட்டன்களின் காலப்பகுதியில் வாழ்ந்து கர்த்தருக்குப் பணியாற்றி திருச்சபையை அலங்கரித்த பெருமகனே ஜோன் ஓவன். அவர் மகா ஞானி. இறையியலறிஞர்களுக்கெல்லாம் மேலான அறிஞர். எழுத்தில் சிறந்தவர். தலை சிறந்த, எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடிய வேதப் பொக்கிஷங்களை எழுத்தில் நமக்குத் தந்தவர். அவையெல்லாம் ஆங்கிலத்தில் இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. அவர் கருணையும், ஆத்தும பாரமும் கொண்ட போதகர். அதையே அவர் தன் ஊழியத்திலெல்லாம் சிறந்ததாகக் கருதினார். பிரசங்கம் செய்வதில் அவருக்கு இணையில்லை. தனக்கென ஒரு தனி முறையைக் கைக்கொண்டு ஆவியில் நிறைந்து அவர் பிரசங்கித்தார். கிராமத்து சபைகளிலிருந்து நாட்டின் பாராளுமன்றம்வரை அவருடைய பிரசங்க சிறப்பின் மேன்மை பரவியிருந்தது. ஒலிவர் குரோம்வெல் அவரைத் தனக்கு சாப்ளினாக விவரமறியாமல் வற்புறுத்தி நியமிக்கவில்லை. இத்தனைக்கும் மத்தியில் ஓவன் மிகவும் தாழ்மையானவர். தன்னைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளாமல் தன் தலைவரான கிறிஸ்துவின் மகிமையை அனைத்திலும் நாடியவர். ஜோன் ஓவன் எத்தகைய மனிதர் என்பதையும், அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் சிறப்பையும், ஊழியத்தின் மேன்மையையும் ஆங்கிலத்தில் அவரைப் பற்றி வாசித்திராதவர்களுக்கு வசதியாக இந்த ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார் ஜெரமி வோக்கர். ஓவன் எழுதிய நூல்களின் தலைப்புகளை தமிழில் மாற்றாமல் அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறோம். இந்த ஆக்கம் ஓவனின் சிறப்பை நீங்கள் அறிந்துகொண்டு அவருக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லவும், தொடர்ந்து அவர் எழுதியவற்றை வாசிக்கவும் உங்களைத் தூண்டுமானால் அதுவே இந்த ஆக்கத்திற்கு கிடைத்த சிறப்பாக இருக்கும். அதையும்விட ஓவன் விசுவாசித்த தேவனை நீங்கள் விசுவாசித்து, அவர் ஆத்மார்த்தமாகப் பின்பற்றிய சத்தியங்களுக்காக வாழவும், துன்பங்களைத் தாங்கவும், உழைக்கவும், ஏன் உயிரையும்கூடக் கொடுக்க உங்களைத் தூண்டுமானால் அதைவிடப் பெரிதாக இந்த ஆக்கத்தின் மூலம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.]
கொக்கஸ்ஹோலிலிருந்த இந்தக் காலப்பகுதியில் ஓவன் திருச்சபை அமைப்பைப் பொறுத்த இறையியல் நம்பிக்கை யில் சபை வேத அடிப்படையில் தன்னைத் தானே ஆளும் அமைப்பில் நம்பிக்கை கொண்டார். இதைக் கொங்கிரி கேஷனல் (Congregational) அல்லது இன்டிபென்டன்ட் (Independent) சபை அமைப்பு முறை என்று கூறுவார்கள். பிரெஸ்பிடீரியன்களோடு இறையி யலைப் பொறுத்தவரையில் அவர் பல போதனைகளில் ஒத்துவந்தபோதும் சபை நிர்வாக அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களோடு அவருக்கு உடன் பாடில்லை. இது பற்றி அதிகம் வாசித்ததோடு ஜோன் கொட்டன் (John Cotton) என்ற கொங்கிரிகேஷனல் சபைக் கோட்பாடுடையவரின் The Keys of the Kingdom of Heaven என்ற நூலை வாசித்தும் ஓவன் இந்த முடிவுக்கு வந்தார். இருந்தாலும் ஓவனின் திருச்சபை அமைப்பு பற்றிய கோட்பாடுகள் கொங்கிரிகேஷனல் சபை அமைப்பை அப்படியே கொண்டி ராமல் அதில் மாற்றங்களை ஏற்படுத்தியும் அதை ஒத்து அமைந்ததாகவும் இருந்தன. ஆகவே அவரை ‘Modified Congregationalist’ என்று கூறலாம். எந்த மனிதனுக்கும் அடிமையாகாது, அதே நேரம் தனித்துவமான சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்து, வேத சத்தியங்களை மட்டும் நாடி ஆத்மீகப் பாதை யொன்றை வகுக்கும் முயற்சியில் ஓவன் ஈடுபட்டார்.
அதே நேரம் நாட்டில் வளர்ந்து கொண்டிருந்த பிரெஸ்பிடீரியன் சபைப்பிரிவினர் ஏனைய சபைப்பிரிவினரை ஏற்று நடந்துகொள்ளாம லிருந்தது அவருக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியது. வற்புறுத்தி எதையும் பின்பற்ற வைக்கும் கட்டுப்பாடுகளையும் போலிப்போதனையாளருக்கு கொலைத்தண்டனை விதிப்பதையும் ஓவன் கடுமையாக சாடினார். “போலிப்போதனை கேடானதுதான், ஆனால், அது ஆத்மீகம் சம்பந்த மானது: ஒரு மனிதனின் தலையைத் துண்டிப்பதால் அதைப் போக்கிவிட முடியாது” என்றார் ஓவன்.
1647ல் அவர் மறுபடியும் ஒரு நூலை வெளியிட்டார். “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” (Death of Death in the Death of Christ) என்ற அந்த நூலில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மெய்த்தன்மையையும், அதனால் ஏற்படும் பலாபலன்களையும் தெள்ளத்தெளிவாக ஓவன் விளக்கியிருந்தார். ஏழு வருடங்களுக்கு ஓவன் ஜெபத்தோடு ஆய்வு செய்து, உழைத்துத் தயாரித்த நூல் இது. இந்நூல் இன்னொரு திறமைவாய்ந்த எழுத்தாளரான ரிச்சட் பெக்ஸ்டருடன் (Richard Baxter) ஓவனுக்கு தொடர்பை ஏற்படுத்தி கிறிஸ்துவின் பரிகாரப்பலியைப்பற்றி அவரோடு பல்வேறு விவாதங்களில் ஈடுபட வைத்தது. இந்ந நூலில் ஓவனின் சிறந்த சிந்தனைத் திறன் ஒளி வீசியது.
1648ல் ஓவன் Eshcol என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் தங்களுக்கு கிறிஸ்துவோடு இருக்கும் உறவின் அடிப்படையில் கிறிஸ்த வர்கள் செய்ய வேண்டிய கடமைகளைப்பற்றி ஓவன் விளக்கியிருந்தார்.
இதற்குப் பிறகு உள்நாட்டுப் போர் நெருங்கிவர அரசாதரவாளர்கள் (Royalist) கொல்செஷ்டரை (Colchester) சுற்றிப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியிருந்தனர். பாராளுமன்ற சார்பாளர்களின் ஜெனரல் கொகெஷெல் (Coggeshall) என்ற இடத்தை தலைமையகமாகக் கொண்டு நிலைமையை சரிசெய்ய அனுப்பிவைக்கப்பட்டார். இக்காலத்தில் ஓவனுக்கு ஜெனரலோடு நல்ல பரிச்சயம் ஏற்பட்டது அவரோடு நல்லுற வேற்படுத்திக் கொண்டார்.
உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்த காலத்தில் ஓவன் பலராலும் போதகராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். 1649ம் ஆண்டு வியாழக்கிழமை 31ம் நாள் பாராளுமன்றத்தில் பிரசங்கிக்க அழைக்கப் பட்டிருந்த இருவரில் ஓவன் ஒருவராக இருந்தார். அதற்கு முதல் தினம்தான் நாட்டு மன்னன் முதலாம் சார்ள்ஸ் கொலை செய்யப்பட்டிருந்தான். இக்காலத்து வாசகர்களுக்கு அன்று நடந்ததை கிரகித்துக் கொள்ளுவது கடினமே. நாட்டின் உயர் பதவிக்கு உரியவன் என்று மக்களால் கருதப்பட்ட அரசன் அந்தப் பதவியை இழந்தது மட்டுமல்லாமல் மக்களால் கொலையும் செய்யப்பட்டிருந்தான். அதுவும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டான் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கொலை செய்யப்பட்டிருந்தான். பாராளுமன்றம் ஓவனை அன்றைய தினம் பிரசங்கம் செய்யும்படிக் கேட்டுக்கொண் டிருந்ததில் இருந்து அது எந்தளவுக்கு ஓவன் மீது நம்பிக்கை வைத்திருந்தது என்பதை உணர முடிகிறது. ஓவன் அன்று பிரசங்கத்திற்கு எடுத்துக் கொண்டிருந்த வசனம் எரேமியா 15:19&20. பிரசங்கம் Righteous Zeal encouraged by Divine Protection என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததோடு Discourse on Toleration என்ற ஆக்கத்தையும் உடன்கொண்டு வெளியிடப்பட்டது. ஓவனின் பிரசங்கம் முதலாம் சார்ள்ஸின் மரணத்தைப் பற்றி எந்தக் குறிப்பையும் கொண்டிருக்கவில்லை. அன்று அதுவே பெரிதாகப் பேசப்பட்ட விஷயமாக இருந்தபோதும் ஓவன் அதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. அதற்காக அவர் அன்று நேர்மை யில்லாதவர், முதுகெலும்பற்றவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஓவனின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ளும்படி நமக்கு எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை.
அதே வருடம் ஏப்ரல் 19ம் நாள் ஓவன் மறுபடியும் பாராளுமன்றத்தில் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டார். அந்நாளில் ஒலிவர் குரோம்வெல் (Oliver Cormwell) பாராளுமன்றத்தில் இருந்தார். அன்றே ஓவனை முதல் தடவையாக பார்க்கும் வாய்ப்பு குரோம்வெலுக்குக் கிடைத்தது. அடுத்த நாள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அந்தச் சந்திப்பின்போது குரோம்வெலுக்கு ஓவனைப் பிடித்திருக்க வேண்டும்; ஏனெனில், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் தரும் வழமையான தாழ்மையான அறிமுகங் களையெல்லாம் குரோம்வெல் ஓவனிடம் எதிர்பார்க்காமல் தன்னோடு ஓவன் அயர்லாந்து நாட்டுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஓவனும் அவருடைய சபை மக்களும் அதற்கு மறுப்புத் தெரிவித்தபோது, குரோம்வெல் அது தன்னுடைய கட்டளை என்று ஓவனுக்கு அறிவித்தார். ஏனைய போதகர்கள் குரோம்வெலின் விருப்பத்தை மறுக்காமல் அவரோடு போகுமாறு ஓவனுக்கு அறிவுரை செய்தபோது கடைசியில் ஓவன் அதற்கு இணங்கி குரோம்வெலோடு போனார்.
1649ல் குரோம்வெலின் படை அயர்லாந்து நாட்டுக்குப் புறப்படவிருந்தது. அதற்கு முதல் நாள் முழுப்படையும் உபவாசத்திலும், ஜெபத்திலும் நாளை செலவிட்டது. அன்று போதகர்கள் பலர் படையின் வெற்றிக்காக கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாடி ஜெபித்தனர். அதற்குப் பிறகு படையை நடத்திய மூன்று படைத்தலைவர்கள் படையினருக்கு வேதப் பிரசங்கமளித்தனர். பன்னிரெண்டாயிரம் பேரைக் கொண்டிருந்த அந்தப் படை, வழமையாக போர்வீரர்கள் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள், பேச்சுக்கள், நடத்தைகளையெல்லாம் உதறிவிட்டு வேதத்தை வாசிப்பதிலும், சங்கீதங்கள் பாடுவதிலும், கர்த்தரைப் பற்றி ஒருவரோடொருவர் பேசுவ திலும் நேரத்தை செலவிட்டது.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குரோம்வெல் வெற்றியுடன் அயர்லாந்தில் இருந்து திரும்பினார். அதன் பின் பொதுநலவாயத்து படைகளின் பிரதான படைத்தலைவராக குரோம்வெல் நியமிக்கப்பட்டார். ஓவன் கொகெஷெல்லுக்கு திரும்பியபோதும், குரோம்வெல் ஸ்கொட்லாந்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்கப் புறப்பட்டபோது அவரோடு போக நேர்ந்தது. பாராளுமன்றம் ஜோசப் கெரலையும் (Joseph Caryl), ஓவனையும் குரோம்வெலின் போதகர்களாகப் பணிபுரியும்படி கேட்டுக்கொண்டது. ஸ்கொட்லாந்தின் எடின்பரோ நகரில் பெரும்பாலான ஸ்கொட்லாந்துப் போதகர்கள் கோட்டைக்கு வெளியில் போகமுடியாது அடைபட்டிருந்தபோது ஓவன் செயின்ட் கில்லிஸ் (St. Giles) சபையில் கொடுத்த பிரசங்கங்களைக் கேட்டு அவரிடம் அதிக ஈடுபாடு காட்டினார் கள். ஸ்கொட்லாந்துப் போதகர்கள் ஓய்வு நாளில் கோட்டைக்கு வெளியில் போய் பிரசங்கம் செய்வதற்கு உதவி செய்ய ஓவன் முன்வந்தபோது அந்தப் போதகர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் தன் கடமை முடிந்தபோது ஓவன் மறுபடியும் தன்னுடைய கொகெஷெல்லில் இருந்த தன்னுடைய அன்பு மக்களிடம் திரும்பி வந்தார். ஆனால், அந்த அமைதி தொடர்ந்து நீளவில்லை.
1651ம் ஆண்டு மார்ச் 18ம் நாள் ஆக்ஸ்போர்டில் இருந்த “கிறிஸ்துவின் சபை” (Christ Church) என்ற கல்லூரியின் தலைவராக (Dean) ஓவனைப் பொறுப்பேற்கும்படி பாராளுமன்றம் பணித்தது. ஆக்ஸ்போர்டில் இருந்த கல்லூரிகள் அனைத்திலும் இதுவே பிரபல்யமானதாக இருந்தது. கல்லூரிக்கூட்டங்களை நடத்துவதும், இறையியல் விரிவுரைகள் அளிப்பதும் இந்தப் பதவியில் ஓவனின் கடமைகளாக இருந்தன. அதற்கு சிறிது காலத்துக்குப் பிறகு 1652ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ம் நாள் குரோம்வெல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமனம் பெற்றபோது தன்னுடைய துணைத் தலைவராக ஓவனை நியமித்தார். எந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முன் மனச்சாட்சியின் காரணமாக ஓவன் விலக நேர்ந்ததோ அதே பல்கலைக் கழகத்தை நடத்திச் செல்லும் பொறுப்பு இப்போது ஓவனின் கைக்கு வந்தது.
இந்தப் பதவிகளெல்லாம் ஓவனுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. மாறாக அவர் அன்பு காட்டும் போதகராகவும், ஊன்றிப் படிக்கும் இறையியலறிஞ ராகவும் இருக்கவுமே விரும்பினார். ஆக்ஸ்போர்ட் பணி அவருடைய திருச்சபைப் பிரிவின் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் சபை அரசியல் பணியாகவே இருந்தது. அத்தோடு பல்கலைக்கழகமும் அக்காலப்பகுதியில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டதாக இருந்தது. அரசாதரவு காட்டி வந்த பல்கலைக்கழகத்தின் வருமானமெல்லாம் அரசனுக்கு உதவி செய்வதில் கரைந்திருந்தது. பணி செய்தவர்களின் மத்தியில் பெரும் எரிச்சலும், பொறாமையும் கொடிகட்டிப் பறந்ததோடு, தகுதியற்ற மோசமான அநேக மாணவர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.
பலர் தவறாகப் பியூரிட்டன்களை கடுமையானவர்களாகப் படம் பிடித்துக் காட்டுவதற்கு எதிர்மாறாக ஓவன் பாராட்டக்கூடிய பண்புள்ள மனிதராக காணப்பட்டார். “அவர் வாழ்ந்த வீடு ஒழுங்கோடு இருந்தது, பிரசங்க மேடையில் அவர் அனைவரும் மதிக்கும் வகையில் நடந்து கொண்டார், திறமை வாய்ந்த பேச்சாளராக இருந்தார், வெற்றிகொள்ள வைக்கும் வாதத்திறமையோடு பேச்சாற்றளும் கலந்து, அவருடைய வேறுசில வெளிப்புற வசதிகளும் இணைந்துகொள்ளும்போது எந்தக் கூட்டத்தையும் தான் விரும்புகிற விதத்தில் தன்வசம் கொண்டுவந்து விடக்கூடிய வல்லமையை ஓவன் கொண்டிருந்தார்.”
பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்களையெல்லாம் ஒன்றுகூட்டி அவர் கொடுத்த ஆரம்ப உரையில் அவர் தான் எதற்கும் கிறிஸ்துவிலேயே தங்கியிருப்பதாக விளக்கினார். கிறிஸ்துவில் தங்கியிருக்கும் உறுதியோடு உழைத்தே அவர் தன் பணியில் சிறக்க ஆரம்பித்தார். ஓவன் உண்மையி லேயே மிகவும் பொறுமையானவராகத் தென்பட்டபோதும், திட்டமான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுபவராக இருந்தார். ஒரு முறை பேச்சில் சகலவித மோசமான வார்த்தைகளையும், வசனங்களையும் தவிர்த்துவிட வேண்டும் என்று தன்னுடைய மாணவன் ஒருவரை அவர் எச்சரித்திருந்தார். ஆனால், பேச ஆரம்பித்தபோது அந்த மாணவன் அதையெல்லாம் உதறிவிட்டுப் பேச ஆரம்பித்தான். அதைக் கவனித்த ஓவன் சக மாணவர்களைப் பார்த்து அவனைத் தடுக்கும்படிக் கூறினார். அப்படியும் அந்த மாணவன் நிறுத்தாமல் போக, பல்கலைக்கழகத்தின் மதிப்பையும், மரியாதையையும் காப்பதற்காக, சக நண்பர்கள் அவருடைய பாதுகாப்பிற்காக அவரைத் தடுத்ததையும் பொறுட்படுத்தாமல் எழுந்து தானே அந்த மாணவனின் தோளில் கைவைத்து அவனை இழுத்து பல்கலைக்கழக சிறையதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த மாணவன் செய்வதறியாது வியப்போடும், பயத்தோடும் திகைத்து நின்றான்.
பல்கலைக்கழகத்தின் ஆத்மீக விருத்திக்காக ஓவன் அயராது உழைத்தார். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரசங்கங்களில் அவருக்குத் திருப்தியில்லாததால் சக பியூரிட்டன் பிரசங்கியான தொமஸ் குட்வினும் அவருமே மாறி மாறி மாணவர்கள் மத்தியில் ஆக்ஸ்போர்ட் செயின்ட் மேரி சபையில் பிரசங்கங்களை அளித்து வந்தனர். ஓவனின் பிரபல்யமான நூல்களான Mortification, Temptation ஆகியவற்றுக்குக் காரணமான அவருடைய பிரசங்கங்கள் அனைத்தும் வாலிபர்களான பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலேயே முதன் முதலாகப் பிரசங்கிக்கப்பட்டன.
இக்காலங்களில் ஓவன் பல்வேறு ஊழியங்களில் ஈடுபட்டிருந்தார். பல்கலைக்கழக துணைத்தலைவராக இருந்தபோதும் அப்பணி அவருடைய வேறுபல முயற்சிகளுக்குத் தடையாக இருக்கவில்லை. 1653ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் நாள் அவர் மறுபடியும் பாராளுமன்றத்தில் பிரசங்கித்தார். அது குரோம்வெலின் படை ஹாலந்துப் படைகளை வென்றதை சிறப்பிக்கும் தருணத்தில் கொடுக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் அவர் குரோம்வெலின் அழைப்பை ஏற்று இலண்டனுக்கு கிறிஸ்தவ ஒற்றுமை குறித்த ஒரு மகாநாட்டில் கலந்துகொள்ளப் போனார். கிறிஸ்தவ ஒற்றுமை குறித்து அன்று அநேகர் அக்கறை காட்டி வந்தார்கள். இருந்தபோதும் பலரும் பெரிதும் இதற்காக உழைத்தபோதும் அந்த மகாநாட்டின் மூலம் எந்த நன்மையும் ஏற்படவில்லை. அன்று ஓவனும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்பார்த்து உழைத்த கிறிஸ்தவ ஒற்றுமை இன்றைய போலித்தனமான சமயசமரச ஒற்றுமையைப் போன்றதாக இருக்கவில்லை. அவர்கள் சத்தியத்தின் அடிப்படையில் வேதம் காட்டும் ஒற்றுமையையே பெரிதும் நாடினார்கள். 1653ம் ஆண்டு டிசெம்பர் 23ம் நாள் தொமஸ் குட்வினுக்கும், ஓவனுக்கும் “டாக்டர்” (Doctor of Divinity) பட்டமளிக்கப் பட்டது. இந்த வருடம் ஓவன் தன்னுடைய மிகவும் கடினமான ஒரு நூலை வெளியிட்டார். அது The Claims of Vindicatory Justice Asserted என்ற நூலாகும். பெருந்தகுதிகளைக் கொண்டிருந்த ஓவனுக்கே பெரும் சவாலாக இருந்தது இந்த நூல். 1654ம் ஆண்டு அவர் The Doctrine of the Saint’s Perseverance Explained and Confirmed என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலையும் மக்களுக்காக அவர் எழுதியதால், மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய மொழிநடையில் எழுதினார். இருந்தபோதும் கருப்பொருளிலும், போதனையிலும் அவர் எப்போதும் சத்தியம் தவறாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார். 1653ல் குரோம்வெல் பார்ளிமென்டைக் கலைத்துவிட்டு 1654ல் புதிய பார்ளிமென்டை நியமித்தபோது ஓவன் அதில் அங்கத்தவராகத் தெரிவுசெய்யப்பட்டார். (புதிய பார்ளிமென்டில் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவருக்கு இடமளிக்கப்பட்டது) ஜோ. ஓவன், எம். பி. தான் எல்லோராலும் மதிக்கப்படும் டாக்டர் ஜோன் ஓவன் என்பதை அறிந்துகொண்டபோது, சபைப் போதகர்கள் பாராளுமன்றத்தில் பணிபுரியக்கூடாது என்ற வழக்கம் இருக்கிறது என்று யாரோ நினைவுறுத்தியபோது ஓவன் பாராளுமன்ற அங்கத்தவர் பணியில் இருந்து விலகிக்கொண்டார். இருந்தபோதும் ஓவன் Triers என்றழைக்கப்பட்ட கமிஷனில் உறுப்பினராக இருந்தார். இந்தக் கமிஷன் பக்திமான்களாகவும், வேதத் தகுதிகளைக் கொண்டவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமே நாட்டில் போதகப் பணிக்கு நியமிக்கப்படும்படிப் பார்த்துக்கொள்ளும் கடமையைக் கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் குரோம்வெலின் பல்வேறு கமிஷன்களில் ஓவன் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். உதாரணமாக, யூதர்கள் இங்கிலாந்தில் வியாபாரம் செய்யவும், வாழவும் அனுமதிக்கப்படலாமா என்ற விஷயத்தை ஆராய்ந்த கமிஷனில் ஓவன் ஓர் உறுப்பினராக இருந்தார். அவர் சோசினியனிசத் துக்கு எதிராக Vindiciae Evangelicae என்ற நூலை வெளியிட்டார். திரித்துவப் போதனையை நிராகரித்து, கிறிஸ்துவை வெறும் மனிதனாகப் பாவித்து அவரின் சிலுவை மரணத்தை வெறும் உதாரணமாக மட்டுமே விளக்குகிறது சோசினியனிசம் என்ற போலிப்போதனை. ஓவனின் காலத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தன்னுடைய முன்னாள் மகிமையை மறுபடியும் அடைந்தது. அதில் ஓவனோடு தொமஸ் குட்வின் (Thomas Goodwin), ஸ்டீபன் சார்நொக் (Stephen Charnock) போன்ற பெரும் பியூரிட்டன் இறையியலறிஞர்கள் பணிபுரிந்தனர். அவர்களுக்குக் கீழ் கிறிஸ்டோபர் ரென் (Christopher Wren), வில்லியம் பென் (William Penn) ஜோன் லொக் (John Locke), பிலிப் ஹென்றி (Philip Henry), ஜோசப் எலைன் (Joseph Alleine) போன்ற பின்னால் கிறிஸ்தவ உலகில் பெருங் காரியங்களை சாதித்தவர்கள் மாணவர்களாக இருந்தனர்.
இக்காலப்பகுதியின் இறுதியில் ஓவன் On the Mortification of Sin in the Believers என்ற நூலை வெளியிட்டார். இந்நூலிலிருந்து ஓவனின் நம்பிக்கைக்கும் வல்லமைக்கும் எது காரணமாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
“எந்த சத்தியங்களுக்காகப் போராடினாரோ அந்த சத்தியங்களின் மூலம் கர்த்தரோடு ஓவனுக்கிருந்த விசேஷ ஐக்கியமும், உறவுமே அவருடைய விடாமுயற்சிக்குக் காரணம். ஓவனுடைய ஆக்கம் சுவிசேஷம் விளக்குகின்ற பரிசுத்தமாக்குதலுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது. அதுவே ஓவனின் தனிப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். இங்கே நாம் திறமைவாய்ந்த ஒரு வைத்தியன் ஆத்துமாவைப் பி்டித்திருக்கும் நோயைத் தீர்க்க அதற்கு மருந்தளிப்பதைப் பார்க்கிறோம்.” (12ம் பக்கம்)
ஓவன் தாம் விசுவாசித்ததை வெறுமனே தெரிந்து வைத்திருக்கவில்லை; தான் தெரிந்து வைத்திருந்ததை அவர் விசுவாசித்தார். தான் போதித்த சத்தியங்களில் அவர் ஆத்மார்த்தமாக அன்பு செலுத்தினார். பாவத்தை அழிப்பதைப் பற்றி அவரெழுதிய நூல் (Mortification) அவசியத்தின் காரணமாக எழுதப்பட்டதல்ல, தீர்மானத்தோடு எழுதப்பட்டது. பல்வேறு கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் அவர் கர்த்தரோடு கொண்டிருந்த ஆழமான ஐக்கியத்தை இது வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நூல் கர்த்தரோடிருக்க வேண்டிய ஐக்கியத்துக்கு உதவும் சில கடமைகளை பரிசேய சடங்காகக் காட்டுவதையும் இந்நூல் தவிர்க்கிறது: மனிதன் ஏற்படுத்துகின்ற கட்டளைகளை வெறித்தனமாகப் பின்பற்று வதனால் ஏற்படுவதல்ல பரிசுத்தமாக்குதல். பரிசுத்தமாக்குதலில் ஆர்வத் தோடு ஈடுபட்டிருக்கும் ஆத்துமாவுக்கு ஆத்தும உணவு படைக்கின்றது இந்நூல். பாவத்தை அழிப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி அதைத் தொலைக்கும் ஆத்துமாவின் பணியைப் பற்றி விபரமாக விளக்கி அப்பணியில் ஆத்துமாவை ஊக்குவித்து வழிகாட்டுகிறது ஓவனின் நூல்.
இந்தக் காலப்பகுதியில் தொடர்ச்சியாகப் பல நூல்களை வெளியிட்டு வந்தார். அவருடைய வாழ்நாள் உழைப்பின் பேறுகளான அந்நூல்களை நாம் இன்றும் வாசிக்க முடிவது நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் ஆசீர்வாதமே. தன்மீது சுமத்தப்பட்ட பெரும் பணிகளைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருந்தார் ஓவன். பணிகள் அதிகரிக்க அதிகரிக்க அப்பணிகளுக்கேற்ப அவருடைய அறிவும், திறமையும், சிந்தனையும் வளர்ந்தது என்றே கூறவேண்டும். அவரில் சுமத்தப்பட்ட பணிகள் அவருடைய சகல திறமைகளுக்கும் சவாலாக அமைந்து தன்னை முழுமையாக அப்பணிகளுக்கு ஒப்படைக்கும் படிச் செய்தன. இறுதியாக அப்பணிகளை ஓவன் துறந்தபோது அப்பணிகளின் மூலம் அடைந்திருந்த அபூர்வமான திறமைகளையும், சிந்தனை வளர்ச்சியையும் அவர் தொடர்ந்தும் அதிகளவுக்கு தன் வாழ்க்கையில் பயன்படுத்தினார்.
இந்த முறையில் தன் மேல் சுமத்தப்பட்டிருந்த பணிகளை ஓவன் ஒதுக்கிவைக்கும் சூழ்நிலை சடுதியாகவே வந்தது. ஒலிவர் குரோம்வெல் அரியாசனம் ஏறுவதை தடுப்பதற்கும், அப்படியே இறுதியில் அந்தப் பதவி கிடைக்குமானால் குரோம்வெல்லோடு பேசி அந்தப் பதவியை ஏற்பதில் இருந்து அவரைத் தடுத்துவிடுவதற்காகவும் செயல்பட்ட ஒரு குழுவின் உறுப்பினராக ஓவன் இருந்தார். இது ஓவனுக்கு எதிராகப் போய் அமைந்தது. குரோம்வெல் லோர்ட் புரொடெக்டராக (Lord Protector) நியமனமானபோது, அதுவரை சகல பாராளுமன்ற கூட்டங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து பிரசங்கமளித்திருந்த ஓவன் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. 1657ல் ஆக்ஸ்போர்ட் தலைவர் பதவியில் இருந்து குரோம்வெல் விலகிக்கொண்டார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஓவன் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப்பிறகு ஓவன் தன்னுடைய சகல திறமைகளையும் பயன்படுத்தி சுதந்திரமாக உழைக்கவும், ஊழியம் செய்யவும் வாய்ப்பு உருவானது. இந்த வருடத்தில் அவர் தன்னுடைய Communion with God என்ற நூலை வெளியிட்டார். 1658ல் அவரது நூலான Temptation வெளியிடப்பட்டது.
செப்டெம்பர் 1658ல் தொமஸ் குட்வினோடும், வேறுசில கொங்கிரிகேஷனல் சபைப்பிரிவினரோடும் இணைந்து இலண்டனில் இருந்த சவோய் மாளிகையில் விசுவாச அறிக்கையொன்றைத் தயாரிக்க ஓவன் முற்பட்டார். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் குட்வினும் ஓவனும் ஒரு வேத சத்தியத்தைப் பற்றிய விளக்கத்தை எழுதி முடித்து பின்பு அதைப்பற்றிய அறிவுபூர்வமான விவாதத்தில் ஈடுபட்டு, தேவையான மாற்றங்களைச் செய்து இறுதியில் அசெம்பிளியில் அதை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்தனர். வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலறிஞர்களுடைய சத்திய ஞானத்தை அங்கீகரித்து மதிப்புச் செய்யும் வகையில் ஓவனும், குட்வினும் ஏனையோரும் உழைத்துத் தயாரித்த சவோய் அறிக்கை வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையில் இருந்து அநேக பகுதிகளைப் பயன்படுத்திக் கொண்டது.
இப்பணியையெல்லாம் மறைத்துவிடும் மேகக்கூட்டத்தைப்போல ஓவனின் உடல்நிலை சீரற்றது. அத்தோடு செப்டெம்பர் 3ம் நாள் 1658ம் ஆண்டு குரோம்வெல் உயிரிழந்தார். நாடும் அத்தோடு குழப்பத்தில் மூழ்கியது. நாட்டின் வடபகுதியில் இருந்து மொன்க் எனும் ஜெனரல் தன் படையோடு இலண்டனை நோக்கி வந்தார். அதைத் தடுக்க எவரும் இருக்கவில்லை. ஜெனரலின் நோக்கம் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. வந்த கையோடு கொலை செய்யப்பட்ட அரசன் சார்ள்ஸின் மகனான சார்ள்ஸ் ஸ்டுவர்டின் நண்பனாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் ஜெனரல் மொன்க். 1660ல் இரண்டாம் சார்ள்ஸ் அரசனாக்கப்பட்டு மறுபடியும் அரச வம்சம் நாடாளுவது உயிர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் சார்ள்ஸ்க்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டபோது நாட்டில் மத சுதந்திரத் திற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்வதில் எவரும் கவனம் செலுத்த வில்லை. வெறும் வாய் வார்த்தையாக சில வாக்குறுதிகளை மட்டுமே அரசன் அளித்திருந்தான்.
ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக துணைத்தலைவர் பதவியை இழந்திருந்த ஓவன் ஸ்டெட்ஹாம்டன் என்ற ஊரில் இருந்த சிறிய சபையொன்றில் போதகராக கடமையாற்றி வந்தார். வெகு விரைவிலேயே உயிர்ப்பிக்கப்பட்ட அரச வம்சத்தின் மூலம் ஒத்துழையாவாதிகளுக்கு (Non- Conformists) எதிரான துன்புறுத்துதல் ஆரம்பமானது. 1662ல் கொண்டு வரப்பட்ட The Act of Uniformity என்ற சட்டம் இதற்கு ஓர் உதாரணம். (இதன் மூலம் சட்டத்தின்படி நடக்காத போதகர்கள் துன்புறுத்தலுக்குள் ளாயினர். அவர்கள் பிரசங்கிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அனுமதிக் கப்படவில்லை) இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது 2000 ஒத்துழையா வாத போதகர்கள் தங்களுடைய வாழ்வூதியத்தை இழந்தனர். அநேகர் அதுவரை உயிர்வாழ்ந்திருக்கவில்லை. ஓவன் தன் கொள்கைகளில் எதையும் மாற்றிக்கொள்ளாமல் இரகசியமாகத் தொடர்ந்து பிரசங்கித்து வந்தார். இந்தக் காலப்பகுதியில் கத்தோலிக்க பிரான்சிஷ்கன் பிரிவைச் சேர்ந்த ஒருவர் Fiat Lux என்ற நூலை வெளியிட்டு ஆங்கிலேயத் திருச்சபையில் இருந்த பிரிவுகளைத் தீர்ப்பதற்கு ஒரே வழி ரோமன் கத்தோலிக்க மதத்தை ஏற்று நடப்பதுதான் என்று விளக்கியிருந்தார். இதற்கு ஓவன் பெயர் குறிப்பிடாமல் பதில் தந்தார். அதற்கு பதிலளித்த கத்தோலிக்க மதவாதி பெயர் குறிப்பிடாமல் பதிலளித்ததால் ஓவனைக் கடுமையாகத் தாக்கியெழுதியிருந்தார். அதற்கு ஓவன் தன் பெயரைக் குறிப்பிட்டுப் பதிலளித்து ரோமன் கத்தோலிக்க மதம் பற்றிய தர்க்கத்தில் பங்குபெற்றார்.
ஓவனோடு தர்க்கத்தில் ஈடுபடுகிறவர்கள் தப்புவது அரிது. தன்னுடைய சகல --ஞானத்தையும் ஓவன் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார். தான் சந்தித்த எந்த சந்தர்ப்பத்தையும் தன்னுடைய அபூர்வமான அறிவைப் பயன்படுத்தி ஒழுங்கோடு முறைப்படுத்தி பதிலளிக்க அவரால் முடிந்தது. அந்த சந்தர்ப் பத்திற்கான முழுப் பதிலையும் அவர் ஏற்கனவே மனதில் வைத்திருந்து, சிறிது சிறிதாக விஷயத்தை விளக்கி எழுதி பதிலளிப்பதில் வல்லவராக இருந்தார். ஓவனின் இந்தவிதமான விளக்கத்தை வாசிப்பதனால் மிகுந்த பயன் கிட்டினாலும் அவருடைய ஆக்கங்களைப் புரிந்துகொள்ள சிறிது கஷ்டப்பட்டு வாசிப்பது அவசியம். ஓவன் ரோமன் கத்தோலிக்க மதத்தை எதிர்த்து நின்றது லோர்ட் கிளேரன்டனுக்கு (Lord Clarendon) மிகவும் பிடித்திருந்தது. அக்காலத்தில் இங்கிலாந்து (ஆங்கிலிக்கன்) திருச்சபை ஆத்மீகக் காரணங்களுக்காக அல்லாமல் அரசியல் காரணங்களுக்காக ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்து நின்றது. இங்கிலாந்து திருச்சபையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டால் அதில் மிக உயர்ந்த பதவியை அளிக்க விருமபு்வதாக லோர்ட் கிளேரன்டன் ஓவனுக்கு தகவல் அனுப்பினார். திருச்சபையின் சுயாதீன அரசமைப்புக்காக எங்கும் எவரோடும் வாதிடத் தயாராக இருந்த ஓவன், அத்தகைய சுயாதீன சபை அமைப்பே கிறிஸ்துவுக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்கு வரலாற்றில் இருந்திருப்பதை லோர்ட் கிளேரன்டனுக்கு எடுத்துக்காட்டி “எனக்கு இங்கிலாந்து திருச்சபையில் உயர்பதவி தேவையில்லை, அது இல்லாமல் எங்களை எங்கள் வழியில் விட்டாலே போதும்” என்று பதில் அனுப்பி னார்.
அதேவேளை அமெரிக்காவில் உள்ள பொஸ்டனுக்கு (Boston in New England) வந்து அங்கிருந்த முதலாம் கொங்கிரிகேஷனல் திருச்சபையில் பணியாற்றுமாறு அவருக்கு அழைப்பு வந்தது. அதற்கு ஓவன் என்ன பதிலளித்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அது பற்றி அவர் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை அல்லது அவரால் அந்த அழைப்பை ஏற்று அங்கு போக முடியவில்லை.
நாட்டில் ஒத்துழையாவாதிகளுக்கெதிரான துன்புறுத்தல் வளர ஆரம்பித்தது. எதிரிகள் வந்துபோனபின்பு பியூரிட்டன் போதகர்கள் தலைதூக்கி ஆத்மீக ஜீவனின்றி அழிந்துகொண்டிருந்த மக்களுடைய ஆத்தும தாகத்தைப் போக்கப் பிரசங்கித்தார்கள். 1665ம் வருடத்தில் பாராளுமன்றம் ஆக்ஸ்போர்டில் கூடி “ஐந்து மைல் சட்டத்தைக்” (Five Mile Act) கொண்டுவந்தது. இந்த காட்டுமிராண்டித்தனமான சட்டம் நாட்டைச் சேர்ந்த போதகர்களை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே பிரசங்கம் செய்யவிடாமல் நாட்டை விட்டுத் துரத்தியது. அதாவது, எந்தப் போதகராவது தான் ஏற்கனவே பிரசங்கித்திருந்த இடத்திற்கு ஐந்து மைல்களுக்குள் எங்காவது பிரசங்கித்தாலோ அல்லது எந்த நகரமோ, பட்டணமோ பாராளுமன்ற அங்கத்தவரைக் கொண்டிருந்தால் அந்த நகரம் அல்லது பட்டணத்தின் எல்லைக்கு ஐந்து மைல்களுக்குள் எங்காவது பிரசங்கித்தாலோ அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கடுமையான துன்புறுத் தலுக்குள்ளாகினார்கள்.
மேலும் கடுந்துன்பங்கள் தொடர்ந்தன. 1666ல் பெருந்தீ இலண்டன் மாநகரை நாசப்படுத்தியது. பெரும் அழிவுக்கும், சாம்பலுக்கும் மத்தியில் சபைக் கட்டிடங்கள் எழுந்தன. அவற்றில் ஜோன் ஓவன், தொமஸ் மேன்டன், ஜோசப் கெரல், ரிச்சட் பெக்ஸ்டர், தொமஸ் வின்சென்ட், ஸ்டீபன் சார்நொக் போன்றோர் இலண்டன் மக்கள் மத்தியில் பிரசங்கம் செய்தனர்.
ஓவன் எழுதுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. 1668ல் அவருடைய மூன்று சிறப்பான ஆக்கங்கள் வெளிவந்தன. அவை On Indwelling Sin, An Exposition of the 130th Psalm, Volume one of the Commentary of Hebrews ஆகியவையாகும். ஓவன் எபிரெயர் நிருபத்துக்கு எழுதிய முதலாம் பாக விளக்கவுரை அதன் தரத்தின் சிறப்பில் மட்டும் பெரிதாக இருக்காமல் எடையிலும், பக்கங்களின் எண்ணிக்கையிலும் மிகப் பெரிதாக இருந்தது. அது அவருடைய வாழ்நாள் ஊழியத்தின் பலனாக இருந்தது. 1669ல் Vin- dication of the Doctrine of the Trinity என்ற நூலும், 1672ல் Evangelical Love என்ற நூலும் வெளிவந்தன. அவற்றைத் தொடர்ந்து ஓய்வு நாளைப்பற்றியும் (Sabbath), சத்தியத்தை விட்டு விலகுவதைப் பற்றியும் (Apostasy) நூல்களை ஓவன் வெளியிட்டார்.
ஒத்துழையாவாதிகளுக்கு எதிரான துன்புறுத்துதல் குறையாமல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தது. 1672 வரை ஒத்துழையா வாதிகளுக்கு எந்த அமைதியும் கிட்டவில்லை. அவ்வருடம் இரண்டாம் சார்ள்ஸ் லைசன்ஸ் இருந்தால் மட்டும் ஒத்துழையாவாதிகள் பிரசங்கம் செய்யலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தான். ஜோன் ஓவனும் அவருடைய நண்பர்களும் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. ஜோசப் கெரல் அதன் பிறகு கர்த்தரை அடைந்தார். 1673ல் அவருடைய சபையும், ஓவன் பணிபுரிந்த சபையும் ஒன்றிணைந்தன.
ஓவனுக்கு உயரிடங்களில் நண்பர்கள் இருந்தும், அரசனோடு சந்தித்துப் பேசும் வசதியிருந்தும் ஒத்துழையாவாத பியூரிட்டன்களுக்கு எதிரான துன்புறுத்துதல்கள் அதிகரிப்பதை அவரால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. ஜோன் பனியன் போன்றவர்களுக்கு துணைபோவதற்காக ஓவன் தன் சக்திக்கு மேலான சகல நடவடிக்கைகளையும் எடுத்தார். பனியனின் பிரசங்கத்தில் ஓவன் பெரும் அக்கறையும், நாட்டமும் கொண்டிருந்தார். ஒரு முறை பனிக்காலத்தில் இலண்டனில் சில நூறு பேர்வரையிலான கூட்டத்தில் அதிகாலை வேளையில் ஜோன் பனியன் பிரசங்கமளிப்பதைக் கேட்க ஓவன் சென்றிருந்தார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன் ஓவனை அழைத்து, “வெறும் இரும்புச் சட்டியையும், பானையையும் சரி செய்யும் ஒருவனின் அசட்டுப் பேச்சைப் பெரும் படிப்பாளியான உங்களால் எப்படிக் கேட்டுச் சகிக்க முடிகிறது?” என்று வினாவினான். அதற்குப் பதிலளித்த ஓவன், “அந்த இரும்புச் சட்டி, பானை சரிசெய்யும் மனிதனின் பிரசங்க வரம் எனக்குக் கிடைக்குமானால் என்னுடைய படிப்பையெல்லாம் கொடுத்துவிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
1647ல் ஓவன் தன்னுடைய Pneumatologia, or A Discourse Concerning the Holy Spirit என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் மூன்றுவகைக் கூட்டத்தாருக்கு எதிராக எழுதப்பட்டது. முதலாவதாக, ஆர்வக்கோளாறு டன் பரிசுத்த ஆவியானவர் பற்றிய போதனைகளைக் குழப்பியவர்கள், இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவரின் ஆள்தத்துவத்தை நிராகரித்த சோசினியன் போலிப்போதனை, மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவர் பற்றிய வேதபூர்வமான போதனைகளைக் கொண்டிருந்தும் அதன் நடைமுறைச் செயல்பாட்டிலும், அனுபவத்திலும் எந்தவித ஆர்வமோ நாட்டமோ இல்லாதிருந்தவர்கள்.
1676ம் ஆண்டு ஜனவரியில் ஓவன் தன் மனைவியை இழந்தார். அவருடைய திருமணத்தைப் பற்றி நமக்கு மிகக்குறைவான விபரங்களே கிடைக்கின்றன. அவருடைய மனைவி மிகவும் அமைதியானவரென்றும், ஓவன் மீது மிகுந்த அன்பு காட்டியவரென்றும், அன்போடுகூடிய தாம்பத்திய வாழ்க்கை நடத்தினார் என்ற விபரங்கள் மட்டுமே அவரைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றது. மனைவியை இழந்து ஓவன் பதினெட்டு மாதங்கள் மட்டுமே தனித்திருந்தார். அவர் தன் மனைவி மீது காட்டிய அன்பையும், அவரோடு கொண்டிருந்த நெருக்கமான உறவையும், தாம்பத்திய வாழ்க்கை மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் இது விளக்குவதாக இருக்கின்றது. 1677ம் ஆண்டு ஜூன் 21ம் நாள் ஓவன் ஒரு விதவையை மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்திற்குப் பிறகு தனக்குக் கிடைத்த வருமானத்தினால் ஓவன் தன்னுடைய இறுதிக்காலம்வரை வாழ்க்கையில் வளமுள்ளவராக பணக்கஷ்டமின்றி வாழ முடிந்தது.
இருந்தபோதும் அவருடைய வாழ்க்கை தன்னுடைய இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் தொடர்ந்து காணப்பட்ட உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்வுகளும், வறுமையையும், அதிகாரத்தையும் மாறி மாறி அனுபவித்ததால் உருவான தளர்ச்சியும், தொடர்ச்சியான கடுமையான படிப்பும் அவருடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தாமலில்லை. கடுமையான ஆஸ்த்துமா வியாதி அடிக்கடி அவரைப் பிரசங்கம் செய்ய முடியாமல் தடுத்தது. அத்தோடு வயிற்றில் உருவான “கட்டி” (gallstones) அவருக்கு பெருந்துன்பத்தை ஏற்படுத்தியது. உதவியாளர் களையும், குறிப்பெடுப்பவர்களையும் வைத்து அவர் தொடர்ந்தும் உழைத்தார்.
1677ம் ஆண்டு அவர் Justification By Faith என்ற நூலை வெளியிட்டார். அவர் இறுதியாக எழுதிய நூல்கள் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிரானவையாகவும், கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமையை வலியுறுத்தியவையாகவும் இருந்தன. சரீரத்தில் பலவீனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவர் சுவிசேஷத்தின் எளிமையானதும், அடிப்படை யானதுமான சத்தியங்களில் அதிக ஆர்வம் காட்டி அவற்றில் இன்பம் கண்டார். இந்தக் காலப்பகுதியில் அவர் எழுதிய நூல்கள்: Christologia: or, A Declaration of the Glorious Mystery of the Person of Christ - God and Man (1679), The Grace and Duty of Being Spiritually-Minded (1681), and Medita- tions on the Glory of Christ. (இது அவருடைய மரணத்திற்குப் பிறகு 1684ல் வெளியிடப்பட்டது).
பக்கிங்ஹம்ஷயரில் வோர்பர்ன் (Woburn, Buckinghamshire) என்ற இடத்தில் வாழ்ந்த ஒரு முக்கியஸ்தர் தன்னுடைய வீட்டில் இருந்து ஓய்வெடுப்பதோடு துன்புறுத்துதலுக்கு ஆளாகிய ஏனைய விசுவாசிகளோடு இருந்து அவர்களுக்கு ஆலோசனை தரும்படி ஓவனை அழைத்தார். ஆனால், ஓவனின் நோய் அதிகரித்தது. அங்கிருந்து ஓவன் தன்னுடைய சபைக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அது நீண்ட கடிதமாக இருந்தபோதும் தன் சபை மக்களுடைய ஆத்தும விருத்தி பற்றி அவர் கொண்டிருந்த பரிசுத்தமான விருப்பங்களை அக்கடிதம் உணர்த்துவதாயிருக்கிறது. அவர் இலண்டனுக்கு திரும்பியதும் கர்த்தர் அவரோடிருந்து அவரைக் கவனித்துக் கொண்டார். இறுதியில் அவர் தனக்கு சொந்தமாக ஈலிங்கில் (Ealing) இருந்த வீட்டிற்கு புறப்பட்டுப் போனார். அவருடைய மரணம் இலகுவான தாக இருக்கவில்லை. சரீரத்தில் பலமுள்ளவராயிருந்த சக போதகரான அன்டுரு புளரைப் (Andrew Fuller) போல இருதயத்தில் வலிமையுள்ளவராக ஓவனிருந்தார். அவர் கடைசிவரை அமைதியோடு மரணத்துடன் போராடி, வலியையும் பொறுத்துக்கொண்டு தன்னுடைய நண்பரான சார்ள்ஸ் பிளீட்வுட்டுக்கு (Charles Fleetwood) தான் மரணத்தை சந்திப்பதற்கு முதல் நாள் ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
“கரத்தைப் பயன்படுத்தி என்னால் ஒரு வார்த்தை எழுத முடியா விட்டாலும் இந்த உலகத்தில் இருக்கும்போது ஒரு வார்த்தையையாவது உங்களோடு நான் பேச ஆசைப்பட்டு என்னுடைய மனைவியின் கரத்தைப் பயன்படுத்தி அதை எழுதி அனுப்புகிறேன். உங்களுடைய அளப்பரிய கருணை, அது எனக்கு எதை அனுப்பிவைத்திருக்கிறது என்பதை உணர்ந்து அதைப் பெரிதாக மதிக்கிறேன். இந்த உலகத்தில் நான் செலவிடும் இறுதிக் காலங்களில் அது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தரும். என்னுடைய இருதயம் வாஞ்சிக்கிறவரிடம் நான் இனிப் போகப்போகிறேன். அதைவிட என்னை நித்திய அன்போடு நேசிப்பவரிடம் நான் போகப்போகிறேன். அதுவே என்னுடைய ஆறுதல்களுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கிறது. இந்தப் பாதை பெருந்துன்பமானதாகவும், தளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. பலவிதமான பெரும் வலி சரீரத்தில் பெரும் காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய வைத்தியர்களின் ஆலோசனைப்படி என்னை இன்று இலண்டனுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பிரயாணத்தைச் செய்ய முடியாத என்னுடைய சரீரத்தளர்ச்சி எங்களெல்லோருக்கும் மனச் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. நான் என்னுடைய சபையாகிய கப்பலை பெருங்காற்றின் மத்தியில் விட்டுப் போகிறேன். ஆனால், மாபெரும் கப்பலோட்டி இருக்கும்போது சாதாரணமான இந்த துடுப்புப் போடுகிறவனை இழப்பதால் ஒன்றும் பாதிப்பில்லை. ஜெபியுங்கள், நம்பிக்கை கொள்ளுங்கள், பொறுமையோடிருங்கள், தளர்ச்சியடையா தீர்கள்; வாக்குத்தத்தம் அழிக்கமுடியாததாக இருக்கிறது, அவர் நம்மை ஒருபோதும் விட்டுப் போகமாட்டார், கைவிட மாட்டார். உங்கள் மனைவியின் நோயை அறிந்து நான் மிகவும் கவலையுறுகிறேன். தேவன் அவரோடிருந்து, அவருக்கு துணைபுரிந்து விடுதலை அளிக்கட்டும். கிறிஸ்துவில் எனக்கு நெருங்கியவர்களான உங்களுடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையையும் தெரிவியுங் கள். மரணத்தை எதிர்நோக்கியிருக்கின்ற உங்களுடைய நண்பனுக்காக ஊக்கத்தோடு ஜெபியுங்கள். அதைச் செய்வீர்கள் என்பதில் நான் ஆறுதலடைகிறேன். முழுவதும் உங்கள் - ஜோ. ஓவன்.”
1683ம் ஆண்டு ஆகஸ்டு 24ம் நாள் ஓவனுக்கு மரணம் வந்தது. ஓவன் தான் நேசித்த இயேசு கிறிஸ்துவின் சன்னிதானத்தில் தன்னுடைய கண்களும் கரங்களும் விரித்த நிலையில் போய்ச்சேர்ந்தார். அந்நாள் செயின்ட் பர்த்தலோமியு நாளின் 21வது வருட நினைவு தினம். அந்நாளிலேயே The Act of Uniformity என்ற சட்டம் நாட்டில் தன்னுடைய கொடூரத்தைக் காட்டியிருந்தது. அதற்குப் பதினொரு நாட்களுக்குப் பிறகு ஓவன் பன்ஹில் (Bunhill Fields) மயானத்தில் புதைக்கப்பட்டார்.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
|
“உண்மை என்னவென்றால், நாம் சரீரத்திலும் ஆவியிலும் பரிபூரணத்திற்காகவே அழைக்கப்பட்டிருந்தபோதும் அதை இங்கேயே இப்போதே தரும்படியாய் ஆண்டவர் நியமிக்கவில்லை.” “கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அசாதாரண அனுபவங்களை ஒருபோதும் அடையப்போவதில்லை என்று நான் சொல்வேனானால் அது முட்டாள்தனமாகிவிடும். நான் என்ன சொல்லுகிறேனென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருவர் வாழ்வதற்கு ஆவிக்குரிய உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் பெற்றிருக்க வேண்டுமென்று கட்டளையாகவோ வாக்குத்தத்தமாகவோ வேதத்தின் எந்தவொரு பகுதியிலாவது நாம் வாசிப்பதில்லை என்பதுதான். இந்த இரண்டிற்குமிடையில் மாபெரும் இடைவெளி இருக்கின்றது.” - அல்பர்ட் என். மார்டின் |
|---|
வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை
அல்பர்ட் என். மார்டின்
[பெனர் ஆப் டுருத் (The Banner of Truth) நிறுவனத்தினால் 1986ம் ஆண்டில் முதல் முறையாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது இந்த நூல். அதற்குப் பிறகு சில தடவைகள் மறுபதிப்புச் செய்யப்பட்டது. போதகர் அல்பர்ட என். மார்டினுடைய பிரசங்கமே இப்படியாக நூலுருவெடுத்திருக்கிறது. இதை இப்போது தமிழிலே வழங்குகிறோம். கிறிஸ்தவர்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய இந்த நூல் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக வேத அடிப்படையில் விளக்குகிறது. அதுவும் கிறிஸ்தவ வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ சடுதியாக ஏற்படக்கூடிய எந்த உச்சகட்ட அசாதாரண அனுபவமும் (Crisis experience) அவசியமில்லை என்பதை போதகர் மார்டின் சந்தேகத்திற் கிடமின்றி விளக்கியிருக்கிறார். வேதத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்க மறுக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த நூலால் எந்தப் பயனும் இல்லை. வேதத்தை நம்பி வாழ்கிறவர்கள் இந்தப் பகுதியில் வாசிக்கப்போகும் சத்தியத்தால் ஊக்கம் பெறுவார்கள்; வாழ்வில் உயர்வார்கள்; கர்த்தரை உயர்த்துவார்கள்.
இந்த நூலைத் திருமறைத்தீபத்தில் வெளியிடுவதற்கு முக்கிய காரணமொன்றுண்டு. போதகர் அல்பர்ட் என். மார்டினை (Albert N. Martin) நான் இருபத்தி ஐந்து வருடங்களாக அறிந்திருக்கிறேன். அதிலும் கடந்த இருபது வருடங்களாக நல்ல நண்பர்களில் ஒருவர் என்ற முறையில் அதிகம் அறிந்திருக்கிறேன். 1992ம் ஆண்டில் முதல் தடவையாக நான் பணிபுரியும் திருச்சபை கொன்பரன்சில் அவர் பிரசங்கம் செய்தார். அவருடைய பிரசங்க, போதக ஊழியத்தால் பயனடைந்த போதகர்கள், திருச்சபைகள் எண்ணற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சீர்திருத்தப் பிரசங்கிகளில் பேர் பெற்றவராகவும், சீர்திருத்த பாப்திஸ்து சபைகளுக்கு வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். போதக ஊழியம் பற்றிய இறையியல் போதனைகளை அவருடைய திருச்சபை நடத்தி வந்த திரித்துவ இறையியல் கல்லூரியில் அவரிடம் கற்று இன்று போதகர்களாக இருப்பவர்கள் அநேகர். தெளிவான பயன்பாடுகளோடு கூடிய வியாக்கியானப் பிரசங்கமளிப்பதில் போதகர் மார்டின் பிரசித்தி பெற்றவர். அதுவே போதகர்களுக்கு போதகராக இருந்து வருகின்ற சிறப்பை அவருக்கு அளித்திருக்கிறது. இறைபதம் அடைந்துவிட்ட பிரசித்தி பெற்ற இறையியலறிஞரான ஜோன் மரே (Professor John Murray) தான் பேசவிருந்த ஒரு கொன்பரன்சில் தன்னைவிட அல்பர்ட் என். மார்டின் பேசினால் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லுகிற அளவுக்கு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்க வரத்தைப் போதகர் மார்டின் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து பின்னால் கிருபையின் போதனைகளையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொண்டபின் திருச்சபையை அமைத்து அதன் மூலம் கிறிஸ்தவ பணிபுரிவதே வேதபூர்வமான முறை என்பதை உணர்ந்து அந்த நிறுவனத்தைத் துறந்து திரித்துவ பாப்திஸ்து சபையை (Trin- ity Baptist Church) நியூ ஜெர்சி மாநிலத்தில், அமெரிக்காவில் ஆரம்பித்தார். கடந்த நாற்பத்தி ஆறு வருடங்கள் அதில் போதகராகப் பணிபுரிந்து கடந்த வருட இறுதியில் அந்தப் பணியில் இருந்து விலகி இறுதிக் காலத்தைத் தன்னுடைய போதக ஊழியம் குறித்த இறையியல் போதனைகளை எழுத்தில் வடிப்பதிலும், சிறு சபைகளுக்கு ஊக்கம் கொடுப்பதிலும், வருங்காலத் தலைவர்கள் உருவாவதற்கு சபைகளுக்கு துணை புரிவதிலும் செலவிடத் தீர்மானித்தார். அவருடைய முதல் மனைவி மெரிலின் கேன்சர் நோயினால் சில வருடங்கள் துன்பப்பட்டு இறுதியில் கர்த்தரை அடைந்தார். அல்பர்ட என். மார்டினுக்கு ஒரு ஆணும், இரண்டு பெண்களுமாக மூன்று பிள்ளைகள். மூவரும் திருமணமானவர்கள். இப்போது இரண்டாவது மனைவி டொரத்தியோடு போதகர் மார்டின் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். அவருடைய குடும்பத்தில் இப்போது மூவர் போதகர்களாக இருக்கிறார்கள்.
போதகர் மார்டினின் நெடுங்கால இறைபணியைப் பாராட்டி சிறப்புச் செய்யும் வகையில் இந்த ஆக்கத்தை இந்த இதழில் தந்திருக்கிறோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு கர்த்தர் அவரை பலப்படுத்தி வல்லமையோடு பாவிக்க இறைவனை வேண்டுகிறோம். - ஆசிரியர்.
கிறிஸ்தவனாய் நான் எப்படி வாழ்வது? இது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும். வேதத்தின் போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்துவின் ஜீவன் எனக்குள் இருக்கின்றது என்ற உண்மையை நான் தெளிவாக அறிந்து வைத்திருக்கலாம். இருந்தபோதும் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்பதையும் நான் அறிந்து வைத்திருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய முக்கிய மான கோட்பாடுகளை மூன்று விதமாக விளக்க விரும்புகிறேன்:
- முதலில் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய வேத இறையியலை நான் படம்பிடித்துக் காட்ட விரும்புகிறேன். இதன் மூலம் எந்தவித வெட்கமும் இல்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய இறையியலை நான் விளக்க விரும்புகிறேன்.
- உங்களுக்கு நான் தடுப்பூசி போட்டு, ஊட்டச்சத்தேற்றி, கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு அவசியமான சத்தியத்திற்கு எதிராக இருக்கும் கொள்கைகளை உங்கள் மனதில் இடம் பெறாதபடி தடுப்பது எனது நோக்கமாகும். நம்மில் சிலர் இப்படியான ஊட்டசத்தும், தடுப்பூசியும் முன்னமே பெற்றிருந்தால் நலமாயிருக்குமே என ஆதங்கப்படலாம். பிடிக்க முடியாத முயலைப் பிடிப்பதற்காக அநேக காலங்களை வாழ்க்கையில் நாம் வீணடித்திருக்கிறோம். எப்படியாவது கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும் வழியைக் கண்டுகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனுபவங் களைப் பெறுவதிலும், மனதையும், இருதயத்தையும் மாற்றி அமைத்துக் கொள்வதிலும் படாத பாடுபட்டிருக்கிறோம். இருந்தாலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
- அடுத்ததாக, கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது பற்றிய எந்தவிதமான தவறான எண்ணங்களும் உங்களுடைய இருதயத்தில் இருந்தால் அவற்றை களைந்தெடுப்பதும் எனது நோக்கம். உங்களுடைய நன்மைக்காகவே அதைச் செய்ய விரும்புகிறேன்.
1. கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு இலகுவான ஒரு வழி அல்லது கருவி இல்லை
இதைச் செய்தால் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம், அதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று சொல்லுவதற்கு வசதியாக சுலபமான ஒரு வழி இல்லை. நான் மனதில் கொண்டிருக்கிற போதனையை விளக்க விரும்புகிறேன்: ஒரு கிறிஸ்தவன் பல வருடங்களாக மிகக் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனுடைய கடல் பிரயாணத்தில் கப்பல் பாய் மரங்கள் விரித்து வைக்கப்பட்டிருந் தாலும் கப்பல் எங்கும் போவதாக இல்லை. காற்றான ஆவியானவர் அவனை எங்குமே கொண்டு போவதாக அவனுக்குத் தெரியவில்லை. பாய் மரங்கள் விரிக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் ஓட்டைகளால் நிரம்பியிருந்தன. பக்கத்தில் இருக்கின்றவர்களெல்லாம் முன்னேறிப் போய்க் கொண்டிருக்க இவன் மட்டும் அசையாமல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றியது.
ஆனால் ஒரு முறை ஒரு கருத்தரங்கில் கலந்துக்கொண்டபோதோ அல்லது, ஒரு புத்தகத்தை வாசித்த போதோ, அல்லது தனித்தியானம் செய்யும்போதோ, ஒரு வசனத்தை மட்டும் அவன் தியானித்து சடுதியாக அவன் முற்றிலும் மாறுதலடைகிறான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது யோவான் 15ம் அதிகாரத்தில் காண்கின்றபடி ஒரு திராட்சைச் செடிக்கும் திராட்சைக் கொடிக்கும் உள்ள உறவே கிறிஸ்துவுக்கும் தனக்கும் உள்ள உறவாக கண்டுகொண்டதாய் எண்ணுகின்றான். இது அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரே இரவில் விளக்கேற்றி வைத்து விடுகின்றது. ஆவிக்குரிய வாழ்விலே உற்சாகம் கொள்ளுகின்றான். உயரப் பறந்து செல்கிறான். அவனுடைய பாய்மரத்தில் காணப்பட்ட ஓட்டைகள் சரி செய்யப்படுகின்றன. தேவனிடத்திலிருந்து வந்த ஒரு பெருங்காற்று அவனு டைய வாழ்க்கைக் கப்பல் பாய் மரத்தில் மோதுகின்றது. அவனை எவ்வளவு தூரம் முன்னேற்ற முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு முன்னேற்று கிறது. இதைத் தொடர்ந்து தனது 6 மாத கிறிஸ்தவ வாழ்க்கையில் அவன் மிகப் பெரிய தூரத்தைக் கடந்து விடுகின்றான். அது அவன் 6 வருட காலத்தில் தன் வாழ்க்கையில் கடந்ததை விட அதிக தூரம்.
இப்போது அவன் மற்றவர்களிடம் சாட்சியாக, யோவான் 15வது அதிகாரத்தைப் புரிந்து கொள்ளுவதின் மூலம் தான் கிறிஸ்தவ வாழ்க்கை யின் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடியதற்கான பதிலை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகின்றான். திராட்சைக் கொடிக்கும், திராட்சைச் செடிக்கும் இடையில் இருக்கும் உறவைப் போலத்தான் கிறிஸ்துவின் உறவு அவருடைய மக்களோடு இருக்கிறதென்பதை மற்றவர் களும் உணர்ந்து கொண்டால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை வித்தியாசமான நிலையை அடைந்து, ஆவியில் அவர்கள் உற்சாகம் அடைந்து கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துவது எவ்வளவு சாத்தியமானது என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்று அவன் தீவிரமாக நம்புகிறான்.
இன்னொருவனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அவன் தன்னைப் பின் வாங்க வைக்கிற ஒரு பாவத்தில் மாட்டிக் கொண்டதால் எப்போதும் தலை குனிந்தவனாக, குற்ற உணர்வால் குறுகிப்போனவனாய் காணப்படு கிறான். அவன் தொடர்ந்து வாழ்க்கையில் கூனிக்குறுகி இருந்து வருவது மற்றவர்களுக்கு தெரியவில்லை. அவனுடைய வண்டிச் சக்கரம் மண்ணில் புதைந்திருக்கிறது. அவன் தனது உந்து வண்டியை இயக்கும் பற்சக்கரங் களை மாற்றினாலும், வண்டியின் வேகத்தைக் கூட்டும்படி எக்ஸலரேட் டரைக் காலால் அழுத்தினாலும் அவனால் சக்கரத்தை மட்டும் சுழற்ற முடிகிறதே தவிர ஓர் அங்குலம்கூட முன்னேற முடியவில்லை. இப்படிச் செய்வதன் மூலம் அவன் தனது வண்டியின் எரிபொருளையும், தன் சரீர வல்லமையையும் இழந்து தவிக்கிறான்.
ஒரு நாள் அவன் கருத்தரங்கிலோ அல்லது ஒரு புத்தகத்தை வாசிக்கும் போதோ, அல்லது தனித்தியானம் செய்யும்போதோ ரோமர் 6வது அதிகாரத்தைக் கவனிக்கிறான். கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தையும், தனது பழைய மனிதன் மரித்ததையும், கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப் பட்டதையும், இப்போது அவன் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் இருப்பதையும புரிந்து கொள்ளுகிறான். இதற்காகத்தான் நான் அழைக்கப் பட்டிருக்கிறேன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான். அதன் விளைவாக மரித்தவரிலிருந்து உயிர்த்தெழும்பியவரைப் போல அவன் உணர்கிறான். ‘பாவப் பிரமாணத்துக்கு நம் மேல் அதிகாரம் இல்லை என்பதையும், நியாயப்பிரமாணத்திற்குத் தான் கட்டுப்பட்டவனல்ல என்பதையும், ஆக்கினையோ அல்லது குற்ற உணர்வோ தன்னைக் குறுக வைப்பதிலிருந்து மீட்கப்பட்டு இப்போது கிருபையின் வட்டத்திற்குள் அல்லது வல்லமைக்குள் வந்து விட்டேன் என்றும் நம்புகிறான்!’ இப்போது என்ன நடந்தது? விசுவாசத்தைப் பற்றிய அறிவை ரோமர் 6ம் அதிகாரத்தில் இருந்து சரியாக பெற்றுக் கொள்ளப்பட்டதால், மண்ணில் மாட்டிக் கொண்டிருந்த வண்டிச் சக்கரம் திடீரென வெளியே வந்துவிட்டது. தார் ரோட்டில் நின்று விடாய்த்துப் போயிருந்த வண்டி ஓட்டுநர் இப்போது வண்டியின் வேகத்தைக் கூட்டும் போதும், உந்துப் பற்சக்கரங்களை மாற்றும் போதும் வண்டி துடிப்போடு முன்னேறுகிறது. அதற்குப் பிறகு அவன் சந்திப்பவர்களிடமெல்லாம், கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றியடையும் வழியை நான் ரோமர் 6ம் அதிகாரத்தில் இருந்து கண்டுபிடித்த உண்மையை நீங்களும் கண்டுகொண்டீர்களானால் என்னைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்களும் வெற்றியடையலாம் என்று கூறுகிறான்.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ உதவும் சரியான ஒரே வழி அல்லது கருவி எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதாவது கிறிஸ்தவ வாழ்க் கையை வெற்றிகரமாக வாழ்ந்துவிட உதவும், எந்தப் பூட்டையும் திறந்துவிடக்கூடிய ஒரே மாஸ்டர் திறவுகோல் எது என்பது தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு மாஸ்டர் திறவுகோல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கிடைக் காது. வேதமும் நமக்கு அப்படி ஒரு சுலபமான வழி இருப்பதாகக் கூற வில்லை. அதற்கு மாறாக வேதம் நமக்கு சாவிக்கொத்தொன்றைத் தருகிறது. அதிலே வேத வசனங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. நம்முடைய ஆண்டவர் “மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்பதை உபாகமம் 8:3 வசனத்திலிருந்து எடுத்து மத்தேயு 4:4 வசனத்தில் கையாளுகிறார். எதினால் பிழைப்பான்? தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையினால் பிழைப்பான். நீ முழு கிறிஸ்தவனாக வாழ வேண்டுமானால் உனக்கு தேவனுடைய முழுப்போதனையும், வார்த்தை யும் அவசியம். அதாவது பிரச்சனைகளைப் போக்கக்கூடிய, வெற்றியளிக்கக் கூடிய இலகுவான ஒரு மாஸ்டர் திறவுகோல் கிடையாது.
பவுலும் இதை வலியுறுத்துகிறார், “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறின வனாகவும் எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும் படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்த லுக்கும், நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளா யிருக்கிறது.” (2 தீமோ 3:16, 17). முழுமையான வேத எழுத்துக்களே நம்மை முழு மனிதனாக, மனுஷியாக மாற்ற முடியும். எல்லா வேத வார்த்தைகளும் ஜீவனுள்ளதாகவும், அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியை படிப்பித்தலுக்கும், பிரயோஜனமாய் தேவமனிதன் முழுமையடைய போதுமானதாய் இருக்கிறது. முழு கிறிஸ்த வனாய் வாழ விரும்புகிறவனுக்கு முழு வேதமும் தேவை.
‘பாக்கியவான்’ என்று முதலாம் சங்கீதத்தில் வர்ணிக்கப்படுகிறவன் எப்படிப்பட்டவன் என்பதை சிந்தித்துப் பாருங்கள்? துன்மார்க்கனுடைய ஆலோசனையின்படி நடவாமல் இருப்பவனே பாக்கியவான். நீ பாக்கிய வானாய் இருக்க விரும்புகிறாயா? நீ பல மணிநேரம் தொலைக் காட்சிப் பெட்டி முன் செலவழிப்பாயானால் உன்னால் பாக்கியவானாய் இருக்க முடியாது. தொலைக்காட்சிப் பெட்டி தரும் ஆலோசனைகள், வெளிப் பிரகாரமாகவும், உட்பிரகாரமாகவும் உலகத்துக்கேற்ற, பக்தி விருத்தியற்ற ஆலோசனைகள். மணிக்கணக்காக, கட்டுப்பாடின்றி அதைப் பார்க்கும் யாரும் தேவனுடைய கிருபையில் அதிக வளர்ச்சியடைய முடியாது.
கடவுள் பயமற்றவர்களுடைய ஆலோசனைகள் பிரபலமானவையும், அவலட்சணமான படங்களைக் கொண்டதுமான கட்டுக்கதை தீட்டும் செய்தித்தாள்களில் வெளிவருகின்றன. அசிங்கமான அந்த செய்தித் தாள்களை படிப்பாயானால் நீ கிருபையில் வளர முடியாது. பாக்கியவான் என்பவன் துன்மார்க்கனுடைய ஆலோசனையில் நடக்கமாட்டான். பாவி களுடைய வழியில் நிற்கமாட்டான். விதிமுறையற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்து பிரபலமடைந்த ஒரு பாடகனுக்கும், அவன் எழுதிய பாடல் களின் போதைக்கும் அடிமையாகி, பால் உணர்ச்சியை தூண்டக்கூடிய அவனுடைய பாடல்களை உன் மனதில் வளர்த்தாயானால் நீ தேவனு டைய கிருபையில் வளருகிறாய் என்று மார் தட்டிக் கொள்ளாதே.
துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாமல், பாவிகளுடைய வழியில் நிற்காமல், பரியாசக்காரன் உட்காருமிடத்தில் உட்காராமல் இருப்பவனே ஆசீர்வதிக்கப்பட்டவன். அவனுடைய மகிழ்ச்சி எதிலிருக்கிறது? கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ அவனுக்குதவும் திறவுகோலெது? அப்படியெதையும் அங்கே நாம் வாசிப்பதில்லையே. பாக்கியவானுடைய மனமகிழ்ச்சி கர்த்த ருடைய முழு வேதத்திலும் பிரியமாய் இருப்பதேயாகும். அதாவது கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கும் முழுச் சித்தமாகிய அவருடைய வேதத்தில் அவனுடைய மகிழ்ச்சியிருக்கும். அவன் இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்து, நீர்க்கால்களின் அருகே நடப்பட்ட மரத்தைப் போலிருக்கிறான். அவன், கனி கொடுப்பவனாய் இருக்கிறான். அவன் இலை உதிராத மரத்தைப் போலிருக்கிறான். அவன் செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும்.
எல்லாம் வல்லதாய், எதையும் இலகுவாய்த் திறக்கும், அசாதாரண மான மாஸ்டர் திறவுகோல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கிடையாது. அப்படி எதிர்பார்ப்பது வேதத்திற்குப் புறம்பானது. அதிலும் முக்கியமாக புதிய ஏற்பாட்டிலுள்ள நிருபங்களின் போதனைக்கு அது எதிரானது.
புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எத்தகைய பிரச்சனைகள் இருந்தன? உதாரணத்திற்கு கொரிந்து சபையை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு பிரிவினை பிரச்சனை, ஒழுக்கக் கேட்டுப் பிரச்சனை, திருமணத்தைப் பற்றிய கேள்விகள், கிறிஸ்தவ விடுதலைக்கான கேள்விகள், இப்படிச் செய்வதா? அப்படிச் செய்வதா? இங்கே போவதா? அங்கே போவதா? என்ற கவலையோடு சுய வெறுப்பு பற்றியும், ஆவிக்குரிய வரங்கள் பற்றியும் அவர்களுக்கு இப்படி அநேக கேள்விகள் இருந்தன. இவையனைத்தையும் உடனடியாக சடுதியாக தீர்த்து வைக்கும் ஒரு வழி அல்லது மாஸ்டர் திறவுகோல் இருந்திருந்தால் பவுல் அப்போஸ்தலன், இதோ இதுதான் அந்த சாவி என்று தூக்கிக் கொடுத்திருப்பாரே. உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் இங்கேயிருக்கிறது, அதைத்தீர்த்து வைக்கும் சுலமான ஒரேவழி, எல்லாவற்றையும் மொத்தமாகத் தீர்த்து வைக்கக் கூடியது இதுதான் என்று சொல்லியிருந்திருப்பாரே. ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை.
ஒரேயொரு, சுலபமான வழி, சகல ஆவிக்குரிய பிரச்சனைகளையும் தீர்த்துவைத்து கிறிஸ்தவ வாழ்க்கையில் மகிழ்ச்சியடைய உதவும் என்ற தவறான போதனைக்கு நாம் முழு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட அசாதாரணமான ஆவிக்குரிய திறவுகோல் இல்லை. உன்னுடைய மாம்சமும் என்னுடைய மாம்சமும் அப்படிப்பட்ட சாவியை விரும்பினாலும் அப்படியொன்று துப்புரவாக இல்லை!
2. மன அழுத்தத்திலிருந்து தப்ப முடியாது
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழுகிறபோது மன அழுத்தத்திலிருந்தோ, குழப்பங்களிலிருந்தோ நாம் தப்ப முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் வெறும் மன அழுத்தமும், குழப்பமுந்தான் என்று நான் சொல்ல வர வில்லை. நான் உங்களுக்குப் புரியவைக்க விரும்புகிற தவறான போதனையானது எப்படிப்பட்டதென்று விளக்குகிறேன் கேளுங்கள்: ஒரு கூட்டத்தில் பேசுகிறவர் ஒரு வசனத்தை எடுத்து, அந்த வசனம் காணப் படும் வேத சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அதை விளக்காமல் மாற்றிப் பேசினார். அவர் “கிறிஸ்து நம் மூலம் வாழுகிறார்” அல்லது “கிறிஸ்து விலான இரட்சிக்கும் ஜீவன்” என்ற தலைப்பில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்போது கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி விளக்கிய அவர் ஓர் அழைப்பைக் கொடுக்கிறார். அப்போது அவர் சொல்லுகிறார், “உங்கள் பாவத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நீங்கள் போரிட்டு சோர்ந்து விட்டீர்களா? நீங்கள் ஜெபத்தில் போராடி சோர்ந்து போய் விட்டீர்களா? பொறாமை, பெருமை, வஞ்சகம் போன்ற அசுத்தமான எண்ணங்களால் போராடிக் களைத்துப் போனீர்களா? நீங்கள் கலக்கத்தால் கலங்கிப் போயிருக்கிறீர்களா?”
இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆத்துமாக்களிடம் இதற்கு எந்தவிதமான பதில் கிடைக்கும்? அப்போது அங்கு உட்கார்ந்திருக்கும் மெய்யான கிறிஸ்தவன் “ஆம்! கர்த்தாவே, உமக்குத் தெரியும், நான் சோர்ந்து போயிருக்கிறேன், ஒரு நல்ல நாளைக் காணும்படியாக நான் எதையும் அர்ப்பணம் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். ஒரே ஒரு நாள் ஆண்டவரே, நான் சோர்வோடு போராடாமல் இருக்க விரும்புகிறேன். எனக்குள்ளிருந் தும் வெளியிலிருந்தும் வரும் பாவத்தால் கறைப்படாமல் இருக்க விரும்பு கிறேன்” என்று சொல்லுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்போது செய்தி கொடுப்பவர், “நீங்கள் உண்மையிலேயே மன அழுத்தத் தால் கலங்கியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உறுதியான சில முடிவுகள் எடுக்க வேண்டும், அப்படிச் செய்யும்போது கிறிஸ்து உங்களில் வந்து வாழ்வதன் மூலமாக நீங்கள் மன அழுத்தத்திலிருந்தும் குழப்பத்திலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள்” என்கிறார். தொடர்ந்து “நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவீர்கள், பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக் குள்ளாவீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களில் வந்தவுடனேயே மன அழுத்தங்களும் குழப்பங்களும் பறந்தோடி விடும். நீங்கள் விரும்பிய, எதிர்பார்த்த காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெறாததற்கு காரணம், இயேசுவோடு வாழுகின்ற வாழ்க்கையில் நீங்கள் தவறியதே யாகும். நீங்கள் பழைய வாழ்க்கைக்குப் போய்விட்டதாலேயே உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம், அல்லது குழப்பம் ஏற்படுகின்றது” என்கிறார். இது ஒரு கேலிச்சித்திரம். அல்லவா? இந்தப் போதனை ஒவ்வொரு புத்தகத்திலும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இன்று வெளி வருகின்றது; வந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு ஜாக்கிரதையாய் இருங்கள். இத்தகைய புத்தகங்களுக்கு நீங்கள் முக்கியத்து வம் கொடுத்தால் அவை உங்களை ஒரு மாய உலகிற்கு கொண்டு போய் விடும் அல்லது எப்போதும் சந்தேகத்துடன் வாழவேண்டிய ஓர் உலகில் உங்களைத் தள்ளிவிடும்.
என்னுடைய போதனைக்கான சில ஆதாரங்களை வேதத்தில் இருந்து உங்கள் முன் நிலைநிறுத்த விரும்புகிறேன்? கேளுங்கள்:
(1) நமக்குள்ளே வாசம் செய்யும் மிஞ்சியிருக்கும் பாவத்தைப் (Remaining sin) பற்றிய உண்மையையும் அது நம்மில் செய்யும் வலிமையான செய்கைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதைக் கவனியுங்கள். “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது நீங்கள் செய்ய வேண்டும் என்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.” (கலாத்தியர் 5:17). இங்கு, அப்போஸ்தலனாகிய பவுல், மன அழுத்தத்திலிருந்தோ அல்லது கலக்கத்திலிருந்தோ முற்றுமாக நமக்கு விடுதலை கிடைப்பதற்கு ஒரு வழியிருக்கிறதென்று கூறவில்லை. அவர் சொல்லுவது என்னவென்றால் நாம் மாம்சத்தால் “மேற்கொள்ளப்படக் கூடாது” என்பதே. “நீங்கள் ஆவியின்படி நடந்தால் மாம்சத்தின் இச்சை களை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” ஆனால், இச்சை கொள்ளும் மாம்சத்தின் செய்கை துப்புரவாக இல்லாமல் போய்விடும் என்று பவுல் கூறவில்லை. ஆவிக்கெதிராக மாம்சம் இச்சை கொள்ளும்போது மன அழுத்தங்களும், குழப்பங்களும் நிச்சயம் உருவாகும்.
காலத்தால் அழியாத விளக்கவுரை ரோமர் 7:14-25 வசனங்களில் இருப்பதாக நான் கருதுகிறேன். அதில் மறுபிறப்படைந்த, இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் தினமும் தன் வாழ்க்கையில் அடைகின்ற மனக்குழப்பங்கள் விளக்கப்படுகின்றன. “நல்லது செய்ய வேண்டிய விருப்பம் என்னில் இருக்கிறது. . . .” என்று கூறுகின்ற பவுல், இப்படி நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் தன்னில் இருக்கின்ற அதே நிமிடம் “வேறொரு பிரமாணத்தை என்னில் இருக்கக் காண்கிறேன்” என்கிறார். ஆவிக்குரிய செயல்களில் நீ முனைந்து ஈடுபடுகிறபோது, உன்னில் இருக்கிற மிஞ்சியிருக் கும் பாவம் (Remaining sin) அதற்கு எதிராக பலத்தோடு செயல்படும். கடினமாக வேலை செய்து நாளிறுதியில் வீட்டுக்கு வந்தவுடன், ‘சரி, நாளிதழை வாசித்து இன்று என்னதான் செய்தி இருக்கிறது என்று பார்ப் போமே’ என்று சிந்தித்து அமரும்போது அந்த சிந்தனைக்கு எதிராக மாம்சம் உங்களை எப்போதாவது பலத்தோடு தடுத்திருக்கிறதா? எனக்கு அப்படி ஒருபோதும் நடந்ததில்லை. ஆனால், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் ‘இன்றைக்கு காலை வேதத்தை சரியாக நேரம் கொடுத்து வாசிக்கவில்லை. இப்போது ஒரு சில அதிகாரங்களையாவது கவனத்தோடு வாசிப்போம்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே இதுவரை தெரியா திருந்தளவுக்கு சோர்வு எங்கிருந்தோ பறந்து வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளும். உங்களுடைய மனதில் ஏற்படும் அந்தப் பெரும் சோர்வினால், ‘இத்தகைய மனநிலையில் வேதத்தை வாசிப்பது முற்றிலும் ஆவிக்குரிய செயலாக இருக்காது, அத்தோடு அது கர்த்தருக்கும் மகிமையளிக்காது’ என்று நினைப்பீர்கள். அத்தகைய உணர்வும், எண்ணங்களும் ஏற்படுவதற்கு எது காரணம்? உங்களில் இருக்கும் மிஞ்சியிருக்கும் பாவம் தான் (Remaining sin).
உங்களுடைய நண்பர்களோடு தொலைபேசியில் பேசும் போது நீங்கள் சோர்வாக இருந்தாலும், 5 நிமிடங்களுக்கு பிறகு உன்னுடைய மனம் தெம்பாகி ஒரு நிமிடத்தில் கிலோ மீட்டா் தூரம் வரை பேசிவிடுகிறீர்கள். ஆனால் 5 நிமிடம் தேவனோடு ஜெபத்தில் பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போது நடப்பதென்ன? உங்கள் மனம் சோர்வுக்குள்ளாகி, உங்களுடைய நாவு தடித்து, உயிரில்லாமல் போய், இறைச்சிக்கடையில் தொங்கும் ஒரு மாமிசம் போல மாறிவிடுகின்றது.
நீ மரண ஆற்றைக் கடந்து விண்ணகம் அடையும் வரை நீ விரும்பாத தோழனாக மிஞ்சியிருக்கும் பாவமானது உன்னோடு இருக்கும். இதனால் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மன அழுத்தத்தில் இருந்தும் பிரச்சனை களிலிருந்தும் நம்மால் தப்ப முடியாமல் இருக்கிறது.
(2) அத்தோடு, அமைதியற்றதாக காணப்படும் இந்த “உலகம்” நம்மைத் தீவிரமாக அழுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார், “இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல்” (ரோமர் 12:2). ஜே. பி. பிலிப்ஸ் (J. B. Phillips) இந்த வசனத்தை சரியாக அர்த்தப்படுத்தி விளக்குகிறார். “உலகம் தன்னுடைய வடிவத்திற்கேற்ப உன்னை அழுத்தி தன்னகத்தே உன்னை வைத்துக் கொள்ள அனுமதியாதே” என்பதே அந்த விளக்கம். உலகத்தில் கர்த்தருக்கு எந்த இடமும் இல்லாதபடி ஒரு வாழ்க்கையை உருவாக்கி ஒழுங்குபடுத்தி, அது தேவனுடைய விதிகளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் விரோதமாக இருக்கிறதை அதன் தரத்திலும், அதன் நோக்கத்திலும், அதன் மனநிலையிலும், அதன் மக்கள் மூலமும், தன் தத்துவத்தினாலும் வெளிப்படுத்துகிறது. “உலகம்” என்பது தேவனுக்கு முற்றிலும் எதிரான மறுபிறப்படையாத மானுடத்தின் மொத்த உருவம் என்றே கூறலாம்.
இந்த உலகத்தோடு ஒத்துவராதவர்களோடு உலகம் எப்போதுமே ஒப்பந்தக் கையெழுத்திட்டதில்லை என வேதம் கூறுகிறது. தேவனற்ற வடிவத்திற்குள்ளாக நம்மைத் திணிப்பதற்கு அது தொடர்ந்து, தீவிர முயற்சி எடுத்துக் கொண்டேயிருக்கிறது. அதனுடைய தராதரத்திற்கு விரோதமாக ஒருவர் சிந்திக்கும் போதும், செயல்படும் போதும் அது கோபத்தால் சீறுகிறது. அதன் கதறுதல் என்னவென்றால், ‘நீ பார்ப்பதே உண்மையானது, உன்னுடைய வங்கி இருப்பு, உன்னுடைய உடலின் சுகம், உன்னுடைய வீட்டில் உள்ளவைகள், நிலம், உலகப்பொருட்கள் இவைகளே உண்மை.’ ஆனால், நீ பரலோகத்தில் சேர்த்து வைக்கும் செல்வங்களே முக்கியமானது என்று ஆண்டவர் சொல்கிறார். எது முக்கியமென்றால், உன் இருதயத்தில் மறைந்திருக்கும் அழகே முக்கியம், அதை இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாது.
உலகம் தன்னுடைய அமைதியற்ற, தீவிரமான, அதிக அழுத்தத்தை நம்மீது செலுத்தும் போது, மன அழுத்தங்களும், குழப்பங்களும் உருவாகியே தீரும். ஆகவேதான் யோவான் இப்படியாய் கூறுகிறார், “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை யுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவை களல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1 யோவான் 2:15-&17).
நான் மிகவும் பயப்படுகிற ஒரு காரியம் என்னவென்றால் (இத்தகைய காரியங்களை அனுபவபூர்வமாகப் பார்த்திருக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிறது), தேவ சித்தத்தின்படி நடப்பதற்கு இப்போது உற்சாகமாய்க் காணப்படுகின்ற அநேக இள உள்ளங்கள் இன்னும் பத்து வருடங்களில் எப்படி இருப்பார்கள்? அவர்கள் ஆவியிலே இறந்தவர்களாகப் போய் விடுவார்களோ என்பதே அந்தப் பயம். அப்படிப் பல இளைஞர்கள் மாறிவிடுவதற்குக் காரணம் என்ன? இயேசு சொன்னார், “தேவ வசனத்தை சிலர் நல்ல நிலத்தில் விழுந்த நல்ல விதைகளைப் போல ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால், அதோடு களையும் சேர்ந்து வளருகிறது. எது களை என்று இயேசு சொல்லுகிறார் தெரியுமா? ‘உலகக் கவலைகள், இச்சைகள் முளைத்து தேவவசனத்தை நெருக்கிப் போடுகின்றது. இந்த உலகத்தின் மாயைக்கு மாறான வாழ்க்கையை நீ வாழும்போது இந்த உலகம் உன்னை வெறுக்கும்.’ இந்த உலகத்தின் வாழ்க்கைக்கு வெகு சிறிய இடத்தை மட்டும் கொடுத்து, சுயத்திற்காக வாழாமல், உன்னுடைய பிரியத்திற்கும், நோக்கத்திற்குமாக வாழாமல், உன்னுடைய விருப்பமெல் லாம் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, முடிவிலே பரலோகத்திலே உனக்கு பலனுண்டு என்று நம்பி வாழும்போது, இந்த உலகத்தை நீ தொடர்ந்து கோபப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய். இந்த உலகத்தைப் போல தேவனில்லாமல் நீ வாழும் வரை இந்த உலகம் திருப்தி அடையாது. மற்றவர்கள் ‘மதிக்கிற அளவுக்கு’ பார்வைக்கு பக்திவிருத்தி யுள்ளவன் போல் மட்டும் நீ நடந்துகொண்டால் இந்த உலகம் உன் மேல் அளவற்ற அன்பு காட்டி அணைத்துக்கொள்ளும், ஏனென்றால் அதன் தத்துவத்திற்கு நீ உருவம் கொடுக்கிறாய்.
மன அழுத்தத்திலிருந்தோ, பிரச்சனையிலிருந்தோ தப்பிக்க வழியில்லை. ‘வருடங்கள் பல கடந்து, கடவுளின் வழிகள் நமக்குப் பழக்கத்தில் வந்து பக்திவிருத்தி நம் வாழ்க்கையில் நிலைநிறுத்தப்படுமானால் இந்த மன அழுத்தங்களும், பிரச்சனைகளும் எளிதாகி விடுமா? என்று நீங்கள் கேட்கலாம். எழுபத்தி மூன்று வருடங்களைக் கடந்து, அதில் 54 வருடங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் நான் சொல்லுகிறேன், ‘போராட்டம் இன்னும் தீவிரமாக மாறுகிறதே தவிர, சாலையின் முடிவு குறைந்தபாடில்லை.’ “ஆற்றைக் (மரணத்தை) கடக்கும் வரை ஒரு விசுவாசிக்கு இளைப்பாறுதல் கிடைக்காது” என்று கூறுகிறார் ஜோன் பனியன்.
(3) நாம் நினைவு கொள்ள வேண்டிய மற்றொரு காரியம் என்ன வென்றால், தீமையான நோக்கங்களைக் கொண்டிருக்கும் பிசாசு நம்மை விழுங்க வேண்டுமென்று காத்திருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவின் உற்சாகந் தரும் வார்த்தைகளை மனதில் கொள்ளுவோம். “தெளிந்த புத்தி யுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில் உங்கள் எதிராளியான பிசாசானவன் யாரை விழுங்கலாமோ என்று வகைத் தேடி சுற்றித்திரிகிறான்.” நீ மிருகக் காட்சி சாலைக் கூண்டிற்கு வெளியே இருப்பவனாக பிசாசு பார்க்கிறானா? இல்லை. அவன் உங்களைப் பிடிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறான். அவனுடைய தொழில் நம் கவனத்தை அவன் வசப்படுத்துவது ஆகும். அவன் கர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகிறான். எதற்காக? அவன் உங்களைக் கடித்து சில இரத்தக் காயங்களோடு மட்டும் விட்டுவைக்கவா? இல்லவே இல்லை, உங்களை முழுவதும் விழுங்கிவிடவே தயாராக இருக்கிறான். அதனால்தான் யாக்கோபு (யாக்கோபு 4:7) வசனத்தில், “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்” எனக் கூறுகிறார். இதனையே பவுலின் போதனையிலும் பார்க்கலாம். எபேசியர் 6:12 வசனத்தில் அவர் கூறுவது, நமது போராட்டம், நமது வேதனை, நாம் கை கலத்தல், ஆவிக்குரிய வேதனையின் உச்சகட்டம் இவையெல்லாம் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங் களோடும் எனக் கூறுகிறார். நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் உன்னத ஞானஸ்நானம் பெற்றவுடன் உங்கள் போராட்டம் அடியோடு நின்று விடும் என்று பவுல் கூறவில்லை! அல்லது நீங்கள் ஒரு கருத்தரங்கிற்கு போய், இயேசுவோடு, நிலைத்திருக்க வேண்டிய இரகசியத்தை அறிந்து கொண்டவுடன் உங்கள் போராட்டம் முற்றுப் பெற்றுவிடாது. நீங்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருப்பீர்களானால் சத்தியத்தோடு தொடர்புள்ளவர்களாக இருப்பீர்களானால், பிசாசானவன், முறையற்ற, கொடூரமான குறுக்கு வழியில் உங்களை எப்போதும் விழுங்க வழி பார்ப்பான்.
(4) நாம் நம்பிக்கையாலே இரட்சிக்கப்பட்டோம். நாம் மிகச் சிறந்ததை வாழ்க்கையில் அடையும் பொருட்டே இரட்சிக்கப்பட்டோம். இரட்சிக்கப்படுதல் என்பது நமக்கு கிடைத்த முன் பணமே ஆகும். அது எப்படி வேலை செய்கிறது என்பதைக் கவனியுங்கள். ஆண்டவர் உங்களில் கிரியை செய்து முடித்ததும் நீங்கள் எப்படியிருப்பீர்கள்? வேதத்தின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போல் இருப்பீர்கள். உங்களுடைய சரீரம் கிறிஸ்துவின் சரீரத்தைப் போல மகிமைப் பொருந்தியதாய்க் காணப் படும் (பிலிப்பியர் 3:21). உங்களுடைய ஆவி கிறிஸ்துவின் ஆவியைப் போல மாற்றப்பட்டிருக்கும். நீங்கள் கடவுளாக மாறிவிட மாட்டீர்கள், ஆனால் உங்கள் நாளங்கள் அனைத்திலும் ஒன்றித்திருக்கும் பாவம் முற்றிலும் களை யப்பட்டிருக்கும். அதனால் உங்களால் முற்றிலும் அன்பு பாராட்டி, உங்கள் சிருஷ்டிகருக்கு, உங்களை உருவாக்கினவருக்கு ஒத்துக் காணப்படுவீர்கள். இதை சிந்தித்துப் பாருங்கள்! இது ஒரு நாளில் நடக்கக்கூடியதல்ல, ஆனால் பல படிகளை நீங்கள் வாழ்க்கையில் கடக்கும்போது எந்தத் தவறான எண்ணமோ, அசுத்த எண்ணமோ, பொறாமையின் எண்ணமோ இல்லா மல் மாறியிருப்பீர்கள்!
கர்த்தர் நம்மை அப்படிப்பட்ட பரிபூரண வாழ்க்கைக்கே அழைத் திருக்கிறார். நமது மனதும் ஆவியும், பாவத்தால் கறைபடாமல் நமது சரீர மானது பூரண பரிசுத்தத்தைக் கொண்டு செலுத்தும் இருதயத்தை எல்லா விதத்திலும் ஏந்துவதாகக் காணப்படும். தூதர்கள் கர்த்தருக்கு சேவை செய்வது போல, சாவுக்கு ஏதுவான இந்த சரீரத்தின் ஆசைகளுக்கு விடுதலையாகியிருப்பதன் காரணமாக கர்த்தர் உங்களை மிகவும் அருமை யானவராகவும்; உங்களோடு நெருங்கி இருப்பவராகவும் அறிந்து கொள்ளு வதே இந்த வாழ்க்கையாகும். இடைவிடாது ஒரு மணி நேரத்துக்கு அவரோடுகூட இருக்கக்கூடிய ஐக்கியத்தைப் பற்றிச் சிந்திப்பது எத்தனை மகிழ்ச்சி தருகிறது. ஆனால், காலம் போகப் போக சோம்போறித் தனம் உங்கள் சரீரத்தைத் திருடி, உங்களைத் திசை திருப்பி, சோம்பலுக்குள் ளாக்குவதை நீங்கள் உணருவீர்கள். உண்மை என்னவென்றால், நாம் சரீரத்திலும் ஆவியிலும் பரிபூரணத்திற்காகவே அழைக்கப்பட்டிருந்த போதும் அதை இங்கேயே இப்போதே தரும்படியாய் ஆண்டவர் நியமிக்கவில்லை.
இதன் மூலம் நடக்கப்போவதென்ன? மன அழுத்தமே! ஏனென்றால் நாம் நம்பிக்கையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நம்பிக்கையின் கனவு இன்னும் நனவாகவில்லை. ஆகவே மன அழுத்தமும் குழப்பமும் ஏற்படு கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் பிரயாணத்தின்போது ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் தங்கியிருக்கும் அறையில் அவர் ஜெபிப்பதை எட்டிப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.் அவருடைய ஜெபத்தைக் கேட்க நாம் கொடுத்து வைத்தவர் கள் அல்லவா? ஆனால், அவருடைய ஜெபம் அவ்வப்போது எப்படி யிருந்திருக்கும்? அந்த ஜெபம் ஒரு கதறுதலாயிருந்திருக்கும்! நீங்கள் சொல்லக்கூடும், இது பவுலின் அறை அல்ல! வாருங்கள் இன்னொரு அறையைப் பார்போம் என்று. இல்லை, இது பவுலின் அறைதான். அவர் சொல்லுவதைக் கவனியுங்கள். “இந்த கூடாரத்திலிருக்கிற நாம் பாவம் சுமந்து தவிக்கிறோம். இந்தப் போர்வையைக் கலைக்க வேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.” (2 கொரி. 5:4). சில சமயங்களில் அவர் அலறுதலுக்குள்ளானதன் காரணம், அவருடைய பரிசுத்த இருதயம் கிருபையினால் மாற்றப்பட்டு கிறிஸ்துவுக்காக சேவை செய்ய துடித்ததனாலாகும். ஆனால், அவருக்கு ஒரு சரீரமும் இருந்தது. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது, நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16) என்று சொல்லித் தவிக்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல். சர்வ சிருஷ்டியும் ஏகமாய் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல் ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவீகாரம் வருகிற தற்கு காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம். (ரோமர் 8:23). இதை வாசிக்கும் போது அங்கே மன அழுத்தத்தையும் வேதனையையும் பார்க்கிறோம் அல்லவா. இத்தகைய அனுபவம் ஆவியற்ற தோற்றமளிப்பதாகத் தென்பட் டாலும் முழு ஆவிக்குரிய அனுபவமாய் இருக்கிறது. ஆகவே தவிப்பும், பெரு மூச்சுமே முழு பக்திக்குரிய மெய்யான அடையாளங்கள் ஆகும். மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை, அதிலிருந்து முழுவது மாய்த் தப்பிவிட்டதாய் நீங்கள் நினைத்தீர்களானால் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
3. நம்முடைய அவயவங்களும், உணர்வுகளும் பாதிப்புறாமல் போகப்போவதில்லை
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும்போது மீட்கப்பட்டுள்ள நம்முடைய மானுடத்தின் சகல அவயவங்களும், உணர்வுகளும் உணர்வுபூர்வமான பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படவோ அல்லது நிறுத்தப்படவோ போவதில்லை. மீட்கப்பட்ட மனிதனின் உணரும் அவயவங்கள் யாவை? அவனுக்கு கையிருக்கிறது. கால்கள் இருக்கின்றன. கண்களும் மூக்கும் இருக்கின்றன. அத்தோடு அவனுக்கு சிந்திக்கவும், தீர்மானங்கள் எடுக்கவும் உதவும் மூளையும், அறிவும் இருக்கின்றன. அவனுக்கு பசியும் தாகமும் ஏற்படுகின்றது. அவனுக்கு மாம்ச ஆசைகளும், உணர்ச்சிகளும் இருக்கின்றன. அத்தோடு அவனுடைய சில உளபூர்வமான உணர்வுகளும், சரீர அவயவ நடவடிக்கைகளும் பின்னிப் பினைந்து ஒன்றினுள் ஒன்று ஊடுருவிக் காணப்படுகின்றன. இவைதான் மானுடத்தின் அவயவங்களும், உணர்வுகளும்.
பாவம் நிறைந்த ஒரு மனிதனைக் கர்த்தர் உயிர்ப்பித்தவுடன், அவர் அவனில் இதுவரையும் இருந்திராத எந்தவித புதிய அவயவங்களையும் உருவாக்குவதில்லை. அவனில் ஏற்கனவே இருக்கும் அவயவங்களை அவர் அழிப்பதும், இல்லாமலாக்குவதுமில்லை. அவருடைய கிருபை அற்புதமாக வும் மிகவும் வல்லமையாகவும் அவனில் செயல்பட்டு அவனுடைய அவய வங்களும், உணர்வுகளும் புதிய கிரியைகளையும், புதிய உணர்வுகளையும், எண்ணங்களையும் கொண்டிருக்கும்படிச் செய்கின்றது. கர்த்தர் மறுரூப மாக்கப்பட்டிருக்கும் மனிதனில் இருக்கும் அவயவங்களை இல்லாம லாக்குவதோ அழிப்பதோ இல்லை; புதிதாக அவனில் எதையும் உருவாக்கு வதுமில்லை. நாம் நம்மிலிருக்கும் சகல அவயவங்களையும், உணர்வு களையும் பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வேண்டும். புத்தி யைப் பயன்படுத்தி எதையும் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். நம்முடைய உணர்வுகளையும், ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும், பிடிப்புகளையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இதை விளக்குவதன் மூலம் நான் எத்தகைய போதனையை உங்கள் முன் வைக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அநேக கிறிஸ்தவர்களும், போதகர்களும் இன்றைக்கு போதிப்பதென்னவென்றால், ‘நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறீர்கள். ஆனால், கர்த்தர் அதைச் செய்யும்படி உங்களை எதிர்பார்க்கவில்லை. சிலுவையை நோக்கிப் போய் உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்ள வேண்டுமென்று கர்த்தர் எப்படி எதிர்பார்க்கவில்லையோ அதேபோல் கிறிஸ்தவ வாழ்க்கையை நீங்களே வாழ வேண்டுமென்றும் கர்த்தர் எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்றால், உங்களை நீங்கள் முழுவதுமாக ஒப்புக்கொடுத்து இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையை உங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதுதான்’ (Let go and let God).
இதை நான் புகை போக்கி கொள்கை (the funnel theory) என்று அழைக்க விரும்புகின்றேன். இக்கொள்கைப்படி நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு முயற்சியுமே எடுக்காமல் முற்றுமாக செயலற்று உங்களை அவருக்கு ஒப்புவித்தால் கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையை உங்களில் ஊற்றுவார் என்பதாகும். அதாவது, அவர் தன்னுடைய வாழ்க்கையை உங்களில் மறுபடியும் வாழ்வதோடு அதன் காரணமாக உங்களுடைய அவயவங்களில் பலவும் செயலற்றுப் போகும்! இப்போதனைப்படி நீங்கள் உங்களுடைய சிந்தனையில் கோளாறுடன் காணப்படுவதற்குக் காரணம் நீங்கள் உங்கள் சிந்தனையைப் பயன்படுத்துவதுதான். நீங்கள் உங்களுடைய புத்தியைப் பயன்படுத்தக் கூடாது. உங்களுடைய மனம் செயலிழந்து போக வேண்டும். கிறிஸ்துவின் மனம் உங்களில் இருக்க வேண்டும்; உங்கள் மனம் அவருடைய மனமாக வேண்டும். நீங்கள் உங்களுடைய சிந்தனையைப் பயன்படுத்தப் பார்ப்பதால்தான் கிறிஸ்துவின் மனம் உங்களில் இல்லாமல் இருக்கிறது. நீங்கள் சிந்திப்பதை நிறுத்திவிட்டு கிறிஸ்து உங்கள் மூலம் சிந்திக்க வழிவிடுங்கள்.
இது மிகவும் நல்ல ஆவிக்குரிய சிந்தனை போல் தென்படுகிறதல்லவா? உண்மை என்னவென்றால் இது வேதத்திற்கு முற்றிலும் புறம்பானது. இப்போதனையின் தவறை உங்களுக்கு மூன்று கருத்துகளின் மூலம் விளக்க விரும்புகிறேன்.
1. கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்ற சத்தியத்தை இந்தப் போதனை அலங்கோலமானதாக்கிவிடுகிறது.
கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்ற போதனையை நாம் நிச்சயம் வேதத்தில் இருந்து அறிந்துகொள்கிறோம். “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவை யில் அறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20). நல்ல எண்ணங்கொண்டிருக்கும் அநேகமானவர்கள் மேற்குறிப்பிட்ட வசனத்தையும், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து” (கொலோசேயர் 3:4), “நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்பட்டோம்” (ரோமர் 5:10) போன்ற ஏனைய வசனங்களையும் அவ்வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வேதப் பகுதிகளின் சந்தர்ப்பங் களையும், முழு வேதத்தின் போதனையையும் ஆராய்ந்து பார்க்காது (totally ignoring both the immediate context and the analogy of faith) ‘கிறிஸ்து நம்மில் வாழ்க்கிறார்’ என்ற போதனை பற்றிய ஒரு தவறான போதனையை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய போதனை வேதபோதனையின் சமநிலையை அசைத்து ஆட்டம் காணவைத்துவிடுகிறது. வாட்ச்மன் நீ (Watchman Nee) , ஏ. பி. சிம்சன் (A. B. Simpson) , திருமதி ஹனா வித்தோல் சிமித் (Mrs. Hannah Withall Smith) போன்றோர் நம்முடைய அவயவங்கள் அனைத்தும் செயலிழந்து போய் கிறிஸ்து நம்மில் முழுமையாகவே தான் இந்த உலகத்தில் வாழ்ந்ததுபோல் வாழ்கிறார் என்று விளக்குகிறார்கள். அப்படி கிறிஸ்து நம்மில் வாழ்கிற போது நம்முடைய மனதின் செயல்களுக் கும், உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்கும், தீர்மானங்களை எடுப்பதற் கான அவசியத்திற்கும் இடமில்லாமல் போய்விடுகிறது. இவ்வாறாக நம்முடைய உணர்வுகளும், அவயவங்களும் செயலிழக்கும்போது தான் கிறிஸ்து நம்மில் வெற்றிகரமாக வாழ முடிகிறது என்பது இவர்களுடைய போதனை.
2. கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய உருவகங்களில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட தவறான போதனை
சில தவறான போதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கையை விளக்குமுகமாக வேதத்தில் காணப்படும் சில உருவகங்களையும், போதனைகளையும் தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்டவையாக இருக்கின்றன. யோவா னில் விளக்கப்பட்டிருக்கும் திராட்சைச் செடிக்கும் அதன் கிளைக்கும் இடையில் இருக்கும் உறவைப் போலவா கிறிஸ்தவ வாழ்க்கை இருக்கிறது? கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி இந்த உருவகத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் எத்தகைய ஆபத்தை உருவாக்கி யிருக்கிறது தெரியுமா? கிறிஸ்தவ வாழ்க்கை பற்றி வேதம் போதிக்கும் அத்தனைப் போதனைகளோடும் எந்தத் தொடர்புமில்லாததாக இந்தப் போதனை இருக்கிறது. இந்தத் தவறான போதனையின் அடிப்படையில் ஒரு முழு இறையியல் போதனையே உருவாக்கப்பட்டு விட்டது.
இத்தகைய போதனையைக் கொடுக்கிறவர்கள் பின்வருமாறு போதிப்பதை நான் அறிந்திருக்கிறேன்: ‘உங்களில் எத்தனை பேர் பழங்கள் பழுத்து முதிர்ந்திருக்கும் ஒரு பழமுதிர்சோலை வழியாய் நடந்து போயிருக்கிறீர்கள்? இதைக்கேட்டு மக்கள் தங்கள் கையை உயர்த்துகிற போது போதகர் சொன்னார், ‘நான் இப்போது உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன். ஆப்பிள் மரம் ஆப்பிள் பழத்தைத் தர எப்போதாவது கஷ்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மரத்திலுள்ள இனிமை யான கிளைகள் செய்தது எல்லாம் அந்த மரத்தில் தொங்கிக் கொண் டிருந்தது மட்டுமே. அந்த மரத்தில் உள்ள சத்து கிளைகளுக்குப் பரவி வந்து அந்த அருமையான ஆப்பிள் பழங்கள் உண்டாயின. இதைப் போலத்தான் நம்மில் ஆரோக்கியமான ஆவிக்குரிய பழங்களும் உருவா கின்றன’.
வேறு சிலர் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய விளக்கத்தை வேதம் போதிக்கும் கிறிஸ்துவின் இறப்பு, அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் நமக்கு கிறிஸ்துவோடிருக்கும் ஐக்கியத்தைப் பற்றிய போதனையில் இருந்து பெற்று பின்வருமாறு கூறுவார்கள், ‘நாம் கிறிஸ்துவோடு மரித்திருக்கிறோமா? நீங்கள் மரித்துப்போன ஒரு மனிதனின் சரீரத்தை அனுகி அச்சரீரத்தின் மூக்கில் வாசனைத் திரவத்தை வைத்தால் அதனால் அதன் வாசனையை நுகர முடியுமா? முடியாது. ஏனெனில் அந்த மனிதன் மரித்துவிட்டான். இறந்த அந்த மனிதன் ஏதாவது ஓர் உணவில் விருப்பம் கொண்டிருந்திருப்பானானால் அந்த உணவை அவனுடைய சரீரத்தின் மூக்கருகில் கொண்டு சென்றால் அவனால் அதை நுகர முடியுமா? முடியவே முடியாது! அதேபோல நீங்கள் நிச்சயமாய் பாவத்தில் மரித்திருப்பீர்களானால் நீங்கள் பாவத்தைப் பற்றிய எந்த அக்கறையையும் கொண்டிருக்கப் போவதில்லை’. இந்த வகையிலான போதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி வேதம் போதிக்கும் விளக்கங்களிலும், உருவகங்களிலும் இருந்து தவறான முறையில் உருவாக்கப்பட்டவை. இவற்றில் எந்த உண்மையும் இல்லை.
3. விசுவாசத்தின் மூலம் மட்டுமே பரிசுத்தமாகுதல் என்னும் தவறான போதனை
இந்தப் போதனையைப் பின்வருமாறு விளக்கலாம்: நீங்கள் உங்க ளுடைய பாவத்தை உணர்ந்து பரிசுத்தமான தேவனுடைய குற்றச் சாட்டுதலுக்கு கீழ் நின்று, எவரிடமும் அடைக்கலம் புகுவதற்கு வழியில்லா மல் இருந்தபோது, இயேசு கிறிஸ்து, மனிதவுருவெடுத்த தேவனின் குமாரன் நாம் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து, நாம் அடைந்திருக்க வேண்டிய மரணத்தை அடைந்து, தன்னுடைய பரிசுத்தமான வாழ்க்கை யினாலும், கீழ்ப்படிவினாலும் பூரணமான நீதியை, தேவனுடைய நீதியை சம்பாதித்தார் என்றும் இப்போது அந்த நீதி அவரை விசுவாசிக்கிறவர் களுக்கெல்லாம் சொந்தமாகும் என்றும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதன் பிறகு இப்படியும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்: ‘அந்தப் பூரணமான நீதியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்தீர்கள்? ஒன்றுமேயில்லை! நீங்கள் செய்ததெல்லாம் விசுவாசித்தது மட்டுமே. விசுவாசமாகிய வெறுங்கரம் அதை எடுத்துக்கொண்டது.’ இப்படிச் சொன்னபிறகு அவர்கள் சொல்லு வார்கள், ‘சிந்தித்துப் பாருங்கள், இதே முறையில்தான் இயேசு கிறிஸ்து நாம் பரிசுத்தமடைவதற்காகக் கொடுக்கப்படுகிறார். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை விசுவாசிப்பது மட்டுமே. நீதிமானாகுதலில் விசுவாசம் எந்தவிதத்தில் செயல்படுகிறதோ அதே முறையில் தான் பரிசுத்தமாகுதலி லும் செயல்படுகிறது’. இப்போதனை மிகவும் தவறானது.
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஆணும், பெண்ணுமாகிய மானுடத்தின் அவயவங்கள், உணர்வுகள் அனைத்தும் எந்தவிதத்திலும் பயன்படுத்தப் படாமலிருப்பதைப் பொதுவான அம்சமாகக் கொண்டு போதிக்கப்படும் இந்த மாதிரியான தவறான போதனைகளின் ஆபத்து என்ன?
(1) நம்முடைய அனைத்து அவயவங்களையும், உணர்வுகளையும் பயன்படுத்தி நாம் கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கர்த்தர் வேதத்தில் கூறியிருப்பதை இவர்கள் அசட்டை செய்கிறார்கள்.
பூமியில் உள்ளவற்றைப் பற்றி சிந்திக்காமல் பரலோகத்தில் உள்ளவற்றை பற்றி சிந்தியுங்கள் (கொலோசேயர் 3:2) சிந்திக்க வேண்டியவர் யார்? நீயா அல்லது கடவுளா? இப்படி கர்த்தராகிய இயேசு சொல்லுவாரா உன் வலது கை தவறு செய்தால் நீ . . . பரிசுத்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் உன் கை அழுகட்டும் என்று விட்டு விடுவாரா? இல்லை! உன் வலது கை தவறு செய்தால், அதை வெட்டி உன்னிடத்தில் இருந்து தூரத்தில் எறிந்து விடு (மத்தேயு 5:30). அதை நீதான் செய்ய வேண்டும் உனக்குத்தான் அது சொல்லப்பட்டிருக்கிறது! பவுல் சொல்லுகிறார் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1 கொரி. 9:27). எனக்குள் இருக்கிற கிறிஸ்து அப்படி செய்ததாக சொல்லுகிறாரா? இல்லை! நான் என்னை ஒடுக்கி என் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (ரோமர் 6:13) நீங்கள்தான் செய்ய வேண்டும்! இன்னும் அநேக வசனங்களை வைத்து இதை உறுதிப்படுத்த என்னால் முடியும். இந்த வசனங்கள் என்னுடைய மனதுக்கும் என்னுடைய உணர்ச்சிக்கும், என்னுடைய உடல் உறுப்புகளுக்கும் சொல்லப்பட்டவை. எடுத்துக் காட்டாக, வேசித்தனத்திற்கு விலகி ஓடு. எப்படி இதில் இருந்து ஓடுவது? கடவுள் சொல்லுவது, இந்த வேசித்தனத்திலிருந்து நீ தப்பிக்க வேண்டுமென்றால் நீ உன் காலை உபயோகப்படுத்த வேண்டும்.
(2) நம் மாம்சத்தில் இருக்கும் மிஞ்சியிருக்கும் பாவத்தை அழிப்பது ஆவியின் மூலமான நம்முடைய பொறுப்பு என்கிறது வேதம்.
பவுல் சொல்லுகிறார்: நீங்கள் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோமர் 8:13). வேதத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் நாம் கிறிஸ்துவில் நியாயமாக அடைய வேண்டிய அத்தனை கிறிஸ்தவ கிருபைகளையும் நாம் கிறிஸ்துவில் வளர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்முடைய பொறுப்பை உணர்த்துகின்றன. உதாரணமாக, ‘இப்படியிருக்க நீங்கள் உங்கள் எல்லா அவயவங்களிலும் ஜாக்கிரதையுள்ளவர்களாக உங்கள் விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும் மற்றும் ஞானத்தோடு இச்சையடக்கத்தை யும்’ கடைப்பிடிக்க வேண்டுமென்றும் (2 பேதுரு 1:5), ‘நீங்களும் நானும் நம்முடைய மனங்களை மேலானவைகளிலே செலுத்த வேண்டும். அவருக் குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்’ என்றும் (1 யோவான் 2:6), ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்’ என்றும் (கலாத்தியர் 5:16), ‘நாம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின் தொடர வேண்டும்’ என்றும் (1 பேதுரு 2:21) வேதம் பல பகுதிகளில் விளக்குவதை வாசிக்கிறோம். நாம் அடைய வேண்டிய கிருபைகளை அடைய வேண்டுமென்றால் நம்முடைய எல்லா உணர்வு களும், அவயவங்களும் ஆத்மார்த்தமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கையை விளக்குவதற்கு வேதத்தில் அடிக்கடி பயன் படுத்தப்பட்டிருக்கும் உருவகம், படைவீரனுக்கும், ஓட்டப்பந்தய வீரனுக்கும் அதை ஒப்பிட்டுக்காட்டும் உருவகம் தான். பல வசனங்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஆனால் குறிப்பாக ஒரு மூல வசனம் இதை சுருக்கமாக நமக்குப் போதிக்கிறது. வேதாகமத்தில் இந்தப் போதனையை வலியுறுத்துவதும் வசனம் பிலிப்பியர் 2:12&13 ஆகும். ‘ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே (கவனியுங்கள், கிறிஸ்து உங்களுக்குள் எப்பொழுதும் தன்னுடைய வாழ்க்கையை உங்களில் வாழ்ந்திருக்கிறபடியே என்று பவுல் சொல்லவில்லை) நான் உங்களுக்கு சமீபமாயிருக்கும் பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிற வராயிருக்கிறார்’.
பவுலின் இந்த போதனையைக் கவனமாகப் பாருங்கள். அவருடைய கட்டளை என்ன? ‘உங்கள் இரட்சிப்பு நிறைவேற நீங்கள் பிரயாசப் படுங்கள்’. உங்கள் கிரியைகளின் மூலம் இரட்சிப்பை அடைய முயற்சி செய்யுங்கள் என்று பவுல் சொல்லவில்லை. இது ஏற்கனவே மனந்திரும்பிய வர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள போதனை. இந்த இரட்சிப்போடு தொடர் புடைய செயல்களில் அவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். தங்களு டைய இரட்சிப்புக்குரிய வாழ்க்கை முழுமைபெற, நிறைவேற அவர்கள் பயத்தோடும், நடுக்கத்தோடும் செயல்பட வேண்டும். கர்த்தரின் கண்கள் தங்கள் மேல் இருக்கிறதென்ற எண்ணத்தோடும், தங்களுடைய பொறுப்புக் களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் அவர்கள் இதைச் செய்ய வேண்டும். ஏன்? ‘தேவனே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலிப்பியர் 2:13) என்கிறார் பவுல். தேவனுடைய செயல் என்னுடைய விருப்பத்திலும் செய்கையிலும் இருக்கும். ஏனென்றால் அவர் அவருடைய விருப்பத்தையும் செய்கையையும் என்னிலே உண்டாக்குகிறார். நான் இதை நடுக்கத்தோடும் பயத்தோடும் செய்து முடிக்கும்போதுதான் என் இரட்சிப்பு முழுமை யடைகிறது. அப்படியானால்! கடவுள் இந்தச் செயலை செய்வாரா அல்லது நான் இந்த செயலை செய்வேனா? நாமும் அவரும் இணைந்து செயல்படுகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அவருடைய கிரியை என்னுடைய பரிசுத்த கிரியைகளினால் வெளிப்படுத்தப்படுகிறது. என்னு டைய பரிசுத்த கிரியைகளே அவருடைய கிரியை என்னில் இருப்பதற்கான தகுந்த சாட்சி. இதன் அழகைப் பார்த்தீர்களா? அவர் என்னில் செய்வதை விட மேலதிகமாக நான் கிரியை செய்கிறேனே என்று நான் என்றுமே பயப்படத் தேவையில்லை, இரட்சிப்பிற்கேற்ற நம்முடைய பரிசுத்த கிரியைகள் அவர் நம்மில் செய்யும் கிரியைகளைவிட ஒருபோதும் மேலதிக மாக இருந்துவிட முடியாது.
பிலிப்பியரில் உள்ள வசனத்தின் மூலம் இந்த கருத்தை பவுல் வலியுறுத்துகின்றார். ‘என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்கிறார். பவுலே, நீங்கள் எவ்வளவு செயல்கள் செய்வீர்கள்? எல்லாவற்றையும். இந்த வசனத்தில் உள்ள “எல்லாவற்றையும்” என்பது கிறிஸ்து எனக்காக வைத்திருக்கிற எல்லாவற்றையும் குறிக்கும். சில நேரங்களில் தேவையோ டிருக்கிறேன், சில நேரங்களில் வாழ்ந்திருக்கிறேன், சில நேரங்களில் நான் எது சந்தோஷம் என்று அறிந்து கொண்டேன். நான் எப்போது பசியாய் இருக்கிறேனோ அப்போது என் வயிறு என் முதுகு எலும்பில் விளையாடி சுருதி உண்டாக்கும். இன்னொரு நேரத்தில் நான் அசந்து போகும் அளவிற்கு, எல்லையை அறியாது மிகுதியாக பெறுவேன். ஆக, நான் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அவர் சொல்வதைக் கேளுங்கள், ‘நான் வாழ்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு’, ‘நான் செய்கிறேன், ஆனால் என்னை பெலப்படுத்துகிறவராலே என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும். கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன். அவர் எனக்குள் இருக்கிறார். அவரே இந்த சரீரத்தில் பிழைத்திருக்கிறார்’. அப்படியானால் உண்மையில் பவுலின் சரீரத்தில் வாழ்கிறது யார்? கிறிஸ்துவா அல்லது பவுலா? பவுல்தான். கிறிஸ்துவுக்குள் மறுமொழியாக இதற்கு பவுல் தரும் பதில் என்னவென்றால், ‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்’ என்பதுதான்.
4. நாம் சடுதியாக அடையப்போகும் உச்சகட்ட அசாதாரண அனுபவமென்றொன்றில்லை
கிறிஸ்தவ வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ ஓர் உச்சகட்ட அசாதாரண அனுபவம் நமக்குக் கிடைக்கும் என்று வேதத்தில் எந்தவொரு வாக்குத்தத்தத்தையோ அல்லது கட்டளையையோ நாம் பார்ப்பதில்லை.
கிறிஸ்தவத்தின் பெயரில் கொடுக்கப்படுகின்ற சில போதனைகள், ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை அடைந்த பிறகு உடனடியாக ஓர் உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை அடையாவிட்டால் அவனால் வல்லமையுள்ள ஆவிக்குரிய கிறிஸ்தவ அனுபவத்தை அடைய முடியாதென்றும், பலவீன மான கிறிஸ்தவ வாழ்க்கையையே வாழ்வான் என்றும் விளக்குகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையில் தரத்தில் உயர்ந்த ஒரு புதிய அனுபவத்தையும், ஆவிக்குரிய வல்லமையையும் வாழ்வதற்கு அவசியமான இந்த உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை அடைய முடியும் என்று வேதம் வாக்குத் தத்தங்களின் மூலமும், கட்டளைகள் மூலமும் போதிப்பதாக இவர்கள் கூறிவருகிறார்கள்.
கிறிஸ்தவ சபையின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது இது பற்றிய வெவ்வேறு வித்தியாசமான போதனைகள் இருந்து வந்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது. கிறிஸ்தவ பிரசங்கியான ஜோன் வெஸ்லி இது பற்றிய தன்னுடைய ‘வெஸ்லியன் பூரணத்துவம்’ (Classical Wesleyan Perfectionism) என்ற போதனையை அளித்தார். இந்தப் போதனை முக்கியமாக பரிசுத்தமாகுதலை விளக்கியதோடு விசுவாசிகளுக்குக் கிடைக்கக்கூடிய அவர்களைக் கழுவியெடுக்கும் அக்கினியைப் போன்ற ஒரு ஞானஸ்நானத்தைப் பற்றியும் அல்லது அவர்கள் அடையவிருக்கும் பூரணமான அன்பின் நிலையைப் பற்றியும் விளக்கியது. வெஸ்லியின் இந்தப் போதனை கர்த்தருக்காக நாம் செய்யக்கூடிய ஊழியத்திற்கு அவசியமான வல்லமையைப் பற்றியதாகவோ அல்லது நம்முடைய உள் உணர்வுகளைப் பற்றியதாகவோ அல்லாமல் நாம் சடுதியாக அடையக் கூடிய உச்சகட்ட அசாதாரண அனுபவத்தின் மூலம் நம்மில் மிஞ்சியிருக் கும் பாவத்தின் வலிமை முற்றுமாக அழிக்கப்பட்டோ அல்லது இல்லாமல் போகக்கூடிய நிலையை விளக்கியது. ஜோன் வெஸ்லி இதைக் குறித்து எத்தகைய விளக்கமளித்திருந்தார் என்பதைப் பற்றிய வெவ்வேறான கருத்துக்கள் உண்டு என்பதை அறிந்து வைத்திருக்குமளவுக்கு வெஸ்லியின் பூரணத்துவப் போதனை பற்றி நான் அதிகம் வாசித்திருக்கிறேன். இருந்த போதும் நான் இதுவரை விளக்கியது ஜோன் வெஸ்லியின் போதனையைப பற்றிய சரியான சுருக்கமான விளக்கம் என்று கருதுகிறேன்.
அதுமட்டுமல்லாமல் ‘பழைய பெந்தகொஸ்தே’ (Old Pentecostalism) போதனையென்றும் ஒன்றிருக்கிறது. இப்போதனை மனந்திரும்புதலுக்குப் பிறகு விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அடைவார்கள் என்றும், அதற்கு அடையாளமாக அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவார்கள் என்றும் விளக்குகிறது. இந்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஒருவர் அடைந்திருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர் முதலில் அந்நிய பாஷையில் பேசக்கூடியவராக இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறது இப்போதனை. இந்தப் பழைய பெந்தகொஸ்தே போதனையின் (Old classical Pentecostalism) அடிப்படைக் கருத்து கர்த்தருக்கு சேவை செய்வதற்காக ஆவியின் வல்லமையை அடைய வேண்டும் என்பதுதான்.
மூன்றாவதாக, இன்றைய ‘நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கத்தைப்’ பற்றிக் கூற வேண்டும். ஏற்கனவே நாம் கவனித்த ‘பழைய பெந்தகொஸ்தே’ போதனையாளர்களைப் போலவே இவர்களும் அப்போஸ்தல நடபடி களின் வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி ஓர் உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் அடைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவர்கள் மத்தியிலும் இதுபற்றிய வெவ்வேறு போதனைகள் இருந்தபோதும், பொதுவாக எல்லோருமே இந்த உச்சகட்ட அசாதாரண அனுபவத்தின் அடையாளமாக விசுவாசிகள் அந்திய பாஷை யில் பேசுவார்கள் என்கிறார்கள். சிலர் நீங்கள் பரிசுத்த சிரிப்பலையை சில காலத்துக்கு அடைந்திருப்பீர்களானால் உங்களுக்கு இந்த அசாதாரண அனுபவம் கிடைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். வேறு சிலர், உங்களுக்கு அந்நிய பாஷை கிடைக்காதிருப்பதற்குக் காரணம் நீங்கள் உள்ளத்தில் ஒருவகைத் தேக்கத்தைக் கொண்டிருப்பது தான், அது முற்றாக நீ்க்கப்படு மானால் அநநி்ய பாஷை கிடைத்துவிடும் என்கிறார்கள். இவர்கள் வெஸ்லி யன் பூரணத்துவப் போதனையைப் போல நம்மைப் ‘பரிசுத்தப்படுத்தக் கூடிய ஞானஸ்நான அக்கினிக்கு’ முக்கியத்துவம் தராமலும், பழைய பெந்தகொஸ்தே போதனையாளர்கள் சொல்வதைப் போல ‘வல்லமையின் ஞானஸ்நானத்திற்கு’ முக்கியத்துவம் தராமலும் மாறாக அதிக ‘ஆனந்த ஸ்தோத்திரம் செலுத்தக்கூடிய ஞானஸ்நான’ அனுபவத்திற்கு முக்கியத்து வம் கொடுத்து விளக்குகிறார்கள். பொதுவாக இவர்கள் மத்தியில் காணப் படும் போதனைகளையே நான் விளக்க முயன்றாலும் சரியாகத்தான் அவர் களுடைய போதனைகளை இங்கே தந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
நான்காவதாக, ‘உயர்வான வாழ்க்கை’ (Higher Life) என்று அழைக்கப் படுகின்ற ஒரு போதனை தனக்குள் வெவ்வேறான பல பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இப்பிரிவுகளின் பொதுவான போதனையாவது: நீங்கள் சாதாரணமாக மனந்திரும்பி இருக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமாக கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கிறீர்கள். சாதாரணமாக ஆவியிலே மறுரூபமாக் கப்பட்டீர்கள். அப்படியிருக்கும் நிலைமையில் நீங்கள் அவரிடம் முழுவது மாக சரணடைந்து அவரில் நம்பிக்கை வைக்க வேண்டிய கட்டத்திற்கு வருகிறீர்கள். ஓர் உச்சகட்ட அனுபவத்தின் மூலம் கிறிஸ்து உங்களிலும், நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் வாழ உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்கும் போது கிறிஸ்து உங்களில் வாழுகின்ற அனுபவத்தை அடைகிறீர்கள். பொதுவாக இந்த உச்சகட்ட அனுபவத்தை அடைய அந்நிய பாஷையிலே பேசுவதோ அல்லது பரிசுத்த சிரிப்பலையை அனுபவிப்பதோ அல்லது குதிப்பதோ, கத்துவதோ அவசியமில்லை. ஆனால், இந்த அனுபவத்தின் மூலமாக நீங்கள் பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு புதிய வல்லமையைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். இந்தப் ‘உயர்வான வாழ்க்கை’ போதனை பரிசுத்த வாழ்க்கையை கிறிஸ்தவர்கள் மிகவும் அக்கறையோடும் கவனத்தோடும் வாழ்வதற்கு வல்லமையை அடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஐந்தாவதாக, பழைய போதனைகளின் அம்சங்களையும், புதிய அம்சங்களையும் தன்னில் கொண்ட இன்னுமொரு போதனை இருக்கிறது. இப்போதனை கிறிஸ்தவ நிச்சயத்துவத்துக்கு முக்கியம் கொடுக்கிறது. இது ‘பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுதல்’ (Sealing of the Holy Spirit) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக பியூரிட்டன்களில் தொமஸ் குட்வின் போன்ற சிலர் இதை விளக்கியிருக்கின்றனர். நம் காலத்தில் சில பிரசங்கிகள் இப்போதனையை ஆணித்தரமாக நம்பி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி விளக்கியிருக்கின்றனர். இந்தப் போதனையின்படி மறுபிறப்பையும் மனந்திரும்புதலையும் அடைந்த பிறகு அதற்கு அடுத்த கட்டமாக ஓர் உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை கிறிஸ்தவர்கள் அடைந்து அதன் மூலமாக தன்மையில் உயர்ந்ததொரு கிறிஸ்தவ நிச்சயத்துவத்தை ‘பரிசுத்த ஆவியின் முத்திரையிடுதலின்’ மூலமாக அடைகிறார்கள். (சிலர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியின் முத்திரையிடுதலும் ஒரே போதனையை விளக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் என்று விளக்குகிறார்கள்.) இந்த அனுபவம் ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய சாட்சியத்திற்கும் அனுபவத்திற்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அந்தக் கிறிஸ்தவனால் சிறப்பாக கிறிஸ்துவுக்கு பணிபுரிய முடிகிறது என்பது இந்தப் போதனையின் கருத்து.
மேலே கண்ட ஐந்து முக்கிய போதனைகளில் பல கிளைப் போதகங் களும் இருக்கின்றன. ஆனால் அவைகளில் இவையே பிரதானமானவை. பொதுவாக இப்போதனைகள் அனைத்தும் ஒரு மனிதனின் ஆவியின் மறுபிறப்புக்கும், மனந்திரும்புதலுக்கும் பிறகு அவன் ஓர் உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை அடைய முடியும் என்று வேதம் வாக்குத் தத்தத்தின் மூலம் விளக்குகிறது என்கின்றன. சிலர் வேதம் அதைக் கட்டளையிட்டு விளக்குவதாகவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு அது முக்கியமானதென்று போதிக்கிறார்கள்.
இந்தப் போதனைகள் அனைத்திலும் காணப்படும் பொதுவான அம்சம் யாது?
(1) இப்போதனைகளின்படி மறுபிறப்பும் (Regeneration), மனந்திரும்பு தலும் (Conversion) சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்குப் போதுமானதல்ல என்ற நிலையை உருவாக்குகின்றன. சிலர் ‘வெறும்’ மனந்திரும்புதல் மட்டும் போதாது என்கின்றனர். இந்தப் போதனை பின்வறுமாறு அமைகிறது: ‘இப்போது நீங்கள் கிறிஸ்தவர்கள், நீங்கள் மீட்கப்பட்டீர்கள். பெற்று இருக்கிறீர்கள். நல்லது! ஆனால் நீங்கள் உண்மை யுள்ள ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அதாவது வல்லமையோடும், கிருபையினாலும், மற்றவர்களுக்கு பிரயோஜனமாகவும், சாட்சியின் நிச்சயத்தோடும் வாழவேண்டுமானால் உங்களுக்கு இந்த உன்னதமான, மதிப்பிற்குரிய, மகிமைக்குரிய, பரிபூரண வாழ்க்கை வாழ்வதற்குரிய கிருபையின் அனுபவம் தேவைப்படுகிறது. உண்மைதான்! நீங்கள் மனந்திரும்பியிருக்கிறீர்கள். அதை நாங்கள் ஒத்துக்கொள்ளுகிறோம். ஆனால், இந்தப் புதிய அனுபவத்தை அடையாமல் வெறும் மனந்திரும்பு தலால் மட்டும் பயனில்லை. ஆவியின் மறுபிறப்பும், மனந்திரும்புதலும் நீங்கள் மரிப்பதற்கு உதவும்; ஆனால், வாழ்வதற்கு அவை உங்களைத் தயார் செய்ய முடியாது. நீங்கள் மெய்யாகவே வாழவேண்டுமானால் இந்த அசாதாரண அனுபவம் அவசியம்.
(2) மனந்திரும்புதலுக்கு பிறகு ஓர் அனுபவத்தை நாம் தேடி அடைய வேண்டும். அந்த அனுபவம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது சில வழிமுறைகளைப் பின்பற்றுவதனாலோ கிடைக்கும்.
இத்தகைய போதனைகளை அளிக்கின்ற சிலர், தேடாமலேயே இந்த அசாதாரண அனுபவம் மனிதர்களுக்கு கிடைக்குமானாலும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அதைத் தேடிக் கண்டு பிடிப்பது நமது கடமை என்று விளக்குகிறார்கள். இந்தப் போதனையை அளிக்கும் வெவ்வேறான குழுக்களும் இந்த அனுபவத்தை அடைவதற்கான வெவ்வேறான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறுகின்றன. ஒவ்வொரு குழுவும் வித்தியாசமான நிபந்தனைகளைக் கொண்டிருக்கின் றன. ஆனால், இவையெல்லாமே பொதுவாக சொல்லுவது என்னவென் றால் சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த அசாதாரண அனுபவத்தை அடையும்வரை அனைவரும் அதை அடைய முயற்சிக்க வேண்டுமென்பதுதான்.
(3) இந்த அனுபவத்தை அடைந்த விசுவாசிகளுக்கு இந்த அனுபவம் அவர்களுடைய உள்மனதில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதை அவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். பலவீனமான போதனை யொன்றின் மூலம் ஒருவர் மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் விசுவாசத்தையும் அடைந்திருக்கலாம். பலவீனமான விசுவாசத்தைக் கொண்டிருப்பவனும் தன் விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பை அளிக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரைப் பிடித்துக் கொண்டால் கர்த்தரின் சட்டரீதியிலான அறிவிப்புகளான நீதிமானாகுதலையும், மகவேட்பையும் அவ்வேளையே அடையலாம். இது பவுலைப்போல நீதிமானாக்குதலைப் பெற்றும், ஆகஸ்தீனைப்போல மகவேட்பை அடைந்து மிருக்கும் ஓர் ஆணாலோ, பெண்ணாலோ, பையனாலோ அல்லது பெண் பிள்ளையாலோ சாத்தியமாகும். இருந்தபோதும் தெளிவான போதனை யின்மையால் அவர்கள் அதை உணர்ந்திராமல் இருந்துவிடக்கூடும். ஆனால், இந்த அசாதாரண அனுபவத்தைப் பொறுத்த வரையில் அதை அடைந்தவர்கள் ஒருபோதும் அதை உணராமல் இருந்து விட முடியாது என்று இந்தப் போதனையை அளிப்பவர்கள் விளக்குகிறார்கள். இது உள்மனதில் தெளிவாகப் பதியப்பட்டிருப்பதால் இந்த அனுபவத்தை அடைகின்ற அனைவரும் அதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் என்கிறார்கள் இப்போதனையாளர்கள்.
பழைய பெந்தகொஸ்தே போதனையாளர்களைப் பொறுத்தவரையில், இந்த அசாதாரண அனுபவத்தைப் பெற்றிருக்கின்ற ஒருவர் அந்நிய பாஷை பேசுவதன் மூலம் இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியும் என்றார்கள். இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண் டிருக்கிறோமா என்பதை ஒருவர் அறிந்துகொள்ள இத்தகைய தெளிவான வழிமுறை இருப்பதாக அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஆனால், அசாதாரண அனுபவத்தின் அவசியத்தைப் போதிக்கும் ஏனையோரும், அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள எந்த வழிமுறைகளையும் தராதவர்களும் பழைய பெந்தகொஸ்தே போதனையாளர்களைவிட நம்ப முடியாதளவுக்கு மிகவும் கொடுமை யானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய விளக்கத்தைக் கவனியுங் கள்: ‘இந்த அனுபவம் எனக்குத் தேவை. இதில்லாமல் நான் சாதாரண கிறிஸ்தவனாக இருந்தால், இதை அடையாமல் நான் சிறந்த கிறிஸ்தவனாக வரவே முடியாது. இதை எப்போது அடைவேன் என்று எனக்கு எப்படித் தெரியும்? என்று ஒருவர் கேட்பாரானால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் அசாதாரண அனுபவ போதனையாளர்கள் அனைவரும், ‘உங்களுடைய உள்மனதில் அது நிச்சயம் பதியப்படுவதால் அது உங்களுக்கு நிச்சயம் தெரியாமல் போகாது’ என்று மட்டுமே பதிலளிக்கின்றனர்.
(4) இந்தப் போதனை, வேதத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு அவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கொடுக்கும் விளக்கங் களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. சகல உச்சகட்ட அசாதாரண அனுபவப் போதனைகளும் வேதத்தின் அடிப்படையில் அமைந்திருப்ப தாகத்தான் மார்தட்டிக் கொள்ளுவதோடு, வேதப்பகுதிகளைப் பயன்படுத் தித்தான் விளக்கங்களையும் அளிக்கின்றன. உதாரணமாக வெஸ்லியன் ‘பூரணப் பரிசுத்தப்’ போதனை அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைப் பிரயோகம் ‘இருதயப் பரிசுத்தம்’ என்பதாகும். இதை அவர்கள் அப்போஸ். 15:9ல், காணப்படும் “விசுவாசத்தால் அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி” என்ற வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விளக்குகிறார்கள். இந்த வாக்கியம் அது அப்போஸ். 15ல் காணப்படும் சந்தர்ப்பத்தின் (context) அடிப்படையில் கிருபையின் இரண்டாவது கிரியைப் பற்றி விளக்காமல், அதாவது இரட்சிப்பிற்குப் பிறகு ஒருவர் தன் வாழ்வில் அடையக்கூடிய அசாதாரண உச்சகட்ட அனுபவத்தைப் பற்றிக்கூறாமல் கொர்நேலியுவி னுடைய வாழ்க்கையிலும் அவனுடைய நண்பர்களுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் நிகழ்த்திய முதலாவது கிருபையின் கிரியையைப் பற்றி விளக்குகிறது. அத்தோடு தங்களுடைய பூரண பரிசுத்தமாகுதல் போதனையை இவர்கள் 1 தெசலோனிக்கேயரில் காணப்படும் “உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23) என்ற வசனத்தைப் பயன்படுத்தி விளக்குகிறார்கள். ‘கிறிஸ்துவில் மீட்கப்பட்ட வாழ்வு’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘உயர்தர வாழ்க்கை’ பற்றிய போதனைகளையளிக்கும் சிலர் ரோமர் 5:10ல் வரும் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” என்ற வசனத்தை தங்கள் போதனைக்கு ஆதாரமாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் உச்சகட்ட அர்ப்பணிப்பால்தான் வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை கிடைக்கிறது என்பதை இந்த வசனத்துக்குள் திணித்து இதை “கிறிஸ்துவில் மீட்கப்பட்ட வாழ்வு” என்ற பெயரில் ஒரு முழு இறையியல் போதனையையே உருவாக்கிப் போதிக்கிறார்கள்.
சடுதியாகக் கிடைக்கக்கூடிய உச்சகட்ட அசாதாரண அனுபவப் போதனையாளர்கள் அனைவரிலும் காணப்படும் பொதுவான அம்சம் என்னவென்றால், அவர்கள் எல்லோருமே வேதத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தெரிந்துகொண்டு அவற்றை அவை காணப்படும் சந்தர்ப்பத் தின்படி விளக்காமல் சந்தேகத்துக்குரிய முறையில் கையாளுவதே.
இந்தப் போதகம் வேத அடிப்படையில் அமையவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்ளுவது?
எந்த ஒரு கிறிஸ்தவரோ அல்லது சபையோ உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை அடைந்தால்தான் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், சபையிலும் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று புதிய ஏற்பாட்டில் ஒரு வசனம்கூட விளக்குவதில்லை.
(1) திருச்சபையில் காணப்பட்ட பிரிவினையை எண்ணிப் பாருங்கள். கொரிந்து சபையில் பிரிவினை காணப்பட்டது. குலோவேயாளின் வீட்டிலிருந்த எவரோ கொரிந்து சபையிலிருந்த பிரிவினையைப் பற்றிப் பவுலின் காதில் போட்டு வைத்திருந்தனர். “என் சகோதரரே, உங்களுக் குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது” (1 கொரி. 1:11) என்கிறார் பவுல். எப்படி இந்த பிரிவினை உண்டாயிற்று என்று அவர் விளக்குகிறார். ஒரே அவயவங்களாய் இருக்கிற நீங்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து மாம்சத்தின் கீழானவைகளைப் பற்றி சிந்திக்கிறது என்ன? “இந்த விசுவாசம் எல்லோருக்கும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு எல்லோரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட் டோம்” (1 கொரி. 12:13) பரிசுத்த ஆவியானவருக்குள் நீங்கள் ஒரே அனுப வத்தை பெற்றிருக்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் காணப்படுவதாக இங்கே விளக்கப்படவில்லை. மனந்திரும்பிய சிலரைப் பற்றியும், மனந்திரும்பி பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த இன்னொரு பிரிவைப் பற்றியும் நாம் வாசிப்பதில்லை. மனந்திரும்பிய ஒரு பிரிவைப் பற்றியும், மனந்திருந்தி ‘உயர்தர வாழ்க்கையை’ வாழ்கிற இன்னொரு பிரிவைப் பற்றியும் வாசிக்கவில்லை. வெறுமனே கிறிஸ்தவர்களாக இருந்த ஒரு பிரிவைப் பற்றியும், அக்கினியின் ஞானஸ்தானத்தைப் பெற்றிருந்த இன்னொரு பிரிவைப் பற்றியும் வாசிப்பதில்லை. பவுலின் நிருபத்தில் கொரிந்தில் இரண்டு வகை கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற போதனைக்கே இடமில்லை.
பவுல் சபைக்கு எழுதியது என்னவென்றால் ‘இயேசு கிறிஸ்துவுக்குள் நீங்கள் பரிசுத்தமாக்கபட்டீர்கள்’, என்று முழு சபை அங்கத்தவர்களின் இரட்சிப்பின் அனுபவத்தை விளக்கி, ‘இப்போது உங்களுக்குள்ளே அநேக பிரிவுகள் உண்டு’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். பரிசுத்தமடைந்த அவர்கள் மத்தியில் இருந்த பிரிவினையை பவுல் விளக்குகிறார். சிலர் தாங்கள் பவுலை சேர்ந்தவர்கள் என்றும், வேறு சிலர் தாங்கள் பேதுருவின் கூட்டத்தார் என்றும் கூறியதோடு அவர்களுக்குள் தங்களை மட்டுமே மெய்யான கிறிஸ்தவர்களாகக் கருதிய சிலர் “நாங்கள் கிறிஸ்துவை சேர்ந்தவர்கள்”, நாங்கள் மட்டுமே கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக் கிறோம் என்றும் கூறினார்கள். ஆனால், பவுல் இந்தவிதமான பிரிவுகளுக் கெல்லாம் இடங்கொடுக்காமல் அவர்கள் எல்லோரையும் கிறிஸ்துவுக்குள் சமமாகவே பார்க்கிறார்.
பவுல் இந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்தார்? உங்கள் மத்தியில் இருக்கும் இந்த பிரிவுக்குக் காரணம், நீங்கள் இதுவரை ஆவியில் ஞானஸ்நானம் பெறாமல் இருப்பதும், உங்களுக்குள் இருக்கும் பாவத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பதும் தான் என்று சொன்னாரா? அவர்கள் மத்தியில் இருந்த ஆழமான பிரிவினையைத் தீர்ப்பதற்கு அவர் எத்தகைய ஆலோசனையைக் கொடுத்தார்? அவர்களிடம் இருந்த ஆவியின் ஆசீர்வாதங்களுக்கு மேலாக எதையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக அவர்கள் கிறிஸ்துவுக்குள் என்னவாய் இருக்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவுக்குள் எதை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும்படித்தான் கூறினார். பவுல் சொல்லுகிறார், “கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?” “பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” அவர்கள் எதைக் கடவுளிடம் பெற்றிருக்கிறார்கள் என்றும், எதை வாழ்க்கையில் அடைந்திருக்கிறார்கள் என்றும்தான் பவுல் சிந்திக்கச் சொன்னார். எவைகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், அவர் கள் கிறிஸ்துவுக்குள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உணர்கிறபோது அந்தப் பிரிவினை பஞ்சாய்ப் பறந்துவிடும். நான் சொல் வதைப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? ‘நீங்கள் உங்களிடம் இருப்பதற்கு மேலாக சில புதிய விஷயங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் சொல்லவில்லை, கிறிஸ்துவுக்குள் நீங்கள் எந்த நிலையில் இருக்கி றீர்கள் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தான் பவுல் சொல்லுகிறார்.
(2) ஒழுக்கக் குறைபாடு - வேசித்தனம் செய்த கிறிஸ்தவர்கள் கொரிந்து சபையில் இருந்ததாக பவுல் சொல்லுவதை அவருடைய கடிதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளுகிறோம். கொரிந்தியர்களில் பலர் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் கீழான அனுபவத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எவருக்காவது அக்கினியின் ஞானஸ்நானம் தேவைப்பட்டிருக்குமானால், செய்து வந்த பாவங்களில் இருந்து முற்றாகக் கழுவியெடுக்கப்பட இவர்களுக்குத்தான் அது முக்கியமாகத் தேவைப்பட்டது. கிறிஸ்தவர்கள் விபச்சாரிகளை அதுவும் கோவில் விபச்சாரிகளை நாடிப் போய்க்கொண் டிருந்தார்கள். இந்த பயங்கரமான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பவுல் எத்தகைய அனுகுமுறையைக் கையாண்டார்? அவர் எழுதுகிறார், “வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப் பண்ணுவார். சரீரமோ வேசித்தனத் திற்கல்ல கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். தேவன் கர்த்தரை எழுப்பினாரே நம்மையும் தமது வல்லமையினால் எழுப்புவார். உங்கள் சரீரங்களை கிறிஸ்துவின் அவயவங்களென்றும் அறியீர்களா? அப்படியிருக்க நாம் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்க ளாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. அப்படியே கர்த்தரோடு இசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்க ளல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:13&-20).
பவுல் என்ன செய்கிறார் என்று பார்த்தீர்களா? இத்தகைய முள்ளைப் போன்ற மோசமான ஒழுக்கக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு கொரிந்தியர் களுக்கு தரத்தில் வேறுபட்ட, உயர்ந்ததொரு கிருபையின் அனுபவம் அவர்களுக்கு தேவைப்பட்டதாக பவுல் கூறவில்லை. உங்களுடைய விபச்சாரம் செய்யத்தூண்டும் இருதயங்களைக் கழுவி சுத்திகரிக்க ஆவியின் ஞானஸ்நானம் தேவைப்படுகிறது என்று கூறவில்லை. பவுல் அத்தகைய ஆலோசனைகளைத் தரவில்லை. மாறாக அவர் சொல்லுகிறார், ‘உங்களுக்கு தெரியாதா. . . .?’ என்று கேட்கிறார். இன்னொரு வகையில் இதை விளக்கினால், ‘நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? என்று சிந்தியுங்கள், நீங்கள் யார் என்பதை அறியீர்களா?’ என்கிறார். நீங்கள் யார் என்பதை நினைத்துப் பாருங்கள், கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் வரும்படி மனந்திரும்பு தலும், விசுவாசமும் கிடைத்தபோது உங்களுக்கு ஏற்பட்டிருந்த உறவு முறைகளை எண்ணிப் பாருங்கள். அது மெய்யான உறவுமுறை: விசுவாச முள்ள கர்த்தரினால் நீங்கள் அழைக்கப்பட்டு கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கையாகிய ஐக்கியத்தை அனுபவிக்கிறீர்கள். அது மெய்யான ஐக்கியம் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? விபச்சாரியின் வீட்டிற்குப் போகிறபோது நீங்கள் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு போகிறீர்கள். கிறிஸ்து வின் அவயவங்களை எடுத்து விபச்சாரியின் அவயவங்களாக மாற்றுவீர்களா? உங்களுடைய சரீரம் விலைகொடுத்து வாங்கப்பட்டிருக் கிறது என்பதை அறியீர்களா? கிறிஸ்து இரத்தம் சிந்தி இறந்தபோது, கர்த்தரின் கோபாக்கினி சிலுவையில் இருந்த கிறிஸ்து மேல் வந்திறங்கிய போது அவர் அந்தச் சிலுவையில் உங்களை விலைகொடுத்து வாங்குவதற் காக மரித்தார். உங்களுடைய கரங்கள், உங்களுடைய கால்கள், உங்களு டைய உடலுறவுக்கு தேவைப்படும் அவயவங்கள் அனைத்தும் அவரால் விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. ஓ கொரிந்தியர்களே! உங்களுக்கு அது தெரியவில்லை, அதை உங்களால் உணர முடியவில்லையா?’
தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சில கிறிஸ்தவ அனுபவங்களை அடைய முடியாமல் போனதால்தான் கொரிந்தியர்கள் இத்தகைய கொடூர மான பாவ வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்று பவுல் ஒரு தடவையாவது சொல்லவில்லை. அவர்களைப் பார்த்து பவுல் சொல்லுகிறார்: இதுதான் உண்மை - நீங்கள் கிறிஸ்துவோடே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார். நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள். இப்போது உங்களுக்குத் தேவை இன்னு மொரு புதிய அனுபவமல்ல. நீங்கள் யார் என்பதையும், உங்களுக்குள் நடந்தும், உங்களுக்குக் கிடைத்துமிருப்பது எது என்பதை அறிந்து உணர்ந்து அச்சத்தியங்களின்படி வாழவேண்டியதே நீங்கள் செய்ய வேண்டியது என்கிறார் பவுல். சபையில் காணப்பட்ட அத்தனைப் பிரச்சனைகளையும் கொரிந்தியருக்கு பவுல் எழுதிய முதலாம் நிருபத்தில் வாசித்துப் பாருங்கள். தொடர்ந்து மேலே நான் சொன்னதைத் தான் பவுல் கொரிந்தியர்களைச் செய்யும்படியாகக் கேட்டிருக்கிறார். புதிய ஏற்பாட்டின் அத்தனை நிருபங்களிலும் இதைத் தான் நாம் வாசிக்கிறோம்.
விசுவாசிகள் தங்களுடைய வாழ்க்கையில் அசாதாரண அனுபவங் களை அடைவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்லுவது வேதத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கை சரிதங்களையும் மறுதலிப்பது போலாகிவிடும். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அசாதாரண அனுபவங்களை அடையக்கூடும். அத்தகைய சில அனுபவங் கள் வாழ்க்கையின் மிகக் குறுகிய காலப்பகுதியில் அவர்கள் இதற்கு முன் அறிந்திராத ஆவிக்குரிய அனுபவத்தையும் வல்லமையையும் அனுபவிக்கும் படிச் செய்யலாம். அதைப் பற்றி நான் தர்க்கம் செய்யவில்லை. கிறிஸ்த வர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அசாதாரண அனுபவங்களை ஒருபோதும் அடையப்போவதில்லை என்று நான் சொல்வேனானால் அது முட்டாள்தனமாகிவிடும். நான் என்ன சொல்லுகிறேனென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருவர் வாழ்வதற்கு ஆவிக்குரிய உச்சகட்ட அசாதாரண அனுபவத்தை தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் பெற்றிருக்க வேண்டுமென்று கட்டளையாகவோ வாக்குத்தத்தமாகவோ வேதத்தின் எந்தவொரு பகுதியிலாவது நாம் வாசிப்பதில்லை என்பதுதான். இந்த இரண்டிற்குமிடையில் மாபெரும் இடைவெளி இருக்கின்றது. புதிய ஏற்பாடு முழுவதையும் நீங்கள் வாசித்துப் பாருங்கள். அங்கே விளக்கப் பட்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும், ஒழுக்கக்கேட்டுப் பிரச்சனை, உறவுப் பிரச்சனை, மிஞ்சியிருக்கும் பாவத்தினால் ஏற்படும் பிரச்சனை, உலகத்தால் ஏற்படும் பிரச்சனை என்று எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும், அப்போஸ்தலர்கள் இந்தப் பிரச்சனைகள் தீர்வதற்கு அசாதாரண அனுபவமொன்றைக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டுமென்று ஒருபோதும், ஓரிடத்திலாவது கட்டளையிட்டோ, வாக்குத்தத்தமளித்தோ போதிக்கவில்லை.
அப்போஸ்தலர் 2, 8, 10, 19 ஆகிய அதிகாரங்களில் காணப்படும் ‘நான்கு பெந்தகொஸ்தேக்கள்’ யாவை என்பதைக் கவனிப்போம்? இந்த அதிகாரங்களை முழுதுமாக என்னால் இந்தப் பகுதியில் விளக்குவது கடினம். இருந்தபோதும் இது பற்றி ஆழமாக அறிந்துகொள்ள விரும்பு கிறவர்கள் முடிந்தால் புரூனர் என்பவர் எழுதியிருக்கும் நூலைப் பெற்று வாசிப்பது பலன் தரும். (A Theology of the Holy Spirit, F. D. Bruner, Grand Rapids 1970) இந்நூலின் ஒருசில இடங்களில் வேதத்தைப் பற்றிய புரூனரின் ‘பார்தியன்’ கருத்துகள் காணப்படுகின்றன. அதில் எனக்கு உடன் பாடில்லை. அத்தோடு ஞானஸ்நானத்தைப் பற்றி அவருடைய கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. இந்த இரண்டு குறைபாடுகளைத் தவிர அப்போஸ்தலர் நடபடிகளின் அதிகாரங்களை புரூனர் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ‘நான்கு பெந்தகொஸ்தேக்களின்’ முக்கியத்துவம் பற்றி மறுத்துக்கூற வழியில்லாதபடி புரூனர் விளக்கமளித்திருக்கிறார் என்றே சொல்வேன்.
ஒரு கிறிஸ்தவன் இன்றை விட நாளை அதிகம் ஆவியால் நிரம்ப வேண்டும் என்று ஜெபிப்பது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. இல்லவே இல்லை! இன்றிருப்பதை விட நாளை அதிகமாகவும், ஆழமாகவும், தரத்தில் கூடியும் கிறிஸ்துவைப் பற்றிய ஞானத்தில் கிறிஸ்தவன் நிரம்பியிருக்கும்படி கிறிஸ்தவன் ஜெபிக்கக் கூடாதென்றா நான் சொல்லுகிறேன். இல்லை! அநேகரைக் குழப்பியும், பலரைப் பயித்திய மாகவும் ஆக்கிவிடுகின்ற, கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு நிச்சயம் அவசியம் என்று போதிக்கப்படுகின்ற சகலவிதமான சடுதியான உச்சகட்ட அசாதாரண அனுபவங்களையும் நான் முழு முற்றாக நிராகரித்தும் எதிர்த்தும் ஆணித்தரமாகப் போராடியபோதும், “நான் ஐசுவரியவா னென்றும், எனக்கு ஒரு குறையுமில்லையென்றும்” சொல்லுகின்ற லவோதிக்கேயரின் ஆவியைக் கொண்டிருப்பவர்களையும் நான் அடியோடு அருவருப்போடு வெறுக்கிறேன். இவர்கள், நாங்கள் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் கொண்டிருக்கிறோம், ஆகவே, இனி நாங்கள் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்று சொல்லுகிறார்கள். அத்தகைய ஆவியையும் புதிய ஏற்பாடு அடியோடு நிராகரிக்கிறது. கிறிஸ்துவோடு நமக்கு ஐக்கியமிருந்தாலும், கர்த்தர் “கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருந்தாலும்” (எபேசியர் 1:3) இந்த ஆசீர்வாதத்தை முழுமையாக கிறிஸ்தவ வாழ்வில் அடைந்து அனுபவித்துவிடவும், அதன் ஓரத்தையாவது தொட்டுவிடவும் நாம் வாழ்நாள் முழுவதும் கடமைப் பொறுப்போடு உழைக்கிறோம். நமக்கு இப்போது இந்த ஆசீர்வாதம்; இன்னும் வரவேண்டியதும், கிடைக்க வேண்டியதும் எண்ணி முடியாது. அலட்சியமாயுள்ள ஆவி கடவுளுக்கு அருவருப்பானது. ஏனென்றால், ‘நான் ஐசுவரியவானென்றும், எனக்கு ஒரு குறையுமில்லையென்றும சொல்லுகின்றவர்களை’ இயேசு கிறிஸ்து ‘நான் உன்னை வாந்திபண்ணிப்போடுவேன்’ என்கிறார்.
ஆவியின் அனுக்கிரகத்தை நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக ஜெபம் பண்ணுவது அவசியம். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்றார் இயேசு (லூக்கா 11:13). எபேசியர் 1ல் பவுல் எழுதுகிறார், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். . .” பவுலின் இந்த ஜெபத்தில் காணப்படும் இறையியல் போதனையைப் பாருங்கள். நமக்குப் பெரும் இரட்சிப்பை அளித்திருக்கிற கர்த்தருக்கு பவுல் நன்றி கூறுகிறார். பிதா கிருபையினால் நம்மை அநாதி காலத்துக்கு முன் தேர்ந்தெடுத்ததற்கும், குமாரன் மீட்பின் கிருபையினால் நம்மை மீட்டதற்கும், மீட்கப்படும் நாளுக்கென்று பரிசுத்த ஆவியானவர் நம்மை முத்திரையிட்டதற்கும் கர்த்தருக்கு பவுல் நன்றி கூறுகிறார். அதேவேளை 17&19ம் வசனங்களில், ‘ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்ன தென்றும், அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்’ என்கிறார் பவுல். அவர் சொல்லுகிறார், நீங்கள் இதையெல்லாம் பெற்று விட்டீர்கள். ஆனாலும், கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு இருக்கிற சகல ஆசீர்வாதங்களின் வல்லமையும் ஆழமாக அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் நீங்கள் அறிய வேண்டும் என்கிறார் பவுல். இதுபோதாதென்று அவர், 3ம் அதிகாரத்தில், “நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்காலிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலை பெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடச் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், அழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (எபேசியர் 3:15&-19) என்று ஜெபிப்பதற்கே கடினமானவைகளுக்காக ஜெபிக்கிறார்.
இந்த ஜெபத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கெரிஸ்மெட்டிக் அனுபவம் கிடைக்க வேண்டும் என்று பவுல் ஜெபிக்கவில்லை; அவர்களுக் குள் கிருபையின் இரண்டாம் கிரியை (second work of grace) நிகழ வேண்டும் என்று ஜெபிக்கவில்லை. ஏற்கனவே நான் விளக்கியுள்ள ஐந்து விதமான அனுபவங்களை அவர்கள் அடைய வேண்டும் என்று பவுல் ஜெபிக்கவில்லை. கிறிஸ்துவில் காணப்படும் முழுமையான கிருபையை அவர்கள் முழுதும் புரிந்து அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்றும், கிறிஸ்துவில் அவர்களுடைய ஆவிக்குரிய அறிவு விரிந்து பரந்து வியாபிக்கவேண்டும் என்றும், அந்த அனுபவங்களில் அவர்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்றும் தான் பவுல் ஜெபிக்கிறார்.
மறுபிறப்பையும், மனந்திரும்புதலையும் கிறிஸ்துவுக்குள் அடைந்தபிறகு நாம் வாழ்க்கையில் எந்தவிதமான சடுதியான உச்சகட்ட அசாதாரண அனுபவம் எதையும் அடைய வேண்டும் என்று புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கவில்லை. அதேநேரம், மிகவும் தெளிவாக நல்ல ஆத்மீக வளர்ச்சியுள்ள ஆத்துமாக்களெல்லாம் இயேசுவின் கிருபைக்காக தாகத்தோடும், பசியோடும், ஆவலோடும் இருப்பதோடு அதைத் தேடியும், அதற்காக கெஞ்சியும், முன்னேறிச் செல்லும் என்பதை அது தெளிவாக விளக்குகிறது.
சில சமயங்களில் நான் ஆதங்கத்தோடு “ஆ! ஆண்டவரே, மக்கள் இந்த வேத சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவார்களா? என்று ஜெபத்தில் கேட்பதுண்டு. ஏனெனில், மக்கள் எப்போதும் சடுதியான உச்சகட்ட அனுபவத்தை நாடிப்போகும் ஒருவித கிறிஸ்தவத்தை நாடிப்போகிறார்கள் அல்லது ஜீவனில்லாத எந்தவிதமான கிருபையின் அனுபவத்திற்கும் இடம் கொடுக்காத, உப்புச்சப்பில்லாத, உறைந்த பனிபோல் இருக்கும் ஒரு வகை கிறிஸ்தவத்திற்கு இடம் கொடுத்துவிடுகிறார்கள். சில வேளைகளில் இந்த இரண்டாவது வகை அநியாயம் ‘சீர்திருத்த கிறிஸ்தவம்’ என்ற பெயரில் இருந்துவிடுகிறது. என்னைக் கேட்டால் உண்மையில், சிந்தனையில் குளறு பாடிருந்து தனக்கு இரண்டாவது கிரியை கிடைத்திருக்கிறது என்று கூறினாலும், கனிந்த இருதயத்தோடு கர்த்தருக்காகத் தாகத்தோடு இருக்கின்ற ‘வெஸ்லியனோடு’ நான் இணைந்திருப்பேனே தவிர பனிபோல் உறைந்து கல்லான இருதயத்தோடு மணித்தியாளக் கணக்கில் உட்கார்ந்து அப்படி யொரு போதனையில்லை என்று வாதிப்பவரோடு இருக்க மாட்டேன்.
5. தெய்வீக சிட்சை
கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடி பின்னிப் பினைந்து காணப்படும் தெய்வீக சிட்சையிலிருந்து தப்பிக்க வழியேயில்லை.
எபிரெயருக்கு எழுதியவர் இதைக் கோடிட்டுக் காட்டுவதைப் பார்க்க லாம். “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துக் கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே. . . . கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைக்கு சொல்லுகிறது போல உங்களுக்கு சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். கர்த்தர் தன்னுடைய கிருபையினால் உங்களைத் தன்னுடைய குடும்பத்தில் இணைத்திருக்கிறார் என்றால், அவர் தான் சிட்சிக்கும் மக்களின் குடும்பத் தில் உங்களைத் தத்தெடுக்கிறார் என்றுதான் அர்த்தம். ‘நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களை புத்திரராக எண்ணி நடத்து கிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்கு கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருப்பீர்களே” தவறான நடத்தையினால் பெற்ற மகனைக் கொண்டிருக்கும் தகப்பன் தான் தன் நிலையைக் குறித்து வெட்கமுறுவான். தன்னுடைய மகனை மகன் என்று வெளிப்படையாக சொல்ல விரும்ப மாட்டான். அந்த மகன் தகப்பனின் சிட்சையை அடையாதவனாக இருப் பான். ஆனால், கர்த்தருக்கு தவறான வழியில் பிறந்த பிள்ளைகள் இல்லை. தன்னுடைய மெய்யான பிள்ளைகளை அவர் சிட்சிக்கிறார்; ஏனெனில் தன்னுடைய பரிசுத்தத்தில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற வைராக் கியத்தை அவர் கொண்டிருக்கிறார். ‘அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக் காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.’ (எபிரெயர் 12:5&8).
கர்த்தரின் மீட்பு நமக்களிக்கப்பட்டிருப்பது நாம் சந்தோஷமாக இருப்பதற்காக அல்ல; நம்மை பரிசுத்தமாக்கவே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ‘தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்’ (ரோமர் 8:29). இந்த வழியிலே அநேக சந்தோஷங்கள் நமக்குக் காத்திருக் கின்றன. ஆனால் இந்த வசனம் நமக்கு சொல்லுவது என்னவென்றால், “எந்த சிட்சையும் இப்போது சந்தோஷம் தராது. என்னுடைய பிள்ளை களில் ஒருவரையும் நான் ஒருமுறை கூட அடித்ததில்லை. ஆனால் ஒரு நாள் நான் அடித்த அடியில் அவன் சமையலறையில் நடனமாடினான்.” ஆமாம்! ஒரு சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷம் தராது.
இந்த அசாதாரண அனுபவம் மட்டும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் 32 பற்களையும், 24 மணி நேரத்தில் 27 மணிநேரம் தினமும் காண்பிக்க முடியும் என்று கூறுவது கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் சாபக்கேடாக இருக்கிறது. சிட்சைக்குள்ளிருக்கும் ஒரு பிள்ளை இருதயத்தில் கசப்போடு வருகிறபோது செயற்கை சிரிப்பை முகத்தில் தாங்கி அவனை வரவேற்பதில் என்ன பலன்? நீ யோபுவினுடைய ஆறுதலாளராகத்தான் இருப்பாய். அவனைப் பார்த்து நீ சொல்லுகிறாய் ‘உன்னுடைய பிரச்சனை என்ன வென்றால் உன்னிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லை, நீ அந்நிய பாஷை யில் உன் அறைக்குள் சென்று ஒருமணி நேரம் உளறிவிட்டால், நீ சந்தோஷ மாயிருப்பாய்’ என்று. யோபுவின் நண்பர்கள் கொடுத்த அறிவுரை இந்த முறையில் பலருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். அதற்கு மாறாக உன்னுடைய இருதயத்தில் பின்வரும் கொள்கை எழுதப்பட வேண்டும். ‘நீ முழுவதும் இயேசுவைப் போல் மாறும் வரை கர்த்த ருடைய சிட்சை என்னும் முள் உன் வாழ்க்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும்.’ ‘கர்த்தர் யாரை நேசிக்கிறாரோ அவனை சிட்சிப்பார் எந்த சிட்சையும் இப்போது மகிழ்ச்சி தராது.’ ‘நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்’ (வெளி. 3:19) என்கிறார் கர்த்தர்.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆண்டவர் எப்போதும் நமது சரீரத்தை மட்டும் சிட்சிப்பவர் அல்ல. நாம் தேவனுடைய சிட்சையை எப்போதும் நமது சரீரப் பாடுகளோடு மட்டும் சம்பந்தப்படுத்தக் கூடாது. தேவனுடைய சிட்சையை நாம் எப்போதும் நம்முடைய பொருளாதார சரீரப் பிரச்சனைகளோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது. அவைகள் சிட்சையாயிருக்கலாம்; இல்லாமலும் போகலாம். என்னைப் பொறுத்தவரையில் எல்லா சிட்சையிலும் மிகவும் கொடியதான சிட்சை என்னவென்றால் ஆண்டவருடைய பிரசன்னம் என்னை விட்டு அகன்றுபோவதுதான். ஜெபிக்கிறபோது அவருடைய ஐக்கியத்தை அறிய முடியாதிருப்பது எத்தனைக் கொடியது. ஓர் உண்மையான கிறிஸ்தவனுக்கு தேவனுடைய தொடர்பு விட்டுப்போகும்போது, ஜெபத்தின் மூலமாய் கிடைக்கும் மகிழ்ச்சியின் இணைப்பு துண்டிக்கப்படும்போது, அவன் மிகவும் அதிக சிட்சைக்குள்ளாய் கடந்து செல்லுகிறான். இதைவிட கசப்பான சிட்சை எதுவும் இல்லையென்றே கருதுகிறேன். ‘ஆ ஆண்டவரே! நான் எங்கே உம்மை வேதனைப்படுத்தினேன். உமது முகத்தை எனக்கு மறையாதேயும் நான் கைவிடப்பட்டிருக்கிறேன். உம்முடைய முகப்பிரகாசத்தை என்மேல் வீசச் செய்யும்.” என்று கூறி உண்மையான கிறிஸ்தவன் தனது இருதயத்தை சரி செய்து கொள்ளுவதற்கு அதுவே போதுமானதாக இருக்கும். சங்கீதப் புத்தகம் இத்தகைய போதனைகளால் நிரம்பி வழிகிறது. கர்த்தரின் சிட்சையிலிருந்து தப்ப வழியே இல்லை என்பதையும், அது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதையும் தேவ பிள்ளையே நீ அறிந்து கொள்.
6. கிருபையின் வாய்க்கால்கள்
கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவன் நியமித்திருக்கும் கிருபையின் சாதனங்களுக்கு இணையான வலிமையுள்ள மாற்றுச் சாதனங்கள் வேறெதுவுமில்லை.
கிருபையின் சாதனங்கள் இரண்டு வகையானவை. (1) தனி நபருக்கும், தனிவாழ்க்கைக்கும் உரியது. (2) பொதுவானதும் சமுதாயத்திற்குரியதுமாகும்.
1. தனி நபருக்கும் தனி வாழ்க்கைக்கும் உரிய கிருபையின் சாதனங்கள். தனி நபருக்கும், தனி வாழ்க்கைக்கும் உண்டான கிருபையின் சாதனங்கள் என்னவென்று உங்களுக்கே தெரியும். இயேசு ஜெபித்ததைக் கேளுங்கள்: ‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17). ‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளு கிறதினால் தானே.’ ‘நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.’ (சங்கீதம் 119:9&-11). இரகசிய ஜெபம்! இரகசியமானதும், அற்புதமானதுமான அந்த ஜெபம், அது எத்தனை மகிழ்ச்சி தரும் பாக்கியம்! ஆவியிலே பலவீனமாயிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? யாக்கோபு சொல்லுகிறார், ‘நீங்கள் விண்ணப்பம் பண்ணமாலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.’ (யாக்கோபு 4:2).
இன்னமும் ஏன் உங்களில் சிலர் பாவத்தில் முடங்கிக் கிடக்கிறீர்கள்? நீங்கள் கர்த்தரிடம் கேட்கவில்லை, ஆகவே நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லை. அந்தப் பாவங்கள் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு கீழாக ஜெபத்தில் கொண்டு வரப்படவில்லை. விடுதலையாக்கும் கிறிஸ்துவின் வல்லமையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. நீ உண்மையாக இருந்து ஜெபிப்பாயானால் உன்னைப் பின் இழுக்கின்ற பாவத்தின் இறுக்கப் பிடிப்பு உன்னை விட்டு அகன்றுவிடும்.
நீ கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேற தேவன் நியமித்திருக்கும் கிருபையின் சாதனங்களுக்கு இணை வேறெதுவுமில்லை. ஆகவே, தனி நபருக்குரிய கிருபையின் சாதனங்களாகிய ஜெபம், வேத வசனத்தைத் தியானித்தல், தற்பரிசோதனை, தேவையான சமயங்களில், அவ்வப்போது செய்ய வேண்டிய உபவாசங்கள், உன்னுடைய பிரச்சனைகள் உச்ச கட்டத்தில் இருக்கும்போது உன்னுடைய மாம்சத்தின் பசியை நிறைவு செய்யாதிருந்து, தேவனது முகத்தை மட்டும் தேடுதல் அவருடைய இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்ட மனச்சாட்சியைக் கொண்டிருத்தல் போன்றவைகளை விட்டுவிடாதே. அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்கமே உனது நோக்கமாயிருக்கட்டும். “இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.” (அப். 24:16).
2. பொதுவான கிருபையின் சாதனங்கள். ‘இவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள்.’ (அப். 2:42). ஐக்கியம், ஜெபித்தல், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்! உன்னுடைய இருதயத்தை திறந்து உன்னுடைய உண்மை நிலையை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லியும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றால், உலகத்திலேயே அது தேவனுடைய பிள்ளைகளிடம் மட்டுமே இருக்க முடியும். ‘நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.’ (1 கொரிந்தியர் 2:12). உன்னுடைய பாரம் என்னவென்றும் எந்த இடத்தில் என்னுடைய தோளை உனக்கு கொடுக்க வேண்டுமென்றும் உன்னுடைய பிரச்சனையை சொல்லா விட்டால் அதை நான் எப்படித் தெரிந்து கொள்ளுவது? வேதம் சொல்லகிறது, ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் என்று’ (காலத்தியர் 6:2). அது ‘அழுகிறவர்களுடனே அழுங்கள்’ என்கிறது (ரோமர் 12:15). உதட்டைக் கடித்து உன்னுடைய துயரங்களைக் காட்ட மறுக்கும் கலாச்சாரத்தை நீ பின்பற்றினால் கர்த்தரின் இந்த வார்த்தைகளை நீ எப்படி நிறைவேற்றப் போகிறாய்? உன்னுடைய துயரங்களை வெளிப் படுத்தாதே என்று வேதம் எங்கே சொல்லுகிறது? அநேக கிறிஸ்தவர்கள் உணர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் அழவேண்டிய நேரத்தில் அழத்தெரியாதவர்களையும், மற்றவர் களோடு இணைந்து துயரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர் களையும் கொண்ட சமுதாயத்தில் வாழ்வதுதான்! என்னுடைய பலன ளிக்கும் பல போதக ஆலோசனைகள் என்னுடைய வாய்வழியில் வந்ததைவிட அழுதுகொண்டிருக்கிற சகோதரனோடும் சகோதரியோடும் உடனிருந்து விட்ட கண்ணீர்கள் மூலமாகத்தான் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவர்களோடு சேர்ந்து நானும் அழுததுண்டு. அவ்வளவுதான் என்னாலே செய்யமுடிந்தது. அவர்களுடைய வேதனையானது வார்த்தைகளாலே தீர்க்க முடியாதது. அதுதான் ஐக்கியம்!
கர்த்தர் நாம் ஜெபிக்கவும், நல்ல சபைகளை நாம் உருவாக்கவும் உதவட்டும். அப்போதுதான் நம் மக்கள் தங்களுடைய தேவைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றத் துடிப்பில் கெரிஸ்மெட்டிக் இயக்கத்தை நாடிப் போகாமல் இருப்பார்கள். கர்த்தர் நமக்குத் தந்திருக்கும் பொதுவான கிருபையின் சாதனங்கள் எவை தெரியுமா? அக்கறை செலுத்தும், அன்பு காட்டும், நம்மோடு சேர்ந்தழும், ஆனந்தப்படும், இணைந்து பணி புரியும், சுவிசேஷத்தை அறிவிக்கும் சரீரமாகிய கர்த்தரின் பிள்ளைகள்தான். அதைத்தான் சபையென்கிறோம். கர்த்தரே இவற்றை நியமித்திருக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்மை உயர வைக்க இவற்றை மீறிய வல்லமையான கிருபையின் சாதனங்கள் வேறில்லை.