திருமறைத்தீபம் 2010 -ம் ஆண்டு நான்காம் இதழ்
1. வாசகர்களே!
2. ஹைப்பர்-கல்வினிஸமும் சுவிசேஷ ஊழியமும்
3. போருக்குப் பின் ஸ்ரீலங்காவில்
4. பிரியாவிடை பிரசங்கங்கள் -5-
5. தாம்பத்திய உறவில் நெருக்கம்
வாசகர்களே!
இந்த வருடத்தின் இதழ்களையெல்லாம் நேரத்தோடு முடித்து அச்சிட்டு அனுப்பி வைக்க கர்த்தர் எங்களுக்கு பேருதவி செய்தார். இந்த ஊழியத்தில் பங்கு கொண்டு பிரதிபலன் எதிர்பார்க்காது தமிழகத்திலும், ஸ்ரீலங்காவிலும் இருந்து எங்களுக்கு துணை செய்து வரும் நல்ல நண்பர்களுக்கு நாம் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். திருமறைத்தீப வாசகர்கள் தொடர்ந்து பத்திரிகைக்கு தந்து வரும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து இதன் மூலம் பயனடைந்து வருவதாக கடிதம் மூலமும், நேரில் சந்தித்தபோதும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். வரப்போகிற வருடத்திலும் விசுவாசத்தோடு இந்தப் பணியை நாம் தொடர தொடர்ந்து ஜெபியுங்கள்.
இந்த இதழில் ஹைப்பர்-கல்வினிஸம் என்ற போதனை கிறிஸ்தவர்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தை விளக்கியிருக்கிறோம். வரலாற்றில் சீர்திருத்த கிறிஸ்தவம் வளருகிறபோதும், கீழடைகிறபோதும் இந்தப் போலிப் போதனை தலைதூக்கிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. கர்த்தருடைய இறையாண்மையை மாசுபடுத்தி அநாவசியத்துக்கு மனிதனை உயர்த்திவிடுகின்ற ஆர்மீனியனிஸத்திடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டால் மட்டும் போதாது. ஹைப்பர்-கல்வினிஸத்திடம் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோட்பாடு சுவிசேஷ ஆர்வத்தை அடியோடு இல்லாமலாக்கி சபையையே சிதைத்துவிடும். புதிதாக சீர்திருத்த போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்கள் இந்தக் கிணற்றில் விழுந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைப் பற்றி விளக்கியிருக் கிறேன். அத்தோடு, சுவிசேஷப் பணியை உயிர்த் துடிப்போடு எவ்வாறு செய்வது என்பதற்குமான விளக்கங்களையும் இந்த ஆக்கத்தில் காணலாம்.
வழமைபோல் தொடர்ந்து அல்பர்ட் என். மார்டினுடையதும், அலன் டன்னினுடையதுமான ஆக்கங்கள் இந்த இதழில் தொடர்கின்றன. அவை உங்களுக்கு பயன்தந்து வருவதறிந்து மகிழ்கிறோம். ஸ்ரீலங்காவில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. அது அங்குள்ளவர்களுக்கு நன்மையில் போய் முடிவது அவசியம். அது பற்றியும் எழுதியிருக்கிறேன். அந்நாட்டுக்காக, முக்கியமாக கிறிஸ்தவ சபைகளுக்காக ஜெபிப்பது அவசியம். புதிய வருடம் வெகு தூரத்தில் இல்லை. காலங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. கர்த்தரின் வருகையும் நெருங்குகிறது. நமது பணிகளை புதிய வருடத்திலும் விசுவாசத்தோடு தொடருவோம்.
- ஆசிரியர்.
ஹைப்பர்-கல்வினிஸமும் சுவிசேஷ ஊழியமும்
(Hyper-Calvinism and Evangelism)
ஹைப்பர்-கல்வினிஸம் என்ற பெயரை அறிந்த சிலர் உங்களில் நிச்சயம் இருப்பீர்கள். இது கர்த்தரின் இறையாண்மை மற்றும் தெரிந்துகொள்ளுதல் ஆகிய போதனைகளைப் பற்றி வேதத்துக்கு முரணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு. பாவிகள் மனந் திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்று சுவிசேஷத்தின் மூலம் பொதுவாக எல்லோருக்கும் அறிவிப்பது தவறு என்று இந்த கோட்பாடு விளக்குகிறது. இதற்கும் வரலாற்று சீர்திருத்தவாத கல்வினிஸத்துக்கும் ஒரு தொடர்புமில்லை. இது கல்வினிஸத்துக்கு எதிரான ஒரு கோட்பாடு. இது பற்றி நான் எழுத வேண்டியது அவசியமா என்று வாசகர்கள் எண்ண லாம். அதற்குக் காரணமிருக்கிறது. நம்மில் புதிதாக கல்வினிஸப் போதனைகளை அறிந்து வருகிறவர்கள் ஹைப்பர்-கல்வினிஸப் பாதையில் போய்விடுகின்ற பெரிய ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், கிறிஸ்தவ சபையின் தலையாய கடமையாகிய சுவிசேஷம் அறிவிப்பதை சபையாக விசுவாசத்தோடு எப்படிச் செய்வது என்பதை விளக்கு வதற்கும் இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.
- ஆசிரியர்.
சுவிசேஷத்தை அறிவிப்பதில் ஆர்வம் காட்டாத திருச்சபைகளையும், தனி நபர்களையும் தமிழினத்தில் இன்று காணாமல் இருக்க முடியாது. சுவிசேஷத்தை அறிவிப்பதில் அநேகருக்கு இருக்கும் ஆர்வத்தை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். உண்மையில் அத்தகைய ஆர்வம் இல்லாம லிருப்பது ஆபத்தானது. சரீரம் மூச்சு விடுவது எந்தளவுக்கு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது திருச்சபை சுவிசேஷத்தை அறிவிப்பது. சிலர் சுவிசேஷத்தை அறிவிக்கத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணமிருக்கிறது. காரணமில்லாமல் எவரும் எதையும் செய்வதில்லை. அவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்க அவசியமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பெருந் தவறானாலும் அதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம். அக்காரணங் களை ஆராய்ந்து அவற்றிற்கு பதிலளிப்பதோடு சுவிசேஷத்தை அறிவிப்பதன் அவசியத்தையும், திருச்சபையாக அதை எப்படி அறிவிப்பது என்பதையும் இந்த ஆக்கத்தில் விளக்க விரும்புகிறேன்.
ஹைப்பர்-கல்வினிஸம் (Hyper-Calvinism) என்ற போதனை 18ம் நூற்றாண் டில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பாதித்து அவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்கத் தடையேற்படுத்தியது. ஹைப்பர்- கல்வினிஸம் என்ற பெயர்கூட முறையானதல்ல. இது வரலாற்றுக் கல்வி னிஸத்துக்கு எதிரான ஒரு கோட்பாடு. இந்தப் போதனையைப் பற்றிய சகல அம்சங்களையும் விளக்குவது எனது நோக்கமல்ல. இது சுவிசேஷத்தின் மூலம் தெய்வீக கிருபை பற்றிய நற்செய்தியை பொதுவாக எல்லோருக்கும் அறிவிப்பது அவசியமல்ல என்பதை ஒரு கோட்பாடாகக் கொண்டிருந்தது. சுவிசேஷத்தில் பாவிகள் அனைவருக்குமான அப்படியான ஓர் அழைப்பு இல்லை (Gospel offer of free grace) என்று இவர்கள் கருதினார்கள். தற்காலத்தில் இதையும்விட ஒரு படி மேலே போய் பொதுவாக பாவிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிற ஹைப்பர்-கல்வினிஸ்டு களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லா வகையிலுமான சுவிசேஷ ஊழியத் தையும் எதிர்க்கிறவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், தான் இரட்சிக்கத் தீர்மானித்திருக்கின்ற எவரையும் கர்த்தர் யார் துணையும் இல்லாமல் (apart from human means) எப்படியும் இரட்சிப்பார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இன்றிருக்கும் அநேக ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் சுவிசேஷத்தை தாங்கள் பிரசங்கித்து வருவதாகவே தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சுவிசேஷப் பிரசங்கம் என்ற பெயரில் இவர்கள் பிரசங்கிப்பது என்ன என்பதைப் பார்ப்போம். உண்மையில் இவர்கள் சுவிசேஷம் என்ற பெயரில் அளிக்கும் பிரசங்கம் இரட்சிப்பு பற்றிய வேதபோதனையை சிதைத்து கர்த்தருடைய ஆணையை அநாவசியத்துக்கு மிகைப்படுத்தி நித்திய தண்டனையை அடையப் போகிறவர் களை எச்சரிப்பதாக மட்டுமே அமைந்திருக்கிறது. இது சுவிசேஷப் பிரசங்கமே அல்ல. இவர்களைப் பொறுத்தவரையில், கர்த்தர் தன்னுடைய மக்களை இரட்சிக்கிறார் என்றும், அவ்வாறு இரட்சிக்கப்படாதவர்கள் அழிந்து போவார் கள் என்பது மட்டுமே சுவிசேஷப் பிரசங்கமாக இருக்கிறது. தெரிந்துகொள்ளு தலையும், நித்திய அழிவுக்குரியவர்களையும் பற்றி பிரசங்கத்தில் விளக்கி நற்செய்தியாகிய கிறிஸ்துவினினுடைய சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழு தலையும் விளக்குவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். ஹைப்பர்-கல்வினிஸ்டு களினுடைய ‘சுவிசேஷம்’, கர்த்தர் நித்திய அழிவுக்காக தெரிந்துகொண்டிருப் பவர்களை வெறுக்கிறார் என்றும் அதைக்குறித்து அவர்கள் செய்வதற்கு ஒன்று மில்லை என்பதாக மட்டுமே இருக்கும். பாவிகள் மனந்திரும்பி கிறிஸ்துவோடு ஒப்புரவாக வேண்டும் என்று வெளிப்படையாக, உறுதியாக அறிவிப்பதற்கு இவர்களுடைய ‘சுவிசேஷத்தில்’ இடமில்லை. கர்த்தர் உங்களுக்கு பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் தரத் தயாராக இருக்கிறார் என்று அவர்கள் பாவிகளைப் பார்த்து சொல்லவே மாட்டார்கள். அத்தகைய அழைப்பைக் கர்த்தர் சுவிசேஷத்தில் தரவில்லை என்றே பெரும்பாலான ஹைப்பர்-கல்வி னிஸ்டுகள் வாதிடுகிறார்கள். சமீபத்தில் நான் இங்கிலாந்தில் ஓர் ஆங்கில சபையில் 1 தீமோ. 2:4ம் வசனத்தில் இருந்து ‘கர்த்தரின் இருதயத் தாகம்’ என்ற தலைப்பில் அவர் பாவிகள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தோடிருக் கிறார் என்று பிரசங்கித்தது அன்று சபைக்கு வந்திருந்த ஹைப்பர்-கல்வினிஸ்டு போதனையில் வீழ்ந்திருந்த ஒரு மனிதனுக்குப் பிடிக்காமல் போனது.
ஹைப்பர்-கல்வினிஸ்டுகளின் எச்சங்களாக இன்றைக்கும் கொஸ்பல் ஸ்டேன்டர்ட்ஸ் (Gospel Standards) என்ற சபைப் பிரிவினரையும், பிரிமிட்டிவ் பாப்திஸ்து என்ற சபைப்பிரிவினரையும் அமெரிக்காவில் பார்க்கலாம். இங்கிலாந்தில் ஹைப்பர்-கல்வினிஸத்தால் பாப்திஸ்துகளே அதிகம் பாதிக்கப் பட்டிருந்தனர். இன்றும் கொஸ்பல் ஸ்டேன்டர்ட்ஸ் என்ற சில சபைகள் இங்கிலாந்தில் ஹைப்பர்-கல்வினிஸ போதனையைப் பின்பற்றி வருகின்றன. இவர்கள் சுவிசேஷம் அறிவித்தலை முற்றாக தவிர்த்து விடுகிறார்கள். தங்களை மட்டுமே மெய்யான கல்வினிஸ்டுகளாகவும், கர்த்தரின் இறையாண்மை பற்றிய போதனையை மெய்யாகப் பின்பற்றுகிறவர்களாகவும் அறிவித்துக்கொள்ளும் இவர்கள் ஏனையோரை கல்வினிஸ்டுகளாகப் பார்ப்பதில்லை. இந்தவிதமான எண்ணத்தை அதிகம் பரப்பியவராக 18ம் நூற்றாண்டு பாப்திஸ்து போதகராக இருந்த வில்லியம் ஹன்டிங்டன் காணப்படுகிறார். ஹன்டிங்டன் அன்டிநோமிய னிஸத்தை (Antinomianism) பின்பற்றி கர்த்தரின் ஒழுக்க நியதிக் கோட் பாடுகளை (The Moral Law of God) கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பின்பற்ற அவசியமில்லை என்று விளக்கியிருந்தார். மனிதன் கடமைப் பொறுப் புள்ளவனாக இருக்கிறான் என்ற போதனையை நிராகரிக்கும் ஹைப்பர்- கல்வினிஸம் அன்டிநோமியனிஸத்தோடு ஒத்துப்போவதில் ஆச்சரியமில்லை.
ஹைப்பர்-கல்வினிஸத்தை சீர்திருத்தவாத கல்வினஸத்தோடு (Reformed Calvinism) தொடர்புபடுத்தி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இந்த இரண் டிற்கும் தொடர்பில்லை. சபை சரித்திரமும், சபை வரலாறு சார்ந்த இறையியல் அறிவைப் பெறாதவர்களும், ஆர்மீனியனிஸக் கோட்பாட்டை பின்பற்றுகிறவர் களும் இரண்டையும் ஒன்றாக நினைத்து கல்வினிஸப் போதனையைப் பின் பற்றுகிறவர்களை ஹைப்பர்-கல்வினிஸ்டுகளாக தவறாக எண்ணிவிடுகிறார்கள். முக்கியமாக கல்வினிஸ கிருபையின் ஐம்போதனைகளில் ஒன்றாகிய குறிப் பிட்ட மக்களை இரட்சிப்பதற்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (இதற்கு இன்னொரு பெயர் நிலைபேறான பரிகாரப்பலி) என்ற வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் அந்தப் போதனை சுவிசேஷத்தை அறிவிக்க தடையேற்படுத்துகிறது என்ற தப்பான எண்ணத்தில் கல்வினிஸப் போதனையைப் பின்பற்றுகிறவர்ளை ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் என்று தவறாகக் கருதுகிறார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே இயேசு மரித்தார் என்பது மறுதலிக்கமுடியாத வேத சத்தியம். அதைப் புதிய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது (எபே. 1:4). இந்த வேதபோதனையை விசுவாசிப்பது சுவிசேஷம் அறிவிக்க தடையாக இருக்கும் என்ற தப்பான எண்ணத்தை இந்த ஆக்கத்தில் குழி தோண்டிப் புதைத்து விட விரும்புகிறேன்.
ஹைப்பர்-கல்வினிஸ போதனைகள்
முதலில் ஹைப்பர்-கல்வினிஸ்டுகளை அடையாளம் காண்பது அவசியம். தன் காலத்தில், 19ம் நூற்றாண்டில் சீர்திருத்த பாப்திஸ்து போதகர்களில் தலைசிறந்தவராக இருந்த சார்ள்ஸ் ஸ்பர்ஜன், 1855ல் இங்கிலாந்தில் நியூ பார்க் திருச்சபையில் இருபதாம் வயதில் தன் போதக ஊழியத்தை ஆரம்பித்த காலத்திலேயே ஹைப்பர்-கல்வினிஸத்திற்கு எதிராகப் போராட வேண்டி யிருந்தது. என் நண்பர் ஜெப்ரி தோமஸ் என்ற தற்கால பாப்திஸ்து போதகர் பின்வருமாறு எழுதியிருக்கிறார், “எப்போது மெய்யான கல்வினிஸம் சபைகளில் உயிர் பெறுகிறதோ அப்போதெல்லாம் ஹைப்பர்-கல்வினிஸம் தலைதூக்குகிறது. அத்தோடு, எப்போதெல்லாம் மெய்யான கல்வினிஸம் இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்படுகிறதோ அப்போதும் ஹைப்பர்- கல்வினிஸம் தலைதூக்கி விடுகிறது.” இன்றைக்கு தமிழினத்தில் சீர்திருத்தவாத கிறிஸ்தவத்தில் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கருத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. புதிதாக சீர்திருத்த விசுவாசத்தை அறிந்து அதில் ஆர்வம் கொள்ளுகிறவர்களில் சிலர் கர்த்தரின் இறையாண்மை பற்றிய போதனையையும், தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியத்தையும் விளங்கிக் கொள்ளாமல் ஹைப்பர்-கல்வினிஸப் போக்கிற்கு இடங்கொடுத்துவிடு கின்றனர். ஸ்பர்ஜனுடைய காலத்தில் கல்வினிஸம் இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை இருந்தது. இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய தெளிவான போதனைகளுக்கு ஆபத்திருந்தது. இதன் காரணமாகவே ஸ்பர்ஜன் கல்வினிஸப் போதனைகளைத் தெளிவாகப் பிரசங்கித்தார். 1689 விசுவாச அறிக்கையை சபையாக ஏற்கச் செய்தார். ஹைப்பர்-கல்வினிஸத்தை தன் எழுத்துக்கள் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் தோலுரித்துக் காட்டினார்.
ஹைப்பர்-கல்வினிஸம் ஏன் சுவிசேஷம் அறிவிப்பதை விரும்பவில்லை? இதற்கு பதில் காணத்தான் வேண்டும். ஹைப்பர்-கல்வினிஸத்தின் நான்கு பெரும் தவறுகளை ஸ்பர்ஜன் விளக்கிக் காட்டியுள்ளார்.
- சகல மனிதர்களுக்கும் எந்தவித வேறுபாடும் காட்டாமல் சுவிசேஷத்தை அறிவிப்பதை ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் தவறானதாக எண்ணுகிறார்கள். கர்த்தர் மனுக்குலத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களைத் தெரிந்துகொண்டிருப்ப தால் சுவிசேஷ அழைப்பு தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களை அழைக்க மட்டுமே நமக்கு வேதத்தில் கட்டளையிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விளக்கினார்கள். சபைக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திப் பிரசங்கிப்பதைத் தவறு என்கிறார்கள் ஹைப்பர்-கல்வினிஸ்டுகள். தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்ப்பதற்காக மட்டுமே சுவிசேஷம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ‘நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும்’ என்று அவர்களை மட்டுமே பார்த்து பிரசங்கிக்க வேண்டும் என்றார்கள் அவர்கள். இதன் மூலம் சுவிசேஷத்தை அனைவருக்கும் பொதுவாக பிரசங்கிப்பதையும், அறிவிப்பதையும் அவர்கள் வேதத்திற்கு முரணான போதனையாக கருதினார்கள்.
இதை ஸ்பர்ஜன் முற்றிலும் எதிர்த்து எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து, மனந்திரும்பினால் மட்டுமே உனக்கு பரலோகம் உண்டு என்று பிரசங்கித்தார். அதையே வேதமும் விளக்குகிறது (மத். 28:18-20; யோவான் 3:18; ரோமர் 10:13; வெளி. 22:17). அனைத்து மனிதர் களுக்கும் நல்ல செய்தியாக சுவிசேஷம் இருக்கிறது என்று கூறிய ஸ்பர்ஜன், கிறிஸ்துவின் வரலாற்று வருகையையும், வாழ்க்கையையும் மட்டும் பிரசங் கத்தில் விளக்குவது போதாது என்றும், மனிதன் மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வர வேண்டியதன் அவசியத்தை விளக்கி அவ்வாறு வந்தால் மட்டுமே அவனுக்கு அழிவற்ற நித்திய ஜீவன் உண்டு என்று வலியுறுத்திப் பிரசங்கிக்க வேண்டுமென்றார். அதையே இயேசுவும் தன் பிரசங்கத்தில் செய்தார்; அப்போஸ்தலர்களும் செய்திருக்கிறார்கள் (கொலோ. 1:28; அப்போ. 3:20). சுவிசேஷ அழைப்புகள் வேதத்தில் பொதுவாக எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருப்பதால் அவற்றை தாராளமாக அனைவருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டியது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் கட்டளையாக இருக்கிறது. அதைப் பிரசங்கிப்பது மட்டுமல்லாமல் தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவிக்க வேண்டும். ஹைப்பர்-கல்வினிஸ ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவே 1689 விசுவாச அறிக்கையில் 20ம் அதிகாரம் (நற்செய்தியும் அதன் செல்வாக்கும்) இணைக்கப்பட்டிருக்கிறது.
- ஹைப்பர்-கல்வினிஸ்டுகள், பாவிகள் கிறிஸ்துவிடம் வர வேண்டும் என்பதற்கான உறுதியான அதிகாரம் (warrant) அவர்களுடைய சொந்த அனுபவங்களிலும் (personal experience), உணர்வுகளிலும், நம்பிக்கைகளிலுமே தங்கியிருப்பதாக விளக்கினார்கள். அதாவது, பாவியாகிய மனிதன் கிறிஸ்து விடம் வர வேண்டுமானால் அவனுடைய இருதயத்தில் அனுபவபூர்வமாக அப்படியொரு உணர்வும் நம்பிக்கையும் முதலில் அவனுக்கு ஏற்பட வேண்டும் என்றும் அதுவே அவன் கிறிஸ்துவிடம் வர வேண்டியதற்கான அதிகாரத்தைத் தருகிறது என்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் பொறுப்பு (duty) மனிதனுக்கு இல்லை என்பதை உறுதியாக நம்பியதால்தான். மனிதன் விசுவாசிக்கும் இயலாமையுள்ளவனாக இருப்பதால் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி சுவிசேஷம் அவனை அழைக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள் ஹைப்பர்-கல்வினிஸ்டுகள். ஆகவே, விசுவாசிப்பது பாவி களுடைய கடமை என்று கிறிஸ்துவின் சுவிசேஷம் சொல்லவில்லை என் கிறார்கள். இதனாலேயே அவர்கள் மனிதன் தன்னுடைய இருதயத்தில் விசுவாசத்தை உணர வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அவ்வாறான உணர்வு அவனுக்கு இருந்தால் மட்டுமே கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறேன் என்பதை அவன் நம்புவதற்கான ஆதாரம் இருக்கிறது என்கிறார்கள்.
ஸ்பர்ஜன் இதற்கு மாறாக சகல மனிதர்களும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற அதிகாரம் அவர்களுக்கு சுவிசேஷத்திலேயே கிறிஸ்துவால் தரப்பட்டிருக்கிறது என்றார். (The Scriptural warrant for the unconverted to trust in Christ lies in the invitation of Christ.) அத்தகைய அதிகாரபூர்வமான கட்டளை சுவிசேஷத்தில் இருப்பதால் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பு பாவியாகிய ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது என்றார் ஸ்பர்ஜன். “உங்களு டைய இருதயங்களில் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் ஏற்படும் வரை காத்திருக்காமல், அவரிடம் வர வேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதாலும், கர்த்தர் உங்களை வரும்படியாக வருந்தி அழைப்பதாலும் நீங்கள் இருந்தது இருந்தபடியே கிறிஸ்துவிடம் வரவேண்டும்” என்று ஸ்பர்ஜன் பிரசங்கித்தார். இதைப்பற்றி ஒரு பிரசங்கத்தில் விளக்கும்போது ஸ்பர்ஜன் பின்வருமாறு கூறினார், “கிறிஸ்துவிடம் வர வேண்டும் என்ற அதிகார பூர்வமான கட்டளை கிறிஸ்துவின் வார்த்தைகளில் இல்லாமல் பாவிகளின் சொந்த அனுபவங்களிலேயே தங்கியிருக்குமானால் அவர்கள் இரட்சிப்பிற்காக தங்களை வரவேற்கும் இரட்சகரை நாடி வராமல், தங்களுடைய இருதயத்தில் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா, தங்கள் இருதயம் சரியான விதத்தில் உடைந்திருக்கிறதா என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்றார். யாருடைய இருதயம் அதிகமாக உடைபட்டிருக்கிறதோ அவர்கள் தங்களுடைய இருதயத்தில் யாருக்கும் அடிபணியாத கடினத்தை மட்டுமே பார்ப்பார்கள் என்றார் ஸ்பர்ஜன். ஸ்பர்ஜனின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை. பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கும் தேவ பலன் சுவிசே ஷத்தில் இருப்பதை பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் நினைவுறுத்து கிறார். மனிதர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்பி அவரை விசுவாசிக்க வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். ஹைப்பர்-கல்வி னிஸம், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே அத்தகைய கடமைப் பொறுப்பு இருப்பதாகவும் அது அனைவருக்கும் இல்லை என்கிறது. மாறாக வேதமோ, கர்த்தரை நாடி வரவேண்டிய கடமைப் பொறுப்புடையவர்களாக மனிதன் படைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ் துவை நாடி வரவேண்டும் என்கிறது. மனிதன் பாவத்தால் இயலாமையுடைய வனாக இருந்தபோதும் கிறிஸ்துவை அவன் விசுவாசிக்க வேண்டும் என்று சுவிசேஷம் அதிகாரத்தோடு அவனுக்கு அழைப்புவிடுகிறது (ஏசாயா 1:18; 55:1-3, 6). கிறிஸ்துவின் சுவிசேஷமே நாம் நம்பக்கூடிய அதிகாரமுள்ள வார்த்தை யாக இருக்கிறது; அடிக்கடி மாறுதலுக்குட்படுகின்ற நம்முடைய இருதயமல்ல.
- மனிதன் பாவியாக, சுயமாக சீர்திருந்துவதற்கு வழியில்லாத ஆத்து மாவைக் கொண்டிருப்பதால் கிறிஸ்துவிடம் வரும்படி சுவிசேஷத்தின் மூலம் வலியுறுத்தி அழைப்பது தவறு என்கிறார்கள் ஹைப்பர்-கல்வினிஸ்டுகள். மனிதனுக்கு சுயமாக சீர்திருந்தக் கூடிய ஆத்துமா இருந்தால் மட்டுமே நாம் எல்லோருக்குமான சுவிசேஷ அழைப்பைக் கொடுக்க முடியும் என்கிறார்கள் அவர்கள். இதற்கு பதிலளிக்கும் ஸ்பர்ஜன், நான் ஒருபோதும் மனிதனுடைய பாவம் பற்றியும், ஆத்தும இயலாமை பற்றிய வேத போதனையையும் துளியும் குறைத்துச் சொல்லமாட்டேன் என்றார். அதேவேளை கிறிஸ்துவின் சுவிசேஷம் மனிதனின் இயலாமையை மூழ்கடிக்கும் தேவ கிருபையைக் கொண்டிருக் கிறது. மனிதனின் இயலாமை, பாவம் அவனை முழுமையாக பாதித்திருக்கும் நிலைமை பற்றிய உண்மைகளின் அடிப்படையில்தான் சுவிசேஷத்தின் வல்லமை யையும், அதன் மகிமையையும் நாம் அறிவிக்க முடியும். வேதம் இரண்டு நிதர் சனமான, மறுக்க முடியாத உண்மைகளை நம்முன் வைக்கிறது. (1) பாவத்தின் காரணமாக மனிதன் மரித்து ஆத்தும விருத்திக்கு வழியற்றிருந்த போதும் அவன் கர்த்தரை நாட வேண்டிய கடமைப் பொறுப்பைத் தன்னில் கொண் டிருக்கிறான். (2) கர்த்தர் மட்டுமே அவனை இரட்சிக்கும் இறையாண்மை யுள்ளவராக இருக்கிறார். எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் வேதம் போதிக்கின்ற இந்த இரண்டு உண்மைகளை விளங்கிக்கொள்ளாதவர்களே ஒன்று ஹைப்பர்-கல்வினிஸ்டாகவோ அல்லது ஆர்மீனியனாகவோ மாறிவிடு கிறார்கள். கர்த்தர் முழுமையான இறையாண்மையுள்ளராக இருக்கிறார் என்ப தற்காக, மனிதன் கர்த்தரை விசுவாசிக்க வேண்டிய கடமைப் பொறுப்புடைய வனாக இருக்கிறான் என்ற உண்மையை எந்தவிதத்திலும் நாம் குறைத்து விளக்கக் கூடாது. பாவத்தினால் இயலாத நிலையில் மனிதன் இருந்தபோதும் அவன் கர்த்தரின் சாயலில் அவரை ஆராதிக்க வேண்டியவனாக, அவருக்கு பதில் சொல்ல வேண்டியவனாக, எவருடைய வற்புறுத்துதலும் இல்லாமல் அவரை நாட வேண்டியவனாக இருக்கிறான். இதைத்தான் ஹைப்பர்-கல்வி னிஸ்டுகள் மறுக்கிறார்கள். அதேவேளை, இந்த உண்மையை விளக்குவதற்காக நாம் கர்த்தரின் இறையாண்மையை எந்த விதத்திலும் குறைத்து விளக்க முயலக் கூடாது. அதைத்தான் ஆர்மீனியன் செய்துவிடுகிறான். கர்த்தர் இறையாண்மை யுடையவராக இருக்கிறார் என்பதும், மனிதன் அவருக்கு பதில் கூற வேண்டிய கடமைப் பொறுப்புடையவனாக இருக்கிறான் என்பதும் வேதத்தில் நிராகரிக்க முடியாதபடி காணப்படும் சத்தியங்கள். இரண்டையும் நாம் கேள்வி கேட்கா மல் விசுவாசிக்க வேண்டும். இது எப்படி முடியும் என்பதற்கு வேதம் பதிலளிக்க வில்லை. இரண்டையும் போதிக்கும் எண்ணற்ற வசனங்களை மட்டுமே அது அள்ளி அள்ளி வீசுகிறது. ஸ்பர்ஜன் சொல்கிறார், “நான் தெரிந்துகொள்ளு தலை விசுவாசிக்கிறேன். எல்லாமே கர்த்தரின் ஆணையினால் அணுவளவும் மாறாதபடி நிர்ணயிக்கப்பட்டபடி நடந்து வருகிறது என்பதை முழுமையாக நம்புகிறேன். . . . அதே நேரம், மனிதன் தன் மனப்போக்குப்படி நடக்கிறான், கேட்டைப் புறத்திலிருந்து எதனாலும் உந்தப்படாமலும், கர்த்தரின் வார்த்தை யால் பாதிக்கப்படாமலும் தன் சுயவிருப்பப்படி செய்கிறான்; முழு சுதந்திரத் தோடு பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு நன்மையை செய்கிறான் . . . மனிதன் கர்த்தர் முன் கடமைப் பொறுப்புடையவனாக இருக்கிறான் . . . இந்த இரண்டு உண்மைகளும் எங்கு எப்படி சந்திக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அவை என்னைக் குழப்பவில்லை. ஏனென்றால் அவை இரண்டையுமே நான் நம்புகிறேன்.” ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். வேதம் போதிக்கும் சத்தியங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுவதே நம்முடைய கடமையாக இருக்க வேண்டும். இரட்சிப்பு கர்த்தருடையது. அதில் எந்த சந்தேகமுமில்லை. மனிதனுக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. அதேநேரம் சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது. கர்த்தருக்கு கணக்குக்கொடுக்க வேண்டிய அவன் கிறிஸ்துவை விசுவாசிக்கா விட்டால் நித்திய மரணத்தை சந்திப்பான் (மாற்கு 16:16). இதையும் மறுக்கவே முடியாது. அதனால்தான் அவன் அழிந்துபோகாமல் இருக்க சுவிசேஷத்தை அவனுக்கு சொல்ல வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது.
- கர்த்தர் உலகின் மீது பொதுவான அன்பைக் கொண்டிருக்கிறார் என்பதை ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் நிராகரிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை யில் கர்த்தர் கோபமுள்ளவராக, இலகுவாக அன்பை வெளிக்காட்ட முடியாதவ ராக இருக்கிறார். ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் கர்த்தர் தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் மீது மட்டுமே அன்புகாட்டுகிற தேவனாக இருக்கிறார் என்று விளக்குகிறார்கள். அத்தோடு, ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் பொதுவான கிருபை யையும் நிராகரிக்கிறார்கள். கர்த்தர் எந்த விதத்திலும் நித்திய அழிவிற்காக நியமிக்கப்பட்டவர்கள் மீது அன்புகாட்டாது அவர்களை வெறுக்க மட்டுமே செய்கிறார் என்பது இதன் போதனை. வேதம் இதற்கு மாறாக கர்த்தர் தன் அன்பை தாராளமாக வெளிப்படுத்துபவராக இருக்கிறார் என்கிறது. கர்த்தர் அன்பே உருவாயிருக்கிறார் என்பது அவருடைய மெய்க் குணாதிசயங்களில் ஒன்று. மத். 9:36ல் திரளான ஜனங்களைப் பார்த்து அவரை மனதுருக வைத்தது எது? லூக்கா 19:41ல், எருசலேமைப் பார்த்து அவரைக் கண்ணீர் விடவைத்தது எது? மத். 23:37ல், உன்னைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன் என்று எருசலேமைப் பார்த்து அவரைச் சொல்ல வைத்தது எது? மாற்கு 10:21-22ல் தன்னிடம் வந்த செல்வந்தனான இளம் வாலிபனைப் பார்த்து அவர் அன்புகூர்ந்தார் என்றிருக்கிறது. இயேசு இவ்வாறு பலவிதங்களில் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்பில்லாமல் அவர் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்கவில்லை. எசேக்கியல் 33:11ல், “துன்மார்க்க னுடைய மரணத்தை நான் விரும்பவில்லை. அவன் தன் வழியை விட்டு விலகி பிழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு நான் சொல்லுகிறேன்” என்று அவர் இருதயத்தில் அன்பேயில்லாமலா சொன்னார். 1 தீமோ. 2:4, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார்” என்ற வார்த்தை களில் கிறிஸ்துவின் இருதய பாரத்தை நம்மால் பார்க்க முடியாமலா இருக்கிறது. உண்மையில் ‘சித்தமுள்ளவராயிருக்கிறார்’ என்ற வார்த்தை இந்த வசனத்தில் ஆழமான பொருளைக் கொண்டிருக்கிறது. அதாவது அவருடைய இருதயத்தில் எல்லோரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டு மென்ற பெரும் ஆதங்கம் காணப்படுகிறது என்பதுதான் இதற்குப் பொருள். இத்தகைய ஆதங்கம் அன்பில்லாத இருதயத்தில் இருக்க முடியுமா? விசுவாசி களாகிய நாம் கர்த்தரை நேசிக்கும் போது அவருடைய அன்பை அதிகமாக அனுபவிக்க முடிகிறது. கிறிஸ்துவின் சுவிசேஷ அழைப்பு கர்த்தரின் பொதுவான அன்பைத் தெளிவாக, மறுதலிக்க முடியாதபடி உள்ளடக்கியதாக இருக்கிறது.
சீர்திருத்தவாத கல்வினிஸத்தை விசுவாசிக்க ஆரம்பிக்கிறவர்கள் ஹைப்பர்-கல்வினிஸக் கிணற்றில் விழாமலிருக்க வழி என்ன?
சீர்திருத்தவாத கல்வினிஸக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் ஹைப்பர்-கல்வினிஸம் பற்றிய மேற்கூறிய விளக்கங்களை கவனமாக விளங்கிக் கொண்டு அத்தகைய தவறான எண்ணங்களைக் கொண்டிராதபடி பார்த்துக் கொள்ளுவது அவசியம். முதன்முறையாக சீர்திருத்தவாத கல்வினிஸப் போதனைகளை அறிந்துகொள்ளும்போது ஹைப்பர்-கல்வினிஸம் தலைதூக்கி விடக்கூடிய ஆபத்திருக்கிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டேன். அது எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
- தெரிந்துகொள்ளுதல் பற்றிய வேத போதனையை முறையாக விளங்கிக் கொள்ளத் தவறுகிறபோது ஹைப்பர்-கல்வினிஸ கிணற்றில் விழுந்துவிடுகிற ஆபத்து ஏற்படுகிறது. தெரிந்துகொள்ளுதலாகிய வேத போதனையை எப்படிப் பயன்படுத்த வேண்டும், விளக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருப்பது அவசியம். இப்போதனை வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பாக இறையாண்மையுள்ள கர்த்தர் தன் மக்களைத் தெரிந்துகொண்டார் என்று பவுல் எபே. 1:4ல் விளக்குகிறார். இருந்தாலும் அவ்வாறாக தெரிந்துகொள்ளப்பட்ட ஆத்துமாக்களுக்கு கர்த்தர் எவ்வாறு இரட்சிப்பை அளிக்கிறார் என்று கேட்கிறபோது, தெரிந்துகொள்ளுதலாகிய வேத போதனையை சுவிசேஷத்தோடு இணைத்து நம்மை நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. சுவிசேஷத்தை விளங்கிக்கொள்ளவும் அதை விளக்கவும் உதவுவது நீதிமானாக்குதலாகிய போதனையே (Justification). அதுவே, கர்த்தரின் திட்டப்படி பாவிகளுக்கு கிறிஸ்து எவ்வாறு தன் இரத்தத்தைச் சிந்தி இரட் சிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதை விளக்குகிறது. இதுவே கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மையப் போதனையாக இருக்கிறது. அதனால் தான் சீர்திருத்த வாதியாகிய ஜோன் கல்வின் தன்னுடைய உயர்ந்த படைப்பாகிய Institutes of the Christian Religionல் முதலில் நீதிமானாக்குதலாகிய போதனையை விளக்கிய பிறகே தெரிந்துகொள்ளுதலைப் பற்றி விளக்குகிறார். (நீதிமானாக்கு தலாகிய போதனை பற்றிய விளக்கங்களை இப்பத்திரிகையின் அக்டோபர்- டிசம்பர் 2006 இதழிலிருந்தும், 1689 விசுவாச அறிக்கையிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.) பாவி எவ்வாறு நீதிமானாக முடியும் என்ற கேள்விக்கு, அவன் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திருமபி் கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டுமே நீதிமானாக முடியும் என்றுதான் வேதம் எங்கும் (ரோமர் 10:13-15) பதிலளிக் கிறது. சுவிசேஷம் உலகம் முழுவதும் (மத். 24:14) பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை நீதிமானாக்குதல் போதனை வலியுறுத்துகிறது. நீதிமானாக்குதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நம்முடைய சீர்திருத்த வினாவிடைப் போதனை அளிக்கும் பதிலைப் பாருங்கள்: “நீதிமானாக்குதல் என்பது திட்ப உறுதியான அழைப்பினால் கிறிஸ்துவிடம் அழைக்கப்பட்ட பாவிகளுக்கான கர்த்தரின் இலவசமான கிருபையின் செயலாகும். . . . இதை விசுவாசத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும்.” இந்த பதிலிலிருந்து நீதிமானாக்குத லாகிய கர்த்தரின் இலவசமான கிருபையை பாவிகள் அடைவதற்கு சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே, தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியம் மெய்யானதாக இருந்தபோதும் அதை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம். தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியத்தை மட்டுமே உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டு அவர்கள் மட்டுமே பரலோகம் போகப் போவதால் அவர் களுக்கு மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்பது முழு முட்டாள் தனம். அந்த அடிப்படையில் அந்தப் போதனை வேதத்தில் விளக்கப்படவில்லை.
கண்மூடித்தனமாக இறையியல் சத்தியங்களைப் பயன்படுத்தி தவறான முடிவுக்கு வந்துள்ள அநேகர் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். அதையே ஹைப்பர்-கல்வினிஸமும் செய்கிறது. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் எண்ண முடியாதளவுக்கு உலகில் இருந்தபோதும், அவர்கள் இரட்சிக்கப் படும்படி மனுக்குலம் முழுவதும் காதால் கேட்பதற்காகவே கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கர்த்தர் தந்திருக்கிறார். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார் என்பதை கர்த்தர் மட்டுமே அறிந்திருப்பதால் சுவிசேஷம் எல்லோருக்கும் பாரபட்சமில்லாமல் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்றும், அப்படிப் பிரசங் கிக்கப்படுகிறபோதே தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அதைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்க வழியிருக்கிறது என்பதையும் ஹைப்பர்-கல்வினிஸ்டு கள் விளங்கிக்கொள்ளவில்லை. அத்தோடு எல்லோருக்கும் சுவிசேஷம் பிரசங் கிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள கிறிஸ்து எல்லோரையும் தன் பொதுவான சுவிசேஷ அன்பால் அழைக்கிறாரே தவிர தெரிந்துகொள்ளப் பட்டவர்களை மட்டுமல்ல. இதையும் ஹைப்பர்-கல்வினிஸ்டுகள் விளங்கிக் கொள்ளவில்லை. தெரிந்துகொள்ளுதலாகிய கர்த்தரின் நீதியான செயலைத் தெளிவாக விளக்கும் அதே வேதமே சுவிசேஷம் எல்லோருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதையும் எந்தவித சந்தேகமுமில்லாமல் விளக்குகிறது. இந்த இரண்டு சத்தியங்களும் இரயில் தண்டவாளங்களைப் போல ஒன்றையொன்று சந்திக்காமல் நேராக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே ஏற்று நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
- இயேசு குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்ற வேத போதனையை இறையியல் ரீதியில் விளங்கிக்கொள்ளத் தவறுகிறபோது நாம் தடுமாறி ஹைப்பர்-கல்வினிஸ சிந்தனைப் போக்கிற்கு இடங்கொடுத்து விடும் ஆபத்து இருக்கிறது. அநேகர் இங்கேயே தவறிழைத்து விடுகின்றனர். கர்த்தர் தெரிந்துகொண்டுள்ள குறிப்பிட்ட தொகையினர் யார் என்பது இறையாண்மை யுள்ள கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அந்தத் தொகையினர் நாம் எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்பதையும் கர்த்தர் தான் ஆபிரகாமோடு நடத்திய சம்பாஷனை மூலம் விளக்கியிருக்கிறார். வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடல் மண் போலவும் பரந்து விரிந்திருக்கும் பெருங்கூட்டமாக வேதம் அவர்களை ஒருவிதத்தில் நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதற்கு மேல் நாம் வீண் ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தப் போதனை நமக்கு கர்த்தரின் ஜனங்கள் பெருந்தொகை யினர் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. மிகவும் முக்கியமாக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் வீணாகப், பொருளற்று யாருக்கு மரிக்கிறோம் என்று தெரியாமல் மரிக்கவில்லை என்பதையும் காட்டுகிறது. கிறிஸ்துவின் இரத்தம் தெரிந்துகொள்ளப்பட்ட அத்தனை மக்களையும் தவறாமல் மீட்கக் கூடிய வலிமையுள்ளதாக இருந்தது என்பதையும், அந்த இரத்தம் சிந்தப்பட்ட அனைவருடைய பாவத்தையும் முற்றிலும் கழுவி இரட்சிக்கும் என்பதையும் அது தெரிவிக்கிறது. கிறிஸ்து யார் யாருக்காக மரித்தாரோ அவர்கள் எல்லோ ரும் நிச்சயம் பரலோகம் அடையும் பாக்கியத்தை சுவிசேஷத்தின் மூலம் அடைவார்கள் என்பதையும் அது விளக்குகிறது. உண்மையில் இத்தனை உறுதியான, இரட்சிக்கும் வல்லமையுடைய கிறிஸ்துவின் பரிகாரப்பலி மட்டுமே சுவிசேஷத்தை வலிமையுள்ளதாக்கி பாவிகளுக்கு பலனுள்ளதாக அமையும் படிச் செய்கிறது. கிறிஸ்து உறுதியாக பலனளிக்கும் விதத்தில் மரித்திரா விட்டால் சுவிசேஷம் எவரையும் இரட்சிக்கக்கூடிய வல்லமையில்லாமலேயே இருந்திருக்கும். நாம் உறுதியாக சுவிசேஷத்தை எல்லோருக்கும் பாரபட்ச மில்லாமல் சுதந்திரத்தோடும், நம்பிக்கையோடும் பிரசங்கிக்க முடிவதற்குக் காரணம் கிறிஸ்துவின் உறுதியான, பலனளிக்கும், இரட்சிக்கும், குறிப்பிட்டவர் களுக்காக சிந்தப்பட்ட வல்லமையுள்ள திரு இரத்தந்தான்.
- சுவிசேஷ ஊழியத்தை இறையியல் ரீதியாக முறையாக விளங்கிக்கொள் ளாமல் போனால் ஹைப்பர்-கல்வினிஸம் நம்மைப் பாதித்துவிடும். கிறிஸ்து மத். 28:18-20 வசனங்களில் தன்னுடைய பிரதான கட்டளையை அப்போஸ்தல ருக்கு தந்தபோது மிகவும் தெளிவாக சுவிசேஷம் யாரால், எவருக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார். உலகில் சகல ஜாதியாருக்கும், எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி கிறிஸ்து கட்டளையிட்டார். அதன் அடிப்படையில் விசுவாசிப்பவர்களைக் கொண்டு சபை அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்டளை விளக்குகிறது. அவர்கள் போய் உலகம் முழுவதும் சீஷர்களை ஏற்படுத்த வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளை. அதை எப்படிச் செய்வது என்பதை ரோமர் 10:14-15 விளக்குகிறது, பலரும் விசுவாசிக்கும்படியாக சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று கூறும் பவுல் பிரசங்கிகள் அதற்காக (சபையால்) அனுப்பப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த போது பெந்தகொஸ்தே தினத்தில் அநேகர் அதைக் கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். பின்பு சுவிசேஷம் புறஜாதியினர் மத்தியிலும் பிரசங்கிக்கப்பட்டு சபைகள் எங்கும் நிறுவப்பட்டன. இதன் மூலம் திருச்சபை இன்று சபைக்குள்ளும் வெளியிலும் சுவிசேஷத்தைத் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டிய கடமையைக் கொண் டிருப்பதை அறிந்துகொள்ளுகிறோம். சுவிசேஷம் மட்டுமே விசுவாசிப் பவர்களுக்கு இரட்சிப்பை அளிக்கக்கூடிய தேவ வல்லமையைக் கொண் டிருப்பதாக பவுல் ரோமர் 1:16ல் கூறுகிறார். சுவிசேஷத்தை பிரசங்கிக்காத சபை மெய்யான திருச்சபையாக இருக்க முடியாது. விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தில் உறுதி பெறவும், அவிசுவாசிகள் இரட்சிப்பை அடையவும் சுவிசேஷம் எப்போதும் சபைகளுக்குள்ளும், சபைகளால் சபைகளுக்கு வெளியிலும் ஆணித்தரமாக பிரசங்கிக்கப்பட வேண்டும்.
சீர்திருத்தவாத கல்வினிஸக் கிறிஸ்தவர்கள் ஹைப்பர்-கல்வினிஸக் கோட் பாடுகளில் விழுந்துவிடாமல் இருக்குமாறு முறையாக கல்வினிஸ வேத போதனைகளை விளங்கிக்கொண்டு நடைமுறையில் சுவிசேஷத்தை எந்த வகையில் அறிவிக்க வேண்டும் என்று இதுவரை பார்த்தோம். கல்வினிஸக் கிறிஸ்தவம் சுவிசேஷத்தை அறிவிக்கத் தவறுகிறபோது அது உயிரற்ற, கவர்ச்சி யிழந்த சமய அமைப்பாக மாறிவிடுகிறது. வேறு எத்தனை நல்ல அம்சங்களை அது தன்னில் கொண்டிருந்தபோதும் சுவிசேஷத்தை ஆணித்தரமாக, ரிச்சட் பெக்ஸ்டர் சொன்னது போல, “இறந்துகொண்டிருப்பவன் இறந்து கொண் டிருப்பவனுக்கு” பிரசங்கிப்பது போல் தொடர்ச்சியாக அறிவிக்கத் தவறும் கல்வினிஸம் மெய்யான கல்வினிஸமல்ல. அது தன்னை சீர்திருத்தவாத கல்வினிஸமாகக் காட்டிக்கொண்டாலும் அது முற்றிலும் போலியானது; வல்லமையற்றது; பிணத்தைப் போன்றது. ஜோன் பனியன், வில்லியம் கேரி, புளர், ஹென்றி மார்டின், அடோனிராம் ஜட்சன், சார்ல்ஸ் ஸ்பர்ஜன் போன்ற கல்வினிஸ பாப்திஸ்துகள் வைராக்கியத்தோடு சுவிசேஷத்தை சபைகளிலும், வெளியிலும் பிரசங்கித்த மாமனிதர்கள். அவர்கள் விசுவாசித்த கல்வினிஸம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தது.
சுவிசேஷத்தை எப்படி அறிவிப்பது?
ஹைப்பர்-கல்வினிஸ ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டு சுவிசேஷத்தை சபையாக எப்படி அறிவிப்பது?
(1) முதலில், பிரசங்க மேடையில் கிறிஸ்து எப்போதும் பிரசங்கிக்கப்பட வேண்டும். எந்த வேதப்பகுதியாக இருந்தாலும் பழைய, புதிய ஏற்பாடுகளி லிருந்து கிறிஸ்து பிரசங்கிக்கப்பட வேண்டும். புதிய உடன்படிக்கையின் நாயகன் கிறிஸ்துவே. ஆத்துமாக்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பதே பிரசங்கத்தின் பிரதான பணி. நம் சபை ஆராதனை கிறிஸ்துவை முதன்மைப்படுத்துகிறதாக இருக்க வேண்டும். நாம் பாடும் சங்கீதங்களும், கீர்த்தனைகளும் கிறிஸ்துவை முதன்மைப்படுத்துபவையாக இருக்க வேண்டும். அதேபோல் ஆராதனையில் பிரதான இடத்தைப் பெறும் பிரசங்கமும் கிறிஸ்துவை முதன்மைபடுத்த வேண்டும். பழைய ஏற்பாடு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது. புதிய ஏற்பாடு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய செயல்களைப் பற்றியும் விளக்குகிறது. இரண்டிலும் கிறிஸ்துவை நாம் பார்க்கிறோம். அநாவசியத்துக்கு வேதப் பகுதிகளில் கிறிஸ்துவை வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய அவசிய மில்லைதான். இருந்தாலும் ஸ்பர்ஜன் கூறுவதுபோல் முடிந்தால் கிறிஸ்துவை எந்தப்பகுதியிலும் திணித்துவிடுகிறது போலவே நம் பிரசங்கங்கள் இருக்க வேண்டும். எந்த வேதப்பகுதியையும் முறையாகத் தயாரித்து பயன்பாடு களோடு வியாக்கியானப் பிரசங்கமளிக்கும்போது அதில் கிறிஸ்து வராமல் இருக்க முடியாது. பிரசங்கம் வெறும் உப்புச் சப்பில்லாத போதனைகளை கொடுப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. பிரசங்கத்தை மேன்மைபடுத்து வதும், அதற்கு உயிரளிப்பதும் கிறிஸ்துதான். கிறிஸ்து இல்லாத பிரசங்கம் உயிரற்றதாகும். ஆகவே, பிரசங்கி எந்தப்பகுதியில் இருந்து பிரசங்கித்தாலும் அந்தப் பகுதி மூலம் கிறிஸ்துவை எப்படி வெளிப்படுத்தலாம் என்று ஒரு தடவை கேட்டுப் பார்ப்பது அவசியம். எத்தனை அருமையான சத்தியங்களை பிரசங்கத்தில் கொடுப்பதற்காக நாம் தயாரித்திருந்தாலும் அவையனைத்தும் கிறிஸ்துவில் இருந்து புறப்படாமலிருந்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. பிரசங்கத்தை தயாரித்து முடித்த பிறகு அதில் கிறிஸ்துவை உங்களால் காண முடிகின்றதா என்று உங்களையே ஒருதடவை கேட்டுப் பாருங்கள். நீங்கள் அதில் பார்க்க முடியாத கிறிஸ்துவை உங்கள் சபை ஆத்துமாக்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்கள்? அத்தோடு, நம் சபைகளில் எப்போதுமே அவிசுவாசிகள் இருந்துகொண்டே இருப்பார்கள். அப்படி ஓரிருவர் இருந் தாலும் அவர்களுக்காக கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவது அவசியம்.
(2) வியாக்கியானப் பிரசங்கத்தை தொடர்ச்சியாக சபையில் அளிக்கிறபோது சுவிசேஷப் பிரசங்கத்தையும் விசேஷமாக தயாரித்து அடிக்கடி சபைகளில் கொடுப்பது அவசியம். அதற்கான அறிவிப்பு கொடுத்து சபையார் தங்க ளுடைய அவிசுவாச உறவினர்கள், நண்பர்களை அழைத்துவருமாறு அறிவிக்க வேண்டும். சுவிசேஷக் கூட்ட அழைப்புத்தாள்களை அவர்களுக்கு கொடுத்து கூட்டங்களுக்கு பிறரை அழைத்து வரும் வசதியை செய்துதர வேண்டும். இந்த முறையில் சுவிசேஷ ஆராதனைக் கூட்டங்கள் சபையில் முறையாக இடைவிடாமல் நடந்து வருவது அவசியம். இது பிரசங்கிக்கும் நபருக்கு சுவிசேஷப் பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்கக் கூடிய நல்ல வாய்ப்பை அளிக்கும். பிரசங்க மேடையும், போதகர்களும் சுவிசேஷத்தில் அக்கறை காட்டாவிட்டால் சபையார் அதில் ஆர்வம் குறைந்து வெகு விரைவிலேயே சுவிசேஷ அக்கறையற்றுப் போய்விடுவார்கள்.
(3) இவை தவிர சுவிசேஷக் கைப்பிரதிகளை சபையார் பயன்படுத்திக் கொள்ளும்படி வெவ்வேறு தலைப்புகளில் அவை தயாரிக்கப்பட்டு சபையார் எடுத்துச் செல்லும் விதத்தில் சபையில் ஓரிடத்தில் எல்லோரும் பார்க்கக் கூடிய விதத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றை சபை மக்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு சுவிசேஷம் சொல்லுவது கைவந்த கலையாக இலகுவாக இருக்கும். கர்த்தர் எல்லோருக்கும் தாலந்துகளை ஒரே விதத்தில் அளிக்கவில்லை. அப்படியாக சுவிசேஷம் சொல்லுவதில் விசேஷ அக்கறையும், திறமையும் கொண் டவர்களை ஊக்குவித்து அவர்கள் சுவிசேஷத்தை தொடர்ச்சியாக சபை மூலமாக அறிவித்து வர வகைசெய்து தர வேண்டும். ஞாயிறு தினத்தில் ஆராதனை தவிர்ந்த நேரங்களில் சுவிசேஷக் கைப்பிரதிகளை விநியோகித்து வருகிற அநேகரை சபைகளில் நான் பார்த்திருக்கிறேன். முதியோர் இல்லங்கள், வைத்தியசாலைகள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்கும் போய் சபையார் சுவிசேஷத்தை அறிவிக்க சபைகள் ஊக்குவிக்க வேண்டும். சபை மக்கள் சேர்ந்து குறிக்கப்பட்ட நாளில் சபையைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வருடா வருடம் சுவிசேஷ கைப்பிரதிகளை விநியோகிக்கலாம்.
(4) ஞாயிறு தவிர்ந்த நாட்களில் வீட்டுக் கூட்டங்கள் நடத்தி சுவிசேஷ வேதபாடங்கள் நடத்துவதும் நல்லதே. இவற்றைச் செய்யத் திறமையும், தகுதியும் உள்ளவர்களை சபை ஆராய்ந்து பார்த்து ஊக்குவித்து, பயிற்சி யளித்து பயன்படுத்த வேண்டும். சபை அங்கத்தவர்கள் தங்களுடைய வீட்டை சுவிசேஷப் பணிக்காகவும், விருந்துபசாரத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் இந்த வகையில் தங்களுடைய வீட்டைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
(5) சபை மக்கள் சுவிசேஷ ஆர்வம் கொண்டிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுவிசேஷ ஆர்வமில்லாத சபை சபையாக இருக்க முடியாது. வீட்டில் ஆண்டவரை அறியாத குடும்ப அங்கத்தவர்களுக்கு குடும்ப ஆராதனை யிலும், வேறு வழிகளிலும் சுவிசேஷம் அறிவிப்பது சபையாரின் கடமை. சபை அங்கத்தவர்கள் நடைமுறையில் சுவிசேஷ ஆர்வத்தோடு எதாவதொரு வகையில் சுவிசேஷத்தை வீட்டிலும், வீட்டுக்கு வெளியில் வேலைத்தளத்திலும், வேறு இடங்களிலும் சொல்வதைக் கடமையாகக் கொண்டிருக்க வேண்டும். சுவிசேஷ ஆர்வத்தைப் பண்பாடாகக் கொண்டிராத சபை வெகு விரைவி லேயே மூச்சிழந்து போய்விடுகிற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
(6) வருடத்தில் சில வேளைகளில் விசேஷ சுவிசேஷ கூட்டங்களையும், முகாம்களையும் கூட நடத்தி சுவிசேஷத்தை அறிவிக்கலாம். இதையெல்லாம் சபைகள் இருக்கும் இடங்களில் உள்ள மக்களுடையதும், மற்றவர்களுடையது மான வசதிப்படி செய்து கொள்ளலாம். சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு எந்த வேத பூர்வமான வழிமுறைகள் பயன்தருமோ அவற்றையெல்லாம் பயன் படுத்திக்கொள்ளுவதில் தவறில்லை.
(7) சபை ஜெபக்கூட்டங்களில் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும், ஆத்துமாக் களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். சுவிசேஷ மூச்சுத் துடிப்பை ஜெபக்கூட்டங் களில் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும். நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் செய்து வருகிற சுவிசேஷப் பணிகளுக்காக ஊக்கத்தோடு இடைவிடாமல் ஜெபக்கூட்டங்களில் ஜெபிக்க வேண்டும். சபையார் செய்து வருகின்ற சுவிசேஷப் பணிகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும். நம்முடைய சாதாரண சுகவீனங்களுக்காக ஜெபிப்பதற்காக ஜெபக்கூட்டங்கள் இருக்கக் கூடாது. கர்த்தரின் ராஜ்ய விஸ்தரிப்புக்காக ஜெபிக்கின்ற முக்கிய ஸ்தலமாக அது இருக்க வேண்டும். கிறிஸ்து வருகிற வரையில்தான் எவரும் சுவிசேஷப் பணி செய்ய முடியும். அவருடைய வருகையை நோக்கியிருக்கிற நாம் சுவிசேஷப் பணியில் வைராக்கியத்தோடும், ஈடுபாட்டோடும் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதை நம் ஜெபங்களில் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
தவிர்த்துக்கொள்ள வேண்டிய தவறுகள்
கல்வினிஸக் கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் வேத ஞானமில்லாமல் சுவிசேஷ ஊழியத்தை மிகவும் தரமற்றதாக, கிறிஸ்துவின் வேதம் அறியாத ஒன்றாக மாற்றி வைத்திருப்பது நாம் அறிந்ததே. தடியெடுப்பவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் சபை வாழ்க்கையையே வாழ்க்கையில் காணா மல் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்ற ஒரே அடையாளத்தை மட்டும் கொண் டிருந்து வேதபூர்வமான தகுதிகள் இல்லாதிருந்தும் தன்னைத் தானே ஊழியக் காரர்களாக்கிக் கொண்டு சுவிசேஷ ஊழியம் செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் அநேகர் இன்று. அத்தகைய ஊழியங்களையே நம்மினம் முழுவதும் நாம் கண் கூடாக பார்க்கிறோம். இவர்கள் யாருக்கும் கணக்குக் கொடுப்பதுமில்லை, இவர்கள் கொண்டிருக்கும் சிறு கூட்டமும் இவர்களுக்குக் கீழ் பொறுப்போடு இருந்து வருவதில்லை. இந்த வழியில் நம் சபை மக்களும் போய்விடக்கூடாது என்ற பயத்தில் நம்மில் சிலர் தங்களுடைய சபை ஆத்துமாக்களை சுவிசேஷ ஊழியத்தில் ஊக்கப்படுத்துவதில்லை. பலருடைய தவறான செய்கைகள் இவர் களுக்கு பயத்தை ஏற்படுத்தி திருச்சபையையும், ஆத்துமாக்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் சுவிசேஷ ஊழியங்களில் வைராக்கியத்தோடு ஈடுபட்டு உழைக்க தடையேற்படுத்தி விடுகிறது. இந்தப் போக்கும் பெரிய ஆபத்தை விளைவித்துவிடும். உங்களுடைய பயத்தை அறியாதவர்கள் உங்களை ஹைப்பர்-கல்வினிஸ்டாக தவறாக எண்ணிவிடக்கூடிய ஆபத்தை நீங்களே உருவாக்கிவிடுகிறீர்கள். தவறான விதத்தில் ஊழியங்களை அவர்கள் செய்தாலும், உங்களில் சுவிசேஷ ஊழிய ஆர்வத்தை அவர்களால் பார்க்க முடியாததால் ஹைப்பர்-கல்வினிஸ்டு என்ற பட்டத்தை உங்களுக்கு அவர்கள் சூட்டிவிடலாம்.
இதைத் தவிர்த்துக்கொள்ள வழிதான் என்ன?
வேதபூர்வமாக அமையாத சுவிசேஷ ஊழியங்கள் - உண்மையில் இன்று சபை ஊழியங்கள் என்ற பெயரில் செய்யப்பட்டு வரும் அநேக ஊழியங்கள் சபை ஊழியங்களே அல்ல. பெரும்பாலும் அவைகள் கிறிஸ்தவ நிறுவனங் களாகவே (Para-church organizations) இயங்கி வருகின்றன. ஞாயிறு ஆராதனை யையும், ஞானஸ்நானத்தையும், திருவிருந்து கொடுப்பதையும் மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தபோதும் இவைகள் எங்கிருந்தோ உதவித்தொகை பெறும் ஒரு மனிதரை மட்டும் ஊழியக்காரராகக் கொண்டு எந்தவித சபை அமைப்பையோ, பொறுப்புள்ள சபை அங்கத்தவர்களையோ, அங்கத்தவர் களால் முறையாகத் தெரிவு செய்யப்பட்ட தகுதி பெற்ற சபை அதிகாரி களையோ, சபை சட்ட விதிகளையோ, எதை விசுவாசிக்கிறோம் என்பதைத் தெளிவாக விளக்கும் விசுவாச அறிக்கையையோ கொண்டிராமல் காணிக் கையை மட்டும் வாரா வாரம் சேர்க்கும் சிறு குழுக்களாக இயங்கி வருகின்றன. இவைகள் சபைகளுக்குரிய எந்தவித இலக்கணத்தையும் தன்னில் கொண்டிராத போதும் சபையென்ற பெயரில் இயங்கி வருகின்றன. இவர்கள் ஈடுபட்டிருக்கும் சுவிசேஷ ஊழியங்களும் எந்தவித வேத வழிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி வருகின்றன. கண்மூடித்தனமாக கேள்வி முறையின்றி இவர்கள் ஆத்துமாக்களுக்கு ஞானஸ்நானத்தைக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண் டிருக்கிறார்கள். இந்த முறையில் பத்துப் பதினைந்து கிராமங்களில் சிறு சிறு குழுக்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை சபைகளாகக் காட்டிக்கொள் வார்கள். இது முறையற்றதும் ஆபத்தானதும்தான். இத்தகைய ஊழியங்களை நாம் அங்கீகரிப்பதும் இயலாத காரியம். அத்தோடு சரியாக சபை நடத்த வேண்டும் என்ற வாஞ்சை கொண்டிருப்பவர்களுக்கும் இவற்றால் ஆபத்துத் தான். இத்தகைய ஊழியங்களோடு நாம் தொடர்பு வைத்து ஐக்கியத்தில் வருவதும் முரண்பாட்டில்தான் போய் முடியும். சிலர், என்னதான் குறைகள் இருந்தாலும் இவர்கள் சுவிசேஷத்தை சொல்லுகிறார்கள், நீங்கள் என்ன செய் கிறீர்கள்? என்று நம்மைப் பார்த்து அங்கலாய்த்துக்கொள்ளுவார்கள். ஆலை இல்லாத ஊரில் இழுப்பைப் பூ சக்கரை என்பது போல இவர்கள் இருந்துவிடுவ தால் இவர்கள் செய்வதையெல்லாம் வேதமாகக்கொள்ள முடியுமா என்ன!
சுவிசேஷப் பணிக்காக கர்த்தர் நியமித்திருக்கும் தெய்வீக அமைப்பு திருச் சபை மட்டுமே - நம்மினத்தில் ஊழியங்களின் நிலைமை இப்படி இருந்த போதும் முறையாக திருச்சபை அமைப்பைக் கொண்டிருந்து சபை ஊழியம் செய்கிறவர்கள் சுவிசேஷத்தை நம் சமுதாயத்தில் அறிவிக்க கர்த்தர் ஏற்படுத்தி யிருக்கும் ஒரே தெய்வீக நிறுவனம் சபைதான் என்பதை உணர வேண்டும். சுவிசேஷ ஊழியத்தை சபைகள் வேறு எவருக்கும் தாரை வார்த்துக் கொடுத்து விட முடியாது. பொறுப்புள்ள அங்கத்துவத்தையும், விசுவாசமுள்ள சபைத் தலைமையையும், சபை அமைப்பையும் கொண்டிருந்து தெளிவான சத்தி யத்தைப் பின்பற்றி வருவது அத்தனை அவசியமானதாக இருந்தபோதும் சுவிசேஷ ஊழியத்தை சபை ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது. சபை செய்ய வேண்டிய அந்தப் பணி வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை. சுவிசேஷப் பணியை சபையில் இருந்து சபைக்குக் கட்டுப்பட்டு வேதபூர்வமாக எப்படி செய்ய வேண்டும் என்பதை சபையாருக்கு கற்றுக் கொடுத்து வழி காட்டி ஊக்குவிக்க வேண்டியது சபைத் தலைமையின் பொறுப்பு. வேத ஞானமின்மையாலும், சுயநலத்தினாலும் பலர் தவறான விதத்தில் சுவிசேஷப் பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக நியாயமாக நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அந்தப் பணியை நாம் செய்யாமலிருப்பது பெருந்தவறு. அதை சரியாக எப்படி செய்வதென்பதை மற்றவர்கள் பார்த்து அறிந்துகொள்ளும் விதத்தில் நாம் செய்து காட்ட வேண்டும். சீர்திருத்த கல்வினிஸத்தை வாயால் பேசிக்கொண்டிருப்பதைவிட செயலில் காட்டுவது அவசியமல்லவா? அதே போல் இறையாண்மையுள்ள கர்த்தரின் செயல் திட்டத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை வைராக்கியத்தோடு அறிவிப்பதில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் இல்லாமலிருக்கிறார்கள் என்ற பெயர் நமக்கு வரக்கூடாது.
சபை சம்பந்தமாக வேதம் போதிக்கும் எநத்க் கோட்பாட்டையும் தாரை வார்த்துக் கொடுத்துவிடாமல் சுவிசேஷத்தை வைராக்கியத்தோடு அறிவித்து சபை கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் விதம் ஊழியத்தை நடத்திச் செல்ல முடியும். சீர்திருத்தவாத கல்வினிஸப் போதனைகளை வெட்கப்படாமல் பிரசங்கியுங்கள். சபை அமைப்புப் பற்றிய வேதபோதனைகளை விசுவாசித்து அவை நடைமுறையில் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், சுவிசேஷப் பணிகள் அனைத்தும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் சபைக்குள் வந்து சேரும் விதத்தில் அமைய வேண்டும் அல்லது வேதபூர்வமான, முறை யான சபை அமைப்பில் போய் முடிய வேண்டும். தொடர்ந்து சுவிசேஷத்தை வைராக்கியத்தோடு சபையிலும், சபைக்கு வெளியிலும் பரிசுத்த ஆவியில் தங்கியிருந்து பிரசங்கியுங்கள். ஆத்தும அறுவடையை கல்வினிஸ சபை மட்டுமே இறையாண்மையுள்ள கர்த்தரில் தங்கியிருந்து உறுதியோடும் வைராக்கியத்தோடும் செய்ய முடியும். இதைச் செய்ய நாம் நம்முடைய திறமை களில் நம்பிக்கை வைப்பதில்லை; கர்த்தர் தந்திருக்கும் ஆயுதமான பிரசங்கத்தில் நம்பிக்கை வைக்கிறோம். ஆத்தும ஆதாயத்திற்காக நாம் நம்முடைய திட்டங் களில் நம்பிக்கை வைப்பதில்லை மாறாக பரிசுத்த ஆவியின் வல்லமையான கிரியையில் நம்பிக்கை வைக்கிறோம். இந்த ஊரிலும் என் மக்கள் இருக் கிறார்கள் என்று பவுலுக்கு கொரிந்து பட்டணத்தில் நினைவுறுத்திய கர்த்தரின் வார்த்தைகளை நம்பியே நாம் சுவிசேஷத்தை அறிவிக்கிறோம். அழிந்துபோகும் இந்த உலகத்து ஆயுதங்களில் தங்கியிருந்து நாம் சுவிசேஷம் அறிவிப்பதில்லை. நம் சுவிசேஷ ஆயுதங்கள் பரலோகத்துக்குரியவை. கர்த்தரின் மக்கள் நிச்சயம் அவருடைய அநாதித் திட்டப்படி அவரிடம் வந்து சேர்வார்கள். அந்த உறுதியான நம்பிக்கையோடே நாம் தொடர்ந்து சுவிசேஷத்தை சத்தியமாக அறிவிக்க வேண்டும். கர்த்தருக்கே எல்லா மகிமையும்.
|
கல்வினிஸம் |
ஹைப்பர்-கல்வினிஸம் |
|
1. சுவிசேஷம் பாரபட்சம் காட்டப்படாமல் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். |
1. பொதுவாக அனைவருக்கும் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்கக் கூடாது. |
|
2. ஒவ்வொரு பாவியும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறான். |
2. பாவி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை. |
|
3. சுவிசேஷம் கிறிஸ்துவை அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது. |
3. சுவிசேஷம் அனைவருக்கும் கிறிஸ்துவை இலவசமாக வழங்கவில்லை. |
|
4. பொதுவான கிருபை (Common Grace) இருப்பதாக வேதம் போதிக்கிறது. |
4. பொதுவான கிருபை என்று ஒன்றில்லை. |
|
5. அனைவருக்குமான பொதுவான அன்பு கர்த்தரில் இருக்கிறது. |
5. தெரிந்துகொள்ளப்படாதவர்கள் மீது கர்த்தர் எந்தவிதத்திலும் அன்பு காட்டுவதில்லை. |
போருக்குப் பின் ஸ்ரீலங்காவில்
இந்த வருடத்தில் ஸ்ரீலங்காவுக்கு போய்வர கர்த்தர் துணை செய்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு, போர் முடிவடைந்த பிறகு போன போது எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் அந்நாட்டுக்குப் போனேன். கடந்த காலங்களில் அங்கு போயிருந்தபோது நிலைமை வேறாகத்தான் இருந்தது. அன்று அரச படைகளையும், சோதனை நிலையங் களையும் எங்கு போனாலும் அடிக்கடி காண வேண்டியிருந்தது. இருதயத்தில் ஒரு மூலையில் பயம் கூட அடிக்கடி தலைகாட்டும். நாட்டு மக்களும் அமைதியின்றி பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலங்கள் அவை. எதிர்காலத்தைப் பற்றி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வழி யில்லாமல் அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற மனப்பதைப்போடு ஒவ்வொரு நாளையும் கடப்பதை மட்டும் வழக்கமாகக் கொண்டு மக்கள் வாழ்ந்த நாட்கள் அவை. இவையெல்லாவற்றிற்கும் மேலாக 2004ல் சுனாமியும் நாட்டைத் தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. 2006ல் இருந்து கடும் போர் ஆரம்பமாகி யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் அரச படைகள் முழு நாட்டையும் தன்வசப்படுத்தி விடுதலைப் புலிகளை இல்லாமல் ஆக்கிவிட்ட 21ம் நூற்றாண்டின் பேரதிசயம் என்று கூறக்கூடிய ஒரு நிலைமை யும் ஏற்பட்டுவிட்டது. இத்தனைக்கும் பிறகு நாடு எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லாமல் இல்லை.
தற்கால நிலைமை
நாட்டில் கால் வைத்த உடனேயே என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த கார் டிரைவர் முதல் பல பேரிடம் நாட்டு நிலைமை பற்றி விசாரித்தேன். ஆட்டோ ஓட்டுகிறவர் முதல், தமிழராக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும் சரி தங்கள் தோளில் இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போன்ற ஓர் உணர்வு இருப்பதாகத்தான் எல்லோரும் சொன்னார்கள். பயமில்லாமல் இப்போது எங்கும் போகமுடிகிறது. எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு பயமில்லாமல் அனுப்ப முடிகின்றது என்ற அமைதி பலருடைய வார்த்தைகளில் இருந்தது. மக்கள் முகத்திலும், நடவடிக்கைகளிலும் நான் இதுவரை பார்த்திராத ஓர் அமைதியைக் கண்டேன். அதுவரைக்கும் நாட்டு மக்களுக்கு நன்மைதான். இருந்தாலும் நடந்து முடிந்த செயல்களை வைத்து அரசு என்ன பாடத்தைப் படித்திருக்கிறது? அகதி முகாம்கள் மூடப்பட்டு அகதிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் வசதியோடு வாழ வழி செய்து தரப்படுகிறதா? அரசியல்வாதிகள் நிலைமையைப் பயன் படுத்திக்கொண்டு எல்லா மக்களும் இணைந்து அமைதியாக வாழ நல்ல நடவடிக்கை எடுப்பார்களா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எது எப்படியிருந்தபோதும் இப்போதைக்கு கிடைத்திருக்கும் அமைதி பற்றி அநேகருக்கு பொதுவாகவே மகிழ்ச்சிதான். குறுகிய காலத்தில் பெரும் அழிவின் மத்தியில், பலத்த உயிரிழப்புக்களின் மத்தியில் இந்த அமைதி கிடைத்திருக்கிறது என்பதையும் அவர்கள் மறக்கவில்லை. நடந்து போன வற்றை மறக்காது, அவை தொடர்ந்துவிடாதபடிக்கு இனங்கள் இணைந்து வாழ அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை எடுப்பார்களானால் இந்நாடு நிச்சயம் பெரும் வளர்ச்சி காணக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் அதற்கு இருக்கிறது என்பது பலரும் உணர்ந்த உண்மைதான். அந்நாளும் வருமா?
நாட்டில் கிறிஸ்தவம்
பல நூறு வருடங்களுக்கு முன்பே கிறிஸ்தவம் ஸ்ரீலங்காவில் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்களும், அதற்குப் பின் டச்சுக் காரர்களும், அவர்களுக்குப் பின் பிரித்தானியர்களும் நாட்டை ஆண்டிருக் கின்றனர். போர்த்துக்கேயர்களின் ஆட்சிக் காலத்தில் அறிமுகமான ரோமன் கத்தோலிக்க மதம் இன்றும் நாட்டில் தொகையானவர்களால் பின்பற்றப் பட்டு வருகிறது. இன்றைக்கு நெதர்லாந்து என்று அழைக்கப்படும் நாட்டா ராகிய டச்சுக்காரர்கள் மூலம் டச்சு சீர்திருத்த சபைகள் நாட்டில் நிறுவப் பட்டன. பிரித்தானியர்கள் இங்கிலாந்து திருச்சபைகளின் வழியில் ஆங்கிலிக்கன், மற்றும் மெத்தடிஸ்ட் சபைகளை நிறுவினார்கள். இன்றைக்கு இவையெல்லாமே பாரம்பரிய சபைகளாக பெரும்பாலும் சுவிசேஷ உயிர்த்துடிப்பில்லாதவை யாக இருந்து வருகின்றன. இவற்றின் மத்தியில் ஒரு சில விதிவிலக்குகள் இருந்துவிடலாம். மிதவாதக் கோட்பாட்டிற்கு இறையாகிப்போன சீ. எஸ். ஐ. சபைகளையும் இங்கு காணலாம். இவை தவிர நாட்டில் பெருந்தொகையான பரவசக்குழுக்கள் பல்வேறு பிரிவுகளோடும், பெயர்களோடும் பெருகிக் காணப்படுகின்றன. தனி ஊழியம் என்ற பெயரில் சிறு சிறு ஊழியங்களை அங்கும் இங்கும் ஆரம்பித்து தன்னிச்சையாக நடத்தி வருகின்றவர்களையும் காணலாம். மொத்தத்தில் நாட்டில் கிறிஸ்தவத்தின் நிலை என்ன? அங்கிருந்த வாசகர் ஒருவர் சொன்ன வார்த்தைதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது: கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்ற அவருடைய வார்த்தைகள் சரியானவையாகத்தான் இருக்கின்றன. இன்றைக்கு சீர்திருத்த கிறிஸ்தவத்தில் நாட்டில் சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளை பின்பற்றும், பாரம்பரிய சபைகளோடு தொடர்பற்ற ஒரு சில சபைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் இரட்சிப்பு பற்றிய போதனையை விளக்கும் கிருபை யின் போதனைகளில் இன்று ஆர்வம் காட்டி வருகிறவர்களை நான் காண் கிறேன். நல்லதுதான். அது சீர்திருத்த கிறிஸ்தவத்தின் ஏனைய அவசியமான போதனைகளிலும் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டி சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை முழுமையாக விளங்கிக்கொள்ள வழி செய்யுமானால் மகிழ்ச்சிதான். கிருபை யின் போதனைகளில் மட்டும் ஆர்வத்தையும், நம்பிக்கையும் வைத்து ஏனைய போதனைகளில் அலட்சியம் காட்டி தொடர்ந்து பரவசக்குழுக்களிலும், மிதவாத பாரம்பரிய சபைகளிலும், சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் கிறிஸ்தவ நிறுவனங்களிலும் இருந்து வருவது சீர்திருத்த கிறிஸ்தவத்தை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்பதைத் தான் வெளிப்படுத்தும். ஆத்துமாக்கள் தேவ பயத்தோடு கர்த்தரின் வார்த்தைக்கு அடிபணிந்து ஆராதனை செய்யவும், ஆத்தும ஆதாயத்தையும், ஆத்தும விருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு வேதத்தில் இருந்து சத்தான பிரசங்கங்களையும், போதனைகளையும் அளிக்க வும், வேத இலக்கணங்களைக் கொண்டிருந்து, உலக இச்சையும், பொருளாசை யும் இன்றி, சபைக்குக் கட்டுப்பட்டு பணி செய்யும் நல்ல போதகர்களையும், சபை அமைப்பையும் கொண்ட சபைகள் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் இன்று நாட்டுக்கு தேவை. சீர்திருத்த சத்தியத்தில் சிலர் இன்று காட்டி வரும் ஆர்வம் அத்தகைய சபைகள் நாட்டில் உருவாவதற்கு வழி செய்யாமல் போனால் கிறிஸ்தவம் இந்நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் உயர்வதற்கு வழி இல்லை.
திருமறைத்தீப வாசகர்கள்
நான் போன சில இடங்களில் திருமறைத்தீப வாசகர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பத்திரிகை மூலம் அடைகின்ற நன்மைகளைக் கேட்டறிந்து கர்த்தருக்கு நன்றி கூறினேன். நல்ல பல யோசனை களையும் அவர்கள் தெரிவித்தார்கள். இந்தளவுக்கு பத்திரிகையில் பலருக்கும் ஆர்வமிருப்பதும், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது பயனளித்து வருவதும் நான் பெரிதாக அறிந்திராத ஒன்று. பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் உழைத்து உருவாக்கும் ஒவ்வொரு இதழும் ஆத்துமாக்களுக்கு பயனளித்து வருவது அறிந்து நானும் என்னைச் சார்ந்தவர்களும் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு துணையாக இருந்து பத்திரிகையை அங்கு தொடர்ந்து அச்சிட்டு விநியோகித்து வரும் நண்பர் களுக்கும் நாம் வாசகர்கள் சார்பாக நன்றி கூறுகிறோம். நமது ஏனைய வெளியீடுகளையும் ஸ்ரீலங்காவில் வெளியிட கூடியவரை முயற்சி செய்யப் போகிறோம். கர்த்தர் இதற்கும் வழி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு எங்களால் செய்ய முடிந்திருக்கிற இந்த சிறு பங்கை கர்த்தர் தன் மகிமைக்காக தொடர்ந்து பயன்படுத்த வேண்டு மென்பது மட்டுமே எங்களுடைய ஜெபமாக இருக்கிறது. பத்திரிகையை நல்ல முறையில் வெளியிட்டு சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளை தொடர்ந்து அளித்துவர எங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.
பிரியாவிடை பிரசங்கங்கள் -5-
அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின் மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தம் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி.
- ஆசிரியர்.
அகில உலக திருச்சபைக்கும், உலகிற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள்
தியத்தீரா சபைக்கு கர்த்தர் கூறியதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுவோம். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள் (வெளி 2:25).
இதுவரை நான் விளக்கியிருப்பவற்றை நினைவுபடுத்திக்கொண்டு, அடுத்த கட்டததி்ற்கு நாம் வரலாம். இந்தப் பிரசங்கங்களுக்கு அடித்தளமாக, ஆரம்பத் தில் நான் கூறியது: “விசுவாசத்தினாலும் அன்பினாலும் இயேசுவை ஒரு நபராக எண்ணி இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அதே விசுவாசத்தையும் அன்பையும் கொண்டு, அவருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாயிருங்கள்” என்பதுதான்.
இந்த அஸ்திபாரத்தை உடையவர்களாகிய விசுவாசிகளுக்கு, இயேசு கிறிஸ்து தியத்தீரா சபைக்குக் கூறிய ஓர் எச்சரிப்பின் வார்த்தைகளை ஆதார மாகக் கொண்டு நான் உங்களுக்கு பல புத்திமதிகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். கர்த்தர், தியத்தீரா சபைக்குக் கூறிய அந்த எச்சரிப்பு: உங்களுக் குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் (வெளி 2:25).
இந்த எச்சரிப்பின் கீழே நான் முதலாவதாக உங்களுக்குக் கூறியது: சபை இலக்கணத்தில் உங்களுக்குரியதை அவர் வருமளவும் பற்றிக்கொண் டிருங்கள் என்பதே. சபை இலக்கணமானது எவற்றைக் குறிக்கிறதென்பதை விளக்கி நான் ஏற்கனவே ஆறு காரியங்களை உங்கள் முன் வைத்தேன்.
- இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்கு இருக்கின்ற முக்கிய பங்கைக் குறித்ததான உங்களுடைய நம்பிக்கையையும், அதை நடைமுறைப்படுத்து வதையும் அவர் வருமளவும் மாற்றிக்கொள்ளாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள்.
- சத்தியத்தை துல்லியமாகவும் கலப்படமில்லாமலும் சபை வாழ்க்கை முழுவதிலும் விளங்கிக்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் உள்ள உறுதியை அவர் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
- சபை அங்கத்துவம் குறித்ததான கொள்கைகளை உறுதியோடு நம்பி நடைமுறைப்படுத்துவதை அவர் வரும்வரைவிடாமல் பற்றிக்கொண்டிருங்கள்.
- தேவனுக்கு ஏற்றதான ஆராதனையே சபையில் நடைபெறுவதற்கு நீங்கள் கொண்டுள்ள உறுதியை அவர் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
- சபையின் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும், அவர்களுடைய பணிகளை நிர்ணயம் செய்வதைக் குறித்ததான கொள்கை களையும் அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்.
- சபையாக, நீங்கள் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஊழியங் களையும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு எல்லாருமாக இணைந்து செய்ய வேண்டிய ஊழியங்களையும் பற்றிய கோட்பாடுகளை அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்.
இன்று நான் சபையின் இலக்கணத்தைக் குறித்ததான ஏழாவது புத்தி மதியை உங்களுக்கு விவரித்து சொல்லப் போகிறேன்.
- உலகத்தில் காணப்படும் உலகளாவிய திருச்சபைக்கு (Universal Church), இந்த சபையிலிருந்து நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளையும், பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் குறித்த தான கொள்கைகளை அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்.
இதை நான் எழுதுவதற்கு முன் என் மேஜையில் அமர்ந்து இந்த வாக்கியத் திற்கு எந்தவித வார்த்தைகளை உபயோகிப்பது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துக் கொண்டிருந்தேன். “கடமை”, “ஊழியம்”, “அழைப்பு” என பல்வேறு வார்த்தைகள் எனக்குத் தோன்றின. எனது சக மூப்பர் ஒருவரைஅழைத்து, சகோதரரே, இதில் எனக்கு உதவுங்கள். எந்த வார்த்தையை உபயோகிப்பது மிகவும் பொருத்தமாயிருக்கும் என சொல்லுங்கள் என்று கேட்டேன். கடைசியாக “கடமை” (duty) என்கிற வார்த்தையையே தெரிந்து கொண்டேன். அநேகருக்கு ஏதாவதொரு காரியத்தை கடமை (duty) என்று கூறி செய்யச் சொன்னால் அது பிடிப்பதில்லை. சீர்திருத்த சபைகளில்கூட அநேகர் இந்த வார்த்தையை வெறுக்கிறவர்களாயிருப்பதை நான் அறிவேன். ஆனால் நான் வேண்டுமென்றேதான் இந்த வார்த்தையை உபயோகிக்கிறேன். தேவனுடைய பிள்ளைகள் “கடமை” என்பதை வெறுக்க வேண்டியதில்லை. “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று இயேசு கிறிஸ்து பிரதான கட்டளையைக் கொடுக்கவில்லையா? ஆகவே, ஒவ்வொரு விசுவாசியின் கடமையும் இன்னதென்பதை வேதத்தின் மூலமாக எடுத்துக்கூற வேண்டிய பொறுப்பு கிறிஸ்துவின் ஊழியத்தை செய்கிற போதகர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு வெறுமனே விசுவாசிப்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. கிறிஸ்துவின் கட்டளைகள் “யாவற்றிற்கும்” கீழ்ப்படிய வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதை அறிவுறுத்த வேண்டும். கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் அவர் கூறியபடி நடக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை பவுல் அப்போஸ் தலனும் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதலாம் நிருபத்தின் 4 ஆம் அதிகாரத்தின் முதல் வசனத்தில் குறிப்பிடுகிறார்: “சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டு மென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்தி சொல்லுகிறோம்”. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவனுக்கு எந்தக் கடமை யும் இல்லையென்று பவுல் கூறவில்லை. நீங்கள் எப்படி நடக்க வேண்டு மென்பதை எங்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் நடக்க வேண்டியவிதம்தான் உங்கள் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. கடவுளுடைய பிள்ளைகளாகிய நீங்கள் அதிலே அதிகமதிகமாய் தேற வேண்டியதாயிருக் கிறது என்கிறார். 2ஆம் வசனத்திலே, அவை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட “கட்டளைகள்” என அறிந்திருக்கிறீர்களே என்கிறார். அவை கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகள். கட்டாயம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று அவைகளைத் தள்ளிவிட முடியாது. அவைகள் கட்டளைகள்! ஆகவே தான் நான் எந்தவித தயக்கமும் இல்லாமல், உறுதியாக சபைக்குக் கூறுகிறேன்: உலகில் காணப்படும் திருச்சபைக்கும், பாவத்தினாலே வீழ்ந்திருக்கும் உலகத் திற்கும் சபையாக நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் வரும்வரைக்கும் விடாமல் செய்து கொண்டிருங்கள். இது சபையின் கடமை.
இந்த புத்திமதியிலே இரண்டு காரியங்கள் அடங்கியுள்ளன. (1) உலகில் காணப்படும் சபைக்கு, நீங்கள் சபையாக செய்ய வேண்டிய கடமைகள், (2) பாவத்திலே வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு நீங்கள் சபையாக செய்யவேண்டிய கடமைகள்.
இந்த வரிசைப் பிரகாரமாகவே அவை இருக்கட்டும். இதை மாற்ற வேண்டாம். கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, “உலகில் காணப்படும் திருச்சபை என்கிற காரியமென்றெல்லாம் ஒன்றுமில்லை; புதிய ஏற்பாட்டில், ‘சபை’ என்று வருகிற வார்த்தைகள் யாவுமே உள்ளூர் சபைகளை மட்டும் தான் குறிப்பிடுகின்றன” எனக்கூறி அதற்காக வேதத்தையே தலைகீழாகப் புரட்டி விவாதம் செய்பவர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டை பாரபட்சமில்லாமல் வாசித்துப் பார்த்தால் நமக்கு சில தெளிவுகள் ஏற்படுகின்றன. நாம் பின்பற்றுகிற 1689 விசுவாச அறிக்கையையும் கவனித்துப் பாருங்கள். அதில் 26ஆம் அதிகாரத்தின் 1ஆம் பாராவை கவனி யுங்கள்: “ஆவியின் உள்ளார்ந்த கிரியையையும், கிருபையின் சத்தியத்தையும் பொருத்த அளவில், உலகளாவிய சபை என்பது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகும். திருச்சபையின் தலைவராகிய கிறிஸ்துவுக்குள் (முன்பிருந்த, இப்போது இருக்கிற, இனி இருக்கப்போகிற) தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய எல்லாருடைய முழு எண்ணிக்கையையும் உடையதாக அது இருக்கிறது. எல்லாரையும், எல்லாருக்குள்ளும் நிறைவுசெய்கிற கிறிஸ்துவில் நிறைவுபெறும் அவரது மனைவியும் சரீரமுமாக உலகளாவிய திருச்சபை இருக்கிறது. சுவிசேஷத்தை விசுவாசித்து கிறிஸ்துவின் மூலமாக கடவுளுக்குக் கீழ்ப்படிந்து உலகமெங்கிலும் வாழ்கின்ற அனைவரும் கண்ணுக்குப் புலனாகின்ற பரிசுத்தவான்களாகக் கருதப்பட வேண்டும். எல்லா உள்ளூர் சபைகளும் அத்தகைய அங்கத்தினரைக் கொண்டு அமைய வேண்டும். அவர்கள் தங்கள் விசுவாசத்தை தவறான போதனைகளினால் அழித்துவிடாமலும், பரிசுத்தமற்ற வாழ்க்கை வாழாமலும் இருக்க வேண்டும்”. இதன்படி, கிறிஸ்துவின் சரீரம் என்பது கண்ணுக்குப் புலப்படுகிற உள்ளூர் சபைகளையும் தாண்டி உலக அளவிலான பெரிய எண்ணிக்கையைக் கொண்டது என்பதை நமது விசுவாச அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த பெரிய எண்ணிக்கையுள்ள கடவுளின் மக்களிடமிருந்து, உள்ளூர் சபையாகிய நாம் பிரிந்தவர்களாகக் காணப்பட முடியாது. பவுல் அப்போஸ்தலன் கொரிந்து சபையாருக்கு தனது முதலாம் நிருபத்தை எழுதும்போது இந்தக் கருத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டு மென்கிற ஆதங்கத்திலே பின்வருமாறு எழுதுகிறார்: “பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள்ளே பரிசுத்தமாக்கப் பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமா யிருக்கிற தேவனுடைய சபைக்கும் (உள்ளூர் கொரிந்து சபை), எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் (உலகெங்கும் காணப்படும் உலகளாவிய சபை) எழுதுகிறதாவது . . .” பவுல் இந்த நிருபத்தை கொரிந்து சபையாகிய உள்ளூர் சபைக்கு எழுதினாலும், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் சபையாகக் கூடி அவரைத் தொழுது ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவராக அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த நிருபத்தை எழுதுகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அவருடைய ஜனங்கள்! கிறிஸ்துவின் சரீரமாகிய அந்த உலகளாவிய சபைக்கு, உள்ளூர் சபையாகிய நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தவறாதீர்கள் என்று நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
உலகில் காணப்படும் பொதுவான திருச்சபைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இவ்வளவு காலமாக நாம் இந்த கடமையை எவ்வாறு நிறைவேற்றி வந்தோம்? நாம் பிற டினாமினேஷனல் சபைகளில் இருந்து பிரிந்து வெளியே வந்து ஒரு சபையாக செயல்பட ஆரம்பிக்கும் முன்னதாகவே, மற்ற தேவபக்தர் களிடமிருந்து எப்படியாக ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் பெற்றுக் கொள்வது என்று அறிந்திருந்தோம். கர்த்தரின் உலகளாவிய திருச்சபையாகிய உலகில் காணப்படும் திருச்சபையில் உள்ள தேவபக்தர்களிடம் ஞானமும், அனுபவமும் நம்மைக் காட்டிலும் அதிகமாக இருந்ததை உணர்ந்து அவர்களிட மிருந்து பல நல்ல ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். நம்மை வழி நடத்தி நமக்கு வேதத்தில் இருந்து அநேக சரியான விளக்கங்களைக் கொடுத்த மற்ற சபைகளைச் சேர்ந்த போதகர்கள் இருந்திருக்காவிட்டால் நாம் இன்று ஒரு சரியான சபையாக செயல்பட்டுக் கொண்டிருக்க முடியுமா என்பதை நினைத்துப் பாருங்கள். ஆரம்ப காலங்களில் நமக்கு உதவிசெய்த மற்ற சபை களின் போதகர்களின் பெயர்களை நாம் மறக்க முடியுமா? நமது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காக பிற சபைகளைச் சேர்ந்த அநேக நல்ல போதகர்கள் நம் மத்தியிலே வந்து இந்த பிரசங்க மேடையிலே நின்று பிரசங்கித்து அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களினாலே நமக்கு உதவிகள் செய்திருக்கிறார்களே. இப்படி யாக உலகில் காணப்படும் உலகளாவிய திருச்சபையின் தேவபக்தர்கள் உள்ளூர் சபையாகிய நாம் ஸ்திரப்படுவதற்கு உதவியிருக்கிறார்கள்.
உள்ளூர் சபையாகிய நாமும் ஸ்திரப்பட்ட பின், உலகில் காணப்படும் உலகளாவிய திருச்சபைக்கு நமது கடமைகளை பலவிதங்களில் ஆற்றியிருக் கிறோம். நமது சபை அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களிலேயே மற்ற இடங்களி லுள்ள சபைகளுக்கு நாம் நமது சபையிலிருந்து பொருள் உதவிகளை செய்திருக் கிறோம். ஆப்பிரிக்கா போன்ற தூர இடங்களிலுள்ள, நமது சபையை சார்ந்திராத பல உள்ளூர் சபைகளின் ஆவிக்குரிய காரியங்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு, பல கிறிஸ்தவ கிளை ஸ்தாபனங்களின் மூலமாக, கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியாக நமது உதவிகளை அனுப்பியிருக்கிறோம். கடவுள் நம்மை ஒரு சபையாக அமைத்திருக்கும்போது, உலகில் காணப்படும் உலகளாவிய திருச்சபைக்கு ஊழியம் செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த பொறுப்பு உள்ளூர் சபைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் புதிய ஏற்பாட்டிலே கண்கூடாகப் பார்க்கிறோம். எருசலேமில் உள்ள விசுவாசிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்தவர்களாகக் கஷ்டப்பட் டிருக்கும்போது, அந்த சமயத்தில் புறஜாதிகளின் மத்தியிலே ஊழியம் செய்து கொண்டிருந்த பவுல் அப்போஸ்தலன், புறஜாதி கிறிஸ்தவர்களின் பொரு ளுதவியை ஏற்று, அதை எருசலேம் விசுவாசிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பை ஏற்கிறார். அதற்காக சில விசுவாசிகளையும் தேர்ந் தெடுத்து அவர்களிடம் அந்தக் காரியத்தை ஒப்படைக்கிறார். கடவுளின் அநேக திட்டங்களில் இதுவும் ஒன்று. மற்ற இடங்களிலுள்ள விசுவாசிகளோடும் நாம் ஐக்கியப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்படிக்கு கடவுள் இந்தத் திட்டத்தை வகுத்திருக்கிறார். சகோதர சபைகளிடமிருந்து நமக்கு வரும் கடிதங்களின் மூலமாக நாமும் உலகளாவிய திருச்சபையில் அங்கமாயிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளுகிறோமல்லவா? இத்தாலி தேசத்திலும், தூர கிழக்கு தேசங்களிலும், தென் ஆசியாவில் வளர்ந்து வருகின்ற கர்த்தருடைய சபைகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையையும், பொறுப்பையும் தற்போது ஏற்றுக்கொண்டவர்களாயிருக்கிறோம். எல்லா இடங்களிலுமிருந்து வருகின்ற கடிதங்களை நான் பாதுகாத்து வருகிறேன். எந்த தேதியில் யாரிடமிருந்து கடிதம் வந்தது என்பதையெல்லாம் இன்னமும் வைத்திருக்கிறேன். 70, 80 ஆம் ஆண்டுகளில் வாரா வாரம் ஏறக்குறைய 50, 60 கடிதங்கள் பிற சபைகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எழுதி அனுப்பியிருப்பதைக் காண்கிறேன். யாருக்கு அவைகளை எழுதினேன்? உலகமெங்கிலுமிருந்து நம்மோடு கடிதத் தொடர்பு கொண்ட அவருடைய விசுவாசிகளுக்கு. அவர்களுக்கு பல ஆவிக்குரிய காரியங்களில் ஆலோசனைத் தேவைப்பட்டது; அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியதாயிருந்தது. கிறிஸ்துவின் ஜீவனில் இணைக்கப்பட்ட அநேக ஆத்துமாக்கள், நம்மோடு தமது ஆத்துமத் தேவைகளுக்காகத் தொடர்புகொள்ளும்போது நாம் உள்ளூர் சபையாக இருந்தாலும் அவர்களுக்கு பலவிதங்களில் உதவிக் கரங்களை நீட்டியிருக்கிறோம். 1967 ஆம் ஆண்டு முதன்முதலாக நாம் வெளிநாடுகளில் போய் ஊழியம் செய்யத் தொடங்கியது முதல் இன்று வரையுள்ள காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். ஸ்வீடன், ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, பாகிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு இடங்களிலுமிருந்து ஊழிய அழைப்பு நமக்கு வந்தபோது, நான் அங்கு போய் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். சபையாராகிய நீங்கள், நான் இங்கு இல்லாத நேரங்களில் அதிருப்தியடை யாமல் என்னை எனது ஊழியத்தில் தாங்கி இருக்கிறீர்கள். அதை நான் நினைவுகூராமல் இருக்க முடியுமா? எதற்காக நான் அங்கெல்லாம் போனேன்? அல்பர்ட் மார்டின் பெயரால் குழுக்களையும் ஸ்தாபனங்களையும் உருவாக்கு வதற்காகவா? இல்லை. புதிதாக எழும்பிவரும் சபைகளைக் கட்டுவதற்கும், அங்குள்ள விசுவாசிகளுடைய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுவதற்குமே. நமக்கும் பல வருடங்களுக்கு முன்பாக அநேக கேள்விகள் இருந்ததே. அதே போல அவர்களும் ஆவிக்குரிய போராட்டங்களைப் போராடிக் கொண்டிருக்கையிலே அவர்களுக்கு ஆலோசனைகளும், தைரிய மளித்தலும் தேவைப்பட்டது. அநேக புதிய ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துக்கூறி ஆத்தும அறுவடை செய்வதற்கு நமது உதவிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் நம்மை அழைத்தார்கள். கடவுளின் ஜனங்களாகிய நீங்கள் இருகரங் கொண்டு அந்த ஊழியங்களில் என்னைத் தாங்கினீர்கள். ஏன்? ஏனென்றால் உலகில் காணப்படும் திருச்சபைக்கு பணியாற்ற வேண்டிய கடமை உள்ளூர் சபைகளுக்கும் இருக்கிறது என்கிற உபதேசத்தை நீங்கள் கேட்டு வளர்ந்திருப்பதினால், அதை மனப்பூர்வமாக நிறைவேற்றினீர்கள். மேலும் மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டுவதிலும், அவர்கள் மேல் கரிசனை யாய் இருப்பதிலும் பவுல் தெசலோனிக்கேயருக்கு கூறினவிதமாகவே நடந்து வந்திருக்கிறீர்கள். “சகோதர சிநேகத்தைக் குறித்து நான் உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரர் எல்லாருக்கும் செய்து வருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும் . . . உங்களுக்கு புத்தி சொல்லுகிறோம்” (1தெச 4:9-10). தெசலோனிக்கேய சபையார் தங்களுடைய சபையாரை மாத்திரம் நேசிக்கிறவர்களாயிராமல், மக்கெதோனியாவிலுள்ள சகோதரர் எல்லாரையும் நேசிக்கிறவர்களாயிருந்தார்கள். அப்படிப்பட்டவர் களுக்கும், அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகுங்கள் என்று பவுல் புத்திசொல்லுகிறார். போதகர் ஸ்மித் நம் மத்தியிலே மூப்பராகப் பணி புரிய வந்தபோது நீங்கள் எவ்வளவு உற்சாகமாக அவரைத் தாங்கினீர்கள். பலமுறை அவர் பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை ஹாங்காங்கிற்கும் ஊழியத்தினிமித்த மாக சென்றுவர நேர்ந்தபோது நீங்கள் மனப்பூர்வமாக உதவினீர்கள். உலகளாவிய திருச்சபைக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்கிற விருப்பம் ஆண்டுதோறும் உங்களிடையே வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. 25 ஆண்டுகளாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பங்கு பெறுகின்ற போதகர்களின் கூட்டம் (Pastor’s Conference) நடைபெறுவதற்கும் நீங்கள் அதிகமாக உதவியிருக்கிறீர்கள். உங்கள் இருதயங்களையும், இல்லங்களையும் திறந்து அவர்கள் தங்குவதற்கு வகை செய்து கொடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு என்ன நன்மை? நீங்கள் உலகளாவிய திருச்சபைக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்திருக்கிறீர்கள். சிறு சிறு குழுக்களாக நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டது எனது பணியை இலகுவாக்கியது. இந்த விஷயங் களில் சபை மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியை காண்பிக்கிறது.
டிரினிட்டி கிறிஸ்டியன் ஸ்கூல் நமது சபை பிள்ளைகளுக்காக மாத்திரம் அமைக்கப்பட்டதல்ல. இவைகளின் மூலமாக உலகளாவிய திருச்சபைக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகளை நீங்கள் சபையாராக செய்துவருகிறீர்கள். சில வாரங்களுக்கு முன்னதாக கென்யா என்கிற இடத்திலுள்ளவர்களின் தேவையைக் குறித்து கேள்விப்பட்டீர்கள். உடனே என்ன செய்தீர்கள்? ஆயிரக் கணக்கான டாலருக்கும் மேலாக பணம் வசூலித்து, நீங்கள் முன்பின் பார்த் திராத அந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள உதவினீர்கள். உண்மையான தேவைகளை சந்திப்பதற்கு உங்களுக்கு இருக்கின்ற வாஞ்சையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என புத்தி சொல்லுகிறேன். உலகளாவிய திருச்சபைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் வரும்வரைக்கும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். கடமைகளை ஆற்றவேண்டிய வழிவகைகள் காலப்போக்கில் மாறலாம். ஆனால் கடமைகள் மாறாது. “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்நிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (மாற்கு 8:35). சபையின் ஜீவனைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் இழக்க வேண்டியவைகளை இழந்து அதைக் காத்துக்கொள்ள வேண்டும். சபையாக உங்கள் ஜீவனை இழந்துபோக விரும்புகிறீர்களா? அல்லது அதைக் காத்துக் கொள்ள விருப்பமா? கொடுக்க மனதில்லாமல் கைகளை இறுக மூடிக்கொள் வீர்களானால், உங்களுக்குரியதை இழக்க சம்மதமில்லையானால், இரகசியமாக சேர்த்து வைத்துக்கொள்வீர்களானால் என்ன ஆகும்? வேதம் கூறுவதை கவனியுங்கள். நீங்கள் அதை இழந்து போவீர்கள். நீங்கள் இழந்து போகக் கூடாதென்றால் தாராளமாகக் கொடுங்கள். ஜீவனையே கொடுத்தாலும் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வீர்கள் என இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். இதுதான் சுவிசேஷ வழியிலான ஆசீர்வாதம். ஆகவே, பிரியமான ஜனங்களே, மூப்பர்களே, உதவிக்காரரே! தாராளமாகக் கொடுக்கும் கரங்கள்தான் அது இணைக்கப்பட் டிருக்கும் கைக்கும், சரீரத்திற்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதிருங்கள். கடவுளுடைய ஜனங்களாகிய உங்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், உலகளாவிய திருச்சபைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறாதிருங்கள்.
ஜெபங்களின் மூலமாகவும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். ஜெபக் கூட்டங்களில் உங்களுடைய பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றுங்கள். சபையின் ஜெபங்களில் ஒரு பங்கு யாருக்காக விசேஷமாக ஏறெடுக்கப்படு கிறது? உலகளாவிய திருச்சபைக்காக. ஆகவே ஜெபங்களின் மூலமாக உலக ளாவிய திருச்சபைக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை விட்டு விடாதீர்கள். நமது அங்கத்தினர்களின் தேவை மற்றும் பிரச்சனைகளுக்காகவும் ஜெபத்தில் சிறிது நேரம் ஒதுக்கப்படுகிறது. அது சரிதான். ஆனால், அது எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 1962ஆம் ஆண்டிலே நான் ஒரு டினாமினேஷனல் சபையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அங்கு செய்யப்பட்ட ஜெபங்கள் வெட்ககரமாக இருந்ததை உணர்ந்தேன். “சகோதரி சுசிக்காக ஜெபியுங்கள். அவருடைய சகோதரியின் பேரனுடைய கால் விரல் குணமாக ஜெபியுங்கள் . . .” என்று இப்படியாக ஜெபம் நீண்டு கொண்டே போனது. நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் இப்படியில்லாமல் தேவனு டைய ராஜ்யத்துக்கடுத்ததாக இருக்க வேண்டும் என நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி திருத்த வேண்டியதாயிருந்தது. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போலவே பூலோகத் திலும் செய்யப்படுவதாக. இப்படியாக மேலோன காரியங்களுக்காக ஜெபிப்ப தென்பது நமக்கு சுலபமாக வந்துவிடவில்லை. அதற்காக நான் பலமுறை புத்திசொல்ல வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட புத்திமதிகள் சொல்வது இனிமையாக இல்லையென்றாலும் சொல்லத்தான் வேண்டியதாயிருந்தது. ஜெபத்தின் நோக்கத்தையே புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
கடவுளின் பெரிதான கிருபையால், வாராந்திர ஜெபக்கூட்டங்களில் உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றச் செய்வதில் நான் கெடுபிடியாகத்தான் இருந்தேன். அது மிகவும் கடினம்தான். நீங்கள் வேலைப் பளுவினால் சோர்ந்து போய் களைத்து இருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். உங்களில் சிலர் வெகு புத்திசாலிகள்! கிறிஸ்தவர்கள் வாரத்தின் இடைநாளிலே கூடினார்கள் என்று வேதத்தில் எங்கும் காணப்படவில்லையே என்று உடனேயே சொல்வீர்கள். ஆமாம், அப்படி இல்லைதான். ஆனால், ஆதித் திருச்சபையில் ஒரு நல்ல பழக்கம் காணப்பட்டதை வேதத்தில் காண்கிறோம். அவர்கள் ஜெபத்திலே உறுதியாகத் தரித்திருந்தார்கள் என்பதைப் பார்க்கிறோம். கர்த்தருடைய நாளின் ஆராதனை நேரத்தை இன்னும் அதிகப்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நாம் ஜெபத்திலே தரித் திருக்கக் கூடுமானால் நன்மையாயிருக்கும். கடவுளை பிரத்தியேகமாக ஜெபத்தின் மூலமாகத் தேடுவதற்கு நமக்கு நேரம் கிடைக்காததாலேயே வாரத்தின் இடை நாட்களிலே ஜெபத்திற்காகக் கூடுகிறோம். இவைகளில் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது சூழ்நிலைகளுக்கேற்ப நமக்கு ஆசீர்வாதங்களும் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதுமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற அவருடைய ஜனங்களுக்காக, நீங்களும் நானும் குறிப்பிட்ட நேரத்திலே வந்து சபையாரோடே கூடி, ஜெபத்திலே அவர்களுக்காகப் போராடி தேவனுடைய ராஜ்யம் நிலைபெறுவதற்காக ஆசீர்வாதங்களைக் கேட்க வர முடியாது என்பதற்கு பொருத்தமான காரணங்கள் எதுவும் இல்லை.
சபையின் மூப்பர்களும், உதவிக்காரரும் உலகமெங்குமுள்ள தேவஜனங் களின் தேவைகளை உங்கள் முன் அறிவிக்கும்போது, அவர்களுக்கு உதவுவதற்கு உங்கள் கரங்கள் எப்போதும் தயாராக இருக்கட்டும். ராவல்பிண்டியிலுள்ள சபையாரின் ஆத்மீகத் தேவைகளுக்காக இங்கிருந்து ஊழியர்களை அனுப்ப வேண்டியது போன்ற தேவைகள் ஏற்படும்போது நம்மிடம் பணப்பற்றாக்குறை இருக்கக்கூடாது. தாராள மனப்பான்மையுள்ள ஆவியும், உதவுகின்ற கரங்களும் சபையில் எப்போதும் குறைவுபடாமல் இருப்பதற்கு ஜெபியுங்கள். எதற்காக? நாம் சபையாராக சேர்ந்து உலகில் காணப்படும் திருச்சபைக்கு உதவக் கடமைப்பட்டிருக்கிறோமே.
பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள்
அடுத்தபடியாக இன்னொரு முக்கிய புத்திமதியையும் கூற விரும்புகிறேன். உலகில் காணப்படும் உலகளாவிய திருச்சபைக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் தவிர்த்து, பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது நான் சொல்லப் போவதை கவனமாகக் கேளுங்கள். பாவத்தில் விழுந்துபோயிருக்கிற உலகத் திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பிரதானமான காரியம் என்ன? உங்களுடைய பிரதான கடமை யாது? நான் கூறப்போகிற பதில் சிலபேருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். இந்த பதில் இரண்டு காரியங்களை உள்ளடக்கியுள்ளது. அதில் முதலாவது, பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்தாரிடம் சுவிசேஷத்தைப் பேசாதீர்கள். அதிர்ச்சியாயிருக்கிறதா? அவர்களிடம் சுவிசேஷத்தை வாயால் கூறுவது உங்கள் பிரதான கடமை அல்ல. நீங்களாகவும், சபையாக சேர்ந்தும், சுவிசேஷம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கும் வகையில் அவர்களுக்கு முன்பாக வாழ்ந்து காட்டுங்கள். அதுதான் பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பிரதான கடமை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், சபையாரோடு இணைந்து வாழும் வாழ்க்கை யையும் சுவிசேஷம் எவ்வளவு வல்லமையாக மாற்றியிருக்கிறது என்பதை வெறுமனே பேசுவதைவிட செயலில் காண்பியுங்கள். இதுதான் உங்கள் பிரதான கடமை என்பதை நான் உங்களுக்கு வேதத்தின் மூலமாக விளக்கு கிறேன். மலைப்பிரசங்கத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய ராஜ்யத்தின் குமாரரும் குமாரத்திகளும் என்னவிதமான குணநலன்களைக் கொண்டிருப்பார்கள் என்பதை விவரிக்கிறார். பரலோக ராஜ்யத்திற்குரிய அத்தகைய குணநலன்களை விவரித்த பின்பாக உடனடியாக அத்தகைய குணநலன்களைக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து கூறுகிறார்: “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்” (மத் 5:13). உப்பாக மாற வேண்டும் என்றோ, நீங்கள் உப்பாக மாற்றப்படுவீர்கள் என்றோ கூறாமல், ராஜ்யத்தின் புத்திரர் உப்பாக இருக்கிறார்கள் என்பதை இயேசு தெரிவிக்கிறார். அத்தோடு, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறார் (மத் 5:14). நீங்கள் ராஜ்யத்தின் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பதினால் உலகத்துக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை முறை, சுவிசேஷத்தின் வல்லமையான செயலை நிரூபிப்பதாயிருக்கிறது. இதை மனதில் கொண்டவராக பவுல் எழுதுகிறார்: “எல்லாவற்றையும் முறுமுறுப் பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்” எதற்காக? “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (பிலி 2:15,14). இந்த உலகத்தாரின் மத்தியில் ஜீவவசனத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போல நீங்கள் பிரகாசிக்கிறீர்கள் என்று பவுல் முந்தின வசனத்திலே கூறுகிறார். பிரகாசமானது காதால் கேட்கப்படுவதல்ல, கண்களால் காணப்பட வேண்டும். ஆகவே பேச்சினால் அல்ல, செயலால், நீங்கள் உங்களை முற்றிலுமாக மாறப் பண்ணியிருக்கிற சுவிசேஷத்தின் வல்லமையை வெளிப்படுத்துங்கள். பேதுருவும் இதே கருத்தை மனதிலே கொண்டவராக ஆசியா பிரதேசங்களிலே சிதறி யிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறார்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களிலே பரிசுத்தம் பண்ணுங்கள்” (1 பேதுரு 3:15). அதாவது கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் எல்லா நேரங்களிலும் தலைமையாகக் கொண்டு செயல் படுங்கள். உலகமோ, சமுதாயமோ, நவீன காலத்துக்கேற்ற சிந்தனைகளோ உங்களை ஆளவிடாமல், கர்த்தராகிய இயேசுவே எனது தலைவரானவர் என உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த உறவின் மத்தியிலும் ‘நான் கிறிஸ்துவின் அடிமை’ என்கிறவர்களாக வாழ்ந்து காட்டுங்கள். கிறிஸ்துவே எனது கர்த்தர் என்பதை உங்கள் இருதயத்தில் பரிசுத்தப்படுத்துங்கள். அப்படியாக வாழும் போது, உங்களில் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். சுவிசேஷமானது உங்களை சுயநலத்தி லிருந்தும், பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும், கிறிஸ்துவற்ற எந்தக் காரியங்களி லிருந்தும் வெளியே கொண்டு வந்திருக்கிறது. அந்த சுவிசேஷத்தின் வல்லமை யானது உங்களுடைய வாழ்க்கையின் மூலமாக பிறருக்குத் தெரிய வேண்டும். அதைப் பார்ப்பவர்கள், நீங்கள் எதனால் இப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிய ஆர்வமடைவார்கள். உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறித்து உங்களிடம் அவர்கள் விசாரித்துக் கேட்க வரும்பொழுது, சுவிசேஷம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்பதைக் கூற ஆயத்தமாயிருங்கள். சிலபேர் சுவிசேஷம் சொல்கிறேன் எனக் கூறி, சம்பந்தமில்லாமல் வசனங்களைக் கூறுவதும், தங்களது ஒழுங்கற்ற தனிப்பட்ட வாழ்க்கையின் மூலமாக சுவிசேஷத் திற்கே அவதூறாக நடந்துகொள்வதையும் பார்க்கும்போது, அப்படிப் பட்டவர்களை பேசவிடாமல் தடுப்பதே சுவிசேஷம் சரியாகப் பரவுவதற்கு ஏதுவாக இருக்குமென எண்ணத் தோன்றுகிறது. நாம் பிரசங்கிக்கிற சுவிசேஷம் கடவுளுடைய வல்லமையான செயலை பறைசாற்றுவதாயிருக்க வேண்டும். ஆம், அது இரட்சிப்புக்கு வழிநடத்தும். நீங்கள் சுவிசேஷத்தை வாயினால் சொல்லுகிறவர்களாயிருந்தாலும், கைப்பிரதிகளை விநியோகிக்கிறவர்களாய் இருந்தாலும், புத்தகங்களின் மூலமாக அறிவிக்கிறவர்களாய் இருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சுவிசேஷத்தின் வல்லமை எப்படி செயல்பட்டிருக்கிறது என்பது காணப்பட வேண்டும். உங்களை சுவிசேஷம் எப்படி மாற்றியது! உங்கள் வாழ்க்கையையும், சிந்தனைகளையும், அனுபவங் களையும் எதை நோக்கித் திருப்பியிருக்கிறது என்பது வெளிப்பட வேண்டும்.
பாவத்தில் வீழ்ந்திருக்கும் உலகத்திற்கு முதலாவது நீங்கள் செய்ய வேண்டிய கடமையாவது, சுவிசேஷத்தின் வல்லமை உங்களுடைய சொந்த வாழ்க்கையை மாற்றியிருப்பதை நடைமுறையில் காண்பிப்பதாகும். அதை நீங்கள் எப்படி காண் பிப்பீர்கள்? உங்களுடைய பிள்ளைகள், ‘கிறிஸ்தவமெல்லாம் ஒன்றுமில்லை, அது பொய்’ எனக் கூறும் கடவுள் நம்பிக்கையற்ற தங்களுடைய சிநேகிதர் களிடம் அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவிடாதபடிக்கு சரியான பதிலைக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களா? அவர்கள் சற்றும் தயக்கமில்லாமல், ‘இதோ, பார். நீ ஏன் சுவிசேஷத்தை நம்பாமல் இருக்கிறாய் என்பது எனக்கு விளங்கவில்லை. அதன் ஆழங்கள் எனக்குப் புரியாவிட்டாலுங் கூட, அந்த சுவிசேஷமானது என்னுடைய தாயிலும் தகப்பனிலும் அவர்களுக் கிடையே உள்ள உறவில் வல்லமையாக கிரியை செய்வதை பார்க்கிறேன். அந்த சுவிசேஷமே அவர்கள் ஒருவருக்கொருவர் ஐக்கியமாயிருக்கும்படி இணைத்திருக்கிறது’ என சொல்லக் கூடிய வகையில் உங்கள் வாழ்க்கை இருக்கிறதா? அவர்களை பயமுறுத்தியோ அல்லது சொல்லிக்கொடுத்தோ இப்படிக் கூற வைப்பதில் பிரயோஜனம் இல்லை. பாவம் செய்யும்போது, மனம்வருந்தி அதை மனைவியிடம் கூறி மன்னிப்புக் கேட்கிறீர்களா? அல்லது உங்கள் பிள்ளைகளே உணர்ந்துகொள்ளும் வகையில் உங்கள் பாவங்களைக் குறித்து அலட்சியமாகவோ, கடினமனதோடோ இருக்கிறீர்களா? நீங்கள் சரியாக நடந்துகொள்ளாதபோது, பிள்ளைகளிடம்கூட மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். நீங்கள் சரியாக நடந்துகொள்வதே சுவிசேஷ வல்லமையை உறுதிப்படுத்துவதாகும். வெறும் வார்த்தைகளினால் சுவிசேஷத்தை அறிவிக்க முடியாது; ஒருவன் தான் சரியாக நடப்பதாக தனக்குள் எண்ணிக்கொள்வ தாலும் சரியான சாட்சியின் ஜீவியம் செய்ய முடியாது. சுவிசேஷம் மிகவும் வல்லமையானது. அது மகத்தான காரியங்களை நடப்பிக்கும். அது உங்களில் மகத்தான காரியங்களை நடப்பித்திருப்பதை முதலாவதாக உங்களுக்கு மிகவும் நெருங்கிய இனத்தாராகிய உங்கள் குடும்பத்திலே செயலில் நடந்து காட்டுகிறீர்களா?
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் எப்படி நடந்துகொள்ளுகிறீர்கள்? வேலைத்தளங்களில் சுயநலவாதிகளும், இருநாக்குடையவர்களும், புறம் பேசு கிறவர்களும், உண்மையற்றவர்களும் இருக்கின்ற இடத்திலே நீங்கள் எப்படி நடந்துகொள்ளுகிறீர்கள்? என்னுடைய வாழ்வில் என் தந்தை எனக்கு மிகவும் முன்மாதிரியாய் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நல்ல முன்மாதிரியான தகப்பனை கடவுள் எனக்குக் கொடுத்ததற்காக நான் மிகவும் நன்றியாயிருக் கிறேன். அலுவலகப் பொருட்களில் ஒன்றுகூட வீட்டிற்கு வராது. குண்டூசியோ, பேப்பரோ எந்த சிறிய காரியமானாலும் அவர் மிகவும் நேர்மையான மனிதர். தனது கம்பெனியின் தயாரிப்புகளை சொந்த உபயோகத்திற்குப் பெற வேண்டுமானால் அதற்குரிய விலையை சரியாகக் கொடுத்து, அதற்குண்டான ரசீதையும் பெற்றுக்கொண்டு வருபவர். சுவிசேஷத்தின் வல்லமை அவருடைய வாழ்க்கையில் பிரகாசித்திருந்தது. தனது கடமைகளை எந்தவித முறுமுறுப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல் நிறைவேற்றுவார். தனக்கு நியமிக்கப்பட்ட வேலைகளை எந்த புகழ்ச்சியையும் எதிர்பார்க்காமல் திறமையாக செய்வார். ஏனென்றால் அவர் கிறிஸ்துவை தனது இருதயத்தில் தரித்துக்கொண்டவராக, கடவுளுக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வாழ்ந்தவர். சகோதரர்களே, நீங்கள் எப்படி? வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறுவிதமாக வாழ்கிறீர்களா? பெண்களே, உங்களுக்கு நியமிக்கப்பட்டதான வீட்டை நடத்துவதை எப்படி நிறைவேற்றுகிறீர்கள்? ‘வீட்டு வேலைகளில் பெரிதான நிறைவு ஒன்றுமில்லை. சமைத்து வைத்ததை சாப்பிட்டுவிட்டு என் கணவர் ஏப்பம் விட்டுக் கொண்டு சென்றுவிடுகிறார். பிள்ளைகளும் அவரவர் காரியங்களில் மூழ்கிவிடுகிறார்கள். வீட்டுகாரியங்களில் என்ன நிறைவு இருக்கிறது?’ என அங்கலாய்க்கிறீர்களா? உங்கள் வேதப்புத்தகத்தை திருப்பி பாருங்கள். வீட்டை நடத்தும் பொறுப்பு பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவள் சந்தோஷத்தோடு மனப்பூர்வமாக ஏற்று நடத்த வேண்டும். “ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும் . . . வீட்டில் தரித்திருக் கிறவர்களுமாய் இருக்க வேண்டும்” (தீத்து 2:4-5). வேதம் இதைத் தெளிவாகக் கூறுகிறது. சுவிசேஷம் கூறுவதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்று கிறவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது உலக ஆலோசனைகளுக்கு இடங்கொடுக் கிறீர்களா? ‘அதெல்லாம் பரவாயில்லை. திருமணம் செய்து, குடும்பத்திற்கு பிள்ளைகளைப் பெற்று விட்டால் கடமை முடிந்தது. பெண்ணே, உனக்கு இருக்கும் தாலந்துகளையும், உனது திறமையையும் நிரூபிக்க குடும்ப அலுவல் களோடுகூட இரண்டாவது அலுவலாக வேறு ஏதாவதொரு பணியைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்று. அது உனக்கு நிறைவைத் தரும்’ என உலகம் ஆலோசனை கூறுகிறது. பெண்களே, உங்கள் வேதத்தில் எங்காவது அப்படி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இவ்வளவு காலம் போதித்த பிறகும்கூட உலகத்தின் ஆலோசனைகள் உங்களை ஊடுருவி இருக்கிறதைப் பார்க்கும்போது நான் மிகுந்த வருத்தமடைகிறேன். இவ்வித கருத்துக்கள் பெண்கள் மத்தியில் பரவியிருப்பதை நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக் கிறேன். சுவிசேஷம் சரியானவிதத்தில் அறிவிக்கப்பட வேண்டுமானால் முதலாவதாக நமது தனிப்பட்ட வாழ்க்கை முறை வேதத்தின் பிரகாரமாக இருப்பது அவசியம். நமது வாழ்க்கையே சுவிசேஷத்தை அறிவிப்பதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை மாத்திரமல்ல, குடும்பமாகவும், சபையாக வும் உள்ள நமது வாழ்க்கை முறையும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதில் ஒருசில காரியங்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். மற்ற எல்லா காரியங்களிலும் பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்த வேண்டும்.
பிள்ளைகளே, உங்களுக்கும் சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். கவனியுங்கள். இது மிகவும் எளிதானது. உங்களுடைய பெற்றோரின் பரா மரிப்பில் நீங்கள் இருக்கும் வரைக்கும் உங்கள் பெற்றோரை மதித்து அவர் களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் படித்து முடித்து சுயமாக சம்பாதிக்கும் காலத்தில் நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டியதில்லை; ஆனால் அவர்களை மதித்து நடக்க வேண்டும். இந்தக் கருத்து எளிதாக விளங்குகிற தல்லவா? பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள்ளாகக் கீழ்ப்படிந் திருங்கள். இது கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ 3:20). கவனியுங்கள்! இது கர்த்தருக்குப் பிரியமானது. என் பெற்றோர் இப்படி, அப்படி என நீங்கள் பல காரணங்களைக் கொண்டுவரலாம். ஆனால் வேதம் கூறுவதை கவனி யுங்கள். இந்தக் கட்டளை ஆசீர்வாதங்களை உள்ளடக்கியுள்ளது. “உன் தகப்பனை யும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையாய் இருக்கிறது” (எபே 6:3). அது பழைய கட்டளைதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், புதிய உடன்படிக்கைக்குள் வந்திருப்பவர் களுக்கும் பவுல் மறுபடியுமாக அந்த கற்பனையை உறுதிப்படுத்துகிறார். மறுபிறப்பை அடைந்திருப்பதாக கூறுகின்ற இளம் பிள்ளைகளே கவனியுங்கள். உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிற இந்த கற்பனையின்படி நீங்கள் உங்கள் பெற்றோருக்கு முழுமனதாக உற்சாகத்தோடு கீழ்ப்படியாமலும், அவர்களை முடிவுபரியந்தம் மதித்து நடவாமலும் இருந்தால், உங்கள் மறுபிறப்பைக் குறித்து நான் மாத்திரமல்ல, யாவருமே சந்தேகப்படுவர். கடவுளால் கொடுக்கப் பட்டிருக்கிற இந்தக் கட்டளைக்கு நீங்கள் முழுமனதோடு உற்சாகமாகக் கீழ்ப்படிந்து நடக்கிறீர்களா? உங்களுடைய பெருமையையும், அகங்காரத்தை யும், பிடிவாதத்தையும், தாய் தந்தையரைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்கிற குணங்களையும் உடைத்து நொறுக்குவதற்காக இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிற பிள்ளைகள், சுவிசேஷத்தை தங்கள் நடக்கையின் மூலமாக உலகிற்கு அறிவிக்கிற குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பார்கள். அப்படி இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. சுவிசேஷம் உங்கள் சொந்த வாழ்க்கையில் கிரியை செய்யாவிட்டால், அதைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவதால் பயன் ஒன்றுமில்லை.
விசுவாசியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சொல்லப்பட்ட காரியங்கள், அவர்கள் குழுவாக செயல்படுவதற்கும் பொருந்தும். இயேசு கூறியதை கவனி யுங்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் . . . என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினாலே நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” (யோ. 13:34-35). இந்த உலகம் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சுயநல மில்லாமல் அவர்கள் ஒருவரிலொருவர் அன்புகூருவதை உலகம் பார்க்கும் போது இந்தவிதமான அன்பை அவர்கள் எதனால் செலுத்துகிறார்கள் என்று சிந்திப்பார்கள். ஓ! இவர்களெல்லாரும் கர்த்தராகிய கிறிஸ்துவில் இணைக்கப் பட்டிருப்பதாலேயே இவ்விதமான அன்பை உடையவர்களாயிருக்கிறார்கள் என கண்டுகொள்வார்கள். உங்களுடைய அன்பின் மூலமாக அவர்கள் கிறிஸ்து வாகிய என்னை அறிந்துகொள்ள ஏதுவாகும் என்பதை அவர் புதிய கட்டளை யாகக் கொடுத்திருக்கிறார். யோவான் 17:23ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக ஜெபிக்கிறார்: “ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதை . . . உலகம் அறியும்படிக்கும் . . . நான் வேண்டிக் கொள்ளுகிறேன்”. கடவுளுடைய ஜனங்களின் ஒருமைப்பாடு, ஐக்கியம் உலகத்தார் அறியும்படிக்கு வெளிப்பட வேண்டும். இவ்வுலக மக்கள், சகோதரத் துவம், அன்பு என சொல்லிக் கொண்டாலும் அவர்களிடையே மாய்மாலம், உண்மையற்ற தன்மை, வெளிப்படையாக சிரித்துப் பேசினாலும் அடுத்தவ னுக்குக் குழி பறிக்கின்ற குணம், சுயநலங்கள் போன்ற மாம்சத்துக்குரிய குணங்களே மேலோங்கி நிற்கின்றது. ஆனால், கடவுளுடைய ஜனங்களிடம் காணப்படுகின்ற சுயநலமில்லாத அன்பு, பொறுமை, மன்னிக்கும் தன்மை போன்ற குணங்கள் சுவிசேஷத்தின் வல்லமையை பிரதிபலிக்கிறதாய் இருக் கிறது. அது பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு. ஆகவேதான், பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக கிரியை செய்ததினாலே, கர்த்தர் ஆயிரமாயிர மான ஜனங்களை சபையிலே கொண்டு வந்து சேர்த்தார் என்று அப் 2:41ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலைக் குறித்து மிகுந்த பலமாக சாட்சி கொடுத்தார்கள் (அப் 4:33). அவர்கள் எல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. அப்போஸ்தலர் பலமாக சாட்சி கொடுத்தார்கள். சபையார் யாவர் மீதும் பூரண கிருபை உண்டாயிருந்தது என்பதை கவனியுங்கள். சுவிசேஷத்தின் வல்லமை சபையார் அனைவரின் மீதும் பரிபூரணமாகக் காணப்பட்டது. குழுவில் சுவிசேஷம் செய்கின்ற கிரியை வெளிப்படையாகக் காணப்படுகிறது. யாருமே இது என்னு டையது, அது உன்னுடையது என அங்கே கூறவில்லை. ஒரு சகோதரனுக்கு தேவையிருந்தது, இதோ நான் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் எனக்குள்ளவைகளை விற்று அப்போஸ்தலரிடம் கொடுக்கிறேன். அந்த சகோதரனின் தேவை பூர்த்தி செய்யப்படட்டும். தேவனுக்கே மகிமை உண் டாவதாக என்கிறதான மனப்பான்மை அவர்களிடையே நிலவியது. யாரும் ஒருவரையொருவர் ஏமாற்றவில்லை. வஞ்சிக்கவில்லை. பேராசைப்படவில்லை. சகலமும் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் எல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
அன்பார்ந்த கர்த்தரின் பிள்ளைகளே, நாம் அனைவரும் ஒருமித்து இருக்கும்படி கர்த்தர் நமக்கு அநேக ஆண்டுகளைக் கிருபையாகக் கொடுத் திருந்தார். கர்த்தரின் பூரண கிருபை நம் எல்லார் மேலும் இருந்த காலங்களை நாம் அறிவோம். உங்களைவிட்டுப் பிரிந்து செல்வதான இந்த துயரமான நேரத்திலுங்கூட அவரின் பூரண கிருபை நம்மோடு தங்கியிருக்கிறது என்பதை நம்புகிறேன். அன்பில் குறைவுபட்டவனாக நான் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை. ஒழுக்கத்திலும் சத்தியத்திலும் உண்மையாக நடந்து கொண்டவனாகவே விடைபெறுகிறேன் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். அது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. என்னை நீங்கள் உண்மையாக நேசிப்பதினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் எனது பிரசங்கத்தின் மூலமாக உங்களைக் கடிந்து கொண்டு, புத்தி சொல்லி, எச்சரித்து வழிநடத்தியிருந்தாலும், ஆராதனை முடிவில் நீங்கள் புன்முறுவலோடு கை குலுக்கி, அன்போடு அரவணைத்து விடைபெறுவது நமது அன்பின் இணைப்பை வெளிப்படுத்துகிறது. உங்கள் மேல் பூரண கிருபை தங்கி யிருக்கிறது. பிரியமானவர்களே, அது தொடர்ந்து உங்கள் மேல் தங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய சாட்சியை கெடுத்துப்போடும். கடவுளிடம் வராத எந்தப் பாவியையும் நீங்கள் கைப்பிரதி கொடுப்பதின் மூலமாகவோ, புத்தகங்களை வழங்குவதின் மூலமாகவோ, சுவிசேஷத்தை அறிவிப்பதின் மூலமாகவோ இந்த சபைக்கு அழைத்து வந்து, இதோ பார், இங்குள்ள மக்களைப் பார், உண்மையான சுவிசேஷம் இந்தவிதமாகத்தான் விசுவாசிகளிடையே கிரியை செய்யும் என்பதை அவனுக்குக் காண்பிக்கக் கூடியவர்களாக சபையானது இருக்க வேண்டும். அப்படி வருகின்ற அவிசுவாசிகள் உங்களைப் பார்ப்பார்கள். வித்தியாசமான நிறங்களை உடைய மக்கள், வித்தியாசமான படிப்பு, வெவ்வேறான பொருளாதார நிலைமை இருந்தாலுங்கூட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சந்நிதானத்திலே, அவருக்குக் கீழ்ப்பட்டவர்களாக ஒருமித்து இருக்கும்போது கடவுள் தமது ஜனங்களை சந்திப்பதை அவர்கள் உணருவார்கள். ஓ! இதைத்தான் அந்தப் புத்தகத்தின் மூலமாக எனக்கு சொன்னீர்களா? அந்தப் புத்தகம் இப்படியான மனிதர்களை உருவாக்குகிறதா? இங்கே ஆண்கள் வழிநடத்துகிறார்கள்; ஆளுகிறார்கள். ஆனாலும் தங்கள் மனைவிகளை ராணியைப் போல நடத்து கிறார்கள். அந்தப் பெண்களும் அமைதலோடும் அடக்கத்தோடும் மரியாதை யோடும் எதிர்பேசாமலும் நடந்துகொள்ளுகிறார்கள். இதை உலகில் எங்கேயும் பார்க்க முடியாதே. ஒரு ஆண் ஆளுகிறவனாயிருந்தால் அவன் சர்வாதி காரியைப் போலத்தான் நடப்பான். அல்லது ஒரு பெண் ராணியாக இருந்தால் ஆண் அடங்கிப் போய் கோழையைப் போல நடப்பான். இங்குள்ள ஆண்கள் சர்வாதிகாரியாகவும் இல்லை, கோழையாகவும் இல்லை. ஆண் ஆணாக நடந்துகொள்ளுகிறான். பெண் பெண்ணாக நடந்துகொள்ளுகிறாள். இது எப்படி சாத்தியம்? இதை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியது சுவிசேஷமா என்று கேட்பார்கள். ஆம் உங்கள் குடும்பத்திலும் இந்த மாற்றங்களை சுவிசேஷம் கொண்டுவரும் என்பதை அவர்களுக்குக் கூறுங்கள். மேலும் சபையிலுள்ள பிள்ளைகளைக் குறித்தும் ஆச்சரியப்படுவார்கள். இந்த பிள்ளைகள் உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள். தைரியசாலிகளாயிருக் கிறார்கள், துணிவுள்ளவர்களாயிருக்கிறார்கள், கலகலப்பாய் எல்லோரோடும் பழகுகிறார்கள். ஆனாலும் அவர்கள் போக்கிரித்தனமாகவும், துடுக்காகவும் இல்லையே. இது எப்படி? இதுவும் சுவிசேஷத்தினால் ஆனதுதானா? என்பார்கள். ஆம் சுவிசேஷம் தனிமனிதனிலும், குடும்பத்திலும், சபையிலும் இவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குடும்பங்களிலே பிள்ளைகள் அன்போடும் கரிசனையோடும் வேதபூர்வமான வழிகளில் ஒழுங்குபடுத்தப் பட்டு, பயிற்றுவிக்கப்படுகிறார்கள். சுவிசேஷம் இப்படியான கிரியைகளை நடப்பிக்கிறது. பிரியமானவர்களே, குழுவாக சேர்ந்து நீங்கள் இப்படியாக சுவிசேஷம் உங்களில் கிரியை செய்வதை உலகத்திற்குக் காண்பிக்க வேண்டிய வர்களாயிருக்கிறீர்கள். அதில் நீங்கள் தவறும்போது, பாவத்தில் விழுந்து போன இந்த உலகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான கடமை களிலிருந்து தவறுகிறீர்கள். ஆகவேதான், பாவத்தில் விழுந்துபோன உலகத் திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் வரும்வரைக்கும் நிறை வேற்றத் தவறாதீர்கள் என புத்தி கூறுகிறேன். சுவிசேஷம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சபையாகச் சேர்ந்த வாழ்க்கையிலும் வெளிப்படுத்தத் தவறாதீர்கள்.
இரண்டாவதாகவுள்ள உங்களுடைய கடமை: கிறிஸ்துவிடம் உங்களுக் குள்ள உறவை வெளிப்படையாக அறிக்கையிடுதலும், உங்களுடைய தாலந்து களுக்கேற்ப சுவிசேஷத்தைப் பிறருக்கு வார்த்தைகளினால் அறிவித்தலுமாகும். இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள். இதை சுலபமாக எண்ணிவிடாதீர் கள். இதில் நான் குறிப்பிடும் நான்கு காரியங்களைக் கவனியுங்கள்: ‘கிறிஸ்து வுக்கும் உங்களுக்குமுள்ள உறவு’, ‘இவ்வுலக மக்களிடம் வெளிப்படையாக சொல்லுதல்’, ‘அவரவர் தாலந்துகள்’, ‘சுவிசேஷம் அறிவித்தல்’. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்க வேண்டிய குறைந்தபட்ச பொறுப்பு, தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை வெளிப்படையாக சொல்லுதலும், வார்த்தைகளால் அறிவித்தலுமாகும். “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப் பேன்” (மத் 10:32-33). கிறிஸ்துவின் அறிக்கை, தம்முடையவர்களின் உள்ளத்தை நியாயந்தீர்ப்பதாகவும், பிதா முன்னிலையில் தம்முடையவர்களை அறிக்கை பண்ணுகிறதாகவும் இருக்கிறது. வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார் இயேசு கிறிஸ்து. ஒவ்வொரு விசுவாசியும் எவ்விதத்திலாவது கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிறவனாயிருக்க வேண்டும். எப்படி சொல்வது என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். எவ்வளவு சொல்லலாம் என்பதும் அவரவர் திறமைக் கேற்ப வேறுபடும். ஆனால் வேதாகமம் கூறுகிறது, மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ என்று. தேவன் ஒவ்வொருவருக்கும் தமது குமாரனை அறிக்கை பண்ணக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொடுப்பார். அந்த சந்தர்ப்பங்களில் நாம் பேசாமல் இருந்துவிடக் கூடாது. கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவைக் குறித்து ஓரளவாவது சொல்லித்தான் ஆகவேண்டும். என்ன சொல்ல வேண்டும், எவ்வளவு சொல்ல வேண்டும் என்பதற்கெல்லாம் நான் அளவு குறிப்பிடப் போவதில்லை. வசனத்தை மாத்திரம் நான் காண்பிக் கிறேன். என்னை மனிதர் முன்பாக அறிக்கை பண்ணுகிறவனை நானும் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன் என்று இயேசு கூறுகிறார். அந்த மாதிரி சந்தர்ப்பங்களை ஆவலோடும் நன்றியோடும் எதிர்பார்த்துக் கொண் டிருப்பவர்களாக நீங்கள் இல்லாவிட்டால், உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து சற்று சந்தேகம்தான்.
பாவத்தில் வீழ்ந்துபோன உலகத்திற்கு சபையாக ஆற்ற வேண்டிய கடமைகள்
பாவத்தில் விழுந்துபோன உலகத்திற்கு சபையாக செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மத் 28:18-20 வரையுள்ள கட்டளைகளை இயேசு கிறிஸ்து பொதுவான மக்கள் கூட்டத்தாரிடம் கூறாமல் 11 சீஷர்களிடம் தெரிவிக்கிறார். இயேசு, அவர்களை நோக்கி, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர் களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இந்த பணி முதலாவதாக பதினொரு அப்போஸ்தலரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அவர்கள் அவ்விதமே புறப்பட்டுப் போனார்கள். அதன்பின் சபைக்குரிய மற்ற கட்டளைகளோடு அதுவும் கலந்துவிட்டது. இயேசு கிறிஸ்துவின் இந்த பிரதான கட்டளை தனிமனிதருக்கு உரியதல்ல. சபைக்குரியதாகும். சபையில் போதிப்பதற்காக நியமிக்கப்பட்ட வர்களைக் கொண்டு, சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, ஜனங்களை சீஷராக்குவது சபைக்கு நியமிக்கப்பட்ட ஊழியம். “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப் பார்கள்”? (ரோமர் 10:14-15). பரிசுத்த ஆவியானவராலே விசேஷித்த வரங்களை சபைக்கு தேவன் கொடுத்து அதன் மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட அவர் வழிவகுத்திருக்கிறார். என்றாலும், ஏற்கனவே கூறினபடி, அவரவருக்கு தேவன் தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, சுவிசேஷத்தை அவரவர் தாலந்துக்கேற்ப அறிவிக்கும் பொறுப்பு சகல விசுவாசிகளுக்கும் இருக்கிறது. ஆனாலும் ஞானஸ்நானம் கொடுப்பதும், பிரசங்கிப்பதும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பல்ல. பின் அவைகளை எப்படித்தான் நிறைவேற்றுவது? அப் 1:8ல் தேவனுடைய வல்லமையான செயல் அறிவிக்கப் படுகிறது. “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்”. நாம் இருக்கும் இடத்திலிருந்து பூமியின் கடைசி எல்லை வரையிலும் ஒரே சமயத்தில் மக்கள் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்க வேண்டும். முதலாவது எருசலேமிலும், இரண்டாவதாக யூதேயாவிலும், அடுத்தபடியாக சமாரியாவிலும் என்கிற விதத்தில் வசனம் நமக்குக் கூறப்படவில்லை. பரிசுத்த ஆவி செயல்படும்போது நீங்கள் பூமியின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஒரே சமயத்தில் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்கிற விதத்தில் இயேசு குறிப்பிடுகிறார். நமக்கு அநேக இடையூறுகள் இருந்த போதிலும், கடவுளின் பெரிதான கிருபையால் நாம் சரியான வரங்களுள்ள விசுவாசிகளை இனங்கண்டு உபயோகித்திருக் கிறோம். முதலாவதாக நாம், கிறிஸ்துவோடு அவர்களுக்குள்ள நெருக்கத்தை அவர்களின் வாய்மொழியினாலேயே கேட்டு அறிந்துகொண்டபின் அவர் களுடைய வரங்களை சோதித்து அறிந்திருக்கிறோம். சுவிசேஷத்தை சரியாக விளக்கிச் சொல்லக்கூடிய வரம் பெற்ற மூன்று பேர் இங்கே பிரசங்கமளிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்கள். அவர்கள் வாரந்தோறும், மாதந் தோறும், வருடமுழுவதும் சோர்வில்லாமல் ஆத்துமாக்களை சந்தித்து கடவுளின் வழிகளை சொல்லுகிறவர்களாயிருக்கிறார்கள். வீடுகளில் வேதபாட வகுப்புகள் நாம் நடத்துகிறோம். சுவிசேஷம் அறிவிக்கும் முகாந்திரமாக இரவு சாப்பாடு களுக்கு ஏற்பாடு செய்கிறோம். கைப்பிரதிகள் தயாரிக்கிறோம். வியாதியஸ்தரை கவனிக்கும் இல்லங்கள் மூலமான ஊழியம் அநேக ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வளவு பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், இங்குள்ள பிரதேசங்களில் புதிய சபைகளை உருவாக்கவும் நாம் மிகவும் பாடுபடுகிறவர்களாய் இருக்கிறோம். நியுவர்க் (Newark) என்கிற இடத்திலே புதிய சபை உருவாக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹேசல்டன் (Hazelton) என்கிற இடத்திலே அந்த பணி நிறைவேறிற்று. வரம் பெற்ற மனிதர்களை உலகின் கடைசிபரியந்தமும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். 1975 ஆம் ஆண்டிலே போதகர் ப்ளேய்க் (Blake) லண்டனுக்கு அனுப்பப்பட்டார். 1980ல் ஸ்டீவ் ஹாவ்மாயர் (Steve Hoffmire) பிலிப்பைன்ஸூக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். 1988ல் அரீப் ஹான் (Alif Khan) பாகிஸ்தானுக்கும், 1970ல் தாம்ஸன் சொங் (Thomson Chung) ஹாங்காங்கிற்கும் அனுப்பப்பட்டனர். நம்மால் முழு உலகத்திற்கும் செய்ய முடியாவிட்டாலும், உதவி தேவைப்படு கின்ற பிரதேசங்களுக்கு வரம் பெற்றவர்களை அனுப்புவதன் மூலமாக, பாவத்தினால் விழுந்து போன இந்த உலகத்திற்கு நம்மால் இயன்ற அளவிலான கடமைகளை நிறைவேற்றி வருகிறோம். இப்படியாக சுவிசேஷத்தை தனிப்பட்ட வாழ்க்கையின் மூலமாகவும், குழுவாக சேர்ந்தும் அறிவிக்கிறவர்களாக விசுவாசிகள் இருக்க வேண்டும். பாவத்தில் விழுந்து போன உலகத்திற்கு விசுவாசிகள் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமை இது. கிறிஸ்து வோடுள்ள உறவை தெரிவிக்கிறவர்களாகவும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவரவர் வரத்திற்கேற்ப உலகத்தின் கடைசிபரியந்தமும் அவரது சுவிசேஷம் அறிவிக்கப் படவும் உழையுங்கள்.
இந்த கடமையோடு சேர்ந்த இன்னொரு கடமையும் இருக்கிறது. இதை நான் தனித்த கடமையாகக் கூறவில்லை. இது, முந்தின காரியத்தோடு இணைந் திருப்பதாகும். அது, மற்றவர்களுக்கு நன்மை செய்தலாகும். இதுவே மனிதர் மேலுள்ள உண்மையான அன்பின் வெளிப்பாடு. இயேசுவும் மனித குலத்திற்கு நன்மை செய்கிறவராகவே காணப்பட்டார். அப் 10:38ல் இதைக் காணலாம். பேதுரு, கொர்நேயுவின் வீட்டாருக்கு இயேசுவைக் குறித்து கூறிக் கொண் டிருக்கிறார். “தேவன் இயேசு கிறிஸ்துவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமை யினாலும் அபிஷேகம் பண்ணினார்”. அதனால் விளைந்த கனி என்ன? “தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராக வும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்”. அவர் நன்மை செய்கிறவராக இருந்தார். இயேசு கிறிஸ்து, தான் குணமாக்கிய எல்லாரையுமே இரட்சித்தார் என்பதற்கு நமக்கு குறிப்பு இல்லை. மீனையும் அப்பத்தையும் பெருகப் பண்ணி ஆயிரக் கணக்கானவர் களுக்கு போஷித்தார்; ஆனால் அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டதாக நமக்கு தகவல் இல்லை. அவர்கள் பசி நீங்கி திருப்தி அடைந்தவர்களாக திரும்பிச் சென்றார்கள். அவர் அவர்களுக்கு நன்மை செய்தார். பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே நன்மை செய்தார். பவுல் அப்போஸ்தலனும் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் இக்கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம்”. விசுவாசக் குடும்பத்தாருக்கு மாத்திரம் என பவுல் குறிப்பிடவில்லை, யாவருக்கும் நன்மை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறார். உண்மையான அன்பின் காரணமாகவே நாம் சுவிசேஷத்தை சொல்ல வருகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு இப்படி நன்மை செய்தல் உதவியா யிருக்கலாம். ஆகவேதான் விடுமுறை கால இளைஞர் வேதபாட வகுப்புகளின் மூலமாக நாம் இந்த சமுதாயத்திற்கு சில நன்மைகளை செய்ய முயலுகிறோம். ஊனமுற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் மூலமாக நன்மை செய்கிறவர்களா யிருக்கிறீர்கள். வயதானவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர் சீரமைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை மூலமாக மற்றவர்களுக்கு நன்மை செய் கிறீர்கள். இவ்விதமாக நன்மை செய்வதற்கு தேவன் தொடர்ந்து வாய்ப்புகளை அளிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். ஏன் தெரியுமா? மனிதர்களை நாம் நேசிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவை அவசியம். சுவிசேஷம் அறிவிக்கப்பட அவ்வாய்ப்புகள் ஏதுவாயிருக்கும். பிரியமானவர்களே, தேவன் நம்மீது வைத்திருக்கும் கடமைகளின் நோக்கம் உங்களுக்குப் புரிகிறதா? நாம் கிறிஸ்துவுக்குள் மறுரூபமாக்கப்பட்டவர்களாக நமது வாழ்க்கையை நடத்த வேண்டியது எவ்வளவு அவசியமாயிருக்கிறது! நமது நேரத்தையும், பணத்தையும், பொழுதுபோக்கும் காரியங்களையும், உலகத்தார் போல் அல்லாது வேறுவிதமாக செலவிட வேண்டியது மிகவும் முக்கியமாயிருக்கிறது. உங்கள் நேரத்தை அபகரிக்கும் உலகத்தாரின் போக்குகளிலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக்கொள்ளாவிட்டால், சுவிசேஷம் உங்களை இவற்றினின்று விடுதலையாக்கியிருக்கிறது என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. தியாக மனப்பான்மையோடு கூடிய அன்பின் சேவைகளை செய்வதற்கு உங்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்காது. நாம் வீண் பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு, ஆவியில் ஒருமைப்பட்டவர்களாகவும், ஜெப சிந்தயைத் தரித்துக்கொள்ளவும், அன்பின் சேவைகளை செய்வதற்கும் சபையாராக பாடுபடவேண்டியது எவ்வளவு முக்கியமாயிருக்கிறது! இவைகள் வளர்ந்து பெருகுவதற்கு நாம் அதிக ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியதாயிருக்கிறது.
இந்த பிரசங்க மேடையிலிருந்து நானும் மற்ற உடன்மூப்பர்களும், அநேக பிரசங்கங்களை விசுவாசிகளை கருத்தில் கொண்டு பிரசங்கித்திருந்தாலும், அதை முடிக்கும் போது, புது விசுவாசிகளுக்கும், விசுவாசத்தில் இன்னும் வராதவர்களுக்கும் தேவையான புத்திமதியையும் எச்சரிப்புகளையும் கூறாமல் முடிப்பதில்லை.
கிறிஸ்துவுக்குள் இன்னும் வராதவர்களுக்குக் கூறுகிறேன், வெளி 21:8 கூறுவதை நாங்கள் நம்புகிறோம். “அவிசுவாசிகள் அனைவரும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பு மாயிருக்கும். அக்கினிகடலிலே சாத்தானும், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கின்ற இடத்திலே அவர்களும் நித்தியமாக இருக்க வேண்டும்”. ஆகவே, பவுல் அப்போஸ்தலனைப் போல உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதைத் தவிர வழியில்லை. கிறிஸ்துவுக்குள்ளாக உங்களை கெஞ்சி அழைக்கிறோம், தேவனோடு ஒப்புரவாகுங்கள். காலதாமதம் செய்யாதீர்கள். உங்கள் மனதையும் நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற காரியங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, உட்கார்ந்து சிந்தியுங்கள். காலதாமதம் ஆகிக் கொண்டே யிருந்தால் கடவுள் உங்களிடம் செலுத்தவிருக்கிற தமது உறவைத் துண்டித்து விடுவார். உங்கள் பாவங்கள் நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தரும். அப்போது உங்களை விடுவித்து, ஜீவனுள் ளோர் வசிக்கப் போகும் இடத்தைப் பெற்றுத் தருவதற்கு ஒரு கடவுளும் உங்களுக்கு இருக்க மாட்டார். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என தாமதம் செய்யாதீர்கள். நாளை என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளிடம் இப்போதே ஒப்புரவாகிவிடுங்கள். கிறிஸ்துவுக்குள்ளாக உங்கள் பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டுவிட்டன என்கிற நிச்சயத்தை அடையும் வரைக்கும் ஓயாதிருங்கள். கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் உங்களை ஒரு புது மனுஷனாக, புது மனுஷியாக மாற்றும். கிறிஸ்துவை நேசிப்பவர்களாக வும், பரிசுத்தத்தை விரும்புபவர்களாகவும் ஆவீர்கள். கீழ்ப்படிதலோடு அவரைப் பின்பற்றி வாழ விரும்புவீர்கள். அவருடைய மணவாட்டியாக எப்போதும் பரலோகத்திலே வாழும் சிலாக்கியத்தை எண்ணி எதிர்பார்த்திருப்பீர்கள். காலதாமதம் செய்யாதீர்கள். நேரம் வெகு வேகமாக இறக்கை கட்டிக் கொண்டு பறந்து செல்கிறது. சில நாட்களாக நான் என் வீட்டினுள்ளே வளைய வரும்போது, இந்த சிந்தனையே என் மனதை ஆக்ரமிக்கிறது. 46 ஆண்டுகள்! 46 ஆண்டுகளா? இவ்வளவு காலம் ஓடிவிட்டதா? நேற்றுதான் இங்கு வந்தது போலிருக்கிறது. அதற்குள் காலம் நொடியில் புகையைப் போல மறைந்து விட்டதே எனத் தோன்றுகிறது. என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் அது உண்மைதான். ஒரு நாளிலே நானும் இயேசு கிறிஸ்துவின் நியாயா சனத்திற்கு முன்பாக நிற்பேன். அப்பொழுது பவுலைப் போல நானும், இதோ, இவர்களுடைய இரத்தப்பழிக்கு நான் நீங்கலாயிருக்கிறேன் என்று சொல்லக் கூடியவனாக இருப்பேன். இந்த அழைப்பு உங்கள் காதுகளை எட்டவில்லை யென்றால் நான் உங்களை ஒருபோதும் அறியேன். தேவன் அந்நாளிலே உங்களிடம் சொல்லுவார்: இதோ, பார் இந்த பிரசங்கியை உனக்குத் தெரிகிறதா? என்னிடம் வரும்படி அழைப்பு விடுக்க நான் இவரை உன்னிடம் அனுப்பி னேனே! உன்னைக் கெஞ்சிக் கேட்டாரே. தகுந்த காரணங்களையெல்லாம் விளக்கினாரே. உனக்காக கண்ணீரோடு புத்தி சொன்னாரே. உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு, கர்த்தராகிய இயேசுவிடம் வா என்று புத்தி சொன்னாரே. ஆனால் நீயோ வரவில்லை. இப்போது என்ன காரணங்களைக் கூறுவாய் என்பாரே! இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நீங்கள் என்ன பதிலைக் கூறுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறித்து உங்களிடம் அவர்கள் விசாரித்துக் கேட்க வரும்பொழுது, சுவிசேஷம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்பதைக் கூற ஆயத்தமாயிருங்கள். சிலபேர் சுவிசேஷம் சொல்கிறேன் எனக் கூறி, சம்பந்தமில்லாமல் வசனங்களைக் கூறுவதும், தங்களது ஒழுங்கற்ற தனிப்பட்ட வாழ்க்கையின் மூலமாக சுவிசேஷத்திற்கே அவதூறாக நடந்துகொள்வதையும் பார்க்கும்போது, அப்படிப்பட்டவர்களை பேசவிடாமல் தடுப்பதே சுவிசேஷம் சரியாகப் பரவுவதற்கு ஏதுவாக இருக்குமென எண்ணத் தோன்றுகிறது. நாம் பிரசங்கிக்கிற சுவிசேஷம் கடவுளுடைய வல்லமையான செயலை பறைசாற்றுவதாயிருக்க வேண்டும்.
- அல்பர்ட் என். மார்டின்
தாம்பத்திய உறவில் நெருக்கம்
பாகம் 2 (தொடர்ச்சி)
அத்தியாயம் 8: சுவிசேஷ அன்பின் பரிமாற்றங்கள் (தொடர்ச்சி)
பழிவாங்குதல் கூடாது
குற்றஞ்செய்த உன்னுடைய மனைவி மனஸ்தாபப்பட்டால் கடவுள் உனக்கு அருளிய அதேவிதமான மன்னிப்பை நீயும் வழங்க வேண்டும். உன் மனைவி செய்த பாவத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மன்னித்துவிடுகிறது என்கிற நம்பிக்கையோடுதான் சுவிசேஷப் பரிமாற்றம் நிகழ வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெய்வீக கோபத்தை நீக்கிவிட்டது என்பதை சட்டமாக எடுத்துக்கொண்டு, உன்னுடைய சொந்த பழிவாங்குதலுக்கு அங்கே இடமேயில்லை என்பதை கவனத்தில் வை. இயேசுவின் மீது விசுவாசம் வைத்த அந்த பாவி மனஸ்தாபப்படுகையில், கிறிஸ்துவை விசுவாசிக்கிற எந்த பாவிக்கும் தேவன் இரக்கம் காண்பித்து மன்னிப்பது போலவே நீயும் நடந்துகொள்ள வேண்டும். இயேசுவின் இரத்தத்தி னால் நீங்கள் ஒப்புரவாக வேண்டும். கிருபையின் சுவிசேஷத்தினாலே ஒருவருக்கொருவர் வாக்குக்கொடுத்துக் கொண்டு, அதைக் கடைப்பிடியுங்கள். மன்னிப்பதென்பது குற்றஞ் செய்தவரை அவரது பாவத்தின்பிரகாரம் பார்க்காமல், இயேசுவோடு இணைக்கப்பட்டவராகப் பார்ப்பதுதான். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் நடுவே கிரியை செய்து, உங்களையும் உங்கள் திருமண வாழ்வையும் சுவிசேஷத்தி னால் மாற்றியமைப்பார் என்கிறதான வாக்குகளெல்லாம் மன்னிப்போடு சம்பந்தப்பட்டுள்ளது. நீங்கள் அப்படி செய்யும் போது கடவுளுக்குப் பிரிய மான பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
நம்முடைய பாவத்தைக் கடவுளிடம் அறிக்கை செய்யும்போது அதற்கு அவர் என்னவிதமான பதிலைத் தருகிறார்? “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்” (1 யோ. 1:9). நம்மிடம் நமது மனைவி பாவ அறிக்கை செய்யும் போது கடவுள் என்ன செய்தாரோ அதையே நாமும் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிறோம். அவர் உண்மையுள்ளவர். அவர் மனம் மாறுகிறவரல்ல. நியாய மற்றவரல்ல. இரக்கமுள்ளவர். உறுதியுள்ளவர். பரமபிதா, மன்னிப்பை வாஞ்சிக் கிறவர்களுக்கு அதை அருளிச் செய்கிறார். ஆகவே, அவரைப் பின்பற்றுகிற நானும் நிச்சயமாக அதைத் தருவேன் என்று மன்னிப்புக் கேட்கிற என் துணை எதிர்பார்க்க வேண்டும். ஏனென்றால் சுவிசேஷ அன்பை உடைய நாமும் நமது பரமபிதாவைப் போல உண்மையுள்ளவர்களாக, மன்னிப்பைத் தரக் கூடியவர்களாக இருக்கிறோம்.
அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார். கடவுள் நியாயத் தின்படி நடக்கிறவர். நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டபோது, அவர் தமது குமாரனுடைய நீதியினாலே நம்மையும் இரட்சிக்க தீர்மானித்து அதன்படியே செய்தார். நம்மை கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டவர்களாகத் தீர்மானித்து விட்டார். கிறிஸ்து நமது பாவங்களுக்காக தமது மரணத்தின் மூலமாக சம்பாதித்த நீதியைக் கொண்டுதான் கடவுள் நம்மைப் பார்க்கிறார். நம்மீது அவர் கோபாக்கினையை செலுத்தவில்லை. ஏனென்றால் நமது பாவங்களினிமித்தமாக அவர் ஏற்கனவே கிறிஸ்துவின் மீது தமது கோபாக் கினையை செலுத்தி அதைத் தீர்த்துக்கொண்டார். நமது மனைவி நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நாமும் கடவுளைப் போலவே அந்த பாவத்தைக் கையாள வேண்டும். பாவியாகிய நம்மை நமது பரமபிதா எப்படி நடத்தினாரோ அதே விதமாக பாவம் செய்த நமது மனைவியையும் நாம் நடத்த வேண்டும். அந்த பாவத்திற்காகத்தான் கிறிஸ்து மரித்தார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கிறிஸ்து முற்றிலுமாக நிறைவேற்றி முடித்த பணியினாலே நம்மையும் மகிமைப்படுத்தியிருக்கிறார் என்பதை நினைவில் கொண்டவர்களாக, நமது மனைவியின் பாவத்திற்காகவும் அவரே சகலத்தையும் நிறைவேற்றிவிட்டார் என்பதை உணர்ந்து நமது மனைவியை மன்னிக்க வேண்டும். அதற்காக ஏதாவது தண்டனையைக் கண்டுபிடித்து அதை நிறை வேற்றுவது நமக்குரியதல்ல.
யார் துக்கப்பட்டார்களோ, அல்லது புண்பட்டார்களோ, யாருக்கு விரோத மாக குற்றஞ்செய்யப்பட்டதோ அவர்களுக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அது பழிதீர்க்க வேண்டுமென்கிற சோதனை. நமக்கு விரோதமாக யாராவது நடக்கும்போது, பதிலுக்கு பதில் ஏதாவது செய்தாக வேண்டுமென நமக்குத் தோன்றுகிறது. நமக்கு விரோதமாக நடந்தவர்களை ஏதாவதொரு வகையில் தண்டிக்க விரும்புகிறோம். பாவத்தைக் குறித்த கோபமும், அதைத் தண்டிக்க வேண்டும் என நினைப்பதும் தவறல்ல. அது கடவுளின் குணாதிசயம். அதில் சோதனை என்னவென்றால், கோபத்தைத் தீர்ப்பதிலும், தண்டனை வழங்கு வதிலும் நமது சொந்த அறிவின்படி செய்ய முயற்சிப்பதாகும். கிறிஸ்துவின் சிலுவையின் வாயிலாக கடவுள் அமைத்திருக்கும் வழிவகைகளின்படி அதை செய்ய முயலாமல் நமது சுயஞானத்தை பிரயோகிப்பது நமக்கு வரக்கூடிய சோதனையே. கடவுளின் ஸ்தானத்தை நாம் ஆக்ரமித்துக் கொண்டு, பாவத்தை தண்டிக்க அவருக்கே உரித்தான உரிமையை நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய சோதனைக்கு ஆளாகிறோம். அப்படி செய்யும்போது, கிறிஸ்துவின் சிலுவைப் போதுமானதல்ல என அறிவிக்கிறவர்களாகிறோம். நமது மனைவி கூறிய, நம்மைத் துயரப்படுத்தின அந்த கடினமான வார்த்தைகள் கடவுளின் ஆறாம் கட்டளையை மீறியதாக வெளிப்பட்டது என்பதை நாம் இங்கு மறந்துவிடு கிறோம். நமது துயரம்தான் இங்கு பெரிதாகத் தெரிகிறது. கடவுளின் கட்டளை மீறப்பட்டதைக் குறித்து நாம் நினைக்கவில்லை. கடவுளின் ஸ்தானத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமது துயரத்தை மிகப்பெரிய விக்கிரகம் போல நமக்கு முன்பாக நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். நமது மனசங்கடம் ஒழியும் வரைக்கும் நாம் சமாதானமடைய மாட்டோம். நமது துயரம் தீருவதால் வருகிற சமாதானம் மாத்திரம் போதாது. கடவுளின் கட்டளை மீறப்பட்டிருக் கிறதே, அது சரி செய்யப்பட வேண்டுமே என்கிற அங்கலாய்ப்பினால், அதை சரி செய்துகொள்வதால் ஏற்படப்போகிற உண்மையான சமாதானத்தையே நாம் நாடுகிறவர்களாயிருக்க வேண்டும். தேவனிடத்திலிருந்து வருகிற மெய் யான சமாதானமே நமக்குத் தேவை. நமது பாவங்களுக்காக சிலுவையின் மேல் தண்டனையை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் ஊழியப்பணி யினால் வருகின்ற மெய்யான சமாதானம் அது.
நாம் எவ்வளவுதான் நம்மை நீதிமான்களாக எண்ணிக்கொண்டாலும், மன்னிப்பை நாடி வருகிற நமது மனைவியிடம் நமது கோபத்தைக் காட்டினோ மானால், தேவனுடைய ஸ்தானத்தைத் துணிகரமாக ஆக்ரமித்துக் கொண்ட வர்களாகவும், சிலுவையின் பலி பூரணமானதல்ல, நானும் சற்று கோபத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோம். மன்னிப்பை வேண்டுகிற நமது மனைவியைக் கண்டுகொள்ளாமல், எதுவும் பேசாமல், இறுகிய முகத்தோடு விலகிப்போகிறவர்களாக நாம் காணப்பட்டோ மென்றாலும், கடவுளின் கோபாக்கினை சிலுவையின் மீது முற்றிலுமாகத் தீர்த்துக்கொள்ளப்படவில்லை என அறிவிக்கிறவர்களாகக் காணப்படுவோம். ஆக, நாம் என்ன சொல்லுகிறவர்களாயிருப்போம்? கடவுளே, நீர் சற்று விலகி நில்லும். நான் இதை நியாயந்தீர்க்கிறேன். சிலுவையின் வழியில் அல்ல, எனது சொந்த முறையில் நான் தண்டிக்கப் போகிறேன் என சொல்கிறவர் களாயிருப்போம். “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே” (யாக். 1:20). நமது திட்டத்தின்படியான தண்டனையை வழங்குவது நிரந்தரமான ஒப்புரவாகுதலுக்கு வழி வகுக்காது. கிறிஸ்துவின் சிலுவையில் மாத்திரமே நமது பாவங்கள் முழுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து வின் சிலுவை மாத்திரமே முழுமையான ஒப்புரவாகுதலுக்கு அடித்தளமா யிருக்கிறது. எத்தனை தம்பதிகளின் வாழ்க்கை, அவர்கள் தங்கள் பாவங்களை கிறிஸ்துவின் சிலுவை வழியிலே சீக்கிரமாகத் தீர்த்துக்கொள்ளாதபடியினால் அன்பில்லாததாக, நெருக்கமில்லாததாக, சண்டைசச்சரவுகள் நிறைந்ததாக ஆகியிருக்கிறது? பழிவாங்குதலையும், மன்னிக்காத குணத்தையும் அவர்கள் அனுமதித்தபடியினால் எத்தனை பேருடைய திருமணங்கள் ஒப்புரவாகுதலை அடையாமலேயே முடிந்து போயிருக்கிறது?
பரிசுத்தமும் நீதியும் நிறைந்த கடவுளின் உக்கிர கோபத்தை ஆற்றுவதற்கு இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பலி போதுமானதாக இருக்குமானால், என்னுடைய மனைவியின் பாவத்தைக் குறித்து எனக்கு ஏற்பட்டிருக்கும் அற்ப கோபத்தை ஆற்றுவதற்கும் அது போதுமானதே. கடவுளின் கற்பனையை மீறின, என்னுடைய மனைவியின் பாவத்தைக் கிறிஸ்துவின் இரத்தபலி நீக்கி விட்டதென்று நான் எனது காயப்பட்ட மனதை சமாதானம் செய்துகொள்ளு வேன். அதே இரத்தத்தினால், எனது கோபத்தையும் அவர் நீக்கிவிட்டார் என்பதையும் உணர்ந்துகொள்ளுவேன். பாவம் தண்டிக்கப்படுவதற்கு கிறிஸ்துவின் சிலுவை போதுமானதாக இருக்கிறது. எங்களுடைய பாவங்களின் நிவாரணம் கிறிஸ்துவின் சிலுவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதை அறிந்து சிலுவையைப் புகழுகிறேன். என்னுடைய மனைவியை நான் தண்டிக்கத்தக்கவ னல்ல என்பதை உணர்ந்து பழிவாங்குதலை விட்டுவிடுகிறேன். என் மனைவியின் பாவங்களுக்காக கடவுள் ஏற்கனவே கிறிஸ்துவை சிலுவையில் தண்டித்துவிட்டார். ஆகவே நான் என் மனைவியின் மீது கோபப்பட்டாலோ, மெளனமாயிருந்து வதைத்தாலோ, வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி தண்டிக்குமாறு கேட்டாலோ நான் கடவுளின் ஸ்தானத்தைக் கைப்பற்று கிறவனாகிறேன். எனது பிதா என் பாவங்களை மன்னிப்பதற்கு நீதியுள்ளவராய் இருந்தது போலவே நானும் என் துணையின் பாவங்களை மன்னிப்பதற்கு நீதியுள்ளவனாயிருக்க வேண்டும் (1 யோ. 1:9). அதாவது, கடவுளின் கட்டளை மீறப்பட்டதை நான் சிலுவையின் நீதியிலே தீர்த்து, அச்சிலுவையை அடிப்படையாகக் கொண்டு எனது மனைவியை மன்னிக்க வேண்டும்.
குற்றம் செய்தவர் பாவத்தை ஒத்துக்கொண்டு, அதை அறிக்கையிட வேண்டிய சவாலை சந்திக்க வேண்டும். யாருக்கு விரோதமாக குற்றம் செய்யப் பட்டதோ, அவருக்கு பழிவாங்கும் ஆவியை விட்டுவிடுதலும், தண்டிக்கும் எண்ணத்தைக் கைவிடுதலும் ஆகிய சவால்கள் இருக்கின்றன “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கிய மானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்கு தல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும் உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு. அவன் தாகமாயிருந்தால் அவனுக்கு பானங்கொடு. நீ இப்படி செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” (ரோ. 12:17-20).
நாம் நீதிமானாக்கப்பட்டதின் ஆசீர்வாதங்களை நமது திருமண வாழ்வில் ஒருவர்மீது ஒருவர் பிரயோகிக்க வேண்டும். கடவுளின் உக்கிர கோபத்தைத் தணித்த இயேசு கிறிஸ்துவின் கிருபாதாரபலியின் அண்டையில் நாங்கள் இருவரும் நிற்கிறோம். 1 யோ. 4:10 கிறிஸ்துவின் கிருபாதாரபலியை விவரிக்கிறது, “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல. அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது”. அங்கேதான் நாங்கள் அவரவர் பாவங்களுடன் நிற்கிறோம். நமது பாவங்களை நிவர்த்தி செய்கிற இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவையையும் சார்ந்தவர் களாக இருக்கிறோம். பாவமானது எங்கள் அன்பின் அஸ்திபாரத்தையே குலைத்து, எங்களை பிரித்துவிடப் பார்க்கிறது. குற்றஞ்செய்தவரை யாராவது தண்டிக்க வேண்டுமென்று நமது மனசாட்சி நம்மைத் தூண்டிவிட்டு நம்மிடையே பிரிவை ஏற்படுத்தப் பார்க்கிறது. குற்றஞ்செய்தவரைத் தண்டிக்கும் பொறுப்பை நாமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சோதனையும் ஏற்படுகிறது. ஆனால் அதைச் செய்யத்தக்கவர் கடவுள் ஒருவரே. கடவுளுடைய இடத்தை நாம் எடுத்துக்கொண்டு, ஒருவரை நியாயந்தீர்த்து தண்டிக்க முற்படும்போது, கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல நீங்களும் ஒருவருக் கொருவர் மன்னியுங்கள் என்கிற சுவிசேஷ அழைப்பை நிராகரித்து, பாவத்தை மேலும் பெருகப் பண்ணிக்கொள்ளுகிறோம். கடவுளின் சுவிசேஷத்தை நாம் நம்ப வேண்டும். சுவிசேஷம் என்ன சொல்லுகிறதென்றால்: அந்தக் குற்றத்திற் குரிய கடவுளின் நியாயமான தண்டனையை கிறிஸ்து நிறைவேற்றிவிட்டார். கிறிஸ்துவில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற கடவுளின் நீதியினிமித்தமாக உங்களுடைய உறவின் அஸ்திபாரம் உறுதியாகவும் பலமாகவும் காக்கப்பட் டிருக்கிறது. ஆகவே மனந்திரும்புதல், மன்னித்தல் ஆகிய சுவிசேஷப் பொருட்களை உங்களுக்குள் பரிமாறிக் கொண்டு மீண்டுமாக திருமண உறவில் நெருக்கத்தை அடையுங்கள். கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்திற்காக கடவுள் இந்த சுவிசேஷப் பொருட்களை உங்களுக்கு அளித்திருக்கிறார்.
திருமண நெருக்கத்திற்கு ஓர் உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். “ஜிப்” (Zip) உள்ள ஒரு மேற்சட்டையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜிப் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு நீங்கள் ஒருவரி லொருவர் இணைந்து நெருக்கமாக இருக்கிறீர்கள். ஆத்மீக நெருக்கம், உணர்ச்சி வசம், உரையாடல்கள், சரீர உறவு ஆகிய இவைகளின் ஏற்றத்தாழ்வுகள் காரண மாக அந்த ஜிப் ஆனது ஏறி இறங்குவதாயிருக்கிறது. அந்த ஜிப் சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் அடித்தளமானது, உங்கள் மனசாட்சியும், ஒருவரி லொருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஆகிய காரியங்களுக்கு ஒத்ததா யிருக்கிறது. இவைதான் உங்களை இணைக்கும் அஸ்திபாரம். பாவமானது இடையில் புகுந்து, அந்த இணைப்பை அடித்தளம் மட்டும் சென்று பிரித்து விடுவதாயிருக்கிறது. அதை நீங்கள் மறுபடியுமாக இணைத்து, உறவில் நெருக்கத்தைத் திரும்பப் பெற வேண்டுமானால், நீங்கள் உங்கள் மனசாட்சி யினாலும், ஒருவரையொருவர் நம்புவதினாலும் மறுபடியும் அந்த இணைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். துக்கப்படும் மனசாட்சியையும், உடைந்து போன நெருக்கத்தையும் சுவிசேஷத்தினால் மாத்திரமே சரி செய்ய முடியும். நீங்கள் ஒருவருக்கொருவர் மனந்திரும்புதலையும், மன்னிப்பையும் அளிக்கும்போது, உடைந்தவை மீண்டும் இணைகிறது. இயேசுவின் இரத்தத்தினால் உங்கள் மனசாட்சி சமாதானம் அடையும்போது மீண்டுமாக நெருக்கமடைகிறீர்கள். நித்திய ஜீவனாகிய கிருபைக்கு பங்குள்ளவர்களாகிய நீங்கள் இப்படியாக ஒருவரையொருவர் கனம் பண்ணுகிறவர்களாகிறீர்கள் (1 பே. 3:7) இப்போது உங்கள் ஜெபங்களுக்குத் (கடவுளோடுள்ள தொடர்புக்கு) தடை ஏற்படாதது மாத்திரமல்ல, உங்கள் இருவருக்கிடையே உள்ள நெருக்கத்திற்கும் தடை இல்லை. எப்படியென்றால் சுவிசேஷ அன்பைக் கொண்டு நீங்கள் பாவத்தை வென்றிருக்கிறீர்கள். கிருபையின் சுவிசேஷமாகிய அஸ்திபாரத்தின் மீது நீங்கள் வலுவாக நிற்கிறவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் நெருக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். சுவிசேஷ அன்பினால் மீண்டுமாக நெருக்கத்தை எப்படி அடைந்துகொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டீர்களா னால், நீங்கள் அன்பின் ஆழத்தை இன்னும் அதிகமதிகமாக விரிவுபடுத்திக் கொண்டே போக முடியும். ஏனென்றால் நீங்கள் இருதயத்திலிருந்து நெருக்கமாக இருப்பதைக் கற்றுக்கொள்வதால், ஒருவரையொருவர் இன்னும் நுணுக்கமாக வும் நெருக்கமாகவும் அறிந்துகொள்ளக் கூடியவர்களாகிறீர்கள். நமது தேவன் எவ்வளவு கிருபையுள்ளவர்! அவர் தமது குமாரன் மூலமாக நம்மை நேசிக்கிற விதமாகவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கும்படியாகக் கற்றுத் தருகிறாரே!
வாக்குக்கொடுத்தல்
நீதிமானாக்குதலாகிய கிருபையை உபயோகித்து நாம் ஒருவரையொருவர் நேசிப்பது மாத்திரமல்லாமல், திருமணத்தில் பரிசுத்தப்படுத்தும் கொள்கையை யும் கடைப்பிடிக்க வேண்டும். நீதிமானாக்குதலின் கொள்கையைக் கடைப் பிடிப்பது ஒப்புரவாகுதலுக்கு அடித்தளமாயிருக்கிறது. பரிசுத்தமாக்குதல், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமது பாவக்கறைகளை நீக்குகிறது. கிருபையும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற படியால் நாம் ஒருவரையொருவர் நம்பிக்கையோடு நோக்குகிறவர்களா யிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் என்னிலும், எனது மனைவி யிலும், எங்கள் திருமணத்திலும் கிரியை செய்கிறார். கிறிஸ்துவுக்குள்ளாக நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்று வருகிறோம். பாவம் செய்கிற என்னுடைய மனைவி, கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தமாகவும், தூய்மையாகவும், நேசிக்கப்படத்தக்கவிதமாகவும் இருப்பதைக் காண்கிறேன். என் மனைவியும் என்னைப் போலவே சுவிசேஷ அன்பை நேசிப்பதால், நாங்கள் இருவரும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்த அன்பினாலேயே ஒருவரை யொருவர் நேசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தம் நற்பலனைத் தரக்கூடியதாக இருப்பதாலும், கடவுள் எங்களில் தொடங்கிய நற்கிரியையை ஆவியானவர் முடிக்க வல்லவராய் இருப்பதாலும் (பிலி. 1:5) எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து, எப்படி சுவிசேஷ அன்பை ஒருவர்மேல் ஒருவர் செலுத்துவது என்பதைக் கற்றுக்கொடுக்கிறபடியால் நாம் நம்பிக்கையோடு நமது துணைக்கு வாக்குக்கொடுக்கலாம். ஆவியானவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் நாமும் நமது வாக்குக்கொடுத்தலில் உண்மையாயிருப்போம் என நம்பலாம். நமது பரமபிதா இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பரிபூரணத்தினாலே உடன்படிக்கை செய்தது போலவே நாமும் மன்னிக்கிறபோது, நமது மனைவியோடு உடன்படிக்கைக்குள்ளாகிறோம். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு தேவன் உண்மையும் நீதியும் உள்ளவ ராய் இருக்கிறார் என்று யோவான் சொல்லுகிறார். கடவுள் நமக்கு ஒரு வாக்குக்கொடுக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். அப்படி செய்வோமானால் அவர் நமது பாவங்களை மன்னித்து, நமது எல்லா அநீதியினின்றும் நம்மை சுத்திகரிப்பதாக வாக்குக் கொடுக்கிறார். அதுபோலவே நானும் எனது மனைவியை மன்னிக்கும்போது, கிறிஸ்துவினால் நீதிமானாக்கப்பட்ட பாவியாகவே எனது மனைவியை நடத்து வேன் என வாக்குக்கொடுக்கிறேன்; ஏனென்றால் எனது மனைவியை சுத்தி கரிக்கும் பணியை பரிசுத்த ஆவியானவர் அல்லவா நிறைவேற்றி வருகிறார்!
இனிமேல் என் மனைவியை பாவத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்காமல், கிறிஸ்துவின் கிருபையோடும், பரிசுத்த ஆவி நடப்பிக்கிற கிரியையோடும் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்ப்பேன் என்கிற வாக்குக்கொடுக்கிறேன். வேறுவகையாக சொல்லப்போனால், என் மனைவி செய்த பாவத்தையை திரும்பத் திரும்ப யோசித்துக் குழப்பிக் கொண்டிருக்காமல், அந்தக் குற்றத்தை திரும்பவும் மனதிற்குள் கொண்டுவர அனுமதிக்க மாட்டேன். என்னுடைய நண்பராகிய போதகர் ஒருவர் சொல்லுவார், மன்னிக்கப்பட்ட பாவத்தையே திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருப்பது எப்படியிருக்குமென்றால், இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி குறுக்கிட்டு (Pop up) எரிச்சலுண்டாக்குவதற்கு ஒத்திருக்கும். அப்படி வரும் விளம்பரங்களை நாம் உடனே அணைத்துவிடுவது போல, மன்னிக்கப்பட்ட பாவங்கள் நமது சிந்தையில் வந்து குறுக்கிடும்போது, அதை ஒரு மானசீகமான ஸ்விட்சை வைத்து உடனடியாக அணைத்து நீக்கிவிட வேண்டும். என் மனைவியின் பாவத்தை நான் மீண்டுமாக ஞாபகப்படுத்த மாட்டேன் என வாக்குக் கொடுத்திருக்கிறேன். மற்றவர்களிடமும் அதைக் குறித்துப் பேச மாட்டேன் என வாக்களித்திருக்கிறேன். சுவிசேஷத்தைப் பிரயோகித்து அந்த விஷயத்தைத் தீர்த்துக் கொண்டாயிற்று. ஒருவேளை அந்த நிகழ்ச்சியின் மூலமாக பாடங் களைக் கற்றுக்கொள்வதற்காக, அதை மிகுந்த புத்திசாலித்தனத்தோடும், பொறுமையோடும், அன்போடும் திரும்பவும் சிந்தித்துப் பார்க்கலாம். ஆனால் திரும்பவும் குற்றப்படுத்தும் முகாந்திரமாக அந்த பழைய புண்ணைக் கிளறிப் பார்க்கக் கூடாது. அப்படி செய்வதால் பிரிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக் காளாவோம். கிருபையின் சுவிசேஷத்தினால் ஏற்பட்டிருக்கும் தாழ்மையோடு நாம் ஒரே ஒரு காரணத்துக்காக நமது பழைய பாவங்களை திரும்ப நினைத்துப் பார்க்கலாம். பழைய பாவத்திலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம் என்கிற அறிவை அடைவதற்காக மாத்திரம் அதை செய்யலாமேயொழிய அந்தப் பாவத்தை திரும்பவும் செய்வதற்காக அல்ல.
அடுத்தபடியாக நாம் மனந்திரும்புதலின் கனியைக் கொடுக்க பிரயாசப்பட வேண்டும். மனந்திரும்பியவரும், மன்னிப்பளித்தவருமாகச் சேர்ந்து இந்த கனியானது தனது பலனைத் தரும்படியாக ஒத்துழைக்க வேண்டும். பாவம் சம்பந்தமான விவகாரத்தில் இம்மாதிரியாக இருவரும் சம்பந்தப்படும்போது, இருதயத்தின் ஆழத்திலுள்ள காரியங்களை ஒருவருக்கொருவர் முழுவதுமாக வெளிப்படுத்திக்கொள்ளுகிறீர்கள். இருதயத்தின் பாவ நிலைக்கு சுவிசேஷத்தின் மூலமாக தீர்வுகாண முயலும்போது, ஒருவரைப் பற்றி ஒருவர் இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளுகிறீர்கள். அதுமாத்திரமல்ல நீங்கள் ஒருவருக்கொருவர் பாவத்தைக் களைந்தெடுக்கும் ஊழியத்தை கனிவோடு செய்துகொள்ளும் போது, நீங்கள் இன்னும் வளருகிறவர்களாகிறீர்கள். ஒருவர் இருதயத்தை ஒருவர் அலசி ஆராயும்போது, உங்கள் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது. பாவத்தைக் கண்டுபிடித்தால் அதை சுவிசேஷ அன்பினால் உடனடியாக களைந்து போடுவோம் என்கிற நம்பிக்கை கொள்ளுகிறீர்கள்.
பாவத்தை மேற்கொள்வதற்காக செய்யப்படும் சுவிசேஷப் பரிமாற்றத்தி னால், உயிர்த்தெழுதலின் வல்லமையை உங்கள் திருமணத்தில் அனுபவிக் கிறவர்களாகிறீர்கள். எப்படி தெரியுமா? பாவம் மரணத்தைக் (பிரிவை) கொண்டு ஆளுகை செய்து கொண்டிருந்த இடத்தில் இப்போது கிருபை பெருகினபடி யால் அது பிரிவாகிய மரணத்தை வென்றது. சுவிசேஷ அன்பினால் நீங்கள் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்போது, திருமண நெருக்கம் உயிர்பெற்று இன்னும் அதிக ஆழமும் நெருக்கமும் அடைவதை அனுபவிப்பீர்கள். சுவிசேஷ அன்பினால் உண்மையாக உங்கள் இருதயத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ளும் போது, திருமண நெருக்கத்தின் பல புதிய உயரங்களை எட்டுவீர்கள்.
எனக்கு சுவிசேஷ அன்பினை விளங்கிக்கொண்ட மனைவி கிடைத்ததால் நான் நன்றி செலுத்துகிறேன். என்னுடைய இருதயத்தில் படிந்து கிடந்த ஆழமான பாவக்கறைகளைக் கூட மன்னிப்பதற்கு என் கர்த்தர் எனது துணைக்கு தயவு பாராட்டினார். கர்த்தர் மேல் கொண்ட விசுவாசத்தினாலும், கீழ்ப்படிதலினாலும் என் மனைவி, என் பாவங்களுக்கேற்ற விதத்தில் என்னை நடத்தாமல், பண்போடு நடத்துவதை நான் காண்கிறேன். கடவுளின் கிருபை யானது என் மனைவி மீது கிரியை செய்வதை நான் காண்கிறேன். என் மீது காட்டும் அன்பினாலே கடவுளின் கிருபையானது என் மனைவியில் பலமாக செயல்படுவதை உணருகிறேன். என் மனைவியைக் குறித்த எனது நம்பிக்கை வளருகிறது. மேலும் கர்த்தரின் மீதும் எனது நம்பிக்கை வளருகிறது (2 தெச. 3:3,4). சுவிசேஷப் பரிவர்த்தனை செய்கிறதால் நாங்கள் அடைகிற அனுபவம் மேலும் மேலும் எங்கள் உறவின் நெருக்கத்தை இறுக்குகிறது. இயேசு கிறிஸ்து வோடும் எங்களுக்குள்ளும் இருக்கின்ற ஒற்றுமையினாலே இது சாத்தியமாகிறது. எங்கள் நெருக்கத்தில் பாவம் பிரவேசிக்கும் சமயங்கள் தான் நாங்கள் ஒருவர் இருதயத்தை ஒருவர் நன்றாக ஊடுருவி ஆராயும் சந்தர்ப்பமாயிருக்கிறது. சுவிசேஷ அன்பினால் நாங்கள் அன்பு செலுத்த கற்றுக்கொள்கையில் நாங்கள் மேன்மேலும் நம்பிக்கையிலும், மரியாதை காண்பிப்பதிலும், நெருக்கத்திலும் முன்னேறிச் செல்லுகிறோம். எங்களுக்குள்ளேயும், எங்கள் மூலமாகவும் கடவுளின் கிருபை வேலை செய்வதை உணர்ந்துகொள்ள கற்றுக்கொள்ளு கிறோம். அந்தக் கிருபையை காணும்போது, நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு செலுத்தக் கர்த்தர் கற்றுக்கொடுக்கிறார் என்கிற நம்பிக்கையைப் பெறுகிறோம். நாங்கள் இருவருமாகச் சேர்ந்து அவருடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படி கிறதினாலே, அவர் எங்களுடைய அன்பைக் காத்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையையும் அடைகிறோம்.
சுவிசேஷ அன்பு எங்களை மாற்றுகிறது. அது எங்களை மேலும் பரிசுத்த மாக்குகிறது. எங்களை பரலோகத்திற்கு ஆயத்தப்படுத்துகிறது. நான் என் மனைவியை பரலோகத்தில் சந்திக்கும்போது, என் மனைவி என்னிடம் வந்து இவ்வாறாக சொல்வதைக் கேட்க விரும்புகிறேன் “பூலோகத்தில் நாம் வாழ்ந்த திருமண வாழ்க்கைக்கு நன்றி. அந்த சிருஷ்டிப்பில் என்னை நேசித்ததற்காக நன்றி. கடவுள், உனது அந்த அன்பை உபயோகித்து நான் இங்கே வருவதற்கு எனக்கு உதவியிருக்கிறார். ஒருவருக்கொருவர் எப்படி சுவிசேஷ அன்பை செலுத்துவது என்பதைக் கற்றுக்கொடுத்த கடவுளில் நான் நித்திய நித்தியமாக சந்தோஷமாயிருப்பேன்”. அதைப்பற்றிதான் பவுல் எபே. 5:25-27ல் குறிப்பிடுகிறார். “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையிலே அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமை யுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” இதைத்தான் சுவிசேஷ அன்பு நடப்பிக் கிறது. அது உன்னை இன்னும் பரிசுத்தமாக்குகிறது. யாராவது உங்களை மிகவும் நேசிக்கிறார்களா? அவர்கள் உங்களை நேசிப்பதை எதினால் அறிய லாம்? அவர்களுடைய அன்பு உங்களை பரிசுத்தத்தை நோக்கி வழிநடத்துமா னால் அது உண்மையான சுவிசேஷ அன்பு.
பாவிகளாகிய இருவர் எப்படி ஆத்மீகமாக நெருங்க முடியும்? அவர் களுடைய பாவங்கள் வெடித்து, சிதறி அவர்களுடைய நெருக்கத்தையே குலைத்துப் போடுமல்லவா! ஆனால், சுவிசேஷ அன்பினால் மாத்திரமே இது கூடும். இந்த அன்பை இயேசு கிறிஸ்து மாத்திரமே நமக்குக் கற்றுத்தர முடியும். அவர் கற்றுத் தருகிறார். நாம் இருவருமாக சேர்ந்து சுவிசேஷத்தைப் பயிற்சி செய்வதின் மூலமாக அதைக் கற்றுக்கொள்ளுகிறோம். நாம் நெருக்கமான உறவை நாடும்படியாக கிருபையினால் வலியுறுத்தப்படுகிறோம். பரிசுத்தத்தில் வளர்ந்து, நமது தாம்பத்திய வாழ்வை சுவிசேஷத்திற்குக் கிடைத்த வெற்றியாக மாற்றிக் காட்டும்படிக்கு வலியுறுத்தப்படுகிறோம். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியரு மாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத் தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” கொலோ. 3:12-14. கடவுளுடைய நாமத்துக்கு மகிமை உண்டாகும் படியாக, உங்களுடைய திருமண வாழ்க்கையில் சுவிசேஷ அன்பினாலே ஒருவரையொருவர் சிநேகித்து, நெருக்கமடையுங்கள். (தொடரும்)