திருமறைத்தீபம் 2010 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. வாசகர்களே!
2. திருவிருந்து பற்றி . . .
3. வேண்டும் இன்று விழிப்புணர்வு!
4. பிரியாவிடை பிரசங்கங்கள் -4-
5. தாம்பத்திய உறவில் நெருக்கம்
வாசகர்களே!
இந்த இதழில் திருவிருந்து பற்றி 1689 விசுவாச அறிக்கை விளக்கும் சத்தியங்களின் அடிப்படையில் வேத விளக்கங்களையும், பயன்பாடுகளையும் தந்திருக் கிறேன். திருவிருந்து நம்முடைய ஆவிக்குரிய நன்மைக் காக கிறிஸ்து அளித்திருக்கும் திருநியமங்களில் ஒன்று. அதைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கிருப்பது அவசியம். அத்தோடு பத்து வருடங்களுக்கு முன்பு இந்தப் பத்திரிகையில் நான் எழுதியிருந்த, இன்றைக்கும் அவசியமான ஓர் ஆக்கத்தையும் மறு வெளியீடாக தந்திருக்கிறேன். பழைய வாசகர்களுக்கும், புதிய வாசகர் களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். கர்த்தர் இந்த இதழையும் உங்களுக்கு ஆசீர்வாதமுள்ளதாக இருக்கச் செய்ய சபையாக ஜெபிக்கிறோம்.
இந்த வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்கள்தான் ஆகியிருந்த போதும் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அழிவுகள் அடிக்கடி தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். பயங்கர நில அதிர்வுகள் இலட்சக் கணக்கானவர்களை இருந்த இடமில்லாமல் போகச் செய்திருக்கின்றன. தொடர்ந்து எரிமலைகள் சில பகுதி களில் உயிர் பெற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக் கின்றன. ஐஸ்லாந்து நாட்டு எரிமலை வெடித்து கனலைக் கக்கியதால் இருபது நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு, ஏழு மில்லியன் பயணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தவிக்கும் நிலையும், விமானக் கம்பேனிகள் ஒரு நாளைக்கு இருநூற்றி ஐம்பது மில்லியன் டாலர்களை இழக்கும் நிலை ஏற்பட்டு பொருளாதாரம் பெரியளவுக்கு பாதிப்படையும் நிலையும் ஏற்பட்டது. இத்தனையும் நடந்தும் நமக்கு மேலாக, நம்மைப் படைத்து இயக்கிக் கொண் டிருக்கும் ஒருவர் இல்லை என்று இறுமாப்போடு இருப்பவர்களை நினைத்துப் பார்க்கும் போது அவர்கள் மேல் எனக்கு பரிதாபம் ஏற்படுவது மட்டுமல்லாமல், கோரமான பாவம் மனித இருதயத்தை எந்தளவுக்கு பாதித்து கடினப்படுத்தி வைத்திருக்கிறது என்பதையும் எண்ணிக் கலங்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதும் மனிதனின் இருதயத்தை அசைத்து அவன் கர்த்தரிடம் மனந்திரும்புதலைப் பெற்றுக் கொள்ளும் வல்லமையுள்ள கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தேவன் நமக்கு தந்திருக்கிறாரே என்ற ஆனந்தமும், அதைத் தொட்ர்ந்து ஆவியின் வல்லமையோடு பிரசங் கிக்கும் பெருங்கடமை நமக்கிருக்கிறது என்ற பொறுப் புணர்வும் என்னை நம்பிக்கையிழந்துவிடாமல் கர்த்தரின் பணியில் தொடர்ந்தும் உழைக்க வைக்கின்றன. நடந்து கொண்டிருப்பவைகள் கர்த்தரின் வருகையையும், நியாயத் தீர்ப்பையும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பதால் அதை நீங்களும் தொடர்வதில் சலிப்படைந்து விடாதீர்கள். - ஆசிரியர்.
திருவிருந்து பற்றி . . .
கர்த்தர் திருச்சபைக்குத் தந்துள்ள கிருபையின் சாதனங்கள் பல. கிறிஸ்துவின் பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் உறுதியாக வளர்ந்து தம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கிருபையின் சாதனங்களை அவர் தந்துள்ளார். கிருபையின் சாதனங்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே அச்சாதனங்கள் கர்த்தரின் கிருபையில் நாம் வளர்வதற்கு துணையாக இருக்கின்றன என்பதை விளக்குகின்றன.
வேத வாசிப்பு, வேதப் பிரசங்கம், ஜெபம், திருமுழுக்கு, திருவிருந்து, சபையின் ஐக்கியம் என்று இவ்வாறாக பல கிருபையின் சாதனங்களை நாம் குறிப்பிடலாம். தனிப்பட்ட விதத்தில் விசுவாசிகள் பயன்படுத்தவும், சபையோடு கூடி வந்து பயன்படுத்தவும் கர்த்தர் இச்சாதனங்களை அளித்துள்ளார். இவற்றில் திருமுழுக்கு, திருவிருந்து (ஆண்டவரின் பந்தி) ஆகிய இரண்டும் கர்த்தரால் சபைக்கு நியமிக்கப்பட்ட திருநியமங்களாக இருக்கின்றன. அதாவது இவற்றை வேதப்பூர்வமாக நிறுவப்பட்டு, தகுந்த சபை அதிகாரிகளைக் கொண்டிருக்கும் சபைகளே நடைமுறையில் ஆத்துமாக்களுக்கு அளிக்க வேண்டும். தனிப்பட்ட விதத்தில் எந்த விசுவாசியும் இத்திருநியமங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேதம் அனுமதிக்கவில்லை.
இத்திருநியமங்களில் திருவிருந்தைப் பற்றி இந்த ஆக்கத்தில் நான் விளக்க விரும்புகிறேன். திருவிருந்தைப் பற்றி வேதம் அளிக்கின்ற அத்தனை விளக்கங்களையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து விளக்குவதல்ல என்னுடைய நோக்கம். அது அவசியமானதாக இருந்தாலும் அதை வேறு ஒரு சந்தர்ப் பத்தில் தர விரும்புகிறேன். இந்த ஆக்கத்தின் மூலம் திருவிருந்தைப் பற்றி 1689 விசுவாச அறிக்கை நமக்களித்திருக்கும் ஓர் எச்சரிக்கையைப் பற்றி விளக்குவதே என்னுடைய முக்கிய நோக்கமாக இருக்கின்றது.
விசுவாச அறிக்கையின் விளக்கம்: அதிகாரம் 20, 4 வது பத்தி
“கோப்பையை ஆத்துமாக்களுக்கு கொடுக்க மறுப்பதும், திருவிருந்தின் சாதனங்களை ஆராதிப்பதும், அவற்றை உயர்த்திப் பிடிப்பதும், அவற்றை மகிமைப்படுத்தும்படியாக தூக்கிச் செல்லுவதும், சமய ஆசாரங்களுக்காக அவற்றை ஒதுக்கி வைப்பது போல் நடிப்பதும், திருவிருந்தின் தன்மைக்கு எதிரானதும் கிறிஸ்துவின் நோக்கங்களுக்கு மாறானவையுமாகும்.”
இந்த வார்த்தைகளை சாதாரணமாகப் பார்க்கின்றபோது அவற்றின் விளக்கத்தைப் புரிந்துகொள்ளுவது கடினமாக இருக்கும். நிச்சயமாக இந்த வார்த்தைகள் எந்தெந்த விதத்தில் சபை திருவிருந்தைக் கையாளக்கூடாது என்று விளக்குகின்றது என்பதை மேலெழுந்தவாரியாக இந்த வார்த்தைகளை வாசிக்கின்றபோது அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்கு சபை வரலாறு தெரிந்திருப்பது அவசியம். விசுவாச அறிக்கையை வரைந்து தந்தவர்கள் திருச்சபை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் வைத்தே இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார்கள். அந்த சம்பவங்கள் தொடர்ந்து நிகழக் கூடாது என்பதினாலும், அதனால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளுவதற்கு வசதியாகவும் இந்த எச்சரிக்கை வார்த்தைகளை அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
விசுவாச அறிக்கை நமக்கு நினைவுறுத்தும் அந்த வரலாற்று சம்பவம் திருச்சபை வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலப்பகுதி யாகும். முதல் ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது அப்போஸ்தல ருடையதும், ஆரம்ப ஆதி சபைப்பிதாக்களினுடையதும் காலத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சத்தியத்திற்கெதிரானவர்கள் எழுந்து திருச்சபையை மோசம் செய்ய ஆரம்பித்தார்கள். அது முழு உருவம் பெற்று இறுதியில் ரோமன் கத்தோலிக்க மதமாக உருப்பெற்று பதினாறாம் நூற்றாண்டுவரை இந்த உலகத்தில் காட்டாட்சி நடத்தி வந்ததை சபை வரலாற்றை வாசிக்கின்ற போது அறிந்துகொள்ளுகிறோம்.
ரோமன் கத்தோலிக்க மத போப்புக்கள் திருவிருந்தை “மாஸ்” என்ற பெயரில் அழைத்து வேதத்திற்கு முற்றிலும் வேறுபாடான பொருளை அதற்கு தந்து திருவிருந்தைக் கர்த்தர் சபைக்கு அளித்த நோக்கத்தை தலைகீழாக மாற்றினார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப் அல்லது கத்தோலிக்க குருமார் மாஸ் நடத்துகிறபோது திருவிருந்தில் பயன்படுத்தப் படும் அப்பத்திலும், பாணத்திலும் இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக இந்த உலகத்தில் பிரவேசித்து அவற்றில் எழுத்துப்பூர்வமாக இருப்பதாக அவர்கள் விளக்குகிறார்கள். மாஸின்போது குருமார் ஜெபிக்கும் வேளையில் அவர் களுடைய ஜெபத்தின் வல்லமையால் அப்பமும், பாணமும் கிறிஸ்துவாக மாறி கிறிஸ்துவின் மரணபலி மறுபடியும் நிகழ்வதாக அவர்கள் விளக்குகிறார்கள். இப்படியாக மறுபடியும், மறுபடியும் மாஸ் நிகழும் போதெல்லாம் கிறிஸ்து மரிக்கிறார் என்றும், அம்ம்ரணத்தின் பலனை கத்தோலிக்க மத விசுவாசி களுக்கு வழங்கும் அதிகாரத்தை போப் கொண்டிருப்பதாகவும் அந்த மதம் விளக்குகிறது. பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் ரோமன் கத்தோலிக்க மதத்தின் இந்த வேத விரோத போதனைகளுக்கெதிராக கொதித் தெழுந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. ஜெர்மனி, திருச்சபைக்கு பெற்றுத் தந்த சீர்திருத்தவாதியான மார்டின் லூதரால் இதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
கிறிஸ்துவின் மரணம் பற்றியும், திருவிருந்து பற்றியும் வேதம் விளக்குகின்ற ஆணித்தரமான விளக்கங்களை நாசப்படுத்தும் கத்தோலிக்க மத விளக்கங்களுக்கெதிராக 1689 விசுவாச அறிக்கையை எழுதிய நம் முன்னோர்கள் திருவிருந்து பற்றி விளக்குகின்ற 20ம் அதிகாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கத்தோலிக்க மதப் போதனையை மனதில் வைத்தே விளக்கியிருக்கிறார்கள். 20 ஆம் அதிகாரம் 2 வது பத்தியின் கடைசிப்பகுதியில் அவர்கள் பின்வருமாறு எழுதினார்கள், “இத்திருநியமத்தின் மூலம் கிறிஸ்து பிதாவுக்கு பலியாகக் கொடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி உயிரோடிருப்பவர்களுடையதும், மரித்தவர்களினுடையதுமான பாவநிவாரணத்திற்காக இதன் மூலம் எந்தப் பலியும் செலுத்தப்படுவதில்லை. கிறிஸ்து சிலுவையில் எப்போதைக்குமாக ஒரே தடவை தன்னையே பலியாகக் கொடுத்ததை நினைவுகூருவதற்காகவே திருவிருந்து இருக்கிறது. அத்தோடு, கல்வாரியில் ஒரே தடவை நிகழ்ந்த அந்த செயலுக்காக கடவுளுக்குக் கொடுக்கக் கூடிய ஆத்மீகக் துதியாகவும் இது இருக்கிறது. ஆகவே, போப் கொடுக்கும் மாஸ் என்று அழைக்கப்படும் பலி சகிக்க முடியாததாகவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பாவ நிவாரணத்திற்கான ஒரே பலியான கிறிஸ்துவின் பலியைப் பாதிக்கின்றதாகவும் இருக்கின்றது.” விசுவாச அறிக்கையின் இந்த விளக்கம் கத்தோலிக்க மத போதனையை ஆணித்தரமாக நிராகரிக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அதிகாரத்தை இழந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இன்றைக்கு ரோமன் கத்தோலிக்க மதம் இருந்தாலும் அது தொடர்ந்து திருவிருந்து பற்றிய தவறான போதனையைக் கொண்டிருக்கிறது. தமிழர் மத்தியில் காணப்படும் பாரம்பரிய சபைகளான சீ. எஸ். ஐ. மற்றும் லூதரன் சபைகள் திருவிருந்து பற்றிய கத்தோலிக்க மதப் போதனைகள் அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் இன்னொரு விதத்தில் திருவிருந்தை மாசுபடுத்துகிறார்கள். ஆடம்பரத்தோடு திருவிருந்தைக் கையாளக்கூடாதென்று வேதமும், விசுவாச அறிக்கையும் விளக்குகின்றது. ஆனால், பாரம்பரிய சபைத் தலைவர்கள் படோபகமாகவும், ஆடம்பரமாகவும் வெள்ளையில் வெள்ளியும், தங்கமும் கலந்த சரிகை வேலைப் பாடுகளுடன் கூடிய சிறப்பான அங்கிகளை அணிந்தும், உயரமான இடத்தில் திருவிருந்து மேடையை மக்களிடம் இருந்து தூரத்தில் தள்ளி வைத்தும், விலையேறிய விசேஷ வெள்ளிக் கோப்பைகளைப் பயன்படுத்தியும், கோப்பையை உயர்த்திக் காட்டியும் சாதாரணமாகக் கையாள வேண்டிய திருவிருந்திற்கு தேவைக்கு மேலான அர்த்தத்தைக் கற்பித்தும், அப்பத்திற்கும் பாணத்திற்கும் விசேஷ இடத்தை அளித்தும் அதை மாசுபடுத்துகிறார்கள். இத்தகைய செய்கைகளின் மூலம் ஆத்துமாக்களின் ஆத்தும வளர்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள திருவிருந்தை அவர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள்.
விசுவாச அறிக்கையின் 20 ஆம் அதிகாரம் 4 வது பத்தியில், “கோப்பையை ஆத்துமாக்களுக்கு கொடுக்க மறுப்பதும் . . . திருவிருந்தின் தன்மைக்கு எதிரானதும் கிறிஸ்துவின் நோக்கங்களுக்கு மாறானவையுமாகும்” என்று விளக்குகின்றது. நம் முன்னோர்கள் இதை எழுதி வைத்ததற்குக் காரண மென்ன என்பதை நாம் ஆராய்வது அவசியம். ரோமன் கத்தோலிக்க மதகுருக்கள் மாஸ் நடத்துகின்றபோது அப்பத்தை மட்டுமே சபையாருக்கு கொடுத்து கோப்பையை ஒரு காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இதற்கு பதிலளித்த ரோமன் கத்தோலிக்க மதம், அப்பத்திலும், பாணத்திலும் கிறிஸ்து இருப்பதால் கோப்பையை அவர்களுக்கு அளிக்காமல் இருப்பதில் தவறில்லை என்றார்கள். ரோமன் கத்தோலிக்க மத குருமார் அப்பத்திற்காகவும், பாணத்திற் காகவும் ஜெபிக்கின்றபோது அந்த ஜெபத்தின் வல்லமையால் கிறிஸ்துவின் மரணம் மறுபடியும் மாஸின்போது நிகழ்வதாக விளக்குகிறார்கள். இது மிகத் தவறான போதனை. கத்தோலிக்க மதம் இச்செய்கைகளால் எந்தளவுக்கு திருவிருந்தை அநாவசியத்துக்கு உருமாற்றி தங்களுடைய சொந்தக் கருத்துக் களைப் புகுத்தி குருமாரின் ஸ்தானத்துக்கு வேதத்தில் காணமுடியாத புனித மான அம்சத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது. கோப்பையை மக்களுக்குக் கொடுக்க மறுப்பதன் மூலம் சாதாரண மனிதர் களான குருமாரின் ஸ்தானத்துக்கு அவசியமற்ற உயர் ஸ்தானத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். இதெல்லாம் கிறிஸ்துவின் நோக்கங்களுக்கு மாறானவை.
புதிய உடன்படிக்கையின் ஆத்துமாக்களுக்காக திருவிருந்தை இயேசு ஏற்படுத்தியதன் நோக்கத்தை விளக்கும் 1689 விசுவாச அறிக்கை, “கிறிஸ்துவின் மரண பலியை (சுட்டிக்) காட்டவும், அவரைத் தொடர்ந்து நினைவுகொள்ளவும், உலக முடிவு பரியந்தமும் திருவிருந்து அவருடைய சபைகளில் அனுசரிக்கப்பட வேண்டும்” என்றும், “கிறிஸ்துவின் பலிகளினால் ஏற்பட்ட அனைத்து பலாபலன் களும் பரிசுத்தவான்களுக்கு உரியது என்பதை நிரூபிக்கவும் இது ஏற்படுத்தப் பட்டது” என்று விளக்குகின்றது. அத்தோடு, “மேலும் கிறிஸ்துவில் அவர் களுடைய ஆத்மீக சக்தியையும் வளர்ச்சியையும் விஸ்தரிக்கவும் கிறிஸ்துவுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும்படி அவர்களைக் கிறிஸ்து வோடு இணைக்கும் அனைத்தையும் உறுதி செய்யவும் இது ஏற்படுத்தப்பட்டது” என்கிறது (அதிகாரம் 20, 1 வது பத்தி). விசுவாச அறிக்கையில் தரப்பட்டுள்ள இந்த விளக்கங்கள் ஆத்துமாக்களின் ஆவிக்குரிய நன்மைக்காகவே இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஆத்துமாக்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் தங்கி யிருந்து கிறிஸ்துவின் மரணபலியை திருவிருந்து மூலம் ஆவிக்குரிய நிலையில் நினைவுகூர்ந்து அவருடைய கிருபையிலும், ஞானத்திலும் தொடர்ந்து வளர்வ தற்கு இந்த உலகத்தில் அவர்கள் வாழ்கின்றவரை இன்றியமையாததொன் றாகவே வேதம் திருவிருந்தை நமக்கு அடையாளம் காட்டித் தருகின்றது. திருவிருந்தில் பக்தியோடு ஆத்துமாக்கள் கலந்துகொண்டு சாதாரணமான அப்பத்தையும், திராட்சை இரசமாகிய பாணத்தையும் அருந்தும்போது அவர்கள் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவோடு ஐக்கியத்தை அனுபவிக் கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. சபை ஆத்துமாக்கள் ஒருவருக் கொருவர் ஐக்கியத்தை வளர்த்துக்கொள்ளவும் திருவிருந்து அவசியமாகிறது. அதன் காரணமாகவே சபை கூடி திருவிருந்து எடுக்க வேண்டிய அவசியத்தை வேதம் சுட்டிக்காட்டுகிறது (1 கொரி. 11).
யார், எவ்வாறு திருவிருந்தில் கலந்துகொள்வது?
ஆத்துமாக்களின் ஆவிக்குரிய நன்மைக்காக திருவிருந்து ஏற்படுத்தப்பட் டிருப்பதை விளக்குகின்ற விசுவாச அறிக்கை திருவிருந்தில் யார், எவ்வாறு கலந்துகொள்ள வேண்டும், யார் பங்குகொள்ளக்கூடாது என்று நம்மை எச்சரிக்கவும் தவறவில்லை. “திருவிருந்தில் அபாத்திரமாய் கலந்துகொள் கிறவர்கள் கிறிஸ்துவின் சரீரத்துக்கும் இரத்தத்திற்கும் எதிராகப் பாவம் செய்கிறார்கள்” என்று அது விளக்குகிறது. தொடர்ந்து அது, “அவர்களுடைய புசித்தலும், பாணம் பண்ணுதலும் அவர்களை தெய்வீக தண்டனைக்குக் கீழ் கொண்டு வருகின்றன. ஆகவே, அறியாமையுடையவர்களும், பரிசுத்த மற்றவர்களும் கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் வரும் தகுதியற்று திருவிருந்தில் கலந்துகொள்ளும் தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள்” (20:8) என்கிறது.
இந்தப் பகுதியில் கூறப்பட்டிருப்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். முதலில் எவரும் திருவிருந்தில் அபாத்திரமாய் கலந்து கொள்ளக்கூடாது என்று விசுவாச அறிக்கை எச்சரிக்கிறது. “அபாத்திரமாய்” (unworthy) என்ற வார்த்தை எத்தகைய தவறுகளை மனதில் வைத்து எழுதப் பட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் 1 கொரி. 11:27ஐ மனதில் வைத்து இதை எழுதியிருக்கிறார்கள். இங்கே இரண்டுவிதமான “அபாத்திரங்களை” அவர்கள் விளக்குகிறார்கள் என்று சீர்திருத்த பாப்திஸ்து இறையியல் அறிஞர் சாமுவேல் வோல்டிரன் எழுதுகிறார். முதலில், அவிசுவாசிகளை மனதில் கொண்டு இது எழுதப் பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மரண பலியின் அடிப்படையில் அவரை மனந்திரும்பி விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே திருவிருந்து உரியது. அத்தகைய மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் விசுவாசத்தையும் வாழ்க்கையில் அடையாத வர்கள் திருவிருந்தில் கலந்துகொள்வது அபாத்திரமானது. அத்தகையவர்களை திருவிருந்தில் கலந்துகொள்ள எந்த திருச்சபையும் அனுமதிக்கக் கூடாது. அபாத் திரமாய் அவர்களை அனுமதிப்பது அவர்களைப் பாவம் செய்ய வைப்பதற்கு சமமானது என்று விசுவாச அறிக்கை 1 கொரி. 11:27-31 ஆகிய வசனங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
சுவிசேஷத்தைப் பற்றிய அறிவின்மையுடையவர்களையும், அவிசுவாசி களையும் திருவிருந்தில் கலந்துகொள்ளத் தடை செய்ய திருச்சபைக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இதற்கு மூன்று சான்றுகளை முன்வைக்க முடியும். (1) நம்மால் முடியுமானால் ஏனையோர் பாவம் செய்யாமலிருக்கும்படிப் பார்த்துக்கொள்ளும் கடமை நமக்கிருக்கிறது. (2) வெளிப்படையாக பக்தி விருத்தியில்லாமல் வாழுகிறவர்களோடு (அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டாலும்) நாம் ஐக்கியத்தில் வரக்கூடாது என்கிறது வேதம் (1 கொரி. 5:9-13; 2 யோவான் 10). (3) திருவிருந்து சபை அனுசரிக்கும்படி சபைக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது (அப்போஸ். 2:41-42; 20:7; 1 கொரி. 11:17-22; 33-34). இவற்றின் அடிப்படையில் சபை திருவிருந்தை ஜாக்கிரதையோடு அனுசரிக்க வேண்டும் என்கிறது வேதம்.
இதிலிருந்து திருவிருந்தை எந்தவித நியாயமான ஒழுங்கும் இல்லாமல் யார் எவரென்றில்லாமல், கேள்விக் கேட்காமல் எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அனுசரிக்கும் முறைக்கு வேதம் இடங்கொடுக்க வில்லை என்பதை உணர வேண்டும். “அபாத்திரமாய்” எவரும் அதை மாசு படுத்தாமல் இருக்க வேண்டுமானால் அதில் கலந்துகொள்கிறவர்கள் விசுவாசி களாக இருக்கிறார்களா என்று திருச்சபை பார்த்துக்கொண்டால் மட்டுமே முடியும். இதனால் திருச்சபை அங்கத்தவர்களுக்கும், வேறு மெய்ச் சுவிசேஷ சபைகளில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கும் சபையில் திருவிருந்தில் கலந்துகொள்ள அனுமதிப்பது நல்லது. ஏனைய சுவிசேஷ திருச்சபைகளில் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் திருவிருந்தில் கலந்துகொள்ளுமுன் தங்க ளுடைய பிரசன்னத்தை சபைத் தலைவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பது அவர்களை திருவிருந்தில் அனுமதிக்க உதவும். திருச்சபை மட்டுமே அனுசரிக் கும்படி கொடுக்கப்பட்டிருக்கும் திருவிருந்தை திருச்சபை விசுவாசிகள் மட்டுமே பங்குகொள்ளும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது வேத நியதி.
இரண்டாவதாக, “அபாத்திரமாய்” என்ற வார்த்தைப் பிரயோகம் விசுவாசிகளாய் தங்களை அறிவித்துக்கொள்கிறவர்களும் திருவிருந்தை மாசுபடுத்திவிடலாம் என்பதை மனதில் கொண்டும் எழுதப்பட்டிருக்கிறது. பவுலின் வார்த்தைகள் 1 கொரி. 11ல் கொரிந்து சபையாருக்கு எழுதப்பட்டவை என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். விசுவாசிகள் எந்தவிதத்தில் “அபாத்திரமாய்” திருவிருந்தில் பங்குகொள்ள முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். கர்த்தருடைய சரீரம் இன்னதென்று அவர்கள் நிதானித்து நடந்து கொள்ளாமல் இருந்தால் அந்நிலை ஏற்படும் என்கிறார் பவுல். அப்பமும், பாணமும் கிறிஸ்துவின் மரணபலியை நினைவூட்டுபவையாக இருக்கின்றன என்பதையும், அவருடைய சிலுவைப் பலியே நம்மை திருச்சபையில் அங்கத்தவராக்கி சக சகோதரர்களுடன் ஐக்கியத்தில் வரும்படிச் செய்திருக்கிற தென்பதையும் ஆவிக்குரிய ரீதியில் எண்ணிப் பார்க்காமல் அப்பத்தையும் பாணத்தையும் அசட்டை செய்து அபாத்திரமாய் போஜனபாணம் பண்ணி னால் நாம் பாவம் செய்வது மட்டுமல்லாமல் நாமிருக்கும் சபைக்கும் தீங்கு வரும் என்பதையே பவுலின் வார்த்தைகள் 1 கொரிந்தியரில் விளக்குகின்றன. கொரிந்து திருச்சபை விசுவாசிகளில் சிலர் திருவிருந்தில் பங்குகொள்கிறோமே என்ற எந்த அக்கறையும் இல்லாமல் வீட்டில் சாதாரணமாய் உணவருந்துவது போல் அசட்டையாய் சபையில் நடந்துகொண்டதாலேயே கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். இத்தகைய தவறான நடத்தையினால் சிலர் கடும் நோய்களை அனுபவிக்க நேர்ந்தது. சிலர் உடனடியாகவே மரணமடைந்தார்கள்.
அத்தோடு, திருவிருந்து எடுக்குமுன் தாழ்மையோடு நம்மை நாமே விசுவாசத்தோடு பரிசோதித்து மனந்திரும்புதலோடு பங்குகொள்ளாமல் (1 கொரி. 11:31) அஜாக்கிரதையாய் பங்குகொண்டாலும் அது அபாத்திரமாய் நடந்துகொள்வதற்கு ஒப்பாகும்.
“அபாத்திரமாய்” என்ற வார்த்தை நம்முடைய தகுதியை மனதில் கொண்டு எழுதப்பட்ட வார்த்தையல்ல. விசுவாசிகளாகிய நம்மில் எவருமே கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலியின் பலன்களை அனுபவிக்கத் தகுதியானவர்களல்ல. நாமெல்லோரும் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காக மரித்திருக்கிறார். நம் தகுதியைப் பார்த்து அவர் நமக்காக மரிக்கவில்லை. எந்தத் தகுதிகளும் இல்லாமல் நாம் பாவிகளாக இருந்தபோதே அவர் நமக்காக இரங்கி தம்மைப் பலியாகத் தந்திருக்கிறார். நாம் கிருபையினால் இரட்சிப்புப் பெற்ற பாவிகளாக இருக்கிறோம். நம்மில் எவருமே பூரணர் அல்ல. நம்முடைய அன்றாட சகல பக்திவிருத்திக்கான முயற்சிகளைத் தாண்டியும் நாம் பரிபூரணமற்றவர்களாகத் தான் இந்த உலகத்தில் தொடர்ந்து இருக்கிறோம். அத்தகைய நிலையில் இருக்கும் நாம் விசுவாசத்தில் பலத்தோடு இருக்கவே இயேசு திருவிருந்தை நமக்குத் தந்திருக்கிறார். தகுதியற்றவர்களுக்குத்தான் திருவிருந்து. தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொள்பவர்களுக்கு திருவிருந்து தேவையில்லை. சுயத்தில் நீதியானவர்களாக ஒருவரும் கர்த்தரின் பார்வையில் தென்படுவ தில்லை. அப்படியானால் “அபாத்திரமாய்” என்ற இந்த வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற கேள்வி எழத்தான் செய்யும். இது நாம் எந்த விதத்தில், எத்தகைய மனப்பாங்கோடும், நடத்தையோடும் திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை நாம் கவனத்தோடும், ஜாக்கிரதையாகவும், இருதய பரிசோதனை யோடும், தாழ்மையோடும், திருவிருந்தின் தன்மையை நன்றாக உணர்ந்த மனப்பான்மையோடும் திருவிருந்தில் பங்குகொள்ள வரவேண்டுமென்பதை சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வளர்ச்சியை மனதில் வைத்து இயேசு கிறிஸ்து திருச்சபைக்கு நியமித்திருக்கின்ற திருநியமமான திருவிருந்து வேதப் பூர்வமாக, முறையாக சபையில் இன்று அனுசரிக்கப்பட வேண்டுமானால் நாம் கீழ்வரும் விஷயங்களை ஆராய்ந்து பார்த்து அவை நம் வாழ்க்கையிலும், சபையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தற்கால சபைப் போதகர்கள் தங்களை எந்தவிதத்திலும் தங்களுடைய தகுதிகளுக்கு மேலாக எண்ணிக்கொள்வது தகாது. போதகர்கள் மந்தைகளை வழிநடத்த நியமிக்கப்பட்ட மேய்ப்பர்கள். தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பக்திவிருத்தியோடு ஆத்துமாக்களுக்கு முன்பாக தாழ்மையோடு வாழ்ந்து காட்டியே ஆத்துமாக்களை அவர்கள் பரிசுத்தத்தில் வளர வழிகாட்ட வேண்டும். வேதத்தை எப்படித் திருப்பி வாசித்தாலும் மேய்ப்பர்களைப் பற்றி அது இதைத்தான் சொல்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் தாழ்மையோடு வாழ்ந்து தன் ஆடுகளை வழிநடத்தினார். பவுல் அப்போஸ்தலன் தான் வாழ்ந்து காட்டிய முறையை அப்போஸ். 20ல் சக மூப்பர்களுக்கு/போதகர்களுக்கு இந்த முறையில்தான் விளக்கியிருக்கிறார். ஒரு போதகன் உலகத்தில் காணப்படும் ஒரு கம்பேனித் தலைவரை அல்லது மேனேஜரைப் போல் எண்ணி இறுமாப்போடு அதிகாரம் செலுத்தி நடந்துகொள்ளும்போது அங்கே ரோமன் கத்தோலிக்க போப்பை அடையாளம் காண்கிறோம். அந்த முறையில் தவறாக நடந்துகொள்ளுகிறவர்கள் திருவிருந்தை சபையில் தவறாகப் பயன்படுத்திவிடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. சக கிறிஸ்தவ சகோதரர்களைப் போல தானும் ஒரு பாவி என்பதை மனதில் வைத்துக்கொண்டு, அவர்களைப் போல தானும் மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும், தாழ்மையுடனும் திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும் என்று எண்ணுகிற போதகனே திருவிருந்தை அசிங்கப்படுத்தாமல் கவனத்தோடு நடந்துகொண்டு சக ஆத்துமாக்களின் ஆவிக்குரிய கரிசனையோடு அதை சபையில் அனுசரிப்பான். போப்பைப்போல நடந்துகொள்ளுகிறவன் அதை அதிகாரம் செலுத்துகிற ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஆத்துமாக்களை அதிகாரம் செய்து ஆண்டவரை நிந்திப்பான்.
திருவிருந்தை முறையாக சபையில் அனுசரிப்பது போதகர்களுடைய பணி. தங்களுடைய பணியை அவர்கள் ஒருபோதும் ஆத்துமாக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு கருவியாக எண்ணிவிடக்கூடாது. தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியை அவர்கள் மிகுந்த மனத்தாழ்மையோடு நிறைவேற்ற வேண்டும். சுய ஆதாயம் எதையும் மனதில் கொள்ளாமல் கிறிஸ்துவின் மகிமைக்காக அதைச் செய்ய வேண்டும். அந்தப் பணிக்கு அவர்கள் கர்த்தருக்கு மட்டுமல்லாமல் தாங்கள் பணிபுரியும் சபைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். தாழ்மையுள்ள ஊழியமே போதகர்களுடைய வாழ்நாள் ஊழியம். அதைத்தான் ரோமன் கத்தோலிக்க போப்புகளிடம் காண முடியாமல் போனது. அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆணவத்தோடு அதிகாரம் செலுத்தும் கருவியாக மாற்றிக் கொண்டார்கள். இதை நான் விளக்குவதற்கு காரணமிருக்கிறது. திருவிருந்து பற்றிய விளக்கத்தை அளிக்கும் விசுவாச அறிக்கை, திருவிருந்து சபையில் முறையாக அனுசரிக்கப்பட வேண்டுமானால் சபைத் தலைமை தாழ்மையோடும், வழிநடத்தலுக்குரிய தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்பதை 20 ஆம் அதிகாரம் 4 வது பத்தி யில் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய தலைமை மட்டுமே இந்தப் பத்தியிலும் ஏனைய பத்திகளிலும் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் திருவிருந்து சபையில் இருக்கும்படியாக அக்கறை காட்டும்.
- அடுத்ததாக, சகல மரியாதையோடும் பக்திவிருத்தியோடும் திருவிருந்தை அனுசரிக்க வேண்டியிருந்தாலும் அளவுக்கு மீறிய ஆடம்பரங்களை திருவிருந்து சம்பந்தமான விஷயங்களில் சபையில் ஏற்படுத்த முயலக்கூடாது. தாழ்மை யோடு கூடிய பயபக்தியே திருவிருந்தை அளிப்பவர்களிடமும், திருவிருந்தை எடுப்பவர்களிடமும் காணும்படியாக இருக்க வேண்டும். திருவிருந்து சாதனங்கள் இருக்கும் மேடையையும், பாத்திரங்களையும், எந்தவிதத்திலும் அலங்கரித்தும், போதகர்கள் தங்களுடைய உடையலங்காரத்தில் அதீத அக்கறை காட்டியும், அப்பத்திற்கும், பாணத்திற்கும் அநாவசியமான, அளவுக்குமீறிய தகுதியை அளித்தும் நடந்துகொள்ளக்கூடாது. ஆதிக் கத்தோலிக்க போப்புக் களும், தற்காலத்தில் இந்த முறையில் நடந்துகொள்கிறவர்களும் அப்பத்தையும், கோப்பையையும் ஆத்துமாக்கள் கையாள அனுமதிப்பதில்லை. தாங்கள் மட்டுமே பரிசுத்தர்கள் போல் நடந்து ஆத்துமாக்களை பாவிகளாக அவர்கள் நடத்துகிறார்கள். தேவனின் திருச்சபையில் அதற்கு இடமிருக்கக்கூடாது.
- திருச்சபை அனுசரிக்கும்படியாக திருவிருந்து ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக அது ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக அதைப் பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக, திருவிருந்து விசுவாசிகளின் ஆவிக்குரிய நன்மைக்காக நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த நோக்கத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்படக்கூடாது. விசுவாசிகள் எப்போதும் திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும். அது அவர்களுடைய விசுவாச வளர்ச்சிக்கு அவசியம். தனிப்பட்டவிதத்தில் அவர்களிடம் குறைபாடுகள் இருந்தால் அந்தக் குறைபாடுகளுக்குக் கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டு மனந்திருந்தி திருவிருந்தில் கலந்துகொள்ள வேண்டும். திருவிருந்தை தவிர்ப்பது நமது வளர்ச்சிக்கு ஆகாது. வாழ்க்கையில் குறை இருந்தால் வேதம் வாசிப்பதை நாம் நிறுத்தி விடுவோமா? இல்லை, தொடர்ந்தும் வாசிப்போம். ஜெபம் செய்வதை நிறுத்திவிடுவோமா? இல்லை, தொடர்ந்தும் ஜெபிப்போம். அன்றாட மனந்திரும்புதலுக்காக கர்த்தர் நம்மை அழைத்திருப்பதால் அன்றாடம் நம் குறைகளை கர்த்தரிடம் ஜெபத்தில் கூறி மனந்திரும்பி வாழ வேண்டியதே நம்முடைய விசுவாசக் கடமை. அந்தக் கடமையில் ஒன்று திருவிருந்திலும் தவறாமல் கலந்துகொள்வது. ஆகவே, திருவிருந்தை நாம் தவிர்க்கக் கூடாது. செய்த பாவத்தில் இருந்து மனந்திரும்பும்படித்தான் ஆண்டவர் சொல்லுகிறாரே தவிர திருவிருந்து எடுப்பதை நிறுத்தும்படி ஓரிடத்திலாவது சொல்லியிருக்கிறாரா? எந்த இடத்திலும் சொல்லவில்லை. திருவிருந்து எடுக்க வரும்போது கூட நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, நிதானித்து நடந்து திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டுமென்றுதான் 1 கொரிந்தியர் 11 விளக்குகிறதே தவிர திருவிருந்தில் பங்குகொள்ளக்கூடாதென்று சொல்லவில்லை. ஆண்டவர் நம்மிடத்தில் கேட்பதும், எதிர்பார்ப்பதும் மனந்திரும்புதலை மட்டுந்தான். அவர் ஒருபோதும் எந்த இடத்திலும் திருவிருந்து எடுப்பதை நிறுத்தும்படி நம்மைக் கேட்கவும் இல்லை, வற்புறுத்தவும் இல்லை. 1 கொரி. 11:23-34 வரை யுள்ள வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் நாம் மனந்திரும்பு வதற்காகவும், மனந்திரும்பி திருவிருந்தில் ஒவ்வொரு தடவையும் கலந்துகொள்வ தற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எந்தத் திருச்சபைப் போதகரும் திருவிருந்தை ஆத்துமாக்களுக்கு கொடுக்காமல் இருக்க மேய்ப்பன் என்றவிதத்தில் அவருக்கு அதிகாரம் இல்லை. திருவிருந்து திருச்சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை கிறிஸ்து போதகர்களுக்குக் கொடுக்கவில்லை. போதகர்கள் தாம் நினைத்தவிதத்தில் மனம்போன போக்கில் திருவிருந்தை பயன்படுத்தக்கூடாது. சாட்சிகளோடு நிரூபிக்கக் கூடிய விதத்தில் மெய்யாகவே பெரிய பாவத்தில் எவரும் விழுந்திருந் தால் தவிர திருவிருந்தை நிறுத்திவைக்க வேதம் எந்தப் போதகருக்கும் உரிமை அளிக்கவில்லை. அப்படியே இறுதிக்கட்ட திருத்தும் நடவடிக்கையாக அதை நிறுத்த நேரும்போது சபை அங்கத்தவர்களுடன் கலந்து பேசி சபையாக அதைச் செய்ய வேண்டுமே தவிர தன்னிச்சையாக எந்தப் போதகனும் அதை எந்த விசுவாசிக்கும் கொடுக்க மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பது கத்தோலிக்கப் போப்புப் போல அதிகாரம் செலுத்துவதற்கு சமமாகும்.
தனிப்பட்ட விதத்தில் எந்த விசுவாசியும் அன்றாடம் தங்களுடைய வாழ்க்கையில் விடுகின்ற தவறுகளுக்கும், பாவங்களுக்கும் அவர்களே கர்த்தருக்கு முன் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய தவறு களையும் பாவங்களையும் பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்க்க லாம். பாவம் செய்துவிட முடியாத கிறிஸ்தவன் என்று ஒருவரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்கள் அவ்வாறாக தவறிழைக்கும்போது உடனடியாக தவறை உணர்ந்து கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் (1 யோ. 1:9). கிறிஸ்துவோடு தங்களுடைய ஐக்கியத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாகத்தான் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்தவனின் பரிசுத்த மாக்குதல் ஆவியின் கிரியையால் நிகழ்கிறது. இந்தவிதமாக ஒரு கிறிஸ்தவன் தவறிழைக்கின்றபோது அவன் சில வேளைகளில் போதகரின் உதவியை நாடலாம். அதில் தப்பில்லை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தப் போதகனும் அவனுக்கு திருவிருந்தை நிறுத்தி வைக்கக்கூடாது. அது அடிப்படையிலேயே தவறான காரியம். அந்தக் கிறிஸ்தவன் மனந்திருந்தி கர்த்தரோடு ஐக்கியத்தில் வர வழி செய்து தருவதே போதகனின் கடமை. தனிப்பட்ட விதத்தில் ஓர் ஆத்துமா தவறுவிடும்போதெல்லாம் அதை எப்படியாவது தெரிந்துகொண்டு அவனுக்குத் திருவிருந்து கொடுக்காமலிருப்பது போல் மோசமான செயலொன்றிருக்க முடியாது. இந்தவிதமாக ஆத்துமாக் களை பாம்புக் கண் கொண்டு சோதித்து வரும்படி எந்த மேய்ப்பருக்கும் கிறிஸ்து வழிகாட்டவில்லை. இதெல்லாம் சீர்திருத்தவாத காலத்துக்கு முன் பிருந்த கத்தோலிக்க வழிமுறைகளுக்கு மறுபடியும் இடங்கொடுப்பதில் போய் முடியும். பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் இந்த அநியாயங்களுக் கெல்லாம் வெடி வைத்து தகர்த்திருக்கிறது.
கர்த்தர் தன்னுடைய பெயரை இரண்டு காரியங்களோடு மட்டுந்தான் இணைத்திருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். ஒன்று ஓய்வுநாள். அது ஆண்டவருடைய நாள் என்று அழைக்கப்படுகிறது. அடுத்தது திருவிருந்து. அது ஆண்டவருடைய பந்தி என்று அழைக்கப்படுகிறது. இப்படி ஆண்டவ ருடைய பெயர் இந்த இரண்டோடும் இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமில்லாமலில்லை. இதன் மூலம் ஆண்டவர் இந்த இரு காரியங்களின் மீதும் நேரடியாக தனக்கிருக்கும் உரிமையையும், அதிகாரத்தையும் நமக்கு உணர்த்துகிறார். இந்தளவுக்கு தான் உரிமை கொண்டாடி ஆத்துமாக்களுடைய நன்மைக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் திருவிருந்தை பாவத்தில் பிறந்து மனந்திரும்பியிருக்கும் சபை அதிகாரிகள்/போதகர்கள் ஆத்துமாக்களுக்கு மறுப்ப தற்கு எந்தளவுக்கு ஆணவம்பிடித்தவர்களாக இருக்க வேண்டும்? திருவிருந்தை ஒருவருக்குக் கொடுக்க மறுப்பதும், அதில் பங்குகொள்ள விசுவாசிகளுக்கு தடை ஏற்படுத்துவதும் கொடூரமான செயல். சிலர் வேத போதனைகளை அறியாமல் இந்தத் தவறை செய்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. அப்படியான வர்கள் வேதத்தை வாசித்து திருவிருந்து பற்றிய தெளிவான போதனைகளை பெற்றுக்கொண்டு அதற்குரிய மரியாதையை சபையில் அளித்து நடந்துகொள்ள வேண்டும்.
- இறுதியாக திருவிருந்தைப் பற்றி ஏற்கனவே சுருக்கமாக சொல்லி யிருக்கிற ஒரு காரியத்தை விளக்க விரும்புகிறேன். திருவிருந்தை சபைகள் அனுசரிக்கும்படி கிறிஸ்து அதை சபைகளுக்கு தந்திருக்கிறார் என்று சொல்லி யிருக்கிறேன். இதை விசுவாச அறிக்கையின் 20ம் அதிகாரம் முதலாம் பத்தி ஆரம்பத்திலேயே விளக்குகிறது. அதாவது, வேதப்பூர்வமாக அங்கத்தவர்களையும், சபைத்தலைவர்களையும் கொண்டு அமைக்கப்பட்டதுதான் கர்த்தரைப் பொறுத்தவரையில் திருச்சபை. இந்த முறையான சபை அமைப்பு திருவிருந்தை முறையாகப் பயன்படுத்த அதற்கு காவலாக இருக்கிறது. சபை திருவிருந்தை அனுசரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்து அதை விசுவாசிகளாக இருந்து சபைக்கு மரியாதை அளித்து சபை வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்களுகே கொடுக்க வேண்டும். இன்றைக்கு சபைக்கு எந்த மரியாதையும் அளிக்காமல், எந்த சபையிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், சபை வாழ்க்கையை முறையாக அனுசரிக்காமல் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்துகொண் டிருப்பவர்கள் அநேகர். அவர்களில் பலர் அறியாமையால் அப்படி வாழ் கிறார்கள். வேறு சிலர் ஆணவத்தினாலும், யாருக்கும் கட்டுப்பட்டு ஒழுங் கோடு வாழும் இதயம் இல்லாததாலும் அப்படி இருக்கிறார்கள். இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அறிவித்துக் கொண்டாலும் கிறிஸ்து போதிக்கும் சபைக்கு மதிப்பளித்து அதில் தங்களை இணைத்துக் கொண்டு வாழா விட்டால் சபை நிச்சயமாக அவர்களுக்குத் திருவிருந்து கொடுப்பதில் தயக்கம் காட்டுவதில் ஆச்சரியமில்லை. விசுவாசிகள் வேதத்திற்கு கட்டுப்பட்டு சபையில் வாழ்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சபை வாழ்க்கையின் ஒருபகுதியாகத்தான் திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும். எனவே, எந்தத் திருச்சபையும் தங்களுடைய அங்கத்தவர்களுக்கும், சபைகளில் அங்கத்தவர் களாக இருந்து நம் சபைகளில் சில அவசியமான சந்தர்ப்பங்களில் ஆராதனை யில் கலந்துகொள்கிறவர்களுக்கும் திருவிருந்து கொடுப்பதே நல்லது. இதன் மூலம் திருச்சபையின் திருநியமமான திருவிருந்தை முறையாக விசுவாசிகள் மட்டும் எடுக்கும்படியாக பார்த்துக்கொள்ள முடிகிறது.
இதை வாசிக்கும்போது, சபையில் சேராவிட்டால் நான் கிறிஸ்தவன் இல்லையா? என்று எவராவது கேள்வி எழுப்பலாம். ஒருவர் மெய்க் கிறிஸ்தவர் என்பதை அடையாளம் காட்டத்தான் அவர் எப்போதும் சபை வாழ்க்கையை நாடிப்போவார். கிறிஸ்துவின் போதனைகளில் ஒன்று தவறாமல் பின்பற்றும் இருதயத்தைக் கொண்டிருப்பவர்தான் கிறிஸ்தவர். சபை வாழ்க்கையை நாடிப்போகும் இருதயமில்லாமலும், சபையை நிராகரித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற எவரையாவது நம்மால் புதிய ஏற்பாட்டில் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. எனவே, நீங்கள் செய்கின்ற காரியத்தை, வாழ்கின்ற வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொண்டிராமல் வேதம் திருச்சபையின் அவசியத்தைப் பற்றி தெளிவாக கொடுக்கும் போதனைகளை ஆராய்ந்து பார்த்து உங்கள் நடவடிக்கைகளைத் திருத்திக்கொள்ளுங்கள். சபையில் வாழ்ந்து, சபையாரோடு கூடிவந்து எடுக்க வேண்டியதே திருவிருந்து. வேறுவிதத்தில் திருவிருந்தை அனுசரிக்க கிறிஸ்து கட்டளையிடவில்லை.
வேத அதிகாரத்துக்குக் கட்டுப்படாமல், எதேச்சாதிகாரமாக நடந்து, ஆத்துமாக்களை துன்பப்படுத்தும் போதகர்களைக் கொண்டிருக்கிற சபைகளில் திருவிருந்து எடுக்கலாமா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி யான சபைகள் குழப்பமுள்ளவையாகத்தான் எனக்குத் தெரிகின்றது. அதனால் தான் பவுல் கொரிந்து சபையில் திருவிருந்தின்போது நடக்கும் கோளாறுகளை கடுமையாக சாடுகிறார். மெய்யான ஐக்கியத்துக்கு அவசியமானவைகளை செய்து திருவிருந்தை முறையாக அனுசரிக்கும்படி ஆலோசனை கூறுகிறார். தவறான நிலையில் தொடர்ந்து வாழ்ந்தால் உங்கள் மீது நீங்களே ஆக்கினையை வரவழைத்துக்கொள்ளுகிறீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார். பவுலின் வார்த்தைகளின்படி பார்த்தால் தவறான சபைகளில் இருந்து ஆத்துமாக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. வேதத்திற்கு கட்டுப்படு கின்ற தலைமையையும், அங்கத்தவர்களையும் கொண்டு ஒருவருக்கொருவர் அன்பையும், ஐக்கியத்தையும் அனுபவித்து வாழ்ந்து வருவதே கர்த்தரின் சபை. அது இல்லாமல் இருக்கின்ற இடத்தில் மனந்திரும்புதல் ஏற்பட்டு குற்றங்குறைகள் தொடராமல் உடனடியாக அவைகள் நீக்கப்பட வேண்டும். தொடர்ந்து தவறான போக்கில் போனால் அது சபை என்ற வார்த்தைக்குரிய இலக்கணங்களை இழந்து வெகு சீக்கிரமே வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை யாக மாறிவிடும். அத்தகைய இடங்களில் தொடர்ந்திருந்து திருவிருந்து எடுப்பது எந்த ஆத்துமாவுக்கும் ஆத்தும வளர்ச்சியை ஏற்படுத்தாது. சபையென்ற பெயரில் கூடிவரும் அத்தகைய அமைப்புகள் திருந்துகிறவரை திருவிருந்தைக் கொடுக்கவோ, அதில் பங்குகொள்ளவோ தகுதியில்லாதவை.
வேண்டும் இன்று விழிப்புணர்வு!
இந்த ஆக்கத்தை நான் பத்து வருடங்களுக்கு முன்பு எழுதினேன். பத்து வருடங்கள் என்பது சாதாரணமானதல்ல. பத்து வருடங்கள் ஆகிவிட்டதே, ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று எண்ணிப் பார்த்தால் அத்தனை வருடங்கள் கடந்து விட்டாலும் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட வேண்டிய ஆலோசனைகளாகத்தான் இவை இருக்கின்றன. பழைய, புதிய வாசகர்களின் பயன் கருதி இந்த ஆக்கத்தை பத்திரிகை பதினைந்தாவது வருடத்தை முடித்திருக்கும் இந்த காலப்பகுதியில் மறுபடியும் வெளியிடத் தீர்மானித்தேன். வாசியுங்கள், கருத்தோடு சிந்தியுங்கள், காலத்தை உணர்ந்து கடமைப் பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நன்றி! & ஆசிரியர்
இப்பத்திரிகையின் பெரும் நோக்கங்களில் ஒன்று திருச்சபைப் போதகர்கள் தேவமனிதர்களாக இருந்து தங்கள் ஊழியத்தை நடத்த அவர்களுக்கு முடிந்ததைச் செய்வது. திருச்சபையும் ஊழியமும் சம்பந்தமான பல ஆக்கங்கள் ஏற்கனவே இப்பத்திரிகையில் வந்துள்ளதை வாசகர்கள் அறிவர். இயேசு கிறிஸ்து தன்னுடைய திருச்சபை மூலமாகவே இவ்வுலகில் தனது பெரும் நோக்கங்களைத் தொடர்ந்து நிறை வேற்றி வருகிறார் என்ற வேதபோதனையில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் இப்பத்திரிகை, கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு சபைகளால் அங்கீகரிக்கப்பட்டு போதக ஊழியத்தை நடத்திவரும் போதகர்களின் வாழ்க்கை, ஊழியம் பற்றி அதிகம் அக்கறை கொண்டு எழுதுவதில் ஆச்சரியமில்லை.
போதக ஊழியம் பற்றி சீர்திருத்தவாதிகள் அநேக ஆக்கங்களை வெளியிட் டுள்ளார்கள். அவர்களைப்போல் சபை வரலாற்றில் இதுபற்றி ஆழமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் எழுதியவர்கள் மிகக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். போதக இறையியல் (Pastoral Theology) என்று எடுத்துக் கொண் டால் அதைப்பற்றி எழுதியுள்ள தொமஸ் மர்பி, டபிள்யூ. ஜீ. டி. செட், பெட்ரிக் பெயர்பேன், ரிச்சட் பெக்ஸ்டர், சார்ள்ஸ் பிரிட்ஜஸ், ஆர். எல். டெப்னி, அலெக்சான்டர் போன்ற பல சீர்திருத்தவாத போதகர்களின் பெயர்கள் என் நினைவலைகளில் தவழ்கின்றன. இவர்களைத் தவிர ஸ்பர்ஜனும், அவருக்குப்பின் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மார்டின் லாயிட் ஜோன்ஸ்ம் என் நினைவுக்கு வருகின்றார்கள்.
வரலாற்றில் சீர்திருத்தவாதம் போதக ஊழியத்திற்கு பெரும் நன்மை புரிந்ததில் முன்னிற்பதற்குக் காரணம் என்ன? அதற்கான பல காரணங்கள் இருந்தபோதும் முக்கியமான இரு காரணங்களைக் குறிப்பிட வேண்டும் (1) சீர்திருத்தவாதம் வேதம் போதிக்கும் திருச்சபை ஊழியத்தில் தீவிர நம்பிக்கை வைத்துள்ளது. (2) போதக ஊழியம் சிறப்பாக அமைந்தாலொழிய சபையும், சபைமக்களும் ஒருபோதும் வளரமுடியாதென்பதில் சீர்திருத்தவாதம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
இக்காரணங்களே சீர்திருத்தவாத போதகர்களை திருச்சபையோடு தொடர்புடைய போதக ஊழியம் குறித்து அதிகம் பேசவும் எழுதவும் வைத்தது. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் ஊழியங்களிலும், சபையோடு உறவில்லாத சுயாதீன நிறுவன ஊழியங்களிலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு சபை பற்றிய வேதப்பூர்வமான ஞானமில்லாததும், போதக ஊழியத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்து தங்களுடைய சுயநலனுக்காகப் பயன்படுத்திக்கொள்வதுமே. இன்று போதக ஊழியம் உயிர்பெற்று சபை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டிய ஒரு சூழ்நிலை தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சீர்திருத்தம் ஏற்படவேண்டுமெனில் அதற்கு முன்னோடியாக சில காரியங்கள் நிகழ்ந்தேயாக வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
முதலில் கிறிஸ்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு தோன்ற வேண்டும். வேதத்தின் அடிப்படையில் அமைந்த போதனைகளை மட்டுமே காது கொடுத்து கேட்பேன். அவை மட்டுமே என் ஆத்மீக வாழ்க்கை வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டு நான் வளர உதவும் என்ற வைராக்கியம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட வேண்டும். கண்ணற்ற குருடர்கள் போலவும், காதற்ற செவிடர்கள் போலவும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வரும் நிலை மாற வேண்டும். உணர்ச்சிக்குத் தூபமிட்டு, போலியான வாக்குறுதிகளைத் தரும் பிரசங்கிகளின் பக்கமே தலைவைப்பதில்லை என்ற மனஉறுதி ஏற்பட வேண்டும். சரீர சுகத்தையும், வாழ்க்கை வசதிகளையும் பெற்றுக்கொள்ள மட்டுமே கிறிஸ்தவ சுவிசேஷம் என்ற போக்கில் செயல்பட்டுவரும் கூட்டத்தாரின் கையிலகப்பட்டு ஆவிக்குத் தீங்கு தேடிக்கொள்ள மாட்டோம் என்று தீர்மானம் எடுக்க வேண்டும். வேதம் புரியவில்லை என்று சாக்குப் போக்குச் சொல்லி, ஆட்டு மந்தை போல் எதையும் சத்தியம் என்று நம்பி போலிகளின் பின்னால் திரியும் வழக்கத்தைக் கிறிஸ்தவர்கள் கைவிட வேண்டும். கிறிஸ்தவப் பத்திரிகைகள் என்ற பெயரில் திரியும் போலிப் பத்திரிகைகளைத் திரும்பியும் பார்க்கக் கூடாது. பணம், பணம் என்று பிணமாக அலையும் ஊழியங்களின் பக்கம் காலெடுத்தும் வைக்கக்கூடாது. தீர ஆராய்ந்து படித்துப் போதிக்கும் போதகர்களைக் கொண்டமைந்து, வேதப்பூர்வமான போதனைகளை அளிக்கும் சபைகளுக்கு மட்டும் தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். போதகர்கள் என்ற போர்வைக்குள் மறைந்திருந்து போலித்தனம் பண்ணாமல் பரிசுத்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இலக்கணமாக இருந்து தாழ்மையோடு வாழ்ந்து வரும் போதகர்களுடைய ஆத்தும விசாரிப்புக்கு மட்டுமே வாழ்க்கையில் இடங் கொடுக்க வேண்டும். சீர்திருத்தவாதம் ஏற்பட்ட பதினாறாம் நூற்றாண்டு மக்கள் சத்தியத்திற்காகத் தம் உயிரையும் பணயம் வைக்கத் தீர்மானித்தனர். வேதத்தைப் படிக்கக் கூடாது என்ற கட்டளை இருந்தபோதும் அதற்குக் கட்டுப்பட மறுத்து வேதத்தைப் படித்து அதில் இன்பம் கண்டனர். போலிகளை அடையாளம் கண்டுகொள்ளும் பக்குவத்தையும் பெற்றனர். இதனை வேதமே அவர்களுக்குத் தந்தது. இந்நிலை முதலில் நம்மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும் சபைகளையும், சமயக் குழுக்களையும், பிரசங்கிகளையும் திட்டிக்கொண்டிருப்பதால் பயனில்லை. இது செயல்பட வேண்டிய நேரம், சிந்திக்க மறுப்பவர்களுக்கும், ஆடல்கள், பாடல்கள் என்றழைத்து உணர்வலைகளுக்குத் தீனி தேடித் திரிபவர்களுக்கும், சுகமளிக்கும் அற்புதங்களே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கும் சீர்திருத்தம் தேவையில்லை. கிறிஸ்தவர்களின் சிந்தனைப் போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட அவர்கள் சத்தியத்தை மட்டும் தேடி அலை வார்களானால் சீர்திருத்தம் எழப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
போதக ஊழியத்தைப்பற்றி திருச்சபைகள் வேதப்பூர்வமான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
(1) போதக ஊழியம் சிறப்பாக அமைய இன்று ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியுள்ள, பணம் மற்றும் பதவி ஆசையில்லாத, தகுதிக்கு ஏற்றவிதத்தில் வாழத்தெரிந்த போதகர்கள் தேவை. அத்தகையவர்களை மட்டுமே போதக ஊழியத்திற்கு தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் சபை எப்போதும் முன்னிற்க வேண்டும். சபை மக்களின் தரத்தை மீறி வாழ முயற்சிக்கும் எந்த ஊழியனையும் சபை நிராகரிக்க வேண்டும். முழு நேர ஊழியவசதி இல்லாத சபையின் போதகர்கள் பகுதிநேர வேலை செய்வது பாவம் அல்ல. அதுவே வேதப்பூர்வமானதும், நியாயமானதும்கூட; ஊரெல்லாம் ஊழியத்திற்காகப் பிச்சை எடுப்பதைவிட இது மேலானது. போதகராக இருந்து பகுதிநேர வேலை செய்வதை பாவமாகக் கருதுகின்ற ஒரு தவறான கலாச்சாரம் இந்திய கிறிஸ்தவர்கள் மத்தியில் அநியாயத்துக்கு இருந்து வருகிறது. வேதத்தைப் படித்து ஆராய்ந்து பார்க்காமல் இந்த சென்டிமென்டல் எண்ணத்தோடு பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
(2) புதுக்கிறிஸ்தவர்களையும், அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்களையும், வேதஞானமில்லாதவர்களையும் போதக ஊழியத்திற்குத் தெரிவு செய்யக் கூடாது. இதைவிடப் பெரிய ஆபத்து சபைகளுக்கு ஏற்பட முடியாது. (ஒருவர் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் ஊழியத்துக்குரிய இலக்கணங்களை வாழ்க்கையில் கொண்டிருக்கலாம். வயதை மட்டும் வைத்து ஒருவரை புறக்கணிப்பது தவறு). போதகர்கள் இல்லையே என்ற ஆதங்கத்தாலும், புது ஊழியங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசரத்தாலும் பல சபைகள் தகுதியில்லாதவர்களை ஊழியத்தில் இணைத்துவிடுகின்றன. தகுதி இல்லாத வர்களைக்கொண்டு சபை ஆரம்பிப்பது தகாது.
(3) படித்த (அனுபவமுள்ள, முதிர்ந்த) கிறிஸ்தவ இளைஞர்களைப் போதக ஊழியத்தைக் குறித்து சிந்திக்குமாறு சபைகள் வழிநடத்த வேண்டும். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த கிறிஸ்தவர்களை இன்று போதகர்களாகப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. மருத்துவம், கணிப்பொறி என்று போய் கட்டுக்கட்டாய்க் காசு சேர்ப்பதே பல இளைஞர்களின் போக்காகிவிடுகிறது. படித்த, திறமைசாலிகளான, நல்ல கிறிஸ்தவ இளைஞர்கள் ஏன் இன்று கிறிஸ்தவ ஊழியத்தை எண்ணிப் பார்க்கக்கூடாது? பட்டங்கள் பெற்ற லூதரையும், ஜோன் கல்வினையும், ஜோன் ஓவனையும் நமது கிறிஸ்தவ இளைஞர்களுக்கு நினைவுறுத்தி போதக ஊழியத்தைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசியின் வைத்தியராக இருக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளிவிட்டு உலகாளும் நம்மரசராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்ய வந்த நம் காலத்து மார்டின் லொயிட் ஜோன்ஸை எண்ணிப் பார்க்க வேண்டும். அம்மனிதரின் படிப்பும், சிந்தனை வளர்ச்சியும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை உரமிட்டு வளர்த்தது.
(4) இறையியல் கல்லூரிக்குப்போனால்தான் போதகனாக முடியும் என்ற மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இறையியல் கல்லூரி ஒருவனைப் போதகனாக்கும் என்று வேதம் போதிக்கவில்லை. போதகர்களை சபையில் தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சபை அங்கீகரித்தவர்களுக்கு வேதப்பூர்வமான இறையியல் கல்லூரிகள் துணை செய்யலாம். இறையியல் கல்லூரிக்கு அவசியம் போகத்தான் வேண்டும் என்பது வேதத்தில் இல்லை. இன்று பல சபைகள் போதக ஊழியத்திற்கு வர வேண்டியவர்களை சபையில் தேடிப்பார்க்காமல், சபைக்கு வெளியில் யார் யார் இறையியல் கல்லூரிக்குப் போய்வந்திருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒருவர் இறையியல் கல்லூரியில் வேதத்தைத்தான் படித்துவிட்டு வந்திருக்கிறாரா என்றுகூட ஆராய்வதில்லை. இதைப்பற்றிக் கேட்டால், வெகு காலமாக இப்படித் தான் நடந்துவருகிறது; இதை மாற்ற முடியாது என்பார்கள். இத்தகைய எண்ணங்கள் இருக்கும்வரை சீர்திருத்தம் சுட்டுப் போட்டாலும் வராது.
பக்தியும், பண்புமுள்ள போதகர்கள் இன்று சபைகளுக்குத் தேவை.
“உன்னைக்குறித்தும், உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார் (1 தீமோ. 4:16). உபதேசத்தைக்குறித்து பின்பு பார்ப்போம். இப்போது “உன்னைக்குறித்து” என்ற வார்த்தையைக் கவனிப்போம். உன்னைக்குறித்து என்று பவுல் கூறுவது போதகனின் சொந்த பக்தியையே குறிக்கிறது. போதக ஊழியத்திற்கு வருபவர்கள் உலகத்தில் தொழில் செய்பவர்களைப் போல் நடந்து கொள்ளக்கூடாது. இன்று அநேக போதகர்கள் இவ்விதமாகவே நடந்துகொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி, சினிமா நடிகன் கவர்ச்சிக்காகப் போட்டுக்கொள்ளும் அலங்காரத்தைப் போலவே இருக்கின்றது. அவர்களுடைய பேச்சு உள்ளத்திலிருந்து வருவதா யில்லை. பெனி ஹின் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்திருப்பவர்களுக்கு நான் கூறுவது புரியும். பேச்சில் சுவை இருந்தாலும் அதில் சத்தியமில்லை. சொல்லில் அலங்காரம் இருந்தாலும் அதில் சுத்தமிருக்காது, அறிவிருக்காது, உண்மையுமிருக்காது. இத்தகைய மனிதர்கள் போதக ஊழியத்தை ஒரு தொழி லாக மட்டுமே கருதுகிறார்கள். இது போதக ஊழியத்தையும், திருச்சபையை யும் இன்று பிடித்திருக்கும் ஒரு சாபக்கேடு.
தான் மிகுந்த மனத்தாழ்மையுடன் கர்த்தருக்கு சேவை செய்ததாக பவுல் எபேசிய மூப்பர்களைப் பார்த்துக் கூறினார் (அப்போஸ். 20:18-35). இந்த மனத்தாழ்மை இன்று போதக ஊழியத்திலிருக்கும் அநேகருக்கு இல்லாம லிருப்பது வேதனை தருகிறது. போதிப்பவனுக்கு இருக்கும் அதிகாரமும், பதவி மேன்மையும், பாராட்டுதல்களும் சுலபமாகவே அவன் தலையில் ஏறிவிடும் என்ற ஆபத்தின் காரணமாகத்தான் வேதம் புதிய கிறிஸ்தவர்களும், முதிர்ச்சி இல்லாதவர்களும் அவ்வூழியத்திற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று வற்புறுத்துகிறது (1 தீமோ. 3). தீமோத்தேயு இளைஞனாக இருந்தாலும் அவனுக்கு மனத்தாழ்மை இருந்தது. ஆத்துமாக்களை அசிங்கப்படுத்தாமல் அவர்களை மெய்யான அன்போடு நேசிக்கும் இருதயம் இருந்தது. ஆத்து மாக்களை அடக்கியாளும் இருதயத்தைக் கொண்டிராமல் அவர்களுக்குப் பணிவோடு பணிபுரியும் அன்பு அவனுக்கு இருந்தது. ஆனால், வயது போயிருந் தும், போதக ஊழியத்தில் பல ஆண்டுகள் இருந்தும் மனத்தாழ்மை இல்லாமல் நடந்து சபை மக்களை உதாசீனப்படுத்தி போதக ஊழியத்திற்கும், கிறிஸ்து விற்கும் இழுக்குத் தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள் அநேகர் இன்று. வேதம் போதிக்கும் மனத்தாழ்மை இன்று போதகர்களுக்கு அவசியம்.
போதகன் தன் சொந்த வாழ்க்கையைக் குறித்து எப்போதும் திருந்து கிறவனாக இருக்க வேண்டும். “குணப்படாத பிரசங்கி” என்ற வார்த்தைகள் ஒன்றுக்கொன்று முரணானவை என்று ஸ்பர்ஜன் கூறுகிறார். ஏனெனில், போதகன் குணமடைவதிலேயே (திருந்துவதிலேயே) எப்போதும் குறியா யிருப்பான். திருந்தாத போதகனால் மக்களுக்கு ஆபத்து. அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு அவனால் எந்த நன்மையுமில்லை. அத்தகையோரைப் பற்றி ஸ்பர்ஜன், “அவன் உதவாத வேலையாள்; தான் நடந்திராத பாதையில் பிரயாணிகளை நடத்தும் வழிகாட்டி; திசை தெரியாத மாலுமி; மூடனா யிருந்தும் பாடம் போதிப்பவன்; மழையில்லாத மேகம்; இலையிருந்தும், கனியற்ற பாழ்மரம்” என்று வர்ணித்திருக்கிறார்.
போதகனுக்கு மெய்யான பக்தி மட்டுமல்ல அவனுக்கு பலமான பக்தியும் தேவை என்று ஸ்பர்ஜன் கூறினார். “தேவபக்தியாகிய அவனுடைய ஜீவ நாடி ஒழுங்காக துடித்தல் வேண்டும். அவனது விசுவாசக்கண் தெளிவாக இருத்தல் வேண்டும். தீர்மானம் என்ற அவன் பாதம் உறுதியாக நிற்றல் வேண்டும். அவனது முழு உள்ளமும் தூய அறிவுடையதாயிருக்க வேண்டும்” என்று ஸ்பர்ஜன் தொடர்ந்து கூறுகிறார். அநேகர் திருச்சபையில் சாதாரண அங்கத்தவர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்களாயிருந்தபோதும் திருச்சபை அதிகாரிகளாக இருக்கத் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுடைய வாழ்க்கை அதற்குப் பொருந்திவராது. இதனாலேயே போதகன் மிகவும் குணசீலனாக இருக்க வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது.
நேரம் தவறாமை, சொன்ன சொல்லைக் காப்பாற்றல், உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாமல் உண்மையே பேசுதல், ஒளிவு மறைவின்றி நடத்தல் (transparent) ஆகிய குணங்கள் போதகனுக்கிருக்க வேண்டிய அவசியமான அடையாளங்கள். இவையெல்லாம் இல்லாமல் ஒருவன் போதக ஊழியத்தை நினைத்தும் பார்க்கக்கூடாது. மெய்யான போதகனிடம் துணிகரமான பாவத்திற்கு இடமிருக்காது. “துணிகரமான பாவம் ஒருவனில் காணப்பட்டால் பின்னால் அவன் எவ்வளவு தூரம் அதற்காக மன வருத்தப்பட்டாலும் போதகராக இருக்க வேண்டிய குணங்கள் அவனிடம் ஆரம்பத்திலிருந்தே இல்லை என்பது வெளிப்படை” என்று ஸ்பர்ஜன் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று துணிகரமாக பெண்களுடன் உறவாடிவிட்டு கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்று மறுபடியும் பிரசங்கிக்கப்போகும் மனிதர்கள் மெய்ப் போதகர்கள் அல்ல. இதைக்கண்டித்து அத்தகையோரைப் பிரசங்க மேடை பக்கம் வரவிடாமல் செய்யும் நாத்தானுக்கிருந்த தைரியமோ (2 சாமு. 12) மனோபாவமோ இன்று திருச்சபைகளிடமும் இல்லை. ஒழுக்கத்திற்கு இடம் கொடுக்காத கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது. நமது கலாச்சாரமும், பண்பாடும் அப்படி, கொஞ்சம் பொறுத்துத்தான் போக வேண்டும் என்ற பேச்சுக்கும், சிந்தனைக்கும் வேதப்பூர்வமான சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் இடமில்லை. கர்த்தர் நமது கலாச்சாரத்திற்கேற்ப வேதத்தை மாற்றச்சொல்லவில்லை. வேதத்திற்கேற்ப கலாச்சாரம் மாறி அமைய வேண்டும்.
போதகர்களின் வாழ்க்கைக்கு இன்று பெரும் எதிரி பணமே. பணம், பணமென்று பதறி வீண்போய்க் கொண்டிருக்கும் அநேக ஊழியர்களை தமிழ்க் கிறிஸ்தவ உலகம் இன்று சகிக்க வேண்டிய நிலையிலிருக்கின்றது. கிறிஸ்தவ பத்திரிகைகளைத் திறந்தாலோ, ஜெப இதழ்களைத் திறந்தாலோ, பிரசங்கத்தைக் கேட்டாலோ, தனிப்பட்டவிதத்தில் அனுப்பப்படும் கடிதங்களைப் பார்த்தாலோ அங்கே பணத்தேவையைப் பற்றித்தான் பார்க்க முடிகின்றது. இந்நிலை மாற வேண்டும். கர்த்தரை நம்பி, கைகளைப் பயன் படுத்தி உழைத்துச் சேர்த்த பணத்தில் சபை நடத்திய கேரி போன்ற மிஷனரிகள் இன்று எங்கே! கொல்லிமலையில் கொல்லும் மலேரியாக் கொசுக்களுக்குத் தன் உயிரைத் தந்து ஊழியம் செய்த பிராண்ட் போன்ற மனிதர்கள் இன்று ஏன் குறைவு? திருச்சபை ஊழியம் பணமில்லாமல் நடப்பது கஷ்டம் தான். ஆனால், பணத்தைப் பற்றிப் பேசுமளவுக்கு வேதப்பூர்வமான சீர்திருத்தத்தைப் பற்றி அநேகர் சிந்திக்க மறுப்பது ஏன்? சிந்தித்துப்பாருங்கள்!
போதக ஊழியத்தில் அக்கறையுள்ளவர்கள் இன்று சபைகளுக்குத் தேவை
பவுல் எபேசியாவின் மூப்பர்களைப்பார்த்து உங்களைக் குறித்தும், ஊழியத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று அறிவுரை செய்தார். உங்களுக்குள்ளேயே ஓநாய்கள் தோன்றிவிடலாம் என்றும் எச்சரிக்கை செய்தார் (அப். 20). பவுல் தீமோத்தேயுவைப் பார்த்து, உன் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு என்று கூறியுள்ளார். வேதத்தைப் படிப்பதிலும், அதைப் போதிப்பதிலும் போதகர்கள் அதிக நாட்டம் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடுடையவர்களே கஷ்டப்பட்டுப் படிப்பார்கள். சபையார் வளர வேண்டுமானால் படிக்க வேண்டும், படித்தால்தான் போதிக்க முடியும் என்ற வாஞ்சையை மனத்தாழ்மை மட்டுமே ஒருவரில் ஏற்படுத்த முடியும். “எத்தனையோ வேலை இருக்கும்போது படிப்பதாவது” என்ற எண்ணம் இறுமாப்பிற்கு அடையாளம். நமது பாவங்களில் மோசமானது இறுமாப்பு என்று ரிச்சட் பெக்ஸ்டர் கூறியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க சீர்திருத்தப் போதகரான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் ஒவ்வொரு நாளும் பதின்மூன்று மணி நேரத்தைச் செலவிட்டு வேதத்தைப் படித்தார். கஷ்டப்பட்டு படித்துப் போதிப்பது அவசியமில்லை என்று எண்ணுபவர்கள் ஸ்பர்ஜனின் அறிவுரைகளை வாசிக்க வேண்டும் (ஸ்பர்ஜனின் அறிவுரைகள், சுவிசேஷ ஊழியம் நூல் நிலையம், சென்னை, பக்கங்கள் 64-133). முழுநேர ஊழியம் என்று வந்துவிட்டு போதனைகளைத் தயார் செய்வதில் நேரத்தைச் செலவிடாமல் ஊரைச் சுற்றுபவர்களால் சபைக்கு நன்மை இல்லை. உடலை வருத்திப் பாடுபட்டு பிரசங்கத்தைத் தயாரிக்காமல் இனிப் பிரசங்க மேடைக்கே போவதில்லை என்று கர்த்தருக்கு முன் நாம் வாக்குறுதி எடுக்க வேண்டும். எத்தனைபேரை இயேசுவுக்குள் கொண்டு வந்திருக்கிறோம், எத்தனை ஊரில் ஊழியங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பட்டியல் போட்டுக் காட்டும் பத்தாம் பசலிக்கூட்டத்தோடு சேர்ந்து விடாமல் கர்த்தர் கொடுத்திருக்கும் கொஞ்ச ஆத்துமாக்களின் வளர்ச்சிக்கு வேத உரமிட்டு வளர்க்கும் மேலான ஊழியத்தில் ஈடுபடவேண்டும். சீர்திருத்தவாத காலப் போதகர்கள் தம் மக்களுக்கு வினா விடை முறையிலமைந்த கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் போதித்து, அவர்களை வளர்த்தெடுத்தனர். இன்று அக்கோட்பாடுகள் பற்றி எந்தவித அறிவோ, அவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் சிரத்தையோ இல்லாமல் பிரசங்கம் என்ற பெயரில் எதை எதையோ பேசிப் போதகர்கள் காலத்தைக் கழிப்பது எத்தனை பெரிய அக்கிரமம். வேத போதனைகளைத் தயார் செய்வதற்கு நேரத்தைக் கொடுக்க மறுப்பது மருத்துவன் நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தில் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
மேற்குறிப்பிட்டவற்றில் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் இன்று விழிப்புணர்வு தோன்றுமானால் நிச்சயம் நாம் சீர்திருத்தப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்று தான் அர்த்தம். அக்காலமும் விடியுமா?
பிரியாவிடை பிரசங்கங்கள் -4-
அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின் மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தம் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி.
- ஆசிரியர்.
சபையின் ஊழியர்கள், ஊழியங்கள்
நான் ஒரு வசனத்தை வாசிக்கிறேன் கவனியுங்கள், “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்” (வெளி. 2:25). கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தியத்தீரா சபைக்குக் கூறின இந்த செய்தியை அடிப் படையாக வைத்துதான் நான் உங்களுக்கு சில புத்திமதிகளை சொல்லிக் கொண்டு வருகிறேன். உங்களுடைய உடன் மேய்ப்பனாக 46 ஆண்டுகள் உங்கள் மத்தியில் பணியாற்றி, இப்போது பிரிந்து செல்லும் முன்னதாக பிரிவு உபதேசமாக நான் இவைகளை சொல்லிக் கொண்டு வருகிறேன். நான் இவ்விடத்திலிருந்து பிரிந்து சென்றாலும் எதிர்காலத்தில் உங்கள் மத்தியிலே அவ்வப்போது விருந்தினராக (Guest Speaker) வந்து உபதேசிக்கவும் செய்வேன். பிரிவு உபதேசத்தில் நான் எந்தவொரு குறிப்பிட்ட காரியத்தின் பேரிலும் உபதேசம் செய்யவில்லை. தனிப்பட்ட விசுவாசியும் சபையும் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான காரியங்களை பொதுவாக கூறுகிறேன். இதுவரை கூறின காரியங்களை சற்று நினைவுபடுத்திவிட்டு தொடர விரும்புகிறேன். முதலாவதாக நான் கூறிய அடிப்படையான உபதேசம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடும் அன்போடும் உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாயிருங்கள். “உங்களுக்குள்ளதை அவர் வரும்வரையில் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்”. இதன் அடிப்படையில் நான் கூறின நடைமுறைப் பயிற்சி: சபை இலக்கணத்தை விட்டுவிடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள். இதில் என்னென்ன அடங்கியுள்ளது என்று அது சம்பந்தமாக நான் ஏழு காரியங்களைக் கூறவிருக்கிறேன். அதில் 4 காரியங்களை ஏற்கனவே கூறி விட்டேன். அவை:
- இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்குள்ள பங்கைக் குறித்து நீங்கள் அறிந்திருப்பதை விடாமல் பற்றிக்கொண்டு அதை செயல்படுத்துவதில் கருத்தோடு இருங்கள். சபைதான் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. கிறிஸ்து, சபை என்கிறதான ஒரே அமைப்பை, நிறுவனத்தை ஏற்படுத்துவதில் மட்டுமே உறுதியாக இருக்கிறார். அவர் கட்டுகின்ற அந்த நிறுவனத்தை நரகத்தின் வாசல்கள் மேற்கொள்ளுவதில்லை.
- சத்தியத்தை துல்லியமாகவும், ஒரேவிதமாகவும் யாவரும் விளங்கிக் கொள்வது சபையின் வாழ்க்கைக்கும் அதன் ஊழியத்துக்கும் மிகவும் அவசியமானது. அதைக் குறித்த உறுதியையும் செயல்படுத்தும் திறனையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். சபையே சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. எபேசியர் 2:20ன் பிரகாரம் சபையானது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டதாயிருக்கிறது. அந்த தனிப்பட்ட நபர்களின் மீதல்ல, அவர்கள் கூறின உபதேசங்களின் மீது கட்டப்பட்டுக்கொண்டுவருகிறது. இயேசுகிறிஸ்துவாகிய நபரின் மீதும் அவருடைய உபதேசங்களின் மீதும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிற சபைக்கு இயேசுகிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
- சபை அங்கத்துவ முறைகளில், சபை நியமித்திருக்கும் கோட்பாடுகளை விட்டுவிடாமல் அதில் உறுதியாய் இருங்கள். சபைக்கு வருகிறவர்களையெல்லாம் சபையாராக அங்கீகரித்துவிடுவது சரியான முறையல்ல. சபையின் கதவுகள் எல்லாருக்குமாக திறந்திருக்கலாம். ஆனால் இரட்சிப்பின் விசுவாசத்தை உடையவர்களை இனம் கண்டு, சபை அங்கத்தினர்களாக அங்கீகரித்து, அவர்கள் தொடர்ந்து அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42ன் பிரகாரம் அப்போஸ்தல உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலும், ஜெபத்திலும் உறுதியாகத் தரித்திருக்கும்படியாக எதிர்பார்க்க வேண்டும். சபையின் இவ்விதமான வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து தரித்திருக்க செய்ய வேண்டும்.
சபையின் அங்கத்துவ முறைகளை விடாமல் இருப்பதும், அங்கத்தினரின் சபை வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதையும் தவிர்த்து, இன்னொரு காரியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சபையின் விசுவாசி ஒருவன் தொடர்ந்து துணிகரமாக தனது பாவத்தை செய்து அதில் தொடரு வானெனில், அவனை சபையில் இருந்து விலக்கி வைக்கத் தயங்கக்கூடாது. மத்தேயு 18:15 முதல் உள்ள வசனங்கள் இதைத் தெளிவாக விளக்குகிறது. பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்திலும் (1 கொரி. 5) இதை வலியுறுத்தியிருக்கிறார்.
- ஆராதனையானது, கடவுளை மையமாகக் கொண்டதும், வசனம் ஆளுகை செய்வதும், ஜெபத்தால் நிறைந்ததும், ஆவியானவராலே உயிர்ப்பிக்கப்பட்டதுமாய் இருக்க வேண்டும். அடுத்தபடியாக நான் உங்களுக்கு ஆராதனை முறைகளைக் குறித்த புத்திமதியைக் கூறினேன். ஒரு சபை, கர்த்தரை ஆராதனை செய்யும் விதத்தை வைத்தே அது சரியான சபைதானா என்பதை இனம் கண்டு விடலாம். ஆகவே, ஆராதனையானது, கடவுளை மையமாகக் கொண்டதும், வசனம் ஆளுகை செய்வதும், ஜெபத்தால் நிறைந்ததும், ஆவியானவராலே உயிர்ப்பிக்கப்பட்டதுமாய் இருக்க வேண்டும் என்கிற புத்திமதியையும் உங்களுக்குக் கூறினேன்.
இந்த காரியங்களை பின்னணியாக வைத்து, சபையின் இலக்கணத்தைக் குறித்த மேலும் சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
- சபையின் ஊழியர்களை இனம் கண்டு அவர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வேதாகமத்தின் உதவியோடு வரையறுப்பது சம்பந்தமான கொள்கைகளையும், அவற்றை நடைமுறைப்படுத்துவதையும் விடாமல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள். மூப்பர்களையும், உதவிக்காரரையும் தேர்ந்தெடுக்கும் விதத்தையும், அவர்கள் பணியை வகைப்படுத்துவதையும் விட்டுவிடாதிருங்கள். யாரை மூப்பராக நியமிப்பது?, யார் உதவிக்காரர்?, மூப்பரின் பணி என்ன?, உதவிக்காரரின் பணி என்ன? என்கிற காரியங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் கொள்கைகளை கைவிடாதிருங்கள்.
நமது சபையின் ஆரம்ப நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். 1967களில், இந்த சிறிய கூட்டம் ஒரு சபையாக வரையறுக்கப்படாத அந்த நாட்களில், நான் ஒரு போதகராகவும், சபைத்தலைவராகவும் இருந்தேன். அப்போது சபை அங்கத்துவம் இல்லை, மூப்பர் இல்லை, கண்காணிகள் நியமிக்கப்படவில்லை. இந்த காரியங்களைக் குறித்து கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாங்கள் எல்லாருமாக சேர்ந்து வேதத்தை அலசி ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. மூப்பர் என்பவர் யார்? அவரது பணி என்ன? மேய்ப்பரின் பணி என்ன? கண்காணியின் ஊழியம் என்ன? அவ்வித ஊழியத்தை செய்ய விரும்புபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? சபையில் தங்கள் பணியை அவர்கள் எவ்விதமாக நிறைவேற்ற வேண்டும்? அந்த சமயத்தில் எங்களில் யாருக்கும் சரியான சபை பின்னணி இல்லை. நான் Salvation Army என்று சொல்லப்படுகிற கூட்டத்திலிருந்து வந்தவன். அது ஒரு சபையாக செயல்படும் கூட்டமல்ல. அவர்கள் படை வீரரைப் போலத்தான் செயல்படுவார்கள். அதில் தலைமை தாங்குபவர் மூப்பரோ, போதகரோ கிடையாது. சபையைக் குறித்ததான விளக்கமோ ஆர்வமோ அங்கு இருந்ததில்லை. ஆகவே சபையைக் குறித்து நாங்களே வேதத்தை ஆராய்ந்து பார்த்த ஆரம்ப கால அனுபவங்களை மறக்க இயலாது. இங்கே ஒரு வசனம் மூப்பரைக் குறித்து இப்படி சொல்லு கிறது பாருங்கள், கண்காணியைக் குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளதைப் பாருங்கள் என்று நாங்களெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு வசனங்களைப் பகிர்ந்து கொண்ட காலங்கள் அவை. அப்படியாக நாங்கள் வேதத்தின் மூலமாகவே சபை ஊழியர்களைக் குறித்தும், அவர்கள் தகுதிகள், பணிகள் ஆகியவைகளைக் குறித்தும் ஆராய்ந்து அறிந்து அறிவித்திருக்கிற காரியங்களை அலட்சியப்படுத்தி விட்டுவிடாமல், அவைகளில் நீங்களும் உறுதியாக இருங்கள் என்று உங்களுக்கு புத்திசொல்லுகிறேன்.
முதலாவதாக, அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது என்பதைக் குறித்துப் பார்க்கலாம். இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய 3 காரியங்கள் அடங்கியுள்ளன. சபை ஊழியத்தில் ஈடுபடுபவர்கள்: (1) ஆணாயிருப்பது அவசியம், (2) நற்குணமும் கிருபையும் பொருந்தியவராக இருத்தல் அவசியம், (3) வரம் பெற்றவராய் இருக்க வேண்டும்.
சபையின் ஊழியர்களை நியமிப்பதில் இந்த கொள்கைகளை கடைப் பிடிப்பதை விட்டுவிடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்.
(1) முதலாவதாக, சபையின் ஊழியர் ஆணாயிருக்க வேண்டியதின் அவசியத்தை பார்ப்போம். நான் கூறுவதை கவனமாகக் கேளுங்கள். மீட்பின் திட்டத்தில் கடவுள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு வைக்கவில்லை. அதைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இரட்சிப்பைப் பொறுத்த வரையில் ஆணும் பெண்ணும் சமமே. “. . . ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை. நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:28). அதே போல மாற்கு 3:31-35 வசனங்களில் இயேசுகிறிஸ்து யார் தமக்கு தாயும் சகோதரரும் சகோதரிகளும் என்பதை வெளிப்படுத்து கிறார். அங்கே அவர் ஆண், பெண் என்று வித்தியாசம் காட்டவில்லை. மீட்பைப் பொறுத்த வரையில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் யாருக்குமே கிடையாது என்பதை வசனம் தெளிவாகக் காண்பிக்கிறது. அதே போல சபையில் பெண்கள் செய்யக்கூடிய ஊழியங்களையும் வசனம் தெளிவாக விளக்குகிறது. தீத்து 2ஆம் அதிகாரத்தில் முதிர் வயதுள்ள பெண்கள் வாலிப வயதுள்ள பெண்களுக்கு எந்தவிதமாக புத்தி சொல்ல வேண்டும் என்பதைக் குறித்து பவுல் எழுதியிருக்கிறார். ஆகவே, சபை ஊழியங்களில் ஆண்களுக்கு மாத்திரமே தேவன் பங்கு கொடுத்திருப்பதால் பெண்கள் தங்களை குறைவாக எண்ணி விசனப்பட அவசியமில்லை. இரட்சிப்பதிலும், நீதிமானாக்குதலிலும், மகிமைப்படுத்துவதிலும், புத்திரசுவீகாரத்திலும், மற்ற எல்லா ஆவிக்குரிய சலுகைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வித்தியாசமே கிடையாது. அதையும் தவிர்த்து, சபையில் பின்னால் இருந்து பலவிதமான ஊழியங்கள் செய்யவும் பெண்களுக்கு இடமிருக்கிறது. ஆனால், பொது இடத்திலே (ஆணும், பெண்ணுமாக) பல பேர் சபையாகக் கூடிவரும் போது போதிப் பதிலும், நிர்வகிப்பதிலும் ஆணுக்குத்தான் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. “உபதேசம்பண்ணவும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிற தில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும்” 1 தீமோ. 2:12. இந்தக் காரியத்தைக் குறித்து இதற்கு மேல் தெளிவாக விளக்க முடியுமா? கடவுள் தமது எண்ணத்தை அப்போஸ்தலர் மூலமாக இவ்வளவு தெளிவாக கூறிய பிறகு அதற்கு மேல் நாம் ஏதும் கூற முடியுமா? ஆனால் சகோதர, சகோதரிகளே, இந்த வசனத்திற்கு பலவிதமான அர்த்தங்களைக் கற்பித்து ஆயிரமாயிரமான பக்கங்களில் விளக்கங்கள் கடந்த 25 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இருந்தாலும் அதற்கு சரியான பதில் கொடுக்கக்கூடிய வேதவல்லுநர்களை தேவன் அவ்வப்போது எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறார். ஸ்தோத்திரம் அவருக்கே.
பெண்ணுரிமை இயக்கவாதிகளின் சிந்தனைகள் சபையின் பெண்கள் மத்தியிலும் ஊடுருவி அவர்களுடைய சிந்தனையை மாற்ற வைக்கிறது. சபையின் ஊழியங்களை ஆண் மாத்திரமே செய்ய வேண்டும் என்கிற குறுகிய சிந்தனை உடையவர்களாயிருக்கக் கூடாது என புத்திசொல்லு கிறவர்கள் இந்த சபையையும் தாக்கத்தான் செய்வார்கள். இப்போதே இங்கே இருக்கிறார்களா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அப்படிப் பட்ட யோசனைகள் எல்லாம் எதிர்காலத்தில் வரும். ஆகவே, என்னுடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கொண்டு நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்திமதி இதுதான்: “சபையின் ஊழியர்கள் ஆண்களாயிருக்க வேண்டும் என்கிறதான உங்களுடைய கொள்கையை அவர் வருமளவும் விடாமல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள்”.
- அடுத்தபடியாக பார்க்க வேண்டியது, நற்குணமும் தயவும் பொருந்திய தன்மை. 1 தீமோ. 3:1-13 வசனங்களை நாம் படிக்கும்போது, கண்காணிப்பாளர் களாகவும், உதவிக்காரராகவும் சபையில் ஊழியம் செய்ய விருப்பப்படுபவர் களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பவுல் குறிப்பிடுகிறார். அதில் அவர் பிரதானமாக குறிப்பிடுவது வரங்களை அல்ல, நற்குணங்களை. நல்ல கிறிஸ்தவ பண்புகளையே அவர் முக்கியமாகக் குறிப்பிடுகிறார். குற்றஞ்சாட்டப்படா தவன், தெளிந்த புத்தியுள்ளவன், யோக்கியதை உள்ளவன், இப்படியான காரியங்களையே பவுல் சொல்லிக் கொண்டு போகிறார். இத்தகைய குணநலன் களோடு, அவனுக்கு தேவனுடைய வீட்டிலே ஊழியனும் தலைவனுமாய் இருக்கக்கூடிய விருப்பமும் இருக்க வேண்டும். நற்குணங்களும் தயையும் மற்ற எல்லாவற்றைப் பார்க்கிலும் உயர்ந்தது. ஆகவேதான் பவுல், கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் என்று குறிப்பிடுகிறார். அவன் குற்றஞ்சாட்டப்படாதவனாய் இருக்க வேண்டும். யாரும் அவனைப் பார்த்து விரலை உயர்த்தி, இப்படிப்பட்ட குற்றங்களைக் கொண்டவன் எப்படி தேவனுடைய ஜனங்களை நடத்த முடியும் என்று கேட்காதபடிக்கு நற்குணங்கள் பொருந்தியவனாய் இருக்க வேண்டும். அந்தப்படியே உதவிக்காரரும் இருக்க வேண்டும் என்று கூறி, பலவிதமான நற்குணங்களை பவுல் அங்கே விவரித்துச் சொல்லுகிறார்.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, ஊழியங்கொள்ள வராமல் ஊழியம் செய்ய வந்தது போல, சபையின் ஊழியக்காரரின் மனநிலை இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் ஊழியனாகவும், தலைவனாகவும் வந்து தமது பணிகளை நிறைவேற்றினார். அவரை சீஷர்கள் கர்த்தர், எஜமான் என்று அழைத்தார்கள். தாம் மெய்யாகவே ஒரு தலைவன்தான் என்பதை அவர் அறிந்திருந்தாலும், தன்னைத் தாழ்த்தி, ஜனங்களுக்கு தாம் செய்ய வேண்டிய ஊழியத்தை அடிமையின் ரூபமெடுத்து நிறைவேற்றினார். அந்தவிதமான மனப்பான்மையோடு கண்காணிகளும் உதவிக்காரரும் தேவனுடைய வீட்டிலே தங்கள் பணியை நிறைவேற்ற வேண்டும். கண்காணி களையும் உதவிக்காரரையும் தேர்ந்தெடுக்கும்போது இவ்விதமான குணங்கள் உடையவர்களைப் பார்த்து அந்த பணியில் அமர்த்த வேண்டும்.
- மூன்றாவதாக, சபை ஊழியர்கள் வரம் பெற்றவர்களாய் இருக்க வேண்டும். 1 தீமோ. 3ஆம் அதிகாரத்திலே, கண்காணியானவன் போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளுடைய வசனங்களை எடுத்து தெளிவாகவும், கேட்பவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் பேசக் கூடியவனாக இருக்க வேண்டும். தீத்து 1 ஆம் அதிகாரத்தில் இன்னும் விரிவாக கூறப்பட்டுள்ளது. அவன் ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். எதிர் பேசுகிறவர்களை கண்டனம் பண்ணக் கூடிய வகையிலே தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாக பற்றிக்கொண்டவனாய் இருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, வீண் பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமா யிருக்கிறவர்களின் வாயை அடக்கத் தெரிந்திருக்க வேண்டும். இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசிக்கிறவர்களை கண்டிப்பாய் கடிந்து கொள்ளக் கூடியவனாய் இருக்க வேண்டும்.
அப்படியே உதவிக்காரரைக் குறித்து 1 தீமோ. 3ல் குறிப்பிடும்போது, மேலும் இவர்கள் முன்னதாக சோதிக்கப்பட வேண்டும் என்றிருக்கிறது. என்ன சோதிக்க வேண்டும்? தேவனுடைய வீட்டிலே ஊழியம் செய்யக் கூடியவனா? அதற்குரிய திறமையும் மனப்பான்மையும் அவனுக்கு இருக்கிறதா என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். ஆகவே என் அருமை மக்களே, சபைக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது வேதாகமம் குறிப்பிடுகின்ற தகுதியுடையவர்களை தெரிவுசெய்ய வேண்டிய அவசியத்தை விட்டுவிடாமல் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள் என புத்திசொல்லு கிறேன். ஊழியர்களை தேர்வு செய்வது மாத்திரமல்லாமல், வேதாகமம் குறிக்கின்ற பணிகளையே அவரவருக்கு நியமியுங்கள். சபையில் செய்யக்கூடிய வேலைகளைக் குறித்து வேதாகமம் வகுத்திருக்கின்ற திட்டம்தான் என்ன?
வேதாகமத்தில் Pastor என்கிற ஊழியத்தை உடையவரை பல வார்த்தை களைக் கொண்டு விவரிப்பதைக் காணலாம். கடவுள் சில இடங்களில் அவர்களை மூப்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், மேய்ப்பர் (Shepherds), கண்காணி (Overseers), சபையை ஆளுகிறவர்கள் (Governors) என பலவித மான அடைமொழிகளில் அவர்கள் குறிப்பிடப்பட்டாலும் அவர்களின் பணி ஒன்றே. 1 பேதுரு 5ம் அதிகாரத்தில் உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து எனக் குறிப்பிடுகையில் அவர்களை மேய்ப்பராக குறிப்பிடுகிறார். சபையை மேய்ப்பவர்கள், அவலட்சணமான உலக ஆதாயத் திற்காக அல்ல, மனப்பூர்வமாகவும், உற்சாக மனதோடும் ஊழியம் செய்கிறவர் களாய் இருக்க வேண்டுமென பேதுரு குறிப்பிடுகிறார். தங்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும் சுதந்திரத்தினால் சபையை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் இருக்கக் கூடாது. சபைக்கு நல்ல முன்மாதிரிகளாய் இருந்து, சபையைக் கண்காணிப்பவர்களாய் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் வெறும் முன்மாதிரிகளாக மாத்திரம் இருப்பதில்லை. மேய்ப்பன், ஆடுகள் நடக்க வேண்டிய பாதையை அவைகளுக்குக் காண்பிக்கிறவனாய் இருக்கிறான். அவர்கள் ஆடுகளின் ஆத்துமாக்களை பாதுகாத்துக்கொள்வதில் வைராக்கியத் தோடு நடந்துகொள்ளுகிறவர்களாய் இருக்கிறார்கள். சபையின் மேய்ப்பர்கள் தமது மந்தையைக் குறித்து எப்போதும் எச்சரிப்போடும் விழிப்போடும் இருக்க வேண்டும் (அப்போஸ். 20:28). மந்தையை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டும். மந்தையும் மேய்ப்பனுக்குக் கீழ்ப்படிந்து அடங்க வேண்டும். “உங்களை நடத்துகிறவர்கள் (Rule - ஆங்கிலத்திலே ஆளுகிறவர்கள் என்றிருக்கிறது) உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர் களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத் தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்க மாட்டாதே” (எபி. 13:17). மேய்ப்பன் சபையைக் குறித்து அக்கறையோடு விசாரிக்கிறவனாயிருக்க (Care) வேண்டும்.
கண்காணியானவன் . . . தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்து கிறவனும் (Rule) தன் பிள்ளைகளை சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாய் இருக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த (Rule) அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான் (Care)? குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளையும் நடக்கின்ற விதத்தை தகப்பன் அறிந்திருப்பான். கடவுளின் குடும்பத்திலும் சகலமும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குட்பட்டதாய் நடக்கும்படி கடவுளின் ஊழியன் சபையைக் குறித்த அக்கறை கொண்டவனாய் இருக்க வேண்டும். நாங்கள் விட்டுவந்த சபைகளில் இருந்தவர்கள் மூப்பர், கண்காணி போன்ற ஊழியர் களின் அவசியத்தைக் குறித்து அறியாதவர்களாய் இருந்தார்கள். இந்த சபை யின் ஆரம்ப காலங்களில் நாங்கள் இப்படியாகத்தான் எங்கள் வேதங்களை ஆராய்ந்து பார்த்தோம். ஊழியர்களின் அவசியத்தையும், அவர்களின் தகுதிகளையும் குறித்து நாங்கள் ஆராய்ந்தபோது, இப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று எல்லாரும் ஒருமனதாகக் கூறினார்கள்.
உதவிக்காரரின் பணி, அதிகாரம் செலுத்துவதல்ல, அவர்கள் ஊழியம் செய்ய வேண்டும். சபையின் மேய்ப்பர்களுக்கு இருக்கும் ஏராளமான பணிகளிலிருந்து அவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும் வகையில் உதவிக்காரர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். மூப்பர்களின் தலைமையின் கீழே உதவிக்காரர் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும் (அப்போஸ். 6:4). சபையாரின் தேவைகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளில் உதவி செய்வது அவர்களின் பணி. பிரியமானவர்களே, நாங்கள் ஆரம்ப காலங்களில் சபைக்கு மூப்பர்களையும் உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களின் பணிகளை வரையறுக்க வேதாகமத்தின் உதவி யோடு முயற்சி செய்து கொண்டிருந்தபோது கடவுள் எங்களை பரீட்சைக்கு உட்படுத்தின ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் மூப்பர் பதவிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளையிலே அப்போது எங்கள் மத்தியில் ஒரு நபர் இருந்தார். அவர், தாம் முன்பு இருந்த சபையிலே மூப்பராக பல வருடங்கள் பதவி வகித்தவர். நாங்கள் மூப்பருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களைக் குறித்து 1 தீமோ. 3ம் அதிகாரத்தில் படித்தபோது அதில், கண்காணியானவன், மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாய் இராமல் இருக்க வேண்டும் என்கிற வாக்கியங்களை கவனித்தோம். மேலே குறிப்பிட்ட அந்த நபர் சண்டை போடுகிறவராயும் அடிதடியில் ஈடுபடுகிறவராயும் இருந்ததை எல்லாருமே அறிந்திருந்தார்கள். வாய்ச்சண்டையும் போடுவார். யாரை மூப்பராகத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் சபையார் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டபோது, இந்த நபர், தன்னையும் மூப்ப ராகத் தெரிவு செய்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஏனென்றால் அவர் தலைமைப் பதவிகளை மிகவும் விரும்புகிறவர். நானோ, மனதுக்குள் ஜெபித்த வண்ணமாக இருந்தேன். ஓ, கர்த்தாவே வேதத்தின்படி நடக்க சபையாருக்கு உமது கிருபையை அளியும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன். கர்த்தர் ஜெபங்களைக் கேட்கிறவர். சபையார் அந்த நபரைத் தவிர்த்துவிட்டு வேறு மூப்பரைத் தெரிவு செய்தார்கள். சில வாரங்களில் அந்த நபர் சபையை விட்டே போய்விட்டார். சபையார் வேதாகமத்துக்குக் கீழ்ப்படிய முடிவு செய்திருந்தபடியினால்தான் சரியான மூப்பரை தெரிவு செய்ய முடிந்தது.
இன்னொரு அருமையான விசுவாசி. இவரையும் முந்தின சபையிலே மூப்ப ராக வைத்திருந்தார்கள். ஆனால் நமது புதிய சபை கட்டமைப்புக்குள்ளே வந்த போது இவருக்கு மூப்பருக்குரிய தகுதிகள் இருக்கிறதா என்று ஆராயப்பட்டது. இவர் தேவபக்தி மிகுந்தவர்தான். ஆனால், ஜெபக்கூட்டங்களில் ஜெபத்திற்குத் தலைமை தாங்குவதற்குக்கூட இவர் மிகவும் பயப்படுபவர். அவருக்கு போதிக்கும் வரம் இல்லை. இதைக் கண்ட சபையார் இவரையும் மூப்பர் பதவிக்குத் தவிர்த்தனர். ஆனால் இவருக்கு உதவிக்காரரின் பதவி அளிக்கப்பட்டது. அருமையான மக்களே! சபைதான் கடவுளால் உங்களுக்கு அளிக்கப்பட்ட உங்களுடைய சொத்து. ஆகவே இதை காத்துக்கொள்வதில் உறுதியைக் கைவிடா திருங்கள் என புத்தி சொல்லுகிறேன். சபைக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுப் பதிலும் அவர்களுடைய பணிகளை நியமிப்பதிலும் வேதாகமத்தின் மூலமாக நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் சத்தியங்களைக் கைவிட்டுவிடாமல், இயேசு கிறிஸ்து வரும் வரைக்கும் அதில் உறுதியாகத் தரித்திருங்கள்.
இன்னும் ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூருகிறேன். ஆரம்ப காலங்களில் நாங்கள் ஏற்றுக்கொண்ட பணிகளை சரிவர செய்கிறோமா என்பதை சரி பார்த்துக்கொள்வதற்காக மாதம் ஒரு முறை மூப்பர்களும் உதவிக்காரருமாக சேர்ந்து சந்திப்போம். ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, எங்க ளுடைய வேதாகமங்களை விரித்து வைத்து எங்கள் அலுவல்களை ஆராய் வோம். இது மூப்பரின் பணி, இது உதவிக்காரரின் பணி என்று வேதாகமத்தின் மூலமாக வரையறுத்துக் கொண்ட அந்த நாட்களை என்னால் மறக்கவே இயலாது. ஆகவேதான் இந்த காரியங்களெல்லாம் எனக்குள் மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. எங்களுடைய எண்ணம், நோக்கம், சிந்தனையெல்லாம் கடவுளுடைய ஜனங்களைப் பற்றியதாகவே இருந்தது. வேதாகமம் எங்களை ஒழுங்குபடுத்தியது.
மூப்பராக்கும்படி நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த ஒரு நபரிடம் தீமோத் தேயு, தீத்துவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூப்பருக்குரிய அனைத்து தகுதிகளும் காணப்படவில்லை. ஒருசில தகுதிகளே காணப்பட்டன. அதைக் குறித்து எனக்கு பல விஷயங்களில் நல்ல ஆலோசனைகளைத் தந்த ஒருவரிடம் யோசனை கேட்டேன். அவரோ, கடவுள் மிகவும் உன்னதமான ஒரு நியமத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதிலுள்ள அனைத்தும் ஒரு மனிதனில் காணப்பட வேண்டுமானால், மூப்பர்களே கிடைக்க மாட்டார்கள். ஆகவே அவ்வசனங்களை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லி விட்டார். ஆனால் கடவுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்துவிட்டா ரென்றால் அது அந்த திட்டத்தின் பிரகாரம் மாத்திரமே இருக்க வேண்டும் என்பதை நான் மனதுக்குள் அறிந்து கொண்டேன். கடவுளின் முன்னிலையில் இப்படியாக ஜெபம் செய்தேன், கர்த்தாவே, நீர் வகுத்த உமது திட்டத்தின் படியான மூப்பர் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை, மூப்பர் இல்லாமலேயே காத்திருப்போம். உமது வசனம் என்றும் எங்களுக்கு முன்பாக மாறாமல் நிலைநிற்கட்டும்.
சபையின் இலக்கணத்துக்குரிய காரியங்களில் 5 காரியங்களை உங்களுக்கு எடுத்துக் கூறினேன். ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களுக்குரிய பணிகளை வரையறுப்பதிலும் வேதாகமம் காண்பிக்கின்ற வழிமுறைகளை விடாமல் பற்றிக்கொண்டிருங்கள் என்பதை கடைசியாகக் கூறினேன்.
- அடுத்தபடியாக, நீங்கள் ஒருவருக்கொருவர் நிறைவேற்றவேண்டிய ஊழியங்களிலும், சபையாக சேர்ந்து செய்ய வேண்டிய ஊழியங்களிலும் வேதாகமம் காண்பிக்கின்ற நடைமுறைப் பயிற்சிகளை விடாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். புதிய ஏற்பாட்டில் சபையானது குடும்பம் என அழைக்கப் படுகிறது. அது தேவனுடைய வீடு. மேலும் அது இயேசுவைத் தலையாகக் கொண்டதும், அங்கத்தினர்களை உறுப்புகளாகக் கொண்டதுமான ஒரு சரீரமாகவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் ஒத்தவாக்கிய அகராதியை எடுத்து அதில் எத்தனை முறை “ஒருவருக்கொருவர்” என்கிற வார்த்தை வேதாகமத்தில் வருகிறது என்பதைப் பார்ப்பீர்களானால் 3 டஜன் முறைக்கும் மேலாக அந்த வார்த்தையை வேதாகமத்தில் காணலாம். ஒருவருக் கொருவராக இருப்பதால் வருகின்ற அனுகூலங்களையும், ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் குறிக்கின்ற பல வசனங்களை வேதா கமத்தில் காணலாம். நான் பணியாற்றுகின்ற இந்த சபையிலே இருக்கின்ற உங்களுக்கு அடிக்கடி நான் கூறுகின்ற ஒரு காரியம்: டிரினிட்டி பாப்திஸ்து சபை வெறுமனே போதிக்கின்ற ஒரு ஸ்தலமல்ல. இது, அல்பர்ட் மார்டினாகிய நானோ என்னுடன் சேர்ந்து பணிபுரிகின்ற மற்ற மூப்பர்களோ எங்கள் திறமைகளையும் பேச்சு சாமர்த்தியத்தையும் காண்பிக்கின்ற ஸ்தலமல்ல. எங்கள் வரங்களை பறைசாற்றிக்கொள்ளுகிற இடமுமல்ல. 1 பே. 4:10ல் கூறியிருக்கிறபடி உங்கள் ஆத்துமாக்களுக்கு உதவி செய்கிறவர்களாக நாங்கள் இங்கே பணியாற்றி வருகிறோம். “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்”. எபே. 4:15,16 வசனங்களிலே பவுல் சபையை ஒரு சரீரமாக உருவகப்படுத்தி விளக்கு கிறார். “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களி னாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்கு கிறது”. ஆகவே இது வெறுமனே போதிக்கும் ஸ்தலம் அல்ல என்பதை நினைவில் வையுங்கள். நாம் ஒரு குடும்பம். நாம் ஒரே சரீரம். நாம் தேவனுடைய வீடு. நாம் இங்கே ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு பக்திவிருத்தி அடைகிறோம். ஒருவருக்கொருவர் என்பதில் நமக்கு கடமைகளும் இருக்கிறது. அது நமக்கு நன்மையையும் அளிக்கிறது. ஒருவருக்கொருவர் என்கிறவைகளில் சில காரியங்களை இப்போது உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
நீங்கள் ஒருவருக்கொருவராகவும், சபையாகவும் நிறைவேற்ற வேண்டிய ஊழியப்பணிகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வித பணிகளில் முதலாவதாக வருவது என்ன தெரியுமா? நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்துகொள்ளுவார்கள் என்றார் இயேசு (யோ. 13:34,35). அன்பா யிருக்க வேண்டும் என்பது கட்டளை. அன்பாயிருப்பது போல நினைத்துக் கொள்ளுவதல்ல. அது செய்கையில் வெளிப்பட வேண்டும். 1 கொரிந்தியர் 13ல் கூறப்பட்டிருப்பதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். அந்த அதிகாரத்தை நாம் படிக்கையில் அன்பு எவைகளை செய்யும், எவைகளை செய்யாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும் என்று கூறப்பட்டிருப்பது நமக்கு எதை உணர்த்துகிறது. நான் தாங்கிக்கொள்ள வேண்டிய அல்லது சகித்துக்கொள்ள வேண்டிய ஏதோ ஒரு காரியத்தை நீங்கள் செய்யப்போகிறீர்கள். அல்லது நீங்கள் சகித்துக்கொள்ளும்படியான காரியம் என்னிடத்தில் இருக்கும். அப்படி சகிப்பதின் மூலமாக அன்பை வெளிப்படுத்துகிறோம். அன்புக்கு பொறாமை யில்லை. அன்பு தன்னைப் புகழாது. தற்பொழிவை நாடாது. சினமடையாது. ஆம், நான் சினமடையக் கூடிய காரியங்களை நீங்கள் செய்வீர்கள். ஆனால் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டியவனாக இருப்பதால், நான் சினத்தை அடக்கி ஆளுவேன்.
ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும் என்று பேதுரு சொல்லுகிறார். சாதாரண பலவீனங்களை மாத்திரம் அல்ல திரளான பாவங்களையும் அன்பு மூடும். சபையில் தவறு செய்பவர்களை கண்டிப்பதோ, திருத்துவதோ கடவுளின் இந்த கட்டளைக்கு விரோதமானதல்ல என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும். மற்றபடி கிறிஸ்து நமக்கு காண்பித்த மாதிரியின்படியே நாமும் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் அன்பு அவரை சிலுவை மரத்திற்கே கொண்டு சென்றது. சிலுவையில் அந்தகாரம் சூழ்ந்த வேளையிலே, பரலோகங்கள் அவருக்கு அடைக்கப்பட்ட நிலையிலே அவர் என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறும் அளவுக்கு கடவுளின் உக்கிர கோபாக்கினை அவர் மீது ஊற்றப்பட்டது. நம் மீது கொண்ட அன்பினால் நமது பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டதால் இந்த நிலைக்கு ஆளானார். அவ்வளவு அன்பைக் காண்பித்த இயேசுதான், நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்கள் மீது அன்பு காண்பித்தது போலவே நீங்களும் ஒருவரிலொருவர் அன்பா யிருங்கள் என்கிறார். அவர் நம்மை மிகவும் நேசித்தபடியால் தம்மையே நமக்காக ஒப்புக்கொடுக்கவும் துணிந்தார் என்று பவுல் கூறுகிறார். தமது பிதாவின் உக்கிரகோபம் தன் மீது பாய்கிற அளவிற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகவேதான் நாமும் அவ்விதமான அன்பை செலுத்தும்படியாக அழைக்கப் பட்டிருக்கிறோம். சகலத்தையும் தாங்குகிற, சகலத்தையும் நம்புகிற, சகலத்தை யும் சகிக்கிற, சகலத்தையும் விசுவாசிக்கிறதான அந்த உன்னதமான அன்பை நாம் ஒருவர் மீது ஒருவர் காண்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
அத்தோடு நாம் ஒருவருக்கொருவர் குறைகளை சுட்டிக்காட்டி புத்தி சொல்லுகிறவர்களாயிருக்க வேண்டும் என வேதம் எதிர்பார்க்கிறது. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் (எபி. 3:12). இதை எழுதிய ஆசிரியர், தமது பாவம் தன்னை ஏமாற்றிவிடும் என்பதை உணர்ந்திருக்கிறார். நமது கண்களை ஏமாற்றுகிற நமது பாவம் பிறர் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆகவே தான் ஒவ்வொருவரும் தமது பாவத்தை அறிந்துகொள்ள பிறரது உதவியை நாட வேண்டும் என்கிறார். சகோதரனே, என்னுடைய பாவத்தை நீ காணும் போது அன்போடு எனக்கு புத்தி சொல்லு எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். சகோதரனே, உன்னிடம் இந்த தவறு இருக்கிறதே, இதை நீ உணர்ந்திருக்கிறாயா உன் பேரில் எனக்கு மிகுந்த அக்கறை இருப்பதால் சொல்லுகிறேன் எனக் கூறி ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொள்ள வேண்டும்.
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள் (1 தெச. 4:18). தேற்றுங்கள் என்கிற வார்த்தை மூலபாஷையிலே புத்திசொல்லுங்கள் என்கிற அர்த்தமுடையதாயிருக்கிறது. புத்திசொல்லுதல் என்பது ஒருவருக்கொருவர் குற்றங்கண்டுபிடிப்பதோ, பாவத்தை சுட்டிக் காட்டுவதோ, வெறுமனே மனந்திரும்பும்படியாக கூறுவதோ அல்ல. அவர்களை ஊக்கப்படுத்தி, தேற்றுவதாகும்.
மேலும் சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்கு புத்தி சொல்லுங்கள் (1 தெச. 5:14). வேதாகமத்தின் கட்டளைகளுக்கு விலகி நடக்கிறவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டியவர் களாக இருக்கிறோம். ஆவிக்குரிய முதிர்ச்சியை ரோம சபையார் அடைந்திருக் கிறார்கள் என்பதற்கு இந்த அடையாளத்தையும் பவுல் ரோமர் 15:14ல் விவரிக் கிறார். நீங்கள் நற்குணத்தினாலே நிறைந்தவர்களாயிருக்கிறீர்கள்; சகல அறிவி னாலும் நிரப்பப்பட்டவர்களாயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வல்லவர்களுமாய் இருக்கிறீர்களென்று நான் உங்களைக் குறித்து நிச்சயமுடையவனாய் இருக்கிறேன் என்கிறார்.
சபையிலுள்ள சகோதர சகோதரிகளே உங்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களை நடத்துகிற ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக் கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். . . உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்கு புத்தி சொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியை களினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (1 தெச. 5:11-13). சபையாகிய சரீரமானது ஆரோக் கியமாக விளங்கும்படிக்கு ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பை சரீரத்தின் அங்கத்தினர் களுக்கே கொடுத்து கர்த்தர் சபையை இவ்விதமாக அமைத்திருக்கிறார்.
அடுத்தபடியாக நாம் பார்க்க வேண்டியது ஒருவருக்கொருவர் செய்யத் தக்க உதவிகள். “நன்மை செய்ய உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே” (நீதி. 3:27,28). “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சல் உண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியை யினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” 1 யோ. 3:17,18. இந்த விஷயத்திலும் நீங்கள் கொண்டிருக்கிற பழக்கத்தைக் கைவிட்டுவிடாமல் உறுதி யாகப் பற்றிக்கொண்டிருக்குமாறு நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
அடுத்ததாக, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலாத்தியர் 6:2). சபையிலே துன்பப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு தோள் கொடுத்து உதவுங்கள். “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களுடனே அழுங்கள்” ரோமர் 12:15. இந்த வசனத்தை நமது ஜெபக் கூட்டங்களில் எத்தனையோ முறை குறிப்பிட்டிருக் கிறோம் அல்லவா?
ஒருவருக்கொருவர் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்! “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்”. இதுவும் ஆவிக்குரிய கடமை. நானும்கூட இவைகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். பிரசங்க மேடையிலோ, அல்லது உரையாடல் களிலோ நான் குற்றம் செய்திருந்தால் அதை உங்களிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற வேண்டியவனாக இருக்கிறேன்.
ஒருவருக்கொருவர் ஜெபம் செய்ய வேண்டும்! “எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி . . . சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்” (எபே. 6:18).
பிரியமானவர்களே, ஒருவருக்கொருவர் நாம் செய்ய வேண்டியவைகளுக்கு மாதிரியாக ஒரு சில காரியங்களைக் குறிப்பிட்டேன். வேதத்தில் 3 டஜனுக்கும் மேலான காரியங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய பிரிவின் செய்தியைக் கூறிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே நான் எல்லாவற்றை யும் உங்களுக்கு விவரித்து சொல்ல நேரம் இடம் கொடுக்காது. ஆகவே நான் முக்கியமாக உங்களுக்கு சொல்லுவது என்னவென்றால், ஒருவருக் கொருவர் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய ஊழியங்களை ஒருபோதும் கைவிட்டு விடாமல் நிறைவேற்றுங்கள்.
சபையாக சேர்ந்து நீங்கள் செய்ய வேண்டிய பணிகளையும் நிறைவேற்றத் தவறாதீர்கள். ஒரு விளையாட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் அத்தனை விளையாட்டு வீரர்களும் சேர்ந்து தங்கள் அணிக்கு வெற்றி சேர்க்க முயற்சிப்பது போல, நீங்களும் சபையாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் சந்திப்பீர்கள். ஒன்றுபட்டவர்களாக, இயேசுவின் நாமம் மகிமைப்படும்படியாக அவைகளை நிறைவேற்றுங்கள். வெள்ளிக்கிழமை ஜெபக்கூட்டங்களிலே சபை யாகக் கூடி நீங்கள் தேவனுக்கு ஏறெடுக்கிற ஜெபங்கள் அந்த ஒருமையை வெளிப்படுத்துவதை நான் எப்போதும் காண்கிறேன். சபையானது ஒரு சரீரமாக எப்போதும் செயல்படுவதாயிருக்க வேண்டும். சபை, வெறும் போதிக்கும் ஸ்தலமல்ல. நீங்கள் உங்களை ஒரு சரீரமாக, குடும்பமாக வெளிப் படுத்திக் காண்பிக்கிற இடம். வருஷந்தோறும் போதகர்களின் ஆலோசனைக் கூட்டம் (Pastor’s conference) நடைபெறுகிறது. அதற்காக உங்களுடைய உதவி களும் ஜெபங்களும் சபையாக ஏறெடுக்கப்படுகிறது. போதகப்பணிகளில் உழைத்து, சோர்ந்து போயிருக்கும் போதகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பச் செல்கையில் புத்துணர்ச்சி பெற்றவர்களாக செல்லுகிறார்கள். மற்ற எல்லா கூட்டங்களையும்விட இது அவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும் தேவையாகவும் இருக்கிறது.
என்னுடைய மனைவி கேன்சர் வியாதியினால் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த அந்த கடைசி இரண்டு ஆண்டுகளில், வாரத்தில் மூன்று முறை சாயங்கால வேளைகளிலே நீங்கள் என் வீட்டுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்த அன்பின் பிரதிபலிப்பை நான் மறக்க முடியாது. சபை, சரீர மாக செயல்படுகிறதை இவை வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயல் பாடுகளை விடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள் என்று நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன். நான் இடம் மாறி போவதால் இதில் எதுவும் மாறிவிடக்கூடாது. வேதாகமத்தில் முதல் எழுதப்பட்டது மாற்றி எழுதப்படுமா? இல்லவே இல்லை. இத்தகைய அன்பின் செயல்பாடு களெல்லாம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளை அவர் வரும் வரைக்கும் விடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவர் கட்டளைகள் யாவுக்கும் கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சையுடையவர்கள், சபையைக் குறித்து அவர் வகுத்திருக்கும் இலக்கணங்களை அவர் வரும் வரைக்கும் விடாமல் உறுதியாகக் கைக்கொண் டிருங்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு சபைக்குரிய இலக்கணங்களை யும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள். அதில் 6 காரியங்களைக் குறிப் பிட்டேன்: 1. இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்கு இருக்கும் முக்கிய பங்கு; 2. வசனத்தை விளங்கிக்கொள்வதில் துல்லியமாகவும் ஒரேவிதமாகவும் இருக்க வேண்டியதின் அவசியம்; 3. சபை அங்கத்துவத்தைக் குறித்த கோட்பாடுகளை கடைப்பிடித்தல்; 4. சரியான ஆராதனை முறை; 5. சபையின் ஊழியர்களை நியமித்தலும் அவர்களின் பணிகளை வரையறுத்தலும்; 6. ஒருவருக் கொருவரும், சபையாகவும் நிறைவேற்ற வேண்டிய ஊழியங்கள்.
நடைமுறைப் பயிற்சியாக நான் சில காரியங்களைக் கூறிவிட்டு இந்த தியானத்தை முடிக்க நினைக்கிறேன். இங்கு சபைக்கு வந்து போகும் சிலர் என்ன நோக்கத்தோடு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்கிற தெளிவான சிந்தனையைப் பெற்றிருக்கிறீர்களா? ஓர் உதாரணம் கூற விரும்புகிறேன். மேலை நாடுகளில் நாகரீகம் மிகவும் முற்றிப் போனதால், ஆண்களும் பெண் களும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழுவார்கள். அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி வாழு கிறவர்கள், ஏதாவது காரணங்களினால் தங்களுக்குள் பிடிக்காமல் போய்விட்ட தென்றால், நான் என் வழியைப் பார்த்துக்கொண்டு போகிறேன், நீ உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ என்று கூறி பிரிந்துவிடுவார்கள். அவர்களுக் கிடையே எந்தவிதமான உடன்படிக்கையோ வாக்குறுதிகளோ ஏற்படுத்திக் கொள்ளாததால் அப்படி பிரிந்துவிடுவது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. எந்தவித பொறுப்பையும் அவர்கள் ஏற்காமல் சுதந்திரமாக வாழ நினைத்து அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழுகிறார்கள். அப்படி வாழ்வதால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் இங்கே கூறப்போவதில்லை. உடன்படிக்கையற்ற அந்த விதமான வாழ்க்கையை மாத்திரம் உதாரணத்திற்கு வைக்க விரும்புகிறேன். அதுபோலவே சபைக்கு வந்து சென்று கொண்டிருப்பவர்களில் பலபேர் இயேசு கிறிஸ்துவிடமோ, சபையோடோ எந்தவிதமான உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக்கொள்ள மனதில்லாமல் வந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வசனத்தையும் ஏற்றுக்கொள்கிறவர் களாக இருந்தால் அவரோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்வதில் என்ன தயக்கம்? நான் இயேசுவை நேசிக்கிறேன். அவருடைய மக்களை நேசிக்கிறேன். ஆகவே அவருடைய காரியங்களுக்கு நானும் உடன்பட்டு வாழ விரும்புகிறேன். எவ்வளவு கடினமான பாதையையோ அல்லது கடினமான சத்தியத்தையோ நான் சந்திக்க நேர்ந்தாலும், பிரிந்துபோகாமல், அவருடைய மக்களோடு சேர்ந்து அவைகளை சந்திக்கவே பிரயாசப்படுவேன் என்கிற உறுதியை எடுத்துக்கொள்வதற்கு ஏன் மனதில்லாமல் இருக்கிறீர்கள்? உங்களைத் தடுப்பது எது? இயேசுவின் விசுவாசிகள் சந்திக்கிற எல்லா பிரச்சனைகளையும் நானும் சந்திப்பேன். ஒரு சகோதரனோடாவது, சகோதரியோடாவது மன வேறுபாடு போன்ற எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சந்திப்பேன். ஏனென்றால் நான் இயேசுவோடும் அவருடைய சபையோடும் உடன்படிக்கைக் குள்ளானவன் என்கிற வாஞ்சை ஏற்படவிடாமல் தடுப்பது எது?
நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்கள் வேதபுத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காணப்படும் எந்த கிறிஸ்தவனாவது சபையோடு சம்பந்தப் படாதவனாக இருப்பதைக் காண்கிறீர்களா? டிரினிட்டி பாப்திஸ்து சபையோடு சம்பந்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என பேதுரு சொல்லியிருக்கிறாரா என்று வீண் விதண்டாவாதம் செய்யாதீர்கள். நான் அப்படிச் சொல்ல வில்லை. வேதத்தில் காணப்படுகின்ற எந்த கிறிஸ்தவனாவது சபையோடு தொடர்பில்லாதவனாக காணப்படுகிறானா என்கிற கேள்வியோடு வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் கேட்கலாம், சிலுவையின் வலது பாரிசத்தில் தொங்கின கள்ளன் எந்த சபையோடு தொடர்பு கொண்டவனென்று. ஆம். அவன் மாத்திரம் விதிவிலக்கு. அடுத்தபடியாக எத்தியோப்பிய மந்திரி என்ன செய்தார் என கேட்பீர்கள். அவன் வீட்டுக்குப் போனபிறகு, என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது. அதை வேதம் நமக்கு காட்டவில்லை. இதைத் தவிர்த்து வேறு எந்த உதாரணங்களையும் உங்களால் காட்ட முடியாது.
அப்போஸ்தல நடபடிகளை படித்துப் பாருங்கள். இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார். வேதாகமத்தில் நீங்கள் படிக்கின்ற நிருபங்கள் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது? எபேசு, கொரிந்து போன்ற பட்டணங்களில் வசித்து வந்த தனிமனிதர்களுக்கா பவுல் தமது நிருபங்களை எழுதி அனுப்பினார்? இல்லை. அவைகளை சபைகளுக்குத்தான் அனுப்பினார். தனிப்பட்ட மனிதர்கள் யாரும் இந்த நிருபங்களை பெறவில்லை. சபையைச் சேர்ந்த மக்களுக்குத்தான் அவர் எழுதி அனுப்பினார். சபையானது இயேசுவோடு உடன்படிக்கை கொண்டுள்ளது. சபைக்கு வந்துபோய்க்கொண் டிருக்கிற நீங்கள் எதனால் அந்த உடன்படிக்கைக்குள் பிரவேசிக்க விரும்ப வில்லை? நீங்கள் இயேசுவின் மீது அன்பு கொண்டவர்களாயிருந்தால், அவர் சத்தியத்தை நேசிக்கிறவர்களாயிருந்தால், அவருடைய ஊழியர்களையும், அவருடைய ஜனங்களையும் நேசிக்கிறவர்களாயிருந்தால் அந்த உடன் படிக்கைக்குள் பிரவேசிக்க என்ன தயக்கம்? ஒருவனை கிறிஸ்தவனாக அடையாளங்காட்டுவது இவைதானே. மரணத்தைக் கடந்து ஜீவபாதைக்கு வந்திருக்கிறோம் என்பதை ஒருவரையொருவர் நேசிப்பதின் மூலமாகத்தானே உணர்ந்துகொள்ள முடியும்! நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்களாக இருந்தால் சபையோடு கட்டப்பட்டவர்களாக காணப்படவேண்டும். சபையின் ஊழியங்களிலும், சபை நியமித்திருக்கும் ஒழுங்குகளிலும், சபை வாழ்க்கை யிலும் உங்கள் பங்கை நிறைவேற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.
இன்னும் கர்த்தருக்குள் வராதவர்களுக்கு நான் கூறுவது: சபை உங்களை இரட்சிக்காது. நான் சபையைப் பற்றியும், அது பாதுகாக்கப்படுவதற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை சபை இலக்கணங்களைப் பற்றியும், சபையில் ஒருவர் உடன்பட்டு இருக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். ஆனாலும் சபை உங்களை இரட்சிக்காது. நீங்கள் கிறிஸ்துவுக் குள்ளாக வேண்டும். அவரைப் பற்றியும் அவரது நோக்கத்தைப் பற்றியும் தெரிந்துகொண்டு அவருக்குள்ளானவர்களாகும்போது, நீங்கள் அவருடைய சபையிலே சேர்க்கப்படுவீர்கள். உள்ளூர் சபைகள் பூரணமடைந்த சபைகள் அல்ல. ஆனால், அவைகள் அவருடைய பரிசுத்தவான்கள், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த கூடுகின்ற ஒரு கூட்டம் ஆகும். இந்த சபையிலே உள்ள அநேக பரிசுத்தவான்களின் மூலமாக என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் அளவிட முடியாத உன்னதமான நிலையை அடைந்தது. ஆகவே நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் எதனால் கர்த்தருக்குள் வராமல் இருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். அவரைக் குறித்து இந்த பிரசங்க மேடையிலே எண்ணிலடங்காத தடவைகள் பேசியிருக் கிறோமே! அவருடைய அன்பைப் புகழ்ந்து அவரை உயர்த்தியிருக்கிறோம். பாவிகளுக்காக அவர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்பதையும், அவர்களுக்காக தன்னையே ஜீவபலியாக அவர் ஒப்புக்கொடுத்ததையும், அவருடைய இரட்சிப்பையும் குறித்து பலமுறை பிரசங்கித்திருக்கிறோம். அவருடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தும், நரகத்தைக் குறித்தும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு உங்களை பயமுறுத்திகூட இருக்கிறோம். அதைக் குறித்து நான் மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனென்றால் வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார் என்று வசனம் கூறுகிறதே. ஆகவே, கிறிஸ்துவுக்குள்ளாகுங்கள்! பின் சபைக்கு வாருங்கள். அவரை நேசித்து, அவரை பிரியப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அவருடைய ஜனத்தின் அந்நியோந்நிய ஐக்கித்துக்குள் நீங்களும் பிரவேசித்து சந்தோஷமடையுங்கள்.
“உங்களுக்குள்ளதை அவர் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்”. இந்த வாக்கியம் ஒரு குறிப்பிட்ட சபைக்குச் சொல்லப்பட்டது. இப்போது துருக்கி என்று அழைக்கப்படுகின்ற பிரதேசத்திலே அந்த சபை இருந்தது. ஆனால் இப்போது அங்கு அந்த சபை இல்லை. ஏன்? அந்த சபையினர் தங்களுக்குரியதை அவர் வருமளவும் பற்றிக்கொண்டிருக்கத் தவறிவிட்டார்கள். சபையில் இது பரவாயில்லை, அது பரவாயில்லை, இதை விட்டுக்கொடுக்கலாம் என்றெல்லாம் கூறி சபை ஒழுக்கத்தை விட்டு விலகினபோது, கடைசியில் இயேசுகிறிஸ்து நானே விலகிக்கொள்கிறேன் என்று அந்த சபையை விட்டு விலகிப்போய்விட நேரிட்டது. ஆம், சபைகளை அவர் எச்சரிக்கிறார். ஆசியாவிலுள்ள ஏழு சபை களுக்கும் அவர் எழுதியதில், நீங்கள் மனந்திரும்பாவிட்டால் நான் வந்து விளக்குத்தண்டை நீக்கிவிடுவேன் என்று எச்சரிக்கிறார். அந்த சபைகளிலிருந்த விளக்குத்தண்டுகளை அவர் நீக்கிவிட்டார். அருமையான மக்களே, நீங்களும் அவர் வரும்வரைக்கும் உங்களுக்குரியதை பற்றிக்கொண்டிராமல் போனீர்களென்றால் இந்த சபையிலும் அவர் விளக்குத்தண்டை நீக்கிவிடுவார்.
தாம்பத்திய உறவில் நெருக்கம்
பாகம் 2 (தொடர்ச்சி)
அத்தியாயம் 7: சுவிசேஷ அன்புடையவர்களாய் இருங்கள்
விரும்பத்தகும் நேசம்
நாம் சுவிசேஷ அன்புடையவர்கள்தானா என்பதை சோதிப்பதற்கு இரண்டு வசனப் பகுதிகளைப் படித்துப் பார்ப்போம்.
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக் கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஆகையால் நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கை யாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” எபேசியர் 4:31-5:2.
“ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு, ஒருவரை யொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” கொலோசெயர் 3:12-14.
கிறிஸ்தவர்களாகிய நாம் சுவிசேஷ அன்பை காண்பிக்கிறவர்களாய் இருக்க வேண்டும். நமது திருமண வாழ்க்கையில் சுவிசேஷ அன்பு வெற்றிகரமாக செயல்படுவதை நாம் கண்டோமானால், நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதையும், கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதையும், கடவுளுக்குப் பிரியமான பரிசுத்த ஜனம் என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். கிறிஸ்துவோடு தொடர்புள்ளவர்களாயும், பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறவராயும் இருக்கின்ற நாம், சுவிசேஷ அன்பைக் காண்பிக்கக்கூடிய கருவிகளாக இருக்கிறோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அன்பைக் கொண்டு அன்பு செலுத்துங்கள்
சுவிசேஷ அன்பை நாம் செலுத்த முடியும் என்று எதனால் நாம் உறுதி யாகக் கூறலாம்? அத்தகைய அன்பு நமது இரத்தத்திலேயே ஊறியிருக்கிறதா? அல்லது பாரம்பரியமாக வருவதா? பெற்றோர் நமக்கு இதில் முன்மாதிரி களாக இருந்திருக்கிறார்களா? பள்ளியில் சொல்லித்தருகிறார்களா? கல்வி யினாலோ கலாச்சாரத்தினாலோ இவ்வித அன்பை பெற்றுக்கொள்ள முடியுமா? இதில் எந்த காரணமும் சரியில்லை. சுவிசேஷ அன்பு இயற்கை யாகவோ, அல்லது மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலோ வரமுடியாது.
கடவுள் நம்மை உயிர்ப்பித்து, புதிய ஜீவனைக் கொடுத்ததால் மாத்திரமே நம்மால் சுவிசேஷ அன்பை செலுத்த முடியும். நம்மில் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவர் நம்மை அந்த திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர் களாக்குகிறார் (2 பேதுரு 1:4). நாம் பரிசுத்த ஆவியை ஈவாகப் பெற்றிருக் கிறோம். அவருடைய வல்லமையினாலே நாம் சுவிசேஷ அன்பை விசுவாசித்து அதை நமது திருமண வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முடியும். நாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், பிரியரும், இயேசு கிறிஸ்து வினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாயிருக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவில் புதுசிருஷ்டி யாயிருக்கிறோம். பழையவைகள் ஒழிந்துபோயின. பாருங்கள், நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். எல்லாம் புதிதாயின அல்லவா! (2 கொரிந்தியர் 5:17).
கடவுள் உங்களை சுவிசேஷ அன்பினாலே சிநேகித்ததாலேயே நீங்களும் சுவிசேஷ அன்புடையவர்களானீர்கள். உங்களுடைய பரம பிதா உங்களை நேசித்தார். அன்பின் சொரூபியாயிருக்கிற கடவுள் உங்களில் அன்பு செலுத்தினார். அவரே இப்போது உங்களுக்குள்ளும் இருக்கிறார். உங்களை அவர் நேசித்தவிதமாகவே நீங்களும் உங்கள் துணையை நேசிக்கும்படிக்கு அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். சுவிசேஷ அன்பை செலுத்துவது சுலப மானதுதான், கடவுள் என்னவிதமான அன்பை உங்களுக்குக் காண்பித்திருக் கிறார் என்பதை உணர்ந்துகொண்டு, அந்த அன்பையே உங்கள் துணையிடம் நீங்கள் காண்பியுங்கள். “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, . . . கிறிஸ்து . . . நம்மில் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” எபேசியர் 5:1-2. கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அன்புகூரப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே உங்களால் மற்றவர்கள்மீதும், முக்கியமாக உங்களுடைய துணையின்மீதும் அன்புகூர முடியும். அன்பு செலுத்தக்கூடிய சாதனமாகவும் கருவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். மன்னிக்கிற இயல்பு
நம்முடைய திருமண நெருக்கத்திற்கு எதிரியாகிய நமது பாவத்தை மேற் கொள்ள வேண்டுமானால் நாம் சுவிசேஷ அன்பை செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இருதயத்தில் சில பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் சுவிசேஷ அன்பை உடையவர் என்பதை வெளிப் படுத்துகிற இயல்பு எது? மன்னிக்கிற தன்மை. இயேசு கிறிஸ்துவோடுள்ள சம்பந்தம், என்னை மன்னிக்கிறவனாக்கும் என்பதை விசுவாசித்து, முழுமன தாக அதை எதிர்பார்த்திருப்பது.
கொலோசெயர் 3:12-3ல் பவுல் இதை விவரிக்கிறார். “. . . உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, . . .” அதேபோல எபேசியர் 4:32லும் சொல்லுகிறார், “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக் கடவது”. இந்தவிதமாக நமது இருதயத்தை நாம் பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டுமென பவுல் கூறுகிறார். சுவிசேஷ அன்பை செலுத்துகிற அடையாளத்தைப் பெறவேண்டுமானால் நாம் நமது மனதை மேற்கூறிய வகைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடவுளின் தன்மையே இவ்வாறாகத்தான் இருக்கிறது. “ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்” சங்கீதம் 86:5. கடவுள் மன்னிக்கிறவராய் இருக்கிறார். இது சுவிசேஷ அன்பின் அடையாளமாயிருக்கிறது. மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார். “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப் பார். உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் . . .” ஏசாயா 30:18.
இந்தவிதமான இரக்கமுள்ள இருதயத்தையே தரித்துக்கொள்ளுங்கள். அன்பும், தாழ்மையும், தயவும், பொறுமையுமுள்ள இருதயத்தையே தரித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போன்ற இரக்க குணத்தையும், மனதுருகும் குணத் தையும் இருதயத்திலே ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனையே உங்கள் நோக்க மாகவும், விருப்பமாகவும்கொள்ளுங்கள். இக்குணங்களுக்கு உங்கள் இருதயத்தை ஒருமுகப்படுத்துங்கள். பாவம் உங்களை மேற்கொள்ள வரும் போது, இத்தகைய குணங்களை பிரயோகிப்பதற்குத் தயாராகவும் ஆவலாகவும் இருங்கள். மன்னிப்பதற்கு தயாராக இருங்கள். இரக்கமும் கிருபையுமே வெல்லும் என்கிற எதிர்பார்ப்போடு பாவத்தை மேற்கொள்ளுவதற்குத் தயாராக இருங்கள்.
கடவுளின் இயல்பு அவருடைய உருவாகிய குமாரனிலும் வெளிப்படு வதைக் காண்கிறோம். சிலுவையில் மரண வேதனையில் அவர் தொங்கிய போதுங்கூட, அவர் ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக அவரது தன்மை விளங்கு கிறது. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” லூக்கா 23:34. இயேசு கிறிஸ்து தமது இருதயத்தின் தன்மையை ஜெபத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார். தன்னை துயரப்படுத்து பவர்களின் பாவத்தை கடவுளின் மன்னிக்கும் தன்மை வெற்றிகொள்வதை காணும் ஆவலோடு ஜெபிக்கிறார். தான் கற்பித்தவைகளுக்கு தானே ஒரு முன்மாதிரியைக் காண்பிக்கிறார். “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத் திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” மாற்கு 11:25. அவரை அவர்கள் கொடூரமாக நடத்திக்கொண்டிருந்தபோதும், பிதாவே இவர்களுக்கு மன்னியும் என ஜெபிக்கிறார். இந்தவிதமான சுவிசேஷ அன்பின் தன்மையை நாமும் அடையும்படிக்கு நாம் ஜெபிக்கிறவர்களாயிருக்க வேண்டும். அது வெற்றி யடைவதைக் காணுகிறதற்கு வாஞ்சையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்.
தொடர்ந்து இயேசுவோடு தொடர்புகொள்பவர்களாய் இருந்தால்தான் இந்தவிதமான தன்மையை நாம் அடைய முடியும். உங்களுடைய துணை இதை அடைவதை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியாது. பிரபலமான பாடல்கள் இந்த தன்மையை உங்களில் ஏற்படுத்தாது. இயேசு ஒருவர் மாத்திரமே அதை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். இயேசு சொல்லு கிறார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” மத்தேயு 11:29. இது சீஷர்களின் தன்மை. அவருடைய சீஷர்கள் செய்தது போலவே நாமும் அவருடைய நுகத்திற்குள்ளாக வந்துவிட வேண்டும். அப்போது அவர் வசனத்தின் மூலமாகவும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் சுவிசேஷ அன்பை எப்படி ஏற்படுத்திக்கொள்வது என்பதை நமக்குக் கற்றுத் தருவார். நாம் அவரோடு ஆத்மீகமான தொடர்பு உடையவர்களாக இருந்தால் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருப்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
பொறுமைக் குணம்
பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்திருப்பதால்தான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அன்பு செலுத்தும் அதிகாரத்தை ஆவியானவர் நமக்கு அளித்திருக்கிறார். நாம் சுவிசேஷ அன்பினால் அன்பு செலுத்தவும், ஒருவர்பேரில் ஒருவர் பொறுமையாயிருக்கவும் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொறுமையாயிருக்கும்படிக்கு நம்மை பண்படுத்திக்கொள்வது அவசியம். “அன்பு திரளான பாவங்களை மூடும்” 1 பே. 4:8. கிறிஸ்தவர்களை பொறுமை யில்லாதவர்களாக சித்தரித்து கேலிச்சித்திரங்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால் வேதமோ மிகவும் பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டுமென நமக்குக் கட்டளையிட்டிருக்கிறது. நம் பொறுமையை சோதிக்கிற எந்த சிறிய காரிய மானாலும், நாம் கோபத்திற்கோ விசனத்திற்கோ ஆளாகாமல் அதை சகித்துக் கொள்கிறவர்களாயிருக்க வேண்டும். கடவுளின் பொறுமையைக் குறித்து ஆராய்ந்தால் அது வியக்கத்தக்க அளவில் இருக்கும். யேகோவா ஆகிய நமது கடவுள், அன்பும் இரக்கமும் பொறுமையும் நீடிய சாந்தமும் உடையவர். கோபத்தைத் தூண்டுகிற காரியங்களை பொறுமையோடு சகித்துக்கொள்ள அவர் கற்றுத் தருகிறார். நாம் அனுபவித்த தீமைகளுக்கு பழிவாங்காமல் இருக்கும்படி கூறுகிறார். அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் (1 கொரி. 13:7) என்பதையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். இந்த அறிவுரைகளை நாம் நமது திருமண வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும். நாம் திருமண வாழ்க்கை யில் நெருக்கத்தை நாட முயற்சிக்கையில் சின்ன சின்ன எரிச்சல்கள், கோப தாபங்கள், மனஉளைச்சல்கள் ஏற்படுவது இயல்பு. ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது சற்று கோபங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அன்பு சினமடையாது என்பதை நினைவில் வைக்க வேண்டும் (1 கொரி. 13:5).
அன்பு கோபப்படுத்தாது என்றும் நாம் கூறலாம். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புகூர பிரயாசப்பட்டுக் கொண்டு வருகையில், உங்களையும் உங்களது துணையையும் நீங்கள் ஆராய்ந்து விளங்கிக்கொள்வதால் எந்தெந்த காரியங் களில் நீங்களோ உங்கள் துணையோ எரிச்சல்படுவீர்கள் அல்லது எவைகளை விரும்பமாட்டீர்கள் என்பதை உணரக்கூடியவர்களாவீர்கள். எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் சற்று குண்டாக இருப்பான். நாங்கள் பள்ளியிலே படித்து வரும்காலத்திலே அவனுடைய சகோதரன் என் நண்பனின் சரீரத்தைக் குறித்து கிண்டல் செய்வான். என் நண்பனிடம் வந்து, அவனது உடற்சதையைக் கிள்ளுவான். அதனால் என் நண்பனின் முகம் அஷ்டகோணலாகும். அதைப் பார்த்து இரசிப்பது அவன் அண்ணனின் விளையாட்டு. அவர்கள் இருவரும் ஒரே வீட்டிலே நெருக்கமாக இருந்து பழகியதால் அவர்களுக்குள் இது அடிக்கடி நடக்கும். சற்றுகாலம் கழித்து, அவனுடைய சகோதரன் என் நண்பனின் பக்கத்தில் வராமல், தூரத்திலிருந்தே அவனைக் கிள்ளுவது போல சைகை காட்டினால் போதும். உடனே இவன் முகம் சிவந்து, கோபமாகி, முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொள்ளுவான். அந்த அளவுக்கு ஒரு சைகையினாலே கூட அவன் இவனை ஆட்கொள்ளுவான். அந்த சைகைக்கு இவனும் ஏதோ வொரு வகையில் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிறான். இது அவர்கள் கூடவே இருந்ததால் சாத்தியமாகிறது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்ததால், முகபாவனைகளிலிருந்தே தங்களுக்குள் என்ன நினைக்கிறோம் என்பதை அவர்களால் வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
நம்மோடு மிக நெருக்கமாக இருப்பவர்களை நம்மால் மிக சுலபமாக கோபப்படுத்திவிட முடியும். நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் எந்த வார்த்தையைச் சொன்னால் என் மனைவிக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். எந்த கடுமையான வார்த்தையைக் கூறினால் என் பொறுமை சோதிக்கப்படும் என்பது என் மனைவிக்கும் தெரியும். நாங்கள் நெருங்கிப் பழகி, ஒருவரையொருவர் புரிந்துகொள்வதால் எது யாருக்குப் பிடிக்காது என்பதை அறிந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவரின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு, அவர்கள் பாவம் செய்துவிடாதபடி தடுப்பதற்கு பதிலாக அவர்களைக் கோபப்படுத்தி, பாவம் செய்ய வைக்கும்படி நாம் சோதிக்கப் படுகிறோம். பாவம் நம்மில் குடிகொண்டிருக்கிறது என்பதை அறிந்திருந் தாலும், நமக்கு நெருக்கமானவரை அன்பினால் தாங்கி, பொறுமையோடு, அவரை பாவம் செய்யவிடாமல் தடுக்காதபடி, அதைத் தூண்டி பெரிது படுத்தும்படியாகவே நமது பாவம் நம்மை சோதிக்கிறது. பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக்கோபு 1:15).
சின்ன சின்ன காரியங்களில்கூட நாம் பொறுமையைக் காண்பிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். சிறிய விஷயம்தானே என அலட்சியமாக இருந்தோமானால், அது நமது உறவின் நெருக்கத்துக்கே ஆபத்தை விளைவித்து விடும். பாவத்தை அதிகரிக்கச் செய்துவிடும். நாம் ஏதாவதொரு விஷயத்தை எப்படி சொல்லுகிறோம், என்னவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம், குரலை எவ்வளவுக்கு உயர்த்திப் பேசுகிறோம், என்பவைகளில் எல்லாம் கவனம் செலுத்தினோமானால், திருமண நெருக்கத்தைக் குலைத்துவிடுகிற பாவத்தைக் குறித்து நாம் கவலைப்பட அவசியம் இருக்காது. நாம் நமது துணையை பாவம் செய்யும்படிக்குத் தூண்டுகிறவர்களாயிருந்து விடக்கூடாது. நாமும் கோபம் எரிச்சல் போன்றவைகளால் பாவம் செய்கிறவர்களாகக் காணப் படக்கூடாது. அதற்கு பதிலாக நாம் பொறுமையைத் தரித்துக் கொண்டவர் களாயிருக்க வேண்டும். அன்பும், தயவும், பொறுமையும் கொண்ட இருதயத்தை தரித்துக்கொள்ள வேண்டும். “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்” (மத். 5:9).
அத்தியாயம் 8: சுவிசேஷ அன்பின் பரிமாற்றங்கள்
சுவிசேஷப் பரிமாற்றங்கள்
சுவிசேஷ அன்பின் பரிமாற்றங்கள் இரண்டு விசுவாசிகளிடையே ஏற்படு கிறது. இருவரும் ஒருவர்பேரில் ஒருவர் சுவிசேஷ அன்பைப் பரிமாறிக் கொள்ளப் பிரயாசப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் அன்பைத் தரித்துக் கொண்டவர்களாக, பொறுமையை கடைப்பிடிக்க முயலும்போதுங்கூட பல சமயங்களில் தங்களுடைய துணைக்கு எதிராகப் பாவம் செய்துவிடுகிறார்கள். அப்படி பாவம் செய்யும்போது, இருவரும் ஒருவருக்கொருவர் சுவிசேஷ அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். சுவிசேஷ பரிமாற்றங்களை எப்படி செய்துகொள்வது என்று கற்றுக்கொள்கிறவர்களாய் இருக்க வேண்டும். பாவம் நமது திருமண நெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்க முயலும்போது அதிக மதிகமாய் சுவிசேஷ அன்பின் பரிமாற்றங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்விடத்தில்தான், கடைசி வழிகாட்டி நட்சத்திரமாகிய மீட்பின் கோட் பாடு நம்மை வழிநடத்துகிறது. பாவம் நம்மை பயமுறுத்துகையில் நமது திருமண வாழ்க்கையில் கிறிஸ்தவத் தன்மைகளைக் காண்பிக்கிறவர்களாய் இருப்பது முக்கியம். தம்பதிகள் பாவமே செய்யாமல் இருப்பதால் அதில் கிறிஸ்தவத் தன்மை வந்துவிடுவதில்லை. அந்த தம்பதிகள் பாவம் செய்யும் போது, சுவிசேஷத்தை எப்படி தங்கள் வாழ்வில் பிரயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒரு திருமண வாழ்வு கிறிஸ்தவத் தன்மையுடையதா இல்லையா எனக் கூறலாம். சுவிசேஷத்தைக் கொண்டு பாவத்தை மேற்கொள்வ தால்தான் அது கிறிஸ்தவ தன்மையுடையதாகிறது. இல்லையென்றால் மீட்பின் கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ள, திருமண உறவின் நெருக்கத் தையே அது அழித்துவிடுவதாகத்தான் இருக்கும். சுவிசேஷம், நமது பாவங்களை மேற்கொண்டு, நம்மையும் நமது திருமண வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்கு ஒத்ததாக ஆக்காவிட்டால், சபைக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவை நமது திருமணத்தின் மூலமாக பிரதிபலிக்க முடியாதவர்களாக இருப்போம். சுவிசேஷ அன்பு என்பது ஏதோ ஒரு கவர்ச்சிகரமான வார்த்தையோ அல்லது நாமாக ஒன்றைக் கற்பனை பண்ணிக்கொள்வதோ அல்ல. ஆவிக்குரிய யுத்தகளத்தில் அன்பானது எப்படி செயல்படுகிறது என்பதை அது குறிக்கிறது. அத்தகைய அன்பு, பாவத்தோடு போராடி, பிரிவாகிய மரணத்தை வெல்லுகிறதா யிருக்கிறது. அதற்கு உயிர்த்தெழுதலின் வல்லமையோடுகூடிய சிலுவையின் வெற்றியை பாவத்தின் மீது உபயோகித்து வெற்றியடைய வேண்டும்.
சுவிசேஷ அன்பு சுவிசேஷத்தின் காரியங்களைச் செய்கிறது. சுவிசேஷத்தைக் கொண்டு நமது பாவத்தை சந்திக்க வேண்டுமென கடவுள் அமைத்திருக்கிறார். நாம் பாவம் செய்யும்போது, சுவிசேஷக் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, ஓர் ஒப்பந்த மேஜைக்குச் சென்று, சுவிசேஷரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட வேண்டும். நீ ஏதோ ஒரு பாவம் செய் தாயா? சுவிசேஷப் பரிமாற்றங்களுக்கு இதுதான் சமயம். பவுல் சொல்லுகிறார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டா னால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோ 3:13). வெறுமனே பாவத்தை மனதில் உணர்ந்தால் மாத்திரம் போதாது. அதை செயலில் காண்பிக்க வேண்டுமென பவுல் இங்கே குறிப்பிடு கிறார். இனிமேல் தாங்க முடியாது என்பது போன்ற காரியங்களையும், குறைபாடுகளையும் பாவங்களாகக் கருத்தில் கொண்டு, அவைகளை சுவிசேஷத்தின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வேண்டிய பொறுமை குணமோ, சுவிசேஷத் தன்மையோ உங்களிடத்தில் இல்லா விட்டால், உங்களால் சுவிசேஷப்பரிமாற்றங்கள் செய்துகொள்ள இயலாது.
இந்த சுவிசேஷப் பரிமாற்றத்தின் தன்மைதான் என்ன? பாவத்தின் காரண மாக ஏற்பட்ட பிளவுகளையும், பிரிவுகளையும் ஒன்று சேர்க்கும் பாலமாக இது செயல்படுகிறது. உங்களில் ஒருவரோ அல்லது இருவருமோ பாவம் செய்துவிட்டீர்கள். அது கணவன் மனைவியாகிய உங்களுக்கிடையே ஏற்கனவே பிளவை ஏற்படுத்திவிட்டது. நீங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்க ஆரம்பிக்கிறீர்கள். பாவம் உங்களைப் பிரித்து உங்கள் நெருக்க மான உறவை அழித்துவிட முயற்சிக்கிறது. ஆனால் நீங்கள் இருவருமாக சேர்ந்துதான் அந்த ஆபத்தை சந்திக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரே மாம்சமானவர்களானபடியால், உங்கள் பாவங்களைக் குறித்து நீங்கள் இருவருமே அக்கறைகொள்ள வேண்டும்.
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். நீங்கள் இதற்கு முன்னதாகவே பாவத்தோடு போராடியிருக்கிறீர்கள். பாவத்தை எப்படி மேற்கொள்வதென்று எங்கே எப்போது கற்றுக் கொண்டீர்கள்? சுவிசேஷம் உங்கள் பாவத்தை வெற்றி கொண்டதை நீங்கள் எப்போது முதன்முதலாக உணர்ந்தீர்கள்? நீங்கள் மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டபோது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவமன்னிப்பைப் பெற்ற சமயத்தில் பாவம் மேற் கொள்ளப்பட்டதை கற்று அறிந்தீர்கள். இப்போதும் கர்த்தர் எப்படி உங்கள் பாவங்களை மன்னித்தாரோ அதே போல நீங்களும் ஒருவர் பாவத்தை ஒருவர் மன்னிக்க வேண்டும். கர்த்தர் உங்கள் பாவங்களை மன்னித்தபோது என்ன ஆனது? நீங்கள் அவரோடு ஒப்புரவானீர்கள். கர்த்தர் உங்கள் பாவங் களை மன்னித்த விதத்தை கவனித்துப் பாருங்கள். அதேவிதமாக நீங்களும் உங்களுடைய துணையின் பாவத்தை மன்னியுங்கள். உங்கள் பரமபிதாவின் மாதிரியைப் பின்பற்றுங்கள்.
சுவிசேஷப் பரிமாற்றம் என்பது என்ன? சில சுவிசேஷப் பொருட்களைக் கொண்டு உங்கள் துணையோடுள்ள நெருக்கமான உறவை மீண்டும் புதுப் பித்துக்கொள்ளுதலாகும். உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிக்கிறதுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். நீங்கள் பாவமன்னிப்பை நாடி அவரிடம் போனபோது அவர் உங்களுக்கு என்ன செய்தாரோ அதையே நீங்களும் செய்யுங்கள். உங்களுடைய மனமாற்றத்தின்போது என்ன நடந்தது? உங்கள் பிதாவோடு நீங்கள் சுவிசேஷ ஒப்பந்தம் செய்துக் கொண்டீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உங்களுடைய பாவஅறிக்கையையும், மனந்திரும்புதலையும் பிதாவுக்கு முன்பாக சமர்ப்பித்தீர்கள். அவர் உங்களுக்கு மன்னிப்பின் ஆசீர்வாதங்களை அளித்து, தமது நித்தியமான அன்பை உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். சுவிசேஷம், பாவத்தை வெற்றி கொள்கிறதென்பதை தேவன் உங்களுக்குக் காண்பித்தார். அவர் உங்கள் பாவத்தை மன்னித்து, உங்களோடு ஒப்புரவானதினாலே பாவமானது சுவிசேஷத்தினால் வெற்றிகொள்ளப்பட்டதென்பதை நாம் காண்கிறோம். ஒப்புரவு ஆவது எப்படி என்பதை கடவுள் இவ்விதமாக உங்களுக்கு ஏற்கனவே கற்றுத் தந்திருக்கிறார். அவரது மாதிரியைப் பின்பற்றினவர்களாக, உங்கள் துணையோடுள்ள நெருக்கத்தை மீண்டுமாக புதுப்பித்து, ஒப்புரவாகுங்கள்.
பாவங்களை அறிக்கை செய்தல்
நாம் செய்யும் பாவங்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். இது ஒரு பெரிய சவால். ஏனென்றால் பாவமானது நம்மை வஞ்சிக்கும். அது நமது மனதைக் கடினப்படுத்தும். நமது கண்களைக் குருடாக்கும். ஆதியாகமம் 3ல் நாம் பார்க்கிற ஆதாமைப் போல நாம் குற்றத்தை வெகு சீக்கிரமாக மற்றவர் மீதுதான் சுமத்தப் பார்ப்போம். பாவம் நம்மை இப்படியாக வஞ்சிக்கிற படியால் நாம் நமது பாவங்களை வேதாகமத்தின் மூலமாக கண்டுபிடித்து அறிய வேண்டும். நமது இருதயத்தின் ஆழங்களில் மறைந்திருப்பதை வேத மாகிய அளவுகோலைக் கொண்டுதான் துல்லியமாக கணக்கிட்டு அறிய முடியும். வேதாகம அளவுகோல் என்பது, கடவுளின் கட்டளைகள், பத்து கட்டளைகள் ஆகும். முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் மூலமாகவும், அவரது முன்மாதிரியான நடக்கைகள், அவர் கற்பித்தவைகளின் மூலமாகவும் நமது பாவத்தை அறிந்து உணர முடியும். நமது நெருக்கத்துக்கு ஆபத்து விளைவிக்கும் பாவங்களை பகுத்தறிந்து அவைகளை மேற்கொள்வ தற்கு தாழ்மையையும், நல்மனசாட்சியையும் நம்மில் பெருகப்பண்ண வேண்டும். அதிக நாள் கடத்தாமல் சீக்கிரமாக சுவிசேஷப் பரிமாற்றங் களினால் செயல்படுவதற்கு நாம் எப்போதும் தயாராகவும் இருக்க வேண்டும்.
ஜனங்கள் எவ்வளவு உணர்வில்லாமலும், பாதிப்பில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள் என்பதை கண்டு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அதிலும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் இப்படி இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. பாவத்தைக் குறித்து கிறிஸ்தவர்களாகிய நமக்குத்தான் அதிகமான வெளிப்பாடு இருக்கிறது. ஆகவே நமது பாவங்களை கண்டு ணர்ந்துகொள்கிற அறிவும் நமக்கு அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? மற்றவர்களுடைய கண்களிலுள்ள தூசியை அல்ல, நமது கண்களிலுள்ள உத்தரத்தைக் காண்கிற அறிவு நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது. பாவம்தான் உங்களுடைய எதிரி என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் மனைவி பாவம் செய்யும்போது, அந்தப் பாவம்தான் உங்கள் எதிரியேயொழிய உங்கள் மனைவி அல்ல. பாவம் உங்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்போது அல்லது உங்களை வஞ்சிக்கும்போது அதை அடையாளங்காண கற்றுக்கொள்ளுங்கள். சுவிசேஷமாகிய பூதக்கண்ணாடியைக் கொண்டு உங்களை ஆராயுங்கள். பத்துக் கட்டளையாகிய தொலைநோக்கி கருவியினாலும் அதை தூரத்தி லேயே அடையாளங்கண்டு அதன் தாக்குதலுக்கு ஜாக்கிரதையோடு இருங்கள். பாவம் உங்களுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும். அது எப்போ தாவது சற்று தலையைத் தூக்கிப் பார்க்கும்போது, “இதோ, இது பாவகாரியம்” என்று அதற்கு முத்திரை குத்துங்கள்.
நீங்கள் உங்கள் பாவத்தை அடையாளங்கண்டதும் அதற்கு பொறுப் பேற்றுக்கொள்ளுங்கள். அது பாவந்தான் என்று நீங்கள் முத்திரை குத்தியதி னால் நீங்கள் அதை அறிக்கையிடுகிறவர்களாகிறீர்கள். கடவுள், பாவம் என்று கூறுகிற காரியத்தையே நீங்களும் ஆம் பாவம்தான் என்று ஒத்துக்கொள்ளு கிறீர்கள். ஒளிந்து கொண்டிருந்த பாவத்தை வசனத்தின் வெளிச்சத்திற்குள் நீங்கள் கொண்டு வரும்போது அதன் வல்லமையை மட்டுப்படுத்துகிறீர்கள். அதை நகரவிடாமல் பிடித்து விட்டீர்கள். சுவிசேஷத்தினாலும் கற்பனைகளி னாலுமான வெளிச்சத்திற்குள் வைத்து அந்தப் பாவத்தைப் பார்க்கும்போது, அது தன்னுடைய அவலட்சணமான, விகாரமான, அழிக்கும் தோற்றத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறீர்கள். பாவத்தின் அகோரமான தோற்றத்தை கண்டுகொண்டபின், கடவுளின் கிருபையினால் நீங்கள் அதை விட்டு விலகி, அதற்காக மனந்திரும்புகிறீர்கள். சாலமோன் வெகு ஞானமாய் சொல்லுகிறார்: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).
கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்திலே திறமைசாலிகளாய் இருக்க வேண்டும். இதை நாம் சரியாக செய்கிறவர்களாயிருக்க வேண்டும். ஜனங்கள் நம்மை “விசுவாசிகள்” என்று அழைக்கிறார்கள். ஆனால் நம்மை “மனந்திரும்புபவர்கள்” என்று அழைத்தார்களானால் அது இன்னும் சரியான பதமாகவும், நம்மை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கலாம். பாவத்தை உடையவர்களாய் இருப்பதும், அதை அடையாளங் காண்பதும், அதை ஒத்துக்கொள்வதும், அதை அறிக்கையிடுவதும், அதிலிருந்து மனந்திரும்புவதும் உண்மையான கிறிஸ்தவர்களின் விசேஷித்த தன்மையாயிருக்கிறது. கடவுளோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் மிகவும் அத்தியாவசியமாயிருக்கிறது. நாம் ஒருவரோடு நெருங்கின தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு அது மிகவும் தேவையான குணாதிசயமாகும். மனந்திரும்புதலையும் அறிக்கையிடு தலையும் தேவன் நமக்கு சுவிசேஷத்தின் மூலமாகத் தெரியப்படுத்தி யிருக்கிறார். நமது மனமாற்றத்திற்கும் அவர் அதையே கற்பித்தார். நாம் அவரில் விசுவாசமுள்ளவர்களாக, நமது வாழ்க்கைப் பாதையில் நடக்கையில் அவைகளையே தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி கட்டளையிடுகிறார். நாம் அவரோடு எப்படி நடந்துகொள்கிறோமோ அதேவிதமாக நாம் ஒருவரோ டொருவர் நடந்துகொள்ள கற்றுத் தருகிறார்.
மனந்திரும்பியதை மெய்யாக வெளிப்படுத்துதல்
அநேகருக்கு வேதாகமத்தின்படியான உண்மையான மனந்திரும்புதல் ஏற்படுவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். ஏதோ தவறு செய்துவிட் டோம் என்பதை உணர்வது, வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் வெளிப்படுத்து கிறதாய் இருக்கிறது. தவறு செய்ததற்கான காரணங்களைக் காண்பிப்பதோடு விட்டுவிடுகிறோம். நம்மை யாராவது புண்படுத்திவிட்டால் அவர்கள் உடனே என்ன சொல்லுவார்கள்? “மன்னித்துக்கொள்ளுங்கள்” என்பார்கள். அது ஒரு சாதாரண வாக்கியம். அவை தவறு செய்த நபரின் உணர்ச்சிகளை புண்பட்ட வருக்குத் தெரிவிக்கிற வார்த்தைகளே. நான் ஒரு தகப்பனாக என்னுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது, மனந்திரும்புதலை வெறும் வாய் வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மாத்திரம் போதாது. அது மற்றவரை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கும் என்பதை நமக்குள்ளாகவே உணர்ந்து பார்க்க வேண்டும். அந்த வலியை உணர்ந்தவர்களாக, மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறும்போது அது உண்மையான மனவேதனையை பிரதிபலிக்கும் வார்த்தையாக இருக்கும். ஆனால் நாம் எப்போதும் செய்த தவறின் கடுமையை உணராதவர்களாக வெறும் வாய்வார்த்தைகளால் மன்னிப்பைக் கேட்டுக்கொள் கிறோம். எவ்வளவு அர்த்தமில்லாமல் நாம் அந்த வார்த்தையை பயன்படுத்து கிறோம் என்பதை காண்பிப்பதற்காக, நான் சிலவேளைகளில் என் மகன், “மன்னியுங்கள்” என்று கூறும் போது நானும் பதிலுக்கு “எனக்குப் பசிக்கிறது” என்று கூறுவேன். அவன் தனது உணர்ச்சியை வெறுமனே வெளிப்படுத்தினான். நானும் அந்த நேரத்தில் பசியாயிருந்தபடியால் எனது உணர்ச்சிகளை அவனுக்குத் தெரிவித்தேன். இப்படி கூறுவது வெறும் உரையாடல் போன்றதுதான். மன்னியுங்கள் என்று கூறிவிடுவதால் அது பாவத்தை அறிக்கையிடுவதாகிவிடாது. மன்னியுங்கள் என்று சொல்ல வேண்டியதும் அவசியம்தான். ஆனால் அப்படி கூறுவது மாத்திரம் மனந்திரும்புதல் அல்ல. வெறுமனே தெரிவிப்பதற்கு மேலாக நமது செய்கை இருக்க வேண்டும். சுவிசேஷப் பரிமாற்றங்களை நாம் கடைப்பிடிக்கப் போகிறோமென்றால், வெறும் மன்னிப்பு கேட்பதைக் காட்டிலும் அதிகமானவைகளை செய்ய வேண்டும்.
மனந்திரும்புதலில் தவறை ஒத்துக்கொள்வதும் இருக்கிறது. வெறுமனே “மன்னியுங்கள்” என்று கூறுவதைக் காட்டிலும், “நான் பாவம் செய்து விட்டேன்” என்று கூறுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் பாவத்தை அறிக்கையிடுதலாகும். அதாவது கடவுள் எந்த பாவத்தையும் குறித்து என்ன கூறுவாரோ அதையே நாமும் கூறுவதற்கு ஒப்பாகும். நான் கடுமையான வார்த்தைகளை சொல்லும்போது அது என் இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகின்ற பாவம் என்பதையும், அது என் வார்த்தைகளில் இருக்கிற தென்பதையும் அடையாளங்கண்டுகொள்ள வேண்டும் (மத். 15:18-20). நான் எதனால் அப்படி நடந்து கொண்டேன் என்பதற்கு மனோதத்துவ ரீதியான ஆயிரம் காரணங்களைக் காட்டினாலும், என்னுடைய கடுமையான வார்த்தை களைக் குறித்து கடவுள் என்ன நினைக்கிறார் என்கிற கருத்து மாறாது. மற்றவர்களை காயப்படுத்தும் கடுமையான வார்த்தைகளை நான் கூறினால் நான் ஆறாவது கற்பனையை மீறுகிறவனாகிறேன். அங்கே என்னுடைய வார்த்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி கொலை செய்கிறேன். போதகராகிய என்னுடைய நண்பர் ஒருவரைப் பற்றிக் கூறினேனே. அவரைப் போலவே நானும் என் தவறுகளை அறிக்கையிட வேண்டியவனாகிறேன்: “நான் அந்தப் பெண்ணை பலமுறை என் இருதயத்திற்குள்ளாக கொலை செய்திருக்கிறேன்”. அது கொலையா? கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது உண்மை யாகவே கொலைக்கு சமானமா? ஒரு சாதாரண செயலுக்கு அளவுக்கதிகமாக விளக்கம் கொடுப்பது போல் இல்லையா? “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும் கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும் பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீண னென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்” மத். 5:21- 22. உன்னுடைய துணை துயரப்படும்படியான வார்த்தைகளை நீ உபயோகித் தாயானால் நீ ஆறாவது கட்டளையை மீறுகிறவனாய் காணப்படுவாய்.
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்” (கொலோ. 3:19) என்று பவுல் கட்டளையிடுகிறார். கசந்து கொள்ளுதல் என்கிற வார்த்தையானது கடுமையான, எரிச்சலான, இரக்கமற்ற, கொடூரமான ஆகிய அர்த்தங்களை உள்ளடக்கியது. இன்னொருவிதமாக சொன்னால் உன் மனைவியை கனவீனமாக நடத்தாதே. அவளுக்குக் கெடுதல் செய்யாதே. கசந்துகொள்ளுதலுக்கு எதிர்மாறானது அன்பு செலுத்துதல். “அப்படியே புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்க ளாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையை போஷித்துக் காப்பாற்று கிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்று கிறான்” எபே. 5:28,29. இதில் காணப்படுகிற அன்புக்கு எதிர்மாறானது பகை. கசந்துகொள்ளுதலின் ஒரு வடிவமே பகையாகும். பகையானது கொலைக்கு சமானமாகும். அதைத்தான் ஆதாம் ஏதேன் தோட்டத்திலே சொன்னான். ஏவாளை நோக்கி கைகளை நீட்டி, “நீர் மரணதண்டனை விதிக்க வேண்டுமானால் அதை அவளுக்கே விதிக்க வேண்டும்” என்றான். கடினமான சொற்கள் இருதயத்தை கொலை செய்யக் கூடியவையே.
பாவத்தை பாவம் என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதற்கு சாக்குப்போக்கு சொல்லவோ, நியாயப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள். பாவத்தைப் பிடித்து அதை இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் உட்படுத் துங்கள். என்னவிதமான தன்மை அதில் வெளிப்படுவதைக் காண்கிறீர்கள்? கசப்பும், கோபமும், காயப்படுத்துகிறதுமான வார்த்தைகள் கொலைகாரத் தன்மையை வெளிப்படுத்துகிறது. பாவத்தை மிகுந்த பாவமுள்ளதாக பார்ப்ப தற்கு கிருபையானது உதவி செய்வதோடு, பாவத்தை அறிக்கையிடவும் கிருபை உதவுகிறது. மனதின் கசப்பு வெறுப்பை வெளிப்படுத்துகிறது. வெறுப்பு கொலைக்கு சமானமாயிருக்கிறது. கொலை செய்வது பாவமாயிருக்கிறது. ஆகவே கசப்பு எதில் போய் முடியும் என்பதை உணர்ந்தவர்களாக அதை அறிக்கையிடுங்கள். கசப்பைக் குறித்து கடவுளின் கருத்து என்னவோ அதையே நீங்களும் ஒத்துக்கொள்ளுங்கள். அதை பாவமாகவே கடவுள் காண்கிறார். கடவுள் பாவத்தைப் பார்க்கும்பிரகாரமாகவே நாமும் பார்த்து அதை ஒத்துக் கொள்வதே அறிக்கையிடுதலாகும். உன்னுடைய பாவங்களைக் குறித்து கடவுள் என்ன சொல்கிறாரோ அதையே நீயும் ஏற்பவனாக இரு. கடவுளின் அளவுகோலின்படியும், அவருடைய பிரமாணத்தின்படியும் பாவங்களை அளந்து, அதை அவருடைய கட்டளைகளுக்கு மீறினதாக எண்ணு. நான் என் மனைவியின் மீது கோபத்தைக் காண்பிக்கையில் நான் கூறிய வார்த்தைகள் அவளை குற்றப்படுத்தி அல்லது விமர்சித்து இருந்தால் நான் அவளை இருதயத்தில் கொலை செய்தவனாகிறேன். ஆறாவது கற்பனையை மீறின பாவத்துக்கு நான் ஆளாகிறேன். அதைத்தான் கடவுளும் சொல்கிறார். அதை நான் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் பாவத்தை பாவமாகப் பார்க்க கற்றுக்கொண்டபடி யினாலே அதை ஒத்துக் கொண்டு, அதற்காக மனந்திரும்புகிறீர்கள். ஆகவே நீங்கள் இப்போது கிருபையினால், கோபம், எரிச்சல், சண்டை சச்சரவு ஆகிய குணங்களை நீக்கிவிட்டு, அன்பையும் இரக்கத்தையும் தரித்துக்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டீர்கள். மனந்திரும்புதல் என்பது முற்றிலுமாக எதிர்த்திசையில் திரும்பிவிடுவதைப் போன்றது. ஏதோ ஒன்றைக் களைந்துவிட்டு, வேறொன்றைத் தரித்துக்கொள்வது. ஒரு துர்க்குணத்தை நீக்கிப் போட்டுவிட்டு, அதற்கு எதிர்மாறான வேறொரு நற்குணத்தை ஏற்படுத்திக்கொள்வது. ஒரு காலத்தில் துர்க்குணம் வளர்ந்து கொண்டிருந்த விலையேறப்பெற்ற நிலத்திலே அதை வெட்டியெறிந்துவிட்டு, அதற்கு நேர்மாறான வேறொரு குணத்தை மனந்திரும்புதல் அங்கே விதைக்கிறது. மனந்திரும்புதலாகிய இந்த சுவிசேஷப் பொருளைத்தான் பாவம் செய்த தம்பதிகள் சுவிசேஷ ஒப்பந்த மேஜைக்குக் கொண்டுவந்து, அதைப் பரிமாறிக் கொள்வதின் மூலமாக தங்களுடைய மனமாறுதலை உறுதி செய்து கொண்டு, நெருக்கமான நிலையை அடைகிறார்கள்.
மன்னிப்பை அடைதல்
குற்றம் செய்தவன் மனந்திரும்புதலோடு, அறிக்கையிடுதலாகிய இன்னொரு சுவிசேஷப் பொருளையும் அந்த சுவிசேஷ மேஜைக்குக் கொண்டு வருகிறான். ஒருவன் தன்னுடைய பாவத்தை கடவுள் பார்க்கிறவிதமாகப் பார்த்து அதற்காக மனந்திரும்பி, வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு, “மன்னித்துக்கொள்” என்று சொல்கிறவனாக இராமல், தனது பாவத்தின் அகோரத்தை உணர்ந்தவ னாக தனது பாவத்தை மனந்திரும்புதலோடு அறிக்கை செய்து அதற்கு பிரதியீடாக வேறொரு சுவிசேஷப் பொருளை எதிர்பார்த்து நிற்கிறான். அவன் மன்னிப்பை வேண்டி நிற்கிறான். தன்னுடைய பாவங்களை சரியான வார்த்தைகளைக் கொண்டு தெரியப்படுத்துகிறான். தனது அறிக்கைக்குப் பதிலாக தனக்கு என்ன வேண்டுமென்பதையும் கேட்கிறான். அவனுக்கு வேண்டியது மன்னிப்பு. ஆகவே பண்டமாற்றுதல் போல கேட்கிறான்: “நான் என்னுடைய மனந்திரும்புதலையும், பாவ அறிக்கையையும் இதோ உனக்குக் கொடுக்கிறேன். அதற்கு பிரதியீடாக நீ எனக்கு மன்னிப்பைத் தா. மன்னிப் பாயா?” என வேண்டுகிறான்.
இப்போது இந்த பண்டமாற்றுதலே, பாவம் செய்யாத, காயப்படுத்தப் பட்டவர் தனது பங்கை நிறைவேற்ற வேண்டும். தனக்கு எதிராக பாவம் செய்தவருக்கு இவர் மன்னிப்பை வழங்க வேண்டும். பாவம் செய்தவர் மனந்திரும்புதலாகிய சுவிசேஷப்பொருளை சமர்ப்பித்துவிட்டார். அடுத்த நபர் அதைப் பெற்றுக்கொண்டு, மன்னிப்பாகிய மற்றொரு சுவிசேஷப் பொருளை பண்டமாற்றாக அவருக்குத் தர வேண்டும். கர்த்தர் மன்னிப்பை அளித்தது போலவே, இப்போது துயரப்பட்டவரும் மனந்திரும்பியவருக்கு மன்னிப்பளிக்க வேண்டும்.
மன்னிப்பவரும் உள்ளத்தால் உணராமல் ஏனோதானோவென மன்னிப் பளிக்கக் கூடாது. நாம் முதன்முதல் பரமபிதாவிடம் நமது பாவங்களுக்காக மன்னிப்பைக் கேட்டு வந்தபோது அவர் எவ்விதமாக நம்மை மன்னித்தாரோ அதேவிதமாக நமது துணையை மன்னிக்கிறவர்களாயிருக்க வேண்டும். பிதா என்ன செய்தார்? நம்மை மன்னித்தார். அவர் வெறுமனே நமக்காக பரிதாபப் பட்டு மன்னித்துவிடவில்லை. அதற்கான சில நடவடிக்கைகளை நிறைவேற்றி னார். இயேசு கிறிஸ்துவானவர் சிலுவையிலே செய்துமுடித்த பணியின் அடிப்படையிலே அவர் நமது பாவங்களை மன்னிக்கச் சித்தமானார். இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தை நமது பாவங்களில் பிரயோகித்து, தமது அன்பின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்தி, அதன் மூலமாக நமக்கு பல வாக்குத்தத்தங்களையும் கொடுத்தார். இயேசுவின் தியாகம், பிதாவின் உக்கிரகோபத்தைத் தணிக்கிற கிருபாதார பலியாயிற்று. நமது பாவங்களுக் கான தண்டனையை பிதாவானவர் இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் ஒரே தடவையாக கொடுத்துவிட்டார். நாம் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற படியால், பிதாவானவர் நம்மையும் தமது குமாரனைப் போலவே நேசித்து, அதினால் குமாரனை மகிமைப்படுத்துகிறார். கிறிஸ்துவின் நிமித்தமாக, கிறிஸ்து வில் விளங்கும் அவருடைய மகிமையின் நிமித்தமாக அவர் தமது உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பி, கிருபையையும், மன்னிப்பையும் நமக்கு அருளு கிறார். அவரது அன்பின் உடன்படிக்கையின் காரணமாக, அவர் நம்மை நமது பாவங்களுக்கு ஏற்ற விதத்தில் நடத்தாமல், கிறிஸ்துவின் நீதியினாலும், அவரது மகிமையினாலும் நம்மை கிறிஸ்துவுக்குள்ளானவர்களாக நடத்து கிறார். கிறிஸ்துவுக்காக, பிதா நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
நாமும் அதேவிதமான சுவிசேஷ அன்பை பிரயோகிக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளாக பிதா நம்மிடம் காண்பிக்கிற அதேவிதமான அன்பி னாலே, பிதாவுக்குக் கீழ்ப்படிந்த பிள்ளைகளாக, மன்னிப்பை வேண்டுகிற நமது துணைக்கு நாம் சுவிசேஷ அன்பை செலுத்த வேண்டும். நான் என் மனைவியை மன்னிக்கும்போது, நான் எனது சொந்த அன்பைக் காண் பிக்காமல், கடவுளின் அன்பையே அவளுக்குக் காண்பிக்கிறவனாகிறேன். அது என் பெற்றோரிடமிருந்தோ, பள்ளியிலிருந்தோ கற்றுக்கொண்ட அன்பு அல்ல. இயற்கையாக என்னிடத்தில் இருக்கிற அன்பும் அல்ல. என்னுடைய பிதாவாகிய தேவன், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக என்னிடத்தில் காண்பித்த அன்பையே நானும் அவளிடம் காண்பிக்கிறேன். அது கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நான் எங்கே பெறுவது? கிறிஸ்துவின் சிலுவையண்டையில் நான் கடவுளின் அன்பைப் பெறுகிறேன். நான் என் மனைவியை மன்னிக்க வேண்டுமானால், சிலுவைக்குச் செல்ல வேண்டும். அங்கேதான் கிறிஸ்து பாவத்தை வெற்றி கொண்டார். எங்களுடைய திருமண நெருக்கத்துக்கு பங்கம் விளைவிக்கிற எந்த பாவத்தையும் நான் சிலுவைக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். சிலுவையின் மூலமாக, பாவிகள் மீது இயேசு கிறிஸ்து காண்பித்த அன்பை நான் நோக்கிப் பார்த்து, விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தவனாக, நான் அந்த விதமான சுவிசேஷ மன்னிப்பை எனது துணைக்கு வழங்க வேண்டும். நானே ஒரு மன்னிக்கப்பட்ட பாவிதான். நம்மையும் மன்னிக்கும்படி இயேசு கட்டளையிட்டிருக்கிறார். அதற்குக் கீழ்ப்படிந்தவனாக, நான் கிறிஸ்துவின் சுவிசேஷ அன்பின் மூலமாக எனது துணையின் பாவங்களை மன்னிக்கிறேன். அப்படி மன்னிக்கையில், இயேசுவின் சீஷர்களாகிய நாங்கள் இருவருமாக சேர்ந்து, சுவிசேஷ அன்பின் வல்லமையினாலே பாவத்தை மேற்கொள்ளு கிறவர்களாகிறோம். பாவமானது நமக்கல்ல, கடவுளுக்குத்தான் விரோதமாக செயல்படுகிறது. கடவுள்தான் பாவத்தை அழித்து வெற்றிகொள்ள வேண்டும். சுவிசேஷ அன்பைத் தரித்துக் கொண்டவர்களாக நாம் கடவுளின் கையிலே ஆயுதங்களாக இருக்கிறோம். நமது நெருக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கிற பாவத்தை தேவன் நம்மைக் கொண்டே மேற்கொள்ளுகிறார். நாம் கடவுளை விசுவாசித்து அவருடைய சுவிசேஷத்துக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழ்ந்து வருகையில், அவரது வல்லமையுள்ள செயலானது நமக்குள்ளே இருந்து, நெருக்கத்துக்கு ஆபத்தை விளைவிக்கிற பாவங்களை மேற்கொள்ள வைக்கிறது. புதுவாழ்வை அடைந்த மாதிரியான ஓர் அன்பின் அனுபவத்திற்குள் அது நம்மை அழைத்துச் செல்கிறது.
நாம் இயேசுவின் சீஷர்களாயிருந்தால் மன்னிக்கிறவர்களாய் இருக்க வேண்டுமென அவர் சொல்லுகிறார். “உங்களைக் குறித்து எச்சரிக்கையா யிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால் அவனைக் கடிந்துகொள். அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழு தரமும் உன்னிடத்தில் வந்து, நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால் அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்” லூக். 17:3,4. இயேசு கிறிஸ்து இதை ஓர் எச்சரிப்பாகக் கூறியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். இந்த விஷயத்தில் நாம் சாத்தானால் தாக்கப்படுவோம் என்பதால் அவர் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுகிறார். உன்னிடம் நெருக்கமாக வந்து பழகுபவர்கள் உனக்கு விரோதமாக ஒரே நாளில் ஏழுதரம்கூட குற்றஞ்செய்யக்கூடிய ஆபத்து இருக் கிறது. இவ்விடத்தில் இயேசு கிறிஸ்து திருமண உறவைப் போன்ற ஒரு நெருக்க மான உறவையே குறிப்பிடுகிறார். மிக நெருங்கிப் பழகும்போது திரும்பத் திரும்ப பாவம் இடைப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அப்படியானால், சுவிசேஷப் பரிமாற்றங்களையும் அடிக்கடி செய்ய வேண்டியிருக்கும்.
குற்றஞ்செய்தவன் மனஸ்தாபப்பட்டால். அவன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒப்பந்தமேஜைக்கு வந்து: ‘நாம் சுவிசேஷப் பரிமாற்றம் செய்துகொள்ளும்படி உன்னை அழைக்கிறேன். சுவிசேஷப் பொருள்களை நம்மிடையே பண்ட மாற்றம் செய்துகொள்ளலாம். நான் எனது பாவத்தை அறிக்கையிட வந்திருக் கிறேன். நான் மனஸ்தாபப்படுகிறேன். நான் உனக்கு விரோதமாகப் பாவம் செய்ததை அறிந்திருக்கிறேன். என்னோடு சுவிசேஷப் பொருட்களைக் கொண்டு சுவிசேஷப் பரிமாற்றம் செய்ய அழைக்கிறேன். நான் எனது மன்னிப்பை வேண்டுகிறேன். நீ மன்னிப்பைக் கொடுப்பாயா?’ என்று கேட்க வேண்டும். குற்றஞ்செய்தவன் அப்படி கேட்டுவிட்டானென்றால் நீ அவனோடு சுவிசேஷப் பரிமாற்றம் செய்துதான் ஆக வேண்டும். ஒரே நாளில் ஏழுமுறை அவன் அப்படி அழைத்தானென்றாலும் நீ அதை சந்திக்கத்தான் வேண்டும். அவன் தனது மனந்திரும்புதலை உனக்கு வெளிப்படுத்தினான் என்றால் நீ பதிலுக்கு அவனை மன்னிக்கத்தான் வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
(பாகம் 2 அத்தியாயம் 8ன் தொடர்ச்சி அடுத்த இதழில் வரும்)