திருமறைத்தீபம் 2010 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. பிரசங்கம் தயாரித்தல்
3. வேதப் பொருளுரை விளக்கம்
4. பிரியாவிடை பிரசங்கங்கள் -3-
5. தாம்பத்திய உறவில் நெருக்கம்
வாசகர்களே!
இன்னுமொரு இதழை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்க கர்த்தர் எங்களுக்குத் துணை செய்திருக்கிறார். இந்த இதழில் பிரசங்கம் தயாரிப்பது பற்றி சகோதரர் ஸ்டீபன் பேர்ட் ஓர் ஆக்கத்தை வரைந்திருக்கிறார். பிரசங்கம் செய்கிறவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அத்தோடு பிரசங்கத்தை தயாரிப்பதற்கு முன் ஆரம்ப வேலையாக வேத வசனங்களைப் பிரித்து ஆராய்ந்து அவற்றின் பொருளை அறிந்துகொள்ள எடுக்க வேண்டிய முயற்சியாகிய வேதப் பொருளுரை விளக்கம் பற்றிய ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். அது உங்களை சிந்திக்க வைக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பிரசங்கம் செய்வதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்ற எல்லோருமே அதனைத் தயாரிப்பது இலகுவானதல்ல என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதற்காக அதிக நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். அதை செய்யும் மனப்பான்மை அநேகருக்கு இல்லாமலிருப்பது வருத்தமே. இந்த ஆக்கங்கள் உங்களை கர்த்தருக்கு முன் விசுவாசத்தோடு உழைக்க வைக்க உதவுமானால் அது எங்களுக்கு அதிக மன சந்தோஷத்தை அளிக்கும்.
தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் போதகர் மார்டினுடையதும், போதகர் அலன் டன்னுடையதும் ஆக்கங்கள் உங்களுக்கு பயன்தரும். குடும்பத்தைப் பற்றிய அலன் டன்னின் ஆக்கம் பயனுள்ளதாக இருக்கிறது என்று சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இவை இரண்டும் தொடர்ந்து உங்களை சபை பற்றியும், குடும்பம் பற்றியும் சிந்தித்து செயலாற்ற வைக்கட்டும்.
பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ந்து இதழ்களை வாசித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி கண்டு வரும் வாசகர்களுக்கெல்லாம் உங்களுடைய ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறோம். சத்தியத்தில் தெளிவான அறிவைப் பெற்று அதில் வளர்ந்து கர்த்தருக்கு நீங்கள் விசுவாசமாக வாழ்ந்து பணி செய்ய உதவுமுகமாகவே இந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்தப் பணியைத் தளராது செய்துவர எங்களுக்கு உதவும் தேவனுக்கு எல்லா மகிமையும் சேர வேண்டும் என்பதே எங்களுடைய இதய வாஞ்சை.
இந்த இதழைக் குறுகிய காலத்தில் முடித்து அச்சுக்கூடத்துக்கு அனுப்ப உதவியவர்களுக்கு என் நன்றிகள். அதேநேரம் ஸ்ரீலங்காவில் பலவருடங்களாக இதை நல்லமுறையில் அச்சிட்டு அங்கே விநியோகித்து உதவுகின்ற நண்பர்களையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. காலங்கள் கடுமையானதாக இருக்கின்றன. நம் எதிரியான பிசாசின் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் தளர்வதாக இல்லை. நம் பணியோ பெரிதாக இருக்கிறது. பாதையும் நீண்டதாக இருக்கிறது. கர்த்தரின் வருகையின் நாள் மனதில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. இருக்கப் போகின்ற குறுகிய காலத்தில் நல்ல மனச்சாட்சியோடு கர்த்தருக்குச் சாட்சியாக வாழ்ந்து, உழைத்து அவர் பாதம் சேர தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவட்டும். - ஆசிரியர்.
பிரசங்கம் தயாரித்தல்
(Dr. Stephen Byrd)
- ஸ்டீபன் பேர்ட் -
உள்ளூர் சபையொன்றில் போதகராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எத்தனையோ ஊழியப் பணிகள் இருக்கும். அந்தப் பணிகளில் அதிமுக்கியமான பணி உங்களுடைய மக்களுக்குத் தேவையான போதனைகளை அளிக்கும் பிரசங்கங்களைத் தயாரிப்பது. பிரசங்கம் தயாரிக்க உதவும் நூல்கள் அதிகமாக இல்லாமலும், வேறு வசதிக்குறைவுகளும் இருந்த போதும் ஆத்துமாக்களுக்கு அவசியமான பிரசங்கங்களை நீங்கள் தயாரித்தளித்தே ஆக வேண்டும். பின்வரும் வேத வாக்கியங்களைக் கவனியுங்கள்:
“நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண்டும்” (1 தீமோ. 5:17).
“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2 தீமோ. 2:15).
“சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லு” (2 தீமோ. 4:2).
இந்த வசனங்கள் மிகத் தெளிவாக உங்களுடைய அதிமுக்கியமான பணி வேதத்தைக் கவனத்தோடு வாசித்து எல்லா சந்தர்ப்பங்களிலும் சபை ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்று விளக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட வேத வசனங்களிலிருந்து எப்படி பிரசங்கத்தைத் தயாரிப்பது என்பதை இந்த ஆக்கத்தில் நான் விளக்க விரும்புகிறேன்.
பிரசங்கம் தயாரிப்பதில் முதலாவது படி வேதத்தைப் படிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் போதுமான நேரத்தை ஒதுக்குவதுதான். வேறு எந்தப் பணியோ அல்லது வேலையோ இந்த நேரத்தைக் கெடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுவது அவசியம். உங்களுக்கு ஊழியத்தில் வேறு எத்தனையோ முக்கிய காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் வேதத்தை வாசிப்பதும், படிப்பதும் உங்களுடைய எல்லாப் பணிகளிலும் அதிமுக்கியமான பணி. அப்போஸ்தலர் 6ம் அதிகாரத்தில் கிரேக்க விதவைகளின் உணவுத் தேவையைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசியம் அப்போஸ்தலர்களுக்கு ஏற்பட்டதாக வாசிக்கிறோம். அதைச் செய்ய அப்போஸ்தலர்கள் ஜெபத்திற்கும், வேதப்படிப்புக்கும் ஒதுக்கியிருந்த நேரத்தைக் கொடுக்க
வேண்டியதாக இருந்தது. அப்போஸ். 6:2ல் பேதுரு, “தேவவசனத்தைப் போதியாமல் பந்தி விசாரணை செய்வது தகுதியல்ல” என்றார். இந்தப் பகுதியில் இருந்து நாம் தெரிந்துகொள்ளும் முக்கிய உண்மை என்னவென்றால், விதவைகளுடைய தேவையைத் தீர்த்துவைக்கும் தேவையேற்பட்டபோது அப்போஸ்தலர்கள் ஜெபத்திற்கும், வேதப்படிப்புக்கும் கொடுக்க வேண்டியிருந்த நேரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இருந்தபோதும், வேதப்படிப்புக்கு அவர்கள் முக்கிய இடம் கொடுக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாகத்தான் பேதுரு, தகுதியுள்ளவர்கள் விதவைகளின் தேவையைக் கவனிக்க நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 6:4ல், “நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப் போம்” என்றார். இந்த முடிவின் காரணமாக “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.” உங்களுடைய மிக முக்கியமான பணி, உங்களுடைய நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயலும் வேறெந்தப் பணியையும்விட ஜெபிப்பதும், வேதத்தைப் படிப்பதும், பிரசங்கிப்பதும் தான் என்பதை இந்த வேதப்பகுதி தெளிவாக விளக்குகிறது.
படிப்பதற்குக் தேவையான நேரத்தை ஒதுக்குவதற்கான தகுந்த வழி படிப்பதற்கு அவசியமான ஒரு திட்டத்தை வகுத்துக்கொள்ளுவதுதான். படிப்பதற்கும், வேறு பணிகளைச் செய்வதற்கும் உதவும் வகையில் ஒரு வாரத்திற்கான திட்டத்தை வகுத்துக் கொண்டால் கடைசி நேரத்தில் படிப்பதற்கும், பிரசங்கத் தயாரிப்புக்கும் நேரத்தைத் தேடி அலைந்து தவிக்க வேண்டிய அவசியமிருக்காது. உதாரணமாக, திங்கட்கிழமை காலையில் வேதத்தைப் படிக்கவும், பிரசங்க வசனத்தைப் படிக்கவும் அவசியமான நேரத்தை ஒதுக்கி அந்த வாரத்திற்கான ஒரு திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றினால் ஞாயிற்றுக்கிழமை வருமுன்பே பிரசங்கங்களை வசதியாகத் தயாரித்துக் கொள்ள முடியும். அத்தோடு அந்த வாரத்தில் செய்ய வேண்டிய ஏனைய போதகப் பணிகளான தனி ஜெபம், போதக ஆலோசனை, ஆத்துமமேற்பார்வை, ஜெபக் கூட்டத்திற்காக தயாராகுதல் போன்ற பணிகளுக்குமான நேரத்தையும் வகுத்து ஒதுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு போதகர் (எட்வர்ட் டொனலி) ஒரு வாரத்தில் பிரசங்கம் தயாரிப்பதற்கு பத்து மணி நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும்படி ஆலோசனை தருகிறார்.
உங்களுடைய ஒரு வாரத் திட்டத்தை எல்லா சந்தர்ப்பத்திலும் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகலாம். இருந்தபோதும், இத்தகைய திட்டம் உங்களுடைய பணிகளில் அதிமுக்கிய பணிகளுக்கு தகுந்த நேரத்தைக் கொடுத்து தனிப்பட்ட முறையிலும், குடும்பத் தேவைகளையும், சபைப் பணிகளையும் நிறைவேற்றி வர துணை செய்யும். வழமையாக ஒவ்வொரு வாரத்திலும் பிரசங்கத் தயாரிப்புக்கான நேரம் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம் என்பதை நீங்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
பிரசங்கத் தயாரிப்பில் இரண்டாவது படி, பிரசங்கத்தைத் தயாரிப்பதற்காக நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள வசனம் அல்லது வேதப் பகுதியை ஜெபத்தோடு சிந்திப்பதாகும். மேலே பார்த்தது போல் நீங்கள் ஒரு வாரத்திற்கான திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தால் எவ்வளவு நேரத்தை இதற்குக்
கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதை இதற்காகப் பயன்படுத்த முடிந்திருக்கும். வேத வசனத்தை வாசித்து சிந்திக்கும்போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அதில் வெளிச்சத்தைக் கொடுக்க நீங்கள் ஜெபிக்க வேண்டியது அவசியமாகும். பிரசங்கத் தயாரிப்புக்கு முன்பாக உதாரணமாக சங்கீதம் 119ஐப் பயன்படுத்தி ஒரு சுருக்கமான ஜெபத்தோடு அதை நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த சங்கீதம் வேதத்தை விளங்கிக் கொண்டு, அதை விசுவாசித்து, அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கான பல ஜெபங்களை உள்ளடக்கிய முக்கியமான சங்கீதமாக இருக்கிறது.
அதற்குப் பிறகு பிரசங்கத் தயாரிப்பைத் தொடருகிறபோது நீங்கள் ஆவியானவர் வசனத்தில் அதிக வெளிச்சத்தைத் தர ஜெபிக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் வசனங்களைத் தந்தவர் அவரே. அதை விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறபோது அதற்கான விளக்கத்தை அளிக்கிறவர் பரிசுத்த ஆவியானவரே (2 தீமோ. 3:16-17). சங்கீதம் 119:18ல் இருப்பதைப் போல உங்களுடைய ஜெபம், “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும் படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” என்பதாக இருக்க வேண்டும். அத்தோடு, உங்களுடைய சபை ஆத்துமாக்களுக்காகவும் இந்த வேளையில் நீங்கள் ஜெபிக்க வேண்டும். வசனத்தைப் பிரசங்கத்திற்காகக் தயாரிக்கும்போது உங்களுடைய சபை மக்களின் பெயர்கள் உங்கள் மனதில் தோன்றலாம். பரிசுத்த ஆவியானவர் வசனத்தை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமாறு செய்ய நீங்கள் இந்நேரத்தில் ஜெபித்துப் பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டும்.
பிரசங்கத் தயாரிப்பில் மூன்றாவது படி, பிரசங்கிப்பதற்காக எடுத்துக் கொண்டிருக்கும் பகுதியை படித்து விளங்கிக்கொள்ளுவதற்கான ஒரு திட்டத்தைக் கையாளுவதுதான். இதைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்:
- எப்போதுமே வேதப் புத்தகத்தில் ஒரு நூலைத் தெரிந்தெடுத்து அதிலிருந்து தொடர்ச்சியாகப் பிரசங்கம் செய்வது நல்லது. நீங்கள் இளம் பிரசங்கியாகவும், புதிதாக போதக ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவருமாக இருந்தால் வேதத்தில் இலகுவான நூல்களைத் தெரிந்து அவற்றில் இருந்து பிரசங்கிக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவும் அந்நூல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களைக் கொண்ட ஒரு வசனப்பகுதியை எடுத்துப் பிரசங்கிப்பது பிரயோஜனமாயிருக்கும். ஒரு வார்த்தையை அல்லது வசனத்தை மட்டும் எடுத்துப் பிரசங்கிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அத்தோடு, ஒரு நூலைத் தொடர்ச்சியாக வாரா வாரம் பிரசங்கிக்க வேண்டும். இங்கும் அங்குமாக பகுதிகளை அதிலிருந்து எடுத்துப் பிரசங்கிக்கக் கூடாது. வாரா வாரம் இங்கும் அங்குமாக இருந்து வசனங்களை எடுத்துப் பிரசங்கிப்பது கவர்ச்சியாக தென்பட்டாலும், தொடர்ச்சியாக ஒரு நூலில் இருந்து பிரசங்கிப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. தொடர்ச்சியாக பிரசங்கிக்கும்போது சபை மக்கள் அந்த நூலில் காணப்படும் சத்தான போதனைகளில் ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ள முடிவதோடு, அந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பல பயன்பாடுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த முறையில் பிரசங்கிக்கும்போது, போதகராகிய நீங்களும் கட்டுப்பாட்டோடு
சபை மக்களுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக அந்த நூலில் காணப்படும் சத்தியங்களை உள்ளது உள்ளபடியே பிரசங்கிக்க முடியும். மேலும், இந்த முறையில் பிரசங்கம் செய்யும்போது ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக பிரசங்க வசனங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது.
- மேலே பார்த்ததுபோல் ஒரு நூலில் இருந்து தொடர்ச்சியாக பிரசங்கிக்காமலிருக்கும்போது பிரசங்க வசனத்தைத் தேடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உங்களுடைய வேத தியானத்தில் உங்களுக்கு பயனளித்த வசனப் பகுதியையோ அல்லது உங்களுடைய சபை ஆத்துமாக்களுடைய தேவைகளை சந்திக்கக் கூடிய ஒரு பகுதியையோ பிரசங்கிக்க தெரிந்துகொள்ளுவது நல்லது. அத்தோடு, ஒவ்வொரு வாரமும் பிரசங்கித்த பகுதிகளை ஒரு குறிப்பேட்டில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரே விஷயத்தைப் பற்றி அடிக்கடி பிரசங்கிக்கும் ஆபத்தைத் தவிர்க்க முடியும். மேலும், அநதக் குறிப்பிலிருந்து எல்லா முக்கிய போதனைகளையும் பிரசங்கத்தில் கொடுத்திருக்கிறோமா என்பதையும் ஆராய்ந்து பார்த்துக்கொள்ள முடியும்.
- பிரசங்கத்திற்கான பகுதியை தெரிந்துகொண்டபின் அந்தப் பகுதியை சரியாகப் புரிந்துகொள்ள மிகுந்த மனத்தாழ்மையை அளிக்குமாறு கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். அதற்குக் காரணம், நம்முடைய சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் வேதமென்ற பெயரில் தவறாகப் பிரசங்கித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இந்த இடத்தில் நமக்கு சங்கீதக்காரன் 25:4-5 வரையுள்ள வசனங்களில் விளக்கும் மனப்பான்மை வேண்டும், “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.” எத்தகைய மனிதனுக்கு புரிந்துகொள்ளும் தன்மையை கர்த்தர் கொடுக்கிறார் என்பதை ஏசாயா 66:2ல் விளக்குகிறார், “சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.” இந்த வசனங்கள் வேத வசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள எந்தளவுக்கு பிரசங்கிக்கிறவனுக்கு மனத்தாழ்மை மிக அவசியம் என்பதை உணர்த்துகின்றன.
- பிரசங்கத்திற்கான வேதப்பகுதியைத் தீர்மானித்த பிறகு அந்தப் பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும். இதற்காக அந்தப் பகுதி அமைந்துள்ள முழு அதிகாரத்தையும் அல்லது முழு நூலையுமே வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கும். இதை சில தடவையாவது செய்ய வேண்டும். இப்படி வாசிக்கின்றபோது பிரசங்கப் பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பம் பற்றிய விஷயங்களையும், அந்தப் பகுதியில் இருந்து வரும் முக்கிய பயன்பாடுகளையும் ஒரு தாளில் குறித்துக்கொள்ள வேண்டும். அத்தோடு, பிரசங்கப் பகுதி பற்றி வேதத்தின் ஏனைய நூல்களில் ஏதும் சொல்லப்பட்டிருக்கின்றதா என்பதையும் ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்கிறபோது பிரசங்கப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயத்தைப் பற்றி வேதம் முழுவதும் என்ன சொல்
கிறது என்பதை நீங்கள் ஆராய்கிறீர்கள். இதிலிருந்து வேத போதனைகள் அனைத்தையும் கர்த்தர் ஒரே நேரத்தில் தந்துவிடாமல் படிப்படியாகத் தந்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வேதப்பகுதியும் முழு வேதத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சேலையில் இருக்கும் ஒவ்வொரு நூளுக்கும் அந்த சேலையில் இருக்கும் அத்தனை நூள்களோடும் தொடர்பிருக்கிறது. பிரசங்கப் பகுதியைத் தொடர்ந்து வாசிக்கிறபோது முக்கியமாக அந்தப் பகுதிக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்காமல் இருக்கக்கூடாது. அதிலிருந்து கிறிஸ்துவில் இருக்கும் விசுவாசத்தைப் பற்றியோ அல்லது போதனை பற்றியோ அல்லது கீழ்ப்படிவு பற்றியோ பிரசங்கப்பகுதி எதைப் போதிக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்துவோடு தொடர்புபடுத்தி எந்தப் பகுதியையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
- பிரசங்க பகுதியை அதன் மூல மொழியில் வாசித்துப் பார்க்க வேண்டும். இதை செய்யக்கூடிய அளவுக்கு வாசகர்களில் அநேகருக்கு எபிரெய, கிரேக்க மொழிப் பாண்டித்தியம் இல்லாமலிருக்கலாம். ஆகவே, எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆங்கில வேதம் இங்கே உங்களுக்கு துணை செய்யக்கூடும். இதற்குக் காரணம் பிரசங்கப் பகுதியைத் தெளிவாக விளங்கிக்கொள்ள இது உதவும். ஒத்தவாக்கிய அகராதியைப் (Concordance) பயன்படுத்தி பிரசங்கப் பகுதியிலிருக்கும் வார்த்தைகளின் சரியான பொருளை ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
- அடுத்ததாக, பிரசங்கப் பகுதி அமைந்திருக்கும் நூலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நல்ல வேதவியாக்கியான உரையொன்றை (Commentary) வாசிப்பது அவசியம். இந்த முறையில் ஒரு வேதவியாக்கியான விளக்கவுரையை வாசிக்கின்றபோது நீங்கள் ஏற்கனவே ஆராய்ந்து தெரிந்துகொண்ட விஷயங்களைப் பற்றி ஏனைய விசுவாசமுள்ள வேத அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். அத்தோடு நமக்கு முன்பு வாழ்ந்து கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட போதகர்கள் அது பற்றி சொல்லியிருக்கும் விளக்கங்கள் நாம் தவறான விளக்கங்களை அளித்துவிடாமலிருக்கவும் நமக்கு உதவி செய்யும். புதிது புதிதாக வேதவசனங்களுக்கு அர்த்தம் கண்டு பிடிக்கும் வழக்கத்தை அடியோடு தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேதவியாக்கியான விளக்கவுரைகளைப் பயன்படுத்துவது நன்மை தரும். அதேவேளை, அவை வேதமாகிவிடாது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அவற்றிலும் தப்பான கருத்துக்கள் இருந்துவிடலாம். ஒரு வேத வியாக்கியான விளக்கவுரையாளர் தந்திருக்கும் கருத்தோடு முரண்பட நமக்கு உரிமை உண்டு. நாம் மிகவும் மதிக்கின்ற ஜோன் கல்வினின் பல போதனைகளை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால், ஞானஸ்நானம் பற்றிய அவருடைய போதனையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதுவரையும் நாம் பார்த்து வந்திருப்பவை பிரசங்க வசனப்பகுதியை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கான நடவடிக்கைகள். இதற்கு ஆங்கிலத்தில் Exegesis என்று பெயர். வேதவசனப்பகுதியை எழுத்துப்பூர்வமாக
விளங்கிக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் என்று இதனை விளக்கலாம். பிரசங்கத்தைத் தயாரிப்பதில் இதற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்.
பிரசங்கம் தயாரிப்பதில் ஐந்தாவது படி, பிரசங்கத்தை முறையாக எழுதுவதாகும். இதுவரை நான் சொன்னவற்றை வாசித்து நீங்கள் சந்தோஷமடைந்திருக்கலாம். வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், சிந்திப்பதிலும் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கலாம். ஆனால், பிரசங்கத்தை முறையாக எழுத்தில் வடிப்பது என்பது இலகுவானதல்ல. ஆகவே, அதை நீங்கள் அலட்சியம் செய்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. எழுதுவதென்பது கடினமானதுதான். ஆனால், அது மிகவும் முக்கியமானது. இதைச் செய்யும்போது நீங்கள் ஆவியின் துணை யோடு அக்கறையோடு கூடிய கடின உழைப்பில் வளர முடியும். அத்தகைய கடினமான உழைப்பு உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும், சபை ஆத்துமாக்களுடைய வாழ்க்கையிலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் (1 தீமோ. 4:16).
பிரசங்கத்தை எழுத ஆரம்பிக்கும்போது ஏற்கனவே பிரசங்க வசனப் பகுதியை ஆராயும் போது எடுத்துள்ள குறிப்புகளோடு ஆரம்பிக்க வேண்டும். அந்தக் குறிப்புகளை மறுபடியும் வாசித்துப் பார்க்க வேண்டும். அதன்பிறகு அந்தக் குறிப்புகளை முக்கிய தலைப்புகளுக்குள் கொண்டு வர வேண்டும் (Write out an outline). சில பிரசங்க வசனப்பகுதிகளின் போதனையை ஒரே வசனத்தில் எழுதி விளக்கமுடியும். எல்லா வசனப்பகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்காததால் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற விதத்தில் அதற்கான படிமுறைத் தலைப்புகள் இருக்க வேண்டும். வரலாற்றுப் பகுதி, சங்கீதப் பகுதி, சுவிசேஷ நூல்கள் என்று வித்தியாசமான இலக்கிய வகைகளில் வேதம் அமைந்திருக்கிறது. அவற்றிற்கேற்ற விதத்தில் நமது பிரசங்கக் குறிப்புகள் அமைய வேண்டும். இப்போது நான் விளக்கிக்கொண்டிருக்கும் நடவடிக்கையின்படி பிரசங்க வசனப்பகுதியின் முக்கிய போதனைகளை நீங்கள் தெளிவான சில குறிப்பிட்ட தலைப்புகளில் எழுதிக்கொள்ளப் போகிறீர்கள்.
பிரசங்க வசனப்பகுதியின் முக்கிய போதனைகளை நீங்கள் எழுதிக் கொண்டபின் அவற்றை மேலும் விளக்குமுகமான முக்கிய வார்த்தைகள் மூலம் அவற்றை விளக்கியும், அந்த விளக்கத்தை வலிமைபெறும்படிச் செய்யும் வேத ஆதாரங்களை வேறு பகுதிகளில் இருந்து தர வேண்டும். உதாரணமாக 1 தெசலோ. 2:10-12க்கான கீழ்வரும் குறிப்பை கவனியுங்கள்.
தலைப்பு 1: தெசலோனிக்கேயாவில் பவுலும் அவரைச் சார்ந்தவர்களும் ஊழியம் செய்த முறை
1. கடமைப் பொறுப்போடு - தங்கள் பணியை கருத்தோடு செய்தார்கள். அப். 20:28
2. நீதியான முறையில் - கர்த்தரின் நீதிச் சட்டத்தையும் கட்டளைகளையும் பின்பற்றினார்கள்.
3. குற்றமில்லாதவர்களாக - அவர்கள் மேல் ஒருவரும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர முடியவில்லை.
தலைப்பு 2: பவுலினுடையதும் அவரைச் சார்ந்தவர்களினுடையதும் பேச்சு.
1. போதனை - மக்களுடைய கடமைகளை நினைவுறுத்தினார்கள். 1 தீமோ. 4:13.
2. ஆறுதல் - மக்களுக்கு ஆறுதலளித்தார்கள்.
3. சாட்சி - தேவ பயத்தோடு அவர்கள் முன் சாட்சியளித்தார்கள்.
4. தகப்பன் பிள்ளைக்கு அறிவுறுத்துவது போல் - அவசியமான ஆலோசனைகளைக் கொடுத்தார்கள்.
தலைப்பு 3: பவுலினதும் அவரைச் சார்ந்தவர்களினதும் நோக்கம்
1. அழைத்த கர்த்தருக்கு மகிமை சேரும் விதத்தில் நடந்து கொள்ளுதல். எபே. 4:1.
மேலே தரப்பட்ட உதாரணத்தைக் கவனித்தீர்களானால் அது வசனத்திற்கு வெளியிலிருந்து வந்ததாக இருக்கவில்லை என்பதை அறிவீர்கள். வசனப்பகுதியில் காணப்படும் போதனைகளை மட்டுமே படிமுறையாக அது விளக்குகிறது. உங்களுடைய சபை மக்களால் இதனை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். உங்களுடைய பிரசங்கத்தை நீங்கள் எழுத்தில் கொண்டுவரும் போது உங்களுடைய சபை மக்களால் அதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவர்களில் சிலர் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கலாம், நீங்கள் போதிக்கின்ற சத்தியத்தில் ஆழமான அறிவில்லாதவர்களாக இருக்கலாம். அதனால், நீங்கள் விளக்குகின்ற சத்தியங்களை உதாரணங்களோடு விளக்குவது நல்லது. ஏற்கனவே மேலே பார்த்த பிரசங்கக் குறிப்பில் ‘தகப்பன் பிள்ளைக்கு அறிவுறுத்துவது போல்’ என்ற தலைப்புக்கு தகப்பன் பிள்ளை பற்றிய ஓர் உதாரணத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, உங்களுடைய பிரசங்கத்திற்கு ஒரு முகவுரையையும், முடிவுரையையும் நீங்கள் தயாரிக்க வேண்டும். முதலில் முகவுரையைக் (Introduction) கவனிப்போம். இதைத் தயாரிக்கும் முன் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தில் ஆத்துமாக்கள் ஆர்வம் காட்ட நான் என்ன செய்ய வேண்டும்? இந்த வசனப்பகுதிக்கான பின்னணி அம்சங்கள் ஏதாவது இதை அறிமுகப்படுத்த உதவுமா? அல்லது இந்தப் பகுதியோடு தொடர் புடையதாக நான் சொல்லக்கூடிய தகுந்த கதை ஏதாவது இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதிலைத் தர வேண்டும். உங்களுடைய அறிமுகத்தை வார்த்தைக்கு வார்த்தை எழுதி வைப்பது அவசியமானது. பிரசங்க அறிமுகம் நீளமானதாக அமைந்துவிடாமல் இருக்கவும், நீங்கள் பிரசங்கத்தை ஆரம்பிக்கும்போது தடுமாறிவிடாமல் இருக்கவும் இது உதவும்.
முடிவுரையும் எழுதி முடிக்கப்பட வேண்டும். இதில் நீங்கள் பிரசங்கத்திற்கான பயன்பாடுகளை எழுத்தில் வடிப்பீர்கள். பிரசங்கப் போதனையை எப்படி நடைமுறையில் வாழ்க்கையில் கொண்டுவருவது என்பதை விளக்கு வதுதான் பயன்பாடு (Application). இதை நீங்கள் மிகுந்த ஜெபத்தோடும், கவனத்தோடும் தயாரிக்க வேண்டும். பயன்பாடுகள் பிரசங்க வசனத்தில்
இருந்து மட்டுமே வருவதாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது நான்கு பயன்பாடுகள் இருப்பது நல்லது. இவற்றில் ஒன்றின் மூலம் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம்.
முடிவுரையையும் முழுவதுமாக எழுதிக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசங்கக் குறிப்புகள் கையிலிருந்த வேளையிலும் சில வேளைகளில் ஆவியினால் உந்தப்பட்டு நீங்கள் அதை சொந்த சொற்களில் மேலும் விளக்க நேரிட்டாலும், முடிவுரையின் போது வார்த்தைகள் தடுமாறி பிரசங்க வசனப்பகுதியோடு சம்பந்தமில்லாத எதையாவது சொல்லிவிடாமல் இருக்க முடிவுரையாக சொல்லப்போவதைக் கவனமாக எழுதி வைப்பது மிகவும் பயன்படும். ஏற்கனவே நாம் பார்த்த 1 தெசலோனிக்கேயர் 2:10-12 பிரசங்கக் குறிப்பில் அந்தப் பகுதியின் பயன்பாடு ஜெபம் செய்வது எப்படி என்பதல்ல. ஏனெனில், அந்தப் பகுதி ஜெபத்தைப் பற்றி விளக்கவில்லை. அதற்குரிய சில பயன்பாடுகளை இப்போது கவனிப்போம்.
1. பவுலையும் அவரைச் சார்ந்தவர்களையும் போன்ற மனிதர்களாக இருக்கப் பாருங்கள்.
2. பவுலையும் அவரைச் சார்ந்தவர்களையும் போல வேதத்தைப் பிரசங்கிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
3. கர்த்தருக்கு முன் அவருக்கு மகிமை வரும்படியாக நடந்து கொள்ளுகிற மனிதர்களாக இருக்கப் பாருங்கள்.
உங்களுடைய பயன்பாடுகள் தெளிவாக இருக்கும்போது உங்களுடைய சபை மக்கள் அவற்றை வரவேற்பார்கள்.
இதுவரை நான் கொடுத்துள்ள விளக்கங்களின்படி நீங்கள் உங்களுடைய பிரசங்கத்தை எழுத்தில் வடித்தீர்களானால் உங்கள் கையில் பிரசங்க மேடைக்கு கொண்டுபோகும்படி பிரசங்கக் குறிப்புகள் தயாராக இருக்கும். இவற்றை நீங்கள் மறுபடியும் வாசித்துப் பார்த்து இன்னும் தெளிவாக இருக்கும்படியாக திருத்த வேண்டியவற்றை திருத்தி எழுதித் தயாரித்துக் கொள்ளலாம். உங்களோடு பணிபுரியும் சக போதகர் இருந்தால் உங்களுடைய பிரசங்கத் தயாரிப்பு தெளிவாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள அவருக்கு அதை சுருக்கமாக விபரித்துக்காட்டி அறிந்துகொள்ளலாம். சக போதகர் இல்லாவிட்டால் நம்பிக்கையுள்ள சபை அங்கத்தவர் ஒருவரிடம் அதை விபரித்துக்கூறி அவருக்கு அது விளங்குகிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பிரசங்கத் தயாரிப்பில் ஆறாவது படியாக, தயாரித்திருக்கும் பிரசங்கத்தை பேசிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, அதை உங்களுக்குள்ளாகவே பிரசங்கித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய படிப்பறையிலோ அல்லது அமைதி இருக்கும் ஓர் இடத்தில் இருந்து உங்களுக்குள்ளாகவே நீங்கள் தயாரித்திருப்பதை சொல்லிப் பார்த்து பயிற்சி பெற வேண்டும். அல்லது எங்காவது வாக்கிங் போய் வாய்க்குள்ளாகவே பிரசங்கத்தைப் பேசிப் பார்க்க வேண்டும். இதைச் செய்யும்போது உங்களுடைய பிரசங்கம்
சுருக்கமானதாக இருக்கிறதா அல்லது தேவைக்கு மேல் நீளமானதாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும். பிரசங்கம் நீளமானதாக இருப்பதால் அது ஆவிக்குரியதாக இருந்துவிடாது. பிரசங்கத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுகிற ஒரு போதகராக இருக்கப் பாருங்கள். உங்களுடைய சபை மக்கள் உங்களைப் பார்த்து, “இன்னும் தொடர்ந்து நீங்கள் பேசியிருக்கலாமே” என்று கூறுகிற விதத்தில் உங்களுடைய பிரசங்கம் இருக்க வேண்டும். “இன்றைக்கு கொஞ்சம் கூடப் பேசிவிட்டீர்கள்” என்று அவர்கள் சொல்லும்படி இருக்கக் கூடாது. உங்களுடைய சபை மக்களுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடாதீர்கள். எப்போதுமே உங்களுடைய பணி பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் தந்திருக்கின்ற சத்தியங்களை உள்ளது உள்ளபடி தெளிவாக விளக்கிப் போதிக்க வேண்டியது தான் என்பதை மறந்துவிடாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய வார்த்தையைப் பயன்படுத்துவார் என்று விசுவாசித்து பிரசங்கியுங்கள்.
பிரசங்கத் தயாரிப்பில் ஏழாவது படியாக, தயாரிக்கப்பட்ட பிரசங்கத்திற்குப் பிறகு தொடர்ந்து வேதத்தைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் நீங்கள் பிரசங்கத்தைத் தயாரிப்பது மட்டுமல்லாமல் தகுந்த நேரத்தை ஒதுக்கி தொடர்ந்து வேதத்தைப் படித்து அதில் மேலும் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது தவிர நல்ல சத்தான நூல்களையும் வாசிப்பது நல்லது. திருமறைத்தீபம் பத்திரிகையையும் தமிழில் இருக்கும் நல்ல நூல்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரசங்கத் தயாரிப்பில் கடைசிப் படியாக நான் சொல்ல விரும்புவது, நீங்கள் பிரசங்கத் தயாரிப்பை எப்போதும் முன்னதாகவே தொடங்க வேண்டுமென்பது தான். இந்த வாரத்திற்கான பிரசங்கத்தைத் தயாரிக்கின்றபோதும், இனிப் பின்னால் செய்ய வேண்டிய பிரசங்கங்களையும் தொடர்ந்து சிந்தித்து ஆராய வேண்டும். இப்போது நீங்கள் ரோமரில் இருந்து பிரசங்கம் செய்து வருவீர்களானால் அந்த நூலைப் பற்றி சிந்தித்து, வாசித்து, ஆராய்ந்து குறிப்பெடுத்து வருவது பயன் தரும். அதுமட்டுமல்லாமல் அதற்குப் பிறகு நீங்கள் ஆதியாக மத்தில் இருந்து பிரசங்கம் செய்யத் தீர்மானித்திருந்தால் அதற்கான முன்னேற்பாடாக அதுபற்றி இப்போதே வாசித்து ஆராய்ந்து சிந்திக்க வேண்டும்.
பிரசங்கத் தயாரிப்பு பற்றிய பொதுவான சில விளக்கங்களை உங்களுக்குத் தந்திருக்கிறேன் இருந்தாலும் பிரசங்கத் தயாரிப்பு என்பது இலகுவானதல்ல. இதைச் செய்யும்போது ஆரம்பத்தில் நிச்சயம் சில தவறுகள் ஏற்படும். இருந்த போதும் நீங்கள் தொடர்ச்சியாக படித்து, ஆராய்ந்து, சிந்தித்து பிரசங்கத்தைத் தயாரித்து எழுதும் வழக்கத்தைக் கைக்கொண்டீர்களானால் அது உங்களுக்கும் உங்களுடைய சபை மக்களுக்கும் நல்ல பயனை அளிக்கும். உங்களுடைய சபை மக்கள் இதற்காக உங்களுக்கு ஜெபித்து நீங்கள் நல்ல பிரசங்கங்களை அளிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். தொடர்ந்து நீங்கள் நல்ல ஊழியக்காரனாக உழைத்துப் போதித்தீர்களானால் நிச்சயம் பவுல் 2 தீமோ. 2:15ல் சொல்லியிருப்பது போல, “வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாக பகுத்துப் போதிக்கிறவனாயும்” இருப்பீர்கள்.
வேதப் பொருளுரை விளக்கம்
(What is Exegesis?)
கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட Exegesis என்ற ஆங்கில வார்த்தைக்கு எழுத்துப்பூர்வமான பொருள் “விளக்குவது” அல்லது “விளக்கப்படுத்துவது” என்பதாகும். இதனை வேதப் பொருளுரை விளக்கம் என்று குறிப்பிட விரும்புகிறேன். இந்த வார்த்தையை நாம் வேதப் படிப்போடு தொடர்புபடுத்திப் பார்க்கிறபோது, ஒரு வசனப்பகுதி யாருக்கு ஆரம்பத்தில் எழுதப்பட்டதோ அவர்களுக்கு அது எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது என்பதை சரியாக விளங்கிக்கொள்வது என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்கிறோம். இதற்கும் வசனப் பகுதிக்கு வியாக்கியானம் (Exposi- tion) கொடுப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வசனப் பகுதியின் போதனையை இலகுவான மொழியில், நடைமுறைக்குரிய நடையில் கேட்கிறவர்கள் புரிந்துகொள்ளும் படி விளக்குவதையே வியாக்கியானம் செய்வது என்கிறோம். வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை உள்ளது உள்ளபடி எழுத்துப்பூர்வமாக புரிந்து கொள்ளுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையே Exegesis அல்லது வேதப் பொருளுரை விளக்கம் காண்பதாகும்.
இது வேத விளக்க விதிமுறையாகிய விரிவான வேத ஆய்வு முறையின் (Hermeneutics or The Principles of Interpretation) ஒரு பகுதியாகும். இருந்தாலும் அதன் சிறுபிரிவான இந்த வேதப் பொருளுரை விளக்கத்தை மட்டுமே இந்த ஆக்கத்தில் நான் விளக்க விரும்புகிறேன். பிரசங்கம் செய்கிறவர்கள், மற்றும் வேதப் பாடம் எடுக்கிறவர்கள் இதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இந்த இதழின் முதல் ஆக்கத்தில் சகோதரர் ஸ்டீபன் பேர்ட்இது பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். அதை மேலும் தெளிவாக விளக்குவதையே நான் நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பிரசங்கத் தயாரிப்பில் எத்தனையோ பல முக்கிய அம்சங்கள் காணப்பட்டாலும் (அவற்றை ஸ்டீபன் பேர்ட் படிமுறையாக விளக்கியிருக்கிறார்), அவற்றை நாம் கவனத்தோடு பின்பற்றி நடைமுறையில் கருத்தோடு செய்தாலும் வசனத்தை உள்ளது உள்ளபடி எழுத்துப்பூர்வமாக விளங்கிக்கொள்ளுவதற்கு பயன்படும் இந்தக் கருவியைக் கவனத்தோடு பயன்படுத்தாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் வசனப்பகுதியின் மூலம் சொல்லுகின்ற சத்தியம் நமக்கு என்றும் இரகசியமாகவே இருந்துவிடும். அந்தளவுக்கு Exegesis வேத ஆய்வுக்கும், பிரசங்கத் தயாரிப்புக்கும் மிக அவசியமாக இருக்கின்றது.
இதனை நாம் ஒரு விஞ்ஞான ரீதியிலான ஆய்வாகக் கருதலாம். இந்த ஆய்வை நாம் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது?
வேதப் பகுதி அமைந்திருக்கும் பின்னணி
எல்லா வேத வசனங்களும், வேதப்பகுதிகளும் ஒரு பின்னணியைக் கொண்டிருக்கின்றன. அதை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. நம்மெல்லாருக்குமே ஒரு பின்னணி இருக்கின்றது. அந்தப் பின்னணியிலேயே நாம் மற்றவர்களுக்கு அறிமுகமாகிறோம். நம்முடைய நிறம், மொழி, இனம், நாடு, கலாச்சாரம் இவையெல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நம்மை எவருக்கும் அடையாளம் காட்ட முடியுமா? முடியவே முடியாது. நாம் யார் என்பதை இந்தப் பின்னணி அடையாளப்படுத்திக் காட்டுகிறது. அதுபோல்தான் வேத வசனங்களும் ஒரு பின்னணியைக் கொண்டு அமைந்திருக்கின்றன. அந்தப் பின்னணியை உதாசீனப்படுத்தினால் அந்த வசனங்களுக்கு பொருளிருக்காது. அதாவது, ஆவியானவர் தந்திருக்கும் சத்தியத்தை அந்த வசனங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. எல்லா வேத வசனங்களுக்கும் ஓர் இலக்கிய, வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. அவற்றை இனிப்பார்ப்போம்.
இலக்கியப் பின்னணி
குறிப்பிட்ட வேதப்பகுதியின் இலக்கியப் பின்னணியை அறிந்துகொள்ள பின்வரும் முறைகளைக் கையாளுவது அவசியம்
(1) முதலில், நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதி அது அமைந்திருக்கும் நூலோடு எந்த விதத்தில் தொடர்புள்ளதாக இருக்கின்றது என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். இந்த வேதப்பகுதி நூலின் அறிமுகப்பகுதியா? அல்லது அதன் முக்கிய போதனையை விளக்கும் அடிப்படைப் பகுதியா? அல்லது நூலின் முடிவுரையா என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டும். மத்தேயு சுவிசேஷத்தில் தரப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாற்றை (1:1-17) அது பரலோகத்தில் இருக்கின்ற தேவனால் அனுப்பப்பட்ட இயேசுவாகிய மேசியாவின் சுவிசேஷத்திற்கான அறிமுகப் பகுதி என்ற அர்த்தத்தில் வாசிக்கும்போது நமக்கு அதிக பலன் கிடைக்கின்றது. ஏனெனில், அதுவே அந்தப் பகுதிக்கு பின்னணி. அதை விட்டுவிட்டு அந்தக் குடும்ப வரலாற்றை வாசித்தால் அதற்குப் பொருளிருக்காது. அதுபோல் ஒவ்வொரு வசனப்பகுதியையும் அதன் பின்னணியின் அடிப்படையில் நாம் வாசிக்கப் பழக வேண்டும். கடந்த வருடம் நான் யாக்கோபு நூலில் இருந்து பிரசங்கித்தேன். அந்நூலின் ஆரம்பத்திலேயே யாக்கோபு “சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல்” சொல்லி ஆரம்பிக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டில் இருந்து (எருசலேம்) துன்புறுத்துதல் காரணமாக அந்நியர்கள் மத்தியில் சிதறிப்போய் வாழ்ந்து கொண்டிருந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு இந்நிருபத்தை எழுதியிருக்கிறார் என்ற பின்னணியை நாம் ஆராய்ந்து அறியாதிருந்தால் யாக்கோபுவின் இந்த ஆரம்ப வாக்கியத்திற்கு அந்த நிருபத்தில் எந்தப் பொருளும் இருந்திருக்காது. நாம் அநாவசியத்துக்கு எதையாவது விளக்க வேண்டியிருந்திருக்கும். இதனால் வசனப்பகுதிகளின் இலக்கியப் பின்னணி வசனங்களை விளங்கிக்கொள்ள மிக அவசியம் என்பதை உணர வேண்டும்.
(2) அடுத்ததாக, நாம் எடுத்துக்கொண்டிருக்கின்ற வசனப்பகுதி அதற்கு முன்னாலிருக்கும் வசனங்களோடும், அதற்குப் பின்னால் இருக்கும் வசனங்களோடும் எந்த விதத்தில் தொடர்புடையதாக இருக்கின்றது? என்று கேட்க வேண்டும். உதாரணமாக கெட்ட குமாரன் உவமையை (லூக்கா 15:11-32), யூதப் பரிசேயர்கள் பாவிகளோடு இயேசு தொடர்பு வைத்திருந்ததைக் கண்டனம் செய்ததன் காரணமாக இயேசு சொன்ன மூன்று உவமைகளில் ஒன்று என்பதை அறிந்துகொள்கிறபோது கெட்ட குமாரன் பற்றிய உவமையின் பொருளை நாம் மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
(3) மூன்றாவதாக, எடுத்துக்கொண்ட வசனப்பகுதி எந்தவகையான இலக்கிய நடையைச் சார்ந்தது என்பதையும் ஆராய வேண்டும். உதாரணமாக, வெளிப்படுத்தல் விசேஷம் நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கின்ற, நடக்கப்போகின்றவற்றை விளக்கும் நூலாக இருக்கின்றது. அதில் நடந்து முடிந்த வரலாறு இருக்கின்றது, அடையாள மொழி நடை இருக்கின்றது என்பதை உணர்கிறபோது அதன் இலக்கிய அமைப்புக்கு ஏற்றவகையில் அதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். வேதத்தில் உவமைகள், சங்கீதங்கள், உருவகங்கள், வரலாறு, அடையாள மொழி, தீர்க்கதரிசனம் என்று பலவகை இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஏற்ற வகையிலேயே வசனப் பகுதிகளை நாம் வாசித்து ஆராய வேண்டும். அப்போஸ்தலருடைய நடபடிகள் முதலாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த சபை வரலாற்றை விளக்குகின்ற வரலாற்று நூல். அதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் அநேகம் இருந்தபோதும் அதை வரலாற்று நூலாகப் பாவித்து அதன் போதனைகளை ஆராய்வது பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்ள மிகவும் அவசியம்.
(4) நான்காவதாக, வசனப்பகுதி காணப்படும் நூலை யார் எழுதியது? அவரைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதை ஆராய வேண்டும். (கடந்த வருடத்தில் யாக்கோபு நிருபத்திற்கான அறிமுகம் பற்றிய ஆக்கத்தில் அந்நிருபத்தை எழுதிய யாக்கோபு பற்றிய விபரங்களைத் தந்திருந்தேன். அது எந்தளவுக்கு நூலை நாம் விளங்கிக்கொள்ள உதவுகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்). கொலோசெயர் நிருபத்தில் இருந்து இப்போது பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதன் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களில் அதை எழுதிய பவுல் தன்னைப் பற்றியும் தீமோத்தேயுவை பற்றியும் குறிப்பிடுகிறார். அதை ஆராய்கிறபோது அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றியும் பவுல் அந்நூலை எழுதிய நோக்கத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அது நூலின் போதனையை விளங்கிக்கொள்ள பேருதவி செய்யும்.
வரலாற்றுப் பின்னணி
எந்த வேதப்பகுதியையும் விளங்கிக்கொள்ள அதன் வரலாற்றுப் பின்னணி பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். அதுபற்றி நாம் பல கேள்விகளை எழுப்பவேண்டும். எத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த நூல் எழுதப்பட்டது? அது பற்றி
நூலிலோ அல்லது வேதத்தின் வேறு பகுதிகளிலோ விளக்கங்கள் காணப்படுகிறதா? வேதத்திற்கு வெளியே இருந்து அது பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா? என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசிக்கும்போது ரோமுக்கு போவதற்கு பவுல் திட்டமிட்டிருந்ததை 15:23-24 மூலம் அறிந்துகொள்ளுகிறோம். அது நூலின் வரலாற்றுப் பின்னணி பற்றி அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது.
வரலாற்றுப் பின்னணி பற்றி ஆராயும் போது நூல் எழுதப்பட்ட காலம், எங்கிருந்து எழுதப்பட்டது, எழுதப்பட்டதன் நோக்கம் போன்ற அம்சங்களை ஆராய வேண்டும். எல்லாக் கேள்விகளுக்கும் எப்போதும் உறுதியான பதில்கள் கிடைத்துவிடாமல் போகலாம். இருந்தபோதும் அந்த விபரங்கள் இல்லாமல் எந்த நூலையும் புரிந்துகொள்ள முடியாது. இந்த வருடத்தில் நான் கொலோசெயர் நூலிலிருந்து பிரசங்கிக்க ஆரம்பித்தபோது என்னுடைய முதல் செய்தியே நூலுக்கான பின்னணியை விளக்குவதாகத்தான் இருந்தது. நூலின் வரலாற்றுப் பின்னணி கொலோசெயர் எழுதப்பட்ட நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள உதவி செய்வதோடு, அதில் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக பவுல் வலியுறுத்தி எழுதியிருப்பதன் காரணத்தையும் விளங்கிக்கொள்ள உதவுகிறது.
பழைய ஏற்பாட்டில் இருந்து பிரசங்கிக்கிறபோது வரலாற்றுப் பின்னணியை அறியாமல் அதன் போதனையின் உள் அர்த்தங்களைப் புரிநது கொள்ளவே முடியாது.
வசனப்பகுதியை ஆராய்தல்
இதுவரை நாம் பார்த்தவை வசனப்பகுதியை விளங்கிக்கொள்ள அவசியமான பின்னணி பற்றியவை. அதேநேரம், வசனப்பகுதியையும் நாம் கூர்ந்து வாசித்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி வசனப்பகுதியை ஆராய்ந்து பார்த்து விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள பின்வரும் முறைகளைக் கையாளுவது அவசியம்.
(1) எடுத்துக் கொண்டிருக்கும் வசனப்பகுதி போதிக்கும் முக்கிய போதனை (போதனைகள்) என்ன? இந்த அடிப்படையான கேள்விக்கு பதில் கண்டு பிடிப்பது மிக அவசியம். ஒரு பகுதியில் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அதன் முக்கிய போதனையைக் கண்டுகொள்வது அவசியம். ரோமர் 6:3,4 ஆகிய வசனங்களில் பவுல் ஞானஸ்நானம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவுக்குள் அவருடைய மரணமாகிய ஞான ஸ்நானத்தை நாம் அடைந்ததாக விளக்குகிறார். இந்தப் பகுதியின் முக்கிய போதனை ஞானஸ்நானமல்ல. அதைப்பற்றி விளக்குவது பவுலின் நோக்கமாக இருக்கவில்லை. கிறிஸ்துவோடு நாம் விசுவாசத்தின் மூலம் இணைக்கப்பட்டிருப்பதையே பவுல் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இங்கே விளக்குகிறார். அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஞானஸ்நானத்தை இந்தப் பகுதி விளக்குவதாக எடுத்துக்கொண்டால் பவுலின் போதனையை நாம் விளங்கிக்கொள்ள வழியில்லை.
(2) வசனப்பகுதியில் காணப்படும் வார்த்தைகளில் எதற்காவது விளக்கம் கண்டுகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறதா? வசனப்பகுதியின் போதனையை வலியுறுத்திக் காட்டும் விதத்தில் எந்த வார்த்தைகளாவது அந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அப்படியானால் எந்த உண்மையை விளக்க அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண வேண்டும். வசனங்களில் காணப்படும் வார்த்தைகளை எப்போதும் எழுத்துப்பூர்வமாக (Literal meaning) விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்குமஅர்த்தத்திற்கு மாறாக வேறு ஓர் அர்த்தத்தை அதில் பார்க்கக் கூடாது. மூல மொழியில் அதன் அர்த்தம் எதுவோ அதுவே தமிழிலும் இருக்க வேண்டும். அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏனைய வேதப்பகுதிகளை ஆராய்கிறபோது அதன் அர்த்தத்தை அறிந்துகொள்ளுவதில் குழப்பமேற்படாது. வார்த்தைகளை எழுத்துப்பூர்வமாக பார்த்து வசனப்பகுதியை இலக்கண அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஓர் அடிப்படையான விதி. அநேகர் வார்த்தைகளுக்கு நினைத்தவிதத்தில் அர்த்தம் கற்பிப்பதையும், வசனங்களுக்கு ஆவிக்குரிய சொந்த விளக்கங்களைக் கொடுப்பதையும் (spiritual meaning) வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவறான முறை வேதம் போதிக்கும் உண்மையை அறிந்துகொள்ள உதவி செய்யாது.
சில உதாரணங்களைக் கவனிப்போம். 2 தெசலோ. 2:3ல் ‘கேட்டின் மகனாகிய பாவ மனிதன்’ யார் என்பதை அறிந்துகொள்ளாமல் அந்தப் பகுதிக்கான விளக்கத்தைப் பெற முடியாது. இங்கே அந்த வார்த்தைகளுக்கு பொருள் காண வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேபோல், பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பல முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, நீதிமானாகுதல், பரிகாரப்பலி, கிருபாதாரப்பலி, எண்ணப்பட்டது, தேவசமாதானம், மீறுதல், கிருபாவரம் போன்ற வார்த்தைகள் அதில் அடிக்கடி வருகின்றன. இந்த வார்த்தைகளை பவுல் சிந்திக்காமல் பயன்படுத்தவில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தைகளை அர்த்தத்தோடேயே தந்திருக்கிறார். ரோமர் 4ல் ‘எண்ணப்பட்டது’ என்ற வார்த்தை அநேக தடவைகள் வந்து போகின்றன. அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளாவிட்டால் அந்த அதிகாரத்தின் போதனையையே தலைகீழாக மாற்றிவிடுவோம். அந்த அதிகாரத்தில் நீதிமானாகுதல் பற்றிய சத்தியம் அருமையாக விளக்கப்படுகிறது. அதன் தன்மையை விளக்கும் முக்கிய வார்த்தைதான் ‘எண்ணப்பட்டதாகும்’. இதன் பொருளை அறிந்துகொள்ள நாம் கிரேக்க மொழியில் அதற்கு அர்த்தம் என்ன என்பதையும், வேதத்தின் ஏனைய பகுதிகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நூல் எழுதப்பட்ட காலத்தில் பேசப்பட்ட மொழியில் அதற்கு அர்த்தம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிவது அவசியம்.
(3) வசனப்பகுதியில் இலக்கிய அம்சங்கள் ஏதாவது இருக்கின்றதா? அதாவது மிகைப்படுத்திக் காட்டுகின்ற வார்த்தைப் பிரயோகங்கள், உருவகங்கள் அல்லது ஒரே விஷயம் வேறுவிதத்தில் திரும்பவும் சொல்லப் பட்டிருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக எபேசி. 1:3-14 வரையுள்ள வசனங்களில் ‘கிறிஸ்துவுக்குள்’ என்ற வார்த்தை பத்து தடவைகளாவது வருகின்றன. காரணமில்லாமல் ஆவியானவர் அதைப் பயன்படுத்தவில்லை. அதற்கான காரணத்தை நாம் ஆராய்வது அந்தப் பகுதியை ஆழமாக விளங்கிக்கொள்ள உதவும். 1 கொரிந்தியரில் பவுல் அடிக்கடி மிகைப்படுத்துகின்ற பேச்சு வழக்கைப் பயன்படுத்துகிறார். அதை நாம் மனதில் வைத்துக் கொண்டு அந்தப் பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 1 கொரி. 13:1, இதில் பவுல் மிகைப்படுத்தும் பேச்சு வழக்கைக் கையாளுகிறார். உண்மையில் ‘தூதர் பாஷை’ என்று ஒன்றில்லை.
(4) வசனப்பகுதியில் வேறு பகுதிகளிலிருந்து (பழைய ஏற்பாடு) எடுக்கப் பட்ட வசனங்கள் காணப்படுகின்றனவா, அப்படி இருந்தால் அதற்குக் காரணமென்ன? வேறு இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள் வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா? என்ற கேள்விகளுக்கு பதில் காண வேண்டும். உதாரணமாக, “இயேசு மெல்கிசேதேக்கின் முறையின்படி” (எபிரெ. 6:20-7:22) என்று எபிரெயரில் வரும் வாக்கியங்களின்படி இயேசு எந்தவிதத்தில் நித்திய பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள ஆதி. 14:20ஐயும், அந்த வசனங்கள் காணப்படும் சங்கீதம் 110ஐயும் வாசித்துப் பார்ப்பது அவசியம்.
(5) வசனப்பகுதியை விளங்கிக்கொள்ள முடியாதளவுக்கு வார்த்தைகள் சிக்கலானதாக இருக்கிறதா? என்றும் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு, ரோமர் 7ம் அதிகாரத்தில் பவுல் “நான்” என்று சொல்லுகிற இடங்களில் அவர் தன்னுடைய அனுபவத்தை விளக்குகிறாரா? அது கிறிஸ்தவஅனுபவமா அல்லது கிறிஸ்துவுக்குள் வருமுன் இருந்த வாழ்க்கை பற்றியதா அல்லது இரண்டையுமே அந்தப் பகுதியில் விளக்குகிறாரா? என்ற கேள்விகளுக்கு பதில் காண்பது அவசியமாகின்றது.
(6) இந்த வசனப்பகுதி இது காணப்படும் நூலுக்கு எந்தவித்தில் பயன்படுகிறது? என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். யோவான் 1:1-18 வரையுள்ள வசனங்கள் நிச்சயமாக அந்த சுவிசேஷ நூலுக்கான அறிமுகமாக இருந்து அந்நூலின் முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டாமலில்லை.
(7) இந்த வசனப்பகுதி நமக்கு இன்றைய காலகட்டத்தில் என்ன போதனையைத் தருகிறது? என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். இதை எல்லா வேதப்பகுதிகளைப் படிக்கும் போதும் நாம் அவசியம் கேட்க வேண்டும். நமக்குப் பயன்படவே வேத வசனங்கள் ஆவியானவரால் தரப்பட்டிருக்கின்றன. மாற்கு 10:17-25ல் வரும் செல்வந்தனான இளம் வாலிபன் பற்றிய விளக்கத்தில் இருந்து கிறிஸ்தவர்களான நாம் படிக்க வேண்டியது என்ன என்பதை அறிய மாற்கு 10:26-31 வரையுள்ள வசனங்களையும் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
வசனப்பகுதிகளை ஆராய அவசியமான துணைகள்
வேத வசனங்களை மேலே பார்த்தவிதத்தில் ஆராய்ந்து சரியான அர்த்தங்களை அறிந்துகொள்ள நமக்கு துணைகள் தேவைப்படுகின்றன. கீழ்வரும் நூல்களைப் பயன்படுத்தி வேத அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
(1) வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ள நாம் படிக்கப் பயன்படுத்தும் தமிழ் வேதத்தைத் தவிர இன்னொன்றையும் பயன்படுத்தலாம். வேதத்தை எழுத்துப்பூர்வமாக தமிழில் மொழிபெயர்த்து அதோடு ஆங்கில வேதத்தையும் இணைத்து ஒரு வேதநூலை India Bible Literature (IBL) வெளியிட்டிருக்கிறது. இது தமிழிலுள்ள வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்த்துக்கொள்ள உதவும்.
(2) வேத ஒத்தவாக்கிய அகராதி (Concordance).
(3) வேதத்தில் காணப்படும் முக்கியமான வார்த்தைகளுக்கு விளக்க மளிக்கும் ஒரு நல்ல அகராதி (A good Bible dictionary and Encyclopedia).
(4) வேதகாலப்பகுதியின் இடங்களைக் காட்டும் நல்ல வரைபடம் (Bible Atlas).
(5) எபிரெய, கிரேக்க வார்த்தைகளுக்கு அர்த்தம் தரும் வேத இன்டர்லீனியர் (Interlinear).
(6) நல்ல வேத விளக்கவுரை நூல்கள் (Commentaries).
இறுதியாக, நாம் மேலே பார்த்த வகையில் வேதத்தை ஆராய்ந்து படிக்காமல் வேதத்தில் ஆவியானவர் தந்திருக்கும் சத்தியங்களை மெய்யாக அறிந்துகொள்ள ஒருபோதும் முடியாது. இந்த முறைகளை ஜெபத்தோடு உழைத்துப் பயன்படுத்தினால் மட்டுமே கர்த்தரின் வேதத்தின் வல்லமையை நாம் உணர முடியும். ஆத்துமாக்கள் சத்தியத்தை அறிந்து தங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்தி வளர வேண்டுமானால் வேதத்தைப் போதிக்கிறவர்கள் மேலே பார்த்த முறைகளை அலட்சியப்படுத்திவிடாமல் கையாண்டு சத்தியத்தில் தெளிவான அறிவைப் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு போதிக்கும் பணியைச் செய்ய வேண்டும். சத்தியம் மட்டுமே விடுதலையாக்கும்.
|
தேவ ஆவிக்கு வெறுப்பான ஒன்று, அகந்தை. ஒருவன் பெரியவனாகிறதற்கு வழி அவன் தன் சிறுமையை உணருதலே. தன் பார்வைக்குப் பெரியவனாயிருக்கிறவன் தேவனால் மதிக்கப்பட மாட்டான். பூமியின் உயர்ந்த ஸ்தலங்களில் வாசம்பண்ண விரும்புகிறவன் மலையின் உச்சி மிகவும் குளிர்ச்சியும் அவாந்தரமுமானது என்று அறிய வேண்டும். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறார். அகந்தைக்காரரையோ தூரத்தில் இருந்து அறிகிறார். - ஸ்பர்ஜன் - |
பிரியாவிடை பிரசங்கங்கள் -3-
அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின், மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து, தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்aரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தன் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி. - ஆசிரியர்.
உண்மையான ஆராதனை
நான் ஒரு வசனத்தை உங்களுக்குப் படித்த பின்னதாக, சிறிய ஜெபத்தோடு இந்த தியானத்தை ஆரம்பிக்கலாம். அது, உயிரோடெழுந்த கர்த்தர், தியத்தீரா சபைக்குக் கூறுகின்ற வார்த்தை. உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள் (வெளி 2:25).
பரிசுத்த பிதாவே, நாங்கள் மீண்டுமாக உமது சந்நிதானத்தில் வருகிறோம். ஏனென்றால் நீர் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு இந்த வசனங்களை வெளிப்படுத்திக் காண்பிக்காவிட்டால், விளங்கப்பண்ணாவிட்டால், உறுதிப்படுத்தாவிட்டால், ஆறுதல் அளிக்காவிட்டால், நான் பிரசங்கிக்கிற வார்த்தைகள் யாவும் வெறுமையாகத்தான் போகும் என்பதை அறிந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியை விரும்பிக் கேட்கிறவர்களுக்கு அருளிச்
செய்கிற பிதாவே, உம்மிடம் தயவாய் வேண்டுகிறோம். உமது ஜனத்தின் மீது பரிசுத்த ஆவியின் வல்லமையை அனுப்பித் தந்து, வசனத்தை விளங்கிக்கொள்ள கிருபை செய்யும். தியானிக்கப் போகின்ற அடியானாகிய எனது இருதயத்திலும் பிரவேசித்து, சுயஇஷ்டத்தின் பிரகாரம் எதுவும் கூறாத படிக்குத் தடுத்து, நீர் சொல்ல விரும்புகிறதை சற்றும் குறையாமல் ஆவியின் வல்லமையோடு வெளிப்படுத்த கிருபை செய்தருளும். பிதாவே எனக்கும் உமது உதவி தேவை. இவர்களுக்கும் உமது உதவி தேவை. வாரும் தேவனே, வாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த மாதம் ஜௗன் 15 ஆம் தேதியோடு நான் உங்களுடைய மேய்ப்பனாக எனது கடைசி செய்தியைக் கூறி முடிப்பேன் என எண்ணுகிறேன். 46 ஆண்டுகளாக நான் உங்கள் மத்தியில் மேய்ப்பர்களுள் ஒருவனாக இருந்து செய்து வந்த ஊழியத்தை அன்றோடு நிறைவேற்றி முடிக்க உத்தேசித்திருக்கிறேன். எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாமல், இவ்வளவு ஆண்டுகள் உங்கள் மத்தியில் ஊழியம் செய்து, சமாதானத்தோடு விடைபெறுகின்ற இந்த சூழ்நிலைக்காக நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன். எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கோ, ஆவிக்குரிய கருத்து வேறுபாடுகளுக்கோ ஆளாகாமல் இருப்பதைக் குறித்தும் நான் சந்தோஷப்படுகிறேன். என்னைக் காட்டிலும் இளமையோடும், சரீரபலத்தோடும், மனபலத்தோடும் இருக்கின்ற தலைவர்களின் ஊழியம் உங்கள் மத்தியில் செய்யப்படுமானால் அது உங்கள் ஆவிக்குரிய நலனுக்கு சிறந்ததாயிருக்கும் என கருதுகிறேன். உங்களுக்காக தங்களையே ஊற்றிப்போட சித்தமாயிருக்கிற ஊழியர்களின் பணி உங்களுக்கு மிகுந்த நலனைக் கொண்டு வரும். எனது ஊழியம் இன்னும் சற்று லேசான விதத்தில் அமைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன். இதைக் குறித்து பரிதபிக்கவோ அல்லது உங்களை கவலைக்கு ஆளாக்கவோ நான் முயற்சிக்கவில்லை. நான் விடை பெற்றுப் போகும் முன்னதாக, இதன் பின்னணியிலே நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளை விரைவாக சொல்லும்படியாக ஆசைப்படுகிறேன். நான் முன்னரே உங்களுக்கு சொல்லியபடி, இந்த பிரசங்கங்கள் யாவும், ஏதோவொரு குறிப்பிட்ட வசனத்தின் பேரிலோ அல்லது ஆவிக்குரிய கருத்தின் பேரிலோ பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதல்ல. கடந்த 46 வருடங்களில் சபைக்கும், விசுவாசியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருந்து வழிநடத்தின காரியங்களையே சுருக்கமாக தொகுத்துக் குறிப்பிடுகிறேன்.
சென்ற பிரசங்கங்களிலே நான் கூறியதின் பொருட் சுருக்கத்தை மீண்டுமாக உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு, இன்றைய செய்திக்கு வருவோம். விசுவாசத்தினாலும் அன்பினாலும் இயேசுவையும் அவர் நிறைவேற்றி முடித்த பணிகளையும் இறுகப் பற்றிக் கொண்டவர்களாக வாழுங்கள். அந்த விசுவாசத்தையும் அன்பையும் உடையவர்களாக, இயேசுவின் கட்டளைகள் யாவுக்கும், அவர் சித்தம் யாவுக்கும் கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாயிருங்கள் என்கிற புத்திமதியை எனது முதலாம் பிரசங்கத்தில் குறிப்பிட்டேன். இந்த கருத்தின் கீழாக சில நடை முறைப் பயிற்சிகளையும் உங்களுக்குக் குறிப்பிட்டேன்.
1. பரிசுத்தமான வாழ்க்கை வாழும்படியாக கிறிஸ்து உங்களை அழைத்திருக்கிறார். அந்த அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள்.
2. உலகத்திலிருந்து பிரிந்து வாழும்படியான அழைப்புக்கும் கீழ்ப்படியுங்கள்.
3. மறுமையிலே கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இயேசுவின் நீதியை மாத்திரமே சார்ந்து கொண்டிருங்கள்; இவ்வுலகிலே கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதற்கு அனுதினமும் இயேசு விடமிருந்து பெலனை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதையுந்தவிர்த்து, இரண்டாம் தியானத்திலே நான் வெளிப்படுத்தின ஆகமத்திலிருந்து எடுத்துக் கொண்ட ஒரு வாக்கியத்தின் பேரில் உங்களுக்கு பல விஷயங்களைக் கூறினேன். ஞாபகமிருக்கிறதா? தியத்தீரா சபைக்கு, உயிரோடெழுந்த கிறிஸ்து கூறின வார்த்தைகள் அவை. அது சம்பந்தமாக நமது சபையின் ஆரம்பகால சரித்திரத்தையும் சற்று நினைவுபடுத்தினேன் அல்லவா? உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள் என்கிற வாக்கியத்தை மையமாகக் கொண்டு, சபை இலக்கணத்தைக் குறித்ததான காரியங்களில் உங்களுக்குள்ளதை உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள் என்கிற இரண்டாவது புத்திமதியையும் கூறினேன்.
இந்த சபை, ஒரு சபையாக அறியப்படுவதற்கு முன்னாலேயே, சபை இலக்கணத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இங்கிருந்த பரிசுத்தவான்களிடம் இருந்ததை நான் அறிவேன். அதைக் குறித்து நன்கு அறிந்து கொண்ட பிற்பாடுதான் அவர்கள் இக்கூட்டத்தை ஒரு சபையாக அங்கீகரித்து, இதற்கு ஊழியம் செய்ய மூப்பர்கள், கண்காணிகளையும் நியமித்து, சபை அங்கத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அப்படியாக வேதத்திலிருந்து ஆராய்ந்து அறிந்து கொள்ளப்பட்ட சபை இலக்கணத்தின்பேரில் நான் உங்களுக்கு 3 அறிவுரைகளை சென்ற தியானத்திலே குறிப்பிட்டேன். அதில் மேலும் 4 அறிவுரைகளை கூறப் போகிறேன். சபை இலக்கணத்தின்பேரில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட 3 அறிவுரைகளாவன:
- இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்கு மாத்திரமே பிரதானமான பங்கு இருக்கிறது. பரலோக ராஜயத்திற்கு செல்வதற்கு கிறிஸ்து அமைத்துள்ள ஒரே ஸ்தாபனம் சபைதான். அதுவே சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது என்று வசனம் குறிப்பிடுகிறது. ஒரே ஸ்தாபனம்! ஒரே நிறுவனம்! கிறிஸ்து கட்டுகின்ற இந்த ஒரே ஸ்தாபனத்தைதான் நரகத்தின் ஒலிமுக வாசல்கள் மேற்கொள்வதில்லை. ஆகவே இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தையும், அதன் பணிகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள் என்று உங்களுக்கு புத்தி கூறினேன்.
- அடுத்தபடியாக, சபையின் காலகட்டம் முழுவதும், அதன் ஊழியம் யாவற்றிலும் சத்தியத்தை துல்லியமாக கடைப்பிடிக்கிறவர்களாகவும், சபையார் அனைவரும் ஒரேவிதமான விளங்குதலை அடைய பாடுபடுகிறவர்
களாகவும் இருங்கள். நமது சபை “1689 இலண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையை” பின்பற்றுகிற சபை என சொல்லிக் கொள்வதில் நாம் வெட்கப் படுவதில்லை. கிறிஸ்துவுக்குப் பின் வந்த மூன்றாம், நான்காம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த பரிசுத்தவான்கள் வேதத்தை அலசி ஆராய்ந்து தயாரித்துக் கொடுத்த அந்த விசுவாச அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்டவர்களாயிருக்கிறோம். அது, சத்தியத்தை துல்லியமாக ஆராய்ந்து அளிக்கப்பட்ட அறிக்கை. அதனை விளங்கி, பின்பற்றுவதின் மூலமாக சபையிலுள்ள யாவரும் ஒருமனதுடையவர்களாயிருக்க முடிகிறது. அந்த விசுவாச அறிக்கையை நாம் வேதபுத்தகத்திற்கு ஒப்பான தெய்வீகமுடையதாக கருதவில்லை. ஆனால், தெய்வீக புத்தகமான வேதாகமம் கூறுகின்ற கருத்துக்களைத் தெளிவாக விளக்குகின்ற ஒரு சாதனமாக எண்ணுகிறோம். நமது ஆவிக்குரிய முன்னோர்கள் சந்தித்திராத புதுவிதமான கள்ளப் போதனைகள் இப்போதும் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. அவைகளையும் வேதவசனங்களைக் கொண்டு சந்திக்கத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சபையின் காலகட்டம் முழுவதிலும், அதன் ஊழியம் யாவிலும் சத்தியத்தை துல்லியமாக கடைப் பிடிப்பதை உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள். சபையிலுள்ள யாவரும் ஒரேவித விளங்குதலை அடைய எடுக்கும் முயற்சிகளையும் விடாதீர்கள்.
- சபையின் அங்கத்துவம் பற்றிய கோட்பாடுகளை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். சபையில் அங்கத்தினராக ஏற்கப்பட என்ன நிருபணம் தேவை? புதிதாக வருபவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம்? அவர்கள் தொடர்ந்து அங்கத்தினர்களாக இருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டியவையாவை? இவை போன்ற காரியங்களில் நமக்கு இருக்கும் கொள்கைகளை விட்டுவிடாதீர்கள். சபையின் அங்கத்தினமுறை பற்றி சபையானது அலட்சியமாயிருந்ததானால், அது கிறிஸ்துவின் சபை என்கிற நிலையிலிருந்து தள்ளப்பட்டு, சாத்தானின் ஆலயமாக மாறிவிடும். மறுபிறப்படையாத, பரிசுத்தமில்லாத, சரியான ஆவிக்குரிய பகுத்தறிதல் இல்லாத ஜனங்கள் சபையில் நுழைந்து சபை காரியாதிகளிலும், ஆராதனை முறைகளிலும் மாறுதல்களை ஏற்படுத்த முயலும்போது சபையின் புனிதம் கெட்டுப் போய் அது வெறும் சமூகசந்திப்பாக மாறிவிடும். ஆகவேதான், அங்கத்துவ முறைகளில் நாம் பின்பற்றி வந்திருக்கும் கொள்கைகளை விடாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள் என்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன். சபை இலக்கணம் சம்பந்தமாக இக்காரியங்களைத்தான் நாம் சென்ற தியானங்களில் அறிந்து கொண்டோம்.
இப்போது, சபை இலக்கணம் சம்பந்தமான நான்காவது புத்திமதியைக் கூற விரும்புகிறேன்.
- ஆராதனை சம்பந்தமான கொள்கைகளையும், பயிற்சிகளையும் அவர் வருமளவும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். கடந்த 25 வருடங்களாக ஆராதனை முறைகளைப் பற்றி இடைவிடாத கலந்துரையாடல்களும், தியானங்களும், விவாதங்களும், ஆலோசனைக்கூட்டங்களும் கிறிஸ்தவர்களின் மத்தியிலே நடந்து வந்திருக்கிறது. சில கூட்டங்களில் எப்படி ஆராதனையை நடத்துவது என்கிற விஷயத்தில் சுவிசேஷ சபைகளினிடையே நடைபெறும்
விவாதங்கள் எல்லை மீறி சச்சரவுகளில் கூட முடிந்திருக்கிறது. அந்த நிலைமையை கேலியாக “ஆராதனைப் போர்” (Worship War) என்றுகூட குறிப்பிடுகிறார்கள். அது மிகவும் மோசமான காரியம்தான். ஆனால் நிலைமை அப்படியாகத்தான் இருக்கிறது. கடவுளுக்கு செலுத்துகின்ற ஆராதனை பலவிதங்களில் மோசமான நிலையில்தான் இருக்கிறது.
நமக்கு அருகாமையிலே இருக்கின்ற ஒரு சபையிலிருந்து வெட்ககரமான விளம்பரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். “உங்களுக்கு என்னவிதமான ஆராதனையில் விருப்பம்? நீங்கள் பாரம்பரிய ஆராதனை முறையை விரும்புகிறவர்களா? குறிப்பிட்ட இந்த நேரத்திற்கு இங்கே வாருங்கள். அல்லது நீங்கள் உற்சாகமான துதி ஆராதனையை விரும்புகிறவரானால் குறிப்பிட்ட அந்த வேளையிலே வாருங்கள். அல்லது இரண்டும் கலந்ததான ஆராதனையை விரும்பினால் அதற்கு குறிக்கப்பட்ட வேளையிலே வாருங்கள்” என்று மக்களின் விருப்பத்திற்கு வழிசெய்து கொடுக்கிறார்கள். பாரம்பரிய ஆராதனை! உற்சாக கோலாகல துதி ஆராதனை! இரண்டும் கலந்த ஆராதனை! உங்கள் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து கொள்ளலாம். உங்கள் விருப்பமே முக்கியம்! கடவுளுக்கு என்னவிதமான ஆராதனையில் பிரியம் என்பதை வேதம் தெரியப்படுத்தாதது போல இவர்களே ஓர் ஆராதனை முறையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த பொருளின் பேரில் அநேக புத்தகங்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். அவைகளை நான் படித்து மிருக்கிறேன். மிகவும் எளிமையான கொள்கைகளை தவிர்த்துவிட்டு, தேவையில்லாத கோணங்களில் எல்லாம் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை செலுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த எளிமையான கொள்கைகளை நான் இன்று உங்களுக்குக் கூறப் போகிறேன். வேறு எதைக் குறித்தும் இப்போது சிந்திக்க நேரமில்லாவிட்டாலுங்கூட இந்த கொள்கைகளை நீங்கள் இன்று நன்றாக விளங்கிக் கொண்டால் அதுவே போதுமானது. சதாகாலமும் உயிரோடிருக்கின்ற உண்மையான தேவனாகிய அவர் ஒருவரே ஆராதனையில் ஆராதிக்கப்படத்தக்கவர்; எவ்விதத்தில் அவரை ஆராதிப்பது என்பதை தீர்மானித்து, நமக்கு தெரிவிக்கக்கூடியவரும் அவர் ஒருவரே. இதுவே ஆராதனையின் கொள்கையாகும்.
ஆராதனை, கடவுளை மாத்திரமே மையமாகக் கொண்டு, அவர் மாத்திரமே மகிமைப்படும் விதத்தில் அமைய வேண்டும். இந்த கருத்து மிகவும் எளிமையாக தேவனுடைய வசனத்திலே விளக்கப்பட்டுள்ளது. சாத்தான் வனாந்தரத்திலே இயேசுவை சோதித்த போது, என்னைத் தாழவிழுந்து பணிந்து கொண்டால், உலகத்தின் இராஜயங்கள் அனைத்தையும் உனக்குத் தருவேன் என்று கூறியபோது, இயேசு, உபாகமத்திலிருந்து ஒரு வசனத்தைக் கொண்டு சாத்தானின் வாயை அடைத்தார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்”. நியாயமாக ஆராதனை ஒருவருக்கு மாத்திரமே உரியது. அந்த ஒருவர், ஒன்றான தேவனாகிய கடவுளே. நமது வேதாகமத்தைத் திறந்து ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் வாசித்துப் பார்த்தோமானால், அவர் ஒருவரே ஆராதிக்கப்படத்தக்கவர் என்பது விளங்கும். எவ்விதமான ஆராதனை தமக்கு விருப்பம்,
எது தமக்கு விருப்பமில்லாதது என்பதைத் தெரிவிக்கத்தக்கவரும் அவர் ஒருவரே. இதை அவர் ஆதியாகமத்திலேயே தெளிவாக வெளிப்படுத்திவிட்டார். காயீன் கடவுளுக்கு ஆராதனை செய்ய வந்து, தனது சுய அறிவின் பிரகாரமான காணிக்கையை செலுத்த வருகிறான். ஆபேலும் அவருக்கு ஆராதனை செய்வதற்காக தனது மந்தையிலிருந்து தலையீற்றுகளையும் கொழுமையானவைகளையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். கர்த்தர் ஆபேலின் பலியை ஏற்றுக்கொள்ளுகிறார்; காயீனுடையதையோ தள்ளிவிடுகிறார். ஏனென்றால், ஆதாமின் பாவத்தினால் ஏற்பட்ட மனிதகுல வீழ்ச்சியின் நிமித்தமாக, கடவுளை நாடி வருகிறவர்கள் யாராயிருந்தாலும், சமாதான பலியான இரத்தம் சிந்துதலோடு வரவேண்டியது அவசியமாயிற்று. இதை எப்படியோ கடவுள் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது. அது வேதத்தில் சொல்லப்படாவிட்டாலுங்கூட நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இரத்தபலி சிந்தப்பட வேண்டியதென்பது விளங்குகிறது. அதை கவனத்தில் வைத்துக் கொண்ட ஆபேல் அவர் விரும்புகிறபடியான காணிக்கையோடு அவரை ஆராதிக்க வருகிறான். ஆனால் காயீனோ, தனது மனதுக்குத் தோன்றினபடியான காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஆராதிக்க வருகிறான். கடவுள் அவன் ஆராதனையை விரும்பவில்லை என்பதை அங்கேயே காண்பித்துவிடுகிறார். அவனையும் அவனுடைய ஆராதனையையும் புறம்பே தள்ளிவிடுகிறார். ஆபேலின் ஆராதனையை ஏற்றுக்கொள்ளுகிறார். தான் ஒருவரே ஆராதிக்கப்படத் தக்கவர் என்பதையும், அந்த ஆராதனையும் தான் ஏற்படுத்துகின்ற முறைமையின்படிதான் அமைய வேண்டும் என்பதையும் அவர் விரும்புவது இங்கே தெளிவாகத் தெரிகிறது.
அடுத்தபடியாக இன்னொரு வசனத்தையும் கவனியுங்கள். தமக்கு எவ்வித ஆராதனை உகந்தது என்பதை முதல் இரண்டு கற்பனைகளின் மூலமாக அவர் வெளிப்படுத்துகிறார். என்னைத் தவிர உனக்கு வேறு தேவர்கள் இருக்க வேண்டாம். அதாவது உன்னுடைய ஆராதனைகளில் எனக்கு மாத்திரமே இடம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, உன்னை சுற்றிலும் இருக்கிற அஞ்ஞானிகள் ஆராதனை செய்வதைப் போல எனக்கு ஆராதனை செய்யாதே. அவர்களுடைய ஆராதனைகளெல்லாம் விக்கிரக சம்பந்த முடையது. என்னை ஒரு விக்கிரகமாகப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். விக்கிரக வடிவில் என்னை வணங்காதே. நான் ஆவியாயிருக்கிறேன். நான் உங்களுக்கு வெளிப்படுத்தும் விதத்தில் எனக்கு ஆராதனை செய்யுங்கள். ஒரு சுரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் நீ உண்டாக்கவும் வேண்டாம், அதை வணங்கவும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
அதற்குப் பிற்பாடு, கடவுளுக்கு ஆராதனை செய்கிற ஸ்தலத்திலே எப்படியாக ஆசாரியர்களைக் கொண்டு அவருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்கிறதான கட்டளைகளையும் அவரே, இஸ்ரவேலர் வனாந்தரத்திலே இருந்த சமயத்தில் சொல்லித் தந்திருக்கிறார். ஆசாரியர்கள் அவைகளை நடப்பிக்க வேண்டிய விதங்களையெல்லாம் விவரமாக சொல்லித் தருகிறார். அவர் கற்றுத் தந்தவைகளை மீறி செயல்பட்டால் என்ன ஆகும்? லேவியராகமம் 10 ஆம் அதிகாரத்தைப் படியுங்கள். நாதாப், அபியூ என்கிற இருவர்,
எங்களுக்கென்ன ஆராதனை செய்யத் தெரியாதா? நாங்களும் ஆராதனை செய்வோம் என்று கூறி அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதானத்திலேதுணிந்து கொண்டு வந்தார்கள். யார் ஆராதனை செய்ய வேண்டும்? யார் அக்கினியைக் கொண்டு வரவேண்டும் என்பதையெல்லாம் கடவுள் தெளிவாக விவரித்திருக்கிறார். இருந்தும் இவர்கள் தங்களுடைய மனதின் யோசனையின்படி அவரை ஆராதிக்க வந்தார்கள். பாவம், விவரம் தெரியாதவர்கள், போனால் போகிறதென்று கடவுள் அவர்களை விட்டு வைத்தாரா? அவருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு வந்து அவர்களை பட்சித்துப் போட்டது. அவர்கள் தேவனுக்கு முன்பாக செத்து விழுந்தார்கள். மனிதனின் சுயஇஷ்டத்தின் பிரகாரம் ஆராதனை நடப்பதை தான் விரும்பவில்லை என்பதை இஸ்ரவேலரை உணரப்பண்ணினார். ஆராதனையில் தான் ஒருவரே ஆராதிக்கப்படுவது மாத்திரமல்ல, தான் கூறியபிரகாரம்தான் ஆராதிக்க வேண்டும் என்கிற கருத்தை அவர் அங்கு மீண்டுமாக வலியுறுத்துகிறார்.
1 பேதுரு 2:5 ல் மற்றொரு வசனத்தைப் பார்க்கலாம். இதில் பேதுரு, பழைய ஏற்பாட்டின் இலக்கியத்தரம் வாய்ந்த வார்த்தைகளை உபயோகித்து, புதிய ஏற்பாட்டின் காலத்தில் அது நிறைவேறியிருப்பதைக் கூறுகிறார். நீங்கள் தேவனுடைய மாளிகையாக இருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள் என்கிறார். நாம் புதிய ஏற்பாட்டின் ஆசாரியக் கூட்டம் என அழைக்கப்படுகிறோம். புதிய உடன்படிக்கையின் ஆசாரியர்களாக நாம் ஆவிக்குரிய பலிகளை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பலி எது என்பதை யாரால் கூற முடியும்? அதை அவர் மாத்திரமே தெரியப்படுத்த முடியும். நாம் வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கையிலே இங்கொரு வசனமும், அங்கொரு வசனமும், சில உதாரணங்களும், சில சம்பவங்களும், கடவுளுக்குப் பிரியமான ஆராதனை எது என்பதை நமக்கு வெளிப்படுத்துவதாயிருக்கிறது. அவ்விதமான ஆராதனையை கடவுளே தமது ஜனங்களுக்கு கட்டளையிட்டிருப்பதை நாம் காண முடிகிறது. நமது விசுவாச அறிக்கையிலே அது, மிகவும் அருமையாக கூறப்பட்டுள்ளது “உன்னதமான தேவனை ஆராதிக்க வேண்டிய வழிவகைகள் அவராலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மனிதருடைய இஷ்டத்தின் பிரகாரமாகவோ, அவர்களுடைய கற்பனைகளின்படியோ, கண்டுபிடிப்புகளின்படியோ ஆராதனை முறைகள் அமையக்கூடாது. இதில் சாத்தானின் யோசனைகளுக்கு சற்றும் இடமளிக்கக்கூடாது. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படாத எந்தவிதமான நூதன முறைகளின்படியும் அவரை ஆராதிக்கலாகாது”. இதுதான் கடவுளை ஆராதிப்பதில் அறிய வேண்டிய எளிமையான கொள்கை. ஆராதனையில் அவர் ஒருவரே மகிமைப்படுத்தப்பட வேண்டும்; ஆராதனை எப்படி அமைய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து அதை தமது வசனங்களின் மூலமாக வெளிப்படுத்தக் கூடிய வரும் அவர் ஒருவரே. நமது கற்பனையில் உதிக்கிறபடியெல்லாம் செய்வது அவருக்குகந்த ஆராதனை அல்ல. சாத்தான் கொண்டு வரும் பலவிதமான யோசனைகளுக்கு இடம் கொடுத்து ஆராதிப்பதும் ஆராதனை அல்ல.
எங்கேயிருந்து இவர்களுக்கு இப்படி புதுவிதமான யோசனைகள் எல்லாம் தோன்றுகிறது? தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபத்திலே பவுல் இப்படிப்பட்டவர்களைக் குறித்து எச்சரிக்கிறார். பிற்காலங்களிலே மனசாட்சியிலே சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள். விவாகத்தை விலக்கும்படி போதிப்பார்கள். தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்க வேண்டுமென அந்த பொய்யர் கட்டளையிடுவார்கள். எவ்வாறு இவ்விதமான காரியங்களை ஏற்படுத்துகிறார்கள்? அவையெல்லாம் பிசாசின் உபதேசங்கள். வஞ்சிக்கிற ஆவிகள்! கர்த்தருடைய ஆராதனையை உற்சாகமூட்டுவதாக நினைத்துக் கொண்டு தங்கள் சுயசித்தத்தின்படி செய்யப் பார்க்கிறார்கள். உங்களில் யாருக்காவது, அப்படி செய்வதும் சரிதானேயென்று தோன்றினால் உங்களுடைய நிலையைக் குறித்து நான் பரிதாபப்படுகிறேன். ஏனென்றால் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் உள்ள பகுதிகளில் ஆராய்ந்து, அதன் மூலமாக அறிந்து கொண்டிருக்கும் விதமாகத்தான் நாம் இந்த சபையில் கடவுளை ஆராதிக்கப் போகிறோம். மனிதர்களின் புதிது புதிதான கண்டுபிடிப்புகளின்படி அல்ல; வேதம் விளக்குகிறபடியான ஆராதனையைத்தான் நாம் கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தப் போகிறோம். ஆராதனையின் கொள்கை என்னவென்று நமக்கு விளங்கிவிட்டதானால், வேதம் காண்பிக்கின்ற, வசனத்தின்படியான ஆராதனையைத் தெளிந்த சிந்தையோடு கடவுளுக்கு ஏறெடுக்கிறவர்களாவோம்.
‘கர்த்தாவே, உம்மை ஆராதிக்க வருகையில் நாங்கள் எவ்விதமாக வரவேண்டும்’? என்று உண்மையாகவே மனதிலிருந்து வாஞ்சையோடு கேட்கின்ற அவருடைய ஜனங்களுக்காக நான் சில காரியங்களை சொல்லப் போகிறேன். அவை, உண்மையான ஆராதனையின் அடிப்படையாக இருக்க வேண்டிய முக்கியமான காரியங்கள். ஆராதனையில், சில விஷயங்களில், நாம் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற அவசியமில்லை. உதாரணமாக, ஆராதனை ஆரம்பிக்கும் நேரம், சபை கூடுகின்ற இடம், எவ்வளவு நேரத்திற்கு ஆராதனை, இருக்கை வசதிகள், வட்டமாக உட்காருவதா, அரைவட்டமாக உட்காருவதா, கான்கிரீட் கட்டிடமா, ஓலை வேய்ந்த கூரையா என்று இவை போன்ற காரியங்களில் கடுமையான சட்டதிட்டங்களை பின்பற்ற அவசியமில்லை. அந்தந்த சபையாரின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் யோசித்து முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சில முக்கியமான விஷயங்களில் வேதம் நமக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமென்பதில் வெளிச்சம் காண்பிக்கிறதை கவனிக்கலாம். அவையே ஆராதனையின் அடிப்படையான விஷயங்களாகும்.
கடவுள், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக அவரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார். கடவுளை ஆராதிக்க வருகின்ற ஒவ்வொரு விசுவாசியும் இந்த கேள்வியைக் கொண்டு தன்னையே ஆராய்ந்து கொள்ள வேண்டியது அவசியம்: “நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்க வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்டது யார்?” (ஏசாயா 1:12) என்று இஸ்ரவேல்
ஜனங்களிடம் தேவன் கேட்டார். புதிய ஏற்பாட்டில், ஆராதிக்க வருகிற விசுவாசியை, எனக்கு இந்தப்பிரகாரமாக ஆராதனை செய்ய வேண்டுமென யார் உன்னிடம் கேட்டது எனக் கடவுள் கேட்கும்போது, அவன், வேதத்தின் பிரகாரமாக சரியான பதிலை அவருக்குத் தாழ்மையோடு கூறக் கூடியவனாக இருக்க வேண்டும். “ஓ! கர்த்தாவே நான் இந்தப்பிரகாரமாக உம்மை ஆராதிக்க வேண்டுமென நீர் கட்டளையிட்டு இருக்கிறீர். அன்பின் கீழ்ப்படிதலோடு இயேசு கிறிஸ்துவின் மூலமாக அதை நிறைவேற்ற வந்திருக்கிறேன்” எனத் தெளிவாகக் கூறுகிறவனாயிருக்க வேண்டும். அப்போது தேவன் அவனுடைய ஆராதனையை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளுவார். “ஆம், பிள்ளைகளே, என்னுடைய நேசகுமாரனுடைய பூரணமான நீதியினாலும், அவர் செய்கின்ற வேண்டுதலினாலும் நான் உங்கள் ஆராதனையை அவர் மூலமாக ஏற்றுக் கொள்ளுகிறேன். இதுவே எனக்கு உகந்த ஆராதனை” என அவர் சொல்லுவார்.
வேதத்தின் பிரகாரமாக அமைந்ததும், வசனத்தையே மையமாகக் கொண்டதுமான கடவுளுக்குகந்த ஆராதனைதான் என்ன? இதன்கீழ் நான் நான்கு முக்கியமான குணாதிசயங்களைக் குறிப்பிடப் போகிறேன்.
- கடவுளையே மையமாகக் கொண்ட ஆராதனை. இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. கடவுளை ஆராதிப்பதற்காக மாத்திரமே நாம் சபையாகக் கூடி வருகிறோம். இந்த சிந்தனை இல்லாமல், வேறு காரணங்களுக்காக கூடி வந்தால் அது வேதம் கூறுகின்ற ஆராதனையே அல்ல. அவ்விடத்தில் என்ன நடந்தாலும் அது கடவுளை மையமாகக் கொண்டு அவருக்கு மகிமையை செலுத்துவதாக இருந்தால் மாத்திரமே அது ஆராதனை. இவ்விடத்தில் ரோமர் 11:36 ஐக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். “சகலமும் அவராலும், அவர் மூலமாயும், அவருக்காகவும் இருக்கிறது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக”. தேவனுக்கு செலுத்துகிற ஆராதனை என்பது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவர் அடங்கிய திரித்துவ தேவனுக்கு செலுத்துகின்ற ஆராதனையாகும் என்பதை இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். புதிய ஏற்பாட்டு ஆராதனை முறை திரித்துவ கடவுள் சம்பந்தமானது. “அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (பரிசுத்த ஆவி), பிதாவினிடத்தில் (பிதா) சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்” (எபேசியர் 2:18). கடவுளை மையமாகக் கொண்ட ஆராதனையானது, திரித்துவ ஆராதனையாகவே இருக்கும். அது இயேசுவுக்கு மாத்திரம் தனித்த பிரகாரமாக முக்கியத்துவம் கொடுக்கிற ஆராதனையாயிருக்காது. அல்லது, பரிசுத்த ஆவிக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுகமளிக்கும் ஆராதனையாகவோ, ஆவியின் வரங்களை வெளிப்படுத்துகிற ஆராதனையாகவோ இருக்காது. கிறிஸ்துவின் மூலமாக திரித்துவ கடவுளுக்கு ஏறெடுக்கப் படுகிற ஆராதனையாக அது இருக்கும். கடவுள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவர் அடங்கிய ஒரே கடவுளாக இருக்கிறார். மீட்பின் பணியிலும் அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி வடிவிலே செயல்படுகிறார். கடவுளின் தன்மையை குமாரனின் மூலமாக பூரணமாக அறிகிறோம். அவரது பயங்கரமான மாட்சிமைக்காகவும், மகத்துவத்துக்காகவும், பரிசுத்தத்திற்காகவும் அவர் ஆராதிக்கப்பட வேண்டியவராய் இருக்கிறார். அவரது அளவிட முடியாத அன்பிற்காகவும், கிருபைக்காகவும் அவர் ஆராதிக்கப்பட வேண்டியவராய் இருக்கிறார். இதற்கு மாறான எந்த காரணமும் இல்லை.
அவரது பயங்கர மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் காணும் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி அடைந்த நிலைதான் என்ன? அவர் என்ன சொல்லுகிறார்? ஐயோ, அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். . . . சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்று அலறுகிறார். அது சந்தோஷ உற்சாக கூக்குரல் அல்ல. அது அழுகையின், கலக்கத்தின் சத்தம். மேலும் அப்போஸ்தலனாகிய யோவானும், உயிரோடெழுந்த இயேசுவை அவருடைய மகிமையின் பூரண நிலையில் கண்டபோது, செத்தவனைப் போல அவர் பாதத்தில் விழுந்தேன் என்கிறார். அவ்வளவு மகத்துவம் வாய்ந்த கடவுளை ஆராதிக்கக் கூடிவருகையில் நமது நிலை எப்படியாயிருக்க வேண்டும்? ஆராதனையில் கூடி வருபவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை கால்களால் தாளம் போட வைத்து, கைகளை உயர்த்தி அல்லேலூயா கோஷம் போட வைப்பது சரியான ஆராதனை அல்ல. அது ஆராதனையின் குணாதிசயத்தையே மாற்றி அமைக்கிறது; ஆராதனையின் பரிசுத்தத்தை குலைத்துப் போடுகிறது. கடவுளை, பிதா- குமாரன்-பரிசுத்தஆவியின் தன்மையிலே தொழ வேண்டும். கடவுளின் குணாதிசயங்களையெல்லாம் குமாரன் நமக்கு விவரித்துக் காண்பித்திருக்கிறார். அவரது பயங்கரமான மகிமைப்பிரதாபத்தையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அளவிடமுடியாத கிருபைகளையும் இரக்கங்களையும் நமக்கு தெரியப்பண்ணியிருக்கிறார். நாம் ஆராதிக்கின்ற கடவுள், தம்மை குமாரனின் தன்மையில் கடைசியாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். முற்காலங்களிலே, தீர்க்கதரிசிகளின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருந்தார். இப்போது குமாரனின் மூலமாக அவர் தம்மை வெளிப்படுத்தியிருப்பதை எபிரெயர் 1:1 ல் நாம் காண்கிறோம். நமது ஆராதனை குமாரன் மூலமாகத் திரித்துவ தேவனுக்கு செலுத்துகின்ற ஆராதனையாயிருக்க வேண்டும். ஏனென்றால் அவரைத்தான் தேவன் நமக்காகக் கொடுத்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் கடவுள் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நமது ஆராதனை இருக்க வேண்டும். நமது பாவநிலையை அவர் தம்மேல் ஏற்றுக் கொண்டதை உணர்ந்த நன்றி கலந்த இருதயத்தோடு அவருக்கு துதி செலுத்துவதும், பரிசுத்தம் அடைந்த உள்ளத்தினால் கடவுளின் பயங்கரமான மகிமையையும், பரிசுத்தத்தையும், அன்பையும், கிருபையையும் உணர்ந்தவர்களாக அவருடைய சந்நிதியில் வந்து நமது உள்ளங்களை அவருக்கு ஏறெடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். நமது விருப்பத்திற்கும், கற்பனைகளுக்கும் ஏற்ற வகையில் அவருடைய தன்மைகளை நாம் மாற்றிக் கொண்டு அவருக்கு ஆராதனை செய்கிறவர்களாக அல்ல. ஆகவேதான், சரியான பிரகாரமாக தம்மை ஆராதனை செய்பவர்களை பிதா தேடிக்கொண்டிருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், அப்படிப்பட்டவர்களை தேடத்தான் வேண்டியதாயிருக்கிறது. தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் (யோவான் 4:24). உண்மை எது? தேவனுடைய
உண்மையான நிலை என்ன என்பதை உணர்ந்தவர்களாக அவரைத் தொழுது கொள்ள வேண்டும். கடவுளின் உண்மையான நிலையை கடைசியாக நமக்கு வெளிப்படுத்தியிருப்பது இயேசு கிறிஸ்துவே. அவரின் உண்மை நிலையில் அவரை ஆராதிப்பதே பிரதானமான ஆராதனைமுறையாக இருக்க வேண்டும். ஆகவேதான் பவுல் அப்போஸ்தலனும் கொரிந்து சபையில் நடந்த தவறான ஆராதனை முறையை சரிப்படுத்துகிறார். சரியான ஒழுங்கிற்கு கொண்டுவருகிறார். அவரவர் இஷ்டத்திற்கு சபையில் ஆராதனை என்கிற பெயரில் நடந்து கொண்ட முறைகேட்டை திருத்துகிறார். உண்மையாகவே அந்நியபாஷை பேசுவதும், தீர்க்கதரிசனம் உரைப்பதும் பரிசுத்த ஆவியினாலே சபையிலே நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே பவுல் அப்போஸ்தலன் ஆராதனை முறைகளில் ஏற்பட்ட குழப்பங்களை திருத்தி, அதை வகைப்படுத்துகிறார். அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காண்பிக்கிறார். அதில் ஒரு காரியத்தைக் குறித்து பவுல் கூறுவதை நாம் கவனிப்போம்: உங்கள் ஆராதனையின் மத்தியிலே தேவனைக் குறித்து அறியாத ஓர் அவிசுவாசி வரும்போது, உங்களுடைய ஆராதனை கடவுளை மையமாகக் கொண்டு, அவரை மாத்திரமே மகிமைப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தால், அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்கள் வெளியரங்கமாகும். அப்போது அவன் என்ன செய்வான்? அவன் முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான் (1 கொரிந்தியர் 14:25). நமது ஆராதனைகளில் என்ன விதமான கடவுளை நாம் ஓர் அவிசுவாசிக்கு அறிமுகப்படுத்துகிறோம்? செல்லம் கொஞ்சி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டுத்தனமான கடவுளையா? கூச்சலையும் கும்மாளத்தையும் விரும்புகின்றதான கடவுளையா? இல்லை. அவர், மனந்திரும்பாதவர்களுக்கு பயங்கரமாகத் தோன்றக்கூடிய கடவுள்! அவிசுவாசியின் பாவத்தை உணர்த்தக்கூடிய கடவுள்! அவன் இருதயத்தை திறந்து வெளிப்படுத்துகிற கடவுள்! தனது நிலையை உணர்ந்து அவன் சபையைவிட்டு வெளியே ஓடிப்போகிறவனாக இல்லை. தனது இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்திய இந்தக் கடவுளைக் குறித்து வியந்து அவன் என்ன சொல்லுகிறான்? “ஓ! இவர்தான் மெய்யான கடவுள். என் பாவநிலையை உணர்த்திய கடவுள்! இந்த இடத்தில் அவருடைய பிரசன்னத்திலே இருக்கின்ற இந்த மக்கள் அவரை அறிந்து கொண்டிருப்பது போலவே நானும் அவரை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என சொல்லுவான். மனிதரோ அல்லது உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளோ அவனது கவனத்தை கவருவதாக அல்ல, கடவுளே அங்கு பிரதானமானவராக காணப்படுவார்.
தேவ வசனத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆராதனைகள் மனிதரை மையமாகக் கொண்டிராது. தனிநபரை சார்ந்ததாக இராது. நிகழ்ச்சி நிரல்களை பூர்த்தி செய்வதாக இராது. மனதுக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிராது. அது கடவுளை மாத்திரமே மையமாகக் கொண்டு, அவரை மாத்திரமே மகிமைப்படுத்துவதாயிருக்கும். இவ்விடத்தில் நடக்கும் ஆராதனைகள் எப்போதும் கடவுளை மாத்திரமே மையமாகக் கொண்டு அமையட்டும். இந்தக் கருத்துக்கு எதிராக நினைப்பவர்கள் மீது தேவன்தாமே இரக்கம் பாராட்டுவாராக.
- வேதம் ஆளுகை செய்கிற ஆராதனை. ஆராதனை கடவுளை மையமாகக் கொண்டு அமைவதோடு, வசனம் அதனை முற்றிலுமாக ஆளுகை செய்வதாய் இருக்க வேண்டும். நாம் தேவனை சத்தியத்தின்படி தொழுகிறோம். சத்தியம் எங்கே இருக்கிறது என்பதை இயேசு கிறிஸ்து யோவான் 17:17ல் அழகாக விளக்குகிறார். உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். ஆராதனையைக் குறித்து விளக்குகிறதான ஒரு புத்தகத்தை நான் என்னுடைய அறையிலே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அதை எழுதிய ஆசிரியர் ஓர் அத்தியாயத்திலே சொல்லுகிறார், ஆராதனையைக் குறித்து எவ்வளவோ பேசலாம். ஆனால் முடிவாக சொல்லப்போனால் ஓர் ஆராதனையின் முக்கியமான ஒழுங்குமுறையாவது 4 காரியங்கள் ஆகும். ஆராதனையில் நாம்,
1. வேதத்தைப் படிக்கிறோம் (We read the Bible)
2. வேதத்தின்படி ஜெபிக்கிறோம் (We pray the Bible)
3. வேதத்தைப் பாடுகிறோம் (We sing the Bible)
4. வேதத்தைப் பிரசங்கிக்கிறோம் (We preach the Bible)
என அவர் எழுதியிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. இந்த கருத்துக்காக நான் கடவுளை துதித்தேன். கர்த்தரோடு தனித்திருந்து வேதத்தை தியானிக்கையில் யாரும் இடையில் குறுக்கிடுவதை நான் பொதுவாக விரும்ப மாட்டேன். ஆனால் இந்த வேளையில் சந்தோஷ மிகுதியினால் நான் உடனடியாக தொலைபேசியை எடுத்து அந்தப் புத்தகத்தை எழுதியவரோடு தொடர்பு கொண்டு அவரோடு அளவளாவினேன். சகோதரரே, நீங்கள் எழுதிய கருத்து எனக்கு இன்றைக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது என்று கூறினேன். சற்று நேரம், பல விஷயங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அந்த ஐக்கியம் மிகவும் உற்சாகம் அளித்தது. அதுமுதல் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொள்வதுண்டு.
அதைத்தான் இந்த வேளையிலே ஆராதனையின் இரண்டாவது குணாதிசயமாக குறிப்பிட விரும்புகிறேன். வேதம் ஆளுகை செய்கிற ஆராதனையில் மேற்கூறிய பகுதிகளில் வேதாகமம் ஆளுகை செய்யும். ஆராதனையில் வேதாகமம் படிக்கப்படுகிறது. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்கள் படிக்கப்படுவது போல் அல்ல. நீங்கள் இங்கு ஆராதனைக்கென்று கூடிவரும்போது, ஆராதனையின் ஆரம்பமாக நீங்கள் முதலாவதாக கேட்பது ஆராதனைக்கென வரும்படி அழைப்பு விடுக்கின்ற தேவனுடைய வசனத்தைதான். கடவுள் தமது வார்த்தைகளைக் கொண்டு வானத்திலிருந்து உங்களிடம் பேசுகிறார். தன்னை தொழுதுகொள்ளும்படியாக அழைக்கிறார். அதன்பிறகு நாம் பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் தொடர்ச்சியாக வசனங்களை வாராவாரம் படித்து வருகிறோம். இதை எதற்காக செய்கிறோம்? பவுல் அப்போஸ்தலன் இப்படியாக செய்யும்படி தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டிருப்பதை வேதத்தின் மூலமாக அறிகிறோம். தீமோத்தேயு எபேசு சபையில் இருந்து, விசுவாசிகளை
ஊக்கப்படுத்தி ஊழியம் செய்து கொண்டிருக்கிறார். சபைக்குத் தேவையான அநேக புத்திமதிகளை பவுல் நிருபத்தில் எழுதி தீமோத்தேயுவுக்கு அனுப்புகிறார். வாசிக்க வேண்டியதின் அவசியத்தைக் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். “நான் வருமளவும் வாசிக்கிறதிலும், புத்திசொல்லுகிறதிலும், உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு” (1 தீமோத்தேயு 4:13). அதுபோல கொலோசெய பட்டணத்திலுள்ள சபைக்கும் பவுல் இவ்வாறே திட்டம் பண்ணி அனுப்புகிறார். “இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்” (கொலோசெயர் 4:16). அன்றைய காலகட்டத்தில் சபைத்தலைவர்கள் இப்படியாக அப்போஸ்தலர்களிடம் இருந்து வருகின்ற நிருபங்களை சபையின் மக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்கள். பின்னர் அவைகளை அவர்கள் மற்ற இடங்களிலுள்ள சபைகளுக்கும் வாசிக்கும்படியாக அனுப்பிவைத்தார்கள். இப்படியாக வேதாகமம் அவர்கள் மத்தியிலே வாசிக்கப் பட்டது. கொலோசெய நிருபமானது சிந்திக்க வைக்கிற, ஆழமான சத்தியங்கள் நிறைந்த நிருபமாகும். கிறிஸ்துவைக் குறித்தும் அவரது மகிமையைக் குறித்தும், அவருடைய உன்னதமான நிலையைக் குறித்தும் ஆழமான வெளிப்பாடுகளை உள்ளடக்கிய நிருபம். ஆனால் இவை வாசிக்கப்பட்ட சபையிலுள்ள மக்களோ சாதாரணமான ஜனங்கள். எஜமான்களும், வேலைக்காரரும், தகப்பன்மார்களும், தாய்மார்களும், பிள்ளைகளும் அடங்கிய சாதாரணமான மக்கள்தான். அவர்கள் மத்தியிலும்கூட வேதாகமத்தை வாசிக்கும்படியாக பவுல் கட்டளையிடுகிறார். ஆகவே, ஆராதனைகளில் வேதத்தைத் தொடர்ந்து தெளிவாக வாசியுங்கள். கடவுளின் வார்த்தைகள் உங்கள் மத்தியிலே கிரியை செய்யும்.
இதே கட்டளையை பவுல் தெசலோனிக்கேய சபையாருக்கும் கொடுக்கிறார். “இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப் படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்” (1 தெசலோனிக்கேயர் 5:27). நீங்கள் அந்த சபையில் ஒரு மூப்பராக இருந்திருந்தால் உடனே என்ன செய்வீர்கள்? சகோதரரே, அப்போஸ்தலரிடமிருந்து நமக்கு ஒரு நிருபம் வந்திருக்கிறது. அதை சபையில் வாசிக்கும்படியாக கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே இதை வாசிக்க, நாம் கவனமாகக் கேட்போமாக என்று கூறி அதை முழுவதுமாக சபையாருக்கு வாசித்துக் காண்பிப்பீர்கள் அல்லவா! அதுபோலவே இந்த கால கட்டத்திலும் அவைகள் சபைகளில் வாசிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அது தேவகட்டளை. இப்படியான ஆராதனையை தேவன் எதிர்பார்க்கிறார். அதற்குக் கீழ்ப்படிந்து வாசிக்கையில் அதற்குண்டான ஆசீர்வாதங்களையும் தேவன் அருளிச் செய்வார். இதை வெளிப்படுத்தின விசேஷம் 1:3 மூலமாக அறிந்து கொள்கிறோம். “இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” என்று அதில் குறிப்பிடுகிறார். வேதத்தை முழுவதுமாக தொடர்ந்து வாசிக்க வேண்டும். இங்கொரு சங்கீதமும், அங்கொரு புதிய ஏற்பாட்டு பகுதியுமாக அல்ல. அல்லது நாம் விரும்புகிற வேதப்பகுதிகளை மாத்திரம் அல்ல. முழுவேதாகமமும் சபையில் தொடர்ந்து
வாசிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஆராதனையை தேவன் விரும்புகிறார். ஆகவேதான் நாமும் நமது சபையில் கடந்த 46 ஆண்டுகளில் ஆதியாகமம் முதல் மல்கியா வரையுமுள்ள பழைய ஏற்பாட்டை தொடர்ச்சியாக 3 முறை வாசித்து முடித்திருக்கிறோம். அதுபோல மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள புதிய ஏற்பாட்டை 8 அல்லது 9 முறை தொடர்ந்து வாசித்து முடித்திருக்கிறோம். எதற்காக? நமது வாழ்க்கையும், நமது ஆராதனையும், நமது எண்ணங்கள் யாவும் ஜீவனுள்ள கடவுளின் வார்த்தைகளின் மூலமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆகவே ஆராதனையில் வேதவாசிப்புக்கு மிக முக்கிய பங்குண்டு.
அடுத்தபடியாக, நாம் வேதத்தைப் பாடுகிறோம் என்று கூறினேன். இதைக் குறித்து அநேக விவாதங்கள் ஏற்படுவதுண்டு. பாரம்பரிய பாடல்களா, நவீன பாடல்களா, இசை அவசியமா என்கிற விவாதங்களெல்லாம் சபைகளில் நடப்பதுண்டு. புதிய ஏற்பாட்டு பக்தர்கள் கடவுளைத் துதித்துப் பாடியதைக் குறித்து நமக்கு வேதம் தெரிவிப்பது மிகக் குறைவானதே. ஆனால் பாடல்களைக் குறித்த முக்கியமான கருத்தை வேதம் நமக்குத் தெரிவிப்பதை கொலோசெயர் 3:16ல் காணலாம். “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடனே பாடி . . . பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்”. பாடல்களில்கூட வசனம் தொனிக்க வேண்டும் என்கிற தெளிவான கருத்தை தேவன் இங்கு வலியுறுத்துகிறார். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருப்பதாக என குறிப்பிட்ட அவர், அவைகளை சங்கீதத்திலும் கீர்த்தனையிலும் ஞானப்பாட்டுகளிலும் உள்ளடக்கி, போதித்து, புத்திசொல்லி, பக்தியுடனே பாடுங்கள் என்கிறார். ஆராதனையின் பாடல்களிலும் கர்த்தருடைய வசனங்கள் முழுமையாக ஆளுகை செய்ய வேண்டும். போதிக்கிறவர், ஏதோ ஒருசில வசனங்களை மாத்திரம் குறிப்பிட்டு விட்டு, பிற்பாடு தனது சுயஅனுபவங்களையும், சுயபெருமைகளையும் பறைசாற்றிக்கொள்வதாக ஆராதனை இருக்கக் கூடாது. வசனங்கள் யாவும் கிறிஸ்துவினால் அருளப்பட்டவை. கிறிஸ்துவினுடைய ஆவியைக் கொண்டு தீர்க்கதரிசிகள் அவைகளை கூறினார்கள் என்று பேதுரு குறிப்பிடுகிறார். பாடல்களிலும் வசனத்தின் ஆளுகை இருக்க வேண்டும். பாடல்களை இயற்று பவர்களிடம் கிறிஸ்துவின் வசனம் பரிபூரணமாக சகலஞானத்தோடும் வாசமாயிருக்கும்போது அவர்கள் கர்த்தருக்குகந்த பாடல்களை இயற்றுகிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் தேவனுடைய வசனத்தின் கருத்துக்கள் நிறைந்து காணப்படும். அவைகளை உபயோகித்து நாம் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொள்ளுகிறோம். சங்கீதங்களினால் தேவனைத்துதிக்கிறோம். பாடல்களின் வரிகள் எந்த வசனத்தை, எந்த கருத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அறிந்தவர்களாக நாம் அவைகளை உபயோகிக்கும் போது வேதத்தையே பாடுகிறவர்களாகிறோம். அவைகளை சபையின் மூப்பர்கள் சபையாருக்கு அவ்வப்போது விவரித்துச் சொல்லலாம். பாடல்களில் வசனம் தொனிக்க வேண்டும் என்பதை தேவன் இவ்விதமாக
கட்டளையிட்டிருக்கிறார். அதையே அவர் விரும்புகிறார். இப்படியான ஆராதனையை யார் உன்னிடம் கேட்டது என்று அவர் வினவினால், பிதாவே நீரே இவ்விதமான ஆராதனையை கட்டளையிட்டிருக்கிறீர். நான் மகிழ்ச்சியோடு அதை உமக்கு செலுத்துகிறேன் என சொல்லத்தக்கவர்களாயிருக்க வேண்டும். இப்படியாக வேதத்தை வாசிப்பதிலும், வேதத்தைப் பாடுவதிலும் அவருக்கு பிரியமான ஆராதனையை அவருக்கு செலுத்துகிறோம்.
அடுத்தபடியாக, நாம் வேதத்தை ஜெபிக்கிறோம். இது எதைக் குறிக்கிறது? கடவுளின் சித்தத்திற்குட்பட்டவர்களாக நாம் ஜெபிக்கும்போது அவர் நமது ஜெபங்களைக் கேட்டு அதற்கு பதிலும் அளிக்கிறார். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்கு செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 5:14-15). இயேசு சொல்லுகிறார் “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7). கிறிஸ்துவின் வசனத்தோடுகூடிய ஜெபம். நாம் இங்கே சபையில் ஜெபிக்கின்ற ஜெபமானது அவ்வப்போது வாய்க்கு வந்தபடி செய்யப்படுகிற ஜெபம் என நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. இங்கு ஜெபிக்கப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கவனத்தோடு முன்னதாகவே திட்டமிடப்படுகிறது. ஜெபங்கள் வசனத்தின் உதவியோடு ஒவ்வொரு முறையும் எழுதப்பட்டு கடவுளுக்கு ஏறெடுக்கப்படுகிறது. அவரிடம் கேட்கின்ற விண்ணப்பங்களும் வீட்டிலேயே சிந்திக்கப்பட்டு, எழுதப்பட்டு, அவரை ஆராதிக்க வருகையில் அவருடைய கவனத்திற்கென கொண்டுவரப்படுகிறது. நாங்கள் மூப்பர்களாக சேர்ந்து செய்கின்ற ஜெபங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்மை ஆளுகிறவர்களுக்காகவும் ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். நம்முடைய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது (1 தீமோ. 2:1-4) என்று வசனம் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியால் அந்த வசனத்தின்பிரகாரம் ஜெபிக்கிறவர்களாகவும் இருக்கிறோம். ஆராதனையில் வேதத்தின்படி ஜெபிக்கிறவர்களாக இருப்பது அவசியம்.
அடுத்தபடியாக, வேதாகமம் பிரசங்கிக்கப்பட வேண்டும். வாசிப்பதிலும், பாடுவதிலும், ஜெபிப்பதிலும் வேதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருப்பதோடு, ஆராதனையில் வேதம் பிரசங்கிக்கப்படவும் வேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு சபை காரியங்களைக் குறித்து புத்திமதி சொல்லுகையில், “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுயஇச்சைகளுக்கேற்ற போதகர்களைத்
தங்களுக்குத் திரளாக சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்கு செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்” (2 தீமோத்தேயு 4:2-4). உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வேதத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டு வரும்போது அது உங்கள் செவிகளுக்கு இன்பமயமாக மாத்திரம் இருப்பதாக உணரமாட்டீர்கள். வேதாகமம் உங்கள் மனதுக்கு வேலை கொடுப்பதாயிருக்கும். அது உங்களை சிந்திக்க வைக்கும். அது உங்கள் இருதயத்தை உருவக்குத்துவதையும் உணருவீர்கள். இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகவும் அது செயல்படும். உங்களுடைய விருப்பங்களையும் ஆசைஇச்சைகளையும் அது மாற்றிப் போடுவதை உணருவீர்கள்.
வேதபூர்வமான ஆராதனையில் பிரசங்கம் மிக மிக முக்கியமானது. அந்த பணியை நிறைவேற்றுவதற்கு தேவனுடைய ஆவியையும் வரத்தையும் பெற்றிருக்கிற பிரசங்கிகள் சபையில் நியமிக்கப்பட வேண்டும். கடவுள் தமது ஆவியினால் அத்தகைய ஊழியர்களைக் கொண்டு சபையில் பேசுகிறார், ஆறுதல் அளிக்கிறார், உற்சாகப்படுத்துகிறார், பெலப்படுத்துகிறார், கண்டிக்கிறார், ஆத்துமாவை உருவக்குத்துகிறார், மனமகிழ்ச்சியின் எண்ணெயை ஊற்றுகிறார், கிருபையினால் குணப்படுத்துகிறார், சபையில் வசனத்தைக் கொண்டு பேசப்படும் பிரசங்கத்தின் மூலமாக இவ்வளவு காரியங்களையும் அவர் நடப்பிக்கிறார். ஆகவே வேதப்பிரசங்கம் ஆராதனையில் மிகமுக்கிய பங்குவகிக்கிறது. இளம் சாமுவேலைப் போல, “சொல்லும் கர்த்தாவே, அடியேன் கேட்கிறேன்” எனத் தாழ்மையோடு அவர் முன்பாக வந்து பணிந்து அமர்வதைக் காட்டிலும் உற்சாக கோலாகல ஆராதனைகள் பெரிதானதல்ல. வேதாகமம் ஆராதனையின் சகல நிகழ்ச்சிகளிலும் ஆளுகை செய்ய வேண்டியதின் அவசியத்தை இப்போது உணருகிறீர்களா? அவ்வளவு சுலபமாக அந்த நிலைமை நமக்கு வந்துவிடவில்லை. நான் முதன்முதல் உங்கள் மத்தியில் ஊழியம் செய்ய 1962 ஆம் ஆண்டில் வந்தபோது ஆராதனையின் இலக்கணத்தை நாம் முற்றிலுமாக அறிந்திருக்கவில்லை. கடவுளோடு போராடி, ஜெபித்து, வசனங்களை ஆராயந்து பார்த்ததின் விளைவாகவே கடவுள் விரும்புகிற ஆராதனை என்ன என்பதை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். 1970களில் நமது சபையின் ஆராதனை முறைக்கும் இப்போது நாம் விளங்கியிருக்கிற ஆராதனை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள், முன்னேற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை. நமது ஆராதனைகளில் வசனத்திற்கு மிகவும் மதிப்பளித்து, வேதாகமம் முற்றிலுமாக ஆளுகை செய்யும்படியாக நமது ஆராதனைகளை அமைத்த விதம் மாறவேயில்லை. கடவுளை மையமாகக் கொண்ட ஆராதனை! வேதாகமம் ஆளுகை செய்கின்ற ஆராதனை!
- மூன்றாவதாக, ஜெபம் நிறைந்த ஆராதனை. ஆராதனைகளில் ஜெபம் நிறைந்திருக்க வேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, தேவனுடைய வீட்டைக் குறித்தும் அங்கு நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைக் குறித்தும் கரிசனையோடு எழுதுகிறார். நான் உன்னிடத்திற்கு வரத் தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாய் இருக்கிறது
(1 தீமோத்தேயு 3:15) என்று எழுதுகிறார். முதலாம் அதிகாரத்தில் எபேசு சபையிலுள்ள சில தவறுகளையும் கள்ளப் போதகங்களையும் சுட்டிக் காண்பித்து அவைகளை எவ்விதமாக களைந்து, நிர்வகிக்க வேண்டும் என்பதை தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். அதன்பிறகு 2 ஆம் அதிகாரத்தைத் தொடங்கும்போது, தேவனுடைய வீட்டிலே அவரை ஆராதிக்க விசுவாசிகள் கூடிவருகின்ற போது என்ன செய்ய வேண்டுமென்பதை விவரிக்கிறார். “நான் பிரதானமாக சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். நாம் எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது” (1 தீமோத்தேயு 2:1-3). பிரதானமான, மிக முக்கியமான புத்திமதியாக, சபையின் ஆராதனைகளில் ஜெபம் நிறைந்திருக்க வேண்டும் என்கிற கருத்தை பவுல் தெரிவிக்கிறார்.
ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக கடவுள் ஜெபத்தைக் குறித்ததான ஓர் அழகான தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்துகிறார் “. . . என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும் நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். அவர்களுடைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின் மேல் அங்கீகரிக்கப் பட்டிருக்கும். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும்” (ஏசாயா 56:6-7). தேவனுடைய வீட்டிலே ஏறெடுக்கப்படுகின்ற ஜெபங்கள் கடமைக்கென்றோ, ஏனோதானோவென்றோ இருக்கக்கூடாது. மரியாதையின் நிமித்தமாக ஓரிரு காரியங்களை அவருக்குப் புகழ்ச்சியாக சொல்லிவிட்டு, பிறகு நமது எண்ணிறந்த தேவைகளை அவர் முன் கூறுவதாக இருக்கக் கூடாது. அது சரியான ஜெபம் அல்ல. இரக்கமும் பரிசுத்தமும் நிறைந்த தேவனை நாம் எப்போதும் எதற்கும் சார்ந்திருப்பதை வெளிப்படுத்தும் சாதனம்தான் ஜெபம். அவருடைய இரக்கங்கள் நமக்குத் தேவை என்பதை ஜெபத்தில் அறிக்கையிடுகிறோம். நம்முடைய பாவநிலையை அறிக்கையிட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை ஜெபத்தின் மூலமாக அவரிடம் சமர்ப்பிக்கிறோம். சபையில் கடவுளின் பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியானவரின் உதவியையும் ஜெபத்தின் மூலமாக கெஞ்சிக் கேட்கிறோம். தேவன் விரும்பும்விதமாக ஆராதனை செய்வதற்கு, அவருடைய உதவியையே நாடுகிறோம். பெலவீனமுள்ளவர்களாகவும், மனசோர்வுள்ளவர்களாகவும், பலவிதமான உணர்வுகளுள்ளவர்களாகவும் கூடி வந்திருக்கிற சபையாரின் மத்தியிலே வாரும், அவர்தம் உள்ளத்தின் தேவைகளை நிறைவேற்றும் என வேண்டி நிற்கிறோம்.
நான் ஒருவரே தேவன். எனக்கு ஆராதனை செய்யுங்கள். என்னைத்துதியுங்கள். என்னுடைய மகத்துவங்களை விவரித்துச் சொல்லுங்கள். என்னுடைய வழிகளைக் குறித்துப் பேசுங்கள் என்று அவர் நமக்கு கட்டளையிடுகிறார். நாம் என்ன சொல்லுவோம்? ஓ! தேவனே, உமக்குப் பிரியமான
ஆராதனையை எங்களிடமிருந்து கேட்பதற்கு உமக்கு சகல அதிகாரமும் இருக்கிறது. ஆனாலும் தேவனே, அதை செலுத்தக்கூடிய பெலன் எங்களுக்கு இல்லை. நீரே எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய ஆராதனையில் நீர் வாரும். பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும். எங்கள் இருதயத்தைத் திறவும். நீர் விரும்புகிறதை நாங்கள் செய்யும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும் என ஜெபத்தின் மூலமாக கெஞ்சி மன்றாடுகிறோம். அவருடைய பிரசன்னத்திற்காக பிரார்த்தித்து, அவரைப் புகழ்ந்து, அவருக்கு துதிகளை செலுத்துகிறோம். நாம் பாடுகின்ற பாடல்கள், நமது இருதயத்தின் தேவையை அவரிடம் சமர்ப்பிப்பதாயிருக்கிறது. பாடல்களின் மூலமாக நமது துதிகளை ஏறெடுக்கிறோம். அவரைப் புகழுகிறோம். பாடல்களின் மூலமாகவும் நமது ஜெபங்களை அவருக்கு ஏறெடுக்கிறவர்களாயிருக்கிறோம்.
அதையுந்தவிர்த்து மூப்பர்களாகவும், சபையின் அங்கத்தினர்களாகவும் கூடி ஜெபிக்கையிலே நம்மை ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிக்கத் தவறுவதில்லை. பிரசங்கங்களிலே ஆவியானவர் வல்லமையாய் கிரியை நடப்பிக்கவும் ஜெபிக்கிறோம். கர்த்தருடைய நாளின் சாயங்கால வேளையிலே நாம் கூடிவரும்போது, கஷ்டத்திலும் துயரத்திலும் இருக்கின்ற நமது சகோதரர்களுக்காக ஜெபிக்கிறோம். ஏனென்றால் அவர்களையும் ஜெபத்தில் நினைக்க வேண்டுமென கர்த்தர் எதிர்பார்க்கிறார். சபையின் ஊழியக் காரர்களுக்காகவும், செய்யப்படுகிற ஊழியங்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுகின்றோம். ஒரு சபையோ அதனுடைய ஆராதனையோ தேவன் விரும்பும் விதமாக நடக்க வேண்டுமென்றால் அது சுலபமானதல்ல. பலபேருடைய உண்மையான வேண்டுதல்களினால் தேவன் இரங்கி ஆராதனையை அவருக்குப் பிரியமாக நடப்பிக்க உதவி செய்கிறார். எனக்கு மிகுந்த வருத்தத்தை விளைவிக்கிற காரியம் என்னவென்றால், வேதத்தை சரியாகக்கூட படித்திராத சிலபேர்கள் வந்து, இதை இப்படி செய்தால் நன்றாயிருக்கும், அப்படி செய்தால் எழுப்புதலாய் இருக்கும் என்றெல்லாம் யோசனைகள் சொல்ல முயற்சிப்பதுதான். ஏனென்றால் அவர்கள் வெளியில் பலவிதமான சபைகளில் சென்று பார்த்து, தங்களுக்கு உற்சாகமாக இருக்கக் கூடியதை ஆராதனையில் புகுத்த வேண்டுமென ஆவல் கொள்ளுகிறார்கள். நமது இஷ்டத்தின்படியான ஆராதனையை தேவன் விரும்புவதில்லை. எப்படிப்பட்ட ஆராதனையை அவர் விரும்புகிறார் என்பதை வேதத்தின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டுமேயொழிய மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளக்கூடாது. இதோ, நான் என்னுடைய ஊழியத்தை முடித்துவிட்டு செல்லப் போகிறேன். எனக்கு பதிலாக வரப்போகின்ற மூப்பரும் மற்ற இரண்டு மூப்பர்களோடு சேர்ந்து நாம் இதுவரைக்கும் கடைப்பிடித்துக் கொண்டுவந்த கடவுளுக்குப் பிரியமான ஆராதனை முறைகளை மாற்றிவிடாமல் இருப்பதற்காக மிகவும் பாடுபடப் போகிறார்கள். ஆராதனைகள் கடவுளை மாத்திரமே மையமாகக் கொண்டதும், வசனம் ஆளுகை செய்கிறதும், ஜெபம் நிறைந்ததுமாயிருக்க சகல முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆனால், இன்னும் இரட்சிக்கப்படாத நிலையில், சபைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிற சிலபேருக்கு இவ்விதமான ஆராதனைகள் பிடிக்காது. ஆம், தேவனைத் தேடுகிறவன் ஒருவனும் இல்லை என்பதை
வேதாகமம் நமக்குக் கூறுகிறது. இயற்கை சுபாவத்தின்படி தேவனை ஒருவனும் தேடமாட்டான். அவர் விரும்புவதை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவன் மனதில் தோன்றவே தோன்றாது. இரட்சிக்கப்படாத நிலையிலுள்ள வர்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்கிற எண்ணமே வராது. ஜெபமே இல்லாத, உற்சாக கூச்சல்கள் நிறைந்த வேறுவிதமான ஆராதனைகளுக்குப் போகும்போது அவர்கள் மனதுக்கு மிகவும் இன்பமாயிருக்கும். கைதட்டல்களும், இரைச்சலான இசையும், ஆட்டம்பாட்டங்களும் நிறைந்த வேறு விதமான ஆராதனைக்கு செல்லும்போது அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும். ஏன்? அவர்கள் மறுபடியும் பிறக்காத நிலையில் இருப்பதனால்தான். அப்படிப்பட்டவர்கள் வந்து தேவன் விரும்புகிற ஆராதனையை மாற்றி அமைக்க முயலும்போது சபை அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அது அப்படிப்பட்டவர்களின் சொந்த விருப்பத்தை பூர்த்தி செய்வதாகத்தான் இருக்கும். இதில் சபை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடவுள் கேட்கின்ற ஆராதனையும் அவர் ஏற்றுக் கொள்கிற ஆராதனையும் எப்படிப்பட்டதாயிருக்கும்? கடவுளை மையமாகக் கொண்டதும், வேதாகமம் ஆளுகை செய்வதும், ஜெபத்தால் நிறைந்ததுமாயிருக்கும். இதோடு இன்னும் ஒரு காரியமும் இருக்கிறது.
- பரிசுத்த ஆவி உயிரூட்டும் ஆராதனை. உண்மையான ஆராதனை பரிசுத்த ஆவியினால் உயிரூட்டப்பட்டதாய் இருக்கும். இக்கருத்தை பவுல் பிலிப்பிய சபைக்கு தெளிவாக விளக்குகிறார். அங்கே புறஜாதி கிறிஸ்தவர்கள் ஆராதனை செய்ய கூடிவருகையில், அவர்கள் மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படியாக விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமென்று யூதக்கிறிஸ்தவர்கள் வலியுறுத்துகிறார்கள். அப்போதுதான், மாம்சத்தின் படியான ஆராதனையல்ல, ஆவியின்படியான ஆராதனையே முக்கியமானது என்பதை பவுல் விளக்குகிறார். “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்” (பிலிப்பியர் 3:3).
சில சடங்காச்சாரங்களை பக்கபலமாக வைத்துக் கொண்டு தேவனைத் தொழுவது ஆராதனையின் கோட்பாடு அல்ல. புதிய ஏற்பாட்டு பக்தர்களுக்கு கிரீடமாக கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தோடும், உதவியோடும் தேவனை ஆராதிப்பதே உயிருள்ள ஆராதனையாகும். அவர்தான் விலையேறப் பெற்ற பொக்கிஷமான இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தியவர், இயேசுவைப் புகழ்ந்து ஸ்தோத்தரிக்கக்கூடிய இருதயத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். நமது சுயபலத்தில் அல்ல, தேவனை சார்ந்தே ஜீவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம் என்கிற நமது உண்மைநிலையை உணர்த்தியிருப்பதும் அவரே. நாமோ பலவீனர்கள்; திரும்பத் திரும்ப அவருடைய கிருபையின் சிங்காசனத்தினிடத்தில் வந்து பெலனைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.
“துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல், ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள்
இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரித்து . . .” (எபேசியர் 5:18-20). ஆவியினால் நிறைந்து ஸ்தோத்தரிப்பதே உண்மையான ஆராதனை என்பதை பவுல் விளக்குகிறார். இதே காரியத்தை கொலோசெய சபைக்கு எழுதுகையில் அதில் இன்னொரு முக்கியமான காரியத்தையும் அவர் சேர்த்துக் குறிப்பிடுவதைக் காணலாம். அதில், கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக என்பதையும் சேர்த்து எழுதுகிறார். கிறிஸ்துவின் வசனத்தினால் பரிபூரணமாக நிரப்பப்படாமல் ஒருவரும் ஆவியினால் மாத்திரம் நிரப்பப்பட முடியாது. ஆவியில் நிரப்பப்படுதல் என்பது ஏதோ ஓர் உணர்ச்சிபூர்வமான அனுபவம் அல்ல. வசனத்தின் மூலமாக பிதாவோடு இயேசு கிறிஸ்துவினால் நெருங்கிய ஐக்கியம் உண்டாவதே ஆவியில் நிரப்படுதல் ஆகும்.
நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்றிருக்கும் தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று எபேசியர் 4ம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிடுகிறார். சகலவித கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணங்களும் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும். கெட்ட வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வருமானால் நீங்கள் ஆவியின்படி நடக்கிறவர்கள் அல்ல. வசனத்தில் பரிபூரணமான ஞானம் உடையவர்களாக, ஆவியில் நிரப்பப்பட்டவர்களாக தேவனைத் தொழுகின்ற ஆராதனைகள் உயிரூட்டப்பட்டதாக இருக்கும். அவ்விதமான ஆவியினாலே தேவனைத் தொழுங்கள். அதைத்தான் இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்திரீயிடம் சொல்லுகிறார். “உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்” (யோவான் 4:23). பரிசுத்த ஆவியானவர் நம்மிலுள்ள ஆவியை உயிர்ப்பிக்கும்போது இப்படிப்பட்ட தொழுது கொள்ளுதல் சாத்தியமாகிறது என நான் நம்புகிறேன். ஏனென்றால் நமது ஆவி தன்னில்தானே செத்ததாயிருக்கிறது. பரிசுத்த ஆவியின் கிரியை நடக்கும்போது அது உயிர் பெறுகிறது. பிரசங்கிகள் பிரசங்கிக்க வரும்போதும் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கும்போது அந்த பிரசங்கம் மிகவும் வல்லமையோடும் ஆத்துமாக்களைத் தொடுவதாகவும் இருக்கும். பரிசுத்த ஆவியின் வல்லமையை நம்பியிருக்கும் பிரசங்கிகளும் பவுல் அப்போஸ்தலனைப் போல, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவஞ்சகமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது என்று சொல்லக்கூடும். அதுதான் ஆவியில் பிரசங்கிப்பது. பேசுபவரின் நாவில் தேவனுடைய ஆவியானவர் வந்து, தெய்வீக வல்லமையோடும் அதிகாரத்தோடும் பேசத் தொடங்கும்போது, ஒரு மனிதர் அங்கே நின்று பேசுகிறார் என்கிற உணர்வே அற்றுப்போனவர்களாக, உங்கள் ஆத்துமாவில் தேவன் பேசுவதை உணருவீர்கள். மனுஷஞானத்திற்குரிய பேச்சுத் திறமைகளும், சுயமகிமையை வெளிப்படுத்துவதற்காக பேசப்படும்
பிரசங்கங்களும் ஆவியானவரால் உயிரூட்டப்பட்டவை அல்ல. ஆவியானவர் பேசும்போது நேரம் போவதே தெரியாது. இருதயங்களை உடைத்து நொறுக்கி, அவைகளை தேவனுக்கென்று அவர் ஆதாயப்படுத்துகிறார். அதனால்தான் பிரசங்கங்களின் இடையே தூங்குபவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
நான் உங்களிடம் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பொதுவாக நான் பிரசங்கத்தில் இப்படியான சரித்திரங்களை கூறுவதில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்திற்கு அது பொருத்தமாயிருப்பதால் அதைக் கூற ஆசைப்படுகிறேன். இது நமது சபையின் ஆரம்பகாலகட்டத்தில் நடந்தது. இப்போதுள்ளவர்களில் பொரும்பாலானோர் அப்போது இல்லை. அது ஒரு கர்த்தருடைய நாள். அன்றைக்கு ஆராதனையை நடத்த நான் எழுந்து நின்று அதைத் தொடங்கியபோது ஏதோ சரியாக இல்லாததைப் போல உணர்ந்தேன். முழு சபையாரும் ஏதோ பாரத்தினால் துயரப்படுவது போலத் தோன்றிற்று. நான் ஜெபிக்கத் தொடங்கியபோது என்னுடைய ஜெபம் மேலே செல்லாமல் திரும்பவும் என்னிடமே வந்துவிட்டதைப் போல உணர்ந்தேன். என்னுடைய சத்தம் என்னையே கேலி செய்வது போல இருந்தது. சபையார் பாடல்களைப் பாடும்போது அது உயிரற்று இருந்தது. சபையாரின் முகத்தில் மகிழ்ச்சியோ, துயரமோ ஒன்றுமில்லாமல் செத்தவர்களைப் போல இருந்தார்கள். நான் பிரசங்கித்தபோது, செங்கடலில் பார்வோனின் ரதங்கள் கழன்று விழுந்தபோது இருந்தமாதிரியான நிர்பந்தமான நிலையை உணர்ந்தேன். என்ன முயன்றும் நிலைமையை என்னால் சரிப்படுத்த முடிய வில்லை. சபையார் கலக்கமடைந்தார்கள். யாவருமே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிற்பாடு வந்த புதன் கிழமை ஜெபக்கூட்டத்தில் சபையார் ஜெபித்ததை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்: கர்த்தாவே! நாங்கள் எவ்விதத்தில் பரிசுத்த ஆவியானவரைதுக்கப்படுத்தினோம்? ஓ, கர்த்தாவே நாங்கள் என்ன தவறு செய்தோம்? நீர் எங்கள் மத்தியில் இருந்தீரே! இப்போது எங்களை கைவிட்டு எங்கே சென்றீர்? மீண்டும் எங்கள் மத்தியில் வாரும். எங்களை விட்டு செல்லாதேயும் என்று ஒருமனப்பட்டவர்களாக ஜெபித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் நமது ஆராதனைகள் பரிசுத்த ஆவியினால் உயிரூட்டப்பட்டதாகவே நடந்து வந்திருக்கிறது என்பதை நான் நிச்சயமாக சொல்ல முடியும். பிரசங்கங்கள் தயாரிப்பதிலும் அதை பிரசங்கிப்பதிலும் கூட பரிசுத்த ஆவியானவர் எனக்குத் துணை செய்திருக்கிறார் என்பதை நான் தனிப்பட்ட முறையிலும் சொல்ல முடியும்.
பிரியமானவர்களே, நான் சொல்லுவதை கவனமாகக் கேளுங்கள். ஒரு சபையில் சபையார் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும்போது, அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக சர்வ வல்ல தேவன் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை சபையைவிட்டு விலக்குகிறார். அதை அந்த சபையார் உணராமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? ஆராதனையில் உயிர் இல்லை. ஆகவே இசையை சற்று அதிகப்படுத்துவோம். வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கொண்டுவருவோம். உற்சாகப்படுத்தும் காரியங்களை செய்வோம். சாட்சிகூற வைப்போம் என்று கூறி அவர்கள் பலவிதமான
காரியங்களை ஆராதனையில் நுழைக்கப் பார்ப்பார்கள். சபையில் உயிர் இல்லை என்பதை கடவுளிடமே நேரடியாக சென்று ஒத்துக் கொண்டு ஜெபிப்பதை விட்டுவிட்டு மனுஷஞானத்தினால் ஆராதனையை மேம்படுத்த முயற்சித்து, வெற்றியடையாமல் அதைக் கெடுத்துப் போடுவார்கள். கடவுளிடம் சென்று, கர்த்தாவே, இந்த விதமான ஆராதனையைத்தான் நீர் விரும்புகிறீர். அதை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இருந்தாலும் அதிலே ஜீவனே இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஓ, கர்த்தாவே, நாங்கள் எதில் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தினோம்? எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை எதினால் நாங்கள் காயப்படுத்தினோம்? எங்கள் பாவங்களை எங்களுக்குக் காண்பியும். எங்களைத் தாழ்மைப்படுத்தும். எங்களை மீண்டுமாகப் புதுப்பியும். பரிசுத்த ஆவியானவரே, எங்கள் மத்தியில் வந்து கிரியை செய்யும் என்று கெஞ்சி மன்றாட வேண்டும்.
பரிசுத்த ஆவியினால் உயிரூட்டப்பட்ட ஆராதனை மிக மிக முக்கியமானது. மாம்சத்துக்கு திருப்தி அளிக்கின்ற உல்லாசமான ஆராதனைக்கும், பரிசுத்த ஆவியின் உதவியோடு ஏறெடுக்கப்படுகிற ஆராதனைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. பரிசுத்த ஆவியினால் உயிரூட்டப்பட்ட ஆராதனையில் சந்தோஷம், சமாதானம், பரிசுத்தம் யாவும் இருக்கும். தேவனுடைய ராஜயம் புசிப்பும் குடிப்பும், உல்லாசமான பொழுதுபோக்கு காரியங்களும் அல்ல. அது ஆவியினால் ஏற்படும் நீதியும் சமாதானமும் சந்தோஷமும் பரிசுத்தமும் நிறைந்தது.
நான் கூறிய சில காரியங்களில் உங்களில் சிலருக்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்பதை நான் அறிவேன். அவைகளைக் குறித்து அபிப்ராய பேதம் சிலருக்கு இருக்கிறது. ஆனால், அநேகம் பேர் நான் கூறுவதை ஏற்றுக் கொண்டிருப்பதும் எனக்குத் தெரியும். சபையில் ஓநாய்கள் நுழைந்து கெடுத்துப் போடாதபடிக்கு இங்குள்ள மூப்பர்கள் தங்கள் இரத்தத்தையும் சிந்தத்தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். உண்மையான விசுவாசிகளாக அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைத்துப் பணியாற்றுங்கள். சபையில் உயிரில்லாததை உணர்ந்தீர்களானால், பரிசுத்த ஆவியை எவ்விதத்தில் துக்கப்படுத்திளீர்கள் என்பதை ஆராய்ந்து, ஜெபித்து தேவனை வேண்டிக்கொள்ளுங்கள். அவருக்கு ஏறெடுக்கப்படும் ஆராதனைகள், தேவனை மையமாகக் கொண்டதும், வேதாகமம் ஆளுகை செய்வதும், ஜெபத்தினால் நிறைந்ததும், பரிசுத்த ஆவியினால் உயிரூட்டப்பட்டதுமாக என்றென்றைக்கும் இருக்கட்டும். அப்படி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? . . . சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாயிருக்கும் (எபேசியர் 3:21). இந்த 4 காரியங்களிலும் கவனம் செலுத்தி வந்தால், வருங்கால சந்ததியாரும் பிரயோஜனப்படத்தக்கதாக, சபையில் சதாகாலங்களிலும் மகிமை உண்டாயிருக்கும். காலத்திற்கேற்ப ஆராதனையை மாற்றி அமைக்க வேண்டும், இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய விதத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறுவீர்களானால், எந்த வசனத்தின் அடிப்படையில் நூதன காரியங்களைப் புகுத்துகிறீர்கள் என்பதையும், எவ்விதங்களில் நான் மேற்கூறிய எனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும்
எனக்குத் தெரியப்படுத்துங்கள். மாறிக் கொண்டேயிருக்கும் சமூகத்திற்கு ஏற்றாற் போலவோ அல்லது இளம்தலைமுறைக்கேற்றாற் போலவோ ஆராதனையை மாற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த உலக சமுதாயம் என்ன நினைக்கிறது என்பதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. என்னுடைய வேதம், என்னுடைய தேவன் எதை விரும்புகிறார் என்பதில்தான் நான் முழு கவனத்தையும் செலுத்துவேன். வேதம் என்னுடைய சிந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. இயேசு கிறிஸ்துவை நான் மறுமையிலே சந்திக்கும்போது, கர்த்தாவே, உமது வசனம் எனக்குக் காண்பித்த பிரகாரம் நான் உம்மை ஆராதித்து வந்தேன். தவறு இருந்தால் என்னை மன்னித்து, உமது நீதியினிமித்தமாக என்னை ஏற்றுக்கொள்ளும் என்று அவரிடம் வேண்டிக்கொள்ளுவேன்.
ஜெபிப்போம்: பிதாவே, நாங்கள் மிக முக்கியமான காரியங்களை தியானித்தோம். உமது நாமம் மகிமைப்படும்படிக்கும், கனப்படும்படிக்கும் அவசியமான காரியங்களை உமது ஊழியனைக் கொண்டு நீர் பேசிளீர். கேட்டவர்களின் உள்ளங்களில் அவை பதியும்படிக்குக் கிருபை செய்யும். பிதாவே, உமது குமாரன் வரும் வரைக்கும், உமது விசுவாசிகள் மெய்யான ஆராதனை சம்பந்தமாக தாங்கள் அறிந்திருப்பதை விடாமல் பற்றிக் கொண்டிருக்க உதவி செய்தருளும். சபைக்கு பொறுப்பாக நீர் நியமித்திருக்கும் தலைவர்களுக்கும் உமது கிருபையைத் தந்தருளும். அவர்களுக்குத் தேவையான ஞானத்தை அருளிச் செய்தருளும். சபையைக் கவிழ்த்துப் போட வீசுகின்ற கடும் புயல்களை சந்தித்து சமாளிக்கக்கூடிய பெலனை அவர்களுக்குத் தந்தருளும். உமது ஜனமாகிய விசுவாசிகளுக்கும் பகுத்தறியும் ஆவியைத் தந்தருளும். அவர்களுக்குத் தேவையான கிருபைகளைத் தந்தருளும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் சபையிலே, அவர் வரும்வரைக்கும் மகிமைப்பட அருள் செய்தருளும். ஆமென்.
|
நாம் மற்றவர்களுடைய குற்றப்படுத்தல்களைச் சகிக்க பலவான்களாய் இருக்க வேண்டும். அவ்வளவு பலமில்லாதவன் ஒரு சபைக்குத் தலைவனாய் இருக்க யோக்கியன் அல்ல. நம்மைக் குற்றப்படுத்தினவனை நமது கொடிய சத்துரு என்று நினைக்க வேண்டாம். சுத்த நெஞ்சோடு நம்மைக் குற்றப்படுத்தினால் அவன் நமது இருமடங்கான நட்புக்கு பாத்திரமானவன். அப்படிப்பட்டவன் நம்மைப் பற்றி மேலான எண்ணங்கொள்ளத் தக்கதாக நாம் நடந்துகொள்ள வேண்டும். நமது ஊழிய ஆரம்பத்தில் நம்மைப் போதக வேலைக்கு அபாத்திரனாக நினைத்தவன், நாம் தேவபக்தியிலும் மற்றும் இலட்சணங்களிலும் தேறுகிறதைக் காணும்போது நமக்கு அனுசாரியாகவும் கூடும். ஆகையால், அவன் தன் அபிப்பிராயத்தை உண்மையாய் வெளியிட்டதினிமித்தம் அவனைச் சத்துரு என்று நினைக்க வேண்டாம். - ஸ்பர்ஜன் -
|
தாம்பத்திய உறவில் நெருக்கம்
திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். கடந்த இதழின் தொடர்ச்சியை இவ்விதழில் தந்திருக்கிறோம். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர். – ஆசிரியர்
பாகம் 2 (தொடர்ச்சி)
அத்தியாயம் 6
சுவிசேஷ அன்பின் எதிரி
பழையவகையிலான அன்பு
பழையவகையிலான அன்பு போதுமானதல்ல. அன்பை யார்தான் மதிக்க மாட்டார்கள்? அன்பை யாராவது எதிர்ப்பார்களா? அன்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்கக்கூடுமா? நமது சமுதாயத்தில் அன்பைக் குறித்து அதிகப்படியாக இசையிலும், கவிதையிலும், ஓவியங்களிலும், இலக்கியங்களிலும் புகழப்பட்டிருப்பதைக் காணலாம். தாராள மனப்பான்மையும், கருணையுள்ள தன்மையும், காதலோடுகூடிய பிரியமும், கடமையில் உறுதியும் உண்மையும் ஆகிய மேலான குணங்களெல்லாம் அன்பின் காரணமாக ஏற்பட்டு, அன்புக்கு புகழ்ச்சியைத் தருவதாயிருக்கிறது. இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அன்பை புகழ்ந்து பாராட்டினாலும் மெய்யான அன்பைக் காண்பது அரிதாகத்தான் இருக்கிறது. அவ்வித மெய்யான அன்பு மிகவும் தேவையாகவும் இருக்கிறது.
1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிட்டிருக்கிற அன்பைக் குறித்த வசனங்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். மெய்யான அன்பு என்பது என்ன என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். செயல்முறையில் மெய்யான அன்பு எப்படியிருக்கும் என்பதை விளக்கியிருக்கிறார். அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் சகிக்கும். இவ்வுலகப் பின்னணியிலே பாவமும், மாய்மாலமும், சகல அசுத்தங்களும் நிறைந்திருக்க, பவுல், மெய்யான அன்பை முன்னுக்குக் கொண்டு வந்து, அதை அழகாகப் படம்பிடித்துக் காண்பிக்கிறார். மெய்யான அன்பை நாம் அறிகிற சந்தர்ப்பத்திலே, அதை விளங்கிக்கொள்ளுகிற நேரத்திலே, பாவத்தின் அகோரம் எவ்வளவாக அதை திசைதிருப்பிவிட்டிருக்கிறதென்பதையும் உணருகிறோம். மெய்யான அன்பு பாவத்தை மேற்கொள்ளும்.
1 யோவான் 4:7-11 வரையுள்ள வசனங்கள் வேதாகம அன்பை அதாவது சுவிசேஷ அன்பை அடையும்படி நம்மைத் தூண்டுவதாயிருக்கிறது. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்திலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
கடவுளை சம்பந்தப்படுத்தி யோவான் அன்பை விவரிக்கிறார்: தேவன் அன்பாகவே இருக்கிறார். நமது நட்சத்திரவழிகாட்டியின் முதலாவது நட்சத்திரத்தின் வெளிச்சம் இக்காரியத்தில் ஒளிவீசுவதை கவனியுங்கள். கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனை நம்முடைய பாவங்களைத் தீர்க்கிற கிருபாதாரபலியாக அனுப்பியதின் மூலம் அவரது அளவிட முடியாத அன்பு இங்கு வெளிப்படுகிறது. அவருடைய தியாகபலி, தேவனுடைய உக்கிரகோபத்தை தணிப்பதாகவும் தெய்வீக தண்டனையை விலக்குவதாகவும் அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் தியாகபலி நமது பாவங்களை நீக்குவதாயிற்று. நாம் அடைந்திருக்க வேண்டிய தண்டனையை அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். கீழ்ப்படிதலோடு அவர் தம்மையே சிலுவையில் பலியிட்டதினால் நமது பாவங்களுக்கு செலுத்த வேண்டிய கிரயத்தை செலுத்தினார். கடவுள் எதிர்பார்த்த நீதியுள்ள கிரயத்தை செலுத்தி, தம்முடைய மரணத்தின் மூலமாக அவர் மரணத்தையே வென்றார். தமது உயிர்த்தெழுதலின் மூலமாக மனுக்குலத்துக்குப் புதிய ஜீவனை சம்பாதித்தார். அது நித்தியமான வாழ்வு. அன்பின் வாழ்வு. இதுவே அன்பு. அன்பானது ஜீவனைப் பிறப்பிக்கிறது. பாவத்தின் விளைவாக ஏற்பட்ட மரணத்தினால் உண்டாகும் பிரச்சனைகளை அன்பு களைகிறது. பாவம் பிரிவினைகளை ஏற்படுத்தியது. அன்பு அதை அகற்றுகிறது. பாவம் மரணத்தை ஏற்படுத்துவதாயிருக்கிறது. அன்பு ஒற்றுமையையும் ஜீவனையும் ஏற்படுத்துகிறது. சுவிசேஷ அன்பு மாத்திரமே பாவத்தை மேற்கொண்டு, செத்தநிலையை உயிர்ப்பிப்பதாயிருக்கிறது. இந்தவிதமான அன்பைத்தான் நாம் திருமணவாழ்க்கையில் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக பிதா, பாவிகளாகிய நம்மை எப்படி சிநேகித்தாரோஅந்தவிதமான சிநேகத்தால்தான் நாம் ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டும். இத்தகைய சுவிசேஷ அன்பைத்தான் யோவான் நமக்கு நினைப்பூட்டி, பிதாவானவர் உங்களிடத்தில் அன்புகூர்ந்தவிதமாக நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற ஆலோசனையைத் தருகிறார். பாவத்தை சுட்டிக் காண்பிக்கிற அன்பினால் அன்புகூருங்கள்; மரணத்தை மேற்கொள்ளுகிற அன்பினாலும், பிரிந்தவைகளை ஒன்றுபடுத்துகிற
அன்பினாலும் ஒருவரையொருவர் நேசியுங்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாக தேவன் உங்களுக்குக் காண்பித்த அதேவிதமான அன்பை நீங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுங்கள்.
நான் “சுவிசேஷ அன்பு” என்கிற வார்த்தையை ஏன் உபயோகிக்கிறேன் தெரியுமா? அந்த அன்பு கடவுளிடமிருந்து பிறந்ததாயிருக்கிறது. மேலும் அது சுவிசேஷத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது, சுவிசேஷம் வெளிப்படுத்திய அன்பு! இயேசு கிறிஸ்துவின் மூலமாக அந்த சுவிசேஷ அன்பை கடவுளிடமிருந்து நாம் பெற்றிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் விதைத்த விசுவாசத்தின் வாயிலாக அதை விளங்கிக் கொண்டிருக்கிறோம். சுவிசேஷ அன்பை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதே சுவிசேஷ அன்பை நமது துணையினிடத்தில் காண்பிக்கிறவர்களாக இருக்கிறோம். சிலவேளைகளில் யோசித்துப் பார்க்கும்போது நாம் சரியானபிரகாரம் அன்புசெலுத்தக் கூடியவர்கள் தானா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அன்பு செலுத்தாதபடிக்கு பாவம் நம்மைத் தடை செய்கிறதில்லையா? நமது பிறப்பு, வளர்ந்த சூழ்நிலை, கடந்தகால பழக்க வழக்கங்கள் ஆகியவை நமது சுவிசேஷ அன்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லையா என நினைக்கிறோம். “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17) என்கிற வசனம் உடனே நினைவுக்கு வருகிறது. நாம் ஆவியினால் பிறந்தவர்கள். கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக மாறிவிட்டோம். அன்பினால் அவர் நம்மை விடுதலையாக்கினார். நாமும் அன்பிலே நிலைத்து வாழும்படிக்கே அப்படியாக்கினார்.
சுவிசேஷ அன்பு என்பது சினிமாவில் ஆடிப்பாடி காதலிக்கிற அன்புக்கு ஒத்ததல்ல. சுவிசேஷ அன்பு பாவத்தை மேற்கொள்ளுதலோடு சம்பந்த முடையது. அது மரணத்தை மேற்கொள்வது. இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் வழியாக வந்தது சுவிசேஷ அன்பு. அது கடவுளின் அன்புக்கு ஒத்தது. சுவிசேஷத்தை நாம் விசுவாசிப்பதினால் அத்தகைய அன்பு நமது உள்ளங்களில் ஏற்படுகிறது. அந்த அன்பையே நாம் நமது திருமண வாழ்க்கைக்குள் கொண்டுவர வேண்டியவர்களாக இருக்கிறோம். சுவிசேஷ அன்பு பரிசுத்த ஆவியானவராலே பூரண பலம் பெற்றிருக்கிறது. பரிசுத்த ஆவியினாலே அதிகாரபூர்வமாயும், சட்டபூர்வமாயும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதலின் மூலமாக கடவுள் நம்மீது அன்புகூர்ந்த அதேவிதமாக நாமும் ஒருவரிலொருவர் அன்புசெலுத்தத்தக்கதாக நம்மை உயிர்ப்பிப்பது பரிசுத்த ஆவியானவரே.
சிலுவையின் முடிவு உயிர்த்தெழுதல். உயிரோடெழுந்த இயேசுவினால் தான் சுவிசேஷ அன்பு அதிகாரபூர்வமானது. அந்த அன்பையே இக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது வருங்காலத்தில் பாவமில்லாத நிலையில் நாம் எவ்விதமாக ஒருவரையொருவர் நேசிக்கப்போகிறோமோ அதேவிதமாக இப்போதே நேசிக்கும்படியாக நமக்கு உணர்த்துகிறார். உயிர்த்தெழுதலின் வல்லமையோடும் சுவிசேஷ அன்போடும் மறுஉலகில் நாம் சந்திக்கப் போகிறோம்.
புதியவானத்திலும் புதியபூமியிலும் நாம் இருக்கப்போகும் வண்ணமாகவே இங்கேயும் நாம் ஒருவரிலொருவர் நடந்துகொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். உயிரோடெழுந்த நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினாலே நாம் கடவுளிடமிருந்து சுவிசேஷ அன்பைப் பெற்றவர்களாயிருக்கிறோம். விசுவாசத்தினால் கடவுளின் சுவிசேஷ அன்பைப் பற்றிக்கொண்டவர்களாக அந்த அன்பை இந்த உலகத்திலும் காண்பிக்கப் பார்க்கிறோம். விழுந்துபோன இந்த பாவ உலகத்திலே சாத்தானோடும் பாவத்தோடும் போராடுகின்ற போராட்டத்தின் மத்தியிலும் அந்த அன்பை பிரயோகிக்க முயற்சி செய்கிறோம். விசுவாசத்தினாலே சுவிசேஷத்தைக் கொண்டு மற்றவர்களை சிநேகிக்கப் பிரயாசப்படுகிறோம். மற்ற எல்லா உறவுகளைக் காட்டிலும் மிகவும் நெருக்கமான திருமணஉறவிலே முக்கியமாக சுவிசேஷ அன்பினாலே இணைக்கப்பட முயற்சி செய்கிறோம்.
பாவம் சுட்டிக் காண்பிக்கப்படுதல்
பாவத்தை சுட்டிக் காண்பிப்பதே சுவிசேஷத்தின் உண்மையான நோக்கம். திருமண உறவின் நெருக்கத்தில் நாம் பலவிதமான அன்பு நிலைகளை உணரலாம். கனவுலகில் மிதக்க வைக்கும் காதல், சரீரப்பிரகாரமான நெருக்கம், விளையாட்டுத்தனமான அன்பு, கடமையோடுகூடிய அன்பு, காயப்படுத்தும் அன்பு, இன்பம் தரும் அன்பு இப்படி பல நிலைகளை ருசிபார்க்கலாம். ஆனால் விசுவாசிகளாகிய இரண்டு பேரின் திருமணநெருக்கம் இவையெல்லாவற்றைக் காட்டிலும் இன்னும் ஆழமானது. கடவுளின் அன்பை நமது திருமணத்தில் உணர முடியும். ஆகவே நமது திருமண உறவை சுவிசேஷ அன்பை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இந்த சுவிசேஷ அன்பை, கிறிஸ்துவின் சிலுவையின் மூலமாக, கடவுளிடமிருந்து மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். சுவிசேஷ அன்பு மாத்திரமே பாவத்தை வென்று மரணத்தை மேற்கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால்தான் அது சாத்தியமாயிற்று. இந்த உலகத்தில் இப்போது நாம் காண்கின்ற சாதாரணமான அன்பினாலே அல்ல, வரப்போகின்ற மகிமையான உலகத்திற்குரிய உன்னதமான அன்பினாலே நாம் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடவோம்.
அன்புக்கே பிரதானமான எதிரி நமது பாவம். திருமணஉறவின் நெருக்கத்திற்கு விரோதமான எதிரி நமது பாவம். இது நமக்கு மீண்டும் கவலையை ஏற்படுத்துவதாயிருக்கிறது. திருமணநெருக்கத்தைக் குறிவைத்து தாக்குவதற்கு அநேக எதிரிகள் வெளியிலும் இருக்கிறது. பாவத்தால் கறைபட்ட உலகம், வேதபூர்வமான அன்பை அடைய ஒருபோதும் உதவிசெய்யப் போவதில்லை. ஆனால் அதைவிடப் பெரிய எதிரி நமக்குள்ளேயே இருக்கிறது. எவ்வளவுக்கு நாம் நெருக்கத்தை அடைய உண்மையாக முயற்சிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது பாவநிலை பூதாகரமாக வெளிப்பட்டு நமது நெருக்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டுபண்ணுகிறது. உன்னுடைய துணையைக் குறித்து நீஅதிகமாக அறிந்துகொள்ள பிரயாசப்படும்போது, பாவத்தைக் குறித்தும் அதிகமாக அறிய வேண்டியதாயிருக்கிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முற்படும்போது, அவரவரின் பாவங்கள் வெளிப்பட்டு, சோர்வடையச் செய்கிறது. திருமணநெருக்கத்தை கலைத்துவிடுவதுபோல பயமுறுத்துகிறது. நெருக்கத்தை நாடுவதை தடைசெய்கிறது.
நானும் என் மனைவியும் புதிதாகத் திருமணம் செய்த இளம் தம்பதிகளாக இருந்தபோது, இளம் தம்பதிகளுக்கான வேதபாட ஆலோசனை வகுப்புகளுக்குச் செல்லுவோம். சற்று முதிர்ந்த தம்பதியர்கள் திருமண வாழ்க்கை சம்பந்தமான பலவிதமான பாடங்களை எங்களுக்கு நடத்து வார்கள். நாங்கள் புதிதாக திருமணம் செய்தவர்களாயிருந்தபடியால், ஆரம்பநாட்களில் பலவிஷயங்களில் ஒத்துப் போவது எங்களுக்குக் கடினமானதாக இருந்தது. அனுபவம் வாய்ந்த தம்பதிகள் எங்களுக்கு நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குவார்களாதலால் நாங்கள் அந்த வேதபாட வகுப்புகளுக்குப் போவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினோம். அவர்களில் ஒரு வயதான தம்பதியர் தங்களுடைய திருமண வாழ்க்கையைக் குறித்து எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை எந்த குறைபாடும் இல்லாத பூரணமான வாழ்க்கையாகத் தோன்றியது. அவர்கள் கூறிய காரியங்களை வைத்து நான் அவர்களை கற்பனை செய்து பார்த்தேன். அந்த மனைவி அழகான பட்டுடை உடுத்தி, முகத்தில் எப்போதும் தவழும் புன்முறுவலோடும் அன்போடும், பாடிக்கொண்டே தன் கணவனுக்கு பணிவிடை செய்வதாகவும், கணவரும் தமது அன்பின் கரங்களினால் மனைவியை அணைத்துக் கொண்டு நடனத்தோடும் பாட்டோடும் தங்கள் வாழ்க்கையை அனுதினமும் நடத்திக் கொண்டு வந்தது போல என் மனக்கண்களினால் கண்டு இரசித்தேன். கதைகளில் வருவது போல அவர்களுடைய வாழ்க்கை மிகவும் இன்பமயமாக இருந்தது. மாலை மயங்கும் வேளையிலே இனிமையாக மீட்டப்படும் வீணை போலத் தோன்றியது அவர்களுடைய இல்லற வாழ்க்கை. அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் எங்கள் வீட்டிலோ மெல்லிய வீணை ஒலிக்குப் பதிலாக காதில் வந்து மோதும் இரைச்சலான மேள, மத்தளங்களின் ஓசையே கேட்பதாக எனக்குப்பட்டது. அவ்வப்போது நாங்கள் சிறு சிறு விவாதங்களில் ஈடுபட்டதுண்டு. மெல்லிய பூசல்களும் எங்களுக்குள் தோன்றியதுண்டு. ஆகவே, நான் மெதுவாக அவர்களிடம், நீங்கள் எப்போதாவது சண்டை போட்டதுண்டா? என்று கேட்டேன். அவர்களோ, இல்லவே இல்லை. எப்போதுமே நாங்கள் சண்டைபோட்டதேயில்லை என்றார்கள். அது அவர்களுடைய வாழ்க்கையை இன்னும் உன்னதமானதாக படம்பிடித்துக் காண்பித்தது. சிறிய வாக்குவாதங்கள், கருத்து வேற்றுமைகூட உங்களிடையே ஏற்பட்டது கிடையாதா எனக் கேட்டேன். நாங்கள் வாக்குவாதம் செய்ததே கிடையாது. சிறிய கருத்துவேற்றுமைகூட எங்களிடம் கிடையாது எனக் கூறினார்கள். அவர் பேசிக்கொண்டே போனார். நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். இவர்களைப் போல நாங்கள் வாழமுடியாதா? விவாதம் செய்யாமல் இருக்க முடியாதா எனப் பெருமூச்சு விட்டேன். சரி, இவரிடம் வேறுவிதமாகக் கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணி, உங்கள் பாவங்களைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள். அவை இடையில் வந்து பிரச்சனை உண்டு பண்ணாதா எனக் கேட்டேன். அதற்கும் அவர் சொன்ன பதில் அவர்கள் பரலோகத்தில் வாழுவதைப் போன்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. அதன்பின்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன். வேதபாடம் முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் என் மனைவியிடம், இதில் ஏதோ தவறு இருப்பது போலத் தெரிகிறதே. அவர்கள் சொல்வதில் முற்றிலும் உண்மையிருப்பதாய் தெரிய வில்லையே என்றேன். சிலகாலம் கழித்து தெரிந்து கொண்டேன், அந்த தம்பதியர் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டவர்கள். முதலாம் திருமண வாழ்க்கையில் அவர்கள் உத்தமமாய் நடக்காமல், விபச்சாரத்துக்குள்ளாகி இருவரும் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அநேகம் பொய்களினால் தங்கள் திருமண வாழ்க்கையைக் கட்டி வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களுடைய தவறுகள் அவர்கள் திருமண வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவில்லை என்பதை அறிந்து கொண்டேன். இந்த திருமண வாழ்க்கையும் வெகுகாலம் நிலைக்கவில்லை. அந்த மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டாள். அவர் தமது மரணப்படுக்கையில் மனைவி அருகில் இல்லாமலேயே மரிக்க நேர்ந்தது. இன்றைக்கும்கூட யாராவது தம்பதியர் என்னிடம், நாங்கள் விவாதம் செய்வதேயில்லை என்று சொன்னால் நான் சந்தேகப்படுவேன். ஒன்று அவர்கள் தங்களுக்குள் நெருக்கத்தை அடைய முயற்சி செய்யாமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது என்னிடம் உண்மையைக் கூறாமல் மறைத்து பொய் சொல்லுகிறார்கள். நாம் எப்போதாவது விவாதம் செய்வதால் திருமணத்தில் பிரச்சனை ஏற்படுவதில்லை. பாவநிலையிலே உள்ள இரண்டு பேர் திருமண நெருக்கத்திலே உண்மையாக வாழும்போது எப்போதாவது இவ்விதமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அந்த விவாதங்களுக்கு மூலகாரணமான பாவத்தைக் குறித்து சிந்திக்கிறோமா? இவ்விதமாக வெடித்தெழும்பி நமது நெருக்கத்தை தடைசெய்ய முயற்சிக்கிற பாவத்தை நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி. பாவத்தின் காரணமாக நம்மிடையே ஏற்படும் பிரிவினையை எப்படி மேற்கொள்வது? நமது பாவத்தைக் குறித்து நாம் உண்மையை ஒத்துக்கொள்கிறவர்களாக இருக்கிறோமா?
சில ஆண்டுகளுக்கு முன்னதாக நான் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் ஒரு சபையின் மேய்ப்பராக பணியாற்றுகிறார். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலே அவருடைய மனைவி எங்களுக்கு சிற்றுண்டி கொண்டுவந்து கொடுத்துவிட்டு சற்று உரையாடிவிட்டுத் திரும்ப உள்ளே சென்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியிருந்தன. அவருடைய மனைவி போகும்போது, என் நண்பருடைய முகத்தை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவருடைய பார்வையிலேயே அவர் தமது மனைவியை எவ்வளவாக நேசிக்கிறார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. “நீங்கள் உங்கள் மனைவியை மிகவும் நேசிக்கிறீர்கள் இல்லையா” என நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் தலையைத் தாழ்த்தி, “நான் அந்தப் பெண்ணை பலமுறை என் மனதிற்குள்ளாக கொலை செய்திருக்கிறேன்” என்று கூறி என்னை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். அவர் கூறியதின் அர்த்தம் எனக்கு விளங்கியதால் நாங்கள் இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோம். அதுதான் உண்மை. அது நெருக்கத்தின் வெளிப்பாடு. திருமணநெருக்கத்தை அடைய முயற்சி செய்யும்
இரண்டு பாவிகளிடையே ஏற்படும் உண்மையான மனநிலை அதுதான். என் நண்பர் தனது மனைவியோடு ஆத்மீகமாகத் தொடர்புகொள்ள வேண்டும் என முடிவு செய்துவிட்டார். ஆத்துமாவும் ஆத்துமாவும் நெருங்குகிற வேளையிலே எவ்வளவாக பாவநிலை தங்களில் உள்ளது என்பதை அவர்கள் உணரமுடிவதால் அது பாதிப்பை ஏற்படுத்துவதாயிருக்கிறது.
நாம் நமது துணையை நேசிக்கிறவர்களாக இருக்கிறோம். அவர்களுக்காக எதையும், நமது உயிரையுங்கூட நாம் தியாகம் செய்ய தயாராயிருப்போம். ஆனால், நாம் அவ்வளவு நெருக்கமாக நேசிக்க முயலும்போது, நம்மில் எஞ்சியிருக்கிற பாவமானது தனது பொல்லாத குணத்தோடு அவ்வப்போது வெடித்தெழும்புகிறது. ஆம், நான் என் மனைவிக்காக உயிரையும்விட தயாராக இருந்தாலுங்கூட, அவ்வப்போது பாவத்தினால் ஏற்படுகின்ற மனநிலைகளினாலே அவளை மனதிற்குள்ளாக கொலை செய்பவனாகவும் நான் இருப்பதை அறிந்து வெட்கப்படுகிறேன். இதை சொல்வது எளிதல்ல. யாரும் இவ்வுண்மையை வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மை நிலை அதுதான். அதனால்தான் என்னுடைய நண்பர் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அதைத்தான் ஆதாமும் செய்தார். தான் செய்த தவறுக்கு தனக்கு மரணதண்டனை கிடைக்கக்கூடும் என்பதை அறிந்தவுடன், அதை அப்படியே ஏவாளின் மீது திருப்பிவிட முனைந்ததை நாம் அறிவோம். தான் பாதுகாத்து, காப்பாற்ற வேண்டிய பெண்ணை கைவிட்டு, அவளுக்கு மரணதண்டனை கிடைக்கும்படியாக கவனத்தை திசைதிருப்பி, தான் தப்பித்துக்கொள்ள எடுத்த முயற்சி அது. அதேவிதமான எண்ணம்தான் எனக்குள்ளும் பலமுறை தோன்றுகிறது. என்னிலுள்ள அருவருப்பான பாவம்தான் நான் செய்ய விரும்பாததை செய்யும்படியாக என்னைத் தூண்டுகிறது. பாவம் என்னை என் மனைவியிடமிருந்து பிரிக்கிறது. என்னுடைய பாவத்தினாலே நான் அவளுக்கு அளிக்க வேண்டிய வசதிகளை குறைக்கிறேன்; அவளுடைய தேவைகளை சந்திக்காமல் இருக்கிறேன். அவளுக்கு வேண்டிய பாதுகாப்பையும் அளிக்காமல் இருக்கிறேன். வாழ்நாள் முழுவதுமாக பாதுகாப்பதாக அவளுக்கு அளித்த வாக்குறுதியை முற்றிலும் நிறைவேற்றாதவனாக இருக்கிறேன். என்னுடைய பாவத்தினாலே நான் நிர்வாணமாக இருப்பதுபோல உணருகிறேன். ஆகையினாலே, “நீர் கொடுத்த இந்த ஸ்திரீ” என்று கூறி விலகி நிற்கிறவனாக என்னையே பார்க்கிறேன். உண்மையான ஆத்மீகமான அன்பு செலுத்துகிறவர்கள் கூறுகிற வார்த்தையா அது? பவுல் சொல்லுகிறார்: “அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்துக்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்” (எபேசியர் 5:28-30). நான் என் மனைவியைப் போஷிக்கிறேனா? அவளைக் காப்பாற்றுகிறேனா? அவளுடைய தேவைகளை சந்திக்கிறேனா? அதை நான் செய்யாமல் இருக்கும்போது, பவுல் சொல்வது
போல இல்லாமல், நான் அவளை வெறுக்கிறவனாக, நேசிக்காதவனாக காணப்படுகிறேன். அது அவளை கொலை செய்ததற்கு சமமாகிறது. எப்போதாவது அவள் மீது எரிச்சலோ கோபமோ வெறுப்போ அடைந்தால் அதனால் பரவாயில்லை என என்னை நானே சமாதானம் செய்துகொள்ளுகிறேன். நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என யாக்கோபு 1:19-20 வசனங்கள் என்னை எச்சரிக்கிறது. “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக் கடவர்கள். மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே”. என்னுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்காமல், அது கொலை செய்வதற்கு சமானமாயிருக்கிறது (மத்தேயு 5:21,22).
திருமண உறவில் நெருக்கத்தை அடைவதில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதென்பது உங்களுக்கு விளங்குகிறதா? நான் நெருக்கத்தை விரும்புகிறேன். நான் ஆத்மீக நேசத்தைக் காண்பிக்கவும், நானும் ஆத்மீகமாக நேசிக்கப்படவும் வேண்டுமென விரும்புகிறேன். அந்த முயற்சியில் ஈடுபடும் போது எனது பாவத்தைக் காண்கிறேன். பாவத்தை மறைக்காதபடிக்கு வேதாகமம் என்னை எச்சரிக்கிறது. என் மனைவியை நான் போஷித்துக் காப்பாற்றாவிட்டால், நான் அவள் வாழ்க்கையை குலைப்பவன் ஆகிறேன். அவள் வாழ்க்கையில் எனக்கு அக்கறை இல்லையென்றால் அது அவளை வெறுப்பதற்கு சமமானது. ஒருவரை வெறுப்பது, கொலைக்கு சமான மானது. நான் அவளை நேசிக்கின்ற முயற்சியில், நான் அவளது மனதை நோகடிப்பதையும் உணருகிறேன். அவள் இருதயம் அவளில் சாகும்போது நான் அவளைக் கொலை செய்தவனாகிறேன். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்” ரோமர் 7:24.
நாம் ஒருவர் இருதயத்தை ஒருவர் புரிந்து கொண்டு நெருக்கமாவதற்கு முயற்சிக்கும்போது, நமது ஒளிவுமறைவுகள், வேஷங்களெல்லாம் களையப்பட்டு, நம்மைக் குறித்தும் நமது துணையைக் குறித்ததுமான நிதர்சனமான உண்மைகளை நன்கு விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறோம். நெருக்கமான அன்பு நம்மில் ஏற்படவேண்டுமானால் ஒருவர் மனதிலுள்ளதை மற்றவர் அறிந்துகொள்ள ஆரம்பிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை அறிந்து, விளங்கிக் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பி, நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள நாம் ஆரம்பிக்கும்போது, நமக்கே அதிர்ச்சி தரக்கூடிய வகையில் நமது பாவகுணங்கள் வெளிப்படுவதை உணருகிறோம். நாமே ஏற்றுக்கொள்ள முடியாத, பாவகரமான, ஆபத்தை விளைவிக்கக் கூடிய தீயகுணங்கள் நம்மிலே மறைந்திருந்ததை காண்கிறோம். அவையெல்லாம் இருதயத்தின் ஆழத்தில் படிந்து கிடந்தவை. உள்ளத்தை அறிகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அதைத் தோண்டப் போனால், இத்தீய குணங்களெல்லாம் கசப்பான, அசுத்தமான திராவகங்களாக நம் முகத்தின் மேலும் நமது துணையின் மேலும் வாரியடிக்கிறது. சூழ்நிலையையே மாசுபடுத்துகிறது. நம்மையும் நமது ஆத்துமாவையும் எரித்து சாம்பலாக்கப் பார்க்கிறது. அதை நீங்கள் உங்கள் சொந்த பலத்தினாலே நீக்க முடியாது.
அந்த அழுக்குகளை நீக்கி உங்களை சுத்திகரிக்க ஒரேயொரு காரியத்தினால் மட்டுந்தான் முடியும். அதுதான் சுவிசேஷ அன்பு. சுவிசேஷ அன்புக்கு மாத்திரந்தான் உங்களையும் உங்களது திருமண வாழ்க்கையையும் சுத்தப்படுத்த முடியும். இருதயத்தின் ஆழத்தில் சாக்கடை போல மறைந்திருக்கிற அசுத்த குணங்களை நீக்கி சுத்திகரிக்க சுவிசேஷ அன்புக்கு மாத்திரந்தான் சக்தி உண்டு. அன்பின் பூரணராகிய கடவுள் மாத்திரம்தான் நாம் எப்படி ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்துவது என்பதைக் கற்றுத்தர முடியும். நமக்குள்ளே இயற்கையாக இருக்கின்ற அன்பினாலே அல்ல, கடவுளிடமிருந்து புறப்படுகிற மெய்யான அன்பினாலே நாம் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக அந்த அன்பை தேவன் நமக்குத் தருகிறார். தெய்வீகமானதும் ஆவியினால் சூழப்பட்டதுமான கடவுளின் அன்பையே உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து வின் மூலமாக நமக்குத் தந்து நாம் ஒருவரையொருவர் அந்த அன்பினாலே சிநேகிக்கும் ஆற்றலை அவர் நமக்குக் கொடுக்கிறார். அந்த அன்புதான் பாவத்தை மேற்கொண்டு மரணத்தை வெல்லும். திருமண நெருக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது சுவிசேஷ அன்பு.
|
பிரசங்க வேலையில் ஈடுபடுகிறவர்கள் முதலாவது தாங்களே குணப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குணப்படாத போதகனால் மிகுந்த தீமை விளையும். வேத விரோத கொள்கைகளும், நடத்தைகளும் திருச்சபையில் தோன்றுவதற்குக் குணப்படாத பிரசங்கியே காரணம். இவனது மரணம் மகா பயங்கரம், இவனது பின்னிலைமை எவ்விதமோ? பாபிலோன் இராஜா நரகத்திற்குப் போகும்போது அவன் பூமியில் பாழாக்கின இராஜாக்களும் பிரபுக்களும் பேய்க்கிடங்கிலிருந்து அவனுக்கு எதிர்கொண்டு வந்து, நீயும் எங்களைப் போலாகிவிட்டாயா என்று பரிகாசஞ் செய்ததாக தீர்க்கதரிசி பாவித்திருக்கிறான். குணப்படாமல் ஜீவ காலத்தை வீணாய்க்கழித்த ஒரு பிரசங்கி நரகத்திற்குப் போகும்போது, அங்கே அடையுண்டிருக்கிற அவனது குணப்படாத சபையார் ஏகோபித்து அவனை நோக்கி, நீயும் எங்களைப்போலானாயா? வைத்தியனே, நீ உன்னைத்தானே குணமாக்கவில்லையா? பிரகாசிக்கிற தீபமென்று பாவித்துக் கொண்ட நீஇப்பொழுது நித்திய அந்தகாரத்துக்குள் தள்ளுண்டதென்ன என்று கூப்பிட மாட்டார்களா? ஒருவன் எவ்விதம் கெட்டுப் போனாலும் இவ்விதம் கெட்டுப் போகலாகாது. -பிரசங்கம் கேட்கிறவர்களின் அழிவு பெரிதானால் பிரசங்கிக்கிறவர்களின் அழிவு அதிலும் அதி பயங்கரமல்லவா? - ஸ்பர்ஜன் - |