திருமறைத்தீபம் 2010 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. உண்மையைப் பேசு!
3. பிரியாவிடை பிரசங்கங்கள் – 2 –
4. தாம்பத்திய உறவில் நெருக்கம்
5. சிந்தனை முத்துக்கள்
வாசகர்களே!
கர்த்தரின் கிருபையினால் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக திருமறைத்தீபத்தை ஆரம்பித்தோம். அதுவும் நாம் நினைத்து திட்டமிட்டு உருவானதல்ல இந்த பத்திரிகை. கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலம் இதன் அவசியத்தை எங்களுக்கு உணர்த்தி அதற்கான தேவைகளை சந்தித்து இது தொடர்ந்து வெளி வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தார். எந்த விஷயத்தை செய்தாலும் அது கர்த்தரால் செய்யப்பட்டு வருகிற விஷயமாக நமக்குத் தெரிகிறபோதுதான் நமக்கு அதிக தாழ்மை ஏற்படுகிறது. நாமே நினைத்து ஒன்றை செய்வதைவிட கர்த்தர் செய்ய விரும்புகிற, செய்து வருகிற காரியத்தில் நமக்கு அவர் பங்களிக்கின்றபோதுதான் அதில் கர்த்தரை நாம் பார்க்க முடிகிறது. அந்த விதத்தில் இந்தப் பத்திரிகை ஊழியத்தின் ஆரம்பத்தில் இருந்து கர்த்தரின் வல்லமையான கரத்தை நாம் ஒவ்வொரு இதழின் தயாரிப்பின்போதும் அது வாசகர்களுக்கு பயனளித்து வருகிற விதத்தில் இருந்தும் பார்த்து வருகிறோம். நமக்கு அதைவிட வேறு எது வேண்டும்? பதினைந்தாவது வருடத்தை திருமறைத்தீபம் எட்டியிருக்கிறது. இந்த வருடத்திலும் கர்த்தர் இதன் இதழ்களை உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்படியாக நாம் உழைத்து வர எங்களுக்காக ஜெபியுங்கள். தொடர்ந்து ஒவ்வொரு இதழும் வெளிவர சகலவிதத்திலும் உதவுகின்ற அன்பு இதயங்களுக்கு, அவர்களுடைய உழைப்புக்கு ஆசிரியராகிய எனது நன்றிகள்.
இந்த இதழில் தாம்பத்திய உறவு பற்றிய அலன் டன் அவர்களின் ஆக்கம் தொடர்கிறது. போதகர் அல்பர்ட் என். மார்டினுடைய பிரியாவிடை பிரசங்கங்களில் இரண்டாவதைத் தந்திருக்கிறோம். அத்தோடு யாக்கோபு நிருபத்தின் 5:12 வசனத்தின் மூலம் 'உண்மையைப் பேசு' என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். பெரும் பிரசங்கியான ஸ்பர்ஜன் அவர்கள் தன்னுடைய பிரசங்கங்களில் சிந்தியிருக்கும் சில முத்துக்களையும் பொறுக்கி இதில் கோர்த்திருக்கிறோம். இதுவரை வந்திருக்கும் இதழ்களைப் போலவே இதையும் கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்யட்டும். புதிய ஆண்டு உங்களுக்கு நல்லாண்டாக இருக்கட்டும் - ஆசிரியர்.
உண்மையைப் பேசு!
யாக்கோபு நிருபத்தில் 5ம் அதிகாரம் 12ம் வசனத்தில், “விசேஷமாய் என் சகோதரரே, வானத்தின் பேரிலாவது, பூமியின் பேரிலாவது வேறெந்த ஆணையினாலாவது சத்தியம் பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக் கடவீர்கள்” என்று யாக்கோபு சொல்லியிருப்பதைக் கவனிக்கிறோம்.
நாக்கின் பலத்தையும், அது செய்துவிடக்கூடிய அவலங்களையும் ஆணித்தரமாக இந்த நிருபத்தில் விளக்கியிருக்கும் யாக்கோபு, பேச்சில் கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு அதிகாரத்திலும் விளக்கியிருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. பேச்சைப் பற்றி 1:19, 26; 3:1-12; 4:11, 13; 5:9 ஆகிய வசனப்பகுதிகளில் ஏற்கனவே யாக்கோபு விளக்கியிருக்கிறார். இந்தளவுக்கு பேச்சுக்கு யாக்கோபு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழலாம். வேத ஒழுக்கமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை கர்த்தரின் கட்டளைகளின்படி வாழ்வதின் ஒரு முக்கிய அம்சமாக பேச்சு இருப்பதால்தான் யாக்கோபு இதைப்பற்றி அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது. பேச்சு சுத்தமில்லாத இடத்தில் ஒழுக்கமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இடமில்லை என்பதைத்தான் யாக்கோபு அடிக்கடி வலியுறுத்துகிறார். நாக்கே இல்லாமலிருந்தால் இந்தப் பிரச்சனையே ஏற்பட்டிராதே என்று நாம் சிந்திக்கிற அளவுக்கு பேச்சு சுத்தத்தின் அவசியத்தை யாக்கோபு வலியுறுத்துகிறார். நாக்கில்லாமல் நாம் கர்த்தரைத் துதிக்க முடியாது, ஒருவரோடொருவர் அன்பு காட்டி ஐக்கியத்தில் வரமுடியாது, சுவிசேஷத்தை சொல்ல முடியாது, பிரசங்கிக்க முடியாது, மனைவி பிள்ளைகளோடும், மற்றவர்களோடும் நம்முடைய எண்ணங் களைப் பகிர்ந்துகொள்ள முடியாது. இருந்தாலும் இத்தனை நல்லதும், ஆசீர்வாதமுமுள்ள காரியங்களுக்கு அவசியமான நாக்கு நாம் விசுவாசிக்கும் கர்த்தரையும், கிறிஸ்தவத்தையும மாசுபடுத்தி எத்தனை அவலட்சணமான காரியங்களை செய்துவிடக்கூடிய அளவுக்கு அதற்கான வல்லமையைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் ‘அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது’ (3:8) என்று யாக்கோபு நினைவுறுத்துகிறார்.
நாம் தியானிக்கப்போகிற 5:12 வசனத்தை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் எதன் பேரிலும் சத்தியம் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணினால் கர்த்தர் நம்மை நியாயத்தீர்ப்பு நாளில் தண்டிப்பார் என்று யாக்கோபு சொல்லுவதாகத்தான் சாதாரணமாக நினைத்துக் கொள்ளுவோம். ஆனால், உண்மையில் யாக்கோபு அப்படியான போதனையை இங்கே தரவில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க விரும்புகிறேன். சத்தியம் பண்ணுவதும் (ஆணையிடுவது), அதுவும் எதன் பேரிலும் சத்தியம் பண்ணுவதும் தண்டனைக்குள்ளாகிற செயல் என்று இந்த வசனத்தை வைத்து அநேகர் தவறாகப் பிரசங்கம் செய்து விடுகிறார்கள். இந்த வசனத்தை வைத்துதான் கிறிஸ்தவ வரலாற்றில் நாம் பார்க்கும் அனாபாப்திஸ்து இயக்கத்தார் கோர்ட்டில் சத்தியம் பண்ணுவதுகூட தவறு என்று விளக்கி எந்தவிதமான ஆணையிடுதலும் கர்த்தருக்கெதிரானது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். எந்த வசனத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக வாசிப்பதால் அத்தகைய தவறு இலகுவாக நிகழ்ந்துவிடுகிறது. கர்த்தர் தன் வார்த்தையில் உண்மையாக விளக்கியிருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியாமல் செய்துவிடுகிறது. அவருடைய வார்த்தைக்கு எதிர்மாறான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அவற்றையே வேதமாக எண்ணிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
இந்த வசனத்தில் யாக்கோபு சொல்லுவதை சரியாகப் புரிந்துகொள்ள அது கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அதற்கு முன்னைய வசனங்களில் யாக்கோபு கிறிஸ்தவர்கள் ஆபத்து காலத்திலும், துன்பங்களைச் சந்திக்கும்போதும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று விளக்குகிறார். அதற்குக் காரணம், முதல் நூற்றாண்டில் இந்தக் கிறிஸ்தவர்கள் பல துன்பங்களை வாழ்க்கையில் சந்தித்ததால் பொறுமையில்லாமல் தவறுகளை செய்ய ஆரம்பித்திருந் தார்கள். அதைத் தீர்த்து வைக்கவே யாக்கோபு இந்த நிருபத்தின் மூலம் ஆலோசனை சொல்லுகிறார். ஒருவர் பொறுமையிழந்து போகிறபோது அவர் தன்னுடைய துன்பங்களையும், சலிப்பையும், கோபத்தையும் வெளிக்காட்டாமல் போகமாட்டார். அவற்றை நாம் முகத்தில் காட்டிவிடுவோம், செயல்களில் காட்டிவிடுவோம், முக்கியமாக நாவைப் பயன்படுத்தி வெளிப்படுத்துகிறோம். அந்தத் தவறைத்தான் இந்த முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர்கள் செய்தார்கள். அதைத்தான் யாக்கோபு திருத்துகிறார்.
அப்படியானால் அதற்கும், சத்தியம் பண்ணுவதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இந்தக் கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமானால் நாம் முதலில் இந்த வசனத்தைக் கொஞ்சம் நெருங்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில், ‘ஆணையிடுவது’ (Swear or Oath) என்ற வார்த்தையின் பொருளை ஆராய வேண்டும். ஆங்கில மொழியில் இன்றைக்கு Swear என்ற வார்த்தையை அசிங்கமாகப் பேசுவது என்றுதான் சாதாரண மக்கள் பொருள் கொள்ளுகிறார்கள். இந்த வார்த்தை Swear or Oath என்ற விதத்தில் ஆங்கில வேதத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழிப்படி இதன் மெய்ப்பொருள், நாம் உண்மை என்று விளக்கப்போகிற விஷயத்தை அது உண்மைதான் என்று நிரூபிக்க சாட்சியமாக கர்த்தருடைய பெயரையோ
அல்லது நம்மைவிடப் பெரிய ஏதாவதொன்றின் பெயரையோ சாட்சியமாகப் பயன்படுத்துவதுதான். உதாரணத்திற்கு கோர்டில் நாம் வேதத்தின் மீது கைவைத்து சத்தியம் பண்ணுவதைத்தான் இந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது. அப்படியானால் சத்தியம் செய்வதைத்தானே யாக்கோபு வேண்டாமென்கிறார் என்று நீங்கள் சொல்லத் துடிக்கலாம். அவசரப்படாதீர்கள். பொறுமையாக மேலும் கவனியுங்கள். வழக்கு மன்றத்தில் சத்தியம் செய்கிற, அதாவது ஒருவர் தான் உண்மை என்று விளக்கப்போகிறதற்கு ஆதாரமாக கர்த்தரையோ வேறு எதையோ துணைக்கு இழுப்பதைத்தான் இந்த வார்த்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டிருந்தாலும் யாக்கோபு அதைப் பயன்படுத்துகிற விதத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உதவி செய்வது இந்த வசனத்தின் கடைசிப் பகுதி. அதில் யாக்கோபு, நாம் ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக் கடவீர்கள்’ என்கிறார். இது நாம் முழு வசனத்திலும் யாக்கோபு விளக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் மனதில் உள்ளதை உண்மையாக, எந்தப் பூச்சோ, ஜோடனையின் மூலமும் அதை உண்மையைவிடப் பெரிதாகக் காட்டாமல், கூட்டாமலும் குறைக்காமலும் உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும் என்பதுதான் யாக்கோபுவின் போதனை. கர்த்தரின் பேரில் அல்லது வேறு எதன் பேரிலும் சத்தியம் பண்ணாதே என்று யாக்கோபு சொல்லுகிறபோது, உண்மை உண்மையாக இருக்கிறபோது அதற்கு வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை, கர்த்தர்பெயரைக்கூட இழுக்க வேண்டிய அவசியமில்லை, உண்மைக்கு அலங்காரம் தேவையில்லை, அதை உள்ளபடி சொல்லுவதை ஒழுக்கமாகக் கைக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுகிறார். இதுதான் இந்த வசனத்தின் பொருள். ஆனால், இதை மேலும் விளக்க சில உண்மைகளை இங்கே குறிப்பிடுவது அவசியம்.
(1) வேதம் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் சத்தியம் செய்யக்கூடாது என்று ஆணித்தரமாக தடைவிதிக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வார்த்தை நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்த கர்த்தரே ஆணையிட்டிருப்பதை பழைய ஏற்பாடு விளக்குகிறது. லேவி. 19:12ல் பின்வருமாறு வாசிக்கிறோம், ‘என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்களுடைய தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்’ என்று கர்த்தர் கூறுவதைக் காண்கிறோம். இதைக் கவனமாக வாசித்தால் கர்த்தர் ஆணையிடுவதைத் தடை செய்யவில்லை என்பதையும் அவர் பொய்யாணையிடுவதையே குறைகாண்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அவருடைய நாமத்தைப் பயன்படுத்தி இஸ்ரவேலர் பொய்யாணையிட்டார்கள். ஏற்கனவே 11ம் வசனத்தில் கர்த்தர் ‘ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்’ என்று சொல்லியிருப்பதைக் கவனிக்கவும். அவர்களுடைய பாவம் ஆணையிட்டதல்ல; பொய்யாணையிட்டதே.
மேலும் எண்ணா. 30:2 பின்வருமாறு விளக்குகிறது, ‘ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.’ இங்கேயும் பொருத்தனை செய்யாதே என்று கர்த்தர் கூறவில்லை. பொருத்தனை செய்வாயானால் அதைப் பொய்யாக்காமல் நிறைவேற்று என்றுதான் கர்த்தர் பழைய ஏற்பாட்டில் கூறியிருக்கிறார். உபா. 1-0:20ல், ‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரை சேவித்து, அவரைப் பற்றிக் கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக் கொண்டு ஆணையிடுவாயாக’ என்றிருக்கிறது. ஆணையிடு, ஆனால், அதை தேவ பயத்தோடும் உண்மையோடும் செய் என்கிறது பழைய ஏற்பாடு.
இனிப் புதிய ஏற்பாட்டுப் போதனையைப் பார்ப்போம். இதுவரை நான் விளக்கியதைப் பார்த்துவிட்டு சிலர் பழைய ஏற்பாட்டில் ஆணையிடுவதைக் கர்த்தர் அனுமதித்திருக்கிறார், ஆனால், புதிய ஏற்பாடு அதை நிராகரிக்கிறது என்பார்கள். அது உண்மையா என்பதை ஆராயத்தான் வேண்டும். அது உண்மையில்லை என்பதை அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்க முடியும். பவுல் தான் கூறும் உண்மையை உண்மைதான் என்று உறுதிப்படுத்த கர்த்தரின் பெயரைப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். பழைய ஏற்பாட்டுப் போதனையைப் புதிய ஏற்பாட்டில் தொடர்வதைப் பவுல் தவறாக எண்ணவில்லை. உதாரணத்திறக்கு 2 கொரி. 1:23ஐக் கவனியுங்கள், ‘மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று என் ஆத்துமாவின் பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்’ என்கிறார் பவுல். பவுல் தன்னுடைய கூற்றுக்கு இங்கே தேவனை சாட்சியாக அழைக்கிறார். புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் பவுலின் வார்த்தைகளில் இதை நாம் கவனிக்கிறோம். ரோமர் 1:9ல், ‘நான் ஜெபம் பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக் குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்’. ஆணையிடுவதை பெரிய காரியங்களுக்காகத்தான் வழமையாக எவரும் செய்வார்கள். ஆனால், பவுல், தான் ஜெபத்தில் ரோம கிறிஸ்தவர்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க தேவனை சாட்சியாக அழைக்கிறார். கலா. 1:20ல், ‘நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுவேன்’. இது இன்னுமொரு தெளிவான ஆதாரம். இவற்றின் மூலம் புதிய ஏற்பாடு ஆணையிடுவதற்கு தடைவிதிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். ஆகவே, 5:12ல் யாக்கோபுவின் வார்த்தைகள் ஆணையிடுவதற்குத் தடைவிதிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுகிறோம்.
அப்படியானால் யாக்கோபுவின் வார்த்தைகளுக்கு அது விளக்கப் பட்டிருக்கிற சந்தர்ப்பத்தின்படி உண்மையான பொருளென்ன என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். யாக்கோபுவின் போதனையைப் புரிந்துகொள்ள நாம் முதல் நூற்றாண்டு யூதர்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அக்காலத்தில் யூதர்கள் சாதாரணமாகப் பேசும் பேச்சின் தரம் மிகவும் கீழான நிலைமையில் இருந்தது. அதாவது, அவர்களுடைய பேச்சு நம்பக்கூடியதாக இருக்கவில்லை. பேச்சுக்கும் நடத்தைக்கும் பல மைல்கள் இடைவெளியிருந்தது. எவருமே ஒருவருடைய பேச்சையும் உடனடியாக நம்பமுடியாதளவுக்கு சமுதாயத்தில் பேச்சு மிக மோசமான நிலையில் இருந்தது. (நம் சமுதாயம் இன்றைக்கு இதற்கு நல்லதொரு உதாரணம்). பேச்சு அந்தளவுக்கு நம்ப முடியாதளவுக்கு இருந்ததால் ஒருவர் எதைச் சொன்னாலும் அதை எதன் மேலாவது ஆணையிட்டுச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. அப்படியில்லாத பேச்சை எவரும் சந்தேகத்தோடு பார்ப்பது வழக்கமாகிவிட்டது. யூதர்கள் இதை மிகவும் மோசமாக்கியிருந்தார்கள். உதாரணத்திற்கு மத்தேயு 3:16-22 வரையுள்ள வசனங்களில் இயேசு விளக்கியிருப்பது இதைப் புரிந்துகொள்ள உதவும்.
‘குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின் பேரில் சத்தியம் பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின் பேரில் சத்தியம் பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம் பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின் பேரில் சத்தியம் பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம். காணிக்கையோ? காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? ஆகையால், பலிபீடத்தின் மேல் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான். தேவாலயத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்கள் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான். வானத்தின் பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.’ (மத்தேயு 23:16-22).
மேலே பார்த்த வசனங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? சத்தியம் பண்ணுவதை (உண்மை பேசுவதை) யூதர்கள் சமுதாயத்தில் எந்தளவுக்கு மோசமானதாக்கியிருந்தார்கள் என்பதைத்தான். சத்தியத்தில் வித்தியாசமான சத்தியங்கள் உண்டு என்றளவுக்கு சத்தியத்தை சத்தியமே இல்லாததாக மாற்றியிருந்தார்கள் யூதர்கள். அவர்களுடைய போதனையாலும், நடத்தையாலும் சத்தியம் பொருளற்றதாகியிருந்தது. அதாவது பேச்சு அர்த்தமற்றதாகவும், நம்பமுடியாததாகவும் மாறியிருந்தது.
தேவாலயத்தின் மேல் செய்யப்பட்ட சத்தியத்தைப் பின்பற்றாவிட்டால் பரவாயில்லை என்றும் தேவாலயத்தில் உள்ள பொன்னின் மேல் பண்ணின சத்தியத்தை மீறுவது தண்டனைக்குரியதென்றும் மாற்றியிருந்தார்கள் அந்த யூத சத்தியவிரோதிகள். அதையே இயேசு இங்கே தோலுரித்துக்காட்டி ஆணித்தரமாக கண்டிக்கிறார். எதன் மேல் சத்தியம் செய்கிறாய் என்பதல்ல முக்கியம், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று இயேசு உணர்த்துகிறார். சொன்ன சொல் உண்மை என்பதை உறுதிப்படுத்த எடுப்பதுதான் ஆணை. சொல்லைக் காப்பாற்றுகின்ற எண்ணமே இருதயத்தில் இல்லாவிட்டால் யார் பேரிலாவது போலித்தனமாக சத்தியம் செய்வது எத்தனைப் பெரிய பொய், பாவம் என்பதை இயேசு இங்கே உணர்த்துகிறார். அத்தகைய பாவத்தைத் செய்து பேச்சைப் பொருளற்றதாக மாற்றியிருந்தார்கள் யூதர்கள்.
பியூரிட்டன் பெரியவரான தொமஸ் மேன்டன் சொல்லுகிறார், ‘இதைப் போல கர்த்தருடைய பொறுமையை சோதிக்கும் வேறு பாவமிருக்க முடியாது; ஏனெனில், நம்முடைய இருதயத்தில் கர்த்தர் மேல் இருக்க வேண்டிய சகல பயத்தையும் இது இல்லாமலாக்கி விடுகிறது’. எத்தனை பொருளுள்ள வாசகங்கள் இவை. யாக்கோபு இந்த வார்த்தைகளை எழுதியதற்கான காரணம், அவருடைய நிருபத்தை வாசித்த கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பொறுமையிழந்து நாவால் தவறு செய்ய ஆரம்பித்ததுதான். துன்பங்களை சந்திக்கப் பொறுமையிழந்து நடந்துகொண்டதால் அவர்களுடைய பேச்சு பொருளற்றதாக மாற ஆரம்பித்திருந்தது. சொன்ன வார்த்தைகளை அவர்கள் காப்பாற்றத் தவறினார்கள். அவர்களால் உண்மையாகப் பேசவோ நடந்துகொள்ளவோ முடியாதளவுக்கு அவர்களுடைய இருதயம் பாதிக்கப்பட்டிருந்தது. இருதயப் பாதிப்பு தானே நம்மை வாக்குச் சுத்தமில்லாதவர்களாக்கிவிடுகிறது. அவர்களைக் கண்டித்து திருத்தவே யாக்கோபு இந்த வசனத்தை எழுதினார்.
(2) அடுத்ததாக யாக்கோபு ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்’ என்று கூறியிருப்பதைக் கவனிக்கவும். இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது நாம் இயேசுவை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில், இயேசு மத்தேயு 5:34-36 வரையுள்ள வசனங்களில் இதே வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். இரண்டு பகுதிகளையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் எந்தளவுக்கு அவை ஒத்திருக்கின்றன என்பதை அறிந்து ஆச்சரியப்படுவோம். அதற்குக் காரணம் யாக்கோபுவில் அந்தளவுக்கு இயேசுவின் ஊழிய அச்சு பதிந்திருந்ததுதான். இயேசு யாக்கோபுவின் சகோதரர் அல்லவா?
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம் பண்ண வேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம்,
அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும், கருப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’.
இந்த வார்த்தைகளும் யாக்கோபுவின் வார்த்தைகளும் ஒரே விஷயத்தைத்தான் விளக்குகின்றன. எந்தவிதமான வித்தியாசமுமில்லை. பழைய ஏற்பாட்டில் ஆணையிடுவது (சத்தியம் செய்வது) அனுமதிக்கப் பட்டிருந்தால் இயேசுவும், யாக்கோபுவும் அதற்கு தடையிடுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் காண வேண்டியது அவசியம். இதற்கு மத்தேயு 5ல் இயேசுவின் வார்த்தைகள் பதிலளிக்கின்றன. யூத போதகர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண போதனைகளுக்கு தவறான விளக்கங் கொடுத்தார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தை எழுத்துபூர்வமாக மட்டுமே பார்த்தார்களே தவிர நியாயப்பிரமாணத்தின் உள்ளர்த்தங்களைக் கவனிக்கத் தவறினார்கள். ஆணையிடுவதை அனுமதித்த நியாயப் பிரமாணம் ஆரம்பத்தில் இருந்தே அதன் மூலம் உண்மையைப் பேசு என்பதைத்தான் வலியுறுத்தியது. ஆணையிடுவதன் மூலம் ஒருவன் தான் உண்மை பேசுகிறேன் என்பதைத்தான் தெரியப்படுத்துகிறான். ஆணையிடுவதில் பல விதங்களை ஏற்படுத்தி அதைத்தான் யூத போதகர்கள் பெரிதுபடுத்தினார்களே தவிர ஆணையிடுவதற்கு பின்னால் காணப்படும் மெய்ப்போதனையை நினைத்துப் பார்க்கத் தவறினார்கள். அதன் மூலம் அவர்கள் ஆணையிடுவதையும் மக்கள் மத்தியில் குழப்பி பேச்சிலும் உண்மைக்கே இடமில்லாமல் செய்திருந்தார்கள்.
மனிதன் பாவத்தின் காரணமாக உண்மையில்லாமல் நடந்து கொண்டதால்தான் கர்த்தர் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து அதன்படி நடக்கும்படிப் போதித்தார். உண்மையில்லாமல் மனிதன் நடந்து கொண்டதால்தான் கர்த்தர் ஆணையிடுவதை அனுமதித்து அதன்மூலம் உண்மையைப் பேசும்படி மனிதனுக்கு கட்டளையிட்டார். மனிதனுடைய பாவமே நியாயப்பிரமாணத்தை அவசியமாக்கியது. மனிதனுடைய பாவத்தின் காரணமாகத் தான் சில சந்தர்ப்பங்களில் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று புதிய ஏற்பாட்டில் இயேசு அனுமதித்தார். அதுபோலத்தான் ஆணையிடுவதும். சில சந்தர்ப்பங்களில் நம்முடைய வார்த்தை உண்மையானதாக இருப்பதற்காக, உதாரணமாக வழக்கு மன்றத்தில் ஆணையிடுவது அவசியமாகிறது. மனிதன் பொய்யே பேச முடியாதவனாக இருந்திருந்தால் இதற்கெல்லாம் சமுதாயத்தில் அவசியம் இருந்திருக்காது. இன்றைக்கு கோர்டில் ஆணையிடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. உலகில் காணப்படும் பாவம் அதை அவசியமாக்கியிருக்கிறது. மனிதர்களுடைய வார்த்தையை நம்பமுடியாமல் இருப்பதால் அது தேவைப்படுகிறது.
அதேவேளை பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள் உண்மையைப் பேசி வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இயேசுவும், யாக்கோபுவும் ‘உள்ளதை உள்ள தென்றும், இல்லதை இல்லதென்றும்’ சொல்லும்படிச் சொல்லியிருக் கிறார்கள். அதற்கு அர்த்தம் உண்மையை மட்டும் தெளிவாகப் பேசு, அதோடு வேறு எதையும் சேர்த்துவிடாதே என்பதுதான். எல்லோருமே இன்றைக்கு உண்மையைப் பேசி அதன்படி நடந்துகொண்டால் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த சத்தியமும் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இயேசுவின் போதனையும், யாக்கோபுவின் போதனையும் யூத சமுதாயத்தை மனதில் வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்டவை. அந்த சந்தர்ப்பத்தை ஆராய்ந்து பார்க்காமல் இந்த இரு பகுதிகளுக்கும் விளக்கமளிக்க முடியாது. ‘இயேசுவின் கட்டளையும், யாக்கோபுவின் கட்டளையும் தரப்பட்ட சந்தர்ப்பங்களை சிந்தித்துப் பார்க்காமல் எழுத்துபூர்வமாக மட்டும் அவற்றை விளக்க முயல்வது மோசமான இறையியல்’ என்று ஒரு வேத விரிவுரையாளர் எழுதியிருக்கிறார்.
இந்த இரு பகுதிகளும் இன்றைக்கு நாம் சாதாரணமான சம்பாஷனைகளின்போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் உண்மையை மட்டும் பேச வேண்டும் என்றும் அதற்கு வெளிப்பூச்சுப் போட்டோ அல்லது பெரிய அதிகாரங்களின் பெயரில் ஆணையிட்டோ அதை உறுதிப்படுத்த வேண்டியதில்லை என்பதை வலியுறுத்துகின்றன. அதற்கு மேல் இந்த வசனங்களில் வேறு அர்த்தங்களை நாம் பார்க்க முயலக்கூடாது.
பயன்பாடுகள்:
- யாக்கோபுவின் வார்த்தைகள் வாழ்நாள் முழுதும் நாம் கடைசிவரை போராடி ஜெயிக்க வேண்டிய நம்முடைய இருதயப் போராட்டத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
கர்த்தருடைய கட்டளைகளுக்கோ ஆணையிடுதலுக்கோ எந்தவிதமான அவசியமுமிருந்திராது பாவம் நம்மிலும் உலகத்திலும் இராதிருந்திருந்தால். பாவத்தில் இருந்து விடுதலையாகி கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருக்கும் நாம் நம்மில் எஞ்சியிருக்கும் பாவத்தினாலும், நம்மைச் சுற்றியிருக்கும் பாவத்தினாலும் அன்றாடம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பாவத்தோடு போராட வேண்டியிருக்கிறது. இதை நாம் அக்கறையோடும், கவனத்தோடும் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து செய்துவர வேண்டும். இதைத் தவிர்க்க முடியாது; இதை ஒதுக்கவும் முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி நாம் தொடர்ந்து வெற்றிகரமாக பாவத்தோடு போராடுவதில்தான் தங்கியிருக்கிறது. அதில் நமக்கு ஓய்விருக்காது; அதேநேரம் அந்தப்போராட்டத்தை நாம் நாமாகத் தனியாக நடத்தாமல் கிறிஸ்துவோடு
அவருடைய ஆவியின் மூலம் நடத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தத் தேவையான அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கர்த்தர் நமக்களித்திருக்கிறார்.
நாம் கிறிஸ்தவர்களாக இருந்தபோதும் நம்முடைய இருதயம் கேடுள்ளதாகவும், திருக்குள்ளதாகவும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து திருத்திக்கொண்டிருக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாவம் அதைத் தன் வழியில் அழைத்துச் செல்ல சகல முயற்சியும் எடுக்கும். அதுவே பிசாசின் விருப்பமும் கூட. அதற்கு இடங்கொடுக்காமல் இருதயத்தை வசனத்தின் மூலம் நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதனால் தான் வேதம் தொடர்ந்து இருதயத்தைப் பற்றி நம்மை எச்சரித்து வருகிறது. யாக்கோபு இதைத் தெரிந்து வைத்திருந்த வல்லமையான போதகராக இருந்தபடியால்தான் உள்ளதை நாம் உள்ளபடி பேசவும் இல்லதை இல்லதென்று சொல்லவும் வேண்டும் என்ற கட்டளையிடுகிறார். இதில் நாம் அன்றாடம் தவறு செய்துவிடக்கூடிய நிலையிலுள்ளவர்களாக இருக்கிறோம். நம்முடைய இருதயத்தில் இருந்து புறப்படும் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தி வரையறுத்து வேதபூர்வமாக வெளிப்படுத்தாவிட்டால் நாம் கர்த்தரின் வேதத்தை மீறிப் பாவம் செய்தவர்களாகிவிடுவோம்.
யாக்கோபு இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் இருந்தே இருதயத்தை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார். எரிச்சல், பொறாமை, அகங்காரம், சுயநலம், தானே எல்லாம் என்ற தற்பெருமை, பொருளாசை, நாக்கில் நரம்பில்லாமல் பேசுதல் என்று நாம் செய்கிற எல்லா அவலட்சணமான செயல்களுக்கும் இருதயமே காரணம் என்பதை யாக்கோபு சுட்டிக்காட்டியிருக்கிறார். நம்முடைய பேச்சு சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்முடைய இருதயத்தை வேதத்திற்குக் கட்டுப்படும்படியாக இருக்கும்படிச் செய்தால் மட்டுமே முடியும். நாக்கு நரம்பில்லாமல் பேசுவதற்கு நாக்கல்ல காரணம், நம்முடைய இருதயம்தான். இருதயத்தில் இருந்து கொப்பளித்துப் புறப்பட்டு வரும் சகல தீய எண்ணங் களுக்கும் உருக்கொடுத்து வார்த்தைகளாக அவை நாக்கின் மூலம் வெளி வருகின்றன. நாக்கு நல்லதைப் பேச வேண்டுமானால் இருதயம் வேதத்தால் கட்டுப்படுத்தப்பட்டு ஆவியினால் அடக்கி ஆளப்பட வேண்டும்.
|
“துப்பாக்கி தோட்டாக்கள் தாக்குகின்ற தூரத்தில் நான் இல்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது நமக்குப் பக்கத்திலேயே ஒரு எதிரி நிற்கிறான் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் போகிற பாதை பாதுகாப்பானது என்று நினைக்கும் போது உங்களுக்கு முன்னால் ஒரு பெருங்குழி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ‘நான் பூரணமான பரிசுத்தவானாக இருக்கிறேன்’ என்று நீங்கள் சொல்லுகிறபோது அப்படி உங்களைச் சொல்ல வைக்கிற அந்த அகங்காரந்தான் உங்களுடைய இருதயத்தை அழித்துக்கொண்டிருக்கும் சுயநீதியாகிய மோசமான கான்சர் வியாதிக்கான அறிகுறி.” சார்ள்ஸ் ஸ்பர்ஜன், (பிரசங்கம் 2351, 1894) |
- யாக்கோபுவின் வார்த்தைகள் நாம் பேச்சில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
இந்த வசனம் நாம் உண்மையாகப் பேச வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்திச் சொல்லுகிறது. அரசியல்வாதிகள்தான் நாக்கில் நரம்பில்லாமல் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுவார்கள். பத்திரிக்கைகாரர்களும், டெலிவிஷன் செனல்களும் பொய்யை உண்மையாக்குவதில் கைதேர்ந்தவர்களாக சமுதாயத்தில் இருந்து வருகிறார்கள். பொய்யை உண்மையாக எண்ணி மாய உலகத்தில் வாழ்ந்து வருகிற நம் சமுதாயத்தில் உண்மைக்கு பெரிதாக இடம் இருக்காது. ஆனால், கிறிஸ்தவர்கள் உண்மை பேசி வாழ்வதற்காக கிறிஸ்துவுக்குள் உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். யாக்கோபு நாம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
நாம் உண்மையாகப் பேசி உண்மையாக நடந்துகொண்டால் சத்தியம் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது என்பதைத்தான் இந்தக் கட்டளை உணர்த்துகிறது. உண்மையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறபோது கோர்ட்டில் சத்தியம் செய்ய வேண்டியது அவசிய மானாலும், அப்படிச் செய்கிறபோது அது மனிதனுடைய பலவீனத்தைத் தான் காட்டுகிறது. உண்மை என்று ஒன்றை உறுதிப்படுத்த சத்தியம் செய்கிறபோது அதைச் செய்கிறவர் மேல் மேலும் சந்தேகமே ஏற்படும். இருந்தாலும் வெறும் உண்டு, இல்லை என்று சொல்லுவது சிலவேளை களில் இந்த சமுதாயத்தில் போதாததாக அமைந்து விடுகிறது.
ஏனைய சமயங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் உண்மை பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொள்ள வேண்டும். உண்டு, இல்லை என்று சொல்லுவதை விட்டுவிட்டு சொல்ல வேண்டியதை வார்த்தை களால் அழகுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியமில்லை. நம் வார்த்தை களுக்கு உப்பும், மிளகும் போட்டு சுவைப்படுத்தத் தேவையில்லை. வார்த்தைக்கு மதிப்பளிக்கும்படி யாக்கோபு இங்கே கேட்கிறார். நம்மில் எத்தனை பேர் சந்திக்க வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வராமல் இருந்து பின்னால் சாக்குப் போக்குச் சொல்லிவிடுகிறோம். செய்து
தருகிறேன் என்று சொல்லிவிட்டு சொன்னதைச் செய்யாமல் பின்னால் காரணங்கள் காட்டுகிறோம். எப்போதும் உண்மையைப் பேசி நடந்து கொண்டால் அநாவசிய சாக்குப்போக்கு சொல்லுவதற்கு இடமிருக்காது. உண்மையைப் பேசி வந்தால் மனித உறவில் நம்பிக்கைக்கு இடமிருக்கும். நம் மத்தியில் மனித உறவுகள் மெய்யாக அன்போடு வளராமல் இருந்து வருவதற்கு காரணமே நாம் உண்மையாகப் பேசி உண்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பதுதான். பொதுவாகவே எல்லோரும் உண்மை யில்லாமல் நடந்துகொள்ளாததால்தான் யாரும் எவரையும் சந்தேகத்தோடு பார்த்துப் பழகி வருகிறார்கள். கிறிஸ்துவின் பெயரில் மாய்மால வாழ்க்கை வாழ்வது எத்தனை பெரிய பாவம்.
உண்மையைப் பேச்சில் கொண்டிருக்கும்போதுதான் சுவிசேஷம் அழகு பெறுகிறது. உண்மையைப் பேசாமல் சுவிசேஷத்தின் மகிமையைப் பேசுவதில் பொருளில்லை. இன்று உண்மை என்று ஒன்றை நிரூபிக்க அதை எத்தனையோ விதத்தில் பெரிதுபடுத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. அதனால் உண்மை, உண்மையான உண்மை, உண்மையிலும் உண்மை என்றெல்லாம் உண்மையைப் பிரித்துக்காட்டுகிற நிலை ஏற்படுகிறது. இதெல்லாம் அநாவசியமானது என்கிறார் யாக்கோபு. உண்மையை எந்தவிதத்திலும் அழகுபடுத்தாமல் சாதாரணமாகப் பேசி நடந்து கொண்டால் பேச்சு சுத்தமாக இருக்கும், நம்பக்கூடியதாக இருக்கும் என்கிறார் யாக்கோபு. எந்தளவுக்கு உண்மைக்கு வெகுதூரத்தில் நாம் இருந்துவிடுகிறோம் என்பது புரிகிறதா? உண்மையை மட்டும் பேசுங்கள், உண்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிடுகிறார் யாக்கோபு.
- யாக்கோபுவின் வார்த்தைகள் நம் பேச்சின் காரணமாக நியாயத்தீர்ப்பை சந்திக்கப் போகிறோம் என்பதை நினைவுறுத்துகிறது.
யாக்கோபு நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பல தடவைகள் இந்த நிருபத்தில் எழுதியிருக்கிறார். இதே 5ம் அதிகாரத்தில் ஏற்கனவே சில தடவைகள் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மறுபடியும் அவர் அதை இந்த வசனத் தில் நினைவுறுத்துகிறார். நியாயத்தீர்ப்பு நாளில் சகல காரியங்களுக்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மத்தேயு 12:36ல் இயேசு நாம் பேசும் பேச்சுக்களுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று சொல்லுகிறார்.
மத்தேயு 12:36ல் ‘மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்’ இயேசு. இது கிறிஸ்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தைகள். அதைத்தான் இந்த வசனத்தில் யாக்கோபு நினைவுறுத்துகிறார்.
பிரியாவிடை பிரசங்கங்கள் – 2 –
[அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின், மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து, தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தன் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி. - ஆசிரியர்.]
சபை இலக்கணத்தைப் பின்பற்றுதல் (Churchmanship)
கடந்த 46 ஆண்டுகளாக உங்கள் மத்தியில் உடன்மூப்பராக ஊழியம் செய்துவிட்டு, இப்போது வேறு மாகாணத்தில் வசிப்பதற்குப் போகும் முன்னதாக, டிரினிட்டி சபையின் அங்கத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் பிரிவின் செய்தியாக சில ஆலோசனைகளைக் கூறிக்கொண்டு வருகிறேன். இந்த 46 ஆண்டுகளில் நான் மிகவும் கருத்தோடும் கவனத் தோடும் உங்களை வழிநடத்தி வந்தவைகளின் சுருக்கமான சாராம்சமாக இந்த புத்திமதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். சென்ற வாரத்திலே நான் தனிப்பட்ட விசுவாசிக்குக் கூறின ஆலோசனையை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு, இன்றைய செய்தியைத் தொடருகிறேன்: விசுவாசம், அன்பு இவைகளின் மூலமாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விடமால் பற்றிக் கொண்டிருங்கள்.
அந்த விசுவாசம், அன்பு ஆகியவற்றினாலே அவருடைய வார்த்தைகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சையை உடையவர்களாயிருங்கள்.
இதன் அடிப்படையில் 3 நடைமுறைப் பயிற்சிகளை விளக்கினேன்.
- முற்றிலுமான பரிசுத்த வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
- உலகத்தாரிடமிருந்து பிரிந்து வாழ அழைக்கப்பட்டிருக்கும் அழைப்புக்கு செவிகொடுத்து அதை செயல்படுத்துங்கள்.
- கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இயேசுவின் நீதியை மாத்திரமே சார்ந்து வாழுங்கள். மேலும், இயேசுவிடமிருந்து அனுதினமும் பெலனைப் பெற்றுக் கொண்டு, கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கையை இவ்வுலகில் வாழுங்கள்.
இப்போது என்னுடைய இரண்டாவது ஆலோசனையை அளிக்கப் போகிறேன். அது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தியத்தீரா சபைக்கு கூறின வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்தது. வெளிப்படுத்தின புத்தகத்தின் 2 ஆம் அதிகாரத்தில் நாம் இந்த சபையை பார்க்கிறோம். நாம் அங்கு காண்கிற ஏழு சபைகளில் இது நான்காவது சபை. உயிரோடெழுந்த இயேசுகிறிஸ்துவிடமிருந்து மிகவும் நீளமான செய்தியை இந்த சபைதான் பெறுகிறது. அந்த செய்தியின் ஆரம்பத்தில் இயேசு அந்த சபையை புகழ்ந்து பேசுகிறார். நான் உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். உன்னுடைய அன்பையும், விசுவாசத்தையும், ஊழியத்தையும் அறிந்திருக்கிறேன். உன்னுடைய முந்தின செய்கையிலும் உனது பிந்தின செய்கை அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் பாராட்டுகிறார். ஆனால் இடையில் ஒன்றைக் குறிப்பிடுகிறார். அது மிகவும் கவனிக்கத் தகுந்தது. அவர்கள் யேசபேல் என்கிற பெண்ணை ஆதரித்து வருவதை சுட்டிக் காண்பிக்கிறார். அவள் தன்னை ஒரு தீர்க்கதரிசினியாக காண்பிக்கிறாள். வேசித்தனம் செய்ய கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதாக அந்தப் பெண் மாறுபாடானவைகளை போதித்துக் கொண்டிருக்கிறாள். அவள் மனந்திரும்புவதற்கு எவ்வளவோ அவகாசம் கொடுத்தும் மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. ஆகவே அவளை தண்டிக்கப் போவதை இயேசு குறிப்பிடுகிறார். 25 ஆம் வசனத்தில் அந்த சபைக்கும் ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள் என்பதே அந்த கட்டளை. இந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்துதான் நான் இன்று உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறப்போகிறேன். இந்த வார்த்தையை நினைவில் வையுங்கள்: உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள். உங்களுக்கு உள்ளது என்ன? இந்த வார்த்தையை அடிப்படையாக வைத்து நான் சொல்வது, சபை இலக்கணத்தில் உங்களுக்குள்ளதை அவர்
வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள். அதாவது நான் என்ன சொல்லுகிறேனென்றால் சபையைக் குறித்தும், சபை ஊழியங்களைக் குறித்தும், சபை காரியாதிகளைக் குறித்தும் நீங்கள் கேட்டு, அறிந்து, விளங்கிக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து விலகாமல் அதை இயேசு வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள். இவைகளைக் குறித்து நீங்கள் இச்சபையில் அநேக விஷயங்களை போதகங்கள் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த அறிவை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
நான் உங்களுக்கு பல புத்திமதிகளைக் கூற யோசித்தபோது, சபை இலக்கணத்தைக் குறித்ததான இந்த புத்திமதியை முதலாவதாக கூற ஏன் நான் யோசித்தேன் என்பதற்கு சில காரணங்கள் உண்டு. இந்த சந்தர்ப்பத்தில் நான் நமது சபையைக் குறித்த சரித்திரத்தை சற்றுக் கூற வேண்டும். பொதுவாக நான் என்னுடைய பிரசங்கங்களில் சுயசரித்திரங்களைக் கூறுவதில்லை. நமது சபை ஆரம்பித்து அதன் எந்த ஆண்டுவிழாவையும் நாம் கொண்டாடியதில்லை. முதலாம் நிறைவு விழாவோ, இரண்டாவதோ, ஐந்தாவதோ, பத்தாவதோ, இருபத்தி ஐந்தாவதோகூட நாம் கொண்டாடியதில்லை. இதை குறைகூறும் அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை. கடவுள் நமக்கு செய்தவைகளை நினைத்து ஆண்டுவிழாக்கள் கொண்டாடும்படியாகவும் நான் கூறவில்லை. உண்மை நிலையைக் கூறுகிறேன். பொதுவாக ஆண்டுவிழாக்களின் போதுதான் ஆரம்பகால சரித்திரங்களை நினைவுகூருவார்கள். நமது சபையின் ஆரம்பகால சரித்திரங்களை இப்போது சற்று தெரிந்து கொள்வது இந்த சந்தர்ப்பத்திற்கு உதவியாக இருக்கும். அப்போதுதான், எதற்காக நான் இந்த புத்திமதியை முதலாவது கூற விரும்பினேன் என்பதும் விளங்கும்.
1962 ஆம் ஆண்டு கோடை காலத்தில் நான் நியூஜெர்சியிலுள்ள நார்த்கோல்ட்வெல் என்கிற நகரத்தில் இருந்த ஒரு சிறிய சபைக்கு 6 வாரங்களுக்கு போதக ஊழியம் செய்வதற்காக வந்தேன். அந்த ஆறு வாரங்களும் முடிந்த பின்னர் அந்த சபையிலுள்ள அங்கத்தினர்கள் சேர்ந்து வந்து நான் தொடர்ந்து அவர்கள் மத்தியிலேயே இருந்து மேய்ப்பனாக அங்கு ஊழியம் செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நான் அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் மத்தியிலே சில ஆண்டுகள் ஊழியம் செய்து வந்தேன். வேதத்தை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு நான் பிரசங்கங்களை தயாரித்துக் கொடுத்து வருகையிலே, அந்த சிறிய சபையின் விசுவாச அறிக்கைக்கும் நான் அறிந்து விளங்கிக் கொண்டிருக்கிற விசுவாச அறிக்கைக்கும் இடையே சற்று வேறுபாடு இருப்பது எனக்குத் தெரியவந்தது. “1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை” என்கிற அறிக்கையை நான் விசுவாசித்து ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் அந்த சிறிய சபையோ அந்த விசுவாச அறிக்கையின்படி இயங்கவில்லை என்பதை கண்டேன். இப்படியாக 3 ஆண்டுகள் கழிந்தன. இப்படியான வித்தியாசமான கொள்கையை சபை பின்பற்றி வருவதை அறிந்த எனது மனசாட்சிக்கு, நான் அங்கு ஊழியம் செய்வது சரியானதாகத் தோன்றவில்லை. நானும் சபையாரும் வெவ்வேறுவிதமான விசுவாசக் கொள்கையைக் கொண்டவர்களாக இயங்க முடியாதென்பதை உணர்ந்தேன். ஆகவே அந்த சிறிய சபையிலிருந்து விடுவித்துக்கொள்ள நான் எனது ராஜினாமா கடிதத்தை சபையில் கொடுத்தேன். அதே வேளையிலே பிலடெல்பியா என்கிற இடத்திலிருந்த ஒரு சபையிலிருந்து, அங்கு வந்து ஊழியம் செய்ய என்னுடைய விருப்பத்தைக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். என்னுடைய பயண நேரங்களில் ஒருசில சமயங்களில் நான் அங்கு ஏற்கனவே பிரசங்கித்திருந்தேன். நார்த் கோல்டேவெல் சபையிலே நான் சிலகாலம் ஊழியம் செய்ததில் அந்த மக்களும் என் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். எனக்கும்கூட அவர்களைப் பிரிய மனமில்லைதான். ஆனாலும் விசுவாசத்தில் வேறுபாடு இருந்ததால் மனசாட்சியின்படி என்னால் ஊழியம் செய்ய முடியவில்லை. என்னுடைய விசுவாசக் கொள்கையின் நிமித்தமாக அந்த சபையில் பிளவு ஏற்படுவதையும் நான் விரும்பவில்லை. ஆகவே பிலடெல்பியா சபையிலிருந்து வந்த கடிதம், கடவுள் எனக்கு வேறு பாதையைக் காண்பிக்கிறாரோ என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதே வேளையில் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சிலரும் எனக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு வந்து ஊழியம் செய்தால், இறையியல் படிக்க வரும் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என அவர்கள் நினைத்தனர். சூழ்நிலைகள் இப்படியாக இருந்தது. நார்த் கோல்ட்வெல் சபை மக்களை எனக்குப் பிரிய மனமில்லாவிட்டாலும், கடவுள் வேறு பாதையை காண்பிப்பதாக எண்ணி என் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சபை மக்கள் அனைவருமாக சேர்ந்து வந்து என்னிடம் பேசினார்கள். ஆறு வார ஊழியத்திற்குப் பின்னர் திரும்பிவிட இருந்த உங்களை நாங்கள்தான் எங்கள் மத்தியில் ஊழியம் செய்ய சபையாராகக் கேட்டுக் கொண்டோம். இப்போது நீங்கள் போவதாக இருந்தால் நாங்கள் அனைவரும் இந்த சபை கட்டிடத்தை விட்டுவிட்டு நீங்கள் தங்கி இருக்கும்
இடத்திற்கே வந்து சபையாகக் கூட தயாராக இருக்கிறோம். நீங்கள் எங்களுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்து எங்களை உண்மையான விசுவாசத்திலே நடத்துவீர்களா என்று கேட்டுக் கொண்டார்கள். ஆகவே நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா ஊழியத்துக்கு வர இயலாததை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டேன். நார்த் கோல்ட்வெல் சபையின் போதகராக தங்குவதற்காக எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டையும் காலிசெய்து கொடுத்துவிட்டேன். 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாங்கள் அனைவரும் கூடுவதற்கு பெண்கள் சங்கத்தின் கட்டிடத்தைதான் பயன்படுத்திக் கொண்டோம். சபை கட்டிடமாக இல்லாமல் நாங்கள் கூடிய அந்த பொது இடத்தை என்னால் இன்னும் நினைவுகூர முடிகிறது. மரத்தால் அமைந்த தரையும் மெத்தைகள் இல்லாத கடினமான மர நாற்காலிகளும் அங்கு இருந்தது. அங்கு நாங்கள் பாடிய பாடல்கள் அருமையாக இருந்தது. அவ்விடத்தில் சிறிய சப்தமும்கூட பெரிதாக கேட்கும். பாடுவதற்கும், பிரசங்கங்கள் கேட்பதற்கும் ஏற்ற இடமாக இருந்தது. அந்த கட்டிடம் நாம் பேசுவதை எதிரொலிக்கக் கூடியதாக இருந்தபடியால் நான் சற்று மெதுவாக பேச வேண்டிய தாயிருந்தது. ஆனாலும் ஆரம்ப நாட்கள் முதல் நாங்கள் சந்தித்த நாட்களிலெல்லாம் கடவுளின் அருமையான பிரசன்னம் எங்களோடு இருந்ததை எங்களால் நன்கு உணர முடிந்தது. நான் பாடத்தை விட்டு விலகி ஏதோ கதை சொல்லிக் கொண்டிருப்பதாக நினைக்காதீர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெரிந்துதான் சொல்கிறேன். அந்த சிறிய கூட்டத்தார் எனது பிரசங்கங்களை மிகுந்த கவனத்தோடும் ஆவலோடும் கேட்டார்கள். அந்நாளிலே அவர்கள் சொன்னதின் கருத்தை சொல்கிறேன்: எங்களுக்கு இதுவரைக்கும் வேதத்தைக் குறித்ததான அறிவு இல்லாமல் இருந்தது. பல காரியங்களைக் குறித்து நாங்கள் அறிய வேண்டியபிரகாரமாக அறிந்திருக்கவில்லை. எதையும் சரியாக அறியாமலேயே ஆரம்பித்தால் கடைசியில் எல்லாம் தவறாகத்தானே முடியும். பழைய சபையோடு எங்களுக்கிருக்கும் உறவைத் துண்டித்துக் கொள்ளுகிறோம். நீங்கள் எங்களுக்குப் போதகராக இருந்து, யாவற்றையும் குறித்துப் போதிப்பீர்களா? சபை என்றால் என்ன? சபை அங்கத்துவம் என்றால் என்ன? மூப்பர், கண்காணி என்பவர் யாவர்? சபை ஊழியர்களுக்கு வேதம் குறிப்பிடும் தகுதிகள் யாவை? சபையின் ஊழியங்கள், ஆராதனை நடைபெற வேண்டிய விதம் ஆகியவைகளை எங்களுக்கு கற்றுக் கொடுங்கள். இவை யாவையும் குறித்து நாங்கள் முதலில் தெரிந்து கொள்ளுகிறோம். அதற்குப் பிற்பாடு நாம் ஒரு சபையாக செயல்படுவோம் என்றார்கள். ஏழெட்டு மாதங்கள் நான் அவைகளை அவர்களுக்கு போதித்தேன். நமது சபையின் காஸட்டு அட்டவணையைப் பார்க்கையில் சபை சம்பந்தமாக அந்நாட்களில் நான் பிரசங்கித்த பிரசங்கங்கள் ஏறக்குறைய 21 இருப்பதைக் காணலாம். 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையினை ஏற்றுக் கொண்டவர்களாக 1967ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு சபையாக நிர்ணயிக்கப்பட்டோம். திரு. டிக்ஸன் என்பவரையும் என்னையும் அந்த சபைக்கு மூப்பராக நியமித்தார்கள். அந்த சமயத்திலே இரண்டு மூன்று கண்காணிகளும் நியமிக்கப்பட்டனர்
என நினைக்கிறேன். அந்தவிதமாகத்தான் டிரினிட்டி பாப்திஸ்து சபை பிறந்தது. மிகுந்த ஈடுபாட்டோடு அது ஏற்பட்டது. இப்போது இதில் இருக்கின்ற இரண்டாம் தலைமுறை மக்களே, நீங்கள் கவனிக்கிறீர்களா? மிகுந்த ஈடுபாடு! ஆர்வம்! ஏனோதானோ என்றல்ல. அலட்சியத்தோடும் அல்ல. சபை சம்பந்தமான எல்லா விவரங்களும் வேதாகமத்திலிருந்து அலசி ஆராயப்பட்டது. சபை என்றால் என்ன? சபை எதற்காக ஏற்படுத்தப்பட்டது? சபைக்கு கட்டளைகள் கொடுப்பது யார்? எப்படி தேவனை ஆராதிக்க வேண்டும்? சபை எப்படி செயல்பட வேண்டும்? தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களின் பணி யாவை? சபையில், சபையாரின் ஆட்சியமைப்பா? அல்லது சபையை மூப்பர்கள் ஆள்வதா? நாம் சபையாக குறிக்கப்பட வேண்டுமானால் அதற்கு என்ன விதமான அமைப்பு தேவை? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி, அவைகளைக் குறித்து கவனத்தோடு வசனத்தைக் கொண்டு ஆராய்ந்து அமைக்கப்பட்டது இந்த சபை. கடந்த 46 ஆண்டுகளாக இப்படியான சபை இலக்கணத்தைக் கவனத்தில் கொண்டு இயங்கி வந்ததுதான் இந்த சபை. நம்முடைய காஸட்டு லைப்ரரியில் பார்த்தீர்களானால் சபை காரியங்களைக் குறித்த அநேக பிரசங்கங்களை நீங்கள் காணலாம். நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவை நிருபணமாயிருக்கிறது. சபைதான் உங்களுடைய ஆவிக்குரிய சொத்து; சபைதான் உங்களது உரிமை சாஸனம். சபைதான் உங்கள் ஊழிய ஸ்தலம். ஆகவேதான் சபை இலக்கணத்தைக் குறித்ததான உங்கள் ஞானத்தில் உங்களுக்குள்ளதை இயேசுகிறிஸ்து வருமளவும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள் என்பதை எனது இரண்டாவது அறிவுரையாக உங்களுக்குக் கூறுகிறேன்.
நமது சபை சரித்திரத்தை சற்று பார்த்தோம். அதன் பின்னணியில் மேற்கூறிய இந்த அறிவுரை சபை சம்பந்தமான என்ன காரியங்களை விளக்குகிறது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்பேரில் 3 முக்கியமான கருத்துக்களைக் கூறிவிட்டு, நடைமுறை பயிற்சியாக 4 காரியங்களையும் விளக்க விரும்புகிறேன்.
|
“நமது விசுவாச அறிக்கைதான் மிகவும் மேலானது என்று நான் கூறவில்லை. ஆனால், அது மிகவும் நம்பகமானது; சபை தவறான வழியில் வழிவிலகிப் போய்விடாதபடிக்கு, பல நூற்றாண்டுகளாக அந்த விசுவாச அறிக்கையின் காரியங்கள் விசுவாசிகளை பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த விசுவாச அறிக்கை யின் கொள்கைகளைக் குறித்து நான் வெட்கப்படுவதில்லை.” - அல்பர்ட் என். மார்டின் - |
- இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்கே பிரதான பங்கு இருக்கிறது. அதைக் குறித்ததான உன்னுடைய நம்பிக்கையையும், நடைமுறைப்படுத்தும் விதத்தையும் விடாமல் பற்றிக் கொண்டிரு.
மத்தேயு 16 ஆம் அதிகாரத்துக்கு வாருங்கள். “சபை” என்கிற வார்த்தை சுவிசேஷ புத்தகங்களில் இரண்டே இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. மத்தேயுவிலேயே அவ்விரண்டு இடங்களும் காணப்படுகிறது. இயேசு யார் என்றும் அவருடைய ஊழியம் யாது என்பதையும் பேதுரு இங்கு அறிக்கையிடுகிறார். “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றார் பேதுரு. நமது கர்த்தர் பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலரிடமும் கூறுகிறார்: நான் உனக்கு சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வ
தில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்”. பிற்பாடு, மத்தேயு 18:17,18 வசனங்களை நாம் பார்க்கும்போது பரலோகராஜ்யத்தின் திறவுகோல்கள் பேதுருவுக்கு மாத்திரம் என்றில்லாமல் சபை முழுவதுக்குமே கொடுக்கப் பட்டிருப்பதை அறிகிறோம். நாம் இவ்வசனங்களில் பார்க்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், ஒரே கட்டிடம்தான் கட்டப் படுகிறது; ஒரே அமைப்புதான் உருவாகிறது; ஒரே நிர்வாகம்தான் ஏற்படுத் தப்படுகிறது; உயிருள்ளதும் வளருகின்றதுமான ஒரே அமைப்புதான் உண்டாக்கப்படுகிறது. இதைக் கட்டுகின்ற நிபுணர் கிறிஸ்துவே! அது அவருடைய சபை. நான் என் சபையைக் கட்டுவேன் என்கிறார். கட்டுவதற்கும், கட்டவிழ்ப்பதற்குமான திறவுகோல்களை அவர் சபைக்கே அளித்திருக்கிறார்.
மத்தேயு 18:15 முதல் உள்ள வசனங்களில் நீங்கள் பார்த்தீர்களானால், உள்ளூர் சபையின் செயல்பாட்டைக் குறிப்பிடுகிறார். சபையில் ஒரு சகோதரன் உனக்கு விரோதமாக குற்றம் செய்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். ஆகவே கடவுளுடைய திட்டத்தில் உள்ளூர் சபைகளை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருப்பது விளங்குகிறது. சிலர் நினைப்பது போல சபை என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் எங்கோ இருப்பதல்ல. இயேசுவில் தனித்தபிரகாரமாக அன்புகூர்ந்து, பேதுருவை விசுவாசித்தால், விவரிக்க முடியாத வகையிலான ஓர் இணைப்பின் மூலமாக விசுவாசிகள் அனைவரும் சபையாக இணைக்கப்படுகிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இயேசு கட்டுகின்ற உலகளாவிய சபை இருக்கத்தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உள்ளூர் சபைகளும் உண்டு. இல்லையென்றால் இயேசு சபையைக் கட்டுவது நமக்கு எப்படித் தெரியும்? அவர் கட்டுகின்ற சபையில் நடக்க வேண்டிய செயல்பாடுகளை மத்தேயு 18:15 முதல் உள்ள வசனங்களில் காணமுடிகிறதே. சபையிலுள்ள உன் சகோதரன் உனக்கு விரோதமாக குற்றம் செய்தால், நீ அவனிடம் தனித்துச் சென்று அவனுடைய குற்றங்களை அவனுக்குத் தெரியப்படுத்து. அவன் அவைகளைக் கேட்டானென்றால் நீ அவனை ஆதாயப்படுத்திக் கொண்டவனாவாய். அவன் கேட்காமற் போனானென்றால் இரண்டு மூன்று சாட்சிகளைக் கூட்டிக் கொண்டு அவனிடம் போய் சொல்லிப் பார். அதற்கும் அவன் செவிகொடுக்கவில்லையென்றால் சபைக்கு அதைத் தெரியப்படுத்து என்கிறார். சபை என்று சொல்கிறாரல்லவா? சபை என்றால் என்ன? எங்கேயோ இருக்கின்ற, கண்ணுக்குத் தெரியாத ஓர் அமைப்பா? இவ்விடத்தில் சபை என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார்? உலகளாவிய சபையை அல்ல. இங்கு அவர் உள்ளூர் சபையைத்தான் குறிப்பிடுகிறார். கடவுளை விசுவாசித்து ஏற்றுக் கொண்டிருக்கிற அவ்விடத்தை சேர்ந்த விசுவாசிகளின் கூட்டத்தையே அவர் இவ்விடத்தில் குறிக்கிறார். இந்த
விசுவாசிகள் மத்தியில்தான் ஒரு சகோதரன் மற்றொருவனுக்கு விரோதமாக குற்றம் செய்யும்போது அதை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதை இயேசு சொல்லிக் கொண்டு வருகிறார். தனித்தும், சாட்சிகளோடும் போய் சொல்லியும் அவன் கேட்காவிட்டால், அதை இந்த உள்ளூர் சபைக்குத்தான் தெரியப்படுத்தும்படி இயேசு சொல்கிறார். இந்த உள்ளூர் சபை சொல்லியும் அவன் கேட்காமற் போனால், அவன் அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக என்கிறார். பேதுருவிடம் மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் கூறிய அதே வார்த்தைகளை இங்கு இந்த உள்ளூர் சபைக்குக் கொடுக்கிறார்: பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சபை ஒழுங்கின் இலக்கணத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் உள்ளூர் சபையைக் குறித்தே இவ்விடத்தில் இயேசு பேசுகிறார். அப்படி ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கும் சபையினர் ஏதாகிலும் ஒரு காரியத்தைக் குறித்து ஒருமனப்பட்டு வேண்டிக் கொண்டால், பரலோகத்தின் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று சொல்கிறார். எப்படி அவர்கள் கூட வேண்டும்? இரண்டு மூன்று பேராக கூடியிருக்கும் இடங்களி லெல்லாம் இயேசு இருப்பாரா? அவருடைய நாமத்தினாலே இரண்டு பேரோ மூன்று பேரோ கூடி வரும்போது அவர்கள் மத்தியில் நானும் இருப்பேன் என்கிறார். அவருடைய நாமத்தினாலே கூடிவருதல் முக்கிய மானது. அப்படி கூடி வருகின்ற உள்ளூர் சபையினரின் மத்தியிலே இருப்பேன் என வாக்களிக்கிறார். கிறிஸ்து தமது சபையைக் கட்டுகின்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறார். அவர் தமது சபையைக் கட்டுகிறார் என்பது உள்ளூர் சபைகளின் செயல்பாடுகளின் மூலமாகத்தான் வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் இயேசுவின் நாமத்தினாலே ஒன்றுகூடி சபை இலக்கணத்துக் குட்பட்டவர்களாக செயல்படும்போது அது உள்ளூர் சபையாகிறது. அப்படிப்பட்ட சபைக்கு அவர் அநேக அனுகூலங்களைத் தருகிறார். பரலோகத்தின் திறவுகோல்களைத் தந்திருக்கிறார். அவர்களுடைய விண்ணப்பங்கள் கேட்கப்படுவதாக வாக்களித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் அவர்கள் மத்தியில் இருப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்.
இதே சிந்தையை உடையவராகத்தான் பவுலும் தீமோத்தேயுவுக்கு தமது நிருபத்தில் எழுதுகிறார். பவுல் தீமோத்தேயுவை எபேசுவிலே விட்டு வந்திருக்கிறார். அங்குள்ள சபையைக் குறித்ததான ஒழுங்குமுறைகளை தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். சபை வாழ்க்கை, சபையின் ஊழியம், ஆகியவைகளைப் பற்றி எழுதுகிறார். நான் உன்னிடத்திற்கு சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாய் இருக்கிறது (1 தீமோத்தேயு 3:14,15). சுவிசேஷத்தின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பின் திட்டம் சபையைப் பிறப்பிப்பதாக உள்ளது. சத்தியத்தினால் சபை பிறப்பிக்கப்படுகிறது. சத்தியத்தின் மூலமாக பிறந்த அந்த சபையே, ஜீவனுள்ள தேவனுடைய வீடாக ஆகி, அந்த சத்தியத்தை அறிவிப்பதின் காரணமாக அந்த சத்தியத்துக்கே தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
சபையின் இலக்கணத்தைக் குறித்து பவுல் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். எபேசு பட்டணத்திலே 3 ஆண்டுகள் தங்கி இருந்து, அங்கு உருவான சபையை ஒழுங்குபடுத்தி, அதை பலப்படுத்த செலவிட்டார். மேலும் சபைகளை நிறுவுவதற்கு அவர் பிரயாணப்பட வேண்டி யிருந்தபடியால் அவர் தமது ஆவிக்குரிய உற்ற நண்பனும், மகனுமாகிய தீமோத்தேயுவை எபேசு சபைக்கு அனுப்பி அங்குள்ள காரியங்களை கவனிக்க வேண்டிய புத்திமதிகளை இந்நிருபத்தில் எழுதுகிறார். அப்போஸ்தல நடபடிகளில் நாம் படிக்கும்போது என்ன பார்க்கிறோம். அப்போஸ்தலர்கள் எங்கும் சுற்றித் திரிந்து சுவிசேஷத்தை அறிவித்தார்கள். ஜனங்களை இயேசுவின் சீஷராக்கினார்கள். அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களை சபை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். பிறகு அவர்களுக்கு நிருபங்களை அனுப்பினார்கள். அவ்வப்போது சபைகளை சந்தித்தார்கள். சபைத் தலைவர்களுக்கு ஆவிக்குரிய போதனைகளைத் தந்து அவர்களை வளர்த்தார்கள். சபைகளுக்கிடையிலே தர்ம ஊழியங்களை செயல்படுத்தினார்கள். அப்போஸ்தலர்கள் செய்த காரியங்கள் யாவும் சபையை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருந்தது. அவர்கள் சபைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். புதிய ஏற்பாட்டை ஊன்றிப் படித்தோமானால் சபை எவ்வளவு பிரதானமானது என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்துகொள்ளலாம். அது மிகவும் விசேஷித்தது. இரட்சிப்பின் திட்டத்தில் சபை பிரதான பங்கு வகிக்கிறது. ஆகவேதான் டிரினிட்டி பாப்திஸ்து சபையை சேர்ந்த உங்களுக்கு நான் சொல்லுகிற புத்திமதி என்னவெனில், சபை இலக்கணத்தைக் குறித்ததான காரியங்களில் உங்களுக்குள்ள நம்பிக்கையை யும் அறிவையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். தளர்ச்சியாக பற்றிக் கொண்டிராமல் உறுதியான நம்பிக்கை உடையவர்களாயிருங்கள். நீங்கள் ஏனோதானோவென்று உறுதியற்று இருப்பீர்களானால், எதிராளியானவன் சுலபமாக உங்கள் விசுவாசத்தைக் கலைத்து விடுவான். சபைக்குள்ள முக்கியத்துவத்தை சற்றும் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.
எவ்விதங்களில் நாம் சபைக்குரிய மதிப்பைக் குறைத்து விசுவாச தளர்ச்சி அடைய நேரிடும் என்பதைப் பார்க்கலாம். சபையின் மூலமாக சபையோடு இணைந்ததாக சில ஊழியங்கள் ஆரம்பிக்கப்படலாம். இவை ஒருபோதும் இரட்சிப்பின் திட்டத்தில் சபையைப் போன்று பிரதானமான பங்கு வகிப்பதில்லை. சபையை அல்லது கிறிஸ்துவை உலகிற்கு அறிமுகப்படுத்து கின்ற ஒரு துணை சாதனமாக வேண்டுமானால் இவை செயல் படலாமேயொழிய இவை ஒருபோதும் சபைக்கு இணையாக முடியாது.
உதாரணமாக, சபையை சார்ந்து நடக்கின்ற அநாதை ஆசிரமங்கள், சிறுவர் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை போன்ற மருத்துவ உதவித்தளங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றைக் கூறுகிறேன். இவைகளுக்கு வேறு வகையான ஊழியங்கள் உள்ளன. இவை ஒருபோதும் இரட்சிப்பின் திட்டத்திற்கு பிரதானமான பங்களிப்பதில்லை. இவை சபை ஊழியத்துக்கு ஈடாகாது. இவைகளை நாம் நல்ல மனசாட்சியோடு நடத்திக் கொண்டு வரலாம். தவறில்லை. ஆனால் அவை ஒருபோதும் சபையின் இடத்தை ஆக்ரமித்திக்கொள்ள விடவே கூடாது. நாயின் வால்தான் ஆடலாமே யொழிய, வாலை வைத்து தலையை ஆட்டும்படி விட்டுவிடக்கூடாது. மேஜையின் கீழ் விழுந்த துணிக்கைகளை நாய் சாப்பிடும்படியாக விடலாமேயொழிய, பிள்ளைகளின் அப்பத்தையே சாப்பிடும்படியாக விட்டுவிடக்கூடாது. மேற்கூறிய துணை ஊழியங்கள் ஒருபோதும் சபை ஆகாது. இவைகளால் இரட்சிப்பை ஏற்படுத்த முடியாது. சபைதான் இரட்சிப்புக்கு ஆதாரம். சபையின் வளர்ச்சிக்குரிய பணத்தையோ, நேரத்தையோ, ஆட்களையோ இந்த துணை அமைப்புகள் எடுத்துக்கொள்ளும்படி விடக்கூடாது. இயேசுவின் நாமத்தினாலே கூடி அவரை ஆராதிக்கிற இந்த கூட்டமே சபையாகும். பள்ளிக்கூடங்கள் சபையாகாது. மருத்துவமனை சபையாகாது. அங்கேயும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவை சபையாகுமா? கர்த்தருடைய நாளிலே சபையாகக் கூடாமல், பள்ளிக்கூடத்திலே வேறு காரணங்களுக் காக கூடுவது முறையாகுமா? சபைகூடுதலுக்கு இரண்டாம் இடத்தை அளித்துவிட்டு, பள்ளிக்கூடத்தின் விளையாட்டுப் போட்டிகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் முதலாவது இடத்தை அளிக்கலாமா? கூடாது, கூடவே கூடாது. நான் பள்ளிக்கூடத்தை கட்டுவேன் என்று இயேசு கூறவில்லை; நான் ஒரு மருத்துவமனையைக் கட்டுவேன் என்று இயேசு கூறவில்லை. பரலோகத்தின் திறவுகோல்களை அவர் அநாதைப் பள்ளிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கான மருத்துவமனைகளுக்கும் கொடுத்திருப்பதாக அறிவிக்கவில்லை. பள்ளியிலோ, மருத்துவமனையிலோ நீங்கள் கூடும் போது நான் உங்கள் மத்தியில் இருப்பேன் என்கிற வாக்கை அவர் அளிக்கவில்லை. இரண்டு பேர் ஒரு காரியத்தைக் குறித்து ஒருமனப்பட்டு வேண்டினால் பரலோகத்திலிருக்கிற பிதா அதைக் கேட்பார் என்கிற வாக்குத்தத்தம் சபைகூடுதலுக்கு மாத்திரமே உரியது. சபை என்பது ஒரு பிரத்தியேகமான ஸ்தாபனம். அதற்குரிய ஆசீர்வாதங்கள் அநேகம். அவை ஒருபோதும் மற்ற எந்தவொரு ஸ்தாபனத்திற்கும் உரியதாகாது.
நீங்கள் வேதாகமபாட கல்லூரியில் படிக்கச் செல்லுகிறீர்கள். பலவிதமான கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்குச் செல்லுகிறீர்கள். அவையெல்லாம் சபையாகாது. நீங்கள் அவ்வித கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்ந்து தொண்டு செய்வதால் நீங்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது. அவர்கள் உங்களுக்கு கிறிஸ்தவர்கள் என சான்றிதழ் கொடுப்பதால் நீங்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது. சபையும், மூப்பர்களும்தான் நீங்கள் கிறிஸ்தவர்களா என்பதை உறுதி செய்ய முடியும். சபையும், மூப்பர்களும் உங்கள் சாட்சியுள்ள நடக்கையை கண்காணித்து, உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய நிலையை தெரியப்படுத்துவர். அருமையான மக்களே, உங்கள் உறுதியையும், செயல்பாட்டையும் குலைத்துப் போடுவதற்கு சாத்தான் அநேகவிதமான கண்ணிகளை உலகெங்கும் வைத்திருக்கிறது. உறுதியான மனம், செயல்படுத்தும் திறன். இந்த இரண்டு வார்த்தையையும்தான் நான் எனது எல்லா புத்திமதிகளிலும் அடிக்கடி பயன்படுத்துகிறேன். இரட்சிப்பின் திட்டத்தில் சபை வகிக்கின்றதான பிரதான பங்கைக் குறித்து உங்களுக்குள்ள அறிவை உறுதியோடு பற்றிக் கொண்டு அதை செயல்படுத்துவதை விட்டுவிடாமல் இருங்கள் என நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்.
|
“சபையின் மூலமாக சபையோடு இணைந்ததாக சில ஊழியங்கள் ஆரம்பிக்கப்படலாம். இருந்தாலும் இவை ஒருபோதும் இரட்சிப்பின் திட்டத்தில் சபையைப் போன்று பிரதானமான பங்கு வகிப்பதில்லை. சபையை அல்லது கிறிஸ்துவை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்ற ஒரு துணை சாதனமாக வேண்டுமானால் இவை செயல்படலாமேயொழிய இவை ஒருபோதும் சபைக்கு இணையாக முடியாது. சபையை சார்ந்து நடக்கின்ற அநாதை ஆசிரமங்கள், சிறுவர் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை போன்ற மருத்துவ உதவித்தளங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றைத்தான் குறிப்பிடுகிறேன். இவைகளுக்கு வேறு வகையான ஊழியங்கள் உள்ளன. இவை ஒருபோதும் இரட்சிப்பின் திட்டத்திற்கு பிரதானமான பங்களிப்பதில்லை. இவை சபை ஊழியத்துக்கு ஈடாகாது. இவைகளை நாம் நல்ல மனசாட்சியோடு நடத்திக் கொண்டு வரலாம்; தவறில்லை. ஆனால் இவை ஒருபோதும் சபையின் இடத்தை ஆக்ரமித்திக்கொள்ள விடவே கூடாது. நாயின் வால்தான் ஆடலாமேயொழிய, வாலை வைத்து தலையை ஆட்டும்படி விட்டுவிடக்கூடாது. மேஜையின் கீழ் விழுந்த துணிக்கைகளை நாய் சாப்பிடும்படியாக விடலாமேயொழிய, பிள்ளைகளின் அப்பத்தையே சாப்பிடும்படியாக விட்டுவிடக்கூடாது. மேற்கூறிய துணை ஊழியங்கள் ஒருபோதும் சபை ஆகாது. இவைகளால் இரட்சிப்பை ஏற்படுத்த முடியாது. சபைதான் இரட்சிப்புக்கு ஆதாரம்.” -அல்பர்ட் என். மார்டின். |
- சத்தியத்தை துல்லியமாகவும் ஒரேவிதமாகவும் யாவரும் விளங்கிக் கொள்வது சபையின் வாழ்க்கைக்கும், சபை ஊழியத்துக்கும் மிகவும் அவசியம். அதை பாதுகாத்துக் கொள்வதில் உறுதியையும் செயல்படுத்தும் திறனையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
இயேசு சபையைக் கட்டுகிறார். அவர் கட்டுகின்ற சபை எப்படிப்பட்டதாக இருக்கும்? நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களு மாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புகிறது. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு
வருகிறீர்கள் (எபேசியர் 2:19). இயேசு கட்டுகின்ற சபையானது, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்கிற தனி நபர்களின் மீது கட்டப்படுவதாக அவர் கூறவில்லை. அவர்கள் அளித்த போதனை களின்மீது கட்டப்பட்டு வருவதை விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த போதனைகள் புதிய ஏற்பாட்டில் மாத்திரமல்லாது, பழைய ஏற்பாட்டிலும் தீர்க்கதரிசிகள் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை யாவும்தான் சபைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய போதனைகளை எழுத்தில் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 3:15ல் நாம் என்ன பார்த்தோம்? தேவனுடைய சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. அப்போஸ்தலர்களின் வார்த்தையினாலே சத்தியத்தை நாம் விளங்கிக் கொள்ளுகிறோம். ஆகவேதான் பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவிடம் கூறுகிறார்: நீ கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு (2 தீமோத்தேயு 1:13). அது என்ன சட்டம்? கிறிஸ்துவைக் குறித்ததான கடவுளின் சித்தத்தையும், அவருடைய ஊழியத்தையும், தேவன் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தினார். அவைகளை அவர்கள் ஆரோக்கியமான வசனங்களின் சட்டமாக, மற்ற விசுவாசிகளுக்கு போதித்தார்கள். அந்த போதனைகளை மறந்துவிடாமல், நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவரின் உதவியினாலே காத்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் அறிவுரை கூறுகிறார். ஆகவேதான் நாமும் ஆரம்பம் முதற்கொண்டு ஆரோக்கியமான வசனங்களின் சட்டங்களைக் கடைப்பிடிக்கின்ற விசுவாச சபையாக இருந்து வருகின்றோம். 1967 ஆம் ஆண்டில் இந்த சபை முதன்முதலாக உருவானபோது, நாம் அனைவரும் ஒருமனதாக லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையை பின்பற்றுபவர்களாக உறுதி செய்து கொண்டோம். அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட விசுவாச அறிக்கைதானே என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் அவை யாவுமே வசனத்தின் அடிப்படையில், வசனத்தைத் தழுவியதாக ஏற்படுத்தப்பட்ட விசுவாச அறிக்கை. அந்த விசுவாச அறிக்கை மிகவும் நேர்த்தியானது. மிகவும் பூரணமானது என நான் சொல்ல மாட்டேன். ஆனால் தெளிவானது. சபையைக் குறித்த வேதபூர்வமான அடிப்படை சட்டங்களைக் கொண்டது.
ரோமன் கத்தோலிக்க ஆதிக்கத்தினால் சபையில் பலவிதமான கள்ளப் போதகங்கள் வந்து சபை சீர்குலைந்து கிடந்தபோது, பல தெய்வீக பக்தர்கள் ஒன்று சேர்ந்து, சபைக்கடுத்த காரியங்களைக் குறித்து வேதாகமத்தில் தேடி, அலசி, ஆராய்ந்து பல விஷயங்களில் உண்மை இன்னதென்பதை வேதத்தின் மூலமாகவே கண்டுபிடித்து, ஒரு மாபெரும் விசுவாச அறிக்கையை 1689 ஆம் ஆண்டிலே தீர்மானம் பண்ணினார்கள். அதுவே லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கை எனப்படுகிறது. அந்த விசுவாச அறிக்கையைத் தழுவித்தான் நமது சபை ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக கிறிஸ்து தேவனா மனிதனா என்பது போன்ற காரியங்களில் பலவிதமான கள்ளப் போதனைகளை, கள்ள சபைகள் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தியிருந்தது. ஞானஸ்நானம், இரட்சிப்பு, பாவமன்னிப்பு, இவை போன்ற காரியங்களில் அநேக குழப்படிகளை கள்ளசபைகள் போதித்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்திருந்தன. தேவனுக்கு பயந்த பக்தர்கள் வேதத்தின் மூலமாக இவைகளையெல்லாம் ஆராய்ந்ததாலே உருவானதுதான் 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கை. அதையும் தவிர, மிகமுக்கியமான, அடிப்படையான வேதபோதனைகளெல்லாம் வினாவிடை பகுதியாக உருவாக்கப்பட்டு இன்று எல்லா மொழிகளிலும் விசுவாசிகளின் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுவும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்திலே நவீன சிந்தனைகள், செயல்பாடுகளினாலே இன்னும் ஏராளமான, புதிது புதிதான கள்ளப் போதனைகளும் சபையில் ஊடுருவி வருகின்றன. உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை நீ செய், எனக்கு சரியாகப்படுவதை நான் செய்துகொள்ளுகிறேன் என்கிறவிதமான போக்குதான் இன்றைக்கு கிறிஸ்தவத்திலே காணப்படுகிறது. இவைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நமது விசுவாச அறிக்கையும், வினா/விடை புத்தகமும் உதவியாயிருக்கிறது.
நமது விசுவாச அறிக்கைதான் மிகவும் மேலானது என்று நான் கூறவில்லை. ஆனால், அது மிகவும் நம்பகமானது; சபை தவறான வழியில் வழிவிலகிப் போய்விடாதபடிக்கு, பல நூற்றாண்டுகளாக அந்த விசுவாச அறிக்கையின் காரியங்கள் விசுவாசிகளை பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த விசுவாச அறிக்கையின் கொள்கைகளைக் குறித்து நான் வெட்கப்படுவதில்லை. வினா/விடை புத்தகத்தின் மூலமாக நான் அடைந்த ஆவிக்குரிய அறிவு, என்னை வெட்கப்படாமல் பல கேள்விகளுக்கு விடையளிக்க வைக்கிறது. கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மீட்கிற மீட்பர் யார் என யாராவது கேட்டால் என்னால் தெளிவாக பதில் சொல்ல முடிகிறது. நித்திய கடவுளாகிய கடவுள், அவருக்கு சொந்தமானவர்களை மீட்பதற்காக இயேசுகிறிஸ்து என்கிற மனிதனாக இவ்வுலகில் வந்தார். அவர் ஒருவரே மீட்பர். அவரைத் தவிர யாரும் இல்லை. அவர் ஒருவரே கடவுளாகவும் மனிதனாகவும் ஒரே சமயத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அவரே எங்களுடைய மீட்பர்; அவரே என்னுடைய மீட்பர் என நான் தலைநிமிர்ந்து சொல்லுவேன். உங்களுடைய மீட்பர் யார்? நீங்கள் எவ்விதமாக பதில்
சொல்லுவீர்கள்? என்னை நல்லபடியாக வைத்திருக்கிறவராகிய இயேசுவே என் மீட்பர் என்று நீங்கள் அவரை அடையாளங் காட்டுவீர்களா? எனக்கு நன்மை செய்கின்ற கடவுள் என்கிறவிதத்தில் மாத்திரம் நான் அவரை அடையாளங்கண்டு கொண்டேனென்றால் அது எனக்குப் போதாது.
அவர் மனிதனல்ல, கடவுள் மாத்திரந்தான் என்கிற கருத்தும் கள்ளப் போதனையால் பரவியிருக்கிறது. அதுவும் எனக்கு உதவியாயிராது. இயேசுகிறிஸ்து ஒரே சமயத்தில் கடவுளாகவும் மனிதனாகவும் வியாபித்திருக்கிறார் என்பதே சரியானது. அப்படிப்பட்டவரே என்னுடைய மீட்பர். மனிதனாக இவ்வுலகில் இருக்கிற என்னை குணப்படுத்த அவரும் என்னைப் போலவே மனிதனாக இருக்க வேண்டியது அவசியமாகிறது; அதே சமயத்தில் மனிதனாகிய என்னை, பரலோகத்தில் கடவுள் இருக்கின்ற வாசஸ்தலத்துக்கு கொண்டு செல்வதற்கு வெறும் மனிதநிலை போதுமானதாயிராதபடியினால் அவருடைய கடவுள் தத்துவமும் மிகவும் தேவையாயிருக்கிறது. என்னை சரிப்படுத்த அவர் என்னைப் போன்ற மனிதனானார்; என்னை கடவுள் இருக்கும் இடத்திற்கு உயர்த்த அவர் கடவுளாக செயல்படுகிறார். ஆகவேதான் அவர் மனிதனாகவும் கடவுளாகவும் ஒரே சமயத்தில் செயல்படுகிறார் என்பதே மிகவும் சரியான கருத்தாயிருக்கிறது. இவை போன்ற காரியங்களில் பலவிதமான கள்ளப் போதனைகள் நுழைந்துவிட்டபடியால்தான் தேவனுக்கு பயந்து நடக்கின்ற அடியார்கள் வேதத்தை ஆராய்ந்து ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் கண்டுபிடித்து, அவற்றை பின்வரும் சந்ததியின் பயன்பாட்டிற்காகவும் எழுதி வைத்தார்கள். அதுவே இந்த 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கை. ஆகவேதான் நமது சபையும் கள்ளப்போதகங்களால் வழிவிலகிப் போய்விடாதபடிக்கு உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன். சத்தியத்தை துல்லியமாகவும் ஒரேவிதமாகவும் யாவரும் விளங்கிக்கொள்வது சபையின் வாழ்க்கைக்கும், சபை ஊழியத்துக்கும் மிகவும் அவசியம். அதை பாதுகாத்துக்கொள்வதில் உறுதியையும் செயல்படுத்தும் திறனையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
ஆகவேதான் இந்த சபைக்குப் புதிதாக வரும் மக்கள், இந்த சபையின் அங்கத்தினராக வாஞ்சிக்கும்போது உங்களுக்கு ஒரு கவரைக் கொடுக்கிறோம். அதில் பல காரியங்கள் இருக்கும். அதில் ஒன்று, 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை. அதிலுள்ள காரியங்களை நன்றாக வாசித்துப் பார்த்துவிட்டு வரும்படியாக நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம். அதைப் படித்துவிட்டு, நீங்கள் இங்குள்ள மூப்பர்களை சந்திக்க வரும்பொழுது, அவைகளை வாசித்தீர்களா? அதில் ஏதாவது காரியங்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறதா என்று கேட்போம். எங்கள் நோக்கம், உங்களை பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்பதல்ல. உங்களுக்கு விளங்காத பகுதிகள் இருந்தால் அவைகளை விளக்க முற்படுவோம். அதையும் தவிர்த்து, இந்த சபையின் அங்கத்தினராக வாஞ்சிக்கும் உங்களுக்கு இங்குள்ளவர்களோடு
ஒரேவிதமான விசுவாச பிணைப்பு ஏற்பட வேண்டுமல்லவா? 1 கொரிந்தியர் 1 ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு பவுல் கொரிந்து சபையிலுள்ள ஒற்றுமைக் குறைவை சரிப்படுத்தப் பார்க்கிறார். 10 ஆம் வசனத்தில் அவர் கூறுகிறார்: சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டு மென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். என்னவிதமான ஒழுங்குமுறையை சபையில் எதிர்பார்க்கிறார் பார்த்தீர்களா? பலவிதமான வித்தியாசங்களின் மத்தியிலும் எங்களுக்கு ஒரேவிதமான நம்பிக்கை இருக்கிறதே அது போதாதா? வேற்றுமையிலும் ஒற்றுமை என்பது போல்தான் இன்றைய கிறிஸ்தவம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பவுல் என்ன சொல்லுகிறார், நாம் அனைவரும் ஒரேவிதமான மனதும், ஒரேவிதமான யோசனையும் உள்ளவர்களாய் சீர்பொருந்தியிருக்க வேண்டும் என்கிறார். ஒரே மனதினாலும், சத்தியத்தை ஒரேவிதமாக விளங்கிக்கொள்வதினாலும் வளருகின்ற ஒற்றுமையைத்தான் பவுல் சபையில் எதிர்பார்க்கிறார். ஆகவேதான் அவர் எபேசியர் 4 ஆம் அதிகாரத்தில் சபையை ஒரு சரீரத்திற்கு உருவகப்படுத்திக் காண்பிக்கிறார். சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாய் இருக்கும்படியாக . . . சத்தியம் இல்லாமல் ஒருமைப்பாடு ஏற்படாது.
எனது அருமையான மக்களே, எனது வாழ்க்கை முழுவதையும் நான் உங்களுக்காகத்தான் செலவிட்டிருக்கிறேன். ஆகவே உரிமையோடு உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்: சபை வாழ்க்கையிலும், சபை ஊழியத்திலும் வசனத்தை யாவரும் துல்லியமாகவும் ஒரேவிதமாகவும் விளங்கிக்கொள்வதில் எடுக்கின்ற முயற்சியையும் பயிற்சியையும் விட்டுவிடாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். நான் இந்த இடத்தை விட்டுப் போன குறுகிய காலத்துக்குள்ளாகவே, நாம் பின்பற்றி வந்த சத்தியங்களில் மாறுதல்கள் ஏற்பட்டு சபையில் குழப்பங்கள் ஏற்பட்டு விடலாம் என நான் அநாவசியமாக பயப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நானும் பவுலைப் போலவே சபையைக் குறித்ததான கவலையைத்தான் கொண்டிருக்கிறேன். அப்போஸ்தல நடபடிகள் 20 ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களை வரவழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திலே பவுல் 3 ஆண்டுகளாக ஊழியம் செய்திருந்தார். இப்போது அவர் அங்கிருந்து போகப்போகிறார். ஒருவேளை அவர் அவர்களைத் திரும்பவும் இவ்வுலகிலே சந்திக்க முடியாமற் போகலாம் என நினைக்கிறார். 26 ஆம் வசனம் முதல் பாருங்கள்: “தேவனுடைய ஆலோசனையிலே ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்றையத் தினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால் உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப்
பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்”. பவுல் எப்படி சொல்லுகிறார் பாருங்கள். மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஓநாய்கள் வரலாம் என நினைக்கிறேன் என அவர் கூறவில்லை. வருமோ என பயப்படுகிறேன் என்றும் சொல்லவில்லை. வரும் என்று அறிந்திருக்கிறேன் என்று உறுதியாகக் கூறுகிறார். அது மாத்திரமல்ல, உங்களிலும் சிலர் எழும்பி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள் என்று கூறுகிறார். ஆகவே எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார். அதைத்தான் நானும் சொல்லுகிறேன். எச்சரிக்கையாயிருங்கள்! நான் சென்ற பிறகு சபையைக் கண்காணித்துக் கொள்ளப் போகிற என் உடன் மூப்பர்களாகிய உங்களுக்கும் கூறுகிறேன், சத்தியத்தை துல்லியமாக போதிப்பதிலும், ஒருமைப்பாட்டைக் கைவிடாமல் இருப்பதிலும் மிகவும் கவனம் செலுத்துங்கள் என்று கர்த்தரின் முன்னிலையில் புத்திகூறுகிறேன். அந்த பொறுப்பை கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஓநாய்கள் வெளியிலிருந்து மாத்திரமல்ல, சபைக்குள்ளேயிருந்தே வரும். சிலர் எழும்பி, எனக்கு இந்த புதிய யோசனை தோன்றுகிறது. சபையை இப்படி நடத்தலாம் அல்லது வேறுவிதமாக செயல்படலாம் என்றெல்லாம் புதிதுபுதிதான காரியங்களை புகுத்த முயற்சிப்பார்கள். கள்ள தீர்க்கதரிசிகளாகிய ஓநாய்கள், ஆட்டு மந்தையைத் தேடி அலைவது எதிர்பார்க்கக்கூடியதே. அவர்கள் கடவுளின் மந்தைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பார்கள். இப்போது இந்த சபையில் அப்படிப்பட்ட ஓநாய்கள் இருக்கிறதென்று சொல்லுகிறேனா? எனக்குத் தெரியாது. பவுல் போன்ற பெரிய அப்போஸ்தலனாலேயே சபையில் ஓநாய்கள் பிரவேசிக்க முடியாதபடி தடுக்க முடியவில்லையென்றால், நான் அவரைவிட சாமர்த்தியசாலி என நினைத்துக் கொண்டிருந்தால் அது எவ்வளவு முட்டாள்தனம்! அப்படி நினைப்பது அறியாமையையே காட்டுகிறது. பொறுப்பற்ற தன்மையைக் காண்பிக்கிறது. எச்சரிக்கையாயருங்கள் மூப்பர்களே! சபையாரே! எச்சரிக்கையாயிருங்கள்.
இந்த பிரசங்க மேடையிலே என்ன பிரசங்கிக்கப்படுகிறது என்கிறதற்குரிய பொறுப்பு உங்களுடையது மூப்பர்களே! ஏதாவதொரு சமயத்தில் யாராவதொருவர் நமது விசுவாச அறிக்கைக்கு விரோதமாகவும், வசனத்திற்கு விரோதமாகவும் இந்த மேடையிலே ஏதாவது பிரசங்கித்தால் அவரை அன்றைய தினமே வசனத்தைக் காண்பித்து எதில் அவர் தவறுதலாக சொல்கிறார் என்பதை சொல்லத் தயங்காதிருங்கள். எவ்வளவு பெரிய மனுஷனாயிருந்தாலும், சத்தியத்தில் தவறு செய்ய அனுமதிக்காதிருங்கள். கடவுளின் வசனத்தை அலட்சியமாகவோ ஏனோதானோவென்று உபயோகிப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது மூப்பர்களுக்கு மாத்திரம் உரிய பொறுப்பல்ல. ஒவ்வொருவருடைய ஆத்துமாவும் கெட்டுவிடாதபடிக்கு அவரவரும் இதற்கு பொறுப்புதான்.
உங்களுடைய ஆத்துமாவின் நிமித்தமாகவும், உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், இன்னும் வரவிருக்கின்ற சந்ததியாரின் நிமித்தமாகவும் எல்லோருமே எப்பொழுதும் விழிப்போடும் எச்சரிப்போடும் இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. கர்த்தர் வரத் தாமதமானால், வருங்கால சந்ததியாரினிமித்தமாக நாம் ஆவிக்குரிய சத்தியத்தில் பிழையில்லாமலும், ஒரே மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டியது சபைக்கு மிக மிக அவசியமானது.
அடுத்தபடியாக இன்னொரு வேதபகுதியையும் பார்ப்போம். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின நிருபத்தின் 4 ஆம் அதிகாரத்தில் அவர் தீமோத்தேயுவுக்கு கடைசியாக சொல்லுகின்ற அறிவுரையைக் காணலாம். ஒரு மனிதன் இறுதியாக சொல்லும் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதல்லவா! பவுல் தமது ஊழியத்தின் கடைசிகாலகட்டத்தில் கூறிய வார்த்தைகள் இவை. ஆகவே நாமும் இதை கவனிப்போம். நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும்
உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு புத்திசொல்லு (2 தீமோத்தேயு 4:1-2). கர்த்தருடைய நாட்களின் அதிகாலை வேளையிலே நான் என்னுடைய படிப்பறையில் அமைதலாக உட்கார்ந்து தியானம் பண்ணுகிற வசனம் இது. அந்த வேளையிலே மிகுந்த நடுக்கத்தோடு கடவுளிடம் இந்த வசனத்தின்பேரில் ஜெபம் பண்ணுவேன், ஓ! கர்த்தாவே இன்றைக்கு உம்முடைய சந்நிதானத்திலே உம்முடைய ஜனங்களுக்கு முன்பாக நான் கூறப்போகிற ஒவ்வொரு வார்த்தையையும் குறித்து நான் நியாயத்தீர்ப்பின் நாளிலே உமக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறேனே. எனக்கு உதவும் என ஜெபிப்பேன். ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணும்படியாக பவுல் கட்டளையிடுகிறார். அலட்சியமாகவோ, சொந்த ஞானத்தைக் காண்பிப்பதற்கோ, வாக்கு சாதூரியத்தைக் கொண்டு பிரபலமடைவ தற்கோ அல்ல. நியாயத்தீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாக ஜாக்கிரதையோடு திருவசனத்தைப் பிரசங்கிக்க வேண்டும். நான் இந்த விஷயத்தில் மிகவும் அலட்டிக் கொள்வதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் மிகவும் ஜாக்கிரதையைக் காண்பிக்கும்படியாக வசனம் எனக்குக் கட்டளையிடுகிறதே. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், நோய்வாய்ப்பட்டிருந்தாலும், சுகத்தோடிருந்தாலும், மனத்துயரத்தில் இருந்தாலும் சந்தோஷ மாயிருந்தாலும் எந்த நிலைமையாயிருந்தாலும் பிரசங்கிக்க வருகின்ற பிரசங்கியானவன் மிகுந்த ஜாக்கிரதையோடு திருவசனத்தைப் பிரசங்கிக்க கவனமாயிருக்க வேண்டும். மரிக்க நேர்ந்தாலும் பிரசங்கிப்பதை சரியானபிரகாரமாக செய்துவிட்டு மரித்துப் போக வேண்டும். இதில் விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடாது. ஜாக்கிரதை மிகவும் அவசியம்.
கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லு. சிலபேர் எனக்கு அறிவுரை சொல்லுகிறார்கள், கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் சரிப்படுத்த முடியும். வெட்டொன்று துண்டு இரண்டு என்று பேசி விடாதீர்கள். இந்த காலத்தில் மனோதத்துவ முறையின்படி கொஞ்சம் அநுசரித்துதான் பேச வேண்டும். கடிந்து கொள்ளக்கூடாது என்று எனக்கு புத்தி சொல்லுகிறார்கள். வசனம் என்னை கடிந்துகொண்டு, கண்டனம் பண்ணி புத்தி சொல்லும்படியாகக் கூறுகிறதே. இந்த வார்த்தைகளை நான் என்ன செய்வது? நானே சொந்தமாக வேதாகமம் எழுத முடியாது. ஏன் அப்படி கடிந்துகொள்ளவும் கண்டனம் பண்ணவும் சொல்லுகிறார் என்பதை ஆராய்ந்தேன். அடுத்த வசனத்தைப் பாருங்கள். அந்த வசனம் எனக்கு எச்சரிப்பை அளிக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுயஇச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாக சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்கு செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்கு
சாய்ந்துபோகும் காலம் வரும். என் அருமை சகோதரரே, பாருங்கள் இதை நான் எழுதவில்லை. பவுல் அப்போஸ்தலனே எழுதியிருக்கிறார். அப்போதே தீமோத்தேயுவை எச்சரித்திருக்கிறார். பவுல் அப்போஸ் தலனால் ஸ்தாபிக்கப்பட்ட அந்த சபையில் தீமோத்தேயு ஊழியம் செய்து கொண்டிருக்கிறார். அப்போஸ்தலனால் உருவாக்கப்பட்டு, அவருடைய பிரதிநிதியாகிய தீமோத்தேயுவினால் பராமரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற சபை அது. அந்த சபைக்கே பவுல் எச்சரிக்கிறார். ஜனங்கள், கடினமாக பேசாமல் இனிமையாகப் பேசுகின்ற உபதேசிகளைத் திரளாகத் தங்களுக்குத் தேடிக்கொள்கிற காலம் வரும் என்பதை முன்னதாகவே அறிவிக்கிறார். நீங்களும் இங்கு உபதேசிக்கப்பட்டு கற்றுக் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இராமற் போனீர்களானால் இங்கேயும் அந்தவிதமான கள்ளப் போதனைகள் நுழைய வெகு காலமாகாது. கள்ளப்போதகர்கள் நுழைவார்கள். ஏன்? கடிந்து கொள்ளப்பட்டு, திருத்தப்பட வேண்டியதின் அவசியம் மக்களுக்கு கேட்க இனிமையாக இராது. ஆறுதலாகப் பேசுகின்ற ஊழியர்களையே அவர்கள் செவிகள் நாடும். இருதயம் குத்தப்படும்படியான பிரசங்கங்கள் அவர்களுக்குப் பிடிக்காது. தங்கள் இச்சைகளுக்கேற்ப போதிக்கின்ற போதகர்களைத் தேடுகின்ற செவித்தினவு அவர்களுக்கு ஏற்படும். செவிகளுக்கு இன்பமான பேச்சையே நாடுவார்கள். சபைக்கு அதிகமான ஜனங்கள் வரவேண்டுமானால், இருதயம் குத்தப்படும்படியாக பேசக்கூடாது. செவிகளுக்கு இன்பமாக பேசுகின்ற போதகர்களை நியமியுங்கள் என்பார்கள். அது படிப்படியாக அதிகரித்து கொஞ்சங்காலத்தில் அவர்கள் இச்சைகளுக்கேற்றதான திரளான போதகர்கள் தோன்றிவிடுவார்கள். அப்படித்தான் ஆகும் என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன். இந்த இடத்திலேயேகூட அது நடக்கலாம். 46 ஆண்டுகால ஊழியம் செவித்தினவுள்ள மக்களால் பூஜ்யமாக ஆகிவிடலாம். இந்த சபையைக் கண்காணிக்கப் போகின்ற மூப்பர்களே, கடவுள்தான் உங்களுக்கு உதவி
செய்ய வேண்டும். ஜனங்களின் செவித்தினவுள்ள இச்சைகளுக்கேற்ப பேசுகின்ற போதகர்களை ஒருபோதும் இங்கு அனுமதிக்காதிருங்கள். சபையைக் குறித்ததும், சத்தியத்தைக் குறித்ததும், சபை ஊழியத்தைக் குறித்ததும், சபை வாழ்க்கையைக் குறித்ததுமான கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிடாதிருங்கள். அது சம்பந்தமான கொள்கைகளை விடாப்பிடியாக உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள்.
இங்குள்ள அங்கத்தினர்களே, நீங்களும் உங்கள் விசுவாசக் கொள்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். வினாவிடை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்ற நமது பாப்திஸ்து புத்தகத்தை தூசிபடிய விடாமல், எப்போதும் படித்து, அதிலுள்ள கருத்துக்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, அதை மறவாமல் இருங்கள். அவைகளைக் கொண்டு, இங்கு சபை ஊழியங்கள் சரிவர நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு சபை மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்கள் குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்து வரும்போதே, உங்கள் விசுவாச அறிக்கையை அவர்களுக்கும் படித்துக் காண்பித்து, எதனால் நீங்கள் அவைகளை நம்புகிறீர்கள் என்பதை அவர்களுக்கும் சொல்லிக் கொண்டே வாருங்கள். கடினமான வேதசத்தியங்களை விளங்கிக்கொள்வதில் தளர்ந்து போகாதிருங்கள். கடவுளின் சொந்த ஜனங்களாக நீங்களும் இருக்கிறீர்களே. யாவற்றையும் நீங்களும் அறிந்திருப்பது அவசியமாயிருக்கிறது. கர்த்தருடைய நாளிலே புத்துணர்ச்சியோடு இங்கு கூடி வாருங்கள். போதகர் பிரசங்கிப்பதை நன்கு கூர்ந்து கவனித்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு வாருங்கள். போதகர், கதைகள் கூறி சுவாரசியமாக பேச மாட்டேனென்கிறாரே என்று இங்கு வந்து தூங்கி விடாதீர்கள். கவனித்துக் கேட்பதற்கும், சிந்திப்பதற்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். கர்த்தருடைய நாளானது உங்களுக்கு மிகவும் உற்சாகமானதாகவும், அதேசமயம் உங்கள் முழு சக்தியையும் செலவிடும் நாளாகவும் இருக்க வேண்டும். இவை இரணடில் ஏதாவது ஒன்றாக அல்ல, இரண்டுமே இருக்க வேண்டும். நீங்கள் அந்நாளிலே கடவுளை சந்திக்கப் போகிறீர்கள். அவருடைய சத்தியத்தைக் கேட்கப் போகிறீர்கள். அந்நாளிலே நீங்கள் உங்கள் முழு மனதையும், முழு சரீர பலத்தையும், முழு உணர்ச்சிகளையும் கடவுளுக்காக இங்கே செலவிடப் போகிறீர்கள். ஆகவே அது உங்களுக்கு ஒருபுறம் உற்சாகத்தை அளிப்பதாகவும் மறுபுறம் உங்கள் முழுபெலனை செலவிடும் நாளாகவும் இருக்கும். இதிலுள்ள உண்மை உங்களுக்குப் புரிகிறதா? புரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை சபையின் இலக்கணம் சம்பந்தமாக இரண்டு காரியங்களை உங்களுக்குக் கூறினேன். அதாவது,
1) இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்குள்ள பிரதானமான பங்கையும், அதை நடைமுறைப்படுத்தும் விதத்தை விடாமல் பற்றியிருத்தலும்.
2) சபையின் காலகட்டத்திலும் அதன் ஊழிய முறைகளிலும் சத்தியத்தின் துல்லியத்தையும், சபையின் ஒருமனப்பாடையும் விடாதிருத்தல்.
மூன்றாவதாக நான் உங்களுக்கு சொல்ல விரும்பும் காரியம்.
- சபை அங்கத்துவ முறைகளில், சபை நியமித்திருக்கும் கோட்பாடுகளைக் கைவிடாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள்.
வேதாகமத்தில் சபைக்கு நிருபங்கள் எழுதப்படும்போது, அதில் முக்கியமாகக் காணப்படும் காரியம் எது? எந்த வார்த்தையினால் சபையை அடையாளங் காட்டுகிறார்கள்? அது ஒரு சிறிய வார்த்தைதான். “கிறிஸ்துவுக்குள்” என்கிற வார்த்தையை, சபையோடு சம்பந்தப்பட்டதாக, அனைத்து நிருபங்களிலும் காணலாம். ஒருசில உதாரணங்களைப் பார்ப்போம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும் சொஸ்தனேயும் . . . (1 கொரிந்தியர் 1:1). தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1 கொரிந்தியர் 1:9).
பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்கு நிருபத்தை எழுதத் தொடங்கியபோது, அவர் மனக்கண்களினால் காண்கிற காட்சி, அவ்விசுவாசிகள் பல்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆவிக்குரிய இருப்பிடம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் இருக்கிறது என்பதையே. எபேசு பட்டணத்து விசுவாசிகளுக்கு அவர் எழுதும்போதும் இதேவிதமான சிந்தனைதான் பவுலை ஆட்கொண்டிருக்கிறது. விசுவாசிகள் எங்கிருந்தாலும் அவர்கள் ஆவியின் பிரகாரமாக கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருப்பதை அவர் தெரிவிக்கிறார்.
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவில் கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது . . . (எபேசியர் 1:1). இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது . . . (பிலிப்பியர் 1:1).
இப்படியாக ஒவ்வொரு பட்டணத்திற்கும் நிருபங்களை அனுப்பும்போது பவுல் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு உலக இருப்பிடம் ஒன்று இருக்கிறது; ஆவிக்குரிய இருப்பிடம் ஒன்று இருக்கிறது. இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியம் உடையவர்கள் ஒன்றுகூடி இயங்கும் நிலைப்பாடுதான் ஒரு மெய்யான சபையை அடையாளங்காட்டுவதாய் இருக்கிறது. எதனால் பவுல் இப்படி நினைக்கிறார்? ஏனென்றால் இரட்சிக்கப்பட்டு இயேசுவோடு நெருங்கிய
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களையே சபை தன்னுடைய கரத்துக்குள் அரவணைத்துக் கொண்டது என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:47ன் மூலமாகப் பார்க்கிறோம். “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்.” பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு ஜனங்களுக்கு பிரசங்கித்தார். அதைக் கேட்டு மனதில் குத்தப்பட்டவர்களாகி, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்கிறார்கள். பேதுரு அவர்களுக்கு மேலும் விவரமாக அநேக வார்த்தைகளால் பிரசங்கிக்கிறார். பேதுருவின் வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இயேசுவை விசுவாசித்து உண்மையாக மனந்திரும்பினவர்களே சபையில் சேர்க்கப்பட்டார்கள். ஒருசிலர் வஞ்சனையினாலோ அல்லது அறியாமையினாலோ சபையில் சேர்ந்திருக்க லாம். இப்படிப்பட்ட ஒருவனைத்தான் அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 ஆம் அதிகாரத்தில் சந்திக்கிறோம். சீமோன் என்கிற மாயவித்தைக்காரன் ஒருவன் பிலிப்பு பிரசங்கித்ததைக் கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானமும் பெற்றுக் கொண்டான். சமாரிய தேசத்திலுள்ள விசுவாசிகளோடு சேர்ந்து சபைக்கும் வந்து கொண்டிருந்தான், பின்னாளிலே பேதுருவும் யோவானும் அங்கு வந்தபோது அவன் தேவனுக்கு ஏற்றவனாக இல்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். “உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாயிராதபடியால் இந்த விஷயத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21). அவன்தான் விசுவாசித்தானே. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டானா? அல்லது உணர்ச்சிவசப்பட்டு இயேசுவை ஏற்றுக் கொண்டானா? அல்லது தெரிந்தே மாய்மாலமாக நடந்து கொண்டானா? தெரியாது. நம்மால் அதைத் தீர்மானிக்க முடியாது. ஆனால் வேதம் நமக்கு ஒன்றை காண்பிக்கிறது. உண்மையாக கடவுளிடம் வராதவர்கள்கூட புதியஏற்பாட்டு சபைகளில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்து யோவான் அப்போஸ்தலரும் குறிப்பிடுகிறார்: “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை. நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப் பார்களே. எல்லாரும் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும் படிக்கே பிரிந்து போனார்கள்” (1 யோவான் 2:19). இப்படிப்பட்டவர்கள் ஒருவேளை சபைக்குள் வந்தபோது, கிறிஸ்துவைக் குறித்து நல்லறிக்கை பண்ணியிருப்பார்கள். அந்த சமயத்தில் தாங்கள் இரட்சிக்கப் பட்டிருப்பதாக ஒருவேளை தவறுதலாக நினைத்துக்கொண்டும் இருந்திருக்கலாம். அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டார்களே. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் தங்களைத் தாங்களே நன்றாக ஆராய்ந்து பார்த்து, ஒரு முடிவுக்கு வரலாம். எனக்கும் அந்தவிதமான இரட்சிப்பின் விசுவாசம் வேண்டும். அதன் ஆழமான வேர் என்னிடத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, இயேசுகிறிஸ்துவை நாடி, அதைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மற்றொரு சாரார் உண்மையை ஒத்துக் கொண்டு பின்வாங்கிப்
போவார்கள். ஆம். நான் சொல்லுகிற விதமாக நான் இல்லை. நான் இப்படியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நான் இதிலிருந்து விலகிவிட விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு விலகிக்கொள்வார்கள். வஞ்சகமாக சபையில் இருப்பவர்களைக் குறித்த காரியம் என்ன? கடவுளே அவர்களை வெளிப்படுத்திவிடுவார். இதற்கு அனனியா சப்பீராள் ஓர் உதாரணம். கடவுளே அவர்களை அழியப்பண்ணினார். கடவுள் சபையின் ஒழுக்கத்தை இவ்விதமாகவும் கட்டுப்படுத்துகிறார். சிலவேளைகளில் மாய்மாலக்காரர் வெளிப்படுத் தப்படாமல் சபையிலேயே இருக்க நேரிடலாம். அப்படிப்பட்டவர்களை தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே வெளிப்படுத்துவார். “அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22, 23).
ஆனால் சபையிலே ஒருவனுடைய மாய்மாலம் தெரியவந்ததென்றால், அவனை மனந்திரும்பச் செய்ய வேண்டும். அவனைக் குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைக் குறித்து அநேக வேதபகுதிகள் நமக்கு விளக்குகின்றன. 1 கொரிந்தியர் 5, 2 தெசலோனிக்கேயர் 3, தீத்து 2, மத்தேயு 18:15 முதல், ரோமர் 16:17 இவ்வசனங்களின் மூலமாக நாம் என்ன பார்க்கிறோம்? சபைக்கு, உள்ளான ஜீவன் இருக்க வேண்டும்; சபையின் ஒழுங்குகளுக்குக் கட்டுப்படாதவர்களை புறம்பே தள்ளுகின்ற அதிகாரமும் சபைக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவோடு ஐக்கியம் உடையவர்களாகவும், பரிசுத்தஆவியைத் தங்கள் உள்ளங்களிலே பெற்றவர்களாகவும் இருக்கின்ற விசுவாசி பரிசுத்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுவான். உலகத்தாரிடமிருந்து விலகி வாழுவான். சமாதானம், ஒற்றுமை உடையவனாக, அவருடைய ராஜ்யத்துக்குரிய வேலைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் மூழ்கியிருப்பான்.
சபை அங்கத்துவக் கோட்பாடுகளை விடாமல் உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள் என்கிற தலைப்பின் கீழ் நான் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன்? எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ, அவர்கள் எந்த வயது உடையவர்களாயிருந்தாலும், சபை அங்கத்துவத்தை நாடி வரும்போது மிகவும் கவனத்தோடு அதை பரிசீலிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். சபையின் மூப்பர்கள் அவர்களுடைய இரட்சிப்பின் விசுவாச அறிக்கையை ஆராய்வதில் கவனத்தை கைவிடாதிருக்கும்படி புத்தி சொல்லுகிறேன். அது மிகவும் முக்கியமானது. சபையின் அங்கத்தவராகிய உங்களுக்கும் சொல்லுகிறேன், ஒரு குறிப்பிட்ட நபர் சபை அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்திருப்பதையும், அவரது விசுவாச அறிக்கையை மூப்பர்கள் கேட்டறிந்து கொண்டிருப்பதையும் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, நீங்களும் அவ்விஷயத்தில் உங்களுக்குரிய
பங்கை செய்ய வேண்டும். அவரோடு நீங்கள் அளவளாவும்போது, அவருடைய விசுவாசத்தைக் குறித்து அறியலாம். அவருடைய விசுவாச அறிக்கையை, மூப்பர்கள் சபையாரின் பார்வைக்கு வைக்கும்போது, அதில் அக்கறை செலுத்தி அதில் ஏதாவதொரு காரியத்தில் விளக்க வேண்டியது அவசியமாகத் தோன்றினால், உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை விளக்கலாம். அதை உங்களால் சரியானபடி விளக்கக்கூடாமல் இருந்தால், மூப்பர்களின் உதவியை நாடுங்கள். அங்கத்துவ விண்ணப்பப் படிவங்களை நாம் விளையாட்டாக தயாரித்து வைக்கவில்லை. அது ஒரு முக்கியமான காரியம். சில வருடங்களுக்கு முன்னதாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட நபரின் அங்கத்துவம் விண்ணப்பிக்கப்பட்ட ஓராண்டு காலம் ஆகியும் அவருக்கு அங்கத்துவம் கொடுக்கப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவரது விசுவாச அறிக்கையைக் குறித்து மூப்பர்கள் மத்தியிலும் அவரிடமுமாக தொடர்ந்து கலந்துரையாடல் நடந்து கொண்டே இருந்தது. ஒருவரது விசுவாச அறிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில்தான் அவரை அங்கத்துவராக்க முடியும். இல்லையென்றால் அவரோடு கலந்து பேசி, குறைகள் உள்ள இடங்களை சுட்டிக் காட்டி அவருக்கு அறிவுறுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. சபையில் புதிதாக வருபவர் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருப்பதை வெளிப்படுத்துகிறாரா? விசுவாசியென சொல்லிக் கொண்டு வருபவர்கள் வேதபூர்வமாக நடக்காவிட்டால் என்ன செய்வதென்பதைத்தான் 2 தெசலோனிக்கேயர் 3 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். சபையில் ஒழுங்கற்று நடக்கிறவர்களை என்ன செய்ய வேண்டுமென காண்கிறோம். அவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும். அவன் மாறவில்லையென்றால், அவனைக் குறித்துக் கொண்டு அவனை ஒழுக்கத்திற்குள் கொண்டுவர வேண்டுமென பவுல் புத்தி சொல்லுகிறார். என் அருமை மக்களே! எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்கிறதான காரியம் அல்ல சபை. கடவுளை உண்மையாக நேசிக்கின்ற, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற கூட்டம் அது இருதயத்தின் கல்லான பகுதியை எடுத்துவிட்டு, சதையான பாகத்தை வைத்து, அதில் தேவனுடைய கட்டளைகளை எழுதி புதுப்பிக்கின்ற பரிசுத்தஆவியானவரின் கிரியை நடக்கின்ற கூட்டமே சபையாகும். அப்படியாக புதுப்பிக்கப்படாமல், மறுபிறப்படையாமல் சபையில் சிலர் உட்கார்ந்திருந்தால் நாளடைவில் என்ன ஆகும்? அப்படிப்பட்டவர்களுக்கு வசனத்தின் மீது ஆர்வம் இல்லை. கடவுளின் கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும் என்கிற மனதில்லை. கிறிஸ்துவின் மீது ஆத்மீக அன்பு இல்லை. ஆனால் அவர்களுக்கு சபையில் வந்துபோக மாத்திரம் இஷ்டம். அதனால் என்ன ஆகும்? மறுபிறப்படையாத அவர்களுடைய மாமிசம் தனது விருப்பத்திற்கேற்றபடியான ஆராதனையை நாடும். தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஆராதனையை விரும்புவர். ஆகவே உல்லாசம் தரக்கூடிய நிகழ்ச்சிகளை அனுமதிக்கத் தொடங்குவார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களுடைய மாமிசத்தை உற்சாகப்படுத்தக் கூடியதாக இருக்குமென்பதால் அதையே விரும்புவார்கள். ஒருவன் தேவனால் பிறவாமலும், கடவுளின் வல்லமையினால் மறுபிறப்பை
அடையாமலும், கர்த்தருடைய வசனம் கருக்குள்ள பட்டயமாக அவனை ஊடுருவி அவனது தவறுகளை சுட்டிக் காண்பித்து, அவனை மனந்திரும்பச் செய்யாமலும் இருந்ததானால் அவன் ஒரு செத்த மனுஷன்தான். பிரசங்கங்கள் அவனுக்கு வீணாய்த் தோன்றும். அது அவனுக்கு போர் அடிப்பதாயிருக்கும். எப்போது பார்த்தாலும் ஜெபம் செய்கிறார்களே என்று அலுத்துக் கொள்ளுவான். மூப்பர் எழுந்து நின்று ஆராதனையை ஆரம்பிக்கும்போது ஜெபிக்கிறார்கள். ஒரு சங்கீதத்தை வாசித்துவிட்டு ஜெபிக்கிறார்கள். இன்னொரு வேதபகுதியை வாசித்துவிட்டு ஜெபிக்கிறார்கள். ஜெபம்! ஜெபம்! ஜெபம்! எதற்கெடுத்தாலும் ஜெபம்தானா என அலுத்துக் கொள்ளுவான். ஜெபத்திற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே செலவிடுகின்ற சில சுவிசேஷ சபைகள் இருக்கின்றன, உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே. எதனால் அவை அப்படி ஆனது? சபை அங்கத்துவத்தைக் குறித்து அவை அலட்சியமாக இருந்தபடியால் அப்படியாயிற்று. இந்த மாதிரியான அங்கத்தினர்கள் அந்த சபையில் சில வருஷங்கள் இருந்தார்களானால் அவர்கள் சபையின் நிலைமையையே தலைகீழாக மாற்றி விடுவார்கள். அவர்களில் சிலருக்கு சில வரங்கள் இருக்கும். நிர்வாகத் திறமைகள் இயற்கையாகவே இருக்கும். ஆகவே அவர்கள் சபைக் காரியங்களில் தலையிட்டு சபையின் கோட்பாடுகளை திருத்தியமைக்க முற்படுவார்கள். இந்த சபைக்கு நான் சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறேனென்றால் நான் அவைகளை நன்றாக ஆராய்ந்துதான் செயல்படுத்தியிருக்கிறேன். சபை சந்திப்பின் ஊழியங்கள் நிமித்தமான பயணங்களில், ஐந்தரை வருடங்களில் நான் பல சபைகளை சந்தித்திருக்கிறேன். அநேக சபைகள் இப்படியான நிலைமையில்தான் இருக்கின்றன. சபை அங்கத்துவத்தைக் குறித்த கோட்பாடுகளை நீங்கள் விடாமல் உறுதியோடு கைக்கொள்ளா விட்டால் இந்த சபையும் அந்த மாதிரிதான் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த செய்தியில் முடிவாக நான் உங்களுக்குக் கூற விரும்புவது, எனது அருமை சகோதரர்களே, சகோதரிகளே, சபையின் அங்கத்தவர்களே, நான் குறிப்பிட்ட சபைக்குரிய இலக்கணங்களை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
- இரட்சிப்பின் திட்டத்தில் சபைக்குரிய பிரத்தியேகமான பங்கையும், அதை நிறைவேற்றுதலைக் குறித்தான செயல்முறைகளையும், நம்பிக்கையையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
- சத்தியத்தின் தூய்மையையும், விளங்குதலில் ஒருமைப்பாட்டையும் சபையின் வாழ்நாள் முழுவதுமாக செயல்படுத்துவதில் உறுதியாக இருங்கள்.
- சபை அங்கத்துவம் குறித்த கோட்பாடுகளை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
நான் என்னுடைய 46 ஆண்டு கால ஊழியத்தில் இவைகளை நிறைவேற்றினேன். எனக்கு எதில் மிகுந்த ஈடுபாடு என நீங்கள் ஆராய்ந்தீர்களென்றால் சபையைக் குறித்ததான இந்த காரியங்களில்தான் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கிறதென்பதை அறிவீர்கள். 46 ஆண்டு காலமாக கட்டி வளர்த்த சபை, சரியாக பராமரிக்கப்படாமல் போயிற்றென்றால், அதைக் காட்டிலும் எனக்கு வேதனை அளிக்கக் கூடியது வேறெதுவும் இருக்காது. சபையைக் கிறிஸ்துதான் பராமரிக்கிறார் என்பது உண்மையே. ஆனாலும் அவர் அதை மனிதர்களைக் கொண்டுதான் பராமரிக்கிறார். ஆகவேதான் அவர் “உனக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிரு” என்கிற எச்சரிப்பை தியத்தீரா சபைக்குக் கொடுக்கிறார். அது அந்தந்த சபையின் பொறுப்புமாகும். ஆகவே, நான் மேற்குறிப்பிட்ட 3 காரியங்களிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும். இனி வரும் வாரங்களிலே, சபை இலக்கணத்தைக் குறித்ததான மேலும் நான்கு முக்கியமான காரியங்களை நாம் ஆராயலாம். அந்நாட்களிலே, ஆவியானவர் நமக்குக் கொடுக்கின்ற சத்தியங்களை கேட்டு விளங்கிக்கொள்ள தேவன்தாமே நமக்கு உதவி செய்வாராக.
|
“உங்களைப் பற்றி எவரும் அபத்தமாகப் பேசும்போது அதற்கு நீங்கள் காது கொடுக்காமல் இருப்பது நல்லதுதான். ஒருபோதுமே அதற்கு பதிலளிக்காமல் இருப்பதுதான் நல்லது. நான் எப்போதுமே ஒரு காதை செவிடாகவும், ஒரு கண்ணைக் குருடாகவும் வைத்திருப்பேன்; செவிடான காதுதான் நல்ல காது என்பதிலும், குருடான கண்தான் இந்த இரண்டிலும் மேலான பயனளிப்பது என்பதிலும் எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு மற்றவர்கள் ஏற்படுத்துகின்ற காயங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்; அவற்றை மறந்து, தூக்கியெறிந்துவிட முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முட்டாளும் உங்களுக்கு ஏற்படுத்துகின்ற தீமைகளை உலகத்தின் முன் வைப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவற்றை அப்படியே விட்டுவிடுங்கள்! தீயவர்கள் உங்களைப் பற்றி அபத்தமாகப் பேசுகிறபோது நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு நன்மையளிப்பது மட்டுமல்லாமல், கர்த்தரின் நாமத்தையும் மகிமைப்படுத்தும். - ஸ்பர்ஜன் - |
தாம்பத்திய உறவில் நெருக்கம்
[திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். கடந்த இதழில் வெளிவர ஆரம்பித்த இந்த ஆக்கம் தொடர்ந்தும் வெளிவரும். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர்.]
பாகம் 2
திருமணத்தில் நெருக்கமும், சுவிசேஷ அன்பின் கிருபையும்
முகவுரை:
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஒரு பாடல் மிகவும் பிரபலமாயிற்று. காலங்களைக் கடந்து நிற்கக்கூடிய கருத்துக்களை அப்பாடல் தெரிவித்ததே அது பிரபலமடையக் காரணமாக இருந்திருக்கலாம். அதன் கருத்துக்களை கீழே காணலாம். “நீ நேசிக்கிறவரையே எப்போதும் துயரமும்படுத்துகிறாய்” என்கிற தலைப்பிலான பாடல் அது. ஆலன் ராபர்ட்ஸ், டோரிஸ் பிஷர் என்பவர்கள் 1944ஆம் ஆண்டிலே எழுதியது.
நீ நேசிக்கிற ஒருவரையே நீ எப்போதும் துயரப்படுத்துகிறாய்
அப்படி ஒருக்காலும் துயரப்படுத்தலாகாதே.
அழகான ஒரு ரோஜாவை கையில் எடுத்து
அதன் இதழ்கள் உதிரும் அளவுக்கு கசக்குகிறாய்.
அன்பான இருதயத்தை
பதற்றமான வார்த்தைகளால் காயப்படுத்துகிறாய்
ஆகவே, நானும் உன் இருதயத்தை
நேற்றைய தினத்திலே நொறுக்கியிருந்தால்
அது உன்னை மிகவும் நேசிப்பதினாலேயே
சிலவேளைகளிலே நாம் ஒருவரை நேசிப்பதற்கு எடுக்கிற முயற்சிகள் நம்மை நோக்கியே திரும்பவும் பாய்வதாயிருக்கிறது. அவர்களை பிரியப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை காயப்படுத்திவிடுகிறோம். நேசிப்பதென்பது ஏன் நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது? நாம் பாவிகளாக இருப்பதாலேயே. கிறிஸ்தவர்களாக இருந்தாலுங்கூட நமக்குள் எஞ்சியிருக்கும் பாவநிலை சில சமயங்களில் வெடித்தெழும்பி, நாம் நேசிப்பவர்களையேகூட காயப்படுத்தி விடுகிறது. நமது பாவநிலைக்கு தீர்வு காண ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது சுவிசேஷ வழி. திருமண உறவின் உண்மையான நெருக்கத்தில் நாம் முன்னேற விரும்பினால், பாவத்தை எப்படி மேற்கொள்வது என்பதை
கற்றுக்கொள்வதில் ஆரம்பிக்க வேண்டும். விவாகத்தில் உள்ளார்ந்த நெருக்கத்தை அடைய முயற்சிப்பவர்கள் “சுவிசேஷ அன்பின்” மூலமாக ஒருவரையொருவர் எப்படி நேசிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். பாவத்தின் மீது சுவிசேஷத்தை பிரயோகிப்பதே “சுவிசேஷ அன்பு”. பாவத்தை அப்படியே விட்டுவிட்டோமானால் அது நாம் நேசிப்பவர்களை காயப் படுத்தும்; நம்மையும் காயப்படுத்தும்; கிறிஸ்துவுக்கும் அவமரியாதையை சம்பாதித்துக் கொடுக்கும்.
அத்தியாயம் 5
சுவிசேஷ அன்பு சந்திக்கும் சவால்கள்
தோழமையும் தேவை: “என்னை நேசி”
திருமண நெருக்கத்தில் நாம் இரண்டுவித மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்களாக செயல்படுகிறோம். தோழமையில் ஈடுபாடும், வெறுப்பும் ஒரே சமயத்தில் இருப்பதை நாம் அனுபவிக்கிறோம்.
கடவுள் நம்மை தோழமைக்கென்று படைத்ததாலேயே நமக்கு அதில் ஈடுபாடு இருக்கிறது. நாம் அவரோடு நெருங்கிய தொடர்புள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவே நம்மை சிருஷ்டித்தார். நமது துணையோடும் உள்ளார்ந்த தொடர்புள்ளவர்களாக வாழும்படி கட்டளையிட்டிருக்கிறார். திருமணத்தில் நாம் ஒரே மாம்சமாகிறோம். திரித்துவ கடவுளிடம் இருக்கின்ற ஒற்றுமையை தம்பதிகள் தங்களுடைய ஒரே மாம்ச உறவில் வெளிப்படுத்துகிறவர்களாயிருக்கிறார்கள். இருவராயிருந்தாலும் ஒன்றாயிருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் தம்பதிகள், மூவராயிருந்தாலும் ஒன்றாயிருக்கிற திரித்துவ கடவுளின் தன்மையை தங்கள் ஒற்றுமையில் பிரதிபலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். அவருடைய சாயலைத் தரித்தவர்களாகிய நாம் அத்தகைய நெருக்கத்தை நோக்கி பயணிக்கிறவர்களாயிருக்கிறோம்.
பாவத்தில் விழுவதற்கு முன்னதாக, ஆதாமுக்கு, நமக்கு இருப்பது போன்ற சுயநலம் இருக்கவில்லை. எப்போதும் தன்னைக் குறித்தே சிந்திப்பவராக இல்லை. கடவுளிடமிருந்தும், தன் மனைவியிடமிருந்தும், தனது வேலைகளிடமிருந்தும், சிருஷ்டிப்பின் நிர்வாகத்தினின்றும் தன்னை பிரித்துப் பார்ப்பவராக ஆதாம் இல்லை. பாவம் பிறப்பித்த சுயநலம் அங்கு இல்லாததால் ஆதாமால் தன்னை ஒரு தனிமனிதனாக பார்க்கமுடியவில்லை. ஆனால் பாவத்தின் காரணமாகத் தோன்றிய மரணமானது, ஆதாமுக்குள்ளேயும், பிற சிருஷ்டிகளிடமிருந்தும் பிரிவினையைத் தோற்றுவித்துவிட்டது. பாவத்தின் காரணமாக ஆதாம், கடவுளிடமிருந்தும் சிருஷ்டிப்புகளிடமிருந்தும் பிரிந்தது மாத்திரமல்லாமல், தனக்குள்ளேயே பல பிரிவினைகள் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தார். கடவுள் ஆதாமை சிருஷ்டிப்பின் சகல காரியங்களோடும் இணைத்
திருந்தார். அதன் நடுவே தன்னை ஒரு தனிமனிதனாக ஆதாமால் பார்க்ககூடாதபடிக்கு, கடவுள் ஆதாமை அவ்வளவு இயல்பாக மற்றவற்றோடு இணைத்திருந்தார். தன்னைக் குறித்து ஆதாம் சிந்திக்கவேயில்லை. பாவநிலையிலுள்ள நாம் எப்போதும் நம்மைக் குறித்தே எண்ணுகிறவர்களாக இருக்கிறோம். ஆனால், பாவமற்ற நிலையிருந்த ஆதாம் அப்படி இல்லை. கடவுளோடும், உலகத்தோடும், அவர் இட்ட பணிகளோடும், ஜீவராசிகளோடும், மனைவியோடும் சம்பந்தப்படுத்திப் பார்க்க மாத்திரம்தான் ஆதாமுக்குத் தெரிந்திருந்தது. தன்னைக் குறித்து கடவுள் எந்த அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தாரோ அந்த அளவு மாத்திரமே ஆதாமுக்குத் தெரிந்திருந்தது.
பாவத்தினால் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதனையும் பிற சிருஷ்டிகளையும் கடவுள் முற்றிலும் அழித்துவிடாமல் கருணைகூர்ந்து, அவர்களை அதனதன் நிலையிலே நிலைநிறுத்தினார். ஆகவேதான், நாம் பாவத்தில் விழுந்துவிட்டவர்களாக இருந்தபோதிலும் கடவுள் ஏற்கனவே குறித்திருந்த நியமத்தின்படியே நாம் வாழுகிறவர்களாயிருக்கிறோம். ஆகவேதான் நாம் நமக்கு வேண்டியவர்களிடமும் நமக்கு விருப்பமானவர் களிடமும் இயல்பாகவே தோழமையை நாடுகிறவர்களாயிருக்கிறோம். திருமண உறவின் நெருக்கத்தைக் குறித்து நாம் சிந்திக்கும்போது அந்த தோழமைதான் நம்மை கவருவதாயிருக்கிறது.
யாராவது நம்மை அறிந்து கொண்டு, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்கிறவர்களாயிருக்க வேண்டும் என நம் இருதயம் வாஞ்சிக்கிறது. பிறர் நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் காரணமாகவே நாம் நண்பர்களைத் தேடுகிறோம். தோழமைக்காக மிகவும் ஏங்குகிறோம். நட்பை விரும்புவது நமது இயல்பாக இருக்கிறது. “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல” ஆதியாகமம் 2:18. தனிமை என்பது நமக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. அதிலிருந்து விடுதலை பெற நண்பர்களை நாடுகிறோம். சில மனிதர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதின் மூலமாக தங்கள் தனிமையை அகற்ற முயலுகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ராபின்ஸன் குரூசோ பற்றிய திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அதில் ராபின்ஸன் குரூசோவும் அவனுடைய நண்பன் வில்சன் என்பவரும் கடற்பிரயாணத்தில் கப்பல் சேதமடைந்ததால், யாருமேயில்லாத ஒரு தீவில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். ராபின்ஸன் அங்கு கடவுளோடு பேசுகிறான். வில்சன் தனது பந்தோடு பேசிக் கொண்டிருக்கிறவனாக சித்தரிக்கப்படுகிறது. தனிமையான நிலையிருந்த அவனுக்கு யாரோடாவது பேச வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆட்களே இல்லாவிட்டால் என்ன? மனதிலுள்ளதை இந்த அழுக்கடைந்த பந்திடமாவது தெரிவிப்பேன் என்கிற ரீதியில் அவன் பந்தோடு பேசிக் கொண்டிருக்கிறான். ஒரு நண்பனிடம் பேசுவது போல அவன் பந்திடம் பேசுகிறான். ஏன் அப்படி பேசுகிறான் என்பது நமக்கு விளங்குகிறது. அவன் தோழமையை நாடுகிறான். மனிதன் ஒரு சமூகப்பிறவி (Social Being). கூடி வாழும் இயல்பை உடையவன். மனிதனால் தனிமையாக இருக்க முடியாது.
தனிமையிலும் விருப்பம்: “என்னை சற்றுத் தனியாக விடு”
தோழமைக்காகப் படைக்கப்பட்டிருந்தாலும் நவீன கால மனிதர்கள் தனிமையை விரும்புகிறவர்களாயிருக்கிறார்கள். “தனிமை எனது உரிமை!” என்பது நவீன மனிதனின் கோரிக்கையாயிருக்கிறது. பலவிதமான அத்தியிலைகளின் கீழே ஒளிந்துகொள்ளும் உரிமையை விரும்புகிறான். தனிமையை தனது சுயஇஷ்டத்தின்பிரகாரம் அனுபவிக்க விரும்புகிறான். அதனால் அவன் தவறான தோழமைக்குள் பிரவேசிக்க நேரிடுகிறது. இன்டர்நெட் தளங்களிலே தனது சுயமுகத்தைக் காண்பிக்காமல், அடையாளங் காட்டாத ஒரு நபராக தோழமையை நாடுகிறான். முகம் தெரியாத நபர்களோடு தனது இரகசியங்களையும், சொந்த வாழ்க்கையையும், விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்துகொள்ளுகிறான். தன்னோடு உரையாடுபவர் யாரென தெரியாவிட்டாலுங்கூட யாரோ ஒருவரோடு தோழமைகொள்ள விரும்புகிறான். பல சமயங்களில் அவன் தனது உண்மையான காரியங்களை பகிர்ந்துகொள்வதில்லை. தன்னை ஒரு கற்பனை மனிதனாக்கி, வேறுவிதமான குணாதிசயங்களை உடையவனாக மற்றவர்களோடு உரையாடும்போது அவன் அநேகவிதமான பொய்களை புனைந்து, மகிழ்ந்து, தனது தனிமை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுகிறான். இன்டர்நெட் தளங்களில் பார்க்கும் ஆபாச படங்கள் தவறான கவர்ச்சியை அவனுக்கு அளிக்கிறது. தன்னை வெளிப்படுத்தாமல் ஒளிந்து கொண்டு, தவறான நெருக்க உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அது அவனுக்கு அளிக்கிறது. தற்கால மனிதர்கள் ஆத்மீகமான தோழமையை நாடுவதைவிட, வெறும் சரீரப்பிரகாரமான நெருக்கத்தினால் கவரப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தன்னை பிறர் நேசிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக அதைக் காண்பிக்காமல் மறைத்து, தன்னைத்தானே வஞ்சித்துக்கொள்ளுகிறதான அத்தியிலைகளின் கீழாகத் தங்களை மறைத்துக் கொண்டு வாழப் பார்க்கிறார்கள்.
தனிமை என்கிற உரிமையைக் கோரி வாழ்கிற நாம், பிரிந்து போன ஒரு சமுதாயமாக, தொடர்பற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விசுவாச வாழ்க்கையைக்கூட நவீன யுகம் பாதிக்கிறதாய் இருக்கிறது. உதாரணமாக “உள்ளூர் சபைகள்” (Local Churches) என்று குறிப்பிடுகிறோம். அதில் “உள்ளூர்” (Local) என்பதற்கு என்ன அர்த்தம்? உள்ளூர் பிரதேசங்களை அது குறிப்பதாயிருக்கிறது. இப்போது நாம் உபயோகப்படுத்துகிற அர்த்தத்தில் உள்ளூர் என்பது அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. நாம் ஒரு பகுதியில் வசிக்கிறோம். இன்னொரு பகுதிக்கு வேலைக்குச் செல்லுகிறோம். வேறொரு பகுதியில் சபையாகக் கூடுகிறோம். பிள்ளைகள் மற்றுமொரு பகுதிக்கு கல்வி கற்கச் செல்லுகிறார்கள். சில வேளைகளில் படிப்பிற்காக வேறு மாநிலத்துக்கே கூட சென்றுவிடுகிறார்கள். நம்மை எந்த உள்ளூரைச் சேர்ந்தவர்களாகக்
கருதுவது? நமது உறவினர்கள், வேறு ஊர்களில், வெளிநாடுகளிலும் வசிக்கிறவர்களாக இருக்கிறார்கள், இப்படியாக நாம் தனித்தனியாக, தீவுகள் போல பல இடங்களில் ஒரே நேரத்தில் வசிக்கிறோம். நமது பல்வேறு அலுவல்களை கவனிக்க இத்தீவுகளுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள மக்களை சந்தித்து நமது பணியை நிறைவேற்றிவிட்டுத் திரும்ப வருகிறோம். இப்படியாக பல தீவுகளுக்கு நாம் பயணம் சென்று வருகையில் அந்தந்த இடத்திற்கும் மனிதர்களுக்கும் ஏற்ற ஒரு முகத்தை காண்பிக்கிறவர்களாக இருக்கிறோம். அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு நமது முகம் வேறுபடுகிறது. வேலை செய்கிற இடத்தில் நமது குணம் ஒருவிதமாக இருக்கிறது. சபையில் நமது குணம் வேறு மாதிரியாக இருக்கிறது. வீட்டிலே நாம் முற்றிலும் மாறுபட்டவர்களாய் இருக்கிறோம். இதில் ஓர் இடத்திற்குரிய குணாதிசயம் வேறொரு இடத்தில் பிரதிபலித்து விடாதபடிக்கு நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம். உலகத்தையே நாடக மேடையாக பாவித்து, அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும், பழகுகின்ற மனிதர்களுக்கும் ஏற்ற வேஷம் தரித்துக் கொண்டு நமக்குள்ளேயே பிரிவுபட்டவர்களாக வாழுகிறோம். இத்தகைய பிரிவுகளுக்கிடையே மற்ற மக்களோடு நாம் பழகுவது மேம்பூச்சாகவும், தொடர்பற்றதாகவும், நிச்சயமற்றதாகவும், நெருக்கமில்லாததாகவும் இருக்கிறது.
தோழமை நம்மை கவருவதாயிருக்கிறது. ஆனால் நமது பாவநிலைமையின் காரணமாக, தோழமையை தவிர்த்து தனிமையை விரும்புகிறவர்களாகவும் இருக்கிறோம். நாம் அனைவரும் தோழமையோடு இருக்கும்படியாக கடவுள் நம்மைப் படைத்திருந்தாலும், நாம் மற்றவர்களிடமிருந்து பிரிந்த ஓர் எல்லையை வகுத்துக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆதாம்-ஏவாளைப் போல அத்தியிலைகளைக் கொண்டு நம்மை மூடிக் கொண்டவர்களாக பிறரிடமிருந்து ஓடி நம்மை ஒளித்துக் கொள்ளவே விரும்புகிறோம். நம்மை அப்படியே விட்டுவிடுவதிலும் நமக்கு இஷ்டமில்லை. யாராவது தேடிக் கண்டுபிடிக்கும்படி காத்துக் கொண்டிருக்கிறோம். உள்ளுக்குள் நமக்கு மற்றவரோடு தோழமையாய் இருக்கவே ஆவல் இருக்கிறது. ஆனால், பாவம் நம்மை தனிமையை நாடி ஓடும்படிக்கு விரட்டுகிறது. தனிமையில் இருக்கும்போது விழித்துக் கொள்ளும் சுயநலமாவது, நாம் எவைகளையெல்லாம் மற்றவர் களிடமிருந்து மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. தோழமையோ எதையும் மறைக்காமல் வெளிப்படுத்திக் காண்பிப்பதாய் இருக்கிறது. தோழமையானது, தனிமையை ஊடுருவி அதை மேற்கொள்ளுகிறது. ஆனால் நமக்கு நமது பாவநிலையைக் குறித்து தெரியும். அது நம்மை வெட்கப்படுத்துகிறது. ஆகவே நம்மை மறைத்துக்கொள்வதற்கு ஏதாவது காரணங்களைக் (அத்தியிலைகள்) காட்டி மறைத்துக்கொள்ளுகிறோம். நமது உள்ளார்ந்த நட்பை நாடி யாராவது வரும்போது, நமது உண்மை நிலையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மாய்மாலமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் மிகவும் நெருங்கி வந்து நமது அசல் நிலையை கண்டுகொண்டுவிடுவார்கள்
போலத் தோன்றினால் அவர்களைத் தவிர்க்கப் பார்க்கிறோம். தப்பித்துக்கொள்ளவும், ஏமாற்றவும், பொய் சொல்லவும் துணிகிறோம். பொய்கள் தோழமையை உருவாக்குவதில்லை. அவைகள் மக்களை நெருங்கவிடுவதில்லை. பிளவையும் பிரிவையும் ஏற்படுத்திவிடுகிறது.
இன்னுமொரு ஆச்சரியப்படத்தக்க காரியம் என்னவென்றால், நம்மிடமே நம்மை மறைத்துக் கொண்டு வாழப் பார்ப்பதாகும். பொய்கள் மற்றவர்களை நம்மிடம் நெருங்கவிடாதது மாத்திரமல்ல, நமக்குள்ளும் தோழமையை வளர்த்துக்கொள்ளவிடாமல் தடுக்கிறது. பிறரை ஏமாற்றுவதைவிட, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதான் அதிகமா யிருக்கிறது. நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளுகிற சுயவஞ்சனையைக் குறித்து வேதாகமம் அநேக இடங்களில் நம்மை எச்சரிக்கிறது. (யோபு 15:31; எரேமியா 37:9; 1 கொரிந்தியர் 3:18, 6:9, 15:33; கலாத்தியர் 6:3,7; யாக்கோபு 1:16,26; 1 யோவான் 1:8). பாவத்தின் காரணமாக நாம் மற்றவர்களிடமிருந்து பிரிந்தவர்களாக போலி வாழ்க்கை வாழ்வது மாத்திரமல்லாமல், நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே உண்மையாக, தோழமையோடு வாழத் தெரியாதவர்களாக இருக்கிறோம். நம்மாலேயே நம்மை சரிவரப் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்த சுயவஞ்சனையை ஒவ்வொன்றாக உடைத்து நொறுக்கும் ஒரு வழியை திருமண உறவு வைத்திருக்கிறது. நாங்கள் வாலிப வயதுடையவர்களாய் இருக்கையில் தனிமையாக நெடுந்தொலைவு பயணப்பட்டு செல்வதுண்டு. எங்களது “சுயம்” என்ன என்பதைக் கண்டுகொள்வதே அந்த பயணத்தின் நோக்கமாகும். அந்த சுயத்தை திருமண பந்தத்தின் வாழ்க்கைப் பயணத்தில் நாம் அடிக்கடி கண்டுகொள்ள முடிகிறது. எனது திருமண வாழ்வின் ஆரம்ப காலங்களில், எனது சுயத்தைக் குறித்து விளங்கிக்கொள்வது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யார், நான் எதை விரும்புகிறேன், எதை வெறுக்கிறேன் என்பதெல்லாம் சரிவர புரியாமல் இருந்தது. என் மனைவியைக் குறித்து அறிந்துகொள்வதில் எனக்கு அதிக விருப்பம் இருந்தது. ஆனால் என்னையே விளங்கிக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. நான் மிகவும் அன்பும், பொறுப்பும், காதலும் உடையவன் என்பதாக என்னைக் குறித்து எனது திருமணத்திற்கு முன்னதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு தவறு, என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது திருமணத்திற்குப் பின்புதான் எனக்குத் தெரிந்தது. நான் தோழமையை நாடுகிறவனாயிருந்தேன். எனக்கு ஆத்மீகமான தோழமை தேவைப்பட்டது. ஆனால் அந்த தோழமையை ஏற்படுத்திக்கொள்வதில் எனக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தது. ஏனென்றால் நான் என் மனைவியை நெருங்கிச் சேரும்போதெல்லாம் எனக்குள் எவ்வளவு பாவம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவளுடைய பாவத்தைவிட என்னுடைய பாவம்தான் அடிக்கடி என்னை தோழமைகொள்ளவிடாமல் தடுப்பதை உணர்ந்தேன். பாவம் பலவிதமான
முகத்திரைகளை நமக்குப் போட்டுவிட்டிருக்கிறது. அவைகளைக் கிழித்து எறிந்துவிட்டு தோழமைகொள்வதற்கு பதிலாக, விலகிப் போகவே நாடுகிறோம். பாவமாகிய எரிமலைகள் அவ்வப்போது வெடிக்கும்போது அவை எங்கள் தோழமைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாவத்தின் கொடூரம் எங்களை நெருங்கவிடாமல் பின்னுக்குத் தள்ளுகிறது. மரணத்தைப் பிறப்பிக்கிற பாவமானது எங்களை பிரித்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆத்மீகத் தோழமையடையக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் திருமணம் இல்லாமல் தனிமனிதனாய் ஜீவிப்பது என்னைப் பொறுத்த வரையில் அதைவிடக் கடினமானது. நான் தனிமையாக இருப்பது எனக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்திருக்கிறேன். நல்லவேளையாக, எனது சுயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சுயநலவாதியாக வாழாமல், தோழமையோடு வாழ்கிற விருப்பம் எனக்குள் இருந்தது. என்னையே வஞ்சித்து, ஏமாற்றிக்கொள்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கடவுளின் கிருபையினாலே நான் அவருக்கு முன்பாகவும், என் மனைவியோடும் ஓர் உண்மையான வாழ்க்கையை வாழ என்னைப் பக்குவப்படுத்துகிறேன். ஏமாற்றுதல் தோழமையை அழித்துவிடுகிறது என்பதை நான் கண்டுகொண்டேன்.
ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது கல்யாணத்தை செய் என்பது தமிழ் உலகில் வழங்கும் ஒரு வழக்கச் சொல். ஆனால் கடவுளின் சாயலைத் தரித்துக் கொண்டிருக்கிற நமக்கு இந்த மாதிரியான உலக பழக்கவழக்கங்களெல்லாம் உதவாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் கூறும்படியாகக் கடவுள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இந்த கட்டளை எந்தவிதமான தோழமைக்கும், திருமண உறவுக்கும் பொருந்தும். நாம் திருமணம் செய்கிறோம். திருமணம் நம்மை ஒருவர் பேரில் ஒருவர் நேசம் வைக்கும்படியாகக் கட்டளையிடுகிறது. நேசம் ஒளிவு மறைவற்ற நேர்மையை எதிர்பார்க்கிறது. நேர்மை, தனிமையை விலகிப் போகச் செய்து இருவரையும் ஒன்றாக இணைக்கிறது. நாம் திருமணம் செய்கையில் நமது தனிமை விலகியோடி விடுகிறது.
ஊடுருவும் மனசாட்சி
நம்மை யாராவது அறிந்து கொண்டு புரிந்துகொள்ள மாட்டார்களா என்கிற ஏக்கமே நம்மைத் திருமணத்தை நாடச் செய்கிறது. ஆனால், திருமணம் செய்துகொண்ட உடனேயே, யாரோ ஒருவர் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டது போலவும், நமது தனிமைசுதந்திரம் பறிபோனது போலவும் உணரத் தொடங்குகிறோம். நம்மை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பமும் இருக்கிறது. அதே சமயத்தில் நம்மை ஒருவர் நெருங்கியிருப்பதும் தொந்தரவாயிருக்கிறது. திருமணத்தில் தனிமைக்கு இடம் கிடையாது. நான் இருக்கின்ற இடமெல்லாம் என் துணை இருப்பதை பார்க்கிறேன். என் படுக்கை
அறையிலும், என் வீட்டு வரவேற்பறையிலும், என் காரிலும் எங்கு போனாலும் கூடவே இருப்பது எனக்கு புது அனுபவமாயிருக்கிறது. என்னுடைய அருகிலேயே எப்போதும் இருந்து, என் தவறுகளையெல்லாம் கண்டுபிடித்துவிடுவது எனக்கு ஏற்கமுடியாமல் இருக்கிறது. இதுவரைக்கும் என்னுடைய சொந்த மனசாட்சி மாத்திரந்தான் என்னைக் குற்றப்படுத்திக் கொண்டிருந்தது. நான் எனது தவறுகளையெல்லாம் அழகாக மறைத்து வைத்துக் கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது துணை, மற்றொரு மனசாட்சியாக செயல்பட்டு, என்னுடைய தனிமைசுதந்திரத்தை ஊடுருவி, என்னை குற்றவாளியாக நிறுத்துவது எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. எனது ஒழுங்கீனங்கள், சோம்பேறித்தனம் போன்றவை யெல்லாம் எனக்கு பழகிப் போயிருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பின்போ எனது துணை என்னுடைய அந்தரங்கத்தில் பிரவேசித்து, புதைபொருட்களைத் தேடியெடுத்து அருங்காட்சியகத்தில் அடுக்கி வைப்பது போல, எனது தவறுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்துவது என்னை பாதிக்கிறது. சில பழக்கங்களைத் தவறு என்பதுகூட தெரியாமல் செய்து கொண்டிருந்திருக்கிறேன் என்பது என்னுடைய இரண்டாவது மனசாட்சியாகிய என் துணை சுட்டிக் காட்டியபிறகுதான் எனக்குத் தெரிகிறது. என்னுடைய சொந்த பழக்கவழக்கங்கள், கோபம், எரிச்சல், சோர்வு போன்றவற்றில் இந்த என்னுடைய துணை பிரவேசித்து அவைகளை வெளிக்கொணர்ந்து, ஆராய்ந்து, அதற்கான பொறுப்புகளை ஏற்கும்படி கட்டாயப்படுத்துவது எனக்குப் பிரியமாக இல்லை. என்ன அழகாக அவைகளை வெளியார் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன்! நெருக்கமான தோழமை வேண்டுமானால் இதுதான் பிரச்சனை. எப்போதும் என் கூடவே இருக்கின்ற தொந்தரவாக இந்த எனது இரண்டாம் மனசாட்சியை நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் என்கூடவே இருந்து என்னை ஒவ்வொரு நிமிடத்திலும் நியாயம் விசாரிக்கிற நியாயாதிபதியாய் என் துணை இருப்பதாக நினைக்கிறேன்.
குற்றம் விசாரித்தல்! நெருக்கத்தில் காணப்படுகிற பிரச்சனையே அதுதான். நெருக்கமாகப் பழகும்போதுதான் குற்றங்கள் வெளிப்படை யாகத் தெரியவருகிறது. எனது பாவங்களை நெருக்கமான உறவு உணர்த்துகிறது. உடனடியாக நான் அதிலிருந்து விலகி ஓடி ஒளியவே விரும்புகிறேன். பாவிகள் தண்டனையிருந்து தப்பித்துக்கொள்ளவே விரும்புவார்கள். சாயங்கால வேளையின் குளிர்ச்சியான சமயத்திலே கடவுள் அந்த தோட்டத்திற்கு வந்தார். தெய்வீக மனசாட்சி அங்கே வந்தபோது பாவிகள் விலகி ஓடி ஒளிந்து கொண்டனர். மரத்திற்குப் பின்னாலே ஒளிந்து கொண்டு, தனது குற்றத்தைப் பார்க்காமல், அடுத்தவருடைய குற்றத்தை எடுத்துக் காட்டி கடவுளின் கவனத்தை அடுத்தவர் பக்கம் திருப்பவே அங்கே ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். தனது தனிமை எல்லைக்குள் கடவுள் பிரவேசித்து, தனது குற்றத்தைக் கண்டுபிடித்து விடுவாரோ என்கிற பயம். திருமண வாழ்க்கையும் ஒரு நியாயவிசாரிப்புப் போலத்தான் இருக்கிறது. ஒவ்வொரு
குற்றத்தையும் எனது துணை கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகையில் எனது தனிமைசுதந்திரம் பறிபோகிறது. சமுதாயத்தில் வெளிப்பார்வைக்கு நல்லவனாக நடமாடிக் கொண்டிருந்தேன். உலகத்திற்கு எனது அந்தரங்க வாழ்க்கைத் தெரியாது. எனது கோளாறுகளையெல்லாம் உணர்ந்துகொள்கிற அளவுக்கு நெருக்கமான நிலை திருமணஉறவில்தான் வந்தது. எனது தவறுகளெல்லாம் எனது துணைக்குத் தெரிகிறதே என்பது எனக்கு சங்கடத்தை விளைவிக்கிறது. என் துணையைவிட்டு விலகி ஒளிந்துகொள்ளலாமா என்கிற எண்ணம் தோன்றுகிறது. எனது துணை எனது அந்தரங்கத்தில் பிரவேசித்து என்னை ஊடுருவி அறிந்துகொள்வதை என்னால் சகிக்க முடியவில்லை. என்னை அறிந்து கொண்டு, என்னை ஏற்றுக் கொண்டு, என் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் நான் என் துணையிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் அதற்கு நான் அதிக விலை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. அதாவது எனது தனிமைசுதந்திரத்தை விட்டுக்கொடுத்துதான் அன்பின் நெருக்கத்தை நான் அடைய வேண்டியதாயிருக்கிறது.
நெருக்கமான ஐக்கியத்தை அடைய வேண்டுமானால், குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நமது அந்தரங்கம் ஆராயப்பட்டு, நியாயம் விசாரிக்கப்படுவதாகிய விலையைக் கொடுத்தால்தான் அன்பின் நெருக்கம் உண்டாகும். தவறான குணங்களை மறைத்து வைத்துக் கொண்டு நெருக்கமாக இருக்க முடியாது. நெருக்கமான உறவில் ஒளிவுமறைவேயில்லை. உனது தவறுதலான குணங்கள், பழக்கவழக்கங்கள் முக்கியமா? அல்லது உனது துணையோடுள்ள நெருக்கமான உறவு வேண்டுமா? என்று கேட்டால் எதைத் தெரிந்தெடுப்பீர்கள். நமது தவறுதலான பழக்கவழக்கங்கள், குணங்களை விடமுடியாததால் அநேக சமயங்களில் நாம் நமது நல்ல நண்பர்களை இழந்திருக்கிறோம். பல உன்னதமான காரியங்களைக்கூட இழந்திருப்போம். அதிருப்தியையும், வெறுப்பையுங் கூட அதனால் சம்பாதித்திருப்போம். பலரைவிட்டு பிரிந்து போய் தனிமையை நாடியிருப்போம். ஆனால் திருமணவாழ்க்கையோ தனிமையைக் கொல்லுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே கடவுள் அதை ஏற்படுத்தினார். மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என தேவன் கண்டார். நெருக்கமான உறவுக்காகவே நானும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன். எனக்கு நெருக்கம் தேவை. ஆனாலும் நான் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கையிலே, எனது அந்தரங்கம் தொடப்படுவதால், என் பாவகுணங்கள் வெளிப்பட்டு, நான் விரும்புகிற அந்த நெருக்கத்தையே கலைத்துவிடுவது போல பயமுறுத்துகிறது.
பாவத்தை மேற்கொள்ளுகிறதான அன்பு
இப்போது பிரச்சனை இதுதான்: நமது தனிப்பட்ட வாழ்க்கையை விட்டுக் கொடுக்கவும் நமக்கு மனதில்லை. நமது சொந்த காரியங்களில்
நமது துணை எப்போதும் பிரவேசித்து நமது பாவத்தை வெளிப்படுத்துவது நமக்கு இஷ்டமாயில்லை. நெருக்கமாயிருப்பதில் இதுதான் பிரச்சனை என நாம் நினைக்கிறோம். நாம் இதுவரை பாவமாக நினைத்திராத புதிய காரியங்கள்கூட பாவமாக வெளிப்படும்போது இன்னும் அதிக சங்கடமாயிருக்கிறது. “மனைவியைப் பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல” (மத் 19:10) என்று சீஷர்கள் கூறியதுபோல நமக்கும் கூறத் தோன்றுகிறது. நெருக்கமா யிருப்பதற்கு அநேக எதிர்ப்புகள் நமக்குள்ளேயே இருக்கையில் நெருக்கத்தைத் தேட வேண்டும் என்கிற உணர்வும் எதனால் நமக்கு ஏற்படுகிறது? நமது தனிப்பட்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிருந்தும் நாம் எதனால் திருமண வாழ்க்கையைத் தெரிந்தெடுக்கிறவர்களாயிருக்கிறோம்? நமது தனிப்பட்ட சுதந்திரம் பறிபோகிறது; எப்பொழுது பார்த்தாலும் குற்றப்படுத்தப்படுகிறோம். அப்படியிருந்தும் எதனால் திருமணநெருக்கத்தை நாடுகிறோம்? ஒவ்வொருவரின் இருதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கிற பாவங்களை தம்பதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறதான செயல் திருமண உறவில் ஏற்படுகிறதாயிருந்தும் நெருக்கமான உறவை நாடுவது ஏன்? கெட்ட குணங்களை மறைத்து வைத்து, வெளிவேஷம் போடுவது திருமண நெருக்கத்தில் முடியாதது. மீண்டும் மீண்டுமாக நமது மறைத்து வைக்கப்பட்ட குணங்கள் நமது துணைக்கு முன்பாக வெளிப்பட்டு, நம்மை காயப்படுத்துவதாயிருக்கிறது. திருமணத்தின் நெருக்கத்திற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு திருமணமும் வேண்டாம், நெருக்கமான உறவும் வேண்டாம் என்று சொல்ல முடிகிறதா?
திருமணத்தில் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் என்ன? நமது பாவநிலைதான். அதை மேற்கொள்ளுவதற்கு, கிறிஸ்து நமக்கு ஓர் ஆயுதம் கொடுத்திருக்கிறார். அதை உபயோகித்து, தயக்கத்தை உடைத்தெறிந்து, நெருக்கமான உறவை அடையவேண்டும் என்கிற நமது ஆவலை நிறைவேற்றிக்கொள்ளலாம். அந்த ஆயுதம்தான் அன்பு! “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” 1 பேதுரு 4:8. திருமண நெருக்கத்தை அழித்துவிடுவதாக பயமுறுத்திக் கொண்டிருக்கும் பாவத்தை மேற்கொள்ளக்கூடியது அன்பு ஒன்றுதான்.
ஏறக்குறைய திருமணமான எல்லா தம்பதிகளையும் உங்கள் திருமணத்திற்கு ஆதாரமாக இருந்தது என்ன என்று கேட்டால் அன்பு என்றுதான் சொல்லுவார்கள். நாம் திருமணம் செய்துகொள்வதற்கு ஆதிகாரணமாய் இருந்ததே அன்புதான். திருமணவாழ்வில் எத்தனையோ ஏமாற்றங்களும், தடைகளும், கஷ்டநஷ்டங்களும் வந்தபோதிலுங்கூட நமது வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக உதவியது எது? வாழ்க்கையின் நடுவயதிற்கு வந்திருப்பவர்களுக்கு, அவர்கள் இத்தனை காலமாக
தம்பதிகளாக இணைந்து நெருக்கமாக வாழ்வதற்கு உந்துதலாக இருந்தது என்ன? நெருக்கத்திற்கு ஏற்பட்ட சவால்களை அவர்கள் எதினால் சந்தித்து மேற்கொண்டார்கள்? நான்கு நட்சத்திரக் குறிப்புகளை சென்ற பாகத்தில் படித்தோமே. அதைக் கருத்தில் கொண்டவர்களாக நமது வாழ்க்கையை இணைந்து வாழ்வதற்கு உதவி செய்தது எது? அதிகார துஷ்பிரயோகம், கடமைகளில் அலட்சியம் இவை போன்றவைகளால் திருமண வாழ்க்கைக்கு ஆபத்து நேரிட்டுவிடாமல் காத்தது எது? அலைக்கழிக்கும் அலைகளும், கடுமையான சுழல்களும், கடுங்காற்றும் வாழ்க்கைக் கப்பலை மோதியபோதும், அதை கவிழவிடமால் பிடித்து நிறுத்தி வைத்தது எது? பனிமூட்டமும், நிசப்தமும், சலனமற்ற நேரங்களும் குறுக்கிடும்போதும் வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது? நமது பயணத்தில் நம்மை முன்னேறிச் செல்ல வைக்கிற அந்த காரியத்தைதான் நான் “சுவிசேஷ அன்பு” எனக் குறிப்பிடுகிறேன். (இனியும் வரும்)
சிந்தனை முத்துக்கள்
- ஸ்பர்ஜன் -
‘இரட்சிப்பைப் பற்றிய இறையியல் போதனை சுருக்கமான இரண்டே வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது - கர்த்தரின் முழுமையான கிருபையில் இருந்தே இரட்சிப்பு வெளிப்படுகிறது: மனிதனின் சித்தமே அவனைத் தண்டனைக்குரியவனாக்குகிறது.’
‘பொதுவாக சிலர் சொல்லுகிற ஒரு கருத்தைப் பற்றி உங்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். மனிதர்கள் தங்களுடைய இருதயங்களைக் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டுமென்று சிலர் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். அதில் உண்மையிருக்கிறதுதான், அதைச் செய்ய வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால், உங்களுடைய முதன்மையான நோக்கம் நீங்கள் எதை இயேசுவுக்கு கொடுக்க முடியும் என்பதில் இருக்கக் கூடாது, இயேசு உங்களுக்கு எதைக் கொடுக்க முடியும் என்பதில்தான் இருக்க வேண்டும்! அவரிடமிருந்து அவரை அவர் தரும் ஈவாக நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அது நடந்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய இருதயத்தை இயேசுவுக்கு கொடுக்க முடியும்.’
‘மனிதனை அழித்துவிடுகிற மோசமான அம்சம் அவனுடைய சித்தம்தான். மனிதனுடைய சுதந்திரமான (சுயாதீன) சித்தம் எவரையும் இரட்சித்ததாக நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், மனிதனுடைய சுதந்திர சித்தத்தின் வெளிப்பாடுகள் அநேகருக்கு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ‘உங்களுக்கோ மனதில்லாமல் போயிற்று’ (You would not) என்பது தான்
குற்றமுள்ள மனிதர்களின் மேல் இயேசுவின் குற்றச்சாற்றாக இருந்திருக்கிறது (மத். 23:37; லூக்கா 13:34). யோவான் 5:24ல் இயேசு, ‘நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுவதற்காக நீங்கள் என்னிடம் வர மறுக்கிறீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். மனிதனுடைய சித்தம் கர்த்தருக்கு எதிரானதாக வைராக்கியத்தோடு இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான நல்ல உணர்வுகளும், எண்ணங்களும் என்றுமே நிறைவேற முடியாதபடி அவற்றை எதிர்த்து அழிக்கின்றதாக இருந்துவருகிற மனித சித்தம் நீதியான எதற்கும் எதிரியாக மட்டும் செயல்பட்டு வருகிறது’ - 1894, பிரசங்கம் 2381.
‘விசுவாசத்தை அறிக்கை செய்யாதவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கப் போவதில்லை. வேத வார்த்தையின்படி தைரியத்தோடு இதை நான் சொல்ல விரும்புகிறேன், “கர்த்தராகிய இயேசுவை உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்’ (ரோமர் 10:9). அறிக்கை செய்வது நிச்சயம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதில் எந்தவித மான சந்தேகமுமில்லை. அது மேலும் தெளிவாக பின்வருமாறு விளக்கப் படுகிறது, ‘விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவர்கள்’ (இதுவே எதிர்பார்க்கப்படுகிற அறிக்கை) இரட்சிப்பை அடைவார்கள்.” வாயால் அறிக்கையிடுவதும், ஞானஸ்நானமும் ஒருவரை ஒருபோதும் இரட்சிக்க முடியாது. ‘விசுவாசத்தால் இரட்சிப்பு அடைவாய்’ என்பதில் அடங்கியிருக்கும் விசுவாசம் தைரியத்தோடு தன்னை வெளிப்படுத்தி அறிக்கையிடுகின்ற விசுவாசமாக இருக்கிறது. - 2891, பிரசங்கம் 2230.
‘நான் பிரசங்கிக்கிறதுபோல் உங்களாலும் பிரசங்கிக்க முடியும். ஆனால், நீங்கள் எல்லோருமே உங்களுடைய கால்களாலும், உங்கள் வாழ்க்கை மூலமும் பிரசங்கிக்க முடியும், அதுவே மிகவும் வலிமையான பிரசங்கம்! பரிசுத்தமான வாழ்க்கையின் பிரசங்கமே உயிர்த்துடிப்புள்ள ஜீவ பிரசங்கம்! பரிசுத்தத்தோடு வாழுகின்ற சபை ஆத்துமாக்கள் நம்மோடு இருக்கின்றபோதுதான் பிரசங்க மேடையில் இருந்து வருகிற பிரசங்கம் பலனளிக்கின்றதாக இருக்கும். இதைச் செய்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவட்டும்.’ - 1893, பிரசங்ம் 2327.
‘தூக்கக் கலக்கமுள்ள மனிதர்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதில்லை! நாம் உயிர்த்துடிப்போடு இருக்க வேண்டுமென்று அவர் விரும்புவதோடு, மற்றவர்களுக்கும் நம்மூலம் உயிரூட்டுகிறார். இது நடக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே!’ - 1892, பிரசங்கம் 2246.
‘மனிதர்கள் பரலோகத்துக்கோ அல்லது நரகத்திற்கோ போய்க் கொண் டிருக்கிறார்கள். அதிமுக்கியமான இந்த விஷயத்தை அவர்கள் அறியும்படி சொல்லுவதே இந்தநேரத்தில் நாம் செய்ய வேண்டிய கடமை. இதைச் செய்ய கர்த்தர் நமக்கு உதவட்டும்.’ - 1893, பிரசங்கம் 2327.