திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2011 -ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. கிறிஸ்தவனில் இரண்டு வகையா?

3. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே

4. ஏன் நீ மனந்திரும்ப மறுக்கிறாய்? - அல்பர்ட் என். மார்டின்

5. பிரியாவிடை பிரசங்கங்கள் - 9 - அல்பர்ட் என். மார்டின்

6. தாம்பத்திய உறவில் நெருக்கம் - அலன் டன்

7. இரட்சிப்பு நம்மோடு மட்டும் சம்பந்தப்பட்டதா?

 

வாசகர்களே!

நல்லபடியாக இந்த இதழை முடித்து உங்கள் முன்வைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். பிரதிபலன் பாராது இந்த பத்திரிகை வெளிவர ஆசிரியரோடு இணைந்து பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி. பத்திரிகையை பிரின்ட்செய்து தருகின்ற கம்பெனியின் மேனேஜர் இந்த வருடம் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். எங்களுடைய பணிக்கு முக்கியத்துவம் தந்து 17 வருடங்களாக அந்தக் கம்பெனி பொறுப்போடு பத்திரிகையை வெளியிட்டு வந்திருக்கின்றது. அவர்கள் தொடர்ந்து அந்தச் சேவையை நமக்குச் செய்ய ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இம்முறை ‘பாவத்தை அழித்தல்’ (Mortification of Sin) பற்றியதான, கொலோசெயர் 3:5 வசனத்தின் அடிப்படையில் வரப்போகின்ற போதனைகளின் முதல் பகுதியைத் தந்திருக்கிறேன். இந்தப் போதனை பற்றியதான அநேக தவறான போதனைகளும், எண்ணங்களும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கின்றன. பரிசுத்தமாக்குதலின் ஒரு பகுதியான ‘பாவத்தை அழித்தல்’ பற்றி நமக்கு வேதபூர்வமான சிந்தனைகள் இருப்பது அவவசியம். இதில் நாம் தவறிழைப்பது நம்மில் பரிசுத்தமாக்குதலாகிய கிரியைக்கு பேரிடையூறு ஏற்படுத்திவிடும்.

அது தவிர ‘கிறிஸ்தவக் கோட்பாடுகளில்’ வினாவிடை 111க்கான விளக்கமும் வந்திருக்கின்றது. அல்பர்ட் என். மார்டினின் ‘பிரியாவிடை பிரசங்கங்களின்’ கடைசிப் பகுதியை இதில் காணலாம். இந்தச்செய்திகள் அநேகருக்கு பயனுள்ளதாக இருந்ததாக சொல்லியிருக்கிறார்கள். இவற்றை நூல் வடிவில் வெளியிடும் திட்டமிருக்கிறது. அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். அலன் டன்னின் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற தொடரை இதில் காணலாம். அது முடிவுக்கு வருகின்ற நிலையில் இருக்கிறது. அதை நூல் வடிவில் இப்போது வாசகர்கள் பெற்று வாசிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தாரும், சபையாரும் வாசிக்க வேண்டிய அருமையான நூலிது. போதகர்கள் தங்களுடைய சபையாரின் தாம்பத்திய வாழ்க்கையின் நன்மை கருதி இந்நூலை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். ‘பிரசங்கிகளும் பிரசங்கமும்’ என்ற நூலை இப்போது ஸ்ரீலங்காவில் வெளியிட்டிருக்கிறோம். அநேகருக்கு அது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய ஜெபம். இதுவரை வந்த இதழ்களைப்போலவே இந்த இதழும் உங்களுடைய ஆத்மீக அறிவுக்கும், வளர்ச்சிக்கும் உதவ ஜெபிக்கிறோம்.

– ஆசிரியர்.

 

கிறிஸ்தவனில் இரண்டு வகையா?

(Mortification of Sin)

வேதத்தில் காணப்படும் வசனங்களில் சிலவற்றை நாம் பயத்தோடும் நடுக்கத்தோடும் வாசிக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வசனங்கள் நம்முடைய இருதயத்தைப் பிளந்து உள்ளே எஞ்சியிருக்கும் பாவத்தை வெளியே கொண்டுவரக்கூடிய பலமான வசனங்கள். நாம் தியானிக்கப்போகின்ற வசனம் அப்படிப்பட்ட வசனங்களில் ஒன்று. கொலோசெயர் 3ம் அதிகாரத்தின் 5ம் வசனத்தில் ‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று பவுல் அப்போஸ்தலன் அந்த வசனத்தின் இறுதியில் எழுதியிருக்கிறார். இது பரிசுத்த ஆவியானவரால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் போதனை. வேதத்தில் இந்த இடத்தில் மட்டும் இத்தகைய போதனையை நாம் வாசிப்பதில்லை. இதே முறையிலான போதனையை ரோமர் 8:13லும், 6:1–14லும் நாம் வாசிக்கிறோம். இந்தப் போதனை புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளிலும் வேறு விதத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த வசனம் போதிக்கின்ற போதனையை ‘பாவத்தை அழித்தல்’ (Mortification of Sin) என்ற தலைப்பில் இறையியல் அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து தந்திருக்கும் கிருபையின் அடிப்படையிலான கடமைப் பொறுப்பை இந்தப் போதனை விளக்குகிறது. மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் விசுவாசத்தையும் அடைந்திருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவருடைய பொறுப்பாகவும் இது இருக்கிறது. கொலோ. 3:5ல் பவுல் ‘அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று சொல்லுகிறபோது நம்முடைய சரீரத்தின் அவயவங்களை அழித்துவிடும்படி சொல்லவில்லை. எஞ்சியிருக்கும் பாவத்தின் (Remaining sin) காரணமாக கிறிஸ்தவர்கள் தங்கள் அவயவங்களைப்பயன்படுத்தி செய்யக்கூடிய சகலவித பாவங்களையும் அழித்துவிடும்படியே சொல்லுகிறார்.

தங்களில் எஞ்சியிருக்கும் பாவத்தோடு ஏற்படும் போராட்டத்தை கிறிஸ்தவர்களில் அநேகர் சரியாகப் புரிந்துவைத்திருக்கவில்லை. இதுபற்றிய பலவிதமான வேதத்துக்கு முரணான போதனைகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. பாவத்தை அழித்தலைப் பற்றி சரியாக விளங்கிக்கொள்ளாவிட்டால் நாம் நம்மில் இருக்கும் பாவத்தோடு போராடுவது எப்படி? அந்த விஷயத்தில் நாம் பெரிய தவறுகளை செய்துவிடுவோம் இல்லையா? தவறான இறையியல் எண்ணங்கள், தவறான பயிற்சிகளில் நம்மைக் கொண்டுபோய்விடும். ஆவிக்குரிய வாழ்க்கையின் தவறான நடைமுறைகள் ஆவிக்குரிய வளர்ச்சியைப்பாதித்துவிடும். அநேகருடைய ஆவிக்குரிய வளர்ச்சியின்மைக்கு இந்த விஷயத்தில் அவர்களுக்கு முறையான வேத ஞானமில்லாததும், இது பற்றிய தவறான நடவடிக்கைகளும்தான் காரணம். ஆவிக்குரிய சந்தோஷத்தோடு நாம் வாழ வேண்டுமானால் பாவத்தை அழித்தலாகிய ஆவிக்குரிய பயிற்சியை வேதபூர்வமாக அறிந்து வைத்திருந்து அதை வேதபூர்வமாக வாழ்க்கையில் கையாள வேண்டும். இதற்கு ஆரம்பமாக பாவத்தை அழித்தல் பற்றிக் காணப்படும் சில தவறான எண்ணங்களை உங்கள் நன்மை கருதி நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆவிக்குரிய கிறிஸ்தவனும், ஆவியில் பலவீனமான கிறிஸ்தவனும்

பாவத்தை அழித்தலைப் பற்றிய தவறான போதனையைக் கொடுக்கிறவர்களில் ஒரு பகுதியினர் கொலோசெயர் 3:1–4 வரையும் உள்ள வசனங்கள் விளக்கும் கிறிஸ்தவன் ஆவிக்குரிய கிறிஸ்தவன் என்றும், கொலோசெயர் 3:5 விளக்கும் கிறிஸ்தவன் ஆவியில் பலவீனமான கிறிஸ்தவன் என்றும் விளக்குகிறார்கள். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். இவர்களைப் பொறுத்தவரையில் கொலோ. 3:1–4 விளக்கும் கிறிஸ்தவன் ஆவிக்குரிய கிறிஸ்தவனாக மேலானதை நாடுகிறவனாக இருக்கிறான். அவன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, தன்னில் இயேசு வாழ்ந்து ஆவிக்குரிய பரிசுத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் இயேசுவுக்கு சரணடைந்திருப்பதால் அவன் மேலானதை நாடக்கூடியவனாக இருக்கிறான். ஆனால், கொலோ. 3:5ல் நாம் பார்க்கும் கிறிஸ்தவன் அப்படிப்பட்டவனல்ல. அவன் வாழ்க்கையில் போராட்டங்கள் அதிகம். மாம்சத்தின் வல்லமை அதிகம். அவனில் பாவத்தின் செயல்கள் தலைதூக்கி நிற்கின்றன. அதற்குக் காரணம், அவன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்காததுதான். அவன் இயேசுவுக்கு சரணடைய மறுக்கிறான். இயேசு ஆவிக்குரிய விதத்தில் கிரியை செய்யும்படியாக அவன் தன்னை இயேசுவுக்கு ஒப்புவிக்கவில்லை. அதனால் பாவத்தின் கிரியைகள் அவனில் தலைதூக்கி அவன் ஆவியில் பலமற்றவனாக காணப்படுகிறான். இதுவே இவர்கள் தரும் விளக்கம்.

மேலே நாம் கவனித்த விளக்கங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது இன்றைக்கு பெருமளவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் நம்பப்பட்டு வரும் ஒரு போதனை. இந்தப் போதனையின் குறைபாடுகளை நாம் ஆராயுமுன் இந்தப் போதனை உருவாகிய வரலாற்றை ஆராய்வது அவசியம். இந்தப் போதனை 19ம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே தலைதூக்கியது. வில்லியம் போர்ட்மன் (William Boardman) என்ற மனிதர் 1858ம் ஆண்டில் உயர் வாழ்க்கை வாழும் கிறிஸ்தவன் (Higher Life Christian) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். உடனடியாக இந்த நூல் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் 1,00,000 பிரதிகள் விற்பனையாயின. அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டிருந்த இந்த நூலில் வேத போதனைகள் அதிகம் காணப்படவில்லை. அந்தக் காலத்தில் இந்த நூலைப்பற்றி விமர்சித்த ஒரு விமர்சகர், ‘இதில் விளக்கப்பட்டுள்ள ஒரு தத்துவமாவது வரலாற்று கிறிஸ்தவப் போதனையோடு சம்பந்தமுடையதாக இருக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். இதுவே உயர்வாழ்வு கிறிஸ்தவம், ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை என்ற பெயர்களில் இன்றும் பரவலாகக் காணப்படுகின்ற போதனைகளின் ஆரம்பமாயிருந்தது. 19ம் நூற்றாண்டில் இந்தப் போதனைகள் பிரபலமாகி எல்லாப் பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தன. முக்கியமாக கிறிஸ்தவ கன்வென்ஷன்கள் மூலம் இந்தப் போதனைகள் வளர ஆரம்பித்தன. இங்கிலாந்தின் லேக் டிஸ்டிரிக்ட் பகுதியில் உள்ள ஓரிடமான கெஸ்சிக் (Keswick) என்ற இடத்தில் 1875ல் இருந்து கூட ஆரம்பித்த கெஸ்சிக் கன்வென்ஷன் இந்தப் போதனையின் அடிப்படையிலேயே கூடிவருகின்றது.

உயர் கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை என்ற பெயர்களில் நிலவும் போதனைகளின் அடிப்படையான அம்சத்தை சுருக்கமாகப் பார்ப்பது அவசியம். இவர்களைப் பொறுத்தவரையில் ரோமர் 6:1–14ல் பவுல் தரும் விளக்கங்களின்படி (இந்தப் பகுதியே இவர்கள் முக்கியமாக பயன்படுத்தும் வேதப்பகுதி) ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியுற்றவனாக கடைசிவரையும் வாழ முடியும். இதற்குக் காரணம் அவன் கிறிஸ்தவனாக இருந்தும் பாவம் அவனில் ஆட்சி செய்து அவனை வெற்றிகரமாக வாழமுடியாமல் செய்துவிடுவதுதான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், இவர்களைப் பொறுத்தவரையில் அவனால் கொலோ. 3:1–4ல் விளக்கப்படும் கிறிஸ்தவனாக கடைசிவரையும் வாழ முடியாது.

இத்தகைய தோல்வி மிகுந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் இருந்து ஒருவன் விடுபட வேண்டுமானால் தன் வாழ்க்கையில் சடுதியாக நிகழக்கூடிய ஒரு கிறிஸ்தவ அனுபவத்தை அடைவதன் மூலம் அவன் வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம். இந்த சடுதியான கிறிஸ்தவ அனுபவத்தை அவன் கிறிஸ்துவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து சரணடைவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் விளக்குகிறார்கள். இந்தப் போதனையை விளக்குகின்ற சிலர் இதை ஒருவிதத்தில் இரண்டாவது மனந்திரும்புதல் அல்லது இரண்டாவது ஆசீர்வாதம் என்று அழைக்கிறார்கள். இந்தப் போதனை கன்வென்ஷன்கள் மூலமாக பரப்பப்பட்டது. முக்கியமாக இந்தக் கன்வென்ஷன் கூட்டங்களிலேயே இந்த சடுதியான அனுபவத்தை அடைவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கித் தரப்பட்டன. அமைதியான தியான வேளைகளும், ஜெபக்கூட்டங்களும், ஆவிக்குரிய போதனைகளும் கொடுக்கப்பட்டன. ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய போதனைகளின் அடிப்படையில் உருவான ஒரு நிறுவனமே கெம்பஸ் குருசேட் (Campus Crusade for Christ). ஆழமான அல்லது உயர்கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய போதனைகளை அளிக்கும் அநேக நிறுவனங்கள் இதன்பின் தோன்ற ஆரம்பித்தன.

19ம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ‘ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை’ பற்றிய போதனைகள் இங்கிலாந்தில் கெஸ்சிக் கன்வென்ஷன்களின் மூலமாக ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்தபோது அது ஆங்கிலிக்கன் சபையாரிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றது. கெஸ்சிக் கன்வென்ஷனில் இதுபற்றி போதனைகளைத் தந்தவர்களில் சிலரும் பங்குபெற்றவர்களில் பெருந்தொகையினரும் ஆங்கிலிக்கன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கெஸ்சிக் கன்வென்ஷனில் போதனைகளை அளித்த மோல், கிரிபித் தொமஸ், ஸ்டுவர்ட் ஹோல்டன் போன்றோர் ஆங்கிலிக்கன் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இதில் போதனையளித்த எப். பி. மெயர் பாப்திஸ்து பிரிவைச் சார்ந்தவராகவும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அன்ட்ரூ மரே ஹாலந்து சீர்திருத்த சபைப் பிரிவைச் சார்ந்தவராகவும் இருந்தனர். இதேபோல் அமெரிக்க கன்வென்ஷன்களில் முக்கிய பேச்சாளர்களாக சீ. ஐ. ஸ்கோபீல்ட், டோசர், அலன் ரெட்பாத்,மேஜர் இயன் தோமஸ், அயன்சைட், தியோடர் எப் போன்றோர் இருந்தனர். சபைப் பாகுபாடுகள் இல்லாமல் இந்தக் கன்வென்ஷன்கள் நடந்து வந்தன.

இந்தக் காலப்பகுதியில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபைப்பிரிவில் போதகராக இருந்துவந்தவர் ஜே. சீ. ரைல். இவர் சீர்திருத்தக்கோட்பாடுகளைப் பின்பற்றிய அருமையான போதகர். தன்னுடைய சபைப்பிரிவினரை பாதித்து வந்த இந்த ‘ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை’ பற்றிய போதனைகளை தோலுரித்துக்காட்டி கிறிஸ்தவர்கள் இந்த மாயையில் வீழ்ந்து ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக உண்மையான பரிசுத்த வாழ்க்கையை ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ்வது என்பதை விளக்குகின்ற அருமையான ஒரு நூலை ‘பரிசுத்தம்’ (Holiness) என்ற தலைப்பில் ரைல் எழுதி வெளியிட்டார். ஜே. சீ. ரைல் இலகுவான மொழிநடையில் எதையும் எழுதுவதில் சிறப்பானவர். அவருடைய இந்த நூல் பரிசுத்த வாழ்க்கை (Sanctification) பற்றிய அருமையான வேதபோதனைகளைத்தருவதோடு இந்தப் போதனைகளைத் தரும் நூல்களில் தலையானதாக இன்றும் இருந்து வருகின்றது. ஜே. சீ. ரைலின் நூலுக்கு பிற்காலத்தில் இருபதாம் நூற்றாண்டில் அறிமுகம் எழுதிய போதகர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், ‘ரைல் தன்னுடைய மூதாதையர்களான பியூரிட்டன் பெரியவர்களைப் பின்பற்றி பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு இலகுவான வழியொன்றைக் காண்பிக்கவில்லை. ஆனால், அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கான பசியையும், தாகத்தையும் தனது நூலின் மூலம் உருவாக்கியிருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறார்.

உயர்கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி போதிக்கிறவர்கள் கிறிஸ்துவால் நீதிமான்களாக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுபடவில்லை என்று விளக்கினார்கள். இதன் மூலம் இந்தப் போதனை நீதிமானாக்குதலை பரிசுத்தமாக்குதலில் இருந்து முற்றாகப் பிரித்து விளக்கியது. நீதிமானாக்குதலாகிய அனுபவத்தை அடைந்த ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து சரணடைவதன் மூலமே பரிசுத்தமாக்குதலை அடைய முடியும் என்று இந்தப் போதனை விளக்கியது. இத்தகைய பரிசுத்தமாக்குதலை ‘ஒப்புக்கொடுத்தலின்’ மூலம் அடையாதவர்களே தோல்வியுற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று இது விளக்கியது. அத்தோடு, பரிசுத்தமாக்குதலாகிய கிருபையின் செயலில் கிறிஸ்தவன் தான் ஒன்றையும் செய்யாமல் தன்னை முழுமையாக கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தால் மட்டுமே (Let go and let God) பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுபட்டு ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ முடியும் என்று இந்தப் போதனை விளக்கியது. இந்த ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய போதனை மறுபிறப்பு, பரிசுத்தமாக்குதல், எஞ்சியிருக்கும் பாவம் பற்றிய போதனைகள் எல்லாவற்றிலும் வேதபோதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஜே. சீ. ரைல் தன் நூலில் இவற்றைத்தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

இந்தப் போதனை கிறிஸ்தவர்களை எப்படிப் பாதிக்கிறது?

இந்தப் போதனை அநேக கிறிஸ்தவர்களை அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகளால் அல்லல்பட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதற்குக் விசுவாசக் குறைவும், கிறிஸ்துவுக்கு தங்களை ஒப்புக்கொடுக்காததும்தான் காரணம் என்று நம்பவைக்கிறது. அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியோடேயே கடைசிவரையும் வாழப்போகிறார்கள் என்றும், பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு வழி கிறிஸ்துவிடம் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து சரணடைந்து சடுதியான கிறிஸ்தவ அனுபவத்தை அடைவதுதான் என்றும் நம்ப வைக்கிறது. சோதனைகளாலும், எஞ்சியிருக்கும் பாவத்தினாலும் தடுமாறிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்தப் போதனைகளால் பாதிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் ஆவியின் சந்தோஷமில்லாமல் சடுதியாக நிகழக்கூடிய ஓர் ஆன்மீக அனுபவத்தை தேடுவதில் காலத்தை செலவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களாக இருந்து பாவத்திற்கு விலகியிருந்து வாழ வேண்டிய வாழ்க்கையை நடத்தத் தெரியாமல் இத்தகைய அனுவத்தைப்பெற ஆவிக்குரிய கூட்டங்கள், கன்வென்ஷன்கள், தியானம், அமைதியான சூழ்நிலை என்று அலைந்துகொண்டிருக்கும் நிலை அநேகருக்கு ஏற்படுகிறது. அத்தோடு கிறிஸ்தவ அனுபவத்தை அடையாதவர்களையும் இந்தப் போதனை தவறான வழியில் இட்டுச் செல்கிறது. சடுதியான ஓர் அனுபவத்தின் மூலம் ஆவிக்குரிய நிலையை அடைவதை நாடுவதற்கு மட்டுமே இந்தப் போதனை முக்கியத்துவம் கொடுப்பதால் இரட்சிப்புக்கு அவசியமான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அலட்சியப்படுத்திவிடுகிறது. இதன் காரணமாக இரட்சிப்பு அடையாதவர் யார், அடைந்தவர் யார் என்ற நிலையை அறிய முடியாத நிலைக்கு பலரை இது தள்ளி விடுகிறது.

நீங்கள் சோதனைகளில் அகப்பட்டு பாவத்தில் வீழ்ந்து குற்ற உணர்வோடு வாழ்ந்து அதிலிருந்து விடுபட ஜெபம், வேத வாசிப்பு, ஆவிக்குரிய கூட்டங்கள் என்று நேரத்தை செலவிட்டு விடுதலையை நாடி அலைந்துகொண்டிருக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட சோதனை பாவத்தை செய்ய வைத்துவிடும்போல் உக்கிரத்தோடு செயல்பட அதிலிருந்து விடுபட உபவாசம், ஆவிக்குரிய தியானக்கூட்டங்கள், ஜெபக்கூட்டங்கள் என்று அலைந்து போராட்டத்தோடு வாழ்கிறீர்களா? அப்படியானால் உங்களைப் பற்றித்தான் இதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறேன். சோதனைகளிலிருந்தும், பாவத்தில் இருந்தும் விடுபட நீங்கள் புறத்தில் இருந்து உதவி கிடைக்குமா என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறீர்கள். அகத்தில் இருப்பதைப் போராடி வெற்றிகொள்ள உங்களுக்கு வழிதெரிய வில்லை. ஆழமான கிறிஸ்தவ வாழ்வு பற்றிய தவறான போதனை உங்களைப் பரிசுத்தமான வாழ்க்கையை கிறிஸ்தவராக இருந்து வாழ்வதற்கு வழிதெரியாமல் செய்திருக்கலாம்.

இந்த போதனையில் காணமுடியாமல் இருக்கும் அம்சம் என்ன? பாவத்தோடு போராடுகின்ற கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்தி பாவத்தோடு போராடி வெற்றிகொள்ள இந்தப் போதனை வழி காட்டவில்லை. பாவ விடுதலைக்கு வழி சடுதியாக அடையக்கூடிய ஓர் அனுபவம் என்று இது போதிக்கின்றது. இதனால் கிறிஸ்தவர்கள் பாவத்திற்கு விலகி வாழ தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுவதைக் கைவிட்டுவிட்டு பாவத்தைக் குறுக்கு வழியில் போக்கிக்கொள்ள வழிகாட்டப்படுகிறார்கள்.

இதுவரை கொலோசெயர் 3ம் அதிகாரத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள தவறான ஒரு போதனையையும், அதன் குறைபாடுகளையும் ஆராய்ந்தோம். இனி கொலோசெயர் 3ம் அதிகாரத்தின் முதல் ஐந்து வசனங்களும் அத்தகைய போதனைக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாக விளக்க விரும்புகிறேன்.

  1. கொலோசெயர் 3:1–4க்கும் அதற்கடுத்து வரும் 5ம் வசனத்துக்குமுள்ள தொடர்பு

கொலோசெயர் 3:1–4ஐ அதற்கடுத்தபடியாக வரும் வசனத்திலிருந்து பிரித்து இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதல்ல என்றும், 3:1–4 ஆவிக்குரிய கிறிஸ்தவர்களைப் பற்றியது என்றும், 5ம் வசனம் ஆவியில் வல்லமையற்ற மாம்சத்தின் ஆளுகைக்குள் இருக்கும் கிறிஸ்தவரைப்பற்றியது என்றும் விளக்குவது பொருத்தமானதல்ல. பவுல் இந்த வசனங்களின் மூலம் எதை விளக்குகிறார் என்பதை சிந்திப்போம். இந்த வசனங்களை ஆரம்பிக்கும்போது பவுல், ‘நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால்’ என்று ஆரம்பிக்கிறார். இதில் ‘நீங்கள்’ என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? கொலோசெய சபையைச் சார்ந்த கிறிஸ்தவர்களையே அவர் அப்படிக் குறிக்கிறார். முதல் இரண்டு அதிகாரங்களிலும் அந்த சபைக் கிறிஸ்தவர்களுக்கே அவர் கிறிஸ்துவின் மேன்மையைப் பற்றிய விளக்கங்களைத் தந்து வருகிறார். 3ம் அதிகாரத்தில் அதே கிறிஸ்தவர்களைப் பார்த்து அவர், ‘நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால்’ என்று ஆரம்பிக்கிறார். இது அவர்களுடைய விசுவாசத்தை சந்தேகித்து பவுல் சொன்ன வார்த்தைகளல்ல. உண்மையில் இதற்கு அர்த்தம், ‘நீங்கள் கிறிஸ்துவோடு கூட எழுந்தது உண்மையாக இருக்குமானால்’ என்பதுதான். இன்னொரு விதத்தில் கூறுவதானால், ‘நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பது உண்மையாயிருக்குமானால்’ என்றும் கூறலாம். இந்த வசனத்தில் வரும் ‘எழுந்ததுண்டானால்’ (If then you were raised with Christ - NKJV) என்பதில் காணப்படும் ‘உண்டானால்’ (If) என்பது முதலிரண்டு அதிகாரங்களையும் 3ம் அதிகாரத்தோடு இணைக்கின்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தை முதலிரண்டு அதிகாரங்களிலும் பவுல் உரையாடிக்கொண்டிருக்கும் அதே விசுவாசிகளுடனேயே 3ம் அதிகாரத்திலும் உரையாடுகிறார் என்பதை அழுத்தத்தோடு விளக்கும் வார்த்தையாகவும் இருக்கிறது. கொலோசெயர் கிறிஸ்துவை விசுவாசித்திருப்பதால் பவுல் அவர்களைப் பார்த்து மேலானவைகளை நாடும்படி அறிவுரை கூறுகிறார். கொலோசெய சபையைக் தாக்கிக்கொண்டிருந்த போலிப்போதனை கொலோசெயர்களை கிறிஸ்துவை விட்டுவிட்டு தேவதூதர்களை வணங்கும்படியும், சடங்குகளைப்பின்பற்றும்படியும் வற்புறுத்தியது. ஆகவே, பவுல், அவர்களைப் பார்த்து உலகத்துக்கு அடுத்தவைகளை நாடாமல், கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து பரலோகத்துக்குரியவர்களாயிருக்கின்ற நீங்கள் கிறிஸ்து இப்போது இருக்கும் பரலோகத்துக்கு உரியவைகளை நாடுங்கள் என்று அறிவுரையளிக்கிறார்.

அதற்குப் பிறகு 5ம் வசனம் ‘ஆகையால்’ (Therefore) என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தை மூன்று காரியங்களை நிறைவேற்றுவதற்காக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

(1) இதுவரை முதலிரண்டு வசனங்களிலும் பவுல் விளக்கி வந்திருக்கும் காரியங்களை இனி வரப்போகும் விளக்கங்களோடு இணைப்பதற்காகப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முதலிரண்டு அதிகாரத்தின் போதனைகளையும் இனி வரப்போகும் போதனைகளிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதை இது உணர்த்துவதாக இருக்கிறது. இரண்டு பகுதிகளிலும் விளக்கப்பட்டிருக்கும் போதனை ஒரே விஷயத்தைப்பற்றியது என்பதையும் இது உணர்த்துவதாக இருக்கிறது.

(2) அத்தோடு இந்த ‘ஆகையால்’ என்ற வார்த்தை முதலிரண்டு அதிகாரங்களிலும் பவுல் விளக்கியிருக்கும் சத்தியங்களின் அடிப்படையில் ஒரு முக்கியமான உண்மையை வலியுறுத்தும் விதத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ‘ஆகையால்’ என்ற வார்த்தையை ‘இந்த விஷயங்கள் இப்படியிருக்குமானால்’ என்றும் மொழிபெயர்க்கலாம் (These things be so). அதன்படி பவுல் 5ம் வசனத்தில் சொல்ல வருவது என்ன என்பதைப் பார்ப்போம். முதலிரண்டு அதிகாரங்களிலும் விளக்கப்பட்டபடி ‘இந்த விஷயங்கள் இப்படி இருக்குமானால் நீங்கள் உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்’ என்று 5ம் வசனத்தில் பவுல் முதல் நான்கு வசனத்திலும் இருக்கும் அதே கிறிஸ்தவர்களைப் பார்த்து வலியுறுத்துகிறார். இப்படியிருக்கும்போது கொலோசயர் 3:5 முதல் நான்கு வசனங்களும் குறிப்பிடுகின்ற கிறிஸ்தவர்களிலிருந்து மாறுபட்ட கிறிஸ்தவர்களை, ஆவிக்குரிய வாழ்க்கையில் பலவீன நிலையில், மாம்சத்தின் ஆளுகைக்குள் இருக்கின்ற கிறிஸ்தவர்களைக் குறிக்கிறதாக இருக்கிறது என்று விளக்கமளிப்பது எந்தவிதத்தில் பொருந்தும்? 5ம் வசனத்தின் ‘ஆகையால்’ என்ற வார்த்தை இந்த இரு பகுதிகளையும் இணைக்கும் வார்த்தையாக மட்டுமில்லாமல் இருபகுதிகளிலும் விளக்கப்பட்டிருக்கும் போதனைகளும் ஒரே பகுதியினரைத்தான் குறிக்கின்றன என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. இரண்டு பகுதியிலும் பவுல் ஆரம்பத்திலிருந்து குறிப்பிடுகின்ற ஒரே கிறிஸ்தவ பிரிவுக்கே ஆலோசனை கொடுத்து வருகிறார். இவர்களை ஆவிக்குரியவிதத்தில் பவுல் பிரித்துப் பார்க்கவில்லை. ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், மாம்சத்தின் ஆளுகையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் என்ற பிரிவெல்லாம் பவுலினுடைய எண்ணத்தில் இருக்கவில்லை. இது செயற்கையாக, இந்தப் பகுதியின் போதனை புரியாமல் உருவாக்கப்பட்டிருக்கும் விளக்கம். ஆகவே, 3ம் அதிகாரத்தில் பவுல் கொலோசெயக் கிறிஸ்தவர்கள் எல்லோருடனுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(3) இந்த ‘ஆகையால்’ என்ற வார்த்தை 5ம் வசனத்தில் அழுத்தத்தோடு பயன்படுத்தப்பட்டு ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றது. கொலோசெயர்களைப் பார்த்துப் பவுல், நீங்கள் கிறிஸ்துவோடுகூட எழுந்திருந்திருப்பது உண்மையாக இருப்பதால் சரீரத்தை அழித்துப்போடுங்கள் என்று அழுத்தத்தோடு வலியுறுத்திச் சொல்லுகிறார். சரீரத்தை அழித்துப் போடுங்கள் என்பது இந்த வசனத்தில் அவர்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தின் அடிப்படையில் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் பவுல், முதல் நான்கு வசனங்களிலும் விளக்கப்பட்டிருக்கும் பரலோகத்துகுரியவைகளை நாடுவது என்பது சரீரத்தை அழித்துப்போடுவதில் தங்கியிருக்கின்றது என்பதை வலியுறுத்துவதைப்பார்க்கிறோம். 5ம் வசனத்தில் பவுல் சொல்லியிருக்கும் பொறுப்பான காரியத்தை தொடர்ந்து கிறிஸ்தவ வாழ்க்கையில் செய்யாமல் எந்தக்கிறிஸ்தவரும் பரலோகத்துக்குரியவைகளை நாடுவது முடியாது. ஆனால், மெய்யான கிறிஸ்தவர்கள் எல்லோருமே பரலோகத்துக்குரியவைகளை நாடும் காரியத்தின் ஒரு பகுதியாக 5ம் வசனத்தில் பவுல் சொல்லுவதைக் கடமைப் பொறுப்போடு செய்து வருவார்கள். அப்படிச் செய்வது அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கடமையாக, பொறுப்பாக இருக்கிறது. பரலோகத்துக்குரிய மேலானவைகளை நாடுவதும், அவயவங்களை அழித்துப்போடுவதும் ஒரு பண நோட்டின் இரண்டு பக்கங்களைப்போன்றது. ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது.

பவுல் 5ம் வசனத்தில் வலியுறுத்தும் அவயவங்களை அழித்துப்போடும் கடமையே நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையில் உயரச் செய்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் இது அவன் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டிய கடமை. சரீரத்தின் சகலவிதமான இச்சைகளையும் ஆவியின் துணையோடு கர்த்தரின் கிருபையின் மூலமாக கிறிஸ்தவன் அழித்துப் போடுகிறதன் மூலமே அவன் ஆவியின் சந்தோஷத்தை இந்த உலகில் அடைகிறான். ஜோன் பணியன் பதினேழாம் நூற்றாண்டில் எழுதிய, கிறிஸ்தவ வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் அருமையான நூலான மோட்சப் பயணத்தில் கிறிஸ்தியான் தன் வாழ்க்கையில் இச்சைகளோடு போராடி அவற்றைத் தொடர்ந்து அழித்தே பரலோகத்தை அடைகிறதை வாசிக்கிறோம். அத்தனைப் பெரிய கிறிஸ்தவ அறிஞரான ஜோன் பணியனுக்கு கிறிஸ்தியான் என்கிற சகலவித மாம்சத்தொல்லைகளாலும் பாதிக்கப்பட்டு அதே நேரம் அவற்றையெல்லாம் வெற்றி கண்ட கிறிஸ்தவனைப் பற்றி மட்டுமே தெரிந்திருந்ததே தவிர ஆவிக்குரிய கிறிஸ்தியான், மாம்சத்தில் பலவீனமான கிறிஸ்தியான் என்று இரண்டு பேரை அறிந்திருக்கவில்லை. ஏனெனில் வேதமும், ஜோன் பணியனும் கிறிஸ்தவர்களில் இரு பிரிவினரை அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் என்ற இரண்டு பிரிவை மட்டுமே நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

இவற்றிலிருந்து நாம் கவனிக்க வேண்டிய உண்மைகள் என்ன?

  1. கர்த்தருடைய பார்வையில் “கிறிஸ்தவர்கள்” “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்” என்ற இரு பிரிவு மட்டுமே உலகத்தில் உண்டு. கிறிஸ்தவன் என்பவன் ஆரம்பக் கிறிஸ்தவனாக, மாம்சப் போராட்டத்தில் ஈடுபட்டு வளர்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவனாக, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவனாக வாழ்க்கையில் பல நிலைகளைக் கண்டும் கடந்தும் போய்க்கொண்டிருப்பான். பழைய மனுஷன் அவனில் கிறிஸ்துவோடு மரித்திருக்கிறான் (ரோமர் 6:6). பாவம் அவனைத் தொடர்ந்து ஆள முடியாதபடி அதன் அதிகாரம் அழிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவன் பாவத்திற்கு அடிமையாக இருக்க முடியாது. பாவம் அவனை அடிமைப்படுத்த முடியாது. ஆவிக்குரிய கிறிஸ்தவன் (Spiritual Christian), ஆவியில் பலவீனமான கிறிஸ்தவன் (Spiritually weak Christian or Carnal Christian) என்ற இரு பிரிவுகளை செயற்கையாக உருவாக்கியிருப்பவர்கள் கிறிஸ்தவனில் பாவம் தொடர்ந்து ஆளுகிறதாக வேதபோதனைகளுக்கு புறம்பாக விளக்கமளிக்கிறார்கள். கிறிஸ்தவனில் பழைய மனிதனும், புதிய மனிதனும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவிதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று தவறாக விளக்குகிறார்கள். கிறிஸ்தவனில் இத்தகைய இரண்டு தன்மைகள் (Two natures) இருந்து செயல்பட்டு வருகிறது என்ற போதனை தவறான இறையியல் போதனை. கிறிஸ்தவனில் பழைய மனிதன் மரித்திருக்கிறான் என்பதே வேதத்தின் போதனை. அவனில் புதிய இருதயமும் புதிய ஆவியும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. மறுபிறப்பின்போது கிறிஸ்தவன் புதிய மனிதனுக்குரிய தன்மையை உடனடியாக அடைந்துவிடுகிறான். அவனில் பாவத்தின் எச்சம் இருப்பது உண்மைதான். இந்த உலகத்தில் அவன் பூரணத்தை அடைய முடியாதபடி பாவத்தின் எச்சத்தோடு போராட வேண்டியிருப்பதும் உண்மைதான். ஆனால், அவன் புதிய ஆவியோடும், புதிய இருதயத்தோடும் கடைசிவரை பாவத்தை அடக்கி ஆளுகிறவனாக இருப்பான். தோல்வியுற்ற கிறிஸ்தவனாக கடைசிவரை வாழுகின்ற ஒரு கிறிஸ்தவனை வேதம் நமக்கு எந்தப் பகுதியிலும் இனங்காட்டவில்லை. இது பற்றி ஏர்னஸ்ட் ரைசிங்கர் என்ற சீர்திருத்த பாப்திஸ்து போதகர் பின்வருமாறு விளக்குகிறார்: “பவுல் அப்போஸ்தலன், மறுரூபமாக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவன் (ஒரே தன்மையைக் கொண்ட ஒரே மனிதன்) பூரணமானவனல்ல, அவனில் இரண்டு தத்துவங்கள் (principles) செயல்படுவதைக் காண்கிறோம் என்கிறார். ஒரே காரியத்தை செய்கிறபோதுகூட இந்த இரண்டு தத்துவங்களும் அவனுடைய இருதயத்தில் ஒரே நேரத்தில் காணப்படலாம். இருந்தபோதும், பவுல் அவனில் இரண்டு ‘மனிதர்களோ’ அல்லது ‘இரண்டு தன்மைகளோ’ இருப்பதாக விளக்கவில்லை. பவுலைப் பொறுத்தவரையில், மனிதனில் ஆரம்பத்தில் முழுமையாக பாவத்தில் இருந்த ஒரே தன்மை (One nature) மறுபிறப்பின்போது பூரணமற்ற பரிசுத்தமானதாக, அதேவேளை தொடர்ந்து பரிசுத்தமடையக்கூடியதாக மாற்றப்பட்டிருக்கிறது.” பரிசுத்தமாக்குதலைப் பற்றி விளக்கும் 1689 விசுவாச அறிக்கையும் 13:1ல் இதையே விளக்குகிறது.
  2. நீதிமானாக்குதலைப் பரிசுத்தமாக்குதலில் இருந்து பிரித்துப் பார்ப்பது பெருந்தவறு. கிறிஸ்தவர்களில் இருபிரிவினர் இருப்பதாக விளக்குகிறவர்கள் நீதிமானாக்குதலாகிய வேத போதனையை பரிசுத்தமாக்குதலாகிய வேதபோதனையிலிருந்து முற்றாகப் பிரித்துவிடுகிறார்கள். இது தவறு. இவர்களைப் பொறுத்தவரையில் நீதிமானாக அறிக்கையிடப்பட்டிருக்கும் கிறிஸ்தவன் தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கிறபோதே பரிசுத்தமாக்குதலாகிய கிருபையை அடைகிறான். வேதம் இந்த முறையில் இந்த சத்தியத்தை விளக்கவில்லை. மறுபிறப்படைந்து நீதிமானாகிய கிறிஸ்தவன் அதேவேளையில் பரிசுத்தமாக்கப்படுகிறான் என்பதே வேதபோதனை. மறுபிறப்படைந்த கிறிஸ்தவன் பரிசுத்தமாக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறான போதனை. இப்படி விளக்குவது பலவிதமான இறையியல் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவனை நீதிமானாக கர்த்தர் அறிக்கையிடுகிறபோது அவன் பரிசுத்தமாக வாழ்வதற்கான அனைத்தையும் அந்த நிமிடமே கொடுத்துவிடுகிறார். அந்தவிதத்திலேயே மறுபிறப்பு அவனை மறுரூபமாக்கியிருக்கிறது. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய ஆவியும், புதிய இருதயமும் பரிசுத்தமாக வாழ்வதற்கான புதிய வாழ்க்கையை அவனில் ஆரம்பித்து வைக்கின்றன. இதையே 1 கொரி. 6:11லும், ரோமர் 8:30லும் வாசிக்கிறோம்.
  3. பரிசுத்தமாக்குதலைப் பற்றிய தவறான, வேதபூர்வமற்ற எண்ணங்கள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தமாக நாம் வாழ்வதற்கு தடையாக அமைந்துவிடும். பரிசுத்தமாக்குதலைப் பற்றிய தவறான போதனைகள் நம்மைப் பாதித்து நாம் கர்த்தரை மகிமைப்படுத்த முடியாதபடி செய்துவிடும் என்ற ஆதங்கத்தினாலேயே ஜே. சீ. ரைல் ‘பரிசுத்தம்’ (Holiness) என்ற நூலை எழுதி வெளியிட்டார். உயர்கிறிஸ்தவ வாழ்க்கை, ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கை, வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை என்ற பெயர்களில் உலவி வரும் போதனைகள் அநேக கிறிஸ்தவர்களை தொடர்ந்து பாதித்து அவர்கள் ஆவிக்குரிய சந்தோஷத்தோடு வாழமுடியாதபடி செய்துவிடுகின்றன. இத்தகைய போதனைகளை நிராகரித்து பரிசுத்தமாக்குதலைப் பற்றிய முறையான வேதவிளக்கங்களைப்பெற்று கர்த்தரைத் தங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேண்டும்.

(வளரும்)

 

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல . . .

(கிறிஸ்தவக் கோட்பாடுகள் தொடர்ச்சி)

கேள்வி 111: மூன்றாவது ஜெபத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் எதற்காக ஜெபிக்கிறார்கள்? பதில்: “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற மூன்றாவது விண்ணப்பத்தின் மூலம் பரலோகத்திலே உள்ள தூதர்களைப்போல நாமும் அவருடைய கிருபையினால் அவருடைய சித்தத்தை அறியவும், கீழ்ப்படியவும், அனைத்திலும் அதற்கு ஒப்புக்கொடுக்க சித்தமுள்ளவர்களாகவும், நிறைவேற்றக்கூடியவர்களாகவும் இருக்கும்படிச் செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். மத். 6:10; சங். 119:34; சங் 119:35–36; யோபு 1:21; அப்போ. 21:14; சங். 103:20–21.

கர்த்தர் மகிமைப்பட வேண்டுமானால் அவருக்கென்று ஓர் இராஜ்யம் இருந்து அதை அவர் ஆள வேண்டுமென்பதை கடந்த இதழில் பார்த்தோம். இரண்டாவது ஜெப விண்ணப்பம் அது நிறைவேறவேண்டும் என்ற ஜெபமாக இருந்தது. மூன்றாவது ஜெபம் இரண்டாவதின் நிறைவேற்றத்துக்கு அவசியமாயிருக்கிறது. எவ்வாறெனில், அவருடைய இராஜ்யத்தின் முக்கிய பகுதியே அவருடைய சித்தம் சகலத்திலும் நிறைவேறுதலில் தங்கியிருப்பதால்தான்.

இந்த ஜெபம் கர்த்தரின் சித்தம் என்பதன் மூலம் எதை விளக்குகிறது என்பதை ஆராய்வது அவசியம். கர்த்தரின் சித்தத்தைப்பற்றி விளக்குகின்ற வேதம் அதை அவருடைய இரகசிய சித்தம், வெளிப்படுத்தப்பட்ட சித்தம் என்று இரண்டுவிதமாக விளக்குகின்றது. “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” என்று உபா. 29:28ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் கர்த்தரின் சித்தத்தின் இரண்டு வகைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. நாம் ‘உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக‘ என்று ஜெபிக்கின்றபோது இந்த இரண்டுவகை சித்தமும் நிறைவேறும்படியாகவே ஜெபிக்கிறோம்.

  1. இரகசிய சித்தம் - இரககிய சித்தம் அல்லது மறைவான சித்தம் என்று

நாம் அழைப்பது கர்த்தருடைய திட்டத்தையே. கர்த்தர் தன்னுடைய சித்தத்தின் ஆலோசனையின்படியே அனைத்தையும் செய்வதாக வேதம் விளக்குகிறது (எபேசி. 1:11). அவருடைய சித்தத்தின்படியே எல்லாம் நடக்கின்றன என்று தானி. 4:35ல் வாசிக்கிறோம். ஒரு பறவைகூட அவருடைய சித்தத்திற்கு மாறாக வானிலிருந்து தரையில் விழமுடியாது என்று மத். 10:29ல் வாசிக்கிறோம். கர்த்தருடைய இரகசிய சித்தத்தைப் பொறுத்தவரையில் அதை நாம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. ஒரு காரியம் நடந்துமுடிகிறபோதுதான் அதுபற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். செய்தித்தாள்களை நாம் வாசிக்கிறபோது நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நாம் தெரிந்துகொள்கிறோம், அதாவது கர்த்தரின் மறைவான சித்தம் எந்த வகையில் நிறைவேறியிருக்கிறதென்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதற்கு முன் அவருடைய இந்த மறைவான சித்தத்தை நாம் எந்தவிதத்திலும் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாகவே ஜோசியம் பார்த்தல் (ஏசாயா 47:13, 14), சூனிய வித்தைகள் (மீகா 5:12), குறிசொல்லுதல், நாள் பார்த்தல் போன்ற ஏனைய அனைத்தையும் (உபா. 18:9–12) கர்த்தர் வெறுப்போடு நிராகரிக்கிறார். கர்த்தரின் மறைவான சித்தத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது தவறு. எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறவர்களே இந்தத் தவறான வழிமுறைகளைப் பயன் படுத்துவதில் ஈடுபடுகிறார்கள். இதுவரை விளக்கியிருக்கிற ஜோசியம் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் போனாலும் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் எதிர்காலத்தில் நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் குறிசொல்லுவதுபோல் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களை நாடிப் போவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வேதம் தீர்க்கதரிசனத்தைப்பற்றிக் கொடுக்கும் விளக்கங்களைப் புரிந்துகொள்ளாமல், தீர்க்கதரிசனம் என்ற பெயரில் எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிச் சொல்லும் திறமை இருப்பதுபோல் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் மனிதர்களை பின்பற்றுகிற கிறிஸ்தவர்களும் தம்முடைய இரகசிய சித்தத்தைப் பற்றி கர்த்தர் விளக்கும் உண்மைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அடுத்த நாளிலும், அடுத்த விநாடியிலும் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போவதை கர்த்தர் உங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அதை அறிந்துகொள்ளும் முறைகளையும் வேதத்தில் தரவில்லை. அப்படியிருக்கும்போது நீங்கள் வெறும் மனிதர்களை நம்பி எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்வது புறஜாதியினர் ஜோசியம் பார்ப்பது போல்தான் இருக்கின்றது. கர்த்தர் அதை வெறுக்கிறார்.

  1. வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தம் - மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில்

பின்பற்றி நடப்பதற்காக கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை மட்டுமே தந்துள்ளார். அவருடைய சித்தம் அறுபத்தாறு நூல்களைக் கொண்டிருக்கும் வேதப்புத்தகத்தில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது (2 தீமோ. 3:16, 17). ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்ற ஒரே நூலாக வேதம் மட்டுமே இருக்கின்றது. கர்த்தருடைய சித்தத்தை அறிவிக்கின்றதாக வேதமும், சாட்சி ஆகமமும் மட்டுமே இருக்கின்றன (ஏசா. 8:20). ஆண்டவரே! ஆண்டவரே! என்று அழைக்கிறவர்களல்ல, பரலோகத்திலிருக்கின்ற என்னுடைய பிதாவினுடைய சித்தத்தை செய்கிறவர்களே பரலோக இராஜ்யத்துக்குள் நுழைவார்கள் (மத். 7:21) என்று இயேசு சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தையே உணர்த்துகிறார். கர்த்தரால் தம்முடைய வேதத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தையே நாம் எப்போதும் நிறைவேற்ற வேண்டும் (உபா. 29:29).

இந்த ஜெபத்தில் நாம் இரண்டு முக்கிய அம்சங்களைக்கவனிக்கிறோம். முதலாவதாக, கர்த்தர் தம்முடைய கிருபையின் மூலம் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை ‘அறிந்துகொண்டு’ அதற்குக் ‘கீழ்ப்படிய’ சித்தங்கொள்ளும்படியும், அதை நிறைவேற்றும் வல்லமையுள்ளவர்களாக இருக்கும்படிச் செய்யவும் ஜெபிக்கிறோம். இரண்டாவதாக, கர்த்தர் நாம் அனைத்திலும் அவருடைய (மறைமுக) திட்டங்களையும் நிறைவேற்றச் சித்தங்கொள்ளவும் அவற்றிற்கு அடிபணிந்து நிறைவேற்றும் வல்லமையுள்ளவர்களாக இருக்கும்படிச் செய்யவும் ஜெபிக்கிறோம். வேதத்தில் இருந்து இதற்கு சில உதாரணங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். பழைய ஏற்பாட்டு மனிதனான யோபுவை எடுத்துக்கொள்ளுங்கள். அவனுடைய வாழ்க்கையில் திடீரென பல கொடுமைகளை அவன் அனுபவிக்க நேர்ந்தது. பிள்ளைகளையும், சொத்துக்களையும் இழக்க நேரிட்டது. கடுமையான நோயும் அவனைப் பாதித்தது. அவனுடைய மனைவிகூட அவனைப் பார்த்து, ‘தேவனை தூஷித்து உயிரை விடும்’ (யோபு 2:9) என்றாள். அதற்கு பதிலாக யோபு, ‘தேவன் கையில் நன்மையைப் பெற்ற நாம் தீமையைப் பெற வேண்டாமோ’ என்றான். ‘இவை எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ் செய்யவில்லை’ என்கிறது வேதம் (யோபு 2:10). தேவனுடைய சித்தம் தன் வாழ்க்கையில் நிகழட்டும் என்பதே யோபுவின் எண்ணமாக இருந்தது. கர்த்தருடைய மறைமுக சித்தத்திற்கு யோபு தாழ்மையோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தான்.

இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போம் நமக்கெல்லாம் யோசேப்பைப் பற்றித் தெரியும். யோசேப்பு போத்திபாருக்குக் கீழ் பணிபுரிந்து வந்தான். ஒரு நாள் போத்திபாரின் மனைவி யோசேப்புடன் தகாத சிந்தனைகளோடு பேச ஆரம்பித்தாள். தன்னோடே சயனிக்கும்படி அவனை வற்புறுத்த ஆரம்பித்தாள் (ஆதி 39:12). அப்படிச் செய்வது கர்த்தருடைய சித்தம் அல்ல என்பது யோசேப்புக்கு தெளிவாக தெரிந்திருந்தது. அதனால் யோசேப்பு அங்கிருந்து உடனே ஓடிப்போனான் (ஆதி 39:12). இதிலிருந்து யோசேப்பு கர்த்தரின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தின்படி தான் வாழ வேண்டும் என்று நிச்சயித்து அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்திருந்ததைப் பார்க்கிறோம். கர்த்தரின் கட்டளைகளுக்கு மட்டுமே தன் வாழ்க்கையில் இடங்கொடுக்க வேண்டும் என்றும், அவற்றின்படியே தன்னுடைய செய்கைகளெல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்றும் யோசேப்பு முழு மனதோடு அவற்றிற்கு கீழ்ப்படிந்திருந்ததைப் பார்க்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலனின் வாழ்க்கையிலும் இப்படியான ஒரு சம்பவத்தைப் பார்க்கிறோம். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ‘முள்’ இருந்ததாக பவுல் எழுதுகிறார் (2 கொரி 12:7). அந்த முள் என்ன என்பதை பவுல் தெரியப்படுத்தாவிட்டாலும், அது ஒரு நோக்கத்திற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பவுல் புரிந்துகொண்டிருந்தார். அந்தப் புரிந்துகொள்ளுதலோடு அவர் அந்த முள்ளை நீக்கும்படி கர்த்தரிடம் மூன்று தடவை ஜெபித்தார் (2 கொரி. 12:7–8). அதற்குக் கர்த்தர், ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்று பதிலளித்து பவுல் அந்த முள்ளை அது இருக்கும் காலம்வரைத்தாங்கிக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார் (2 கொரி. 12:9). பவுல் அதை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார் (2 கொரி 12:9). இதிலிருந்து தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு துன்பத்திற்கான முழுக் காரணமும் பவுலுக்குத் தெரியாமலிருந்திருந்த போதும் கர்த்தர் அதற்குரிய (மறைமுக) காரணத்தைத் தெரிந்துவைத்திருக்கிறார் என்பதை பவுல் மனப்பூர்வமாய் அறிந்திருந்து அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்திருந்ததை இங்கே கவனிக்கிறோம்.

கர்த்தருடைய சித்தம் பற்றிய இந்த இரண்டு காரியங்களையும் நாம் மனதில் வைத்திருந்து அவற்றின்படி நடந்துகொள்ள வேண்டும். அவற்றை நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் இந்த இரண்டு காரியங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கும். எந்தவொரு காரியமும் இவற்றில் ஒன்றோடு மட்டும் தொடர்புடையதாக நிகழ்வதில்லை. இதை நாம் புரிந்துவைத்திருந்து கர்த்தருடைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும்.

முக்கியமானதொரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ளுவதற்கு நாம் நம்முடைய வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை உதாரணமாக, வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றின் அடிப்படையில் கர்த்தரின் சித்தத்தை எடைபோட்டுப் பார்க்கக் கூடாது. நம் வாழ்க்கையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துவிட்டால் அதை வைத்து கர்த்தருக்கு நம்மீது அன்பில்லை என்று தீர்மானிக்கக் கூடாது. வேலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்திருப்பீர்கள், பல மாதங்களாக, ஏன் ஒரு வருடம்கூட அது கிடைக்காமல் போனால் நம் வாழ்க்கை சரியில்லை அதனால்தான் கர்த்தர் நமக்கு வேலை கொடுக்கவில்லை என்றோ, கர்த்தர் ஏதோ ஒரு காரணத்தை மனதில் வைத்து நம்மைத் தண்டிக்கிறார் என்றோ தீர்மானித்துவிடக்கூடாது. இதையெல்லாம் பொதுவாக அநேகர் செய்து வருகிறார்கள்.

அத்தோடு, ஒரு காரியம் பற்றி கர்த்தர் தன்னுடைய சித்தத்தை ஏதோ ஒன்றின் மூலம் காட்ட வேண்டும் என்று ஜெபித்து வருவதும் பெருந்தவறு. இப்படியாக கர்த்தரின் சித்தத்தை அறிய ஜெபிக்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்கிறவர்கள் புரிந்துகொள்ளாம லிருப்பது என்ன? நாம் அறிந்துகொள்ள வேண்டிய, நம் வாழ்க்கையில் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டிய தெளிவான சித்தத்தை கர்த்தர் ஏற்கனவே தன்னுடைய வார்த்தையில் கட்டளைகளாகவும், போதனை களாகவும் தந்திருக்கிறார் என்பதை உணராமலிருப்பதுதான். அவர் நாம் அறிந்துகொள்ளும்படி தந்திருக்கும் வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் கட்டளையிட்டிருப்பவற்றிற்கு கீழ்ப்படிந்து நடக்காமலிருந்துவிட்டு அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வது முட்டாள்தனம். நாம் இந்த உலகத்தில் வாழும்வரை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டிய ஒட்டுமொத்தமான கர்த்தரின் சித்தம் அவருடைய வேதத்தில் மட்டுமே விளக்கப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான போதனை. இதை நம்பாதவர்களுக்கு கர்த்தருடைய சித்தம் எதன் மூலமும் ஒருபோதும் தெரியப்போவதில்லை. அத்தோடு அவர் வெளிப்படுத்தியிருக்காத அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்ற மறைமுக சித்தத்தை அறிந்துகொள்ளுவதில் நாம் காலத்தை வீணாக்கக்கூடாது. அவருடைய திட்டம் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு அவர் வெளிப்படுத்தியிருக்கின்ற சித்தத்தை உணர்ந்து, கீழ்ப்படிந்து வாழ வேண்டியதே ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை.

கர்த்தருடைய சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுகின்ற கடமை பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய இன்னுமொரு காரியம் உண்டு. கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றுகிறபோது இந்த உலகில் தொடர்ச்சியாக நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது நாம் இப்போது இருபத்தியோராவது நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மனதில் வைத்திருந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். நம்முடைய சூழ்நிலைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற முறையில் ஒருபோதும் நாம் கர்த்தரின் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற சித்தத்தை மாற்றியமைக்க முடியாது. இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று நிராகரித்துவிடவும் முடியாது. அவருடைய சித்தம் எக்காலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருக்கின்றது. உதாரணத்துக்கு கர்த்தரின் கட்டளையும், சித்தமுமாகிய ஓய்வுநாளை அநுசரிப்பதை எடுத்துக்கொள்ளுவோம். ஓய்வுநாள் எக்காலத்திலும் அநுசரிக்கப்பட வேண்டிய கட்டளை. அதை அநுசரிப்பதில் பதினேழாம் நூற்றாண்டில் இருந்த சூழ்நிலை வித்தியாசமாக இருந்திருக்கும். அன்றைக்கு கட்டை வண்டியில் 5 மணிக்கே எழுந்து பல மணிநேரம் பிரயாணம் செய்து சபைக்குப் போயிருப்பார்கள். சபை ஆராதனையும்கூட முழுநாளிலும் அதிக நேரம் நடந்திருக்கும். ஏனென்றால் ஆத்துமாக்கள் வீட்டுக்குப் போய்விட்டு இன்னொரு ஆராதனைக்கு உடனடியாக திரும்பி வர முடியாதளவுக்கு வீடுகள் தொலைவில் இருந்திருக்கும். பிரயாண நேரமும் அதிகமாக இருந்திருக்கும். ஆகவே, அவர்கள் காலையில் போய் மாலையில் வீடு திரும்பியிருப்பார்கள். அன்றைக்கு சபைக்கு காணிக்கை கொடுக்கும்போது பொருள்களாகக் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், இன்றைக்கு கரன்சி நோட்டை நாம் பயன்படுத்துகிற அளவுக்கு அன்றைக்கு அவற்றின் மதிப்பு இருந்திருக்காது. இப்படியாக அநேக சூழ்நிலை மாற்றங்களை உதாரணங்காட்டலாம். இன்றைக்கு நாம் இருநேர ஆராதனைக்கு போய் வரும்படியாக காரும், பஸ்ஸும், டிரெயினும் இருக்கின்றது. அன்றைக்கு ஆடு, மாடு மேய்த்தவர்கள் ஓய்வுநாளில் ஆடு, மாடுகளுக்கு தீனி போட்டு, தண்ணீர் கொடுக்கிறதை செய்யாமல் இருந்திருக்க முடியாது. (அதை வேதம் அனுமதிக்கிறது). இன்றைக்கும் குக்கிராமங்களில் இப்படித்தான் இருக்கும். ஆனால் நகரங்களில் வாழ்கிறவர்கள் அதிக நேரத்தை ஓய்வுநாளில் கர்த்தருக்காகப் பயன்படுத்துகிற வாய்ப்பு இன்று அதிகம். இந்த கால மாற்றத்திற்கு ஏற்ப நிகழும் இந்த நடைமுறை உண்மைகளை நாம் மனதில் வைத்திருந்து கர்த்தரின் சித்தங்களை தாழ்மையோடும், கீழ்ப்படிவோடும் நிறைவேற்றி வரவேண்டும்.

வேதத்தை வாசிக்கின்ற சிலர் இன்றைக்கு சபை, அங்கத்துவம், ஒழுங்குக் கட்டுப்பாடு, போதகர்கள், சபைக்கட்டிடம் எல்லாம் தேவையில்லை. அந்தக் காலத்தில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி வந்தார்கள் என்றெல்லாம் விளக்கங்கொடுத்து கர்த்தருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாமல் அவருடைய சித்தத்திற்கு மாறாக நடந்துகொள்கிறார்கள். அன்றைக்கு கால சூழ்நிலை வித்தியாசமாக, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வாழ்ந்து வந்ததால்தான் வீடுகளில், அதுவும் இரகசியமாகக்கூடக் கூட வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் சபைக் கட்டிடத்தையும், சபை அங்கத்துவத்தையும், சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டையும், போதகர்களையும் நம்பவில்லை என்று விளக்கங்கொடுப்பது எந்தளவுக்கு அறியாமை இன்றைக்கு பலரை ஆளுகிறது என்பதற்கு நல்ல அடையாளம். இந்த முறையில் வேதம் வாசித்தால் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவே முடியாது. பொறுமையோடு ஆராய்ந்து பார்த்து வாசிக்கும்போது பல இடங்களில் தெளிவாக கர்த்தர் தம்முடைய சபையின் அவசியத்தையும் அதன் ஒழுங்கமைப்பையும் விளக்கி அதில் பங்குகொண்டு அவருடைய சித்தத்தை நாம் கவனத்தோடு நிறைவேற்ற வேண்டுமென்று விளக்கியிருப்பதைப்பார்க்கலாம். சபையே கர்த்தரின் திட்டத்தில் முதன்மை வகிக்கிறது.

கர்த்தருடைய சித்தத்தை நாம் காசை சுண்டிப்போட்டு பூவா? தலையா? என்று பார்ப்பதுபோல் பார்த்து தீர்மானித்து உடனடியாக செயல்படுத்திவிட முடியாது. அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறபோது, அதை செய்வதற்கு நாம் அதிக கவனத்தையும், உழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கும். அதிக ஜெபம் செய்ய வேண்டியிருக்கும். சிந்தித்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். இதற்காகவே நாம் கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய சாயலைக்கொண்டிருக்கிறவர்களாக, கவனத்தோடு அன்றாடம் புதிதாகிற மனத்தோடு, மறுரூபமாகி கவனத்தோடு அவருடைய சித்தத்தை ஆராய்ந்து பார்த்து செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். கன வேகமாக போய்க்கொண்டிருக்கும் இந்த ஆப்பிள் ஐபேட், ஐகிளவுட் காலத்தில் எதுவும் துரிதமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மனிதர்கள் வாழ்கிறார்கள். இரண்டு செகன்டில் கம்பியூட்டர் ஓபன் பண்ணாவிட்டால் அது பழைய பஞ்சாங்கமாகி விடுகிறது. மூன்று செகன்டில் இன்டர்நெட் ஓடாவிட்டால் சர்விஸ் கொடுக்கிறவரை மாற்றி விடத்துடிக்கிறோம். இரண்டு மூன்று சிம் கார்டுகளோடு மொபைல் போன் தேவைப்படுகிறது. இன்றைக்கு ‘துரிதமே’ அநேகருக்கு வாழ்க்கையாகிப் போயிருக்கிறது. இந்த துரித மனப்பான்மையை நாம் ஆத்மீகக் காரியங்களில் ஒருபோதும் காட்ட முடியாது, காட்டவும் கூடாது. இரண்டு செகன்ட் வேத தியானத்துக்கும், ஜெபத்துக்கும் வழியே இல்லை. ஒருவரில் அந்த எண்ணம் இருப்பதே அவருக்கும் கர்த்தருக்கும் தொடர்பில்லை என்பதற்கு அழுத்தமான காரணமாகிவிடும். கர்த்தரின் வார்த்தையை நேரங்கொடுத்து, பொறுமையோடு, சிந்தித்து தொடர்ச்சியாக வாசிப்பது அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள மிகவும் அவசியமானது. ஒரே நாளில் அவருடைய சித்தம் அத்தனையையும் நாம் அறிந்துகொள்ள முடியாது. காலம் போகப்போகத்தான் அதில் நமக்கு முதிர்ச்சியும், ஞானமும் ஏற்படும். கர்த்தரின் சித்தத்தை நாம் ஜெபத்தோடு ஆராய்ந்து பார்த்து, புரிந்துகொண்டு கவனத்தோடு நிறைவேற்ற நீடிய பொறுமை வேண்டும். பவுல் சொல்லுவதுபோல, ‘இந்தப் பிரபஞ்சத்திற்கொத்த வேஷத்தை’ நாம் போட முடியாது (ரோமர் 12:1–2). ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக’ நம்முடைய மனம் அன்றாடம் ‘புதிதாகி மறுரூபமாகவேண்டும்’. இயேசு ஜெபித்தார், ‘இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச்செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று (மத்தேயு 26:39). அவருடைய வார்த்தைகளை சிந்தித்துப் பாருங்கள். அவர் சொல்லியது இதுதான் “எனக்கு வந்திருக்கிற இந்த சோதனை காலமாறுதலால் நான் அனுபவிக்க வேண்டியதொன்றாக இல்லாமல் போனால் அதை உம்முடைய சித்தமாக முழுமனதோடு நான் ஏற்றுக்கொள்ளுவேன். அப்படியில்லாமல் இந்த கடுமையான சோதனையை நான் அனுபவிப்பதுதான் உம்முடைய திட்டமானால் அதை என் வாழ்வில் பூரணமாக தாழ்மையோடும், கீழ்ப்படிவோடும் நிறைவேற்ற எனக்கு துணை செய்யும்” என்றே இயேசு ஜெபித்திருக்கிறார். அதுவே நம்முடைய மனப்பான்மையாகவும் இருக்கவேண்டும்.

 

ஏன் நீ மனந்திரும்ப மறுக்கிறாய்?

- அல்பர்ட் என். மார்டின் -

மனிதனே! நீ பாவத்தில் இருப்பதை அறியாமல் இருப்பதல்ல உன்னுடைய பிரச்சனை. உன் பாவம் மன்னிக்கப்படவும், சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிற உன் தேவையை நீ நன்றாகவே உணர்ந்திருக்கிறாய். ஆனால் கிறிஸ்துவின் நிபந்தனையின் பிரகாரமாக, உன் பாவங்களை விட்டுவிட்டு அவரிடம் வருவதற்கு நீ தயாராக இல்லை. அதுதான் உன் பிரச்சனை. அதிக ஆஸ்திகளுக்கு சொந்தக்காரனாக இருந்த (மத் 19) அந்த இளம் வாலிபனின் பிரச்சனை இதுதான். அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே ஆசையிருந்தது. அதை அடைவதற்காக அவன் இயேசு கிறிஸ்துவிடமும் வந்தான். ஆனால், தன்னுடைய பூரண ஞானத்தினால், மனிதனுடைய இருதயத்தில் இருப்பதை அறியக்கூடியவராகிய கிறிஸ்துவோ அந்த வாலிபனின் இருதயத்தில் இருந்ததைக் கண்டுகொண்டார். சொத்துக்களின் மேல் அவனுக்கு தீராத விருப்பம் இருப்பதை அறிந்தார். இயேசு கிறிஸ்து மாத்திரமே ஒருவனுடைய எஜமானாக இருந்து அவனுடைய இருதயத்தை ஆளவேண்டும். அதனால்தான் இயேசு, “போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்று அவனைப் பார்த்து சொன்னார். இருதயத்தை ஊடுருவுகின்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு இணங்க அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. “அவன் துக்கமடைந்தவனாய்ப்போய்விட்டான்” என்று வேதம் கூறுகிறது.

பொருளாசை மட்டும்தான் நமக்குப் பிரச்சனை என்று நீ நினைக்க வேண்டாம். சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்று இயேசு கிறிஸ்து எல்லோருக்கும் சொல்லுவதாகவும் நீ நினைக்க வேண்டாம். பணக்காரர்களாக இருந்த மத்தேயு, சகேயு போன்ற சிலரை அவர் அழைத்திருக்கிறார். ஆனால், அவர்கள் தங்களுடைய சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்று அவர் நிபந்தனை விதிக்கவில்லை. அவர் பாவிகளை அழைக்கும்போது, அவர்கள் எதைத் தங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகக் கருதுகிறார்களோ அதையே விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். யோவான் 4ல் காணப்படும் சமாரிய ஸ்தீரியிடம் என்ன குறை இருந்தது என்பதை அவர் கண்டுகொண்டு அதிலிருந்து விலகி வரும்படி அவளை அழைத்தார். இயேசுவிடம் மாத்திரம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு அவருக்கு முதலிடம் கொடுப்பவன் மாத்திரமே நித்தியஜீவனை அடையமுடியும் என்பதை இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் சொல்லுகிறார். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது” (மத் 6:24). “ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற் 8:34). பரிசுத்தத்தில் பரிபூரணரான மகிமையின் கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக்கொடுக்கும்படியாக, உன் பாவங்களை விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். நீயோ அவற்றை விட்டு விலக மறுக்கிறாய். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:23ல் கூறுகிறார்.

இத்தனைக் கல்மனதோடு நீ இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமல்லாமல், முட்டாள்தனமாகவும் இருப்பதை உணர்கிறாயா? பாவத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார். வாலிப வயதில், தேவனுடைய அழைப்புக்கு எதிர்த்து நின்றவர்களின் வாழ்க்கை எவ்வளவு தடம்புரண்டுப்போயிருக்கிறதென்று சிந்தித்துப் பார். “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள். அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசா 57:20-21). தங்களுடைய பாவங்களிலேயே நிலைத்திருந்தவர்களின் மரணப்படுக்கை யானது எவ்வளவு சஞ்சலம் நிறைந்ததாயிருந்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பார். நியாயத்தீர்ப்பின் நாட்களை எண்ணிப் பார். நரகத்திற்குள்கூட சற்று எட்டிப் பார். மனந்திரும்பாத பாவிகள் நரக அக்கினியிலே போடப்படுகிறார்கள், “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத். 13:42).

சிலுவையை நோக்கி உன் பார்வையைத் திருப்பு. மகிமையின் தேவன், பாவமே இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்த ஒரே மனிதன், சிலுவையின் மீது தமது ஜனங்களின் பாவங்களினிமித்தமாக பாவமானார். நீ விரும்புகின்ற பாவத்துக்காக இயேசு கிறிஸ்து செலுத்திய கிரயத்தை எண்ணிப் பார். மனிதர்களின் பாவங்களுக்காக பிதாவின் கோபத்தை தாம் சந்திக்க நேர்ந்ததைக் குறித்து அவர் அடைந்த அளவிடமுடியாத வேதனையை குறித்து சிந்தித்துப் பார். ஜான் நியூட்டன் என்கிற கவிஞர் கூறியபிரகாரமாக உன்னாலும் சொல்ல முடியுமா என்பதை சிந்தித்துப் பார்:

“இரத்தம் வடிகிற இரட்சகரை நான் நோக்கிப் பார்த்ததுமுதல், என் பாவங்களை நான் வெறுக்கிறேன்”

இவ்வளவு காரியங்களையும் சிந்தித்துப் பார்த்தும், நீ மிகவும் நேசிக்கிற உன் பாவங்களை விட்டு உன்னால் விலக முடியவில்லையென்றால், நியாயத்தீர்ப்பின் நாளிலே கடவுள் உன்னைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத் 25:41) என்று கூறுவதில் தவறென்ன? உன் பாவங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நரகத்தின் அக்கினியிலே அமிழ்ந்து போகாதிரு. கிறிஸ்துவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவரிடம் வா. நித்தியஜீவனை அடைவாய்.

 

பிரியாவிடை பிரசங்கங்கள் -9-

- அல்பர்ட் என். மார்டின் -

முடிவு பிரசங்கம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20ஆம் அதிகாரத்தில் பவுலின் நடவடிக்கைகளை லூக்கா எழுதிக் கொண்டு வருகிறார். 17ஆம்

வசனத்திலிருந்து லூக்கா எழுதியிருப்பதிலிருந்து பின்வரும் விபரங்களை அறிந்துகொள்ளுகிறோம்.

மிலேத்துவிலிருந்து பவுல் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: “நான் ஆசியா நாட்டில் வந்த முதல் நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வெகுமனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரை சேவித்தேன். பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம் பண்ணி, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஓட்டத்தை சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணினதைக்கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால் உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலை செய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத்தாங்கவும், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்கள் எல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான். அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.”

உங்கள் மத்தியில் (டிரினிட்டி பாப்திஸ்து சபை) மூப்பர்களுள் ஒருவராக நின்று பிரசங்கிக்கப் போகும் இந்தக் கடைசி பிரசங்கத்தில் எதைக் குறித்து பேசுவது என நான் மிகுந்த ஜெபத்தோடு, சிந்தித்துக் கொண்டிருந்தேன். பவுல், எபேசு சபை மூப்பர்களை அழைத்து, கடைசியாகப் பேசிய மேற்கூறிய பகுதி என் மனதைத் தொட்டது. அது உங்களில் அநேகருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்காது. அப் 20:17–-35 வரையுள்ள வசனங்கள் நமக்காகவே எழுதப்பட்டிருப்பதாக உணருகிறேன். அந்த வேதபகுதியை நான் மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்தபோது அதில் பல விஷயங்கள் பவுலோடு தொடர்புடையதாக இருப்பதைப் பார்க்கிறேன். அந்தப் பகுதியோடு என் சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால், அதன் காரணமாக நான் இந்தப் பகுதியை எனது கடைசி பிரிவு உபதேசத்திற்காக எடுத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறமுடியாது. அதில் மிகவும் முக்கியமானதொரு வித்தியாசம், பவுலுக்கு அது உண்மையாகவே கடைசித் தருணமாயிருந்தது. இனி என் முகத்தைப் பார்க்க மாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன் என்பதை பவுல் 25ஆம் வசனத்தில் உறுதியாகக் குறிப்பிடுகிறார். மற்றுமொரு இடத்திலும், “என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, அவர்கள் அழுதார்கள்” என்பதையும் காண்கிறோம். ஆனால் என்னுடைய நிலைமை அப்படி இல்லை. கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் 4 மாதங்கள் கழித்து இந்த இடத்திலே நடைபெறப் போகிற, போதகர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் 25 வது வருடாந்திர விழாவுக்கு நான் வரத் தீர்மானித்திருக்கிறேன். அதையுந்தவிர்த்து, போதகர்களுக்கான வேதாகம ஆராய்ச்சி வகுப்பின் 4ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுவேன். நான் ஒழுங்காக நடந்து கொண்டேனென்றால், ஒருவேளை இந்த சபையின் மூப்பர்கள் அந்த வகுப்புகளில் பேசும்படியாக என்னை அழைக்கவும் செய்யலாம். அதுபோன்ற பிற சந்தர்ப்பங்களிலும் ஒருவேளை மூப்பர்கள் என்னை பேசும்படியாக அழைக்கலாம். ஆகவே இவ்வகையில் பார்க்கும்போது, பவுலும் நானும் ஒரே நிலைமையில் இருப்பதாகத் தோன்றவில்லை. அந்த மக்களை மீண்டும் பார்க்க முடியாதென்பது பவுலுக்கு நன்றாகத்தெரிந்திருந்தது. இந்த உண்மையின் அடிப்படையானது. அந்த வேதபகுதி முழுவதும் பிரதிபலிப்பதைக் காணலாம். நான் உங்கள் மத்தியில் மேய்ப்பனாக ஊழியம் செய்து முடித்து, இப்போது பிரிந்து செல்கையில், பவுலைப் போல அல்லாது மீண்டும் உங்களை சந்திக்கக் கூடியவனாகவே செல்கிறேன். நான் மீண்டுமாக உங்களை வந்து சந்திப்பது, நீங்கள் சரியாக செயல்படுகிறீர்களா என்று சோதிப்பதற்காக அல்ல. ஒருவரிலொருவர் எப்போதும் குறையாத அன்பும் மரியாதையும் செலுத்துபவர்களாக இருக்கின்ற நிலமையிலே பிரிந்து செல்கின்ற நாம், மீண்டும் சந்திப்பதின் மூலமாக, கிறிஸ்துவின் ராஜ்யத்தின் நிமித்தமான பல்வேறு ஊழியங்களை பலவிதங்களில் நிறைவேற்ற ஏதுவாக இருப்பதற்காகவும் அடிக்கடி சந்திக்கவிருக்கிறோம். ஆகவே, பவுலின் பிரிவு உபதேசத்திற்கு அப்படியே ஒத்ததாக எனது பிரிவு உபதேசம் இல்லாவிட்டாலுங்கூட, அந்த வசனப்பகுதிகளில் இருந்து முக்கியமான கொள்கையை எடுத்து நான் எனது பிரிவு உபதேசத்தில் உபயோகிக்க விரும்புகிறேன். அந்தக் கொள்கை இதுதான்: பவுலின் மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஊழிய வாழ்க்கையானது, எந்தவிதமான இச்சையோ, சுயநலமோ இல்லாததாக, அவர் ஊழியம் செய்தவர்களின் மத்தியிலே ஆவியிலும் நடக்கையிலும் காணப்பட்டது. கடவுளின் ஜனங்களுக்கு, கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு ஊழியம் செய்த கடவுளுடைய மனிதனானவன், அவர்களை விட்டுச் செல்கையிலே, தான் அவர்கள் மத்தியிலே நடந்து கொண்ட விதத்தை விவரித்துக் காண்பிப்பது நியாயமே. ஆகவே, ஓர் ஊழியன், கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக, தூய்மையான மனசாட்சியோடு, ஆவியினாலும் நடக்கையினாலும் தனது ஊழியத்தில் நிறைவேற்றியவைகளை எடுத்துக் கூறுவது சற்றும் தவறல்ல. அப்படிக் கூறும்போது எந்தவிதமான சுயநலத்திற்கோ, உலகசிந்தனைகளுக்கோ இடமளிக்கக்கூடாது.

உங்கள் மத்தியிலே ஊழியம் செய்த கடந்த 46 ஆண்டுகளாக என் இருதயத்தில் நான் மையமாகக் கொண்டிருந்த 6 உண்மைகளை உங்கள் முன்னதாக எடுத்து வைக்க விரும்புகிறேன். சில வாரங்களுக்கு முன்னதாக உங்களிடம் தெரிவித்த என்னுடைய சாட்சியின் போது, நான் குறிப்பிட்ட வசனங்களையும், நமது சபை சரித்திரத்தைக் குறித்து சில வாரங்களுக்கு முன்னதாக நான் விவரித்தபோது குறிப்பிட்ட வசனங்களையும் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துகிறேன். பவுல் 1 கொரி 15:10ல் தன்னைப்பற்றிக் கூறும்போது, நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். தனது ஊழியத்தைக் குறித்துப் பேசும்போது, நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே என்னை அதிகமாகப்பிரயாசப்பட வைத்தது என்கிறார். எனக்கும் அப்படித்தான். மனிதனாகிய என்னோடு கடவுளின் கிருபை தங்கி இருக்கிறபடியால் மட்டுமே நானும் இந்த பிரிவு உபதேசத்திலே கூறப் போகிறவைகளை சுத்தமனசாட்சியோடு, கடவுளின் முன்னிலையாக கூறமுடிகிறது. அது மாத்திரமல்ல, உங்கள் மத்தியில் ஊழியம் செய்த காலங்களிலும் தேவனுடைய கிருபையே என்னோடு தங்கி ஊழியங்களில் கிரியை செய்தது. இப்போது, நான் கூற விரும்புபவைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறுகிறேன்:

  1. கடந்த 46 ஆண்டுகளாக, நான் உங்களுக்கு உபதேசித்து வந்தவைகளை எனது வாழ்க்கையிலும், கடவுளின் பெரிதான கிருபையினாலே, கடவுளுக்கும் உங்களுக்கும் முன்பாக, கடைப்பிடித்து வாழ்ந்தேன்.

ஒரு தெய்வபக்தன் கூறிய கருத்து எனக்கு மிகவும் பிடித்தமானது. இதை இங்குள்ளவர்களும் அடிக்கடி உபயோகித்துக்கொள்வார்கள். அதாவது, “ஊழியக்காரன் வாழ்கிற வாழ்க்கையே அவனுடைய ஊழியத்தின் உயிர் நாடியாக இருக்கிறது” (The life of the minister is the life of his ministry). பவுல் அப் 24:16ல் கூறுகின்ற வசனம் எனது மனசாட்சியில் ஆழமாகப் பதிந்து, எனக்கு மிகவும் உதவியாக இருந்த வசனங்களுள் ஒன்று. “நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப்பிரயாசப்படுகிறேன்” என்கிறார். “பிரயாசம்” என்று சொல்லும்போது, ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் எந்தவிதமான கடுமையான பயிற்சியை மேற்கொள்வார்களோ அந்தவிதமாக ஆவிக்குரிய வகையில் பிரயாசப்படுகிறேன் என்கிற அர்த்தம் தொனிக்கும் வகையில் அவர் இங்கே குறிப்பிடுகிறார். நானும், 46 ஆண்டுகளாக உங்களுக்கு உபதேசித்தவைகளை எனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். கடவுளுக்கு முன்பாகவும், அவருடைய ஜனமாகிய உங்களுக்கு முன்பாகவும் அவ்விதமாகவே வாழ்ந்திருக்கிறேன். கடவுளுடைய வார்த்தைகளுக்கு விரோதமான எந்தவிதமான சிந்தனையாவது, ஆசைகளாவது, குணங்களாவது என் இருதயத்தின் ஆழத்திலே இரகசியமாகத் தோன்றினாலும், அவை பாவ செய்கையையே பிறப்பித்துவிட்டது போல அவைகளைக் குறித்து புலம்பி, மனந்திரும்பி, அவைகளில் இருந்து விடுவிக்குமாறு கடவுளை நோக்கி கெஞ்சி மன்றாடி விடுதலை பெற நாடுவேன். நான் பாவங்களை அறிக்கையிட்ட அளவுக்கு இங்கு அநேகர் வெளிப்படையாக அவைகளை சொல்லிக்கொள்வதில்லை. ஒழுக்க கேடாக நடந்து, அதனிமித்தமாக பாவ அறிக்கை செய்யாதபடிக்கு கடவுள் என்னைக் காத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். வேதாகமக் கொள்கைகளுக்கு புறம்பாக நடந்ததாலோ அல்லது அங்கத்தினர் கூட்டங்களில் பொறுமையிழத்தல், கோபமடைதல் ஆகிய காரணங்களுக்காகவோ நான் பாவ அறிக்கை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாமல் கர்த்தர் காத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

பல சந்தர்ப்பங்களில் சாதூரியமில்லாமல் பேசிவிடுவதற்காக நான் அநேக முறை அறிக்கை செய்ய நேர்ந்திருக்கிறது. பல விஷயங்களில் நாம் தவறுவதை யாக்கோபு தமது நிருபத்திலே சுட்டிக் காண்பிக்கிறார். “நாம் எல்லோரும் அநேக விஷயங்களிலே தவறுகிறோம். ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்”. நான் அப்படிப்பட்ட பூரண புருஷனாக இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், நான் உங்கள் முன்னிலையில் நின்று என்னுடைய தவறுகளுக்காக மன்னிப்புக்கோரியிருக்கிறேன். கடவுளுக்கு முன்னிலையாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் குற்றம் சுமத்தப்படாதபடிக்கு வாழும்படியாக நான் மிகவும் விரும்பி, அப்படியே வாழ்ந்தேன். உங்களில் எவருடைய பொருளையாவது அடையவேண்டுமென நான் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதை உங்கள் கண்களைப் பார்த்து நேருக்கு நேராக என்னால் கூறமுடியும். இங்குள்ள பெண்களில் ஒருவரையாவது நான் களங்கத்தோடு நோக்கியதாகவோ, தவறான எண்ணத்தோடு தொட்டதாகவோ எவரும் என் மீது குற்றம் சுமத்த இயலாது. நான் உங்கள் மீது அன்புகூர்ந்து, உங்களிடம் பழகினாலுங்கூட, தவறான விதத்தில் என்னோடு பழகினார் என்று யாரும் என்னை குறைகூற முடியாது. எனக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் அவர் என்னைத் தொட்டார் என்றோ, அணைத்துக் கொண்டார் என்றோ ஒருவரும் என்னைக் குறித்து குறைகூற முடியாத அளவில் நான் உங்கள் மத்தியில் வாழ்ந்தேன். 46 ஆண்டுகள்! நான் எவைகளை உங்களுக்குப் பிரசங்கித்தேனோ, அவை யாவையும் கடவுளின் பெரிதான கிருபையினால் நானும் கடைப்பிடித்து வாழ்ந்தேன்.

போதகர்களைக் கெடுத்துப் போடக்கூடிய 4 காரியங்கள் என்ன தெரியுமா? பணம், அகந்தை, பெயரையும் புகழையும் பதவியையும் அடைய கட்டுக்கடங்காத ஆவல், பெண்கள்! இவைகளால்தான் ஆயிரக்கணக்கான போதகர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். கடவுளின் பெரிதான கிருபையால் நான் இவைகளிலிருந்து காக்கப்பட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாளிலே, நான் ஒரு பிரிவு உபதேச செய்தியை உங்கள் மத்தியில் சொல்ல வேண்டியதிருக்கும் என்பதை நான் பல ஆண்டுகளாகவே எதிர்பார்த்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனம் 1 சாமு 12ஆம் அதிகாரத்தை நோக்கிச் செல்லும். இஸ்ரவேலராகிய அந்தப் பெரிய கூட்டத்தாரின் முன்னே சாமுவேல் சொல்ல முடிந்ததைப் போலவே நானும் இந்த சபையாரின் முன்பாக சொல்லும் விதத்தில் வாழவேண்டும் என ஜெபித்து வந்திருக்கிறேன். “அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்கு சொன்னபடியெல்லாம் உங்கள் சொல் கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாக சஞ்சரித்து வருகிறார். நானோ கிழவனும் நரைத்தவனுமானேன். என் குமாரர் உங்களோடிருப்பார்கள். நான் என் சிறு வயது முதல் இந்நாள் வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்து வந்தேன். இதோ, இருக்கிறேன். கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம் பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்து சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள், அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை. ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார் என்றான்”. நான் நியூஜெர்ஸிக்கு 28 வயதுடைய இளம் போதகனாக உங்கள் மத்தியில் வந்தேன். இந்நாள் மட்டும் உங்கள் முன்பாக வாழ்ந்து வந்திருக்கிறேன். இப்போது முதிர் வயதுள்ளவனானேன். கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேலைப்போலவே நானும் உங்கள் முன்பாக சவால் விடக்கூடிய நிலைமையில் தேவன் என்னை கிருபையாக வைத்திருப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். நூற்றுக்கணக்கான போதகர்களை அழித்துப் போட்ட மேற்கூறிய பாவங்களில் எதினிமித்தமாவது நீங்கள் என் பேரில் குற்றம் சுமத்த முடியுமா? கடவுளை முன்னிலையாக வைத்து பயமின்றி உங்களைக் கேட்கிறேன். கடவுளின் கிருபையினால் காத்துக்கொள்ளப்பட்டிருக்கிறேன்.

ஆம், கடவுளின் கிருபையே என்னைக் காத்தது. அப்படிக்கூற முடிவது மிகவும் ஆசீர்வாதமானது. கடவுளின் கிருபையை நாம் உணராவிட்டால் அவருக்கு அளிக்க வேண்டிய கனத்தை அளிக்காமல் போய்விடுவோம். நாங்கள் உங்கள் முன்பாக பரிசுத்தமாகவும், நீதியோடும், குற்றமில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி என்று பவுலைப் போலக் கூறவேண்டுமானால் அதற்கு கடவுளின் கிருபையே உதவியிருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக அவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை அவருக்கு செலுத்த வேண்டும். அப்படியானால் பாவங்களை அறிக்கையிட்டதாகக் கூறினீர்களே என்பீர்கள். ஆம், பாவமற்ற நிலையில் நான் இல்லை. ஆனால் குற்றஞ்சுமத்தப்படாத நிலையில் வாழ்ந்திருக்கிறேன். கிறிஸ்தவ விசுவாசத்தை நம்பாத யாராவது ஒருவர் கடவுளின் மக்களாகிய உங்களிடம் சுவிசேஷத்தை நம்பமுடியவில்லையே என்று கூறும்போது, நீங்கள் சுவிசேஷத்தை நம்பாவிட்டாலும், எங்களுடைய போதகரின் வாழ்க்கையைப் பாருங்கள் என்று சொல்லக்கூடிய விதத்தில் நான் வாழ்ந்து காட்ட வேண்டுமென வாஞ்சித்தேன். என் வாழ்க்கையைத்தான் நான் உங்களுக்கு ஒரு சிறந்த பரிசாகக் கொடுக்க விரும்பினேன். அப்படி வாழ்வது சுலபமாக இருந்ததென்று நினைக்கிறீர்களா? அதற்காக நான் எவ்வளவு போராடியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. வந்த சோதனைகளைக் குறித்தும் நீங்கள் அறியீர்கள். ஆனால் இன்று உங்கள் முன்பாக நின்று தைரியமாக இவ்வார்த்தைகளைப் பேச முடிந்ததற்காக நான் கடவுளுக்கு என் நன்றியை ஏறெடுக்கிறேன்.

  1. கடந்த 46 ஆண்டுகளாக நான் எந்த மனிதனுக்கும் பயப்படாமல், கடவுளின் ஆலோசனைகள் யாவையும், எதையும் மறைக்காமல் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அப்படி செய்வதற்கு உதவியாக இருந்தது கடவுளின் கிருபையே தவிர வேறொன்றுமில்லை.

இதற்கு ஆதாரமாக நான் அப் 20ஆம் அதிகார வசனபகுதியில் பவுல் கூறியதை பயன்படுத்துகிறேன். பவுல், 20ஆம் வசனத்தில் பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை என்கிறார். மறைத்து வைக்கக் கூடிய அல்லது சொல்லாமல் விட்டுவிடக்கூடிய சோதனை அவருக்கு நேரிட்டிருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் யூகிக்கலாம். இல்லை, நான் ஒன்றையும் மறைக்கவேயில்லை என்று அவர் சொல்லுகிறார். சொல்லாமல் விட்டுவிடலாம் என்கிற சோதனை எனக்கு நேரிட்டபோது, நான் அதை மேற்கொண்டேன் என்கிறார். பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை. அடுத்தபடியாக 26ஆம் வசனத்திலும் அதை மீண்டுமாக உறுதிப்படுத்துகிறார். “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்”. மேலும் கலாத்தியருக்கு எழுதின நிருபத்திலே, “நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே” (1:10) என்கிறார். மேலும், “சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களை சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி . . . உங்களிடத்திலாவது. மற்றவர்களிடத்திலாவது வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை” (1 தெச 2:4-6). உங்கள் ஒருவரது முகத்திற்கும் பயப்படாமல், கடவுளின் ஆலோசனைகள் யாவையும் உங்களுக்கு அறிவித்தேன் என்று தைரியமாக சொல்லக்கூடியவராக பவுல் அப்போஸ்தலன் இருக்கிறார்.

சிறுவயதில், வகுப்பில் ஆசிரியர் திட்டுவார்களே என பயப்படும் சுபாவமுள்ளவனாக இருந்த என்னை, தேவன் தமது கிருபையினாலே, உங்கள் ஒருவரது முகத்திற்கும் அஞ்சாமல், கடவுளின் ஆலோசனைகள் யாவையும் சொல்லக்கூடிய தைரியத்தை அளித்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவன் என்னை அப்படியே விட்டிருந்தாரென்றால் நான் ஒரு பயந்தாங்கொள்ளியாகத்தான் இருந்திருப்பேன். நான் பிரசங்கிக்கும்போது, உங்கள் முகத்தில் ஏதேனும் அதிருப்தியைக் கண்டிருந்தால், மேற்கொண்டு பிரசங்கிக்காமல் சுருங்கிப்போயிருப்பேன். சில சமயங்களில் எரிச்சலோடு நீங்கள் என்னைப் பார்ப்பதை உணர்ந்திருக்கிறேன். கடந்த பிரசங்கத்தின்போதுகூட நான் அதை உணர்ந்தேன். இளம் வாலிப வயதுள்ளவர்கள் தங்கள் பெற்றோரிடம் சரியான முறையில் நடந்துகொள்ளாததைக் குறித்து நான் பேசியபோது, அநேக இளம் வாலிபர்கள் கோபக்கனல் வீசும் பார்வையை என் மீது செலுத்தினார்கள். அதற்கெல்லாம் நான் பயந்து விலகிவிட மாட்டேன். ஏனென்றால் 46 ஆண்டுகளாக யாருக்கும் பயப்படாமல் கர்த்தருடைய ஆலோசனைகளை அறிவிக்கும் ஊழியத்தை செய்துகொண்டு வந்திருக்கிறேனே. ஜனங்களைக் கவராத வேதகொள்கையாக இருந்தாலும் சரி, பிரபலமடைந்திருக்கும் பழக்கவழக்கங்களானாலும், ஆராதனையில் அர்த்தமற்ற காரியங்களைப் புகுத்துவதை எதிர்ப்பதிலும், நவீன காரியங்களை ஏற்றுக்கொள்வதற்காக நற்பழக்கங்களை விட்டுக்கொடுப்பதை கண்டிப்பதிலும், எதுவாக இருந்தாலும் நான் உங்கள் முன்னால் பயமின்றி கடவுளின் ஆலோசனைகளைக் கூறியிருக்கிறேன். இதற்காக நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு வசனம் ஏசா 8:20 “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை”.

  1. கர்த்தரின் வார்த்தைகளைப் போதிப்பதிலும், புத்திசொல்லுதலிலும் கடந்த 46 ஆண்டுகளாக நான் மிகுந்த ஆர்வத்தோடும், சற்றும் குறையாத ஈடுபாட்டோடும் என்னையே உங்கள் மத்தியில் அர்ப்பணித்திருந்தேன்.

ஜீவனுக்கும் மரணத்துக்கும் அடுத்ததான காரியங்களை பிரசங்கிப்பதென்பது சுலபமானதல்ல. இது வாழ்வா சாவா என்பதைத்தீர்மானிக்கும் போதனை என்பதை யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பிரசங்கிப்பவருக்கு அதன் நிச்சயமான உண்மை தெரிந்திருக்கும்போது, அதை எப்படியாவது விளக்க வேண்டுமே என்கிற பாரம் உடையவராயிருக்கிறார். ஆகவேதான் ஈடுபாடும், குன்றாத ஆர்வமும் அப்பேர்பட்ட பிரசங்கிகளிடம் காணப்படும். கடந்த வாரம் பிரசங்கம் முடிந்தபின்னர், பின்புற அறையில் என்னோடு ஜெபித்த என்னுடைய சக மூப்பர்கள் என்னிடம் வந்து, சொல்ல வந்ததில் எதையாவது, நேரமில்லாமல் முடிக்காமல் விட்டுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். இல்லை. நான் எதையும் விட்டுவைக்கவில்லை. அடுத்த மணிநேரம் வரைக்கும் தான் உயிரோடு இருப்பது நிச்சயமில்லை என்றிருப்பவன், உடனுக்குடன் காரியங்களை செய்து முடிப்பது போன்ற சிந்தனையோடு, நான் சொல்ல வந்தவைகளை சொல்லி முடித்திருந்தேன். புகழ் பெற்ற பிரசங்கியான ஸ்பர்ஜன் கூறினார், “ஒவ்வொரு முறையும் நான் பிரசங்கிப்பதற்கு நிற்கும்போது, என்னுடைய உள்ளத்தில் இருப்பதை கடைசி சொட்டு வரைக்கும் ஜனங்கள் முன்னால் கொட்டி விடுவேன். பிறகு காலியான உள்ளத்தோடு ஆண்டவரிடம் வந்து, கர்த்தாவே, இதை மீண்டும் நிரப்பித் தாரும் என ஜெபித்துப் பெற்றுக்கொள்வேன்” என்றார்.

கர்த்தருக்குத் தெரியும், நான் எப்படியாக என் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவையும் உங்களுக்காக செலவிட்டேன் என்பது. என்னுடைய கால்களில் நரம்பு வீக்கத்தினால் ஏற்பட்டிருக்கிற கோளாறுகளைக் குறித்தோ, நரம்புமண்டலக் கோளாறுகளினால் எனது காது, எண்பது சதவீதம் கேட்கும் திறனை இழந்து போயிருப்பதையோ நான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. கடவுள் எனக்கு நியமித்த பணியை முற்றிலுமாக செய்வதே எனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டு உழைக்கிறேன். அவருடைய வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்கு போதித்து புத்தி சொல்லுவதே 46 ஆண்டு காலமாக என்னுடைய குன்றாத ஆர்வமும், தளராத ஈடுபாடுமாக இருந்தது. இதிலும் அப்போஸ்தலனாகிய பவுல் எனக்கு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்கிறார். தெசலோனிக்கேய சபையாரிடம் அவர் கூறுகிறார், “நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” (1 தெச 2:8).

  1. கடந்த 46 ஆண்டுகளாக இந்த ஊழியத்தில் என்னோடு இணைந்து பணிபுரிந்த சக ஊழியர்களையும், மற்றும் பல அலுவல்களில் உதவியாக இருந்தவர்களையும் மரியாதையோடும், கனப்படுத்தியும் நடத்தி வர கடவுளின் பெரிதான கிருபை எனக்கு உதவியாக இருந்திருக்கிறது.

அல்பர்ட் என். மார்டினாகிய நான் இந்த காலை வேளையிலே சுத்த மனசாட்சியோடு உங்களுக்கு முன்பாக கூறுவதாவது: கடவுளின் பெரிதான கிருபையினாலே, இந்த சபையை ஸ்தாபிப்பதிலும், அதன் வளர்ச்சியிலும், கர்த்தரால் எனக்கு மிக முக்கியமான பங்கு கொடுக்கப்பட்டதை பெரும் சிலாக்கியமாகக் கருதுகிறேன். இதை நான் உணராதவனாக இருந்தால் பெரும் முட்டாளாக இருப்பேன். ஆம், அது கடவுளின் சுத்த கிருபையினால் ஏற்பட்டது. டிரினிட்டி பாப்திஸ்து சபை, அல்பர்ட் மார்டினுடைய சபை அல்ல. அப்படி நினைத்தீர்களானால், நான் ஒழிந்து போவேனாக. “நான் சபையைக் கட்டுவேன், நரகத்தின் ஒலிமுக வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று கிறிஸ்து கூறின வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலே இந்த சபையாகும். ஆம், கிறிஸ்துவே இந்த சபையைக் கட்டினார். பலவிதமான வேலைகளுக்கும், ஊழியங்களுக்குமான வரங்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளித்து தமது திட்டத்தை அவர் நிறைவேற்றினார். இல்லாவிட்டால், நீங்கள் இன்று இருக்கிற வண்ணமாக இருந்திருக்க மாட்டீர்கள். இதை மிகவும் உறுதியாக நான் நம்புகிறேன்.

என்னை யாரும் தலைமைப் போதகர் அல்லது தலைமை ஊழியர் (Senior Pastor/Ministor) என அழைப்பதற்கு நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. திரித்துவ பாப்திஸ்து சபையின் அழைப்பிதழ்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் எனது பெயரை மற்ற சக ஊழியர்களைக்காட்டிலும் பெரிதாக்கி அச்சிடக்கூடாது என்பதில் நான் கண்டிப்பாக இருந்தேன். சிலருக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் நான் அதை விட்டுக் கொடுக்கவில்லை. அந்த வார்த்தைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆகவே நான் அவைகளை ஈவு இரக்கமின்றி ஒதுக்கி விட்டேன். 1976ஆம் ஆண்டில் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்கிற விஷயம் உங்களில் அநேகருக்குத் தெரியாது. ஜெனிவா காலேஜில் இருந்து எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of divinity degree from Geneva col- lege) அளித்தார்கள். அதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னால் எனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அதை ஏற்றுக்கொள்வதா என ஆலோசனை கேட்டேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். பட்டம் பெறப் போவதற்கு முந்தைய வாரத்தில் சபையாரிடம் நான் கூறினேன்: நான் இப்போது உங்கள் முன்னதாக பாஸ்டர் மார்டினாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். அடுத்த வாரத்திலே நான் பெனிசில்வேனியாவுக்குச் சென்று கௌரவ டாக்டர் பட்டம் பெறப் போகிறேன். நான், இங்கு வந்த பிறகு யாராவது என்னை டாக்டர் மார்டின் என்று அழைத்தீர்களானால், நீங்கள் உண்மையாகவே ஒரு டாக்டரை தேடிப் போக வேண்டிய நிலை ஏற்படும். ஜாக்கிரதை! என எச்சரித்து வைத்தேன். 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. அப்போது என் உடலில் அதிக பலம் இருந்திருக்குமல்லவா! அந்நாட்களில் இருந்தவர்கள் யாராவது இந்நிகழ்ச்சிக்கு சாட்சியாக இப்போது இங்கு இருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏன் அப்படிக் கூறினேன் தெரியுமா? இப்போது எப்படி அழைக்கப்படுகிறேனோ அப்படி அழைக்கப்படுவதையே நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். கிறிஸ்து ஏற்படுத்திய பல போதகர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவனாக நானும் அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். என்னோடு சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்ட சக ஊழியர்களும், உதவிக்காரர்களும், செயலாளர்களும் இந்த சபையின் வாழ்க்கையில், தங்களுடைய பணியின் நிமித்தமாக பாராட்டுகளையும், உரிய மரியாதையையும் பெற்றுக்கொண்டதை சாட்சியாக அறிவிப்பார்கள். எனது ஊழியத்திலும், வாழ்க்கையிலும் கர்த்தரின் பெரிதான கிருபையால் சக ஊழியர்களை மதிப்பும் மரியாதையுமாக நடத்தினேன்.

  1. பரிசுத்தஆவியானவராலே ஆட்கொள்ளப்பட்ட இருதயத்தையும், இயேசு கிறிஸ்துவோடு ஒப்புரவானதினாலே ஏற்பட்ட புதிதான ஜீவனையும் உடையவர்களாக ஆவதைக் காட்டிலும் மேலானது ஒன்றுமில்லை என்கிற நிச்சயம் உங்கள் இருதயங்களிலே ஏற்படும்படியாக, நான் கடந்த 46 ஆண்டுகளாக கடவுளின் பெரிதான கிருபையினாலே உங்கள் மத்தியிலே ஊழியம் செய்திருக்கிறேன்.

வேறுவிதமாக சொல்வோமானால், உண்மையான கிறிஸ்தவனாகிறது என்றால் என்ன என்று அறிந்திருக்கிறீர்கள். ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் அவன் புது சிருஷ்டியாக இருக்கிறான் என்று வேதாகமம் சொல்லுகிறது. பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. கடவுள் பழையவைகளை வைத்துக் கொண்டு ஒட்டுப் போடுகின்ற காரியத்தில் ஈடுபடுகிறவரல்ல. அவர் புது சிருஷ்டிகளை உண்டுபண்ணுகிறவராய் இருக்கிறார். நாம் நற்கிரியைகளை செய்யும்படிக்கு இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள புதுசிருஷ்டிகளாயிருக்கிறோம். சபையின் ஆரம்பநாட்களில், ‘உண்மையான கிறிஸ்தவனின் பிறப்படையாளங்கள்’ என்கிற தலைப்பின் கீழாக நான் 1 யோவான் நிருபத்திலிருந்து உங்களுக்குப் பிரசங்கித்தேன். பிற்பாடு மலைப் பிரசங்கத்தை எடுத்துக் கொண்டு வசனம் வசனமாக விளக்கினேன். அதில் 7: 13, 14 வசனங்களைப் படிக்கும்போது நாம் இடுக்கமான வழியைக் குறித்துப் பார்த்தோம். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்பதைப் படித்தோம். கடவுளால் மீட்கப்பட்டவர்களின் தொகை பரலோகத்தில் எண்ண முடியாததாகத்தான் இருக்கும். என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலே, குறிப்பிட்ட இடத்திலே ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே. அவர்கள் எவ்வளவுதான் பக்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் ஜீவனுக்குப் போகிற வாசலை ஒரு சிலர்தான் கண்டுபிடிப்பார்கள். அதை நான் உங்களுக்கு நன்றாக சுட்டிக் காட்டியிருக்கிறேன். தொடர்ந்து 21–- 23 வசனங்களை நாம் படித்தபோது கர்த்தாவே, கர்த்தாவே என அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறவனெல்லாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்பதையும் பார்த்தோம். பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே அதில் பிரவேசிப்பான். கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது அவர், அக்கிரமச் செய்கைக்காரரே, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. என்னைவிட்டு அகன்று போங்கள் என்று சொல்லுவார். இந்தக் காரியத்தையும் நான் ஆழமாக உங்களுக்குப் போதித்தேன். இப்படியாக நாம் அநேக வேதபகுதிகளைத் தொடர்ச்சியாக படித்து வந்தோம். அவைகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியான எச்சரிப்புகளை தேவன் அளித்திருக்கும் வசனங்களைத் தொடர்ந்து பல பகுதிகளில் படித்துக் கொண்டு வந்திருக்கிறோம். வஞ்சிக்கப்படாதிருங்கள். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவரால் உங்கள் இருதயமானது ஆட்கொள்ளும்படியாகவும், இயேசுவோடு இணைக்கப்பட்டதினால் முற்றிலும் புதிதாக்கப்பட்டதான வாழ்க்கையை நீங்கள் ஒவ்வொருவரும் அடையும்படியாகவும் கடந்த 46 ஆண்டுகளாக உங்கள் மத்தியிலே பணியாற்றி வந்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட புதிய வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக உணர்ந்துகொள்ளும்படியாக நான் உங்களுக்கு உதவியிருக்கிறேன். ஆகவேதான் அப்போஸ்தலனாகிய பவுலும் எபேசு மூப்பர்களிடம், பிரயோஜனமானவைகளில் நான் ஒன்றையும் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை என்று கூறுகிறார். அவைகளை வெளியரங்கமாகவும், வீடுகள் தோறும் பிரசங்கித்திருக்கிறார். அவர் பிரசங்கித்தவைகளின் முக்கியமான செய்தி என்ன? கடவுளிடமாக மனந்திரும்புங்கள். இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாயிருங்கள். ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலுக்கு மிகவும் தேவையானவைகளை அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறிக் கொண்டேயிருக்கிறார். சுயத்திற்கும், பாவத்திற்கும், உலகத்திற்கும் இடங்கொடாதிருங்கள் என வலியுறுத்துகிறார். நான் கடவுளுக்கு சொந்தமானவன், கிறிஸ்துவிடம் இருக்கிறேன். ஆகவே இவைகளுக்கு என்னிடத்தில் இடமில்லை என்று கூறிவிடுங்கள். கிறிஸ்துவின் மகிமையிலும், அவருடைய ஊழியத்தின் பரிபூரணத்திலும் அடைக்கலமாகிவிடுங்கள். எனது அருமையான மக்களே, என்னுடைய ஊழியத்தின் கீழாக இருந்தும் நீங்கள் நரகத்திற்குப் போவீர்களென்றால், என்னுடைய கரம் உங்களுடைய இரத்தப்பழிக்கு நீங்கலாகி சுத்தமா யிருக்கிறதென்று இன்று அறிக்கையிடுகிறேன். எத்தனை முறை நான் இந்த பிரசங்க மேடையில் நின்று, கண்ணீரோடு, “நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறீர்களா” என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கெஞ்சி யிருக்கிறேன்? உங்களுடைய மனசாட்சியே அதைக் குறித்து சாட்சியிடும்.

  1. நீங்கள் கிறிஸ்துவில் அதிகமதிகமாகப் பிரியம் வைக்கும்படியாகவும், அவரை நன்றாக அறிந்துகொள்ளவும், அவரைப் பிரியப்படுத்துகிறவர்களாக ஆகும்படியாகவும், கடவுளின் பெரிதான கிருபையினாலே, கடந்த 46 ஆண்டுகளாக நான் உங்கள் மத்தியில் உழைத்து வந்திருக்கிறேன்.

பவுல், ஒரு தேறின கிறிஸ்தவனாக, “நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும் . . .” என்று பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் தன்னை அடையாளங் காண்பிக்கிறார். கிறிஸ்துவை நேசிப்பதை தமது வார்த்தைகளால் உணர்த்துகிறார். “அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவே நாடுகிறோம்“ (2 கொரி 5:9). “என்று அவரால் சொல்ல முடிகிறது. பிலிப் 1:21ல் கிறிஸ்து எனக்கு ஜீவன் என்றும் கூற முடிகிறது. கிறிஸ்துவே எனக்கு முக்கியம்; ஆதாரம். எனக்குள்ளாக இருப்பவரும் அவரே, என்னை சூழ்ந்து இருப்பவரும் அவரே. உள்ளும் புறமும் எனக்கு அவரே என்று பலவிதங்களில் அவர் கிறிஸ்துவைத் தமது வாழ்க்கையில் அடையாளங்காட்டக்கூடியவராக இருக்கிறார். அவ்விதமாக நீங்களும் சொல்லக்கூடிய வகையிலேயே நான் உங்களுக்கு சுவிசேஷத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். சுவிசேஷம் அளிக்கின்ற அருமையான சாதனங்களை உங்கள் வாழ்க்கையில் உபயோகித்து ருசித்துப் பார்க்கும்படியாக வழிநடத்தியிருக்கிறேன். நீங்கள் கிறிஸ்துவில் வைத்திருக்கும் பிரியம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்படியாகவும், இன்னும் அவரை நன்றாக அறிந்துகொண்டு அவரை பிரியப்படுத்துதலில் அதிகமான ஈடுபாடுகொள்ளும்படியாகவும் நான் உங்களை நடத்தி வந்திருக்கிறேன்.

அப்படியானால் நீங்கள் என்னிடம் கூறுவீர்கள்: நல்லது, நீங்கள் மேற்கூறிய 6 காரியங்களையும் நல்மனசாட்சியோடு கடவுளுக்கு முன்னதாக கடைப்பிடித்து வந்திருப்பீர்களானால், இன்றைக்கு உங்களுடைய 46 ஆண்டு கால ஊழியத்தின் நிறைவின்போது நீங்கள் மிகுந்த மனமகிழ்ச்சியோடும், மிகுந்த நன்றியோடும் இருப்பீர்கள் அல்லவா! என்பீர்கள். ஆனால், நான் என்னுடைய 46 ஆண்டுகால ஊழிய வாழ்க்கையை திரும்பிப்பார்த்தாலும், அதில் இரண்டு முக்கியமான குறைகளைக் காண்கிறேன். அதை நினைக்கும்போது மிகவும் மனவருத்தம் அடைகிறேன். கடவுளின் சித்தத்திற்கு கிறிஸ்து பரிபூரணமாகக் கீழ்ப்படிந்ததினாலும், கடவுளின் சாபத்துக்குத் தன்னையே பரிகாரபலியாக ஒப்புக்கொடுத்ததினாலும் கிறிஸ்து அடைந்த நீதிக்குள்ளாக நானும் உட்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பதை நான் விசுவாசிக்கிறவன்தான். ஆனாலும் நான் செய்யாமல் விட்ட இரண்டு காரியங்கள், எனக்குள் பாவமாக இருந்துகொண்டு என்னை வேதனைக்குள்ளாக்குகிறது. அதில் ஒன்று, உங்களுக்காக நான் இடைவிடாமல் ஜெபிக்கத் தவறியது. பவுலின் நிருபங்களைப்படிக்கும்போது அவர் சபைகளுக்காக எவ்வளவு கண்ணீரோடும், வாஞ்சையோடும் ஜெபிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது அவருடைய ஜெபத்தின் ஆழத்தையும் அகலத்தையும் உணர முடிகிறது. அந்த அளவுக்கு நான் ஜெபிக்கவில்லை என்பதை நினைக்கும்போது மிகுந்த வேதனையடைகிறேன். ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய விதத்தைக்குறித்து நான் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அதிகமதிகமாக ஜெபிக்கவும், அடிக்கடி ஜெபிக்கவும், புதுப்பிக்கப்பட்ட உறுதியோடும் வாஞ்சையோடும் அநேகம் நல்ல வழிமுறைகளை சிந்தித்துக் கையாண்டிருக்கிறேன். கடவுளின் பெரிதான கிருபையால் எனக்குத் தெரிந்த அளவில் நான் உண்மையாக வாழ்ந்திருக்கிறேன். ஒருவேளை நான் இன்னும் அதிகமாக ஜெபித்திருந்தால் உங்களுடைய போராட்டங்களும் ஏமாற்றங்களும் குறைக்கப்பட்டிருக்குமோ என்பது எனக்குத் தெரியாது. அப்படியிருக்குமானால், அதிகமாக ஜெபிக்காத குற்றத்தை நான் கடவுளின் முன்னிலையிலும் உங்களிடமும் அறிக்கையிடுகிறேன். மன்னிப்பை வேண்டுகிறேன். இனிவரும் நாட்களில் கடவுளின் கிருபையினாலே அதை மேலும் சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.

போதகன் என்கிற முறையில், கடவுளின் மக்களாகிய உங்களை, நேரிடையாகவும், தனிப்பட்டவிதத்திலும் அடிக்கடி சந்திக்காமல் போனதை எனது இரண்டாவது குற்றமாகக் காண்கிறேன். என்னிடம் ஆலோசனை பெறவேண்டும் என்று வந்தவர்களில் ஒருவரையும் நான் வரவேற்காமல் போனதில்லை. நீங்கள் என்னிடம் பேசுவதற்கு வரும்போது நான் உங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் போதகன் என்கிற முறையில் நான் தனிப்பட்ட விதத்தில் உங்களை நேருக்குநேர் சந்தித்து உங்கள் காரியங்களில் ஆலோசனைகள் வழங்கத் தவறியிருக்கிறேன். பவுல் அதை செய்திருப்பதை அப் 20:20ல் காண்கிறேன். வெளியரங்கமாக மாத்திரமல்ல, வீடுகள்தோறும் பிரசங்கித்து, உபதேசித்து வந்திருக்கிறார். கொலோசெயரிலும் அதைக் காண்கிறோம் -“எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ 1:21) என்கிறார். மேலும், “தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், தேறுதலும், எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்களே” என்று 1 தெச 2:12ல் பவுல் குறிப்பிடுகிறார். இவைகளைப் படிக்கும்போது என் மனசாட்சி என்னை வாதிக்கிறது. இந்த அளவுக்கு நான் ஒரு நல்ல போதகனாக இல்லையே என மனம் வருந்துகிறேன். உங்களுடைய வாழ்க்கையிலே பிரச்சனைகள் இருந்தது. நான் ஒரு போதகன் என்கிற முறையிலே தனிப்பட்டவிதத்திலே உங்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கியிருந்திருக்கலாம். காலம் கடந்துவிட்டது. இனி நான் திரும்பப் போய் அவைகளை சரிப்படுத்த முடியாது. ஆனால் அதை உங்கள் முன்னிலையாக அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுகிறேன். அவைகளின் மூலமாக எனக்கு ஒரேயொரு நல்ல காரியம்தான் நடந்திருக்கிறது. அது எனக்கு ஒரு மாபெரும் உண்மையைக் கற்றுக் கொடுக்கிறது. எனது ஊழியத்தில் நான் செய்ததாகக்குறிப்பிட்ட அந்த 6 நற்காரியங்களும் இருந்தாலுங்கூட, நான் கடவுளின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட அவை ஒருபோதும் போதாது என்கிற உண்மையை அது ஞாபகப்படுத்துகிறது. எனது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினாலும், சிலுவையின் மரணபரியந்தமும் அவர் தன்னைத் தாழ்த்தியதாலும் அடைந்த நீதியினால் மாத்திரமே நான் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவேன் என்கிற உண்மையை அது நினைவுபடுத்துகிறது. அந்த நீதியின் வஸ்திரத்தின் ஒரு நூலாகிலும் அல்பர்ட் மார்டினுடைய ஊழியத்தின் பலனாக உண்டானதல்ல.

இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தில் ஜெபம் பண்ணுகிற சந்தர்ப்பங்களிலெல்லாம் ஜெபித்தாரே தவிர, ஜெபத்தில் பிரசங்கிக்கவில்லை. அதேபோல், அவர் பிரசங்கிக்கும்போது, பிரசங்கித்தாரேயொழிய பிரசங்கத்தில் ஜெபிக்கவில்லை. ஒரு கூட்டத்தாரிடம் ஜெபஆலயத்திலோ, படகிலிருந்தோ அல்லது வேறுவிதமான சூழலில் இருந்தோ பேசும்போது அவர் கூட்டத்திற்குப் பேசினார். தனிப்பட்டவர்களிடம், கிணற்றண்டையில் வந்த ஸ்திரீயிடமோ அல்லது இரவில் வந்த நிக்கொதேமுவிடமோ பேசும்போது அவர் தனிப்பட்டவிதத்தில் பேசினார். ஜெபித்தல், பிரசங்கித்தல், கூட்டத்திற்குப் பேசுதல், தனிமனிதனிடம் பேசுதல் போன்ற தனது ஊழியத்தின் எல்லா நிலைகளையும் அவர் வெகுதிறமையாகக்கையாண்டு பிதாவின் சித்தத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றினார். அவருடைய நீதியில் கீழ்ப்படிதலுக்கும் மாபெரும் பங்குண்டு. அல்பர்ட் மார்டினாகிய நான் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, இயேசு கிறிஸ்துவின் நீதியையே சார்ந்திருக்கிறேன். அவருடைய நீதியின் செட்டை களின் கீழாக நான் மறைக்கப்பட்டிருக்கிறேன். நான் செய்தவைகளோ அல்லது செய்யாமல் போனவைகளோ இயேசுவின் நீதிக்கு முன்பாக ஒன்றுமில்லை. தேவன் எதிர்பார்க்கிற நீதி என் இரட்சகரால் எனக்குப் பரிபூரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதோ, நான் 6 காரியங்களை உங்களுக்கு முன்பாக வைத்தேன். எனது முழு மனசாட்சியோடும் நான் அவைகளில் உண்மையாக நடந்தேனென்று கூறிக் கொண்டு உங்களைவிட்டு செல்லப் போகிறேன். மற்ற 2 காரியங்களை நான் சரிவர செய்யாமற்போனதினிமித்தமாக குற்றமனப்பான்மையுள்ளவனாகவும் இருக்கிறேன்.

இதை முடிப்பதற்கு முன்பாக கடவுளின் ஜனமாகிய உங்களிடம் நான் சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். பவுல் அப்போஸ்தலன் பிலிப்பிய சபையாரிடம் கூறியது போலவே நானும் உங்களிடம் சொல்ல முடிவது கர்த்தருடைய பெரிதான கிருபையினால்தான். “சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம் பண்ணி, உங்களில் நற்கிரியையைத்தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்” (பிலிப் 1:3-5). இதைத்தான் நானும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். கடந்த 46 ஆண்டு காலமாக கடவுளின் பெரிதான கிருபையினாலே நீங்கள் கர்த்தருடைய வசனங்களுக்குக்கீழ்ப்படிந்திருப்பதை செயலில் காண்பித்து வாழ்ந்தீர்கள். அதுவே எனது ஊழியத்தை சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் செய்வதற்கு உதவியாக இருந்தது. நான் ஊழியத்தின் நிமித்தமாக உலகெங்கும் செல்லும்போது அவ்விடங்களில் உங்களைக் குறித்து எவ்வளவு பெருமையாகப் பேசினேன் என்பதைக் கேட்டீர்களானால், வெட்கத்தினால் முகம் சிவந்து போவீர்கள். ஊழியத்தின் நிமித்தமாக செல்லும் இடங்களிலும், போதகர்களுக்கான கூட்டங்கள் நடத்தும்போதும் பலர் என்னைக் கேள்வி கேட்பார்கள். நீங்கள் வசனத்தை எடுத்துச் சொல்லியும், வசனத்தை நன்றாகப் போதித்தும் அதைக் கேட்பவர்கள் அதற்குக் கீழ்ப்படியாமல் அதற்குத் தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்களானால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள். இதற்கு வேதாகமத்திலிருந்து சில அடிப்படைக்கொள்கைகளைத்தான் என்னால் பதிலாகத் தரமுடியும் என்று கூறுவேன். அந்தவிதமான நிலைமை நான் ஊழியம் செய்த இந்த இடத்திலே வராமல் இருந்ததற்காக நான் கடவுளை நன்றியோடு துதிக்கிறேன். பவுலைப் போலவே நானும் உங்களைக் குறித்தும் உங்களுக்காகவும் சாட்சிகூற முடியும். கொரிந்து சபையாரைக் குறித்து பவுல் பெருமைப்பட்டுக்கொண்டார். மக்கெதோனியா சபையாரைக் குறித்து அவர் புகழ்கிறார். அதைக் குறித்து 2 கொரி 7:14, 8:24 ஆகிய வசனங்களில் எழுதுகிறார். கடவுளுடைய ஜனங்களைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். கடவுளின் கிருபை அவர்களில் செயல்படுவதைக் கண்டு புகழுகிறார். ஊழியம் சம்பந்தமான வகுப்புகளுக்கு வரும் ஆண்களிடம் நான் கூறுவதுண்டு: நீங்கள் முழுமனதோடு ஊழியத்தில் ஈடுபட விரும்புவீர்களானால், ஒன்றை நினைவில் வையுங்கள். ஊழியத்தில், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்திற்கே இடமில்லை. கர்த்தருடைய வார்த்தையை ஜனங்களுக்கு முன்பாக அறிவியுங்கள். அவர்கள் அவைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உடனடியாக இடத்தை காலிசெய்து வேறு இடத்திற்கு சென்று, அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற மற்ற ஜனங்களிடம் கடவுளின் வார்த்தையை அறிவியுங்கள். கடவுளின் வார்த்தையை ஏற்க மனதில்லாதவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடையாது. வசனத்தின் மூலமாக கிறிஸ்து பேசுவதைக்கேட்க மனதில்லாதவர்கள் தங்களுக்குரியதை அடைந்தாயிற்று. கடந்த 46 ஆண்டுகளாக நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருந்ததைக்கண்டு நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனுடைய வார்த்தையை நன்றாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பிரசங்கங்களை நீங்கள் முழுமனதோடும் ஏற்றுக் கொண்டு அவைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். கடவுள் வெளிப்படுத்தித் தருபவைகளை விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டு அவைகளுக்குக் கீழ்ப்படிய எப்பொழுதும் ஆயத்தமாக இருந்தீர்கள். அதனால்தான் எபிரெயருக்கு எழுதின ஆசிரியர், தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து, உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்துப் பாருங்கள் என்று சொல்லுகிறார். நடத்தினவர்கள் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமலா போதித்தார்கள்? தேவனுடைய வார்த்தையைப் போதிக்கிறவர்கள் அல்லவா அவர்கள்! எனது ஊழியத்தின் 46 ஆண்டு கால முடிவில் நான் இன்று உங்களுக்கு முன்பாக நின்று உங்களைப் புகழ்ந்து பேசுகிறேன். எனக்குப் பிறகு உங்களை தேவனுடைய வழியில் நடத்துவதற்கு இங்கு நான்கு போதகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை கர்த்தர் வரத் தாமதமாகுமானால், இவர்களுடைய ஊழிய காலத்தின் முடிவில், நான் இன்று உங்களைக் குறித்து பெருமைப்படுவது போலவே இவர்களும் உங்களைக் குறித்து பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடியதான வாய்ப்பை அவர்களுக்குத்தருவீர்களா? தருவீர்கள் என்றுதான் நம்புகிறேன். இவர்கள் கர்த்தருடைய வசனத்தை உண்மையாக உங்களுக்குப் போதிப்பார்கள். கர்த்தருடைய வசனங்களுக்குக் கீழ்ப்படிவதின் மூலமாக, நீங்கள் கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.

அடுத்தபடியாக, நான் உங்களிடம் கூற விரும்புவது, 46 ஆண்டுகளாக நீங்கள் என்னுடைய குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாமல் என் மீது அன்பு செலுத்தி வந்திருக்கிறீர்கள். எனது நடை, உடை, பாவனைகளில் அக்கறை செலுத்தியிருக்கிறீர்கள். எனது உடைகளைத் தெரிவு செய்வதுகூட சபையின் உதவிக்காரர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெள்ளை நிற சட்டை அணிந்து நான் மேடைக்கு வரக்கூடாது என்பது அவர்களின் அன்பின் கட்டளை. ஏனென்றால் பிரசங்க மேடையின் பின்னணி வெண்மையாக இருப்பதால், நானும் வெள்ளையுடை அணிந்து வந்தால், நேரிலும் வீடியோவிலும் பார்ப்பவர்களுக்கு எனது கையும் முகமும் மாத்திரந்தான் தெரியும் என்பதால் எனக்கு அந்த தடையுத்தரவு. அன்பின் மிகுதியினால் நீங்கள் அப்படி செய்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய வாழ்க்கையின் கஷ்டமான காலங்களில் நீங்கள் எனக்காக ஜெபித்து வந்திருக்கிறீர்கள். இத்தனை காலங்களில் எனக்கு நடந்த பல அறுவை சிகிச்சைகளின்போதும் ஜெபித்திருக்கிறீர்கள்; என்னுடைய பிள்ளைகளுக்காக ஜெபித்திருக்கிறீர்கள். என்னோடு சேர்ந்து அழுதிருக்கிறீர்கள். எனது மனைவி மெரிலின் புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கையில் எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறீர்கள். மரணத்தினால் ஏற்பட்ட பிரிவின் துக்கத்தில் ஆறுதலாக இருந்திருக்கிறீர்கள். என்னுடைய சந்தோஷங்களில் சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள். எனது 72ம் வயதில், தேவன் எனது அருமை டோரத்தியை எனது வாழ்வில் இணைத்த போது நீங்களும் என்னோடுகூட சேர்ந்து மகிழ்ந்தீர்கள். நான் இவைகளையெல்லாம் கற்பனையில் கூறவில்லை. இவை யாவும் நிஜங்கள். கடவுளின் பெரிதான கிருபையால் நீங்கள் என் மீது அன்பு செலுத்தினீர்கள். எனது துக்கங்களில் எனக்காக ஜெபித்தீர்கள். இவைகளுக்காக நான் என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். கடவுள் எனக்கு இன்னும் கொடுத்திருக்கும் ஆயுட்காலத்தில் நான் அவருடைய ராஜ்யத்துக்காக எவ்விதத்தில் பணியாற்றலாம் என்பதைக் குறித்து நீங்கள் தொடர்ந்து ஜெபிப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதுவே எனது ஆவலும் ஈடுபாடும் என்பதால் நீங்கள் ஜெபிப்பீர்கள் என்பதை அறிவேன். எனது சரீரத்தில் இருக்கும் உபாதைகளோடு தொடர்ந்து நான் அவருடைய பணியை கடைசி வரை செய்ய தேவன் உதவி செய்வார். எனது காதுகளில் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் எவ்வளவு சத்தமாக பேசுகிறேன் என்பதை என்னால் உணரமுடியவில்லை. ஒருவேளை அளவுக்கதிகமாக சத்தமிடுகிறேனோ அல்லது மிகவும் மெதுவாகப்பேசுகிறேனா என்பதில் எனக்குக் குழப்பம் ஏற்படும். என்னுடைய முதுகில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகள், காலில் ஆர்த்தரைட்டிஸ் போன்றவற்றின் மருத்துவ அறிக்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால் நான் எப்படி நின்று கொண்டு பேசுகிறேன் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். இவையெல்லாம் முதுமையினால் எனக்கு ஏற்பட்ட நண்பர்கள். கடவுள் அற்புதமாக இவைகளை நீக்கினால் தவிர, நான் இவைகளோடுதான் என் வாழ்நாள் முழுவதையும் கழித்து முடிக்க வேண்டும். உங்களுடைய அனுதாபத்தைப் பெறவேண்டுமென்பதற்காக நான் இவைகளைக் கூறவில்லை. சுறுசுறுப்போடும், பெலத்தோடும் ஊழியம் செய்து கொண்டிருந்த வயதில் நான் இப்போது இல்லை. முதுமை காரணமாகப் பல விதங்களில் எனது சரீரம் பெலனற்றுப் போய்விட்டது. ஆனாலும் எனது கடைசி மூச்சு உள்ளவரையிலும் எனது இரட்சகருக்கு பணியாற்றவே விரும்புகிறேன். நான் பலபேரிடம் சொல்லியிருக்கிறேன், “நான் எனது கடைசி காலங்களை சாய்வு நாற்காலியில் அமர்ந்து கழித்துப் போட்டு பரலோகம் செல்வதை விரும்பவில்லை; மாறாக எனது ஆண்டவரின் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டே இறந்து போவதையே விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறேன். ஆகவே, யாராவது உங்களிடம் வந்து, உங்கள் போதகர் அல்பர்ட் மார்டின் ஓய்வு பெற்றுவிட்டாராமே என்று கூறினால் அவர்களை சும்மா விடாதீர்கள். “இல்லை, நீங்கள் தவறாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். யார் உங்களிடம் அப்படி கூறினார்கள் எனத் தெரியவில்லை. அவரே எங்களிடம் நேரிடையாகக் கூறியிருக்கிறார். அவர் ஒருபோதும் ஓய்வுபெறப்போவதில்லை. அவர் தாம் வசிக்கின்ற இடத்தைதான் மாற்றியிருக்கிறார். டிரினிட்டி பாப்திஸ்து சபையின் பிரதானமான கடினமான பணிகளை செய்து வந்த நிலையை சற்று மாற்றி வேறுவிதமான பணிகளை செய்யவிருக்கிறார்” என்று அவர்களிடம் சொல்லுங்கள். கடவுள் எனக்கு இனிமேல் என்ன பணிகளை வைத்திருக்கிறாரோ அதை நான் செய்வேன். இளம் பருவத்தினரை கடவுளின் வழியில் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் வேலையை அவர் எனக்கு அளித்தாரென்றால் அதை நான் செய்வேன். அல்லது எழுத்துப் பணியைக் கொடுத்தாரென்றால் அதை செய்வேன். அவர் எனக்கு என்ன வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் எனக்கு எவ்வளவு காலம் ஆயுளைக்கொடுப்பாரோ அதுவரைக்கும் நான் செய்யக்கூடிய பணிகளை அவர் நிச்சயமாக எனக்கு வைத்திருக்கிறார் என நான் நம்புகிறேன். உங்களுடைய அன்பும், ஜெபங்களும் தொடர்ந்து என்னைத் தாங்கும் என்பதையும் நான் நம்பி அதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இரண்டு வேதவசனங்களைக் கூறி இந்த செய்தியை முடிக்க விரும்புகிறேன். முதலாவது 1 தெச 2:19, “எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்”. என்னுடைய அருமையான மக்களே, நீங்கள் என்னுடைய வாழ்நாளின் கிரியையாயிருக்கிறீர்கள். ஓர் ஆலயத்தைக்கட்டின மேஸ்திரி, ஜனங்களிடம் இந்த ஆலயத்தின் கற்களை நான்தான் அமைத்தேன். அதன் மேற்கூரையையும் கட்டினேன், இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று சொல்லிக்கொள்ளுவான் அல்லவா? நீங்களே எனது ஊழியத்தின் கிரியைகளாக இருக்கிறீர்கள். இந்த ஊழியத்தை எனக்குத் தந்த தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டவர்களாக, அவருடைய வார்த்தையில் நிலைத்து வாழும்போது, ஒரு நாளிலே பிரதான தூதனுடைய எக்காளம் தொனிக்கையிலே, இயேசு கிறிஸ்து மீண்டுமாக வருகையிலே நீங்களே எனக்கு மகிழ்ச்சியின் கிரீடமாக இருப்பீர்கள். அப்போஸ்தலனின் மொழியில் சொல்வதானால், கிறிஸ்துவுக்கு முன்பாக உங்களை ஒரு கற்புள்ள கன்னிகையாக நிறுத்த நான் ஆசைப்படுகிறேன்.

அப்படி இருக்கும்பட்சத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிற இரண்டாவது வசனம், “நீங்கள் பக்திவிருத்தி அடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்” - அப் 20:32. கர்த்தருடைய ஊழியர்கள், கர்த்தருடைய வசனத்தைக் கொண்டு இவ்விடத்திலே வருங்காலத்திலே ஊழியம் செய்யும்போது, அவ்வசனங்கள் உங்களைப் பாதுகாக்கும், உங்களை மேன்மேலும் ஆவிக்குரிய வழியிலே வளரச் செய்து பூரணப்படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதன்காரணமாக நீங்கள் ஒரு சபையாக சேர்ந்து பலருக்கும் பிரயோஜனமாக இருப்பீர்கள். எவ்விதத்தில் என்பதை நீங்கள் இப்போது அறியாவிட்டாலுங்கூட இந்த சபை அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும். கடவுள் இவ்விடத்திலுள்ள தமது ஜனங்களை ஆசீர்வதிக்க சித்தங்கொண்டிருக்கிறார் என்பதை நான் என் முழுமனதினாலும் நம்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாள் வரும்வரைக்கும் இந்த இடத்திலே தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதை எனது ஜெபமாக ஏறெடுக்கிறேன். சிலபேருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை நான் அறிவேன். பாருங்கள், போதகர் அல்பர்ட் மார்டின் சென்றவுடனே இந்த சபை அவ்வளவுதான், அதற்கு ஒரு முடிவு வந்துவிடும் என நினைக்கிறவர்கள் உண்டு. ஆம், நல்நம்பிக்கையற்ற மனப்பான்மையுள்ளவர்கள் எங்கும் உண்டு. அவர்கள் நினைப்பது தவறு என்று அவர்களுக்கு நீங்கள் நிருபித்துக்காண்பியுங்கள். கிறிஸ்துவோடு நீங்கள் கொண்டிருக்கிற உறவின் மூலமாக நிருபியுங்கள்; கிருபையுள்ள அவருடைய வசனத்துக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடப்பதின் மூலமாக கிறிஸ்துவே இந்த சபைக்குத் தலைவராகவும் ஜீவனளிப்பவராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை வருங்காலங்களிலே அவர்களுக்கு உணர்த்துங்கள்.

(முடிவு)

போதகர் அலன் டன் எழுதிய “தாம்பத்திய உறவில் நெருக்கம்”
என்ற புத்தகத்தைப் பற்றி . . .

மணவாழ்வு பற்றிய தெளிவான இறையியல் போதனையையும், தாம்பத்திய உறவில் நடைமுறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தையும் விளக்குகின்ற நான் வாசித்திருக்கும் அத்தனை நூல்களிலும் மிகச் சிறந்த நூலாக நான் அலன் டன்னின் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற நூலைக் கருதுகிறேன். என்னுடைய வாழ்நாளில் மண வாழ்க்கை பற்றி நான் வாசித்திருக்கும் அத்தனை நூல்களிலும் இந்த நூல் மட்டுமே கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இருக்கும் உறவையும், அதன் பிரிக்க முடியாத உடன்படிக்கையின் அடிப்படையிலான நெருக்கத்தையும் விளக்குகின்ற பவுலின் போதனைகளை தோலுரித்துக்காட்டுகின்ற அளவுக்கு நெருங்கி வந்திருக்கிறது. நான் திருமணம் செய்து வைக்கின்ற இளம் தம்பதியர்களுக்கும், தங்களுடைய திருமண நாளைக் கொண்டாடும் திருமணமான தம்பதிகளுக்கும் நான் பரிசாக வாசிக்கக் கொடுக்கும் எனக்குப் பிடித்தமான நூலாக இது இருக்கிறது. உங்களுடைய திருமண வாழ்க்கை ஆழமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற இந்த நூலை வாசியுங்கள். அத்தோடு இதன் பல பிரதிகளை வாங்கி உங்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுங்கள்.

Dr. Joel Beeke, President of Puritan Reformed

Theological Seminary, Grand Rapids, USA

 

தாம்பத்திய உறவில் நெருக்கம்

- அலன் டன் -

அத்தியாயம் 11: வேதபூர்வமற்ற வார்த்தைப் பரிமாற்றமாகிய சவால் (தொடர்ச்சி)

உடலுறவின்போது வார்த்தைப் பரிமாறல்

தாம்பத்திய உறவில் உடலுறவிற்கு ஆரம்ப கட்டமாக இருப்பதற்காக மட்டும் கணவன் மனைவியிடம் அன்பு

காட்டுகிறவனாக இருக்கக் கூடாது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். ஆனாலும் கணவன்-மனைவி சரீர உறவிற்கு இவை அவசியமானதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. மீண்டும் ஹார்லியின் கருத்தைப் பார்ப்போம். “கணவன்-மனைவியிடையே உடலுறவு சரியானதாக அமையவில்லை என்றால், அன்புசெலுத்துதலில் ஏதாவது குறை வைத்திருக்கிறீர்களா என்பதை கவனியுங்கள். சரியான சூழ்நிலை இல்லையென்றால் அநேக பெண்களுக்கு உடலுறவு இயல்பாக இராது. அது, இயற்கையாக இராமல், திட்டமிட்டு நடத்தப்படுவதாக உணர்வார்கள். தனக்கு அதில் இன்பம் இருக்கப் போவதில்லை என்பது தெரிந்தாலுங்கூட, அவர்கள் கணவனுக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடன்படுவார்கள்.” “பிரியம் இல்லாமல் ஒரு பெண்ணின் சரீரத்தேவை பூர்த்தியடையாது.” திருமண வாழ்வில், உடலுறவு சரியாக நடைபெற, அன்புசெலுத்துதல் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்குகிறது. பிரியமான சூழ்நிலையை ஏற்படுத்துவது கணவனுடைய பொறுப்பு என்பதைப் பார்த்தோம். ஹார்லே மேலும் கூறுகிறார்: “மனைவியானவளுக்குத்தேவைப்படுகிற பிரியம் கிடைக்காததாலும், கணவனுக்குத் தேவையான உடலுறவு கிடைக்காததாலும்தான் பெரும்பாலான கள்ளத்தொடர்புகள் ஏற்படுகின்றன. தம்பதிகள் ஒருவர் தேவையை ஒருவர் நிறைவேற்றாததால், அவர்கள் இந்தவிதமான சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். கணவன் பிரியமாயிருக்கவில்லை; அதனால் மனைவிக்கு உடலுறவில் நாட்டமில்லை. அதன்காரணமாக அவனுக்கு அவள் மீது இன்னும் பிரியம் குறைகிறது. இப்படியாக அவர்களே தங்களுக்கிடையே பெரும் இடைவெளி ஏற்பட காரணமாகிவிடுகிறார்கள். திருமண நெருக்கத்திலிருந்து திசைமாறிச்செல்கிறார்கள். தங்களுக்குள்ளாக தனித்தனியே ஓர் உலகத்தை அமைத்துக் கொண்டு விலகி வாழுகிறார்கள். மனக்கசப்புடையவர்களாயும், உணர்ச்சியற்றவர்களாயும், வெறுப்படைந்தவர்களாயும் வாழத் தொடங்கி, முடிவில் பிரிவாகிய மரணத்தை நோக்கி பயணிக்கிறவர்களாகிறார்கள். திருமணத்தில் உடலுறவைக் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. திருமண நெருக்கத்தில், நாம் நினைப்பதைக்காட்டிலும் இந்த விஷயமானது அதிக அர்த்தம் நிறைந்ததாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது. இதைக் குறித்து ஆராய்கிற பயணத்தில் நமக்கு நமது நான்கு நட்சத்திரவழிகாட்டிகளின் உதவியுமே அவசியமாயிருக்கிறது.

“கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் “கொண்டு உடலுறவின் நெருக்கத்தைக் குறித்ததான காரியங்களை ஆராய வேண்டும். திரித்துவ கடவுளின் ஒன்றான தன்மைக்கு நமது உடலுறவின் நெருக்கம் உருவகமாக இருக்கிறது.

“படைப்பின் தத்துவமாகிய” நட்சத்திர வழிகாட்டியைக் கொண்டு உடலுறவை நோக்குகையில், கடவுள் படைப்பில் மனிதனை பாலின வேறுபாடுகளைக் கொண்டவனாகப் படைத்து, அதை நல்லதென்று கண்டார் எனப் பார்க்கிறோம். ஆதாமையும் மனுஷியையும் படரூபமாக மோசே ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தின் முடிவிலே காண்பிக்கும்போது அதிலுள்ள சத்தியத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருந்தபோதும் வெட்கப்படாதிருந்தார்கள் என எழுதுகிறார்.

“வீழ்ச்சியின் சரித்திரமாகிய” நட்சத்திர வழிகாட்டியின் வெளிச்சத்தில் நாம் இந்த உடலுறவை ஆராயும்போது என்ன அறிகிறோம்? அந்த ஒற்றுமையான தம்பதிகள் பாவத்தின் வீழ்ச்சியினாலே, தங்களுக்குள்ளே பிரிவை ஏற்படுத்திக் கொண்டவர்களாக, அத்தியிலைகளைக் கொண்டு தங்களை மூடிக் கொண்டவர்களாக விலகி நிற்பதைக் காண்கிறோம். பாவத்தின் வீழ்ச்சியினாலே சரீர நெருக்கம் அங்கே அற்றுப்போனது.

“மீட்பின் கோட்பாடாகிய” நட்சத்திரம், உடலுறவைக் குறித்து சுட்டிக்காட்டு உண்மையாவது: கிறிஸ்தவ தம்பதிகளின் சரீர நெருக்கம், மீட்பின் அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளது. தேவன் ஆதியிலே ஏற்படுத்திய திருமண ஒழுக்கம் நமது கிறிஸ்தவத் திருமணங்களில் காணப்பட வேண்டும். பவுல் கிறிஸ்தவத் திருமணத்தைக் குறித்து எபே 5ஆம் அதிகாரத்தில் கற்றுத் தருகிறார். அதற்கு இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சபையையும் முன்மாதிரியாக வைக்கிறார். நாம் புரித்து கொள்தற்காக ஆதி 2:24ஐ அடித்தளமாகக் கொண்டு எபே 5:31ல் புத்தி கூறுகிறார்: “இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது”. அற்புதமாகவும், ஆச்சரியப்படும்படியாகவும், சுவிசேஷ அன்பை ஒருவர் பேரில் ஒருவர் செலுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறவர்களாகிய நாம், சுவிசேஷத்தில் இணைக்கப்பட்டு, உயர்த்தப்பட்டிருக்கிற அந்த ஆரம்ப திருமண ஒழுக்கத்தை, கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியாக, நமது திருமண வாழ்வில் வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம்.

எபி 13:4ல் தேவன் திருமண நெருக்கத்தைக் குறித்துக் கூறுகிற புத்திமதியை நாம் கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாகவும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயும் இருப்பதாக. வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்”. திருமணத்தை ஓர் அமைப்பாகக் கருதி அனைவரும் அதை மதிக்க வேண்டும். திருமணத்தை உயர்வானதாகவும், மரியாதைக்குரியதாகவும், விலையேறப் பெற்றதாகவும் கருத வேண்டும். திருமணத்தின் அடையாளச்சின்னமாகிய திருமண மஞ்சத்தை மதித்துப் போற்ற வேண்டும். கிரேக்க மொழியிலே திருமண மஞ்சம் என்கிற வார்த்தை உடலுறவைக் குறிக்க பயன்படும் பதமாயிருக்கிறது. திருமண மஞ்சம் என்பது உடலுறவை மறைமுகமாக வெளிப்படுத்தும் வார்த்தையாகும். உடலுறவை எல்லாரும் மதித்து அதன் மேன்மையை இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும் என கடவுள் கட்டளையிடுகிறார். அசுசிப்படுதல் என்கிற வார்த்தையானது பழைய உடன்படிக்கையின் சுத்தப்படுத்தும் சடங்கு முறைமைகளோடு சம்பந்தப்பட்டது. கறைகள், ஒழுக்கக்கேடு ஆகியவைகளை நீக்கி சுத்தப்படுத்துதலோடு சம்பந்தமுடையது. திருமணத்தின் மூலமாக வரும் உடலுறவு பரிசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அது கறை இல்லாதது. திருமணத்தின் மூலமாக ஏற்படும் உடலுறவை தேவன் பரிசுத்தப்படுத்தி, அதை நல்லதென்று கண்டு, அதை மனிதனுக்கு அனுமதித்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் துணையோடு உடலுறவில் ஈடுபடும்போது, தேவனும் அங்கே உங்களோடு இருக்கிறார் என்கிற எண்ணம் எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? அதைக் குறித்து நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் வேதபூர்வமாக அதை சிந்தித்துப் பார்த்தீர்களானால், அது ஒரு உற்சாகமளிக்கிற உயர்தரமான சிந்தனையாகும். நீங்கள் ஒரே மாம்சமாக இருக்கும்போது, கடவுளைக்குறித்ததான ஒரு காரியத்தை வெளிப்படுத்துகிறீர்கள். திரித்துவ கடவுளாகிய அம்மூவரும் ஒன்றாயிருப்பதின் தன்மையை அவர் கொடுத்திருக்கும் நெருக்கத்தில் நீங்கள் அங்கு அனுபவிக்கிறவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரிலொருவர் சந்தோஷமாயிருக்கிற உங்களுடைய நெருக்கத்தில் அவருடைய சாயல் வெளிப்படுவதைக் கண்டு அவர் மகிழுகிறார். நீங்கள் ஒரே மாம்சமாயிருக்கும்படி அவர் உங்களை படைத்தார். உங்களுடைய உடலுறவையும் நல்லதென்று அவர் தன் படைப்பில் கண்டார். குமாரனுக்கு அவரது மணவாட்டியின் மீதுள்ள அன்பானது, பக்தியுள்ள, சுவிசேஷம் நிறைந்த திருமணங்களின் மூலமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு தேவன் மகிழ்ச்சியுறுகிறார். உடலுறவுக்கு வேதபூர்வமான விளக்கத்தைக்கொடுத்துப் பாருங்கள். அதன்பின் அது பரிசுத்தம் நிறைந்ததாகவும், ஆசீர்வாதங்கள் நிறைந்ததாகவும், கடவுள் அது எப்படியிருக்க வேண்டுமென அமைத்துக் கொடுத்தாரோ அதன்படியேயும் அமையும். தனது சாயலை வெளிப்படுத்துவதற்கு கடவுள் தெய்வீகமாக ஏற்படுத்திக் கொடுத்த இந்த அன்பின் அமைப்பை மீறுபவர்களை நியாயந்தீர்ப்பேன் என கடவுள் எச்சரிக்கிறார். “வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்”. பரிசுத்தமாக நடப்பவர்களையும், உடலுறவை இழிவுபடுத்தாமல் இருப்பவர்களையும் தேவன் ஏற்றுக் கொண்டு அவர்களை கனப்படுத்துவார் என்கிற அர்த்தமும் இதில் அடங்கியுள்ளது.

திருமணத்தைக் குறித்து கடவுளின் பார்வை என்னவென்று அறிந்தோம். அதுமாத்திரமல்லாமல் தேவன் திருமணத்தை நமக்கு முன்னேற்பாடான பாதுகாப்பாகவும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை 1 கொரி 7:2-5 வசனங்களில் காண்கிறோம்.

ஆகிலும், வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும். புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையாயிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டி விடாதபடிக்கு மறுபடியும் கூடி வாழுங்கள்.

கடவுள் மனிதகுலத்துக்குத் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். உலகில் எங்கும் நிறைந்து காணப்படுகின்ற துன்மார்க்கமான காரியங்களையும், விபச்சாரத்தனங்களையும் கருத்தில் கொண்டு தேவன் திருமணத்திற்குள்ளாக உடலுறவை அனுபவிக்கும்படி யாக விசுவாசிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். “அவனவன்/ அவளவள் . . . உடையவர்களாய்” என்று பவுல் மேற்கூறிய வசனத்தில் குறிப்பிடுவதில், “உடையவர்களாய்” என்பது உடலுறவுக்காக தனக்கென சொந்தமாய் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய உறவு என்கிற பொருள்படும். பழங்காலத்தில், திருமணத்தில் வாக்குக்கொடுக்கையில் இந்தவிதமான வார்த்தைகள் சொல்லப்படும்: “To Have and To Hold” (உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளவும், உன்னை ஆதரிக்கவும் வாக்குக்கொடுக்கிறேன்). இந்த வார்த்தைகள் உடலுறவுக்கு அனுகூலங்களாக சொல்லப்படுபவை. உடலுறவைப் பொறுத்த அளவில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்று 1 கொரி 7:3ல் பவுல் கூறுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர்களா? ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கடமைகளா? பெண்ணுரிமைவாதிகள் கூறுவது போலில்லையா? பரிசேயக் கூட்டத்தைச் சேர்ந்த பவுலா இப்படி எழுதுகிறார்? அவர் இருந்த நாட்களில், அவர்களுடைய சமுதாயத்தில் பெண்கள் கீழானவர்களாக நடத்தப்பட்ட காலத்திலா பவுல் இம்மாதிரியாக எழுதுகிறார்? ஆச்சரியமாக இருக்கிறதே! தமது கலாச்சாரத்தின் பின்னணியை அவர் இவ்விஷயத்தில் புகுத்தவில்லையா? இல்லை. அவர் கடவுளுடைய வார்த்தைகளை உள்ளது உள்ளபடி எழுதுகிறார். “ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டிய கடமைகள்!” இந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டு பெண்களுக்கு எந்தவிதமான சுதந்திர உணர்வைக் கொடுத்திருக்கும்! பவுலின் சமுதாயத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. கிரேக்க-ரோம கலாச்சாரம் ஆண்டு கொண்டிருந்த அந்த நாட்களிலே, ஒரு தம்பதிகளில் மனைவியைப் பார்த்து, “பெண்ணே, உன் கணவனுடைய சரீரம் உனக்குரியது. அவன் மீது உனக்குத்தான் உரிமை உள்ளது. அவன் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறான்” என்று கூற வேண்டுமானால், அது முற்போக்கான கொள்கையாகும். ஆனால் சுவிசேஷ அன்பானது முற்போக்கானதும் வேதபூர்வமானதுமான கொள்கையாகும். உபாகமம் 24:5ல் பாருங்கள். புதிதாகத் திருமணமான ஒரு ஆணை, யுத்தத்துக்குச் செல்ல அனுமதிக்காமல் ஒரு வருடகாலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக அவன் வீட்டில் இருந்து, தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்திருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் முற்போக்கான, வேதபூர்வமான கொள்கை.

பொதுவாக தம்பதிகள் உடலுறவுக்கு ஒருவருக்கொருவர் தடைவிதிக்கக் கூடாது. ஆனால், மதசிந்தனையோடு உபவாசம், ஜெபம் போன்ற காரியங்களுக்கு இடைஞ்சலாக இராதபடிக்கு, இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதித்துக் கொண்டால் மாத்திரமே, உடலுறவை சிலகாலத்துக்கு தடை பண்ணிக்கொள்ளலாம் என்கிறார். என்றாலும் துறவு நிலையிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தவராக பவுல், திருமணத்தில் துறவு நிலையை தம்பதிகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டாம் என வலியுறுத்துகிறார். சரீர இச்சைகள் அதிகரிக்கும்போது, இவ்விதமான உபவாசம், அவர்களுடைய மதசிந்தனையையே குலைத்துப் போடும் என்பதால் அதை பவுல் கட்டாயப்படுத்தவில்லை. தம்பதிகளிடையே இச்சையடக்கம் இல்லாததால், சாத்தான் அவர்களைத் தூண்டி பாவத்துக்கு உட்படுத்திவிடக் கூடிய ஆபத்து இருப்பதால், அவர்கள் தாங்கள் அடைய விரும்பிய பக்திநிலையையும் அடைய முடியாமல் போய்விட நேரிடும் என்பதால் அவர்கள் மீண்டுமாகக் கூடி வாழுதலே சிறந்தது என்கிறார். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளத்தக்கதான இடைவெளியில் உடலுறவில் ஈடுபடக் கூடாமல் போனார்களானால், சாத்தானால் தாக்கப்படும் அபாயத்துக்குள்ளாக நேரிடும். சரீர இச்சைகளை அளவுமீறித்தூண்டக்கூடிய காரியங்கள் பெருகிக் கொண்டிருக்கிறதும், உடலுறவின் கட்டுப்பாடுகள் அழிந்து கொண்டிருக்கிறதுமான இக்காலங்களிலே விவாக மஞ்சத்தை நாம் மரியாதைக்குரியதாகப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. கணவன்-மனைவி இருவரின் தேவைகளைப் பொருத்தும், உரிமைகளைக்கொண்டும், ஆர்வத்தைப் பொருத்தும் அதை தம்பதிகள் விவேகத்தோடு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

இரட்சிப்பு நம்மோடு மட்டும் சம்பந்தப்பட்டதா?

இன்றைக்கு அநேகர் இரட்சிப்பைத் தங்களுடைய தனிப்பட்ட விஷயமாகக் கருதி (Personal salvation) அதைத் திருச்சபையோடு

எந்தவிதத்திலும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. இரட்சிப்பை இந்தவிதமாக மட்டும் பார்க்கும் ஆபத்து 19ம் நூற்றாண்டுக்குப் பின்தான் ஏற்பட்டது. திருச்சபை அந்நூற்றாண்டில் லிபரல் கோட்பாடுகளைப்பின்பற்றி ஆவிக்குரிய தன்மையை இழந்து காணப்பட்டதால் ஆவிக்குரிய நிலையில் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையையும், ஆவிக்குரிய விஷயங்களையும் தனிப்பட்ட விஷயங்களாக பார்க்கும் தவறைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஓர் அமைப்பாக திருச்சபை இந்த உலகத்தில் அந்த காலத்தில் பலவீனமாக இருந்ததற்காக கர்த்தரின் திட்டங்களோ, அவருடைய வேதமோ பொய்த்துப் போய்விடவில்லை. இஸ்ரவேலர் கர்த்தரை நிராகரித்ததால் கர்த்தரின் திட்டம் பாழாகிவிடவில்லையே. அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இரட்சிப்பைத் தனிப்பட்டவிதமாகப் பார்த்து திருச்சபையை அலட்சியப்படுத்த ஆரம்பித்ததால்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் தோன்றி, சபையுணர்வோ, ஓய்வுநாள் அநுசரிப்பு பற்றிய கரிசனையோ இல்லாத கூட்டம் உருவானது. இத்தகைய வேதபூர்வமாற்ற எண்ணங்கள் இன்று நாம் வாழும் நூற்றாண்டையும் பாதித்திருக்கிறது.

இரட்சிப்பை அடைய தனிப்பட்டவிதத்தில் ஒருவன் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியது அவசியம்தான். அந்த விஷயத்தில் அவன் செய்ய வேண்டியதை வேறு யாரும் அவனுக்காக செய்ய முடியாது. இரட்சிப்பைக் கர்த்தரிடம் இருந்து அடைந்த ஒருவன் அதற்குப் பின் செய்ய வேண்டிய அனைத்தும் அவனோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இரட்சிப்பு அடைந்த உடனேயே அவன் கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்படுகிறான். கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் அங்கத்தவர்களனைவரோடும் இணைந்தவனாக்கப்படுகிறான். அதனால்தான் அந்த சரீரத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் உலகில் காணப்படும் சபைகளிலொன்றில் அவன் இணைந்து தன்னை கிறிஸ்துவின் சரீரத்தில் ஒருவனாக இனங்காட்டிக்கொள்ள வேண்டிய வேத கட்டாயம் இருக்கிறது. இதிலிருந்து கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு அவன் ‘தனிக்கட்டை’ போல வாழ்வது தவறு என்பது தெரிகிறதா? அவன் கிறிஸ்துவோடு மரித்தபோதே அவனுடைய சுயமும் பாவத்தோடு அழிந்து அவன் கிறிஸ்துவின் சரீரத்தில் (சமூகத்தில்) ஒருவனாக்கப்படுகிறான். கிறிஸ்துவின் சரீரத்தில் இரட்சிப்பின் மூலம் உண்மையாக இணைக்கப்பட்ட ஒருவனுக்கு சமூக வாழ்க்கை (சபை) வாழ்வதே சிந்தனையாக இருக்கும், தனிக்கட்டையாக சபையில்லாமல் வாழ்வது அல்ல.

இன்று பொதுவாகக் காணப்படும் சுவிசேஷ ஊழியங்கள் ஒருவனை சபை வாழ்க்கைக்கு தயார் செய்வதில்லை, உண்மையில் சபை பற்றிய உணர்வையே ஏற்படுத்துதில்லை. ‘பாவம் தீர இயேசுவிடம் வா’ என்று சொல்லி அதற்கு வழிகாட்டுகிறவர்கள் சபையில் இணைந்து ஒருவர் விசுவாச வாழ்க்கையை வாழ வேண்டியது வேத கட்டளையாக இருக்கிறது என்பதை உணரவில்லை. இதனால் சுவிசேஷப் பிரசங்கங்களும் உண்மையை முழுவதுமாக விளக்கும் பிரசங்கங்களாக இருப்பதில்லை. ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும்கூட சபையோடு தொடர்புடையதாகப் பார்த்து அவற்றை அனுபவிக்கும் கிருபையைப் பெற்றவர்கள் சபை வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்தே அதைச்செய்யவேண்டும் என்பது அநேகருக்கு தெரியாமலிருக்கிறது. இதனால் அநேகர் தொடர்ச்சியான சபை வாழ்க்கையில்லாமல் தங்களுடைய வசதிக்கேற்றபடி போகிற இடங்களிலெல்லாம் எங்காவது சத்தியம் கேட்கலாம், திருவிருந்தெடுக்கலாம் என்று வாழ்ந்து வருகிறார்கள். சபையை மையப்படுத்தி, அதற்கும், ஓய்வுநாளுக்கும் முதலிடம் கொடுத்துத்தான் வாழ்க்கையில் ஏனைய எல்லாவற்றையும், வேலை, மணவாழ்க்கை, சமூக வாழ்க்கை உட்பட அமையும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்ற எண்ணமே இன்றைக்கு பொதுவாக அநேகருக்கு இருப்பதில்லை. அந்தளவுக்கு சபை பற்றிய வேதபோதனையும், சபை வாழ்க்கை பற்றிய அருமையும் இன்றைக்கு விசுவாசிகளுக்கு இல்லாமலிருப்பதுதான் நம்மினத்துக் கிறிஸ்தவம் பலவீனமாக இருப்பதற்கு பெருங்காரணம். “ஓய்வுநாளில்லையென்றால் நமக்கு மதவாழ்க்கைக்கு வழியேயில்லை” என்று ஜே. சீ. ரைல் சொல்லியிருக்கிறார். “சபை வாழ்க்கையில்லாவிட்டால் நமக்கு விசுவாச வாழ்க்கைக்கு வழியேயில்லை” என்று நான் சொல்லுவேன். இது அதிர்ச்சி தருவதாக உங்களுக்குத் தென்பட்டால் வேதப்புத்தகத்தைத் திறந்து திறந்தமனத்தோடு கர்த்தர் தன்னுடைய சபையைப் பற்றி விளக்குகிறதை வாசித்துப் பாருங்கள். ‘அவனுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் . . . (சபையில்) சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்போ. 2:41–42). இது எதை விளக்குகிறது? அன்று இரட்சிப்பு அடைந்தவர்கள் அப்போஸ்தலப்போதனைபடி, தாங்களே முன்வந்து சபை தொடர்ச்சியாக செய்து வந்த நான்கு காரியங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து, அவற்றை விடாமல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு ஓய்வுநாளை அநுசரித்து வாழ்ந்து வந்தார்கள் என்பதைத்தான். ‘உறுதியாய்’ என்ற வார்த்தை இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. இதுதான் ஆதி சபையின் சபை வாழ்க்கை. இது இருக்கிற இருதயத்தில்தான் மெய்யான விசுவாசத்தைப் பார்க்க முடியும். இவற்றைத்தொடர்ச்சியாக செய்யும் ஆத்தும தாகம் இருப்பவர்களுக்குத்தான் ஞானஸ்நானமும் திருவிருந்தும்.

சரீரத்தில் இணைக்கப்பட்டிருக்கிற சக சகோதர, சகோதரிகளோடு தொடர்ச்சியான உறவு இல்லாமல், போதக கண்காணிப்பும், வழிநடத்தலு மில்லாமல், தொடர்ச்சியான சத்தியப் போதனைகளும், பிரசங்கங்களும் கேட்கும் வசதியில்லாமல், உன்னுடைய சுய கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான கிருபையின் சாதனங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே இடமான சபையில்லாமல் எந்த தைரியத்தில் கிறிஸ்தவன் என்று பெயர் வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறாய்? வேலை, சம்பளம், உலக வசதிகள் என்பதையெல்லாம் பயன்படுத்தி பிசாசு உன்னை கிறிஸ்துவின் சபையில் இருந்து பிரித்து வைத்திருப்பதை நீ உணராமலிருப்பது ஏன்? இதை வாசிக்கின்ற விசுவாசியே! இயேசு தன் உயிராக நேசித்து வரும் சபையை நீ நேசிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஆராதனை

எல்லாவிதமான ஆராதனைகளும் கர்த்தரின் பார்வையில் சரியானதாக இருக்கும் எனக் கூற முடியாது. வேதத்தை ஒழுங்காகப் படிக்கிற அனைவருக்கும் இது வெட்ட வெளிச்சமாகத் தெரியும் என நான் நம்புகிறேன். வேதம் “வீணான ஆராதனை”யைக் குறித்து தெளிவாக பேசுகிறது. “உண்மையோடுள்ள ஆராதனை”, “சுயநலமுள்ள ஆராதனை”, “ஆவியோடு ஆராதித்தல்” போன்ற பலவிதமான கோணங்களில் ஆராதனையைக் குறித்து வேதத்திலே வாசிக்கிறோம். நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஓய்வுநாளில்) எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. ஏதாவதொரு ஆராதனைக்குப் போய்விட்டு வந்தால் மட்டும் போதுமானது என்று சிலர் மூடத்தனமாக நடந்து வருவது சிந்திக்கத் தெரியாத குழந்தைத்தனத்துக்கு ஒப்பானது. வியாபாரிகளும், வேறு தொழில் செய்பவர்களும்கூட தங்கள் வேலைகளை இந்தவிதமாக செய்வதில்லை. எப்படி வேண்டுமானாலும் செய்தால் போதும் என்று அவர்கள் திருப்திப்பட்டுக்கொள்வதில்லை. அவர்கள் வேலையை ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நாம் கர்த்தரை பரியாசம் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார். “தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும்?” என்பது மிகவும் முக்கியமானதொரு விஷயம்.

- ஜே. சீ. ரைல் -

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.