திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2011 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்

1. வாசகர்களே!

2. பிரான்ஸில் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தம்

3. உம்முடைய இராஜ்யம் வருவதாக

4. பிரியாவிடை பிரசங்கங்கள்

5. தாம்பத்திய உறவில் நெருக்கம்

 

வாசகர்களே!

கர்த்தரின் கிருபையால் இன்னுமொரு இதழை நிறைவாக முடித்து உங்கள் முன் அர்ப்பணிக்க முடிந்திருக்கிறது. பத்திரிகையில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த திருச்சபை வரலாறு சிலகாலம் நின்றிருந்தது. பிரான்ஸ் நாட்டில் திருச்சபை சீர்திருத்தம் எவ்வாறு ஆரம்பித்து வளர்ந்தது என்பது பற்றி இந்த இதழில் படங்களோடு விளக்கியிருக் கிறோம். இன்றும் கத்தோலிக்க நாடாகவும், சுவிசேஷத்தின் தாக்கம் அதிகமில்லாததாகவும் இருந்து வரும் பிரான்ஸில் சத்தியத்திற்காக உயிரைப் பணயம் வைத்து உழைத்திருக்கிறார்கள் சீர்திருத்த விசுவாசிகள். ரோமன் கத்தோலிக்க மதம் எந்தளவுக்கு இரத்த தாகத்தோடு விசுவாசிகளைக் கொன்று குவித்திருக்கிறது என்பதையும் பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சிகளை வாசிக்கும்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர்களுடைய கொடூரச் செயல்களால் பல்லாயிரக்கணக்காக சீர்திருத்த விசுவாசிகள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு

நாடுகளில் வாழ நேர்ந்தது. இதை வாசிப்பதோடு நின்றுவிடாமல் கர்த்தருக்காகவும், அவருடைய வேதத்திற் காகவும் இரத்தப்பழி கொடுத்திருக்கும் ஹியூகநொட் விசுவாசிகளுடைய வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். நம்மினத்தில் இன்னும் அதன் வாடைகூட படவில்லையே என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். சபை வரலாறு ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமான பாடம். நம்முடைய விசுவாசம் உறுதிபெற அது நிச்சயம் உதவும். 

இந்த இதழில் இயேசு போதித்த மாதிரி ஜெபத்தின் இரண்டாம் ஜெபத்திற்கான விளக்கத்தைத் தந்திருக் கிறோம். கிறிஸ்தவ கோட்பாடுகள் என்ற தலைப்பில் வினாவிடை ரூபத்தில் வந்துகொண்டிருக்கும் வேத போதனைகளின் 110வது கேள்விக்கான விளக்கம் இது. இந்தத் தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. சத்தான இறையியல் போதனைகள் இல்லாமல் இருந்து வரும் நம்மினத்து சபைகளுக்கு இந்தத் தொடர் பயனளிக்குமானால் நாம் மிகுந்த சந்தோஷமடைவோம். போதகர்கள் அல்பர்ட் என். மார்டினினுடையதும், அலன் டன்னினுடையதுமான ஆக்கங்கள் இதில் தொடர்கின்றன. இவற்றின் மூலம் அநேகர் பயனடைந்து வருவதை அறிந்து ஆனந்தப்படுகிறோம். திருமறைத்தீபத்தின் மூலம் தொடர்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ

இலக்கியப் பணிக்காக இப்பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களனைவரையும் ஜெபத்தில் தாங்கி தொடர்ந்து ஜெபித்து வரும் வாசகர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.   -ஆசிரியர்.   

பிரான்ஸில் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தம்

(Protestant Reformation in France)

இந்த ஆக்கம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஹியூகநொட்’ (Huguenot) என்ற பதம் பிரான்ஸ் நாட்டில் கர்த்தரின் வேதத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு அதன்படி திருச்சபைகளை அமைத்து கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று பாடுபட்ட சீர்திருத்த கிறிஸ்தவர்களைக் (Reformed Christians) குறிப்பதாகும். இவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனைகளை எதிர்த்து அம்மதத்திற்கும், போப்பிற்கும் கட்டுப்பட்டு வாழ மறுத்ததால் ‘புரொட்டஸ்தாந்தியர்’ (Protestants) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர். ‘புரொட்டஸ்ட்’ (Protest) என்ற வார்த்தைக்கு ‘எதிர்ப்பு’ என்பது அர்த்தம். ‘புரொட்டஸ்தாந்தியர்’ என்றால் ‘எதிர்ப்பாளிகள்’ என்று பொருள். ரோமன் கத்தோலிக்க மத எதிர்ப்பாளிகளே ‘புரொட்டஸ்தாந்தியர்’.

பிரெஞ்சு (French) மொழியில் இருந்து வந்த ‘ஹியூகநொட்’ என்ற ஆங்கில வார்த்தை தனிநபரொருவரைக் குறிக்கவும், ‘ஹியூகநொட்கள்’ என்ற வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கவும் இந்த ஆக்கம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ‘ஜெசுயிட்’ என்ற வார்த்தை தனிநபரொருவரைக் குறிக்கவும், ‘ஜெசுயிட்கள்’ என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. & ஆசிரியர் இ

ங்கிலாந்தைப் போலவே பிரான்ஸிலும், நாட்டை ஆண்டவர்களைப் பொறுத்தே நாட்டின் மத வழிபாடும் இருந்தது. மார்டின் லூதரைப் பின்பற்றியவர்களின் போதனைகள் பிரான்ஸில் நுழைய ஆரம்பித்தபோது அந்நாட்டை ஆண்டவன் முதலாம் பிரான்ஸிஸ் (Francis I). அவன் இங்கிலாந்தை ஆண்ட எட்டாம் ஹென்றியைவிட (Henry VIII) மூன்று வயது குறைந்தவனாக இருந்தபோதும் குணாதிசயத்திலும் அவனையே ஒத்திருந்தான். ‘பிரான்ஸின் சீர்திருத்தவாதிகளின் தந்தை’ என்றும், பிரான்ஸில் ‘புரொட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்’ என்றும் அழைக்கப்பட்ட ஜாக் லெபேவ்ரேக்கு (Jacques Lefe- vre) அவன் எந்த மரியாதையையும் அளிக்கவில்லை. சபை வரலாற்றில் லெபேவ்ரேயைப்பற்றி அதிகமாக வாசிக்க முடிவதில்லை. அதற்கு முதலாவது காரணம், இவருடைய காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதம் தங்களுக்கு எதிரானவர்களுக்கு பயங்கரமான துன்பங்களை ஏற்படுத்தியதால் சீர்திருத்தவாதம் பிரான்ஸில் ஏனைய நாடுகளில் வளர்ந்ததைப்போல வளர முடியவில்லை. இரண்டாவதாக, லெபேவ்ரே வேதத்தில் முழுமையான அறிவைப் பெற்றிராததோடு, மார்டின் லூதரைப்போல ரோமன் கத்தோலிக்க சபையைவிட்டு அடியோடு வெளியேறவில்லை. பிரான்ஸின் ஆரம்ப சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குப் பின்னால் எழுந்தவர்களைப் போல சீர்திருத்தப் போதனைகளில் முழுமையான அறிவைப் பெற்றிருக்கவில்லை. சபை சீர்திருத்தத்தில் ஈடுபட ஜோன் கல்வினை வற்புறுத்திய வில்லியம் ஔபெரலுக்கு (William Farel) ஜாக் லெபேவ்ரேயோடு அதிக தொடர்பு இருந்தது. பாரிஸில் கல்வின் மாணவராக இருந்தபோது லெபேவேரேக்கு எழுபது வயதாக இருந்தது. ஜாக் லெபேவ்ரே கர்த்தரை அதிகம் நேசித்தவராக இருந்தார். இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவத்தின் அடித்தளமாகவும், தலையாகவும் இருக்கிறார் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சுவிசேஷத்தைப் பற்றிய அவருடைய போதனைகளுக்காக அவர் விரிவுரையாற்றி வந்த பாரிஸ் பல்கலைக்கழகம் அவருடைய நூல்களை எரித்து பல்கலைக்கழகத்தில் இருந்து அவரை நீக்கியது. ஜாக் லெபேவ்ரே முதுமையைத் தழுவி 1536ல் மரித்தார்.

முதலாம் பிரான்ஸிஸின் வாழ்க்கையில் ஆத்மீகத்திற்கு இடமிருக்க வில்லை. அவன் புரொட்டஸ்தாந்து போதனைகளைக் கணக்கெடுத்தும் பார்க்கவில்லை. பழமைவாத சபைக்கெதிரான சிந்தனைப் போராட்டமாக மட்டுமே அவன் சீர்திருத்தத்தை எண்ணினான். 1516ல் அரசியல் காரணங்களுக்காக அவன் போப்போடு ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டான். அதே போல லூதரைப் பின்பற்ற ஆரம்பித்த பிரான்ஸ் நாட்டாரோடும், பின்பு கல்வினோடும் சமய உடன்படிக்கை செய்து கொண்டான். கல்வின் தான் எழுதிய கிறிஸ்தவ கோட்பாடுகள் (Institute) நூலை முதலாம் பிரான்ஸிஸ்க்கே அர்ப்பணித்திருந்தார். ஆனால், லூதரின் போதனைகள் பிரான்ஸில் அதிகம் வளர ஆரம்பித்தபோது முதலாம் பிரான்ஸிஸ் அதிக ஆத்திரமடைந்து அநேகரை உயிரோடு தீயில் எரித்தான். 1545 வரையில் அவன் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தும், அநேகரைப் பாதாளக் கிடங்குகளில் அடைத்தும். இருபத்தி இரண்டு நகரங்களையும், கிராமங்களையும் முற்றாக அழித்திருந்தான்.

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி இறந்த அதே வருடத்தில் முதலாம் பிரான்ஸிஸ்ம் உயிர் துறந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் ஹென்றி (Henry II) அரசனானான். அவன் இத்தாலியைச் சேர்ந்த கெத்தரின் டீ மெடீசியை (Catherine De Medici) திருமணம் செய்திருந்தான். (கொடியவளான இவளைப் பற்றி இனி அதிகமாகவே அறிந்துகொள்ளப் போகிறோம்). முதல் பத்து வருடங்களுக்கு அவளுக்கு பிள்ளை இல்லாதிருந்தது. அதற்குப் பிறகு அவளுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் மூவர் பின்பு பிரான்ஸின் அரசர்களாக இருந்தார்கள். இரண்டாம் ஹென்றி தன் தகப்பனின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றினான். பிரான்ஸின் பாராளுமன்றத்தில் இதற்காக ஒரு விசேட கமிட்டி அமைக்கப்பட்டது. இதிலிருந்து தப்ப அநேகர் ஜெனீவாவுக்கு போனார்கள். ஜெனீவா இவ்வாறு வந்து சேர்ந்த அகதிகளால் நிரம்பி வழிந்தது. மிகவும் தைரியசாலிகளான இளம் வாலிபர்கள் ஜெனீவாவில் ஜோன் கல்வினிடம் பயிற்சி பெற்று தங்களுடைய உயிரை மதிக்காமல் நூல்களையும், கைப்பிரதிகளையும் விநியோகிக்க பிரான்ஸ்க்கு அடிக்கடி திரும்பினார்கள். ‘எங்களுக்கு மரத்துண்டுகளை அனுப்புங்கள், நாங்கள் உங்களுக்கு அம்புகளை அனுப்பி வைக்கிறோம்’ என்று ஜோன் கல்வின் தன் நாட்டாரைப் பார்த்துச் சொன்னார். இப்படிச் சொன்னதன் மூலம் ஜெனீவாவில் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் சீர்திருத்தப் பணிக்காக பயிற்சியளிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார் கல்வின்.

பிரான்ஸின் அரசன் சீர்திருத்தப் பணி தொடர பல தடைகளை விதித்தான். தெருவில் நூல்களை விற்பதைத் தடை செய்தான். படிப்பறியாதவர்கள் வீட்டிலோ, வேலைத் தளத்திலோ, நண்பர்களுடனோ வேறெங்குமோ மத சம்பந்தமான எந்த சம்பாஷனைகளையும் செய்யத் தடை விதித்தான். அச்சுக் கூடங்கள் மத சம்பந்தமான எதையும் அச்சிடாமல் பார்த்துக்கொள்ள அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி வந்து சோதனை செய்தார்கள். பிரான்ஸ்க்குள் வந்த அத்தனைப் பொருட்களும் சுங்கச் சாவடிகளில் கவனமாக சோதிக்கப்பட்டன. இதையெல்லாம் அரசன் இரண்டாம் ஹென்றி செய்தபோதும் அரசு பலவீனமாக இருந்த இடங்களிலெல்லாம் வெளிப்படையாகவும், ஏனைய இடங்களில் இரகசியமாகவும் சீர்திருத்தப்பணி பிரான்ஸில் தடையின்றித் தொடர்ந்தது. 1559ம் ஆண்டு ஒரு விளையாட்டுப் போட்டியின் போது நெற்றியில் பலத்த அடிபட்டு இரண்டாம் ஹென்றி உயிரிழந்தான்.

சீர்திருத்தவாதிகளான ஹியூகநொட்கள்

1560ம் ஆண்டுவரை பிரான்ஸின் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகள் ஹியூகநொட்கள் (Huguenots) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுடைய பெயரும், போதகனைகளும் ஜெனீவாவில் இருந்தே வந்தன. இந்தப் பெயர் ஜெனீவாவில் இருந்த பிரான்ஸின் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களிடமிருந்து அந்தப் பெயர் பிரான்ஸ் முழுவதும் இருந்த புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. இருந்தாலும் ஹியூகநொட்கள் பிரான்ஸின் எல்லாப் பிரதேசங்களில் பரவிக்காணப்படவில்லை. அவர்கள் வட பகுதியில் லோயர் (Loire) நதிப்புறத்திலும், கிழக்குப் பகுதியில் ரோன் (Rhone) மற்றும் சோன் (Saone) நதிப்புறங்களிலுமே அதிகளவில் காணப்பட்டனர். பிரான்ஸின் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அரச பரம்பரையில் கீழ்தட்டில் இருந்தவர்கள் மத்தியிலும், வியாபாரிகள் மற்றும் நடுத்தர வகுப்பின் கீழ் மட்டத்தில் இருந்த பயிற்சிபெற்று தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியிலும் அவர்களுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. மிகக் குறைந் தளவிலேயே அவர்களுக்கு உயர்மட்டத்தில் இருந்து ஆதரவு கிடைத்தது. அத்தோடு பிரான்ஸின் பெரும்பாலான விவசாயிகள் கத்தோலிக்க மதத்தையே தொடர்ந்தும் தீவிரமாகப் பின்பற்றி வந்தனர். அறுபத்தைந்து கல்லூரிகளை உள்ளடக்கியதாக இருந்த பிரபல்யமான பல்கலைக் கழகத்தையும், மாபெரும் சமய ஸ்தலங்களையும் கொண்டிருந்த பிரான்ஸின் தலைநகரான பாரிஸ், கத்தோலிக்கர்களின் கோட்டையாக இருந்தது.

ஹியூகநொட்களின் தலைவர்கள்

ஹியூகநொட்களின் முக்கிய தலைவர்களாக லூயிஸ் டீ போர்போன் (Louis de Bourbon), கொன்டேயின் இளவரசன் (Prince of Conde), பிரான்ஸின் அட்மிரல் கெஸ்பார்ட் டீ கொலிக்னி (Gaspard de Coligny) ஆகியோர் இருந்தனர். கொலிக்னி ‘அட்மிரல்’ என்று அழைக்கப்பட்டபோதும் அவர் எந்தக் கடற்படையிலும் பணிபுரியவில்லை. கடற் போர்களிலும் ஈடுபடவில்லை. ஆனால், பிரான்ஸின் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தப் படைகளின் ஆவிக்குரிய அட்மிரலாக அவரிருந்தார். 1569ல் கொன்டே போரில் மரணமடைந்தார். கத்தோலிக்கர்களின் பக்கத்தில் அரசனின் உறவினர்களாக இருந்த கைஸ் (Guise) குடும்பத்தார் முக்கிய தலைவர்களாக இருந்தனர். முக்கியமாக ரோமன் கத்தோலிக்க சபையில் கார்டினலாக இருந்த பிரான்ஸிஸ் டீ கைஸ்ம் (Francis de Guise), சார்ள்ஸ்ம் (Charles) முக்கிய தலைவர்களாக கத்தோலிக்கர்கள் பக்கத்தில் இருந்தார்கள்.

ஹியூகநொட்களை அழிக்க கெத்தரின் வகுத்த சதி

இரண்டாம் ஹென்றி மரணமடைந்தபோது அவனுடைய பதினாறு வயது மகன் இரண்டாம் பிரான்ஸிஸ் (Francis II) என்ற பெயரோடு அரசனானான். அவன் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த அரசியாகிய மேரியை (Mary Queen of Scots) திருமணம் செய்திருந்தான். ஆனால், அவன் அதிக காலம் அரசனாக இருக்க முடியாதபடி காதில் ஏற்பட்ட ஒரு வியாதியினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய பத்து வயது தம்பி ஒன்பதாம் சார்ள்ஸ் (Charles IX) என்ற பெயரோடு அரசனானான். மகன் சிறுவனாக இருந்ததால் அவனுடைய தாயாகிய கெத்தரின் டீ மெடிசி பிரான்ஸை மகனுடைய இடத்தில் இருந்து ஆண்டாள். அவளுடைய கணவனான இரண்டாம் ஹென்றி மரணமான நாளில் இருந்து அவள் தன்னுடைய ஐந்து பிள்ளைகளையும் ஒருபுறம் கைஸ் குடும்பத்தாரிடமிருந்தும் மறுபுறம் போர்பன்ஸ் குடும்பத்தாரிடமிருந்தும் பாதுகாக்க வேண்டியிருந்தது. 1560க்குப் பிறகு, முப்பது வருட காலத்துக்கு மதப்போர்கள் பிரான்ஸில் ஏற்பட்டன. இதற்கு மத்தியில் கெத்தரின் டீ மெடிசி நாட்டை ஆண்டுகொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அவள் புரொட்டஸ்தாந்து படைகளுக்கும், கத்தோலிக்கப் படைகளுக்கும் இடையில் ஒரு சமநிலை இருக்கும்படி பார்த்துக்கொண்ட போதும் அவளுடைய இறுதி நோக்கம் ஹியூகநொட்களை முற்றாக அழிப்பதாகவே இருந்தது. தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவள் தந்திரமான ஒரு வழியை வகுத்தாள். புரொட்டஸ்தாந்தியர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்துமுகமாக ஒன்பதாம் சார்ள்ஸினுடைய தங்கையான கத்தோலிக்க இளவரசி மார்கரெட்டை (Princes Margaret) நெவேரியின் (Navarre) புதிய ஹியூகநொட்கள் அரசனாக இருந்த ஹென்றி டீ போர்போன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தாள். நாட்டின் அத்தனை முக்கியஸ்தர்களும் திருமணம் நடைபெறப்போகும் பாரிஸ்க்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஹியூகநொட்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அட்மிரல் கொலிக்னி. கெத்தரின் வீசியிருந்த தந்திரமான வலையைப் பற்றிய எந்த உணர்வுமில்லாமல் ஹியூகநொட்கள் திருமண விழாவுக்கு வந்திருந்தனர்.

திருமண வைபவம் நிகழ்ந்து கொண்டாட்டங்களெல்லாம் முடிவதற்கு முன்பு வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரமான ஒரு கொடுமை பாரிஸில் நிகழ்ந்தது. அந்த நாள் ஆகஸ்டு 24, 1572, புனித பார்த்தலோமியூவின் நாள் (St. Bartholomew’s Day). அன்று மாலை நேரத்தில் கெத்தரின் அரசனாக இருந்த தன்னுடைய மகனிடம் போய் ஹியூகநொட்கள் அரச குடும்பத்தாரையும், கத்தோலிக்க தலைவர்கள் அனைவரையும் இரகசியமாக கொன்று குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், அதைத் தடுத்து நிறுத்தி அரச குடும்பத்தைக் காக்கவேண்டுமானால் பாரிஸ் நகர வாசல்களுக்குள்ளாக அத்தனை ஹியூகநொட்களையும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னாள். அரசனின் கையெழுத்தைப் பெற்று இதை அரச கட்டளையாக்க ஏற்கனவே கெத்தரின் ஓர் ஓலை யையும் தயார் செய்து வைத்திருந்தாள்.

பலவீனமானவனும், மனோதிடம் இல்லாதவனுமாகயிருந்த ஒன்பதாம் சார்ள்ஸ் தன்னுடைய நாட்டுமக்களின் ஒருபகுதியினருக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய மனமில்லாதவனாக அதை நினைத்துப் பார்க்கவும் முடியாதென ஆரம்பத்தில் தன் தாயிடம் மறுத்தான். இறுதியில் தாயின் தொல்லை தாங்கமுடியாமல் அந்தக் கொடுமை நிகழ அனுமதி கொடுத்தான். அப்போது அவன் தாயிடம், ‘இதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால், இந்தக் கொடுமைக்காக என்னைத் தூற்றுவதற்கு வழியில்லாதபடி ஒரு ஹியூகநொட்டும் பிரான்ஸில் உயிரோடு இருக்கக் கூடாது. நீ செய்ய விரும்பியதை உடனடியாக செய்து முடி’ என்று கூறினான்.

இந்தக் கொடுமையை நிறைவேற்றுவதற்காக பாரிஸிலிருந்த கொடியவர்களுக்கு அன்றைய தினம் முழுச் சுதந்திரமும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. மணவாளனாக இருந்த நெவேரியின் ஹென்றி (Henry de Bourbon of Navarre) மட்டுமே அன்று உயிர் தப்ப வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்டு 24ம் நாள் நள்ளிரவில் நடக்கவிருந்த கொடுமையை ஆரம்பித்து வைப்பதற்கு அறிகுறியாக கோட்டை மணி அடிக்கப்பட்டது. முதலில் கொலிக்னியின் வீட்டுக்குள் கொடுமைக்காரர்கள் நுழைந்தனர். நடக்கப் போவதை உணர்ந்த அவர் தன் நண்பர்களைப் பார்த்து, உயிர்தப்ப இங்கிருந்து ஓடிப் போங்கள், நான் உயிர்விடத் தயாராகிவிட்டேன், கர்த்தருடைய கிருபைக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்றார். அவருடைய நண்பர்களில் சிலர் உயிர் தப்பினார்கள். இரத்த வெறிபிடித்த கொலைகாரக் கும்பல் அட்மிரல் கொலிக்னியை நோக்கிப் பாய்ந்தது. ‘நீர்தான் கொலிக்னியா? என்று வீராப்புடன் ஒரு வாலிபன் கேட்டான். அதற்கு, ‘நான்தான்’ என்று பதிலளித்த கொலிக்கினி, ‘என் வயதிற்கு மரியாதை கொடுத்துப் பேசு’ என்றார். அதற்குப் பதிலாக அந்த வாலிபன் தன் கையிலிருந்த வாளால் அவரைக் கடுமையாகத் தாக்கினான். உயிரிழக்கும்வரை தாக்குதலுக்குள்ளான அவருடைய சரீரம் வீதியில் தூக்கி எறியப்பட்டது. கொலிக்னியின் உயிரற்ற சரீரம் நிலத்தில் கிடந்தபோது கைஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஹென்றி அச்சரீரத்தைக் குனிந்து பார்த்து, ‘இது அநத் மனிதன்தான், அவரை நான் அறிவேன்’ என்றான். பின்பு சந்தோஷம் தாங்க முடியாமல் கொலிக்னியின் முகத்தைக் காலால் உதைத்துவிட்டு வெளியில் போய், ‘வாருங்கள் வீரர்களே, நாம் நல்லபடியாகத்தான் வேலையை ஆரம்பித்திருக்கிறோம். அரச கட்டளைப்படி மற்றவர்களையும் கண்டுபிடிப்போம்’ என்று எல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.

ஹியூகநொட் தலைவரான கொலிக்னியின் உயிரற்ற சரீரத்தை கத்தோலிக்க எதிரிகள் அசிங்கப்படுத்தினார்கள். அவருடைய தலையை வெட்டி கெத்தரினுக்கும், ஒன்பதாம் சார்ள்ஸ்க்கும் அனுப்பினார்கள். அதற்குப் பிறகு கொலிக்னியின் தலையை அவர்கள் பாதுகாப்போடு ரோமுக்கு போப் பதின்மூன்றாம் கிரெகரியின் (Pope Gregory XIII) பார்வைக்கு அனுப்பிவைத்தார்கள். கொலிக்னியின் சடலத்தின் கரங்களும் வெட்டப்பட்டன. தலையும், கைகளும் இல்லாத அவருடைய சரீரத்தை மூன்று நாட்களுக்கு பாரிஸ் நகரின் வீதிகளில் இழுத்துச் சென்றது இருதயமற்ற வாலிபர்கள் கூட்டம். ஹியூகநொட்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் பணி மூன்று நாட்களுக்கு இரவு பகலாக பாரிஸில் தொடர்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பிரான்ஸின் ஏனைய நகரங்களிலும் அதேவிதமாக புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகளை அழித்தொழிக்குமாறு அரச கட்டளை அனுப்பப்பட்டது. பல நகரங்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. சில இடங்களில் அது நிறைவேற்றப்பட்டது. இவ்வித மாக அவர்களுக்கெதிரான பயங்கரமான கொலைகள் தொடர்ந்தன. முப்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஹியூகநொட்கள் வரை உயிரிழந்ததாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயினின் அரசனான இரண்டாம் பிலிப்புவுக்கு (Philip II) இந்த செய்தி எட்டியபோது அவன் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தான். புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகளை அழிக்கும் இந்தக் கொடூரம் அவனுடைய கொள்கைகளோடு ஒத்துப்போவதாயிருந்தது. இங்கிலாந்து அரசியான எலிசபெத் (Queen Elizabeth) இதைக் கேள்விப்பட்டு தன்னுடைய மறுப்பைத் தெரிவித்தபோதும் ஸ்பெயினின் அரசன் மேல் இருந்த பயத்தால் பிரான்ஸோடு பிரச்சனையை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. கத்தோலிக்க போப் பதின்மூன்றாம் கிரெகரி அளவில்லா ஆனந்தத்தால் துப்பாக்கி வேட்டுக்களை வெடிக்க வைத்தும், எல்லா கத்தோலிக்க ஆலயங்களிலும் ஆலய மணிகளை தொடர்ந்து அடிக்க வைத்தும், ஆலயங்களில் பாட்டுக்களை பாட வைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தார். மூன்று நாட்களுக்கு இத்தாலியில் ரோம் நகர் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. திருச்சபைக்கு கிடைத்த வெற்றியாக இதைக் கருதிய போப் தனக்கு ஒரு சிறப்பு மெடலையும் குத்திக் கொண்டார். பிரான்ஸின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சலி (Sully), இதற்கு அடுத்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு பயங்கரமான கொடுமைகள் பிரான்ஸ் தேசத்தில் தொடர்ந்ததாக கூறியிருக்கிறார். கர்த்தருடைய திருச்சபைக்கெதிரான கத்தோலிக்கர்களுடைய வெறியாட்டம் இந்த வகையில் பிரான்ஸில் தொடர்ந்தது.

பாரிஸில் புனித பார்த்தலோமியுவின் நாளில் நிகழ்ந்த இந்தக் கொடூரமான வெறியாட்டத்தில் அனைத்து ஹியூகநொட்களும் உயிர் துறக்கவில்லை. அவர்களில் நான்கில் மூன்று பேர் தப்பிவிட்டார்கள். பாரிஸில் இருந்த ஹியூகநொட் போதகர்களில் இருவர் மட்டுமே உயிரிழந்தார்கள். போதகர்களையே கத்தோலிக்க வெறியர்கள் பெரிதும் தேடி அலைந்தார்கள். சில போதகர்கள் அற்புதமாக உயிர்தப்பினார்கள். கொலிக்னியின் சாப்ளினாக இருந்த மெர்லின் (Merlin) வாழ்க்கையில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கொலிக்னி இறப்பதற்கு முன் அவருடைய வற்புறுத்தலின் காரணமாக விருப்பமில்லாமல் அவரை விட்டுப் பிரிந்த மெர்லின் பக்கத்து வீட்டுக் கூரையின்மீது ஏறித்தப்ப முயன்றபோது கால் தவறி கீழே அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த பெரும் வைக்கோல் புதருக்குள் விழுந்தார். வெளியே வந்தால் எதிரிகளின் கையில் அகப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அதற்குள்ளேயே மூன்று நாட்கள் சத்தமில்லாமல் இருந்தார். கோழி ஒன்று அந்தப் புதருக்குள் ஒவ்வொரு நாளும் ஒரு முட்டையை இட்டுச் சென்றிருந்தது. அது மட்டுமே மெர்லினின் உணவாக மூன்று நாட்களுக்கும் இருந்தது. பழைய ஏற்பாட்டு எலியாவின் சரித்திரத்தை நினைவுபடுத்துவதுபோல் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. கர்த்தர் இந்தவிதமாக தன் மக்களை அக்காலத்தில் காத்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு மெர்லின் புதரை விட்டு வெளியேறி எதிரிகளின் கையில் படாமல் தப்பினார்.

இந்தப் பயங்கரக் கொடுமைக்குப் பிறகு ஒன்பதாம் சார்ள்ஸ் சிறிது காலமே உயிர் வாழ்ந்தான். 1574ல் தனது 24ம் வயதில் அவன் உயிர் துறந்தான். அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவனாகவும், குற்றவுணர்வுள்ளவனாகவும் அவன் வாழ்ந்து மடிந்தான். அடிக்கடி மனநிலை பாதிப்பு ஏற்பட்டபோது ஹியூகநொட்களுக்கு இழைக்கப்பட்ட பயங்கரக் கொடுமைகள் நினைவுக்கு வந்து அவனுக்கு பெரும் உளப்பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அவனுடைய தாய் கெத்தரின் தொடர்ந்தும் கடின இருதயத்தோடும், மனந்திரும்பாமலும் வாழ்ந்து வந்தாள். அக்காலத்தில் அவள் யேசபேலைப் (Jezabel) போல வாழ்ந்து, கேட்டைச் செய்கிறவர்களுக்கு ஆலோசனை அளிக்கிறவளாக இருந்தாள். 1589ல் அவள் கத்தோலிக்கர், புரொட்டஸ்தாந்தியர் இரு பகுதியினராலும் வெறுக்கப்பட்டும், கைவிடப்பட்டும் உயிர் துறந்தாள். அவளுடைய மரணத்திற்காக ஒருவரும் கண்ணீர்விடவில்லை.

ஒன்பதாம் சார்ள்ஸ் இறந்த பிறகு அவனுடைய தம்பி ஹென்றி அரசனானான். கெத்தரின் பணத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி அவனைப் போலந்து நாட்டின் அரசனாக்கியிருந்தாள். 1589ல் அவனும் உயிரிழந்தான். அவன் உயிரோடிருந்தபோதுகூட கெத்தரினே உண்மையில் நாட்டை ஆண்டு வந்திருந்தாள். ஹென்றியை அவனுடைய எதிரிகள் கொலை செய்தனர்.

சந்தர்ப்பவாதியான நான்காம் ஹென்றி

மூன்றாம் ஹென்றி இறந்தபிறகு நெவேரியின் ஹென்றி, அதாவது கெத்தரினின் மகளான மார்கரெட்டை மணந்த ஹியூகநொட் ஹென்றி டீ போர்போன், நான்காம் ஹென்றி (Henry IV) என்ற பெயருடன் அரசனானான். அவன் ஆட்சிக்கு வந்தவுடன் புரொட்டஸ்தாந்தியர்களுக்கு நல்ல காலம் ஏற்பட்டது போல் தோன்றியது. ஆனால், கத்தோலிக்கர்கள் அவனுக்கு ஆதரவளிக்க மறுத்ததால் தொடர்ந்து போர் நிகழ்ந்தது. ஹென்றி பல போர்களை வென்றதோடு பாரிஸையும் தன் படைகளோடு சுற்றி வளைத்தான். அதனால் உணவில்லாமல் திண்டாடிய மக்கள் தங்களுடைய குழந்தைகளையும் உணவாக சாப்பிட வேண்டிய நிலைமை உருவானது. இறுதியில் நெதர்லாந்தில் இருந்து வந்த ஸ்பெயின் தேசப் படைகளே பாரிஸை விடுதலை செய்தன. அதன்பிறகு ஹென்றி பிரான்ஸின் மதமாக கத்தோலிக்க மதம் இருக்க சம்மதித்தான். அதேவேளை தான் தொடர்ந்தும் புரொட்டஸ்தாந்து பிரிவைச் சார்ந்தவனாக இருந்தான். ஆனால், ஹென்றியின் இந்த முடிவு எல்லோருக்கும் உடன்பாடாக இருக்கவில்லை. இறுதியில் அவன் கத்தோலிக்க சபையே உண்மையான சபை என்று அங்கீகரித்து கத்தோலிக்க போப்புக்குக் கட்டுப்பட உடன்பட்டான். அவனுடைய முடிவுக்கு பின்வருவனவே காரணங்கள். (1) அவனால் பிரான்ஸை போரில் வெல்ல முடியவில்லை. (2) பிரான்ஸில் ஹியூகநொட்கள் சிறு பிரிவினராகவே இருந்தனர். (3) பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஹியூகநொட் அரசனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். (4) ஸ்பெயினிலும் நெதர்லாந்திலும் இருந்த ஸ்பெயின் படைகள் பிரான்ஸை ஆக்கிரமிக்கத் தயாராக இருந்தார்கள்.

ஆனால், ஹென்றி கத்தோலிக்க மதத்தை அங்கீகரித்ததற்கும் போப்புக்குக் கட்டுப்பட உடன்பட்டதுக்கும் இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கவில்லை. அவனுடைய மனந்திரும்புதல் ஏனைய ஹியூகநொட்களுடையதைப்போல மெய்யான ஆத்மீக மனந்திரும்புதலாக இருக்கவில்லை. அவனிடம் பல நல்ல குணாதிசயங்கள் இருந்தபோதும், அரசியல் ஆதாயங்களுக்காக தன்னுடைய மதக் கோட்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்பவனாக இருந்தான். அவன் சத்தியத்திற்காக போராடுகிறவனாக இருக்கவில்லை. ஹியூகநொட்கள் அடிக்கடி சொல்லுவார்கள், ‘இளவரசர்களில் நம்பிக்கை வைக்காதே’ என்று. அது நான்காம் ஹென்றியைப் பொறுத்தவரையில் பேருண்மை.

நான்காம் ஹென்றி கத்தோலிக்க மதத்தை பிரான்ஸின் அதிகார பூர்வமான மதமாக அங்கீகரித்த பின்பு ரோமன் கத்தோலிக்கர்கள் நெடுங் காலமாக நடந்த உள்ளூர் போரில் வெற்றியடைந்தது போல் உணர்ந்தனர். ஹென்றி ரோமன் கத்தோலிக்க மதத்தை அங்கீகரித்திருந்தாலும் மக்களனைவரும் ரோமின் அதிகாரத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவிக்கவில்லை. அவன் அப்படிச் செய்திருந்தால் ஹியூநொட்களுக்கு அது பேராபத்தை விளைவித்திருக்கும். 1598ல் வெளியிடப்பட்ட நென்ட்டஸ் அறிக்கையில் (Edict of Nantes) ஹியூகநொட்களுக்கு சில உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்ததோடு அந்த உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் மக்கள் தங்கள் மனச்சாட்சிப்படி சுதந்திரமாக இயங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததோடு, சில பிரதேசங்களில் ஹியூகநொட்கள் தங்கள் விருப்பப்படி ஆராதனை செய்யவும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் மக்களுக்கிருந்த வழமையான குடியுரிமை வசதிகள் ஹியூகநொட்களுக்கும் வழங்கப்பட்டதோடு, சில பிரதேசங்களில் ஹியூகநொட்கள் பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்கவும், நூல்களை வெளியிடவும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்கள் தசம பாகம் கொடுக்க வேண்டியிருந்தாலும் அதில் ஒரு பகுதியை போதகர்களுக்கு கொடுப்பதற்காக அரசன் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த மத உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாக இருந்ததோடு நான்காம் ஹென்றியின் ஆட்சிக்காலம்வரை நிலைத்திருந்தது. ஆனால், 1610ல் ஹென்றி உயிரிழந்தான். ஜெசுயிட்கள் (Jesuits) என்ற ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவினரின் கைக்கூலியாக செயல்பட்ட ஒரு மத தீவிரவாதியினால் ஹென்றி கொலை செய்யப்பட்டான். ஜெசுயிட்கள் பிரிவு அவனைக் கடுமையாக எதிர்த்து வந்திருந்தது.

ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவான ஜெசுயிட்கள்

கத்தோலிக்க மதத்தின் ஒரு பிரிவான ஜெசுயிட்கள் 1534ல் இக்னேஷியஸ் லொயோலா (Ignatius Loyola) என்ற ஸ்பெயின் தேசத்தவரால் ஆரம் பிக்கப்பட்டது. அவர்களுடைய ஒரே நோக்கம் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதத்தை முற்றாக ஒழிப்பதாக இருந்தது. தங்களுடைய பிரிவை அவர்கள் இயேசுவின் நிறுவனம் (The Society of Jesus) என்று அழைத்தார்கள். அவர்கள் வேறு எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாதவர்களாய், நேரடியாக போப்புக்கு கீழிருந்து செயல்படுகிறவர்களாகவும், போப்புக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டியவர்களாயும், எந்த நிபந்தனைகளுமில்லாமல் போப்புக்கு கீழ்ப்படிவதாகவும் வாக்குறுதி எடுத்திருந்தனர். நாடோ, நண்பர்களோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோ, மனச்சாட்சியோ எதுவும் அவர்களுக்குப் பெரிதாக இருக்காமல் தங்களுடைய பிரிவின் விதிமுறைகளுக்கு மட்டுமே விசுவாசமுள்ளவர்களாய் இருந்தனர். அரச வம்சத்தவர்களுக்கு மிகவும் தரமான கல்வி அளிப்பதில் அவர்கள் திறமைவாய்ந்தவர்களாய் இருந்ததால் சமுதாயத்தின் உயர் மட்டத்தில் அவர்களுக்கு மிகவும் செல்வாக்கு இருந்தது. இதனால் அவர்கள் உயர்மட்டத்தில் நெருக்கமாக உறவாடி அநேக இரகசியங்களைப் பெற்று அவற்றை தங்களுடைய பிரிவின் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ‘நாம் பயன்படுத்துகிற எந்த வழிமுறைகளையும் நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பின் முடிவை நியாயப்படுத்துகிறது’ என்பது ஜெசுயிட்களுடைய கொடூரமான கோட்பாடாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க சபைக்கு நன்மை வருமானால் கொலை செய்வதில் தவறில்லை என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. நான்காம் ஹென்றியைக் கொலை செய்த ரெவாய்லெக் (Ravaillac) எந்த சந்தேகமுமில்லாமல் ஜெசுயிட்களுடைய கையாளாக இருந்தான்.

இந்தியாவில் கோவா, மலேசியாவில் மலாக்கா போன்ற இடங்களில் ரோமன் கத்தோலிக்க மதப்பணி புரிந்த பிரான்ஸிஸ் சேவியர் (Francis Zavier) இக்னேஷியஸ் லொயோலாவின் நண்பரும், ஜெசுயிட் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.

1598ம் ஆண்டுக்குப் பிறகு நென்டஸ் அறிக்கை (Edict of Nantes) இனி அவசியமற்றது என்று அறிவிக்க ரோமன் கத்தோலிக்கர்கள் 17ம் நூற்றாண்டு முழுவதும் சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவி செய்வதற்காக பிரான்ஸின் மிக முக்கிய பிரமுகரான கார்டினல் ரிச்செலியு (Cardinal Richelieu) தீர்மானித்தார். இந்த மனிதன் வெறும் அரசியல்வாதியாக இருந்தாரே தவிர தீவிரமதவாதி அல்ல. ஹியூகநொட்கள் பிரான்ஸ் நாட்டுக்குள் இன்னொரு நாடுபோல செயல்பட்டு வந்தது இவருக்கு பிடிக்கவில்லை. இதனால் 1629ல் இவர் ஹியூகநொட்களோடு போரிட்டு அவர்களை ஒரு உடன்படிக்கைக்கு ஒத்துக்கொள்ள வைத்தார். அந்த உடன்படிக்கையின்படி ஹியூகநொட்களுக்கு வழிபாட்டு சுதந்திரமும், குடியுரிமையும் மட்டும் இருந்ததே தவிர ஏனைய உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அதற்குப்பிறகு ஹியூகநொட்கள் நாட்டில் தங்களுக்கிருந்த அரசியல் பலத்தை இழக்க நேர்ந்தது. வேறு வழியில்லாமல் அவர்கள் நாட்டரசனுக்கு தாங்கள் முழு விசுவாசமாக இருப்பதாக உறுதியெடுத்தனர். அவர்கள் நாட்டில் ஒழுக்கத்திற்கும், உழைப்பிற்கும் பேர்போனவர்களாக இருந்தனர்.

மறுபடியும் ஹியூகநொட்களுக்கு பெருந்துன்பம்

17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பதின்நான்காம் லூயிஸ் (Louis XIV) பிரான்ஸை ஆண்டான். அவன் நான்காம் ஹென்றியின் பேரன். அரசனானபோது அவன் மிகச் சிறுவனாக இருந்ததால் இருபது வருடங்களுக்கு நாட்டை கார்டினல் மெசரின் (Cardinal Mazarin) என்பவர் அவனுடைய இடத்தில் இருந்து ஆண்டு வந்தார். பின்பு லூயிஸ் நாட்டை ஆளுவதற்கு தகுந்த வயதை அடைந்தபோது தன்னை நாட்டின் முழு அதிகாரமுள்ள அரசனாக அறிவித்துக்கொண்டான். ‘நானே நாடு’ என்று இறுமாப்போடு நடந்துகொண்டான். பிரான்ஸ் தேசத்தார் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய தீவிர நோக்கமாக இருந்ததால் 1598ல் ஏற்பட்டுத்தப்பட்ட நென்டஸ் அறிக்கையை முழுமையாக இல்லாமல் ஆக்க வேண்டிய அவசியமேற்பட்டது. ‘என்னுடைய தாத்தா ஹியூகநொட்களை நேசித்தார், ஆனால் அவர்களுக்கு பயப்படவில்லை. நான் அவர்களை நேசிக்கவும் இல்லை, அவர்களுக்கு பயப்படவுமில்லை’ என்று லூயிஸ் சொன்னான். அத்தோடு, ‘நான் ஒரு கையோடு மட்டும்தான் பிரான்ஸில் இருந்து புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதத்தை இல்லாமலாக்குவது அவசியமானால் நிச்சயமாக ஒரு கையை இழந்து அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்றான்.

பிரான்ஸை கத்தோலிக்க நாடாக்கும் தன்னுடைய கேடான நோக்கத்தை நிறை வேற்றுவதற்கான நடவடிக்கைகளை லூயிஸ் எடுக்க ஆரம்பித்தான். இரவில் மட்டுமே ஹியூகநொட்கள் தங்களைச் சார்ந்தவர்களைப் புதைக்க அவன் அனுமதியளித்தான். திருமண வைபவத்திற்கோ, ஞானஸ்நானத்திற்கோ பன்னிரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தடைவிதித்தான். அவர்களுடைய பள்ளிக்கூடங்களில் எழுதுவதும், வாசிப்பதும் தவிர வேறு எந்தப் பாடங்களும் போதிக்கப்படக்கூடாது என்று கட்டளையிட்டான். வறியவர்களாக இருந்த ஹியூகநொட்களை லஞ்சம் கொடுத்து தன்பக்கத்தில் இழுத்துக்கொள்ள அவன் முயற்சி செய்ததோடு, அரசாங்கப் பதவிகளிலும், நீதித்துறை மற்றும் வேறு உயர் பதவிகளிலும் இருந்த ஹியூகநொட்களை அப்பதவிகளில் இருந்து நீக்கினான். வியாபாரத்துறையிலும் அவர்கள் ஈடுபட முடியாதபடி செய்தான். ஹியூகநொட்கள் போதகர்கள் பிரசங்கம் செய்யத் தடை விதித்தான். மிக விரைவிலேயே டிரகனேட் (Dragonnade) என்று அழைக்கப்பட்ட புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதி களுக்கெதிரான கொடூரமான துன்புறுத்தல்கள் நாட்டில் மறுபடியும் ஆரம்பமாயின. இதன் மூலம் அவர்களை ரோமன் கத்தோலிக்க மதத் தவராக்குகின்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந் தொகையான ஹியூகநொட்கள் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற லூயிஸ் தடைவிதித்ததோடு நாட்டின் எல்லைகளில் பிடிபட்டவர்களை பாதாளக்கிடங்குகளில் அடைத்தும் துன்புறுத்தினான்.

இத்துன்புறுத்தல்களின் உச்சகட்டமாக 1685ல் நென்ட்டஸ் அறிக்கை (Edict of Nantes) நாட்டில் இருந்து முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டது. புரொட்டஸ்தாந்து வழிபாடுகள் பிரான்ஸில் முற்றாக தடைசெய்யப்பட்டன. சகல புரொட்டஸ்தாந்து சபைகளும் தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஹியூகநொட்கள் குழந்தைகள் அனைவரும் ரோமன் கத்தோலிக்கர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்று அரச அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. ஹியூகநொட்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க அரசன் பெரு முயற்சிகள் எடுத்தும் ஆயிரக்கணக்கானவர்கள் பிரான்ஸைவிட்டுத் தப்பிப் போனார்கள். ஒவ்வொரு வாரமும் மூவாயிரம் பேர்வரை சுவிட்சர்லாந்துக்கு (Switzerland) தப்பிப் போனார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கிலாந்திற்கும் (England), ஹாலந்திற்கும் (Hol- and) தப்பிச் சென்றார்கள். பிரான்ஸைச் சேர்ந்த இருநூறு ஹியூகநொட் போதகர்கள் ஹாலந்து திருச்சபைப் போதகர்களாக பணியாற்றினார்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு அவர்கள் ஹாலந்து தேசத்தில் டச்சு வரிகள் (Dutch taxes) செலுத்தாமலிருக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இன்று ஜெர்மனி (Germany) என்ற பெயரில் இருக்கும் அன்றைய புரூசியாவின் (Prussia) அரசன் பெர்லின் (Berlin) நகருக்கு அருகாமையில் 20,000 ஹியூகநொட்களுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்தான். பெரும்பாலும் 3,00,000 ஹியூகநொட்கள் பிரான்ஸ் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார்கள். திறமை வாய்ந்த பிரான்ஸைச் சேர்ந்த மரத்தச்சர்களில் அநேகர் இவ்வாறு தப்பிச் சென்றதால் அவர்கள் குடியேறிய நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார்கள். தன் நாட்டை ரோமன் கத்தோலிக்க நாடாக்க வேண்டும் என்ற வெறித்தனத்தினால் பதினான்காம் லூயிஸ் பெரிய இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது. ஸ்பெயினின் இரண்டாம் பிலிப்பைக் குறித்து சொல்லப்பட்ட, ‘மதத்தின் பெயரால் தன் நாட்டை நாசமாக்கினான்’ என்ற வார்த்தைகள் பிரான்ஸின் லூயிஸ்க்கும் மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

இதிலிருந்து ரோமன் கத்தோலிக்க மதத்தின் வெறியாட்டம் எந்தளவுக்கு பிரான்ஸ் நாட்டில் தலைவிரித்தாடியது என்பதையும், புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகள் கிறிஸ்துவிலும் அவருடைய வேதத்திலும் வைத்த விசுவாசத்திற்காக எத்தனைத் தியாகங்களை அனுபவிக்க நேர்ந்தது என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். ஐரோப்பாவின் பிரான்ஸ் இன்றைக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் தாக்கம் அதிகளவில்லாததாக, சீர்திருத்தவாதத்தின் செல்வாக்கு மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. தலைசிறந்த சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினும், வைராக்கியம் கொண்ட சீர்திருத்தவாதிகளான ஹியூகநொட்களும் பிறந்த நாட்டில் சுவிசேஷம் செழித்து சீர்திருத்தம் மலரும் காலம் வருமா?

இந்தப் படம் ஹியூகநொட்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த அட்மிரல் கொலிக்னியின் உருவச் சிலை. ஜெனிவாவிலுள்ள “சீர்திருத்த சுவர்” (Reformation Wall) என்று அழைக்கப்படும் நினைவுச்சின்னத்தில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்டது.

 

உம்முடைய இராஜ்யம் வருவதாக

(கிறிஸ்தவக் கோட்பாடுகள் தொடர்ச்சி)

கேள்வி 110: இரண்டாவது விண்ணப்பத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் எதற்காக ஜெபிக்கிறார்கள்?

பதில்: ‘உம்முடைய இராஜ்யம் வருவதாக’ என்ற இரண்டாவது விண்ணப்பத்தின் மூலம் சாத்தானுடைய இராஜ்யம் அழிக்கப்பட வேண்டும் என்றும், கிருபையின் இராஜ்யம் முன்னேற வேண்டும் என்றும், பாவிகள் அந்த இராஜ்யத்துக்குள்ளே கொண்டு வரப்பட வேண்டும் என்றும், விசுவாசிகள் அதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அந்த மகிமையின் இராஜ்யம் விரைவாக வர வேண்டும் என்றும் ஜெபிக்கிறோம்.

மத். 6:10; சங்கீ. 68:1; 51:18; வெளி. 12:10-11; 2 தெச. 3:1; ரோமர் 10:1; கொலோ 1:9-13; வெளி. 22:20.

விளக்கக்குறிப்பு: கர்த்தரை அறிந்துகொள்ளுவதே மனிதனுடைய தலையாய கடமையாக இருக்கிறது. அவரை அறிந்து விசுவாசிக்காமல் ஒருவராலும் அவர் கட்டளையிட்டிருக்கிறபடி உண்மையாக ஜெபிக்க முடியாது. ஆண்டவரின் ஜெபம் நம் கர்த்தர் பரலோகத்தில் இருப்பதை நமக்கு ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது. அந்த உணர்வோடு நாம் அவரை ஜெபத்தில் அனுக வேண்டுமென்பதை அது அறிவுறுத்துகிறது. கர்த்தரைப் பற்றி நினைக்கும்போது அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டுமென்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை ‘உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக’ என்ற வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. பாவத்தில் இருக்கும் உலகத்து மனிதனுக்கு இந்த எண்ணங்கள் இருப்பதில்லை. அவன் கர்த்தரை அறியாமல் இருப்பதால் அவனுடைய வாழ்க்கை சுயத்தை சார்ந்தே இருக்கிறது. அவனுக்கு தன்னைப் பற்றியும், தன்னுடைய வளர்ச்சி பற்றியுமே எப்போதும் நினைவாக இருக்கும். அவனுடைய வாழ்க்கை அவனைச் சுற்றியே இருக்கும். அதில் கர்த்தருக்கு இடமில்லை. விசுவாசிகளின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. விசுவாசிகளுடைய வாழ்க்கையில் அனைத்தும் கர்த்தரைச் சார்ந்தும், அவருடைய நோக்கங்களைப் பற்றியதாகவுமே இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். அதை உணர்த்தியே ஆண்டவரின் ஜெபம் ஆரம்பிக்கிறது. மெய் விசுவாசி தன் வாழ்க்கையில் அனைத்தையும் கர்த்தரோடு தனக்கிருக்கும் உறவின் அடிப்படையிலேயே அனுகுவதை இலக்காக வைத்திருப்பான். இதை ஆரம்பத்திலேயே விளக்கிய இயேசு அதற்குப் பிறகு கர்த்தருடைய இராஜ்யம் விருத்தியடைவதற்காகவும், அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றுவதற்காகவும் ஜெபிப்பது எப்படி என்பதை விளக்குகிறார்.

‘உம்முடைய இராஜ்யம் வருவதாக’ என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? கர்த்தருடைய இராஜ்யம் எப்படிப்பட்டது? என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தெரியாமல் அவருடைய இராஜ்யத்துக்காக நாம் ஜெபிக்க முடியாது. கர்த்தருடைய இராஜ்யத்தை மூன்று விதத்தில் விளக்கலாம்.

(1) ஆத்மீக இராஜ்யம்

முதலில், கர்த்தருடைய இராஜ்யம் ஆத்மீக இராஜ்யம் (Spiritual king- dom) என்பதை நாம் உணர வேண்டும். இதனை நான் விளக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, எந்தவிதத்தில் அது ஆத்மீக இராஜ்யமாக இருக்கிறது? கர்த்தர் ஏற்கனவே அனைத்தையும் ஆள்கிறவராக இருக்கிறார் (தானி. 4:35). சாத்தான் கர்த்தரின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் நிற்பதாக சிலர் நினைத்துவிடுகிறார்கள். அவர்கள் இந்த உலகத்தில் இரண்டு நிலையான அதிகாரங்கள் இருப்பதாக, அதாவது, கடவுளும், பிசாசும் சம அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், ஒரேயொரு சர்வ வல்லவர் மட்டுமே இருப்பதாக, இறையாண்மையுடைய ஒரே அதிகாரம் மட்டுமே இருப்பதாக கர்த்தரின் வேதம் போதிக்கிறது. சாத்தான் அந்த அதிகாரத்தைத் தூக்கியெறியவே எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். பழைய ஏற்பாட்டு யோபு நூலில் இதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளுகிறோம். கர்த்தர் சாத்தானோடு பேசுகிறபோது, ‘அவன் மேல் உன் கையை வைக்காதே’ என்று சொன்னார். சாத்தான் செய்கின்ற, செய்ய முடிகின்ற காரியங்களை மட்டுமே அவன் செய்து வர அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அதற்கு மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. ஓரளவுக்கு மட்டுமே சாத்தானின் ஆட்டங்களுக்கு கர்த்தர் அனுமதிக்கிறார். அவனால் ஒருபோதும் கர்த்தரை மீறியோ, கர்த்தருடைய திட்டங்களைத் தகர்க்கும் வகையிலோ நடக்க முடியாது.

நாம் ‘கர்த்தருடைய இராஜ்யம் வருவதாக’ என்று ஜெபிக்கின்றபோது, கர்த்தர் சகலத்தையும் ஆள வேண்டும் என்று நாம் ஜெபிக்கவில்லை. கர்த்தர் ஏற்கனவே சகலத்தையும் ஆண்டு வருகிறார். அப்படியானால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? இந்த வார்த்தைகளுக்கு ஆத்மீக ரீதியில் அர்த்தமுண்டு. அதாவது, கர்த்தரின் கிருபை மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாக்களின் இருதயங்களில் கிரியை செய்து அவர்கள் கர்த்தரின் சித்தத்தை தமது வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பதே இதற்கு அர்த்தம். கர்த்தரின் கிருபையின் இராஜ்யம் இந்த உலகத்தில் வரவேண்டும் என்றே நாம் ஜெபிக்கும்படி இயேசு போதிக்கிறார். எல்லா மனிதர்களுமே வெளிப்புறமாக கர்த்தரின் இறையாண்மையுள்ள ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலருடைய இருதயங்களில் கர்த்தர் தன்னுடைய ஆவியின் மூலம் ஆட்சி செய்கிறார். அதனால் அவர்கள் கர்த்தரின் சித்தத்தை தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றி வருகிறார்கள். இது எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் நிகழவில்லை. அது நிகழ வேண்டும் என்றுதான் இந்த ஜெபத்தின் மூலம் நாம் கர்த்தரிடம் வருகிறோம்.

சிலர் நாம் அரசியல் மாற்றங்களுக்கும், அரசியல் விடுதலைக்கும் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்தத் தவறைத்தான் யூதர்கள் செய்தார்கள். அவர்கள் கர்த்தரின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் மேசியா மூலம் அரசியல் விடுதலையையும், இஸ்ரவேலின் உன்னத நிலையையும் நாடி அலைந்தார்கள். ஆனால், இந்த ஜெபம் அதைப்பற்றியதல்ல. அதனால்தான் இந்த ஜெபம் குறிக்கும் இராஜ்யத்தை ஆத்மீக இராஜ்யம் என்று அழைக்கிறேன். கிறிஸ்தவர்களில் சிலர், இயேசு இந்த உலகத்துக்கு வந்து ஆயிரம் வருடங்களுக்கு அரசாட்சியை ஏற்படுத்துவார் என்று கருதுகிறார்கள். அவர்கள் போதனைப்படி இயேசு இந்த உலகத்துக்கு வந்து இந்த உலகத்தின் இராஜாவாக, எருசலேமைத் தலைநகராகக்கொண்டு அங்கே கண்களால் காணக்கூடியதாக ஒரு சிம்மாசனத்தை ஏற்படுத்தி ஆயிரம் வருடங்களுக்கு இராஜாவாக ஆட்சி செய்வார் என்கிறார்கள். ஆனால், இயேசுவின் போதனைகள் இவர்களுடைய கனவுகளுக்கெல்லாம் எதிரானதாக இருப்பதை இவர்கள் உணர்வதில்லை. இயேசு சொல்லுகிறார், ‘தேவனுடைய இராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறதே’ (லூக்கா 17:20). யோவான் 18:36ல், ‘என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல’ என்கிறார் இயேசு. ஆகவே, மறுபடியும் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மூலம் கர்த்தர் ஆண்டதுபோல ஓர் உலக இராஜ்யத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அத்தகைய அரசியல் ரீதியான இராஜ்யம் அமையப் போவதில்லை. இந்த ஜெபத்தில் காணப்படும் ராஜ்யம் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் எந்தவொரு நகரத்தையோ, நாட்டையோ குறித்த அரசியல் வாசகங்கள் இல்லை. இது ஆத்துமாக்களின் இருதயத்தில் நிறுவப்படுகின்ற கிறிஸ்துவின் ஆத்மீக இராஜ்யத்தைக் குறிக்கின்றன. இந்த இராஜ்யம் நாட்டு எல்லைகளைக் கடந்தது. இது வாளால் வெல்லப்படாமல் வார்த்தையினாலும், ஆவியினாலும் வெல்லப்படும் இராஜ்யமாகும்.

(2) தனக்கெதிரான அனைத்தையும் எதிர்க்கும் இராஜ்யம்

இந்த உலகத்தில் இருக்கும் அரசாங்கங்கள், இயக்கங்கள், பண்பாடுகள் அனைத்திற்கும் பின்னால் அவற்றை ஆளுகின்ற, இயக்குகின்ற ஒரு வல்லமை இருக்கின்றது. அதனால்தான் சாத்தான் இந்த உலகத்தின் ‘கடவுள்’ என்று அழைக்கப்படுகிறான். மனிதகுலம் ஆதாமோடு பாவத்தில் விழுந்தபோது சாத்தான் இந்த உலகத்தையும், அதன் மக்களையும் ஆள ஆரம்பித்தான். இயேசு கிறிஸ்துவின் வருகையும், அவருடைய சிலுவைப் பலியும் அவனுடைய கொட்டத்தை அடக்கி அவனுடைய இறுதி முடிவுக்கு வழிவகுக்கப் போகின்றன. உலகத்து மக்கள் அவனுடைய இராஜ்யத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவர்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும். அத்தோடு, சாத்தானோடு சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் அவர்கள் மேலும் மேலும் பூரணமாக விடுபட வேண்டும். ஆனால், இங்கிருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால் சாத்தான் நம்மை எப்போதும் வஞ்சிக்கப் பார்ப்பான். இயேசு கிறிஸ்துவின் இராஜ்யம் சாத்தானோடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் எதிரானது என்பதை நாம் நினையாமல் இருக்கும்போதுதான் அவன் நம்மை வஞ்சிக்கப் பார்ப்பான். இதற்கு நான் ஓர் உதாரணத்தைத் தருகிறேன். பல்லாண்டு காலமாக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தமிழ்ப் பண்பாடு (கலாச்சாரம்) தமிழரான எவரோடும் ஒட்டிப்பிறந்தது, நலமானது என்ற எண்ணம் இருந்துவருகிறது. அதாவது, அதற்கும் சாத்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை, கிறிஸ்தவத்திற்கும் அதோடு எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் தொடர்கிறது. ஆனால், இன்றுவரை தமிழர்கள் மத்தியில் திருச்சபை ஆவிக்குரிய வல்லமை இல்லாமல் இருப்பதற்கு இந்த எண்ணம் ஒரு காரணம் என்பதை பலரும் உணர்வதில்லை. தொடர்ந்தும் தமிழ்ப்பண்பாடு என்ற கலாச்சாரம் திருச்சபைகளைப் பாதித்து வருகிறது. இதற்குக் காரணம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் தொடர்கின்ற பல விஷயங்களும், நாம் வாழுகின்ற இந்துப் பண்பாட்டு சமுதாயத்திலிருந்து பெற்றுக்கொண்டவை என்பதை நாம் அறிவுபூர்வமாக நினைத்துப் பார்ப்பதில்லை. சிலை வழிபாட்டு சமுதாயத்தில், சிலை வழிபாட்டு பண்பாட்டில் பிறந்துதான் நாம் அனைவரும் கிறிஸ்தவ சுவிசேஷத்தை அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த சிலை வழிபாட்டு வாழ்க்கை முறை பண்பாடு என்ற பெயரில் அநேக விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் இன்றும் கிறிஸ்தவ சமுதாயம் முற்றாகத் தூக்கியெறிந்துவிடாமல் பின்பற்றி வருகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தகுந்த வரன் பார்த்து திருமணம் நடத்தி வைப்பதை நாம் பண்பாடு என்கிறோம். ஆனால், இது சாதியையும், குடும்ப சொத்தையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சிலை வழிபாட்டு சமுதாயம் உருவாக்கிய கலாச்சாரம் என்பதை நம் மக்கள் இன்றும் உணராமலிருந்து வருகிறார்கள். ஆதியாகமத்தில் கர்த்தர் போதிக்கும் திருமண முறையும், குடும்ப வாழ்க்கை முறையும், அந்த அடிப்படையில் எபேசியரிலும், கொலோசெயரிலும் பவுலும், பேதுரு தன் நிருபத்திலும் கொடுக்கும் போதனைகளும் தமிழர் பண்பாட்டு திருமண, குடும்ப வாழ்க்கை முறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பது நமக்கு புரிவதில்லை. இதற்குக் காரணம் அந்தளவுக்கு வேத அடிப்படையில் நம் பண்பாட்டை நாம் ஆராய்ந்து, வேதத்திற்கு எதிரானவற்றை தூக்கியெறிந்து, கிறிஸ்துவின் ஆட்சி நம் இருதயத்தையும், வாழ்க்கையையும் ஆளும்விதத்தில் வாழ நாம் வளரப் பழகிக்கொள்ளாததுதான். இதேவிதத்தில் கணவன்-மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்கூட வேத ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படாமல் பண்பாட்டை நன்மை, தீமைகளற்ற (neutral) ஒரு நடைமுறை வழக்கமாக எண்ணி இன்றைக்கும் கிறிஸ்தவ சமுதாயம் வாழ்ந்து வருகிறது. அறிவுபூர்வமான சிந்தனையின் அடிப்படையில் சுவிசேஷ மாற்றங்கள் ஏற்படாத வரையில் கிறிஸ்துவின் முழுமையான ஆட்சி கிறிஸ்தவ திருச்சபைகளில் உருவாக தமிழ்ப்பண்பாடு தடையாகத்தான் இருந்து வரும்.

‘உமது இராஜ்யம் வருவதாக’ என்று நாம் ஜெபிக்கிறபோது நமது எண்ணங்களும், நடவடிக்கைகளும் நாம் விசுவாசிக்கும் கிறிஸ்துவின் வேத ஆளுகைக்குள் வர வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறோம். கிறிஸ்துவின் வேத போதனைகளுக்கு எதிரான அனைத்தோடும் நமக்கு தீவிர போராட்டமும், கலகமும் இறுதி வெற்றியும் உண்டு. நம் தேசத்திலும், இந்த உலகத்திலும் இந்த வகையிலேயே மேலும், மேலும் கிறிஸ்துவின் இராஜ்யம் வளர்கின்றது; கிறிஸ்துவின் ஆளுகை ஏற்படுகின்றது.

கிறிஸ்துவின் இராஜ்யம் உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் எதிரானது மட்டுமல்ல, அந்த இராஜ்யம் உருவாக கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களும் வித்தியாசமானவை. ‘எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கின்றன (2 கொரி. 10:4). இந்த உலகத்து கடவுளான சாத்தானோடு போரிடுகிறபோது கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்த பாவகரமான ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது. நமது போராயுதங்கள் மாம்சத்துக்குரியவைகளல்ல. சபை வரலாற்றில் திருச்சபை ஒரு காலத்தில் வேதசத்தியங்களைப் புறக்கணித்து மாம்சத்துக்குரிய செயல்களைச் செய்து வந்தபோது ஆயுதங்களேந்தி இஸ்லாமியர்களோடு போராடினார்கள். இவற்றை சபை வரலாறு ‘சிலுவைப் போர்கள்’ (Crusades) என்று வர்ணிக்கிறது. இது மெய்க் கிறிஸ்தவர்கள் செய்கிற காரியமல்ல. பவுல் ரோம் சிறையில் இருந்தபோது அங்கிருந்த போர் வீரர்களையும், அரண்மனையில் இருந்தவர்களையும் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவுக்காக வென்றிருக்கிறார். அதுவே கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆத்மீக ஆயுதம். ரோமின் பேரரசனான சீசர், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது அவர்கள் உலகத்து ஆயுதங்களைத் தாங்கி அவனோடு போராடவில்லை. சிலுவையின் போதனைகளைத் தூவி ரோமை வென்றார்கள். சிலர் முடிவு தான் முக்கியம், அதை எதைக் கொண்டு சாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல என்பார்கள். இது முழுத்தவறு. வேதம் அப்படிப் போதிக்கவில்லை. சுவிசேஷ நோக்கங்களை அடைவதும் வெல்லுவதும் மட்டும் முக்கியமல்ல, அதை நிறைவேற்றப் பயன்படுத்தும் நமது வழிமுறைகளும் சுவிசேஷ வழிமுறைகளாக இருக்க வேண்டுமென்பதில் கர்த்தர் உறுதியாக இருக்கிறார். அவருடைய இராஜ்யத்துக்குரிய ஆத்மீக ஆயுதங்களை மட்டுமே நாம் என்றும் உபயோகப்படுத்த வேண்டும்.

(3) வரவிருக்கின்ற இராஜ்யம்

‘உமது இராஜ்யம் வருவதாக’ என்ற ஆண்டவரின் ஜெபத்திற்கான அர்த்தத்தைப் பார்த்து வருகிறோம். அது ஆத்மீக இராஜ்யம் என்பதையும், உலகத்தைச் சார்ந்த அனைத்தையும் எதிர்த்து நிற்கும் இராஜ்யம் என்பதையும் இதுவரை பார்த்திருக்கிறோம். இனி அது வரவிருக்கின்ற இராஜ்யமாகவும் இருக்கின்றது என்ற உண்மையை ஆராய்வோம். இயேசு நமக்குத் தந்துள்ள மாதிரி ஜெபத்தின் இவ்வாசகங்கள் அவருடைய இராஜ்யத்தைப் பற்றிய எதிர்கால உண்மைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. அதாவது, கடைசிகால நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன. நமது வினாவிடை, ‘மகிமையின் இராஜ்யம் விரைவாக வரவேண்டும் என்கிறபோது, கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையின்போது அனைத்தையும் புதுப்பிக்கின்றபோதுதான் அவருடைய இராஜ்யம் முழுமையடையும்’ என்பதை நினைவுபடுத்துகின்றது. அப்போதே இயேசு உலகத்தை நியாயந்தீர்த்து அனைத்திற்கும் முடிவு கட்டி அனைத்தையும் புதுப்பிக்கப் போகிறார். இதை மத்தேயு 13ல் இயேசு விதைக்கிறவனின் உவமையின் மூலம் விளக்குகிறார். கோதுமையை விதைக்கிறபோது சத்துரு வந்து களையையும் விதைத்துவிடுகிறான். ஆனால், ஆண்டவர் அந்த உவமையில் களைகளைப் பிடுங்க வேண்டாம். அறுப்புக்காலம் வரையும் களைகளையும், கோதுமையையும் வளரவிடுங்கள் என்கிறார். இங்கே அறுப்புக்காலம் இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தைக் குறிக்கிறது. அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம், அவருடைய இரண்டாம் வருகையின்போதே அவர் களைகளைப் பிடுங்கி சுட்டெரிக்கப் போகிறார் (13:30). இயேசு சொல்லுகிறார், ‘அறுப்பு உலகத்தின் முடிவு’ என்று (13:39). ஆகவே, கிறிஸ்துவின் இராஜ்ய வெற்றியை அறுப்புக் காலமாகிய அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்பு நாம் எதிர்பார்க்க முடியாது. அவருடைய இராஜ்யம் வளரும்; விஸ்தரிக்கப்படும், ஆனால் அதன் முழுமை கடைசிக்காலத்திலேயே நிகழும். இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக உலகம் சீர்திருந்தி ஆயிரம் வருடமாகிய பொற்காலத்தை அனுபவிக்கும் என்ற போதனைகளையெல்லாம் இயேசுவின் வார்த்தைகள் தவிடுபொடியாக்குகின்றன.

‘உம்முடைய இராஜ்யம் வருவதாக’ என்று நாம் ஜெபிக்கிறபோது கிறிஸ்துவின் இராஜ்யம் இப்போது நடந்து வருகின்றது என்பதையும் அது மகிமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. சிலவேளைகளில் உலகத்தில் நடக்கும் காரியங்களையும், திருச்சபைகளையும் பார்க்கும்போது நமக்கு அப்படித் தெரியாமல் இருக்கலாம். கிறிஸ்துவின் இராஜ்யம் பலவீனமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலம் ஏற்கனவே வெற்றி கண்டிருக்கிறார். சாத்தானின் கொட்டத்தை அடக்கியிருக்கிறார். மரணம் ஏற்கனவே வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது (1 கொரி 15:54, 55). விசுவாசிகளுக்கு வெற்றி ஏற்கனவே கிட்டியிருக்கிறது (1 யோ 5:4). கிறிஸ்து ஏற்கனவே சகலத்துக்கும் அரசராக நியமிக்கப்பட்டிருக் கிறார் (எபே. 1:20&23).

பாவத்தில் இருக்கின்ற இவ்வுலகத்தில் கிறிஸ்துவின் இராஜ்யம் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது. இவ்வுலகத்தின் முடிவையும் அழிவை யும் நாம் இப்போதே ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. இதற்கு மத்தியில் கிறிஸ்துவின் ராஜ்யம் வளர்கிறது. கிறிஸ்து வருகிறபோது இவ்வுலகம் அதன் பாவத்தோடு அழிய, அவரால் கட்டப்பட்டு வருகிற ராஜ்யம் முழுமைபெறும். அன்றைக்கு அந்த ராஜ்யத்தை நாம் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளப் போகிறோம். ‘அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்’ (வெளி. 11:15).

 

பிரியாவிடை பிரசங்கங்கள்

-8-

அல்பர்ட் என். மார்டின்

குடும்ப வாழ்க்கை: பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுரைகள்

கடந்த வாரத்தின் கர்த்தருடைய நாளின் மாலை வேளையிலே நாம் சபையாகக் கூடி வந்தபோது, பிரியாவிடை பிரசங்கத்தின் கடைசியான பிரசங்கம் இதுதான் என்று கூறி நான் ஆரம்பித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், அந்நாளிலே முழு பிரசங்கத்தையும் செய்யக்கூடாமல் போயிற்றென்பதையும் நான் முடிவில் உங்களுக்கு அறிவித்தேன். அதை இந்த வாரத்தில் செய்து முடிப்பேன் எனக் கூறியிருந்தேன். அதையும் தவிர்த்து முடிவு பிரசங்கமாகவும் ஒரு பிரசங்கத்தை செய்வேன் என்றும் கூறியிருந்தேன். ஆனால் நான் உங்கள் மத்தியிலே இருக்கப் போவதோ ஒரேயொரு கர்த்தருடைய நாள் மாத்திரமே. அப்படியிருக்கையில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது, சபையாராகிய உங்களில் சிலர் மூப்பர்களாகிய எங்களுக்கு சில ஆலோசனைகளை அளித்தீர்கள். அவைகளில் மிகச் சிறந்ததான ஆலோசனையின்படி, இன்றைக்கு ஞாயிறு இளைஞர் பாட வகுப்பிலே, சென்ற வாரம் விட்டுப் போன பிரசங்கத்தை செய்யும்படியாக நாம் இங்கு கூடி வந்திருக்கிறோம். நம்மோடு, 5ம் வகுப்பு படிக்கிற சிறுவர் முதற்கொண்டு, இளம்பிராயத்தினர் வரைக்கும் சேர்ந்து இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது. இவர்களையும் தவிர்த்து நம் மத்தியிலே சில விருந்தினரும் வந்திருக்கிறார்கள். ஆகவே, சென்ற வாரத்திலே நான் பிரசங்கித்தவைகளின் சுருக்கத்தை நினைவுபடுத்திவிட்டு, இன்றைய செய்தியைத் தொடருகிறேன்.

சென்ற வாரத்திலே நான் உங்களுக்கு அளித்த உபதேசம்: வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான உங்களுடைய கொள்கையையும் அதை நடைமுறைப் படுத்துவதையும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள். இந்த ஆலோசனையின் விளைவாக உங்களுடைய குடும்ப வாழ்க்கையானது, மேலும் வேதாகம ஒழுக்கம் உடையதாகவும், சுவிசேஷம் நிரம்பியதாகவும், தொடர்ந்து முன்னேறிச் செல்கிறதுமான கொள்கையில் பலப்பட வேண்டும். இந்த ஆலோசனையிலுள்ள வார்த்தைகளின் கருத்துக்களை உங்களுக்கு விவரித்துக் கூறினேன். “வேதாகம ஒழுக்கம்” என்பது, காலங்களுக்குட்பட்டதாயிராமல் எல்லா காலத்திற்கும் பொருந்தும்; எந்தக் கலாச்சாரத்திற்கும், எந்த சூழ்நிலையிலுள்ள குடும்பத்திற்கும் அது பொருந்தும். “சுவிசேஷம் நிரம்பியதான” என்கிற வார்த்தையை நான் உபயோகிக்கக் காரணம்: குடும்ப வாழ்க்கைக்குரிய சகல அறிவுரைகளும், முக்கியமாக நிருபங்களில் காணப்படும் அறிவுரைகளும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதினாலே வந்தவையாகும். அந்த சுவிசேஷமே ஆண்கள், பெண்கள் ஆகியோருடைய இருதயங்களை ஆட்கொண்டது. அதனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வந்து வாசம் செய்கிறவராயிருக்கிறார். அப்படிப்பட்டவர்கள், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களாகவும், இயேசுவின் மீது அன்புகூருகிறவர்களாகவும், இயேசுவைப் பிரியப்படுத்துகிறவர்களாகவும் வாழ முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுடைய குடும்ப வாழ்க்கையை சுவிசேஷம் ஆளுகை செய்கிறதாயிருக்கிறதைக் குறிக்கும் வகையில் “சுவிசேஷம் நிரம்பியதான” குடும்ப வாழ்க்கை என்கிற வார்த்தையை உபயோகித்திருக்கிறேன். குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான அறிவுரைகளைக் கொடுக்கும்போது பவுல் சுவிசேஷத்தின் மையமானக் கருத்தையும் சேர்த்துதான் தருகிறார். அதன் பிற்பாடு நான் சில நிமிடங்கள், சுவிசேஷம் நிரம்பியதான குடும்பத்தின் வடிவமைப்பு எப்படியாக இருக்கும் என்பதை விளக்கினேன். முதலாவது அதிலுள்ள குடும்பத் தலைவனைக் குறிப்பிட்டேன். “அவன் சுயநலமில்லாதவனாக, தியாகமனப்பான்மை கொண்டவனாக, தன் மனைவியைப் போஷித்துக் காப்பாற்றுகின்ற கொள்கையை அன்போடும் கனத்தோடும் கடைப்பிடிக்கிற தலைவனாக இருந்து, தன் மனைவியை அறிந்துகொள்வதில் நாளுக்குநாள் அதிகமதிகமாக முன்னேறுவான்”. இவை, எபே 5, 1பேது 3:7, கொலோ 3 ஆகிய வசனபகுதிகளில் கணவனைக் குறித்துக் காணப்படுவதின் சாராம்சமாகும். அடுத்தபடியாக மனைவியைக் குறித்தது “அவள் மனப்பூர்வமாகவும், உற்சாகமாகவும், சகல காரியங்களிலும் தனது கணவனுக்குக் கீழ்ப்படிகிறவளாகவும் அவனை மதித்து நடப்பதையும், அவனுக்கு உதவியாயிருப்பதையும் தனது அன்பின் கொள்கையாகக் கடைப்பிடிக்கிறவளாக இருப்பாள்”. அதோடு நான் இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்திருக்க வேண்டும். அவளுடைய சிந்தையும், பணியும் தனது வீட்டைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் (எபே 5, கொலோ 3, தீத்து 2).

பிள்ளைகளைக் குறித்து கூறிய பின்னர் நான், பெற்றோருக்கு பிள்ளைகளின் மீது இருக்க வேண்டிய கடமைகளைக் குறித்துக் கூறியிருக்க வேண்டும். அதைத்தான் நான் சென்ற வாரத்தில் நேரமின்மையால் கூற முடியவில்லை. பிள்ளைகளை வளர்ப்பதில் வேதாகமத்தின் ஒழுங்கின்படி வளர்க்கும் பெற்றோர், இடைவிடாத ஜெபத்தோடும், வேதாகமம் வலியுறுத்துகின்ற ஒழுக்கத்துக்குள் அவர்களைக் கொண்டு வரவேண்டிய அதிகாரத்தை தாங்கள் கிறிஸ்துவிடமிருந்து பெற்றிருக்கிறபடியினால் பிள்ளைகளை இடைவிடாமல் ஒழுக்கத்துக்குட்படுத்துகிறவர்களாகவும், புத்திசொல்லுகிறவர்களாகவும் காணப்படுவார்கள். பெற்றோரின் இந்த கடமைகளைக் குறித்து எபே 6:4, கொலோ 3:21, நீதிமொழிகளில் பல வசனங்கள், உபா 6 போன்ற வசனபகுதிகளில் நீங்கள் காணலாம். அப்படியாக வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பத்தில் வசிக்கின்ற பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாயிருப்பார்கள்? அவர்கள், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலவே தங்கள் பெற்றோருக்கும் சகல காரியத்திலேயும், உற்சாகத்தோடும், மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிந்து, அவர்களை கனம் பண்ணுவதை தங்களுடைய கொள்கையாகக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறவர்களாய் காணப்படுவார்கள்”. (எபே 6:1-3, கொலோ 3:20). அந்தவிதமான கீழ்ப்படிதல் சரியான முறையில் காண்பிக்கப்பட வேண்டும். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் கீழ்ப்படிதலுக்கான குணாதிசயத்தை சரியான முறையில் வெளிப்படுத்தினார். 12 வயது பாலகனாக அவர் எருசலேம் தேவாலயத்திலே காணப்பட்ட சந்தர்ப்பத்திலே, அவர் தவறு செய்ததாகக் கருதி அவருடைய பெற்றோர் சற்று எரிச்சலடைந்தார்கள். ஆனால் அவரோ, “நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டும் என்பதை அறியீர்களா?” என அவர்களைப் பார்த்துக் கேட்டார். கடவுளுக்குத்தான் முதலாவதாக கீழ்ப்படிந்திருக்க வேண்டும். கடவுளின் சித்தம் வசனத்தின் மூலமாகத் தெளிவாக உணர்த்தப்படும்போது, பெற்றோர் வேறுவிதமாக சொன்னாலும், பிள்ளைகள் கடவுள் சொல்லுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டும். மனைவியின் விஷயத்திலும் இதே கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவளும் கடவுளின் கட்டளைகளுக்கே முதல் இடத்தைக் கொடுக்க வேண்டும். கடவுளின் கட்டளைகள் மீறப்படுகின்றதான காரியங்களில் மனைவியோ அல்லது பிள்ளைகளோ மனித அதிகாரத்திற்குக் கட்டுப்பட அவசியமில்லை. கடவுளின் கட்டளைகளை மீறி செயல்படும்படி ஒரு புருஷன் தன் மனைவியை வற்புறுத்தும்போது, அவள் அதற்கு இணங்க வேண்டியதில்லை. அதைத் தவிர்த்து பிள்ளைகள் இயேசுவுக்குக் கீழ்ப்படிவது போலவே தங்கள் பெற்றோருக்கு சகல காரியத்திலேயும் உற்சாகத்தோடும் மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அதன்பின் நான் 5 எச்சரிப்புகளை உங்களுக்குக் கொடுத்தேன். வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கையை வாழுகின்ற புருஷன்-மனைவி ஐக்கியத்தைக் குலைத்துப் போடக்கூடிய 5 விதமான ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கை செய்தேன். அவைகளை திரும்பவும் கூற இப்போது அவகாசமில்லாததால் நான் புதிய செய்திக்கு கடந்து போகிறேன்.

பெற்றோருக்கு சில எச்சரிப்புகள் வேதாகமம் வழிகாட்டுகின்றபடியான ஒழுங்கு முறைகளையும் அறிவுரை களையும் கொண்டு உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் இடைவிடாத ஜெபத்தோடும் அன்போடும் சீர்பொருந்தப் பண்ணுகின்றதான ஊழியத்தை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதை நிறைவேற்றிக்கொண்டு வருகையில் நீங்கள் என்னவிதமான ஆபத்துக்களை சந்திப்பீர்கள் என்பதைக் கூற விழைகிறேன். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அவைகளுக்கு இடம் கொடுத்துவிட்டால் அவை வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்டதும் சுவிசேஷம் நிரம்பியதுமான உங்கள் குடும்ப வாழ்க்கைக்கே ஆபத்தை வருவித்துவிடும். முக்கியமாக பெற்றோர்- பிள்ளைகள் உறவில் விரிசல் கண்டுவிடும். நான் கூறவிருப்பதை எந்தவிதமான வரிசைக்குட்படுத்தியும் அமைக்கவில்லை. கணவன்-மனைவிக்கு கூறியது போலவே இங்கேயும் நான் 5 எச்சரிப்புகளை குறிப்பிடுகிறேன்.

1. குடும்பத்தார், அளவுக்கதிகமான பணிகளில் ஈடுபடுவதால் விளையக்கூடிய பாதிப்பு களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

நேரத்தை ஆக்ரமிக்கும் நடவடிக்கைகள்! இவைகள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் குறித்து நன்றாக அறியும் அளவுக்கு நான் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன். அவைகள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உதாரணமாக விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள்வோம். அதற்குரிய பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சிலரை 4.30 மணிக்கு வரச் சொல்லுவார்கள். சிலரை 5.30 மணிக்கு வரச் சொல்லுவார்கள். அதற்கென வெவ்வேறு இடங்களுக்கு சென்று பிள்ளைகளை பயிற்சி ஸ்தலங்களில் விட்டு வரவும் திரும்பவும் அவர்களைக் கூட்டிக் கொண்டு வரவும் இங்கும் அங்குமாக போக வேண்டியதிருக்கும். அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? குடும்பமாக ஒன்று சேர்ந்து இருக்கும் நேரங்கள் பாதிக்கப்படுகிறது. குடும்ப ஆராதனைகளைக்கூட சரிவர நடத்த முடியாததான நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த மாதிரியான சமயங்களில் பெற்றோராகிய நீங்கள்தான் உறுதியாக நின்று அதற்கு ஒரு வரையறை ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு போதும், இதற்கு மேல் வேண்டாம் என கறாராக கூறிவிட வேண்டும். நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்திலே, தினந்தோறும் சேர்ந்து வேதத்தைப் படிப்பதிலும், நல்ல ஆவிக்குரிய புத்தகங்களை வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், கடவுளைப் புகழ்ந்து பாடுவதிலும் குடும்பமாக நேரத்தை செலவிட முடியாவிட்டால், வேதம் கட்டளையிடாத அந்த மற்ற பணிகள் சற்றும் அவசியமில்லை எனக் கூற தயங்காதீர்கள். இதனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எரிச்சலை சம்பாதித்துக்கொள்ள நேரிடலாம். அவர்களை நீங்கள் புரிந்துகொள்ளாமல், உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறீர்கள் என்றுகூட அவர்கள் உங்களைக் குறித்து நினைத்துக்கொள்ளலாம். அதனால் என்ன? யோசுவாவைப் போன்ற மனப்பான்மை உங்களுக்கு இருக்குமானால், “நானும் என் வீட்டாருமோவெனில் கர்த்தரையே சேவிப்போம்” (யோசு 24:15) என்கிற உறுதியை விடாமல் கடைப்பிடியுங்கள். “நம்முடைய வீட்டிலே தினந்தோறும், தவறாமல் குடும்ப ஆராதனை நடக்கும். அதற்கு இடையூறாக இருக்கும் காரியம் எதுவாக இருந்தாலும் அது மாற்றப்படவோ அல்லது நீக்கப்படவோ வேண்டும்” என்கிற உறுதியைக் காண்பியுங்கள். எரேமியா தீர்க்கதரிசி ஒரு பயங்கரமான ஜெபத்தை செய்கிறார்: “உம்மை அறியாத ஜாதிகளின் மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின் (குடும்பங்களின்) மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்” (எரே 10:25). உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத குடும்பங்களின் மீது உமது உக்கிரத்தை ஊற்றிவிடும் என்கிறார். குடும்ப ஆராதனையைக் குறித்தும், குடும்பமாகக் கடவுளைத் தொழுதுகொள்ள வேண்டியதின் அவசியத்தைக் குறித்தும் காணப்படுகின்ற பிரத்தியேகமான வசனம் இது. ஆகவே, பெற்றோர்களே, நான் உங்களை எச்சரிக்கிறேன். உங்கள் குடும்பத்தார் அளவுக்கதிகமான இதர பணிகளில் ஈடுபடுவதால் விளையக்கூடிய நேர மின்மைக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது விளையாட்டு சம்பந்தமாக இருந்தாலும், இசைப் பயிற்சியாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். “என்னையும் எனது குடும்பத்தாரையும் பொறுத்த அளவில் எங்கள் வாழ்க்கை கர்த்தரின் நியதிக்குட்பட்டதாய்தான் இருக்கும்” எனக் கூறுகிற தைரியமுடையவர்களாயிருங்கள்.

என்னுடைய குடும்பத்திலே இதை எப்படிக் கடைப்பிடித்தோம் என்று கூறுகிறேன். புதன்கிழமையைத் தவிர்த்து மற்ற நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 மணி வரைக்கும் குடும்ப நேரமாக அனுசரித்து நாங்கள் கூடி வருவோம். அந்த வேளைகளில் தொலைபேசிக் கருவியை அணைத்து வைத்துவிடுவோம். அதை செயலிழக்கச் செய்திருக்கிறோம் என்பது எங்களுக்கு மீண்டும் நினைவுக்கு வருவதற்காக அதன் மீது ஒரு சிறிய மேஜைவிரிப்பைப் போட்டு மூடி வைத்திருப்போம். எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும், அந்த வேளையானது குடும்பமாக செயல்படுகிற நேரம் என்று. அது எங்களுக்கு மட்டுமே உரிய பிரத்தியேகமான நேரம். அதில் ஒரு தொலைபேசி அழைப்பும் வராது. அப்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டுமே இருந்த காலங்கள். அதன் பிற்பாடுதான் நான் எனது படிப்பு அறைக்கென தனியாக ஒரு இணைப்பைப் பெற்றுக் கொண்டேன். பிள்ளைகள் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலங்கள் அவை. அந்த குடும்ப நேரங்கள் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அவ்வேளைகளில் நாங்கள் ஒருவரோடொருவர் அளவளாவுவோம்; பிள்ளைகளோடு விளையாடு வோம்; நாங்கள் ஒன்று சேர்ந்து வாசிப்போம்; ஜெபிப்போம்; பாடல்கள் பாடுவோம். அது குடும்பத்திலே பிணைப்பை வலுப்படுத்தியது. சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் காலை வேளைகளில் அப்படியாக ஒன்று சேரமுடியாது. ஆனால் மாலை வேளைகளில் நாங்கள் குடும்பமாக செலவிடுகின்ற நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறவர்களாயிருப்போம். யாரும், எதுவும் அதில் குறுக்கிட்டுவிடாதபடிக்கு அதை மிகுந்த கவனமாக காத்துக்கொண்டோம்.

2. பிள்ளைகளை ஒழுக்கத்துக்குட்படுத்தி, பயிற்சிவிப்பதில் உலகத்தின் வழிமுறை களால் தந்திரமாக கவரப்பட்டு விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

“நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் . . . உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. இந்த ரோமர் 12:2ஆம் வசனத்தை நான் எத்தனையோ முறை குறிப்பிட்டிருப்பதை நீங்கள் பல ஆண்டுகளாக கேட்டு வந்திருக்கிறீர்கள். உலகம் தனது வழிமுறைகளுக்குள் உங்களை அழைத்துச் சென்றுவிடாதபடிக்கு நீங்கள் மறுரூபமாகுங்கள். கடவுளின் ஜனங்களும் உலகத்தாரைப் போலவே சிந்திப்பதையும் பேசுவதையும் நடப்பதையும் பார்க்கையில் அது எனக்கு மிகுந்த துக்கத்தை வருவிப்பதாக இருக்கிறது. உதாரணமாக, தன்னைக் குறித்தே பெரிதாக நினைத்துக் கொள்ளுகிற சுயகெளரவக் (Self Esteem) கொள்கை. ஒரு சிறுவன் தனது ஷூவைத் தானே போட்டுக் கொள்வதைக் காணும் பெற்றோர், அதற்காக அவனைப் புகழ்ந்து, போற்றி, இன்னும் கொஞ்சம் போனால் அவனுக்கு ஒரு பீடத்தைக் கட்டி அதற்காக அவனைத் தொழுதுகொள்ளக்கூட செய்வார்கள் போன்ற உணர்வை வெளிப்படுத்துதல். ஆகா, என்ன நேர்த்தியாக செய்துவிட்டாய், பெரிய காரியம் செய்து விட்டாயே என அளவுக்கதிகமாக போற்றுதல் - அடிப்படை காரியத்தை செய்ததற்கு நினைவாலயமே கட்டுவதா? ஏன் அப்படி செய்கிறார்களாம்? அது அவனுடைய சுயமரியாதையை அதிகப்படுத்தும் என்கிற மனோதத்துவக் கொள்கைக்காக. பிள்ளைகளே, நீங்கள் அளவுக்கதிமான சுயகெளரவத்தோடு வளைய வந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான், ஒருவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடனாக இருக்க வேண்டுமானால் அவன் தனது சுயகெளரவத்தைக் களைந்து, தன்னைத் தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெற்றோரே, நீங்கள் பிள்ளைகளுக்கு வேதாகமத்திலிருந்துதான் சொல்லித் தர வேண்டும். கடவுளின் சாயலைத் தரித்துக் கொண்டவர்களாக இருக்கிறபடியால் அவர்களுக்கென ஒரு மரியாதையும் தகுதியும் இருக்கிறது. என்றாலும் ஆதாமின் பாவம் தங்களுக்குள் இருக்கிறபடியால் அவர்கள் தங்களைக் குறித்து இழிவாகவும் எண்ண வேண்டியதாயிருக்கிறது. அதெல்லாம் பழைய கதை, இப்போது காலம் மாறிவிட்டது எனக் கூறுகின்ற கிறிஸ்தவர்களையும் நான் பார்க்கிறேன். வேதாகமத்தில் என்ன மாறிவிட்டது? பிதாக்களே, உங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக என கூறியது மாறிவிட்டதா? காலத்திற்கேற்ப வசனத்தில் மாறுதல்கள் ஏற்படும் என வேதாகமம் எங்காவது குறிப்பிடுகிறதா? எங்கிருந்து நீங்கள் இந்த மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்? பிள்ளை வளர்ப்பைக் குறித்து உலகம் கூறும் கருத்துக்களிலிருந்து இந்த எண்ணத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்களா? ஞானியாகிய சாலமோன் கூறுவதைவிட உலகத்தாரின் கருத்து உங்களில் சிலரை ஆட்கொண்டிருப்பதைக் காண்கிறேன். “பிள்ளையின் நெஞ்சிலே மதியீனம் ஒட்டியிருக்கும். தண்டனையின் பிரம்பு அதை விலகப் பண்ணும்” என்று வேதாகமம் கூறுகிறது. அப்படியில்லை, என்னுடைய பிள்ளை மிகவும் ரோஷக்காரன்; உணர்ச்சிவசப்படக்கூடியவன். அடிப்பதென்பது அவனுக்குரிய சரியான வழிமுறையல்ல என்கிறவர்களே, வேதாகமம் அப்படியா கூறுகிறது? எனதருமை மக்களே, பிள்ளைகளை சகல ஒழுக்கத்திற்குட்படுத்தி, அவர்களை பயிற்சிவிப்பதில் உலகத்தாரின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்காதீர்கள் என எச்சரிக்கிறேன். தண்டனையின் பிரம்பு அவன் நெஞ்சிலுள்ள மதியீனத்தை அகற்றும் (நீதி 22:15). நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே (நீதி 23:14). இவைகளைப் போன்ற எத்தனையோ வசனங்களின் மூலமாக வேதாகமம் நாம் பிள்ளைகளை எவ்விதத்தில் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது.

3. பிள்ளைகளை ஒழுக்கத்திற்குட்படுத்துவதிலும், பயிற்சிவிப்பதிலும் பெற்றோ ராகிய நீங்கள் இருவருமாக சேர்ந்துதான் செயல்பட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

எபே 6:4ன் பிரகாரம், பிள்ளைகளை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு தகப்பனாரிடம் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். “பிதாக்களே . . . உங்கள் பிள்ளைகளை . . கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக”. இருந்தாலும் 6:1ஆம் வசனத்தைப் பார்க்கும்போது, “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்” என்று கணவன்-மனைவி இருவரையும் சேர்த்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. இது நியாயம் என்றும் குறிப்பிடுகிறார். இதன் மூலமாக, பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும், பயிற்சிகளையும் கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்துதான் வகுத்து அதை நடைமுறைபடுத்துகிறார்கள் என நாம் யூகிக்கலாம். குடும்பத்தின் தலைமை ஸ்தானத்தை ஏற்று, அதை நிர்வகிக்கின்ற கணவனிடந்தான் முழுபொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் மனைவியானவள், கடவுள் தன்னை எந்தக் காரணத்திற்காகப் படைத்தாரோ அதை நிறைவேற்றுகிறவளாக, தானும் அதில் பங்கேற்கிறாள் என நாம் யூகிக்கலாம். கணவனது தேவைகளை சந்திக்கக் கூடிய ஒரு துணையை (Helper) உருவாக்குவேன் என ஆதியிலே தேவன் மனைவியை உருவாக்கினார். குடும்பத்தில் தகப்பனின் தேவைகள் என்ன? பிள்ளைகள் நடக்க வேண்டிய வழிகளையும், கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் தனது மனைவியோடு சேர்ந்து அவன் ஏற்படுத்துகிறான். அதன்பின் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்காக அலுவலகத்திற்கோ, வியாபாரத்திற்கோ, அல்லது வேலைத்தளத்திற்கோ அவன் வெளியிடங்களில் சென்றிருக்கையில், தாங்கள் சேர்ந்து உருவாக்கின சட்டதிட்டங்களின்படி பிள்ளைகள் நடக்கிறார்களா என்பதை கவனித்துக்கொள்ள, அவனோடு சகல காரியங்களிலும் முழுவதுமாக ஒத்துப்போகின்ற ஒரு மனைவி அவனுக்குத் தேவை. தவறான வார்த்தைகள் பிள்ளைகளின் வாயில் இருந்து வருவதற்கு அவள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்; தங்களுக்கு நியமிக்கப்பட்ட வீட்டுவேலைகளைக் குறித்து அவர்கள் முறுமுறுக்கவோ, முனகவோ இடங்கொடுக்க மாட்டாள். தங்களை ஒழுங்கானவர்களாக உருவாக்குவதிலும், தண்டிப்பதிலும், போதிப்பதிலும் அப்பா அம்மாவிடம் வித்தியாசமே கிடையாது; அவ்விஷயத்தில் இருவரும் ஒன்றுதான் என்பதைப் பிள்ளைகள் உணர்ந்துகொள்ளுவார்கள். இங்கே அமர்ந்திருக்கிற பெண்களில் சிலர் அவ்விதமாக இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதைக் குறித்து நீங்கள் குற்றமனப்பான்மையோடு வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் கணவன் வகுத்த சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்துவதில் நீங்கள் சோம்பலாக இருக்கிறீர்கள்; உங்களைக் குறித்தே எப்போதும் சிந்தையுடையவர்களாகக் காணப்படுகிறீர்கள். பிள்ளைகள் கட்டளைகளை மீறும்போதும், முறுமுறுக்கும்போதும் அவர்களின் அழுகைக்கு உங்கள் செவிகளை விலக்கிக் கொண்டு, தண்டனையின் பிரம்பை எடுத்து அவர்களின் மூடத்தனம் நீங்கும்படியாக, அதை பிரயோகிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். அவர்களைக் கீழ்ப்படியப் பண்ணும் வரைக்கும் நீங்கள் பிரம்பைக் கையாளவேண்டியதாயிருக்கிறது.

பெற்றோர்களே, நீங்கள் வகுத்த சட்டதிட்டங்களை மீறுவதிலும், அதிலுள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதிலும் பிள்ளைகள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள். கடவுள்தாம் உங்களுக்கு உதவ வேண்டும். பிள்ளைகளை ஒழுக்கத்திற்குட்படுத்துவதிலும், பயிற்சிவிப்பதிலும் கணவனும் மனைவியுமாக எப்போதும் சேர்ந்து செயல்படுவதில் சற்றும் குறைவுபடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

4. பிள்ளைகளின் மேற்படிப்பைக் குறித்தும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று படிப்பதால் விளையக்கூடிய நன்மைகள் என உலகம் குறிப்படுவதைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.

நன்றாக கவனியுங்கள். பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. தேவபக்தியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ அனுப்பி படிக்க வைப்பது பொறுப்பற்ற செயல் என்றும் நான் கூறவில்லை. போதகர் அல். மார்டின் இப்படியாக சொல்லுகிறார் என சொல்லிக்கொள்ளாதேயுங்கள். நான் என்ன சொல்லுகிறேன் என்பதை நன்றாக கவனியுங்கள். மேற்படிப்பைக் குறித்தும், வீட்டை விட்டு வெளியே சென்று படிப்பதால் அதிக நன்மை விளைவதாக உலகமானது நினைக்கிறவிதமாக நீங்கள் நினையாதிருங்கள் என்று சொல்லுகிறேன். உலகம் இவைகளைக் குறித்து என்ன சொல்லுகிறது? பெற்றோரை விட்டு விலகி வெளியே சென்று படிப்பதால், பிள்ளைகள் சுதந்திரமாக வாழக் கற்றுக்கொள்வார்கள் என்றும், பலபேரோடு விடுதியில் தங்கிப் பழகுவது சமுதாயத்தில் பழகும் முறையை அவர்களுக்குக் கற்றுத் தரும் என்றும் உலகம் கருதுகிறது. யார் அப்படி சொல்வது? உலகம்தான்! பிள்ளைகளின் ஆரம்ப வயதுகளாகிய 5 அல்லது 6 வயதுப் பருவத்தைக் காட்டிலும் 18-22 வரையுள்ள பருவத்திலேயே பெற்றோரின் கண்காணிப்பு அவர்களுக்கு மிகவும் முக்கியம். பிள்ளைகளின் நலத்தைக் கருதியே நான் அவர்களை வெளியே படிக்க அனுப்பினேன் என்று கடவுளின் நியாயாசனத்திற்கு முன்பாக நீங்கள் சொல்லக் கூடுமானால் அந்த பிள்ளையானது உண்மையாகவே அசாதாரணமான பிள்ளையாக இருந்திருக்கும். அந்த நன்மையும் உலகப்பிரகாரமானதாக நீங்கள் நினைக்காமல் ஆவிக்குரிய நன்மையைத் தருமானால் அது இன்னும் அதிக விசேஷமானது. பெற்றோரின் பயிற்சிவிப்பையும், குடும்பத்தின் மூலமாகக் கிடைக்கக் கூடிய ஒழுங்கையும் தவிர்த்து, விடுதி வாழ்க்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும்? அவர்களைச் சுற்றிலும் அவர்களின் வயதையொத்த பருவத்தினரே இருப்பார்கள்; அவர்களுக்கு இருக்கும் அனுபவமும் சொற்பமாகவே இருக்கும்; அனுபவக் குறைவினால் இருக்கின்ற அறியாமையைக் கொண்டுதான் அவர்கள் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொள்ள முடியும். வாழ்க்கை என்றால் என்னவென்றே விளங்கிக்கொண்டிராத கூட்டமாக அவர்கள் சேர்ந்து இருப்பது சகதி நிறைந்த குட்டையிலே உழன்று கொண்டிருப்பது போல இருக்கும். அருமையானவர்களே, பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமான விஷயத்தில் உலகத்தின் போக்கு உங்களை ஈர்த்து விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

5. கட்டுக்கடங்காத, கண்காணிக்கப்படாத, பரிசோதிக்கப்படாத, வடிகட்டப்படாத (Unfiltered) வகையில், தொலைதொடர்பு சாதனங்களை உங்கள் பிள்ளைகள் உபயோகிக்க அனுமதிப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

பெற்றோரே, நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, நான் தயாரித்து வந்திருக்கும் இந்த செய்தியை சற்றும் குறைக்காமல்தான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். மேற்கூறிய வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தை யையும் நான் மிகுந்த கவனத்தோடுதான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

(1) முதலாவதாக உங்களுடைய கட்டுக்குள் அடங்காத டெலிவிஷன் நிகழ்ச்சிகள்! வாக்மேன், ஐபாட், mp3ப்ளேயர், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சகலவிதமான தொலைதொடர்பு சாதனங்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். கடவுள்தான் பெற்றோராகிய உங்களுக்கு உதவ வேண்டும். அதெல்லாம் உங்களுடைய அதிகாரவரம்புக்குள் இல்லாமல் மீறிப் போய்விட்டதென்றால் என்ன நடக்கும்? பிள்ளைகள் அவற்றை விரும்புவார்கள். சொந்தமாக அடைய ஆசைப்படுவார்கள். தங்கள் செலவிற்கு கொடுக்கும் பணத்தைக் கொண்டு அதை பெற அவர்களுக்கு வழி உண்டாகும். பணம் கொடுத்து தாங்களே சுயமாக வாங்கிக்கொள்ளவும் செய்வார்கள். நீங்களோ முட்டாள்கள் போலக் காணப்படுவீர்கள். இத்தகைய சாதனங்கள் சாத்தானின் வல்லமையான ஆயுதங்கள். அவைகளைக் கொண்டு அவன் உங்கள் பிள்ளைகளின் இருதயத்துக்குள்ளும், மனதுக்குள்ளும், சிந்தனைகளுக்குள்ளும் நுழைந்து அவர்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளுவான். நீங்களோ அவர்களைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக நிற்பீர்கள்.

(2) இரண்டாவதாக நான் உபயோகித்திருக்கும் வார்த்தை “கண்காணிக் காத” என்பதாகும். தங்களுடைய பிள்ளைகள் எந்த அளவுக்கு வீடியோ கேம்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்காமல் இருக்கின்றனர். மனோதத்துவ நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் இவ்வகைக் காரியங்களுக்கு பிள்ளைகள் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் குறித்து கவலை தெரிவிக்கிறார்கள். இந்த அடிமைத்தனம் எங்கும் பரவிக் கிடக்கிறது. போதை மருந்துகளை நாடுபவர்கள், அடுத்தடுத்து அதிகப்படியான போதையை நாடுவது போலவே, இவ்விதமான வீடியோகேம் போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்களும் இன்னும் அதிகமதிகமான லெவலை அடைந்து வெற்றி காண்பதற்கு பைத்தியமாக அலைகிறார்கள். கண்காணிக்கப்படாத வீடியோ கேம்கள், பாடல்களை இசைக்கும் சாதனங்கள்! விழிப்பாயிருங்கள். உங்களுக்குக் கேட்காமல், அவர்களுடைய சின்னஞ்சிறு காதுகளில் ஒலிக்கக்கூடிய சாதனங்களால் (Ear phones) அவர்கள் கேட்கும் பாடல்களும், இசைகளும் அவர்களை அடிமைப்படுத்துகிறது. அதைக் குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. பெற்றோரே நீங்கள் கண்காணிப்பதில்லை. நீங்கள் பிள்ளைகளின் இத்தகைய சாதனங்களைக் கண்காணிக்காவிட்டால், இங்கே இடைவிடாமல் புத்திகூறும் போதகர்களின் உழைப்பும், ஞாயிறுபாட சாலையில் கூறப்படும் அறிவுரைகளும், உங்களுடைய குடும்ப ஆராதனையில் நீங்கள் கற்றுத் தருபவைகளும் கல்லறைக்குத்தான் போகும் என்பதை என்னுடைய ஒவ்வொரு நாடிநரம்புகளிலும் நான் உணர்ந்திருக்கிறேன்.

(3) அடுத்த வார்த்தை, பரிசோதிக்கப்படாத. இது கண்காணிப்பையும் தாண்டி இன்னொரு படிக்குச் செல்லுகிறது. உங்கள் வீட்டிலே இருக்கின்ற இம்மாதிரியான எந்தவிதமான சாதனத்தையும் பரிசோதித்துப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. உன் இசை சாதனத்தில் எதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லது கம்ப்யூட்டரில் எந்த இணைய தளத்தில் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் உங்கள் பிள்ளைகளை பரிசோதித்துப் பார்க்கும்போது அவர்கள் திரும்ப உங்களை முறைத்தாலோ அல்லது எதிர்த்துப் பேசினாலோ அத்தோடு அந்த சாதனத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடுங்கள். உங்களுடைய கூரையின் கீழ், உங்களுடைய சம்பாத்தியத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை இம்மாதிரியாக அவர்களை பரிசோதனைக்குட்படுத்தும் உரிமையைக் கடவுள் பெற்றோராகிய உங்களுக்கு வழங்கியிருக்கிறார்.

(4) வடிகட்டப்படாத (Unfiltered)! நீங்கள் கடவுளுக்கு பயந்த மனிதனாக இருந்து, உங்கள் வீட்டிலே இன்டர்நெட் இணைப்பு வாங்குவது அவசியமாக இருக்குமானால், நீங்கள் மிகவும் நன்றாக அலசி ஆராய்ந்து மிக நல்ல இணையதளவடிகட்டியை (filter) போடாவிட்டால் நீங்கள் ஒரு முட்டாள். ஆம் நீங்கள் ஒரு முட்டாள்தான். உங்களுடைய 14 வயது மகன் உங்கள் கண்களுக்கு முன்பாக அப்பாவி போலத்தான் தோற்றமளிப்பான். நீங்கள் திருப்தியாக இருப்பீர்கள். ஆனால் சாத்தான் அவ்வளவு சுலபமாக திருப்தியடைந்துவிடும் என்று கனவு காணாதீர்கள். அவனுடைய ஹார்மோன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற அந்த வயதிலே அவனுடைய கண்களுக்கு முன்பாக ஆபாசபடங்களை சுமார் ஒரு மணிநேர அளவிற்குத் தோன்றப்பண்ணிவிட்டால் அவனை வாழ்நாள் முழுவதற்குமாகத் தனக்கு அடிமையாக்கி விடலாம் என்கிற ருசி சாத்தானுக்குத் தெரியும். இது எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இவ்விதமாக அடிமைப்பட்டுப் போன மனிதர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வருவதால் தெரிகிறது. உங்களுக்கு வயதாகிவிட்டது, ஆகவே உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று என்னிடம் கூறாதீர்கள். என்னிடம் ஆலோசனை பெற வந்தவர்கள் எத்தனையோ பேர். ஒரேயொரு ஆபாசபடம் அவர்கள் கண்முன் வந்ததுதான் அவர்கள் இப்படியாக அடிமைப்பட்டுப் போக காரணமாயிற்று என்பதை அவர்கள் கூறுவதில் இருந்து உணர முடிகிறது. பெற்றோரே, இந்தவிதமான ஒரு அருமையான சாதனம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தனக்கு இருக்கிறதென்பது சாத்தானுக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவன் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளினிடத்திலே கிரியை நடப்பிக்கிற ஆகாயத்து அதிகார பிரபு.

ஆகவேதான் நான் உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்: கட்டுக்கடங்காத, கண்காணிக்காத, பரிசோதிக்கப்படாத, வடிகட்டப்படாத வகையில் தொலைதொடர்பு சாதனங்களை உங்கள் பிள்ளைகள் உபயோகிக்க அனுமதிப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வேதாகம ஒழுங்குக்குட் பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக மேற்கூறிய ஐந்து காரியங்களையும் நான் பெற்றோராகிய உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். அவற்றிற்கு எச்சரிக்கை யாயிருங்கள்.

பிள்ளைகளே, இளம் வாலிபப்பிராயத்தினரே நான் இப்போது உங்களோடு பேசப்போகிறேன். உங்களுக்கும் சில எச்சரிப்புகளை வைத்திருக்கிறேன். என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து இவைகளை உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுக்கென விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ள வேதவாக்கியங்களை நினைவில் வையுங்கள். “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள். இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே 6:1-3). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். தமது 12ஆம் வயதிலே எருசலேம் தேவாலயத்திலே, என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்பதை அறியீர்களா என்று அவர் தமது பெற்றோரைப் பார்த்துக் கேட்ட பிற்பாடு நடந்தவைகளை நினைவுபடுத்துங்கள். அவர் பாவம் செய்யவில்லை. அவர் தமது பெற்றோரை எதிர்க்கவில்லை. அவர்களை அவமரியாதையாய் பேசவில்லை. ஏனென்றால் நமது இரட்சகர் பாவமில்லாதவர் ஆயிற்றே. தேவாலய சம்பவத்திற்குப் பின் என்ன நடந்தது? “பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்” (லூக் 2:51). அடுத்தபடியாக நாம் அவரை சந்திப்பது அவருடைய 30ஆம் வயதில்தான். யோர்தான் நதியிலே, யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறும்படியாக நின்று கொண்டிருந்தார். தேவனுடைய ஆவியானவர் புறாவைப் போல அவர் மேல் இறங்கி, அவரது பொது ஊழியத்தின் ஆரம்பத்திற்காகவும், மேசியாவாகவும், நமக்கு தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் அவரை அபிஷேகம் செய்வித்தார். அதற்கு இடைப்பட்ட காலங்களில் எல்லாம் அவர் தமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த உத்தம மகனாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர் தமது பெற்றோரைவிட சாமர்த்தியமுள்ளவரா? இதிலென்ன சந்தேகம்? அவருக்குள்தான் ஞானம் அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. அவர்களை சிருஷ்டித்தவரும் அவரே. ஆனாலும் அவர் அவர்களுடனே கூடப்போய் நாசரேத்தூரிலே சேர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர்களை எதிர்த்து அவர் ஒருபோதும் வாய்பேசவில்லை. அகந்தையாக பேசவில்லை. அவர்களை எதிர்க்கவில்லை. நாசரேத்தூருக்குப் போய் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் என்பதை வேதத்தில் பார்க்கிறோம்.

இளம் பிராயத்தினரே! உங்களுக்கும் சில முக்கியமான எச்சரிப்புகளைக் கொடுக்க விரும்புகிறேன்.

  1. உங்களுடைய வாழ்க்கையிலே உங்கள் பெற்றோருக்கும், தேவபக்தியுள்ள பெரியோருக்கும் இருக்கின்ற அதிகாரபூர்வமான பங்கை எந்த வகையிலாவது கெடுத்துப் போட முயற்சிக்கின்ற எந்த தோழமைக்கும் இடங்கொடாதீர்கள். நான் கூறுவதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் யாருடைய அதிகாரபூர்வமான நடத்துதல் இருக்க வேண்டும்? தகப்பன்மார், தங்களோடு முழுவதுமாக ஒத்துழைக்கிற மனைவியோடு சேர்ந்து பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் நடத்த வேண்டும் என்கிறதான கட்டளையை பெற்றோர்கள் கர்த்தரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். ஆகவே, பிள்ளைகளாகிய நீங்கள் அதற்கு ஒத்துழைத்து, அவர்கள் உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். நீதி 1:8 இந்தக் காரியத்தை நன்றாக விவரித்துக் காண்பிக்கிறது. “மகனே, உன் தகப்பன் புத்திமதியைக் கேள். உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே”. தாயும் தகப்பனும் ஒன்றுதான் என்பதை இவ்வசனம் காண்பிக்கிறது. தாயின் அறிவுரைகளும் தகப்பனின் அறிவுரைகளும் ஒன்றே. “அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்கு சரப்பணியுமாயிருக்கும். என் மகனே பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே”. நண்பர்கள் உன்னிடம் வந்து எங்கள் கூட்டத்தில் சேர்ந்துகொள் என்பார்கள். ஒரு ரவுடிக் கூட்டம் ஆரம்பமாவதும் இவ்விதத்தில்தான். ஆனால் உனது கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? இளம் பிராயத்திலுள்ள நீ, உன்னுடைய சிந்தனையிலும், உனது நடவடிக்கைகளிலும், உலகத்தைக் குறித்த உனது பார்வையிலும், உன்னைக் குறித்தும், உனது வாழ்க்கையிலும், அதன் சகல காரியங்களிலும் பெற்றோரே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிரு. உனது தாய் தந்தையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு வெளிவரும்படி யாராவது உன்னைத் தூண்டினார்களென்றால், “என்னை விட்டு விலகிப் போங்கள். நீங்கள் எனக்கு நல்லது செய்கிறவர்கள் அல்ல” என்று கூறிவிடுங்கள்.

1 இராஜா 12:6ல் ஒரு ராஜாவைக் குறித்துக் கூறப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேற்கூறிய கொள்கையைக் கடைப்பிடிக்காத இந்த ராஜாவைக் குறித்ததான சரித்திரம் இங்கு காணப்படுகிறது. ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரிடத்தில் ஆலோசனை கேட்கிறான். இந்த முதியோரைக் குறித்து என்ன விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அவர்கள் அவனுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவனுடைய சமூகத்தில் நின்றவர்கள். உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே தலைசிறந்த ஞானியாகிய சாலொமோனிடமிருந்து ஞானத்தைப் பெற்றிருந்தவர்கள். அவர்களிடம் ராஜாவாகிய ரெகொபெயாம், இந்த ஜனங்களுக்கு நான் என்ன மறுஉத்தரவு கொடுக்கட்டும் என்று கேட்கிறான். அவர்கள் அவனுக்கு மிகவும் அருமையான ஆலோசனையைக் கூறுகிறார்கள். ‘நானோ இளைஞன். நீங்கள் முதியவர்கள். மாபெரும் ஞானியாகிய என் தகப்பனின் அருகாமையில் வாழ்ந்து அதிக ஞானம் அடைந்தவர்கள். உங்கள் ஆலோசனையின்படி நான் நடவாமல் போனால் பெரிய பைத்தியக்காரனாயிருப்பேன்’ என்று கூறி அவர்களின் யோசனையின்படி அவன் நடந்தானா? இல்லை. 8ஆம் வசனத்தை கவனியுங்கள். “முதியோர் தனக்கு சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமூகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி . . .” என்று விளக்கப்பட்டுள்ளது. தனது நண்பர்களிடம் அவன் யோசனை கேட்கிறான். சிறுவயது முதற்கொண்டு அவனோடு குண்டு விளையாடி, பந்தாட்டங்களில் ஒன்றாக விளையாடி அவனோடு வளர்ந்தவர்கள் அவர்கள். அவர்களிடம் நான் ஆலோசனை கேட்பேன் என தீர்மானிக்கிறான். அவர்கள் அவனுக்கு சிறந்த ஆலோசனையைத் தரவில்லை. ஆனாலும் அவர்கள் தந்த ஆலோசனையையே அவன் ஏற்றுக்கொள்ளுகிறான். சாலமோனிடம் கடவுள் எச்சரித்திருந்த பிரகாரம் அவனுடைய ராஜ்யம் பிளவுபடுவதற்கு கடவுள் இச்சம்பவத்தின் மூலமாக தனது ஆளுகையை செலுத்தினார் என்றாலும், இவனைப் பொறுத்த அளவில் இவன் முட்டாள்தனமாக நடந்து கொண்டான். பக்தியுள்ள இளைஞனுக்குரிய கொள்கையை அவன் கடைப்பிடிக்காமல் தவற விட்டான். முதியோரும் ஞானிகளுமாகிய பெரியோர்களின் ஆலோசனையைக் கேளாமல் போனதினால் தன்னை முட்டாளாக்கிக் கொண்டான். ஆகவேதான் சிறுபிள்ளைகளே, இளம்பிராயத்தினரே, உங்களையும் எச்சரிக்கிறேன். பெற்றோரும், முதிர்ந்த கிறிஸ்தவர்களும் உங்கள் வாழ்க்கையில் யோசனை கூறி உங்களை வழிநடத்துவதை அற்பமாக எண்ண வைக்கின்ற எந்தவிதமான தோழமைக்கும் இடங்கொடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பிள்ளைகளே, உன்னுடைய சிநேகிதியாவது, சிநேகிதனாவது உன்னிடம், “உன் வீட்டில் சும்மாவே இருக்க மாட்டார்களா? தொணத்தொணவென்று ஏதாவது கூறிக்கொண்டே இருக்கிறார்களே” என்று சொல்லத் தொடங்கும் போதே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய தைரியம் உடையவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். “இதோ, பார், எனக்கும் என் பெற்றோருக்கும் இடையில் ஏதாவது இடைவெளியை உண்டு பண்ண நீ முயற்சித்தாயானால் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாம் நண்பர்களாக இருக்க முடியாது” என்று கர்ஜிக்கக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். பிள்ளைகளே, இது மிகவும் முக்கியமானது. வெளியே ஓர் உலகம் இருக்கிறது. அதன் தேவனாகிய பிசாசானவனுக்கு ஊழியம் செய்ய அங்கே அநேகம் பேர் இருக்கிறார்கள். இரட்சகரை அறியாதிருக்கிறவர்களைத் தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு, அவர்களை உபயோகித்து உங்களையும் தனது எல்லைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாமல் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிற பிசாசின் தூதர்கள் அவர்கள். அதன் வழிகளில் ஒன்று, சிநேகிதர்களின் மூலமாக உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே சிறிது சிறிதாக இடைவெளியை ஏற்படுத்தி விடுவதாகும். அவர்களின் வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் உங்களை விட்டு அகற்றிப் போட பிசாசு செய்யும் எத்தனம் இது. நீங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோரைக் கொண்டு தேவன்தாமே உங்களுக்கு அறிவுரை கூறி உங்களை சீர்படுத்திக் கொண்டு வருகிறார். அதைக் குலைத்துப் போடுவதற்கு பிசாசு செய்யும் தந்திர வலைதான் நண்பர்களின் மூலமாக உங்களை பெற்றோரின் ஆலோசனைகளில் இருந்து பிரியச் செய்வது. நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாவது, “நண்பனே, உனக்கு என்ன தெரியும்? நீ எவ்வளவு காலம் ஜீவித்திருக்கிறாய்? உனக்கு என்ன அனுபவ ஞானம் இருக்கிறது?”

  1. நீங்கள் வாசிப்பவைகளின் மூலமாகவோ, அல்லது பார்ப்பவைகள் மூலமாகவோ, கேட்பவைகளின் மூலமாகவோ உலகம் உங்களுடைய சிந்தனைகளை எந்த விஷயத்திலும் ஆக்ரமித்து விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். முதலாம் சங்கீதம், பாக்கியவானாயிருப்பதற்குரிய வழிவகைகளை விவரித்துக் காண்பிக்கிறது. வாழ்க்கையின் நிறைவையும், வாழ்க்கையின் சகல ஆசீர்வாதங்களையும் எடுத்துக் காண்பிக்கிறது. அப்பேர்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட பாக்கியவானாகிய அந்த மனிதன் எப்படிப்பட்டவனாக நடந்திருக்கிறான்? அவன் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருந்திருக்கிறான். அதற்கு மாறாக, அவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்திருக்கிறான். சிறுபிள்ளைகளே, இளம்பிராயத்தினரே, உங்களை தனது பக்கமாகக் கவர்ந்து இழுக்க உலகம் காத்திருக்கிறது. உலகத்தின் வழிவகைகள், நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சாத்தான் இருக்கிறான். அவனைத் திருடனாகவும், கொலைபாதகனாகவும், அழிக்கிறவன் என்றும் இயேசு கிறிஸ்து விவரிக்கிறார். அவன் உங்கள் ஆத்துமாவைத் திருடிக்கொள்ளவும், கொலை செய்யவும், அழித்துப்போடவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். இருளின் பிரபுவாகிய பிசாசு உங்களை ஒன்றும் செய்ய மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் ஏதோ மனமயக்கத்தில் இருக்கிறீர்கள். தன்னோடுகூட நரகத்திற்கு உங்களையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக அவன் உங்களோடு கூடவே குடியிருக்கிறான் என்றுதான் அதற்கு அர்த்தம். இதுதான் உண்மை. நீங்கள் அவனோடு நரகத்திற்குத்தான் வரப்போகிறீர்கள் என்கிற உறுதியோடு அவன் கலக்கமில்லாமல் இருக்கிறான். அவன் எப்படி உங்களைத் தனது வலைக்குள் சிக்க வைத்து விழுங்கிப் போடப்போகிறான் தெரியுமா? நீங்கள் வாசிப்பவைகளின் மூலமாகவும், பார்ப்பவைகளின் மூலமாகவும், கேட்பவைகளின் மூலமாகவுந்தான். அவைகள், அவன் உங்கள் மனதிற்குள் நுழையக்கூடிய வழிகள். வேதாகமம் அனுமதிக்காத எந்த விஷயமும் தனது மனதிற்குள் நுழைந்துவிடாமல், அது வரக்கூடிய வழிகளை அடைத்துப் போடுகிறவன் பாக்கியவான் என்று கடவுள் சொல்லுகிறார். நமது எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் யாவையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்துகிறவர்களாக நாம் இருக்க வேண்டும். உங்களைக் குறித்தோ, உங்கள் பெற்றோரைக் குறித்தோ, செக்ஸ், டேட்டிங், திருமணம், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், இவைகளில் எதைக் குறித்தோ நீங்கள் சிந்தித்தாலும் அந்த கருத்துக்கள் யாவும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுவதாக இருக்க வேண்டும். அவர்கள் ஜீவனை அடைந்துகொள்ளும்படியாக நான் உலகில் வந்தேன் என்று கிறிஸ்து கூறியிருக்கிறார். ஜீவனை அவரிடமிருந்து தாராளமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அவருடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுவதே வாழ்க்கையின் பரிபூரணமாம்.

எனது பள்ளிப் பிராயத்திலே தேவன் என்னை இரட்சிப்புக்குள்ளாகக் கொண்டு வந்த காலத்திலே, என்னோடு படித்த சகமாணாக்கர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் என்னை எவ்வளவு பரிதாபத்துக்குரியவனாக நோக்கினார்கள்! அவர்களுடைய விருந்து, கேளிக்கைகளுக்கு நான் செல்லாததால் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள். அவர்களுடைய குடி, போதை சமாச்சாரங்களில் பங்கெடுக்க எனக்கு விருப்பமில்லாததைக் கண்டு அனுதாபப்பட்டார்கள். வாழ்க்கையையே இழந்து போன ஒருவனாக என்னைக் குறித்து எண்ணங்கொண்டிருந்தார்கள். பள்ளியில் இருந்து தேறி வந்த பிற்பாடு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முறை பழைய பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தபோது அவர்களையெல்லாம் சந்தித்தேன். அவர்கள் யாவரும் உற்சாகமில்லாதவர்களாக சோர்ந்து போயிருந்ததைக் கண்டேன். வெடித்து விடுவார்களோ என எண்ணும் அளவுக்கு உப்பி ஊதிப் போய் சரீரத்திலும் சுகமில்லாதவர்களாகத் தோன்றினார்கள். அந்த வயதிலேயே மிகவும் வயதானவர்கள் போலத் தோற்றமளித்தனர். அவர்கள் மத்தியிலே நான் வித்தியாசமானவனாகக் காணப்பட்டேன். என்னுடைய எஜமான் மிகவும் நல்ல எஜமானன். சிறுபிள்ளைகளே, இளம்பிராயத்தினரே, எச்சரிக்கையாயிருங்கள்! நீங்கள் வாசிப்பவைகள், பார்ப்பவைகள், கேட்பவைகளின் மூலமாக உலகமானது தனது எண்ணப்படி உங்களை உருவாக்க அனுமதிக்காதீர்கள்.

  1. உங்களுடைய பாவங்களில் இருந்து விடுபட்டு, உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டியதான மிகப் பெரிதான அந்த இரட்சிப்பைக் குறித்து கவலையற்றவர்களாக, அதைத் தள்ளிப்போடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கடவுளின் வார்த்தை தெளிவாகக் கூறுகிறது. சிறுபிள்ளைகளே, இளம்பிராயத்தினரே பிரசங்கி 12:1 மூலமாக தேவன் உங்களிடம்தான் பேசுகிறார். “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை. தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் . . . அவரை நினை” இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற பிள்ளைகளில் அநேகர் தாங்கள் ஒரு பாவி என்பதை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள் என நான் சந்தேகிக்கிறேன். உங்களுக்கே தெரியும். உங்களுடைய மனசாட்சியை நீங்கள் எவ்வளவுக்கு அடக்கி வைக்கப் பார்க்கிறீர்களோ அவ்வளவுக்கு அது அதிகமாக செயல்படும். சில வேளைகளில் அது இரகசியமாக உங்கள் காதுகளில் பேசும். சில வேளைகளில் இடியோசை போல உங்களைக் குற்றப்படுத்திக் காண்பிக்கும். பெற்றோரும், இங்கு பிரசங்கிக்கிற பிரசங்கிகளும். ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களும் உங்கள் பாவநிலைமைக்கு ஒரேயொரு தீர்வைத்தான் உங்களுக்கு எடுத்துக் காண்பித்திருப்பார்கள். அது இயேசு என்கிற மனிதரிலும் அவர் செய்த வேலைகளிலும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்று அவர் கூறியிருக்கிறார். அவரையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வர முடியாது. நீங்கள் உங்களது பாவத்தை உணராமல் நிம்மதியாக இருப்பது போலத் தோன்றினாலும், ஒன்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த வாழ்க்கையானது நிரந்தரமானதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். நீதி 27:1 கூறுகிறது “நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே. ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே”. இதிலுள்ள உண்மையை ஒருவேளை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அதை அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நீங்கள் சுவிசேஷ வெளிச்சத்தின் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சுவிசேஷமானது நாள்தோறும், வாரந்தோறும் உங்களுடைய மனதின் ஆழத்தில் பாயும் வெளிச்சமாகப் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளின் நடுவே இருந்தும் நீங்கள் கிறிஸ்துவிடம் வருவதற்குத் தாமதம் செய்வீர்களானால் உங்களுடைய இருதயம் நாளுக்கு நாள் கடினப்பட்டுக் கொண்டே போகும். சுவிசேஷமானது நம்மில் எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் இருக்கக் கூடியதல்ல. அது ஏதாவதொரு விளைவை நம்மில் உண்டாக்கக் கூடியது. கிறிஸ்துவில் கடவுளைக் காண்கிறோம்; கிறிஸ்துவின் மூலமாக ஏற்பட்ட சுவிசேஷத்தினால் தேவன் நம்மோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிற மாபெரும் இரக்கத்தை உணருகிறோம். சுவிசேஷ வெளிச்சம் நமது இருதயத்திலும், மனசாட்சியிலும் ஊடுருவிப் பாயும்போது நாம் பாதிக்கப்படாமல் போவதில்லை. சுவிசேஷத்தின் மூலமாக தேவன் தமது மாபெரும் இரக்கத்தோடு நம்மிடம் உடன்படிக்கை செய்துகொள்ள வருவதை நாம் ஏற்காமல், எதிர்க்கும் போது அதனால் நமது இருதயம் கடினப்பட்டுப் போகிறது. ஆகவேதான் எபி 3:7, 4:7 ஆகிய வசனங்களின் மூலமாக, “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள்” என்று கடவுள் எச்சரிக்கிறார். அதற்கு மாறாக நாம் சொல்ல வேண்டியதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இனிமேல் நான் உமது சத்தத்திற்கு எதிர்த்து நிற்கவே மாட்டேன் என்று கூறுவதாகும். நீதி 29:1ல் மிகவும் தெளிவான ஓர் எச்சரிப்பையும் காண்கிறோம்: “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான்”.

சிறுபிள்ளைகள், இளம்பிராயத்தினரே, இந்த சபையின் போதகருள் ஒருவராக நான் கடைசியாக இந்த வாரத்திலே இந்த பிரசங்க மேடையிலே உங்கள் முன்பாக நின்று உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்ளுகிறேன்: தாமதிக்காதீர்கள்! தள்ளிப் போடாதீர்கள்!! உங்களை கிறிஸ்துவிடம் அழைத்துக் கொண்டு வருவது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் அவரண்டையில் வந்து விட்டீர்களானால் போதுமானது. நான் கூறுவது புரிகிறதா? எது உங்களை அழைத்து வந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்துவிடம் மாத்திரம் வந்து விடுங்கள். ஒருவேளை நீங்கள் உங்களுடைய பாவத்தின் காரணமாக பாரமுள்ளவர்களாக இருந்து, அதில் இருந்து விடுபட பெலன் இல்லாமல் தவிக்கிறவர்களாக இருக்கலாம். இயேசு உங்களுக்கு என்ன சொல்லுகிறார்? “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறி உங்களை அழைக்கிறார். அல்லது நீங்கள் பாவத்தினால் பாரமுற்றவர்களாக இராமல், வாழ்க்கையில் இன்னும் எதையோ அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆத்தும தாகம் உடையவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களையும் இயேசு அழைக்கிறார்: “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவா 7:37). நீங்கள் ஆத்துமதாகம் உடையவர்களாக இருக்கிறீர்களா? இயேசுவிடம் வாருங்கள். பானம் பண்ணுங்கள். அல்லது உங்களில் வேறு சிலர், நான் பயந்து கொண்டிருந்தது போலவே பயந்து கொண்டிருக்கலாம். கடவுள் தண்டித்து நரகத்தில் தள்ளிவிடுவார் என்று நாள்தோறும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கலாம். கிறிஸ்துவையே அடைக்கலமாக நம்பி ஓடி வந்த அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறித்து எபி 6:18 அழகாக விவரிக்கிறது. அதற்கு முன்னால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அடைக்கல பட்டணங்களைக் குறித்து நீங்கள் அறிய வேண்டியது அவசியம். தெரியாமல், கைப்பிசகாக ஒருவன் மற்றொருவனைக் கொன்று விட்டான் என வைத்துக்கொள்வோம். இவன் திட்டமிட்டு அவனைக் கொல்லவில்லை. அறியாமல், அந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் கொலையுண்டவனின் உறவினர்கள் வந்து அவனைப் பிடித்து ஒரு கொலையாளியை நடத்துவது போல நடத்தி விடக்கூடாது என்பதற்காக தேவன் ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருந்தார். இஸ்ரவேல் தேசத்தில் மூன்று பட்டணங்களை அடைக்கலப் பட்டணமாக குறித்துக்கொள்ளும்படி கூறினார். இப்படியாக அறியாமல் கொலை செய்துவிட்டவன் வேகமாக ஓடி அந்த அடைக்கலப் பட்டணங்களுள் ஒன்றை அடைந்து, பின் அதன் கதவும் அடைக்கப்பட்டுவிட்டால் அவன் அதில் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என்கிற ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தார். அப்படிப்பட்ட அடைக்கலத்தைக் குறித்துதான் எபிரெயருக்கு எழுதிய ஆசிரியர் இந்த வசனத்தின் மூலமாக தெளிவுபடுத்துகிறார். இயேசு கிறிஸ்துவை அடைந்தவர்கள் அப்படிப்பட்ட அடைக்கல பட்டணத்திற்குள் வந்து சேர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். உனது மனசாட்சி எதைக் குறித்து உன்னைக் குற்றப்படுத்தி பயமுறுத்துகிறது? தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து பயந்திருக்கிறாயா? இயேசு கிறிஸ்துவிடம் ஓடு. மனுக்குலத்தின் பாவத்தின் காரணமாக தேவனுக்கு உண்டாயிருந்த பயங்கரமான கோப அலைகளை கிறிஸ்து தன் மீது ஏற்றுக்கொண்டார். தமது பரிசுத்தமான நிலையிலே இயேசு கிறிஸ்து பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார். என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சிலுவையிலே கதறினார். நீங்கள் அவரிலும் அவருடைய நீதியிலும் அடைக்கலமாக மறைத்து வைக்கப்படும்படியாக அவர் கைவிடப்பட்ட நிலைமையை அடைந்தார். என்னருமை சிறுபிள்ளைகளே, இளம்பிராயத்தினரே, நீங்கள் பாவத்தில் இருந்து விடுபட்டு இரட்சிப்பை அடைய வேண்டியதான மிகப் பெரும் காரியத்தைத் தள்ளிப்போடுவதைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். பாவத்தை விட்டுவிடுங்கள். இயேசு கிறிஸ்துவிடம் செல்லுங்கள்.

இந்த தியானத்தின் குறிப்புகளை நான் இன்று காலையிலே மீண்டுமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு காரியம் எனது மனக்கண்களின் முன்னால் வந்து நின்றது. நாம் எல்லோருமாக சேர்ந்து மீண்டும் ஒரு முறை சந்திக்கப் போகும் நாளை நினைத்துப் பார்த்தேன். நான் போதகராகவும் நீங்கள் அங்கத்தினராகவும் இன்னும் பலமுறை ஒருவேளை இவ்வுலகில் சந்திக்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் முன்னால் நிற்கப் போகிற அந்த குறிப்பிட்ட நாளை நினைத்துப் பார்த்தேன். இங்கே, இப்போது சிறுவர்களாகவும், சிறுமிகளாகவும் உட்கார்ந்து கொண்டிருக்கிற நீங்கள் ஆண்களாகவும், பெண்களாகவும் வளர்ந்து உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கலாம். அன்றைக்கு கர்த்தரின் நியாயாசனத்தின் முன்னாலே நாம் அனைவருமாக நிற்கும் போது, உங்களில் சிலரைப் பார்த்து எனது கர்த்தர், சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று, உங்களுக்காக வைக்கப்பட்டுள்ள நித்திய அக்கினிக்குள் போங்கள் என்று கூறிவிட்டாரென்றால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன். கிருபை, ஒளி, இரக்கம், தயவு, மன்னிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை ஆகிய அனைத்துக்குமே பிறப்பிடமாக இருப்பவரிடமிருந்து அகன்று நித்திய அக்கினிக்குள் போகக்கூடியதென்பது என்னவொரு சாபகரமான நிலைமை. அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் எல்லாருமே சந்தோஷத்துக்குள் பிரவேசிக்கும்படியான பணியை தேவன் நம்மிடம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளலாமேயொழிய அதைக் குறித்து இப்போதே சந்தோஷப்பட்டு விடும் நிலைமை இல்லையே. உங்களில் யாராவது நரகத்தில் போவீர்களென்றால் அது எவ்வளவு வருத்தத்தை விளைவிக்கும். இங்கேயுமில்லாமல் அங்கேயுமில்லாத நடுநிலையான நிலைமை என்கிற ஒன்று இல்லை. என்னிடம் வராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கப்படுகிறான். ஒன்று நீங்கள் கிறிஸ்துவில் இருகிறவர்களாயிருக்க வேண்டும். அல்லது கிறிஸ்துவை விட்டு விலகி இருக்கிறவர்களாய் இருப்பீர்கள். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை எதுவுமில்லை. ஒன்று நீங்கள் ஆதாமுக்குள்ளாக இருப்பீர்கள் அல்லது கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பீர்கள். உங்களுடைய பாவங்களில் இருந்து விடுபட்டு இயேசு கிறிஸ்துவிடம் வருவதான மிகப் பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றவர்களாக அதைத் தள்ளிப்போடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்கு இன்றே கீழ்ப்படியுங்கள்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்திலே அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன். அவர் அவன் மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக் கடவன். அவர் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார்”. இன்றைக்கு உங்களில் சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து, “என்னுடைய இரட்சிப்பைக் குறித்து நான் கவலையற்றிருந்தது போதும், உம்மை எதிர்த்து நின்றது போதும், என்னை நானே முட்டாளாக்கிக் கொண்டிருந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் நான் உம்மிடம் இன்றைக்கு வருகிறேன். எனது சுயநலத்தையும் பாவத்தையும் விட்டுவிட்டு உம்மிடம் வந்து என்னை உமக்கே ஒப்படைக்கிறேன். நீர் எனது இரட்சகராயிரும். எனது எஜமானனாயிரும். எனக்கு எல்லாமுமாயிரும்” என்று கேட்டுக்கொள்வீர்களானால், நானும் அதை அறிந்தேனென்றால் எனக்கு அதுவே மிகச் சிறப்பான வழியனுப்பும் காரியமாக இருக்கும்.


தாம்பத்திய உறவில் நெருக்கம்

திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். கடந்த இதழின் தொடர்ச்சியை இவ்விதழில் தந்திருக்கிறோம். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர்.    & ஆசிரியர்

அத்தியாயம் 11

சத்தியத்திற்கு விரோதமான பேச்சுவார்த்தையாகிய சவால்கள் அர்த்தமுள்ள வார்த்தைகள்

திருமண வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமானால் சில திறமைகள் தேவையாயிருக்கிறது. ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ளுதலுக்கு முக்கியமான ஆதாரத் தேவையாக இருப்பது சரியான வார்த்தைப் பிரயோகங்கள். வார்த்தைகளை எப்படி உபயோகிப்பது என்பதை அறிவதற்கு நமக்கு மீண்டுமாக நமது நட்சத்திர வழிகாட்டியாகிய சிருஷ்டிப்பின் தத்துவம் தேவையாயிருக்கிறது. சிருஷ்டிப்பையும், அவருடைய சாயலைக் கொண்டிருக்கிற மனிதனையும் உருவாக்கியதை தேவனுடைய வார்த்தை விவரிக்கிறது. அவன் வார்த்தையைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டபடியால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் அவனை “வார்த்தை- பிறவி” (word-creature) எனத் தற்காலிகமாக அழைப்போம். ஆண்-பெண் உறவில் வார்த்தைகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பாவத்தில் விழுந்ததின் காரணமாக, வார்த்தைகளும் அதன் உண்மையான அர்த்தங்களும் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியதாயிற்று. இரட்சிப்பை அளிக்கும் மீட்பின் திட்டத்தில், வார்த்தைகளே கடவுளின் பிரதிநிதியாக மீண்டும் செயல்படத் தொடங்கிற்று. மாம்சமாகிய வார்த்தையை கடவுள் நமக்குத் தந்தார் (யோவா 1:14). வசனமாகிய வார்த்தையையும் அளித்தார். உலகத்தாருக்குப் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கங்களின் மூலமாக அவர் இன்றும் பேசுகிறார் (1கொரி 1:21).

சிருஷ்டிப்பின் முதலாம் வாரத்திலே பெரும்பாலும் நடைபெற்ற செயல், கடவுள் பேசியதே. ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தில் நீங்கள் படிக்கும் போது, சகல சிருஷ்டிப்புகளையும் அவர் தமது வாயின் வார்த்தையினாலே உருவாக்கினார் என்பதைக் காண்பீர்கள். யோவா 1:1-3 வசனத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தனது வாயின் வார்த்தைகளின் மூலமாகக் கடவுள், அண்டசராசரங்களையும் உருவாக்கி அதை சிருஷ்டிகளால் நிரப்பினார். கடவுள் சொன்னார், சொன்னார், சொன்னார் என்பதையும், பேரிட்டார், பேரிட்டார், பேரிட்டார் என்பதையும் நாம் 1ஆம் அதிகாரத்தில் பலமுறை வாசிக்கிறோம். வார்த்தைகளின் நாயகராகிய நமது கடவுளின் சொற்களுக்கு வல்லமையும், பொருளும் உண்டு.

2ஆம் அதிகாரத்தில் கடவுளின் சாயலை உடைய ஒரு சிருஷ்டியைக் காண்கிறோம். “வார்த்தை-பிறவி” என நாம் பெயரிட்டோமே. அதுதான் மனிதன். பெண் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னால் இந்த வார்த்தை-பிறவி மூன்றுவிதமான வார்த்தைக் கட்டளைகளை தேவனிடமிருந்து தனது நிர்வாகப் பொறுப்பிற்காக ஏற்றுக்கொண்டதைக் காண்கிறோம். முதலாவது கடவுள் மனிதனிடம் “சிருஷ்டிப்பின் வார்த்தை”களைக் கொடுத்தார். இந்த வார்த்தைகளின் மூலமாக ஆதாம், சிருஷ்டிப்பின் தாவரவர்க்கங்களைக் குறித்தும் அவைகளுடைய பயன்களைக் குறித்தும் விளங்கிக்கொள்ள முடிந்தது (ஆதி 1:29-30).

இரண்டாவதாக தேவன், ஆதாமுக்கு “ஓய்வுநாளின் வார்த்தை”களைக் கொடுத்தார். “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” (மாற் 2:27) என்பது இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள். ஆதியாகமத்தில் இந்த ஓய்வுநாள் வார்த்தைகள் எங்கே இருக்கிறது? இந்த புத்தகத்தை எழுதிய மோசே சொல்லுகிறார்: “தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்த மாக்கினார்” (ஆதி 2:3). யாரையாவது ஆசீர்வதிக்க வேண்டுமானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் வாயைத் திறந்து வார்த்தைகளைப் பேசுவீர்கள் அல்லவா? கடவுள் பேசியதைப் போல இவ்விடத்தில் நமக்குக் காணப்படாவிட்டாலும், ஆதி 1:28ஐப் பார்க்கும்போது, அவர் ஆசீர்வதிக்கும் வார்த்தைகளைப் பேசியிருப்பது விளங்குகிறது. அதே போல ஓய்வுநாளை அவர் ஆசீர்வதிக்கும்போது வார்த்தைகளைக் கொண்டு பேசியிருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடியும். அதை ஆசீர்வதிக்கும்போது வார்த்தைகளைக் கொண்டு ஆசீர்வதித்து பின் அதை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். பரிசுத்தப்படுத்துதல் என்பது, கடவுளுக்கென்று தனியாக சிலவற்றைப் பிரித்து வைத்தல் என அர்த்தப்படும். பாவம் உலகில் தோன்றுவதற்கு முன்பாகவே தேவன் பரிசுத்தப்படுத்தினார் என்பதை நாம் எப்படி விளங்கிக்கொள்வது? அந்த நாளை அவர் எப்படி பரிசுத்தப்படுத்தினார்? ஓய்வுநாளை அவர் பரிசுத்தப்படுத்தி, அதைத் தம்மோடும் தமது பிரசன்னத்தோடும் சம்பந்தப்படும் நாளாக ஆக்கினார். தமது பிரசன்னத்தினால் அதைப் பரிசுத்தப்படுத்தினார். அந்த ஓய்வுநாளிலே தேவன் தம்மை ஆதாமுக்கு வெளிப்படுத்தி, ஓய்வுநாள் வார்த்தைகளை ஆதாமிடம் ஒப்புவித்தார்.

மூன்றாவதாக தேவன், ஆதாமிடம் “சட்ட வார்த்தை”களை ஒப்புவித்தார். விலக்கப்பட்டிருக்கும் விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாது என்கிற கட்டளையை ஆதாமுக்குக் கொடுத்தார் (ஆதி 2:17).

கடவுளிடமிருந்து இவ்விதமான வார்த்தைகளை ஏற்றுக்கொண்டிருப்பது ஆதாமாகிய “வார்த்தை-பிறவி” ஆகும். வார்த்தைகளின் நிர்வாகி, பொருள் விவரிக்கிறவர் ஆகிய ஸ்தானங்களை உடையவராக அங்குள்ள மிருகஜீவன்களுக்கெல்லாம் பெயரிடும் பணியை மேற்கொள்கிறார். பிற்பாடு ஏவாள் அங்கு அழைத்துவரப்பட்டபோது, ஆதாம் உடனடியாக ஏவாளுக்கும் பெயரிடும் பணியை நிறைவேற்றி, அதன் அர்த்தத்தையும் விவரிக்கிறார். வார்த்தைகளைக் கொண்டு எப்படி தனது நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என கடவுள் எதிர்பார்த்தாரோ அதேவிதமாக செயல்பட ஆதாமால் இயல்பாக முடிந்தது. பெண்ணைப் பார்த்ததும், அவளுடைய பெயரையும், அதற்குரிய அர்த்தத்தையும் தனது வார்த்தைகளால் விவரிக்க இந்த வார்த்தை-பிறவியால் முடிந்தது. உண்மையில் சொல்லப்போனால், மனுஷி அங்கே வருவதற்கு முன்பாகவே அனைத்து ஜீவராசிகளுக்கும் பெயரிடப்பட்டு, அதன் பொருளும் விவரிக்கப்பட்டாயிற்று.

எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் வார்த்தைகள் அர்த்தத்தைத் தருவதா யிருக்கிறது. வார்த்தைகளின் நிர்வாகமும், அதற்குரிய சரியான அர்த்தத்தை விளக்குவதும் ஆண்களாகிய நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பாகும். நமது வார்த்தைப் பிரயோகங்களின் மூலமாக மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நாம் அர்த்தமுள்ளவர்களாகக் காணப்படு கிறோம். நாம் வார்த்தைகளால் உருவாக்கும் உலகத்தில்தான் நமது குடும்பத்தினர் வாழ்கின்றனர். நாம் நமது பிள்ளைகளை “முட்டாள்கள்” என்று அழைப்போமானால் அவர்கள் தங்களை முட்டாள்களாகவே கருதி, முட்டாள்களைப் போலவே வாழ்வார்கள். நாம் உபயோகிக்கும் வார்த்தை களுக்கு மகத்தான சக்தி இருக்கிறது. நாம் உபயோகிக்கிற வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட உலகத்தில்தான் அவர்கள் வசிக்கிறார்கள்.

பரிசுத்தப்படுத்துகிற வார்த்தைகள்

கிறிஸ்துவைக் குறித்து எபே 5:26ல் பவுல் குறிப்பிடும்போது ஒரு விசேஷமான வார்த்தையை பவுல் உபயோகிக்கிறார் “திருவசனத்தைக் கொண்டு, தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து . . .” கிரேக்க மொழியிலே வசனம் என்கிற இந்த பதம் இவ்விடத்திலே பேசுகின்றதான வார்த்தையைக் குறிப்பதாக இருக்கிறது. இதன் மூலமாக பவுல் கணவன்மார்களுக்கு ஒரு காரியத்தை வெளிப்படுத்துகிறார். புருஷன் தன் மனைவியை எப்படி பரிசுத்தப்படுத்தலாம் என்பதைக் குறிப்பிடுகிறார். சீர்பொருந்தச் செய்யும் வார்த்தைகளைப் பேசுவதன் மூலமாக அவளை சுத்திகரித்து, அவளுக்கு சுவிசேஷ கிருபைகளை எடுத்துச் சொல்லுவதின் மூலமாக பரிசுத்தப்படுத்தும்படி கூறுகிறார்.

மனைவியிடம் உண்மையான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு பேச்சு வார்த்தைகள்தான் மிகவும் பிரதானமான சாதனம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதைக் குறித்து நான் ஒருசில புத்திமதி களைத்தான் கூற முடியும். பிரியமானவர்களே, நீங்கள் எதுவானாலும் அவளோடு பேசித்தான் ஆக வேண்டும். நமது மனைவியோடும், பிள்ளை களோடும் நாம் அமர்ந்து பேச வேண்டும். ஆண் பேசும் வார்த்தைகள்தான் பெண்ணுடைய கவனத்தை மிகவும் கவரக்கூடியதாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நமது சரீர பலமெல்லாம் சீக்கிரத்தில் நம்மை விட்டுப் போய்விடும். நமது இளமைத் தோற்றம் அவள் இருதயக் கதவைத் திறக்காது. நமது பணபலம் - அதுவும் ஒருநாளில் சிறகடித்து பறந்து போய்விடும். அதற்கும் அவள் இருதயத்தைத் திறக்க மாட்டாள். பிறகு எதுதான் அவள் இருதயத்தைத் திறக்கும்? வார்த்தைகள்! அவளை நன்றாகப் புரிந்துகொண்டு, விளங்கிக்கொண்டுள்ள மனிதன் கூறும் வார்த்தைகளே அவளது இருதயத்தைத் தொடும். தனது வார்த்தைகளின் மூலமாக, அந்த மனிதன் உலகத்தையும் அவளையும் தான் விளங்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறான். அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு பாதுகாப்பான உணர்ச்சியையும், வாழ்க்கையில் தனது பங்கு என்னவென்பதையும், தனது செயல்பாடுகள் யாதென்பதையும் விவரிக்கிறது. வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிற ஓர் ஆண், அதை அன்பான வார்த்தைகளால் விவரித்துச் சொல்வதே பெண்ணிற்குத் தேவையாக இருக்கிறது. பெண்ணின் இருதயத்தின் ஆழங்களை அடையும் படிக்கட்டுகளாக உங்கள் வார்த்தைகள் செயல்படட்டும் கனவான்களே!

உங்கள் வீடுகளில் பேசப்படும் வார்த்தைகளை கவனித்து, அவைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு ஆண்களாகிய உங்களுக்கு இருக்கிறது. வீட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை அளவிடும் உஷ்ணமானியாக நீங்கள் செயல்பட வேண்டும். அதிக சூடாகவோ, அதிகமாகக் குளிர்ந்தோ போய்விடாதபடி பார்த்துக்கொள்வது குடும்பத் தலைவனின் பணி. வீட்டிலே இசை ஒலிக்கிறதா, இடியோசைக் கேட்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். என்னுடைய வீட்டிலே எனக்கு படிப்பு அறை ஒன்று உண்டு. அங்கிருந்தபடி வீட்டின் அங்கத்தினரிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளை கவனித்துக்கொள்வேன். வயதாக ஆக, எனக்கு காது அவ்வளவு சரியாகக் கேட்காதபடியால் அவர்கள் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்காவிட்டாலும், அந்த சத்தத்தின் தொனியை வைத்தே. அது சச்சரவா அல்லது சந்தோஷ ஒலியா என்பதைக் கண்டுபிடித்துவிடுவேன். சச்சரவு தொனி போல எனக்குத் தோன்றுமானால், உடனே வெளியே வந்து, அவர்களிடம் பேசி நிலைமையை சீர் செய்து மீண்டும் இன்னிசை ஒலிக்கும்படி செய்வேன். ஆனால் சில சமயங்களில் என்னுடைய குறுக்கீடே மிகப்பெரிய இடியோசைகளையும் கொண்டு வந்துவிடும் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியதாயிருக்கிறது. எப்படியிருந்தாலும், எனது குடும்பத்தின் சுமுகமான உரையாடல்களுக்கு நானே பொறுப்பாளி. உரையாடல்களின் உஷ்ணநிலையை நாம்தான் கண்காணிக்க வேண்டும். மரியாதை தொனிக்கிறதா அல்லது எரிச்சல் தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நாமும் குடும்பத்தினரை உற்சாகப்படுத்துகிறோமா அல்லது குறை கூறிக் கொண்டேயிருக்கிறோமா என்பதிலும் நம்மையே ஆராய்ந்துகொள்ள வேண்டும்.

உரையாடல்களின் உஷ்ணநிலையை கண்காணிப்பது மாத்திரமல்லாமல், நமது குடும்பத்தார் சரியான வார்த்தைகளை உபயோகிக்கக் கற்றுத் தர வேண்டும். “நன்றி”, “தயவு செய்து” ஆகிய பொதுவான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது மாத்திரமல்லாமல் (அவை கூட இப்போது பல வீடுகளில் சொல்லப்படுவதில்லை) , சுவிசேஷ வார்த்தைகளை உபயோகிக்க உற்சாகப்படுத்த வேண்டும். வேதசம்பந்தமான வார்த்தைகளைக் காட்டிலும், மருத்துவ ரீதியான வார்த்தைகளே இன்று மக்களிடையே அதிக பிரபலமாயிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவரோடொருவர் வேதசம்பந்தமான வார்த்தைகளால் பேசிக்கொள்ள வேண்டும். குடும்ப ஆராதனைகள் நடத்துவதன் மூலமாகவும், குடும்ப அங்கத்தினரை ஜெபிக்க உற்சாகப்படுத்துவதின் மூலமாகவும் வேதசம்பந்தமான வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ளலாம். சுவிசேஷப் பரிமாற்றங்களை எப்போதும் செய்துகொள்ளத் தயாராக இருங்கள். பாவமானது தொடர்ந்து வெடித்தெழும்பிக் கொண்டுதான் இருக்கும். ஆகவே நாமும் தொடர்ந்து சுவிசேஷப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். சுவிசேஷப் பொருள்களை அடிக்கடி பரிமாறிக்கொள்ள வேண்டியதிருக்கும். கடுமையான வார்த்தைகள், சுயநலமான செய்கைகள் போன்றவை ஏற்படுவதை கவனியுங்கள். அந்த பாவங்களினால் ஏற்படக் கூடிய பிரிவினைகளைத் தீர்த்துக்கொள்ளும்படி அவர்களை வழிநடத்துங்கள். சரியான சுவிசேஷ வார்த்தைகளை உபயோகிக்கும்படி கற்றுக்கொடுங்கள். தவறு செய்த என் மகன், “மன்னித்துக் கொள்ளுங்கள்” என்பான். நான் உடனே அவனிடம், “இல்லை, அப்படி சொல்வது போதாது. நான் பாவம் செய்துவிட்டேன் என்று கூறு. என்ன பாவம் செய்தாய் என்பதையும் கூறு. அதற்காக என்னிடம் மன்னிப்பைக் கேள்” என்று அவனை திருத்துவேன். பாவமானது செயல்படும்போது, உங்கள் குடும்பத்தில் சுவிசேஷம் அதிகமாக நிரம்பி வழியட்டும். பாவத்தை சுவிசேஷம் பார்க்கிற பார்வையிலே நாமும் பார்ப்போம். சமுதாயமோ, கலாச்சாரமோ, நவீனத்துவமோ விளக்குகிற பிரகாரமாக அல்ல, வேதபூர்வமாக பாவத்தைப் பார்த்து, சுவிசேஷ அன்பைக் கொண்டு பாவத்தைக் களைய தொடர்ந்து முயற்சிப்போம். நமது இல்லங்களில் நாம் கிறிஸ்தவர்களைப் போல பேசுவோம். நமது வீடுகளில் நாம் கிறிஸ்தவர்களாக நடக்காவிட்டால் நாம் எங்குமே கிறிஸ்தவர்கள் அல்ல.

பிரியமான வார்த்தைகள்

“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள் . . . தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையை போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” (எபே 5:29) . பகைப்பதா? ஆம், பவுல் இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார். என்னுடைய நண்பர் ஒருவர் தன் மனைவியை இருதயத்திலே கொலை செய்தார் என்று முன்னே நான் கூறினேனே, அது உங்களுக்கு சற்று ஆச்சரியத்தை அளித்திருக்கலாம். “கொலை” என்பது சாதாரண வார்த்தையல்ல. அதற்கு ஒத்த வார்த்தையைத்தான் பவுல் இங்கே கூறுகிறார். உங்கள் மனைவியைப் பகைக்காதிருங்கள். பகைப்பது கொலைக்குச் சமமானது. பகைப்பதற்கு எதிர்ப்பதமாவது, போஷித்துக் காப்பாற்றுதல். போஷித்தல் என்பது பூரணவளர்ச்சியடைந்து கனிகொடுக்கும்படிக்கு பராமரித்தல் என்கிற அர்த்தமாம். காப்பாற்றுதல் என்பதற்கு, எந்த சூழ்நிலையில் இருந்தால் இதமாக இருக்குமோ அதை ஏற்படுத்திக் கொடுத்தல் எனப் பொருள்படும். இக்கருத்து ஆர்வமூட்டுவதாயிருக்கிறதல்லவா! உங்கள் மனைவியோடு பேசுகின்ற உரையாடல்கள் இதமாகவும், பிரியத்தோடும் இருக்கட்டும். அதை நீங்கள் செய்யாவிட்டால் அவளுடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான போஷாக்குகளையும் கரிசனையையும் அளிக்காதவர்களாகி விடுவீர்கள். அப்படிப்பட்ட போஷாக்குகளை அளித்து அவளை பேணிக் காப்பாற்றாவிட்டால் அவளை வாடச் செய்கிறீர்கள். அதுவும் ஒருவிதத்தில் கொலைதான்.

வில்லர்ட் ஹார்லே (Willard Harley) என்கிற ஆலோசகர் தம்மிடத்தில் ஆலோசனைக்கு வருபவர்கள் கூறுவதிலிருந்து பொதுவாக அவர்களுக்கு 5 முக்கியமான தேவைகள் இருப்பதை கவனித்தார். கணவர்களுடைய பிரதானமான தேவை எது என புள்ளிவிவரக் கணக்கிடுகையில் பெரும் பாலானோர் சரீர உறவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அவர் கவனித்தார். மனைவிகளின் பிரதானமான தேவைப்பட்டியலில் முதலாவதாக இடம் பெறுவது, பிரியமாக இருப்பதே. அநேக பெண்கள், அன்பில்தான் உத்திரவாதத்தையும், பாதுகாப்பையும், ஏற்றுக் கொள்ளப்படுதலையும், ஆறுதலையும், சமாதானத்தையும் அடையாளமாகக் காணுகிறார்கள். அந்த ஆலோசகர் மேலும் கூறுவதை ஆண்கள் கவனிக்க வேண்டும். “பெண்கள் அன்பை எதிர்பார்ப்பதற்கு உரிமையுடையவர்கள். அன்பைக் கொடுப்பதிலும் அதைப் பெற்றுக் கொள்வதிலும் ஏற்படுகிற மகிழ்ச்சியை அவர்கள் விரும்புகிறார்கள். இதற்கும் சரீர உறவுக்கும் அவர்களைப் பொறுத்தஅளவில் எந்த சம்பந்தமும் இல்லை. சரீர உறவைப் பெறவேண்டும் என்பதற்காக அவர்கள் அன்பை செலுத்துவதோ பெற்றுக் கொள்வதோ கிடையாது. ஆனால் ஓர் ஆணுக்கோ இது பெரும் குழப்பத்தைத் தருகிறது. அவனைப் பொறுத்த அளவில் அன்பைக் காண்பிப்பதில், சரீர உறவு ஒரு பாகம் வகிப்பதாக அவன் நினைக்கிறான்”.

பெண்களே, உங்கள் கணவன் அன்பைக் காண்பித்து, அதன் பலனாக அவன் சரீர உறவை அடையாவிட்டால், தன்னை வெறுப்பதாக அவன் நினைப்பான். அது அவனுக்கு சிலுவை சுமப்பதைப் போலிருக்கும். அந்தவிதமாகத்தான் அவன் தன் மனைவியில் அன்பு செலுத்தி, அவளை இதமாக பிரியப்படுத்தி, அவளைப் போஷிக்க இயலும். அவளும் போஷிக்கப்பட வேண்டும். வெறுமனே, சரீர உறவுக்காக மாத்திரம் கணவன் அவளிடம் வரக் கூடாது.

சமீபகாலங்களிலே இன்டர்நெட் தளங்களில் ஒரு சிறிய படம் பலருக்கும் அனுப்பப்படுவதைக் கவனித்திருப்பீர்கள். அதில் இரண்டு சிறிய எலக்ட்ரானிக் மிஷின்கள் ஆண்-பெண் வித்தியாசத்தைக் காண்பிக்கும் வகையில் வேடிக்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு சாதாரண, அலங்காரமில்லாத ஒரு சிறு பெட்டி, ஒரேயொரு (On-Off) கன்ட்ரோல் ஸ்விட்சை மாத்திரம் கொண்டதாக காண்பிக்கப்படுவது ஆணைக் குறிக்கும். மற்றொரு பெட்டியில் கன்ட்ரோல் சாதனங்களும், வயர்களும், விளக்குகளும், மூடித்திறக்கும் அமைப்புகளுமாக சிக்கலானதாகக் காணப்படுவது பெண்ணைக் குறிக்கிறதாம். சரீர உறவை நடுகிறதைத் தெரிவிப்பதில் பெரும்பாலான ஆண்கள் இப்படிப்பட்ட எளிதான உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பைக் கொடுத்தல் - சரீரஉறவைப் பெற்றுக் கொள்ளுதல். ஆனால் பவுல் அப்போஸ்தலன், கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியாக மனைவிகளை போஷிக்கவும், காக்கவும் வேண்டுமென கூறுகிறார். விளக்கு எரிவதற்கு ஒரு ஸ்விட்சைப் போடுவது போல அவளை நடத்தக்கூடாது. அவள் போஷிக்கப்படவும், காக்கப்படவும் வேண்டும். கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டு வரும் வகையிலான அன்பில் நிச்சயமாக தன்னைத்தானே வெறுக்கிற சீஷத்துவம் காணப்படும். பல்வேறு விதங்களில் மனைவியிடம் பிரியத்தைக் காண்பிக்கலாம் என்று ஹார்லே கூறுகிறார். அணைத்துக் கொள்ளுதல், அர்த்தமுள்ள வாழ்த்து அட்டைகளை வழங்குதல், பூச்செண்டு வழங்குதல், ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லுதல், அவளுக்காக கதவுகளைத் திறந்துவிடுதல், கைகளைக் கோர்த்துக் கொண்டு செல்லுதல், இரவு உணவிற்குப் பின்னர் இருவருமாக சற்று நேரம் உலாவி வருதல், போனில் அழைத்துப் பேசுதல், நட்போடு உரையாடுதல் ஆகியவை சில உதாரணங்களாகும். வேறுவிதமாக சொல்லப்போனால், பழங்காலத்து காதல் முறைகளைக் கையாளும்படி கூறுகிறார்.   (தொடரும்)

“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

பூமியில் உள்ளவைகளையல்ல மேலானவைகளையே தேடுங்கள்” என்று பவுல் (கொலோ. 3:1&2) சொல்லுகிறார். இதில் தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக வரவில்லை. முதல் வசனத்தில் ‘மேலானவைகளைத் தேடுங்கள்’ என்பதன் மூலம்

பரலோகத்துக்குரிய, ஆவிக்குரிய காரியங்களை நாடும்படி அறிவுறை கூறும் பவுல் இரண்டாம் வசனத்தில் அதையே திரும்பச் சொல்லுவதுபோல் இந்த வசனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இரண்டாம் வசனம், ‘பூமியில் உள்ளவைகளில் அல்ல, மேலானவைகளில் உங்களுடைய இருதயம் பதிந்திருக்குமாறு பார்்த்துக்கொள்ளுங்கள்’ என்று இருக்க வேண்டும். முதல் வசனத்தில் கிறிஸ்தவர்களுடைய இலக்கு என்ன என்பதை விளக்கும்

பவுல் இரண்டாம் வசனத்தில் கிறிஸ்தவர்களுடைய இருதயம் எதனால் நிரம்பியிருக்க வேண்டும் என்று விளக்குகிறார். ஆவிக்குரிய காரியங்களுக்கு

நம் வாழ்க்கை அடையாளமாக இருக்க வேண்டுமானால் அது வெறும் ஜெபத்தாலும், உபவாசத்தாலும் ஏற்பட்டுவிடாது. உங்களுடைய இருதயத்திலுள்ள

இந்த உலகத்துப் பண்பாட்டைச் சார்ந்த அத்தனை எண்ணங்களையும், ஆசைகளையும், திட்டங்களையும், வழிமுறைகளையும் முற்றாக நீங்கள் அழிக்க வேண்டும். உலகத்தைச் சார்ந்த பாவப் புதர்கள் ஆக்கிரமித்திருக்கும்

இருதயமாகிய மண்ணில், கிறிஸ்துவுக்குரிய பயிர்களான எண்ணங்களும்,

நோக்கங்களும், வழிமுறைகளும் ஒருபோதும் வளர முடியாது.

- ஆசிரியர் –

 

வாசகர்களிடமிருந்து ஒரு வார்த்தை . . .

(போதகர் பாலாவின் பிரசங்க சீடிக்கள் பற்றி . . .)

ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆங்கிலத்தில் காணப்படும் அளவிற்கு தமிழில் நல்ல கிறிஸ்தவ புத்தகங்களும், போதனைகளும் இல்லையே என்று எண்ணி ஏக்கமடைந்த காலங்களை எண்ணிப் பார்க்கிறேன். பழமை வாய்ந்த தமிழ் மொழியில் நல்ல சத்தான போதனைகள் கிடைக்காதா என்கிற வாஞ்சையை தீர்த்து வைக்க தேவன் சித்தங் கொண்டிருக்கிறார் என்பது, போதகர் பாலாவின் பிரசங்கங்கள் அடங்கிய சி.டி.க்-களை கேட்கும்போது விளங்குகிறது. சத்தியத்தை உள்ளது உள்ளபடி, சற்றும் கலப்பில்லாமல், யாருக்கும் அஞ்சாமல், தேவனுக்கு மாத்திரமே பயந்தவராக எடுத்துக் கூறும் பாங்கு, சத்திய தாகமுள்ளவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிஷமாகும். பேச்சு வழக்கு, தூய தமிழ் ஆகியவைகளைக் கலந்து அவர் பிரசங்கித்திருக்கும் விதம் இன்றைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்திழுத்து, அவர்களை வேறு சிந்தனைக்குத் தாவவிடாமல், சொல்ல வரும் கருத்துக்களை அவர்களுடைய மனதில் புகுத்துகிறது. கருத்துக்களை கோர்வைப்படுத்தி, தெளிவான முறையில் பிரசங்கித்திருக்கும் விதத்தினால் அவை மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.

“கர்த்தரின் வார்த்தையும் கிறிஸ்தவக் குடும்பமும்” என்கிற பிரசங்க சிடி ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்க வேண்டிய சிடி. குடும்பத்தின் தலைவன், மனைவி, பிள்ளைகள் எப்படி வாழ வேண்டுமென கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்பதை விளக்கி, கர்த்தருக்கேற்ற குடும்பங்களை உருவாக்கும் சாதனமாக அது திகழ்கிறது.

“திருச்சபை வரலாறு” என்ன என்பதையே அறியாதவர்களாகத்தான் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிசபை முதற்கொண்டு, பல்வேறு விதமான சரியான-தவறான சபைகள் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலம் வரைக்குமுள்ள சபை வரலாற்றை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிற ஒவ்வொரும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதற்கு இந்த சிடி உதவுகிறது. வாலிப வயதிலுள்ளவர்களும், விடலைப் பருவத்தினரும் பல்வேறு சோதனைகளை சந்தித்து வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கர்த்தரின் வேதாகமம் காண்பிக்கின்ற அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, “சோதனைகளின் மத்தியில் கர்த்தருக்கென்று சாதித்து வாழ்வது எப்படி?” என்கிற புத்திமதிகள் அடங்கிய பிரசங்க சிடி இளம்பிராயத்தினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். பெற்றோரே, இதை கவனத்தில் கொள்ளுங்கள். “யாக்கோபு நிருபத்திலிருந்து தொடர் பிரசங்கங்கள்” நூலின் ஆசிரியருடைய அறிமுகத்தில் தொடங்கி, அந்நிருபத்தின் அனைத்து வசனங்களின் பேரில் பிரசங்கித்திருக்கும் தொடர் பிரசங்கம், அடுத்த பிரசங்கம் எப்போது வெளிவரும் என்கிற ஆவலைத் தூண்டிவிடுவதாக இருக்கிறது. முழு நிருபத்திலும் சொல்லப்பட்டிருப்பவைகளை முறையாக கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த சிடி நமக்கு அளிக்கிறது.

கடவுளுடைய உள்ளார்ந்த விருப்பத்தையும், அவருடைய கிருபையின் மகத்துவத்தையும் விளக்குகின்ற “கர்த்தருடைய இருதயதாகம், கிருபையின் மகத்துவம்” என்கிற பிரசங்கம் கடவுளுக்கும் பாவிகளான நமக்கும் உறவு ஏற்படுத்துவதற்கு உதவுகிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது, தமிழில் போதகர் பாலாவின் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய பிரசங்கங்கள், தமிழ் கிறிஸ்தவத்தில் சீர்திருத்தம் ஏற்பட்டுக் கொண்டுவருவதை எடுத்துரைக்கிறது. இவைகளின் மூலமாக தமிழ் கிறிஸ்தவ உலகம் புத்துணர்ச்சி அடைய வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும் ஜெபத்தையும் தேவனுக்கு ஏறெடுக்கிறேன். இன்னும் அதிகமான பிரசங்கங்கள் தமிழர் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டு, கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ச்சி அடையவும், தேவனை அறியாதவர்கள் அவரை அறிந்துகொள்ளவும் இவைகள் வழி செய்யட்டும் என தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன்.

-- திருமதி. விநோதா சுரேந்தர்

தமிழ்நாடு, இந்தியா.

 

கடந்த சில காலங்களாக போதகர் பாலாவின் சிடி செய்திகளைக் கேட்டு வருகிறேன். முக்கியமாக யாக்கோபு நிருபத்தில் அவர் கொடுத்திருக்கும் செய்திகள் இறையியல் போதனைகளால் நிறைந்திருப்பதோடு, அநேக நடைமுறைக்கு தேவையான பயன்பாடுகளையும் அள்ளித் தருபவைகளாக உள்ளன. அருமையான தேவ செய்திகள் செய்திக்கேற்ற தகுந்த உதாரணங்களோடு, மிகவும் எளிமையாக பிரசங்கிக்கப்பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் பயன்தருவதாக இருந்தது. நாவை அடக்குவது, கிரியையில்லாத விசுவாசம், உலக இச்சை, மாம்சத்து வைராக்கியம், பாவமும் சோதனைகளும், கர்த்தருக்கு கீழ்ப்படிவது ஆகிய செய்திகள் என்னுடைய பரிசுத்த வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பெருந் துணையாக இருந்தன. நேரடியாக, உள் நோக்கம் இல்லாமல் ஆணித்தரமாக அவர் பிரசங்கிப்பது இருதயத்தை தொடுவதாகவும், வல்லமையுள்ளதாகவும் இருக்கிறது. எங்கள் ஐக்கியத்தில் இருக்கும் அனைவரும் இந்த செய்திகளைக் கேட்டு இதே அனுபவத்தை அடைந்திருப்பதோடு நண்பர்களும் அவற்றைக் கேட்கும்படி கொடுத்துவருகிறார்கள். எங்கள் ஐக்கியத்தில் இருக்கும் மாம்சத்தில் தைரியம் கொண்டிருந்த சில வியாபாரிகள் “அகம்பாவமாகிய பாவம்” (Sin of Presumption) என்ற செய்தியைக் கேட்டு ஆடிப்போனார்கள். உலக இச்சை, கிரியையில்லாத விசுவாசம், பாவமும் சோதனைகளும் செயற்படும் விதம் ஆகியவை பற்றிய போதனைகள் எங்களை கிருபைக்குள் வளர்த்திருக்கின்றன. நானும், என் மனைவியும் பிரயாணம் செய்கிற நேரங்களிலெல்லாம் இந்த செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். கர்த்்தருடைய ஆவியானவர் இவற்றின் மூலம் எங்களைத் தாழ்த்தி பரிசுத்த வாழ்க்கையை இன்னும் கவனத்தோடு வாழ உதவியிருக்கிறார்.

இந்திய தேசத்தின் கிறிஸ்தவம் ‘துன்பங்களைப்’ பற்றி துப்புரவாக வேதத்தோடு பொருந்திவராத எண்ணங்களால் நிறைந்திருக்கின்றது. ஆவியில் பிறந்திருக்கின்ற எங்களுக்கு துன்பங்கள் தடைகளல்ல. இன்று நம்மத்தியில் இருந்து வருகின்ற அத்தனைத் தவறான போதனைகளின் மத்தியில் இந்த செய்திகளைக் கேட்கும்போது வாழ்க்கையின் பெரிய இரகசியங்கள் எங்களுக்கு முன் திறந்து வைக்கப்படுவது போன்ற அனுபவத்தை அடைந்தோம். ‘துன்பங்களைத் தாங்குகின்றவன் ஆசீர்வதிக்கப்படுவான்’ என்ற யாக்கோபுவின் வசனத்தைப் பற்றிய இத்தனை வல்லமையான செய்தியை நான் இதற்கு முன் கேட்டதில்லை. அநேக துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்திருக்கின்ற எங்களுடைய ஐக்கியத்தைச் சேர்ந்த சிலருக்கு இந்த செய்திகள் விடுதலையைத் தந்திருக்கின்றன.

பிரசங்க ஊழியத்தைப்பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கும் நான் போதகர் பாலா போதிக்கின்ற முறையைக் கவனித்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அவருடைய செய்திகள் எப்போதும் தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும். கர்்்த்தருடைய வார்த்தையின் மகத்தான போதனைகளை எளிமையாகவும், நம்பத்தக்கதாகவும், நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ள விதத்திலும் அவர் விளக்குகிற முறையில் ஓர் தனித்துவத்தை நான் காண்கிறேன். கேட்பவர்களுடைய உணர்ச்சிகளைக் தூண்டியும், குரள் வளத்தோடும் கஷ்டமான வசனங்களைக்கூட விளக்குகின்ற அநேகம் பேருடைய போதனைகளை நான் கணினியிலும், வேறு ஊடகங்களின் மூலமும் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை கேட்பதற்கு நன்றாயிருந்தபோதும் கேட்டு முடிந்தபிறகு எந்த பயனையும் அடைந்த உணர்வைத் தரவில்லை. போதகர் பாலாவின் பிரசங்கங்களும், சபை வரலாறு பற்றி அவர் தொடர்ந்து கொடுத்து வரும் செய்திகளும் தவறான போதனைகளில் இருந்து என்னைக் காத்துக்கொள்ளவும், கர்த்தருக்குள் வளரவும் பெரிதும் உதவுகின்றன. இந்த ஆடியோ ஊழியத்தை கர்த்தர் பெரிதாக ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆத்மார்த்தமான வாஞ்சை.

அ. முரளி, பெங்களூர் கிருபை சீர்திருத்த ஐக்கியம்

General Manager - Aditya Birla Menacs,

Banagalore, India.

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.