திருமறைத்தீபம் 2011 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. பத்து மில்லி கிறிஸ்தவம்
3. நூல் அறிமுகம்: பிரசங்கிகளும் பிரசங்கமும்
4. பிரியாவிடைப் பிரசங்கங்கள் - 7 -
5. தாம்பத்திய உறவில் நெருக்கம்
வாசகர்களே!
உங்களை மறுபடியும் இந்த இதழ் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் இம்முறை நம்மினத்துக் கிறிஸ்தவத்தைப் பற்றிய ஓர் ஆக்கத்தை எழுதியிருக்கிறேன். நம்மினத்தில் ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் தாறுமாறாகக் கொடுத்து வரும் வேதமறியாத ஒரு வழக்கம் மெய்க்கிறிஸ்தவம் உருவாக வழியில்லாமல் இருந்து வருகிறது. இந்த ஆக்கம் உங்கள்ை சிந்தித்து செயல்பட வைக்கட்டும்.
இந்த இதழில் போதக நண்பர் அல்பர்ட் என். மார்டின் தன் ஆக்கத்தில் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார். இந்துப் பாரம்பரிய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரம் என்ற போர்வைக்குள் மறைத்துப் பின்பற்றி போலிக் குடும்ப வாழ்ககை நடத்தி வரும் தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் இதை கவனத்தோடு வாசித்து தங்கள் குடும்ப வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். போதகர் அல்பர்ட் என். மார்டின் முகத்தாட்சண்யம் பார்க்காமல் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உண்மையைத் தெளிவாக எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஆக்கம் அநேகரை சிந்திக்க வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஜெபம். போதகர் அலன் டன்னுடைய ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற ஆக்கமும் இதில் தொடர்கிறது. இருவரின் ஆக்கங்களும் கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையில் இருக்க வேண்டிய வேத இலக்கணங்களை அருமையாக விளக்குகின்றன. இவற்றை வாசகர்கள் படித்துப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள முயல வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் தமிழ் கிறிஸ்தவ குடும்பங்கள் வேத அடிப்படையில் அமையாமலும், வாழாமலும் இருப்பது, திருச்சபை ஒழுங் காக இல்லாமலிருப்பதற்கு ஒரு முக்கிய காரணமென்று நம்புகிறேன். அதுவும் ஊழியக்காரர்களுடைய குடும்பங்கள் ஒழுங்காக இல்லாமலிருப்பது பெருந்தவறு. கர்த்தரே உங்களோடு தன் வார்த்தையின் மூலமாகப் பேசட்டும்.
புதிய இணைய தளமான biblelamp.org/english எனும் தளத்தை பார்க்கத் தவறாதீர்கள். அதே வேளை பழைய இணைய தளமான biblelamp.org யும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம். ‘பிரசங்கிகளும் பிரசங்கமும்’ என்ற புதிய நூல் வெளிவந்திருப்பது உங்களுக்குத் தெரியும். அது பிரசங்கம் செய்கிறவர்களுக்கு பெரும் பயனைக் கொடுக்கும். அதை வாசித்து இருவர் தங்கள் கருத்துக்களை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கட்டும்.
– ஆசிரியர்.
பத்து மில்லி கிறிஸ்தவம்
இது என்ன, இதுவரைக் கேள்விப்படாததொன்றாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? உங்களை சிந்திக்க வைக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தலைப்பையே நான் கொடுத்திருக்கிறேன். இதை வாசித்து சிலர், கிறிஸ்தவத்தை இந்த மாதிரி அவமதிப்பதுபோல் எழுதலாமா, என்றும் கேட்கலாம். நான் சொல்ல வருவதை வாசித்துப் பார்த்தபிறகு அந்த மாதிரியான எண்ணத்தில் இது எழுதப்படவில்லை என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். நம்மினத்தில் இருந்து வரும் கிறிஸ்தவத்தைப் பற்றி நான் நினைத்துப் பார்க்காத நாளில்லை என்றுதான் சொல்லலாம். எத்தனையோ வருடங்களாக நம்மின மக்கள் மத்தியில் நான் கிறிஸ்தவ பணிபுரிந்து வந்தபோதும், வேத அறிவிலும், பக்தியிலும், வளர்ச்சியிலும் மிகவும் தளர்ந்த நிலையில் மெய்யான ஆத்மீக எழுச்சியில்லாது இருந்து வரும் நம்மினத்துக் கிறிஸ்தவம் என் மனதை எப்போதுமே மிகவும் பாதித்து வருகிறது. நம்மினத்திலும் மெய்க்கிறிஸ்தவம் தலைதூக்கி நின்று நம்மக்களுக்கு ஆறுதலையும், வேத அறிவையும் கொடுத்து வரும் நாள் எப்போது வரும் என்று நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். வயதான, பக்திமானாகிய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லுவார்: ‘மெய்யான ஆவிக்குரிய மனந்திரும்புதலைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறபோதுதான் மெய்க்கிறிஸ்தவம் இருப்பதற்கான அடையாளத்தைக் காணமுடியும்’ என்று. அவருடைய வார்த்தைகள் உண்மையானதுதான். நம்மினத்தைப் பொறுத்தவரையில் மெய்க்கிறிஸ்தவத்திற்கான அடையாளத்தை நாம் பெரிதும் காணமுடியாதிருப்பதற்கு அதுதான் முக்கிய காரணம்.
‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ என்று நான் தலைப்புக் கொடுத்திருப்பதற்குக் காரணம் நம்மினத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் திருவிருந்துக்காக அலையும் செயலைப் பார்த்துத்தான். திருவிருந்து பற்றி ஒரு மாயமான எண்ணங்களை அவர்கள் தங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பத்து மில்லிக்காக மட்டும் சபையை நாடிப்போவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். திருவிருந்து ஒருவருக்கு கொடுக்கும்போது வெறும் பத்து மில்லி அளவு மட்டுமே கிடைப்பதால்தான் இந்தப் பெயைரைச் சூட்டியிருக்கிறேன். அப்படியானால் திருவிருந்து அவசியமில்லை என்று சொல்லுகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படி சொல்லவில்லை. திருவிருந்திற்காக மட்டும் அலைய வேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன். திருவிருந்து மட்டும்தான் கிறிஸ்தவம் என்று எண்ணி வீண்போக வேண்டாம் என்றுதான் சொல்ல வருகிறேன். திருவிருந்தை மட்டும் தவறாது எடுத்து வந்தால் பரலோகம் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நம்பி அழிந்து போகாதீர்கள் என்றுதான் ஆதங்கத்தோடு அறிவுரை கூறவருகிறேன்.
திருவிருந்திற்காக அலைகின்ற பலர் திருவிருந்து பற்றிய வேதபூர்வமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. அதை யார் எடுக்க வேண்டும்? எங்கிருந்து எடுக்க வேண்டும்? எதற்காக எடுக்க வேண்டும்? எப்படி எடுக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. உண்மையில் இதேபோல்தான் ஞானஸ்நானத்தைப் பற்றியும் அவர்களுக்கு வேத அறிவு இல்லாமலிருக்கிறது. அப்படியானால் திருவிருந்தை யார், எப்படி எடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கப் போவது எனக்குத் தெரியும். அதைத் தான் இப்போது விளக்கப் போகிறேன்.
இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஞானஸ்நானமும், திருவிருந்தும்
வேதம் தெளிவாக திருவிருந்து இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று விளக்குகிறது. இதன் மூலம் நான் விளக்க விரும்புவதென்னவென்றால் திருவிருந்தைப் பற்றி எவரும் சிந்திப்பதற்கு முன் அல்லது என் பாஷையில் சொல்லுவதானால் ‘அதற்காக அலைவதற்கு’ முன் தங்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பு நிகழ்ந்திருக்கிறதா? இரட்சிப்பை அடைந்திருக்கிறேனா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். மனந்திரும்புதலையும், கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தையும் மெய்யாக அடையாதவர்கள் திருவிருந்து பக்கம் போகவே கூடாது. இது நமக்குத் தெரிந்ததுதானே, புதிதாக ஒன்றும் சொல்லவில்லையே என்று நீங்கள் அங்கலாய்ப்பீர்கள். ஆனால், இன்று உண்மையிலேயே மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் பெறாத அநேகருக்கு நம்மினத்தில் ஞானஸ்நானமும், திருவிருந்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எத்தனையோ பேரை நான் சந்தித்திருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பின் அனுபவம் எப்படி ஏற்பட்டது என்று ஒருமுறை நான் ஒரு போதகரைக் கேட்டேன். இராத்திரி பன்னிரண்டு மணிக்கு பளீரென என் படுக்கை அறையில் வெளிச்சம் ஏற்பட்டது. என் முன் இயேசு நடந்து வந்தார். அன்றிலிருந்து நான் அவரை நம்ப ஆரம்பித்தேன் என்று அவர் சொன்னார். இரட்சிப்பின் அனுபவம் இப்படிக் கிடைக்கும் என்று வேதத்தில் ஒரு பக்கத்திலும் எழுதியிருக்கவில்லை. இதிலிருந்து இந்தப் போதகருக்கு இரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அறிந்துகொண்டேன். ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால் உங்களுடைய பிள்ளைக்கு சரீர சுகம் ஏற்படும் என்று சொல்லி பெற்றோருக்கு ஞானஸ்நானமும், திருவிருந்தும் கொடுத்திருக்கிறார் ஒரு சபைப் போதகர். வருடத்திற்கு இரண்டு முறையாவது, ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள ‘விரும்புகிறவர்கள்’ உங்கள் பெயர்களைக் கொடுத்து விட்டு இனி நடக்கப் போகும் ஓரிரு வகுப்புகளில் கலந்து கொண்டு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து, உங்கள் விசுவாச அனுபவத்தை விளக்குவீர்களா? நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? என்று ஒரு தடவையாவது கேட்டுப்பார்க்காமல் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிற சபைகளையும் எனக்குத் தெரியும். அப்படி இரட்சிப்பின் அனுபவத்தை அடையாமல் ஞானஸ்நானம் பெற்று, திருவிருந்து பெற்று இன்றும் சபைக்கு ‘வசதிக்கேற்ற விதத்தில்’ வந்துபோய் கொண்டிருக்கிறவர்களை நான் அறிவேன். இப்போது தெரிகிறதா, ஏன் மனந்திரும்புதலையும், இரட்சிப்பைப் பற்றியும் இந்தளவுக்கு வலியுறுத்துகிறேன் என்று.
நம்மினத்து ஊழியக்காரர்கள் பெரும்பாலும் ஞானஸ்நானம் கேட்கிறவர்களுக்கு உடனடியாக அதைக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில், அப்போஸ்தல நடபடிகளின் ஆரம்பப் பகுதிகளை வாசிக்கிறபோது ஞானஸ்நானம் உடனடியாக ஆத்துமாக்களுக்கு கொடுத்ததுபோல் அவர்களுக்கு தெரிகிறது. அப்போஸ்தல நடபடிகள் வரலாற்று நூல். நடந்த முழு விபரங்களையும் அதில் லூக்கா விளக்கியிருந்தால் வேதப் புத்தகம் நாம் கையில் தூக்கிக் கொண்டு போகிற அளவுக்கு இருந்திருக்காது. அந்ந நூலின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையென்னவென்றால், விசுவாசிகளுக்கு மட்டுமே அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதுதான். விசுவாசிகளல்லாதவர்களுக்கு அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் யார் விசுவாசி என்பதை ஆராய்ந்து பார்க்காமல் ஞானஸ்நானம் கொடுத்திருக்க முடியாது. அத்தோடு, பரிசுத்த ஆவியானவர் சபை ஆரம்பிக்கப்பட்ட அந்தக் காலத்தில் அப்போஸ்தலர்களோடு இருந்து பேரற்புதங்களை செய்து மனித இருதய எண்ணங்களை அவர்கள் அறிந்து பணிபுரிய உதவி வந்தார். நாம் அப்போஸ்தலர்கள் அல்ல, அவர்களுக்கிருந்த அதிகாரம், வல்லமை, ஞானம் நமக்கில்லை. ஆகவே, ஒருவர் விசுவாசித்த அந்த நிமிடமே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று அப்போஸ்தல நடபடிகள் விளக்கவில்லை. நம் காலத்திலும்கூட ஒருவர் விசுவாசித்த அந்த நிமிடமே நம்மால் ஞானஸ்நானம் கொடுக்க முடியாது. முக்கியமாக இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஒருவருடைய விசுவாசம் நம்பக்கூடியதாக இருக்கும்வரை அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது என்பதுதான். அதைத் தெரிந்துகொள்வதுதான் போதகர்களின் தலையாய கடமை. அதற்காகத்தான் ஞானஸ்நானம் கேட்கிறவர்களுடைய அநுபவத்தை நாம் கேட்டுப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் சபை வாழ்க்கையில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ஒருவருடைய பேச்சைக்கேட்டு, அவர் ஞானஸ்நானம் கேட்டிருக்கிறார், அதனால் அவருக்கு நாம் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இயேசுவுக்கோ அவருடைய அப்போஸ்தலர்களுக்கோ தோன் றாதது மட்டுமல்ல, வேதத்திலும் காணமுடியாத ஒரு தவறான நடைமுறை.
இயேசுவோ, அவருடைய அப்போஸ்தலர்களோ, ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லியதில்லை, அப்படி புதிய ஏற்பாட்டில் எந்தப் பகுதியிலும் நாம் வாசிப்பதில்லை. பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயத்தில் குத்தப்பட்டு, ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்று மக்கள்தான் கேட்டார்களே தவிர, யாருக்கு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விருப்பமிருக்கிறது என்று பேதுரு ஒருவரைப் பார்த்தும் கேட்கவில்லை. மக்கள் பேதுருவைப் பார்த்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது பேதுரு அவர்களைப் பார்த்து, மனந்திரும்பி, ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். அப்படி மனந்திரும்பியவர்களுக்கு மட்டுமே அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானத்தைக் கொடுத்தார்கள். வேதம் இப்படிப் போதிக்க, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் உங்கள் பெயர்களைக் கொடுத்துவிட்டு சில வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என்ற முறையை தமிழின சபைகள் பின்பற்றி வருவது எப்படி சரிப்பட்டு வரும். இந்த முறைக்கு வேதம் எங்கே, எப்போது, யாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறது. இந்த முறை அப்போஸ்தலர்களுடைய போதனைகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானது. இது சபைக்கு ‘ஆள்’ சேர்க்க உதவுமே தவிர ‘ஆவிக்குரிய ஆடுகளை’ சேர்க்க உதவாது. இந்த முறை ஆவிக்குரிய முறையல்ல. அதனால்தான் இந்த முறையைப் பின்பற்றுகிற ‘சபைகள்’ உலகத்து சபைகளாக எந்தவித ஆவிக்குரிய வேத வைராக்கியமும் இல்லாமல் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
பேதுரு மட்டுமல்லாமல், இயேசுவும், பவுலும், யோவான் ஸ்நானனும் கூட ‘மனந்திரும்பி விசுவாசியுங்கள்’ (Repent and belive) என்றே சுவிசேஷத்தை அறிவித்து வந்தார்கள். இதில் மனந்திரும்புதல், தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்ப வேண்டுமென்பதையும், விசுவாசம் என்பது இரட்சிப்புக்காக கிறிஸ்துவில் மட்டுமே வைக்க வேண்டிய விசுவாசத்தையும் குறிக்கிறது. இதே போதனையை வேறு வகையிலும் இயேசு கொடுத்திருக்கிறார். நிக்கொதேமுவைப் பார்த்து அவர், ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்’ (You must be born again - regeneration) என்று சொன்னார். இந்த வார்த்தைகள் இரட்சிப்பு பரலோகத்தில் இருந்து வருவதையும், ஒரு மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ள முடியாதென்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மனிதன் ஆவியினால் மட்டுமே மறுபடியும் பிறக்க முடியும் என்பதையும் இயேசு சுட்டிக் காட்டுகிறார். சபையோ, ஞானஸ்நானமோ, மதச் சடங்குகளோ, பாரம்பரியமோ அல்லது உலகத்தைச் சார்ந்த எதுவும் ஒருவரை மறுபடியும் பிறக்க வைக்க முடியாது. தேவ ஆவியானவர் சுவிசேஷ வசனங்களைப் பயன்படுத்தி ஒருவருடைய வாழ்க்கையில் கிரியை செய்தால் மட்டுமே அவர் மறுபிறப்பாகிய ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார் இயேசு. பரிசுத்த ஆவி, ஒருவரை ஆவிக்குரியவிதத்தில் மறுபடியும் பிறக்கவைத்தால் (Regeneration), அதை அவர் மனமாற்றத்தின் (Conversion) மூலம் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார். அதைத்தான் நாம் கெட்ட குமாரனில் பார்க்கிறோம் (லூக்கா 15). ஒருவரில் நிகழும் ஆவிக்குரிய மறுபிறப்பை நாம் புறக்கண்களால் பார்க்க முடியாது. அதற்கு அடையாளமான அவருடைய மனமாற்றத்தை நாம் அவர் வாழ்க்கையில் பார்க்க முடியும். அந்த மனமாற்றத்தை பார்த்து விசாரித்துத்தான் நாம் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமே தவிர, அவர் கேட்டார் என்பதற்காக ஒருபோதும் கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது. ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் பெற முன்பு ஒருவர் ஆவிக்குரிய மறுபிறப்பையும், மனமாற்றத்தையும் தவறாமல் அடைந்திருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும், அப்போஸ்தலர்களும் தொடர்ந்து பிரசங்கித்தார்கள்.
இன்றைக்கு சுவிசேஷம் சொல்லுவது என்றால் என்ன? என்பதை அறியாமல் இருக்கிறார்கள் நம்மினத்து பிரசங்கிகள். அவர்களுடைய சுவிசேஷத்தில் ‘பாவம்’ விளக்கப்படுவதில்லை. பாவத்தை ஆத்துமா உணர அவர்களுடைய பிரசங்கம் வழிகாட்டுவதில்லை. பாவத்திற்கு கிறிஸ்து செய்திருக்கிற சிலுவை நிவாரணமும் அதில் தெளிவாக விளக்கப்படுவதில்லை. மனந்திரும்புதலும், விசுவாசமும் எத்தகையது என்பதும் ஆத்துமாக்களுக்கு புரியும்படியாக விளக்கப்படுவதில்லை. சுவிசேஷப் பிரசங்கம் என்ற பெயரில் கொடுக்கப்படும் கொச்சையான வெறும் பேச்சுக்களால் கிறிஸ்து அவர்களுடைய கண்களுக்கு தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகிறார். செய்தி கேட்கிறவர்களால் வேதம் காட்டுகின்ற, பாவம் போக்கும் இரட்சிக்கும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடிவதில்லை. வெறும் பிணி தீர்க்கும், வாழ்க்கை வசதிகளை அளிக்கும், கஷ்டங்களுக்கு ஆறுதல் அளிக்கும், சுகம் கொடுக்கும் வித்தைகள் செய்யும் ஒரு கிறிஸ்துவை மட்டுமே அவர்கள் செய்திகளில் பார்க்கிறார்கள். இதனால் ஆவிக்குரிய கிரியைகள் இன்றைய கொச்சை சுவிசேஷப் பிரசங்கங்களால் நிகழ்வதில்லை. அவற்றால் ஆவிக்குரிய பிறப்பை மனிதன் அடைய வழி இல்லாமல் இருக்கிறது. ‘இருதயத்தைக் குத்துகின்ற’ பிரசங்கப் பஞ்சம் நம்மத்தியில் தொடர்ந்து இருந்து வருகின்றது. இதன்காரணமாக ஆவிக்குரிய செயலாக வெளியில் தெரிகின்ற, செயற்கையாக உலக வழியில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிற வழிகள் உருவாகி ஆயிரக்கணக்கில் மெய்யாக ஆத்தும ஆதாயம் அடையாதவர்கள் ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் பெற்றுக் கிறிஸ்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் ‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ என்று இங்கே விளக்கிக் கொண்டிருக்கிறேன். இது எப்படித் தவறான வார்த்தைப் பிரயோகமாக இருக்க முடியும்? உள்ளதை உள்ளதாக வெளிப்படையாக நாம் சொல்லாவிட்டால் ஒரு டாக்டரால் கூட எவருக்கும் நோய் தீர்க்க மருந்து கொடுக்க முடியாது. நம்மைப் பிடித்திருக்கின்ற வியாதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்று வேஷம் போட்டுக் கொண்டிருக்க முடியாது. மறுபிறப்படையாதவர்களுக்கு சபை, சபையாக ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு வருகிறது என்ற ஆணித்தரமான உண்மையை நாம் உணர்ந்து அதற்காக கண்ணீர்கொட்டி வருந்தி அழுகிறவரை, அதை மாற்ற கங்கணங்கட்டிப் பாடுபடுகிறவரை பரலோகத்து ஆண்டவர் நம்மினத்துக்கு ஆவிக்குரிய எழுச்சியை ஒருபோதும் தரப்போவதில்லை. நடைப்பிணமான மனந்திரும்பாத பெயர் கிறிஸ்தவர்களைக் கொண்ட உலகத்து சபைகள் மட்டுமே இங்கு தொடர்ந்து இருந்து வரும்.
சபை வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கே திருநியமங்கள்
சபை வாழ்க்கை என்றால் என்ன என்பதை நான் இங்கே விளக்கியாக வேண்டும். ஆங்கிலத்தில் இதை Churchmanship என்று கூறுவார்கள். இதை சபை இலக்கணம் என்றும் தமிழில் கூறலாம். இந்த வார்த்தையை தமிழில் எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்க முடியாது. ஆனால், அதன் பொருள் என்ன என்பதை பல வார்த்தைகளால் நிச்சயம் விளக்க முடியும். சபை வாழ்க்கை என்பது ஒருவர் ‘சபை’ என்றால் என்ன என்பதை வேத அடிப்படையில் உணர்ந்து அதற்கு தம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, வேத வழிப்படி சபையைத் தம் வாழ்க்கையில் மையமாகக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையை சபை வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஆனால், நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு இதுபற்றி இன்றும் பெரிதாகத் தெரியாமலிருக்கிறது. ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்பதை நான் விளக்குவது அவசியம். பல நூற்றாண்டுகளாக மேலை நாடுகளில் (முக்கியமாக பிரிட்டனிலும், அமெரிக்காவிலும்) கிறிஸ்தவம் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. அந்த நாடுகள் பெற்றெடுத்திருக்கின்ற தலை சிறந்த கிறிஸ்தவ தலைவர்களை நம்மினம் காணவில்லை. கிறிஸ்தவ இறையியலும், கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவ இலக்கியங்களும் பெருமளவில் உதயமாகி காலம் காலமாக அந்நாடுகள் நல்ல சபைகளைக் கண்டு வந்திருக்கின்றன. வேதபூர்வமான சபைகள் அமைக்கப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட சபைத் தலைவர்களைக் கொண்டு, நல்ல அங்கத்துவ அமைப்பைக் கொண்டு சமுதாயத்தில் கிறிஸ்தவ பணிபுரிந்து வந்திருக்கின்றன. குடும்பங் குடும்பமாக சபை வாழ்க்கையை அனுபவித்து வந்திருக்கின்றன. சாதாரணமாகவே பெரும்பாலானோர் சிறுவயதில் இருந்தே பெற்றோரோடு சபைக்குப் போய் சபையில் வளர்ந்து, பின்பு விசுவாசியாகி நல்ல குடும்பத்தை அமைத்து சபையில் நல்ல அங்கத்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ சமுதாயம் அந்நாடுகளில் சபை வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்திருக்கிறது. நல்ல சபைகளில் போதகர்களாக இருக்கின்ற அனைவரும் இந்த முறையில் சபையில் வளர்ந்து சபை வாழ்க்கையை அனுபவித்து, சபையால் பின்பு தெரிவு செய்யப்பட்டே போதகர்களாக வந்திருக்கிறார்கள். அப்படியில்லாதவர்கள் இந்த சபைகளில் போதகர்களாக இருக்க முடியாது. சபை வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள் இந்த சபைகளில் போதகர்களாக வருவதற்கு வழியே இல்லை. இது எல்லா நல்ல சபைகளையும் பொறுத்தவரையில் மெய்யானது. ஆனால், இந்தவிதமாக சபை வாழ்க்கையை அனுபவிக்கும்விதமாக நம்மினத்தில் பெரும்பாலான சபைகள் உதயமாகி இருந்து வரவில்லை. நம் சபைப் போதகர்கள் சபை வாழ்க்கையை மெய்யாக வாழ்க்கையில் அனுபவிக்காதவர்கள். இன்று ஊழியத்தில் இருந்து வருகின்ற பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை இது அசைக்க முடியாத உண்மை. நல்ல சபையில் அங்கத்தவராக இருந்து, போதகக் கண்காணிப்பைப் பெற்று, குடும்பத்தோடு வளர்ந்து, சபையாரோடு இணைந்து செயல்பட்டு சபை மக்களால் ஊழியத்துக்கு தெரிவு செய்து நியமிக்கப்பட்டவர்களாக அநேகர் இருப்பதில்லை. வாழ்க்கையில் இவர்கள் சபை வாழ்க்கையை ருசித்ததில்லை. சபை மக்களோடு பழகி, அவர்களோடு ஐக்கியத்தை அனுபவித்து, வேதத்தைக் அதிலிருந்து கற்று, கிறிஸ்தவ அனுபவத்தில் அதிலிருந்து வளர்ந்து வந்ததில்லை. இதற்கு விதிவிலக்கானவர்கள் இருந்துவிடலாம். ஆனால் பெரும்பாலானோரைப் பொறுத்தவரை இதுவே உண்மை. காரைப் பற்றியே ஒன்றும் தெரியாத ஒருவர் கார் லைசென்ஸ் பெற்று காரோட்ட ஆரம்பிப்பதுபோல் இவர்கள் ‘சபை’ நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால், இவர்கள் சபை என்ற பெயரில் தங்களுக்கு மனதில் பட்டவிதத்தில் ஒன்றை அமைத்து விடுகிறார்களே தவிர வேதத்தில் காணப்படுகிற, இயேசு போதிக்கிற சபையை நிறுவ முடிவதில்லை. இத்தகைய இடங்களுக்கு போய்வருகிறவர்களும் சபை அமைப்பு, சபை அங்கத்துவம், போதகக் கண்காணிப்பு, சபை ஐக்கியம், சபை ஒழுங்கு, சபை வாழ்க்கை என்பவற்றையெல்லாம் அறியாமலும் உணராமலும் வளர்ந்து வருகிறார்கள்.
மேலை நாடுகளில் நல்ல சபைகளில் அங்கத்தவராக வர விரும்புகிற ஒருவரின் விசுவாசமும், கிறிஸ்தவ வாழ்க்கையும் ஆராயப்பட்ட பிறகே அவருக்கு ஞானஸ்நானமும், சபை அங்கத்துவமும் அளிக்கப்படும். போதகர்கள் இந்த விஷயத்தில் தேர்ந்தவர்களாக இருப்பதால் தவறு ஏற்படாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுவார்கள். ஒருவர் அங்கத்தவராகுமுன் சபை அங்கத்தவர்களும் அவர்களுடைய சாட்சியையும், வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்க்கக்கூடிய நடைமுறை வசதி இருக்கும். இதனால் சபையில் திருவிருந்து எடுக்கிறவர்கள் மெய்விசுவாசிகளாக, சபை அங்கத்தவர்களாக, சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக இருப்பார்கள். இது நம்மினத்தில் பெரும்பாலும் இல்லை. ஞானஸ்நானம் வேண்டும் என்று ஒருவர் கேட்பதை மட்டுமே அவருடைய விசுவாசத்தின் ‘மெய்யான அறிகுறியாக’ எடுத்துக் கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் அவருக்கு உடனடியாக ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியும், திருவிருந்தைப் பற்றியும், சபை வாழ்க்கையைப் பற்றியும் ஒன்றுமே தெரிந்திருக்காது. இந்த முறையிலேயே ‘கிறிஸ்தவம்’ நம்மினத்தில் இருந்து வந்திருக்கிறது, தொடர்ந்தும் இருந்து வருகிறது. திருச்சபைகள் வேத அடிப்படையில் அமையாமலிருப்பதால் தொடர்ந்து விசுவாசிகளா என்று உறுதியாகத் தெரியாதவர்களெல்லாம் ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் பெற்று வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் மறுபிறப்பும், மெய்யான பரிசுத்தமும் இல்லாமல் பெயர் கிறிஸ்தவம் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
திருவிருந்துக்கும் சபை வாழ்க்கைக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது. திருவிருந்தை சபைகூடிவந்தே எடுக்க வேண்டும். அதாவது, அங்கத்தவர்கள் கூடி வந்தே எடுக்க வேண்டும் என்பதைப் பவுல் 1 கொரி. 11ல் தெளிவாக விளக்கியிருக்கிறார். ‘சபை கூடிவருதல்’ என்பது சபை அங்கத்தவர்கள் கூடிவருவதைக் குறிக்கும் வேதபதம். அதனால்தான் சபையாக முறையாக அமைக்கப்படாத ஒரு கூட்டத்திற்கு திருவிருந்து கொடுக்கும் தகுதியோ, அதிகாரமோ இல்லை. அத்தோடு, திருவிருந்து சபை ஐக்கியத்தை வலியுறுத்துகிறது. அதனால்தான், 1 கொரி. 11ல் ஐக்கியமில்லாத சபை திருவிருந்தை அசிங்கப்படுத்துவதாக பவுல் கண்டிக்கிறார். சபைக்கு வெளியில் எவரும் திருவிருந்து கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் வேதம் அனுமதி தரவில்லை. ரோமன் கத்தோலிக்க குருக்களைப்போல நாம் திருவிருந்தை மருத்தவமனையில் படுக்கையில் இருப்பவர்களுக்கும், வீட்டில் வியாதியால் நகர முடியாமல் இருக்கிறவர்களுக்கும் கொடுக்க முடியாது. ஏனெனில், அங்கே சபைகூடிவரவில்லை. சபைகூடி வருகிறபோது மட்டும்தான் திருவிருந்து கொடுக்கப்பட வேண்டும். சபைக்காக கிறிஸ்து மரித்ததை திருவிருந்து நினைவுகூருவதால் சபையில்லாத இடத்தில் கொடுக்கப்படும் திருவிருந்தால் எந்தப் பயனும் இல்லை. சபை இல்லாத இடத்தில் திருவிருந்து கொடுப்பது திருவிருந்தின் நோக்கத்தையே சிதைத்துவிடுகின்ற செயலாக இருக்கிறது. வேத போதனை இப்படியாக இருக்கும்போது சபை வாழ்க்கையை அறியாமலும், அதற்குத் தம்மை ஒப்புக் கொடுக்காமலும் இருப்பவர்களுக்கு ஏன் திருவிருந்து?
திருவிருந்துக்கும் சபை ஒழுங்குக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது. சபையில் ஒழுக்கத்தோடு, பக்திவிருத்தியோடு வாழாமல் பாவம் செய்கிறவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது அவர்களுக்கு திருவிருந்து கொடுப்பதை மூப்பர்கள் நிறுத்துவார்கள். அதற்குக் காரணம் பாவத்தில் வீழ்ந்து மனந்திரும்பாமல் இருக்கும் அங்கத்தவரால் முழு சபையின் ஐக்கியமும், புனிதமும் பாதிக்கப்படுவதால்தான். இதிலிருந்து திருவிருந்துக்கு சபையோடு பிரிக்கமுடியாத தொடர்பிருப்பதைப் பார்க்க முடிகிறது. திருவிருந்தை ‘ஒரு விசுவாசிக்கு சொந்தமானதாக’ மட்டுமே பார்க்கின்ற நம்மினத்துப் பார்வைக்கு கர்த்தரின் வேதத்தில் இடமில்லை. திருவிருந்தில் கலந்துகொள்ளுவதையும், கலந்துகொள்ளாததையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை தனிமனிதனின் கையில் விட்டுவிடுகிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். அதனால்தான் சபை வாழ்க்கையே இல்லாமல், சபையொன்றில் விசுவாசமாக வாழாமல், சபைக்கு இருந்திருந்து வந்து திருவிருந்தை மட்டும் தவறாது ருசி பார்க்கிற ஒரு கிறிஸ்தவத்தை நம்மினத்தில் பார்க்கிறோம். சகோதரத்துவ சபைகளிலும், ஏன், பாப்திஸ்து சபைகளிலும்கூட இருப்பதுபோல், ஞானஸ்நானம் பெற்றிருத்தல் என்ற ஒரே தகுதியை மட்டுமே எதிர்பார்த்து திருவிருந்தில் கலந்துகொள்ள ‘விரும்புகிறவர்களையெல்லாம்’ அதில் கலந்துகொள்ள அனுமதிக்கும் முறைக்கு வேதத்தில் இடமில்லை. இது open communion முறை. கர்த்தருக்கு open, closed என்றெல்லாம் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் திருவிருந்து முறையாக அமைக்கப்பட்ட சபை அங்கத்தவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்பதுதான். நம்மினத்தில் ‘ஞானஸ்நானம் எடுத்திருக்கிறவருக்கு திருவிருந்து’ என்று மட்டும் பார்க்கிற கண்ணோட்டம் இருக்கிறதே தவிர ‘சபை வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்தவர்களுகே திருவிருந்து’ என்று பார்க்கும் வேதஞானம் இல்லை. இத்தனை காரியங்களும் சபையோடு திருவிருந்துக்கு இருக்கும் பெருந்தொடர்பை விளக்கும்போது சபை வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்து நடைமுறையில் கடைப்பிடிக்காதவர்களுக்கு திருவிருந்து கொடுப்பது பெரும் தவறு. சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களுக்கு மட்டுமே ஞானஸ்நானமும், திருவிருந்தும் என்று ஆரம்பத்தில் நான் சொன்னதன் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நம்மினத்தில் யார், யார் அவை தேவை என்று கேட்கிறார்களோ அவர்களுக்கு அவை கேள்வி முறையில்லாமல் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்ற தவறான வழக்கம் தொடர்கிறது. சபை வாழ்க்கை (Churchmanship) பற்றிய உணர்வே நம்மினத்தில் இல்லை.
பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கத்தால் இருதயம் குத்தப்பட்டு (பாவங்களை உணர்ந்து) மனந்திரும்பி கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்தவர்கள் என்ன செய்தார்கள்? நான்கு காரியங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களின் உபதேசத்தையும், ஐக்கியத்தையும், திருவிருந்தையும், ஜெபத்தையும் (சபையாரோடு ஜெபித்தல்) உறுதியோடு பின்பற்றினார்கள். மெய்யான விசுவாசிகள் மட்டுமே இதைச் செய்வார்கள். அவர்கள் மெய்யான விசுவாசிகளாக இருந்ததை அறிந்த பிறகே அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அவர்களுக்கு சபை வாழ்க்கையைப் பற்றி சொல்லித் தந்திருந்தார்கள். அதனால்தான் அவர்களால் சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுக்க முடிந்தது. விசுவாசமே இல்லாமல் ஞானஸ்நானம் எடுத்திருக்கும் நம்மினத்து மக்கள் இன்று செய்வதென்ன? விருப்பப்படுகிறபோது சபைக்கு வருவது, சபை ஐக்கியத்தை அலட்சியப்படுத்துவது, ஜெபக்கூட்டத்திற்கே வரமால் இருப்பது, வேதப்படிப்பிலும், பிரசங்கம் கேட்பதிலும் அக்கறை காட்டாமலிருப்பது. ஓய்வு நாளில் வேலை செய்து சபைக்கு வராததற்கு அதை சாக்காக வைப்பது, இதைத்தான் செய்து வருகிறார்கள். காரணமென்ன? உள்ளே விஷயமிருந்தால்தானே வெளியில் அது வெளிப்படும். ஞானஸ்நானத்தையே பெற்றுக்கொண்டிருந்தாலும் இருதயம் இருட்டாயிருப்பதால்தான் வாழ்க்கையில் ஆவிக்குரிய வெளிப்பாடு இல்லாமலிருக்கிறது. ஆவிக்குரிய மனிதர்களாக அவர்கள் இருந்தால் சுயமாகவே ஆவிக்குரிய காரியங்களில் அக்கறை காட்டுவார்கள். அவர்களை நாம் தேடி அலைந்து பிடித்துக் கொண்டு வந்து இந்தக் காரியங்களை செய்ய வைக்க வேண்டிய அவசியமில்லை.
திருநியமங்கள் யாருக்கு, எந்த முறையில் கொடுக்கப்பட வேண்டும் என்ற வேதம் போதிக்கும் சத்தியத்தை வரைபடமாக விளக்க விரும்புகிறேன். (அடுத்தப் பக்கத்தில் காண்க.)
இந்த வரைபடத்தின்படி ஞானஸ்நானத்தை ஒருவருக்கு கொடுக்கும் அதிகாரம் கொண்ட சபை கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் ஞானஸ்நானம் கேட்டு வந்தால் (நாம் கேட்கக் கூடாது), அவரை விசாரித்து விசுவாசம் மெய்யானதா என்பதை முதலில் நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு அவருக்கு சபையைப் பற்றியும், சபை வாழ்க்கைமுறை பற்றியும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தெளிவாக போதித்து, அதன் பிறகு மறுபடியும் அவரை விசாரித்து தெரிந்துகொண்ட காரியங்களின்படி நடக்கும் வைராக்கியத்தை அவர் கொண்டிருக்கிறாரா என்று பார்த்து சபை அங்கத்துவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த முறையில் ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்காவிட்டால் எவரும் சபையில் ஒழுங்கான அங்கத்தவராக இருப்பதற்கு வழியில்லை.
இந்த முறையைப் பின்பற்ற வேண்டுமானால் முதலில் நல்ல சபை அமைப்பு அவசியம். ஒழுங்காக அமைக்கப்படாத சபை நல்ல சபையாக இருக்க முடியாது. சபை அங்கத்துவத்தையும், போதகர்களையும், உதவிக்காரர்களையும் கொண்டிருந்து, சபை எதை விசுவாசிக்கிறது என்ற விசுவாச அறிக்கையும், சபை ஒழுங்குவிதிகளையும் வைத்திருந்தால் மட்டுமே சபைக்குள் இணையப்போகிற ஒருவரை விசாரித்து சரியான முறையில் உள்ளே அனுமதிக்க முடியும். இந்த ஒழுங்குகளெல்லாம் இல்லாத இடத்தில் வேதபூர்வமான சபை வாழ்க்கைக்கு இடம் இருக்காது. சபை வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாமல் இயங்கி வரும் எதனாலும் சரியான அங்கத்தவர்களை உருவாக்க வழியில்லை. தனி மனிதன் ஒருவரின் அதிகாரத்தின் கீழ் வேத முறைகளுக்கு கட்டுப்படாமல் சபை என்ற பெயரில் கூட்டங்கள் எந்தவித வேத அமைப்பும் இல்லாமல் இயங்கி வருகிறவரை தம்மினத்துக் கிறிஸ்தவம் ‘பத்து மில்லி’ கிறிஸ்தவமாகத்தான் இருந்துவரும்.
இந்த நிலை மாற கிறிஸ்தவர்கள் வேதத்தை வாசித்து சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வேதம் புரியும். பெயரளில் கிறிஸ்தவராக, ஆவிக்குரிய வைராக்கியமும், பொறுப்புள்ள சபை வாழ்க்கையும் இல்லாமலிருந்து வருவது உங்களுக்கு தவறாகப்படவில்லையா? வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களுக்கேற்ற வகையில் எல்லாவற்றையும் செய்துகொண்டு சபைக்கு அதில் ஒரு சிறு இடத்தை மட்டும் கொடுத்துவிட்டு மனம்போன போக்கில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது உங்களுக்கு தவறாகப்படவில்லையா? எந்த நம்பிக்கையில் பரலோகத்திற்கு நிச்சயமாகப் போகப்போகிறோம் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? என்னை நேசிக்கிறவர்கள் என் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்க, அவரை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு, விசுவாசி என்ற பெயரை வைத்துக்கொண்டு அவருடைய போதனைகளுக்கெல்லாம் கட்டுப்படாமலும், அவற்றை தேவபயத்தோடு பின்பற்றாமலும் போலி வாழ்க்கை வாழ்வது தகுமா? இது எப்படி கிறிஸ்தவ வாழ்க்கையாக முடியும்? மாதத்துக்கொருமுறை எடுக்கும் ‘பத்து மில்லி’ உங்களைக் கரை சேர்த்துவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு வாழாதீர்கள். நியாயத்தீர்ப்பு நாளில் நீங்கள் ‘செம்மறியாடுகளாக’ இல்லாமல் ‘வெள்ளாடுகளாக’ இனங்காணப்பட்டால் என்னாவது? அந்த நாளில் மனந்திரும்புவதற்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் வழியிருக்காது. இப்போது மனந்திரும்பினால் மட்டுமே உண்டு வாழ்வு.
சிலர் மெய்விசுவாசிகளாக இருந்து, நம்மினத்தில் நடந்து வருகிற காரியங்கள் சரியில்லை என்று நன்றாகத் தெரிந்தும் மனதைரியமில்லால், நல்ல சபைகளை நாடிப்போய் அங்கிருந்து சபை வாழ்க்கை நடத்தாம லிருப்பது நல்ல விசுவாசத்திற்கு அறிகுறியும் அல்ல. இந்தப் பத்திரிகையை வாசிக்கின்ற பலர் இந்த நிலையில் இருக்கிறவர்களாக இருக்கலாம். நீங்கள் உலகத்தில் இருக்கின்ற குறைந்தளவான காலத்தில் நல்ல விசுவாசத்தோடும், சுத்த மனச்சாட்சியோடும் வாழ்வதையே கர்த்தர் எதிர்பார்க்கிறார். அப்படியான விசுவாச வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்களா? விசுவாசத்தோடு வேதம் போதிக்காத, ‘பத்து மில்லி’ கிறிஸ்தவ வாடையடிக்கின்ற ஓர் இடத்தில் வெறுமனே காலத்தைப் போக்குவதற்காக தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறீர்களா?
இதை வாசிக்கும் போதகர்கள், ஊழியக்காரர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ஊழியத்தை சொந்த நன்மைக்காக பயன்படுத்தாமல் கருத்தோடு வேதத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். ஆத்துமாக்கள் சபை வாழ்க்கையை அனுபவித்து வாழ வசதி செய்து கொடுக்க வேண்டிய நீங்கள் தவறு செய்தால் தேவன் உங்களை சும்மாவிட மாட்டார். ‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ என்ற நிலை மாறி மெய்க்கிறிஸ்தவம் நம்மினத்தில் உருவாக நீங்கள் முதலில் மனந்திருந்தி மெய் ஊழியக்காரர்களாக பணிபுரிய ஆரம்பிக்க வேண்டும். மனந்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், திருவிருந்து, சபை அமைப்பு, சபை வாழ்க்கை என்பவை பற்றி ஆராய்ந்து கற்றறிந்து தேவ பயத்தோடு இயேசு வாழ்ந்து காட்டிய மெய்த்தாழ்மையோடு, ஆத்துமாக்களுக்கு வேலைக்காரர்களாக (ser- vant) இருந்து பணிபுரிய ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவின் நாமம் மகிமைபெறும்படி மெய்க்கிறிஸ்தவம் தளைத்து வளர தேவ பயத்தோடும், ஜெபத்தோடும், தியாக மனப்பான்மையோடும் உழைக்க வேண்டும்.
நூல் அறிமுகம்: பிரசங்கிகளும் பிரசங்கமும்
போதகர் பாலா அவர்களின் இந்நூல் இதற்கு முன் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றிருப்பதைக் குறித்தும், இதற்கு அறிமுகம் எழுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பற்றியும் மிக மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். முதலில் நான் ஆசிரியரின் எழுத்து நடையைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. தமிழில் ஆரம்ப காலத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கின்ற கிறிஸ்தவ நூல்கள் தற்கால இலக்கிய நடையில் எழுதப்படவில்லை. தமிழ் வேதாகமத்தையே எழுத்துக்கொண்டால் அது ஐரோப்பிய மிஷனரிகளால் அவர்களுக்குத் தெரிந்த தமிழில் எழுதப்பட்டிருப்பதால் புறமதத்தார் அதைப் படித்து விளங்கிக்கொள்ள கஷ்டப்படுகிறார்கள். கல்லூரிகளில் தற்காலத் தமிழில் படித்து வருகிறவர்களும் அதை அதிக பிரயாசத்தோடு படித்து விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்னைப் போன்ற வயதானவர்கள்கூட (84 வயது) ஆங்கில வேதாகமமில்லாமல் ஐரோப்பிய மிஷனரிகளால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வேதத்தைப் படிக்க முடியாது. இருந்தாலும் அந்நிய மொழியில் அவர்கள் வேதாகமத்தை மொழிபெயர்த்திருப்பது ஒரு மாபெரும் சேவை.
தமிழ் இலக்கிய உரைநடை (Tamil prose writing) தற்காலத்தில் பெரும் பாலும் பின்வரும் மூன்றில் ஒன்றாக இருக்கும். டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் தமிழ், ரா. சேதுப்பிள்ளையின் (கடுமையான தமிழ்) அல்லது சி. என். அண்ணாத்துரையின் அடுக்கு மொழித் தமிழாக இருக்கும். ஆனால், கிறிஸ்தவ இலக்கியம் இவைகளில் ஒன்றையும் சேர்ந்ததல்ல. ஆனால், போதகர் பாலாவின் அருமையான இலக்கியத் தமிழ் உ. வே. சாமிநாதையருக்கும், ரா. சேதுப்பிள்ளைக்கும் இடையேயான, யாவரும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதும், தமிழ் இலக்கிய வரம்பிற்குட்பட்டதாயும் இருப்பது கிறிஸ்தவ இலக்கிய உலகிற்கு கிடைத்த அபூர்வமான சிறப்பாகும். அதிலும் சுவிசேஷ இலக்கியத்திற்கு இவ்விதமான (prose writing) முறை மிக முக்கியமானது. முக்கியமாக கிறிஸ்துவின் சுவிசேஷத்தை புறமதத்தாருக்கு பிரசங்கிப்பதில், விசேஷமாக சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய எழுத்தாளர் இருப்பது அபூர்வமாகும்.
ஆசிரியரின் நூல்களின் தரம்
வேதாகமத்தில் உள்ள சில பதங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும் தற்காலத்து தமிழ் நடையில் எழுதுவது லேசில்லை. ஆசிரியர் அவற்றை தமக்கே உரித்தான அருமையான நடையில் எழுதுவதோடு, வேதாகமத்தின் ஆழமான கருத்துக்களுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் வேத பாண்டித்தியத்தோடு எழுதுவது கிறிஸ்தவர்களுக்கும், புறமதத்தாருக்கும் படிக்க இலகுவாக இருக்கிறது. சத்திய சுத்தம் (Doc- trinal purity) அரவேயில்லாமலும், பரந்த இறையியல் (Liberal theology) மலிந்ததுமான இக்காலத்தில் சத்தியத்தை சத்தியமாக நல்ல தமிழில் ஆசிரியர் எழுதி வருவது விசேஷமானது.
‘பிரசங்கிகளும் பிரசங்கமும்’
இதுவரை தமிழுக்கும், கிறிஸ்தவ இலக்கியத்திற்கும் ஆசிரியர் அளித்து வரும் பங்கைப் பற்றி சொன்னேன். புதிதாக வெளிவந்திருக்கிற ‘பிரசங்கிகளும் பிரசங்கமும்’ என்ற நூல் ஓர் அருமையான நூல். இது சுவிசேஷ வேதாகம கல்லூரிகள் பயன்படுத்தக்கூடிய பாடப்புத்தகமாகவும், சபைப் போதகர்களும், பிரசங்கிகளும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய நூலாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதில் பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை 16 அத்தியாயங்களில் தெளிவாக விளக்கியிருப்பது மிகவும் போற்றத்தக்கது. பிரசங்கம் பற்றியும், அதைத் தயாரிக்கும் முறைகள் பற்றியும் வேதாகமத்தின் அடிப்படையில், பல முக்கிய வசனங்களைக் குறிப்பிட்டுக் காட்டி, மறுக்கமுடியாதபடி திட்டமும், தெளிவாகவும், திருப்தியளிக்கக்கூடியவிதமாக விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. ‘எது பிரசங்கம்’ என்ற அத்தியாயத்தில், எல்லாவகைப் பேச்சுக்களும் பிரசங்கம் ஆகிவிடாது என்று எச்சரிக்கை விடுப்பதோடு நில்லாமல், அது எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை மூன்று தலைப்புகளில் விளக்கியிருப்பது அருமையானது. பிரசங்கம் தயாரிக்கும் முறையை மூன்று அத்தியாயங்களில் படிமுறையாக மறக்க முடியாதளவுக்கு தெளிவாக விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இவற்றைத் தவிர ‘பிரசங்கமும் பரிசுத்த ஆவியும்’ என்ற தலைப்பில் ஒரு சரியான பிரசங்கம் ஒருவரின் பேச்சுத் திறமையை வெளிப்படுத்துவதற்காக அல்ல, அது தேவனுடைய வசனத்தின் அடிப்படையிலும், தேவனுடைய சித்தத்தை சபையறிந்துகொள்ள வேண்டிய பிரதான நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்க வேண்டுமானால் அதை பரிசுத்த ஆவியின் உதவியில்லாமல் செய்ய முடியாது என்பதை விளக்கும் வகையில் ஆசிரியர் ‘தங்களுடைய பிரசங்க ஊழியத்தில் பரிசுத்த ஆவியின் கிரியையை பார்க்க வேண்டுமானால் பிரசங்கிகள் தங்களுடைய ஊழியக்கால முழுவதிலும் பரிசுத்த ஆவியில் தங்கியிருக்க வேண்டும்’ என்று எழுதியிருக்கும் வார்த்தைகள் வெள்ளித் தட்டில் தங்கத்தால் பொறித்த வார்த்தைகள் போல் பிரகாசிக்கின்றன. இந்நூல் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு எழுதப்பட்டது என்பது இதைப் படித்து முடிப்பதற்கு முன்பாகவே தெரிந்துவிடும். இதை ஜெப சிந்தனையோடு பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொண்டால் ஆவிக்குரிய பிரசங்கங்கள் செய்ய மாபெரும் உதவியாக இருக்கும் என்பது இந்நூலை வாசிப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை. இனிமேல் இந்தப் பாடத்தை சொல்லிக்கொடுக்க ஆளில்லை என்ற குறைபாடு எழக்கூடாது. கடவுள் கிருபையால் இந்த நூல் தமிழில் கிடைத்துவிட்டது. இந்த நூல் சிறப்பான பிரசங்கிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வில்சன் ஞான பக்தமித்திரன் MA, MS (Sye. NY, USA) Retd Librarian from LIM (Government of India)
ஓய்வு பெற்ற முன்னால் போதகர்
தமிழ் மக்களின் ஆத்தும நலன் கருதி இந்நூலை எழுதியிருக்கும் ஆசிரியருக்கு நான் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ் இனத்தைப் பொறுத்தவரையில் பொதுவாக வும், விரைவாகவும் பரவி வரும் ‘உலகத்தைச் சார்ந்த பிரசங்கிகளும், பிரசங்கமும்’ என்ற புற்றுநோய்க்கு இந்த நூலை மருந்தாக இறைவன் தந்திருக்கிறார். வேதத்தின் அடிப்படையில் போதக ஊழியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்கியிருப்பதோடு எவ்வாறு இருக்கக் கூடாது என்பதையும் எடுத்துக்கூறத் தவறவில்லை. ‘வேதத்திற்கு அமைவாக பிரசங்கிக்காத பிரசங்கிகள் சபிக்கப்பட்டவர்கள்’ என்ற வேத போதனையை உணர்ந்திருக்கும் ஆசிரியர் நம்மினத்துப் போதகர்கள் சாத்தானுக்கு பலியாகாமல் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நூலை எழுதியிருக்கிறார். போதக ஊழியமும் பிரசங்கமும் உன்னதமான பணிகள் என்பதை வலியுறுத்தி அந்த உன்னத பணிகள் உன்னதமாக இல்லாததற்குக் காரணம் ‘பிரசங்கிகளும் பிரசங்கமும்’ என்பது போன்ற நூல்கள் இல்லாததுதான் என்ற முடிவுக்கு வரத்துடிக்கின்ற அளவுக்கு இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. நூலில் ஆசிரியர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை விளக்காமல் வேதத்தில் இருந்தும் கர்த்தரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் போதகர்களின் எழுத்துக்களில் இருந்தும் விளக்கம் கொடுத்து எழுதியிருக்கிறார். ஐந்து முதல் ஏழு வரையுள்ள அத்தியாயங்களில் பிரசங்கத்தை எப்படித் தயாரிப்பது என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இங்கு விளக்கப்பட்டிருக்கும் முறைகளின்படி பிரசங்கத்தைத் தயாரித்தால் தேவனுக்கு மகிமை தரும் ஒரு பிரசங்கத்தை ஊழியக்காரரால் தயாரிக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன்.
கடைசி அதிகாரத்தில், எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லாமல் எப்படிப் பிரசங்கிக்கக் கூடாது என்றும் விளக்கியிருப்பது பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கருத்தை இப்போதுதான் முதல் தடவையாக நான் தமிழில் வாசித்திருக்கிறேன். ‘கிறிஸ்து உன்னை நேசித்தார்’, ‘உனக்காக மரித்தார்’ என்று பிரசங்கிப்பது தவறு என்று விளக்குகிற முதல் தமிழ் நூல் இதுதான். ‘கிறிஸ்து உனக்காக மரித்தார்’ என்று பிரசங்கத்தில் எல்லோரையும் பார்த்து சொல்லுவது தவறு என்று தெரிந்த நம்மினத்து போதகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்நூல் போதகர்களும், ஊழியத்துக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று. இதை மேலோட்டமாக வாசிக்காமல் நேரத்தை ஒதுக்கி, சிந்தித்து, கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களை சிந்தித்து, இதில் காணப்படும் அறிவுரைகளைத் தாழ்மையாக ஏற்றுக்கொண்டு, எச்சரிப்புகளை உணர்ந்து அவற்றைத் தவிர்த்து பிரசங்கங்களை ஆயத்தப்படுத்தினால் தேவனுடைய ஆசீர்வாதத்தை அடையலாம். அதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இதை வாங்கி வாசிக்கவும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். தேவன் இந்த நூலின் மூலம் வாசிக்கின்ற பிரசங்கிகளோடு பேசி அவர்களைத் தன் வழியில் ஊழியத்தில் பயன்படுத்தி ஆத்துமாக்களை இரட்சித்து உறுதியான சீர்திருத்த சபைகளை உருவாக்க வேண்டுமென்பது எனது வேண்டுதல்.
பார்த்திபன் (Theological student, Scotland, UK)
மண வாழ்க்கையைப் பற்றிய இரண்டு ஆக்கங்கள் இந்த இதழில் வந்திருக்கின்றன. அல்பர்ட் என். மார்டின் கிறிஸ்தவ மணவாழ்க்கையில் இருக்க வேண்டிய நெருக்கத்தை விளக்கியிருக்கிறார். அதையே அலன் டன் அவர்கள் பல இதழ்களில் இன்னும் ஆழமாக விளக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதை
நடைமுறையில் கொண்டுவர நம் இனத்துப் பண்பாடு தடையாக இருக்கிறது. நம் மனைவியின் கையை அன்போடு பிடிப்பதும், அந்த அன்பைத் தனியாக இருக்கும்போதுகூட சரீர நெருக்கத்தின் மூலம் காட்டுவதும் நம்மினத்துப் பண்பாடல்ல. சரீரத்தோடு சரீரமாக இருக்க வேண்டிய மனைவியிடம் அந்தளவுக்கு நெருக்கமாக இருக்க நம் (இந்துப்) பண்பாடு உடன்படுவதில்லை. கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற
மணவாழ்வின் நெருக்கத்திற்கு நம் பண்பாடு குறுக்கீடாக இருக்கின்றது. நம்மில் அநேகர் அத்தகைய நெருக்கம் தேவையில்லை, அதெல்லாம் மேல்நாட்டு வழக்கம் என்று
அறிவில்லாமல் சொல்லிவிடுகிறார்கள். ‘உன் சரீரம் உனக்கு சொந்தமானதல்ல, உன் மனைவியின் சரீரம் அவளுக்கு சொந்தமானதல்ல’ என்று சொன்னது வெள்ளையனல்ல; நமக்கு வேதத்தைத் தந்திருக்கும் கர்த்தர். ஆகவே, மணவாழ்க்கையை வேதபூர்வமாக
நடத்தவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் நம்மினத்து ‘அசிங்கப் பண்பாட்டை’ உதறித்தள்ளிவிட்டு கர்த்தரின் வார்த்தையை மணவாழ்க்கையில் பின்பற்றி மனைவியோடு
உண்மையான அன்பை வெளிப்படுத்துகிற நெருக்கத்தோடு வாழும் கிறிஸ்தவராக இருங்கள். (1 கொரி. 7:3-5). இல்லாவிட்டால் நீங்கள் கிறிஸ்தவரா என்பதே சந்தேகந்தான். - ஆசிரியர்
பிரியாவிடைப் பிரசங்கங்கள் - 7 -
அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின் மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தம் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி. - ஆசிரியர்.
குடும்ப வாழ்க்கை
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், “உங்களுக் குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்”
இப்போது நாம் என்னுடைய பிரிவு உபதேச பிரசங்கங்களின் கடைசிப் பிரசங்கத்திற்கு வந்திருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்து வரும் கர்த்தருடைய நாளிலே உங்களுக்கு எனது விடைபெறும் செய்தியைக் கூறலாம் என நினைத்திருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்கு என்ன கூறப் போகிறேன் என்பதைக் குறித்து இன்றைய தினத்தில் எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. பொருத்தமான செய்தியைக் கூறுவதற்கு நான் கடவுளின் வழிநடத்துதலையே நோக்கியிருக்கிறேன். உங்களுடைய போதகர்களில் ஒருவராக இருந்து, நான் கூறவிருக்கிற அந்த கடைசி செய்திக்கு கர்த்தர் என்னை வழிநடத்தி, ஏற்ற செய்தியைத் தரும்படியாக நீங்களும் அதற்காக ஜெபிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் முதலாவதாக உங்களுக்குக் கூறின அடிப்படை புத்திமதிக்குப் பிறகு சொல்லப்பட்ட அனைத்து புத்திமதிகளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தியத்தீரா சபைக்கு கூறின அறிவுரையின் அடிப்படையிலே அமைந்தது. அதாவது: “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள்” என்பதே அது. கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் அறிந்து கொண்டிருப்பவைகளைக் குறித்து தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவ்வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. தெரிந்து வைத்திருப்பது மாத்திரமல்லாமல் அவைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய ஆவிக்குரிய ஒழுக்கத்திலும் அவர்கள் தரித்திருக்க வேண்டும்.
சபை இலக்கணத்தைக் (Churchmanship) குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருப்பவைகளை விடாமல் பற்றிக்கொண்டிருங்கள் என்கிற தலைப்பின்கீழ் நான் உங்களுக்கு ஏழு காரியங்களை கூறிக் கொண்டு வருகிறேன். அதில் கடைசியாக, கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளை அநுசரிப்பதைக் குறித்ததான உங்களுடைய கொள்கையை விடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள் என்கிற புத்திமதியைக் கூறினேன். இப்போது நான் சொல்லப் போகிற புத்திமதி: “வேதாகம ஒழுக்கத்துக்குட்பட்ட, சுவிசேஷம் நிரம்பியதான குடும்ப வாழ்க்கையைக் குறித்த உங்களுடைய கொள்கையையும் அதை நடைமுறைப்படுத்துவதையும் அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்” என்பதே.
நம் மத்தியிலே திருமண வாழ்க்கையைத் தவிர்த்து, தனித்து வாழ்கின்ற அநேக நல்ல விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தனித்து கழித்திருக்கிற தேவனுடைய மக்கள். இன்னும் சில அருமையான விசுவாசிகள் திருமண வாழ்க்கையைத் தெரிவு செய்யலாமா அல்லது தனித்தே வாழலாமா என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சொல்லப் போகின்ற இந்த புத்திமதியை நான் அப்படிப்பட்டவர்களுக்கு நேரிடையாக சொல்லவில்லை. ஆனால், இவை உங்களைப் போன்றவர்களுக்கும் தேவையாயிருக்கும். திருமணமானவர்களிடமும், குடும்பங்களிலும் கடவுள் எதை எதிர்பார்க்கிறார் என்பதை நீங்களும் தெரிந்து கொண்டீர்களானால், அவர்களுக்காக நீங்கள் அதிக ஞானத்தோடு கர்த்தரிடத்தில் ஜெபிக்க ஏதுவாயிருக்கும். அவர்களோடு நீங்கள் பேசும்போது, ஆவிக்குரிய மனப்பான்மையோடு பேச முடியும். அவர்களுக்கு நீங்கள் கூறும் யோசனைகளும் புத்திமதிகளும் இன்னும் சிறப்பாக அமையும். குடும்ப வாழ்க்கை என்கிற இந்தப் பொருளிலே நான் பேசுகிற இவ்வேளையிலே, நான் உங்களுக்கு தனிப்பட்ட புத்திமதி ஏதும் கூறப்போவதில்லை. அது உங்களை அலட்சியப்படுத்துவதற்காக அல்ல. திருமண வாழ்க்கைக்குரிய சலுகைகளையும் பொறுப்புகளையும் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடாவிட்டாலும், அவர் உங்களுக்கு வேறுவிதமான சலுகைகளையும் பொறுப்புகளையும் நிச்சயம் கொடுத்திருக்கிறார். உங்களுடைய பிரத்தியேகமான சலுகைகளையும் பொறுப்புகளையும் குறித்து நான் வேறு சந்தர்ப்பத்தில் பேசியிருக்கிறேன். இப்போது விளக்கப்போகும் காரியங்களை நீங்களும் கேட்கப் போகிறீர்கள் என்பதை உணர்ந்தவனாகத்தான் நான் எனது புத்திமதியைக் கூறவிருக்கிறேன். இவைகள் உங்களுக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலுங்கூட, குடும்ப வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்காக நான் இவைகளை விளக்கத்தான் வேண்டும்.
இந்த தியானத்தை ஆரம்பிக்கும் முன்னதாக, நான் ஏன் இவ்விதமான வார்த்தைகளை உபயோகித்து இந்த புத்திமதியை எழுதியிருக்கிறேன் என்பதைக் குறித்த விளக்கத்தை முதலாவதாக கூற வேண்டியவனா யிருக்கிறேன். இதுவரைக்கும் நீங்கள் கேட்டவைகளைக் குறித்த உங்களுடைய நம்பிக்கையிலும், செயல்படுத்துவதிலும் வேதத்திற்கேற்றவிதமாக தொடர்ந்து நடந்துகொள்ளுங்கள். இப்போது நான் கொடுக்கிற புத்திமதியின் முக்கியமான வார்த்தைகள்: வேதாகம ஒழுக்கத்துக்குட்பட்ட குடும்ப வாழ்க்கை - “வேதாகமம் கட்டளையிடுகின்ற காரியங்களில் விடாப்பிடியாக நிலைத்திருங்கள் - வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்ட குடும்ப வாழ்க்கை என்பது உலகத்தில் காணப்படுகின்ற பல்வேறு கலாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டது; அது, கடவுளால் அதிகாரபூர்வமாக கட்டளையிடப்பட்டது; குடும்ப வாழ்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறதோ அது கடவுள் சொன்னதே - இவைகளை முற்றிலுமாக விசுவாசித்தவர்களாக குடும்ப வாழ்க்கையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என நாம் ஆராய்வோம். குடும்ப வாழ்க்கையைக் குறித்து கடவுள் என்ன கூறியிருக்கிறாரோ அது மனுக்குலம் முழுவதற்கும் பொருந்தும். அவர்கள் (இந்தியா போன்ற) கீழை தேசங்களில் இருந்தாலும், மேற்கத்திய நாடுகளில் இருந்தாலும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை. வேதம் குறிப்பிடுகிற குடும்ப வாழ்க்கை முறை பாகிஸ்தானிலும், ஸ்வீடனிலும், அமெரிக்காவிலும் உலகின் எந்த மூலையிலுள்ள ஜனமாயிருந்தாலும் அனைவருக்கும் பொருந்தும். அது முதலாம் நூற்றாண்டுக்கும், இரண்டாம் நூற்றாண்டுக்கும், 21ஆம் நூற்றாண்டுக்கும், இனி வரப்போகிற காலங்களுக்கும்கூடப் பொருந்தும். ஆகவேதான் நான் “வேதம் கட்டளையிடுகின்றபடியான குடும்ப வாழ்க்கை” என்பதை விசுவாசிப்பவனாக உங்களுக்கும் அதைப் போதிக்கிறேன். அடுத்தபடியாக இந்த புத்திமதியில் நான் உபயோகித்திருக்கும் வார்த்தை, “சுவிசேஷம் நிரம்பியதான” (Gospel Flavoured) குடும்ப வாழ்க்கை என்பது. இந்த வார்த்தையை நான் ஏன் உபயோகித்திருக்கிறேன் தெரியுமா? குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான சகல அறிவையும் சுவிசேஷத்தின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறதினாலே இதை “சுவிசேஷம் நிரம்பியதான” குடும்ப வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறேன். முக்கியமாக இன்றைக்கு நாம் வாசிக்கப் போகின்ற எபேசியர் 5ஆம் அதிகாரத்தில் காணப்படுகின்ற முக்கிய கதாபாத்திரங்களான கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் ஆகிய யாவருமே முந்தைய 3 அதிகாரங்களில் காணப்படுகின்றதான இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தவர்கள் என்பதாக நாம் கருதலாம். அதுமாத்திரமல்ல, அவர்கள் மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தனையிலே நடக்கிறது போல நடவாமல் இருக்கிறவர்கள் (எபே 4:1-17) என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் அவர்கள் துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்வதில் பிரியப்படாமல், ஆவியில் நிறைந்தவர்களாயிருக்க (எபே 5:18) மிகவும் வாஞ்சையுள்ளவர்களாக இருப்பதாகவும் கொள்ளலாம். இந்தவிதமாக ஆழமான, ஆவிக்குரிய வலிமையான காரியங்களைக் குறித்து பேசிய பிறகுதான் பவுல் குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான காரியங்களையும் விவரிக்கிறார். ஆகவே, நானும் இவ்வேளையில் குறிப்பிடும் புத்திமதியாவது, வேதாகமம் வலியுறுத்துகின்ற, சுவிசேஷம் நிரம்பியதான குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான உங்களுடைய கொள்கையை அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்” என்பதே. இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், பிள்ளைகள்-பெற்றோர் என்போருக்கிடையே அவர்கள் மனதிலும் இருதயத்திலும், உறவிலும் சுவிசேஷமானது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னுடைய பிரிவு உபதேச செய்தியில் நான் ஏன் குடும்ப வாழ்க்கையைக் குறித்து விளக்குகிறேன்? அது அத்தனை முக்கியமானதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு மூன்று காரணங்களைத் தர விரும்புகிறேன்.
முதலாவதாக, சமுதாயத்திலே குடும்பம் ஒரு முக்கியமான பாகமாக பங்கு வகிக்கிறது. ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம், கடவுள் ஆதாமையும் ஏவாளையும் தமது சாயலாகப் படைத்த பின்னர் அவர்களை பூமியின் மீது பலுகிப் பெருகவும், அதை நிரப்பவும், ஆண்டுகொள்ளவும் கட்டளையிடுகிறார். ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கி, சமுதாயத்தின் அடிப்படை பாகமாக குடும்பத்தை அவர் உருவாக்கினார். அவர்களை ஆண்-பெண் உறவின் தன்மையுடையவர்களாகவும் (Hetrosexual) ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கொள்கையுடையவர்களாகவும் (Monogamous) இருக்கும்படி சிருஷ்டித்து, அவர்கள் மூலமாகப் பிறக்கும் பிள்ளைகள் அடங்கியதான குடும்பம் என்கிற சிறு ஸ்தாபனத்தை, சமுதாயம் உருவாவதற்கு அடிப்படை நியமமாக அவர் ஏற்படுத்தினார் என்பதை ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் மூலமாக அறிந்துகொள்ளுகிறோம். நம்முடைய தேசத்திலே (அமெரிக்கா), முக்கியமாக, கடந்த 30 - 40 ஆண்டுகளில், கடவுள் ஏற்படுத்திய இந்த அடிப்படை நியமம் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. கடவுளின் ஜனங்களாகிய நாம் எந்த விஷயத்திலாவது புறஜாதிகள் நடக்கிறது போல நடக்கக் கூடாது எனத் தீர்மானித்தோமானால், அது குடும்பம் என்கிற இந்த அடிப்படை நியமத்திலேதான் மிகவும் அத்தியாவசியமானது. ஆகவேதான் நான் எனது பிரிவு உபதேச செய்தியில் குடும்ப வாழ்க்கையைக் குறித்து விளக்க விரும்பினேன்.
இரண்டாவது காரணம், கிறிஸ்துவின் சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கு, வேதத்தின் பிரகாரமாக கட்டமைக்கப்பட்டதும், சுவிசேஷம் ஆளுகிறதுமான குடும்பங்களை நடத்துகின்ற தலைவர்களே நியமிக்கப்பட வேண்டுமென்பதை அடிப்படைத் தகுதியாக வேதம் குறிப்பிடுகிறது. 1தீமோ 3:4,5; 3:12, தீத்து 1 ஆகிய வசனங்கள், கிறிஸ்துவின் சபையில் தலைமை ஏற்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்த அறிந்தவனும், தன் பிள்ளைகளை சகல நல்லொழுக்கத்திலும் கீழ்ப்படியப் பண்ணுகிறவனும், புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனுமாயிருக்க வேண்டும் என அதில் காண்கிறோம். மேலும் அவன் ஒரே மனைவியை உடைய புருஷனாய் இருக்க வேண்டும். அவன் இருதயத்திலும், அவன் கண்களுக்கு முன்பாகவும், அவன் படுக்கையறையிலும், அவன் தனது நேசம் முழுவதையும் காண்பிப்பதற்கும் அவனுக்கு ஒரேயொரு பெண்தான் இருக்க வேண்டுமென்று வேதாகமம் வலியுறுத்துகின்றது. அதேபோல்தான் கண்காணியாக (போதகன்) நியமிக்கப்படுபவனுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை வேதாகமம் குறிப்பிடுகிறது. இந்த சபையானது நன்கு விருத்தியடைந்து வளர வேண்டுமானால், அப்பேர்பட்ட குடும்பங்களை நடத்துகின்ற தகுதியுள்ளவர்களை மட்டுமே சபை ஊழியத்துக்கென நியமிக்க வேண்டும். ஆகவே, வேதாகம ஒழுக்கத்துக்குட்பட்ட, சுவிசேஷம் நிரம்பியதான குடும்பங்களை நடத்துகின்ற தேவஜனங்கள், சபையின் ஊழியத்துக்குத் தேவைப்படுவதால் குடும்ப வாழ்க்கையைக் குறித்து எனது பிரிவு உபதேசத்தில் பேசுகின்றேன்.
மூன்றாவதாக, நான் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கூறக் காரணம்: கடவுள் நியமித்த குடும்ப அமைப்புகளின் மீது பிசாசின் வலிமையான தாக்குதல்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருவதே. எத்தனை குடும்பங்கள் விவாகரத்தாகிப் பிரிந்து போயிருப்பதைக் குறித்த புள்ளிவிவரங்களை நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை என நினைக்கிறேன். அதனால் குடும்பங்கள் சந்திக்கும் பயங்கரமான விளைவுகளையும் நீங்கள் அறிவீர்கள். அதையும் தவிர்த்து, ஒரே பாலினத்தார் (Homosexuals and Lesbians) திருமணம் செய்துகொள்வதை ஆதரிக்கும் சமுதாயத்தார் சமூகத்திற்கு விளைவித்து வரும் கேடுகளை பட்டியலிடவும் வேண்டுமா? மற்ற குடிமக்களைப் போலவே தங்களுக்கும் சகல உரிமைகளும் வேண்டும் எனக் கேட்பது மாத்திரமல்லாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வதை எல்லாரும் சிரம் தாழ்த்தி, கரம்கூப்பி வரவேற்கவும் வேண்டும் என எதிர்பார்ப்பதால், சமுதாயத்தில் எதிர்கால சந்ததியினரிடம் என்னவிதமான கலாச்சார சீரழிவுகள் ஏற்படவிருக்கின்றன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? பிள்ளைகளின் பாட புத்தகங்களிலே பலவிதமான குடும்ப அமைப்புகள் சித்தரிக்கப்படுகின்றன - இரு ஆண் கொண்ட குடும்பம், இரு பெண் கொண்ட குடும்பம், இன்னும் பலவிதங்களில் நெறிதவறிய அமைப்புகள்! பிரியமானவர்களே, கடவுள் ஏற்படுத்திய குடும்ப அமைப்புகளை சிதைப்பது மாத்திரம் சாத்தானின் நோக்கமல்ல, பலவிதமான வக்கிரமான, சீர்கெட்ட உறவுகளை ஏற்படுத்தி, அதுவும் சரிதானென்று ஜனங்களை நம்பப் பண்ணுகிற வேலைகளை சாத்தான் செய்து கொண்டிருக்கிறான். ஆகவே இந்தத் தாக்குதலுக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, எபே 6:13ல் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரமாக, “தீங்குநாளிலே அவைகளை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு” நம்மை ஆயத்தப்படுத்தும்படியாகவும் நான் இந்தப் பொருளில் பேச விரும்புகிறேன். அதாவது, வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான உங்கள் உறுதியைக் கைவிடாமல் அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள் என்பதுதான் அது.
அடுத்தபடியாக, வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறப் போகிறேன். உங்கள் வேதபுத்தகத்தில் எபேசியர் 5ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பகுதியை எனது 46 வருட போதக வாழ்க்கையில் உங்கள் மத்தியில் பலமுறை மிகவும் கவனமாக விளக்கியிருக்கிறேன். இப்போது நான் மிகவும் சுருக்கமாக அதிலுள்ள முக்கியமான கருத்துக்களை உங்களுக்குத் திரும்பவும் நினைவுபடுத்தப் போகிறேன். ஒரு குடும்பத்தில், அந்த குடும்பத்தின் தலைவன், வேதவசனங்களுக்குக் கட்டுப்பட்டவனாகவும், தனது மனைவியோடு உள்ள உறவில் சுவிசேஷ தன்மைகள் நிரம்பியவனாகவும் வாழும்போது, அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் என்பதை ஆராய்வோம்.
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு, தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றுமில்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையை போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” (25-29) . . . “எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக் கடவன்” (33). “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்” (கொலோ 3:19). “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள்” (1 பேதுரு 3:7).
இவ்வசனங்களையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, கடவுளின் கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவரின் நிறைவினாலும் ஒரு புருஷன், வேதம் வலியுறுத்துகிறதும், சுவிசேஷம் நிரம்பியதுமான உறவை மனைவியினிடத்தில் கொண்டிருப்பானேயாகில் அவன் எப்படிப்பட்டவனாயிருப்பான்? இதில் பரிபூரணமற்றவனாக அவன் காணப்படலாம்; அல்லது குறையுள்ளவனாகவோ, தான் ஜெபத்தோடு முயற்சிக்கிற அளவுக்கு பலனை அடையாதவனாகவோ அவன் இருக்கலாம். வேதத்தில் காணப்படுகின்ற இந்த சத்தியங்கள் வெறுமனே பெயரளவுக்காக, பின்பற்ற முடியாதவையாக கொடுக்கப்படவில்லை. இவை அடிப்படை சத்தியங்களாக இருந்து, அவனை பயிற்றுவித்து, கடவுள் எதிர்பார்க்கிற நல்ல குடும்பத்தலைவனாக உருவாக்குகின்ற கடவுளின் விதிமுறைகளாக இருக்கின்றன. இவைகள் யாவும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய குடும்பத்தலைவனை விவரிப்போமாகில் அவன் பின்வருமாறு இருப்பான்: “சுயநலமில்லாதவனாக, தியாக மனப்பான்மை கொண்டவனாக, தன் மனைவியைப் போஷித்துக் காப்பாற்றுகின்ற கொள்கையை அன்போடும் கனத்தோடும் கடைப்பிடிக்கிற தலைவனாக இருந்து, தன் மனைவியை அறிந்துகொள்வதில் நாளுக்கு நாள் அதிகமதிகமாக முன்னேறுவான்”. மேற்கூறிய 3 வசன பகுதிகளையும் இணைத்துப் பார்க்கும்போது, வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான வாழ்க்கையை மேற்கொள்ளுகிற குடும்பத் தலைவன், தன் மனைவியோடுள்ள உறவில் சுயநலமில்லாதவனாக இருப்பான். தியாகமனப்பான்மை உடையவனாயிருப்பான். தன் மனைவியை அன்போடும் கனத்தோடும் போஷித்துக் காப்பாற்ற வேண்டிய கொள்கையை கடைப்பிடிக்கிறவனாயிருப்பான். அவன் சினிமாத்தனமான காதலென்கிற அன்பையெல்லாம் கடந்து, மனைவி வெறுக்கப்படத் தக்கவளாயிருந்தாலுங்கூட, வேதம் காண்பிக்கிறதான இந்தவிதமான அன்பை அவள்மீது காண்பிக்க வேண்டுமென்கிற கொள்கையுடையவனாயிருப்பான். அவள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்கிற நிபந்தனையை அவன் ஏற்றுக் கொண்டவனாயிருக்கிறான். மனைவியானவள் பலவீனபாண்டம் என்பதால் அவளுக்கு கனம் செலுத்த வேண்டியதென்பதை உணர்ந்தவர்களாக, அவள் மீது அன்பு செலுத்துகிற கொள்கையை புருஷர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவள் யார் என்பதை நாளுக்கு நாள் அதிகமதிகமாக உணர்ந்துகொள்ள வேண்டும். விவேகத்தோடு அவர்களோடு வாழுங்கள் என்று வேதாகமம் கட்டளையிடுகின்றது. இயேசுவின் நாமத்தைக் கூறுகிற ஒவ்வொரு புருஷரும், இவ்விதமான அன்பினாலே தங்கள் மனைவியை நேசிப்பதற்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும், கிருபையையும் சார்ந்திருக்க வேண்டும். எபே 5:18ல் பவுல், துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபானவெறி கொள்ளாதிருங்கள், ஆவியினால் நிறைந்திருங்கள் என்கிற புத்திமதியை சொன்ன பிற்பாடு, அப்படி ஆவியினால் நிறைந்த புருஷர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதை விவரிக்கிறார். வேதம் கட்டளையிடுகிற பிரகாரமாகவும், சுவிசேஷத்தால் நிரம்பியதாகவும் தனது மனைவியோடு வாழ விரும்புகிற புருஷர்கள் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்: “சுயநலமில்லாத, தியாகமனப்பான்மையோடு, தனது மனைவியை விளங்கிக்கொள்வதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விவேகத்தோடு, அவளை போஷித்துக் காப்பாற்றி, அன்போடு கனம் செய்கிறதான தலைமைத்துவக் கொள்கையைக் கொண்டவர்களாய் இருப்பார்கள்”.
மனைவியைப் பற்றிய காரியம் என்ன? வேதாகம ஒழுங்கிற்குட் பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பத்திலுள்ள மனைவி எப்படிப்பட்டவளாயிருப்பாள்? அதை விவரிக்கிற இரண்டு முக்கியமான வேதபகுதிகளைப் பார்ப்போம்.
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” (எபே 5:22-24).
“மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவள்” (எபே 5:33). மனைவியானவள் புருஷனுக்கு மரியாதை செலுத்துகிறவளாய் இருக்க வேண்டும். பயம் என்று இந்த இடத்தில் சொல்லும்போது, ஒரு குற்றவாளியானவன் மேலதிகாரிகளைப் பார்த்து பயப்படுவது போன்ற பயமல்ல. அல்லது, ஒரு கொடூரமான தகப்பனைப் பார்த்து பிள்ளை பயப்படுகிறதான பயமல்ல. அவள் புருஷனை மதித்து மரியாதை செய்ய வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இந்த வேதபகுதியை வெகு கவனமாகக் கருத்தில் எடுத்துக்கொள்கின்ற பெண்களிடம் கர்த்தர் இந்த வசனங்களின் மூலமாகப் பேசுகிறார். வெறுமனே சபையில் வந்து வாராவாரம் உட்கார்ந்து இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தும் சற்றும் மாறாத பெண்களைப் போல அல்லாமல், இவ்வசனங்களை கவனித்து அதன்படி நடக்கப் பிரயாசப்படுகிற பெண் எப்படிப்பட்டவளாயிருப்பாள்? கடவுளின் பெரிதான கிருபையினாலே, வேதாகமம் கட்டளையிடுகிறதும், சுவிசேஷம் நிரம்பியதுமானதொரு உறவை தனது கணவனிடம் காண்பிக்கிற அத்தகைய பெண் எப்படிப்பட்டவளாயிருப்பாள்? வேதாகமம் கட்டளையிடுகின்றபடியான மனைவி இப்படியாகத்தான் இருப்பாள்: “அவள் மனப்பூர்வமாகவும், உற்சாகமாகவும், சகல காரியங்களிலும் தனது கணவனுக்குக் கீழ்ப்படிகிறவளாகவும் அவனை மதித்து நடப்பதையும், அவனுக்கு உதவியாயிருப்பதையும் தனது அன்பின் கொள்கையாகக் கடைப்பிடிக்கிறவளாக இருப்பாள்”. அவள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்திருப்பாள். எந்த மனிதனும் தன் மனைவியை அடக்குமுறையினாலே கீழ்ப்படியச் செய்யலாகாது. கணவர்களே, உங்கள் மனைவிகளை உங்களுக்குக் கீழ்ப்படியப் பண்ணுங்கள் என்று வேதாகமம் நமக்குக் கட்டளையிடவில்லை. அவன் அதைச் செய்யக் கூடாது. ஆனால் மனைவிகளே, நீங்கள் கீழ்ப்படிந்திருங்கள் என்று வேதாகமம் அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. வேதாகமம் கட்டளையிடுவதால் அவள் உற்சாகத்தோடு, சகல காரியங்களிலும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டியதாயிருக்கிறது. கணவனுக்கு உதவியாயிருத்தல் என்பதில், ஆதியிலே தேவன் மனிதனுக்குத் துணையாக இருக்கும்படி ஸ்திரீயைப் படைத்ததின் நோக்கம் நிறைவேறுகிறது. அவனுடைய தேவைகளை சந்தித்து, அவனுக்கு உதவியாக இருப்பதை அவள் நிறைவேற்றுகிறாள். கணவனிடம் பயபக்தியாக இருக்கும்படியாக வேதாகமம் கட்டளையிடுவதால், அவனை மதித்து மரியாதை செய்கிறோமா என்பதை மனைவிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். “அன்பின் கொள்கை” என்கிற வார்த்தையை ஏன் நான் உபயோகிக்கிறேன் தெரியுமா? உணர்ச்சிவசப்பட்ட அன்பு, சரீர உறவு போன்றவைகள் இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால், மேற்கூறிய விதமான அன்பு செலுத்துதலைக் கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தீத்து 2:4ல் இருக்கிறது. அதிலே முதிர்வயதுள்ள ஸ்திரீகள், பாலிய ஸ்திரீகளை எவ்விதத்தில் பயிற்றுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களாக இருக்கும்படிக்கு பாலிய ஸ்திரீகளுக்குப் படிப்பிக்க வேண்டிய பொறுப்பு முதிர்வயதுள்ள ஸ்திரீகளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. புருஷரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் அன்புசெலுத்துதல் என்பது உணர்ச்சிவசப்பட்ட நிலைமைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால்தான் அதில் படிப்பிக்கப்பட வேண்டும் என வேதாகமம் குறிப்பிடுகிறது. ஆகவேதான் அதை நான் ஒரு கொள்கையாகவே குறிப்பிடுகிறேன். “அன்பின் கொள்கை” என விவரிக்கிறேன்.
வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான இல்லம் எப்படியிருக்கும் தெரியுமா? அதன் தலைவனாகிய புருஷன் அன்பின் கொள்கையைக் கொண்டிருப்பான். அதாவது, சுயநலமில்லாத அன்பும், தியாகமனப்பான்மையுடையதுமான அன்பினாலே தனது மனைவியைப் போஷித்துக் காப்பாற்றுகிறதான நிர்வாகத்தை உடையவனாக இருப்பான். அவளுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்கிறவனாயும் இருப்பான். தன்னோடு வசிக்கிறவளாகிய இந்தப் பெண்ணோடு விவேகத்தோடு வாழும்படிக்கு அவளைக் குறித்து நன்றாக அறிந்து விளங்கிக்கொள்வதிலே முழு சிந்தையையும் செலுத்துவான். அந்த விதமான இல்லத்திலே வசிக்கிற மனைவி எப்படிப்பட்டவளாயிருப்பாள்? அவளும் அன்பின் கொள்கையைக் கொண்டவளாக இருப்பாள். மனப்பூர்வமாகவும், உற்சாகமாகவும், சகல காரியங்களிலும் கணவனுக்கு உதவியாயிருக்கும் விதமாக அவனுக்குக் கீழ்ப்படிந்து, அவனுக்கு மதிப்பும் மரியாதையும் செய்கிறவளாக இருப்பாள். ஆகவேதான், வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான கணவன்-மனைவி உறவைக் குறித்து பவுல் கூறும்போது, அத்தகைய உறவை கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள மேலான உறவோடு ஒப்பிட்டு கூறுவதில் ஆச்சரியமில்லை அல்லவா? அப்பேர்பட்ட கணவன்-மனைவியின் உறவு, கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவை குறித்து தெளிவாகவும், வல்லமையாகவும் படம் பிடித்துக் காண்பிக்கிறதாயிருக்கும்.
அடுத்தபடியாக, குடும்பத்தில் பிள்ளைகளைக் குறித்ததான காரியம் என்ன? வேதாகம ஒழுக்கத்திற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பத்தில் வாழுகின்ற பிள்ளைகள் எப்படியிருப்பார்கள்? எபே. 6ஆம் அதிகாரத்தில் அதற்கு விடை காணலாம். “பிள்ளைகளே!” என அருமையாக அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை, பதினைந்தோ, பதினெட்டோ, இருபதோ அதுவல்ல விஷயம். குடும்பத்தில் வசிக்கிறதான பிள்ளைகளைக் குறித்து பவுல் இங்கே கட்டளை கொடுக்கிறார் என்பதுதான் முக்கியம்.
“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள். இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே 6:1). “பிள்ளைகளே உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள். இது கர்த்தருக்குப் பிரியமானது”. (கொலோ 3:20).
இவ்வசனத்திற்கு விளக்கம் தேவை. எல்லாக் காரியத்திலேயும், பெற்றோரைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என நீங்கள் நினைத்தாலும், பெற்றோரோடு நீங்கள் வாதம் செய்யக்கூடிய ஞானம் இருந்தாலும், அவர்களைக் காட்டிலும் நீங்கள் சாமர்த்தியசாலிகளாக இருந்தாலும்கூட, பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள் என வேதாகமம் கூறுகிறது. பிள்ளைகளே, நீங்களே உங்களுடைய வேதாகமத்தில் வாசித்துப் பாருங்கள். அப்படித்தானே எழுதியிருக்கிறது? பிள்ளைகளே, பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள். எதற்காக கீழ்ப்படிய வேண்டும் தெரியமா? ஏனென்றால், “அது கர்த்தருக்குப் பிரியமானது”. பிள்ளைகளே, நீங்கள் உங்களுடைய கர்த்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதின் மூலமாக அதை செய்து காண்பியுங்கள்.
ஆனால், இந்தக் கட்டளைக்கு ஒரேயொரு விதிவிலக்கு மாத்திரம் உண்டு. பிள்ளைகளே, நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள். வேதாகம கட்டளைகளை மீறி நடக்கும்படிக்கு எந்தப் பெற்றோராவது கட்டாயப்படுத்தினால், அப்போது மாத்திரம் நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை. அதைத்தான் “கர்த்தருக்குள்” கீழ்ப்படியுங்கள் என்கிற வார்த்தையினால் எபே 6:1ன் மூலமாக அறிந்துகொள்ளுகிறோம். கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருக்கும்படியாக உங்கள் பெற்றோர் உங்களை ஏதாவது காரியத்தில் ஈடுபடச் சொன்னால் அதற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களுக்கு உரிமை இருப்பது மாத்திரமல்ல, கர்த்தருடைய கட்டளைகளுக்கே முதலாவதாகக் கீழ்ப்படிய வேண்டுமென்கிற பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. இவைகளைத் தவிர்த்து மற்ற காரியங்களில் எது சரி, தவறு என்பதைக் குறித்தோ, அல்லது அபிப்பிராயங்களைக் குறித்தோ, தீர்மானங்களைக் குறித்தோ பெற்றோர் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்கள் அடங்கிக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
ஆகவே, வேதாகம ஒழுங்குக்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பத்தில் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள்? அவர்கள், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலவே தங்கள் பெற்றோருக்கும் சகல காரியத்திலேயும், உற்சாகத்தோடும், மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிந்து, அவர்களை கனம் பண்ணுவதை தங்களுடைய கொள்கையாகக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறவர்களாய் காணப்படுவார்கள்”. உற்சாகமாகக் கீழ்ப்படியுங்கள்! வேண்டாவெறுப்பாக அல்ல, உற்சாகத்தோடு கீழ்ப்படியுங்கள். சகல காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள். உங்களுக்கு எது நலமென்று தோன்றுகிறதோ அவைகளுக்கு மாத்திரமல்ல, உங்களுக்கு எவை சாதகமாகத் தோன்றுகிறதோ அதற்கு மாத்திரமல்ல. சகல காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருங்கள். சிறுவர்களே, இளம் வாலிபப் பிள்ளைகளே, இது ஒன்றும் கடவுளின் சித்தமல்ல என்பீர்களானால் அதை விளக்கிக் காண்பியுங்கள். வசனம் தெளிவாகக் கூறுகிறது. இதைக் காட்டிலும் தெளிவாகக் கூற முடியாது. பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருங்கள். இது கர்த்தருக்குப் பிரியமானது. சகல காரியத்திலேயும் கீழ்ப்படிவதைக் கொள்கையாகக் கடைப்பிடியுங்கள். ஏன் கொள்கையாகக் கடைப்பிடிக்கும்படி கூறுகிறேன் தெரியுமா? ஒரு காலம் வரும். அப்போது உங்களிலுள்ள சகலமும் கூறும்: “என் பெற்றோர் எப்போதுமே தவறாகத்தான் கூறுவார்கள். இதை செய், அதை செய், இதை செய்யாதே அதை செய்யாதே என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வேதத்தை மீறி எதையுமே செய்ய விடுவதில்லை. என்னுடைய இச்சைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், என்னுடைய அபிப்பிராயங்களுக்கும் இடமேயில்லையா? என் நண்பர்களைப் போல நான் இருக்கக் கூடாதா?” என்றெல்லாம் உங்களுக்குள் கேள்விகள் எழும். அதனால் பெற்றோருக்குக் கீழ்ப்படிய மறுத்துவிடலாமா? அவர்கள் உங்களைப் பெற்றவர்கள். அவர்களுக்குக் கீழ்ப்படியும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார். கர்த்தருக்குள்ளாகக் கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களும், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறவர்களும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். சகல காரியத்திலேயும் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதின் மூலமாக நீங்கள் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்படிந்திருப்பதைக் காண்பிக்கிறீர்கள். உங்களுக்கு சாதகமாக அவர்கள் கூறுகிற காரியங்களுக்கு மாத்திரமல்ல, உங்களுடைய விருப்பத்தின்படி அவர்கள் சொல்லுகிற காரியங்களுக்கு மாத்திரமல்ல, சகலத்திலும் அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அதைக் கொள்கையாகக் கடைப்பிடியுங்கள். அதற்கு அர்த்தம், உங்களிலுள்ள சகலமும் கீழ்ப்படிய மறுக்கிறபோதும், கீழ்ப்படிவதுதான். உங்களுடைய ஞானம் அவர்களை முட்டாள்களாகவும், எதையும் விளங்கிக்கொள்ளாதவர்களாகவும் காட்டினாலும்கூட நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியத்தான் வேண்டும். பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படியாகச் சொல்லுவது கடவுள்; ஆகவே நான் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பேன் என்பதுதான் உங்களுடைய சிந்தையாக இருக்க வேண்டும். இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்ப்போமானால், வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பம் எப்படியிருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
அந்தக் குடும்பத்தின் தலைவனாகிய புருஷன், தன்னலமற்ற, தியாகமனப்பான்மையுள்ள, போஷித்துக் காப்பாற்றுகின்றதான தலைமைத்துவத்தை அன்பினாலும், கனத்தினாலும் தனது குடும்பத்தின் மீது செலுத்துவான். அதை தனது அன்பின் கொள்கையாகக் கடைப்பிடிப்பான். தான் மரிப்பதற்கு முன்னதாக தனது மனைவியை நன்றாக அறிந்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு அவளைப் புரிந்து கொண்டு, விவேகத்தோடே அவளோடே வாழ முயற்சிப்பான். அந்தக் குடும்பத்திலுள்ள மனைவியும் மனப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் தனது புருஷனுக்கு சகல காரியங்களிலும் கீழ்ப்படிந்து, மரியாதை செலுத்தி வாழுவதை தனது அன்பின் கொள்கையாகக் கடைப்பிடிப்பாள். அக்குடும்பத்திலுள்ள பிள்ளைகளும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைப் போல, உற்சாகத்தோடு தங்களைப் பெற்றவர்களுக்கு சகல காரியங்களிலும் கீழ்ப்படிந்து, அவர்களை மதித்து நடப்பதை தங்களுடைய கொள்கையாகக் கொண்டு நடப்பார்கள். வேத ஒழுங்கின்படியும், சுவிசேஷ மணம் வீசுகிறதுமான கிறிஸ்தவக் குடும்பங்கள் இப்படியாகத்தான் இருக்கும். அம்மாதிரியான சில குடும்பங்கள் நம் மத்தியிலே காணப்படுவதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். கடவுளின் பெரிதான கிருபையினாலே, இந்தவிதமான ஒழுக்கத்திற்குள் வர ஆரம்பித்திருக்கின்ற குடும்பங்களுக்குக் கூறுகிறேன்: உங்களை இவ்வித ஒழுக்கத்திற்கு உட்படுத்தின காரியங்களையும் அதை செயல்படுத்தின விதங்களையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். உங்களுடைய ஆவிக்குரிய பயணத்தை வெளிப்படுத்துகின்றதான வேத ஒழுக்கத்திற்குட்பட்ட குடும்ப வாழ்க்கையையும், சுவிசேஷம் நிரம்பியதான குடும்ப வாழ்க்கையையும் அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருங்கள்.
இதுவரைக்கும் நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்ததாவது: நான் எதற்காக இந்தவிதமான வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு தெரிந்தெடுத்தேன் என்பதைக் குறித்தும், பிரிவு உபதேசத்தில் எதற்காக இந்தக் கருத்தில் பேச விரும்பினேன் என்பதைக் குறித்தும் முதலாவதாக விளக்கினேன். பிற்பாடு, வேத ஒழுங்குக்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை விவரித்துக் கூறினேன். இப்போது, நான் சில எச்சரிப்புகளையும் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். இந்தவிதமான சிறப்பான குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கும், அதைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் விரோதமாக வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்க விரும்புகிறேன். மிகவும் கடுமையாக இந்த எச்சரிப்புகளைக் கூறப்போவதைக் குறித்து நான் மன்னிப்புக் கோரப் போவதில்லை. ஏனென்றால் 19ஆம் சங்கீதம், கர்த்தருடைய வசனங்களால் நாம் எச்சரிக்கப்படுகிறோம் என்பதையும், அவைகளைக் கைக்கொள்ளுவதால் நமக்கு மிகுந்த பலனுண்டு என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது, கரடுமுரடான பாதையில் பயணிக்கும்போது அங்கு காணப்படுகின்ற எச்சரிக்கைக் குறிப்புகளுக்காக நான் என் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் நான் அவைகளால் விழிப்படைந்து, ஆபத்தில் விழாமல் என்னை தற்காத்துக்கொள்ளுகிறேன்.
இந்தக் காரியங்களைக் குறித்து உங்களை பயமுறுத்தாமல், அவைகளை ஆலோசனைகளாக சொல்ல வேண்டும் என்று விரும்பினாலும், வரவிருக்கும் பலவிதமான ஆபத்துக்களை நான் முன்கூட்டியே காண்பதாலும், அவைகள் எனக்குள் பெரும் போராட்டத்தையே உருவாக்குவதாலும் அவைகளை எச்சரிப்புகளாகவே உங்களுக்குக் கொடுக்க நேரிடுகிறது.
முதலாவதாக, நான் கணவன் மனைவிக்கு சில எச்சரிப்புகளைக் கொடுக்கிறேன். கறையான்கள் அஸ்திபாரத்தையே அழித்துப் போடுவது போல உங்களுடைய உறவை தந்திரமாகக் கெடுத்துப் போடக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. வேத ஒழுக்கத்துக்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான உங்களுடைய குடும்ப வாழ்வின் உறவினை சீர்குலையச் செய்கின்ற காரியங்கள் யாவை? நான் உங்களுக்கு 5 காரியங்களை எச்சரிக்கையாகக் கூறப் போகிறேன்.
- திருமண வாழ்க்கையில் உங்களுக்கிடையேயுள்ள கருத்துப் பரிமாற்றங்களை (Marital Communications) அழித்துப் போடவோ, தடுக்கவோ முயற்சிக்கும் எந்தக் காரியங்களையும் அனுமதிக்காதீர்கள்.
புருஷர்களே உங்கள் மனைவிகளோடு விவேகத்துடனே வாழுங்கள் என பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 3). அதாவது மனைவியைப் புரிந்து கொண்டு வாழுங்கள் என்கிற அர்த்தத்தில் பேதுரு கூறுகிறார். மனைவியினுடைய மனதும், அவளுடைய ஆத்துமாவும், அவளுடைய எண்ணங்களும் ஆழமான சுரங்கம் போன்றது. அந்த ஆழங்களை ஊடுருவிப் போய் அவைகளை அறியவும், அவள் இவ்விதமாக உருவாக்கப்பட்டிருப்பதின் காரணங்கள் என்ன என்பதைக் கண்டறியவும் கூடிய வாய்ப்புகளும் பொறுப்பும் புருஷர்களாகிய உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பவுல் 1கொரி 2:11ல் கூறுகிறார், மனுஷனிலுள்ள ஆவியேயன்றி எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? கடவுள் மாத்திரமே அதை அறியக்கூடும். இந்த நிமிடத்திலே நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் அறிய முடியுமா? நான் என் வாயைத் திறந்து அதை வெளிப்படுத்தாவிட்டால் உங்களால் எப்படி அதை அறிய முடியும்? அதைப் போல தேவனுக்குரியவைகளையும் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்திக் காண்பிக்காவிட்டால் எப்படி ஒருவனால் அவைகளை உணர முடியும் என்று பவுல் மேலும் தொடர்ந்து கூறிக் கொண்டே செல்கிறார். அவைகளை பரிசுத்த ஆவி போதிக்கிற ‘வார்த்தைகளாலே’ பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம் என்கிறார். நானும் என் வாயைத் திறந்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை வார்த்தைகளால் உண்மையாக கூறினால்தான் நான் நினைத்ததை உங்களால் அறிய முடியும். நான் அப்போது உங்களிடம் கேட்டபோது என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிற இந்த சகோதரனுடைய மீசை வெகு அழகாக இருக்கிறது என்று நினைத்தேன். பாருங்கள், இதை நான் உண்மையாக, எனது வாயின் வார்த்தைகளால் உங்களிடம் கூறியிருக்காவிட்டால், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதே உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். இதை நான் ஓர் உதாரணத்துக்காக விளக்கிக் காண்பித்தேன். புருஷர்களே, மனைவிகளே, நான் கூறுவதைக் கவனியுங்கள். கடவுளின் சாயலை பிரதிபலிக்கும் விதமாக படைக்கப்பட்டிருக்கிற நீங்கள் இருசாரரும், ஆத்துமாவிலும், எண்ணங்களிலும் பின்னிப் பிணைந்து ஊடுருவியிருக்கத்தக்கவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். அப்படியிருக்கின்ற நீங்கள், வார்த்தையினாலே உங்கள் கருத்துக்களை ஆழமாகவும், வெளிப்படையாகவும் பரிமாறிக்கொள்ளாவிட்டால் உங்களால் எப்படி ஒரு சிறந்த திருமண உறவை அடைய முடியும்? உங்கள் ஆத்துமாவின் ஆழமான அந்தரங்க அறைகளில், வார்த்தைகளின் மூலமாக உங்களுடைய துணையை பிரவேசிக்க அனுமதிப்பதினால், ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கிறீர்கள். திருமண பந்தத்தில் உங்கள் கணவரோடு ஆழமாகவும், வெளிப்படையாகவும் நீங்கள் பேசிக்கொள்ளாவிட்டால், எப்படி அவர் உங்களோடு விவேகத்துடன் வாழ முடியும்? எந்தக் காரியங்கள் உங்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது? எவைகள் உங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது? உங்களை சோர்வடையச் செய்வது எது? உங்கள் ஆத்துமாவின் வாஞ்சைகள் என்ன? இவைகளையெல்லாம் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளாமல், ஒரே கூரையின் கீழே, மேம்பூச்சாக வசிக்கின்ற இரண்டு பேரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. ஏனென்றால் அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்வதில்லை. தங்களுடைய கருத்துக்களை அவரவர் மறைத்து வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். வேதாகம ஒழுங்கிற்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்ப வாழ்க்கையை வாழ நீங்கள் விரும்பினீர்களானால், அதற்கு விரோதமாக வருகின்ற சகல தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். உங்களுடைய சுபாவமே ஒரு தடையாக வரலாம். சுபாவத்திலேயே நான் எதையும் வெளிப்படையாகப் பேசுகிற ஆளில்லை என நீங்கள் சாக்கு சொல்லலாம். அதனால் என்ன? நீங்கள் மாறத்தான் வேண்டும். அப்படி இல்லையானால் நீங்கள் திருமணமே செய்திருக்கக்கூடாது. தனித்த வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு நீங்களே வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் திருமணம் செய்துகொள்வதாயிருந்தால், உங்கள் துணையை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ளவும், உங்கள் துணையால் நீங்கள் அறிந்துகொள்ளப்படவும் வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அறிந்துகொள்ளுதலும், அறியப்படுதலும் திருமண உறவில் மிகவும் அவசியமானது. முழுவதுமாக அறிந்துகொள்ளுதல் சிரமம் போலத் தோன்றினாலும், அதில் எவ்வளவு ஆசீர்வாதங்கள் அடங்கியுள்ளன! உங்களுடைய துணையை முற்றிலும் அறிந்துகொள்வதாலும், நீங்களும் அறியப்படுவதாலும் கடவுளின் பரிசுத்தப்படுத்தும் பணி உங்களிடையே வேகமாக நடைபெறத் தொடங்குகிறது. ஒரு கணவனாக நீங்கள் உங்கள் மனைவியை புரிந்துகொண்டு அவளைப் பாராட்டுகிற வேளையிலே, போஷித்தல், காப்பாற்றுதல் என்பதின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளுகிறீர்கள். தன்னை விளங்கிக்கொள்வதற்கு அவள் உங்களை அனுமதிக்கிறாள். அவளது பலவீனமான காரியங்களில் எப்படி அவளை போஷித்துக் காப்பாற்றுவது என்கிற சவாலை நீங்கள் மேற்கொள்ளுகிறீர்கள். அவளை உங்களுடைய சொந்த சரீரமாகப் பாவித்து நடத்த நீங்கள் கற்றுக்கொள்ளுகிறீர்கள். ஆனால், அவள் மெளனமாக, தன்னை வெளிப்படுத்தாதவளாக இருந்தாலோ அல்லது அவளது மனதிலுள்ளதை வெளியே கொண்டு வருவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காதவராக இருந்தால், நீங்கள் எப்படி அவளைப் போஷித்துக் காப்பாற்றுகிற கணவனாக இருக்க முடியும்?
அந்தப்படியே மனைவிகளே, உங்களோடு வாழுகின்றதான இந்த மனிதனைக் குறித்து நன்றாக அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்மையாகவே உங்களுக்கு இருக்கிறதா? அவரோடு ஒன்றாக உறங்குகிறீர்கள். ஒரே மேஜையிலே சாப்பிடுகிறீர்கள். அவருடைய தாய், தன் மகனைக் குறித்து அறிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கிறீர்களா? அதற்குத் தடையாக இருக்கிற எந்தக் காரியத்தையும் விலக்கிப் போட நீங்கள் பாயும் புலி போல தயாராக இருக்க வேண்டும். அது நேரமில்லாமையாக இருந்தாலும் சரி, செய்தித்தாளோ, தொலைபேசித் தொடர்புகளோ, இன்டர்நெட்டோ, இயற்கையான சுபாவமோ எதுவாக இருந்தாலும், அவைகளை விலக்கிப் போட முடிவு செய்யுங்கள். கடவுளின் கிருபையை உதவியாகக் கொண்டு, நாம் ஒருவரையொருவர் அதிகமதிகமாக விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்கிற உறுதியை கைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.
- உங்களிலுள்ள பாவத்தைக் குறித்தும், அதை சரிப்படுத்துவதைக் குறித்ததுமான வேதாகமப் பொறுப்புகளை ஒருவருக்கொருவர் நிறைவேற்றிக்கொள்ளாமல், அவைகளைப் பொறுத்துக்கொள்வதோ, அல்லது சமாதானப்படுத்திக்கொள்வதோ, அல்லது நியாயப்படுத்திக்கொள்வதோ போன்ற எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
புருஷர்களே, மனைவிகளே, வேதாகம ஒழுக்கத்துக்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான திருமண வாழ்க்கையை மேற்கொண்டவர்களாய் நீங்கள் இருந்தீர்களானால் நான் கூறும் இந்த எச்சரிப்புக்குக் கவனமாக இருங்கள். இது மிகவும் முக்கியமான காரியம். திருமணங்களில் தம்பதியரில் ஒருவர் செய்கிற பாவம் அடுத்தவரை இன்னும் பாவம் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, அவரவர் பாவத்தை நியாயப்படுத்துவதும், சாக்கு சொல்வதும், பொறுத்துக்கொள்வதுமாக ஏற்பட்டு பலவிதமான தொடர் பாவங்களுள்ள நிலைமை உருவாகி விடுகிறது. நீதான் சொன்னாய், நீதான் செய்தாய் போன்ற குற்றச்சாட்டுகளுடன் போர்க்களம் உருவாகிறது. உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பீர்கள். 48 ஆண்டுகள் ஒரே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறேன். அவளது மரணத்திற்குப் பின்னதாக மறுமணம் செய்து 2ம் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகவே, நான் இத்தகைய பாவங்களைக் குறித்து நன்கு அறிவேன். எனது துணையின் பாவங்களைக் குறித்தும், அவைகளை திருத்த வேண்டிய வேதாகமப் பொறுப்பு எனக்கு இருப்பதையும், அவைகளைப் பொறுத்துக்கொள்ளுதல், சமாதானப்படுத்துதல். நியாயப்படுத்துதல் போன்றவைகளைக் குறித்த பகுத்தறிவும் எனக்கு உண்டு. செய்யப்பட்ட பாவத்தை ஒரு விதத்தில் மாத்திரமே அணுக முடியும். நல்ல ஆரோக்கியமுள்ள ஆத்துமாக்கள் அதை ஒரு விதத்தில் மாத்திரமே நிவர்த்தி செய்வர். அதை நீதி 28:13ல் காணலாம், “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்”. திருமண வாழ்க்கையில் மறைத்து வைக்கப்படும் பாவங்கள், அன்பின் உறவுக்குத் தடையாகி, ஆசீர்வாதமடையாமல் செய்துவிடும். பாவங்களை மறைத்து வைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான். பாவத்தை சரிக்கட்ட ஒரேயொரு வழிமுறைதான் இருக்கிறது. அது, உங்கள் துணையிடம், ஆமாம் பாவம் செய்துவிட்டேன் என அலட்சியமாக சொல்வதல்ல. பாவத்தை நீங்களும் தூண்டிவிட்டிருக்கிறீர்கள். ஆகவே, அன்பே, நான் பாவம் செய்துவிட்டேன். அதை நான் கடவுளிடமும் உன்னிடமும் அறிக்கையிட வேண்டும். என்னை மன்னிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். பாவத்தைப் பொறுத்துக்கொள்ளுதலோ, சமாதானப்படுத்திக்கொள்ளுதலோ, நியாயப்படுத்துதலோ கூடாது. பாவம் செய்தவர் உணர்ந்து, அதை உள்ளபடி அறிக்கையிட வேண்டும். அடுத்தவர் அந்த அறிக்கையிடுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எபே 4:32ல் கூறப்பட்டிருக்கிற சுவிசேஷ மணம் வீசுகிறது. “ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்”. கோபமான, கடினமான, கடுமையான வார்த்தைகள் பேசப்பட்ட பிற்பாடு சுவிசேஷமுறையில்தான் அதை சரிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. கடுமையான வார்த்தைகளைப் பேசியவர், தமது துணையிடம், ‘நான் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பேசி பாவம் செய்துவிட்டேன். எனது இருதயத்திலிருந்து கடவுளிடம், கிறிஸ்துவின் நிமித்தமாக என்னை மன்னிக்கும்படியாகக் கேட்கிறேன். இனிமேல் அப்படி நடந்துகொள்ளவே மாட்டேன். நீயும் என்னை தயவுசெய்து மன்னிக்க வேண்டும்’ என்று துணையிடம் உண்மையாகவே உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி உண்மையாகக் கேட்பவரை அந்த துணை எப்படி நடத்த வேண்டுமென கடவுள் சொல்லுகிறார்? இருதயக் கடினத்துடனேயோ அல்லது மன்னிக்க விருப்பம் இல்லாமலோ நடத்தக் கூடாது. ஏழெழுபது முறை என அவர் கூறியதுப் போல், வாழ்நாளில் பல தடவைகள் மனப்பூர்வமாக மன்னிக்க வேண்டியதிருக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் பல விஷயங்களில் கடவுளைப் போல நடந்துகொள்வதில்லை. ஆனால், இன்னொரு மனித சிருஷ்டியை நான் மனப்பூர்வமாக, நிபந்தனையில்லாமல் மன்னிக்கும்போது, நான் கடவுளின் குணாதிசயத்தைக் கொண்டிருப்பதாக உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அவர் என்னுடைய பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்துவுக்காக, பூரணமாக மன்னித்தவராயிருக்கிறாரே.
திருமணமானவர்களே, உங்களுடைய திருமண வாழ்க்கை இப்படிப் பட்டதாய் இருக்கிறதா? ஒருவர் பாவங்களைக் குறித்து மற்றவர் என்னவிதமான அக்கறை கொண்டிருக்கிறீர்கள்? பொறுத்துக்கொள்ளுதலும், சமாதானப்படுத்திக்கொள்ளுதலும், நியாயங்கற்பித்தலுமாக இருக்குமானால் வேதபூர்வமான உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் எப்படி நிறைவேற்றுகிறவர்களாக வாழுவீர்கள்? அவைகளை சரிப்படுத்துவதைக் குறித்ததான உங்களுடைய பொறுப்பை எப்படி நிறைவேற்றுவீர்கள்? நீதிமொழிகளிலுள்ள வசனங்களை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டுமா? தான் சரிப்படுத்தப்படுவதை விரும்பாத மனிதனை கடவுள் எப்படி அழைக்கிறார் தெரியுமா? முட்டாள் என்று அவனைக் குறிப்பிடுகிறார். உங்களை சரிப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கும்போது, நீங்கள் சரிப்படுத்தப்படுவதை விரும்பாவிட்டால் உங்களையும் அப்படித்தான் குறிப்பிடுவார். சங்கீதக்காரன் என்ன சொல்லுகிறார், நீதிபரர் என்னை அடிக்கட்டும் என்கிறார். அவர் எனக்கு மென்மையாக, ஞானத்துடன், நிதானத்துடன் புத்தி கூறட்டும் என்று கூறவில்லை. “அவர் என்னை தயவாய் தலையில் குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும். அது என் தலைக்கு எண்ணெய் வார்த்தது போலிருக்கும் என்கிறார்” (சங் 141:5).
புருஷர்களே, கவனியுங்கள். உங்கள் மனைவிகள் உங்களிடம் மெதுவாக வருகிறார்கள். அவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே, எந்த விஷயத்துக்கு வரப்போகிறார்கள் என்பதை உணர்நதவர்களாக அவர்களை மேற்கொண்டு பேச விடாதபடி செய்துவிடுகிறீர்கள். அவர்களை பேசவிடாமல் மூலையிலே தள்ளிவிடுகிறீர்கள். ஏனென்றால் உங்களுடைய பாவங்கள் சரிப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. கர்த்தருக்கு அடுத்தபடியாக உங்களை அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பது உங்கள் மனைவிதான். ஆகவே, சரிப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெரிந்ததும், அவள் மேற்கொண்டு விவாதிக்க மனமில்லாமல் மெளனமாகிவிடுகிறாள். அடுத்தபடியாக, மனைவிகளே, நீங்களும் எதற்கெடுத்தாலும் மனம் சுருங்கிப் போய்விடுகிறீர்கள். கணவனின் பாவத்திற்குக் காரணம், எஞ்சியுள்ள பாவந்தான் (Remaining sin) என சமாதானப்படுத்திக் கொண்டு, அவர்களை அந்தப் பாவத்திலேயே தொடர்ந்து இருக்கும்படியாக விட்டுவிடுகிறீர்கள். பாவத்திலேயே தொடர்ந்து இருக்கலாமா? “உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாள்தோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்” என்று வசனம் அறிவுறுத்துகிறபடியால், கணவனாவது அல்லது மனைவியாவது புத்தி சொல்ல வரும்போது மற்றவர் அதை வரவேற்க வேண்டும். பாவம் என்னைக் கடினப்படுத்திவிடாதபடிக்குத்தான் இன்று எனக்கு இந்த புத்திமதி கிடைக்கிறது என்கிற ஆர்வத்தோடு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்னுடைய மனைவி என்னிடம் வந்து, வாருங்கள் நாம் சற்று பேச வேண்டியிருக்கிறது என்று சொன்னாலே, ஏதோ விஷயமிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுவேன். உடனே ஜெபித்து, அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளுவேன். கர்த்தாவே, என் மனைவி கரிசனையோடு எனக்குக் கூறப்போகிற புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளும்படியாக என்னைப் பக்குவப்படுத்தியருளும் என்று வேண்டிக்கொள்ளுவேன். விசுவாசியாக இந்த சபையிலே அமர்ந்து கொண்டிருக்கும் அவள், என்னை நோக்கி, சபைக்குப் பிரசங்கிக்கிற நீங்கள் இவ்விதமாக நடந்துகொள்ளலாமா எனக் குற்றப்படுத்தக் கூடும் அல்லவா? அதற்காக நான் என் கடவுளுக்கு நன்றி கூறுவேன். ஏனென்றால், நான் திருத்தப்படுகிற ஒவ்வொரு காரியத்தின் மூலமாகவும், நான் மேலும் மேலும் எனது இரட்சகரைப் போல இருக்கக்கூடிய வாய்ப்பை அது அளிக்கிறதல்லவா? என்னை சுத்தப்படுத்துவதற்காக, என்னை கறைதிரை ஒன்றுமில்லாதவனாக ஆக்குவதற்காக, பரிசுத்தமும் பிழையற்றவனுமாக ஆக்குவதற்காக என் இரட்சகர் கல்வாரி சிலுவையிலே மரித்தார். என் மனைவியை உபயோகித்து அவர் அந்த வேலையை என் மீது நிறைவேற்றுகிறார். அதே போல கணவனை உபயோகித்து அவர் தமது பணியை மனைவியில் நிறைவேற்றுகிறார். ஆகவே ஒருவர் பாவத்தைக் குறித்து ஒருவர் காண்பிக்க வேண்டிய வேதபூர்வமான அக்கறையையும், அதை சரிப்படுத்துவதைக் குறித்ததான கரிசனையையும் பொறுப்பையும் நிறைவேற்ற எச்சரிக்கையாயிருங்கள். அவைகளைப் பொறுத்துக்கொள்வதோ, சமாதானப்படுத்திக்கொள்வதோ, நியாயப்படுத்துவதோ கூடாதென்பதில் உறுதியாக இருங்கள்.
- நீங்கள் இருவருமாக சேர்ந்து ஜெபிக்காத வாழ்க்கையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
மனம்திறந்து கடவுளிடம் இருவருமாக ஜெபிக்கும்போது, அது நல்ல ஆவிக்குரிய ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுளிடம் கணக்கொப்புவிக்கும் முகாந்திரமாக, தம்பதிகள் இருவருமாக சேர்ந்து, ஜெபத்தின் மூலமாக கடவுளிடம் மனந்திறந்து பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுதலைப் போன்ற சிறந்த ஆவிக்குரிய பயிற்சி கிடையாது. பல ஆண்டுகளாக எங்களுடைய குடும்பத்தில் இருந்த வழக்கத்தை இப்போது நினைவுகூருகிறேன். நானும் என் மனைவியுமாக சேர்ந்து, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு, முழங்கால்படியிட்டு ஜெபித்த நாட்களை நினைக்கிறேன். நாங்கள் அன்போடு அவ்வாறு கரத்தைப் பற்றிக் கொண்டு ஜெபிக்க இயலாமல் எங்களுக்கிடையே ஏதாவது மனவேறுபாடுகள் இருந்தால் அதை நான் மிகவும் அவமானகரமாக உணர்வேன். எங்கள் கரங்களுக்கிடையேயுள்ள அன்பின் நெருக்கமே, எங்களிடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உணருவதற்கு ஏதுவாக இருந்தது. என்னுடைய அன்பான மனைவியோடு, தீர்க்கப்படாத பிரச்சனைகள் எதையாவது வைத்துக் கொண்டு, இரவில் ஜெபிப்பதற்கு நான் வாயைத் திறந்தால், ஒரு மாய்மாலக்காரனைப் போல உணர்வேன். மனதில் ஏதேனும் பாரம் இருந்தால், அதை தொடுதலின் மூலமாகவும் உணர்ந்துகொள்ளக் கூடிய வகையில்தான் தேவன் மனிதர்களை சிருஷ்டித்திருக்கிறார். இப்படியாக ஜெபிக்காத தம்பதிகளின் நிலை என்ன? அவர்கள் நல்லதொரு கிருபையின் சாதனத்தைத் தவறவிடுகிறார்கள். புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியால், நீங்கள் விவேகத்துடனே அவர்களுடனே வாழ்ந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள் என்று பேதுரு கூறுகையில் இதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் போலும். எதற்காக அப்படி வாழச் சொல்லுகிறார்? உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கும், அவர்களும் உங்களுடனேகூட நித்தியஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களாய் இருப்பதாலும் இம்மாதிரியாக வாழச் சொல்லுகிறார். கணவன் மனைவியாக சேர்ந்து ஜெபிக்கிற ஜெபத்தை அவர் இங்கே குறிப்பிட்டிருக்கலாம். அவ்விதமான ஜெபவாழ்க்கையற்ற தம்பதிகளாக நீங்கள் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் பாவங்களை நீங்கள் கடவுளிடம் அறிக்கையிடுவதையும், கடவுளின் கிருபை உங்களுக்குத் தேவைப்படுவதையும் உங்களுடைய துணையும் கேட்கட்டும். “ஓ, பிதாவே, என்னுடைய முன்கோபத்தைக் குறித்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன். கர்த்தாவே உம்முடைய கிருபையினாலே நான் சுயகட்டுப்பாட்டையும், தாழ்மையையும், சாந்தத்தையும் கற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே இவைகள் என்னில் ஏற்படுவதற்கு நீர் கிரியை நடப்பித்தருளும்” என்று நீங்கள் ஜெபிப்பதை உங்கள் மனைவியும் கேட்கட்டும். ஒருவேளை உங்கள் மனைவி இந்த ஜெபத்திற்கு சற்று சத்தமாகக்கூட ஆமென் என்று கூறலாம் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதனால் மனவருத்தம் அடையாதிருங்கள். தம்பதிகளில் அவரவர் தங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவதை மற்றவர் கேட்கட்டும். அவள் சரியில்லை, அவளுக்கு இந்தக் குறை இருக்கிறது, அல்லது அவரை இவ்விதமாகத் திருத்தும் என்கிற விதத்தில் ஜெபிக்காதீர்கள். நீங்கள் கடவுளுடைய பிரசன்னத்திற்கு வந்திருக்கிறீர்கள். கடவுளுக்கு முன்பாகவும், உங்களுடைய துணைக்கு முன்பாகவும் ஒளிவுமறைவில்லாமலும், உண்மையாகவும் நடந்துகொள்ளுங்கள். ஒருவர் பாவங்களை ஒருவருக்கு அறிக்கையிடுங்கள். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள் என்று யாக் 5:16ஆம் வசனம் நமக்குக் கூறுகிறதல்லவா? இதை திருமண உறவில் பிரயோகிப்பது மிகுந்த பலன் அளிக்கும். ஆகவே, சேர்ந்து ஜெபிக்காத தம்பதிகள் எச்சரிக்கையாயிருங்கள். இந்த சபையிலே அடிக்கடி இந்த ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்தாத தம்பதிகளுக்கு சொல்லுகிறேன், இன்றைக்கே நீங்கள் வீட்டுக்குப் போய், இன்று இரவு முதல் அதை அமல்படுத்துங்கள். இதுவரை ஜெபிக்காததற்காக மனந்திரும்பி, முழங்கால்படியிட்டு, இன்றிலிருந்து இந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்க உறுதிகொள்ளுங்கள். அருமையானவர்களே, இதற்கு மேல் நான் எப்படி உங்களுக்கு விளக்குவது என்பது எனக்குத் தெரியவில்லை. எத்தனையோ முறை கூறியிருந்தும் அநேக தம்பதிகள் இந்த காரியத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒருவேளை வேறு யாராவது என் ஸ்தானத்தில் வந்து, இதை வேறு கோணத்தில் உங்களுக்குக் கூறினால் உணர்ந்துகொள்வீர்களோ என்னவோ! அதனால்தான் ஒருவேளை கர்த்தர் என்னை இவ்விடத்திலிருந்து வேறு ஊழியப் பணிக்கு மாற்றுகிறாரோ என்றுகூட எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. புருஷர்களே, எந்தவித சாக்குப் போக்குக்கும் இடம் கொடாமல் இன்றிலிருந்தே இப்பழக்கத்தை உங்கள் குடும்பத்தில் கடைப்பிடியுங்கள் என புத்தி கூறுகிறேன்.
என்னவானாலும் நாம் சேர்ந்து ஜெபிக்கத்தான் போகிறோம். தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு நாம் இருவருமாக சேர்ந்து கிட்டிச் சேர்வோம் என்பதை உங்கள் மனைவிகளுக்கும் வலியுறுத்தி, அதை செயல்படுத்துங்கள்.
- உங்களுடைய நெருக்கமான உறவு, இயந்திரத்தனமாகவோ, அதிக இடைவெளியுள்ளதாகவோ, திருப்தியளிக்காததாகவோ இருந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
கர்த்தருடைய வசனம் இதை மிகவும் தெளிவாக விளக்குகிறது. “புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையாயிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்”. திருமண நெருக்கத்தின் அடிப்படையாக வேதாகமம் இவ்வாறு தெளிவாக விளக்கிக் கூறுகிறது. கிறிஸ்தவ தம்பதியரிடம் காணப்பட வேண்டிய திருமண நெருக்கத்தில் மனைவியானவள், இந்த என்னுடைய சரீரம் எனக்கு சொந்தமானதல்ல, இது என் கணவனுக்கே சொந்தமானது என்று நினைக்க வேண்டும்; எந்த அளவுக்கு அது கணவனுக்கு உரியது? வேண்டாவெறுப்பாகவோ அல்லது அலட்சியமாகவோ அதைக் கணவனுக்குரியதாக ஆக்காமல், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் அளிக்கின்ற நெருக்கமான உறவிலே அவனை முழுதிருப்தியடையப் பண்ணும் அளவுக்கு தன் சரீரத்தை அவனுக்கு சொந்தமானதாக அவள் கருத வேண்டும். இதே விதமாகக் கணவனும் தனது சரீரத்தை மனைவிக்குரியதாக நினைக்க வேண்டும். அவன் தனது சரீரத்தை தன்னுடையதாக நினைக்காமல், திருமணபந்தத்தின் காரணமாக அதை மனைவிக்கு சொந்தமானதாகக் கருத வேண்டும். அப்படி நினைப்பதில் அவன் சுயநலமுள்ளவனாக இராமல், மனைவியின் நலனைக் கருதியவனாக வாழ வேண்டும். இந்த சரீரத்தைக் கொண்டு என் மனைவியை திருப்திப்படுத்துவதில் நான் சில அடிப்படை காரியங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவன் நினைக்க வேண்டும். 1கொரி 7ஆம் அதிகாரத்தில் அடிப்படை காரியங்களைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. பின்னும் இதைக் குறித்தான ஒரு தெளிவான வசனபகுதியை நீதி 5:18-19ல் காணலாம். “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக. அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னை திருப்தி செய்வதாக. அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக”. இப்படியாகத்தான் வேதாகமம் போதிக்கிறது. நெருக்கமான உறவை இயந்திரத்தனமானதாகவோ, அதிக இடைவெளியுள்ளதாகவோ, திருப்தியற்றதாகவோ இருக்கும்படி அனுமதித்தீர்களானால், விபச்சார பாவத்திற்குள்ளாகக்கூடிய சோதனையை நீங்களே ஏற்படுத்துகிறவர்களாக ஆகிவிடுவீர்கள். வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும் என்று பவுலும் சொல்லியிருக்கிறாரே. ஆகவே, திருமணமான தம்பதிகளே, உங்களுடைய நெருக்கமான வாழ்க்கைக்கு இடையூறு வராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உலகத்தின் அலுவல்களோ, பொறுப்புகளோ, நேரமின்மையோ உங்களைக் களைப்படையச் செய்து, நீங்கள் சேர்ந்து இருப்பதற்கு தடைசெய்யாதபடிக்கு கவனமாக இருங்கள். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் ஏதாவது செய்து அதை மாற்றுங்கள். உங்களுடைய நெருக்கமான உறவு இயந்திரத்தனமாகவோ, அதிக இடைவெளி உள்ளதாகவோ, திருப்தியற்றதாகவோ இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவது உங்கள் பொறுப்பு. உங்களில் அநேகர் திருமணமானவர்கள். நீங்கள் வீட்டிற்குப் போய் உங்கள் துணையோடு மனந்திறந்து பேசுங்கள். எதையும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ நெருக்கமான உறவில் திருப்தியடைந்திருக்கிறாரா என்பதை பலர் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள். நீங்கள் பேசிக்கொள்ளாததினால் உண்மையான நிலையை அறியாமல் இருக்கிறீர்கள். உங்களுடைய நெருக்கமான உறவைக் குறித்துப் பேசுங்கள். எதையும் மறைக்காமல், மனந்திறந்து பேசுங்கள். உங்களுடைய நெருக்கமான உறவு புத்துணர்ச்சியில்லாமலும், அதிக இடைவெளியோடும், திருப்தியற்றதாகவும் காணப்படுமானால் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொண்டு, அதை சரிப்படுத்தப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் அந்தப் பகுதிகளில் வேதாகமம் உங்களை நடத்தவில்லையென்றால், வேதாகமத்தின் அவ்வித பகுதிகளை நீங்கள் படிக்கும்போது அது உங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கும்.
- வாழ்க்கையின் நடுத்தர வயதையும், முதிர்வயதையும் குறித்து உலகத்தார் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு ஒத்துப் போவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
இதில் உலகத்தாரின் கருத்து என்ன? இதற்கு மிகச் சரியான உதாரணம் லூக்கா 12ஆம் அதிகாரத்தில் காணப்படும் ஐசுவரியவான்தான். எனக்கு இப்போது அதிக வருமானம் வருகிறது. நான் சந்தோஷமாக வாழ எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்கின்றன. என்னுடைய பணத்தையெல்லாம் மிகுதியாக சேர்த்து வைப்பேன். களஞ்சியங்களைப் பெரிதாகக் கட்டிக்கொள்ளுவேன். பின்பு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று அவன் தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டான். ஆனால் தேவன் என்ன சொன்னார்? மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்போது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். அமெரிக்கர்களுடைய சிந்தனைப் போக்கும் இப்படித்தான் இருக்கிறது. இவ்வளவு நாள் ஓடி ஓடி உழைத்தேன். இனி சந்தோஷமாக, உல்லாசமாக வாழ்வை அனுபவிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நான் என் கடமைகளை செய்துவிட்டேன். பிள்ளைகளை வளர்த்துவிட்டேன். புருஷனாகிய இவருக்கும் செய்ய வேண்டியவைகளை செய்துவிட்டேன். இனி நான் வெளி உலகில் சென்று, உண்மையாகவே என்னுடைய திறமையைப் போற்றி மதிக்கிறவர்களிடம் பணியில் அமர்ந்து, எனக்கென்று ஒரு தன்னிறைவை அடையப் போகிறேன் என்று திட்டமிடுவார்கள். நடுத்தர, முதிர் வயதையடைந்த கிறிஸ்தவ தம்பதிகளே கவனியுங்கள்: வாழ்க்கையின் நடுத்தர வயதையும், முதிர்வயதையும் குறித்து உலகத்தார் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு ஒத்துப் போவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உலகத்தாரின் கருத்துக்களுக்கு இயேசு கிறிஸ்து ஒரே வசனத்தின் மூலமாக பதிலடி கொடுக்கிறார். “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” மாற் 8:35. எனக்குள் ஜீவனும் சுவாசமும் இருக்கும் வரைக்கும் நான் கடவுளுக்கு பணி செய்வதற்காகவே இவ்வுலகில் வசிக்கிறேன் என்பதே நமது மனப்பான்மையாக இருக்க வேண்டும். நமது சரீர பெலன் ஒத்துழைக்கும் அளவுக்கு எவ்விதத்தில் அவருக்குப் பணியாற்றலாம் என்பதை திட்டமிட வேண்டும். இதோ நான் இன்று 74 வயதுடையவனாக உங்கள் முன்னால் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். 40 வயதில் பணியாற்றியதைப் போல இப்போது உழைக்க முடியாமலிருக்கலாம். அப்போது இருந்த பெலன் இப்போது இல்லை. என்னுடைய காலம் கடந்து போகிறது. எனது நரம்புக் கோளாறுகள், முதுகுவலி போன்ற அநேகம் பிரச்சனைகள், பூமிக்குரிய கூடாரத்தை விட்டுப் போகும் நாள் எதிர்நோக்கி வருவதைக் காண்பிக்கிறது. அதுதான் உண்மை நிலை. இவைகளை மனதில் கொண்டவனாக, எனக்கிருக்கும் சக்தியைக் கொண்டு எவ்வளவு சிறப்பாக, அதிக நாள் கடவுளுக்கு பணி செய்யலாம், அவருடைய ராஜ்யத்துக்காக உழைக்கலாம் என்பவைகளைத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. ஜனங்கள் என்னைக் கேட்கிறார்கள்: நீங்கள் ஓய்வுபெறப் போகிறீர்களா என்று. அது எனக்கு, சாத்தானோடு உறவாடப் போகிறீர்களா என்று கேட்பதைப் போல இருக்கிறது. இல்லை நான் ஓய்வு பெறப் போவதில்லை. நான் வேறுவிதமாக கடவுளுக்கும், அவருடைய ஜனங்களுக்கும், ஆவிக்குரிய தேவையுள்ள சந்ததியாருக்கும் பணி செய்யப் போகிறேன். நடுத்தரவயதையும், முதிர்வயதையும் குறித்து உலகத்தார் நினைக்கின்ற கருத்துகளுக்கு நாம் சற்றும் இடம் தராமல் இருப்பதற்கு உறுதிகொள்ளுவோம்.
தங்கள் குடும்பங்களை நன்றாக கவனித்து, பிள்ளைகளை வளர்த்து, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பரிசுத்தத்துக்கேற்ற விதமாக நடந்து, முதிர்வயதை அடைந்த பெண்மணிகளுக்கு பவுல் என்ன புத்திமதி கூறுகிறார்? “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்திற்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், . . . பாலியஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்கு புத்தி சொல்லு” (தீத்து 2:3-5). எதற்காக அப்படி நடக்க வேண்டுமாம்? தேவ வசனம் தூஷிக்கப்படாதபடிக்கு. பல தலைமுறைகளுக்கு இந்த சபையிலே சுவிசேஷத்தின் செல்வாக்கானது உறுதிப்படுத்தப்பட வேண்டும். முதிர்வயதுள்ள பெண்களின் மூலமாகவும் அது ஒரு வகையில் உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்கள் தங்களுடைய கணவரின் உற்சாகப்படுத்துதலினால் பெலனடைந்தவர்களாக, இளம் வயதுள்ள பெண்களுக்கு தீத்துவில் சொல்லப்பட்ட காரியங்களை படிப்பிக்கத் தக்கவர்களாயிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையைக் குறித்து கூறப்பட்ட 5 எச்சரிப்புகளைக் கொண்டு இளம் மனைவிகளுக்கும், இளம் தாய்மார்களுக்கும் அவர்கள் ஆலோசனைகளை அளித்து அவர்களை நல்வழியில் நடத்தலாம். வேதஒழுக்கத்திற்குட்பட்டதும் சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பங்கள் உருவாகுமானால் அவை கடவுளின் குடும்பத்திலும் என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும் பாக்கியத்தைப் பெறும். ஆகவேதான் நடுத்தர, முதிர் வயதை அடைந்தவர்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையைக் குறித்து உலகத்தார் காண்பது போல பார்க்காதீர்கள். அதைக் குறித்த அவர்களுடைய கருத்துக்களுக்கு ஒத்துப் போகாமலிருக்கும்படி புத்தி சொல்லுகிறேன்.
பெற்றோருக்கு, பிள்ளைகளைக் குறித்ததான 5 எச்சரிப்புகளை வைத்திருக்கிறேன். பிள்ளைகளுக்கும் பெற்றோரைக் குறித்து 2 எச்சரிப்புகளை சொல்ல விரும்புகிறேன். இப்போது நேரமில்லாமையால் ஒரு வேளை நான் என்னுடைய அடுத்த பிரசங்கத்தில் அவைகளை சொல்லக் கூடும். இந்தக் காரியங்களை இவ்வாறான பாணியில் நான் இதுவரை சொல்லியதில்லை. வாலிபர்களுக்கு சொல்லுகிறேன், 56 வருடங்களாக நான் பிரசங்கம் செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் பேசும்போது 1ஆம் வகுப்பு மாணவனைப் போலத்தான் உணருகிறேன். சொல்ல வேண்டியது அதிகமாக இருக்கிறது. கடவுள் நமக்கு உதவி செய்வாராக. கடவுளின் கிருபையினாலே நாம் நமது கொள்கைகளையும், நடைமுறைப்படுத்துவதையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்போமாக. வேதாகம ஒழுக்கத்துக்குட்பட்டதும், சுவிசேஷம் நிரம்பியதுமான குடும்பங்களை உருவாக்குவதற்கு எதிராக செயல்படும் சகல காரியங்களுக்கும் கடவுளின் கிருபையினாலே எச்சரிப்பாயிருப்போமாக.
தாம்பத்திய உறவில் நெருக்கம்
திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். கடந்த இதழின் தொடர்ச்சியை இவ்விதழில் தந்திருக்கிறோம். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர். - ஆசிரியர்
அத்தியாயம் 10: சுயநலத்திற்கு சவால்கள்
கிறிஸ்துவின் மனப்பான்மை
திருமண நெருக்கத்திற்கு சவால் விடுவது சுயநலமாகும். அதைக் குறித்து சற்று சிந்திப்போம். தாழ்மையும், சுயநலமில்லாமையுமான தம்பதிகள் யாராவது திருமண பிரச்சனைகள் உடையவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? திருமணத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தம்பதிகளில் இருவருமோ அல்லது யாராவது ஒருவரோ ஏதாவதொரு வகையில் சுயநலமுடையவர்களாய் இருப்பதுதான். “தன்னையே நேசித்தல், தன்னைத்தானே மன்னித்துக்கொள்ளுதல், தனது நன்மையை நாடுதல், சுயபுகழைத் தேடிக்கொள்ளுதல், தன் இஷ்டத்தின்படி நடந்துகொள்ளுதல், தனது மகிழ்ச்சியையே முக்கியமாகக் கருதுதல்” இவைகளெல்லாம் உலகத்தாரின் மனப்பான்மைகள். ஆனால், நாமோ கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென பவுல் பிலி 2:1-8 வசனங்களில் குறிப்பிடுகிறார்.
ஆதலால், கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏகசிந்தையும், ஏக அன்புமுள்ளவர்களாய் இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தமும் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.
சபை ஐக்கியத்தில் இந்தவிதமான மனப்பான்மையை உடையவர்களாய் நாம் இருக்க வேண்டுமென பவுல் குறிப்பிடுகிறார். ஆனால், இதேவிதமான மனப்பான்மையை நாம் நமது திருமணத்திலும், குடும்பத்திலும் கடைப்பிடிக்க பயிற்சி செய்ய வேண்டும். நாம் இவ்விதமான கிறிஸ்துவின் சிந்தையை நமது திருமண வாழ்க்கையில் பயிற்சி செய்யும்போது, நமது பிள்ளைகளுக்கும் கிறிஸ்துவின் சிந்தையைக் கற்றுத் தருகிறவர்களாய் இருப் போம். அதன் காரணமாக நாம் சபையிலும், சமூகத்திலும் பழகும்போதுங் கூட கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்துகிறவர்களாக வாழுவோம்.
பிலிப் 2:1-2 வசனங்களில் பவுல், கிறிஸ்தவ அன்பினால் நமக்குள் இருக்க வேண்டிய பிரத்தியேகமானதொரு ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார். 2ம் வசனத்திலே ஓர் அழகான கருத்தை அவர் கூறுகிறார். “இசைந்த ஆத்துமாக்களாய்” என்கிறார். கிரேக்க பதத்தில், “ஒருவரையொருவர் முற்றிலுமாக ஏற்றுக் கொண்டு”, என்கிற அர்த்தம் காணப்படுகிறது. அதற்கு, ஆத்துமாக்களில் இணைக்கப்படுதல், ஒரே ஆவியை உடையவர்களாய் இருத்தல் என அர்த்தங்கொள்ளலாம். பலவிதமான இசைக்கருவிகள் சேர்ந்து இசைக்கப்படும்போது அவை அபஸ்வரமாக தொனிக்காமல், ஒன்றோடொன்று இணைந்து இனிமையாக ஒலிப்பது போல, தம்பதிகள் தங்கள் ஆத்துமாக்களில் இணைப்பைப் பெற வேண்டும் என பவுல் விளக்குகிறார். சுயநலமற்ற, சுவிசேஷ அன்பினால் கட்டப்படுகிற திருமண வாழ்க்கையானது தம்பதிகளின் ஆத்துமாக்களை இணைக்கும். இனிமையான இசை போன்று அவர்கள் வாழ்க்கை இருக்கும்.
3ம், 4ம் வசனங்களில் பவுல் வாதினால் எதையும் செய்யாமல் என்று கூறி அதைக் களைந்து போடுமாறு வலியுறுத்துகிறார். தனக்கு நன்மை வரவேண்டுமென்பதற்காக மற்றவர்களை தந்திரமாக பயன்படுத்திக்கொள்கிற தன்மையை இவ்வார்த்தை குறிக்கிறது. (இது, சூதுவாது என நாம் தமிழில் குறிப்பிடுகிறதான வார்த்தை. ஆங்கிலத்தில், சுயநலத்தினால் எதையும் செய்யாமல் என்றிருக்கிறது). முதலாம் நூற்றாண்டில் கிரேக்க அரசியல்வாதிகள் பதவியை அடைய வேண்டுமென்பதற்காக அநியாயமான முறைகளில் அதை அடைந்துகொள்ளும்போது அதைக் குறிக்க இவ்வார்த்தை பயன்பட்டது. பதவியையும் பொருள்களையும் முறையற்ற வழிகளில் அடைந்துகொள்வதை இவ்வார்த்தைகளால் பிற்பாடு குறித்தனர். கடைசியாக, வேலை எதுவும் பார்க்க விரும்பாமல், வெறும் பதவியையும், அதனால் ஏற்படக்கூடிய லாபங்களையும் மாத்திரம் குறியாகக் கொண்டு சுயநலத்தோடு இருப்பவர்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக வீண்பெருமையினால் எதையும் செய்யாதீர்கள் என பவுல் எச்சரிக்கிறார். இதற்கு அர்த்தம், தனது உண்மையான நிலையை, மனப்பான்மையை மறைத்து வைத்து, பெருமைக்கென்று தவறாக தன்னையே பிரஸ்தாபப்படுத்திக்கொள்ளுதலாகும். தனது மிகுதியான பேச்சினாலும், பெருமை பறைசாற்றிக்கொள்வதாலும் தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என வீணாக விளம்பரப்படுத்திக்கொள்வதை அவர் குறிப்பிடுகிறார். ரோமர் 12:3ல் நாம் வாசிக்கிறோம்: “அல்லாமலும் எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.”
அடுத்தபடியாக, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளும்படி பவுல் வலியுறுத்துகிறார். இது மனம், தாழ்மை ஆகிய இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது. நமது மனப்பான்மையை குறிக்கிறது. மேலும் ஏக சிந்தையும் (வசனம் 2), கிறிஸ்து இயேசுவின் சிந்தையும் (வசனம் 5) உடையவர்களாய் இருங்கள் என்கிறார். கடவுளோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்த்தால் மாத்திரமே மனத்தாழ்மையை அடைய முடியும். இது தன்னையே இழிவாக எண்ணிக்கொள்ளுகிறதான தாழ்வுமனப்பான்மை அல்ல. கடவுளுக்கு முன்னிலையில் தன்னை பரிசோதித்துக்கொள்வதால் ஏற்படுகிற ஆரோக்கியமான தன்மை. நாம் கடவுளின் சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் உன்னதமான பிறவிகள். பாவநிலையோடு இருந்த போதிலும் கடவுளின் கிருபை பெற்றவர்களாக, மறுரூபமாக்கப்படுதலுக்காக வாழுகின்ற நிலைமையில் இருக்கின்றோம். கிறிஸ்துவுக்குள் நமது நிலைமை இன்னதென்று உணர்ந்தவர்களாக, சுயநல இச்சைகளைப் பூர்த்தி செய்ய விரும்பாமால், கிறிஸ்துவைப் போன்றே கடவுளுடைய மகிமைக்கென்று மேலான நோக்கத்துடன் வாழுகின்றதான மனப்பான்மையே மனத்தாழ்மையாகும். தேவனுடைய ராஜ்யத்தின் உன்னதமான நிலையை, தாழ்மையுள்ள மனிதன் ஒப்புக்கொள்வான். அந்த ராஜ்யத்தில் தான் மேன்மைப்பட வேண்டுமானால், இங்கு அனைவருக்கும் பணிவிடைக்காரனாக இருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான் (லூக் 22:24-26). “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோ 3:12). “மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி . . .” (எபே 4:2).
இந்தவிதமான மனப்பான்மையோடு நாம் மற்றவர்களை நம்மிலும் மேலானவர்களாக எண்ண வேண்டும். ஒருவரை மேன்மையாக எண்ணுவது என்பது ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்களைக் குறித்து தீர்மானிப்பது. கடவுளின் கிருபையை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒருவரையொருவர், முக்கியமாக நமது துணையை சோதித்தறிய வேண்டும். சுவிசேஷத்தின் வெளிச்சத்திலே அவர்களை நிறுத்திப் பார்க்க வேண்டும். நமது பரலோகப் பிதாவின் குணங்களினால்தான் நாமும் வெளிச்சம் பெற்றிருக்கிறோம் அல்லவா? கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நம்மீது காண்பிக்கும் அன்பையும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து கொண்டுவருவதையும் உணர்ந்தவர்களாக நாம் மற்றவர்களைக் குறித்ததான நமது எண்ணத்தைத் தீர்மானிக்க வேண்டும். “ஆகையால், இது முதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்” (2கொரி 5:12). கடவுளின் கிருபையை நினைத்தவர்களாக நாம் ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துகிறவர்களாக இருக்கிறோம். அவரது கிருபையின் அடிப்படையிலேயே நாம் மற்றவர்களைப் பார்க்கிறோம். ஆச்சரியப்படத்தக்க விதமாக நாம் அன்புசெலுத்தப்பட்டு, கிறிஸ்துவுக்குள்ளாக ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம். நம்மைக் குறித்து நாமே கவலைப்பட வேண்டியதான சிரமத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். பிதாவாகிய கடவுள் நம்மை பாதுகாக்கிறார். என்னத்தை உடுப்போம், என்னத்தைக் குடிப்போம் (மத் 6:25-34) என்று நம்மைக் குறித்தே கவலைகொள்ளுகிறவர்களாயிராமல், கிறிஸ்துவைப் போன்று மற்றவர்களுக்கு பணிவிடை செய்யும்படிக்கு நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். “தம்முடைய கையிலே பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதை” அறிந்தவராக, இயேசு கிறிஸ்து போஜனத்தை விட்டு எழுந்து ஒரு சீலையை அரையிலே கட்டிக் கொண்டு எல்லாருக்கும் பணிவிடை செய்ததைப் போலவே நாமும் ஒருவருக்கொருவர் பணிவிடைக்காரர்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் நம் மீது கரிசனையுடையவராய் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தோமானால், கடவுளின் அன்பையும் கரிசனையையும் பிறர் மீது செலுத்துவதற்காகவே நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் உணர வேண்டும். பிறருக்கானவைகளையும் நோக்கும்படியாக பவுல் நமக்குச் சொல்லுகிறார். அதே குறியாக இருக்க வேண்டும் என்கிற வார்த்தை கிரேக்க மொழியிலே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேட்டைக்காரன் தனது துப்பாக்கியில் ஏதாவது சிக்காதா என்கிற நோக்கத்துடன் குறி வைத்த வண்ணமாக வெகு கவனத்துடன் இருப்பது போல நாமும் நமது வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கிறதா என்பதை நோக்கிய வண்ணமாகவே வாழ வேண்டும். சபையிலுள்ள நமது சகோதரரிடம் நாம் இந்த விதமாக வாழும்படி கூறப்பட்டோமானால், நம்மோடு ஒரே சரீரமாக இணைந்திருக்கும் துணையோடு இன்னும் எவ்வளவு அதிகமாக இவ்வித செயலைக் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்?
மனத்தாழ்மைக்கு இயேசு கிறிஸ்து மாதிரியாக வாழ்ந்து காட்டினார். நாமும் இயேசுவின் சிந்தையை உடையவர்களாய் இருக்க வேண்டும். பிலிப் 2:5-8 வரையுள்ள வசனங்கள் அநேக அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. இவைகளுக்கு பொருள் விளக்கி சொல்வது எளிதல்லாதது மாத்திரமல்லாமல், கிறிஸ்துவைப் போல நம்மையும் தாழ்மையுடையவர்களாக இருக்கும்படியாக சவால் விடுவதாக இவை காணப்படுகின்றன. இவ்வளவு ஆழமான வார்த்தைகளுக்கு இடையிலும், தாழ்மையின் சிகரமான இயேசு கிறிஸ்துவைக் குறித்து பவுல் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. திரித்துவத்தின் இரண்டாவது நபராகிய குமாரன், தன்னுடையவர்களை இரட்சிக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தாழ்த்தி, மனிதரூபம் எடுத்தார். மற்றவர்களுடைய நன்மைக்காக, பிதாவின் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தவராக, நமது பாவங்களின் கிருபாதார பலியாக தன்னையே சிலுவையில் மரிக்க ஒப்புக்கொடுத்து மேசியாவின் ஊழியத்தை நிறைவேற்றினார். அதுவே தாழ்மையின் அடையாளம். தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் இயேசு கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் அவரே, “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருக்கிறார் (மத் 11:29).
சீஷத்துவமும் தியாகமனப்பான்மையும்
கிறிஸ்துவின் அழைப்புக்கு செவிகொடுத்து, அவரிடம் வந்து, தாழ்மையைக் கற்றுக் கொண்டவர்கள் யார்? (மத் 11:28,29). அவருடைய சீஷர்களே. யார் அந்த சீஷர்கள்? கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலே, தன்னைத் தானே வெறுத்து, அனுதினமும் தனது சிலுவையை சுமந்தவர்களாக அவரைப் பின்பற்றுகிறவர்களே அவருடைய சீஷர்கள் (லூக் 9:23). இயேசுவின் மீது அவன் கொண்ட விசுவாசம், அவனுடைய சுயநலத்தைவிட அதிகமானதாக இருந்தது. சிலுவையைத் தானே மனமுவந்து ஏற்றுக்கொண்டவனாக, பாவம் நிறைந்த தனது சுயநலத்தை அழித்துப் போட்டுவிட்டு, இயேசுவோடு தன்னை இணைத்துக்கொள்ளுகிறான். இந்த விதமான சீஷனையே பவுல், “இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவன்” என விவரிக்கிறார். “நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 6:6). “கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் பிழைத்திருக்கிறேன். இனி, நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20). “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா. 5:24). கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே, அவரை விசுவாசிக்கிற சீஷர்கள் சுயநலம் என்கிற பாவத்தை மேற்கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கின்ற நாம், திருமண வாழ்க்கையில் நம்மை நாமே வெறுக்க வேண்டும் என்கிறதான கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்கின்றோம். திருமணத்தில் தியாக மனப்பான்மையோடு செயல்படும்படி இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம்முடைய விருப்பங்களுக்கு மரித்தவர்களாக இருந்தால்தான், நமது துணையிடம் தயவோடு நடந்துகொள்ள முடியும். திருமண நெருக்கத்தை அடைவதற்கு சுயநலத்தைக் கைவிடுதல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மற்ற எல்லா உறவுகளைக் காட்டிலும் திருமண உறவே ஆத்துமாவில் ஆழமாக பதிவதாலும், அது அதிக காலத்துக்கு நீடித்து இருப்பதாலும் சுயநலத்துக்கு அங்கே இடமிருக்கக் கூடாது, சுயநலத்தைக் கொல்லுகின்ற சவாலானது நமது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில், நாம் எதிர்பார்க்காத விதங்களில் எல்லாம் சுயநலம் வெளிப்பட்டு அதை அழிக்கப் போராட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது சுயநலம்தான் பிரதானமான எதிரியாக வெளிப்படும். நமது வாழ்க்கைப் பாதையில் குடும்பத்தின் சூழ்நிலைகள் மாறும். நாமும்கூட மாறுவோம். ஆனால், இரண்டு ஆக்ரோஷமான சுயநலங்கள் எப்போதும் வாழ்வில் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும். அவைதான் கணவனினுடையதும், மனைவியினுடையதுமான சுயநலங்கள். அவைகளோடு போராட வேண்டியதிருக்கும். ஒருவரையொருவர் ஆத்மீகமாக நெருங்க முயற்சிக்கும்போது, இவைகள் குறுக்கிட்டு பிரச்சனையை உண்டு பண்ணும். இந்த இருவருமே கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக, இன்னும் நெருங்கிச் சேருவதற்கு, தங்கள் சொந்த நலன்களை அழித்தால் மட்டுமே திருமண நெருக்கத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும்.
தங்களைத் தாங்களே வெறுத்து, கிறிஸ்துவுக்குப் பின் செல்ல முடிவு எடுத்த இரண்டு பேரின் திருமணமே உண்மையான கிறிஸ்தவத் திருமணம். தங்களையே வெறுப்பதும், தியாகமனப்பான்மையும் அவர்களது அன்பை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. ஒரு திருமணம் சுவிசேஷ அன்பை வெளிப்படுத்த வேண்டுமானால், திருமணம் செய்திருக்கும் அந்த விசுவாசிகள் இருவருமே தங்களுடைய சுயநலமாகிய பாவத்தை சிலுவையில் அறைந்து, ஒருவருக்கொருவர் தியாகமனப்பான்மையோடு அன்பைப் பரிமாறிக்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். தியாகமனப்பான்மையோடு கூடிய அன்பு எப்படிப்பட்டதாயிருக்கும் என்று எபே 5:25-27 வரையுள்ள வசனங்கள் நமக்கு விவரிக்கிறது.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு, தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றுமில்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
24 மற்றும் 25 ஆம் வசனங்களில் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று பவுல் பெண்களுக்குக் கட்டளை கொடுத்தபின் அடுத்தபடியாக மேற்கூறிய அறிவுரையை கணவன்களுக்குக் கூறுகிறார். திருமணத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் கிறிஸ்தவ கணவனைப் பார்த்து கூறுகிறார்: கிறிஸ்துவைப் போன்று நீங்கள் உங்கள் மனைவிகளை நேசியுங்கள் என்கிறார். அவனுடைய தலைமைத்துவத்தின் சாராம்சம் அன்பிலே அடங்கியிருக்கிறது. கிறிஸ்தவ கணவன் அன்பினால் வழிநடத்த வேண்டியவனாக இருக்கிறான். இந்த உண்மை ஆழமாகப் பதிய வேண்டும். கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது, கொடூரமாக ஆள்வதோ, தனது கருத்துக்களை திணிப்பதோ, தந்திரமாக செயல்படுவதோ அல்ல. கிறிஸ்தவத் தலைவர்கள் அன்பினாலே ஆளுகிறார்கள். ஒரு விசேஷித்தவிதமான அன்பைக் குறித்து பவுல் குறிப்பிடுகிறார்: அந்த அன்பு தானாகவே முன்வந்து செயலாற்றும். அந்தவிதமான அன்பே முன்நின்று நடத்த வேண்டும். அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்த வேண்டுமென முடிவு செய்துவிட்டார். நேசிக்கத்தக்க விதத்தில் இருப்பதால் அல்ல, அன்பு செலுத்த வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டபடியால் அதை வெளிப்படுத்துகிறார். தான் யாரென அவன் அறிந்திருக்கிறபடியால் அவன் அன்பு செலுத்தத் தீர்மானித்துவிட்டான். சுவிசேஷ அன்பை செயல்படுத்த வேண்டிய கதாபாத்திரங்கள் நாமே. அன்பு எதைச் செய்ய வேண்டுமோ அதை ஆரம்பித்து வைக்க வேண்டிய பொறுப்பு நமக்குரியது.
கிறிஸ்து சபைக்காக என்ன செய்தாரோ அதை கிறிஸ்தவ கணவனும் தன் மனைவிக்குச் செய்ய வேண்டும். “தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்”. பழைய ஏற்பாட்டு பலிகளில் காணப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக தன்னையே தியாக பலியாக ஒப்புக் கொடுத்தார். கிறிஸ்தவ கணவனின் அன்பு கிறிஸ்துவின் கிருபாதார பலிக்கு ஒப்பானதல்ல. ஆனால், அவன் கிறிஸ்துவினுடைய தியாக மனப்பான்மையை மாதிரியாகக்கொள்ள வேண்டும். பிலிப் 2:5ல் காணப்படும் கிறிஸ்துவினுடைய சிந்தை, தியாக மனப்பான்மையின் செயல்பாடுகளை விவரிப்பதாக இருக்கிறது. கிறிஸ்தவ கணவன், தனது நலன்களிலேயே மூழ்கிவிடாமல், தன்னுடைய மனைவிக்காக தனது நலன்கள் பலவற்றையும் விட்டுக் கொடுக்கும்படியாக அழைக்கப்படுகிறான்.
தியாக மனப்பான்மையோடுகூடிய அன்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது: “பரிசுத்தமாக்குதலே” அதன் நோக்கம். தான் மிகவும் நேசிக்கிறவர்கள் இன்னும் பரிசுத்தம் அடையவேண்டும் என்பதையே சுவிசேஷ அன்பு வாஞ்சிக்கும். தியாக மனப்பான்மையோடுகூடிய சுவிசேஷ அன்பு நம்மை கிறிஸ்துவைப் போலாக்குகிறது. தான் மிகவும் நேசிக்கிறவர்களின் குணங்களிலும் நடத்தையிலும் தேவபக்தி காணப்படும்படியாகவும், அவர்களை சுத்திகரிக்கக் கூடிய விஷயங்களை அதிகப்படுத்துவதற்காகவும், தியாக மனப்பான்மையோடு கூடிய அன்பு தனது சுயவிருப்பங்களை அழித்துக்கொள்ளுகிறது. தியாக செயல்களினாலும், சுத்திகரிக்கும் வார்த்தைகளினாலும் பரிசுத்தத்தை பெற முடியும். இயேசு கிறிஸ்துவும் அதையே நிறைவேற்றினார் “தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து . . .” நாம் பேசுகின்ற வார்த்தைகள், நாம் நேசிக்கின்றவர்களின் ஆத்துமாவை கழுவி சுத்திகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, . . . கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளரும்படியாக . . .” என்று பவுல் முன்னதாக எபே 4:15ல் குறிப்பிடுகிறார். சுவிசேஷ அன்பு பேசுவதாகவும் செயல்படுவதாகவும் இருக்கிறது. அது சத்திய வசனத்தைப் பேசுகிறது. வசனத்தின்படி எது உண்மையோ, சரியானதோ, நேர்மையானதோ அதையே சுவிசேஷ அன்பு தெரிவிக்கும். கிறிஸ்து சபையை நேசிக்கும் விதமாக மனைவியை நேசிக்கின்ற கணவன், சத்தியத்தின்படியாக மனைவியிடம் பேசுவான். சுற்றிவளைத்தோ, ஒளிவுமறைவாகவோ பேசாமல், தன் உள்ளத்தில் உள்ளதை உள்ளதின்படியே அவளுக்குத் தெரியப்படுத்த முயற்சிப்பான். இவ்விதமாகத்தான் கடவுள் நம்மோடும் பேசுகிறவராய் இருக்கிறார். தனது அன்பை வெளிப்படுத்துகிறவிதமாய் அவர் பேசுகிறார், செயல்படுகிறார். நாமும் ஒருவரையொருவர் நேசிக்கிற முயற்சியிலே அவரை மாதிரியாகக்கொள்ள வேண்டும்.
பரிசுத்தப்படுத்தும் நோக்கத்தோடு செலுத்துகிற தியாக அன்பு தோல்வியைத் தராது. அது நற்பலனையே தரும். “பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வ தற்காக” - ஆம், இயேசு கிறிஸ்து சபைக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். அவருடைய தியாக அன்பினாலே பரிசுத்தமாக்கப்பட்டிருக்கும் அவருடைய மணவாட்டி இப்போது அவருக்கு முன்பாக இருக்கிறது. தன்னைத் தானே வெறுத்து உலகில் வந்த அந்த நேசர், இப்போது பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள தமது மணவாட்டியைக் கண்டு திருப்தியடைந்தவராய் இருக்கிறார். நாமும் நம்பிக்கையோடு நம்மையே தியாகம் செய்யும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். தியாக மனப்பான்மையோடு நாம் செலுத்துகிற அன்பு நமது துணைக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கிறோம். தியாக மனப்பான்மையோடு நாம் செலுத்துகிற அன்பு, உன்னதமான ஒரு திருப்தியை அளிக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம். தியாக மனப்பான்மையோடு கூடிய செயல்களாலும், பரிசுத்தப்படுத்தும் வார்த்தைகளாலும் அன்பு செலுத்துகிறோம். பதிலுக்கு நாமும் சுவிசேஷ அன்பினாலே அன்புகூரப்படுகிறோம் என்கிற திருப்தியையும் பெற்று அனுபவிக்கிறோம்.
பரத்திலிருந்து வரும் ஞானம்
தினசரி வாழ்க்கையில், தன்னைத்தானே வெறுக்கும்படியாக திருமணம் கற்றுக்கொடுக்கிறது. அது, திருமணமான அவருடைய சீஷர்கள் நடக்க வேண்டிய பாதை. அது, தினமும் சுயநலத்திற்கு செத்து, உயிர்த்தெழுதலின் வல்லமையினாலே வாழுகின்ற நாடக அரங்கம். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் வாழவேண்டிய முக்கிய காலகட்டம் நமது திருமண வாழ்க்கையாகும். திருமணத்தில் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிறோம். திருமணத்தில் நாம் நமது சுயத்தை அழிக்க பயிற்சி பெறுகிறோம். திருமணத்தில் நாம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும், சுவிசேஷ அன்பையும் அனுபவித்து சந்தோஷமடைகிறோம். திருமணத்தில் நாம், விட்டுக்கொடுத்தல், துறத்தல், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் போன்ற சிறு சிறு காரியங்களின் மூலமாகத் தியாக மனப்பான்மையோடு அன்பு செலுத்த முயற்சிக்கிறோம். “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும், சகல துர்ச்செய்கைகளும் உண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது” யாக் 3:16-17.
இவைகளை நமது திருமணத்தில் எப்படி நிறைவேற்றுவது? மீட்பின் கோட்பாடாகிய நட்சத்திர வழிகாட்டியைக் கொண்டுதான் திருமண வாழ்க்கையில் இவ்விடத்தில் முன்னேறிச் செல்ல முடியும். சிலுவையின் வழியை தெரிந்துகொண்டுள்ளவர்களாக, சுயத்திற்கு எப்படி மரிப்பது என்பதை கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நாம் சுயத்திற்கு மரித்தோமானால், அவரோடேகூட புதிதான வாழ்க்கைக்கு எழுந்தவர்களாயிருப்போம். கிறிஸ்துவோடு இணைந்தவர்களாக நாம் வாழும்போது, நாம் பணிவிடைக்காரராய், கிறிஸ்துவின் அன்பை நமது துணைக்கு பரிமாறுகிறவர்களாய் வாழலாம். நாமே நமது சொந்த முயற்சியினால் இவ்வித அன்பை செலுத்த முடியாது. இந்தவிதமான அன்பு நமது சுபாவத்திலிருந்து வருகின்ற அன்பல்ல. அது நம்மிடமிருந்து வெளிப்படுவதல்ல. அது கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட அன்பு. அவருடையதான அந்த அன்பையே நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டுமென அவர் கூறுகிறார். சில சமயங்களில் சில பேர் என்னிடம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்: “பாருங்கள், பாஸ்டர், என்னால் முடியாது. இப்படியெல்லாம் அன்பு செலுத்த எனக்குத் தெரியாது. என்னுடைய பெற்றோர் எனக்கு நல்ல முன்மாதிரியாக இல்லை. நான் வளர்ந்த விதம் அப்படி” என்பார்கள். நமது செய்கைகளுக்கு மற்றவர்களைக் காரணம் காண்பித்து, உளவியல் பாதிப்பு போன்ற காரணங்களைக்கூறி சாக்குச் சொல்லக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதை முதலாவது நிறுத்துங்கள். நீங்கள் கிறிஸ்துவில் ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவை சம்பந்தப்படுத்தி உங்கள் செய்கைகளுக்கு விளக்கம் அளியுங்கள். ரோமருக்கு எழுதிய நிருபத்தின் முதல் 5 அதிகாரங்களில், பவுல், கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவைக் குறித்து எழுதிவிட்டு, அதன் 6ம் அதிகாரத்தில்தான் முதல் முறையாக நமக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். “உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (ரோமர் 6:11). கிறிஸ்துவை விசுவாசியுங்கள். கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் யாரென்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அன்பு செலுத்தும்படியான ஆவிக்குரிய சாதனம் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தேவன் உங்களை நேசித்திருக்கிறாரே! கடவுளின் அன்பையே உங்கள் மனைவியிடம் செலுத்துங்கள்! கடவுளின் அன்பை உங்கள் கணவரிடம் காண்பியுங்கள்! கடவுளை மாதிரியாகப் பின்பற்றினவர்களாக ஒருவரிலொருவர் அன்பு செலுத்துங்கள்.
கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களாக அவரது அன்பை நீங்கள் ஒருவருக்கொருவர் கணவனும் மனைவியுமாகப் பரிமாறிக்கொள்ளுங்கள். முதலில் கிறிஸ்துவின் அன்பைக் குறித்துக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு பரிசுத்த ஆவியானவரின் உதவியைக் கொண்டு அந்த அன்பை பயிற்சி செய்து, அந்த அன்பிலே வாழுங்கள். கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாக நீங்கள் அவருடைய சீஷர்களாக வாழும்போது, உங்களுடைய சுயத்தை உடைத்து முன்னேறிச் செல்வதில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களையே வெறுங்கள். உங்கள் துணைக்காக நீங்கள் உங்களையே தியாகம் செய்யுங்கள். உங்களுடைய அன்பான செய்கையினாலும் வார்த்தைகளினாலும் உங்கள் துணையைப் பரிசுத்தப்படுத்த முயலுங்கள். அதன் பலனாக சுவிசேஷ அன்பின் சந்தோஷத்தைப் பெற்று திருப்தியடையுங்கள்.
(வளரும்)