திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2015-ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. சார்ளி கர்க்: சாதாரண அமெரிக்க கிறிஸ்தவன்

3. பானையில் மரணம்

4. விசுவாசம் இல்லாத நாட்டில் விசுவாசம்

5. சீரியாவுக்குப் போகிறது சுவிசேஷம்

 

 

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே!

மறுபடியும் இந்த இதழ் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இந்த இதழில் சாதாரண ஒரு அமெரிக்க கிறிஸ்தவனான சார்ளி கர்க் பற்றி எழுதியிருக்கிறேன். திருப்புமுனை யுஎஸ்ஏ என்ற அறக்கட்டளைக்குத் தலைவனாக இருந்து பாரமம்பரிய சமூகக் கருத்துக்களையும், கிறிஸ்தவ சுவிசேஷத்தையும் இளைஞர்கள் முன் விளக்கி சமுதாய சீர்திருத்தத்திற்காக 18ம் வயதிலிருந்து உழைத்து வந்த இளம் குடும்பஸ்தன். அவனுடைய பணிகளால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பாரம்பரிய சமூகக் கருத்துக்களுக்குத் தலைசாய்த்து தைரியத்தோடு தீவிரவாத தாராளத்துவ சமூகக் கருத்துக்களுக்கு எதிராக நிற்கவும், பேசவும் ஆரம்பித்திருந்தனர். அவனுடைய வெற்றியே அவனுக்கு எதிரியாகவும் மாறியது. செப்டெம்பர் 10ம் தேதி ஒரு தீவிரத் தாராளவாத இளைஞனின் துப்பாக்கிக் குண்டு அவனுடைய உயிரை மாய்த்தது. இந்த ஆக்கம் உங்களை சிந்திக்க வைக்கட்டும்.

இது தவிர 2 இராஜாக்களில் இருந்து மூன்று ஆக்கங்களை இந்த இதழ் சுமந்து வருகிறது. பானையி¢ல் மரணம், விசுவாசம் இல்லாத நாட்டில் விசுவாசம், சீரியாவுக்குப் போகிறது சுவிசேஷம் ஆகிய ஆக்கங்கள் உங்களுடைய ஆத்மீக வாழ்க்கைக்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன். இவற்றை நண்பர்களோடும், குடும்பத்தோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

2 இராஜாக்கள் நூலின் நான்கு அதிகாரங்களை விளக்கி அதன் முதல் பாகத்தை நூலாக வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். அது அந்நூலுக்கான ஒரு விளக்கவுரையாக அமையும். பழைய ஏற்பாட்டு நூல்களிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் விளக்கவுரைகள் தமிழில் எனக்குத் தெரிந்து இல்லை. இந்த நூலை வெளியிடும் பணிகளுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

நம்முடைய இதழின் வலைதளத்தை புதிய முறையில் அருமையாக வடிவமைத்துத் தந்திருக்கிறார் ஜோசப். அதையும் ஒருதடவை போய்ப் பாருங்கள் (biblelamp.org). இந்த இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். & ஆசிரியர்

 

சார்ளி கர்க்: சாதாரண அமெரிக்க கிறிஸ்தவன்

செப்டம்பர் 9ம் தேதி, அமெரிக்கா 24வது வருட இரட்டைக் கட்டடங்களின் மாபெரும் இழப்பை நினைவூகூர்ந்து கொண்டிருந்த போது அதற்கடுத்த நாளில் என்ன நடக்கப்போகிறதென்பது ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த செப்டம்பர் 10ம் தேதி அருமையான மனைவிக்கும், இரண்டு சிறு குழந்தைகளுக்கும் தகப்பனான சார்ளி கர்க் வழமைபோல் யூட்டா சமவெளிப் பல்கலைக்கழகத்தில் வெளியரங்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்த கூட்டத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தவர்களோடு அமைதியான வாதங்களைச் செய்துகொண்டிருந்தார்.

திருப்புமுனை யூஎஸ்ஏ

திருப்புமுனை யூஎஸ்ஏ (Turningpoint USA) என்ற அறக்கட்டளையின் தலைவர் 31 வயதான சார்ளி கர்க் (Charlie Kirk). அவர் தனது 18ம் வயதில் கல்லூரியில் படிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்க சமுதாயத்தின் இளைஞர்கள் மத்தியில் பணிசெய்து, கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் பாரம்பரியக் கருத்துக்களைத் தைரியமாக அவர்கள் முன்வைத்து அவர்களுடைய கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அமைதிக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். அதில் ஒன்று தாராளவாத செல்வாக்கு அதிகரித்துக் காணப்படும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அத்தகைய கூட்டங்களை நடத்துவது. இங்கே தாராளவாதம் (Liberalism) என்று நான் குறிப்பிடுவதை இறையியல் தாராளவாதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நான் சமூகப் பொருளாதாரத் தாராளவாதத்தையே குறிப்பிடுகிறேன். அந்தவிதத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி (Democratic Party) ஒரு தாராளவாதக் கட்சி. பேர்க்ளி போன்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தீவிர தாராளவாதப் பல்கலைக் கழகங்களாக மாறிவிட்டிருக்கின்றன.

இத்தகைய தாராளவாதப் போக்கை மாற்றிப் பாரம்பரியக் கருத்துக்களை இளைஞர்கள் முன் தைரியமாக விளக்கி அமைதியான முறையில் அவர்களுடைய கருத்துக்களுக்கும் பதில்கூறித் தான் நம்பிவரும் கோட்பாடுகளையும் அவர்களைச் சிந்திக்க வைக்கும் முயற்சியில் சார்ளி கேர்க் ஈடுபட்டு வந்தார். அவருடைய பணிகள் பெரும் வெற்றி கண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பாரம்பரியக் கருத்துக்களில் நாட்டம் காட்ட முன்வந்ததோடு, பாரம்பரியக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களும், இளைஞர்களும் தைரியமாகத் தங்களுடைய விசுவாசத்தை எங்கும் முன்வைக்கவும், விளக்கவும் ஆரம்பித்தனர்.

சார்ளி கர்க்கின் இத்தகைய முயற்சிகளாலேயே ஒன்பது மாதங்களுக்கு முன் டொனல்ட் டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் பெருவெற்றி பெறமுடிந்தது. என்றுமில்லாதவிதத்தில் இளைஞர்கள் இந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு வாக்களித்து டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்தனர். சார்ளி கர்க் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அதற்காக உழைத்தவர். டொனல்ட் டிரம்பின் நெருங்கிய நண்பர்.

சுவிசேஷ இயக்கக் கிறிஸ்தவன்

சார்ளி கர்க் ஒரு சுவிசேஷ இயக்கக் கிறிஸ்தவர் (Evangelical Christian). அரிசோனாவில் இருக்கும் Dream City சபையின் அங்கத்தவர். சார்ளி கர்க் கிறிஸ்துவை ஆணித்தரமாக விசுவாசித்ததோடு, வேதத்தின் தவறற்ற மெய்த் தன்மையையும், தெளிவான கிறிஸ்தவ சுவிசேஷத்தையும் நம்பிய இளைஞன். சார்ளி கர்க் ஒரு சீர்திருத்த கிறிஸ்தவரல்ல; அவருடைய அனைத்துக் கருத்துக்களோடும் (பொருளாதார அரசியல்) ஒத்துப்போக வேண்டியதும் அவசியம் இல்லை. இருந்தபோதும் கர்த்தரின் இறையாண்மையையும், கிறிஸ்து மூலம் மட்டுமே இரட்சிப்பு என்பதையும், வேத வழியிலான குடும்ப வாழ்க்கை நடத்துவதையும், ஓய்வுநாளைக் கவனத்தோடு அனுசரிப்பதையும், திருச்சபை வாழ்க்கையை விசுவாசத்தோடு வாழ்வதையும், பாரம்பரியக் கோட்பாடுகளை வலியுறுத்துவதையும், அமெரிக்க நாட்டை நேசிப்பதையும் முழுமனத்தோடு நம்பி அவற்றைத் தன்னுடைய வாழ்க்கை நியதியாகக் கொண்டிருந்தார். கடவுள் ஆணையும், பெண்ணையும் மட்டுமே படைத்திருக்கிறார் என்பதை வலியுறுத்தி வந்தார். அவர் இளைஞர்களைத் திருமணம் செய்து நல்ல மணவாழ்க்கை நடத்திப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவித்தார்.

சமுதாயத்தை மோசமாக்கி அழித்துவரும் தீவிரத் தாராளவாதக் கருத்துக்களில் இருந்து அமெரிக்க இளைஞர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, அக்கருத்துக்களால் ஏற்படும் பாதகங்களை அவர்களுக்கு விளக்கி இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் கலப்படமில்லாமல் தன்னுடைய பாணியில் அவர்கள் முன்வைத்து வந்தார்.  இத்தகைய பாரம்பரியக் கிறிஸ்தவப் போதனைகளும், குடியரசுக்கட்சிக்கும், டொனல்ட் டிரம்புக்கான அவருடைய ஆதரவுமே அவருடைய உயிருக்கு ஆபத்தாக மாறியது.

சார்ளி கர்க்கின் கருத்துக்களை அவருடைய தீவிரத் தாராளவாத எதிரிகள் ‘பாசிசம்’ (Fascism) என்று அழைத்தனர். தாங்கள் விரும்பி அரவணைத்திருக்கும் சோதோம், கொமோரா வாழ்க்கை முறைக்கு அவர் எதிரி என்று தீர்மானித்து ஆக்ரோஷமாக அவரை எதிர்த்து நின்றனர். அமைதியாக அவரோடு விவாதிப்பதைக் கைவிட்டுவிட்டு துப்பாக்கியைக் கையிலெடுத்தனர். அமெரிக்காவில் இத்தகைய கலாச்சாரம் என்றுமே இல்லாதவகையில் இன்று சமுதாயத்தில் வளர்ந்து நிற்கிறது.

சுதந்திரப் பேச்சு

சுதந்திரப் பேச்சிற்கு (Freedom of speech) நாட்டின் அரசியல் சாசனம் அனைவருக்கும் அனுமதி வழங்கியபோதும், அத்தகைய பேச்சு தங்களுடைய கருத்துக்களுக்கு எதிராக ஒருவரும் ஒருபோதும் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று தீவிரத் தாராளவாதக் கருத்துக்கொண்டிருப்பவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தங்களுக்கு எதிரான கருத்துக்களை பாசிசம் என்றும், வெறுப்புப் பேச்சு (Hate speech) என்றும் அழைத்து வருகின்றனர். அமெரிக்க செய்தித் தகவல் நிறுவனங்களும், ஹாலிவுட்டும் இந்தப் பாணியையே பின்பற்றுகின்றன. இயற்கைக்கே முரணான அரவாணி வாழ்க்கை முறையை சமூக வாழ்க்கை முறையாக மாற்ற அவர்கள் காட்டும் வைராக்கியம் அதற்கெதிரான எந்தப் பாரம்பரியக் கருத்துக்களையும் எவரும் முன்வைக்கக் கூடாது என்று ஆக்ரோஷமாகக் கோபக் குரலெழுப்புகிறது. இதெல்லாம் எப்படி சுதந்திரப் பேச்சாகும்? சுதந்திரப் பேச்சை ஒரு பக்கத்துக்கு மட்டும் (தீவிரத் தாராளவாதிகளுக்கு) அனுமதித்து வரும் இவர்களுக்கு எதிராகவே சார்ளி கர்க் அமைதிப் போராட்டத்தைக் கிறிஸ்தவ அன்போடும், சமூக இங்கிதத்தோடும், சக மனிதனைத் தன்னைப்போல நேசித்தும் இளைஞர்கள் மத்தியில் நடத்திப் பெரும் வெற்றிகளைக் கண்டு வந்தார்.

அந்த செப்டம்பர் 10ம் தேதி யூட்டா சமவெளிப் பல்கலைக்கழகத்தில் தன் இருக்கையில் அமர்ந்து இளைஞர்களின் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்து விவாதித்துக்கொண்டிருந்த சார்ளி கர்கின் வலதுபுறக் கழுத்தை, ஏறக்குறைய 200 மீட்டர்கள் தூரத்தில் இருந்து பாய்ந்து வந்த ஒரு தீவிரத் தாராளவாத இளைஞனின் தொலைநோக்கித் துப்பாக்கிக் குண்டு துளைத்தது. அவன் ஆணாக இருந்து பெண்ணாகத் தன்னை மாற்றிக்கொண்டிருந்த ஒருவனோடு காதலுறவு கொண்டு ஒரே அப்பார்ட்மென்டில் வாழ்ந்துகொண்டிருந்த 22 வயது வாலிபன். நல்ல குடும்பத்தில் பிறந்திருந்த அவன் தீவிரத் தாராளவாதத்திற்குத் தன்னை அர்ப்பணித்து அதற்கெதிரானவர்களை அழிக்கும் இருதயத்தைக் கொண்டிருந்தவன்.

வைத்தியசாலைக்கு உடனடியாக சார்ளி கர்க் கொண்டுபோகப்பட்ட போதும் அங்கே அவருடைய உயிர் பிரிந்து கர்த்தரின் பிரசன்னத்தை அடைந்தது. சார்ளி கர்க்கின் இளம் மனைவியான எரிக்கா கர்க், சார்ளி கர்க்கிற்காக, செப்டம்பர் 22ல் 2 இலட்சம் பேர் கூடிய அரிசோனாவில் நிகழ்ந்த நினைவுக்கூட்டதில் அந்தக் கொலையாளியைத் தான் மன்னித்துவிட்டதாகக் கண்ணீரோடு கூறியதை முழு உலகமே கேட்டது. அதுவே கிறிஸ்து பிரசங்கித்த கிறிஸ்தவம். சார்ளி கர்க் ஒரு பிரபலமான கிறிஸ்தவ இறையியல் அறிஞனோ, போதகனோ, சீர்திருத்தவாதியோ அல்ல; கிறிஸ்தவ சுவிசேஷத்தைத் தனக்குரிய முறையில் பிரசங்கித்த சாதாரண அமெரிக்க கிறிஸ்தவன். கிறிஸ்துவுக்காகத் தன்னை இரத்தப்பலிகொடுத்த தியாகி.

 

பானையில் மரணம்

2 இராஜாக்கள் 4:38-41

2 இராஜாக்கள் 4 அதிகாரத்தில் விளக்கப்பட்டிருக்கும் மூன்றாவது அற்புதத்தை இந்த ஆக்கத்தில் ஆராயவிருக்கிறோம். எலிசாவின் ஊழியம் மிகவும் அதிரடியாக ஆரம்பித்ததை இந்த அதிகாரத்தின் ஆரம்பப் பகுதிகள் தெளிவாகக் காட்டுகின்றன. எலிசாவின் ஊழியம் அவருக்கு முன்னால் இருந்த எலியாவின் ஊழியத்தைப் போலவே இருந்தது. எலிசாவின் ஊழியத்தின் மத்தியில் நடந்த 14 அற்புதங்களை வேதத்தில் நாம் வாசிக்கிறோம். நாம் பார்க்கப்போகும் இந்த அற்புதமும் கூட இஸ்ரவேலின் இக்கட்டான ஒரு காலப்பகுதியில் கர்த்தர் செய்த ஒரு அற்புதமாக இருக்கிறது. இந்த அற்புதம் நம்முடைய தேவன் ஜீவனுள்ள தேவனாக, தம்முடைய மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கிற தேவனாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தேவன் தம் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று வேதம் சொல்லுகிறது. நமக்குத்தான் நம்பிக்கை குறைவாக இருக்கிறதே தவிர ஆண்டவர் தம் மக்களை இக்கட்டான நேரங்களில் கைவிடாத தேவனாக இருக்கிறார். நாம் கேட்கும் நேரங்களிலெல்லாம் உடனடியாக வந்து உதவி செய்யாவிட்டாலுங்கூட நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற அவர், தம்முடைய சித்தத்தின்படி நமக்கு விடுதலையைக் கொடுக்கிறவராக இருக்கிறார். சங்கீதம் 72:12 இல் நாம் “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.” என்று வாசிக்கிறோம். கூப்பிடுகிற எளியவன் என்பது தேவையிருக்கும் ஒருவரையும், சிறுமையானவன் என்பது வாழ்க்கையில் வசதிகள் இல்லாத வறுமையிலிருக்கும் மனிதரையும் குறிக்கிறது. இவர்களின் குரலைக்கேட்டு ஆண்டவர் விடுவிப்பார் என்று வேதம் சொல்லுகிறது. இந்த சங்கீதம் சொல்வது போலவே தேவன் தம்முடைய மக்களின் குரலைக் கேட்டு அவர்களுக்குத் துணை செய்ய வருவார். அப்படியான ஒரு அற்புதமான காரியத்தைத்தான் இந்த நான்காவது அதிகாரத்தில் பானையிலிருந்த சாப்பிட முடியாத உணவை மட்டுமல்ல, அது உயிரையே குடிக்கும் என்று அந்த தீர்க்கதரிசியின் புத்திரர்கள் சத்தம்போட்டு சொன்ன ஒரு உணவை நல்ல உணவாக மாற்றி தன்னுடைய வல்லமையை அவர்களுக்குக் காட்டினார் என்று காண்கிறோம்.

இஸ்ரவேல் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை

இந்த அற்புதத்தை நாம் கவனிக்கின்ற வேளையில் எத்தகைய ஒரு சூழ்நிலையில் இது நடந்தது என்பதையும், அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டு மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு விலகிப்போனவர்களாக, சத்தியத்தைவிட்டு விலகிப்போனவர்களாக, புறஜாதி தெய்வங்களை வழிபட்டு வந்தவர்களாக இருந்தார்கள். இஸ்ரவேல் நாடு முழுவதையும் பார்க்கிறபோது சத்தியத்தைத் தெரிந்திருந்தும் அதற்கு இடம் கொடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். நிச்சயமாக அவர்கள் பழைய ஏற்பாட்டு சம்பவங்களை வாசித்திருந்தும், எலியாவின் நாட்களில் நடந்த காரியங்களெல்லாம் தெரிந்திருந்தும், அவர்கள் கண்கள் குருடாகி இருதயம் கடினப்பட்டு சத்தியத்தை விட்டு விலகி புறஜாதி தெய்வங்களை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

யெரொபெயாம் அரசன் தாணிலும் பெத்தேலிலும் கோயில்களைக் கட்டி போலி ஆராதனையை ஆண்டவரின் பெயரில் உருவாக்கிவிட்டிருந்தான். அது அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அந்த வழியில் போவதற்குக் காரணமாக இருந்தது. ஆகாப் அரசனும் இவ்விதமான போலியான ஆராதனைக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து விடுகிறவனாக இருந்தான். ஆகவே அந்நாட்களில் ஒருவர் கூட ஆண்டவரின் இரண்டாம் கட்டளைக்கு இடம் கொடுக்காமல் இருந்தனர். அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தார்கள். நாடு முழுவதும் சிலை வழிபாடும், போலியான ஆராதனையும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சிலைகள் இல்லாத இடத்தில் ஆராதனை இருக்க முடியாது என்பதுபோல் அவர்களின் கோட்பாடு இருந்தது. சிலைகளை ஆண்டவராகப் பாவித்து வணங்குவது மிகவும் மோசமான ஒரு சத்திய விலகல் என்று வேதம் நமக்குக் காட்டுகிறது.

இஸ்ரவேல் மக்கள் இப்படியெல்லாம் ஆண்டவரை விட்டு விலகிப்போய், அவர் ஏற்படுத்தி வைத்த ஆராதனையை அவருக்கு அளிக்காமல் சிலைகளை வணங்கி சத்தியத்தை விட்டு விலகிப்போன மக்களாக வாழ்ந்து வந்த ஒரு காலப்பகுதியாக அது இருந்தது. ஆண்டவர் சத்தியத்தைக் கொடுத்தபோதும் அதை அடக்கி வைத்து, அதைவிட்டு விலகிப் போகிறபோது அவர் சும்மா இருந்துவிடுவதில்லை. அவர் அமைதியாக இருக்கமாட்டார் என்பதை வேத வரலாறு நமக்குக் காட்டுகிறது. அவ்வாறு மக்கள் செய்கிறபோது அவர் ஒன்றும் தெரியாததுபோல நடந்துகொள்ளமாட்டார். ஏனென்றால் சிலைகளை ஆண்டவராகப் பாவித்து வணங்குவதும் போலி ஆராதனையை அவருக்குக் கொடுப்பதும் மிகவும் மோசமான பாவமாக இருக்கிறது. ஏன்?

ஏனெனில், அந்த தேவன் இஸ்ரவேல் நாட்டைத் தெரிவு செய்தார் என்று நாம் வாசிக்கிறோம். இஸ்ரவேல் நாடு தானே உருவான நாடல்ல. ஆண்டவர் அந்த நாட்டைத் தெரிவு செய்து, அதைப் பயன்படுத்தித் தன்னுடைய மீட்பின் திட்டங்களை உலகத்தில் நிறைவேற்றத் தீர்மானித்திருந்தார். அதற்கு எதிராக அந்த நாடு நடந்துகொண்டது. நம் தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இறையாண்மையுள்ளவராக இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. இப்படியாக இருக்கும் தேவன் இவ்வாறு நடக்கும் அநியாயங்களையும், மோசமான கொடுமைகளையும், போலி ஆராதனைகளையும், புற தெய்வங்களைக் கர்த்தராக பாவித்து ஆராதனை செய்வதையும் எப்படி சகித்துக்கொண்டிருப்பார்? ஆண்டவர் எதுவுமே செய்யாமல் விட்டால் அந்த நாடு தொடர்ந்து வீணாய் அழிந்தே போய்விடும். ஆகவே ஆண்டவர் அதைத் தண்டிக்க ஆரம்பித்தார்.

அந்தத் தண்டனையின் காரணமாக இந்த மக்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். ஆண்டவர் எதிரி நாடுகளைப் பயன்படுத்தி இஸ்ரவேலை தாக்கினார். வரலாற்றில் வாசிக்கிறபோது ஏன் ஆண்டவர் இவ்வாறு செய்கிறார் என்று நாம் நினைக்கலாம். நாம் ஆண்டவருக்கு விரோதமாக நடக்கிறபோது ஆண்டவர் சர்வ வல்லவராக இருப்பதானால் எதையும் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளுகிற தேவனாக இருக்கிறார். ஆகவேதான் எதிரி நாட்டைப் பயன்படுத்தி இஸ்ரவேலைத் தாக்கினார். அவ்வாறு தாக்கியபோது இஸ்ரவேல் மக்களை அந்நாடு சிறைபிடித்து தங்களுடைய நாட்டிற்குக் கொண்டுபோனது. அவ்வாறுதான் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் சிறைவாசத்தை இஸ்ரவேல் அனுபவித்தது என்று அறிகிறோம்.

மகிமையான நாடாக இருக்கவேண்டிய இஸ்ரவேல், கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தேசம், அந்த மகிமையை இழந்துபோய் புறஜாதிக்காரர்கள் மத்தியில் சிறைவாசம் இருக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேல் மக்களின் பெருமையை ஆண்டவர் சுக்கு நூறாக உடைத்தார். அவர்களுடைய அகங்காரத்திற்கு ஏற்ற அடி விழுந்தது. இப்படியெல்லாம் ஆண்டவர் ஒருவனுடைய அகங்காரத்தை இல்லாமல் ஆக்குகிறபோது, இப்படி மோசமாக அடிவாங்கிவிட்டோமே என்று நினைத்து அவன் மனந்திரும்பி ஆண்டவரிடம் வந்துவிடுவான் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

மனிதனுடைய இருதயம் கோரமானது. எவ்வளவுதான் அடிவாங்கினாலும் மனிதன் தன் பாவ இயல்பினால் ஆண்டவரை மதிக்காமல்தான் நடந்துகொள்ளுவான். இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுப்போன இந்தக் காலத்திலும்கூட போலி ஆராதனையையும், சிலை வணக்கத்தையும் விட்டுவிடுவதற்கு அவர்களுடைய இருதயம் இடம் கொடுக்கவில்லை. ஆண்டவரின் பத்துக் கட்டளைகளை மீறக்கூடாது என்று பழைய ஏற்பாடு தெளிவாகச் சொல்லுகிறது. இரண்டாம் கட்டளை சிலைவணக்கத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கிறது. தன்னுடைய மக்கள் சிலைகளை வணங்கினதால்தான் எதிரி நாடுகளைப் பயன்படுத்தி அவர்களை ஆண்டவர் அடிக்கடித் தாக்கினார், அவர்களுக்குத் தண்டனையைக் கொடுத்தார் என்று வாசிக்கிறோம்.

சிலை வணக்கம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டுகிறது. ஏனெனில், சர்வ வல்லமையுள்ள தேவன், முழு நீதியும், முழு பரிசுத்தத்தையும், முழு ஞானத்தையும் உடைய தேவனை ஒரு பொருளாக உருவாக்கி, அந்தப் பொருளை ஆண்டவராக நினைத்து வழிபடுவது அவருக்கு எரிச்சலூட்டுகிறது. ஆண்டவர் என்னுடைய மகிமையை யாரோடும் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆகவேதான் அசீரியர்களைக் கொண்டு அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார் என்று பார்க்கிறோம். அவ்வாறு தண்டனையை அனுபவித்தபோதும் அந்த மக்கள் மனந்திரும்பவில்லை. தொடர்ந்து இருதயம் கடினப்பட்டு ஆண்டவரை வழிபடாமல் இருந்தார்கள். அவர்கள் பாகாலை வணங்கினார்கள். 2 இராஜாக்கள் 17: 16&18 வசனங்களில் “தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள். அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்;” என்று வாசிக்கிறோம்.

எவ்வளவு சீக்கிரம் ஆண்டவரை விட்டுவிட்டு அவருடைய கற்பனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மனிதன் இவ்வாறு சிலை வணக்கத்தைப் பின்பற்றியிருக்கிறான் என்பதை இங்கு காண்கிறோம். சிலை வணக்கம் எல்லா மனிதர்களையும் பாதிக்கக்கூடிய மிகவும் மோசமானதொன்றாகும். ஏதோவொரு காரணத்திற்காக அதை நோக்கி மனிதன் ஒடுகிறவனாக இருக்கிறான். ரோமருக்கு எழுதின நிருபத்தில் பவுல் சொன்னதுபோல சத்தியத்தை அடக்கி வைக்கும் செயல் மனிதனுக்குப் பாவத்தின் காரணமாக இயல்பாக வருகிறது. ஆகவேதான் அவனுக்கு சிலை வணக்கம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அது மனிதனைக் குருடனாக்கி வைத்துள்ளது, அழிவை நோக்கி அழைத்துப் போகிறது.

ரோமன் கத்தோலிக்க மதமும் சிலை வணக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. அது கிறிஸ்தவ மதமல்ல, அதன் அடிப்படையே சிலை வணக்கப் போதனைதான். அது ஆண்டவர் வெறுக்கும் செயலாக இருக்கிறது. எந்தவிதத்திலும் யாராலும் நியாயப்படுத்த முடியாத ஒரு காரியம் சிலை வணக்கம் என்பதை நாம் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். பாரம்பரிய சபைகளில் சிலை வணக்கம் அதிகமாக இருக்கிறது. அது தேவனுக்கு பிடித்தமில்லாதது, அவர் அதை வெறுக்கிறார். எந்தவொரு மனிதனும் சிலை வணக்கத்தில் ஈடுபட்டாலும் அவன் தேவனுடையபிள்ளையாக, விசுவாசியாக இருப்பதற்கு வழியே இல்லை.

இரண்டு உண்மைகளை நாம் எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலாவது, சிலை வணக்கம் மிகவும் பயங்கரமானது. அதை விட்டு விலகியிருப்பது மிகவும் அவசியம். வேதம் சிலை வணக்கத்தை, வெறும் உருவ வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை, நம் இருதயத்தில் ஆண்டவருக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்காமல், வேறு எதற்கெல்லாம் இருதயத்தில் இடம் கொடுக்கிறோமோ அதெல்லாம் சிலை வணக்கம்தான். ஆகவே சிலை வழிபாட்டை ஆண்டவர் வெறுக்கிறார் என்பதை அறிந்து, ஆண்டவர் எந்தவிதமாக நாம் அவரை ஆராதிக்கும் படியாக எதிர்பார்க்கிறாரோ அந்த ஆராதனையை நாம் கொடுக்க வேண்டுமே தவிர நமக்குப் பிடித்தமாதிரியான சிலை வழிபாட்டை நாம் ஒருநாளும் பின்பற்றக்கூடாது. இயேசு படத்தை வைத்து அதை நம்பி வணங்குவது, சிலுவையில் நம்பிக்கை வைப்பது போன்றவையும் தேவனுக்குப் விருப்பமில்லாதவையாகும். அவரை நாம் ஆவியினாலும் சத்தியத்தினாலும் வழிபடும்படியாக ஆண்டவர் கேட்கிறார். அப்படியானால் நம் இருதயம் ஏன் அவருக்கு விருப்பமில்லாத காரியங்கள் பக்கம் போக வேண்டும்? நீங்களே உங்களைக் கேட்டுப்பாருங்கள்.

இரண்டாவதாக, ஆண்டவர் சகலவிதமான உருவ வழிபாட்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாமென்று சொல்லுகிறார். ஆண்டவரை உதறிவிட்டுப் பணத்திலும், உலகத்திலும், வேறு எதன்மேலெல்லாம் நம்பிக்கை வைக்கிறோமோ அதெல்லாம் சிலை வழிபாடுதான். அதைச் செய்வதன் மூலம் ஆண்டவரை எரிச்சலூட்டுகிறோம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேல் நாட்டுமக்கள் அதைத்தான் வழமையாகச் செய்து வந்தார்கள். உருவ வழிபாடு அந்த நாட்டு மக்களின் வழிபாடாக மாறியது. சத்தியத்தை விட்டு விலகிப்போய் சத்தியத்திற்குக் காதையும் இருதயத்தையும் கொடுக்காதவர்களாக இருந்தார்கள்.

இஸ்ரவேல் நாட்டில் பஞ்சம்

அந்நாட்களில் இஸ்ரவேல் நாட்டில் மிகவும் மோசமாக இருந்த இன்னொரு நிலை உணவுப் பஞ்சம். இரண்டாவது இராஜாக்கள் புத்தகத்தில் உணவு அதிகமாக வந்துபோகின்ற காரியமாக இருக்கிறது. சாப்பாட்டுப் பஞ்சம் அங்கு பெருமளவில் இருந்தது. என்றைக்காவது சாப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறீர்களா? சாப்பாடு இல்லாமல் இன்றைக்கும் உலகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். இந்தியாவிலும் எத்தனையோ இடங்களில் சாப்பாடில்லாமல் இருக்கிறார்கள். ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு முறை சாப்பாடு இல்லாமல் போவதைப் பற்றி நான் சொல்லவில்லை. குடிப்பதற்குத் தண்ணீரே இல்லாமல் வாரக்கணக்கில் உணவே இல்லாமல் இருக்கும் கடுமையான பஞ்சத்தைப் பற்றிக் கூறுகிறேன். உண்மையிலேயே அப்படியான பஞ்சத்தை நாம் அனுபவித்தது இல்லை. சாப்பாட்டுப் பஞ்சம் மிகவும் கோரமானது. பாரதியார் கூட ஒருவனுக்கு உணவு இல்லையென்றால் இந்த உலகத்தையே அழித்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். இஸ்ரவேல் நாடு அந்த நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

38 வது வசனத்தில் நாம் “தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று;” என்று வாசிக்கிறோம். சாப்பிடுவதற்கு அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. நாட்டில் மழை பெய்யவில்லை, பயிர்கள் வளரவில்லை, கடுமையான வெயில் காணப்பட்டது, எதைப் பயிரிட்டாலும் அது அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை. இவ்விதமான சூழ்நிலை நாட்கள், மாதங்கள் எனக் கடந்து போய்க்கொண்டிருந்தால் மனிதன் கஷ்டப்படுவான். உணவை வேறொரு இடத்திலிருந்து கொண்டுவருவதற்கும் வழியில்லை என்றால் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். தேசம் முழுவதும் இவ்வாறாக உணவுப் பஞ்சம் காணப்பட்டது. அந்தப் பஞ்சம் வேறு பல பிரச்சனைகளையும் அவர்களுக்குக் கொண்டுவந்தது. அவ்வாறு பஞ்சத்தை சந்தித்தபோது ஆண்டவரை வழிபடாத, அவருக்கு விரோதமான மக்கள் மட்டுமல்ல, ஆண்டவருடைய மக்களும் பஞ்சத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவிசுவாசிகள் விசுவாசிகளைப் பார்த்து: இந்த நேரத்தில் உன் தெய்வம் உனக்கு உதவவில்லையா? என்று கேட்டார்கள்.

38 வசனத்தில் வாசிக்கிற கில்கால் என்ற பகுதியில் சிறிதளவும் உணவு இல்லை. அறுவடைக்கு என்று எந்தப் பயிறுமில்லை. மனிதன் என்ன செய்வதென்றே தெரியாமல் குடும்பமாகப் பெற்றோர்கள், பிள்ளைகள் என எல்லோரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நிலை. அவிசுவாசிகள், விசுவாசிகள் என்ற பாரபட்சமின்றி முழுநாடும் அதால் பாதிக்கப்பட்டது. இத்தகைய நிலையை உருவாக்கினவரே ஆண்டவர்தான். இந்தப் பஞ்சம் கர்த்தருடைய தண்டனையாக நாட்டிற்கு வந்தது. இது ஆண்டவரால் அனுப்பப்பட்ட ஒரு தண்டனை.

ஏன் ஆண்டவர் அவ்வாறு செய்தார்? இஸ்ரவேல் மக்கள் ஆண்டவரை விட்டு விலகிப்போய் அவரை வழிபடாமல் அவருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை வேறு பொருள்களுக்குக் கொடுத்து, அவர் கேட்டபடி அவருக்கான ஆராதனையைக் கொடுக்காமல் இருக்கிறபோது அவர்களைத் தண்டிக்கிற அதிகாரம் ஆண்டவருக்கு இருக்கிறது. அகங்காரத்தினால் ஒருவன் அவரைவிட்டு விலகிப்போகிறபோது ஆண்டவர் பேசாமல் இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியுமா? அவர் இவ்விதமாகத் தண்டனையை அனுப்புகிறார். ஏன் அனுப்புகிறார்? அவர்களைத் தண்டிப்பதற்கு மட்டுமல்ல, தண்டித்து அவரை நோக்கித் திரும்பும்படியாகவும், மனம் மாறும்படியாகவும் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். ஏன் அவ்வாறு செய்கிறார்? ஆண்டவர் அந்த நாட்டோடு ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறார். அந்த நாட்டைப் பெரும் மதிப்புள்ள தேசமாக மாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவர்கள் இப்படி நடந்துகொள்கிறபோது அவர் தண்டிக்காமல் வேறு என்ன செய்வார்?

வேதத்தில் பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கையை மீறினால் என்னென்ன தண்டனைகள் வரும் என்பதையெல்லாம் வாசிக்கிறோம்.

“உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது. என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள். இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.” (லேவியராகமம் 26:20,25&28)

ஆண்டவர் சொன்ன வார்த்தையை மீறக்கூடாது, அவர் பொய் சொல்லுகிறவர் அல்ல. என் வார்த்தையை மீறினால் நிச்சயமாகத் தண்டிப்பேன் என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உபாகமம் புத்தகத்திலும் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.

“மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும். ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.” (உபாகமம் 28:38&40).

ஆகவே இப்போது இஸ்ரவேல் நாட்டில் கோரமான பஞ்சம் வந்திருக்கிறது, எங்கேயும் தண்ணீரில்லை. எங்கும் சென்று எதுவும் வாங்க முடியாத நிலை. ஆண்டவரை விட்டு விலகிப்போனதால் இவ்விதமான தண்டனையை ஆண்டவர் அனுப்பிருக்கிறார்.

இதே நேரத்தில் எலிசா தீர்க்கதரிசி நாட்டில் இருக்கிறார். அவர் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார். பல இடங்களில் அவரால் உருவாக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம் பண்ணி வந்தார்கள். ஆனால் மக்கள் அடியோடு தேவனுடைய வார்த்தையை நிராகரித்துவிட்டு சுயநலத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருந்தபோது ஆண்டவர் இவ்விதமான தண்டனைகளை அனுப்பி வைத்தார். ஆண்டவர் ஒருவர் இருப்பதை மறந்து வாழும் மக்களிடம் பேசுவதற்காக அவர் தண்டனையை அனுப்புகிறார். ஆகவேதான் இந்த பஞ்சமும் அவரால் அனுப்பப்பட்ட அவருடைய எச்சரிக்கைச் செய்தியாக இருந்தது. இதன்மூலம் ஆண்டவர் அவர்களுக்கு வலிகளையும் துன்பங்களையும் ஏற்படுத்தி அவருடைய இருதயங்கள் இந்தச் சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடச் செய்தார்.

மேலும் இந்நேரத்தில் அந்த தேசத்தில் இருந்த பரிசுத்தவான்களின் நிலையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவரை விசுவாசிக்கிற மக்கள் பெருந்தொகையாக இல்லாவிட்டாலும் அந்த நாட்டிலும் விசுவாச மக்கள் காணப்பட்டனர். ஆனால் அவர்களும்கூட இந்தத் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டபோது எசேக்கியேல், தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றோரும் சிறைபிடிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்தனர். ஆகவே துன்பங்ளை முழு தேசமும் அனுபவிக்கிறபோது அந்தத் துன்பங்களைத் தேவனுடைய மக்களும் அனுபவிக்க வேண்டியிருந்தது.

ஏன் துன்பங்கள் நாடு முழுவதும் பரவிக் காணப்பட்டன? அந்த நாடு ஆத்மீக ரீதியில் ஆண்டவருக்கு எதிராக மிகவும் அநியாயமாக நடந்து கொண்டிருந்தது. ஆகவே தேவனுடைய மக்களும், தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும் கூட இந்தத் துன்பத்தை அனுபவித்தார்கள். இவ்விதமாக ஆண்டவர் மோசமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் அவிசுவாசிகளைத் தண்டிப்பதற்காக அனுப்புகிறபோது தேவனுடைய மக்களும் அவற்றை அனுபவிக்காமல் இருக்கமுடியாது. ஆகவே ஆண்டவர் நாடுகளைத் தண்டிக்கப் பொதுவான நியாயத்தீர்ப்புகளை அனுப்புகிறபோது ஆண்டவருடைய மக்களை அது பாதிக்காது என்று நாம் நினைக்கக்கூடாது. எல்லோரும் அந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும். கொடிய நோய்கள் பரவி மக்களைப் பாதிக்கிறபோது கிறிஸ்தவர்களும் அதில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே ஆண்டவருடைய கிரியைகளைப் பற்றித் தவறான எண்ணங்கள் நமக்கு இருக்கக்கூடாது. அவிசுவாச மக்களின் இருதயம் கடினப்பட்டுப் போயிருப்பதால் தண்டனைகள் வந்திருந்தாலும், தேவனுடைய மக்களும் அவற்றைக் கடந்து போக வேண்டிய நிலை ஏற்படும்.

அப்படியானால் இதனை நாம் எப்படி புரிந்துகொள்ளுவது? தன்னைவிட்டு விலகிப்போய் தன்னை எதிர்ப்பவர்களுக்கு ஆண்டவர் பொதுவான ஒரு நியாயத்தீர்ப்பை அனுப்புகிறபோது கிறிஸ்தவர்கள் அதை அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்குக் காரணமிருக்கிறது. ஆண்டவர் அதன்மூலம் நம்மோடும் பேசுகிறார். அதன் மத்தியில் நாம் கடந்து செல்லுகிறபோது நம்மைச் சுத்திகரிப்பதற்காக ஆண்டவர் அதனைப் பயன்படுத்துகிறார். அவிசுவாச மக்களுக்குத் தண்டனையாக வந்து அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கித் திரும்பும்படியாக ஆண்டவர் அதனைப் பயன்படுத்துவார். விசுவாச மக்கள் அதனை அனுபவிக்கிறபோது அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு ஆத்மீக விருத்தியடைந்து மேலும் கிருபையில் வளருவதற்கு ஆண்டவர் அதைப் பயன்படுத்துவார். விசுவாச மக்களின் ஆத்துமாவை இதெல்லாம் அழித்துவிட முடியாது. அவிசுவாசிகளின் மீது ஆண்டவர் அனுப்புகிற எந்தத் தண்டனையும் விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை ஒருபோதும் அழித்துவிடாது.

வெகு காலத்திற்கு முன்பு அமெரிக்காவின் நியூயோர்க்கில் இரட்டைக் கட்டடங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது கிறிஸ்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டனர். அன்று ஏன் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழும்பின. அவ்வாறு கேள்விகளைக் கேட்கக் கூடாது. பொதுவான துன்பங்கள் உலகில் உள்ள அனைவரையும் பாரபட்சமில்லாமல் பாதிக்கும். இதன்மூலம் ஆண்டவர் தனிப்பட்ட விதத்தில் என்னோடு என்ன பேசுகிறார், இந்தச் சூழ்நிலையில் எந்தவிதத்தில் திருந்தி இன்னும் விசுவாசத்தோடு ஆண்டவரோடு வாழ முடியும் என்பதைக் கேட்கவேண்டும்.

அந்தக் காலத்தில் இஸ்ரவேலில் தேவனுடைய மக்கள் சிறிதளவினராகவே இருந்தார்கள். இருந்தபோதும் அவர்களும் இந்தத் துன்பத்தை அனுபவித்தார்கள். வறுமையும் பஞ்சமும் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகளையும் தொடாமல் இல்லை. பஞ்சத்தின் காரணமாக அவர்கள் சாப்பிடுவதற்கும் உணவு இல்லாமல் இருந்தது. ஆகவே அவர்கள் இருந்த நிலைமை மிகவும் மோசமான நிலைமையாக இருந்தது. இப்படியான நேரத்தில்தான் அவர்கள் எலிசாவைச் சந்திக்கிறார்கள்.

எலிசாவின் வருகையும், அவர் மூலம் நடந்த அற்புதமும்

எலிசா தீர்கதரிசிகளின் புத்திரர்களைப் பார்ப்பதற்காக கில்காலுக்கு வந்தார். தேசம் மிகவும் மோசமாக இருந்த சூழ்நிலையில் எலிசா கில்காலுக்கு வருகிறார். “எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று;” (2 இராஜாக்கள் 4:38) என்று நாம் வாசிக்கிறோம். அவ்வாறு எலிசா அங்கு வந்தபோது அவிசுவாச மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. எலிசாவைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான சிந்தனையுமில்லை. நான் ஏற்கனவே விளக்கியிருப்பதுபோல எலிசா ஒரு பெரிய தீர்க்கதரிசி. ஆண்டவருடைய வார்த்தை அவரிடத்தில் இருந்தது. எங்கு எலிசா இருந்தாரோ அங்கு தேவனுடைய வார்த்தை இருந்தது. எங்கு எலிசா இருந்தாரோ அங்கு ஆண்டவர் இருந்தார் என்றுகூட சொல்லலாம். 2 இராஜாக்கள் புத்தகத்தில் பல அதிரடியான அற்புதங்களை நாம் வாசிப்பதற்குக் காரணம், திக்கற்றவர்களுக்கு உதவுகிற ஆண்டவர் தீர்கதரிசிகளின் மூலம் அவற்றை அன்று செய்தார் என்பதுதான்.

அவ்விதமான சூழ்நிலையில் எலிசா கில்காலுக்கு வருகிறார், ஆனால் மக்கள் எந்தவிதத்திலும் அதைக் கணக்கெடுக்கவில்லை. இருந்தபோதும் தேவனுடைய மக்களுக்கு அது மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. அவர்கள் சிறிதளவினராக இருந்தபோதும் அவர் வந்தது அவர்களுக்கு மிகந்த உற்சாகத்தைக் கொடுத்தது. பஞ்சத்தில் உணவு இல்லாமல் இருப்பதையெல்லாம் மறந்து தேவனுடைய மனிதன் அங்கு வந்திருக்கிறார் என்று அதில் ஆனந்தப்பட்டார்கள். ஏன் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்? எலிசாவிடமிருந்தே தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு வந்தது. அந்த வார்த்தையைக் கேட்கவும், அதைப் படிக்கவும், இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்ளவும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். எப்படி சூரியன் வருகிறபோது வானத்திலிருக்கிற முகில்கள் இல்லாமல் போய் வெளிச்சம் வருமோ அதேபோல் எலிசாவின் வருகை கில்காலில் தேவனுடைய மக்களுக்குப் பெரிய ஆசீர்வாதமாக இருந்தது. இந்தத் தேவனுடைய தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் போல நாம் சந்தோஷப்படுகிறோமா என்று இந்நேரத்தில் நம்மை நாமே கேட்டுப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்த வாழ்க்கையில் துன்பமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது. ஆண்டவர் அவ்விதமான வாக்குறுதிகளை யாருக்குமே அளிக்கவில்லை. வாழ்க்கையில் துன்பங்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ மாறிமாறி வந்துபோகும். துன்பங்கள் இல்லாமல் இருந்தால் நமக்கு ஜெபம் தேவை இல்லை.

ஜெபம் நமக்குத் தேவை. பிரச்சனைகள் துன்பங்கள் வருகிறபோது அதைப் பயன்படுத்தி ஆண்டவரிடத்தில் நாம் பேசுகிறோம். கோபப்பட்டு, ஆண்டவரைக் குறைகூறி, நம்மோடு இருக்கிற மக்களை நாம் குறைகூறிக்கொண்டு இருக்கிறோமா? இல்லையெனில் அந்த நிலையிலும் அதையெல்லாம் தூக்கி ஒருபுறம் வைத்துவிட்டு தேவனுடைய வார்த்தையைக் கேட்கத் துடிக்கிறோமா? தேவனுடைய வார்த்தையை வாசித்து ஆறுதலடையப் பார்க்கிறோமா? நீங்கள்தான் உங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு எல்லாவற்றையும்விட தேவனுடைய வார்த்தை முக்கியமாகக் காணப்பட்டது. அதனால்தான் எலிசா அங்கு வந்தபோது அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். ஏனென்றால் அவரிடத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்கலாம், நமக்கு ஆறுதல் கிடைக்குமென்று எதிர்பார்த்தார்கள்.

நடந்த அற்புதம் எவ்விதம் ஆரம்பிக்கிறது என்பதை 38 வது வசனம் நமக்குச் சொல்லுகிறது. “தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.” (2 இராஜாக்கள் 4:38). தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பது எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே அவன் தன் வேலைக்காரனை நோக்கி அவர்களுக்குக் கூழ் காய்ச்சு என்று சொல்லுகிறார். “ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.” (2 இராஜாக்கள் 4:39). ‘ஒருவன்’ என்பது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவராகக் கூட இருக்கலாம். அவன் சென்று அங்கு பார்த்த கீரை வகை சாப்பிடுவதற்குத் தகுந்ததாக அவனுக்குத் தெரிந்து அதைக் கொண்டுவந்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, வெட்டிப் பானையில் போட்டான் என்று காண்கிறோம்.

இந்தக் கீரை வகையைப் பற்றி ஆராய்ந்தவர்கள் அது நன்மையானதல்ல என்று சொல்லுகிறார்கள். வயிறு சரியில்லை என்றால் அதைச் சுத்தம் செய்வதற்கு அதில் வருகிற காய் உதவும் என்று சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் அதை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் அது உடலுக்கே ஆபத்தாகப் போய்விடும் என்கிறார்கள். 39 வது வசனத்தில் சொல்லுவதுபோல அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அதைக் கொண்டுவந்தவனுக்கும் தெரியவில்லை, அங்கிருந்த ஏனைய தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு நல்ல கீரையாகத்தான் கொண்டுவந்திருப்பான், நாம் சமைத்துக் கூழ் செய்து குடிக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதைப்பற்றி மேத்யூ ஹென்றி என்கிற வேத விளக்கவுரையாளர் இவ்விதம் சொல்லுகிறார்.

“தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இயற்கை தத்துவத்திலும் கீரை வகைகளின் தன்மையும் பற்றி கொண்டிருந்த ஞானத்தைக் காட்டிலும் இறையியலிலும் வேதத்தைக் கற்றுக் கொள்ளுவதிலுமே கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்.”

இறையியல் தெரிந்தளவுக்கு எந்தக் கீரையைச் சாப்பிட வேண்டும், எந்தக் கீரையை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று நகைச்சுவையாகச் சொல்லுகிறார். இவ்வாறு கூழ் தயாரித்தபோது அடுத்து அங்கு ஏற்படுகிற பிரச்னையை நாம் பார்க்கிறோம். 40 வது வசனத்தில் “சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.” (2 இராஜாக்கள் 4:40) என்று வாசிக்கிறோம். இங்கு ஜனங்கள் என்று சொல்லுகிறபோது அங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் மட்டுமல்ல மற்ற ஜனங்களும் இருந்தார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதை ஆங்கில வேதத்தில் பார்க்கிறபோது அவர்கள் (men) சாப்பிடும்படியாகக் கொடுத்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதை ஏனைய ஜனங்கள் என்று சொல்ல முடியாது. அவர்களையும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் தீர்க்கத்தரிசிகளின் புத்திரர்கள் எல்லாம் ஆண்களாகத்தான் இருந்தார்கள்.

அவர்கள் அந்தக் கூழை சாப்பிட்டபோது அதிலிருந்து வந்த மணமோ அல்லது அதன் சுவையோ அது சாப்பிடக்கூடாத ஒரு பதார்த்தம் என்று அவர்களுக்கு நன்றாக உணர்த்தியுள்ளது. அதைக் குடித்தால் ஆபத்தில் முடிந்துவிடும் என்று அறிந்து, தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று அவர்கள் சத்தமிட்டார்கள் என்று நாம் பார்க்கிறோம். அந்த நேரத்தில்தான் எலிசா ஒரு அற்புதத்தை செய்தார் என்று நாம் அறிகிறோம். 41 வது வசனத்தில் “அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.” என்று நாம் வாசிக்கிறோம்.

எலிசா செய்த இந்த அற்புதத்தில், அவர் தன் கைகளைத் தலைக்குமேல் உயர்த்திப் பெரிய ஜெபம் எல்லாம் பெரிதாகச் செய்யவில்லை. நாகமானுக்கு தொழுநோய் வந்து மிகவும் கஷ்டப்பட்டான். அதை அதிக காலம் மறைத்து வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவிக்கு வேலையாளாக இருந்த ஒரு சின்ன சிறுமி இஸ்ரவேலில் இருக்கும் எலிசாவிடம் போனால் சரியாகிவிடும் என்று சொன்னதைக் கேட்டு, பெரிய படையோடு தாரை தப்பட்டை எல்லாம் வாசித்து, அதிகமான தங்கம் வெள்ளி எனப் பொருட்களை எடுத்து வந்து, ஊரே பார்க்கும்படி பெரிய அற்புதம் செய்து எலிசா குணப்படுத்துவார் என்று அகங்காரத்தோடு எண்ணி வந்தான். அப்போதும் எலிசா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. எலிசா நாகமானைப் பார்த்து நீ யோர்தான் நதிக்குச் சென்று அதில் எழுதரம் மூழ்கி எழு அப்போது தொழுநோய் சுகமாகும் என்று சொன்னார். அங்கும் எலிசா மக்கள் பார்க்கும்படிப் பெரிதாக ஜெபம் எல்லாம் செய்யவில்லை. அதேபோல இந்தப் பகுதியிலும் வசனத்தை வாசிக்கும்போது எந்தத் தாரை தப்பட்டையும் வாசிக்காமல் முடிந்துபோன அற்புதமாகத்தான் இதைக் காண்கிறோம்.

41 வது வசனத்தை வாசிக்கும்போது அதில் எலிசா சிறிது மாவைக் கொண்டு வரக் கேட்டுக்கொண்டதைக் காண்கிறோம். அந்த மாவை அவர் பானையில் போட்டார். அதைப் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்குமென சிந்தித்துப் பாருங்கள். வெறும் மாவைக் கொண்டு வந்து பானையில் போட்டுவிட்டு அதை ஜனங்களுக்குக் கொடு என்று சொல்லுகிறாரே, இது ஒரு அற்புதமா என்று எண்ணியிருப்பார்கள். அற்புதம் செய்தால் அதிரடியாக இருக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்ந்திருந்திருப்பார்கள்.

நாகமானுக்குக்கூட அன்று ஏன் கோபம் வந்தது? எதையாவது பெரிதாகச் செய்து தன்னை எலிசா குணப்படுத்துவார் என்று அவன் எண்ணினான். அனால் எலிசா தன்னை இந்த அழுக்குத் தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கச் சொல்லுகிறாரே என்று அவன் கோபப்பட்டான். இங்கேயும் நாம் பார்க்கிறபோது இதைவிட முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றுதான் நமக்கு எண்ணத்தோன்றும். மாவைப் போட்டு விஷத்தை எப்படிச் சரிசெய்ய முடியும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இங்கு ஆண்டவர் சாதாரணமாக மனிதன் சிந்திக்காத, எதிர்பார்க்காத ஒரு வழியில் எலிசா தீர்க்கதரிசியின் மூலம் அற்புதம் செய்வதைக் காண்கிறோம்.

ஆண்டவர் சாதாரணமாகத் தோன்றுகிறவற்றைக் கொண்டு எவ்வளவோ அற்புதங்களைச் செய்திருக்கிறார். இதே புத்தகத்தில் 2 இராஜாக்கள் 2:20&21 வது வசனங்களை வாசிக்கிறபோது,

“அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”

என்று நமக்கு விளக்கப்பட்டிருக்கிறது. எரிகோவில் நீருற்றுகள் மிகவும் மோசமாக இருந்த சூழலில் அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு நீரூற்றுகளை அவர் சரி செய்ததைப் பற்றி வாசிக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் காரியங்களைக் கொண்டு ஆண்டவர் மாபெரும் அற்புதத்தைச் செய்கிறார் என்று பார்க்கிறோம். நாம் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கும் பகுதியில் வரும் அற்புதத்தைப் பற்றி விரிவுரையாளர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்.

“சர்வ வல்லவரான கர்த்தரின் கையில் ஒரு கையளவு மாவு, சாவை விரட்டி நரகத்திற்கு ஏமாற்றத்தை விளைவித்து பூமியில் உப்பாக இருப்பவர்களைப் பாதுகாத்து இந்த உலகத்துத் திருச்சபை தொடரக் காரணமாக இருந்தது.”

ஆண்டவர் தம் பிள்ளைகளைப் பாதுகாத்து இந்த உலகத்தில் திருச்சபைகள் தொடர அந்த அற்புதம் காரணமாக இருந்தது. ஆண்டவர் செய்கிற காரியங்களை சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. சில நேரம் நமக்கு மோசமான வியாதியிருந்து ஜெபம் செய்வோம், ஆனால் இது வெறும் ஜெபத்தால் நீங்கிவிடுமா என்று யோசிக்கக்கூடாது. ஒருவேளை அடுத்தநாள் நீங்கள் தூங்கி எழும்புகிற நேரம் அது சரியாகி இருக்கலாம். அப்படியானால் ஜெபத்தினால் சரியாகாமல் வேறு எதனால் அது குணமாகியிருக்கும்? நாம் செய்யவேண்டியது ஜெபம். ஜெபத்தைச் செய்துவிட்டு அவரை நம்ப வேண்டும். ஆண்டவர் எப்போது குணப்படுத்த வேண்டுமோ அப்போது அதைச் செய்வார். அதேபோலத்தான் இங்கு இந்த அற்புதம் நடந்தது. 41 வது வசனத்தில், “ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.” (2 இராஜாக்கள் 4:41) என்று நாம் வாசிக்கிறோம். பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று என்றால் அதிலிருந்த ஆபத்து உடனே இல்லாமல் போயிற்று என்று அர்த்தமாகும்.

இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள்

கில்காலில் நடந்த இந்த அற்புதம் இரண்டு மூன்று வசனங்களில் மட்டுமே விளக்கப்பட்டிருந்தாலும், நாம் ஆத்மீக ரீதியில் பயன்படுவதற்கான வெளிப்படுத்தலாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, நாம் இதிலிருந்து நம்முடைய கர்த்தர் ஜீவனுள்ளவர் என்பதை அறிகிறோம். இஸ்ரவேல் தேசம் மோசமாக இருந்ததற்குக் காரணம், மக்கள் கர்த்தரை விட்டு விலகிப்போய் சிலைகளை வழிபட்டதுதான். ஜீவனுள்ள கர்த்தரை வழிபட்டு அவருடைய வார்த்தையின்படி நடக்க வேண்டிய மனிதர்கள், அவரைவிட்டு விலகிப்போய் எதையோ வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்த்தர் ஜீவனுள்ளவர், அவரைத் தவிர வேறு தேவன் இல்லை, அவரைத்தான் நாம் வழிபட வேண்டும். இதுபோன்ற ஒரு கொடுமையான காலப்பகுதியில் ஆண்டவர் தம் மக்களின் உதவிக்கு வருகிறார், தீர்க்கதரிசிகளின் புத்திரர்களைக் காப்பாற்றுகிறார். தான் செய்த அந்த அற்புதத்தின் மூலமாக அவர்களுக்கு ஆறுதலைக் கொண்டுவந்தார். அதன் மூலம் அவர்: நானே ஜீவனுள்ள தேவன் என்னை நம்பினவர்கள் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை என்று அவர்களுக்குச் சொல்லுகிறார்.

இஸ்ரவேலில் இருக்கும் எல்லோரும் பாகாலை வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பக்தியுள்ளவர்கள் தொடர்ந்து அந்த ஜீவனுள்ள தேவனில் விசுவாசம் வைத்திருந்தார்கள். நீங்கள் அந்த ஜீவனுள்ள தேவனை இந்நேரத்தில் நம்புகிறீர்களா? நீங்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். நீங்கள் யாரை விசுவாசிக்கிறீர்கள்? யாருக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுத்துள்ளீர்கள்? இவை நம்மையே நாம் ஆராய்ந்து பார்த்துக் கேட்கவேண்டிய கேள்விகளாகும்.

இன்றைக்கு அநேகர் ஒரு மதத்தைப் போல இயேசுவை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை மாறவில்லை, உங்கள் இருதயத்தில் அன்றாடம் மனந்திரும்புதல் ஏற்படவில்லை, உங்கள் குற்றம் குறைகளை வார்த்தையின் அடிப்படையில் கேட்டு மாற்றி வைக்கும் பக்குவமில்லை, உள்ளுக்குள் ஒரு போலித்தனமான வாழ்க்கையை இரகசியமாக வாழ்ந்து வெளியில் விசுவாசி மாதிரி நடந்து கொள்ளுகிறீர்கள். நான் சொல்லுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா? யோசித்துப்பாருங்கள். எந்தளவுக்கு நீங்கள் ஜீவனுள்ள தேவனுக்கு உண்மையானவர்களாக இருக்கிறீர்கள்? நம் வாழ்க்கை சரியில்லாமல் இருந்து, தவறான வழிகளில் போய்க்கொண்டிருந்து, ஆண்டவரை அசட்டைப் பண்ணி வாழ்ந்து, நமது மனைவி பிள்ளைகளை தேவனுக்காக விசுவாசமாக வாழ்வதற்கு காரியங்களை செய்யாமல் இருந்து வந்தால் அது எவ்வளவு மோசமான காரியம் தெரியுமா? ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகி அவருக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது மிகவும் மோசமானது.

இரண்டாவதாக, நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களையும் ஆண்டவர் செய்கிறவராக இருக்கிறார். அவருக்கு எதுமே கடினமானதல்ல. இறையாண்மையுள்ள தேவனாக சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதனால் அவரால் செய்ய முடியாதது ஒன்றுமேயில்லை. அவர்தான் படைப்பின் தேவன். வேதத்தில் இஸ்ரவேலின் வரலாற்றை வாசித்துப் பார்க்கிற போது எத்தனையோ அற்புதங்களை அவர் செய்திருக்கிறார். அவ்வாறு அவர் பெரிய அற்புதங்களையெல்லாம் செய்தபோது ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து இன்னொரு கட்டத்திற்கு போகும்படியான காலத்தில்தான் அதுபோன்ற அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் அவற்றைச் செய்தததற்குக் காரணம் என்ன தெரியுமா? அவருடைய திட்டத்தின்படி மீட்பை நடத்திச் செல்லுவதற்காகத்தான்.

மோசேயை வழிநடத்தி இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து இஸ்ரவேலை ஒரு நாடாக அமைப்பது ஆண்டவருடைய திட்டமாக இருந்தது. அவ்விதம் அமைப்பதற்காக ஆண்டவர் அற்புதங்களைச் செய்தார். ஏனென்றால் பார்வோன் இஸ்ரவேல் மக்களை விடமாட்டேன் என்றிருந்தான். அப்போது ஆண்டவர் அதிரடியான அற்புதங்களைச் செய்து தன்னுடைய மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதைப் பார்க்கிறோம். அதற்குப் பிறகு எலியாவின் மூலமாகவும் எலிசாவின் மூலமாகவும் அதிரடியான அற்புதங்கள் செய்திருப்பதைக் காண்கிறோம். பின்பு பாபிலோன் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பிவந்து ஆலயத்தையும் அதன் மதில்களையும் கட்டுவதற்கு ஆண்டவர் செய்த அற்புதங்களைப் பாருங்கள். புறஜாதி ராஜாக்களே அனுமதி கொடுத்து அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். ஆகவே ஆண்டவர் அவிசுவாச இராஜாக்களையும் பயன்படுத்தி தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிற தேவனாக இருக்கிறார்.

நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்தப் பகுதியிலும் அந்த அற்புதத்தை ஆண்டவர் செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால் தன் மக்களான தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு வாழ்வு கொடுப்பதற்காக அதைச் செய்தார். அதுமட்டுமல்ல, இதேபோல இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் செய்த அற்புதங்களுக்குக் காரணம் மீட்பின் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். இதேபோலத்தான் நாம் வாழ்கிற இந்தக் காலத்திலேயும் அற்புதங்களைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். சுவிசேஷம் உலகெங்கும் பிரசங்கிக்கப்படும், அவ்வாறு பிரசங்கிக்கப்படும்போது ஆண்டவர் வருவேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தை மீறாத தேவன் அந்தத் திட்டம் நிறைவேறுவதற்காக நிச்சயமாகத் தொடர்ந்து அற்புதங்களைச் செய்வார்.

பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவமே இந்த உலகத்தில் இல்லையோ என்கிற நிலை காணப்பட்டது. பன்னிரண்டு நூற்றாண்டுகள் ரோமன் கத்தோலிக்க மதம் வளர்ந்து யாரும் வேதம் வாசிக்க முடியாத நிலை இருந்தது. வேதத்தை வாசிப்பவர்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்கிறவர்களுக்கும் மரணம் என்கிற நிலை இருந்த காலத்தில் ஆண்டவர் அதையெல்லாம் மாற்றினார். மார்டின் லூத்தர், ஜான் கால்வின் போன்றோரை எழுப்பி அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்து மறுபடியும் கிறிஸ்தவமும் கிறிஸ்தவ சபைகளும் உலகத்தில் ஏற்படுவதற்கு அவர் கிரியை செய்தார் என்று பார்க்கிறோம். இதற்கு முன்னால் வரலாற்றைப் பார்க்கிறபோது பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நானூறு வருடங்கள் இருண்ட காலங்கள் காணப்பட்டது. இஸ்ரவேலரின் மோசமான நடத்தையின் காரணமாக ஆண்டவர் இந்த உலகத்தில் இல்லையோ என்று நினைக்கிற அளவிற்கு ஒரு இருண்ட காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முதலில் யோவான்ஸ்நானகன் வந்தார், பிறகு இயேசு வந்தார். ஆகவே தேவனால் முடியாதது ஒன்றுமேயில்லை. நம்முடைய காலத்திலும் சத்தியத்தைக் கேட்பதற்கு யாருமே ஆர்வமாக இல்லை. எல்லோருக்கும் சரீர சுகம் வேண்டும், பொருட்கள் வேண்டும், இந்த உலகத்தில் சுலபமாக வாழ்வதற்கு என்ன வேண்டும் என்றுதான் எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு மனிதன் தன் இருதயத்தில் கடினப்பட்டுப் போயிருக்கிறான். இதுபோன்ற நேரத்தில் ஒரு ஆத்மீக எழுப்புதலுக்காக ஜெபிக்க வேண்டும். லூத்தர், கல்வின் போன்ற அதிரடிப் பிரசங்கிகளை நம்மினத்தில் எழுப்பும்படியாகவும், நல்ல சபைகள் உருவாகும்படியாகவும், நல்ல சபைத் தலைவர்கள் உருவாகவேண்டுமென்று ஆண்டவரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும். ஆண்டவர் நிச்சயம் அதற்குப் பதிலளிப்பார், அவருடைய திட்டப்படி எல்லாம் நடந்துகொண்டே இருக்கிறது. அவரால் முடியாதது ஒன்றுமில்லை. அவரில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மூன்றாவதாக, இங்கு நடந்த அற்புதம் நமக்கு ஆறுதலாக இருக்கிறது. என்ன விதத்தில் ஆறுதலாக இருக்கிறதென்றால், தாழ்மையோடு ஆண்டவருக்கென்று பணி செய்வதற்கு நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனென்றால் இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் கடுமையான பஞ்சத்தையும் பலவிதமான துன்பத்தையும் அனுபவித்து வந்தபோதும் அவர்கள் எல்லோரும் வேதத்தை எலிசாவிடமிருந்து கற்றுக்கொண்டு வந்தார்கள். வேத சத்தியங்களை மற்ற இடங்களுக்குப் போய்ச் சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களுடைய தேவைகள் நிறைவேறாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்தார்கள். ஆண்டவர் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறார். இந்தமுறை மட்டுமல்ல இதற்குமுன் எவ்வளவோ முறை எலிசா வந்திருக்கிறார், ஆண்டவர் அவரைப் பயன்படுத்தி அவர்களுடைய தேவையை நிறைவேற்றிக்கொண்டே போகிறார். ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. எவ்வளவு கடினமான சூழலிலும் ஆண்டவர் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார் என்பதை 2 இராஜாக்கள் புத்தகத்தை வாசித்துப் பார்த்தால் தெரியும். அடிக்கடி அவர்களை ஆண்டவர் பாதுகாத்து வந்தார், இந்த இடத்திலும் அவர் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறார். தாழ்மையோடு அவரில் தங்கியிருந்து அவருக்காகப் பணி செய்கிறபோது, அவர் நிச்சயம் நம்மைப் பாதுகாப்பார்.

வாழ்க்கையின் கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாம் அநேக காரியங்களைச் சிந்தித்தாலும் நம்மால் எதுவும் செய்யமுடியாது. அத்தகைய நேரங்களில் நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார், அவர் நமக்கு துணை செய்வார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் நம்மோடு இருப்பார். எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு வேதப் புத்தகம் போல் இருந்தார். அதேபோல நம்முடைய தேவன் எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நம்மைக் காப்பாற்றுவார் என்று அவரில் நாம் தாழ்மையோடு தங்கியிருக்க வேண்டும். தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு அன்றைக்கு உணவு இல்லாமல் இருந்தது, ஆனால் எலிசாவின் மூலம் அவர்களுக்கு உணவு கிடைத்தது. அவர்களுடைய தேவையை ஆண்டவர் நிறைவேற்றி வைத்தார். அதேவிதமாக ஆண்டவர் நமக்கும் செய்வார். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறவர்களாக, அவர் வழியில் நடக்கிறவர்களாக இருந்தால் நாம் எந்தக் கவலையும் அடைய வேண்டிய அவசியமே இல்லை. நாம் இதிலிருந்து தாழ்மையோடு உண்மையான கிறிஸ்தவர்களாக ஆறுதலடைந்து ஆண்டவருக்கு விசுவாசமாக இருப்போம்.

 

விசுவாசம் இல்லாத நாட்டில் விசுவாசம்

2 இராஜாக்கள் 4:42-44

2 இராஜாக்கள் 4 ஆம் அதிகாரத்தின் இறுதிப் பகுதியை இந்த ஆக்கத்தில் ஆராயப் போகிறோம். இந்த அதிகாரத்தில் நான்கு அற்புதங்கள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே மூன்று அற்புதங்களை விரிவாக ஆராய்ந்து வந்திருக்கிறோம். இந்த நூலை எழுதியவர் இந்த நான்கு அற்புதங்களையும் கால அடிப்படையில் அடுத்தடுத்து வரும்படியாக எழுதினார் என்று நான் நினைக்கவில்லை. இவற்றைத் தலைப்பின் அடிப்படையில் அவர் ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறார்.

இந்த நான்காவது அதிகாரத்தில் வருகிற முதலாவது அற்புதம், ஆண்டவர் எவ்வாறு ஒரு கடனைத் தீர்த்தார் என்பதை விளக்குகிறது. கடன் தொல்லையிலிருந்த விதவைக்கு அதிலிருந்து விடுபட இறையாண்மையுள்ள தேவன் அவளுடைய பிரச்சனையை எவ்வாறு தீர்த்து வைத்தார் என்பதை இங்கே காண்கிறோம்.

இரண்டாவது அற்புதம், இறையாண்மையுள்ள ஆண்டவர் மரணத்திலிருந்து எவ்வாறு வெற்றி தந்தார் என்பதை விவரிக்கிறது.

மூன்றாவது அற்புதம், ஆபத்திலிருந்து எவ்வாறு விடுவித்தார் என்பதை விவரிக்கிறது.

கடைசியாக நான்காவது அற்புதத்தை இந்த அதிகாரத்தின் கடைசிப் பகுதியில் வாசிக்கிறோம். இதில் இறையாண்மையுள்ள கர்த்தர் ஒரு பற்றாக்குறையை எவ்வாறு நீக்கி வைக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்.

இந்த அற்புதங்களிலிருந்து நாம் கர்த்தரின் குணாதிசயங்களில் ஒன்றான, அவர் சர்வ வல்லமையுள்ளவர் என்பதையும் அவர் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய இறையாண்மையுள்ள தேவனாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுகிறோம். இந்தப் பகுதியில் நாம் ஆராயப் போகிற அற்புதம் ஒரு பெரிய அற்புதமாக இருக்கிறது. ஆனால் அது மூன்றே வசனங்களில் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த அற்புதம் அன்று இஸ்ரவேலிலிருந்த தேவனுடைய மக்களுக்கு ஆறுதலைக் கொண்டு வந்தது. இப்போது நமக்கும் நிச்சயமாக ஆறுதலைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் பகுதியில் மூன்று வசனங்கள் உள்ளன. அதில் மூன்று மனிதர்களை நாம் காண்கிறோம். அந்த மூன்று மனிதர்களில் இரண்டு பேரை ஏற்கனவே நமக்குத் தெரியும். மூன்றாவதாக இருக்கும் மனிதன் நமக்குப் புதிதாக அறிமுகமாகிறார். ஆகவே இந்த அற்புதத்தை இந்தப் புதிய மனிதனிலிருந்து ஆரம்பித்து ஆராயலாம்.

முதல் மனிதன்: அப்பங்களோடு வந்த மனிதன்

புதிதாக அறிமுகமாகும் மனிதனுக்கு ஒரு பெயரை நாம் கொடுக்க வேண்டுமென்றால் “அப்பங்களோடு வந்த மனிதன்” என்று எளிமையான பெயரைக் கொடுக்கலாம். 42 வது வசனத்தில் “பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் வந்தான்” (2 இராஜாக்கள் 4:42) என்றிருக்கிறது. இந்த மனிதனுடைய பெயர்கூட நமக்குச் சொல்லப்படவில்லை. அவன் பாகால் சலீஷாவிலிருந்து வந்தவன் எனும் வரலாறு மட்டுந்தான் நமக்குத் தெரியும். பாகால் சலீஷா என்கிற இடம் அந்நாட்களில் பாகாலை வணங்கிய மக்களுக்கெல்லாம் முக்கியமான ஆராதனை இடமாக இருந்தது. பாகாலை முதன்மையான தெய்வமாக புறஜாதி மக்கள் வழிபட்டார்கள். அதே நேரத்தில் பாகாலைச் சுற்றி நிறைய குட்டி தெய்வங்கள் இருந்திருக்கின்றன. இந்த இடம் எருசலேமிலிருந்து 16 மைல் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மனிதன் கில்காலிலிருந்த தேவனுடைய மனிதனாகிய எலிசாவிற்கு சில பொருட்களைக் கொண்டு வருகிறான். “முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்;” (2 இராஜாக்கள் 4:42) என்று வாசிக்கிறோம். இந்த மனிதன் செய்த காரியம், அதாவது தேவனுடைய மனிதனுக்கு இந்தப் பொருட்களைக் கொடுத்தது மிக முக்கியமான காரியமாகும்.

இரண்டு காரணங்களுக்காக இந்த மனிதன் செய்த காரியம் முக்கியத்துவம் பெறுகிறது.

முதலாவது காரணம்: நாட்டிலிருந்த பஞ்சம்.

அந்நாடு கடுமையான பஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. அந்தப் பஞ்சத்திற்குக் காரணம் ஆண்டவருடைய பொதுவான தண்டனையை அவர்கள் அனுபவித்ததுதான். நாம் ஒருபோதும் இத்தகைய பஞ்சத்தை அனுபவித்தது இல்லை. அவர்கள் பஞ்சத்தால் சாப்பிட உணவு இல்லாத நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்நாட்களில் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும் ஆண்டவரின் பொதுவான தண்டனையின்கீழ் அந்தப் பஞ்சத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எலிசா இஸ்ரவேலின் பல பகுதிகளுக்குச் சென்று தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். தற்கால இறையியல் கல்லூரியைப் போல அதை அவர் நடத்தி வந்தார். கில்காலில் அவர் பயிற்சி அளித்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் நூறு பேர் இருந்தார்கள். கில்காலில் நூறுபேர் பயிற்சி பெற்று வந்தார்கள் என்று சொல்லும்போது அவர்களுடைய குடும்பங்களும் அவர்களோடு அங்கு இருந்தார்கள். அவர்களுடைய குடும்பங்களையும் சேர்த்துப் பார்க்கிறபோது நானூறுக்கும் மேற்பட்டோர் அங்கு வாழ்ந்து வந்திருப்பார்கள். இவ்வளவு பேருக்கும் உணவளிக்க வேண்டியிருந்தது. இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் கர்த்தருடைய பணியைச் செய்து வந்தார்கள். வேதத்தைப் படித்து அதில் நன்றாகத் தேர்ச்சி அடையும்படியாகத் தங்களைத் தயாரித்துக் கொள்ளுவதும், மற்றவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையைப் போதிப்பதும் அவர்களுடைய பணியாக இருந்தது. அவர்களுக்குத் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் கவனித்துக்கொள்ளுகிற பொறுப்பும் இருந்தது. இந்தப் பஞ்சச் சூழ்நிலையில் தேவன் அவர்களைக் கவனித்துக்கொண்டார்.

பழைய ஏற்பாட்டை வாசிக்கிறபோது ஆலயத்திலிருந்த ஆசாரியர்களுக்கும் மற்ற லேவியர்களுக்கும் அவர்களுடைய தேவையைக் கவனித்துக் கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை ஆண்டவர் செய்துவைத்திருந்தார். அதனை நாம் லேவியர் புத்தகத்தை வாசித்துப் பார்த்தால் அறிந்துகொள்ள முடியும். உலகத்தில் எந்தக் காலப்பகுதியாக இருந்தாலும் தேவனுக்காக உழைக்கும் தேவனுடைய மனிதர்களுக்கும் தேவைகள் இருந்தன. நம் காலத்திலும் ஆண்டவருடைய ஊழியப் பணிகளைச் செய்கிறவர்களுக்கு தேவைகள் இருக்கின்றன. அவர்களுக்கு உண்ணுவதற்கு உணவும், உடுத்திக் கொள்ளுவதற்கு உடையும், மருந்து வகைகளும் மற்றும் ஓய்வெடுப்பதற்கு ஓய்வு நேரங்களும் தேவையாக உள்ளன. இதுபோன்ற தேவைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனிக்கும்படியாக ஆண்டவர் ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

இப்போது இஸ்ரவேல் இருந்த நிலைமையே வேறாக இருந்தது. யெரொபெயாம் தாணிலும் பெத்தேலிலும் கோயிலைக் கட்டி மக்களை புறஜாதி தெய்வங்களை வழிபடும்படி செய்து பாவத்தில் வழிநடத்தினான் என்று 1 இராஜாக்கள் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதன் காரணமாக நாட்டில் பாகால் வழிபாடு நிரம்பிக் காணப்பட்டது. ஆகாப் அரசனும் மோசமான அரசனாக இருந்து அதேவிதமாக செய்துகொண்டிருந்தான். அரசன் எப்படியோ அப்படியே நாடும் இருக்கும் என்ற அடிப்படையில் அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் போய் புறஜாதி தெய்வங்களை அதிகமாக வணங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த தேசத்தில் கர்த்தருக்கு மதிப்புக் கொடுத்தவர்கள் மிகக் குறைந்த தொகையினரே இருந்தனர். அந்தக் குறைந்த தொகையில் முதன்மையானவர்கள் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும், எலிசா தீர்க்கதரிசியுமே.  ஒருபுறம் நாடு முழுவதும் புறஜாதி வழிபாடும், கர்த்தருக்கு மதிப்புக் கொடுக்காமல் வயிற்றுப் பஞ்சம் மட்டுமல்ல வசனப் பஞ்சமும் அதிகரித்து அந்நாட்டில் காணப்பட்டது.

மறுபுறம் ஒழுக்கக்கேடுகள் அதிகரித்துக் காணப்பட்டது. எங்கு சிலை வழிபாடு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் ஒழுக்கக்கேடுகள் அதிகரித்திருப்பதைக் காணமுடியும். இந்தியாவில் அவற்றை நிச்சயம் காணமுடியும். அந்தக் காலத்தில் கிராமத்தில் ஊர் பெரிய மனுஷர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் ஒரு சின்ன வீடும் வைத்திருப்பது வழக்கம். அது இன்றைக்கும் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஏமி கார்மைக்கல் இந்தியாவிற்கு வந்திருந்தார். அந்நாட்களில் பெண் பிள்ளைகளை தூக்கி எறிந்துவிடுகிற வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. அந்தப் பெண் பிள்ளைகளைத் தத்தெடுத்து கவனத்தோடு வளர்த்து வந்தார். இன்றைக்கும் டோனவூரில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது.

சமுதாயத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அவ்வாறு தூக்கியெறிந்து விடுகிற வழக்கம் இருந்தது. அதுமட்டுமல்ல, அவ்வாறு பிறக்கிற பெண் பிள்ளைகளைக் கோயிலுக்குக் கொடுத்து விடுகிற வழக்கமும் இருந்தது. அவ்வாறு சாமிக்கென்று கொடுத்த பெண் பிள்ளைகளை ஊரிலுள்ள ஊர்த் தலைவர்கள் விபச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். எங்கெல்லாம் ஜீவனுள்ள தேவனை வணங்காமல் சிலை வணக்கத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் சிலை வணக்கப் பாவத்தோடு இந்த ஒழுக்கக்கேடுகளும் அதிகரித்துக் காணப்படும்.

ஜீவனுள்ள தேவனை வழிபடுவதை விட்டுவிட்டு கல்லையும் மண்ணையும் வணங்கும்படியாக இருதயம் மோசமாக இருப்பதால், ரோமர் முதலாவது அதிகாரத்தில் சொல்லுவதுபோல ஒழுக்கக்கேடுகள் தானாகவே அங்கு வந்துவிடும். இஸ்ரவேல் நாட்டில் சிலை வழிபாட்டோடு சேர்ந்து ஒழுக்கக்கேடுகளும் பெருமளவில் காணப்பட்டது. அதுமட்டுமல்ல, இப்போது அங்கு பஞ்சமும் ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு மோசமாக அரசன் முதல் குடிமக்கள் வரையும் சத்தியத்தைவிட்டு விலகியிருக்கும் தேசத்தில், ஒழுக்கக்கேடுகள் நிரம்பிக் காணப்படுகிற இடத்தில், கடவுளுடைய மக்களுக்குத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு யாராவது உணவளிப்பார்களா? ஆகவே இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்தார்கள். கடவுளை வணங்காத அரசனிடமிருந்தும் எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்த அரசாங்கத்திற்கு இவர்களைப் பிடிக்காமல் இருந்தது. ஏனெனில், நாடு முழுவதும் மிகவும் ஆழமாக புறஜாதி பாகால் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அதாவது, தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் தங்கள் குடும்பங்களோடு சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கில்காலே எங்கிருந்து உணவு வரப்போகிறது என்று எதிர்பார்த்த ஒரு சூழலில் பாகால் சலீஷாவில் இருந்த மனிதன் வருகிறான். அவன் தன்னோடு என்ன கொண்டு வருகிறான்? தேவனுடைய மனிதனுக்கு உணவு கொண்டு வருகிறான் என்று வாசிக்கிறோம். ஆகவேதான் அவனுடைய வருகையை முக்கியமானதாகக் காண்கிறோம்.

இரண்டாவது காரணம்: அப்பங்களோடு வந்த மனிதனின் தேவ பக்தி

அப்பங்களோடு வந்த மனிதன் எந்தளவுக்கு தேவ பக்தியோடு இருந்தான் என்பதை நாம் இந்தப் பகுதியிலிருந்து அறிந்துகொள்கிறோம். இஸ்ரவேல் நாடு புறஜாதி தெய்வ வழிபாட்டை நாடிப் போவதற்கு முன்பாக, ஆண்டவருடைய ஆலயத்தில் எருசலேமிலேயே ஆராதனை நடக்க வேண்டும், எல்லோரும் அங்குதான் போகவேண்டும் எனும் விதியை ஏற்படுத்தி வைத்திருந்தார் ஆண்டவர். இது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா ஏற்படுத்தி வைத்திருந்த வழிமுறையாகும். ஆகவே தேவனை ஆராதித்தவர்கள் எல்லோரும் எருசலேமிற்குச் சென்று ஆராதித்தார்கள். ஆண்டவர் கேட்டதையெல்லாம் அங்கு சென்று கொடுத்தார்கள் என்று பார்க்கிறோம். இந்த வழிமுறை கொஞ்சக் காலத்திற்குத் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆசாரியர்கள், லேவியர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அன்று நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டார்கள். ஆண்டவருடைய ஆராதனை அன்று நன்றாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த நிலைமை மாறியது. இஸ்ரவேலிலிருந்த குறைந்தளவானோர் இந்த நிலையில் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் யெரொபெயாம் வழியில் சென்று புறஜாதி தெய்வங்களை வழிபட்டு, நாடு முழுவதும் பாகால் வழிபாட்டில் ஈடுபட்டு, சத்தியத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அநியாயமான ஒழுக்கக்கேடுகள் பெருகி, எந்த விதத்திலும் ஆண்டவருக்கோ எருசலேமிலிருந்த ஆலயத்தின் ஆராதனைக்கோ அக்கறை காட்டாமல் இருந்தார்கள். ஆண்டவர் கேட்டதைக் கொடுக்க வேண்டுமென்ற அக்கறை யாருக்குமே இல்லாமல் இருந்தது. ஓய்வுநாளை அனுசரித்தவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். அதை அசிங்கப்படுத்தியவர்களே நாட்டில் அதிகமாக இருந்தனர்.

இத்தனை மோசமாக பக்தியில்லாத நிலையில் நாடு இருந்தபோது இந்த அப்பங்களைக் கொண்டுவந்த மனிதன் விடாமல் தேவனை ஆராதித்து வந்தவனாக இருந்தான். அதை எப்படி உங்களால் சொல்ல முடியும்? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். இந்த மனுஷன் தேவனுடைய மனிதனைத் தேடிக் கொண்டுவந்த உணவுப் பொருட்கள் சாதாரணமானவையல்ல. அவன் கொண்டுவந்தவை விசேஷமானவை. ஏன் இவன் தேவனுடைய மனிதனைத் தேடி வந்தான் என்று முதலில் கவனிக்க வேண்டும்.

ஆண்டவர் லேவியராகமத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் விதிகளின்படி இந்த மனுஷன் இஸ்ரவேலில் இருக்கின்ற ஆலயத்திற்குப் போய் அங்கு செலுத்த வேண்டியவற்றை வழமையாகச் செலுத்தி வந்தான். தசமபாகங்களையும் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுக்க வேண்டுமென்ற விதியை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருந்தார். இஸ்ரவேலில் தெய்வ பக்தியுள்ளவர்களின் ஆராதனை முறைகளில் அது ஒரு பகுதியாக இருந்தது. தெய்வ பக்தியுள்ள இந்த மனிதனுக்கு அதைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் ராஜா நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பாகாலைத்தான் வணங்க வேண்டும், எருசலேம் ஆலயத்திற்கு சென்று வழிபடக்கூடாதென்று சட்டம் போட்டிருந்தான்.

எருசலேம் ஆலயத்திற்குச் சென்று எதுவும் செய்யக்கூடாதென்ற கட்டளை இருந்ததால் உண்மையான ஆசாரியர்கள் தாங்களே தங்களை விலக்கிக்கொண்டனர் (Excommunicate). அதாவது இதுபோன்றதொரு அரசாங்கத்திற்குக் கீழிருந்து ஆராதனையில் ஈடுபடமாட்டோம் என்று தாங்களே தங்களை ஆசாரித்துவப் பணியிலிருந்து விலக்கிக் கொண்டனர். ஆகவே இந்த மனிதன் என்ன செய்ய முடியும்? இவன் உண்மையாகவே ஆண்டவரை பக்தி விருத்தியோடு ஆராதித்த மனிதன், ஆண்டவருடைய வார்த்தையின்படி நடக்க வேண்டுமென்று விசுவாசித்து வாழ்ந்த மனிதன், தேவனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இருந்த மனிதன், ஆனால் இஸ்ரவேலில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவருக்குச் செய்ய வேண்டியதை செய்யமுடியாத நிலையிலும், ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உதவ முடியாத நிலையிலும் இருந்தான்.

இந்த மனிதன் நிச்சயமாக ஆண்டவரிடத்தில் வருத்ததோடு ‘ஆண்டவரே! நீர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆராதனையை செய்யமுடியாத நிலையில் இருக்கிறேன், உமக்குப் பலிகளையும், ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டியதையும் செய்யமுடியாமல் இருக்கிறேன்’ என்று ஜெபத்தில் விண்ணப்பித்திருப்பான். ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறவராக இருக்கிறார். இருதயத்தில் உண்மையான விசுவாசத்தோடும் மனந்திரும்புதலோடும் ஜெபிக்கிறபோது நம்முடைய தேவன் நிச்சயமாக அந்த ஜெபங்களைக் கேட்கிறவராக இருக்கிறார். இந்த மனிதனுடைய ஜெபத்தையும் ஆண்டவர் கேட்டார்.

நாட்டில் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, கில்காலில் எலிசா இருப்பதையும் கண்டுபிடித்து ஆண்டவர் ஆசாரியர்களுக்குக் கொடுக்கும்படியாகக் கட்டளையிட்டதை நிறைவேற்றுவதற்காக அவன் 16 மைல்களைக் கடந்து பிரயாணம் செய்து கில்காலுக்கு வந்திருக்கிறான். அவன் செய்த செயல் அவனுடைய பக்தியையும், கடவுள் நம்பிக்கையையும், தேவனுடைய வார்த்தையில் வைத்திருந்த நம்பிக்கையையும் விளக்குகிறது. நாட்டில் எவ்வளவு கஷ்டமிருந்தாலும், அவபக்தி நிறைந்து காணப்பட்டாலும், எவ்வளவு ஒழுக்கக்கேடுகள் காணப்பட்டாலும், சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் தேவனுக்குச் செய்யவேண்டியதைச் செய்தே தீருவேன் என்ற உறுதியோடு உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு அவன் எலிசாவை சந்திக்க வந்திருந்தான். தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை அவன் செய்யத் துடித்தான்.

லேவிராகமம் புத்தகத்தில் “முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.” (லேவியராகம் 2:14) என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோல எண்ணாகமம் புத்தகத்தில் “அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன். தங்கள் தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்;” (எண்ணாகமம் 18:12&13) என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் உபாகமம் புத்தகத்தில் “ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.” (உபாகமம் 18:4&5) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வேதத்தில், ஆண்டவருக்கு கொடுக்கவேண்டும், ஆசாரியர்களுக்கும் கொடுக்க வேண்டும், லேவியர்களுக்கும் கொடுக்கவேண்டும் போன்ற விதிகள் காணப்படுகின்றன. ஆனால் இப்போது எப்படிக் கொடுப்பது? அரசனுடைய கட்டளையினால் ஆலயம் மூடப்பட்டிருக்கிறது. ஆசாரியர்களும், லேவியர்களும் அங்கு இல்லை. ஆகவே இந்த மனிதனுக்குக் கொடுக்காமல் இருப்பதால் ஆண்டவர் சொன்னபடி ஆராதிக்காமல் இருக்கிறோமே என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டது. இப்போது இஸ்ரவேலிலும் தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து நீண்ட பயணம் செய்து கில்காலுக்கு வந்து தன்னுடைய முதற்பலன்களை எல்லாம் கொடுக்க வருகிறான். இவ்வளவு கஷ்ட நேரத்திலும் தேவனுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்பதைக் கவனியுங்கள்.

நமக்கு அந்த உறுதியிருக்கிறதா? நம்முடைய கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம்? இந்த மனிதன் நாடு முழுவதும் ஒழுக்கக்கேடுகளும், அவபக்தியும், பஞ்சமும் அதிகரித்துக் காணப்பட்டபோதும் ஆண்டவருக்குத் தன் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தான் என்று பார்க்கிறோம். எல்லாவற்றையும்விட அவன் தன் வாழ்க்கையில் ஆண்டவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தான். நீங்கள் யாருக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். கடினமான சூழ்நிலையில் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்கிற எண்ணம் உங்கள் இருதயத்தில் இருக்கிறதா?

பாகால் சலீஷாவிலிருந்து வந்த மனிதன் அவ்வாறுதான் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினான் என்று பார்க்கிறோம். இந்த மனிதனுடைய பெயர் நமக்குத் தெரியாது. இஸ்ரவேலில் மிகக் குறைந்த அளவில் இருந்த விசுவாசிகளில் அவனும் ஒருவனாக இருந்தான். விசுவாசத்திற்கு முன் மாதிரியாக இருந்தான் என்று பார்க்கிறோம். வருத்தம், துன்பம், நாட்டில் காணப்பட்ட ஒழுக்கக்கேடு, அவபக்தி எதுவும் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை. இதுவும் ஆண்டவர் செய்கிற அற்புதமென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் மனிதர்களுடைய வாழ்க்கையில் இடைப்பட்டு இருதயத்தில் நித்திய ஜீவனை விதைத்த பின், அவரே அவர்களுக்குள்ளாக தன் ஆவியின் மூலம் குடியேறுகிறபோது அவர்களை யாரும் அசைக்க முடியாது. அந்த விசுவாசம் உண்மையானதாக இருந்தால் அவர்கள் ஆண்டவருக்கு அடிமைகளாக இருப்பார்கள். கிறிஸ்துவுக்கு அடிமைகளாக இருப்பார்களென்று பவுல் தன்னுடைய நிருபங்களில் எழுதியிருக்கிறார். அவர்கள் உலகத்திற்கோ உலகத்தின் தெய்வங்களுக்கோ அடிமைகள் அல்ல. விசுவாசிகள் ஆண்டவருக்கு அடிமைகளாக உள்ளனர். அவர்களிடம் இருக்கும் எல்லாமே ஆண்டவருக்குச் சொந்தமானது. ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கையே அவர் கொடுத்த வாழ்க்கைதான்.

இரண்டாவது மனிதன்: எலிசா

இந்தப் பகுதியில் நாம் பார்க்கிற இரண்டாவது நபர் எலிசா. “பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான். அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” (2 இராஜாக்கள் 4:42&43) என்று நாம் வாசிக்கிறோம்.

இங்கு எலிசா தன்னுடைய வேலைக்காரனிடம் அப்பத்தை எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்லுகிறார். அப்போது வேலைக்காரன், இருபது அப்பங்களை நூறுபேருக்கு எவ்வாறு கொடுப்பது என்று கேட்கிறான். அவர்களுக்குச் சாப்பிடக்கொடு, அவர்கள் சாப்பிட்டபின் மீதியிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எலிசா சொன்னார். இந்த இடத்தில் எலிசா தீர்க்கதரிசியாக இருந்தாலுங்கூட அவரும் கர்த்தரையே நம்பி இருந்தார் என்று பார்க்கிறோம். இங்கு நாம் ஆண்டவரை விசுவாசித்த ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிறோம். இதற்கு முன் பார்த்திருக்கும் அற்புதங்களில் முதலில் நீரூற்றுகள் மோசமாக இருந்தது, அதில் உப்பை போடும்படி எலிசா சொன்னார், அப்போது அது குடிக்கக்கூடிய தண்ணீராக மாறியது. அடுத்தாக ஒரு பையன் செத்துப்போனான். அப்போது அவர் வீட்டின் கதவை மூடி அந்தப் பையன் மீது படுத்தார், அப்போது அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அடுத்ததாக பானையில் காய்ச்சின கூழ் விஷமாக இருந்தது. அந்தக் கூழில் மாவைப் போடச் சொன்னார், அப்போது அது குடிக்கக்கூடியதாக மாறியது.

இந்த அற்புதம் நடக்கும்போது அப்படியான ஒன்றையுமே எலிசா செய்யவில்லை. எலிசா முழுமையாக ஆண்டவரிலும் அவருடைய வார்த்தையிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. இங்கு நடந்த அற்புதம் கர்த்தரின் வார்த்தையில் தங்கியிருந்தது. இருபது அப்பங்களும், தாள் கதிர்களையும் கொண்டு நூறு பேருக்கு மட்டுமல்ல, அந்த நூறு பேரின் குடும்பங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கிடைக்கும் என்று எலிசா நம்பினார். எலிசா தன் மீது நம்பிக்கை வைக்கவில்லை, கர்த்தரில் நம்பிக்கை வைத்தார் என்று பார்க்கிறோம். அன்று ஆண்டவர் அவர்கள் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்படிச் செய்தார் என்று பார்க்கிறோம்.

எலிசா கர்த்தரின்மீதும் அவர் வார்த்தையின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கை எப்படிப்பட்டது என்பதை 43 வது வசனம் நமக்குக் காட்டுகிறது. “அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” (2 இராஜாக்கள் 4:43). மீதியுண்டாகும் என்று சொன்னது எலிசாவின் வார்த்தையல்ல, அதைக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எலிசா சொல்லுகிறார்.

எலிசா தீர்க்கதிரிசி நிச்சயமாக இதற்கு முன்பு இஸ்ரவேல் வரலாற்றில் வானாந்தரத்தில் ஆண்டவர் செய்த அற்புதங்களை நினைத்துப் பார்த்திருப்பார். வனாந்தரத்தில் நடந்த அற்புதத்தை உபாகமம் புத்தகத்தில் “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.” (உபாகமம் 8:3) என்று வாசிக்கிறோம்.

ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை அளித்துப் போஷித்தார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் பிழைப்பான் என்று உணர்த்தும்படிக்கு அப்படிச் செய்தார் என்று பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவைக் கொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் அந்த மன்னாவைப் பார்க்கிறபோது அவர்களுடைய நம்பிக்கை அந்த மன்னாவின் மீது இருக்கக்கூடாது, அந்த மன்னாவைக் கொடுத்த தேவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் மன்னாவை பார்க்கிறபோது ஒவ்வொரு நாளும் நாம் மன்னாவினால் பிழைக்கவில்லை, ஆண்டவருடைய ஒவ்வொரு வார்த்தையினால் பிழைக்கிறேன், ஆண்டவர் சொல்லியிருக்கிறபடி செய்திருக்கிறார் என்று அவர்கள் நம்பியிருக்கும்படி அப்படிச் செய்தார்.

உங்கள் கஷ்டமான நேரங்களில் உங்கள் வீட்டில் உணவு பொருட்கள் இருந்தால் நிச்சயமாக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவீர்கள். ஆனால் உங்கள் நம்பிக்கையை அந்த பொருட்களின்மீது வைத்துவிடக்கூடாது. அந்தப் பொருட்களைக் கொடுக்கும் தேவன் மீதே உங்கள் நம்பிக்கை இருக்கவேண்டும். அப்பத்தினால் அல்ல ஆண்டவர் சொல்லியிருக்கிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று சொல்லியிருக்கிறபடி கொடுக்கிற தேவன் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். நம்முடைய வாழ்க்கையும் ஜீவனும் சாப்பாட்டிலிருந்து அல்ல, அதைக் கொடுக்கிற தேவனிடத்திலிருந்துதான் வருகிறது. இங்கு எலிசா ஆண்டவரை நம்பினார். இவ்விதமான நம்பிக்கை அவர் மீது இருந்ததனால்தான் வேலைக்காரனிடம் சொல்லுகிறார், அவர்களுக்கு அப்பங்களைக் கொடு, ஆனால் மீதி உண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். எலிசா சொன்னபடியே அன்றைக்கு நடந்தது. இங்கு வார்த்தை செய்த அற்புதத்தை நாம் காண்கிறோம்.

நாம் எந்தளவுக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருக்கிறோம்? கஷ்டமான நேரத்தில் எதிர்காலம் என்னவாகும் என்று இருக்கிறபோது, வேலையைப் பற்றிய கவலைகள் ஏற்படுகிறபோது நம் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கிறதா? இதெல்லாம் அவருக்கு முன்பாக ஒன்றுமேயில்லை. இதையெல்லாம் ஒரு நிமிடத்தில் சரிசெய்யக்கூடிய தேவனாக அவர் இருக்கிறார். அவரால் முடியாதது ஒன்றுமேயில்லை. ஆகவே இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் கர்த்தர்மீது உறுதியான நம்பிக்கையை வைத்து, அந்த நம்பிக்கை தொடர்ந்து நம்மில் நிலைத்திருக்க வேண்டுமென்று அந்த நாளுக்குரியதை நீங்கள் செய்துவருகிறீர்களா? இல்லாவிட்டால் இஸ்ரவேல் மக்களைப்போல ஒவ்வொருநாளும் உனக்குச் சாப்பாடு கொடுப்பேன், உன்னைக் காப்பாற்றுவேன் அவர் சொன்னதை மறந்து அன்றைக்குச் சாப்பிட வேண்டியதைச் சாப்பிடாமல் அடுத்த நாளைக்கும் தேவையானதைச் சேர்த்து வைக்கப் பார்க்கிறீர்களா? நாம் அப்பத்தினால் பிழைப்பதில்லை, அவருடைய வார்த்தையினால் பிழைக்கிறோம். கர்த்தருடைய வார்த்தை எல்லாவற்றையும்விட பெரியது என்பதைக் காட்டுவதற்காகத்தான் எலிசா அந்த அற்புதத்தை எந்தவொரு பொருளைக் கொண்டும் செய்யவில்லை.

மூன்றாவது மனிதன்: தீர்க்கதரிசியின் வேலைக்காரன்

கடைசியாக இந்தப் பகுதியில் வருகிற மூன்றாவது மனிதன் வேறு யாருமில்லை எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரன். இந்த தீர்க்கதரிசியின் வேலைக்காரன் என்ன சொல்லுகிறான் என்பதைக் கவனியுங்கள். “அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான்.” (2 இராஜாக்கள் 4:43). அப்போது தீர்க்கதரிசி அவர்களுக்குச் சாப்பிடக்கொடு பிறகு மீதியும் இருக்குமென்று சொல்லுகிறார். “அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.” (2 இராஜாக்கள் 4:44). தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையை நம்பி அதன்படி செய்வதுமட்டுமே அவனுக்குப் பொறுப்பாக இருந்தது. அப்படி அவன் செய்தபோது, அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது என்று பார்க்கிறோம். அவர்கள் சாப்பிடச் சாப்பிட அந்த உணவுப் பொருட்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டே போயிற்று. பற்றாக்குறை என்பதே இல்லாத அளவிற்கு அன்றைக்கு ஒரு அற்புதத்தை ஆண்டவர் செய்தார்.

இந்த அற்புதம் நமக்கு எதை நினைவுபடுத்துகிறது? சுவிசேஷ நூல்களில் இயேசு இந்த உலகத்திலிருந்தபோது நாலாயிரம் பேருக்கு ஒருமுறையும், ஐயாயிரம் பேருக்கு இன்னொரு முறையும் உணவளித்தார் என்று பார்க்கிறோம். ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது மூன்று சுவிசேஷ நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யோவான் ஆறாவது அதிகாரத்தில் அந்திரேயா இயேசுவிடம், இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கிறது. ஆனால் இது எல்லோருக்கும் போதாது என்று சொன்னான். எலிசாவின் வேலைக்காரனும் நூறு பேருக்கு எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்டான். இந்த வேலைக்காரன் சொன்னதற்கும் அந்திரேயா சொன்னதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. ஆனால் இயேசு என்ன சொன்னார்? ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து அதை அவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார். அதை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது அவர்களுக்குப் பசி தீர்ந்தது மட்டுமல்ல, மீதமிருந்ததை பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள் என்று பார்க்கிறோம். நீண்ட காலங்களுக்கு முன்பு நடந்த இந்த அற்புதத்தில் அவர்கள் சாப்பிட்டபின் மீதியும் இருந்தது என்று பார்க்கிறோம்.

இங்கு நாம் இயேசு கிறிஸ்துவைக் காண்கிறோம். ஏனென்றால் இயேசு கிறிஸ்து நானே ஜீவ அப்பம் என்று சொல்லியிருக்கிறார். நான் மனிதர்களுக்கு உணவளிப்பவன் மட்டுமல்ல, அதற்கெல்லாம் மேலாக பாவ விடுதலையை நான் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லுகிறார். வேறு யாரும் அதைக் கொடுக்க முடியாது. இயேசு தன்னை விசுவாசிப்பவர்களோடு எப்போதும் இருக்கிறார். பாகால் சலீஷாவிலிருந்து வந்த மனிதன் அதை நமக்குச் சுட்டுகிறான். இயேசு கிறிஸ்துவை நீங்கள் எந்தளவுக்கு விசுவாசிக்கிறீர்கள்? வேதத்தில் காணப்படும் இத்தனை உதாரணங்களும் கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபிக்கின்றன. நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரிதாக இருந்தபோதும், உலகமே நம்மைக் கைவிட்டபோதும் தேவன் நம்மைத் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இப்படியிருக்க நாம் நம்பிக்கையோடு அந்தத் தேவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோமா?

இன்னும் ஆண்டவரை அறியாமல், இயேசுவை விசுவாசிக்காமல் கடினப்பட்ட இருதயத்தோடு நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்றைக்கே அதற்கு ஒரு முடிவுகட்டி இயேசுவை விசுவாசியுங்கள். இயேசு உங்கள் குறைகளைப் போக்குவார், உங்கள் பாவத்திலிருந்து உங்களுக்கு விடுதலையைக் கொடுப்பார், நித்திய ஜீவனைக் கொடுப்பார், பரலோகத்திற்குப் போகிற வாழ்க்கையை அவர் உங்களுக்கு இலவசமாகக் கொடுப்பார். அவரை நீங்கள் எப்போதும் நம்பலாம். அவர் உங்களை ஒருபோதும் கைவிடவேமாட்டார். வேத வரலாறு உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறது. அன்றைக்கு நடந்த அற்புதம் இயேசுவை நினைவுபடுத்துகிறது. இன்றைக்கு நீங்கள் ஜீவ அப்பமாகிய இயேசுவை விசுவாசித்து, பாவ மன்னிப்பை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளையாக இருக்கப்பாருங்கள்.

 

சீரியாவுக்குப் போகிறது சுவிசேஷம்

2 இராஜாக்கள் 5:1-15

நாம் இந்த ஆக்கத்தில் ஆராயவிருக்கும் வேதப்பகுதியானது வழமையாக வேதத்தை வாசிக்கின்ற கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பகுதி. 2 இராஜாக்கள் நூல் முழுவதும் வருவது போல் இந்த அதிகாரத்திலும் சில அதிரடியானதும் அற்புதமானதுமான நிகழ்வுகளை நாம் வாசிக்கிறோம். இந்தப் பகுதியில் மூன்று முக்கியமான நபர்களைச் சந்திக்கிறோம். முதலாவது நபர் நம் எல்லோருக்கும் பெயர் தெரிந்த நாகமான். இரண்டாவது நபர் முகமறியாத ஒரு சிறுமி. மூன்றாவது நபர் இஸ்ரவேலின் அரசன். அவன் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும் 2 இராஜாக்கள் மூன்றாவது அதிகாரத்தில் வருகிற யோராம்தான் இங்கு இஸ்ரவேலின் அரசனாக இருக்கிறான். இந்த மூன்று நபர்களில் முகவரியே தெரியாமல் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற சின்னஞ்சிறு சிறுமி இந்தப் பகுதியில் நடக்கின்ற அத்தனை காரியங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறாள். அந்தச் சிறுமியைச் சுற்றியே இந்தப் பகுதியில் நாம் வாசிக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்கின்றன. ஆண்டவருடைய செயல்களின் அற்புதத்தை வர்ணிப்பதற்கு நமக்கு வார்த்தைகளே இல்லை. அவையனைத்துமே ஆச்சரியமான விதத்தில்தான் காணப்படும். இந்த அதிகாரத்தை வாசிக்கிறபோது அவருடைய அற்புதமான கிரியைகளை நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

முதலாவதாக, சீரியாவின் நாகமான்

இந்தப் பகுதியில் ஒரு முக்கியமான நபராக நாகமான் இருக்கிறான். அவன் சீரிய ராஜாவின் படைத்தலைவன் என்று முதலாவது வசனம் சொல்லுகிறது.

“சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.” (2 இராஜாக்கள் 5:1).

இந்த நாகமான், சீரிய ராஜாவிற்கு இரண்டாவது இடத்தில் ஒரு ஜெனரல் (படைகளின் பெருந்தலைவன்) போல இருந்தான். இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை ஜெனரல் என்று சொல்லலாம். அந்தளவுக்கு ஒரு உயர்ந்த பதவியில் சீரிய நாட்டு இராணுவத்திற்குத் தலைவனாக அவன் இருந்திருக்கிறான். தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனாக இருந்தான் என்று காணப்படுவது அவன் நாட்டிலேயே முக்கியமானவனாக இருந்தான் என்பதைக் குறிக்கிறது. எந்தளவுக்கு ராஜாவின் வார்த்தைகளுக்கு நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்களோ அந்தளவுக்கு இந்த நாகமானின் வார்த்தைகளுக்கும் நாட்டில் மதிப்பு இருந்தது. அடுத்ததாக, அவனைப் பற்றி வேதம் சொல்லும்போது அவன் எண்ணிக்கையுள்ளவனாக இருந்தான் என்று சொல்லப்படுகிறது. அவனுக்குக் கீழ் ஒரு பெரும் படை இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரவேல் தேசம் சீரிய நாட்டுக்கு அடிமையாக இருந்தது. இஸ்ரவேலைப் பிடிப்பதற்கு சீரிய நாட்டு அரசன் இவனைத்தான் அனுப்பியிருந்தான்.

ஆகவே நாகமான் ஒரு பெரும் படைக்குத் தலைவனாக இருந்தான். ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்ததனால் நிச்சயமாக வசதியுள்ளவனாகவும், செல்வந்தனாகவும் இருந்திருப்பான். மேலும் அவனைப் பற்றி வேதம், அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார் என்று விளக்குகிறது. இங்கு இரட்சிப்பு எனும் வார்த்தைக்கு பாவத்திலிருந்து மீட்பு என்பது அர்த்தம் என்று நினைத்துவிடக்கூடாது. அவன் மூலம் சீரியாவுக்கு மீட்பு வந்தது என்று வேதம் சொல்லவில்லை. அவன் மூலம் ஆண்டவர் சீரியாவுக்கு பெரிய வெற்றிகளைக் கொடுத்திருந்தார். ஆகவே இஸ்ரவேல் உட்பட பலநாடுகளை சீரியா கைப்பற்ற இந்த நாகமானை ஆண்டவர் பயன்படுத்தியிருக்கிறார்.

இதை வாசிக்கிறபோது சில கேள்விகள் எழலாம். நம் ஆண்டவர் ஒரு புறஜாதி தேசத்திற்கு ஒரு புறஜாதி படைத்தலைவனைப் பயன்படுத்தி ஏன் இந்தளவுக்கு வெற்றியைக் கொடுத்தார் என்று நீங்கள் சிந்திக்கலாம். அவ்வாறு எண்ணுவதில் தவறில்லை. இருந்தபோதும் நீங்கள் இந்த யெகோவா தேவன் எங்கேயோ ஓரத்திலிருக்கும் சிறிய நாடான அந்த இஸ்ரவேலுக்கு மட்டும்தான் கர்த்தர், அவரால் மற்ற நாடுகளுக்கு எதுவும் செய்யமாட்டார் என்று நினைத்துவிடக்கூடாது. உலத்திற்கே தேவன் நம் ஆண்டவர்தான். அவரே இந்த உலகத்தைப் படைத்தவர். எல்லா நாடுகளும் அவருக்குக் கீழ்தான் இருக்கின்றன. ஆகவே சீரிய நாடு எத்தனை வெற்றிகளை அடைந்திருந்தாலும் நம்முடைய கர்த்தர் அங்கு செயல்படாமல் அவர்கள் வெற்றியை அடைந்திருக்க முடியாது என்பதைத்தான் அந்த வசனம் நமக்குக் காட்டுகிறது. ஆகவே சீரியநாடு ஆண்டவரை வழிபடாத நாடாக இருந்தபோதும் அந்த நாடும் இறையாண்மையுள்ள கர்த்தரின் கீழ்தான் இருந்தது.

இஸ்ரவேல் தவறு செய்கிறபோது ஆண்டவர் மற்ற நாடுகளைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டித்தார். மேலும் நாகமானைப் பற்றி வேதம், அவன் மகா பராக்கிரமசாலி என்று சொல்லுகிறது. அதாவது அவன் பெரிய போராளியாக இருந்திருக்கிறான். போர்த் தந்திரங்களில் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்கிறான். அவனை மிகப்பெரிய வீரன் என்று சொல்லலாம்.

நான் வரலாற்றை மிகவும் விரும்பிப் படிப்பேன். உலக வரலாற்றையும், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் போன்று வரலாற்று நிகழ்வுகளை மிகவும் ஆர்வமாக வாசிப்பேன். வேதத்தை தவிர்த்து இஸ்ரவேலின் வரலாற்றையும் அந்நாடு எவ்வாறு நிறுவப்பட்டது என்பதையும் வாசித்திருக்கிறேன். இஸ்ரவேல் நாட்டில் மோசே தயான் (Moshe Dayan 1915-1981) என்ற ஒரு மனிதன் இருந்தார். அவன் ஒரு ஜெனெரலாக இருந்தான். அவருக்கு ஒரு கண் மட்டுமே இருந்தது. அவரைப் பயன்படுத்தி ஆண்டவர் இஸ்ரவேல் நாட்டிற்கு எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்தார். இவ்விதம் மிகவும் அருமையான காரியங்களை இஸ்ரவேலைப் பற்றி வாசிக்கலாம்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏழு நாடுகள் சேர்ந்து இஸ்ரவேலைத் தாக்க முயற்சித்தபோது இந்த மோசே தயான்தான் இஸ்ரவேல் படைகளை வழிநடத்தி அனைத்து நாடுகளையும் தோற்கடித்தார். அதுமட்டுமல்ல இஸ்ரவேல் படை யோர்தானுக்குள்ளும், சீரியாவுக்குள்ளும் நுழைந்து சில இடங்களைப் பிடித்துக்கொண்டது. மேலும் அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து வரை அந்தப் படை சென்றது. இஸ்ரவேல் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும் நல்ல போர் தந்திரங்களைப் பயன்படுத்தி மோசே தயான் தலைமையில் போரிட்டது. அதுபோல ஒரு சிறந்த பராக்கிரமசாலியாக, போராளியாக, ஒரு ஜெனெரலாக இந்த நாகமான் இருந்திருக்கிறான். ஆனால் அவனோ குஷ்டரோகியாயிருந்தான் என்று வேதம் சொல்லுகிறது.

நாகமானைப் பற்றி வேதம் அநேக காரியங்களை விளக்கிவிட்டு, ‘ஆனால்’ என்ற வார்த்தை மூலம் அவன் குஷ்டரோகியாக இருந்தான் என்று சொல்லுகிறது. இதனைத் தொழுநோய் என்று சொல்லுவோம். தொழுநோய் உள்ளவன் அந்தக் காலங்களில் உடம்பு முழுவதும் துணிகளை சுற்றியிருப்பான். தொழுநோய்க்கு மருந்து வசதிகள் அந்தக் காலத்தில் இல்லை. ஒருவனுக்குத் தொழுநோய் வந்தால் அவனுக்குத் தோல் நிறமெல்லாம் மாறிவிடும். பிறகு அது உடம்பை அரித்து அரித்து சிதலடையச் செய்து அங்கங்களை இல்லாமல் போகச் செய்யும். அது அப்படியே தொடர்ந்து போனால் உடல் பாதி இல்லாமல் போய்விடும். அவன்மீது துர்நாற்றம் வீசும். அவன் அருகில் யாரும் செல்ல முடியாது. இஸ்ரவேலில்கூட தொழு நோயாளிகளை ஊருக்கு வெளியில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அந்தக் காலத்தில் அது ஒரு பயங்கரமான வியாதியாக இருந்தது. இந்தக் காலத்தில் அதற்கு மருந்துகள் நிறைய உள்ளன. நாகமான் மிக உயர்ந்த இடத்தில் இருந்தபோதும் அவன் ஒரு குஷ்டரோகியாக இருந்தான்.

எந்தளவுக்கு அவன் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டான் என்று நமக்குத் தெரியாது. அவன் உயரிய இடத்தில் இருந்ததால் அந்த வசதிகளைப் பயன்படுத்தி அதை மூடி மறைத்திருக்கலாம். இருந்தாலும் அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதலடைந்து மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். இருந்தபோதும் இப்போது அவன் நடமாடிக் கொண்டிருந்தான் என்று பார்க்கிறோம். அவன் சீரியாவிலிருந்து இஸ்ரவேலுக்குப் போனான். ஆகவே குஷ்டரோகம் அவனை அதிகம் பாதித்திருக்கவில்லை என்று சொல்லலாம். இருந்தாலும்கூட அந்த குஷ்டரோகம் அவனை ஒருநாள் இல்லாமலாக்கத்தான் போகிறது. அது எவ்வளவு நாள் என்று நமக்குத் தெரியாது. அது நாகமானுக்கும், அவனுடைய மனைவிக்கும் தெரிந்திருந்தது.

வேதத்தில் குஷ்டரோகத்தை இன்னொன்றிற்கும் அடையாளமாகக் காட்டப்பட்டிருக்கிறது. எதற்கு? பாவத்திற்கு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வேதம் பழைய ஏற்பாட்டில் பாவத்தை ஒரு குஷ்டரோகமாகப் பார்க்கிறது. இன்றைக்கு சிலர் புற்றுநோய்க்கு அதை ஒப்பிட்டுச் சொல்லுவார்கள். எது நம் காலத்தில் பெரிதாக மிகவும் மோசமாக நம்மைப் பாதிக்கிறதோ அதை உதாரணமாகச் சொல்லுவது வழக்கம். அந்தக் காலத்தில் குஷ்டரோகம் என்று சொன்னால் மனிதர்களுக்குப் பிடிக்காது. யாரும் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பக்கம் போகமாட்டார்கள்.

இந்தத் தொழுநோய் மிகவும் மோசமாக இருந்ததனால்தான் தமிழ்நாட்டில் வேலூரில் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (CMC) ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து தொழுநோய் உள்ளவர்களைக் குணப்படுத்துவதற்காகத்தான் அது ஆரம்பிக்கப்பட்டது. கொல்லிமலையில் மிஷனரி பணிபுரிந்த ஆங்கிலேய ஜெசி பிராண்டின் மகனான பிராண்ட் எனும் மருத்துவர் அமெரிக்காவிலிருந்து வந்து அதற்காக மருந்து கண்டுபிடித்தார், தொழுநோயாளிகளுக்கு குணமளித்தார். இன்று அந்த மருத்துவமனை பெரியதாகவும், பலவிதமான வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.  இந்த நாகமான் குஷ்டரோகியாக இருந்தான் என்று பார்க்கிறோம்.

இரண்டாவதாக, சுவிசேஷம் அறிவித்த சிறுமி

அந்தச் சிறுமியைப் பற்றி இரண்டாவது வசனத்தில் நாம் வாசிக்கிறோம். “சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.” (2 இராஜாக்கள் 5:2). இந்தச் சிறுமி இஸ்ரவேலைச் சேர்ந்தவள். இந்த நாகமான் சீரியப் படைகளை வழிநடத்தி இஸ்ரவேலைப் பிடிக்கப் போனான். அந்தக் காலத்தில் போர் முடிந்த பிறகு அந்நாட்டிலிருந்த மிகவும் முக்கியமான தலைவர்கள், வல்லமையானவர்கள், தேவையானவர்கள் எல்லோரையும் சிறைப்பிடித்து தங்கள் நாட்டிற்குக் கொண்டுபோவது வழக்கம். ஒருவிதத்தில் தாங்கள் சிறைபிடித்த நாட்டைப் பலவீனப்படுத்துவதற்கு அவ்வாறு செய்வார்கள். அந்த நாட்டிலுள்ள வளங்களைக் கொள்ளையடிப்பது இன்னொரு வழக்கம். தானியேல் அவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுத்தான் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டான்.

இஸ்ரவேல் நாட்டில் இருந்த இந்தச் சிறுமியை சீரியர்கள் ஏன் சிறை பிடித்துக்கொண்டு போனார்கள்? அவளால் இவர்களுக்கு என்ன பயன் என்பதையெல்லாம் வேதம் நமக்குச் சொல்லவில்லை. உண்மையாலும் என்ன பயன் என்பதையும், அது ஆண்டவருடைய திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதையும் இந்தப் பகுதியை வாசிக்கிறபோது நாம் அறிந்துகொள்ளுகிறோம். இந்தச் சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் நடந்த சண்டையில் இறந்து போனார்களா? அதுவும் நமக்குத் தெரியாது. இப்போது இவள் ஒரு அனாதையாக இருக்கிறாள். அவளுக்குச் சொந்தமென்று சொல்ல யாருமேயில்லை. அவளுக்கு எவ்வளவு வயதென்றும் நமக்குத் தெரியாது. சிறுபெண் என்று வாசிக்கும்போது அவளுக்கு வாலிப வயதுகூட இருக்காது என்று நம்பலாம். அவள் திரும்பி இஸ்ரவேல் நாட்டிற்குப் போக முடியுமா? திரும்பிப் போனால் அங்கு வாழ முடியுமா? என்று அவளுடைய எதிர்காலத்தை நினைத்தால் பயம் ஏற்படும்.

அந்தச் சிறுமி அரண்மனையில் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்ய அதிகம் பேர் இருந்திருப்பார்கள். இருந்தபோதும் அதற்காக இந்தச் சிறுமியும் நியமிக்கப்பட்டிருந்தாள். அந்த அரண்மனையில் இந்தச் சிறுமியைப் பற்றி யாரும் பெரியதாக எண்ணியிருக்கமாட்டார்கள். ஆகவே இந்தச் சிறுமியைப் பற்றிச் சொன்னால் முகமறியாதவள் என்று சொல்லலாம். இருந்தபோதும் இந்தச் சிறுமியைப் பற்றி மூன்றாவது வசனத்தில் உள்ளடக்கமாக ஒன்று தெரிகிறது. அது என்னவென்றால், இந்தச் சிறுமி இஸ்ரவேலில் மீதமாக இருந்த விசுவாசிகளில் ஒருத்தியாக இருந்திருக்கிறாள்.

அவள் சிறுமியாக இருந்தபோதும் இஸ்ரவேலின் தேவனை வணங்கியவளாக இருந்தாள். தேவனைப் பற்றி அறிந்து உணர்ந்து அவரை ஆராதித்தவளாக இருந்தாள் என்பதை மூன்றாவது வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல எலிசாவைப் பற்றியும் அவள் அறிந்திருந்தாள். அவள் வெறுமனே எலிசாவின் பெயரை மட்டும் அறிந்திருக்கவில்லை, அந்த எலிசா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதையும், அவர் தேவனுடைய மனிதன் என்பதையும், எலிசா இருக்கிற இடத்தில் தேவன் இருக்கிறார் என்பதையும், அந்தத் தேவன் எலிசாவைப் பயன்படுத்தினார் என்பதையும், எலிசாவினிடத்தில்தான் கர்த்தருடைய வார்த்தை இருந்தது என்பதையும் அவள் நன்றாக அறிந்திருந்தாள்.

அவள் முகமறியாதவளாக இருந்தபோதும் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து அவரோடு ஐக்கியங்கொண்டிருந்தவளாக இருந்தாள். நாகமானிடம் நிறைய பணம் இருந்தது. ஆனால் அவன் குஷ்டரோகியாக இருந்தான். இந்தச் சிறுமி முகமறியாதவளாக பணமில்லாதவளாக வசதியற்றவளாக இருந்தாள், ஆனால் அவளுக்கு இஸ்ரவேலின் தேவன் மீது விசுவாசம் இருந்தது. வாழ்க்கையில் எது இருந்தாலும் இந்த விசுவாசம் இல்லாமல் இருந்தால் என்ன பயன்? நாகமானிடம் எத்தனையோ வசதிகள் இருந்தது என்று பார்த்தோமல்லவா? அதெல்லாம் ஒரு நாள் இல்லாமல் போய்விடும். ஒரு நொடியில் எல்லாவற்றையும் ஆண்டவர் இல்லாமல் ஆக்கிவிடலாம். ஆனால் இந்தச் சிறுமியிடம் காணப்பட்ட விசுவாசம் அவள் எங்கு போனாலும் அவளோடு போகும். அவளோடு இருக்கும் அந்த விசுவாசந்தான் அவள் பரலோகம் போக உதவி செய்யும். அதுமட்டுமல்ல இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வசனத்தை எடுத்துவிட்டோமென்றால் உண்மையில் இந்த அதிகாரம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். பிறகு நாகமானைப் பற்றிப் பேசுவதற்கு நமக்கு ஒன்றுமே இருந்திருக்காது. இந்த வரலாற்று நிகழ்ச்சியில் இந்தச் சிறுமி இல்லாமல் இருந்தால் நாகமான் ஒருநாளும் கர்த்தரை அறிந்திருக்கவும் முடியாது, குஷ்டரோகம் நீங்கியிருக்கவும் முடியாது. இந்த இரண்டு வசனங்களில் சாதாரணமாக வந்துபோகும் சிறுமி சின்னவளாக இருந்தாலும் நம் கண்முன் மிகப் பெரிதாகப் பரந்து விரிந்து காணப்படுகிறாள் என்பது தெரிகிறதா?

மூன்றாவதாக, இஸ்ரவேலின் அரசன்

இந்தப் பகுதியில் இஸ்ரவேலின் அரசனாக இருப்பது யோராம் என்று மேலே குறிப்பிட்டேன். யோராம் இஸ்ரவேலின் அரசனாக இருந்தபோதும் அவன் விசுவாசி அல்ல. அவன் இஸ்ரவேலில் இருந்தும், அந்த நாட்டில் எலிசா இருந்தும், எலிசா மூலமாக சத்தியம் பிரசங்கிக்கப்பட்டபோதும் அவன் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. வார்த்தைக்குத் தன் இருதயத்தில் இடங்கொடுக்கவில்லை. அவன் அரசியலுக்கும் தன் சொந்த நன்மைகளுக்கும் மட்டுமே தன் வாழ்வில் இடங்கொடுத்தான். இஸ்ரவேலில் அவன் இருந்தபோதும் அங்கு காணப்பட்ட ஆவிக்குரிய வசதிகள் எதையுமே பயன்படுத்திக் கொள்ளாத ஒருவனாக அவனிருந்தான்.

சீரிய தேசத்து ராஜா ஒரு கடிதத்தை எழுதி நாகமான் கையில் கொடுத்தனுப்பினான் என்று தெரிந்தபோது அவன் கதறி அழுக ஆரம்பித்துவிட்டான். அவன் ஏன் பயப்பட வேண்டும்? இஸ்ரவேலின் தேவன் இருக்கிறார், எலிசா பக்கத்திலேயே இருக்கிறார். சீரியப் படை எத்தனை பெரிதாக இருந்தபோதும், பராக்கிரமசாலியாக நாகமான் இருந்தபோதும் முழு உலகத்தையும் வெல்வதற்கு ஒரு எலிசா போதுமே. ஆனால் அவ்விதமான உணர்வே யோரோமுக்கு இல்லை. கர்த்தரைப் பற்றிய உணர்வே இல்லாமல் தன் சொந்த நன்மைகளையும் அரசியல் லாபத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு அவன் வாழ்ந்தான். இஸ்ரவேலுக்கே அவமானப் பெயரை வாங்கி கொடுக்கும் விதத்தில் யோராம் வாழ்ந்து வந்திருக்கிறான்.

இந்தப் பகுதியில் நாம் காணும் மூன்று நபர்கள் இவர்கள்தான். அற்புதங்களைச் செய்யக் கர்த்தர் சிலநேரங்களில் பெரிய மனிதர்களைப் பயன்படுத்துவார், சிலநேரங்களில் பெயர் தெரியாத முகமறியாத நபர்களைப் பயன்படுத்துவார். கர்த்தரால் ஒரு நபர் பயன்படுத்தப்படுவதற்கு உலகத் தகுதிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சிறுமிக்கு எந்தவிதமான உலகத் தகுதியுமே இருக்கவில்லை. அவள் மிகவும் சிறியவளாக இருந்திருக்கிறாள், இருந்தாலும் ஒருவரை ஆண்டவர் பயன்படுத்த வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் அதற்கெதிராக எவரும் எதுவுமே செய்யமுடியாது. நாகமானுக்கு குஷ்டரோகம் நீங்கவேண்டுமென்றால், அவன் கர்த்தரை அறியவேண்டுமென்றால் சீரிய ராஜாவினால் அதற்கெதிராக எதுவும் செய்யமுடியாது; இஸ்ரவேலின் ராஜாவினாலும் எதுவும் செய்ய முடியாது.

ஆண்டவர் அற்புதத்தைச் செய்யப் பயன்படுத்திய நபர் சாதாரணமான அந்தச் சிறுமிதான். கர்த்தர் தன் இறையாண்மையின் சித்தத்தின்படிச் செயலாற்றுவாரே தவிர தகுதிகளின் அடிப்படையில் எதையும் செய்வதில்லை. இன்று கிறிஸ்தவர்களாக இருக்கும் அநேகர் பிரபலமாக எல்லோராலும் அறிந்துகொள்ளப்படுவதற்கு என்னென்னவோ முயற்சி செய்கிறார்கள். அதிக இறையியல் படிப்புகள் படித்து பட்டங்கள் வாங்கினால் பெரிய போதகராக வந்துவிடலாம் என்று நினைத்து வேதத்தையே நம்பாத ஒரு தாராளவாதக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கிக்கொண்டு இருதயத்தை இழந்து நிற்பார்கள். ஆண்டவர் அதையெல்லாம் எதிர்பார்ப்பதேயில்லை. ஆண்டவர் நம்மைப் பயன்படுத்த உண்மையாக வேதத்தை ஆராய்ந்து படித்து அவரில் தங்கியிருந்தாலே போதும்.

சிறுமியின் ஆலோசனை

மூன்றாவது வசனத்தில் அந்தச் சிறுமிக்கு ஒரு யோசனை வந்தது. அது என்ன? தான் வேலை செய்கின்ற ராணியின் கணவனாகிய நாகமானுக்குக் குஷ்டரோகம் இருக்கிறதென்று அவள் கேள்விப்பட்டாள். அதை யாரிடமாவது போய்ச் சொன்னாலும் அவளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதைத் தெரிந்துகொண்டவுடன் அவளுடைய இருதயத்தில் ஒரு பாரம் ஏற்பட்டது. தான் பணி செய்கின்ற ராணியின் கணவனுக்கு இப்படி நடந்துவிட்டதே, இதற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று அவள் யோசித்தாள். அதற்காக அவள் ஜெபம் செய்தும் இருக்கலாம். அவள் தனக்குத் தெரிந்ததை செய்யத் தீர்மானித்தாள். அவளுக்கு என்ன தெரிந்திந்திருந்தது?

நம் ஊரில் இருக்கும் எலிசா நிச்சயமாக இந்தக் குஷ்டரோகத்தை நீக்கிவிடக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறார் என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். ஆகவே தைரியத்தோடும் பெரிய நம்பிக்கையோடும் வசனத்தில் சொல்லுகிறாள்.

“அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.” (2 இராஜாக்கள் 5:3).

எலிசா தீர்க்கதரிசியிடம் நாகமான் போனால் நிச்சயம் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்று சொல்லுகிறாள். இவ்வாறு சொன்னபிறகு அவளுக்கு என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவள் சொன்னது சரியா, சரியில்லையா என்பது கூட பெரிய கேள்விக்குறிதான். எதிரி நாட்டிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவந்திருக்கிற இந்தப் பெண் அந்த நாட்டிலிருந்து இதற்கு ஒரு தீர்வு வரவேண்டுமென்று சொன்னால் நிச்சயமாக அவர்களுக்கு அது பிடிக்காது. ஆகவே என்ன நடக்குமென்று தெரியாத ஒரு நிலைதான் காணப்பட்டது.

நான்காவது வசனத்தில் “அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்.” (2 இராஜாக்கள் 5:4) என்று நாம் வாசிக்கிறோம். அந்தச் சிறுமி சொன்ன செய்தி நாகமானுக்கும் போய்விட்டது, சீரிய ராஜாவிற்கும் போய்ச் சேர்ந்துவிட்டது. அந்தச் சிறுமி சொன்னதை அவர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் நம்புமளவுக்கு அவள் அந்த செய்தியைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் அது உண்மையாலும் நாம் இங்கு கர்த்தர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம். இது சிறுமியால் மட்டும் நடந்தது என்று நாம் நினைக்கக்கூடாது. எங்கிருந்தும் எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிற இறையாண்மையுள்ள கர்த்தருடைய கரம் இங்கிருப்பதைப் பார்க்கிறோம். அவர்தான் சிறுமி சொன்ன வார்த்தைகளை நம்ப வைத்திருக்கிறார். உடனே சீரிய ராஜா போகலாமென்று அனுமதி கொடுக்கிறார். நாகமானுக்கு எங்கிருந்தோ ஒரு விடுதலை கிடைத்ததென்றால் அது நல்லதுதான் என்று ராஜா நினைத்தான். அந்தளவுக்கு சீரிய ராஜாவின் நம்பிக்கைக்கு உரியவனாக நாகமான் இருந்தான்.

ஆகவே சீரிய ராஜா இஸ்ரவேலை நாம் பிடித்து வைத்திருக்கிறோமே, இஸ்ரவேலின் ராஜா நமக்கு அடிமையாக இருப்பதனால் நானே ஒரு கடிதத்தைக் கொடுக்கிறேன், நீ போ என்று சொன்னான். அவ்வாறு அவர்கள் போகும்போது வெறுங்கையோடு போகவில்லை. ஐந்தாவது வசனத்தில் “அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,” (2 இராஜாக்கள் 5:5) என்று வாசிக்கிறோம். இந்த பத்து தாலந்து வெள்ளி என்பது 340 கிலோகிராம் எடையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன் என்பது 90 கிலோகிராம் எடையுமாகும். இதெல்லாம் நம் காலத்தில் எத்தனை பெரிய மதிப்புள்ளதாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

எதற்காக இவ்வளவு மதிப்புள்ள பொருட்களைக் கொண்டு போகிறார்கள்? குஷ்டரோகத்தைக் குணப்படுத்துவதற்காகவா? இல்லை. நாம் ஒரு பெரிய நாடு, இஸ்ரவேல் நம் அடிமை நாடு. அடிமையாக நமக்குக் கீழிருக்கும் ஒரு நாட்டிற்குச் சென்று அவர்களிடம் இந்த உதவியைப் பெறுகிறபோது அவர்கள் நாம் கொண்டுபோகும் தங்கத்தையும், வெள்ளியையும், பொருட்களையும் பார்த்து நம்மைப் பெரிதாக நினைக்க வேண்டும். நம் தரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஒரு பரிசைக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில்தான் அவற்றைக் கொண்டு போகிறார்கள். ஆகவே இவர்கள் எல்லோரும் பொருட்களையும், சீரிய ராஜா கொடுத்த கடிதத்தையும் கொண்டுபோய் இஸ்ரவேல் அரசனிடம் கொடுக்கிறார்கள்.

இஸ்ரவேல் ராஜாவின் நிலை

இஸ்ரவேல் ராஜாவின் உண்மையான நிலையை இங்குதான் நாம் பார்க்க முடிகிறது. சீரிய ராஜாவிடமிருந்து வந்த கடிதத்தை அவன் வாசிக்கிறான்.

“இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.” (2 இராஜாக்கள் 5:6&7).

அதை வாசித்தவுடனே தான் ஒரு ராஜா என்பதையும் நினைத்துப் பார்க்காமல் தான் அணிந்திருந்த அங்கியைக் கிழித்துக்கொண்டு ஒருவனுடைய உயிரை எடுப்பதற்கும் ஒருவனுக்கு உயிரைக் கொடுப்பதற்கும் நான் என்ன கடவுளா என்று கேட்கிறான். இஸ்ரவேல் ராஜா இவ்வாறு நடந்துகொண்ட போது அவன் ஒரு அவிசுவாசி என்பதை வெளிப்படுத்தினான். அவன் கர்த்தருக்கும் எலிசாவிற்கும் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் குஷ்டரோகத்தை நீக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பதை மட்டும் அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த ஆண்டவரோடு தொடர்பை வைத்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீரிய ராஜா நம்மைச் சிறை பிடித்து நாட்டில் பாதிப்பேரைக் கொண்டுபோய்விட்டான், இப்போது ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம், அதோடு நின்றுவிடாமல் ஏதாவது ஒரு வம்பிழுத்து பெரிய சண்டை போடுவதற்குத்தான் இந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கிறான் என்று யோசித்து இஸ்ரவேல் ராஜா கதிகலங்கி நிற்கிறான்.

இஸ்ரவேல் ராஜா ஒழுங்கானவனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இதை வாசித்தவுடனே எலிசாவிற்கு செய்தி அனுப்பியிருக்க வேண்டும். அந்நாட்களில் ராஜாக்கள் தீர்க்கதரிசிகளிடம் இருந்துதான் ஆலோசனை வாங்கிக்கொள்ளுவார்கள். எங்கு தீர்க்கத்தரிசி இருக்கிறாரோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் அர்த்தம். அது இஸ்ரவேல் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் பல ராஜாக்கள் அவர்களுக்கு மதிப்பும் கொடுக்கவில்லை, மரியாதையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. அதனால் இவன் நினைவுக்கு எலிசா வரவே இல்லை. ஆனால் இங்கு நடந்த சம்பவம் எலிசாவின் காதிற்குப் போய்ச் சேர்ந்தது.

எலிசாவோடு நாகமானின் சந்திப்பு

எட்டாவது வசனத்தில் “இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியைத் தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.” (2 இராஜாக்கள் 5:8) என்று வாசிக்கிறோம். எலிசா இவ்வாறு சொன்னவுடன் நாகமான் எலிசாவைப் பார்க்கப் போகிறான். ஒன்பதாவது வசனத்தில் “அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.” (2 இராஜாக்கள் 5:9) என்று வாசிக்கிறோம். நம் ஊருக்கு ஒரு முதலமைச்சரோ அல்லது பிரதமரோ வந்தால் அவர்கள் வகிக்கிற பதவிக்கு ஏற்றதரத்தில் வருவார்கள். அதுபோல இந்த நாகமானும் எலிசாவிடம் தன் குதிரைகளோடும் இரதங்களோடும் போனான்.

எலிசாவின் வீடு ஒரு உயரமான மேட்டுப் பகுதியில் இருந்தது. அது ஒரு பெரிய வீடாக இல்லையென்றாலும் படிகளில் ஏறித்தான் உள்ளே போகவேண்டும். நாகமான் தன் படைகளோடு எலிசாவின் வீட்டின் கீழ் வந்து நிற்கிறான். பத்தாவது வசனத்தில் “அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.” (2 இராஜாக்கள் 5:10) என்று நாம் வாசிக்கிறோம். இங்கு எலிசாவிற்கு சமூக இங்கிதங்களைப் பின்பற்றும் திறமை பெரிதாக இருந்ததுபோலத் தெரியவில்லை. நம்மிடம் வரும் எல்லோரையும் ஒரேமாதிரியாக சாதாரணமாக நடத்த முடியாது. சிலர் உயர் பதவியில் இருப்பவர்களாக இருப்பார்கள் அவர்கள் வந்தால் நாம் இருக்கையிலிருந்து எழுந்து வரவேற்போம். ஆனால் எலிசா தான் இருந்த வீட்டிலிருந்தே செய்தியோடு தன் ஆளை அனுப்புகிறார். நாகமான் ஏன் வந்திருக்கிறான், எதற்காக வந்திருக்கிறான் என்பதெல்லாம் எலிசாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர் தேவனின் தீர்க்கதரிசி அல்லவா! ஆகவே எலிசா ஒரு ஆளை அனுப்பி யோர்தானில் போய் எழுதரம் ஸ்நானம் பண்ணு என்று அவனிடம் சொல்லு என்று சொல்லியனுப்பினார்.

யோர்தான் நதி சாதாரணமாக எல்லோரும் பயன்படுத்தும் நதி. அது சிறிது அழுக்காக இருக்கும். நாகமான் சிரியாவில் ராஜாவிற்கு அடுத்தபடியான உயர் ஸ்தானத்தில் இருப்பவன். அவனைப் போய் அந்த நதியில் ஏழுமுறை குளிக்கச் சொன்னால் அவனுக்கு எப்படி இருந்திருக்கும்! எலிசா தன் செய்தியை அனுப்பிவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு கீழிருந்த நாகமானுக்கு அந்தச் செய்தியைக் கேட்டபோது கடுங்கோபம் வந்தது.

அப்போது வசனம் பதினொன்றில் “அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.” (2 இராஜாக்கள் 5:11) என்று வாசிக்கிறோம். எலிசாவே கீழே இறங்கி வந்து தனக்குரிய மரியாதையையெல்லாம் தகுந்த முறையில் தந்து, தான் செய்யவேண்டியதையெல்லாம் செய்து தன் கையால் தன்னுடைய சரீரத்தைத் தொட்டுக் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று நாகமான் நினைத்துக் கொண்டிருந்தான். இந்நாட்களிலுங்கூட மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் நாலாயிரம் பேர் ஐயாயிரம் பேரெனக் கூட்டத்தைக் கூட்டி, பெரிய விளம்பரங்களைச் செய்து, எதையெதையோ உளறி என்னென்னவோ செய்கிறார்கள். அங்கு எந்தவொரு அற்புதமும் நிகழாது. நிகழ்ந்து வருவது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை அவர்கள் மக்கள் மனத்தில் ஏற்படுத்தி வருவார்கள். அது ஒரு பிணி தீர்ப்பு மாய வியாபாரம் மட்டுமே.

அதுபோல ஏதாவது பெரிதாக நிகழும் என்று நாகமான் எண்ணிக்கொண்டு வந்திருந்தான். ஆனால் என்னை ஒரு சாதாரண நதியின் அழுக்குத் தண்ணீரில் குளிக்கச் சொல்லுகிறானே என்று அதைத் தனக்குச் செய்யப்பட்ட அவமானமாக நாகமான் கருதினான். யோர்தானில் குளித்தால் எப்படி குஷ்டரோகம் போகும்? இப்போது என்ன செய்வது எனும் இக்கட்டான நிலைமையில் நாகமான் இருந்தான். அவன் பக்கத்தில் எலிசா இருந்திருந்தால் கத்தியை உருவி எலிசாவின் தலையை வெட்டியிருந்திருப்பான். ஆனால் எலிசா வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார். எலிசாவின்மேலிருந்த கோபத்தில் நாகமான் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரம் போனால் தன் படைகளை அனுப்பி எலிசாவையும் அவன் வீட்டையும் அழித்திருப்பான் அல்லது ஊரையே நெருப்பு வைத்து அழித்துவிடலாம் என்று எண்ணியிருப்பான். இதில் ஏதாவது ஒன்று நடந்திருக்கும். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் கர்த்தர் இருக்கிறார் அல்லவா! அவர் பெரிய காரியங்களைச் செய்கிறவர்.

இதன் மத்தியில் நாகமான் இன்னொன்றையும் சொல்லுகிறான்.

“நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.” (2 இராஜாக்கள் 5:12).

நான் குளிக்க வேண்டுமென்றால் எங்கள் ஊரில் இல்லாத நதியா? ஆப்னாவும் பர்பாரையும்விட யோர்தான் நதி பெரியதா? அதுமட்டுமல்ல நாகமான் பெரிய அரண்மனையில் வாழ்ந்ததால் அங்கே அழகான நீச்சல் குளங்களெல்லாம் கட்டி வைத்திருந்திருப்பான். அப்படி வாழ்கின்ற தன்னைப் பார்த்து இந்த அழுக்கு நீரில் குளிக்கச் சொல்லுகிறானே என்று திரும்பிப் போகத் தயாராகிவிட்டான். அவனால் தாங்க முடியவில்லை. எலிசா செய்ததுபோல நாகமான் வாழ்க்கையில் யாருமே அவனுக்குச் செய்திருக்க மாட்டார்கள்; அப்படிச் செய்யக் கனவிலும் நினைக்க மாட்டார்கள். நாகமான் கோபத்தோடு திரும்பிப்போகும் நேரத்தில் அவனுடைய ஊழியக்காரர்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நாகமானைப் பார்த்துப் பேசுகிறார்கள்.

நாகமானுக்குக் கிடைத்த விடுதலை

(அ) வேலை ஆட்களின் ஆலோசனை

பதிமூன்றாவது வசனத்தில் “அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.” (2 இராஜாக்கள் 5:13) என்று வாசிக்கிறோம். அவனுடைய ஊழியக்காரர்கள் கையைக் கட்டிக்கொண்டு முன்னால் வந்து, ஐயா அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச்சொல்லியிருந்தால் நீங்கள் செய்திருப்பீர்கள் தானே? ஸ்நானம் பண்ணுங்கள் அப்போது சுத்தமாவீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறபோது அதைச் செய்தால்தான் என்ன? என்று கேட்டார்கள்.

நாகமான் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான். நாகமானால் உள்ளுக்குள் எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்த குஷ்டரோகத்தை மறைத்து வைப்பது? அதை சுகப்படுத்த நம் நாட்டில் யாரும் இல்லையே என்று நினைத்த்துப் பார்த்திருப்பான். ஆகவே அது குணமாக வேண்டும், ஆனால், அது தன் விருப்பப்படி நடக்கவேண்டும் என்று நினைத்தான். ஆண்டவர் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுகிறாரோ அதைச் செய்ய அவன் விரும்பவில்லை. அதுதான் நாகமானுடைய பிரச்சனையாக இருந்தது. தான் விரும்பியபடி எதுவும் நிகழவில்லையே என்பதுதான் அவனுக்கு வந்த கோபத்திற்குக் காரணம். இதிலிருந்து அவனுடைய ஆணவத்தையும் கடின இருதயத்தையும் காண்கிறோம். அவன் மிகவும் அகங்காரம் கொண்டவனாக இருக்கிறான். தான் எதிர்பார்த்தபடியும், தான் கொடுக்கின்ற பரிசின் மூலமும் பெரிதாக அதிசயமாக எல்லோரும் தன்னைப் பற்றிப் பேசும் அளவிற்கு குணப்பட வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆகவே நீ சொல்லுகிற வழியை நான் பின்பற்றமாட்டேன் அது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு சுகம் வேண்டும், ஆனால் அது நான் எதிர்பார்க்கின்ற விதம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

இன்றைக்கு அநேகர் ஆண்டவரிடத்தில் வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம். தமிழில் அதை அகந்தை, ஆணவம், அகங்காரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். அநேகர் ஆண்டவரிடத்தில் வருவதற்குக் காலத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். பிரசங்கங்களை நன்றாகக் கேட்பார்கள், மனந்திரும்புதல் வேண்டும், விசுவாசம் வேண்டும், கர்த்தர்தான் ஜீவனுள்ள மெய்யான கடவுள், இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே வழி, அவரை விசுவாசிக்காமல் பரலோகம் போக முடியாது, பாவம் போகாது என்பதெல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் இருதயம் மிகவும் மோசமாக இருக்கிறது. இருதய அகங்காரத்தினால் காலத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் மனிதன் ஆண்டவரிடத்தில் சுயமாக வரமுடியாத நிலையில் இருக்கிறான். நாகமானும் அப்படியே இருந்தான். நோய் போகவேண்டும் என்பதில் அவனுக்கு விருப்பந்தான், ஆனால் அது எப்படிப் போகவேண்டும் என்பதில்தான் பிரச்சனை இருந்தது. அதனால்தான் மனிதனும் ஆண்டவர் வேண்டுமென்று நினைக்கிறான், ஆனால் எனக்குப் பிடித்தவிதத்தில் கோயிலைக் கட்டுவேன், இந்தச் சாமிதான் எனக்கு விருப்பம். எனக்கு பிடித்த முறையில் என்னுடைய விருப்பப்படி எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஆண்டவரைப் பார்த்துச் சொல்லுகிறான். ஆண்டவரைத் தன் கையிலிருக்கும் ஒரு விளையாட்டுப் பொருளைப்போல நினைக்கிறான். அவன் கேட்கிற நேரமெல்லாம் அவர் கேட்பதைத் தான் விரும்பியபடி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். இதையே நாகமானும் எதிர்பார்த்தான்.

(ஆ) நாகமானின் ஆணவம்

இப்போது அவனுடைய வேலையாட்கள் வந்து ஆலோசனையைத் தருகிறார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு நாகமான் சிந்திக்க ஆரம்பித்தான். இது பெரிய ஆச்சரியம். இதற்குப் பின்னால் நம் ஆண்டவர் இருந்திருக்கிறார், அவர் இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.

“அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.” (2 இராஜாக்கள் 5:14)

இங்கு நாகமான் ‘இறங்கி’ என்று காணப்படுவது தன் இரதத்தில் இருந்து மட்டுமல்ல, தன் ஆணவம் அகங்காரம் ஆகியவற்றிலிருந்தும் இறங்கி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. இதைப்போல ஒரு மனிதன் எப்போது ‘இறங்கி’ வருகிறானோ அப்போதுதான் ஆண்டவர் அவன் அருகில் வருகிறார். இதற்குப் பெயர்தான் தமிழில் தாழ்மை என்பது. இஸ்ரவேல் ராஜாவிடம் அது காணப்படவில்லை. அது இருந்திருந்தால் அவன் எலிசாவிற்கு செய்தி அனுப்பியிருப்பான். எலிசாவை அவன் பொருட்படுத்தவே இல்லை. எலிசா வசதியாக பக்கத்தில் இருந்தும் அவனுக்கு ஆத்மீக விடுதலை கிடைக்கவில்லை. ஆனால் தூரதேசத்திலிருந்த நாகமானுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைத்தது.

தாழ்மை இல்லாதவர்கள் ஒருநாளும் உயர முடியாது. தாழ்மை இல்லாதவர்களிடம் ஆண்டவர் ஒருபோதும் வரமாட்டார். நாகமானிடம் தாழ்மை இதற்கு முன் இருந்ததில்லை. முதன்முறையாக நாகமான் இறங்கி வருகிறான். உங்களிலும் சிலர் ஆண்டவரிடம் வராமல் தொடர்ந்து அதே நிலையில் இருப்பதற்குக் காரணம் தாழ்மை இல்லாததுதான். உங்களுடைய ஆணவம் உங்களை அவரிடம் போகவிடாமல் வைத்திருக்கிறது. நீங்கள் இந்த நாகமான் போல பெரிய பதவியில் இல்லாமல் இருக்கலாம். சமுதாயத்தில் ஒரு சாதாரணமான ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். இருந்தாலும் உங்களிடம் ஆணவம் இருக்கிறது. உயர்ந்த இடத்தில் இருப்பவர்களிடந்தான் ஆணவம் இருக்கும், ஏழை, எளியவர்களிடமே தாழ்மை இருக்கும் என்று நாம் நினைப்போம். அந்த எண்ணம் தவறு. ஆவிக்குரியவிதத்தில் பார்க்கும்போது இந்த ஆணவம் பணக்காரனையும் விடாது, ஏழையையும் விடாது. உங்களை ஆண்டவரிடம் வரவிடாமல் வைத்திருப்பது உங்கள் இருதயமும், உங்கள் ஆணவமே.

(இ) நாகமானைத் தாழ்த்திய கிருபை

அன்று நாகமான் இறங்கி வருகிறான். இறங்கி வருகிறவன்தான் ஆண்டவரிடத்தில் வருகிறான், அவனிடத்தில் கிருபை வருகிறது. உண்மையிலேயே கிருபை செயல்படுகிறதனால்தான் மனிதன் இறங்கி வருகிறான். ஏனென்றால் மனிதனின் இருதயம் அத்தனை மோசமானது. அது சாதாரணமாக இறங்கி வராது. பாவம் பொல்லாததென்று வேதம் சொல்லுகிறது. அந்தப் பாவத்திற்கு எதுவும் நடக்காவிட்டால் நம்மில் எவருமே இறங்கி வரமாட்டோம். ஆவியானவர் ஒரு மனிதனின் இருதயத்தில் கிரியை செய்து, கிருபை அவனைச் சந்திக்கிறபோது அந்த ஆணவத்திற்கு சாவுமணி அடித்து முடிவு கட்டப்படுகிறது.

நாகமான் இருதயத்தில் ஆவியானவர் கிரியை செய்து அவன் இறங்கி வந்து தேவனுடைய மனுஷனின் வார்த்தையின்படி ஏழுதரம் யோர்தான் நதியில் முழுகினான். இதற்குமுன் அவன் என்ன ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதோ அவன் இறங்கி வந்து எலிசா சொன்னபடியே யோர்தானில் ஏழுதரம் முழுகினான். ஏன் எலிசா ஏழுதரம் முழுகச் சொன்னார்? அவனுடைய ஆணவம் முழுவதும் போகும்மட்டும் அவன் முழுக வேண்டியிருந்தது. அவன் யோர்தான் நதியில் இறங்கும் நேரம் தன் கவசங்களையும், விலையுயர்ந்த உடைகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண உடையை இடுப்பில் அணிந்துகொண்டு எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போது மூழ்கி எழுந்தான். அவன் இவ்வாறு செய்கிறபோது ஆண்டவர் எந்தளவுக்கு அவனுடைய இருதயத்தில் கிரியை செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. ஆண்டவர் கிரியை செய்யாமல் இதை எந்தவொரு மனிதனும் செய்ய முடியாது. அவன் அவ்வாறு செய்தபோது “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” என்று வேதம் சொல்லுகிறது.

அவன் யோர்தானில் இறங்கி மூழ்காமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. ஆண்டவர் சொன்ன வார்த்தை நிச்சயமாக நிறைவேறும். அவர் கிருபையின் மூலம் இலவசமாக இரட்சிப்பைத் தருகிறேன், என்னிடத்தில் வருகிறவர்களை நான் புறம்பே தள்ளமாட்டேன் என்று சொல்லுகிறார். இரட்சிப்பை அடைவதற்கு நீங்கள் பணமோ, பொருட்களோ கொடுக்கத் தேவையில்லை. அவர் இலவசமாய்க் கொடுப்பதை நாம் பெற்றுக்கொள்வதே நம் வேலை. நாம் எப்போது ஆண்டவரைப் பற்றி சிந்தித்து அவரை அழைக்கிறோமோ அப்போதே அவர் நம்மிடத்தில் வருகிறார். ஆண்டவர் வார்த்தை தவறாதவர், மாறாதவர். நான் மாறாத தேவனாக இருக்கிறேன் என்று தன்னைப் பற்றிச் சொல்லுகிறார். அவர் தன் வார்த்தையின்படி நடக்கிறவராக இருக்கிறார். அவர் வார்த்தையின்படி நாமும் நடக்க வேண்டும். நாகமான் சுகமடைந்ததற்குக் காரணம் ஆண்டவருடைய கிருபை நாகமானில் செயல்பட ஆரம்பித்து அவனுடைய ஆணவம் முழுவதும் இல்லாமல் போய் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்ததுதான் என்று பார்க்கிறோம்.

அவன் சுகமடைந்து திரும்பி வந்து “அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்;” (2 இராஜாக்கள் 5:15) என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். நாகமான் படிகள் ஏறி எலிசாவிடம் தன் கூட்டத்தோடு போய் நிற்கிறான். அப்போது இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் என்று சொல்லுகிறான். அவனுக்கு ஆணவம் போய்விட்டது, கிருபை அவனுக்குள் கிரியை செய்தது, விசுவாசத்தின் மூலம் ஆண்டவரிடத்திலிருந்து இலவசமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் என்பதற்கு அவனுடைய வார்த்தைகள் அடையாளமாக இருக்கின்றன. இப்போது அவன் இதுவரை நான் ஆராதித்துவந்த கடவுள் கடவுளே இல்லை, இஸ்ரவேலிலிருக்கும் தேவனைத் தவிர பூமியெங்கும் வேறு தேவன் இல்லை என்பதை அறிந்தேன் என்று பகிரங்கமாக எல்லோரும் கேட்கும்படிச் சொன்னான். அவனிடத்திலிருந்து போனது குஷ்டரோகம் மட்டுமல்ல, அதைவிடக் கொடுமையாக அவனைப் பிடித்திருந்த பாவத்திற்கு ஆண்டவர் அன்றைக்கு விடுதலையைக் கொடுத்தார். அதனால்தான் இஸ்ரவேலின் தேவனைவிட பூமியெங்கும் வேறு தேவன் இல்லை என்று சொன்னான். இவை சாதாரண வார்த்தைகள் இல்லை. உண்மையாலும் கிருபையின் மூலமாக விசுவாசத்தை அடைந்த ஒரு மனிதன் மட்டுமே இவ்விதம் அதிரடியாகச் சொல்லமுடியும். அவன் எந்தவித வெட்கமுமில்லாமல் தன்னுடைய விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கையிடுவதற்கு தேவனுடைய கிருபை காரணமாக இருந்திருக்கிறது.

(ஈ) நாகமானைச் சந்தித்த கிருபை

இதெல்லாம் நடந்ததற்கு அந்தச் சிறுமி காரணமா, அல்லது எலிசா காரணமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. நிச்சயமாக இறையாண்மையுள்ள தேவன் இதற்குப் பின்னாலிருந்து செயல்பட்டிருக்கிறார். எந்தவொரு பாவியும் மனந்திரும்பி ஆண்டவரிடத்தில் வருகிறபோது அது மனிதனால் நடக்கின்ற காரியமல்ல, தேவனுடைய கிருபையினால் நடக்கிற காரியமாக இருக்கிறது. அதற்காக அவர் பயன்படுத்திய கருவிகளில் ஒருவர் அந்தச் சிறுமி, இன்னொருவர் எலிசா. ஆணவத்தோடு இருந்த மனிதன் இப்போது “உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும்” (2 இராஜாக்கள் 5:15) என்று சொல்லுகிற நிலைக்கு மாறினான். எவ்வளவு ஒரு அருமையான விடுதலையை ஆண்டவர் அவனுக்குக் கொடுத்ததை இங்கு காண்கிறோம்.

அந்தச் சிறுமி இல்லாமல் அது நடந்திருக்காது. அந்தச் சிறுமி ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி. அன்றைக்கு நாகமானுக்கு கிருபை கிடைக்கும்படியும், சீரியாவிற்கு சுவிசேஷம் போய்ச் சேரும்படியும் ஆண்டவர் ஒரு பெரிய பிரசங்கியை அன்று பயன்படுத்தவில்லை, எலிசாவைப் பயன்படுத்தவில்லை, சாதாரண பெயர் தெரியாத ஒரு சிறுமியைப் பயன்படுத்தியிருக்கிறார். அவள் மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்படும்படியாகவும், நாகமான் திரும்பிப்போய் ராஜாவிடம் இதையெல்லாம் சொல்லும்படியாகவும், தான் அடைந்த விசுவாசத்தை விளக்கும்படியாகவும் அவள் பயன்படுத்தப்பட்டிருக்கிறாள். அதுமட்டுமல்ல நாகமான பெரிய பதவியில் இருப்பதனால் சீரியாவிலுள்ள விசுவாசிகளுக்கு உதவவும், ஆராதனைக்கு அனுமதி அளிக்கவும், அதன்மூலம் சுவிசேஷம் அந்த நாட்டிற்கும் போய்ச்சேரவும் அந்தச் சிறுமியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

உங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்

இதையெல்லாம் இப்போது அறிந்துகொண்ட நீங்கள், உங்களுக்கு ஆண்டவர் கிருபை அளித்திருக்கிறாரா? கிருபையின் மூலமாக அவர் கொடுக்கிற அழிவில்லாத ஆத்மீக வாழ்க்கையை அடைந்திருக்கிறீர்களா? கல்லிலும், மண்ணிலும், படத்திலும் நம்பிக்கை வைத்து, இறந்துபோனால் எங்கு போகப்போகிறோம் என்று தெரியாமல், இருதயம் குழம்பிப்போய் ஒரு சமாதானமில்லாமல், யார் ஆண்டவரென்று தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெல்லாம் இருந்தால் அதற்குக் காரணம் என்னவென்று இதில் பார்த்தோம் அல்லவா? நாகமானின் அகங்காரம் அவனை அப்படிச் செய்ய வைத்தது. நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அகங்காரத்திற்கு முடிவு கட்டவேண்டும். நிச்சயமாக அதற்குக் கர்த்தர்தான் உதவி செய்யவேண்டும். ஆனால் நீங்கள் அகங்காரத்தோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். உங்களில் அகங்காரம் பிடித்திருப்பதற்கு காரணம் உங்களைப் பிடித்திருக்கிற பாவமே. அந்தப் பாவம் பொல்லாதது, அது பயங்கரமானது என்று வேதம் சொல்லுகிறது. அந்தப் பாவம் அவ்வளவு மோசமாக, கொடூரமாக, குஷ்டரோகத்தையும் விட மோசமாக இருந்ததனால்தான் கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார். மக்களால் பாராட்டப்படுவதற்காக அவர் வரவில்லை. தன்னையே சிலுவையில் பலியாகக் கொடுப்பதற்காவும், பாவிகள் விடுதலை வாழ்க்கையை அடைவதற்கு தன்னுடைய இரத்தத்தையும், ஜீவனையும் கொடுத்து இந்த உலகத்தில் மரிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அதன்மூலமாக மட்டுமே பாவத்திற்கு முடிவுகட்ட ஆண்டவர் தீர்மானித்திருந்தார். தேவனும் மனிதனுமாக இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாக மட்டும்தான் பாவத்திற்கு விடுதலை வரவேண்டி இருந்தது. ஏனென்றால் அந்தளவுக்கு பாவம் மோசமானது.

உங்களை அந்தப் பாவம் பிடித்திருப்பதை உணருகிறீர்களா? அந்தப் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து மட்டும்தான். வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. அதனால்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். அருமையான அந்த நல்ல செய்தியைச் சொன்னார். எத்தனையோ பேருக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். அவர் தொடர்ந்தும் நம் மத்தியிலிருந்து சுவிசேஷத்தின் மூலமாக பேசிக்கொண்டிருக்கிறார். உங்களுக்குள்ளும் எத்தனையோ பேருக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜீவன் கிடைத்திருக்கிறது. ஆனால் உங்களில் சிலர் இன்னும் ஆண்டவரை அறியாமல், அவருக்கு இருதயத்தைக் கொடுக்காமல், அவரை விசுவாசிக்காமல், அவரையே தேவனாக விசுவாசித்து அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்காமல் தொடர்ந்து ஆணவத்தோடு வாழ்ந்து வருகிறீர்கள். அதற்குக் காரணமான பாவத்திலிருந்து விடுதலை அளிக்கக்கூடிய இயேசுவினிடத்தில் நீங்கள் வராமல் இருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? அன்றைக்கு இந்த நாகமான் கோபத்தோடு சீரியாவிற்குத் திரும்பிப் போயிருந்தால் குஷ்டரோகம் ஒருநாளும் அவனிடத்திலிருந்து போயிருக்காது, அவன் இருதயமும் மாறியிருக்காது. ஆனால் அவன் தன் வேலையாட்கள் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தான், ஆண்டவர் அவனுக்கு உதவி செய்தார்.

நீங்கள் ஏன் அவர் வார்த்தையைக் கேட்கக்கூடாது? அந்த நாகமான் அவ்வளவு பெரிய மனுஷனே தனக்கு உதவி வேண்டுமென்று இறங்கி வந்து தன் இருதயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்தான். உங்களால் ஏன் அது முடியாமல் இருக்கிறது. கர்த்தரை அறியாமல், அவரை விசுவாசிக்காமல் நீங்கள் ஏன் உங்கள் காலத்தைப் போக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்? உலகில் எத்தனையோ மரணங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தும் உங்கள் இருதயத்தை நீங்கள் கடினப்படுத்திக் கொண்டிருந்தால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது. ஆண்டவர் என் வார்த்தைக்குச் செவி கொடுங்கள் என்று சொல்லுகிறார். இன்றைக்கே நீங்கள் மனந்திரும்பி அவர்தான் ஜீவனுள்ள தேவன், அவர்தான் உலகத்தையே படைத்து பராமரிக்கிற தேவன் என்று விசுவாசிப்பீர்களானால் அவர் உங்களுக்கு ஜீவனைக் கொடுப்பார். எந்த நிமிடம் விசுவாசிப்பீர்களோ அந்த நிமிடமே அழிவில்லாத ஜீவனை இயேசு கொடுக்கிறார். அதை ஏன் நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடாது? மனந்திரும்புங்கள், இயேசுவை விசுவாசியுங்கள். நாகமானுக்குக் கிடைத்த விடுதலை உங்களுக்கும் கிடைக்கும்.

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.