திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2012 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்

1. வாசகர்களே!

2. பொது ஆராதனை – ஜே. சி. ரைல் –

3. திருச்சபையில் பொது ஆராதனை ஜே. சி. ரைலின் ஆக்கத்தின் நடைமுறைப் பலன்கள்

4. இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை? – அல்பர்ட் என். மார்டின் –

5. கிறிஸ்தவனே! பாவத்தை அழி, அது உன்னை அழிக்குமுன் (பாவத்தை அழித்தல் – 3)

6. அவசியம் சிந்திக்க வேண்டிய ஓர் ஆத்மீகப் பிரச்சனை!

 

 

வாசகர்களே!

பல வேலைகளுக்கு மத்தியில் இந்த இதழை நேரத்தோடு முடித்து உங்கள் முன் வைக்க கர்த்தர் கிருபை செய்தார். தொடர்ந்து திருமறைத்தீபம் உங்களுக்கு பெரும் பயனளித்து வருவதை கேள்விப்பட்டும், கடிதங்களை வாசித்தும், பலரிடம் நேரில் கேட்டறிந்தும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், என் சபைக்கும், என்னோடிணைந்து இந்த ஊழியத்தில் பணிபுரிந்து வருகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஊக்கத்தை அளிக்கிறது. தொடர்ந்து எங்களுக்காகவும், இந்தப் பணிக்காகவும் ஜெபியுங்கள்.

இந்த இதழில் பெரியவர் ரைலின் ஆராதனை பற்றிய ஆக்கம் நிறைவு பெறுகிறது. அந்த ஆக்கத்தின் நடைமுறைப் பலனை விளக்கி சுருக்கமாக எழுதியிருக்கிறேன். ரைலின் ஆக்கம் உங்கள் கண்களைத் திறந்து வைத்து கர்த்தரை உங்கள் சபையில் அவருடைய வேதபோதனையின்படி ஆராதிக்க வைக்குமானால் அதைவிட பெரிய ஆத்மீக எழப்புதல் இருக்க முடியாது. அது நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இருதயத்தின் தாகம். கடந்த இதழில் வந்த பாகம் பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பதை அறிந்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இந்த இதழில் வந்திருப்பது உங்களை மேலும் சிந்திக்கவும், செயல்படவும் வைக்கட்டும்.

அல்பர்ட் மார்டினின் ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை?’ என்ற சுவிசேஷ ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கின்றது. இது அருமையான சுவிசேஷப் பிரசங்கம். வாசித்து ஆத்மீகப் பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்தும் இத்தகைய ஆக்கங்களை வெளியிட விரும்புகிறோம். சுவிசேஷ செய்தி என்ற பெயரில் சுவிசேஷம் கலங்கப்படுத்தப்பட்டு வருகின்ற காலப்பகுதியில் நாம் வாழுகிறோம். சுவிசேஷம் என்றால் என்ன என்பதை இந்த ஆக்கம் நிச்சயம் உங்களுக்கு தெளிவாக விளக்கும். கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைக் கேட்பதும், சுவிசேஷப் பிரசங்கங்களை வாசிப்பதும் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியம். கேடான நம்மிருதயத்துக்கு சுவிசேஷம் ஆத்மீக வைட்டமின் போல உதவி செய்யும். கர்த்தர் எத்தனை பெரியவர் என்பதையும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்பு எத்தனை ஆசீர்வாதமானது என்பதையும் உணர்ந்து தொடர்ந்து கர்த்தரைத் துதித்து பரிசுத்தமாக வாழ சுவிசேஷம் உதவுகிறது.

பாவத்தை அழித்தல் பற்றிய என்னுடைய ஆக்கத்தின் மூன்றாவது பகுதியும் இந்த இதழில் வந்திருக்கிறது. இந்த இதழை நல்லமுறையில் தயாரித்து வெளியிடவும், விநியோகிக்கவும் தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரதிபலன் பாராமல் உழைத்து உதவியிருக்கும் நல்ல இதயங்களுக்கு என் நன்றி.- ஆசிரியர்

 

பொது ஆராதனை – ஜே. சி. ரைல் –

ஜே. சி. ரைல் ஆங்கிலேய திருச்சபையின் (Church of England) போதகராக இங்கிலாந்தில் இருந்தார். இந்த ஆக்கம் ஜே. சி. ரைலினுடைய “Knots United” என்கிற ஆக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவர் எழுதிய காலப்பகுதியில், உயர் வர்க்க ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்துக்குச் செல்வதை நாகரீகமானதாக கருதி வந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த 130 ஆண்டுகளில் இந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டாலும், ஆராதனையைக் குறித்து ரைல் எழுதியிருக்கின்ற வேதபூர்வமான கருத்துக்கள் உலகமெங்கும் வாழுகின்ற எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்விதத்தில் அமைந்திருக்கின்றது.

  1. பொது ஆராதனையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கடவுளைக் குறித்து அதிகமாக சிந்திக்காமலும், மதசம்பந்தமான எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமலும், இதுவரை எந்த ஆராதனைக்கும் சென்றிராதவனுமாகிய ஒரு மனிதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். திடீரென எப்படியோ அவனுக்கு தன்னுடைய ஆத்துமாவைக் குறித்த அக்கறை ஏற்பட்டு, விழிப்படைந்தவனாகி, மதசம்பந்தமான காரியங்களில் பங்குபெற ஆர்வமுள்ளவனாகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் சபைகளுக்குப் போய் பார்க்கும்போது எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே விதமாக கடவுளை வழிபடுவதில்லை என்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். தனது பக்கத்து வீட்டுக் கிறிஸ்தவர் ஒருவிதமாகவும், தனது அலுவலக கிறிஸ்தவ நண்பர் வேறுவிதமாகவும் கடவுளைத் தொழுதுகொள்ளுகிறதைக் காண்கிறான். அவர்களில் ஒருவர் சொல்லுகிறார், தனது சபையின் மூலமாகத்தான் ஒருவன் மோட்சத்தை சென்று அடையமுடியும் என்று. இன்னொரு நண்பரோ, தான் இருக்கின்ற சபைக்கு வராத யாவரும் நரகத்திற்குத்தான் போய் சேருவார்கள் என்கிறார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மனிதன் என்ன நினைப்பான்? கிறிஸ்தவ வழிபாட்டில் அவசியமாக இருக்க வேண்டிய காரியங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்பான். நிச்சயமாக அப்படியான காரியங்கள் இருக்கின்றன. இப்போது நான் அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்கப் போகிறேன்.

புதிய ஏற்பாட்டில் ஆராதனை முறையைக் குறித்து குறைந்தளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது என நான் ஏற்கனவே கூறினேன். பழைய ஏற்பாட்டில் ஆராதனையைக் குறித்து மோசேயின் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளோடு ஒப்பிடும்போது புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பது மிகவும் கொஞ்சமே. யூத மார்க்கத்து வழிபாட்டு முறையானது மிகவும் கறாரானது. ஒவ்வொரு காரியமும் அதில் அதிக விவரமாக விளக்கப்பட்டிருக்கும். கிறிஸ்தவ மார்க்கத்திலோ அவ்வளவு விளக்கங்கள் இல்லை. ஆராதிப்பதைக் குறித்து எளிமையாகவும், பொதுவாகவுந்தான் புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டிருக்கிறது. யூதமார்க்கத்தில் கடவுள் வழிபாட்டில், மாதிரிகளும், அடையாளச் சின்னங்களும், வெளிப்படையான பொருட்களும் அதிகமாக காணப்பட்டன. கிறிஸ்தவத்தில் இரண்டே இரண்டு காரியங்களைத்தான் அடையாளமாகக் காண்கிறோம். அதாவது, ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும். யூதவழிபாட்டாளர்கள் கண்களால் காணக்கூடியதைக் கொண்டு கடவுளைத் தொழுதனர். புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவ வழிபாட்டில் இருதயமும், மனச்சாட்சியும் சம்பந்தப்படுகிறது. யூதமதமானது ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு மாத்திரம் ஏற்பட்டது. கிறிஸ்தவம் உலகத்திலுள்ள அனைவருக்கும் உரியது. ஆராதனையின் ஒவ்வொரு காரியத்தையும் குறித்து தெரிந்துகொள்ள யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் படித்துப் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்தவர்களோ புதிய ஏற்பாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொடுக்கப்பட்டிருக்கிற சில வசனபகுதிகளைப் பார்த்து, அந்தந்த சபைகளில் சூழ்நிலைக்கு ஏற்றபடி உபயோகித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். யாத்திராகமம், லேவியராகமம் ஆகியவற்றின் மூலமாக இஸ்ரவேலருக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அளவுக்கு புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஆராதனை குறித்த போதனை இல்லை. ஆனால், வேதத்தை கவனமாகப் படித்து விளங்கிக் கொண்டிருக்கிற எந்த கிறிஸ்தவனும், கிறிஸ்தவ வழிபாட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஆராதனைக்குரிய அம்சங்களை உணராமல் இருக்க முடியாது. இந்த அத்தியாவசியமான காரியங்கள் காணப்படுகிற ஆராதனையே மெய்யான கிறிஸ்தவ ஆராதனையாகும். இவை காணப்படாத ஆராதனை குறைவுள்ளவை, பூரணமில்லாதவை, அரைகுறையானவை என்றுதான் கூறமுடியும். அந்த அத்தியாவசியமான ஆராதனை அம்சங்கள் யாவை என இனிப் பார்ப்போம்.

  1. முறையான பொது ஆராதனையில், ஓய்வுநாள் எப்போதும் மரியாதையோடு அனுசரிக்கப்பட வேண்டும்.

இதற்காகவே அந்த நாள் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மனிதர்களோடு கூடி கடவுளின் ஆராதனையில் ஈடுபடுவதற்காக அந்த நாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. மோட்சத்திலுங்கூட மனிதருக்கு ஓய்வுநாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்துக் கற்பனைகளில் ஒன்றாக ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதை வேதம் வலியுறுத்துகிறது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுங்கூட ஓய்வுநாளிலே தேவனைத் தொழுது, அதைக் கடைப்பிடிக்கிறவராக காணப்பட்டார். வாரத்தில் ஒரு நாள் அனைவருமாகக் கூடிவருகின்ற பழக்கம் ஆதிக் கிறிஸ்தவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்கள் வாரத்தின் கடைசிநாளுக்கு பதிலாக வாரத்தின் முதலாம் நாளிலே கூடி வந்தததை அறிந்துகொள்ளுகிறோம் (அப் 20:7; 1 கொரி 16:2).

கிறிஸ்தவ ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக் கிழமைகளில் விசுவாசிகள் கர்த்தருடைய ஆலயத்திலே கூடிவருகின்ற பழக்கம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள், ஓய்வுநாளிலே சபையாகக் கூடிவருதலால் ஏற்படும் நன்மைகளையும் அதன் சிறப்புத் தன்மைகளையும் குறித்து எப்போதும் மற்றவர்களுக்கு வலியுறுத்திக் கூறிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் தாங்கள் எவ்வளவு நன்மையை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்களே நல்ல சாட்சிகளாக விளங்கியிருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லா நாளுமே பரிசுத்தமான ஓய்வுநாள்தான். அதிலே எந்த நாளையும் மற்ற நாட்களைக் காட்டிலும் விசேஷித்துப் பார்க்கக் கூடாது என்று கூறிக்கொள்வது கேட்பதற்கு நன்றாகவும், ஆவிக்குரியவிதமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெறும் வாய்ப்பேச்சுக்களைவிட நடைமுறையில் அது எப்படி செயல்படுகிறது என்பதே முக்கியமானது. சில குறிப்பிட்ட மணி நேரங்கள், குறிப்பிட்ட காலங்கள், குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, அந்த வேளைகளை கடவுளுடைய காரியங்களில் செலவிடுவது மனிதனுடைய ஆத்துமாவுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள். கடவுள் அமைத்துக் கொடுத்த ஒழுங்கு விதியை நாம் பயன்படுத்தாவிட்டால், பொது ஆராதனை பயனுள்ளதாக இருக்காது. “ஓய்வுநாள் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது” என்ற ஒழுங்குவிதியை, மனிதனை ஆதியில் உருவாக்கியவரே சொல்லுகிறார். மாமிசமும் இரத்தமும் எப்படி செயல்படுமென்று மனிதனை உருவாக்கியவரான அவருக்குத் தெரியும். ஓய்வுநாள் சரியான விதத்தில் அனுசரிக்கப்படாத இடத்தில் பொது ஆராதனையைப் பார்க்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

  1. முறையான பொது ஆராதனையை நடத்த அதைத் தலைமை தாங்குகிற அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் (போதகர்) இருக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளக் கூடிவருகின்ற சமயத்திலே அவர்களை ஒழுங்கோடும் சரியான வழியிலும் தலைமை தாங்கி நடத்திச்செல்வதற்கு சரியான ஊழியர்கள் பொது ஆராதனையை நடத்த வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். அப்போஸ்தல நடபடிகளையும், கொரிந்து, எபேசிய சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்களையும், தீமோத்தேயு, தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபங்களையும் வாசிப்பவர்கள், சபையை நடத்துவதற்கு ஊழியர்கள் தேவையில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? குவேக்கர்கள் மீதும், பிலிமத் சகோதரர்கள் மீதும் (Quakers and Plymouth Brethren) நான் மரியாதை வைத்திருக்கிறேன். இருந்தாலும், ஊழியக்காரர்களை நியமிக்காமல் சபையாக செயல்படலாம் என்கிற இவர்களுடைய கருத்துக்கள் எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்றிருக்கிற உலக காரியங்கள்கூட நாளடைவில் சீர்கெட்டு அழிந்துவிடுவதைப் பார்க்கிறோமல்லவா? பரலோகத்திலேயே ஒழுங்குதான் முதலாவது விதியாக இருக்கிறது. ஜனங்கள் ஓய்வுநாளை அனுசரிக்காமலும், ஊழியர்கள் என யாரையும் நியமிக்காமலும் போனால், வெகு சீக்கிரத்தில் பொது ஆராதனையும், பக்தியும், கடவுள் பயமும் இல்லாமல் ஒழிந்து போகும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.

  1. முறையான பொது ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தை தெளிவாக பிரசங்கிக்கப்பட வேண்டும்.

கடவுளுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படாத எந்தவொரு சபையையும் நாம் புதிய ஏற்பாட்டிலே காண்பதில்லை. சபை கூடிவரும்போது கர்த்தருடைய வசனம் பிரசங்கிக்கப்படுவது முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு உணர்த்தி அவர்களை விழிப்படையச் செய்வது மாத்திரமல்லாமல், பரிசுத்தவான்களை நடத்தி, அவர்களையும் நிலை நிறுத்துகிறார். இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகிறபொழுது “திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு” என்று குறிப்பிட்டுச் சொல்லுகிறார். பிரசங்கத்திற்கு மிகவும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிற ஆராதனையோ அல்லது பிரசங்கத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் அதை ஒரு மூலையில் தள்ளிவிடுகின்ற ஆராதனையோ வேதபூர்வமான ஆராதனை என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அப்படிப்பட்ட ஆராதனைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்காது. ஜெபம், வேத வாசிப்பு, பாடல்கள் பாடுதல், திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய இவைகள் மட்டும் அடங்கிய ஆராதனையை நான் ஆராதனையாகவே நினைக்க மாட்டேன். அவைகள் சடங்காச்சாரங்களை அதிகப்படுத்தி, வசனபோதனையை ஒழிந்து போகப் பண்ணுகிற சாத்தானின் திட்டமேயல்லாமல் வேறல்ல என்று பிஷப் லெட்டிமர் (Latimer) கூறியதை நான் அங்கீகரிக்கிறேன். “தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்” (1 தெச 5:20) என்கிற வார்த்தை மிகுந்த பொருள் உடையது. பிரசங்கங்களை அவமதிப்பது ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு அடையாளமாயிருக்கிறது.

  1. முறையான பொது ஆராதனையில் எல்லோரும் ஒன்று கூடி ஏறெடுக்கிற பொதுவான ஜெபம் இருக்க வேண்டும்.

ஜெபங்களும் வேண்டுதல்களும் ஏறெடுக்கப்படாத சபை கூடுதலை நாம் புதிய ஏற்பாட்டில் காண்பதில்லை. “நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோ 2:1) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு கட்டளையிடுகிறதை நாம் பார்க்கிறோம். பொது ஆராதனையில் ஏறெடுக்கப்படுகிற ஜெபம் தெளிவானதாகவும் ஞானமுள்ளதாகவும் இருக்க வேண்டும். எதைக் குறித்து ஜெபிக்கிறார்கள் என்பது ஆராதிப்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஜெபிப்பவரோடு அவர்களும் ஒருமனப்பட்டிருக்க வேண்டும். கூடுமானவரையில் ஜெபம் சபையார் அனைவரின் ஒன்றுபட்ட விண்ணப்பமாயிருக்க வேண்டும். அது ஒரு தனிப்பட்ட மனிதனின் மனதை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது. ஒரு சிறந்த பிரசங்கத்தைக் கேட்பதற்காக மட்டும் கூடி வந்துவிட்டு, ஜெபங்களில் அக்கறை செலுத்தாத சபையார் புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கு ஏற்றவர்கள் அல்ல. வெறும் பிரசங்கத்தை மாத்திரம் கேட்பது பொது ஆராதனை அல்ல.

  1. முறையாக நடக்கும் பொது ஆராதனையில் பரிசுத்த வேதாகமப் பகுதிகளை பகிரங்கமாக வாசிக்க வேண்டும்.

யூதர்களின் ஜெப ஆலயங்களில் ஆராதனையின் ஒரு பகுதியாக வேதவாசிப்பும் இடம் பெற்றிருந்தது என்பதை நாம் நாசரேத்து, பிசீதியாவிலுள்ள அந்தியோகியா (லூக் 4:16; அப் 13:15) ஆகிய இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு அறிந்துகொள்கிறோம். யூதர்கள் வேதாகமத்திற்கு மரியாதை கொடுத்தது போலவே ஆதிக்கிறிஸ்தவ சபைகளும் வேதாகமத்தை மதித்தன என்பதைக் குறித்து சந்தேகமேயில்லை. பவுல் தீமோத்தேயுவுக்கு கூறும் அறிவுரையிலும் இந்தக் கருத்து தொனிப்பதை நான் காண்கிறேன் – “நான் வருமளவும் வாசிக்கிறதிலும் . . . ஜாக்கிரதையாயிரு” (1 தீமோ 4:13). தனிப்பட்ட வேதவாசிப்பைக் குறித்து இவ்விடத்தில் பவுல் கூறுவதாக நான் நினைக்கவில்லை. வேதாகமத்தை பகிரங்கமாக வாசிக்கும் பழக்கத்தினால் ஏற்படக்கூடிய உபயோகத்தை நாம் அனுபவத்தினாலும் பொது அறிவினாலும் உணர்ந்துகொள்ள முடியும், சபையிலே பலவிதமான மக்கள் இருப்பார்கள். சிலபேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம். சிலருக்கு நேரமில்லாமையினாலோ அல்லது மனதில்லாமையினாலோ வீட்டிலே வேதத்தைப் படிக்காதவர்களாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களும் சபையின் பகிரங்க வேதவாசிப்பின் மூலமாக வேதபோதனையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, கடவுள் என்னவொரு அருமையான திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார்! வேதவசனங்களை மிகவும் குறைந்த அளவிலே கேட்கின்ற சபையானது, சபைப் போதகரையே முற்றிலுமாக சார்ந்து நிற்க வேண்டிய அபாயத்தில் இருக்கிறது. கடவுள் சபையோடும் தனிமனிதனோடும் பேச வேண்டும்.

இங்கிலாந்து சபையிலே நான் பெரிதும் மதித்துப் பாராட்டுகிறதான ஒரு காரியம் என்னவென்றால் சபையில் வாசிக்கப்படுகின்ற அதிகமான வேதவசனங்களாகும். சபை அங்கத்தினர் அனைவரும் கேட்கும்படியாக சத்தமாக வாசிக்கப்படுகின்ற வேதபகுதிகள் இங்கு ஏராளம். ஞாயிறு தினங்களிலே காலையிலும் மாலையிலும் ஆராதனையில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும் பழைய ஏற்பாட்டில் 2 அதிகாரங்களும், புதிய ஏற்பாட்டில் 2 அதிகாரங்களும் வாசிக்கக் கேட்பார்கள். அதையும் தவிர்த்து, சங்கீதங்களிலிருந்தும், நிருபங்களிலிருந்தும், சுவிசேஷங்களிலிருந்தும் வசனங்கள் வாசிக்கப்பட அதையும் கேட்பார்கள். வேறு எந்தக் கிறிஸ்தவ சபையிலும் இந்த அளவுக்கு வேத வசனங்கள் சபையிலே பகிரங்கமாக வாசிக்கப்படுகிறதா என்பது சந்தேகந்தான்.

  1. முறையான பொது ஆராதனை நடக்குமிடத்தில் அனைவரும் பகிரங்கமாக தேவனைப் புகழ்ந்து பாட வேண்டும்.

எபேசியருக்கும் கொலோசெயருக்கும் பவுல் எழுதின நிருபங்களில், “சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும்” ஏற்படக்கூடிய உபயோகத்தைக் குறித்து கட்டளையிட்டு எழுதியிருப்பதை நாம் காண்கிறோம் (எபே 5:19; கொலோ 3:16). ஆரம்ப கிறிஸ்தவர்களிடம் அந்தப் பழக்கம் காணப்பட்டது. கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட அந்த பழக்கமானது வரலாற்றிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிளினி (Pliny) என்பவர் கிறிஸ்தவர்களைக் குறித்து, “இவர்கள் கிறிஸ்துவை கடவுளாக கருதி அவருக்கு பாடல்கள் பாடுகிறார்கள்” என்று எழுதி வைத்திருக்கிறார். பழைய ஏற்பாட்டை வாசிப்பவர்கள், அதில், தேவாலயத்திலே கடவுளைப் புகழ்ந்து துதிக்கின்ற வசனபகுதிகள் ஏராளமாக இடம் பெற்றிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களும் அப்படியாக பாடல்களின் மூலமாக கடவுளைப் புகழுவதை பெரிதும் மதித்தார்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா? கடவுளைப் புகழ்ந்து துதிப்பதே, உண்மையான பக்தியின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ஆராதனையின் இந்தப் பகுதியானது ஒரு போதும் அழிந்து போகாது. பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும், வேதவாசிப்பிற்கும் ஒரு காலத்தில் தேவை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் தேவனைப் புகழுதலோ

நித்திய காலத்துக்கும் தொடர்ந்து வரும். தேவனைப் புகழுதலில் பங்கெடுக் காத சபை சரியான சபையல்ல. தேவனைப் புகழுதலை பாடகர் குழு வொன்றிடம் ஒப்படைத்துவிட்டு, அதில் கலந்துகொள்ளாமலிருக்கிற சபை யானது சரியான நிலையில் இல்லை என்றுதான் தீர்மானிக்க வேண்டும்.

  1. கிறிஸ்து தமது சபைக்கென்று நியமித்திருக்கின்ற இரண்டு புனித திருநியமங்களை (Sacraments) சபையானது தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய அங்கத்தவர்கள் ஞானஸ்நானத்தின் மூலமாக மற்ற அங்கத்தினரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டு, கிறிஸ்தவர்கள் என்கிற பட்டியலிலே சேர்த்துக்கொள்ளப்படுதல் தொடர்ந்து நடைபெற வேண்டும். கர்த்தருடைய பந்தியின் மூலமாக இயேசு கிறிஸ்துவை தனது ஆண்டவராக அறிக்கையிடுகின்ற சந்தர்ப்பத்தை ஒவ்வொரு விசுவாசிக்கும் அளிக்க வேண்டும். விசுவாசியானவன் தொடர்ந்து பலப்படவும், புதுப்பிக்கப்படவும், அவரது சிலுவைப் பலியை நினைவுகூரவும் கர்த்தருடைய பந்தியின் மூலமாக அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டு புனிதசட்டங்களையும் அலட்சியப்படுத்துகிற எவரையும் பவுலோ, பேதுருவோ, யாக்கோபோ, யோவானோ கிறிஸ்தவனென்றே கருதமாட்டார்கள் என குவேக்கர்களும், பிலிமத் பிரதரன் குழுக்களும் நினைப்பது போலவே நானும் இந்த விஷயத்தில் நினைக்கிறேன். எல்லா நல்ல காரியங்களையும் தவறாக பயன்படுத்துவது போலவே இதையும் தவறாக பயன்படுத்துகிறவர்களும் இல்லாமல் இல்லை. சிலர் இதை அலட்சியமாகக் கருதலாம். வேறு சிலரோ இதை மூடபக்தியோடு ஒரு விக்கிரகம் போல மனதில் வைத்துக் கொண்டிருக்கலாம். யார் எப்படி நினைத்துக் கொண்டாலும், ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலே கிருபையின் சாதனங்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற உண்மையை மறுப்பதற்கில்லை. அவைகளை மிகுந்த பக்தியோடும் கனத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்தாமே அவைகளை ஏற்படுத்தியுள்ளார் என்பதில் சந்தேகமேயில்லை. கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறாமல் வெகு காலங்களாக ஒருவன் ஆராதனையில் மாத்திரம் கலந்து கொண்டு வந்திருக்கிறானென்றால் அவனுடைய ஆவிக்குரிய நிலைமையைக் குறித்த சந்தேகம் அப்போஸ்தலர் காலத்திலேயே எழுந்திருக்கும்.

நான் மேற்கூறின ஏழு காரியங்களையும் நீங்கள் கவனத்தோடு சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவைகளில் சிலவற்றை குறித்து சில கிறிஸ்தவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். நான் அவர்களுடைய நியாயாதிபதி அல்ல. அவர்கள் நின்றாலும் விழுந்தாலும் தங்கள் எஜமானனுக்கு முன்பாக அவர்கள்தான் கணக்கொப்புவிக்க வேண்டும். கர்த்தருக்கு உண்மையான ஊழியனாக, வேதாகமம் கூறுகிற காரியங்களாக நான் நினைப்பவற்றை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் நான் பார்க்கிற விதமாகவேதான் பொதுவான ஆராதனையைக் குறித்துப் பார்க்க வேண்டுமென்றும், அப்படிப் பார்க்காவிட்டால் அவன் இரட்சிப்படைய மாட்டான் என்றும் நான் சொல்லவில்லை. பொது ஆராதனையில் பரிசுத்த ஓய்வுநாளும், போதகர்களும், பிரசங்கமும், ஜெபமும், வேதவாசிப்பும், துதித்தலும், திருமியமங்களும் காணப்படாவிட்டால் அது முழுமையான ஆராதனையல்ல என்றுதான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த ஏழு காரியங்களையும் அலட்சியப்படுத்துகிற ஒரு கூட்டத்தாரோடு கூடி நாம் தேவனை ஆராதிப்போமானால் நமது ஆத்துமாவுக்கு நஷ்டமும், சீர்குலைவும் ஏற்படும். நாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் சரியானபடி ஆராதிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் இந்த ஏழு காரியங்களும் தெளிவாகக் காணப்படுவதாக நான் கருதுகிறேன். அதையே உங்களுக்கும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.

  1. பொது ஆராதனையில் தவிர்க்கப்பட வேண்டியவைகள்

இவ்வுலகில் எதுவுமே பூரணமானதல்ல என்பதை நான் அறிந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா சபைகளின் ஆராதனைகளிலும் ஏதாவதொரு குறையும், சில தவறுகளும் இருக்கும் என்பது நிச்சயம். உலகிலேயே மிகச் சிறந்த சபையின், மிகவும் சிறந்த ஆராதனைகூட, பரலோகத்தின் மகிமையடைந்த சபையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படும். கடவுளுடைய ஜனங்களின் விசுவாசமும், நம்பிக்கையும், வாழ்க்கையும், அவர்கள் செய்கின்ற ஆராதனையும் மிகவும் குறைபாடுள்ளதாகவே காணப்படுகிறது என்பதை நான் துக்கத்தோடும், அவமானத்தோடும் ஒத்துக்கொள்ளுகிறேன். சபைகளின் நிர்வாகத்திலே குற்றம் காணப்படுகிறது என்கிற காரணத்துக்காக ஒருவன் சபையைவிட்டு பிரிந்து விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறானென்றால் அவன் விவேகமானவன் அல்ல. கோதுமையையும் களைகளையும் குறித்த உவமையை மறந்து வாழ்வதற்கு அது சமமாகும்.

ஆனால், இவை எல்லாவற்றிற்கு மத்தியிலும் நாம் ஆராதனையைக் குறித்த விஷயத்தில் ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் வசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நமது தேசத்திலே ஆங்கிலேய சபைகளிலும் ஆலயங்களிலும் நிறைய விஷயங்கள் ஏற்க முடியாதவையாகக் காணப்படுகிறது. அவைகளைக் குறித்து நான் எச்சரிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவைகளை விவரமாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஊழியருக்கும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. ஆபத்து நெருங்குகிற வேளையிலே நகரத்தின் காவற்காரன் பேசாமல் மௌனமாயிருந்தானென்றால், அந்தப் பட்டணத்தார் எப்படி எச்சரிப்படைவார்கள்? “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?” (1 கொரி 14:8).

இன்றைய காலகட்டத்தில் மூன்று வகையான பெருந்தீமைகள் பொது ஆராதனையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளைக் குறித்து விசேஷமாக எச்சரிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதைப்பற்றி உங்களை சிந்திக்கவைப்பது எங்கள் கடமையாக இருக்கிறது. இந்த தீமைகளைக் குறித்து நாம் தகுந்த எச்சரிக்கை அடைந்து, அவைகளால் நமது ஆத்துமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாதபடி காத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

  1. ஆராதனையில் திருநியமங்களில் ஒன்றுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தல்.

கர்த்தர் நியமித்திருக்கும் திருநியமங்களில் ஏதாவதொன்றில் அதிக கவனம் செலுத்திவிட்டு, மற்றதை நாம் அலட்சியப்படுத்துகிறவர்களாக இராதபடி எச்சரிக்கையாயிருப்பது அவசியம். இங்கு சில சபைகள் இருக்கின்றன. அவைகளில் ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள் ஆரோனின் கோலைப் போல ஆராதனையின் மற்ற காரியங்களை விழுங்கிப் போட்டு விடுகின்றன. பக்திவிருத்திக்குரிய மற்ற காரியங்களுக்கு ஆராதனையில் அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதை நீங்கள் அநேகமாக எல்லா இடங்களிலும் பார்க்கலாம். ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் சபைகளில் பிரதானமான இடத்தை வகிக்கின்றன. அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆராதனைக்குரிய மற்ற அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இவைகளுக்குக் கொடுக்கப்படும் அதிமுக்கியத்துவம் மற்றவைகளை மறைத்துவிடுகிறது. மற்ற காரியங்களுக்கு ஆராதனையில் இடம் இல்லாமல் அவைகள் நெருக்கப்படுகின்றன. மற்ற காரியங்கள் ஓர் மூலையில் தூக்கிப் போடப்பட்டுவிடுகின்றன. இந்த விதமான ஆராதனைகளால் மனித ஆத்துமா எந்தவித பயனையும் அடையப் போவதில்லை என்பதை நான் தயக்கமின்றி கூறுகிறேன். ஒரு மருத்துவர் அளிக்கின்ற மருந்துகளை அவர் சொல்கிறபடிதான் சாப்பிட வேண்டும். அவைகளின் அளவை நீங்கள் உங்கள் இஷ்டத்திற்குக் கூட்டிக் குறைத்தீர்களானால் அது விஷமாகிப் போகும். கிறிஸ்தவமே ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும்தான் என நினைத்து மற்றவைகளைப் புதைத்துப் போட்டீர்களானால், கிறிஸ்தவ ஆராதனைக்குரிய அர்த்தமே சிதைந்து விடும்.

  1. ஆராதனையில் அளவுக்கு மீறிய ஆடம்பரம் இருத்தல்

ஆராதனைகளில் அளவுக்கு மீறிய அலங்காரங்களும், ஆபரணங்களும் காணப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இன்றைக்கு பல சபைகளில் நடைபெறும் ஆராதனைகளைப் பார்த்தீர்களானால், ஆராதனை நடத்துபவர்களின் பகட்டான உடைகளும், மெழுகுவர்த்தி அலங்காரங்களும், நாடகமேடைக்கேற்ற சடங்குகளும் ஆராதிப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி, ஆராதனையின் நோக்கத்தையே மாற்றி விடுபவவையாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டின் ஆராதனை எளிமையைக் கொண்டிருக்க வேண்டும். புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கு அலங்காரங்கள் தேவையில்லை. சுவிசேஷ நூல்களிலும், நிருபங்களிலும் நாம் காண்கின்ற சபை ஆராதனைகளில் எந்தவிதமான ஆடம்பர அலங்கார சடங்குகள் நடைபெற்றதாக சிறிதும் அடையாளமில்லை. எந்தவிதமான அடையாளங்களும், மாதிரிகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. தண்ணீரும், அப்பமும், திராட்சை ரசமும் மாத்திரம்தான் புதிய ஏற்பாட்டு ஆராதனைகளில் இடம்பெற்ற காரியங்களாயிருக்கின்றன. நமது பொல்லாத இருதயமானது, ஆவிக்குரிய காரியங்களைவிட, கண்களால் காணப்படும் காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறது. இருதயத்தில் மறைந்திருக்கிற ஆவிக்குரிய நற்குணங்களைக் காட்டிலும் வெளியே பகட்டாக காண்பிக்கிற வேஷங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது ஆத்துமாக்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.

இதைப் பற்றி ஸ்டீவன் சார்நோக் பின்வருமாறு சொல்லுகிறார், “பகட்டான சடங்கு சம்பிரதாயங்களால் மனித ஆத்துமாக்களைக் கவருகின்ற வஞ்சனையை சாத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றான். எளிமையான ஆராதனை செய்வது கடவுளுக்குப் பிரியமில்லாதது போலவும் அவருடைய மகிமைக்கும் மகா மேன்மைக்கும் அது தகாதது என்பது போலவும் மனிதனை நினைக்கத் தூண்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் (2 கொரி 11:3). இயேசுவின் காலத்து யூதர்களால், சாலமோன் கட்டின முந்திய ஆலயத்தில் இருந்த மகிமை அப்போது இல்லை என்பதைத்தான் உணர முடிந்ததேயொழிய, தேவாலயத்திலும் பெரியவரான மேசியாவின் பிரசன்னத்தின் மகிமை அங்கிருந்ததை அந்த யூதர்களால் உணர முடியாமல் இருந்தது.

ஆதிகாலந் தொடங்கி, மனிதர்கள் தேவனுடைய உண்மையான மகிமைக்குப் புறம்பாக, தங்களுடைய மனதுக்குத் தோன்றுகிறவிதத்தில் அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். கடவுளுடைய ஸ்தாபனத்தில் அவருக்கு அளிக்கப்படுகின்ற மரியாதையில் ஏதோ குறைவு இருப்பது போலவும், அதைப் பெற்றுக்கொள்வதற்கு அவருடைய சிருஷ்டிப்புகளின் உதவி அவருக்குத் தேவையாயிருப்பது போலவும் எண்ணி மனிதர்கள் நடந்துகொள்ளுகிறார்கள். இந்த எண்ணமானது உலகத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. பழங்காலங்களில் மனிதர்கள் தங்கள் கற்பனைக்கேற்ற விதமாக அவருக்கு மரியாதை அளித்துப் பார்த்தார்கள். இப்போதுங்கூட விதவிதமான செயல்களால் கடவுளை கௌரவப்படுத்தப் பார்க்கிறார்கள். இஸ்ரவேலர், கடவுளின் அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்கூடாக கண்டவர்களாகவும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர் தங்களை மீட்ட மாபெரும் செயலை அனுபவித்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு பொன் கன்றுக்குட்டியில் அவரது மகிமையை அடக்கப் பார்த்தார்கள். மோசேயின் நியாயாசனத்தில் அமர்ந்திருந்த பரிசேயர்கள், கடவுளுடைய நியாயப்பிரமாணம் போதாது என்பதுபோல, புதிது புதிதான பாரம்பரியங்களை உருவாக்கி, அவற்றை அதற்குள் திணித்தார்கள். போப்புகளும், அஞ்ஞானிகளை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் கிறிஸ்தவத்துக்குள் கலந்து, மனிதர்களின் மாமிசப்பிரகாரமான ஆசைகளுக்கு இடங்கொடுக்கிறார்கள்.

புராதன சபைகளின் முன்னோர்களின் பழக்கவழக்கங்களுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, ஆராதனைகளில் கடவுள் வேதத்தின் பிரகாரமாக கட்டளையிட்டிருப்பவைகளைக்கூட தள்ளி வைத்துவிடத் துணிகிறோம் அல்லவா? கடவுளை ஆராதிக்க வேண்டும் என்பது மனிதனுடைய இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் கெட்டுப்போன தன்மையுடைய அவனுக்கு அதை தேவன் விரும்புகிறவண்ணமாக செய்யாமல், தனது மனதுக்குத் தோன்றுகிற மனித வழிகளிலே செய்வதே இயல்பாக வருகிறது. இது கடவுளுக்கே சவால் விடுகிறதாக இல்லையா? அவரைக் காட்டிலும் நம்மை அதிமேதாவிகளாகக் காட்டிக்கொள்ளத் துணிகிறோமல்லவா? தன்னைக் குறித்தும், தமது மகிமையைக் குறித்தும் அவருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை என்பது போலவும், நமக்கு இருக்கின்ற கொஞ்ச மூளையை வைத்துக் கொண்டு, அவரது திட்டத்தைக் காட்டிலும் சிறப்பானதொரு வழியில் அவரை ஆராதிக்கவும் கனப்படுத்தவும் கூடிய வழிவகைகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” (Stephen Charnock, Vol. 1, P. 222).

  1. போதகர்கள் பலி செலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்துகொள்ளுதல்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும் இன்னொரு காரியத்தைக் குறித்தும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். எந்த ஆராதனையிலும், சபையின் போதகர்கள் பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போன்ற உடைகளை அணிந்துகொள்வதோ, அல்லது பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்துகொள்வதோ கூடாது. இன்றைக்கு இங்கிலாந்து தேசத்திலே நூற்றுக்கணக்கான சபைகளிலே கர்த்தருடைய பந்தியானது புனித கட்டளையாக அனுசரிக்கப்படாமல், ஒரு பலியைப் போல நடத்தப்படுகிறது. அதை நடத்துகின்ற குருவானவர், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் செயல்படுகின்ற மத்தியஸ்தர் போல நடந்துகொள்ளுகிறார். அப்பம் இயேசு கிறிஸ்துவின் மாமிசமாகவே மாறிவிட்டதென்றும், திராட்சரசம் அவருடைய இரத்தமாகவே மாறிவிட்டதென்றும் சபை மக்களுக்குப் போதிக்கிறார்கள். கர்த்தருடைய பந்தியின் மேஜையை பலிபீடமென்றும் கூறுகிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்திற்கும் திராட்சரசத்திற்கும் விக்கிரகத்துக்கொப்பான மரியாதை கொடுக்கிறார்கள். கடவுளே அப்பம் வடிவிலும் திராட்சரச வடிவிலும் அதற்குள்ளாக வந்துவிட்டது போல கருதுகிறார்கள். மேலும் குருவானவரிடம் சபை மக்கள் வந்து தனிப்பட்ட விதத்தில் பாவ அறிக்கை செய்துகொள்ளும்படியாகத் தூண்டப்படுகிறார்கள். இந்தவிதமான ஆராதனைகள் கடவுளுக்கு விரோதமானவையாகத்தான் இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர் எரிச்சலுள்ள தேவன். அவர் தமது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்க மாட்டார். இயேசு கிறிஸ்து சிலுவை மரத்திலே ஒரே தரம் பலியானார். மீண்டும் மீண்டுமாக ஆராதனைகளில் அவரை பலியிடுகிறோமென்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. அப்படி செய்யவே கூடாது. இயேசு கிறிஸ்துவே மத்தியஸ்தராகவும், ஆசாரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறபடியால் அந்த பணியை வேறு எந்த மனிதனிடமும் ஒப்படைக்கக் கூடாது. அப்போஸ்தலர்கள் இந்த மாதிரியாக பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்து கொண்டதாக நாம் அப்போஸ்தல நடபடிகளிலோ நிருபங்களிலோ எங்கும் காண்பதில்லை. அவர்கள், பாவஅறிக்கைகளை கேட்டதாகவோ, கர்த்தருடைய பந்தியை விக்கிரக வழிபாடு போல நடத்தியதாகவோ, தங்களை நியாயாதிபதிகள் போல காண்பித்ததாகவோ நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. வெகு சாதாரணமான இந்த உண்மைகள் மனிதரை சிந்திக்கத் தூண்ட வேண்டும். பலி, மாஸ் (Mass), பூசை முறைகள், பாவ அறிக்கை இவைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து அத்தகைய அவலங்களுக்கு சபையில் இடங்கொடுக்கக்கூடாது.

நான் மேலே குறிப்பிட்ட இந்த மூன்று தீமையான காரியங்களைக் குறித்து உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். அந்தவிதமான ஆராதனைகள் கடவுளின் பார்வையிலே ஏற்றுக்கொள்ளத் தகாதவைகள். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவை நமக்கு திருப்தியைத் தருவதாக இருக்கலாம். அது நமது கண்களையும், காதுகளையும், உணர்ச்சிகளையும் கவரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒரு பெரிய தவறு இருக்கிறது. அவைகளுக்கு வேத ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது. திருநியம சடங்குகள் (Sacramentalism), சம்பிரதாய சடங்குகள் (Ceremonialism), பலி முறைமை (Sacrificialism) ஆகியவைகளை புதிய ஏற்பாட்டில் பார்க்க முடியாது. வேதாகமத்தை ஒழுங்காக தியானித்து, வியாக்கியானம் செய்தால் இவைகளுக்கு சபையில் இடமிருக்கப் போவதில்லை.

இவைகளையெல்லாம் விளக்கியும் நமது கண்கள் உண்மையைக் காண மறுக்குமானால், நாம் ஆங்கிலேய தேசத்தின் வரலாற்றை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். சடங்குகளும், சம்பிரதாயங்களும், பாரம்பரியங்களும், பூசை முறைகளும் ஆராதனையின் பெரும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சபைகள் இங்கிலாந்து தேசத்தில் ஏராளமாகக் காணப்பட்டன. நமது முன்னோர்களின் காலத்திலே, புராட்டஸ்தாந்து சீர்திருத்தமானது சபைகளில் உருவாகிய காலத்துக்கு முன்னே இந்தவிதமான ஆராதனைகளைத்தான் ரோம சபை (Roman Catholic Church) நடத்திக் கொண்டிருந்தது. ஆனால், அது தோல்வியையே சந்தித்தது. அது இந்த தேசம் முழுவதையும் மூடநம்பிக்கைகளினாலும், அறியாமையினாலும், வெறும் சடங்குகளினாலும், துன்மார்க்கத்தினாலும் நிரப்பிக் கொண்டிருந்தது. அவ்வகையான ஆராதனைகள் யாருக்கும் ஆறுதலை அளிக்கவில்லை. யாரையும் பரிசுத்தப்படுத்தவில்லை. யாரையும் உயர்த்தவில்லை. பரலோகத்திற்கு செல்வதற்கு யாருக்கும் உதவவில்லை. அது குருமார்களை கொடுங்கோலாட்சி செய்கிறவர்களாகவும், சபை மக்களை கெஞ்சுகிற அடிமைகளாகவும் ஆக்கியது. அந்த நிலைமைக்கே நாம் திரும்பவும் போகவேண்டுமா? கடவுள் காப்பாராக! ஞானஸ்நானங்களும், கர்த்தருடைய பந்தியும், ஆசாரியர்களின் அதிகாரங்களும், திருவிருந்தின் அப்பம் ரசத்தில் இயேசுவின் பிரசன்னம் இருப்பதாக சொல்லப்படும் உபதேசங்களும், அலங்காரங்களும், பவனிகளும், கொடிகளும், உருவங்களும், பீடத்து விளக்குகளும் நிரம்பி வழிகின்ற ஆராதனையில் திருப்திப்பட்டுக் கொண்டு, அவைகள் நம் மனதை ஆளும்படியான நிலைமைக்குத் திரும்பச் செல்ல வேண்டுமா? கடவுள்தாம் நம்மைக் காக்க வேண்டுமென்று மீண்டும் கூறுகிறேன். தனது ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிற எவரும் அந்தவிதமான ஆராதனையை விட்டு விலகி வெளியே வரவேண்டும். அதை அவன் தவிர்க்க வேண்டும். அதை ஒரு விஷத்தைப் போலக் கருதி அதிலிருந்து விலகி ஓடிவிட வேண்டும்.

  1. பொது ஆராதனையில் சோதித்துப் பார்க்க வேண்டியவைகள்

இந்தக் காரியம் மிகவும் முக்கியமானது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகக் கூறும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவைகளை கவனித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம். நாம் தியானித்துக் கொண்டிருக்கிற தலைப்பின் கடினமான விஷயங்களை அவரவர் தங்கள் சொந்த வசதிக்கேற்ப விட்டுவிட முயற்சிப்பார்கள். தாங்கள் பெரிய வேத பண்டிதர் அல்லவென்றும், ஒரு சபைப்பிரிவினரின் விசுவாசக்கொள்கைகளுக்கும் மற்றொரு சபையின் விசுவாசக்கொள்கைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது என்றும் கூறிக்கொள்வார்கள். ஆனால் தாங்கள் பங்குபெறுகிற ஆராதனையானது தங்களுக்கு நன்றாக இருக்கிறதென்றும், அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லையென்றும் கூறுவார்கள். இப்படி சொல்லிக்கொள்கிற யாரும் அவ்வளவு சுலபமாக என்னிடமிருந்து தப்பித்துவிட முடியாது. பக்தி உணர்வுகளெல்லாம் நம்மை வஞ்சிக்கக் கூடியவை என்பதை நான் மறந்துவிட மாட்டேன். பக்திப் பாடல்களைக் கேட்பதின் மூலமாகவும், பக்தி ததும்பும் காட்சிகளைக் காண்பதினாலும் ஒருவிதமான பக்திப் பரவச நிலை ஏற்படுகிறது. ஆனால், அது உண்மையான பக்தியல்ல. அந்தப் பரவசநிலை ஏற்படும் நேரங்களிலே அது மிகவும் வல்லமையாகவும், பிறரையும் பற்றிக்கொள்ளும் விதத்திலும் இருக்கும். ஆனால் அது யாருடைய உள்ளத்தின் ஆழத்திலும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வந்த வேகத்திலேயே திரும்பப் போய்விடும். அது தற்காலிகமாக, சரீரப்பிரகாரமான ஒரு பாதிப்பை மாத்திரமே தோற்றுவிக்கும். ரோம சமயத்தவருக்குக் கூட பண்டிகைக் காலங்களில் மாத்திரம் ஒரு தற்காலிக பக்தி உணர்ச்சி ஏற்படும். அதன் பிற்பாடு அவர்கள் வேதகொள்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் தொடர்ந்து ரோமசமயத்தவராகவே காணப்படுவார்கள்.

  1. உண்மையான ஆராதனையானது மனிதனின் இருதயத்தையும் மனசாட்சியையும் பாதிக்கும்.பாவத்தின் அகோரத் தன்மையை அது அவனுக்கு தெளிவாக உணர்த்தும். அவனுடைய சொந்த பாவங்களை படம் பிடித்துக் காண்பிக்கும். அவனுடைய தாழ்மையை அதிகரிக்கச் செய்யும். தனது உள்மனதைக் குறித்து மிகவும் கவனத்தோடு இருக்கும்படியாக அவனை எச்சரிக்கும். ஆனால், தவறான விதத்தில் செய்யப்படும் ஆராதனையோ போதை மருந்து சாப்பிடுவதைப் போன்றது. அது ஆரம்பத்தில் மனிதனில் ஏற்படுத்திய பாதிப்புகளின் வீரியம் இழந்து போய் நாட்கள் செல்லச் செல்ல மரத்துப் போன நிலைமைக்குக் கொண்டு செல்லும். உண்மையான ஆராதனையானது சத்துள்ள ஆகாரம் சாப்பிடுவதைப் போன்றது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்பவனை அது பலப்படுத்துகிறது. வருஷந்தோறும் அவன் உள்ளான மனிதனில் ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டே போவான்.
  2. உண்மையான ஆராதனையானது மனிதனை இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கிச் சேர செய்யும்.சபைகளுக்கும், மதசட்டங்களுக்கும், ஊழியர்களுக்கும் அப்பாற்பட்டு இயேசு கிறிஸ்துவோடு மாத்திரம் உள்ள உறவை அவனில் வலுப்படுத்தும். தனது ராஜாவைக் காணும்படியான பசி தாகத்தை அவனுக்குள் ஏற்படுத்தும். அவரைக் குறித்து அவன் அதிகமதிகமாக கேட்டு அறிவதாலும், அவரது வசனத்தைப் படிப்பதாலும், ஜெபிப்பதாலும், அவரைப் புகழுவதாலும் தன்னுடைய ஆத்துமாவுக்கு தேவையான ஜீவனை அளிப்பது இயேசு கிறிஸ்து மாத்திரமே என்பதை உணர வைக்கும். அவரோடு தனக்கு இருக்கும் ஐக்கியமே “புசிப்பும் குடிப்பும்” என்பதை அவன் அதிகமதிகமாக உணருவான். தேவனை உண்மையாகத் தொழுதுகொள்ளாதவன், கஷ்டகாலங்களில் மற்றவர்களின் உதவியை நாடி ஓடுவான். குருமார்களிடம் யோசனை கேட்கச் செல்லுவான். சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், புனித நியமங்களையும் கடைப்பிடித்தால் தன் கஷ்டம் நீங்குமா என முயற்சித்துக் கொண்டிருப்பான். ஆனால் தேவனை உண்மையாகத் தொழுகிறவனோ, தனக்கு கஷ்டங்கள் நேரிடும் சமயங்களில் விசுவாசமுள்ளவனாக தன்னிச்சையாக இயேசு கிறிஸ்துவை நோக்கியே திரும்புவான். காந்த முள்ளானது எவ்விடத்தில் இருந்தாலும் துருவங்களை நோக்கியே திரும்பிக் கொண்டிருப்பது போல அவனும் விசுவாசத்தினால் இயேசுவையே நோக்கிக் கொண்டிருப்பான்.
  3. உண்மையான ஆராதனையானது, மனிதனின் ஆவிக்குரிய ஞானத்தை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே போகும்.அவனுடைய பக்தியானது எலும்பும், சதையுமாக உருப்பெற்று மிகுந்த பலமுடையதாக ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டேயிருக்கும். தேவனை உண்மையாக ஆராதிப்பவன், தன்னைக் குறித்தும், கடவுளைக் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆண்டுதோறும் வளர்ச்சி பெறுவான். மேலும் தனது கடமைகள், மதகொள்கைகள், பழக்கவழக்கங்கள், அனுபவங்கள் ஆகியவைகளிலும் முன்னேறிச் செல்லுவான். அவனுடைய பக்தியானது உயிருள்ளது. ஆகவே அது வளருகின்றதான சுபாவத்தைக் கொண்டிருக்கும். தேவனை சரியாக ஆராதிக்காதவனுடைய பக்தியானது மாமிசப்பிரகாரமான காரியங்களில் கட்டப்பட்டிருப்பதால் அது வெளிவேஷமான பக்தி நிலையைக் கடந்து சற்றும் முன்னேறாது. அது செக்கு மாட்டைப் போல ஆண்டுதோறும் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அந்தப் பாதையை விட்டு சற்றும் முன்னேறிப் போகாது. அவனுடைய பக்தியானது செத்த நிலையிலுள்ளது. ஆகவே அது வளரவோ அதிகரிக்கவோ செய்யாது.
  4. உண்மையான ஆராதனையானது, மனிதனின் பரிசுத்த நிலையை அதிகரிக்கச் செய்வதில் இடைவிடாமல் செயல்படும்.ஆண்டுகள் செல்லச்செல்ல அவன் தன் நாவைக் கட்டுப்படுத்துவதில் அதிகமதிகமாக வெற்றி காண்பான். தனது கோபத்தைக் குறித்தும், நேரத்தை செலவிடுவதிலும், தனது குணங்களைக் குறித்ததுமான தனது வாழ்வின் சகல காரியங்களிலும் மிகுந்த கவனத்தைக் கடைப்பிடிப்பான். ஆண்டுதோறும் அவனுடைய மனசாட்சியானது மென்மையாகிக் கொண்டே போகும், பொய்யான ஆராதனை செய்பவர்களின் மனசாட்சி அதிகமதிகமாக சூடுண்டு, கடினப்பட்டுக் கொண்டே போகும்.

“அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள்” என்ற நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினாலே சோதிக்கப்பட்டு வெற்றிபெற்ற ஆராதனையை எனக்குக் காண்பியுங்கள். மனிதர்களின் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகின்ற ஆராதனை, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருந்து அவரோடு நடக்கின்ற மனிதர்களை உருவாக்குகிற ஆராதனை, உலகத்திற்கு பயப்படாமலும், உலகத்தை சிநேகிக்காமலும் இருக்கும்படியாக மனிதர்களை பயிற்றுவிக்கிற ஆராதனை, சகமனிதர்களின் முன்னிலையிலே தேவசாயல் தன்னில் இருப்பதை பிரதிபலிக்கும்படியாக வாழ்கிற மனிதர்களை உருவாக்கும் ஆராதனை, மனிதனை நீதியுள்ளவனாகவும் அன்புள்ளவனாகவும் பரிசுத்தமுள்ளவனாகவும், சாந்த குணமுள்ளவனாகவும், முன்கோபமில்லாதவனாகவும், பொறுமையுள்ளவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும், சுயநலமில்லாதவனாகவும், நிதானமுள்ளவனாகவும் மாற்றக் கூடியதான ஆராதனை. இவைகளே உண்மையான ஆராதனைக்குரிய அடையாளங்கள். அவ்விதமான ஆராதனையை அடையாளங் கண்டுபிடியுங்கள். இவ்விதமான ஆராதனையே பரலோகத்திலிருந்து வருவதாக இருக்கிறது. அது கடவுளுடைய முத்திரையையும் அங்கீகரிப்பையும் பெற்றதாக இருக்கிறது.

ஆராதனையைக் குறித்து மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆராதிப்பவர்களின் நடைமுறை வாழ்க்கையிலே என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மையான ஆராதனையை பரீட்சித்துப் பார்க்கும் வழியாகும். சடங்காச்சாரங்களைக் கடைப்பிடித்து செய்கின்ற ஆராதனையே இந்நாட்களில் மிகவும் சிறப்பான ஆராதனை முறை என சிலர் சொல்லுவார்கள். சுவிசேஷக் குழுக்கள் எளிமையாக, சடங்காச்சாரங்கள் இல்லாமல் செய்கின்ற ஆராதனையைக் குறித்து அவர்கள் இழிவாகப் பேசலாம். ஆலயத்தில் காணப்படுகின்ற பகட்டான அணிகலன்களும், அலங்காரங்களும் கொண்ட ஆராதனைதான் பரலோகத்தின் தேவனுக்கு உகந்ததான ஆராதனையென அவர்கள் வானமளாவப் புகழ் பாடலாம். ஆனால், நான் அவர்களுக்கு என்ன சொல்வேனென்றால், ஓர் ஆராதனையினால் விளைகின்ற நன்மைகளை ஒருமுறை பார்த்துவிட்டு எது சரியான ஆராதனையெனத் தீர்மானிக்கலாம் என்பேன். சடங்காச்சாரமாக ஆராதனையை நடத்துகிறவர்கள் இதுவரைக்கும் மென்மையான பாடல்களை காதைக் கிழிக்கும் இரைச்சலான இசைகளாகத்தான் மாற்றியிருக்கிறார்கள். ஆராதனைகளில் பாவ அறிக்கைகள் ஒருபுறமும், நடனமாடுதல் மறுபுறமுமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான ஆராதனைகளைக் குறித்து நாம் குறைவாக மதிப்பிடுவதைக் குறித்து ஆச்சரியமொன்றுமில்லையே.

இதையெல்லாம் வைத்து இப்போது நாம் பொதுவான ஒரு முடிவுக்கு வருவது அவசியம். ஒருவனின் தனிப்பட்ட சொந்த வாழ்வில் எத்தகைய ஆவிக்குரிய மாற்றத்தை ஓர் ஆராதனை ஏற்படுத்தியிருக்கிறதோ அதுவே சிறந்த ஆராதனையாகும் என்பதுதான் அந்த முடிவு. சபை அங்கத்தினர்கள் தங்களுடைய வீட்டிலும், சொந்த வாழ்க்கையிலும் எவ்வளவு பரிசுத்தமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்தே அந்த ஆராதனை சிறப்பானதா இல்லையா என்பதைக் கூற முடியும். நாம் பங்குபெறுகின்ற பொது ஆராதனை நம்மில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள கீழ்வரும் கேள்விகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும். அது நமது மனசாட்சியை உயிர்ப்பித்திருக்கிறதா? அது நம்மைக் கிறிஸ்துவிடம் செல்ல வைத்திருக்கிறதா? அது நமக்கு மேலும் ஞானத்தைக் கொடுப்பதாயிருக்கிறதா? நமது வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறதா? அப்படி செய்திருக்குமானால் நாம் அந்த ஆராதனையைக் குறித்து நாம் நம்பிக்கையோடிருக்கலாம். அவ்வித ஆராதனையைக் குறித்து நாம் வெட்கப்படத் தேவையில்லை.

ஒரு காலம் வரப்போகிறது. அப்போது சபையார் பிரிந்து போவதில்லை. பரிசுத்த ஓய்வு நாள் நித்தியமாக நீடித்திருக்கப் போகிறது. துதிப்பாடலானது தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அந்தக் கூட்டத்தார் ஒருபோதும் சிதறிப் போகமாட்டார்கள். அந்தக் கூட்டத்திலே, பூலோகத்திலே தேவனை “ஆவியோடு தொழுது கொண்டவர்கள்” மாத்திரம் இருப்பார்கள். நாம் இங்கு அப்படி இருப்போமானால் பரலோகத்திலுள்ள அந்தக் கூட்டத்தாரோடு காணப்படுவோம். இங்கு நாம் பல சமயங்களில் கடவுளை பலவீனமுள்ளவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், உற்சாகமிழந்தவர்களாகவும் தொழுதுகொள்ளுகிறோம். ஆனால் பரலோகத்திலோ மகிமையடைந்த சரீரத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக இருப்பதால், சோர்வில்லாமலும், கவனம் சிதறாமல் ஒரே நோக்குடையவர்களாகவும் அவரைத் தொழுவோம்.

இங்கே நாம் எவ்வளவு முயற்சித்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிழலாகப் பார்க்கிறவர்களாகத்தான் காணப்படுகிறோம். அவரை பூரணமாக அறிந்துகொள்ளாதவர்களாகவும், அவர்மேல் இன்னும் அதிகமான அன்பு காண்பிக்க இயலாதவர்களாகவும் நாம் இங்கு இருப்பதைக் குறித்து அதிக விசனமடைகிறோம். அங்கேயோ நம்மிலுள்ள பாவமானது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடுகிறபடியால், கர்த்தராகிய இயேசுவை முகமுகமாகத் தரிசிப்போம். அவரை அவர் இருக்கிறவண்ணமாகவே அறிந்துகொள்வோம். நாமும் இருக்கிறவண்ணமாகவே அறியப்பட்டிருப்போம். விசுவாசமானது இனிமையும், சமாதானமுமாக இருக்குமானால், நமது பார்வையும் சரியானதாக இருக்கும்.

உலகத்தின் கவலைகளாலும் பாரங்களாலும் நாம் இங்கே நெருக்கப்படுவதால், நாம் ஏறெடுக்கின்ற ஆராதனையானது பல சமயங்களில் மகிழ்ச்சிகரமாக இருப்பதில்லை. நமக்கு அருமையானவர்கள் மரித்துப் போன கல்லறையண்டையில் கண்களில் கண்ணீரோடு நிற்கும் வேளையிலே துதிப்பாடல்களைப் பாட முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகள் நசுக்கப்படும்போதும், குடும்பத்தில் துயரங்களை சந்திக்கும்போதும் சந்தோஷகீதங்களைப் பாட முடிவதில்லை. பரலோகத்திலோ நமது கண்ணீர் யாவும் துடைக்கப்படும். கிறிஸ்துவுக்குள்ளாக மரித்த பரிசுத்தவான்கள் அனைவரையும் மீண்டுமாக அங்கே நாம் சந்திப்போம். பூலோகத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் யாவும் அங்கே மறைந்து போய் நமது பாதை தெளிவும் இலேசுமாகும். பல நேரங்களிலே நாம் இங்கே பூலோகத்திலே தனிமையாக இருப்பதாக உணருகிறோம். கர்த்தருடைய சபையிலேகூட உண்மையாக அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் வெகு சிலரே இருப்பதாக அறிகிறோம். ஆனால் பரலோகத்திலோ மனிதரால் எண்ண முடியாத அளவுக்கு சகோதரர்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டு பேரானந்தம் அடையப் போகிறோம். அவர்கள் எல்லோரும் ஒரே மனதையும் ஒரே இருதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோருமே குற்றங்களிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும், சோர்வுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஒரே இரட்சகரில் அனைவரும் களிகூர்ந்திருப்பார்கள். அவரைத் துதிப்பதிலேயே நித்திய காலத்தையும் கழிக்கும்படியான ஆயத்தத்தோடே இருப்பார்கள். நம்மோடு சேர்ந்து கடவுளை உண்மையாகத் தொழக் கூடியவர்கள் பரலோகத்திலே நமக்கு ஏராளமாக இருப்பார்கள்.

இவ்விதமான நம்பிக்கையைத் தரித்துக் கொண்டவர்களாக நமது இருதயத்தை உயர்த்தி, முன்னேறிச் செல்லுவோம். கர்த்தர் வருவதற்கு கொஞ்சக் காலம்தான் இருக்கிறது. இரவு கடந்து போகிறது. பகல் நெருங்கிவிட்டது. கடவுளைத் தொழுவோம், ஜெபிப்போம், துதிப்போம், வேதத்தை வாசிப்போம். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பற்றிக் கொண்டவர்களாக, வேதபூர்வமான ஆராதனைக்கு விரோதமான எந்த செய்கைக்கும் தைரியத்தோடு எதிர்த்து நிற்போம், சுவிசேஷ ஆராதனையாகிய சுடரை நமது பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அளிப்பதில் விடாமல் முயற்சி செய்வோம். இன்னும் கொஞ்சக் காலம்தான். வரவேண்டியவர் வரப்போகிறார். தாமதிக்கமாட்டார். “ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கிறவர்களாக” காணப்படுகின்ற உண்மையான விசுவாசிகளே அந்நாளில் மிகவும் பாக்கியவான்களாக கருதப்படுவார்கள்!

 

 

திருச்சபையில் பொது ஆராதனை ஜே. சி. ரைலின் ஆக்கத்தின் நடைமுறைப் பலன்கள்

பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் இந்த இதழில் நிறைவுபெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கர்த்தரின் பணியில் ஈடுபட்டிருந்த ரைல் தன் காலத்தில் தான் ஊழியப்பணி செய்து வந்த இங்கிலாந்து திருச்சபை அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பொது ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களை அருமையாக விளக்கிக் காட்டியிருக்கிறார். ரைலின் விளக்கங்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களல்ல. வேதத்தின் அதிகாரத்தை உணர்ந்திருந்த ரைல் வேதம் ஆராதனை பற்றி தெளிவாக விளக்கும் சத்தியங்களையே விளக்கியிருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் இன்றைக்கு நாம் சபை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பல பிரச்சனைகள் அதே ரூபத்தில் இருக்கவில்லை.

ஆராதனையில் ஆடம்பரம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிற ரைல் அதற்கு உதாரணம் காட்டும்போது ரோமன் கத்தோலிக்க மதப் போதனையின் அடிப்படையில் திருவிருந்து சுவிசேஷ சபைகளில் இருக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தகைய தவறுகள் அன்றைக்கு இங்கிலாந்து சபையில் இருந்து வந்திருந்ததால்தான் ரைல் அப்படி எழுத நேர்ந்தது. இன்றைக்கும் அந்தத் தவறுகள் இல்லாமலில்லை. மறுபடியும் கத்தொலிக்க மதத்தின் ஆபத்தான வழிகளில் திருச்சபை போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் ரைல் அந்த ஆபத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்றைய காலப்பகுதியில் மேலும் உதாரணங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முக்கியமாக பொது ஆராதனையில் இசைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆடம்பரமான இசைக்கருவிகளை அநேகர் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தரைப் புகழ்ந்து பாட வேண்டிய சபையாரின் குரலைக் கேட்க முடியாதபடி இசைக் கருவிகளின் சத்தம் சபைகளில் காதைக் கிழித்து ஆராதனையை அசிங்கப்படுத்தி வருகின்றது. இசைக் கருவி வாசிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். ஆராதனையில் பாடல்கள் மற்றும் சங்கீதப்பாடல்களின் இடம் எது என்றே திருச்சபை இன்று கேட்டுப்பார்ப்பதில்லை. இதைப்பற்றி கர்த்தர் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிற தாழ்மையையும், மனப்பக்குவத்தையும் பார்க்க முடியாமலிருக்கிறது.

இன்றைக்கு பொது ஆராதனையில் தனிப்பாடல்கள் பாடுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். தனிப்பட்டவர்களின் பாடல் எழுதுகின்ற திறமையைப் பலரும் அறிந்துகொள்ளுவதற்காகவா பொது ஆராதனை நடத்தப்படுகின்றது என்று கேட்கும் மனப்பக்குவம் நம்மவர்களிடம் இல்லை. நல்ல குரல் வளம் உள்ள மூன்று நான்கு பேர் ஆராதனையின்போது சபை முன்னால் நின்று மைக்கைக் கையில் பிடித்துக்கொண்டு பாடுவதால் சபையார் பாடல்களைப் பாடுகிற சத்தம் கேட்பதற்கே வழியில்லாமல் இருக்கிறது. இப்போது நான்கு, ஐந்து வாலிபப் பெண்கள் ஆராதனையின்போது மேடையில் ஏறி ஆடிப்பாடுவது தமிழினத்து திருச்சபைகளிலும், சுவிசேஷக் கூட்டங்களிலும் அதிகமாகத் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. கிறிஸ்தவ டி.வி. செனல்களில் இதை அன்றாடம் பார்க்கலாம். இயேசு பேரைச் சொல்லித்தானே பாடுகிறோம், ஆடுகிறோம் என்ற பெயரில் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசு பெயரைச் சொல்லி ஆராதனையின்போது எதுவும் செய்யலாம் என்ற போக்கில் மனித மனம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தளவுக்கு ரைலின் காலத்தில் ஆராதனை மோசமாக இருக்கவில்லை. ஆனால், இத்தகைய தனிமனித இச்சைகளை முதன்மைப்படுத்துகின்ற, பொது ஆராதனையில் இருக்கக்கூடாத உலக இச்சையைச் சார்ந்த ஆடம்பரங்கள் ஆராதனையில் இருக்கக்கூடாது என்று ரைல் சுட்டிக் காட்டுகிறார். அன்னிய அக்கினியை என் முன் கொண்டுவராதே என்று கர்த்தர் சொல்லியிருப்பது எத்தனை பேர் காதில் விழுகின்றது.

போதகர்கள் பழைய ஏற்பாட்டு ஆலயத்து ஆசாரியர்களைப் போலப் பகட்டான உடை உடுப்பதையும், பலிகொடுப்பது போல் திருவிருந்து நடத்துவதையும் ரைல் கண்டிக்கிறார். இது ரோமன் கத்தோலிக்க மதத்தில் நாம் பார்க்கின்ற நடைமுறை. இது ரைலின் காலத்தில் இங்கிலாந்து திருச்சபைக்குள் நுழைந்து பெருகுகின்ற ஆபத்து இருந்ததை ரைல் உணர்ந்ததால்தான் அதைக் கண்டித்து எழுத வேண்டியிருந்தது. இந்த ஆபத்து இன்றைக்கு வேறுவிதத்தில் இருக்கிறது. நம்மினத்தில் கொலுத்தும் வெய்யிலில் கோட்டு சூட்டோடு பிரசங்க மேடையில் லெப் டாப்பை வைத்துக்கொண்டு பிரசங்கம் செய்யும் பிரசங்கிகள் அதிகரித்து வருகிறார்கள். மேலைத்தேய நாடுகளில் இதற்கு எதிர்மாறான வழியில் போய் குடுமியோடும், கிழிந்த ஜீன்ஸோடும், டிரவுசருக்கு வெளியில் தொங்கும் சேர்ட்டோடும் பிரசங்கிக்கிறவர்கள் இன்று அநேகம். கலாச்சாரத்தை உதாரணம் காட்டி இவர்கள் செய்து வருகிற அலங்கோலச் செயல்களுக்கு எல்லையில்லை. பொது ஆராதனையின்போது அதை நடத்தும் போதகர்களும், ஊழியக்காரர்களும் தேவபயத்தோடு கர்த்தரின் பிரசன்னம் இருக்கும் திருச்சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ரைல் அன்று சொன்னது இன்றைக்கு நன்றாகப் பொருந்துகிறது.

பொது ஆராதனையில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரைல் விளக்கியிருக்கிறார். ஓய்வு நாள், போதக ஊழியம், பிரசங்கம், வேத வாசிப்பு, ஜெபம், பாடல்களின் மூலம் துதித்தல், இரண்டு திருநியமங்கள் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் ரைல். இதையெல்லாம் கர்த்தர் ஆராதனையின் இன்றியமையாத அம்சங்களாக ஏற்படுத்தியிருப்பதால்தான் ரைல் அவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். ரைல் தன் ஆக்கத்தில் வெளிப்படையாக பயன்படுத்தியிராத வார்த்தைகள் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவங்கள்’ என்பது. இதை ஆங்கிலத்தில் Regulative Principles of Worship என்று அழைப்பார்கள். வேதம் ஆராதனையைப் பற்றிப் போதிக்கின்ற போதனைகளுக்குத்தான் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ரைல் தன்னுடைய ஆக்கத்தில் அந்தப் பெயரைப் பயன்படுத்தாமலேயே விளக்கியிருக்கிறார். ஆராதனையை கர்த்தரே ஏற்படுத்தியிருப்பதால், அவருடைய ஆராதனையை வேதத்தில் தெளிவாக அவரே விளக்கியிருக்கிற முறைகளின்படி, அவற்றில் இருந்து எதையும் குறைக்காமலும், அவற்றோடு எதையும் சேர்க்காமலும் அவர் ஏற்றுக்கொள்ளுகிற விதத்தில் நடத்த வேண்டும் என்பதே இந்த ஆராதனைத் தத்துவம். நம்மினத்தில் இந்தப் பொது ஆராதனை சம்பந்தமான போதனைகள் திருச்சபைகளில் கொடுக்கப்படாததால்தான் வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இனத்தையும், கலாச்சாரத்தையும் சார்ந்த வழிகளில் தனி மனித இச்சைகளின் வழிப்படி இன்று பொது ஆராதனை நடத்தப்பட்டு வருகின்றது. வேதம் போதிக்கும் ஆராதனைத் தத்துவங்கள் மேல் நாட்டு கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. அப்படி நினைப்பது நம்முடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. அவை கர்த்தரால் வேதத்தில் தெளிவாக பழைய, புதிய ஏற்பாடுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் நம் முன்னோர்களான சீர்திருத்த கிறிஸ்தவர்களும், பியூரிட்டன் பெரியவர்களும் அதற்குப்பின் ஸ்பர்ஜன், ரைல் போன்றவர்களும் போதித்து பின்பற்றி வந்திருக்கிறார்கள். இந்த ஆராதனைத் தத்துவங்களை 1689 விசுவாச அறிக்கை ‘ஆராதனையும் ஆண்டவரின் நாளும்’ என்ற தலைப்பில் 22ம் அதிகாரத்தில் விளக்குகிறது. விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இந்தப் போதனை வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருப்பதால்தான் அதைக் கவனமாக விளக்கியிருக்கிறார்கள்.

பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் அருமையானது. நம்மை சிந்திக்க வைக்க இன்றைய காலப்பகுதியில் மிகவும் அவசியமானது. இன்றைக்கு திருச்சபையில் நாம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து வந்தாலும் ஆராதனை பற்றிய போராட்டமே விஸ்வரூபம் எடுத்து திருச்சபையை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். ஜே. சி. ரைலின் அறிவுரைகளை நாம் ஜெபத்தோடும், தாழ்மையோடும், திறந்த வேதப்புத்தகத்தோடு சிந்தித்து ஆராய்ந்து பார்த்தால் கர்த்தரின் கோபத்துக்கு ஆளாகின்ற பேராபத்தை தவிர்த்துக்கொள்ளுவதோடு, அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அவருக்குகந¢த ஆராதனையை நாம் கொடுக்க முடியும்.

 

 

 

இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை? – அல்பர்ட் என். மார்டின் –

யூதர்களின் பண்டிகை நாளொன்றில் எருசலேம் மிகவும் கலகலப்பாக இருந்தது. பெதஸ்தா குளத்தின் பக்கத்தில் கலிலேயாவிலிருந்து வந்த அந்த இளம் ரபி, 38 வருஷமாக திமிர்வாதம் பிடித்திருந்த ஒரு மனிதனை நொடிப்பொழுதில் குணமாக்கியிருந்தார். அதைப் பார்த்து சுற்றியிருந்த கூட்டத்தார் பிரமிப்படைந்திருந்தனர். அதைக் குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, யூதமதத் தலைவர்கள், அந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ஓய்வுநாளிலே நீ ஏன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கிறாய் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அது வேலையாக இருந்தது. ஓய்வுநாளில் அவன் வேலை செய்யக்கூடாது என்பது அவர்களுடைய கொள்கை. அத்தோடு அவர்கள் இயேசு கிறிஸ்து மீதும் குற்றஞ்சாட்டினார்கள். திமிர்வாதக்காரனை சுகப்படுத்திய “வேலையை” அவரும் ஓய்வுநாளில் செய்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அதற்கு இயேசு, “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட அவர்களுக்கு, “அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிவிட்டார்” என்ற கோபம் வந்ததே தவிர வேறொன்றும் தோன்றவில்லை (யோவான் 5:18).

பொறாமை பிடித்த அந்த யூதமதத் தலைவர்கள், இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கி பேசி விட்டார் என்பதால், அவரைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிற வெறியோடு அலைந்தார்கள். இருந்தாலும், இயேசு கிறிஸ்து, தன்னுடைய இருதயத்தின் உன்னதமான வாஞ்சையை 34ஆம் வசனத்தில் வெளிப்படுத்துகிறார், “நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்” என்றார். தேவனே அவர்கள் மத்தியில் மனிதவடிவில் வந்திருக்கிறார் என்பதையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவராகிய மேசியா அவரே என்பதையும் அவர்கள் விசுவாசிக்காவிட்டால், அவர்கள் இரட்சிப்படைய முடியாது என்பதால் அவர் தம்முடைய தெய்வீகத் தன்மையை மூன்று விதங்களில் அவர்கள் நடுவே நிரூபணமாக்குகிறார். இதை அவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள்: யோவான் ஸ்நானகனின் சாட்சியின் மூலமாகவும், தாம் செய்த பலவிதமான அற்புதங்களின் மூலமாகவும், வேதவாக்கியங்களின் மூலமாகவும் அவர் தம்மை மேசியாவாக அறிவிக்கிறார். இவ்வளவு சாட்சிகள் இருந்தும், அவர்கள் தங்களுடைய அவிசுவாசத்திலே பிடிவாதமாக நிலைகொண்டிருந்ததால் இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து வெளிவந்த அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட, வருத்தப்பட வேண்டிய வார்த்தையானது 40ஆம் வசனத்தில் காணப்படுகிறது: “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”.

எத்தனை துக்ககரமான வார்த்தைகள்! தம்மிடம்தான் ஜீவன் இருக்கிறதென்றும், அதை அடைவதற்கு தன்னிடம் வந்தால் போதுமானது என்றும் இயேசு கிறிஸ்து தெளிவாக தெரிவிக்கிறார். அவர் சரீரப்பிரகாரமான ஜீவனையோ, சரீரத்தின்படி அவருக்குப் பக்கத்தில் வருவதையோ குறித்துப் பேசவில்லை. ஏனென்றால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் அவருக்குப் பக்கத்தில்தான் இருந்தார்கள். சரீரத்தின்படி அவர்கள் உயிரோடும் இருக்கிறார்கள். ஆனால், அவர் ஆவிக்குரிய நித்தியமான ஜீவனைக் குறித்துப் பேசுகிறார். விசுவாசத்தினால் தங்களை அவரோடு இணைத்துக்கொள்வதின் மூலமாக அடையப் போகும் அழிவில்லாத ஜீவனைக் குறித்தே அவர் விளக்குகிறார். நித்தியஜீவனை அடைவதற்குத் தேவையான ஒன்றை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். அதாவது அவரை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள்தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை இயேசு கிறிஸ்துவின் நிதானமான பதில் சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவிடம் வராமல் பிடிவாதமாக இருக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களைப் போலவே கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

வெளிப்பிரகாரமாக பக்திமான்கள் போலத் தோன்றுகிற இந்த மக்கள் இயேசுவிடம் வருவதற்கு எது தடையாக இருக்கிறது? இன்னும் விசுவாசத்தை அடையாத என் நண்பனே, இன்றைக்கு இயேசுவிடம் வராதபடி உன்னைத் தடை செய்வது எது? இதை எண்ணிப் பார்த்திருக்கிறாயா? ஏன் சிலபேர் இயேசுவிடம் வருவதில்லை என்பதற்கு நான் நான்கு முக்கிய காரணங்களை விளக்கப்போகிறேன். ஆனால் இந்தக் காரணங்களில் எதுவுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதையும் நான் நிருபிக்கப் போகிறேன். இந்தக் காரணங்களை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, இயேசு கிறிஸ்துவிடம் வரும்படியாக நான் உன்னை அழைக்கப் போகிறேன்.

  1. அறியாமையுடன் வாழுதல்.

இயேசு கிறிஸ்து உனக்கு எத்தனை அவசியம் என்பதை நீ அறியாமலிருக்கிறாய். சிலபேர் இயேசு கிறிஸ்துவிடம் வராமலேயே இருப்பார்கள். பாவிகளாகிய தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உணராமல் இருப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் இந்தவிதமான அறியாமைக்கு நல்ல உதாரணம். “தங்களையே நீதிமான்களென்று நம்பிக்” கொண்டிருந்த இந்த மாய்மாலக்காரர்களை நோக்கி இயேசு கிறிஸ்து, மிகவும் தைரியமாக, இரண்டு மனுஷர் ஜெபம் பண்ண ஆலயத்துக்குச் சென்ற உவமையைக் கூறினார் (லூக் 18:9). ஆயக்காரரோடும், பாவிகளோடும் இயேசு கிறிஸ்து பந்தி இருந்து, போஜனம் பண்ணுவதைக் குறித்து பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுக்கிறதை இயேசு கிறிஸ்து கவனித்தார். “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று அவர்களுக்கு பதில் கூறினார் (லூக் 5:31-32).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பரிசேயர் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இன்றும் அநேகர் இருக்கிறார்கள். தாங்கள் வியாதியாய் இருப்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களுக்கு ஆவிக்குரிய நோய் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. தங்களுடைய ஆத்துமாவை சுகப்படுத்தக்கூடியவரான அந்த மிகப்பெரிய மருத்துவரிடம் போவதைக் குறித்து அவர்கள் அக்கறைகொள்வதில்லை. ஏனென்றால், தங்களிடத்தில் எந்தக் குறையும் இருப்பதாக அவர்கள் நினைப்பதேயில்லை.

உன் ஆத்துமாவின் உண்மையான நிலையைக் குறித்து நீ அலட்சியமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் உன்னிடம் இருக்கின்ற வேதமும், உன்னுடைய மனசாட்சியுமே அதற்கு தெளிவான சாட்சியளிக்கும்.

வேதத்தில் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் திறந்துபார். மனிதனின் பாவநிலையைக் குறித்தும், அவன் பாவத்தில் விழுந்துபோன நிலையைக் குறித்தும் அதில் வாசிக்கலாம். ஆதாம்-ஏவாள், கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமற்போன காலந்தொடங்கி, மனித வரலாற்றில் நாம் குற்றவாளிகளாகவும், அசுத்தம் நிறைந்தவர்களாகவும்தான் காணப்படுகிறோம் என்பதை வேதவசனம் தெளிவாகக் காண்பிக்கிறது. நான் மட்டும் அப்படியில்லை என்று நீ நினைப்பாயானால், அப்போஸ்தலனாகிய பவுல், தவறே இழைக்கமுடியாத பரிசுத்த ஆவியின் உதவியினாலே, இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்து எழுதிய பல சுருக்கமான குறிப்புகளைப் படித்துப்பார்: “ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல” (1 கொரி 15:22), “ஒரே மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12).

இந்தப் பாரம்பரியத்தில் நாமும் வந்திருக்கிறபடியினாலே நாம் அனைவருமே பாவிகள்தான். “சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகள்” (எபே 2:3) என்று பவுல் அப்போஸ்தலன் நம்மைக் குறித்து விவரிக்கிறார். கடவுளின் இருதயத்துக்கேற்றவன் எனப் பெயர் பெற்ற அவருடைய தாசனாகிய தாவீது தன்னைக் குறித்து சொல்வதைப் பார்: “இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”. நாம் ஒவ்வொருவரும் பாவசுபாவத்தை நம்மில் இயற்கையாகவே கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பாவம் செய்வது தானாகவே வருகிறது. கடவுளின் வேதாகமத்திலும், நமது இருதயங்களிலும் எழுதப்பட்டிருக்கிற அவருடைய நியாயங்களை நாம் மீறுகிறவர்களாக இருக்கிறபடியால் குற்றவாளிகளாகக் காணப்படுகிறோம். “நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” என்று ஏசாயா (ஏசாயா 53:6) தீர்க்கதரிசி அறிவிக்கிறார். பவுல் இன்னும் ஆணித்தரமாக “நீதிமான் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” என்கிறார். இங்கே மறுபேச்சுக்கே இடமில்லை.

வேதாகமம் கூறுகின்ற சாட்சியையும்விட, உனக்குள் இருக்கிற உன்னுடைய சொந்த மனசாட்சியே உனக்கு விரோதமாக சாட்சியளிக்கிறதே. ஒவ்வொரு மனிதனிலும் மனசாட்சியானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது, ஒன்று அவனுடைய கெட்ட நடத்தையைக் குற்றப்படுத்துகிறது, அல்லது அவனுடைய நல்ல நடத்தையைப் புகழுகிறது (ரோமர் 2:15). பாவத்தினால் வருகின்ற சந்தோஷங்களை மனசாட்சி உறுத்திக் காட்டுகிறது. ஆனால், மனசாட்சியை பேசவிடாமல் செய்வதற்கு உன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் நீ எடுக்கிறாய். மனசாட்சியின் சத்தம் மட்டும் வெளியே கேட்குமானால், அது எல்லோரும் அறியும்படியாக, சத்தமாக, உன்னுடைய இருதயம் எவ்வளவு பொல்லாதது என்பதை பகிரங்கமாக அறிவிக்கும். உன் இருதயத்திலுள்ள இழிவான நோக்கங்களையும் ஆசைகளையும் அது வெளிப்படுத்திவிடும். உன்னுடைய மனசாட்சியின் சத்தத்துக்கு நீ கொஞ்சம் செவிகொடுப்பாயானால், இயேசு கிறிஸ்துவின் உதவி உனக்கு எவ்வளவு தேவை என்பதை நீ உணராமல் இருக்க முடியாது. உன்னுடைய பாவங்களின் காரணமாக நீ தேவனுடைய தண்டனைக்குரிய தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை அறிவாய். அந்தப் பாவத்தின் காரணமாக உனக்கு கிடைக்க வேண்டிய முழு தண்டனையும் கிடைத்தே தீரும் என்பதை நீ தெரிந்துகொள்வாய். அதைத் தவிர்க்க உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதையும் உணர்ந்துகொள்வாய்.

பாவங்களைக் குறித்து வேதாகமம் குற்றஞ் சுமத்துவதையும், மனசாட்சியும் கூடவே சாட்சியிடுவதையும் அலட்சியப்படுத்துகிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா! இயேசு கிறிஸ்து தம்முடைய மிகுந்த இரக்கத்தினால் உனக்கு அழைப்புக் கொடுத்தும், கொஞ்சமும் அசையாமல் இருக்கின்ற உன் நிலையைக் குறித்து உன்னை நீ பாராட்டிக்கொள்ளாதே. உன்னுடைய ஆத்துமாவின் தேவையை உணர்ந்துகொள்ளக்கூடிய தெளிந்த கண்களைக் கொடுக்கும்படியாக அவரை நோக்கி வேண்டிக்கொள். உன்னுடைய அசுத்தநிலையையும், பாவத்தின் அகோரத்தையும் உணரத்தக்க நிலையை தேவன் தரும்படி ஜெபம் செய். லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் அந்தப் பரிசேயன் தன்னுடைய நற்குணங்களை கடவுளிடம் எடுத்துக்கூறி வெட்கமில்லாமல் ஜெபித்தது போல இல்லாமல், தாழ்மையுள்ள அந்த ஆயக்காரனைப் போல “தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று கெஞ்சி மன்றாடு.

  1. கடினமான மனதோடிருத்தல்

இயேசு கிறிஸ்துவின் ஊடுருவுகின்ற வேண்டுகோளுக்கு இணங்காத கடின மனசு மோசமானது! ஒருவேளை உன்னுடைய பாவங்களைக் குறித்து நீ அறிந்தவனாயிருக்கலாம். ஓயாமல் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும் மனசாட்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்புகிறவனாயிருக்கலாம். ஆனாலும், நீ இயேசு கிறிஸ்துவிடம் வராமலிருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. உன் மனசாட்சியை ஊடுருவி அழைக்கின்றதான அவருடைய அழைப்புக்கு நீ இடந்தராமல் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனாய் இருக்கலாம்.

தம்மிடம் வரும்படி கிறிஸ்து அழைக்கின்ற அழைப்பில் ஒரு கட்டளையும் இருக்கிறது. அது, உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு நீ அவரிடம் வரவேண்டும் என்பதே. “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21) என்று தேவ தூதன் யோசேப்பிடம் கூறினான். அவர் தமது மக்களை அவர்கள் இருக்கிற வண்ணமாகவே, பாவநிலையிலேயே ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால், அவர்களுடைய பாவங்களை நீக்கி அவர்களுக்கு விடுதலை கொடுப்பார். “பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து லூக்கா 5:32ல் கூறுகிறார். நீ கிறிஸ்துவின் மணவாட்டியாக அவரோடு இணைக்கப்பட வேண்டுமானால், உன் பாவங்களிலிருந்து முழுவதுமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும், பாவமன்னிப்பையும் பிரிக்கவே முடியாது. “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” அறிவிப்பதே சரியான விதத்தில் சுவிசேஷம் சொல்லுவதாகும் என்பதை பவுல் அப் 20:21ல் உறுதிப்படுத்துகிறார். “இஸ்ரவேலருக்கு இரட்சிப்பையும், மனந்திரும்புதலையும் அருளுகிறதற்காக” தேவன் இயேசு கிறிஸ்துவை அதிபதி யாகவும் இரட்சகராகவும் உயர்த்தினார் என்று பேதுரு அப் 5:31ல் கூறுகிறார்.

பாவத்தில் இருப்பதை அறியாமல் இருப்பதல்ல உன் பிரச்சனை. உன் பாவம் மன்னிக்கப்படவும், சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிற உன் தேவையை நீ நன்றாகவே உணர்ந்திருக்கிறாய். ஆனால் கிறிஸ்துவின் நிபந்தனையின் காரணமாக, உன் பாவங்களை விட்டுவிட்டு அவரிடம் வருவதற்கு நீ தயாராக இல்லை. அதுதான் உன் பிரச்சனை. அதிக ஆஸ்திகளுக்கு அதிபதியாகிய (மத்தேயு 19) அந்த இளம் வாலிபனின் பிரச்சனை இதுதான். அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே ஆவலாயிருந்தான். அதை அடைவதற்காக அவன் இயேசு கிறிஸ்துவிடமும் வந்தான். ஆனால், தம்முடைய சர்வஞானத்தினால், மனிதர் இருதயத்தில் இருப்பதை அறியக்கூடியவராகிய கிறிஸ்துவோ இந்த வாலிபனின் குறை என்ன என்பதை கண்டுகொண்டார். பணத்தின் மீதும், சொத்துக்களின் மீதும் அவனுக்கு விருப்பம் இருப்பதை அறிந்தார். சொத்துக்களைவிட இயேசு கிறிஸ்துவே ஒருவனுடைய எஜமானாக இருந்து அவனுடைய இருதயத்தை ஆளவேண்டும். ஆகவே இயேசு அவனைப் பார்த்து: “போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். இயேசு கிறிஸ்துவின் இந்த இருதயத்தை ஊடுருவுகின்ற வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்கு விருப்பமில்லை. “அவன் துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்” என்று அந்த உவமை முடிகிறது.

சொத்துக்கள் மட்டுந்தான் குறையாக இருக்கிறது என்று நீ நினைக்க வேண்டாம். சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்று இயேசு கிறிஸ்து எல்லோருக்கும் சொல்லுவதாகவும் நினைக்க வேண்டாம். செல்வந்தர்களாக இருந்த மத்தேயு, சகேயு போன்ற சிலருக்கும் அவர் சுவிசேஷ அழைப்புக்கொடுத்தார். ஆனால் அவர்களிடம் சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்கிற நிபந்தனையை அவர் விதிக்கவில்லை. அவர் பாவிகளை அழைக்கும்போது, அவர்களுடைய இருதயத்துக்கு எது மிகவும் அருமையானதாக தெரிகிறதோ அதையே விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். யோவான் 4ல் காணப்படும் சமாரிய ஸ்தீரியிடம் என்ன குறை இருந்தது என்பதை அவர் கண்டுகொண்டு அதிலிருந்து விலகி வரும்படி அழைக்கிறார். இயேசுவிடம் மாத்திரம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு அவருக்கு முதலிடம் கொடுப்பவன் மாத்திரமே நித்தியஜீவனை அடையமுடியும் என்பதை இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் கூறுகிறார். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” (மத் 6:24). “ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34).

உன் இருதயத்தை ஊடுருவி அறிந்திருக்கிறவரான இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்கு எதிராக உன் மனதை நீ கடினப்படுத்திக்கொள்ளுவது சரியா? பரிசுத்தத்தில் பரிபூரணரான மகிமையின் கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியாக, உன் பாவங்களை விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். நீயோ அவற்றை விட்டு விலக மறுக்கிறாய். உன் பாவங்களை விட்டுவிலகாமல் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கிறாயே! முடிவில் அவை உனக்கு என்ன தரும்? “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:23ல் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிற இரட்சிப்பு உனக்கு எதைத் தருகிறது தெரியுமா? தண்டனையிலிருந்தும், பாவத்தின் பிடியிலிருந்தும், அதன் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலையைத் தருகிறது. ஒரு நாளில் அது முற்றிலுமாக பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே விடுதலையை அளிக்கப் போகிறது. ஆண்டவருக்கு நன்றி! உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறதான அந்தப் பாவத்தை நீ விடாமல் ஏன் பற்றிக் கொண்டிருக்கிறாய்?

எதையும் விட்டு விலகுவது எவ்வளவு கடினமானது என்பதை இயேசு அறிவார். வலது கண்ணும், வலது கையும் ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முதன்மையைப் பெற்றிருக்கிற பாவங்களைக் குறித்து அவர் பேசுகிறார். உண்மையான மனந்திரும்புதலும், அறிக்கையிடுதலும், பாவத்தைவிட்டுவிடுதலும் ஒருவனுக்கு பலவிதமான நஷ்டங்களைக் கொண்டுவரும் என்பதை அவர் அறிவார். அது, சிலருக்கு அவமானத்தையும், மனவிரோதத்தையும், பொருளாதாரத்தில் நஷ்டத்தையும், நெருங்கிய உறவினரை விட்டுவிலகுவதால் ஏற்படும் மனக்கஷ்டத்தையும் கொண்டுவரும். “நீங்கள் என்னிடத்தில் வரமாட்டீர்கள்” என்று இயேசு கிறிஸ்து அந்த யூதரைப் பார்த்து சொன்னபோது, அவர்கள் ஒருவராலொருவருக்கு வருகின்ற மரியாதையை விரும்புகிறவர்கள் என்பதை அறிந்தே அப்படிச் சொன்னார் (யோவான் 5:44). அநேகர் கேவலமாக பேசுகிற இந்தப் போதகரைப் பின்பற்றுவது தங்களுடைய பெருமைக்கு இழுக்கு என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய மனப்போராட்டத்தை அவர் அறிவார். இருந்தாலும் அவர்களை இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் ஆழ்த்துவதை அவர் தவிர்க்கவேயில்லை.

இப்படி இருதயம் கடினப்பட்டுப்போய் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் மாத்திரமல்லாமல், முட்டாள்தனமாகவும் இருப்பதை கவனிக்கிறாயா? பாவத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வாழ்க்கையானது எப்படியிருக்கும் என்று பார். வாலிப வயதிலே, தேவனுடைய அழைப்புக்கு எதிர்த்து நின்றவர்களின் வாழ்க்கையானது எவ்வளவு தடம்புரண்டதாக இருந்திருக்கிறதென்று கவனித்துப்பார். ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் உரைத்த வார்த்தைகள் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறது: “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள். அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசா 57:20-21). “துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது” (நீதி 13:15). தங்களுடைய பாவங்களிலேயே நிலைத்திருந்தவர்களின் மரணப்படுக்கையானது எவ்வளவு சஞ்சலம் நிறைந்தாயிருந்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பார். பூமியின் ராஜாக்களும், பெரியோரும், மலைகளையும் குகைகளையும் பார்த்து எங்களை மறைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் “ஆட்டுக்குட்டியானவரின் கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டதே” (வெளிப் 6:15-17) என்று கதறி நிற்கப் போகிற நியாயத்தீர்ப்பின் நாட்களை எண்ணிப் பார். நரகத்திற்குள்கூட சற்று எட்டிப் பார். மனந்திரும்பாத பாவிகள் நரக அக்கினியிலே போடப்படுகிறார்கள்: “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத் 13:42). “அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” (வெளி 14:11).

கடைசியாக, சிலுவையை நோக்கி உன் பார்வையைத் திருப்பு. மகிமையின் தேவன், பாவமே இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்த ஒரே மனிதன், சிலுவையின் மீது தமது மக்களின் பாவங்களின் காரணமாக பாவமானார். நீ விரும்புகின்ற பாவத்துக்காக இயேசு கிறிஸ்து செய்திருக்கும் தியாகத்தைக் கவனித்துப் பார். பொல்லாதவர்களின் கரங்களின் கீழாக அவர் பட்ட பாடுகளை நினைத்துப் பார். மனிதர்களின் பாவங்களுக்காக பிதாவின் கோபத்தை தாம் சந்திக்க நேர்ந்ததைக் குறித்து அவர் அடைந்த அளவிடமுடியாத வேதனையை குறித்து சிந்தித்துப் பார். ஜான் நியூட்டன் என்கிற கவிஞர் சொன்னபடி உன்னாலும் சொல்ல முடியுமா என்பதை சிந்தித்துப் பார்:

“இரத்தம் வடிகிற இரட்சகரை நான் நோக்கிப் பார்த்ததுமுதல், என் பாவங்களை நான் வெறுக்கிறேன்”

இத்தனையையும் சிந்தித்துப் பார்த்தும், நீ நேசத்தோடு வாழ்கிற உன் பாவ வாழ்க்கையை விட்டு உன்னால் விலக முடியவில்லையென்றால், நியாயத்தீர்ப்பின் நாளிலே கடவுள் உன்னைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத் 25:41) என்று கூறுவதில் தவறென்ன? “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். அவனைப் போகவிடு” (ஓசி 4:17). உன் பாவங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நரகத்தின் அக்கினியிலே அமிழ்ந்து போகாதிரு. கிறிஸ்துவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவரிடம் வா, நித்தியஜீவனை நிச்சயம் அடைவாய்.

  1. இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிதிகளின் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பது

ஒருவேளை நீ மிகவும் பயங்கரமான பாவங்களில் சிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நீயாகவே உன் சொந்த முயற்சியினால் அநேக பாவங்களைத் தவிர்த்து வாழ்பவனாக இருக்கலாம். உன்னுடைய சொந்த நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதற்காகவும் பாவம் செய்யாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் உன்னிடத்தில் பாவத்தின் கிரியை இருப்பதை நீ உணராமல் இருக்கிறாய். அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல என நீ நினைத்துக்கொண்டிருக்கலாம். உன் பாவத்தை அவமானகரமான பாவமாக நீ கருதாமல் இருக்கலாம். ஆனால், அது எப்படிப்பட்டது தெரியுமா? இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கும் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கையில்லாதவனாக இருப்பதே அந்தப் பெரிய பாவம்.

“என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? நம்பிக்கையில்லாமல் இருப்பது பெரிய பாவமா? நான் ஒருசில காரியங்களை நம்பவில்லை என்பதற்காக கடவுள் எப்படி என்னைக் கணக்குக் கேட்கமுடியும்?” என்று நீ ஒருவேளை கேட்கலாம். நண்பனே, நீ கிறிஸ்துவிடம் வருவதற்கு, நம்பிக்கையில்லாத உன் இருதயம் பெருந்தடையாக இருக்கிறது என்பதையும், நீ மோட்சத்திற்குள் பிரவேசிக்க முடியாமற் போவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது என்பதையும் ஒரு நிமிஷம் சிந்தித்துப் பார்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகள் எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும், எல்லாருக்கும் உரியதாகவும் இருக்கிறது என்பதில் உனக்கு சந்தேகமுண்டா? அவர் வாக்குறுதிகளில் சிலவற்றைப் படித்துப் பார். நீயே உன்னுடைய வேதப் புத்தகத்தை எடுத்து அவற்றை வாசித்துப் பார். அவைகள் நிபந்தனைகளை விதிக்காமலும், உன்னிடம் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்காமலும் இருக்கிறதென்பதை கூர்ந்து கவனி.

வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).

தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார் (ரோமர் 10:12).

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் (ரோமர் 10:13).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான் (யோவான் 5:24).

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை (யோவான் 6:37). (எப்படிப்பட்டவனாயிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அவனை நான் புறம்பே தள்ளமாட்டேன் என்கிறார்).

தேவன் தமது இரட்சிப்பின் செயலை ஒரு திருமணவிருந்துக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” (மத் 22:4) என்று அழைக்கிறார். தேவன் எல்லாவற்றையும் தயார் செய்து முடித்து வைத்திருக்கிறார். செய்ய வேண்டியவைகளையெல்லாம் குறைகளில்லாமல் அவர் செய்து முடித்துவிட்டார். நாம் எதையுமே கொண்டுவர வேண்டியதில்லை. அவரிடம் வரவேண்டியது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டியது.

நிபந்தனையில்லாத மன்னிப்பை அருளி உன்னை ஏற்றுக்கொள்ளுவதாக அவர் அற்புதமான வாக்குக்கொடுக்கிறார். அதை நீ நம்ப மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? சுவிசேஷ விருந்து தயாராகிவிட்டது. அவர் தமது ஊழியர்களை அனுப்பி விருந்தினரை அழைத்துவரச் சொல்லுகிறார்: “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. வாருங்கள்” (லூக் 14:17) என அழைப்பு விடுக்கிறார். ஆனால் நீயோ திருமண மண்டபத்துக்கு வெளியே தயங்கி நின்று கொண்டிருக்கிறாய். அவருடைய இரக்கமுள்ள வாக்குறுதிகளை நம்பாதவனாக இருப்பதால் அதைப் பெறாதவனாகவும், சாபத்துக்குட்பட்ட நிலையிலும் காணப்படுகிறாய். உன்னுடைய பாவத்தைக் குறித்த அறியாமை உன்னில் காணப்படாமல் இருக்கலாம். அல்லது பாவத்தைக் குறித்த கடினமனதைக் கொண்டிராதவனாகக்கூட நீ இருக்கலாம். ஆனால், தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கூறிய சாட்சியை நம்பாதவனாயும் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாயும் இருக்கிறாயே. எந்த மனிதனுடைய பாவத்தையும் நீக்கி, அவனை மீட்பதற்குத் தமது குமாரன் போதுமானவராய் இருக்கிறார் என்று அவர் குமாரனைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார். “இவர் என்னுடைய நேசகுமாரன். இவருக்கு செவிகொடுங்கள்” (மாற்கு 9:7) என்று வானத்திலிருந்து எல்லோரும் கேட்கும்படியாக சத்தமாக அவர் கூறியிருக்கிறார்.

பரலோகத்திலே நாம் பலவிதமான பாவிகளைக் கண்டு ஆச்சரியப்படப் போகிறோம். லூக்கா 7 ஆம் அதிகாரத்தில் நாம் காண்கிற, யாவருக்கும் தெரிந்திருந்த பாவியாகிய அந்த ஸ்திரீயைப் போன்றவர்களையும் காண்போம். அவளுடைய பாவநிலையை அவ்வூரிலிருந்த அனைவரும் நன்கு அறிந்திருந்தார்கள். தனது குற்றங்களின் நிமித்தமாக சிலுவைக்குச் சென்ற கள்ளன் போன்றோரையும் சந்திப்போம். தர்சு பட்டணத்தின் சவுலைப் போல அநேகரை கொலை செய்தவர்களும், தேவதூஷணம் சொல்லியவர்களையும் அங்கே காண்போம். தேவனுடைய ஒரே பேறான குமாரனின் கொலையில் பங்குபெற்ற சிலரைக்கூட நாம் பரலோகத்தில் பார்க்க நேரிடும் (அப் 2:23). இப்பேர்பட்ட பலதரப்பட்ட பாவிகளின் மத்தியில் ஒரு குறிப்பிட்டவிதமான பாவிகளை மாத்திரம் நாம் அங்கு சந்திக்கவே மாட்டோம். அவர்கள்தான் இயேசு கிறிஸ்துவை நம்பாதவர்களாகிய பாவிகள். இந்த உலகத்திலே, இயேசு கிறிஸ்துவோடு விசுவாசத்தினாலே இணைக்கப்படாத எவரும் பரலோகத்தில் இருக்கப்போவதில்லை.

கடவுளின் கடைசி நியாயத்தீர்ப்பைக் குறித்து வெளிப்படுத்தின சுவிசேஷம் அநேக காரியங்களை நம் முன் வைக்கிறது. அவைகளில் பல காரியங்கள் நமக்குப் புதிராகவும், மறைபொருளாகவும் இருக்கிறது. ஆனால் அவைகளில் ஒரு வசனம், பரலோகத்தின் வாசலுக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டவர்களின் தன்மையைத் தெளிவாக விளக்குவதாயிருக்கிறது: “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்” (வெளி 21:8). உலகத்தில் மரியாதைக்குரியவர்களாகவும் நல்லவர்களாகவும் வாழ்ந்த அநேகர்கூட, தங்களுடைய அவிசுவாசமாகிய மிகப் பெரும் பாவத்தினால் நரக அக்கினியில் பங்கடைவார்கள். கொலை, பொய், விபசாரம் போன்ற பலவித பாவங்களில் வாழ்ந்த பாவிகளோடு சேர்ந்து இவர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்டதான நித்திய அழிவை அடைவார்கள்.

அவிசுவாசத்தை நாம் சாதாரண குற்றமாகத்தான் நினைக்கிறோம். அதை “வைட்டமின் குறைபாடு” போலவும், அதன் காரணமாக நாம் ஆவிக்குரிய வாழ்வில் கொஞ்சம் தளர்ச்சி மாத்திரம்தான் அடைவோம், அதைத் தவிர அது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல என்று எண்ணிக்கொள்ளுகிறோம். ஆனால் கடவுள், அவிசுவாசத்தை அதன் உண்மையான நிலைமையில் பார்க்கிறார். பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்தில் வந்ததன் நோக்கம் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவதற்கே. அதில் மிகவும் முக்கியமான பாவம் எதுவென்று இயேசு கிறிஸ்து யோவான் 16:9ல் சுட்டிக் காண்பிக்கிறார்: “அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும் . . . கண்டித்து உணர்த்துவார்”.

இதுவரைக்கும் நீ அவிசுவாசியாக (ஆத்தும விடுதலைக்கு இயேசுவில் முழு நம்பிக்கையில்லாதவனாக) இருந்திருப்பாயானால், இப்போதாவது அந்தப் பாவத்திலிருந்து விலகி, விசுவாசமுடையவனாக இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வாயா? இரட்சிப்பு, பாவமன்னிப்பு, இளைப்பாறுதல் ஆகியவைகளைக் குறித்து அவர் அளித்திருக்கின்ற ஏராளமான வாக்குறுதிகளை நம்புவாயா?

  1. இயேசுவிடமிருந்து இன்னும் அதிகமான வெளிப்பாடுகளை எதிர்பார்த்தல்

ஒருவேளை இதுவரைக்கும் இயேசுவிடம் வருவதற்கு நீ தயங்குவதற்கான உண்மையான காரணத்தை உன்னால் அடையாளம் காணமுடியாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை உன்னுடைய தேவையை நீ அறிந்தவனாகவும், உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு வரவும்கூட நீ தயாராக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் மீது உன் நம்பிக்கையை வைப்பதற்கு நீ சரியான வேளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவனாகக்கூட இருக்கலாம். ஆனால், அவரை நீ விசுவாசிப்பதற்கு அவரிடம் இருந்து விசேஷமான விதத்தில் ஒரு செய்தி வரவேண்டுமென்று நீ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாய்.

தனிப்பட்ட வேதவாசிப்புகளின் மூலமாகவோ, குடும்பத்தில் நல்ல வளர்ப்பு முறையின் காரணமாகவோ, ஒழுங்காக சபைக்கு வந்துகொண்டிருந்ததினாலோ வேதாகமம் உனக்கு சத்தியத்தின் அவசியத்தை உணர வைத்திருக்கிறது. கடவுளால் நீ விசேஷமாகத் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தாலொழிய உன்னால் கிறிஸ்துவிடம் வரமுடியாது என்பதை நீ அறிந்து வைத்திருக்கிறாய். தனது தேவையை அறிந்துகொள்ளும்படியாக தேவன் தாமே ஒரு பாவியை தட்டி எழுப்ப வேண்டும், கடவுள் அவனைத் தம்மிடமாக இழுத்துக்கொள்ள வேண்டும், விசுவாசமாகிய வரத்தை தேவனே அவனுக்கு அருள வேண்டும் என்கிற சத்தியமெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கிறது. இதையெல்லாம் நீ எண்ணிப் பார்த்து உனக்குள்ளேயே, “நான் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், நானாக அவரிடமாக வருவது துணிகரமான செயலாயிருக்கும்” என்று சொல்லிக்கொள்ளுகிறாய்.

இந்த எண்ணம் உனக்குள் உறுதியாக இருப்பதால், இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஏதாவது கூடுதலான நிச்சயம் உனக்கு ஏற்பட்டாலொழிய உன்னால் விசுவாசத்திற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனத் தீர்மானித்துக்கொள்ளுகிறாய். ஒருவேளை நீ ஒரு விசேஷ தரிசனத்தையோ அல்லது நடு இராத்திரியில் ஒரு மெல்லிய சத்தத்தையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறவனாக இல்லாமல் இருக்கலாம். இருந்தபோதும், உன் மனதைத் தொடுகின்றதான ஒரு வசனத்தையோ, அல்லது கடவுள் உன்னோடு பேசுகிற ஒரு அனுபவத்தையோ, அல்லது உன் வாழ்வில் நீ புதுப்பிக்கப்பட்டிருப்பதற்கான ஓர் அடையாளத்தையோ நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறவனாக இருக்கலாம். கடவுளிடமிருந்து இத்தகைய விசேஷ செய்தியை நீ எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் கிறிஸ்துவிடம் நீ வராமல் இருக்கிறாய்.

விசேஷமானதொரு வெளிப்பாட்டை எதிர்பார்த்துக் காத்துகொண்டிருப்பது கொஞ்சமும் சரியல்ல என்று ஏன் நான் சொல்லுகிறேன் தெரியுமா? அதற்கு யோவான் 5ஆம் அதிகாரம் அழகாக விடை தருகிறது. தான் மேசியா என்பதற்கு பழைய ஏற்பாட்டின் வசனங்களே போதுமான அத்தாட்சி அளிக்கின்றது என்று இயேசு, யூதர்களிடம் உறுதியாக கூறுகிறார். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39). மேலும் அவர் கூறுகிறார்: “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள். அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே” (யோவான் 5:46). வேறுவிதமாக சொல்வோமானால், “மோசே எழுதிய முதலாவது புத்தகம் தொடங்கி, கடைசி தீர்க்கதரிசி எழுதிய புத்தகம் வரைக்கும் உள்ள வார்த்தைகள் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறதோ, அவையே ஒருவன் என்னிடம் வருவதற்கு தேவையான சகல ஆதாரங்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு எதுவும் தேவையென்று நீங்கள் காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இந்த வார்த்தைகளே போதுமானதாயிருக்கிறது” என இயேசு சொல்லியிருக்கிறார்.

நரகத்தில் ஐசுவரியவானோடு நிகழ்ந்த சம்பாஷணையானது, வேதாகமத்தின் சாட்சி மாத்திரமே போதுமானதும் முடிவானதும் என்பதை நிருபிக்கின்றதாயிருக்கிறது. நரகத்தின் வேதனைகளைக் குறித்து தன் சகோதரருக்கு யாராவது எச்சரிக்க வேண்டும் என ஐசுவரியவான் வேண்டிக் கொண்டபோது, ஆபிரகாம் அதற்கு பதில் கூறுகிறார்: “அவர்களுக்கு மோசேயும், தீர்க்கதரிசிகளும் உண்டு. அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்” (லூக் 16:29). ஐசுவரியவானுக்கு இன்னும் சிறந்த வழியொன்று தோன்றுகிறது: “அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள்” (லூக் 16:30) என்றான். ஆபிரகாம் சொல்லும் கடைசி பதிலில் நாம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்கிறோம்: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும் நம்பமாட்டார்கள்”.

நீ இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பாக ஏதாவதொரு விசேஷ வெளிப்பாடு உனக்குக் கிடைக்க வேண்டுமென காத்துக் கொண்டிருக்கிறாயா? உன் வேதாகமத்தில் காணப்படுகின்ற “மோசே, தீர்க்கதரிசிகளின்” செய்திகளை நீ அலட்சியப்படுத்துகிறாயா? அவரை விசுவாசிக்க எதற்காகவாவது இப்படிக் காத்துக் கொண்டிருப்பது ஏற்கமுடியாதது என்பதை நீ உணருகிறாயா? இத்தகைய மனநிலையைக் கொண்டிருப்பதால், கடவுளுக்கு முன்பாக உன்னைத் நீ தாழ்த்திக்கொள்வதாக தவறாக எண்ணாதே. அவரை விசுவாசிக்க நீ இந்த முறையில் தயங்கிக் கொண்டிருப்பது, உண்மையிலேயே, கடவுள் எந்தவிதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அவருக்கு கட்டளையிடுகின்ற உன்னுடைய அகங்காரத்தைக் காண்பிக்கிறது. நீயும் அந்த ஐசுவரியவானைப் போல, வேறு சிறந்த வழிவகைகள் இருப்பதாக கடவுளிடம் விளக்கிக் கொண்டிருக்கிறாய்: “தேவனே, இரட்சிப்பைக் குறித்து நீர் வைத்திருக்கின்ற சாதாரணமான வழிவகையைக் காட்டிலும் என்னிடம் மிகச் சிறந்த திட்டம் இருக்கின்றது. நீர் என்னை உம்மிடமாக அழைப்பதற்கு நான் சில விசேஷ வழிகளை யோசித்து வைத்திருக்கிறேன். அந்தவிதமான வெளிப்பாடுகளால் நீர் என்னை அழைப்பதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவரிடம் யோசனை கூறிக் கொண்டிருக்கிறவனாக இருக்கிறாய். உண்மையில், கடவுளின் இரட்சிப்பின் திட்டமானது மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் வேதாகமத்தின் மூலமாக உனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷமாகிய திருமணவிருந்து தயாராகிவிட்டது. கடவுள் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படியாக உன்னை அழைக்கிறார். நீ செய்ய வேண்டியதெல்லாம் அந்த அழைப்புக்கு இணங்கி வரவேண்டியது மட்டுமே.

இயேசு கிறிஸ்து உன்னை அழைக்கிறாரா? உன்னை நீ ஒரு விசேஷ பாவியாகப் பார்க்காமல், நரகத்திற்கு மட்டுமே தகுதியான, காணாமற்போன, ஏழைப் பாவியாக உணருகிறாயா? அப்படியானால் அவரிடம் மனந்திரும்புதலோடும் விசுவாசத்தோடும் வா! “பாவிகளின் நண்பரான” இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார். தெய்வீக திட்டத்தை முற்றிலுமாக நிறைவேற்றிய அவருடைய பரிபூரணமான நீதியுள்ள வாழ்க்கையைப் பார். உனக்காக மரித்த அவருடைய மரணமானது, உன்னுடைய பாவங்களுக்கான தெய்வீக நீதிச்சட்டத்தை பரிபூரணமாக நிறைவேற்றி முடித்திருப்பதை கவனி. கடவுள் மிகவும் எளிமையாக உருவாக்கியிருப்பதை நீ கடினமாக்காமல் பார்த்துக்கொள். வா, இயேசுவிடம் இன்றே, இப்போதே வா.

கடவுள் கிருபையாக வழிகாட்டுகிறபடியால் இயேசு கிறிஸ்துவிடம் வா: “நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமா யிருந்து . . . என்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது” (1 யோவான் 3:23). கடவுள் கிருபையாக வாக்குறுதி அளிக்கிறபடியால் அவரிடம் வா: “தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு . . .” (யோவான் 3:16). இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து உன்னைத் தடுத்துநிறுத்துகிற காரணம் எதுவாக இருந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிட்டு, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவிடம் வா!

நான் இருக்கிறவண்ணமாகவே, வாதம் செய்யாமல்,
உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டதால்.
உம்மிடம் வருமாறு நீர் என்னை அழைத்ததால்
ஆட்டுக்குட்டியானவரே, வருகிறேன்!

நான் இருக்கிறவண்ணமாகவே, தாமதிக்காமல்
முற்றிலும் அழுக்கான என் ஆத்துமாவை
உமது இரத்தம் கறையின்றி கழுவப் போவதால்
ஆட்டுக்குட்டியானவரே வருகிறேன்!

நான் இருக்கிறவண்ணமாகவே, நீர் ஏற்றுக்கொள்வீர்
வரவேற்று, மன்னித்து, கறைநீக்கி, சுகமளிப்பீர்
ஏனெனில் உமது வாக்கை நான் விசுவாசிக்கிறேன்
ஆட்டுக்குட்டியானவரே, வருகிறேன்!

 

 

 

கிறிஸ்தவனே! பாவத்தை அழி, அது உன்னை அழிக்குமுன் (பாவத்தை அழித்தல் – 3)

பவுல் கொலோசெயர் 3:5ல் ‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று கட்டளையாக அறிவிக்கிறார். கடந்த இதழ்களில் பாவத்தை அழித்தல் பற்றிய போதனை சம்பந்தமான இறையியல் குழப்பங்களை ஆராய்ந்து வந்திருக்கிறோம். முதலாவதாக, நம்முடைய சரீரங்களில் பாவத்தை அழிப்பதற்கு சடுதியாக நிகழும் எந்தக் குறுக்கு வழி ஆத்மீக அனுபவத்தையும் வேதத்தில் கர்த்தர் காட்டவில்லை. இரண்டாவதாக, கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கடமையுணர்வோடும், பரிசுத்தமாகுதல் பற்றிய தாகத்தோடும் நம்மில் இருக்கும் பாவத்தை நாம் ஆவியின் துணையோடு அழிக்காவிட்டால் பாவத்தை அழிப்பதற்கு வேறு வழிகளில்லை. பாவத்தை அழித்தல் பற்றிய போதனையை விளங்கிக்கொள்ளுவதற்கு நான் மேலே விளக்கிய இரண்டு காரியங்களையும் நாம் கருத்தோடு சிந்திப்பது மிகவும் அவசியம். இனி நாம் கொலோ 3:5ல் பவுல் சொல்லுகின்ற காரியத்தை சிந்தித்துப் பார்ப்போம்.

‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று பவுல் அப்போஸ்தலன் கூறியிருக்கும் வார்த்தைகள் சுருக்கமானவைகளாக இருந்தாலும் அவற்றில் பேருண்மைகள் பொதிந்து காணப்படுகின்றன. பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவன் இந்த வார்த்தைகளுக்கு 648 பக்கங்கள் மூலம் விளக்கமளித்திருக்கிறார். அதனால், வேதத்தில் சுருக்கமாகக் காணப்படும் வசனங்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றில் ஆழமான சத்தியங்கள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. அவசரப்பட்டு வசனங்களைக் கவனித்துப் படிக்காமல் விளக்கிக்கொள்ளக் கூடிய ஆபத்து இருக்கிறது. பெரிய வசனப்பகுதிகளையும், நூல்களையும் சுருக்கமாகப் படிப்பதும் அவசியம். அதேநேரம் ஒவ்வொரு வசனங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் பொதிந்து காணப்படும் சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவதும் மிகவும் அவசியமானது.

இந்த வசனத்தைப் பற்றிய மூன்று காரியங்களை நான் விளக்க விரும்புகிறேன்:

  1. இந்த வசனங்களுக்கான இலக்கணபூர்வமான அர்த்தம்
  2. இந்த வசனங்களின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனை
  3. சரீரத்தில் பாவத்தை அழித்தலின் அவசியத்தை உணர்த்தும் வேதபூர்வமான இறையியல் காரணங்கள்.
  4. இந்த வசனங்களுக்கான இலக்கணபூர்வமான அர்த்தம்

இந்த வசனங்களிலிருந்து இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்.

அ. ‘அழித்துப் போடுங்கள்’ என்ற பதங்கள்.

இந்த வார்த்தைகள் சரியாகவே மூல மொழியான கிரேக்கத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒன்றை அழித்துவிடுவது என்பதே இதற்குப் பொருள். இதைப் பற்றி விளக்கும் ஜோன் ஓவன், ‘ஒன்றின் வலிமையையும் உயிர்நாடியையும் முற்றாக செயலிழக்கச் செய்து அது தொடர்ந்து செயற்பட முடியாமல் செய்வதே அழித்துவிடுவது என்பதற்குப் பொருள்’ என்று விளக்கியிருக்கிறார். இந்தப் பதங்களில் காணப்படும் வினைச் சொல் இலக்கணப்படி நாம் செய்ய வேண்டிய செயலை உணர்த்துகிறது. அத்தோடு, அதில் தெளிவான கட்டளைத் தொனியும் காணப்படுகிறது. இந்த வசனத்தைப் போன்ற இன்னொரு வசனத்தை ரோமர் 8:13ல் காண்கிறோம். ‘மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினால் சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.’ இங்கே ரோமர் 8:13ல் ‘அழித்தால்’ என்பதற்கு கொலோசெயர் 3ல் பயன்படுத்தியதைவிட வேறொரு கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் இரண்டு வசனங்களும் ஒரே காரியத்தை விளக்குகின்றன. கொலோ. 3:5ல் காணப்படும் ‘அழித்துப் போடுங்கள்’ என்ற பதங்கள் நாம் எடுக்க வேண்டிய கடமைபூர்வமான நடவடிக்கையை உணர்த்தும் பதங்களாக இருக்கின்றன.

ஆ. அடுத்து கவனிக்க வேண்டிய பதங்கள் ‘பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை’ என்பதாகும்.

ஆங்கில வேதத்தில் இந்தப் பதங்கள் ‘பூமியில் உள்ள உங்கள் அவயவங்கள்’ என்றிருக்கிறது. இந்தப் பதங்களை எவ்வாறு புரிந்துகொள்ளுவது? இவற்றை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், இவை இன்னொரு விஷயத்தைக் குறிக்கும் அடையாள மொழியாகக் காணப்படுகின்றன. நம்முடைய சரீரத்தைப் பயன்படுத்தி நாம் செய்யும் காரியங்களைக் குறிப்பதற்காக இத்தகைய மொழி நடையை பவுல் பயன்படுத்தியிருக்கிறார். இது பற்றி விளக்குகின்ற ஜோன் கல்வின், “நம்மோடு மிகவும் நெருக்கமாக இருந்து நம்மில் வெளிப்படுகிறவையாக பவுல் குறிப்பிடுகின்ற பாவச் செயல்கள் இருப்பதால் அவற்றை ‘அவயவங்கள்’ என்று குறிப்பிடுகிறார்” என்கிறார். நம்முடைய அவயவங்களைப் பயன்படுத்தி நாம் பாவச்செயல்களைச் செய்வதால் தமிழ் வேதத்தில் ‘பூமியில் உண்டுபண்ணுகிற அவயவங்கள்’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது பற்றி வேத விளக்கவுரையாளரான வில்லியம் ஹென்றிக்சன் விளக்கமாக பின்வருமாறு எழுதியிருக்கிறார், ‘நம்மோடு மிகவும் நெருக்கமாக இருக்கிற, நம்முடைய சரீரத்தின் மூலம் நாம் செய்கின்ற விபச்சாரம் போன்ற செயல்களை அழித்துப் போடுங்கள்.’ இன்னொரு வேத விளக்கவுரையாளர், “நம்முடைய சரீரத்தினால் நாம் செய்கின்ற பாவச்செயல்களையே இங்கே அவயவங்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார் என்றும், இதையே ரோமர் 8:13ல் ‘சரீரத்தின் செயல்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று விளக்கியிருக்கிறார்.

இதுவரை இந்த வசனத்தின் தெளிவான இலக்கணபூர்வமான விளக்கத்தைப் பார்த்திருக்கிறோம்.

  1. இந்த வசனங்களின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனை.

இந்த வசனங்கள் உண்மையில் எதைப் போதிக்கின்றன? நம்முடைய ஆக்கத்தின் தலைப்பு ‘பாவத்தை அழித்தல்’ என்பதாகும். இதுவரை நாம் பார்த்தவற்றில் இருந்து இந்த வசனத்தில் பவுல், கிறிஸ்தவர்கள் தங்களுடைய சரீரத்தின் மூலம் செய்கின்ற பாவங்களை அழிக்க வேண்டும் என்று கட்டளையாக அறிவிக்கின்றார் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். அதுவே இந்த வசனம் போதிக்கும் சத்தியம். உடனேயே இது ஒரு முக்கியமான இறையியல் கேள்வியை எழுப்பிவிடுகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியின் 3ம் வசனத்தில் ‘நீங்கள் மரித்தீர்கள்’ என்றிருப்பதைப் பார்த்திருக்கிறோம். 2ம் அதிகாரம் 20ம் வசனத்தில்; ‘நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால்’ என்றிருப்பதை வாசிக்கிறோம். இந்த வசனங்கள் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே பாவத்துக்கு மரித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. கொலோ. 2:11-13 வரையிலுமுள்ள வசனங்களில், ‘நீங்கள் . . மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதானால்’ (11) என்றும், ‘உங்கள் பாவங்களினாலேயும் . . . மரித்தவர்களாயிருந்த உங்களை’ (13) என்றும் பவுல் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே தங்களுடைய பாவத்துக்கு கிறிஸ்துவில் மரித்திருப்பதை உணர்த்துவதைக் காண்கிறோம். இந்த வசனங்கள் கிறிஸ்தவர்களுடைய பழைய மனிதன் கிறிஸ்துவுக்குள் மரித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அத்தோடு கொலோ 3:9, கிறிஸ்தவர்கள் பழைய மனிதனை ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் களைந்து போட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகின்றது.

இவை இப்படி இருக்கும்போது, ஏற்கனவே கிறிஸ்தவர்களில் பழைய மனிதன் கிறிஸ்துவுக்குள் பாவத்துக்கு மரித்து அடக்கம் செய்யப்பட்டிருந்தால் இப்போது பவுல் கொலோ 3:5ல் அவர்கள் பாவத்தை அழிக்க வேண்டும் என்று கட்டளையாக எப்படிச் சொல்ல முடியும்? என்பதுதான் அந்த இறையியல் கேள்வி. ஏற்கனவே பவுல் நாம் பாவத்துக்கு மரித்துவிட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே. மரித்துவிட்டோம் என்றால் முற்றாக இறந்துவிட்டோம், இனி உயிர் இல்லை என்றுதானே அர்த்தம். அப்படியானால், கிறிஸ்தவர்கள் பாவத்தை அழிக்க வேண்டும் என்று மறுபடியும் பவுல் சொல்லக் காரணம் என்ன? இந்தக் கேள்வி அவசியமானதுதான். இதற்கு பதிலளிப்பதும் அவசியந்தான். இதற்கு பதில்தான் என்ன? இந்த வசனம் ஏற்கனவே மரித்துப் போயிருக்கின்ற ஒன்றை நாம் மீண்டும் அழிக்க வேண்டும் என்று சொல்லுவது உண்மைதான், அதை மறுக்கவே முடியாது. ஆனால், நமது கண்களுக்கு மேலெழுந்தவாரியாக இந்த வசனத்தில் தென்படுவது முழுமையான உண்மையல்ல. பாவத்தைப் பற்றியும், பாவத்தைத் தொடர்ந்து அழிக்க வேண்டிய நம்முடைய கடமையைப் பற்றியுமான முழு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் இவை பற்றிய வேதத்தின் ஏனைய பகுதிகள் போதிக்கும் சத்தியங்களையும் ஒத்து ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகிறது.

இங்கே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கான பதிலை நான் முதலில் வேதத்தில் இருந்து விளக்கிவிடுகிறேன். கேள்விக்கான பதில் இதுதான் – இந்தக் கேள்விக்கான பதில் கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்களின் நிலைக்கும், கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய நிலைக்கும் இடையில் உள்ள தொடர்பில் தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்கள் காணப்படும் நிலை, கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய தற்போதிருக்கும் நிலையோடு பூரணமாக சம நிலையில் காணப்படவில்லை. இதை நீங்கள் கவனமாக சிந்தித்துப் பார்த்து விளங்கிக்கொள்வது அவசியம். கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்களின் நிலையைப் பற்றி விளக்குவதானால் அவர்கள் பாவமற்ற பூரணநிலையில் நீதிமான்களாக கிறிஸ்துவின் கண்களுக்குத் தென்படுகிறார்கள். அவர்களுடைய பழைய மனிதன் முற்றாக மரித்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டான். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய பூரணமான பரிகாரப்பலி அவர்களுக்கு பூரணமான இரட்சிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்கள் பாவமில்லாதபடி பூரணமாக கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார், “என்னுடைய சந்நிதானத்தில் உங்களை நான் எந்தவித குற்றங்குறையுமில்லாத முழுமையான நீதிமான்களாகப் பார்க்கிறேன். என்னுடைய குமாரனுடைய திருஇரத்தத்தினால் நீங்கள் பூரணமாகக் கழுவப்பட்டிருக்கிறீர்கள். உங்களில் நான் எந்தவிதமான குறைபாட்டையும் பார்க்கவில்லை. கிறிஸ்து தன் திருஇரத்தத்தைக் கிரயமாக செலுத்தி உங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதால் நீங்கள் அழைக்கப்பட்டும், மன்னிக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், கிறிஸ்துவுக்குள் மகிமைப்படுத்தப்பட்டும் காணப்படுகிறீர்கள்.” இந்த வகையிலேயே ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தரின் பார்வையில் தென்படுகிறான். இது உண்மையில்லாவிட்டால் நீதிமானாக்குதல் என்கிற சத்தியம் உண்மையில்லை என்றாகிவிடும். விசுவாசியைக் குறித்து அவன் நீதிமான் என்று கர்த்தர் அறிக்கையிடுகிறார் என்கிற சத்தியம் நாம் மேலே விளக்கிய உண்மைகளை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

நாம் இதுவரை கர்த்தரின் பார்வையில் விசுவாசி எப்படித் தென்படுகிறான் என்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஒரு காசின் ஒரு பக்கத்தைப் போன்ற உண்மை. அதன் மறுபக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இதுவரை நாம் பார்த்திருப்பது சத்தியத்தின் ஒரு புறத்தை மட்டுமே. அதன் மறுபக்கம் கிறிஸ்தவனின் தற்போதைய நிலை பற்றியது. “கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவனின் நிலை” (Believer’s standing before God in Christ) என்பதையும் “கிறிஸ்தனின் தற்போதைய நிலை” (Believer’s condition in Christ) என்பதையும் நான் பிரித்துப் பார்ப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவன் பூரணமாக நீதிமானாக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும் தென்படுகிறான் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. ஆனால், கிறிஸ்துவில் அவனுடைய தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் அவன் அத்தகைய நிலைக்கான முழு உரிமையையும், தகுதியையும் அடைந்திருந்த போதும் அனுபவத்தில் இன்னும் பூரணத்துவத்தை அடையவில்லை.

இந்த உண்மையை இன்னொருவிதமாக புரிந்துகொள்ளப் பார்ப்போம். கடந்த இதழில் வந்த ஆக்கத்தில் கிறிஸ்தவனின் பரிசுத்தமாக்குதல் பற்றி விளக்கியிருந்தேன். அதில் கிறிஸ்தவனின் பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தளவில் அதில் இரண்டு பக்கங்கள் இருப்பதாக சொல்லியிருந்தேன். ஒன்று மறுபடியும் பிறக்கும்போது ஒருவன் அடைகின்ற பரிசுத்தமாக்குதலுக்கான உரிமையும் தகுதியும். இன்னொன்று படிமுறையில் வளரும் பரிசுத்தமாக்குதல். இரட்சிப்படையும்போது பெறுகின்ற பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவன் பாவங்களில் இருந்து பூரணமாக விடுபட்டு பூரண நீதிமானாக கிறிஸ்துவின் முன்னால் காணப்படுகிறான். கர்த்தரின் முன்னால் அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய நிலை. ஆனால், படிமுறையில் வளரும் பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தவரையில், பாவகரமான இந்த உலகத்தில் அவன் வாழ்வதாலும், எஞ்சிய பாவம் அவனுக்குள் தொடர்ந்து காணப்படுவதாலும் கிறிஸ்துவுக்குள் அவன் மரிக்கும்வரை பாவத்தோடு தொடர்ந்து போராடி அவற்றை சரீரத்தில் அழித்து வெற்றி கண்டு வாழ வேண்டும். இதைப் பற்றி விளக்கும் ஜோன் ஓவன், ‘பாவத்தின் குற்றச்சாட்டிலிருந்து முழு விடுதலை அடைந்திருக்கும் மெய்யான கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னில் எஞ்சியிருக்கும் வல்லமையான பாவத்தை அழிப்பதைத் தன்னுடைய தலையாய கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்’ என்கிறார்.

கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவன் காணப்படுகின்ற நிலைக்கும் (his state in Christ) அவனுடைய தற்போதைய நிலைக்கும் (his standing in Christ) இடையில் எந்தவிதமான முரண்பாடும் கிடையாது. அவனைக் குற்றப்படுத்தி கண்டனைக்குள்ளாக்கும் வலிமையான பாவத்தில் இருந்து அவனுக்கு கிறிஸ்துவில் முழு விடுதலை கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் அவன் போராட வேண்டிய எஞ்சிய பாவத்தில் இருந்து அவனுக்கு இன்னும் முழுவிடுதலை கிடைக்கவில்லை. நிலையான பரிசுத்தமாக்குதலும், படிமுறையாகத் தொடரும் பரிசுத்தமாக்குதலும் ஒரே சத்தியத்தின் இரு புறங்களாக எந்தவிதத்திலும் மறுக்கமுடியாதபடி வேதத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் காரணங்களினாலேயே பவுல் கொலோ. 3:5ல் சரீரத்தில் பாவத்தை அழிக்கும்படி கிறிஸ்தவர்களைப் பார்த்து சொல்லுகிறார். ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டு மறுபிறப்பாகிய அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள கொலோசெயக் கிறிஸ்தவர்களுக்கே பவுல் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார். அவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் மரித்து பாவத்துக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவர்களே இப்போது தற்போதைய நிலையில் இந¢த உலகத்தில் பாவத்தோடு போராடி சரீரத்தில் அதை அழிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதுவரை நான் விளக்கியிருக்கும் உண்மைகள் இனி நான் விளக்கப்போகின்ற சத்தியங்களின் மூலம் உங்களுக்கு மேலும் தெளிவாகப் புலப்படும்.

  1. சரீரத்தில் பாவத்தை அழித்தலின் அவசியத்தை உணர்த்தும் வேதபூர்வமான இறையியல் காரணங்கள்.

பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவன் இது பற்றி அருமையாக எழுதியிருக்கிறார். அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதி இதை அவர் விளக்கியிருப்பதன் காரணம் இது அத்தனை அவசியமான போதனை என்பதால்தான். இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘சோதனையும் பாவமும்’ என்ற தலைப்பில் நூலாக இருக்கிறது. ஜோன் ஓவன் தன் நூலில் விளக்கியிருக்கும் அத்தனை உண்மைகளையும் சுருக்கமாக தொகுத்து இந்த ஆக்கத்தில் தருவது என்னால் முடியாத காரியம். தென் வேல்ஸில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பாவத்தைப் பற்றி விளக்குகின்ற ஜோன் ஓவனின் 6வது வால்யூம் எனக்குக் கிடைத்தது. இன்றைக்கு மேலைத்தேய நாடுகளில்கூட பாவத்தை அழித்தலைப் பற்றிய ஜோன் ஓவனுடைய போதனைகளை எல்லோரும் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. இதுபற்றி பிரசங்க மேடைகளில் தெளிவான போதனையில்லாததே அதற்குக் காரணம். இந்தப் போதனைகள் தமிழுலகை இன்னும் பெரிதும் எட்டாமலிருப்பது நம் குறையாக இருக்கிறது.

பாவத்தை நாம் ஏன் சரீரத்தில் அழிக்க வேண்டும்?

நாம் உயிரோடிருக்கும் காலம்வரை எஞ்சியிருக்கும் பாவம் நம்மில் தொடர்ந்து இருக்கும் என்பதால்.

பாவத்தை நம் சரீரத்தில் நாம் ஏன் அழிக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்கு இதுவே முதலாவது இறையியல்பூர்வமான நடைமுறைக் காரணமாக இருக்கின்றது. இதைக் கேட்ட உடனேயே யாராவது ஒரு கேள்வி எழுப்பக்கூடும். ‘இப்போது நான் கிறிஸ்தவனாக இருக்கிறேன். பாவத்திற்கு முற்றாக கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்தெழுந்திருக்கிறேன். பழைய மனிதனோ அழிந்து விட்டான். அப்படியிருக்க பாவம் தொடர்ந்து என்னில் இருக்கிறது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?’ இந்தக் கேள்வியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய கேள்வி எழுந்ததால்தான் திருச்சபை வரலாற்றில் Higher Life, Victorious Life or Deeper Life, Sinless Perfection போன்ற போதனைகள் உருவாக நேர்ந்தது. இந்தப் போதனைகள் எல்லாமே இந்த விஷயத்தில் வேத போதனைகளை நியாயப்படுத்தவில்லை. வேத போதனைகளின் அடிப்படையில் அமையவில்லை. அப்படியானால் இந்தக் கேள்விக்கு பதிலென்ன?

இதற்கு பதிலளிக்க வேண்டுமானால் நமக்குள் இருக்கும் பாவத்தை விளக்கப் பயன்படுத்தப்படுகிற இரண்டு வார்த்தைகளை முதலில் ஆராய வேண்டும். அவை எஞ்சியிருக்கும் பாவம் (Remaining sin) அல்லது நமக்குள்ளிருக்கும் பாவம் (Indwelling sin) என்பதாகும். இந்த இரண்டு பதங்களுமே நமக்குள் பாவம் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. அதுவே இந்தப் பதங்கள் தரும் தெளிவான அர்த்தம். இந்தப் பதங்கள் பாவத்தைப் பற்றிய இறையியல் மற்றும் நடைமுறை உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பதங்களில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவற்றை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

கிறிஸ்தவர்களுக்குள் பாவம் இருக்கிறது என்பது உண்மையா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கு முன் ஒரு மனிதன் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற போது அவனுக்கு நடப்பதென்ன என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். சில வேத வசனங்களை முதலில் தந்துவிட்டு அவற்றை நான் பின்பு விளக்க விரும்புகிறேன்.

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6).

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. (2 கொரி. 5:17).

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு . . .

புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. (கொலோ. 3:9-10).

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். (2 பேதுரு 3:9).

இந்த வசனங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? கிறிஸ்தவன் தன்னுடைய பாவங்களுக்கு மரித்து இப்போது புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு பழையவை களைந்து எறியப்பட்டிருக்கின்றன. அவன் இப்போது பாவத்தின் ஆளுகைக்கு அடிமைப்பட்டவனல்ல. அவன் பாவத்திற்கு மரித்திருப்பதால் இப்போது பாவத்தோடு போராடி அவை வெற்றிகொள்ளக்கூடியவனாக இருக்கிறான். அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய இப்போதைய நிலை. இதுவே இப்போது அவனுக்கு கிறிஸ்துவோடும் பாவத்தோடும் இருக்கும் உறவுமுறை. இந்தப் புதிய உறவுமுறையில் பாவம் அவனை ஆள வழியில்லை. அதைத்தான் இந்த வேதப்பகுதிகள் தெளிவாக விளக்குகின்றன.

இதுவரை நாம் பார்த்தது ஒரு புறம் மட்டுமே. இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவன் பாவத்திற்கு மரித்திருந்தபோதும் பாவம் அவனில் மரித்துவிடவில்லை. இது என்ன வார்த்தை ஜாலமாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். கிறிஸ்தவனுக்கு பாவத்தோடு இருக்கிற உறவைத்தான் நான் மேலே விளக்கியிருக்கிறேன். இனிப் பாவத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்கிறபோது, கிறிஸ்தவனைப் பாவம் முன்பிருந்ததுபோல் ஆண்டு வழிநடத்த முடியாதபோதும் அது அவனில் இருக்கிறது என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. பாவம் அவனைச் சுற்றி இருக்கிறது. மறுபிறப்பின் மூலம் அவன் புதிய இருதயத்தையும், தன்மையையும் அடைந்திருந்தபோதும் அவனால் தொடர்ந்து பாவத்தை செய்துவிடமுடியும். அவனில் இப்போது இருப்பது புதிய இருதயம், அந்தப் புதிய இருதயம் பத்துக்கட்டளைகளை நேசிக்கின்ற இருதயம், அது இயேசுவில் அன்பு காட்டுகின்ற இருதயம். இருந்தபோதும் அந்த இருதயம் சோதனையில் விழுந்து பாவத்தைச் செய்துவிடக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. அதைத்தான் யாக்கோபு தன் நிருபத்தில் சுட்டிக் காட்டுகிறார். ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.’ (யாக்கோபு 1:14-16).

யாக்கோபு சொல்லுவதைக் கவனித்தீர்களா? யாக்கோபு கிறிஸ்தவன் பாவத்தில் வீழ்கிறபோது அவனையே குறை காண்கிறார். அவனுடைய இருதயத்தை அவர் குறைகாணவில்லை. கிறிஸ்தவன் சோதனைக்கு இடம் கொடுத்து பாவத்தை செய்யத் துணிகிறபோதே அவன் புதிய இருதயத்தோடு அந்தப் பாவத்தை செய்து விடுகிறான். தன்னுடைய இருதயம் பாவத்தை செய்துவிடாதபடி காத்துக்கொள்ளுகிற வல்லமை கிறிஸ்தவனுக்கு இருக்கிறது. பரிசுத்த ஆவியின் மூலம் அவன் பாவத்துக்கு விலகி வாழத் தேவையான அனைத்து வல்லமையையும், வசதிகளையும் கொண்டிருக்கிறான். அவன் அனுமதித்தாலொழிய பாவம் அவனுக்கு தொல்லை கொடுக்க முடியாது. நான் சொல்லுவது உங்களுக்குப் புரிகிறதா?

கிறிஸ்தவனில் பாவம் எஞ்சியிருக்கிறது என்ற போதனை அவன் பாவத்துக்கு மரித்திருக்கிறான் என்ற போதனையைப் போலவே தெளிவான மறுக்கமுடியாத வேத போதனையாக இருக்கிறது. இதுபற்றி 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது, ‘இவ்வுலக வாழ்க்கையில் பாவத்தினால் கறைபடிந்த மனித இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மறுபடியும் பிறந்தவர்களில் நிலைத்திருக்கின்றது. (மனிதனின்) இக்கறை படிந்த இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மன்னிக்கப்பட்டும், பெலனற்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டும் இருந்தபோதும், அதனுடைய அனைத்து இயங்கும் ஆற்றல்களும் மெய்யாகவும், முழுமையாகவும் பாவத்தன்மையுடையவை.’ (அதிகாரம் 6:5).

விசுவாச அறிக்கை மேலும் கூறுவதைக் கவனியுங்கள், ‘கடவுள் பாவிக்கு . . . பாவத்திலிருந்து . . . விடுதலை தந்து . . . ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யும்படிச் செய்கிறார். ஆனால், அவனுள் தொடர்ந்திருக்கும் பாவசுபாவத்தினால் நன்மைகளை மட்டுமன்றி அவன் கேடானவைகளையும் செய்யச் சித்தங்கொள்ளுகிறான்.’ (அதிகாரம் 9:4).

இன்னொரு அதிகாரத்தில் 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது, ‘ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பாவத்தின் மாசுள்ள எஞ்சிய பகுதிகள் சில சந்தர்ப்பங்களில் மேலோங்கப் பார்த்தாலும் . . . மனிதன் ஒரு புதுப்பிறவியாக வெற்றி அடைய முடிகிறது.’ (அதிகாரம் 13:3).

இதுவரை நாம் பார்த்திருக்கும் பாவத்தைப் பற்றிய இந்த உண்மையை விளக்குவதற்கு 1689 விசுவாச அறிக்கை அடிக்கடி ஒரு வசனப்பகுதியை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அது ரோமர் 7ம் அதிகாரமே. கிறிஸ்தவனில் இருக்கும் பாவத்தைப் பற்றிய அருமையான போதனையளிக்கும் ஒரு வேதப்பகுதி இது. இதில் 7:14-25 வரையுள்ள வசனங்கள் முக்கியமானவை. இந்தப் பகுதி கிறிஸ்தவனின் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் என்பதை ஒரு சிலரால் அடையாளம் காண முடியவில்லை. இருந்தாலும் இந்தப் பகுதி கிறிஸ்தவனின் அனுபவத்தைத்தான் விளக்குகிறதென்பதை மறுக்க முடியாது. அந்த வகையில்தான் வேதவிளக்கவுரையாளர்களான ஜோன் மரே, ஹெல்டேன், பின்க் ஆகியோர் விளக்கம் தந்திருக்கிறார்கள்.

ரோமர் 7:14-25 வசனங்கள் கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறது. எல்லாக் கிறிஸ்தவர்களும், அனுபவசாலிகளாயிருந்தாலும், புதுக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சாகும்வரை இந்த அனுபவத்தை வாழ்க்கையில் சந்திப்பார்கள். சில சமயங்களில் இந்தப் பகுதி விளக்கும் போராட்டம் நம்மில் நெருக்கமானதாகவும் வேறு சமயங்களில் குறைவாகவும் காணப்படும். ஆனால், மெய்க் கிறிஸ்தவர்கள் இதை வாழ்க்கையில் சந்திக்காமல் இருக்க முடியாது. இந்தப் பகுதியில் பவுல் கிறிஸ்தவனுக்கு கர்த்தரின் நியாயப்பிரமாணத்தோடு இருக்கும் தொடர்பை விளக்குகிறார். 13-25 வரையுள்ள பகுதி கிறிஸ்தவனில் இருக்கும் பாவத்தைப் பற்றியும் அதோடு அவனுக்கேற்படும் போராட்டத்தைப் பற்றியும் விளக்குகிறது. 17ம், 20ம் வசனங்களில் பவுல், ‘பாவம் எனக்குள் வாசமாக இருக்கிறது’ என்கிறார். 21ம் வசனத்தில், ‘என்னில் தீமையுண்டு’ என்கிறார். 23ம் வசனத்தில், ‘என் அவயவத்தில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணம்’ என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பகுதியில் எட்டு வசனங்களில் நான்கு தடவைகள் கிறிஸ்தவனாகிய தன்னில் பாவமாகிய பிரமாணம் தொடர்ந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் பவுல் தன்னில் பாவத்திற்கும் புதிய மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார். கவனியுங்கள், நான் பவுலில் பழைய மனிதன், புதிய மனிதன் என்று இரண்டு பேர் இருப்பதாகக் கூறவில்லை. புதிய மனிதனுக்கும் பாவத்துக்கும் இடையிலான போராட்டம் என்றுதான் குறிப்பிட்டேன். மறுபிறப்படைந்த மனிதனில் ஒரே தன்மை (one nature) மட்டுமே காணப்படுகிறது. அந்தப் புதிய மனிதனே எஞ்சியிருக்கும் பாவத்தோடு போராடுகிறான். பத்துக் கட்டளைகளே கிறிஸ்தவனுக்கு எது பாவம், எது பாவமில்லை என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அவனுள் இருக்கும் எஞ்சிய பாவம் சில வேளைகளில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்கு தொல்லை கொடுக்கிறது. ரோமர் 7ல் நாம் பார்க்கின்ற கிறிஸ்தவன் தன் உள்ளார்ந்த மனிதனில் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் நேசம் வைத்திருக்கிறான். அதேவேளை தனக்குள் பாவம் எஞ்சியிருக்கிறதென்பதையும், பத்துக்கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க தான் பாவத்தோடு போராடி வெற்றிகாண வேண்டுமென்பதையும் அவன் உணர்ந்தவனாயிருக்கிறான். புதிய மனிதனுக்கும் எஞ்சியிருக்கும் பாவத்திற்கும் இடையில் நடக்கும் போராட்ட வேளையில் சில சமயங்களில் பவுல் ‘நிர்பந்தமான மனிதன்’ நான் என்று சொல்லி தன்னுடைய முழு விடுதலைக்காக ஏங்குவதையும் காண்கிறோம். அத்தகைய விடுதலை பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதும் பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அத்தகைய விடுதலை கிடைக்கும் வரையும் இந்த உலகத்தில் தன்னில் எஞ்சியிருக்கும் பாவத்தோடு தொடர்ந்து போராடி வெற்றி கண்டு கர்த்தருக்கு பணி செய்ய வேண்டும் என்பதைப் பவுல் நன்றாகவே உணர்ந்தவராயிருந்தார்.

நமக்குள் எஞ்சியிருக்கும் பாவம் இருக்கிறதென்பதை ரோமர் 7 மட்டும் விளக்கவில்லை. அத்தகைய வேறு பகுதிகளும் வேதத்தில் காணப்படுகின்றன.

ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் உலகத்திலில்லை (பிரசங்கி 7:20).

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோமர் 8:13).

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோத மாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக் கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17).

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம¢, சத்தியம் நமக்குள் இராதே (1 யோவான் 1:8).

ஆகையால் நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோமர் 6:12-14).

இதுவரை கிறிஸ்தவனில் எஞ்சியிருக்கும் பாவம் தொடர்ந்திருப்பதால் அவன் பாவத்தோடு போராடி அதை அழித்து வெற்றிகொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான ஜோன் ஓவனுடைய மொழியில் சொல்வதானால் கிறிஸ்தவர்களாகிய நாம் பாவத்தை அன்றாடம் கொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அதை நாம் நம்முடைய உள்ளார்ந்த புதிய மனிதன் மூலமாக செய்கிறோம். பாவத்தை நம்மில் அழிப்பதே நம்மைக் கட்டுப்படுத்துகிற நம்முடைய கடமையாக இருக்கிறது. இதிலிருந்து எந்தக் கிறிஸ்தவனும் இந்த உலக வாழ்க்கையில் தப்ப முடியாது. நீங்கள் மெய்யான கிறிஸ்தவராக இருந்தால் இந்தப் போராட்டத்தில் கிறிஸ்துவுக்குள் ஆனந்தத்தோடு ஈடுபடுவீர்கள். சில வேளைகளில் இரத்தம் சிந்திப் போராட நேரிட்டாலும் அதில் மகிழ்ச்சியோடே ஈடுபடுவீர்கள். பரலோகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் கிறிஸ்தவன் இந்தப் போராட்டதில் கிறிஸ்து மூலமாக ஒவ்வொரு முறையும் நிச்சயம் வெற்றி அடைவான்.

கிறிஸ்தவன் தன்னுடைய பாவங்களுக்கு மரித்து இப்போது புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு பழையவை களைந்து எறியப்பட்டிருக்கின்றன. அவன் இப்போது பாவத்தின் ஆளுகைக்கு அடிமைப்பட்டவனல்ல. அவன் பாவத்திற்கு மரித்திருப்பதால் இப்போது பாவத்தோடு போராடி அவற்றை வெற்றிகொள்ளக்கூடியவனாக இருக்கிறான். அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய இப்போதைய நிலை. இதுவே அவனுக்கு கிறிஸ்துவோடும் பாவத்தோடும் இப்போது இருக்கும் உறவுமுறை. இந்தப் புதிய உறவுமுறையில் பாவம் அவனை ஆள வழியில்லை. – ஆசிரியர் –

 

 

அவசியம் சிந்திக்க வேண்டிய ஓர் ஆத்மீகப் பிரச்சனை!

சமீபத்தில் போதகர்களுக்கும், ஊழியத்திலிருப்பவர்களுக்கும் நடந்த கூட்டத்தில் நான் ஒரு காரியத்தை செய்தேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் வந்திருக்கிறானா என்பதை நாம் எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து அதுபற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரம் இந்தக் காரியம் பற்றி சிந்தித்து, வேதத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்த்தது நடைமுறைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் இதனால் பெரிதும் பயனடைந்ததாக சொன்னார்கள்.  இன்றைக்கு ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறானா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்றளவுக்கு சுவிசேஷ ஊழியம் தரங்கெட்டு நிற்கிறதை, சிந்திக்க ஆரம்பித்திருக்கும் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் அக்கறை காட்டாத நிலையை தமிழினத்து சுவிசேஷ ஊழியங்களில் பார்க்க முடிகிறது. அவசர அவசரமாக ஞானஸ்நானம் கொடுத்து ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுவதில் பெரும் அக்கறை காட்டி வருவதால் ஒரு மனிதனின் ஆத்துமாவில் உண்மையான ஆவிக்குரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்துகொள்ளுவதில் அக்கறை இல்லாத நிலை உருவாகிவிட்டது. ‘அரிசிக் கிறிஸ்தவர்கள்’ (Rice Christians), பெயர்க் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கள் ஏற்படுவதற்குக் காரணமான நிலையை சத்தான சுவிசேஷப் பிரசங்கமில்லாத ஊழியம் உருவாக்கியிருக்கிறது. ஞானஸ்நானம் பாவத்தைப் போக்கி இரட்சிப்பை அளிக்கிறது என்ற தவறான எண்ணங்களும் மனந்திரும்பாது பாவிகளாக தொடர்ந்திருக்கும் போலிக் கிறிஸ்தவர்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. மனந்திரும்புதலும், விசுவாசமும் இல்லாமல் ஞானஸ்நானம் எடுத்து வாழ்ந்து வருகிற ஒரு பெருங்கூட்டம் நம்மினத்தில் இருந்து வருவதை யாரால் மறுக்க முடியும். எப்படியாவது ஓர் ஊழியத்தை செய்து அதைப் பலர் முன் நியாயப்படுத்திவிட வேண்டும் என்ற துடிப்பு இப்படியான போலிக்கிறிஸ்தவர்கள் கூட்டம் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. நம்மினத்தில் சுவிசேஷக் கிறிஸ்தவம் மெய்யான ஆவிக்குரிய கிரியைகளைக் காண முடியாதபடி ஆவிக்குரிய வீரியமில்லாதிருப்பதற்கு இதுதான் பெருங்காரணம்.

ஒரு மனிதன் கிறிஸ்தவனா, இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளுவது அவசியமில்லை என்று நினைப்போமானால் நமக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். நான் ஏன் என்னைக் கிறிஸ்தவன் என்று அறிவித்துக்கொள்ளுகிறேன் என்று என்னால் தெளிவாக பதில் சொல்ல முடியாவிட்டால் நான் கிறிஸ்தவனாக இருப்பதிலேயே அர்த்தமில்லை. என்னுடைய மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் பற்றித் தெளிவாக சொல்ல வேண்டியது என்னுடைய ஆத்மீகக் கடமை. பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் இதுபற்றித்தான் கொஞ்சம் பேர் சிந்திக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால், அந்தக் கேள்விக்கு அன்று தெளிவான பதிலிருக்கவில்லை. கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவனாக நீ இருந்தால் நிச்சயம் கிறிஸ்தவன் தான் என்ற எண்ணமே அன்றைக்கு தலைதூக்கி நின்றது. கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவனாக இருப்பாயானால், நீ கிறிஸ்தவனா இல்லையா என்ற கேள்வியே எழுப்பக்கூடாது என்ற நிலை அன்று இருந்தது. அது தவறு என்று உணர்ந்து வேதத்தைப் புரட்டிப் பார்த்து அந்தக் கேள்விக்கு விடை காணத் துணிந்தார்கள் சிலர். அவர்களில் ஒருவர் மார்டின் லூதர். கிறிஸ்தவன் என்று நம்பி வாழ்ந்துகொண்டிருந்த லூதருக்கு தான் உண்மையில் கிறிஸ்தவன் இல்லை என்பது ஆவியினால் உணர்த்தப்பட்டது. தன் பாவத்தை உணர்ந்த லூதர் வேதத்தை வாசித்து கிறிஸ்தவனாவது எப்படி? என்று தேட ஆரம்பித்தார். கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்தால் மட்டுமே கிறிஸ்தவனாக முடியும் என்பதைத் தெரிந்துகொண்ட லூதர் கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்தார். அப்படி அன்று தோன்றியதே சீர்திருத்தவாதம். அது அடிப்படையிலேயே, ஒரு மனிதன் கிறிஸ்தவனாவது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி உருவானது. லூதர் மட்டுமல்லாமல் வேறு பலரும் இந்தக் கேள்வியை எழுப்பியதால் பல நாடுகளிலும் மெய்க் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் கிருபையினால் உருவாக ஆரம்பித்தார்கள். அப்போஸ். 2:37ல் நாம் வாசிப்பதுபோல் ஆவியினால் ‘இருதயத்தில் குத்தப்பட்டவர்கள்’ இரட்சிப்புக்கு வழிதேடி கிறிஸ்துவை நாட ஆரம்பித்தார்கள். இரட்சிப்புக்கு வழி என்ன? என்ற ஆணித்தரமான கேள்வி எழுந்ததால்தான் சீர்திருத்தவாதம் உருவானது. இது உங்களுக்குப் புரிகிறதா? இந்தக் கேள்வி கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை கொடுக்க நாம் தயங்க முடியாது. இந்தக் கேள்வியைத் தவிர்ப்பவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இந்தக் கேள்வியை அடிக்கடிக் கேட்டு வேதம் தரும் தெளிவான பதிலால் நம்மை சோதித்துப் பார்த்துக் கொண்டால் மட்டுமே நமக்கு பரலோக நிச்சயம் இருக்க முடியும். என்றைக்கு இந்தக் கேள்வியை நாம் அசட்டை செய்கிறோமோ அன்றே நமக்கு ஆவிக்குரிய பேராபத்து உருவாகிறது. அந்தக் கேள்வியை நம்மினத்துக் கிறிஸ்தவம் இன்று அசட்டை செய்கிறது என்பதே என்னுடைய தீர்க்கமான வாதம். அந்த நிலை நம்மினத்தில் இன்று இருப்பதை மறுப்பவர்களோடு நான் எந்த இடத்திலும் ஆவிக்குரிய விதத்தில் நட்பு ரீதியான வாதத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். இதுவரை நான் இப்படிச் சொன்னதில்லை. நம்மினத்து கிறிஸ்தவம் இருக்கும் அவல நிலை என்னை இப்படி ஆதங்கத்தோடு பேச வைக்கிறது என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

‘மனந்திரும்பாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜோசப் எலேயின் (Joseph Alleine) என்ற பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன் பிரசங்கி ஒரு நூலை எழுதினார் (1671). இதற்கு ‘பரலோகத்துக்கான உறுதியான வழிகாட்டி’ என்ற தலைப்பும் உண்டு. இந்த நூல் அருமையான கிறிஸ்தவ இலக்கியங்களில் ஒன்று. கிறிஸ்தவம் இந்த உலகில் சிறப்பாக இருந்த காலப்பகுதியான பதினேழாம் நூற்றாண்டில் இவர் அருமையான பிரசங்கியாக இருந்து கிறிஸ்தவ ஊழியம் செய்திருக்கிறார். ஜோன் ஓவன், தொமஸ் குட்வின் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவர்களிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பாடமும் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ சுவிசேஷத்தை இந்த நூல் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

இந்த நூலை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வருவதற்கு என்ன தேவை என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குவதால்தான். மெய்யான மனந்திரும்புதல் எது என்பதை இந்நூல் இனங்காட்டுவதோடு, எவை மெய்யான மனந்திரும்புதலுக்கான அடையாளங்கள் இல்லை என்பதையும் ஒவ்வொன்றாக ஆணித்தரமாக விளக்குகிறது. ஒருவன் கிறிஸ்தவனா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லாவிட்டால் இந்த நூல் வெளிவந்திருக்கவே முடியாது. மெய்யான மனந்திரும்புதல் இருந்தால் மட்டுமே ஒருவன் சபை அங்கத்தவனாக இருக்க வேண்டும் என்று வேதம் போதிப்பதால்தான் வேதத்தில் இருந்து அத்தனை துல்லியமாக மனந்திரும்புதலைப் பற்றிய சத்தியங்களை ஜோசப் எலேயின் அள்ளி வழங்கியிருக்கிறார். ஒரு வேதாகமக் கல்லூரியின் அதிபராக மட்டும் நான் இருப்பேனேயாகில் என்னுடைய மாணவர்கள் அனைவரையும் முதலில் இதை வாசிக்க வைத்து ஓர் அத்தியாவசியமான பாடமாக இதை நிச்சயம் வைக்காமலிருக்க மாட்டேன். நம்மினத்தில் ஞானஸ்நானம் பெற்ற பெயர்க் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து உருவாகி வராமல் இருக்க வேண்டுமானால் சுவிசேஷம் இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பதுபோல் பிரசங்க மேடைகள் தோறும்

தெளிவாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆத்துமாக்கள் மனந்திரும்புதலைப் பற்றி அறிந்துகொள்ளும் வசதியைத் தெளிவான பிரசங்கங்கள் மூலம் நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த நூலைப் போலவே ரிச்சட் பெக்ஸ்டரின் ‘மனந்திரும்பாதவர்களுக்கான அழைப்பு’ (Call to the Unconverted by Richard Baxter), ஜோன் கொல்கூனின் ‘சுவிசேஷ மனந்திரும்புதல்’ (Evangelical Repentance by John Colquhoun) ஆகிய இரு நூல்களும் இதை விளக்கும் அருமையான நூல்களாக ஆங்கிலத்தில் இருக்கின்றன.

மெய்க் கிறிஸ்தவன் யார்? என்பதற்கான தெளிவான பதில் தரமுடியாமல் கண்கெட்டு கிடக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் அதற்கான விளக்கத்தை ஆணித்தரமாகத் தருகின்ற சத்தான நூல்களும், அந்த சத்தியங்களை அழுத்தமாகவும், எளிமையாகவும், ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கிற பிரசங்கிகளும், மெய்க்கிறிஸ்தவர்களை தெளிவாக அடையாளங்கண்டு அவர்களுக்கு மட்டுமே ஞானஸ்நானம் அளித்து அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்குகின்ற சபைகளும் இல்லாதவரை கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒரு நொன்டிக் குதிரை மட்டுமே நம்மினத்தில் எப்போதும் நடமாடிக் கொண்டிருக்கப் போகிறது.

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.