திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2013 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்

1. வாசகர்களே!

2. நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்

3. பிரியாததும் இணையாததும்

4. காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள்

5. கவிதை

6. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

7. பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் –

 

வாசகர்களே!

போதக ஊழியத்தில் தொடர்ந்திருந்து இதழாசிரியராகப் பணிபுரிவதுதென்பது இலகுவானதல்ல என்பதை நான் அறிந்திருந்தபோதும் கர்த்தரின் பெரும் கிருபையால் ஒவ்வொரு இதழையும் நேரத்துக்கு முடித்து அச்சுக்கு அனுப்ப முடிகிறது. அநேகருடைய ஜெபங்கள் இதற்கு முக்கிய காரணம் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். அச்சுப்பிழை பார்த்து துணை செய்கிறவர்களுக்கும் என் நன்றிகள். எங்களுடைய உழைப்பையும் கவனத்தையும் மீறி வந்திருக்கும் குறைகளை நீங்கள் நிச்சயம் பெரிதுபடுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்த இதழில் நான் இணைய தளத்தில் வெளியிட்ட இரு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். எல்லோருக்கும் இவற்றை இணையத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருந்திருக்காது என்பதால் இதில் தந்திருக்கிறேன். அதில் ஒன்றான “நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்” என்ற ஆக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி இதில் எழுதியிருக்கிறேன். இது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான ஓர் இறையியல் ஆக்கம். உங்களை இது சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

இவற்றோடு தொடர்ந்து ஜெ. சி. ரைலின் “பெற்றோர் களுக்கான கடமை” என்ற ஆக்கத்தின் இரண்டாம் பகுதி இதில் வந்திருக்கிறது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இது நூல் வடிவில் வெளிவந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பத்துக்கட்டளைகள் பற்றிய எனது இரண்டாவது ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. பழைய, புதிய ஏற்பாடுகளில் பத்துக்கட்டளைகளுக்கு எத்தகைய இடம் இருந்திருக்கிறது என்பதை இது ஆராய்கிறது. பல வருடங்களுக்கு முன் நாம் வெளியிட்ட பத்துக்கட்டளைகள் நூல் இப்போது அச்சில் இல்லை. அதை மேலும் விரிவுபடுத்தி அதிக விளக்கங்களோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. கூடிய விரைவிலேயே அதைச் செய்ய எண்ணியிருக்கிறோம். அதற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பத்திரிகையை ஆர்வத்தோடு விநியோகித்து துணை புரிகிற சகோதர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த சத்தியங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இதைச் செய்கிறீர்கள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதையும் கர்த்தர் தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்துவாராக.

– ஆசிரியர்

 

 

நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்

நான் பணிபுரியும் சபையில் ஓய்வு நாளில் காலை வேளைகளில் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் சமீபத்தில் ஒரு முக்கிய விஷயத்தை ஆராய நேர்ந்தது. பரிசுத்தவான்களின் விடாமுயற்சியைப் பற்றிப் போதிக்கும் விசுவாச அறிக்கை அந்தக் கிருபை ஐந்து தூண்களில் தங்கியிருப்பதாக விளக்குகிறது. அந்தப் பெருந்தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தின் மதிப்பு (Efficacious merit). இன்னொருவிதமாக விளக்குவதானால், பரிசுத்தவான்களாகிய விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தைக் காத்து அதில் வளர்வதற்குரிய பணிகளை விடாமுயற்சியுடன் செய்வதற்குக் காரணமாக இருக்கும் தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களாகும். இது வேதம் போதிக்கின்ற உண்மை. கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களே விசுவாசி விசுவாசியாக இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ, வளர உதவுகிறது; அவர்கள் பரலோகத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபோட துணை செய்கிறது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்குரியது என்பது பற்றிய பல கருத்துவேறுபாடுகள் சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துவருகிறது. உண்மையில் இந்த விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடாது. வேதத்தின் மிக முக்கியமான போதனைகளில் நம்மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சரியல்ல. நாம் பலவீனர்களாக இருப்பதாலும், நமது அறிவு பூரணமானதாக இல்லாமலிருப்பதாலும் நாம் வேதத்தைப் பூரணமாக புரிந்துகொள்ள முடியாமல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

நடுநிலையாளர்

இந்தக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற காரணத்தினால் சிலர், நாம் எப்போதும் இரண்டு பக்கமும் சாயாமல் நடுநிலையான கருத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பார்கள். இத்தகைய நடுநிலைக் கருத்துக் கொண்டிருக்கும் மன்னர்கள் நம்மத்தியில் அதிகம். முக்கியமாக அநேக வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய நிலையை எடுத்து இயங்கி வருகின்றன. வேதத்தில் எந்தப் பகுதியை எடுத்தாலும் அந்தப் பகுதி இதைத்தான் விளக்குகிறது என்று உறுதியாக சொல்லாமல் இதற்கு வேறு ஒரு கருத்து இருக்கிறதென்று ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை சொல்லித் தருவதோடு இதில் நடுநிலை அவசியம் என்று விளக்குவார்கள். எனக்கு நண்பரான ஒரு போதகர் ஒரு முறை சரியாகவே சொன்னார், ‘எனக்குத் தெரிந்த நடுநிலை எல்லாம் நட்ட நடுவீதியில் இறந்து கிடக்கின்ற நாய் மட்டுந்தான்’ என்று.

 மிக உயரமாக கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒரு பக்கமிருந்து மறுபக்கம்வரை ஒரு நீளமான கம்பைக் கையில் சுமந்துகொண்டு நடப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? கயிற்றில் நடந்து வருகிறவர் கையிலிருக்கும் கம்பை விழுந்துவிடாமல் சுமந்து நடந்து வரவேண்டும். அந்தக் கம்பு அவர் இருபக்கமும் சாய்ந்துவிடாமல் நடுமத்தியில் நின்று நடக்க உதவுகிறது. இப்படியாக ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் நடுநிலையில் நடந்து வருவது கயிற்றில் நடக்கும் வித்தைக்கு அவசியம். இதே மாதிரிதான் கரகாட்டமாடுகிறவனும் செய்வான். தலையில் இருக்கும் கரகத்தை நடுநிலையில் இருத்தி அதை விழுந்துவிடாமல் இருக்க வைத்து ஆடுவதே கரகாட்டக்காரனின் தொழில். இந்தக் கரகாட்ட வித்தையைக் கர்த்தரின் வேதம் போதிக்கும் சத்தியத்தில் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரையில் அகோரமானது. நடுநிலை வித்தை காட்டுவதற்காக கர்த்தர் நமக்கு வேதத்தைத் தரவில்லை. அவருடைய வேதம் ஒரே சத்தியத்தை எப்போதும் உள்ளது உள்ளபடி போதிக்கிறது. கஷ்டப்பட்டு வாசித்து அதை விளங்கிக்கொண்டு விசுவாசத்தோடு பின்பற்றி வருவது மட்டுந்தான் நம்முடைய கடமை. அதில் நடுநிலை வித்தை காட்டும் நாசவேலையில் நாம் ஈடுபடக் கூடாது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் தரப்படுகிறது – “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” (Sufficient for all; efficient only for some). இதன் கருத்து என்ன தெரியுமா? கிறிஸ்துவின் மரணம் எல்லோரையும் இரட்சிக்கும் வல்லமை கொண்டது. ஆனால், சிலர் மட்டுமே அதனால் நிச்சயம் இரட்சிப்படைவார்கள் என்பதே. இந்த சிலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று இந்தக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் விளக்குவார்கள். இந்தக் கருத்து இன்று நேற்றில்லாமல் பல காலமாக இருந்து வந்திருக்கிறது. கிருபையின் போதனைகளைப் பின்பற்றுகிற அநேகரிடம் இந்தக் கருத்து இருந்து வருகிறது.

இந்தக் கருத்து எப்படி உருவானது, ஏன் உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? திருச்சபையைப் போலிப்போதனைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் நெதர்லாந்தில் 1618-1619ல் பல்வேறு திருச்சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய இறையியலறிஞர்கள் ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் சீடர்களுடைய போதனைகள் (ஐந்து போதனைகள்) வேதபோதனைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஆராய்ந்து தீர்மானித்து அந்தத் தவறான போதனைகளுக்கு எதிராக வேத போதனைகளின் அடிப்படையில் ஐந்து கருத்துக்களை வெளியிட்டனர் (கல்வினிச ஐம்போதனைகள்). அந்தப் போதனைகளை ஜோன் கல்வின் உருவாக்கவில்லை. ஆனால், அவருடைய பெயரில் அது அழைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் கருத்துக்களில் ஒன்றுதான் “வரையறுக்கப்பட்ட பரிகாரபலி” (Limited Atonement) என்பது. இது கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாரைச் சேரும் என்பதை விளக்கும் கருத்தின் தலைப்பு. அதாவது, கிறிஸ்து யாருக்காக சிலுவையில் மரித்தார் என்பதை இது விளக்குகிறது. இதற்கு வேறு பெயர்களும் உண்டு – “குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு” (Particular Redemption), “தீர்க்கமான மீட்பு” (Definite Atonement) என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கருத்தின்படி அன்று கூடிய இறையியலறிஞர்கள் பிதாவினால் அனுப்பப்பட்ட கிறிஸ்து அவரால் முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே சிலுவையில் மரித்தார் (யோவான் 6:37-40, 44; 10:27-29; 17:6-10; எபே 1:4-6) என்று வேதம் தெளிவாகப் போதிப்பதாக விளக்கினார்கள். அதையே நெதர்லாந்தில் மட்டுமல்லாமல் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த சபைகளும் வேத போதனையாக ஏற்று நடக்கத் தீர்மானித்தார்கள்.

இந்த ‘வரையறுக்கப்பட்ட பரிகாரபலி’ என்ற கருத்து கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை (Infinite Value) மட்டுப்படுத்துகிறது என்று சிலர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள், அது விளக்கும் போதனை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்காமல் வெறும் தலைப்பை மட்டுமே வைத்து அந்தத் தீர்மானத்துக்கு வந்தார்கள். வேறு சிலர், இந்தக் கருத்து பிதாவின் நீதியையும், கருணையையும், அன்பையும் மாசுபடுத்துகிறது, அவர் நிச்சயம் சிலரை இரட்சிப்பதற்காக மட்டும் தன் குமாரனைப் பலியாக்கியிருக்க மாட்டார் என்று குறை கூறினார்கள். இப்படிப்பட்டவர்களே கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை வேறுவிதமாக விளக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த கருத்தே, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்பது. இந்தக் கருத்தில் என்ன தவறிருக்கிறது என்பதை நாம் ஆராயாமல் இருக்க முடியாது.

  1. முதலில் இந்தக் கருத்து ‘வரையறுக்கப்பட்ட பரிகாரபலி’ என்ற கருத்தை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. வரையறுக்கப்பட்ட பரிகாரபலி என்ற உண்மை கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை எந்தவிதத்திலும் மட்டுப்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் நோக்கம் கிறிஸ்துவின் மரணம் எத்தகைய பெலன் கொண்டது என்பதை விளக்குவதல்ல; கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் யாருக்குரியது என்பதை விளக்குவதே. கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை அடைய வேண்டியவர்களின் எண்ணிக்கை கடவுளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை அது விளக்குகிறது. “இந்த வார்த்தைப் பிரயோகம் சரியானதா இல்லையா என்பதைவிட அது எதை விளக்குகிறது என்பதுதான் முக்கியமானது” என்று பேராசிரியர் ஜோன் மரே சொல்லியிருக்கிறார் (Pg 64, Redemption Accomplished and Applied). தப்பான எண்ணத்தை சிலர் மனதில் அது தோற்றுவிக்கிறது என்பதால்தான் அந்தக் கருத்தை வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். அதாவது, ‘குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரபலி அல்லது மீட்பு’ என்ற வார்த்தைப் பிரயோகம் யாருக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பிட்டவர்களுக்காகவே அதாவது, அநாதி காலத்தில் எவரைக் கடவுள் இரட்சிக்கப்போகிறேன் என்று நிர்ணயித்தாரோ அவர்களுக்காகவே அவர் மரித்தார் (எபே 1:4-6) என்பதே அது தரும் விளக்கம்.
  2. இந்தக் கருத்தின் இரண்டாவது தவறு, இது கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார் என்று தவறாக அனுமானம் செய்கிறது. அதாவது, எல்லோரையும் இரட்சிக்கக்கூடிய வகையில் மரிப்பதற்காக கிறிஸ்து அனுப்பப்பட்டு அத்தகைய வல்லமையுள்ள பரிகாரபலியை அவர் நிறைவேற்றினார் என்கிறது இந்தக் கருத்து. அது தவறான அனுமானம். வேதம் அப்படிச் சொல்லவில்லை. வேதம் தெளிவாக கிறிஸ்து தன்னுடைய ஆடுகளுக்காக, தன்னுடைய மக்களுக்காக, தன் கரத்தில் பிதாவினால் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களுக்காக, எவருக்காக தான் இந்த உலகத்திற்கு வந்தாரோ அவர்களுக்காக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, பிதாவினால் உலகத்தோற்றத்திற்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மரித்தார் என்றே பல இடங்களிலும் ஆணித்தரமாக விளக்குகிறது. அதைவிட்டுவிட்டு கிறிஸ்து எல்லோருக்குமாக, அதாவது, முழு மனிதகுலத்துக்குமாக, ஒருவர் தவறவிடாமல் அனைவருக்குமாக மரித்தார் என்று சொல்லுவது வேதத்தில் முற்றிலும் காணப்படாத போதனை.
  3. இந்தக் கருத்தின் மூன்றாவது தவறு, இது கிறிஸ்துவின் மரணத்தை மாசுபடுத்துகிறது. கிறிஸ்து சிலுவையில் தன்னைப் பரிகாரபலியாக ஒப்புக்கொடுத்தபோது தான் இரட்சிக்கப்போகிறவர்களை நிச்சயம் இரட்சிக்கக்கூடிய அனைத்தையும் அதன் மூலம் செய்து முடித்தார். ஆகவே, அந்தப் பரிகாரபலி அவர்களுடைய முக்காலத்துப் பாவங்களையும் அடியோடு அகற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்தது. இரட்சிக்கப்படப் போகிறவர்களுக்கு அது எந்தவித சந்தேகமுமில்லாமல் பாவநிவாரணம் தரக்கூடிய பலியாக இருந்தது. அப்படியிருக்கும்போது அது முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கக்கூடியது என்று தீர்மானித்தால் முழு மனித குலமும் நிச்சயமாக இரட்சிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படிக் கூறுவது வேதம் போதிக்காத போலிப்போதனையில் (Universalism) போய் முடிந்துவிடும். ஏனென்றால், முழு மனிதகுலத்துக்கும் அறிவிக்கப்படும்படியாக சுவிசேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கும்படியாக கிறிஸ்து கொடுக்கப்படவில்லை. யோவான் 3:16ல், “அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” என்ற வார்த்தைகளை வைத்து இயேசு முழு உலகத்தையும் இரட்சிப்பார் என்று கூறுவது பெருந்தவறு. ‘உலகம்’ என்ற வார்த்தை வேதத்தில் ‘உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும்’ என்ற அர்த்தத்தில் அது காணப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தப்படவில்லை. யோவான் 3:16ல் அது உலகத்தில் உள்ள நாடுகளையும், வெவ்வேறு இனங்களையும் குறிக்கும் ‘ஆகுபெயராகவே’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உலகம்’ என்ற பதம் வரும் இடங்களில் உள்ள பகுதியை அதன் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய்ந்தே பொருள் கொடுக்க வேண்டும். ஜோன் ஓவனின் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” என்ற நூல் இதைத் தெளிவாக விளக்கும் அருமையான நூல். (ஓவனின் இந்த நூல் சுருக்கமாக தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது, ELS வெளியீடு.)

இதுவரை “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்ற வாசகங்களில் உள்ள மூன்று தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த வாசகங்கள் வேத உண்மைகளுக்குப் புறம்பானவை. கிறிஸ்துவின் மரணம் பற்றிய வேத சத்தியங்களை திரித்துக் காட்டுபவை. இனி கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் பற்றிய உண்மையை சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்.

கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள்

கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய பரிகாரபலியின் (Atonement) மூலம் சம்பாதித்த பலாபலன்கள் வரையறுக்க முடியாத, எல்லையற்ற மதிப்புக் கொண்டது. அது உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்ட அத்தனை பேருடைய சகல பாவங்களையும் அகற்றி அவர்களுக்கு இரட்சிப்பு வழங்கக்கூடிய எல்லையில்லாத மதிப்பும் வலிமையும் கொண்டது (Infinite in value). இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆகவே, கிறிஸ்துவின் பரிகாரபலியின் எல்லையற்ற மதிப்பை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

இப்படியாக கிறிஸ்து தன் பரிகாரபலியின் மூலமாக சம்பாதித்த பலன்கள் பிதாவினால் முன்குறிக்கப்பட்டவர்களின் பாவங்களை அகற்றி அவர்களுக்கு கிறிஸ்துவில் இரட்சிப்பு வழங்கப் போதுமானது (Sufficient). இதிலும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கிறிஸ்துவால் ஒரே தடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரபலியைத் தவிர வேறு எதுவும் பாவிகளின் இரட்சிப்புக்கு அவசியமில்லை. அந்தளவுக்கு கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருடைய பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் நிலையில் பூரணமாக போதுமான தன்மையுடன் இருக்கிறது.

இதை 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

வி. அ. 8:1 – “நித்தியத்திலிருந்தே கடவுள் தனது குமாரனுக்கு சந்ததியாகப் போகிறவர்களை அவரிடம் தந்திருந்தார். குமாரன் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு, அழைத்து, நீதிமான்களாக்கி, பரிசுத்தப்படுத்தி மகிமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டார்.”

வி. அ 8:5 – “. . . பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தைக் கிரயம் செலுத்தி வாங்கினார்.”

இதுவரை பார்த்த விசுவாச அறிக்கையின் வாசகங்கள் மிகத் தெளிவாக கிறிஸ்து செலுத்திய பரிகாரபலியையும், அதை யாருக்காக செலுத்தினார் என்பதையும் விளக்குகின்றன.

கிறிஸ்துவின் பரிகாரபலி மனிதகுலம் அனைத்தையும் இரட்சிப்பதற்காக செலுத்தப்பட்டதா? என்றால் இல்லை என்றுதான் உறுதியாக பதிலளிக்க முடியும். அப்படி சொல்லுவது கிறிஸ்துவின் பரிகாரபலியின் மதிப்பையும் போதுமான தன்மையையும் குறைவுபடுத்துவதாகாது. உண்மையில் எல்லையற்ற மதிப்புள்ள அந்தப் பரிகாரபலி யாருக்கு செலுத்தப்பட்டது அல்லது யாருக்கு பலன்கொடுப்பதாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது. “கிறிஸ்து தான் யாருக்காகவெல்லாம் நித்திய மீட்பை பெற்றுக்கொண்டாரோ அவர்கள் அனைவருக்கும் அதை நிச்சயமாகவும், திட்ப உறுதியாகவும் அளித்துப் பலிதமாக்குகிறார் . . . ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணப்படக்கூடிய எந்த நன்மையையும் முன்னறிந்ததன் விளைவாக அல்லாமல் நிபந்தனையற்ற முறையில் இவை செய்யப்படுகின்றன.’ ” விசுவாச அறிக்கையின் இந்த வாசகங்கள் கிறிஸ்து பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே அவருடைய பரிகாரபலியின் பலன்கள் உரித்தானவை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஒரு பேச்சுக்கு சொல்லப்போனால், உண்மையில் கிறிஸ்துவின் மரணத்தில் பலாபலன்கள் மனுக்குலமனைத்தின் பாவத்தையும் போக்கக் கூடிய வல்லமையுடையது. அந்தளவுக்கு அது எல்லையற்ற மதிப்பும் வல்லமையும் கொண்டது. எந்தவிதத்திலும் குறைவற்றதாக அனைத்துப் பாவங்களையும் கழுவக்கூடிய போதுமான தன்மை கொண்டது. அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், இந்த இடத்தில்தான் பிரச்சனையும் இருக்கிறது. உண்மையில் அந்த நோக்கத்துடன்தான் பிதாவும், குமாரனும் மீட்பின் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்களா? அந்த நோக்கத்துடன்தான் பிதா குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பினாரா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் வேதம் போதிக்கும் உண்மையும்கூட.

இப்படிக் குறைவற்ற எல்லையில்லா மதிப்புடைய கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலாபலன்களை சிந்தித்துப் பார்க்காமல் மனுக்குலம் அனைத்துக்கும் உரிமையானதாகக் காட்டும்போதுதான் சிலர் தவறிழைக்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையையும் வேதம் கொடுக்கவில்லை. தன்னுடைய ஆடுகளுக்காக மட்டுமே இந்த உலகத்துக்கு வந்ததாக இயேசு தெளிவாகப் போதித்திருக்கிறார். அந்த ஆடுகளுக்கு கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதே பிதாவினுடையதும், குமாரனுடையதும் திட்டமாக இருக்கிறது. எவருக்காக பரிகாரபலி (Atonement) செலுத்தப்பட்டதோ அவர்களே கிறிஸ்துவால் மீட்கப்படுகிறார்கள் (Redemption). எவரெவர் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவில் இரட்சிப்புக்காக தெரிந்துகொள்ளப்பட்டார்களோ அவர்களுக்காகவே கிறிஸ்து நீதியை சம்பாதித்து ஒப்புரவாக்குதலையும் (Reconciliation) உண்டுபண்ணினார். கிறிஸ்துவின் பரிகாரபலி விலைமதிப்பற்றது. அவருடைய மீட்பு முன்குறிக்கப்பட்டவர்களுக்குரியது. உலகத்தோற்றத்தின் முன் பிதாவும், குமாரனும் உருவாக்கிய உடன்படிக்கை அவர்களால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆடுகளை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆடுகளுக்காகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார். அந்த ஆடுகள் பாவிகளாக மனுக்குலத்திலே நிறைந்திருக்கிறார்கள். அந்த ஆடுகளில் ஒன்று தவறாமல் கிறிஸ்து தன்னிடம் அழைத்துக்கொள்ளுவார். இதுவே வேதம் போதிக்கும் உண்மை.

வேதத்தில் உலகத்துக்காக கிறிஸ்து மரித்தது போன்ற எண்ணத்தைக் கொடுக்கும் சில பகுதிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு யோவான் 1:28 (உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி); யோவான் 3:16 (தேவன், தம்முடைய . . . குமாரனை . . . தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்). வேதம் போதிக்கும் உண்மை இப்படியிருக்க, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும். கிறிஸ்துவின் பரிகாரபலி எல்லோருக்கும் போதுமானதாக இருந்தால் எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும். அவ்வாறு எல்லோரும் இரட்சிக்கப்படாமல் சிலர் மட்டும் இரட்சிக்கப்படுவார்களானால் கிறிஸ்துவின் பரிகாரபலியின் மதிப்பு குறைந்துவிடும்.

கர்த்தரின் திட்டமும் நோக்கமும் தன்னுடைய மக்களைக் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பதுதான். “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எவருக்காகப் போதுமானதாக நிறைவேற்றப்பட்டதோ அவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும்” என்பதுதான் சரியான விளக்கமாகும். வேத சத்தியங்களைப் பொறுத்தவரையில் சிலருக்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக நடுநிலையை உருவாக்கப் பார்ப்பது சத்தியப் புரட்டலில் கொண்டுபோய் விட்டுவிடும். இதில் கரகாட்டத்துக்கு இடமில்லை.

பொதுவான கிருபை

கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் எவரை அடைவதற்காக நிர்ணயம் செய்யப்பட்டன என்பதை ஆராய்ந்து வருகிற நாம் அதற்கும் “பொதுவான கிருபைக்கும்” தொடர்பு இருக்கின்றதா என்பதையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கு முதலில் பொதுவான கிருபை என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

கிருபை என்ற வார்த்தை வேதத்தில் இரட்சிக்கும் கிருபை என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. எல்லோருக்கும் கடவுள் தாராள மனப்பான்மையுடன் அளிக்கும் பொதுவான நன்மைகளையும், திறமைகளையும், வசதிகளையும் குறிப்பதாக “பொதுவான கிருபையைக்” குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடவுளை அறியாத மனிதர்களிடம் நாம் தைரியத்தையும், நம்பகத்தன்மையையும், நீதியையும், வேறு நல்ல குணாதிசயங்களையும் காண்கிறோம். இயற்கையான மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இதையெல்லாம் கடவுளின் சாயலைக் கொண்டுள்ள மனிதனில் காணமுடியும். இதெல்லாம் கடவுள் தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களுக்கும் அளிக்கின்ற ஆசீர்வாதங்களாக இருக்கின்றன. கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிற மனிதன் பாவத்தால் முழுமையாகக் கறைபடிந்தவனாக இருந்தபோதிலும் அவன் தேவசாயலை இழந்துவிடவில்லை. அவன் ஆவியுள்ளவனாக மனிதனாகவே தொடர்ந்தும் இருக்கிறான்.

“தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே ஆவியினால் பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள் மட்டுமே பாவநோயில் இருந்து விடுதலை அடைகிறார்கள்; அவர்கள் மட்டுமே புதிய மனிதர்களாக சிருஷ்டிக்கப்படுகிறார்கள். இருந்தபோதும் கடவுளினால் படைக்கப்பட்ட அனைவருமே அதே ஆவியினால் படைப்பின் சட்டப்படி தங்களுடைய தன்மைக்கேற்றவிதத்தில் இயக்கப்படுகிறார்கள்” என்று எழுதியிருக்கிறார் ஜோன் கல்வின். கல்வினின் இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. நாம் சாதாரணமாகவே பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்தவர்களோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்த்து வருகிறோம். அது தவறு. திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவரான பரிசுத்த ஆவியானவர் கடவுள் படைத்த உலகையும், படைப்புகளையும் பராமரித்து வருகிறார். உலகத்தைக் கடவுள் படைத்தபோது திரித்துவ அங்கத்தவர்கள் மூவருமே அதில் பங்கேற்றார்கள் (ஆதி 1). அதேபோல் உலகையும், படைப்புயிர்களையும் பராமரிப்பதிலும், கொண்டு நடத்துவதிலும் அவர்கள் மூவரும் பங்கேற்கிறார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இதன் காரணமாகவே தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களிலும் நாம் ஆவிக்குரியதாக இல்லாத பல்வேறு நன்மைகளையும், சிந்தனா சக்தியையும், ஒழுக்கத்தையும் காண முடிகின்றது.

பொதுவான கிருபையைப் பற்றி விளக்குகிற பிரின்ஸ்டன் பேராசிரியரான A. A.  ஹொட்ஜ், “சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படும் சத்தியத்தின் மூலமாகவோ அல்லது மனிதனின் உள் மனச்சாட்சியும், இயற்கையின் விதிகளும் வெளிப்படுத்துகின்ற உண்மைகளின் அடிப்படையிலோ பரிசுத்த ஆவியானவர் மனிதனின் இருதயத்தைப் பாதித்து அவனுடைய சிந்தனைகளையும், செயல்களையும் கட்டுப்படுத்தியும், அவனில் செல்வாக்கு செலுத்தும் கிரியையே பொதுவான கிருபை என்ற பெயரில் அழைக்கிறோம்” என்று விளக்கியிருக்கிறார். இது மிகவும் பிரயோஜனமான விளக்கம். இந்த விளக்கத்தின்படி பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொள்ளப்படாத மனிதனில் இரட்சிப்புக்குரிய கிருபையைத் தவிர ஏனைய செயல்களைச் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இதை நாம் மறுக்க முடியாது. ஏனெனில், தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களின் அத்தனை நடவடிக்கைகளும், வல்லமைகளும் அவர்களுக்குள் இயற்கையாக காணப்படும் தன்மையின் காரணமாக நிகழ்கின்றது என்றும் கடவுளோடு தொடர்பில்லாதது என்று சொல்லுவது வேதத்துக்கு முரணானது மட்டுமல்ல மனிதன் கடவுளில்லாமல் தானே சுயமாக இயங்குகிறான் என்று கூறுவதில் போய் முடிந்துவிடும். அது உண்மையல்ல. அனைத்தையும் இயக்கி வருகிறவர் கடவுள் மட்டுமே. ஆகவே “பொதுவான கிருபையின்” மூலம் கடவுள் இரட்சிப்பிற்குரிய கிரியையைத் தவிர ஏனைய செயல்களைத் தெரிந்துகொள்ளாதவர்களில் செய்வதோடு அவர்களுக்கு ஆவிக்குரியதாக இல்லாத ஏனைய நன்மைகளையும், வல்லமைகளையும் தந்து தன்னுடைய மகிமைக்காக அவர்களைக் கொண்டு நடத்துகிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். இதையே “கடவுளின் பொதுவான பராமரிப்பு எல்லாப் படைப்புயிர்களையும் அடைகின்றது” என்ற வாசகங்களின் மூலம் 1689 விசுவாச அறிக்கை 5:7ல் விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் 1689 வி. அ. 10 ஆம் அதிகாரத்தில் 4வது பத்தியில், “ஆவியின் பொதுவான சில செயல்களின் கீழ் வரவும் வாய்ப்புப் பெற்றவர்கள்” என்று தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு ஆவியானவர் நற்செய்தியின் மூலம் செய்கின்ற பொதுவான பலன்களைக் குறிப்பிடுகின்றது.

இந்த ஆக்கத்தில் பொதுவான கிருபை பற்றி நாம் ஆராய்ந்ததற்குக் காரணம் அதற்கும் கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலாபலன்களுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காகத்தான். அத்தகைய தொடர்பு அடியோடு இல்லை என்று சொல்ல முடியாது. இதுவரை நாம் பார்த்திருப்பவற்றைவிட பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தின் மூலமாகவும் இரட்சிப்பைத் தவிர்த்த நன்மைகளை தெரிந்துகொள்ளப்படாதவர்கள் அடையும்படிச் செய்கிறார். அதை விளக்குகின்ற சில வேதப்பகுதிகள் இருக்கின்றன. மத்தேயு 13ல் நாம் வாசிக்கின்ற விதைக்கிறவனின் உவமையில் விதைகள் எல்லா நிலங்களிலும் விழுவதாக விளக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறோம். அவை நல்ல நிலத்தில் விழும்போதுதான் பலனளித்தபோதும், ஏனைய நிலங்களிலும் விழுந்து சில காலம் மட்டும் பலனளித்திருப்பதைப் பார்க்கிறோம். இதில் பண்படுத்தப்பட்ட நிலம் மட்டுமே கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகின்றது. ஏனைய நிலங்கள் தெரிந்துகொள்ளப்படாத, சுவிசேஷத்தை விசுவாசிக்காத மனிதர்களைக் குறிக்கும். அவர்கள் கேட்ட விதையான சுவிசேஷம் வெளிப்புறமாக அவர்களில் சிறிது காலம் மட்டுமே பலன் தந்திருக்கிறது. நிலையான நித்திய ஜீவனை ஒருபோதும் அளிக்கவில்லை.

அதேபோல் எபிரெயர் 6:4-8; 10:26-29 ஆகிய வசனங்களும் பரிசுத்த ஆவியின் கிரியையினால் தெரிந்துகொள்ளப்படாதவர்கள் வெளிப்புறமாக குறுகிய காலத்துக்கு அடையும் பலன்களை விளக்குகின்றன. சிலர் இந்தப் பகுதிகள் இரட்சிப்பு அடைந்த பிறகு பின்வாங்கிப் போகிறவர்களையோ அல்லது விழுந்துபோகிறவர்களையோ குறிப்பதாக விளக்குவார்கள். அது முழுத்தவறு. உண்மையில் இரட்சிப்பு அடைகிறவர்கள் ஒருபோதும் விழுந்துபோகப் போவதில்லை என்பதை இயேசுவே விளக்கியிருக்கிறார் (யோவான் 10:28). எபிரெயர் வேதப்பகுதிகள் விளக்கும் சில நன்மைகளை பரிசுத்த ஆவியானவர் சகல மனிதர்களிலும் செய்யும் கிரியையின் மூலமாக சிலர் பெற்றிருந்தபோதும் அவர்கள் இரட்சிக்கும் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டிராதபடியால் தங்களுடைய பாவத்திலேயே தொடர்ந்திருந்துவிடுகிறார்கள். இதையே இந்தப்பகுதிகள் விளக்குகின்றன. இதே உண்மையைத்தான் 2 பேதுரு 2:20-22 வரையுள்ள வசனங்களும் விளக்குகின்றன.

பொதுவான கிருபையைப் பற்றிய இரண்டு தவறான போதனைகளை நான் விளக்காமல் இருக்க முடியாது. ஆர்மீனியன் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் பொதுவான கிருபை மூலம் கர்த்தர் அவிசுவாசிக்கு ஆவிக்குரிய வல்லமையை அளித்து கிறிஸ்துவை விசுவாசிக்கக்கூடிய தீர்மானத்தை எடுக்கும் தகுதியைக் கொடுக்கிறார் என்று கூறுகிறார்கள். அது முழுத்தவறு. பொதுவான கிருபை எந்தவிதத்திலும் மனிதனுக்கு ஆவிக்குரிய கிரியைகளைச் செய்யும் வல்லமையையும், தகுதியையும் அளிப்பதில்லை. பொதுவான கிருபை மூலம் இஸ்ரவேலுக்கு அரசனாக இருந்த சவுல் ஆவிக்குரிய செயல்களைச் செய்யும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அவன் கடைசிவரை அவிசுவாசியாகவே இருந்தான். யெகூ பொதுவான கிருபையின் மூலம் ‘நன்மை செய்தான்’ என்று கர்த்தரே சொல்லும்படி நன்மையைச் செய்திருந்தபோதும் விசுவாசியாக இருக்கவில்லை. இவர்களில் ஆவிக்குரிய கிரியையை பரிசுத்த ஆவியானவர் செய்யவில்லை.

இரண்டாவதாக, ஹைப்பர்-கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள் பொதுவான கிருபையை நிராகரிக்கிறார்கள். கடவுள் எந்தவிதத்திலும் தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு நன்மை செய்வதோ கருணை காட்டுவதோ இல்லை என்கிறார்கள். இது முழுத் தவறான போதனை. வேதம் தெளிவாக பொதுவான கிருபையிருப்பதை விளக்குகிறது (சங் 145:9). கல்வினுக்கு முன் ஆகஸ்தீனும் இதை நம்பினார். எப்படி கடவுளின் திட்ப உறுதியான அழைப்பும், பொதுவான அழைப்பும் இருக்கிறதோ அதேபோலத்தான் இரட்சிக்கும் கிருபையும், பொதுவான கிருபையும்.

கிறிஸ்துவின் பரிகாரபலியின் பொதுவான நன்மைகள்

கிறிஸ்துவின் எல்லையற்ற மதிப்புள்ள (Infinite Value), பாவங்களைப் போக்கி இரட்சிக்கும் வல்லமையுள்ள பரிகாரபலி பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கக்கூடியது என்றும் அதை அந்த நோக்கத்துக்காக மட்டுமே பிதாவும் குமாரனும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இதுவரை தெளிவாகக் கண்டிருக்கிறோம். இருந்தபோதும் கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தவிர ஏனையோருக்கும் பலனளிக்கக் கூடிய சில பொதுவான நன்மைகளைக் கொண்டிருக்கிறதென்று சிலர் விளக்கியிருக்கிறார்கள். இந்தப் பொதுவான நன்மைகள் எந்தவிதத்திலும் எவரையும் இரட்சிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றால் எவரிலும் நிரந்தரமான எந்தவித ஆவிக்குரிய மாற்றத்தையும் கொண்டு வரவும் முடியாது. இருந்தபோதும் கடவுளின் நித்திய ஆலோசனையின்படி ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் முழு உலகத்துக்கும் சில பொதுவான நன்மைகள் கிட்டுகின்றன.

இதைப்பற்றி விளக்கமளிக்கின்ற சார்ள்ஸ் ஸ்பர்ஜன், “தரிசுவைச் சேர்ந்த பவுலுக்காக மரித்ததுபோல் இயேசு கிறிஸ்து யூதாஸுக்காகவும் மரித்தார் என்று கூறமுடியாது” என்கிறார். இதன் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காகவே கிறிஸ்து மரித்தார் என்பதை ஸ்பர்ஜன் உணர்த்துகிறார். அதேநேரம் கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் வேறு சில பொதுவான நன்மைகளும் கிடைப்பதாக ஸ்பர்ஜன் சொல்லுகிறார். இந்த நன்மைகளில் பல பாவத்தில் இருக்கும் முழு உலகத்துக்கும் சொந்தமானது என்று தெரிவிக்கிறார். அவற்றிலொன்றாக, “அது பாவிகளின் மேல் கடவுளுக்கு இருக்கும் பொதுவான கருணையையும், அவர்களுக்கு அவரளிக்கும் பொதுவான நன்மையையும் காட்டுகிறது” என்கிறார். அதுமட்டுமல்லாமல், “பாவம் செய்ததனால் உடனடியாக அழிக்கப்பட்டிருக்க வேண்டிய மனித குலம் அதை உடனடியாக அனுபவிக்காமல் கிறிஸ்துவின் பரிகாரபலியின் காரணமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதோடு, மனிதர்களுடைய பாவ நடவடிக்கைகளைக் கடவுள் இவ்விடைக்காலத்தில் மட்டுப்படுத்துகிறார் என்றும், அத்தோடு தற்காலிகமாக இந்த உலகத்தில் பல நன்மைகளை அனுபவிக்கவும், சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும் தந்திருக்கிறார்” என்றும் விளக்கியிருக்கிறார். ஸ்பர்ஜனுடைய இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இதை எசே. 18:32; 1 தீமோ 2:4 ஆகிய வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதுபோல் பல வசனங்கள் வேதத்தில் காணப்படுகின்றன.  கிறிஸ்துவின் மரணம் நிகழ்ந்திராவிட்டால் சுவிசேஷத்திற்கு வழியிருந்திருக்காது.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் கிடைக்கும் பொதுவான நன்மைகளை விளக்கும் இன்னொரு வேத வல்லுனர் ஆர். பி. கைப்பர் (R. Kuiper). “யாருக்காக கிறிஸ்து மரித்தார்” என்ற ஆங்கில நூலில் கைப்பர் இதை விளக்குகிறார். “பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்கள், நேரடியாக (direct) அல்லாமல் மறைமுகமாக (indirect), கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலமாகக் கிடைக்கும்படியாகவே கடவுள் கிறிஸ்துவின் பரிகாரபலியை ஏற்படுத்தியிருக்கிறார்” என்று கைப்பர் விளக்குகிறார். கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கக்கூடியது என்பதைக் கைப்பர் ஆணித்தரமாக விசுவாசிக்கிறார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தபோதும் அவர், “கிறிஸ்துவின் பரிகாரபலியின் எல்லையற்ற மதிப்பிலும் (Infinite value), போதுமான தன்மையிலுமே (Sufficient) முழு உலகத்துக்கும் இலவசமாக அறிவிக்க வேண்டிய சுவிசேஷம் (Free offer of the gospel) தங்கியிருக்கின்றது” என்கிறார். இங்கே கைப்பர், சுவிசேஷம் இலவசமாக பாரபட்சமின்றி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய வசதி கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலமாகவே மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்று விளக்குவதைக் காண்கிறோம். பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்கள் இந்த முறையில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் அனைவரையும் அடைவதாக கைப்பர் விளக்குகிறார். கைப்பரின் இந்த விளக்கங்களை ஏற்று அவற்றோடு ஒத்துப்போகும் விதத்திலேயே பேராசிரியர் ஜோன் மரேயின் விளக்கங்களும் அமைந்திருக்கின்றன (Common Grace, Collected Writings of John Murray, Vol. 2). இன்னொரு இறையியல் அறிஞரான லூயிஸ் பேர்கொவ் (Louis Berkhof), “சாபத்தையும், மரணத்தையும் தவிர, கடவுளை அறியாத மனிதன் அடையும் ஏனைய சகல நன்மைகளும் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையிலும், அதன் பலாபலன்களின் மூலமே நேரடியாக அல்லாமல் மறைமுகமாகக் கிடைக்கின்றன” என்கிறார். அத்தோடு “அதைக் கடவுளே திட்டமிட்டிருக்கிறார்” என்கிறார். இந்த விளக்கங்களுக்கு ஆர். பி. கைப்பர் கொலே 3:11; ஏசா 55:1; மத் 11:28 ஆகிய வசனங்களை உதாரணங் காட்டுகிறார்.

சீர்திருத்த இறையியல் அறிஞர்களான ஸ்பர்ஜன், கைப்பர், ஜோன் மரே மற்றும் பேர்கொவ் ஆகியவர்களின் கருத்துக்களை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். இலவசமாக அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய சுவிசேஷத்திற்கு கிறிஸ்துவின் பரிகாரபலி மறைமுகமாக (Indirect) வழிகோளியிருக்கிறது என்றும், அந்த முறையிலேயே கடவுள் கிறிஸ்துவின் மீட்பின் பரிகாரபலியைத் திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கிறார் எனும் இவர்களுடைய விளக்கம் ஹைப்பர்&கல்வினிச ஆபத்தை முற்றிலும் தவிர்க்க முயல்வதை நாம் உணர வேண்டியது அவசியம். இவர்கள் சுவிசேஷத்தை இலவசமாக எவருக்கும் கட்டுப்பாடின்றி அறிவிப்பதற்கு கிறிஸ்துவின் பரிகாரபலி வழியேற்படுத்தியிருக்கிறது என்கிறார்களே தவிர அது முழு உலகத்தின் பாவத்தையும் போக்கக்கூடிய வல்லமையுடையதாக இருக்கிறது என்றோ அல்லது ஆர்மீனியக் கோட்பாட்டாளர் விளக்குவதுபோல அது ஆவிக்குரிய வல்லமையைத் தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்குக் கொடுக்கிறது என்றோ நிச்சயமாகக் கூறவில்லை. தற்காலிகமான பொதுவான சில நன்மைகளை மட்டுமே கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களுக்கு அளிக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

இலவசமாக வழங்கப்படும் சுவிசேஷச் செய்தி கிறிஸ்துவின் சிலுவைப் பரிகாரபலி கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கும் நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டிருந்தபோதும், கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தி மனிதகுலமனைத்திற்கும் போய்ச் சேருவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை இயேசுவே மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் அப்போஸ்தலருக்கு தான் கொடுத்த கட்டளையில் விளக்குகிறார். எந்தவித பாரபட்சமில்லாமலும், இன, மத, நிற, மொழிப்பாகுபாடு காட்டாமலும் அனைத்து மக்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக இயேசு கட்டளையிட்டிருக்கிறார். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்பதால் சுவிசேஷத்தை தெரிந்துகொள்ளப்பட்டாதவர்களுக்கு அறிவிக்கக்கூடாது என்பார்கள் சிலர். அந்த வாதம் தவறானது. மனிதர்கள் மத்தியில் தெரிந்துகொள்ளப்பட்டவர் யார், தெரிந்துகொள்ளப்படாதவர் யார் என்பதை அறிந்தவர் கடவுள் மட்டுமே. அதனால் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் எல்லோருக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பது அவர்களுடைய கடமை. பாவிகள் அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி வேதம் சொல்லுகிறதே தவிர தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தேடி அறிவிக்கும்படிச் சொல்லவில்லை. “நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகங்களின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான் 2:2). இந்த வார்த்தைகளில் ‘உலகம்’ என்ற வார்த்தை உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறிப்பது அல்ல. அந்தவிதத்தில் அது இங்கே பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை பாவத்தில் இருக்கும் உலகத்தை, கர்த்தரைவிட்டு விலகியிருக்கும் உலகத்தை ஒழுக்க ரீதியில் அடையாளப்படுத்திக் காட்டுகிறது. இந்த வசனங்கள் கிறிஸ்துவின் பரிகாரபலியை உள்ளடக்கிய சுவிசேஷம் முழு உலகத்துக்கும் அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே மறுபிறப்பின் மூலமாக இரட்சிக்கப்படப்போவதால் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது ஹைப்பர்-கல்வினிசம். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால் அதை உணர்ந்து நமக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இந்தப்போதனை. பாவிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள் அல்ல என்று வாதிடுகிற ஹைப்பர்-கல்வினிசம் சுவிசேஷத்தை அறிவிப்பது நம்முடைய கடமையல்ல என்கிறது. இது வேதத்தில் காணப்படாத பெருந்தவறான போதனை. இது மத்தேயு 28:18-20லும் அப்போஸ் 1:8லும் காணப்படும் இயேசுவின் கட்டளைகளுக்கெல்லாம் முரணானது. அத்தோடு பொதுவான கிருபை என்று ஒன்றில்லை என்றும் ஹைப்பர்-கல்வினிசம் கூறுகிறது. நரகத்திற்குப் போகப்போகிறவர்கள் மீது கடவுள் எந்தக் கருணையையும் காட்டுவதில்லை என்றும், அவர்களிடம் எந்தவிதமான நன்மையையும் காணமுடியாது என்றும் ஹைப்பர்-கல்வினிசம் விளக்குகிறது. இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வேதத்தோடு ஒத்துப் போகாத முழுத்தவறான வாதங்கள்.

1689 விசுவாச அறிக்கையின் “நற்செய்தியும் அதன் செல்வாக்கும்” என்ற 20ம் அதிகாரம் சுவிசேஷத்தை உலகமெங்கும் அறிவிக்க வேண்டிய கடமையை வற்புறுத்துகிறது. நான் “துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார் (எசே 33:11). “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார்” என்று கடவுளைப் பற்றி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். இந்த வார்த்தைகள் கடவுளின் தெரிந்துகொள்ளுதலாகிய போதனைக்கு முரணானதல்ல. இந்த வார்த்தைகள் கடவுள் எத்தனை பெரிய இருதயங்கொண்டவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. அத்தோடு கடவுளின் இருதய பாரத்தோடு நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இலவசமாக எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. சிலர் கடவுளுக்கு இத்தகைய விருப்பமில்லை என்று வாதிடுவார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படப் போவதானாலும், பாவத்தில் இருக்கும் முழு மனிதகுலமும் அழிந்துபோவது கர்த்தருக்கு விருப்பமில்லை. தெரிந்துகொள்ளப்படாதவர்கள் அழிந்துபோவதற்கு காரணம் அவர்கள் தெரிந்துகொள்ளப்படாதது அல்ல; அவர்களுடைய அவிசுவாசமே; அவர்களுடைய பாவமே. மனந்திரும்ப மறுக்கிறதனால்தான் அவிசுவாசிகள் அழிந்துபோகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு சொன்னார், “நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்று (யோவான் 6:36). அவரை நோக்கி முறுமுறுத்தும், கல்லெறியத் துணிந்தும் இருந்த யூதர்களைப் பார்த்து அவர் தொடர்ந்தும் நித்திய ஜீவனைப் பற்றி சொல்லவில்லையா?  (யோவான் 10:23-31).

சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது?

இத்தனையையும் விளக்கிய பிறகும் வேறு சிலருக்கு முக்கியமான ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் நாம் சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது? என்பதுதான் அது. அந்தக் கேள்விக்கு நிச்சயம் பதிலளிப்பது அவசியம். சுவிசேஷத்தை நாம் எல்லோருக்கும் பாரபட்சமெதுவுமின்றி அறிவிக்க வேண்டும். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்ப அவசியமில்லாத பாவி ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை. படைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சுவிசேஷம் தேவை.

சுவிசேஷத்தை அறிவிக்கும்போது நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார்’ என்று சொல்ல முடியாது. அது முழுப் பொய்; பெருந்தவறு. அப்படி அறிவிக்க வேதம் அனுமதிக்கவில்லை. எந்த மனிதனுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை அறிந்த மனிதர்கள் எவருமில்லை. அது பிதாவுக்கும், குமாரனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. அது தெரிந்தவர்கள்போல் நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார், இன்றே கிறிஸ்துவிடம் வந்துவிடு’ என்று சொல்லுவது தவறு. மனிதர்கள் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ளுவதற்கு வழியேற்படும் விதத்தில் கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நிச்சயமாக இரட்சிக்கும்படியாக அவர் சிலுவையில் மரித்தார். ஆகவே, யாரைப் பார்த்தும் “உனக்காக இயேசு மரித்தார்” என்று சொல்லுவது தவறு; அது அப்பட்டமான பொய்.

சுவிசேஷம் சொல்லும்போது தெரிந்துகொள்ளுதலை பாவிகளுக்கு விளக்கும்படியாக வேதம் போதிக்கவில்லை. தெரிந்துகொள்ளுதலல்ல பாவிகளுக்கு இரட்சிப்பைக் கொடுப்பது; கிறிஸ்து இயேசுவே அவர்களை இரட்சிக்கிறவராக இருக்கிறார். ‘நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்’ என்று பாவிகளாகிய மனிதரைப் பார்த்துக் கேட்பது ஹைப்பர்-கல்வினிசம். ‘பாவிகளாகிய நீங்கள் ஏன் இன்னும் இரட்சகராகிய கிறிஸ்துவிடம் வராமலிருக்கிறீர்கள்?’ என்று கேட்பது வேத சுவிசேஷம்.

அத்தோடு சுவிசேஷம் சொல்லும்போது, நாம் சுவிசேஷத்தில் அதைக் கேட்பவர்களுக்கு பரிகாரபலியைக் கொடுக்கக்கூடாது. அதுவும் தவறு. பரிகாரபலியல்ல பாவியை இரட்சிப்பது; அதை நிறைவேற்றிய கிறிஸ்துவே பாவிக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார். சுவிசேஷத்தில் கிறிஸ்துவையே நாம் பாவிகளுக்கு அளிக்க வேண்டும். பாவங்களை நீக்கக்கூடிய கிறிஸ்துவிடம் வரும்படியாக அவர்களை அழைக்க வேண்டும். கிறிஸ்துதான் பாவத்தை நீக்கி இரட்சிப்பு அளிக்கக்கூடியவராக இருக்கிறார்; பரிகாரபலியல்ல. கிறிஸ்துவின் பரிகாரபலியையும் சுவிசேஷத்தையும் போட்டு மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சுவிசேஷம் இரட்சகரிடம் வரும்படி பாவியை அழைக்கிறதே தவிர பரிகாரபலியிடம் வரும்படி அல்ல. சுவிசேஷத்தைக் கேட்கிற பாவியாகிய மனிதன் கிறிஸ்துவின் பரிகாரபலி தனக்குரியதா என்று ஆராய்ந்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் கவலைப்பட வேண்டியதெல்லாம், ‘நான் பாவியா’ என்று சிந்தித்துப் பார்ப்பதுதான்; தன்னைக் கிறிஸ்து இரட்சிப்பாரா என்று கேட்டுப்பார்ப்பதுதான்; அப்படி இரட்சகராக அவர் இருந்தால் அவர் அழைப்புக்கு நான் ஏன் இன்னும் செவிசாய்க்காமல் இருக்கிறேன் என்று கேட்டுப் பார்ப்பதுதான்.

ஒருவனின் இருதயத்தில் சுவிசேஷம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமானால், அவன் தான் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேனா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவனுடைய கடமையல்ல. தனக்காக கிறிஸ்து மரித்திருக்கிறாரா என்று கேட்டுப் பார்ப்பதும் தவறு. தன்னுடைய பாவ வியாதிக்கு மருந்திட்டு தன்னை விடுதலை செய்ய யாரிருக்கிறார்? என்று கேட்பதே அவனுடைய கடமை. கிறிஸ்துவை நோக்கிப் பார்!

பாவ நிவாரணத்துக்காக கிறிஸ்துவிடம் ஓடு! என்கிறது கிறிஸ்துவின் சுவிசேஷம். இயேசு சொல்லுகிறார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத் 11:28). மனிதனுக்கு தேவை கிறிஸ்துவே. அவன் தன் இரட்சிப்பிற்காக அவரிடம் மட்டுமே போக வேண்டும் (1 தீமோ 2:5-6).

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் – பிதாவின் தெரிந்துகொள்ளுதலும், திட்ப உறுதியான அழைப்பும், கிறிஸ்துவின் முன்குறிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரபலியும், அனைத்துப் பாவிகளுக்குமான சுவிசேஷமும் ஒன்றுக்கொன்று முரணான சத்தியங்களல்ல. இவையெல்லாமே ஒன்றோடொன்று கர்த்தரின் மகா ஞானத்தின்படி பொருந்திப்போகின்ற வேத உண்மைகள். பிதாவின் தெரிந்துகொள்ளுதலில் கிறிஸ்துவின் பரிகாரபலி தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பூரணமான ஒரேதடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரபலி இல்லாமல் சுவிசேஷ செய்தி உருவாகியிருக்க முடியாது. பாவிகளின் பாவங்களையெல்லாம் கழுவியெடுக்கக்கூடிய கிறிஸ்துவின் பரிகாரபலியே சுவிசேஷத்தைத் தாங்கி நின்று அதற்கு வலிமையூட்டுகின்றது. நம்முடைய கண்களுக்கு இவை ஒத்துப்போகாததுபோல் முரண்பட்டுத் தெரிகிறது என்பதற்காக இவற்றை தத்துவரீதியாக சமநிலைப்படுத்தும் கரகாட்டத்தில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பூரணர்களாக இல்லாமலிருக்கும் நம் கண்களில்தான் முரண்பாடே தவிர வேதத்தில் அல்ல. வேதம் தெளிவானது; சத்தியமானது. இணைத்துப் பார்க்கக் கூடாதவைகளை இணைத்துப் பார்க்க முயற்சிக்காமலும், இரகசியமாக தேவன் வைத்திருப்பவற்றை அறிந்துகொள்ளப் பெரும்பாடுபடாமலும், பிரிக்கக் கூடாதவைகளை பிரித்துப் பார்க்காமலும் சத்தியங்களை சத்தியமாக உள்ளதை உள்ளவாறு விசுவாசத்தோடு ஏற்று வேதத்தைப் பின்பற்றுவதே மெய்க் கிறிஸ்தவனின் பணி. அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

 

பிரியாததும் இணையாததும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றி இப்போது அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம், சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (கிருபையின் போதனைகளை விசுவாசிக்கிறவர்கள்) சுவிசேஷம் சொல்லுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஓர் அநியாயக் குற்றச்சாட்டுத்தான். இந்தக் குற்றச்சாட்டு சரியா? என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஏன்? இது என்னையே நான் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வியும்கூட. இந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்றவிதத்தில் நடந்துகொள்ளுகிற சில சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் நிச்சயம் இருந்துவிடலாம். இருக்கமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு சீர்திருத்த கிறிஸ்தவம் காரணமில்லை என்பதில் மட்டும் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. அதை என்னால் ஆணித்தரமாகவும் சொல்ல முடியும். இப்படியான குற்றச்சாட்டுக்கு என்ன காரணம், என்று நிச்சயம் கேட்டுப்பார்க்கத்தான் வேண்டும்.

(1). முதலில் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப்பற்றி சரியாக அறிந்துகொள்ளாமல் சுவிசேஷம் சொல்லுவதைப் பற்றித் தாங்களாகவே ஒரு கருத்தைக் கொண்டிருப்பவர்கள் சாதாரணமாகவே இப்படிக் குற்றச்சாட்டுவது வழக்கம் – அதாவது, சுவிசேஷம் சொல்லுவது என்பது ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் இயேசுவுக்காகக் தீர்மானம் எடுக்கிறேன் என்று ஆத்துமாக்களை சொல்லவைக்கும் வழிமுறையைப் பின்பற்றுகிறவர்கள் அப்படிச் செய்யாதவர்களை சுவிசேஷ வாஞ்சையில்லாதவர்கள் என்று நினைத்துவிடுகிறார்கள். அவர்களுடைய வழிமுறை வேதத்தில் காணப்படாததொன்று என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அத்தோடு, உப்புச்சப்பில்லாமல் சுவிசேஷம் சொல்லுகிறோம் என்ற பெயரில் சுவிசேஷ சத்தியங்களை விளக்காமல் இயேசுவை விசுவாசித்தால் அவர் உனக்கு நிச்சயம் எல்லாம் கொடுப்பார் என்று சொல்லுகிறவர்களும் அல்லது அரிசி, பருப்பு பொட்டலத்தைக் கையில் கொடுத்து இயேசு பெயரில் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுகிறாயா என்று சொல்லி அவர்கள் மனம்மாறிவிடுவதுக்குள் ஞானஸ்நானம் கொடுக்கின்ற சுவிசேஷ ஊழியம் செய்கிறவர்களும் அந்த வழிமுறையைப் பின்பற்றாதவர்களை சுவிசேஷ வாஞ்சையில்லாதவர்கள் என்று நினைத்துவிடுவதில் நாம் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. எவருடைய வாயிலிருந்தாவது உதிரும் ‘விசுவாசிக்கிறேன்’ என்ற வெறும் வார்த்தையை மட்டும் மந்திரமாக நம்பி எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறவர்களும், ஞானஸ்நானத்தையே இரட்சிப்புக்கு அடையாளமாக பார்க்கிறவர்களும் அந்த முறைகளைப் பின்பற்றாதவர்களைத் தப்பாக எண்ணுகிற சூழ்நிலை உண்டு. ஆகவே, இந்த அடிப்படையிலான குற்றச்சாட்டு நியாயமில்லாதது; அர்த்தமற்றது. ஒருவருடைய சுவிசேஷம் அறிவிக்கும் முறையை மட்டும் வைத்து மற்றவர்கள் அதைப் பின்பற்றாமலிருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷ வாஞ்சையில்லை என்று குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

(2) ‘ஹைப்பர்-கல்வினிசம்’ என்ற தவறான போதனைக்குள் விழுந்து விடுகிறவர்கள், சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டவர்கள் அதை உணரும்வரை நாம்தான் காத்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்தப் போதனை சீர்திருத்த கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது. கிருபையின் போதனைகள் இத்தகைய விளக்கத்தை அளிக்கவில்லை. சிலர் ஹைப்பர்-கல்வினிசத்தை (அதில் கல்வின் பெயர் இருப்பதால்), அது என்ன என்ற உண்மை தெரியாமல் கிருபையின் போதனையைப் பின்பற்றுகிறவர்களைத் தவறாக எண்ணிவிடுகிறார்கள். இப்போது சொல்லுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், ஹைப்பர்-கல்வினிசம் வேதத்தில் இல்லாதது, அதற்கும் சீர்திருத்தக் கிறிஸ்தவப் போதனைகளுக்கும், ஏன் கல்வினுக்கும்கூட எந்தத் தொடர்பும் இல்லை. கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய (Election) வேதபோதனையைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களே ஹைப்பர்-கல்வினிஸ்டுகளாக மாறிவிடுகிறார்கள். இவர்கள் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய போதனை சுவிசேஷம் சொல்லுவதை அவசியமற்றதாக்கியிருக்கிறது என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் கிருபையின் போதனையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

(3) கிருபையின் போதனையைப் பின்பற்றுகிற சிலர் கர்த்தரின் தெரிந்து கொள்ளுதலாகிய போதனைக்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்கும் இடையில் உள்ள தொடர்பைச் சரிவரப் புரிந்துகொள்ளாததால் ஒன்று மற்றதற்கு இடையூறாகிவிடுமோ என்ற நினைப்பில் சுவிசேஷம் அறிவிப்பதில் அதிக அக்கறை காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். மனந்திரும்பு என்று அழுத்திச் சொல்லிவிட்டால் எங்கே, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதலாகிய போதனைகளை மாசுபடுத்திவிடுவோமோ என்ற ஒருவித பயம் இவர்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை நான் அதிகம் சந்தித்திருக்கிறேன். இவர்கள் சுவிசேஷத்தை அறிவிப்பது அவசியம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தபோதும் அதை எப்படி, எந்தளவுக்குப் போய்ச் செய்வது என்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்லாவிட்டாலும் அவர்களுடைய ஊழியம் அதை இனங்காட்டிவிடும். தெரிந்துகொள்ளுதலாகிய போதனையை சரியாக விளங்கிக்கொள்ளாமல் இருப்பதே இவர்கள் வைராக்கியத்தோடும், பாரத்தோடும் சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. இப்படிப்பட்ட சிலரால் நிச்சயம் கிருபையின் போதனைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, அதைப் பின்பற்றுபவர்கள் சுவிசேஷம் சொல்லுவதை நம்புவதில்லை என்ற தவறான எண்ணத்தைப் பலர் மனதில் ஏற்படுத்தி விடுகிறது.

(4) வேறு சிலர் சுவிசேஷ அறிவிப்பில் அதிக நாட்டம் காட்டினால் சபை வளர்ச்சி குன்றிவிடும் என்ற நினைப்பில் சுவிசேஷ அறிவிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை, ஓய்வு நாள் பிரசங்கத்தை மட்டுமே சுவிசேஷ அறிவிப்பாக இவர்கள் நினைத்துக்கொள்ளுகிறார்கள். இது பெருந்தவறு. சபை நிர்வாகத்திலும், அமைப்பிலும் மட்டும் கவனமாக இருந்து ஆத்மீக தாகமில்லாமல் இருக்கும் சபைத் தலைமை ஆவியில் முடமாக மட்டுமே இருக்க முடியும்.

உண்மையில் சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷ ஊழியத்தைப் பற்றிய எத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதை நான் நிச்சயம் விளக்கியாக வேண்டும்:

(1) சீர்திருத்த கிறிஸ்தவம் கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்பதை ஆணித்தரமாக நம்புவதாலும், அவர் தனக்கென மனுக்குலத்தில் ஒரு கூட்டத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிப்பதாலும், மத்தேயு 24:14ல் இயேசு கிறிஸ்து, “இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்பது சத்தியமான வார்த்தை என்று அறிந்திருப்பதாலும், வைராக்கியத்தோடு சுவிசேஷத்தை பாவிகளுக்கு சொல்லுவதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறது. இந்தக் காரியத்தில் திருச்சபைக்குப் பெரும் பங்குண்டு என்பதை உணர்ந்திருக்கும் சீர்திருத்த கிறிஸ்தவம் சபையாக சுவிசேஷத்தை ஓய்வு நாளில் அறிவிப்பதையும், குடும்பங்களில் கர்த்தரை அறியாதவர்களுக்கு அறிவிப்பதையும், ஏனைய இடங்களிலும் ஏன், நாட்டிற்கு வெளியிலும் போய் அறிவிப்பதையும் சபையின் பெரும் பணியாகக் கருதுகிறது. ரிச்சட் பெக்ஸ்டர் என்ற போதகர் இங்கிலாந்தில் தான் பணிபுரிந்த கிடர்மின்ஸ்டர் என்ற இடத்தில் வாழ்ந்த குடும்பங்கள் அனைத்திற்கும் வினாவிடைப் போதனைகளைக் கற்றுக்கொடுத்து கிறிஸ்துவிடம் வழிகாட்டியிருக்கிறார். வினாவிடைப் போதனைகளை சுவிசேஷத்தை அறிவிக்கப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த ஊரில் அவருடைய சபையைச் சேராமல் இருந்தவர்கள் மிகக் குறைவு. அந்தளவுக்கு அவருடைய சுவிசேஷப் பணி இருந்திருக்கிறது. இது பொய்யாக இருக்குமானால் இந்த உலகம் ஒரு ஜோர்ஜ் விட்பீல்டையோ, டேனியல் ரோலன்டையோ, ஹொவல் ஹெரிசையோ, சீகன் பால்க்கையோ, வில்லியம் கேரியையோ, டேவிட் பிரெய்னாட்டையோ, ஹென்றி மார்டினையோ இன்னும் எத்தனையோ சீர்திருத்த சுவிசேஷகர்களையும், மிஷனரிகளையும் சந்தித்திருக்காது. சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது தப்பான குற்றச்சாட்டு. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்டு சுவிசேஷத்தை ஒரு சிலர் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக சீர்திருத்த கிறிஸ்தவத்தைத் தவறாக எண்ணுவது சரியாகாது.

(2) சீர்திருத்தக் கிறிஸ்தவம் பாவியாகிய மனிதன் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை முழுமனத்தோடு விசுவாசிக்க வேண்டிய கடமைப்பாடுள்ளவனாக (பொறுப்புள்ளவனாக) இருக்கிறான் என்று ஆணித்தரமாக நம்புகிறது (மாற்கு 6:12; லூக்கா 13:3; அப்போ 17:30; மாற்கு 1:15; யோவான் 1:12; 3:16-18; 3:36).

அதாவது மனந்திரும்புவதும் விசுவாசிப்பதும் மனிதனின் பொறுப்பே தவிர கடவுளின் கடமையல்ல என்பதை உணர்ந்திருக்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். மனிதன் அதற்குப் பொறுப்பானாலும் அது அவனுடைய மாம்சத்தின் கிரியை அல்ல (எபே 2:8-10). பொறுப்பும், கிரியையும் வெவ்வேறானவை. இந்த விஷயத்தில்தான் ஹைப்பர்-கல்வினிசத்தோடு சீர்திருத்த கிறிஸ்தவம் முரண்படுகிறது. ஹைப்பர்-கல்வினிசம், மனந்திரும்புவதும், விசுவாசிப்பதும் மனிதனின் ‘பொறுப்பு’ இல்லை என்கிறது. அது முழுத் தவறான போதனை. கர்த்தர் தான் முன்குறித்து தெரிந்துகொண்டிருப்பவர்களை நிச்சயம் தன்னோடு இணைத்துக்கொள்ளுவார் என்ற வேத போதனையை விசுவாசிக்கும் சீர்திருத்த கிறிஸ்தவம், அப்படி முன்குறிக்கப்பட்டவர்கள் இந்த உலகத்தில் சுவிசேஷத்தைக் கேட்டுத் தங்களுடைய பாவத்தை உணர்ந்து, பாவநிவாரணத்திற்காக இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று நம்புகிறது. மனந்திரும்புதலும், கிறிஸ்துவை விசுவாசிப்பதும் தேவ கிருபையினால் நிகழ்ந்தபோதும், அவற்றிற்கு மூலகாரணம் கர்த்தராக இருந்தபோதும், தன்னுடைய இரட்சிப்பிற்காக மனிதனே தன்னுடைய பாவத்திலிருந்து விலகிப்போய் பாவமன்னிப்புக்காகவும், இரட்சிப்புக்காகவும் இயேசுவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான் என்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். அதனால்தான் சுவிசேஷத்தை பகிரங்கமாக அறிவித்து பாவிகளை மனந்திரும்பும்படி அறைகூவலிடும் பணியைச் செய்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். கர்த்தரின் முன்குறித்தலாகிய கிருபையின் செயல் சுவிசேஷத்தை அறிவிக்கும் கிறிஸ்தவனின் கடமைக்கோ அல்லது மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பாவியின் கடமைக்கோ முரணானதும் எதிரானதும் அல்ல. பிரிந்து போகாமலும் இணையாமலும், சீராகவும் நேராகவும் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் தண்டவாளங்களைப் போல வேதத்தில் காணப்படும் இரு சத்தியங்களாக அவை இருக்கின்றன. அவற்றை நாம் பிரிக்கவும் கூடாது; இணைக்கவும் கூடாது. இந்த இரண்டு நிதர்சனமான, அவசியமான உண்மைகளையும் குழப்பத்திற்கு இடமில்லாமல் வேதம் விளக்குகிறது. நீங்களும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

(3) சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் சிலர் பின்பற்றும் தவறான முறைகளை நிச்சயம் பின்பற்றுவதில்லை என்பது உண்மைதான். எந்த ஆத்மீகக் கூட்டத்திலும் ‘இயேசுவுக்காகத் தீர்மானம் எடு’ என்றும், ‘இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றும் யாரையும் பார்த்து நாம் நிச்சயம் சொல்லுவதில்லை. ஏன், தெரியுமா? அப்படிச் சொல்லும்படி கர்த்தரின் வேதம் நமக்கு அனுமதி தராததால்தான். அரிசி, பருப்பைக் கொடுத்தும், சமூக சேவைகள் செய்தும் கர்த்தருக்கு நாம் ஆள் சேர்ப்பதில்லைதான். ஏன், தெரியுமா? கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அந்த முறையில் கொச்சைப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான். கிறிஸ்துவிலும், அவருடைய வல்லமையுள்ள சுவிசேஷத்திலும் அசையா நம்பிக்கை வைத்திருக்கும் நாங்கள் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு மனந்திரும்புதலைக் கொடுக்கக்கூடிய இறையாண்மையுள்ளவர் என்பதை நிச்சயமாக நம்புகிறோம். அப்படியிருக்கும்போது மனிதனுடைய தேவைகளைத் தீர்த்துவைத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. இதற்காக மனிதனுடைய தேவைகளை நாம் அலட்சியப்படுத்துகிறோம் என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. அதை நாம் நிச்சயம் ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆரவாரமில்லாமல் சுவிசேஷப் பணியோடு கலக்காமல் செய்து வருகிறோம்.

(4) சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அது சுவிசேஷப் பணியை சபையின் பணியாகக் கருதுகிறது. அதற்குக் காரணம் வேதம் அந்தமுறையில் சுவிசேஷப்பணியை விளக்குவதால்தான் (மத்தேயு 28:18-20). அதன் காரணமாக சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் சபையாக சுவிசேஷத்தை சொல்ல முனைவதுடன், சபையாக சபை நிறுவும் பணியிலும் ஈடுபடுகின்றது. தனிமனிதனொருவன் எந்தச் சபைத்தொடர்பும் இல்லாமலும், சபையால் நியமிக்கப்படாமலும் சுயமாக தன்னை சுவிசேஷ ஊழியனாகக் கருதி அந்தப் பணியில் ஈடுபடுவதை சீர்திருத்த கிறிஸ்தவம் வேதபூர்வமானதாகப் பார்க்கவில்லை. சிலர், கர்த்தரின் பணியை எப்படிச் செய்தாலென்ன, செய்வதுதான் முக்கியமே தவிர எப்படிச் செய்ய வேண்டுமென்பதில் அக்கறைக்காட்டத் தேவையில்லை என்பார்கள். ஆனால், தன்னுடைய பணிகளை நாம் எப்படிச் செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுவதற்காக இறையாண்மையுள்ள கர்த்தர் வேதத்தை நமக்குத் தந்திருக்கும்போது அதிகப்பிரசங்கித்தனமாக இந்த விஷயத்தில் எங்கள் சுயஞானத்தைப் பயன்படுத்தி கர்த்தரை அவமதிக்க நாங்கள் தயாராக இல்லை. வேதம் சத்தியமானது, அதிகாரமுள்ளது, எந்தவிஷயத்துக்கும் போதுமானது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஓர் ஆலோசனை . . .

சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷம் அறிவிப்பதை விசுவாசிக்கிறது, நம்புகிறது, அதைச் செய்கிறது என்பதற்கான விளக்கத்தை நான் தந்திருக்கும்போதும், சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆலோசனையைத் தர விரும்புகிறேன். திருச்சபை ஊழியத்திற்கு நாம் பெருமதிப்புக் கொடுப்பது அவசியந்தான். திருச்சபை மூலமாக அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டியதும் அவசியந்தான். இருந்தபோதும் சுவிசேஷப் பணியை திருச்சபை சகல வாய்ப்புகளையும் பயன்படுத்தி நடைமுறையில் செய்யும்படியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பிரசங்க மேடையில் சுவிசேஷம் அதிர வேண்டும். எந்த வேதப்பகுதியை எடுத்துப் பிரசங்கித்தாலும், சபைக்கும் வரும் ஆத்துமாக்களின் மத்தியில் ஒரு சில அவிசுவாசிகளே இருந்தாலும் சுவிசேஷத்தை அவர்கள் அறிந்துகொள்ளும்படித் தெளிவாகப் பிரசங்கியுங்கள். எல்லாப் போதனைகளிலும், எல்லாப் பிரசங்கங்களிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படாவிட்டால் உங்கள் பிரசங்கம் பிரசங்கமாக இராது. சகல போதனைகளிலும் கிறிஸ்து நிறைந்து காணப்பட வேண்டும்; அவற்றில் கிறிஸ்துவின் இரத்தம் தழுவியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஊர்பூராவுமே சபையாக சுவிசேஷத்தைச் சொல்ல சகல முயற்சிகளையும் எடுங்கள். போதகர்கள் படிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியந்தான்; பிரசங்க மேடையை மதித்து உழைத்துப் பிரசங்கிப்பதும் அவசியந்தான். இருந்தாலும் இதெல்லாம் சுவிசேஷத்தை உயிரைக்கொடுத்து எல்லா இடங்களிலும் அறிவிக்கத் தடையாக இருந்துவிடக்கூடாது. அத்தனைப் படிப்புப்படித்துப் பிரசங்கித்த லூதருக்கோ, கல்வினுக்கோ, ஜொனத்தன் எட்வர்ட்ஸுக்கோ அது தடையாக இருந்துவிடவில்லையே.

சுவிசேஷம் அறிவிப்பதில் நமக்கு வைராக்கியம் தேவை; பாரம் தேவை. அதெல்லாம் நடைமுறையில் கண்களால் பார்க்கும் விதத்திலும், உணரும் விதத்திலும் இருப்பதும் அவசியம். சுவிசேஷ வாஞ்சை இருதயத்தில் மறைந்து காணப்பட வேண்டிய ஒன்றல்ல; அது கொழுந்துவிட்டெறிந்து அனல்கக்க வேண்டிய வைராக்கிய வாஞ்சை. அருமையான சீர்திருத்த போதனையை நமக்கு கர்த்தர் அளப்பரிய கிருபை பாராட்டித் தெரிந்துகொள்ள வைத்திருக்கிறார். பிரசங்க மேடையின் பெருமையையும், உண்மையான ஊழியத்தின் அவசியத்தையும் பக்திவைராக்கியத்தோடு உணரும்படிச் செய்திருக்கிறார். இத்தனையும் இருக்கும்போது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கர்த்தருக்கு இருக்கும் இருதய பாரத்தோடு சகல ஆத்துமாக்களுக்கும் அறிவிப்பதில் நமக்கு ஏனையோரைவிட அதிக வைராக்கியம் இருக்க வேண்டுமே. உங்களுடைய சபையாருக்கும், மற்றவர்கள் பார்வைக்கும் உங்கள் வைராக்கியம் தெரிகிறதா? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பாவிகள் மனந்திரும்பும்படி அறிவிப்பதில் ஊக்கத்தோடு ஈடுபட்டு வருகிறீர்களா?

நம்மில் சிலர் சபை வளர்ச்சியில்தான் ஊக்கம் காட்டுகிறார்களே தவிர சுவிசேஷத்தை அறிவிப்பதில் அல்ல. இவர்கள் சபை ஊழியத்துக்கு அதிக நேரத்தைக் கொடுக்கிறார்கள்; அது பாராட்ட வேண்டிய செயல்தான். ஆனால், சபை வளர வேண்டுமானால் சபையாரை ஊக்குவித்து சுவிசேஷத்தை ஊரெங்கும் அறிவிக்க வேண்டும். சுவிசேஷ ஊழியம் சபை வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருக்காது. மாறாக சுவிசேஷப் பணியில் ஈடுபடாத சபை ஒருக்காலும் வளரமுடியாது. சபையாருக்கு இருக்கும் ஈவுகளைக் கவனித்து அவர்களை உற்சாகப்படுத்தி சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட வைக்க வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பது சபையின் கலாச்சாரமாக உருவாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது நம் ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். சுவிசேஷ வாஞ்சையில்லாத சபை கர்த்தரின் சபையாக இருக்க முடியாது. பவுல் எபேசு சபைப் போதகராக இருந்த தீமோத்தேயுவைப் பார்த்து ‘சுவிசேஷ ஊழியத்தை செய்’ என்று சொல்லவில்லையா? ஒரு போதகன் பிரசங்கியாக மட்டுமல்லாமல், ஆத்தும கவனிப்பு செய்கிறவனாக மட்டுமல்லாமல், சுவிசேஷ ஊழியத்தில் வாஞ்சையோடு ஈடுபடுகிறவனாகவும் இருக்க வேண்டும். அந்த வாஞ்சையில்லாதவர்கள் சபைக்குடும்பங்களில் அவிசுவாசிகளாக இருப்பவர்களின் மனந்திரும்புதலுக்காகப் பிரசங்கிப்பதும், ஜெபிப்பதும் எப்படி முடியும்?

 

 

காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள்

II- பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களில் பத்துக்கட்டளைகள்

கடந்த இதழில் திருச்சபை வரலாற்றில் பத்துக்கட்டளைகள் சபைகளால் மதிக்கப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது பற்றியும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்ற தவறான எண்ணங்கொண்டிருந்த பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்திருக்கிறோம். பத்துக்கட்டளைகளின் அவசியத்தை வேதத்தில் இருந்து நேரடியாக நிரூபிப்பதற்கு முன் இப்படியாக வரலாற்றில் திருச்சபையில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தது நம் நன்மைக்கே. திருச்சபை வரலாற்றில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருமாற்றங்களே பத்துக்கட்டளைகளை இன்று திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் மதித்துப் பின்பற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் நாம் நேரடியாக வேதத்தில் பத்துக்கட்டளைகளின் அவசியம் எந்த முறையில் விளக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

மோசேக்கு முன்பு பத்துக்கட்டளைகள்

பத்துக்கட்டளைகளை கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் தந்தார் என்று யாத்திராகமம் 20 விளக்குகின்றது. அத்தோடு அவர் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் இஸ்ரவேலர் பின்பற்றும்படிக் கொடுத்தார் என்று அந்நூல் விளக்குகின்றது. பத்துக்கட்டளைகளே கடவுள் யார்? என்பதையும் அவரை எவ்வாறு ஆராதித்து பரிசுத்தத்தோடு அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் இதுபற்றிய ஒரு முக்கியமான கேள்விக்கு நாம் விடை காண்பது அவசியம். அதாவது, பத்துக்கட்டளைகளைக் கடவுள் மோசேக்கு கொடுப்பதற்கு முன்பு எந்தக் கட்டளைகளின் மூலம் மனிதன் கடவுளை அறிந்துகொண்டான்? அவன் பரிசுத்தத்தோடு வாழ எந்தக் கட்டளைகள் உதவின என்பதே அந்தக் கேள்வி.

ஆதாம், ஏதேன் தோட்டத்தில் ஏவாளோடு வாழ்ந்து கடவுளின் சித்தத்தைத் தன் வாழ்க்கையில் பின்பற்றி வந்தான் என்று ஆதியாகமம் நமக்கு விளக்குகிறது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய சித்தம் என்ன என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார். அதை அவர்கள் அறிந்திருந்தபடியால்தான் அவர்களால் கடவுளின் சித்தப்படி வாழ முடிந்தது. அவருடைய சித்தத்தை (கட்டளைகளை) மீறினால் அவர்கள் இருவரும் தாங்கள் இருக்கும் பூரண நிலையை (ஆவிக்குரிய ஜீவனை) இழந்து போவார்கள் என்று கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் ஆதி 2:16&17 வசனங்கள் விளக்குகின்றன. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” என்றிருக்கிறது. இந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவற்றை வெறும் மரமும், பழமும் சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இவை மிகவும் பொருள்பொதிந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் மூலம் நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம் தெரியுமா? ஆதாமும், ஏவாளும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று ஆண்டவர் அவர்களுக்கு ஏதேனில் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். கடவுள் சொல்லியிருப்பவற்றைச் செய்கிறவரை அவர்களுக்கு வாழ்வுண்டு. அவர் தடைசெய்திருப்பவற்றைச் செய்யும்போது அவர்கள் ஆவிக்குரிய ஜீவனை இழந்து பாவத்தில் விழக்கூடிய வாய்ப்பிருந்தது. இங்கே ஆதாமுக்கும், ஏவாளுக்கும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று கடவுள் விதித்திருந்த கட்டளைகள் வெளிப்படையாக நமக்கு சொல்லப்படாவிட்டாலும் அவற்றையே பத்துக்கட்டளைகளாக பின்பு கடவுள் மோசேக்கு தன் கரத்தால் கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இதுவே உண்மை. இதை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

பாவம் என்பது கடவுளின் கட்டளைகளை மீறுவது என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 3:4). அந்தக் கட்டளைகள் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே ஒருவர் அவற்றை மீற முடியும். பத்துக்கட்டளைகளை மீறி வாழ்வதனால்தான் முழு மனுக்குலமும் இன்று பாவத்தில் இருக்கிறது. அந்தப் பத்துக்கட்டளைகளைத் தெரிந்திராமல் நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுந்திருக்க வழியில்லை. பத்துக்கட்டளைகளே எவற்றை நாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விளக்குகின்றன. அவை தெரிந்திருந்தபடியால்தான் நமது முதல் பெற்றோர் கடவுளுடைய வழியில் வாழ முடிந்தது. சாத்தானின் பேச்சைக்கேட்டு அவற்றை மீறியதால்தான் (புசிக்கக்கூடாத மரத்தின் கனியைப் புசித்தது) அவர்களுக்கு பாவம் நிகழ்ந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஆண்டவர் விதித்திருந்த கட்டளைகள் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். ஒரு பேச்சுக்காக அவை பத்துக்கட்டளைகளாக இருக்க முடியாது என்று நாம் வாதிட்டால், அதாவது வேறு ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தால் அந்த வாதம் உண்மையாகாது. ஏன் தெரியுமா? பத்துக்கட்டளைகள் மட்டுமே பாவத்தை உணர்த்துகிற ஒரே கட்டளைகளாக வேதத்தில் இருக்கின்றன (1 யோவான் 3:4; ரோமர் 7:7). நமது முதல் பெற்றோருக்கு தெரிந்திருந்ததும், அவர்கள் முழு உணர்வோடு மீறியதும் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவாகவும் இருப்பதற்கு வழியில்லை.

இன்னோரு விதத்திலும் இதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இன்றைக்கு நாம் பாவத்துக்கு விளக்கம் காண வேண்டுமானால் பத்துக்கட்டளைகளையே பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே வேதம் உணர்த்துகிறது என்று ஏற்கனவே பார்த்தோம் (1 யோவான் 3:4). கடவுள் நிச்சயமாக பாவத்தைப் பற்றி அறிந்துகொள்ள நமது முதல் பெற்றோருக்கு ஒரு கட்டளையையும் நமக்கு ஒரு கட்டளையையும் தந்திருக்க முடியாது. இன்றைக்கு பாவம் என்றால் என்ன என்பதை எது உணர்த்துகிறதோ அது மட்டுமே ஆதாமுக்கும் பாவத்தை உணர்த்தியிருக்க முடியும். இதில் ஒரு வித்தியாசத்தை மட்டுமே பார்க்கிறோம். ஆதாமுக்கு பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்படாமல் அவனுடைய இருதயத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தன (ரோமர் 1:19; 21 & “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் . . . அவர்கள் தேவனை அறிந்திருந்தும் . . .”) கடவுளுடைய வார்த்தைகளின் பொருளை அதை வைத்தே அவனால் உணர முடிந்தது. இன்றைக்கு அதே கட்டளைகள் ஆரம்பத்தில் இஸ்ரவேலருக்கும் நமக்கும் எழுத்தில் தரப்பட்டிருக்கின்றன. அது மட்டுமே வித்தியாசம்.

பத்துக்கட்டளைகள் மோசேக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்றும் அதற்கு முன் அவை இருக்கவில்லை என்கிற வாதம் தப்பானது. பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்பட்டிராதபோதும் ஆதியில் இருந்தே இருந்திருக்கின்றன. பாவத்தைப் பற்றிய அறிவும், கடவுளின் சித்தத்தைப் பற்றிய அறிவும் படைப்பில் இருந்தே மனிதனுக்கு இருந்திருக்கிறது.

சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகள்

யாத்திராகமம் 20 ஆம் அதிகாரம் கடவுள் பத்துக்கட்டளைகளை சீனாய் மலையில் மோசேயை அழைத்துக் கொடுத்தார் என்பதை விளக்குகிறது. இஸ்ரவேலர் கானான் தேசத்தை அடைவதற்கு முன்பாக கடவுள் இதைச் செய்தார். அவர்கள் தேவனுடைய மக்களாக அவருக்குக் கீழிருந்து இந்தக் கட்டளைகளையும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் பின்பற்றி வாழ வேண்டுமென்று கடவுள் விதித்திருந்தார். இவ்வாறாக கடவுள் கட்டளைகளை மோசேக்கு அளித்தபோது அதில் ஒரு விசேஷத்தை நாம் பார்க்கிறோம். நியாயப்பிரமாணம் என்பது பத்துக்கட்டளைகளையும் அது தவிர்த்த ஏனைய சடங்காச்சாரியம், நீதி தொடர்பான கட்டளைகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இவை எல்லாவற்றையும் மொத்தமாக கடவுள் சீனாய் மலையில் மோசேக்கு அளித்தார். இவையனைத்தையும் பின்பற்றி இஸ்ரவேலர் வாழ வேண்டும் என்றும் கடவுள் கட்டளையிட்டார். இருந்தபோதும் இந்தக் கட்டளைகளைக் கொடுத்த விதத்தில் நாம் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்கிறோம்.

கடவுள் மோசேயை மலைக்கு மேல் வரும்படி அழைத்து (யாத் 19:3) அவனோடு பேசினார். அதில் அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பு இஸ்ரவேலர் தங்களைத் தயார்செய்துகொள்வதற்கான சில விதிமுறைகளை விதித்தார். அந்த விதிமுறைகளின்படி அவர்கள் தங்களை மூன்று நாட்கள் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மூன்று நாளும் அவர்கள் தங்கள் மனைவிகளோடும் சேரக்கூடாது என்று எச்சரித்திருந்தார். மூன்றாம் நாளிலேயே கடவுள் சீனாய் மலையில் வந்திறங்குவதாகச் சொன்னார். மூன்றாவது நாளில் ஜனங்களுக்கு ஒரு எல்லையை ஆண்டவர் விதித்திருந்தார். அவர்கள் அந்த எல்லையைவிட்டு மீறாமலும், மலையில் ஏறிவராமலும், மலை அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரித்தார். அதை மீறுகிறவர்கள் கொல்லப்படுவார்கள் என்றார். மூன்றாம் நாள் விடியற் காலையில் இடிமுழக்கங்களும், மின்னலும், கார்மேகமும் பலத்த எக்காளச் சத்தமும் ஏற்பட்டது. ஜனங்கள் எல்லோருக்கும் அது நடுக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது மோசே அவர்களை மலை அடிவாரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைக்கோட்டிற்கு புறம்பே நிற்கும்படிச் செய்தான். கடவுள் சீனாய் மலை மீது அக்கினியில் இறங்க அது புகை மண்டலமாகியது. மலை முழுவதும் அதிர்ந்தது. எக்காள சத்தம் வர வர அதிகரித்தது. மோசே கடவுளோடு பேச அவரும் பதிலளித்தார். அவன் மலைமேல் ஏறிப் போனான். இத்தனையையும் மக்கள் கேட்டும் பார்த்தபடியும் நின்றார்கள். இதெல்லாம் ஏன் நடந்தது தெரியுமா? கடவுள் எத்தனை பெரியவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும், அவர் கொடுக்கப்போகின்ற கட்டளைகள் சாதாரணமானவையல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவும் கடவுள் இப்படிச் செய்தார்.

அதுமட்டுமல்லாது கடவுள் மோசேக்கு நியாயப்பிரமாணத்தின் ஓர் அங்கமான பத்துக்கட்டளைகளை முதலில் கொடுத்தார். அதைக் கொடுத்த விதத்தில் சிறப்பான பல அம்சங்களைக் காணலாம். அவை பத்துக்கட்டளைகள் எந்தவிதத்தில் ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களில் இருந்து வேறுபட்டவை என்பதையும், ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களை விட நிரந்தரமானவை என்பதையும் உணர்த்துகின்றன. கடவுள் மோசேயுடன் மலையின் உயரத்தில் இருந்து பேசி முதலில் பத்துக்கட்டளைகளைக் கொடுத்தார் என்பதை யாத். 20 அதிகாரம் விளக்குகிறது. அதைக் கொடுத்து முடித்த உடனேயே இடி முழக்கங்களும், மின்னல்களும் தோன்றியதோடு எக்காளச் சத்தமும் காதைத் துளைத்தது. அத்தோடு மலையும் புகைந்தது. இத்தனையையும் கடவுள் செய்ததற்குக் காரணம் பத்துக்கட்டளைகள் எந்தளவுக்கு சிறப்பானவை என்றும் அவை காலத்துக்கும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நிரந்தரக் கட்டளைகள் என்பதை உணர்த்தவும்தான். அது மட்டுமல்லாது, இந்தக் கட்டளைகளைக் கடவுள் தன்னுடைய சொந்தக்கரங்களினால் இரண்டு கற்பலகைகளில் எழுதி மோசேக்கு கொடுத்தார்.

இதற்குப் பிறகுதான் கடவுள் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளை அளித்தார். அவற்றைக் கொடுத்தபோது கடவுள் சொல்லச் சொல்ல மோசே தன்னுடைய எழுத்தில் அவற்றை எழுதிக்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றைக் கடவுள் எழுதிக் கொடுக்கவில்லை. இதிலிருந்து பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகளுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்வது அவசியம். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானவை. ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகள் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமானவை. இஸ்ரவேலரை ஒரு நாடாக அமைத்து தன் கீழ் ஆள்வதற்காக ஏனைய நியாயப்பிரமாணங்களைக் கடவுள் அவர்கள் பின்பற்றும்படியாகக் கட்டளையிட்டார். அதேவேளை பத்துக்கட்டளைகளை முழு உலகமும் பின்பற்ற வேண்டிய நிரந்தரமான கட்டளைகளாகக் கடவுள் தந்தார்.

அதுமட்டுமல்லாத வேறொரு உண்மையையும் கவனிப்பது அவசியம். நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகள் பலி மற்றும் இஸ்ரவேலரின் ஆராதனைக்குரிய சடங்குகள் சம்பந்தமானவை. அவற்றில் நாட்டுப் பரிபாலனத்துக்குரிய நீதிச் சட்டங்களும் அடங்கும். இவையெல்லாம் இஸ்ரவேல் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டவை; அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை. பத்துக்கட்டளைகள் அப்படிப்பட்டவையல்ல; அவை ஒழுக்கச் சட்டங்களாக இருக்கின்றன. கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதாக சகல மனிதர்களும் எக்காலத்துக்கும் பின்பற்ற வேண்டியவைகளாக இருக்கின்றன. பவுல் இவற்றை ‘நீதிச் சட்டங்கள்’ என்று அழைக்கிறார்.

இஸ்ரவேல் மக்கள் மோசே மலையில் இருந்து வரும்வரையும் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஆரோனை வற்புறுத்தி தாங்கள் ஆராதனை செய்ய சிலைவழிபாட்டை ஏற்படுத்தியபோது கர்த்தர் கோபங்கொண்டார். மோசேயும் கடவுள் தந்த பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளையும் போட்டு உடைத்தான். (யாத். 32:14-16). மக்களின் மனந்திரும்புதலைப் பார்த்து மனமிறங்கிய கடவுள் மறுபடியும் இரண்டு கற்பலகைகளில் தன்னுடைய சொந்தக் கரங்களில் பத்துக்கட்டளைகளை இரண்டாவது தடவையாக எழுதி மோசேக்கு அளித்தார். இதை அவர் ஏனைய நியாயப்பிரமாணச் சட்டங்களைக் குறித்து செய்யவில்லை. இதிலிருந்து நாம் பத்துக்கட்டளைகளின் விசேஷ தன்மையையும், அவற்றின் நிரந்தரத் தன்மையையும் அறிந்துகொள்ளுகிறோம். (உபா. 5:1-22; 10:1-2).

இஸ்ரவேலர் மத்தியில் பத்துக்கட்டளைகள் கடவுள் பத்துக்கட்டளைகள் உட்பட அனைத்து சட்டங்களும் அடங்கிய நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலருக்கு அளித்தார் என்று பார்த்தோம். இவற்றில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை; நிரந்தரமானவை என்பது இஸ்ரவேலருக்குத் தெரிந்திருந்ததா? என்ற கேள்விக்கு பதில் காண்பது அவசியம். இன்று புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சிலர் பத்துக்கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டவை என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். ஆனால், பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பத்துக்கட்டளைகள் ஏனைய சட்டங்களைவிட விசேஷமானவை என்பது இஸ்ரவேலருக்கு தெரிந்திருந்தது. அதை யூதர்கள் எப்போதுமே உணர்ந்திருந்தார்கள். நியாயப்பிரமாணத்தை (பத்துக்கட்டளைகள் உட்பட) முழுமையாக பின்பற்றுவது இஸ்ரவேலரின் கடமையாக இருந்தது. படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி ஒரே தேவனை வணங்கி ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அத்தோடு நியாயப்பிரமாணத்தின் பலிகளையும், சடங்குகளையும், நீதிச்சட்டங்களையும் பின்பற்றி கடவுளின் நாடாக அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை மட்டும், அவர் காட்டியிருக்கும் வழியில் அவருடைய ஆலயத்தில் வழிபாடு செய்து நீதியோடு நடந்துகொள்ள வேண்டிய கடமையும் இருந்தது.

பத்துக்கட்டளைகள் ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளைவிட விசேஷமானவை, நிரந்தரமானவை என்பதை கடவுள் யாத் 19-20ல் இஸ்ரவேல் மக்களுக்கு முன் செய்த வல்லமையான செயல்களின் மூலம் விளக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது உபாகமம் 10:1&5 வரையிலுள்ள வசனங்களில் இந்தப் பத்துக்கட்டளைகள் எழுதப்பட்ட பலகைகளே கர்த்தர் செய்யச் சொன்ன பெட்டியில் வைக்கப்பட்டதாக வாசிக்கிறோம். உடன்படிக்கைப் பெட்டி எனும் அது பத்துக்கட்டளைகளை ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பத்துக் கட்டளைகள் கடவுளின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாலும், மனித குலத்துக்கான நிரந்தரமான ஒழுக்க நீதிச் சட்டங்களாக இருப்பதாலுமே அவை மட்டும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டன.

வனாந்தரத்தில் இஸ்ரவேலருடைய கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அங்கேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி பின்னால் எருசலேமில் கட்டப்பட்ட ஆலயத்தில் இருந்தது. ஆலயத்திலேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. தாவீதின் காலத்தில் இந்த உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு தூக்கி செல்லும்படி கடவுள் கட்டளையிட்டார். வழியில் அது ஆடியதால் ஊசா அதைத் தொட்டுத்தாங்கப்போக ஆண்டவர் அவனை அந்த இடத்திலேயே கொன்று போட்டார். அதற்குக் காரணம் என்ன? கர்த்தரின் பிரசன்னம் அங்கு உடன்படிக்கைப் பெட்டியோடு இருந்ததால், அதை அசட்டை செய்து ஊசா நடந்துகொண்டபோது கர்த்தர் அப்படிச் செய்தார். இந்த உதாரணங்களில் இருந்து பத்துக்கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலித்த அந்தக் கட்டளைகள் இருந்த இடத்தில் ஆண்டவர் இருந்திருக்கிறார். இதெல்லாம் இஸ்ரேலருக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. நிச்சயம் அவர்கள் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய பலி, சடங்குபோன்ற சட்டங்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்திருந்தார்கள். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானது என்பது பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது.

இதற்கு இன்னுமொரு உதாரணம் பழைய ஏற்பாட்டு விசுவாசியான தாவீதின் 119வது சங்கீதம். இந்த சங்கீதத்தில் தாவீது பத்து வார்த்தைகளை கர்த்தரின் கட்டளைகளைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பத்து வார்த்தைகளும் கர்த்தர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், நாம் அவரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பனவாக இருக்கின்றன. இந்த சங்கீதம் நிச்சயமாக கர்த்தரின் நிரந்தரமான, எக்காலத்துக்கும் உரிய கட்டளைகளைக் குறிப்பனவாக இருக்கின்றன. அத்தகைய நிரந்தரமான கட்டளைகள் பத்துக்கட்டளைகளாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பேச்சுக்கு இவை கர்த்தரின் பொதுவான சகல ஒழுக்கக் கட்டளைகளையும் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அத்தகைய நீதிக்கட்டளைகளுக்கு பத்துக்கட்டளைகள் மட்டுமே ஆதாரமாக இருக்கின்றன; இருக்க முடியும். இஸ்ரவேல் நாட்டுக்கு தற்காலிகமாக தரப்பட்ட பலி சம்பந்தமான கட்டளைகளாக அவை இருக்க முடியாது. தாவீது இந்த சங்கீதத்தில் நிரந்தரமான கட்டளைகளைப் பற்றி விளக்குவதை நாம் மனதில் வைக்க வேண்டும்.

இதன்படி பழைய ஏற்பாட்டு மக்களுக்கு நிச்சயம் நியாயப்பிரமாணத்தில் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய கட்டளைகளுக்கும் இடையில் இருந்த அவசியமான வேறுபாடு தெரிந்திருந்ததை நாம் அறிந்துகொள்ளுகிறோம். பத்துக்கட்டளைகளே கர்த்தரின் குணாதிசயத்தை உணர்த்துவனவாகவும், பாவத்துக்கு விளக்கம் கொடுப்பனவாகவும், பாவ விடுதலைக்கு கர்த்தரை நோக்கி ஓட பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டுவனாகவும் இருந்திருக்கின்றன.

சுவிஷேச நூல்களில் பத்துக்கட்டளைகள்

புதிய ஏற்பாட்டு சுவிசேஷ நூல்களில் பத்துக்கட்டளைகள் பற்றி அதிக இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. பத்துக்கட்டளைகளுக்கும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய சட்டங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இயேசு மத்தேயு 22:35&40ல் விளக்கியிருக்கிறார். நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி, “நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது” என்று கேட்டான். அதற்கு இயேசு, “உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” என்றார். இந்த வாசகங்கள் மூலம் இயேசு பத்துக்கட்டளையை இரண்டுபிரிவாகப் பிரித்து முதல் நான்கு கட்டளைகளும் தேவனிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் ஏனைய ஆறு கட்டளைகளும் பிறரிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் விளக்குவதாக பதிலளித்துள்ளார். “இந்த இரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்” என்று அந்தப் பகுதி விளக்குகிறது. இயேசு ‘நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும்’ என்று சொன்னதற்குக் காரணம் பழைய ஏற்பாடு முழுதும் இந்த உண்மையைப் போதிக்கின்றன என்று காட்டுவதற்காகத்தான். இந்தப் பதங்கள் பழைய ஏற்பாட்டைக் குறிப்பதற்காக வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

லூக்கா 10 ஆம் அதிகாரத்தில் நியாயசாஸ்திரி ஒருவன் இதே கேள்வியை இயேசுவைப் பார்த்து, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டபோது இயேசு அதற்கு பதிலளிக்காமல் அவனையே பதிலளிக்கும்படிக் கேட்டார். அதற்கு இங்கே இயேசு தந்த அதே பதிலை அவனும் சொன்னான் (10:25&28). இதிலிருந்து அன்றைக்கு யூதர்கள் மத்தியில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை என்பதும், அவை ஒழுக்க நீதிக் கட்டளைகள், அவற்றைப் பின்பற்றுவதற்கும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதும் அவர்களுக்குக் தெரிந்திருந்தது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இதையே நியாயசாஸ்திரியின் பதில் புலப்படுத்துகிறது.

நம்மெல்லோருக்கும் தெரிந்த இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மத்தேயு 5&7 வரையுள்ள் மலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்கான உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் பத்துக்கட்டளைகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து விளக்காமல் அவற்றில் சிலவற்றை எடுத்து விளக்குவதைக் காண்கிறோம். இதன் மூலம் இயேசு பரிசேயர்கள் செய்த தவறுகளை வெளிப்படுத்துகிறார். அவர்கள் பத்துக்கட்டளைகளின் மெய்யான போதனையை மறைத்ததோடு அவற்றோடு தங்களுடைய சொந்தக் கட்டளைகளையும் இணைத்து யூதர்கள் அவற்றைப் பின்பற்றும்படி வற்புறுத்தினார்கள். இயேசு அவர்களைக் கடுமையாக மலைப்பிரசங்கத்தில் சாடுகிறார். மலைப்பிரசங்கம் மெய்யான ஆவிக்குரிய விசுவாச வாழ்க்கை என்ன என்பதை விளக்கி யூதர்கள் மத்தியில் இருந்த பரிசேயத்தனமான போலிச் சமயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

மலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்குக் கொடுக்கும் விளக்கங்களில் இருந்து அவற்றின் மெய்த் தன்மையை மட்டுமல்லாமல் எக்காலத்துக்குமுரிய அவற்றின் நிரந்தரத்தன்மையையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.

“இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்” என்று இயேசு இந்தக் கட்டளைகளைக் குறித்து சொல்லியிருக்கிறார் (மத் 5:19). பத்துக்கட்டளைகளில் ஒன்றான ‘கொலை செய்யாதே’ என்ற கட்டளைக்கு அவர் கொடுக்கின்ற விளக்கம் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இன்று அவசியமில்லாதது என்று சொல்லுவது எத்தனை முட்டாள்தனம் என்பதை அதற்கு அவர் 5:22ல் கொடுக்கும் விளக்கம் காட்டுகிறது. இதேபோலத்தான் அவர் ஏனைய கட்டளைகளுக்கும் விளக்கந்தந்து புதிய உடன்படிக்கை காலத்தில் அவற்றின் பயனையும் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பத்துக் கட்டளைகள்

புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பல இடங்களில் பத்துக்கட்டளைகளின் பயன்பாட்டையும் கிறிஸ்தவர்களில் அதன் நிலையான இடத்தையும் விளக்கும் வேதப்பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு யோவான் 5:14லும் 8:11லும் இயேசு “பாவம் செய்யாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். பாவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 1 யோவான்  3:4 தரும் விளக்கமென்ன? “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறது அந்த வசனம். இது தற்காலிகமாக இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த பலி, சடங்கு சம்பந்தமான விதிகளை நிச்சயமாகக் குறித்ததாக இருக்காது. பத்துக்கட்டளைகளை மீறுவதே பாவமாகும். புதிய உடன்படிக்கையில் பாவத்துக்கு விளக்கம் கொடுக்கும் ஒரே சாதனம் பத்துக்கட்டளைகள் மட்டுமே. ந¤யாயப்பிரமாணமாகிய பத்துக்கட்டளைகளை மீறுவோமானால் நமக்கு கடவுளைப் பற்றியே தெரியாது என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யோவான் (1 யோவான் 2:3-6).

இதைப் பற்றி பவுல் விளக்கும்போது, “அது பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையுமாயும் இருக்கிறது” என்று கூறுகிறார் (ரோமர் 7:12). “நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்கிறார் பவுல் (ரோமர் 2:13). விசுவாசிகள் வெளிப்படுத்தல் நூலில் எவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள் & “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சியுடையவர்களும்” என்று வெளி 12:17 அவர்களைப்பற்றி விளக்குகிறது. “. . . அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிறது வெளி 22:14.

பத்துக்கட்டளைகளில் ஒவ்வொன்றுமே புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பவுலாலும், பேதுருவாலும், யோவானாலும், யாக்கோபாலும் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றின் பயன்பாடு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்து வாழ வேண்டிய புதிய உடன்படிக்கை வாழ்க்கையே பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. “பத்துக்கட்டளைகளுக்கான ஆழமான, விரிவான விளக்கவுரையே புதிய ஏற்பாடு” என்று ஆர்தர் பின்க் அருமையாக சொல்லியிருக்கிறார். பத்துக்கட்டளைகள் கிறிஸ்தவர்களால் பரலோகம் போகும்வரை இயேசு கிறிஸ்துவை நேசித்து பின்பற்ற வேண்டிய கற்பனைகள் என்பதை புதிய ஏற்பாடு ஆணித்தரமாக விளக்குகிறது.

கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளுக்கு இடமில்லை என்று அறியாமையால் வாதிடுபவர்கள் வேதத்தைக் கருத்தோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல அவற்றை நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அவர் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைக்கு நிலையான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளைகளை தொடர்ந்து பாவத்தை உணர்த்துவதாகவும், கர்த்தரின் குணாதிசயங்களை எடுத்துக்காட்டுவதாகவும், பரிசுத்த வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படையாகவும் இருந்து வருகின்றன. பத்துக்கட்டளைகள் இல்லாமல் பாவம் இருக்க முடியாது; இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கைக்கும் வழியிருக்க முடியாது.

கவிதை

மண்புழுவும் மண்வெட்டியும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நினைப்பதெல்லாம் நடப்பதற்கு நாமும் தெய்வமில்லை
நடக்கின்ற அத்தனைக்கும் படைத்தவரே காரணம்
நாசத்தனங்களுக்கு மட்டும் நாம் காரணம்

பரமனை அறியாமல் பாவத்தில் மூழ்கி
பண்புகள் கெட்டுப் பாம்பிலும் மோசமாய்
விஷத்தைக் கக்கி வினாசங்கள் செய்து
வையத்தை அழிக்கின்றோம் வீணராய் வாழ்ந்து

விடுதலை தேவை வீணான வாழ்க்கைக்கு
சீரானவழி காட்ட சிந்தனைக்கில்லை பலம்
இருதயம் கெட்டு சிதல் கொட்டுது பாவத்தால்
மருந்துக்கு வழி இந்த மண்ணில் எங்குமில்லை

மனிதநேயமே மருந்திதற்கு என்பார்
மனிதனும் தெய்வமாகலாம் என்பார்
மண்புழு அறியுமா மண்வெட்டியின் நோக்கம்
மனிதப்புழுவுக்குத் தெரியுமா தேவனின் சித்தம்

நித்திய தெய்வீகத்தைப் பெரிதாய் எண்ணாமல்
நமக்காய் இம்மண்ணில் மானுடத்தை ஏற்று
தயவாய்த் தன்னை சிலுவையில் தாழ்த்தி
மரித்தார் ஒரேதரம் தேவ மைந்தனாம் இயேசு

பாவங்களைந்தோட பாவியென்றுணை உணர்ந்து
பரமன் இயேசுவின் பாதத்தில் அறிக்கையிட்டு
நித்திய வாழ்வுக்காய் நிமலனை விசுவாசித்து
நித்தமும் வாழ்வாயவர் நேர்வழி பின்பற்றி

-சுபி

 

 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற வரிகளை ஒரு காலத்தில் தமிழகத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்த கண்ணதாசன் எழுதியிருந்தார். கடவுளை அறியாத மனிதனாக இருந்தபோதும் அவரெழுதிய இந்த வாசகம் உண்மையானதுதான். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நாமல்லவா தெய்வம் என்றாகிவிடும். என்ன நோக்கத்தில் கண்ணதாசன் இதை எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக அவரை முற்றிலும் அறியாத கண்ணதாசன் போன்ற மனிதர்கள்கூட ஞானமான சில விஷயங்களை சொல்லிவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் என்றோ, அவரை நெருங்கி விட்டார்களென்றோ சொல்ல முடியாது. ஆவியில்லாத மனிதர்களில் சொட்டும் ஆவிக்குரிய சிந்தனையோ, நடவடிக்கையோ இருக்க வழியில்லை.

கண்ணதாசனின் இந்த வார்த்தைகள் என் மனதுக்கு வந்ததற்குக் காரணம் உலகத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் சில காரியங்கள்தான். முதலில் அக்கிரமம் நாளுக்கு நாள் உலகில் அநியாயத்துக்கு அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்களில் சிலர் இந்த உலகம் ஆண்டவருடைய வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு என்றைக்குமே இல்லாதவகையில் சமாதானத்தையும், பெரும் சுவிசேஷ ஆசீர்வாதத்தையும், எழுப்புதல்களையும், திருச்சபை எழுச்சியையும் அனுபவிக்கும் என்கிறார்கள். அவர்களுடைய இந்த கிறிஸ்துவின் வருகையை மையமாகக் கொண்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களைச் சுற்றிப் பார்க்கின்ற எவருமே இந்த உலகம் இன்னும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவார்கள். அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருக்கின்றன. இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக வேதம் சொல்லுகிறது. இயேசு மீண்டும் வருகிறபோது இந்த உலகத்தை முற்றிலும் உருமாற்றம் செய்யப்போகிறார் என்கிறது வேதம். அந்த மீட்புக்காகவே இந்த உலகமும் பரிதவிப்போடு காத்திருப்பதாக ரோமர் 8லும் வாசிக்கிறோம்.

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. எது நடக்கக்கூடாது என்று பலரும் எதிர்பார்த்தார்களோ அது என் நாட்டில் நடந்திருக்கிறது. என் நாட்டுப் பாராளுமன்றம் ஓரினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை ஏப்ரல் மாதம் வழங்கியிருக்கிறது. ‘திருமணம்’ என்ற சொல்லின் கருத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள் கடவுளின் ஒழுக்க நீதிச் சட்டத்தையும், அவருடைய சர்வ அதிகாரத்தையும் எதிர்க்கிறவர்கள். இது பிரான்சு நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. ஏற்கனவே வேறுசில நாடுகளில் இது நடந்துவிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வேகமாகப் பரவும். இது சிலருக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம். சிந்திக்கின்ற ஆவிக்குரிய கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இது நியாயத்தீர்ப்பு நாள் வெகு வேகமாக சமீபிக்கிறது என்பதையும், உலகத்தில் கேடு கண்மூடித்தனமான வேகத்தில் காட்டாற்றைப் போல பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கும் அடையாளம் மட்டுமே. இதெல்லாம் உலகில் வரப்போகிற சமாதானத்துக்கும், ஆவிக்குரிய எழுப்புதலுக்கும் அடையாளம் என்று எந்த எண்ணத்தில் சொல்ல முடியும்?

முப்பது வருடங்களுக்கு அசைக்க முடியாத வலிமையோடு ஸ்ரீ லங்காவில் வட பகுதியை ஆண்டுகொண்டிருந்த புலிகள் இயக்கம் இன்று இல்லாமல் போய்விட்டது. தமிழீழக் கனவு மண்ணாகிவிட்டது. ஈழத் தமிழர்களுடையதும், அவர்கள் வாழும் பிரதேசங்களினதும் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச வசதிகளும், அதிகாரமும், வீடும், நிலமும், மரியாதையும் இல்லாமல் போய் சொந்த நாட்டிலேயே அந்நியரைப் போல வாழுகின்ற நிலை ஏற்படும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? அநேக ஈழத் தமிழர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. மலேசிய நாட்டைப் பாருங்கள். இந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிடும் என்று நம்பியவர்களே அதிகம். அந்தப் பயம் ஐம்பது வருடங்களுக்கு நாட்டை ஆண்ட ஆளும் கட்சியை ஒவ்வொரு நாளும் வாட்டியிருந்தது. சிறுபான்மையினருக்கு இந்தத் தேர்தலின் மூலம் நாட்டில் நன்மை கிடைத்துவிடும் என்று பலர் நம்பினார்கள். தேர்தல் முடிந்து ஆளும் கட்சி சாதாரண பெருமான்மையுடன் எப்படியோ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. பலரும் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும், ஏன் அநேக மலாய் வர்க்கத்தினருக்கும் இது அதிர்ச்சியளித்திருக்கலாம். இருந்தபோதும் நினைத்தது நடக்கவில்லை.

இந்தியாவில் டெல்லியில் நடந்த கற்பழிப்புகளும், வட கொரிய நாட்டின் கிம் ஜொங்கின் அணுகுண்டுத் தாக்குதல் பயமுறுத்தல்களும், அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பும், கிளீவ்லென்டில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பெண் கடத்தல், கற்பழிப்பு நடவடிக்கைகளும், இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், நினைத்துப் பார்க்காததெல்லாம் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை தொலைக்காட்சியில் பார்க்கிறபோதும், பத்திரிகையில் வாசிக்கின்ற போதும் இப்படியும் நடக்குமா? மனிதன் இப்படியும் நடந்துகொள்வானா? என்ற ஆதங்கம் அநேகருக்கு ஏற்படுகின்றது. மனித நேயத்தில் இருக்கும் நம்பிக்கையும் ஆட்டம் காணுகின்றது. மானுடத்தில் நமக்கு இருக்கும் நம்பிக்கையிலும் அது மண்ணை வாரி இறைத்துவிடுகிறது.

நாம் நினைப்பது நடக்காமல் போவதற்கும், நினைக்காதவை நடந்துவிடுவதற்கும் நிச்சயம் இவற்றிற்குப் பின்னால் இருக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளே உண்மையான காரணம். அதாவது, இந்தப் பாவகரமான காரியங்களுக்கு அவர் மூலகாரணமல்ல; இவை நிகழ்வதற்கு அவர் நேரடியான காரணமுமல்ல. இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதனை ஆக்ரோஷத்தோடு பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் பாவம் மட்டுமே. தன்னில் நிலைகொண்டிருக்கும் பாவ இருதயத்தின் வழிநடத்துதலால் மனிதன் இத்தனைக் கொடுமையையும் செய்து வருகிறான். இருந்தபோதும் இதற்குமேல் போய் அவன் எல்லோரையும் உண்டு இல்லை என்றாக்கி விடாதபடி தடுத்து வைத்துக்கொண்டிருப்பது நம்மையெல்லாம்  ஆண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லவரான ஆண்டவர் மட்டுமே. அதனால்தான் இதற்கெல்லாம் பின்னால் இருப்பவர் நம்மை ஆளும் ஆண்டவர் என்று சொன்னேன். நம்மேலும், இந்த உலகத்தின் மேலும் இருக்கும் அவருடைய கரம் மட்டும் கொஞ்சம் அகலுமானால், விநாடிப் பொழுதில் நாம் கோரமானவர்களாகி இந்த உலகத்தையே, அது நினைத்தும் பார்த்திராதவிதத்தில் இரத்தக்காடாக்கி விடுவோம்; மானுடத்தின் கோரமெல்லாம் மனுக்குலம் அனுபவிக்கும்படியாகிவிடும். அந்தளவுக்கு மானுடத் தன்மையையே களங்கப்படுத்திக் கோரத்தை செய்துவிடுகின்ற வல்லமையுள்ளதாக ஒவ்வொரு மனிதனிலும் உறங்கிக் கொண்டிருக்கிறது மூலபாவம். நம்மை ஆளும் கடவுள் மட்டும் நம்மை அடக்கி ஆளாவிட்டால் நாம் காதில் கேட்டு, கண்கள் மூலம் பார்ப்பவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட அழிவுகளையும், அசிங்கங்களையும் செய்துவிடுகின்ற கொடியவர்களாக மனிதர்கள் பாவ இருதயத்தோடு இருக்கிறார்கள். இந்த உண்மையை கடவுளின் வேதம் உறுதியாக சொல்லுகிறது.

எனக்கு சிரிப்பேற்படுத்துகிற ஒரு காரியம் என்ன தெரியுமா? இன்றைக்கு அநேகர் மனிதநேயத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருவதும், அதில் எல்லையில்லா நம்பிக்கை வைத்திருப்பதுந்தான். டெல்லிக் கற்பழிப்பு சம்பவத்தின் பின் ஒரு மதகுரு பேசியிருப்பது சிரிப்பூட்டுகிறது. அந்த அசிங்கத்தைச் செய்தவர்களிடம் “அண்ணா இப்படி நடந்துகொள்வது உங்களுக்குச் சரியாகப்படுகிறதா? உங்கள் தங்கையாக நினைத்து விட்டுவிடுங்கள்” என்று சொல்லி அவனுடைய மனிதநேயத்தைத் தொட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் அப்படி சொல்லி அழாமல் போனதுதான் அவன் அந்தக் கோரத்தை செய்ததற்குக் காரணம் என்றும் அந்த மதகுரு சொல்லியிருக்கிறார். இதை வாசித்தபோது இப்படியும் ஒருவர் சொல்வாரா, எப்படி இந்த மனிதனால் இப்படி நினைக்க முடிகிறது என்று கேட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது எந்தளவுக்கு மனிதன் தன்னுடைய இருதயத்தின் கோரமான நிலையை அறியாமல் இருந்துவருகிறான் என்பதையும் வெறும் மனித நேயத்தில் அவனுக்கிருக்கும் தவறான அதீதமான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டுகின்றது. மனிதனைப் பிடித்திருக்கும் மூலபாவமே அவன் தன் நிலையை உணராமல் இருப்பதற்குக் காரணம் என்பதை அவன் அறியவில்லை. மனிதனுக்கு கடவுளைவிட மனித நேயத்தில் அதீத நம்பிக்கை வைத்திருப்பதற்கும் அந்தப் பாவம்தான் காரணம் என்பதை அவன் உணரவில்லை.

கடவுளின் பொதுவான கிருபை மட்டுமே மனிதன், கொஞ்சம் மனிதநேயமுள்ளவனாக நடந்துகொள்வதற்குக் காரணம். மனிதநேயம் நிலையானது அல்ல. மனிதநேயம் மனிதனின் பாவ இருதயத்தை மேற்கொள்ளும் வலிமைகொண்டதல்ல. பாவம் அவனுடைய மனிதநேயத்தை வென்றுவிடும் வல்லமையுடையது. மனிதநேயமும்கூட பாவக்கறைகொண்டதுதான். சுயநலம் கலக்காத மனிதநேயம் என்றொன்றில்லை. ஸ்ரீ லங்காவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த கோரமான, அட்டூழியங்களை செய்தவர்கள் மனிதர்களே. அவர்களுக்கு மனைவி, பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். சாதாரண குடும்பவாசிகளாக இருந்து, அகிம்சையைப் போதித்த கௌதம புத்தரின் வழிமுறைகளை பின்பற்றுகிற அவர்களை அந்த சிலநாட்கள் மிருகங்களாக்கியது எது? மனிதநேயமுள்ளவர்களாக இருந்த அவர்களை வென்று கோரமான இச்சையையும், இரத்தப்பசியையும் கொண்டவர்களாக்கியது எது? மனிதனை ஆண்டுவருகிற மூலபாவந்தான். அதிலிருந்து விடுதலை கிடைக்காதவரை மனிதநேயம் மாயமானைப் போல மனிதனை மனிதன் ஏமாற்ற மட்டுமே உதவும்.

மனிதன் தெய்வமாகலாம் என்பது சிலரின் நம்பிக்கை; அதெல்லாம் வெறும் கற்பனை. நாம் படைக்கப்பட்ட இரத்தமும் சதையும் கொண்ட வெறும் மனிதர்கள் மட்டுமே. அடுத்த நிமிடத்தில் எது நடக்கும், நடக்காது என்பதைத் தீர்மானிக்கும் வலிமையில்லாதவர்கள் நாம். நம்முடைய எதிர்காலத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. நம்முடைய செய்கைகள் எப்போதும் பூரணத்தோடு நேர்மையானவைகளாக இருந்துவிடுவதற்கே நமக்கு வல்லமையில்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நம்மைப் படைத்த கடவுளை நாம் அறியாமல், அவருக்கு கொடுக்க வேண்டிய நீதியான வழிபாட்டைக் கொடுக்க முடியாமல், சுயநல இருதயத்தோடு அனைத்தையும் செய்து வருகிறவர்களாக நாம் இருந்து வருகிறோம். கடவுள் வழிபாட்டையும் நம்முடைய சுயநலத்துக்காக செய்து வருகிறது நம்முடைய இருதயம். நம்மில் இருக்கும் பாவமே நாம் இப்படி நடந்துகொள்ளவதற்கு காரணம்.

மனிதன் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள பெரும்பாடுபட்டு வருகிறான். ஆனால், அதில் பிரச்சனை என்ன தெரியுமா? பாவமுள்ள இருதயத்தைக் கொண்டிருக்கும் மனிதனால் தன்னைத் தானே சுயமுயற்சியால் அறிந்துகொள்ளும் முயற்சி பலனளிக்காது. அவனுடைய பாவம் அவனுடைய சிந்தனைகளையும், செயல்களையும் பாவமுள்ளவையாக்கியிருக்கிறது. இந்த ந¤லையில் அவன் எப்படித் தன்னைத் தானே அறிந்துகொள்ள முடியும்? அப்படியானால் மனிதன் எப்படி தன்னை அறிந்துகொள்ளுவது? இந்தப் பாவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை அடைவது எப்படி? பாவ இருதயத்தை சுத்தமானதாக்கிக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அதற்கு வழியிருக்கிறது. நம்மை ஆளுகின்ற கடவுளே அதற்கு ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறவனைப் போன்றதுதான் நம் வாழ்க்கை. அதிலிருந்து நம்மால் சுயமாக வெளிவர முடியாது. நம்மை ஒருவர் கரைசேர்க்க வேண்டும். அது கடவுளால் மட்டுமே முடியும். அவர் நம் விடுதலைக்கு என்ன செய்திருக்கிறார் தெரியுமா? தன்னுடைய உன்னதமான மகிமையையும், பரிசுத்தத்தையும், நீதியையும், வல்லமையையும் பெரிதாக எண்ணாமல் பாவிகளாக இருக்கிற நம்மேல் இரக்கம் காட்டி நம்மை விடுதலை செய்வதற்காக மானுட உருவமெடுத்து இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிறந்து, நம் பாவங்களைத் தம்மேல் சுமந்து தன்னையே சிலுவை மரத்தில் இரத்தப்பலியாகக் கொடுத்திருக்கிறார். இத்தனை பெரிய மகிமையான செயலை அவர் செய்தற்கு என்ன காரணம் தெரியுமா? நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாதவர்களாக, கடவுளை அறியாதவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்பதில் இருந்து நமக்கு விடுதலை தரத்தான். அந்தளவுக்கு பாவிகளாகிய நம்மேல் இரக்கம் காட்டியிருக்கிறார் நம்மைப் படைத்த கடவுள். நம் பாவம் போக, இருதயம் சுத்தப்படுத்தப்பட, கடவுளை அறிந்து அவருக்குரிய வழிபாட்டைக் கொடுக்க, ஒருவர் மேல் ஒருவர் உண்மையாக அன்புகாட்ட நாம் அவரனுப்பிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவ விடுதலைக்காக நம்முடைய ஆண்டவராக விசுவாசிக்க வேண்டும். அது மட்டுமே நமக்கு நிரந்தர விடுதலையைத் தரும். நினைப்பது, நடப்பது எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிவதற்கு இயேசு இருக்க வேண்டும் உங்கள் இருதயத்தில்.

 

 

 

 

பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் –

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6

  1. பிள்ளையின் ஆத்துமாவின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எப்போதும் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.

உங்களுடைய கண்களுக்கு உங்கள் பிள்ளைகள் விலையேறப் பெற்றவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுவீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவின் நலனைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நித்தியஜீவனைவிட நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய பெரிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற அந்த அழியாத ஆத்துமாவைவிட வேறு எந்த அங்கமும் உங்களுக்கு மேலானதாகத் தெரியக்கூடாது. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாள் அழிந்து போகும். மலைகள் எல்லாம் உருகிவிடும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்காமல் போகும் காலம் வரும். எல்லாமே ஒரு நாள் அழிந்து போகப்போகின்றன. ஆனால், நீங்கள் மிகவும் அன்புகாட்டுகிற உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமா இவைகள் அனைத்தையும் கடந்து என்றென்றும் வாழப் போகின்றது. அதனால் அவர்களுடைய சந்தோஷமும், துக்கமும் உங்கள் கையிலேயே இருக்கிறது.

இந்த எண்ணமே உங்களுடைய மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து ஆக்கிரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத்தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் “இந்தக் காரியம் என் பிள்ளையினுடைய ஆத்துமாவைப் பாதிக்குமா?” என்ற கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.

ஆத்துமா மீது அன்புகாட்டுவதே சகலவிதமான அன்புக்கும் உயிர்நாடியாயிருக்கிறது. இந்த உலகில் மட்டுமே சந்தோஷம் அனுபவிக்க முடியும் என்பது போலவும், இந்த உலக வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதே முக்கியமானது என்பது போலவும் பிள்ளைகளுக்கு காண்பித்து, அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து, கொஞ்சி, சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்வது உண்மையான அன்பு அல்ல. அது மகாக் கொடூரமானது. அது அந்தப் பிள்ளையை மிருகத்தைப் போல நடத்துவதற்கு சமமானது. ஏனென்றால் மிருகம்தான் இவ்வுலக வாழ்வோடு அழிந்துவிடப் போகிறது. அது மறு உலகத்தைக் குறித்த எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மடிகிறது. உங்கள் பிள்ளையை அப்படி வாழவிடுவது, மிகப் பெரிய உண்மையை அதனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது. அதாவது, தனக்கொரு ஆத்துமா இருக்கிறது என்பதையும், அது இரட்சிக்கப்பட வேண்டும் என்பதையும் தனது வாழ்நாளின் குறிக்கோளாக சிறு வயதில் இருந்து அந்தப் பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டியதை நாம் அதனிடம் இருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது.

உண்மையான கிறிஸ்தவன் உலக நாகரீகத்திற்கு அடிமையாகி வாழக்கூடாது. பரலோக வாழ்க்கைக்கு தன்னுடைய பிள்ளைகளை அவன் தயார் செய்ய வேண்டுமானால் உலகம் போகிற போக்கைப் பற்றி அவன் கவனமாயிருக்க வேண்டும். உலகத்தார் வாழ்கின்ற விதமாகவே தானும் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவன் இருக்கக் கூடாது. நண்பர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கின்ற விதமாகவே தாங்களும் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாக இருக்கக் கூடாது. மற்றவர்களின் பிள்ளைகள் வாசிக்கின்றார்களே என்பதற்காக சரியில்லாத புத்தகங்களை தங்கள் பிள்ளைகளும் வாசிப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. சந்தேகத்துக்கிடமான பழக்கவழக்கங்களை மற்றவர்களைப் பார்த்துப் பழகிக்கொள்ளுவதற்கு அனுமதிக்கக் கூடாது. உலகத்தில் எல்லாரும் இப்படித்தான் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதற்காக கிறிஸ்தவப் பெற்றோரும் உலகத்தோடு ஒத்துப் போய்விடக்கூடாது. பிள்ளைகளை வளர்க்கும்போது உங்களுடைய கண் பிள்ளையின் ஆத்துமாவை நோக்கியதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்கிற விதத்தைப் பார்த்து யாராவது, ‘ஏன் நீங்கள் மாத்திரம் உங்கள் பிள்ளைகளை வித்தியாசமாக வளர்க்கிறீர்கள்’ என்று கேலியாகப் பேசினால், அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். அப்படி வளர்ப்பதால் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது? காலம் மிகவும் குறுகியது. உலகத்தின் நாகரீகங்களும் பழக்கவழக்கங்களும் விரைவில் மாறிப் போய்விடும். உலகத்துக்காக இல்லாமல் பரலோகத்துக்காக தன் பிள்ளைகளை வளர்ப்பவன் முடிவில் புத்திசாலியாக மதிக்கப்படுவான். மனிதர்களுக்காக இல்லாமல் கடவுளுக்காக தன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் ஒருபோதும் வெட்கப்படப் போவதில்லை.

  1. வேத அறிவைப் பெற்றுக்கொள்ளும்படியாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.

பிள்ளைகள் வேதத்தை மிகவும் விரும்பி நேசிக்கும்படியாக செய்ய உங்களால் முடியாது என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எவராலும் ஒருவனுக்கு வேதத்தில் வாஞ்சை ஏற்படும்படியாக செய்ய முடியாது. ஆனால், வேதத்திலுள்ள காரியங்களையும் சம்பவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ளும்படி நீங்கள் அவர்களைப் பழக்கப் படுத்தலாம். வேதத்தை சீக்கிரமாகவோ அல்லது மிகவும் நன்றாகவோ அவர்களால் அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேதத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுகின்ற நல்ல அறிவே கிறிஸ்தவத்தைப் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள அத்திவாரமாக அமையும். அதில் நல்ல தேர்ச்சி அடைந்திருக்கும் ஒருவன் காற்றில் இங்குமங்குமாக அலைந்து திரியும் இலைகளைப் போன்ற போதனைகளைப் பின்பற்றி தடுமாறுகிறவனாக இருக்க மாட்டான். வேத அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பிரதான இடத்தை அளிக்காத எந்தவிதமான பிள்ளை வளர்ப்பு முறையாலும் பிள்ளைகளுக்கு நன்மையில்லை என்பது மட்டுமல்ல அவை ஆபத்தானவையும்கூட.

வேத அறிவை பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற இந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஏனென்றால் சாத்தான் இன்றைக்கு நுழையாத இடமில்லை அத்தோடு தவறான போதனைகளும் அதிகரித்திருக்கின்றன. கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சபைக்குக் கொடுக்கின்றவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். நம்மைப் பரலோகத்துக்கு அனுப்பும் பயணச்சீட்டாக திருநியமங்களைக் கருதுகிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். அதேபோல் வினாவிடைப் புத்தகங்களுக்கு வேதாகமத்திற்கு மேல் மதிப்புக் கொடுக்கிறவர்களும், தங்களுடைய குழந்தைகளின் மனதை சத்திய வசனத்தால் நிரப்பாமல் விதவிதமான சிறு கதைகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் மேல் அன்புகாட்டுவீர்களானால் அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேதத்தைக் கொண்டு பயிற்சியளியுங்கள். வேறு நூல்களனைத்தும் வேதத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கட்டும்.

வேத வினா-விடை புத்தகத்தைப் படித்து அதில் அவர்கள் பாண்டித்தியம் அடையாவிட்டாலும் வேதத்தைப் படித்து அதில் அதிக பாண்டித்தியம் பெறும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தவிதமான பயிற்சியையே தேவன் சிறந்ததாகக் கருதுவார். “உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங் 138:2) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். மனிதர்களின் மத்தியிலே அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்துகிற எல்லாரையும் தேவன் சிறப்பான விதத்தில் ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன்.

(இந்த இடத்தில் ஜெ. சி. ரைல், சபையையோ, திருநியமங்களையோ, வினாவிடை நூல்களையோ ஒதுக்கி வைத்துவிட்டு வேதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை செய்வதாக நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. ரைல் வாழ்ந்த காலத்தில் அவர் பணிபுரிந்த ஆங்கிலிக்கன் சபைப்பிரிவு ஆவிக்குரியதாக இல்லாமல் வெறும் சடங்குகளுக்கு மதிப்புக்கொடுப்பதாக இருந்தது. ரைல் அந்த சபைப்பிரிவில் இருந்தபோதும் அதைத் தன்னுடைய பிரசங்கங்களால் சாடியிருக்கிறார். சடங்கைப்போல சபையையும், திருநியமங்களையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்துவதையே அவர் இங்கே தவிர்க்கும்படிச் சொல்லுகிறார். கர்த்தர் உருவாக்கியிருக்கும் அவருடைய சபையும் அவசியம், அவரே ஏற்படுத்தியிருக்கும் திருநியமங்களும் அவசியம். அதேபோல் வினாவிடை நூல்களும் வேத போதனைகளைத் தருவதற்கு பெரும் பயனளிப்பவை. ஆனால், இவையெல்லாமே ஒருபோதும் உயிரற்ற சடங்குகளாக மாறிவிடக்கூடாது. அதுவும் வேதத்துக்கு முதலிடத்தைக் கொடுத்து இவையனைத்தையும் ஆவிக்குரியவிதத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளுவது மிகவும் அவசியம். – ஆசிரியர்)

உங்கள் பிள்ளைகள் வேதாகமத்தை மரியாதையோடு படிக்கும்படியாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, அது தேவனே அருளிய வார்த்தைகள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்கிறார் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். அவை நமக்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதென்றும், அது நம்மை அறிவுள்ளவர்களாக்கும் என்றும், அந்த வார்த்தைதான் நம்மை இரட்சிப்பை நோக்கி வழிநடத்தும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவர்கள் வேதாகமத்தைத் தினமும் படிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேண்டிய அன்றாட ஆகாரம் என்பதை அவர்கள் அறியும்படி செய்யுங்கள். ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஆகாரம் அவர்களுக்கு தினமும் தேவை என்பதை உணரச் செய்யுங்கள். இது அவர்களுடைய அனுதின கடமையாக இருக்குமென்றாலும், இந்தக் கடமை எத்தனை பாவங்களைத் தடுத்து நிறுத்தக்கூடியது என்பதை நம்மால் அளவிட்டுக் கூற முடியாது.

வேதம் முழுவதையும் அவர்கள் படிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். எந்த வேதசத்தியங்களையும் அவர்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கிவிட வேண்டாம். வேதத்திலுள்ள ஆழ்ந்த, முக்கியமான சத்தியங்களை அவர்களால் விளங்கிக்கொள்ள முடியாது என்று நீங்களாக கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். நாம் நினைப்பதையும் எதிர்பார்ப்பதையும்விட அதிகமாக அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.

பாவத்தைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். அது ஏற்படுத்தும் குற்ற உணர்வைக் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறித்தும், அதனுடைய சக்தியைக் குறித்தும், அதனுடைய பொல்லாத தன்மையைக் குறித்தும் அவர்களிடம் பேசுவதற்குத் தயங்காதீர்கள். அவைகளில் சிலவற்றையாவது அவர்கள் புரிந்துகொள்வதை நீங்கள் பின்னால் உணருவீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். நம்மைக் காப்பதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் விவரித்து சொல்லுங்கள். அவருடைய பரிகாரபலி, சிலுவை மரணம், அவருடைய திரு இரத்தம், அவரது தியாகம், நமக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருப்பது ஆகிய காரியங்களைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். இவைகளில் எதுவும் அவர்களுடைய புத்திக்கு எட்டாமலிருக்காது என்பதை நீங்கள் உணருவீர்கள்.

அவர்களோடு மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். ஒருவனை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதையும், அவனைப் புதுப்பிப்பதையும், பரிசுத்தப்படுத்தி தூய்மைப்படுத்துவதையும் விளக்கிக் கூறுங்கள். நீங்கள் சொல்பவைகளை ஓரளவிற்கு அவர்களும் விளங்கிக்கொள்வதைப் பார்ப்பீர்கள். சுருக்கமாகக் கூறினால், மகத்துவமான சுவிசேஷத்தின் நீள அகலங்களை பிள்ளைகள் எந்தளவுக்கு உணருகிறார்கள் தெரியுமா? அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையைக் குறித்து நாம்தான் கொஞ்சமும் அறிந்துவைத்திருக்கவில்லை என்று நான் சந்தேகப்படுகிறேன். நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே அவர்கள் புரிந்துகொள்ளும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுடைய இருதயத்தை வேத வசனங்களால் நிரப்புங்கள். வசனம் அவர்கள் இருதயங்களில் பரிபூரணமாக வாசம் செய்யட்டும். அவர்களுக்கென சொந்தமாக ஒரு வேதப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். முழுவேதாகமத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். அதுவும் அவர்கள் சிறுவயதினராய் இருக்கும்போதே கொடுங்கள்.

  1. ஜெபிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள்.

உண்மையான தேவபக்திக்கு ஜெபம்தான் உயிர்மூச்சு. ஒருவன் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கு முதலாவது அடையாளம் ஜெபம்தான். கர்த்தர் அனனியாவை சவுலிடம் அனுப்பும்போது, “அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” (அப் 9:11) என்று அடையாளம் சொல்லி அனுப்புகிறார். சவுல் ஜெபம் பண்ணத் தொடங்கிவிட்டார் என்பதே அவருடைய மறுபிறப்பை நிருபிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

உலகத்தார் ஜெபிப்பதில்லை. ஆனால், கடவுளுடைய மக்களோ ஜெபிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். உலகத்தாரையும் கடவுளுடைய மக்களையும் வேறுபடுத்திக் காண்பிப்பது ஜெபமாகத்தான் இருக்கிறது. “அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (ஆதி 4:26) என்கிறது வேதம்.

மெய்யான கிறிஸ்தவர்களின் விசேஷமான குணமாக ஜெபம் இன்றைக்கும் இருக்கிறது. ஜெபத்தின் மூலமாக அவர்கள் கடவுளிடம் பேசுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களையும், உணர்வுகளையும், ஆசைகளையும், பயங்களையும் அவர்கள் உண்மையாக அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்கள், ஜெபங்களை திரும்பத் திரும்ப உதட்டளவில் செய்வார்கள். அதை அவர்கள் நன்றாகக்கூட பேச்சளவில் செய்யலாம். ஆனால் அதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போக முடியாது.

ஜெபமானது மனிதனுடைய ஆத்துமாவைத் திருப்புவதாக இருக்கிறது. எங்கள் ஊழியமும் உழைப்பும் உங்களை முழங்காலில் நின்று ஜெபிக்கச் செய்யாவிட்டால், அது வீணானதுதான். நீங்கள் ஜெபிக்கத் தொடங்கும் வரைக்கும் உங்களைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்காது.

ஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெற்றுக்கொள்ளும் இரகசியம் ஜெபத்தில் இருக்கிறது. கடவுளோடு நீங்கள் அடிக்கடி தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்கிறவர்களாக இருந்தீர்களானால் உங்கள் ஆத்துமா மழை பெய்த பிறகு காணப்படும் புல்லைப்போல செழிப்பாக இருக்கும். ஜெபம் குறைந்து போனால் அது காய்ந்து போன நிலையில் காணப்படும். ஜெபமில்லாவிட்டால் உங்கள் ஆத்துமாவை உயிரோடு வைப்பதும்கூட சிரமமாக இருக்கும். கர்த்தரோடு அடிக்கடி ஜெபத்தில் பேசுகிறவன், வளருகின்ற கிறிஸ்தவனாகவும், முன்னேறிச் செல்கிற கிறிஸ்தவனாகவும், உறுதியான கிறிஸ்தவனாகவும், செழிப்பான கிறிஸ்தவனாகவும் இருப்பான். அவன் கடவுளிடம் அதிகமாகக் கேட்கிறான், அவரிடமிருந்து அதிகமாகப் பெற்றுக்கொள்ளுகிறான். தன்னுடைய சகல காரியங்களையும் அவன் இயேசு கிறிஸ்துவிடம் தெரிவிக்கிறான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது எப்போதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது கரங்களில் கடவுள் கொடுத்திருக்கும் மகத்தான கருவி ஜெபமாகும். எந்த கஷ்டத்திலும் உபயோகிக்கக்கூடிய கருவியாக அது இருக்கிறது. துன்பத்தைப் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது. கடவுளின் வாக்குத்தத்தங்கள் அடங்கிய பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. கிருபையைப் பெற்றுத் தரும் கரமாக அது இருக்கிறது. ஆபத்தில் உதவும் நண்பனாக ஜெபம் செயல்படுகிறது. நமது தேவையின்போது பயன்படுத்தும்படியாக தேவன் நமது கரங்களில் தந்திருக்கும் எக்காளமாக இருக்கிறது. தாயானவள் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதை கவனிப்பது போல, ஜெபத்தின் மூலமாக நாம் எழுப்பும் அழுகுரலைக் கடவுள் கேட்டு நமக்கு உதவி செய்கிறார்.

கடவுளிடம் வருவதற்கு மனிதன் உபயோகிக்கக்கூடிய எளிமையான சாதனம் ஜெபம். தேவனிடத்தில் நெருங்கி வருவதற்கு, எல்லாருமே உபயோகித்துக்கொள்ளக்கூடிய அருமையான சாதனம் ஜெபம். வியாதியஸ்தரும், வயதானவர்களும், பலவீனரும், நடமாட முடியாதவர்களும், குருடரும், ஏழைகளும், படிக்காதவர்களுங்கூட கடவுளிடம் ஜெபத்தின் மூலமாக நெருங்க முடியும். ஜெபிப்பதற்கு பெரிய திறமைகள் தேவையில்லை, படிப்பு தேவையில்லை, புத்தகங்கள் தேவையில்லை. ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி கடவுளிடம் கூறுவதற்கு உங்களுக்கு ஒரு நாவு இருந்தால் போதும். அதைக் கொண்டு நீங்கள் ஜெபிக்கலாம்; ஜெபிக்க வேண்டும். ஜெபிக்காதவர்களைக் குறித்து, “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் உங்களுக்கு சித்திக்கிறதில்லை” (யாக் 4:2) என்று சொல்லப்படுகிற பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நியாயத்தீர்ப்பின் நாளிலே அநேகர் கேட்பார்கள்.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளிடம் ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முழு முயற்சி செய்யுங்கள். எப்படி ஜெபிக்க ஆரம்பிப்பது என அவர்களுக்குக் காண்பியுங்கள். ஜெபத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். விடாமல் ஜெபம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ அவர்கள் இருந்தார்களானால் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அவர்கள் கடவுளிடம் ஜெபிக்காதவர்களாக இருந்தார்களானால் அது ஒருபோதும் உங்களுடைய குற்றமாக இராதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிறுபிள்ளை தனது பக்திவழியில் எடுத்து வைக்கக் கூடிய முதலாவது அடி ஜெபிப்பது என்பதை நினைவில் வைத்திருங்கள். அக்குழந்தை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நீங்கள் குழந்தையை அதன் தாயின் அருகில் முழங்கால்படியிட வைத்து, தேவனைக் குறித்து புகழக்கூடிய சிறு வார்த்தைகளையும், சிறு விண்ணப்பங்களையும் அதன் மழலை மொழியில் சொல்ல வைக்க உங்களால் முடியும். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் ஆரம்பம் மிகவும் முக்கியமானதாகும். அதுபோலத்தான் பிள்ளைகளின் ஜெபவாழ்க்கையில் ஆரம்ப ஜெபமும் முக்கியமானது. குழந்தையின் ஜெபத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது எவ்வளவு அவசியமானது என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைப் பிராயத்தில் குழந்தையை சரியாக பழக்கப்படுத்தாவிட்டால், அவர்கள் அலட்சியமாகவும், கவலையற்றும், தகுந்த மரியாதை செலுத்தாமலும் ஜெபிக்கக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். பிள்ளைகளுக்கு ஜெபிக்கக் கற்றுத் தருவதை வேலையாட்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ விட்டுவிடாதீர்கள். அவர்கள் தாங்களாகவே ஜெபிக்கப் பழகிக்கொள்ளட்டும் என்ற வீணான எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். தனது பிள்ளையின் தினசரி வாழ்வின் முக்கியமான இந்த பகுதியில் அக்கறை காட்டாத தாய்மார்களைக் குறித்து நான் குறைவாகத்தான் மதிப்பிட முடியும். குழந்தைக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கின்ற நல்ல பழக்கம் உங்களுடைய சொந்த முயற்சியினால் ஏற்பட வேண்டும். உங்கள் பிள்ளைகள் ஜெபிப்பதைக் கேட்காத பெற்றோராக நீங்கள் இருப்பீர்களானால், தவறு உங்களுடையதுதான். யோபுவில் சொல்லப்பட்டுள்ள பறவையைப் போலத்தான் நீங்கள் இருப்பீர்கள்: “அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகள் மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப் போய், காலால் மிதிபட்டு உடைந்துபோம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாதது போல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.” (யோபு 39:14-16).

ஜெபிக்கும் பழக்கம் மட்டுமே வெகுகாலத்துக்கு தொடர்ந்து நிலைத்திருக்கும். முதியவர்கள் எல்லோரும் தாங்கள் சிறுவயதில் எப்படித் தங்கள் தாயாரிடமிருந்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லா விஷயங்களும் அவர்களுடைய நினைவில் இருந்து அகன்று போயிருக்கலாம். ஆராதனைக்கு அவர்கள் பெற்றோர் கூட்டிச் சென்ற சபை, அங்கு பிரசங்கித்த பிரசங்கியார், தங்களுடைய சிறுவயது விளையாட்டுத் தோழர்கள் ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து போயிருக்கலாம். அதன் தடயம்கூட ஞாபகத்தில் கொஞ்சமும் இல்லாமல் அழிந்து போயிருக்கலாம். ஆனால், தங்களுடைய சிறு வயது ஜெபத்தை மட்டும் அவர்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திலே முழங்கால்படியிட்டார்கள், என்ன வார்த்தைகளை சொல்லும்படி தாயார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவர்கள் நினைவில் தெளிவாக இருக்கும். தாங்கள் ஜெபிக்கும்போது, தாயாரின் கண்கள் அன்போடு நோக்கிக் கொண்டிருந்ததைக்கூட நினைவில் வைத்திருப்பார்கள். நேற்றுதான் நிகழ்ந்த விஷயம் போல அது மிகவும் பசுமையாக அவர்கள் மனக்கண்களில் தோன்றும்.

பெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பவர்களாக இருந்தால், ஜெபிக்கும் பழக்கமாகிய விதையை அந்தப் பருவத்திலேயே விதைக்க மறவாதீர்கள். சரியானபடி ஜெபிப்பதற்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்காமல் போனாலும், ஜெபிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.

  1. பொதுவான கிருபையின் சாதனங்களை (Means of Grace) பிள்ளைகள் ஊக்கத்தோடும் தவறாமலும் கடைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

தேவனுடைய வீட்டிற்குச் (சபைக்கு) சென்று, அங்குள்ளோரோடு ஜெபத்தில் (ஆராதனையில்) கலந்துகொள்வது எவ்வளவு நன்மையானது என்றும், அது நமது கடமையென்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்கெல்லாம் கர்த்தருடைய ஜனங்கள் கூடிவருகிறார்களோ அங்கெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் விசேஷித்தவிதத்தில் இருக்கிறதென்று அவர்களுக்குக் கூறுங்கள். அதில் கலந்துகொள்ளத் தவறுகிறவர்கள், அப்போஸ்தலனாகிய தோமா தவறவிட்டதைப் போல ஓர் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள் என்பதையும் தெரிவியுங்கள். தேவனுடைய வீட்டிலே பிரசங்கிக்கப்படுகிற கர்த்தருடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை எடுத்துரையுங்கள். கடவுளின் வார்த்தைகள் மனமாறுதலுக்கும், பரிசுத்தப்படுத்துதலுக்கும், மனிதனுடைய ஆத்துமாவை வலுப்படுத்துகிறதற்கும் மிகவும் அத்தியாவசியமானது என்று தெரியப்படுத்துங்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமலிருக்கும்படியாக” (எபி 10:25) கட்டளையிட்டிருப்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். நாளானது சமீபித்து வருகிறதை எந்தளவுக்கு பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு புத்தி சொல்லுங்கள்.

கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்வதற்கு சபைகளிலுள்ள வயதானவர்கள் மட்டுமே வருவதைக் காண்பது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. இளம் வாலிபரும் பெண்களும் அதில் பங்கெடுக்காமல் திரும்பிப் போய்விடுகிறார்கள். அதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால் ஞாயிறுபாட சாலைக்கு வரும் சிறுபிள்ளைகளைத் தவிர்த்து, வேறு பிள்ளைகள் எவரும் சபைகூடுதலுக்கு வருவதில்லை என்பதே. இந்தக் குற்றம் உங்கள் குடும்பத்தின் மேல் இராமலிருக்கட்டும். சிறுபையன்களும் சிறுபெண்களும் பள்ளிகளுக்கு ஒழுங்காகப் போய் வருகிறார்கள். அதுபோல் அவர்களின் பெற்றோராகிய நீங்களும், அவர்களுடைய நண்பர்களும் அப்பிள்ளைகளை உங்களோடு சபைக்கு அழைத்து வரவேண்டும்.

சபைக்கு வராமலிருப்பதற்கு வீணான காரணங்களைக் காண்பிக்கின்ற பழக்கத்தை பெற்றோராகிய நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் உங்களுக்குக் கீழாக உங்கள் குடும்பத்தில் இருக்கிறவரையும், உடல்நலக் குறைவு ஏற்படும் நாட்களைத் தவிர, ஏனைய கர்த்தருடைய நாட்களில் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேண்டியது உங்கள் வீட்டின் சட்டம் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள். ஓய்வு நாளை ஆசரிக்காதவன் தனது ஆத்துமாவையே கொலை செய்துகொள்வதற்கு ஒப்பானவன் என நீங்கள் நம்புவதாக தெரிவியுங்கள்.

சபை ஆராதனை வேளையில் உங்கள் பிள்ளைகள் உங்களோடேயே வந்து உங்கள் அருகாமையில் அமரும்படிச் செய்யுங்கள். சபைக்கு போவது அவசியமானது, அப்படிப்போகிறபோது சபையில் ஒழுங்கோடு நடந்துகொள்வதும் அவசியம். உங்கள் கண்பார்வையில் உங்கள் பிள்ளைகள் இருக்கும்படி உங்கள் பக்கத்திலேயே சபையில் அவர்களை அமரச் செய்வதுதான் அவர்களுடைய நல்லொழுக்கத்திற்குப் பாதுகாப்பு என நான் நம்புகிறேன்.

இளம் பிள்ளைகளின் மனம் சுலபமாக வேறு விஷயங்களுக்குத் தாவிவிடும். அவர்களுடைய கவனம் சிதறும். இதை எதிர்ப்பதற்குரிய சகல வழிமுறைகளையும் நீங்கள் கையாள வேண்டும். அவர்கள் தனியாக சபைக்குப் போவதை நான் விரும்பவில்லை. போகிற வழியில் அவர்கள் தகாதவர்களோடு சேர்ந்துகொண்டு, மற்ற நாட்களைக் காட்டிலும் கர்த்தருடைய நாளில் அதிக தீமையான காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்ள அது துணை போய்விடும். சபையில் “இளம் வயதினர் அமரும் இடம்” என்று ஒன்றை ஏற்படுத்தி அவர்களை அங்கே இருக்க வைப்பதையும் நான் விரும்புவதில்லை. அங்கேதான் அவர்களுடைய கவனம் சிதறிப்போக வழியேற்படுகிறது. சபையில் அவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளவும் அது வழிவகுத்துவிடும். அந்தத் தீங்கான காரியத்தை அவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்களானால் அவர்களிடமிருந்து அந்தப் பழக்கத்தை அகற்றுவதற்கு அதிக காலம் ஆகும். சபையில் முழுக்குடும்பமாக, வயதானவர்களும் வாலிபப் பிராயத்தினரும் அருகருகே அமர்ந்திருப்பதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவரவருடைய குடும்பத்திற்கேற்ப கடவுளைத் தொழுது ஆராதிப்பதை நான் காண விரும்புகிறேன்.

ஆனால், சிலபேர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். பிள்ளைகளுக்கு கிருபையின் சாதனங்களை விளங்கிக்கொள்ள முடியாது என்றும் அதனால் இப்படி சபைக்கு அவர்களை அழைத்து வருவது பிரயோஜனமற்றது என்று சொல்லுவார்கள். இந்தவிதமான காரணங்களுக்கு நான் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டேன். இந்தவிதமான சிந்தனைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்ததாக நான் வாசிக்கவில்லை. மோசே பார்வோனின் முன்பாகச் சென்றபோது: “எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும் . . . போவோம். நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்” (யாத் 10:9) என்று கூறியதை நான் காண்கிறேன். மேலும் யோசுவா நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிற வார்த்தைகளை வாசித்தபோது, “. . . இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்” (யோசு 8:35). “வருஷத்தில் மூன்று தரம் உங்கள் ஆண் மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்” என்று யாத் 34:23ல் எழுதியிருப்பதைப் பார்க்கிறேன். புதிய ஏற்பாட்டிலும் பிள்ளைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தைப் போலவே சபை சம்பந்தமான பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் காண்கிறேன். பவுல் தீருபட்டணத்திலுள்ள சீஷர்களைவிட்டு புறப்பட்டபோது, “அவர்களெல்லோரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூட பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினோம்” என்று (அப் 21:5) எழுதியிருப்பதைப் பார்க்கிறேன்.

சாமுவேல் சிறு பிள்ளையாக இருந்தபோது, கடவுளை அவர் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே சிலகாலம் கடவுளுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்ததைக் காணலாம். “சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை” (1 சாமு 3:7). அது மாத்திரமல்ல, அப்போஸ்தலர்கள்கூட கர்த்தர் கூறிய வார்த்தைகள் எல்லாவற்றையும் அவை சொல்லப்பட்ட நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொண்டிருக்கவில்லை: “இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறிந்திருக்கவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதை . . . நினைவுகூர்ந்தார்கள்” (யோவான் 12:16).

பெற்றோர்களே, இந்த உதாரணங்களைப் பார்த்து ஆறுதலடையுங்கள். கிருபையின் சாதனங்களின் மதிப்பை உங்கள் பிள்ளைகள் இப்போது உணராமல் இருக்கிறார்களே என வேதனை அடையாதீர்கள். அவர்கள் ஒழுங்காக சபைக்கு வரும்படியான பழக்கத்தை மாத்திரம் இப்போது ஏற்படுத்திவிடுங்கள். அப்படி வருவதே பரிசுத்தமும், உயர்ந்ததும், உன்னதமானதுமான கடமையாயிருக்கிறது என்கிற சிந்தனையை அவர்கள் உள்ளத்தில் பதித்துவிடுங்கள். இதற்காக அவர்கள் உங்களை நன்றியோடு வாழ்த்துகின்ற நாள் விரைவில் வரும். (தொடரும்)

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.