திருமறைத்தீபம் 2013 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. மதில்மேல் பூனை
3. அசிங்கம் அந்தஸ்திற்கு அலைகிறது!
4. அலங்கரிக்கப்பட்ட பிணமும் பீசா கோபுரமும்
5. கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
6. கவிதைகள்
வாசகர்களே!
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய வருடம் பழையதைவிட நல்லதாக அமைந்து கர்¢த்தரின் ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையை நிரப்ப அவர் கிருபை பாராட்டட்டும். இந்த இதழ் நேரத்திற்கு முடிவடைந்து அச்சிடப்பட்டு உங்கள் கரத்தை அடையத் துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றி. பல பேருடைய உழைப்பில் உருவாகி இதழ் உங்கள் கரத்தை அடைகிறது. அதுவுமில்லாமல் நீங்கள் வேத அறிவிலும் தேவனுடைய அன்பிலும் வளர வேண்டும் என்ற ஒரே மேலான ஆத்மீக எண்ணத்துடன் இதை நாங்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கிறோம். வேறு எந்தவிதமான நோக்கங்களும் இல்லாமல் இதில் சம்பந்தப்பட்டவர்கள் உழைத்து வருகிறார்கள். பத்திரிகை உங்களுடைய வாழ்க்கைக்கும், கிறிஸ்தவ பணிக்கும் ஆத்மீக உரம் போட்டு உயர வைக்குமானால் அதுவே எங்களுடைய சிரமங்களுக்கெல்லாம் மருந¢தாக அமையும்.
இந்த இதழில் அல்பர்ட் என். மார்டினுடைய சுவிசேஷப் பிரசங்கம் ஒன்று வந்திருக்கிறது. சுவிசேஷத்தை தெளிவாக, ஆணித்தரமாக வெளிப்படுத்தும் பிரசங்க செய்தி இது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மாசுபடுத்தும் விதத்தில் சுவிசேஷ ஊழியங்கள் நிகழ்ந்து வரும் நம்மினத்துக்கு இதுபோன்ற சுவிசேஷ செய்திகளைக் கேட்கும் காலம் வரும்போதுதான் கர்த்தர் நம்மத்தியில் இருக்கிறார் என்று நாம் சந்தோஷப்பட முடியும். இதை நான் இதயபூர்வமாக சொல்லுகிறேன்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களின் திருமணம் பற்றி இன்று அதிகமாக மேலை நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. அதுபற்றிய விளக்கமான ஆக்கம் இதில் வந்திருக்கிறது. நம்மைச் சுற்றி நடந்துவரும் காரியங்கள் நம்மையும், சபையையும் பாதிக்காமல் போகாது. சிந்திக்காமலும், எல்லா விஷயங்களிலும் சுவிசேஷ அணுகுமுறையில்லாமலும் இருப்போமானால் உலக இச்சையான பேரலை நம்மை அடித்துச்சென்று ஆழியில் அமிழ்த்திவிடும்.
விசுவாசத்தை அடித்தளமாகக் கொண்டிராத வேத அறிவைப் பற்றியும், விசுவாசிகளாக இருந்து வேத அறிவில் நாட்டம் காட்டாதவர்களைப் பற்றியும் இந்த இதழில், 'அலங்கரிக்கப்பட்ட பிணமும் பீசா கோபுரமும்' என்ற தலைப்பில் விளக்கியிருக்கிறேன். இந¢த ஆக்கம் உங்களை சிந்திக்க வைக்கட்டும். முடிந்தால் எழுதுங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
- ஆசிரியர்
மதில்மேல் பூனை
- அல்பர்ட் என். மார்டின் -
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்.
என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். - லூக்கா 11:23
இந்த வேத வசனம் மிக முக்கியமானது. இந்தச் செய்தியை நாம் அடிக்கடி மறுபடியும் மறுபடியுமாக நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் இதை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஏனென்றால், இயேசு கிறிஸ்துவோடு உங்களுக்குள்ள தொடர்பு எப்படி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதை வேதாகமத்திலுள்ள ஏனைய வசனங்களைக் காட்டிலும், இந்த வசனமே நமக்கு அதிகமாகத் தெளிவோடு காண்பிக்கிறது. இந்த வசனம் என்ன சொல்கிறது தெரியுமா? எந்தவொரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், ஒரு பக்கமும் சாராத இடைப்பட்ட நிலை என்று ஒன்று உங்களுக்கு இருக்கவே முடியாது என்பதைத்தான் சுட்டிக் காண்பிக்கிறது. மதில் மேல் பூனை என்று சொல்வார்களே அதைப்போல.
லூக்கா 11:23ம் வசனத்தைக் கவனியுங்கள்: "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்" என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அங்கே சொல்லுகிறார். இந்த ஒரு வசனத்தை மாத்திரம் இன்றைக்கு எடுத்துக் கொண்டு, அதை அழுத்தம் கொடுத்து உச்சரித்து, பலவிதமாக மீண்டும் மீண்டுமாக பலமுறை படிக்கச் செய்து, ஒரு சில சகோதரர்களை அழைத்து ஜெபிக்கும்படிச் செய்து உங்களை இன்று வீட்டிற்கு அனுப்பிவிட்டேனென்றாலும்கூட இந்த வசனம் உங்கள் இருதயங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்து, அதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும் என்பதைக் குறித்து எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால், நான் அப்படி செய்யப் போவதில்லை. இயேசு கிறிஸ்து இவ்வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிற மதில்மேல் பூனைபோன்ற இடைப்பட்ட நிலை என்று ஒன்றில்லை என்கிற அடிப்படை உண்மையை நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன்.
எந்த சந்தர்ப்பத்தில் நமது ஆண்டவர் இந்த வசனத்தை சொன்னார்?
இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து வந்த இவ்வார்த்தைகள், அவர் எங்கேயிருந்து எப்படிப் பேசியிருந்தாலும், எந்த சூழ்நிலையில் சொல்லியிருந்தாலும் அது சத்தியமானது. வனாந்திரத்திலிருந்து பேசியிருந்தாலும், கலிலேயாக் கடலில் ஒரு படகில் அமர்ந்து விளக்கி யிருந்தாலும், திரள்கூட்டத்தாரிடம் கூறியிருந்தாலும் ஆண்டவர் கூறிய இவ்வார்த்தைகள் சத்தியமானவை. பிதாவினால் தனக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டுமே அவர் பேசினார். நானே வழி என்று மாத்திரமல்ல, நானே சத்தியமாகவும் ஜீவனாகவும் இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இப்போது இந்த வார்த்தைகளை அவர் ஒரு விசேஷமான சூழ்நிலையில் சொல்லியிருக்கிறார். இவ்வார்த்தைகளைக் கூறும்படியான நிலைமைக்கு அந்தச் சூழ்நிலை அவரைக் கொண்டு சென்றது. இவ்வார்த்தைகளைக் கூறும்படியாக கர்த்தராகிய ஆண்டவரைத் தூண்டியது எது?
இந்த வார்த்தைகளைக் கேட்கும்படியாக அங்கு கூடியிருந்தவர்கள் யார்?
அங்கு கூடியிருந்தவர்களின் மத்தியில், தங்களை அவருக்கு அர்ப்பணித்திருந்தவர்களாகிய அவருடைய சீஷர்களும் இருந்தார்கள் என்பதை முதலாவதாக அறிந்துகொள்ளுகிறோம். இந்த அதிகாரம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை கவனியுங்கள்: "அவர் ஓர் இடத்தில் ஜெபம் பண்ணி முடித்த பின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி, ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்." நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்கு பதில் அளிக்கிறார். தனக்கு மிகவும் நெருக்கமான சீஷர்களோடு, அவர் நேசத்தோடு பேசிக் கொண்டிருக்கிற காட்சி அங்கு வெளிப்படுகின்றது. ஜெபத்தைக் குறித்த அருமையான ஆலோசனைகளை அவர் அங்கு சொல்லிக் கொண்டு வருகிறார்.
நாம் 14 ஆம் வசனத்தில் தொடர்ந்து வாசிக்கிறோம்: "பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப் போனபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்" என்று. சீஷர்களோடு அவர் அளவளாவிக் கொண்டிருந்த காட்சியிலிருந்து இப்போது இன்னொரு காட்சிக்கு லூக்கா நம்மைக் கொண்டு வருகிறார். இவை இரண்டிற்கும் இடையிலுள்ள காலத்தைக் குறித்து லூக்கா கூறவில்லை. தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து அவருக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருந்த சீஷர்கள் மாத்திரமல்ல, ஊமையான பிசாசைத் துரத்தின அற்புதத்தை கண்ட ஜனக்கூட்டம் ஒன்றும் அவரை சூழ்ந்திருந்த வேறொரு காட்சிக்கு லூக்கா நம்மை அழைத்துச் செல்கிறார். அதில் பேசக்கூடாத பிசாசின் ஆவியையுடைய ஒருவனிடம் இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதத்தை காண்கிறோம்.
மேலும், 15 ஆம் வசனத்தில் "இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான்" என சொல்லுகிற சிலரையும் அந்தக் கூட்டத்தாரின் மத்தியில் நாம் காண்கிறோம். இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்த மதத்தலைவர்கள் என்பதை மற்ற சுவிசேஷங்களிலுள்ள இதே சம்பவத்தின் மூலமாக அறிகிறோம். இவர்கள் இயேசுவுக்கு பின்பாக சென்று, அவருக்கு விரோதமானவைகளை பரப்புவதையே விடாமல் செய்து கொண்டிருந்தார்கள். அவர் சொல்லுகிறபடி அவர் உண்மையில் மேசியா அல்லவென்றும், அவர் ஓர் ஏமாற்றுக்காரரென்றும் ஜனங்களிடம் கூறிவந்தார்கள். இயேசு பிசாசின் ஆவியைத் துரத்தினதை அவர்களால் மறுக்க முடியாததால், இயேசு பிசாசோடு கூட்டு சேர்ந்து கொண்டு பிசாசின் ஆவியைத் துரத்துகிறார் என்று ஜனங்களிடம் கூறினார்கள். பிசாசுகளின் மத்தியில் இவருக்கு செல்வாக்கு உண்டென்றும், அவைகளின் உடன்பாட் டோடுதான் அவர் அவைகளைத் துரத்துகிறார் என்றும் கூறினார்கள். இப்படி யான சிந்தனையை உடைய ஓர் அவிசுவாசக்கூட்டமும் அங்கிருந்தது.
16ஆம் வசனத்தில் இன்னொரு பிரிவினரையும் நாம் காண்கிறோம். அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று கேட்கும் சிலரையும் நாம் அங்கு பார்க்கிறோம். இவர்கள் ஒருவேளை நமது ஆண்டவரை எதிர்க்கிற விரோதிகளாக இல்லாமல் இருக்கலாம். இவர்கள் கொஞ்சம் சந்தேகப்பிராணிகள். இயற்கைக்குப் புறம்பானதொரு அற்புதத்தை நாங்கள் இப்போது கண்டது உண்மையா யிருக்கலாம். ஆனால் எங்களுக்கு இன்னும் அதிகமான அடையாளம் காண்பிக்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள். வானத்திலிருந்து வருகின்ற அடையாளமாக அது இருக்க வேண்டும் என்கிறார்கள்.
நாம் இன்னும் மேலே வாசித்துக் கொண்டே போவோமானால், 27ஆம் வசனத்தில், அவர் இவைகளை சொல்லிக் கொண்டு வருகையிலே ஜனக்கூட்டத்தாரிலிருந்த ஒரு ஸ்திரீயைப் பற்றியும் வாசிக்கிறோம். 'ஜனக்கூட்டத்தாரிலிருந்த' என்கிற வார்த்தையானது, அவர் செய்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட திரள்கூட்டத்தாரையும், பிசாசோடு கூட்டுச்சேர்ந்தவராக அவரைக் காண்கிற அவருடைய விரோதிகளையும், அவரை சந்தேகக் கண்ணால் பார்ப்பவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அந்த ஜனக்கூட்டத்திலிருந்து ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: "உம்மை சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியிருந்தாலும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்கிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்." அந்தக் கூட்டத்தாரின் மத்தியிலே மிகுந்த உற்சாகமுடையவளாக இந்த ஒரு ஸ்திரீ காணப்படுகிறாள். இவள் ஒருவேளை மற்றவர்களின் சார்பாகவும் பேசியிருக்கலாம். இயேசுவை யாரென்று அடையாளம் கண்டவளாக இவள் காணப்படுகிறாள். அதை மிகுந்த உற்சாகத்தோடு தனது வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்துகிறாள். அவர் யாரென்பதையும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்தவளாக மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிறாள். உம்மை சுமந்த கர்ப்பம் பாக்கியமுள்ளது என்கிறாள். உமது தாயார் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்கிறாள். ஏன்? இந்தவிதமான வல்லமையான அற்புதத்தை செய்கிற ஒரு மகனைப் பெற்றாளே என்பதால்தான். ஆகவே அவளுடைய பங்காக, இயேசுவின் வார்த்தைகளைக் குறித்தும் அவர் செய்த அற்புதத்தைக் குறித்தும் மிகுந்த உற்சாகத்தோடு இவ்வார்த்தைகளை மிகுந்த சத்தமாகக் கூறுகிறாள்.
ஆகவே அங்குள்ள சந்தர்ப்பத்தின் பின்னணியில் மூன்று அல்லது நான்கு விதமான மக்கள் இருந்ததை அறிகிறீர்கள். அவருக்கு தங்களை ஒப்புவித்திருந்த சீஷர்கள் அங்கிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்போஸ்தலர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள், பிற்பாடு ஒருவன் அவரைக் காட்டிக் கொடுத்தவனாயிருந்தாலும், ஒரு குழுவாக அவருடைய வார்த்தைகளைக் கேட்பவர்களாகவும், அதைக் கடைப்பிடிப்பவர்களாகவும், அவர் எங்கு சென்றாலும் அவரோடு செல்பவர்களாகவும், விசுவாசத்தினாலும் அன்பினாலும் கீழ்ப்படிதலினாலும் அவரோடு இணைக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். அவருடைய உண்மையான சீஷர்களாகிய இந்தக் கூட்டம் அங்கிருந்தது. அவரைப் பகைத்தவர்களாகிய அவருடைய விரோதிகளும் அங்கிருந்தனர். அவரை சோதிப்பதற்காக வானத்திலிருந்து அடையாளம் கேட்கிறவர்களாகிய பாதி நிச்சயமும், பாதி சந்தேகமும் உடைய கூட்டத்தாரும் அங்கிருந்தனர். இயேசுவின் தாயாரைப் பாக்கியமுள்ளவளாகக் கருதிய அந்த ஸ்திரீயின் மனநிலையைக் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்த சிலரும் அங்கிருந்திருக்கலாம்.
இவ்விதமாக மூன்று அல்லது நான்குவிதமான மனநிலையைக் கொண் டிருந்த கூட்டத்தாரின் மத்தியில்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்: 'என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.' அவர் கூறுகிற இந்த வார்த்தைகள் எதைத் தெளிவாக விவரிக்கிறதென்றால், இயேசுவைப் பற்றி மூன்று அல்லது நான்குவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தாரில் உண்மையில் இரண்டே பிரிவுகள்தான் இருக்கிறது என்பதை விளக்குகிறது. இரண்டே இரண்டு ராஜ்ஜியங்கள்தான் இருக்கிறது என்பதை அவர் நிச்சயமாகத் தெரிவிக்கிறார். 17ஆம் வசனத்தில்: அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்ஜியமும் பாழாய்ப்போம் . . . சாத்தானும் தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்ஜியம் எப்படி நிலைநிற்கும் (18) . . . நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே (20) எனக் கூறுவதைக் காண்கிறோம். ஆகவே இரண்டு ராஜ்ஜியங்கள் மட்டும் இருப்பது நிச்சயம். ஒன்று சாத்தானின் ராஜ்ஜியம், அடுத்தது தேவனுடைய ராஜ்ஜியம். எனவே மனிதர்கள் ஒன்று, அவரோடு இருக்கிறார்கள் அல்லது அவருக்கு விரோதியாக இருக்கிறார்கள். ஒருவன் அவரோடு இணைகிறவன் மற்றவன் அவரை வெறுக்கிறவன்!
அத்தகைய ராஜ்ஜியங்களின் பிரதிநிதியாக இருவரை அவர் தெளிவாக விவரித்துக் காண்பிக்கிறார். ஒருவன் பலவான், மற்றொருவன் அவனிலும் பலவான்! "ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக் கொண்டு, அவனுடைய கொள்ளைப் பொருளைப் பங்கிடுவான்" (வசனம் 21-:22). இந்த இடத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்ஜியத்தையும் சாத்தானுடைய ராஜ்ஜியத்தையும் குறித்து உவமையாகப் பேசுகிறார். சாத்தானுடைய ராஜ்ஜியம் என்பது ஆயுதந்தரித்த பலவானுடைய ராஜ்ஜியத்திற்கு ஒப்பானது. கிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்பது அவனிலும் அதிக பலவானுடைய ராஜ்ஜியத்திற்கு ஒப்பானது. ஏனெனில் அவன் வந்து பலவானுடைய கொள்ளைப் பொருளைப் பங்கிடுகிறான். அங்கே, ஆயுதந்தரித்த பலவானாகிய சாத்தான் ஒரு மனிதனிடம் வந்து அவனைப் பிடித்திருந்தபோது அம்மனிதன் ஒன்றும் பேசக்கூடாத ஊமையனாயிருந்தான். அவனிலும் பலவானாகிய இயேசு கிறிஸ்து வந்து, அந்த பிசாசைத் துரத்தியதின் மூலமாக அவரே அதிக பலவான் என்பதை நிரூபிக்கிறார். மேலும் தனக்கு இருளின் ராஜ்ஜியத்தின் மீதும், அந்த ராஜ்ஜியத்தின் அதிபதியின் மீதும் அதிகாரம் இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறார். இப்படியான சந்தர்ப்பத்தின்போதுதான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்" என்கிற வார்த்தைகளைக் கூறுகிறார். மூன்று நான்கு விதமான ஜனங்கள் அங்கே இருப்பதாகக் காணப்படும் அந்த சூழ்நிலையில்தான் அவர் இதைக் கூறுகிறார். மூன்று நான்கல்ல, இரண்டே ராஜ்ஜியங்கள் மட்டுந்தான் இருக்கின்றன. அதாவது, சாத்தானுடைய ராஜ்ஜியமும் தேவனுடைய ராஜ்ஜியமும். பலவானும் அவனிலும் அதிக பலவானும். இவை இரண்டு மாத்திரமே இருப்பது எவ்வளவு உறுதியோ, அது போலவே அவரோடு இராதவனும் அவரோடு சேராதவனும் என்கிற விஷயமும் நிதர்சனமான உண்மை.
உதாரணமாக, இன்றைக்கு இங்கே கூடிவந்திருப்பவர்களின் பாலினத்தை வைத்து ஒன்று, அவர்கள் ஆணாக இருப்பார்கள் அல்லது பெண்ணாக இருப்பார்கள் என்று நான் ஆணித்தரமாகக் கூறினேனானால் அதை யாரும் மறுத்துப் பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சிறு பையனாகவோ அல்லது சிறு பெண்ணாகவோ, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் உங்களில் ஒவ்வொருவரும் இருப்பீர்கள். "அது" எனக் குறிப்பிடக்கூடிய அஃறிணையிலோ அல்லது ஆண்- பெண் பாலினத்திற்கு இடைப்பட்ட நிலையிலோ யாரும் இங்கு இருக்க மாட்டீர்கள் இல்லையா? இதையே வேறுவிதமாக சொல்வோமானால், யாரெல்லாம் பெண்ணாக இல்லையோ அவர் ஆணாகத்தான் இருப்பார், யாரெல்லாம் ஆண் இல்லையோ அவர் பெண்ணாகத்தான் இருப்பார். இந்த கருத்துக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டீர்கள் இல்லையா? இதை விளக்குவதற்கு அப்படியொன்றும் மிகப்பெரும் ஞானம் அவசியமில்லை. ஆண்களெல்லாம் வலது பக்கமும் பெண்களெல்லாம் இடது பக்கமும் நில்லுங்கள் என்று கூறி இடையில் ஒரு கோடு போடுவோமானால் அந்தக் கோட்டின் மீது நிற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதை மறுத்து யாரும் விவாதிக்க முடியாது. ஒன்று ஆண் அல்லது பெண்தான் இருக்க முடியும். மதில்மேல் பூனை போன்ற இடை நிலை என்று எதுவுமில்லை. இதைத்தான் இயேசு கிறிஸ்துவும் அந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறார். இந்த இடத்தில் இரண்டு மூன்றுவிதமான பிரிவினர் போலத் தோற்றமளிக்கும் மனிதர்கள் இருந்தாலும், இரண்டேவிதமான பிரிவினையைத்தான் தான் காண்பதாக அவர் விளக்குகிறார். ஒன்று நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள் அல்லது எனக்கு விரோதமாக இருக்கிறீர்கள் என்கிறார். நீங்கள் என்னோடே சேர்கிறவர்கள் அல்லது சிதறிப் போகிறவர்கள். இதற்கு இடைப்பட்ட நிலையில் யாருமே இல்லை.
அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
எந்த சந்தர்ப்பத்தில் ஆண்டவர் இவ்வார்த்தைகளை கூறினார் எனப் பார்த்தோம். இப்போது அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்பதை இரண்டு தலைப்புகளின் கீழ் பார்ப்போம்.
- அது பற்றிய பொதுவான விளக்கம்,
- அது பற்றிய குறிப்பான ஆழமான பார்வை.
(1) இயேசுவின் வார்த்தைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, இயேசுவாகிய நபர், அவருடைய ஊழியம் இவ்விரண்டையும் பொறுத்தவரையில் யாரும் எந்தவிதமான இடைப்பட்ட நிலையிலும் இருக்க முடியாது என்பதை இயேசுவின் வார்த்தைகள் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன. என்னோடே இராதவன் எனக்கு விரோதமாக இருக்கிறான் என்றும், என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறவனாக இருக்கிறான் என்றும் இயேசு சொன்னார். இயேசுவாகிய எனது ஊழியம் பாவிகளை என்னுடன் இணைத்துக்கொள்ளுவதே என்கிறார் இயேசு. பாவிகளைத் தனக்கு அறிமுகப்படுத்தாதவனை அவர் மேற்கூறிய இரண்டு நிலைகளில் எதையும் சாராதவனாகக் குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். அப்படிப்பட்டவனை அவர் சிதறடிக்கிறவனென்று குறிப்பிடுகிறார். ஒருவன் பாவிகளை என்னிடம் அறிமுகப்படுத்தாதவனாக இருந்தால் அவன் அவர்களை என்னைவிட்டு துரத்தி விடுகிறவனாக இருக்கிறான் என்கிறார் இயேசு. ஆகவே இந்தப் பொதுவான விளக்கத்தில் காணப்படும் உண்மைகளை கிரேக்க மொழி அறியாத சிறுபிள்ளைகள்கூட சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகளில் மதில்மேல் பூனைபோன்ற இடைப்பட்ட நிலையென எதுவும் காணப்படவில்லை என்பதைப் புதுவிசுவாசிகளும்கூட நன்றாக விளங்கிக்கொள்ள முடியும்.
(2) இயேசுவின் வார்த்தைகளைக் குறிப்பாக ஆழமாகக் கவனிக்கும்போது, அதில் இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் சொல்லுவதைக் கவனிக்கலாம். இடைப்பட்ட நிலை என்று ஒன்று இருக்க முடியாது என்பதை அவை தெளிவாக விளக்கிக் காண்பிக்கின்றன. முதலில், ஆண்டவராகிய இயேசுவிடம் இருக்க வேண்டிய உறவில் எந்தவிதமான இடைப்பட்ட நிலையும் இருக்க முடியாது. இரண்டாவது, அவருடைய ஊழியம் சம்பந்தமான எந்தவித இடைப்பட்ட நிலையும் காணப்பட முடியாது. என்னோடு இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடு இணைந்து நடக்காதவனும், என்னோடிருப்பதை விலையேறப்பெற்ற பாக்கியமாக எண்ணாதவனும், தன்னை என்னோடு இணைத்துக் கொள்ளாதவனும் எனக்கு விரோதியாக இருக்கிறான் என்கிறார் இயேசு. அவன் எனக்கு எதிரியாக இருந்து செயல்படுகிறான். இயேசுவாகிய என்னிடம் ஒருவன் இணைக்கப்பட்டவனாகவோ அல்லது இணைக்கப்படாதவ னாகவோ இருக்கின்ற நிலையைத் தவிர வேறு இடைப்பட்ட நிலையே கிடையாது என்று இயேசு ஆணித்தரமாகக் கூறுகிறார்.
அதைக் கேட்ட அங்கிருந்த கூட்டத்தாருக்கு அது எந்தவிதமான எண்ணத்தை உண்டாக்கியிருக்கக்கூடும் என்பதை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்: 'நாங்கள் எங்களுடைய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இப்போது உம்மிடம் வந்திருக்கிறோமே. உம்முடைய வார்த்தைகளைக் கேட்கவும், நீர் செய்கிற அற்புதங்களைக் காணவும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். நீர் செய்ததைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். இந்தக் கூட்டத்திலிருந்து ஒரு ஸ்திரீகூட உமது தாயார் பாக்கியவதி என்று அறிக்கை செய்தாளே. ஆண்டவரே! நீர் தனிப்பட்ட விதத்தில் என்னைச் சுற்றி இங்கே ஒரு எல்லையைப் போடுகிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கறாராய் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுவதென்னவென்றால், ஒன்று நான் முற்றிலும், சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் உம்முடையவனாக இருக்கிறேன், அல்லது உமக்கு விரோதமாக செயல்படுகிறவனாக இருக்கிறேன் என்று வரையறுக்கிறீர்கள்' என்று நினைத்திருப்பார்கள். அதுதான் உண்மை என்று இயேசு சொல்லுகிறார். அவர்கள் அதை அறிந்திருந்தாலும் சரி, அதிலுள்ள உண்மையை புரிந்து கொண்டிருந்தாலும் சரி, நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் நிதரிசனமான உண்மையை இங்கே விளக்குகின்றது. ஜனங்கள் தங்களைக் குறித்து தாங்களே கொண்டிருக்கின்ற எண்ணத்தையல்ல, அவர்களைப் பற்றிய உண்மை நிலையை அவை அறிவிக்கின்றன. நீங்களும்கூட ஒருவேளை அந்த கூட்டத்தார் போலவே, 'நீங்கள் மிகவும் கறாராக அல்லவா சொல்லுகிறீர்கள்' என்று கேட்கலாம். 'நாங்கள் ஒருவேளை இயேசு கிறிஸ்துவோடு இணைந்தவர்களாக காணப்படாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் அவருக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் இல்லையே' என கூறுவீர்கள். இந்த விஷயத்தை ஏன் இயேசு கிறிஸ்து கொஞ்சமும் சலுகை எதுவும் காட்டாமல், சந்தேகத்துக்கே இடமில்லாத வகையில் உறுதியாகச் சொல்லுகிறார்? விசுவாசத்தினாலும் அன்பினாலும் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்படாதவர்களாகவும், அவர் மீது முழுநம்பிக்கையும் பக்தியும் வைக்காதவர்களாகவும் இருந்துகொண்டு, நாங்கள் ஒன்றும் அவருக்கு விரோதமாக செயல்படவில்லையே என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: ஒன்று, இயேசுவைக் குறித்தும் அவர் நிறைவேற்றியிருக்கிற ஊழியத்தைக் குறித்தும், உங்கள் மீது அவருக்கு இருக்கிற உரிமையைக் குறித்தும் அவர் அறிவித்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் அவைகளை வேண்டுமென்றே அடக்கி வைக்கிறீர்கள். அல்லது அவர் அறிவித்திருப்பவைகளையே நீங்கள் அறியாமல் அறியாமையில் இருக்கிறீர்கள்.
'என்னோடே இராதவன்' என்று இயேசு கிறிஸ்து கூறும்போது, முதலாவதாக, தான் யாரென்பதை முற்றிலுமாக உணர்ந்தவராகவே அவர் கூறுகிறார். தான் ஒரு விசேஷமான மனிதன், தேவகுமாரன் என்பதால் அப்படி கூறுகிறார். 10ஆம் அதிகாரம் 22ஆம் வசனத்திலே அவர் தான் யாரென்பதை நிலைநிறுத்துகிறார். "சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான். குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான்." இந்த இடத்திலே இயேசு கிறிஸ்து தாம் ஒருவர் மாத்திரமே கடவுளை அறிந்திருப்பதாக உரிமை பாராட்டுகிறார். ஏன்? அவரும் கடவுளாகவே இருப்பதால், தாம் மாத்திரமே கடவுளை அறிந்திருப்பதாகக் கூறுகிறார். தெய்வீகம் மாத்திரமே தெய்வீகத்தை உணர முடியும். கடவுளோடு ஒன்றாக இருந்து அவரோடு தெய்வீகத்தில் பங்குபெற்றிருக்கிறவர் மாத்திரமே அவரை அறிந்திருக்க முடியும். தாம் மாத்திரமே ஒருவனுக்கு பிதாவை வெளிப்படுத்த முடியும் என்கிற தனது உரிமையையும் அவர் அங்கே குறிப்பிடுகிறார். மனிதனாக இருந்து கொண்டு, அவர் தம்மை கடவுளாகப் பாவித்து உரிமை கொண்டாடுவதை யூதர்கள் விரும்பவில்லை. வானத்திலிருந்து வந்ததாகவும் திரும்பவும் அங்கே செல்லப் போவதாகவும் வெட்கமில்லாமல் அறிவிக்கிறாரே என்று நினைக்கிறார்கள். அவரோ பிதாவிடமிருந்து வந்தவர், பிதாவோடு இருந்தவர், பிதாவின் ஒரே பேறான குமாரன். ஆகவேதான் அவர் கூறுகிறார்: என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே இணைந்து இராதவன் நிச்சயமாக எனக்கு விரோதியாகத்தான் காணப்படுவான். ஏனென்றால் உண்மையில் நான் யாரென்பதை நீங்கள் அறிந்திருக்கவேயில்லை.
அதுபோலவே, தான் மேசியா என்பதையும் அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். தனது சீஷர்களுக்கு விசேஷமாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்பதை அவர்களும் அறிக்கையிட்டிருக்கிறார்கள். தாமே பிரதான ஆசாரியராகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும் கடவுளிடமிருந்து முடிவாக வந்தவர் என்பதை சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கடவுளின் சித்தத்தை முழுவதுமாக வெளிப்படுத்துகிற தீர்க்கதரிசி அவர். பாவங்களுக்காக ஒரே தடவையாக முடிவான பலியை செலுத்துகிற ஆசாரியர் அவர். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகனும் அவரைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார். கடவுளிடமிருந்து வந்த மகிமையும் பூரணமுமான ராஜா அவர். பரிபூரணமான அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டவர். பூலோகத்தில் தமது ஊழியத்தை நிறைவேற்றி முடித்த பின்பு அவர் தமது பிதாவிடம் மகிமையில் ஏறெடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக தமது சீஷர்களிடம், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தவர். தமது ஊழியகாலம் முழுவதுமாக, தான் யாரென்பதை மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார். தேவன் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்று அவர் கூறினார். நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஒருவன் முற்றிலுமாக தன்னை விசுவாசிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார்.
தன்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் இருதயத்தில் தனக்கு முதலாவது இடத்தை அளிக்க வேண்டும் என்கிறார். இதே லூக்கா சுவிசேஷத்தில் இன்னும் சில அதிகாரங்களுக்குப் பிறகு பார்த்தோமானால் அவரை விரும்பித் தேடி வருகிற ஒரு திரள் ஜனக்கூட்டத்தைக் காண்கிறோம். தங்களுடைய இருப்பிடத்தையும், வேலையையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்துவிட்டு அவருக்கு பின்னாக சென்ற கூட்டத்தாரைக் காண்கிறோம். லூக்கா சொல்லுகிறார், "அநேக ஜனங்கள் அவரோடேகூட பிரயாணம் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப் பார்த்து: யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான்." பிதா உங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக செய்ய என்னால் மட்டுமே முடியும் என்று என் மீது நீங்கள் முழுநம்பிக்கை வைப்பது மாத்திரமல்லாமல், தாய் தகப்பன், சகோதர சகோதரி, கணவன் மனைவி, உங்கள் சொந்த ஜீவன் ஆகிய அனைத்துக்கும் மேலாக நீங்கள் என் மீது அன்பு செலுத்த தயாராக இல்லாவிட்டால் நீங்கள் என்னோடிருக்க முடியாது.
அது மாத்திரமல்ல, கீழ்ப்படிதலுக்கும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒருவன் என் பின்னே வரவேண்டுமானால் அவன் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினமும் என்னைப் பின்பற்றி வரக்கடவான். அதுமுதற்கொண்டு என் சித்தம் மாத்திரமே உங்களை ஆளும். இனிமேல் உங்களுடைய ஆசைகளோ, விருப்பங்களோ உங்களை ஆளவிடக்கூடாது. உங்களையே வெறுத்து, சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள், என்று சொல்லுகிற ஒருவரின் முன்னால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாக உணருகிறீர்களா? அதைத் தவிர்த்து இடைப்பட்ட நிலை என ஒன்றும் இருக்க முடியாது. இதைத்தான் நமது ஆண்டவர் இந்த வசனத்தின் மூலமாக உணர்த்துகிறார்: என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னுடைய தனித்துவமான இயல்பில் உங்களை இணைத்துக் கொண்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். எனது ஊழியத்தினால் உருவான பாதுகாப்பை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே என்னோடே இருக்கிறவன்.
இன்றைக்கும்கூட உங்களில் சிலர் அவரோடு இருக்கிறவர்களாக இருக்கலாம் அல்லது அவருக்கு விரோதிகளாக இருக்கலாம். நீங்கள் அவரோடு இணைந்திருந்தால் அவருக்கு அருகில் இருப்பீர்கள். உங்களையே அவருக்கு ஒப்புவித்திருப்பீர்கள். வசனத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் இயேசுவிடம் வந்திருப்பீர்களானால், இயேசு ஒரு மகத்தான மதத்தலைவர் என்பதால் அல்ல, சரித்திரம் படைத்த பல மதத்தலைவர்களில் ஒருவர் என்பதாலும் அல்ல, அவர் கடவுளின் ஒரே பேறான குமாரன் என்பதாலேயே அவரிடம் வந்திருக்கிறீர்கள். அவர் பிதாவை வெளிப்படுத்துகிறவர். தேவன் நம்மோடிருக்கிறார் என்கிற இம்மானுவேல் அவர். தேவனின் முடிவான தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய மேசியாவாகிய அவர் மூலமாக மாத்திரமே உங்களுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகிறது என்பதைக் காண்கிறீர்கள். அதனாலேயே தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறார். வசனத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவரால் உங்கள் கண்கள் திறக்கப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்துவையும் அவர் நிறைவேற்றிய பணியையும் பார்த்து அவரை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக காண்கிறீர்கள். நான் அவரிடம் கொண்டுவந்தது எதுவுமில்லை, அவரது சிலுவையையே பற்றிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறுவது உங்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நான் என்னையே உமக்கு ஒப்புவிக்கிறேன். அதை மாத்திரமே என்னால் செய்ய முடியும் என்பீர்கள். அவரை முற்றிலுமாக விசுவாசிப்பதோ, எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பதோ, அவருக்குக் கீழ்ப்படிவதோ உங்களுக்கு பாரமானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் நீங்கள் அவரோடு இருக்கிறீர்கள். அவருடைய நுகம் மெதுவானது என உணருகிறீர்கள். அவருடைய சுமை இலேசானதாயிருக்கிறது. முற்றிலுமாக விசுவாசிப்பதற்கு அவரே பாத்திரமானவர் என நீங்கள் கூறுகிறீர்கள். இன்னும் அதிகமாக அவரை விசுவாசிக்கவில்லையே, இடைவிடாமல் விசுவாசிக்கவில்லையே என்பதுதான் உங்கள் கவலையாயிருக்கிறது. ஆவிக்குரியவிதத்தில் எல்லாவற்றிற்கும் மேலான அன்பு செலுத்துவதற்கு அவர் தகுதியானவரே, இருதயத்தில் பிரதானமான இடத்தை வகிக்கக் கூடியவர் அவரே. ஆனாலும் அவருக்கே உரியதான என்னுடைய இருதயம் மாறுபாடுள்ளதாக இருப்பதால் மற்ற காரியங்களை நேசித்து அதன் பிறகாக போவது எனக்கு வருத்தத்தையும் சஞ்சலத்தையும் விளைவிப்பதாக இருக்கிறது என்கிறீர்கள். அவருக்கு நான் கீழ்ப்படிந்திருப்பதே தகும். சிறுபையனோ, சிறுபெண்ணோ, விடலைப் பருவத்திலுள்ளவர்களோ, நடுத்தர வயதினரோ, முதிர்வயதினரோ யாராயிருந்தாலும், அவர் கீழ்ப்படியும்படியாகக் கூறியிருக்கும் காரியங்கள் யாவும் நன்மையானவைகளே. ஆனாலும் அவற்றிற்கு உறுதியாகக் கீழ்ப்படியாமலும் தொடர்ந்து கீழ்ப்படியாமலும் போகிற எனது நிலையைக் குறித்து மிகவும் வருந்துகிறேன் என்கிறீர்கள். அதுதான் அவரோடே இருப்பது என்பது. நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? இல்லையென்றால் நீங்கள் அவருக்கு விரோதமாக இருக்கிறீர்கள். இயேசு சொல்லுகிறபடி நீங்கள் அவருக்கு விரோதியாயிருக்கிறீர்கள்.
ஒருவேளை நீங்கள் சொல்லலாம், அப்படி அவர் சொல்வது சரியல்லவே என்று. நான் அவருடைய நாமத்தை வீணிலே வழங்கவில்லையே. நான் அவரை விசுவாசிக்கவில்லை எனக் கூறவில்லையே. அவர் இவ்வுலகத்திற்கு வரவில்லை என நான் சொல்லவில்லை. அது வேதத்தில் எழுதப்பட்டிருக் கிறதே. அவர் மரியாதைக்குரியவர் என்பதை நான் மறுக்கவில்லையே என்பீர்கள். நண்பர்களே! அது பெரிய விஷயமல்ல. தான் இவ்வுலகத்திற்கு வந்ததை நீங்கள் விசுவாசிப்பதிலும், தனக்குரிய மரியாதையை செலுத்து வதிலும் நீங்கள் கொஞ்சம் சலுகை காண்பிக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்க வில்லை. உங்களிடம் இருக்க வேண்டியதையே அவர் முழுமையாக எதிர்பார்க்கிறார். அவர் ஆண்டவராக இருப்பதால் அப்படி எதிர்பார்ப்பதற்கு அவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. அவர் எதிர்பார்ப்பது உங்களிடம் காணப்படவில்லையென்றால் நீங்கள் அவருக்கு விரோதமானவர்கள். தேவனுடைய குமாரனுக்கு விரோதமானவர்களாயிருப்பீர்கள். பலவானிலும் அதிக பலவானாக வந்தவருக்கே விரோதமானவர்களாக இருப்பீர்கள். அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை தன்னோடு கொண்டு வந்தவர். அப்படிப்பட்டவருக்கு விரோதமானவர்களாக காணப்படுவீர்கள் என்பதை அவர் தெளிவாக உங்களுக்கு அறிவிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவிடம் நீங்கள் பட்டும்படாமலும் இருக்க முடியாது.
இரண்டாவதாக, அவருடைய ஊழியத்தின் பலனிலும் நீங்கள் இணைந்தும் இணையாததுமான இடைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்றும் சொல்லுகிறார். சேர்க்காதவன் என்று அவர் கூறும்போது என்ன அர்த்தத்தில் குறிப்பிடுறார்? சேர்ப்பதை தன்னுடைய ஊழியத்தில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். பொதுவாக, ஜனங்களையோ பொருள்களையோ ஒன்று கூட்டுவதைத்தான் சேர்த்தல் என்று கூறுவோம். இந்த வார்த்தை மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் சில இடங்களில் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். 2 ஆம் வசனத்தில் ஜனங்கள் கூடி வருவதைப் பார்க்கிறோம்: திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால் . . . அதாவது, அதிகமான ஜனங்கள் அவரை சூழ்ந்திருந்தார்கள். அவரிடமாக ஈர்க்கப்பட்டிருந்தார்கள். மத்தேயு 13:30ல் பொருள்கள் சேர்க்கப்படுவதைக் குறித்துக் காண்கிறோம். இங்கே அது களைகளாக இருக்கிறது: அறுப்புக் காலத்தில் அறுக்கிறவர்களை நோக்கி, முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளை சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள் என்கிறார். அவைகளை ஒன்றாக சேருங்கள், கட்டுகளாகக் கட்டுங்கள். சேர்க்கப்படுதல் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? உங்கள் சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள் என்று கூறினேனென்றால், உடனே நீங்கள் உங்களுடைய பர்ஸ், சாவி, கோட்டு, குடை முதலான சாமான்களை சேர்த்து எடுத்துக் கொண்டு புறப்படுவீர்கள். ஓரளவிற்கு சிதறியிருக்கிற உங்களுடைய பொருட்களை ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொள்வீர்கள். தனது பணியும் இவ்விதமாகத்தான் இருக்கிறது என்கிறார் இயேசு கிறிஸ்து. ஜனங்களைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வதே அவருடைய வேலையாக இருக்கிறது. தன்னை தேவமனிதனாகப் பார்க்கின்ற ஜனங்களை கூட்டிச் சேர்ப்பதே அவருடைய வேலை. அதை செய்வதற்காகவே அவர் இவ்வுலகிற்கு வந்தார். காணமற் போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார். தனக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிகிறவர்களை அவர் தேடுகிறார். தன் மீது ஒப்பிட முடியாத அளவுக்கு அன்பு செலுத்துபவர்களை அவர் தேடுகிறார். அப்படிப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்க்கிற பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் அப்படிப்பட்ட அன்பை வைத்திருந்த ஒரு சீஷர் கூட்டத்தை நாம் இந்தக் காட்சியில் காண்கிறோம். அவர்களில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுத்தவனாயிருந்தாலும், மற்ற பதினொரு பேர்களும் அவரோடு இணைக்கப்பட்டவர்களாயிருந்தார்கள். திரளான ஜனங்கள் அவரைவிட்டு விலகிப் போனபோது, நீங்களும் என்னைவிட்டுப் போய்விட மனதாயிருக்கிறீர்களா என்று அவர் கேட்டபோது, எங்கே போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே என்று கூறியவர்கள் அவர்கள். அவரோடு சேர்க்கப்பட்டிருந்தவர்கள் அந்த சீஷர்கள். யோவான் 11 ஆம் அதிகாரத்தில் இயேசுவின் பணி விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் தன்னிடம் ஒன்றாய்க் கூட்டிச் சேர்ப்பதே அவருடைய வேலையாக இருக்கிறது. அந்தப் பணியைப் பொறுத்தவரையில் இடைப்பட்ட நிலை என ஒன்றும் இல்லையென இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். மற்றவர்களை என்னிடத்தில் இணைக்கின்ற இந்த பணியை சுறுசுறுப்போடு செய்யாமலிருக்கிற எவனும் ஒன்றும் செய்யாதவ னாக இருக்கிறான் என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள். அவன் சிதறடிக்கிற வேலையைத்தான் திறமையோடு செய்கிறவனாக இருக்கிறான் என்கிறார். ஜனங்களை என்னிடம் வராதபடிக்கு விரட்டிவிடு கிறான். ஜனங்களை என்னிடமிருந்து தூரமாகப் போகும்படியாக செய்கிறான். ஆகவே, என்னிடம் இணைந்திருப்பதில் மாத்திரமல்ல, எனது பணியை செய்வதிலுங்கூட இடைப்பட்ட நிலை என எதுவுமில்லை என்பதை இயேசு கிறிஸ்து இவ்விடத்திலே தெளிவாக அறிவிக்கிறார். அவரோடு இருப்பவன் எல்லோரும் எப்படி அவரோடு சேர்க்கிறவனாகவும் செயலாற்றுவான் என்று நீங்கள் கேட்பீர்கள். தங்களுடைய பக்தியுள்ள வாழ்க்கையின் சாட்சியினால் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்கள் இயேசுவோடு இணைக்கிறவனாக அவன் காணப்படுவான். இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவர்களாகிய அவர்கள் இயேசுவை பிரதிபலிப்பார்கள். வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, நான் அநுபவிக்கிறதான காரியங்களில் ஏதேனும் திருப்தி காணப்படுகிறதா என்று குழம்பித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், இயேசுவோடு இணைக்கப் பட்டிருப்பவர்களான விசுவாசிகளைக் காண்பார்கள். தாங்கள் பருகிக் கொண்டிருக்கிற ஊற்றானது களங்கமுற்றதாகவும், கைவிடப்பட்டதாகவும், அசுத்தமாகவும், அழிவை உண்டுபண்ணுவதாகவும் இருக்கும்போது, இயேசுவிடம் இணைக்கப்பட்டிருப்பவர்களிடமோ மெய்யான தேவபக்தியின் அடையாளங்கள் காணப்படுவதை உணருவார்கள். அவர்களிடம் பெருந் தன்மை காணப்படும். குறிக்கோளுடன் வாழ்வார்கள். வழி தெரிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் கடூரம் காணப்படுகிற வேளையிலே இவர்களோ சாந்தமாக இருப்பார்கள். நேர்மையும், நீதியும், உண்மையும் காணப்படும். மற்றவர்களிடமோ இரு மனமும், உண்மையற்றிருத்தலும் காணப்படும். இவர்களிடம் பரிசுத்தம் காணப்படும், மற்றவர்களிலோ அசுத்தம் இருக்கும். கிறிஸ்துவைப் போன்றதான தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழும்போது அவர்கள் இயேசுவோடு மற்றவர்களை சேர்க்கிறவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் இயேசுவானவர் தனது மக்களை உலகத்தின் வெளிச்சமாக விவரிக்கிறார். மலையின் மீது கட்டப் பட்டிருக்கிற பட்டணத்தை ஒருவராலும் மறைக்க முடியாது என்கிறார்.
கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ்வதினால் மாத்திரமல்ல, தங்களுடைய ஜெபமாகிய செல்வாக்கையும் உபயோகித்து அவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவந்து சேர்க்கிறவர்களாயிருக்கிறார்கள். தாங்களும் ஒருகாலத்தில் இயேசுவுக்கு விரோதமாக இருந்தவர்களே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் சிதறடிக்கப்பட்டவர்களாயிருந்தார்கள். இப்போதோ அவரோடிருக்கிறார்கள். மற்றவர்களும் அவரோடு இருக்க வேண்டுமேயென அவர்கள் ஏங்குகிறார்கள். இருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கு தங்களுக்கு வல்லமை இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். இயேசுவின் அருமையை மற்றவர்கள் காணும்படியாக செய்வதற்கு தங்களுக்கு திறன் இல்லையென அறிவார்கள். பாவங்களிலிருக்கிற மற்றவர்களின் இருதயத்தை திறக்கும் வல்லமை தங்களுக்கு இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய இருதயத்தை எடுத்து இயேசுவோடு இணைப்பது தங்களால் முடியாது என்பதை அறிவார்கள். ஆகவே அவர்கள் என்ன செய்வார்கள்? தேவனிடம் சென்று கதறுவார்கள். மற்றவர்களின் கண்கள் திறக்கப்பட வேண்டுமே, தங்களுடைய பாவநிலையை அவர்கள் உணரவேண்டுமே, கிறிஸ்து தங்களுக்கு அவசியம் தேவை என்பதை உணரவேண்டுமே, கிறிஸ்துவின் அருமையைக் காண வேண்டுமே, தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க கிறிஸ்து எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் உணரவேண்டுமே என்கிற அங்கலாய்ப்போடு அவர்கள் ஜெபிக்கும் ஜெபம் தேவனை மகிழ்விக்கும்.
தாங்கள் இருக்கின்ற இடத்திலிருந்தே, தங்களுடைய விளங்குதலுக்கும் பலத்திற்கும் ஏற்றவிதத்திலும், தங்களுடைய சந்தர்ப்பசூழ்நிலையைப் பொறுத்த அளவிலும் அவர்கள் தங்களுடைய உதடுகளினாலும் முடிந்தவரையில் சாட்சி கொடுப்பார்கள். தங்களில் இத்தகைய மாற்றத்தை உருவாக்கியவர் யார் என்பதை அறிவிப்பதற்கு அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படமாட்டார்கள். சகலத்தைக் காட்டிலும் தம்மையே முதன்மை யாகக்கொள்ள வேண்டும் என்று அவர் உரிமை பாராட்டுவதை சிரமமாகக் கருத மாட்டார்கள். வாழ்வின் எல்லா நொடியிலும் சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம், இயேசுவைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவரே எனக்கு சகலத்திலும் அருமையானவர் என சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் என்ன சொல்லுகிறேனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் கிறிஸ்துவை அறிக்கை செய்கிறவர்களாய் இருக்க வேண்டும். ஏனென்றால், இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை குறித்து வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைக் குறித்து நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக வெட்கப்படுவேன். மேலும் விசுவாசமானது கேள்வியினால் வரும். கேள்வி தேவனுடைய வசனத் தினால் வரும். ஆகவேதான் அவர்கள் தங்களுடைய வாயின் வார்த்தை களினாலே சாட்சி கொடுத்து இயேசுவுக்கென்று கூட்டிச் சேர்க்கிறவர்களா யிருக்கிறார்கள். இதில் இடைப்பட்ட நிலையே இல்லை. என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இடைப்பட்டநிலை எதுவுமில்லை என்று கூறுவதற்கு முக்கியமான அடிப்படை காரணம் இதுதான் என்று நான் நம்புகிறேன். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
இயேசு எந்த சந்தர்ப்பத்தில் இவ்வார்த்தைகளைக் கூறினார் என்று பார்த்தோம். அவ்வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றும் பார்த்தோம். அதன் பொதுவான அறிவித்தலையும், குறிப்பான விளக்கத்தையும் பார்த்தோம். இப்போது, கடைசியாக இவ்வார்த்தைகளின் மூலமாக சில சுயபரிசோதனைகளை நமக்கு நாமே செய்துகொள்வதைக் குறித்துக் கவனிப்போம். இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளின் மூலமாக நாம் என்ன முடிவுக்கு வரலாம்? முதலாவதும் அடிப்படையானதுமான காரியம் இது: இயேசுவின் மீது விசுவாசம், அன்பு, கீழ்ப்படிதல் கொண்டவர்களாக, அவரோடு ஆத்மீகத்தில் முழுமையாக இணைக்கப்படாதவர்களை இயேசு கிறிஸ்து பகைவர்களாகவும் எதிர்க்கிறவர்களாகவுந்தான் கருதுகிறார். என்னோடே இராதவன் என்று அவர் சொல்லும்போது, இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாததான இடைப்பட்ட நிலையில் அவன் இருக்கலாம் என்று இயேசு கூறவில்லை. அப்படிப்பட்டவன் எனக்கு விரோதமாய் இருக்கிறான் என்கிறார். விரோதி என்கிறதான அந்த வார்த்தை உங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருப்பதாக. எனக்கு விரோதி! யாருக்கு விரோதமாக நீங்கள் இருக்கிறீர்கள்? இயேசுவோடு இணைக்கப்படாமலிருப்பதால், அவர் மீது நம்பிக்கை வைக்காமலிருப்பதால், முழுமனதோடும் அவரோடு இணைக்கப்படாமலிருப்பதால், அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிற வாழ்க்கையை மேற்கொள்ளாமலிருப்பதால் அவருக்கு விரோதமாயிருக்கிறீர்கள். இதற்கு அர்த்தம் என்ன? நீங்கள் சாத்தானோடு இணைந்திருக்கிறீர்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். நாம் பார்த்த சந்தர்ப்பசூழ்நிலைகளை திரும்பப் பாருங்கள். அங்கு இரண்டே ராஜ்ஜியங்கள்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று இருளின் ராஜ்ஜியம். அதை ஆளுகிறவன் அந்தகாரத்தின் அதிபதியாகிய பிசாசு. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக போரிட மாட்டான். தான் சாத்தானோடு கூட்டுசேர்ந்தவரல்ல என்பது நமது ஆண்டவரின் வாதங்களில் ஒன்று. சாத்தான் ஆளுகின்ற இருளின் ராஜ்ஜியம் ஒன்றிருக்கிறது. ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் நிச்சயிக்கப்பட்ட தேவனுடைய ராஜ்ஜியமும் இருக்கிறது. நீங்கள் இயேசுவுக்கு விரோதமாயிருப்பீர்களானால் நீங்கள் சாத்தானோடு கூட்டுச்சேர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. அது மிகவும் பயங்கரமான காரியம். இதைக் கேட்கிற உங்களில் சிலர் எரிச்சலடைவீர்கள். நீங்கள் என்ன சொல்லுவீர்கள், "பாருங்கள், நாங்கள் ஒன்றும் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள் கிடையாது. அவர் காரியத்தை அவர் செய்யட்டும். எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டு போகிறோம்" என்பீர்கள். அப்படி கூறுவதே சாத்தானின் ஆவியாயிருக்கிறது. கடவுள் தன் மீது ஆளுகை செலுத்துவதை சாத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சாத்தானும் அவனை சேர்ந்தவர்களும் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்றார்கள். அவருடைய பிரசன்னத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள். ஏதேனின் வீழ்ச்சிக்கும் அதுவே மூலகாரணமாயிற்று. தேவனுடைய கிருபையுள்ள ஆட்சிக்கு ஆதிப்பெற்றோர் அடிபணிந்து வாழ மறுத்தபோது, தேவனுடைய வார்த்தை தங்களை ஆளும்படிக்கு விடாமல் போனபோது அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொண்டார்கள். இந்த கனியைப் புசித்தீர்களானால் தேவனைப் போலவே நன்மை தீமை அறியக்கூடியவர்களாக ஆவீர்கள் என்கிற சோதனை வந்தது. நீங்கள் இயேசுவோடு இருக்கவில்வையானால், தேவனுடைய வார்த்தைகள் அவரை யாரென்று அறிவிக்கிறதை உணர்ந்து அவரோடு இணைக்கப்படவில்லையானால், உங்களை அவருக்கு ஒப்புவிக்கவில்லையானால், மிக உயர்ந்ததான தேவபக்தியோடு அவரில் பிரியம் வைக்காவிட்டால், அவருடைய வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற வாழ்க்கையை நீங்கள் வாழாவிட்டால் நீங்கள் சாத்தானோடுதான் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருக்கு விரோதியாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் இன்னும் இருளின் அதிபதியின் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறீர்களே.
பவுலை ஊழியத்திற்குப் பிரித்தெடுத்த போது, தேவன், உயிரோடெழுந்த இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய பணிகள் யாவையும் தெளிவுபடுத்தினார். பவுல் தனது ஊழியத்தில் எங்கெல்லாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறாரோ அங்கே சுவிசேஷம் அவர்களை ஆட்கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கிறார்: அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு, இப்போது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்பதை பவுலுக்குத் தெளிவுபடுத்தினார். அவர் எங்கே சென்றாலும், யூதர்களின் மத்தியிலோ அல்லது புறஜாதியாரிடமோ எங்கு சென்றாலும், கிறிஸ்துவுக்குள் இல்லாத அனைவருமே சாத்தானின் அதிகாரத்திற்குட்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அவருக்கு தெளிவாகப் போதித்திருந்தார். அவருக்கு விரோதமாயிருப்பவர்கள் சாத்தானோடு இணைந்திருக்கிறவர்கள்.
இரண்டாவதாக, நாம் இதில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறதான இன்னொரு ஆபத்தையும் உணரலாம். அது என்ன நிகழ்கால ஆபத்து? இதைக் கேட்பவர்களில் சிலரும் அந்த ஆபத்தை உணருவீர்கள். லூக்கா 11:24ஐப் பாருங்கள். இடைப்பட்ட நிலை எதுவும் இல்லையென்று நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்திய உடனேயே இந்த வேதபகுதியை ஏன் கூறுகிறார் என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம்: "அசுத்த ஆவி ஒரு மனுஷனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல், நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்புவேன் என்று சொல்லி, அதில் வரும்போது அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப் போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும். அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாயிருக்கும் என்றார்". நமது கர்த்தர் என்ன சொல்லுகிறார்? இதைக் குறித்து அநேக வேத வல்லுணர்கள் கூறுகின்ற கருத்து எனக்கும் ஏற்கக் கூடியதாக இருக்கிறது. அங்கே கூடியிருந்த ஜனங்களில் அநேகர் ஒருவேளை யோவான் ஸ்நானகனின் ஊழியத்தில் போதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். தேவனுடைய வார்த்தையை அவர்கள் கேட்டிருந்தார்கள். மனந்திரும்பும்படியான அழைப்பையும் அவர்கள் கேட்டிருந்தார்கள். யோவான் இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காண்பித்தபோது அவர்களிடம் ஆரம்பத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவர்களுடைய வாழ்க்கையிலும் சில வெளிப்படையான அடையாளங்கள்கூட தோன்றியிருக்கலாம். ஆனால் அவர்களின் இருதயத்தில் உண்மையான பெரு மாற்றம் எதுவும் ஒருபோதும் ஏற்பட்டிருக்கவில்லை. கடவுளோடும் அவருடைய ஒரே பேறான குமாரனோடும் இருக்க வேண்டிய உறவில் எந்த மாற்றமும் உருவாகியிருக்கவில்லை. ஒரு பிசாசு வெளியே போனால், அதனிலும் பொல்லாததான ஏழு பிசாசுகள் உள்ளே வந்து சேரும்.
இயேசுவிற்கு அருகில் வந்தவர்களாகவும், சுவிசேஷத்திற்கும் கடவுளின் காரியங்களுக்கும் அருகே ஓரளவிற்கு வந்தவர்களாகவும்கூட நீங்கள் இருக்கலாம். அது ஒருவேளை மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டுமென்பதற்காகவோ, கடவுளின் மக்களோடு இருப்பது நாகரீகமானது என்பதற்காகவோ, அவர்களுடைய இருதயத்தில் கடவுளின் கிருபை தங்கியிருப்பதை நீங்கள் விரும்புவதாலோ இயேசுவின் அருகில் நெருங்கி வந்திருப்பதாக நான் கூறவில்லை. ஆனால், நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு அருகில் வந்தவர்களாக மாத்திரம் இருந்து, வெளிப்படையான அடையாளமோ மாற்றங்களோ காணப்படாதவர்களாகவும், இயேசுவோடு இராதவர்களாகவும் இருந்தால் முன்னைக் காட்டிலும் ஏழு பொல்லாத பிசாசுகள் உங்களிடம் வந்து சேரும். உங்களை நீங்களே வஞ்சித்துக் கொள்ளுதலும், சுயமகிமைப்படுத்திக்கொள்ளுதலும், நீதிமானாக எண்ணிக்கொள்ளுதலுமாகிய பிசாசுகள், உங்கள் முன்னிலைமையைக் காட்டிலும் பின்னிலைமையை அதிகக் கேடுள்ளதாக்கும். நீங்கள் இயேசுவோடு இல்லையென்றால் அவருக்கு விரோதமாயிருக்கிறீர்கள். அவருக்கு விரோதமாயிருப்பதென்பது சாத்தானை சேர்ந்தவர்களாக இருப்பது மாத்திரமல்லாமல், ஏழு பொல்லாத பிசாசுகள் வந்து சேருகிறதான நிகழ்கால ஆபத்துக்கும் பயங்கரத்துக்கும் உட்படுவது.
பிள்ளைகளே, வாலிபர்களே! உங்களைக் குறித்த பெரிய கவலைகளில் எனக்கு இதுவும் ஒன்றாயிருக்கிறது. பிறந்தது முதற்கொண்டு உங்களைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கின்ற உங்களைக் கவருகின்றவைகளை நீங்கள் தவிர்க்க முடியாது. உலகத்தின் செல்வாக்குகள், கவர்ச்சிகள், ஈர்ப்புகள்! இயேசுவிடம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக நீங்கள் இணைக்கப்படாதவர் களாயிருந்தால், அவரை யாரென்று அறியாதவர்களாயிருந்தால், அவர் மீது அதிகமான பக்தி கொண்டிராமல் இருந்தால், உங்கள் விருப்பங்கள் யாவையும் அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் இருந்தால், இவ்வுலகத்தின் செல்வாக்குகள் உங்களுக்குப் பெருத்த ஆபத்தைதான் விளைவிக்கும். நீங்கள் இயேசுவோடு இராமலிருந்தால், சாத்தானுடையவர்களாய் இருப்பது மாத்திரமல்லாமல், இவ்வுலகத்தின் நிகழ்கால ஆபத்துகளுக்கும்கூட உட்பட்டவர்களாய் இருப்பீர்கள்.
மூன்றாவதாக, நீங்கள் எதிர்கால பயங்கரத்திற்க்கும் ஆளாவீர்கள். ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் இயேசு இல்லாமல் வாழ்ந்து முடிக்கத் தீர்மானித்தீர்களானால், நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர் உங்களைப் பார்த்து, என்னை விட்டு என்றென்றுமாக அகன்று போங்கள் என்கிற தீர்ப்பை வழங்கிவிடுவார். என்னை விட்டு அகன்று போங்கள்! நியாயாதிபதி எவ்வளவு ஆணித்தரமாகக் கூறுகிறார் என்பதைப் பாருங்கள். பிசாசுக்கும் அவனுடைய தூதருக்கும் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்துக்குப் போங்கள் என்று அவர் முதலாவது கூறவில்லை. தன்னைவிட்டு அகன்று போகச் சொல்லுகிறார். நீ என்னோடு இருக்க முடியாது. உன்னால் என்னோடு ஒளியில் இருக்க முடியாது. உன்னுடைய சொந்த இச்சைகளிலேயே இருக்க விரும்பினாய். உன் ஆசைகளிலேயே தரித்திருக்க விரும்பினாய். வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்து நீ உன்னுடைய சொந்தக் கருத்துக்களைக் கொண்டவனாக வாழ்ந்தாய். இவ்வுலக வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை நீயே தீர்மானித்துக் கொண்டிருந்தாய். என்னைவிட்டு விலகியிருக்கவே நீ விரும்பினாய். நீ விரும்பியதையே நான் இப்போது உனக்குக் கொடுக்கிறேன். என்னைவிட்டு அகன்று போ! அவரை விட்டு விலகிப் போகுதல் என்பது, பிசாசுக்கும் அதன் தூதர்களுக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவதாகும். முழுமனதோடு இயேசுவில் இணைக்கப்பட்டிராவிட்டால் அது அவரைப் பகைப்பதாகும். சாத்தானோடு இணைந்திருப்பது, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் பயங்கரமான நிலையில் இருப்பதாகும். நீங்கள் அதைக் குறித்து மனந்திரும்பாவிட்டால் அது மிகவும் துக்ககரமானது.
இன்னொரு காரியத்தையும் இதில் கவனிக்க வேண்டும். இயேசுவின் இந்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்பதை நாம் உணர வேண்டும். நான் எங்கே இருக்கிறேன்? என்று நீங்கள் உங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்ளுங்கள். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்று இயேசு சொல்லுகிறார். என்னுடைய நிலை என்ன? எனது மனைவியின் நிலை என்ன? என் கணவனின் நிலை என்ன? என் அம்மா, அப்பா, பிள்ளைகள், சகோதர சகோதரிகளின் நிலை என்ன? இளம் பிள்ளைகளே, வாலிபரே, வாலிப பெண்களே, வயோதிபரே நீங்கள் உங்களையே இந்த கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: நான் எங்கே இருக்கிறேன்? இயேசு கிறிஸ்து மணலில் போட்டது போன்று ஒரு கோடு போட்டுவிட்டார். நீங்கள் என்னோடு இராவிட்டால் எனக்கு விரோதிகள். என்னோடு சேர்க்காவிட்டால் நீங்கள் சிதறடிக்கிறீர்கள். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவும் இல்லை. இடைநிலை கிடையவே கிடையாது. நீங்கள் ஒருவேளை சொல்லலாம், நான் அவரோடிருப்பதற்கு முயற்சி செய்கிறேன் என்று. அது என்ன முயற்சிப்பது? நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்பீர்கள். அது நல்லதுதான். வேறு என்ன செய்கிறீர்கள்? நான் வேதத்தைப் படிக்கிறேன். தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தும்படியாக அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பீர்கள். நல்லதுதான். அப்படியே செய்து வாருங்கள். ஆனால் அவர் இதை மாத்திரந்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறாரா? இல்லை. இன்றே நீங்கள் அவரிடம் வரவேண்டுமென்று அவர் உங்களிடம் எதிர்பார்க்கிறார். சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்படுகின்ற அவருடைய குமாரனை இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள். இன்றைக்கு அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதிருங்கள். இன்றே இரட்சிப்பின் நாள். நான் வேதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன், ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், என்றாவது ஒருநாள் அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் சொல்லிக்கொள்வதெல்லாம் உங்கள் மனசாட்சியை சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகும். ஒருவேளை இடைப்பட்ட நிலை இருக்கலாம் என்று உங்களையே ஏமாற்றிக்கொள்வ தாகும். இல்லை, இடைப்பட்டநிலை இல்லவேயில்லை. ஒன்று நீங்கள் அவரோடிருக்கிறீர்கள். அல்லது அவருக்கு விரோதமாக இருக்கிறீர்கள். கடவுள் தமது சுவிசேஷத்தின் மூலமாக நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதை அறியவும், கிறிஸ்துவோடிருப்பதற்கு என்ன தேவை என்பதையும் கட்டளையிட்டிருக்கிறார். விசுவாசத்தினால் அவரோடு ஒப்புரவாக வேண்டுமென்கிறார். ஆண்டவரே! நான் ஒரு பாவி என்பதை அறிந்திருக்கிறேன். என்னுடைய பாவநிலையை நூறு சதவீதம் நான் அறிந்திராவிட்டாலும் நான் ஒரு பாவிதான். நீர் என்னை இரட்சிக்காவிட்டால், உமது பரிசுத்த இரத்தம் என்னைக் கழுவாவிட்டால், என்னைக் கட்டியிருக்கும் சங்கிலிகளை உமது வல்லமை அறுத்தெறியாவிட்டால் என் கதி அதோ கதிதான். ஆண்டவரே, நீரும் உமது அன்பும் மாத்திரமே என்னை இரட்சிக்க முடியும். நான் என்னையே உமக்கு ஒப்புவிக்கிறேன். ஆண்டவராகிய, இயேசுவே உலகில் அநேகரில் நான் அன்பு வைத்திருக்கிறேன். என் இருதயத்தை அநேகர் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். என் இருதயம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்வதற்கு உமக்கே முழு உரிமையும் இருக்கிறது. தாய், தகப்பன், சகோதர சகோதரிகள், கணவன் மனைவி, என் ஜீவனையும் காட்டிலும் என் இருதயத்தால் முழுவதுமாக நேசிக்கப்பட வேண்டியவர் நீரே. என் சக நண்பர்களுக்கு சந்தோஷமாயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் சரி நீரே என் இருதயத்தில் முதன்மையான இடத்தை வகிக்க வேண்டியவர். யார் என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி நீரே எனக்கு எல்லாமுமானவர். நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இன்றே ஏற்றுக்கொள்ளும் என்று உங்கள் மனதை தேவனிடம் திறந்து காட்டுங்கள். நீங்கள் யாரோடே இருக்கிறீர்கள் என்பதற்கும், அவரோடே இருப்பதற்கு என்ன அவசியம் என்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள். "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை எனது தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளுகிறேன். உண்மை என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்தித் தாரும். உம்மை எனது ஆசாரியராக ஏற்றுக்கொள்ளுகிறேன். எனக்கு மன்னிப்பளித்து, என்னை பரிசுத்தப்படுத்தி, எனக்காக பரிந்து பேசி என்னை பாதுகாத்துக்கொள்ளும். நான் உம்மை எனது ராஜாவாக ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னை ஆளும். என்னை வழிநடத்தும். உம்முடைய ராஜ்ஜியத்தின் உண்மையான குடிமகனாயும், ஊழியனாயும் இராதபடிக்கு என்னைக் கட்டியிருக்கும் சங்கிலிகளை உடைத்தெறியும்" என்று அவரிடம் மன்றாடுங்கள். இயேசுவின் அறிவிப்பு, நம்மை நாமே, நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுக்கொள்ளும்படியாக அழைக்கிறது. நான் அவரோடு இருக்கிறேனா அல்லது அவருக்கு விரோதியாக இருக்கிறேனா? அவரோடே சேர்க்கிறேனா அல்லது சிதறடிக்கிறேனா? அவரோடே இல்லாதவர்களாக காணப்பட்டீர்களானால், நேரிடையாக அவரிடம் செல்லுங்கள். உடனடியான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும், பாவங்களை விட்டுவிடுகிற மனப்பாங்கையும் கொண்டு, உங்கள் மீது நம்பிக்கை வைத்திராமல், இயேசுவுக்கு முற்றிலுமாக உங்களை ஒப்புவிக்கின்ற நேர்வழியின் மூலமாக இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தின் மூலமாக உங்களுக்கு இலவசமாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள அவரை இப்போதே நாடுங்கள். ஆமேன்.
மொழியாக்கம்: வினோதா சுரேந்தர் மொழியமைப்பு: ஆசிரியர்
அசிங்கம் அந்தஸ்திற்கு அலைகிறது!
இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது அமெரிக்காவில் தேர்தல் கடந்த நவம்பரில் நடந்து புதிய அதிபர் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால் ஒபாமா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ஓரினச் சேர்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை என்றும் அதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார். தாராளவாதக் கொள்ளையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் கூட்டத்தின் போச்சாளராக இருக்கும் ஒபாமாவின் இந்த அறிவிப்பு ஐரோப்பா மற்றும் கனடாவைப் போல அமெரிக்காவும் தாராளவாதக் கொள்ளையை நோக்கி இதுவரையிலும் இல்லாதவிதத்தில் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்காவில் ஒன்று நடந்தாலே மற்ற நாடுகள் அதைப் பின்பற்றத் தொடங்குவது வழக்கமாகிவிட்டது. உடனேயே நியூசிலாந்து பிரதமர் தனக்கும் அதில் சம்மதம்தான் என்று அறிவிக்க அதை சட்டமாக்கும் வகையில் ஒரு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து 'ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே' என்றும் அதுவே திருமணத்திற்கு ஆதியில் இருந்து அர்த்தம் என்றும் விளக்கி வரப்போகிற சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டுமுகமாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இணையதளம் அரை மணி நேரத்திலேயே எதிரிகளின் இணையதளத் தாக்குதலுக்கு உள்ளானது. ஜோன் நொக்ஸைப் பெற்றெடுத்த ஸ்கொட்லாந்து உடனடியாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அதை சட்டமாக்கியிருக்கிறது. இனி ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இதைப் பின்பற்ற ஆரம்பிக்கும். ஆஸ்திரேலியாவின் தஸ்மேனியா மாநிலம் தானும் இதை சட்டமாக்கப்போவதாக அறிவித்தது. வெகு சீக்கிரமே அநேக நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செய்துகொள்வது சாதாரணமானதாகிவிடும். இது கீழைத்தேய நாடுகளிலும் பிரதிபலிக்காமல் இருக்கப் போவதில்லை. உடனடியாக இல்லாவிட்டாலும் இதற்கான அறைகூவலிடுகிறவர்கள் சும்மாயிருக்கப் போவதில்லை.
எந்த நாட்டுச் சமுதாயத்திலும் பெரும்பான்மையினராக இல்லாத ஓரினச் சேர்க்கையாளருக்கு இந்த வகையில் ஆதரவளித்து அவர்களுக்கு திருமண அந்தஸ்தளிக்க அரசாங்கங்கள் கச்சை கட்டிக்கொண்டு நிற்பது மிகவும் ஆச்சரியமானதொன்றுதான். இது இன்றைய பின் நவீனத்துவ சமுதாய சிந்தனைப் போக்கைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டாமலில்லை. சில காலங்களுக்கு முன் பின் நவீனத்துவம் பற்றி நான் எழுதியிருந்த சில கவிதை வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றது.
உனக்குப் பிடித்ததை நீ செய்
எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன்
இதில் எது சரி, தப்பு என்பதற்கு இடமேயில்லை.
அவரவருக்கு எது சரியோ
அதற்குப் பெயர்தான் 'உண்மை'
அதற்கு வெளியில் எல்லாமே பொய்
இதற்குப் பெயர்தான் பின்நவீனத்துவம்.
இப்போது புரிகிறதா, ஏன் பின்நவீனத்துவ சமுதாயங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்கப் புறப்பட்டிருக்கின்றன என்று.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை நாடுகிற இந்த விஷயத்தில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் இணைந்து வாழ்வதை ஏற்கனவே பல நாடுகள் அனுமதித்து அதற்கு 'சிவில் யூனியன்' (சிவீஸ்வீறீ ஹிஸீவீஷீஸீ) என்ற பெயரில் அனுமதி கொடுத்திருக்கின்றன. அவர்கள் பல நாடுகளில் இந்த அடிப்படையில் உறவுவை ஏற்படுத்திக் கொண்டு சட்டரீதியாக ஏற்கனவே வாழ்ந்து வருகிறார்கள். அப்படியானால் அவர்கள் புதிதாக திருமணத்தை நாட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம் ஆணும், பெண்ணும் சட்டரீதியாக இணைந்து வாழ்வதைப் போன்ற அதே முறையில் ஓரினச் சேர்க்கைக்கும் எந்த வேறுபாடும் காட்டாமல் திருமண அந்தஸ்து வேண்டும் என்பதற்காகத்தான். அத்தோடு முறையாகத் திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு இருக்கும் அத்தனை சலுகையும் வேண்டுமென்பதற்காகத்தான். இங்குதான் கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த விஷயத்தில் இருக்கும் பேராபத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. இது சிறுபான்மைக் கூட்டமொன்றை அலட்சியப்படுத்தாமல் அதற்கு சமுதாய நீதி செய்கின்ற சாதாரண விஷயமல்ல. தலித் மக்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்குவதைப் போன்றதல்ல இது. ஓரினச் சேர்க்கைக்கு திருமணம் என்ற அந்தஸ்தை சட்ட ரீதியாகக் கொடுக்கிறபோது நம்மைப் படைத்த இறையாண்மையுள்ள கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கும் திருமணம் என்ற உறவு முறைக்கு இந்த சமுதாயம் அடிப்படையிலேயே பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. திருமணம் என்ற வார்த்தைக்கு இதுவரை இருந்துவந்ததைவிட வித்தியாசமான விளக்கம் இனி கொடுக்கப்படும். இந்த விளக்கம் கடவுளின் சித்தத்தில் உதித்த திருமணத்தையும் அதோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஏன், சமுதாயத்தையே மாற்றி அமைக்கப் போகிறது. இது கடவுளுக்கும் அவருடைய திட்டத்துக்கும் எதிரான அடிப்படையான மாற்றம்.
ஏற்கனவே பல மேலைத்தேய நாடுகளில் ஓரினச் சேர்க்கை உறவுமுறை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு டிவியில் வரும் நிகழ்ச்சிகளும், கமர்ஷியல் அறிவிப்புகளும் ஓரினச் சேர்க்கையை வெகு சாதாரணமாக வெளிப்படுத்துகிறவையாக இருக்கின்றன. மாலை 6 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளைக் குடும்பத்தோடு இருந்து பார்க்க முடியாது. அதுவும் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்க முடியாதபடி இருக்கின்றன. பாடசாலை நூல்களிலும், நூலகத்திலுள்ள நூல்களிலும் இந்த உறவுமுறை பற்றிய கட்டுரைகளும், கதைகளும் படத்தோடு இடம்பிடித்துவிட்டன. சமுதாயம் ஏற்றுக்கொள்ளுகிற வாழ்க்கை முறை பற்றி பிள்ளைகளுக்கு அறிவும், புரிந்துகொள்ளுதலும் இருக்க வேண்டும் என்பதே இதை நியாயப்படுத்துகிறவர்களின் வாதம். இதைத் தவறான, அசிங்கமான உறவு முறையாகக் கருதப்பட்டு வந்த காலம் மாறி 'இன்னொரு வகையிலான வாழ்க்கை முறை' (ஞிவீயீயீமீக்ள்ஸீ௴ றீவீயீமீ ௳௴ஹ்றீமீ) என்று அழைக்கின்ற, நம்புகின்ற வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த உறவு முறையை அனுமதித்துள்ள நாடுகள் இதற்கெதிராகப் பேசுவதையும், எழுதுவதையும் தடை செய்திருக்கின்றன. இதற்கெதிராகப் பேசி, எழுதுவது மனித உரிமைகளுக்கெதிரானது என்று அவர்கள் நம்புகிறார்கள். திருச்சபைகளில்கூட இந்த உறவுமுறைக்கெதிராக பிரசங்கம் செய்வது ஆபத்தானது என்ற நிலை வெகுவேகமாக உருவாகிக்கொண்டு வருகின்றது. சில நாடுகளில் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டால் நிலைமை இன்னும் எத்தனை மோசமாகலாம் என்பதும், இது நினைத்துப் பார்க்க முடியாத சமுதாய சீர்கேடு என்பதும் இன்றைய சமுதாயத்துக்குப் புரியவில்லை.
ஓரினச் சேர்க்கையைப் பற்றி கிறிஸ்தவ வேதம் ஒன்றும் சொல்லாமல் இல்லை. இன்றைய சமுதாயத்தில் சிலர் வாதிடுவது போல இது 'ஜீன்ஸ்' சம்பந்தப்பட்டதான விஷயமாக வேதம் கருதவில்லை. ஆதியில் மனிதனைப் படைத்த கடவுள் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களைத் திருமணத்தில் இணைத்தார். பாலியல் உறவை திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்க வேண்டிய உறவாக மட்டுமே அவர் ஏற்படுத்தினார். கடவுளுடைய மனதில் இதைத்தவிர வேறெதற்கும் இடமிருக்கவில்லை. படைப்பின் இந்தச் செயல்முறையின் அடிப்படையிலேயே புதிய ஏற்பாடும் திருமணம் மற்றும் பாலியல் பற்றிய விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதனால்தான் பவுல் திருமணம் மற்றும் குடும்ப உறவு முறைகளைப் பற்றி எழுதுகிறபோதெல்லாம் 'ஆதியில் அப்படியிருந்தது' என்று படைப்பில் கடவுள் ஏற்படுத்திய நிரந்தர ஏற்பாட்டை சுட்டிக்காட்டி அதை ஆதாரமாகக் கொண்டே விளக்கமளிக்கிறார்.
ஓரினச் சேர்க்கையை வேதம் மிகவும் வெளிப்படையாக ஒழுக்க விதிகளுக்கெல்லாம் முரணான மிகவும் மோசமான, உறவுமுறையாகக் கருதுகிறது. இந்த உறவுமுறை பத்துக் கட்டளைகளுக்கு முரணானது. இது பற்றி விளக்கும் ரோமர் 1 வது அதிகாரம், 'சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய அவபக்தி'யின் அடையாளமாக சுட்டிக் காட்டுகிறது (ரோமர் 1:18). பவுல் ரோமரில் இதற்கான விளக்கத்தைக் கொடுக்கும்போது கடவுளின் சத்தியத்தைப் புறக்கணித்து புற தெய்வ வழிபாட்டை மனிதன் ஏற்படுத்தியதால்தான் இத்தகைய பாவச் செயல்கள் உருவாகின என்று கூறுகிறார் (ரோமர் 1:23-25). மேலும் விளக்கங் கொடுக்கும் வேதம், 'அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்' என்று விளக்கமளிக்கிறது. பாவத்தின் காரணமாக சத்தியத்தைப் புறக்கணிப்பதால் மனிதன் ஈடுபடுகின்ற அவலட்சணமான செயலாகத்தான் வேதம் ஓரினச் சேர்க்கையைக் கருதுகின்றது.
ஓரினச் சேர்க்கை இயற்கையானதல்ல என்பதை பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் பல இடங்களில் தெளிவாக விளக்குகின்றன. ஆதி 19:5-8; யூதா 7; லேவி 18:22-23; 20:13; 1 கொரி 6:9; 1 தீமோ 1:9-10.
இன்று சிலர் முறை தவறிய பாலியல் உறவு பற்றிக் கடவுள் வேதத்தில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளுக்கு வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்து கடவுள் ஓரினச் சேர்க்கைக்கு இடமளித்திருக்கிறார் என்று காட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். 1 கொரி 6:9-10 பின்வருமாறு சொல்லுகிறது, 'வேசிமார்க்கத்தாரும் (fornicators), . . . விபசாரரும் (adulterers), சுயபுணர்ச்சிக்காரரும் (homosexuals), ஆண்புணர்ச்சிக்காரரும் (sodomites)- திருடரும்(thieves), பொருளாசைக்காரரும் (covetous), வெறியரும் (drunkards), உதாசினரும் (revilers), கொள்ளைக்காரரும் (extortioners)) . . . தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை' என்று. இந்த வசனத்தில் முறைகேடான பாலியல் உறவு பற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் முறைகேடான சகல பாலியல் உறவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளன. எதுவும் இங்கு தப்பவில்லை. முக்கியமாக 'சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்' என்ற பதங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலரையும் பற்றியே குறிப்பாக விளக்குகின்றன. பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியுள்ள இந்த வார்த்தைகளுக்கு மனிதன் வித்தியாசமான விளக்கங்கொடுக்கப் பார்ப்பது முட்டாள்தனமான செயல்.
1 தீமோத்தேயு 1:9-11 வரையுள்ள வசனங்களில் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான செயல்களைச் செய்பவர்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் லிஸ்டில், 'வேசிக்கள்ளரும் (fornicators), ஆண்புணர்ச்சிக்காரரும் (sodomites)' அடங்கியிருக்கின்றனர். பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 9 லும், 1 தீமோத் தேயு 1 லும் விளக்கியுள்ள அதே முறைகேடான பாலியல் உறவுகளைத் தான் ரோமர் 1:23-25 வரையுள்ள வசனங்களில் விளக்கியிருக்கிறார். கடவுள் எந்தளவுக்கு இத்தகைய முறைகேடான செயல்களை வெறுக்கிறார் என்றும் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை நியாயத்தீர்ப்புக்காக நியமித்திருக்கிறார் என்றும் வேதம் தெளிவாக விளக்குகின்றது.
ஒரு கட்டுக்குள் இருந்து விபசாரம் செய்வதை ஐரோப்பிய, ஆசீயானிய நாடுகள் அங்கீகரித்து, ஏன் சில ஆசிய நாடுகளும் கூட அங்கீகரித்திருக்கிற போது ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மட்டும் ஏன் இப்படிக் குரலெழுப்பு கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். ஓரினச் சேர்க்கையைப் போலவே விபசாரத் தையும் வேதம் அசிங்கமானதாகத்தான் பார்க்கிறது. விபசாரத்தை நாடுகள் அங்கீகரித்திருப்பதற்கும், ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டரீதியான அங்கீகாரம் வழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வது அவசியம். விபசாரத்தை அனுமதித்திருக்கும் நாடுகளில் அதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். மக்களைப் பாதிக்காதபடியும், அவர்களுக்குத் தொல்லை ஏற்படாதபடியும் பாடசாலைகள் இருக்கும் பகுதிகளிலும், பொது மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் அத்தகைய செயல்கள் நடக்கும் இடங்கள் இருக்கக்கூடாது என்றும், தெருவில் நின்று அந்தச் செயலுக்கு யாரையும் வற்புறுத்தி அழைக்கக்கூடாதென்றெல்லாம் மேல் நாடுகளில் சட்டம் இருக்கின்றது. விபசாரம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அது கட்டுப் பாட்டோடு நிகழ நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கொருவர் முத்தங் கொடுத்துக்கொள்ளுவதைக் காலை முதல் இரவுவரை டிவி நிகழ்ச்சிகளில் காட்டுவதைப் போல விபசாரத்தை அதில் காட்டுவதில்லை. அசிங்கமான விபசாரம் இல்லாமல் போனால் அது நல்லது தான். அதை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள இன்னும் சமுதாயம் ஒத்துக்கொள்ளாததால்தான் கட்டுப்பாடில்லாமல் அது நிகழ இன்னும் இடங்கொடுக்காமல் இருக்கிறது. விபசாரமே கொடுமை, அதையும்விடக் கொடுமை ஓரினச் சேர்க்கை. இப்படியிருக்கும்போது ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்குவது ஓரினச் சேர்க்கையாகிய விபசாரத்தை எந்தக் கட்டுப்பாடுகளுமில்லாமல் சமுதாயம் பின்பற்றக்கூடிய, பின்பற்ற வேண்டிய விருப்பொழுக்கமாக மாற்றுகிற மாபெரும் கேடாகும்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால், "பாருங்கள்! ரொம்பவும் நீதிமான் போல் இவரும் ஓரினச் சேர்க்கையாளரைத் தாக்கிப் பேச ஆரம்பித்துவிட்டார்" என்று சிலர் உடனடியாக என்னைக் குறைகூறுவார்கள். உங்களுடைய கோபம் எனக்குப் புரிகிறது. இன்றைக்கு ஓரினச் சேர்க்கையையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும் பற்றித் தாக்கிப் பேசுவதும், எழுதுவதும், பிரசங்கங்கள் கொடுப்பதும் அதிகரித்திருப்பதால் நீங்கள் என்னையும் அப்படி நினைக்க வேண்டியிருக்கிறது. அதோடு, ஓரினச் சேர்க்கையாளரோடு நண்பர்களைப் போலப் பழகி, நாம் ஒன்றும் மற்ற கிறிஸ்தவர்களைப்போல ஓரினச் சேர்க்கையாளரைப் பற்றித் தவறாக எண்ணி ஒதுக்கி வைப்பதில்லை என்று அவர்கள் புரிந்துகொள்ளும்படி நடந்துகொண்டால் சிலவேளை அவர்கள் திருந்தி இயேசுவிடம் வர வாய்ப்பிருக்கிறது என்று நீங்கள் அழுத்தமான எண்ணத்தைக் கொண்டிருப்பதாலும் நான் எழுதியிருப்பதை வாசித்தவுடன் இப்படி என்னைப் பற்றிக் கருத வேண்டியிருக்கிறது.
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஓரினச் சேர்க்கை யாளரைப் பற்றி இழிவாக எழுதி அவர்களை அவமானப்படுத்த வேண்டுமென்ப தல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம். பொதுவான கிருபையினால் இந்த விஷயத்தில் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகின்ற கிறிஸ்தவரல்லாதவர்களையும், கிறிஸ்தவர்களையும் மட்டுமல்லாமல் ஓரினச் சேர்க்கையாளரையும் மனதில் வைத்தே இதை நான் எழுதுகிறேன். ஒரு தரப்பினர் சார்பாக மட்டும் பார்க்காமல் கடவுளுடைய அதிகாரமுள்ள வேதம் இந்த விஷயத்தைப்பற்றி என்ன சொல்லுகிறது என்ற அந்த சத்தியத்தின் அடிப்படையில் எழுது கிறேன். ஓரினச் சேர்க்கை என்ற ஆபத்தான ஒழுக்கக் கேட்டில் விழுந்து விட்டவர்கள் மேல் எனக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை. இதில் விழுந்து விடுகிறவர்கள் ஏனைய பாவங்களைப் போலவே இதில் சுயமாகத்தான் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மனந்திரும்பி ஒழுக்கத்தோடு வாழ்வது இவர்களுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை செய்யும். ஓரினச் சேர்க்கை ஒழுக்கக்கேடான செயல் என்று சொல்லுவதால் ஓரினச் சேர்க்கையாளரை நாம் வெறுக்கிறோம் என்பது அர்த்தமல்ல. பாவத்தைப் பாவமென்று சொல்லாமல் வேறு பெயரில் அழைக்க முடியுமா? பாவத்தில் நாம் ஈடுபடாமல் இருப்பது மட்டுமல்ல அதை வெறுக்கவும் வேண்டும். அதேநேரம் இயேசுவைப் போல பாவிகளை மனிதர்களாக நடத்தி அவர்கள் மனந்திரும்பு வதற்கான வழிகளைக் காட்ட வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்களுடைய ஒழுக்கக்கேட்டை நாம் நியாயப்படுத்த முடியாது. அதைப் பற்றி நம்மால் பேசாமலும் இருக்க முடியாது. ஒழுக்கக்கேடாக வாழ்ந்து மற்றவர்கள் கல்லெறியும்படி தன் முன் நின்றிருந்த அந்தப் பெண்ணை அவர்களிடம் இருந்து இயேசு காப்பாற்றினார். அதேநேரம் அவளுடைய பாவத்தை அவளுக்கு உணர்த்த அவர் தயங்கவுமில்லை, தவறவுமில்லை.
ஓரினச் சேர்க்கையாளரை ஒதுக்கி வைப்பதால் நம் பிரச்சனை தீர்ந்து விடாது. ஏற்கனவே பாலியல் உறவுப் பாவச் செயல்கள் நம் சமுதாயத்தில் நிரம்பி வழிகின்றன. விபசாரம், ஒன்றுக்கு மேல் மனைவிகளை வைத்திருப்பது, சின்ன வீடு வைத்திருப்பது, திருமணத்திற்கு வெளியில் தகாத பெண்ணுறவு வைத்திருப்பது என்று பாவச் செயல்கள் வழக்கத்தில் இல்லாமலில்லை. இவர்களில் எத்தனையோ பேரை நாம் அன்றாடம் வேலைத் தளத்திலும், வேறு இடங்களிலும் சந்திக்கிறோம். நமக்குத் தெரிந்தவர்களும் இவர்கள் மத்தியில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நாம் ஒதுக்கி வைத்துவிடவில்லை. ஒதுக்கவும் வழியில்லை. இவர்களுக்கும் நாம் சுவிசேஷத்தை சொல்லாமலில்லை. இவர்களையெல்லாம்விட எந்த விதத்தில் ஓரினச் சேர்க்கையாளர் மோசமானவர்களாகிவிட்டார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அது உண்மைதான். ஓரினச் சேர்க்கையாகிய பாவத்தை செய்பவர்கள் அநேகமாக சமுதாயத்தில் இரகசியமாகவே இதுவரை இதைச் செய்து வந்திருப்பதால் நாம் இதற்கெதிராக கூக்குரலிட வழியில்லாமல் இருந்திருக்கிறது. இப்போது இவர்கள் வெளிப்படையாகவே இதைச் செய்வதோடு தங்களுடைய தவறான உறவுமுறைக்கு சட்டரீதியான, திருமணத்திற்கு இணையான அங்கீகாரமும் கேட்கிறார்கள். அதுதான் நம்மில் பலருக்கு இதை அசிங்கமானதாக எண்ணத் தோன்றுவதோடு, இப்படியானவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்ற எண்ணைத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.
அப்படியானால், நாம் செய்ய வேண்டியதுதான் என்ன? இவர்களை ஏற்றுக்கொண்டு இவர்களுடைய செயல்களுக்கு ஒப்புதல் கொடுக்கும்படிச் சொல்லுகிறீர்களா? என்று வேறு சிலர் காரசாரமாகக் கேட்பதும் என் காதுகளில் விழாமலில்லை. ஒரு பாவச் செயலை சுட்டிக்காட்டி அது தவறு என்று எடுத்துக்காட்டி திருந்தச் சொல்லுவதற்கும், அந்தப் பாவத்தைச் செய்பவரை அடியோடு வெறுத்து ஒதுக்கி வைப்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாவதை இயேசு செய்தார். இரண்டாவதைப் பரிசேயர்கள் செய்தார்கள். இந்த விஷயத்தில் நாம் இயேசுவின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும், பரிசேயர்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது. மேலை நாட்டு சமுதாயத்தில் ஓரினச் சேர்க்கையாளரை நாம் தவறாக நடத்தினாலோ, அவர்களுக்கு வெறுப்பூட்டினாலே நம்மை சிறையில் தள்ளக்கூடிய அளவுக்கு சட்டங்கள் இருக்கின்றன. நிச்சயம் நியூசிலாந்தில் அப்படித்தான். நியூசிலாந்து சமுதாயத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை சமுதாயத்தில் எல்லா மட்டங் களிலும் பார்க்கலாம். டி.வி. நியூஸ் வாசிப்பவர்களில் இருந்து பாராளுமன்ற அங்கத்தவர்கள் முதல் எங்கு பார்த்தாலும் அவர்கள் இருக்கிறார்கள். பாடசாலை ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் மேலைத்தேய நாடுகளில் நிதானத்தோடும், புத்தியோடும் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். சமுதாயத்தில் இந்தளவுக்கு ஊடுருவியிருக்கும், நம்மைப் பொறுத்தவரையில் பாவச்செயலான ஓரினச் சேர்க்கையாகிய சீரழிவின் ஆபத்திலிருந்து நம்மையும், நம் குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்ளுவது எப்படி என்பதை நிதானத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைப் பற்றி சிந்திக்காமல் கூக்குரலிடுவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.
எல்லாப் பாவங்களையும் போலவே ஓரினச் சேர்க்கையையும் கர்த்தர் அடியோடு வெறுக்கிறார். அப்படியானால் ஓரினச் சேர்க்கையாளர் மனந்திரும்ப வழியுண்டா என்ற கேள்வி எழும். ஓரினச் சேர்க்கைக்கு சட்டரீதியான திருமண அந்தஸ்து வழங்குவதால் அத்தகைய வாழ்க்கை முறை தவறு என்று உணர்ந்து அதிலிருந்து விடுபடுகிறவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்காமல் போகப் போவதில்லை. திருமணமானவர்கள் விவாகரத்து செய்கிறபோது எழுகின்ற சட்டரீதியான பல பிரச்சனைகள் இதிலும் ஏற்படும். ஓரினச் சேர்க்கையாளர் தங்களுடைய வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை நிச்சயம் விசுவாசிக்கலாம். எந்தப் பாகுபாடுமின்றி சகலருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் கடவுளின் விடுதலைச் செய்தி சுவிசேஷம். அது விபசாரர்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனந்திரும்பி மெய்யாகவே கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அத்தனை பேருக்கும் கடவுள் இரட்சிப்பை இலவசமாக வழங்குகிறார். நீதிமான்களுக்காக அல்ல அக்கிரமக்காரர்களுக்காகவே இயேசு இந்த உலகத்துக்கு வந்தார்.
ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:
கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்திற்கு, உலக மக்கள் இதுவரை அறிந்து ஏற்றிருந்த விளக்கத்தைவிட சட்டரீதியான மாற்று விளக்கம் இனிக் கொடுக்கப்படும். இது துளியும் பயமே இல்லாத கடவுளுக்கு எதிரான தைரியமான மானிடச் செயல். இந்தப் புது விளக்கம் சமுதாயத்தில் பரவி கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்
என்ற வேறுபாடில்லாமல் சமுதாய மக்களின் மனதைப் பாதிக்கும் பேராபத்து உருவாகியுள்ளது. டி.வி., வானொலி, பத்திரிகைகள், நூலகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் என்று எங்கும் இந்தப் புது விளக்கம் நியாயப்படுத்தப்பட்டு, பரவி பெரியவர்கள், இளைஞர்கள், பிள்ளைகள் என்ற வேறுபாடின்றி அனைவருடைய இருதயத்திலும் விஷத்தைப் தூவ வழியேற்பட்டிருக்கிறது. கடவுளின் சிந்தையில் மனிதனுடைய நன்மைக்காக உருவான திருமணத்தையே அடியோடு மாற்றியமைக்கும் சிதைக்கும் நடவடிக்கை இது.
- ஓரினச் சேர்க்கையாளர் திருமண அந்தஸ்தை மட்டுமல்லாமல் சாதாரணமாக திருமணம் செய்துகொள்ளுகிறவர்களுக்கு இருக்கும் அனைத்து சட்டரீதியான சலுகைகளையும் கேட்பதால் பிள்ளை வளர்ப்புக்கும் இனிப் புதுவிளக்கம் கொடுக்கப்படும். இரு ஆண்கள் குடும்பம் நடத்தி பிள்ளைகளைத் தத்தெடுத்தோ, வாடகைத் தாயைப் பயன்படுத்திப் பிள்ளைகளைப் பெற்றோ வளர்க்க முயலும்போது உண்மையான பெற்றோரில்லாமல் வளரும் அத்தகைய பிள்ளைகள் சமுதாயம் இதுவரை அறிந்திராத இயற்கைக்கு மாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பாரதூரமான விளைவுகளை சந்திப்பார்கள்.
- பாவகரமான எந்தச் செயலும் அதற்கான பலன்களைத் தனி மனிதனிலும் சமுதாயத்திலும் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. ஓரினச் சேர்க்கையினால் உருவாகும் நோய்களைக் குறித்து பக்கம் பக்கமாக மருத்துவ உலகம் விளக்காமலில்லை. அதை மனிதன் கவனிக்க மறுக்கிறான். அத்தோடு, இனி ஒருவரோ டென்றிராமல் பலபேரோடு பாலியல் உறவு வைத்து (றிஷீறீஹ்ரீணீனீஹ்) அதற்கும் சட்ட அந்தஸ்து கேட்கும் நிலமையும் உருவாகலாம். இந்தத் துணிகரமான செயல் அதற்கான பலன்களை சமுதாயத் தில் விதைத்து சமுதாய சீரழிவையும், கர்த்தரின் வருகையின் காலத்தையும் சமீபிக்காமல் இருக்கப் போவதில்லை.
- பாவகரமான எந்தச் செயலும் அதற்கான பலன்களைத் தனி மனிதனிலும் சமுதாயத்திலும் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. ஓரினச் சேர்க்கையினால் உருவாகும் நோய்களைக் குறித்து பக்கம் பக்கமாக மருத்துவ உலகம் விளக்காமலில்லை. அதை மனிதன் கவனிக்க மறுக்கிறான். இந்தத் துணிகரமான செயல் அதற்கான பலன்களை சமுதாயத்தில் விதைத்து சமுதாய சீரழிவையும், கர்த்தரின் வருகையின் காலத்தையும் சமீபிக்காமல் இருக்கப் போவதில்லை.
- ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்குவது நிச்சயம் கிறிஸ்தவ சபைகளைப் பாதிக்கும். ஓரினத் திருமணத்தை ஆதரிக் கின்ற அரசியல்வாதிகள் கிறிஸ்தவர்களுக்கும், சபைகளுக்கும் இதனால் பாதிப்பிருக்காது என்று சொன்னாலும் நிச்சயம்
பிரசங்கத்தையும், போதிக்கும் பணியையும் இது பாதிக்காமல் இருக்காது. தைரியத்தோடு இது தவறு என்று சுட்டிக்காட்டுவதும், பிரசங்கிப்பதும் சட்டத்துக்கு முரணானதாக மாறும் நிலை ஏற்படாமல் இருக்க வழியில்லை. திருச்சபை அங்கத்துவக் கட்டுப்பாடுகளை முறையாக வேத அடிப்படையில் பின்பற்றி வர இதுவரை இருந்திராத இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவும் வழியில்லை. இயற்கைக்கு மாறானதொன்றை சமுதாயம் சட்டரீதியாக அங்கீகரிக்கின்றபோது அதெல்லாம் நிச்சயம் ஏதோவொருவகையில் கிறிஸ்தவ சபையைப் பெரிதும் பாதிக்கத்தான் செய்யும்.
இயற்கை என்பது கடவுள் படைப்பில் ஏற்படுத்தி வைத்த விதிமுறை என்றுதான் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம். சூரியன் உதிப்பதும், மறைவதும் இயற்கை. பூ பூப்பதும், வாடுவதும் இயற்கை. ஊற்றிலிருந்து தண்ணீர் வருவதும் கடலில் போய் கலப்பதும் இயற்கை. அதேபோல் ஆணும், பெண்ணும் திருமணத்தில் இணைவது இயற்கை ஏற்படுத்தி வைத்த தர்மம். இன்று இயற்கையை மனிதன் மாற்றியமைக்கும் செயலில் இறங்கிவிட்டான். இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாற்றுகிற அவனுடைய முயற்சி எங்கு போய் முடியுமோ? 'மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு தாம் பூமியில் மனுஷரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது' என்று வேதம் சொல்லுகிறது. அதன் காரணமாக அவர் மனிதனின் ஆயுளைக் குறைத்திருக்கிறார். நோவாவின் காலத்தில் நீதிமான்களாயிருந்த எட்டுப்பேரைத் தவிர்த்து ஏனைய எல்லோரையும் அழித்தார். பாபேல் கோபுரத்தைக் கட்டி கர்த்தர் இருக்கும் இடத்தை அடைய மனிதன் எண்ணங்கொண்டபோது ஒரே பாஷை பேசிக்கொண்டிருந்த மனிதன் புரிந்துகொள்ள முடியாதபடி பாஷைகளைக் கொடுத்தார். சோதோமினதும், கொமோராவினதும் அக்கிரமக் கூக்குரல் பெரிதானபடியால் வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்கினியையும் வரப்பண்ணி அந்நகரங்களில் புல்லும் இல்லாதபடி அழித்துப் போட்டார். இவற்றின் மூலம் தன் பொறுமைக்கும் ஓரளவுண்டென்று காட்டுகின்ற கடவுள் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பொறுத்திருக்கப் போகிறாரோ?
அலங்கரிக்கப்பட்ட பிணமும் பீசா கோபுரமும்
இன்று நம்மத்தியில் காணப்படுகின்ற கிறிஸ்தவத்தைப் பற்றிய இரண்டு முக்கியமான ஆத்மீக விஷயங்களை விளக்க விரும்புகிறேன். நான் விளக்கப்போகும் இந்த இரண்டு அம்சங்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தோடு சம்பந்தமுடையது. ஒன்று, அலங்கரிக்கப்பட்ட பிணத்தைப் போன்ற விசுவாசமில்லாத அறிவு. இன்னொன்று, பீசாவின் சாய்ந்த கோபுரத்தை நினைவூட்டும் அறிவை நாடாத விசுவாசம்.
அலங்கரிக்கப்பட்ட பிணம் (விசுவாசமில்லாத அறிவு)
சுவிசேஷத்தைக் கேட்டுப் புரிந்துகொள்கிற ஒருவரால் மட்டுமே கிறிஸ்துவை விசுவாசிக்க முடியும். விசுவாசம் கேள்வியின் மூலம் வருகிறது என்கிறார் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் பத்தாவது அதிகாரத்தில். ஒருவன் காதால் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டு இருதயத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். நம்மைப் படைத்த இறையாண்மையுள்ள கடவுளால் எவரையும் எந்த முறையிலும் இரட்சிக்க முடிந்தபோதிலும் அவர் சாதாரணமாக சுவிசேஷத்தின் மூலமாகவே பாவியின் உயிரற்ற செவி மடல்களையும், இருதயத்தையும் திறந்து வைக்கிறார். இதனால்தான் சுவிசேஷப் பிரசங்கம் அவசியமாயிருக்கிறது. சுவிசேஷப் பிரசங்கமில்லாது எவரும் இரட்சிப்பை அடைய வழியில்லை. இன்றைய சூழ்நிலையில் இந்த உண்மை மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட வேண்டியதாக இருக்கிறது. சுவிசேஷப் பிரசங்கத்தை விட்டுவிட்டு வெறும் போலி வித்தைகளைச் செய்து காட்டியும், வாக்குத்தத்த வசனங்களை மட்டும் அள்ளிக் கொட்டியும் மனிதனுக்கு இரட்சிப்புக்கான வழிகாட்ட முனைந்திருப்பவர்கள் நம்மத்தியில் அதிகம். ஜெப கோபுரங்களில் தனி மனிதர்களின் பெயரை இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு சொல்லி ஜெபிப்பதால் இரட்சிப்பு ஒருவருக்கும் கிடைக்காது. இரட்சிப்புக்குரிய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காமலேயே ஒரு மனிதனை கிறிஸ்தவனாகக் கூட்டத்தில் அறிவிக்கின்ற அலங்கோலங்களையெல்லாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிற நிலைமையில் தமிழினம் இருக்கின்றது. இதெல்லாம் இயேசு போதிக்காத, கிறிஸ்தவ சுவிசேஷத்தையே அவமதிக்கும் செயல்களாகும். இரட்சிப்புக்கு சுவிசேஷம் மட்டுமே தேவ பலனாக இருக்கின்றது என்று பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் முதலாவது அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். அதனால் எந்த மனிதனும் சுவிசேஷத்தைக் காதால் கேட்டு சிந்தித்து தன் இருதயத்தில் இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.
இப்படியாக சுவிசேஷத்தைக் காதால் கேட்டு அதன் செய்தியைப் புரிந்துகொள்ளுவது இரட்சிப்பை அடைய அவசியமானதாக இருந்தபோதும், சுவிசேஷத்தைப் பற்றிய வெறும் அறிவால் மட்டும் இரட்சிப்பு கிடைத்துவிடாது. இதென்னடா! ஒரு கையால் கொடுத்துவிட்டு இன்னொரு கையால் வாங்கிவிடுகிறீர்களே என்கிறீர்களா? அப்படியில்லை. இதை நான் கொஞ்சம் விளக்கியே சொல்லிவிடுகிறேனே. சுவிசேஷம் நம்முடைய மொழியில் பிரசங்கிக்கப்படுகிறபொழுது அதில் விளக்கப்படுகின்ற இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்புக்கான வழியை நாம் கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த வகையிலேயே நமக்கு இரட்சிப்பு பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலமாகக் கிடைக்கின்றது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், சுவிசேஷத்தின் அருமையையும், அதில் விளக்கப்படும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அருமையையும் கேட்டு கிறிஸ்து எத்தனை பெரியவர் என்றோ அல்லது சுவிசேஷம் எத்தனை மகத்தானது என்றோ பாராட்டுவதற்காக சுவிசேஷம் கொடுக்கப்படவில்லை. பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி இரட்சிப்புக்காக கிறிஸ்துவை விசுவாசிக்க அது கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்தை உணர்தலும், மனந்திரும்புதலும் விசுவாசமும் இல்லாதவரை இரட்சிப்புக்கு வழியில்லை. சுவிசேஷப் பிரசங்கத்தின் விளைவாக மனிதன் கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து அவரிடம் இரட்சிப்பை நாடி ஓட வேண்டும்; அவரை விசுவாசிக்க வேண்டும். இது நிகழாதவரை ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. அதனால்தான் சுவிசேஷ செய்தியைக் கேட்டு அதைப் பாராட்டுவதோடு இருந்துவிட்டால் இரட்சிப்புக்கு வழியில்லை என்று சொல்லுகிறேன். சுவிசேஷ செய்தியைப் பற்றிய அறிவு அவசியம். ஆனால், அந்த அறிவு மட்டுமே இரட்சிப்பைக் கொடுத்துவிடாது.
விசுவாசமில்லாத வெறும் சுவிசேஷ அறிவினால் எந்தப் பயனுமில்லை. இந்தவிதத்தில் விசுவாசமற்ற சுவிசேஷ அறிவை மட்டும் ஒருவரால் கொண்டிருந்துவிட முடியும். இதனை மனத்தளவிலான அறிவு அல்லது புத்திபூர்வமான அறிவு (மிஸீ௴மீறீமீநீ௴௵ணீறீ யீணீவீ௴லீ) என்று அழைப்பார்கள். இது இரட்சிப்பை அளிக்க முடியாத அறிவு. இது மனத்தளவில் வெறும் அறிவாக மட்டும் இருந்துவிடும். இதில் இரட்சிப்பின் கிருபையைக் காண முடியாது. இப்படியான வெறும் மனத்தளவிலான ஆத்மீக அறிவைக் கொண்டிருந்தவர்களை வேதத்தில் நாம் அடையாளம் காணமுடியும். ஏரோது இராஜா ஆர்வத்தோடு இயேசுவைப்பற்றிக் கேட்டறிந்துகொள்ள பல இரவுகள் யோவான் ஸ்நானனை சிறையில் சந்தித்துப் பேசியிருக்கிறான். யூதாசு இயேசுவின் சீடனாக இருந்து அப்போஸ்தலர்களில் ஒருவனாக இடம் பிடித்து பிரசங்கங்களையும், அற்புதங்களையும் செய்திருக்கிறான். தேமா பவுலோடு இணைந்து ஊழியம் செய்து இறுதியில் உலக இச்சையால் அதை உதறிவிட்டுப் போயிருக்கிறான். இப்படி வெறும் மனத்தளவில், புத்திஜீவிகளாக மட்டும் இருந்து சுவிசேஷத்தில் ஆர்வம் காட்டி, கிறிஸ்தவர்கள் என்று இனங்காட்டிக்கொள்ளுமளவுக்கு (இரட்சிப்பை அடையாமல்) இருந்திருக்கின்ற அநேகரை வேதத்தில் அடையாளம் காண்கிறோம். பரிசேயர்கள் கூட்டத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களைவிட பழைய ஏற்பாடு தெரிந்தவர்கள் யூதர்கள் மத்தியில் இருந்திருக்க முடியாது. இஸ்ரவேலின் போதகன் என்று இயேசுவால் அழைக்கப்பட்ட பரிசேயனான நிக்கொதேமு கூட வேத அறிவை மட்டும் கொண்டிருந்து ஆண்டவரை அறியாமல் இருந்திருக்கிறான். இப்படி விசுவாசம் இல்லாத வெறும் சுவிசேஷ அறிவை மட்டும் ஒருவர் கொண்டிருந்துவிட முடியும். அந்த ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளுவது அவசியம்.
சமீபத்தில் சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜனைப் பற்றி என் சபையில் நண்பரும், சகபிரசங்கியுமான ஒருவர் விளக்கமான செய்திகள் தந்தார். ஸ்பர்ஜனைப் பற்றிப் பல அருமையான விஷயங்களை நினைவுபடுத்தி பாடங்களைக் கற்றுக்கொள்ள அவர் உதவினார். அதில் ஒன்று ஸ்பர்ஜனுடைய ஆரம்ப கால வாழ்க்கை பற்றியது. நான்கு வயதில் இருந்தே ஸ்பர்ஜன் விசேஷமான, அசாதாரணமான தன்மைகளைக் கொண்டிருந்தார். வாசிக்கவே தெரியாத வயதில் நூல்கள் மேல் நாட்டம் காட்டித் தன்னுடைய தாத்தாவின் படிப்பறையில் புத்தகங்களைத் திறந்து அவற்றில் எழுத்துக்களையும், படங்களையும் மணிக்கணக்காக ஆர்வத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். நான்கு வயதில் நிகழ்ந்தது இது. ஐந்து அல்லது ஆறு வயதில் வேதவசனங்களைக் கற்று மனப்பாடம் செய்து வாசிக்கவும், ஓய்வு நாளில் நாட்டம் செலுத்தவும் ஆரம்பித்தார். போதகரான தன்னுடைய தாத்தாவின் மனசுக்கு துன்பம் விளைவித்த சபை அங்கத்தவரொருவரை நேரில் பார்த்துக் கண்டித்து அன்றிலிருந்து அவர் மது அருந்துவதைவிட்டுவிடவும், மனந்திருந்தவும் காரணமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் ஐந்து ஆறுவயதில் ஸ்பர்ஜனில் காணப்பட்ட அம்சங்கள். அடுத்த பன்னிரெண்டு வருடங்களுக்கு ஸ்பர்ஜன் வேதத்தையும், பியூரிட்டன் பெரியவர்களின் அருமையான வேத போதனைகளையும் கரைத்துக் குடித்து மற்றவர்களுக்கு விளக்கமளிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தது பதினைந்தாம் வயதில். ஆனால், அதற்கு முன்பே வேத பாண்டியத்தையும், இன்று அநேக போதகர்கள்கூட வாசித்திராத பியூரிட்டன் பெரியோரின் அருமை நூல்களையும் கற்றுத் தேர்ந்து போதனைகள் செய்திருக்கிறார். இத்தனை சுவிசேஷ கிறிஸ்தவ ஞானமும் கிறிஸ்துவை விசுவாசிக்கும் முன்பே அவருக்கு இருந்திருக்கிறது. சுவிசேஷ அறிவும், ஞானமும் அதிகமாகவே இருந்தது; விசுவாசம் மட்டும் இருக்கவில்லை. இதே முறையில்தான் ஜோன் வெஸ்லியும் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அடையும் முன்பே வேதத்தைக் கற்றுத் தேர்ந்து பிரசங்கங்கள் செய்து வந்திருக்கிறார். இதெல்லாம் எதைக் காட்டுகிறது. இரட்சிப்புக்கு சுவிசேஷ அறிவு நிச்சயமாகத் தேவைப்பட்டபோதும் வெறும் சுவிசேஷ அறிவு மட்டும் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொடுத்துவிடாது என்பதுதான். விசுவாசமில்லாமல் வெறும் சுவிசேஷ அறிவு மட்டும், அது எத்தனை அவசியமானதாக, நன்மையானதாக இருந்தாலும், ஒருவருக்கிருந்துவிடலாம் என்பது இதிலிருந்து தெரிகிறதா?
இந்தவிதத்தில் வெறும் புத்திபூர்வமான சுவிசேஷ அறிவிருந்து இரட்சிப்பு இல்லாமலிருக்கிறவர்களைப் பற்றித்தான் எபிரெயர் 6:4-6 வரையிலுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறவர்கள் பொதுவான கிருபையின் மூலம் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் தவிர்த்த எத்தனையோ பலன்களை சுவிசேஷத்தின் மூலம் அடைந்திருந்தபோதும் கிறிஸ்துவைத் தங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் அடையாமல் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். வில்லியம் பேர்க்கின்ஸ் (கீவீறீறீவீணீனீ றிமீக்ஷீளீவீஸீ௳) என்ற பியூரிட்டன் பெரியவர் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு பற்றிக் கொடுத்திருக்கும் ஒரு வரைபடத்தில் பொதுவான கிருபையின் மூலம் ஆவிக்குரிய சில நல்ல பலன்களை மட்டும் கொண்டிருந்து இரட்சிப்பை அடையாமல் இருக்கிறவர்களைப் பற்றி விளக்கியிருக்கிறார். மனத்தளவில் மட்டும் சுவிசேஷ அறிவைக் கொண்டிருந்து விசுவாசமில்லாமல் இருக்கிறவர்கள் அதில் அடங்குகிறார்கள். இது எத்தனை ஆபத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சுவிசேஷ அறிவு அவசியமானபோதும், அது அதிகளவுக்கு இருந்தபோதும் அதைக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய இருதயத்தை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு வேதத்தில் எத்தனை அறிவு இருந்தபோதும் பாவ உணர்தலோடு கூடிய மனந்திரும்புதலும், விசுவாசமும் கிறிஸ்துவின் மூலம் ஏற்படாதிருந்தால் அவருடைய அத்தனை அறிவாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வெறும் சுவிசேஷ அறிவைக் கொண்டிருப்பது இரட்சிப்பை அடைந்திருப்பதற்கு அடையாளமில்லை. அதனால்தான் அதை அலங்கரிக்கப்பட்ட பிணத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பிணத்துக்கு எத்தனை அலங்காரம் இருந்தாலும் அது பிணந்தான். எத்தனை அறிவிருந்தும் இரட்சிப்பு இல்லாவிட்டால் அது ஆத்மீக ரீதியில் செத்த பிணந்தான். வெறும் அறிவு இருதய மாற்றத்தை ஏற்படுத்தாது. அந்த அறிவைப் பயன்படுத்தி இரட்சிப்புக்கு ஏதுவாக கிறிஸ்து கட்டளையிட்டிருப்பதை நடைமுறையில் செய்ய வேண்டும்.
அப்படி என்ன கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார்? மனந்திரும்பி இன்றே என்னை விசுவாசி என்கிறார் கிறிஸ்து. 'உங்களைப் பற்றித்தான் எனக்கு அதிகம் தெரியுமே. உங்களுடைய சிலுவை மரணத்தைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் கடவுள் என்பது எனக்குத் தெரியும். மறுபடியும் நீங்கள் வரப்போவதும், நியாயத்தீர்க்கப் போவதும் எனக்குத் தெரியும். இதெல்லாம் நான் கிறிஸ்தவன் என்பதற்கு அடையாளம் இல்லையா?' என்று கேட்பீர்கள். நிச்சயமாக, உறுதியாக இல்லை என்றுதான் சொல்லுவேன். நான் அப்படிச் சொல்லுவதற்குக் காரணமென்ன? நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், இத்தனையும் தெரிந்திருந்தும் உங்களுக்கு மனந்திரும்புதல் கிடைக்கவில்லையே, அதனால்தான அப்படிச் சொல்லுகிறேன். 'அப்படியானால் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கின்ற உண்மைகள் மனந்திரும்புதலுக்கு அடையாளம் இல்லையா?' என்று கேட்பீர்கள். அதற்கும், நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்லுவேன். கிறிஸ்துவைப் பற்றிய வெறும் அறிவு மனந்திரும்புதலுக்கு அடையாளம் இல்லை. வேதம் அறிவை மனந்திரும்புதலுக்கு அடையாளமாக இனங்காட்டவில்லை. இயேசு, 'என்னைபற்றி என்னென்ன தெரிந்துவைத்திருக்கிறாய்?' என்றா கேட்கிறார். 'என்னைப் பற்றி உனக்கிருக்கும் அறிவு, நீ என்னுடைய பிள்ளையாய் இருக்கிறாய் என்பதற்கு அடையாளம்' என்றா? சொல்லியிருக்கிறார். நன்றாய் கவனித்து வேதத்தை வாசித்துப் பாருங்கள். இயேசு அப்படிச் சொல்லவேயில்லை. 'நீ மனந்திரும்பி என்னை விசுவாசி' என்றுதான் சொல்லியிருக்கிறார். 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்' (யோவான் 6:35). 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (யோவான் 6:47) என்றுதான் விளக்கியிருக்கிறார். இதிலிருந்து இயேசு எதிர்பார்ப்பது வெறும் அறிவை அல்ல; விசுவாசத்தைத்தான் என்பது தெரியவில்லையா உங்களுக்கு. இயேசு சொல்லுவதை நீங்கள் செய்யாமலிருந்து உங்களைக் கிறிஸ்தவனாக கற்பனை செய்து வாழாதீர்கள். வெறும் சுவிசேஷ அறிவை இரட்சிப்புக்கு அடையாளமாக எண்ணி வீண்போகாதீர்கள். இயேசு சொல்வதைக் கேட்டு இன்றே, இப்போதே மனந்திரும்புங்கள். இயேசுவை பாவ மன்னிப்புக்காக விசுவாசியுங்கள். உங்களுக்கிருக்கும் அறிவில் தஞ்சம் அடையாமல் இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரிடம் வாருங்கள், உங்கள் பாவங்களை மன்னிக்கும்படிக் கேட்டு அவரை முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்போது தெரிகிறதா? வெறும் அறிவுக்கும் இயேசுவை விசுவாசிப்பதற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு. இதைத்தான் விசுவாசமில்லாத அறிவு என்று அழைக்கிறேன்.
பீசாவின் சாய்ந்த கோபுரம் (அறிவை நாடாத விசுவாசம்)
இத்தாலியின் பீசா கோபுரம்
இன்று அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் நம்மினத்தில் சிறிதளவில் வேத அறிவுத்தாகம் ஏற்பட்டிருப்பதைக் கடந்த இருபது வருடங்களாக நான் கவனித்து வருகிறேன். கடல் போன்ற நம் ஜனத்தொகையில் மெய்க் கிறிஸ்தவர்களின் தொகையும், நல்ல சபைகளின் எண்ணிக்கையும் துளியளவே என்பது நம்மில் அனைவரும் ஒப்புக்கொள்ளுகிற ஒரு விஷயந்தான். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகத்தான் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். சமீபத்தில் நான் தமிழகத்தில் ஓரிடத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது வண்டியோட்டியவர் என்னோடு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர் கிறிஸ்தவர் என்பது முதலில் எனக்குத் தெரியாது. கிறிஸ்தவர் என்று தெரிந்தவுடன் ஆர்வத்தோடு வேத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தேன். நேரம் போவதும் தெரியவில்லை. என்னுடைய பிரசங்கத்தை முதன் முறையாக அன்றைக்கு கேட்டிருந்த அவர், 'இந்த மாதிரிதான் ஐயா, வேதத்தை விளக்கிப் போதிக்க வேண்டும். இது போன்ற போதனைகள் எனக்குக் கிடைப்பதில்லை' என்றார். ஏன்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர், 'என் சபையில் பிரசங்கமே கொடுப்பதில்லை' என்றார். அப்படியானால் வேறு என்னதான் செய்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு, 'ஆவிக்குரிய துடிப்பு வரும்படியாக பாடுவோம், சத்தம்போட்டு ஜெபிப்போம், கையை வேகமாகத் தட்டுவோம், குதிப்போம். ஆனால், இயல்பிலேயே நான் அமைதியானவன். எனக்கு அப்படியெல்லாம் செய்யவராததால் மற்றவர்கள் என்னை ஆவியில்லாதவன் என்றும், கர்த்தருக்கெதிராக பாவம் செய்கிறேன் என்றும் சொல்லுகிறார்கள்' என்றார். இந்த சகோதரருக்கு தான் போகும் சபையில் ஏதோ சரியில்லை என்பது தெரிந்திருக்கிறது. ஆனால், எது சரியானது என்பது தெரியாமலிருந்தது. அன்றைக்கு முதல் தடவையாக பிரசங்கத்தை ருசி பார்த்த அவருக்கு எது தேவை என்பது தெரிந்துவிட்டது. அவரை சத்தியம் பிரசங்கிக்கப்படும் ஒரு சபைக்குப் போகும்படி ஆலோசனை கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னோடிருந்து நான் கொடுத்த பிரசங்கங்களை ஆர்வத்தோடு கேட்டார் அந்த மனிதர். இப்படி சிலருக்கு இன்று வேதப் பிரசங்கத் தாகம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால், பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அதை விட்டுவிட்டு இந்த சகோதரர் விளக்கியதுபோன்ற வேறு காரியங்களில் தொடர்ந்து நாட்டம் செலுத்தி வருகிறார்கள்.
இன்று வேத அறிவுப் பஞ்சம் தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் தாண்டவம் ஆடி வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. டிவியைப் போட்டு இருக்கும் கிறிஸ்தவ செனல்களைப் பார்த்தாலே போதும். எந்தளவுக்கு அறியாமையில் மூழ்கி கிறிஸ்தவம் என்ற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தை நம்மினத்தில் நாம் பார்க்கிறோம். சபை, சபையாக ஆவியானவர் இறங்க வேண்டும் என்ற பெயரில் ஆராதனையையும், ஜெபக்கூட்டத்தையும் கேளிக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறவர்களின் எண்ணிக்கையைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கிறிஸ்தவமாகவும், கிறிஸ்தவர்களாகவும் அடையாளம் காணமுடியுமா என்று கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்ல நான் என்ன கடவுளா? அவர்களுடைய இருதயம் தெரிந்தவர் கடவுள் மட்டுமே. அவர்கள் எங்கு போய்ச்சேருவார்கள் என்பதும் அவருக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் அவர்களுடைய செயல்களையும், ஆராதனை என்ற பெயரில் செய்கின்ற அட்டகாசங்களையும் பார்க்கிறபோது பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் அந்நிய அக்கினியை ஆண்டவருக்கு முன் கொண்டு வந்து அழிவைத் தேடிக்கொண்டதையும், கிறிஸ்தவ சபை வரலாற்றில் மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவச் சிலை வழிபாட்டையும், தூபம் காட்டுதலையும் அறிமுகப்படுத்தி ஆழ்போல் வளர்ந்து கிறிஸ்தவத்தின் பேரெதிரியாக மாறிய ரோமன் கத்தோலிக்க மதத்தையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தவிதமாக உணர்ச்சிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து அதை எல்லைமீறிப் போகிறபடி செய்தால் பரிசுத்த ஆவி நம்மீது வருகின்ற நிலையை அனுபவிக்கலாம் என்ற தவறான, புறஜாதி மதப் போக்கைப் பின்பற்றுகிறவர்களை என்னால் பரிதாபமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்து மதத்தில் சாமியாடுகிறவர்களை நான் அறிந்திருக்கிறேன். தன்னுடைய சுயஉணர்வை இழந்து, எல்லைமீறிய உணர்ச்சி அதிகரிப்பால் எதையெதையோ பேசிச் செய்கின்ற இந்து மதத்தில் குறி சொல்லுகின்ற, பேய்விரட்டுகின்ற மனிதர்களைப் பற்றி அறிந்தும், கண்டும் இருக்கிறேன். 'ஆவி இறங்குகிறார்' என்று சொல்லி ஆராதனை நடத்தாத, கூட்டத்தில் பேசாத தமிழக கிறிஸ்தவ பிரசங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த மாதிரியான இந்து மதச் செயல்களை நினைப்பூட்டும் வகையில் இருப்பவற்றைக் கிறிஸ்தவம் என்ற பெயரில் எப்படி அழைக்க முடியும் என்று என்னால் ஆதங்கத்தோடு கேட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படிக் கேட்டுப் பார்க்காமல், ஆண்டவர் இதில் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று பயத்தோடு தட்டிக்கழித்துவிடும் அறியாமையும் எனக்கில்லை. எது கிறிஸ்தவம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் கிறிஸ்தவம் இருக்குமானால் என்னைப் பொறுத்தவரையில் அதற்குப் பெயர் கிறிஸ்தவமாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வேதம் நமக்கு எது கிறிஸ்தவம் என்பதை தெளிவாக இனங்காட்டிக் கொடுக்கிறது.
கிறிஸ்தவம் என்ற பெயரில் தொடரும் இந்த மாதிரியான செயல்களுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருப்பது தவறு. என்னைப் பொறுத்தவரையில் இதற்கெல்லாம் காரணம் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தை நம்மினத்தில் பார்க்க முடியாதிருப்பதுதான். ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்தும், உலகின் ஏனைய சகல மதங்களில் இருந்தும் கிறிஸ்தவத்தை வேறுபடுத்திக் காட்டுவது கிறிஸ்தவ வேதம் மட்டுமே. கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வேதத்தை கடவுளுடைய வார்த்தை என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். அதிலுள்ள அனைத்துமே, போதனைகள் மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கடவுளால் பரிசுத்த ஆவியின் மூலமாக அருளப்பட்டவை என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. அதன் காரணமாக கிறிஸ்தவத்தின் சகல அம்சங்களும் கடவுளின் வார்த்தையாகிய வேதத்தின் மூலமே சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். தன்னுடைய மக்கள் தன்னை விசுவாசித்து, தன்னுடைய போதனைகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றுவதற்காக, அவர்களுக்கு அவசியமான தன்னுடைய சித்தத்தின் மொத்தத் தொகுப்பாக கடவுள் கிறிஸ்தவ வேதத்தைத் தந்திருக்கிறார். இதனால், கிறிஸ்தவ வேதம் மிகச் சிறப்பானது. கிறிஸ்தவ வேதம் மட்டுமே இயேசுவின் சுவிசேஷத்தை வெளிப்படுத்துகிறது. இரட்சிப்புக்கான வழிமுறையைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாக வாழத் தேவையான அனைத்தையும் தருகின்றது. ஆகவே, கிறிஸ்தவ வேதம் கிறிஸ்தவனுக்கு உயிர்நாடி என்று அடித்துச் சொல்ல முடியும். வேதமில்லாமல் அவனால் வேத வாழ்க்கை வாழ முடியாது. கர்த்தரில் அன்பு செலுத்தி அவரை ஆராதிக்க வழியிருக்காது. இது தெரிந்துதான் பிசாசு ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ வேதத்தை இல்லாமலொழிக்க வகை தேடினான்.
வேத ஞானமில்லாத விசுவாசமா?
கிறிஸ்தவ வேதமில்லாமல் கிறிஸ்தவம் இருக்க முடியாதென்றால் கிறிஸ்தவ வேத ஞானமில்லாமல் மெய்யான விசுவாசம் இருக்க முடியுமா என்று கேட்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவத்தின் ஆணிவேர் இயேசு கிறிஸ்து. அந்த ஆணிவேர் தன்னுடைய வார்த்தையான வேதத்தின் மூலமே சபையைத் தாங்கி நிற்கிறது. அதனால்தான் எந்த சபையும் வேதத்தை நிராகரித்து விலகிப் போகிறபோது மெய்யான சபையாக இல்லாமல் ஆண்டவருடைய விளக்குத் தண்டத்தை இழந்து போகிறது (வெளி 2:6). கிறிஸ்து நமக்கு ஜீவநாடி என்றால் அவருடைய வார்த்தையாகிய வேதமே அந்த ஜீவநாடியோடு நமக்கிருக்கும் உறவை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கிறது. இன்னொரு முறையில் சொல்லப்போனால், எந்த அளவுக்கு வேதம் நம்மில் நிறைந்திருக்கிறதோ அந்தளவுக்கே கிறிஸ்து நம்மில் அடையாளம் காணப்படுவார். வேதமில்லாத கிறிஸ்தவன் என்ற வார்த்தைக்கே கிறிஸ்தவ அகராதியில் இடமில்லை. அந்தளவுக்கு கிறிஸ்துவைப் போலவே வேதமும் நமக்கு அத்தியாவசியமானது. வேதமில்லாத கிறிஸ்தவம் இருக்க முடியாததுபோல் வேதமில்லாத விசுவாசம் இருக்க முடியாது. வேதத்தை வைத்து மட்டுமே ஒருவருடைய விசுவாசத்தை அது எத்தகையது என்று ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியும். மெய் விசுவாசம் இருக்குமிடத்தில் கிறிஸ்து வேதத்தின் மூலம் அந்த ஆத்துமாவை ஆளுவதைக் கண்டுகொள்ளலாம்.
விசுவாசமும் வேத அறிவும்
விசுவாசத்திற்கு வேத அறிவு எந்தளவுக்கு முக்கியம்? என்ற கேள்விக்கு நாம் பதிலளக்க வேண்டும். இரட்சிப்புக்குரிய விசுவாசத்திற்கு சுவிசேஷ அறிவு அவசியம் தேவை என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பாவத்தைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும், அவருடைய சிலுவைத் தியாகத்தைப் பற்றியும் அறிந்தே ஒருவர் கிறிஸ்துவை நாட முடியும். இரட்சிப்பைப் பற்றிய போதனைகள் பழைய புதிய ஏற்பாடெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. முக்கியமாக புதிய ஏற்பாட்டில் தெளிவாகப் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. சொந்த மொழியில் வேதத்தை வாசிக்கின்ற எவரும் தடையில்லாமல் புரிந்துகொள்ளும் விதத்தில் இரட்சிப்பைப் பற்றிய போதனைகள் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றன. ஆகவே, இரட்சிப்பை அடையவும், இரட்சிப்பின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் ஒருவர் இறையியல் அறிஞரளவுக்கு வேதத்தில் பாண்டித்தியம் இருக்கத் தேவையில்லை. சுவிசேஷ உண்மைகள் தெளிவாக இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் வேதத்தில் தரப்பட்டிருக்கின்றன. அந்த உண்மைகள் இல்லாமல் மெய்யான விசுவாசம் இருக்க முடியாது. இரட்சிப்பை அடைந்த ஒருவர் தான் பரிசுத்தமாக வாழத் தேவையான சத்தியங்களை அறிந்துவைத்திருப்பதும் அவசியம். அவையும் தெளிவாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. பத்துக்கட்டளைகள் புரிந்துகொள்ள முடியாதவிதத்தில் வேதத்தில் காணப்படவில்லை. இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கைக்கும் அவசியமான போதனைகளை தெரிந்துவைத்திருக்க ஒருவர் இறையியல் கல்லூரிக்குப் போகத் தேவையில்லை. பெரும்படிப்பறிவில்லாத பாமரனும் தன் சொந்த மொழியில் இவைகளை வேதத்தில் வாசித்து தெளிவாக அறிந்துகொள்ள முடியும்; அறிந்துவைத்திருக்க வேண்டும். இவையில்லாமல் ஒருவன் கிறிஸ்தவனாக இருந்துவிட முடியாது.
விசுவாச வளர்ச்சியும் வேத அறிவும்
இதற்கு மேலாக வேத அறிவு கிறிஸ்தவனுக்குத் தேவையா? என்று எவராவது கேட்கலாம். இந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கிறிஸ்தவரொருவர் இப்படி நினைக்கலாம், 'இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கைக்கும் தேவையான அளவுக்கு வேத அறிவு இருந்தால் மட்டும் போதாதா? ஏன் வீணாக வேதம் வேதமென்று அதில் காலத்தை வீணாக்க வேண்டும். அதிக படிப்பு தானே பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது; பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. இரட்சிப்புக்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும் அவசியமான தெளிவான சில போதனைகளோடு நிறுத்திக்கொண்டு பரலோக இன்பத்தை இங்கே அனுபவித்து வாழ்வதில் என்ன தவறு? சுவிசேஷத்தை சொல்லுவதற்கும்கூட அதிக வேத அறிவு தேவையில்லையே. அப்படிப் பார்க்கிறபோது வேதம் கர்த்தருடையது என்ற நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாமல் இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்வதற்கும், சுவிசேஷத்தை சொல்லுவதற்கும் அவசியமான அளவுக்கு மட்டும் வேதம் தெரிந்து வாழ்ந்துவிட்டால் ஒரு பிரச்சனையும் இருக்காதே? இதற்குமேல் ஏன் அலட்சிக்கொள்ள வேண்டும்?' இப்படி சிந்திக்கின்ற, பேசுகிற கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லுவது? இனி நான் விளக்கபோவதைக் கொஞ்சம் கவனத்தோடு சிந்தித்துப் பாருங்கள்.
(1) முதலில், வேத அறிவு அதிகம் தேவையில்லை என்று சொல்லுகிற ஒரு கூட்டம் இன்று தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்ளுவது அவசியம். சகோதரத்துவ சபைகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பொதுவாக வேதத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று அவர்கள் கருதியதோடு போதகர் என்று விசேஷமாக ஒருவர் நியமிக்கப்பட்டு போதிக்க வேண்டியதில்லை, யாரும் வேதத்தைப் போதிக்கலாம், விளக்கலாம் என்று நம்ப ஆரம்பித்தார்கள். அதன்படி கிறிஸ்தவனாக இருக்கும் எவரும் போதிக்கலாம் என்ற நிலை அவர்கள் மத்தியில் உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே முக்கியம், வேறு எதுவும் அந்தளவுக்கு முக்கியமில்லை என்ற கருத்து உருவாகி திருச்சபை அமைப்பதிலும், திருச்சபை அமைப்பில் அக்கறை காட்டுவதிலும் கவனம் செலுத்தாத ஒருவகை கிறிஸ்த ஊழியம் உருவானது. அந்த மனப்போக்கோடு வளர்ந்த கிறிஸ்தவத்தின் பிரதிபலிப்பைத்தான் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இன்று பார்க்கிறோம். இன்றைக்கு வேதத்தில் ஆழமான போதனைகளோ, அறிவோ இருப்பது அவசியமில்லை என்ற எண்ணம் பொதுவாக கிறிஸ்தவர்களிடம் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. இதனை மேலும் மோசமாக்குவதுபோல் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து உணர்ச்சிக்கும், அற்புதங்களுக்கும், இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வேதபோதனைகளுக்கும், வேத அறிவில் வளர்வதற்கும் அடியோடு இடமில்லாமல் ஆக்கியிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும், நம் கண்ணில்படுகின்ற அத்தனை கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பார்த்தாலும் இதே நிலைமைதான். 'தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்பதுபோல எவர் நினைத்தாலும் பிரசங்கியாகிவிடுகிற நிலையைத் தான் இன்று எங்கும் பார்க்கிறோம். இதெல்லாம் சத்தான வேதப் பிரசங்கத்தையும், வேத போதனைகளையும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது.
(2) இரண்டாவதாக, வேதப் பஞ்சம், பிரசங்கப் பஞ்சம் தொடருகிற நிலையில் வேதபோதனைகளைத் தெளிவாக அறிந்திராத போதகர்களும், ஆத்துமாக்களும் எது சரி, எது தவறு என்று எதையும் நிதானித்து தீர்மானிக்கும் திரணில்லாமலும், தவறானதைக் கூட தவறு என்று சொல்லத் தயங்குகின்ற இருதயத்தையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதனால், அவர்கள் மத்தியிலும் சரியான போதனை, தவறான போதனை இரண்டும் கலந்து இரண்டுமே சரியானது என்பதைக் கொடுக்கும் தோற்றத்தோடு இருந்து வருகின்றன. இதை நம்மத்தியில் இருக்கின்ற அனைத்து வேதாகம கல்லூரிகளிலும் காணலாம். நம் மத்தியில் 90 வீதத்துக்கு மேல் எல்லோரும் தவறான போதனைகளை தவறு என்று இனங்கண்டுகொள்ள முடியாமல் அவையும் வேதத்தில் இருந்துவிடலாம் என்றும், அவற்றை நாம் குறைசொல்லக்கூடாது என்ற பொதுவான எண்ணத்தையுமே கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் சத்தியத்தை மறைத்து, அதை வலிமையில்லாததாக மாற்றி எல்லாமே சத்தியந்தான் என்ற தவறான எண்ணத்தை கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் அன்பு மட்டுமே அவசியமென்றும், எதையும் அது மட்டுமே சத்தியம் என்று ஆணித்தரமாக சொல்லுவது அன்புக்கு அழிவை ஏற்படுத்திவிடும் என்ற பரவலான கருத்தையும் எங்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய எண்ணப்போக்கு இன்றைக்கு வேதபோதனைகளில் அதிக நாட்டம் செலுத்தாத, அதிக போதனையும், ஆழமான போதனையும் தேவையில்லை என்ற கருத்தையும் எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
(3) வேதசத்தியங்களில் ஆழமான அறிவு தேவையா? ஆழமான அறிவு இல்லாவிட்டால் என்ன ஆபத்து ஏற்படும்? எந்தளவுக்கு ஆழமாக வேதம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லத்தான் வேண்டும். உங்கள் மனதில் நிச்சயம் இந்தக் கேள்விகள் இருக்கத்தான் செய்யும். இரட்சிப்புக்குத் தேவையான, சாதாரண மனிதனும் விளங்கிக்கொள்ளக்கூடிய போதனைகள் வேதமெங்கும் காணப்பட்டபோதும் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் கிறிஸ்தவ வாழ்க்கையைத் திறம்பட வாழவும், கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டு சேவை செய்யவும் வேத ஞானம் அவசியமாகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையை (பரிசுத்தமான வாழ்க்கை) எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுப்போம்? ஜெபம் செய்யவேண்டும், உபவாசம் எடுக்க வேண்டும் காணிக்கை கொடுக்க வேண்டும், ஆராதனைக்கு போய் வரவேண்டும், சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்றா பதில் கொடுப்பீர்கள். அப்படிக் கொடுத்தால் கிறிஸ்தவ வாழ்க்கை என்றாலே உங்களுக்கு என்னவென்று தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இப்போது சொன்னதெல்லாம் நல்ல காரியங்களாக இருந்தாலும் அவற்றைச் செய்து கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையை (பரிசுத்த வாழ்க்கை) வாழ, அதில் வளர நாம் பத்துக்கட்டளைகளை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். பத்துக்கட்டளைகளின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாட்டை நாம் நல்ல முறையில் வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டும். படித்து அறிந்துகொண்டவற்றை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். பாவத்துக்கு விலகியிருந்து கர்த்தரின் நீதியின்படி நடந்துவர வேண்டும். ஒவ்வொரு நாளும் உலகத்தில் பாவம் நம்மைப் பலகோணங்களில், பல திசைகளில் இருந்து பலவேறு வாழ்வு சம்பந்தமான விஷயங்களில் நம்மைத் தாக்கும்போது பாவ சிந்தனைகள், பாவச் செயல்களை அடையாளங்கண்டு நம் வாழ்க்கையில் அவை இருந்துவிடாதபடி பார்த்து வாழ வேண்டுமானால் வேதத்தில் நல்லறிவு இல்லாமல் அறைகுறை அறிவு இருந்து அதைச் செய்துவிட முடியுமா?
ரோமர் 7ம் அதிகாரம் கிறிஸ்தவனல்லாதவனைப் பற்றிப் பேசுகிறதா அல்லது கிறிஸ்தவ அனுபவத்தைப் பற்றி விளக்குகிறதா? என்பது தெரிந்திருப்பது அவசியமா இல்லையா? பத்துக் கட்டளைகளை நாம் இன்றைக்கு பின்பற்ற வேண்டுமா, இல்லையா என்பது தெரிந்திருப்பது அவசியமா இல்லையா? ஆத்மா இளைப்பாறும் இடம் என்று ஒன்றில்லை என்று அறிந்திருப்பது அவசியமா இல்லையா? மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாதென்றும், அவன் இரட்சிப்பில் கடவுளோடு இணைந்து செயல்படுவதில்லையென்றும் தெரிந்திருப்பது அவசியமா இல்லையா? ஒரு தடவை உண்மையில் இரட்சிப்பை அடைந்த கிறிஸ்தவன் அதை இழந்துபோக முடியாது என்று அறிந்திருப்பது அவசியமா இல்லையா? கர்த்தர் நம்மீது அன்புகாட்டி இரட்சிப்புக்காக முன்குறித்து அழைப்பதாலேயே நாம் விசுவாசிக்கிறோம் என்பதைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமா இல்லையா? நீதிமானாக்குதலாகிய போதனை பற்றியும், பரிசுத்தமாக்குதலாகிய போதனை பற்றியும், கிறிஸ்தவ நிச்சயத்துவத்தைப் பற்றியும், கிறிஸ்துவோடிருக்கும் இணைப்பு பற்றிய போதனையையும், மகவேட்பு பற்றியும், வேதம் என்றால் என்ன என்பது பற்றியும், திரித்துவப் போதனையையும், இறுதிக்காலப் போதனைகளையும் முறையாக அறிந்து வைத்திராமல் கிறிஸ்தவ வாழ்க்கையை கிறிஸ்து எதிர்பார்க்குமளவுக்கு சிறப்பாக உங்களால் வாழ்ந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? 'என்னிடம் இராதவன் என்னோடு சேராதவன், சிதறடிக்கிறவன்' என்றெல்லாம் கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே, அந்த வார்த்தைகளுக்குப் பொருளென்ன என்று ஆழமாக சிந்தித்துப்பார்த்து நான் அவரோடு இருக்கிறேன் என்று அனுபவபூர்வமாக, இரட்சிப்பின் நிச்சயத்தோடு சொல்லுமளவுக்கு வேத அறிவு உங்களுக்கு இருக்கிறதா? 'இல்லை, பரிசுத்தமாக இருந்து கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ இதெல்லாம் அவசியமில்லை' என்று சொல்லப் போகிறீர்களா? இதுவரை நான் சொல்லிவந்திருக்கிற பல சத்தியங்களை கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகள் என்று ஆணித்தரமாக என்னால் எடுத்துக்காட்ட முடியும். அந்த அடிப்படை உண்மைகளை அறிந்துவைத்திராமல், அவற்றின் மூலம் கிறிஸ்துவில் உறுதியான விசுவாசமில்லாமல் ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது எந்தவிதத்தில் சரியாகும்.
கிறிஸ்தவத்தைப் பற்றியும், வேதத்தைப் பற்றியும் அதிகம் படித்து உடம்பை அலட்சிக்கொள்ளக் கூடாது என்று எவராவது சொல்வார்களேயானால் உடனடியாக நான், அப்படிச் சொல்லுகிறவர்கள் ஆபத்தான நிலையிலிருப்பது மட்டுமல்ல அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து என்றுதான் நான் சொல்வேன். வேதத்தில் அறிவு அதிகம் தேவையில்லையென்றால் இயேசு மலைப்பிரசங்கத்தைக் கொடுத்திருப்பாரா? அவருடைய ஜெபங்களும், போதனைகளும் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் இருந்தபோதும் அவற்றில் எத்தனை ஆழமான சத்தியங்களை அவர் விளக்கியிருகிறார். உப்புச் சப்பில்லாமல் அறைத்த மாவையே அறைத்து, வாக்குத்தத்த வசனங்களை மட்டும் அவர் அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கவில்லையே. வேத அறிவில்லாத, அதை வளர்த்துக்கொள்ளாத, அதில் இன்பம் காணாத, அதை நாடியோடாத, தேடிப் பெற்றுக்கொள்ளாத, அது நிரம்பிய பிரசங்கங்களைக் கேட்கத் துடிக்காத கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். ஆவியின் வல்லமையில்லாதவர்களாக, எது சரி, எது தவறு என்று இனங்காண முடியாதவர்களாக, பாவத்தை எதிர்க்கும் வல்லமையில்லாதவர்களாக, சாத்தானின் சூதுகளுக்கு மண்டியிட்டுவிடக்கூடியவர்களாக, இரட்சிப்பில் நிச்சயம் குறைந்தவர்களாக, காற்றில் அடிபட்டு அலையும் சருகைப் போன்றவர்களாக மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் இருக்க முடியும். இத்தாலியில் பீசாவின் சாய்ந்த கோபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது நிமிர முடியாமல் சாய்ந்த நிலையிலேயே தொடர்ந்திருக்கிறது. அது சாய்ந்த கோபுரம் மட்டுமல்ல, அணு, அணுவாக சாய்ந்து கொண்டிருக்கும் கோபுரமும்கூட. அப்படியிருக்கும் எத்தனை பேரை நாம் அன்றாடம் நம்மினத்தில் சந்திக்கிறோம். இவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை, என்று விழுந்துவிடுமோ இந்த கோபுரம் என்று பிறர் பார்த்து நினைக்க வைக்கின்ற விதத்தில் மட்டுமே இருக்க முடியும். இந்த நிலை தொடருமானால் அவர்கள் தாங்கள் எங்கிருக்கிறோம் என்ற விஷயத்திலேயே உறுதியில்லாமல் உலகத்தோடு ஒட்டிப்போய்விட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது.
கிறிஸ்துவோடு நம்மை உறுதியாக இணைத்து வைப்பதற்கு ஆத்மீக ரீதியில் நமக்கு துணை செய்யும் கிறிஸ்துவைப் பற்றிய போதனைகளை அலட்சியம் செய்து அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை என்று வாழ்வது ஒருவரின் ஆணவத்தைத்தான் காட்டுகிறது. பன்னிரெண்டு வயதில் யூத மதத்தலைவர்களோடு வாதிட்டு அவர்களுக்கு வேதம் போதித்த இயேசு எங்கே, இப்படிப்பட்டவர்களெங்கே. பிரசங்கம் செய்யத் தெரியாத படிப்பறிவில்லாத ஒரு மெத்தடிஸ்ட் பிரசங்கியின் செய்தியை அந்த சபையில் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்த ஸ்பர்ஜன் அதற்குப் பிறகு தொடர்ந்து அந்த சபைக்குப் போனபோது ரோமர் 7ம் அதிகாரத்தைப் பற்றி சபைப் போதகர் கொடுத்த தவறான பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, 'கிறிஸ்துவிடம் வருவதற்கு இந்த சபை எனக்கு கர்த்தரின் கருவியாக இருந்து உதவியிருந்தபோதும் பரிசுத்த வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் வாழவும் ஒரு நாளும் உதவாது' என்று சொல்லி வேறு சபையை நாடிப் போனாராம். ஸ்பர்ஜன் சத்தியம் அதிகம் தெரிந்திருக்க அவசியமில்லை என்று எண்ணி அங்கேயே உட்கார்ந்து தவறான போதனைகளைக் கேட்டுவந்திருந்தால் இன்றைக்கு உலகம் பாராட்டும் பெரும் பிரசங்கி நமக்குக் கிடைத்திருந்திருப்பாரா? ஆயிரக்கணக்கானவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும் வகையில் இயேசு தந்த ஆசீர்வாதமான பிரசங்கியாக இருந்திருக்க முடியுமா? பதினைந்து வயதிலேயே ஸ்பர்ஜனுக்குத் தெரிந்திருந்தது வேத ஞானம் எந்தளவுக்கு முக்கியமானதென்று. அதைத் தேடிப்போய் பெற்று அதில் வளர்ந்து சிறந்தவர் ஸ்பர்ஜன்.
வேத அறிவு அவசியமில்லை என்று அதை ஆர்வத்தோடு நாடிக் கற்றுக்கொள்ளாமல் இருந்தால் எது சத்தியம், எது சத்தியமில்லை என்று நம்மால் இனங்கண்டுகொள்ள முடியாது. காற்றில் அடிபட்டு அங்குமிங்குமாக எங்கு வீசுவது என்று தெரியாத அலைகளைப் போலத்தான் நம்முடைய ஆத்மீக வாழ்க்கை இருந்துவிடும் (எபேசியர் 4:14-15). சத்தியம் எது, போலிப் போதனை எது என்று இனங்காண முடியாமல் வாழ்வது நம்முடைய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சத்தியம் எது என்று ஆணித்தரமாகத் தெரிகிறபோதே அதை நாம் கவனத்தோடும், ஆர்வத்தோடும் நடைமுறையில் பின்பற்றுவோம். சத்தியத்தை போலிப்போதனைகளில் இருந்து பிரித்து இனங்காண முடியாத நிலையில் இருப்பது நம்மை வளர்ச்சியில்லாமல் இருக்கும் மரத்தைப் போலவும், உணவில்லாமல் வாடி வதங்கிப் போயிருக்கும் குழந்தையைப் போலவும் தான் இருக்க வைக்கும். 'நாம் வளர்ச்சியில்லாமல் குழந்தைகளாய் இருக்கக் கூடாது' என்கிறார் பவுல். அப்படியிருந்தால் பலருடைய வஞ்சகப் போதனைகளுக்கு நாம் தலையாட்டிவிடுவோம் (எபேசியர் 4:14). சரீரம் வளருகிறதைப் போல நாம் ஆத்மீக வாழ்க்கையில் வேத ஞானத்தில் வளருவது அவசியம். யூதா எழுதின நிருபத்தில் அவர் கிறிஸ்தவர்களைப் பார்த்து, 'பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது' என்று எழுதியிருக்கிறார் (யூதா 1:3). விசுவாசத்திற்காக நாம் தைரியமாய்ப் போராட வேண்டுமானால் நமக்கு நம்முடைய விசுவாசத்தைப் பற்றிய சத்தியங்கள் நன்றாய்த் தெரிந்திருக்க வேண்டும். இல்லாமல் நாம் போலிப்போதனைகளை எதிர்த்து நிற்க வழியில்லை. பிசாசு நம்மை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு நாளும் விதவிதமான போலிப்போதனைகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறான். அவை நம்மையும், சபையையும் தாக்கும். சுனாமி வருகிறபோது ஒன்றுமே நடந்துவிடாது என்று தூங்கிக்கொண்டிருப்பவன் போல் நாமிருந்தால் நமக்கு அழிவைத் தவிர வேறெதுவும் கிட்டாது.
ஸ்பர்ஜன் சிறுவயதிலிருந்தே வேதத்தைக் கற்றுக்கொண்டிருந்ததால் தான் இருபத்தியொரு வயது இளம் வாலிபராக இருந்தபோது சபையைத் தாக்கிய போலிப்போதனைகளை இனங்கண்டு தனியொருவராக அதை எதிர்த்து நிற்க முடிந்தது. தன்னுடைய சபையையும் காத்துக்கொள்ள முடிந்தது. சத்தியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளுவது அவசியமில்லை என்று அவர் அதைத் தேடிப்போகாமல் இருந்திருந்தால் போலிப்போதனையாகிய அலையை நோக்கி அவரால் எதிர்நீச்சல் போட்டிருக்க முடியாது.
வேதம் சொல்லுவதை சிந்தித்துப் பாருங்கள்:
யோவான் 8:32, 'சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.' இந்த வார்த்தைகளின் மூலம் இயேசு, இரட்சிப்புக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் இன்றியமையாத சத்தியத்தின் (தெளிந்த போதனை) அவசியத்தை உணர்த்துகிறார்.
எபேசியர் 4:15, 'சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.' கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர வேண்டும் என்று சொல்லுகிற பவுல், சத்தியத்தின் மூலமே அந்த ஆத்மீக வளர்ச்சியை கிறிஸ்தவர்களில் எதிர்பார்க்கிறார்.
1 பேதுரு 2:3, 'நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.' பால்குடிக்கும் குழந்தை பாலுக்கு அலைவதைப் போல் நாம் சத்தியத்தை நாடி அலைய வேண்டுமென்கிறார் பேதுரு.
2 பேதுரு 3:18, 'நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.' கிறிஸ்தவர்கள் இரட்சிப்பு கிடைத்து ஞானஸ்நானம் எடுத்துவிட்டோம் என்பதோடு திருப்திப்பட்டு சும்மாயிருந்துவிடாமல் கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் (சத்திய போதனைகளில்) வளர வேண்டுமென்கிறார் பேதுரு.
2 தீமோத்தேயு 2:15, 'நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாய் இரு.' போதகனான தீமோத்தேயு தானும் சத்தியத்தில் நல்ல முறையில் வளர்ந்து அதை நல்ல முறையில் தெளிவாகப் போதிக்க வேண்டுமென்கிறார் பவுல். சத்தியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளாமலும், அதை விசுவாசிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் போதிக்கத் தெரியாதவனும் போதகனாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை என்கிறார் பவுல்.
1 தீமோத்தேயு 4:13, 'நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.' வேதத்தைக் கருத்தோடு வாசிப்பதிலும், வேதபோதனைகளைப் பயன்படுத்தி ஆத்தும ஆலோசனைகளை அளிப்பதிலும், வேதபோதனைகளில் ஒன்றும் குறைவைக்காமல் ஆத்துமாக்களுக்குப் போதிப்பதிலும் கருத்தாக இருக்க வேண்டியது போதிக்கிறவர்களின் கடமை என்பதை பவுல் உணர்த்துகிறார்.
1 தீமோத்தேயு 4:16, 'உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு'
1 தீமோத்தேயு 5:17, '. . . திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை . . . .'
2 தீமோத்தேயு 4:2, 'சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.' இந்த வசனங்களின் மூலம் சத்தியத்தில் வளருவது கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியமானது என்பதைப் பவுல் தீமோத்தேயு சத்தியத்தில் நாட்டம் காட்டிக் கடமை பொறுப்போடு அதைப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று சொல்லுவதில் இருந்து அறிந்துகொள்கிறோம். வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் நேரத்தை செலவிட்டு கருத்தோடு அதைப் போதிக்கிற போதகர்களுக்கு சபை இரட்டிப்பு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (1 தீமோத்தேயு 5:17).
தீத்து 2:1, '. . . ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி புத்திசொல்லு.' தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், ஐ£க்கிரதையுள்ளவர்களாகவும், விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமானால் சத்தியத்தில் அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் நடைமுறையில் வளராமல் இருக்க முடியாது. அதைத்தான் பவுலின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் முழுமையானது, பூரணமானது. அதாவது, சுவிசேஷக் கிறிஸ்தவத்தின் போதனைகளில் எந்தப் பகுதியையும் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. நமது அறியாமையின் காரணமாகவோ அல்லது நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ கிறிஸ்தவப் போதனைகளில் ஒரு பகுதியை அலட்சியம் செய்து நமக்குப் பிடித்ததை மட்டும் கிறிஸ்தவமாக எண்ணி நம்மை சமாதானப்படுத்திக்கொண்டு நாம் வாழ முயற்சிப்பது பெருந்தவறு. கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் கிறிஸ்தவ போதனைகளுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் நம்மில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த எண்ணப்பாட்டால் அவர்கள் வேத சத்தியங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். ஏதோ, இயேசு சத்தியத்துக்கும், போதனைகளுக்கும் மதிப்புக்கொடுக்காமல் பாவமன்னிப்பை மட்டும் வலியுறுத்தியதுபோல் எண்ணி வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவம் இன்றைக்கு குழப்பான நிலையில் நம்மினத்தில் இருந்து வருகின்றது.
கிறிஸ்தவர்களில் சிலர் பத்துக் கட்டளைகள் கிறிஸ்துவின் கிருபைக்கு எதிராக இருப்பதாகத் தவறாக எண்ணி அதை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். வேறுசிலர், கிருபையைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதால் பத்துக் கட்டளைகளை மட்டுமே பெரிதுபடுத்தி போதித்துக் கொண் டிருப்பார்கள். இவர்களும் தவறு செய்கிறார்கள். பத்துக் கட்டளையை நாம் பின்பற்ற கிறிஸ்துவின் கிருபை நமக்கு அவசியம். கிருபையைத் தம்மில் கொண்டிருக்காதவர்கள் பரிசுத்தத்திற்கு அவசியமான பத்துக் கட்டளையை வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாது. அதேபோல், பத்துக் கட்டளைகள் கிறிஸ்துவின் கிருபையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. அதுவே பத்துக் கட்டளைகளின் பிரதான கடமை. பத்துக் கட்டளைகளைப் பார்க்கும் அவிசுவாசிக்கு அவற்றைப் பின்பற்றும் அளவிற்கு தன்னில் பரிசுத்தம் இல்லை என்பதை உணருவான். அதையே பவுலும் உணர்ந்து கிறிஸ்துவை பாவ மன்னிப்புக்காகவும், இரட்சிப்புக்காகவும் விசுவாசித்தார். கிறிஸ்துவின் கிருபையை அடைந்தவர்களால் மட்டுமே பத்துக் கட்டளைகளை நிறைவேற்ற முடியும். இப்படியிருக்கும்போது ஒன்றை மட்டும் வலியுறுத்தி மற்றதை எப்படி ஒதுக்கிவைக்க முடியும்? இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவத்தில் நியாயப்பிரமாணமும், கிருபையும் இணைந்தே காணப்படுக்கின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் நாம் பெரிதுபடுத்தக் கூடாது. ஒன்றில்லாமல் மற்றதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை.
வேறு சிலர் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே கிறிஸ்தவர்களின் கடமை என்று எண்ணி வேதத்தில் வேறு எந்தப் போதனைகளுமே முக்கியம் இல்லை என்பதுபோல் நடந்து கொள்வார்கள். பரிசுத்த வாழ்க்கை, சபை வாழ்க்கை, சத்திய வளர்ச்சி, கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கை, கிறிஸ்தவ சமுதாய உறவு, தொழிலொழுக்கம் போன்ற கிறிஸ்தவத்தின் ஏனைய அவசியமான அம்சங்களையெல்லாம் அவர்கள் கவனிப்பதே இல்லை. சுவிசேஷ வைராக்கியம் கொண்டவர்கள்போல் இவர்கள் தங்களை இனங்காட்டிக்கொண்டாலும் தங்களுடைய கிறிஸ்தவ வண்டியின் அச்சாணி ஆடிக்கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. இதேபோல், பரிசுத்த வாழ்க்கை வாழ்வது மட்டுமே கிறிஸ்தவம் என்று நம்பி கிறிஸ்தவ சத்தியங்களைக் கற்றுக்கொள்ளுவதில் எந்த அக்கறையும் காட்டாதவர்களையும், ஜெபமும், உபவாசமும் மட்டுமே கிறிஸ்தவத்தின் உயிர்நாடி என்று நம்பி வேறெதற்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காதவர்களையும், பரிசுத்த ஆவியின் அனுபவம் மட்டுமே கிறிஸ்தவம் என்று எண்ணி வேதத்தின் வேறெந்த அம்சங்களிலும் அக்கறையே காட்டாதவர்களையும் இன்று பரவலாகக் கண்ணெதிரே தமிழினத்தில் நாம் பார்த்து வருகிறோம். கிறிஸ்தவ வேத போதனைகளில் ஒரு சில அம்சங்களுக்கு மட்டுமே இவர்களால் தங்கள் வாழ்க்கையில் இடங்கொடுக்க முடிகிறது. இது முழுமையான கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளமில்லை.
இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தைக் கவனமாக வாசித்துப் பாருங்கள். அந்த அருமையான பிரசங்கத்தில் இயேசு சுவிசேஷக் கிறிஸ்தவ போதனையின் சகல அம்சங்களின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு விஷயத்தை மட்டும் வலியுறுத்தி அது மட்டுமே முக்கியம் என்று அவர் பிரசங்கம் செய்யவில்லை. வேதத்தில் ஒரு சத்தியத்தை இன்னொரு சத்தியத்தோடு ஒப்பிடும்போது ஒன்று மற்றதற்கு அடித்தளமாகவோ அல்லது ஒன்று இன்னொன்றைவிட முக்கியத்துவம் கொண்டதாகவோ காணப் படுவதை மறுக்க முடியாது. ஆனால், அவையெல்லாமே கிறிஸ்தவத்தின் அவசியமான, ஒதுக்கிவைக்க முடியாத சத்தியங்களாக இருக்கும். எதையுமே அலட்சியம் செய்யவோ, உதறிவிடவோ முடியாது. வேதம் ஜெபிக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனால், உபவாசம் கட்டளையாகக் கொடுக்கப்பட வில்லை. அதனால், ஜெபம் மட்டுமே அவசியம், உபவாசம் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஜெபமேயில்லாத உபவாசத்தைத்தான் நாம் கண்டிருக்கிறோமா? இதில் எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டும் அவசியம் என்றுதான் சொல்ல முடியும். இருந்தாலும் ஒன்று இன்னொன்றிற்கு அவசியமானதாகவும், அடித்தளமாகவும் இருப்பதை நாம் நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கும்போது உபவாசமெடுத்து ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, உபவாசமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முடியாது. ஏனெனில், நம்மில் இருக்கும் சில பாவங்கள் உபவாச ஜெபமில்லாமல் போகாது என்று வேதம் சொல்லுகிறதே. அதனால், ஜெபமும் அவசியம், உபவாசமும் அவசியம் என்று அறிந்துகொள்ளுகிறோம் இல்லையா? ஞானஸ்நானத்தினால் ஒருவருக்கு இரட்சிப்பு கிடைக்காது. அதனால் ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா? ஞானஸ்நானம் எடுக்கும்படி விசுவாசிகளுக்கு
கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரே! சபையில் அங்கத்தவராக இருக்க அது அவசியமாக இருக்கிறதே. இதேபோல்தான் கிறிஸ்தவத்தின் சகல போதனைகளையும் நாம் கவனத்தோடு ஆராய்ந்து படித்து அனைத்து சத்தியங்களையும் கீழ்ப்படிவோடு தகுந்த முறையில் பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவத்தின் ஒரு போதனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதை மட்டுமே கிறிஸ்தவமாகக் கருதி ஏனைய சத்தியங்களை நிராகரித்து நடந்துகொள்ளுவது நம்மைப் பரிசேயர்கள் கூட்டத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். கிறிஸ்து கிருபையாய் நமக்குத் தந்திருக்கும் கிறிஸ்தவத்தை நாம் கொச்சைப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையும் கொஞ்சம் சிந்தித்துத்துத்தான் பாருங்களேன்.
கவிதைகள்
யார் கிறிஸ்தவன்?
அடித்தவனை நோக்கி
ஆவேசமாய்ப் பாராமல்
அன்பாய்ப் பார்க்கிறாயா?
நீ கிறிஸ்தவன்
தூசித்தவனுக்கு துன்பம் கொடாமல்
தூய்மை மனதோடு
தெடர்ந்து ஜெபிக்கிறாயா?
நீ கிறிஸ்தவன்
எள்ளளவு உணவிருக்கையிலும்
உன் வயிற்றுக்கிடாமல் ஏதுமில்லா
ஏழைக்கு தானமளிக்கிறாயா
நீ கிறிஸ்தவன்
இழப்பென்று ஏது வரினும்
எல்லாம் இறைசெயல்
என்றிருக்கிறாயா
நீ கிறிஸ்தவன்
பாவப்பட்ட பூமிக்காய் சொத்து
சேர்க்காமல் பரலோகத்தில் வாழ
முத்து சேர்க்கிறாயா
நீ கிறிஸ்தவன்
வாய்மொழியில் மட்டும் வல்ல கர்த்தரை
வாழ்த்திப் பாடாமல் செயலிலும்
மனதிலும் அதை செய்து காட்டுகிறாயா
நீ கிறிஸ்தவன்
ஞாயிறு மட்டுமல்ல
நாளெல்லாம் வேதத்தை
இதயத்தில் சுமக்கிறாயா
நீ கிறிஸ்தவன்
இப்போ சொல் நீ கிறிஸ்தவனா?
திருமறைத்தீபம்
நிறைபொருள் தன்னை
மறைதனில் எடுத்து
வரையறையிலா
வடிவாய்த்தரும் கீதம்
இந்த திருமறைத்தீபம்
நித்திய சத்தத்தை
நிலமுள்ளோர் அறிய
வளமுள்ள விளைநிலைத்தில்
வடிவாய் விளைந்த மணிபோல்
தெளிவாய் சீர்திருத்தம்
துணிவாய் சொல்லும்
எளிதாய் இதயம் அள்ளும்
ஒளி கொடுக்கும் - நல்
ஒலி கொடுக்கும்
விழி வியக்க - அட்டைப்
படம் கொடுக்கும்
மொழிதனைக் கோர்த்து - தகவல்
முத்து கொடுக்கும்
செத்துப் போனோரை
சிறப்பாய் உயிர்ப்பிக்கும்
வேத வசனம் கொடுக்கும்
இத்தனை கொடுப்பதால்
இந்த தீபம் என்றும் நிலைக்கும்
தெரியாதோரையும்
திருச்சபைக்கு அழைக்கும்
இதை . . .
இனிதே புரிந்த
ஆத்துமா பிழைக்கும்.
எழுதியவர் திருமறைத்தீப வாசகரான
யோ. யோகராஜா (புரட்சி), முல்லைத்தீவு, ஸ்ரீ லங்கா.