திருமறைத்தீபம் 2014-ம் ஆண்டு நான்காம் இதழ்
1. வாசகர்களே!
2. எல்லாம் நன்மைக்கே! யாருக்கு?
3. முதல் கோணல், முற்றும் கோணல்
4. நிழல் நிஜமாகப் பார்க்கிறது
5. ஆதியில் தேவன் . . . சிருஷ்டித்தார்
6. தேவ கோபம்
7. வாசகர் மடல்
வாசகர்களே!
இந்த வருடத்தின் இறுதி இதழ் இது. எல்லாம் வல்ல கர்த்தர் இந்த இதழை சரியான முறையில் தயாரித்து வெளியிட துணைபுரிந்திருக்கிறார். பலருடைய உழைப்பின் பயனாக இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கிறது. கர்த்தருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.
இவ்விதழில் பல ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. ரோமர் 8:28க்கான விரிவான விளக்கத்தைத் தந்திருக்கிறேன். அத்தோடு ஆதியாகமத்தைப்பற்றி நம்மத்தியில் இருந்துவருகின்ற தவறான எண்ணங்களைச் சுட்டிக்காட்டி படைப்பைப் பற்றியும், ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களைப்பற்றியும் நாம் கொண்டிருக்க வேண்டிய வேத நம்பிக்கைகளை விளக்கி இரண்டு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன்.
ஓரினச் சேர்க்கையை உலக சமுதாயங்கள் கலாச்சாரப் பிரதிபலிப்பாகக் கருதி கடுவேகத்தோடு அங்கீகரித்து வருகிறபோது, ஓரின ஓரியன்டேஷன் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பது தவறில்லை; பாவமில்லை என்ற பேச்சு மேலைநாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு இன்று எங்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து பெரும் ஆபத்துத்தான். அதை உணருகின்ற நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லாமலிருப்பதுதான் பெரும் கவலை தரும் காரியமாகும். அதுபற்றிய ஓர் ஆக்கத்தை இந்த இதழில் நீங்கள் வாசிக்கலாம்.
கோபநிவாரண பலி பற்றிய ஓர் ஆக்கத்தை இதற்கு முன் வெளியிட்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக தேவ கோபத்தைப்பற்றி மேலும் விளக்கமளிக்கும் ஓர் ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கின்றது. இது இன்னும் தொடரவிருக்கிறது.
இந்த இதழில் வந்திருக்கின்ற எல்லா ஆக்கங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் துணை செய்யட்டும். திருமறைத்தீபத்தை வாசித்து வருகிறவர்கள் அநேகர். ஆரம்பத்தில் இருந்து இதழைப் பெற்று வருகிறவர்கள் தொகை அதிகம். தொடர்ந¢து இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்பதையும், முகவரி சரியானதுதான் என்பதையும் தெரிவித்து எங்களுக்கு இமெயிலோ, கடிதமோ அனுப்பினால் அது பேருதவியாக இருக்கும். அநாவசிய செலவைக் குறைத்துக்கொள்ள அது துணைபுரியும். தொடர்ந்து இந்த இலக்கியப் பணிக்காகவும், எங்களுக்காகவும் ஜெபியுங்கள். நன்றி! – ஆசிரியர்.
எல்லாம் நன்மைக்கே! யாருக்கு?
வேதத்தில் நமக்கு எத்தனையோ வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நம்மில் அன்புகூர்ந்து வழிநடத்தும் கர்த்தர் நம்மை பெலப்படுத்தவும், ஆவிக்குரிய வல்லமையோடு நாம் வாழவும் இத்தகைய வாக்குத்தத்தங்களை நாம் நினைவுகூரும்படியாகத் தந்திருக்கிறார். இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல; உண்மையானவை, நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமானவை. இவை நமக்கு ஆவிக்குரிய தைரியத்தை மட்டும் தராமல் அநேக ஆழமான வேத சத்தியங்களையும் வெளிப்படுத்துகின்றன. அத்தகைய வாக்குத்தத்தங்களில் ஒன்றுதான் ரோமர் 8:28ல் நாம் வாசிக்கும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.
‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’.
மொழிபெயர்ப்பு
ஆதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கிறபோது கிரேக்க மொழியில் எங்கெங்கு வார்த்தைகளுக்கு அழுத்தங்கொடுத்து எழுதப்பட்டிருக்கிறதோ அந்த அழுத்தம் தமிழில் வராமல் போய்விடுகின்ற நிலை ஏற்படுகின்றது. ஒரு மொழிக்கு ஏற்றவிதத்தில் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டிய அவசியமிருப்பதால் இந்நிலை உருவாகிறது. இதை ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் கவனிக்கலாம். மூல மொழியில் காணப்படுகின்ற அத்தகைய அழுத்தங்கள் அவசியமானவை; காரணத்துடனேயே பரிசுத்த ஆவியானவர் அந்த முறையில் வார்த்தைகளைத் தந்திருக்கிறார். அதனால் வேத வசனங்களை நாம் ஆராய்ந்து படிக்கவேண்டியிருக்கிறது. ஆவியானவர் தந்திருக்கும் முறையில் அழுத்தங்களின் அர்த்தத்தை உணர்ந்து சத்தியத்தை அறிந்துகொள்ள அத்தகைய கவனத்தோடுகூடிய படிப்பு உதவும்.
இந்த வசனத்தை கிரேக்கத்தில் இருப்பதுபோல கூடுமானவரையில் எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்ப்போமானால் அது பின்வருமாறு அமையும்.
‘அத்தோடு, நமக்குத் தெரியும், சகலமும் நன்மைக்கு ஏதுவாக அவரில் அன்புகூருகிறவர்களுக்கு, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கின்றது’ என்று வரும். இதில் ‘சகலமும்’ என்ற வார்த்தைக்குப் பிறகு ‘நிகழ்கின்றது’ என்ற வார்த்தை வந்து, அதாவது ‘சகலமும் நிகழ்கின்றது’ என்று இருந்திருக்க வேண்டும். அப்படி மொழிபெயர்த்திருந்தால் தமிழில் வாசிக்கும்போது அது தமிழாக இருந்திருக்காது. தமிழில் வினைச்சொல் வசனத்தின் இறுதியில்தான் வரும்.
வசனத்திற்கான விளக்கம்
(1) ‘அன்றியும்’
தமிழில் சரியான முறையில் கிரேக்கத்தில் இருந்தது போலவே ‘அன்றியும்’ என்ற வார்த்தையோடு இந்த வசனம் ஆரம்பிக்கிறது. இந்த சிறு வார்த்தை மிகவும் அவசியமானது. ஆங்கிலத்தில் Conjunctions என்று அழைக்கப்படுகின்ற ‘ஆனால்’, ‘அன்றியும்’, ‘அத்தோடு’, ‘மேலும்’, ‘ஆகையால்’ போன்ற வார்த்தைகள் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அடுத்து சொல்லப்படுகின்ற விஷயத்தோடு இணைக்கின்ற வார்த்தைகளாக இருக்கின்றன. இவற்றைத் ‘தொடரிணைப்பு வார்த்தைகள்’ அல்லது ‘இணைப்பு வார்த்தைகள்’ என்று தமிழில் கூறலாம். இத்தகைய தொடரிணைப்பு வார்த்தைகள் பல காரணங்களுக்காகப் பயன்படுகின்றன. இந்த வசனத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்ற விஷயத்தோடு இனி வரப்போகின்ற விஷயம் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது என்ற அடிப்படை உண்மையை இது விளக்குகின்றது. அத்தோடு இறையியல் சத்தியங்களின் அடிப்படையில், இதுவரை சொல்லப்பட்ட விஷயத்துக்கு மேலும் அழுத்தம் கொடுத்து நம்மைப் பெலப்படுத்த மேலுமொரு உண்மையைப் பவுல் சொல்லுகிறார் என்பதையும் இந்த ‘அன்றியும்’ என்ற சிறு வார்த்தை விளக்குகிறது.
ரோமர் 8ம் அதிகாரத்தில் கிறிஸ்தவனில் ஆவியானவரின் செயல்பாட்டை விளக்குகின்ற பவுல் 26, 27ம் வசனங்களில், பரிசுத்த ஆவியானவர் எந்தவிதத்தில் கிறிஸ்தவனுக்கு ஜெபத்தில் உதவுகிறார் என்பதை விளக்குகிறார். பலவீனத்தோடு இருக்கின்ற கிறிஸ்தவனுக்கு, ஜெபத்தில் அவன் தன்னுடைய எண்ணங்களைக் கோர்வையோடு வார்த்தைகளில் கொண்டுவர முடியாத தவிப்போடு இருக்கிறபோது, அவனுடைய இருதயத் தவிப்பையும் எண்ணங்களையும் உணர்ந்திருக்கும் ஆவியானவர் தானும் அவனுடைய தவிப்பில் பங்குகொண்டு வார்த்தைகளில் அவனால் கொண்டுவரமுடியாத அந்தத் தவிப்பைக் கர்த்தரின் பிரசன்னத்தில் சமர்ப்பித்து அவனுக்காக வேண்டுதல் செய்கிறார். கிறிஸ்தவன் அடைந்திருக்கும் எத்தனை பெரிய ஆசீர்வாதம் இது! ஆவியானவரின் இந்தப் பேருதவியைப் பற்றிய விளக்கத்தைத் தந்து அதை நிறைவுக்குக் கொண்டுவரும் பவுல் கிறிஸ்தவனை மேலும் பெலப்படுத்தி ஊக்குவிக்குமுகமாக இதுவரை விளக்கியவற்றோடு தொடர்புடைய இன்னுமொரு சத்தியத்தை விளக்கும் வகையில்தான் கர்த்தரின் வாக்குத்தத்தத்தை 28ம் வசனத்தில் கொடுக்கிறார். ஆகவே, 28ம் வசனம் 27ம் வசனத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ‘அன்றியும்’ என்ற பதம் அந்த இணைப்பை விளக்குவதாக 28ம் வசனத்தின் ஆரம்பத்தில் வருகிறது.
(2) ‘நமக்குத் தெரியும்’
இந்த வசனத்தில் அடுத்து வருகின்ற வார்த்தைகள் ‘நமக்குத் தெரியும்’ என்பதாகும். ‘தெரியும்’ (know) என்ற பதம் இந்த அதிகாரத்தில் பல தடவைகள் வந்திருக்கிறது. ஒரு விஷயத்தை வெளிப்புற சாதனங்களைக் கொண்டு ஆராய்ந்து தெரிந்துகொள்ளுகிற அறிவை இந்த வார்த்தை குறிக்கவில்லை. விசுவாசத்தின் காரணமாக விசுவாசி வேதத்தில் இருந்து அறிந்துகொண்ட சத்தியத்தை இருதயத்தின் ஆழத்தில் நம்புகின்ற தன்மையை இந்தத் ‘தெரியும்’ என்ற வார்த்தை விளக்குகின்றது. ‘நமக்கு’ என்ற பதம் விசுவாசிகளை, அதாவது பரிசுத்தவான்களைக் குறிக்கும் வார்த்தை. இது விசுவாசிகளுக்கு எழுதப்பட்ட நிருபம். ஏற்கனவே விசுவாசத்தின் காரணமாக அவர்கள் வேதத்தில் இருந்து தெளிவாக அறிந்து உணர்ந்து நம்புகிற ஓர் உண்மையைப் பவுல் விளக்கப்போவதால்தான் ‘நமக்குத் தெரியும்’ என்று சொல்லுகிறார். இதில் பவுல் விசுவாசியான தன்னையும் இணைத்துப் பேசுவதைக் காண்கிறோம்.
அப்படிப் பவுலுக்கும் நமக்கும் தெரிந்திருப்பது எது? அதைத்தான் இந்த வசனம் அடுத்து விளக்குகிறது.
(3) ‘சகலமும் நிகழ்கின்றது (நடக்கின்றது)’
பழைய மொழிபெயர்ப்பில் ‘சகலமும் நடக்கின்றது’ என்றிருக்கின்றது. ஏற்கனவே நான் விளக்கியபடி கிரேக்க மொழியில் இவை அடுத்தடுத்து வருகின்றன. ஆனால், தமிழில் வினைச்சொல் வசனத்தின் இறுதியில் வரவேண்டியிருப்பதால் ‘நடக்கின்றது’ என்ற வார்த்தை இறுதியில் வருகின்றது. இவை இணைந்து காணப்படுகின்ற வார்த்தைகளானபடியால் அந்த முறையிலேயே அவற்றை நாம் ஆராய வேண்டும்.
இந்த வார்த்தையில் முதலில் வருகின்ற ‘சகலமும்’ என்ற வார்த்தையைக் கவனிப்போம். இது சரியான மொழிபெயர்ப்பு; ஆனால் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்த வார்த்தை. இதை ‘அனைத்தும்’ அல்லது ‘எல்லாம்’ என்றும் தமிழில் மொழிபெயர்க்கலாம். ஆங்கில வார்த்தையான ‘All’ என்பதன் தமிழாக்கம் இது. கிரேக்க மொழிபெயர்ப்பில் ஒரே வார்த்தையான இதை (pass) ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘All things’ என்று இரு வார்த்தைகளை இணைத்து விளக்கியிருக்கிறார்கள்.
‘சகலமும்’ என்பது எதைக் குறிக்கின்றது? பவுல் இதன் மூலம் எதை விளக்குகிறார் என்பதை முதலில் அறிய வேண்டும். சகலமும் என்பது, ‘எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் உள்ளடக்கியது’ என்ற கருத்தில் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையின் அர்த்தத்தைவிட இந்த வார்த்தையைப் பயன்படுத்தி பவுல் விளக்குகின்ற இறையியல் சத்தியத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எதையெல்லாம் இந்த ‘சகலமும்’ உள்ளடக்குகின்றதென்று பார்ப்போம். இது அசைகின்றதும், அசையாததும், உயிருள்ளதும், உயிரற்றதுமான படைக்கப்பட்டிருக்கின்ற அனைத்தையும், சகல காலங்களையும், நன்மையானவற்றையும், தீமையானவற்றையும், நல்லவர்களையும், தீயவர்களையும், சந்தர்ப்பசூழ்நிலைகள் அனைத்தையும், நல்ல தூதர்களையும், தீய தூதர்களையும், வானத்து நட்சத்திரங்களையும். சந்திர சூரியன்களையும் உள்ளடக்குகின்றது. அத்தோடு இந்த ‘சகலத்தில்’ அடங்காததொன்றும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.
அடுத்து ‘நடக்கின்றது’ அல்லது ‘நிகழ்கின்றது’ என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். உண்மையில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருக்கும் கிரேக்கமொழியில் இந்த வார்த்தை தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படுவதைவிட ஆழமான பொருள்கொண்ட வார்த்தை.
ஆங்கில வேதத்தில் இந்த வார்த்தை ‘work together’ என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிரேக்க மொழியில் இது ‘sunergei’ என்றிருக்கிறது. sun, ergow ஆகிய இரு வார்த்தைகளை இணைத்து இந்த வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியே விளக்க முடியும். தமிழில் ‘நடக்கின்றது’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தபோதும் அது கிரேக்க வார்த்தையில் காணப்படும் முழு அர்த்தத்தையும் விளக்குவதாக இல்லை. இதன் அர்த்தத்தை விளக்குவதானால், ‘ஒன்றோடொன்றிணைந்து பொருந்திவருவதாக நிகழ்கின்றது’ என்று கூறலாம். பவுல், சகலமும் வெறுமனே நடக்காமல் அனைத்தும், அதாவது எதிர்புறமானவைகள் உட்பட எல்லாமே ஒன்றோடொன்றிணைந்து பொருந்திவரும் வகையில் ஒருமித்து ஒரே இலக்கை நோக்கி இயங்குகின்றன என்று விளக்குகிறார். இந்த வார்த்தைக்குள் மிக ஆழமான இறையியல் போதனை உள்ளடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு நண்பர்கள் இருவர் தங்களுடைய வண்டிகளில் ஏறி எதிர்புறமான திசைகளில் பிரயாணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மணி நேரப் பிரயாணத்திற்குப்பின் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் போய் முடிகிறார்கள். இருவருக்கும் அப்படி நிகழும் என்பது தெரியாதிருந்திருக்கின்றது. ஏனெனில், அந்தப் பாதை இறுதியில் ஒரே இடத்தில் போய் முடிகின்ற பாதை. நண்பர்கள் இருவரும் பிரயாணத்தை ஆரம்பித்தபோது எதிர்த்திசைகளில் போகப் போகிறோம் என்ற முடிவோடுதான் ஆரம்பித்துப் பயணித்தபோதும் அவர்களுக்கே தெரியாமல் ஒரே இடத்தில் போய் சந்திக்க நேர்ந்தது. இந்த உதாரணத்தைப் போலத்தான் கர்த்தரைப் பொறுத்தவரையில் அவருடைய நோக்கங்கள் நிறைவேறும்படியாக ‘சகலமும் நிகழ்வதாக’ பவுல் விளக்குகிறார்.
‘சகலமும் ஒன்றுக்கொன்றிணைந்து பொருந்திப்போய் நிகழ்கிறது’ என்பது தற்செயலாய் நிகழ்கின்ற காரியமல்ல. ஆண்டவரை அறியாதவர்கள் எல்லாம் தானாகவே எதேச்சையாக நிகழ்கிறதாக நினைத்து வாழ்கிறார்கள். அத்தோடு பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை நம்புகிறவர்கள் ஒவ்வொன்றும் தானாகவே பரிணாமவளர்ச்சியடைந்து இன்னொரு செயலுக்குக் காரணமாக இருக்கின்றதென்று நம்புகிறார்கள். இத்தகைய உலகரீதியான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய அகராதியில் சர்வவல்லவரான கர்த்தருக்கு இடமில்லை. எல்லாமே கடவுளால் படைக்கப்பட்டு அவரால் பராமரிக்கப்பட்டு வருவதாக வேதம் சொல்லுகிறது. அவரில்லாமல் ஒன்றுமே இயங்கமுடியாது. எல்லாமே அவரால் இயக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அவரே முதற் காரணியாக இருக்கிறார்; பாவத்தைத் தவிர. அதனால் தற்செயலாகவும், எதேச்சையாகவும் எதுவும் நிகழ வழியில்லை.
கர்த்தரின் பராமரிப்பாகிய சத்தியத்தை (The Providence of God) 1689 விசுவாச அறிக்கை அருமையாக விளக்குகிறது. ‘அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய கடவுளுடைய முன்னறிவின் மூலமும், ஆணையின் மூலமும் எல்லாக் காரியங்களும் மாறாத்தன்மையுடனும் தவறா நிலையிலும் நேரிட்டபோதும் எதுவுமே எவருக்கும் தற்செயலாகவோ அல்லது அவரது பராமரிப்புக்கு அப்பாற்பட்டோ நிகழ்வதில்லை. அதேவேளை, கடவுள் இடைக்காரணங்களின் தன்மையின்படி தமது பராமரிப்பின் மூலம் தேவைக்கேற்பவும், சுதந்திரமாகவும், எதிர்பாரா வேளைகளிலும் சம்பவங்கள் நிகழ உத்தரவிடுகிறார். இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலமாக கடவுள் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்.’ (விசுவாச அறிக்கை அதி 3:2). இந்த வார்த்தைகளில் ஆராய்ந்து சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அருமையான சத்தியங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
தொடர்ந்தும் கர்த்தரின் பராமரிப்பை விளக்கும் விசுவாச அறிக்கை, ‘சாதாரணமாக தனது பராமரிப்பில் கடவுள் பல சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவற்றின் துணையில்லாமல் அவரால் தன்னுரிமையோடு இயங்க முடியும். அவரால் . . . அச்சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அல்லது அவற்றிற்கு எதிர்மறையாக செயல்படவும் முடியும்.’ (வி. அ. அதி 3:3). இதிலிருந்து புற உதவிகளின் தேவையில்லாமல் எல்லாவற்றையும் இயக்கித் தன்னுடைய தூய்மையான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுகிற இறையாண்மையுள்ளவராக நம் தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம்.
உலகத்தில் கர்த்தர் சம்பந்தப்படாத காரியங்கள் எதுவும் இருக்க வழியில்லை. நேரடியாக அவர் பாவத்திற்குக் காரணகர்த்தாவாக இல்லாவிட்டாலும் மனிதர்களின் பாவச் செயல்களைத் தன்னுடைய திட்டங்கள் நிறைவேற அவர் பயன்படுத்திக்கொள்ளுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு தன்னுடைய சுயபாவத்தினால் அதைச் செய்தபோதும் அச்செயலும்கூட கர்த்தரின் ஆணைக்குள் (The Decree of God) அடங்கியிருக்கிறது; அவரது இறுதி நோக்கம் இயேசுவின் மூலம் நிறைவேற அதையும் கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். கர்த்தரின் பராமரிப்பு பற்றிய சத்தியங்கள் நம்முடைய எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தபோதும் நாம் நம்பக்கூடிய தேவ இரகசியங்களாக வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீதிமொழிகள் 16:33 சொல்லுகிறது, ‘சீட்டு மடியிலே போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும்.’
(4) ‘நன்மைக்கு ஏதுவாக’
ரோமர் 8:28ல் அடுத்ததாக சகலமும் எந்த இலக்கை நோக்கி நிகழ்கின்றது என்பதைப் பவுல் விளக்குகிறார். அனைத்தும் ‘நன்மைக்கு ஏதுவாக’ நிகழ்வதாக அவர் விளக்குவதைக் காண்கிறோம். அதாவது அனைத்து நிகழ்ச்சிகளுமே நன்மையில் போய் முடிகின்றன என்பது இதற்குப் பொருள். யாருடைய நன்மைக்காக என்பதை இனி விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். இருந்தபோதும் நிச்சயமாக அவை கிறிஸ்தவர்களின் (விசுவாசிகளின்) நன்மைக்காகவே போய் முடிகின்றன என்பது வேதம் போதிக்கும் உண்மை. இனி கர்த்தரின் பராமரிப்பு எந்தவிதத்தில் நன்மையில் போய் முடிகின்றது என்பதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.
கர்த்தரின் பராமரிப்பாகிய பெரும் வேத சத்தியத்தை வேதத்தில் பல உதாரணங்களைக் காட்டி விளக்கலாம். பழைய ஏற்பாட்டில் ஆதி 37ல் யோசேப்புவை எடுத்துக்கொள்ளுவோம். அவனுடைய சகோதரர்கள் ஆரம்பத்தில் யோசேப்புவைக் கொலை செய்யத் தீர்மானித்து பின்பு மனம்மாறி 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை இஸ்மவேலரிடம் விற்றார்கள். இஸ்மவேலர் யோசேப்புவை எகிப்துக்கு கொண்டுபோனார்கள். எகிப்தில் கர்த்தரின் கிருபையால் பின்பு யோசேப்பு பெரும் பதவியில் அரசனால் நியமிக்கப்பட்டான். அதுமட்டுமல்ல பின்பு பஞ்சத்தால் அவனுடைய குடும்பம் அவதிப்பட்டு, ஆபத்தை எதிர்நோக்கியபோது அதே யோசேப்பு மூலமே அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. யோசேப்புவின் சகோதரர்கள் தீய எண்ணத்தோடு செய்த காரியம் கர்த்தரின் மகா பராமரிப்பின் காரணமாக நன்மையில் போய் முடிந்திருக்கிறதில்லையா? இதைத்தான் யோசேப்பு ஆதி 50:20ல், ‘நீங்கள் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று தன்னுடைய சகோதரர்களைப் பார்த்துத் சொன்னான்.
இன்னுமொரு உதாரணத்தை நெகேமியா 4ம் அதிகாரத்தில் காணலாம். எருசலேமின் மதில்களைக் கட்ட நெகேமியா தீர்மானித்து அதைக் கட்டும்படியாக அரச அனுமதியோடு எருசலேமுக்குப்போய் அந்தப் பணியை ஆரம்பித்தபோது சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் எரிச்சலும், பொறாமையும் கொண்டு நெகேமியாவின் பணியைத் தடுக்கவும், எருசலேமின் மேல் யுத்தம் செய்யவும் முற்பட்டார்கள் (நெகே 4:1-8). ஆனால், ‘தேவன் அவர்களுடைய ஆலோசனையை அபத்தமாக்கினார்’ என்று நெகேமியா 4:15ல் சொல்லியிருப்பதை வாசிக்கிறோம். நெகேமியாவின் எதிரிகள் எரிச்சலாலும், பொறாமையாலும் தீங்கு செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டபோது அதைக் கர்த்தர் அபத்தமாக்கி நன்மையில் போய் முடியும்படிச் செய்தார்.
ஆதி சபை ஆரம்பித்து வளர்ந்துகொண்டிருந்தபோது எருசலேமில் இருந்த சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள் மட்டுமே எருசலேமில் இருக்க சகல கிறிஸ்தவர்களும் யூதேயா, சமாரியா பிரதேசங்களுக்கு சிதறிப்போனார்கள். இது சபைக்கு ஏற்பட்ட பெரும் துன்பம். சபையின் எதிரிகள் இந்த உலகத்தில் வெற்றியடைவதாக பலரும் அப்போது எண்ணியிருந்திருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? யூதேயா, சமாரியா பிரதேசங்களுக்குப் போன கிறிஸ்தவர்கள் மூலமாக சுவிசேஷச் செய்தி எங்கும் பரவி அநேகர் கர்த்தரை விசுவாசித்ததோடு மேலும் சபைகள் எங்கும் நிறுவப்பட்டன. கர்த்தரின் எதிரிகள் சபையைத் தொலைக்கும் நோக்கில் செயற்பட்டபோதும் கர்த்தர் அதை நன்மைக்காகப் பயன்படுத்தினார் என்பதை வரலாறு காட்டுகிறது.
இன்னுமொரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். சங்கீதம் 2:1-3வரையுள்ள வசனங்களில், ‘ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதாக்காரியத்தை சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி, அவர்கள் கட்டுக்களை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்’ என்று உலகத்தவர்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் பற்றி விளக்கிவிட்டு சங்கீதக்காரன் 4ம் வசனத்தில் கர்த்தர் இதையெல்லாம் பார்த்து என்ன செய்கிறார் என்று விளக்குகிறான். ‘பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார், ஆண்டவர் அவர்களை இகழுவார்’ என்று சொல்லுகிறான். அதற்கென்ன அர்த்தம்? உலகத்தவர்கள் என்ன நினைத்து எதைத் திட்டமிட்டாலும் சர்வவல்லவரான கர்த்தர் தன்னுடைய பராமரிப்பின் மூலம் அவர்களுடைய தீங்கான எண்ணங்களையும், திட்டங்களையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கங்களை எப்போதும் நிறைவேற்றிக்கொள்ளப் போகிறார் என்பதுதான். அதைத்தான் இறையாண்மையுள்ளவரின் ‘நகைப்பு’ விளக்குகிறது.
(5) ‘அவரில் அன்புகூருகிறவர்களுக்கு, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு’
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நிகழ்கின்றது என்று விளக்கும் பவுல், அது யாருடைய நன்மைக்காக நிகழ்கின்றது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். அவர்கள் முதலில், ‘அவரில் அன்புகூருகிறவர்கள்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? வேதபோதனையின்படி இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய தேவனாக, ஆண்டவராக விசுவாசித்து வாழ்கிறவர்களே இந்த வகையில் வேதத்தில் அடையாளம் காணப்படுகிறார்கள். எபேசியர் 1:2; எபேசியர் 2:4; எபேசியர் 3:17-19; எபேசியர் 5:2; யாக்கோபு 1:12; 1 யோவான் 4:10 ஆகிய வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். இந்த வசனங்கள் அனைத்திலும் இயேசு அன்பு செலுத்துகிற, அவரால் அன்புசெலுத்தப்படுகிறவர்கள் அவருடைய மக்களாகவும், பிள்ளைகளாகவும், விசுவாசிகளாகவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் சகலமும் நன்மையில் போய் முடிவதில்லை. அத்தகைய போதனையை வேதத்தில் காணமுடியாது. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரிடம் இருந்து பாவமன்னிப்பு அடையாமல் தங்களுடைய பாவத்தில் தொடர்ந்து வாழுகிறவர்கள் கர்த்தரிடம் இருந்து நன்மையை எதிர்பார்க்க முடியாது. கர்த்தரின் பொதுவான கிருபையின் கீழ் அவர்கள் இந்த உலகத்தில் எல்லோரும் (நல்லவர்களும், தீயவர்களும்) அனுபவிக்கின்ற பொதுவான நன்மைகளை அடைந்தபோதும், நித்திய வாழ்வை இயேசுவில் அடையாதவரை அவர்களுக்கு இயேசுவின் அன்பைப்பற்றித் தெரியாது. இயேசு கிறிஸ்துவில் அன்புகாட்டும் இருதயம் அவர்களில் இருக்கப்போவதில்லை. தங்களுடைய பாவத்தில் தொடர்ந்து வாழ்கிற அவர்கள் தங்களுடைய பாவத்திற்கான பலனை மட்டுமே இறுதியில் அடையமுடியும். அவர்களுக்கு நித்திய மரணம் மட்டுமே உண்டு. அதிலிருந்து விடுபட்டு இயேசுவில் அன்புகாட்ட அவர்கள் இயேசுவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் தங்களுடைய பாவமன்னிப்புக்காகவும், நித்திய வாழ்வுக்காகவும் முதலில் விசுவாசிக்க வேண்டும்.
ரோமர் 8:28ல் தரப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம் இயேசுவில் அன்பு பாராட்டும் விசுவாசிகளுக்கு மட்டும் உரித்தானது. இதை மேலும் உறுதிப்படுத்தும்படியாக பவுல் விசுவாசிகளை இன்னொருவிதத்திலும் இந்த வசனத்தில் அடையாளம் காட்டுகிறார். அதாவது, அவர்கள் ‘அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்’ என்று விளக்குகிறார். எபே 1:4; ரோமர் 8:29-30 ஆகிய வசனங்கள் இதையே போதிக்கின்றன. இயேசுவில் அன்பு பாராட்டுகிறவர்கள் அவரால் அநாதியில், உலகத்தோற்றத்திற்கு முன்பாகத் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டவர்கள். அதுவும் அவருக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாக இருக்கும்படி அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அப்படித் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களே இந்த உலகத்தில் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பை அடைகிறார்கள்; அவருடைய அன்பை ருசிபார்த்து அன்புள்ளவர்களாக வாழ்கிறார்கள். கர்த்தர் அவர்கள் நிமித்தம் சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக நிகழும்படிச் செய்கிறார்.
முடிவாக . . .
(1) இந்த வசனத்தில் இருந்து நாம் எதைப் படிக்கிறோம்? இயேசுவில் அன்புகாட்டும் விசுவாசிகள் எத்தனை பிரச்சனைகள், தொல்லைகள், இடறல்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள், அவமானங்கள், எட்டப்பசதிகள் மற்றும் சரீரப்பாடுகளை இயேசு கிறிஸ்துவும், பவுலும் மேலும் அநேக பரிசுத்தவான்களும் அனுபவித்திருப்பதைப்போல இந்த உலகத்தில் அனுபவித்தபோதிலும் சகலத்தையும் ஆண்டவர் அவர்களுடைய நன்மைக்காகப் போய் முடியும்படிக் கிரியை செய்கிறார் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுகிறோம். எந்தத் தொல்லையும் இயேசுவின் அன்பில் இருந்து நம்மைப் பிரித்துவிடமுடியாது. (ரோமர் 8:31-39). ‘உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நமக்கு நேரிட்டாலும்’ கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மை எவரும் பிரிக்க முடியாது. ‘இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல’ என்று பவுல் சொல்லுகிறார் (ரோமர் 8:18). அனைத்தும் நம்முடைய நன்மைக்காகவே நிகழும்; அதுவே கர்த்தரின் ஆணையும், அவருடைய மகா பராமரிப்பும் நமக்குக் காட்டித் தரும்.
(2) இதை எழுதும்போது ஒரு விஷயத்தை என்னால் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்தவற்றில் இருந்து இந்த உலகத்தில் நன்மையையும், ஆசீர்வாதத்தையும் மட்டும் அனுபவிப்பதற்காக கர்த்தர் நம்மை அழைக்கவில்லை. அவருடைய ஆசீர்வாதங்களில் நாமனுபவிக்கும் ‘கஷ்டங்களும்’ உள்ளடங்கியிருக்கின்றன. அந்தக் கஷ்டங்களால் நாம் அழிந்துபோவதில்லை; அதுவே ஆசீர்வாதம். கஷ்டங்களால் நாம் துன்பப்பட்டாலும் அது வெறும் நிழல் மட்டுமே; அதுவே நமக்கு ஆசீர்வாதம்.
கஷ்டமே இல்லாமல் இருப்பதை மட்டுமே ஆசீர்வாதமாகக் கருதுகிறது இன்று பரவசக் குழுக்களின் மத்தியில் பரவலாகக் காணப்படும் ‘செழிப்பு உபதேசம்’. இது ஒருதலைபட்டசமான, தவறான போதனை; சத்தியத்தை சத்தியமாக இது விளக்கவில்லை. கஷ்டங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மை ஒருவரும் பிரிக்க முடியாது, கஷ்டங்கள் நம்மை அழித்துவிட முடியாது, கஷ்டங்களும் பனிபோல ஒரு நாள் விலகிவிடும் என்ற நம்பிக்கையோடு பரலோக இன்பத்தை எதிர்நோக்கி வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை.
ரோமர் 8:22ல் இந்த உலகம் விடுதலைக்காக தவிப்பதைப் பற்றி விளக்கும் பவுல், நாமும்கூட நமக்குள் தவிக்கிறோம் என்று 8:23ல் சொல்லுகிறார். அந்தத் தவிப்பிற்கு நமது ‘பலவீனங்கள்’ காரணமாக இருப்பதாக அந்த வசனத்தில் காட்டுகிறார். அந்தப் பலவீனங்களுக்குக் காரணம் நமக்குள் இருக்கும் பாவமே (ரோமர் 7:20). அந்தப் பாவம் அடியோடு இல்லாமல் போகப்போவது பரலோகத்தில் மட்டுமே. அதற்கு முன் நாம் நம்முடைய ‘பலவீனங்களாலும்’, புறத்தில் காணப்படும் பாவச் செயல்களாலும் வெற்றிகரமான, ஆசீர்வாதமான ஒரு போராட்ட வாழ்க்கையையே இந்த உலகத்தில் வாழப்போகிறோம். அந்தப் போராட்ட வாழ்க்கையின் மத்தியிலேயே நாம் கிறிஸ்துவுக்குள்ளான நித்திய ஆனந்தத்தையும், சமாதானத்தையும் அனுபவிக்கப்போகிறோம். இது இந்தப் பாவ உலகம் அறிந்திருக்கிற ஆனந்தத்தையும், சமாதானத்தையும்விட வித்தியாசமானது. கிறிஸ்துவுக்குள்ளான ஆனந்தத்தையும், சமாதானத்தையும் அவரில் விடுதலை பெறாமல் இந்தப் பாவ உலகத்தால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.
முதல் கோணல், முற்றும் கோணல்
சமீபத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் நான் ஆதியாகமத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ‘ஆதாமும். ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். வரலாற்று ஆதாமையும் (Historical Adam), கர்த்தர் அவனோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையையும், அவனே மானுடத்தின் பிரதிநிதி (Federal headship) என்பதையும் இன்று நேற்றில்லாமல் அடிப்படை நம்பிக்கைகளாகக் கொண்டமைந்ததே வேதபூர்வமான கிறிஸ்தவம். இவற்றை நிராகரிப்பதோ அல்லது இவற்றிற்கு மாறான வேறு விளக்கங்களைத் தருவதோ அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அடியோடு சிதைத்துவிடும். ஆதியாகமத்திற்கு புது விளக்கம் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் புதுவிளக்கங்களைக் கொடுக்கிறவர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள்; கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.
ஆதியாகமம் வேதத்தின் முதல் நூலாக மட்டும் இருக்கவில்லை; அனைத்திற்கும் ஆதாரமான ஆரம்ப நூலாகவும் இருக்கின்றது. ஆதியாகமத்தின் முதல் பதினோரு அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றின் அடிப்படையிலேயே வேதத்தின் ஏனைய போதனைகள் அமைந்திருக்கின்றன. நான் பழைய ஏற்பாட்டு இறையியலைக் கற்றுக்கொண்ட இறையியல் கல்லூரியில் அதைப் போதித்த, நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஜோன் வெயிட் (Professor John Waite) ஒரு முறை சொன்னார், ‘ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை இல்லாமலாக்கினால் வேதம் இருக்க வழியில்லை’ என்று. இது சத்தியமான வார்த்தைகள். பிசாசு ஆதியாகமத்தைத் தாக்கும் முயற்சியை இன்றுவரை கைவிடவில்லை. ஆண்டவராகிய இயேசுவுக்கே வேதத்திற்கு புதுவிளக்கம் கொடுக்க முயன்றவனாயிற்றே அவன்.
ஆதியாகமத்தின் முதல் பதினோரு அத்தியாயங்களில் காணப்படும் அடிப்படைப் போதனைகளை ஒரு முறை பார்ப்போம்.
- கர்த்தரைப் பற்றியும், திரியேக தேவனைப் பற்றியதுமான அடிப்படைப் போதனை (ஆதி 1).
- ஆறு நாட்களில் கர்த்தரால் உலகம் படைக்கப்பட்டவிதம் (ஆதி 1-2).
- தேவதூதர்கள் (ஆதி 1).
- ஆதாம், ஏவாள் படைக்கப்பட்ட விதம் (ஆதி 1-2).
- ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விதிக்கப்பட்ட நியாயப்பிரமாணம் (ஆதி 3:2-3).
- ஆதாம், ஏவாளுக்கு விதிக்கப்பட்ட சமுதாயக் கடமைகள். (ஆதாமின் தலைமைத்துவமும், ஏவாளின் பங்கும்) (ஆதி 1-3).
- ஆணும், பெண்ணும் மட்டும் திருமணத்தில் இணைதல் (ஆதி 1-2).
- குடும்ப வாழ்க்கை (ஆதி 2-3).
- தொழில் (ஆதி 1-2).
- சபத்து நாள் (கிறிஸ்தவ ஓய்வு நாள்) (ஆதி 2).
- பிசாசு பற்றிய போதனை (ஆதி 2-3).
- பாவத்தின் தோற்றம், அதனால் ஏற்பட்ட சீரழிவு, பாவத்திற்குத் தண்டனை (ஆதி 2-3).
- கிறிஸ்தவ சுவிசேஷமும், இரட்சிப்பும் (ஆதி 3:15).
- கர்த்தரின் கோபமும், நியாயத்தீர்ப்பும் (ஆதி 9-11).
இத்தனைப் போதனைகளுக்குமான அத்திவாரத்தை நாம் ஆதியாகமம் 1-11 வரையுள்ள அதிகாரங்களில் காண்கிறோம். இப்போதனைகளுக்கான புதிய ஏற்பாட்டின் விளக்கங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் அவர்களுடைய போதனைகளை நிலைநிறுத்துவதற்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்களைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதை மறுக்க முடியாது. உண்மையில் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இருபத்தைந்து இடங்களில் ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் பகுதிகளை இயேசு கிறிஸ்துவும், ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். அதுவும் இந்த ஆதியாகமப் பகுதிகளை எழுத்துப்பூர்வமாக, வரலாற்று நிகழ்வுகளாகக் கணித்தே விளக்கியுள்ளனர். அந்தளவுக்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்கள் முக்கியமானவை. இந்த அதிகாரங்களை சிதைத்தால் மட்டுமே வேதநூல்களில் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு புதுவிளக்கம் கொடுக்க முடியும். இப்போது தெரிகிறதா, பலர் ஏன் இந்த அதிகாரங்களைச் சிதைக்கக் கங்கணம் கட்டிச் செயல்பட்டிருக்கிறார்கள், தொடர்ந்தும் செயல்பட்டுவருகிறார்கள் என்று.
ஆதியாகமம் கற்பனைக் கதையா?
லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் இந்த அதிகாரங்களைக் கற்பனைக் கதைகள் (Myth) என்று சொல்லுகிறார்கள். லிபரல் போதனையாளர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கையற்றவர்கள். வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் ஆதியாகமம் மெய்யான வரலாற்று நூலல்ல. லிபரல் இறையியல் அறிஞர்களுக்கு உதாரணமாக கார்ல் பார்த், எமில் புரூனர், புல்ட்மான், போன்றோரைக் குறிப்பிடலாம். வில்லியம் பார்க்கிளே, ஜேம்ஸ் டெனி போன்றோரும் இதே போக்கிலேயே இறையியல் விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர்.
இன்று சுவிசேஷ இயக்கத்தில் பலரும், நியோ&கல்வினிசம் என்று அழைக்கப்படும் புது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதியாகமத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டாலும், அதன் முதல் மூன்று அதிகாரங்களை, முக்கியமாக முதலாவதைக் கவிதையாகவும் (Poetical), உருவகமாகவும் (Allegorical or Figurative) பார்க்க முனைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஆதியாகமத்தைப் பற்றிய ஒரேவிதமான கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியாது. இவர்களில் பலர் ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் பல பகுதிகளை எழுத்துபூர்வமாகவும், சிலவற்றை உருவகமாகவும், அடையாள மொழியாகவும் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மட்டுமே இவர்களால் நாம் மேலே பார்த்த அடிப்படை உண்மைகளை நிராகரிக்கவோ அவற்றிற்கு புதுவிளக்கம் கொடுக்கவோ முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களைக் கவிதையாகவோ, உருவகமாகவோ அல்லது அடையாளமொழியாகவோ பார்க்கிறவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவர்களில் Bruce Waltke, (who was professor of Old Testament at Westminster Theological Seminary), Fuller Seminary theologian Paul K. Jewet, Charles E. Hummel, John H. Stek, Howard Van Till, John Frame (who was a professor of theology at Westminster Seminary in Escondido, California) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆதியாகமத்தை வரலாற்று நூலாகக் கணிக்காமல் உருவகமாகவோ, இறையியல் போதனையை மட்டும் தரும் உருவகப் போதனையாகவோ மட்டும் கணிப்பது அநேக சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களிடமும், இவெஞ்சலிக்கள் இறையியல் கல்லூரிகளிலும், கிறிஸ்தவ கல்லூரிகளிலும், ஏன், பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களிடமும் இன்று பொதுவாக இருந்து வருகிறது. அதுவும் போஸ்ட்&மொடர்ன் காலப்பகுதியில் நாம் வாழ்வதால், உண்மை என்று எதுவும் இல்லை என்று வாதிடும் போஸ்ட்&மொடர்ன் சிந்தனை கிறிஸ்தவர்களைப் பாதித்து போஸ்ட்&மொடர்ன் சிந்தனையின் அடிப்படையில் ஆதியாகமப் பகுதிகளுக்கு விளக்கங்கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதை மேலைநாட்டுக் கிறிஸ்தவத்தில் அன்றாடம் காண்கிறோம். கீழைத்தேய நாடுகளுக்கு இந்தப்போக்கு நிச்சயம் ஏற்றுமதி செய்யப்படும். இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.
ஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்கள் கவிதையோ அல்லது உருவகமோ அல்ல, முழு வரலாற்று நூல் என்றும், உலகத்தோற்றத்தை விளக்கும் எழுத்துபூர்வமான நூல் என்றும் ஆதியில் இருந்து கிறிஸ்தவர்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு எப்படி ஆபத்து வந்தது? முதலில், விஞ்ஞான வளர்ச்சியும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்து ஆய்வு செய்யும் முறையும் வளர ஆரம்பித்தது இந்த ஆபத்திற்கு வழிகோளியது. விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் நம்மைப் படைத்த கர்த்தரே. அவரின்றி மனிதனில் அறிவு மேம்பட வாய்ப்பில்லை. அந்த அறிவை மனிதன் படைத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. ஆதியில் மனிதன் பேருயரத்தில் ஒரு கோபுரத்தை உருவாக்கியதில் தவறில்லை (ஆதி 9). கர்த்தரை எட்டும் நோக்கத்தில், விண்ணைத்தொட அகங்காரத்தோடு அதைக் கட்டியதுதான் தவறு. விஞ்ஞானத்தை எதற்காக, எப்படி, எதில் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனத்தோடு இருக்க வேண்டும்.
வேதமும் விஞ்ஞானமும்
விஞ்ஞான வளர்ச்சியும், ஆய்வு மனப்பான்மையும் ஏற்பட்ட காலத்தில் இறையியலறிஞர்கள் இறையியல் கல்லூரிகளில் விஞ்ஞான அடிப்படையில் வேதத்தை ஆராயவும், அதற்கு விளக்கங்கொடுக்கவும் முற்பட்டார்கள் (Higher Criticism). விஞ்ஞானத்தின் அடிப்படையிலான வேத ஆய்வு முறை ஆதியாகமத்தின் வரலாற்று நிகழ்வுகளுக்கு உலகரீதியிலான விளக்கங்கொடுக்க வழிகோளியது. அநேகருடைய விஞ்ஞானக் கண்ணோட்டமே அவர்கள் ஏதேன் வாழ்க்கையையும், நோவா காலத்து ஜலப்பிரவாக உலக அழிவையும், பாபேல் கோபுரத்தையும் வரலாற்று நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அத்தோடு கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் உருவாக்கியிருக்க முடியாது என்ற எண்ணமும் இவர்கள் மத்தியில் உருவானது. ஆதியாகமத்தில் ‘நாள்’ என்ற வார்த்தையை இருபத்திநான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாளாகப் பார்க்காமல் அதைவிட அதிகமான காலமாக விளக்கங்கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. டார்வினின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை (Evolution theory) நியாயப்படுத்தும் வகையில் ஆதியாகமத்திற்கான விளக்கங்கள் கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. ஆதியாகமத்தை இவர்கள் பொதுவாகக் கற்பனையாகவும், உருவகமாகவும், அடையாளமொழியாகவும் கருதி விளக்கினார்கள். இதை லிபரல் இறையியலறிஞர்களிடம் பார்க்கலாம். இந்தியாவில் முக்கியமாக யூனியன் பிப்பிளிக்கள் செமினரி, அரசரடி இறையியல் கல்லூரிகள் போன்றவற்றில் இந்தப் போக்கே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதை ஸ்ரீ லங்காவில் பிலிமத்தலாவை இறையியல் கல்லூரியிலும், லங்கா வேதாகமக் கல்லூரியிலும் காணலாம். பொதுவாகவே இந்தவகையில் போதனை தராத இறையியல் கல்லூரிகள் இருப்பது இன்று அரிதாக இருக்கின்றது.
கடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு
சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டபோதும் அதிலுள்ள அனைத்து சம்பவங்களையும், போதனைகளையும் எழுத்துப்பூர்வமாக எடுத்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டனர். இவர்கள் டார்வினின் லிபரல் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்கு ஒத்துப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க ஆரம்பித்தார்கள். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் வழியில் உருவான, கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு போதனைக்குப் பெயர்தான் Theistic evolution. நியோ-கல்வினிசத்தைப் பின்பற்றும் டிம் கெலர் இதைத்தான் நம்புகிறார். இவரைப் பொறுத்தவரையில் ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் ஒரு கவிதை (The Reason for God). இந்தப் போதனை, கர்த்தர் ஓரிரு அடிப்படை அற்புத செய்கைகளின் மூலம் உலகத்தையும், அதிலுள்ள அனைத்தையும் தோற்றுவித்தபோதும், தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அதற்குப் பிறகு பரிணாமவளர்ச்சி முறையிலே உருவாயின என்று விளக்குகிறது. இந்தப் போதனை விஞ்ஞானத்தை உயர்வானதாகக் கணித்து அதற்கேற்ற முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படி படைப்பில் கர்த்தரின் அற்புதச் செய்கைகளும், இயல்பான படிப்படியான பரிணாமவளர்ச்சியும் இணைந்து காணப்படுகின்றன. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல.
இடைவெளிக் கோட்பாடு
இன்னுமொரு கோட்பாடு ஆங்கிலத்தில் Gap theory என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போதனை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்கொண்ட நாளாக ஏற்றுக்கொண்டபோதும், ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தை அதைவிட நீண்ட காலப்பகுதியாக விளக்கங்கொடுக்கிறது. இதை Gap creationism என்றும் அழைப்பார்கள். இது வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (ruin-restoration creationism, restoration creationism). இதிலும் வித்தியாசமான விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்தப் போதனை உலகம் மிகமிகப் பழமையானதாகவும், அது தோன்றுவதற்கு ஆறாயிரம் ஆண்டுகளைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளோ, அதைவிட நீண்ட காலங்களோ எடுத்திருக்க வேண்டும் என்று நிரூபிக்கப் பார்க்கின்றது. இந்தப் போக்கை ‘நியோ’ அல்லது ‘நியூ&கல்வினிச’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் காண்கிறோம் (ஜோன் பைப்பர், டிம் கெலர்). இந்தப் போக்கிற்குக் காரணம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் உலகம் மிகப்பழமையானது என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று இவர்கள் நம்புவதால்தான். ஆகவே, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு இடங்கொடுக்கும் விதத்தில் இவர்கள் ஆதியாகமத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள்.
வேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை
‘படைப்பை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி விளக்க முடியாது’ என்று ஜோன் மெக்காத்தர் எழுதியிருக்கிறார். கர்த்தர் படைத்த அனைத்தையும் வைத்தே விஞ்ஞானிகளால் எந்த ஆய்வையும் செய்ய முடிகிறது. அதனால் படைப்புக்கு பின்னால் வந்த விஞ்ஞானம் படைப்பைப் பற்றி விளக்கங்கொடுக்க வழியில்லை. கர்த்தரின் அற்புத படைப்புச் செயலுக்கு எதிராக விளக்கங்கொடுக்கும் ‘இயற்கைவாதிகளைப்’ (Naturalists) பார்த்து நாம் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரின் வேதத்தில் நம்பிக்கை வைத்து வேதம் போதிப்பதை விசுவாசித்து, தைரியத்தோடு விசுவாசிக்க வேண்டும், விளக்கவேண்டும். இவெஞ்சலிக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வெயின் குரூடம் (Wayne Grudem) என்ற இறையியலறிஞர், ‘உலகத்திற்கு எத்தனை வயது என்ற விஷயத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று அவருடைய இறையியல் விளக்க நூலில் எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இது வேதத்தின் ஏனைய போதனைகளைவிட முக்கியமானதல்ல. ஆனால், வெயின் குரூடத்தின் கூற்று மிகத்தவறானது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு இடங்கொடுத்து உலகத்தின் வயதைக் கூட்டிக்காட்ட முயலும் கூட்டம் வேத நம்பிக்கைகளை சிதறடிக்கப் பார்க்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்றைய சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த பெரும்பாலான இறையியல் கல்லூரிகளும், அறிஞர்களும் உலகம் இளமையானது (young earth) என்ற நம்பிக்கையை என்றோ இழந்துவிட்டிருக்கிறார்கள்.
கர்த்தர் ஆறு நாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், ஒரு நாள் இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாள் என்பதையும், முதலாம் நாளுக்கும் இரண்டாம் நாளுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை என்பதையும், ஏனைய போதனைகளை வழங்கும் ஆதியாகமம் பதினொரு அதிகாரங்களையும் எழுத்துப்பூர்வமாக, உண்மை வரலாற்று நிகழ்வுகளாக ஏற்று, நம்பி விசுவாசிக்க வேண்டியது இன்று கிறிஸ்தவனின் தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது. இதற்கு கிறிஸ்தவனுக்குத் தேவை விசுவாசம் மட்டுமே. விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைத்து வேதத்தை அதற்கேற்றபடி மாற்றுவது பாலில் விஷத்தைக் கலப்பதற்கு சமமானதாகும்.
பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான அனைத்து ஆதியாகம விளக்க முறைகளிலும், ஆதியாகமம் மெய்யான வரலாறு என்பதை மறுக்கும் போதனைகளிலும் உள்ள ஆபத்து என்ன தெரியுமா?
- வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதென்பதை இக்கொள்கைகள் மறுக்கின்றன.
பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களுக்கான எந்த விளக்கமும் கர்த்தரின் வேதம் அருளப்பட்ட முறையை சந்தேகக்கண்ணோடு பார்த்து அதை விசுவாசிக்க மறுக்கின்றன. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதாக (God breathed – theopneustos – 2 Tim 3:16) நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இதற்கு அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி, அவர்களை வழிநடத்தி வேதத்தை எழுத வைத்தார் என்பதே. இதை ஆங்கிலத்தில், Inspiration என்று அழைப்பார்கள். இது வேதம் அருளப்பட்ட தன்மையைக் குறித்த முக்கிய உண்மை. உலக மனிதர்களின் எழுத்துக்களில் காணப்படாத ஒரு தெய்வீக வழிநடத்துதல் இது. அதனால்தான் வேதம் மனித எழுத்துகளைவிட மாறுபட்டதாக இருக்கின்றது. இந்தத் தெய்வீக ஆவியின் வழிநடத்துதல் வேதத்தின் போதனைகள் மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் வேதத்தின் வார்த்தைகளோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் வேதத்தை ஊதி அருளியபோது அதை எழுதியவர்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துமாறும் பார்த்துக்கொண்டார். வேதம் எழுதப்பட்ட மூல மொழிகளில் (எபிரெயம்-கிரேக்கம்) ஒவ்வொரு வார்த்தையும், சகல பகுதிகளும் கர்த்தரால் தெரிந்து கொடுக்கப்பட்டவை (Verbal plenary inspiration). அதனால்தான் வேதத்தில் காணப்படும் வார்த்தைகளையும், எந்தப் பகுதிகளையும் நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கமும் வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை சத்தியத்தை மாசுபடுத்துகின்றன; மறுக்கின்றன. அவை அனைத்துமே வேத வார்த்தைகளுக்கு கர்த்தர் தந்துள்ள அர்த்தத்தைவிட மறுபொருள் கொடுப்பதோடு, வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனையாகவும், கவிதை மொழியாகவும், உருவகமாகவும் பார்க்கின்றன. கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கத்தையும் (Theistic evolution and Gap theory) நாம் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
- வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கின்றன.
பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதை அடிப்படையாகக் கொண்ட ஏனைய போதனைகளும் (Theistic evolution and Gap theory) வேதத்தின் அதிகாரத்தை மாசுபடுத்துகின்றன. வேதவார்த்தைகளுக்கும், போதனைகளுக்கும் கர்த்தர் நினைத்திராத விளக்கங்களைக் கொடுக்கின்றபோது அத்தகைய செயல்கள் வேதத்தை மாசுபடுத்தி அதன் அதிகாரத்தைக் குறைவுபடுத்துகின்றன. வேதம் கர்த்தருடைய தவறுகளற்ற, சத்தியமான வார்த்தை என்பதை பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சகல விளக்கங்களும் நிராகரிக்கின்றன. கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாட்களாக ஒவ்வொரு நாட்களும் இருந்தன என்பதையும் ஏற்றுக்கொள்ள இருதயம் மறுக்கின்றபோது அந்த இருதயத்தில் கர்த்தரின் வேதத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்துவிட்டதென்றே அர்த்தம்.
- கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன.
பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், அதோடு தொடர்புடைய Theistic evolution, Gap theory போன்றவையும் கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன. இறையாண்மையுள்ள கர்த்தரால் முடியாதது என்று ஏதாவது இருக்க முடியுமா? எதுவுமில்லாததிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் செய்ய முடியாதது என்ன? நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்து எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, சோதோம், கொமோராவை அக்கினியினால் அழித்து, யோனாவை மீன் விழுங்க வைத்து இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களைச் செய்த கர்த்தருக்கு உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்குவது என்பது பெரிதா? இதை விசுவாசிக்கத் தெரியாத கிறிஸ்தவ விசுவாசம் எத்தகைய விசுவாசமாக இருக்க முடியும்?
- கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சிதைக்கின்றன.
ஆதியாகமத்தின் படைப்பு சம்பந்தமான மெய் வரலாற்றுப் போதனைகளும், அதன் முதல் பதினொரு அதிகாரங்களில் காணப்படும் சத்தியங்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தோடு தொடர்புள்ளவை என்பதைப் பலர் நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆதியாகமத்தில் 3:15ல் தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதன் முறையாக வாசிக்கிறோம். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் வரலாற்றுத் தன்மையை சிதைத்தால் கர்த்தரின் அற்புதங்களும், அவ்வதிகாரங்களின் போதனைகளும் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. மனிதனின் தோற்றம், ஏதேனில் அவனுடைய வாழ்க்கை, அவனுடைய பாவம் பற்றிய போதனைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவை பாதிப்புக்குள்ளாகும்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மையும் பாதிப்புக்குள்ளாகின்றது. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, கிறிஸ்துவின் அற்புதச் செய்கைகள், கிறிஸ்துவின் மரணம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இல்லை என்றாகி விடுகின்றது (1 கொரிந்தியர் 15:17-19). ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பைத் தவிர்க்க வழியில்லை. அதனால்தான் ‘ஆதாமும், ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி ஒருவர் எழுதியிருந்தார்.
எந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கிறவனே கிறிஸ்தவன் (2 தீமோத்தேயு 3:16-17). ஆதியாகமத்தையும், அதன் ஆரம்ப அதிகாரங்களில் காணப்படும் அத்தனை நிகழ்வுகளையும், போதனைகளையும் உள்ளது உள்ளபடியே விசுவாசிக்க மறுக்கும் இருதயம் கர்த்தரை விசுவாசிக்கும் இருதயமாக இருக்க வழியில்லை. கிறிஸ்துவோடு இல்லாதவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்காதவனை அவர் மறுஉலகத்தில் நிராகரிப்பார் என்பதை நினைவுகூருங்கள். அடுத்தமுறை ஆதியாகமத்தை வாசிக்கிறபோது அது ஆண்டவருடைய, ஆவியால் அருளப்பட்ட வார்த்தை என்ற தேவபயத்தோடு வாசியுங்கள். முதல் கோணல், முற்றும் கோணல் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இப்போது புரிகிறதா?
Helpful resources:
- Coming to Grips with Genesis: Biblical Authority and the Age of the Earthedited by Terry Mortenson, Thane Hutcherson Ury, Master Books.
- In the Beginning, J. Young, The Banner of Truth Trust.
- Genesis 3, E. J. Young, The Banner of Truth Trust.
நிழல் நிஜமாகப் பார்க்கிறது
தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘உண்மையைப் போலியானதிலிருந்து பிரித்துக்காட்டும் சாதாரண விஷயமல்ல பகுத்தறிவு என்பது; உண்மையை உண்மையைப்போலத் தோற்றமளிப்பதிலிருந்து பிரித்துக்காட்டுவதே பகுத்தறிவு.’ இது எத்தனை சத்தியமான வார்த்தை என்பதை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நிதர்சனமாய்ப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் தவறு எது, உண்மையெது என்று அறிந்துகொள்ளுவது அத்தனை கடினமான காரியமாக இருக்கவில்லை. பொதுவாகவே அந்த விஷயத்தில் மக்களுக்கு அதிகம் பிரச்சனை இல்லாமலிருந்தது. இன்றைக்கு அதுவே இமாலயப் பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. தவற்றைத் தவறென்று சொல்லுவது தவறு என்கிறது பின்நவீனத்துவ சமுதாயம். கிறிஸ்தவ சமுதாயமும் அந்த சிந்தனைப் போக்கைக் கொண்ட கலாச்சாரத்தைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது. தவற்றைத் தவறாகப் பார்க்கும் காலம் போய், அதோடு சேர்ந்து வாழ வற்புறுத்துகிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம். அதுதான் உண்மையான ஒற்றுமையாம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் உண்மை, உண்மையைப்போல் தோற்றமளிப்பதோடு ஒருங்கிணைந்து வாழ்வதுதான் யதார்த்தம் என்கிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம்.
உண்மை வேறு, உண்மையைப்போல் தோற்றமளிப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. உண்மைக்கு வெகு அருகாமையில் நிற்கிறது என்பதற்காக உண்மையைப்போலத் தோன்றுவதையெல்லாம் உண்மையாகக் கருதிவிடக்கூடாது. ஸ்பர்ஜன் தன்காலத்திலேயே இத்தகைய ஆபத்தை சந்தித்திருக்கிறார். அதற்கெதிராக அவர் போராடத் தவறவில்லை. வேதசத்தியங்களைத் தகர்த்து வேறு திசையில் பாப்திஸ்து யூனியன் சபைகள் இங்கிலாந்தில் போக ஆரம்பித்தபோது ஸ்பர்ஜன் அதை இனங்கண்டு தன்னுடைய சபையை அதிலிருந்து விலக்கிக் கொண்டார். மேலே நாம் பார்த்த ஸ்பர்ஜன், என்றோ சொன்ன கருத்து இன்றைக்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியளவுக்கு கோலியாத்தைப் போல வளர்ந்து நிற்கிறது.
ஒரு காலத்தில் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு வேதத்தில் இருந்த நம்பிக்கை இன்று அறவேயில்லை. வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டதென்று சொல்லுகிறவர்களெல்லாம் அதை மேற்போக்காகத்தான் சொல்லுகிறார்களே தவிர அதை உறுதியாக நம்பி நடந்துகொள்வதில்லை. காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் வேத வார்த்தைகளுக்கும், வசனங்களுக்கும் விளக்கங்கொடுத்து அதன் மெய் அதிகாரத்தை இன்றைக்கு அநேகர் சிதைத்து வருகிறார்கள். இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் இவர்கள் அதிகரித்திருப்பதுதான் பெருங்கவலையான காரியம். காலத்துக்கு ஏற்றவிதத்தில், சட்டையை மாற்றிக்கொள்ளுவதுபோல் சத்தியத்தை மாற்றியமைத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம். வேதவசனங்களுக்கு நினைத்தவிதத்தில் பொருள் காண்பதும். ஏன், வேதவார்த்தைகளுக்கும், சத்தியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் காலத்துக்கேற்ற விதத்தில் பொருள் காண்பதும் வழமையாகிக் கொண்டிருக்கிறது.
பாவத்திற்கு புதுவிளக்கம்
இன்று சிலர் பாவத்திற்கு புது விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கலாச்சார அடிப்படையில் மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதுதான். கிறிஸ்துவைப் பலரும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை சிதைப்பது எப்படி நியாயமாகும்? டிம் கெலர் என்ற அமெரிக்க போதகர் பாவமென்பது ‘மனிதன் தன்னை முதன்மைப்படுத்துவது’ என்று விளக்குகிறார். அதாவது, அவன் சுயத்தில் எல்லாவற்றிற்குமான நிறைவேற்றத்தைக் கண்டு அதில் தங்கியிருப்பதே அவரைப் பொறுத்தவரையில் பாவமாகும். மனிதன் சுயத்தில் அல்லாது கர்த்தரை அடிப்படையாகக் கொண்டு தன்னில் எல்லாவற்றிற்குமான நிறைவேற்றத்தைக் காண வேண்டும் என்கிறார் கெலர். இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. உண்மையைப் போல இது தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இது பாவத்திற்கு வேதம் கொடுக்கும் விளக்கத்தைத் தரவில்லை.
கர்த்தரின் கட்டளைகளை மீறுவது பாவம் என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 3:7; ரோமர் 4:15). அதாவது கர்த்தரின் கட்டளைகளை மனிதன் நிறைவேற்றத் தவறியதால்தான் ஆரம்பத்தில் ஏதேனில் பாவம் பிறந்தது. அந்த அடிப்படையில் சகல மனிதர்களும் கட்டளைகளை மீறுகிறவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். அந்த ‘மீறுதலே’ அவர்கள் சுயத்தில் தங்கியிருப்பதற்கும், சுயத்தில் திருப்தியடைவதற்கும் காரணம். மனிதன் சுயத்தில் தங்கியிருப்பதல்ல பாவம்; அது பாவத்தினால் ஏற்பட்ட விளைவு. மனிதன் கர்த்தரின் கட்டளைகளை மீறி வாழ்வதே பாவம் என்பது வேதம் பாவத்திற்கு அளிக்கும் தெளிவான விளக்கம். அந்த மீறுதல் மனிதனைப் பாவியாக்கி அவன் சகல பாவங்களையும் செய்யும் நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது; அவன் தன்னை முதன்மைப்படுத்தி வாழும்படிச் செய்திருக்கிறது. இதைத்தான் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தெளிவாகப் போதிக்கின்றன. இன்று இதைத் தவிர்த்து பாவத்திற்கு மறுவிளக்கம் கொடுக்க பலர் முனைந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பின்நவீனத்துவ கலாச்சாரத்திற்கேற்றவகையில் வேதத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று டிம் கெலர் போன்றவர்கள் நம்புவதுதான். பின்நவீனத்துவ சமுதாயம் ஒழுக்கத்தை நிராகரித்து, சத்தியம் என்று ஒன்றில்லை என்று சிந்திக்கும் போக்கைக் கொண்டிருப்பதால் அவர்களைக் கவர, சத்தியம் இதுதான் என்று சொல்லிப்போதிக்கின்ற பழமையான சீர்திருத்தவாத, தூய்மைவாத கிறிஸ்தவப் போதனைகள் இந்தப் பின்நவீனத்துவ காலத்துக்கு உதவாது என்று முடிவுகட்டி பாவம் முதற்கொண்டு வேத சத்தியங்களுக்கெல்லாம் பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கின்படி இவர்கள் விளக்கங்கொடுத்து வருகிறார்கள்.
நான் சமீபத்தில் வாசித்த இன்னுமொரு ஆக்கத்தில் (Toward a Cross-Cultural Definition of Sin by T. Wayne Dye) அதை எழுதிய ஒரு முன்னாள் மிஷனரி பாவத்துக்குக் கொடுத்திருந்த விளக்கம் என்னை அதிரச் செய்தது. இதுவும் பின்நவீனத்துவ விளக்கந்தான். அந்த முன்னாள் மிஷனரி நாடுகளின் கலாச்சாரத்துக்குத் தகுந்தவிதத்தில் பாவத்தை விளக்க வேண்டும் என்கிறார். ஒரு நாட்டில் பலதார மணமுடித்தல் வழக்கத்தில் இருந்தால் அதைப் பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் பாவமாகப் பார்ப்பது மேலைநாட்டு வழக்கமாம். மேலை நாடுகளில் கிறிஸ்தவர்கள் அந்தவகையில் பாவத்தை இனங்காணப் பழகியிருப்பதால் அந்தக் கண்ணோட்டத்தோடு இன்னொரு நாட்டில் காணப்படும் கலாச்சாரத்தை பாவமாகப் பார்க்கக்கூடாது என்று இந்த மிஷனரி எழுதியிருக்கிறார். ஆகவே, நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறுவதால் ஒரு நாட்டில் பாவமாகக் கருதப்படுவது இன்னொரு நாட்டில் கலாச்சாரமாக மட்டுமே இருக்கும் என்பது இவரது விளக்கம். கலாச்சாரத்தின் அடிப்படையில் மட்டுமே எந்த நடத்தையையும் எந்நாட்டிலும் விளங்கிக்கொள்ள வேண்டுமே தவிர பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு எதையும் பாவமாகப் பார்க்கக்கூடாது என்று இவர் சொல்லியிருக்கிறார். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விளக்கம். இந்த மனிதரின் விளக்கம் அடிப்படையிலேயே வேதவிரோதமானது. கர்த்தருக்கு எதிரானது. இவரது விளக்கம் பாவத்திற்கு மட்டும் மறுவிளக்கம் தராமல், பத்துக்கட்டளைகளுக்கும் மறுவிளக்கம் தந்து இறுதியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே சிதைத்துவிடுகிறது. எந்தளவுக்கு பின்நவீனத்துவப் பார்வை கிறிஸ்தவர்களைப் பாதித்திருக்கிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். உண்மையைப் போலத் தோற்றமளிக்கும் விதத்தில் பொய்யைப் பரப்பி வருபவர்கள் தொகை இன்று அதிகம்.
ஓரின இச்சை (Same-sex orientation)
ஓரினச் சேர்க்கையை வேதம் ஆணித்தரமாக இயற்கைக்கு மாறானதாக விளக்க, அந்த வாழ்க்கையுள்ளவர்களை சபையில் ஏற்றுவாழ வேண்டும் என்று மேலைநாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு சாராரால் இன்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஓயேஸிஸ் டிரஸ்ட் (Oasis Trust) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தை நடத்தும் ஸ்டீவ் சோக் (Steve Chalke) என்ற பாப்திஸ்து போதகர் இங்கிலாந்தில் இதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதேவேளை, ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்றும், அந்த வாழ்க்கை பாவகரமானது என்றும் ஏற்றுக்கொள்ளுகிற கிறிஸ்தவர்களில் ஒரு சாரார், அந்த வாழ்க்கையை நடைமுறையில் வாழாதவரையில் மனத்தளவில் ஓரின இச்சை கொண்டிருப்பது (orientation) பாவமில்லை என்ற புதுவிளக்கத்தைக் கொடுத்து வருகிறார்கள். அதாவது, கிறிஸ்தவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால்தான் பாவம், ஓரின இச்சையை இருதயத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது பாவமில்லை என்கிறார்கள் இவர்கள். இதை சபையில் போதித்து வருகிறார்கள் பல போதகர்கள். தன் சபைப் போதகர் இதை விளக்கி, கோபப்படுவதைப் போலத்தான் இதுவும், அதனால் இது பாவமில்லை என்று சொன்னதாகச் சொல்லி என்னிடம் வருத்தப்பட்டுக்கொண்டார் ஒரு பெண்மணி. ஓரினச் சேர்க்கையில் நடைமுறையில் ஈடுபடாவிட்டாலும் அத்தகைய இச்சை எங்களுக்கு தொடர்ந்திருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள் சில ஆங்கிலிக்கன் இவெஞ்சலிக்கள் போதகர்கள். ‘அந்த இச்சை போய்விடும் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்யவில்லை; அதனால் கடைசிவரை தனிமையில் வாழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றும், ‘அந்தப் பலவீனத்திற்கு மத்தியில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே எனக்கு முக்கியம்’ என்றும் வோன் ரொபட்ஸ் (Vaughan Roberts) என்ற ஆங்கிலிக்கன் இவெஞ்சலிக்கள் போதகர் ஒருவர் இங்கிலாந்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். (ஊழியத்திலிருக்கும் இவருடைய மூன்று நண்பர்கள் தங்களுடைய ஓரின ஓரியன்டேஷனை வெளிப்படுத்தி அதை நியாயப்படுத்தும் வகையில் Living Out என்ற ஒரு வலைப்பூவையும் வைத்திருக்கிறார்கள்.) ஓரினச் சேர்க்கையைப் பற்றி விளக்கும் மிக முக்கியமான ஆறு வேதப்பகுதிகளுக்கு (ஆதியாகமம் 19:5; லேவியராகமம் 18:22; 20:13; ரோமர் 1:26-27; 1 கொரிந்தியர் 6:9; 1 தீமோத்தேயு 1:10) இவர்களெல்லாம் புதுவிளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஓரினச் சேர்க்கைப் பற்று, ஓரினச் சேர்க்கை இச்சை, அடிப்படையில் ஓரினச் சேர்க்கை ஆசைகொண்ட உள்மனப் போக்கு இதெல்லாம் ஒரே விஷயத்தைக் குறிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள். அடிப்படையில் ஓரினச்சேர்க்கை ஆசைகொண்ட உள்மனப்போக்கை நடைமுறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலில் இருந்து வேதம் பிரித்துப் பார்க்கவில்லை. பிரித்துப் பார்க்கிறது என்று இவர்கள் தவறாகப் போதிக்கிறார்கள். இப்படிப் போதிப்பவர்களில் வோன் ரொபட்ஸ் மட்டுமல்ல, கெரிஸ்மெட்டிக் கல்வினிஸ்ட் என்று தன்னை இனங்காட்டிக் கொள்ளும் ஜோன் பைப்பரும் (John Piper) ஒருவர். அவருடைய இணைய தளமான Desiring Godல் இந்தவகையில்தான் அவர் விளக்கங் கொடுத்திருக்கிறார்.
ரோமர் 1:26ல் தேவன் அவர்களை ‘இழிவான இச்சைரோகங்களுக்கு’ (vile affections, vile passions, degrading passions, shameful lusts) ஒப்புக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது. கிரேக்கத்தில் ‘பேதோஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இச்சை’ என்று அர்த்தம். புதிய ஏற்பாட்டில் இது கேடான இச்சையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதே வசனம் இந்த இச்சையை சுபாவத்துக்கு விரோதமானது என்று விளக்குகிறது. அதாவது, இயற்கைக்கு மாறானது என்று அர்த்தம். ஏன் இயற்கைக்கு மாறானது என்று எழுதியிருக்கிறது என்று கேட்பது அவசியம். ‘இயற்கை’ என்று இங்கு அடையாளங் காணப்படுவது ஆதியில் கர்த்தர் ஆணையும், பெண்ணையும் உருவாக்கிய முறையைத்தான். ஆதியில் தேவன் ஆண், பெண்ணிலும், பெண் ஆணிலும் ஆசைகொள்வதைத்தான் மனித இருதயத்தில் இயற்கையாக ஏற்படுத்தியிருந்தார். அதற்கு முற்றிலும் மாறான, இயற்கைக்கு விரோதமானதுதான் ஆண் ஆணில் ஆசைகொள்வதும், பெண் பெண்ணில் ஆசைகொள்வதும். இத்தகைய ஆசையை வேதம் இயற்கையானதாகக் காணவில்லை; பாவமாக அதுவும் மிகவும் கீழ்த்தரமான, இழிவான பாவமாகப் பார்க்கிறது. அதன் காரணமாக தேவகோபம் மனிதன்மேல் இருப்பதாக ரோமர் 1 விளக்குகிறது.
வோன் ரொபட்ஸூம் ஜோன் பைப்பரும் விளக்குவதுபோல் இந்த ‘சுபாவத்துக்கு விரோதமான இச்சை’ கிறிஸ்தவர்களில் இயற்கையாகக் காணப்படும் பாவமற்ற ஆசையல்ல. வேதவிரோதமான விளக்கத்தை கலாச்சார அடிப்படையில் கொடுத்து இவர்கள் பொய்யை உண்மையைப் போலத் தோற்றமளிக்க வைக்கும் செயலைச் செய்திருக்கிறார்கள். அல்பர்ட் மொஹ்லரின் ‘God and the Gay Christian, A Response to Matthew Vines’ என்ற pdf நூல் இந்த விஷயத்தில் அடிப்படை வேதபோதனையை விளக்கி ‘ஓரின ஓரியன்டேஷனை’ (இருதயத்தில் ஓரின இச்சைப் போக்கு) பாவமானதாக, கிறிஸ்தவனில் காணப்படக்கூடாததாக ஆணித்தரமாக விளக்குகிறது. ஓரினச்சேர்க்கையையும், ஓரின ஓரியன்டேஷனையும் வேதம் அனுமதிக்கிறது என்று விளக்க முனையும் மெத்தியூ வைனின் வாதங்களை அல்பர்ட் மொஹ்லரின் நூல் தைரியத்தோடு தகர்த்தெறிகிறது.
ஓரினச்சேர்க்கை அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமுதாயத்தில் சாதாரண உறவு முறையாக ‘எபோலா’ வைரஸைப் போல உலகெங்கும் பெருகிவருவதால் அதை எதிர்த்துக் குற்றப்படுத்தாமல் சுவிசேஷத்தை அந்த வாழ்க்கைமுறையைக் கொண்டவர்களுக்குக் கொடுத்தால் பெரும் பயனிருக்குமே என்ற ‘உயர்ந்த நோக்கத்தால்’ வேதபோதனைகளுக்கு மறுவிளக்கம் (redefining) கொடுத்து ஓரின ஓரியன்டேஷனைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருப்பது தப்பில்லை (செயல் மட்டுமே தப்பு) என்று சொல்லிவருவது கிறிஸ்தவ சமுதாயத்தில் பெருகி வருகிறது.
ஓரினச் சேர்க்கையையும், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஓரின ஓரியன்டேஷனையும் எதிர்ப்பது நமக்கு ஒருபோதும் அரசியல் ஆகிவிடக்கூடாது. ஓரினச் சேர்க்கையாளர்களை நாம் வெறுக்கக்கூடாது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் இயற்கைக்கு மாறான ஈனத்தனமான செய்கையில் ஈடுபடும் அளவுக்கு பாவத்தில் விழுந்திருக்கிறார்கள். அதை அறியாதிருக்கிறார்கள். அவர்களும் கிறிஸ்துவை அறிந்து விசுவாசிக்கும்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே நமது இலக்காக எப்போதும் இருக்க வேண்டும். அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு நிலைதடுமாறிக் கொண்டிருப்பவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பி இரட்சிப்பை அடைய வழி இருக்கிறது. அப்படி மனந்திரும்பி இரட்சிப்பு அடைகிறவர்கள் தொடர்ந்தும் பழைய ஈன வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது. அந்த வாழ்க்கையை விட்டுவிலகி நல்வாழ்வு வாழ்வதற்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் வழிவகுத்திருக்கிறது. பாவத்திலிருந்து விடுதலையை மட்டும் தராமல், பாவ வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்கக்கூடிய வல்லமையையும் கிறிஸ்துவின் திருஇரத்தம் தருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவங்களிலும் இருந்து சுத்திகரித்து புதுவாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. ஓரின ஓரியன்டேஷனைப் போக்க வல்லமையற்றதாக கிறிஸ்துவின் இரட்சிப்பு இருக்குமானால் கிறிஸ்துவின் சுவிசேஷமே மதிப்பற்றதாகிவிடும். ஓரின ஓரியன்டேஷனில் இருந்து விடுதலை கொடுக்க கிறிஸ்துவால் இயலாவிட்டால் கிறிஸ்தவ பரிசுத்தமாக்குதலும் கேலிக்குரியதாகிவிடும். ஓரின ஓரியன்டேஷனை பாவமற்ற வெறும் சோதனை மட்டுமே என்று வாதிடும் வோன் ரொபட்ஸ் போன்றவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடித்தளத்தையே தகர்க்கிறார்கள்.
கிறிஸ்துவின் கட்டளைகளையும், வேதபோதனைகளையும் காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி மாற்றியமைப்பதில் ஈடுபடும் ‘கிறிஸ்துவின் பெயரில்’ நடந்துவரும் திட்டமிட்ட பரவலான பிரச்சாரத்தை நம்மால் எதிர்த்து நிற்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ சுவிசேஷத்தைக் கேட்டுத் திருந்தி கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எல்லா விஷயத்திலும் கிறிஸ்துவுக்கு அடிமையாக பாவத்தை வெறுத்து, அதிலிருந்து அடியோடு விலகி அவரை மேன்மைப்படுத்துபவர்களாக சபையில் வாழவேண்டும். தங்களுடைய பழைய வாழ்க்கைப் போக்குகளுக்கு புது நியாயம் கற்பித்து, பாவத்துக்குப் புதுவிளக்கம் கொடுத்து வாழ்கிறவர்களாக அவர்கள் இருக்க முடியாது; அதற்கு இடங்கொடுப்பது ஒருபோதும் மெய்க்கிறிஸ்தவமாக இருக்காது. ஓரின ஓரியன்டேஷன் பாவமற்ற இச்சைதான் என்று வாதிடுபவர்கள் நிழலை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் இந்தப் போலிப் போதனையை இனங்கண்டு எதிர்த்து நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆதியில் தேவன் . . . சிருஷ்டித்தார்
‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1:1)
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் முதல் வசனம் மிகவும் முக்கியமானது. அது வேதத்தின் முதல் வசனம் என்பதனால் மட்டும் அல்ல; அது முழு வேதத்திற்குமான அத்திவாரத்தை அமைத்துத் தரும் வசனமாகவும் இருக்கிறது. இந்த வசனம் இதற்குப் பிறகு வரும் வசனப்பகுதியோடு பிரிக்கமுடியாத தொடர்புகொண்டது. கிறிஸ்தவ இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் அநேகர் இன்றைக்கு இந்த வசனம் பற்றிய மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த வசனத்திற்கும் இதற்கு அடுத்த வசனத்திற்கும் இடையில் (1:1-1:2) கோடிக்கணக்கான ஆண்டுகள் கொண்ட இடைவெளி இருந்ததாகவும், அந்த இடைவெளிக்காலத்தில் அநேக நிகழ்ச்சிகள் நடந்ததாகவும் நம்புகின்றனர். இந்தத் தவறான நம்பிக்கைக்கு ‘இடைவெளித் தத்துவம்’ (Gap Theory) என்று பெயர். இந்த இடைவெளித் தத்துவத்தின்படியான இடைவெளிக்காலத்தைப் பற்றி, இதை நம்புகிற எல்லோருமே ஒரே விளக்கத்தைத் தருவதில்லை. கோடிக்கணக்கான இடைவெளிக் காலம் இருந்ததாக பெரும்பாலானோர் நம்பியபோதும், பல்லாயிரக்கணக்கான இடைவெளிக்காலம் மட்டுமே இருந்ததாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்காலத் தத்துவம் பொதுவாகவே இன்றைக்கு இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் பரவலாக இருந்துவருகிறது. அநாவசியத்துக்கு கீழைத்தேய இறையியல் கல்லூரிகள் பெரும்பாலானவற்றிலும் நுழைந்து குடிகொண்டிருக்கிறது. இந்த இடைவெளிக்காலப்பகுதியில் ஆதாமுக்கு முன் இன்னொரு மனிதன் இருந்ததாகவும், சாத்தானின் வீழ்ச்சியும் இந்தக் காலப்பகுதியில்தான் நிகழ்ந்ததாகவும் கட்டுக்கதைகள் பல எழுந்துள்ளன.
கர்த்தரின் வேதத்தைப் பற்றிய உயர்வான நம்பிக்கை கொண்டிருக்கிற நாம் இந்த இடைவெளிக்காலத் தத்துவத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? முதலில் இது முழுத்தவறான போலித்தனமான போதனை என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆணித்தரமாக இப்படி நான் சொல்வதற்குக் காரணமென்ன? எந்தப் போதனை எந்தப் பகுதியில் இருந்து எழுந்தாலும் அந்தப் போதனை கிறிஸ்துவாலும், வேதத்தின் ஏனைய எழுத்தாளர்களாலும் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டுமென்பது வேதவிளக்க விதிகளில் ஒன்று. அந்த விதிப்படிப் பார்த்தால் ஆதி. 1:1க்கும் 1:2க்கும் இடையில் கால இடைவெளி இருந்ததாக வேதத்தின் எந்தப்பகுதியும், எந்த எழுத்தாளரும், இயேசு உட்பட எங்குமே விளக்கியதில்லை. இது ஒன்றே போதும் இடைவெளிக்காலத் தத்துவம் போலியான கட்டுக்கதை என்பதை நிரூபிக்க. இது உருவானதற்குக் காரணம் டார்வினின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டையும் (Evolution), இயற்கைவாதிகளின் (Naturalists) விளக்கங்களையும் வேதத்திற்குள் திணித்து விஞ்ஞான அடிப்படையில் வேதவிளக்கங்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இவெஞ்சலிக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நம்பியதால்தான். கர்த்தரின் வேதத்தில் அவர் சொல்லியிருப்பதை மட்டுந்தான் நாம் பார்க்கப் பழக வேண்டுமே தவிர அவர் வெளிப்படுத்தியிராத, அவருடைய எழுத்துக்களில் இல்லாதவற்றைக் காண்பதற்கு எந்த முயற்சியும் செய்யக்கூடாது. இத்தகைய முயற்சியே ‘லிபரல்வாதிகளை’ (வேதத்தை கர்த்தருடைய தெய்வீக வார்த்தையாக நம்பாதவர்கள்) உருவாக்கிவிட்டிருக்கிறது.
தேவ பயத்தோடு வேதத்தைப் படிக்காமலும், ஆராயாமலும் உலக நோக்கோடு, அவிசுவாசியின் கண்ணோட்டத்தோடு அதை அணுகும் போதுதான் விசுவாசி வேதத்தை சிதைக்கும் வழியில் போக நேர்கிறது. கர்த்தருடைய வேதம் தவறுகளற்றதும் (without error), தவறிழைக்க முடியாததும் (infallible), அதன் சகல பகுதிகளும், சகல வார்த்தைகளும் (எபிரெய கிரேக்க மூலமொழிகளில்) கர்த்தரால் ஊதி வழங்கப்பட்டதுமான (Verbal plenary Inspiration) தேவ வார்த்தை என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பவனே மெய்விசுவாசி (2 தீமோத்தேயு 2:16-17; 1 பேதுரு 1:2-21; 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்தையும் பார்க்கவும்). வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிராதவர்கள் வேதத்தை எப்போதுமே தவறான கண்ணோட்டத்தோடேயே பார்ப்பார்கள். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கை வேதத்தை ஆராய்ந்து படிப்பதற்கு ஒருபோதும் தடைபோடவில்லை. வேதப்பகுதிகளை ஏனைய வேதப்பகுதிகளுடன் ஒப்பிட்டு, ஆராய்ந்து படித்து கர்த்தரின் வெளிப்படுத்தல்களை அறிந்துகொள்வதற்கு உலக ஞானம் (worldly wisdom) தேவையில்லை. உலக ஞானத்தின் உதவியில்லாமல் பரிசுத்த ஆவியின் துணையோடு வேதத்தின் மூலமொழிகளைப் பயன்படுத்தி நம்மொழியில் இருக்கும் வேதத்தை ஜெபத்தோடு ஆராய்ந்து படிப்பது மட்டுமே விசுவாசியின் கடமை. வேதத்தில் ஆணித்தரமான நம்பிக்கைவைத்து பின்பற்ற வேண்டிய அந்த வழி மட்டுமே கர்த்தரின் வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், அவரில் வளரவும் துணை செய்யும்.
இனி ஆதியாகமத்தின் முதலாவது வசனத்தை ஆராய்வோம். ‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1:1). இது ஆங்கில வேதத்தில் ‘In the beginning God created the heavens and earth’ என்றிருக்கிறது. இந்த வசனத்தை நான்கு கேள்விகளைத் தலைப்பாகக் கொண்டு ஆராய்வோம். அந்தக் கேள்விகள் பின்வருமாறு:
- படைத்தவர் யார்?
- படைப்பு எப்போது நிகழ்ந்தது?
- படைப்பு எப்படி நிகழ்ந்தது?
- படைக்கப்பட்டவை எவை?
- படைத்தவர் யார்?
இப்படியொரு கேள்வி தேவையா? என்றுகூட சிலர் நினைக்கலாம். இருந்தபோதும் வசனத்தை ஆராய்கிறபோது அதற்குப் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. கர்த்தரே அனைத்தையும் படைத்தவர் என்பதை இந்த வசனம் உறுதியாக விளக்குகிறது. ‘ஆதியில் கர்த்தர்’ என்று அது கர்த்தரை அறிமுகப்படுத்துவதைக் காண்கிறோம். கர்த்தரே மோசேயின் மூலமாக அதை எழுத வைத்தார். எலோகிம் என்ற எபிரெய வார்த்தை தேவன் என்று இந்த வசனத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது முதலாம் அதிகாரத்தில் 32 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
கர்த்தரைப் படைத்தவராக இந்த வசனம் காட்டுகிறதை வேதத்தின் ஏனைய பகுதிகள் அங்கீகரிக்கின்றன. அத்தகைய வசனங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
பழைய ஏற்பாடு:
நெகேமியா 9:6
யோபு 9:8
சங்கீதம் 102:25
ஏசாயா 45:18
எரேமியா 51:15
புதிய ஏற்பாடு:
யோவான் 1:1
அப்போஸ்தலர் 17:24
எபிரெயர் 1:10
எபிரெயர் 11:3
வெளிப்படுத்தின விசேஷம் 4:11
இதுவரை நாம் பார்த்துள்ள வசனங்களெல்லாம் கர்த்தரே சிருஷ்டிகர்த்தர், அனைத்தையும் படைத்தவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. மோசே மட்டுமல்லாமல் வேதத்தின் ஏனைய தேவ மனிதர்களும், எழுத்தாளர்களும் படைப்பைக்குறித்த ஒரேவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததை நாம் இதன் மூலம் பார்க்கிறோம். எல்லாம் வல்ல கர்த்தரைத் தவிர வேறு எவரும் உலகத்தைப் படைத்திருக்க வழியில்லை. அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பு ஆதியில் ஜீவனுள்ள கர்த்தர் மட்டுமே இருந்ததாகவும், கர்த்தரே காலத்தை உண்டாக்கி உலகத்தைப் படைத்தார் என்பதை இந்த வசனம் விளக்குகிறது. மோசே மூலம் கர்த்தர் தன்னை அறிமுகப்படுத்தி இந்த வசனத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதேவிதத்தில்தான் யோவானும் தன்னுடைய சுவிசேஷத்தில் (யோவான் 1:1), ‘ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று ஆரம்பித்து இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
கர்த்தரில்லாமல் படைப்பு இல்லை; கர்த்தரில்லாமல் வேதம் இல்லை; கர்த்தரில்லாமல் எதுவும் இருக்க வழியில்லை. உங்களுடைய விசுவாசம் கர்த்தரோடு ஆரம்பிக்கிறதா? கர்த்தரை முதன்மைப்படுத்துகிறதா? இறையாண்மையுள்ள கர்த்தரை, அவருடைய வல்லமை மற்றும் குணாதிசயங்களோடு ஏற்றுக்கொள்ளுகிற விசுவாசமாக இருக்கிறதா? ஆதியாகமத்தின் இந்த முதலாம் வசனத்தில் கர்த்தர் முதன்மைப்படுத்தப்படுகிறார். அவரைச் சுற்றி, அவரிலேயே இவ்வசனத்தின் ஏனைய வார்த்தைகளும், அவை விளக்கும் உண்மைகளும் தங்கியிருக்கின்றன. இவ்வசனத்தின் ‘ஆதியில்’ என்ற வார்த்தையும் அதற்குப்பிறகு வரும் ‘சிருஷ்டி’ என்ற வார்த்தையும் பிரிக்க முடியாதபடி ‘கர்த்தர்’ என்ற வார்த்தையில் மொழிப்பிரகாரமாக தங்கியிருக்கின்றன. அதாவது, காலத்தின் ஆரம்பத்தையும், சிருஷ்டியையும் கர்த்தரில்லாமல் பார்க்க வேதம் அனுமதிக்கவில்லை. அந்தவிதத்திலேயே இந்த வசனத்தின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன.
பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு ‘இயற்கைவாதத்தைப்’ பின்பற்றி கடவுளில்லாமல் உலகம் உருவாகியதாக விளக்குகிறது. இது கடவுள் நம்பிக்கையற்ற விளக்கம். கடவுள் நம்பிக்கையற்ற இயற்கைவாத விளக்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் ஒருபோதும் இருதயத்தில் இடங்கொடுக்கக் கூடாது. அது விஷத்தைப்போல இருதயத்தின் ஆத்மீக நம்பிக்கைகளைப் பாதித்துவிடும். பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டைப் பின்பற்றி உருவாகியிருக்கும் ஏனைய போதனைகளான ‘கடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும்’ (Theistic evolution), ‘இடைவெளித் தத்துவமும்’ (Gap theory) கடவுளுக்கு படைப்பில் இடங்கொடுத்தபோதும் கர்த்தரை இறையாண்மையுள்ளவராகக் கணித்து விளக்கங்கொடுக்கவில்லை. அவை கர்த்தரின் படைப்புக் கிரியையை மாசுபடுத்துகின்றன. கர்த்தரே அனைத்தையும் படைத்தார் என்று நம்புவது மட்டுமல்லாமல், அவரே அனைத்தையும் தன்னுடைய வார்த்தையின் மூலம் மாபெரும் அற்புதச் செய்கையால் படைத்தார் என்று நம்புவதும் அவசியம். கர்த்தரின் படைப்பின் செயல் ஓர் அற்புதம். அவருடைய அற்புதச் செய்கையில் இயற்கையை நாம் புகுத்தக்கூடாது. கர்த்தர் மட்டுமே அற்புதங்களைச் செய்யக்கூடியவர்.
- படைப்பு எப்போது நிகழ்ந்தது?
ஆதியாகமத்தின் முதலாம் வசனம் கர்த்தர் ‘ஆதியில்’ படைத்தார் என்று விளக்குகிறது. இது சரியான மொழிபெயர்ப்பு. இதைத் ‘தொடக்கத்தில்’, ‘ஆரம்பத்தில்’ என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தை மூலம் எதைக் கர்த்தர் விளக்குகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியில் என்ற இந்த வார்த்தைக்கும் கர்த்தர் என்ற பதத்திற்கும் பெருந்தொடர்பிருக்கின்றது. ஒன்று மற்றதில் தங்கியிருக்கின்றது.
சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், ‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ என்பதை ‘கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது . . .’ என்று மொழிபெயர்த்திருக்கின்றன. (Foot note of Revised Standard Version, Moffatt Bible). முதலில் இது மொழிபெயர்ப்பு இலக்கணங்களை மீறிய ஒரு மொழிபெயர்ப்பாகும். இப்படி மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த முதலாம் வசனத்தை முடிவற்ற ஒரு வசனமென்றும், அது மூன்றாம் வசனத்தில் ‘தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்’ என்பதில் தங்கியிருக்கும் வசனம் என்றும் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் செய்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இப்படி மொழிபெயர்க்கும்போது இரண்டாம் வசனம் ஓர் இடைச்செருகலாக அமைந்து முதலாம் வசனத்தின் பொருளை மாற்றி, ‘கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது . . . பூமியானது ஒழுங்கின்மையாகவும், வெறுமையாகவும் இருந்தது’ என்பதில் போய் முடிகிறது. இதன்படி கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது ஏற்கனவே அவருடைய சிருஷ்டிக்கான மூலப் பொருள்கள் காணப்பட்டன என்ற கருத்து உருவாகின்றது. அதாவது, கர்த்தர் படைப்பை ஆரம்பிக்கும் முன்பே உலகம் இருந்தது, ஆனால் அது ஒழுங்கில்லாமல் இருந்தது என்ற கருத்தை இது தருகின்றது. ஆனால், ‘ஆதியில் தேவன் . . . சிருஷ்டித்தார்’ என்ற நம் தமிழ் வேதத்தில் காணப்படும் சரியான மொழிபெயர்ப்பு எந்தப் பொருளையும் பயன்படுத்தாமல், எதன் துணையும் இல்லாமல் கர்த்தர் உலகத்தைப் படைத்தார் என்ற உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. ஆதியாகமத்தின் முதலாம் வசனத்தை முடிவற்ற வசனமாக மொழிபெயர்க்கிறவர்கள், ஒன்றையும் பயன்படுத்தாமல் கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்தார் என்ற போதனையை நிராகரிப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் படைப்பைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் நோக்கத்தை வேதத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள். இது முழுத் தவறு. நம்முடைய சொந்தக் கருத்துகளுக்கு ஏற்றமுறையில் வேதத்தை நாம் மொழிபெயர்க்கவோ, அதன் பொருளை மாற்றியமைக்கவோ முயலக் கூடாது.
ஆதியாகமத்தின் முதல் வசனத்தில், ‘ஆதியில்’ (Bereisheet) என்ற வார்த்தை காலத்தின் துவக்கத்தை விளக்குகிறது. அதற்கு முன் காலம் இருக்கவில்லை. ஆதியில் கர்த்தர் சிருஷ்டித்தபோதே காலம் உருவானது. அதற்கு முன் எதுவுமே இருக்கவில்லை; கர்த்தர் மட்டுமே நித்தியத்திலிருந்து இருந்தார். அவருக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அவர் காலத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல. காலம் ஆதியில் உண்டாவதற்கு முன் எந்தப் பொருளோ, மனிதனோ காணப்படவில்லை. அவ்வாறிருந்தபோதுதான் நித்தியத்திலிருந்து இருந்து வந்த கர்த்தர் இடைப்பட்டு வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்; காலத்தை ஆரம்பித்து வைத்தார்.
- படைப்பு எப்படி நிகழ்ந்தது?
ஆதியாகமத்தின் முதலாம் வசனம், ‘ஆதியிலே தேவன் . . . சிருஷ்டித்தார்’ என்றிருக்கிறது. இங்கே ‘சிருஷ்டித்தார்’ என்ற வார்த்தை எபிரெய மொழியில் (bara) மிக முக்கியமானது. இது ஒரு வினைச்சொல் ஆனால், எபிரெய மொழியில் இது ஆண்பாலில் இருக்கிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் வினைச்சொற்கள் ஆண், பெண்பாலில் காணப்படுவதில்லை. சிருஷ்டி இங்கே கர்த்தரோடு தொடர்புபடுத்திக் காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வார்த்தை வேதத்தில் கர்த்தரோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தரில்லாமல் சிருஷ்டி நிகழ வழியில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. கர்த்தரில்லாமல் சிருஷ்டியைப் பற்றி சிந்திக்க முடியாது என்பதை இது வலியுறுத்துகிறது. இந்த வார்த்தை ஆதியாகமம் 2:3, 4 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சிருஷ்டி (பாரா) என்ற இந்த வார்த்தையில் ஆழமானதோர் அர்த்தமுண்டு. அதாவது, ‘ஒன்றுமில்லாததிலிருந்து படைக்கப்படுதல்’ (ex hihilo) என்ற அர்த்தம் இதில் இருக்கிறது. நாம் எதையும் உருவாக்க வேண்டுமானால் நமக்கு மூலப் பொருட்கள் தேவை. மூலப் பொருட்கள் இல்லாமல் நம்மால் எதையும் உண்டாக்க முடியாது. காகிதக் கப்பல் ஒன்று செய்ய வேண்டுமானால் நமக்கு காகிதம் தேவை. எதை உருவாக்க வேண்டுமானாலும் நமக்கு மூலப்பொருட்கள் அவசியம். ஆனால் இறையாண்மையுள்ள கர்த்தருக்கு அவை அவசியமில்லை. அவர் எதன் அவசியமும் இல்லாமல், எதையும் பயன்படுத்தாமல் எதை வேண்டுமானாலும் உருவாக்க வல்லவர். அந்தப்படி மூலப்பொருட்கள் எதுவும் இல்லாமல், ஒன்றுமில்லாததிலிருந்து கர்த்தர் வானத்தையும் உலகத்தையும் படைத்தார் என்பதை இந்த வார்த்தையான சிருஷ்டி நமக்கு விளக்குகிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘உருவாக்குதல்’ என்ற வார்த்தை பரந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருப்பவற்றை வைத்து நாம் உருவாக்கும் எதையும் குறிப்பிட இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். எபிரெய மொழியில், இங்கே ஆதி 1:1ல் ‘சிருஷ்டி’ எந்த வார்த்தை ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டித்தல் என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது.
எபிரெயர் 11:3, ‘விசுவாசத்தினாலே நாம் தேவனுடைய வார்த்தையினாலே உலகங்கள் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்’ என்று எபிரெயருக்கு எழுதியவர் நாம் மேலே பார்த்த உண்மையைப் புதிய ஏற்பாட்டில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இங்கே பழைய ஏற்பாட்டு சத்தியத்தைப் புதிய ஏற்பாடு ஆணித்தரமாக நிரூபிப்பதைக் காண்கிறோம்.
சிருஷ்டி ஓர் அற்புதம். அற்புதங்களைக் கர்த்தர் மட்டுமே செய்ய வல்லவர். உலகத்தில் இருக்கும் மெஜிக் வித்தைக்காரனுக்கு மெஜிக் செய்ய பொருட்கள் தேவை. அவற்றைப் பயன்படுத்தியே நம் கண்களை ஏமாற்றி அவன் வித்தை செய்கிறான். கர்த்தர் சிருஷ்டி மூலம் மாஜிக் செய்யவில்லை. அவர் அற்புதத்தை, உலகமே அறிந்திராத, எவரும் செய்யமுடியாத அற்புதத்தைச் செய்தார். கர்த்தருடைய அற்புதங்கள் அனைத்துமே அந்தவகையில்தான் அமைந்திருக்கின்றன. பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதிலிருந்து புறப்பட்டுள்ள சிருஷ்டி பற்றிய இவெஞ்சலிக்கள் விளக்கங்களும் கர்த்தரின் மாபெரும் சிருஷ்டியாகிய அற்புதத்தை மாசுபடுத்துகின்றன. கர்த்தருடைய வல்லமையைக் குறைவுபடுத்துகின்றன. லாசருவை மரணத்திலிருந்து விடுவித்து உயிர்கொடுக்க இயேசு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார். அவர் பேசியபோது லாசரு உயிர்த்தெழுந்தான். அதேபோல் கர்த்தர் பேசியபோது உலகம் உருவானது. எந்தவித படிமுறைப் பரிணாமவளர்ச்சியையும் அறியாது உடனடியாக, அவர் ‘உண்டாகக்கடவது’ என்ற சொன்ன அதே நிமிடமே, அவர் எது உண்டாகக்கடவது என்று சொன்னாரோ அது உருவானது. இதுவே கர்த்தரின் சிருஷ்டியாகிய மகா அற்புதம். எபிரெயருக்கு எழுதியவர் 11:3ல் சொன்னதுபோல் இதை விசுவாசத்தினால் மட்டுமே ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியும். விசுவாசமில்லாதவர்களும், சத்தியப் புரட்டர்களுந்தான் இதை விசுவாசிக்க மறுப்பார்கள்.
- படைக்கப்பட்டவை எவை?
‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ என்று ஆதியாகமம் 1:1ல் வாசிக்கிறோம். கர்த்தர் ‘வானத்தையும் பூமியையும்’ படைத்ததாக இந்த வசனம் சொல்லுகிறது. வானத்தையும் பூமியையும் என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஆராய்வது அவசியம். முதலில் மூலமொழியான எபிரெயத்தில் தமிழில் ‘வானம்’ என்று ஒருமையில் இருப்பது பன்மையில் ‘வானங்கள்’ என்றே இருக்கின்றது. அந்தவிதத்திலேயே தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகளெல்லாம் மொழிபெயர்த்திருக்கின்றன.
இந்த வசனத்தின் வார்த்தைப் பிரயோகமான ‘வானங்களும் பூமியும்’ என்பது எதைக்குறிக்கவில்லை என்பதை முதலில் பார்ப்போம். முதலாவதாக, எந்தத் துணைப்பொருளையும் பயன்படுத்தாமல் கர்த்தர் வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தார். இவற்றை உருவாக்குவதற்கு அவருக்கு எதுவும் தேவையிருக்கவில்லை. ஒன்றிலுமிருந்து இவை உருவாக்கப்படவில்லை. இவற்றில் எதுவும் அதற்கு முன்பு இருந்ததில்லை. முதன்முறையாக கர்த்தரின் வார்த்தையின் மூலம் இவை எந்தப் படிமுறை வளர்ச்சியும் இல்லாமல் உடனடியாக உருவாயின. இதற்கு மேல் எந்த விளக்கத்தையும் நாம் கொடுக்க முடியாது. அப்படிக்கொடுக்கும்படியாக இந்த வசனத்தில் கர்த்தர் வேறு எதையும் சொல்லவில்லை. இதுவே கர்த்தருடைய வார்த்தையின் அற்புதம். அவருடைய வார்த்தையை நாம் உலகத்து எழுத்துக்களைப் போல மனித சிந்தனையின் அடிப்படையில் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள முடியாது. கர்த்தரின் வார்த்தையின் சிறப்பு அம்சமே அது அவருடைய ஆணித்தரமான, மெய்யான, தவறிழைக்க முடியாத வார்த்தை என்பதுதான். இப்படிச் சொல்லுவதை சிலர் ‘இது கண்மூடித்தனமான நம்பிக்கை’ என்பார்கள். உண்மையில் இது அப்படிப்பட்டதல்ல. இது கர்த்தரை அறிந்துகொள்ளுகிற அறிவால் பரிசுத்த ஆவியால் ஏற்படுகின்ற அசையா நம்பிக்கை; விசுவாசம். இத்தகைய விசுவாசத்திற்கு ஈடு இணை கிடையாது. கடவுளை அறியாதவர்களால் இதை நம்புவது கஷ்டந்தான். இவெஞ்சலிக்கள் விசுவாசிகள் இதை நம்ப மறுப்பதுதான் மிகக் கொடூரமானது. சிருஷ்டியை வேதம் விளக்குகிற முறையில் நம்ப மறுக்கும் இருதயத்தின் விசுவாசம் நிச்சயம் சந்தேகத்துக்குரியதுதான். உண்மையில் விசுவாசம் இல்லாமல் இதை நம்புவது கடினம். கிறிஸ்துவில் மெய்விசுவாசம் இருந்தால் மட்டுமே வேதத்தை உள்ளது உள்ளவாறு கர்த்தரின் வார்த்தையாக ஏற்றுக்கொள்ள ஒருவரால் முடியும்.
இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம், இந்த வசனம் சிருஷ்டியைப் பற்றிய பொதுவான விளக்கத்தைத் தருகிறது என்பதைத்தான். பொதுவான விளக்கத்தை முதலில் தந்துவிட்டு அதற்குப்பிறகு வரும் வசனங்களின் மூலம் அந்த சிருஷ்டி எந்தவகையில் நிகழந்தது என்பதைக் கர்த்தர் விளக்குகிறார். ஆகவே, ‘வானங்களையும், பூமியையும்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் பொதுவானவிதத்தில் மட்டுமே இந்த இடத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அர்த்தங்களைத் தேட முயற்சிக்கக்கூடாது. உண்மையில் இந்த வார்த்தைப் பிரயோகம் எதை விளக்குகிறது? அதாவது, கர்த்தர் ‘எல்லாவற்றையும் குறிப்பாக அவற்றில் உலகத்தையும்’ படைத்தார் என்பதையே இந்த வார்த்தைப் பிரயோகங்கள் விளக்குகின்றன. இதேமுறையிலான வார்த்தைப் பிரயோகத்தை ஏசாயா 1:1ல் காண்கிறோம். ‘. . . யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்’ என்று அங்கே வாசிக்கிறோம். இதில் ‘யூதாவையும் எருசலேமையும்’ என்ற பதங்களைக் கவனியுங்கள். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? யூதாவையும் குறிப்பாக எருசலேமையும் என்பதுதான். அதேமுறையில்தான் ஆதியாகமம் 1:1ல் ‘வானங்களையும் பூமியையும்’ என்ற பதங்கள் அமைந்திருக்கின்றன. வானங்கள் என்றால் என்ன? பூமி என்றால் என்ன? என்று விளக்குவதை இந்த வசனம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதுபற்றிய விளக்கத்தை இந்த வசனத்தை அடுத்து வரும் வேதப்பகுதி விளக்கப்போகிறது. கர்த்தரின் சிருஷ்டி பற்றிய பொதுவான விளக்கத்தைத் தருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த வசனம் ‘அனைத்தையும் குறிப்பாக அவற்றில் உலகத்தையும்? கர்த்தர் படைத்தார் என்பதை இந்த வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் விளக்குகிறது.
முடிவாக . . .
இதுவரை ஆதியாகமம் 1:1ஐ விளக்கமாக ஆராய்ந்திருக்கிறோம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறைப் போதனைகள் என்ன தெரியுமா?
- இந்த ஆரம்ப வசனம் கர்த்தர் எத்தனை பெரியவர் என்பதை நமக்கு உணர்த்தி மிகத்தாழ்மையோடு அவருக்குப் பணிசெய்ய நம்மைத் தூண்டுகிறது.
இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் அம்சம் தேவபயமே. கர்த்தரை நேசிக்கிறேன், கர்த்தரில் இன்பமடைகிறேன், கர்த்தரிடம் எல்லாவற்றையும் கேட்டு நிற்கிறேன், கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார், கர்த்தர் என்னைத் தாங்குகிறார், கர்த்தர் என்னோடு பேசுகிறார், கர்த்தர் என் ராஜா என்று இன்னும் எத்தனையெத்தனையோ விஷயங்களைக் கிளிப்பிள்ளைபோல சொல்லுகிறவர்களை எல்லா இடங்களிலும் காண்கிறோமே தவிர ‘கர்த்தருக்கு நான் பயப்படுகிறேன்’ என்று சொல்லுகிற ஒரு கிறிஸ்தவனையாவது நாம் காண்பதில்லை. இது ஏன் என்று என்றாவது சிந்தித்துக் கேட்டுப்பார்த்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் அநேகருக்கு தேவபயமென்பதே இல்லாமல் போயிருப்பதுதான். தன்னுடைய இஷ்டத்துக்கு இழுபடுகிற கர்த்தரே இன்றைக்கு மனிதனுக்கு தேவையாயிருக்கிறது. இந்துக் கடவுளுக்குத் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்ள சுயநலத்தோடு தேங்காய் உடைத்து பூசை செய்கிறவனைப்போலவே அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். கர்த்தருக்குப் பயப்பட்டுப் பணிந்து மிகத்தாழ்மையோடு பணி செய்கிற கிறிஸ்தவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பது சுயநலத்திற்காக, சுவிசேஷம் சொல்லுவது சுயப்பெருமைக்காக, கிறிஸ்தவ ஊழியம் வயிற்றுப்பாட்டுக்காக, கிறிஸ்துவை ஆராதிப்பது சுயமனமகிழ்ச்சிக்காக என்று சுயத்தைச் சார்ந்த கிறிஸ்தவ விசுவாசத்தை எங்கும் பார்க்கிறோமே தவிர தேவபயத்தை வெளிப்படுத்துகிற கிறிஸ்தவத்தை நடைமுறையில் பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஆதியாகமத்தின் முதல் வசனத்தின் மூலம் கர்த்தர் நம்மைப் பார்த்து, ‘நான் கர்த்தர்’ என்பதை உணர்ந்துகொள், நீ என்னால் படைக்கப்பட்ட, என்னுடைய மகிமைக்காகப் படைக்கப்பட்ட வெறும் மனிதன்தான் என்பதை உணர்ந்து எனக்குப் பயந்து பணிந்து நடந்துகொள் என்று சொல்லுகிறார்.
- இத்தனைப் பெரிய கர்த்தரை அறியாமலும், அவரை விசுவாசிக்காமலும் இருப்பது எத்தனை தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அனைத்தையும் படைத்தவரை அறியாமல் இருந்து மனிதன் கரைசேர்ந்துவிட முடியுமா? படைக்கப்பட்டவன் படைத்தவரில்லாமல் என்ன செய்துவிடமுடியும்? பாவத்தைச் செய்து அதிலிருந்து விடுபட வழியில்லாமல் பாவத்தில் மூழ்கி திணறிக்கொண்டிருக்கும் மனிதா, நீ கர்த்தரை இப்போதே உடனடியாக, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிந்துகொள் என்று இந்த முதல் வசனம் அறைகூவலிடுகிறது. நான் படைத்தவன், எனக்குப் பணிசெய்வதே உன் வாழ்க்கைக் குறிக்கோளாக இருக்க வேண்டும், நானில்லாமல் நீ இருக்க வழியில்லை, இப்போதே உன் பாவ விடுதலைக்காக, பாவநிவாரணத்திற்குப் பூரணவழி ஏற்படுத்தித்தந்திருக்கும் இயேசு கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்து என்னை ஆராதித்து வாழ் என்று இந்த வசனத்தின் மூலம் கர்த்தர் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்கிறார்.
தேவ கோபம்
இந்த வருடத்தில் வெளிவந்த இரண்டாவது இதழில் ‘கிருபாதார பலியா, கோபநிவாரண பலியா?’ என்ற ஆக்கத்தில் அதன் இறுதிப் பகுதியில் தேவ கோபத்தைப் பற்றி விளக்கியிருந்தேன். மனிதர் மேலிருக்கும் கர்த்தரின் கோபத்தை நீக்கி அவர்களுக்கு பாவநிவாரணமளிப்பதற்காகவே இயேசு கல்வாரியில் மரித்தார். கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் மனந்திரும்புகிற பாவிகளின் மேலிருக்கும் தேவ கோபம் நீக்கப்படுகிறது என்ற கிரேக்க மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையில் காணப்படும் சத்தியத்தைத் தமிழ்வேத மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘கிருபாதார பலி’ என்ற பதம் விளக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதற்கு மாற்றுப் பதமாக ‘கோபநிவாரண பலி’ என்ற பதம் பொருத்தமானதாக இருக்கும் என்று விளக்கியிருந்தேன். தேவன் பாவிகள் மீது கோபத்தோடு இருக்கிறார் என்ற வேத உண்மையை மறுதலிக்கிற அநேகர் இருக்கிறார்கள். ஆகவே தேவ கோபத்தைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்காமல் இருக்க முடியாது.
தேவ கோபமும், சி. எச். டொட் போன்றோரும்
தேவகோபத்தை மறுதலித்தவர்களில் முக்கியமானவர் சி. எச். டொட் என்ற இறையியலறிஞர். இவரைப் பற்றி முதல் ஆக்கத்தில் சிறிது விளக்கியிருந்தேன். இவர் கேம்பிரிட்ஜில் 14 வருடங்கள் இறையியல் பேராசிரியராக கடமைபுரிந்ததோடு, புதிய ஆங்கில வேதாகமத்தின் (New English Bible) புதிய ஏற்பாட்டுப் பகுதியை மொழிபெயர்த்தவர்களின் குழுவின் அதிபராகவும் இருந்தவர். இவர் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் 1:18ம் வசனத்திற்குத் தந்த விளக்கத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
“கடவுளுக்கு கோபம் வருகிறது என்று சொல்லுவது மனித குணாதிசயத்தை அவரில் இருப்பதாகக் காட்டுவதாகும். கடவுளைப் பற்றி பவுல் எழுதுகிறபோது அவருக்குக் கோபம் வருகிறது என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி ஒருபோதும் எழுதியதில்லை. ‘கடவுளின் கோபம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படும் ‘கோபம்’ என்ற வார்த்தைக்கு அடிப்படை அர்த்தம் ஆரம்பத்தில் கோப உணர்வாக இருந்தபோதும், பவுலின் காலத்தில் அந்த அர்த்தத்தை அது இழந்து உணர்வுகளற்ற, பாவத்தின் விளைவினால் உண்டானதொன்றாக மட்டுமே கருதப்பட்டது. ஆகவே, கடவுளில் கோபம் என்ற குணாதிசயம் இல்லாமல்போய் அவருடைய அன்பும் கருணையும் மட்டுமே மேலோங்கி நிற்கிறது. இதைப் பவுல் ஏற்றுக்கொண்ட போதும் கடவுளில் கோபம் இருக்கிறது என்பதைத் தன்னுடைய எழுத்துக்களில் இருந்து நீக்கவில்லை. கடவுளில் எல்லையற்ற மன்னிப்பு காணப்படுகிறது என்பதையே நான் நம்புகிறேன்; அதையே இயேசு கிறிஸ்துவும் போதித்தார். கடவுளில் கோபமாகிய குணாதிசயம் காணப்படுகிறது என்று பவுல் எழுதியிருந்தாலும், இது இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் ஒருபோதும் காணப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் உவமைகளுக்கு நாம் நீதியற்ற முறையில் விளக்கங்கொடுத்தால் தவிர கடவுளில் கோபம் இருக்கிறது என்று நிரூபிக்க வழியில்லை.”
சி. எச். டொட்டின் இந்தக் கூற்றின்படிப் பார்த்தால், கடவுள் எந்தவிதத்திலும் கோபப்படுவதற்கு வழியே இல்லை. கடவுளின் கோபத்தைப் பற்றிப் பவுல் எழுதியிருந்தபோதும் மனிதர்களாகிய நாம் கடவுளைப் புரிந்துகொள்ளவே அவர் அப்படி எழுதினாரே தவிர உண்மையில் கடவுளில் கோபத்துக்கு வழியில்லை என்கிறார் டொட். கோபம் என்பது பாவத்தினாலான மனித உணர்வு மட்டுமே என்று கருதும் டொட் கடவுளில் காணப்படும் கோபமாகிய குணாதிசயத்தை அடியோடு மறுதலிக்கிறார். மேலும் கடுமையாக, “ ‘தேவ கோபம்’ என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கக் கதை என்றும் பழங்காலத்துக்கு மட்டுமே பொருத்தமான” கருத்து என்றும் சாடுகிறார்.
1931ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்த எல்ம்வுட் பிரஸ்பிடீரியன் சபையில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த இரண்டு போதகர்கள் (Dr. Frazer-Hurst and Hyndman) இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். விவாதத்தினிடையில் டாக்டர் பிரேசர் தன் சிறுவயதில் இருந்து கற்றிருந்த வினாவிடைப் போதனை நூலில் இருந்து ஒரு வினாவைக் குறிப்பிட்டார். அந்த வினா, ‘பிறப்பிலிருந்து உன்னுடைய குணாதிசயம் என்ன?’ என்பதாகும். அதற்குப் பதில் & ‘நான் கடவுளுக்கு எதிரி, சாத்தானின் குழந்தை, நரகத்துக்குப் பாத்திரமானவன்’ என்பதாகும். இதைக் குறிப்பிட்ட பின் டாக்டர் பிரேசர், இந்தப் போதனை மனிதத்தன்மையற்ற மகாக்கேடான போதனை என்று சொல்ல, ஹைன்ட்மன் அவரோடு இணைந்து, இத்தகைய எண்ணங்கள் பழங்காலத்துப் பரம்பரைக்கே சொந்தமானது என்று கூறியிருக்கிறார். இதை வரலாறு விளக்குகிறது.
லிபரல் போதனையாளரும், கடவுளை அறியாதவர்களும் வேதபோதனையான ‘தேவ கோபத்தை’ அடியோடு நிராகரிக்கிறார்கள். கடவுளின் கோபமாகிய போதனைக்கெதிரான கடும் எதிர்ப்பைக் கவனிக்கின்ற இவெஞ்சலிக்கள் சமுதாயம் கடவுளின் மன்னிப்பிற்கும், அன்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசங்க மேடைகளில் கடவுளின் கோபத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதையே தவிர்த்துவிடுகிறது. இந்த முறையில் ‘தேவ கோபம்’ பிரசங்க மேடைகளில் தவிர்க்கப்பட்டும், கடவுளின் மன்னிப்பு மற்றும் அன்பின் அடிப்படையில் அதற்குப் புதுவிளக்கம் கொடுக்கப்பட்டும் வருவதால் பாவம் மற்றும் கடவுளின் நியாயத்தீர்ப்பு பற்றிய அடிப்படைக் கிறிஸ்தவ போதனைகள் இன்றைக்கு பெரும் பாதிப்புக்குள்ளாகி கிறிஸ்தவர்கள் மத்தியில் அவை குறித்த குழப்பத்தை உருவாகியிருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கு அநேகர், தேவ கோபம், கடவுளின் பயங்கரம், நரகம் பற்றியெல்லாம் பிரசங்கிப்பதையும் பேசுவதையும் தவிர்த்து விடுகின்றனர்.
வேதமும், கிறிஸ்தவ விசுவாசமும்
இவெஞ்சலிக்கள் சமுதாயம் இன்றைக்கு அடிப்படை வேத சத்தியங்களுக்கெல்லாம் புதுவிளக்கங்கள் தந்து உருமாற்றி அழித்து வருவதால் ‘வேதத்தை நம்புகிறோம்’ என்று மட்டும் தொடர்ந்து நாம் கிளிப்பிள்ளைபோல் சொல்லிக்கொண்டு வருவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாம் உண்மையில் விசுவாசிக்கும் வேத சத்தியங்களைத் தெளிவாக விளக்கும் விசுவாச அறிக்கைகள், வினாவிடைப் போதனைகளுக்கு ஒப்புக்கொடுத்து, நடைமுறையில் அவற்றைப் பயன்படுத்தி நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். வேதத்தை மட்டுமே விசுவாசிப்பேன் என்று பெருமையோடு மார்தட்டித் தான் விசுவாசிப்பதை விளக்கிச்சொல்ல மறுப்பவர்களுடன் பேசி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வேதத்திற்கு சமமான அதிகாரத்தை விசுவாச அறிக்கைகள் கொண்டிராவிட்டாலும், வேதத்தில் இருப்பதை மட்டும் போதிக்கும் விசுவாச அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களோடு நாம் நடைமுறையில் ஒருமனப்பட்டு ஐக்கியத்தில் வருவது முடியாத காரியம்.
இயேசு கிறிஸ்துகூட நம்முடைய விசுவாசத்தை நாம் அறிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். பவுல் ரோமர் 10ல் நாம் நம்முடைய விசுவாசத்தை வாய் திறந்து அறிக்கை செய்ய வேண்டும் என்கிறார். விசுவாசம் என்று இயேசுவும், பவுலும் சொல்லியிருப்பது வெறுமனே இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று மட்டும் சொல்வதை அல்ல; எந்த இயேசுவை, எத்தகைய விசுவாசத்தைத் தந்திருக்கிற இயேசுவை, அதை எப்படித் தந்தார் என்பதை, நம் விசுவாசத்தின் மெய்த்தன்மையை அறிக்கை செய்வதையே அவர்கள் விசுவாசம் என்ற வார்த்தையின் மூலம் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். ‘இயேசுவை விசுவாசிக்கிறேன்’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு அர்த்தமற்ற வார்த்தைகளாக மாறிவிட்டன. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர்களுக்கு மறுபிறப்பு, மனமாற்றம் என்றால் உண்மையில் என்னவென்று தெளிவாகச் சொல்ல முடியாமலிருக்கிறது. சில போதகர்கள், ‘பாவிகள் இயேசுவை விசுவாசிப்பது மட்டுமே அவசியம், அவர்கள் இறையியல் அறிஞர்களாக இருக்க வேண்டியதில்லை’ என்ற அசட்டுத்தனமான பேச்சினால் கிறிஸ்துவை விசுவாசிப்பது என்ற மகோன்னதமான அனுபவத்தை மெரினா பீச்சில் ஐந்து ரூபாய்க்கு சுண்டல் வாங்குகிற அளவுக்கு ‘சீப்பாக்கி’ விட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவில் தனக்கிருக்கும் விசுவாசத்தைத் தெளிவாக சொல்லத்தெரியாமலும், வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாமலும் தடுமாறுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நம்முடைய விசுவாசம் வேதபோதனைகளோடு ஒத்துக் காணப்பட வேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் என்பது வெறும் அனுபவம் மட்டுமல்ல; அது வேதசத்தியத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும் அனுபவம். நம்முடைய விசுவாசம் விளக்கிச் சொல்லப்படக்கூடிய விசுவாசம்; தெளிவாக அறிக்கையிட வேண்டிய விசுவாசம். இன்றைக்கு கிறிஸ்தவ அனுபவமும், கிறிஸ்தவ வாழ்க்கையும் உண்மையானதாக இருக்க வேண்டுமானால் அவை சத்தியத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். சத்தியத்தோடு ஒத்துப்போகாத எந்த விசுவாசமும், விசுவாச வாழ்க்கையும் கிறிஸ்துவில் இருந்து வெளிப்பட்டதாக இருக்க முடியாது. அதனால்தான் இன்றைக்கு வேதத்தோடு, விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் பயன்படுத்திப் போதனையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
தேவ கோபமும், 1689 விசுவாச அறிக்கையும்
தேவ கோபத்தை வேதம் விளக்கும் விதத்தை நாம் இந்த ஆக்கத்தின் முதல் பகுதியில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் (திருமறைத்தீபம் இதழ் 2, 2014). இனி அந்தப் போதனையை எந்தவகையில் 1689 விசுவாச அறிக்கை விளக்குகிறது என்பதை ஆராய்வது நல்லது. அதற்குக் காரணம் வேதம் தேவ கோபத்தைப் பற்றி அளிக்கும் போதனைகளை விசுவாச அறிக்கை தெளிவாகத் தொகுத்துத் தந்திருப்பதுதான். அத்தோடு வேதத்தின் அநேக முக்கிய போதனைகளுக்கும் தேவ கோபத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பையும் விசுவாச அறிக்கை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. விசுவாச அறிக்கையென்பது வேதபோதனைகளை நமக்கு உதவுமுகமாக வரிசையாகத் தொகுத்துத் தருகின்ற அருமையான சாதனம்.
கடவுளின் ஆணை (அதி. 3)
1689 விசுவாச அறிக்கையின் 3ம் அதிகாரம் கடவுளின் ஆணையை விளக்குகிறது. கடவுளின் ஆணையை பற்றி வினாவிடைப் போதனை பின்வருமாறு விளக்குகிறது, ‘கடவுள் தன்னுடைய சுயமகிமையின் பொருட்டு, தனது சித்தத்தின் ஆலோசனையின்படி நடைபெறக்கூடிய அனைத்தையும் ஏற்கனவே முன்குறித்துள்ளார்.’ இந்த உலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்தையும், நன்மை தீமைகள் உட்பட சகலத்தையும் கடவுள் தன்னுடைய மகிமைக்காக ஏற்கனவே முன்குறித்துள்ளார் என்பதே கடவுளின் ஆணை போதிக்கும் உண்மை. கடவுளின் ஆணை இப்படியிருப்பதால் கடவுளே தீமைகளுக்கு காரணகர்த்தா என்று எண்ணிவிடக்கூடாது. மனிதனுடைய எந்தத் தீமையான செயல்களுக்கும் அவர் பொறுப்பாளியல்ல. இருந்தபோதும் பாவத்தின் காரணமாக அனைத்துத் தீமைகளும் நிகழ்ந்தபோதும் கடவுளின் ஆணைக்குள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. அவர் இறையாண்மையுள்ள தேவனாக இருப்பதால் அவரை மீறி ஒன்றும் நிகழ்ந்துவிட முடியாது. அவருடைய கட்டுக்குள்ளேயே அனைத்தும் இருந்தபோதும் எந்தப் பாவகரமான காரியங்களுக்கும் அவர் காரணகர்த்தா அல்ல. மனிதனின் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும், (அவற்றிற்கு அவர் நேரடிக் காரணியாக இல்லாதிருந்தபோதும்), தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள கடவுள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்.
கடவுளுடைய ஆணை பற்றிய இந்த அதிகாரத்தில் தேவ கோபத்தை விபரிக்கும் பகுதி எது என்று கவனிப்போம். இதன் 3ம் பத்தி பின்வருமாறு விளக்குகிறது, ‘. . . ஏனையோர் அவரது மேன்மையான நீதி வெளிப்பட்டு துதிபெறும்படியாக தங்கள் பாவத்தில் தொடர்ந்திருந்து நியாயமான கண்டனத்தைப் பெறும்படியாக விடப்பட்டுள்ளார்கள்.’ கடவுளின் ஆணையின் காரணமாக பலர் நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று விளக்கியபிறகு ஏனையோர் கடவுளின் நியாயமான கண்டனத்தை அடையும்படி விடப்பட்டுள்ளார்கள் என்று இந்தப் பகுதி விளக்குகிறது. இந்த ‘நியாயமான கண்டனம்’ என்பதை ‘நியாயமான பயங்கரம்’ என்றும் விளக்கலாம். ஆங்கிலத்தில் இது terrors of His justice என்றிருக்கிறது. கடவுளின் ஆணையின்படி சிலர் அவருடைய நீதியான பயங்கரத்தை சந்திக்கப் போகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய பாவத்தில் தொடர்ந்திருப்பது மட்டுமே என்று வேதம் விளக்குவதோடு இதுவும் கடவுளின் ஆணையின் ஒரு பகுதியாக விளக்குகிறது. தன்னுடைய அன்பின் காரணமாகத்தான் தெரிந்துகொண்டவர்களுக்கு கிருபையை வெளிப்படுத்தும் கர்த்தர் பாவத்தில் தொடர்ந்திருப்பவர்கள் தன்னுடைய நீதியான பயங்கரத்தை சந்திக்கவும் ஆணையிட்டிருக்கிறார். இதை ரோமர் 9:22&23 விளக்குகிறது. யூதா 1:3&15 வரையுள்ள வசனங்களிலும் இந்தப் போதனையைக் காணலாம். இப்படிச் செய்வதற்கு இறையாண்மையுள்ள கடவுளுக்கு உரிமையுண்டு. நீதியைக் குணாதிசயமாகக் கொண்டுள்ள தேவன் இப்படிச் செய்வதில் முழு நியாயமுண்டு. நீதியானதைத் தவிர அவர் வேறெதையும் செய்யமாட்டார்.
கடவுளின் ‘நியாயமான கண்டனம்’ அல்லது ‘நீதியான பயங்கரம்’ என்று விசுவாச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தேவ கோபத்தைத்தான். தேவ கோபத்தையே நியாயத்தீர்ப்பின்போது மனந்திரும்ப மறுப்பவர்கள் (கண்டனத்துக்குள்ளானவர்கள்) சந்திக்கப்போகிறார்கள். இதை விளக்கும் இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
(1) தன்னுடைய மகன் செய்கிற தவற்றைக் கவனிக்கின்ற தகப்பன் மகனைக் கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தவற்றிற்குத் தகுந்த தண்டனையையும் கொடுப்பது வழக்கம்; அதுவே நியாயமானதுமாகும். இந்தத் தண்டனை அடியாக இருந்தால் அது அவனுக்கு சரீரத்தில் துன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். வலிக்காத அடியிருக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாட்டை, தண்டனையை வழங்கவேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறது. தகப்பன் தன்னுடைய மகனுக்கு வழங்கும் இந்தத் தண்டனையை தகப்பனுடைய பயங்கரத் தண்டனையாகக் கருத முடியாது. இந்தத் தண்டனை மகனைத் திருத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. கடவுள் அவரால் கைவிடப்பட்டுள்ள, பாவத்தில் இருந்து திருந்த மறுக்கிறவர்களுக்குத் தன்னுடைய நீதியான பயங்கரத்தைக் காட்டுகிறபோது அது அவர்களைத் திருத்துவதற்காகக் கொடுக்கப்படுவதல்ல. அது அவர்கள் நித்தியத்திற்கும் அழியாமல் அனுபவிப்பதற்காகக் கொடுக்கப்படுவது. இந்த பயங்கரத்தை அவர்கள் நரகத்தில் அனுபவிப்பார்கள்.
(2) உள்ளூர் சபைகளில் திருந்தாமல் தொடர்ந்து பாவத்தைச் செய்கிறவர்கள்மேல் ஒழுங்கு நடவடிக்கை கொண்டுவரும்படி வேதம் கட்டளையிடுகிறது. இத்தகைய ஒழுங்கு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக சபையில் இருந்து அங்கத்தவர் நீக்கப்படுவார். அவரோடுள்ள சமூக பந்தமும் அகற்றிக்கொள்ளப்படும். ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவருக்கு துன்பத்தையும் அதிக வருத்தத்தையும் ஏற்படுத்துவது இந்த ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம். இருந்தபோதும் இந்த ஒழுங்கு நடவடிக்கை திருத்த நடவடிக்கையே தவிர ஒருவரை அழித்துவிடும் பயங்கர நடவடிக்கையல்ல. இந்த ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது நித்திய ஆக்கினையை பாவத்திலிருந்து மனந்திரும்பாதவர்களுக்கு அளிக்கும் தேவகோபம்.
இந்த உதாரணங்களில் இருந்து தேவ கோபத்தின் தன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்ப மறுத்து பாவத்தில் தொடர்ந்திருப்பவர்கள் மீது காணப்படுவதே தேவ கோபம். இதை விசுவாசிகள் அனுபவிப்பதில்லை. விசுவாசிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தபோதே அவர்கள்மேலிருந்த தேவகோபம் அகற்றப்பட்டுவிட்டது. விசுவாசிகளில் சிலர் 2 கொரி 5:10 வசனத்தை வாசித்துவிட்டு நியாயத்தீர்ப்பைப் பற்றிய பயத்தோடு இருக்கிறார்கள். அந்த வசனத்தைக் கவனிப்போம்.
‘ஏனென்றால் சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படி நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்.’
இந்த வசனம் சொல்வதென்ன? எல்லோரும் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும், அப்போது எல்லோருடைய நன்மைகளும், தீமைகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் என்று இந்த வசனம் சொல்லுகிறது. இந்த வசனம் விசுவாசிகள், அவிசுவாசிகளைப்போல நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படிப் பொருள்கொள்வதற்கு இந்த வசனம் இடமளிக்கவில்லை. இந்த வசனம் உலகத்து மக்களை தீயவர்கள், நன்மை செய்கிறவர்கள் என்று இரண்டு பகுதியாகப் பிரிக்கிறது. இந்த வசனத்தில் வரும் ‘நாமெல்லாரும்’ என்ற பதத்தை விசுவாசிகளை மட்டும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளுவது தவறு. இது அவிசுவாசிகள், விசுவாசிகள் எல்லோரையும் இணைத்துக் குறிப்பிடுகிறது. இதில் வரும் ‘அவனவன்’ என்ற பதம் ஒவ்வொருவரும், அதாவது அவிசுவாசியும், விசுவாசியும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனம் கூறும் ‘தீமைகள்’ தீயவர்களான அவிசுவாசிகளுடையவை; விசுவாசிகளுடையதல்ல. அதேபோல் இந்த வசனம் கூறும் ‘நன்மை’ விசுவாசியுடைய நன்மை. ஆகவே, இந்த வசனத்தின்படி நியாயத்தீர்ப்பு நாளில் விசுவாசிகள் ஆண்டவரால் வரவேற்கப்பட்டு அவர்களுடைய நன்மைகளின் நிமித்தம் அவற்றிற்குரிய பலனை அனுபவிக்க பரலோகத்திற்கு செல்வார்கள். அவர்கள் ஏற்கனவே மன்னிப்புப் பெற்றுள்ள பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவால் எல்லோர் முன்பும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள். அப்படி எண்ணுவது தவறு. அதேவேளை தீமைகளைச் செய்து ஆண்டவர் முன்பு நிற்கும் அவிசுவாசிகளுடைய பாவத்தின் பலனாக அவர்கள் அன்று நியாயந்தீர்க்கப்பட்டு அதற்குரிய பலனை அனுபவிக்க நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.
நியாயத்தீர்ப்பு நாளில் ஒவ்வொருவருடைய விசுவாசத்தின் அடிப்படையிலேயே ஆண்டவர் அவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் விசுவாசமில்லாதவர்களாகக் கணிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவார்கள். விசுவாசிகளுடைய விசுவாசத்தின் பெருமை அந்த நாளில் வெளிப்படுத்தப்பட்டு அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவின் பிள்ளைகளாகக் கணிக்கப்படுவார்கள். விசுவாசிகளுடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் முற்றாகக் கழுவப்பட்டிருப்பதால் அன்று அவை கழுவப்பட்டிருப்பதாக மட்டுமே அறிக்கைசெய்யப்படும். கீழ்வரும் வசனங்களைக் கவனியுங்கள். ஏசாயா 43:25. ‘நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.’ ஏசாயா 44:22, ‘உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.’ இப்படியெல்லாம் வாக்குறுதி தந்திருக்கும் கர்த்தர் நியாயத்தீர்ப்பு நாளில் தான் ஏற்கனவே மன்னித்து மறந்திருக்கிற பாவங்களை பகிரங்கப்படுத்தி விசுவாசிகளை எல்லோர் முன்பும் அவமானப்படுத்த வேண்டிய அவசியமென்ன? அப்படி நினைப்பதும், பொருள்கொள்வதும் தவறு என்பது இப்போது தெரிகிறதா?
இந்த உலகத்தில் தேவ கோபத்தை சுமந்து நிற்கும் பாவி மனந்திரும்பி விசுவாசத்தை அடைகிறபோது அவன் இயேசுவுக்கு உரியவனாக உடனடியாக நியாயந்தீர்க்கப்படுகிறான். இந்த நியாயத்தீர்ப்பு இரகசியமானது. கர்த்தர் மட்டுமே அறிந்தது. இது பகிரங்கமானது அல்ல. அதே விசுவாசி இந்த உலகத்தில் இறக்கும்போது உடனடியாக, அதே நிமிடம் பரலோகத்தை அடைகிறான். நியாயத்தீர்ப்பு நாளில் இந்த விஷயத்தில் எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை. விசுவாசி பாவசரீரத்தோடு இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்தபோதும் அவன் பாவத்தை வெறுத்து அன்றாடம் மனந்திருந்தி வாழ்கிறவனாக, பரலோக நிச்சயத்தோடு வாழ்கிறவனாக இருப்பான். நியாயத்தீர்ப்பு நாளில் அவனுடைய ஆத்துமா சரீரத்துடன் இணைந்து இயேசுவுக்கு முன்பாக அவருடைய ஆடாக அவருடைய வலது பக்கத்தில் நிற்கப்போகிறான் (மத்தேயு 25). இயேசுவோடு இணைந்து நின்று அவன் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறான். அந்த நாளில் அவனுடைய நன்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, அவன் இயேசுவுக்குரியவனாக வெளிப்படையாக அறிக்கை செய்யப்பட்டு நித்தியத்திற்கும் பரலோகத்தை அனுபவிக்க இயேசுவோடு அங்கு போகப்போகிறான். விசுவாசியினுடைய நன்மைகளே நியாயத்தீர்ப்பு நாளில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு அவன் பாராட்டுதலுக்குரியவனாக இருப்பான். அவனுடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருப்பதாக அன்று அறிவிக்கப்படும். அத்தோடு விசுவாசிகளுடைய நன்மைகளில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளும் அன்று முற்றாக நீக்கப்படும். இதன் காரணமாக விசுவாசிகள் நியாயத்தீர்ப்பை சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்து வாழவேண்டுமே தவிர பயத்தோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை. நியாயத்தீர்ப்பின் நாள் விசுவாசிகளுக்கு பயங்கரமான நாளல்ல. விசுவாசிகள் அத்தகைய பயத்தோடு வாழும்படி வேதம் எந்த இடத்திலும் விளக்கவில்லை. இந்த வேத உண்மைகள் தெரியாததால்தான் கிறிஸ்தவர்களில் பலர் நியாயத்தீர்ப்பை நினைத்து பயப்படுகிறார்கள். நியாயத்தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியவன் அவிசுவாசி மட்டுமே.
கர்த்தரின் பராமரிப்பு (அதி. 5)
தேவ கோபம் பற்றிய போதனை வேதத்தின் ஏனைய சத்தியங்களோடு பொருந்திக் காணப்படுவதை நாம் உணர்வது அவசியம். கர்த்தரின் ஆணை பற்றிய சத்தியம், அவருடைய கோபம் கடைசிவரை மனந்திரும்ப மறுத்து வாழ்கிறவர்களின் மேல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படப்போவதாக விளக்குகிறதைப் பார்த்திருக்கிறோம். இனிக் கர்த்தரின் பராமரிப்பு பற்றிய சத்தியத்திற்கும் தேவ கோபத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பார்ப்பது அவசியமாகிறது. தேவ கோபமாகிய சத்தியம் கர்த்தரின் குணாதிசயங்கள் அனைத்தோடும், அவருடைய செயல்கள் அனைத்தோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்படுகிறது. அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு பாவத்தில் இறுதிவரை வாழ்ந்து அழிகிறவர்களில் கர்த்தரின் பராமரிப்பாகிய கிருபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம். 1689 விசுவாச அறிக்கை ‘கர்த்தரின் பராமரிப்பு’ என்ற அதிகாரத்தின் 6வது பத்தியில் தரும் விளக்கத்தைக் கவனிப்போம்.
“நீதியுள்ள நீதிபதியாகிய கடவுள் கேடான, பரிசுத்தமற்ற மனிதர்களை நியாயந்தீர்க்கிறார். அவர்களுடைய பாவத்தினால் அவர்களுடைய இருதயத்தை இருளடையச்செய்து கடினப்படுத்துகிறார். அவர்களுடைய மனத்திற்கு அறிவொளி தந்து, இருதயத்தில் கிரியை செய்திருக்கக்கூடிய கிருபையை அவர்கள் அடையமுடியாதபடி தடுத்துக்கொள்வதோடு, வேறு சிலருக்கு அவர் கொடுத்திருந்த வரங்களையும் திரும்ப எடுத்துக்கொள்கிறார். அவர்கள் தங்களுடைய கேடான இருதயத்தின் பாவத்தினால் பாவ சந்தர்ப்பங்களை நாடிப் பயன்படுத்திக் கொள்ளும்படியான சந்தர்ப்பங்களிலும் கடவுள் அவர்களை விடுகிறார். வேறுவிதத்தில் கூறப்போனால், அவர்களில் காணப்படும் உள்ளார்ந்த பாவத்தின் சீரழிவுகளுக்கும், உலகத்தின் சோதனைகளுக்கும், சாத்தானின் வல்லமைக்கும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார். இதன் காரணமாக ஏனையோருடைய இருதயங்களை மென்மையாக்கக் கடவுள் பயன்படுத்தும் அதே சாதனங்களை அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.”
இது கர்த்தரின் பராமரிப்பு பற்றிய மிகவும் அருமையான விளக்கம். இதற்கு முன்வந்த பத்தியில் கர்த்தர் தான் தெரிந்துகொண்டிருக்கிறவர்களை எந்தவிதத்தில் பராமரிக்கிறார் என்பதை விளக்கிவிட்டு, பரிசுத்தமற்றவர்களை எந்தவிதத்தில் பராமரிக்கிறார் என்பதை இந்தப் பத்தி விளக்குகிறது. கர்த்தர் எந்தவிதத்திலும் தீங்கு செய்கிறவர் அல்ல என்றும், தீங்கிற்கு அவர் காரணகர்த்தா அல்ல என்பதையும் இந்தப் பத்தி விளக்குகிறது. கேடானவர்களே கர்த்தரின் பொதுவான கிருபையை நிர்த்தாட்சண்யமாக அலட்சியப்படுத்தி தங்களுடைய இருதயத்தை அவருக்கு எதிராக கடினப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை இந்தப் பத்தி சுட்டிக்காட்டுகிறது. நீதியுள்ள கர்த்தர் கேடானவர்களை நீதியுடன் அணுகி அவர்கள் தங்களுடைய பாவத்தில் தொடருமாறு கைவிட்டு நியாயந்தீர்த்துத் தன்னுடைய கோபத்தை அவர்கள் மீது வெளிப்படுத்துகிறார். இந்தப் பத்தி தரும் விளக்கத்தில் ‘தேவ கோபம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் காணப்படாவிட்டாலும் கர்த்தருடைய நீதியான தண்டனையில் அது உள்ளடங்கியிருப்பதை விளங்கிக்கொள்வது அவசியம். இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களுக்கான சில வேத வசனங்களைக் கவனிப்போம்.
சங்கீதம் 81:11-12 ரோமர் 1:28 1 பேதுரு 2:7-8
இன்னும் மூன்று இடங்களில் 1689 விசுவாச அறிக்கையில் தேவ கோபத்தைப் பற்றிய உண்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
மனிதனின் வீழ்ச்சியும், பாவமும் அதற்குரிய தண்டனையும் (அதி. 6)
இந்த அதிகாரத்தின் மூன்றாம் பத்தி ஆதாம், ஏவாளின் பாவத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. நம்முடைய முதற் பெற்றோர்களின் பாவத்தின் காரணமாகவே முழு மனிதகுலமும் பாவத்தால் கறைபட்டு பாவிகளாயினர். நம் முதற்பெற்றோரே மனிதகுலத்தின் பிரதிநிதிகளாக இருந்தனர். அந்த அடிப்படையில் இந்தப் பகுதி எல்லா மனிதர்களையும் பின்வருமாறு கணிக்கிறது.
‘ஆகவே, ஆதாம் ஏவாளினுடைய வழித்தோன்றல்கள், கருவிலேயே பாவத்தில் உருவாகி, இயற்கையாகவே (கடவுளின்) கோபாக்கினையின் குழந்தைகளாய், பாவத்தின் ஊழியர்களாயும், மரணத்திற்குட்பட்டவர்களாயும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடுவித்தாலன்றி மீட்படைய இயலாமல், ஆவிக்குரியதும், இவ்வுலகிற்குரியதும், எல்லையற்றதுமான பல்வேறு துன்பங்களுக்கும் உட்பட்டுவருகிறார்கள்.’
நம்முடைய முதல் பெற்றோர் பாவத்தை மட்டும் சம்பாதித்துக்கொள்ளாமல் அதோடு சேர்த்து தேவ கோபத்தையும், அதன் பலன்களாகிய பல்வேறு துன்பங்களையும் சம்பாதித்துக் கொண்டார்கள் என்பதை இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது. இதன் மூலம் தேவ கோபம் பற்றிய வேத சத்தியம் ஓரிரு இடங்களில் மட்டும் காணப்படும் போதனையல்ல என்பதையும் அது வேதத்தின் ஏனைய சத்தியங்களோடு தொடர்புடைய தவிர்க்கமுடியாத சத்தியம் என்பதையும் உணர்வது அவசியம். தேவ கோபம் தேவனின் நீதியோடு தொடர்புடைய அதிலிருந்து பிரிக்கமுடியாத சத்தியம்.
மத்தியஸ்தராகிய கிறிஸ்து (அதி. 8)
கர்த்தரால் முன்குறிக்கப்பட்டிருப்பவர்களின் மீதிருக்கும் பாவத்திற்கு நிவாரணத்தை ஏற்படுத்தி தேவ கோபத்தை நீக்க அனுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் மீட்புப் பணி பற்றிய ஆழமான சத்தியங்களை விளக்கும் இந்த அதிகாரத்தில் தேவ கோபத்தைப் பற்றிய விளக்கத்தை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. கிறிஸ்துவின் மீட்புப் பணி பற்றி விளக்கும் இந்த அதிகாரம் மிகவும் அருமையானது. வாரங்கள், மாதங்களை செலவிட்டு ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய அதிகாரம் இது.
இந்த அதிகாரத்தில் தேவ கோபம் என்ற பதங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும் அந்த சத்தியம் இது கிறிஸ்துவின் மீட்புப் பற்றி விளக்கும் சத்தியங்களில் உள்ளடங்கிக் காணப்படுவதைப் பார்க்கிறோம். அத்தகைய விளக்கங்கள் அடங்கிய பகுதிகளைக் கவனிப்போம்.
நான்காம் பத்தி:
‘நாம் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவர் தன்மேல் சுமந்து அனுபவித்து நமக்காக சாபமானார். தனது ஆத்துமாவில் நாம் புரிந்துகொள்ள முடியாத அளவு கடுமையான வேதனையை அனுபவித்தார். தனது சரீரத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையுள்ள துன்பங்களையும் சகித்துக்கொண்டார். சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக அவர் மரித்தார்.’
இதில் ‘நாம் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவர் தன்மேல் சுமந்து அனுபவித்து நமக்காக சாபமானார்’ என்பதில் நாம் அனுபவித்ததும் நமக்காக அவர் சுமந்ததுமான தேவ கோபம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.
ஐந்தாம் பத்தி:
‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு தாம் பரிபூரணமாக கீழ்ப்படிந்ததன் மூலமாகவும், நித்திய ஆவியினாலே ஒரே தரம் தன்னைத்தானே பலியாகக் கொடுத்ததன் மூலமும் தெய்வீக நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் முழுவதுமாக திருப்தி செய்தார். அவர் ஒப்புரவாகுதலை இவ்விதமாக உண்டுபண்ணி, பிதாவினால் தமக்கு கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்யத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தை கிரயம்செலுத்தி வாங்கினார்.’
இந்தப் பகுதியில், ‘ஒரே தரம் தம்மைப்பலி கொடுத்ததன் மூலமும் தெய்வீகக் நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் முழுவதுமாக திருப்தி செய்தார்’ என்ற வார்த்தைகள் தேவ கோபத்தைக் கிறிஸ்து தம்மேல் சிலுவையில் சுமப்பது தெய்வீகக் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. அதைக் கிறிஸ்து சுமக்காமல் மெய்யான ஒப்புரவாக்குதல் நிகழ வழியில்லை. ஒப்புரவாக்குதலின் மூலம் சமாதானம் உருவாக கிறிஸ்து நம்முடைய கோபநிவாரண பலியாக வேண்டியிருந்தது.
நீதிமானாக்குதல் (அதி. 11)
நீதிமானாக்குதல் பற்றிய விசுவாச அறிக்கை (11ம் அதிகாரம்) தரும் விளக்கங்களில் தேவ கோபம் என்ற பதங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும், மனிதர்களின் பாவத்தை நீக்கி இரட்சிப்பை சம்பாதிப்பதற்காக கிறிஸ்துவின் கீழ்ப்படிவோடு கூடிய கிரியைகள் மற்றும் பலி பற்றிய விளக்கங்கள் அதைத் தொடாமலில்லை.
விசுவாசிகளினுடைய கணக்கில் வைக்கப்பட்ட நீதி கிறிஸ்துவின் கீழ்ப்படிவின் மூலம் நிறைவேற்றப்பட்டது என்று விளக்கும் இந்த அதிகாரத்தின் முதலாம் பத்தி, அந்தக் கீழ்ப்படிவின் இரு பக்கங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது,
‘கிறிஸ்துவினுடய கீழ்ப்படிவு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து அதை முழுமையாகக் கடைப்பிடித்தல், மரணத்திற்கு தன்னை உட்படுத்திக் கீழ்ப்படிதல் ஆகிய இரண்டு தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.’
இதில் இந்தக் கீழ்ப்படிவின் இரண்டு அம்சங்களிலும் தேவ கோபத்தைக் கிறிஸ்து சுமக்கும் பணி அடங்கிக் காணப்படுகிறது என்பதை வேதம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து தேவ கோபத்தை சுமக்காமல் பாவம் போவதற்கு வழியே இல்லை. மெய்யான நீதிமானாக்குதல் நிறைவேற கிறிஸ்து அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது.
இறுதி நியாயத்தீர்ப்பு (அதி. 32)
இந்த அதிகாரத்தின் இரண்டாம் பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைக் கவனியுங்கள்.
‘தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நித்திய இரட்சிப்பின் மூலம் தமது கருணையின் மகிமையை வெளிப்படுத்தவும், தன்னால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அதாவது கேடானவர்களும், கீழ்ப்படியாதவர்களும் நித்திய அழிவின் மூலம் தமது நீதியின் மகிமையை வெளிப்படுத்தவும் கடவுள் நியாயத்தீர்ப்புக்கென்று ஒரு நாளைத் தீர்மானித்துள்ளார். அந்நாளில் நீதிமான்கள் நித்திய ஜீவனையும், தேவனுடைய சந்நிதானத்தில் மனமகிழ்ச்சியையும், மகிமையையும் நித்திய வெகுமதியாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், கடவுளை அறியாத, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிய மறுத்த கேடானவர்கள் நித்தியவேதனையை அடையும்படி நியமிக்கப்பட்டு கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.’
இந்தப் பகுதி ‘நித்திய வேதனை’, ‘நித்திய அழிவு’ என்று இரு தடவைகள் நரகத்தில் தேவ கோபத்தை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் நிரந்தரமாகத் தொடர்ந்து அனுபவிக்கப் போவதை வெளிப்படுத்துகிறது. அவிசுவாசிகள் இந்த உலகில் மட்டுமல்லாது வரப்போகிற உலகிலும் தேவ கோபத்தைத் தொடர்ச்சியாக அனுபவிப்பார்கள் என்பதை இது விளக்குகிறது.
இப்படியாக 1689 விசுவாச அறிக்கையின் பல பகுதிகளில் ஏனைய வேத இறையியல் சத்தியங்களுக்கும் தேவ கோபமாகிய சத்தியத்திற்கும் இடையில் இருக்கும் பிரிக்க முடியாத தொடர்பைக் கவனிக்க முடிகின்றது. வேதத்தில் ஏதொவொரு பகுதியில் மட்டும், ஏனைய சத்தியங்களோடு தொடர்பில்லாதபடி மறைமுகமாகக் காணப்படுகின்ற ஒரு போதனையல்ல தேவ கோபம். அது கர்த்தரில் காணப்படும், பாவத்தின் மீதும், பாவிகள் மீதும் அவர் காட்டுகின்ற ஒரு குணாதிசயம் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். (இனியும் வரும்)
வாசகர் மடல்
திருமறைத்தீபம் என்ற அற்புத பொக்கிசத்தை இலவசமாகப் பெற்று பயனடையும் வாசகர்களில் அடியேனும் ஒருவன். கிறிஸ்துவின் வருகை சமீபமாகவரும் இவ்வேளையில் வார்த்தைகளினால் விபரிக்க முடியாத காத்திரமான வேதாகம விளக்கங்களை திருமறைத் தீபம் கிறிஸ்தவ உலகிற்கு வழங்கி வருகிறதென்பதில் இரண்டு கருத்துக்கு நிச்சயமாக இடமிருக்க முடியாது.
இறுதியாகத் திருமறைத்தீபத்திலே வெளிவந்த ஆரம்ப அற்புத கட்டுரையான “ஆபத்தான மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆய்வுத்தொடரை இலங்கை வாழ் ஒவ்வொரு மீட்கப்பட்ட கிறிஸ்தவர்களும் கட்டாயம் வாசித்தேயாக வேண்டும். இந்த மொழிபெயர்ப்பினை மெதடிஸ்டு திருச்சபையில் தற்போது அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூக்குரலிடுவோரின் கவனத்திற்கு, அடியேன் பிரதியாக்கம் செய்து, அநேகருக்குக் கொடுத்து, வாசிக்கச் செய்து அகக்கண்களைத் திறக்கச் செய்ய ஆசிரியர் பாலா அவர்கள் கிறிஸ்துவின் கிருபைகொண்டு உதவி செய்திருக்கிறார்.
இம்மடல், ஆசிரியர் பாலா அவர்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் இரட்டிப்பு மகிழ்வு அடைவேன்.
சகோ. சுரேந்திரன் இராஜநாயகம்,
மட்டக்களப்பு.
ஜூலை-செப்டம்பர், 2014 ‘திருமறைத்தீபம்’ என் கரம் கிட்டியது. நீங்கள் தொடர்ந்து திருமறைத்தீபத்தை அனுப்பி வைத்து எனது ஆவிக்குரிய ஜீவியத்தில் பெரிதும் உதவி வருகின்றீர்கள். கர்த்தருடைய வார்த்தை பேதையை உயிர்ப்பிக்கும் என்பது எத்தனை உண்மையும் சத்தியமும் நிறைந்தது. இந்த இதழில் “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது” என்ற கட்டுரையை வாசித்தேன். சுவிசேஷம் அறிவிக்கப்படும்போது ‘மதம் மாற்றுகிறார்கள்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கான சரியான பதிலைச் சொல்லும் வகையில் துண்டுப் பிரதிகள் தமிழில் இல்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை தீர்த்து வைத்தது.
இந்து மதத்தினரும் மற்றவர்களும் பொதுவாக சொல்வது, ஒருவனுக்கு ஒரு அப்பாவும் ஒரு அம்மாவும் தான் இருப்பார்கள். ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர் ஆகும்போது எப்படி அப்பாவை அல்லது அம்மாவை மாற்றுவது என்று கேள்வி கேட்கிறார்கள். எல்லா மதமும் சம்மதம். எல்லா நதியும் ஒரு கடலில்தான் சங்கமிக்கும் என்ற பொதுவான அறிவில் வாதிடுவோருக்கு பதில் சொல்லும் வகையில் ஒரு துண்டுப் பிரதி எழுதி வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
- மகேந்திரன்,
போகவந்தலாவ, ஸ்ரீ லங்கா