திருமறைத்தீபம் 2014 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. வாசகர்களே!
2. ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்
3. தனி மனிதன் சமூகமாகிறான்
4. சிறைக்கு வெளியில் சிறைவாசம்
5. சில சமயங்களில் சில நூல்கள் – 3
6. ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது
வாசகர்களே!
கர்த்தரின் கிருபையால் இன்னுமொரு இதழை நேரத்தோடு முடித்து அனுப்ப முடிந்திருக்கிறது. இந்த இதழை சரிபார்த்து வெளியிட பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆவியானவரின் வழிநடத்தல் இல்லாமல் எந்தப்பணியும் நிறைவேற முடியாது. அவருடைய வழிநடத்துதலை இந்த இதழைத் தயார் செய்யும்போது அனுபவித்திருக்கிறோம். கர்த்தருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.
இவ்விதழில் தமிழ் வேத மொழிபெயர்ப்பு ஒன்றை ஆய்வு செய்திருக்கிறோம். திருவிவிலியம் என்ற பெயரோடு 1995ம் ஆண்டில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்பை பல கிறிஸ்தவ நிறுவனங்கள் கத்தோலிக்க நிறுவனத்தோடு இணைந்து தமிழகத்தில் வெளியிட்டன. பொதுமொழிபெயர்ப்பு என்ற பெயரோடு அது வெளிவந்தது. கத்தோலிக்கர்களுக்காக அறுபத்தாறு வேதநூல்களோடு தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கப்படும் நூல்களை இணைத்தும், கிறிஸ்தவர்களுக்குத் தனியாக தள்ளுபடி ஆகமங்களை இணைக்காமலும் இந்நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டன. கர்த்தரின் கிருபையால் இந்த மொழிபெயர்ப்பை எல்லோரும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதும் இதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லாமலில்லை. கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் இந்த மொழிபெயர்ப்பை ஆய்வு செய்து என்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நாம் எந்த மொழிபெயர்ப்பிலும் என்னென்ன அம்சங்களைக் கருத்தோடு கவனித்து ஆராயவேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள இந்த ஆக்கம் உதவும் என்று நம்புகிறேன்.
இந்த இதழில் வந்திருக்கின்ற ஏனைய ஆக்கங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் துணை செய்யட்டும். ஒவ்வொரு இதழையும் கவனத்தோடும், ஜெபத்தோடும் தயாரித்து வெளியிட பெருமுயற்சிகள் எடுக்கிறோம். இருந்தபோதும் எதாவது குறைபாடுகள் இருப்பின் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். திருமறைத்தீப இதழைப் பெற்றுக்கொள்ள விரும¢புகிறவர்கள் இந்த இதழின் கடைசிப்பக்கங்களில் தரப்பட்டிருக்கும் முகவரிகளோடு தொடர்பு கொண்டு அதைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து இந்த இலக்கியப் பணிக்காகவும், எங்களுக்காகவும் ஜெபியுங்கள். நன்றி!
– ஆசிரியர்.
ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)

கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து வருவது என்றுமே இருந்திருந்தாலும் சமீப காலத்தில் இணையத்தில் அது அதிகரித்திருக்கிறது. இதிலும் சில வகையறாக்கள் இருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியோடும், சந்தேகக் கண்களோடும் பார்த்து விமர்சனம் செய்கின்ற இந்துத்துவ ராஜீவ் மல்கோத்திரா போன்றோர் ஒருவகை. இன்னொரு வகையினர் கிறிஸ்தவத்தை மதித்து, அதேநேரம் அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியோடு அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு கிறிஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் மார்க்ஸிய பார்வைகொண்ட இந்து. தமிழகத்தில் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய வலைத்தளத்தில் அவரெழுதிய ‘விவிலியம், புதுமொழியாக்கம்’ ஆக்கத்தை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது, கிறிஸ்தவர்களே இதுவரை சிந்தித்துப் பார்க்காத ஒரு விஷயத்தை கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கருத்தோடு சிந்தித்து அதுபற்றி எழுதியிருப்பதைப் பார்த்தபோது.
ஜெயமோகனின் ஆக்கம் 1995ல் வெளிவந்த பொது மொழிபெயர்ப்பான ‘திருவிவிலியம்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும், அனைத்துலக வேதாகம சங்கமும் மதுரையில் வெளியிட்டன. இந்திய வேதாகம சங்கப் பதிப்பான இதன் பிரதி ஒன்றை சீ. எஸ். ஐ. திருச்சபை போதக நண்பர் ஒருவர் 2002ல் என்னிடம் தந்து வாசித்து கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அன்று பல வேலைப்பளுவின் காரணமாக அதை நான் உடனடியாக செய்யமுடியவில்லை. ஜெயமோகனின் ஆக்கத்தை வாசித்தபிறகு அதை மறுபடியும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் இந்த ஆக்கம்.
தமிழில் நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வரும் வேதப்புத்தகத்தின் மொழிநடை பற்றி நான் கடந்த வருட திருமறைத்தீப இதழொன்றில் ‘தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?’ (திருமறைத்தீபம், இதழ் 4, 2012) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அதுபற்றி இந்தளவுக்கு சிந்தித்து எவருமே எழுதவில்லை என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘எதை வாசிக்கிறேன் என்று உணராமலேயே வாசித்து வந்திருக்கிறேனே’ என்று வருத்தத்தோடு சொன்னவர்களும் உண்டு. ஜெயமோகனின் ஆக்கத்தை தற்செயலாக வாசிக்க நேர்ந்தபோது நம் பக்கத்தில் இராத ஒருவர் அதுபற்றி நமக்கு முன்னாலேயே கருத்துத் தெரிவித்திருக்கிறாரே என்ற எண்ணத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆய்வு செய்து அது எழுதப்பட்டிருந்தாலும் கிறிஸ்தவன் என்ற முறையில் அதைப்பற்றிய எதிர்வினை தராமல் இருக்க முடியவில்லை.
ஜெயமோகன் தன் ஆக்கத்தின் ஆரம்பத்தில் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரை தவறாக மார்டின் லூத்தர்-கிங் என்று ஒருமுறைக்கு மேல் எழுதியிருக்கிறார். மார்டின் லூத்தரும், மார்டின் லூத்தர்-கிங்கும் வெவ்வேறு மனிதர்கள். மார்டின் லூத்தர் 16ம் நூற்றாண்டு பெற்றெடுத்த தலைசிறந்த ஜெர்மானிய சீர்திருத்தவாதி. ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்தவர். இன்று தமிழில் வேதம் நாம் வாசிக்கும்படியான வசதி இருப்பதற்கு கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மனிதர். மார்டின் லூத்தர்-கிங் அமெரிக்காவில் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட சமூக சேவையாளர்.
மார்டின் லூத்தரின் மொழிபெயர்ப்புத் தத்துவத்தை ஜெயமோகன் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார். லூத்தர், ‘பைபிள் மொழியாக்கம் சந்தை மொழியில் இருந்தாக வேண்டுமென்று எண்ணினார். ஏனெனில் சந்தைகளில்தான் அதிகம் பிரச்சாரம் செய்யப்பட்டது’ என்றும், ஆரம்பகால தமிழ் மிஷனரிகள் ஜெர்மனி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த டச்சு மிஷனைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் அவர்கள் லூத்தரின் மொழிபெயர்ப்புக் கொள்கையினால் பாதிக்கப்பட்டு தமிழ் வேதத்தை எளிய, அடித்தட்டு மக்களுடைய பாஷையில் மொழிபெயர்த்ததன் விளைவாக தமிழ் வேதம் அந்த மொழியில் இருக்கிறது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நாம் ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வில்லியம் டின்டேலும் அது கலப்பை பிடிக்கிறவனும் வாசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கு அர்த்தம், வேதம் சாதாரண மக்களும் வாசிக்கக்கூடிய மொழியில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியில்லாவிட்டால் அதனால் என்ன பலனிருக்கப்போகிறது? இதுதான் ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதன் உண்மையான விளக்கம். ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதை சேரித்தமிழ் மொழிபெயர்ப்பு என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக்கூடாது. இந்த ‘சந்தை மொழிபெயர்ப்பு’ தத்துவத்தை நம்மினத்தில் பயன்படுத்தும்போது நம்மொழி அறிந்திராத மேலைநாட்டு மிஷனரிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதில் ஆச்சரியமிருக்க முடியாது. தமிழை நாம் ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசமாகப் பேசுகிறோம்; எழுதுகிறோம். சேரிப்பாஷை வேறிருக்கிறது. இதனால்தான் இந்தியாவுக்கு வந்த இன்னொரு மிஷனரியான சீகன் பால்க் தமிழில் வேதத்தை முதன் முதலாக மொழிபெயர்த்தபோது தான் சுவிசேஷப்பணி புரிந்த கீழ்தட்டு மக்களுடைய பாஷையில் அதை மொழிபெயர்த்தார். அன்று அவருடைய இலக்கு அந்த மக்களுக்குப் புரியும்படி வேதம் இருக்கவேண்டுமென்பது மட்டுமே. தமிழர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற பெருந்திட்டத்துடன் அவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் இன்று நாம் பரவலாகப் பயன்படுத்தும் தமிழ் வேதத்தை மொழிபெயர்ப்பு செய்தார்கள். அது பிராமண வழக்கு மொழியில் இருப்பதற்கான காரணத்தை என்னுடைய ‘தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?,’ (திருமறைத்தீபம், இதழ் 4, 2012) என்ற ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன்.
ஜெயமோகன் விளக்கியிருப்பதுபோல் தமிழ் அன்று அதிகம் செய்யுள் வடிவ ஆதிக்கத்தில் இருந்தது. ஜோன் பனியனின் ‘மோட்ச பிரயாணத்தைத்’ தழுவி ‘இரட்சண்ய யாத்திரீகம்’ வரைந்த கிருஷ¢ணபிள்ளைகூட அதை செய்யுள் வடிவில்தான் செய்தார். அந்தக்காலத்தில் அதற்குத்தான் மதிப்பும் இருந்தது. உரைநடை வளர்ச்சி அன்றிருக்கவில்லை. உயர்குலத்தவர் மத்தியில் பேச்சுத் தமிழும் பிராமண வடமொழித் தாக்கத்தைக் கொண்டிருந்தது. அதுவே தமிழ் வேதத்திலும் பிரதிபலித்ததில் ஆச்சரியமில்லை. பின்னால் உரைநடை வளர்ச்சி ஆறுமுக நாவலர், உ. வே. சாமிநாதையர் போன்றவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாரதிக்கும் இதில் பெரும்பங்குண்டு. பிராமணத் தமிழ் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து தமிழ் உரைநடை பின்னால் தனித்தன்மை கொண்டதாக வளர்ந்தது. ஒரு காலத்தில் அறவே இல்லாமலும், மதிப்பில்லாமலும் இருந்த உரைநடை இன்று தழைத்தோங்கி நிற்கிறது. தமிழ் வேதத்தில் இருக்கும் பிரச்சனையே இன்றிருக்கும் உரைநடையில் எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளும்படி இல்லை என்பது தான். ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல், ‘இப்போதே இருபது முப்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கிறது’.
இதிலிருக்கும் இன்னுமொரு பிரச்சனையை ஜெயமோகன் சரியாக இனங்காட்டியிருக்கிறார். இதை நான் என்னுடைய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஜெயமோகனின் வார்த்தைகளிலேயே தருகிறேனே, ‘சாதாரணக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அந்தமொழி பைபிளுக்கே உரிய தனிமொழி. ஆண்டவனின் மொழி. அது மொழியாக்கந்தான் என்ற எண்ணங்கூட சாதாரண கிறிஸ்தவர்களிடம் இல்லை. அதன் விநோதமான சொல்லாட்சிகள் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகத் தன்மையுடன் ஒலிக்கின்றன.’ இதை நாம் மறுக்க முடியுமா? கிறிஸ்தவரே அல்லாத ஒருவர் இந்தளவுக்கு நம்மைப் புரிந்துவைத்திருந்து நமக்குப் புத்தி சொல்லவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம்.
இதுவரையில் சில விஷயங்களில் எனக்கு ஜெயமோகனோடு ஒத்துப்போக முடிந்திருக்கிறது. இனிப்பிரச்சனைக்குரிய விஷயத்துக்கு வருவோம். ஜெயமோகன் தன் ஆக்கத்தில் 1995ல் இந்திய வேதாகம சங்கம் வெளியிட்ட “திருவிவிலியம்” பொதுமொழிப்பெயர்ப்பை அதிகம் பாராட்டி அது ‘கடந்த இருபது வருட காலப்பகுதிகளில் தமிழில் நிகழ்ந்த பிரமாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று ஐயமில்லாமல் சொல்லலாம்’ என்று எழுதியிருக்கிறார். இங்குதான் அவரோடு நான் கிறிஸ்தவன் என்ற முறையில் முரண்பட வேண்டியிருக்கிறது. அவருடைய கருத்தின்படி தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் அது பெரிய சாதனையாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அந்த மொழிபெயர்ப்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; கிறிஸ்தவர்களால் பயன்படுத்தக்கூடியதா? என்பதை நாம் ஆராய வேண்டும்.
கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவமும்
ஜெயமோகன் மட்டுமல்லாது தமிழக கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோரும் இன்றைக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாக எண்ணி வருவது நாமறிந்ததே. திருச்சபை வரலாற்று நூல் சரியாக எழுதப்பட்டு நம்மினத்தில் பரவலாகக் காணப்படாததாலும், கிறிஸ்தவ திருச்சபைகள் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலைக் கொண்டிராததாலும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் தாய் சபையாக எண்ணிவருகின்ற பேராபத்து நம்மினத்தில் இருக்கிறது. புரொட்டஸ்தாந்து சீர்திருத்த கிறிஸ்தவம் கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்த ஒன்றல்ல; மெய்கிறிஸ்தவ அனுபவத்தை விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவிடம் இருந்து மட்டும் அடைந்து, வேதத்தின் அடிப்படையில் மட்டும் திருச்சபையை அமைக்க கர்த்தரால் எழுப்பப்பட்ட அவருடைய மக்களின் கூட்டம். கத்தோலிக்க மதம் கர்த்தரை அறியாதது; கிறிஸ்தவம் ஆவிக்குரியது.
கிறிஸ்தவத்தைப் போலிப்போதனைகள் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தாக்க அது பெருகி வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாகி வளர்ந்த மதமே ரோமன் கத்தோலிக்க மதம். அது கத்தோலிக்க போப்புகளின் கட்டளைகள், ஆவணங்கள் என்பவற்றையும், வத்திக்கான் முடிவுகளின் அடிப்படையிலும் இயங்கி வரும் மதமேயன்றி கர்த்தரின் வேதத்திற்கும் அதன் போதனைகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆவிக்குரிய விஷயங்களை அணுகுகின்ற ஒரு சபையல்ல. கடவுளுடைய வார்த்தையோடு சாதாரண மனித சிந்தனைகளை சம அதிகாரத்துடன் இணைத்துப் பார்க்கிற ஒரு மதமே அது. வேதத்தை அணுகி அதன்படி நடக்கின்ற சபையாக அது இருக்குமானால் முதலில் தன்னை தெய்வீக அம்சமாகக் கருதும் போப்புக்கும், வத்திக்கானுக்கு அதில் இடமிருக்காது. ஏனெனில் கர்த்தரின் வேதத்தில் போப்புக்கோ, வத்திக்கான் தலைமைச் செயலகத்துக்கோ இடமில்லை. கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், கத்தோலிக்க மதத்திற்கும் இடையில் இருக்கும் இந்தப் பெரிய வேறுபாடு ஜெயமோகனுக்குப் புரிவது கொஞ்சம் கடினம்தான். அவர் அதை இரு திருச்சபைகளுக்கிடையில் இருக்கும் வேறுபாடாக மட்டுமே பார்ப்பார். ஆவிக்குரிய மனிதனாக இல்லாமலிருந்தால் இந்த வேறுபாட்டை உணர்வது கஷ்டம். அதனால் அவரை நான் இந்த விஷயத்தில் பெரிதாகக் குறைகூற முடியாது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் கிறிஸ்தவர்களை எண்ணித்தான் என்னால் வெட்கப்பட முடியும். நான் எழுதி வெளியிட்டுள்ள ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ (2012) என்ற நூலின் முதல் பாகம் கத்தோலிக்க மதத்தை வெளிப்படையாக இனங்காட்டுகின்ற ஒரு நூல்.

திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பின் பதிப்புரிமை பக்கமும் முன்னுரை பக்கமும்
ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த மொழிபெயர்ப்பு
இந்தப் பொது மொழிபெயர்ப்பைக் (1995) கொண்டுவர முன்னின்று நடவடிக்கை எடுத்தது கத்தோலிக்க மதமே. இரண்டாம் வத்திக்கான் சங்கமே (1962-65) இதை ஊக்குவித்து தன்னோடு இந்தப் பணியில் சேர்ந்துழைக்க கிறிஸ்தவ சபைகளை நாடியது. தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையும் (Tamil Nadu Catholic Bishops’ Council), இந்திய வேதாகம சங்கமும் (Bible Society of India) இதில் இணைந்து செயல்பட்டன. இந்தப் பொது மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும் (TNBCLC), அனைத்துலக வேதாகம சங்கமும் (United Bible Society-UBS) இணைந்து 1995ல் இதை மதுரையில் வெளியிட்டன.
ஆவிக்குரிய மதமாக இல்லாத கத்தோலிக்க மதம் இந்தளவுக்கு ஊக்கம்காட்டி வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டால் அதில் கிறிஸ்தவ நோக்கங்களுக்கும், கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுமா? என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக முடியாது. நம்முடைய ஆவிக்குரிய நம்பிக்கைகளுக்கெல்லாம் அத்திவாரமாக இருக்கும் கர்த்தரின் வேதத்தை வேத அதிகாரத்துக்கே இடங்கொடுக்காத கத்தோலிக்க மதம் எப்படி சரியாக மொழிபெயர்க்க முடியும்? கத்தோலிக்கர்கள் பயன்படுத்துவதற்காக இந்தப் பொது மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் தள்ளுபடி ஆகமங்களை (Apocrypha) ‘இணைத்திருமறை’ நூல்கள் என்ற பெயரில் இணைத்துள்ளது. இந்தத் தள்ளுபடி ஆகமங்கள் ஆரம்பத்திலிருந்தே கர்த்தரின் வேதத்தோடு எந்தவித சம்பந்தமில்லாதவையாக கிறிஸ்தவ சபைகளால் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரம் தள்ளுபடி ஆகமங்கள் வேதத்தின் ஒருபகுதியல்ல என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளுக்காக இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள பொது மொழிபெயர்ப்பின் பதிப்பில் தள்ளுபடி ஆகமங்கள் இணைக்கப்படவில்லை. இந்தவிதத்தில் கத்தோலிக்க மதத்தோடு இணைந்து வேதமொழிபெயர்ப்பில் ஈடுபடுவதே அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் முரண்பாடு. சீகன் பால்க் முதன் முதலாக வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தபோது கத்தோலிக்கரோடு சேர்ந்து அதைச் செய்யவில்லை. அவருக்குப் பின் நூறு வருடங்களுக்குப் பிறகு இந்திய மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்து அருஞ்சாதனை செய்த வில்லியம் கேரி வேதமொழிபெயர்ப்பில் கத்தோலிக்கரோடு இணைந்து ஈடுபடவில்லை. ஏன் தெரியுமா? மெய்க்கிறிஸ்தவர்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டமையாத கத்தோலிக்க மதத்தோடு இந்த அதிமுக்கியமான ஆவிக்குரிய பணியில் இணைந்து செயல்படமாட்டார்கள்.
இந்தப் பொது மொழிபெயர்ப்பை ரோமன் கத்தோலிக்க மதத்தாரின் ஒருபகுதியினர் மட்டுமே இன்று பயன்படுத்துவதாகவும், பிறர் அதைப் பயன்படுத்துவதாக இல்லை என்றும் ஜெயமோகன் தன் ஆக்கத்தில் குறைபட்டுக்கொள்கிறார். அதற்குக் காரணமில்லாமலில்லை; அது அவருக்குப் புரிவதும் கஷ்டம்தான்.
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பின் இணைத்திருமறை’ நூல்கள் முதல் பக்கம்
தூய தனித்தமிழுக்கு முக்கியத்துவம்
இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேத மொழிபெயர்ப்பின் தமிழில் மாற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் (தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?, திருமறைத்தீபம், இதழ் 4, 2012). அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தபோதும் வேதமொழிபெயர்ப்பு என்று வரும்போது அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தரமுடியாது. இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருதம் தழுவிய வார்த்தைகள் அதிகம் என்பதற்காக தனித்தமிழில் இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள். நல்ல தமிழ் வேறு, தனித்தமிழ் வேறு. நல்ல தமிழ் என்பது எல்லோராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளையும், நடையையும் கொண்டமைந்தது. அதில் நிச்சயம் அந்நிய மொழிகளில் இருந்துவந்த அவசியமான வார்த்தைகள் இருக்கும். தூய தனித்தமிழ் மொழிக் கோட்பாடு எப்போதுமே சரியானதல்ல. அது அரசியலாகிவிட்டது தமிழகத்தில். எந்த மொழிகளிலுமே அந்நிய வார்த்தைகள் வந்து சேர்ந்திருக்கின்றன. அந்நிய வார்த்தைகளே இருக்கக்கூடாது என்று கூறுவது மொழியை வளர்ப்பதற்கு அறிகுறியல்ல; அந்நிய வார்த்தைகள் மொழி வளர்ச்சியின் அடையாளந்தான். தமிழில் அறவே வடமொழி வாடை இருக்கக்கூடாதென்று எண்ணுவது தவறு. வடமொழியில் இருந்து வந்து சேர்ந்துள்ள வார்த்தைகள் மொழிக்கு அழகூட்டுகின்றன. தூய தனித்தமிழை நாடியுள்ள இந்த மொழிபெயர்ப்பு ‘திருவிவிலியம்’ என்று தலைப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியந்தான். இதைவிட ‘பரிசுத்த வேதாகமம்’ எத்தனையோ மேல். திருவிவிலியம் என்பதைக் கிறிஸ்தவர்கள் பொதுவாகவே வழக்கத்தில் பயன்படுத்துவதில்லை.
இந்த மொழிபெயர்ப்பில் இலக்கிய நடை அதிகம். அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாடல் பகுதிகளையெல்லாம் தமிழ்க்கவிதை நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றியிருக்கிறார்கள். வேதம் வாசிக்கும் சாதாரண தமிழர்களெல்லாம் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களல்ல. இலக்கிய நடையைப் புரிந்துகொள்ள இலக்கியப் பரிச்சயம் இருக்க வேண்டும். அது தெரிந்தவர்கள் நம்மில் குறைந்த தொகையினரே. எல்லோராலும் இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய வேதமொழிபெயர்ப்பில் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது எல்லோரும் வாசிக்க முடியாதளவுக்கு வேதத்தை மாற்றிவிடும். அத்தோடு இலக்கிய நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மூல மொழியில் சொல்லப்பட்டிருப்பதை உள்ளபடியே சொல்லுவதற்கும் தடை ஏற்படும். ‘வாயைத் திறந்து பேசினார்’ என்பதைத் ‘திருவாய் மலர்ந்தார்’ என்று இலக்கிய நடையில் பொது மொழிபெயர்ப்பில் எழுதியிருப்பதால் மூலமொழியில் சொல்லப்பட்டிருப்பதன் அழுத்தம் மறைந்துவிடுகிறது. இது தேவையற்றது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பரத்தைமை’ என்ற இலக்கிய வார்த்தை பலரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தையல்ல. பேருவகை (மத். 5:12) நல்ல வார்த்தைதான்; சாதாரண மக்களுக்கு சுலபமாகப் புரியுமா?
தெளிபொருள் மொழிபெயர்ப்பு (Dynamic Equivalence) அளவுக்குமீறிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
வேதமொழிபெயர்ப்பில் மூலமொழிகளில் காணப்படும் வார்த்தைகளும், வசனங்களும் எழுத்துபூர்வமாக உள்ளது உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதை Formal Equivalence என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதற்கு மாறானது, Dynamic Equivalence என்பதாகும். அதாவது, எழுத்துபூர்வமாக அல்லாமல் அன்றிருந்த வார்த்தைகளுக்கு இன்று புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்துதலே இதன் அர்த்தமாகும் (தெளிபொருள் மொழிபெயர்ப்பு). வேதமொழிபெயர்ப்பில் எப்போதுமே ஓரளவுக்கு Dynamic Equivalence முறை பயன்படுத்தப்பட்டபோதும் அதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டதாக மொழிபெயர்ப்பு ஒருபோதும் அமையக்கூடாது. இந்த மொழிபெயர்ப்பு அளவுக்குமீறி Dynamic Equivalence க்கே பெருமுக்கியத்துவம் அளித்திருக்கிறது. எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் மூலத்திலிருந்த வார்த்தைகளின் பொருளே போகப்போகக் காணாமல் போய் வேதம் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.
வேத மொழிபெயர்ப்புக்கும் வேறு நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வேதவார்த்தைகள் ஆவியினால் அருளப்பட்டவை; அவர் தெரிந்தெடுத்தே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அத்தோடு வார்த்தைகளில் இறையியல் உண்மைகள் ஆழமாகப் பொதிந்து காணப்படுகின்றன. அந்த இறையியல் உண்மைகள் மொழிபெயர்ப்பில் காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறையியல் தெரிந்த ஆவிக்குரிய மனிதர்களால் மட்டுமே இந்தப் பாதிப்பு மொழிபெயர்ப்பில் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள முடியும்; கத்தோலிக்கர்களால் அது முடியாது. அத்தோடு வேதத்தை வேதமாக இருக்கும்படி மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும். அதை ஆழமாகக் கருத்தோடு படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது வேத மாணவனின் கடமை. வேத மொழிபெயர்ப்பு வேதவியாக்கியானத்தைப்போலவோ (Commentary), பொழிப்புரையாகவோ (Paraphrase) அமைந்துவிடக்கூடாது. அதாவது, வேதவிளக்கமாக இருந்துவிடலாகாது. அதனால்தான் எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பே மேலானது. இதையெல்லாம் இந்தப் பொது மொழிபெயர்ப்பு அலட்சியம் செய்திருக்கிறது.
பழகிப்போன வார்த்தைகளுக்கு புதிய வார்த்தைகள்
நாம் இப்போது பயன்படுத்தி வரும் தமிழ் வேதத்தை வாசித்து, வாசித்து அநேக வார்த்தைகள் கிறிஸ்தவர்களுக்கு பழகிவிட்டன. அத்தகைய வார்த்தைகளை மாற்றுவது அநாவசியச் செயல். உதாரணத்திற்கு விசுவாசம், பரலோகம், பரிசுத்தம், அப்போஸ்தலர் போன்ற வார்த்தைகளுக்கு இந்த மொழிபெயர்ப்பு மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த வார்த்தைகளில் எதுவுமே வழக்கொழிந்து போனவையல்ல. விசுவாசத்தை ‘நம்பிக்கை’யாக மாற்றியிருக்கிறார்கள். அதை சொல்லிப்பார்க்கும்போதே எதையோ இழந்தது போலிருக்கிறது. இதை மாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை.
‘ஜீவன்’ என்ற வார்த்தை எல்லோருக்குமே புரிவதுதான். ஜெயமோகனும் பயன்படுத்துகிற வார்த்தைதான். அதை ‘வாழ்க்கை’ என்றாக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ‘நித்திய’ என்ற வார்த்தையும் அனைவரும் அறிந்திருப்பதுதான். ‘நித்திய ஜீவன்’ என்று சொல்லுகிறபோதே அது தரும் அழுத்தமும், அழகும் இந்த மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கும் ‘நிலை வாழ்வில்’ தெரிவதாக இல்லை. நித்திய வாழ்வு என்று மாற்றியிருந்தாலாவது நன்றாயிருக்கும். சித்தம் இதில் ‘திருவுளம்’ ஆக மாறியிருக்கிறது. ‘சாட்சி’ சான்றாக மாறியிருக்கிறது. இன்றைக்கும் ‘சாட்சி’ என்ற வார்த்தையை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
வேசித்தனம், விபச்சாரம் இரண்டுமே சில இடங்களில் ‘பரத்தைமை’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையைப் புரிந்துகொள்ள டிக்ஷனரியைத் தேடவேண்டும். சாதாரணமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகள் வேறு எத்தனையோ தமிழில் இருக்கின்றன. இது இலக்கியத் தமிழ். பொதுவாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தை அல்ல. வேதம் சரீர ஒழுக்கக்கேடான உறவை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அவற்றில் இரண்டு முக்கியமானவை. மணவாழ்க்கைக்கு வெளியில் இருக்கக்கூடிய சகல ஆண், பெண் உறவுகளையும் fornication (porneia – in Greek) குறிக்கிறது. திருமணம் செய்தவர்கள் மணவாழ்க்கைக்கு வெளியில் ஈடுபடும் ஒழுக்க உறவுகளை adultery (Moikos – in Greek) என்ற வார்த்தை குறிக்கிறது. இந்த இரண்டும் காரணத்தோடேயே மூலமொழியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டையுமே ‘பரத்தைமை’ என்று இந்தப் புதிய மொழிபெயர்ப்பு சில இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறது.
வேதம் வாசிக்கும் பெரும்பாலான மக்கள் இலக்கியம் அறியாதவர்கள். இலக்கிய வார்த்தைகளைத் தேடிப் பயன்படுத்துவதைவிட எந்த வார்த்தை பொதுவாக மக்களுக்கு புரியக்கூடியது என்பதை மொழிபெயர்ப்பில் கவனிக்கவேண்டும். பொதுவாக இதுவரை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வந்திருக்கும் தெரிந்த, பரிச்சயமான வார்த்தைகளை இம்மொழிபெயர்ப்பில் கண்மூடித்தனமாக மாற்றியிருப்பது புதிதாக ஏதோவொரு நூலை வாசிக்கிறோம் என்ற உணர்வைத்தான் தருகிறதே தவிர வேதத்தை வாசிக்கிறோம் என்ற உணர்வையல்ல.
அப்போஸ்தலர்கள் இதில் ‘திருத்தூதர்களாக’ மாறியிருக்கிறார்கள். யோவானுக்கு ‘அருளப்பர்’ பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. வேத பாரகர் ‘மறைநூல் அறிஞர்கள்’ ஆகியிருக்கிறார்கள். இதெல்லாம் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி வருகின்ற வார்த்தைகள். அப்போஸ்தலர்கள் என்பதற்கு ‘திருத்தூதர்கள்’ என்பது சரியான மொழிபெயர்ப்பு இல்லை. அப்போஸ்தலர்கள் என்ற வார்த்தையின் மூலக் கருத்து ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்பதே. அப்போஸ்தலர் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையில் இருந்து ஒலியமைப்புப்படி தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதில் தவறில்லை. அதற்கு மாற்று வார்த்தை தேடவேண்டிய அவசியமில்லை. இந்தவகையில் தமிழில் எத்தனையோ வார்த்தைகள் வழக்கத்தில் இருக்கின்றன. மிஷனரி என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்த வார்த்தை இப்படிப்பட்டதுதான். இதையெல்லாம் சுத்தத் தமிழாக்க முயல்வது அசட்டுத்தனம். திமுக ஒரு காலத்தில் தூய தனித்தமிழ் ஆர்வக்கோளாரால் ‘இராஜாஜியை’ ‘இராச்சாசி’ என்று எழுதியது. இதெல்லாம் தமிழாக்கமல்ல; நடைமுறைக்கே அப்பாற்பட்ட செயல்.
வேத நூல்களுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள தலைப்புகளில் பல மாற்றப்பட்டிருப்பதும் அநாவசியமானது. ‘ஆகமம்’ என்ற வார்த்தையில் என்ன தவறு? அது புரிந்துகொள்ளக்கூடிய இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பதந்தான். ஆதியாகமத்தை ‘தொடக்கநூல்’ என்று மாற்றியிருப்பது தேவையற்றது. நிருபம் என்ற வார்த்தை ‘திருமுகம்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. நிருபமாவது என்னவென்று நமக்குத் தெரியும். திருமுகம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நிருபம் என்றால் கடிதம். கடிதம் ஏன் திருமுகமாக மாறவேண்டும்? இந்தவகையில் தூயதமிழை நாடியிருப்பது அவசியமற்றது. நியாயாதிபதிகள் என்று வாசித்துப் பழகிப்போன நமக்கு இந்த மொழிபெயர்ப்பில் அதை ‘நீதித் தலைவர்கள்’ என்று வாசிக்க வேண்டியிருக்கிறது. நீதித்தலைவர்கள் என்று வழமையாக பேச்சிலோ எழுத்திலோ யாரையும் நாம் குறிப்பிடுவதில்லையே. வார்த்தைகள் பரிச்சயமானதாக, புரிந்துகொள்ள இலகுவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மொழிபெயர்ப்பு செய்தால் வழக்கத்தில் சாதாரணமாக நாம் பயன்படுத்தாத வார்த்தைகளைப் புகுத்தக்கூடாது.
தேவன் என்ற பதம் இந்த மொழிபெயர்ப்பில் ‘கடவுள்’ என்றிருக்கிறது. தேவகுமாரன் என்ற பதம் ‘இறைமகன்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயர்களில் மாற்றம் கொண்டுவந்திருப்பது கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு பிடிக்கவில்லை. அந்தப் பிரச்சனை வேதமொழிபெயர்ப்பில் ஆரம்பத்திலேயே இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்ற வார்த்தையைக் கர்த்தருக்குப் பயன்படுத்துவதில் தப்பில்லை. மேல்நாட்டு மிஷனரிகள் நம்நாட்டுக்கு வந்தபோது பொதுவாக மக்கள் பயன்படுத்திய வார்த்தையான ‘கடவுள்’ என்பதை அவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. அதைப் பிறமத வார்த்தையாக அவர்கள் கருதினார்கள். உண்மையில் கடவுள் என்ற வார்த்தை இந்துக் கடவுள்களை மட்டும் குறிக்கும் வார்த்தையல்ல. எல்லாவற்றையும் கடந்து நிற்கும் தனிப்பெருங் கடவுளை அது குறிக்கிறது. பராபரன், தம்பிரான், சர்வேசுவரன் என்ற பதங்களெல்லாம் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கொழிந்து போய்விட்டன. ஆறுமுகநாவலர் அறிமுகப்படுத்திய வார்த்தை ‘தேவன்’ என்று அறிகிறேன். அதுவே இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேதத்தில் இருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பில் தேவகுமாரன் என்பது ‘இறைமகனாக’ மாற்றப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசிகளுக்கு இதில் ‘இறைவாக்கினர்’ என்ற பெயரளிக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணம் இதில் ‘திருச்சட்டம்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அதிரடி மாற்றங்கள் அவசியமில்லாதது என்பது என் கருத்து.
முக்கியமாக ‘பிரசங்கம்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுவோம். பொதுமொழிபெயர்ப்பில் அது ‘அறிவிப்பு’ என்று மாற்றப்பட்டிரு¢கிறது (ரோமர் 10:14-15). இது சரியான ஆய்வு இல்லாமல் செய்யப்பட்ட வார்த்தை மாற்றம். பிரசங்கம் என்பது மூல மொழியான கிரேக்கத்தில் அதிகாரத்தோடு ஆண்டவரின் செய்தியை ஆணித்தரமாக சொல்லுவது என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (Kerusso-Greek). ஆங்கிலத்தில்கூட அதற்கு Preaching என்ற வார்த்தையையே தெரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். வெறுமனே speach, talk, lecture, communication என்ற வார்த்தைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பிரசங்கம் என்ற வார்த்தையில் இருக்கும் தொனியும், அழுத்தமும் ‘அறிவிப்பில்’ வெளிவரவில்லை. பிரசங்கம் என்பது இன்று வழக்கொழிந்துபோன வார்த்தையல்ல; கிறிஸ்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தை. கிறிஸ்தவரல்லாதவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைதான். அதைத் தவிர்த்திருப்பது சரியல்ல.
இதுவரையிலும் பரிச்சயமான பகுதிகள் அந்நியமாய்த் தெரிதல்
தமிழ் வேதத்தை வாசித்து சில முக்கியமான பகுதிகள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பகுதிகளாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு மலைப்பிரசங்கத்தில் பாக்கியவான்கள் பகுதி, ஆண்டவரின் ஜெபம், பத்துக்கட்டளைகள் போன்றவை. ஆங்கில வேத மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள்கூட இந்தப் பகுதிகளைக் கூடுமானவரை அதிகம் மாற்ற முயலுவதில்லை. பொது மொழிபெயர்ப்பு இவற்றை அடியோடு மாற்றியிருக்கின்றது. அவற்றை வாசிக்கும்போது வித்தியாசமான எதையோ வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவற்றை இந்தளவுக்கு மாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாக்கியவான்கள் ‘பேறுபெற்றோர்’ ஆகியிருக்கிறது. தூய தமிழ் ஆர்வம் மொழிபெயர்ப்பாளர்களை அளவுக்கு மீறிய எழுத்து நடைக்கு இட்டுப்போயிருக்கிறது.
தவறான மொழிபெயர்ப்புக்கு உதாரணங்கள்
இந்தப் பொது மொழிபெயர்ப்பில் இதுவரை நாம் பார்த்து வந்திருப்பவை பாரதூரமான மாற்றங்களாக இருப்பினும் இவற்றில் காணப்படும் மொழிபெயர்ப்புத் தவறுகள் அவற்றையும்விடப் பாரதூரமானவை. நூல் முழுவதும் பல்வேறு இடங்களில் மொழிபெயர்ப்பில் தவறுகளும், இறையியல் போதனை மாற்றங்களும் காணப்படுகின்றன. இதில் நீங்கள் வாசிக்கப்போகும் உதாரணங்கள் நான் தேடித் தேடித் தெரிந்தெடுத்தவை. எந்தளவுக்கு இந்தப் பொதுமொழிபெயர்ப்பு மோசமானது என்பதை எடுத்துக்காட்ட இவையே போதும்.
2 கொரி 5:21, தவறான மொழிபெயர்ப்பு. ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி’ என்றிருக்க வேண்டியது ‘தமக்கு ஏற்புடையவராகுமாறு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் Righteousness of God என்றிருப்பதில் காணப்படும் ‘தேவநீதி’ இந்த மொழிபெயர்ப்பில் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் அது மிகப்பெரிய போதனை. எப்படிப் பாவமில்லாத இயேசு நமக்காகப் பாவமானாரோ அதேபோல் நீதியற்ற நாம் அவருக்குள் தேவநீதியாகிறோம் என்பதுதான் இந்த வசனம் போதிக்கும் உண்மை. இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அதை வெளிக்கொணராததால் மொழிபெயர்ப்பில் பெரும் இறையியல் தவறு நிகழ்ந்திருக்கிறது. கத்தோலிக்கர்கள் இந்த மொழிபெயர்ப்பில் சம்பந்தப்பட்டிருப்பதால் இது தெரிந்தே செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.
அதேபோல் கலாத்தியர் 5லும் Righteousness, Justify எனும் பதங்களுக்கு ‘ஏற்புடைய’ என்ற வார்த்தையையே இந்த மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கிறது. இதேவிதத்தில்தான் ரோமர் 4ம் அதிகாரத்திலும் ‘ஏற்புடைய’ என்ற பதத்தைப் பயன்படுத்தி இந்த மொழிபெயர்ப்பு ‘விசுவாசத்தினால் நீதிமானாகுதல்’ என்ற போதனையின் வலிமையைக் குறைத்து அதை பலவீனப்படுத்தியிருக்கிறது. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற போதனை வேதத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து வேறுபட்டதாக கிறிஸ்தவம் இருப்பதற்கும் இந்தப்போதனைதான் முக்கிய காரணம். அந்தப் போதனையை இந்த மொழிபெயர்ப்பு அலட்சியப்படுத்தியிருக்கிறது. அதற்கு ஒரு காரணம் மூல வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொழிபெயர்க்காதது. அடுத்த காரணம் இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் தராதது. இன்னொரு முக்கிய காரணம் நீதிமானாகுதல் போதனை பற்றி கிறிஸ்தவ வேதம் போதிக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அதுபற்றி செயற்கையான போதனையைப் பின்பற்றும் கத்தோலிக்கர்கள் இந்த மொழிபெயர்ப்பில் சம்பந்தப்பட்டு நீதிமானாகுதல் போதனையைத் திரிபுபடுத்தியிருப்பது. கத்தோலிக்கர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற போதனையை ஏற்றுக்கொள்ளுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கத்தோலிக்க மதமே ஒருவரை நீதிமானாக்குகிறது. அந்த அடிப்படையிலேயே அவர்கள் ஞானஸ்நானம் ஒருவரை நீதிமானாக்குவதாகவும், ஒவ்வொருமுறை மாஸ் நிகழும்போதும் அதில் பங்குகொள்ளுகிறவர்கள் நீதிமான்களாவதாகவும் நம்புகிறார்கள். இது போலிப்போதனை. கிறிஸ்தவ வேதமோ விசுவாசம் மட்டுமே ஒருவரை நீதிமானாக்குகிறது என்று விளக்குகிறது (ரோமர் 1:17).
மத்தேயு 5:12ல் ‘விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்’ என்று இந்தப் பொதுமொழிபெயர்ப்பில் இருக்கிறது. நாம் பயன்படுத்திவரும் வேதத்தில் ‘பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்’ என்றிருக்கிறது. ‘பலன்’ என்ற வார்த்தை பொதுமொழிபெயர்ப்பில் ‘கைம்மாறு’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. கைம்மாறு என்பதற்குப் பொருள் நன்றிக்கடன், பிரதிபலன், பதில் உதவி, பிரதியுபகாரம் என்று பலவிதங்களில் சொற்பொருளகராதி விளக்குகிறது. ஆங்கிலத்தில் இதற்கு making a return for favours என்று அர்த்தம். இந்த இடத்தில் மூலமொழியிலிருந்த வார்த்தை ஆங்கிலத்தில் reward என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை வெகுமதி, பலன் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். வெகுமதி வேறு கைம்மாறு வேறு. இந்த உலகில் நீங்கள் துன்புறுத்தப்பட்டால் அதை எண்ணிக் கலங்காதீர்கள்; விண்ணுலகில் உங்களுக்கு அதற்கான பலன் (வெகுமதி) கிடைக்கும் என்பதை இந்தப் பகுதி போதிப்பது. ‘கைம்மாறு’ என்ற வார்த்தை இங்கு சரியான மொழிபெயர்ப்பில்லை. கைம்மாறு என்ற பதத்தை, யாரோ நமக்குச் செய்ய ஒன்றிற்கு நாம் பதிலாக ஏதாவது செய்வது என்ற பொதுவான அர்த்தத்திலேயே நாம் பயன்படுத்துகிறோம். அது இந்த இடத்தில் ஒத்துவராது. அத்தோடு ‘கைம்மாறு’ என்பது இந்த இடத்தில் இறையியல்பூர்வமாகவும் பொருந்தி வராது. வேத இறையியலின்படி கர்த்தர் நமக்களிக்கும் இந்த ‘பலன்’ அல்லது ‘வெகுமதி’ நம்மில் தங்கியிருக்கும் எதனாலுமோ அல்லது நம்முடைய செயல்களின் அடிப்படையிலோ தரப்படுவதல்ல. கத்தோலிக்கர்கள் இந்தப் பொதுமொழிபெயர்ப்பில் ஆழமாக பங்குபெற்றிருப்பதால் அவர்களுடைய போதனைகளை இங்கு திணிக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் அவர்கள் படுகின்ற பாடுகளுக்கும், செய்கின்ற செயல்களுக்கும் ஏற்றளவிலேயே எந்த விண்ணுலக ஆசீர்வாதமும் கிடைக்கும். கர்த்தரில் வைக்கும் விசுவாசத்தை கிரியை மூலம் அடைவதாகவே அவர்கள் போதிக்கிறார்கள். மனிதனின் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களுடைய சகல மதபோதனைகளும் அமைந்திருக்கின்றன. அந்தப் போதனையைப் பிரதிபலிக்க ‘கைம்மாறு’ என்ற பதம் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அதேபோல் மத்தேயு 5:3-11வரையிலும் இதுவரை இருந்த வார்த்தையான ‘பாக்கியவான்கள்’, பேறுபெற்றவர்கள் என்று மாற்றப்பட்டிருக்கிறது. பாக்கியவான்கள் வேறு, பேறுபெறுதல் வேறு. பாக்கியவான்கள் என்ற வார்த்தை blessed என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வடிவம். கிரேக்கம் Makarios என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதற்கு அடிப்படை அர்த்தம் ‘மகிழ்ச்சி’ என்பதே. அதிகளவுக்கு ஆவிக்குரியவிதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது இந்த வார்த்தைக்கான விரிவான விளக்கம். பாக்கியவான் என்பது சரியான மொழிபெயர்ப்பு, வடமொழி தழுவியதாக இருந்தபோதும், பேறுபெற்றவன் என்பது அந்த அர்த்தத்தைக் கொண்டுவரவில்லை. ‘பேறு’ என்பதற்கு பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம் என்று பல பொருள்கள் இருக்கின்றன. பேறு என்ற இந்த வார்த்தையில் ஆவிக்குரிய மகிழ்ச்சிக்கோ, ஆசீர்வாதத்திற்கோ இடமில்லை.
1 யோவான் 2:2 லும் மொழிபெயர்ப்பு தவறானதாக இருக்கிறது. ‘நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே’ என்றிருக்கிறது. இந்தக் ‘கழுவாய்’ என்ற பதம் Propitiation என்ற ஆங்கில வார்த்தையில் பொதிந்திருக்கும் ‘தேவ கோபத்தை நிவர்த்தி செய்தல்’ என்ற இறையியலுண்மையை மறைத்துவிடுகிறது. ‘கழுவாய்’ என்ற பதம் பாவத்தைக் கழுவுதல் என்ற அர்த்தத்தை மட்டுமே கொடுக்கிறது. இதுவும் மொழிபெயர்ப்பில் காணப்படும் இறையியல் தவறை சுட்டிக் காட்டுகிறது.
1 கொரிந்தியரில் (12-14) விளக்கப்படும் அந்நியபாஷை இந்த மொழிபெயர்ப்பில் ‘பரவசப் பேச்சு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது tongues என்ற ஆங்கில பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல. மூல மொழியான கிரேக்க மொழியிலும் ‘அந்நியபாஷை’ அல்லது ‘அந்நிய மொழி’ என்ற அர்த்தமே இருக்கிறது. பரவசப் பேச்சு என்ற மொழிபெயர்ப்பு தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறையால் ஏற்பட்ட தவறு. அது பரவச நிலையில் பேசுகின்ற பேச்சு என்ற அர்த்தத்தையே தருகிறது. இதில் அந்நிய மொழி என்ற பொருள் அறவே இல்லை; இது வேத அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது.
கலாத்தியர் 5:1ல் பவுல் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து ‘சுயாதீன நிலைமையை’ அல்லது சுதந்திரத்தைத் தந்திருக்கிறார் என்று விளக்குகிறார். சுயாதீனம் என்பதை இந்த மொழிபெயர்ப்பு ‘உரிமை’ என்று மாற்றியிருக்கிறது. சுயாதீனம், உரிமையல்ல. உரிமை எனும் பதம் நமக்கு எதன்மீதாவது இருக்கும் சொந்தத்தையும், அதிகாரத்தையும் குறிக்கிறது; அதுவல்ல பரிசுத்த ஆவி பவுல் மூலம் இங்கே விளக்குவது. நமக்குத் தரப்பட்டிருக்கும் ‘விடுதலையை’ அவர் விளக்குகிறார். இந்த இடத்தில் இந்த மொழிபெயர்ப்பு தேவைக்கதிகமான உரிமையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவி மூலமொழியில் சொன்ன கருத்தையே மாற்றிவிடுகிறது.
யோவான் 2:4ல் தன் தாயான மேரியைப் பார்த்து இயேசு, ‘பெண்ணே’ (ஸ்திரீயே) என்று அழைத்தார். Woman என்றே ஆங்கிலத்திலும் இருக்கிறது. மூல மொழியான கிரேக்கத்தில் பெண் என்றிருப்பதை இம்மொழிபெயர்ப்பு ‘அம்மா’ என்று மாற்றியிருக்கிறது. அடிக்குறிப்பில் ‘தாய் என்ற பொருளில் அல்ல பெண்களை மதிப்புடன் குறிக்கும் பொருளில் கையாளப்பட்டுள்ளது’ என்று விளக்கப்பட்டிருக்கிறது. இது அநாவசியச் செயல். மொழிபெயர்ப்பாளரின் வேலையல்ல இது; வாசகன் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டியது. மொழிபெயர்ப்பில் ‘பெண்ணே’ என்றே இருந்திருக்க வேண்டும். அதை மொழிபெயர்ப்பாளன் தான் புரிந்துகொண்டிருக்கும் விதத்தில் மரியாதை வார்த்தையாக மாற்ற உரிமையில்லை. அது வேதத்தை பலவீனப்படுத்தும் செயல்.
1 கொரிந்தியர் 7:1ல். ‘ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது’ என்று நாம் பயன்படுத்துகிற வேதத்தில் இருக்கிறது. அதிலிருக்கும் ‘மனுஷனுக்கு’ என்ற வார்த்தையை இந்த மொழிபெயர்ப்பு கைவிட்டுவிட்டது. நிச்சயமாக அது ஆண்களைத்தான் குறித்துச் சொல்லப்படுகிறது என்பதை அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிற பகுதியை வாசிக்கும்போது புரிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் இந்த வார்த்தை இந்த இடத்தில் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடாது. மூல மொழியில் காணப்படும் இந்த வார்த்தையை, அதுவும் இந்தப் பகுதி போதிக்கும் விஷயத்துக்கு அவசியமான வார்த்தையைத் தவிர்த்த காரணமென்ன?
1 கொரிந்தியர் 7:9ல், உணர்ச்சிகளால் எரிவதைவிட (than to burn) என்ற அர்த்தத்தில் காணப்படும் வார்த்தைகளை ‘காமத்தீயால்’ உருகுவதைவிட என்ற வார்த்தைகள் மூலம் தெளிபொருள் விளக்கம் (Dynamic equivalence) கொடுக்கப்பட்டுள்ளது. இது அவசியமில்லாதது. அந்தப் பகுதி இதைத்தான் விளக்குகிறது என்ற முடிவுக்கு வரவேண்டியது வாசிக்கிறவர்களே தவிர மொழிபெயர்ப்பாளனல்ல.
மத்தேயு 5:2ல், ‘அவர் தம் வாயைத்திறந்து அவர்களுக்கு உபதேசித்து சொன்னது’ என்று மூலமொழியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது சரியாகவே நாம் தற்போது பயன்படுத்தி வருகிற மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதை இந்த மொழிபெயர்ப்பு ‘அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை’ என்று மாற்றியிருக்கிறது. இதில் என்ன தவறு? நன்றாய்த்தானே இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். வாசிப்பதற்கு நல்ல இலக்கியநடைதான். ஆனால், இங்கு இலக்கிய நடைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் தவறு. ‘வாயைத் திறந்து’ என்பதற்கும் ‘திருவாய் மலர்ந்து’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேதம் வாய் என்ற பதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்க, பேசியவர் இயேசு என்பதற்காக ‘திருவாய்’ என்று மாற்றியிருப்பது சரியல்ல. இது வழக்கமாக இந்து தெய்வங்களுக்கும், இந்துப் பெரியவர்களுக்கும் பயன்படுத்தப்படும் வார்த்தை. கிறிஸ்தவ வேதத்தில் ஆண்டவராகிய இயேசுவைக்குறித்து இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தோடு இதெல்லாம் சாதாரணமாக செய்யுள் அல்லது கவிதை எழுத உதவும்; வேதமொழிபெயர்ப்புக்கு உதவாது. அடுத்ததாக ‘மலர்ந்து’ என்ற வார்த்தை ‘திறந்து’ என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இல்லை. பூ மலர்ந்தது என்றால், அதற்கு ‘பூ பூத்தது’, ‘பூ விரிந்தது’ என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ‘மலர்ந்து’ என்ற வார்த்தை தெளிவான அர்த்தத்தைக் கொடுப்பதாக இல்லை. வாயைத் திறந்து, என்று மூல மொழியில் காரணத்தோடுதான் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, அவர் குரலை உயர்த்திப் பிரசங்கம் செய்தார் என்பதை அது உணர்த்துகிறது. அந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள ‘மலர்ந்து’ என்ற வார்த்தை உதவவில்லை. இந்த இலக்கிய நடை வேதமொழிபெயர்ப்பில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மத்தேயு 6ல், ஆண்டவருடைய ஜெபத்தில் ‘எங்கள் கடனாளிகளுக்கு’ என்றிருந்ததை ‘எங்களுக்கு எதிராக குற்றஞ் செய்தோரை’ என்று இந்த மொழிபெயர்ப்பு மாற்றியிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்த வார்த்தை debt என்றிருக்கிறது. இதற்கு ‘கடன்’ என்பதே பொருள். இதை இந்தப் பொதுமொழிபெயர்ப்பு ‘குற்றம்’ என்று தேவையில்லாமல் மாற்றியிருக்கிறது. கடனுக்கும் குற்றத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்? தெளிபொருள் மொழிபெயர்ப்பு இவர்களை இந்தளவுக்கு வேதத்தை மாற்றி எழுத வழிநடத்தியிருக்கிறது. மத்தேயு 5:13ம் வசனத்தில் ‘தீமை’ என்றிருந்ததை அநாவசியத்துக்கு ‘தீயோன்’ என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாம் பயன்படுத்தி வரும் தமிழ் வேதத்தில் ஆதியாகமம் 2:24ல், ‘இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு,’ என்றிருக்கிறது. இங்கே ‘புருஷன்’ என்ற வடமொழி வார்த்தைக்கு ‘மனுஷன்’ என்பதே பொருள். ஒருவனை ‘சௌந்தர்யபுருஷன்’ என்றால் அவன் அழகானவன் என்று அர்த்தம். புருஷன் என்பதற்கு வழக்கில் கணவன் என்ற அர்த்தமும் உண்டு. இருந்தாலும் மூலமொழியான கிரேக்கத்தில் ‘Man’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அதைக் ‘கணவன்’ என்று தவறாக மொழிபெயர்த்திருக்கிறது. இது அவசியமற்றது. காரணத்தோடுதான் மூலமொழியில் அது மனிதன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இருபாலாருக்குமான பொதுவான வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கின்றன
ஆண், பெண் வித்தியாசமில்லாமல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் வேதத்தில் இருக்கின்றன. அவை முக்கியமான காரணங்களுக்காகப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் புதியமொழிபெயர்ப்பு Inclusive language அல்லது Gender-inclusive language எனும் முறையைப் பின்பற்றுகிறது. உதாரணத்திற்கு கலாத்தியர் 6:1, ‘சகோதரரே’ என்றிருக்கிறது. இது பொதுவான வார்த்தை; ஆண், பெண் இருபாலாரையும் குறிக்கும் வார்த்தை. ஆங்கில வேதத்தில் Brethren என்றிருக்கும். இந்த மொழிபெயர்ப்பு இதை ‘சகோதரரே, சகோதரியே’ என்று மாற்றியிருக்கிறது. இதுவும் வேத மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் அநாவசியமானது. ஏன் தெரியுமா? வேதத்தை உள்ளது உள்ளபடி எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பதே (translation) மொழிபெயர்ப்பாளனின் கடமை. அதை நமக்கு விளக்குவதல்ல (interpretation). மொழிபெயர்ப்பாளன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யவேண்டும். வேதத்தை வாசிக்கிறவர்களுடைய பணியே அதற்குரிய விளக்கத்தை ஆராய்ந்து பார்த்து பெற்றுக்கொள்ளுவது. மொழிபெயர்ப்பு வியாக்கியானமாகவோ, பொழிப்புரையாகவோ மாறினால் அது வேதமாக இருக்காது. அந்தத் தவற்றை இந்த மொழிபெயர்ப்பில் எங்கும் பார்க்க முடிகிறது.
இதில் மிகவும் ஆபத்தான மொழிபெயர்ப்பை ஆதியாகமத்தில் காண்கிறோம். ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் (1-3) கர்த்தருடைய படைப்பின் செயல்களை விளக்குகின்றன. படைப்பில் (Creation) கர்த்தர் செய்த காரியங்களில் அரும்பெரும் இறையியல் அம்சங்கள் பொதிந்து காணப்படுகின்றன. வேதத்தின் ஏனைய பகுதிகளில் தரப்பட்டுள்ள மனித குலம் மற்றும் ஆண், பெண் பற்றிய போதனைகள் எப்போதும் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களில் படைப்பில் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை ஆதாரமாகக் கொண்டே விளக்கமளிக்கின்றன. இந்தப் புதிய மொழிபெயர்ப்பு ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் மொழிபெயர்ப்பை மாற்றியமைத்திருக்கிறது. இது பலவிதமான இறையியல் கோளாறுகளுக்கு இடங்கொடுத்துவிடுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தெரிந்தே செய்திருக்கிறார்கள். பெண்ணியவாதிகளைத் (Feminism) திருப்திப்படுத்தும் நோக்குடனும், ஆண், பெண் சமத்துவம் கருதியும் தற்காலப் பண்பாட்டுப் போக்கின் அடிப்படையில் மூலமொழியில் இருந்தவற்றை மாற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, மனிதனைக் கர்த்தர் படைத்தவிதத்தை ஆதியாகமம் 1:26-27லும், 2:7-8லும், 2:15-27லும், 5:1-2லும் காண்கிறோம். இந்தப் பகுதிகளில் ஆதியாகமம் 1:26-27லும், 5:1-2லும் இதுவரையிலும் ‘தேவன் மனுஷனை சிருஷ்டித்தார்’ என்றே இருந்தது. அதுவே சரியான மொழிபெயர்ப்பு. மூலமொழியில் அவ்வாறே இருக்கிறது. மனுஷன் என்பதற்கு ‘ஆதாம்’ என்ற எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மனுஷன் என்று இந்த வார்த்தை இருந்தபோதும் இது மனிதகுலத்தைக் குறிக்கின்ற வார்த்தை என்பதை அந்த இருபகுதிகளும் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, ஆதி 1:27ல், ‘தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்’ என்றிருக்கிறது. இதேமுறையில்தான் ஆதி 5:1-2ம் விளக்குகிறது. ‘தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாகவே உண்டாக்கினார். அவர்களை ஆணும், பெண்ணுமாகச் சிருஷ்டித்து . . .’ என்றிருக்கிறது. இது சரியான மொழிபெயர்ப்பு; காரணத்தோடுதான் இந்தவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமொழிபெயர்ப்பு இந்த இடங்களிலெல்லாம் மனுஷனை (Man-Adam) என்பதை ‘மானுடரை’ என்று ஆதி 1:26-27லும், ‘மானிடரை’ என்று 5:1-2லும், ஒருமையில் இதுவரை இருந்ததைப் பன்மையில் மாற்றியிருக்கிறது. இதை இவர்கள் செய்திருப்பதற்கான காரணம் பெண்ணிய சார்பும், ஆண், பெண் சமத்துவக் கோட்பாடுந்தான். அது இந்தப் பொதுமொழிபெயர்ப்புத் தத்துவத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது. ‘இருபாலார்க்கும் பொதுவான கருத்துகள் மூல நூலில் ஆண்பால் விகுதிபெற்று வந்தாலும் இருபாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive language) தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு மூலமொழியிலும், தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்பட்டு, சமத்துவ உணர்வு வெளிப்படுகிறது’ என்கிறது இந்தப் பொது மொழிபெயர்ப்புத் தத்துவம் (தமிழ் விவிலியம், விக்கிப்பீடியா). இந்தக்கூற்றில் முக்கியமானதொன்றைக் கவனிக்க வேண்டும். ‘மூலமொழியில் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு’ என்றிருப்பதைக் கவனியுங்கள். ஆகவே, இவர்களே ஒத்துக்கொள்கிறார்கள், இது மொழிபெயர்ப்பு மட்டுமல்ல; மூலமொழியில் இருப்பதை இஷ்டத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை. கலாச்சார மாற்றத்துக்கேற்றவகையில் மூலமொழியில் இருப்பது அடியோடு மாற்றப்பட்டிருக்கிறது. இது வேதமொழிபெயர்ப்புத் தத்துவங்களுக்கெல்லாம் முற்றிலும் விரோதமானது; கர்த்தரின் வேதத்திலேயே குறைகாணும் அடிப்படை முரண்பாட்டை இதில் காண்கிறோம். வேதத்தில் மூலமொழிகளில் இருப்பவற்றைக் காலத்துக்கு ஒத்துவரவில்லை என்று மாற்றும்போது அது தொடர்ந்து கர்த்தரின் வேதமாக இருக்க வழியில்லை. ஆங்கிலத்தில் பல வேத நூல்களில் இன்றைக்கு கடவுளையே ஆணும், பெண்ணுமாக வர்ணிக்கும் அளவுக்குப் போயிருக்கின்றன.
ஆதியாகமம் 1:26-27லும், 5:1-2லும் காணப்படும் ‘மனிதன்’ என்ற பதத்தை ‘மானிடர்’ என்று மாற்றியதில் என்ன தவறு? முதலில், ஏற்கனவே நான் விளக்கியபடி மூலமொழியிலுள்ளதை மாற்றியிருப்பது முதல் தவறு. இரண்டாவது, மிகப்பெரிய இறையியல் தவறுக்கு இது வழிகோலியிருக்கிறது. ஆதியாகமத்தில் இந்த இரண்டு பகுதிகளும் படைப்பில் கர்த்தர் மனிதனைப் (ஆணும், பெண்ணுமாக) படைத்தபோது அவர்களுக்கு எத்தகைய சமுதாயப் பங்கை அளித்தார் என்பதை விளக்குகின்றன. படைப்பிலேயே அது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தில் ஆண் தலைவனாக இருந்து வழிகாட்ட வேண்டிய முக்கிய பொறுப்பை படைப்பு நிர்ணயித்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை நாம் ஆதியாகமத்திலேயே காண்கிறோம். (அ) ஆணே முதலில் படைக்கப்பட்டு பெண் பின்னால் படைக்கப்பட்டாள். (ஆ) ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டாள். (இ) கர்த்தர் ஆதாமோடேயே பேசுகிறார். (ஈ) பெண் ஆணுக்குத் துணையாக இருக்கப் படைக்கப்பட்டாள். (உ) ஆதாமே பெண்ணுக்குப் பெயர் சூட்டுகிறான். இதெல்லாம் ஆணுக்கு ஒரு விசேஷ பொறுப்பையும், பெண்ணுக்கு வித்தியாசமான பொறுப்பையும் படைப்பில் கர்த்தர் நியமித்திருப்பதைக் காட்டுகின்றன. இவற்றை வெளிப்படுத்துமுகமாகத்தான் ஆதி 1:26-27லும், 5:1-2லும் ‘மனுஷன்’ (மனிதன்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற இந்த வேறுபட்ட பொறுப்புக்களின் காரணமாகத்தான் புதிய ஏற்பாட்டில் பவுல் குடும்பத்திலும், சபையிலும் ஆண், பெண் இருபாலாரின் பொறுப்புக்களைப் பற்றி விளக்கும்போது ஆதியாகமத்தையே எப்போதும் சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். ஆணின்மேல் பெண் அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதை விளக்கும் பவுல் 1 தீமோ 2:11-15 வரையுள்ள வசனங்களில் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கையே உதாரணங்காட்டி விளக்குகிறார். 1 கொரி 11:1-16 வரையுள்ள வசனங்களிலும் இதேவிதமாக படைப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கையே பவுல் உதாரணங்காட்டுகிறார். ஆதியாகமத்தில் மனுஷனை ‘மானிடர்’ என்று பொது மொழிபெயர்ப்பில் மாற்றியிருப்பது வேதத்தின் அத்திவாரமானதோர் இறையியல் போதனையை சமூக மாற்றங்களின் அடிப்படையில் அழித்துவிடுகின்றதாக இருக்கின்றது. இது மொழிபெயர்ப்பில் அனுமதிக்கமுடியாத தவறு.
ஏனைய குறைபாடுகள்
நீட்டளளவைகளும், நிறுவைகளும் தற்கால மெட்ரிக் முறையில் தரப்பட்டுள்ளன. இதுவும் அவசியமற்றது. இப்படியே காலத்துக்குக் காலம் காலமாற்றங்களுக்கேற்ப இவற்றை மாற்றிக்கொண்டு போனால் வேதம் வாசிக்கிறவர்களுக்கு உண்மையில் கர்த்தர் ஆரம்பத்தில் எதைச் சொல்லியிருந்தார் என்பதே தெரியாமல் போகும். நீட்டளளவைகளும், நிறுவைகளும் மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை. வாசகனே அந்த அளவைகளை வேதத்தை ஆராயந்து புரிந்துகொள்ள வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறான்.
தமிழினத்து மரியாதைப் பண்பிற்கேற்றவிதத்தில் அவன், இவன் என்றிருந்ததெல்லாம் அவர், இவர் என்று பொதுமொழிபெயர்ப்பில் மாற்றப்பட்டிருக்கிறது. இதுவும் அநாவசியமானது; குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. இன்றைக்கு தமிழில் நாம் வாசிக்கும் எதிலும் மரியாதைப் பண்பு வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி எழுதுவதில்லை. பேச்சிலும் தமிழகத்தில் ஏரியாவுக்கு ஏரியா இது வேறுபடும். காலம் மாறிப்போய் சமுதாயப் பேச்சுமுறை வித்தியாசமாக மாறினால் மறுபடியும் இதை மாற்றி எழுதப்போகிறார்களா? காலப்போக்குக்கு ஏற்ப வேதத்தை மாற்றும் இந்தப்போக்கு மிக மிக ஆபத்தானது.
முடிவாக
இலகுவான தமிழ் நடையில் தமிழ் வேதம் (வேதாகமம்) அவசியந்தான். இன்றைய சூழ்நிலையில் அது மிகவும் அவசியம் என்றாலும் இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. இது கிறிஸ்தவ வேதமொழிபெயர்ப்புக்கான அடிப்படை அம்சங்களுக்கெல்லாம் முற்றிலும் முரண்பாடானவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மூலமொழியில் இருப்பதை இஷ்டத்துக்கு இது மாற்றியிருக்கிறது; இல்லாமலாக்கியிருக்கிறது. அநேக இறையியல் தவறுகளுக்கும் இடங்கொடுத்திருக்கிறது. கர்த்தரின் வேதமாக நம்பி வாசிக்கக்கூடியதல்ல இந்த மொழிபெயர்ப்பு. கிறிஸ்தவ வேதமொழிபெயர்ப்புப் பணியில் கத்தோலிக்க மதத்தின் பங்கு ஒருபோதும் இருந்திருக்கக்கூடாது.
தனித்தமிழ் நடை, இயல்பான மக்கள் பேசும் மொழி என்றெல்லாம் இது பறைசாற்றிக்கொண்டாலும், தமிழ்நடை சாதாரண வாசகர்களுக்கு புரிவதாக இல்லை. இலக்கிய நடையையே காண்கிறோம். கவிதைப் பாங்குக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய நடையும், வார்த்தைத் தெரிவும், மூல மொழியிலுள்ள வார்த்தைகளின் அர்த்தத்திற்கும், இறையியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வேதத்தைத் தமிழ் இலக்கியமாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றன. வேதத்தை வாசிப்பது போன்ற உணர்வையே இது எனக்குத் தரவில்லை.
இதுவரை நான் ஆராய்ந்து கவனித்த பல முக்கியமான தவறுகளை இந்த ஆக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது எத்தகைய மொழிபெயர்ப்பு என்பதை எடுத்துக்காட்ட இவையே போதுமென்றாலும், ஆராய்ந்து, சிந்தித்து வாசிக்கிறவர்கள் நிச்சயம் இன்னும் அநேக குறைபாடுகளைக் கண்டுகொள்ளுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த மொழிபெயர்ப்பைக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ திருச்சபைகளும் பயன்படுத்துவது தகாது. இது தனித்தியானத்துக்கும், ஆராதனைக்கும் பயன்படக்கூடியதல்ல. பிரசங்கம் செய்கிறவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது. வேத மொழிபெயர்ப்பு என்பது சாதாரணமான விஷயமல்ல; பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை மொழிபெயர்க்கும் ஆவிக்குரிய பணி அது. அந்தப் பணியில் இந்த மொழிபெயர்ப்பு தற்கால சமுதாய சிந்தனைப் போக்குக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கர்த்தரைக் கைவிட்டிருக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறின கதைதான் இந்தப் பொதுமொழிபெயர்ப்பு. ஜெயமோகனின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால், ‘பைபிளை ஆண்டவரின் நேரடி வார்த்தை என்று கண்மூடித்தனமாக நம்புகிற’ என் போன்றவர்களுக்கு இந்தப் பொதுமொழிபெயர்ப்பு சீற்றம் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.
ஆதாரங்கள்:
- விவிலியம், புதிய மொழியாக்கம், ஜெயமோகன், நவம்பர் 26, 2008 (ஜெயமோகன் இணையதளம்).
- தமிழ் விவிலியம், விக்கிப்பீடியா (இணையதளம்).
- திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு, 1995.
- பரிசுத்த வேதாகமம், Tamil OV, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு.
தனி மனிதன் சமூகமாகிறான்
சமீபத்தில் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர் தந்திருந்த விளக்கத்தை வாசிக்க நேர்ந்தது. ‘ஒழுக்கம் என்பது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச் சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப் பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கஞ்சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை’ என்று அவர் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கம் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் மனந்திறந்து கேட்டிருந்த வினாவுக்கு அவர் தந்திருந்த விளக்கத்தின் ஒருபகுதி. விளக்கம் தந்த எழுத்தாளர் ஒழுக்கமென்பது சமூகத்தால் உருவாக்கப்படுகிறதென்றும், அது காலத்துக்குக் காலம் மாறுகிறதென்றும், காலப்போக்குக்குத் தக்கதாக அது மாறாவிட்டால்தான் பிரச்சனை என்றும் ஆதங்கப்படுகிறார். இந்த எழுத்தாளரைப் பொறுத்தவரையில் ஒழுக்கமும், பண்பாடும் ஒன்றே. வீட்டுக்குள் போவதற்கு முன் செருப்பைக் கழட்டி வாசலில் வைத்துவிட்டுப் போவதற்கும் (பண்பாடு) ஓரினச்சேர்க்கையையும் (ஒழுக்கம்) அவர் ஒன்றாகத்தான் பார்க்கிறார். இதை வாசித்தபோது எந்தளவுக்கு தமிழ் சமுதாயத்தின் சிந்தனைப்போக்கில் ஒழுக்கத்தைக் குறித்த தீவிர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை என்னால் ஆழமாக எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு புரட்சிகரமாக எழுதிப் பிரபலமாக ஆரம்பித்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஆண், பெண் உறவு, திருமணம் பற்றிய அவருடைய சுதந்திரமான, சமுதாயம் வாசித்துப் பழகாத எண்ணங்களை அவர் தன் சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளியிட ஆரம்பித்தபோது சமுதாயம் அவரைப் பார்த்துச் சீறியது. முக்கிய பத்திரிகையொன்று அந்தச் சீற்றம் தாங்கமுடியாமல் தான் வெளியிட்ட அவருடைய கதைக்காக பொதுமன்னிப்புக் கேட்டது. அன்று சமுதாயம் பொதுவாக ஒழுக்கத்தைப் பற்றிய வலுவான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடவும் தவறவில்லை.
இன்றைக்கு தமிழினத்தில் ஒழுக்கத்தைப் பற்றி எதை எழுதினாலும் எவரும் கவலைப்படுவதாக இல்லை. இதுவரை ஒழுக்கமாகக் கருதப்பட்டவைகளில் சமுதாய மாற்றங்கள் தேவையென எண்ணுபவர்களின் தொகை அதிகரித்திருக்கிறது; முக்கியமாக பெருநகர்ப்புறங்களில் இது பெருகிவருகிறது. இதற்கெல்லாம் மேலைத்தேய நாடுகளின் விபரீதமான எண்ணப்போக்கைத்தான் நான் காரணமாகச் சொல்லுவேன். சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாரின் பங்கு, ஆண் பெண் உறவு, ஓரினச்சேர்க்கை என்பவை பற்றிய கருத்துக்கள் அடியோடுமாறி வைரஸ்போல பரவி, சமுதாயப் பரிணாம வளர்ச்சி என்ற பெயரில் தன்னை அழித்துக்கொண்டிருக்கும் மேலை நாடுகள் இணையதளங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மூலம் கீழைத்தேய சமுதாயத்திற்கு இவற்றை ஏற்றுமதி செய்து சமுதாய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. விஷயம் தெரியாமல் கண்மூடித்தனமாக அனைத்திலும் மேலைநாடுகளைப் பின்பற்றுபவர்கள் இந்த எண்ணங்களை முற்போக்குச் சிந்தனைகளாக நினைத்து நம்மக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பேசியும், எழுதியும் அறிமுகஞ் செய்துவைக்கிறார்கள். இணையதளங்களில் முகத்தையே காட்டாமல் எவரும் எதையும் எழுதி வெளியிடும் வசதியும் ஏற்பட்டிருப்பதால் இத்தகைய கருத்துக்களும், எண்ணங்களும் எவர் கண்ணையும் ஈர்க்கும்படி வெளிப்படையாகவே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் சீறியெழுந்திருக்கக்கூடிய மக்கள் இன்றைக்கு அமைதிகாக்கப் பழகியிருக்கும்வரை காலம் மாறிப்போயிருக்கிறது.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் உதாரணமாக இந்தியா டுடே சஞ்சிகையை எடுத்துக்காட்டலாம். வருடத்தில் ஓரிரு தடவையாவது இந்திய தேச மக்களின் பாலுறவுச் சிந்தனைகள், நடைமுறைகள் பற்றி அப்பட்டமாக கருத்துக்கணிப்பு நிகழ்த்தி, அவற்றை விளாவாரியாக விளக்கி அட்டைப்படம் தொடக்கம் படங்களோடு முத்திரைக் கட்டுரையாக அது வெளியிட்டு வருகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் இந்தப் பத்திரிகை இதைச் செய்திருந்தால் தெருவில் எரித்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள் மக்கள். பத்திரிகை ஆபிஸுக்கும் ஆபத்து நேர்ந்திருந்திருக்கும். இன்று அதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள் ஒருவருமே இல்லை. எந்தளவுக்கு சமுதாயம் மாறியிருக்கிறது தெரிகிறதா? அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகை மட்டுமே மட்டமான செய்தி வெளியிடும் பத்திரிகை என்ற எண்ணம் இருந்தது. அதுவும் வெறும் சாதாரண சினிமா ஸ்டில்களையும், செய்திகளையும் வெளியிட்டதற்கே அந்தப் பெயர். அன்று அது குடும்பப் பத்திரிகையாகக் கணிக்கப்படவில்லை. இன்றைக்கு காலம் எப்படித்தான் மாறியிருக்கிறது? ஓரினச் சேர்க்கையை ‘மனிதநேயக்’ கண்ணோட்டத்தோடு அணுகும்வரைக்கும் காலம் தமிழினத்தில் மாறித்தான் போயிருக்கிறது.
இதையெல்லாம் நான் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று வாசகர்கள் எண்ணலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒழுக்கம் பற்றிய சிந்தனையை மறுபடியும் கவனிப்போம். ஒழுக்கத்தை அவர் ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு காலப்பகுதியில் பின்பற்றுகிற ஒன்றாகத்தான் பார்க்கிறார். காலத்துக்குக் காலம் ஒழுக்கத்தில் மாறுதல் ஏற்படுவது மட்டுமல்ல; மாறுவதும் நல்லது என்பது அவருடைய எண்ணம்.
இதைத்தான் மேலை நாடுகளில் பின்நவீனத்துவ சிந்தனை என்று அழைக்கிறார்கள். இதுவே பின்நவீனத்துவமல்ல. இது பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படை அம்சம். எதுவும் நிலையானதாக இல்லாமல் பரிணாம வளர்ச்சி அடையும்; அடையவேண்டும் என்கிறது பின்நவீனத்துவம். இந்தப் போக்கு தமிழினத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மனித உரிமைக்குக் குரலெழுப்புகிறவர்கள் மத்தியில் பரவலாகப் படர்ந்து மீடியா மூலம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மீடியா ஒரு சக்தி வாய்ந்த சாதனம். சிறுபான்மைக் குழுவான மீடியா எங்கும் சமுதாய சிந்தனைகளில் மாற்றமேற்படுத்த உழைத்து வருகிறது. பின்நவீனத்துவம் அதன் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம். இன்றைக்கு ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். இராமகிருஷ்ணன் போன்றோர் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கு ஒருசில உதாரணங்கள் (Tamil Literature, Wikipedia). இவர்களெல்லாம் எல்லா விஷயத்திலும் பின்நவீனத்துவவாதிகளல்ல. இவர்களுடைய எழுத்துக்களில் அந்தப் போக்கைப் பல விஷயங்களில் காணமுடியும். ஓரினச்சேர்க்கையைப் பொறுத்தவரையில் இவர்கள் நிச்சயம் பின்நவீனத்துவவாதிகள்தான்.
பின்நவீனத்துவத்தைக் தவறாகக் கணிப்பதில் ஆபத்து இருக்கிறது. அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. கட்டுக்கோப்பில்லாமல் எழுதுவது, பாலியல் பற்றி அப்பட்டமாக எழுதுவது என்பதுதான் பின்நவீனத்துவமாகக் கருதுகிற எண்ணம் எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. இது முழுத்தவறு. அதுவல்ல பின்நவீனத்துவம். ஒரு காலத்தில் சமூகம் நவீனத்துவத்தைப் பின்பற்றியது. அன்று எல்லாம் கட்டுக்கோப்போடு இருந்து வந்தது; தெளிவான விளக்கம் ஒவ்வொன்றிற்கும் இருந்தது. வரைமுறை இருந்தது. உதாரணத்திற்கு ஒழுக்கத்தை எடுத்துக்கொண்டால் எது ஒழுக்கம், ஒழுக்கமில்லை என்ற வரையறை இருந்தது – இது நவீனத்துவம். சமூகம் நவீனத்துவ காலத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பின்நவீனத்துவத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்தது. பின்நவீனத்துவம் நவீனத்துவத்துக்கு எதிர்புறமானது.
பின்நவீனத்துவம் மாற்றத்தை விரும்புகிறது. அதனால் மாற்றங்களே தவறு என்றும் நினைத்துவிடக்கூடாது. பின்நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களை மாற்றங்களை விரும்பாதவர்களாக நினைப்பது அபத்தம். மாற்றங்கள் அவசியம். படைப்பு மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. வண்ணத்துப் பூச்சி புழுவாக இருந்து மாற்றமடைந்துதான் அழகாக சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. இயற்கையில் மாற்றங்களைக் காண்கிறோம்; நான்கு காலங்களைப் பார்க்கிறோம். மாற்றங்கள் முன்னேற்றத்துக்கு வழிகோலுகின்றன. சமூகத்தின் எண்ணங்களில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்து முன்னேற்றம் உண்டாகியிருக்கின்றது. மக்கள் குக்கிராமங்களிலேயே இருக்க அவசியமில்லாதபடி மாற்றங்கள் ஏற்படவில்லையா? அரசியல், கலை, பொருளாதாரம், தொழில்நுட்பம் என்று அனைத்திலும் மாற்றங்கள் அவசியம்; முன்னேற்றம் அவசியம். இதிலெல்லாம் தப்பில்லை.
பின்நவீனத்துவ மாற்றங்கள் இதுவரை நான் விளக்கிய விஷயங்களில் இல்லை. அது சமூகத்துக்கு எது அடித்தளமோ அதில் மாற்றத்தை நாடுகிறது. சமூகத்தை சமூகம் இல்லை என்று விளக்கப் பார்ப்பது அது நாடுகிற மாற்றம். நான் நானில்லை என்று நிரூபிக்கப் பார்ப்பது பின்நவீனத்துவம். ஒன்றின் அடையாளத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கிறது பின்நவீனத்துவம். இதுவரை ஒருவிஷயத்தைப் பற்றி பொதுவாக எல்லோரும் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையைத் தகர்த்து அது அதுவல்ல என்று காட்ட முயல்கிறது பின்நவீனத்துவம். இதனை ஆங்கிலத்தில் deconstruction என்று சொல்லுவார்கள். இதைத்தான் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது பின்நவீனத்துவம். அதன் இன்னொரு அம்சம் அது எதையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது (scepticism); ஒன்றின் மெய்த்தன்மையை சந்தேகிப்பது. அதை இந்தளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்களா?
பின்நவீனத்துவம் வரையறையோடும், கட்டுமானத்தோடும் இருக்கும் அனைத்தின் மையத்தையும் அசைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அதிகாரம் அதற்குப் பிடிக்காத ஒன்று; அதிகாரத்தின் மையத்தை அது அசைக்கிறது. ஒழுக்கம் அது விரும்பாத ஒன்று; அதன் ஆணிவேரை அது அகற்றுகிறது. எதெல்லாம் ஒரு வட்டத்துக்குள் வரையறையோடு இருக்கின்றதோ அதன் மையங்களையெல்லாம் தகர்த்துச் சின்னாபின்னமாக்குகிறது பின்நவீனத்துவம். இதுவரை அடிப்படையானது என்று எதைக் கருதி வந்திருக்கிறோமோ அதை இல்லாமலாக்குவது பின்நவீனத்துவம். இயல்பாக இருப்பதை அது இயல்பற்றதாக மாற்ற முயல்கிறது. இயல்பு, ஒழுக்கம், அதிகாரம் என்பதெல்லாம் பின்நவீனத்துவ அகராதியில் இல்லை. அதனால்தான் அது ஒழுக்கமென்று இதுவரை கருதப்பட்டதற்கு மறுவிளக்கமளிக்கிறது. ஓரினச்சேர்க்கையை அது ஒழுக்கமற்ற செயலாகக் கணிக்க மறுக்கிறது. ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளுக்கு மறுவடிவம் கொடுக்க முனைகிறது.
பின்நவீனத்துவம் தனிமனிதனுக்கும் அவனுடைய சிந்தனைகளுக்கும் முக்கியத்துவமளிக்கிறது. அவனே அவனுக்கு அதிகாரி. அவனுடைய எண்ணங்களே அவனை ஆளுகின்றன. அவைகூட தொடர்ந்து மாற்றமுறலாம். அவனுடைய விருப்ப வெறுப்புகளே அவனைப் பொறுத்தவரையில் எல்லாமாகிவிடுகின்றன. அவனைப் பொறுத்தவரையில் அவையே உண்மை. அவன் எதைச் சொன்னாலும் அது உண்மையே என்கிறது பின்நவீனத்துவம். சரி, தவறு என்பதெல்லாம் பின்நவீனத்துவத்தில் இல்லை; அவை வெறும் வேறுபட்ட கருத்துக்கள் மட்டுமே.
No man is an island என்று சொல்லுவார்கள். தனிமனிதன் சமூகத்தோடு சம்பந்தப்பட்டவன். மனிதன் ஒரு சமூக விலங்கு என்று தத்துவவாதியான அரிஸ்டோட்டில் சொல்லியிருக்கிறார். மனிதன் தனிமைக்காகப் படைக்கப்படவில்லை. தனக்காக வாழ்வதற்காக அவன் உருவாக்கப்படவில்லை. அவன் சமூகத்தோடு வாழப் படைக்கப்பட்டவன். பின்நவீனத்துவத்தின் தாக்கத்தால் சமூகம் என்பது பலபேர் என்றிருந்த நிலைமாறி தனிமனிதன் சமூகமாகி விடுகிறான். அவனுடைய சுதந்திரம், அவனுடைய உரிமை என்பதே இதன் மூச்சாக இருக்கிறது. சமூகத்துக்காக தனிமனிதன் என்றிருந்த காலம் போய் மனிதன் தானே ஓர் உலகமாகிவிடுகிறான். அவனுடைய எண்ணங்களும், விருப்பங்களும், போக்குகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற பார்வைக்குப் பெயர் மனிதநேயமாகிறது. தனி மனிதனும் அவனுடைய லாபங்களுமே பின்நவீனத்துவத்தின் இலட்சியப் பார்வை. இந்த அடிப்படையிலேயே தனி மனிதன் சம்பந்தப்பட்ட எதையும் அணுகி, எந்தக் கட்டுக்கோப்பையும் அவனுக்காகத் தகர்த்து அவனுடைய சுதந்திரத்தை நிலைநாட்டப்பார்க்கிறது பின்நவீனத்துவம். இந்தப் பார்வை கலை, அரசியல், சமுதாய ஒழுக்கம், தத்துவம், வரலாறு, பொருளாதாரம், கட்டடக்கலை, புனைகதை, இலக்கிய விமர்சனம் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. பின்நவீனத்துவப் பார்வையில் எல்லாத் துறைகளிலும் அனைத்தின் மையங்களும் தகர்க்கப்படுகின்றன.
ஓரினச்சேர்க்கையாளர்களை பின்நவீனத்துவப் பார்வையோடு கணிக்க தமிழ் சமுதாயம் இலக்கியவாதிகளாலும், பத்திரிகையாளர்களும், மீடியாக்களாலும் வழிநடத்தப்படுகிறது. மேலைத்தேய நாடுகளைப் போல ஓரினச் சேர்க்கைக்கும், அதோடு தொடர்புடைய ஏனைய சுதந்திரங்களுக்கும் சட்ட உரிமையளிக்கும் காலம் தமிழினத்தில் ஒருகாலத்தில் ஏற்படாமல் இருக்கப்போவதில்லை. தனி மனிதன் சமூகமாகிற நிலை அதிகரிக்க அதிகரிக்க ஒருங்கிணைந்த சமுதாயப் பார்வை இல்லாமல்போய் சமுதாயம் தன்னை அழித்துக்கொள்ளும் நிலைக்குப் போய்விடும். அதை மேலை நாட்டு சமுதாயங்களில் இன்று உணர முடிகின்றது. அழிவை அது வளர்ச்சியின், முன்னேற்றத்தின் அறிகுறியாகக் கருதுகிறது.
இதுவரை மதங்களும், ஒழுக்க நெறிகளும் சமுதாயத்தை ஒருங்கிணைத்து வைத்திருந்தன. பின்நவீனத்துவம் அதற்கு எதிரி. எதெல்லாம் சமுதாயத்தை இறுக்கமாக இணைக்க உதவியதோ அதையெல்லாம் களைவதுதான் பின்நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. இன்றைக்கு மேலைநாட்டு சமுதாயங்களில் ஒழுக்கம் என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. தனி மனிதனுடைய விருப்பு, வெறுப்பே அவனைப் பொறுத்தவரையில் ஒழுக்கம். அதுவும் நிலையானது அல்ல. சமூகக் கட்டுப்பாடு, சமூக ஒழுங்கு என்பதெல்லாம் இல்லாமல் போய் சமூகம் என்பது தனி மனிதன் என்ற நிலைக்கு உலகம் போய்க்கொண்டிருக்கிறது.
இங்குதான் கிறிஸ்தவனான என்னால் பின்நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றங்களை அறவே வெறுப்பவனல்ல நான். மாற்றங்கள் படைப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். மாற்றங்களில்லாமல் முன்னேற்றத்திற்கு வழியில்லை என்பதையும் படைப்பு எனக்குக் காட்டுகின்றது. படைப்பின் அஸ்திவாரத்தை அசைக்கப்பார்க்கிற மாற்றங்களுக்குத்தான் நான் விரோதி. ஒரு கிறிஸ்தவனால் மாற்றங்களை இருகரம் நீட்டி வரவேற்க முடியும்; அவை எந்த அடிப்படை அம்சங்களையும் நிராகரிக்காமல் இருக்கும்வரை.
பின்நவீனத்துவம் கர்த்தரின் வேதத்திற்கு எதிரி. வேதம் நிலையானது, கர்த்தர் நிலையாக இருப்பதைப்போல. அது என்றும் மாறாதது, கர்த்தர் மாறாதவராக இருப்பதைப்போல. ஒழுக்கத்தை வரையறுத்துக் காட்டுகிறது அது. ஒழுக்கம் கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை முறையாக விளக்குகிறது வேதம். மனிதன் ஒழுக்கத்தை உண்டாக்குவதில்லை; சமுதாயம் அதைக் கண்டுபிடிக்கவில்லை. இங்கேயே பின்நவீனத்துவத்தோடு நான் முரண்படுகிறேன். பின்நவீனத்துவம் ஒழுக்கத்தை இந்த முறையில் கணிப்பதில்லை. இந்து மதமும்கூட ஒழுக்கத்தை சமுதாயப் பண்பாடாக மட்டுமே காண்கிறது. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் வேதம் மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட விளக்கத்தை அளிக்கிறது. அதுவே உண்மையும்கூட. சமூகத்தில் பண்பாடு காலத்துக்குக் காலம் மாறலாம். ஒழுக்கம் எல்லா சமுதாயத்துக்கும் பொருந்துவதாக கடவுளால் தரப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை; அது மாறமுடியாது, மாறாது. அதனால்தான் பத்துக்கட்டளைகளை ஒழுக்கநியதிக் கோட்பாடுகள் என்று அழைக்கிறோம். ஒழுக்கம் நிரந்தரமானது. பண்பாடு அப்படிப்பட்டதல்ல. ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் ஒன்றாகப் பார்த்து குழப்பமடையக்கூடாது.
சமூகம் என்பது என்ன என்பதை நாம் வேதத்திலேயே கண்டுகொள்கிறோம். தனிமனிதனையும் அவனுடைய சுதந்திரத்தின் எல்லைகளையும் நிர்ணயிக்கிறது வேதம். எல்லாவற்றிற்கும் எது அடிப்படை என்பதை வேதத்தில் பார்க்கிறோம். நிலையானது எது, நிலையற்றது எது என்பதற்கு வேதமே விளக்கமளிக்கிறது. எல்லா விஷயங்களிலும் வேதம் பின்நவீனத்துவத்துக்கு எதிர்புறமானது.
ஓரினச்சேர்க்கை பின்நவீனத்துவதைப் பொறுத்தவரையில் தனிமனிதனின் பாலியல் விருப்பு வெறுப்போடு சம்பந்தப்பட்ட வெறும் நடத்தை மட்டுமே. அதைத்தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளரின் கூற்று விளக்க முயல்கிறது.
அந்த எழுத்தாளர் இன்னோரிடத்தில் ‘அந்த உந்துதல் இயற்கையானது’ என்றும் ‘எல்லா உயிரினத்திலும் காணப்படுகிறது’ என்றும் எழுதியிருக்கிறார். ஏனைய உயிரினங்களைவிட மனிதன் வித்தியாசமானவன் என்பது அவருக்குத் தெரியவில்லை. மனிதன் அழிவில்லாத ஆவியோடு (ஆன்மா) படைக்கப்பட்டிருக்கிறான். கடவுளோடு உறவுகொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறான். அவனும் மிருகமும் ஒன்றல்ல. ஏனைய உயிரினங்களைப் போலல்லாது அவன் பெண்ணோடு மட்டுமே வாழவேண்டியவனாக, வாழக்கூடியவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். அதனால்தான் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு (படைப்புக்கு) மாறானது.
இன்றைக்கும் தமிழ் சமூகம் ஓரினச்சேர்க்கையை அருவருப்போடு பார்த்தாலும் அப்படிப்பார்ப்பது தவறு என்றும், அதை ஒழுக்கக்கேடாகப் பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகி அதைப் பின்பற்றுகிறவர்கள் துன்புறுத்தலுக்கும், வசைக்கும் ஆளாகாமல் அதைத்தொடர வழிகாண வேண்டும் என்பதே பின்நவீனத்துவம். அதையே அந்த எழுத்தாளரும் விளக்க முனைகிறார். பின்நவீனத்துவ எழுத்தாளர்களும், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மீடியாக்களும் இந்தப் பிரச்சாரத்திலேயே வலுவாக ஈடுபட்டிருக்கின்றார்கள். நான் வாசிக்கும் கர்த்தரின் வேதம் இந்த எண்ணப்போக்கை ஒழுக்கவீனமாகக் காட்டுகிறது. என்னால் இதை வேதக்கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுக முடியும். அதற்காக நான் வெட்கப்படவோ, பலரின் பாராட்டுதலுக்கும் ஆளாக முடியாதே என்று வருத்தப்படவோ முடியாது. அந்த அரசியல் வித்தைகள் கிறிஸ்தவனுக்குத் தெரியக்கூடாது. இதற்காக எனக்கு மனிதாபிமானம் இல்லை என்றில்லை. மெய்யான மனிதாபிமானம் இருக்கிறவர்கள் ஓரினச்சேர்க்கையால் ஏற்படக்கூடிய அழிவை நினைத்துப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். மருத்துவ வல்லுனர்களே இதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். கடவுள் இதை இயல்பானதாகக் கருதவில்லை. இதைக் கேவலமானதாகக் கருதி அவர் வெறுக்கிறார் (ரோமர் 1:16-32). படைப்பில் இதற்கு இடமேயில்லை. பத்துக்கட்டளைகளும் இதை நிராகரிக்கின்றன (யாத் 20:14). சோதோமும், கொமோராவும் கர்த்தரின் கடுங்கோபத்துக்கு ஆளாகி அழிவைச் சந்திக்குமுன் ஓரினச்சேர்க்கை அங்கே எல்லைமீறிப் போயிருந்திருக்கிறது (ஆதி. 19).
பின்நவீனத்துவம் ஒன்றை நினைத்துப் பார்க்க மறுக்கிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுவருகிறவர்கள் அதிலிருந்து விடுபடத் தவிக்கிறவர்களாகவும் இருந்துவிடலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. எல்லோரும் அந்த உறவையே நாடுவது போலவும், நாம் அனுதாபத்தோடு அவர்களுக்குத் துணைபோக வேண்டும் என்பதுபோலவும் எழுத்தாளர்களும், மீடியாக்கள் எழுதியும், பேசியும் வருகிறார்கள். உண்மை அதுவல்ல. சமூகத்தில் சிறுபான்மையினர் இந்த உறவில் விழுந்து விடுதலைக்கு வழிதெரியாமல் வாழ்ந்து வரலாம்; உள்மனத்தின் ஆழத்தில் குற்ற உணர்வால் அதிலிருந்து விடுபடத் தவித்துக்கொண்டும் இருந்து வரலாம். எங்கிருந்தாவது உதவி வராதா? என்று ஆழ்மனத்தில் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அதிலிருந்து விடுபட வழிதெரியாமல் வழிதேடிக்கொண்டிருக்கலாம். அவர்களுடைய விடுதலைக்கு பின்நவீனத்துவத்தில் சொட்டு மருந்தும் இல்லை. ஏன் தெரியுமா? பின்நவீனத்துவம் அதை நோயாகவே பார்க்க மறுப்பதால்தான்; தவறான உறவாகவே அதை ஏற்றுக்கொள்ள பின்நவீனத்துவம் மறுக்கிறது. ஓரினச்சேர்க்கையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறவர்களுக்கு யாரிடம் இருக்கிறது மருந்து? நம்மைப் படைத்தவர் மட்டுமே அதற்கு விடுதலை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்; கிறிஸ்து மட்டுமே துணைசெய்யக்கூடியவராக இருக்கிறார்.
ஓரினச்சேர்க்கை விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டதொன்றல்ல. கர்த்தரின் நீதிக்கும், மனிதனின் தன்மைக்கும் இயல்புக்கும் முற்றிலும் மாறானது. மனிதன் இதை நாடுவதற்குக் காரணம் அவனில் இருக்கும் பாவமே. அதிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும் வரையில் அவனால் அதில் ஈடுபடக்கூடிய இச்சையைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. பாவத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களுமே இதில் ஈடுபடுகின்றார்கள் என்றில்லை. சமுதாயத்தில் அநேகர் இதை வெறுக்கத்தான் செய்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடுகளும், பொதுவான கிருபையும் அவர்கள் இதில் ஈடுபடாமல் இருக்க துணை செய்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய இருதயம் இதை நாடக்கூடிய இச்சையோடுதான் இயங்குகிறது. அதற்கு நிரந்தர விடுதலை கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வரமுடியும். வேதம் மட்டுமே இந்த விடுதலைக்கு வழிகாட்டுகிறது. தன்னுடைய பாவ இயல்பை உணர்ந்து அதிலிருந்து விடுபட கிறிஸ்துவை நாடி வந்து பாவமன்னிப்புக்காகவும், அழிவற்ற வாழ்வுக்காகவும் அவரை விசுவாசிக்கிறவர்களால் மட்டுமே ஓரினச்சேர்க்கை போன்ற முறைகேடான ஒழுக்கக்கேட்டிலிருந்து விடுபட முடியும். கிறிஸ்து நிச்சயம் அவர்களை மன்னித்து விடுதலை கொடுப்பார். எல்லாப் பாவங்களுக்கும் அவரிடம் மன்னிப்பு உண்டு. மனிதாபிமானமும், மனிதநேயமும் என்னிடம் இருப்பதால்தான் உண்மையை மறைக்காமல் இதிலிருந்து விடுபடுவதற்கான வழியை விளக்கிக் கொண்டிருக்கிறேன். மனிதனில் பிறப்பில் இருந்து தொடர்ந்து அவனை சீரழித்துக் கொண்டிருக்கும் பாவத்தை சுட்டிக்காட்டாமல் இருப்பதுதான் மனிதநேயமற்ற செயல். மனிதனுடைய அழிவை அல்ல, விடுதலையையே கடவுள் விரும்புகிறார். ‘எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்’ என்று வேதம் சொல்லுகிறது (1 தீமோ. 2:4).
சிறைக்கு வெளியில் சிறைவாசம்

பவுல்: துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா (2 தீமோத்தேயு 4:13).
வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றதோ இல்லையோ நிச்சயம் மனிதனுக்கு அறிவைக்கொடுக்கும்; அனுபவத்தை அளிக்கும். அது அவனை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயத்தை ஆராய வைக்கும்; அதுபற்றி சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துத் தெரிவிக்க வலியுறுத்தும். வாசிக்கின்ற மனிதன் பல விஷயங்களை வாழ்க்கையில் அறிந்துகொள்ளுகிறான். பல விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவனாக இருக்கிறான்.
வாசிக்காதவர்களால் சிந்திக்க வழியில்லை. விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலிருந்தால் அதுபற்றி எப்படி சிந்திப்பது? எப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பது? அந்தக் கருத்தை எப்படி வெளிப்படுத்துவது? வாசிக்கும் வழக்கம் இல்லாவிட்டால் நம்மால் தெளிவான, முதிர்ச்சியான சம்பாஷனை செய்யமுடியாது. முட்டாள்களைப்போலத்தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வாசிக்காதவர்களுக்கு பல விஷயங்களில் அறிவு இருக்க வழியில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாக இருப்பார்கள்; வளருவார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அவர்களால் எந்தப் பயனுமிருக்காது. வாசிக்காதவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிக் காரணகாரியங்களோடு ஆராய்ந்து தெளிவான விளக்கங்கொடுக்க முடியாது. அவர்களுடைய பேச்சு அறிவு சார்ந்ததாக இல்லாமல் அசட்டுத்தனமானதாக இருந்துவிடும். இப்போது தெரிகிறதா எந்தளவுக்கு வாசிப்பு அவசியம் என்று? அதனால்தான் அப்போஸ்தலன் பவுலும் சிறையிலிருக்கும்போது வேதப்புத்தகத்தையும், ஏனைய அவசியமான நூல்களையும் கொண்டுவரும்படித் தன் நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார்.
நான் சிறு வயதிலேயே வாசிப்பில் ஆர்வம் காட்டினேன். அது எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை. பதினொரு அல்லது பன்னிரெண்டு வயதுப் பருவத்தில் வாசிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அதுவும் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். அந்த வயதில் இலக்கியப் பத்திரிகைகளாகத்தான் தேடி வாசிப்பேன். அந்தக் காலத்துப் பத்திரிகைகள் இன்றிருப்பதுபோல அசிங்கத்தனமான பத்திரிகைகளாக இருக்கவில்லை. அவை இலக்கியத்தரம் வாய்ந்தனவாக, இலக்கியவாதிகளை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்தவை. அந்தக் காலத்தில் புதுமைப்பித்தன், சி. சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, லா. ச. ராமாமிருதம், நா. பா. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், மு. வரதராசன் என்பவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டு வாசிக்கும் பழக்கத்தை நான் அதிகரித்துக்கொண்டேன். மு. வரதராசனின் அறிவுசார்ந்த சிந்தனைக் கட்டுரைகள் எனக்கு அக்காலத்தில் மிகவும் பிடித்தமானவை. வாசித்ததையெல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடிந்ததோ இல்லையோ வாசிப்பதில் குறைவைக்கவில்லை. இலக்கியத்தோடு அறிவு சார்ந்த நூல்களையும் நான் வாசித்தேன். இதற்கு வசதியாக என் அப்பா நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று வாங்கிக் குவிப்பார். அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஒரு வாரத்துக்குள் வாசித்து முடித்துவிடுவேன். இன்று பெரியவர்களாக இருப்பவர்களும் வாசித்துவிட்டு விளங்கவில்லை என்று சொல்லுகின்ற எழுத்துக்களை நான் பன்னிரெண்டு வயதில் புரிந்துகொண்டு மனதுக்குள் மகிழ்ந்திருக்கிறேன்; அந்த எழுத்துக்களைப் பாராட்டியிருக்கிறேன். அப்படியாக நான் வாசித்த, வளர்ந்தவர்களும் புரியவில்லை என்று சொன்ன ஒரு குருநாவல் இப்போதும் என் மனதுக்கு வருகிறது. அதில் போட்டிருந்த படமும் நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஊர் நூலகங்களுக்குப் போய் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் புரட்டிப் புரட்டி வாசித்திருக்கிறேன். நேரம் போவதே தெரியாது. ஒரு நூலகத்தில் அங்கத்தவராக வரவும் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், வயது போதாததால் அதில் இணைவது அன்று சுலபமாக இருக்கவில்லை.
இதையெல்லாம் நான் எதற்காக சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த வாசிக்கும் பழக்கம்தான் என்னை சிந்திக்கிறவனாகவும் மாற்றியிருக்கிறது; எழுதுமளவுக்கு கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கும் நான் வாசிக்கிறேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசிக்கிறேன். என் வாசிப்பு கிறிஸ்தவத்தைப் பற்றியதாக மட்டும் இருந்துவிடுவதில்லை. அறிவுசார்ந்த நூல்களையும், பத்திரிக்கைகளையும் நான் வாசிக்கிறேன். இதற்காக நான் கண்டதையும் வாசிப்பதில்லை. தெரிவு செய்த பத்திரிகைகள், நூல்கள், தொகுப்புகள் என்று பல விஷயங்களை நான் வாசிக்கிறேன். பல விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இன்றைக்கும் ஆசைப்படுகிறேன். வாசித்து அறிந்துகொள்ளாதது எவ்வளவோ இருக்கிறதே என்ற ஆதங்கமும் எனக்கு உள்ளுக்குள் இருக்கிறது. வாசிக்கும் பழக்கத்தை எங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நானும் என் மனைவியும் கற்றுத் தந்திருக்கிறோம். வயதுக்கேற்றவிதத்தில் நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவர்களுக்கு ‘போரடிக்கிறது’ (Bored) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அந்தளவுக்கு அவர்கள் நேரத்தை வாசிப்பதில் செலுத்தியிருக்கிறார்கள். குடும்பமாக விடுமுறைக்கு போகும்போதெல்லாம் முதல் நாளிலேயே எந்த ஊரிலிருக்கிறோமோ அந்த ஊர் நூல்நிலையத்துக்கு அவர்களை அழைத்துப் போய் கைநிறைய நூல்களை வாசிப்பதற்கு கொடுத்துவிடுவோம். இன்று அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதற்கு நிச்சயம் சிறுவயதிலிருந்தே கொடுக்கப்பட்ட வாசிப்புப் பயிற்சியும், அதிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவும் அனுபவமும் காரணமாக இருந்திருக்கிறது என்று எங்களால் நிச்சயமாக சொல்ல முடியும்.
வாசிப்பு மனிதனை சிந்தனையாளியாக மாற்றுகிறது. அதுவும் ஒரு மனிதன் கிறிஸ்தவனாக வந்துவிட்டால் அவன் உண்மையிலேயே பெரிய சிந்தனையாளியாக மாறிவிடுகிறான். அதுதான் கிறிஸ்தவத்தில் இருக்கும் சிறப்பான அம்சம். சிந்திக்கத் தெரியாதவனாக இருந்தவனை சிந்திக்க வைப்பதே கிறிஸ்தவம். உண்மை எது, பொய் எது என்று ஒரு கிறிஸ்தவனால் மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் அவன் கிறிஸ்துவால் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதுதான். உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவன் தான் ஆராதிக்கும் கடவுளின் வேதத்தை வாசித்து அவருடைய திட்டங்களையும், கட்டளைகளையும் எண்ணங்களையும் அறிந்து உணர்ந்துகொள்ளுகிறான். அவரோடு உறவாடும் அவனால் அவருடைய இருதயத்தை அறிந்து சிந்திக்க முடிகிறது. உலகத்தை அவனால் அவருடைய பார்வையோடு பார்க்க முடிகிறது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே அவனுக்கு இப்போது புதிராகவும், குழப்பமாகவும் இருப்பதில்லை. படைத்தவரின் பார்வை அவனுக்கு இப்போது கிடைத்துவிட்டதல்லவா? அவருடைய கண்களோடு அவருடைய வார்த்தை மூலம் எல்லாவற்றையும் அவன் இப்போது பார்க்கிறான். அதுதான் கிறிஸ்தவம் மனிதனுக்கு தந்திருக்கின்ற ஆசீர்வாதம்.
கிறிஸ்தவனாக இல்லாத காலத்தில் நான் அதிகம் வாசித்து கற்றுக்கொண்டிருந்தபோதும் கிறிஸ்தவனான பிறகே நான் உண்மையில் பிறந்ததற்கான அர்த்தமுள்ளவனானேன். கிறிஸ்தவம் என்னை மெய்ச் சிந்தனையாளியாக்கியது. இன்றைக்கு என் வாசிப்பும் எழுத்தும் அந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. கிறிஸ்தவம்தானே மார்டின் லூத்தரையும், ஜோன் கல்வினையும், ஜோன் ஓவனையும், ஜோன் பனியனையும், ஸ்பர்ஜனையும் சிந்தனையாளிகளாக்கியது. சிந்திக்க ஆரம்பித்த கிறிஸ்தவன்தானே 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தையும், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் சீர்திருத்தத்தையும், 18ம் நூற்றாண்டு எழுப்புதல்களிலும் பங்கேற்றான். 18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த சிந்தனையாளராக இருந்தவர் கிறிஸ்தவத் தலைவர்களில் சிறப்புமிக்கவராக அமெரிக்காவில் இருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸ்.
‘சிந்திக்காத கிறிஸ்தவன்’ என்ற வார்த்தைப் பதங்கள் கிறிஸ்தவத்திற்கே அவமானத்தைத் தேடித் தரும் வார்த்தைகள். உண்மையில் அப்படியொருவரும் இருக்கக்கூடாது. ஆனால், நம்மினத்தில் அந்தத்தொகைதான் அதிகம். இதற்குக் காரணம் நம்மினத்துக் கிறிஸ்தவம் சிந்தனைபூர்வமான வேதபோதனைகளுக்கு இடங்கொடுக்காமலிருப்பதுதான். ஆராதனையை எடுத்துக்கொள்ளுங்கள்; சிந்திப்பதற்கு இன்றைய கிறிஸ்தவ ஆராதனையில் எங்கே இடமிருக்கிறது? பிரசங்கம் வேதப்பிரசங்கமாக இல்லாமல் வெறும் வார்த்தை ஜாலமாகவும், அள்ளித் தெளிக்கப்படும் வாக்குத்தத்த வசனங்களாக மட்டுமே இருக்கின்றது. தனிமனித அனுபவப் பகிர்வை மட்டுமே அதில் பார்க்கிறோம். இதில் சிந்திப்பதற்கு எங்கே வழியிருக்கிறது. ரோமர் 12:1-2 வசனங்கள் விளக்குகிறபடி புத்திரீதியிலான அறிவுசார்ந்த ஆராதனையாக தமிழ் ஆராதனைகள் இருப்பதில்லை. உணர்ச்சிக்கு உப்பிட்டு வளர்க்கும் வெறும் மாம்ச ஆராதனையாகத்தான் இருக்கின்றது. இந்தவித கிறிஸ்தவம் நம்மவர்களை வேதசிந்தனையாளர்களாக இருக்க முடியாமல் செய்துவிடுகிறது. நம்மவர்களும் வேத சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாமல் நேரத்தைக் கொடுத்து வாசிக்காதவர்களாக இருந்து வருகிறார்கள். வேதத்தை அவர்கள் ஆராய்ந்து வாசிப்பதில்லை. இருக்கும் கொஞ்சநஞ்ச வாசிப்பும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளுகிற விதத்தில் இருப்பதில்லை.
நம்மவர்கள் அதிகம் பாரம்பரியங்களுக்கும், சடங்குகளுக்கும் அடிமையானவர்கள், இன்னும் இவற்றில் இருந்து நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் விடுதலையடையவில்லை. பாரம்பரியமும், சடங்குகளும் சிந்தனைக்கு எதிரி தெரியுமா? சிறுவயதில் நான் என் குடும்பப் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் புரிந்துகொள்ள கேள்விகள் கேட்டிருக்கிறேன். எந்தக் கேள்வி கேட்டாலும், ‘அப்படித்தான் செய்ய வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது’ என்று மிரட்டுவார்கள். சிந்தனைக்கும், கேள்விக்கும் அங்கே இடமிருக்கவில்லை. அதுவே என்னை அதிகம் சிந்திக்கவைத்தது, கேள்வி கேட்க வைத்தது. பாரம்பரியமும், சடங்குகளும் கிறிஸ்தவத்தின் எதிரி. அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் நம்மினத்துக் கிறிஸ்தவம் விடுதலையடையும். சிறைக்கு வெளியில் வந்தும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது நம்மினம். பாரம்பரியத்திலும், சடங்குகளிலும் இருந்து இன்னும் விடுபடாதவர்கள் முடமான கிறிஸ்தவ வாழ்க்கை மட்டுமே வாழ முடியும். உங்களுடைய கிறிஸ்தவம் உங்களை சிந்திக்க வைத்து பாரம்பரியத்திலிருந்தும், சடங்குகளிலிருந்தும் உங்களுக்கு இன்னும் விடுதலை தராமல் இருந்தால் நீங்கள் உண்மையில் கிறிஸ்தவரா என்றுதான் உங்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளாததும் இந்த அவலங்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதற்கு ஒரு பெருங்காரணம். வாசிப்பில்லாமல் சிந்திக்க வழியில்லை. சிந்திக்காமல் ஒரு விஷயத்தை ஆராய வழியில்லை. வேதத்தை வைத்து ஆராய்ந்து பார்க்காமல் எந்த விஷயத்தைப் பற்றியும் உண்மைத் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியாது. பத்துக் கட்டளைகளை வைத்து ஆராய்ந்து பார்த்தாலே போதும் நம் பாரம்பரியப் போலித்தனங்கள் எந்தளவுக்குப் பொய்யானவை, கிறிஸ்தவத்திற்கு முரணானவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா? வாசிக்க வேண்டும் என்ற உணர்வை உங்களில் ஏற்படுத்துவதற்காகத்தான். முடமாக வாழாமல் நீங்கள் நிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். சத்தியத்தை சத்தியமாக நீங்கள் தெரிந்துகொண்டு அசத்தியத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். வாசிக்க ஆரம்பியுங்கள்; வேதத்தை விடாமல் சிந்தித்து ஆராய்ந்து வாசியுங்கள். நல்ல சத்தான ஆக்கங்களையும், நூல்களையும் வாசிக்க ஆரம்பியுங்கள். வேதத்தை அடித்தளமாக வைத்து நீங்கள் வாசிக்கின்ற அனைத்தும் வேதக் கருத்துக்களுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்று ஆராய்ந்து வாசியுங்கள். வேதபூர்வமான உலகப் பார்வையொன்றை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு வாசிக்க ஆரம்பியுங்கள். உங்கள் வாசிப்பு உங்களை சிந்திக்க வைக்கட்டும். கேள்விகளைக் கேட்க வைக்கட்டும். உங்கள் சிந்தனை விருத்தியாகட்டும். சிறைக்கு வெளியில் வாழும் உங்கள் சிறைவாசத்துக்கு ஒரு முடிவு வரட்டும். இன்றே கருத்தோடு வாசிக்க ஆரம்பிப்பீர்களா?
சில சமயங்களில் சில நூல்கள் – 3
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மூன்று சிறு நூல்களை நாம் தமிழில் வெளியிட்டோம். இவை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த மூன்றைப் பற்றியும் நான் எழுதுவதற்குக் காரணம் இவை சுவிசேஷ பிரசங்கங்கள் என்பதால்தான். சுவிசேஷ பிரசங்கங்கள் விசேஷமானவை. எந்தளவுக்கு விசேஷமானவை என்பதை நம்மினத்தில் பெரும்பாலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏனைய பிரசங்கங்களைவிட சுவிசேஷ பிரசங்கங்கள் கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டியவை. அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால அளவில் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை சிந்திக்க வைத்து, அவர்களுடைய இதயத்தைத் தொட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டிய கடமை பிரசங்கிக்கிறவருக்கு இருக்கிறது. இத்தனையையும் அந்தக் குறுகிய கால அளவில் செய்யவேண்டுமானால் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பெருங்கவனம் எடுக்க வேண்டியது அவசியம்.
பிரசங்கத்தைத் தெளிவாகத் தயாரிப்பதில் மட்டுமல்லாமல், கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணப்போக்கு, மனநிலை, அவர்களுடைய வாழ்க்கை நிலை, தேவைகள், படித்தவர்களா, படிக்காதவர்களா என்பது போன்ற அத்தனையையும் மனத்தில் வைத்துப் பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டும். பின்பு தயாரித்த பிரசங்கத்தைக் கேட்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ள வேண்டிய மொழியில், சிற்றோடை துள்ளித் தவன்று தடையின்றி ஒடுவதுபோல் பிரசங்கிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. பிரசங்கத்தின் முடிவில், ‘இவர் சொல்லுவது உண்மைதான், இயேசு அவசியம் தேவைதான்’ என்றளவுக்கு கேட்பவர்களை சிந்திக்க வைக்கின்ற விதத்தில் பிரசங்கம் இருக்க வேண்டும். அவர்கள் இயேசுவிடம் வருவதும் வராததும் கர்த்தரின் கையில் தங்கியிருக்கிறது. அது நம்முடைய வேலையல்ல. இருந்தாலும் கேட்பவர்களின் இருதயத்தைத் துளைத்து பாவத்தைப் பற்றியும், அதிலிருந்து இயேசுவின் மூலமாக விடுதலை அடைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மனித அளவில் அவர்களை சிந்திக்க வைத்து ஒருமுடிவுக்கு வரும்படிச் செய்ய வைக்கும் வகையில் சுவிசேஷ பிரசங்கம் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பணி பிரசங்கியினுடையது. அதனால் தான் சுவிசேஷப் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பிரசங்கி விசேஷ கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
இதுவரை நான் விளக்கிய விதத்தில் நம்மினத்தில் பெரும்பாலும் பிரசங்கங்கள் பொதுவாகவே இருப்பதில்லை. நம்முன்னால் உட்கார்ந்து பிரசங்கம் கேட்கிறவர்கள் ஆண்டவரை அறிந்தவர்களா, அறியாதவர்களா? என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல் வாக்குத்தத்த வசனங்களை அள்ளித்தெளித்து, ‘கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’, அதைச் செய்வார் இதைச் செய்வார் என்றெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவதே பெரும்பாலும் நடந்துவருகிற காரியம். தமிழ் டி.வி செனல்களில் இத்தகைய பேச்சுக்களைத்தான் சுவிசேஷ பிரசங்கங்கள் என்ற பெயரில் கேட்க வேண்டியிருக்கிறது. அதுவும் சுவிசேஷ செய்தி, பிரசங்கம் என்ற பதங்களைக்கூடப் பயன்படுத்தாமல் ‘ஆசீர்வாத செய்தி’ என்ற பதத்தையே பொதுவாக எல்லோரும் பயன்படுத்தி வருகிறார்கள். செழிப்பு உபதேசம் (Prosperity Gospel) இந்தளவுக்கு மெய் சுவிசேஷத்தை இன்று இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது.
இத்தகைய நடைமுறை சூழ்நிலைதான் இந்த மூன்று நூல்களையும் தமிழில் வெளியிட வைத்தது. இவை மூன்றும் முழுக்க முழுக்க சுவிசேஷ பிரசங்கங்கள். இந்த மூன்றையும் பிரசங்கித்தவர் அல்பர்ட் என். மார்டின் என்ற அருமையான பிரசங்கியார்; முக்கியமாக சுவிசேஷ பிரசங்கம் செய்வதில் கைதேர்ந்தவர், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பலருடைய உள்ளத்தை அசைத்திருக்கும் இந்த மூன்று பிரசங்கங்களும் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்பதால்தான் இதை வெளியிட்டிருக்கிறோம்.
இந்த மூன்று நூல்களின் தலைப்பு:
‘உன்னைப் பற்றிய குற்றப்பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும்’
‘மதில் மேல் பூனை’
‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை?’
இவை ஒவ்வொன்றும் இருபது பக்கங்கள் கொண்டவை; கையடக்க மானவை. கண்ணைக் கவரும் முக அட்டைகளைக் கொண்டு அருமையாக அச்சிடப்பட்டிருக்கின்றன. வாசிப்பதற்கு இலகுவான முறையில் எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. இயேசுவை இன்னும் அறியாதவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியான முறையில் தயாரிக்கப்பட்டு குறைவான விலையில் வெளிவந்திருக்கின்றன. தனிப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், சபைகள் இவைகளை அதிகமாக வாங்கி சுவிசேஷ ஊழியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ளன.
சுவிசேஷ செய்தியை அருமையாக விளக்கி கைப்பிரதிகள் வெளியிட மாட்டீர்களா? என்று என்னிடம் எத்தனையோ பேர் கேட்டிருக்கிறார்கள். அந்தக்குறையை இந்த நூல்கள் நிச்சயம் நீக்கியிருக்கின்றன. இத்தகைய தரமான சுவிசேஷ சிறு நூல்கள் நம்மொழியில் இல்லை என்பது இவற்றை வாசிக்கப் போகின்ற உங்களுக்கே தெரிந்திருக்கும். இவற்றை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
இந்நூல்களின் சிறப்பம்சங்கள்:
- சுத்தமாக வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எந்தப் பிரசங்கமாக இருந்தாலும் அது வேதத்தை விளக்குவதாக, வேத வசனங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்; வேதத்தில் இருந்தே புறப்படுவதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேதப் பிரசங்கமாக இருக்க முடியாது. சுவிசேஷ பிரசங்கத்திற்கும் அதே நிலைதான். இன்றைக்கு சுவிசேஷ செய்தி என்பது தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை அனுபவ விளக்கமாக மட்டுமே இருக்கின்றது. சொந்த அனுபவங்களை விளக்க வசதியாக அங்கும் இங்குமாக ஓரிரு வசனங்களை மட்டும் செய்தி கொடுக்கிறவர் பயன்படுத்திக் கொள்ளுவார். இயேசுவை ஏன் ஒருவர் விசுவாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தனி மனித அனுபவம் மட்டுமே தமிழினத்தில் சுவிசேஷமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் சுவிசேஷ செய்தி என்றால் என்ன? என்பது தெரியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் மாறாக வேதத்தை அடிப்படையாகக் கொண்டு சுவிசேஷத்தை விளக்குவதற்காக அதற்கேற்றவகையில் அமைந்துள்ள தெரிந்தெடுக்கப்பட்ட வசனப்பகுதிகளை அவை அமைந்திருக்கும் வேத சந்தர்ப்பத்திற்கேற்ற முறையில் விளக்கி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இந்த நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. எல்லாவிதங்களிலும் வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது இவற்றின் விசேஷ தன்மை. பிரசங்கியின் சொந்த அனுபவங்களை இதில் காணவழியில்லை. இயேசு யார்? அவரை விசுவாசிப்பது ஏன் அத்தனை அவசியமானது என்பதை மட்டுமே பிரசங்கிப்பவர் விளக்கியிருக்கிறார்.
- சொல்ல வேண்டிய முறையில் சுவிசேஷத்தின் அடிப்படை அம்சங்களைத் தெளிவாக விளக்குகின்றன.சுவிசேஷம் சொல்லும் முறையை நாமெல்லாம் சுவிசேஷத்தின் நாயகனான இயேசுவிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அத்தோடு அப்போஸ்தலர்களும் இதில் நமக்கு உதவுகிறார்கள். அவர்களுடைய சுவிசேஷ செய்தி வேத அடிப்படையில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மைகளைத் தெளிவாக விளக்குவனவாகவும் இருக்கின்றன. சுவிசேஷத்தின் அடிப்படை அம்சங்கள் சுவிசேஷ செய்திகளில் காணப்பட வேண்டும். கடவுள் யார், பாவம் என்றால் என்ன, மனிதனின் உண்மையான நிலை என்ன, பாவத்துக்கு நிவாரணம் எது, பாவம் யாரால் போக்கப்பட முடியும், பாவிகளும், பாவவிடுதலை பெற்றவர்களும் போகின்ற நித்திய இடங்கள் யாவை, மனிதன் பாவத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த சுவிசேஷ செய்தியும் பதிலளிக்காவிட்டால் அவை சுவிசேஷ செய்தியாக இருக்க முடியாது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வேதத்தில் இருந்து தெளிவாக, சுருக்கமாக, ஆணித்தரமாக, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பதிலளிக்கின்றன இந்நூல்கள். ஒவ்வொரு செய்தியும் இவற்றில் எதையும் விட்டுவைக்காமல் சுவிசேஷத்தை உள்ளது உள்ளபடி தெளிவாக விளக்கியிருப்பது அவற்றின் சிறப்பம்சம்.
- மனித இருதயத்தைப் புரிந்துகொண்டு சுவிசேஷ அழைப்பை பிரசங்கி கொடுத்திருக்கும் முறை அருமை.இயேசுவிடம் வா! இயேசுவிடம் வா! என்று திரும்பத் திரும்பக் கூறுவது அல்ல சுவிசேஷ அழைப்பு. மனிதனுடைய இருதயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவன் வாழ்கின்ற சூழ்நிலை, அவனுடைய ஆத்மீகத் தேவைகளை அறிந்து வைத்திருந்து, இயேசுவிடம் அவன் ஏன் வரவேண்டுமென்பதை விளக்கி உடனடியாக அவன் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக சுவிசேஷ செய்தியில் சொல்லவேண்டும். அது மட்டுமல்லாமல் சுவிசேஷ பாரத்தோடு, அவ்வாறு அவன் மனந்திரும்பாவிட்டால் அவனுக்கு அழிவைத்தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்காட்டி அவனுடைய இருதயத்தோடு போராடி இயேசுவிடம் அவன் வரவேண்டிய அவசியத்தை அவன் பார்க்கும்படிச் செய்ய வேண்டும். இந்த மூன்று நூல்களிலும் அல்பர்ட் என். மார்டின் அதைச் செய்திருக்கும் முறை அருமையானது. இந்தவிதத்தில் நம்மினத்தில் சுவிசேஷம் சொல்லப்படுவதில்லை என்பது நூலை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். சுவிசேஷ அழைப்பைக் கொடுத்து ஆத்துமாக்களின் இருதயத்தோடு அவர் போராடுகின்ற முறை எனக்கு ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற பியூரிட்டன்களைத்தான் நினைவுபடுத்துகின்றது. இதையே நாம் இயேசுவிலும், அவருடைய அப்போஸ்தலர்களிலும் காண்கிறோம். பேதுருவின் பெந்தகொஸ்தே தின பிரசங்கம் இதேபோல்தான் இருந்தது.
இந்நூல்கள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இருந்தபோதும் இன்றைய பிரசங்கிகளும், கிறிஸ்தவர்களும் அவசியம் வாசிக்க வேண்டியவையாகவும் இருக்கின்றன. சுவிசேஷம் உண்மையில் எப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஏனோதானோவென்று என்னென்னவோ சுவிசேஷம் என்ற பெயரில் சொல்லப்பட்டு வருகின்றவைகளைக் கேட்டுக் காதுகள் புளித்துப்போயிருக்கின்றவர்களுக்கு இந்நூல்கள் ஆவிக்குரிய மருந்தாக நிச்சயம் இருக்கும். ஏன், கிறிஸ்தவர்களுக்கு மெய்சுவிசேஷத்தின் அருமையை இவை புரியவைக்கும். கிறிஸ்து பாவிகளுக்கு செய்திருக்கும் சிலுவைப்பலியின் மகோன்னத உண்மைகளை வாசித்து இருதயம் மகிழச் செய்யும். நம்முடைய இரட்சிப்பு எத்தனை மேலானது, மகிமையானது என்பதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றிகூற வைக்கும். இந்த சுவிசேஷ செய்திகள் உங்களுடைய இரட்சிப்பு உண்மையானதா என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்கச் செய்யும். அப்படி அது உண்மையானதாக இருந்தால் உங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்தை இவை அதிகரிக்கச் செய்யும். சுவிசேஷம் பாவிகளுக்கு மட்டுமல்ல, விசுவாசிகளுக்கும் அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விசுவாசத்தோடு கிறிஸ்துவில் வளர்ந்து வருகின்ற எவரும் சுவிசேஷத்தைத் தொடர்ந்து கேட்க ஆவலோடிருப்பார்கள். ஏன் தெரியுமா? தங்களுக்கு வாழ்வளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அவர்கள் தாழ்மையோடு மறுபடியும், மறுபடியும் எண்ணிப் பார்த்து கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சிக்கு தங்களில் மட்டும் தங்கி நிற்காது கர்த்தரின் துணையை நன்றியோடு நாடி நிற்பதற்காதத்தான். மெய்கிறிஸ்தவனுக்கு சுவிசேஷ செய்தி தேன் குடிப்பது போலிருக்கும்.
இந்நூல்கள் இப்போதைக்கு இந்தியாவிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன. மெய்சுவிசேஷ செய்தி எப்படி அமைய வேண்டும் என்பதை இந்நூல்களை வாசித்து நீங்கள் புரிந்துகொள்ளுவதோடு, சுவிசேஷ பாரத்தோடு இயேசுவை அறியாதவர்களுக்கு இவற்றைக் கொடுத்து அவர்களுடைய ஆத்மீக தேவைகள் நிறைவேற பணிசெய்யுங்கள்.
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது
மதம் மாற்றுகிறோமா!

கிறிஸ்தவர்களைப் பற்றி கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் பொதுவாக வைக்கும் ஒரு குற்றச்சாட்டு ‘அவர்கள் மக்களை மதம் மாற்றுகிறார்கள்’ என்பது. என்னைப் பொறுத்தவரையில் இது ஓர் அநியாயக் குற்றச்சாட்டுத்தான். கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு மனிதர்களை மதம் மாற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ வேதமோ மற்றவர்களை மதம் மாற்றும்படி எங்குமே எப்போதுமே சொன்னதில்லை. வேதத்தை வாசித்துப் பாருங்கள், யாரும் எவரையும் மதம் மாற்றும்படியான போதனைகளை அதில் பார்க்கவே முடியாது.
கிறிஸ்தவ சுவிசேஷத்தை சிலர் தவறான முறையில் போதித்து, பிரசங்கம் செய்து கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடி வைத்துவிடுகிறார்கள். சில காலங்களுக்கு முன்பு இந்தியாவில், முக்கியமாக தென் மாநிலங்களில் இந்து மதத்தில் இருந்துகொண்டே இயேசுவை அறிந்துகொள்ளலாம் என்று சாது செல்லப்பாவும், திராவிட மதங்கள் ஆரம்பத்தில் இருந்தே இயேசுவைத்தான் கடவுளாக விவரித்தன, பிராமணர்கள்தான் அதை மாற்றி இந்து தெய்வங்களை அறிமுகப்படுத்தி தமிழினத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று புலவர் தெய்வநாயகம் போன்றவர்களும் அநாவசியத்துக்கு அறிவுக்குப் பொருத்தமில்லாததும், உண்மையில்லாததுமான கட்டுக்கதைகளை உருவாக்கி கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடித் தந்தார்கள். இவர்களுடைய கதைகள் எல்லாம் கேட்பதற்கு சுவையாகவும், கேட்பவர்களை சினிமாவைப்போல கவருவதற்கு உதவினாலும் உண்மையானவையல்ல. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வேதம் இதையெல்லாம் போலிப் போதனைகள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோருடைய விளக்கங்கள் அநாவசியத்துக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை ஊட்டிவிடுகிறது. சமீபத்தில் அப்படியான ஒரு கருத்தை நான் ஒரு வலைப்பூவில் வாசிக்க நேர்ந்தது. செல்லப்பா போன்றவர்களின் போதனையைப் பற்றிக் குறிப்பனுப்பியிருந்த ஒருவருக்கு பதிலளிக்குமுகமாக அந்த வலைப்பூவின் சொந்தக்காரரான பிரபல எழுத்தாளர், ‘இப்படியெல்லாம் இந்திய வேதங்களில் இயேசு இருக்கிறாரென்று எழுதி இந்துவை மதம் மாற்றி அதற்குப் பிறகு கிறிஸ்தவ வேதத்தை நம்ப வைக்கும் ஒரு முயற்சி இது’ என்று எழுதியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த எழுத்தாளர் நான் இது பற்றி எழுதியிருந்த இன்னொரு ஆக்கத்தில் இருந்த ஒரு குறிப்பைத் தன்னுடைய வாதத்துக்கு சார்பாகப் பயன்படுத்தியிருந்தார். அதாவது, மரபு சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு சாது செல்லப்பாவின் போக்கில் சம்மதமில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர் என் குறிப்பைப் பயன்படுத்தியிருந்தார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்தவத்தின் மேல் தவறான எண்ணம் ஏற்படும் நிலை உருவாகிவிடுவதை எண்ணும்போதுதான் மனதுக்குக் கஷ்டமாகி விடுகிறது.
உண்மையில் இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தமுறையில் கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவத்தைப் பார்க்கும் நிலைக்கு சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் அவர்களைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ‘இந்திய வேதங்களில் இயேசுவா!’ என்ற ஒரு நூலில் நான் இந்திய வேதங்களில் இயேசுவைக் கண்டுகொள்ள வழியில்லை என்று விளக்கி எழுதியிருந்தேன். அதை நான் எழுதக் காரணமே இவர்கள் கிறிஸ்தவ வேதத்தையும், கிறிஸ்தவத்தையும் பற்றிய தவறான எண்ணத்தை மற்ற மதத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காகத்தான். அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வலையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதை எழுதினேன். (இப்போது அந்த நூல் அச்சில் இல்லை).
புலவர் தெய்வநாயகத்தின் திராவிட சமயம்
இந்த இருவரில் புலவர் தெய்வநாயகத்தின் நோக்கம் வேறு. அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிராமண எதிர்ப்பாளர். திராவிட மதங்கள் இந்து மதத்தில் இருந்து உருவாகவில்லை என்று காட்டுவதற்காகவும், அவை ஆதியில் ஒரே தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன என்று நிரூபிப்பதற்காகவும் கிறிஸ்தவமே திராவிட சமயமாக தோமாவின் போதனைகளால் தென்னிந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்ற கோட்பாட்டை அவர் உருவாக்கியிருந்தார். இவரது நோக்கம் மதம் மாற்றுவது அல்ல, திராவிட மதம் தனித்தன்மையுடையது என்றும், இந்திய ஆரிய மதங்களில் இருந்து வேறுபட்டது என்றும் காட்டுவது மட்டுமே. இவரது ஆய்வு வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல; அது வேத உண்மைகளுக்கும் முரணானது. வரலாற்று உண்மையாக இன்னமும் நிரூபிக்கப்படாத அப்போஸ்தலனான தோமாவின் இந்திய வருகையை மட்டும் வைத்து அவர் திராவிடத்துக்கு ஏற்ற ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற கட்டுக்கதையை தெய்வநாயகம் அவிழ்த்து விட்டிருந்தார். கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் சுவிசேஷத்தை அப்படித் திரிபுபடுத்தி கலாச்சாரத்துக்கு ஏற்றதொரு கிறிஸ்தவத்தை உருவாக்க மாட்டான் என்ற அடிப்படை வேத உண்மை இவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை. இவருடைய உண்மையில்லாத ஆய்வு திராவிட இயக்கத்திற்கு மகிழ்வை ஏற்படுத்தி அவர்களிடம் அங்கீகாரம் பெறச் செய்திருக்கிறது. அது மட்டுமே.
சாது செல்லப்பாவும் மதமாற்றமும்
சாது செல்லப்பாவின் இந்திய வேதங்களைப் படித்து அவற்றில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்ற போதனை நிச்சயம் இந்துக்களைக் கவர அவர் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கவர்ச்சிப் போதனை. இந்திய வேதங்கள் சுட்டிக்காட்டும் ‘பிரஜாபதி’ இயேசுவே என்பது இவரின் முடிவு. இவருடைய விளக்கங்களினால் கவரப்பட்டு ஓர் இந்து கிறிஸ்தவ மதத்தை நாடக்கூடும்; ஆனால், கிறிஸ்தவனாகிவிட முடியாது. மதம் மாறுவது வேறு; கிறிஸ்தவனாவது வேறு. இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மதம் மாறுவது என்பது, ஒரு மனிதன் இன்னொரு மதத்தின் மேல், ஏதோவொரு சுயநலனுக்காக ஆசைப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளுவது. அப்படி அந்த மனிதன் வேறு ஒரு மதத்தைத் தழுவிக்கொள்ளும்போது அவனுடைய மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளுகிறான்; புறவாழ்க்கையிலும் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறான். மதம் மாறுவது என்பது இதோடு மட்டுமே நின்றுவிடும், அதற்குமேல் அதால் போகமுடியாது. இப்படி மதம் மாறுகிறவர்கள் மறுபடியும் இன்னொரு மதத்திற்கு மாறிக்கொள்ளலாம். அவர்களுடைய மனதையும், விருப்பத்தையும் பொறுத்தளவில் அது நிகழும். சமுதாயம் அனுமதிக்கின்றவரை, அந்த மனிதனுக்குப் பிடித்தவரை ஒரு மனிதன் எத்தனை தடவையும் மதம் மாறிக்கொள்ளலாம்; பல மதங்களை ஒரே தடவை பின்பற்றவும் செய்யலாம். இந்த முறையில் பெயர் கிறிஸ்தவராக பெயரளவில் மனிதர்கள் மதம் மாறுவது இன்று நேற்றில்லாமல் நிகழ்ந்து வந்திருக்கின்றது. இத்தகைய மதமாற்றங்களால் அடிப்படை இருதய மாற்றமோ வாழ்க்கை மாற்றமோ ஏற்பட முடியாது.
பதினைந்தாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் ஸ்ரீ லங்காவை ஆண்ட காலத்தில் அவர்களுக்குப் பயந்து ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்ட நாட்டின் வட பகுதி இந்துக்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்களால் தங்களுடைய இந்து முறைகளைக் கைவிட முடியாததால் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து முடித்தபிறகு சாப்பிட்ட வாழை இலையைக் கூரையில் சொருகி மறைத்து வைப்பது வழமையாக இருந்திருக்கிறது. யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். இதே முறையில்தான் இந்தியாவிலும் சுயநலனுக்காகப் பெயரளவில் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட பெருந்தொகையினர் பின்னால் அம்பேத்கருடன் சேர்ந்து புத்த மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். இதெல்லாம் மதமாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள். இதன் மூலம் பக்தி போன்று வெளிப்பார்வைக்குத் தோன்றும் வேஷத்தை மட்டுமே ஒருவரால் போட முடியுமே தவிர மெய்யான பக்தியின் வல்லமையை வாழ்க்கையில் கொண்டிருக்க முடியாது. ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டிருப்பதால் ஓநாய் ஆடாகிவிடாது.
கிறிஸ்தவம் என்பதென்ன?
ஒருவர் கிறிஸ்தவராவது இதுவரை நாம் பார்த்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது எப்படி நிகழ்கிறது தெரியுமா? அதைக் கடவுளே ஒருவருடைய இருதயத்தில் நிகழ வைக்கிறார். அது மனிதனால் நிகழ்கிற காரியமல்ல. சுவிசேஷத்தில் சொல்லப்படுகிற கிறிஸ்து மனிதனுடைய பாவத்தைப் போக்குவதற்காக செய்திருக்கும் பலியைப் பற்றிய செய்தியை வாஞ்சையோடு கேட்கிற ஒருவரின் இருதயத்தில் கடவுளின் பரிசுத்த ஆவியானவர் யாருடைய தலையீடும் இல்லாமல் தானே சர்வ அதிகாரத்துடன் கொண்டுவருகிற மாற்றமே ஒருவனைக் கிறிஸ்தவனாக்குகிறது. இதை எந்த ஒரு மனிதனாலும் ஒருவரில் நடத்திவிட முடியாது. அப்படிப் பரிசுத்த ஆவியின் கிரியையினால் இருதயம் மாற்றமடைந்த ஒருவனே கடைசிவரைக் கிறிஸ்துவைத் தலையே போனாலும் போகட்டும் என்று விசுவாசிப்பான். அவன் சுயநலத்துக்காக, மற்றவர்களைத் திருப்பிப்படுத்துவதற்காக மதத்தை மாற்றிக்கொள்ளவில்லை; கடவுளின் வல்லமையான செயலால் அவன் மாற்றப்பட்டிருக்கிறான். அதுதான் மெய்கிறிஸ்தவம் காட்டுகிற பாதை. ‘மதம் மாறு’ என்று மெய்கிறிஸ்தவம் சொல்லவில்லை; ஒருபோதும் சொல்லாது. உன் பாவம் போக கிறிஸ்துவை விசுவாசி என்று மட்டுமே அது சொல்லுகிறது. அதைக் கேட்கிறவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறபோது அந்த விசுவாசத்தைக் கொடுத்து அவர்களுடைய இருதயத்தை மாற்றுகிறவர் சர்வ வல்லவரான கடவுளே. இதுதான் கிறிஸ்தவம். இதற்கு மாறானதெல்லாம் வெறும் போலி.
கிறிஸ்தவ வேதம் மட்டுமே கடவுளின் வெளிப்படுத்தல் (Revelation of God)
உண்மையில் ஏனைய மதங்களின் நூல்களில் இருந்து இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்ளலாம் என்றும் வேதத்தை வாசிப்பதால் மட்டும் அது நிகழ்வதில்லை என்று சொல்லுவது கிறிஸ்தவத்தை உயர்த்துகிற காரியமல்ல; அதன் மதிப்பையும், உயர்வையும் அது அடியோடு சரித்துவிடுகிற காரியம் என்பது சாது செல்லப்பா போன்றோருக்குப் புரியவில்லை. கிறிஸ்தவ வேதமும், கிறிஸ்தவமும் தனித்தன்மை வாய்ந்தவை. அதன் போதனைகளை வேறு எங்கும் பார்ப்பதற்கு வழியில்லை. உலகத்து மதங்களிலும், மனிதர்களுடைய எழுத்துகளிலும் கிறிஸ்தவ வேத சத்தியங்களை அறவே காணவே முடியாது. ஏன் தெரியுமா? அந்த சத்தியங்களைக் கடவுளே நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேதத்துக்கு கடவுளின் வெளிப்படுத்தல் என்ற பெயரும் உண்டு. ஆறு நாட்களில் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்று அறிவிக்கும் ஒரே நூல் வேதம் மட்டுமே. கடவுள் மனிதனாக உருவேற்று மனிதனின் பாவத்தைப் போக்க வழியேற்படுத்தினார் என்று விளக்குவதும் வேதம் மட்டுமே. (இதற்கும் அவதாரமெடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது). சுவிசேஷத்தின் மூலம் அனைத்து மனிதர்களும் தம்மை அறிந்துகொள்ள கடவுள் தொடர்ந்தும் மனிதர்களோடு பேசுகிறார் என்றுரைப்பதும் வேதம் மட்டுமே. வேதத்தில் மட்டுமே இவற்றை வெளிப்படுத்தியிருப்பதாக வேதநாயகனாகிய கடவுளே சொல்லும்போது அதை மறுத்து அவரை இந்திய வேதங்களைப் படித்து அறிந்துகொள்ளலாம் என்று சொல்லுவது எந்தவிதத்தில் கிறிஸ்துவை உயர்த்தும்? அது அவருடைய மதிப்பைக் குறைத்து இந்திய வேதங்களை உயர்த்துவதில் மட்டுமே போய்முடிகிறது. இந்திய வேதங்களில் வெளிப்படுத்தல் (Revelation) இருக்கிறது என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடுகிறது. இதை சாது செல்லப்பா சிந்திக்கவில்லை. கடவுளின் வெளிப்பாடான வேதத்தை வேறு எந்த நூலுக்கும் சமமாகப் பயன்படுத்துவதைக் கடவுள் அனுமதிக்கவில்லை.
‘மதம் மாறு’ என்று கிறிஸ்தவம் சொல்லவில்லை
மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் ‘மதம் ஓர் அபின்’ (போதைப் பொருள்) என்றார். மனிதன் தன்னுடைய ஆத்மீகத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிற ஒரு வழி மதம். ஒருவர் ஆஸ்திகராக ஏதாவதொரு மதத்தைப் பின்பற்றுவதுபோலத்தான் இன்னொருவர் நாஸ்திகராக மதமே இல்லை என்று வாழ்கிறார். இவர்கள் இருவருமே தங்களுடைய வழிகளில் நம்பிக்கை வைத்து வாழ்கிறார்கள். இது ஒரு நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை அவர்களுக்கு அவசியமாயிருக்கிறது; திருப்தியளிக்கிறது. இந்த நம்பிக்கையை ஒருதரம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கிறிஸ்தவம் அவர்களைப் பார்த்துக் கேட்கிறது. அப்படிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? உங்கள் நம்பிக்கை தவறாக இருந்துவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்? கடவுளைப் பற்றி தவறான ஒரு நம்பிக்கையோடு வாழ்வது எப்படி ஒருவருக்கு உதவப்போகிறது? நீங்கள் நம்புவதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், அந்த நம்பிக்கை உங்களுக்கு நிச்சயமாக ஆத்மீக விடுதலையைக் கொடுக்கப் போகிறதா என்றுதான் கிறிஸ்தவம் கேட்கிறது. யாரையும் மதம் மாறும்படிக் கிறிஸ்தவம் சொல்லவில்லை. உண்மையில் மதம் மாறுவதால் ஒருவருக்கு ஆத்மீக விடுதலை கிடைக்காது என்று கிறிஸ்தவம் நிச்சயமாக நம்புகிறது. யூதர்கள் கடவுளை நம்பி யூதமதத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். யூதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்து உங்கள் நம்பிக்கை சரியானதுதானா என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்கவில்லையா? யூதர்களின் மத வாழ்க்கை இயேசு கிறிஸ்துவுக்கு சரியாகப் படவில்லையே. அதனால் கிறிஸ்தவம் மற்றவர்களை மதம் மாறச் சொல்லுகிறது என்று தவறாக கிறிஸ்தவத்தைக் குறை சொல்லாதீர்கள்.
கிறிஸ்தவம் சொல்லுவதெல்லாம் ஒரு தடவை கடவுளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் என்பதுதான். கடவுள் யாரென்பதை எண்ணிப் பாருங்கள் என்பதுதான். கடவுளிடம் இருந்து வந்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒரு தடவை ஆராய்ந்து பாருங்கள் என்றுதான் கிறிஸ்தவம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனை உண்மையாக இருந்து அதன் மூலம் நீங்கள் பரலோகம் போக முடியுமானால் அதை ஏன் நீங்கள் உதறித்தள்ளிவிட்டு வெறும் சாதாரண ‘ஆஸ்திகராகவோ’, ‘நாஸ்திகராகவோ’ வாழ வேண்டும்? அதில் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்றுதான் கிறிஸ்தவம் கேட்கிறது. ஒரு மதவாழ்க்கையைக் கொண்டிருப்பதாலோ, மதம் மாறுவதாலோ எவரும் கடவுளை அறிந்துகொள்ள முடியாது என்கிறது கிறிஸ்தவம். மத வாழ்க்கை மார்க்ஸ் சொன்னதுபோல் ஒருவருக்கு ‘அபின்’ போன்ற ஒரு தற்காலிக திருப்தியை, ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போதைப் பொருள் மட்டுமே.
கிறிஸ்தவம் ஒரு மதமல்ல; அது கடவுளோடு, இயேசு கிறிஸ்துவோடு ஒரு நிலையான உறவை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை ஒரு ‘மதம்’ கொடுத்துவிட முடியாது. அதனால்தான் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்கிறேன். கிறிஸ்தவத்தை மதமாக மாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். அது போலிக் கிறிஸ்தவம். அந்த முறையிலான கிறிஸ்தவம் அவர்களை இந்த உலகத்தில் வாழ்ந்து தற்காலிக மனத்திருப்தி அடைந்து இறப்பதோடு அவர்களை நிறுத்திவிடும். அத்தகைய செயலைத்தான் சாது செல்லப்பா செய்யப் பார்க்கிறார். அவர் இந்துவுக்கு இன்னொரு ‘மதத்தைக்’ காட்டப் பார்க்கிறார். அவர் காட்டப் பார்ப்பது மெய்யான கிறிஸ்தவமல்ல. அவரைப்போல இன்னும் அநேகர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ வேதம் ஒருவரை மதம் மாறும்படி ஒருபோதுமே அழைக்கவில்லை. கடவுளை அறிந்துகொள், கடவுளோடு மெய்யான, நிதர்சனமான உறவை அனுபவிக்க இயேசு கிறிஸ்தவின் போதனைகளை ஆராய்ந்து சிந்தித்துப் பார் என்றுதான் கிறிஸ்தவம் அறைகூவலிடுகிறது. அதில் என்ன தவறிருக்கிறது?
சுவிசேஷத்தை ஏன் அறிவிக்க வேண்டும்?
வேறு மதத்தார் தங்களுடைய மதத்தைப் பற்றிப் பேசுவதில்லையே, சுவிசேஷத்தை நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்? என்று யாராவது கேட்கலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. (1) கிறிஸ்து மட்டுமே தரமுடிந்த பாவமன்னிப்பையும், அழிவில்லாமல் நிலைத்திருக்கும் ஜீவனைப்பற்றியும் அன்போடு மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று கடவுள் வேதத்தில் கட்டளையிட்டிருப்பதால் அதை சொல்லுவதை மட்டுமே நாம் கடமையாகக் கொண்டிருக்கிறோம். (2) கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மூலமாக மட்டுமே எந்தவொரு மனிதனும் உண்மையான கடவுளை கிறிஸ்துவின் மூலம் அறிந்து விசுவாசிக்க முடியும் என்பதால் அதைச் சொல்லுகிறோம். (3) பாவத்தோடு ஒருவரும் இந்த உலகத்தில் அழிந்துபோகக்கூடாது என்ற ஆத்தும பாரம் எங்களுக்கிருப்பதால் கிறிஸ்துவைப் பற்றி அன்போடு சொல்லுகிறோம்.
ஒரு இந்துவோ அல்லது வேறு மதத்தவரோ இதை வாசித்துவிட்டு உங்கள் மதம் மட்டுந்தான் கடவுளிடம் ஒருவரைக் வழிகாட்டுமா? என்று கேட்கலாம். அது நியாயமான கேள்விதான். அதற்கு நான் கடவுளின் வேதத்தில் இருந்து மட்டுமே பதில் சொல்லமுடியும். கடவுள் தன்னை மனிதன் அறிந்துகொள்ளும்படி வேதத்தில் சுவிசேஷ உண்மையை வெளிப்படுத்தியிருப்பதால் அதன் மூலம் மட்டுமே ஒருவர் கடவுளை அறிந்துகொள்ளவும், அவரோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். ஏன் தெரியுமா? மனிதனைப் பிடித்திருக்கின்ற பாவம் போக்கப்பட்டாலொழிய எவரும் கடவுளை அறிந்துகொள்ள முடியாது. மனிதனுடைய பாவங்களை முற்றாக அகற்ற இயேசு கிறிஸ்து மட்டுமே இந்த உலகத்தில் பிறந்து, வாழ்ந்து, மனிதனுடைய பாவங்களுக்காகத் தன்னைப் பலிகொடுத்து, உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார். அதனால் இயேசு மட்டுமே பாவங்கள் அகன்று மனிதன் பரலோகத்தை அடையச் செய்யக்கூடியவராக இருக்கிறார். அதனால்தான் இயேசுவை விசுவாசிக்கும்படி கிறிஸ்தவ சுவிசேஷம் அழைக்கிறது. இந்த உண்மையை மற்றவர்களுக்குப் போய் சொல்லுவதால் அது மதம் மாற்றும் முயற்சியாகிவிடாது. இதைச் சொல்லுவதை மட்டுமே மெய்க் கிறிஸ்தவர்கள் கடமையாக வைத்திருக்கிறார்கள்.
இந்தவிதத்தில் மனிதனுடைய பாவம் போக்கப்பட வழிசொல்லும் வேறு மதமோ, வாழ்க்கை நெறிகளோ இந்த உலகத்தில் இல்லை. இந்த சுவிசேஷ உண்மையையும் ஒரு மெய்க் கிறிஸ்தவன் மற்றவர்களுக்கு அவர்களுடைய அனுமதியோடு சொல்லி விளக்குவானே தவிர அவர்களை வற்புறுத்தவோ, மதம் மாற்றவோ எந்த முயற்சியும் எடுக்கமாட்டான். ஏன் தெரியுமா? சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே அவனுடைய கடமை; அதைக் கேட்டு ஒருவர் இருதய மாற்றமடையச் செய்வது கடவுளின் செயல். கடவுள் மாற்றினால் தவிர எந்த மனிதனுடைய இருதயமும் மாறுவதற்கு வழியில்லை என்கிறது கிறிஸ்தவ வேதம். இதைத்தான் சாது செல்லப்பா விளங்கிக்கொள்ளவில்லை. மெய்க் கிறிஸ்தவம் எவரையும் மதம் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; எல்லோரும் தங்களுடைய பாவத்தில் இருந்து கிறிஸ்துவின் மூலமாக விடுதலை அடைந்து பரிசுத்தமாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே சுவிசேஷத்தை அது அறிவிக்கிறது. மனிதனுடைய இருதயத்தை மாற்றுகிற வேலையை அது உலகத்தையும், மனிதனையும் படைத்த கடவுளின் கையில் விட்டுவிடுகிறது.
தவறான போதனைகளுக்குக் என்ன காரணம்?
கல்லில்லாத அரிசி நாட்டில் இருக்க முடியாது. கற்களே இல்லாமல் அரிசி கிடைத்தால் வேலை குறைவாக இருக்கும்; வயிறும் நன்றாக இருக்கும். அரிசியில் எப்போதும் கல் இருந்துவிடுகிறது. அதைத் தடுக்க முடியாது. அது யதார்த்தம். அதுபோலத்தான் உலகத்தில் மெய்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் சாது செல்லப்பாக்கள் போன்றோரின் போதனைகளும் இருந்து விடுகின்றன. எதையும் சோதித்துப் பார் என்கிறது வேதம். கள்ளப்போதனைகளுக்கு விலகி நில் என்கிறது வேதம். திருச்சபை வரலாறும் இதை நமக்குக் காட்டாமலில்லை. இத்தகைய போதனைகள் திருச்சபைக்கும், வேதத்துக்கும் ஆபத்தாய் அமைந்துவிடுகின்றன; மற்ற மதத்தார் மனதையும் புண்படுத்தி விடுகின்றன. மேலாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொச்சைப்படுத்தி விடுகின்றன.
நல்லரிசி மட்டும் வேண்டுமென்கிறவர்கள் முதலில் சோதித்துப் பார்த்து அதை மட்டுமே வாங்குவார்கள். அதையும் அலசிப்பார்த்து இருக்கும் கற்களை எறிந்துவிட்டு சமைப்பார்கள். அப்படித்தான் நாமும் மெய்க்கிறிஸ்தவத்தை இனங்கண்டு பின்பற்றி வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். பாவம் இந்த உலகத்தில் தொடர்ந்திருக்கும்வரை அரிசியில் கல்லிருப்பதைப்போல தவறான போதனைகளும், தவறான சுவிசேஷ அறிவிப்பு முறைகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றை இனங்கண்டு ஒதுக்கி வைக்க வேண்டியதே நம் கடமை. மற்ற மதத்தவர்களையும் இவை பாதித்து மெய்சுவிசேஷப் பணிக்குத் தடையாக வந்துவிடும்போதுதான் அதில் சாத்தானின் கைவேலையைப் பார்க்கிறோம். இத்தகைய முயற்சிகள் நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளின் கண்களுக்குத் தப்பாது என்பது மட்டும் நிச்சயம்.
கிறிஸ்தவர்களுக்கு ஒரு வார்த்தை
இப்போது மெய்க் கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். சுவிசேஷத்தை ஆவியில் தங்கியிருந்து அறிவியுங்கள். மனிதனின் இருதய மாற்றத்துக்கு உங்களுடைய ஞானத்திலும், வல்லமையிலும் தங்கியிருக்காதீர்கள். உங்களால் ஒரு மனிதனையும் மாற்ற முடியாது. மனித இருதய மாற்றத்துக்கான பெலம் சுவிசேஷத்தின் மூலமாக கிரியை செய்யும் பரிசுத்த ஆவியில் காணப்படுகிறது. எந்த மனிதனுக்கும் சுவிசேஷத்தைச் சொல்லுகிறபோது அதை வேதத்தில் இருப்பதுபோல் உண்மையோடு சொல்லுங்கள். அதோடு எதையும் கலந்து சொல்லவோ அல்லது சுய வல்லமையைப் பயன்படுத்தி மனிதனுடைய மனதை மாற்றவோ முயலாதீர்கள். முக்கியமாக மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறோம் என்று எவரும் நினைத்துவிடுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். பெயர் கிறிஸ்தவர்கள் உருவாவதற்கு நீங்கள் காரணமாக இருந்துவிடாதீர்கள். அவர்கள் மதத்தை மாற்றிக்கொள்ளலாம்; மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பரிசுத்தமாக வாழ முடியாது; பரலோகமும் போகமுடியாது. சுத்தமான சுவிசேஷத்தை மட்டும் நீங்கள் சொல்லி, மனிதனின் பாவத்தைப் போக்கித் தன்னோடு இணைத்துக்கொள்கிற வேலையைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள். சொல்லுகிற சுவிசேஷத்தை மெய்யான ஆத்தும வாஞ்சையோடும், அன்போடும் மனிதர்களை மதித்துச் சொல்லுங்கள். எந்தவிதத்திலும் அவர்கள் உங்களைத் தவறாக எண்ணிவிட இடங்கொடாதீர்கள். கிறிஸ்தவம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை; மனிதனின் பாவத்தைப் போக்குகிற கடவுளான கிறிஸ்துவை எல்லோரும் அறிந்துகொள்ளும்படிச் செய்வதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கிறது என்பதை நாடு உணரச் செய்யுங்கள்.