திருமறைத்தீபம் 2014 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. சிந்திக்க வேண்டிய இறையியல் பயிற்சி
3. கிருபாதாரபலியா, கோபநிவாரணபலியா?
4. அன்று நடந்ததுதான் என்ன?
5. மரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு –
வாசகர்களே!
இந்த இதழின் எல்லா ஆக்கங்களையும் நானே எழுத கர்த்தர் துணை செய்தார். சில சமயங்களில் எப்படி இந்த இதழை முடிக்கப்போகிறோமோ என்ற ஏக்கம் எப்போதுமே எழும். இருந்தபோதும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லாதபடி இதழ்களை நிறைவுசெய்ய கர்த்தர் துணை செய்திருக்கிறார்; தொடர்ந்தும் செய்கிறார். இந்த இதழ் நேரத்தோடு வெளிவர அநேகரின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. அவர்களெல்லோருக்கும் என் நன்றிகள்.
இறையியல் பயிற்சி பற்றி நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியாது. திருச்சபைக்கு போதக சமர்த்துள்ள போதகர்கள் தேவையெனில் அதற்குத் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தத் தகுதியை இன்றைய சூழ்நிலையில் எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்பது பற்றி இந்த இதழில் விளக்க முயன்றிருக்கிறேன். இது உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.
இந்த இதழில் ‘கோபநிவாரணபலி’ பற்றிய ஆரம்ப ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த தியாகப் பணி பற்றிய வேத சத்தியந்தான் ‘கோபநிவாரணபலி’. இந்த வார்த்தைக்கு தமிழ் வேதத்தில் ‘கிருபாதாரபலி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோபநிவாரணபலி என்று அதை மாற்றி நான் விளக்கியிருப்பதற்கான காரணத்தை இந்த இதழில் நீங்கள் வாசிக்கலாம். இந்த சத்தியத்தில் நீங்கள் மேலும் தெளிவுபெற இது துணை செய்யும் என்று நம்புகிறேன். இதுபற்றி வரப்போகின்ற இதழ்களில் மேலும் எழுதவிருக்கிறேன்.
அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை விரிவாக விளக்குகின்ற ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. எப்படியெப்படியெல்லாமோ அதற்கு விளக்கங்கொடுத்து வருகிறவர்களை நாம் இன்று காண்கிறோம். வேதம் தெளிவானது; பொய்யுரைக்காது என்பது நிச்சயம். அதன்படி உண்மையில் வேதம் என்னதான் அந்த அதிகாரத்தில் விளக்குகிறது என்பதை வேதவிதிமுறைகளுக்கிணங்க விளக்கியிருக்கிறேன். அதையும் கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்வாராக. இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதையும் கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்ய வேண்டுமென்பதுதான் எங்கள் ஜெபம்.
– ஆசிரியர்.
சிந்திக்க வேண்டிய இறையியல் பயிற்சி
அநேக வருடங்களுக்கு முன் நான் வைத்திருந்த முதல் காரை எண்ணிப் பார்க்கிறேன். பழைய காராக இருந்தபோதும் என் தேவையை அப்போதைக்கு அது நிறைவேற்றியது. எல்லாப் பழங்கார்களுமே இருந்திருந்து பிரச்சனை தரும். ஒரு முறை என் கார் எஞ்சினில் பிரச்சனை ஏற்பட அதைக் கவனித்த நண்பனொருவன் தானே அதை சரி செய்ய முன்வந்தான். நானும் நம்பிக் காரை அவன் கையில் ஒப்படைத்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கார் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். முழு எஞ்சினுமே அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டி நிலத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது, என்று கேட்டால் சீக்கிரம் முடிந்துவிடும் என்று பதிலளித்தான் நண்பன். அதற்குப் பிறகு நடந்ததைப் பற்றி என்ன சொல்ல. எஞ்சினைப் பீஸ் பீஸாகக் கழட்டத் தெரிந்திருந்த நண்பனுக்கு அதை மறுபடியும் இணைக்கத் தெரியவில்லை. கடைசியில் காரை ஒரு வண்டியில் ஏற்றி சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தேன்.
இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் ஒரு காரியத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுந்தான் அந்தக் காரியம் பற்றிய சகல விஷயங்களையும் நாம் புரிந்துகொள்ளுதலோடு அணுக முடியும்; பிரச்சனை ஏற்பட்டாலும் சரி செய்ய முடியும். அதைப் பற்றிய குறைந்தளவு ஞானம் போதாது. அது பிரச்சனை ஏற்படும்போது சரி செய்ய உதவாது. எந்தவொரு காரியத்தைப் பற்றியும் தேவையான அளவுக்கு ஞானம் இருப்பது அவசியம். பொது அறிவுகூட அதைத்தான் சொல்லும். தெரியாத விஷயத்தில் ஒருவர் தலையிட்டால் அவர் அதை பிரச்சனையுள்ளதாக்கி விடுவார். தெரியாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.
எந்தவொரு விஷயத்தையும் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். அது தவிர்க்க முடியாத உண்மை. அது மட்டுமே நமக்கு அந்த விஷயத்தில் ஈடுபட கைகொடுக்கும். இன்றைக்கு பெரிய நகரங்களுக்கு வெளியில் இருக்கும் கல்லூரிகளில் எ-ஞ்சினியரிங்கோ, அல்லது கம்பியூட்டர் படிப்போ படித்து சராசரி மார்க்குகளைப் பெற்று வேலை தேடி அலைந்து வேலை கிடைக்காமல் பலரிருப்பதற்குக் காரணமென்ன? அந்தப் படிப்பு பற்றிய ஆழமான அறிவையும், நடைமுறைக்குத் தகுந்த பயிற்சியையும், அதிக மார்க்கையும் பெற்றிராததால்தான். சராசரி அறிவு எதையும் சராசரியாக முடிக்க மட்டுமே உதவும். முழுமையாக ஒரு காரியத்தை முடித்து வைக்க உதவாது. சராசரி அறிவுக்கும், வேலைக்கும் ஊதியம் கொடுக்க எந்தக் கம்பேனி முன்வரும்?
இதையெல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், முழுமையான வேத இறையியலறிவைப் பெற்றுக்கொள்ளுவதின் அவசியத்தை வலியுறுத்தத்தான். அதாவது, வேதம் தரும் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள அவசியமான நடைமுறைப் பயிற்சியைப் பயன்படுத்தி வேத சத்தியங்கள் பற்றிய சரியான முடிவுக்கு வந்து அந்த அடிப்படையில் ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் சரியான விளக்கமளிப்பதையும், போதிப்பதையும் பற்றித்தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது வேதத்தைப் போதிக்கின்ற பணியைக் கொண்டிருக்கின்ற போதகர்களுக்கு மிகவும் அவசியமானது. கர்த்தரின் வேதம் அவருடைய தெளிவான சித்தத்தை அதிகாரத்தோடு விளக்குகின்றது. அதில் குளறுபடிகளுக்கோ அல்லது முரண்பாடுகளுக்கோ இடமில்லை; இருக்க வழியில்லை. அது கர்த்தரின் முடிவான சித்தம். கர்த்தரின் விசுவாசமுள்ள சேவகனாக இருந்து கர்த்தரின் சித்தத்தை உள்ளது உள்ளபடி தவறுகளெதுவுமில்லாமல் அப்படியே ஆத்துமாக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பெருங்கடமை போதகர்களுடையது. அதில் தவறிழைப்பது கர்த்தரின் பேச்சை மாற்றிச் சொல்லுவதற்கு சமமாகும்; பொய் சொல்லுவதில் போய் முடியும். வேத அறிவு இல்லாமலிருந்து அதைச் செய்தாலும் சொல்லுவதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். அதை எவரும் மறுக்க முடியாது. அவருடைய தெளிவான வார்த்தையை வேறுவிதமாக அர்த்தமளித்து சொல்லுவதைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளுவாரா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதைத்தான் வேதம் விளக்குகிறது.
கர்த்தரின் வேதத்தை உள்ளது உள்ளபடி பிரசங்கிக்கவும், போதிக்கவும் வேண்டுமானால் வேத இறையியல் அறிந்திருக்காமல் முடியாது. வேத இறையியல் என்பது பொதுவான வார்த்தைகள். இதற்குள் நான் வேதத்தை அறிந்துகொள்ள அவசியமான அத்தனைப் பாடங்களையும் உள்ளடக்கியே பயன்படுத்துகிறேன். அதாவது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பற்றிய பொதுவான அறிவு, ஒவ்வொரு வேத நூல்களையும் பற்றிய விபரமான அறிவு, வேதப்பகுதிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டிய விளக்கப் பயிற்சி முறைகள், வரையறுக்கப்பட்ட இறையியல் அறிவு (வேத சத்தியங்கள் ஒவ்வொன்றையும் பற்றிய முழுமையான தெளிவான அறிவு), மூல மொழிகளில் அறிவு, ஆங்கில வேதத்தைப் பயன்படுத்த அவசியமான ஆங்கில அறிவு, தமிழறிவு போன்ற இத்தனையும் தேவை.
வேதத்தை நம்முடைய மொழியில் உழைப்போடு அடிக்கடியும், வருடந்தோரும் வாசித்து வந்தால் அதிலிருந்து பொதுவான போதனைகளை நாம் தடைகளின்றிப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள், சுவிசேஷம், இரட்சிப்பு, பரிசுத்த வாழ்க்கை போன்ற அடிப்படைப் போதனைகளை சாதாரணமாகவே எவரும் அடிக்கடி உழைத்து வேதத்தை வாசித்து அறிந்துகொள்ள முடியும். இதையெல்லாம் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலேயே கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலம் வேதத்தைத் தந்திருக்கிறார். சபைப் போதகப் பணியிலிருப்பவர்களுக்கு இதற்கு மேலான வேதஅறிவு தேவைப்படுகிறது. வருடந்தோறும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு முழு வேதத்தையும் அவர்களுடைய ஆத்தும தேவைகளுக்கேற்ப பங்கு பங்காகத் தெளிவாகக் கருத்து மாறிவிடாமல் போதனைகளையும், நடைமுறைப் பயன்பாடுகளையும் கொடுத்துப் போதிக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான வேத இறையியலறிவைப் பெற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே முடியும்.
படித்தவர்கள் கூடிய சபைகளில் போதகர்களாக இருப்பவர்களுக்கே இந்தளவுக்கு இறையியல் அறிவு தேவை என்று நினைத்துவிடக் கூடாது. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத கிராமத்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வேதத்தை சொல்லிக்கொடுத்து வரும் போதகர்களுக்கு இதுவரை நான் விளக்கியிருக்கும் வேத இறையியல் போதனைகள் நிச்சயம் அவசியம். இந்த இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே வேதப் பகுதிகளில் தெளிவான அறிவிருந்து அவற்றை இலகுவான முறையில் படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் ஏற்ற முறையில் விளங்க வைக்க முடியும். போதகர்களுக்கு இறையியல் அறிவு அவசியம் என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.
இறையியல் அறிவு தேவை இல்லை, வேதம் மட்டுமே தேவை என்று சிந்திக்காமல் சிலர் பேசுவார்கள். இறையியல் அறிவை அவர்கள் ஏட்டுப்படிப்பாக மட்டும் தவறாக எண்ணிக் கொள்ளுவதால் இப்படிப் பேசுவார்கள். வேத அறிவையே நான் இறையியல் அறிவு என்று குறிப்பிடுகிறேன்; வெறும் ஏட்டுப் படிப்பையல்ல. வேத இறையியல் அறிவு இல்லாமல் எவரும் போதகனாக இருக்க முடியாது. டாக்டருக்குப் படிக்காமல் டாக்டராக பணிபுரிய முடியுமா? கம்பியூட்டர் கல்வி கற்காமல் கம்பியூட்டர் கன்சல்டன்ட்டாக இருக்க முடியுமா? எண்ணிப் பாருங்கள். அதுபோலத்தான் வேத இறையியல் அறிவு இல்லாமல் வேதபோதகனாக இருக்க வழியில்லை.
இறையியல் கல்லூரிகள்
இத்தகைய இறையியலறிவை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுவது என்று சிந்திக்கும்போதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது. பொதுவாகவே இறையியல் கல்லூரிகள்தான் நம்நினைவுக்கு வரும். அதில் தவறில்லை. இருந்தாலும் சத்தியத்தை சத்தியமாகப் போதிக்கும் இறையியல் கல்லூரிகள் இன்று நம்மினத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவுக்குக்கூட இல்லை என்பதுதான் உண்மை. இதை மறுக்க முடியாது. இன்றைய இறையியல் கல்லூரிகளில் பல இறைநிந்தனை செய்யும் கல்லூரிகளாகவும், பணத்துக்காக நடப்பவையாகவும், சிலருடைய ஈகோவைத் திருப்திப்படுத்த நடந்துவருகின்றவையாகவும் இருக்கின்றன. முக்கியமாக, தெளிவாக சத்தியத்தை விளக்காமல் முரண்பாடான போதனைகளை அளித்து வேத அதிகாரத்தைக் குறைவுபடுத்துபவையாக இருப்பதே இவற்றின் அடிப்படைக் கோளாறு. சகல டினோமிநேஷன்களையும் திருப்திப்படுத்தி எவருடைய மனதையும் நோகடிக்காமல் போதனைகள் இருந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் இக்கல்லூரிகளில் இருப்பதால் எது சத்தியம்? என்பதை ஆணித்தரமாக இவற்றின் மூலம் அறிந்துகொள்ளுவற்கு சந்தர்ப்பமே இல்லை. இத்தனை காரணங்களையும் பார்க்கின்றபோது இன்றைய இறையியல் கல்லூரிகளுக்குப் போய் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி, ஆத்துமாவுக்கும் ஆபத்தைத் தேடிக்கொள்ளுவது அவசியமா? என்று எவராலும் சிந்திக்காமல் இருக்க முடியாது. எதுபோனாலும் பரவாயில்லை, எப்படியாவது ஒரு டிகிரி அல்லது டிப்ளோமாவாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு மட்டுமே இக்கல்லூரிகள் உதவ முடியும்.
வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போதனையளிக்கும் கல்லூரிகள்
இறையியல் போதனைகள் அனைத்தும் எப்போதும் வேதத்தில் இருந்து மட்டுமே பெறப்பட வேண்டும். அதுவும் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக முழுமையாக விசுவாசித்து அதன் அதிகாரத்துக்கும் (Authority), போதுமான தன்மைக்கும் (Sufficiency) எந்தப் பங்கமும் வராதபடி போதனைகள் இருக்க வேண்டும். வேதத்திற்கு முரணாக சிந்திக்கவோ, பேசவோ, போதிக்கவோ கூடாது. 2 தீமோ 3:16-17ல் பவுல் சொல்லுகிறார், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக (That the man of God may be complete, thoroughly equipped for every good work. – NKJV) அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு மனிதன் தேவனுடைய மனிதனாக பணிபுரிவதற்கு அவசியமான அத்தனையும் கர்த்தருடைய வேதத்திலே இருக்கின்றது என்பதுதான். தேவமனிதனாக அவன் தேறும்படிச் செய்வதற்கு அது அடிப்படைக் கருவியாக இருக்கிறது. ஒரு நதிக்கு அது உருவாகிப் புறப்படும் ஊற்று எத்தனை அவசியமானதோ அந்தளவுக்கு வேதம் ஒரு மனிதன் போதகனாக உருவாக அவசியமானதாக இருக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே எந்த இறையியல் போதனையையும் அணுக வேண்டும். இத்தகைய அழுத்தமான, ஆழமான, உறுதியான, விடாப்பிடியான நம்பிக்கையை வேதத்தில் வைத்திராத கல்லூரிகளில் இருந்து கடவுளைப் பற்றி எதைக் கற்றுக்கொள்ள முடியும்?
உண்மையில் நம்மினத்தில் வேத அதிகாரம் என்பது என்ன? என்ற விஷயத்திலேயே தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாமலிருக்கிறது. இந்த ஆக்கத்தில் அதை விளக்கப் போதுமான இடமில்லை. 1689 விசுவாச அறிக்கையின் முதலாம் அதிகாரம் இதைத் தெளிவாக விளக்குகிறது. அதைப் பல தடவைகள் வாசித்துப் பாருங்கள். நாம் வெளியிட்டிருக்கும் ‘கர்த்தருடைய வேதம்’ என்ற நூலிலும் இதைப்பற்றி வாசிக்கலாம். இந்த அடிப்படையில் வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து இயங்காத இடங்களுக்கு எவரும் ஊழியப் பயிற்சிக்குப் போவதால் எந்த நன்மையுமில்லை; சுயநல நோக்கமுள்ளவர்கள் மட்டுமே அத்தகைய இடங்களை நாடிப்போவார்கள். இந்தவிதத்தில் வேத அதிகாரத்திற்கு மதிப்புக்கொடுத்து கர்த்தருக்குப் பயந்து போதனையளிக்கும் கல்லூரிகளை நம்மினத்தில் காண்பது அரிது.
விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனைகளை விசுவாசிக்கும் கல்லூரிகள்
நம்முடைய ஆத்மீகப் பாதுகாப்புக்கும், நம் சபைப் பாதுகாப்புக்கும் தேவையான இறையியல் போதனைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? வரலாறு நமக்குத் தந்திருக்கும் விசுவாச அறிக்கைகளிலும், வினாவிடைப் போதனை நூல்களிலும் தரப்பட்டிருக்கும் அத்தனை கோட்பாடுகளுக்கும் எந்தவிதத்திலும் முரண்பாடில்லாத போதனைகளைக் கொண்டிருந்து அந்த விசுவாச அறிக்கைகளையும், வினாவிடை நூல்களையும் உயர்த்திக் காட்டும் விதத்தில் போதனைகளைக் கொண்டிருக்க வேண்டும். என்னைப் பொறுத்தளவில் இது அடிப்படையான விஷயம். ஏனெனில், நாமும் சபைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பெருநோக்கத்துடனேயே இவை நமக்குக் கர்த்தரால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அன்றாடம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மனித சிந்தனைகள் நம்மை ஆவிக்குரிய விஷயங்களில் வழிநடத்த முடியாது. வேதம் பற்றிய இந்த விஷயத்தில் என்னால் முரண்பட முடியாது. வேதத்தின் மொத்தப் போதனைகளையும் சுருக்கமாக விளக்கியிருக்கும் வரலாறு நமக்களித்திருக்கும் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் நம்முடைய விசுவாசத்தைத் தெளிவாக அறிக்கையிடுகின்றன. இந்த அடிப்படையில் நம்மினத்தில் போதனைகளைத் தரும் கல்லூரிகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். இந்த விசுவாச அறிக்கைகளின் போதனைகளை விசுவாசித்து அவற்றின் அடிப்படையில் அனைத்துப் போதனைகளையும் அளிக்கும் விரிவுரையாளர்களையும் கல்லூரிகள் கொண்டிருக்கவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று சொல்லுவது மட்டும் போதாது; இவற்றை விசுவாசித்து இவற்றிற்கு முரண்படாமல் இவற்றை உயர்த்திக் காட்டும் வகையில் போதனைகள் இருக்கவேண்டும். சத்தியத்தைப் பொறுத்தவரையில் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி முரண்படுவது நம் ஆத்துமாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; நாம் பணிபுரியும் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
சபைப்போதக அனுபவமுள்ள அனுபவசாலிகளான விரிவுரையாளர்கள்
இது மட்டுமில்லாமல் இறையியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போதகப் பணியில் அனுபவமுள்ளவர்களாக, சபைக்கு மதிப்புக்கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். ஓர் உண்மையான ஆத்துமபாரமுள்ள போதகனால்தான் போதக ஊழியத்துக்குப் போகிற ஒருவருக்கு உதவ முடியும். வெறும் ஏட்டுப்படிப்புப் படித்த விரிவுரையாளர்களால் அது முடியாது. வேதசத்தியங்களை வெறும் ஏட்டுப்படிப்பாக மாற்றிவிடக்கூடாது. உலகத்தில் இருக்கும் செக்யூலர் கல்லூரிகளைப்போல இறையியல் போதிக்கப்படும் இடங்கள் இருக்கக் கூடாது. அந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இறையியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நன்கு கற்ற ஆவிக்குரிய மெய்ப்போதகர்களாக இருந்தால் மட்டுமே அது முடியும். இந்தளவுக்கு இந்த விஷயத்தில் நாம் கருத்தோடு சிந்திப்பது அவசியமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம்! நிச்சயம் அவசியந்தான். இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் ஏதோவொரு கல்லூரிக்குப் போய் ஆத்துமாவை இழந்துவிட்டு பின்னால் என்ன ஊழியம் செய்யப் போகிறீர்கள்? நம்முடைய ஆத்தும பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் இடையூறை ஏற்படுத்திவிடாததாக கல்லூரிகள் இருக்க வேண்டும். நீங்கள் சத்தியம் கற்றுக்கொள்ளப் போகிறவர், தேர்ந்த, அனுபவசாலியான மெய்ப்போதகராக இல்லாவிட்டால் அவரிடம் சபை ஊழியத்தைப் பற்றி எதைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? அனுபவசாலியான கார் மெக்கானிக்கிடம் மட்டுந்தான் நாம் காரையே திருத்தக் கொடுக்கிறோம். இது ஆத்மீக விஷயத்திலும் பயன்படுத்த வேண்டிய நடைமுறைதான்.
இறையியல் அறிவை அடையும் வழி
இறையியல் போதனை தேவை என்கிறீர்கள், இன்றைய இறையியல் கல்லூரிகளில் அநேகமானவைகள் பக்கத்தில் போகாதீர்கள் என்கிறீர்கள், அப்படியானால் போதகர்களுக்கு அவசியமான சுத்தமான, கலப்படமில்லாத இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ள என்ன வழி? என்று நீங்கள் கேட்கப்போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய கேள்விக்கு என்னால் சுலபமாக பதில்கூற முடியாமல் இருக்கின்ற நிலைமையை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் நமக்குத் துணைபோகக்கூடிய இறையியல் கல்லூரிகள் இல்லை என்பது உண்மையானாலும் இறையியல் கல்வி அவசியமில்லை என்றாகிவிடாது. அதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் கவனத்தோடு சிந்திக்காமல் இருக்க முடியாது.
இறையியல் போதனைகள் தெரியாது வேதத்தைப் பயன்படுத்திப் போதிக்கிறோம் என்ற பெயரில் சபை சபையாக இன்றைக்கு அநேக போதகர்கள் ஆத்துமாக்களின் காதுகளுக்கு ‘செழிப்பு உபதேசத்தையும்’, ‘ஆசீர்வாத வசனங்களையும்’, வாக்குத்தத்த வசனங்களையுந்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவாச வாழ்க்கையில் அநேகர் இரட்சிப்பின் உறுதியும், நிச்சயமும் இல்லாமல் குழம்பிப்போயிருப்பதற்குக் காரணம் சத்தியத்தில் உறுதி இல்லாததுதான். சத்தியத்தில் உறுதி ஏற்பட சத்தியம் தெரிந்திருக்க வேண்டும். அதைக்கொடுக்க வேண்டிய தற்கால போதகர்கள் அது தெரியாமல் ஊழியப்பணி செய்து வருகிறார்கள். ஆத்துமாக்களுக்கு வேதத்தில் தெரிந்திராத போதனைகள் அநேகம். இரட்சிப்பின் மகிமையையும், பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டிய முறைகளையும், கர்த்தரின் ஈடு இணையற்ற குணாதிசயங்களையும், வேதம் போதிக்கும் மறுபிறப்பு, மனமாற்றம், நீதிமானாக்குதல், மகவேட்பு, தெரிந்துகொள்ளுதல், தேவ கோபம், நித்திய ஆக்கினை, இரட்சிப்பின் நிச்சயம், திருச்சபை அமைப்பு, பத்துக்கட்டளைகள், இறுதிக்காலம் பற்றிய தெளிவான சத்தியங்கள் என்று இன்னும் எத்தனையெத்தனையோ அவசியமான போதனைகளையும் அறியாமல் வாழ்ந்து வருகிற ஆத்துமாக்கள் தொகை அதிகம். இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாடே இருண்ட நூலாக பலருக்கும் இருந்து வருகிறது. பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தி அதில் காணப்படும் மனிதர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் போதகர்கள் இருக்கிறார்களே தவிர, பழைய ஏற்பாட்டைக் கர்த்தரின் மீட்பின் திட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, கர்த்தர் இஸ்ரவேலின் மூலம் செய்து வந்திருக்கின்ற பணி பற்றியும் அதன் புதிய ஏற்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் போதிக்க அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது. புதிய ஏற்பாட்டு நூல்களின் பின்னணி தெரியாமல் அவற்றின் பொருளையும் போதனைகளையும் விளங்கிக் கொள்ள முடியாது. அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் புதிய ஏற்பாட்டு நூல்களில் இருந்து அநேகர் பிரசங்கித்து மனதில்பட்டதைச் சொல்லி வருகிறார்கள். இன்றைய போதகர்களினதும், போதனைகளினதும் நிலைமை இவ்வாறே இருக்கின்றது. கத்தோலிக்க மதத்தால் சத்தியம் ஒரு காலத்தில் மறைக்கப்பட்டு வேதத்தை மக்கள் வாசிக்க முடியாத நிலை இருந்தது. இன்று வேதம் நம்மொழியில் இருந்தபோதும் அது ஆத்துமாக்களின் இதயத்தை அடைய முடியாதபடி சபைப் பிரசங்க மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சத்தியம் தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகிறது. நான் எழுதுவதைக்கூட உணர முடியாதபடி அநேகருடைய இருதயம் சத்தியத்தைவிட்டு வெகுதூரம் விலகி நிற்கின்றது.
போதகன் தேவ மனிதனாக இருக்க வேண்டும்
சத்திய வாஞ்சையோடு வேதம் படிக்க முதலில், போதகர்கள் தேவ மனிதர்களாக இருக்க வேண்டும். பவுல் சபை மூப்பர்களுக்கு (அப்போஸ்தலர் 20:28) கொடுத்த ஆலோசனையில் ‘உங்களைக் குறித்து . . . எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது, உங்களுடைய இருதயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். போதகனின் இருதயம் ஆவிக்குரியதாகவும், சுத்தமானதாகவும் இருக்கவேண்டும். பெருந்தாழ்மையோடு கர்த்தருக்கும், ஆத்துமாக்களுக்கும் பணி செய்கிறதாக இருக்க வேண்டும். அத்தகைய இருதயம் மட்டுமே சத்தியத்தை அறிந்து அதில் தேர்ச்சி பெற அலையும். போதகன் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கையில் கர்த்தரை மேலும் அறிந்துகொள்ளவும், அவரில் சந்தோஷத்தை அனுபவிக்கவும் அவனுக்கு சத்திய ஆர்வமும், சத்திய அறிவும் தேவை. உண்மையான போதகன் தான் சத்தியத்தை அறியாமல் இருப்பதை உணர்ந்து உருகிக் கண்ணீர் விடுவான். அத்தகைய அறியாமை தன்னையும், ஆத்துமாக்களையும் ஆழமாகப் பாதிக்கும் என்பது அவனுக்கு நிதர்சனமாகத் தெரியும். ஓய்வு நாட்களில் ஆத்துமாக்களின் முன் நின்று அவர்களை ஏமாற்ற அவன் பயப்படுவான். வேதத்தில் இல்லாததைச் சொல்லக் கூச்சப்படுவான்; அஞ்சுவான். தேவ பயம் அவனுடைய இருதயத்தை வாட்டும். தன்னுடைய சத்திய வளர்ச்சிக்காக ஜெபிக்கும்படி அவன் வெட்கப்படாமல் ஆத்துமாக்களைக் கேட்பவனாக இருப்பான். சத்தியத்தை அறிந்து அதில் தேர்ச்சி பெற ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதுபோல் தன்னுடைய சட்டையை விற்றாவது அவன் நல்ல ஆவிக்குரிய நூல்களை வாங்கி வாசிப்பான். வேதத்தையும், கையில் இருக்கும் நூல்களையும் கவனத்தோடும், கருத்தோடும் வாசிப்பான். சத்தியத்தில் தேர்ச்சி தரும்படிக் கர்த்தரை நோக்கி ஜெபிப்பான். கற்றவைகளை முடிந்தவரை தெளிவாக மனத்தாழ்மையோடு ஆத்துமாக்களுடன் பகிர்ந்துகொள்ளுவான். தவறானதை ஆத்துமாக்களுக்கு கற்றுத்தர பயப்படுவான். தன் நாவு சத்தியத்தை மட்டுமே பேசப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பான். இதுவே மெய்ப்போதகனில் நாம் பார்க்கக் கூடியது. இந்த அடையாளங்கள் இல்லாதவர்கள் எப்படிப் போதகர்களாக இருக்க முடியும்?
நல்ல வேதஞானம் வழங்கும் கல்லூரிகள் இல்லாத நிலையில் அவசியமான இறையியலறிவை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்ற கஷ்டமான கேள்விக்கு பதில் காண்பது அவசியம்தான். இதை அநேகர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி எனக்குப் புதிதல்ல. பதிலளிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நல்ல வேதஞானம் வழங்கும் கல்லூரிகள் நம்மினத்தில் இன்னும் எழவில்லை என்பதை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இறையியல் கல்லூரிகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்ற உணர்வோடு வேதத்தை அடிப்படையாகக் கொண்டே எந்தப் போதனையையும் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது ஒரு கல்லூரி அறவே ‘லிபரல்’ போதனைகளைக் கொடுக்கக்கூடாது. அதாவது போதனைகள் அடிப்படையிலேயே வேதத்திற்கு முரணானதாக இருக்கக் கூடாது (இயேசு கிறிஸ்துவின், கன்னிப்பிறப்பையும், அற்புதங்களையும், அவருடைய மானுட தெய்வீக தன்மைகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், வேதத்தின் தன்மையையும், அதிகாரத்தையும் மறுதலிப்பது லிபரல் போதனை.) அடுத்ததாக அது பரவசக்குழுப் போதனைகளையும், செழிப்புபதேசத்தையும் கொண்டதாக இருக்கக்கூடாது. இவையும் வேத அதிகாரத்தை குறைவுபடுத்தும் போதனைகள். அடுத்தாக சகல டினோமிநேஷன்களையும் திருப்திப்படுத்தி நடக்கும் கல்லூரிகளாக இருக்கக்கூடாது. முழுக்கு ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எல்லாமே சரி என்றவிதத்திலும், சபை அமைப்பு, ஆளுகை பற்றிய போதனைகள் ஒவ்வோரு டினோமிநேசன்களுக்கும் ஏற்றமுறையில் இருந்துவிடலாம் என்றவிதத்திலும், கர்த்தருடைய ஆராதனை எப்படியும் இருந்துவிடலாம் என்று போதித்து வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தை என்ற தேவபயத்தோடு அணுகி அதிலுள்ளதை மட்டும் போதிக்காமல் டினோமிநேசன்களைத் திருப்திப்படுத்தும்விதமாகப் போதனையளிக்கும் கல்லூரியாக இருக்கக்கூடாது. அவசியமற்ற பாடங்களைப் போதிக்காமல், மெய்யான சபை வரலாறு, வேத மொழிகள், புதிய, பழைய ஏற்பாட்டு வேத வியாக்கியானம், வரையறுக்கப்பட்ட இறையியல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக இருக்க வேண்டும். திருச்சபையையும், ஓய்வுநாளையும் அலட்சியப்படுத்தி நடக்கும் கல்லூரியாக இருக்கக்கூடாது. சபை ஊழியத்தில் ஈடுபடும் தேவபக்கியுள்ள மெய்ப்போதகர்கள் வளர்ச்சியடையத் துணைசெய்யும் போதனைகளையும், சூழ்நிலையையும் கொண்டவையாக இருக்கவேண்டும். ஆரம்பம் முதல் கடைசிவரையும் வேதத்தில் உள்ளதை மட்டுமே தைரியத்தோடு போதித்து வரும் கல்லூரிகள் இருக்கின்றனவா? என்றுதான் கேட்கிறேன். இதைப் புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய கல்லூரிகள் இல்லாத நிலையில் சத்தியத்தின்படி மட்டுமே நடக்க வேண்டும், சபை நடத்த வேண்டும், சத்திய வாஞ்சையுள்ள ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கான சில ஆலோசனைகளை இங்கே தர விரும்புகிறேன்.
- ஊழியப் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு வேதத்தில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும்.
வேதத்தில் காணப்படும் அறுபத்தியாறு நூல்களையும் தொடர்ந்து வாசித்து அவற்றில் பரிச்சயமடைய வேண்டும். இதை எல்லா கிறிஸ்தவர்களுமே செய்ய வேண்டும்; அது அவர்களால் முடியும். போதகர்களும், அப்பணிக்குத் தயாராகிறவர்களும் அந்த அறுபத்தியாறு நூல்களில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது, அந்த நூல்களைப் பற்றிய தெளிவான ஞானத்தை அவற்றைத் தொடர்ந்து கருத்தோடு வாசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு இறையியல் கல்லூரிகள் தேவையில்லை. வேத வியாக்கியான நூல்கள் அவசியமில்லை. இதைச் செய்வதற்கு ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்; அது மட்டுமே அவசியம். ஏன், இதைச் சொல்லுகிறேன் என்றால் தன்னுடைய சொந்த மொழியில் வாசிக்கப் படிக்கத் தெரிந்த ஒருவன் வேதத்தை சிரத்தையோடு வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலேயே கர்த்தர் தன்னுடைய வேதத்தைத் தந்திருக்கிறார். கர்த்தர் பொய்சொல்ல மாட்டார். கலப்பை பிடிக்கிறவனும், வாசிக்கத் தெரிந்தவனாக இருந்தால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலேயே கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். அந்தளவுக்கு நாம் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவோடு அது அமைந்திருக்கிறது.
வேதம் படிக்கிறபோது, ஒவ்வொரு நாளும் தகுந்த நேரத்தை ஒதுக்கி தியானம் செய்வதற்காக மட்டும் படிக்காமல் அதைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்காகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு நூலையும் பல தடவைகள் வாசிக்க வேண்டும். அதில் எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை வசனங்கள் இருக்கின்றன, நூலை யார், யாருக்கு எழுதியிருக்கிறார், நூலின் முக்கிய கருத்து என்ன, அந்தக் கருத்தை விளக்கும் அடிப்படை வசனங்கள் யாவை, என்பவற்றை பேப்பரையும், பேனாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கருத்தோடு வேதத்தை வாசித்து குறிப்பெடுத்து மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த வகையில் வேதத்தைப் படிப்பது அவசியம். அதற்குமேல்போய் அந்த நூலின் முக்கிய கருத்தை அதை எழுதியவர் என்ன விதத்தில் விளக்குகிறார் என்பதை சிந்தித்துப் பார்த்து வாசிக்க வேண்டும். அந்த நூலில் காணப்படும் முக்கிய கருத்தைவிட வேறு என்ன போதனைகள் இருக்கின்றன? அந்தப் போதனைகளை நூலாசிரியர் எப்படி விளக்குகிறார் என்று ஆராய்ந்து பார்த்து வாசிக்க வேண்டும், குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் நிச்சயம் நேரம் தேவைப்படும். பலர் தியானத்துக்காக மட்டும் வேதத்தை வாசிப்பதாலேயே அவர்களுக்கு வேதத்தில் பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது; வேதம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். நேரத்தை ஒதுக்கி, ஜெபத்தோடு முழு வேதத்தையும் வாசித்து அதன் ஒவ்வொரு நூல்களைப் பற்றியும் தெளிவான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இப்படிப் படிப்பதன் மூலம் நாம் நாள்போகப்போக கர்த்தரைப் பற்றிய அறிவிலும், அவரோடு இருக்கும் உறவிலும் அதிகம் வளருவோம். வேதத்தோடு நமக்கு இருக்கும் உறவின் அடிப்படையிலேயே கர்த்தரோடு நமக்கு இருக்கும் உறவும் அமையும். நம் வாழ்க்கையில் வேதமில்லாமல் கர்த்தரோடு உறவிருக்க முடியாது. தன்னை விசுவாசிக்கிறவர்களோடு இடைவிடாத உறவை அமைத்துக்கொள்ளவே கர்த்தர் வேதத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார். வேத வாசிப்பில் தேர்ச்சியடையாமல் இறையியல் கல்லூரியில் அதைப் பெற்றுக்கொள்ளப் பார்ப்பது முதலில் சோம்பேரித்தனம், இரண்டாவது, அந்த மனிதன் இறையியல் கல்லூரிக்குப் போகிற நோக்கமே தவறு.
இதுவரை நான் விளக்கிய வேத அறிவை எழுதப்படிக்கத் தெரிந்த எந்த மனிதனும் தன்னுடைய மொழியில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில்தான் கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். அதனால்தான் வேதம் ‘தெளிவானது’ (Perspicuous, Clear), அதாவது, யாரும் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அது இருக்கிறது என்று சொல்லுகிறோம். இது வேதத்தைப் பற்றிய நிராகரிக்க முடியாத உண்மை; அதன் குணாதிசயங்களில் ஒன்று. இதை வேதமே விளக்குகிறது. நம்மால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத வேதத்தைக் கர்த்தர் தரவேண்டிய அவசியமில்லை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ளுவது எத்தனை அவசியமானது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய சித்தத்தின்படி, அதை மீறாமல் நாம் வாழும்படி அவர் கட்டளையிட்டிருக்கிறார். அப்படி வாழ்கிறபோதே நமக்குள் பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது. இரட்சிப்புகுரிய நம் வாழ்க்கையை கர்த்தருடைய மகிமைக்காக நாம் வாழ்வதற்கு வேதம் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது கர்த்தர் அந்த வேதத்தைத் தெளிவில்லாததாக, நம்மால் புரிந்துகொள்ள முடியாததாக, இறையியல் கல்லூரிக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விதத்தில் தந்திருப்பாரா? நிச்சயம் இல்லை. அப்படி நினைப்பது வேதத்தின் தன்மையையும் அதன் அதிகாரத்தையும், ஏன், கர்த்தரையும்கூட குறைத்துமதிப்பிடுவது போலாகிவிடும்.
அத்தோடு, கர்த்தர் நமக்குத் தந்திருக்கும் வேதத்தை நாம் புரிந்துகொள்ள இன்னொரு உதவியையும் செய்கிறார். நமக்குள் இருக்கும்படி அவர் தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவர் வேதத்தை விளங்கிக்கொள்ள நமக்கு உதவுகிறார். பரிசுத்த ஆவியானவரின் துணையோடுதான் நாம் வேதத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. ‘. . . பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்’ என்று இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும் (யோவான் 14:26). ‘. . . பரிசுத்த ஆவியானவர் . . . உங்களுக்குப் போதிப்பார் . . .’ என்று இயேசு லூக்கா 12:12ல் சொல்லியிருக்கிறார். பவுல் கொரிந்தியர்களைப் பார்த்து, ‘. . . நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல் பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி; ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்’ என்கிறார் (1 கொரி 2:13). ஒவ்வொரு தடவையும் நேரத்தை ஒதுக்கி நாம் வேதத்தை ஜெபத்தோடும் கருத்தோடும் வாசிக்கின்றபோது நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி வழிநடத்துகிறார். நம்முடைய வாசிப்பும், உழைப்பும் இல்லாமல் அவர் நமக்கு உதவி செய்வதில்லை. நாம் கருத்தோடும், ஜெபத்தோடும் சிந்தித்து வாசிக்கின்ற போது அவர் வேத உண்மைகளைப் படிப்படியாக நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்கிறார். இந்த விஷயத்தில் நமது உழைப்பும், அவருடைய வழிநடத்துதலும் இணைந்து நடக்கின்றன. இதுதான் ஆவிக்குரிய விஷயத்தில் விசேஷமானது. ஆண்டவரை அறியாதவனுக்கு இந்த வசதியில்லை.
மேலே நாம் பார்த்து வந்திருக்கும் விதத்தில் வேதத்தை விளங்கிக்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனாலும் முடியும். அதை ஒரு கிறிஸ்தவன் செய்யாமல் இருப்பது தவறு. கிறிஸ்துவோடு உறவிருப்பவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்பதிலும், அறிந்துகொள்ளுவதிலும் துடிப்போடு செயல்படுவார்கள். அது இல்லாமல் எப்படி ஒருவன் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியும்? ஜோன் பனியனின் உடலில் ஊசியால் எங்கே குத்தினாலும் வேதமாகவே சிந்தும் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு வேதத்தை அவர் கரைத்துக் குடித்திருந்தார். அதை அவர் இறையியல் கல்லூரிக்குப் போகாமல் சிரத்தையோடு வேதத்தை அன்றாடம் வாசித்து மட்டுமே கற்றிருந்தார். அதே முறையில்தான் ஸ்பர்ஜனுக்கும், மார்டின் லொயிட் ஜோன்ஸுக்கும் வேதத்தில் ஆழமான பரிச்சயம் இருந்தது. இவர்கள் கர்த்தர் தங்களால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் வேதத்தைத் தந்திருக்கிறார் என்று நம்பி துடிப்போடும், கருத்தோடும் அதை வாசித்து கற்றுக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த ஒரு சபை மூப்பர் எந்தக் கல்லூரிக்கும் போகாமல் வீட்டில் இருந்து வாசித்து, வாசித்து வேதத்தில் ஆழமான ஞானத்தைப் பெற்றிருக்கிறார். எந்தப் புத்தகத்தில், எந்த அதிகாரத்தில், எந்த வசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது அவருக்கு அத்துப்படி. அவரால் அது எப்படி முடிந்தது? கர்த்தரோடிருக்கும் உறவும், கடுமையான உழைப்பும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும்தான். இதை ஒவ்வொரு விசுவாசமுள்ள கிறிஸ்தவனும் செய்ய முடியும் என்றளவில்தான் கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். உண்மையில் போதகப் பணிக்காக இறையியல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு சாதாரணமாக எந்தக் கிறிஸ்தவனுக்கும் இருக்கவேண்டிய இந்தளவு போதுமான வேதப் பரிச்சயம் அறுபத்தி ஆறு நூல்களிலும் இருக்கவேண்டும். உண்மையில் இன்று அது அநேகருக்கு இல்லாமலிருக்கிறது. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இருந்தபோதும் ஆத்துமாக்களுக்கு ஆத்தும ஆலோசனை கொடுத்து வழிநடத்த வேண்டியவர்களுக்கு கர்த்தரோடிருக்கும் ஆழமான உறவும், வேதத்தில் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இந்தளவுக்கு வேத நூல்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இறையியல் கல்வி அவசியமில்லை. சாதாரண கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய வேத தகுதிகள் இல்லாமல் எவரும் போதகப் பணியை நினைத்தும் பார்க்கக்கூடாது. தேவமனிதனாக விரும்புகிற எவனும் தான் வேதமனிதனாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வேத அடிப்படையில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் நல்ல சத்தான நூல்களை சிந்தித்து, ஆராய்ந்து வாசித்து அவற்றில் தேர்ச்சி பெறவேண்டும்.
முதலில் ஊழியப்பணி செய்யப் போகிறவர்களுக்கு வேதத்தில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். அடுத்ததாக, வேதத்தில் மேலும் மேலும் ஞானம் வளர நல்ல நூல்களை வாசிப்பதும் அவசியம். வாசிக்கும் நூல்கள் நம்முடைய ஆத்துமாவைக் கெடுத்துவிடாததாகவும், சத்தியத்தின் அடிப்படையில் அமைந்தவையாகவும் இருக்கவேண்டும். எதை வாசித்தாலும் ஆராய்ந்து சிந்தித்து வாசிக்க வேண்டும். வேதத்தோடு பொருந்திப்போவதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தில் மேலும் தெளிவு பெற கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் சிறந்த தேவமனிதர்களின் ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரலாற்றில் எழுந்துள்ள அத்தகைய மனிதர்களின் எழுத்தைக் கர்த்தர் பாதுகாத்து நமக்குத் தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்காலத்திலும் எழுதப்பட்டிருக்கும் சிறந்த வேத இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது கிறிஸ்தவர்களுக்கும் அவசியம். மேலாக ஊழியப்பணி செய்கிறவர்களுக்கு மிகவும் அவசியம்.
ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘ஒருபோதும் வாசிக்காமல் இருப்பவனைப் பற்றி நாம் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாது; எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாதவனை யாரும் எவரோடும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். மற்ற மனிதர்களின் அறிவையும், எண்ணங்களையும் பயன்படுத்திக் கொள்ளாதவன், தன்னில் அறிவில்லாதவனாக இருக்கிறான் என்பதையே நிரூபிக்கிறான்.’
ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள்தான் எத்தனை உண்மையானவை. வாசிக்காத கிறிஸ்தவன் தன்னில் அறிவில்லாதவனாகத்தான் இருக்க முடியும். எவரும் வாசிக்காமல் இருப்பதற்கு சோம்பேரித்தனம் முக்கிய காரணம். அதுவே பழக்கமாகிவிட்டால் இரண்டு பக்கங்கள் வாசிப்பதும் கஷ்டமானதாகத்தான் தெரியும். நூல்கள் வாசிப்பதற்கு இப்படித் தடுமாறுகிறவர்கள் வேதத்தை எப்படி அடிக்கடி நெடுநேரம் வாசிக்கப்போகிறார்கள்?
போதக ஊழியப்பணிக்குப் போகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது அவர்களுடைய பணிக்கே ஆபத்து. கிறிஸ்தவர்கள் வாசிக்காமல் இருப்பது தவறு என்றால் போதிக்கும் பணிபுரிகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது அவர்களால் மற்றவர்களுக்கு எந்தப் பயனுமில்லை என்றாகிவிடும். நம்மினத்தில் பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் குறைவு என்பது எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அது பெருந்தவறு. முக்கியமாக போதிக்க விரும்புகிறவர்களுக்கு வாசிப்பது முக்கிய கடமையாக இருக்கிறது.
எதை வாசிக்க வேண்டும்? வேதத்தைத் தவிர நாம் விசுவாசத்திலும், வேதஞானத்திலும் வளரத் துணை செய்யும் நூல்களை மட்டுமே வாசிக்க வேண்டும். இதற்கான சிறு பட்டியலை நான் தர விரும்புகிறேன்.
- 1689 விசுவாச அறிக்கை
- கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகள்
நிச்சயமாக 1689 விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகளையும் வாசித்து அவற்றில் தேர்ச்சியடைய வேண்டும். கர்த்தர் வரலாற்றில் எழுப்பியுள்ள சிறந்த ஞானிகளிடமிருந்து இவை நம்மை வந்தடைந்திருக்கின்றன. அதுவும், தமிழில் வாசிக்கக்கூடியதாக இன்று அச்சில் இருக்கின்றன. இவை இரண்டும் மொத்த வேத இறையியல் போதனைகளைத் தொகுத்து நமக்குக் கொடுக்கின்றன. இதைவிட வேறு என்ன வேண்டும்? என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கிறிஸ்தவனும் வேதத்தோடு இவைகளைப் பயன்படுத்தி கிறிஸ்தவ அறிவில் உயர முடியும். அத்தோடு போலிப்போதனைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இரண்டையும் தமிழினத்துக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இன்றைக்கு வசதி இருக்கின்றது. (இவ்விதழில் கொடுக்கப்பட்டுள்ள தமிழக முகவரிகளோடு தொடர்புகொண்டு இவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்).
இவை தவிர 1995ல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘திருமறைத்தீபம்’ காலண்டு பத்திரிகை உங்களுக்குப் பயனளிக்கும். 1689 விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனைகளின் அடிப்படையில் வேதபூர்வமான சீர்திருத்த போதனைகளை இந்தப் பத்திரிகை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதைப் பயன்படுத்தி இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் அநேகர். இதையும் நீங்கள் கருத்தோடு வாசித்தால் வேத இறையியல் போதனைகளில் ஞானம் பெறலாம். இப்பத்திரிகையை http://www.biblelamp.org எனும் இணைய முகவரிக்குப் போய் ஆரம்பத்திலிருந்து வந்திருக்கின்ற இதழ்கள் அனைத்தையும் வாசிக்கலாம்.
சவரின் கிரேஸ் வெளியீடுகளின் மூலமாக இதுவரை வெளிவந்திருக்கும் நூல்களையும் நீங்கள் http://www.biblelamp.org இணைய முகவரிக்குப் போய் அதிலுள்ள முகவரிகளோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல்கள் அனைத்துமே வேதபூர்வமான சீர்திருத்த போதனைகளை அளிப்பவை. அவற்றில் மிகவும் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
- திருச்சபை வரலாறு (பாகம் 1ம், 2ம்)– போதிக்கும் பணிக்கு வருகிறவர்கள் திருச்சபை வரலாறு தெரியாமல் இருக்கக் கூடாது. சபையைப் பற்றி அறிந்திராமல் சபை ஊழியத்தில் ஈடுபடலாமா? தமிழில் திருச்சபை வரலாறு சரியானவிதத்தில் எழுதப்பட்டிராத குறையை இந்நூல்கள் நிறைவு செய்துள்ளன. ஆதிசபைக் காலத்திலிருந்து 16ம் நூற்றாண்டு சபை சீர்திருத்த காலம் வரையிலான வரலாற்றை இவை படங்களுடன் விளக்குகின்றன.
- வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை– இந்நூல் பரிசுத்தமாக வாழ்வதைக் குறித்தது. அல்பர்ட் என். மார்டின் எழுதியது. பரிசுத்தவாழ்க்கை வாழ்வது என்பது மேஜிக் நடத்துவது போன்றதல்ல. அது வெறும் ஜெபத்தின் மூலமோ அல்லது அசாதாரண செயல்களின் மூலமோ நம்மில் நிகழ்வதில்லை. பரிசுத்தமாக வாழ்வது நம்முடைய கடமை. அந்தக் கடமையைப் புரிந்துகொள்ளுதலோடு நிறைவேற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு. பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு பரிசுத்தமாக வாழமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவதில் பொருளில்லை. செய்யவேண்டிய கடமைகளை ஜெபத்தோடும், ஆவியின் துணையோடும் அன்றாடம் செய்தால் பரிசுத்தமாக வாழலாம், அதில் வளரலாம் என்பதை நூலாசிரியர் வேதபூர்வமாக விளக்குகிறார்.
- அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்– பலரும் விரும்பி வாசித்து வருகின்ற அல்பர்ட் என். மார்டினின் நூல். திருச்சபை எப்படி இருக்க வேண்டும், திருச்சபை வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று வேதபூர்வமாகவும், தெளிவாகவும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். சில தடவைகளாவது வாசித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நூல். போதகர்களும், போதக ஊழியப்பணிக்கு வருகிறவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலிது.
- ஆதிசபையின் அற்புத வரங்கள்– ஆதிசபையில் வேதம் முழுவதுமாக எழுதிக் கொடுக்கப்படுவதற்கு முன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்த கர்த்தர் திருச்சபைக்குக் கொடுத்த வரங்கள் இன்றும் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கான விளக்கத்தை இந்நூலில் காணலாம். 1 கொரி 11–14வரையுள்ள அதிகாரங்களுக்கான தெளிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது.
- பிரசங்கிகளும் பிரசங்கமும்– பிரசங்கப் பணி பற்றிய சகல அம்சங்களையும் தெளிவாக விளக்குகின்ற நூல். இதுவரை நான் நடத்தியுள்ள இரண்டு போதகர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் இந்நூல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தமிழினத்துப் போதகர்களும், போதகப்பணி செய்யத் தயார் செய்துகொள்கிறவர்களும் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமான நூல்.
- தாம்பத்திய உறவில் நெருக்கம்– தலைப்பைப் பார்த்து மலைத்துப்போய் விடாதீர்கள். இந்நூல் கிறிஸ்துவின் சுவிசேஷ அன்பின் அடிப்படையில் எப்படி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து நடத்துவது என்பது பற்றியது. அலன் டன் அவர்கள் எழுதியது. ஆதியில் கர்த்தர் மனிதனைப் படைத்தவிதத்தையும், படைப்பிலேயே அவனுக்கும், அவன் மனைவிக்கும் அளித்துள்ள பொறுப்புக்களையும் விளக்கிய பிறகு அவர்களுடைய பாவம் அந்தப் பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்ற முடியாதபடி செய்திருப்பதை சுட்டிக்காட்டி, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அந்தப் பொறுப்புகளை திருமணத்திற்கு முன்பே சிந்தித்துப் பார்த்து தங்களைத் தயார் செய்துகொண்டு அந்தப் பொறுப்புக்களை கிறிஸ்துவின் மகிமைக்காக நிறைவேற்றுபவர்களாக குடும்பம் நடத்தவேண்டும் என்பதை விளக்குகிறது. தமிழில் இந்தமுறையில் எழுதப்பட்ட நூலில்லை.
நாம் வெளியிட்டுள்ள நூல்களைத் தவிர இதே அடிப்படையில் வேத சத்தியங்களை ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் நூல்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் வாசிக்கக்கூடிய திறமை இருக்குமானால் அநேக நல்ல நூல்கள் வசதியாக இருக்கின்றன. தமிழில் மட்டுமே வாசிக்கக்கூடியவர்களுக்கு அந்தளவுக்கு நூல்கள் இல்லாத குறையுண்டு.
- கல்லூரிகள், பட்டங்கள் என்ற உலக எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வேத இறையியலை மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நல்ல போதனைகளை தரமுடியாத கல்லூரிகளும், அங்குபெறப்படும் பட்டங்களும் இந்த உலகத்தில் மக்களுக்கு முன் அங்கீகாரம் பெற உதவலாம்; ஆத்துமாக்களை சத்தியத்தில் வழிநடத்திப் பாதுகாக்க உதவாது. நம்முடைய சொந்த நன்மைக்காகப் போதகப் பணியில் ஈடுபடுவதைப் போன்ற பாவமான செயல் இருக்க முடியாது. உலகத்தில் உள்ள எல்லாப் பணிகளையும்விட வித்தியாசமானது போதகப் பணி. அது ஆத்துமாக்களுக்கு சேவை செய்யும்பணி. அதில் ஈடுபட வேதம் நமக்குத் தேவை; வேத இறையியல் நமக்கு அவசியம். அவற்றைத் தரமுடியாத இடங்களில் நாம் காலத்தை வீணாக்குவதில் பயனில்லை. அப்படியானால் நல்ல இறையியலைப் பெற்றுக்கொள்ள வேறு என்ன வழி?
இதுவரை நான் விளக்கியவிதத்தில் உழைத்துப் போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிற போதகர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி தங்களுடைய சபைகளில் இருப்பவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதற்கு நேரத்தை ஒதுக்கி நல்ல திட்டம் வகுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பாரமிருக்க வேண்டும். சபையிலிருப்பவர்களை எங்கோ அனுப்பி எதையோ படித்துவிட்டு வரும்படிச் செய்வது சபைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். தேவையில்லாத, நம் விசுவாசத்திற்கு ஒத்துப்போகாத விஷயங்களை அவர்கள் கற்றுக்கொண்டு வருவது சபைக்கு நல்லதா? என்று சிந்தித்துப் பாருங்கள். சபை வரலாற்றைப் படிக்கிறபோது 3ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் போலிப்போதனைகள் சபைகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டதைக் காண்கிறோம். அந்தளவுக்கு பிசாசு சபையைத் தாக்குவதில் கருத்தாக இருக்கிறான். எப்படியாவது சபைகளுக்குள் நுழைந்து களைகளை விதைக்கப் பார்ப்பான். இன்று தவறான போதனைகள் பெருகியிருப்பது மட்டுமல்லாமல், சத்தியத்தின் வலிமையைக் குறைக்கும்விதத்தில் போதனைகள் மலிந்து காணப்படுகின்றன. இதிலிருந்தெல்லாம் போதகர்களாகிற நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களைப் பாதுகாக்க வேண்டாமா? அவர்களைப் பாதுகாக்க வழி நாமே உழைத்து சத்தியத்தைக் கற்று வளர்ந்து அவர்களுக்குப் போதிப்பதுதான். சபையில் போதிக்க விரும்புகிறவர்களை நீங்கள்தான் கருத்தோடு போதித்து வளர்க்க வேண்டும். இந்தப் பணியை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வேறு யாரிடமோ ஒப்படைத்துவிடக் கூடாது.
இதற்கும் மேலாக நல்ல சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும்விதத்தில் அனுபவசாலிகளான, சத்தியத்தை மட்டும் போதிக்கின்ற போதகர்கள் இருந்து நடத்தும் வகுப்புகளுக்கு உங்கள் போதக மாணவர்களை அனுப்பிப் படிக்க வைக்கலாம். சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் போதனைகளை அளித்து போதக ஊழியத்தில் உதவுமுகமாக போதகர்களுக்கும், போதக பயிற்சி பெறுபவர்களுக்கும் பல காலமாகவே நான் பயிற்சியளித்து வருகிறேன். இதில் ஆத்தும வாஞ்சையோடு ஊழியம் செய்கிறவர்களுக்கும், செய்ய விரும்புகிறவர்களுக்கும் வருடாந்தரம் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படுகின்றது. இதில் கற்றுப் போதகர்களாக பணிபுரிகிறவர்கள் இன்றிருக்கிறார்கள். இத்தகைய வகுப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலைத்தேசத்து முறைகளையும், பாடங்களையும் பின்பற்றி இன்றைக்கு கல்லூரிகள் நடத்த முயல்கிறார்கள். நம் மக்களுடைய மொழியும், பண்பாடும், எண்ணப்போக்கும், வாழ்க்கை முறையும் வேறு. நம் மக்களுடைய தேவைகள் வித்தியாசமானவை; வாழும் சூழ்நிலை வித்தியாசமானது. அவர்கள் அணுகுகின்ற பிரச்சனைகள் நம்மினத்து சூழ்நிலையைத் தழுவியவை. அத்தோடு நம்மக்களுக்கு வேதம் அதிகம் தெரியாதிருக்கிறது. மேலைத்தேசத்து மக்களும், சபைகளும் அணுகுகின்ற பிரச்சனைகள் அல்ல நம்முடைய பிரச்சனைகள். நம்மினத்து மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, விசுவாசிகள் ஆத்தும வாழ்க்கையில் சீரடையப் போதிக்க அவசியமானவற்றையே நம்மினத்துப் போதகர்களும், போதகப்பயிற்சிக்கு வருகிறவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அநாவசியத்துக்கு நாம் வாழ்க்கையில் என்றுமே பயன்படுத்தாமல் இருக்கப்போகிற பாடங்களை நேரத்தை வீணாக்கிக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இன்று நம்மினத்தில் இருக்கும் இறையியல் கல்லூரிகளில் காணப்படும் பாடமுறைகளில் இருக்கும் பெருந்தவறு. டிகிரிக்கும், டிப்ளொமோவுக்கும் மட்டுமே கல்லூரிகள் இருந்து வருகின்றன. மேலைநாட்டு முறைகளைப் பின்பற்றிய பாடங்கள் இருக்கின்றன. பிரசங்கத்தையும், போதனையையும் கொடுக்க எந்தவிதத்திலும் வரத்தையோ, தகுதியையோ கொண்டிராதவர்களையும் இவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. திருச்சபைபற்றிய வேதஞானமில்லாமல் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்காத கல்லூரிகள்தான் நம்மத்தியில் அதிகம்.
ஒரு போதகனுக்கோ, போதக ஊழியத்திற்கு வருகிறவருக்கோ எவை தேவை? முதலில், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் வேதத்தில் மேலதிக ஞானம் பெற உதவும் பாடங்கள் தேவை. முழு வேதஞானத்தை, அதாவது பழைய ஏற்பாட்டு நூல்களிலும், புதிய ஏற்பாட்டு நூல்களிலும் தேர்ந்த அறிவை அளிக்கும்படியாக பாடங்கள் இருக்க வேண்டும். இவற்றை வைத்துத்தான் வாழ்நாள் முழுதும் போதிக்கப்போகிறோம். இவை தெரியாமல் எந்தப் போதக ஊழியத்தை நடத்துவது? அடுத்ததாக, வேதப்பகுதிகளை ஆராய்ந்து புரிந்துகொள்ள உதவும் வேதவிளக்க விதிமுறைகளைக் கற்றுத்தர வேண்டும். இந்தவிதிமுறைகளைத் திறமையோடு பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதோடு சம்பந்தப்பட்டதுதான் Exegesis. அதாவது, ஒரு வேதப்பகுதியைப் புரிந்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். இதெல்லாம் இல்லாமல் வேதத்தை எவரும் மற்றவர்களுக்குப் போதிக்க வழியில்லை. சுத்தமாக, உள்ளது உள்ளபடி வேதத்தைப் போதிக்க இந்தப் பாடங்கள் அத்தியாவசியமானவை.
இதற்கு மேலாக ஒருவருக்கு பிரசங்கத்தகுதி வேண்டும். என்ன வேத ஞானமிருந்தும் பிரசங்கிக்கும் வரமும், தகுதியும் இல்லாமல் எந்தப் பேச்சும் ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெறாது. பிரசங்க வரம் கர்த்தர் அளிப்பது. அது இருந்தால் மட்டுமே ஒருவரால் பிரசங்கம் செய்ய முடியும். அதை எவரும் இன்னொருவருக்கு கொடுக்க முடியாது. ஒரு பிரசங்கியை வளர்க்க (உருவாக்க அல்ல) முடியாத எந்த இறையியல் பாடத்திட்டத்தாலும் எந்தப் பயனும் இல்லை. சுவிசேஷத்தை அறிவிக்கவும், சபையை நிறுவி வளர்க்கவும் தேவை வேதத்தைத் திறமையாகப் போதிக்கக் கூடிய பிரசங்கிதான். அத்தகைய மனிதனில்லாத ஊழியத்தால் யாருக்கு எந்தப் பயன்? கிறிஸ்துவின் மத்தேயு 28:18–20வரையுள்ள கட்டளையை யாரை வைத்து நிறைவேற்றப்போகிறோம்? அதை நிறைவேற்ற இயேசு யாரை உருவாக்கினார்? வேதப்பிரசங்கிகளைத் தவிர வேறு எவரையுமில்லை.
வேதப் பிரசங்கியாக ஒருவர் இருப்பதோடு, ஆத்துமாக்களில் அன்புகாட்டி கரிசனையோடு போதகப் பணி செய்வதிலும் திறமை வேண்டும். இதனால்தான் ஒருவர் அனுபவசாலியான போதகராக இல்லாமல் இன்னொரு போதகரை வளர்க்க முடியாது என்று சொல்லுகிறேன். அனுபவசாலிகளான தேவமனிதர்களே இறையியல் போதனையளிக்கத் தகுந்தவர்கள். இந்த விஷயத்தில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கும் இடத்திலேயே எவரும் இறையியலறிவைப் பெறவேண்டும். ஜோன் ஓவன், ஜோன் பனியன், ஜோன் நொக்ஸ், ஜோன் கல்வின் எல்லோருமே பிரசங்க வரமுள்ளவர்களாகவும், ஆத்தும கரிசனையோடு போதக ஊழியம் புரியும் அனுபவசாலிகளாகவும் இருந்தனர். இன்று இவை இரண்டுமே நம்மினத்து இறையியல் பாடத்திட்டங்களிலும், கல்லூரிகளிலும் கடைசி இடத்தைக் கூடப் பிடிக்கமுடியாமல் இருக்கின்றன. அந்தளவுக்கு கிறிஸ்தவ ஊழியங்கள் வேதபோதனைகளைப் பின்பற்றாமல் இருந்துவருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இறையியல் பயிற்சி பற்றி நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதுவும், சத்தியத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு சபை நடத்த முனைகிறவர்கள் இந்த விஷயத்தைத் தவிர்க்க வழியே இல்லை. மேலே நான் விளக்கிய அம்சங்களை ஆராய்ந்து சிந்தித்து ஜெபத்தோடு செய்ய ஆரம்பித்தால் சத்திய வாஞ்சையுள்ளவர்கள் உருவாவதற்கு இது ஆரம்பகட்டமாக அமையும். கடந்த வருடம் இத்தகைய பயிற்சியை நான் கொடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்னார், ‘ஐயா, இந்த அடிப்படையில் வாஞ்சையோடு போதனையளிப்பவர்கள் நம் நாட்டில் இல்லை. நீங்களே, தொடர்ந்து ஒரு பயிற்சிக்கூடத்தை ஏன் நடத்தக்கூடாது?’ என்று. எது இல்லை என்பதை உணர்கின்ற தன்மையும், இல்லாமலிருப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் ஆரம்பமாகிவிட்டாலே அது நல்லதுதான். அதற்காக ஜெபிப்பதோடு, வேதத்தைக் கற்றுக்கொள்ளுகிற பணியில் கருத்தோடு நாம் ஈடுபடவேண்டும்.
கிருபாதாரபலியா, கோபநிவாரணபலியா?
வார்த்தைகள் முக்கியமானவை. நம்முடைய எண்ணங்களை வெளியிட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். எண்ணங்களைத் தெளிவாக விளக்குவதற்கு தகுந்த வார்த்தைகள் அவசியம். வார்த்தைகள் சரியானதாக இல்லாவிட்டால் நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் தவறான கருத்தைக் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. தகுந்த வார்த்தைகளை, நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களுக்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவசியத்தை பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் இந்தளவுக்கு மொழியைப் பொறுத்தவரையில் நாம் வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறபோது, நாமறிந்துகொள்ளும்படி தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் தன்னுடைய வேதத்தில் கர்த்தர் எந்தளவுக்கு முக்கியம் கொடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பார்? தம்முடைய சித்தம் தெளிவாக, நாம் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டுமென்பதற்காக நிச்சயம் கவனத்தோடு தெரிந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அதுவும் வேதம் பரிசுத்த ஆவியினால் விசேஷமான முறையில் ஊதி அருளப்பட்டதாக இருக்கிறது. வேதத்தை எழுதி முடிக்க தேவ மனிதர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருந்தபோதும், தவறு அறவேயில்லாமல் அவர்கள் வேதத்தை எழுதும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் பூரணபரிசுத்தராக இருப்பதால் அவருடைய எழுத்துக்களும் பூரணபரிசுத்தம் வாய்ந்ததாகவே இருக்கும். வேதத்தில் அது போதிக்கும் சத்தியங்கள் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் மொழியும், வார்த்தைகளும்கூட பூரணமானவையாகக் காணப்படுகின்றன. அதாவது. வேதம் எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதித் தரப்பட்டு காணப்படும் மூலச் சுருள்களில் அந்தவகையில் கர்த்தரின் வேதம் பூரணமானதாகக் காணப்படுகின்றது. இந்த மூலச் சுருள்களில் இருந்தே வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறது.
இத்தனைப் பீடிகையோடு இதையெல்லாம் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? அதற்குக் காரணம் முக்கியமான ஒரு வேத போதனையை நான் இப்போது உங்களுக்கு விளக்க முன்வந்திருப்பதால்தான். அந்தப் போதனை கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு அடித்தளமாக இருக்கும் ஒன்று. அந்தப் போதனையை விளக்குவதற்கு கர்த்தர் தன்னுடைய வேதத்தில் ஒரு முக்கியமான வார்த்தையைத் தெரிந்து பயன்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தை மூல மொழியான கிரேக்கத்தில் இருந்து தமிழ் வேதத்தில் ‘கிருபாதாரபலி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் அது Propitiation என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைக்குள் கிறிஸ்துவின் மீட்புப் பலி பற்றிய ஆழமானதும், அவசியமானதுமான சத்தியங்கள் பொதிந்து காணப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் இந்த வார்த்தை முக்கியமானது என்று சொன்னேன்.
இந்த வார்த்தையை முதலாம் யோவான் 4:10ல் காண்கிறோம். ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.’ கிறிஸ்து நமக்காக கிருபாதாரபலியானார் என்று இந்த வசனம் சொல்லுகிறது.
கிறிஸ்துவின் மீட்பாகிய பணியில் அடங்கியுள்ள உண்மைகளை விளக்கும் பலவகையான வார்த்தைகள் வேதத்தில் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘மீட்பு’ (Redemption) என்ற வார்த்தை பல தடவைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவிகளுக்கு விடுதலை கொடுப்பதற்காக கிறிஸ்து ஏற்றிருக்கும் பெரும் பணியையும் அந்தப் பணியில் அடங்கியிருக்கும் அருஞ்செயல்களையும் இந்தப் பதம் விளக்குகிறது. இதேபோல் ‘பாவநிவாரணபலி’ (Atonement) என்ற வார்த்தையையும் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டு பலிகளை நினைவுபடுத்துமுகமாக கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்ததை இந்தப் பதம் விளக்குகிறது.
கிறிஸ்து நமக்காக செய்திருக்கும் சிலுவைத் தியாகத்தை விளக்கும் இன்னொரு வார்த்தை ‘ஒப்புரவாக்குதல்’ (Reconciliation). இவையும் இவைபோன்ற ஏனைய பதங்களும் கிறிஸ்துவின் மீட்புப்பணியின் அருஞ்செயல்களை விளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வார்த்தைகளை நாம் நம்முடைய அன்றாட உரையாடலில் பயன்படுத்துவதில்லை. ஞாயிறு பாடசாலைகளில் சிறுவர்களுக்கு நிச்சயம் விளக்குவதில்லை.
இந்த வார்த்தைகள் முக்கியமானவை. கர்த்தரே தெரிந்தெடுத்து இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்துவின் மீட்பைப் பற்றி விளக்கும் இந்தப் பதங்கள் ஒரே விஷயத்தை விளக்குவதில்லை. அதாவது ஒரே விஷயத்தை விளக்கும் பல வார்த்தைகளாக இவற்றைக் கருத்தில் கொள்ளக் கூடாது. அப்படித்தான் அநேகர் இவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாபெரும் மீட்பாகிய அருஞ்செயலில் அடங்கியுள்ள வெவ்வேறு சிறப்பான அம்சங்களை ஒவ்வொரு பதமும் விளக்குகின்றது. உதாரணத்திற்கு ‘மீட்பு’ என்ற பதம் பாவிகளுக்கு கிறிஸ்து ஏற்படுத்தித் தந்திருக்கும் பெரும் ஆத்மீக விடுதலையை விளக்குவதாக இருக்கிறது. இன்னொரு பதமான ‘பாவநிவாரண பலி’ மீட்பின் ஓர் அங்கமான கிறிஸ்துவின் சிலுவைப் பலியை சிறப்பாக விளக்குகிறது. இன்னொரு பதமான ‘ஒப்புரவாக்குதல்’ மீட்பாகிய பெருஞ்செயலின் இன்னொரு அங்கமான கிறிஸ்துவின் மூலம் பாவி விடுதலை அடைந்து கர்த்தரோடு சமாதானத்தை அடைதலை சிறப்பாக விளக்குகிறது.
இந்தவகையில் ‘கிருபாதாரபலி’ என்ற பதம் விசேஷமானது. உண்மையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முறையாக விளங்கிக்கொள்ள இந்தப் பதம் அவசியமாக இருக்கிறது. இந்தப் பதத்தை நாம் விளங்கிக்கொள்ளுகிற விதத்திலேயே சுவிசேஷத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் காணப்படும். இந்தப் பதத்தை சரியாக விளங்கிக்கொள்ளாவிட்டால் திரித்துவ தேவனைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளிலும் மாற்றமேற்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதம் போதிக்கும் ஆழ்ந்த உண்மைகளை அறியாமலிருப்பது நம்முடைய வேத நம்பிக்கைகளையும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் பலவீனப்படுத்திவிடும்.
1 யோவான் 4:10 ஐ இப்போது ஆராய்வோம். ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.’
இந்தப் பகுதியில் யோவான் முக்கியமாக கடவுளுக்கு நம்மீதிருக்கும் அன்பையும் அந்த அன்பின் அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டிய அன்பையும் விளக்குகிறார். இந்தப் பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம் அதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. யோவான், ‘இங்கே பாருங்கள், இதுதான் அன்பு – இயேசு கிறிஸ்து நமது கிருபாதாரபலி’ என்கிறார். அன்பு என்ன என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதை இயேசு கிறிஸ்து நமது கிருபாதாரபலியானதில் காண்கிறோம் என்கிறார் யோவான்.
இங்கே பேராச்சரியம் தருகின்ற விஷயம் என்ன தெரியுமா? அன்புக்கும், கிருபாதாரபலிக்குமிடையில் யோவான் ஏற்படுத்துகின்ற தொடர்புதான். இந்த இரண்டையும் யோவான் இணைக்கிறார். கடவுளுக்கு தன் மக்கள் மீதிருக்கும் அன்பை, அவர் கிறிஸ்துவை அவர்களுக்கு கிருபாதாரபலியாக்கியதன் மூலம் பூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதே யோவானின் போதனை. இது எனக்கு பேராச்சரியமளிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? இப்போதெல்லாம் இந்த இரண்டும் ஒன்று சேர முடியாதென்பதையே நாம் தொடர்ந்தும் கேட்டுவருவதால்தான். இறையியல் அறிஞர்களும், பிரசங்கிகளும் இப்படித்தான் விளக்கி வருகிறார்கள். அன்பும், கிருபாதாரபலியும் இணைவதற்கு வழியே இல்லை என்று சொல்லி வருகிறவர்கள், அவற்றை இணைப்பதற்காக கிருபாதாரபலி என்ற வார்த்தையைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார்கள். (இதை நான் பின்னால் விபரமாக விளக்கவிருக்கிறேன்.) ஆனால் யோவானுக்கோ, கடவுளுக்கு தன் மக்கள் மீதிருக்கும் அளப்பரிய அன்பை அவர்களுக்காக கிறிஸ்து கிருபாதாரபலியானதிலேயே தெளிவாகப் பார்க்க முடிந்திருக்கிறது. யோவானைப் பொறுத்தவரையில் கிருபாதாரபலி, அதில் அடங்கியிருக்கும் அத்தனை அம்சங்களோடும் மாறாமல் இருந்தால் மட்டுமே அதில் கடவுளின் மெய்யான அன்பைப் பார்க்க முடியும்.
- கிருபாதாரபலி எனும் வார்த்தைக்கான அர்த்தமும் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் முறையும்.
இந்த வார்த்தையை நாம் 1 யோவான் 4:10ல் மட்டும் காண்பதில்லை. புதிய ஏற்பாட்டில் வேறு சில இடங்களிலும் இதைக் காண்கிறோம். இந்த இடங்களில் இது பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய மூன்று வேதப் பகுதிகளைக் கவனிப்போம்.
1 யோவான் 2:2, ‘நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.’
ரோமர் 3:26, ‘கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.’ (இந்த வசனத்தில் கிருபாதாரபலி என்ற தமிழ் வார்த்தைக்கான கிரேக்க வடிவமான ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற வார்த்தையின் குடும்பத்திலிருந்து வரும் ‘ஹிலாஸ்டேரியன்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் அது கிருபாதாரபலி என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
எபிரெயர் 2:17, ‘அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது.’
இந்த வசனத்தில் கிருபாதாரபலி என்ற வார்த்தை தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆங்கில வேதநூல்களில் NKJV, NASB, ESV மொழிபெயர்ப்புகளில் அதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருபாதாரபலி என்ற வார்த்தை ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற கிரேக்க வார்த்தையின் தமிழ் வடிவம். எபிரெ 2:17ல் ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற வார்த்தைக் குடும்பத்திலிருந்து வரும் ‘ஹிலாஸ்கொமாய்’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை KJV, ‘Reconciliation’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால், NKJV, NASB, ESV எல்லாமே Propitiation (கிருபாதாரபலி) என்று மொழிபெயர்த்திருக்கின்றன. எது சரி? Propitiation அல்லது கிருபாதாரபலி என்று மொழிபெயர்ப்பதே சரியானது. தமிழ்வேதம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாது ‘பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவாக’ என்று மட்டும் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த இடத்தில் கிருபாதாரபலி என்ற வார்த்தை தமிழில் இருந்திருக்க வேண்டும்.
இனி கிருபாதாரபலி (Propitiation) என்ற வார்த்தைக்கான பொருளை நாம் ஆராய்வது அவசியம். வேதத்திற்கு புறத்தில், அதாவது, கிறிஸ்தவர்களல்லாதவர்கள் மத்தியில் இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தத்தை முதலில் கவனிப்போம். ஒருவருடைய ‘சினத்தைத் தணிப்பது’ என்ற அர்த்தத்திலேயே இதன் வினைச்சொல் (Propitiate) அவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இருக்கும் ‘க்ரியா’ சொற்பொருளகராதியில் இந்த அர்த்தத்தைக் காணலாம். கிறிஸ்தவர்களல்லாதவர்கள்கூட இந்த வார்த்தைக்குள், பிரச்சனையோடிருக்கும் இருவரில் ஒருவர் கோபத்தோடிருக்கிறார் என்ற அர்த்தமிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுவே இந்த வார்த்தையின் அடிப்படை அர்த்தமாகும்.
நாம் இதற்கு மேல் ஒருபடி போய் வேதத்தில் இது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். இறையியல் வல்லுனரான ஜோன் ஓவன் கிருபாதாரபலியில் நான்கு முக்கிய விஷயங்கள் அடங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார்.
- செய்யப்பட்ட ஒரு குற்றம் நீக்கப்பட வேண்டும்.
- குற்றத்துக்கு ஆளானவர் சமாதானப்படுத்தப்பட வேண்டும்.
- குற்றத்தைச் செய்தவர் குற்றவாளியாக நிற்கிறார்.
- செய்யப்பட்ட குற்றத்திற்காக பலிகொடுக்கப்பட வேண்டும்.
ஜோன் ஓவனின் இந்த விளக்கம் மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் கிருபாதாரபலி (Propitiation) எனும் வார்த்தை விளக்கும் உண்மைக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த விஷயங்கள் யாரைப்பற்றிப் பேசுகின்றன, நடந்த குற்றந்தான் என்ன? குற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பென்ன? குற்றம் செய்தவரின் கதி என்ன? என்பதையெல்லாம் நாம் ஆராய்வது அவசியம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தேடுகின்றபோது குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறவர் கர்த்தர் என்ற உண்மையை வேதத்தில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். அதுமட்டுமல்லாமல் அந்தக் குற்றத்தால் அவர் பரிசுத்தமான கடுங்கோபத்தில் இருக்கிறார் என்பதையும் வேதம் விளக்குகிறது. கர்த்தர் பாதிக்கப்பட்டவராக பரிசுத்தமான கோபத்தோடு இருக்கிறார் என்பது கிருபாதாரபலி என்ற பதத்தின் அடிப்படை விளக்கமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோபத்தை நிவர்த்தி செய்யும் பலியாகவே கிறிஸ்து சிலுவையில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை கிருபாதாரபலி விளக்குகிறது. கர்த்தர் கோபத்தோடிருக்கிறார் என்பதையும் அதற்குக் காரணமான மனிதன் அவருடைய கோபத்துக்கு ஆளாகியவனாக இருக்கிறான் என்ற அடிப்படை உண்மையை கிருபாதாரபலியில் இருந்து எந்தவிதத்திலும் ஒதுக்குவதற்கு வழியே இல்லை. இந்த உண்மையை ஒதுக்கிவைக்கப் பார்த்தால் கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் அடிப்படைத் தன்மையை அழித்துவிடுவது போலாகிவிடும்; அவரது சிலுவைப்பலி அதன் பிறகு பரிகாரபலியாக இருக்காது.
உண்மை இப்படி இருந்தபோதும் நான் இதுவரை விளக்கியதை சிலர் நிராகரிக்கிறார்கள். பாவிகளாகிய மனிதர்கள் மேல் கர்த்தர் பரிசுத்தமான கோபத்துடன் இருக்கிறார் என்பதை நிராகரிப்பதற்காக அவர்கள் கிருபாதாரபலி என்ற வார்த்தையை சில ஆங்கில வேத மொழிபெயர்ப்புகளில் மாற்றி வேறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் Propitiation க்குப் பதிலாக Expiation என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் சி. எச். டொட் (C.H. Dodd) முக்கியமானவர். டொட்டுக்கு கர்த்தர் பெருங்கோபத்துடன் இருக்கிறார் என்ற உண்மை பிடிக்கவில்லை. அதை அவர் ‘பழங்காலக் கருத்து’ என்றும், ‘பழங்காக எண்ணங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது’ என்றும் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டொட், ‘இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் அந்தப்போதனை காணப்படவில்லை’ என்றும் தைரியமாக எழுதியிருக்கிறார்.
Expiation என்ற பதத்தின் பொருளென்ன? Propitiation க்குப் பதிலாக இந்த Expiation ஐ ஏன் பயன்படுத்தக்கூடாது?
Propitiation என்ற வார்த்தை விளக்குகின்ற கருத்துக்களில் பாதியையும் Expiation என்ற வார்த்தை விளக்குவதில்லை.
Expiation என்ற வார்த்தைக்கு ‘கழுவுதல்’ என்பது அடிப்படைப் பொருள். அதாவது, பாவத்தின் காரணமாக உண்டாயிருக்கும் குற்றவுணர்வைக் கழுவுதல் என்பதை இது விளக்குகிறது. பாவ மனிதனில் இருக்கும் குற்றவுணர்வைக் கழுவி அவனைச் சுத்தப்படுத்துவது என்பது மட்டுமே இந்த வார்த்தையளிக்கின்ற அர்த்தம். பாவம் இதன் மூலம் அழிக்கப்பட்டு கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் நட்புறவு ஏற்படுத்தப்படுவதாக இது விளக்குகிறது. கிருபாதாரபலியில் (Propitiationi) காணப்படும் அடிப்படை அம்சமான, கோபத்தோடு இருக்கும் கர்த்தரின் கோபத்தை சிலுவை மரணத்தால் ஒருவர் நீக்கிவிடுகிறார் என்ற உண்மை இந்த வார்த்தையில் அடியோடு இல்லை. அதனால் Propitiation என்ற வார்த்தைக்குப் பதிலாக Expiation என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முழுத்தவறு.
கர்த்தர் கோபத்துடன் இருக்கிறார் என்ற உண்மையை மறுதலிப்பதற்காக மட்டுமே இந்த வார்த்தையை எவரும் பயன்படுத்த முடியும். இந்திய வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பொதுமொழிபெயர்ப்பு வேதநூலில் ‘கழுவாயாக’ என்ற பதமே கழுவுதல் என்ற அர்த்தத்தில் 1 யோவான் 4:10ல் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பில் 1 யோவான் 2:2லும் ‘கழுவாய்’ என்ற வார்த்தையே Propitiation க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கிருபாதாரபலி (Propitiation) பற்றி பேராசிரியர் ஜோன் மரே இவ்வாறு விளக்குகிறார், ‘கிருபாதாரபலி என்பது இதுதான் – கர்த்தர் தன்னுடைய கோபத்தின் கீழ் வந்திருப்பவர்கள் மீது அளப்பரிய அன்புகாட்டியதால் தன்னுடைய ஒரே குமாரனுடைய இரத்தப்பலியின் மூலம் அவர்கள் மீது இருக்கும் தன்னுடைய கோபம் அகலுவதற்கு வழியேற்படுத்தியிருக்கிறார். தன்னுடைய கோபத்தை நீக்குவது இந்தளவுக்கு கிறிஸ்துவின் பணியாக இருக்கிறது; அதன்மூலம், தான் ‘அன்பு காட்டுகிறவர்கள்’ தன்னுடைய கோபத்துக்கு இலக்கானவர்களாக இல்லாமல்போவதோடு, ‘கோபாக்கினையின் பிள்ளைகள்’ கர்த்தரின் அன்புக்குப் பாத்திரமான பிள்ளைகளாக மாற்றப்படும் இலக்கையும் அன்பு நிறைவேற்றும்.’ (John Murray, The Atonement, pg 15.)
பேராசிரியர் ஜோன் மரேயின் வார்த்தைகளை மறுபடியும் ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். கர்த்தரின் அன்பைக் கிருபாதாரபலியோடு ஒத்துப்போகவைப்பதற்காக ஜோன் மரே கர்த்தரின் கோபத்தைக் கிருபாதாரபலியில் இருந்து அகற்றிவிட முயலவில்லை. கர்த்தரின் பெருங்கோபத்துக்காளாகியிருக்கும் பாவிகளை அதிலிருந்து விடுவிப்பதற்காகத்தான் அவர் தன்னுடைய அளப்பரிய அன்பின் காரணமாக தன்னுடைய ஒரே குமாரனை அவர்களை இரட்சிப்பதற்காக அனுப்பிவைத்தார். அவருடைய அன்பே பாவிகள்மீது தனக்கிருக்கும் கோபத்தை நீதியாக நீக்கிக்கொள்ளும் வழிமுறையை இயேசு மூலம் ஏற்படுத்த வழிகோலியது. அவருக்கு அந்த அன்பில்லாமலிருந்திருந்தால் பாவிகள் மீதான அவருடைய கோபம் தொடர்ந்திருந்திருக்கும். இங்கே தேவ அன்புக்கும் தேவகோபத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்ளுவது அவசியம்; ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க முடியாது. பாவிகளின் மீது கர்த்தருக்கு இருக்கும் தேவகோபம் அவருக்கு தன்னுடைய மக்கள் மீதிருக்கும் அன்புக்கு முரண்பாடானதாக இருக்கவில்லை. அன்பே உருவாக இருக்கும் கர்த்தரில் கோபமிருக்க முடியாது என்று நினைக்கிறவர்களுக்கு வேத சத்தியம் புரியவில்லை. Propitiation (கிருபாதாரபலி) என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை அம்சமான பாவிகள் மீதிருக்கும் கர்த்தரின் கோபத்தை நீக்க வழியில்லை.
- தமிழ் மொழிபெயர்ப்பான ‘கிருபாதாரபலி’
Propitiation என்ற ஆங்கிலப் பதத்திற்கு தமிழில் ‘கிருபாதாரபலி’ என்ற வார்த்தை நாம் இன்று பொதுவாகப் பயன்படுத்தி வருகின்ற தமிழ்வேத நூலில் காணப்படுகின்றது. இதைப்பற்றி நான் கொஞ்சக்காலமாகவே சிந்தித்து வந்திருக்கிறேன். எந்த அடிப்படையில் இந்த வார்த்தை பொருத்தமானது என்று தெரிந்து தமிழ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான குறிப்புகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிருபாதாரபலி என்ற வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால், ‘கிருபையை ஆதாரமாகக் கொண்ட பலி’ என்ற கருத்து வரும். அதாவது, கிறிஸ்துவின் சிலுவைப்பலி கிருபையை ஆதாரமாகக் கொண்டதாக அமைந்திருக்கிறது என்பதே இதன் கருத்து. வேறு கருத்து வரும்விதத்தில் இதைப் பதம் பிரித்துப் பார்க்க வழியில்லை. இதுதான் இந்த வார்த்தைக்குப் பொருளாக இருந்தால் இந்த மொழிபெயர்ப்பு Propitiation (Hilasmos) என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை உண்மைகளை விளக்குவதாக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இதுவரை நாம் பயன்படுத்தி வந்திருக்கின்ற கிருபாதாரபலி என்ற பதம் Propitiation னுக்கான சரியான மொழிபெயர்ப்பாக இல்லை.
வேத மொழிபெயர்ப்பில் எந்த வார்த்தைகளும் வேதம் எழுதப்பட்டுள்ள மூலமொழியில் பொதிந்து காணப்படும் அடிப்படை அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு ஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்கிறபோது அது இலகுவான ஒரு காரியம் அல்ல. இருந்தபோதும் கர்த்தரின் தூய வேதத்தை மொழிபெயர்க்கின்றபோது அதிலுள்ள வார்த்தைகளின் இறையியல் அர்த்தங்கள் காணாமல் போய்விடுகிற மாதிரி மொழிமாற்றம் செய்யப்படும் வார்த்தைகள் அமைந்துவிடக்கூடாது. வேதத்தில் Propitiation மிக முக்கியமான அவசியமான வார்த்தை. இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தின் அரும்பெரும் இறையியல் உண்மைகளை வெளிப்படுத்துகின்ற பல வேதவார்த்தைகளில் (பரிகாரபலி, ஒப்புரவாக்குதல் போன்றவை) இதுவும் ஒன்று. ஒவ்வொரு வார்த்தையும் சிலுவைப்பலியின் விசேஷ அம்சங்களை விளக்குகின்றன. ஒவ்வொன்றும் அந்த அம்சங்களின் ஏதாவது ஒன்றை சிறப்பாக வலியுறுத்தும். உதாரணத்திற்கு ‘பரிகாரபலி’ (Atonement) கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்திற்கு முக்கியத்துவம் தருகிறது; பாவத்திற்காக பலிகொடுக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. இன்னொரு பதமான ‘ஒப்புரவாக்குதல்’ பாவிகளிடம் இருந்து கர்த்தர் பிரிந்திருக்கிறார் என்பதை முக்கியமாக உணர்த்தி அதற்கான நிவாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் Propitiation கர்த்தர் பாவிகள் மேல் கோபத்தோடு இருக்கிறார் என்பதை வலியுறுத்தி அதற்கான நிவாரணத்தைச் சுட்டுகிறது. அந்த அவசியத்தின் அடிப்படையிலேயே Propitiation என்று ஆங்கிலத்தில் அது கவனத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அது எந்த அர்த்தத்தில் மூலமொழியில் அமைந்திருந்ததோ அதே அர்த்தத்தைக் கொண்டதாக தமிழில் நிச்சயம் அமைய வேண்டும்.
Propitiation என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும், அந்த வார்த்தையின் அடித்தளமான இறையியல் அம்சம், பாவிகள் மீது கர்த்தருக்கு இருக்கும் கோபமாகும். ஏனெனில், அந்தக் கோபத்தை நிவர்த்தி செய்வதற்கான பலியைப் பற்றியே அந்த வார்த்தை விளக்குகிறது. ஆகவே, கர்த்தரின் கோபத்தை வெளிப்படுத்துகிறவிதத்தில் அதன் தமிழ்மொழிபெயர்ப்பு அமைய வேண்டியது அவசியம். இதற்கான வார்த்தைகளை நான் சிந்தித்துப் பார்த்தபோது ‘கோபநிவாரணபலி’ என்ற வார்த்தை, Propitiation என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்துவதாக கருதுகிறேன். இதை இங்கு விளக்குவது அவசியமாகிறது.
கோபநிவாரணபலி என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று முக்கிய அம்சங்களைக் காணலாம்:
- அடிப்படை அம்சமான கர்த்தரின் கோபம் அதில் வெளிப்படையாக சொல்லப்படுகிறது (கோபம்).
- அந்தக் கோபம் நிவர்த்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அது சுட்டிக்காட்டுகிறது (நிவாரணம்).
- அந்த நிவர்த்திக்காகப் பலிகொடுக்கப்பட வேண்டியதையும் அந்த வார்த்தை சுட்டுகிறது (பலி).
இந்த மூன்று அம்சங்களும் Propitiation என்ற வார்த்தையின் முக்கிய அம்சங்கள். இவற்றை வெளிப்படுத்துவதாக ‘கோபநிவாரணபலி’ என்ற வார்த்தை இருப்பதாக நான் காண்கிறேன். இந்த அம்சங்கள் கிருபாதாரபலி என்ற வார்த்தையில் காணப்படவில்லை. அந்த வார்த்தையை உருவாக்கியவர்கள் அதை அமைத்தபோது எந்த சிந்தையோடு அதை அமைத்தார்கள் என்பது தெரியவில்லை. வெறும் வார்த்தை என்ற அடிப்படையில் அது நல்ல வார்த்தையாகவும் கிருபையின் மேன்மையை சுட்டிக்காட்டுவதாகவும் இருந்தபோதும் Propitiation என்ற வார்த்தைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாக இல்லாததுதான் அதன் குறை.
இதையெல்லாம் வாசிக்கின்ற சிலர், என்னடா வேதத்தில் இந்தளவுக்கு குறை இருக்கின்றதா? என்று கேட்கலாம். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கர்த்தர் எபிரெய, கிரேக்க மொழிகளில் நமக்குக் கொடுத்த வேதத்தின் மூலத்தில் எந்தத் தவறுக்கும் தப்புக்கும் இடமில்லை. ஆனால், அதனுடைய மொழிபெயர்ப்புகளில் எப்போதுமே பூரணத்துவத்தைக் காணமுடியாது. அதனால்தான் பல மொழிபெயர்ப்புகள் உள்ள ஆங்கிலத்திலும்கூட நல்ல மொழிபெயர்ப்புகளை நாம் நாடிப் போகிறோம். தமிழில் நமக்கு உதவும்படித் தொகையான மொழிபெயர்ப்புகள் இல்லை. எல்லோரும் பொதுவாக விரும்பிப் பயன்படுத்துகிற ஒரே மொழிபெயர்ப்பு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அதில் குறைகள் இல்லாமலில்லை. அதைத் தவிர்த்த ஒருசில மொழிபெயர்ப்புகளிருந்தாலும் அவை நம்பக்கூடியவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்கவில்லை. போதகப்பணியிலும், பிரசங்க ஊழியத்திலும் ஈடுபடுகிறவர்கள் ஏனைய மொழிகளில் வேதத்தை ஆராய்ந்து படித்து தமிழில் ஆத்துமாக்கள் பயனடையும் விதத்தில் மெய்ப்போதனைகளை வழங்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறார்கள்.
- வேதம் போதிக்கின்ற தேவகோபம்
மனிதனுடைய கீழ்ப்படியாமையாலும், அதனால் விளைந்த பாவத்தாலும் பரிசுத்தமான கர்த்தர் மனிதன்மேல் கோபத்தோடிருக்கிறார் என்ற உண்மை நிராகரிக்க முடியாதபடி கோபநிவாரணபலியாகிய (Propitiation) பதத்தில் உள்ளடங்கியிருக்கிறது என்று பார்த்தோம். தேவன் மனிதன் மேல் கோபத்தோடிருக்கிறார் என்று வேதம் போதிக்கிறதா என்பதை இனி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டு நூலில் தேவகோபத்தை சுட்டிக்காட்டும்படியாக இருபதுக்கும் மேலான பதங்கள் காணப்படுகின்றன என்று இறையியலறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வார்த்தைகள் 580 தடவைகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தேவகோபத்தை நிரூபிப்பதற்கு இது மட்டுமே போதும். இருந்தபோதும் புதிய ஏற்பாட்டிலும் இந்தப் போதனை வெளிப்படையாகக் காணப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் சில பகுதிகளை இதற்கு உதாரணங்காட்ட விரும்புகிறேன்.
யோவான் 3:36 – குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
மாற்கு 9:43-44 – 43உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 44அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
மத்தேயு 25:30 – பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
மத்தேயு 25:41 – அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
மத்தேயு 25:46 – அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
அப்போஸ்தலர் 17:31 – மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
அதுமட்டுமல்லாமல் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தேவகோபத்தைப் பற்றி பத்துத்தடவைகள் பவுல் குறிப்பிட்டிருக்கிறார்.
ரோமர் 1:18 – சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
வேதத்தில் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆரம்பம் முதல் கடைசிவரை ‘ஆட்டுக்குட்டியின் கோபம்’ பற்றி திரும்பத் திரும்ப விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். திறந்த மனத்தோடு வேதத்தை ஆரம்ப முதல் கடைசி வரை ஆராய்ந்து வாசித்துப் பார்த்தால் பரிசுத்தமுள்ள கர்த்தர் பாவத்திற்கு எதிரானவராக மனிதர்கள் மேல் கோபத்துடன் இருக்கிறார் என்பதையும், தேவகோபம் மனிதர்கள் மேல் இருக்கிறது என்பதையும் எத்தனையோ பகுதிகளில் விளக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
தேவகோபம் என்றால் என்ன?
எல்லாப் பாவங்களுக்கும், கேடுகளுக்கும் எதிரானதாக பரிசுத்தமான கர்த்தரில் காணப்படும் நிரந்தரமான குணாதிசயமே தேவகோபமாகும். கர்த்தர் ஒளியானவராக இருந்து அவரில் எந்தவிதமான இருளும் காணப்படாமலிருப்பதால் சகலவிதமான பாவங்களுக்கும், கேடுகளுக்கும் அவர் எதிரானவராக இருக்கிறார். அவரது பரிசுத்த தன்மை சகலவித பாவங்களையும் வெறுக்கிறது. அவருடைய பரிசுத்தமே இந்தவகையில் கேட்டை வெறுத்து அதற்கு எதிரானதாக இருக்கின்றது.

இந்த இடத்தில் நாம் இன்னுமொரு உண்மையைப் புரிந்துகொள்ளுவது அவசியம். இது பாவத்தைக் குறித்த உண்மை. பாவத்தை நாம் ஏதோவொரு பொருளைப்போல எண்ணிவிடக்கூடாது. பாவம் ஒரு பொருளல்ல. பாவம் மனிதர்களில் பிரிக்க முடியாதபடி காணப்படுகின்ற தன்மை. பாவம் தனியாக நிற்கும் பொருளல்ல. அது மனிதர்களில், மனிதர்களுக்குள் காணப்படுக்கின்ற தன்மை. கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த உறவு அறுந்துபோயிருப்பதற்குக் காரணம் அந்தப் பாவமே. பாவத்தினால் மனிதன் இன்று பாவியாக இருக்கிறான்; பாவத்தைச் செய்கிறான். மனிதனுடைய இருதயம் பாவத்தில் இருக்கிறது; முழுமையாக பாவத்தால் பாதிக்கப்பட்டு நீதியற்று இருக்கின்றது. எந்த மனிதனிலும் இருந்து நாம் பாவத்தைப் பிரிக்க முடியாது. அதனால் கர்த்தர் மனிதனைப் பார்க்கின்றபோது பாவியாகத்தான் பார்க்கிறார். பாவியாகத்தான் அவனை அவர் நடத்த வேண்டும்; நடத்துகிறார். பாவத்தில் இருக்கின்ற மனிதனை அவரால் வேறுவிதத்தில் பார்க்க முடியாது. இதன் காரணமாக வேதமெங்கும் நாம் கர்த்தர் பாவத்தை விரோதிக்கிறார் என்றும், பாவியையும் விரோதிக்கிறார் என்றும் வாசிக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் – நரகத்தில் துன்பப்படுவது பாவமல்ல; மனந்திரும்ப மறுத்து அங்கு போயிருக்கும் பாவியாகிய மனிதனே. பாவத்தில் தொடர்ந்திருக்கும் மனிதர்களே நரகத்தில் துன்பப்படுகிறார்கள். பாவத்திற்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் இந்தப் பிரிக்கமுடியாத ஆழமான தொடர்பை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம்.
கோபநிவாரணபலி (Propitiation) என்ற வார்த்தையை அகற்றிவிட்டு ‘கழுவுதல்’ (Expiation) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தவர்கள், பாவத்தைக் கழுவுதலாகிய காரியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர பாவத்தின் காரணமாக பாவிகளின் மீதிருக்கும் தேவகோபத்தைத் தவிர்த்துவிட்டார்கள். கர்த்தருக்கும் பாவியாகிய மனிதனுக்கும் இடையில் ஒப்புரவு ஏற்பட வேண்டுமானால் மனிதர்மேல் கோபத்துடன் இருக்கும் கர்த்தரின் கோபம் தீரும்படியான தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.
கோபநிவாரணபலி கர்த்தர் மனிதனின் பாவத்தின் காரணமாக கோபமடைந்திருக்கிறார் என்பதை விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கர்த்தரே மனிதனின் மீதிருக்கும் தனது கோபத்தை விலக்கிக்கொள்ளவும், மனிதனின் பாவத்துக்கும் பரிகாரம் ஏற்படவும் வழிசெய்திருக்கிறார் என்றும் விளக்குகிறது. பாவத்திற்கும், பாவிகளுக்கும் எதிரான அவருடைய கோபம் நீதியான பலியினால் தீர்க்கப்பட்டு மனிதன் அவரோடு ஒப்புரவாக அவரே ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வவல்லவரான கர்த்தர் மட்டுமே அத்தகைய தீர்வை ஏற்படுத்த முடியும். இது கோபநிவாரணபலியில் மட்டுமல்ல, ஒப்புரவாகுதலிலும் பொதிந்து காணப்படும் அடிப்படை உண்மை. கர்த்தரின் கோபத்தால் மனிதன் அவரைவிட்டுப் பிரிந்திருப்பது உண்மைதான். ஆனால், கர்த்தர் மனிதனின் பாவத்தால் கோபப்பட்டு அவனை விட்டுப் பிரிந்திருப்பதாலேயே மனிதன் அவரைவிட்டு தூரத்தில் இருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகையால், கர்த்தரே ஒரு தீர்வை ஏற்படுத்தினாலொழிய இந்தப் பிரிவு நீங்கி ஒப்புரவாகுதல் ஏற்பட வழியில்லை. கர்த்தர் தன்னுடைய மக்கள் மீதிருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாக, அவர்களுடைய பாவத்தைப் போக்குவதற்காகத் தானே முன்வந்து தன்னுடைய ஒரே குமாரனைப் பலியாகத் தன்னுடைய கோபத்தைத் தாங்கி சிலுவையில் மரிக்கும்படிச் செய்தார்.
ரோமர் 5:8-9 – 8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். 9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 3:23-26 – 23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
இதுவரை கோபநிவாரணபலி (Propitiation) பற்றிப் பார்த்துவந்திருக்கிறோம். இனி வரப்போகிற இதழில் இதன் விளக்கத்தைத் தொடர்ந்துப் பார்ப்போம்.
அன்று நடந்ததுதான் என்ன? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2)
[இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது ஓரிரு தடவைகள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை வாசித்தபின்போ அல்லது அதைத் திறந்துவைத்துக்கொண்டு இந்த ஆக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து வாசிப்பது பிரயோஜனமாக இருக்கும். – ஆசிரியர்]
அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு என்ன தோன்றுகிறது? இதுவரை இருந்திராத வகையில் அப்போஸ்தலனான பேதுரு பெருந்தைரியத்தோடு சகல அப்போஸ்தலர்களும் சூழ்ந்திருக்க முன்னால் வந்து அங்கிருந்த திரளான யூதக்கூட்டத்தைப் பார்த்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆணித்தரமாக விளக்கினார். அந்த சுவிசேஷ செய்தியில் கிறிஸ்துவின் மீட்பின் செயலை பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் அருமையாக விளக்கியது மட்டுமல்ல, ஆவிக்குரிய தைரியத்தோடு பேதுரு பிரசங்கித்திருப்பது நாம் ஒரு தடவை வாசிப்பதை நிறுத்திக் கவனிக்க வேண்டிய பெருநிகழ்ச்சி. அத்தோடு, அந்தப் பிரசங்கத்தின் முடிவில், இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக அநேகர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பெருங்குரலெடுத்துக் கேட்டதையும் கவனிக்கிறோம். அன்றைய தினத்தில் உடனடியாக மூவாயிரம் பேர் விசுவாசிகளாகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் கவனிக்கிறோம். இந்த இடத்தில் நாம் சில முக்கியமான உண்மைகளைக் கவனித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
- அப்போஸ்தலருடைய நடபடிகளில் அன்று (முதல் நூற்றாண்டு) நடந்த நிகழ்ச்சியை நாம் அன்றாட வாழ்க்கையில், நம்முடைய சாதாரண சுவிசேஷப் பணிகளில் பார்க்க முடியுமா? அதாவது, இந்த நிகழ்ச்சியை இன்று பொதுவாகவே எவருடைய ஊழியப்பணி மூலமாகவும் நிகழக்கூடியதாக எடுத்துக்கொள்ள முடியுமா? அந்தவகையில் வேதத்தைப் படிக்கின்ற அநேகர் இருக்கிறார்கள். அன்று நடந்திருக்கிறது, ஆகவே, இன்றும் சாதாரணமாக அப்படி நடக்கமுடியும்; நடக்க வேண்டும் என்று எண்ணி அதை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் தவறு விடுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து. அதை நான் சொல்லக் காரணம், அவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளை வாசிக்க வேண்டிய விதத்தில் வாசிக்கவில்லை என்பதால்தான். அப்போஸ்தல நடபடிகள் இரண்டாம் அதிகாரம், ஏன், அந்த வரலாற்று நூல் முழுவதுமே நமக்கு திருச்சபை பற்றிய நல்ல போதனைகளை, நடைமுறைப்படுத்த வேண்டிய போதனைகளைத் தருகின்றனவே தவிர அதிலுள்ள அனைத்தையும் ‘லிட்டரலாக’ உள்ளது உள்ளபடியே எடுத்து எந்தவித மாறுதலும் இல்லாமல் இன்றும் அவை நிகழ வேண்டும் என்றவிதத்தில் புரிந்துகொள்ளுவதற்காக எழுதப்படவில்லை. அந்தவிதத்தில் வேதத்தை வாசிப்பது முழுத்தவறு. சாதாரண நூல்களை வாசிக்கும்போதும், உலக நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாம் அந்தவிதத்தில் பொருள்கொள்வதில்லை. சிலர், வேதத்தை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டுமென்பார்கள். அது தவறு. ஏனைய நூல்களையும், நிகழ்ச்சிகளையும் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்துகிற சாதாரண விதிமுறைகளை வேதம் படிப்பதிலும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒன்று மட்டும் வித்தியாசமானது; சாதாரண விதிகளைப் பயன்படுத்தி நாம் வேதத்தைப் படிக்க வேண்டிய அவசியமிருந்தபோதும் வேதத்திலிருந்து நாம் ஆவிக்குரிய போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம். அதை வேறெதிலும் இருந்து பெறமுடியாது.
- அப்போஸ்தலர் 2ம் அதிகார முடிவில் மூவாயிரம் பேர் பிரசங்கம் கேட்டு உடனடியாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களில்ஒருவராவது போலியாக இல்லை. அத்தனை பேரும் மெய்க்கிறிஸ்தவர்களாக கர்த்தரால் மாற்றப்பட்டார்கள். இது எப்படி முடிந்தது? எந்த நாட்டில், எந்த ஊரில், இன்றோ அல்லது வரலாற்றிலோ இப்படிப்பட்ட மெய்யான மனமாற்றமும் விசுவாசமும் ஒரேயொரு பிரசங்கத்திற்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது; அப்படி நிகழ்ந்ததாக வரலாறே இல்லையே. எப்போதுமே யாருக்காவது மனமாற்றம் நிகழ்கிறபோது அதை ஓரளவுக்கு மனித அளவில் சோதித்துப் பார்த்தே ஞானஸ்நானம் கொடுப்பது இன்றைய நல்ல சபைகளில் வழக்கம். இதைப் பின்பற்றாத நல்ல சபைகளே இல்லையெனலாம். அப்படியானால் சபைகள் தவறு செய்கின்றனவா? அப்போஸ்தல நடபடிகள் 2ல் உள்ளபடி உடனடியாக சடுதியாக எவருக்கும் ஞானஸ்நானம் கொடுப்பதா? என்ற கேள்விகளுக்கு பதில் காண்பது அவசியம். அத்தோடு அந்த மூவாயிரம் பேரும் மெய்யான விசுவாசிகளானார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் பன்னிரெண்டு பேரும் எப்படி உறுதியாக அறிந்துகொண்டார்கள்? அவர்கள் மெய்யான விசுவாசிகள் என்பதையும் அவர்களில் எவருமே போலிகளல்ல என்பதையும் அந்தப் பகுதி உறுதி செய்கிறது. இதையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது?
வரலாற்று நூல் – முதலில், அப்போஸ்தல நடபடிகள் வரலாற்று நூல் என்பதை மனதில் வைத்து அதை வாசிக்க வேண்டும். வரலாறு நடந்து முடிந்த நிகழ்வுகளைக் கூறுகிறது. அப்போஸ்தல நடபடிகள் முதல் நூற்றாண்டில் கர்த்தர் தன் சபையை எப்படி நிறுவினார் என்பதை விளக்குகிறது. இதற்காக அதில் போதனைகள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அந்தப் போதனைகளை நாம் பார்ப்பதற்கு முன் நூலின் தன்மையைப் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். இது வரலாற்று நூல் என்பதால் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, அதை உள்ளது உள்ளபடி ‘லிட்டரலாக’ எடுத்து அன்று நடந்ததுபோல் இன்றும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு என்பதைத்தான். பெந்தகொஸ்தே தினம் திரும்பிவரப்போவதில்லை. அப்போஸ்தலர்கள் இன்று இல்லை. பிலிப்பை ஆவியானவர் எங்கோயிருந்து தூக்கி எத்தியோப்பிய மந்திரி முன் நிறுத்தியதுபோல் இன்று செய்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார் என்று நான்கு இடங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அது வரலாற்றின் அடிப்படையில் அவருடைய முதலாவது நூற்றாண்டு வருகை எருசலேமில் ஆரம்பித்து யூதேயா, சமாரியா மற்றும் உலகமெங்கும் பரவியது என்பதை சுட்டிக்காட்டத்தான் (1:8). அதேபோல் இன்றும் அவர் வந்திறங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது, நூலை எப்படிப்படிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாததால் ஏற்படுகின்ற விளைவு. அன்றைக்கு சபை ஆரம்பித்தது 2ம் அதிகாரத்தில். அது ஆரம்பமே தவிர எத்தனையோ காரியங்கள் அதில் உடனடியாக ஏற்படுத்தப்படவில்லை. போதகர்களும், உதவிக்காரர்களும் பின்னால்தான் ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகவே, இந்நூலிலுள்ள அத்தனை நிகழ்ச்சிகளையும் நாம் காலவரையறை அடிப்படையில் தொடர்நிகழ்ச்சிகளாகப் பார்த்தும் விளக்கங்கொடுப்பதும், லிட்டரலாக எல்லாம் இன்றும் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நூலின் தன்மைக்கும், கர்த்தர் அதைக் கொடுத்திருக்கும் நோக்கத்திற்கும் முற்றிலும் விரோதமானது. இந்தத் தவறைத்தான் பெந்தகொஸ்தே இயக்கத்தினர் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அப்போஸ்தல நடபடிகள் முடிந்துபோன வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கவில்லை. முடிந்துபோன வரலாற்று நிகழ்ச்சிகளை நாம் இன்று தொடரும்படி எதிர்பார்ப்பது முழுத்தவறு. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நாம் மறுபடியும் சுதந்திரத்துக்கு முன்னிருந்த நிலைக்கு திரும்பிப் போகமுடியுமா? முன்னிருந்த நிலையிலிருந்து பாடங்களைத்தான் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் நாம் முதல் நூற்றாண்டுக்கு திரும்பிப்போக முடியாது. அப்போஸ்தல நடபடிகளில் இருந்து இன்றைக்கு அவசியமான, இருக்க வேண்டிய போதனைகளைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எழுப்புதல் (Revival) – அடுத்ததாக, அப்போஸ்தல நடபடிகள் வரலாற்று நூல் மட்டுமல்ல, அதில் நாம் சிறப்பான இன்னொரு அம்சத்தையும் காண்கிறோம். இதுவே அந்த நூலை நாம் விளங்கிக்கொள்ள பெரிதும் துணைசெய்கிறது. பெந்தகொஸ்தே தினத்தில் நிகழ்ந்த அதியற்புத நிகழ்ச்சிகளுக்கு முக்கியகாரணம் அது ஓர் எழுப்புதலாக இருந்தபடியால்தான். நம்மினத்தவர்களுக்கு எழுப்புதல் பற்றி அதிகம் தெரியாதென்பது என்னுடைய கருத்து. எழுப்புதல் பற்றி நாம் எதையோ நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது. எழுப்புதலென்பது கர்த்தர் தனக்கு சித்தமான காலத்தில் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு நிகழ்த்தும் அதியற்புத செயல். எழுப்புதல் காலத்தில் நிகழும் முக்கியமான இரு செயல்கள் – பிரசங்கம் ஓர் உன்னத சிகரத்தை அடைவது; அதையடுத்து குறுகிய காலத்தில் பெருந்தொகையானோர் அந்தப் பிரசங்கப்பணியின் காரணமாக மெய்யான மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் அடைந்து தேவஇராஜ்ஜியத்துக்குள் இணைவது. இவை இரண்டும் சாதாரண காலப்பகுதிகளில் நிகழ்வதில்லை. அதுமட்டுமல்லாமல், எழுப்புதல் காலத்தில் பாவத்தைக்குறித்த உணர்வு மனந்திரும்புபவர்களில் என்றுமில்லாதவகையில் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கும். பலர் வாரக்கணக்கில் பாவத்தின் கோரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி அதன்பிறகு இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் அக்காலங்களில் இரட்சிப்பு அடைகிற ஒருவரில் அதற்கான அடையாளங்கள் அதிரடியாக, வெளிப்படையாக, ஒளிவுமறைவில்லாமல் இருக்கும். இந்தளவுக்கு பெருந்தொகையானோரின் வெளிப்படையான ஆழமான பாவ உணர்தலோடுகூடிய ஆவிக்குரிய இரட்சிப்பை நாம் சாதாரண காலங்களில் பார்க்க முடியாது. ‘எல்லோருக்கும் பயமுண்டாயிற்று’ (2:43) என்று லூக்கா சொல்லுகிறவிதத்தில் கர்த்தரின் செயல்கள் எழுப்புதல் காலத்தில் இருக்கும். இந்த வகையில்தான் வேதம் முழுவதுமே நாம் எழுப்புதல் காலங்களை அடையாளங்கண்டுகொள்ள முடியும். இந்தவகையிலேயே வரலாற்றின் சில காலப்பகுதிகளிலும் எழுப்புதல்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணத்திற்கு அமெரிக்காவில் நிகழ்ந்த ஆவிக்குரிய விழிப்புணர்வு (Great Awakening), 1859ல் வேல்ஸ் தேசத்திலும் பிரிட்டனிலும் நிகழ்ந்த எழுப்புதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். டேனியல் ரோலன்ட்ஸ், ஹொவல் ஹெரிஸ், ஜோர்ஸ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் போன்றோர் இந்த எழுப்புதல்கள் காலத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட பிரசித்தமான பிரசங்கிகள். எழுப்புதலுக்கு இன்னொரு உதாரணம் பிலிப்பை பரிசுத்த ஆவியானவர் எங்கோயிருந்து தூக்கி எத்தியோப்பிய மந்திரி முன் நிறுத்தி சுவிசேஷம் சொல்ல வைத்தது. அத்தோடு, பவுலின் மிஷனரிப் பணியின்போது அவர் போக நினைத்த இடத்துக்கு போகத்தடைபோட்டு மக்கெதோனியாவுக்கு பரிசுத்த ஆவியானவர் அவரை அனுப்பியது. இப்படி அநேக உதாரணங்கள் அப்போஸ்தல நடபடிகளில் இருக்கின்றன. இதெல்லாம் எழுப்புதல் காலங்களில் ஆவியானவர் செய்யும் அசாதாரண செயல்கள். அதனால்தான் இந்நூலை ‘ஆவியானவரின் நடபடிகள்’ என்றுகூட சொல்லக்கூடியளவுக்கு அவரது செயல்களை இதில் பார்க்கிறோம். பெந்தகொஸ்தே நாள் அந்தவகையில் எழுப்புதல் நாளாக இருக்கிறது.
பேதுருவை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண மனிதனாக இருந்த பேதுரு, பெந்தகொஸ்தே தினத்தில் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியின்படி பரிசுத்த ஆவியானவரின் உலகளாவிய நிரந்தர வருகை நிகழ்ந்தபோது புதிய மனிதனாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். பெந்தகொஸ்தே தினம் எழுப்புதலாகவும் இருந்தபடியால் அப்போஸ்தலனான பேதுரு தன்னுடைய பிரசங்கப் பணியில் ஆவியின் அனுக்கிரகத்தால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதைப் பார்க்கிறோம். அதாவது, அவரால் தயாரித்துப் பிரசங்கிக்கப்பட்ட அன்றைய பிரசங்கம் ஆவியின் பலத்தோடு கொடுக்கப்பட்டதாக இருந்தது. பேதுரு ஆவியின் வல்லமையையும், ஆவியின் தைரியத்தையும் அன்று பிரசங்கம் செய்தபோது உணர முடிந்தது. இந்த ஆவியின் தைரியம் என்பது மானுட தைரியமல்ல. இது மனித பயமற்ற பரிசுத்த தைரியமாகும். அன்று பேதுரு பிரசங்கித்தபோது, சாதாரண மனிதனாக இருந்து பிரசங்கித்தபோதும் இதுவரையில்லாததொரு உயர்வான அனுபவத்தையும், ஆவியின் கிரியையும் பிரசங்கப்பணியில் பார்க்க முடிந்தது. வார்த்தைகள் தெளிவாக நீர்வீழ்ச்சி போல் மடமடவென்று வாயிலிருந்து கொட்டின. இருதயத்தில் ஆத்தும பாரமும், ஆத்துமாக்களில் அளவற்ற அன்பும் சுரந்தது. தட்டுத் தடங்கலின்றி கர்த்தரின் வேதம் வாயிலிருந்து புறப்பட்டது. பேதுருவுக்கு இருந்த வரங்கள், மனித ஆற்றல், ஞானம் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட வல்லமையும், தைரியமும் பிரசங்கத்திலும், பிரசங்கித்தவரிலும் அன்று காணப்பட்டது. இது எழுப்புதல் காலங்களில் பிரசங்கிகளை ஆவியானவர் பயன்படுத்துகின்ற விதத்திற்கு அடையாளம். பிரசங்கப் பணியில் இத்தகைய ஆவியின் கிரியையை நாம் செயற்கையாக உண்டாக்க முடியாது. எழுப்புதல் கர்த்தரின் சித்தப்படி நிகழுவது; அதை நாம் உண்டாக்க முடியாது. இதற்காக நாம் ஜெபிக்க மட்டுமே முடியும்.
எழுப்புதலில் நிகழும் இன்னுமொரு அருங்காரியம், பெருந்தொகையானவர்கள் மெய்க்கிறிஸ்தவர்களாக தேவ இராஜ்ஜியத்தை அடைவது. அதையும் நாம் உண்டாக்க முடியாது. ஆவியானவர் பிரசங்கப் பணியின் மூலமே இதைச் செய்தாலும் சாதாரண காலப்பகுதிகளில் இத்தகைய ஆவிக்குரிய அறுவடையை நாம் காண்பதில்லை; வரலாறு கண்டதுமில்லை. பெந்தகொஸ்தே நாளில் அவிசுவாசிகளான மூவாயிரம் பேர் உறுதியான விசுவாசத்தை அடைந்ததற்கு இதுவே காரணம். நூற்றியிருபது பேர் மூவாயிரமாகவும், பின்பு ஐயாயிரமாகவும், பதினைந்தாயிரமாகவும், இருபதாயிரமாகவும் முதல் எட்டு அதிகாரங்களை நாம் வாசித்து முடிப்பதற்குள் அறுவடை செய்யப்பட்டது ஆவியினால் மட்டுமல்லாமல் வேறு எந்தவிதத்திலும் ஏற்பட முடியாது. இன்று நடத்தப்படும் சுவிசேஷ கூட்டங்களுக்கும், அவற்றில் நடத்தப்படும் மனித செயற்பாடுகளுக்கும் பெந்தகொஸ்தே தினத்தில் அறவே இடமிருக்கவில்லை. வெறும் பிரசங்கத்தால், இசைகூட இல்லாமல் கர்த்தர் பெருந்தொகையினரை இரட்சித்தார் என்றால் அதற்கு எழுப்புதலைத் தவிர வேறு எதுவும் காரணமல்ல. அக்காலம் எழுப்புதல் காலமாக இருந்தபடியால்தான் அனனியாவும், சப்பிராளும் பொய் சொன்னபோது உடனடியாக கர்த்தரால் கொல்லப்பட்டனர். அவிசுவாசிகள் விசுவாசிகளுடன் இணைவதற்கு பயப்படுகிற அளவுக்கு தேவபயத்தை பிரசங்கப் பணியும், ஆவியின் கிரியைகளும் ஏற்படுத்தியிருந்தன.
பெந்தகொஸ்தே தினம் உலகலாவிய ஆவியின் வருகையின் வரலாற்று நிகழ்வு என்பதோடு, அந்நாள் திருச்சபை ஆரம்பித்த வரலாற்று நிகழ்வு என்பதையும், இவற்றிற்கு மத்தியில் அது எழுப்புதல் காலமாகவும் இருந்தது என்பதை மனதில் வைத்து அந்நாளின் நிகழ்வுகளை வாசிக்கின்றபோது அப்போஸ்தல நடபடிகளின் இரண்டாம் அதிகாரம் நமக்குத் தரும் போதனைகளை நம்மால் உணர முடியும். இந்தவகையில் பார்க்கிறபோது இரண்டாம் அதிகாரம் தரும் போதனைகள் என்ன?
- ஆவிக்குரிய பிரசங்கம்
ஆவிக்குரிய பிரசங்கம் எப்படி இருக்கும் என்பதை அது விளக்குகிறது. பிரசங்கியினுடைய திறமைக்கும், ஆற்றலுக்கும், தயார் நிலைக்கும் மேலாக அவனை உயர்த்தி பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், தைரியத்தோடும் கர்த்தர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அப்போஸ்தலர் 1:8; 1 தெசலோனிக்கேயர் 1:5 அப்போஸ்தலர் 4:31 ஆகிய வசனங்கள் விளக்குவதை நிதர்சனமாக அப்போஸ்தலர் 2ல் பேதுருவில் காண்கிறோம். இத்தகைய பிரசங்க அனுபவத்தை ஓரளவுக்கு சாதாரண பிரசங்க ஊழியத்தில் எந்தப் பிரசங்கியும் அனுபவிக்க முடியும். அதற்காக ஊக்கத்தோடு ஜெபித்து, அதை எதிர்பார்த்தே பிரசங்கி பிரசங்க மேடைக்குப் போகவேண்டும். வெறும் உண்மைகளை மட்டும் ஆத்துமாக்களுக்கு முன் உரித்துவைக்க பிரசங்கி அவசியமில்லை. அதை எல்லோருமே செய்துவிடலாம். பிரசங்கி அருமையாக உழைத்து வேதப் பிரசங்கத்தை ஜெபத்தோடு தயாரித்து வைத்திருந்தாலும் அதை ஆத்துமாக்களுக்கு கொடுக்கும் காரியத்தில் அவனுக்கு ஆவியின் துணை அவசியம். பிரசங்கத் தயாரிப்பில் துணைபுரிந்த ஆவியானவர் பிரசங்க மேடையிலும் தொடர்ந்து துணை செய்கிறார். அதைத்தான் பேதுருவின் பிரசங்கத்தில் பார்க்கிறோம். அது ஆவியின் மூலமாக கொடுக்கப்பட்ட பிரசங்கம்; ஆத்துமாக்களை அசைத்த பிரசங்கம்; சாதாரண மனித ஆற்றலுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரசங்கம். ஆவியின் அசைவாட்டத்தைப் பிரசங்கியிலும், பிரசங்கத்திலும் அன்று மக்கள் பார்த்தார்கள். அந்த அசைவாட்டத்தை ஆத்துமாக்களாலும், பிரசங்கியாலும் அன்று உணர முடிந்தது. அத்தகைய பிரசங்கத்தை இன்று பார்க்க முடிகிறதா? ஆவியின் அசைவாட்டமுள்ள பிரசங்கிகள் எத்தனை பேரை இன்று பார்க்கிறோம்? ஆவியானவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்களே தவிர, ஆவிக்குரிய பிரசங்கிகளையும், பிரசங்கத்தையும் நம்மினத்தில் இன்று பார்க்க முடிவதில்லை.
பேதுருவின் பிரசங்க அனுபவத்தை சாதாரண பிரசங்க ஊழியத்தில் மெய்யான பிரசங்கி அனுபவிக்க முடியும் என்பதை பெந்தகொஸ்தே தினமும் ஏனைய வேதவசனங்களும் தெளிவாக சுட்டிக்காட்டியபோதும், அதை விசேஷமாக எழுப்புதல் காலத்தில் காணமுடியும். அந்தவகையில் பெந்தகொஸ்தே பிரசங்கம் விசேஷமானது. அன்று பேதுரு ஆவியின் பேரறுவடையை அந்தப் பிரசங்கத்தின் மூலம் பார்க்க முடிந்தது. அது ஒரு பிரசங்கியின் சாதாரண பிரசங்க ஊழியத்தில் அந்தளவுக்கு நிகழ்வதில்லை. ஆத்தும அறுவடை எப்போதுமே ஆண்டவரால் செய்யப்படுகின்ற காரியம். அவர் யாரை இழுத்துக்கொள்ளுகிறாரோ அவர்கள் மட்டுமே அவரிடம் வரமுடியும். அதை அவர் பிரசங்கத்தின் மூலமே செய்கிறார். எழுப்புதல் காலத்தில் கர்த்தர் பிரசங்கத்தை உன்னத நிலைக்குக் கொண்டுபோய் அதைப் பயன்படுத்தி பெரும் ஆத்தும அறுவடையைச் செய்கிறார். அதைப் பெந்தகொஸ்தே நாள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
- ஆவிக்குரிய இரட்சிப்பு
இரட்சிப்பு கர்த்தருடையது என்கிறார் யோனா. அது பேருண்மை. மெய்யான இரட்சிப்புக்கும் போலியான ஆத்தும அனுபவத்துக்குமிடையில் பெரிய வித்தியாசமுண்டு. மாயவித்தைக்காரனான சீமோன் போலியானவன். பெந்தகொஸ்தே தினத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தவர்கள். அதை அந்தப்பகுதியே விளக்குகிறது. ஆவிக்குரிய இரட்சிப்பு பற்றிய விளக்கமில்லாத தன்மையை அநேகரிடம் இன்று பொதுவாகவே காண்கிறோம். போதகர்கள்கூட ஒருவனின் ஆவிக்குரிய அனுபவத்தை எப்படி அறிந்துகொள்ளுவது என்று என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். ஒருவன் விசுவாசிக்கிறேன் என்று சொன்ன உடனேயே அவன் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்தக்கேள்வியும் கேட்காமல் உடனடியாக ஞானஸ்நானம் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் அநேகர். இதற்கு அவர்கள் ரோமர் 10ஐயும் உதாரணங்காட்டுவார்கள். இந்தளவுக்கு சாதாரணமான ஓர் அனுபவமா இரட்சிப்பு? என்று கேட்காமல் இருக்க முடியாது. மெய்யான இரட்சிப்பைப் போலியில் இருந்து எப்படி வேறுபடுத்திப் புரிந்துகொள்ளுவது?
பெந்தகொஸ்தே தின அனுபவம் இதில் நமக்கு உதவுகிறதா? நிச்சயம் உதவுகிறது. அதாவது, மெய்யான இரட்சிப்பு என்று ஒன்றிருக்கிறது என்பதை அதில் அறிந்துகொள்ளுகிறோம். அன்றைய தினத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். அவர்களிடம் இருந்த அடையாளங்களை அறிந்துகொள்ளுகிறோம். அவர்கள் போலிகள் இல்லை என்பதற்கான அறிகுறிகள் யாவை என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். என்னென்ன விஷயங்களை மெய்யான விசுவாசத்தை அடைந்தவர்களிடம் பார்க்க முடியும், பார்க்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். இதற்கெல்லாம் அப்போஸ்தலர் 2 நமக்கு உதவுகிறது. அன்று இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டவர்கள் மனத்தில் குத்தப்பட்டு தங்களுடைய பாவத்தை உணர்ந்தார்கள். அவர்கள் கிறிஸ்து மட்டுமே ஆண்டவர் என்பதை விசுவாசித்து அந்த விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடும்படியாக ஞானஸ்நானத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலர்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. மூவாயிரம் பேரும் மெய்யான விசுவாசிகள். இதையெல்லாம் ஐந்து பத்து நிமிஷங்களில் எவரும் சாதாரணமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. ஆவிக்குரிய செயல் மனிதனின் உள்வாழ்க்கையில் நிகழ்ந்து அவனில் இருந்து வெளிப்படுகின்ற, வெளிப்பட வேண்டிய ஓர் அனுபவம். அது வெளிப்படும் விதமும், காலமும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். ஒருவன் தன்னுடைய விசுவாசத்தை அதிரடியாக வெளிப்படுத்தி அதன் அடையாளங்கள் தெரியும்படியாக தைரியத்துடன் பேசுவான்; நடப்பான். இன்னொருவன் தயக்க குணமுள்ளவனாக தன் அனுபவத்தை வெளிப்படுத்துவதை சிறிது காலதாமதத்துடன் செய்வான். இரண்டு பேரிலும் மெய் அனுபவம் இருந்தபோதும், இருவருடைய குணாதிசயத்துக்கு ஏற்ப அது வெளிப்படும். இருவரிலும் ஒரேவிதத்தில் மாறுபாடில்லாத வகையில் இரட்சிப்பின் அனுபவம் வெளிப்பட வேண்டும் என்று நினைக்க முடியாது. அவர்கள் இயந்திரங்களல்ல; மனிதர்கள்.
பெந்தகொஸ்தே நாளின் விசேஷம் என்னவென்றால் அன்றைக்கு எழுப்புதல் (Revival) நிகழ்ந்தபடியால் ஆவியானவர் வெளிப்படையாக செயல்பட்டதை அறிந்துகொள்ளுகிறோம். சாதாரண காலங்களில் நிகழ்வது போலல்லாமல் அன்றைக்கு அவர் அதிரடியாக செயல்பட்டார். பிரசங்கியை வழமைக்குமாறான விதத்தில் உயர்த்திப் பயன்படுத்தினார். பிரசங்கத்தை இன்னொரு படிக்கு உயர்த்தி வைத்தார். ஆத்துமாக்களை அதிரடியாக அசைத்தார். ஆயிரக்கணக்கானவர்கள் அதைக் கேட்டு மனந்திரும்ப வைத்தார். அன்றைக்கு ஆவியானவரின் செயற்பாடு சாதாரண காலங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆத்துமாக்களின் இரட்சிப்பும் அசாதாரணமான விதத்தில் இருந்தது. அன்றைக்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் ஆயிரக்கணக்கானவர்களின் ஆத்தும அறுவடையை சரியாக உணர்ந்துகொள்ளும் அளவுக்கு ஆவியானவர் அனைவரையும் பயன்படுத்தினார். அன்று நிகழ்ந்த ஆத்தும அறுவடையும், இரட்சிப்பும் மெய்யானது என்பதை அப்போஸ்தலர் 2 காட்டி, அந்தவிதத்தில் எவருடைய இரட்சிப்பும் இருக்க வேண்டும் என்று போதனையளிக்கிறதே தவிர, அன்று நடந்ததுபோல் ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டும்; விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிறவர்களுக்கு உடனடியாக கண்ணசையும் நேரத்தில் காலதாமதமில்லாமல் ஞானஸ்நானம் கொடுத்துவிட வேண்டும் என்று போதிக்கவில்லை. அந்தவிதத்தில் அந்த அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனைவது அது எழுப்புதல் காலம் என்பதையும், ஆவியானவரின் உலகளாவிய வருகையின் வரலாற்று நிகழ்வு என்பதையும், அந்தப் பகுதிக்குரிய விசேஷ அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு வாசிப்பதற்கு ஒப்பானதாகும். வேதத்தை அந்தவிதத்தில் சாதாரண வேதவாசிப்பு விதிமுறைக்கு அப்பாற்பட்ட முறையில் அசாதாரணவிதத்தில் வாசித்துப் பொருள்கொள்ளக் கூடாது. அப்போஸ்தலர் 2 மெய்யான மனந்திரும்புதலும், கிறிஸ்துவில் மெய்யான விசுவாசமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது; அன்று அத்தகைய மெய்யான இரட்சிப்பைப் பெருந்தொகையானவர்கள் அடைந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
- திருச்சபை அமைப்பு
அப்போஸ்தலர் 2 ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அன்றைக்கு ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியின்படி திருச்சபையை இந்த உலகத்தில் நிறுவுவதற்காக அனுப்பப்பட்டார் என்பதை மறந்துவிடக்கூடாது (லூக்கா 24:49; யோவான் 14:16; 16:7-11; அப்போஸ்தலர் 1:8). அன்றுதான் ஆவியானவர் தன்னுடைய உலகளாவிய, அதாவது யூதர்களிடம் மட்டுமல்லாமல், புறஜாதியார்கள் மத்தியிலும் கிரியை செய்து எந்தவித வேறுபாடுமில்லாமல் அனைவரும் சுவிசேஷம் கேட்க வைப்பதற்காகவும், விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பு அளிப்பதற்காகவும், திருச்சபையை நிறுவுவதற்காகவும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். இதைத்தான் மத்தேயு 28:18-20ம் விளக்குகிறது. இதற்காகவே அப்போஸ்தலர்களும் நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இந்த நாளில் திருச்சபை ஒரு நிறுவனமாக இந்த உலகத்தில் இதுவரை இருந்திராத வகையில் ஆரம்பமானது என்பதைப் புரிந்துகொள்ளுவது அவசியம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் விசுவாசிகள் இருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலர் மத்தியில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டில் சபையை ஒரு படமாக இஸ்ரவேலின் மத்தியில் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் சபை இல்லை என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். அது முழுத்தவறு. சபை அன்று இல்லை என்று கூறினால் அன்று விசுவாசிகளும் இல்லை என்ற அர்த்தத்தில் போய் முடிந்துவிடும். விசுவாசிகளின் கூட்டமே சபை. அந்தவிதத்தில் பழைய ஏற்பாட்டில் சபை இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சபை ஒரு நிறுவனமாக முழு அமைப்போடு நிறுவப்பட்டது (The Church was planted not only as an organism but also as an organization.) யூத விசுவாசிகளையும், புறஜாதி விசுவாசிகளையும் கொண்டு ஜாதி, இன வேறுபாடில்லாமல் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் நிறுவப்பட்டது. இதுதான் பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமிடையில் சபைபற்றிய வித்தியாசம்.
அப்போஸ்தலர் 2 நமக்கு சபை அமைப்பை விளக்குகிறது. இன்று திருச்சபை அமைப்பைப் பற்றிய போதனைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அப்போஸ்தலர் நடபடிகளையும், ஏனைய புதிய ஏற்பாட்டு நூல்களையும் பயன்படுத்த வேண்டும். அந்தப்படிப் பார்க்கிறபோது அப்போஸ்தலர் 2ல் சபை பற்றிய தெளிவான ஆரம்பப் படத்தினைப் பார்க்க முடிகிறது. இன்று அமைக்கப்பட வேண்டிய சபைக்கான அருமையான விளக்கத்தை அங்கே நாம் காண்கிறோம். முதலில், பிரசங்கம் கொடுக்கப்பட்டு பாவிகள் விசுவாசத்தை அடைய வேண்டும். மெய்யாக விசுவாசத்தை அடைந்தவர்கள் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அவர்கள் சபை வாழ்க்கைக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து விசுவாசத்தோடு வாழவேண்டும். இந்த மூன்றையும் நாம் தெளிவாக அப்போஸ்தலர் 2:40-47 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். மெய்யான விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற்று சபையில் இணைந்து சபை வாழ்க்கையில் ஒருமனத்தோடு ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மை அங்கு வெளிப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையொன்றிருக்கிறது. அதாவது, திருச்சபை அமைப்பில் காணப்பட வேண்டிய ஒரு தெளிவான படிமுறையை இந்தப் பகுதி காட்டுகிறதே தவிர இவற்றிற்கான கால இடைவெளி பற்றி இந்தப் பகுதி பேசவில்லை. படிமுறை இந்தப் பகுதி போதிக்கும் விதத்தில் ஒன்றையடுத்து மற்றது வரவேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் முதலில் இருக்க வேண்டும்; அதற்கு அடுத்தபடியாக ஞானஸ்நானம். விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து விசுவாசமாக வாழவேண்டும். இதைத்தான் இந்தப்பகுதி போதிக்கிறது. இந்தப்படிமுறை எந்த நாட்டில், எந்த ஊரில் சபை அமைக்கப்பட்டாலும் பின்பற்றப்பட வேண்டிய படிமுறை ஒழுங்கு.
ஒரு விஷயத்தை இங்கே நாம் மறந்துவிடக்கூடாது. அப்போஸ்தலர் 2 சபையின் ஆரம்பத்தை விளக்குகிறது. அப்போஸ்தலர் 2ல் சபை இன்னும் தனக்கிருக்க வேண்டிய அனைத்தையும் கொண்டு முழுமையாக அமைக்கப்படவில்லை. ஆரம்ப, அடித்தள காரியங்கள் சரியாக அமைக்கப்பட்டு படிப்படியாக ஏனையவும் நிறைவு செய்யப்படுவதை அப்போஸ்தல நடபடிகளின் ஏனைய அதிகாரங்கள் காட்டுகின்றன. அதனால்தான் சபை பற்றிய போதனைகள் காலவரை அடிப்படையில் இந்நூலில் தரப்படிருப்பதாக நினைத்து அதை நாம் வாசிக்கக்கூடாது. சபையின் ஆரம்பம் பற்றியும் அது படிப்படியாக அமைக்கப்பட்ட விதத்தையுமே இந்நூல் விளக்குகிறது. போதகர்களுக்கான இலக்கணத்தை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிப்பதில்லை. அதற்கு 1 தீமோ, தீத்து ஆகிய நூல்களை நோக்கி நாம் போகிறோம். திருவிருந்து பற்றி அப்போஸ்தல நடபடிகள் சொன்னாலும் அதற்கான முழு விளக்கத்துக்கு நாம் 1 கொரிந்தியருக்கு போகிறோம். ஆகவே, சபை பற்றிய முழு விளக்கத்தையும் பெற நமக்கு புதிய ஏற்பாடு முழுவதும் அவசியம்.
அப்போஸ்தலர் 2ல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், சபைக்கிருக்க வேண்டிய இலக்கணங்களைத்தான். இங்கே சபை பற்றிய ஒரு ‘பெட்டர்னை’ அல்லது மாதிரியை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த மாதிரியில் ஒரு தெளிவான ஒழுங்குமுறை இருக்கிறது. அந்த ஒழுங்குமுறை மாறக்கூடாது; மாறமுடியாது. அது என்ன? முதலில் விசுவாசம். அதாவது, மெய்யான இரட்சிப்பு. அதற்கு அடுத்து வருவதுதான் ஞானஸ்நானம். ஞானஸ்நானம் முதலில் வரமுடியாது. அது விசுவாசித்தவருக்கு கொடுக்கப்படுவது. ஆகவே, அது விசுவாசத்திற்குப் பிறகுதான் வரவேண்டும். அதற்கு அடுத்தகட்டமாக சபை வருகிறது. ஒருவருக்கு ஞானஸ்நானத்தைக் கொடுக்கின்ற பணி சபையினுடையது. அது சபையின் திருநியமம். ஞானஸ்நானத்தைப் பெற்று விசுவாசிக்கிறவர்கள் எல்லோருமே சபைக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் மாற்ற முடியாத ஒழுங்குமுறை. இதற்கு மேல் வேறெதையும் இந்த வசனங்களில் பார்க்கவோ திணிக்கவோ கூடாது. இதை இன்றைய சூழ்நிலையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்று கேட்டால், சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவை விசுவாசிக்கின்ற எவரும் மெய்யான விசுவாசிகளா என்பதை சபைத்தலைவர்கள் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது உண்மையாக இருக்குமானால் அப்படி விசுவாசித்தவருக்கு ஓரளவுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியும், சபையைப் பற்றியும், சபை நடைமுறைகளையும், சபை வாழ்க்கையையும் பற்றிப் போதித்து ஞானஸ்நானம் எடுப்பதற்கு சபையாக அவரைத் தயார் செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் இன்றைக்கு தெளிவான போதனைகள் இல்லாததாலும், போலிப்போதனைகள் மலிந்து காணப்படுவதாலும், சபைக்குள் இணைகிற ஒருவரை முறையாக வழிநடத்த வேண்டிய அவசியம் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்கின்ற சபைகளுக்கிருக்கிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறபோது சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் இருக்கும் ஊரில் பக்கத்தில் இருக்கும் ஒரு சபையில் சுவிசேஷ கூட்டம் முடிந்த உடனேயே இருபத்தைந்து பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்களாம். அது கேட்பதற்கு காதுக்கு சுவையாக இருந்தபோதும் புத்தியான செயலாக எனக்குப்படவில்லை. நாம் முதலாம் நூற்றாண்டிலோ அல்லது எழுப்புதல் காலத்திலோ வாழவில்லை. இப்படிக் கூட்ட முடிவில் உடனடியாக ஞானஸ்நானம் கொடுப்பது முழுத்தவறு. அப்படிக் கொடுப்பதற்கு ஆதாரமாக அப்போஸ்தலர் 2ஐப் பயன்படுத்துகிறவர்கள் என்னைப் பொறுத்தவரையில் அந்த நூலைப் புரிந்துகொள்ளுகிற விதத்தில் பெரிய தவறைச் செய்கிறார்கள்.
- அடிப்படைத் திருச்சபை வாழ்வியல்
அப்போஸ்தலர் 2, திருச்சபை வாழ்க்கையையும் விளக்குகிறது. அதை 42-47 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். விசுவாசித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறவர்கள் சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததாக வாசிக்கிறோம். இங்கே விசுவாசித்து ஞானஸ்நானம் எடுக்கிறவர்களுக்கே திருவிருந்தில் கலந்துகொள்ளும் ஆசீர்வாதம் இருப்பதையும் பார்க்கிறோம். விசுவாசித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் திருவிருந்து எடுப்பது சரியல்ல. அப்போஸ்தலர் நடபடிகள் விளக்கும் ஒழுங்குமுறையை மறுபடியும் கவனியுங்கள்.

இந்த ஒழுங்குமுறையை வேதம் தெளிவாக அப்போஸ்தலர் 2ல் சுட்டிக்காட்டுகிறது. இதுவே இன்றும் பொதுவாகப் பின்பற்றப்பட வேண்டும். கிறிஸ்து உயரெடுத்துக்கொள்ளப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் போய் நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் சபை வரலாற்றில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்து பலவிதமான டினோமிநேஷன்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் என்ன செய்வது என்ற திகைப்பு சிலருக்கு இருக்கும். எது எப்படியிருந்தாலும் வேதம் போதிக்கும் பொதுவான ஒழுங்கையே எல்லா சபைகளும் பின்பற்றுவது அவசியம். இந்த ஒழுங்கை நம் வசதிக்கேற்ற முறையில் மாற்றி அமைத்துக்கொண்டால் நமக்கு வேதம் தேவைப்படாது. வேதத்தில் இந்த ஒழுங்கை ஏற்படுத்தித் தந்திருப்பவரே கர்த்தர்தான்.
கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அவருக்கு கீழ்ப்படியாமல் ஞானஸ்நானத்தை தவிர்த்துவிடுவது தவறான செயல். -ஞானஸ்நானத்தை நாடுகிற ஒருவர் கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறார் என்பதையே அறிவிக்கிறார். -ஞானஸ்நானம் எடுக்கத் தயங்குகிறவருக்கு அதுபற்றிய உண்மைகள் சரியாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஞானஸ்நானத்தைக் காரணமில்லாமல் கர்த்தர் தன் சபையில் நியமித்திருக்கவில்லை. அதை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. அடுத்ததாக, சபைகளில் சபை அங்கத்துவம் இருக்க வேண்டும். சபை அங்கத்தவர்கள் யார்? யாரில்லை? என்பது தெளிவாகத் தெரியும்விதமாக சபை அங்கத்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் ஆதி சபை இருந்தது. ஆரம்பத்தில் 120 ஆகவும் பின்னால் 3000மாகவும் வளர்ந்தது. அவர்களைத் தவிர வேறு எவரும் அங்கத்தவர்களாக இருக்கவில்லை. அந்த அங்கத்தவ தொகை பின்னால் அதிகரித்தது. இன்றைக்கு நம்மினத்தில் சபைகள் தங்களுக்கு இருக்க வேண்டிய அடையாளமே இல்லாமல் இருக்கின்றன. வெறுமனே கூடிவருகிறதைத் தவிர இருக்க வேண்டிய தகுதிகளையும், அடையாளங்களையும் கொண்டிராமல் இருக்கின்றன. இந்த முறையில் சபைகூடிவருவதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. உலகத்துக்கே ஒழுங்கை ஏற்படுத்தி அரசாங்கங்களையும், ஆட்சிமுறையையும், எல்லைகளையும் வகுத்திருக்கும் கர்த்தர் தன்னுடைய சபை இந்த உலகத்தில் ஏனோதானோவென்று தெளிவான அமைப்பும் ஒழுங்கும் இல்லாமல் இருக்க அனுமதிப்பாரா? சபைக்குரிய அத்தனை ஒழுங்கையும் அவர் தெளிவாக புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார். அதை நாம் உதாசீனப்படுத்துவது அவரை இகழ்வது போலாகும். நம்முடைய சுயநலத்துக்காகவும், வசதிக்காகவும் கர்த்தருடைய வேதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடாது.
சபை ஆவிக்குரியது ஆகவே அதில் உலக முறைகளுக்கு இடமில்லை என்று அறியாமல் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். உலகத்தை உருவாக்கியவர் நம் கர்த்தர். அவர் தன்னுடைய ஆவிக்குரிய சபையும் இந்த உலகத்தில் ஒழுங்கோடு இருக்க வேண்டுமென்றுதான் புதிய ஏற்பாட்டைத் தந்திருக்கிறார். தன்னுடைய சபை பரிசுத்தத்தோடு உலகத்தில் இருப்பதை அவர் விரும்புவதால்தான் அதற்கான அத்தனை ஒழுங்குமுறையையும் தந்திருக்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒழுங்கு அவசியமில்லை என்பது ‘இந்துத் துறவி’ பேசுவது போல் அமைந்துவிடும். அவனில்தான் ஒழுங்குக்கு இடமில்லை. ஒருபுறம் ஆத்திக விளக்கம் கொடுப்பதோடு இன்னொரு புறம் கஞ்சாவையும் புகைப்பான். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒழுங்கிருக்க வேண்டும், தன் சம்பந்தப்பட்ட சபை உட்பட அனைத்திலும் ஒழுங்கிருக்க வேண்டுமென்பதால்தான் கர்த்தர் பத்துக்கட்டளைகளையே தந்திருக்கிறார். அது கர்த்தர் வகுத்திருக்கும் ஒழுங்கை வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில்தான் திருச்சபை அமைப்பும், ஒழுங்கும் கர்த்தரால் புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கிறது.
- ஆவிக்குரிய எழுப்புதலின் தன்மை
அப்போஸ்தலர் 2 இதுவரை நான் விளக்கிய சபைக்குரிய போதனைகளைத் தருவதோடு கர்த்தர் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய எழுப்புதலையும் விளக்குகிறது. தம்முடைய சித்தப்படி, தன்னுடைய மகிமைக்காக இருந்திருந்து வரலாற்றில் கர்த்தர் ஏற்படுத்தும் எழுப்புதல் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியல்ல. அப்படியானால் எழுப்புதலைப்பற்றி நாம் இந்த அதிகாரத்தில் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழும். நிச்சயம் எழுப்புதலுக்காக நாம் ஜெபிக்கலாம். நம்முடைய இனத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடு போன்ற கிறிஸ்தவத்தில் காணப்படும் ஒழுங்கற்ற தன்மையும், போலித்தனங்களும் நீங்கி சத்தியம் சத்தியமாகப் பிரசங்கிப்படும் சூழ்நிலையைக் கர்த்தர் ஏற்படுத்த ஜெபிக்கலாம். பேதுரு போன்ற வரலாறு கண்டிருக்கும் மெய்ப்பிரசங்கிகளும், மெய்ப்போதகர்களும் வெறும் அனுபவத்தையும், உணர்ச்சியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராத சத்தியமான வேதப்பிரசங்கத்தை அளிக்கும்படி எழுப்பித்தர வேண்டுமென்று ஜெபிக்கலாம். வேத சத்தியங்களை நம் மக்கள் இனங்கண்டுகொள்ளும் வகையில் ஆவிக்குரிய ஆத்மீக பலத்தோடு இருக்க, வேதம் தெரிந்தவர்களாக இருக்கும் சூழ்நிலை உருவாகும் எழுப்புலுக்காக ஜெபிக்கலாம். நம்மால் அதற்காக ஜெபிக்கத்தான் முடியுமே தவிர சார்ள்ஸ் பினி தவறாக நம்பி ஏமாந்ததுபோல் மெய்யான எழுப்புதலை ஒருபோதும் உருவாக்க முடியாது. எழுப்புதலைத் தருவது கர்த்தரின் பணி; நம் பணி அதற்காக ஜெபிப்பதும், அதற்குத் தகுதியுள்ளவர்களாக வாழுவதுமே. இருந்தபோதும், நாம் கடமைப்பொறுப்போடு கிறிஸ்தவ சீர்திருத்தத்திற்காகவும், சபை சீர்திருத்தத்திற்காகவும் அன்றாடம் இடைவிடாது ஜெபத்தோடு உழைக்கும் பணியில் தளரக்கூடாது.
மரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு –

இந்த வருடம் ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தவாதியான ஜோன் நொக்ஸின் (1514-1572) 500வது நினைவாண்டு. வரலாற்று முக்கியத்துவம் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்பது உலக வழக்கம். கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் கர்த்தர் பயன்படுத்தியுள்ள சிறப்பான மனிதர்களை நினைத்துப் பார்ப்பது நமது வரலாற்றையும் அதன் முக்கிய அம்சங்களையும் மறந்துவிடாமல் நினைவுபடுத்தி கர்த்தருக்கு நன்றிகூறவும், அவர்கள் தியாகத்தோடு உழைத்த சத்தியங்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபடவும் உதவும். அத்தோடு, எபிரெயர் 11:4 விளக்குவதுபோல் இந்தப் பெரிய மனிதர்கள் மரணத்தை சந்தித்தபோதும் தங்களுடைய வாழ்க்கைச் சாதனைகளின் மூலம் இன்றும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர், அதிரடிப் பிரசங்கி, அஞ்சாநெஞ்சன், ‘ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தத் தந்தை’ என்றெல்லாம் பெயர்பெற்றிருக்கும் ஜோன் நொக்ஸைப் பற்றி திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த வருடம் வெளிவந்த திருச்சபை வரலாறு, பாகம் 2லும் அவரைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்று நாயகர்களில் எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர் ஜோன் நொக்ஸ். அவரை நினைத்துப் பார்க்கும்போது உடனடியாக மனதில் நிற்பது அவருடைய அஞ்சாநெஞ்சந்தான். பயமே அறியாதவர் அவர். ஸ்கொட்லாந்து தேச ராணி மேரி ஸ்டுவர்ட் முன் நின்று சபையில் அவர் பிரசங்கம் செய்கிற ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பிரசங்க மேடையில் கண்களில் தீப்பொறி பறக்க நின்று ராணியை நோக்கிக் கையை நீட்டி ஜோன் நொக்ஸ் பிரசங்கிக்கும் காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. அக்காலத்தில் அரசி மந்திரிகளோடு ஓய்வுநாளில் சபைக்குப் போவது வழக்கம். ராணி மேரி ரோமன் கத்தோலிக்க மத ஆதரவாளி. இதுதான் கிடைத்த சமயம் என்று நொக்ஸ் அவளுக்கு வைராக்கியத்தோடு கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார். ராணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் சபையில் அவரை ஒன்றும் செய்ய முடியாததால் பேசாமல் இருந்துவிடுவாள். பின்னால் அவரைக் கைதுசெய்ய அவள் பெருமுயற்சி எடுக்காமலில்லை. ஜோன் நொக்ஸ் எப்படியும் அவளுடைய கையில் பிடிபடாமல் உயிர்தப்பி வாழ்ந்திருக்கிறார். இங்கிலாந்தின் படைகளைவிட ஜோன் நொக்ஸின் பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும் ராணி மேரி ஸ்டுவர்ட் பயப்பட்டாள் என்று அன்று பேசப்பட்டது.
வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒரு காலப்பகுதியில் ஜோன் நொக்ஸ் ஸ்கொட்லாந்தில் கர்த்தரால் எழுப்பப்பட்டவர். அந்நாட்டில் திருச்சபை சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் அவர் இங்கிலாந்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது ‘இரத்தக் கறைபடிந்த மேரி’ என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து அரசி தன்னைச் சிறைபிடிக்க அலைகிறாள் என்பதை உணர்ந்து ஐரோப்பாவிற்குத் தப்பிப் போனார். முதலில் ஜெர்மனிக்கும் பின்பு ஜெனிவாவுக்கும் போனார். ஜெனிவாவில்தான் அவருக்கு சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினோடு பரிச்சயம் ஏற்பட்டது; கல்வினின் சீடராகவும் மாறினார். ஏனைய சீர்திருத்தவாதிகளின் தொடர்பையும் பெற்றுக் கொண்டார். ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தம் வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக உழைத்தவர் ஜோன் நொக்ஸ். இன்று ஸ்கொட்லாந்து மக்கள் அவரை நினைவுகூர்கிறார்களோ இல்லையோ அந்நாட்டில் மெய்க்கிறிஸ்தவம் தலைநிமிர்ந்து நிற்க பெரும்பணியாற்றியவர் ஜோன் நொக்ஸ் என்பதை ஸ்கொட்லாந்தின் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது.
ஸ்கொட்லாந்து ரோமன் கத்தோலிக்க மதத்தின் பிடியில் ஆவிக்குரிய இருட்டில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த காலத்தில் ஜோன் நொக்ஸ் கர்த்தரால் எழுப்பப்பட்டார். வேதம் அன்று மறக்கடிக்கப்பட்டிருந்தது. வேதப்பிரசங்கத்திற்கு அன்று எலிசா தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்தது போல பெரும்பஞ்சம் இருந்தது. நாடும் பெரும் வறுமையை அனுபவித்து வந்த காலம் அது. இத்தகைய சூழ்நிலையில் 1514ம் ஆண்டில் ஜொன் நொக்ஸ் பிறந்தார். வறுமையில் வாடிய சாதாரண குடும்பத்தில் அவர் பிறந்திருந்த போதும் கல்விக்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்தியதால் ஸ்கொட்லாந்தில் பிரசித்தி பெற்ற செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் போகும்வரை அவருடைய படிப்பு அவரை உயர்த்தியது. 1536ல் பல்கலைக்கழக முதுகலைப் பட்டத்தைப் பெற்று கொஞ்சக்காலம் அங்கேயே துணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

1543ம் ஆண்டு நொக்ஸ் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்தார். தொமஸ் கிலேன் (Thomas Guillanne) என்பரைக் கர்த்தர் நொக்ஸின் ஆத்மீக வாழ்க்கையில் இந்தவிதத்தில் பயன்படுத்தியிருந்தார். அவருடைய பிரசங்கங்கள் நொக்ஸுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தின. விசுவாசம் அடைந்தபிறகு இரண்டு வருடங்களுக்கு வேதத்தை முழுமையாகவும், ஆழமாகவும் அறிந்துகொள்ளுவதற்காக அதைக் கருத்தோடு படித்தார் நொக்ஸ். அதன் பிறகு தென் ஸ்கொட்லாந்தில் அக்காலத்தில் கிறிஸ்துவைப் பிரசங்கித்துக் கொண்டிருந்த ஜோர்ஜ் விஷ்சார்ட்டின் அறிமுகம் நொக்ஸுக்குக் கிடைத்தது. விஷ்சார்ட் அதிரடியான சீர்த்திருத்த பிரசங்கியாக இருந்தார். அவரோடு நொக்ஸ் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடைய சீடரானார்.
ஜோர்ஜ் விஷ்சார்டின் பிரசங்கம் ஆணித்தரமானதாகவும் அன்றைய மதசூழ்நிலையின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் இருந்ததால் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. நொக்ஸ் தன்னுடைய நண்பரைப் பாதுகாப்பதில் வாளையும் பயன்படுத்தத் தயாராகி அவருடைய மெய்காப்பாளராகப் பணியாற்றினார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கிவிட்டதென்பதை உணர்ந்த விஷ்சார்ட் ஜோன் நொக்ஸை இன்னோர் இடத்துக்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தார். இறுதியில் 1546, மார்ச் 1ல் விஷ்சார்ட் அண்ட்ரூஸ் கோட்டையில் கத்தோலிக்கர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார். அன்றிலிருந்து ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தத்தைத் தொடரும் பணி ஜோன் நொக்ஸின் கைக்கு மாறியது. அதுமட்டுமல்லாது விஷ்சார்ட்டை எரித்த தீ ஜோன் நொக்ஸின் பிரசங்கப் பணியால் சீர்திருத்தத் தீயாக மாறி ஸ்கொட்லாந்து முழுவதும், ஏன், இங்கிலாந்தையும் நோக்கிப் பரவியது.

செயின்ட் அண்ட்ரூசில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தபோது நொக்ஸைச் சுற்றி ஓர் இளைஞர் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தார் நொக்ஸ். நொக்ஸின் போதிக்கும் திறமை பலருடைய காதுகளையும் எட்ட இன்னும் பலர் அவரிடம் வேதம் கற்றுக்கொள்ள வந்திணைந்தனர். அண்ட்ரூஸில் கூடிய சபை நொக்ஸைப் பிரசங்கம் செய்யும்படியாக அழைத்தது. அந்தளவுக்கு வேதத்தைப் போதிக்கும் நொக்ஸின் திறமை எல்லோரையும் கவர்ந்திருந்தது. பிரசங்க அழைப்பு கிடைத்தபோதும் நொக்ஸ் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கி ஜெபித்தார். கர்த்தர் அனுமதிக்காத, அழைக்காத பணியை ஏற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை. கர்த்தர் அதைத்தான் செய்ய அனுமதிக்கிறார் என்பதை உறுதியாக உணர்ந்தபிறகே அண்ட்ரூஸில் பிரசங்கிக்கும் அழைப்பையும், பணியையும் நொக்ஸ் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய இறுதிக்காலம்வரை இங்கு நொக்ஸ் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை அதிரடியாகப் பிரசங்கித்து ஸ்கொட்லாந்து திருச்சபை சீர்திருத்தத்தை அடைய முன்னோடியாக இருந்தார்.
நொக்ஸ் கிறிஸ்தவப் பணியாற்றிய காலம் கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உயிராபத்து இருந்த காலம். ரோமன் கத்தோலிக்க சபை அவர்களை வெறுத்து அழிப்பதில் ஆக்ரோஷமாக ஈடுபட்டிருந்த காலம். மதமும், அரசும் இணைந்து இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்த காலம். உள்ளத்தில் உறுதியும், உரனும் இருந்து உயிரைத் துச்சமாக எண்ணுகிறவர்களால் மட்டுமே அந்தக்காலத்தில் கிறிஸ்துவைப் பிரசங்கித்திருக்க முடியும். அநேகர் தங்களுடைய குடும்பத்தைக்கூட கிறிஸ்துவுக்கு பணியாற்றியதால் அக்காலத்தில் இழக்க நேர்ந்தது. கிறிஸ்தவர்களும், சீர்திருத்தவாதிகளும் உயிரோடு கொளுத்தப்படுவது மிகச் சாதாரணமாக நடந்துவந்த காரியம். இத்தகைய சூழ்நிலையில்தான் ஜோன் நொக்ஸ் சீர்திருத்தப் பிரசங்கியாக கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியத்தோடு பிரசங்கித்து வந்தார். தன் இறுதிக்காலம்வரை இந்தப் பணியில் அவர் சளைக்கவில்லை. மிகுந்த மனத்தாழ்மையையும், அஞ்சாநெஞ்சையும், அளப்பரிய ஆவிக்குரிய பிரசங்கத் திறமையையும் தன்னில் கொண்டிருந்த ஜோன் நொக்ஸ் இறக்கும்போது தன்னுடைய கல்லைறையில் ‘சாதாரண விசுவாசி இங்கு புதைக்கப்பட்டிருக்கிறான்’ என்று மட்டுமே எழுதிவைக்கும்படிக் கேட்டிருந்தார்.
ஸ்கொட்லாந்து மக்கள் இன்று நொக்ஸை மறந்துவிட்டார்கள். மேலைநாடுகளில்கூட இன்றைய சந்ததி அவரைப் பெரிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எந்தளவுக்கு இன்றைய கிறிஸ்தவம் தனக்கு ஆணிவேராக இருந்து உழைத்து உயிர் துறந்தவர்களை மறந்துவிட்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். நம்மின மக்களுக்கு சீர்திருத்த வரலாறு அந்தளவுக்கு தெரியாது. ஜோன் நொக்ஸ் விசுவாசித்த சத்தியங்களின் அடிப்படையில் திருச்சபைகள் அமைக்கப்பட்டு உயர்ந்தோங்கி இருந்த வரலாறு நம்மினத்தில் இல்லை. நொக்ஸைப் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்ற பிரசங்கிகளை நம்மினம் கண்டதுமில்லை. சமீபத்தில், குறுகிய காலப்பகுதியில்தான் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளே நம்மினத்து மக்களின் சிந்தையை எட்டியிருக்கின்றன. சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நம்மினம் ஆரம்பகட்டத்தில்தான் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. அது நமக்குத் தெரியாததல்ல. நம்மினத்துக் கிறிஸ்தவம் இருக்கும் நிலையில் ஜோன் நொக்ஸையும், அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையையும், பிரசங்க ஊழியத்தையும், திருச்சபை சீர்திருத்தத்திற்காக அவர் உழைத்த உழைப்பையும் நினைத்துப் பார்ப்பதும், நாமிருக்கும் நிலையைக் குறித்து சிந்திப்பதும் நிராகரிக்க முடியாதளவுக்கு அவசியமாகிறது. கிறிஸ்தவ திருச்சபை வரலாறு, பாகம் 2ல் ஸ்கொட்லாந்தில் நிகழ்ந்த சீர்திருத்தத்தை விளக்கி ஜோன் நொக்ஸைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறேன். அதை வாங்கி வாசித்துப் பயனடையுங்கள்.
ஜோன் நொக்ஸை நாம் நினைவுகூர வேண்டியதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன:
- உறுதியான வேத சிந்தனை தேவை – நம்மினத்தில் உறுதியான வேத சிந்தனை தேவையாக இருக்கிறது. நொக்ஸ் காலம் உயிராபத்திருந்த காலம். வேதம் வாசித்தாலே அன்று உயிராபத்து; கிறிஸ்துவை விசுவாசித்தாலே மரணம் நிச்சயம். நம்காலத்தில் நம்மைக் கேட்பார் யாருமில்லை. வேதத்திற்கு மதிப்புக்கொடுக்கிறோமா, இல்லையா? என்று கவலைப்படுகிறவர்கள் ஒருவருமில்லை. மற்றவர்களுடைய மனத்தைப்புண்படுத்தாத வகையில் நமக்குப் பிடித்த எதையும், ஒழுக்கக்கேடானவற்றையும் செய்துகொள்ளலாம் என்று எண்ணி வாழும் பின்நவீனத்துவ சமுதாயத்தில் நாம் நிலைகொண்டிருக்கிறோம். அந்த எண்ணப்போக்கே வலுத்துவருகிறது. நம்மைப் பிடித்திருக்கும் ஆபத்து உயிராபத்து அல்ல; நம்முடைய சிந்தனைப் போக்கையும், இருதயத்தையும் குடிகொள்ள முனையும் தத்துவ ஆபத்து. ‘சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற’ சமுதாயத் தத்துவப்போக்கு நமக்குப் பேரெதிரியாக இருக்கிறது.
வேதம் நம்மொழியில் இருந்தும் அதை நாம் கருத்தோடு இன்று வாசிப்பதில்லை. வேதம் போதிக்கும் சத்தியங்களைத் தெரிந்துகொள்ளுகிற ஆதங்கமோ, ஆர்வமோ, துடிப்போ, வைராக்கியமோ அறவேயில்லை. வேதத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்ற ஞானத்தைக்கூட நம்மினப் போதகர்கள் பெரும்பாலானோரில் காணமுடியாதிருக்கிறது. அந்தளவுக்கு வேதத்தைப் பற்றி நமக்கிருக்க வேண்டிய சிந்தனைகள் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இல்லை. இதை வேதப் பஞ்சகாலமாக மட்டுந்தான் வர்ணிக்க முடியும். ஜோர்ஜ் விஷ்சார்ட்டோ, ஜோன் நொக்ஸோ வேதத்தை உயிராக மதித்தார்கள். அது மட்டுமே கிறிஸ்துவை விசுவாசிக்க நமக்கிருக்கும் ஒரே ஆதாரமாகக் கருதினார்கள். ஆத்மீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தரும் கருவியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையோடு அதை இரவும் பகலுமாகப் படித்து அதில் பேரறிவை அடைந்தார்கள். இது இன்றைக்கு நம்மினத்தில் இல்லை. வேதம் படிக்க முடியாததற்கு நூறு சாக்குப்போக்குகளை, தெருவில் புழுதி போவதற்கு தண்ணீர் தெளிப்பதுபோல் அள்ளியள்ளித் தெளிக்க முடிகிற நமக்கு, நேரம் ஒதுக்கி அதை ஆழமாக உணர்வுபூர்வமாகப் படிப்பதற்கு இருதயம் ஒத்துழைப்பதில்லை. இந்த சமுதாய அலங்கோலங்களை எதிர்த்து மெய்க்கிறிஸ்தவர்களாக நாம் வாழமுடியாமலிருப்பதற்கு நம்முடைய ஆவிக்குரிய நிலையே பெருங்காரணம். இதை உணர்ந்து நாம் ஜெபத்தோடு நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து கர்த்தர் முன் நம்மை சரிப்படுத்திக்கொண்டு வேதத்தைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்; உறுதியான வேத சிந்தனையை வளர்த்துக்கொள்ள நொக்ஸைப் போல உழைக்க வேண்டும்.
- நொக்ஸைப் போன்ற பிரசங்கிகள் தேவை – சீர்திருத்தவாத காலம் வேதத்தை அருமையாகப் பிரசங்கிக்கும் ஆவிக்குரிய பிரசங்கிகளைக் கொண்டிருந்த காலம். ஜோன் நொக்லின் பிரசங்கம் மனித இருதயத்தை அசைத்த பிரசங்கம். மானுட செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆவிக்குரிய பிரசங்கத்தை அவர் அளித்தார். அத்தகைய பிரசங்கிகளை இன்று காணமுடியாதிருக்கின்றது. நொக்ஸைப் போன்றே லூத்தரும், கல்வினும், விஷ்சார்ட்டும், சுவிங்ளியும், மலாங்தனும் இன்னும் பிரான்ஸில் இருந்த சீர்திருத்தவாதிகளும், ஏனைய நாடுகளில் இருந்தவர்களும் ஆவிக்குரிய பிரசங்கிகளாக இருந்தனர். இவர்களுக்கெல்லாம் வேதம் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய வேத நம்பிக்கை ஆழமானதாக இருந்தது. கர்த்தருடைய வார்த்தையாக அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். அவர்களில் ஆவியானவர் நடமாடி பிரசங்க ஊழியத்தில் அவர்களை அதியற்புதமாகப் பயன்படுத்தினார். தாழ்மையையும், மெய்யான அன்பையும் கொண்டிருந்த அவர்கள் பிரசங்க ஊழியத்தை மிக உயர்ந்ததாகவும், பரிசுத்தமானதாகவும் கருதி தேவபயத்தோடு அதை அணுகினார்கள். மனித தைரியத்தோடு அவர்கள் பிரசங்க மேடைக்கு சென்றதில்லை. வேதம் சொல்லுகிறது என்று தவறான விளக்கங்கொடுப்பதையும், வேதத்திற்கு மாறானதைச் சொல்லுவதையும்விட உயிரை இழப்பதை அவர்கள் பெரிதாகக் கருதினார்கள். அத்தகைய வேத நம்பிக்கைகள் கொண்ட பிரசங்கிகள் நம்மினத்தில் இருக்கிறார்களா? அவர்களுக்கு மெய்யான ஆத்தும பாரமிருந்தது. முழுதும் கர்த்தரில் தங்கியிருந்து வேதத்தைப் படித்துத் தயாரித்து சுயநலநோக்கமின்றி ஆத்தும ஆதாயத்துக்காகவே அவர்கள் பிரசங்க ஊழியத்தை அணுகியதால் ஆவியானவர் அவர்களுக்கு ஆவிக்குரிய தைரியத்தைத் தாராளமாக வழங்கினார். அவர்களுடைய பிரசங்கங்கள் பவுல் சொன்னதுபோல், ‘வசனத்தோடு மாத்திரமல்ல, வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது.’ (1 தெச 1:5).
இத்தகைய பிரசங்கிகளை நம்மினம் கண்டதில்லை; அநேகர் கேட்டதுமில்லை. எங்கு பிரசங்கம் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறதோ அங்கேயே கர்த்தரின் ஆவிக்குரிய செயல்களை நாம் பரவலாகப் பார்க்க முடியும். பிரசங்கம் உயர் நிலையில் இருந்தும் ஆத்தும ஆதாயம் நிகழவில்லை என்று வேதமோ, வரலாறோ நமக்குக் காட்டவில்லை. 16ம் நூற்றாண்டிலும் சரி, பதினேழாம் நூற்றாண்டிலும் சரி பிரசங்கம் உன்னத நிலையை அடைந்தது; கிறிஸ்தவமும் உன்னத நிலையில் இருந்தது. இதிலிருந்து நமக்கு எது தெரியவேண்டும்? பிரசங்க ஊழியத்தை சுயத்துக்காக பயன்படுத்தும் நம்மினத்து ஊழியங்கள் இல்லாமல் போகவேண்டும். பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடந்துவரும் ஊழியங்கள் காணாமல் போய் வயிறு காய்ந்தாலும், மூன்று வேளைக்கு உணவு அருகினாலும் ஏன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சத்திய வாஞ்சையோடு ஆவியில் தங்கியிருந்து ஆத்துமபாரத்தோடு பிரசங்கிப்பேன் என்று துடிக்கின்ற பிரசங்கிகள் நம்மினத்தில் எழவேண்டும். அப்படி எழுந்தார்களானால் கர்த்தர் நம்மத்தியில் இருக்கிறார் என்று நாம் நம்பலாம். அத்தகைய வேதப்பிரசங்கம் செய்யும் பிரசங்கிகளை நொக்ஸை எழுப்பியதுபோல் கர்த்தர் நம்மினத்தில் எழுப்ப நாம் ஜெபிக்க வேண்டும். நம்முடைய பிரசங்க ஊழியமும் அந்தமுறையில் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- திருச்சபை சீர்திருத்தம் தேவை – ஸ்கொட்லாந்தில் ஜோன் நொக்ஸின் பெரும் பங்களிப்பு திருச்சபை சீர்திருத்தமாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்தின் இரும்புப்பிடியில் சிக்கி நாட்டு மக்கள் ஆத்மீக விடுதலைக்கு வழியின்றி இருந்த காலத்தில் வேதத்தைப் பயன்படுத்தி சத்தியபோதனைகள் அளித்து வேத அடிப்படையிலான திருச்சபையை நிறுவப் பாடுபட்டார் நொக்ஸ். அதில் கர்த்தரின் ஆசீர்வாதத்தையும் கண்டார். வெறுமனே சுவிசேஷத்தை மட்டும் அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் கர்த்தரின் வார்த்தையின்படி சபை நிறுவுவதே அவருடைய இலட்சியமாக இருந்தது. வேத அமைப்பையும், வேத போதனைகளையும், வேதத்தின்படியிலான திருநியமங்களையும் கொண்டமைந்த திருச்சபை மட்டுமே ஆத்துமாக்களுக்கு தொடர்ச்சியான ஆத்தும விருத்தியைக் கொடுக்க முடியுமென்பதை நன்குணர்ந்திருந்த நொக்ஸ், லூத்தரையும், கல்வினையும்போல அதே பணியை ஸ்கொட்லாந்திலும் செய்யப் பாடுபட்டார்.இன்று நம்மினத்திற்குத் தேவையாக இருப்பதும் இதுதான்.
கிறிஸ்தவ ஊழியங்கள், சபைகளென்ற பெயர்களில் என்னென்னவோ நடந்துவந்தபோதும், வேத அடிப்படையில் திருச்சபை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நம்மினத்தில் வெகுசிலரே. சுயநலம் பாராமல் ஆத்துமப் பாதுகாப்புக்காக அத்தகைய சபைகள் அமைய நொக்ஸ் போன்றோர் நம்மினத்தில் தேவை. பணத்துக்காகவும், சுயவிளம்பரத்துக்காகவும், வாழ்க்கைப்படியில் ஏறி வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவதற்காகவும் சபைகள் இருக்கும் நம்மினத்தில் ஜோன் நொக்ஸ் போன்றோர் தோன்றாமல் இருப்பதற்குக் காரணம் நம்மைப் பிடித்திருக்கும் ஆத்மீக வறட்சியே. கர்த்தர் எழுப்பினாலொழிய நொக்ஸ்கள் நம்மினத்தில் தோன்ற முடியாது; பரவலாக மெய்த்திருச்சபைகள் அமைவதும் கடினமே.
ஜோன் நொக்ஸ் திருச்சபை சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக ஆராதனை சீர்திருத்தத்தையும் கொண்டுவந்தார். அதுபற்றி நொக்ஸ் அதிகம் எழுதியிருக்கிறார். கர்த்தரை ஆராதிப்பதற்கே திருச்சபை தேவை. திருச்சபை ஆராதனை வேத அடிப்படையில் இருக்கவேண்டுமென்று நொக்ஸ் ஆணித்தரமாக நம்பினார்; அதில் கர்த்தருடைய வார்த்தையே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ரோமன் கத்தோலிக்க மதம் ஆராதனையை வெறும் சடங்காக, குருமார்களின் ஆடம்பர வேதவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது. வேதத்திற்கும், ஆவிக்கும் அதில் இடமிருக்கவில்லை. நொக்ஸ் வாழ்ந்த ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நம்மினத்தில் ஆராதனை மனித உணர்ச்சிகளையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. வேதத்திற்கும், கர்த்தருக்கும் அதில் இடமில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தைக் காணமுடியாத வகையிலேயே பெரும்பாலான இடங்களில் ஆராதனையைப் பார்க்கிறோம். மனிதனின் கைவண்ணத்திற்கும், ஆற்றலுக்குமே அதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜோன் நொக்ஸ் போன்றோர் நம்மினத்தில் உருவாகி வேத திருச்சபை சீர்திருத்தத்தையும், ஆராதனைச் சீர்திருத்தத்தையும் கொண்டுவர எத்தனைக் காலம் நாம் பொறுத்திருக்க வேண்டுமோ?