திருமறைத்தீபம் 2014 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. வண்டியும் சக்கரங்களும்
3. நீயும் நானுமா! (பாகம் 2)
4. திருச்சபை வரலாறு ஏன்?
5. சில சமயங்களில் சில நூல்கள் – 1
6. கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்
7. 75வது இதழ் வாசகர்கள் சொன்னவை!
வாசகர்களே!
திருமறைத்தீபம் 20வது வருடத்தை இந்த இதழோடு ஆரம்பிக்கிறது. இம்மட்டுமாக கர்த்தர் பத்திரிகை மூலம் சத்தியத்தை சத்தியமாக விளக்கி வாசகர்களுக்கு அளிக்க துணைபுரிந்திருக்கிறார். இந்தப் பணி தொடர தொடர்ந்து ஜெபியுங்கள். சத்தியம் பலரின் கண்களைத் திறக்கட்டும். வேத வசனங்களில் தெளிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது என்பதை நம்மினத்துக் கிறிஸ்தவம் உணர வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் இந்தப் பத்திரிகை ஆரம்பமானது. அது வீண்போகவில்லை என்பதை நாம் நிதர்சனமாக உணர்கிறோம். இன்னும் அநேகர் சத்தியத்தெளிவடைந்து வேதநம்பிக்கைகளை மட்டும் சுமந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ பத்திரிகையைக் கர்த்தர் பயன்படுத்தட்டும்.
மனித சித்தத்தைப் பற்றிய தொடரில் இன்னொரு பகுதியை (நீயும் நானுமா – 2) இந்த இதழில் தந்திருக்கிறோம். அது நிறைவடைந்தபின் நூலாக வெளிவரும். இறையனுபவத்தை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதைத்தான் சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் எதிர்பார்க்கிறோம். அந்த அனுபவத்தை அடையவும் அதில் வளரவும் தெளிவான இறைபோதனைகள் அவசியம். இறைபோதனைகள் இல்லாமல் இறையனுபவத்தில் வளரவோ, உயரவோ முடியாது. அதை விளக்கும் ஆக்கமே ‘வண்டியும் சக்கரங்களும்’.
ஒரு சில வாசகர்கள் 75வது இதழை வாசித்தபின் பத்திரிகை மூலம் தங்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த பெருங்காரியங்களை எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அந்தளவுக்கு கர்த்தர் அவர்களுக்கு ஆத்மீக வழிகாட்டுதலை பத்திரிகை மூலம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிந்து மிகத் தாழ்மையோடு கர்த்தருக்கு சகல நன்றிகளையும் தெரிவிக்கிறோம். இதை இறையாண்மையுள்ள நம் தேவன் மட்டுமே செய்ய முடியும். அந்தக் கடிதங்களை நீங்களும் வாசித்து கர்த்தருக்கு நன்றி தெரிவிக்குமுகமாக சிலவற்றை இந்த இதழில் தந்திருக்கிறோம்.
கிறிஸ்தவ வினா விடைப் போதனைத் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. அதன் அறிமுகத்தை இதில் வெளியிட்டிருக்கிறோம். இந்த நூல் சத்திய வெளிச்சத்தை அநேகருக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாஞ்சை. பத்திரிகைப் பணியிலும், நூல் வெளியீட்டுப் பணியிலும் எங்களோடு இணைந்து உழைத்து வருகிறவர்களை உங்கள் ஜெபங்களில் தவறாது நினைவுகூருங்கள்.
– ஆசிரியர்.
வண்டியும் சக்கரங்களும்
‘இறையியல், படித்தவர்களுக்கும் ஞானமுள்ளவர்களுக்கும் சொந்தமானது; பொழுதுபோவதற்கு ஒரு நல்ல சாதனம், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறையுள்ளவர்கள் இறையியலின் வாசற்படியைக்கூட நாடக்கூடாது. அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்’ என்ற விதமான எண்ணங்களையெல்லாம் இன்று பலரும் கொண்டிருக்கிறார்கள். லிபரல் கோட்பாட்டாளர் நிச்சயமாக இவ்வெண்ணங்களுக்கு மூலகாரணமாக இருந்துள்ளார்கள். லிபரலிஸம் சமயக்குழுக்களில் பரவத்தொடங்கி வேதத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியதும் இறையியலிலேயே மக்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கி அதிகப்படிப்பு புத்திக்குதவாது என்ற எண்ணத்தில் பலரும் அதில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைதூக்கிய சுவிசேஷ இயக்கத்தைப்போல் தோற்றமளித்த புதிய சுவிசேஷ இயக்கமும், நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இத்தகைய எண்ணங்களை இனிப்பூட்டி வளர்த்தன என்றால் மிகையாகாது. இவ்வியக்கங்களின் தாக்கத்தால் இன்று பிரசங்கம், போதனை என்ற பெயரில் இறையியலற்ற, உப்புச் சப்பில்லாத ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாத, காதுக்கு மட்டும் குளிர்ச்சி தரும் வெறும் பேச்சுக்களை சபை சபையாக இன்று கேட்க முடிகின்றது. வண்டியென்றிருந்தால் அதில் சக்கரங்களிருக்கத்தான் செய்யும். சக்கரங்களில்லாத எதையும் நாம் வண்டியாகக் கருதமாட்டோம். அதுபோல் இறையனுபவத்துக்கு இறையியல் அவசியம். சக்கரங்களில்லாமல் எப்படி வண்டியிருக்க முடியாதோ அதேபோல் சத்தான இறையியலில்லாமல் ஆவிக்குரிய இறையனுபவம் இருக்க முடியாது. பிரிக்கக்கூடாததைப் பிரிக்காதீர்கள்.

பிரின்ஸ்டன் செமினரியில் இருந்து விலகி பின்பு வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்களில் ஒருவரான கிரேஷம் மேகன் (Gresham Machen) இந்நிலைமையைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “கடவுளைப் பற்றிய கோட்பாடுகளையோ, ஞானத்தையோ இறையியல் அறிவையோ கொண்டிருக்கக் கூடாதென்று கூறுபவர்கள் இக்காலத்தில் நம்மத்தியில் அநேகம். இறையியல், ஆன்மீக வாழ்விற்கு அழிவைத்தேடித் தரக்கூடியது என்பது இவர்களது வாதம். இறையியல் அறிவல்ல நமக்குத் தேவை; இறையனுபவமே சகல காலத்துக்கும் தேவையானது என்கிறார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதுபோல், ஆன்மீக வாழ்க்கையென்பது இறைவனைப் பற்றி நமக்கேற்படும் வெறும் உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது எந்தவிதமான ஒழுக்க ரீதியான அதிகாரத்தையும் தன்னில் கொண்டிராததாகவே இருக்கும். கோட்பாடுகளற்ற வெறும் அனுபவம் என்று ஒன்றில்லை. அவ்வாறு ஒன்றிருந்தாலும், அது ஒழுக்கமானதாக நீதியுள்ளதாக இருக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு நண்பன் மீது நமக்கிருக்கும் அளவற்ற அன்பிற்குக் காரணமாக அமைவது அவனைப்பற்றி நாம் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயங்களே. ஆகவே நமது நண்பனைக் குறித்து நம்மில் ஏற்படும் இச்சாதாரண அனுபவமயமான உணர்வுகளுக்கு அடிப்படையே அவனைப் பற்றி நமக்குள்ள அறிவுதான். எனவே, மனிதருக்கிடையில் ஏற்படும் உறவுமுறை அனுபவங்களுக்கே அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள அறிவுபூர்வமான அபிப்பிராயங்கள் அவசியமாக இருக்கும்போது, அறிவின் அடிப்படையில் கடவுளோடு ஏற்படும் தொடர்பில் மட்டும் எந்தத் தவறிருக்க முடியும்? நமது கர்த்தரைப்பற்றி யாராவது இழிவாகப் பேசுவதை நம்மால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறபோது, நமது நண்பர்களைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் நமக்கு ஆத்திரம் ஏற்படுவது மட்டும் எப்படி முறையாகும்? கர்த்தரைப்பற்றி நமக்குள்ள அறிவே கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதால் நாம் கர்த்தரைப் பற்றி எத்தகைய அறிவைப் பெற்றிருக்கிறோம் என்பது நம்மில் ஒரு பெரும் மாற்றத்தையே ஏற்படுத்துகிறது” என்ற மேகனின் இவ்வார்த்தைகள்தான் எத்தனை பொருள் பொதிந்தவை.
இறையியல் என்றால் என்ன?
இறையியல் என்பது இறைவனைப் பற்றிய கோட்பாடுகளாகும் (இறை + இயல்). கர்த்தர் தம்மைப்பற்றி வேதத்தில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள சத்தியங்களை வரையறுத்து ஒழுங்குபடுத்திப் படிப்பதையே இறையியல் என்கிறோம். எனவே அத்தகைய ஒழுங்கமைப்புடைய பாடம் எல்லோருக்குமே அவசியம் தேவை. நீதிமொழிகள் 9:10, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு” என்று வாசிக்கிறோம். பரிசுத்தரைப்பற்றிய அறிவே மெய்யான அறிவாகும்; அத்தகைய அறிவே கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான அனுபவபூர்வமான நடைமுறை ஞானத்தையும் தரும். இதையே நீதிமொழிகள் எங்கும் எடுத்துரைக்கிறது.
மெய்க் கிறிஸ்தவனுக்கு இறைவனைப் பற்றிய கோட்பாடுகள் ஒருபோதும் உப்புச்சப்பற்றதாக இருக்க முடியாது. வேதபூர்வமான இறையியலை நாம் வேதத்திலிருந்தே பெற்றுக் கொள்கிறோம். இறையியலற்ற கிறிஸ்தவ போதனை என்பது முரண்பாடுள்ள ஒரு வார்த்தைப் பிரயோகமாகும். ஏனெனில் அப்படி ஒன்று உண்மையில் இருக்க முடியாது. சிலர் கிறிஸ்துவை மட்டுமே போதிக்க வேண்டும். வேறு காரியங்கள் அவசியமில்லை என்று ஆணவத்துடன் கூறுவார்கள். ஆனால் கிறிஸ்து யார்? அவரைப்பற்றி வேதம் என்ன போதிக்கின்றது? என்ற கேள்விகளை நாம் கேட்கும்போது நாம் இறையியலுடன் தொடர்புடைய கேள்விகளையே கேட்கிறோம். இக்கேள்விகளுக்கு வேதம் அளிக்கும் பதில்களே கிறிஸ்துவைப் பற்றிய இறையியல் போதனைகளாக அமைகின்றன. எனவே இறையியலற்ற ஒரு கிறிஸ்து இருக்க முடியாது. அவ்வாறு வேதம் கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கும் சத்தியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கிறிஸ்துவைப்பற்றி எவரும் போதிக்க முற்பட்டால் அது கிறிஸ்தவ போதனையாக இருக்க முடியாது. இவர்களைப்பற்றிக் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் அத்தகையவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் (கலாத்தியர் 1:6-9) என்று கூறுகிறார். ஏனெனில் வேதபூர்வமாக, வேதபோதனைகளின் அடிப்படையில் பிரசங்கிக்கப்படாத கிறிஸ்து வேதம் போதிக்கும் கிறிஸ்து அல்ல. அவ்வாறு போதிப்பவர்களும் மெய்ப்போதகர்களாக இருக்க முடியாது.
இறையியல் அறிவின் அவசியம்
இறையியல் அறிவென்பது போதக ஊழியத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமானது என்ற தவறான எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். உண்மையில் அது சபை மக்கள் அனைவருக்கும் தேவையானதாகும். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இதையே விளக்குகிறார். “நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” (எபேசியர் 4:14-15).
இன்று கிறிஸ்தவர்களுக்கு இறையியல் போதனை அதிமுக்கியமாகத் தேவைப்படுகின்றது. வேத ஆதாரமற்ற உப்புச்சப்பற்ற பிரசங்கங்களும், போதனைகளும், மாயாஜால வித்தைகளும், அதிகாரத் துஷ்ப்பிரயோகமும் மலிந்த தமிழ்க் கிறிஸ்தவ உலகில் மெய்யான கிறிஸ்தவம் தழைத்தோங்கி வளர தமிழ் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்தவ இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. தனிமனித வழிபாடு, ஏமாற்று வித்தைகள் மலிந்து கிறிஸ்தவத்தின் பெயரில் உலவி வரும் போலித்தனத்தின் அடிமைத்தனத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் விடுபட இன்று கிறிஸ்தவ இறையியல் அவசியமாகின்றது. கிறிஸ்துவைப்பற்றியும், அவரது போதனைகளைப்பற்றியும் முறையான வேதபூர்வமான அறிவைப் பெற்றுக்கொள்ளும்போது போலித்தனத்தின் அடிமைத்தளையிலிருந்து நாம் விடுதலை அடைகிறோம். ஆகவேதான் பேதுரு, தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகக் கடவது (2 பேதுரு 1:2) என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் கிறிஸ்து போதிக்கும், கிறிஸ்தவ வாழ்க்கையின் மேன்மை, கிறிஸ்து தலையாக இருந்து வளர்த்து வரும் திருச்சபை ஆகியவை பற்றியும் வேதபூர்வமாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தேவ அதிகாரத்திற்கு கட்டுப்பட மறுத்து திருச்சபை குறித்த போதனைகளையெல்லாம் நிராகரித்து வேதம் அதைப்பற்றி ஒன்றுமே கூறாததுபோல் நடந்துவரும் கூட்டத்தின் கரத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் விடுபட்டு, கிறிஸ்து நேசிக்கும் சபை வாழ்க்கைக்கு வேதபூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுக்க, கிறிஸ்தவ இறையியல் அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. மேலும், கிறிஸ்தவ இறையியல் அறிவு எல்லாவிதமான போலிப்போதனைகளிலும் இருந்து நம்மைக் காப்பது மட்டுமன்றி மெய்ச்சத்தியத்தில் நமக்கு மேலான ஆர்வத்தையும், உறுதியையும் ஏற்படுத்தும்.
முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology)
கிறிஸ்தவ இறையியலை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். அதனை விளக்கவுரை (Exegetical) இறையியல், முறைப்படுத்தப்பட்ட இறையியல், வரலாற்று இறையியல், போதக அல்லது நடைமுறை இறையியல் என்று வகுக்கலாம். இவற்றை மேலும் பல பகுதிகளாகவும் பிரிக்கலாம். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே இவை எல்லாவற்றிலும் ஓரளவிற்கு பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் அறிவின் அவசியத்தையே நாம் இங்கு விவரிக்கப் போவதோடு அதன் அடிப்படையிலான போதனைகளையே இப்பகுதிகளில் தொடர்ந்து தரவிருக்கிறோம்.
முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்றால் என்ன?
வேதத்தில் காணப்படும் எல்லா முக்கிய போதனைகளையும் சீராகத் தொகுத்து, முறைப்படுத்தித் தருவதே முறைப்படுத்தப்பட்ட இறையியலாகும். பொதுவாக எல்லாப் போதனைகளும் வேதத்தில் முறைப்படுத்தப்பட்டுக் கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தும் வேதத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து காணப்படுகின்றன. இவற்றைத் தொகுத்தளிப்பதே முறைப்படுத்தப்பட்ட இறையியலின் பணியாகும். உதாரணத்திற்கு படைப்பை எடுத்துக்கொண்டால் அது பற்றிய அனைத்துப் போதனைகளும் வேதத்தில் பரந்து விரிந்து காணப்படுகின்றன. வேதத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படும் விதிகளைப் பயன்படுத்தி வேதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் படைப்பைப் பற்றிய அத்தனைப் போதனைகளையும் முறையாகத் தொகுத்து விளக்குவதே முறைப்படுத்தப்பட்ட இறையியலின் பங்காகும்.
அறிவீனத்தினால் இன்று சிலர் இத்தகைய இறையியலறிவை செயற்கையானதென்று விபரம் புரியாமல் நிராகரிப்பார்கள். ஆனால் வேதத்தில் பரந்து காணப்படும் போதனைகளை, வேதமே தனக்குள் கொண்டுள்ள, அதை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிகளைப்பயன்படுத்தி, முறையாக விளங்கி, அவற்றை ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொகுத்துப் படிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. இதனால் வேதம் போதிக்கும் சகல போதனைகளையும் நாம் முறையாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் ஞானம் இன்று பெரும்பாலானோருக்கு இல்லாததாலேயே போலிப்போதனைகளுக்கு அவர்கள் இரையாகிவிடுகிறார்கள். ஆகவே, முறைப்படுத்தப்பட்ட இறையியலின் பெரும் அவசியத்தை நாம் உணர வேண்டும்.
வரலாறு கண்டுள்ள இரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகள்
வரலாற்றில் இருவிதமான முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனையை திருச்சபை பெற்றுக் கொண்டுள்ளது. வினா விடைப் பயிற்சியும் (Catechism), விசுவாச அறிக்கையுமே (Confession of Faith) அத்தகைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகளாகும். முக்கியமாக சீர்திருத்த பாப்திஸ்துகள் உலகமெங்கும் பயன்படுத்தும் வினாவிடைப் பயிற்சியையே திருமறைத்தீபத்தில், கிறிஸ்தவக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் கேள்வி-பதில்களாக விளக்கக் குறிப்புகளோடு தொடர்ந்து திருச்சபைகளின் பயன் கருதி அளித்து வந்திருக்கிறோம். இது பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன் களின் காலப்பகுதியில் திருச்சபைத் தலைவர்களால் எதிர்கால சந்ததியின் பயன் கருதி தொகுத்தளிக்கப்பட்டது. பாப்திஸ்துகளில் தலைசிறந்த போதகராக இருந்த ஸ்பர்ஜனும் தன்காலத்தில் இதன் அவசியத்தை உணர்ந்து தனது சபை வளர்ச்சிக்குப் பயன்படுமுகமாக இதேபோல் ஒரு வினா விடைப் போதனை முறையை வெளியிட்டார். இதனைப் பயன்படுத்துவதால் அடையக்கூடிய பயன்களையும், ஆசீர்வாதங்களையும் உலகெங்கும் அநேக திருச்சபைகளில் பார்க்க முடிகின்றது.
இதே முறையில் வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்கு விசுவாச அறிக்கைகளையும் அளித்துள்ளது. இவற்றில் முக்கியமான 1689 இல் வெளியிடப்பட்ட பாப்திஸ்து விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஏற்கனவே இவ்விதழ்களில் எழுதியுள்ளோம். நமது பாப்திஸ்து பிதாக்கள் பதினேழாம் நூற்றாண்டில் திருச்சபையின் வளர்ச்சி கருதியும், அது இரத்ததானமளித்துப் பெற்றுக் கொண்டுள்ள சீர்திருத்தத்தை இழந்துவிடாமலும் இருக்க அவ்விசுவாச அறிக்கையை தயாரித்தனர். நூறு வருடங்களுக்கு மேலாக இதுவே அக்காலத்து சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக அமைந்து சபை மக்கள் சத்தியத்தில் உறுதியுடன் இருக்க துணை புரிந்துள்ளது. சத்தியத்திற்கு ஆபத்து நேரிட்ட வேளையில், தன்காலத்தில் ஸ்பர்ஜனும் இதனை மறுபடியும் புதுப்பித்து, தனது மக்களுக்குத் தொடர்ந்து போதித்து வேதத்தை விசுவாசிக்கும் சபைகள் இதனைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். சத்தியத்தின் பேரில் வியாபாரம் நடத்தும் போலிகள் மலிந்து திருச்சபை மக்கள் வழி தெரியாது, திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும் இந்நாட்களில் இதன் அவசியத்தை யார் மறுக்க முடியும்.
விசுவாச அறிக்கை, வேதபோதனைகளை முக்கியமான தலைப்புகளின் அடிப்படையில் விளக்கும் அருமையான சாதனமாகும். உலகெங்கும் பல சபைகளில் போதகர்கள் இதனைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் முறையான கிறிஸ்தவ இறையியல் போதனையைப் பெற்றுக்கொள்ள வழி செய்கிறார்கள். இத்தகைய இறையியல் போதனையினால் சத்தியத்தில் முறையான அறிவைப் பெற்று வளருவது மட்டுமல்லாமல், சத்தியத்திற்கு விரோதமான போக்குகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் சபை மக்களால் முடிகின்றது.
இறையியல் அவசியமா? என்று நாம் ஒருபோதும் கேட்கக்கூடாது. அந்தக் கேள்வியே தவறானது. நாம் நேசிக்கும், வழிபடும் இறைவனைப் பற்றிய சத்தியங்களனைத்தையும் அறிந்துகொள்ளுவது எப்படித் தவறாகும்? தான் நேசிக்கும் தன் மனைவியைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வது அவரோடு அந்த மனிதருக்கு இருக்கும் நெருக்கத்தை வளர்க்கும். நாம் வழிபடும் கடவுளைப் பற்றிய நம் அறிவு அதிகரிக்கும்போது அவரோடு நம்முடைய உறவு வளரும், உயரும், நெருக்கமடையும். கர்த்தரைப் பற்றியும், அவருடைய மேலான செயல்களைப் பற்றியும் வேதம் அள்ளியள்ளி விளக்கும் சத்தியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவரை வழிபட முனைவது நம்மை மறுபடியும் சிலை வணக்கத்திற்கே வழிநடத்திச் செல்லும்.
நீயும் நானுமா! (பாகம் 2)
இதற்கு முன்பு வந்திருந்த ஓரிதழில் இதே தலைப்பில் மனிதனுடைய சித்தத்தின் தன்மையை (The Will of Man) ஆராயும் ஆக்கங்களின் ஒருபகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பகுதியாக இந்த ஆக்கம் வெளிவருகிறது. இதுவரை, மூல பாவத்தைப் பற்றிய பெலேஜியனின் கோட்பாடுகளில் இருந்து ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் கோட்பாடுகள்வரை பார்த்திருக்கிறோம். இந்த இதழில் தொடர்ந்து 18ம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்வரும் நூற்றாண்டுகளிலும் இது பற்றிக் காணப்பட்ட கோட்பாடுகளை ஆராய்வது அவசியமாகிறது.
ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) மனித சித்தமும்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பிரசங்கியும், இறையியல் வல்லுனரும், சிந்தனையாளருமாக இருந்தவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸ். அமெரிக்காவில் வாழ்ந்த எட்வர்ட்ஸுக்கு அக்காலத்தில் ஏற்பட்ட ஆத்மீக எழுப்புதலோடு தொடர்பிருந்தது. எட்வர்ட்ஸின் பல நூல்கள் பிரபலமானவை. அவருடைய ‘கோபத்தோடிருக்கும் கடவுளின் பார்வையில் பாவிகள்’ என்ற பிரசங்கம் மிக முக்கியமானதும் பிரபலமானதுமாகும். பக்திரீதியான உணர்வுகள் (1746), சித்தத்தின் சுயாதீனம் (1754) ஆகிய முக்கிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். எட்வர்ட்ஸ் மூல பாவத்தைப் பற்றி ஓர் ஆக்கத்தில் விளக்கியுள்ளார். இந்த முக்கியமான ஆக்கம் பெருமளவுக்கு அநேகர் அறிந்திராத ஒன்று.
இந்நூலில் எட்வர்ட்ஸ் ஆகஸ்தீன், மார்டின் லூதர் ஆகியோருடைய கோட்பாடுகளை ஒத்தே மூலபாவத்திற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். பிறப்பிலேயே மனிதன் பாவத்தில் மரித்திருக்கிறான் என்ற சத்தியமே எட்வர்ட்ஸின் விளக்கங்களுக்கும் ஆதாரமாக இருந்திருக்கிறது. மனிதன் பாவமில்லாமல் பிறந்து சமுதாயத்தினால் கெட்டுப் போனதாக எட்வர்ட்ஸ் கருதவில்லை. பாவம் செய்வது மனிதனுக்கு இயற்கையானது என்று அவர் விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தில் தன்னைக் கல்வினித்துவவாதியாகக் கருதுவதை அவர் மறுக்கவில்லை.
எட்வர்ட்ஸைப் பொறுத்தவரையில் பாவத்தில் இருக்கும் மனிதனின் சித்தம் அதன் தன்மைக்கேற்பவே செயல்படும். மனிதனின் இச்சைகளுக்கும் சித்தத்திற்கும் இடையில் அவர் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவனுடைய இச்சை ஒருவிதமாகவும், சித்தம் ஒருவிதமாகவும் இருப்பதாக அவர் கருதவில்லை. அவனுடைய சித்தத்திற்கேற்றபடியே இச்சையும் அமைந்திருக்கும் என்று அவர் விளக்கினார். ஒருபோதும் மனிதன் தன்னுடைய சித்தத்திற்கு மாறான விதத்தில் இச்சைகொள்ள மாட்டான் என்று எட்வர்ட்ஸ் கருதினார். எட்வர்ட்ஸின் இந்தக் கருத்துக்கும் பவுல் ரோமர் 7ல் விளக்கியிருப்பதற்கும் வேறுபாடில்லை. பவுல் தன்னுடைய இருதய போராட்டத்தை ரோமர் 7ல் விளக்குகிறார். நீதியை செய்யும்படியான இருதயத்தைப் பவுல் கொண்டிருந்த போதும் அவருக்குள் பாவ இருதயத்தின் காரணமாக போராட்டம் நிகழ்கிறது. சில வேளைகளில் நீதியை விரும்பினாலும் அதற்கு மாறானதை செய்துவிடுகிறபோது அவ்வேளையில் அவருடைய சித்தமும் செய்கையும் ஒன்றாகத்தானிருக்கிறது. இதற்காக எப்போதுமே பவுலின் சித்தம் நீதிக்கெதிரானதாக இருந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீதியை செய்யும்படியாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் அவருடைய இருதயம் நீதியையே எப்போதும் நாடினாலும் உள்ளிருக்கும் பாவத்தால் சில வேளைகளில் எதிரானதை செய்துவிடும்.
மனிதனின் இயற்கையான செயற்திறனுக்கும் ஆத்மீக செயற்திறனுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்கிறார் எட்வர்ட்ஸ். இந்த வேறுபாடே மனிதனின் ஆத்மீக செயற்திறனற்ற தன்மைக்குக் காரணமாக இருப்பதாக அவர் விளக்குகிறார். ஆத்மீக செயற்திறனற்றவனாக மனிதன் இருப்பதாலேயே மனிதனுடைய சித்தம் சுயாதீனமற்றதாக இருப்பதாக அவர் விளக்குகிறார். ஒருவன் தன்னுடைய இருதயத்தில் எதன் மீது ஆசைவைத்து அதைச் செய்வதற்கு உக்கிரத்தோடு நாடுகிறானோ அவனே சுயாதீனமாக இருக்கிறான். இதுவே உண்மையில் சுயாதீனம். ‘ஒருவன் அத்தகைய சுயாதீன சித்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று நான் சொல்லுகிறபோது, மனிதனுடைய சித்தம் அது உக்கிரத்தோடு ஆசைப்பட்டு நாடுகிற ஒன்றிற்கு எதிராக இயற்கையாக செயற்பட முடியாதென்றே கூறுகிறேன்’ என்கிறார் எட்வர்ட்ஸ்.
மனித சித்தம் நடுநிலையில் இருக்கிறதென்பது (neutral) முட்டாள்தனம் என்கிறார் எட்வர்ட்ஸ். மனித சித்தம் நடுநிலையில் இருந்து எதையும் நாடாமலும், எதைப்பற்றியும் கருத்தில்லாமலும் இருக்குமானால் மனிதன் செய்யத் தீர்மானிக்கின்ற எதுவும் எப்படி ஒழுக்கத்தோடு தொடர்புடையதாக இருக்க முடியும்? என்று கேட்கிறார் எட்வர்ட்ஸ். அவனுக்கும் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே என்கிறார். அத்தோடு மனித சித்தம் நடுநிலையில் இருந்தால் மனிதன் எப்படி எதையும் செய்யும்படி ஒரு தீர்மானத்துக்கு வர முடியும்? என்று கேட்கிறார். சித்தம் நடுநிலையில் இருக்குமானால் தீர்மானம் எடுப்பதற்கு இடமேயிருக்காது என்றும் எதையும் தீர்மானிப்பதற்கு அது காரணமாகவும் இருக்க முடியாது என்றும் எட்வர்ட்ஸ் விளக்குகிறார்.
மூலபாவத்தைப் பற்றிய எட்வர்ட்ஸின் கருத்துக்களை சுருக்கமாகப் பார்ப்போம். கடவுளுக்குரிய எதையும் விரும்பிச் செய்யத் தீர்மானிக்கும் ஒழுக்கச் செயற்திறனற்றவனாக மனிதன் இருக்கிறான் என்கிறார் எட்வர்ட்ஸ். கடவுள் அவனுடைய இருதயத்தை மாற்றாத வரையில் அவனால் ஒழுக்கச் செயற்திறனுடையவனாக இருக்க முடியாது என்றும், கடவுளுக்குரிய எதையும் நாட முடியாத இருதயத்தோடிருப்பதே அவனை ஒழுக்கச் செயற்திறனற்றவனாக வைத்திருக்கிறது என்றும் விளக்குகிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார் – அவனை அப்படியே விட்டுவிட்டால் அவன் ஒருபோதும் இயேசுவை நாடி வரமாட்டான். தன்னுடைய பாவவீழ்ச்சியின் தன்மை காரணமாக இயேசுவை நாடி வரக்கூடிய இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. பாவத்தின் காரணமாக தன்னுடைய இருதயத்தில் காணப்படும் ஆழமான இச்சைகளினால் அவன் ஒருபோதும் இயேசுவை நாட மாட்டான். இயேசு அவனுடைய இருதயத்தை மறுபிறப்பின் மூலமாக மாற்றித் தன்பக்கத்தில் இழுக்காதவரை அவனால் தன் நிலையில் இருந்து மாற முடியாது; தன் நிலைக்கெதிராக நடக்க முடியாது. அவனுடைய கேடான இருதய இச்சைகளின் அடிமைத்தனத்தில் இருந்து அவனை விடுதலை செய்ய கடவுளால் மட்டுமே முடியும். இதெல்லாம் மூலபாவத்தைப் பற்றிய ஜொனத்தன் எட்வர்ட்ஸின் கருத்துக்கள். ஆத்துமா கர்த்தரை நாடுகின்ற விஷயத்தில் நீயும், நானும் என்ற எண்ணத்துக்கே இடமில்லாத வகையில் எட்வர்ட்ஸின் போதனைகள் அமைந்திருக்கின்றன. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற யோனாவின் வார்த்தைகளுக்கேற்ப எட்வர்ட்ஸின் விளக்கங்கள் இருக்கின்றன.
சார்ள்ஸ் கிரென்டிசன் பினி (Charles Grandison Finney)

சார்ள்ஸ் பினி (1792-1875) என்று பொதுவாக அழைக்கப்படும் பினி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான மனிதர். அமெரிக்காவின் மாபெரும் எழுப்புதல் மன்னன் என்று பலரால் கருதப்படுபவர். அது சரியான கூற்றா என்பதை ஆராயத்தான் வேண்டும். அவரெழுதிய ‘எழுப்புதல் பற்றிய விரிவுரைகள்’ (Lectures on Revival) எனும் நூல் மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்லாது கீழைத்தேய நாடுகளிலும் பிரசித்தி அடைந்தது. அநேக வேதாகமக் கல்லூரிகளில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று பொதுவாகவே எங்கும் காணப்படும் சுவிசேஷ அழைப்பு முறைகளுக்கு காரணமாக சார்ள்ஸ் பினியே கருதப்படுகிறார். ஆத்துமாக்கள் கடவுளை விசுவாசிப்பதற்கு அநேக முறைகளை பினி உருவாக்கினார் என்று அவரைப் பற்றி எழுதியிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். அவருடைய பிரசங்க முறை வித்தியாசமாக இருந்தது. சுவிசேஷப் பிரசங்கம் மற்றும் ஊழியம் பற்றி அதுவரை இருந்த எண்ணங்களுக்கெல்லாம் வித்தியாசமான முறையில் பினியின் போதனைகளும், சுவிசேஷ முறைகளும் அமைந்திருந்தன. அவருக்குப் பின்னால் வந்த டீ. எல். மூடி, பில்லி சன்டே, பில்லி கிரேகாம் போன்றவர்களுடைய சுவிசேஷ அழைப்பு முறைகளுக்கும் உத்திகளுக்கும் காரணமாக சார்ள்ஸ் பினியின் சுவிசேஷ உத்திகளே இருந்தன. அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு சுவிசேஷ ஊழியத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி இன்றைய சுவிசேஷ ஊழியத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தித் கொண்டிருக்கும் மனிதராக பினியை நிச்சயம் கருதலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமான மனிதராக பினி இருந்தபோதும் அவருடைய குறைபாடுகளை சுட்டிக்காட்டாதவர்கள் இருக்காமலில்லை. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முக்கிய இறையியல் வல்லுனராக இருந்த சார்ள்ஸ் ஹொட்ஜ் (Charles Hodge) பினியை விமர்சித்தவர்களில் முக்கியமானவர். அக்காலத்தில் அமெரிக்காவில் கொனடிக்கெட்டில் போதகராகவும், இறையியல் வல்லுனராகவும், முக்கியமான சுவிசேஷ ஊழியராகவும் இருந்த அசேல் நெட்டில்டன் (Asahe Nettleton) பினியில் சுவிசேஷ ஊழிய உத்திகளைப் பெரிதும் விமர்சித்து மக்களை எச்சரித்திருக்கிறார்.

இன்றைக்கு பினியின் நூல்கள் மேலை நாடுகளிலும், கீழைத்தேய நாடுகளிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பினியின் போதனைகளை சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமலேயே அவற்றைப் பின்பற்றி வருகிறவர்கள் அநேகர். பினியைப் பற்றி எழுதுகின்ற ரொபட் கொட்பிரி என்ற தற்கால இறையியல் வல்லுனர், ‘வரலாற்றில் பினியைப்போல பெலேஜியனாக இருந்த ஒரு இறையியல் வல்லுனர் இருக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மிகத் தெளிவாக பினி தன்னுடைய போதனைகளைத் தன் நூல்களில் விளக்குகிறார். தன்னுடைய ‘எழுப்புதல்கள் பற்றிய விரிவுரை’ என்ற நூலின் ஆரம்பத்திலேயே பினி ‘மனமாற்றம் மனிதன் தன்னுடைய சுயாதீன சித்தத்தைப் பயன்படுத்துவதனாலேயே ஏற்படுகின்றது’ என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார். பினியை விமர்சிக்கும் இன்னுமொரு பெரும் இறையியல் வல்லுனர் பென்ஜமின் வார்பீல்ட். வரலாற்றறிஞரான அவர், சபை வரலாற்றில் ‘பினியைப் போல பெலேஜியனாக இருந்த இறையியல் வல்லுனர்கள் வேறெவருமிருக்கவில்லை’ என்கிறார்.
பினியைப் பற்றிய இவர்களுடைய கருத்துக்கள் கடினமானதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்தளவுக்கு சுவிசேஷ இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பினி கருதப்பட்டு வருகிறார். சுவிசேஷ இயக்கப் போதனைகளில் பினிக்கு விசுவாசமிருந்ததா? என்று கேட்பது அவசியம். சுவிசேஷ இயக்கப் போதனைகள் (Evangelicalism) என்பதற்கு இன்று கொடுக்கப்படும் விளக்கம் முன்பிருந்த விளக்கத்தைவிடப் பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் சுவிசேஷ இயக்கக் கோட்பாடுகள் என்பதற்கும் புரொட்டஸ்தாந்து, சீர்திருத்தவாதப் போதனைகள் என்பற்கும் வேறுபாடில்லாமல் இருந்தது. ஏனெனில் சுவிசேஷ இயக்கப் போதனைகள் என்பது சீர்திருத்தவாதப் போதனைகளுக்கு இன்னுமொரு பெயர். இன்றைக்கு அந்த முறையில் ‘சுவிசேஷ இயக்கப் போதனை’ என்ற பதங்களுக்கு அர்த்தம் இருக்கவில்லை. உண்மையில் மனிதர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிற அனைவரும் சுவிசேஷ இயக்கக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இன்று கருதப்படுகிறார்கள். இந்தவகையில் ரோமன் கத்தோலிக்க மதமும்கூட ‘கத்தோலிக்க சுவிசேஷ இயக்கம்’ (Catholic Evangelical) என்ற பெயரைத் தனக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளுகிறது. அந்தளவுக்கு இந்தப் பெயரின் அடிப்படைக் கருத்து தெளிவற்றவிதத்தில் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய கருத்தின் அடிப்படையில் மட்டுமே சார்ள்ஸ் பினியை சுவிசேஷ இயக்க நம்பிக்கை கொண்டவராக பார்க்க முடியும். ஆரம்ப காலத்தில் இருந்த சுவிசேஷ இயக்கப் போதனைகளின் அடிப்படை அம்சங்களை பினி நிராகரித்திருந்தார் என்பதை அவருடைய நூல்களை சிந்தித்து ஆராய்ந்து வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சுவிசேஷ இயக்க நம்பிக்கைகளைத் தகர்த்தவர்களில் முக்கிய மனிதராக சார்ள்ஸ் பினி இருந்திருக்கிறார். பினியின் நூல்களை வாசிப்பவர்களும், அவருடைய பெயரைப் பயன்படுத்துகிறவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
இனி சார்ள்ஸ் பினியின் போதனைகளையும், கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். முக்கியமாக மூல பாவத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிய அவருடைய போதனைகளே நமக்கு அவசியமாக இருக்கின்றன. மனித சித்தத்தின் தன்மையை நாம் ஆராய்ந்து வருவதால் அதோடு தொடர்புடைய விஷயங்களில் பினியின் கருத்துக்களே நமக்கு முக்கியமானவையாக இருக்கின்றன.
நீதிமானாக்குதல்
சார்ள்ஸ் பினி சீர்திருத்த கிறிஸ்தவம் விளக்கும் நீதிமானாக்குதல் போதனையை நிராகரித்தார். அவருடைய எழுத்துக்களை ஆராயும்போது அவருக்கு கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் கடவுளின் நியாயஸ்தலத்தில் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் சட்டபூர்வமாக கடவுளால் நீதிமான் என்று அறிக்கை செய்யப்படுவது ஏற்புடையதல்ல என்பது தெளிவாகிறது. கடவுளின் இந்த சட்டபூர்வமான அறிவிப்பை ஆங்கிலத்தில் Forensic justification என்று அழைப்பார்கள். இதில் இருபகுதிகள் அடங்கியுள்ளன. ஒன்று, கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக சிலுவையில் தன்னைப் பலியாகக்கொடுத்து அவர்களுடைய இரட்சிப்பை விலைகொடுத்து வாங்கியிருப்பது. இதற்காக கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து அதைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டியிருந்தது. இரண்டாவது, கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கடவுள் ‘கிறிஸ்துவுக்குள்’ பார்த்து அவர்களை நீதிமான்கள் என்று அறிவிப்பது. இந்த சட்டரீதியிலான (judicial) நீதிமானாக்குதலை பினி முற்றாக நிராகரித்தார். இதை அவர் முட்டாள்தனமான வாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பினியைப் பொறுத்தவரையில் கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டு நடந்து அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இயேசு வேறு எவருக்காகவும் அவர்களுடைய நீதியை சம்பாதிப்பதற்காக ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது பினியின் வாதம். இதிலிருந்தே சுவிசேஷக் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடித்தளப் போதனைகளில் பினிக்கு உடன்பாடில்லாமல் இருந்திருப்பது புரிகிறது.
கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் பற்றிய சத்தியத்தில் இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. ஒன்று, அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து பூரணமாக அதை நிறைவேற்றுவது. அதை active obedience என்று அழைப்பார்கள். இன்னொன்று, அவர் சகல துன்பங்களுக்கும், சிலுவைப்பலி உட்பட தன்னை ஒப்புக்கொடுத்து நிறைவேற்றுவது. இதை passive obedience என்று அழைப்பார்கள். கிறிஸ்துவின் கீழ்ப்படிதலில் இவை இரண்டுமே அடங்கியிருக்கின்றன. நீதிமானாக்குதலுக்கு இவை இரண்டும் அவசியம். அதேபோல நீதிமானாக்குதலில் இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன (Imputation or Imputed righteousness). ஒன்று, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய பாவங்கள் கிறிஸ்துவின் மேல் சிலுவையில் சுமத்தப்பட வேண்டும். இன்னொன்று, சிலுவை மரணத்தின் மூலம் கிறிஸ்து சம்பாதித்த நீதி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மேல் சுமத்தப்பட வேண்டும். நீதிமானாக்குதலில் இவை பிரிக்க முடியாதபடி அடங்கியிருக்கின்றன. இவையில்லாத நீதிமானாக்குதல் மெய்யான வேதம் போதிக்கும் நீதிமானாக்குதலாக இருக்க வழியில்லை. ரோமர் 4ம் அதிகாரத்தில் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி விளக்கும்போது இந்த நீதிமானாக்குதலையே பவுல் ‘எண்ணப்படுகிறது’, ‘எண்ணப்பட்டது’ என்ற பதங்களைப் பயன்படுத்தி விளக்குகிறார். ஆனால், சார்ள்ஸ் பினி இந்த விளக்கத்தை அடியோடு நிராகரித்தார்.
கிறிஸ்துவின் கிருபாதாரபலி
கிறிஸ்துவின் கிருபாதாரபலி பற்றிய போதனையிலும் பினிக்கு பிரச்சனை இருந்தது. அந்த விஷயத்தில் சுவிசேஷக் கிறிஸ்தவக் கோட்பாடுகளை விட்டு பினி வெகுதூரம் விலகிப் போயிருந்தார். இதை அநேகர் உணர்வதில்லை. கடவுளுடைய உக்கிரமான தண்டிக்கும் கோபத்தை ஒருவரும் சமாதானப்படுத்த முடியாது என்பது பினியின் கருத்தாக இருந்தது. அதுவும் கிறிஸ்துவாலும்கூட அந்தக் கோபத்தை சமாதானப்படுத்த முடியாது என்று பினி குறிப்பிட்டார். கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் முக்கிய அம்சங்களில் ஒன்று தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் இடத்தில் கிறிஸ்து இருந்து தேவகோபத்தைத் தன்மேல் தாங்குவது. அதை நிராகரிக்கும் பினி கிருபாதாரபலி பற்றிய போதனையையே தன்னிஷ்டத்துக்கு மாற்றி அமைத்தார்.
கிறிஸ்துவின் கிருபாதாரபலியை விளக்கும் பினி எந்தவொரு தெரிந்துகொள்ளப்பட்டவரின் பாவத்துக்காகவும் கிறிஸ்து மரிக்கவில்லை என்றார். அதேநேரம் கிறிஸ்துவின் கிருபாதாரபலி முழு உலகத்துக்காகவும் செலுத்தப்பட்டதாகவும், எல்லோருக்காகவும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கினார். இதன் மூலம் நீதியைப் பாதுகாப்பதில் கடவுளுக்கு இருக்கும் கடமைப்பாட்டையும், அவருடைய நீதியான ஒழுக்கத்தைப் பற்றியுமே நாம் அறிந்துகொள்ளுகிறோம் என்கிறார் பினி. பினியின் கருத்துக்கள் கிருபாதாரபலி பற்றிய போதனைகளை குழப்பிவிடுகிறது. இதற்குக் காரணமில்லாமலில்லை. பினியைப் பொறுத்தவரையில் மனிதனுடைய இரட்சிப்பு கிறிஸ்துவின் கிருபாதாரப் பலியில் இல்லாமல் அவனுடைய இருதயத்தின் செய்கையிலேயே தங்கியிருந்தது.
கிறிஸ்து பாவிகளுக்காக தன்னைப் பலிகொடுத்து மரிப்பது நீதிமானாக்குதலுக்கு அவசியமான நிபந்தனையாயிருந்தது. அதேபோல் நீதிமானாக்குதலுக்கு மனந்திரும்புதலும், விசுவாசமும் அவசியமான நிபந்தனையாயிருந்தது. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் நிபந்தனையாக இருப்பதை பினி விரும்பவில்லை. விசுவாசத்தைப் பற்றிய பினியின் விளக்கங்கள் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றியதாக இருக்கவில்லை.
பரிசுத்தமாக்குதல்
நீதிமானாக்குதல், கிருபாதாரபலி என்று மட்டுமல்லாமல் பரிசுத்தமாக்குதல் போதனையிலும் பினி மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருந்தார். பினி தன்னுடைய கருத்துக்களை தெளிவாக விளக்குவதால் அவர் எங்கு தவறிழைக்கிறார் என்பதை நம்மால் சுலபமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. பினியைப் பொறுத்தவரையில் பரிசுத்தமாக்குதல் நீதிமானாக்குதலுக்கு இன்னுமொரு நிபந்தனையாக இருக்கிறது. அதாவது நீதிமானாவதற்கு முதலில் ஒருவர் பரிசுத்தமாகுதலை அடைந்திருக்க வேண்டும் என்பது பினியின் விளக்கம். இது சீர்திருத்தப் போதனைக்கு மாறான தலைகீழான விளக்கம். பினி இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கையே தலைகீழாக திருப்பி விடுகிறார். உண்மையில் நீதிமானாக்குதலை அடைந்த ஒருவரே (கிறிஸ்துவால் அறிவிக்கப்பட்ட ஒருவரே) பரிசுத்தமாக்குதலுக்கான தகுதியை அடைகிறார். இதை சார்ள்ஸ் பினி மறுத்தார். ‘இந்த உலகத்தில் முழுமையான பரிசுத்தத்தை கடவுளுக்காகவும் அவருடைய சேவைக்காகவும் அடைந்த இருதயத்தை ஒருவர் கொண்டிருப்பது அவருடைய பாவங்கள் இந்த உலகத்தில் மன்னிக்கப்பட்டு கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவசியமான மாற்றப்படமுடியாத நிபந்தனையாக இருக்கிறது’ (Finney’s Systematic Theology) என்று பினி விளக்கியிருக்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே சிதைக்கும் போதனையாக இருக்கிறது.
‘நம்முடைய நீதிமானாக்குதல் முழுமையான பரிசுத்தமாக்குதலில் தங்கியிருக்குமானால் நம்மைவிட பரிதாபமானவர்கள் எவரும் இருக்க முடியாது’ என்று ஆர். சீ. ஸ்பிரவுல் என்ற இறையியலாளர் குறிப்பிடுகின்றார். முழுமையான பரிசுத்தமாகுதல் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவசியமானால் யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டிய அவசியமிருக்கிறது? என்று கேட்க வேண்டியதாயிருக்கிறது. கடவுளின் நியாயஸ்தலத்தில் பிதாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்த சட்டரீதியிலான நீதிமானாக்குதலையும், அதைப் பெற்றுக்கொள்ளுவதற்கு அவசியமான விசுவாசத்தையும் நிராகரித்து மாற்று விளக்கங்களை பினி கொடுக்க ஆரம்பித்ததால் பரிசுத்தமாக்குதல் பற்றிய போதனையையும் அவர் குழப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. பினியின் இந்த விளக்கங்கள் நிச்சயம் வேத சுவிசேஷ சத்தியத்துக்கு எதிரானதாக இருக்கின்றது. ஆகவே, பினி ‘இவெஞ்சலிக்கள்’ சுவிசேஷக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. பினியின் சுவிசேஷம் வேத சுவிசேஷமல்ல.
மனிதனின் பாவம்
சார்ள்ஸ் பினியின் இரட்சிப்பு பற்றிய இறையியல் போதனைகளில் காணப்படும் கோளாறுகளுக்கெல்லாம் மனிதனின் பாவம் பற்றிய அவருடைய தவறான விளக்கங்களே காரணம். இதில் அவர் வேதத்துக்கு முற்றிலும் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருந்ததாலேயே ஏனைய இறையியல் போதனைகளையும் அவர் குழப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘முதல் கோணலென்றால் முற்றும் கோணல்’ என்று சொல்வார்களே அதுபோலத்தான். பாவத்தைப் பற்றிய பினியின் கருத்துக்களை அவர் ‘ஒழுக்கப் பாதிப்பு’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதிகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். மனிதனின் ஒழுக்கப்பாதிப்பை மனிதனுடைய பாவ இயல்பாக பினி கருதவில்லை. மனிதன் சரீரபூர்வமாக பாவத்தால் பாதிக்கப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளும் பினி அதை பாவத்தன்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய ஒழுக்கக்கோளாறுகளுக்கும், சரீரப் பாதிப்புகளுக்கும் அவன் பாவத்தில் வீழ்ந்திருப்பதே காரணம் என்று வேதமும், சீர்திருத்தவாதமும் விளக்குகிறது. இதையே மூலபாவம் என்று சொல்லுகிறோம். இதை பினி முற்றிலும் நிராகரிக்கிறார். மூலபாவத்தை நிராகரிக்கும் பினி மனிதனுடைய சித்தத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.
பினியின் இறையியல் விளக்கங்களுக்கெல்லாம் அத்திவாரமாக இருப்பது மனிதனுடைய சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்று அவர் நம்புவதுதான். அதாவது பாவத்தால் பாதிக்கப்படாத சித்தத்தை மனிதன் கொண்டிருப்பதாக பினி கருதுகிறார். மனிதனால் ஒழுக்கரீதியில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்பது பினியின் வாதம். ஜொனத்தன் எட்வர்ட்ஸினதும், ஆகஸ்தீனுடையதுமான கருத்துக்களை இந்த விஷயத்தில் நிராகரிக்கும் பினி மனிதனால் அவனுக்குரிய அனைத்துக் கடமைகளையும் சரியாகச் செய்ய முடியும் என்று விளக்குகிறார். கடவுள் கட்டளையிடும் எதையும் செய்யக்கூடிய சுயாதீனமான சித்தத்தை மனிதன் கொண்டிருக்கிறான் என்கிறார் பினி. இதையெல்லாம் அவருடைய ‘வரையறுக்கப்பட்ட இறையியல்’ நூலில் பினி விளக்கியிருக்கிறார்.
பினி மூலபாவத்தை பெலேஜியனைப் போல அடியோடு நிராகரிப்பதால் மனிதன் பாவத்திற்கு அடிமையாக இருக்கவில்லை என்று அவரால் விளக்க முடிகின்றது. கடவுள் மனிதன் எதையாவது செய்யும்படி எதிர்பார்த்தால் அதை அவன் செய்யக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவனுக்கு சுயாதீன சித்தம் இருக்க வழியில்லை. அவனுக்கு சுயாதீன சித்தம் இல்லாவிட்டால் அவனால் எப்படி கடவுள் எதிர்பார்ப்பதை செய்ய முடியும் என்று பினி வாதிடுகிறார். ஒழுக்கத்தோடு வாழவேண்டிய கடமை மனிதனுக்கு இருக்குமானால் அப்படி வாழ்வதற்கான வல்லமையும் அவனுக்கு இருக்க வேண்டும் என்பது பினியின் வாதம். இதிலிருந்து பினி எந்தளவுக்கு பெலேஜியனோடு ஒத்துப்போகிறார் என்பதை உணர முடிகின்றது.
மறுபிறப்பு
மறுபிறப்பாகிய வேத போதனையைப் பற்றிய பினியின் விளக்கங்கள் வேதபோதனைகள் அனைத்திற்கும் முரணானவை. மனந்திரும்புதலையும் மறுபிறப்பையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக விளக்குகிறார் பினி. உண்மையில் மறுபிறப்பு முழுவதும் கடவுளுடைய செயலாகவும் அந்த செயலின் காரணமாக, அதன் இன்னொரு பக்கமாக நிகழும் மனந்திரும்புதல் நம்முடைய செயலாகவும் வேதம் விளக்குகிறது. ஆனால், பினியோ இவை இரண்டையும் பிரித்து மனந்திரும்புதல் முழுவதுமாக நம்முடைய செயலாகவும் மறுபிறப்போடு தொடர்பில்லாததுமாக விளக்குகிறார்.
மறுபிறப்பைப் பற்றி விளக்கும் பினி, ‘பரிசுத்த ஆவியே மனிதனுக்கு சத்தியத்தை உணர்த்துகிறபோதும் அந்த உணர்த்துதலுக்கும் மறுபிறப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கிறார். ஆனால், ‘மறுபிறப்பு நிகழுகிறபோது இந்த உணர்த்துதலும் நிகழ்கிறது’ என்கிறார். ‘இந்த சத்தியத்தை அறிகிற உணர்த்துதலே மறுபிறப்பை நம்மில் நிகழ வைக்கிறது’ என்கிறார். ‘சத்தியத்தைப் பெற்றுக்கொள்கிறவேளை மனிதன் அதை வெறுமனே பெற்றுக்கொள்கிறவனாக மட்டுமே இருக்கிறான்’ என்றும், மறுபிறப்பின்போது அவன் இரட்சிப்பிற்கான கிரியை நிகழ்வதில் தானும் ஒத்துழைக்கிறவனாக இருக்கிறான்’ என்றும் பினி விளக்குகிறார். மனிதனுடைய ஒத்துழைப்பில்லாமல் கடவுள் அவனுக்கு ஒருபோதும் இரட்சிப்பளிக்க முடியாது என்பது பினியின் வாதம். ‘மனிதன் மனம்மாற சித்தம் கொள்ளாவிட்டால் கடவுள் மட்டுமன்றி வேறெவருமே அவனை மாற்ற முடியாது’ என்கிறார் பினி.
மனிதனுடைய ‘தீர்மானத்தில்தான்’ மறுபிறப்பு தங்கியிருப்பதாக விளக்கும் பினியே சுவிசேஷக் கூட்டங்களில் இந்தத் ‘தீர்மானம்’ எடுக்கும் முறைக்குக் காரணமாக இருந்தார். பினியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த முறை பெரும்பாலான நவீன சுவிசேஷகர்களால் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருகிறது. மறுபிறப்பு ஒருவரில் நிகழ்வதற்கு முன்பு அவர் கர்த்தருக்காக இந்தத் ‘தீர்மானத்தை’ எடுக்க வேண்டும் என்றும் மறுபிறப்புக்கு இந்தத் தீர்மானம் எடுத்தல் தவிர்க்க முடியாத ஒரு நிபந்தனையாக இருக்கிறது என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இதன் மூலம் இவர்களுடைய இறையியல் போதனைகள் ஒருவரில் மறுபிறப்பு நிகழ்வதற்கு முன்பு அவர் விசுவாசத்தை அடைய வேண்டும் என்றிருக்கின்றது. அத்தோடு அந்த விசுவாசமே மறுபிறப்புக்கோ, மனந்திரும்புதலுக்கோ அவசியமான நிபந்தனையாகவும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் கிருபையின் போதனைகளில் இருந்து அடியோடு முரண்பட்டு நிற்கின்றது பினியைப் போன்றோரின் போதனைகள். எந்தளவுக்கு பெலேஜியனின் போதனை இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
லூயிஸ் ஸ்பெரி சேஃபர் (Lewis Sperry Chafer)

இந்தப் பெயர் உங்களில் பலருக்கு புதிதாக இருக்கலாம். அமெரிக்க கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது அநேகர் அறிந்து வைத்திருக்கும் பெயர். இன்றைக்கு டிஸ்பென்சேஷனலிசம் பெரும்பாலான திருச்சபைப் பிரிவுகளைப் பாதித்து அநேகருடைய இறையியல் நம்பிக்கைகளின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. டிஸ்பென்சேஷனலிசப் போதனை ஜோன் டார்பி, ஸ்கோஃபீல்ட் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததைவிட இன்றைக்கு பெரிதும் வளர்ந்து உருமாறியிருக்கின்றது. ஆரம்ப காலத்தில் டிஸ்பென்சேஷனலிசத்தை கடைசிக்காலப் போதனைகளோடு தொடர்புடையதாக மட்டுமே பெரும்பாலும் கருதி வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அது குடைவிரித்து இறையியலின் பல்வேறு போதனைகளை, இரட்சிப்பு உட்படப் பாதித்து வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது.
அடிப்படையிலேயே டிஸ்பென்சேஷனலிசம் ஒரு செயற்கைப் போதனை. அது செயற்கையாக, வேதத்தில் இருந்து புறப்படாமல் உருவாக்கப்பட்ட ஒன்று. இருந்தபோதும் ஆரம்பகாலத்தில் பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டில் இருந்து அடியோடு பிரித்துப் பார்த்து அதன் காரணமாக பழைய ஏற்பாட்டில் திருச்சபைக்கு இடமில்லை, புதிய ஏற்பாட்டிலேயே அதை அடையாளம் காணமுடியும் என்று அது விளக்கியது. இது இரட்சிப்புப் பற்றிய போதனையிலும் கைவைக்காமலில்லை. இருந்தபோதும் ஆரம்பத்தில் இருந்த டிஸ்பென்சேஷனலிசம் இன்று உருமாறியிருக்கிறது. டிஸ்பென்சேஷனலிசத்தில் ஏற்பட்ட ஆபத்தான உருமாற்றங்களே டிஸ்பென்சேஷலிஸ்டாக இருந்த ஜோன் மெக்கார்த்தரையும் அதற்கு எதிராகப் பிரசங்கிக்கவும், எழுதவும் வைத்தது. ஒரு விசுவாசியில் கிறிஸ்து இரட்சகராக இருந்து அவனுடைய ஆண்டவராக இல்லாமல் இருந்துவிட முடியும் என்ற ‘லோர்ட்சிப் முரண்பாடு’ (Lordship controversy) டிஸ்பென்சேஷனலிசத்தால் உருவான ஒரு போதனை. இது அமெரிக்க இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தை அதிகம் பாதித்து கிறிஸ்தவம் காணப்படும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ‘டிஸ்பென்சேஷனலிசத்தில் இன்று ஏற்பட்டு வருகின்ற உருமாற்றங்களால், முக்கியமாக இரட்சிப்பைப் பற்றிய விஷயத்தில் அதைப் பல கோணங்களில்லாத ஒற்றைப் போதனையாகக் கருதுவது மிகவும் ஆபத்தானது’ என்று அமெரிக்க இறையியல் அறிஞரான ஆச். ஸி. ஸ்பிரவுல் எச்சரிக்கிறார்.
லூயிஸ் ஸ்பெரி சேஃபர் அமெரிக்க டிஸ்பென்சேஷனலிசத்தின் முக்கிய தலைவர். அவர் டல்லஸ் இறையியல் கல்லூரியில் போதிக்கின்றவர். இவருடைய டிஸ்பென்சேஷனலிசப் போதனை அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலுமுள்ள இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்திலும் செல்வாக்கு செலுத்தி பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது.
டிஸ்பென்சேஷனலிசத்தை ஆராயும் ஆர். ஸி. ஸ்பிரவுல், அது பெரும்பாலும் கல்வினிசப் போதனைகளை பலவிதங்களில் பின்பற்றுகிறது என்றும் அவர்களை ‘நான்கு பாயின்ட் கல்வினிஸ்டுகள்’ என்று அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அதாவது டிஸ¢பென்சேஷனலிஸ்டுகளுக்கு இருக்கும் பிரச்சனையே ‘வரையறுக்கப்பட்ட கிருபாதாரப் பலி’ சம்பந்தப்பட்டதுதான். அதைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிருபையின் போதனைகளின் ஏனைய நான்கு சத்தியங்களோடும் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் பொதுவாகவே கிருபையின் போதனையின் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் அதை முறையாக விளங்கிக்கொள்ளவில்லை. கிருபையின் போதனைகளில் ஒன்றை விலக்கி வைத்துவிட்டு ஏனையவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்று மற்றதில் இருந்து பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கிறது என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. இவற்றை ஒன்றோடொன்று தொடர்பில்லாத, தனித்தனியாகக் காணப்படும் ஐந்து அம்சங்களாகக் கருத வழியில்லை.
லூயிஸ் சேஃபர் பலவிதங்களில் ஆகஸ்தீனுடையதும், கல்வினுடையதும் போதனைகளைச் சார்ந்தே தன்னுடைய போதனைகளை விளக்கியிருப்பதாக ஆர். ஸி. ஸ்பிரவுல் குறிப்பிடுகிறார். பெலேஜியனிசம், ஆர்மீனியனிசம் ஆகியவற்றில் இருந்து தன்னை விலக்கிக் காண்பிக்க சேஃபர் அதிகம் பிரயாசைப்படுகிறார். லூயிஸ் சேஃபரின் வரையறுக்கப்பட்ட இறையியல் நூல் அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
பாவம் ஆதாமைப் பாதித்து அவனை மாற்றியிருக்கிறது என்பதை லூயிஸ் சேஃபர் ஏற்றுக்கொள்ளுகிறார். மனிதர்கள் பாவத்தின் காரணமாக பிறப்பிலேயே ஆத்மீக ரீதியில் மரித்தவர்களாக இருப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் ஆவிக்குரிய எந்த நன்மையையும் செய்ய முடியாதவர்களாக இருப்பதாகவும் சேஃபர் விளக்குகிறார். அத்தோடு மனிதனுடைய சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்றும் விளக்குகிறார். இந்தவகையில் சேஃபர் ஆகஸ்தீனியன் போதனைகளை ஒத்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மறுபிறப்பு பற்றிய சேஃபரின் கருத்துக்களை ஆராயும்போதுதான் அவர் எந்தளவுக்கு கிருபையின் போதனைகளின் அடிப்படைக் கருத்துக்களில் இருந்து மாறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
இந்த இடத்தில் முதலில் சீர்திருத்தப் போதனைகள் மறுபிறப்பை விளக்கும் விதத்தைப் பார்ப்பது அவசியம். சீர்திருத்தப் போதனைகளைப் பொறுத்தவரையில் மறுபிறப்புக்குப் பிறகே ஒருவருக்கு விசுவாசம் கிடைக்கிறது. அதாவது, மறுபிறப்பு நிகழ்ந்தவுடன் அவரால் கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது. இந்த இடத்தில் மறுபிறப்பையும், விசுவாசத்தையும் கால அடிப்படையில் இடைவெளி கொடுத்து நாம் விளங்கிக்கொள்ளக்கூடாது. இதில் கால இடைவெளிக்கு இடமேயில்லை. இங்கே தத்துவரீதியில் எது முன்னால் வரவேண்டும் (in the order of logical priority) என்பதுதான் முக்கியம். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. அதேநேரம் இந்தப்படிமுறை வரிசையில் மறுபிறப்பே முதலில் வரவேண்டும். அதற்குப் பிறகு விசுவாசமேற்படுவதாக விளங்கிக்கொள்வது அவசியம். பேராசிரியர் ஜோன் மரே இதை அருமையாக தன்னுடைய நூலான Redemption: Accomplished and Appliedல் விளக்கியிருக்கிறார்.
சீர்திருத்தக் கோட்பாடுகளின் இரட்சிப்பின் படிமுறைகள் பற்றிய விளக்கத்தின்படி தத்துவரீதியில் விசுவாசம் மறுபிறப்பிலேயே தங்கியிருக்கிறது; மறுபிறப்பு விசுவாசத்தில் தங்கியிருக்கவில்லை. மறுபிறப்புக்கு இங்கு அளிக்கப்படும் முதன்மைத்துவம் தத்துவரீதியானதே தவிர கால அடிப்படையில் விளக்கப்படவில்லை. சீர்திருத்தப் போதனைகளின்படி விசுவாசத்திற்கு மறுபிறப்பு அவசியமான நிபந்தனையாக இருக்கிறது; மறுபிறப்புக்கு விசுவாசம் அடிப்படையானதாக இருக்கவில்லை, அப்படியிருக்கவும் வழியில்லை.
மறுபிறப்பு விசுவாசத்திற்கு முதலில் வருவதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனிதனுடைய பாவநிலையே காரணம். அதாவது மூலபாவத்தின் காரணமாக அவனுடைய சகல பகுதிகளும் பாவத்தால் பாதிக்கப்பட்டு அவன் ஆத்மீக நன்மைகள் எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதே காரணம். அந்த நிலையில் இருக்கும் மனிதன் எவ்வாறு கடவுளை ஆத்மீக ரீதியில் விசுவாசிக்க முடியும்? கடவுளை நாடும்படியாக அவனில் எந்த ஆத்மீக செயலுக்கும் இடமில்லை. ஆவிக்குரிய நன்மைகள் எதையும் செய்ய முடியாதபடி பாவம் அவனைப் பாதித்திருக்கிறது. மறுபிறப்புக்கு முன்பு விசுவாசம் வருகிறது என்று வாதத்துக்கு எடுத்துக்கொண்டால், பாவத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆத்மீக ரீதியில் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் மனிதன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது என்று சொல்வதில் போய் முடிந்துவிடும். அந்தப்படி பாவியாகிய மனிதன் கடவுளை விசுவாசிக்கக் கூடியவனாக இருப்பானெனில் அவன் ஏதோவொரு விதத்தில் மூல பாவத்தினால் முழுமையாக பாதிக்கப்படாதவனாக இருக்கிறான் என்பதில் போய் முடியும். இதைத்தான் ஆர்மீனியனிசமும், செமி-பெலேஜியன் போதனையும் சொல்லுகின்றன; அவை மனிதன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்படவில்லை என்கின்றன. ஆகஸ்தீனிய, கல்வினிசப் போதனைகள் இதற்கு மாறானவை.
இந்தவகையில் பார்க்கிறபோது லூயிஸ் சேஃபர் உண்மையிலேயே ஆகஸ்தீனிய, கல்வினிசப் போதனைகளைத்தான் பின்பற்றினாரா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு சேஃபரின் மறுபிறப்பு பற்றிய போதனை ‘இல்லை’ என்ற பதிலைத்தான் தரும்படிச் செய்கிறது. மறுபிறப்புக்கு விசுவாசம் அவசியம் என்று சேஃபர் விளக்கியிருக்கிறார். இதை சேஃபர் ‘நிபந்தனையின் அடிப்படையிலான மறுபிறப்பு’ என்று விளக்கியிருக்கிறார். அதாவது மறுபிறப்பு நிகழுவதற்கு விசுவாசம் ஒரு கட்டாய நிபந்தனையாக இருக்கிறது என்பது இதற்குப் பொருள். விசுவாசம் மறுபிறப்புக்கு அவசியமான நிபந்தனையாக இருந்தால் அது நிச்சயம் மறுபிறப்புக்கு முன்னால்தான் வரமுடியும். அதைத்தான் சேஃபர் நம்புகிறார்.
சீர்திருத்த போதனைகள் மறுபிறப்பை பரிசுத்த ஆவியானவர் எவருடைய துணையுமில்லாமல் தானே நிறைவேற்றுவதாகப் போதிக்கிறது. அதை லூயிஸ் சேஃபர் நிச்சயம் ஒத்துக்கொள்ளுகிறார். மறுபிறப்பில் எவருடைய தலையீடும் இல்லாமல் பரிசுத்த ஆவி அதை நிகழ்த்துவதாக அவர் கூறுகிறார். இது சீர்திருத்தப் போதனையைப் போலத் தெரிகிறதல்லவா? ஆனால் பிரச்சனை மறுபிறப்பை யார் நிகழ்த்துவது என்பதல்ல; மறுபிறப்பு யாரில் நிகழ்கின்றது என்பதுதான். இங்குதான் சேஃபரின் போதனையின் தவறைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏற்கனவே சேஃபர் மறுபிறப்புக்கு முன் விசுவாசம் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதன்படிப் பார்க்கிறபோது ஏற்கனவே கடவுளை விசுவாசிக்கிற ஒரு இருதயத்தில்தான் மறுபிறப்பு நிகழ்கிறது. அதைத்தான் சேஃபர் சொல்லுகிறார். இது சீர்திருத்தப் போதனைகளை ஒத்த போதனையல்ல. அதற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்து. சீர்திருத்த போதனை அவிசுவாசியாக இருக்கின்ற ஒருவனின் இருதயத்தில் எவருடைய தலையீடும் இல்லாமல் மறுபிறப்பு நிகழ்கிறதாகப் போதிக்கிறது. சீர்திருத்தப் போதனைகளைப் பொறுத்தவரையில் மறுபிறப்பு Monergistic. மரித்துப் போயிருக்கிற ஒருவனில் ஜீவனை விதைப்பவர் ஆவியானவர். பாவத்தில் மரித்திருக்கிறவனுக்கு ஆவிக்குரிய உயிரளிப்பதுதான் மறுபிறப்பு. அதில் அவரோடு எவரும் ஒத்துழைப்பதில்லை.
டிஸ்பென்சேஷனலிஸ்டான சேஃபரின் மறுபிறப்பு பற்றிய போதனைகள் சீர்திருத்த கிறிஸ்தவப் போதனைகளைவிட மிகவும் மாறுபாடுடையதாக இருப்பதைக் காண்கிறோம். சேஃபரின் விளக்கங்களில் நாம் கவனிக்கப் போகிற இன்னொரு விஷயம் என்னைப் பொறுத்தவரையில் ஆபத்தானது. மறுபிறப்பை பரிசுத்த ஆவி மனிதனில் நிகழ்த்துகிறபோது அவன் தெய்வீகத் தன்மையை அடைகிறான் என்று சேஃபர் கூறுகிறார். மறுபிறப்பு ஒருவரில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்று கூறுவது வேறு; அது தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது (Divine nature) என்று கூறுவது வேறு. மனிதன் நித்திய ஜீவனை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் அடைகிறான் என்கிறார் சேஃபர்.
சீர்திருத்த கிறிஸ்தவம் இதைப்பற்றி விளக்குகிறபோது, கிறிஸ்துவை விசுவாசிக்கும் மனிதன் அடிப்படையில் பெரிய மாற்றத்தையும் புது வாழ்க்கையையும் அடைகிறான் என்று விளக்குகிறது. அவன் தன்னில் புதிய தன்மையை (New nature) அடைகிறான் என்பதும் உண்மை. அது மறுரூபமாக்கப்பட்ட புதிய மானுடத் தன்மை; தெய்வீகத் தன்மையல்ல. கர்த்தரின் குணாதிசயங்களை வாழ்க்கை நடத்தைகளில் பிரதிபலிக்கும் அளவுக்கு புதிய சிருஷ்டியாக, புதிய மனிதனாக மனிதன் மாற்றப் பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இதை ‘தேவனுடைய சாயல்’ என்று எபேசியர் 4:24 விளக்குகிறது. அதே வசனம் அதைப் ‘புதிய மனிதனாக’ விளக்குகிறது. பேதுரு இதை ‘திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள்’ என்ற பதங்களின் மூலம் விளக்குகிறார் (2 பேதுரு 1:4). அதாவது ‘திவ்விய சுபாவம்’ என்று பேதுரு குறிப்பிடுவது திவ்விய சுபாவத்தின் குணநலன்களான அன்பு, கருணை, நீதி, பத்துக்கட்டளைகளுக்கேற்ற ஒழுக்கம், கர்த்தரோடு உறவாடும் தன்மை, அவருடைய பேச்சை வசனத்தின் மூலம் அறிந்து உணரக்கூடிய தன்மை போன்றவற்றைக் குறிக்கும். விசுவாசத்தை அடைவதன் மூலம் எவரும் தெய்வீகத்தை அடைவதில்லை. இதை எபிரெயர் நிருபத்தை எழுதியவர் எபிரெயர் 12:10ல், ‘அவருடைய பரிசுத்தத்தில் பங்கு கொள்கிறோம்’ என்று விளக்கியிருக்கிறார். அதாவது கர்த்தரைப் போல பரிசுத்தமாக வாழக்கூடியவர்களாக (பூரணப் பரிசுத்தத்தோடு அல்ல) நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருள். மனிதன் தெய்வீக நிலையை ஒருபோதும் அடைய முடியாது. பரலோகத்தை அடைகிறபோதுகூட அவன் தெய்வீகத்தை அடையப் போவதில்லை; முழுப் பரிசுத்தத்தைத்தான் அடையப் போகிறான்.
பரிசுத்த ஆவியானவர் பாவத்தில் இருக்கும் மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்கிறார். அப்படி அவர் மறுபிறப்பை அளிக்கிறபோது அதைப் பெறுகின்ற மனிதன் தன்னில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆசீர்வாதத்தையும், அதோடிணைந்து வருகின்ற பலன்களையும் அடைகிறான். இந்த இடத்தில் நாம் மறுபிறப்பு பரிசுத்த ஆவியை ஒருவருக்கு கொடுப்பதாக நினைத்துவிடக் கூடாது. மறுபிறப்பை அளிக்கும் பரிசுத்த ஆவியானவர் அதை அடைந்த மனிதனுக்குள் தானே வந்திருந்து வாசம் செய்ய ஆரம்பிக்கிறார். அதுவே உண்மை.
மறுபிறப்பைப் பற்றி ஜோன் கேர்ஸ்ட்னர் (John Gerstner) தன்னுடைய நூலில் (Wrongly Dividing the Word of Truth) விளக்கியிருக்கிறார். “மறுபிறப்பு பற்றிய இத்தகைய விளக்கங்களே இப்போது நம்மத்தியில் உலாவி வரும் ‘மாம்சக் கிறிஸ்தவன்’ என்ற போதனைக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.” கிறிஸ்தவனாக ஒருவர் இருந்து நீதிமானாக கிறிஸ்துவின் முன் இருந்தபோதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல் இருக்க முடியும் என்கிறது இந்தப் போதனை. இந்த ‘மாம்சக் கிறிஸ்தவன்’ (Carnal Christian) போதனையை பிரபல்யப்படுத்தி வருகிறவர்கள் கெம்பஸ் குருசேட் (Campus Crusade) நிறுவனத்தார். அதாவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தும் அவரில் கிறிஸ்து ஆண்டவராக இல்லாமல் வெறும் இரட்சகராக மட்டுமே இருக்க முடியும் என்றும், அவ்வாறு இருக்கும் கிறிஸ்தவன் ‘மாம்சக் கிறிஸ்தவன்’ என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். கிறிஸ்து அவரில் ஆண்டவராக வரும்போதே அவர் முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையை ஆவிக்குரிய விதத்தில் வாழ முடியும் என்பது அவர்களுடைய போதனை. அவ்வாறு மாறுவதற்கு அவர் பரிசுத்த ஆவியோடு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் போதனையில் பல தவறுகள் காணப்படுகின்றன.
முதலில், மறுபிறப்பை ஒருவர் அடைந்திருந்தும் அவரில் அது எந்தவிதமான அடிப்படை மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என்கிறது இந்தப் போதனை. இதன்படி ஒருவர் மறுபிறப்பை அடைந்திருந்தபோதும் தொடர்ந்தும் மாம்சம் அவரை பழையபடி ஆளுகிறது. அவர் புதிய மனிதனாக மாறி பரிசுத்த ஆவியும் அவரில் ஜீவிக்கிறார். இருந்தபோதும் பரிசுத்த ஆவியின் ஆளுகைக்குள் வரும்படி அந்த மனிதன் ஆவியானவரோடு ஒத்துழைக்கவில்லை. பழைய மனிதன் பரிசுத்த ஆவியானவரோடு ஒத்துழைக்கின்றபோதுதான் ஆவியில் நிரம்பிய வாழ்க்கையை அவரால் வாழ முடிகின்றது என்கிறது இந்தப் போதனை.
இரண்டாவதாக, மறுபிறப்பை ஒருவர் அடைந்திருக்கும் நிலையில் அவர் நீதிக்குரிய காரியங்களைச் செய்கிறபோது அதை அவர் தன்னுடைய மானுடத் தன்மையில் தானே செய்யாமல் அவரில் இருக்கும் பரிசுத்த ஆவியே அவற்றைச் செய்கிறார். இது அடுத்த தவறு.
இதைப்பற்றி விளக்கும் கேர்ஸ்ட்னர் சொல்லுகிறார், ‘மனந்திரும்பிய மனிதனில் இவர்களுடைய போதனைகளின்படி இரண்டு தன்மைகள் (Two natures) இருக்கின்றன – பழைய மனிதன், புதிய மனிதன். பழைய தன்மை முற்றிலும் கேடானதாக இந்த உலகத்துக்குரியதை மட்டுமே செய்கிறது. புதிய தன்மை தெய்வீகத் தன்மையாய் இருப்பதால் விலை மதிப்பில்லாத காரியங்களைச் செய்வதாய் இருக்கிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மானுடத் தன்மை எரிந்துபோகக்கூடிய அழிவுக்குரியதை செய்கிறது. அதேநேரம் கடவுள் அவனில் இருந்து அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைச் செய்கிறார்.’ மறுபிறப்படைந்த கிறிஸ்தவனில் இரண்டு தன்மைகள், கேடானதும், நல்லதும் தனித்தனியாக சம தன்மையோடு இருந்து கேட்டையும், நல்லதையும் செய்வதாகவும் சில வேளைகளில் ஒன்று மேலோங்கி மற்றது அடங்கியும் காணப்படும் என்பது இவர்களுடைய போதனை. இதெல்லாம் பாவத்தைப் பற்றியும், மறுபிறப்பைப் பற்றியும் சரியான போதனைகளைக் கொண்டிராததால் ஏற்பட்ட முரண்பாடான போதனைகளாக இருக்கின்றன.
வேதம் கிறிஸ்தவனில் இரண்டு தன்மைகள் இருப்பதாக விளக்கவில்லை. பழைய மனிதனே ஆவியானவரால் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, இப்போது கிறிஸ்தவன் புதிய மனிதனாக இருக்கிறான். இந்தப் புதிய மனிதன் மறுரூபமாக்கப்பட்டவனாக இருந்தபோதும் அவனில் பாவம் தொடர்ந்திருக்கிறது. இதையே பவுல் ரோமர் 7ல் விளக்குகிறார். புதிய மனிதனில் தொடர்ந்திருக்கும் பாவம் பரலோகம் போகிறபோதுதான் முற்றிலும் இல்லாமல் போகும். அதுவரை கிறிஸ்தவன் நற்கிரியைகளைச் செய்து பாவத்தை அழித்து வாழ வேண்டியவனாக இருக்கிறான். புதிய மனிதன், பழைய மனிதன் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தையும் அவற்றின் நோக்கத்தையும் ஆராய்ந்து பார்க்காது கிறிஸ்தவனுக்குள் இரண்டு நபர்கள் இருந்து இயங்குவது போல் விளக்குவது வேதத்தில் காணப்படாத போதனை.
சேஃபர் கடவுளின் கிருபை திட்ப உறுதியானது (Effectual Call), மனிதனில் தெய்வீக செயலை நிகழ்த்தக்கூடியது, ஒருவருமே அதை இறுதியில் நிராகரிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டபோதும் அந்தக் கிருபையை மனிதன் தன் சித்தத்தைப் பயன்படுத்தி சுயாதீனமாக ஏற்றுக்கொள்ளாமல் போனால் அது செயல்பட முடியாது என்று விளக்கினார். ஆவியின் துணையில்லாமல் மனிதன் திட்ப உறுதியான அழைப்பை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ கூடியவனாக இருக்கிறான் என்பதே இறுதியில் இவருடைய போதனையாக இருக்கிறது.
சீர்திருத்த கிறிஸ்தவம் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய மனிதனுடைய கடமையை (Responsibility of man) பெரிதும் வலியுறுத்துகிறது. அந்தக் கடமையைச் செய்யக்கூடிய விதத்தில் மறுபிறப்பு அவனுக்கு ஆத்மீக ஜீவனைக் கொடுப்பதனாலேயே அவனால் அந்தக் கடமையை ஆவியின் நிலையில் இருந்து சுயாதீனமாக நிறைவேற்ற முடிகிறது என்பது சீர்திருத்தப் போதனையின் விளக்கம். சேஃபரின் விளக்கம் இதற்கு முற்றிலும் முரணானது.

இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தின் பிரசித்தி பெற்ற டிஸ்பென்சேஷனலிஸ்டான பில்லி கிரேகம் (Billy Graham) இதைப் பற்றி தன்னுடைய நூலில் விளக்குகிறார். இந்த விஷயத்தில் பில்லி கிரெகம் ஓர் ஆர்மீனியன், அவர் பெலேஜியனல்ல. மனிதனின் இரட்சிப்புக்கு கடவுளின் துணையும் தேவை, மனிதனின் தீர்மானமும் அவசியம் என்பது அவரைப் போல எல்லா ஆர்மீனியன்களும் நம்பும் போதனை. பரிசுத்த ஆவி என்னதான் செய்து ஒருவரைக் கடவுளின் பக்கம் இழுக்கப் பார்த்தபோதும் மனிதனின் தனிப்பட்ட தீர்மானமே அவனுடைய மறுபிறப்புக்கு அவசியமாகிறது என்கிறார் பில்லி கிரெகம். இது கேட்பதற்கு பிரச்சனையில்லாததுபோல் தோன்றும். ஆனால் இதில் இருக்கிற பிரச்சனை என்ன தெரியுமா? கிரேகமின் போதனையின்படி, கிறிஸ்துவை விசுவாசிக்க மனிதனெடுக்கின்ற தீர்மானம் பரிசுத்த ஆவியினால் ஏற்படும் மறுபிறப்பால் வருவதல்ல. அதை அவன் பிறப்பில் இருந்தே கொண்டிருக்கிறான். கிரெகமைப் பொறுத்தவரையில் இந்தக் காரணத்தால்தான் அவனால் விசுவாசிக்க முடிகின்றது; விசுவாசத்தின் பின் மறுபிறப்பு அவனுக்குக் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் கிரேகம் சேஃபரின் வழிகளையே பின்பற்றுகிறவராக இருக்கிறார்.
இவரைப்போலவே ஹெரி அயன்சைட் (Harry Ironside), சார்ள்ஸ் ரைரி (Charles C. Ryrie), நோர்மன் கீஸ்லர் (Norman Geisler) போன்ற ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றுகிறவர்களும் மறுபிறப்பைப் பற்றிய விஷயங்களில் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். சேஃபர் முதல் இவர்கள் எல்லோருக்குமே சீர்திருத்தக் கோட்பாடு விளக்கும் மறுபிறப்புத் தத்துவத்திலும், திட்ப உறுதியான அழைப்பிலும் நம்பிக்கையில்லை. அவை மனிதனின் சுயாதீன சித்தத்தைப் பாதிக்கிறதாக, அவனை சுயமாக செயல்பட இடங்கொடுக்காமல் இருப்பதாக அவர்கள் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே இவர்கள் எல்லோரும் இரட்சிப்பின் படிமுறையின் படிகளையெல்லாம் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனுக்கேற்றவிதத்தில் விளக்கியிருக்கிறார்கள்.
சீர்திருத்த போதனைகள் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இல்லை. அவன் சுயாதீனமாகவே எல்லா நிலைகளிலும் இயங்குவதாக அது தெளிவாகப் போதிக்கிறது. பாவத்தில் விழுமுன் அவன் சுயாதீனமாக இயங்கினான். பாவத்தில் விழுந்த பின்னும் தன்பாவநிலைக்கேற்றபடி முழு சுயாதீனத்துடன்தான் பாவத்தை அவன் செய்கிறான். மறுபிறப்பு ஏற்பட்டவுடன் அவன் ஆவிக்குரிய விஷயங்களை சுயாதீனத்துடன்தான் செய்கிறான். சீர்திருத்த போதனைகள் மனிதன் சுயாதீனமாக இயங்கத் தடையாக இருக்கிறது என்பது அந்தப் போதனைகளை ஆராய்ந்து பார்க்காமல் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டுக்கதை.
ஆர்மீனியனிசம் மனிதனின் சுயாதீன சித்ததுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் கொடுத்து நடப்பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டாலும் அதன் போதனைகள் மனிதனுக்கு ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுப்பதில்லை; வேதத்தையும் பிரதிபலிக்கவில்லை. கர்த்தரின் இறையாண்மையையும் அது களங்கப்படுத்துகிறது.
இதுவரை நாம் மூல பாவத்தைப் பற்றிய தவறான போதனைகள் எந்தெந்த விதங்களில் வரலாற்றில் பெலேஜியனின் காலத்தில் இருந்து இன்று வரையும் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதையும் எத்தனைத் தவறான முரண்பாடான போதனைகளை உருவாக்கியுள்ளன என்பதையும் ஆராய்ந்திருக்கிறோம். மூல பாவத்தில் கைவைத்து மனிதனில் அதன் விளைவுகளைக் கொச்சைப்படுத்த ஆரம்பித்தபோதுதான் இறையியல் வல்லுனர்கள் அதோடு தொடர்புடைய இரட்சிப்பின் படிமுறைகளில் அடங்கியிருக்கும் கிருபைகளுக்கெல்லாம் தங்களுடைய எண்ணப்படி விளக்கங்கொடுக்க ஆரம்பித்து கர்த்தர் இறையாண்மையுடன் தருகின்ற இரட்சிப்புக்கும் செல்லாக் காசைப்போல விளக்கங் கொடுக்க ஆரம்பித்தார்கள். எவரும் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம், விரும்பாவிட்டால் தூக்கியெறிந்துவிடலாம் என்ற நிலைக்கு இரட்சிப்பை மனிதர் மனதில் நிலை நிறுத்தச் செய்தார்கள். மனிதனுடைய சித்தத்தைப் பற்றிய தவறான போதனைகள் எந்தளவுக்கு வேதபோதனைகளைக் கறைபடுத்திவிடலாம் என்பதையும் வரலாற்றில் நாம் பார்த்திருக்கும் உண்மைகள் விளக்குகின்றன.
திருச்சபை வரலாறு ஏன்?
அநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தெரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் விளக்குகின்றது என்பதை உணராதிருக்கிறார்கள். நாம் வணங்கும் தேவன் வரலாற்றின் தேவனாக இருப்பதால், உலக வரலாற்றிலிருந்து அவரைப் பிரித்துவிட முடியாது.
திருச்சபை வரலாற்று அறிவு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நிச்சயம் அவசியம். அவ்வறிவைப் பெற்றுக் கொள்பவன் கர்த்தரை மேலும் தன் வாழ்க்கையில் மகிமைப்படுத்தக் கூடியவனாக இருக்கிறான்.
திருச்சபை வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கீழ்வரும் ஆறு காரணங்களும் விளக்குகின்றன.
- கடவுள் வரலாற்றின் மூலம் செயல்படுகிறவராய் இருக்கிறார்.
வேதம் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்ற கடவுளுடைய வார்த்தையாய் இருக்கின்றது. எது சரி, எது பிழை என்று எடுத்துச்சொல்கின்ற பல உதாரணங்களை நாம் வேதத்தில் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி, கடவுள் எவ்வாறு எல்லாக் காரியங்களையும் தன் மகிமைக்காகவே நிறைவேற்றிக் கொள்கிறார் என்றும் வேதம் தெரிவிக்கின்றது. கர்த்தருடைய கிரியைகளே, அவருடைய பிள்ளைகளின் வரலாறாக வேதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். எந்தளவு திருச்சபை வரலாற்று அறிவில் நாம் வளருகிறோமோ, அந்தளவிற்கு கர்த்தருடைய அறிவிலும் நாம் வளருகிறவர்களாய் இருப்போம்.
- கிறிஸ்தவர்கள் எக்காலத்திலும் ஒரேவிதமான பிரச்சனைகளையே சந்திக்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.
இவ்வுலகம் தொடர்ந்து திருச்சபையை வெறுக்கிறது. திருச்சபையில் சமாதானம் நிலவும் காலங்களிலும், அதற்கு எதிர்ப்பு ஏற்படுகின்றபோதும், சாத்தான் தனது திட்டங்களின் மூலமாக நம்மைத் தவறான வழிக்குள் இட்டுச்செல்லப் பார்க்கிறான். தவறான போதனைகளும், ஒழுக்கக்குறைவும் கிறிஸ்தவ சபை வாழ்க்கைக்குப் புதிதானதல்ல. நாம் இக்காலங்களில் சந்திக்கும் அனைத்துக் கள்ளப்போதனைகளையும் திருச்சபை வரலாற்றிலும் காணமுடிகின்றது. வேதம் இந்தக் கள்ளப்போதனைகளைக் குறித்து நம்மைத் தொடர்ந்து எச்சரிப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, இக்கள்ளப்போதனைகள் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்தால், நாம் பெருந்தவறு செய்தவர்களாவோம். கள்ளப்போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள திருச்சபை வரலாறு பெரிதும் உதவுகிறது.
- வரலாற்றில் நமக்குரிய இடத்தைப்பற்றி நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
வேதம், நாமனைவரும் ‘புதிய உடன்படிக்கை’யின் காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது. அதாவது, கடவுள், கிறிஸ்துவோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நற்செய்தியை, உலகமெங்கும் இக்காலத்தில் பரப்பி வருகிறார். அதேவேளை, தேவன் எக்காலத்திலும் தனக்கென்று ஒரு மக்களைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் வேதம் வெளிப்படுத்துகிறது. இதை திருச்சபை வரலாறும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாம் மட்டும் கர்த்தரை அறிந்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஏன் அவரை அறிந்துகொள்வதில்லை? வேதத்தால் ஒருகாலத்தில், உருவாக்கப்பட்டு, எழுச்சிபெற்ற நாடுகளில் நற்செய்தி ஊழியம் வளராத நேரத்தில், ‘மூன்றாம் உலகநாடுகளில்’ மட்டும் அது பெருவளர்ச்சியடைவதின் காரணம் என்ன? திருச்சபை வரலாற்றின் அறிவைக்கொண்டே இக்கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்க முடியும்.
- திருச்சபை வரலாறு பற்றிய அறிவு, நமது விசுவாசத்தையும், வேதத்தின் போதனைகளையும், உறுதிப்படுத்துவதோடு, அவற்றிற்குப் பாதுகாப்பாகவும் இருக்கின்றது.
இயேசு கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசம் சரித்திரபூர்வமான விசுவாசம். நமது வேத சத்தியங்கள் காளான்களைப்போல் இவ்வுலகில் திடீரெனத் தோன்றியவையல்ல. நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்களையும், போதனைகளையும் பின்பற்றியதோடு அவற்றிற்காகத் தம் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ள அநேகரை நாம் திருச்சபை வரலாற்றில் சந்திக்கிறோம். நம் மூதாதையர்கள், தொடக்கமுதல் நாம் விசுவாசிக்கும் அதே விசுவாசத்தையும், போதனைகளையுமே கொண்டிருந்ததற்கு திருச்சபை வரலாறு சாட்சி பகருகின்றது. இன்று எம்மத்தியில் கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் பல சமயக்கிளைகளும் குழுக்களும் இப்பெருமையைப் பெற முடியாது. அதுமட்டுமல்லாமல், திருச்சபை வரலாறு நமது விசுவாசத்திற்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தவறான போதனைகளைப் பின்பற்றுபவர்களை சந்திக்கிறோம். வரலாற்றினால் சாட்சி பகரப்படும் நமது விசுவாசத்தைக் கொண்டு, அவர்கள் வேத அறிவிலும், விசுவாச வாழ்க்கையிலும், எங்கே தவறிழைக்கிறார்கள் என்று நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. திருச்சபை வரலாற்றின் அறிவையும், வேதத்தின் போதனைகளையும் பயன்படுத்தி, தவறான போதனைகளை நாம் இனங்கண்டு கொள்ள முடிவதோடு, அவற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவும் முடிகின்றது.
- திருச்சபை வரலாற்று அறிவு, நாம் நற்செய்தி ஊழியத்திலும், மிஷனரி ஊழியத்திலும் அறிவுபூர்வமான ஊக்கத்தோடு ஈடுபட உதவும்.
திருச்சபை வரலாறு, மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றவர்களின் அயராத, தளராத ஊழியங்களையும், சார்ள்ஸ் ஸ்பர்ஜன் போன்றோரின் பேரூழியங்களையும், வில்லியம் கேரி, டேவிட் பிரெய்நாட் போன்றோரின் ஊக்கத்தோடுகூடிய திருப்பணிகளையும் எடுத்துரைக்கின்றது. இவர்களனைவரும் திருச்சபை வரலாற்றிற்கு தம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதனால் உந்தப்பட்டு ஊழியத்திற்கும் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள்.
வில்லியம் கேரி, திருப்பணி ஊழியத்தில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி எழுதிய ‘விசாரணை’ என்ற எண்பத்தைந்து பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், திருச்சபையின் வரலாற்றிலே எவ்வாறு அநேகர் இவ்வூழியத்தில் ஈடுபட்டு கர்த்தரை மகிமைப்படுத்தினர் என்பதையும், தாம் எவ்வாறு அவர்களுடைய வரலாற்றின் மூலம் உந்தப்பட்டு ஊழியத்தில் ஈடுபட நேர்ந்தது என்பதையும் தெரிவிக்கிறார். திருச்சபை வரலாற்றிலே கேரி அவதானித்த, பலருடைய வாழ்க்கைச் சரிதம் அவருக்குப் பேருதவி புரிந்தது.
- திருச்சபை வரலாற்றில் நாம் பெறும் அறிவு, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நம்மைக் கர்த்தரிலேயே தங்கியிருக்கும்படி செய்யும்.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சார்ள்ஸ் பினி (Charles Finney) என்ற அமெரிக்க நற்செய்திப் பிரசங்கியார் நம் சந்ததிக்கு ஒரு பெருந்தவறான வழியைக் காட்டித்தந்தார். கர்த்தரிடம் இருந்து வரும் எல்லா ஆசீர்வாதங்களையும் மனிதன் தன் சுயமுயற்சியால் பெற்று அனுபவிக்க முடியும் என்று சார்ள்ஸ் பினி போதித்தார். இதற்கான சில வழி முறைகளையும் இவர் வகுத்து புத்தகமாக வெளியிட்டார். இன்று நாம் நற்செய்தி ஊழியத்தில் அவதானிக்கக்கூடிய வேதப்போதனைகளுக்குப் புறம்பான பல செயல்களுக்கு இம்மனிதனே வித்திட்டார். திருச்சபை வரலாற்றை சரியான முறையில் படித்து நாம் பெறக்கூடிய அறிவு, எல்லாவற்றிற்கும் நாம் கர்த்தரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற தாழ்மை உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். திருச்சபை வளர்ச்சி, மனிதனுடைய சுய முயற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உண்மையை வரலாறு தெளிவாகப் போதிக்கின்றது.
சில சமயங்களில் சில நூல்கள் – 1
நல்ல நூல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் எப்போதுமே தயங்கியதில்லை. ஒரு முக்கியமான நூலை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் வாசிக்க வேண்டிய அவசியத்தை இங்கு நான் குறிப்பாக விளக்க விரும்புகிறேன். இதுவரை வாசிப்பில் நீங்கள் அக்கறை காட்டியிருந்திராவிட்டால் உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொண்டு கொஞ்சம் வாசிப்பில் அக்கறை காட்டுங்கள். வாசிப்பே எல்லாமாகி விடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் வாசிப்பு இல்லாத வாழ்க்கையில் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழியில்லை என்பதும் எனக்குத் தெரியும். வாசிப்பு அவசியமில்லையென்றால் நம்மைப் படைத்தவர் நமக்கு வேதத்தைத் தந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியமில்லையென்றால் பவுல் சிறையில் நூல்களுக்காக அலைந்திருந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியம் மட்டுமல்ல வாசிக்க வேண்டியவற்றை வாசிப்பதும் அவசியம். அதற்காகத்தான் இந்த நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

என் நல்ல நண்பரான அலன் டன் என்ற அமெரிக்க போதகர் 2009ல் ‘Gospel Intimacy in a Godly Marriage’ என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். திருமண வாழ்க்கையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தபோதும் இன்னொரு நூல் அவசியமா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு இந்த நூலுக்கு மதிப்புரை தந்துள்ள மதிப்புக்குரிய ஜொயல் பீக்கி (Joel Beeke) என்ற போதகரும், நூலாசிரியரும் நல்ல பதிலளித்துள்ளார். அவருடைய பதில் இதுதான் – ‘இறையியல் போதனைகளின் அடிப்படையில் ஆழமாக மணவாழ்க்கையையும் அதில் இருக்க வேண்டிய நெருக்கத்தையும் விளக்குகின்ற அலன் டன்னின் நூல் நான் வாசித்திருக்கும் நூல்கள் அனைத்திலும் சிறந்ததென்றே கூறுவேன். உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்து தன்னுடைய சபையோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த இரகசியமான உறவை திருமணத்தின் மூலம் பவுல் விளக்குவதை, மணவாழக்கை பற்றி என் வாழ்நாளில் நான் வாசித்திருக்கும் ஒரு டஜன் நூல்களில் இந்த நூலே மிகவும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது . . . உங்களுடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களானால் உடனடியாக அலன் டன்னின் நூலை வாங்கி வாசியுங்கள். அத்தோடு ஒரு டஜன் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி மற்றவர்களுக்கும் கொடுங்கள்.’ சமீபத்தில் நான் நண்பர் அலன் டன்னை சந்தித்தபோது இதைவிடப் பெரிய மதிப்புரையை யாரும் ஒரு நூலுக்கு கொடுக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன். அதற்குக் காரணம் போதகரும், நூலாசியருமான ஜொயல் பீக்கி இந்த வார்த்தைகளை சாதாரணமாக எழுதவில்லை என்பதால்தான்.
இறையியலறிஞர் பீக்கியின் வார்த்தைகள் மெய்யானவை. அந்தளவுக்கு கிறிஸ்துவுக்குள்ளான சுவிசேஷ அன்பின் அடிப்படையில் அலன் டன் மணவாழ்க்கை பற்றி இந்நூலில் விளக்கி எழுதியுள்ளார். அதனால்தான் இந்நூலைத் தமிழ் வாசகர்கள் வாசித்துப் பயனடையும்படியாக தமிழில் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அதை வாங்கி வாசித்து அதிர்ந்து போய் மணவாழ்க்கையில் இவ்வளவு இருக்கின்றதா என்று கேட்டவர்கள் உண்டு.
தமிழில் மணவாழ்க்கை பற்றி விளக்கும் ஒரு சில நூல்கள் இருந்தபோதும் இந்தளவுக்கு வேதம் மணவாழ்க்கை பற்றி விளக்கும் சத்தியங்களை இறையியல்பூர்வமாக ஆழமாகவும், வசனபூர்வமாகத் தெளிவாக விளக்கியும், அதேநேரம் நடைமுறைக்குப் பயனளிக்கும் வகையிலும் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதனால்தான் இந்த நூல் தமிழில் மணவாழ்க்கை பற்றிய முக்கியமான கிறிஸ்தவ நூலாக இருக்கின்றது.
நம்முடைய இனத்தின் கலாச்சாரப் பாதிப்பால் கிறிஸ்தவர்கள் மத்தியில் திருமணமும், மணவாழ்க்கையும் இன்னும் விடுதலை பெறாமல் இருப்பதை உங்களில் அநேகர் உணர்வீர்கள். கிறிஸ்துவை விசுவாசித்த போதும் கிறிஸ்துவின் ஆளுமை மணவாழ்க்கையை ஆக்கிரமிக்காமல் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். வெறும் சடங்காக கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கும் மணவாழ்க்கை இருந்து வருகிறது. அதில் அன்பில்லை, ஜெபம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதெல்லாம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. கிறிஸ்தவர்கள் வேத போதனைகளின் அடிப்படையில் மணவாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை என்றுதான் சொல்ல வருகிறேன். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தவிர மணவாழ்க்கையைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது? கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்துகொள்வதால் மட்டும் பவுலின் போதனைகளின் அடிப்படையில் சிறப்பான மணவாழ்க்கை அமைந்துவிடுமா? அப்படி இருந்துவிட்டால் அலன் டன்னின் நூலுக்கும், ஜொயல் பீக்கி அது பற்றி சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கும் மதிப்பில்லாமலும் அவசியமில்லாமலும் போய்விடுமே.
அலன் டன்னின் இந்த நூலில் மணவாழ்க்கையைப் பற்றி அப்படி என்னதான் சிறப்பான விளக்கங்கள் இருக்கின்றன என்று கேட்பீர்கள். அதை நான் விளக்கத்தான் வேண்டும்.
அ. நூலாசிரியர் நேரடியாக மணவாழ்க்கை பற்றிய நடைமுறைப் பயன்பாட்டிற்குள் நுழைந்துவிடாமல் முதலில் மணவாழ்க்கை பற்றிய அடிப்படை வேத போதனைகளை ஆராய்கிறார்.
மணவாழ்க்கை என்றதுமே அதை எப்படி நடத்த வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட சில நூல்களையே நாம் தமிழில் காண்கிறோம். மணவாழ்க்கை நடைமுறை சம்பந்தப்பட்டதாக, சமுதாய உறவு பற்றியதாக இருந்தபோதும் அதைக் கடவுளோடு தொடர்புபடுத்தி விளக்கியெழுதப்பட்ட நூல்கள் தமிழில் இல்லை. தன்னுடைய நூல் எந்த அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நூலாசிரியர் அலன் டன் விளக்குகிறார் – ‘நான் மணவாழ்க்கையை வேதம் பெருமளவுக்கு விளக்கும் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய பெரும் போதனைகளின் பின்னணியிலேயே காண்கிறேன். படைப்பு, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையில் ஈடுபடப்போகிறவர்களைப் பற்றி நான் விளக்கிய பிறகுதான் அந்த மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான மிகப்பெரும் சவாலாகிய பாவத்தைப் பற்றி நான் விளக்கியிருக்கிறேன். நம்முடைய மணவாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் பாவத்தை சுவிசேஷம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதனால்தான் நாம் மணவாழ்வில் ஒருவருக்கொருவர் சுவிசேஷ அன்பை எப்படிக் காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.’
முதல் நான்கு அத்தியாயங்களில் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளுக்கும் மணவாழ்க்கைக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதி மிகவும் முக்கியமானது. மணவாழ்க்கை கடவுளின் சிந்தையில் உருவானது மட்டுமன்றி அதற்கு எந்தளவுக்கு கடவுள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை இந்தப் பகுதி புரிய வைக்கிறது. வாசகர்கள் நிச்சயம் இத்தகைய விளக்கங்களைத் தமிழில் வாசித்திருக்க மாட்டீர்கள். அந்தளவுக்கு அலன் டன் வேத விளக்கங்களை ஆராய்ந்து தந்திருக்கிறார்.
நூலாசிரியர் அலன் டன் கிறிஸ்தவ மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான பெரும் எதிரியாக பாவத்தைக் காண்கிறார். அது முற்றிலும் உண்மை. பாவமே அனைத்திற்கும் எதிரி. அந்தப் பாவத்தோடுதான் நாம் சாகும்வரை போராட வேண்டிய கடமை இருக்கிறது. நம்மில் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும் பாவம் மணவாழக்கையையும் பாதிக்கும். எல்லா விஷயங்களிலும் நமக்கு கிறிஸ்துவில் இருக்கும் சுவிசேஷ அன்பைக்கொண்டே பாவத்தை எதிர்க்கிறோம். அதேபோல் மணவாழ்க்கையிலும் சுவிசேஷ அன்பைக் கொண்டே பாவத்தை அழித்து நெருக்கத்தை அனுபவிக்க முடியுமென்று அலன் டன் விளக்குகிறார். வேத இறையியலின் அடிப்படையில் கிறிஸ்தவ மணவாழ்க்கையை ஆசிரியர் அணுகியிருக்கும் முறையே இந்நூலின் விசேஷ தன்மையாகும்.
ஆ. கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையை விளங்கிக்கொள்வதால் மட்டுமே நடைமுறையில் பக்திவிருத்தியை மணவாழ்க்கையில் அனுபவிக்க முடியும் என்று ஆசிரியர் நம்புகிறார்.
இதையும் அவரே பின்வருமாறு விளக்குகிறார், ‘கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளே நம்மைப் பற்றிய உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுகின்றன. கடவுளே எல்லாவற்றிற்கும் அடிப்படை அர்த்தத்தை அளிக்கிறார். ஆதியில் தேவன் இருந்தார் . . . என்ற ஆதியாகமத்தின் இந்த வசனங்கள் நமக்கு கடவுளின் படைப்பை அறிமுகப்படுத்துகின்றன. நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டோம். பின்பு நாம் பாவிகளானோம். பாவத்தால் நாம் மரணத்தை சம்பாதித்துக்கொண்டோம். இரட்சிப்பு கிருபையின் மூலமாக மட்டுமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.’
‘இந்த உண்மைகளின் அடிப்படையில் நம்மைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறவர்களாகி விடுவோம். இந்த உண்மைகள் நமக்கு வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை அளிக்கின்றன. இந்தக் கண்ணோட்டம் நாம் யார் என்பதையும், நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும், நம்மை சரிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ள துணை செய்கின்றது.’
ஆசிரியரின் விளக்கம் உண்மையானதுதான். ஒருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்றிருந்தால் அவர் தன் வாழ்க்கையில் அனைத்தையும் அதை முன்னிலைப்படுத்தியே செய்வார், மணவாழ்க்கை உட்பட. ஒருவர் தன் வாழ்க்கையில் கடவுளுக்கு முக்கியத்துவம் தந்தால் அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இயேசுவை முன்னிலைப்படுத்தி இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்குரியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயேசுவை ஆராதித்து, இயேசுவின் அன்பைப் பகிர்ந்துகொண்டு, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இயேசுவுக்காகவே பக்திவிருத்தியோடு வாழ்வார்கள். இந்நூல் இயேசுவின் சுவிசேஷ அன்பை ஆதாரமாகக் கொண்ட மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆலோசனை தருகிறது.
இ. நூலின் ஏனைய பயன்பாடுகள்
நூலில் 5ல் இருந்து 8 வரையிலான அதிகாரங்களில் சுவிசேஷ அன்பின் எதிரியைப் படம் பிடித்துக் காட்டி, சுவிசேஷ அன்பு எதிர்நோக்கும் சவால்களை விளக்கி, சுவிசேஷ அன்பை மணவாழ்க்கையில் எவ்வாறு பரிமாறிக்கொள்ளுவது என்று ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதியில் மனந்திரும்புதலுக்கும், மன்னிக்கும் இயல்புக்கும் அதிக முக்கியத்துவத்தை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். சுவிசேஷ அன்பிற்கு எதிரியான பாவத்தை எதிர்நோக்கி வெற்றிக்கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் மணவாழ்க்கையில் மனந்திரும்புதலுக்கும், மன்னிப்புக்கும் அவசியம் ஏற்படுகிறது. இந்த இயல்புகளை நாம் கிறிஸ்துவில் இரட்சிப்பின் அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுகிறோம். கிறிஸ்தவ மனவாழ்க்கையில் சுவிசேஷ அன்பை வெளிப்படுத்த இவை மிகவும் அவசியமானவை.
கடைசிப்பகுதியான 9லிருந்து 12 வரையிலான அதிகாரங்களில் ஆசிரியர் தாம்பத்திய உறவின் நெருக்கத்திற்கு எதிரான நான்கு சவால்களை இனங்காட்டி அவற்றை எதிர்கொண்டு வெற்றிகாணும் வழிகளை விளக்குகிறார். அதில் முதலாவது, கணவனின் தலைமை வகிக்கும் பொறுப்பு சந்திக்கும் சவால், இரண்டாவது, சுயநலமாகிய சவால், மூன்றாவது வார்த்தைப் பறிமாற்றம் சந்திக்கும் சவால், நான்காவது மரணமாகிய சவால். இதில் மணவாழ்வில் எந்தவிதத்தில் நாம் சுவிசேஷ அன்பை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார். நாம் பொதுவாகவே மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் இங்கே மணவாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருதயத்தின் கோளாறுகள் பேச்சின் மூலமாகவே வெளிப்படுகின்றன என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் விளக்கியிருப்பது எத்தனை உண்மை. சிந்தித்து, கவனத்தோடு சுவிசேஷ அன்பைப் பேச்சில் காட்டாமல் எவருடைய மணவாழ்க்கையிலும் பக்திவிருத்தியான நெருக்கத்தைக் காணமுடியாது என்கிறார் ஆசிரியர். சுவிசேஷ அன்பின் அடிப்படையிலான வார்த்தைகளை மணவாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்று அலன் டன் கூறும் ஆலோசனைகளை அவர் உண்மையிலேயே தன்னுடைய மணவாழ்க்கையில் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த முறையில் நூலை எழுதியிருக்க முடியும். ஆசிரியரும் அவருடைய மனைவியாரும் சுவிசேஷ அன்பிலான மணவாழ்க்கைக்கு அருமையான உதாரணமாக அவருடைய சபையில் இருக்கிறார்கள்.
இதற்கு மேலும் நான் தொடர்ந்து இந்நூல் பற்றி விளக்கினால் நீங்கள் நூலை வாசிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை உங்கள் இருதயத்தில் நான் ஏற்படுத்தியிருந்தால் அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கும். இந்நூல் இதுவரை தமிழகத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. திருமறைத்தீபம் பத்திரிகையில் காணப்படும் முகவரிகளோடோ அல்லது இந்தத் தளத்தில் காணப்படும் இந்திய முகவரியோடோ தொடர்புகொண்டு இந்த நூலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். வாங்கி வாசியுங்கள். உங்கள் மணவாழ்க்கைக்கு இது துணை செய்யும். வாங்கி புதுமணத் தம்பதிகளுக்கு கொடுங்கள். போதகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு திருமண ஆலோசனை வழங்க இதைப் பயன்படுத்தலாம். சபைகள் நிச்சயம் தங்களுடைய மக்களுக்கு இதை அறிமுகப்படுத்துவது அவசியம். இதை வாங்கி வாசித்துப் பயனடைந்தால் நிச்சயம் ஒரு வரி எழுதி உங்கள் கருத்தைத் தெரிவிக்க மறக்காதீர்கள். நன்றி.
கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்
(புதிய நூலான ‘கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்’ வெளிவந்திருக்கின்றது. அதன் அவசியத்தையும் பயன்பாட்டையும் இந்த ஆக்கத்தில் வலியுறுத்தி விளக்கியிருக்கிறோம். இது நூலில் அறிமுகவுரையாக வந்திருக்கின்றது. – ஆசிரியர்.)
வினா விடைப் போதனை தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பெரும்பாலும் புதியது. ஆரம்ப கால மிஷனரிகளான வில்லியம் கேரி, சீகன்பால்கு போன்றோர் கீழைத்தேய நாடுகளில் அதை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும் திருச்சபைகளில் அவை நிலைகொள்ளவில்லை. இன்றைக்கு வாக்குத்தத்த வசனங்களும், தியானச் செய்திகளும் மட்டுமே திருச்சபைகளை அலங்கரித்து சத்தான போதனைகள் ஆத்துமாக்களை அடைய முடியாதபடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது திருச்சபையின் ஆத்தும வளர்ச்சிக்கு அறிகுறியாகாது. பல வருடங்களுக்கு முன்பாக சிறுவர்களுக்கான சிறிய வினா விடைப் போதனையை வெளியிட்டிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. பல சபைகள் அதை ஞாயிறு பாடசாலைகளிலும், கிறிஸ்தவர்கள் குடும்ப ஆராதனையிலும் பயன்படுத்திப் பலனடைந்தார்கள். அது தொடர்ந்தும் அச்சில் இருந்து வருகின்றது.
வினா விடைப் போதனை முறையை கர்த்தரின் திருச்சபை வரலாற்றில் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் தன்னுடைய படைப்புக்கள் அனைத்திலும் தான் சிறுவர்களுக்காக எழுதிய வினா விடைப் போதனையையே மிகவும் முக்கியமானதாகக் கருதியுள்ளார். தான் எழுதிய அனைத்து நூல்களும் அழிந்துபோனாலும் வினா விடைப் போதனை பாதுகாக்கப்பட வேண்டுமென்று அவர் கருதினார். வினா விடைப் போதனை என்றவுடனேயே அது சிறுவர்களுக்கானது என்று எண்ணிவிடக்கூடாது. அந்த எண்ணமே நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் வினா விடைப் போதனைகள் இருக்கின்றன. பெரியவர்களுக்கான அருமையான வினா விடைப் போதனை நூல்களை வரலாறு நமக்குத் தந்திருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி கூடி திருச்சபையின் பாதுகாப்பிற்காக விசுவாச அறிக்கையைப் படைத்தனர். இதேபோன்று பாப்திஸ்துகளும் 1689 விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் குறுகிய வினா விடைப் போதனை, விரிவான வினா விடைப் போதனை ஆகியவற்றை வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி படைத்தது. விசுவாச அறிக்கை வேத சத்தியங்களை பல்வேறு தலைப்புகளில் தொகுத்து விளக்கமாக அளிக்க, அதே வேத சத்தியங்களை வினா விடை முறையில் தொகுத்து சுருக்கமாக அளித்தது வினா விடைப் போதனை. இந்த வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனையைப் பின்பற்றி ஒரு சில அவசியமான மாற்றங்களுடன் பாப்திஸ்துகள் சில வினா விடைப் போதனைகளை வெளியிட்டிருந்தனர். அவற்றில் முக்கியமானது பென்ஜமின் கீச் வெளியிட்ட (1693) வினா விடைப் போதனை. விசுவாச அறிக்கை மற்றும் வினா விடைப் போதனைகளின் அவசியத்தை வரலாற்றில் சீர்திருத்தவாத காலமும், பியூரிட்டன் காலப்பகுதியும் அதிகம் உணர்ந்திருந்தது. அதற்குப் பின்னைய காலப்பகுதியில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரும் அவற்றைத் திருச்சபைகளில் பயன்படுத்தியுள்ளனர். ரிச்சட் பெக்ஸ்டர் என்ற போதகர் தான் பணிபுரிந்த ஊரான கிடர்மின்ஸ்டரின் மக்கள் அனைவருக்கும் வினா விடைப் போதனையளித்து கர்த்தரை அறிந்துகொள்ளும்படிச் செய்துள்ளார். இது வரலாறு கூறும் உண்மை.
வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனையைப் பின்பற்றி காலத்துக்கு அவசியமான ஒரு சில மேலதிக வினா விடைகளுடனும், பாப்திஸ்து இறையியலைப் பிரதிபலிக்கும் முறையிலும் இந்த வினா விடைப் போதனையை திருச்சபைகளுக்கு உதவுமுகமாக சிம்ப்சன் வெளியீட்டாளர்கள் வெளியிட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்க வினா விடைப் போதனையை மட்டுமல்லாது விரிவான வினா விடைப் போதனையையும் பின்பற்றி மிகக் கவனத்துடன் இது தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்கால இறையியல் குழப்பங்களுக்கு தகுந்த பதிலளிக்கு முகமாக மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ள வினா விடைகள் அமைகின்றன.
இறையியல் அறிஞர்களான தற்கால சீர்திருத்த பாப்திஸ்து போதகர்களான கிரெக் நிக்கல்ஸ், சாமுவேல் வோல்டிரன் போன்றோர் இதைத் தயாரிப்பதற்கு நல்லாலோசனைகளைத் தந்துள்ளனர். இதன் அட்டவணையை போதகர் கிரெக் நிக்கல்ஸ் தயாரித்துள்ளார். வினா விடைகளுக்கான வேத வசனங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனைகளைப் பின்பற்றியே இதிலும் காணப்படுகின்றன. காலத்தின் அவசியம் கருதி ஒருசில புதிய வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சிம்ப்சன் வெளியீட்டின் வினா விடைப் போதனையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அவர்களுடைய அனுமதியுடன் அப்படியே இதை நாம் தமிழில் வெளியிட்டிருக்கிறோம். இதை வெளியிட அனுமதி தந்த அவர்களுக்கு எங்களுடைய நன்றிகள் உரித்தானவை.
திருச்சபை சத்தியத்துக்கு தூணாகவும், ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதி நினைவுறுத்தினார். கிறிஸ்தவம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. சத்தியத்தின் அடிப்படையிலேயே நம்முடைய கிறிஸ்தவ அனுபவங்களும் அமைய வேண்டும். அதுவே கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் கிறிஸ்தவமாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் சத்தியத்தில் மேலான அறிவைப் பெற்று தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்துவின் சந்தோஷத்தை சகலத்திலும் அனுபவிக்க வேண்டும். அதற்கு விசுவாச அறிக்கையைப் போல வினா விடைப் போதனையும் நிச்சயம் உதவும். இந்த வினா விடைப் போதனையை சபைகள் வேதப் பிரசங்கங்களிலும், வேத பாட வகுப்புகளிலும், ஞாயிறு பாடசாலைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். போதகர்களுக்கும், வேத பாட, ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கும் வேத சத்தியங்களில் நல்லறிவு பெற்றுக்கொள்ள இது அவசியம் துணைபோகும்.
சபைகளில் சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும் வினா விடைப் போதனைகளைக் கற்றுக்கொடுப்பதைப் போல மேலானது ஒன்றுமில்லை. அவர்களை சத்தியத்தில் வளர்க்க அதைவிட மேலான வழி எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் வரலாற்றில் திருச்சபை வினா விடைப் போதனைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்திருக்கிறது. இளம் வயதில் சத்தியத்தை வினா விடைப் போதனை மூலம் கற்று வளர்கிறவர்கள் திருச்சபைகளை அலங்கரிக்கும்போது அச்சபைகள் உயர்வதற்கே வாய்ப்பிருக்கின்றது. வினா விடைப் போதனை வேத சத்தியங்களை அள்ளி அள்ளி வழங்கி நம்மை வேதத்தால் நிரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதை இதை வாசிக்கும்போதே உணர்வீர்கள்.
இந்த வினா விடைக்கான அட்டவணையைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டியது அவசியம். இதிலுள்ள 115 வினா விடைகளையும் இந்த அட்டவணை வரையறுக்கப்பட்ட இறையியல் போதனைகளின் அடிப்படையில் மூன்று அலகுகளாகப் பிரித்து எந்தெந்த சத்தியங்களின் கீழ் படிமுறையாக அவை வருகின்றன என்பதை முறையாகத் தொகுத்து வழங்குகிறது. முதலாவது வினா விடை மனிதனின் தோற்றத்திற்கும், வாழ்க்கைக்குமான குறிக்கோளை விளக்குகிறது. இந்த வினா விடை, கர்த்தரின் மகிமைக்காகவே மனிதன் உருவாக்கப்பட்டிருப்பதை விளக்கி கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையில் முழு வேதபோதனைகளையும் ஏனைய வினா விடைகளின் மூலம் அணுகுவதைக் கவனிக்கிறோம். இதுவே சீர்திருத்த கிறிஸ்தவத்தின் விசேஷ தன்மை.
ஏனைய 114 வினா விடைகளும் மூன்று அலகுகளுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. முதலாவது அலகு கர்த்தருடைய வார்த்தையின் தன்மையைப் பற்றியது. ஆவியினால் அருளப்பட்டிருக்கும் வேதாகமமே கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் அத்திவாரமாக இருக்கின்றது. அது பற்றிய மூன்று முக்கிய அம்சங்களை – அதன் போதுமான தன்மை, நம்பகத் தன்மை, உள்ளடக்கம் ஆகியவற்றை 2ல் இருந்து 4வரையிலான வினா விடைகள் இந்த முதலாம் அலகில் விளக்குகின்றன. இரண்டாம் அலகு, கடவுளைப் பற்றியது. அவருடைய நித்திய மகிமையையும் அற்புத செயல்களையும் அது விளக்குகிறது. 5ல் இருந்து 41வரையுள்ள வினா விடைகள் கடவுளைப் பற்றிய இந்த அரும்பெரும் உண்மைகளை விளக்குகின்றன. இந்த அலகில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன – கடவுளைப் பற்றிய போதனை, கடவுளின் படைப்பைப் பற்றிய போதனை, பாவத்தில் இருந்து மீட்பு ஆகிய போதனையே அவை. இந்த அலகில் காணப்படும் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் கீழ் மேலும் மூன்று பிரிவுகள் உள்ளன. அந்தளவுக்கு கடவுளின் செயல்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் இப்பகுதியில் வினா விடைகள் மூலம் தரப்பட்டுள்ளன.
இந்த அட்டவணையில் இதுவரை நாம் கவனித்துள்ள இரண்டு அலகுகளிலும் முக்கியமான உண்மையொன்றை நாம் சந்திக்கிறோம். விசுவாச அறிக்கையைப் போலவே இந்த வினா விடையும் முதலில் கடவுளின் வேதத்தோடு ஆரம்பிக்கிறது. ஏனெனில், வேதமே (அது மட்டுமே) நமக்கு கடவுளைப் பற்றிப் போதிக்கும் ஒரே வெளிப்பாடாக இருக்கின்றது. அதை விளக்கிய பிறகு கடவுளைப் பற்றி வேதம் தருகின்ற உண்மைகளை வினா விடை விளக்குகிறது.
வினா விடையின் மூன்றாம் அலகு மனிதன் அறிந்து, பின்பற்றும்படியாக கடவுள் வெளிப்படுத்தியுள்ள அவருடைய சித்தத்தை விளக்குகிறது. அவருடைய சித்தத்தின் சுருக்கமான மொத்த வடிவமாக பத்துக்கட்டளைகள் அமைந்திருக்கின்றன. அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவனுடைய தலையாய கடமையாக இருக்கின்றது. இந்த அலகு 42ல் இருந்து 115 வரையுள்ள வினா விடைகளை உள்ளடக்கி அவற்றை விளக்குகின்றன. இந்த அலகில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. முதலாவது, கடவுளின் ஒழுக்க நியதிச் சட்டங்களான பத்துக்கட்டளைகள்; இரண்டாவது, கடவுளின் சுவிசேஷம். இவற்றின் மூலம் கிறிஸ்தவனின் கடமைகள் அனைத்தும் வலியுறுத்தி விளக்கப்படுகின்றன. வினா விடைக்கான இந்த அட்டவணை ம¤கவும் அவசியமானதாக, வினா விடைக்கான தெளிவான வழிகாட்டியாக இருந்து உதவுகின்றது.
இந்த வினா விடைப் போதனை நூலின் சிறப்பம்சங்களை விளக்காமலிருக்க முடியாது.
இது வரையறுக்கப்பட்ட இறையியல் போதனையளிக்கும் ஒரு சுருக்கக் கையேடாக இருக்கிறது. வேதத்தின் அத்தனை முக்கிய சத்தியங்களையும் வினா விடை முறையில் இது தொகுத்துத் தருகிறது. வேதம் போதிக்கும் எந்த சத்தியத்தைப் பற்றியும் உடனடியாக அறிந்துகொள்ள வேண்டுமானால் இதைப் புரட்டி அது சம்பந்தமான வினா விடை மூலம் தெளிவான, சுருக்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த முறையில் அநாதி காலத்தில் கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கையில் இருந்து இறுதிக் காலத்தில் கிறிஸ்துவினதும் சபையினதும் மகிமைத்துவம் வரையிலும் உள்ள அத்தனைப் போதனைகளையும் இது சுருக்கமாக அளிக்கின்றது. ஒரு போதகனோ, வேத பாடமெடுக்கும் அல்லது ஞாயிறு பாடசாலை ஆசிரியரொருவரோ தான் போதிக்கும் விஷயங்கள் வேதத்தின்படி அமையுமாறு பார்த்துக்கொள்ள இந்த வினா விடை நிச்சயம் உதவும். இதிலுள்ள விஷயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 1689 விசுவாச அறிக்கை இருக்கவே இருக்கிறது.
- இன்னொரு முக்கிய அம்சமாக இந்த வினா விடைப் போதனை முழுவதும் அந்தப் போதனைகளுக்கான வேத ஆதாரங்கள் பெருமளவில் தரப்பட்டிருக்கின்றன. வேத வசனங்கள் நிரம்பி வழியும் வினா விடை நூலாக இது இருக்கிறது.
- இது வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்க வினா விடை மட்டுமல்லாது விரிவான வினா விடையையும் பின்பற்றி வரையப்பட்டிருப்பதால் இந்த ஒரே வினா விடை நூலின் மூலம் அதிக பயன்களை நாம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இந்த வினா விடைப் போதனையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நலன்கள்:
சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் பெரியவர்கள் வரை கர்த்தரில் இருந்து ஆரம்பித்து இறுதிக்கால நிகழ்ச்சிவரையுள்ள அத்தனை அதிமுக்கியமான வேத சத்தியங்களையும் இதன் மூலம் சுருக்கமாக, படிமுறையாக, தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியும். குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் குருட்டுக் கண்களை இது நிச்சயம் திறந்து வைக்கும்.
இவற்றைக் கற்று வளரும் சிறுவர்களும், வாலிபர்களும், பெரியவர்களும் திருச்சபையில் சத்தியமறிந்த ஆத்மீக வளர்ச்சியை நிச்சயம் அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
திருச்சபையின் வளர்ச்சிக்கும், சத்திய விரோதப் போக்கை எதிர்த்து நிற்கப் பாதுகாப்புக் கேடயமாகவும் இந்த வினா விடைப் போதனை உதவும். அந்த வகையில் இது விசுவாச அறிக்கையைப் போன்றது.
இந்தளவுக்கு வினா விடைப் போதனையின் அவசியத்தை நான் விளக்கியிருந்தபோதும் அது இல்லாமல் கிறிஸ்தவம் இருக்க முடியாது என்ற ஆணவப் போக்கோடு அதைச் செய்யவில்லை. வினா விடைப் போதனைகள் இருப்பதையே அறியாமல் திருச்சபைகள் நம்மினத்தில் இருந்து வந்திருக்கின்றன. கர்த்தரின் கிருபையால் வேதத்தைப் பயன்படுத்தி தங்களைத் தவறான வழிகளில் இருந்து சில சபைகள் எப்படியோ பாதுகாத்துக்கொள்ளவும் செய்திருக்கின்றன. இருந்தபோதும் தந்திரமாக பிசாசு திருச்சபையை அழிப்பதற்கு நவீன முயற்சிகளையெல்லாம் செய்து வரும் இக்காலத்தில் எந்தத் திருச்சபையும், கிறிஸ்தவனும் அசட்டையாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்த வழியில்லை. சபைகளும், கிறிஸ்தவர்களும் சத்தியத்தில் நல்லறிவு பெறவும், தங்களைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நல்வளர்ச்சி அடையவும் இந்த வினா விடைப் போதனை நிச்சயம் தமிழ் திருச்சபைகளுக்கு பெருந்துணை போகும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
வரலாற்றில் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் பெருங்காரியங்களைத் திருச்சபையில் செய்த நம் தேவன் நமக்கு வழங்கியிருக்கும் அருஞ்சாதனம் இந்த வினா விடை நூல். தமிழில் இது வெளிவருகின்ற பெருவாய்ப்பு நமக்குக் கிடைக்கும்படி கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார். இனி திருச்சபைகளையும், கிறிஸ்தவர்களின் வாழ்க்கையையும் இது அலங்கரித்து கிறிஸ்துவுக்கு மகிமை சேர்க்குமானால் அதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக இருக்க முடியும்.
75வது இதழ் வாசகர்கள் சொன்னவை!
திருமறைத்தீபம் பத்திரிக்கை 75 வது இதழாக வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் தடையில்லாமல் வெளிவர உதவிசெய்து இப்பிரதிகள் எனக்கும் கிடைக்க உதவிய ஆண்டவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி ஏறெடுக்கிறேன்! இவ்வூழியம் என் வாழ்க்கையில் கொண்டு வந்த நன்மைகளை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது!
எத்தனை எத்தனை சத்தியங்கள், எவ்வளவு பெரிய வெளிப்பாடுகள்! கற்றுக்கொண்ட காரியங்கள் எத்தனையோ!! அவைகள் அத்தனையையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவனை போன்ற ஓர் உணர்வு எனக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.
‘திருமறைத்தீபம்’ வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த நாட்கள் அந்நாட்கள். பத்திரிக்கை கையில் கிடைத்த நிமிடத்திலிருந்து, அதை வாசித்து முடித்துவிட்ட பிறகே மற்ற வேலையைப் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு பிரதியும் உள்ளத்தில் அனல்மூட்டிக்கொண்டிருந்தது. பாடப் புத்தகத்தோடு சேர்த்து திருமறைத்தீபத்தையும் எடுத்துச் சென்று பள்ளி நாட்களை கழித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் ரயில் பயணத்தில் படிப்பதற்கு ஒவ்வொரு பிரதிகளையும் கொண்டுசெல்வது என் வழக்கமாகவே இருந்திருக்கிறது. அது என் சக தோழர்களுக்கும் இந்த பழக்கத்தை உண்டாக்கியது. இப்படியாக இன்றுவரைக்கும் என் ஆத்மீகப் பசிக்கு உணவளிக்கும் வல்லமையுள்ளதாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றது இத்தீபம்!
இன்றும் என் அன்றாட வேதவாசிப்பின் போதெழும் சந்தேகத்திற்கெல்லாம், பத்திரிக்கையின் உதவியை நான் நாடிக்கொண்டிருக்கிறேன். மாதத்தில் இரண்டொரு முறையாவது பழைய ஆக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. அது எந்த ஆக்கத்தில் எந்த தலைப்பின் கீழ் வந்தது என்பதனை தேடித் தேடி அலுத்துப்போய், தற்போது எந்த ஆக்கம் எந்த ஆண்டு வந்தது என்பதற்கான அட்டவணையை தயாரித்து வைத்து சுலபமாக புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு அநேக சத்தியங்களை நான் விளங்கிக்கொள்ள திருமறைத்தீபம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது.
ஆரம்ப நாட்களில் காலாண்டுக்கு ஒருமுறைதான் வெளிவருகிறது என்பதை மறந்து, நான் அடிக்கடி தபால் நிலையம் முன் நின்ற அனுபவங்களும் உண்டு. இப்பத்திரிக்கையின் வாயிலாகவே எனது தகப்பனாருக்கும், தபால்காரருக்கும் நட்பு ஏற்பட்டு அவரது மகனும் நானும் இன்று நண்பர்களாக பழகுமளவிற்கு வளர்ந்து, அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட அந்த உறவு தொடர்ந்திருப்பது நினைத்துப்பார்க்க கூடிய ஆச்சரியமான ஒன்று!
எவ்வளவு ஆக்கங்கள்! எத்தனை விதமான தலைப்புகள்!! அதே நேரத்தில் பள்ளி பருவங்களில் இருக்கும்போது பத்திரிக்கையில் வந்த சில ஆக்கங்களும், வாசகங்களும் புரிந்து கொள்ள முடியாததாயிருந்தாலும் (பின்நவினத்துவம், கல்வினிசம், பெலேஜியனிசம், ஆர்மீனியனிசம்) அவைகள் பின்னாளில் நான் கல்லூரியில் தத்துவம் பயிலும்போது அவைகள் விளங்கிக்கொள்ள கர்த்தர் உதவிசெய்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
முதன் முதலில் என் வாழ்க்கையில் ஜோடனையில்லாத நடைமுறைப் போதனைகளை அறிமுகப்படுத்தி வைத்ததே இப்பத்திரிக்கை தான். பல ஆக்கங்களை படிக்கும்போதே கண்களில் கண்ணீர் துளிகளை வரவைக்கும் பல வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இன்றும் என் காதில் ஓயாமல் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிற வாசகங்களும், தலைப்புகளும் எத்தனையோ எத்தனை!! சில செய்திகளை மறந்ததுபோல் தோன்ற, மறந்துவிட கூடாது என்பதற்காக, நடுஇரவில் எழுந்து அந்த ஆக்கங்களை வாசித்து ஜெபம் செய்யும் அளவிற்கு திருமறைத்தீபம் சத்தியங்களை சுமந்து வந்துள்ளது.
ஜோன் நியூட்டன், வில்லியம் கேரி போன்றவர்களின் வாழ்க்கை சரிதங்கள், வில்லியம் பிளமரின் “ஆத்மீக பின்வாங்குதல்”, ஆல்பர்ட் மார்டினின் “நீ ஏன் மனம்திரும்ப மறுக்கிறாய்’’ மற்றும் “பிரியாவிடைப் பிரசங்கம்” தங்களுடைய “குடும்ப ஆராதனை” போன்றவைகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அசைபோட வைப்பவையாகும். அதில் முக்கியமாக பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம், அதில் பத்துக்கட்டளைகளின் அவசியம், முக்கியமாக ஓய்வு நாளின் முக்கியத்துவம் போன்ற ‘என்றுமே கைவிட்டுவிடக் கூடாத வேதத்தின் இன்றியமையாத அடிப்படை சத்தியங்களை’ (Non Negotiable Essential Doctrines of the Bible) குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்தியாவிற்கு வந்து சேவைசெய்த ஒருசிலரைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த எனக்கு அநேக பரிசுத்தவான்களின் அறிமுகங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தன. சார்லஸ் பினி, ஜான் வெஸ்லி, மூடி, பால் யொங்கி சோ போன்ற பிரபலமானவர்களின் தவறான போதனைகளை சுட்டிக்காட்டி அவர்களை போல இன்று தவறான போதனைகளை தரக்கூடிய மனிதர்களை விட்டு விலகும் அளவிற்கு வேத அறிவில் வளர இப்பத்திரிக்கை எனக்கு துணை நின்றிருக்கிறது. தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் அறியாத ஒரு குழந்தைக்கு அதனை அறிமுகப்படுத்தி வைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்களே அவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்றைப் பற்றிய ஆக்கங்கள் வந்தப்போது!
இன்னும் எத்தனையோ பாடங்கள்: சபை, ஆராதனை, ஜெபம், பிரசங்கம், பிரசங்கி, அவர்களின் மனைவி பிள்ளைகள், ஊழியம், காணிக்கை, வேலை, திருமணம், குடும்பம், தவறான போதனைகள் என ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான அடிப்படை சத்தியங்களை அறியத் தந்திருக்கிறது இத்திருமறைத்தீபம். எந்த புத்தகத்தை வாங்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றிய வாசிப்பு அறிவுரைகளுக்கு முக்கியத்துவம் அளித்த புத்தகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை. எத்தனை ஆவிக்குரிய நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இத்தீபம். இன்னும் எத்தனையோ நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே போகலாம்!!!
அதில் என்றுமே மறக்கமுடியாத நன்றியுடன் நினைவுகூர வேண்டிய ஒன்று, எப்படி பிரசங்கம் செய்ய வேண்டும்? என்பது பற்றியும், தவறான போதனைகளையும், அதனை செய்கிறவர்களையும், இனம்கண்டுக்கொள்ளவும், சரியான தரமுள்ள சத்தியங்களை கொண்ட புத்தகங்களை வாங்கவும் நான் கற்றுக்கொண்டது தான். இதில் முக்கியமாக “ஊழிய அழைப்பு, கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை, போதகா உன் கடமை, போதகர்களின் ஒழுக்ககேட்டை அசட்டை செய்யலாமா?” போன்ற ஆக்கங்கள் ‘ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்’ என்பதாய் என் ஊழிய பாதையில் சரியான கர்த்தருடைய ஆலோசனையாயிருந்து, ஊழியம் செய்வதற்கான தைரியத்தையும் பெலனையும் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படியாக, ஒரு வளரும் ஊழியனுக்கு முதிர்ந்த அனுபமுள்ள ஓர் ஊழியர் பக்கத்திலிருந்து கற்றுக்கொடுப்பது போல கடந்த 19 ஆண்டுகளாக இடையறாமல் வெளிவந்து எங்களை சரியான வழியில் நடத்தியதை நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பயணத்தில் உங்களோடு நானும் பயணித்திருக்கிறேன் ஒரு வாசகனாய் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம். நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த வேத வெளிச்சங்கள் நாங்கள் சரியான வழியில் செல்ல உதவியாயிருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய எழுத்துப்பணி எங்களுக்கும், எங்களது சபைகளுக்கும், நமது நாட்டிற்கும் தேவை. உங்களுடைய எழுத்துப் பணிக்காகவும், உடல் சுகத்திற்காகவும், மற்றும் குடும்பம் சபைக்காகவும்; நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்.
இப்பத்திரிக்கைக்கு பணம், உழைப்பு, நேரம் என அனைத்தையும் செய்கிற ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் ஜெபித்து தேவனை துதிக்கிறேன். இன்னும் பற்பல சுடர்களாய் எரிந்து அநேகர் வாழ்க்கையில் ஒளிவீச வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த ஊழியத்தை உற்சாகத்தோடு செய்ய உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கர்த்தர் தம்முடைய அளப்பரிய கிருபையும், பெலனையும் தரவேண்டுமென்று ஜெபித்து வேண்டுகிறேன்.
‘திருமறைத்தீபம் ஒரு மரித்த தேகத்தை உயிரோடு எழுப்பினதில்லை. ஆனால் இதனுடைய செய்தியோ காலம் காலமாக ஆவிக்குரிய ரீதியில் மரித்துப்போயிருந்தவர்களை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது.’
அன்புடன்,
ஆர்வமுள்ள வாசகனாய்,
எம். பிரபுதாஸ்,
ரபூனி நம்மோடு சபை, தமிழ்நாடு
_____________________________________________________________________________
திருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழ் கையில் கிடைத்தபோது, கடந்த பதினேழு வருட காலமாக இந்தப் பத்திரிகை என் வாழ்வில் எனக்களித்துள்ள ஊக்கத்திற்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தருக்கு அநேக ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன். நான் 1996ம் ஆண்டில் திருமறைத்தீபத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதே இந்தப் பத்திரிகை ஏனைய பத்திரிகைகள் எல்லாவற்றையும்விட பெரிதும் வித்தியாசமானது என்பதை நான் உணர்ந்தேன். அந்தக் காலங்களில் நான் ஒரு மிஷனரி நிறுவனத்தின் ஊழியனாக குஜராத்தில் சபை நிறுவும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். சீர்திருத்தப் போதனைகளைப் பற்றி நான் அந்தக் காலத்தில் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. பத்திரிகையில் அதைப்பற்றி வாசித்ததும் அதுபற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பேரார்வம் எனக்குள் ஏற்பட்டது. இறையாண்மையுள்ள கர்த்தர் சரியான நேரத்தில் திருமறைத்தீபத்தை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு இதழும் வேதபோதனைகளுக்கு நல்ல விளக்கங்களை அளித்துவர அதன் மூலம் கர்த்தர் தன்னுடைய ஆவியினால் என் இருதயத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களைக் கொண்டுவர ஆரம்பித்தார்.
பத்திரிகையை அட்டையில் இருந்து கடைசிப் பக்கம்வரை ஒன்று தவறாமல் வாசித்து வர ஆரம்பித்தேன். சில வேளைகளில் ஒரே ஆக்கத்தைப் பலதடவைகள், அதில் தெளிவு அடைய வேண்டுமென்பதற்காக வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பத்திரிகையில் வெளிவந்த ஆக்கங்களில் அநேகமானவை எனக்கு வேதத்தில் தெளிவை அளித்தன – சுவிசேஷ ஊழியம் பற்றிய வேதபோதனைகள், உள்ளூர் சபையின் முக்கியத்துவம், உள்ளூர் சபையின் ஆட்சியமைப்பு ஆகியவை என் ஆவிக்குரிய வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின.
ஜூன் மாதம் 2006ம் ஆண்டில் என் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் திருமறைத்தீப ஆசிரியர் எழுதிய ‘திருச்சபை சீர்திருத்தம்’ என்ற நூல் பத்திரிகையோடு என் கையில் கிடைத்தது. அந்த நூலையும், பத்திரிகையையும் வாசித்த பிறகு நானும் என் மனைவியும் நான் பணி செய்துவந்த மிஷனரி நிறுவனத்தில் இருந்து விலகத் தீர்மானித்தோம். அதுமட்டுமல்லாது திருமறைத்தீபத்தில் இருந்து நாங்கள் பத்துவருடங்களாக (1996-2006) கற்று வந்திருந்த வேத போதனைகளின் அடிப்படையில் குஜராத்தில் உள்ளூர் சபையொன்றை நிறுவவும் தீர்மானித்தோம். இன்று கர்த்தரின் பெருங் கிருபையால் கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் வேதபோதனைகளைப் பின்பற்றி நடக்கும் திருச்சபையாக குஜராத்தில் அமைக்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. நாங்கள் தனிப்பட்ட விதத்திலும், சபையாகவும் திருமறைத்தீப ஆசிரியர் போதகர் பாலாவிற்கு அவருடைய எழுத்துப்பணிகளுக்காக பெரும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
கர்த்தரின் கிருபையினால் மட்டும்,
போதகர் பால் ஜெயசிங்
குஜராத்
_____________________________________________________________________________
நான் வளர்ந்த முறையின் காரணமாக எனக்கு தமிழில் வாசிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் திருமறைத்தீபம் பத்திரிகையின் காரணமாக நான் தமிழில் வாசிக்க பெருமுயற்சி செய்து வருவதோடு எனது மனைவியின் துணையோடு அதில் வருகின்ற ஆக்கங்களின் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுகிறேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் பத்திரிகையை நான் வாசித்து வருகிறேன். ஆசிரியரிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் இறையியல் கற்று வருவதற்கு இடையில் பத்திரிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து சத்திய உணவளித்து வருகிறது. அதில் வரும் ஆக்கங்களில் அருமையானதும், ஆழமானதுமான சத்தியங்களை வாசித்தறிந்து நான் மகிழ்ந்திருக்கிறேன். என்னுடைய ஊழியப் பணியில் நான் சந்தித்து வருகின்ற ஆத்மீக விஷயங்களுக்கு பத்திரிகை தகுந்த விளக்கமளித்து எனக்குத் துணை செய்கிறது. சத்தியத்தில் என்னை வளர்ச்சியடையச் செய்து, போலிப்போதனைகளில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள பத்திரிகை உதவிசெய்கிறது. என்னுடைய குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பல விஷயங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. பெங்களூரில் உள்ள எங்கள் சபை மக்களில் பலரும் ஆர்வத்தோடும், தாகத்தோடும் பத்திரிகையை வாசித்து வருகிறார்கள். தங்களுடைய குடும்ப ஜெபவேளைகளிலும் அவர்கள் பத்திரிகையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பத்திரிகையில் வந்த ‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ எனும் ஆக்கம் நகைச்சுவையோடு ஆரம்பித்த போதும் நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவத்தைப் படம்பிடித்துக் காட்டியதோடு நம்முடைய செய்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்படித் தூண்டியது. ‘சுவிசேஷத்தை எப்படிப் பிரசங்கிப்பது’ என்ற ஆக்கம் சுவிசேஷப் பிரசங்கத்தை சரிவர செய்ய என்னை ஊக்கப்படுத்தியது. ‘சபை ஆராதனை’ பற்றிய ஆக்கங்கள் மனித இச்சைகளின்படி ஆராதனை நடத்தாமல் கர்த்தரின் வார்த்தையின் வழிப்படி ஆராதனை நடத்த எனக்கு பயனளித்தது. சுயாதீன சித்தத்தைப் பற்றி நான் பெரிதாக எண்ணியிருக்கவில்லை. சுவிசேஷத்தை சரிவரப் புரிந்துகொள்ள சுயாதீன சித்தம் பற்றிய போதனைகள் எந்தளவுக்கு அவசியமென்பதையும், சுயாதீன சித்தம் பற்றிய கருத்துக்களே சீர்திருத்தவாத காலத்தில் பெரும் தர்க்கங்களை உருவாக்கின என்பதையும் அதுபற்றிய ஆக்கங்கள் எனக்கு தெளிவுபடுத்தின. ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தலைப்பே என்னுடைய சபை மக்கள் அனைவரும் சுயாதீன சித்தம் பற்றிய ஆக்கத்தை வாசிக்கப் பெரும் ஆர்வத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதோடு, அதுபற்றிய சரியான போதனைகளையும் பெற்றுக்கொள்ள உதவியது. அல்பர்ட் என். மார்டின் அவர்களின் பிரசங்கங்கள் எப்போதுமே ஆழமான சத்தியங்களைக் கொண்டவையாகவும் இருதயத்தைத் தொடுகின்றவையாகவும் இருக்கின்றன. அவை என்னுடைய பிரசங்க ஊழியத்துக்கும் பேருதவி புரிகின்றன. பத்துக் கட்டளைகளைப் பற்றி இப்போது நான் சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேன். திருமறைத்தீபத்தில் அதுபற்றி வந்துள்ள ஆக்கங்கள் அதிகாரத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் கர்த்தரின் கட்டளைகளைப் பிரசங்கிக்க உதவின.
என்னுடைய பிரசங்கப் பணியில் மாற்றங்களைக் கொண்டுவர பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பாவிகளைக் கிறிஸ்துவிடம் அழைக்கும் முறையில் நான் இப்போது மாற்றங்களை செய்திருக்கிறேன். அதற்குக் காரணம் ‘சுயாதீன சித்தம்’ பற்றிய பத்திரிகையில் வந்துள்ள ஆக்கங்கள்தான். எத்தனையோ விஷயங்களை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பத்திரிகை தற்காலத்தில் நிகழும் அவசியமான பல விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்து நம்முடைய சிந்தனைகளையும் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து சபை சீர்திருத்தத்தில் உத்வேகத்தோடு ஈடும்படி வழிகாட்டுகிறது.
எங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளரப் பேருதவி புரிந்து இந்தக் காலாண்டுப் பத்திரிகையை வெளியிட்டு வரும் பத்திரிகை ஆசிரியரையும், அவரோடு இணைந்து உழைப்பவர்களையும், பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் துணை செய்கிறவர்களையும் இந்த நேரத்தில் என்னால் வாழ்த்தி நன்றி கூறாமல் இருக்க முடியாது. கர்த்தர் தொடர்ந்து இதனைத் தன் மகிமைக்காகப் பயன்படுத்தட்டும். மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பத்திரிகை என் கைக்குக் கிடைக்காமல் போனது மட்டுமே என்னுடைய வருத்தம்.
போதகர் முரளி
பெங்களூர்
_____________________________________________________________________________
முதலில் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும். பத்திரிகைக்கு இது இருபதாம் ஆண்டு. கர்த்தருடைய கிருபையால் இது பத்திரிகையின் பெரும் சாதனை. எத்தனையோ பத்திரிகைகள் வந்த வேகத்தில் காணாமல் போக, இருப்பவையும் இறை சிந்தனை அளிப்பதற்கு பதில் இறை நிந்தனை செய்துகொண்டிருக்க, இவைகளின் மத்தியில் சத்தியத்தை அறியும் ஆர்வமுள்ளோருக்கு கலங்கரைத்தீபமாக ஒளிர்கிறது ‘திருமறைத்தீபம்’. ஆயிரக்கணக்கானோர் இதன் வெளிச்சத்தால் கண் திறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக இதை நான் எழுதுகிறேன்.
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து பாரம்பரிய சபையொன்றிற்கு போய்க்கொண்டிருந்தேன். அங்கே அடைந்தது ஒன்றுமில்லை. கிறிஸ்துவை அறியாமல் நான் அந்தச் சபைக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். கர்த்தர் தன் கிருபையால் என்னை ஒரு நாள் இரட்சித்தார். ஆவியின் கண்கள் திறக்கப்பட்டு சத்தியத்தை அறியும் ஆவலில் அதைத் தேடித்திரிந்தேன். எத்தனையோ சபைகளுக்குப் போய்ப் பார்த்தேன். அங்கெல்லாம் சத்தியம் போதிக்கப்படவில்லை. இதற்காக கர்த்தரிடம் அழுது மன்றாடியிருக்கிறேன். 2001ம் ஆண்டில் ஒரு சபைக்குப் போனபோது அங்கிருந்து திருமறைத்தீபம் பத்திரிகை எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தபோது ஏனைய பத்திரிகைகளில் இல்லாத சத்திய ஈர்ப்பை அதில் உணர்ந்தேன். இன்றுவரை தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.
பத்திரிகையின் எழுத்து நடையும், கருத்து வளமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதன் வடிவமைப்பு அருமையானது. பத்திரிகையில் வந்துள்ள பல ஆக்கங்கள் எனக்கு சத்திய விடுதலை அளித்திருக்கின்றன. ‘கர்த்தர் கட்டியெழுப்பும் சபை’, ‘குடும்ப ஆராதனை’, ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’, ‘1689 விசுவாச அறிக்கை விளக்கம்’, ‘வினா விடை மூலம் வரும் கிறிஸ்தவ கோட்பாடுகள்’, ‘சான்றோரின் சரித்திரம்’, ‘திருச்சபை வரலாறு’ போன்ற ஆக்கங்கள் மூலம் நான் இரட்சிப்பு குறித்த தெளிவான விளக்கங்களையும், சபை பற்றியும், குடும்ப அமைப்பு பற்றியும் அதிகம் அறிந்துகொண்டேன்.
திருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழை வாசித்தேன். எத்தனை அருமையான பணி இது. உங்களுடைய கடுமையான உழைப்பை என்னால் அதில் பார்க்க முடிந்தது. ‘உடையும் இந்தியா’ நூலை விமர்சித்து நீங்கள் எழுதியிருக்கும் முறை என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னோடு பணிபுரியும் சக ஆசிரியரோடு அநேக காரியங்களை பகிர்ந்து வருகிறேன். என்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த ஆக்கத்தை வாசித்து என்னைப் பற்றி நினைத்து என்னால் வெட்கப்படத்தான் முடிந்தது. என்னைச் சுற்றி என் நாட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே தெரியாமல் இருந்திருக்கிறேனே. ‘உடையும் இந்தியாவுக்கு’ நீங்கள் கொடுத்திருக்கும் பதில் அருமையானது. உங்களுக்கு எங்கிருந்து இத்தனை ஞானத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்? அந்த ஆக்கத்தில் உங்களுடைய ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது. ஆக்கத்தில் சில வசனங்கள் அருமையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சபை வரலாறு நூல்களை மறுபடியும் வாசித்து வருகிறேன். வரலாற்று சம்பவங்களை பிரசங்கத்திலும் பயன்படுத்தி வருகிறேன். சபை மக்களை வாசிக்கும்படி தூண்டி வருகிறேன். உங்களுடைய எழுத்து நடை உங்களோடு நேரில் பேசிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது. மிகவும் எளிதான, இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய நடையாக இருக்கிறது. நூலில் காணப்படும் படங்கள் வரலாற்று சம்பவங்களை மனக்கண்ணில் கற்பனை செய்து எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க உதவுகின்றன. இந்த நூல்கள் சுவிசேஷத்தைப் பாரத்தோடு பிரசங்கிக்கவும், சத்தியத்திற்காக நிற்கவும் துணை செய்கின்றன.
கிறிஸ்தவ தமிழினத்துக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருந்து வருகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இதற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறி தொடர்ந்தும் அவர் உங்களை அருமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
போதகர் ஜெரால்ட்,
மதுரை, தமிழ்நாடு