திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2026-ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. என்ன செய்துவிட்டாய் எலிமெலேக்கு!

3. தொடரும் சீர்திருத்தம்: நைசீன் விசுவாச அறிக்கை

4. ஆதி சபை விசுவாச அறிக்கைகள்

5. பரிதாபத்துக்குரிய அவிசுவாசியே!

6. கிறிஸ்துவின் இரு இயல்புகள்

 

 

வாசகர்களே!

இந்த வருடத்திற்கான இதழ்களையெல்லாம் நல்லமுறையில் தயாரித்து உங்கள் முன் வைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். இந்தப் பணியில் என்னோடு ஒத்துழைத்து வருகின்ற சகோதரர் ஜேம்ஸ் மற்றும் பிழைதிருத்த வேலையில் உதவுகின்ற பாலா, ரோஸ்லின் ஆகியோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் பயனுள்ள நல்ல ஆவிக்குரிய ஆக்கங்களை சீர்திருத்த சத்தியத்தின் அடிப்படையில் எழுதியும், மொழிபெயர்த்தும் வௌ¤யிட எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இந்த இதழில் ரூத்தின் நூலிலிருந்து ஒரு பயனுள்ள செய்தியைத் தந்திருக்கிறேன். முடிந்தால் வரப்போகின்ற இதழ்களிலும் இது தொடரும். அத்தோடு நண்பர் வொரன் பீல் (அயர்லாந்து) எழுதிய வரலாற்று நைசீன் அறிக்கை பற்றிய ஆக்கமும் வந்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பின் வந்த கெல்சிடோனிய அறிக்கை பற்றியும் அது எதை விளக்குகிறதென்றும் ஓர் ஆக்கத்தை நான் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக “கிறிஸ்துவின் இரு இயல்புகள்” எனும் ஆக்கத்தையும் எழுதியிருக்கிறேன்.

போலிப்போதனைகளை இனங்காண முடியாதளவுக்கு இன்று இறையியல் இல்லாத, அதற்கு முக்கியத்துவமளிக்காத பலவீனமானதொரு கிறிஸ்தவ சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். சரீர சுகத்தையும், ஆசீர்வாத வாழ்க்கையையும், காதுக்கினிமையான இசையையும், போலி வாக்குத்தத்தங்களையும், தங்களுக்குப் பிடித்தவகையிலான ஆராதனையையும் நாடி அலையும் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் இன்று நாம் சுவிசேஷப் பணிசெய்ய வேண்டியிருக்கிறது. அதுவும் மனந்தளராமல் வைராக்கியத்தோடு அதைத் தொடர வேண்டியிருக்கிறது.

ஆவிக்குரிய சமரசத்தில் ஈடுபடாமலும், இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடங்கொடாமலும் வேதத்தை மட்டுமே தொடர்ந்து கற்று விசுவாசமாக வாழ்ந்து பணிசெய்துவருகிறவர்கள் நம்மினத்தில் இன்று அரிது. இத்தகைய சூழ்நிலையில் சத்தியத்தை மட்டுமே மனித சிந்தனைகளுக்கு இடங்கொடாமல் வௌ¤யிட்டு வரும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அந்தவகையில் இந்த இதழும் அமைந்திருக்கிறது. இதில் வந்திருக்கும் ஆக்கங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஆவியானவர் உங்களில் கிருபை செய்ய வேண்டும் என்பது எங்கள் ஜெபம். - ஆசிரியர்.   

 

என்ன செய்துவிட்டாய் எலிமெலேக்கு!

ஒருவன் தன் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளே அவன் எப்படிப்பட்டவனாய் இருக்கிறான், அவனுடைய இருதயத்தின் சிந்தனைகள் எத்தகையதாய் இருகின்றன என்று விளக்குவதாய் இருக்கின்றன. நாமெடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் காரணம் நம்முடைய இருதயத்தின் ஆவிக்குரிய நிலையே. நல்ல முடிவுகள் நல்ல நிலையில் இருக்கும் இருதயத்தின் வெளிப்பாடு; தவறான முடிவுகள் அத்தகைய நிலையில் இல்லாத, பலவீனமான இருதயத்தின் வெளிப்பாடு.

இந்த ஆக்கத்தில் வருகின்ற மனிதன் தன் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவையும் அதன் விளைவுகளையும் ஆராயப்போகிறோம். அந்த மனிதன் பழைய ஏற்பாட்டு நூலான ரூத்தின் ஒரு பாத்திரமான எலிமெலேக்கு.

பழைய ஏற்பாட்டு நூலான ரூத்தை ஒரு வரலாற்று நிகழ்வாகக் காண்பதைத் தவிர்க்கும் இறையியலாளர்கள் இருக்கிறார்கள். அந்நூல் அதிகமாக ஒரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை விளக்குவதால் அவர்கள் அந்த முடிவுக்கு வருகிறார்கள். அவர்களுடைய எண்ணங்களுக்கு முடிவு கட்டுவதுபோல் நூல், “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்” என்று ஆரம்பிக்கிறது. இது வரலாற்று நூல் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்? பரிசுத்த ஆவியானவரே ரூத் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதை ஆணித்தரமாக இந்த வசனத்தின் மூலம் சுட்டுகிறார்.

ரூத் நூலின் காலப்பகுதி நியாயாதிபதியாகிய கிதியோன் நியாயம் விசாரித்து வந்த காலப்பகுதி என்று பொதுவாக நம்பப்படுகிறது என்று விளக்குகிறார் கோர்டன் கெடி (Even in Darkness). அதாவது சிம்சோன் மரிப்பதற்கு ஏறக்குறைய எண்பது வருடங்களுக்கு முன்பு என்கிறார் லியோன் வுட். அந்த வரலாற்றுக் காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை ரூத் விளக்குகிறது.

ரூத்தின் புத்தகம் இருண்ட காலத்தோடு ஆரம்பிக்கிறது. ஏற்கனவே மோசமான ஆவிக்குரிய இருண்ட சூழலை அனுபவித்து வந்த நியாயாதிபதிகளின் காலத்தில், அது போதாதென்று அதற்குத் தண்டனையாக நாட்டில் பஞ்சம் வேறு, அத்தோடு பெத்லகேமிலிருந்து ஒரு குடும்பம் புறப்பட்டு, அந்நிய தேசத்தில் வாழ ஆரம்பிக்கிறது. இறுதியில் அவர்கள் சந்திக்கும் மரணமும் துயரமும் - இவை அனைத்தும் நூலின் தொடக்கத்திலேயே நம் கண் முன் படம்போல் விரிகின்றன. ஐந்து வசனங்களுக்குள்ளேயே, கடினமான நிலையிலிருந்து துக்ககரமான நிலைக்குச் சூழ்நிலைகளால் தொடர்ந்து தள்ளப்பட்டு மோசமடைந்த ஒரு குடும்பம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனாலும், இந்நிகழ்வுகளுக்குப் பின்னால் காணப்பட்ட தேவனுடைய இறையாண்மையுள்ள பராமரிப்பின் அற்புதத்தையும் நூலை வாசிக்கும்போது நாம் உணர்கிறோம்.

தேவனுடைய இறையாண்மையுள்ள பராமரிப்பே ரூத்தின் புத்தகம் நமக்குக் கற்பிக்கும் முக்கிய பாடங்களில் ஒன்று. இந்தத் தொடக்க வசனங்களில் தேவன் மிகக் குறைவாகவே குறிப்பிடப்படுகிறார்; அற்புதத்தையோ, தரிசனத்தையோ, தீர்க்கதரிசிகளையோ, பரலோகத்திலிருந்து கேட்கும் குரலையோ இங்கு நாம் பார்ப்பதில்லை. ஆனாலும் தேவன் அங்கே இருக்கிறார்; அவர் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பஞ்சத்தையும் அறுவடையையும், பயணங்களையும் திருமணங்களையும், வாழ்வையும் மரணத்தையும் அவருடைய பராமரிப்பே ஆளுகிறது.

இப்பகுதியில் சாதாரணமான ஒரு குடும்ப வரலாறுபோல் நம் பார்வைக்குத் தோன்றுவது, இறுதியில் மீட்பின் வரலாற்றின் ஒரு பகுதியாகிறது. ரூத் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல; அது மீட்பின் வரலாற்று நூல். நூலில் காணப்படும் வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கு மத்தியில் வரவிருக்கின்ற மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை நூல் நமக்கு அடையாளங்காட்டுகிறது. நகோமியின் மருமகளான ரூத்தின் வழியில் மேசியா இந்த உலகத்தில் பிறக்கப்போகும் வரலாற்று நிகழ்வை நோக்கி ரூத் நம்மை அழைத்துச்செல்லுகிறது. ஏனெனில் ரூத்தின் வழியாக தாவீது வரப்போகிறான்; தாவீதின் அரச வம்சத்தின் வழியாக இறுதியில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரவிருக்கிறார்.

மேசியா பிறப்பதற்கு கிருபையின் தேவன் ஒரு புறஜாதி மோவாபியப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலர் கர்த்தரைவிட்டு விலகியோடிக்கொண்டிருந்த காலத்தில் அவர்களிடம் காணப்படாத அசைக்க முடியாததொரு விசுவாசத்தைக் கர்த்தர் மேல் வைத்திருந்தாள் ரூத். பழைய ஏற்பாட்டு ராகாபைப்போல இவளும் புறஜாதியினரிடமிருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவளாக இருந்தாள். கர்த்தரின் வழிகள் கண்களுக்குப் புலப்படாத இரகசியமானவை; அற்புதமானவை. இஸ்ரவேலர் அசட்டை செய்து உதறித்தள்ளிய கிருபை பெத்லகேமிலிருந்து மோவாபிற்குப் புறப்பட்டுப் போய் ரூத்துக்கு விடுதலையளித்தது. மனந்திரும்புவதை விட்டுவிட்டு ஆத்மீக இருளுக்குத் தங்களை இஸ்ரவேலர் அடிமையாக்கிக் கொண்டிருந்த வேளையில் அதிசயிக்கத் தக்கவிதத்தில் அது மோவாபிய ரூத்தில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.

ஆகவே, இப்போது நம்மால் காணக்கூடியவைகளைக் கடந்துபோய் எதிர்காலத்தை நோக்கும்படி ரூத் நம்மைச் சுட்டுகிறது. சில வேளைகளில் தேவனுடைய நோக்கங்கள் முற்றிலும் மறைந்திருப்பதுபோல் தோன்றுகிற சூழ்நிலைகளின் வழியாக தேவனுடைய மக்கள் பயணிக்க நேரிடலாம். ஆனாலும் கர்த்தர் ஒருபோதும் அச்சூழ்நிலைகளின் மத்தியில் இல்லாமற்போவதில்லை; அவருடைய உடன்படிக்கையின் நோக்கங்கள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை; அவருடைய பராமரிப்பு ஒருபோதும் திசைமாறிப் போவதில்லை.

இந்த ஆக்கத்தில் ரூத்தின் முதல் அதிகாரத்தின் முதலாம் வசனத்தை மூன்று தலைப்புகளின் மூலம் ஆராயலாம்.

  1. இருண்ட பின்னணி: நியாயாதிபதிகளின் நாட்கள்

இந்நூலின் முதல் வசனம் இவ்வாறு தொடங்குகிறது: “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று.”

“நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில்” என்ற வார்த்தைகள், இந்தப் புத்தகத்தின் வரலாறு மற்றும் ஆவிக்குரிய பின்னணியை உடனடியாக நமக்கு விளக்குகின்றன. இவை நியாயாதிபதிகளின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் நாட்கள். இஸ்ரவேலின் வரலாற்றில் அவை ஆவிக்குரிய மிக இருண்ட நாட்களாக இருந்தன. இஸ்ரவேலர் மீண்டும் மீண்டும் கர்த்தரை விட்டு விலகி, விக்கிராதாரனையில் விழுந்து, தங்கள் சத்துருக்களால் துன்புறுத்தப்பட்டார்கள். அத்துன்பங்களால் அவர்கள் தேவனை நோக்கிக் கதறியபோது தேவன் தானெழுப்பிய நியாயாதிபதிகளின் மூலம் அவர்களை விடுவித்தார்.

நியாயாதிபதிகளின் கடைசி வசனம் அன்றைய தேசத்தின் நிலையைச் சுருக்கமாக அதேவேளை ஆணித்தரமாக இவ்வாறு கூறுகிறது: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 21:25). இதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இந்நூலில் காணலாம்.

ஆவிக்குரிய குழப்பமும், ஒழுக்கச் சீரழிவும், உடன்படிக்கைக்கு உண்மையற்ற தன்மையும் நிறைந்த காலமாக அக்காலம் இருந்தது. ஆனாலும், அந்த இருண்ட நாட்களிலேயே தேவன் தம்முடைய மீட்பின் நோக்கங்களை வல்லமையோடு அமைதியாக நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

இதைப் புரிந்து கொள்ளுவது அவசியம்; ஏனெனில் ரூத்தின் புத்தகம் இறுதியில் நம்மை தாவீதிடம் அழைத்துச் செல்கிறது. ரூத் 4:17, ரூத்தின் மகனாகிய ஓபேத் “ஈசாயின் தகப்பனும் தாவீதின் பாட்டனுமாயிருந்தான்” என்று கூறுகிறது. ஆகவே, “இஸ்ரவேலில் ராஜா இல்லை” என்ற நாட்களில் தொடங்கும் இந்த நூல், தேவன் நமக்கு அளிக்கப்போகும் ஜீவனுள்ள ராஜாவைச் சுட்டிக்காட்டி முடிகிறது.

ஆனால் தாவீதும் நூலின் இறுதியான இலக்கு அல்ல. மத்தேயு 1:5, “கிறிஸ்து என்னப்பட்ட இயேசு”விடம் (மத்தேயு 1:16) இறுதியில் கொண்டு செல்லும் வம்சவரலாற்றில் ரூத்தையும் சேர்க்கிறது. ஆகவே, இஸ்ரவேலின் வரலாற்றிலேயே மிக இருண்ட காலப்பகுதிகளில் ஒன்றில், மேசியா வரவிருந்த வம்சத்தை ஆயத்தப்படுத்துவதற்காக இறையாண்மையுள்ள தேவன் செயல்பட்டுக்கொண்டிருந்தார். எத்தனை அற்புதமான உண்மை இது! நம் வாழ்க்கையில் கர்த்தரின் பராமரிப்பின் இருண்ட பகுதியை நாம் சந்திக்கும்போது மனதில் வைத்திருக்க வேண்டிய அவசியமான உண்மை இது. நாம் அனுபவிக்கும் இருள் போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில், அதற்குப் பின்னால் இருந்து நம்மைப் பாதுகாத்து வழிநடத்தி வரும் கர்த்தரை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு முறை நான் விமானப்பிரயாணம் செய்தபோது, வானம் மிகத் தெளிவாக சூரிய கதிர்கள் எங்கும் வியாபித்து வெய்யில் சுள்ளென்று விமானத்தின் கண்ணாடி ஜன்னலைச் சூடாக்கியிருந்தது. அது சுகமான அனுபவம். அதற்குப் பத்து நிமிடங்களுக்குள் விமானம் கடும் இருள் போன்ற கருமையான மேகக்கூட்டத்திற்குள் போவதை நான் உணர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே கருமையான மேகக்கூட்டம் விமானத்தை முழுமையாக விழுங்கப்போவதுபோல் சூழ்ந்து நின்றது. வினாடிகள், நிமிடங்கள் நகர்ந்தன. எங்கும் இருள், வெளியில் பலத்த மழை. வெளிச்சமும், வெப்பமும் அடியோடு இல்லாமல் போய் விமானத்திற்குப் புறத்தில் இருள், மழை, கடுங்குளிர். அதை உள்ளே இருந்த என்னால் உணரமுடிந்தது. அதற்குப் பத்து நிமிடங்கள் தாண்டிய பின்பே விமானம் அந்த இருளடைந்த மேகக்கூட்டத்திற்குள் இருந்து வெளிவந்து மறுபடியும் தெளிவான சூரியக்கதிர்கள் வியாபித்துக் காணப்பட்ட நீல நிற வானில் தொடர்ந்து பறக்க ஆரம்பித்தது. இதுபோல்தான் நம் வாழ்க்கையும். அதில் மாறி மாறி வெளிச்சமும், இருளும் இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்து நம்மை வழிநடத்துகிறவர் கர்த்தர்.

இதிலிருந்து ஒரு முக்கியமான நியதியை நாம் கற்றுக்கொள்கிறோம்: காலத்தின் இருள் தேவனுடைய நோக்கங்களை ஒருபோதும் முறியடிக்க முடியாது.

நாம் வாழும் சமுதாயத்தின் மோசமான நிலை, சபைகளின் பலவீனம், கள்ளப்போதனைகளின் பரவல் அல்லது துன்மார்க்கம் வெற்றியடைவதுபோல் தோற்றமளிப்பது போன்றவற்றைப் பார்த்து சிலவேளைகளில் நாம் மனச்சோர்வடைந்து விடுகிறோம். ஆனால் காலத்தின் நிலைமை தேவனுடைய சிம்மாசனத்தை ஒருபோதும் பயமுறுத்துவதில்லை; அசைத்தாட்டிவிடுவதில்லை. சங்கீதம் 115:3 கூறுகிறது: “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.”

தேவன் என்ன செய்கிறார் என்பதை அவருடைய மக்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத நேரங்களில்கூட, அவர் தம்முடைய மிகப் பெரிய நோக்கங்களை அற்புதமாக அமைதியாக நிறைவேற்றிக்கொண்டிருப்பதை ரூத்தின் புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது.

  1. கடுமையான சோதனை: பெத்லகேமில் பஞ்சம்

அடுத்து, “தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” என்று முதல் அதிகாரத்தின் முதலாம் வசனம் சொல்லுகிறது.

ரூத்தில் விளக்கப்பட்டிருக்கும் குடும்பம் பெத்லகேமில் வாழ்ந்ததால் இந்த நிகழ்வு குறிப்பாகக் கவனிக்கவேண்டியதாக இருக்கிறது. பெத்லகேம் என்ற பெயருக்கு “அப்பத்தின் வீடு” என்று பொருள்; ஆனாலும் அப்பத்தின் வீட்டிலேயே அன்று அப்பம் இல்லாமல் போயிருந்தது.

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்கு பஞ்சம் மிகவும் கடுமையான தேவபராமரிப்பாக இருந்தது. பயிர்கள் விளையாமல் போயின; உணவு அரிதானது; குடும்பங்கள் உயிர்வாழ முடியுமா என்ற நிச்சயமற்ற நிலையை அன்று எதிர்கொண்டன.

ஆகவே, எலிமெலேக்கு கடினமான சூழ்நிலையைத் தன் வாழ்க்கையில் எதிர்கொண்டான். அது வெறும் கற்பனையான ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. அவன் பொறுப்பேற்றுக் காப்பாற்ற வேண்டிய மனைவியும் இரண்டு மகன்களும் அவனுக்கு இருந்தார்கள்.

ஆனால் நாம் கவனிக்கத் தவறக்கூடாத ஓர் உடன்படிக்கையின் பின்னணியும் இங்கே காணப்படுகின்றது. இஸ்ரவேலோடு தான் ஏற்படுத்திய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியாமல் தொடர்ந்து நடந்தால், தேசத்தின் மீது நியாயத்தீர்ப்பு வரக்கூடும் என்று தேவன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். உபாகமம் 28:23-24 வறட்சியையும் விவசாயத் தோல்வியையும் குறித்து எச்சரித்தது.

உபாகமம் 28:23-24

உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாயிருக்கும். கர்த்தர் உன் தேசத்தின் மழையைப் புழுதியும் தூசியுமாக்குவார்; நீ அழிந்துபோகுமட்டும் அது வானத்திலிருந்து உன்மேல் இறங்கும்.

ஆகவே, இந்தக் குறிப்பிட்ட பஞ்சத்திற்கான துல்லியமான காரணத்தை ரூத் 1 வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், நியாயாதிபதிகளின் நாட்களில் வாழ்ந்த ஓர் இஸ்ரவேலன், தேவன் தம்முடைய உடன்படிக்கையின் மக்களை நடத்திய விதத்தின் பின்னணியில் இதை நிச்சயமாகப் புரிந்துகொண்டிருந்திருப்பான். “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்த நாட்களில் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று” என்ற வார்த்தைகளில் பஞ்சத்திற்கான காரணம் தொக்கி நிற்பதை உணரலாம். நியாயாதிபதிகளின் காலத்து நிகழ்வுகளே பஞ்சத்திற்கான காரணம். பஞ்சம் கர்த்தரின் கரத்தில் சிட்சையின் கருவி.

நம் வாழ்க்கையில் தேவனுடைய சிட்சைக்கு உரிய பதில் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்புவதாகும். 2 நாளாகமம் 7:14-ல் தேவன் இவ்வாறு வாக்குத்தத்தம் செய்திருந்தார்: “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு...”

இங்கே ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. தேவனின் பராமரிப்பு சிலவேளைகளில் இருளான பராமரிப்பாக நம் வாழ்க்கையில் வெளிப்படும். தேவனின் பராமரிப்பு கடினமாகும்போது, “இந்தக் கஷ்டத்திலிருந்து நான் எப்படித் தப்பிக்கலாம்?” என்பது மட்டுமே நம்முடைய முதல் கேள்வியாக ஒருபோதும் இருக்கக்கூடாது. “இதன் வழியாக தேவன் நான் கற்றுக்கொள்ளும்படி எனக்கு எதைப் போதிக்கிறார்?” என்றும் நாம் கேட்க வேண்டும்.

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகள் நம்முடைய இருதயத்தை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய நம்பிக்கை எதில் இருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. தேவனுடைய பராமரிப்பு சுகமாக இருக்கும்போது மட்டுமே நாம் அவரை நம்புகிறோமா, அல்லது அவருடைய வழிகள் நமக்குப் புரியாதபோதும் அவரைத் தொடர்ந்து நம்புகிறோமா என்பதை அவை சோதிக்கின்றன.

ஆகவே, விசுவாசி தேவனுடைய பராமரிப்புக்கும் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவபராமரிப்பு சிலவேளைகளில் இருண்டதாகத் தோன்றலாம்; ஆனால் அவ்வேளையிலும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மாறாமல் உறுதியாகவே இருக்கின்றன. அத்திமரம் துளிர்விடாவிட்டாலும், வயல்கள் ஆகாரம் விளைவிக்காவிட்டாலும், தொழுவத்திலே மந்தை இல்லாவிட்டாலும், “ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று ஆபகூக்கால் கூற முடிந்தது (ஆபகூக் 3:17-18).

பஞ்சத்தைப் பஞ்சமல்ல என்று நினைத்துப் பாசாங்கு செய்வது அல்ல விசுவாசம்; பஞ்சத்தின் நடுவிலும் தேவனை நம்புவதே விசுவாசம்.

  1. கேள்விக்குரிய முடிவு: வாக்குத்தத்த தேசத்தை விட்டு வெளியேறுதல்

முதல் வசனம் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது:

“யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடும் மோவாப் தேசத்திலே போய்த் தங்கினான்.”

இரண்டாம் வசனம் அந்தக் குடும்பத்தை அறிமுகப்படுத்துகிறது: “அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்.”

எலிமெலேக்கின் பெயர் கவனிக்க வேண்டியது. அதற்கு “என் தேவன் ராஜா” என்று பொருள். ஆனாலும், தேவனுடைய அரசாட்சியைத் தன் பெயரால் அறிக்கையிட்ட அந்த மனிதன், பெத்லகேமை விட்டுப் போய் மோவாபில் நிவாரணம் தேடத் தீர்மானித்தான். இஸ்ரவேலர் தங்கள் தேவனோடு கொண்டிருந்த உடன்படிக்கையின் பொறுப்புகளை எண்ணிப் பார்க்கும்போது, இது நிச்சயமாகக் கேள்விக்குரியதொரு முடிவாகும்.

மோவாப் என்பது வெறுமனே இஸ்ரவேலுக்குப் பக்கத்திலிருந்த மற்றொரு பிரதேசம் அல்ல. ஆதியாகமம் 19:30-38-ல் காணப்படும் விளக்கத்தின்படி, லோத்துக்கும் அவன் குமாரத்திகளுக்கும் இடையே நடந்த ஒழுக்கக்கேடான உறவின் வழியாக மோவாபியர் தோன்றினர். இஸ்ரவேலர் கானானை நோக்கிப் பயணித்தபோது மோவாபியர் அவர்களுக்கு எதிராக நின்றனர். மோவாபின் ராஜாவாகிய பாலாக், இஸ்ரவேலைச் சபிக்கும்படி பிலேயாமை கூலிக்கு அமர்த்தினான் (எண்ணாகமம் 22-24). ஆகவே, உடன்படிக்கையின் நாட்டோடு மோவாபியருக்கு இருந்த உறவைப் பற்றி உபாகமம் 23:3-6 கடுமையான கட்டுப்பாடுகளைப் பதிவு செய்கிறது.

“அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையானவனும் என்றைக்கும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொண்டு வராததினாலும், உன்னைச் சபிக்கும்படி மெசொப்பொத்தாமியாவிலுள்ள பேத்தோரின் ஊரானாகிய பேயோரின் குமாரன் பிலேயாமை உனக்கு விரோதமாகக் கூலிக்கு அமர்த்தினதினாலும் அப்படியாகும். ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிநேகித்தபடியினால், உனக்காகச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் என்றைக்கும் அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் தேடாதிருப்பாயாக.”

எலிமெலேக்கு உடன்படிக்கையின் தேசத்தைக் கைவிட்டு, கர்த்தர் ஒருபோதும் சகவாசம் வைக்கக்கூடாது என்று ஆணித்தரமாகக் கூறியிருந்த இஸ்ரவேலின் சத்துருக்களுடனும், விக்கிரகாராதனையும் அதையொட்டிய பண்பாடும் மலிந்து காணப்பட்ட ஒரு சூழலுக்குள் தன் குடும்பத்தை அழைத்துச் சென்றான்.

மேலும், முதல் வசனம் அவன் மோவாபில் “தங்கச்” சென்றான் என்று கூறுவதையும் கவனியுங்கள். இங்கே பயன்படுத்தப்பட்ட எபிரெயச் சொல், அங்கே தற்காலிகமாக வசிப்பது என்ற கருத்தைக் கொண்டுள்ளது. பஞ்சத்திற்குத் தப்பித்து தற்காலிகமாக அங்கே உயிர்வாழ்ந்து, பின்னால் நாடு திரும்பிவர வேண்டும் என்பதே எலிமெலேக்கின் ஆரம்ப நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் இரண்டாம் வசனம், “அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்” என்று கூறுகிறது. தற்காலிகமான ஒரு தீர்வு நிரந்தரமான குடியிருப்பாக மாறியது.

பெத்லகேமை விட்டு மோவாபில் குடும்பத்தோடு வாழச்சென்ற எலிமெலேக்கு ஞானமான தீர்மானத்தை எடுத்தானா? நாட்டில் பஞ்சம் என்ற ஒரே காரணத்திற்காக அவன் பெத்லகேமைவிட்டுப் போயிருந்திருக்க வேண்டுமா? இதெல்லாம் அவசியமாகக் கேட்க வேண்டிய ஆவிக்குரிய கேள்விகள்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண பின்வரும் விஷயங்களை சிந்தித்துப் பாருங்கள்:

  1. நியாயாதிபதிகளின் நாட்களில் இஸ்ரவேல் மிகவும் மோசமான ஆவிக்குரிய நிலையில் இருந்தபோதிலும், தேவன் இஸ்ரவேலை விட்டு ஒருபோதும் விலகவில்லை. தேவனை விட்டுப் பிரிந்தது அந்தத் தேசமே. இஸ்ரவேலில் ஜீவனுள்ள தேவனுக்குத் தகுந்த அங்கீகாரம் இருக்கவில்லை. “இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்தான்” என்று நியாயாதிபதிகள் கூறுவதன் பொருள் இதுதான். இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய தேவனை நிராகரித்தார்கள்; அவருடைய வழிகளைப் பின்பற்ற மறுத்தார்கள். ஆனாலும் இஸ்ரவேல் தேவனுடைய தேசமாகவே தொடர்ந்திருந்தது; தேவனும் அவர்களுடைய தேவனாகவே இருந்தார்.

மெத்தியூ பூல் சொல்வதுபோல், நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் இஸ்ரவேல் தேவனை நிராகரித்து வாழ்ந்ததற்குத் தண்டனையாகவே அனுப்பப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் மக்கள் செய்ய வேண்டிய கடமை, தங்களுடைய பாவங்களிலிருந்து மெய்யாக மனந்திரும்புவது மட்டுமே. உண்மையான மனந்திரும்புதல் தண்டனையையும் பேரழிவையும் விட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்திருக்கும். இதே கருத்தை சின்கிளெயர் பேர்கஸனும் முன்வைக்கிறார். இந்த விஷயத்தில் சில வேதவிளக்கவியலாளர் முரண்பாடான கருத்தைக் கொண்டிருப்பதை ஒத்துக்கொள்ளும் பேர்கஸன், உலகத்து சிந்தனையின்படி மோவாபிற்குப் போவது அவசியமானதாகவும், புத்தியுள்ளதாகவும் காணப்பட்டிருந்தபோதும், அப்படிப்போவது கர்த்தரில் தங்கியிருப்பதையும், அவருடைய வார்த்தையையும், மனந்திரும்புவதையும் விட்டு விலகுவதையுமே தன்னில் கொண்டிருந்தது என்கிறார். இச்செயலை “ஆவிக்குரிய வீழ்ச்சியின் அறிகுறியாகவே கருதவேண்டும் என்பது எனக்கு மிகத்தெளிவாகத் தெரிகிறது” என்கிறார் பேர்கஸன்.

எலிமெலேக்குவின் விசுவாச வாழ்க்கையைப் பற்றி நம்மால் அதிகம் அறிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் மோவாபுக்குப் போக அவனெடுத்த முடிவு அவன் ஆவிக்குரிய நிலையில் தளர்வாக இருந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. பஞ்சம் அவனைப் பதர வைத்துக் குடும்பத்திற்குப் பொருளாதார வசதியைத் தேடிச் செழிப்புள்ளதாக இருந்த மோவாப் மீது கண்களைத் திருப்ப வைத்தது. அவன் கர்த்தரை மதித்து மனந்திரும்புதலுக்குரிய வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அவனுடைய சிந்தனைகளும், முடிவுகளும் ஆவிக்குரியதாகவே இருந்திருக்கும்.

ஆகவே, எலிமெலேக்கு பெத்லகேமை விட்டு வெளியேறியது ஞானமான நடவடிக்கை அல்ல.

  1. ரூத்தின் புத்தகத்தின் முக்கியமான பாத்திரங்களில் ஒருவனான போவாஸ் பஞ்ச காலத்திலும் பெத்லகேமை விட்டு வெளியேறவில்லை; அவனைப்போலவே வேறு பல ஆவிக்குரிய இஸ்ரவேலரும் பெத்லகேமில் இருந்திருப்பார்கள், அவர்கள் வெளியேறியதாகவும் தெரியவில்லை. தேசத்தில் பஞ்சம் இருந்தபோதிலும் அதற்கு மத்தியில் போவாஸ் நன்றாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. கடவுளை நம்பிய அநேக இஸ்ரவேலரும் பஞ்சத்திற்கு மத்தியில் இருந்ததை வைத்து அவ்வாறே வாழ்ந்திருப்பார்கள். அவர்களைக் கவனித்துக்கொண்டதும் இஸ்ரவேலின் தேவனே. அத்தோடு, 1:21ல், நகோமி, “நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்” என்று கூறியிருக்கிறாள். அதிலிருந்து, மெத்தியூ ஹென்றி சுட்டுவதுபோல், “உயிரைக்காத்துக்கொள்ள முடியாதளவுக்கு அந்தப் பஞ்சம் கடுமையானதாக இருக்கவில்லை என்பது தெரிகிறது.”

எலிமெலேக்கைப் பற்றி ஹென்றி ஆணித்தரமாக, “தன்னைச் சுற்றியிருந்தவர்கள் ஏற்றுக்கொண்ட குறைவான உணவோடு அவனால் திருப்தியடைய முடியாமலும், பஞ்சகாலத்தில் முன்பு இருந்ததுபோல நிறைவான வாழ்க்கையைத் தொடர முடியாமல் இருப்பதில் அவனால் திருப்தியடைய முடியாமலும் இருந்திருந்தால்; அல்லது உரிய காலத்தில் மீண்டும் செழிப்பான ஆண்டுகள் வரும் என்ற நம்பிக்கையில் அவனால் வாழ முடியாமலும், அவற்றிற்காகப் பொறுமையோடு காத்திருக்க முடியாமலும் இருந்திருந்தால், அது அவனுடைய தவறு” என்கிறார்.

இது பற்றி விளக்கும் கோர்டன் கெடி, “எலிமெலேக்கு தன்னுடைய குடும்பத்தைப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்க நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவனுடைய முடிவைக் (மோவாபுக்குப் போவது) கர்த்தருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து செய்த முடிவாகக் கணிப்பது மிகவும் கடினம்” என்கிறார். அத்தோடு, அவனுடைய முடிவை, “விசுவாசத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய நடைமுறைவாதத்தின் வெற்றியாகவே (Victory of pragmatism) கருதவேண்டும்” என்கிறார். எலிமெலேக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் கோர்டன் கெடி, இரட்சண்ய சேனையின் அதிகாரிகளில் ஒருவர் 1949ல் செங்காய் என்ற சீன நகரில் இருந்து சொன்ன வார்த்தைகளை நினைவுறுத்துகிறார். அந்த அதிகாரி, “நான் (கர்த்தரின்) வாக்குறுதிகளின் மேல் உட்கார்ந்திருக்கிறேன்; அவற்றின் மேல் நின்று கொண்டிருக்கிறேன்” என்றார். அதை எலிமெலேக்கு செய்யவில்லை.

இதுவும் எலிமெலேக்கு செய்த செயல் சரியானதா என்ற பெருங்கேள்வியை எழுப்புகிறது.

  1. முதல் அதிகாரத்தின் முதலாம் வசனம், “. . . தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது . . . ஒரு மனுஷன் . . . மோவாப் தேசத்தில் போய்ச் சஞ்சரித்தான்” என்று விளக்குகிறது. இதன்படி பஞ்சத்தின் காரணமாகவே எலிமெலேக்கு மோவாபுக்குப் போனான் என்று வசனம் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும். கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளைத் தொடர்ச்சியாக வாழ்க்கையில் பின்பற்றி வருகிற எவரும் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு பெருந்தொல்லைக்காக அதுவரை அனுபவித்து வந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்துவிட்டு சிலைவணக்கத்தில் ஈடுபட்டு அதற்குரிய இழிவான பண்பாட்டில் மூழ்கிக் கிடக்கும் புறஜாதி தேசத்துக்குப் போய்விட மாட்டார்கள். அவர்களுடைய இருதயம் கர்த்தரோடிருப்பதால் அவர்கள் தொல்லைகளைத் தடைகளாகப் பார்க்கும் மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள். போவாஸைப் போல வாழ்ந்திருப்பார்கள்.

பெத்லகேமைவிட்டு மோவாபிற்குப் போவதை நாம் சாதாரணமாக தேசம் விட்டுத் தேசம் போவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று விளக்குகிறார் சின்கிளெயர் பேர்கஸன். ஏனெனில், இஸ்வேல் கர்த்தரின் பிரசன்னம் இருந்த நாடு. அக்காலத்தில் இஸ்ரேவேலில் கர்த்தர் வாசம் செய்த ஆலயத்தில் மட்டுமே அவருடைய பிரசன்னம் இருந்தது. இதுவே பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் காணப்பட்ட பெரும் வேறுபாடு. இஸ்ரவேல் உடன்படிக்கையின் தேசம். இஸ்ரவேலர் உடன்படிக்கையின் மக்கள். அவர்களுக்கு உடன்படிக்கையின்படி விசுவாசத்தோடு வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பிருந்தது. உடன்படிக்கையை மீறி வாழ்ந்ததாலேயே நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேல் இருளடைந்து காணப்பட்டது. இந்நிலையில் உடன்படிக்கையின் பிள்ளையாக இருந்த எலிமெலேக்கு உடன்படிக்கையின் நாட்டைவிட்டு, தனக்கிருந்த அத்தனை ஆவிக்குரிய பாதுகாப்பையும் உதறிவிட்டு உடன்படிக்கையின் தேவனை வெறுத்த மோவாபிற்குப் போவது எந்தவிதத்தில் நன்மையானது?

எலிமெலேக்கு பெத்லகேமைவிட்டு பஞ்சத்தின் காரணமாக வெளியேறியிருந்தாலும் அது மட்டுமே உண்மைக்காரணமா, என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. இஸ்ரவேலின் இருளடைந்த ஆன்மீகக் குழப்ப சூழ்நிலை எலிமெலேக்குவின் வாழ்க்கையைத் தனிப்பட்டவிதத்தில் எந்தளவுக்குப் பாதித்திருந்தது என்பதும் நமக்குத் தெரியவில்லை. அவனெடுத்த முடிவுக்குப் பஞ்சம் மட்டுமே உறுதியான காரணம் என்று சொல்வதற்கில்லை. நிச்சயமாக ஆவிக்குரிய பலவீனமும் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். அவன் செய்த செயலும், அதன் விளைவாக அதற்குப் பின்னால் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளும், அவனுடைய முடிவுகள் தேவனை மையமாகக் கொண்டவையா? என்று நிச்சயமாகக் கேள்விகளை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

  1. மோவாபுக்குச் சென்றதன் மூலம் எலிமெலேக்கு பாவம் செய்தான் என்று இந்த வேதப்பகுதி வெளிப்படையாகக் கூறவில்லை என்று ஒரு சில வேதவிளக்கவியலாளர் சுட்டுகின்றனர். அது உண்மைதான். ஆனால், அது முழு உண்மையுமல்ல; ஏனெனில், அவனுடைய செயலின் ஆவிக்குரிய தன்மையை இந்தப் பகுதியின் விரிவான சந்தர்ப்ப சூழலையும், வேதத்தின் ஏனைய பகுதிகளையும் வைத்து மட்டுமே முடிவு செய்யமுடியும். மோவாபிற்குப் போக முடிவெடுத்ததிலிருந்து எலிமெலேக்கும் அவன் குடும்பத்தினரும் செய்த காரியங்களும் (புறஜாதியினரான மோவாபிய பெண்களைத் திருமணம் செய்தது), அவற்றின் விளைவுகளும் (மிகக் குறுகிய கால வாழ்க்கையும், மரணமும்), நிச்சயமாக எலிமெலேக்கு தேவபயத்தோடும், நிதானத்தோடும் முடிவுகளை எடுக்கவில்லை என்பதையும் அவனுடைய முடிவு உடன்படிக்கையின் தேவனுக்கு எதிரானது என்பதையுமே சுட்டுகின்றன. இதே முடிவுக்குத்தான் சின்கிளெயர் பேர்கஸனும் வருகிறார்.

ஆபிரகாமையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிலகி சோதோம் கொமோராவில் வாழச் சென்ற லோத்துவின் முட்டாள்த்தனமான தீர்மானத்தை வேறு எப்படி விளக்கமுடியும்? இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியானவையல்ல என்றபோதும் இந்த விஷயத்தில் பொருந்தியிருப்பதை மறுக்கமுடியாது. மோவாபுக்குச் செல்லத் தீர்மானித்தபோது எலிமெலேக்கு வேதத்தில் காணப்படும் பக்திமான்களின் உதாரணங்களை நிச்சயமாகச் சிந்தித்திருக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய பாதுகாப்புக்கு அவசியமானவற்றைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கவில்லை. கர்த்தரின் உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் ஆபத்துக்களையும், அதனால் ஏற்படக்கூடிய தண்டனையையும் பற்றிய பயத்தை இருதயத்தில் கொண்டிருக்கவில்லை.

இந்த விஷயத்தில் எலிமெலேக்கின் தீர்மானத்தை கடுமையாக விமர்சிக்கும் மெத்தியூ ஹென்றியுடனும் மெத்தியூ பூலுடனும், கோர்டன் கெடியுடனும் நான் ஒத்துப்போகிறேன்; இவர்களில் ஹென்றி, பூலைவிடக் கடுமையாக எலிமெலேக்கின் செயலை விமர்சிக்கிறார். ஹென்றி, “நம்முடைய பாதையில் வைக்கப்பட்டிருப்பதால் நாம் சுமக்க வேண்டிய சிலுவையிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைப்பது மதியீனமாகும்” என்கிறார்.

ஆவிக்குரிய சமரசம் (spiritual compromise) பெரும்பாலும் இந்த வகையில்தான் எவரிலும் வளர்கிறது. ஒருவன் எல்லாவற்றையும் கைவிட வேண்டும் என்று முடிவெடுத்து ஒருபோதும் ஆவிக்குரிய சமரசத்தை ஆரம்பிப்பதில்லை. அவன் வைக்கும் முதல் படி சிறியதாகவும், நடைமுறைக்கேற்றதாகவும், தற்காலிகமானதாகவும் தோன்றும். ஆனால் அந்த சிறிய, முதல் சமரசம் அவனுடைய அடுத்த சமரசத்தை எளிதாக்கிவிடுகிறது. அதனால்தான் வேதம் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “உன் கால்கள் செல்லும் பாதையைச் சீர்தூக்கிப்பார்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் நிலைவரப்படும்” (நீதிமொழிகள் 4:26).

நம்முடைய குடும்பங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பகுதி நமக்கு மிக முக்கியமான போதனையளிக்கிறது. எலிமெலேக்கின் தீர்மானம் அவனை மட்டும் பாதிக்கவில்லை. நகோமியையும், மக்லோனையும், கிலியோனையும் அவன் தன்னோடு அழைத்துச் சென்றான். அவனெடுத்த முடிவு அவர்களெல்லோரையும் பாதித்தது. குடும்பத் தலைவன் எடுக்கும் தீர்மானங்கள் தவிர்க்க முடியாதபடி குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் பாதிக்கின்றன.

குறிப்பாக வீட்டுத் தலைவர்களான தந்தையர் இந்த நியதியைப் புரிந்துகொள்ள வேண்டும். சபை ஆராதனை, சபை, நண்பர்கள், கல்வி, வேலை, பொழுதுபோக்கு, ஆவிக்குரிய முன்னுரிமைகள் ஆகியவை பற்றி நீங்கள் எடுக்கின்றன ஒவ்வொரு தீர்மானங்களும் உங்கள் பிள்ளைகள் வளர்கின்ற சூழலை உருவாக்குகின்றன. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களால் ஆவிக்குரிய சூழலில் உங்களுடைய பிள்ளைகள் வளரமுடியாத நிலையை ஏற்படுத்தி வருகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை உதாரணங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவா? குடும்பமே பிள்ளைகள் கற்று நல்லொழுக்கத்தோடு வளரக் கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் கல்விநிலையம்.

ஒரு தகப்பனால் தன் பிள்ளைகளின் மனமாற்றத்தை ஒருபோதும் உறுதிசெய்ய முடியாது; ஆனால் தேவனுடைய வார்த்தையின்படி தன் குடும்பத்தை ஒழுங்குபடுத்துவது அவனுடைய தவிர்க்க முடியாத பொறுப்பு. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15) என்று அறிவித்தபோது யோசுவா இதை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தான்.

குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது அவசியம்; ஆனால் ஆவிக்குரிய தேவைகளை நிறைவேற்றுவது அதைவிட முக்கியமானது. நம்முடைய கர்த்தர் கேட்கிறார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மத்தேயு 16:26). பொருளாதாரத் தேவைக்காக ஆத்துமாவை சிலை வணக்கப் பண்பாட்டிற்கு அடகு வைப்பது எத்தனை ஆபத்து? மனைவி, பிள்ளைகள் கர்த்தரை வழிபட்டு அவருடைய வழிகளில் நடப்பதற்குத் தடையாகக் காணப்படும் பண்பாட்டுச் சூழலில் அவர்களைத் தள்ளிவிடுகின்ற குடும்பத் தலைவன் எந்தவகையில் ஆவிக்குரியவனாக இருப்பான்?

மோவாபிற்குத் தன் குடும்பத்தை அழைத்துச் சென்ற எலிமெலேக்குவின் முடிவை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவனுடைய முடிவு குடும்பத்திற்கு ஆவிக்குரிய ஆபத்தையும், குறுகிய கால வாழ்க்கையையும், மரணத்தையும் மட்டுமே கொண்டு வந்தது. இறுதியில் எலிமெலேக்கும், அவனுடைய மகன்களும் மோவாபிற்கு வந்த பத்துவருடத்திற்குள் மரணத்தைச் சந்தித்தார்கள். எலிமெலேக்கு கர்த்தரின் உடன்படிக்கைக்கு எதிராகச் செய்த பாவமே அவனுடையதும், அவனுடைய மகன்களின் மரணத்திற்கும் காரணம் என்று நான் யோபுவின் ஆலோசகர்களைப் போலச் சொல்ல வரவில்லை. அதற்கு கர்த்தரின் பராமரிப்பு மட்டுமே பதில்சொல்ல முடியும். இருந்தபோதும், அவன் ஆரம்பத்தில் கர்த்தரின் உடன்படிக்கைக்கு எதிராக எடுத்த மிகத் தவறான முடிவு பெரிதாக எந்த நன்மையையோ, ஆசீர்வாதத்தையோ குடும்பத்திற்குக் கொண்டு வரவில்லை. கர்த்தரின் தேசத்தைவிட்டுப் பொருளாதார நன்மையை நாடிப்போன எலிமெலேக்கு இறுதியில் இருந்ததனைத்தையும் இழந்துபோகும் நிலைக்குத் தன் குடும்பத்தைத் தள்ளிவிட்டான். நகோமியின் வார்த்தைகளைக் கவனியுங்கள்,

“நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்.”

என்ன செய்துவிட்டாய் எலிமெலேக்கு!

 

தொடரும் சீர்திருத்தம்: நைசீன் விசுவாச அறிக்கை

[நைசீன் அறிக்கை பற்றிய இந்த ஆக்கத்தை எழுதியவர் வொரன் பீல். மதிப்புக்குரிய மறைந்த எட்வர்ட் டொன்னலியின் மருமகனும், அயர்லாந்து நாட்டின், கலவே எனுமிடத்திலுள்ள திருச்சபையின் போதகருமாவார்.]

சீர்திருத்தவாதிகள் தங்களைப் புதிதாக எதையும் உருவாக்கியவர்களாகக் கருதாமல் ஏற்கனவே இருந்தவற்றை சீரமைத்தவர்களாகவே கருதினர். சீர்திருத்தவாதம் என்பது புதிதாக ஒரு மதத்தை உருவாக்கிய இயக்கம் அல்ல; பல நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல மறைக்கப்பட்டு, மங்கலாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்த அப்போஸ்தலரின் பழமையான சத்தியங்களை மீண்டும் கண்டுபிடித்த இயக்கமாகும்.

சீர்திருத்த இயக்கத்தின் அநேக முக்கிய முழக்கங்களில் ஒன்று இலத்தீன் மொழியில் ad fontes[1] என்ற வார்த்தைப் பிரயோகமாகும். அதன் பொருள், “ஊற்றுக்கண்களிடமே திரும்புவோம்”, அதாவது “மூல ஆதாரங்களுக்குத் திரும்புவோம்” என்பதாகும். முக்கியமாக இந்த வார்த்தைப் பிரயோகம் வேதத்தின் மூல மொழிகளுக்குத் திரும்புவதைக் குறித்தாலும், அது சுட்டும் அந்த மூல ஊற்றுகளில் நைசீன் விசுவாச அறிக்கையும் ஒன்றாகும்.

ரோமன் கத்தோலிக்க கார்டினல் சடலேட்டோவுக்கு எழுதிய தனது புகழ்பெற்ற கடிதத்தில் கல்வின் இவ்வாறு கூறுகிறார்: “ஆதித் திருச்சபையோடு எங்களுக்கிருக்கும் ஒற்றுமை உங்களுடையதைவிட மிகவும் அதிகமானது.”

உண்மையில், நைசியாவின் உண்மையான வாரிசுகள் சீர்திருத்தவாதிகளே.

நைசீன் அறிக்கையின் இந்த 1700-ம் ஆண்டு நினைவு விழா, இதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். நைசீன் விசுவாச அறிக்கை நமக்குச் சொந்தமானது. பாரம்பரிய அப்போஸ்தலரின் கிறிஸ்தவ விசுவாசத்தோடு நாமும் இணைந்து நிற்கிறோம்.

ஒருவேளை நீங்கள் 1646 வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையோ, அல்லது 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையையோ முழுமனதுடன் ஏற்றுக்கொள்பவராக இருக்கலாம். அது மிகவும் நல்லதே! ஆனால், அந்த அறிக்கைகள் நம்மிடம் இருப்பதால், அவை பிறப்பதற்கு முன்பிருந்தவற்றைப் பற்றி இனிச் சிந்திக்க வேண்டியதில்லை என்று நினைக்கக்கூடாது. நைசீன் விசுவாச அறிக்கையைப் படிப்பது, இன்று ஐபோன் 17ஐப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மீண்டும் பழைய ஐபோன் 3-க்கு அல்லது பீடாமெக்ஸ்[2] (Betamax) வீடியோ பதிவு கருவிக்கோ திரும்புவது போன்ற பயனற்ற செயல் என்று சிலர் எண்ணலாம்.

“இப்போது நம்மிடம் இருப்பவை, முன்பிருந்தவற்றின் எல்லாப் பணிகளையும் இன்னும் சிறப்பாகச் செய்கின்றன; மேலும் அவை செய்யாத பலவற்றையும் செய்கின்றன. அப்படியிருக்க, நாம் ஏன் பழையவற்றுக்குத் திரும்ப வேண்டும்?” என்று அவர்கள் கேட்கலாம். ஆனால், நாம் இன்று விசுவாசிக்கும் சத்தியங்கள் கடந்த வியாழக்கிழமை யாரோ ஒருவரால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்பதை மீண்டும் உணர்வது மிகவும் அவசியம். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவம் மடிந்து கொண்டிருப்பதுபோலவும், தேவனுடைய ராஜ்யம் பின்வாங்கிக் கொண்டிருப்பதுபோலவும் தோன்றும் இந்தக் காலத்தில், இந்த உண்மை நமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.

நைசியா விசுவாச அறிக்கை, நமக்கு முன் வாழ்ந்த எண்ணற்ற விசுவாசிகளை நினைவூட்டுகிறது. நாம் இன்று பயன்படுத்தும் இதே வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். நாம் தேவனைப் பற்றி விசுவாசிக்கும் அதே சத்தியங்களை அவர்களும் விசுவாசித்தார்கள்.

கெவின் ஓர்ட்லண்ட் (Gavin Ortlund) இதை அழகாக விளக்குகிறார். கொரிந்துவில் வாழ்ந்த ஒரு சாதாரண வயல்வெளி விவசாயி, ரோமில் வாழ்ந்த செல்வந்த வணிகர், ஒழுக்கக்கேடான வாழ்க்கையிலிருந்து கிறிஸ்துவினிடத்தில் மனந்திரும்பிய அந்தியோகியாவின் ஒரு நடிகை, ஆறாம் நூற்றாண்டில் அகஸ்தீனின் சுவிசேஷப் பணியினால் பழைய இங்கிலாந்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் மனந்திரும்பிய ஒரு சிறுவன் - இவர்கள் அனைவரும் திரித்துவ தேவனில் தாங்கள் கொண்டிருந்த ஒரே விசுவாசத்தை அறிக்கையிட, நாம் இன்று பயன்படுத்தும் இதே வார்த்தைகளையே பயன்படுத்தினர்.

இது, இன்று பல சுவிசேஷ சபைகளில் காணப்படும் “தற்கால அறிவுத் திமிருக்கு” (chronological snobbery[3]) சிறந்த மருந்தாகும். பழையதென்றாலே அது காலாவதியானது, பயன்பாடற்றது என்று அலட்சியமாகப் பார்ப்பது இன்றைய தலைமுறையினரின் பொதுவான மனப்பான்மையாகிவிட்டது.

ஆனால், மறுபுறம், காலத்தின் சோதனையைத் தாங்கி நிலைத்திருக்கும் உறுதியான, தொன்மையான விசுவாசத்தை நாடும் ஏக்கம் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்திற்கான சிறந்த பதிலை இந்தப் பாரம்பரிய விசுவாச அறிக்கைகள் நமக்குக் கொடுக்கின்றன.

நைசியா விசுவாச அறிக்கை, சீர்திருத்த இயக்கத்தின் இன்னுமொரு முக்கிய கொள்கைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அது “எப்போதும் சீர்திருத்தமடைந்து கொண்டிருத்தல்” (Ecclesia reformata, semper reformanda) என்ற கொள்கையாகும். ஏனெனில், நைசியா விசுவாச அறிக்கை அதற்கு முன்பிருந்த விசுவாச அறிக்கைகளின் தொடர்ச்சியாகும். அது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை; மாறாக, அது ஏற்கனவே இருந்த சத்தியங்களை மீண்டும் நினைவுபடுத்தி, அவற்றை மேலும் தெளிவுபடுத்தி, அக்காலத் தேவைக்கு ஏற்றவிதத்தில் இன்னும் துல்லியமாக விளக்கியது.

அப்போஸ்தலர் விசுவாச அறிக்கையை (Apostles Creed) (இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே உருவானதாகத் கருதப்படுகிறது) இந்த நைசீன் அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை மிகத் தெளிவாகத் தெரியும். அப்போஸ்தலர் விசுவாச அறிக்கை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர்மேல் இருக்கவேண்டிய விசுவாசத்தை அறிக்கையிடுகிறது. ஆனால், குமாரனுடைய தேவத்துவ இயல்பைப் பற்றி அதில் விரிவாக எதுவும் கூறப்படவில்லை. அதுபோல, பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும், அவர் தேவன் என்பதை மறைமுகமாக உணர்த்துவதைத் தவிர, வேறு எந்த விளக்கமும் அதில் தரப்படவில்லை.

ஆனால், தேவகுமாரனின் இயல்பை எவ்வாறு சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பலவிதமான கருத்துகள் ஆதிசபைக் காலத்தில் தோன்றத் தொடங்கியபோது, வேதாகமம் குமாரனைப் பற்றி போதிப்பதை இன்னும் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்குவதற்கு விரிவான விளக்கமும், மொழிநடையும் தேவைப்பட்டது.

இயேசு தேவனுடைய குமாரன் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. அதில் அனைவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், எந்த விதத்தில் அவர் தேவகுமாரன்? பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு என்ன? குமாரன் எவ்வகையில் பிதாவிடமிருந்து பிறப்பிக்கப்பட்டார்? இந்தக் கேள்விகளே விவாதத்தின் மையமாகின.

இந்த விவாதங்கள் நான்காம் நூற்றாண்டில் உச்சக்கட்டத்தை எட்டின. காரணம், அலெக்ஸாண்டிரியாவில் பணியாற்றிய ஏரியஸ் என்ற பிசப், இயேசு நித்திய தேவன் அல்ல; தேவனாகிய பிதாவால் உண்டாக்கப்பட்ட, தேவனைவிடத் தாழ்ந்த ஒரு உயர்ந்த படைப்பு என்று போதித்தார்.

அவருடைய தர்க்கவாதம் பின்வருமாறு இருந்தது: இயேசு “பிறப்பிக்கப்பட்டவர்” (begotten) என்றால், அவர் ஒருகாலத்தில் இல்லாதவராக இருந்து பின்னர் இருப்புக்கு வந்திருக்க வேண்டும். ஏனெனில், “பிறப்பித்தல்” என்பது ஒரு ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

அன்று எரியஸின் பெரும் முழக்கம் இதுதான்: “அவர் இல்லாத ஒரு காலம் இருந்தது.” ஏரியஸ் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சாளராக இருந்தார். அவர் தனது கருத்துக்களை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எளிதில் மனப்பாடம் செய்யக்கூடிய பாடல்களையும் இயற்றினார். அதன் விளைவாக, அவருடைய போதனை வேகமாக பரவியது. இதற்குப் பதிலளிக்கவே கி.பி. 325-இல் நைசியா நகரத்தில் 318 ஆயர்கள் கூடினர்.

அவர்கள் அங்கு கூடிய நோக்கம், திரித்துவத்தைப் பற்றிய ஒரு புதிய, சிக்கலான, தத்துவக் கோட்பாட்டைக் கண்டுபிடிப்பதற்கல்ல. தேவனுடைய இருப்பைப் பற்றி வேதாகமம் உண்மையில் என்ன போதிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

சிறிது குழப்பமாகத் தோன்றினாலும், இன்று நாம் “நைசீன் விசுவாச அறிக்கை” என்று நாம் அழைப்பது, உண்மையில் கி.பி. 325-இல் உருவாக்கப்பட்ட நைசீன் அறிக்கைக்குப் பின் வந்த விரிவாக்கப்பட்ட விளக்கமாகும்.

அதன் முழுப் பெயர் “நைசியா-கொன்ஸ்டான்டினோப்பிள் விசுவாச அறிக்கை” (Niceno-Constantinopolitan Creed[4]) ஆகும். இது கி.பி. 381-இல் கொன்ஸ்தாந்தினோப்பிள் சபைத்தலைவர்கள் பேரவையில் உருவாக்கப்பட்டது.

இது நைசியா சபைத் தலைவர்கள் பேரவை உருவாக்கிய இறையியலை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு, தேவகுமாரனின் இயல்பைப் பற்றிய விவாதங்கள் அன்று தொடர்ந்து நீடித்ததால், அந்தச் சத்தியங்களை மேலும் விரிவுபடுத்தி, மேலும் துல்லியமாக விளக்கியது.

ஆதிசபை அப்போஸ்தலர் விசுவாச அறிக்கை, கி.பி. 325 ஆம் ஆண்டின் நைசீன் விசுவாச அறிக்கை, மற்றும் கி.பி. 381 ஆம் ஆண்டின் நைசியா-கொன்ஸ்தாந்தினோப்பிள் விசுவாச அறிக்கை ஆகிய மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வேதாகமம் வெளிப்படுத்துகின்ற இயேசு கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தையும் கிரியையையும் பற்றிய மாறாத சத்தியம், காலப்போக்கில் மேலும் மேலும் தெளிவாகவும் துல்லியமாகவும் அறிக்கையிடப்பட்டதை நாம் காண முடிகிறது.

நைசீன் விசுவாச அறிக்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் கற்பிக்கிறது. தேவனைப் பற்றிய நமது சிந்தனையிலும், நமது விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்திலும், இயன்றவரை மிகுந்த துல்லியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது.

இது, இறையியல் விவாதங்களில் ஈடுபடுவதில் பொறுமையற்ற மனப்பான்மை அதிகரித்துள்ள இக்காலத்தில், நமக்கு ஒரு சவாலும் ஊக்கமும் ஆகும்.

அநேக கிறிஸ்தவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

“நாம் இயேசுவையும், ஒருவரையொருவரும் நேசித்தாலே போதும். கோட்பாட்டு வேறுபாடுகளுக்காகச் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, இரட்சிக்கப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்போம்.”

ஆனால், சாதாரணமாக மிக எளிமையானதாகத் தோன்றும் இந்தப் பேச்சுக்கள் கூட, நம்மை நைசீன் விசுவாச அறிக்கையின் மையத்தில் உள்ள ஆழமான இறையியலுக்கே வழிநடத்திச் செல்கின்றன. பிதாவோடு குமாரனுக்கிருக்கும் உறவு பற்றிய உண்மைகள் தெளிவில்லாத வெறும் தத்துவப் புதிர்கள் அல்ல.

இயேசு யார்? அவரை நேசிப்பது என்றால் என்ன? அவரை தேவனாக ஆராதிக்கலாமா? இரட்சிக்கப்படாதவர்களுக்கு சொல்ல வேண்டிய சுவிசேஷம் என்ன? இயேசு எவ்வாறு நம்மை இரட்சிக்கிறார்? அவர் என்ன செய்தார்? அவர் செய்த கிரியையின் பலன் நமக்குக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இத்தகைய கேள்விகளுக்கான விடையை அறிய, நாம் கடினமாக உழைத்து, ஆழமாகவும் கவனமாகவும் சிந்திக்க வேண்டியது அவசியம்.

பீட்டர் சான்லன் இவ்வாறு எழுதுகிறார்:

“தேவன், தமது குமாரனைப் பற்றி நாம் எதை விசுவாசிக்க வேண்டும் என்பதை, நம்முடைய ஆண்டவரின் ஞானஸ்நானத்தின் போது செய்ததுபோல, வானத்திலிருந்து ஒரு சத்தத்தின்மூலம் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக, மிகுந்த நேரமும், விவாதங்களும், பரஸ்பரத் தாழ்மையும் அவசியமான ஒரு முழுமையான வேத வெளிப்படுத்தலை அவர் நமக்குக் கொடுத்துள்ளார்.”

இந்த உண்மை, சீர்திருத்தப் பணியில் அர்ப்பணிப்புள்ள உழைப்பை மேற்கொண்ட அந்தப் பாரம்பரிய தேவ ஊழியர்களுக்காக நாம் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கச் செய்யவேண்டும். கல்வின், பெவிங்க் போன்ற இறையியலாளர்களின் நூல்கள் கையில் இல்லாமலேயே, வேதாகமத்தை ஆராய்ந்து, ஜெபித்து, விவாதித்து, இந்தச் சத்தியங்களை அவர்கள் தெளிவாக வடிவமைத்திருக்கிறார்கள்.

உண்மையில், நாம் மகத்தான ஆவிக்குரிய மாமனிதர்களின் தோள்கள்மீது நிற்கிறோம்.

அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற இந்தச் செல்வமிக்க மரபுரிமையை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா?

நைசீன் விசுவாச அறிக்கை, போலிப் போதனைகளின்மேலும் தேவன் தமது இறையாண்மையைப் பயன்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். போலிப் போதனை நல்லதல்ல; அது தீமையானது. ஆனால், தமது இறையாண்மையுள்ள ஞானத்தால், தேவன் அதைக்கூட நன்மைக்காகப் பயன்படுத்துகிறார்.

திருச்சபை சத்தியத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்ய, தேவன் மீண்டும் மீண்டும் தவறான போதனைகளையும் இறையியல் சர்ச்சைகளையும் பயன்படுத்துகிறார்.

ரோமர் 8:28-ல் உள்ள வாக்குத்தத்தம், தவறான போதனைகளுக்கும் பொருந்துகிறது. “சகலமும்” என்றால் உண்மையாகவே சகலமும் என்று பொருள்படும்.

தவறான போதனைகள் எழும்போது, தேவன் காலத்திற்கேற்றபடி சத்தியத்தை இன்னும் துல்லியமாக விளக்கக்கூடிய சிந்தனையாளர்களையும் எழுப்புகிறார். இசக்கார் கோத்திரத்தாரைப் பற்றி வேதாகமம் கூறுவது போல, அவர்கள் “காலங்களை அறிந்தவர்கள்” (1 நாளாகமம் 12:32).

நைசியாவில் அது நடந்தது. இன்றும் அது தொடர்ந்து நடைபெறுகிறது.

உதாரணமாக, LGBTQ+ இயக்கம், மனிதனைப் பற்றிய வேதாகமக் கோட்பாடு, தேவனுடைய சாயல், பாலினம், மற்றும் பாலுறவின் இயல்பு ஆகியவற்றைப் பற்றி திருச்சபை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது.

இது, இறுதியில், திருச்சபைக்கே ஒரு ஆசீர்வாதமாகிறது.

கெவின் டி யொங் இவ்வாறு கூறுகிறார்:

“நைசியா சபைத் தலைவர்கள் பேரவையில் கலந்து கொண்ட 318 ஆயர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், கிறிஸ்தவ விசுவாசம் முற்றிலும் புதிய விதங்களில் சவாலுக்குள்ளாகியிருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். நைசீன் விசுவாச அறிக்கை, விசுவாச அறிக்கைகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறதே தவிர, அதன் உச்சவரம்பை நிர்ணயிக்கவில்லை.”

இந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை.

நாம் நம்முடைய தலைமுறையில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டங்களையே நாம் மீண்டும் நடத்த வேண்டியதில்லை. நாம் எதிர்கொள்ள வேண்டியது, 2026ம் ஆண்டின் சவால்களாகும்.

சத்தியம் ஒருபோதும் மாறுவதில்லை. ஆனால், அந்தச் சத்தியத்தை அறிவிக்க வேண்டிய உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

போலிப் போதனைகள், கவனிக்காமல் போயிருந்திருக்கும் சத்தியங்களின் புதிய அம்சங்களையும், அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டியவற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்படி திருச்சபையைத் தூண்டுகின்றன. தேவனுடைய சத்தியம் எல்லையற்றது; அதில் முழுமையாக நீந்திக் கரைசேர்ந்துவிட முடியாது. “இப்போது எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது” என்று எந்தக் கிறிஸ்தவரும் கூற முடியாது. நித்தியம் வரையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

National Treasure என்ற திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் நினைவில் நிற்கும் ஒரு காட்சி உள்ளது. கதையின் நாயகர்கள், பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட புகழ்பெற்ற பொக்கிஷங்கள் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் நிலத்தடி பொக்கிஷ அறையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

அது மிகப் பெரிய, இருண்ட குகையைப் போன்ற இடமாக இருக்கிறது. அந்தக் குகை முழுவதும் எண்ணெய் நிரம்பிய கால்வாய்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் தீ பற்றவைக்கப்படும்போது, அந்த ஒளி குகை முழுவதும் பரவி, அங்கிருந்த பொன்னும், இரத்தினங்களும், விலைமதிப்பற்ற கலைப்பொருள்களும், அளவிட முடியாத செல்வங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன.

ஆனால், அந்தக் காட்சியின் உண்மையான ஆச்சரியம் வேறு ஒன்றாகும்.

அந்த எண்ணெய்க் கால்வாய்கள் முடிவில்லாமல் தொடர்ந்து பல திசைகளில் கிளைபிரிந்து செல்கின்றன. ஒளி மேலும் மேலும் பரவும்போது, அவர்கள் இதுவரை கற்பனைகூட செய்யாத அளவிற்கு அந்தப் பொக்கிஷம் பரந்து விரிந்திருப்பதை அவர்கள் காண்கிறார்கள். எண்ணற்ற ஏக்கர் பரப்பளவில் விலைமதிப்பற்ற செல்வங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.

என் பார்வையில், இது தேவனுடைய ஜனங்களுக்கு நித்தியம் எப்படி இருக்கும் என்பதற்கான அழகான ஓர் எடுத்துக்காட்டு. நமக்கு மேலும் மேலும் வெளிச்சம் கிடைக்கும். அதன் மூலம் தேவனுடைய மகிமையையும் மேன்மையையும் நாம் மேலும் மேலும் காண்போம். அந்த வெளிச்சம் நித்தியமெங்கும் விரிந்துகொண்டே இருக்கும். அதே நேரத்தில், நித்தியத்திற்கும் நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாதவை எப்போதும் இருக்கும்.

தேவன் எல்லையற்றவராயும், முழுமையாக அறிந்துகொள்ள முடியாதவராயும் இருப்பதால், அவரைப் பற்றிய இரகசியம் எப்போதும் நிலைத்திருக்கும். நம்மிடம் சத்தியம் இருக்கிறது. அநேக சத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லாச் சத்தியங்களையும் நாம் ஒருபோதும் முழுமையாகப் பெற்றிருக்க மாட்டோம்.

நைசீன் விசுவாச அறிக்கை, குமாரனின் நித்தியப் பிறப்பைப் (eternal generation) பற்றிய அனைத்து இரகசியங்களையும் அகற்றிவிடவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 1700 ஆண்டுகளாக நடைபெற்ற இறையியல் ஆய்வுகளாலும் அந்த மறைபொருள் முழுமையாக நீக்கப்படவில்லை.

நாம் என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதற்கான எல்லைகளை நைசீன் விசுவாச அறிக்கை தெளிவாக வரையறுத்தது. ஆனால், நம்முடைய மனம் எல்லையற்றதல்லாத காரணத்தினால், நாம் இன்னும் அறிய முடியாத எண்ணற்ற உண்மைகள் எப்போதும் இருந்து வரும். இருந்தபோதும் அது நம்மைக் கலங்கச் செய்யக்கூடாது.

தேவனுடைய ஆழமான காரியங்களைப் பற்றிப் பேசும்போது, மறைபொருள் இருப்பது இயல்பானதே. அதற்கும் மேலாக, அந்த மறைபொருளை நாம் விரும்ப வேண்டும்! நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தேவன், ஆராதிக்கத் தகுதியான தேவனாக இருக்க முடியாது. மறைபொருள் இருப்பதே, வேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு ஒரு சாட்சியாகும்.

கிறிஸ்தவம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமாக இருந்திருந்தால், அதில் எந்த மறைபொருளும் இருந்திருக்காது. எல்லாமே மனித அறிவுக்குப் புரியும் வகையிலும், முழுமையாகத் தர்க்கரீதியாகவும் அமைந்திருக்கும். அப்போது விசுவாசம் தேவையற்றதாகிவிடும். மனித அறிவுக்கு அப்பாற்பட்டதாகவோ, அதைத் திகைக்கச் செய்வதாகவோ, அதற்கு இடறலாகவோ எதுவும் இருக்காது.

இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மறைபொருள் (mystery) என்பது முரண்பாடு (contradiction) அல்ல. மறைபொருள் என்பது, நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். முரண்பாடு என்பது, ஒரே நேரத்தில் ஒன்றை உண்மையென்றும் பொய்யென்றும் கூறுவதாகும். நாம் ஒரு உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக, அது பொய்யாகிவிடாது.

இந்த உண்மைகள், நம்மை அமைதியான விசுவாசத்திற்கும், ஆண்டவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைக்கும், உண்மையான ஆராதனைக்கும் வழிநடத்த வேண்டும்.


பின்குறிப்புகள்:

[1] Ad fontes - இலத்தீன் சொற்றொடர்; “மூல ஆதாரங்களுக்குத் திரும்புதல்” (back to the sources) என்று பொருள். குறிப்பாக மறுமலர்ச்சிக் காலத்தில், பிற்காலத்து விளக்கங்களை மட்டும் சார்ந்திராமல், மூல நூல்களையும் ஆதாரங்களையும் நேரடியாக ஆராய்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

[2] Betamax - 1975-ல் Sony அறிமுகப்படுத்திய வீடியோ கேசட் பதிவு முறை (video cassette format). பின்னர் VHS பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்ததால் Betamax படிப்படியாக வழக்கொழிந்தது. எனவே, ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தும் பின்னர் காலாவதியான அல்லது பயன்பாட்டிலிருந்து மறைந்த ஒன்றை எடுத்துக்காட்டுவதற்கு இப்பெயர் சிலவேளைகளில் பயன்படுத்தப்படுகிறது.

[3] Chronological snobbery - C. S. Lewis பிரபலப்படுத்திய சொற்றொடர். “தற்கால அறிவுத் திமிர்” என்று தமிழாக்கலாம். முந்தைய தலைமுறையினரின் கருத்துக்கள் பழையவை என்பதற்காகவே அவற்றைத் தாழ்வாகக் கருதி, தற்காலக் கருத்துக்கள் புதியவை என்பதற்காகவே அவற்றை மேலானவையாகக் கருதும் மனப்பான்மையைக் குறிக்கிறது.

[4] Niceno-Constantinopolitan Creed - நைசியா-கொன்ஸ்தாந்தினோப்பிள் விசுவாச அறிக்கை. கி.பி. 325-ல் நைசியா பேரவையில் உருவான விசுவாச அறிக்கையின் அடிப்படையில், கி.பி. 381-ல் கொன்ஸ்தாந்திநோப்பிள் பேரவையுடன் தொடர்புபடுத்தப்படும் விசுவாச அறிக்கை. பொதுவாக இதுவும் “Nicene Creed - நைசீன் விசுவாச அறிக்கை” என்றே அழைக்கப்படுகிறது. திரித்துவத்தைப் பற்றியும், குறிப்பாக குமாரனுடைய முழுமையான தெய்வத்துவத்தையும் ஆவியானவரைப் பற்றிய விசுவாசத்தையும் தெளிவாக அறிக்கையிடுகிறது.


 

ஆதி சபை விசுவாச அறிக்கைகள்

அப்போஸ்தல அறிக்கையிலிருந்து கெல்சிடோனிய அறிக்கைவரை

சமீப காலமாக என் இறையியல் மாணவர்களுக்கு நான் கிறிஸ்துவியல் பற்றிய போலிப்போதனைகளை விளக்கி வந்திருக்கிறேன். அதாவது, கிறிஸ்துவுக்கு எதிரான, அவரை உள்ளது உள்ளபடி விளக்காமல் வேறுபடுத்தி விளக்கும் வேதத்திற்குப் புறம்பான போலிப்போதனைகளை விளக்கியிருக்கிறேன்.

என்னடா! இவர் ஏன் நேரத்தை வீணாக்கிப் போலிப்போதனைகளை விளக்கி வருகிறார். அதைப் படித்து என்ன ஆகப்போகிறது? அது ஆத்துமாக்களை திசைதிருப்பி விடுமே. அதைவிட சத்தியங்களை நேரடியாக சொல்லித்தரலாமே என்று சில குரல்கள் எழும். அதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. சத்தியங்களை நன்றாகக் கற்று அவற்றைப் பயன்படுத்தி போலிப்போதனைகளை அடையாளங்கண்டு அவற்றின் நச்சுத்தோலை உரித்துக்காட்டி, அவற்றிற்கெதிரான வேதசத்தியங்களைத் துல்லியமாக விளக்கி திருச்சபையை வழிநடத்தி வருகின்ற நல்ல சபைத்தலைமை இன்றில்லாதிருக்கும் நிலையில் இத்தகைய குரல்கள் எழுவதில் ஆச்சரியமில்லைதான்.

எதை விசுவாசிக்கிறோம் என்பதைத் தெளிவாக, அச்சுவேறு ஆணிவேராக விளக்குகின்ற விசுவாச அறிக்கையொன்றைக் கொண்டிராமலும், எதை விசுவாசிக்கிறோம், விசுவாசிக்கவில்லை என்பதை ஆத்துமாக்கள் கண்டுபிடிக்க வழியில்லாதபடி திருச்சபை சட்டவிதிகளையோ, சட்ட அமைப்பையோ, முறையான அங்கத்தவர்கள் அமைப்பையோ, ஒழுங்கு நடவடிக்கையையோ கொண்டிராமல் திருச்சபை என்ற பெயரில் ஒரு நிலையற்ற பரதேசிக்கூட்டத்தை* நடத்தி வருகின்ற, தகுதிகளை ஆராய்ந்து சபைத்தலைமைக்கு நியமிக்கப்படாமல் தங்களைத் தாங்களே போதகர்களாக நியமித்துக்கொண்ட ‘ஊழியர்கள்’ பரவலாக இருந்து வரும் நம்மினத்தில் இத்தகைய குரல்கள் எழத்தான் செய்யும்.

இந்தக் குரல்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய பதிலை மறைந்த சீர்திருத்த போதகர் ஆர். சி. ஸ்பிரவுல் அருமையாக விளக்கியிருக்கிறார். அவர் ஒல்லாந்து நாட்டுக்கு இறையியல் கற்றுக்கொள்ள சென்றபோது முதல் வருடம் முழுதும் அவர் கற்றுக்கொண்ட இறையியல் போதனை, “போலிப்போதனைகளின் வரலாறு” (The History of Heresy). அதுபோல வேறெதுவும் தனக்குப் பயனளித்ததில்லை என்று ஸ்பிரவுல் சொல்லியிருக்கிறார். ஏன், தெரியுமா? போலிப்போதனைகளின் வரலாற்றை ஆழமாகவும் துல்லியமாகவும் கற்றுக்கொண்டதன் மூலம் வேத சத்தியங்களை நான் மேலும் ஆழமாகவும், மிகத்துல்லியமாகவும் கற்றுக்கொண்டேன் என்கிறார் ஸ்பிரவுல். போலிப்போதனைகளை அந்தளவுக்கு நான் அறியாமல் இருந்திருந்தால் சத்தியத்தில் பிற்காலத்தில் தெள்ளத்தெளிவுள்ளவனாக இருந்திருக்க மாட்டேன் என்கிறார் அவர். இது எத்தனை பெரிய உண்மை தெரியுமா?

போலிப்போதனைகள் எழ ஆரம்பித்து திருச்சபைகளைத் தாக்கியபோது அப்போஸ்தலர்கள் நம்மினத்து சபைத்தலைவர்களைப்போல ஆதிசபையில் காப்பி குடித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கவில்லை. அவர்கள் காலத்தை வீணாக்காமல் அவற்றை உடனடியாக நேரடியாக எதிர்கொண்டார்கள். அவற்றின் தோலை உரித்துக்காட்டி அத்தகைய போதனைகளையும், அவற்றைப் போதிப்பவர்களையும் தூக்கியெறியும்படி ஒவ்வொரு சபைக்கும் அவர்கள் எழுதிய நிருபங்களைப் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம்.

கீழ்வரும் வசனங்களைப் படித்துப் பாருங்கள், நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.

2 பேதுரு 2:1

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

கலாத்தியர் 1:8-9

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

2 கொரிந்தியர் 11:13-15

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

தீத்து 3:10-11

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

மேல்வரும் வசனங்களை உதாரணத்திற்குத் தந்திருக்கிறேன். இன்னும் அநேக வசனப் பகுதிகளை என்னால் இனங்காட்ட முடியும். இயேசு கிறிஸ்து முதல் அப்போஸ்தலர்கள் வரை போலிப் போதனையாளருக்கு எதிராகவும் போலிப்போதனைகளுக்கு எதிராகவும் இந்தளவுக்கு சபைகளை எச்சரித்திருக்கிறார்கள். போலிப்போதனைகளினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து அவற்றைத் தவிர்த்துக்கொள்ளும்படியும், அவற்றைப் போதிப்பவர்களோடு தொடர்பை அறுத்துக்கொள்ளும்படியும் சபைகளுக்கு அறிவுரை தந்திருக்கிறார்கள்.

சத்தியம் தெரியாதவர்களால் போலிப்போதனைகளை இனங்கண்டுகொள்ள முடியாது. விசுவாச அறிக்கைகளை வாசித்து வளர்ந்திருக்காதவர்களால் அவற்றைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாது. சீதையைக் கௌவிக்கொள்ள மானுருவில் வந்த மாயமானைப்போல போலிப்போதனைகள் நம்முடைய இருதயத்தைக் கவிழ்க்க முயற்சி செய்யும்.

சத்தியம் துல்லியமாகத் தெரிந்திருந்து நிதானத்தோடு அதைப் பயன்படுத்தியே போலிப்போதனைகளை அடையாளங் காணவேண்டும். அதை ஒரு கத்துக்குட்டியால் செய்துவிட முடியாது. புட்டிப்பால் குடிக்கும் நிலையிலிருக்கும் புதிய விசுவாசியால் செய்துவிடமுடியாது. நல்ல வேதக்கல்வித்திறமும், முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள சபைத் தலைமையாலேயே அதைச் செய்யமுடியும்.

அப்போஸ்தலர் அறிக்கையும், நைசீன் அறிக்கையும்

போலிப்போதனைகளிலிருந்து சபையைக் காத்துக்கொள்வதற்காகத்தான் ஆதி சபையிலும் சுவிசேஷத்தின் அடிப்படை உண்மைகளை விளக்கும் “அப்போஸ்தலர் அறிக்கை” எனும் விசுவாச அறிக்கை 2ம் நூற்றாண்டளவில் இருந்திருக்கிறது. இதை சபைகளில் வாசித்திருக்கிறார்கள். சபை மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் போலிப்போதனைகளின் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்ததுதான்.

அதற்குப் பின் நான்காம் நூற்றாண்டில் ஏரியனியம் என்ற நச்சுப்போதனை கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலித்து அவரை வெறும் மனிதனாக மட்டும் காட்ட முயன்றதால் நாட்டரசனான கொன்ஸ்டன்டைனும், திருச்சபையும் அதை ஆராய்ந்து அதற்கொரு முடிவுகட்ட கி.பி. 325ல் நைசியா எனுமிடத்தில் 318 சபைத்தலைவர்களைக் கொண்ட ஒரு பேரவையைக்கூட்டி ஏரியனியத்திற்கு எதிரான தெளிவான வேதவிளக்கத்தை நைசீன் அறிக்கை மூலம் வெளியிட்டனர். இந்த அறிக்கை 1700 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அன்றிருந்த சபைகளை இது பாதுகாத்தது. ஏரியனியத்தைப் பரப்பிய ஏரியஸும் போலிப்போதனையாளனாக இனங்காணப்பட்டு திருச்சபையால் தள்ளிவைக்கப்பட்டான்.

ஏரியஸோடு தன் வாழ்நாள் முழுதும் சத்தியப்போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியப் போர்வீரர்தான் அத்தனேசியஸ். கி.பி. 325ல் நைசீன் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும் ஏரியனியம் உடனடியாக சபைகளை விட்டு ஒடிப்போகவில்லை. அதற்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிறு கூட்டமும் தொடர்ந்திருந்தது. அதனால்தான் ஏரியஸோடு தன்னுடைய போராட்டத்தை அத்தனேசியஸ் தொடர்ந்து நடத்தி வந்திருந்தார். தன் வாழ்நாளையே சத்தியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருந்த அதிசய மனிதர் அத்தனேஸியஸ்.

நைசீன் அறிக்கை சத்தியமனைத்தையும் முழுமையாக விளக்கி எழுதப்பட்ட ஒரு விசுவாச அறிக்கை அல்ல. அன்று காணப்பட்ட போலிப்போதனையான ஏரியனியத்திற்கு எதிராக கிறிஸ்துவின் தெய்வீகத்தை நிலைநாட்ட எழுதப்பட்ட அறிக்கை மட்டுமே. இருந்தபோதும் திரித்துவ ஆள்தத்துவங்களைப் பற்றிய தெளிவான, துல்லியமான விளக்கத்தைத் தந்த நைசீன் அறிக்கை அதற்குப் பின்னால் 17ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்ட அத்தனை விசுவாச அறிக்கைகளுக்கும் பலமான அடித்தளமாக இருந்திருக்கிறது. இதற்குப் பின்வந்த அத்தனை அறிக்கைகளும் திரித்துவம் பற்றி நைசீன் அறிக்கை தந்த விளக்கத்திற்கு மாறாத எதையும் ஒருபோதும் எழுதவில்லை. அந்தளவுக்கு நைசீன் அறிக்கை திருச்சபை வரலாற்றில் மிகமுக்கியமான அறிக்கையாக இடம் வகித்து வருகிறது. இன்றுவரை சீர்திருத்த திருச்சபைகள் அனைத்தும் ஏற்றுப் பயன்படுத்தி வரும் அறிக்கையாகவும் இருந்து வருகிறது. திரித்துவப் போதனை பற்றிய விஷயத்தில் நைசீன் அறிக்கைக்கு எதிராக எதையும் சொல்பவர்கள் திரித்துவத்திற்கு எதிரான போலிப்போதனையைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

நைசீன் போன்ற அத்தனை விசுவாச அறிக்கைகளையும் வெறும் மனித எழுத்துக்களாகவும் கர்த்தரோடும், வேதத்தோடும் தொடர்பற்றவையாகவும் கருதி வருகின்ற ஒருகூட்டம் இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு அறியாமையைத் தவிர வேறு காரணமில்லை. சபை வரலாறோ, சபை வரலாற்றில் வளர்ந்து வந்திருக்கும் வரலாற்று இறையியலோ அறியாத கூட்டமே இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கும். அத்தோடு சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே எங்கள் பணி, சத்தியங்களில் அக்கறை காட்டி சத்தியம், சத்தியம் என்று அலையக்கூடாது என்று கூறி, ஆத்துமாக்கள் சத்தியத்தைக் கற்று வளரமுடியாமல் செய்து வரும் போலிச்சுவிசேஷக் கூட்டமும் இன்று ஆத்துமாக்களை இருட்டில் இருக்கச் செய்து வருகிறது. இத்தகைய நிலைமை போலிப்போதனைகள் துளிர்விட்டு செடியாகி, கிளைவிட்டு வளரும் மரமாகி கொஞ்ச நஞ்சமிருந்த சத்தியத்தையும் அடியோடு அழித்து ஆத்துமாக்களை வேதத்தை விட்டு விலகி நிற்கும்படி செய்து வருகின்றது. இதற்கெல்லாம் நல்ல உதாரணம் அனாமத்துக்களால் யூடியூபில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் ஏராளமான தமிழ் பிரசங்கங்களே.

நைசீன் அறிக்கைக்குப் பின் 381ல் எழுதப்பட்ட அறிக்கைக்குப் பெயர் கொன்ஸ்தாந்தினோப்பிள் அறிக்கை. இது வரையப்பட்டதற்கான காரணம் நைசீன் அறிக்கை மிகத் தெளிவானதாக இருந்தபோதும், அதில் காணப்படாத திரித்துவம் தொடர்பான மேலும் தெளிவான விளக்கங்களை அளிப்பதற்காகவே. நைசீன் அறிக்கை வெளியிடப்பட்ட பின்பு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் பதிலளிக்கு முகமாகவே இந்த அறிக்கை சபைத் தலைவர்களால் வெளியிடப்பட்டு திருச்சபைகளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறிக்கை பரிசுத்த ஆவியானவர் பிதாவிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் புறப்படுகின்றார் என்ற Filioque இணைப்பைச் சேர்த்திருந்தது. இது நைசீன் அறிக்கையில் காணப்படவில்லை. இருந்தபோதும் நைசீன் அறிக்கை அதற்கெதிரானதாக இருக்கவில்லை. இந்தப் புதிய அறிக்கை நைசீன்-கொன்ஸ்டாட்டிநோப்பிள் அறிக்கை என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; வேறுபாடானவையோ, முரண்பாடானவையோ அல்ல.

கெல்சிடோனிய விசுவாச அறிக்கை (கி.பி. 451)

அதற்குப் பிறகு திருச்சபை வரலாற்றில் வெளிவந்த முக்கியமான விசுவாச அறிக்கை கெல்சிடோனியன் அறிக்கை. இது கி.பி. 451ல் வெளியிடப்பட்டது. இதன் முக்கியத்துவம், இது கிறிஸ்துவின் இரண்டு இயல்புகளைத் தெளிவாக விளக்குவதுதான். அதாவது, அவருடைய மானுட இயல்பையும், தெய்வீக இயல்பையும் இவ்வறிக்கை தெளிவாக விளக்கி நமக்கு உதவுகிறது. இவ்வறிக்கை வெளிவந்ததற்கான காரணம் 5ம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் இரு இயல்புகளைப் பற்றியும் எழுந்த பல்வேறு போலிப்போதனைகளே. ஒன்றுக்கு மேற்பட்ட அத்தகைய போலிப்போதனைகள் சரமாரியாக திருச்சபையைத் தாக்கியிருக்கின்றன.

அத்தகைய போலிப்போதனைகள் நச்சுத் தன்மைகொண்டவையாகவும் தேவகுமாரனும், மனிதகுமாரனுமாகிய இயேசு கிறிஸ்துவின் இரு இயல்புகளையும் மாசுபடுத்தி அவரை வேதம் விளக்குகின்ற விதத்தில் காட்டாமல் சுவிசேஷத்திற்கே ஆபத்து விளைவிப்பவையாகவும் இருந்தபடியால் திருச்சபை அன்று அமைதி காக்காமல் இப்போலிப்போதனைகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி சபைத்தலைவர்கள் கூடிய பேரவையில் போலிப்போதனைகளை ஆராய்ந்து அவற்றிற்கெதிரான அறிக்கையை வெளியிட்டு சபைகளைக் காத்தது.

மூன்றே வாரங்களில் எழுதி முடிக்கப்பட்ட கெல்சிடோனிய அறிக்கை கிறிஸ்துவின் இயல்புகளைப்பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த அறிக்கை என்று ஸ்டுவர்ட் ஒலியொட் எழுதியிருக்கிறார் (The Person of Christ, pg 116). அத்தோடு அதற்குப் பின்வந்த அத்தனை அறிக்கைகளும் இதையே பயன்படுத்திக்கொண்டுள்ளன. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையும், 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையும் கெல்சிடோனியன் அறிக்கையின் விளக்கங்களையே சத்தியம் மாறாமல் சுருக்கமாகத் தருகின்றன. அந்தளவுக்கு திருச்சபை இதில் காணப்பட்ட விளக்கங்களுக்கு மேலாகப் பெரிதாக எழுத எதுவும் இருக்கவில்லை. அவர்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. கெல்சிடோனியன் அறிக்கையை எவரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஏறக்குறைய கெல்சிடோனிய அறிக்கை வெளியிடப்பட்டு பன்னிரண்டு நூற்றாண்டுகள்வரை எழுதப்பட்டிருந்த எந்த விசுவாச அறிக்கையும் கெல்சிடோனிய அறிக்கை தரும் சத்தியங்களுக்கு எதிராக எதையும் எழுதவில்லை. ஆத்மீகத் தரத்திலும், சத்திய ஞானத்திலும் விண்ணுயரத்தில் இருந்த அத்தகைய மாமனிதர்கள் கல்சிடோனிய அறிக்கைக்குத் தந்திருக்கும் மதிப்பை உங்களால் உணரமுடிகிறதா?

இயேசு கிறிஸ்துவின் இயல்புகளைப் பற்றி விளக்கும் கெல்சிடோனிய அறிக்கை பின்வருமாறு கூறுகிறது,

“பரிசுத்த பிதாக்களைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒருமனப்பட்டு, ஒருவரும் அதே குமாரனுமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும்படி போதிக்கிறோம்.

அவரே தெய்வீக இயல்பில் பரிபூரணமானவரும், மானிட இயல்பிலும் பரிபூரணமானவரும்; மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமாயிருக்கிறார். பகுத்தறிவுள்ள ஆத்துமாவையும் சரீரத்தையும் உடையவராயிருக்கிறார்.

தெய்வீக இயல்பின்படி பிதாவோடு ஒரே சாரமுடையவரும், மானிட இயல்பின்படி நம்மோடு ஒரே சாரமுடையவருமாயிருக்கிறார். பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம்மைப் போன்றவராயிருக்கிறார்.

தெய்வீக இயல்பின்படி சகல காலங்களுக்கும் முன்னே பிதாவினால் பிறப்பிக்கப்பட்டவரும், மானிட இயல்பின்படி இந்தக் கடைசி நாட்களில் நமக்காகவும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் கன்னியாகிய மரியாளிடமிருந்து பிறந்தவருமாயிருக்கிறார்.

ஒருவரும், அதே கிறிஸ்துவும், குமாரனும், கர்த்தரும், ஒரேபேறானவருமாகிய அவரை, இரண்டு இயல்புகளில், குழப்பமின்றி, மாற்றமின்றி, பிரிவின்றி, பிரித்தலின்றி அறிந்துகொள்ள வேண்டும்.

இயல்புகளுக்கிடையிலான வேறுபாடு அவற்றின் ஐக்கியத்தினால் எவ்விதத்திலும் நீக்கப்படாமல், மாறாக, ஒவ்வொரு இயல்பிற்குரிய தன்மையும் பாதுகாக்கப்பட்டு, அவை ஒரே ஆள்தத்துவத்திலும் ஒரே தனிநிலையிருப்பிலும் ஒன்றிணைந்திருக்கின்றன.

அவர் இரண்டு ஆள்தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டவரோ பகுக்கப்பட்டவரோ அல்ல; மாறாக, ஒருவரும் அதே குமாரனும், ஒரேபேறானவரும், தேவனாகிய வார்த்தையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுமாயிருக்கிறார்.”

மேலே நாம் கவனிக்கும் கெல்சிடோனிய அறிக்கை இயேசு கிறிஸ்துவின் இயல்புகள் பற்றி விளக்கும்போது நான்கு மறுப்புகளைத் தந்திருப்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நான்கு மறுப்புகளும் கெல்சிடோனியன் அறிக்கைக்குப் பின் 16, 17ம் நூற்றாண்டு வரை வந்திருக்கும் அத்தனை விசுவாச அறிக்கைகளிலும், வினாவிடைப் போதனைகளிலும் காணப்படுகின்றன. அந்த மறுப்புகளை உங்கள் நன்மைக்காக சுருக்கமாகக் கிழே தருகிறேன்.

நான்கு மறுப்புகள்

“ஒருவரும், அதே கிறிஸ்துவும், குமாரனும், கர்த்தரும், ஒரே பேறானவருமாகிய அவரை, இரண்டு இயல்புகளில், குழப்பமின்றி, மாற்றமின்றி, பிரிவின்றி, பிரித்தலின்றி அறிந்துகொள்ள வேண்டும்.”

  1. குழப்பமின்றி (confusion) - இதைக் கலப்பின்றி என்றும் கூறலாம். அதாவது, பச்சையும், நீளமும் கலந்து மஞ்சள் நிறத்தை உண்டாக்குவதுபோல், கிறிஸ்துவின் மானுடமும், தெய்வீகமும் கலந்து ஒரு மூன்றாவது இயல்பாக மாறிவிடுவதில்லை.
  2. மாற்றமில்லாமல் (without change) - தன்னோடு மானுடத்தை இணைத்துக்கொண்டதன் மூலம் தெய்வீக வார்த்தை தான் நித்தியத்திலிருந்து கொண்டிருந்த நிலையை இழந்துபோகவில்லை. மானுடவுருவெடுத்தது தேவகுமாரனில் எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
  3. பிரிவின்றி (without division) - கிறிஸ்துவின் இரண்டு இயல்புகளும் (மானுடமும், தெய்வீகமும்) அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தை இரண்டாகப் பிரிக்கவில்லை. பாதி தேவன், பாதி மனிதன் அல்ல கிறிஸ்து.
  4. பிரித்தலின்றி (without separation) - தெய்வீகமும், மானுடமும் கிறிஸ்துவில் இரண்டு பங்காளர்களைப் போன்ற உறவைக் கொண்டிருக்கவில்லை. அவரது இரண்டு இயல்புகளும் இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆள்தத்துவத்தில் மெய்யாகவே, உயிரிணையாகக் காணப்பட்டன. அதாவது, ஜீவனுள்ள ஐக்கியத்தைக் கொண்டிருந்தன.

இந்நான்கு மறுப்புகளும் கிறிஸ்துவின் இரு இயல்புகளின் தன்மையைப் பாதுகாப்பதற்காக எழுதப்பட்டன. இவற்றை மறுக்கிறவர்களோ, இவற்றிற்கெதிரான கருத்துக்களைப் கொண்டிருப்பவர்களோ இயேசு கிறிஸ்துவை அவருடைய மெய்யான நிலையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். வேதம் வெளிப்படுத்தும்விதத்தில் கிறிஸ்துவின் இரு இயல்புகளும் இணைந்திருக்கும் சத்தியத்தை விசுவாசிக்காதவர்கள் வேதத்திற்குப் புறம்பானதொரு கிறிஸ்துவை நம்புவதோடு, சுவிசேஷத்தையும் மாசுபடுத்துகிறார்கள். மேலே விளக்கப்பட்டிருக்கும் விதத்தில் காணப்படாத கிறிஸ்து தேவகுமாரனாகவும், மனித குமாரனாகவும் இருக்கமுடியாது. அத்தகையவரால் மீட்பிற்கான நிவாரணத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. அவருடைய சுவிசேஷம் மனிதனை இரட்சிக்கும் வல்லமையைக் கொண்டிருக்காது.

காலத்துக்குக் காலம் போலிப்போதனைகளை இனங்கண்டு இறையியல் வல்லமை கொண்ட சபைத் தலைவர்களின் மூலம் திருச்சபைகளுக்கு விசுவாச அறிக்கைகளைத் தந்து திருச்சபையைக் காத்து வந்திருக்கும் திருச்சபையின் நாயகனாகிய ஆண்டவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நம் காலத்தில் அவ்வறிக்கைகளை வாசித்துப் பயன்படுத்தி நம் இருதயங்களையும், குடும்பங்களையும் போலிப்போதனையான நச்சுப் பாம்பிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். ஆத்மீக ஊனத்தோடு அரைகுறை வாழ்க்கை வாழ்ந்து நொண்டியாகப் பரலோகம் போகவேண்டிய அவசியம் நமக்கில்லை. சத்தியத்தின் மூலம் கர்த்தரை அவர் இருக்கும்விதமாக அறிந்து, விசுவாசித்து, ஆராதித்து இருதயத்தில் பேரானந்தத்தோடும், சமாதானத்தோடும் பரலோகம் போகும் ஆசீர்வாதத்தை அடைவோம்.

[பிற்குறிப்பு: நிலையற்ற பரதேசிக்கூட்டம் என்ற சொல்லாடலைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. பரதேசி என்ற வார்த்தை ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகப் போய் வாழ்கின்றவர்களைக் குறிக்கும் தமிழ் வார்த்தை. வேதத்திலும் இந்த அர்த்தத்திலேயே அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சபையில் தொடர்ந்திருந்து விசுவாசத்தோடு வாழாமல் வருவதும் போவதுமாக இருந்து தொடர்ச்சியான சபை வாழ்க்கையைக் கொண்டிருக்காதவர்களையும், அத்தகையவர்களைக் கொண்டிருந்து வெறும் பெயருக்குத் தன்னை சபை என்று அழைத்துக்கொள்ளும் கூட்டத்தையுமே ‘நிலையற்ற பரதேசிக்கூட்டம்‘ என்று இந்த ஆக்கத்தில் வர்ணித்திருக்கிறேன்.]

 

பரிதாபத்துக்குரிய அவிசுவாசியே!

“நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்குக் கட்டுப்படாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெட்கமாயிருக்கிறவைகளினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.” ரோமர் 6:20-21

அறிமுகம்

ரோமர் 6:20-21ல் பவுல் விசுவாசிகளிடம் அவர்கள் மனந்திரும்புவதற்கு முன்பு எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துகிறார். பாவத்தின் துயரத்தையும், வெட்கத்தையும், அதன் பயங்கரமான முடிவையும் இந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, கிறிஸ்து தமது மக்களை எதிலிருந்து மீட்டார் என்பதைக் காட்டுவதால் தேவகிருபையின் மகத்துவத்தையும் உயர்த்திக் காட்டுகின்றன.

இவை வெறும் இறையியல் உண்மைகள் அல்ல. கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு மனிதனின் உண்மையான நிலையை காட்டும் கண்ணாடியாக இருக்கின்றன. சுவிசேஷத்தின் மகிமையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மனிதனுடைய பாவநிலையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனுடைய பாவநிலை நம்பிக்கையற்றதாக இல்லையென்றால், தேவகுமாரன் சிலுவையில் மரிக்கும்படி உலகத்திற்கு வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆகவே சிலுவையின் மகத்துவத்தை அறிய வேண்டுமானால் பாவத்தின் கொடுமையை அறிய வேண்டும்.

இன்றைய சுவிசேஷப் பிரசங்கத்தின் ஒரு பெரிய பலவீனம் பாவத்தைத் தெளிவாக எடுத்துரைக்காததே. மனிதனின் பிரச்சனை வெறும் தவறான பழக்கங்களோ, கல்வியின்மையோ, சூழ்நிலையோ அல்ல. அவனுடைய அடிப்படைப் பிரச்சனை பாவம். இதை மூன்று தலைப்புகளின் கீழ் பார்ப்போம்:

  1. அவிசுவாசியின் அடிமைத்தனம்,
  2. அவிசுவாசியின் வெட்கம்,
  3. அவிசுவாசியின் தண்டனை.
  1. அவிசுவாசியின் அடிமைத்தனம்

“நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்த காலத்தில்...” என்று பவுல் ஆரம்பிக்கிறார். விசுவாசிகள் தாங்கள் ஒருகாலத்தில் என்னவாயிருந்தார்கள் என்பதைத் திரும்பிப் பார்க்கும்படி அவர் அழைக்கிறார்; அப்போதுதான் இரட்சிப்பின் மகத்துவத்தை அவர்கள் இன்னும் ஆழமாக உணர முடியும்.

மனந்திரும்புவதற்கு முன்பு ஒவ்வொரு விசுவாசியும் பாவத்தின் அடிமையாக இருந்தான். இதுவே ஒவ்வொரு அவிசுவாசியின் இயல்பான ஆவிக்குரிய நிலை. மனிதன் தன்னை சுதந்திரமானவன் என்று நினைக்கிறான். தன்னாட்சி, தனிச்சுதந்திரம் என்று பெருமை பேசுகிறான். ஆனால் வேதாகமம் கிறிஸ்துவுக்கு வெளியே மனிதன் கட்டுண்டவனாக இருக்கிறான் என்று அறிவிக்கிறது. ஆண்டவராகிய இயேசு, “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்” என்றார் (யோவான் 8:34).

பாவம் அவிசுவாசி அவ்வப்போது செய்கிற ஒரு செயல் மட்டுமல்ல. பாவம் அவனை ஆளுகிறது. அவனுடைய விருப்பங்களை வழிநடத்துகிறது; சிந்தனையைப் பாதிக்கிறது; நேசங்களைச் சீர்குலைக்கிறது; வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கிறது. அவன் வெளிப்புறத்தில் ஒழுக்கமுள்ளவனாகவும், படித்தவனாகவும், அன்பானவனாகவும், தாராளமாக உதவுகிறவனாகவும் இருக்கலாம். ஆனால் அவனுடைய இயல்பு பாவத்தால் கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிமைத்தனம் முழு மனிதனையும் பாதிக்கிறது. அவனுடைய மனம் ஆவிக்குரிய உண்மைகளுக்குக் குருடாக இருக்கிறது: “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்” (1 கொரிந்தியர் 2:14). அவனுடைய மனப்பான்மை தேவனுக்கு விரோதமானது (ரோமர் 8:7). அவனுடைய நேசங்களும் பாவத்தால் கெடுக்கப்பட்டுள்ளன: “மனுஷர் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்பினார்கள்” (யோவான் 3:19).

பவுல் மேலும் அவர்கள் “நீதிக்குக் கட்டுப்படாதவர்களாயிருந்தார்கள்” என்று கூறுகிறார். இதன் பொருள், நீதியிலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள் என்பதல்ல; மாறாக, நீதியின் ஆட்சி அவர்கள்மேல் இல்லை. உண்மையான பரிசுத்தத்திற்கு அவர்கள் அந்நியர்களாயிருந்தார்கள். தேவன்மீது அன்பும், கீழ்ப்படிதலில் மகிழ்ச்சியும், கிறிஸ்துவின் மகிமைக்காக வாழும் விருப்பமும் அவர்களிடம் இயல்பாக இல்லை.

எபேசியர் 2:1-3 இதையே வலிமையாக எடுத்துரைக்கிறது. நாம் ஒருகாலத்தில் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாய், இவ்வுலகத்தின் போக்கின்படி நடந்தோம்; மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றி, மற்றவர்களைப்போல சுபாவத்தினாலே கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். ஆகவே இரட்சிப்பு என்பது மனிதன் தன்னைச் சிறிது மேம்படுத்திக்கொள்வது அல்ல. அது தேவன் செய்கிற மீட்பு.

இங்கே உலகம் மார்தட்டிக்கொள்ளும் சுதந்திரத்தின் பொய்மை வெளிப்படுகிறது. மனிதன் சில பழக்கங்களை மாற்றலாம்; வெளிப்புற வாழ்க்கையைச் சீர்செய்யலாம்; மதபக்தியுள்ளவனாகக்கூட மாறலாம். ஆனால் பாவத்தின் ஆட்சியை முறிக்கக்கூடியவர் கிறிஸ்து மட்டுமே. இதனால் அவிசுவாசிகளை நாம் இரக்கத்தோடு பார்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல ஆலோசனை மட்டும் போதாது. அவர்களுக்கு புதிய பிறப்பு வேண்டும். பரிசுத்த ஆவியானவர் செய்கிற ஆவிக்குரிய அற்புதம் வேண்டும். அதற்காக அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும்.

  1. அவிசுவாசியின் வெட்கம்

21ஆம் வசனத்தில் பவுல் மிகவும் சிந்தித்துப் பார்க்கச் செய்யும் கேள்வியைக் கேட்கிறார்: “இப்பொழுது உங்களுக்கு வெட்கமாயிருக்கிறவைகளினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது?” பாவம் இறுதியில் என்ன நன்மையைத் தந்தது? அதன் உண்மையான கனியேது?

பாவம் எப்போதும் பெரிய வாக்குறுதிகளை அளிக்கிறது. சுதந்திரம், திருப்தி, சந்தோஷம், இன்பம் ஆகியவற்றைத் தருவதாகச் சொல்கிறது. ஆனால் அது வாக்களிப்பதை ஒருபோதும் நிலையான விதத்தில் கொடுப்பதில்லை. எபிரெயர் 11:25 பாவத்தின் இன்பம் “கொஞ்சக்காலம்” மட்டுமே என்று கூறுகிறது. பாவம் சில நிமிட இன்பத்தைத் தரலாம்; ஆனால் நிலையான சமாதானத்தைத் தர முடியாது. இறுதியில் அது குற்றவுணர்வு, வெறுமை, துக்கம், வெட்கம் ஆகியவற்றையே விட்டுச் செல்கிறது.

பிசாசு பாவத்தின் முடிவை ஆரம்பத்திலேயே காட்டுவதில்லை. அதன் விஷத்தை இனிப்புக்குள் மறைக்கிறான். ஆனால் கிருபையால் கண்கள் திறக்கப்பட்டபின் விசுவாசி தன் பழைய வாழ்க்கையை வேறு விதமாகப் பார்க்கிறான். ஒருகாலத்தில் விரும்பியவற்றைக் குறித்து இப்போது வெட்கப்படுகிறான். இந்த வெட்கம் மனிதர்களுக்கு முன்பாக ஏற்படும் சங்கடம் மட்டுமல்ல; பரிசுத்தமான தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததற்கான துக்கமாகும்.

மனந்திரும்புவதற்கு முன்பு மனிதன் தன் பாவத்தை நியாயப்படுத்தலாம்; சில சமயம் அதைப் பற்றிப் பெருமை பேசலாம். மனந்திரும்பியபின் அதற்காக வருந்துகிறான். கிறிஸ்தவன் இந்த வாழ்க்கையில் பாவமற்றவனாகிவிடவில்லை. ஆனால் பாவத்தோடு அமைதியாக வாழ முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவனை உணர்த்தி மனந்திரும்புதலுக்குக் கொண்டுவருகிறார்.

அவிசுவாச உலகம் இதற்கு முற்றிலும் மாறாக நடக்கிறது. பிலிப்பியர் 3:19, “வெட்கமாயிருக்க வேண்டியவைகளையே மகிமையாக எண்ணுகிறவர்கள்” என்பவர்களைப் பற்றி பேசுகிறது. ரோமர் 1ன் பிற்பகுதியில் பவுல் விவரிக்கும் நிலை நவீன சமுதாயத்தில் வெளிப்படையாகக் காணப்படுகிறது. ஒருகாலத்தில் வெட்கத்திற்குரியதாகக் கருதப்பட்ட பல காரியங்கள் இன்று கொண்டாடப்படுகின்றன. ஆனால் மனித சமுதாயம் பாவத்தின் பெயரை மாற்றிக்கொண்டாலும் தேவனுடைய தீர்ப்பு மாறுவதில்லை.

ஆகவே விசுவாசியே, கிறிஸ்துவுக்கு வெளியே இருந்த உன் பழைய வாழ்க்கையை ஒருபோதும் இனிமையாக நினைத்துப் பார்க்காதே. உலகத்தைப் பார்த்துப் பொறாமைப்படாதே. பாவம் உன் ஆத்துமாவை உண்மையாகத் திருப்திப்படுத்தும் என்று ஒருபோதும் எண்ணாதே. தேவனுடைய சுயாதீன கிருபை இல்லையென்றால் நாமும் இன்னும் அதே இருளில்தான் இருப்போம்.

அவிசுவாசியே, நீயும் நேர்மையாக உன்னைக் கேட்டுக்கொள்: பாவம் உனக்கு உண்மையில் என்ன பலனைத் தந்தது? தேவனுக்கு எதிரான வாழ்க்கை உனக்கு சமாதானத்தைத் தந்ததா? உனக்காகவே வாழ்ந்த வாழ்க்கை உன் இருதயத்தைத் திருப்திப்படுத்தியதா? உலகம், பொழுதுபோக்கு, வெற்றி, இன்பம், செல்வம் அனைத்தையும் தரலாம்; ஆனால் மனிதன் தேவனுக்காகப் படைக்கப்பட்டவன். ஆகவே தேவனை விட்டு விலகிய இருதயம் உண்மையான இளைப்பாறுதலைக் காண முடியாது.

உண்மையான மனந்திரும்புதலில் பாவத்தைக் குறித்த துக்கமும் வெட்கமும் அடங்கியுள்ளன. பலர் மனந்திரும்புதல் இல்லாமல் மன்னிப்பை விரும்புகிறார்கள்; பரிசுத்தம் இல்லாமல் பரலோகத்தை விரும்புகிறார்கள். ஆனால் இரட்சிக்கும் கிருபை மனிதன் ஒருகாலத்தில் நேசித்த பாவத்தை வெறுக்கும்படி செய்கிறது.

  1. அவிசுவாசியின் தண்டனை

பவுல் இப்போது பயங்கரமான முடிவுக்கு வருகிறார்: “அவைகளின் முடிவு மரணமே.” பாவத்திற்கு ஒரு முடிவு உண்டு. அது எங்கோ கொண்டு செல்கிறது. அதன் இறுதி இலக்கு மரணம்.

வேதாகமம் பாவத்தின் விளைவாக ஆவிக்குரிய மரணம், சரீர மரணம், நித்திய மரணம் மனிதனுக்கு நிகழ்வதாக வேதம் விளக்குகிறது. எபேசியர் 2:1 மனிதனை “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்கள்” என்று கூறுகிறது. விழுந்த மனிதன் ஆவிக்குரியவிதத்தில் மரித்திருக்கிறான். தேவனிடமிருந்து பிரிந்திருக்கிறான்; தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ள முடியாது.

சரீர மரணமும் பாவத்தினாலே உலகத்திற்குள் வந்தது. “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று ஆதியாகமம் 3:19 கூறுகிறது. ஒவ்வொரு மரணமும் பாவம் உலகத்திற்குள் வந்துவிட்டது என்பதை நினைவுபடுத்துகிறது. ஆனால் இதைவிடப் பயங்கரமானது நித்திய நியாயத்தீர்ப்பு. “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23). பரிசுத்தமான தேவனுடைய நீதியான கோபத்திற்குக் கீழாக இருப்பதே அதன் இறுதி பயங்கரம்.

நரகம் என்பது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. அது வெறும் அடையாள மொழியும் அல்ல. பாவத்திற்கு எதிராகப் பரிசுத்தமான தேவன் வழங்கும் நீதியான தீர்ப்பு அது. எபிரெயர் 9:27, “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறது. ஆகவே பாவம் தீங்கற்றது என்ற எண்ணம் பொய். கிறிஸ்துவுக்கு வெளியே கண்டனத்திலிருந்து தப்பிக்கும் வழி இல்லை.

ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், சுவிசேஷம் மரணத்தோடு முடிவதில்லை. ரோமர் 6:23 தொடர்ந்து, “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” என்று அறிவிக்கிறது. இங்கே சுவிசேஷத்தின் மகிமை பிரகாசிக்கிறது.

இயேசு கிறிஸ்து பாவத்தின் அடிமைகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தார். பாவிகள் வாழ முடியாத பரிபூரண நீதியான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். தேவனுடைய நியாயப்பிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றினார். பின்னர் சிலுவையில் தமது மக்கள் சுமக்கவேண்டிய சாபத்தை அவர் சுமந்தார்.

“கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலாத்தியர் 3:13).

சிலுவையில் பாவத்திற்கு எதிரான தேவனுடைய கோபத்தை கிறிஸ்து தாங்கினார். அவர் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் வெற்றியுடன் உயிர்த்தெழுந்தார். இப்போது மனந்திரும்பி அவரை விசுவாசிக்கிற அனைவரும் பாவமன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், தேவனோடு ஒப்புரவாகுதல், நித்தியஜீவன் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். சுவிசேஷம் ஒழுக்க முன்னேற்றத்திற்கான திட்டமல்ல; தேவன் நிறைவேற்றிய மீட்பின் செய்தி.

நீ இன்னும் கிறிஸ்துவை விசுவாசிக்காதவனாக இருந்தால், இன்று அவரிடத்தில் ஓடிவா. தாமதிக்காதே. பாவத்தின் முடிவு மரணம். உலகத்தின் எந்த இன்பமும் நித்திய அழிவிற்கு மதிப்பானதல்ல. கிறிஸ்து தம்மிடத்தில் வரும் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்: “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).

பயன்பாடுகள்

முதலாவது, இந்த வசனங்கள் விசுவாசிக்குத் தாழ்மையைத் தர வேண்டும். கிருபைக்கு வெளியே நீ ஒருகாலத்தில் என்னவாயிருந்தாய் என்பதை மறந்துவிடாதே. இரட்சிப்பு சுயமுன்னேற்றமல்ல; அது தேவனுடைய மீட்பு.

“உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (1 கொரிந்தியர் 6:11).

விசுவாசியே, கிருபையில் மகிழ்ந்து நன்றியுள்ள கீழ்ப்படிதலோடு நீ வாழவேண்டும். ஒருகாலத்தில் நீ பாவத்தின் அடிமையாக மரணத்தை நோக்கிச் சென்றாய்; ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் உன் வாழ்க்கையில் தலையிட்டார். கிறிஸ்து தமது மக்களை பாவத்தில் கவலையின்றித் தொடரும்படி மீட்கவில்லை; பரிசுத்தத்திற்காக மீட்டார்.

“கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு மகிமையுண்டாக உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:20).

இரண்டாவது, இந்த உண்மை நம்மை சுவிசேஷ ஊழியத்திற்குத் தூண்ட வேண்டும். அவிசுவாசி வெறுமனே தவறாகச் சிந்திக்கிறவன் அல்ல; அவன் ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருக்கிறான். அவனுக்கு ஆவிக்குரிய புதிய பிறப்பு தேவை. ஆகவே அவனுக்குத் தேவையானது தன்னைத் திருத்திக்கொள்ளும் ஆலோசனை அல்ல; இயேசு கிறிஸ்துவின்மூலம் தேவன் அளிக்கும் மீட்பின் சுவிசேஷம்.

மூன்றாவதாக, இவை அவிசுவாசியின் கனவுலக சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்றன. வேதாகமக் கட்டுப்பாடுகளை நிராகரிப்பதால் தான் சுதந்திரமானவன் என்று மனிதன் நினைக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு வெளியே அவன் பாவத்தின் அடிமை. பழக்கங்களை மாற்றுவது, வெளிப்புற நடத்தையைச் சீர்செய்வது, மதபக்தியுள்ளவனாக மாறுவது ஆகியவை பாவத்தின் ஆட்சியை முறிக்காது. கிறிஸ்து மட்டுமே அதைச் செய்ய முடியும். பாவியே, மனந்திரும்பி உன் பாவவாழ்க்கைக்கு புறமுதுகு காட்டி, உன் இரட்சிப்புக்காக இயேசுவிடம் வா. அவர் மட்டுமே உனக்கு இரட்சிப்பை இலவசமாக அளிக்கக்கூடியவர்; அவர் மட்டுமே பாவிகளுக்காகத் தன்னைப் பலிகொடுத்தவர்; அவர் மட்டுமே உன் பாவங்களைத் தன் இரத்தத்தால் கழுவி உன்னைச் சுத்தப்படுத்தக்கூடியவர். அவரை விசுவாசி, முழு இருதயத்தோடும் அவரை நாடு.

 

கிறிஸ்துவின் இரு இயல்புகள்

ஆதி சபைக்காலத்தில் திரித்துவத்தைப்பற்றிய அநேக போலிப்போதனைகள் உருவாகி சத்தியத்தையும், சபைகளையும் ஆக்ரோஷமாகத் தாக்கின. முதலில் ஏரியனியம் கிறிஸ்துவின் தெய்வீகத்தை அடியோடு நிராகரித்தது. திருச்சபை அதற்கெதிராகப் போராடி கி.பி. 325ல் நைசீன் அறிக்கையை வெளியிட்டு சத்தியத்தையும், சபைகளையும் பாதுகாத்தது.

அதற்குப் பிறகு கிறிஸ்துவின் தெய்வீக, மானுடம் ஆகிய இரு இயல்புகள் (தன்மைகள்) பற்றிய அநேக போலிப்போதனைகள் விதவிதமான ரூபங்களில் உருவாகி திருச்சபைகளைத் தாக்கின. கிறிஸ்து தெய்வீகத்தையும் மானுடத்தையும் ஒரேவேளையில் தன்னில் கொண்டிருந்தார் என்று வேதம் விளக்குகிறது. அவருடைய தெய்வீகம் பூரணமானது, அதேபோல் அவருடைய மானுடமும் பூரணமானது. ஆனால், தன் மானுடத்தில் அவர் பாவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. ஏனைய அனைத்து விதங்களிலும் அவர் மனிதனாகவே காணப்பட்டார். இந்த இரு இயல்புகளும் கிறிஸ்துவில் இணைந்து காணப்பட்டன. அதனால்தான் வேதம் அவரைத் தேவகுமாரன் என்றும், மனிதகுமாரன் என்று அழைக்கிறது.

இதுவே வேதம் கிறிஸ்துவின் இயல்புகளைப் பற்றித் தரும் அடிப்படை விளக்கம். இதை மறுதலித்தாலோ அல்லது அதில் கடுகளவு மாற்றங்களைச் செய்தாலோ ஒருவர் சுவிசேஷக் கிறிஸ்தவராக இருப்பதற்கு வழியில்லை. இது வேதத்தின் அடிப்படை சத்தியம். வேதம் விளக்குகின்ற வகையில் காணப்படாத கிறிஸ்து வேதக்கிறிஸ்துவாக இருக்கமுடியாது; அவர் இரட்சகராக இருக்கவும் வழியில்லை.

இருந்தபோதும், வரலாற்றில் பலர் வேதம் தருகின்ற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் அநாவசியமான சிந்தனைகளைக் கொண்டிருந்து புதுமையான விளக்கங்களைத் தர ஆரம்பித்தனர். அவர்களுடைய விளக்கங்கள் வேதம் தருகின்ற விளக்கங்களைத் தாண்டிப் போய் கிறிஸ்துவில் காணப்படும் இரு இயல்புகள் பற்றிய முரண்பாடான விளக்கங்களாக அமைந்தன. இந்த வகையிலேயே போலிப்போதனைகள் உருவாகின்றன. போலிப்போதனைகள் சத்தியத்தை விட்டு விலகிப்போய் சத்தியத்தைப்போலத் தோற்றமளிக்க முயல்கின்றன. அதனாலேயே சத்தியத்தில் தேர்ச்சியும், முதிர்ச்சியும் இல்லாத கிறிஸ்தவர்கள் அதற்கு இலகுவாக இரையாகிவிடுகின்றனர்.

முக்கியமான வேதவிளக்க விதி

இந்த இடத்தில் வேதவிளக்க விதி பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமான உண்மையொன்றிருக்கிறது. எந்த முக்கியமான, அதேவேளை விளங்கிக்கொள்ள இலகுவாக இல்லாமலிருக்கும் சத்தியத்தையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றபோது, அந்த சத்தியங்கள் பற்றி வேதம் பழைய புதிய ஏற்பாடுகளில் அநேக பகுதிகளில் விளக்கும் உண்மைகளை ஒன்றுவிடாமல் திரட்டித் தொகுத்துத் தெளிவாக ஆராய்ந்து அவை தரும் போதனைகளின்படி மட்டுமே விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்குப் பெயர் வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டு ஆராய்தல் என்பது (compare Scripture with Scripture). இதை நம் முன்னோர்களும், விசுவாச அறிக்கைகளும், இறையியல் அறிஞர்களும் Analogy of Scripture என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள்.

சிலவேளைகளில் அனைத்து வசனப்பகுதிகள் தரும் விளக்கங்கள் நம் மனதுக்குப் போதுமானவையாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அவற்றை இன்னும் அதிகமாக ஆழமாகவும், துல்லியமாகவும் விளக்கவேண்டும் என்ற உந்துதல் நம்மில் ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் தேவபயத்தோடு நாம் தாழ்மையைக் கடைபிடித்து வேதம் இதற்கு மேல் இந்த விஷயத்தில் நமக்கு விளக்கமளிக்கவில்லை என்று தீர்மானித்து அமைதி காக்கவேண்டும்.

வேதத்தை மீறி, வேதம் போகாத தூரத்திற்குப் போய் மனித சிந்தனையைப் பயன்படுத்தி அந்த விஷயத்திற்கு நம் மனத்திற்கு ஒத்துப்போகும் வேதம் தராத ஒரு புதிய விளக்கத்தைத் கொடுப்பது ஆபத்தானது. நாம் கண்டுபிடித்திருக்கும் விளக்கம் வேதத்தில் நேரடியாக வெளிப்படையாகவோ (explicitly) அல்லது உள்ளடக்கமாகவோ (implicitly/deduced or inferred through good and necessary consequence) காணப்படாமல் இருந்தாலோ அல்லது அந்த விளக்கத்தை நாம் வேறுவிதங்களில் கொடுக்க வேண்டியதாக இருந்தாலோ நாம் வேதத்தை மீறி விளக்கங்கொடுக்கிறோம் என்பதே அதற்குப் பொருள். இந்த முறையிலேயே போலிப்போதனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வரலாறு கண்டிருக்கும் போலிப்போதனையாளர்கள் இந்த வகையிலேயே வீண்போயிருக்கிறார்கள்.

ஸ்டுவர்ட் ஒலியொட் தத்தெடுத்தலியம் (Adoptionism) எனும் போலிப்போதனையை விளக்கும்போது, “வேதத்தின் தெளிவான விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, வேதம் எழுப்பும் கேள்விகளுக்கு மனித சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பதில் காண முயல்வதாலேயே இது உருவானது” என்கிறார் (The Person of Christ, pg 146). இந்தப் போலிப்போதனை கிறிஸ்துவின் மானுடம் தத்தெடுக்கப்பட்ட மானுடம் என்றும், அவருடைய ஞானஸ்நானத்தின்போதே ஆவிக்குரிய பிறப்பின் மூலம் அவரில் தத்தெடுக்கப்பட்ட மானுடம் காணப்பட்டது என்கிறது. இது பிறப்பிலிருந்து அவர் மெய்யான மானுடத்தைக் கொண்டிருந்தார் என்பதை மறுதலிக்கிறது.

கெல்சிடோனிய அறிக்கை

வரலாற்றில் 451ல் வரையப்பட்ட கெல்சிடோனிய அறிக்கை மிக முக்கியமானது. இது கிறிஸ்துவின் இரு இயல்புகளைப் பற்றி அருமையான தெளிவான விளக்கங்களைத் தந்து சத்தியத்தைப் பாதுகாக்கின்றது. அந்தவகையில் இது வரலாற்றறிக்கைகளில் மிக முக்கியமானது.

கிறிஸ்துவின் இயல்புகளைத் தவறாக விளக்கிய போலிப்போதனைகளில் ஏரியனியம் (Arianism) வரலாற்றின் ஆரம்பத்தில் உருவானது. இது கிறிஸ்துவின் தெய்வீக இயல்பை மறுதலித்தது. இதையே அதற்குப் பின்வந்த எபியனியமும் (Ebionism) செய்தது. வேறு சில போதனைகள் கிறிஸ்துவில் ஓரியல்பு மட்டுமே காணப்படுவதாக விளக்கின (Monophysitism, ஓரியல்பியம்). இவை பல்வேறு ரூபங்களிலும், பல்வேறு பெயர்களிலும் காணப்பட்டன. அவற்றில் ஒன்று Eutychianism - யூடிகியனியம்). இது கிறிஸ்துவில் காணப்பட்ட தெய்வீகம் மானுடத்தை விழுங்கி அவரில் ஒரு இயல்பு மட்டுமே காணப்பட்டது என்றது. இன்னொன்று அவர் சாதாரண மனிதனாக மட்டுமே இருந்தார் என்றது. வேறொன்று அவருடைய மானுடம் மெய்யான மானுடமாக இல்லாமல் மானுடத் தோற்றத்தை மட்டுமே அளித்தது என்றது (Docetism - நிஜமற்ற தோன்றலியம்). வேறொன்று கிறிஸ்து பூரணமற்ற மானுடத்தைக் கொண்டிருந்தார் என்று விளக்கியது (Apollinarianism - அப்போலினேரியனியம்). இன்னும் சில அவரில் இரண்டு இயல்புகள் காணப்படாமல், இரண்டு நபர்கள் காணப்பட்டதாக விளக்கின. மற்றொன்று, அவருடைய இரு இயல்புகளும் பிரிந்து தனித்தனியாகக் காணப்பட்டன என்றது (Nestorianism - நெஸ்டோரியனியம்). இன்னொன்று அவருடைய இரு இயல்புகளும் ஒன்றோடொன்று கலந்து விட்டதாக விளக்கியது.

அதுமட்டுமல்லாமல் இன்னுமொரு போதனை கிறிஸ்துவில் ஒரு சித்தம் மட்டுமே காணப்பட்டதாக விளக்கியது (Monothelitism - ஒரு சித்தவியம்). அதாவது, கிறிஸ்துவின் மானுடம் சித்தமில்லாத மானுடமாக இருந்ததென்றும், மானுட சித்தத்தின் பணியை அவருடைய தெய்வீகம் கவனித்துக்கொண்டது என்று இது விளக்கியது.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் போலிப்போதனைகளுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக பதிலளித்தது கி.பி. 451ல் வெளிவந்த கெல்சிடோனிய அறிக்கை. அந்தவிதத்தில் இது மிகமுக்கியமான அறிக்கை. கிறிஸ்துவில் காணப்பட்ட தனித்துவமுள்ள இரு இயல்புகளையும் தெளிவாக விளக்கும் கெல்சிடோனிய அறிக்கையின் விளக்கத்தை மறுதலிப்பவர்கள் சீர்திருத்த சுவிசேஷ கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கமுடியாது. வேத அறிவு குறைவாகக் காணப்படுபவர்கள் சத்தியத்தை நுணுக்கமாக அறிந்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை நான் உணர்கிறேன். அவர்கள் படிப்படியாக வளர்ந்து சத்தியத்தைத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் “நூதன சீஷர்கள்” பிரசங்கிப்பதற்கும், போதகப் பணி செய்வதற்கும் தகுதியற்றவர்கள் என்கிறது வேதம்.

வரலாறு கண்டிருக்கும், கிறிஸ்துவின் ஈரியல்புகளுக்கும் போலி விளக்கமளிக்கும் போலிப்போதனைகள் இந்த 21ம் நூற்றாண்டிலும் பரவலாக நம்மினத்திலும், ஏனைய நாடுகளிலும் இருந்து வருகின்றன. இவற்றை மேலெழுந்தவாரியாக வாசித்துவிட்டு நம்காலத்திற்குத் தொடர்பில்லாதவையாகக் கருதிவிடும் மாபெரும் தவறை நீங்கள் செய்யக்கூடாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதென்று அர்த்தமல்ல. சத்தியம் இன்றும் என்றும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

கெல்சிடோனிய அறிக்கையை வெளியிட்ட சபைத்தலைவர்களின் பேரவை அவ்வறிக்கையின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது:

“ஆகையால், இவை அனைத்தும் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் எங்களால் வகுத்துரைக்கப்பட்டிருக்கிறபடியால், வேறொரு விசுவாசத்தை முன்வைப்பதற்கோ, எழுதுவதற்கோ, இயற்றுவதற்கோ, வேறுவிதமாகச் சிந்திப்பதற்கோ, அல்லது மற்றவர்களுக்குப் போதிப்பதற்கோ எவருக்கும் அனுமதியில்லை என்று இந்தப் பரிசுத்தமான, மகத்தான, உலகளாவிய திருச்சபைக் கூடுகை தீர்மானித்திருக்கிறது.

வேறொரு விசுவாசத்தை இயற்றுவதற்கோ, முன்வைப்பதற்கோ, போதிப்பதற்கோ துணிகிறவர்களும், புறமதத்திலிருந்தோ, யூதமதத்திலிருந்தோ, அல்லது வேறு எந்தப் போலிப்போதனையிலிருந்தோ சத்தியத்தை அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு வேறொரு விசுவாச அறிக்கையை வழங்குகிறவர்களும், அவர்கள் மூப்பர்களாகவோ திருச்சபைப் பணியாளர்களாகவோ இருந்தால், மூப்பர்கள், மூப்பர் பதவியிலிருந்தும் திருச்சபைப் பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும்; அவர்கள் துறவிகளாகவோ பொதுமக்களாகவோ இருந்தால், திருச்சபை ஐக்கியத்திலிருந்து விலக்கப்பட வேண்டும்.”

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.