திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2015-ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. ஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை

3. ஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு

4. முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .

5. இன்றியமையாத வாசிப்பு

 

 

வாசகர்களே!

கர்த்தர் தன்னுடைய பெருங்கிருபையால் இந்த வருடத்திற்கான கடைசி இதழை நல்லபடியாக முடித்து வெளியிட துணை செய்தார். தமிழகத்திற்கு வந்த ஐரிஷ் பெண்ணான ஏமி கார்மைக்கல் தென்னிந்திய டோனவூரில் குடியேறி நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகளை சமுதாய சீரழிவிலிருந்து காப்பாற்றி வளர்த்த அருஞ்செயலையும், அவருடைய பணிகள் பற்றிய ஆக்கபூர்வமான ஆய்வினையும் இந்த இதழில் வாசிக்கலாம். சுவிசேஷப் பணியையும், நற்பணிகளையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளாமல் இரண்டையும் சரிவரப் புரிந்துகொள்ள இந்த ஆக்கம் துணைசெய்யுமென்று நம்புகிறேன்.

கல்வினித்துவ ஐம்போதனைகளான கிருபையின் போதனைகள் நமக்கு இறையாண்மையின் அடிப்படையில் கிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பின் பெருமையை உணர்த்துகின்றன. அப்போதனைகளைக் கிறிஸ்தவர்கள் அனைவரும் நன்கறிந்து தங்களுடைய இரட்சிப்பிற்காக வாழ்நாள் முழுதும் தேவனுக்கு நன்றிபாராட்டி வாழவேண்டும். இருந்தபோதும் இந்தக் கிருபையின் போதனைகளே சீர்திருத்த விசுவாசமாகி விடாது என்பதை விளக்கி ஆங்கிலத்தில் வந்திருக்கும் ஒரு புதிய நூலை அலசி அதைத் தமிழில் சுருக்கமாகத் தரத் தீர்மானித்திருக்கிறேன். அதன் முதல் ஆக்கம் ‘முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி’ என்ற தலைப்பில் இதில் வந்திருக்கிறது.

வாசிப்பின் அவசியத்தை விளக்கும் ஒரு புது நூல் சீக்கிரமே வெளிவரவிருக்கிறது. அதன் ஓர் அதிகாரத்தை ‘இன்றியமையாத வாசிப்பு’ என்ற தலைப்பில் இதில் தந்திருக்கிறேன். நூலை சென்னை, சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தார் வெளியிடுவார்கள். இருபது ஆண்டுகாலமாக வெளிவந்துள்ள திருமறைத்தீப இதழ்களையெல்லாம் தொகுத்து டிஜிட்டல் முறையில் மறுவடிவம்செய்து அழகாக, அருமையாக அச்சிட்டு வெளியிடும் பணியில் சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகம் ஈடுபட்டு வருகிறது. ஐந்து வால்யூம்களாக வருகின்ற ஜனவரி மாதத்தில் இதன் முதல் பிரதி சிறப்புக்கூட்டமொன்றில் வெளியிடப்படும். வாசகர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அவர்களோடு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் அட்டையில் இதற்கான விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. புதிய வருடம் வெகு தொலைவில் இல்லை. தொடர்ந்து சளைக்காமல் அவருடைய மகிமைக்காகப் பணியாற்ற எங்களை உங்கள் ஜெபத்தில் நினைவுகூருங்கள். நன்றி! – ஆசிரியர்.

 

ஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை

சமீபத்தில் இயன் மரேயின் கைவண்ணத்தில் புதிதாக வெளிவந்த ஏமி கார்மைக்கலின் நூலை உடனடியாக என்னுடைய சபையின் புத்தக அறையில் இருந்து பெற்று வாசிக்க ஆரம்பித்தேன். நூலை வாசித்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. இதற்கு முன் ஏமி கார்மைக்கல் பற்றி எலிசபெத் ஸ்கொக்லன்ட் என்ற பெண்மணி எழுதிய நூலை வாசித்திருக்கிறேன். அந்த நூல் ஏமியைப் பற்றிய சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தவில்லை. அவரைப்பற்றிய வேறு நூல்கள் வாசித்ததில்லை. இந்தப் புதிய நூலை வாசிக்கத்தூண்டிய காரணங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். செந்தாளி என்ற என்னுடைய நல்ல நண்பி அமெரிக்காவில் வாழ்கிறார். அவரை நான் அமெரிக்க பிரயாணங்களின்போது சந்தித்தவேளையெல்லாம், ‘பாஸ்டர் நீங்கள் கட்டாயம் டோனவூர் போக வேண்டும். அங்கு ஒரு செய்தியாவது கொடுக்கவேண்டும். நிச்சயம் எல்லோரும் அதை விரும்புவார்கள். அங்கிருப்பவர்களுக்கு நான் எழுதிச் சொல்லிவிடுகிறேன்’ என்று வற்புறுத்திக் கேட்டிருந்தார். கட்டாயம் போக முயற்சிக்கிறேன் என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன். டோனவூர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதிகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. செந்தாளியின் அன்புக்கட்டளை காரணமாக பல வருடங்களுக்கு முன் சுனாமி நிவாரணப் பணியின் நிமித்தம் கன்னியாகுமரி போகும் வழியில் டோனவூர் போகும் வாய்ப்புக் கிட்டியது. அது மிகப்பெரிய காம்ப்ளெக்ஸ். ஏமி கார்மைக்கல் தங்கியிருந்த அறையையும், அந்தக் காம்ப்ளெக்ஸையும் சுற்றிப் பார்த்தேன். மிகவும் அருமையாகக் கவனித்து உபசரித்தார்கள் அங்கிருந்த ‘சிஸ்டர்ஸ்.’ மூன்று நாள் தங்கியிருந்துவிட்டுப் போகவேண்டும் என்று அன்போடு வற்புறுத்தினார்கள். அதை நிறைவேற்ற முடியாதபடி என்னுடைய பிரயாணம் இருந்ததால் அவர்கள் உபசரிப்பை ஏற்று உணவருந்திவிட்டு செல்ல மட்டுமே முடிந்தது.

அதற்கு முன் ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். செந்தாளி சிறு பெண்ணாக இருந்தபோது டோனவூர் ஐக்கியத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பெண்மணி. எத்தனையோ இந்தியக் குழந்தைகளுக்கு வாழ்வளித்திருந்த அந்த ஐக்கியம் செந்தாளிக்கும் வாழ்வளித்திருந்தது. அந்த நன்றியை செந்தாளி இன்றும் மறக்கவில்லை. செந்தாளியின் அன்பு வற்புறுத்தலை நிறைவேற்றிய பிறகுதான் ஏமி கார்மைக்கலைப்பற்றிய நூல்களைத் தேட ஆரம்பித்தேன். ஆனால் அவரைப்பற்றியும், அவருடைய பணிகளைப்பற்றியும் முழுமையான ஒரு புரிதலை என்னால் அடைய முடியவில்லை. அச்சூழ்நிலையில்தான் இப்புதிய நூலைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதை வாசிக்கும் ஆர்வமும் உண்டானது. இன்னுமொரு காரணம் அதை எழுதியவரைப்பற்றியது. இதை எழுதிய இயன் மரே சீர்திருத்த பிரெஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர். அத்தோடு வரலாற்று எழுத்தில் சிறப்பானவர். சீர்திருத்த போதனையின் வழிவந்திராத ஏமி கார்மைக்கலை எந்தக் கோணத்தில் இயன் மரே காட்டப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஓர் ஆர்வமும் எனக்குள் எழுந்தது. இயன் மரே எழுதியிருப்பதால் உண்மைகளை மறைக்காமல் ஏமியின் வாழ்க்கையைச் சித்தரித்திருப்பார் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அது நூலை வாசிக்கத்தூண்டியது.

முக்கியமானவர்களின் வாழ்க்கைச் சரிதங்களை எழுதியிருப்பவர்கள் ஒரு தவற்றைச் செய்துவிடுகிறார்கள். அதாவது, அவர்களைப்பற்றி யதார்த்தமாக எழுதாமல் கற்பனாவாதத்தைக் கையாண்டுவிடுகிறார்கள். அவர்கள் எந்தத் தவறையும் செய்யமுடியாதவர்கள் என்ற தோற்றத்தை சரிதத்தில் உருவாக்கிவிடுகிறார்கள். உள்ளதை உள்ளதுபோல் காட்டத்தவறும் இந்த முயற்சி சென்டிமென்டலிசத்திற்கு வித்திட்டுவிடுகிறது. அந்த முறையிலேயே கிறிஸ்தவப் பெரியவர்களைப் பார்க்க வாசகன் பழகிவிடுகிற நிலையும் ஏற்படுகிறது. இவர்களைப்போல வாழ்வது கஷ்டம்; தவறே செய்ய முடியாதவர்கள்; எட்டமுடியாத தூரத்தில் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆபத்து இயன் மரேயின் நூலில் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. இயன் என் நம்பிக்கையை ஓரளவுக்கு வீணாக்கவில்லை. ஏமியைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் என்று தெரிகிறது. அவரைப்பற்றிய இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு எனக்கு நூலில் விடைகிடைக்காவிட்டாலும், அது இன்னும் சில கேள்விகளை எழுப்பியிருந்தாலும் ஓரளவுக்கு ஏமி கார்மைக்கலைப்பற்றிய புரிதலை அடைய நூல் நிச்சயம் உதவியிருக்கிறது. இந்த ஆக்கத்தில் நான் முதலில் ஏமியின் வாழ்க்கையையும், பணிகளையும்பற்றி விளக்கிவிட்டு அடுத்து வரவிருக்கின்ற ஆக்கத்தில் அவரைப்பற்றிய மதிப்பீட்டை வழங்கவிருக்கிறேன்.

ஏமி கார்மைக்கலின் குடும்ப வரலாறும், கிறிஸ்தவ நம்பிக்கையும்

இனி நூலின் உள்ளே நுழைந்து ஏமியின் வாழ்க்கையை ஆராயலாமே. ஏமி கார்மைக்கல் 1867ல் வட அயர்லாந்தில் டிசம்பர் 16ம் தேதி பிறந்தார். அல்ஸ்டர் பிரெஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்ததாக அவருடைய குடும்பம் இருந்தது. சங்கீதப் புத்தகத்தில் இருந்து பாடல்களைப் பாடுவதையும், குடும்ப ஆராதனையையும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதையும் தீவிர வழக்கமாகக் கொண்டிருந்த பக்திமிக்க குடும்பப் பாரம்பரியத்தைத் கொண்டிருந்தார் ஏமி. ஓய்வு நாளைக் கர்த்தருக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவுமே அவருடைய குடும்பம் செலவிட்டது. 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை வேதமாகக் கொண்டு வளர்ந்த பின்னணி ஏமியினுடையதாக இருந்தது. அவருடைய ஆரம்பக் கல்வியை இங்கிலாந்தில் ஹரகேட்டிலிருந்த போர்டிங் ஸ்கூலில் பெற்றுக்கொண்ட ஏமியினுடைய குடும்பம் ஓரளவுக்கு பணவசதி படைத்தது; மத்தியதரக் குடும்பமாக இருந்தது. 1885ல் தந்தை இறந்தபோது ஏமியினுடைய படிப்பு முடிவுக்கு வந்தது. குடும்பத்தில் தனக்கு இளையவர்களாக இருந்தவர்களைக் கவனிப்பதிலும், ஓவியம் பயில்வதிலும் ஏமி கவனம் செலுத்தினார்.

பிரெஸ்பிடீரியன் சபைப்பின்னணியில் வளர்ந்திருந்த ஏமி, கர்த்தரை விசுவாசித்த காலப்பகுதியில் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் மத்தியில் சுயபக்திவிருத்தியில் கவனம் செலுத்துவது தீவிரமாகிக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய பயனுள்ள வாழ்க்கைவாழ சுயபக்திவிருத்தி அத்தியாவசியம் என்ற கருத்து மேலோங்கிக்கொண்டிருந்தது. இதற்கு அக்காலகட்டத்தில் உருவாகி வளர்ந்துகொண்டிருந்த ஆவிக்குரிய இயக்கமொன்று காரணமாக இருந்தது. கம்பிரியாவில் கெஸ்சிக் என்ற பகுதியிலும் வேறு சில இடங்களிலும் வருடாந்தர ஆவிக்குரிய கூட்டங்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் நடத்தி வந்தனர். இது முக்கியமாக ஆங்கிலிக்கன் சபைப்பிரிவினரின் மத்தியில் தோன்றியிருந்தபோதும், ஏனைய சபைப்பிரிவினர் மத்தியிலும் இதன் செல்வாக்கு பரவ ஆரம்பித்தது. அன்ட்ரூ போனர் போன்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சீர்திருத்த பிரெஸ்பிடீரியன்களும் இந்தக்கூட்டங்களுக்கு சென்றிருந்தனர். அக்கூட்ட நிகழ்ச்சிகள் ‘தனக்குப் பயனுள்ளதாக இருந்தபோதும் சில நடவடிக்கைகள் தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடியனவாக இருந்தன’ என்று அன்ட்ரு போனர் குறிப்பிட்டிருப்பதாக இயன் மரே நூலில் சுட்டிக்காட்டுகிறார். ஏமி கார்மைக்கல் பதினெட்டு வயதாக இருக்கும்போது கெஸ்சிக் கூட்டமொன்றில் கிளாஸ்கோவில் கலந்துகொண்டார். 1887ம் ஆண்டு பெல்பாஸ்டில் (அயர்லாந்து) நிகழ்ந்த இத்தகைய கூட்டங்களிலும் ஏமி கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் ஹட்சன் டெயிலர், ரொபட் வில்சன் போன்றோர் உரையாற்றியிருந்தனர். ரொபட் வில்சன் கெஸ்சிக் (கன்வென்ஷன்) கூட்டங்களின் ஆரம்பத் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

கெஸ்சிக் கூட்டங்கள் மூலம் உருவான, 65 வயதுள்ளவராக இருந்த ரொபட் வில்சனின் தொடர்பு பின்னால் அவருடைய குடும்பத்தில் வளர்ப்பு மகளைப்போல வாழ்வதற்கான வசதியை ஏமிக்கு பெற்றுக்கொடுத்தது. ஏமிக்கு வில்சனின் மீது அதிக மதிப்பிருந்தது. தன் வீட்டில் வளர்ந்த ஏமிக்கு உலக மிஷனரி ஊழியம்பற்றிய ஆர்வத்தை வில்சன் ஊட்டி வளர்த்தார். கெஸ்சிக் கன்வென்ஷன், வில்சனின் தொடர்பு, அவருடைய போதனைகள், வாழ்க்கைமுறை ஆகியன ஏமியை மிஷனரி ஊழியத்தில் ஆர்வம் காட்டவைத்ததில் ஆச்சரியமில்லை. பிரெஸ்பிடீரியனாக வளர்ந்த ஏமியில் கெஸ்சிக் ஆவிக்குரிய கூட்டப்போதனைகளின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை அவரைப்பற்றிய மதிப்பீட்டைச் செய்யும்போது பார்ப்போம். இருந்தபோதும் கெஸ்சிக் கன்வென்ஷன் கூட்டப் போதனைகள்பற்றி இந்த இடத்தில் சொல்லாமல் இருக்கமுடியாது.

கெஸ்சிக் போதனைகளைப் போதித்த முக்கியமானவர்களில் ஒருவர் அன்ட்ரூ மரே. சிறந்த கிறிஸ்தவரான இவரும் கெஸ்சிக் போதனையாளர்களும் பரிசுத்தவாழ்க்கை வாழ்வதுபற்றிய வித்தியாசமான போதனையை அளித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த எவ். பி. மேயர் போன்றோரும் இதன் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர். இந்தப் போதனைகள் பரிசுத்தமாகுதலில் தனி மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்வின் பொறுப்பைவிட கிறிஸ்து நமக்குள் இருந்து செய்கின்ற கிரியைகளுக்கும், அந்தக் கிரியைகளுக்கு நம்மை ஆவிக்குரிய ஜெபம், தியானங்கள் மூலம் ‘ஒப்புக்கொடுத்து’ வாழ்கின்ற முறையே மிகவும் அவசியமானதென்றும் வலியுறுத்திப் போதித்தனர் (Let go and let God). இது வழமையாக பரிசுத்தவாழ்க்கை வாழ்வதுபற்றி அப்போஸ்தலர் காலத்திலிருந்து வந்திருந்த போதனைகளுக்கு முரணாக இருந்தது. கெஸ்சிக் கன்வென்ஷன் கூட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலை, நடவடிக்கைகள், போதனைகள் ஆகியவை ஆவிக்குரிய உணர்வுகளை உருவாக்கத் தேவையானவை என்ற எண்ணமும், அத்தகையவற்றிற்கு தன்னை இழந்து ஒப்புக்கொடுப்பதன் மூலமே ஒருவரால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்வை வாழமுடியும் என்ற கருத்துகளும் மேலோங்கின. இந்தப் போதனைகள் ஆவிக்குரிய உணர்வலைகளைத் தூண்டி அநேகருக்கு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருந்தாலும் அவற்றில் காணப்பட்ட முக்கியமான இறையியல் தவறுகளை எல்லோரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஆங்கிலேயத் திருச்சபை பிஷப்பாக இருந்த ஜே. சி. ரைல் அவற்றைப் பாரதூரமானவையாக உணர்ந்து தான் பணிபுரிந்த ஆங்கிலிக்கன் பிரிவில் அவற்றிற்கெதிரான எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். அவர் எழுதிய ‘பரிசுத்தமாகுதல்’ (Holiness) என்ற நூலின் நீண்ட அறிமுகப்பகுதி கெஸ்சிக் போதனையைத் தோலுரித்துக்காட்டி அதற்கெதிரான வேதபூர்வமான பரிசுத்தமாக்குதலுக்கான விளக்கத்தை அளிக்கிறது. இத்தகைய போதனைகள் அமெரிக்காவிலும் இந்தக் காலத்தில் தலையெடுத்தன. பென்ஜமீன் வோர்பீல்ட் எனும் இறையியலறிஞர் தன்னுடைய ‘பூரணத்துவம்’ என்ற பெரும் நூலில் இப்போதனைகளை இனங்காட்டி, அவற்றின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றிற்கெதிரான வேதவிளக்கங்களைத் தந்திருக்கிறார். 20ம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் கெஸ்சிக் கூட்டங்கள் எதிலும் பேச மறுத்ததோடு அதன் போதனைகளையும் முற்றிலும் நிராகரித்தார். பியூரிட்டன் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிய மார்டின் லொயிட் ஜோன்ஸ், பியூரிட்டன் பரிசுத்தமாக்குதலுக்கு எதிர்மாறான போதனைகளாக கெஸ்சிக் போதனைகள் இருப்பதைக் கண்டார்.

1900ங்களின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் இன்றைய கெரிஸ்மெட்டிக் இயக்கத்துக்கு ஆரம்பகட்டமான அசூசா தெரு எழுப்புதல் நிகழ்வுகளும் உருவானது என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டு பெந்தகொஸ்தே போதனைகளில் காணப்பட்ட பரிசுத்தமாக்குதல் தொடர்பான போதனைகளின் சாயலைக் கெஸ்சிக் போதனைகள் அன்றே கொண்டிருந்தன. நாம் வெளியிட்டிருக்கும் அல்பர்ட் என். மார்டினின் ‘வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற நூலும் இந்த விஷயத்தை மனதில் வைத்தே எழுதப்பட்டிருக்கும் அருமையான நூல். எந்தளவுக்கு ஏமி கார்மைக்கலில் கெஸ்சிக் போதனைகளின் தாக்கமிருந்தது என்பதை இயன் மரே தெளிவாக விளக்கியிராவிட்டாலும் சிலவற்றை நூலில் அடிக்கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

மிஷனரிப் பணியில் ஆர்வமும், ஆரம்ப நடவடிக்கைகளும்

1892ம் ஆண்டு ஜூலை மாதம் மிஷனரி ஊழியத்திற்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற உந்துதல் தனக்குள் உருவானதாக ஏமி குறிப்பிடுகிறார். இதற்கு அவருடைய வளர்ப்புத் தந்தையும் காரணமாக இருந்திருப்பதை முன்பே கண்டோம். ஆகஸ்டு மாதம் ‘சீன உள்ளூர் மிஷன்’ என்ற மிஷனரி நிறுவனத்தோடு தொடர்புகொண்டு இலண்டனில் அவர்களோடு ஓர் இன்டர்வியூவுக்கு ஏற்பாடு செய்துகொண்டார் ஏமி. மிஷனும் அவரை ஏற்றுக்கொண்டது. தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் தயார்செய்துகொண்டு பிரயாணத்துக்குத் தயாராக இருந்தவேளை யில் மிஷனைச் சேர்ந்த டாக்டர், ஏமியின் உடல்நிலை இந்தப்பணிக்குத் தயாராக இல்லை என்று நிராகரித்துவிட்டார். ஏமி மறுபடியும் வில்சனின் வீட்டுக்கே திரும்ப நேர்ந்தது; ஆனால் நீண்டகாலத்துக்கு இருப்பதற்கு அல்ல. அதற்குப் பிறகு ஜப்பானுக்குப் போகத் தீர்மானித்த ஏமி, ஜப்பான் சுவிசேஷக் குழுவினரோடு தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக 1893ல் ஜப்பான் சென்றார். ஜப்பான் வாழ்க்கை ஏமிக்கு நல்ல அனுபவத்தைத் தந்தது. சுவிசேஷப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஏமி மொழியைக் கற்றுக்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அத்தோடு அங்கு காணப்பட்ட சில தவறான சுவிசேஷ அறிவிப்பு முறைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை அவரை சிந்திக்க வைத்தன. சிறுமிகளுக்குக் கிறிஸ்துவை அறிமுகப்படுத்த வேண்டுமானால் வெறுமனே சுவிசேஷம் சொன்னால் போதாது, தையல் கற்பித்தோ, நூற்கவோ பழகிக்கொடுத்து சுவிசேஷத்தைக் கொஞ்சம் குறைத்துச் சொன்னால் அதிகம் பேர் ஆண்டவரிடம் வருவார்கள் என்று சுவிசேஷப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சொன்னதை ஏமி ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மெய்யான ஆர்வத்தோடு இரண்டு பேர் வந்தால் போதும் நூறுபேர் விளையாடுவதற்காக வருவதைவிட. இந்தமாதிரி ஆத்துமாக்களுடன் விளையாடுவது நல்லதல்ல’ என்று ஏமி இதைப்பற்றி எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில மிஷனரிகள் இயேசு படங்களை வைத்து சுவிசேஷம் சொல்லி வந்ததையும் ஏமி துப்புரவாக விரும்பவில்லை. தேவகுமாரனை எவ்வாறு மனிதகுமாரனில் இருந்து பிரித்துப் பார்க்கமுடியும் என்று ஏமி மிகவும் வருத்தப்பட்டார். அப்போஸ்தலர்கள் தேவனுடைய வார்த்தையில் முழு நம்பிக்கைவைத்துப் பிரசங்கித்ததைவிட ஆத்துமாக்களுடைய உணர்வுகளைத் தூண்டுவதற்கு எதையும் செய்யவில்லை என்றும், தேவ வல்லமை நீங்கியதனாலேயே திருச்சபை படங்களை நாடி ஓடுகிறது என்றும் ஏமி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பயணமும், வோக்கரின் அறிமுகமும்

ஏமி ஜப்பானில் அதிக காலம் இருக்கவில்லை. அதற்குப் பிறகு கெஸ்சிக் மிஷன் நிறுவனத்தின் மூலமாக இலங்கைக்குப் போனார். அதுவும் அவருடைய வளர்ப்புத் தந்தையின் உடல்நலக்குறைவின் காரணமாக நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர் மறுபடியும் சொந்தநாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. அங்கு வந்த பிறகு அவருக்கு ஒரு திருப்பம் வாழ்வில் ஏற்பட்டது. அது ஒரு பெரிய திருப்பந்தான். இங்கிலாந்து திருச்சபையின் கிளையான செனானா மிஷனரி நிறுவனத்தின் மூலமாக இந்தியாவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. இருபத்தி ஏழு வயதில் அக்டோபர் மாதம் 11ம் நாள் 1895ம் வருடம் ஏமி இந்தியாவுக்குப் பயணமானார். அந்தப் பயணம் ஒருவழிப்பயணமாக அமையும் என்பதை அவர் வாழ்வில் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; தெரிந்திருந்தாலும் அது அவருக்கு எந்தக் கவலையையும் அளித்திருந்திருக்காது. அந்தளவுக்கு கிறிஸ்துக்குப் பணிசெய்வதில் இளம் வயதிலேயே தீவிர பொறுப்புணர்ச்சி ஏமியிடம் இருந்தது.

பெங்களூர் மிஷன் ஆஸ்பத்திரியை அடைந்த ஏமி அந்தக் காலத்தில் இந்தியாவில் 15 மில்லியன் மக்கள் பேசிய தமிழ் மொழியை முதலில் கற்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. முதன் முறையாக இந்தியாவில் நிலவிவந்த இருளும், பிசாசின் கைங்கரியங்களும் சூழ்ந்திருந்த வெளிப்படையான சமுதாயத் தீங்குகளை வாழ்வில் உணர ஆரம்பித்தார் ஏமி. இந்து சமுதாயத்தின் ஆணிவேராக இருந்த ஜாதிமுறையும், கணவன் இறந்தபின் மனைவி உடன்கட்டை ஏறுதலும் அவருடைய கவனத்தைத் தொட்டன. சமுதாயம் இருந்த நிலை மட்டுமல்லாது திருச்சபை அப்போதிருந்த நிலை அவருக்கு துன்பம் தந்தது. சமுதாய இருளுக்கு மத்தியில் கிறிஸ்தவம் என்ற பெயரில் பெயரளவிலான ஒரு மதத்தையே ஏமி அன்று கண்டார். எத்தனையோ காலங்களாக மிஷன் ஊழியங்கள் இருந்திருந்த போதிலும் இருதயத்தைத் தொட்டுத் திருப்பியிருந்த சுவிசேஷக் கிறிஸ்தவத்தை அங்கு அவரால் காணமுடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் கையில் வேதப்புத்தகமே இல்லாதிருந்தது. அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் மட்டுமே கிறிஸ்தவ ஊழியம் செய்வேன் என்று பணிசெய்தவர்களையே அவர் பெரும்பாலும் கண்ணால் கண்டார். அவர்களுக்கு இயேசுவின் சுவிசேஷமென்றால் என்னவென்பதும் தெரியாதிருந்தது. ‘முற்களும், களைகளும் நிரம்பி வழிந்த திருச்சபையையே நான் கண்டேன்’ என்று ஏமி எழுதியிருக்கிறார். இருள்பரவியிருந்த இந்து சமுதாயத்தில் ஊழியம் செய்வதன் மூலம் சந்திக்கக்கூடிய நெருடல்களால் தளர்ந்துபோன மிஷனரிகள் சமுதாயத்திற்கேற்றவிதத்தில் ஒத்துப்போகும் சுவிசேஷ ஊழியத்தைச் செய்யும் முரண்பாட்டுக்கு இடங்கொடுக்கும் சோதனையில் வீழ்ந்திருந்தனர். பெங்களூரில் இதைக் கண்ட ஏமி சோகமுற்றார்.

ஏமி கார்மைக்கலுக்கு அன்று கிடைத்த பெரும் ஆசீர்வாதம் தொமஸ் வோக்கர் என்ற மனிதனின் உருவத்தில் வந்தது. இவரைப்பற்றிச் சொல்ல வேண்டும். தென் தமிழகத்தில் ஏமியின் வாழ்க்கையிலும் பணிகளிலும் இந்த மனிதர் பெரும் இடத்தைப் பெற்றிருந்தார். ஏமியைவிட எட்டு வயது கூடியவர் வோக்கர். ஏமியின் பணிகளெல்லாம் இவரின் துணையும் செல்வாக்குமில்லாமல் வளர்ந்திருக்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு தமிழகத்தில் பணிபுரிந்த காலம் முதல் இவர் ஏமிக்கு உற்ற துணையாக இருந்து வழிகாட்டியிருக்கிறார். இங்கிலாந்து திருச்சபையின் போதகர்களில் ஒருவராக இருந்த வோக்கர் சி. எம். எஸ். மூலம் திருநெல்வேலி மாகாணத்தில் (அன்று தின்னவெலி) பணிபுரிந்து வந்திருந்தார். தமிழைப் பயிலத் துணை செய்வதாக வோக்கரும் அவருடைய மனைவியும் கொடுத்த வாக்குறுதிகள் 1896ல் ஏமியைத் திருநெல்வேலியில் போய் வாழவைத்தது. வோக்கர் தமிழை முறையாகக் கற்றுப் பிரசங்கம் செய்த வேத இறையியல் திறமைகளைக் கொண்டவராக இருந்தார். அவருடைய பிரசங்கத்திறமையை மட்டுமல்லாது, அதன் மூலமான ஆவியானவரின் செயல்பாட்டையும் ஏமி தன் புலன்களால் உணர்ந்தார். அன்று வோக்கர் தமிழகத்தில் பணிபுரிந்த கிறிஸ்தவப் பிரிவே இன்றைக்கு சி. எஸ். ஐ. (தென்னிந்திய திருச்சபை) பிரிவாக இயங்கி வருகிறது. அன்று வோக்கரோடு ஏமிக்கு ஏற்பட்ட உறவு எத்தனைப் பெரிய மாற்றங்களையும், நிலைநின்று பெயர் சொல்லவைத்த பணிகளையும் ஏமி செய்வதற்கு வழிவகுத்திருக்கிறது.

தொமஸ் வோக்கர் 1885ல் மிஷனரியாக தமிழகம் வந்து செனானா மிஷனைச் சேர்ந்த செல்வி ஹொட்ஜை 1890ல் மணம்புரிந்தார். தமிழகம் வந்தநாள் தொடக்கம் அவர் திருநெல்வேலியில் இருந்த பிஷப்புகளுக்கு துணைசெய்து நிர்வாகப்பணிகளைக் கவனித்துக்கொண்டார். பின்னால் அவற்றைத் துறந்துவிட்டு சுவிசேஷப் பணியில் ஈடுபட்டு ஊழியத்திற்கு தகுதியானவர்களுக்கு பயிற்சிகொடுக்க ஆரம்பித்தார். ஸ்பிரிங் இல்லாத கட்டை மாட்டுவண்டியில் ஒரு சிறு கூட்டத்தோடு பிரயாணம் செய்து பல இடங்களில் சுவிசேஷப் பணிபுரிந்தார் வோக்கர். அத்தோடு ஊழியத்திற்காகப் பலரைத் தயாரிப்பதற்காக போதனைகளையும் தந்து வந்தார். 1904வரையில் எட்டுவருடங்களுக்கு வோக்கர் ஏமியின் வழிகாட்டியாக பலவிதங்களில் துணைசெய்து வந்தார். வோக்கரின் மனைவியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோதே வோக்கர் மனைவியோடு இங்கிலாந்து போக நேர்ந்தது. அதற்குப் பிறகு ஏமி தனியாகவே தன் பணியைத் தொடர வேண்டியிருந்தது. வோக்கரோடிருந்த காலங்களில் ஏமிக்கு நல்ல பாதுகாப்பு இருந்தது மட்டுமன்றி அவர் வோக்கரிடம் கற்றுக்கொண்டவைகள் அநேகம்.

டோனவூர் ஐக்கியமும், ஏமியின் சமூகத் தொண்டும்

ஆரம்பத்தில் வோக்கரோடு சுவிசேஷப் பணிகளுக்குப் போய்க்கொண்டிருந்த ஏமியின் கவனம் குழந்தைகள் மீது திரும்பியதற்குக் காரணம் ஏழு வயதுள்ள ஒரு பெண்குழந்தைதான். அவள் பெயர் பிரீனா. அவள் ஏமியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத்தேடிப் பல தூரங்களைக் கடந்து ஓடி வந்தாள். கடவுளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவளுடைய பெற்றோர்கள் அவளைக் கோயிலுக்கு அர்ப்பணித்திருந்தனர். அதை விரும்பாத சிறுமி ஏமியைத் தேடி வந்திருந்தாள். ஏற்கனவே சில தடவைகள் கோயிலிலிருந்து தப்ப முயற்சித்திருந்த அவள் கண்டுபிடிக்கப்பட்டு தீச்சூடு போடப்பட்டிருந்தாள். இப்போது அவள் ஏமியிடம் தஞ்சமடைந்திருந்தாள். அதற்குப் பிறகு நான்கு சிறுமிகள் வேறு காரணங்களுக்காக ஏமியால் காப்பாற்றப்பட்டிருந்தனர். இந்தக் கொடூரமான சமுதாய இழிவே ஏமியைக் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்க்கும் பணியில் வழிநடத்தியிருந்தது. அந்தக் காலத்தில் சிறுமிகளாக இருந்த பெண்பிள்ளைகளைக் கோயிலுக்கு, சாமிக்கு திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது (பொட்டுக்கட்டிக் கொடுத்தல்). இப்படி அனுப்பிவைக்கப்படும் சிறுமிகள் கோயிலில் பூசாரிகளுக்குக் கீழிருந்து வளருவது மட்டுமல்லாமல் பூசாரிகளினுடையதும், ஊர்ப்பெரியவர்களினதும் சரீர ஆசைக்குப் பலியாகி விபச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்து வந்திருந்த பெருங்கொடுமை. பெண்குழந்தைகளை இப்படிக் கோயிலுக்கு அனுப்பிவைப்பதற்கு ஜாதிப் பிரச்சனை, திருமணப்பிரச்சனை, பொருளாதாரம் போன்ற பல காரணங்கள் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியிலுங்கூட இந்தவழக்கம் தொடர்ந்தது.

திருநெல்வேலி மாகாணத்தில் 1932ல் எழுதப்பட்ட ஏமியின் கடிதத்தின்படி 3000 கோயில்கள் இருந்தன. அப்படியானால் அவற்றில் எத்தனைக் குழந்தை விபச்சாரிகள் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இதை உணர்ந்த ஏமி கடுங்கோபமும், துன்பமும் அடைந்தார். இந்த சமுதாய இழிவை எதிர்த்து நிற்பதென்பது அந்தக் காலத்தில் சாதாரண விஷயமல்ல. மேல்ஜாதிப் பிராமணர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய உயர்சாதியினர், தாழ்ந்த சாதியினரோடும் போராட வேண்டும். எத்தனையோ சரீர ஆபத்துக்களையுங்கூட சந்திக்க நேரிடும். ஒரு பெண்ணால் செய்யக்கூடிய காரியமா அது? இதற்கெல்லாம் உதவி செய்துவருகிற நோக்கத்தில் பிரிட்டிஷ் அரசும் அன்றில்லை. முடிந்தவரை தங்களுடைய ஆட்சியையும், வருவாயையும் காத்துக்கொள்ளும் எண்ணத்திலேயே பிரிட்டிஷார் இருந்தனர். ஏமி தன்னந்தனியாக இந்தப் போராட்டத்தில் குதிக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் வோக்கரின் உதவி அவருக்கு இருந்தது. பல தடவைகள் இந்தப் போராட்டத்தின் காரணமாக கோர்ட்டுப் படியேற வேண்டியிருந்தது. ஒருதடவை ஒரு சிறுமியைக் காப்பாற்ற அவளை நாட்டைவிட்டே அனுப்ப நேர்ந்தது. 1901 ல் ஆரம்பித்து 1904ல் ஏமி பதினேழு குழந்தைகளை இந்தக்கொடுமையிலிருந்து காப்பாற்றியிருந்தார். வோக்கரோடு தொடர்ந்து சுவிசேஷப் பணியில் ஈடுபட முடியாதபடி இந்தக் குழந்தைகளை வளர்க்கும் முழுநேர வேலையில் ஏமி தன்னை அர்ப்பணிக்கும் நிலை ஏற்பட்டது. அதுவே கடவுள் காட்டுகிற வழியாகக் கருதி தன்னை அதற்கு ஏமி ஒப்புக்கொடுத்தார். இந்தக் குழந்தைகள் அன்போடு அழைக்கும் ‘அம்மா’ வாகவும் மாறினார். அந்தப் பெயரே கடைசிவரை ஏமியின் பெயராக நிலைத்தது.

இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடத்தைத் தேடியபோதுதான் டோனவூர் கண்டுபிடிக்கப்பட்டது. ‘டோனா’ என்பது சி. எம். எஸ். நிறுவனத்துக்கு ஆதரவளித்து வந்த ஒரு ஜெர்மன் பெண்மணியின் பெயர். அவருடைய பெயரே இந்தக் கிராமத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. அவருடைய பணத்தில் 1824ல் ஒரு சிறு சபைக்கட்டடமும் இங்கு கட்டப்பட்டது. 1886ல் வோக்கர் முதல் தடவை இந்த ஊருக்கு வந்திருந்தார். 1900ல் ஏமி இந்த ஊருக்கு முதல் தடவை வந்தபோது அது அவருக்கு பார்த்ததுமே பிடித்துப்போய்விட்டது. இறுதியில் டோனவூரே ஏமியின் நிரந்தர வாழ்க்கை ஸ்தலமாகியது. அங்கு மூன்று அறைகள் கொண்டதாக இருந்த சிறுவீட்டில் வோக்கர் தம்பதியினரின் துணையோடு தான் காப்பாற்றிய பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்தார் ஏமி. அதுவே பின்பு வளர்ச்சியடைந்து டோனவூர் ஐக்கியமாகி 1000க்கு மேற்பட்ட சிறுமிகளும், சிறுவர்களும் இருந்து வளர்ந்து ஏமியின் கண்காணிப்பில் கல்வி பயின்ற நல்லூழியமாக இருந்தது. இதற்காக ஏமியோடு சேர்ந்து உழைப்பதற்காக அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். நாளடைவில் ஒரு பெரும் பிள்ளைகள் காப்பகமாக பல்வேறு ஊழியர்களைக் கொண்டு வளர்ந்த ஸ்தாபனமாக டோனவூர் ஐக்கியம் மாறியது. கல்விஸ்தலங்களும், மருத்துவமனையும், பயிற்சி ஸ்தலங்கள் என்று பல்வேறு பணிகளும் டோனவூர் ஐக்கியத்தில் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கப்பட்டன. இங்கு வளர்ந்த பிள்ளைகளுக்கு ஏமி சுவிசேஷத்தை அறிவிக்கத் தவறவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவர்களும் அநேகர். அப்படி ஞானஸ்நானம் பெற்ற எல்லோருமே கடைசிவரை விசுவாசிகளாக இருந்துவிடவில்லை. இருந்தும் பிள்ளைகளை வளர்த்துக் கல்வி புகட்டுவதோடு மட்டும் இருந்துவிடாமல் கிறிஸ்தவ சுவிசேஷத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஏமி கருத்தோடு செயல்பட்டார். பிள்ளைகளுக்கும், வேலை செய்கிறவர்களுக்கும் ஆராதிப்பதற்கு வசதியாக ஓர் ஆராதனைத்தளமும் டோனவூரில் கட்டப்பட்டது. உள்ளூர் பிரசங்கிகள் இதில் செய்தி கொடுத்தனர். அப்படி நல்ல பிரசங்கிகள் கிடைக்காதவேளையில் அங்கிருப்பவர்களே செய்தி கொடுத்தனர். பக்கத்து ஊர்களுக்குப் போய் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியிலும் தன்கீழிருந்தவர்களை ஏமி பயன்படுத்தினார்.

இந்தக் காலத்தில் ஆங்கிலேயத் திருச்சபையின் மிஷனரி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு இந்தியா வந்த ஸ்டீபன் நீல் ஏமியின் கீழ் டோனவூரில் பணிசெய்ய வந்திணைந்தார். பிள்ளைகளுக்கு போதிப்பதும், நிர்வாகக் கடமைகளைக் கவனிப்பதும் நீலின் பணியாக இருந்தது. நாட்கள் போகப்போக ஏமிக்கும் நீலுக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் ஸ்டீபன் நீல் கர்த்தரின் வேதம் தவறுகளேதுமற்ற அவரால் ஊதியருளப்பட்ட வெளிப்படுத்தல் என்பதை நம்ப மறுத்ததுதான். ஏமி ஸ்டீபன் நீலை டோனவூர் பணிகளில் இருந்து விலக்கினார். இதைச் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு பெருந்தைரியம் இருந்திருக்க வேண்டும். பெரும் மனத்தாங்களுடன் ஏமி இதைச் செய்ய நேர்ந்தது. அதற்குப்பின் ஸ்டீபன் நீல் திருநெல்வேலி சி. எஸ். ஐ. பிரிவின் பிஷப்பாக பதவியேற்றார். இதிலிருந்து அந்தக் காலத்திலேயே சி. எஸ். ஐ. பிரிவு தென்னிந்தியாவில் எந்த நிலையில் இருந்திருக்கிறது என்பதை உணர முடியும்.

குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு கல்வியறிவூட்டி சுவிசேஷத்தை அறிவித்ததோடு எழுத்துப் பணியிலும் ஏமி ஈடுபட்டார். முப்பந்தைந்து நூல்கள்வரைத் தன் வாழ்நாளில் ஏமி எழுதி வெளியிட்டிருந்தார். அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும், தியான நூல்களாகவும், வாழ்க்கைச் சரிதங்களாகவும் இருந்தன. டோனவூர் பணிகளுக்குத் தேவையான பணத்தை இந்த வெளியீடுகள் மூலம் பெற்றுப் பயன்படுத்திக் கொண்டார் ஏமி. வாசிப்பதிலும், மற்றவர்களை வாசிக்க வைப்பதிலும் அவர் அக்கறை காட்டினார். டோனவூரில் இதற்காக ஒரு நூலகத்தை ஏற்படுத்தி அங்கிருந்தவர்கள் அதைப் பயன்படுத்தும்படிச் செய்தார்.

வயதாகி வரும் காலத்தில் ஏமி ஒரு விபத்தின் காரணமாக நடமாட முடியாத நிலையை அடைந்தார். அப்படியும் அவருடைய பணிகளை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இறுதியில் தன்னுடைய 83ம் வயதில் 1951ம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் ஏமி கர்த்தரின் பாதத்தை அடைந்தார். தன்னுடைய நினைவாக கல்லறை எதுவும் டோனவூரில் கட்டக்கூடாது என்று அவர் உறுதியாகச் சொல்லியிருந்தார்.

டோனவூர் பணிகள் இன்று தொடர்ந்தும் நடந்து வருகின்றன. தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் சி. எஸ். ஐ. பிரிவின் மேற்பார்வையின் கீழ் இதற்காக உருவாக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் இப்பணிகள் தொடர்கின்றன. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் விஷயத்தில் இந்திய அரசாங்கம் சட்டங்களை உருவாக்கியிருப்பதால் ஏமியின் காலத்தில் இருந்ததுபோல எவரையும் எவரும் நினைத்தபடி தத்தெடுத்து வளர்ப்பது என்பது இன்று முடியாத காரியம். இந்திய சட்டங்களுக்கு ஏற்றவிதத்தில் டோனவூரும் தன்னுடைய பணிகளில் மாற்றங்களைச் செய்துகொண்டது. ஏமியின் நோக்கங்களையும், இலக்குகளையும் பூரணமாகக் கொண்டதாக டோனவூர் பணிகள் இன்றுதொடர்கின்றன என்று சொல்வதற்கில்லை. முக்கியமாக ஏமியின் சுவிசேஷ நோக்கங்களை அப்படியே பின்பற்றும் நிறுவனமாக இன்று டோனவூர் இல்லை என்பதாகத்தான் நான் கேள்விப்படுகிறேன். தமிழகத்து சி. எஸ். ஐ. சபைப்பிரிவு சுவிசேஷ இயக்க இலக்குகளைக்கொண்டதாக இன்று இல்லை. லிபரலிசத்தைப் பின்பற்றும் அந்தப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் சுவிசேஷ நோக்கங்களை எதிர்பார்க்க முடியாது.

கிறிஸ்துவை வாழ்நாளெல்லாம் நேசித்து தியாகங்கள் பல செய்து தன்னுடைய சுகதுக்கங்களுக்கு மதிப்பளிக்காமல் சேவை செய்திருக்கும் ஏமி கார்மைக்கலை நாம் எப்படி எடைபோடுவது? சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பூப்போன்ற குழந்தைகளை அதன் கோரமான அரக்கத்தனத்தில் இருந்து காப்பாற்றி வளர்த்த சமூகசேவையை ஏமி தனியொருவராக பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்திருக்கிறார். சமூகப்பணியைக் கிறிஸ்தவரல்லாதவர்களும் செய்யலாம், செய்து வருகிறார்கள்; அது கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட சொத்துரிமையல்ல. ஆனால், ஏமியின் சமூகத் தொண்டு கிறிஸ்துவில் அவர் வைத்திருந்த அன்பினால் உருவான தன்னலமற்ற தொண்டு. தமிழ் சமூகத்தில் நிலவி வந்த அகோரத் தீங்கை, குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை வெறுத்து, ஆபத்துக்களைச் துச்சமாக எண்ணி குழந்தைகளை அவர் காப்பாற்றிப் பாதுகாத்தார். கிறிஸ்துவின் அன்பு மட்டுமே ஒருவரை இதைச் செய்யவைக்கும். அந்தவிதத்தில் ஏமியின் சமூகத் தொண்டைப் பாராட்டலாம். இந்தவிதத்திலேயே வில்லியம் வில்பர்போர்ஸ் இங்கிலாந்தில் அடிமை ஒழிப்புக்காகப் போராடினார். வில்லியம் கேரியும் கணவனை இழந்த மனைவிகள் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்துப் பேசி அதைத்தடுக்க முயற்சிகள் எடுத்தார். ஜி. யூ. போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் சாதிப்பாகுபாட்டுக்கு எதிராகப் பேசியும், நடந்தும் வந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பு சமுதாயக் கோரங்களை, பண்பாட்டுச் சீரழிவுகளைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டிராமல் தன்னலமற்று ஒருவர் அவற்றிற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க வைக்கும். அந்தவிதத்தில் ஏமி சமுதாயப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழந்தைகளை மீட்டு வளர்த்து வாழ்வளித்தது கிறிஸ்தவ அன்பின் காரணத்தினால்தான். அத்தகைய இருதயம் நமக்கிருக்க வேண்டும்.

இந்தளவுக்கு ஏமியின் கிறிஸ்தவ அன்பையும், சமூகத் தொண்டையும் நாம் வரவேற்றுப் பாராட்டினாலும் அதற்கு மேல் போய் அவருடைய வாழ்க்கையையும், பணிகளையும் பாரபட்சமற்ற வகையில் எடைபோடுவது அவசியம். அத்தகைய மதிப்பீட்டைத்தான் இனித் தொடர்ந்து எழுதவிருக்கிறேன். மறுபடியும் இந்தப் பக்கங்களில் சந்திப்போம்.

 

ஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு

தன்னலமற்ற கிறிஸ்தவ அன்பின் நிமித்தமாக, சுயதுக்கங்களுக்கும், ஆசாபாசங்களுக்கும் மதிப்பளிக்காமல் சமூகத்துக்குப் பணியாற்றியிருக்கும் ஏமி கார்மைக்கலின் பணிகளை எவ்வாறு மதிப்பிடுவது? ஏமியைப்பற்றிய நூலை எழுதியிருக்கும் இயன் மரே இந்த விஷயத்திலுள்ள சிக்கலை விளக்காமலில்லை. ஏமியைப்பற்றி இதுவரை நூல்கள் எழுதியிருக்கும் பிரேங்க் ஹௌட்டனும், எலிசபெத் எலியட்டும் அவருக்கு அளவுக்குமீறிய வர்ணத்தைத் தீட்டியிருப்பதை இயன் சுட்டிக்காட்டுகிறார். ஏமிக்கு தன்னைப்பற்றிப் பெரிதாகப் பேசுவதும், தன்னை முன்னிலைப்படுத்துவதும் பிடித்தமில்லாததாக இருந்தது. இறப்பதற்கு முன்பே தனக்கு எந்தக் கல்லறையும் வைத்துப் பாராட்டுதல்கள் எழுதக்கூடாது என்று வற்புறுத்திக் கூறியிருந்திருக்கிறார். இருந்தும் ஏமியைப்பற்றி எழுதியிருக்கிறவர்கள் அவரை ஒரு ‘புனிதப் பெண்ணாகவே’ காட்ட முயன்றிருக்கிறார்கள். இதனால் வாழ்க்கைச் சரிதமெழுதுகிறவர்கள் உண்மை நிலையைக் காட்டாமல் வாசகர்களைத் திசைதிருப்பிவிடுகிற நிலை உருவாகிறது. கயஸ் டேவிஸ் இதைப்பற்றி எழுதுகிறபோது, ‘டோனவூர் வைரஸ்’ என்று இதை வர்ணித்திருக்கிறார் என்று இயன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, ‘பாகுபாடற்றவிதத்திலும், கவனத்தோடு ஆராயப்படாமலும், ஒருவித தனிநபர் துதிபாடலுக்கு வழிவிட்டிருக்கிறது. இது நன்மையானதல்ல’ என்று கயஸ் டேவிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இயன் மரே தன்நூலில் மேற்குறிப்பிட்ட தனிநபர் துதிபாடலுக்கு இடமளிக்கவில்லை. ஏமியைக் கூடுமானவரையில் அவர் எப்படிப்பட்ட கிறிஸ்தவ பெண்மணி என்று சரியாகக் கணித்துக்காட்டியிருக்கிறார். ஏமியின் குறைபாடுகளைத் தவறாமல் கவனத்தோடு சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். அவர் விட்ட தவறுகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காரணமாக இருந்திருப்பதை அவர் சுட்டாமலில்லை. ஏமியின் கிறிஸ்தவ வாழ்க்கையையும், பணிகளையும்பற்றியே அதிக கவனம் செலுத்தி ஆராய்ந்திருக்கும் இயன் மரே அவருடைய கிறிஸ்தவக் கோட்பாடு, நம்பிக்கைகளைப்பற்றி அதிகளவில் விவரிக்கவில்லை. முக்கியமாக ஏமியின் சபைப் பின்புலம், சபை வாழ்க்கை, சபை அணுகுமுறைபற்றி எதுவுமே தெரிவிக்காமலிருந்திருப்பது இந்நூலின் பலவீனமாக நான் கருதுகிறேன். ஏமியின் சமூகப்பணிக்கும், கிறிஸ்தவ அன்பிற்கும் மட்டுமே முக்கியமளித்து இயனின் நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு தடவை மட்டும் இந்தியாவில் கால் பதித்துவிட்டு (அறிமுகம்), புரிந்துகொள்ளக் கடினமான இந்தியப் பண்பாட்டைப்பற்றியும், அந்நாட்டு கிறிஸ்தவ பணிபற்றியும், ஏமியைப்பற்றியும் எழுதிவிடுவது ஒருவருக்கு அத்தனை சுலபமான காரியமல்ல. ஏமியைப்பற்றி நூல்கள் எழுதியுள்ள பிரேங்க் ஹௌட்டனும், எலிசபெத் எலியட்டும்கூட இந்தியாவுக்கு ஒருசில தடவைகளே போயிருந்திருக்கின்றனர். எனவே, இயன் மரே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இயன் மறைக்காமல் ஏமியைப் பற்றிய பல குறைபாடுகளை விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. குறைகாண வேண்டுமென்பதை நோக்கமாகக் கொள்ளாமல் அந்தக் குறைபாடுகள் இல்லாமலிருந்திருந்தால் ஏமியின் பணிகள் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும் என்பதைக்காட்ட இயன் அவற்றை விளக்கியிருக்கிறார். எப்படியோ, ஏமியைப்பற்றி அறிந்துகொள்ள நான் ஆவலோடிருந்த எத்தனையோ விஷயங்களை இயனின் நூல் வெளிப்படுத்தாவிட்டாலும் ஏமியைப்பற்றியும், இன்றைய டோனவூர் ஐக்கியத்தின் நிலையைப்பற்றியும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கால இந்திய கிறிஸ்தவத்தின் நிலைபற்றியும் சரியாகக் கணிக்க நூல் உதவியிருக்கிறது.

ஏமி சிறந்த கிறிஸ்தவ விசுவாசி

ஏமி கார்மைக்கல் கிறிஸ்துவை நேசித்தார். அவருடைய நேசம் தன்னலமற்ற முழுமையான நேசமாக இருந்தது. சிறுவயதிலேயே கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து வந்திருந்த ஏமிக்கு வேதபோதனைகளும், ஆரம்பகாலத் திருச்சபை வாழ்க்கையும் கிடைத்திருந்தது. கிறிஸ்துவை விசுவாசித்தபின் அவர் தியானத்திலும், ஜெபத்திலும் அதிக அக்கறை காட்டினார். அவர் கர்த்தரோடு தனிமையிலும், ஜெபத்திலும் கழித்த நாட்கள் அநேகம். கர்த்தரோடு தனிமையில் ஜெபித்தும், தியானித்தும் உறவாடுவதை அவர் கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதினார். இதைக் கெஸ்சிக் கன்வென்ஷன் கூட்டங்கள் அவருக்குக் கற்றுத்தந்திருக்கின்றது. இது கெஸ்சிக் போதனையாளருக்கு மட்டும் சொந்தமானதல்ல. பியூரிட்டன் பெரியவர்கள் இதைப்பற்றி அதிகம் வற்புறுத்தி எழுதியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மரே மெக்செயின், அன்ரூ போனர் போன்றோரின் வாழ்க்கையிலும் எழுத்துக்களிலும் இதை அதிகம் காணலாம். ஜே. சி. ரைலும், ஸ்பர்ஜனும் இதுபற்றி வற்புறுத்திப் பிரசங்கித்தும், எழுதியும் இருக்கிறார்கள். ரைல் சொல்லுகிறார், ‘கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் குறைபாடேற்படாதபடி கவனத்தோடிரு. உன்னுடைய ஜெபங்களும், வேத தியானமும், கர்த்தரோடு உறவாடுகிற நேரமும் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்.’ வேத தியானமும், ஜெபமும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாதவை மட்டுமல்ல, இணைபிரியாதவை. இவையில்லாத கிறிஸ்தவம் கிறிஸ்தவமல்ல. தண்ணீரில்லாமல் செடி வளரவும், வாழவும் முடியாதே. வேத தியானமும், ஜெபமும் இல்லாத வாழ்க்கை பரிசேயத்தனம் மட்டுமே. மிகவும் ‘பிசி’யாகப் போய்விட்ட நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் இந்த இரண்டிற்கும் பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஏமியின் நடைமுறை தியானவாழ்க்கைக்கு ரொபட் வில்சன், தொமஸ் வோக்கர் போன்றோரின் செல்வாக்கு அதிகம் உதவியிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் அதைப் பின்பற்றிய ஏமி டோனவூரிலும் எல்லோரும் அதைப்பின்பற்ற முன்மாதிரியாக இருந்திருக்கிறார். எதற்கும், எதிலும் கர்த்தரில் தங்கியிருந்த ஏமி அவருடைய வழிகாட்டுதலை நாடாமல் எதையும் செய்ய முற்படவில்லை. இத்தகைய தியான வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் அவர் இறுதிவரை வாழ்ந்தார். அதுவே பெரும் எதிர்ப்புகளுக்கும், ஆபத்துகளுக்கும் மத்தியில் அவருடைய பணியைத் தொடருவதற்கான வல்லமையைத் தந்திருந்தது. பல சமயங்களில் ஏமி தனித்து நின்று பெரும் சவால்களை வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. கிறிஸ்துவில் பெரு நம்பிக்கையும், அன்பும் இல்லாத ஒருவரால் இத்தகைய காரியங்களை வாழ்க்கையில் தளராது செய்திருக்க முடியாது. சுயத்தில் தங்கியிராது கர்த்தரில் தங்கியிருந்து அவருக்காக தன் பணிகளைச் செய்த சிறந்த விசுவாசி ஏமி.

சிறந்த விசுவாசி என்பதற்காக ஏமி கார்மைக்கல் பூரணமான விசுவாசத்தைக் கொண்டிருந்த குறைபாடற்ற பெண்மணி என்று எண்ணிவிடக்கூடாது. அந்தவகையில்தான் அவரைப்பற்றி எழுதியிருக்கும் சில வாழ்க்கைச் சரிதங்கள் காட்ட முயன்றிருக்கின்றன. அது உண்மையல்ல. ஏமியின் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பல சங்கடங்களை அவர் சந்தித்து தவறுகளையும் விட நேர்ந்திருக்கிறது. பரிசுத்த வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே கடைசிவரை இருக்கும் என்பது வேதம் போதிக்கும் உண்மை. அந்த ஏற்ற இறக்கங்களை ஏமியும் தன் வாழ்வில் கண்டிருக்கிறார். சில வேளைகளில், கோபப்பட்டும், தவறாக ஒருவரைக் கணித்தும், பின்பு அதற்காக வருந்தியும், தவறான முடிவுகளை சில வேளைகளில் எடுத்தும் பின்னால் அவற்றைத் திருத்திக்கொண்டும், அளவுக்கு மீறி அதிகாரத்தை செலுத்தியும், சிலரோடு முரண்பட்டும் ஏமி நடந்திருப்பதை இயன் மரே சுட்டிக்காட்டியிருக்கிறார். இதெல்லாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறந்த மனிதர்களிலும் காணப்பட்டிருக்கின்றன. தன்னை அன்றாடம் திருத்திக்கொண்டு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கையே தவிர குறைபாடுகளே இல்லாமல் வாழ்வதல்ல. குறைபாடுகள் ஏமியை அதிகம் கர்த்தரில் தங்கியிருக்க உதவியிருக்கின்றன. தியானத்திலும், ஜெபத்திலும் ஆவியின் உதவியை நாடவும், திருத்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவியிருக்கின்றன. அவற்றை இயன் மரே மறைக்காமல் தனக்கேயுரிய பாணியில் நூலில் விளக்கியிருப்பது ஏமி கார்மைக்கலைப்பற்றி வந்திருக்கும் ஏனைய நூல்களைவிட அதை முக்கியமானதாக்குகிறது.

ஏமியின் வேதநம்பிக்கைகள்

ஏமி வேதத்தைக் கர்த்தருடைய தவறுகளற்ற அதிகாரமுள்ள வார்த்தையாக நம்பினார். வேதத்திற்கு அவர் வாழ்க்கையில் முதலிடம் தந்திருந்தார். வேதவாசிப்பில் அன்றாடம் கவனம் செலுத்தியதோடு வேதத்தின் அதிகாரத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்குப் பல சமயங்களில் சவால்கள் நேரிட்டபோதிலும் அடிப்படை வேத நம்பிக்கையை அவர் ஆணித்தரமாக வெளிப்படுத்தத் தவறவில்லை. பெரும் இறையியலறிவு பெற்றிருந்த பெண்மணியல்ல ஏமி. இருந்தும் வேதத்தின் தன்மையில், அதிகாரத்தில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. அதாவது வேதத்தைப்பற்றிய அடிப்படை இவெஞ்சலிக்கள் நம்பிக்கைகள் அவரில் ஊறிப்போயிருந்தன.

தென்னிந்திய ஆங்கிலேயத் திருச்சபையில் 1939ல் பிஷப்பாக நியமிக்கப்பட்ட ஸ்டீபன் நீல் தான் பிஷப்பாக வருவதற்குமுன் 25ம் வயதில் ஏமியின் கீழ் சிறுவர்களுக்கு கல்வி பயிற்றும் பணியில் வந்திணைந்தார். அவருடைய பெற்றோர் மருத்துவப்பணி செய்வதற்காக டோனவூருக்கு வந்திருந்தனர். ஸ்டீபன் நீல் கேம்பிரிஜ் டிரினிட்டி கல்லூரியில் கற்றிருந்தார். துடிப்புள்ள இளைஞராகவும், அதிகம் கற்றவராகவும், அதேவேளை வயதில் மூத்தவரான ஏமியைவிட அனுபவம் குறைந்தவராகவும் இருந்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலேயத் திருச்சபையின் மிஷனரிக்கிளையாக இருந்த சி. எம். எஸ்., வேதம் பழைய புதிய ஏற்பாடுகளைக் கொண்ட கர்த்தரின் ஆவியினால் ஊதி அருளப்பட்ட தவறுகளற்ற வார்த்தை (2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21) என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்து, மிஷனரி ஊழியத்துக்குப் போகிறவர்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கத் தேவையில்லை என்று தீர்மானித்தது. இதனால் சி. எம். எஸ். இரண்டாகப் பிரியவும் நேரிட்டது. சி. எம். எஸ். மூலம் இந்தியா வந்திருந்த ஸ்டீபன் நீல் இதை நம்ப ஆரம்பித்து ஏமியின் கொள்கைகளில் குறைகாண முயன்றார். வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்று ஸ்டிபன் நீல் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஏமிக்கு நீலோடு பலமுறை இதுபற்றிய வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏமிக்கு பெருந்தலைவலியையும், துன்பத்தையும் அளித்தது. ஏமி இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் பணிகளுக்கு ஸ்டீபன் நீலின் துணை மிக அவசியமாக இருந்தபோதும், வேதத்தை வேதமாக ஏற்றுக்கொள்ள நீல் தவறியதால் டோனவூர் ஐக்கியத்தில் இருந்து அவரை ஏமி தைரியத்தோடு நீக்கினார். அதற்குப் பிறகு டோனவூர் ஐக்கியத்தில் பேசுவதற்கு நீலுக்கு அவர் இடமளிக்கவில்லை. மனக்கஷ்டத்தோடு பலவித ஏச்சுப் பேச்சுக்களுக்கு மத்தியில் இதை செய்ய நேர்ந்தபோதும் ஏமிக்கு சத்தியம் முக்கியமானதாகப்பட்டது. பெரும் இறையியல் ஞானம்கொண்டிருந்திராத ஏமிக்கு வேதம் எத்தகைய அதிகாரம் கொண்டது என்ற உண்மை தெரியாமலிருக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கைச் சரிதத்தில் இதைப்பற்றி ஏமி எந்தக்குறிப்பும் எழுதிவைக்கவில்லை. பிரேங்க் ஹௌட்டனுடைய நூலிலும் இது பற்றிய விபரம் இல்லை. எலியட் தன் நூலில் இதுபற்றி விளக்கியிருக்கிறார். சத்தியத்திற்காக சாதாரண மங்கையான ஏமி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தூண்போல நின்றது அவருடைய ஆழமான அடிப்படை வேதநம்பிக்கையைக் காட்டுகிறது.

ஏமி கர்த்தருடைய சித்தத்தை நாடிய முறை

கர்த்தருடைய சித்தத்தை நாடுவதில் ஏமி வேதத்தைப் பயன்படுத்திய முறையில் தவறுகள் காணப்பட்டன. இதை இயன் மரே தன்நூலில் விளக்கியிருக்கிறார். உள்மனதில் ஒரு விஷயத்தைப்பற்றி எந்தத் தீவிரமான எண்ணத்தைக் கடவுள் உண்டாக்குகிறார் என்பதிலேயே ஏமி அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அத்தகைய ஆழமான உள்மன உணர்வே ஒரு விஷயத்தைப்பற்றிய தீர்மானத்தை எடுக்க அவரைப் பொதுவாக வழிநடத்தியிருக்கிறது. இது கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் மூலம் உருவான நம்பிக்கையா? என்பதை இயன் விளக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருவான கெஸ்சிக் போதனைகளில் கடவுளின் வழிகாட்டுதல்பற்றிய இத்தகைய போதனைகள் காணப்பட்டன. அதன் கிறிஸ்தவ வாழ்க்கைபற்றிய போதனை பெரும்பாலும், நீண்ட தியானம், ஜெபம், ஆழமான உணர்வுகளின் வழிநடத்துதல் என்பவற்றில் ஊறியிருந்தது. அதுவரை இருந்து வந்திருந்த பரிசுத்த வாழ்க்கைபற்றிய போதனைகளில் இருந்து இது வேறுபட்டதாக இருந்தது. ஏமி மிஷனரி ஊழியத்துக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் பெண்ணாகப் போகத் தீர்மானித்ததற்கும் இருதயத்தின் ஆழமான உள்ளுணர்வு வழிநடத்துதலே காரணமாக இருந்திருக்கிறது. கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளும், ரொபட் வில்சனின் தொடர்பும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் சி. ஐ. எம். மூலம் மிஷனரியாகப் போகத் தீர்மானித்து அது நடக்காமல் போனதால் உடனடியாக ஜப்பான் போகத் தீர்மானித்ததற்கும் இத்தகைய உள்ளுணர்வு வழிநடத்தல் காரணமாக இருந்தது. அங்கிருந்து சடுதியாக பின்பு கெஸ்சிக் மிஷன் மூலம் இலங்கைக்குத் திடீரென கிளம்பிப்போய் சிறிதுகாலம் இருந்ததற்கும் இதுவே காரணம். அப்போது ஏமிக்கு வயது 26. இலங்கையில் இருந்தபோது ரொபட் வில்சன் ஏமியின் செய்கை பிடிக்காமல் இங்கிலாந்துக்கு உடனடியாகத் திரும்பி வரும்படி கடிதம் எழுதி 2 தீமோ. 4:9 வேதவசனத்தை அதற்கு ஆதாரமாகக் காட்டியிருந்தார். அந்த வசனம், ‘நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு’ என்பதாகும். அதைப் பார்த்தவுடன் உடனடியாக எந்த எதிர்ப்புமில்லாமல் ஏமி இங்கிலாந்து திரும்பினார். கெஸ்சிக் தலைவர்களில் ஒருவராக இருந்த ரொபட் வில்சனும் கர்த்தரின் சித்தத்தை நாட வேதத்தை இந்தவிதத்தில் பயன்படுத்தியிருப்பது சரியல்ல.

ஒரு காரியம்பற்றிய தீர்மானத்தை எடுப்பதில் உள்ளுணர்வு சொல்லுவதைப் பின்பற்றும் வழிமுறை டோனவூரில் பல விஷயங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது என்கிறார் இயன் மரே. ஒரு காரியத்துக்கு பணம் செலவழிக்க வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஏமி பின்பற்றிய வழியை இயன் மரே விளக்குகிறார். அந்தக் காரியத்துக்கு பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதை ஏமி எப்படித் தீர்மானித்திருக்கிறார் தெரியுமா? யோசுவா 3:15லுள்ள வசனத்தைப் பயன்படுத்தி. ‘யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே;’ என்கிறது அந்த வசனம். ‘தண்ணீரின் ஓரத்தில்பட்ட’ என்பது ஆங்கிலத்தில் ‘dipped in the water’ என்று வரும். இதில் dipped என்ற வார்த்தையை plunged என்று அர்த்தப்படுத்தி இதன் மூலம் கர்த்தர் அந்த வசனத்தில் ‘விசுவாசத்தோடு காரியத்தில் குதிக்க வேண்டும்’ என்று சொல்லுகிறார், அதனால் பணம் அந்த விஷயத்துக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்று ஏமி கார்மைக்கல் முடிவுகட்டியிருக்கிறார். வேத நம்பிக்கை ஏமிக்கு இருந்திருந்தபோதும் தீர்மானங்களை எடுப்பதில் வேதவசனங்களை அது காணப்படும் சந்தர்ப்பசூழ்நிலைகளைப் பொறுத்தே அர்த்தப்படுத்தி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருந்திருப்பது தெரிகிறது. இப்படி எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்க்கவும் அவர் எவரையும் பெரும்பாலும் அனுமதிக்கவில்லை.

கர்த்தரிடம் இருந்து எதன் மூலமும் இல்லாமல் நேரடியாக நமக்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது என்ற ஆக்ஸ்போர்ட் குழுவினரின் போதனையை ஏமி 1930களில் எதிர்த்திருக்கிறார். அத்தோடு தனி மனிதன் ஒருவன் பிணி தீர்க்கின்ற வரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் நம்பி டோனவூரில் அதற்கு எந்தவித இடமும் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இத்தகைய பெந்தகொஸ்தே வழிமுறைகளை ஏமி பின்பற்றியிராவிட்டாலும், வேதத்தை அதன் இலக்கண, வரலாற்று அமைப்பின்படி விளங்கியே எப்போதும் அர்த்தப்படுத்த வேண்டும் என்பதில் பெருங்குறைபாடுடையவராக இருந்தார். இதற்காக வழிகாட்டுதலுக்கு ஏமி வேதத்தை நாடவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. வேதத்தை அவர் நாடியபோதும், வேதத்தை அர்த்தப்படுத்திக்கொள்ளும் முறையில் அவரிடம் இருந்த குறைபாடு வசனங்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் புரிந்துகொள்ளுவதைத் தடைசெய்திருக்கிறது. தவறாக ஒரு வசனத்தைப் புரிந்துகொண்டு அதன் மூலம் கர்த்தர் நம்மோடு பேசவேண்டும் என்று எதிர்பார்ப்போமானால், நம்முள்ளுணர்வுகள் நம்மைச் சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது. நாம் ஒரு விஷயத்தைப்பற்றிய எத்தகைய உணர்வுகளை ஆழமாக இருதயத்தில் கொண்டிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அத்தகைய உள்ளுணர்வுகளைக் கர்த்தரின் சித்தமாக எடுத்துக்கொள்ளுவது முழுத்தவறு. இது ஏமி பல தவறான முடிவுகளை எடுக்க வழிநடத்தியிருந்தது.

வேதத்தை ஏமி பயன்படுத்திய விதத்தைப்பற்றி இயன் மரே கொடுக்கும் இன்னொரு உதாரணமும் இங்கே கவனிக்கத்தக்கது. ‘வேத வசனங்களின் சரியான அர்த்தத்தை அறிந்திருப்பது அடிப்படையான விஷயமானாலும், வேதவசனங்களுக்கான தெளிவான விளக்கத்தைவிட அதன் பயன்பாட்டிலேயே ஏமி அதிகம் கவனம் செலுத்தினார்’ என்கிறார் இயன் மரே (பக்கம் 131). இதற்கான ஓர் உதாரணத்தையும் இயன் தருகிறார். ஏமியின் சிந்தனை இந்த விஷயத்தில் தவறானதாகப்படுகிறது. வேத வசனங்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ளுவது அடித்தளமானது என்று நம்பினால் அதில்தான் ஒருவர் முதலில் கவனத்தை செலுத்தவேண்டும். வசனங்களின் அர்த்தத்தின் அடிப்படையிலேயே பயன்பாடுகளை முறையான விதத்தில் பெற்றுக்கொள்ள முடியும். வசனங்களின் அர்த்தம் சரியாக விளக்கப்படாவிட்டால் அதிலிருந்து எழும் நடைமுறைப் பயன்பாடுகள் தவறானதாகவே அமையும். எந்தளவுக்கு பயன்பாடுகளில் நாம் ஆர்வம் காட்டுகிறோமோ அந்தளவுக்கு வசனங்களுக்கான சரியான தெளிவான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ளுவதும் அவசியம். இந்த விஷயத்திலும் நான் ஏமியில் கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் தாக்கத்தைத்தான் காண்கிறேன். கர்த்தர் வசனங்களின் மூலம் நம்மோடு என்ன பேசுகிறார் என்று அறிந்துகொள்ளுகிற ஆர்வத்தில் அவற்றின் சூழ்நிலைக்கேற்ற விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறையில் அதன் மூலம் கர்த்தர் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று அறிந்துகொள்ள முயலுகின்ற செயல் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்திய கிறிஸ்தவ சமுதாயத்தில் இது அநாவசியத்துக்கு அதிகம். இத்தகைய பிரெக்டிக்கள் ‘தியானச்செய்தி’ கொடுக்கும் முறை பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் பெருமளவுக்கு உண்டு. கெஸ்சிக் போதனையாளர்களிடம் இது வாடிக்கையாக இருந்தது. இந்த விதத்தில் வேதத்திற்கு அர்த்தம் கொடுத்திருப்பதை ரொபட் வில்சனிலும், ஏமியிலும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

வேத வசனங்களை, அவை தெளிவாக போதிக்கும் விஷயத்தைத் தவிர்த்து வேறுவிதமாக ஏமி எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கான இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். மிஷனரி அழைப்பை மாற்றிக்கொள்ள முடியாத நிரந்தர அழைப்பாகவும், சகல தியாகங்களையும் செய்து வாழவேண்டிய அழைப்பாகவும் ஏமி கருதினார். இதற்கு ஆதாரமாக அவர் பயன்படுத்திய வேதவசனங்கள் நசரேய விரதத்தை விளக்கும் எண்ணாகமம் 6:2-4. ஏமி எழுதி வெளியிட்ட ‘கர்த்தரின் மிஷனரி’ என்ற நூலுக்கு இதுவே தலைப்பாக இருந்தது. அதில் அவர் எழுதினார், ‘கடவுளின் மிஷனரி மெய்யான நசரேயனைப் போன்றவன், அவன் எல்லாவற்றிலும் இருந்து தன்னைப் பிரித்துக் கர்த்தருக்காக மட்டும் ஒப்புக்கொடுத்தவன்.’ அத்தோடு மிஷனரிப் பணியை ‘விசேஷ அழைப்பு’ என்றும், ‘அனைத்திலிருந்தும் பிரிக்கின்ற அழைப்பு’ என்றும், ‘முற்றாகப் பிரிந்து தியாகத்தோடு வாழும் பணி’ என்றும் ஏமி விளக்குகிறார்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் பொறுப்பில்லாமல் உல்லாசத்திற்கு இடங்கொடுத்து வாழ்ந்திருந்த சில மிஷனரிகளுடைய வாழ்க்கை இந்தவிதத்தில் மிஷனரி அழைப்பைப்பற்றி ஏமியைக் கருத வைத்திருக்கலாம். இதற்காக நீதியான ஓய்வையும், விளையாட்டு போன்றவற்றையும் ஏமி நிராகரிக்கவில்லை. வேறு எதிலும் கவனம் போகாமல் நிலையான தியாகத்தோடு கூடிய மிஷனரி வாழ்க்கையை வற்புறுத்திய ஏமி அதற்காகப் பழைய ஏற்பாட்டு நசரேய விரதத்தைப் பின்பற்ற வேண்டுமென்று எண்ணாகமப் பகுதியை ஆதாரம் காட்டி வற்புறுத்தியிருப்பது வேதபூர்வமான போதனையல்ல. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நசரேய விரதத்தைப் பின்பற்ற முயல்வது அநாவசியமான பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்க வழியேற்படுத்திவிடும். மிஷனரிப் பணியை ‘சிறப்பான பணியாகக்’ கருதினால் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட திருமணத்தையும் அதோடு கூடிவருகின்ற பொறுப்புக்களையும் என்னவாகக் கருதுவது? திருமண வாழ்க்கையையும், குழந்தைகளையும் பிரிந்து மிஷனரிப் பணி செய்யும்படி கர்த்தர் வேதத்தில் சொல்லவில்லை. திருமண பந்தத்தைக் கர்த்தர் சிறப்பானதாக, முக்கியமானதாகக் கருதி ஏற்படுத்தியிருக்கிறார். தியாகத்தோடு மிஷனரிப் பணிபுரிய விசேஷ கிறிஸ்தவர்களாக நாமிருக்கவேண்டுமென்று வேதம் எந்த இடத்திலும் போதிக்கவில்லை. ஏமி கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் சமூகப்பணி செய்ததும் இந்த நசரேய விரத நம்பிக்கையால்தான்.

வேதத்தை விளங்கிக்கொள்ளும் முறையில் ஏமி தவறான வழியைப் பின்பற்றியிருந்தபோதும் பல தவறான போதனைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்தும் வாழ்ந்திருக்கிறார். 1905ல் உருவான ஒரு போதனை, விசுவாசிகள் தங்களுடைய பழைய பாவங்களை பொதுவில் அறிக்கையிட வேண்டும் என்பது. ஏமி வோக்கரோடு இணைந்து இந்தப்போதனையை எதிர்த்தார். ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் ‘விசுவாசப் பிணி தீர்ப்பு’ போன்ற அற்புதங்களையும் ஏமி நிராகரித்து அவற்றிற்கு இடங்கொடாதிருந்திருக்கிறார்.

ஏமியும் திருச்சபையும்

பாராட்டத்தக்க பணிபுரிந்திருக்கும் ஏமியின் நூலில் எனக்குக் குறையாகப்படுவது திருச்சபைபற்றிய விபரங்களோ, விளக்கங்களோ அதில் இல்லாததுதான். ஆரம்பத்தில் 25 வயதில் மிஷனரிப்பணிபுரிய அவர் சபைமூலமாக வந்ததாகத் தெரியவில்லை. அப்படியே திருச்சபை அனுப்பி இருந்தால் ஒருபெண் தனியாக அந்தப்பணிக்கு அனுப்பப்பட்டிருக்க மாட்டாள். ஏமி தன்னந்தனியாகத் தன்னுடைய ஆழமான உள்ளுணர்வை மட்டும் நம்பி இந்தக்காரியத்தில் இறங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சி. ஐ. எம். மிஷன், அதற்கும்பிறகு கெஸ்சிக் மிஷன், பின்பு செனானா மிஷன் என்று திருச்சபைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஏமி தனியாளாக இந்தப் பணியில் இறங்கி இந்தியா வந்திருக்கிறார். அங்கும்கூட தற்செயலாகத்தான் (நிச்சயம் அதில் கர்த்தரின் கரம் இல்லாமலில்லை) குழந்தைகளை விடுவிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் மூலம் அங்கு வந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மிஷனரி ஆர்வம் ஏமியின் இந்தச் செயல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருச்சபைகள் அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் மிக மோசமாக இருந்தன என்று ஏமி எழுதியிருப்பதில் இருந்து திருச்சபை பற்றிய அவருடைய கருத்தையும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண் தனியாக இந்தவிதத்தில் அதுவும் ஆபத்துக்கள் நிறைந்த பணிக்குப் போக வேதம் நிச்சயம் அனுமதிக்கவில்லை. மிஷனரிப் பணிக்குப் போகிற ஒருவருக்கு சபைப் போதகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் தேவை என்பதும் வேதபோதனை. இதையெல்லாம் எண்ணி ஆராய்ந்து பார்த்து ஏமி செயலில் இறங்கியதாகத் தெரியவில்லை. வேதம், வேதம் என்றிருந்தால் இத்தகைய அற்புத பணியை ஏமி செய்திருக்க முடியாதே? என்று விதண்டாவாதம் செய்கிற குரல்கள் நிச்சயம் எழும் என்பது எனக்குத்தெரியும். எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன சாதித்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று பிரெக்மெட்டிக்காக வாதிடுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைப் படைத்து நமக்கு வேதத்தைத் தந்திருக்கிற சர்வ இறையாண்மையுள்ள கர்த்தர் அனைத்தையும் தன் வேதத்தைப்பின்பற்றிச் செய்யும்படியே சொல்லியிருக்கிறார். அவர் நேசிக்கும் திருச்சபை அவர் வழியில் நிறுவப்பட்டு அவர் விதித்திருக்கும் பணியை அவர் வழியில் செய்ய வேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம்.

திருச்சபை அனுப்பாமல் ஏமி இந்தியா வந்தது மட்டுமல்ல டோனவூர் ஐக்கியத் தேவைகளுக்கு அவர் தன்னுடைய தனிப்பட்ட நண்பர்களின் உதவியை மட்டுமே நாடியிருக்கிறார். திருச்சபைகளை அவர் அணுகியதாக விபரங்கள் இல்லை. தென் தமிழகத்திலும் அவருக்கு திருச்சபைகளோடு நெருங்கிய தொடர்புகள் இருக்கவில்லை. ஸ்டீபன் நீலோடு ஏற்பட்ட பிரச்சனை அவரை சி. எஸ். ஐ. திருச்சபைக்கு வெகுதூரத்தில் நிறுத்தி வைத்திருந்தது.

டோனவூர் ஐக்கியம் விருத்தியடைந்தபோது சிறுவர்கள் மத்தியில் மனந்திரும்புதல் ஏற்பட்டது. பலர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். ஞானஸ்நானம் பெற்றவர்கள் எல்லோருமே தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை என்று இயன் மரே குறிப்பிட்டிருக்கிறார். இது ஏமிக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது. இதைப் பற்றிச் சொல்லும்போது இயன் மரே, ‘ஓர் ஆத்துமாவுக்கு உதவி செய்யும் வாய்ப்பிற்காக ஆயிரந்தடவைகள் ஏமாற்றத்தை அனுபவிப்பதில் தவறில்லை’ என்று ஏமி எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். மனந்திரும்பியவர்களுக்காக டோனவூர் ஐக்கியத்திலேயே ஆராதனைக்காக ஒரு கட்டடம் எழுப்பப்பட்டது. இது நல்லெண்ணத்தில் நிகழ்ந்தபோதும், உண்மையில் திருச்சபையாக இல்லாத சமூகப் பணியாற்றும் டோனவூர் ஐக்கியம் போன்ற ஒருநிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டது வேதவழியில் சபை அமைத்ததாகாது. டோனவூர் ஐக்கியத்தில் போதகராக இருந்து பணிபுரிந்து பிரசங்கம் அளித்து ஊழியத்தைச் செய்வதற்கு தகுதியானவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. தேவைக்கேற்றவிதத்தில் செய்தி கொடுக்க வெளியில் இருந்து பிரசங்கிகள் வரவழைக்கப்பட்டனர். முடியாதபோது ஐக்கியத்தில் இருந்த யாரோ அதைச் செய்திருக்கிறார்கள். நிச்சயம் டோனவூர் திருச்சபையாகவும் இல்லாமல், அதேவேளை ஓய்வு நாளில் நியாயமாக திருச்சபை செய்யவேண்டிய பணியைச் செய்து இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்திருக்கிறது. இதற்கும்மேல் போய் பக்கத்தில் இருந்த கிராமங்களில் சுவிசேஷம் சொல்ல டோனவூர் ஐக்கியத்தில் இருந்து குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் வாசிக்கிறோம். திருச்சபைபற்றிய விஷயத்தில் ஏமி வேதபூர்வமாக நடந்துகொண்டதாகவே தெரியவில்லை.

ஏமியின் பணியின் மூலம் நிச்சயம் கிறிஸ்துவை பலர் விசுவாசித்திருந்திருக்கிறார்கள். ஏமியின் சுவிசேஷ வாஞ்சை பாராட்டப்பட வேண்டியது; பின்பற்ற வேண்டிய உதாரணமது. இருந்தபோதும் ஒரு பெண் தனியொருவராக சபை அமைப்பு பற்றிய வேத போதனைகளையெல்லாம் உதறிவிட்டு திருச்சபைப் பணியில் ஈடுபட்டது எவருக்கும் நல்லுதாரணமல்ல. வேதபோதனைகளை நிராகரித்துவிட்டு சமூகப்பணியில் ஈடுபட்டு அதற்குத் தொட்டுக்கொள்ள துவையல் வைத்துக்கொள்ளுவது போல் ஒரு கட்டடத்தைக் கட்டி அதற்குத் திருச்சபை என்று பெயரிட்டு சிறுபிள்ளைகளையும், அவர்களுக்குப் போதிப்பவர்களையும் சபையாகக் காட்டி நடக்கும் புற்றீசல்கள் போன்ற ஆயிரக்கணக்கான ஊழியங்களை இந்தியாவில் இன்று காண்கிறோம். திருச்சபையை நேசிக்கும் இயேசு அதுபற்றி அவசியமான ஆழமான போதனைகளைத் தெளிவாக வேதத்தில் தந்திருக்கிறார். சுவிசேஷ ஊழியம் எந்தப் பெயரில் நடந்தாலும் சபைபற்றிய சத்தியங்களுக்கு இடங்கொடுக்காமல் நடக்குமானால் அவை பின்பற்றக்கூடிய உதாரணங்களல்ல.

ஏமியின் பணிகளின் சிறப்பு

ஏமி கார்மைக்கலின் சிறப்பான பங்களிப்பு அவர் சமூகத்துக்குச் செய்திருக்கும் பணிதான். அதை எந்தவிதத்திலும் மறுக்கமுடியாது. அந்தப் பணியின் சிறப்பை தமிழகத்தில் அந்தக் காலத்தில் நிலவி வந்த பண்பாட்டுச் சீரழிவின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் கோவிலுக்கு பெண்குழந்தைகள் பொட்டுக்கட்டி தேவதாசிகளாக அனுப்பிவைக்கப்பட்ட சமூக சீரழிவு நிலவி வந்தது. அது பிரிட்டிஷ் அரசின் கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்து வந்ததாக இயன் மரே குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளுவது கடினமாக இருக்கிறது. அவர்கள் இதில் ஏன் தலையிட வேண்டும் என்றிருந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் அரசு இதுபோன்ற பலவிஷயங்களில் தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. கணவன் இறந்தபிறகு மனைவி உடன்கட்டை ஏறும் முறையை கேரி எதிர்த்தபோது அதற்கு பிரிட்டிஷ் அரசு அவரோடு இணைந்து போராடவில்லையே. வியாபாரத்துக்காக நாட்டில் நுழைந்த பிரிட்டிஷ் அரசு இந்திய சமூக மாற்றங்களுக்காகவா போராடப் போகிறது?

சுவிசேஷப் பணிபுரிய இந்தியா வந்த ஏமி அழிவின் விளிம்பில் நின்ற ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு வாழ்வுகொடுக்கும் சமூகத்தொண்டாற்றும் பணிக்கு வழிநடத்தப்பட்டார். இதெல்லாம் ஏமி தன் வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிராத, சந்தித்திராத சமூக சீரழிவு. ஏமிக்குத் தெரிந்ததெல்லாம் இது கோரமான ஒழுக்கக்கேடு என்பது மட்டுமல்ல, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான பாவம் என்பதுதான். அன்றைய தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட இந்த அகோரமான பண்பாட்டுச் சீரழிவை எதிர்த்து அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவே டோனவூர் ஐக்கியம் ஏமி மூலம் உருவானது. அந்தப்பணியில் பின்பு இணைந்துகொண்டதுதான் பிள்ளைகளுக்கு கல்வியறிவளிப்பதும், மருத்துவப் பணிபுரிவதும். இப்படிப்பட்ட பணியில் ஈடுபடப்போகிறோம் என்று ஏமி கனவுகூட கண்டிருக்க வழியில்லை.

அன்றைய இந்திய சமுதாயத்தில் வெளிநாட்டவர் ஒருவர் இதைச் செய்வதற்கு பெருந்தைரியம் தேவை. சமூகம் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்படாமல் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் இதில் ஏமி இறங்கியதுதான் அவருடைய பெருந்தைரியத்தையும். சுவிசேஷ அன்பையும் காட்டுகிறது. பல தடவை இந்தப் போராட்டத்தில் வோக்கரோடு கோர்ட்டுப்படி ஏறியிருக்கிறார் ஏமி. அன்றைக்கு பிரிட்டிஷ் அரசு மட்டுமல்ல இந்திய சபைகள்கூட இதில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கின்றன. ஏமி மூலம் ஆயிரக்கணக்கான பெண்குழந்தைகளும், ஏன் ஆண்குழந்தைகளுங்கூட இந்த விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஏமி சாதிப்பாகுபாடு பார்ப்பதையும் வேம்பாகக் கருதி எதிர்த்தார். வெளிநாட்டவர்கள் நம் பண்பாடு புரியாமல் இதையெல்லாம் எதிர்த்திருக்கிறார்கள் என்று கேரி, சீகன்பால்கு, கால்டுவேல், ஜி. யூ. போப் போன்ற அநேக மிஷனரிகளை இன்றும் இந்தியாவில் ஒரு பகுதியினர் குறைகூறி வருகிறார்கள். இந்த அலங்கோலங்களைப் பண்பாடாகக் கருதும் ஒரு பண்பாடு சீரழிந்த பண்பாடாகத்தான் இருக்க முடியும். இவற்றைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்கள் கடவுள் படைத்த மனிதனை மனிதனாக மட்டும் பார்ப்பதால்தான். வெளிநாட்டு மிஷனரிகள் எல்லோருமே இந்த விஷயத்தில் ஏமியைப்போல சாதியை எதிர்த்தார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்பவாதிகளாகப் பலர் தன் காலத்திலேயே நடந்துகொண்டிருந்ததை ஏமி தன் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். சமுதாயச் சீரழிவுகளை ஏற்று அதற்கு ஒத்துப்போகக்கூடிய, இயேசு இல்லாத ஒருவகைக் கிறிஸ்தவத்தை உருவாக்க முயன்று வந்த மினஷரிகளும் அன்றிருந்திருக்கிறார்கள். இவர்களை ஏமி துச்சமாகக் கருதி துணிந்து தன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தவிதத்தில் அன்றைய டோனவூரின் பணியை நிச்சயம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

தான் காப்பாற்றி வளர்த்த பிள்ளைகளுக்கு கல்வியையும், வாசிப்பையும், கிறிஸ்தவ சுவிசேஷத்தையும் சேர்த்து வழங்கினார் ஏமி. கல்வியின் அவசியத்தை அவர் உணர்ந்து தகுந்தவர்களைக் கல்வி புகட்ட நியமித்தார். பிள்ளைகளின் தொகை வளர அத்தோடு ஆண்பிள்ளைகளுக்கான காப்பகமும் உருவாகி மருத்துவ சேவைக்கான தேவையும் ஏற்பட்டது. அப்படி வளர்ந்து இன்று பெருமரமாக டோனவூர் ஐக்கியம் தொடருகிறது. பலவிஷயங்களில் ஏமியில் குறைபாடுகள் இருந்தபோதும் 1900ங்களில் அவர் செய்திருந்த இந்தப் பணி மிகச் சிறந்ததே.

இந்த இடத்தில் சமூகத்தொண்டில் (social service) கிறிஸ்தவர்களின் பணி என்ன என்பதைப்பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் மனிதனை மனிதனாகப் பார்த்து நடத்தும் இருதயத்தை மறுபிறப்பின் மூலம் தருகின்ற கிறிஸ்து, மனிதனின் சகல தேவைகளையும் தீர்க்கும் சுவிசேஷத்தைத்தான் நமக்குத் தந்திருக்கிறார். சுவிசேஷத்தால் மறுபிறப்படைகின்ற ஒருவரின் பஞ்சத்துக்குத் தீர்வு கிறிஸ்தவ விசுவாசத்தினால் உடனடியாக ஏற்படும் என்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. அப்படி தேவ அன்பை கிறிஸ்துவில் ருசி பார்க்கிறவர்கள் தங்களுடைய வறுமை வாழ்க்கையை கிறிஸ்துவின் வழியில் துன்பத்தின் மத்தியில் வாழக் கற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் வேதம் போதிக்கிறது. ஆவிக்குரிய இருதய மாற்றம் ஒருவரின் ஒழுக்கத்தை சீராக்கி அவர் மூலமாக சூழ்நிலையையும் பாதிக்கிறது. சுவிசேஷத்தின் மூலம் ஏற்படும் மறுபிறப்பே மனிதனைத் தன்னையும், சுற்றுச்சூழலையும் மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் சுவிசேஷத்தால், நேரடியாக உடனடியாக வறுமையும், சமூகச் சீரழிவுகளும் அகன்றுவிடும் என்பதில்லை. கிறிஸ்துவை அடைகிறவர்கள் மாற மாற எல்லா விஷயங்களிலும் பெருமாற்றங்கள் சிறிது சிறிதாக நேரும்.

ஆவிக்குரிய மாற்றத்தை அடையாதவர்கள் செய்கிற சமூகத் தொண்டு ஓரளவுக்கு சமுதாயத்தில் வெளிப்புற மாற்றங்களைக் கொண்டுவருமே தவிர ஆவிக்குரிய மாற்றங்களை ஒருபோதும் கொண்டுவர முடியாது. அதனால் சமூகத்தொண்டை சுவிசேஷ ஊழியத்தோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சமுகத்தொண்டு செய்து, அதைச் செய்வதால் எவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள் என்று நம்புவதும் தவறு. சமூகத்தொண்டைப் பயன்படுத்தி எவரையும் கிறிஸ்தவர்களாக மாற்ற முயல்வதும் பெருந்தவறு. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதது. சமூகத்தொண்டு இந்த உலகத்தைச் சார்ந்த தற்காலிக மாற்றங்களை மட்டும் கொண்டுவருவது; சுவிசேஷப்பணி நிரந்தரமான ஆவிக்குரிய மாற்றத்தைக் கொண்டுவருவது.

கிறிஸ்தவர்கள் ஒருவரின் வறுமையைப் போக்க உதவும்போதும், ஏமிபோல் பெண்குழந்தைகளைப் பாதுகாக்க முயலும்போதும், வில்பர்போசைப்போல அடிமைமுறைக்கெதிராகப் போராடுகிறபோதும், கேரிபோல் உடன்கட்டை ஏறுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றபோதும், சாதிப்பாகுபாட்டை வெறுத்து அதற்கு இடங்கொடுக்காது இருக்கும்போதும் கிறிஸ்துவால் தங்களுடைய வாழ்க்கை மாற்றப்பட்டிருப்பதன் காரணமாக பத்துக்கட்டளைகள் போதிக்கும் நற்கிரியைகளை அன்போடு செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அது மெய்க்கிறிஸ்தவன் இயல்பாகச் செய்கின்ற செயல். அது கிறிஸ்தவ அன்பின் பிரதிபலிப்பு. அதற்கு சமூகத்தொண்டு என்ற பெயர் அவசியமில்லை. திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் இதைப்புரிந்துகொண்டு மறுபிறப்பின் இயல்புக்கேற்றபடி வாழுகின்றபோது எந்த தேசத்தில் இருந்தாலும் சமுதாயத்தீங்குகளிலும், இடர்பாடுகளிலும் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றி கைகொடுக்க முயலுவார்கள். நல்ல சமாரியன் உவமை இதைத்தானே விளக்குகிறது. அவன் என்ன சமூகத்தொண்டா செய்தான்? தேவ அன்பை இயற்கையாக ஏமியைப்போல வெளிப்படுத்தினான். இன்னொன்று தெரியுமா? ஏமியைப்போல நற்கிரியைகளைச் செய்யும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும். கிறிஸ்தவன் பிரதிபலன் எதிர்பார்த்து செய்யும் எதுவும் நற்கிரியையாக இருக்காது. கிறிஸ்துவிடம் ஒருவர் வரவேண்டும் என்ற ஆர்வத்தில் சமூகத் தொண்டு செய்வது சுயநலம் கலந்த செயலாக மாறிவிடுகிறது. அது நற்செய்கையாக இல்லாமல் போவதோடு சுவிசேஷத்தையும் அசிங்கப்படுத்துகிற செயலாகிறது. ஏமி எந்த நன்மையையும் எதிர்பார்க்காமல், கிறிஸ்துவிடம் குழந்தைகள் வரவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாமல் அவர்களுக்கு வந்திருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முனைந்தார். அப்படிக் காப்பாற்றியவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக சுவிசேஷத்தைச் சொன்னாரே தவிர அவர்களை மதம் மாற்றுவதற்காக அல்ல.

1900ங்களில் தமிழகம்

இறுதியாக இந்த ஆக்கத்தில் 1900களின் தமிழகத்தை சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியில் சமுதாய இழிவுகள் பண்பாட்டின் பெயரில் அன்றும் தொடர்ந்திருக்கின்றன. சாதிப்பாகுபாடு, தேவதாசி முறை, உயர்குலப் பிராமணர்களின் ஆதிக்கம், கோயில்கள், பூஜை, புனஸ்காரம் எல்லாம் கொடிகட்டிப் பறந்திருக்கின்றன. ஏமியின் கண்கள் மூலமாக அன்றைய தமிழகத்தை இயன் மரேயின் நூலில் ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் மத்தியில் வெளிநாட்டு மிஷனரிகள் பல இடங்களில் சுவிசேஷப் பணிபுரிந்திருப்பது மட்டுமல்ல, திருச்சபைகளும் நிறுவப்பட்டு இயங்கி வந்திருக்கின்றன. இங்கிலாந்து திருச்சபை தமிழகத்தில் தென்னிந்திய திருச்சபையை நிறுவியிருந்திருக்கிறது. ஏமியின் நூலில் கவனித்ததுபோல அன்றே தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவ வேதத்தில் ஆணித்தரமான நம்பிக்கையைக் கொண்டிராமல் இருந்துள்ளது. இல்லாவிட்டால் வேதத்தை தேவனுடைய வார்த்தையாக நம்ப மறுத்த ஸ்டீபன் நீல் அதன் பிஷப்பாக 1939ல் எப்படி வந்திருக்க முடியும்? இன்றைக்கு வேத நம்பிக்கையற்ற பரிசேயப் பிரிவைப்போல இயங்கி வந்துகொண்டிருக்கிறது தென்னிந்திய சி. எஸ். ஐ. திருச்சபைகள். அதற்குள் சாதி முதற்கொண்டு ஏமி எதிர்த்து நின்ற அத்தனைப் புறளிகளும் தொடர்கின்றன. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குழந்தைகளுக்கு வாழ்வு கொடுக்க அந்தத் திருச்சபை அன்று எதையும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி அது ஆதரவளித்திருந்தால் நிச்சயம் ஏமியின் எழுத்துக்களில் அதுபற்றிய குறிப்புகள் இருந்திருக்கும். பண்பாட்டிற்கு ஏற்றவிதத்தில் அதற்கு இடங்கொடுத்த பரிசேய ஊழியத்தையே அச்சபைகள் அன்று செய்துவந்திருக்கின்றன. இன்று டோனவூர் பணியை அது மேற்பார்வை செய்து வருகின்றது என்பது எதைக் காட்டுகிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சுயாதீனமான ஒரு நிர்வாகத்தில் முற்றாக இந்தியர்களைக் கொண்டு இயங்கும் டோனவூர் ஐக்கியம் ஏமியின் சுவிசேஷக் கோட்பாடுகளைப் பின்பற்றி இயங்குகிறது என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

இன்றைக்கு தேவதாசி முறை தமிழகத்தில் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கின்றது என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. சமீபத்திய நிகழ்வான ‘இந்தியாவின் மகள்’ அதை நமக்கு நினைவுறுத்துகிறது. இன்றைய சமுதாயத்திலும் சாதிப்பேய் தொடர்ந்து அசைக்க முடியாதபடி ஆளுகிறது. அது ஆளும் இடத்தில் பெண்களுக்கு சமத்துவம் சமுதாயத்தில் இருக்க வழியில்லை. குழந்தைகளைத் தத்தெடுப்பது என்பது இன்று சட்டத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அநேக கொடுமைகளுக்கு முடிவுகட்டப்பட்டிருந்தபோதும் சமுதாயத்தில் பல சீரழிவுகள், ஒழுக்கக்கேடுகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கெல்லாம் சமுதாய சீர்திருத்தப்பணி எந்தப் பெரு மாற்றத்தையும் ஒருபோதும் கொண்டுவந்துவிட முடியாது. அதையெல்லாம் கிறிஸ்தவர்களல்லாத தி.க.வைச் சேர்ந்த பெரியார் போன்றோர் செய்து என்னத்தைக் கண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் இல்லாமல் போக கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்தும் கிறிஸ்துவின் சுவிசேஷமே தேவை. சுயநலமற்ற சுவிசேஷப் பணியும், வேதபூர்வமான மெய்யான திருச்சபைகளுமே மக்களுக்கு வாழ்வளிக்க முடியும். கிறிஸ்துவின் சுவிசேஷம் தருகின்ற விடுதலையை வேறெந்த சீர்திருத்தமும் தந்துவிட முடியாது.

 

 

முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி ஸ்ரீ லங்காவில் வெளியிட்டிருந்தேன். அது தீர்ந்துவிட்டிருந்ததால் அதைத் திருத்திய பதிப்பாக மறுபடியும் தமிழகத்தில் ‘சீர்திருத்த விசுவாசமும் ஐங்கோட்பாடுகளும்’ என்ற தலைப்பில் 2014ல் சென்னையைச் சார்ந்த சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருந்தேன். இந்நூலில் சீர்திருத்த விசுவாசம் என்பது என்ன என்பதை விளக்கி அதற்குப் பிறகு கல்வினித்துவ ஐம்போதனைகளை முறையாக, சுருக்கமாக விளக்கியிருந்தேன். இந்த நூலை முதன் முறையாக 2003ல் எழுதுவதற்கு முக்கிய காரணமிருந்தது. நம்மினத்தில் கல்வினித்துவ ஐம்போதனைகளில் (இதற்கு இன்னொரு பெயர், கிருபையின் போதனைகள்) ஆர்வம்காட்டி வருகிறவர்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களில் அதிகரித்து வந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்களில் அநேகர் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி வந்திருக்கிறார்கள். அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சுருக்கமாக விளக்குவதே என்நூலின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கு துணை செய்வதே என் இலக்காக இருந்தது.

கிருபையின் போதனைகளையும் சீர்திருத்த விசுவாசத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரளவுக்கு சீர்திருத்த திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியலும் தெரிந்திருக்க வேண்டும். நம்மினத்தில் அத்தகைய வரலாற்றோடு தொடர்புடைய இறையியல் ஞானத்தைக் கொடுத்து வரும் திருச்சபைகள் அரிது. கிறிஸ்தவம் பெரிதும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களினதும், கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்களினதும் ஆர்மீனியனிசப் போதனைகளின் செல்வாக்குக்குட்பட்டு இயங்கி வருவதால் பொதுவாக கிறிஸ்தவப் பார்வை நம்மினத்தில் சீர்திருத்த விசுவாசத்தை ஒத்ததாக அமையவில்லை. இதன் காரணமாக புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்கள் இரண்டுவித பாதிப்புக்குள்ளாகிறார்கள். (1) சிலர் ஐம்போதனைகளை தங்களுக்கேற்றவிதத்தில் புரிந்துகொண்டு அதில் நான்கை மட்டும் ஏற்றுக்கொண்டு ஒன்றை (குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலியை) நிராகரித்துவிடுகிறார்கள். வேறு சிலர் மூன்றை மட்டும் ஏற்றுக்கொண்டு இரண்டை (நிபந்தனையற்ற முன்குறித்தல், குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலி) நிராகரித்து விடுகிறார்கள். இந்தவிதமாக மனம்போன போக்கில் ஆளுக்காள் ஐம்போதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அதற்குத் திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியல் ஞானமும் இல்லாதது முக்கிய காரணம். (2) அடுத்ததாக, கல்வினின் ஐம்போதனைகளை மறுப்பில்லாமல் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் அதை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி அதற்குமேல் போக இருதயமில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம், இவர்கள் சீர்திருத்த திருச்சபை வாழ்க்கை அனுபவத்தை வாழ்வில் அடைந்திராததும், சீர்திருத்த விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனைகளில் பரிச்சயமில்லாதிருப்பதும், திருச்சபை அமைப்பு, பணிகள், ஆராதனை, கிறிஸ்தவ வாழ்க்கை என்பதெல்லாம் சமகால சமுதாயப் பண்பாட்டுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் நினைப்பதுதான். இந்த விஷயங்களில் வேதம் தெளிவான போதனைகளை அளித்திருக்கிறது என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அல்லது அறிந்து நடைமுறைப்படுத்த விரும்பாதிருக்கிறார்கள். இந்த இருசாராருக்கும், புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கும் துணைசெய்யும் வகையிலேயே என் நூலை வெளியிட்டேன்.

என்நூலில் நான், முழுமையான சீர்திருத்த விசுவாசம் தொடர்கின்ற சீர்திருத்தத்தை திருச்சபையில் எதிர்பார்க்கின்றது என்பதை வலியுறுத்தி, அத்தகைய சீர்திருத்தத்திற்கு அவசியமான நான்கு தூண்களை சுருக்கமாக விளக்கியிருந்தேன். (1) கர்த்தரின் வேதத்தை அதிகாரமாகக் கொண்டு எல்லா விஷயத்திலும் அதன் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். (2) திருச்சபைக்கு முக்கிய இடத்தை அளித்து வேதம் விளக்கும் விதத்தில் அதன் அமைப்பும், பணிகளும் அமைய வேண்டும். (3) கர்த்தரின் ஆராதனை அவருடைய வார்த்தை விளக்கும் விதத்தில் திருச்சபையில் அமைய வேண்டும். (4) கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும்.

இவையே நான் விளக்கிய நான்கு தூண்கள். இவற்றோடு இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்திருக்க முடியும்; இந்த நான்கு தூண்களை மேலும் விரிவாக விளக்கி எழுதியிருந்திருக்கவும் முடியும். இருந்தாலும் இதற்கு மேல் விளக்கி எழுதி எவரும் புரிந்துகொள்ள முடியாதவகையில் நூல் இருந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் சீர்திருத்த விசுவாசத்திற்கு ஓர் அறிமுக நூலாக மட்டுமே என்நூலை எழுதியிருந்தேன். (‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற நூலை சென்னை முகவரியில் வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம்).

கிருபையின் போதனைகள் (ஐம்போதனைகள்) மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதை சீர்திருத்த இறையியலறிஞர்கள் விளக்காமலில்லை. ஜே. ஐ. பெக்கர் தான் ஜோன் ஓவனின் The Death of Death in the Death of Christ என்ற நூலுக்கு அளித்திருந்த அருமையான அறிமுக உரையில் இதை விளக்கியிருக்கிறார். ஆர். சி. ஸ்பிரவுலும் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஐம்போதனைகளையும், சீர்திருத்த விசுவாசத்தையும் விளக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் அநேகம் இருந்தபோதும், ஐம்போதனைகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதைக் குறிப்பிட்டு விளக்கும் நூல்களை நான் காணவில்லை. அதற்குக் காரணமிருக்கிறது. மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த திருச்சபைகள் அனைத்தும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப்போதனைகளின் அடிப்படையில் போதனைகளை அளித்து வந்திருப்பதால் சபையாருக்கு சீர்திருத்த விசுவாசத்தில் ஐம்போதனைகளின் பங்கு எது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

அந்த நிலையில் நம்மினத்துத் திருச்சபைகள் இல்லை. கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிற நம்மவர்கள் கிருபையின் போதனைகளுக்கு அப்பால் போய் சீர்திருத்த விசுவாசத்தைப் பார்க்க முடியாத கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.

இந்த இடத்தில் (கல்வினித்துவ) ஐம்போதனைகளைப்பற்றிய முக்கியமான உண்மையை சுருக்கமாக விளக்கிவிட விரும்புகிறேன். கர்த்தரின் வழிநடத்தலால் வரலாற்றில் திருச்சபையின் இறையியல் பாதுகாப்புக்காகத் தொகுக்கப்பட்ட இந்தப் போதனைகள் (Synod of Dort, 1618), கர்த்தர் இறையாண்மையுடன் அளிக்கும் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன. இந்தவிதத்தில் இரட்சிப்பின் போதனைகளை அவை விளக்குவதற்கான காரணம் அந்தக் காலத்தில் இரட்சிப்பைப்பற்றி செயற்கையாக வேத ஆதாரமற்று உருவான ஆர்மீனியனிசமே. ஆர்மீனியனிசம் இரட்சிப்பில் மனிதனுக்குப் பங்கிருப்பதாக விளக்கி, மனிதன் தன்னைக் கர்த்தரின் துணையோடு இரட்சித்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய போதனைகளை அளித்தது. அந்தத் தவறான போதனையைத் தோலுரித்துக்காட்டி திருச்சபைகளைக் காப்பாற்றுவதற்காகவே ஐம்போதனைகள் தொகுத்தளிக்கப்பட்டன. அவை கல்வினித்துவ ஐம்போதனைகள் என்ற பெயரையும் பெற்றன. கர்த்தரின் இறையாண்மையுள்ள கிருபையின் அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய உண்மைகளை இவை அணுகுவதால் இவற்றிற்கு கிருபையின் போதனைகள் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம், இந்தக் கல்வினித்துவ ஐம்போதனைகள் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன என்பதுதான். அதற்குமேல் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையெல்லாம் இது விளக்க எத்தனிக்கவில்லை.

ஜே. ஐ. பெக்கர் இதுபற்றி விளக்கியிருப்பதைக் கவனியுங்கள், ‘கல்வினிச ஐம்போதனைகளை சீர்திருத்த விசுவாசமாகக் கருதுவது முறையானதல்ல’ என்று கூறும் பெக்கர் அதற்கான காரணங்களைக் கூறத் தவறவில்லை.சீர்திருத்த விசுவாசத்தைக் ‘கல்வினிசம்’ என்ற பெயரில் விளக்கும் பெக்கர், ‘கல்வினிசம் ஐம்போதனைகளைவிட  மிகவும் விரிவானது, அதுமுழு உலகத்தையும் அதை உருவாக்கிய சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையினை அளக்கின்ற போதனை’ என்கிறார். தொடர்ந்து அவர், ‘ஐம்போதனைகள் குறிப்பாக இரட்சிப்பை மட்டுமே இறையாண்மையின் அடிப்படையில் கர்த்தருடையதாகப் பார்க்கிறபோது, கல்வினிசம், அவர் படைத்த இயக்குகின்ற அனைத்தையும் இறையாண்மையின் அடிப்படையில் அணுகி அவர் தான் ஏற்கனவே திட்டமிட்டுள்ள திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் படைப்புயிர்களுக்காகவும், தன்னுடைய திருச்சபைக்காகவும் எவ்வாறு கொண்டு நடத்துகிறார் என்று விளக்குவதாகும்’ என்கிறார். (Introduction to the Death of Death in the Death of Christ, J.I. Packer).

சீர்திருத்த விசுவாசம் இரட்சிப்பு சம்பந்தமான ஐம்போதனைகளை மட்டுமல்லாமல் அதற்கு அப்பால்போய் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையும் விளக்குகின்றது; அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையில் அவருடைய வேதத்தில் தரப்பட்டிருக்கும் அனைத்துப் போதனைகளையும் நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என்கிறது சீர்திருத்த விசுவாசம். வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்பையும், வேதரீதியிலான அதன் பணிகளின் அவசியத்தையும், வேதம் போதிக்கும் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டியதன் அவசியத்தையும், கர்த்தர் வரையறுத்துக்காட்டியிருக்கும் வழிமுறையின்படி திருச்சபை ஆராதனை அமைய வேண்டியதன் அவசியத்தையும், அவருடைய உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற வேண்டியதன் அவசியத்தையும் சீர்திருத்த விசுவாசம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதிவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. ஐம்போதனைகளை ஒருவர் அறிந்து விசுவாசிப்பது அவருடைய இறையியல் சிந்தனைகளில் சீர்திருத்தத்தின் ஆரம்பமே தவிர அதுவே முடிவல்ல.

‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற என் நூலைப்பற்றியும், சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய இந்த விளக்கத்தையும் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். அதை விளக்கத்தான் வேண்டும். என் நண்பர் ரொப் வென்சூராவை நான் 2014ல் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய புதிய நூலை ஆங்கிலத்தில் வெளியிடத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அந்த நூல் நான் வெளியிட்ட நூலின் கருப்பொருளின் அடிப்படையில் விரிவானதாக இருக்கப்போவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நூல் இப்போது 2015ல் வெளிவந்திருக்கிறது. அதன் தலைப்பு Going Beyond the Five Points: Pursuing a More Comprehensive Reformation என்பதாகும். இதனைத் தமிழில், ‘ஐம்போதனைகளுக்கு அப்பால் போய் முழுமையான சீர்திருத்தத்தை நாடுதல்’ என்று கூறலாம். இந்நூலுக்கு ஆசிரியராக இருந்து, அறிமுகத்தை ரொப் வென்சூரா தந்திருக்கிறார். நூலுக்கான முன்னுரையை ஜேம்ஸ் வைட் அளித்திருக்கிறார். சீர்திருத்த விசுவாசத்தின் முக்கிய தூண்களாக ஐந்து அம்சங்களை இனங்காட்டி நான்குபேர் நூலை எழுதியிருக்கின்றனர். நால்வரும் எனக்கு நன்கு அறிமுகமான சீர்திருத்த பாப்திஸ்து போதகர்கள். இந்த நூலில் வந்திருக்கும் ஆக்கங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் வெளிவந்திருப்பவை. அவற்றை இந்நூலுக்குத் தகுந்தவிதத்தில் அவற்றை எழுதியவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

நூலின் தலைப்புகளும் அவற்றை எழுதியவர்களும்:

  1. பத்துக்கட்டளைகளும் கிறிஸ்தவனும், ரிச்சர்ட் பார்சிலஸ் (Richard Barcelos)
  2. வரையறுக்கப்பட்ட தத்துவம், சாம் வோல்டிரன் (Sam Waldron)
  3. உடன்படிக்கை இறையியல், ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)
  4. திருச்சபை, ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)
  5. விசுவாச அறிக்கைகளின் அவசியமும், பயன்பாடும், ரொபட் மார்டின் (Robert Martin)

நூலாசிரியர் ரொப் வென்சூரா தன்னுடைய அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இந்த நான்கு தலைப்புகளையும் நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இவையே எப்போதும் வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்திருக்கின்றன. இவற்றை விளங்கிக்கொண்டு விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவ திருச்சபை பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கை பற்றியும் முழுமையான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். வேறுசிலர் இன்னும் சில போதனைகளை இவற்றோடு சேர்த்திருக்க வேண்டும் என்று கருதுவார்கள். இருந்தபோதும் கிறிஸ்தவ வரலாற்றில் இந்தக் காலப்பகுதியில் இவற்றையே முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.’

இதற்கு முகவுரை அளித்துள்ள ஜேம்ஸ் வைட், ‘இந்நூலை எழுதியவர்கள் கிருபையின் போதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்துப் பகுதியோடும் தொடர்புடையவையாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஐம்போதனைகளோடு நாம் நிறுத்திக்கொண்டால், அதாவது தன்னுடைய மகிமைக்காக சுயாதீனமாக அவர் இரட்சிப்பதில் மட்டும் ஆனந்தமடைந்து, அவருடைய வல்லமையும், கிருபையும் நம்முடைய ஆராதனையில் வெளிப்படுவதையும், நம்முடைய போதனைகளிலும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் அவற்றின் வெளிப்பாட்டை அறிந்துகொள்ளாமல் போனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஊனமுற்றதாக இருந்து இந்த உண்மைகளும் நம்மூலம் வெளிப்படாமல் போய்விடும்’ என்கிறார்.

முதலாவது அதிகாரம்:

பத்துக்கட்டளைகளும் கிறிஸ்தவனும்

முதலாவது ஆக்கத்தை எழுதியிருப்பவர் ரிச்சர்ட் பார்சிலஸ். இந்த ஆக்கத்தில் காணப்படும் பல விஷயங்களை அவர் ஏற்கனவே தன்னுடைய அருமையான நூலான In Defence of the Decalogue (பத்துக்கட்டளைகளுக்கு ஆதரவாக) எனும் நூலில் வெளியிட்டிருக்கிறார். கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட ‘புதிய உடன்படிக்கை இறையியல்’ என்ற போதனைக்கு எதிராக பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை விளக்கி எழுதப்பட்ட நூலிது. இன்று அது பதிப்பில் இல்லை. வெளிவந்தபோது பலருக்கு அதை நான் அறிமுகப்படுத்தியிருந்திருக்கிறேன்.

இந்த அதிகாரத்தில் ஆரம்பத்தில் இந்த ஆக்கத்திற்கான காரணத்தை விளக்கும் பார்சிலஸ், இன்றைக்கு சரி எது, தவறு எது என்று உறுதியாக நிலை நிறுத்த மறுக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு, அந்த சிந்தனை கிறிஸ்தவர்களையும் பாதித்திருப்பதை நினைவுறுத்துகிறார். பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மைக்கு எதிரான பல குரல்களைக் குறிப்பிடும் அவர் அலிஸ்டர் பெக்கின் கூற்றை நினைவூட்டுகிறார். ‘சமகால சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் ஆண்டவருடைய நாளுக்கு எதிராகக் காணப்படும் துக்ககரமான நிலை, வேறு எதையும்விட பத்துக்கட்டளைகளின் நிரந்தரப் பரிசுத்தத் தன்மையை நிலைநிறுத்துவதில் நமக்குள்ள சவால்களை அதிகம் விளக்குகிறது’ என்கிறார் அலிஸ்டர் பெக்.

இந்த அறிமுகத்தோடு அதிகாரத்தை ஆரம்பிக்கும் ரிச்சர்ட் பார்சிலஸ் நியாயப்பிரமாணம் நம்மை நீதிமானாக்கவோ, பரிசுத்தப்படுத்தவோ முடியாது என்பதை ஆணித்தரமாக முதலில் சுட்டிக்காட்டுகிறார். அதனால் நம்முடைய குற்றவுணர்வைப்போக்க முடியாது; நமக்கு இரட்சிப்பை அளிக்க முடியாது என்றும், நம்முடைய கடமையை மட்டுமே சுட்டிக்காட்டும் நியாயப்பிரமாணம் அதை நாம் செய்யவைக்கும் தன்மையைத் தன்னில் கொண்டிருக்கவில்லை என்பதையும் விளக்குகிறார். பரிசுத்தம் எப்படி இருக்கும் என்று காட்டுகின்ற நியாயப்பிரமாணத்தால் (பத்துக்கட்டளைகள்) நம்மைப் பரிசுத்தப்படுத்த முடியாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார். இரட்சிப்புக்கு நமக்கு வழிகாட்டுவது சுவிசேஷம்; இரட்சிப்பை நமக்கு அளிப்பது கிறிஸ்து; பரிசுத்தமாக நம்மை வாழவைப்பவர் பரிசுத்த ஆவியானவர் என்று கூறும் ரிச்சர்ட், கிறிஸ்தவர்கள் ஏன் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்க ஆரம்பிக்கிறார்.

திருச்சபை வரலாற்றில், பதினாறாம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்த காலத்தில் ஜோன் கல்வின் போன்ற சீர்திருத்தவாதிகள் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை உணர்ந்து போதித்திருப்பதை சுட்டிக்காட்டும் பார்சிலஸ் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகிய ஓர் இயக்கம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்றும், அன்பு மட்டுமே அவசியம் என்று விளக்க ஆரம்பித்ததை சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான ஒழுக்கத்தின் அவசியத்தை நிராகரித்து அதன் இடத்தில் தன்னல மறுப்போடு கூடிய அன்பை வலியுறுத்தினார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் மனித இருதயமே நியாயப்பிரமாணத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளுகிறது. பேராசிரியர் ஜோன் மரே சுட்டிக்காட்டுவதுபோல், ‘அன்பை வலியுறுத்தும் இவர்கள் அன்பை நியாயப்பிரமாணத்திற்கு எதிரான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அன்பு நியாயப்பிரமாணத்திற்கு எதிரானதல்ல; அது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது.’

நியாயப்பிரமாணத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள பிரச்சனை நியாயப்பிரமாணம் அன்புருவானதாக இல்லாமல் இருப்பதல்ல; பிரச்சனை நமக்குள்ளேயே இருக்கிறது, காட்ட வேண்டியவிதத்தில் அன்புகாட்ட முடியாத நிலையில் நாமிருக்கிறோம்.

பத்துக்கட்டளைகளைக் கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் பார்சிலஸ் அதற்கு 1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். அந்த அதிகாரத்தின் போதனைகளை நான்கு தலைப்புகளில் விளக்குகிறார்.

  1. படைப்பும் பத்துக்கட்டளைகளும்.
  2. சீனாயில் பத்துக்கட்டளைகள்.
  3. கிறிஸ்தவர்களும் பத்துக்கட்டளைகளும்
  4. அவிசுவாசிகளும் பத்துக்கட்டளைகளும்.

1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரம் தெளிவாக நியாயப்பிரமாணத்தின் நிலையை விளக்கி பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. படைப்பில் நியமிக்கப்பட்ட ‘சபத்து நாள்’ இன்றைக்கு ஆண்டவருடைய நாளாகக் கிறிஸ்தவர்களால் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் நிலைநாட்டுகிறது. 1689 விசுவாச அறிக்கை வேதபோதனைகளைத் தெளிவாகத் தொகுத்து அளிக்கும் வரலாற்றுச் சாதனம். அதன் அவசியத்தை மறுதலிக்க முடியாதிருந்தபோதும் பார்சிலஸ் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி தான் விளக்கியிருக்கும் உண்மைகளை வேதவசனங்களின் மூலம் அடுத்து விளக்க ஆரம்பிக்கிறார். அதை அவர் மூன்றுத் தலைப்பில் தந்திருக்கிறார். (1) பத்துக்கட்டளைகளும் பழைய உடன்படிக்கையும், (2) பத்துக்கட்டளைகளும் புதிய உடன்படிக்கையும். (3) பத்துக்கட்டளைகளும் ஒழுக்கநியதிக்கோட்பாடும் (Moral Law). இவற்றின் மூலம் பழைய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளின் இடத்தையும், புதிய உடன்படிக்கையில் கர்த்தரின் மக்களின் மத்தியில் அதன் நிரந்தரமான தன்மையையும் விளக்கும் பார்சிலஸ் இறுதியில் பத்துக்கட்டளைகளை ஒழுக்க நியதிக்கோட்பாட்டோடு ஒப்பிட்டு விளக்குகிறார். முடிவாக பத்துக்கட்டளைகள் மூன்றுவிதத்தில் வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார் பார்சிலஸ்: பழைய உடன்படிக்கையில் அது அடிப்படை நியாயப்பிரமாணமாகவும், புதிய ஏற்பாட்டிலும் அதேவிதத்தில் அடிப்படை நியாயப்பிரமாணமாகவும் அமைந்திருந்து, எல்லா மனிதர்களுக்கும் அடிப்படை நியாயப்பிரமாணமாக, ஒழுக்க நியதிக்கோட்பாடாகவும் அது இருப்பதாகக் கூறி முடிக்கிறார். ஏதேன் தோட்டத்தில் மனித வாழக்கையில் இயங்க ஆரம்பித்த பத்துக்கட்டளைகள் பின்பு கர்த்தரின் கையால் எழுதப்பட்டு இஸ்ரவேலின் வாழ்க்கையில் இடம் பெற்றது. பின்பு புதிய உடன்படிக்கை மக்களின் இருதயத்தில் எழுதப்பட்டு அவர்களின் வாழ்க்கை நியதியானது. பத்துக்கட்டளைகள் அடிப்படைக் கட்டளைகளாக, நியாயப்பிரமாணமாக, ஒழுக்கநீதிச் சட்டங்களாக இருப்பதால் அவை உடன்படிக்கைகளையெல்லாம் கடந்தவையாக இந்த உலகமிருக்கும்வரை நிலைத்திருப்பவையாக இருக்கின்றன.

பத்துக்கட்டளைகளை விசுவாச அறிக்கையின் போதனைகள் மூலமும், வேத வசனங்கள் மூலமும் நிலைநாட்டிக் காட்டும் ரிச்சர்ட் பார்சிலஸ் அடுத்ததாக பத்துக்கட்டளைகளுக்கு எதிரான நான்கு வாதங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் நியாயமற்ற தன்மையை விளக்கி அவற்றிற்குப் பதிலளிக்கிறார். அவருடைய விளக்கங்கள் மறுதலிக்க முடியாதவை. இறுதியில் மூன்று நடைமுறைப் பயன்களோடு அவருடைய ஆக்கம் முடிவுக்கு வருகிறது. (1) பழைய, புதிய உடன்படிக்கைகளின் அடிப்படை நியாயப்பிரமாணமே (பத்துக்கட்டளைகள்) கர்த்தரில் ஆரம்பித்து நம்முடைய முதல் பெற்றோரின் இருதயத்தில் எழுதப்பட்டதாக இருந்தது. (ரோமர் 2:14-15). (2) கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்) ஒரு வழிகாட்டியே தவிர வல்லமை அல்ல. அதாவது, பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை பரிசுத்த ஆவியிடம் இருந்து வருகிறதே தவிர பத்துக்கட்டளைகளில் அது காணப்படவில்லை; பத்துக்கட்டளைகள் இறக்கைகளற்ற வழிகாட்டியாக இருக்கின்றது. ரயில் தண்டவாளங்களைப்போல இருக்கும் பத்துக்கட்டளைகளால் ரயிலை ஓட வைக்க முடியாது; ரயிலுக்கு அவை வழிகாட்டிகள் மட்டுமே. பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை புதிய உடன்படிக்கை மக்களனைவருக்கும் கிடைத்திருக்கும் ஈவு. (3) நம்முடைய அன்பை வெளிப்படுத்த உதவும் சாதனம் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்). பத்துக்கட்டளைகளை நாம் பின்பற்றுவதன் மூலமே அன்பை வெளிப்படுத்த முடியும்; வேறு வழிகளாலல்ல. என்மேல் அன்பு காட்டுவீர்களானால் என் கற்பனைகளைப் பின்பற்றுங்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

ரிச்சர்ட் பார்சிலஸின் இந்த அதிகாரம் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையைத் தெளிவாக வேதபூர்வமாக விளக்கியிருக்கிறது. அதற்கு எதிரான சிந்தனைகளுக்கெல்லாம் முறையான பதில்களை ஆக்கத்தின் ஆசிரியர் அளித்திருக்கிறார். புதிய உடன்படிக்கை விசுவாசிகள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மன்னிப்புக்கேட்கும் முதுகெலும்பற்ற தோரணையில் எழுதாது, உறுதியோடு பார்சிலஸ் விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாலுபேர் உரக்கச் சத்தமிட்டு பத்துக்கட்டளைகள் இன்று அவசியமில்லை என்று சொல்லிவிட்டால் மசிந்துபோகிற கூட்டம் அதிகரித்து வருகின்ற நாளில் சீர்திருத்த விசுவாசத்தின் ஓர் அடிப்படை அம்சமான பத்துக்கட்டளைகளின் அவசியத்தை ஆணித்தரமாக, அதேநேரம் அன்போடு ரிச்சர்ட் விளக்கியிருக்கிறார். இந்த ஆக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பிரெட் மலோன், ‘கிருபையின் கீழ் வாழும் கிறிஸ்தவனுக்கு பத்துக்கட்டளைகள் அவசியமானவை எனும் பார்சிலஸின் வாதங்கள் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார்.

கல்வினித்துவ ஐம்போதனைகளில் ஆர்வம் காட்டி அவற்றை விசுவாசிக்க ஆரம்பித்திருப்பவர்கள் நிச்சயம் பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் விசுவாச வாழ்க்கை நடத்தவேண்டியதன் அவசியத்தை உதாசினப்படுத்த முடியாது; ஓய்வுநாளை அனுசரிப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது. வேதமும், விசுவாச அறிக்கையும் தெளிவாக விளக்கும் இந்த சீர்திருத்தவாத சத்தியத்தைப் புறந்தள்ளி கிறிஸ்தவ வாழ்க்கையையும், சபையையும் நடத்துவதில் பயனில்லை. அது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கே எதிரான செயல். வாழும் சமுதாயத்தின் பண்பாட்டைக் காரணம் காட்டி பத்துக்கட்டளைகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது. அது கர்த்தரையே ஒதுக்கி வைப்பதற்குச் சமமானது. பத்துக்கட்டளைகள் இல்லையெனில் ஒழுக்கத்துக்கே இடமில்லை என்றாகிவிடும். ஓய்வுநாளும் கர்த்தரைப் பற்றும் நல்லொழுக்கத்தோடு சம்பந்தமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அன்பு ஒழுக்கத்துக்கு விரோதமானதல்ல; அதேநேரம் அன்பே ஒழுக்கமாகிவிடாது. அன்பிருக்குமிடத்தில் ஒழுக்கம் நிச்சயம் இருக்கும். அந்த ஒழுக்கம் அன்போடு பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே வாழ்க்கையில் நிலைநிற்கும். பத்துக்கட்டளைகள் பரிசுத்தமாக இருப்பதற்கு நம்மை வழிநடத்துகின்றன; ஆவியின் வல்லமையால் அவற்றை நாம் பின்பற்றுகிறபோது நாம் மேலும் மேலும் பரிசுத்தமடைகிறோம்; அன்பும் நம்மில் ஒளிவீச ஆரம்பிக்கிறது.

இரண்டாவது அதிகாரம்:

வரையறுக்கப்பட்ட தத்துவம் அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் (Regulative Principle)

“இதுபற்றி அதிகமாக இன்று பேசப்பட்டு வருகிறது என்று கூறுவது இதுபற்றிய பரபரப்பான விவாதத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும்,“ என்று கூறி தன்னுடைய ஆக்கத்தை ஆரம்பிக்கிறார் சாம் வோல்டிரன். தமிழ் வாசகர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்தத் தத்துவம் என்ன என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. நம்மில் எத்தனை பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே என் கணிப்பு. அதற்குக் காரணம் முறையான சீர்திருத்த திருச்சபை வாழ்க்கை முறையை ஒருவர் அனுபவித்திருந்தாலோ அல்லது சீர்திருத்த இறையியலை முறையாகக் கற்றிருந்தாலோ அல்லது சீர்திருத்த கிறிஸ்தவம் தழுவிய நூல்களை அதிகம் முறையாக வாசித்திருந்தாலோ மட்டுமே ஒருவர் இதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கவும் அறிந்திருக்கவும் வழியுண்டு. சாதாரணமாகத் தமிழ் திருச்சபைகளில் இதற்குப் பெரும்பாலும் இடமில்லை; அதற்குக் காரணம் சீர்திருத்த வரலாறு மற்றும் சீர்திருத்த இறையியல் பற்றிய ஆழ்ந்த அறிவும், பரந்த அனுபவமின்மையுமே.

சாம் வோல்டிரன் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கும் இந்தப் போதனை மிகமிக முக்கியமானது. இது சீர்திருத்த கிறிஸ்தவத்தின் முக்கியமான போதனைகளில் ஒன்று. இதுபற்றி வோல்டிரன் தன்னுடைய ஆக்கத்தில் விளக்காத சில உண்மைகளை நாம் முதலில் தெரிந்துகொள்ளுவது நல்லது. அவை இந்தப் போதனையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். இதை வோல்டிரன் விளக்காததற்குக் காரணம் இந்த நூல் மேலைத்தேய கிறிஸ்தவர்களை மனதில்வைத்து எழுதப்பட்டதுதான். அங்கிருக்கும் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும்; அதற்குக் காரணம் அவர்கள் அதை நடைமுறையில் போதித்துப் பின்பற்றும் சபைகளில் அங்கம் வகித்து வருவதுதான். இதன் அடிப்படையிலேயே அவர்களுடைய ஆராதனை நிகழ்ந்து வருகிறது. அங்குள்ள போதகர்களுக்கு இதன் அவசியம் தெரியும்; நடைமுறையில் இதைப்பயன்படுத்துவதற்கான அனுபவமும் அவர்களுக்குண்டு. இதுபற்றிய அரிச்சுவடிப் போதனை அவர்களுக்கு அவசியமில்லை. இருந்தபோதும், இந்த 21ம் நூற்றாண்டில் மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த போதனைகளை அறிந்திராத ஒரு ஜெனரேஷன் வளர்ந்து வருகிறது. நூலில் வோல்டிரன் குறிப்பிடும் மார்க் ட்ரிஸ்கல் (Mark Driscol) அந்த ஜெனரேஷனைச் சேர்ந்தவர். அவர்களுக்குப் புரியும்படி சில விளக்கங்களை வோல்டிரன் தந்திருந்திருப்பாரானால் அது அவருடைய ஆக்கத்தை முழுமையானதாக ஆக்கியிருக்கும்.

வேதத்தில் கர்த்தர் தந்திருக்கும் பல போதனைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது இறையியலறிஞர்கள் எப்போதுமே செய்து வந்திருக்கும் ஒரு அவசியமான செயல். வேத போதனைகளை இனங்கண்டுகொள்ள இப்பெயர்கள் துணை செய்கின்றன. திரித்துவம் (Trinity) என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதால் கர்த்தரின் ஆள்தத்துவங்கள் பற்றிய போதனைகளை இனங்கண்டுகொள்ளவும், விவாதிக்கவும் சுலபமாக இருக்கின்றது. அதேபோல் வேதத்தின் பல போதனைகளை இனங்கண்டுகொள்ள பெயர்கள் அவசியமாகின்றன. அங்கத்துவம் (Membership), ஒழுக்கநியதிக் கோட்பாடு (Moral Law), பராமரிப்பு (Providence), வீழ்ச்சி (Fall) போன்ற வார்த்தைகளை நேரடியாக வேதத்தில் காண முடியாது. ஆனால், மறுதலிக்க முடியாதபடி வேதத்தில் காணப்படுகின்ற போதனைகளை விளக்க அவ்வார்த்தைகள் திருச்சபையால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய வார்த்தைகள் வேதத்தில் இல்லை என்பதால் அவை விளக்கும் போதனைகள் இல்லை என்றாகிவிடாது. அந்த வார்த்தைகள் விளக்கும் போதனைகள் எத்தனை அவசியமோ அதேபோல் அந்த வார்த்தைகளும் அவசியமானவை. (இதை ஏர்ல் பிலெபர்ன் தன்னுடைய ஆக்கத்திலும் இதே நூலில் குறிப்பிட்டிருக்கிறார்).

வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்ற பதம், வேதம் விளக்கும் திருச்சபையின் பொது ஆராதனை குறித்த போதனைகளை விளக்கும் பதமாகும். நம் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்  என்று விளக்கி அதற்கான நெறிப்படுத்திய போதனைகளை வேதத்தில் தந்திருக்கும் கர்த்தர் அவருடைய திருச்சபையில் பொது ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக அத்தகைய போதனைகளையும் நெறிப்படுத்தித் தந்திருக்கிறார். அதனாலேயே அப்போதனைகள் ‘வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட ஆராதனைத் தத்துவங்கள்’ என்ற பெயரில் திருச்சபையால் 16ம் நூற்றாண்டில் இருந்து அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆராதனைபற்றிய போதனைகள் பெரும்பாலும் நம்மினத்து சபைகளில் இந்த வேத தத்துவத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் இந்தப் போதனைகள் பற்றித் தொடர்ந்து இருந்துவரும் அறியாமையே.

வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலேயே அதுபற்றிய  நெறிப்படுத்தப்பட்ட வேத போதனைகளை 1689 விசுவாச அறிக்கை 22ம் அதிகாரத்தில் தருகின்றது. (வாசகர்கள் 1689 விசுவாச அறிக்கையை <www.biblelamp.org> இணைய தளத்தில் வாசிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்). இந்த வார்த்தைப் பிரயோகம் சீர்திருத்த விசுவாசத்தோடு தொடர்புடையது. அதற்குக் காரணம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தம் இதற்கு மறுபடியும் உயிரூட்டியதுதான். (திருச்சபை வரலாற்றை விளக்கி நாம் வெளியிட்டிருக்கும் இரு பாகங்களும் இதைப் புரிந்துகொள்ள உதவும்). 16ம் நூற்றாண்டுக்கு முன் கத்தோலிக்க மதத்தின் கொடூரத்தால் பல நூற்றாண்டு காலமாக வேதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது; வேதபோதனைகளும் பகிரங்கமாகப் போதிக்கப்பட வாய்ப்பிருக்கவில்லை. இதையெல்லாம் மாற்றியமைத்தது, கர்த்தர் எழுப்பிய 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தம். ‘வேதம் மட்டுமே’ என்று வைராக்கியத்தோடு கோஷமிட ஆரம்பித்த சீர்திருத்தவாதிகள் வேதபோதனைகளையெல்லாம் மறுபடியும் விளக்கவும், வேதப்பூர்வமான திருச்சபை அமைக்கவும் ஆரம்பித்தனர். வேதத்தை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டு கர்த்தரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்த எழுப்புதல் வேதம் தொடர்பான அத்தனையிலும் வேதபூர்வமான மாற்றத்தை நாடியது. அதற்கு அடுத்த நூற்றாண்டில் சீர்திருத்த திருச்சபைகளின் பாதுகாப்பிற்காக பியூரிட்டன் பெரியவர்கள் விசுவாச அறிக்கைகளையும், வினாவிடை நூல்களையும் வரைந்தளித்தனர். அவர்களுடைய போதனைகளிலும், எழுத்துக்களிலும் ‘வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம்’ அதிகமாக இடம்பெற்றது. பியூரிட்டன் பெரியவர்கள் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் சந்தித்த பெரிய போராட்டமே திருச்சபை ஆராதனை பற்றியதாக இருந்தது. இந்தச் சீர்திருத்தப் போராட்டத்தில் அநேகர் இரத்தம் சிந்தவும், உயிரிழக்கவும் நேரிட்டது. ஆகவே ஆராதனைபற்றி வேதவிளக்கங்கள் பியூரிட்டன்களின் பிரசங்கங்களிலும், எழுத்துக்களிலும் அதிகம் இடம்பெற்றிருந்ததில் ஆச்சரியமில்லை.

சாம் வோல்டினுடைய இந்த ஆக்கம் மிகவும் சிறப்பானது; அத்தனை அவசியமானது. வோல்டிரன் சொல்லுகிறார், ‘வேதபூர்வமான திருச்சபை சீர்திருத்தம் நம்முடைய சபைகளில் நிகழ வேண்டுமென்ற நாட்டம் நமக்கிருக்குமானால் வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை நாம் முறையாக விளங்கிக்கொள்ளுவதோடு, அதை நடைமுறைப்படுத்துவதிலும் நமக்கு அழுத்தமான உறுதிப்பாடிருக்க வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்’ என்கிறார். வோல்டிரனின் வார்த்தைகள் சீர்திருத்த விசுவாசிகள் பெரிதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியமான வார்த்தைகள். இந்தத் தத்துவத்தை அறிந்திராது, இதை விசுவாசித்து இதற்கு முக்கியத்துவம் கொடுக்காது, இதை நடைமுறையில் சபையில் நிலைநிறுத்தும் வைராக்கியமில்லாது, வேதபூர்வமான திருச்சபை சீர்த்திருத்தத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்கிறார் வோல்டிரன். திருச்சபை சீர்திருத்தம் என்பது, வேதபோதனைகளின் அடிப்படையில் திருச்சபையில் அனைத்தும் இருக்குமாறும், நிகழுமாறும் பார்த்துக்கொள்ளுவது. இதில் போதகர்களினுடைய பொறுப்பு அதிகம். போதகர்களே கர்த்தரிடம் இதற்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதுவும் கர்த்தர் அதிகம் எதிர்பார்க்கும், அவருடைய வார்த்தையின் அடிப்படையிலான ஆராதனை அவருடைய சித்தத்துக்கு முரண்பட்டதாக இருந்துவிட்டால் அவர் வாக்குத்தத்தம் செய்து தந்திருக்கும் அவருடைய பிரசன்னத்தையே சபையில் காணமுடியாது. இது எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்த வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்தை ஆராய்ந்து பார்த்து விளங்கிக்கொள்ளுகிறபோதே புரியவரும்.

இத்தனை அவசியமான ஆசிரியரின் ஆக்கம் எளிமையான நடையில் இருந்திருக்குமானால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் வாசிப்பதற்கு ஆங்கில நூல் பயனுள்ளதாக இருந்திருக்கும். நூலில் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆங்கிலந்தெரிந்த தமிழ் வாசகர்களுக்கு சீர்திருத்த சத்தியத்திலும், வரலாற்று இறையியலிலும் நல்லறிவு தேவையாயிருக்கிறது. முக்கியமாக இந்தப் போதனைக்கெதிரான எதிராளிகளின் எதிர்ப்புக்கணைகளை – ஜோன் பிரேம் (John Frame), மார்க் ட்ரிஸ்கல் (Mark Driscol), கோர் (Gore), ஸ்டீவன் சுவிசெல் (Steven Schlissel) – வோல்டிரன் விளக்குகிறபோது அவையெல்லாமே மேலைத்தேய கிறிஸ்தவப் பின்னணியுடையவர்களிடம் இருந்து வருகின்றவையாக இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை முற்றும் அறியாதவர்களால் அத்தகைய எதிர்ப்பை இந்தவிதத்தில் வெளிக்காட்ட வழியில்லை; அறியாமையால், அது நமக்கு அவசியமற்றது என்று உதாசீனப்படுத்தவே அவர்களால் முடியும். அருமையான இந்த ஆக்கம் இன்னும் இலகுவான நடையில், கீழைத்தேய கிறிஸ்தவத்தையும் மனதில் வைத்து எழுதப்பட்டிருந்தால் பெரும் பயனளித்திருக்கும்.

வோல்டிரன் இந்த ஆக்கத்தைத் தத்துவார்த்த ரீதியில், வரையறுக்கப்பட்ட தத்துவத்தை நியாயப்படுத்தி அதன் எதிர்ப்புக்கணைகளை நிர்மூலம் செய்யும் விவாதப்பாணியில் எழுதியிருக்கிறார். அந்தப் பாணியைப் புரிந்துகொள்ள இந்தத் தத்துவம் பற்றிய விளக்கமும், எதிராளிகளின் கருத்துக்களும், ஆக்கத்தின் விவாதப்போக்கை விளங்கிக்கொள்ளும் பக்குவமும் வாசகனுக்குத் தேவைப்படுகிறது. நம்மவர்களில் பெரும்பாலானவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. இவர்களுக்கு இந்த ஆங்கில ஆக்கம் துணையாக இருக்காமல் போகப்போகிறதே என்பது மட்டுமே என் வருத்தம். இந்தக் குறைபாட்டை ஓரளவுக்கு நிவர்த்திசெய்து தமிழ் வாசகர்களுக்கு வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை விளக்கி, அதன் அவசியத்தை வலியுறுத்தவே முடிந்தவரையில் இந்த ஆக்கத்தை இலகுவான தமிழில் தர முயன்றிருக்கிறேன்.  (தொடரும்)

 

 

இன்றியமையாத வாசிப்பு

வாசிப்பு சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வாசிக்காதவர்களால் சிந்திக்கவும், வளரவும் முடியாது. கல்லூரிப்படிப்பு இல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்தவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், வாசிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சி மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. வாசிப்பில்லாமல் வெறும் இணையத்தைச் சார்ந்தவைகளைக் கொண்டு மனிதர்கள் வளரவில்லையா? என்று சிலர் கேட்கலாம். அது, ஒரு துறையைச் சார்ந்த வளர்ச்சி மட்டுமே, அதுவே உண்மையான வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல.

வளர்ச்சி என்பது மனிதனின் அறிவு, மனோபாவம், சிந்தனை, விவேகம், ஒழுக்கம், நடத்தை என்பவற்றைச் சார்ந்தது. இவை மனிதனை மனிதனாக்குகிற விஷயங்கள். இவற்றின் வளர்ச்சியைப் பொறுத்தே மனிதனின் வளர்ச்சியைக் கணிப்பிட முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சமூக மாற்றங்களும் நிகழும். நல்ல சமூகமாற்றங்களுக்கு இந்த விஷயங்களில் மனிதனின் வளர்ச்சி முக்கியமானது. இந்த விஷயங்களில் மாற்றம் ஏற்பட மனிதனுக்கு மொழி அவசியமாகிறது. மொழியைப் புறக்கணிக்கும் சமுதாயம் உயர முடியாது. அதேநேரம் மொழியைத் தவறாகப்பயன்படுத்தும் சமுதாயமும் உயர முடியாது. மொழிவளர கல்வி அவசியம். மனிதனின் அடிப்படை சமுதாயத்தேவைகளில் ஒன்று கல்வி. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

கல்வி மொழிக்கு எத்தனை அவசியமானதோ, அந்தவிதத்தில் அது அரசியல் கலந்ததாக இருந்துவிடக்கூடாது. அரசியல் சார்பற்ற கல்வி அமைப்பு சமூகம் உயர ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அறுபதுகளில் தி. மு. க. தமிழகத்தில் மொழி வெறியை ஏற்படுத்தியது. தி. மு. க ஆட்சிக்கு வர அது வித்திட்டது. மக்கள் சுயமொழி வெறியால் வேற்று மொழி எதிர்ப்பாளர்களாக, அந்த மொழிகளைப் பின்பற்றும் மத எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இந்தியும், ஆங்கிலமும், புறக்கணிக்கப்பட்டது. இந்து மதமும் புறக்கணிக்கப்பட்டு பகுத்தறிவுவாதம் தலைதூக்கியது. இதெல்லாம் எந்தவகையில் மொழிவளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று ஆராய்ந்தால் பெரியளவுக்கு மொழி வளர்ச்சி நிகழ்ந்திருப்பதாகக் கொள்ள முடியாது. உண்மையில் தமிழகம் புறக்கணித்திருக்கும் விஷயங்களால் அதற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். குறுகிய மாநிலப் பார்வைகொண்ட பரந்தநோக்கில்லாத சமூகப் பார்வையை தி. மு. க உருவாக்கியது. அரசியல் நோக்கங்களுக்கு மொழிவெறி துணைபோயிருந்தாலும் உண்மையான சமூக வளர்ச்சிக்கு அது உதவவில்லை. அதனால்தான் அரசியல் கலப்பில்லாத நேர்மையான கல்வி மக்களுக்குத் தேவை என்கிறேன்.

சுயமொழிக்கல்வி என்பதிலெல்லாம் எனக்கு நாட்டமில்லை. மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் கல்வியே தேவை. பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் கல்வி அளிக்க வேண்டும். சுயமொழிக் கல்வி குறுகிய மாநில, வட்டார மனப்பான்மையையே வளர்க்கும். மாநிலப் பாதுகாப்புக்கு அது அவசியம் என்று கருதுவது இன்றைய உலகில் கண்ணைக்கட்டிக்கொண்டு உலகம் தெரியவில்லை என்று சொல்வது போலாகும். இணைய உலகமும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார அணுகுமுறையும் குறுகிய மனப்பான்மைக்கு பேரெதிரியாக உருவாகி விட்டிருக்கிறது. மனிதன் எங்கிருந்தாலும் உலகின் இன்னொரு பகுதியோடு தொடர்புகொள்ளவும், சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் கூடியவனாக இன்று இருக்கிறான்.

கல்வியில் மொழிக்கு முதலிடம் அமைகிறது. எதைக்கற்றாலும் மொழியில்லாமல் கற்க முடியாது. மனிதனுக்கு வாசிக்கவும், எழுதவும் அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டும். அதை அளிப்பதே சிறந்த கல்வி. இந்த இடத்தில்தான் கீழைத்தேய நாடுகளின் கல்வி முறையில் பெருங்குறைபாடிருப்பதைப் பார்க்கிறோம். இந்நாடுகளில் கல்வி பொருளாதார மேன்மையை மட்டும் இலக்காகக் கொண்டதாக மாறி சிந்தனைபூர்வமான தேர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளுவதற்கான அடிப்படை அம்சங்களைப் புறக்கணித்து வெறும் பட்டங்களை மட்டும் பெற்றுத்தரும் கல்வியாக மாறியிருக்கிறது. இதற்கு அரசியல் நிச்சயம் ஒரு பெருங்காரணம் என்பதை மறுக்கமுடியாது. இன்றைய கல்விமுறையின் கீழ் வளரும் பிள்ளைகளுக்கு வாசிப்பிலும், எழுத்திலும் தேர்ச்சியில்லை. பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கு முன் அவர்கள் வாசித்திருப்பதும் எழுதியிருப்பதும் மிகக் குறைவு. எழுத்துப்பிழையில்லாமல் சொந்த மொழியில் எழுதத் தெரியாமலும், வாசிப்புத்தேர்ச்சியில்லாமலும் பட்டப்படிப்பை ஆரம்பிப்பவர்களின் பட்டப்படிப்பு எப்படியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

எந்தக் கல்விமுறையும் கல்லூரிப் படிப்புக்கு முன் மாணவனை வாசிப்பதிலும், எழுதுவதிலும் தேர்ச்சியுள்ளவனாக்க வேண்டும். மேலை நாட்டுப் பாடசாலைகளில் இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.  நம் சமுதாய மனப்பான்மை இதைப் புறக்கணித்து தேவையற்றதாக ஆக்கியிருக்கிறது. வீட்டில் பெற்றோர் இதற்கு பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் வாசிப்பது பொழுதைப் போக்குகின்ற செயலாகக் கருதப்படுகின்றது. நல்ல மார்க்குப் பெற்றுத் தேரவேண்டும் என்ற வணிக நோக்குக் கொண்ட ஒரே உறுதியால் வாசிப்பதிலும், எழுதுவதிலும் பிள்ளைகளை ஆர்வமற்றவர்களாக்கியிருக்கிறார்கள். இது மாற வேண்டும். இந்த மாற்றமேற்பட முழு சமுதாயமும் இணைந்து இயங்க வேண்டும்.

ஓரளவுக்கு கல்வி பயின்றிருக்கும் சிலரிடம் வாசிப்புப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நான் அவதானித்திருக்கும் விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் பள்ளிவாழ்க்கையில் ஒரு நூலையாவது முழுமையாக வாசித்ததில்லை. அத்தகைய ஊக்கத்தைப் பள்ளியில் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஒரு கட்டுரையாவது அவர்கள் எழுதியதில்லை. எப்படிக் கட்டுரை எழுத வேண்டும், அதற்கான விதிகள் என்ன என்பது பற்றிய ஆரம்ப விளக்கங்களைக்கூட எவரும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கவில்லை. அதன் விளைவு என்ன? அவர்களுக்கு சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்குக் கூட பொருள் தெரியவில்லை. தங்களுடைய குடும்பத்திலும், சுற்றுச் சூழலிலும், வட்டாரத்திலும் பேசக் கற்றிருக்கும் மொழிதவிர வேறு ஞானமில்லை. பொதுவாக தமிழில் பயன்படுத்தப்படும் பழமொழிகளும், உவமைகளும், மொழி அணிநலன்களும் அவர்களுக்குப் பரிச்சயமில்லாதவையாக இருந்தன. இலக்கியவாடை அரவே இல்லை. எது இதற்கெல்லாம் காரணம்? ஆரம்ப வாசிப்புப் பயிற்சியையும், எழுத்துப் பயிற்சியையும் அவர்கள் அடையமுடியாமல் போனதுதான்.

சமீபத்தில் கணையாழி இலக்கிய இதழின் பொன்விழாவை (50ம் ஆண்டு) நினைவுகூரும் கூட்டத்தில் முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமை உரையாற்றியிருந்தார். அவரது உரையை நான் வாசிக்க நேர்ந்தது. சிதம்பரத்துக்கு இலக்கியப் பரிச்சயம், இலக்கிய இதழ் தொடர்பிருந்தது அறிந்து ஆச்சரியப்பட்டேன். அதைவிட முக்கியம் அவர் தன் உரையில் குறிப்பிட்ட விஷயங்கள்தான். நிதர்சனமான சில உண்மைகளை இனங்காட்டிப் பேசியிருந்த அவர் அவற்றிற்கான தெளிவான தீர்வுகளையும் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குப்பட்டது. கணையாழி இதழை ஆரம்பித்தவர் கஸ்தூரி ரங்கன். அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியிருக்கிறார். கணையாழி இலக்கிய இதழாகத்தான் இருந்திருக்கிறது. அதன் வாழ்க்கையில் இடையில் தொய்வு ஏற்பட்டு மறுபடியும் எழுந்து நடைபோட ஆரம்பித்தது. சிதம்பரம் தன் பேச்சில், ‘வந்திருக்கும் கூட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தபோதும் அது 150 ஆக இருப்பது மகிழ்ச்சி தரவில்லை’ என்றார். ஐயாயிரமோ பத்தாயிரமோ பேர் வந்திருக்க வேண்டிய கூட்டம் இது என்று குறிப்பிட்ட அவர் இன்றைக்கு சிறுகதைகள், நாவல்கள் 500 பிரதிகள் மட்டுமே போகிறதென்பது சமுதாய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல என்றார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர் இளைஞர்களிடம் இலக்கியம் போய்ச்சேராமலிருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார். ‘ஆறே முக்கால் கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகள் கடந்த ஓர் இதழ் அதிக பிரதிகள் விற்பனையாகவில்லை என்றால் எங்கோ கோளாறு இருக்கிறது நம் சமூகத்தில் என்று அர்த்தம்’ என்றார் சிதம்பரம். தழுவல் ஆங்கில இதழ்களும், நூல்களும் நாட்டில் இலட்சக் கணக்கில் விற்கிறபோது தமிழில் இரண்டாயிரம் போவது தவிப்பாக இருக்கிறது என்பது மிகப் பெரிய கோளாறுக்கான அறிகுறி என்றார் அவர். இதை மட்டும் சொல்லிவிடாமல் ஒரு முக்கிய காரணத்தை அவர் விளக்கினார். நாம் ‘தமிழில் பேசுவதில்லை, தமிழில் எழுதுவதில்லை. பல தமிழ்க்குடும்பங்கள் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளும் சூழல் வந்துகொண்டிருக்கிறது. தமிழில் பேசத் தயங்குகிறார்கள், கூச்சப்படுகிறார்கள்’ என்றார்.

சிதம்பரத்தின் பேச்சில் பல உண்மைகள் இருந்தன. தமிழில் பேசுவதில்லை, எழுதுவதில்லை என்று குறிப்பிட்ட அவர் அதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டவில்லை. ஆங்கில மோகம் மட்டும் அதற்குக் காரணமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்விநிலை அந்தளவுக்கு மோசமாக வாசிக்கவும், எழுதவும் மாணவர்களை ஊக்குவித்து வளரச் செய்யாமல் இருந்திருப்பதையும், இருந்து வருவதையும் அவர் அறியாமல் இருந்திருக்கிறாரா, அறிந்தும் அதைப்பற்றி பேசாமல் இருந்திருக்கிறாரா என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஆங்கில மோகம் என்பது முழுத்தமிழகத்தையும் பாதித்திருக்கும் ஒன்றல்ல. பெரும்பான்மையானவர்களுக்கு அதை அடைகின்ற வசதியில்லை. கல்வி இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் வாசிக்கும் பழக்கமும், நூல் விற்பனையும் வளர்ந்திருக்கும். நான் பிரயாணம் செய்கிறபோது விமானத்தில் அநேகர் தடித்த நூல்களை வாசித்துக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். பத்துப்பதினொரு மணிநேரப் பிரயாணத்திலும் அவர்கள் வாசிக்கிறார்கள் என்றால் வீட்டில் எந்தளவுக்கு வாசிக்கிறவர்களாக இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும். இளமையில் வாசிக்கும் கலையை அவர்களுடைய கல்வி அவர்களுக்குத் தந்திருப்பதால் வாசிப்பு அவர்களுக்கு இயல்பாக வருகிறது. அவர்களோடு இணைந்ததொன்றாக இருக்கிறது. வாசிப்பதையும், எழுதுவதையும் அடிப்படை அம்சங்களாகக் கருதும் கல்வி அமைப்பு நமக்கு முதலில் தேவை. அது அமையும்போது வாசிப்பும், நூல்வளர்ச்சியும் தன்னால் ஏற்படும்.

இனி வாசிப்பின் அவசியத்திற்கான காரணங்களை அவதானிப்போம்.

  1. வாசிப்பு மொழியில் தேர்ச்சி பெற உதவும்.நாம் சிந்திப்பது நம்முடைய தாய்மொழியில். சிந்தித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுவது நம்முடைய தாய்மொழியில். தாய்மொழியில் தேர்ச்சி பெறாமல் இவற்றைச் செய்ய முடியாது. இதற்கு நாம் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய வார்த்தைகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு வாசிப்பில் ஈடுபட வேண்டும். வார்த்தைகளில் பரிச்சயமேற்படுகிறபோது நம்முடைய வாசிப்பும், எழுத்தும், சம்பாஷனையும் வளரும். வார்த்தைகளைப் பயன்படுத்தியே சம்பாஷனையில் ஈடுபடுகிறோம். வார்த்தைகள் சம்பாஷனையை சிறக்கச் செய்யும். நம் சம்பாஷனையில் பயன்படுத்தும் மொழி பெரும்பாலும் குடும்பத்தில் கற்றுக்கொண்டிருக்கிற வட்டாரவழக்காகவே இருக்கும். அதற்காக அதுதான் நல்லது என்று அர்த்தமல்ல. சென்னை நகரத்தில் பேசப்படும் சேரிப் பேச்சு மேடைப் பேச்சுக்கு உதவுமா? அந்தப் பேச்சில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான் எழுதுவதற்கு உதவுமா? வாசிப்பில் வளர்கிறவர்கள் இந்தவகைப் பேச்சோடு மட்டும் நின்றுவிட மாட்டார்கள். சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் பேச்சை நல்ல தமிழில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள அவர்களால் முடியும். கல்லூரிப்படிப்புக்கூட இல்லாத எழுத்தாளர்களில் பலருக்கு பலவித வட்டார வழக்குகளில் பரிச்சயமேற்பட்டிருப்பது எப்படி? அவர்கள் வார்த்தைகளை அள்ளித்தெளித்து எழுதுவது எப்படி? எப்படிச் சுற்றிச்சுற்றிப் பார்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வாசிப்பை அடிப்படை அம்சமாக வளர்த்துக்கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
  2. சிந்திக்க வாசிப்பு அவசியம்.வாசிக்க வாசிக்கத்தான் சிந்தனை வளருகிறது. சிந்தனைக்கு சோறிடு என்பார்கள். வாசிக்காதவர்களால் அதிகம் சிந்திக்க முடியாது. ஒரு குறுகிய வட்டம்போல அவர்களுடைய பேச்சும் சிந்தனையும் ஒரே இடத்தை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும். வாசிப்பில் வளருகிறவர்கள் பல விஷயங்களைப் பற்றிய பன்முகச்சிந்தனையை வளர்த்துக்கொள்ளுவார்கள். வாசித்தவற்றைப்பற்றி அதிகம் சிந்தித்து அவைபற்றிய சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். வாசிக்கிறவர்கள் சிந்திப்பதற்தாக இன்னும் வாசிப்பைத் தேடி ஓடுவார்கள். வாசிக்க வாசிக்க அவர்களுடைய தேடுதலும் அதிகரிக்கும். இன்றைக்கு நம்மினத்தில் போதகப் பணியில் இருக்கும் பெரும்பாலானோருக்குக்கூட ஒரு நல்ல ஆக்கத்தை வாசித்து சிந்தனைபூர்வமான கருத்துத் தெரிவிப்பது கஷ்டமானதாக இருக்கிறது. சிறுவயதிலிருந்து வாசிப்பில் வளராமல் இருந்திருப்பதே இதற்குப் பெருங்காரணம். வாசிப்பு, வாசித்துவிட்டு மறந்துவிடுகிறதாக இருக்கக் கூடாது. மெய்யான வாசிப்பு ஒருவனை வாசித்தவற்றைப்பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைக்கும்.
  3. அறிவு வளர வாசிப்பு அவசியம்.ஏட்டுப்படிப்பால் அறிவு வளராது. வணிக நோக்குமட்டும் கொண்ட தற்காலக் கல்வி முறை அறிவை வளர்க்க உதவவில்லை. அறிவு என்பது வெறும் செய்தித்தொகுப்பை மனதில் இருத்திக்கொள்ளுவது அல்ல. மற்றவர்கள் எழுதியதை, சொன்னவற்றை மனதிலிருத்திக்கொள்ளுவது அல்ல. அறிவு என்பது படித்தவற்றைப்பற்றிச் சிந்தித்து, ஆராய்ந்து, அதில் தெளிவுபெற்று தனக்கென அவற்றைப்பற்றிய சொந்தக் கருத்துக்களைக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்துச்செல்ல வித்திடுவது. படித்தவற்றை வாந்தியெடுப்பதுபோல் பரீட்சைத்தாளில் கொட்டித்தீர்த்து அதிக மார்க்குகளை அடைவதே இன்று அறிவு என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறது. அது அறிவல்ல; பிரதியெடுக்கும் அச்சியந்திரம். எவன் சிந்தனையாளனோ அவனே அறிவாளி. எவன் புதிய சிந்தனைகளைக் கொண்டிருக்கிறானோ, புதிய வழிமுறைகளைக் கண்டுகொள்கிறானோ அவனே அறிவாளி. அத்தகைய அறிவை அளிப்பதாக நடைமுறைக் கல்வி இல்லை. தொடர்ச்சியான, ஆழமான, சிந்தனைபூர்வமான வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும்.

கிறிஸ்தவனுக்கு வேத அறிவு தேவை. வேத அறிவு கடவுளைப்பற்றிய ஞானத்தை நமக்கு அளிக்கிறது. அந்த ஞானமே நாம் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும், கிறிஸ்தவ வாழ்க்கையை அவரை நம்பி அவருடைய வழிகளைப்பின்பற்றி வாழவும் உதவுகிறது. வேத அறிவில்லாவிட்டால் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை. வேதத்தை எந்தளவுக்கு வாசித்து, அதன் போதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் அர்ப்பணிப்போடு தியானித்துப் பின்பற்றுகிறோமோ அந்தளவுக்கு நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர்வோம். இதற்கு வாசிப்பு அவசியம். வாசிக்காத கிறிஸ்தவன் கடவுளைப்பற்றிய நல்லறிவை எப்படிப் பெறுவான், கிறிஸ்தவனாக எப்படி வாழ்வான்? அதனால்தான் ‘வாசிக்காத கிறிஸ்தவன்’ என்ற பதம் மிகவும் முரண்பாடானது. இதற்கும் மேலாக கிறிஸ்தவனுக்கு வேதம் கண்ணாடி போன்றது. இதுவரை சாத்தானின் பிள்ளையாக இருந்து பாவத்தில் வாழ்ந்திருந்தவன் இப்போது கடவுளின் பிள்ளையாக வேதத்தின் மூலமாக சகலத்தையும் அறிந்து ஆராய்ந்து வாழவேண்டியவனாக இருக்கிறான். வேதமே அவனுக்கு அனைத்தைப்பற்றியும் விளக்குகிற அதிகாரப்பூர்வமான ஆயுதமாக இருக்கிறது. வேதமில்லாமல் அவனுக்கு கிறிஸ்தவ பார்வை இருக்க முடியாது. இதற்கு அவன் வாசிக்கிறவனாக இருந்து வேத அறிவில் வளர வேண்டியவனாக இருக்கிறான். பவுல் தீமோத்தேயுவுக்கு, ‘நீ கற்று நிச்சயித்தவைகளில் நிலைத்திரு’ என்று எழுதினார். வேதத்தை தீமோத்தேயு கற்று அதில் தேர்ந்தவனாயிருந்தான்.

  1. உலகத்தை அறிந்துகொள்ள வாசிப்பு அவசியம்.நாம் ஒருபோதும் உலகந்தெரியாதவர்களாக இருந்துவிடக் கூடாது. கண்கள் எப்படி நமக்கு சுற்றியிருப்பவற்றைக் காட்டி வழிநடத்துகிறதோ அதேபோல் வாசிப்பு நமக்கு உலகத்தைப் புரியவைக்கும். வாசிக்காதவர்கள் உலகந்தெரியாதவர்களாகத்தான் கடைசிவரை இருந்துவிடுவார்கள். கிணற்றுத்தவளையாக ஒன்றுந்தெரியாதவர்களாக இருந்துவிடுவார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும், அவர்களுடைய சிந்தனைகளையும், உலகத்து மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகள், கலை, அரசியல், பண்பாடு போன்ற அனைத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவும், ஆராயவும் நமக்கு வாசிப்பு தேவைப்படுகிறது. வாசிப்பில்லாவிட்டால் குறுகிய மனப்பான்மையோடு கடைசிவரை வாழ்ந்து மடிந்துவிடுவோம். ஒருமுறை ஒரு குக்கிராமத்துக்குப் போயிருந்தேன். அவர்களுக்கு எத்தனை தடவை எடுத்துச்சொல்லியும் நான் தூரதேசத்திலிருந்து வருகிறேன் என்பதை அவர்கள் கடைசிவரை நம்பவேயில்லை. அவர்கள் தங்களுடைய கிராமத்துக்கு வெளியில் அதிகம் போனதில்லை. நியூசிலாந்து என்று ஒரு நாடு இருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எதையும் தெரிந்துகொள்ளாமல் கடைசிவரை அப்படியே இருந்துவிடப் போகிறார்கள். இன்றைய இணைய யுகத்தில் உலகந்தெரியாதவர்களாக இருந்துவிடுவது பெரிய ஆபத்து.

வாசிப்பின் மூலம் உலகத்தை எடைபோட்டு இனங்கண்டுகொள்ளுகிறபோது நம்முடைய குறுகிய மனப்பான்மைகள் மடிய வாய்ப்புண்டு. குறுகிய வட்டத்தில் இருந்து நாம் நினைப்பது மட்டுமே சரி என்றிருந்த மனப்பான்மை மாறி எது சரி என்பதைக் கண்டுகொள்ள வாசிப்பு உதவும். நம்மில் ஏற்படும் சிந்தனை மாற்றமே நம்மைச் சுற்றியிருப்பவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படும். முதலில் அது நம் குடும்பத்திலேயே ஆரம்பமாகிவிடும். நான் மிகவும் பிற்போக்கு சிந்தனைகளோடு வளர்ந்த இந்துக்குடும்பத்தில் பிறந்தேன். அந்தக் குலத்தின் பிற்போக்கு சிந்தனைகளில் இருந்து அடியோடு பிரிந்து நின்று சிந்திக்க எனக்கு முறையான கல்வியும், வாசிப்பும் பேருதவி புரிந்தன. வாசிப்பு மனிதர்களைப்பற்றியும், சமுதாயத்தைப்பற்றியும், குல வழக்கங்களைப்பற்றியும், உலகத்தைப்பற்றியும் சிந்திக்க வைத்தது, ஆராய வைத்தது, பகுத்தறிந்து எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கியது. ஆழமாக ஆணிவேர்விட்டுப் பதிந்து புரையோடிப்போயிருந்த குலவழக்கங்களில் இருந்து எனக்கு வாசிப்பும், சிந்தனையும் விடுதலை தந்தது.

  1. மனிதர்களைப் புரிந்துகொள்ள வாசிப்பு அவசியம்.வாசிக்காதவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டிருப்பது மட்டுமல்ல, சிந்தனை, நடத்தை, பிற மனிதர்களை நடத்துகின்ற முறை ஆகியவற்றிலும் பின்தங்கிய நடைமுறைகளைக் கொண்டிருப்பார்கள். இங்கிதம் தெரியாதவர்களாக இருப்பார்கள். வாசிப்பு நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தி நல்லொழுக்கத்தையும், நன்னடத்தையையும் வளர்த்துக்கொள்ள உதவும். பிற மனிதர்களை சமூக, உளவியல் ரீதியில் அறிந்து புரிந்துகொள்ள வாசிப்பு உதவும். வாசிப்பில்லாதவனுக்கு பிற மனிதனைப் புரிந்துகொள்ள முடியாதது மட்டுமல்ல, அவனோடு எப்படிப் பழகுவது என்பதும் தெரியாது. சம்பாஷனை செய்வதில் அவனுக்கு குழப்பங்கள் இருக்கும். எதிலும் அறிவுப்பூர்வமான சொந்தக் கருத்துக்கள் இல்லாததால் அவனால் எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது கடினம். மனித உள்ளத்தையும், மனோபாவத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள வாசிப்பு துணை செய்கிறது.

மனித உறவுகளைப் புரிந்துகொள்ள இலக்கியம் நமக்கு உதவும். இலக்கிய பாத்திரங்கள் மனிதர்களையும், வாழ்க்கையையும் நமக்குப் போதிக்கின்றன. நாம் வாழும் சமூகத்தை அவற்றின் மூலமாக நாம் பார்க்கவும், அறிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன. நல்ல இலக்கியங்கள் நமக்கு நகர்ப்புறத்தான், கிராமத்தான், செல்வந்தன், பிச்சைக்காரன், சமுதாய விரோதிகள் என்று அத்தனை பேரையும் இனங்காட்டி அவர்களுடைய மனப்போக்கை அறிந்துகொள்ள உதவுகின்றன. இதேநேரம் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ வாசிப்பு இதற்கு ஒருபடி மேலேபோய் வேத அடிப்படையில் மனித உறவுகளை அறிந்துகொள்ளவும் மனிதனோடு உறவாடவும் துணை செய்கின்றது. பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பாகமே மனித உறவுகள் பற்றியதுதானே.

  1. வாழ்க்கையில் முன்னேற வாசிப்பு அவசியம்.வாழ்க்கை முன்னேற்றம் என்பதன் மூலம் நான் பணவசதியைப்பற்றிச் சொல்ல வரவேயில்லை. வாசிப்பில்லாமல் பணம் சம்பாதித்துவிட முடியும்; மனிதனாக வாழத்தான் முடியாது. இருதயத்திலும், நடத்தையிலும், சக மனிதர்களோடு இருக்க வேண்டிய நடைமுறை அனுபவ வாழ்க்கைபற்றிய விஷயங்களிலும் ஏற்படும் முன்னேற்றத்தைத்தான் வாழ்க்கை முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இதைத்தான் பண்பாடு என்றும் கூறுவார்கள். ஜோன் பனியன் வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்ததில்லை; ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அனுபவித்திருக்கிறார். அவருடைய மோட்ச பிரயாணம் அதை விளக்குகிறது. ஜோன் நியூட்டன் வாழ்க்கையின் கடை நிலைக்குப் போய்வந்தவராக அவருடைய சரிதம் நமக்குக் காட்டுகிறது. அங்கேயே இருந்துவிடாமல் முன்னேறிக் கடவுளுக்குப் பணிசெய்ய அவருக்கு வேதமும், வேத இலக்கிய வாசிப்பும் வகைசெய்திருக்கின்றது. புதிய ஏற்பாட்டில் பவுலை நாம் இந்தவகையில்தான் காண்கிறோம். தவறுகள் செய்யாதவர்களல்ல தாவீதும், சாலமோனும்; சிந்தனைபூர்வமான வேதவாசிப்பும், இருதய மாற்றமும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வகை செய்தன.
  2. ஆத்மீக விடுதலை அடைய வாசிப்பு அவசியம்.சமீபத்தில் ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்த அருமையான பிரசங்கியொருவரின் வாசிப்பு பற்றிய ஆக்கத்தை வாசித்தேன். அதன் தலைப்பு, ‘ஆத்துமவிருத்திக்குதவுகின்ற ஒரு நூலை எப்படி வாசிப்பது’ என்பதாகும். இதிலிருந்து அவர் ஆவிக்குரிய நூல் வாசிப்பைப்பற்றி விளக்குகிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். ஆவிக்குரிய நல்ல நூலொன்றை வாசிக்கின்றபோது நாம் செய்தித்தாள் வாசிக்கின்ற விதத்தில் அதை அணுகக்கூடாது. வேதத்தின் மூலம் பேசுகின்ற தேவன், வேத வார்த்தைகளை விளக்குகின்ற நூல்கள் மூலமும் நம்மோடு பேசுகிறவராக இருக்கிறார். அதனால் அந்நூல்களை ஜெபத்தோடும், கருத்தோடும், நிதானத்துடனும் வாசிக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தர் நம்மோடு பேசவேண்டும் என்ற இருதய தாகத்தோடு வாசிக்க வேண்டும். வாசித்தவற்றைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். நல்ல ஆவிக்குரிய நூல்கள் மூலம் கர்த்தர் பலரோடு பேசியிருக்கிறார்; ஆத்தும விடுதலையைத் தந்திருக்கிறார். ஜோன் பனியனுடைய வாழ்க்கையிலும் ஒரு நூல் அந்தவகையில் அவருக்கு ஆத்தும விடுதலைக்கான வழியைக் காட்டியிருக்கிறது. நம் முன்னோர்களில் பலர் இதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றனர். ஆகவே, நல்ல கிறிஸ்தவ நூல்களை உலகத்து நூல்களைப் போல அணுகாமல் அவற்றின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றவிதத்தில் இருதயத்தைப் பக்குவப்படுத்தி ஜெபத்தோடு வாசியுங்கள். ஆத்மீக விடுதலையைத் தேடி வாசியுங்கள்.
  3. ஆத்மீக வளர்ச்சிக்கு வாசிப்பு அவசியம்.வேத வாசிப்பு எந்தளவுக்கு ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமோ அந்தளவுக்கு நல்ல ஆத்மீக நூல்களும் நமக்கு அவசியம். அருமையான கிறிஸ்தவ இலக்கியங்கள் அதிகமாக உருவாயிருந்த காலங்களில் எல்லாம் ஆத்மீக வளர்ச்சியுள்ளதாக கிறிஸ்தவ திருச்சபையும், கிறிஸ்தவர்களும் இருந்திருப்பதைக் கிறிஸ்தவ வரலாறு நமக்குக் காட்டுகிறது. கிறிஸ்தவ இலக்கியங்களை வாசிக்காதவர்கள் தங்களுடைய விசுவாசத்தைப்பற்றிய அதிக ஞானமில்லாதவர்களாக இருப்பார்கள். இதில் பெரிய ஆபத்து என்னவென்றால் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று ஆராய்ந்தறிந்துகொள்ளுகிற பக்குவம் இருக்காது. தங்களுக்குத் தெரிந்தது மட்டுமே சரியானது என்ற கனவுலகில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தங்களுடைய விசுவாசத்தை நிச்சயப்படுத்திக்கொண்டு அதில் நிலைத்திருப்பது அவர்களால் முடியாத காரியமாக இருக்கும். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இந்த ஆபத்து அதிகம். மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள் யார் என்று அறிந்துகொள்ள முடியாதளவுக்கு வேத ஞானமும், வேத அடிப்படையிலான கிறிஸ்தவ வளர்ச்சியும் இல்லாமல் உணர்ச்சிகளுக்கு மட்டும் அடிமையான கிறிஸ்தவம் பெருகிக் காணப்படுகிறது. இந்நிலைமை காணப்பட்ட காலங்களில் எல்லாம் கிறிஸ்தவம் மேன்மையானதாக இருந்ததில்லை.

ஆத்மீக வளர்ச்சி பெற கிறிஸ்தவன் கிறிஸ்தவ இலக்கியங்களை நாடிப்போய் வாசிக்க வேண்டும். மோட்ச பயணம் போன்ற நூல்களை பல தடவைகள் தியானத்தோடு வாசித்து வாழ்க்கையை அதற்கேற்றபடி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல ஆத்மீக நூல்களைத் தேடித்தேடி வாசித்து சிந்தித்து ஆராய்கிறபோது (வேதத்தைக் கையில் வைத்துக்கொண்டு) சரி எது, தவறு என்பது தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும். தவறான போதனைகளை வாழ்க்கையில் தவிர்த்துக்கொண்டு வேதக்கிறிஸ்தவனாக வாழக்கற்றுக்கொள்ள முடியும். ஆரோக்கியமான வாசிப்பு வாசிக்கிறவனை கர்த்தருக்கு அருகில் கொண்டுபோகும். அவனுடைய சிந்தனையில் சத்தியம் குடிகொண்டிருப்பதால் அவனால் மற்றவர்களுக்கும் அவனிருக்கும் திருச்சபைக்கும் பயனுண்டாகும். வாசிக்காத கிறிஸ்தவனால் அவனுக்கோ மற்றவர்களுக்கோ எந்தப் பயனும் இருக்க முடியாது.

  1. கிறிஸ்தவ போதனைகள் சிறப்பாக அமைய வாசிப்பு அவசியம்.திருச்சபையில் போதிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு வாசிப்பு இன்றியமையாதது. வேத சத்தியங்களைப பகுத்துப்பார்த்து விளக்குவதற்கு அவர்களுக்கு வேதத்தைத் தவிர, அதை விளங்கிக்கொள்ளத் துணை செய்யும் உபகரணங்கள் அவசியம். வேத வியாக்கியான நூல்கள், மூலமொழிகளில் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள துணை செய்யும் நூல்கள், இறையியல் போதனைகளைத் தரும் நூல்கள், சிறந்த கிறிஸ்தவ தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் என்று அநேக நூல்களை அவர்கள் ஊழியத்தில் இருக்கும் நாள்முழுவதும் வாசிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போதனை செய்வதற்கு இந்தளவுக்கு ஒருவர் உழைத்து வாசிக்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது என்பதை அனேகர் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தளவுக்கு போதக ஊழியம் இன்று சீரற்று காணப்படுகின்றது. வாசிப்பை வாழ்க்கையில் அன்றாட வழக்காகக் கொண்டிராதவர்கள் போதக ஊழியத்தில் இருப்பார்களானால் அவர்களுக்குக் கீழிருந்து செய்தி கேட்பவர்களுக்காக நாம் வருத்தப்பட வேண்டும்.

இதுவரை பெருமளவுக்கு வாசித்திருந்திராவிட்டாலும் இனியாவது போதனை செய்வதில் கவனத்தைச் செலுத்தி தாழ்மையோடு வாசிக்கும் வழக்கத்தை வாழ்க்கையில் வளர்த்துக்கொள்வதைப் போதகர்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். பெருந்தொகையில் தமிழில் நூல்கள் இல்லாவிட்டாலும் இருக்கின்ற நல்ல நூல்களைப் பயன்படுத்திக்கொண்டால் போதகர்களாகிய உங்களுடைய போதனையின் கீழ் வருகிறவர்கள் ஆத்மீகப் பயனடைவார்கள். போதிக்கிறவர்கள் அன்றாடம் தங்களுடைய கடமைகளில் ஒன்றாக வாசிப்புக்கு இடமளிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை அதற்குக் கொடுக்க முடியாதவர்கள் ஒருநாளும் போதனையில் வளரவோ, சிறக்கவோ முடியாது. தொடர்ச்சியான, ஊக்கத்தோடு கூடிய வாசிப்புப் பழக்கம் நீண்ட காலத்துக்கு உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும், ஊழியப்பணிகளிலும் பெரும் ஆத்மீக எழுச்சியை ஏற்படுத்தும்.

  1. ஆராக்கியமான வாசிப்பு எழுத்தில் தேர்ச்சியடைய துணைபுரியும்.வார்த்தைகளைப் பயன்படுத்திக் கோர்வையாக எழுதுவது என்பது சும்மா வந்துவிடாது. வசனங்களைத் தொகுத்து சொல்லவருகின்ற கருத்துக்களைத் தெளிவாக சிந்தனைபூர்வமாக எழுதுவதற்கு சீரான வாசிப்புப் பழக்கம் உதவுகிறது. மொழிக்குரிய அணிநலன்களைத் தகுந்த இடத்தில் பயன்படுத்தி சரளமாகத் தடையின்றி நதி ஓடுவதுபோல எழுதுவதற்கு அதிகமான வாசிப்பு அவசியம். வாசிக்க வாசிக்க வாசகன் மொழியை, வார்த்தைகளை, மொழிக்குரிய அணிநலன்களைக் கற்றுக்கொள்கிறான்.

எந்தளவுக்கு ஒருவர் வாசிப்பில் தேர்ச்சியுள்ளவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவருடைய எழுத்தும் பேச்சைப்போலவே சிறப்பாக இருக்கும். என் அனுபவத்தில் நம்மினத்தில் அநேகர் சாதாரணமான ஒரு விஷயத்தைப்பற்றி எழுதுவதில்கூடத் தேர்ச்சியில்லாதவர்களாக இருப்பதை உணருகிறேன். அதற்கு முக்கிய காரணம் வாசிப்பின்மையே. எழுதுகிறவன் எப்போதுமே வாசிக்கிறவனாக இருப்பான். வாசிக்கிறவனின் எழுத்து எப்போதுமே சிந்திக்க வைப்பதாக இருக்கும்.

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.