திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2015 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்

1. வாசகர்களே!

2. இந்த இதழைப்பற்றி ஒரு வார்த்தை . . .

3. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் –

4. விசுவாசமும் இரட்சிப்பின் நிச்சயமும் – ஜே.சி. ரைல் (1816-1900) –

5. யார் மெய்யான கிறிஸ்தவன்? – ஜெரமி வோக்கர் –

6. பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது

7. அர்த்தமுள்ள தாழ்மை

8. வாசகர் கடிதம்

 

 

வாசகர்களே!

 

திருமறைத்தீப எழுத்துப்பணி மூலம் ஆண்டவர் வழிநடத்திக் கற்றுத்தருகின்ற பாடங்கள் எத்தனையோ. இதழ் வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. பலருடைய அன்போடுகூடிய வற்புறுத்தல் காரணமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அதில் எத்தனையெத்தனை பொறுப்புக்கள், சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் என்று முகங்கொடுத்த விஷயங்களுக்கெல்லாம் எல்லை இல்லை. முக்கியமாக இதழை ஒவ்வொரு தடவையும் கவனத்தோடு தயாரித்து, சரிபார்த்து அச்சிடுபவர்களுக்கு நேரத்தோடு அனுப்பிவைப்பதென்பது சாதாரணமான விஷயமல்ல. தொடர்ச்சியாக வருடாவருடம் சளிக்காமல், ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும்,  சரியானபடி இதழின் தரம் எந்தவிதத்திலும் தேய்ந்துவிடாதபடி தயாரிப்பது என்பது இலகுவான செயலா? அனுபவம் பல விஷயங்களை இதில் கற்றுத்தந்திருக்கின்றது.

கடந்த சில வருடங்களாக இந்தப்பணியில் நல்ல ஆத்துமாக்கள் பங்குகொண்டு வெவ்வேறு விதங்களில் துணைபுரிந்து வருவதால் தனியொருவனாக உழைக்க வேண்டிய பாரம் குறைந்திருக்கிறது. அவர்களுடைய துணை பெரிது. நிச்சயம் அநேகர் இந்தப்பணிக்காக ஜெபித்து வருவது எங்களுக்குத் தெரிந்ததே. உங்கள் ஜெபத்தில் தளராதீர்கள்; தொடருங்கள். மொழி தெரியாதிருந்தும் இந்தப்பணிக்காக ஊக்கத்தோடு ஜெபித்தும், உதவியும் வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகம். ஒத்த கருத்தும், ஒரே விசுவாசமும், தேவ அன்பும், ஐக்கியமும் எங்களை இணைத்து இந்தப்பணியைத் தொடரச் செய்கிறது.

இந்த இதழைத் தயாரிக்க ஆவியானவரின் வழிநடத்துதல் அற்புதமாக இருந்தது. அதுபற்றி இந்த இதழின் இன்னொரு பக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இத்தனை வருடங்களாக ஒவ்வொரு இதழில் வரவேண்டிய விஷயங்களைக் காட்டித்தந்து ஊக்கத்தோடு எழுதவைத்து, வழிநடத்தி நாடு கடந்து எங்கெங்கோ வாழுகின்ற நெஞ்சங்களுக்கெல்லாம் ஆவிக்குரிய உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கும் நம்மாண்டவரின் கிருபையும், கருணையும் பெரிது. வெளிநாட்டுப் பிரயாணங்களின்போது இதழ் தங்கள் வாழ்க்கையில் செய்து வருகின்ற ஆவிக்குரிய காரியங்களை விசுவாச நெஞ்சங்கள் விளக்குகின்றபோது, அது இதழைத் தயாரிப்பதில் ஏற்படும் அத்தனைப் பாரங்களையும் பனிபோல் அகற்றி, கர்த்தருக்கே சகல மகிமையும் என்று தொடர்ந்து ஜெபத்தோடு இந்தப் பணியில் ஈடுபட வைக்கிறது. நன்றி! – ஆசிரியர்.



இந்த இதழைப்பற்றி ஒரு வார்த்தை . . .

இந்த இதழுக்கான ஆக்கங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது முதலில் ஜே. சி. ரைலின் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பின்பு அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியலடிப்படையில் விளங்கிக்கொள்ள உதவுமுகமாக நான் ஒரு ஆக்கத்தை எழுதினேன். அதற்குக் காரணம் ரைல், ‘விசுவாசத்தைக் கொண்டிருந்தும் முழு நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் ஒருவர் பரலோகத்தை அடைந்துவிடலாம்’ என்று விளக்கியிருப்பதுதான். அது 1689 விசுவாச அறிக்கையும் (அதி. 18) அளிக்கும் போதனை. இதைப் பியூரிட்டன் பெரியவர்கள் 17ம் நூற்றாண்டில் அதிகம் விளக்கிப் போதித்திருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளில் உருவான மாற்றங்கள் பாவம் மற்றும் இரட்சிப்பு பற்றிய போதனைகளை வேறு திக்கில் கொண்டுபோய் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனைகளை இருட்டடிப்புச் செய்துவிட்டன. என்னுடைய ஆக்கம் வேதபூர்மான பியூரிட்டன் பெரியவர்கள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையிலானது. இந்த இரு ஆக்கங்களையும் விளங்கிக்கொள்ளத் துணையாக 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரம் இதில் வந்திருக்கிறது.

அத்தோடு ஜெரமி வோக்கரின், ‘யார் மெய்யான கிறிஸ்தவன்?’ என்ற ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய ‘கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதியங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற நூலின் முக்கிய பாகத்தை அடிப்படையாக வைத்து தன்னுடைய ஆக்கத்தை ஜெரமி வோக்கர் எழுதியிருக்கிறார். கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் தவறாது வாசிக்கவேண்டிய கிறிஸ்தவ இலக்கியம் (Christian classic). அது இன்றும் ஆங்கிலத்தில் அச்சில் இருந்து ஆங்கிலமொழி அறிந்த விசுவாசிகளுக்கு பயனளித்து வருகிறது. தவறான மருந்தைக் குடித்துக் கலங்கிப் போயிருக்கிற வியாதியஸ்தனுக்கு நல்ல வைத்தியமளித்தால் அவனுக்குப் புத்துயிர் ஏற்படுவதுபோல், கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் கிறிஸ்தவம் என்ற பெயரில் போலித்தனமாக பவனிவரும் மாயமானின் கையில் அகப்பட்டு ஆவிக்குரிய சிக்கலுக்குள்ளாகியிருக்கிறவர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் ஆவிக்குரிய அரிய மருந்து. அதை வாசிக்க வசதியில்லாதவர்களுக்கு ஜெரமி வோக்கரின் ஆக்கம் ஓர் அன்பளிப்பு.

ஜெரமி வோக்கரின் ஆக்கத்தில் காணப்படும் ஒரு வேதபூர்வமான இறையியல் விளக்கம் உங்கள் சிந்தனையில் குழப்பத்தை உண்டு பண்ணிவிடக்கூடாது என்பதற்காக பரிசுத்த ஆவியானவரின் கிரியையான பாவ உணர்த்துதலைப் பற்றி (Conviction of sin) விளக்கும் ஓர் ஆக்கத்தை எழுத ஆரம்பித்தேன். அது மிக அவசியமானது என்பதை எழுதி முடித்த பின்பே உணர்ந்தேன். பாவத்தை உணராமல் இரட்சிப்பை அடைய முடியாது என்றாலும் அதுவே இரட்சிப்புக்கு அடையாளமாகிவிடாது என்பதை இந்த ஆக்கம் விளக்குகிறது. ஒருவர் இரட்சிப்பை அடைவதில் பாவத்தை உணர்தலின் பங்கு என்ன என்பதை வேதரீதியில் விளக்குவதாக இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது. பலருடைய இருதயத்திலும் காணப்படும் இரட்சிப்பு பற்றிய சந்தேகங்கள் நீங்க இந்த இரு ஆக்கங்களும் உதவும் என்று நம்புகிறேன்.

மொத்தத்தில் இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் இரண்டு முக்கிய வினாக்களுக்கு விடையளிக்கின்றன.

இரட்சிப்படைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

இரட்சிப்படைந்திருக்கிறேன் என்பதை நான் எப்படி அறிந்துகொள்ளுவது?

இவை இரண்டும் தனித்துவம்கொண்ட வெவ்வேறான வினாக்கள். முதலாவது கேள்விக்குப் பதில் – பாவத்தில் இருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை இரட்சிப்புக்காக விசுவாசி என்பது. (அப்போ. 2:21). உன்னையும், உனக்குள்ளேயும் பார்த்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு இயேசுவை நோக்கிப் பார், அவருடைய சுவிசேஷத்தின்படி அவரை விசுவாசி என்பதுதான் இந்தக் கேள்விக்குப் பதில். இரண்டாவது கேள்விக்கு வித்தியாசமான பதில் அளிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில், இரட்சிப்பை அடைவதற்காக நமக்களிக்கப்பட்டிருக்கும் கிருபையின் சாதனங்களில் தங்கியிருக்கவில்லை; கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் ஆவிக்குரிய உறவை நிரூபிக்கும் சான்றுகளில் தங்கியிருக்கிறது. இதற்கு பதில், ‘நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்’ என்பதுதான். இந்த இரண்டாவது கேள்வியை அநேகர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. பொதுவாக, கிறிஸ்தவர்கள் எல்லோருமே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இதற்குப் பதிலாக  அநேகர் வேதத்தில் இருந்து சில வசனங்களை எடுத்துக்காட்டி நம்மை நம்பவைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அதுவல்ல இதற்குப் பதில். கேள்வியைப்  புரிந்துகொள்ளாததால் இந்நிலை ஏற்படுகிறது. இரண்டாவது கேள்வி, எப்படி இரட்ச்சிப்பை அடையலாம் என்பதல்ல; அது அடைந்திருக்கும் இரட்சிப்பின் நிச்சயம் பற்றியது. கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது. அதையே ஜெரமி வோக்கர் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். உண்மையில் இந்த இதழிலுள்ள ஆக்கங்கள் அனைத்துமே இந்த இரண்டு கேள்விகளுக்குத்தான் பதிலளிக்கின்றன.

இந்த இதழ் சிறிது சிறிதாக உருவாகி முழுமையடையும்போதே இதழ் முழுவதும் ஒரே சத்தியத்தை, அதோடு தொடர்புடைய பல அம்சங்களை விளக்கும் ஆக்கங்களைக் கொண்டு அமைந்திருப்பதை அவதானித்தேன். பரிசுத்த ஆவியானவரே இந்தவிதமாக வழிநடத்தி இதழ் முழுதும் இன்றைய காலகட்டத்தில் நம்மினத்துக்கு மிகவும் அவசியமான இரட்சிப்புப் பற்றிய போதனைகள் வரும்படியாகச் செய்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்; அவருக்கு நன்றி கூறினேன்.

இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்களை வாசிக்கின்றபோது புதிய  விஷயங்களை வாசிக்கிறோம் எனும் உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதில் ஆச்சரியமில்லை. பொதுவாகவே இத்தகைய போதனைகள் நம்மினத்தில் அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் ஆழமான போதனைகள் இன்றும் மறைபொருளாக நம்மினத்தில் இருந்துவருகின்றன. மேலோட்டமாக எதையும் நுனிப்புல் மேய்வதுபோல் மேய்ந்துவிட்டுப் போய்விடுகிற காரணத்தால் வேதத்தில் இரத்தினக்கற்கள் போலப் பரவலாகக் காணப்படும் அரிய அவசியமான போதனைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு பிரசங்கமேடைகள் வாக்குத்தத்த ஆசீர்வாத வசனங்களாலும், ஜெபத்தாலும் மட்டுமே நிரம்பி வழிகின்றன. பரலோகத்தை அடைவதற்கு அடிப்படைத் தேவையான மெய்ச்சுவிசேஷமும், இரட்சிப்பைப்பற்றிய போதனைகளையும்விட நமக்கு வேறென்ன தேவை?

இரட்சிப்பின் நிச்சயமாகிய போதனை பற்றிய விளக்கங்களும், மெய்க் கிறிஸ்தவத்தின் அடிப்படை அம்சங்களான சுவிசேஷம், மனந்திரும்புதல், விசுவாசம் ஆகிய கிருபைகள் பற்றிய விளக்கங்களும் உங்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய மேலும் தெளிவான வேதப்பார்வையைத் தந்து, கிறிஸ்தவ வாழ்க்கையை நீங்கள் கர்த்தரின் மகிமைக்காக நேர்மையான இருதயத்தோடும், பரிசுத்தத்தோடும், முழுநிச்சயத்தோடும் வாழத்துணைபுரியுமானால் அதைவிட மனமகிழ்ச்சி தரும் காரியம் பத்திரிகைக் குழுவினருக்குக் கிடையாது.

 

கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் –

இரட்சிப்பின் நிச்சயம் (Assurance of Salvation) என்ற வேதபோதனை பற்றி நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் எந்தளவுக்கு வேதஞானம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றிய விளக்கமான போதனைகள் பரவலாகக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். என்னுடைய போதகப் பணியில் ‘இரட்சிப்பின் நிச்சயம்’ குறித்து சந்தேகம் கொண்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘நான் உண்மையிலேயே இரட்சிப்பை அடைந்திருக்கிறேனா’ என்ற சந்தேகந்தான் அது. அந்த சந்தேகத்தோடேயே அநேக நாட்கள் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; ஆலோசனைகள் அளித்திருக்கிறேன்.


இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஞானம் கிறிஸ்தவர்களுக்கு மிக அவசியமானது. அது கிறிஸ்தவ அனுபவம். கிறிஸ்தவர் அல்லாதவர்களிடம் அதைக் காணமுடியாது. அதுபற்றி ஓர் ஆக்கத்தில் எழுதியிருக்கும் ஜொயல் பீக்கி எனும் சீர்திருத்தவாத போதகர், ‘இன்றைய தலைமுறையினரிடம் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை அதிகமாக இருப்பதல்ல பிரச்சனை; அது இருக்கிறதா என்று சந்தேகப்படும் விதத்தில் அருகிக் காணப்படுவதே பிரச்சனை’ என்று எழுதியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயமாகிய  அனுபவத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அதிகம் நாட வேண்டும் என்று கூறும் அவர், ‘அது இருக்கும்போதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர  முடியும், உயர முடியும்’ என்கிறார். ‘தங்களில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர்களே சிறுபிள்ளைகளுடைய இருதயத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்; எழுப்புதலுக்காக ஜெபிப்பார்கள்; இயேசு மத்தேயு 28ல் கொடுத்திருக்கும் கட்டளையை நிறைவேற்ற சுவிசேஷ வாஞ்சையோடும் ஊக்கத்தோடும் பாடுபடுவார்கள்; பரலோகத்தையும் தங்களுடைய வீடாக எண்ணி இவ்வுலகில் வாழ்வார்கள்’ என்றும் பீக்கி எழுதுகிறார் (Masters Journal, Spring 1994, Pgs 43-71). இந்தப் போதனை நம்மினத்தில் தெளிவாகப் போதிக்கப்படாததால் அதுபற்றி ஜே. சி. ரைல் எழுதிய ஓர் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு இந்த இதழில் வந்திருக்கிறது. அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியல் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ளுவதற்கு வசதியாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.

இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனை நம்மினத்தில் காணப்படாததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

முதலில், அந்தப் போதனை ஏனைய அடிப்படைப் போதனைகளைப் போல (பாவம், விசுவாசம், மனந்திரும்புதல், நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல்) நேரடியாக, வெளிப்படையாக வேதத்தில் காணப் படவில்லை. அதாவது அது பலபகுதிகளில் பரவலாகக் காணப்பட்டபோதும் படித்து ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டியவிதத்திலேயே காணப்படுகிறது. இறையியல் போதனைகளைத் தெளிவாக அறிந்திராதவர்களுக்கு இதுபற்றிய விளக்கமில்லாதிருப்பதில் ஆச்சரியமில்லை.

இரண்டாவதாக, சுவிசேஷ ஊழியம் வேத அடிப்படையில் அமையாமல், ஒருவன் விசுவாசிக்கிறேன் என்று சொன்னால் போதும் அதுபற்றி அவனை ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே அவன் விசுவாசிதான் என்றும், விசுவாசிக்கிறவனும் தன்னுடைய விசுவாசத்தை ஒருபோதும் எந்தவிதத்திலும் சந்தேகிக்கக்கூடாது என்றும் விளக்குகின்ற அரைகுறை சுவிசேஷ ஊழியம் பலகாலமாக நம்மினத்தில் காணப்படுவதால் ‘விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ (1 கொரி 11:28 – ‘தன்னைத்தானே சோதித்தறிந்து’) என்ற பரிசுத்த வாழ்க்கைக்கு அவசியமான வேதபோதனைக்கே இடமில்லாமல் போய் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில்  அரைகுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் கூட்டமே இன்று நம்மினத்தில்  பெருகிக் காணப்படுகிறது. இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை யொன்றிருக்கிறதே என்ற உணர்வுகூட இன்றைக்கு அநேகருக்கு இல்லை. கிறிஸ்தவம் என்ற பெயரில் காணப்படும் இத்தகைய தவறான சுவிசேஷ  ஊழியத்தை மேலைநாடுகளில் Easy believism என்று அழைப்பார்கள்.

மூன்றாவதாக, உணர்ச்சிக்கு மட்டும் இடங்கொடுத்து இறையியலைத் துவம்சம் செய்திருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவம் இன்றைக்கு நாம் ‘எதை விசுவாசிக்க வேண்டும்’ என்பதில் அக்கறை காட்டாமல், ‘எந்தளவுக்கு அதிக உணர்ச்சிவசப்படவேண்டும்’ என்பதில் மூழ்கிப்போயிருக்கும் ஒருவித கிறிஸ்தவத்தை வளர்த்துவிட்டிருக்கிறது. இந்தக் ‘கிறிஸ்தவத்தில்’ இரட்சிப்பின் நிச்சயத்துக்கு இடமில்லை. பரிசுத்தமான வாழ்க்கையின் மூலம் வரும் இரட்சிப்பின் நிச்சயத்தை அறியாமல் வெறும் உணர்ச்சிவசப்படும் நிலையை மட்டும் விசுவாசத்தின் ஆழத்துக்கு அறிகுறியாக எண்ணும் மாயத்தோற்றத்தை அது உருவாக்கிவிட்டிருக்கிறது.

நான்காவதாக, விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றே என்ற தவறான எண்ணம் பொதுவாகப் பரவலாக இருந்து இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனைகளுக்கு நம்மினத்தில் இடமில்லாமல் செய்திருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்தபோது இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், கத்தோலிக்க மதம் ஒரு விசுவாசி எந்தவிதத்திலும் இரட்சிப்பின் நிச்சயத்தை வாழ்க்கையில் கொண்டிருப்பது ஆபத்தானது என்று அதை நிராகரித்தது. அத்தகைய நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர் வீணான நம்பிக்கையைக் கொண்டிருந்து கிறிஸ்தவ வாழ்க்கையை உலகரீதியில் வாழ்ந்துவிடக்கூடும் என்று அது போதித்தது. அத்தோடு கிறிஸ்தவர்களில் மிகச் சிறந்த சிலர் மட்டுமே அத்தகைய நிச்சயத்தை அனுபவிக்க முடியும் என்றும், அதை அவர்கள் கடவுளிடமிருந்து கிடைக்கும் விசேஷமானதொரு வெளிப்படுத்தல் மூலம் மட்டுமே அடையலாம் என்றும் விளக்கியது. கத்தோலிக்க மதத்தின் இத்தகைய தவறான விளக்கங்களால் சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின் போன்றோர் இரட்சிப்பின் நிச்சயத்தைக்குறித்து வேதபூர்வமான போதனைகளை, வேதத்தை ஆராய்ந்து அளிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். இதுபற்றிய கல்வினின் போதனைகளை கத்தோலிக்க மதப்போதனைகளின் பின்புலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.

தவறான போதனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும், வேதரீதியிலான போதனைகளை அளிக்கவுமே பதினேழாம் நூற்றாண்டில் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் எழுத்தில் வடிக்கப்பட்டு திருச்சபைகளுக்கு உதவின. 1689 விசுவாச அறிக்கையில் அதன் 18ம் அதிகாரம் இரட்சிப்பின் நிச்சயத்தை நான்கு பத்திகளில் அருமையாக விளக்குகிறது. அதன் போதனையைப் புரிந்துகொள்ளுவதற்கு அதற்குப் பின்புலமாக இருந்த வரலாற்று சம்பவங்களையும், வரலாற்றில் உருவாகியிருந்த இறையியல் போதனைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். அது பற்றி இந்த ஆக்கத்தில் சுருக்கமாக விளக்கப் போகிறேன்.

இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனையை விளங்கிக்கொள்ள நாம் விசுவாசம் என்றால் என்ன? இரட்சிப்பின் நிச்சயம் என்றால் என்ன? என்பதையும், அவை இரண்டிற்கும் இடையிலிருக்கும் தொடர்பையும் முறையாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். நம்மினத்தில் அநேகருக்கு விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் உறவோ, வேறுபாடோ சரியாகத் தெரியாமல் இருக்கிறது. விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றுதான் என்றளவில் மேலெழுந்தவாரியாக இவற்றைப் பற்றிய எண்ணங்களையே பெரும்பாலானோர் கொண்டிருக்கிறார்கள்.

(1) முதலில், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும், வளரக்கூடிய இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றல்ல. ஒன்றிற்கான இன்னொரு பெயர் அல்ல மற்றது. இரண்டும் வெவ்வேறானவை; தனித்துவமானவை. இதை சீர்திருத்த விசுவாச இறையியலறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதுதான் வேத உண்மையும்கூட. இரட்சிக்கும் விசுவாசமாகிய கிருபையில் கிறிஸ்துவில் இருக்கவேண்டிய அடிப்படை ஆரம்ப நம்பிக்கையானது உள்ளடங்கியிருந்தபோதும் ஒருவரது தனிப்பட்ட இரட்சிப்பின் நிச்சயம் அந்த விசுவாசத்தின் தன்மையில் அடங்கியிருக்கவில்லை. விசுவாசமிருந்து இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருக்கலாம்.

(2) அடுத்ததாக, விசுவாசத்திற்கும் இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவிருக்கிறது. ஜோன் கல்வினில் இருந்து எல்லா சீர்திருத்த அறிஞர்களும் இதைப்போதித்து வந்திருக்கிறார்கள். விசுவாசத்தை  அடைகின்ற ஒருவர் அது தருகின்ற அத்தனை ஆவிக்குரிய கிருபையின் ஆசீர்வாதங்களுக்கும், ஒன்று தவறாமல், சொந்தக்காரராகிறார். அவற்றில்  ஒன்று இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசத்தின் கனியே இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசமில்லாமல் இரட்சிப்பின் நிச்சயம் இருக்க வழியில்லை. விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு அதில் இருந்து வளருவதே இரட்சிப்பின் நிச்சயம் என்று பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘விசுவாசம், காலம் செல்லச்செல்லத் தானே வளர்ந்து உயர்ந்து இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்.’

(3) கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைந்த உடனேயே ஒரு புது விசுவாசிக்கு இரட்சிப்பின் நிச்சயம் உயர்ந்தளவில் இருந்துவிடலாம். அத்தகைய அனுபவத்தை பிலிப்பி பட்டணத்து சிறை அதிகாரி அடைந்ததால்தான் அவனால் இரட்சிப்பை அடைந்தவுடனேயே விசுவாசமுள்ளவனாகி ‘மனமகிழ்ச்சியோடு’ இருக்க முடிந்தது (அப்போ 16:34). விசுவாசமே அந்தச் சிறை அதிகாரி இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய வழிகோலியது. இருந்தபோதும் விசுவாசத்தை அடைந்த எல்லோருக்குமே ஆரம்பத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உடனடியாக இருந்துவிடாது; அப்படி இருந்துவிடவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஏனெனில் இயேசுவில் வைக்கும் விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு அவசியமானது; இரட்சிப்பின் நிச்சயமல்ல. வேதம் இரட்சிப்பிற்கு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. விசுவாசம் இரட்சிப்பைத் தருகிறது; இரட்சிப்பின் நிச்சயம் நம்மை விசுவாச வாழ்க்கையில் வளரவும் உயரவும் வைக்கிறது. இரண்டும் ஒரேநேரத்தில் ஒரு விசுவாசியிடம் இருந்துவிடாது. இதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் மூன்றாவது பத்தியில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ரைலும் தன் ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

(4) விசுவாசத்தைப் பற்றியும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றியும் இதுவரை சொன்னவைகள் மிக முக்கியமான உண்மைகள். இருந்தபோதும் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்கள் இரட்சிப்பின் நிச்சயம் பற்றி மேலும் தெளிவான விளக்கங்களை அளித்தார்கள். அந்த விளக்கங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள உதவுகின்றன. பியூரிட்டன் பெரியவர்களின் விளக்கங்கள் கல்வினின் போதனைகளை ஒத்திருந்தபோதும் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர்கள் இன்னொரு கோணத்தில் பார்த்து விளக்கமளித்திருக்கிறார்கள். அதில்  இருபகுதிகள் காணப்படுவதாக விளக்கினார்கள். இப்படி விளக்கமளிப்பதன் மூலம் அதன் மெய்த்தன்மையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.

இதை நாம் 1689 விசுவாச அறிக்கையின் 3ம் பத்தியில் கவனிக்கிறோம். அந்தப் பத்தி பின்வருமாறு ஆரம்பிக்கின்றது, ‘இத்தவறிழையாத (நிச்சயமான,  உறுதிப்படுத்தப்பட்ட, விழுந்துவிடாத) இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல’ என்று அது விளக்குகிறது. விசுவாச அறிக்கையின் இந்த விளக்கத்தை நாம் குழப்பமில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இரட்சிப்பு கிடைக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்துக்கு அத்திவாரம் போடப்படுவதில்லை என்பதல்ல இதன் விளக்கம். ஒருவர் இரட்சிப்பை அடைகின்றபோது அந்தவேளையில் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்றே பியூரிட்டன் பெரியவர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள். விசுவாசம் இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய உதவுகின்றபோதும் நடைமுறையில் அதை அனுபவபூர்வமாக ஒரு விசுவாசி உணராமல் இருந்துவிடலாம் என்றுதான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் அவர்கள் இந்தப் பத்தியில் தந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் நிகழும் சோதனைகளாலும், கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதாலும், உலக நேசத்தாலும், பாவத்தைச் செய்துவிடுவதாலும், வேறு பல அம்சங்களாலும் ஒருவர் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமலோ, அதைக் குறைந்தளவிலோ கொண்டிருக்கலாம் என்று அவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

பியூரிட்டன் பெரியவர்களின் இத்தகைய விளக்கத்துக்குக்கான காரணத்தைப் பார்ப்போம். முதலில் 1689 விசுவாச அறிக்கையின் பதினெட்டாம் அதிகாரத்தின் மூன்றாம் பத்தியில் அவர்கள் இந்த விஷயத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனையை சிதறடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பின் நிச்சயத்தை விசுவாசிகள் சிறப்பான வெளிப்பாடுகள் எதுவுமின்றி சாதாரண கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுவதன் மூலம் அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு இரட்சிப்பின் நிச்சயத்தை ஒவ்வொரு விசுவாசியும் அவசியம் நாடி வாழவேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அதை நாடுவதற்கு கிறிஸ்தவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்தபோதும் பியூரிட்டன் பெரியவர்கள், ஒருவர் விசுவாசத்தை அடைந்தும் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவத்தில் உணராது இருந்துவிடலாம் என்று சொன்னதற்கு இறையியல் காரணமுண்டு.

அவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை இரண்டுவிதமாகப் பார்க்கிறார்கள் (objective and subjective). முதலாவதாக, அதை அடிப்படையிலேயே கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்புடைய கிருபையாகப் பார்க்கிறார்கள். இரண்டாவதாக, அது இருப்பதை விசுவாசி அனுபவத்தில் உள்ளரங்கமாக உணராமல் (conscious presence of assurance) இருந்துவிடலாம் என்கிறார்கள். முதலாவது, விசுவாசி கர்த்தரை அறிந்திருப்பதைப் பற்றிய உண்மை; இரண்டாவது அவன் தான் கர்த்தரால் அறியப்பட்டிருப்பதை உள்ளரங்கமாக உணர்ந்திருப்பதைப் பற்றிய உண்மை. முதலாவதை அறியும் தகுதியை ஒரு விசுவாசி நிச்சயம் கொண்டிருப்பார்; இருந்தும் இரண்டாவதை அவர் நடைமுறையில் உணராமல் இருந்துவிடலாம். விசுவாசத்தோடு இணைந்திருக்கும் இரட்சிப்பின் கிருபையை உணரக்கூடிய நிலையில் விசுவாசி இருந்தபோதும் வாழ்க்கையில் அதை உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்பதே பியூரிட்டன் பெரியவர்களின் போதனை. ஒருவர் அதை உணராது இருந்துவிடுவதால் அவர் கிறிஸ்தவரல்ல என்று ஆகிவிடாது. அதை அதிகளவில் உணர்ந்து வாழ முயற்சிசெய்வது அவருடைய கடமை. ‘சகோதரரே, உங்கள் அன்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; . . .’ (2 பேதுரு 1:10) என்று பேதுரு எழுதியிருப்பது இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்படி நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்தவன் அதை உணராதிருப்பதற்குக் காரணம், ஊக்கத்தோடு கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்தி கர்த்தரோடு ஐக்கியத்தில் ஆழமான உறவில்லாமல் இருந்துவிடுவதாலேயே. இந்த உண்மையைப் பல பகுதிகளில் வேதம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு புதுக் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ விசுவாசம் பற்றிய ஞானம் அதிகம் இல்லாதிருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உணராதிருந்துவிடலாம். ஒரு விசுவாசிக்கு கர்த்தரோடிருக்க வேண்டிய ஐக்கியம் தளர்ந்திருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உயர்ந்தளவில் கொண்டிருக்க முடியாதுதான். அதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். இதையே ஜே. சி. ரைலும் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். தான் பாவத்தைச் செய்து அதற்காக வருந்தி ஜெபித்தபோது விசுவாசியான தாவீது தன்னில் பரிசுத்த ஆவியே இல்லாததுபோல் உணர்ந்து ஜெபிக்கவில்லையா (சங் 51). சங்கீதத்தின் பல பகுதிகளில் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்த சங்கீதக்காரனின் குரலைக் கேட்கிறோம் (38; 73; 88). அதற்குக் காரணம் அந்த நிலையில் அவனில்  இரட்சிப்பின் நிச்சயம் (assurance) மிகத்தாழ்ந்த நிலையில் இருந்ததுதான். அதேநேரம் பவுல், ‘ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை, ஏனென்றால், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்’ (2 தீமோ 1:12) என்று ஆணித்தரமாக உறுதியாகச் சொல்லவில்லையா? அதற்குக் காரணம் அவ்வேளையில் பவுலில் இரட்சிப்பின் நிச்சயம் உறுதியாக உயர்ந்த நிலையில் இருந்ததுதான். இந்த உள்ளரங்கமான உணர்வுப்பூர்வமான அனுபவம் கிறிஸ்தவர்களில் அவர்கள் இருக்கின்ற ஆவிக்குரிய நிலைக்குத்தக்கதாக வாழ்நாளில் மாறி மாறிக் காணப்படும் (1689 வி. அ, 18:4).

இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அனுபவத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊக்குவிப்பதற்காகத்தான் யோவான் தன்னுடைய நிருபங்களை அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதினார்.  ‘உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’ என்று யோவான் (1 யோவான் 1:4) எழுதுகிறார். ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்’ (யோபு 19:25) என்று யோபு சொன்னது வெறும் அறிவு சார்ந்த உண்மையல்ல; அது தொல்லைகளின் மத்தியில் அவருடைய இரட்சிப்பின் நிச்சயம் எந்தளவுக்கு உயர்வான நிலையில் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. நீங்கள் ‘சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கின்ற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து’ (1 பேதுரு 1:6-9) காணப்படுகிறீர்கள் என்று பேதுரு சொல்லுவது இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிப்பவர்களைப் பார்த்துத்தான். அத்தகைய இரட்சிப்பின் நிச்சயத்தை ஊக்கத்தோடு நாட முயலும்படியே எபிரெயருக்கு எழுதியவரும் சொல்லுகிறார், ‘. . . தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும் . . . , சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் (பரிசுத்தஸ்தலத்தில்) சேரக்கடவோம் (எபிரெயர் 10:19-22).

கிறிஸ்தவ வாழ்க்கையை உருவகமாக எழுத்தில் வடித்து விளக்குகின்ற ஜோன் பனியன் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றித் தன்னுடைய மோட்சப் பயணம் நூலில் விளக்கியிருக்கிறார். மோட்ச வாயிலை அடைவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு கிறிஸ்தியானுக்கு இரட்சிப்பின் நிச்சயம் இருக்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் பல குழப்பங்கள் இருந்தன (193ம் பக்கம்). நன்னம்பிக்கை அவனுக்கு வேத வார்த்தைகளை நினைவூட்டி தைரியப்படுத்துகிறான். சோதனைகள் வந்திருக்கின்றன என்பதால் ஆண்டவர் உன்னைக் கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல என்று சொல்லி ஆறுதல் கூறுகிறான். அதற்குப் பிறகு கிறிஸ்தியானுக்கு மனத்துணிவு வருகிறது. இருவரும் மோட்ச வாயிலுக்குள் நுழைகிறார்கள். பியூரிட்டன் பாப்திஸ்தாக இருந்த பனியன் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய இந்த உண்மையைத்தான் விளக்கியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்தபோதும் கிறிஸ்தியான் மெய்விசுவாசிதான் அவனுடைய விசுவாசமே அவனைக் கரைசேர்த்தது. கிறிஸ்துவில் வைக்கும் உறுதியான விசுவாசமே ஒருவரை பரலோகத்துக்கு கொண்டு சேர்க்கிறது. அந்த விசுவாசம் கிறிஸ்தியானுக்கு சந்தேகமில்லாமல் இருந்தது.

விசுவாசமிருந்தும் ஒருவர் இரட்சிப்பின் பூரண நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் பரலோகத்தை அடைந்துவிடலாம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதையும் நாம் குழப்பில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டும். பரலோகம் அடைய விசுவாசமே தேவை. அந்த விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை எப்போதுமே பெரியளவில் கொண்டிருப்பதில்லை. அது சில சூழ்நிலைகளுக்கும், அவர்களுடைய பரிசுத்த வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றவகையில் தாழ்ந்தும், உயர்ந்தும் காணப்படும். கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இரட்சிப்புபற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் எழாமலிருக்காது. அத்தகைய நிலை ஏற்படுவது கிறிஸ்தவ வாழ்க்கையில் சகஜம். பாவ சரீரத்தை சுமந்து இந்த உலகில் வாழ்கிறவரை இங்கு பூரண விசுவாசத்துக்கும், பூரண இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடமில்லை (ரோமர் 7). அதனால் விசுவாசம் உறுதியாக இருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் மரணத்தருவாயில் ஒருவருக்கு முழுதாக இல்லாமல் இருந்துவிடலாம். இரட்சிப்பின் நிச்சயத்தை நாடி வாழ்ந்து வளர வேண்டியது விசுவாசியின் கடமை. விசுவாசி அதை வாழ்க்கையில் பல நிலைகளில் கொண்டிருப்பது அவனுடைய விசுவாசத்தோடு சம்பந்தப்பட்ட அனுபவமே. இதை ரைல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

இரட்சிப்பின் நிச்சயம் ஒருவரில் உயர்ந்தளவில் இருக்கும்போது எப்படி இருக்கும் என்று சில ஆவிக்குரிய பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். பியூரிட்டன் பெரியவரான தொமஸ் வொட்சன் சொல்லுகிறார், ‘அது ஒரு மனிதன் பரலோகத்தை அடையுமுன்பே அதை இவ்வுலகில் அடையச் செய்கிறது.’ இன்னொரு பெரியவரான தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘கிருபையின் ஸ்தானம் ஒருவருக்கு பரலோகத்தை அடையும் தகுதியை அளிக்கிறது; அந்த நிலையில் அம்மனிதன் தன்னை உணரும்போதும் அவன் பரலோகத்தை அடையும் தகுதியை மட்டுமல்லாமல் பரலோகத்தை இங்கேயே கொண்டிருக்கிறான்.’

முடிவாக . . .

இன்று இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய தெளிவான போதனைகள் நம்மினத்தில் மிகவும் அவசியம். கிறிஸ்துவை விசுவாசித்து வாழுகின்ற வாழ்க்கையைப் பற்றிய தவறான போதனைகள் நம்மினத்தை சிலந்திவலைபோல் சுற்றி ஆக்கிரமித்திருக்கின்றன. கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளையே போதகர்கள் அறியாதவர்களாக இருந்துவருகிறார்கள். பரிசுத்தமாக்குதலாகிய வேத சத்தியத்தைப் பற்றி அவர்களுக்குப் பெரிதும் தெரியாதிருக்கிறது. இத்தகைய இறையியல் தெளிவற்ற குழப்பநிலை நடைமுறையில் கிறிஸ்தவத்தைத் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. போலித்தனமான உணர்ச்சிவசப்படும் செயல்களைச் செய்து அவற்றை ஆவிக்குரிய அனுபவமாகத் தவறாக எண்ணி மெய்யான ஆவிக்குரிய வல்லமையில்லாது கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் நம்மினத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறவர்களுக்கு இன்று  பரிசுத்தமாக்குதல், பற்றியும் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனையும் அவசியம். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும் நாடாமல் உலகத்தைச் சார்ந்து அவர்கள்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் ஆவிக்குரிய அனுபவமே இல்லாது இருந்து அது இருப்பதாகத் தவறாக எண்ணி வாழ்ந்து வரலாம். அந்த ஆபத்தையும் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் முதல் பத்தி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மெய்விசுவாசிகள் ஆவிக்குரிய அனுபவத்தில் இரட்சிப்பின் நிச்சயத்தின் உயர்ந்த நிலையை இந்த உலகத்தில் அடைய முடியும் என்று வேதமும், 1689 விசுவாச அறிக்கையும் சொல்லுகின்றன. அது நிரந்தரமாக ஒரே நிலையில் எப்போதும் இருந்துவிடாது. அதை உணராது ஒரு கிறிஸ்தவன் இருந்துவிடலாம் என்று ரைல் சுட்டிக்காட்டுகிறார். அந்தவொரு காரணத்துக்காகவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பின் நிச்சயத்தை முழுதும் அடைந்து வாழ வேண்டும் என்ற வாஞ்சையோடு ஆவிக்குரிய சாதனங்களனைத்தையும் விசுவாசத்தோடும், கருத்தோடும், ஜெபத்தோடும் பயன்படுத்த வேண்டும். பரிசுத்தவானின் விடாமுயற்சி இதற்கு அவசியம். பரிசுத்தவான்களின் விடாமுயற்சியில்லாமல் (1689:17) இரட்சிப்பின் நிச்சயத்தை (1689:18) நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான் இந்த இரண்டும் அடுத்தடுத்து விசுவாச அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இரட்சிப்பின் நிச்சயம் ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் அனுபவம். அவரில்லாமல் அது கிடைக்காது. கிறிஸ்தவன் அதை அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளில் ஆவியின் துணையோடுதான் ஈடுபடுகிறான். இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ்வதைவிட ஒரு கிறிஸ்தவனுக்கு வேறு என்ன தேவை? ஆனால், அதை அறியாது நம்மினத்துக் கிறிஸ்தவம் மாயமானைத் தேடுவதுபோல் எதையெல்லாமோ நாடி ஓடித் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறதே. இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ முயலுங்கள். அதைத்தான் கர்த்தரும் எதிர்பார்க்கிறார். ரைலின் ஆக்கம் உங்களுக்கு உதவட்டும்.

வாசகர்களின் நலன் கருதி விசுவாச அறிக்கையிலுள்ள (18 வது அதிகாரம்) “கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும்” என்ற அதிகாரத்தின் பகுதியை அப்படியே இங்குத் தந்திருக்கிறேன்.

1689 விசுவாச அறிக்கை – கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் (The Assurance of Grace and Salvation)

தாம் இரட்சிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுளின் தயவு தம்மோடு இருப்பதாகவும் தற்காலிக விசுவாசிகளும், மறுபிறப்பு அடையாதவர்களும் தவறான நம்பிக்கையையும், மாம்சத்திற்குரிய ஊக்கத்தையும் கொண்டிருந்தாலும் அத்தகைய நம்பிக்கைகள் இறுதியில் வீண்போகும். இருப்பினும், இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து, உண்மையுடன் அவரில் அன்பு செலுத்தி, நல்மனச்சாட்சியுடன் அவருக்காக வாழ்பவர்களின் இவ்வுலக வாழ்வில் தாம் கிருபையின் ஸ்தானத்தில் இருக்கும் நிச்சயத்தை அடைவர். அவர்கள் தேவ மகிமையின் நம்பிக்கையிலும் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய நம்பிக்கை அவர்களை ஒருபோதும் அவமானத்திற்குள்ளாக்காது.

யோபு 8:13,14; மத்தேயு 7:22,23; ரோமர் 5:2,5; 1 யோவான் 2:3; 3:14,18,19,21,24; 5:13.

இரட்சிப்பின் நிச்சயமானது ஊகத்திற்கிடமானதோ அல்லது தவறும் இயல்புடைய நம்பிக்கையில் அமைந்ததோ அல்ல. ஆனால், அது நற்செய்தியில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் இரத்தத்தையும், நீதியையும் ஆதாரமாகக் கொண்ட தவறிழைக்காத விசுவாசத்தின் நிச்சயமாக இருக்கிறது. (இது கிறிஸ்துவின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டது). அத்தோடு, இது பரிசுத்த ஆவியின் உள்ளான கிருபையின் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டது. ஏனெனில், அவ்வித கிருபைகளுக்கே கடவுள் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். மேலும் இது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோமென்று நம்முடைய ஆவியினூடாக சாட்சியளிப்பதோடு, இரட்சிப்பின் நிச்சயமான அனுபவத்தின் மூலம் நமது இருதயத்தைத் தாழ்மையுடனும் பரிசுத்தமாகவும் வைத்திருக்கும் புத்திர சுவிகார ஆவியின் சாட்சியையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

ரோமர் 8:15,16; எபிரெயர் 6:11,17-19; 2 பேதுரு 1:4,5,10,11; 1 யோவான் 3:1-3

இத்தவறிழையாத இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும். அற்புதமான வெளிப்படுத்தல் எதன் மூலமாகவும் அல்லாமல் கடவுளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஆவியின் மூலமாக அறிந்து கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிச்சயத்தை விசுவாசி அடைய முடியும். ஆகவே, தனது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக்கொள்ளுவதில் முழுமுயற்சி எடுப்பது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாக இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியின் மேலான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதோடு, கடவுளிடம் மேலான அன்பையும் நன்றியறிதலையும் கொண்டு கடமையுணர்வுடைய தமது கீழ்ப்படிவில் உற்சாகமும் அதிக வல்லமையும் பெறுகிறார்கள். மேற்கூறப்பட்டவையே இரட்சிப்பின் நிச்சயத்துவத்தினால் ஏற்படுபவையாக இருப்பதோடு மனிதர்கள் இழிவான வாழ்க்கை வாழ்வதற்கு இந்நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமாட்டாது என்பதற்கும் உறுதியான சான்றுகளாக உள்ளன.

சங்கீதம் 77:1-12; சங்கீதம் 88; 119:32; ஏசாயா 50:10; ரோமர் 5:1,2,5; 6:1,2; 14:17; தீத்து 2:11,12,14; எபிரெயர் 6:11,12; 1 யோவான் 4:13.

மெய்யான விசுவாசிகள் தமது இரட்சிப்பின் நிச்சயம் சில வேளைகளில் உயர்ந்தும், சில வேளைகளில் தாழ்ந்தும் இருப்பதை உணருவார்கள். இது அதனைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததனாலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட ஒரு பாவத்தைச் செய்து தங்கள் மனச்சாட்சியைக் காயப்படுத்தி ஆவியைத் துக்கப்படுத்தியதாலோ அல்லது திடீரென்றோ தீவிரமாகவோ ஏற்பட்ட சோதனையாலோ அல்லது கடவுள் தமது முகதரிசனத்தை மீளப்பெற்றுக்கொண்டு தம்மில் பயமுள்ளவர்களின் மீது இருள்படியச் செய்வதாலோ ஏற்படலாம். எது நடந்த போதிலும் கடவுளால் பிறந்த புதிய சுபாவம், விசுவாச வாழ்க்கை, கிறிஸ்துவின் மீதும் சக விசுவாசிகளின் மீதும் உள்ள அன்பு, இதய சுத்தி மற்றும் கடமையுணர்வு ஆகிய இன்றியமையாத காரியங்கள் நிலைத்திருக்கும். இவற்றின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செய்யும் செயலின் மூலமாகவும் அவர்களது இரட்சிப்பின் நிச்சயம் ஏற்ற காலத்தில் புதுப்பிக்கப்படும். அதற்கிடைப்பட்ட காலத்தில் இந்தக் காரியங்களின் செல்வாக்குகள் அவர்கள் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் அவர்களைப் பாதுகாக்கின்றது.

சங்கீதம் 30:7; 31:22; 45:5,11; 51:8,12,14; 77:7,8; 116:11; உன்னதப்பாட்டு 5:2,3,6; புலம்பல் 3:26-31; லூக்கா 22:32; 1 யோவான் 3:9.

 

 

விசுவாசமும் இரட்சிப்பின் நிச்சயமும் – ஜே.சி. ரைல் (1816-1900) –

உங்கள் ஆத்துமாவைப் பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல், அசட்டையாக இருப்பீர்களானால் இந்த ஆக்கத்தில் கொடுக்கப்படும் போதனையை நீங்கள் சட்டை செய்ய மாட்டீர்கள். விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் உங்களுக்கு வெறும் வார்த்தைகளாக மட்டுமே தென்படும். வாழ்க்கையில் இவைகள் உங்களுக்கு அர்த்தமுள்ளவைகளாக இருக்காது. கலிலியோவைப்போல இவைகளைப்பற்றி எந்தக் கவலையும் கொண்டிருக்க மாட்டீர்கள். என்ன பரிதாபமான நிலையில் இருக்கிறது உங்களுடைய ஆத்துமா! உங்களை எண்ணி நான் கவலையடைகிறேன்.

வாசகர்களே, நீங்கள் பரலோகம் போக வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புவீர்களானால், அதை வேதப்பூர்வமான வழிகளில் தேடுவீர்களானால், இந்த ஆக்கத்திலுள்ள போதனைக்கு வேதத்தில் எவ்வளவு ஆழமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுகொள்வீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள்!  உங்களுக்குண்டாகும் கிறிஸ்தவ ஆறுதலும், மனசாட்சிரீதியாக உங்களுக்குண்டாகும் சமாதானமும், நான் இந்த ஆக்கத்தில் விளக்குகிற விஷயத்தைக் குறித்த உங்களுடைய ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பொறுத்தே அமையும்.

இயேசுவை விசுவாசிப்பதும், இயேசுவினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்ற முழுமையான நிச்சயத்தைக் கொண்டிருப்பதும் இரண்டு தனித்துவமான போதனைகள் என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு மனிதன் கிறிஸ்துவில் இரட்சிக்கும் விசுவாசத்தைக் கொண்டிருந்தும், தன் வாழ்நாளில் ஒருபோதும் அதைப்பற்றிய நிச்சயத்தினால் உண்டாகும் நம்பிக்கையைப் பவுல் அனுபவித்ததைப்போல அனுபவிக்காமல் இருந்துவிடலாம். விசுவாசத்தை நம்மில் கொண்டிருந்து அதனால் உண்டாகும், கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மெல்லிய நம்பிக்கை ஒருரகம்; விசுவாசத்தில் ஆனந்தத்தையும் சமாதானத்தையும் கொண்டிருந்து, நம்பிக்கையில் மேலதிகமாக உயர்வது என்பது இன்னொரு ரகம். கடவுளின் பிள்ளைகள் அனைவருமே விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் எல்லோரும் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.

இந்த விஷயத்தைப்பற்றி சில சிறந்த மனிதர்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். நான் இங்குக் குறிப்பிட்டுள்ள இந்த வேறுபாட்டை அநேக சிறந்த தேவஊழியர்கள் கூட அனுமதிப்பதில்லை என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும் எந்த மனிதனும் இந்த விஷயத்தில் எனக்குத் தலைவனாக நான் பார்ப்பதில்லை. காயப்பட்டிருக்கும் ஒரு மனச்சாட்சிக்கு கொஞ்சமாவது மருந்திடும் விஷயம்பற்றி எல்லோரையும்போல எனக்கும் பயமிருக்கிறது. இருந்தபோதும் நான் கொடுத்திருக்கும் விளக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் கொடுப்பது சம்மதமில்லாததொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் போய் முடியும். அதுமட்டுமல்லாமல் அத்தகைய விளக்கங்கள் ஓர் ஆத்துமா நித்திய ஜீவனின் வாசலை அடைவதை நீண்டகாலத்துக்கு தள்ளிவைத்து விடும்.

இரட்சிப்பின் நிச்சயத்தை முழுமையாக அனுபவித்திருக்காவிட்டால் கிறிஸ்துவோடு உனக்கு எந்தத்தொடர்பும் இருக்க முடியாது என்று ஒரு ஆத்துமாவை எண்ணவைக்கவோ, கடவுள் துன்பத்தை ஏற்படுத்தியிருக்காத ஒரு நொருங்குண்ட இருதயத்தை வருத்தப்படவைக்கவோ, துவண்டுபோயிருக்கிற கடவுளின் பிள்ளையை தளர்ந்துபோக வைக்கவோ நான் விரும்பமாட்டேன்.

ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடிவருவதற்கு கிருபையின் மூலம் போதுமான அளவுக்கு விசுவாசத்தைக் கொண்டிருக்கவும், அவரில் மெய்யாகவே தங்கியிருக்கவும், மெய்யாகவே நம்பிக்கை வைக்கவும், அவருடைய பிள்ளையாயிருக்கவும், இரட்சிப்பை அடையவும் கூடியவனாக இருக்கிறான் என்பதை சொல்லுவதற்கு நான் கொஞ்சவும் தயங்கமாட்டேன். இருந்தாலும் உயிர் துறக்கும் வரையிலும் அவன் தன் ஆத்துமாவில் சந்தேகங்களையும், பயத்தையும், கவலைகளையும் கொண்டிராமல் இருக்க மாட்டான்.

இதைப்பற்றி ஒரு பழைய எழுத்தாளர் சொல்லுகிறார், “ஒரு கடிதம் எழுதப்பட்டும் முத்திரையிடப்படாமல் இருக்கலாம். அதுபோல, ஒருவருடைய இருதயத்தில் கிருபையின் கிரியை காணப்படலாம்; ஆனால், பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பின் நிச்சயமாகிய முத்திரையை இன்னும் பதிக்காமல் இருந்துவிடலாம்.”

ஒரு குழந்தை பெரும் சொத்துக்கு வாரிசாகப் பிறந்தும், தனக்கிருக்கின்ற செல்வத்தைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாமல், குழந்தைத்தனமாகவே வாழ்ந்து, குழந்தைத்தனமாகவே மரித்து, ஒருபோதும் தன்னுடைய நிலைமையின் அருமை பெருமைகளை உணராமலேயே இருந்துவிடலாம்.

அதுபோலவே, ஒரு மனிதன் கிறிஸ்துவின் குடும்பத்தில் குழந்தையாக இருந்து, குழந்தையைப் போல் சிந்தித்து, குழந்தையைப்போல் பேசி, இரட்சிப்பை அடைந்திருந்தும் அதன் உயிர்த்துடிப்புள்ள நம்பிக்கையை ஒருபோதும் அனுபவியாமலும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கிற ஆவிக்குரிய சொத்தின் ஆசீர்வாதங்களை அறியாமலும் இருந்துவிடலாம்.

ஒரு மனிதன் இரட்சிக்கப்பட இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிதாவை அடைய அதைவிட வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவால் மட்டுமல்லாமல் வேறு வழிகளின் மூலம் கிருபை கிடைப்பதாக நான் அறிந்திருக்கவில்லை.

எந்த மனிதனும் தன் பாவத்தையும், சீரழிந்த நிலையையும் உணர்ந்து, மன்னிப்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் இயேசுவிடம் வந்து, அவரில் தங்கியிருந்து அவரில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்விதமான விசுவாசத்தைக் கொண்டிருப்பவன், அந்த விசுவாசம் எத்தனை பெலவீனமானதாக இருந்தாலும் நிச்சயமாக பரலோகம் சென்றடைவான் என்று வேதம் போதிப்பதை நான் பல பகுதிகளில் இருந்து எடுத்துக்காட்டக்கூடியவனாக இருக்கிறேன்.

சமநிலையுடையதும், மகிமையானதுமான சுவிசேஷம் அளிக்கப் பட்டிருக்கும் தன்மையில் இருந்து அதை சுருக்கவோ, குறைக்கவோ முயலக்கூடாது. ஆணவமும், பாவத்தை நேசிக்கும் தன்மையும் ஏற்கனவே செய்திருப்பதற்கு மேலாக பரலோக வாசலைக் கடினமானதாக்கவோ, அதன் பாதையை இடுக்கமானதாக்கவோ முயலக்கூடாது. ஆண்டவராகிய இயேசு மிகுந்த இரக்கமும் கருணையுமுள்ளவர். அவர் விசுவாசத்தின் தன்மையைத்தவிர அதன் அளவைப் பொருட்படுத்துவதில்லை. அவர் அது எத்தனை சத்தியமானது என்பதைத் தவிர அதன் விகிதத்தை அளவிடுவதில்லை. அவர் காயப்பட்ட நாணலை முறிப்பதுமில்லை, புகைகிற சூளையை அவிப்பதுமில்லை. சிலுவையை நாடி வந்த எவரும் அழிந்துபோனார்கள் என்று சொல்வதற்கு அவர் அனுமதிப்பதில்லை. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார் (யோவான் 6:37).

ஆம் வாசகர்களே! ஒருவனின் விசுவாசம் கடுகு விதையளவு இருந்தாலும், அது அவனை இயேசுவிடம் கொண்டு வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடச் செய்யுமானால் நிச்சயமாக அவன் இரட்சிக்கப்படுவான்; பரலோகத்தில் இருக்கும் மிக வயதான விசுவாசியைப்போலவே அவனும் இரட்சிப்படைவான், பேதுருவும் யோவானும் பவுலும் இரட்சிக்கப்பட்டது போலவே அவனும் இரட்சிக்கப்படுவான். பரிசுத்தமாகுதலின் அளவு ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நீதிமானாக்குதலில் அதற்கு இடமேயில்லை. எழுதப்பட்டது எழுதப்பட்டதுதான், ஒருபோதும் மாறாது. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ” என்றுதான் இருக்கிறதே தவிர “அவரை ஆழமாகவும் உறுதியாகவும் விசுவாசிக்கிறவன் எவனோ” என்றில்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” (ரோமர் 10:11).

இதுவரையில் நீங்கள் கவனிக்கும்படி நான் சொல்லிவந்திருப்பது என்ன தெரியுமா? ஓர் ஆத்துமா கடவுள் தனக்கு அளித்துள்ள மன்னிப்பையும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் குறித்த முழுமையான நிச்சயமில்லாமல் இருந்துவிடலாம் என்பதுதான். பயமும், சந்தேகமும் அவனை வாட்டிவிடலாம். அநேக கேள்விகளும் அநேக கவலைகளும், அநேக போராட்டமும், அநேக சந்தேகமும், மப்பும் மந்தாரமுமான நிலையும், புயலும் பெருங்காற்றுமான நிலையும் இறுதிவரை இருந்துவிடலாம்.

ஏற்கனவே சொன்னதை திரும்பவும் சொல்லுகிறேன் & ஒருவன் தன் வாழ்வில் இரட்சிப்பின் நிச்சயத்தை ஒருபோதும் அடையாமல்போனாலும், அவன் சாதாரணமாக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் அவனை இரட்சிக்கும் வல்லமையுடையதாக இருக்கிறது; ஆனால் அந்த விசுவாசம் அவனை பெலத்தோடும், பெரும் ஆறுதல்களோடும் பரலோகத்திற்கு கொண்டுசெல்லும் என்று நான் சொல்லமாட்டேன். அந்த விசுவாசம் அவனைப் பாதுகாப்போடு பரலோகமாகிய துறைமுகத்தில் இறக்கிவிடும்; ஆனால் அவன் முழுமையான நம்பிக்கையோடும், பேரானந்தத்தோடும், தன் பாய்மரங்களனைத்தையும் அகல விரித்துப் பாய்ந்து போகும் கப்பலைப்போல பரலோகத்தை அடைய மாட்டான். போகிற வழியில் அவன் வானிலையால் தாக்கப்பட்டும், பெருங்காற்றில் மோதியும், தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி அறிந்திராமலும், மகிமையில் தன்னுடைய கண்களைத் திறந்தால் அதுபற்றி நான் சிறிதும் ஆச்சரியப்படமாட்டேன்.

வாசகர்களே! விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் இந்த வேறுபாட்டை நாம் மனத்தில் வைத்திருப்பது மிக மிக முக்கியம் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவத்தைப்பற்றி சிந்திக்கின்ற ஒருவர் சிலவேளைகளில் புரிந்துகொள்ளுவதற்கு கடினமாக இருக்கும் ஒரு விஷயத்தை இந்த வேறுபாடு விளக்குகிறது.

நினைவில் வைத்திருங்கள் – விசுவாசமே வேர்; இரட்சிப்பின் நிச்சயம் மலர்.  சந்தேகமில்லாமல் வேரின்றி ஒருபோதும் மலர் இருக்கமுடியாது; அதே வேளை வேரிருந்தும் மலரில்லாமல் இருந்துவிடலாம் என்பதும் உண்மை.

இயேசுவின் பின்னால் சென்று அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட வேண்டும் என்றுச் சொல்லி அவரை நாடி வந்த பெண்ணிடம் விசுவாசத்தைப் பார்க்கிறோம். (மாற்கு 5:25). ஸ்தேவான், கொலை பாதகர்களான யூதர்கள் மத்தியில் “அதோ வானம் திறந்திருக்கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்று சொன்னதில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம். (அப்போஸ்தலர் 7:56).

“ஆண்டவரே என்னை நினைத்தருளும்” என்று கெஞ்சிய மனந்திரும்பிய கள்ளனின் வார்த்தைகளில் விசுவாசத்தைப் பார்க்கிறோம் (லூக்கா 23:42). யோபு புழுதியில் அமர்ந்து பருக்கள் நிறைந்தவனாக இருந்தும் “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19:25) என்றும், “அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்றும் சொன்ன வார்த்தைகளில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.

பேதுரு நீரில் முழ்குகிறபோது “ஆண்டவரே, என்னை இரட்சியும்” (மத்தேயு 14:30) என்று கூப்பிட்டதில் அவனுடைய விசுவாசத்தைப் பார்க்கிறோம். அதே பேதுரு பிறகு ஆலோசனை சங்கத்தின் முன் நிற்கிறபோது “வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:11-12) என்று சொன்னதில் அவனுடைய இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.

ஆவலோடும் நடுக்கத்தோடும் “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” (மாற்கு 9:24) என்ற அந்த மனிதனின் வார்த்தைகளில் விசுவாசத்தைப் பார்க்கிறோம். “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?” (ரோமர் 8:33-34) என்ற உறுதியான வார்த்தைகளில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.

தமஸ்குவிலுள்ள யூதாவின் வீட்டில் துக்கத்தோடு, கண்பார்வையற்ற வனாக, தனிமையில் ஜெபித்த பவுலில் விசுவாசத்தைக் காண்கிறோம். (அப்போஸ்தலர் 9:11). அதே பவுல் முதிர்ந்த வயதிலும் தன்னுடைய இறுதி நாட்களை அமைதியோடு எதிர்பார்த்து “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்” “நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப் பட்டிருக்கிறது” (2 தீமோத்தேயு 1:12; 4:8) என்று சொல்லுகிறபோது அதில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.

விசுவாசமே ஜீவன். இது எப்பேற்பட்ட ஆசீர்வாதம்! ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியை யாரால் விளக்க முடியும்? இருந்தும் விசுவாசமாகிய ஜீவனானது பெலவீனத்தோடும், சுகவீனத்தோடும், வலியோடும், கவலையோடும், தளர்ச்சியோடும், பாரத்தோடும், ஆனந்தமற்றும், புன்னகையற்றும் கடைசிவரை இருந்துவிடலாம்.

இரட்சிப்பின் நிச்சயம் என்பது விசுவாசமாகிய ஜீவனை விட மேலானது. அது சுகம், வலிமை, ஆற்றல், வேகம், செயல்திறன், சக்தி, அழகு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

வாசகர்களே, இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா? இல்லையா? என்பதல்ல நம்முன் இருக்கும் கேள்வி, அதன் சிறப்புகளை அனுபவிக்கிறோமா? இல்லையா? என்பதே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் விஷயம். நமக்கு  சமாதானம் இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல கேள்வி, பெரிய  அளவிலான சமாதானத்தையா? குறைந்த அளவிலான சமாதானத்தையா?  கொண்டிருக்கிறோம் என்பதைப்பற்றித்தான் நான் விளக்கிக்கொண்டிருக் கிறேன். இது உலகத்தானுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள கேள்வியல்ல. இது கிறிஸ்தவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட கேள்வி.

விசுவாசத்தைக் கொண்டிருக்கிறவன் நன்றாயிருக்கிறான். இந்த ஆக்கத்தை வாசிக்கின்ற அனைவரும் அதைக் கொண்டிருந்தால் அது எனக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கும். விசுவாசிக்கிறவர்கள் மும்மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்; அவர்கள் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; நீதிமான்களாக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் நரகத்தின் வல்லமைக்கு அப்பாற்பட்டவர்கள். சாத்தான் தன்னுடைய சூழ்ச்சிகள் அனைத்தையும் பயன்படுத்தினாலும் அவர்களை கிறிஸ்துவின் கரத்தில் இருந்து ஒருபோதும் பறித்துக்கொள்ள முடியாது.

இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கும் ஒருவன் இதையெல்லாம்விட மேலானதை அனுபவிக்கிறான். அவன் ஆவிக்குரியவற்றில் காண்பது அதிகம்; உணர்வது அதிகம்; அறிந்துகொள்ளுவது அதிகம்; ஆனந்திப்பது அதிகம். அவன் வாழும் நாட்களும் உபாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதைப்போல், ‘பரலோகத்தின் நாட்களெல்லாம் பூமியில் இருக்கும்’ என்பதுபோல் காணப்படும்.

வாசகர்களே, நீங்கள் யாராக இருந்தாலும், வாழ்க்கையில் உங்களுடைய இரட்சிப்பின் முழு நிச்சயத்தையும் அடைவதைத்தவிர வேறு எதிலும் திருப்திகொள்ளாதீர்கள் என்று உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். குழந்தையிடம் காணப்படுவதுபோன்ற விசுவாசத்தோடுதான் உங்கள் வாழ்க்கை ஆரம்பமாகவேண்டும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்” என்கிறது வேதம். ஆனால், விசுவாசத்தில் ஆரம்பித்து இரட்சிப்பின் நிச்சயத்தை நோக்கிப் போங்கள். “நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று நான் அறிவேன்” என்று சொல்லுகிறவரை ஓய்ந்து இருந்துவிடாதீர்கள்.

நான் சொல்லுகிறதை நம்புங்கள், இரட்சிப்பின் நிச்சயத்தைத் தேடுவது மிகவும் சிறப்பானது. உங்களுடைய கிருபை போதுமானது என்றிருப்பீர்களானால் அவற்றைத் தள்ளிவைக்கிறவர்களாகிவிடுவீர்கள். நான் விளக்கிக்கொண்டிருக்கிற விஷயங்கள் உங்களுடைய சமாதானத்துக்குத் தான். இந்த உலகத்துக்குரிய காரியங்களில் நம்பிக்கை இருப்பது நல்லது தான்; ஆனால் பரலோகத்துக்குரிய காரியங்களில் நம்பிக்கை இருப்பது அதைவிட எத்தனை மேலானது.

உங்களுடைய விசுவாசம் அதிகரிக்க வேண்டுமென்று நீங்கள் அனுதினமும் ஜெபியுங்கள். உங்கள் விசுவாசத்தைப் பொறுத்தே உங்கள் சமாதானமும் இருக்கும். ஆவிக்குரிய வேர் உங்களில் வளருவதற்கானதைச் செய்யுங்கள், கடவுளின் ஆசீர்வாதத்தினால் அது உங்களில் மலராகிய இரட்சிப்பின் நிச்சயத்தை உடனடியாகவோ அல்லது பிற்பாடோ அடையச்செய்யும். உடனடியாக முழு நிச்சயத்தையும் நீங்கள் அடையாமல் இருந்துவிடலாம். சிலவேளைகளில் நல்ல விஷயங்களுக்காகக் காத்திருப்பது நல்லது. எந்தவித பிரச்சனையையும் சந்திக்காமல் இலகுவாக அடையும் விஷயங்களை நாம் மதிப்பதில்லை. இரட்சிப்பின் நிச்சயம் உங்களைக் காத்திருக்க வைத்தபோதும் அதற்காகக் காத்திருங்கள். அதைக் கண்டடைவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு அதைத் தேடுங்கள்.

அடிக்குறிப்புகள்:

  1. இயேசுவை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அப்படி ஒருவனும் வெட்கப்பட்டதில்லை. நீங்கள் விசுவாசித்தால் நீங்களும் வெட்கப்படும் நிலை நிச்சயம் வராது. கண்டனத்திற்கும் மரணத்திற்கும் இடையில், மரிக்கும் தருவாயிலிருந்த மனந்திரும்பிய ஒருவன் பேசிய விசுவாச வார்த்தைகள் எவ்வளவு அருமையானது. அவனுடைய இறுதி வார்த்தைகள் நம்மை நோக்கிப் பின்வருமாறு உரத்த சத்தத்தோடு சொல்லுகிறது, “இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்பிய ஒருவனும் கெட்டுப்போனதில்லை.” – டிரெய்ல்.
  2. தேவனுடைய மகிமைக்கு அடுத்தபடியாக நாம் விரும்பக்கூடிய மிக பெரிய விஷயம் நம்முடைய இரட்சிப்பு; ஆனால் நாம் விரும்பக்கூடிய மிகவும் இனிப்பான விஷயம் நமது இரட்சிப்பின் நிச்சயம். பரலோகத்தில் நாம் அனுபவிக்கப் போகும் வாழ்க்கையின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதைவிட மேலானதொன்றை இந்த உலகத்தில் நாம் அடையமுடியாது. இந்த உலகத்தைவிட்டுப் போகிறபோது எல்லாப் பரிசுத்தவான்களும் பரலோகத்தை அனுபவிப்பார்கள்; அவர்களில் சிலர் இந்த உலகத்தில் இருக்கின்றபோதே பரலோகத்தை அனுபவிப்பார்கள். – ஜோசப் கார்லைல்.

 

யார் மெய்யான கிறிஸ்தவன்? – ஜெரமி வோக்கர் –

“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22) எனும் இயேசு கிறிஸ்துவின் கிருபையுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனே கிறிஸ்தவன். அவன் ஒருகாலத்தில் காணாமல்போயிருந்து, திசை தெரியாமல் பாவியாக அலைந்துகொண் டிருந்து பின்னால் கிறிஸ்துவில் விசுவாசத்தைக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டு, கர்த்தரின் மெய்யான சீடனாக, பழையவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாகி இருக்கிறவன் (2 கொரிந்தியர் 5:17).

நீங்கள் மெய்யான கிறிஸ்தவன்தான் என்பதை எப்படி சொல்லுவீர்கள்? நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்? ஒருவன் கிறிஸ்துவுக்குள் புதிதாகக்கப்பட்ட சிருஷ்டி என்பதற்கு உறுதியான சான்றுகள் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இந்த ஆக்கத்தில் பார்க்கப் போகிறோம்.

மறுபிறப்பையும் அதற்கான சான்றுகளையும்பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் தெரிவித்திருக்கிறார். இயேசுவே கிறிஸ்து என்றும் அவரை விசுவாசிப்பதின் மூலம் இரட்சிக்கப்படுவோம் என்பதை நாம் அறிந்துகொள்ளுபடியாக யோவான் தன் சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார் (யோவான் 20:31). அதற்குப் பிறகு, அவர் தன்னுடைய முதல் நிருபத்தை, விசுவாசிகள் “தங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் தொடர்ந்து விசுவாசமாயிருக்கவும்” (1 யோவான் 5:13) எழுதினார். “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்கிற இந்த முக்கியமான கேள்விக்கு பதில் காண யோவானின் முதல் நிருபம் நமக்கு உதவியாக இருக்கிறது.

இந்த உலகத்தாரும், வெளிப்பிரகாரமாக மட்டும் தங்களை பக்தி யுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்களும், சில குறிப்பிட்ட அடையாளங்களை மெய்க்கிறிஸ்தவத்திற்கு அறிகுறியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகள், அவர்கள் மெய்யான விசுவாசிகளாக இல்லாதிருந்தும், விசுவாசிகள் என்று தங்களைத் தவறாகக் கற்பனை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் தங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்திற்காக இவற்றில் நம்பிக்கை வைக்கிறார்கள். இவை உறுதியான அடித்தளத்தைப் போடமுடியாத அறிகுறிகளாக இருப்பதால் தங்களுக்குத் தேவையான நேரத்தில் இவை தங்களைக் கைவிட்டுவிடுவதை அறிந்துகொள்ளுகிறார்கள்.


‘கிறிஸ்தவனின் சிறப்பான குணாதிசயங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய அருமையான நூல், ஒருவன் மெய்யான கிறிஸ்தவனா இல்லையா என்பதை அறிந்துகொள்ளுவதற்கு உறுதியான அறிகுறிகளாகக் கருத முடியாத ஏழு காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

முதலாவது, வெளிப்பிரகாரமான ஒழுக்கமுள்ள வாழ்க்கை – வெளிப்பிரகாரமான நேர்மையான ஒழுக்க நடவடிக்கைகள் ஒருவன் கடவுளை நேசிக்கிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகள் இல்லை. அத்தகைய வெளிப்புறமான வாழ்க்கை ஒருவனுடைய இருதயத்தில் காணப்படும் மெய்யான நீதிக்கு அறிகுறி அல்ல (1 சாமு 16:7). அநேகர், நித்திய ஜீவனை அடையாமலும், இயேசுகிறிஸ்துவைப்போல இருப்பதற்கான வளர்ச்சிக்குரிய எந்த அடை யாளங்களும் இல்லாமலும் வெறும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையைக் கொண்டிருந்துவிடலாம்.


இரண்டாவது, வெறும் அறிவு – (ஜீவனில்லாத அறிவு) சத்தியத்தை ஆவிக்குரியவிதத்தில் அறிந்துகொள்ளுவதற்கு எதிர்மாறானது இந்த ஜீவனில்லாத வெறும் புத்தியோடு மட்டும் சம்பந்தமான அறிவு (ரோமர் 1:21, 2:17-20, யாக்கோபு 2:19, 1 கொரிந்தியர் 2:14). ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவை அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிய அறிவை மட்டும் பெரியளவில் கொண்டிருந்துவிட முடியும். வேதத்தின் தேவனுக்குத் தலைபணிந்து ஆராதிக்க மறுத்து வேதத்தில் இருந்து மேலதிகமான அறிவை ஒரு மனிதனால் கொண்டிருந்துவிட முடியும்.

மூன்றாவது, வெளிப்புறமான பக்தி நிலை – அநேகர் தேவபக்தியின் வேஷத்தை அணிந்து மெய்யான பக்திவிருத்தியைக் கொண்டிராமல் இருப்பார்கள். அது தேவவல்லமையில்லாத வெளித்தோற்றம் மட்டுமே. (2 தீமோத்தேயு 3:5, மத்தேயு 25:1-12, ஏசாயா 58:2-3. பரிசேயர்களே இப்படியானவர்களுக்கு முக்கியமான உதாரணம். அவர்கள் சிறந்த பக்திமான்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டபோதும் அவர்களுடைய இருதயம் கடவுளைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது.

நான்காவது, பிரகாசமான தாலந்துகள் – சிலர் லாவகமாகவும், நெடுநேரமும் பேசக்கூடிய அரிய தாலந்தை பிறப்பிலிருந்தே கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் பக்திக்குரிய காரியங்களைப்பற்றிப் பெரிதாகப் பேசுகிறபோது அதை அவர்களுடைய இருதயத்தில் கடவுள் இருப்பதற்கான அறிகுறியாகவும், அவர்களுடைய பேச்சை அவர்களுடைய பக்திக்கு அடையாளமாகவும் பலரும் தவறாகக் கருதிவிடுகின்ற நிலை இருக்கிறது. பிலேயாமும் சவுலும் தீர்க்கதரிசனம் பேசும் திறனைக் கொண்டவர்களாக இருந்தும் கடவுளின் இராஜ்யத்தை அடையாதவர்களாக இருந்திருக்கிறார்கள் (மத்தேயு 7:22-23). மெய்யான விசுவாசியாக வருவதற்கு முன்பாக ஜோன் பனியன் பக்திரீதியான காரியங்களைப் பேசுகிறதில் மிகத் திறமையானவராக இருந்திருக்கிறார். அவரெழுதிய மோட்சப் பயணம் நூலில் இத்தகைய தன்மை கொண்ட சில நபர்களை அவர் வர்ணித்திருக்கிறார்.

ஐந்தாவது, பாவத்தை இருதயத்தில் உணர்தல் – இந்த விஷயத்தை நாம் கவனமாக சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கு பாவத்தை இருதயத்தில் ஓரளவுக்கு உணர்வது மிகவும் அவசியம். பாவத்தை இருதயத்தில் உணர்வது இரட்சிப்பை அடைவதற்கு மிகவும் அவசியமானது, ஆனால் அத்தகைய பாவ உணர்தல் இரட்சிப்போடு இணைந்ததல்ல. அநேக கிறிஸ்தவர்கள் இரட்சிப்படைவதற்கு முன்பிருந்ததைவிட இரட்சிப்படைந்தபின்பே பாவத்தை அதிகமாகவும், ஆழமாகவும் தங்களில் உணர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே மனந்திரும்பியவர்கள் பாவத்தைப்பற்றிப் பெரியளவில் அறிந்திராமலும், பாவஉணர்வை அதிகளவுக்கு ஆழமாகக் கொண்டிராமலும் இருந்துவிடலாம். அதேவேளை பாவத்தைப் பற்றிய உணர்வு இருப்பது மட்டுமே (மிக ஆழமான உணர்வுகூட) இரட்சிப்பு அடைந்ததற்கு அடையாளமாகிவிடாது. பாவத்தைப் பற்றிய உணர்வைக்கொண்டிருப்பதற்கும், பாவத்தில் இருந்து மனந்திரும்புவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. பாவத்தைப்பற்றிய விழிப்புணர்வும், அதுபற்றிய குற்றவுணர்வும் மட்டும் இருந்துவிட்டால் ஒரு மனிதன் மனந்திரும்பிவிட்டான் அல்லது மனந்திரும்பி விடுவான் என்று அர்த்தமல்ல. (யூதா 14-15). சவுலிலும், ஆகாபிலும், யூதாசிலும் இது இருந்தும் அவர்கள் இரட்சிப்பைப் பெற்றிருக்கவில்லை.

ஆறாவது, உறுதியான நிச்சயம் – இரட்சிப்படைந்திருக்கிறேன் என்று நம்புவதற்கும், கிறிஸ்துவை விசுவாசித்து அதன்காரணமாக தொடர்ச்சியாக இரட்சிப்படைந்து வருவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒருவன் கடவுளை உண்மையில் அறியாமல் இருந்தும், அவரை அறிந்திருக்கிறேன் என்று தீவிரமாக நம்பி வாழ்ந்துவிட முடியும் (மத்தேயு 3:7-9).

ஏழாவது, ஒருவருடைய மனமாற்றம் நிகழ்ந்த நேரம் அல்லது அது நிகழ்ந்த முறை – ஒருவருடைய அசாதாரண அனுபவமோ அல்லது தனித்துவமானதொரு அனுபவமோ, மனமாற்றமடைந்த குறிப்பிட்ட நேரமோ அவருடைய இரட்சிப்பின் அனுபவம் மெய்யானது என்பதற்கு அடையாளமில்லை. மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருபோதும் அறியாமல், உள்ளார்ந்ததொரு உணர்வையோ அல்லது ஒரு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட சுவிசேஷ அழைப்பைக்கேட்டுக் கையைத்தூக்கி முன்னால் நடந்துபோனதையோ மட்டும் நம்பி வாழ்ந்து மெய்யான மனமாற்றமில்லாமல் மடிந்த அநேகர் இருந்திருக்கிறார்கள்.

இரட்சிப்பை அடையாமலே, அதை அடைந்துவிட்டதாகக் கற்பனை செய்து வாழ்வதைப்போன்ற ஆபத்தானது வேறொன்றுமில்லை. தான் வாசம் செய்பவர்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் பகரும் சாட்சியை இருதயத்தில் அறிகின்ற உறுதியான அத்திவாரத்தைக் கொண்டிருந்து, தான் கிறிஸ்தவன் என்பதை அறிந்துணர்ந்திருப்பதைப் போன்ற ஆசீர்வாதத்திற்கு இணையானதொன்றில்லை. இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற நிலையற்ற அறிகுறிகளை அறிந்து உணர்ந்திருப்பது, மெய்யான விசுவாசியை மாறுதலடையும் வெறும் உணர்ச்சிவசப்படுதலின் ஆளுகையில் இருந்து விடுவித்து, நீங்களும், நானும் இன்னும் அநேகரும் நம்முடைய நம்பிக்கைக்காகத் தங்கியிருந்துவிடுகின்ற தவறானதும் அழுகிப்போனதுமான போலிக்காரணிகளை நம்மில் இருந்து அடியோடு தூக்கியெறிந்துவிட துணைபுரிகின்றது.

அப்படியானால், ஒரு பாவியின் இருதயத்தில் மெய்யான கிருபையின் கிரியை நிகழ்ந்திருக்கின்றது என்பதற்கான வேபூர்வமான அடையாளங்கள் என்ன? யோவான் தன் நிருபத்தை எழுதுகிறபோது, அதை மிகவும் திட்டமிட்டு எழுதுகிறார். ஒரு விமானம் தான் பறக்கின்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வருவதுபோல் யோவானும் தான் சொல்ல வருகின்ற விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுகிறார். யோவானுடைய நிருபத்தை நாம் வாசிக்கிறபோது மெய்க்கிறிஸ்தவத்தைப்பற்றிய நான்கு தவிர்க்கமுடியாத அறிகுறிகளை அவர் தெளிவாக விளக்குவதை நாம் அறியமுடிகிறது.

முதலாவது அறிகுறி – பாவத்தைப்பற்றிக் கடவுள் விளக்கியிருக்கின்ற உண்மைகளையும், அதிலிருந்து விடுபடுவதற்காக அவர் ஏற்படுத்தியிருக்கின்ற வழிமுறையையும் தாழ்மையோடும் முழுமனதோடும் ஏற்றுக்கொள்ளுதல். (1 யோவான் 1:7-2:2; 2:12-14; 3:5, 6, 23; 4:2, 9-10, 13-16; 5:1, 5, 10-13, 20). ஒரு கிறிஸ்தவன் தன்னைக் குறித்து நிதானித்து அறிந்துகொண்டவனாக, பாவத்தைச் செய்கின்ற பாவியாகப் பார்ப்பான். பரிசுத்தமான கடவுளுடைய நீதியான நியாயத்தீர்ப்பை அவன் ஏற்றுக்கொள்ளுவான். (சங்கீதம் 51:4; லூக்கா 15:18, 18:13). பரிசுத்த ஆவியானவரால் ஏற்படும், இந்த பாவத்தைப் பற்றிய உறுத்துதல் அவனைத் தன்னுடைய இருதயத்தின் கடவுளுக்கு விரோதமான நிலையை உணரவைத்து மெய்யான மனந்திரும்புதலை நோக்கி வழிநடத்துகிறது. அதனால் அவன் தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, அது கடவுளைக் காயப்படுத்துவதால் அதை வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி விலகியோடுகிறான். (1 யோவான் 2:12-13). தாழ்மையும், கருணையும்கொண்டவரான இயேசு கிறிஸ்து வல்லமையோடு சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்படுவதால் அவனுடைய மனந்திரும்புதலோடு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும் இணைந்து அவனில் காணப்படுகிறது. விசுவாசம் இயேசுவை இருகரம் நீட்டி வரவேற்று, அவரை நோக்கி ஓடி, அவரைப் பற்றி, அவரிலேயே தங்கியிருக்கும். இந்த உண்மைதான் இனி நான் விளக்கப்போகும் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிலுவையில் மரித்த மனந்திரும்பிய கள்வன் இனி நான் விளக்கவிருக்கும் இரட்சிக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் மூன்று காரியங்களையும் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. (அவன் உயிரோடிருந்திருந்தால் அவற்றை நிச்சயம் வெளிப்படுத்தியிருப்பான்.) இருந்தும் இயேசு அவனைப்பார்த்து, “இன்று நீ என்னோடுகூட பரலோகத்தில் இருப்பாய்” என்று உறுதியளித்தார். (லூக்கா 23:43). இயேசுவை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அவரை விசுவாசித்த அடுத்த நிமிடமே மரித்தாலும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் கடவுளுக்கேற்ற ஜீவனுண்டு.

இரண்டாவது அறிகுறி – கடவுளையும் அவருடைய மகிமையையும் நோக்கமாகக் கொண்ட தாழ்மையோடுகூடிய பயபக்தியும், மகிழ்ச்சியான அர்ப்பணிப்பும். (1 யோவான் 1:3-5; 2:12-15; 3:1-2; 4:12-13, 9; 5:1-2). இரட்சிக்கப்பட்டிருப்பவனில் அவனுக்கு எது முக்கியமானது என்பதில் தீவிரமான தலைகீழ் மாற்றமேற்பட்டிருக்கிறது. அவனுடைய இருதயத்தில் சுயம் வீழ்த்தப்பட்டு கடவுள் ஆளத்தொடங்கியிருக்கிறார். அவனில் கடவுளுக்கு எதிரியாக இதுவரை இருந்துவந்துள்ள இருதயம் (ரோமர் 8:7) அகற்றப்பட்டு அவரை நேசிக்கின்ற இருதயம் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (லூக்கா 10:37). சுயத்திற்காக மட்டும் இதுவரை வாழ்ந்தவன் ஜீவனுள்ள பலியாகத் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வாழத் தொடங்கியிருக்கிறான். (ரோமர் 12:1-2). அவன் மகிமையின் கர்த்தருக்கு மகிழ்ச்சியோடு ஆராதனை செய்து தான் பெற்றிருக்கிற கிருபைக்கு நன்றியையும் கடவுளுக்குள் தன் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறான். கடவுளின் சிறப்பான மகிமையை அவன் நம்புவதால், அதனிமித்தம் கடவுள் மகிமைக்குப் பாத்திரர் என்பதை அங்கீகரித்து, அவரால் அழைக்கப்படுவானால் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது அவருக்குப் பணிசெய்வான். ரோமர் 11:36ல் சொல்லப்பட்டிருப்பது அவனுக்கு முற்றிலும் பிரியமானதும் ஏற்றதுமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், இப்போது கிறிஸ்துவுக்குள்ளாக கடவுளே அவனுடைய வாழ்க்கையின் உச்சமாக சிந்தனையிலும் உணர்விலும் செயலிலும் இருக்கிறார். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூமியில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; ஆனால் தேவனே என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” என்பதாக அவனுடைய சாட்சி இருக்கிறது. (சங்கீதம் 73:25-26). அவன் அதை விசுவாசிக்கிறான், அறிந்திருக்கிறான், பின்பற்றுகிறான். புது வலிமையோடு மனந்திரும்புவதன் மூலம் தான் அதை அறிந்திருப்பதையும், உணருவதையும் நிருபித்துக்காட்டுகிறான். கடவுளின் பெயரைப் பற்றியும் கடவுளின் மக்களைப் பற்றியுமே அவன் அக்கறைகொண்டிருப்பதால் தன்னுடைய நேரம், ஆற்றல், நயம், தாலந்துகள், திறமைகள், முயற்சிகள் அனைத்தையும் தான் செய்யும் ஆச்சரியத்துக்குரிய செயல்களின் மூலம் அல்லது சாதாரண செயல்கள் மூலம் அவருக்கே அர்ப்பணிக்கிறான். (1 கொரிந்தியர் 10:31). இன்றும் என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்துவதும் அவரை அனுபவிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பெரும்  மகிழ்ச்சியுமாயிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் கடவுளே அவனுடைய வாழ்க்கையில்  அனைத்துமாக இருக்கிறார். அதை மேன்மேலும் அறிவதும் உணர்வதும் நிருபிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் ஏங்கலாக இருக்கிறது.

மூன்றாவது அறிகுறி – பரிசுத்தத்தை அதிகமாக அடைவதற்காக திட்ட மிட்ட நடவடிக்கைகளோடு பரிசுத்தத்தில் முன்னேறுதல். (1 யோவான் 2:3-8,  15-16, 19, 29; 3:3, 6, 10, 24; 4:13; 5:2-5, 21). மாய்மாலக்காரர்கள் பரிசுத்தத்தின் மூலம் வருகின்ற மதிப்பையும் மரியாதையையும் விரும்புகிறார்கள். ஆனால் கடவுளின் மெய்யான பிள்ளையோ பரிசுத்தத்தின் மெய்த்தன்மையில் மட்டுமே திருப்திகொள்ளுவான். அவன் தன் வழிகளை ஆராய்ந்து பார்த்து, கடவுளின் சாட்சிகளிடம் தன் நடையைத் திருப்புகிறான் (சங்கீதம் 119:59). உலகம் முன்பு அவனுக்கு பிரகாசமாக இருந்ததுபோல் இப்போது இல்லை. அதன்மீதான அவனுடைய ஈர்ப்பும் நேசமும் இப்போது அடிப்படையிலேயே மாறிவிட்டது. தன்னை அழைத்த கடவுள் பரிசுத்தராக இருப்பதுபோல் தானும் பரிசுத்தமாக வாழ அழைக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து இப்போது கடவுளுக்காகவே அவன் வாழுகிறான்  (1 பேதுரு 1:16). அவன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறதினால், அவனுக்கு பாவத்தோடு இருந்த தொடர்பு உடைத்தெறியப்பட்டிருப்பதோடு, பாவத்தில் தொடர்ந்திருக்கும் பழக்கமும் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. புது வேர் புதுக் கனிகளைப் பிறப்பிக்கிறது (மத்தேயு 7:20, 12:33-35). அவனுடைய கீழ்ப்படிவு பூரணமானதாக இல்லாதிருந்தாலும் முழுமையானதாக இருக்கும். அது தொடர்ந்து சீராக முன்னேறுகிறதாக இருக்கும்; கட்டாயத்தினால் அல்ல விருப்பத்தோடும் முழுமனதோடும் செய்கிறதாக இருக்கும்; விடாமுயற்சியோடு இறுதிவரை தொடருகிற கீழ்ப்படிவாக இருக்கும். அவன் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் சீடனாகத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரைப் பின்தொடருகிறான் (மத்தேயு 16:24-25). கிறிஸ்துவைப்போல் இருப்பதை இலக்காக வைத்து அவரைப் பின்தொடருகிறான். அதுவே அவனுடைய தனிப்பட்டதும், பொதுவானதுமான ஜெபமுமாக இருக்கிறது. அவன் ஆவியின் கனிகளை மேன்மேலும் வெளிப்படுத்துகிறான் (கலாத்தியர் 5:22-23). உலகத்தின்மீது அவனுக்கு நேசமில்லை (யாக்கோபு 4:4). முன்பு உலகத்துக்கேற்றதும், உலகத்தோடும் சமரசமுமாக இருந்த வாழ்க்கை முறை இப்போது முடிவுற்றுவிட்டது. (2 தீமோத்தேயு 3:4; 1 கொரிந்தியர் 16:33). இது பாவமற்ற பூரணபரிசுத்தநிலையல்ல, அதை அடைவதற்கான கடும் முயற்சியாக இருக்கிறது. கிறிஸ்தவன் தன் வாழ்வில் எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்வதில்லை என்றில்லை, மாறாக அவன் பெரும் போராட்டங்களை எதிர்கொள்கிறான்; தீவிரமாக பொங்கி எழும் துர்க்குணத்தோடும், தீயசக்திகளோடும் எதிர்த்துப் போராடுகிறவனாக இருக்கிறான். (ரோமர் 7:13-25). சில வேளைகளில் அவன் அலைந்து திரிகிறான், சில வேளைகளில் அவனில் முன்றேற்றமில்லை, சில வேளைகளில் துக்கப்படுமளவுக்கு பின்மாற்றமும் அடைகிறான். இருப்பினும் அவனுடைய வாழ்க்கையின் நோக்கமும், போக்கும் முன்னோக்கிச் செல்வதாக  இருக்கிறது. காலம் போகப்போக அவனுடைய வாழ்க்கை முன்னேற்றப் பாதையாகவே இருக்கிறது. அவனுடைய ஆவிக்குரிய வரைபடத்தில் காணப்படும் புள்ளிகள் எப்போதும் நேர்கோடாக உயரப்போவதாகக் காணப் படாமல் வளைந்தும், பல மலைகளை வழியில் சந்திப்பதாகவும் இருக்கிறது. இருப்பினும் அதில் பாவம் அழிக்கப்பட்டு தேவபக்தி வளருவதற்கு அறிகுறியான விடாமுயற்சி தொடர்ந்திருப்பதையும் காண முடியும்.

நான்காவது அறிகுறி & கடவுளால் மீட்கப்பட்டுள்ள மக்களோடிருக்கும் அன்பும், இணைப்பும். இதைப்பற்றி யோவான் தன் நிருபங்களில் விளக்குகிறார் (1 யோவான் 2:9-11, 3:10-18, 23; 4:7-11, 4:20 – 5:2). இது, ‘அவர்களை எனக்குப் பிடிக்கும்’ என்று சொல்லுகின்ற இயற்கையான அன்பைவிடவும், கூலிக்காக மாரடிப்பதால் உண்டாகிற சுயநலமான இணைப்பைவிடவும், இவர்கள் தங்களுடைய கட்சி என்ற எண்ணத்தில் கூடிவருவதைவிடவும், வெறும் கடமைக்காக இருந்திருந்து கூட்டங்கூடுவதைவிடவும் மேலான ஆழ்ந்த அன்பும், இணைப்புமாகும். மெய்யான கிறிஸ்தவன் கடவுளின் பிள்ளைகளை, அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக நேசிக்கிறான். அவர்கள் பார்ப்பதற்கு அன்பு பாராட்டக்கூடாதவர்களாகக் கண்களுக்குத் தென்பட்டாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். அவர்களை நேசிப்பதற்கு அவனுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தபோதும் இந்த ஒரு காரணத்தைத் தவிர அவனுக்கு வேறு காரணங்கள் தேவையில்லை. அவர்களைக் கடவுள் நேசிப்பதாலும், கிறிஸ்துவின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாலும், அவர்களை நேசிப்பது கடவுளைப்போல அவர்களை நேசிப்பதற்கு ஒப்பானதாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். கடவுளின் சாயலுக்கும், தான் நேசிக்கும் இயேசுவின் சாயலுக்கும் ஒப்பாக வளர்ந்து வருகின்ற தன்மை அவர்களில் காணப்படுகின்ற காரணத்தால் அவன் அவர்களை நேசிக்கின்றான். இயேசு இரட்சித்து, இறையாண்மையுள்ள தலைவனாக இருந்து வருகின்ற அவருடைய சரீரமாகிய சபையில் அவர்கள் தன்னோடு இணை அங்கத்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவன் அவர்களை நேசிக்கிறான். (1 கொரிந்தியர் 12:12-14, 26-27). அவன் தன் அன்பை வார்த்தையால் மட்டும் காட்டாமல் எண்ணங்களாலும், நடத்தையாலும் காட்டுகிறான். (எபேசியர் 4:1-6, 12-16, 25-32). அவன் மெய்யான சபைக்கோட்பாட்டாளியாக (Churchman) இருக்கிறான். அதாவது சபையை நேசித்துத் தன் பொறுப்புக்களையெல்லாம் தவறாது செய்கிறவனாக இருக்கிறான். வெறுமனே அவன் சபைக்கு கடமைக்காகப் போய்வருகிறவனாக இல்லாமல், ஒவ்வொரு அங்கத்தவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்நியோன்யத்துடன் உறவாடி, அவர்களோடு சபையாக நேசத்தோடும், அர்ப்பணிப்போடும் கூடிவந்து சபைக்காகப் பணிசெய்கிறவனாக இருக்கிறான். அவன் வெறும் பார்வையானனைப்போல நடந்து சபைமூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், சபைக்குத் தன்னால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு பணிசெய்கிறான்

இந்த நான்கு அறிகுறிகளும் மெய்யான கடவுளுடைய பிள்ளைகளிடம் நிச்சயம் காணப்படும். மகிமையை அவர்கள் அடையும்வரை இந்த அறிகுறிகள் பூரணப்படாது; ஆனால் இங்கு வாழும்வரையிலும் அவை அவர்களில் காணப்படும்.

இரட்சிப்பை அடையாத நிலையில் இருக்கும்போது அதை அடைந்திருக்கிறோம் என்று தவறாகக் கற்பனைசெய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. இவ்வாறு நினைத்து வாழ்வது மிகவும் ஆபத்தான, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். ஆவிக்குரிய விஷயத்தில் எப்போதும் சந்தேகத்துடனோ அல்லது தவறான நம்பிக்கையுடனோ குழப்பத்தோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா இல்லையா என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதை நிச்சயத்தோடு உணர்ந்து நித்தியவாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுவதற்காகவே யோவான் தன்னுடைய நிருபத்தை எழுதியிருக்கிறார்.

இதுவரை நான் விளக்கிய தவிர்க்கமுடியாத, விசுவாசிக்குரிய அறிகுறிகள் உங்களுடைய இருதயத்தில் காணப்படாவிட்டால் நீங்கள் விசுவாசியல்ல (கிறிஸ்தவனல்ல). உங்களைப்பற்றி நீங்கள் என்ன கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் வழிகளின்படி நடக்காமல் அவருடைய பெயரை மட்டும் சூட்டிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி, கிறிஸ்துவையும் நிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  கிறிஸ்துவின் கிருபையின் வல்லமையையும், இரட்சிக்கும் ஞானத்தையும் வாழ்க்கையில் அறியாமல் விசுவாசிக்கு மட்டுமே சொந்தமான பெயரை உங்களுக்கு சூட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தூஷித்து அவருக்கு இகழ்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். மாய்மாலக்காரன் தன்னிடம் இல்லாததை இருப்பதாகக்காட்டிப் போலிவேஷம் தரித்து, அவிசுவாசிகள் மெய்க்கிறிஸ்தவத்தைக் கேலிசெய்யவும், இகழவும் வழியெற்படுத்துகிறான். கிறிஸ்தவ சபையாக தங்களை இனங்காட்டிக்கொள்கிறவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து, தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் போதித்து, பக்திவிருத்தியில்லாமல் வாழ்ந்து மற்றவர்கள் தூஷிப்பதற்கு இடங்கொடுக்கும்போது இதனை நாம் பெரியளவில் பார்க்க நேரிடுகிறது. இதுவா கிறிஸ்தவம்? இல்லை! அறவே இல்லை! இது கிறிஸ்தவம் அல்ல. பாவிகள் கிறிஸ்துவை ஏளனம் செய்வதற்கு இடங்கொடுக்கவும், இயேசுவின் மீது நம்பிக்கையற்றுப்போகவும் வைக்கும் போலித்தனம் இது. இதிலிருந்து நீங்கள் விடுபடாவிட்டால் அவர்களுடைய இரத்தப்பலி உங்கள்மீதிருந்து உங்களை இறுதியில் அழித்துவிடும். கிறிஸ்துவுக்குள் இருப்பதாக நீங்கள் போலித்தனமாக நினைத்துக்கொண்டிருப்பதைவிட அவரில்லாமல் அவிசுவாசியாக இருப்பது மேலானது. எனவே, நீங்கள் இயேசுவிடம் ஓடிவந்து, அவர் உங்களுக்குத் தேவையாக இருக்கிறார் என்பதை அவர் முன் அறிவித்து, பாவத்தில் இருந்து உடனடியாக மனந்திரும்பி இரட்சகரான இயேசுவை விசுவாசியுங்கள்.

இதுவரை நான் மேலே விளக்கி வந்திருக்கும் நான்கு இலக்கணங்களும் உங்களில் இருக்குமானால் நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர்தான். அது உண்மையாக இருக்கும்போது உங்களில் இருக்கும் கிருபைக்கு காரண மானவரான கிறிஸ்துவை நீங்கள் ஒருபோதும் நிராகரித்து நித்திக்கக்கூடாது. சந்தேகத்தோடும் பயத்தோடும் வாழும் சில மெய்க்கிறிஸ்தவர்கள், தங்களில் இல்லாதிருக்கும் கிறிஸ்துவைத் தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறோமோ என்ற நடுக்கத்தோடும் பயத்தோடும், சந்தோஷத்தை இழந்து உள்ளுக்குள் எந்த ஆசீர்வாதமும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயனில்லாமல் நிழலிலோ, இருட்டிலோ வாழ்வதைப்போல வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் – நான் இதுவரை விளக்கி வந்திருக்கும் இலக்கணங்கள் அவிசுவாசியின் இருதயத்தில் இருக்க வழியேயில்லை. கிறிஸ்தவ சாட்சியில்லாமல் அவற்றைக் கொண்டிருப்ப தென்பது தேவராஜ்யத்தின் சிறப்புரிமைகளைப்பற்றி மட்டும் தெரிந்து வைத்திருந்து அதற்குரிய ஆடையை அணிந்திராமல் இருப்பதுபோலாகும். அது கிருபையின் கனிகள் பாவஇருதயத்தில் வளரலாம் என்பதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடலாம்; மனந்திரும்பாத மனிதர்கள் மெய்யான பக்திவிருத்தியையும், கிறிஸ்தவ ஒழுக்கத்தையும் அடையலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். இது கடவுளின் ஆவியானவரின் கிரியையை இழிவுபடுத்திவிடும். வேறுசிலர், இரட்சிப்பை அடையாமலே ஒருவன் பரிசுத்தத்திற்கான மெய்யான அறிகுறிகளை வெளிப்படுத்திவிடலாம் என்று கற்பனை செய்து அதனால் மிகவும் மனத்தளர்ச்சியுற்று, ‘நான் அவருக்கு சொந்தமானவன், அவர் எனக்கு சொந்தமானவர்’ என்று கிறிஸ்துவைப்பற்றி சொல்ல முடியாமல் போய்விடுமோ என்று ஏங்கித்தவிப்பார்கள். நண்பனே! இதுவரை நான் விளக்கியுள்ள நான்கு அறிகுறிகளும் உன்னில் காணப்படுமானால், கடவுளால் இரட்சிப்பை அடைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து, நீ இரட்சிப்படையும்படி அவற்றை உன்னில் வைத்த கடவுளை மகிமைப்படுத்தி அதற்கேற்றபடி வாழ்ந்து வா.

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:24-25). உங்களுக்கு இயேசு தேவையானால், இப்போதே அவரிடம் போங்கள், அவர் உங்களை இரட்சிப்பார். உங்களில் இயேசு இருந்தால் – அவரில் நீங்கள் இருப்பீர்களானால் – அவரைப் பற்றி, அவரை நேசித்து, அவரில் ஆனந்தமடைந்து, அவருக்குப் பணிசெய்யுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருப்பதால், அவர் உங்களைக் கடைசிவரைக் காத்து, உங்களில் அவர் ஆரம்பித்த கிரியையை அவர் பூரணமடையச்செய்வார்.


பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது

“பாவத்தை உணர்தல் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமானது, ஆனால் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல” என்று ஜெரமி வோக்கர் “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்ற தன்னுடைய ஆக்கத்தில் எழுதியிருக்கிறார். இது சிலவேளை வாசகர்களை சிந்திக்கும்படி செய்யலாம் அல்லது குழப்பவும் கூடும். அதுபற்றி இந்த ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்தேன். எந்த அடிப்படையில் ஜெரமி வோக்கர் இதை சொல்லியிருக்க முடியும்? அவர் கார்டினர் ஸ்பிரிங்கின் (Gardiner Spring) நூலின் ஒரு பகுதியின் சாராம்சத்தின் அடிப்படையில் தன்னுடைய ஆக்கத்தை எழுதியிருப்பதால் நிச்சயம் அவருடைய கருத்தும் இதுவாகத்தான் இருந்திருக்கும். கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை நான் இதற்காக மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். இதே வார்த்தைகளை அவர் தன்நூலில் பயன்படுத்தியிராவிட்டாலும் அதைத்தான் அவரும் விளக்கியிருக்கிறார். இது பாவ உணர்தலைப் பற்றிப் பியூரிட்டன் பெரியவர்கள் அநேகரிடமும் பொதுவாகக் காணப்பட்ட ஒரு விளக்கம்.

பாவத்தை உணர்தல் (Conviction of Sin)

உண்மையில் இன்றைக்கு பாவத்தை விளக்கிப் பிரசங்கிக்கும் பிரசங்கங்கள் அரிது. பாவம், பாவம் என்றே அலரிக்கொண்டிருக்கக் கூடாது. அது ஆத்துமாக்களுக்கு சங்கடத்தை உண்டாகும்; நெகட்டிவ் பிரசங்கம், ஆத்துமாக்களுக்கு ஆறுதல் தரும் செய்திகளைத்தான் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லி சுவிசேஷத்தில் பாவத்தைப்பற்றிப் பிரசங்கிப்பதையே அநேகர் கைவிட்டுவிட்டிருக்கிறார்கள். நம்மினத்தில் இதுபற்றிய விளக்கமான போதனைகள் கொடுக்கப்படுவதில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனையாக இருக்கிறது பாவம். பாவத்தைப்பற்றிய விளக்கத்தைத் தராத சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷமாக இருக்க முடியாது. அந்தளவுக்கு சுவிசேஷத்தில் இருந்து பிரிக்க முடியாததாக அது இருக்கிறது.

பாவமே மனிதனைக் கடவுளிடம் இருந்து வெகுதூரத்தில் பிரித்து வைத்திருக்கிறது. அந்தப் பாவம் அகலாதவரையில் மனிதனுக்கு விமோசனமில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளி நீங்கும்படியான பாலமாகவே இயேசு இந்த உலகத்துக்கு வந்து பாவம் நீங்குவதற்கு வழியேற்படுத்தினார். பாவத்திற்கு விளக்கம் கொடுக்கும் யோவான், “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறார்  (1 யோவான் 3:4). பத்துக்கட்டளைகளையே அவர் நியாயப்பிரமாணம் என்று இனங்காட்டுகின்றார். பத்துக்கட்டளைகள் கர்த்தரின் நீதியைப் பிரதிபலிக்கின்றன. அதற்கு நீதிக் கட்டளைகள் என்றும் பெயர். ஆதாமும், ஏவாளும் அந்தக் கட்டளைகளை மீறியதாலேயே பாவம் சம்பவித்து மனிதகுலமே பாவத்தில் வீழ்ந்தது. பாவியாகிய மனிதன் அன்றாடம் அந்தக் கட்டளைகளை மீறிவாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்தக் கட்டளைகள் போதிக்கும் நீதியான வாழ்க்கையை அவன் இயற்கையாக வாழமுடியாதவனாக, அதற்கான தகுதியைத் தன்னில் கொண்டிராதவனாக இருக்கிறான். பாவத்தில் இருந்து பாவிகளை விடுவிப்பதற்காகவே இயேசு சிலுவையில் மரித்திருக்கிறார்; தன்னையே பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணங்களை (நீதிக்கட்டளைகளுட்பட) அவர் தன்வாழ்வில் பூரணமாக நிறைவேற்றி பாவ விடுதலைக்கும், மனிதனின் இரட்சிப்புக்குமான வழியை ஏற்படுத்தினார்.

மனிதன் இரட்சிப்பை அடைய முதலில் அவன் பாவத்தை உணருவது அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷம் மனிதன் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்கிறது. ‘மனந்திரும்புதல்’ என்பது மனிதன் தான் பாவியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து அதற்குப் புறமுதுகு காட்டுதலைக் குறிக்கிறது. இந்த மனந்திரும்புதலும் கிறிஸ்துவில் விசுவாசமும் இல்லாமல் இரட்சிப்பு எவருக்கும் கிடைக்க வழியில்லை. பாவ உணர்த்தலின்றி மனந்திரும்புதல் ஒருபோதும் நிகழ முடியாது.

பாவ உணர்வும் பரிசுத்த ஆவியும்

மனிதன் தன் ஜென்ம பாவத்தையும் (ஆதாமில் இருந்து தொடர்வது), அதன் காரணமாகத் தான் வாழ்ந்துவரும் பாவ வாழ்க்கையையும் பாவநிலையில் இருந்து தானாக உணர வழியில்லை. அவனில் எந்தவித ஆத்மீக வல்லமையும், அதை அடைவதற்கான வசதிகளும் இல்லாமலிருப்பதனால் புறத்தில் இருந்து அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. ‘இரட்சிப்பு கர்த்தருடையது’ என்ற யோனாவின் வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். முற்றுமுழுதாக இரட்சிப்பைக் கர்த்தரே நிறைவேற்றி இலவசமாக மனிதனுக்கு வழங்குகிறார். அப்படி அவர் வழங்குகின்ற இரட்சிப்பை மனிதன் அடைவதற்கான வழிவகைகளையும் அவரே ஏற்படுத்தியிருக்கிறார். மனிதன் இரட்சிப்பை அடைய சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழ் வருவது அவசியம். அந்த சுவிசேஷத்தைக் கேட்டு அவன் மனந்திரும்ப வழிசெய்கிறவரே பரிசுத்த ஆவியானவர். 1689 விசுவாச அறிக்கை, ‘வார்த்தையும், ஆவியும்’ இணைந்து செயல்படுவதால் மனிதன் மறுபிறப்பு அடைகிறான் என்று 10 வது அதிகாரம் ‘திட்ப உறுதியான அழைப்பு’ என்ற பகுதி விளக்குகிறது. வார்த்தை மனிதனின் இருதயத்தில் பதிய பரிசுத்த ஆவியானவரே வழிசெய்கிறார். இதை இயேசு யோவான் 3ல் நிக்கொதேமுவுக்கு விளக்குகிறார்.

இந்தப் பெரிய காரியத்தைப் பரவலாக உலகம் பூராவும் செய்வ தற்காகவே பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்தார் (யோவான் 16:7-8). சுவிசேஷத்தைக் கேட்கும் மனிதன் பாவத்தை உணரும்படிச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. சுவிசேஷத்தின் ஓர் அங்கமான நியாயப்பிரமாணம் பிரசங்கிக்கப்பட வேண்டிய நோக்கமே அதைக் கேட்கின்ற மனிதன் தான் பிறப்பிலிருந்தே அதற்கு எதிராக செயல்பட்டு வந்திருப்பதை இருதயத்தில் உணர்ந்து மனந்திரும்ப வேண்டுமென்பதற்காகத்தான். நியாயப்பிரமாணத்தை (பத்துக் கட்டளைகளை) மீறுவதே பாவம், அதை மீறுவதைத்தவிர இயற்கையாக மனிதன் வேறெதையும் செய்வதில்லை. ஆகவே, மனிதனுக்கு தான் பாவியாக இருக்கிறேன் என்பதும், கடவுளின் கட்டளைகளை மீறிக்கொண்டிருக் கின்றேன் என்பதும் தெரிந்தாக வேண்டும். மெய்யான சுவிசேஷப் பிரசங்கம் அதை முதலில் உணர்த்தியே மனிதனுக்கு கிறிஸ்து வழங்கும் இரட்சிப்பை  இலவசமாக அளிக்கிறதாக இருக்கிறது. இப்போது தெரிகிறதா, ஏன் பாவத்தைப் பற்றி விளக்காத சுவிசேஷம் சுவிசேஷமாக இருக்கமுடியாதென்று?

மனிதனின் இரட்சிப்புக்கு கிறிஸ்து மூலம் வழியேற்படுத்தியிருக்கும் இறையாண்மையுள்ள கர்த்தர் பரிசுத்த ஆவியின்மூலம் மனிதன் தன் பாவத்தை  உணர வழிசெய்கிறார். இதைத்தான் இயேசு யோவானின் சுவிசேஷ நூலில் விளக்கியிருக்கிறார். அவர் தன் சீடர்களுக்கு பரிசுத்த ஆவியின் வருகையைப்பற்றி விளக்கி, அவர் வருகிறபோது பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் மனிதனுக்கு உணர்த்துவார் என்று சொன்னார். பரிசுத்த ஆவியானவர் இதை சுவிசேஷ செய்தியின் மூலம் பாவியாகிய மனிதனில் செய்கிறார். இந்தவிதமாக அவர் கண்டித்து உணர்த்துகிற கிரியையையே பியூரிட்டன் பெரியவர்கள் ‘மனிதனை ஆவியானவர் தயார்செய்கிற’ (Preparatory work of the Spirit) பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று தங்களுடைய எழுத்துக்களில் விளக்கியிருக்கிறார்கள். வேறு சில இறையியல் வல்லுனர்கள் இதைப் ‘பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியை’ (Common operations of the Spirit) என்று விளக்கியிருக்கிறார்கள். இத்தகைய பாவ உணர்த்தலை பாவிகள் அடையும்போது அவர்கள், பிலாத்தைப் போல ‘இந்த மனிதனில் (இயேசுவில்) நான் எந்தக் குறையையும் காண வில்லை’ என்றும், அக்கிரிப்பா மன்னனைப்போல, ‘இவனை (பவுல்) இன்னுங் கொஞ்சம் பேசவிட்டால் நானே கிறிஸ்தவனாகி விடுவேன் போலிருக்கிறது’ என்று சொல்லியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது ராஜனைப்போல இருதயம் காயப்பட்டு அடிக்கடி யோவான் ஸ்நானனை சிறையில் சந்தித்து வேதம் கேட்டதுபோலவும், இயேசுவைக் காட்டிக்கொடுத்தபின் அதற்காக வருந்தி அழுத யூதாசைப்போலவும் நடந்துகொள்ளுவார்கள். இதெல்லாம் பரிசுத்த ஆவியானரின் பொதுவான கிரியைகளில் ஒன்று. இதை ஆவியானவர் சுவிசேஷம் கேட்கிறவர்களில் பொதுவாகச் செய்கிறார்.

மெய்யான சுவிசேஷத்தைக் கேட்கிற மனிதன் அதனால் இருதயத்தில் குத்தப்படாமல் நெடுங்காலத்துக்கு இருக்க முடியாது என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவன் என்னதான் எண்ணங்களோடும், நோக்கங்களோடும் இருந்தாலும் அவனுள்ளத்தில் நிச்சயம் சுவிசேஷத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய நிலையைப்பற்றி யோசிக்க வைப்பார் என்கிறார் ஸ்பிரிங். இதற்காக அவன் மாறிவிடப்போகிறான் என்பதில்லை. அது ஆவியானவர் அவனில் செய்யும் இரட்சிப்புக்குரிய கிரியையாகிய மறுபிறப்பையும் அவனுடைய மனந்திரும்புதலையும் பொறுத்தது. பாவத்தைப்பற்றிய உணர்தலையும், குற்றஉணர்வையும் பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷம் கேட்கின்ற அனைவரிலும் பாரபட்சமின்றி செய்கிறார். எல்லோரும் சமமானவிதத்தில் பாவத்தை உணரப்போவதில்லை என்றாலும் எல்லோருக்கும் அந்த உணர்வை சுவிசேஷத்தின் மூலம் ஏதோவொருவிதத்தில் ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இது சுவிசேஷத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பொதுவான பலன். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

பரிசுத்த ஆவியின் பொதுவான செயற்பாட்டின் மூலம் பாவ உணர்வை அடைகிறவர்களில் சிலர் பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குக்கூட குற்ற உணர்வையும், ஆழமான மனஉறுத்துதலையும் அனுபவிக்கக்கூடும். அவர்கள் தங்களுடைய பாவத்தின் கோரத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் உணர்ந்து பெரும் கலக்கம் அடைவார்கள். பயமும், நடுக்கமும் அவர்களை வாட்டும். அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டால்கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. சபைக்கு வந்து சுவிசேஷ செய்தியைக் கேட்டுவிட்டு குடும்பப் பிரச்சனைகளையும், குடிப்பிரச்சனையையும் சொல்லி ஜெபிக்கும்படியும், உதவும்படியும் கேட்கிறவர்களை நாம் காணவில்லையா? அப்படி சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ இருதயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் பின்பு நம் கண்ணிலும்படாமல் போவதில்லையா? அத்தகைய மனஉறுத்துதலை அடைந்தவர்களைப்பற்றி கிறிஸ்தவ வரலாறு நமக்கு வெளிப்படுத்துகிறது. மார்டின் லாயிட் ஜோன்ஸ் அத்தகைய அனுபவத்தை அடைந்த பலரைத்  தன்னுடைய ஊழியத்தில் சந்தித்துள்ளதாகத் தான் எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் பனியனின் மோட்சப் பயணம் நூலின் ஆரம்பப்  பகுதிகளில் கிறிஸ்தியான் மனந்திரும்புவதற்கு முன்பு அத்தகைய குற்ற உணர்வினால் நெடு நாட்களுக்குப் பாதிக்கப்பட்டிருந்ததை வாசிக்கிறோம்.

பாவத்தைப் பற்றிய இந்தக் குற்றவுணர்வை மட்டும் நாம் விசுவாசத்திற்கும் இரட்சிப்பிற்கும் அடையாளமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தன்னைப் பெரும் மோசமான பாவியாகக் கருதினாலும் மனந்திரும்பாமலேயே இருந்துவிடலாம் என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவர் தொடர்ந்து, ‘பாவத்தை உணர்தல், பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்புதலைவிட முற்றிலும் வேறுபட்டது’ என்கிறார். இதைத்தான் பெரும்பாலான சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இரட்சிப்பை அடைவதற்கு, பாவ உணர்த்துதலும், குற்றவுணர்வும் மிக மிக அவசியமானபோதும் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல என்று ஜெரமி வோக்கர் எழுதியிருப்பதற்கும் இதுதான் காரணம். இத்தகைய உணர்வைப் பாவிகளில் பரிசுத்த ஆவியானவர் உண்டாக்குகிறபோதும் அவர்கள் அதைக்கடந்து அடுத்த கட்டமாகிய மனந்திரும்புதலை அடையாதவரை அவர்களுக்கு இரட்சிப்பில்லை. அநேகர் இந்தப் பாவஉணர்த்துதலைப் பெற்றிருந்தும் இரட்சிப்பை அடையாமல் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வேதத்தில் பல ஆதாரங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் சவுல், ஆகாப், யூதாசு, ஏரோது இராஜா, அக்கிரிப்பா, இயேசுவிடம் வந்த செல்வந்தனும் வாலிபனுமான யூதன் போன்ற பலரை இதற்கு உதாரணங்காட்டலாம். மாயவித்தைக்காரனான சீமோன் இந்தப் பாவ உணர்த்துதல் இருந்தும் இறுதிவரை மனந்திரும்பவில்லை.

சபைக்கு வந்துகொண்டிருக்கிற ஒருவன், ‘எனக்கு தீய எண்ணங்கள் அடிக்கடி மனதில் தோன்றி என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. இத்தகைய எண்ணங்களால் எனக்கு குற்றவுணர்வு ஏற்படுகிறது. நான் ஆவிக்குரியவனா, இல்லையா?’ என்று கேட்டால், ‘அத்தகைய குற்றவுணர்வு ஏற்படுவதே நீ ஆவிக்குரியவன், விசுவாசி என்பதற்கு அர்த்தம்’ என்று பல இடங்களில் பொதுவாகவே நம்மினத்தில் போதிக்கப்பட்டு வருவதாக ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இது மிகத் தவறானது. பாவ உணர்த்துதல் இருதயத்தில் தோன்றுவது நாம் விசுவாசி என்பதற்கு அர்த்தமேயில்லை. ஆவியானவர் மூலமாகவே அது வந்தாலும், அதைக் கடந்து ஒருவன் போயிருக்கிறானா? பாவத்தை வெறுத்து, அதைவிட்டு விலகி விசுவாசத்தை அடைந்து அதற்குரியவிதத்தில் தொடர்ந்து வாழ்கிறானா? என்றெல்லாம் அறிந்துகொள்ளாமல், குற்றமுள்ள இருதயம் இருக்கிற காரணத்துக்காக ஒருவரை விசுவாசியாகக் கருதுவது இந்த விஷயம் பற்றிய ஞானமில்லாததால் இழைக்கப்படும் பெருந்தவறு.

பாவஉணர்த்துதலையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்துவது பரிசுத்த ஆவியானவராக இருப்பதால் அது இரட்சிப்போடு இணைந்தது என்று பலர் தவறாக நம்மினத்தில் எண்ணிவிடுகிறார்கள். அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் ஆவிக்குரிய அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோவார் என்று நினைக்கிறார்கள். வேதம் அப்படிப் போதிக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே உதாரணங்களைக் காட்டியிருக்கிறேன். பாவஉணர்வை ஆவியானவர் ஒருவரில் சுவிசேஷத்தின் மூலம் ஏற்படுத்துவது எல்லா ஆத்துமாக்களிலும் அவர் செய்யும் பொதுவான கிரியைகளின் ஒருபகுதியே தவிர தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் செய்யும் சிறப்பான கிரியையோடு இணைந்தது அல்ல.

பாவத்தை உணர்தலும் மனந்திரும்புதலும்

இதுவரை பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியையான பாவ உணர்த்துதலையும் அதன் மூலம் மனித இருதயத்தில் குற்ற உணர்வை அவர் உண்டாக்குவதையும் கவனித்திருக்கிறோம். இரட்சிப்பிற்கு இது மிக மிக அவசியமானபோதும் இது மட்டும் இரட்சிப்பை அடைந்ததற்கு அடையாளமில்லை என்றும் பார்த்திருக்கிறோம். இந்தப் பரிசுத்த ஆவியானவரின் பாவ உணர்த்துதல் எப்படி ஒருவருடைய இரட்சிப்பில்போய் முடிகிறது என்பதை ஆராய்வது அவசியம். இதை இறையியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முதலில், கர்த்தரால் அநாதியிலேயே தெரிந்துகொள்ளப்படாமல் இருக்கும்  ஒருவன் பாவஉணர்த்துதலை அடைந்தாலும் இரட்சிப்பை அடையும்படி மனந்திரும்பமாட்டான். வேத இறையியல் அடிப்படையில் அது முழுக்க முழுக்க உண்மை. தன்னுடைய பாவநிலைக்கு முழுப்பொறுப்பாளியாக இருக்கும் அவன் மனந்திரும்ப மறுத்து நிற்பான். சுவிசேஷத்தைக் கேட்டு, அதனால் இருதயம் பாதிக்கப்பட்டிருந்தபோதும், அவனுக்கு உலக இன்பம் பெரிதாகத் தெரிந்து அதில் திளைத்திருப்பதையே நாடிப்போகிறான். இத்தகையவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும், பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியைக்குள் வரும்படியும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். அவருடைய இருதயத்தாகம் கேடானவர்களும் திருந்தி தேவ இராஜ்யத்தை அடைய வேண்டும் என்பதுதான். இதற்காகவே அனைவரும் கேட்பதற்காக சுவிசேஷத்தை ஏற்படுத்தி, அதை உலகெங்கும் போகவைக்கும்படியாக இயேசு பரிசுத்த ஆவியானவரை அனுப்பிவைத்தார். மனிதனின் பாவநிலை அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலையை அனுமதிப்பதில்லை. பாவஉணர்த்துதலைப் பெற்றும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் அடையும் நீதியான நித்திய தண்டனைக்கு அவர்களே முழுப்பொறுப்பு.

அதேவேளை, பாவஉணர்த்தலையும், பாவத்திற்கான குற்ற உணர்வையும் அடைந்து, மனந்திரும்புகிறவர்களே மெய்யான கிறிஸ்தவ விசுவாசிகள். மனந்திரும்புதல் என்பது பாவத்தை உணர்வதும், அதற்கான குற்ற உணர்வை இருதயத்தில் கொண்டிருப்பதும் மட்டுமல்ல. அந்தப் பாவஉணர்தலோடு நின்றுவிடாமல் பாவத்தில் இருந்து மீண்டுவாழ அதற்கு விடுதலையளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவை நாடி வருதல் அவசியம்; கிறிஸ்துவைத் தன்னுடைய பாவவிடுதலைக்காக மனந்திரும்பி விசுவாசித்தல் அவசியம். 1689 விசுவாச அறிக்கை 15ம் அதிகாரத்தில் மனந்திரும்புதலைப்பற்றி விளக்குகிறபோது, ‘பரிசுத்த ஆவியின் மூலம் தன்னில் உள்ள பாவத்தின் பலவிதமான கேடுகளை உணருபவன் நற்செய்தியின் கிருபையாகிய இரட்சிக்கும் மனந்திரும்புதல் மூலம் இதை அடைகிறான். அத்தோடு அவன் பாவத்தின் காரணமாக தன்னைத் தாழ்த்தி கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறான். இத்தாழ்மைப்படுத்தல் தேவனுக்கேற்ற துக்கம், பாவத்தில் வெறுப்பு, சுய அருவருப்பு ஆகிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்’ (பத்தி 3) என்று கூறுகிறது.

மனந்திரும்புவதற்கு, முதலில் ஒருவன், தான் நீதியான கர்த்தருக்கு முன் பாவியாக நின்று நித்திய தண்டனையை எதிர்நோக்கி இருப்பதை உணர வேண்டும். பத்துக்கட்டளைகளை நிராகரித்து அவற்றிற்கெதிராக வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்தல் அவசியம். மனந்திரும்புவது என்பது, ஒருவன் தன் பாவத்திற்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல் அதை இருதயத்தில் அடியோடு வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி, அதிலிருந்து விடுபடவழி செய்திருக்கும் பாவநிவாரணியான கிறிஸ்துவை மட்டுமே தேவனாக முழுஇருதயத்தோடும் விசுவாசிப்பதாகும். பாவத்தில் இருந்து விடுதலை அடைய பாவஉணர்தலை அடைய வேண்டும் என்பதல்ல சுவிசேஷம்; மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசி என்பதே சுவிசேஷம். மனந்திரும்புதலின் ஆரம்பப்படி பாவத்தை உணர்தல்; அது முழுமையான ஆவிக்குரிய மனந்திரும்புதலிலும், இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் விசுவாசிக்கும் விசுவாசத்திலும் போய் முடியவேண்டும்.

இறையியலடிப்படையில் மனந்திரும்புதலும் (கிறிஸ்துவில் வைக்கும்) விசுவாசமுமே இரட்சிப்பை அடைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள். (அப்போஸ்தலர் 20:21, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும்; சாட்சியாக அறிவித்தேன்.) மனந்திரும்புதலா, விசுவாசமா முதலில் எது வரவேண்டும் என்ற விவாதத்தில் பல இறையியலறிஞர்கள் ஈடுபட்டு வந்திருந்திருக்கிறார்கள். 1689 விசுவாச அறிக்கையில் இரட்சிக்கும் விசுவாசம் (14) முதலில் விளக்கப்பட்டு அதற்கு அடுத்த அதிகாரத்தில் மனந்திரும்பதல் (15) விளக்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஜோன் மரே சொல்லுவதுபோல், அதில் எது முதலில் வரவேண்டும் என்பதைவிட அவை இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதை உணர்வதுதான் முக்கியம். ஒன்றில்லாமல் மற்றது இருக்காது. சீர்திருத்த இறையியலறிஞரான சின்கிளேயர் பேர்கசன் (Sinclair Ferguson), இதை அழகாக விளக்கியிருக்கிறார். அதாவது,  இரண்டு விசுவாசிகளை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வளர்ப்பு முறை, மனநிலைக்கு ஏற்ப அவர்களுடைய விசுவாசத்தின் வெளிப்பாடு அமைந்திருக்கும் என்கிறார். பெரும் பாவவாழ்க்கை வாழ்ந்து சீரழியாமல் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து இரட்சிப்பை அடைந்திருக்கும் ஒருவன் தான் அடைந்திருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகப்பேசி மகிமைப்படுத்துவான்; அவனுக்கு பாவஉணர்தல் உண்டாகி மனந்திரும்பியிருந்தபோதும், அவனுடைய பேச்சில் கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசம் பற்றியே அதிகமாக இருக்கும். அதேநேரம் பாவத்தைச் செய்து சீரழிந்து மனந்திரும்பியிருக்கும் ஒருவனில், அவனுடைய மனந்திரும்புதலைப்பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். அவனும் கிறிஸ்துவை விசுவாசித்திருந்தபோதும், கோரமான பாவத்தில் இருந்து அடைந்திருக்கும் விடுதலை அவனுடைய பேச்சிலும், மூச்சிலும் மேலிடம் பெற்றிருக்கும். இதற்காக ஒன்றிருந்து மற்றதில்லை என்பதில்லை. இருவரிலும் மனந்திரும்புதலும், விசுவாசமும் இடம்பெற்றிருக்கிறது (அவை இல்லாமல் அவர்கள் இரட்சிப்பை அடைந்திருக்க முடியாது). அவர்களுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய விடுதலைக்குத் தக்கதாக அது அவர்களில் வெளிப்படுகிறது.

மனந்திரும்புதலை அடைய ஒருவன் எந்தளவுக்கு, எத்தனை ஆழமாகப் பாவஉணர்தலையும், குற்ற உணர்வையும் பெற்றிருக்க வேண்டும்? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறபோது பிரசங்கிகள், ஆத்துமாக்கள் பாவத்தை அறிந்து உணர்வது அவசியம் என்று வலியுறுத்துவார்கள். அதற்கு உதாரணமாக கெட்டகுமாரனின் உவமை மற்றும் ஜோன் நியூட்டன் போன்றோரின் அனுபவங்களையும் விளக்குவார்கள். இதையெல்லாம் கேட்கிறவர்கள்  எந்தளவுக்கு நம்மில் பாவஉணர்தலும், குற்ற உணர்வும் இருக்க வேண்டும் என்று சிந்திக்கக்கூடும். அதற்கு பதில் – கிறிஸ்துவில் இரட்சிப்படைய எந்தளவுக்கு அது தேவையோ அந்தளவுக்கு இருக்க வேண்டும். அதைத் தீர்மானிக்கிறவரும், கொடுக்கிறவரும் கர்த்தரே. நீதியுள்ள கர்த்தர்முன், தான் ஒன்றுமில்லாத பிச்சைக்காரனைப்போல நிற்கிறேன் என்றும், அவருடைய நீதிக்கட்டளைகளுக்கெதிராக வாழ்ந்து அவருக்கு எதிரியாக இருந்திருக்கிறேன் என்றும், தன்னுடைய இருதயம் பொல்லாப்புள்ளது என்றும் உணர்வதும், வருந்துவதும் இங்கே மிக அவசியம். இது எந்தளவுக்கு ஒருவருடைய இருதயத்தைத் தாழ்த்துகிறதென்பது ஒவ்வொரு விசுவாசியையும் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும். இதை ஒருவரில் உண்டாக்குகிற பரிசுத்த ஆவியானவர் அவரவருடைய வாழ்க்கைப் பின்னணி மற்றும் அனுபவங்களுக்கேற்பவே அதைச் செய்கிறார். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரேவித அளவுகோளில்லை. ஜோன் நியூட்டனைப் போலவோ அல்லது பாவஉணர்தலைப் பலமாதங்களுக்கு அனுபவித்து வருந்தி வாடிக் கர்த்தரிடம் சேர்கிற ஒரு மனிதரைப்போலவோ அனுபவங்களைக் கொண்டிராமல் இரட்சிப்பை அடைய முடியாது என்று எண்ணுவது மிகத் தவறு. அத்தகைய ஆழமான, நெடுநாட்களுக்கு நீடித்த அனுபவங்களை எல்லோரும் கொண்டிருப்பார்கள் என்று வேதம் போதிக்கவில்லை; அதை எதிர்பார்க்கவும் கூடாது. பாவத்தை உணர்ந்து, வருந்தி, மனந்திரும்ப வேண்டும் என்பதே வேதபோதனை.

பாவஉணர்த்துதலுக்கும் மனந்திரும்புதலுக்கும் இடையில் கால இடைவெளி இருக்கவேண்டுமா? அத்தகைய இடைவெளி இல்லாத மனந்திரும்புதல் பெலனற்றதா? இல்லை என்பதுதான் இரண்டு வினாக்களுக்கும் பதில். பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தவரையில் இடைவெளி காணப்படலாம். அதுவே எல்லோரிடமும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை; அப்படி இருந்ததுமில்லை. இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கவேண்டிய இடைவெளியைவிட மனந்திரும்புதலின் ஆவிக்குரிய தரமே முக்கியம். மனந்திரும்புதல் மெய்யானதா என்பதிலேயே வேதம் கவனம்  செலுத்துகிறது. இயேசுவோடு கல்வாரியில் அறையப்பட்டிருந்த மனந்திரும்பிய  கள்வனிடம் பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படவில்லை. ஆனால் பவுல் அப்போஸ்தலன் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசுவை சந்தித்தபோது அவனுக்கு பாவ உணர்த்துதல் உண்டாகி பின்பு தமஸ்குவை அடைந்து அனனியா அவன்மீது கரம் வைத்து ஜெபித்தபோதே முழு மனந்திரும்புதலும், விசுவாசமும் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரிடமும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒரேவிதத்தில் அமைந்திருக்கவில்லை. இருந்தபோதும் இருவருடைய விசுவாசமும் முழுமையான மெய்யான விசுவாசமாக இருந்தது.

முடிவாக . . .

பாவத்தை உணர்ந்து அதற்காக வருத்தப்பட்டுவிடுவதால் மட்டும் பரலோகம் போய்விட முடியாது என்று இந்த ஆக்கத்துக்கு ஏன் தலைப்புக் கொடுத்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறதா? மெய்யான மனந்திரும்புதலின் ஓர் அங்கமாக பாவஉணர்வும் அதற்காக வருந்துதலும் இருந்தபோதும், மனந்திரும்புதலை நோக்கி அழைத்துப்போகாத பாவ உணர்தல் மெய்யான மனந்திரும்புதலோடு இணைந்ததல்ல. மெய்யாக மனந்திரும்பியவர்கள் (இரட்சிப்படைந்தவர்கள்), மனந்திரும்பிய பிறகு அதிகமாகவே பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தி, தொடர்ச்சியான திருத்தத்தோடு வாழ்வார்கள். உங்களுடைய பாவ உணர்தலும், குற்றவுணர்வும் எந்தவகையைச் சேர்ந்தது? வாசியுங்கள் மத்தேயு 7:13-27 வரை. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களை சிந்திக்க வைக்கட்டும்.


அர்த்தமுள்ள தாழ்மை

இந்த நாட்களில் தாழ்மையைப் பற்றிச் (Humility) சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தாழ்மையைப் பற்றி அதிகமாக பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதன் முழுப்பொருளையும் உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. தாழ்மை பேசுகிற, விவாதிக்கிற ஒரு விஷயமல்ல; அது வாழ்க்கையில் மற்றவர்கள காணும்விதத்தில் இருக்க வேண்டியது. தாழ்மையென்ற உடனேயே பலருக்கு காந்தி தாத்தா நினைவுக்கு வந்துவிடுகிறார். அவரைப்போல மேல் சட்டை இல்லாமல் அரைவேட்டி கட்டியிருந்தால் அதுதான் தாழ்மைக்கு அடையாளமாகப்படுகிறது அநேகருக்கு. எளிமையாக உடுப்பதும், வாழ்வதும் தாழ்மைக்கு அடையாளம் என்பதே பலருடைய மனதிலும் பொதுவாக இருக்கும் கருத்து. தாழ்மைக்கும் வெளித்தோற்றத்திற்கும் தொடர்பு இருந்தாலும்கூட தாழ்மை உண்மையில் புறத்தோற்றத்தோடு மட்டும் சம்பந்தமானது அல்ல.

தாழ்மையும் புறத்தோற்றமும்

ஒருவர் கனிவான முகத்தோடும், தேனூறும் வார்த்தைகளோடும், அமைதியான தோற்றத்தோடும் இருந்துவிடலாம். அது தாழ்மைக்கு அடையாளமா? உண்மையில் நிச்சயம் இல்லை. இப்படிப் பார்த்தே நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தாழ்மை துப்புரவாக இல்லாத வர்களிடம்கூட இவை இருந்துவிடலாம். வெளித்தோற்றத்திற்கு அமைதியும், எளிமையுமுள்ளவர்போல் இருந்து உள்ளத்தில் சாக்கடையை வைத்துக்கொண்டிருந்திருக்கிற பலரை வேதம் நமக்கு இனங்காட்டிக் கொடுக்கவில்லையா? தாழ்மையைப் பற்றி சிந்திக்கும்போது, நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு வாலிபன் என்னைப்பார்த்து, ‘ஐயா, நீங்கள் இப்படி நல்ல சர்ட் போடுகிறீர்களே, இது தாழ்மைக்கு அடையாளமா?’ என்று கேட்டான். அதுதான் முதல் தடவை அப்படி எவரும் என்னைப்பார்த்துக் கேட்டது. அந்த வாலிபனுடைய பிரச்சனையை நான் புரிந்துகொண்டிருந்தேன். கட்டுப்பாட்டோடு பணத்தை இறுக்கிப்பிடித்து செலவுகளை செய்து வாழவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தது மட்டுமல்ல, அவனுடைய அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே அவன் மற்றவர்களைப் பார்த்தவிதமும் இருந்தது. இதற்காக அவன் கிழிந்த சட்டையைப் போட்டிருக்கவில்லை. அவனுக்கு நல்ல ஆலோசனை தரத் தீர்மானித்து வெளியில் தெரிவதை மட்டும் வைத்து எவரையும் எடைபோட்டுவிடக்கூடாது என்று புத்தி சொன்னேன். மற்றவர்களுடைய தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்ப்பது நம்முடைய இருதயத்தின் நிலையையே காட்டுகிறது என்பதை விளக்கி உதாரணங்களைக் கொடுத்துத் திருத்தினேன். எத்தனை இலகுவாக மற்றவர்களை நாம் நியாயந்தீர்த்துவிடுகிறோம். அதேநேரம் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க நமக்கு எத்தனை கஷ்டமாக இருக்கிறது.

தாழ்மை ஆவிக்குரியது


தாழ்மை என்பது விலைகுறைந்த சர்ட் போடுவதிலோ, செருப்பில்லாமல் தெருவில் நடப்பதிலோ, குடிசையில் வாழ்வதிலோ, அரைவயிற்றுக் கஞ்சியோடிருப்பதிலோ தங்கியிருக்கவில்லை. அது அடிப்படையில் இருதயம் சம்பந்தப்பட்டது. அப்படித்தான் வேதமும் அதற்கு விளக்கங் கொடுக்கிறது. தாழ்மையை ஆவிக்குரிய குணாதிசயமாக வேதம் காட்டுகிறது. உண்மையில் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு தாழ்மையைப் பற்றித் தெரியாது. இது கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம், இருந்தாலும் உண்மை அதுதான். இல்லாவிட்டால் வேதம் அதை ஆவிக்குரியதாக விளக்கியிருக்காது. அன்னை தெரேசா கொல்கத்தாவில் உலகம் வியக்க சேவை செய்தார். அதைத் தாழ்மைக்கு அறிகுறியாக உலகம் பார்க்கும். உண்மையில் கடவுளையே வாழ்க்கையில் கொண்டிராமல் அத்தகைய நல்ல பணிகளை நாம் செய்துவிடக்கூடிய விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் சாயலில் இருக்கிற மனிதன் பாவியாக இருந்தபோதும் மனிதத்தன்மையை இழந்துவிடவில்லை. அந்த மனிதத்தன்மையே அன்னை தெரேசாவை சேவை செய்ய வைத்தது. அதை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், மதமே இல்லை என்கிறவர்களும் செய்துவிடலாம். கடவுளே இல்லை என்று சொல்லுகிற கமலஹாசன் தன்னுடைய உடல்பூராவையும் தானமாக எழுதிவைத்துவிடவில்லையா? எத்தனையோ நற்பணிகளை நாள்தோறும் செய்துவிடவில்லையா? பிறப்பிலிருந்து வரும் மனிதத்தன்மை மனிதனை அத்தகைய காரியங்களைச் செய்யும்படிச் செய்கிறது. இதிலிருந்தே கடவுள் இருப்பதையும் மனிதன் புரிந்துகொள்ள வேண்டும். அவரால் படைக்கப்பட்டவனாக மனிதன் இருப்பதாலேயே அவனால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து அதிலிருந்து கடவுளின் கிருபையால் விடுதலை அடைகிறபோதே தாழ்மையோடு வாழும் நிலையை ஆவியின் மூலம் அடைகிறான். தாழ்மைக்கு எதிர்மறையானது ஆணவம், அகங்காரம். பாவத்தில் இருக்கும் மனிதன் ஆணவத்தோடு வாழ்கிறான். அவனால் கடவுள் முன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள இயலாமல் இருக்கிறது. கடவுள் வேண்டும் என்கிற எண்ணங்கொண்ட மனிதனுக்கும் அவரை விலைகொடுத்து வாங்கவும், அவருக்கே லஞ்சம் கொடுக்கவுந்தான் முடிகிறது. அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள அவனில் இருக்கும் பாவம் இடங்கொடுக்காது. அவனுடைய ஆணவம் அவனை அழிவை நோக்கிக் கொண்டு செல்கிறது. தாழ்மையும் ஆணவமும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆவியால் மறுபிறப்படைந்தவனுக்கே தாழ்மையைத் தன்னில் நடைமுறையில் கொண்டிருக்க முடியும்.

கிறிஸ்தவனுக்கு தாழ்மை இல்லாமல் இருக்க முடியாது. தாழ்மையைத் தன்னில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். யாக்கோபு சொல்லுகிறார், ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்’ என்று (யாக்கோபு 4:10). கிறிஸ்தவனில் தொடர்ந்திருக்கும் பாவம் (மரணத்தின் சரீரம், ரோமர் 7:27), அவன் சோதனைக்குள்ளாகி தொல்லைப்படுகிறபோது ஆணவத்தை அவனில் தலைதூக்க வைத்துவிடலாம். கிறிஸ்தவன் அதை எதிர்த்துப் போராடித் தன்னுடைய இருதயத்தில் தாழ்மை இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளக்கூடிய கடமையுள்ளவனாக இருக்கிறான். தாழ்மையை அவன் அன்றாடம் தன்னில் வளர்க்காவிட்டால் ஆணவம் தலைதூக்கி அவன் இருதயத்தை மாசுபடுத்திவிடும். ‘தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.’ (நீதிமொழிகள் 22:4). இதில் தாழ்மையையும் கர்த்தருக்குப் பயப்படுதலையும் இணைத்து எழுதியிருக்கிறான் சாலமோன். கர்த்தருக்குப் பயமிருக்கிற இருதயத்திலேயே தாழ்மை இருக்கும். இயேசு பிள்ளைகளை உதாரணங்காட்டி அவர்களைப் போல நம்மைத் தாழ்த்திக்கொள்ளும்படி அறிவுரை சொன்னார் (மத்தேயு 18:4). குழந்தைகளுக்கு கபடம் தெரியாது, சூதுவாது அறியாதவர்கள் அவர்கள். வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். அங்கேதான் தாழ்மை இருக்கும். வேதபாரகர்களிடமும், பரிசேயர்களிடமும் தாழ்மை இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்? அவர்கள் மாயக்காரர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளுவதிலேயே எப்போதும் குறியாக இருந்தார்கள். அதனால்தான் இயேசு, ‘தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்று சொன்னார் (மத்தேயு 23:12). நேபூகாத்நேச்சார் ஆணவத்தோடு தன்னைப் பெருமைப்படுத்தியதால் கர்த்தர் அவனைத் தரைகவிழ வைத்தார்; தாழ்த்தினார்.

கிறிஸ்தவனின் அடிப்படைக் குணாதிசயம்

தாழ்மையைப் பற்றி வேதம் இத்தனை தூரம் விளக்குவதற்குக் காரணம் அது கிறிஸ்தவனின் அடிப்படைக் குணாதிசயமாக இருப்பதால்தான். கிறிஸ்து இருக்கும் இருதயத்தில் அது இருந்தாக வேண்டும்; அன்றாடம் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அது தாழ்ந்த நிலையில் இருக்கும் இருதயத்தில் ஜெபம் குறையும், வேத வாசிப்பு குறையும். உலக எண்ணங்களும், ஆசையும் அதிகரிக்கும். சகோதரர்களைப் பார்த்துப் பொறாமைப்படச் செய்யும். மற்றவர்களோடு இருக்கும் உறவைக் கொச்சைப்படுத்தும். குடும்பத்தில் இருப்பவர்களிடமும் ஆணவத்தோடு நடந்துகொள்ள வைத்துவிடும். இந்தத் தவறையெல்லாம் கிறிஸ்தவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தவறுவதால் செய்துவிடலாம் தெரியுமா? சமீபத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்ன ஓர் உண்மை நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது அவர் அனுபவத்தில் பார்த்த ஒன்று. இளம் போதகனான ஒருவன் ஓர் அருமைப் போதகருடைய பிரசங்க ஊழியத்தால் கவரப்பட்டு அவரைப்போலப் பணிசெய்ய ஆசைப்பட்டு அவரைப் போலப் பேசியும், நடந்தும் வர ஆரம்பித்தான். அந்தப் பிரபலமான போதகர் இதை எப்படியோ அந்த இளம்போதகனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் கவனித்து அவனுக்கு உதவ எண்ணி அவனைப் பார்த்து, ‘சகோதரா, உன்னில் இருக்கின்ற ஆணவத்தை இல்லாமல் ஆக்கிக்கொள்ளப் பார்’ என்று அன்போடு அறிவுரை சொன்னார். அந்த இளம்போதகனால் அதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் உயர்வாக நினைத்திருந்தவர் இப்படித் தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டாரே என்று அன்று முதல் அவரை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். அவருக்கெதிராக நடந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுடைய இருதயத்தை இறுமாப்பு ஆளத்தொடங்கி சரீரத்தின் இச்சைகளான கோபம், மூர்க்கம், பொறாமை, வெறுப்பு, புறம்பேசுதல், கூடாப்பேச்சு எல்லாவற்றையும் அவனில் வளர்ந்து அதிகரிக்கச் செய்தது. வெளிப்பார்வைக்கு அவன் கனிவானவனாக நடந்துகொண்டபோதும் அவனுடைய இருதயம் இருட்டாகி இரட்டை வாழ்க்கை வாழவைத்தது. தான் உயர்வாக நினைத்திருந்த அந்தப் பிரபலப் போதகரை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டி அவன் வாழ ஆரம்பித்தான். இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா? கிறிஸ்தவன் தன்னை அன்றாடம் திருத்திக்கொண்டு வாழாமல் போனால் இறுமாப்பு அவன் இருதயத்தை இருட்டாக்கி அவிசுவாசியைப்போல வாழவைத்துவிடும். ஆவிக்குரிய குணாதிசயங்களை அவனில் காணவழியில்லாமல் செய்துவிடும். ஆணவம் நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லும்; தாழ்மையோ பரலோகக் கதவைத் திறந்து வைக்கும்.

பவுல் கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில், ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு . . . தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய் . . . மனத்தாழ்மையையும் . . . தரித்துக்கொள்ளுங்கள்’ என்று காரணமில்லாமலா சொல்லியிருக்கிறார் (கொலோசெயர் 3:9-12). இங்கே தாழ்மையை ‘மனத்தாழ்மை’ என்று பவுல் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். தாழ்மை மனதில், இருதயத்தில் இருக்கவேண்டியது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அத்தோடு, மனத்தாழ்மை கொண்டிருக்கக்கூடியவனாக கிறிஸ்தவன் இருந்தபோதும் அது தானே இயல்பாக வந்துவிடாது என்பதையும் பவுல் சுட்டிக்காட்டி அதை அணிந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார். சட்டையை எடுத்து அணிந்துகொள்ளுவதுபோல் மனத்தாழ்மையை நம்மில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே பேதுருவும், ‘ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்’ என்று கூறி ‘பெருமையுள்ளவர்களுக்கு (இறுமாப்பு) தேவன் எதிர்த்து நிற்கிறார்’ என்று எச்சரிக்கிறார் (1 பேதுரு 5:5). அடுத்த வசனத்தில் அவர், ‘ஏற்றகாலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்’ என்கிறார். இந்த வசனத்தில் ‘அடங்கியிருங்கள்’ என்ற வார்த்தைக்கு ‘தாழ்ந்திருங்கள்’, ‘தாழ்மையைக் கொண்டிருங்கள்’ என்பதே முறையான எழுத்துப்பூர்வமான மொழிபெயர்ப்பு. பெருமையுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்துதான் யாக்கோபுவும் பேதுரு தந்துள்ள அதே அறிவுரையை நினைவுபடுத்தி, ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்’ என்கிறார் (யாக்கோபு 4:10).

தாழ்மை எளிதில் வந்துவிடாது

இத்தனையும் உண்மையாயிருந்தும் தாழ்மையோடிருப்பது என்பது இட்லிபோல் இலகுவாக வெந்துவிடாது. சரீரத்தை ஒடுக்கி, மனதை அன்றாடம் அடக்கித் தாழ்மையை நாம் அணிந்திருக்க வேண்டும். அதனால்தான் வேதம் இயேசுவையே நமக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது. பிலிப்பியர் 2ம் அதிகாரத்தைக் கவனியுங்கள்.

‘கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக் கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.’ (பிலிப்பியர் 2:5-8).

இந்த வசனப்பகுதியில் ஆழமான சத்தியங்கள் பொதிந்து காணப்படு கின்றன. முதலில் இது இயேசு கிறிஸ்துவின் மானுட ரூப வருகையையும், வாழ்க்கையையும் பற்றி விளக்குகிறது. தேவனாயிருந்தும் மனிதனாக அவர் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்த தாழ்த்துதலைப் பற்றி இது விளக்குகிறது. அது இந்த வசனங்களின் அடிப்படைப் போதனை. பவுல் கிறிஸ்துவின் அந்தத் தாழ்த்துதலை உதாரணமாகக் காட்டி நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பொறுப்போடு உழைக்க வேண்டும் என்று விளக்கி அதற்கு இயேசு தன்னைத் தாழ்த்திக்கொண்டவிதமாக நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கடவுளாக இருக்கின்ற தேவகுமாரன் மனிதனாக உருவேற்று மானுடத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள். சர்வ வல்லவரான அவர் தனக்கிருந்த அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் முழுமையாக மானுடத்தில் வாழ்ந்து தான் வந்த நோக்கத்தைக் கீழ்ப்படிவோடு நிறைவேற்றினார் என்பதை நாம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்துத் தியானித்து அவரைப் போற்ற வேண்டும். கிறிஸ்து அந்தளவுக்குத் தாழ்மையைக் கைக்கொண்டார்; அவரே நமக்கு முன்னுதாரணம். இப்போது சொல்லுங்கள் வந்துவிடுமா தாழ்மை நமக்கு இலகுவாக? ஜெபத்தோடும், தேவபயத்தோடும் நாம் நம்மில் கருத்தோடு வளர்க்க வேண்டிய கிருபையல்லவா அது.


முன்னால் தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரை தாழ்மையானவர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜியாரையும் அப்படித்தான் சொல்லுவார்கள். இன்னும் காந்தி, இராமலிங்க வள்ளலார் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது மக்கள் கைவசம் – தாழ்மைக்கு உதாரணங்காட்டுவதற்கு. இவர்களெல்லோரும் கிறிஸ்தவர்களல்ல. தங்களுடைய மானுடத்தில் படைப்பிலிருந்து தேவ சாயலோடு இருப்பதால் பொதுவான கிருபைக்கு அடையாளமாக இவர்களிடம் கனிவும், சில நல்ல பண்பாடுகளும் இருந்திருக்கின்றன. வேதம் போதிக்கும் தாழ்மையை அடைய இவை மட்டும் போதாது. காந்தி தன் எளிமையான வாழ்க்கையையும், அன்னை தெரேசா தன்னுடைய அருஞ்சேவையையும் மட்டும் சொத்தாகக் கொண்டு பரலோகத்தை அடைந்திருக்க முடியுமா? ‘ஒருவனாகிலும் நற்கிரியைகளைச் செய்கிறவர் இல்லை’ என்று கர்த்தர் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே. இவர்களுடைய செய்கைகள் அனைத்தையும் அவர்களில் இருக்கும் பாவம் கர்த்தர் முன் செயலிழக்கச் செய்துவிடுகிறதே. இரட்சிப்பை அடையாமல் இவர்களால் கர்த்தருக்கேற்ற எந்த நற்கிரியையும் ஒருபோதும் செய்திருக்க முடியாது. நாமோ கர்த்தரை ருசித்திருக்கிறோம். அவரை இனங்கண்டு கிறிஸ்து இயேசுவை விசுவாசித்திருக்கிறோம். நற்கிரியைகளைச் செய்யக்கூடியவர்களாக ஆவியால் உருமாற்றப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்மால் முடியும் தாழ்மையோடு வாழ. தாழ்மையாயிருப்பது – இருக்கலாம், இல்லாமலும் இருந்துவிடலாம் என்பது போன்ற விஷயமல்ல நமக்கு. நாம் தாழ்மையோடிருந்தாக வேண்டும். அது கிறிஸ்தவத்தின் அடையாளம்; கிறிஸ்தவனின் இலக்கணம்.

இன்று நடைமுறையில் நம்மினத்தில் இருந்துவரும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய வல்லமையற்றதாக, பெயரளவில் மட்டும் கர்த்தரைச் சார்ந்ததாகக் காணப்படுவதற்கு காரணம் இப்போது உங்களுக்குத் தெரிகிறதா? அதில் ஆவியானவரின் கிரியை இல்லை, கிறிஸ்தவத்தின் அடிப்படை இலக்கணத்தை அதில் பார்க்கமுடியாமல் இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய முக்கிய அடையாளமான மனத்தாழ்மையை அதில் காண முடியாமல் இருக்கிறது. ஊழியத்தில் இருப்பவர்களானாலும் சரி, சராசரிக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி மனத்தாழ்மையில்லாதவர்களாக இருதயத்தை அடக்கிப் பாதுகாக்காமல் இருந்து வருகிறார்கள். பெரிய பாவங்களை செய்யவில்லை என்று மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்தவ பரிசேயக்கூட்டமே நம்மத்தியில் அதிகமாக இருக்கிறது. இருதயத்தில் ஆணவம் (பெருமை, ஈகோ) இருக்கின்ற உணர்வுகூட இல்லாமல் சக கிறிஸ்தவர்களைப்பற்றி புறம்பேசியும், தூஷித்தும் இருதயம் பூராவும் கழிவுகளை ஊறி வளரவிட்டு பேருக்கு ஜெபித்தும், தியானித்தும் வாழ்கிற ஆவியற்ற மதச் சடங்கு வாழ்க்கையில் தாழ்மைக்கேது இடம்? மனத்தாழ்மை என்பது பெரிய விஷயம்; ஆழமான விஷயம். அதில் எவ்வளவோ உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அதன் பேரவசியத்தை உணர்ந்திருந்ததால்தான் பியூரிட்டன் பெரியவர்களான தொமஸ் வொட்சன், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பனியன், ஜோன் ஓவன், ஜெரமாயா பரோஸ் போன்றோர் அதுபற்றித் தாராளமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

தாழ்மையும் கோழைத்தனமும்

மத்தேயு 5:3ல் இயேசு, ‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகம் அவர்களுடையது’ என்கிறார். ஆவியில் எளிமையானவர்களுக்கே தாழ்மையிருக்கும். இயேசு தொடர்ந்து, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்’ என்று (5:5) சொல்லுகிறார். இங்கே ‘சாந்தகுணம்’ (Meekness) என்பது ஆவியில் எளிமையாயிருக்கின்றவர்கள் கொண்டிருக்கும் தாழ்மையைக் குறிக்கிறது. பலர் சாந்தமாயிருப்பதைக் கோழைத்தனமாகக் கருதிவிடுவதுண்டு. தாழ்மைக்கும் கோழைத்தனத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிறவனே உண்மையில் கோழை. அதை அவன் ஏன் செய்கிறான் தெரியுமா? தன்னுடைய அகங்காரத்தால் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு தீய இருதயத்தால் செய்கிறான். மூர்க்கம் பட்டென்று வந்துவிடும். அசிங்கமாகப் பேசுவதற்கு நேரமெடுத்து சிந்திக்கத் தேவையில்லை. சாந்தமாக, தாழ்மையோடிருப்பதற்குத்தான் பொறுமை அதிகம் தேவை. அடிக்கிறவனைப் பார்த்து மறுகன்னத்தைக் காட்டி சாந்தத்தோடு நிற்கிறவன் இயேசுவைப்போல இருதயத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வல்லவன். தாழ்மையிருக்கும் இடத்திலேயே தைரியமும் இருக்கும். மார்டின் லூதருக்கும், ஜோன் நொக்ஸுக்கும், ஹியூ லத்திமருக்கும், ஜோன் கல்வினுக்கும், ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் இருந்ததுபோல. இவர்களெல்லோரையும் உலகம் தைரியமற்ற, கையாளாகதவர்களாகத்தான் பார்க்கும். ஏன் தெரியுமா? அவர்கள் திருப்பி அடித்ததில்லை. விட்பீல்ட் பிரசங்கம் செய்த பல இடங்களில் கூட்டத்திலிருந்த சிலர் அவர் மீது மனிதக்கழிவுகளை எறிந்திருக்கிறார்கள். விட்பீல்ட் ஆத்திரமடையவில்லை. இருதயத்தைக் கட்டுக்குள் வைத்திருந்ததாலேயே இவர்கள் எல்லோராலும் தாழ்மையைக் கொண்டிருக்க முடிந்தது.

இயேசுவைப்போன்ற தைரியசாலியை உலகம் கண்டதில்லை. எத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் சாந்தத்தோடு நின்றிருக்கிறார். கன்னத்தில் அடித்தும், முகத்தில் துப்பியும், தூஷண வார்த்தைகள் பேசியும் மக்கள் அவரை நிந்தித்தபோது கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அவர்களை அவரால் பொசுக்கி சாம்பலாக்கி இருக்க முடியும். அது தைரியத்தின் அறிகுறியா? அதுவே பலவீனத்தின் அறிகுறி. தான் வந்த காரியத்தை மறக்காமல், எதிர்ப்பாளிகளின் அஜன்டா நிறைவேறத் தன் நடவடிக்கைகள் காரணமாக இருந்துவிடாமல், தான் வந்த நோக்கத்தைத் நிறைவேற்றியதிலேயே அவருடைய இருதயக் கட்டுப்பாட்டையும், தைரியத்தையும், தாழ்மையையும் பார்க்கிறோம். வாழ்நாளெல்லாம் பரிசேயர்கள் தன்னை உசுப்பிவிட்டு மூர்க்கமடையவைக்கப் பிரயத்தனம் செய்தபோதும் அவர் அவற்றாலெல்லாம் இருதயம் பாதிக்கப்படாமல், நிலைதளும்பாமல் தாழ்மையோடு தன் பணியைச் செய்து வந்தார். அவர் தைரியத்திற்கு, தாழ்மைக்கு முன்னுதாரணம்.

மனத்தாழ்மையை நினைக்கும்போது என்னுடைய நண்பரொருவரையும், என்னுடைய இறையியல் கல்லூரி புரொபஸரொருவரையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முகஸ்துதி செய்வது எனக்குப் பிடிக்காது. உண்டு என்றிருந்தால் மட்டுமே ஒருவரை நான் பாராட்டுவேன். ஒருவரைப்பற்றி இல்லாதது பொல்லாததை சொல்லுவது கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. என்னைப் பற்றியும் முகஸ்துதியாக எவரும் பேசுவது எனக்குப் பிடித்தமில்லாதது. அப்படி எவராது பேசுகிறபோது நான் கூனிக்குறுகிப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆண்டவரே! இந்த மாயவலையில் விழுந்துவிடாமல் என் இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று ஜெபித்திருக்கிறேன். என் நண்பரையும், புரொபஸரையும் பற்றிய உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். நான் சந்தித்திருக்கின்ற மனிதர்களில் இவர்கள் இருவரிலும் நான் தாழ்மையைக் கண்டிருக்கிறேன். இதுவரை நான் விளக்கிவந்திருக்கின்ற தாழ்மை அது. தன்னலமில்லாத தாழ்மை அது. இருவருமே முகஸ்துதி செய்யத் தெரியாதவர்கள். தங்களுடைய நிலையையும், தராதரத்தையும் நன்கு உணர்ந்தவர்கள். இல்லாததை இருப்பதாகக் காட்டிக்கொள்ளாதவர்கள். அவர்களோடு பழகும்போது எனக்குப் பாதுகாப்பான இடத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். தாழ்மை இருவருடைய வாழ்க்கையையும் அலங்கரிக்கிறது. புரொபஸர் கர்த்தரை அடைந்துவிட்டார். மற்ற நண்பர் இன்னும் வாழ்கிறார், தன்னலமற்று தன்னால் முடிந்ததைக் கர்த்தருக்காக செய்து வருகிறார். இப்படிப்பட்டவர்கள் ஏன் அருகிக் காணப்படுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இவர்களிடம் தாழ்மையை நான் பார்க்கிறேன்; கற்றுக்கொள்கிறேன். இப்போது தெரிகிறதா தாழ்மை அர்த்தமுள்ளதென்று.

முடிவாக ஜே. சி. ரைல் தாழ்மையைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வார்த்தைகளோடு இந்த ஆக்கத்தை முடிக்கிறேன்.

‘கிறிஸ்தவ கிருபைகள் அனைத்திற்கும் அரசியாக இருப்பது தாழ்மை என்று சொல்லலாம். நம்முடைய பாவத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுவதும், கிறிஸ்து நமக்கு தேவையாக இருக்கிறார் என்பதை உணர்வதுமே இரட்சிக்கும் கிறிஸ்தவத்தின் ஆரம்பமாக இருக்கிறது. எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் மிகப்பரிசுத்தமான கிறிஸ்தவர்களை ஏனையோரில் இருந்து பிரித்துக்காட்டுகிற, அவர்களிடம் காணப்பட்ட முக்கிய கிருபையாக இதுவே இருந்திருக்கிறது. ஆபிரகாம், மோசே, யோபு, தானியேல், பவுல் எல்லோருமே தாழ்மையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் அடையக்கூடிய கிருபையாக இது இருக்கிறது. எல்லோரிடத்திலும் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவுக்கு பணமிருக்காது. உலகத்துக்கு நன்மை செய்யக்கூடியளவுக்கு பேசும் வரமும், ஞானமும் இல்லாமலிருக்கலாம். ஆனால், அனைத்து கிறிஸ்தவர்களும் தாங்கள் விசுவாசிப்பதாக சொல்லிக்கொள்ளும் போதனைகள் வாழ்க்கையில் தாழ்மையை அணிகலனாகக் கொண்டு காணப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல், Expository Thoughts on the Gospels: Luke, volume 2, The Banner of Truth, UK.

‘அறிவு, பணம், நம்முடைய நற்தன்மைகள் போன்ற எந்த ரூபத்திலும் நம்மில் இருந்துவிடக்கூடிய ஆணவத்தைக் (பெருமை) குறித்து நாம் கவனத்தோடு இருக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க முடியாமலும், பரலோகம் போகமுடியாமலும் செய்துவிடக்கூடியது ஆணவம். நம்மைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டிருக்கிறவரையில் நாம் இரட்சிப்படையப்போவதில்லை. ஜெபத்தோடு நாம் தாழ்மையை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி சரியாகத் தெரிந்துவைத்திருந்து பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்முடைய இடத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல்.

‘நாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக இருந்தால் நம்மில் யோவான் ஸ்நானனுக்கிருந்த இருதயம் இருக்க வேண்டும். தாழ்மையைப் பற்றி நாம் படிப்பது அவசியம். இரட்சிப்படையப்போகிற அனைவரும் இந்தக் கிருபையுடனேயே ஆரம்பிக்க வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, நாம் பாவிகள் என்பதை உணரும்வரையில் நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வழியில்லை. யாருமே சாக்குப்போக்குச் சொல்லி உதாசீனப்படுத்திவிட முடியாத, எல்லாக் கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டிய கிருபை இது. கர்த்தரின் பிள்ளைகள் எல்லோருக்கும் வரங்களோ, பணமோ, வேலையோ, நேரமோ, நல்லபணிகளைச் செய்யும் வாய்ப்போ இல்லாமல் போனாலும் அவர்களெல்லோருமே தாழ்மையுடையவர்களாக இருக்கவேண்டும். நமக்கிருக்கும் கிருபைகளனைத்திலும் இந்தக் கிருபையே கடைசிக்காலத்தில் மிக அழகானதாகத் தோன்றும். மரிக்கும் தருவாயில் நியாயத்தீர்ப்பைச் எதிர்நோக்கி நிற்கின்ற வேளையில்தான் தாழ்மையின் தேவையை வேறெப்போதும் இல்லாதவகையில் நாம் மிக ஆழமாக உணர்வோம். அப்போதுதான் நாம் வெறுமையாயிருந்து, கிறிஸ்துவே எல்லாமாக பரிபூரணப்பரிசுத்தமில்லாத நம்முடைய முழு வாழ்க்கையும் படமாக விரியும்.’ (Expository Thoughts on the Gospels: John, volume 1, The Banner of Truth).

 

 

வாசகர் கடிதம்

அன்புள்ள திருமறைத்தீபம் ஆசிரியர் அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியினை இயேசுவின் நாமத்தில் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நான்  கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல்  இருந்து வந்தேன். உங்கள் பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என்னுடைய நடைமுறை வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள கர்த்தர் உதவினார். என்னை முதன் முதலில் கவர்ந்த அல்டர்ட் என் மார்டினின் ‘பிரியாவிடை பிரசங்கம்’ ஆக்கங்கள் என்னையே படம்பிடித்துக் காட்டியதுபோல் உணர்ந்தேன். திருச்சபையில் விசுவாசியின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்ள அவை துணைசெய்தன. அல்பர்ட் என் மார்டின் அவர்களுக்கு என் நன்றி. ஒவ்வொரு இதழையும் வாசிக்கும்போதும் இறையியல் கற்றுக்கொள்ளுகிற அனுபவம் கிடைத்தது. தெரிந்துகொள்ளுதலின் உபதேசம், முன்குறித்தல், அழைப்பு, மகிமைப்படுத்துதல் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திய ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றி.

மேலும் நீங்கள் வெளியிட்ட திருச்சபை வரலாறு பற்றிய இரண்டு பாகங்களும் என் வாழ்வில் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களைப் பற்றிக் கேள்விபட்டிருக் கிறேன். ஆனால் இப்படிக் கொடூரமான முறையில் அவர்கள் நடத்தப் பட்டிருப்பதைப் படிக்கும்போது இப்பொழுது நாம் அனுபவிக்கும் பாடுகள் எம்மாத்திரம் என்பதை உணரச் செய்தார் ஆவியானவர்.

தாம்பத்திய உறவில் நெருக்கம் (அலன் டன்) என்ற நூலில் திருமணத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்ற நான்கு நட்சத்திரக் குறிப்புகளான கடவுளைப் பற்றிய சத்தியம், படைப்பின் தத்துவம், வீழ்ச்சியின் சரித்திரம், மீட்பின் கோட்பாடு என்பவைகள் என்னுடைய திருமண வாழ்க்கைக்கு  மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அத்தியாயம் ஐந்திலுள்ள “ஊடுருவும் மனசாட்சி” மற்றும் “குற்றம் விசாரித்தல்”, அத்தியாயம் ஆறிலுள்ள “சுவிசேஷ அன்பின் எதிரி” என்ற தலைப்பின் கீழுள்ள போதனைகள் அனைத்தும் அற்புதம். அவை என் வாழ்கையைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. எளிமையான முறையில் விளக்கிய அலன் டன் அவர்களுக்கும் நன்றி.

மேலும், வேதத்தை எப்படி வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் திருமறைத்தீபம் வழியாக அதிகம் தெரிந்துகொண்டேன். வேதத்தில் உவமை, உருவகம், உபதேசம், வரலாறு, கவிதை, சங்கீதம், தீர்க்கதரிசனம் என்பவைகளை எப்படி எழுத்துப்பூர்வமாக படிக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். 16 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தம் ஏற்பட்டதைப்போல் எனக்குள்ளும் சீர்திருத்தம் ஏற்பட வழிசெய்த திருமறைத்தீபத்தின் ஆசிரியருக்கும், அவர் குழுவினருக்கும், சவரின் கிரேஸ் திருச்சபைக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஆசிரியர் பாலா அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை உயர்வாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் இப்படி என்னைச் சொல்ல வைக்கின்றன. இவற்றை எல்லாம் செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.

பர்னபாஸ், காவல்துறை
சேலம், தமிழ்நாடு

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.