திருமறைத்தீபம் 2015 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. இருபது வயதாகிவிட்டது
3. நினைவில் நிற்பவர்கள்
4. பரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள்
5. நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –
6. நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – மொரிஸ் ரொபட்ஸ்
7. சமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்
8. ஒரு மூத்த போதகரின் முதிர்ந்த ஆலோசனைகள்
9. வாழ்த்துக்கள்!
10. கவிதை
வாசகர்களே!
இந்த வருடத்தின் முதல் இதழ் இது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த இதழ் வழமையான இதழைப் போலில்லாமல் வந்திருப்பதுதான். திருமறைத்தீபம் தன்னுடைய இருபது வருட நிறைவை நினைவுகூர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவிப்பதோடு வாசகர்களுக்கு ஊக்கந்தரும் விதத்தில் இந்த இதழை வெளியிட்டிருக்கிறோம். அதற்காக ஆவிக்குரிய செய்திகள் இதில் இல்லை என்பதில்லை. ஜே. சீ. ரைலின் நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், கிறிஸ்தவனில் பாவம் ஆகிய வேதபோதனைகளுக்கான விளக்கங்கள் இதில் வந்திருக்கின்றன.
இருபது வருடங்களைத் திருமறைத்தீபம் தாண்டி வந்திருக்கிறது. அதன் ஊழியப்பணி பற்றிய ஒரு விளக்கத்தை நான் தந்திருக்கிறேன். அத்தோடு இந்த இருபது வருடங்களில் பத்திரிகை மூலமாகக் கர்த்தர் எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள அன்புள்ளங்கள் எத்தனை எத்தனையோ! அவர்களையெல்லாம் நான் நினையாத, கர்த்தருக்கு நன்றி சொல்லாத நாளில்லை. அத்தனைப் பேரையும் பற்றி என்னால் இந்த இதழில் குறிப்பிட்டிருக்க வழியில்லை. அவர்களில் சிலரைப்பற்றி என் எண்ணங்களை அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமல் தந்திருக்கிறேன். பத்திரிகை அவர்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கும் காரியங்களே அவர்களை இங்கு குறிப்பிடும்படிச் செய்திருக்கிறது. அது உங்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். விட்டுப்போனோரின் பெயர்கள் எத்தனையோ. அவர்களை நான் நினையாமலில்லை. அவர்களைப் பற்றி எழுதும் ஒரு காலம் வரலாம்.
இந்த இதழில் அநேக வாசகர்களின் கடிதங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக இதழின் இருபதாவது நினைவு வருடத்தை மனதில் வைத்து பத்திரிகை தங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கும் நன்மைகளை அவர்கள் நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதைச் சொல்லாமலிருந்திருந்தால் எனக்கே அது தெரிய வந்திருக்காது. இதழின் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கே எல்லா மகிமையும். இந்தளவுக்கு பத்திரிகையைப் பயன்படுத்தி வரும் தேவனை பத்திரிகை குழுவினர் போற்றுகின்றனர். வருகின்ற வருடங்களிலும் நாங்கள் இந்த இலக்கியப் பணியில் ஊக்கத்தோடும், தேவபயத்தோடும், தாழ்மையோடும் ஈடுபட்டு வர எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள். நன்றி! – ஆசிரியர்.
இருபது வயதாகிவிட்டது
கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டிதழோடு திருமறைத்தீபம் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறது. இருபது வருடங்கள் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய காலப்பகுதி; மனிதனுடைய வாழ்க்கைக்கு அத்திவாரமிடும் அடிப்படைக் காலப்பகுதி. இருபது வயதாகிறபோது ஒருவன் வளர்ந்து பிற்கால வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக்கொள்ளுகிற நிலையை அடைந்துவிடுகிறான். பிள்ளைப் பருவத்தைத் தாண்டி வாலிபனாகி, கல்விகள் பல கற்று இருபதைத் தொடுகிறபோது அவன் மனிதனாக எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளத் தேவையானதை அடைந்து விடுகிறான். அதுவே பெண்ணாக இருக்கும்போது இருபது வயதில் அவள் ஒருவனுக்கு மனைவியாகி குடும்பம் நடத்துகிற நிலைக்குத் தயாராகி விடுகிறாள். இருபது வருடங்கள் நிமிடங்களைப் போலப் பறந்துவிடுவதுபோல் நம் பார்வைக்குப்பட்டாலும் அந்த வருடங்கள் எவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலப்பகுதி.
நம் பத்திரிகை இருபது வருடங்களைத் தாண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறபோது அந்த வருடங்கள் பறந்தோடிவிட்டதுபோல் என் மனதுக்குப்பட்டபோதும் எத்தனையெத்தனை காரியங்களை அந்த வருடங்கள் பத்திரிகை மூலம் செய்திருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. பத்திரிகை ஆரம்பித்தவிதமே அற்புதமானதுதான். என் நண்பர்களான இருவரின் சலிக்காத தூண்டுதலின் பலனே பத்திரிகை. அதற்காக ஜெபித்து என்னை ஊக்குவித்ததோடு பொருளுதவி செய்து ஆரம்பகாலப்பகுதியில் ஐந்து வருடத்தேவைகளை அவர்கள் தாங்கி பத்திரிகை தொடர்ந்து வெளிவர உதவியிருக்கிறார்கள். ஒருவர் இப்போது கர்த்தரை அடைந்துவிட்டார். ஐந்து வருடங்கள் நிறைவேறிய நிலையில் அவர்களால் தொடர்ந்து தேவைகளைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது கர்த்தர் அந்தத் தேவைகள் சந்திக்கப்படுகிற வழிகளை ஏற்படுத்தித் தந்தார். இன்றுவரை கர்த்தரே பத்திரிகையைத் தாங்கி நடத்தி வருகிறார். அவரில்லாமல் எதுவும் நடக்க முடியாது. அவர் நடத்துகிறதை எவரும் நிறுத்தவும் முடியாதென்பதை அவருடைய இறையாண்மை நமக்கு போதிக்கிறதல்லவா.
ஆரம்பத்தில் பெரிய சைஸில் வெளிவந்த பத்திரிகை வாசகர்கள் பலரின் வேண்டுகோளினால் இப்போதிருக்கும் சைஸில் வெளிவர ஆரம்பித்தது. அதையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழில் வந்துகொண்டிருக்கும் பத்திரிகைகளைவிடத் திருமறைத்தீபம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பத்திரிகை நடத்தி எனக்குப் பழக்கமில்லை. எழுதுவதை நான் பள்ளிப் பருவத்தில் இருந்து செய்து வந்திருக்கிறேன். அதுவேறு, பத்திரிகை நடத்துவது என்பது வேறு. வெறும் எட்டுப்பக்கங்களோடு மட்டும் ஆரம்ப இதழை ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாதமும் வெளிவருவதென்பது என்னுடைய போதக ஊழியப்பணிகளின் மத்தியில் கஷ்டமானது என்பது எனக்குப் புரிந்திருந்தது. எனவே காலாண்டிதழாக வெளியிட முடிவு செய்தேன். சபைக்கு கொடுக்க வேண்டிய நேரம் இதற்குப் போகிறது என்பதால் இதை சபை வெளியீடாக வெளியிட முடிவு செய்தேன். எப்போதுமே எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஈவுகளை நாம் சபை மூலமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எனக்குத் தெளிவிருந்தது. பத்திரிகை சம்பந்தமான அனைத்து வேலைகளும் என் பொறுப்பாக இருந்தது. காலம் போகப்போக பத்திரிகை வளர சபையும் நடைமுறையில் பத்திரிகையை முத்திரை ஒட்டிப் போஸ்ட் செய்யும் பணியுட்பட பல காரியங்களில் ஈடுபட்டது. சபை ஆங்கில சபையாக இருந்ததால் பத்திரிகையில் வருவதை அவர்களால் வாசிக்க வழியில்லை. இருந்தாலும் சுவிசேஷப் பணியில் அவர்கள் எனக்கு ஆதரவு தர எப்போதும் தடையாக இருக்கவில்லை.
ஆரம்ப காலத்தில் பத்திரிகை நடத்துவதற்காக நான் கம்பியூட்டர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதான் (1995) தமிழில் கணினி மென்பொருள் வெளிவர ஆரம்பித்திருந்தது. அதன் விலையும் ஆரம்பத்தில் அதிகம். பெரும் பத்திரிகைகள் நடத்துகிறவர்களே அத்தகைய மென்பொருளை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சென்னையில் ஒரு கம்பேனியில் அதை நான் வாங்கினேன். என் நண்பரொருவர் அதற்குப் பணம் கொடுத்தார். சபைக்கு அன்று பத்திரிகை செலவுகளை சந்திக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. தமிழ் மென்பொருளை இன்றைக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. டைப் செய்யத் தெரிந்திருந்தாலும், வார்த்தைக்கு வார்த்தை தொடர்பில்லாமல் இருந்த தமிழ் டைப்பிங் கற்றுக்கொண்டேன். அதுவே போகப்போகப் பழகிவிட்டது. பேஜ் மேக்கரில் பத்திரிகையை எப்படித் தயாரிப்பது என்பதையெல்லாம் நானே எனக்குத் தெரிந்தவரையில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். எழுதுவது மட்டுமல்லாமல் அட்டைப் படத்தில் இருந்து எல்லா வேலைகளையும் தனியொருவனாகப் பல வருடங்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்த விஷயத்தில் துணை செய்யவோ, உதவியாளர்களை வைத்துக்கொள்ளவோ அன்று எவரும் இருக்கவில்லை; வசதியும் இருக்கவில்லை. நானும், கணினியுமாக சேர்ந்து உழைத்து முதல் இதழ் வெளிவந்தது. அது தொடர்ந்து வளர்ந்து இன்று மரமாக நிற்கின்றது. இன்று என்னோடு தோளோடு தோளாக இருந்து நண்பர் ஜேம்ஸ் இந்தப் பணியில் இணைந்து இயங்குகிறார். இதை எண்ணிப்பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமல்லாமல் இதில் கர்த்தரின் செய்கையைத்தான் நான் பெருமளவில் சிந்தித்துப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
பத்திரிகையில் எதை எழுதுவது என்பதில் எனக்கு சந்தேகமிருக்கவில்லை. நான் விசுவாசிக்கின்ற சீர்திருத்த சத்தியங்களை ஆணித்தரமாக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அது போய்ச்சேர வழி ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதேபோல் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளையே ஆரம்பத்தில் இருந்து இன்றைக்கும் பத்திரிகை வெளியிட்டு வருகின்றது. தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அதை விளக்குவது மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எழுத வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். குழப்பமான போதனைகளைத் தன் மத்தியில் வளர்த்துக்கொண்டு சீர்திருத்த வரலாறு பற்றிய தெளிவான ஞானமற்ற நிலையில் இருந்து வந்த தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர்கள் அறிந்துகொள்ளுவதில் பத்திரிகை இருபது வருடங்களில் தன் பங்கைச் செய்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதைக் கர்த்தரே பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.
பத்திரிகைக்கு என்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்ற பெரிய எண்ணங்கள் எதுவுமில்லாமல் ஒருசில கொள்கைகளை மட்டும் நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும் என்றிருந்தேன். முதலில் அது நல்ல எளிமையான தமிழில் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உறுதி இருந்தது. கிறிஸ்தவ தமிழ் என்று பெயர்பெற்றுவிட்ட தமிழில் எழுதாமல் வாசகர்களுக்கு புரியக்கூடிய தமிழில், அதுவும் கொச்சையானதாக இல்லாமல் ஓரளவுக்கு இலக்கியத் தரம் கொண்ட தமிழில் எழுத வேண்டும் என்பதை நான் கொள்கையாக வைத்திருந்தேன். அதன் பலனை ஆரம்ப இதழ்களே எனக்குத் தெரியப்படுத்தின. கிறிஸ்தவ வாசகர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தாகம் எனக்கிருந்தது. அதுபற்றி அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன். நடைமுறை சூழலில் தமிழ் கிறிஸ்தவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், இறையியல் பிரச்சனைகள் என்பது போன்றவற்றிற்கும் பத்திரிகை விளக்கமளித்திருக்கிறது. காலம் போகப்போக எதை எழுத வேண்டும் என்பதில் கர்த்தர் எனக்கு தெளிவான வழியைக் காட்டி வந்திருக்கிறார். நான் மட்டுமல்லாமல் வேறு பலரும் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நல்ல ஆக்கங்களும் பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன.
இத்தனை வருட பத்திரிகை ஊழியத்தில் பார்த்ததும் கற்றதும் அநேகம். ஒரே சத்தியத்தின் அடிப்படையில் ஒரே கொள்கையை விளக்கி எழுதி வருவது சிலருக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி அளித்திருக்கிறது. ஏனெனில், தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் இன்றைக்கு பரவலான பலவிதமான போதனைகளைப் பின்பற்றி வருவதால் அந்த சிந்தனைப் போக்கை வளர்த்துக்கொண்டவர்களுக்கு பத்திரிகையின் இந்தத் தனித்துவப் போக்கு தவறானதாகப் பட்டிருக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு இது பற்றி இப்போது விளக்குவது அவசியமாகிறது. ஒரே சத்தியத்தை அடிப்படைக் கோட்பாடுகளில் கொண்டிராமல் தற்காலத் தமிழ் கிறிஸ்தவம் இருந்துவருவதால் அதுவே சரியானது என்று எண்ணுவது தவறு. அடிப்படைப் போதனைகளில் வேதம் வெவ்வேறான போதனைகளைக் கொண்டிருக்க வழிகாட்டவில்லை. கர்த்தர் ஒருவரே; விசுவாசம் ஒன்றே என்று பவுல் எபேசியர் 4ல் விளக்குகிறார். அந்த அடிப்படையில் சீர்திருத்த கிறிஸ்தவப் போதனைகளை வேத அடிப்படையில் விளக்குகிறபோது அதைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு பத்திரிகையின் போக்கு புதிராகத்தான் இருந்திருக்கும். பத்திரிகையை வாசிக்க வாசிக்க பின்னால் அதைப் புரிந்துகொண்டிருக்கிற வாசகர்கள் அநேகர். வேதத்தையும், 1689 விசுவாச அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டே சகல போதனைகளும் பத்திரிகையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதை மீறி சத்தியத்திற்கு பல தோற்றங்களும், வர்ணங்களும் இருக்கின்றன என்று காண்பிப்பதோ, சத்தியத்தை சத்தியமாக விளக்காமல் விடுவதோ சத்தியத் துரோகம் என்று நான் நம்புகிறேன்.
வேத போதனைகளையும், சீர்திருத்த கிறிஸ்தவத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகள் சத்தியமானவை என்றும் கிறிஸ்தவத்தின் நியாயமான, தவிர்க்க முடியாதொரு வெளிப்பாடு என்றும் எண்ணி வருகிறார்கள். 19ம் நூற்றாண்டில் தலைதூக்கி வளர்ந்து இன்றைக்கு செழிப்பு உபதேசம் மற்றும் மோசமான பெனிஹின் போன்றோரின் அற்புத ஊழியம் வரைக்கும் கொண்டுபோயிருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகளும், ஊழிய முறைகளும் வேதம் அறியாதவை. வரலாற்றுக் கிறிஸ்தவம் காணாதவை. வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளிலும் இல்லாதவை. ஆகவே அவசியமான வேளைகளில் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகளிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆத்துமாக்களுக்கு வேத வெளிச்சமளிப்பது எம் கடமை. நாம் தனிப்பட்ட முறையில் பெந்தகொஸ்தெ, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களல்ல; அவர்களுடைய போதனைகளையே மிகத் தவறானவைகளாக வேத அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறோம். அவர்களுடைய கண்கள் திறக்கவும் ஜெபிக்கிறோம். அந்த வகையில் திருமறைத்தீபத்தால் கண்கள் திறக்கப்பட்டவர்களின் தொகை ஏராளம்.
பத்திரிகை எந்தத் திருச்சபைப் பிரிவுக்கும் எதிரானதல்ல. நிச்சயமாக கத்தோலிக்க மதத்தை நாம் கிறிஸ்தவமாக பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பது வேதத்துரோகம். புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவப் பிரிவுகளனைத்தையும் நாம் மதிக்கிறோம். இருந்தபோதும் வேதத்தையும், வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்குத் தந்துள்ள 1689 விசுவாச அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு திருச்சபை பற்றி விளக்கங்களைத் தருகிறபோது இன்றைய காலப்பகுதியில் காணப்படும் நடைமுறைத் தவறுகளை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க வழியில்லை. வேத அடிப்படையிலும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலும் திருச்சபையைத் தொடர்ந்து சீர்திருத்தத்திற்கு உட்படுத்துவதே நம் காலத்தில் தொடர வேண்டிய சீர்திருத்தமாகும். சீர்திருத்தம் என்பது முடிந்துபோனதல்ல; இன்றும் தொடர வேண்டியது.
கிறிஸ்தவ ஒற்றுமையை பத்திரிகை பெரிதும் மதிக்கிறது; ஆனால், போலித்தனமான உதட்டளவில் நிற்கும் ஒற்றுமையை அல்ல. கிறிஸ்தவ ஒற்றுமை சத்தியத்தின் அடிப்படையிலானதாக அன்பால் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். சத்தியத்தின் அடிப்படையில் காணப்படாத ஒற்றுமை மெய்யான ஒற்றுமையல்ல. திருமறைத்தீபத்தைப் பல்வேறான திருச்சபைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் வாசிக்கிறார்கள். யார் வாசிப்பதற்கும் நாம் தடைபோடுவதில்லை. ஆனால், பத்திரிகையில் வருவதனைத்தும் வேத அடிப்படையிலும், வரலாற்றுக் கிறிஸ்தவத்தினதும் அடிப்படையில் அமைந்ததாக மட்டுமே இருக்கும். சத்திய வாஞ்சை கொண்ட பல்வேறு திருச்சபைப் பிரிவினரையும் பத்திரிகை நண்பர்களாகக் கொண்டிருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன் பத்திரிகை முதன் முதலாக வெளிவந்தபோது தமிழினத்தில் அது சந்தித்த பெரும் சவால் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் செழிப்பு உபதேசப் போதனையே. அந்தப் போதனைகள் இன்றும் காணப்பட்டபோதிலும் வேறு எத்தனையோ சவால்களை இந்தக் காலப்பகுதியில் பத்திரிகை முகங்கொடுத்து அவை பற்றி விளக்கியிருக்கிறது. இந்துப் பின்னணியிலான சமுதாயக் கட்டுப்பாடுகளையும், கலாச்சாரத்தையும் கிறிஸ்தவர்கள் விட்டுவிலக வேண்டிய அவசியத்தை வேதபூர்வமாக விளக்கியிருக்கிறது. பழைய சவால்களிலிருந்தே இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் 21ம் நூற்றாண்டில் புதிய சவால்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றையும் பத்திரிகை நிச்சயம் முகங்கொடுத்து தமிழின கிறிஸ்தவ விழிப்புணர்வுக்கு வழிகோலுமுகமாக தன்னுடைய விளக்கங்களை வேதப்பூர்வமாகத் தொடர்ந்தளிக்கும். அந்தப் பணியில் பத்திரிகையை உங்கள் ஜெபத்தில் தாங்குங்கள்.
நினைவில் நிற்பவர்கள்
பத்திரிகையின் கடந்துபோன இந்த இருபது வருடங்களில் நான் நினைத்துப் பார்த்துக் குறிப்பிட வேண்டிய பல பேரிருக்கிறார்கள். அவர்களில் பலரை நான் பத்திரிகை மூலமாகத்தான் சந்தித்தேன். பலரோடு ஏற்கனவே இருந்த உறவை பத்திரிகை நெருக்கமாக்கியிருக்கிறது. அவர்களுடைய உண்மைப் பெயரை வெளியிட்டு அவர்களை நான் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு புனைப் பெயரைக்கொடுத்தே எழுதப்போகிறேன். இவர்களுடைய சத்திய வேட்கையும், இலக்கியத் தாகமுந்தான் இவர்களை என்னோடு நெருக்கமாக்கியிருக்கிறது. பொதுவாகப் பணத்தை முதன்மைப்படுத்தி சுயநல நோக்கோடு இயங்கி வரும் தமிழினக் கிறிஸ்தவத்தில் இவர்கள் அழுக்கில்லாத முத்தாக இருந்து வருகிறார்கள். இவர்கள் வாசிப்பதோடு சிந்திக்கவும் செய்கிறார்கள். தமிழினக் கிறிஸ்தவத்தில் பொதுவாக அதைப் பார்ப்பது அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தில் இவர்களுக்கு அதிக வாஞ்சையிருக்கிறது. அதை வெறும் இறையியல் போதனையாக மட்டும் இவர்கள் பார்க்கவில்லை. தங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான வேத இறையியலாகப் பார்த்து நடைமுறையில் அதன்படி வாழ முயற்சி செய்து வருகிறவர்கள். இவர்களுடைய சந்திப்பும், உறவும் என்னைத் தொட்டிருக்கிறது. இவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதற்கு நான்தான் பெருமைப்பட வேண்டும். இவர்களிடம் நான் பார்த்ததும், கற்றதும் அநேகம். திருமறைத்தீபம் எங்களை இணைத்து உறவை நெருக்கமாக்கி வளர்த்திருக்கிறது என்பதை எண்ணும்போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன. கர்த்தரில்லாமல் எதுவுமில்லை என்பதை இந்த நெஞ்சங்கள் உணர்த்துகின்றன.
முகிலன்
ஸ்ரீ லங்காவில் பல வருடங்களுக்கு முன் முதன் முறை சந்தித்தேன். நான் வந்திருப்பது அறிந்து என்னைப் பார்க்க வந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டபின் பத்திரிகையைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்ப இதழிலிருந்து பத்திரிகையை அவர் வாசித்திருக்கும் விதம் என்னை அதிசயிக்க வைத்தது. இப்படியும் வாசிக்கிறவர்கள் இருக்கிறார்களா என்று எண்ண வைத்தது. எந்த இதழில் எந்தப் பக்கத்தில் என்ன எழுதியிருந்தேன் என்றளவுக்கு பத்திரிகையில் வந்திருந்த ஆக்கங்களில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. உண்மையிலேயே பத்திரிகை அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததைக் கவனித்து வியந்து நின்றேன். சீர்திருத்தப் போதனைகளில் பெரும் வாஞ்சையை பத்திரிகை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது. சத்தியத்தை நாடித் தேடிக்கொண்டிருந்த அவருக்கு பத்திரிகை செய்திருக்கும் உதவியறிந்து கண்கள் கசிந்தன. கர்த்தர் எத்தனை பெரியவர். ஆவிக்குரிய தாகமுள்ள அந்த சகோதரரின் வாழ்க்கையில் இந்தப் பத்திரிகை தன் பங்குக்கு உதவி செய்திருக்கிறதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவித்தேன். இன்றைக்கும் பத்திரிகையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்ற அன்பு சகோதரன் இவர். ‘முகிலன் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்’ என்று இன்றும் சிலர் என்னிடம் சொல்லித் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நாங்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதில்லை; சந்திப்பதும் சில தடவைகள்தான். இருந்தபோதும் பத்திரிகை எங்களை இணைத்திருக்கிறது. மானசீகமான நட்பை உண்டாக்கியிருக்கிறது.
நெடுமாறன்
தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு சகோதரர். சீர்திருத்த சபையொன்றை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் பத்திரிகையை வாசித்து அதில் மிகுந்த ஆர்வம் காட்டும் சகோதரர். ஒரு சபை மூப்பராக இப்போதிருக்கிறார். பத்திரிகையைப் படித்து அதில் அவர் மூழ்கிப்போயிருக்கும் விதம் என்னைத் தலைகுனிய வைத்திருக்கிறது. நானே நினைவுகூரத் தடுமாறும் அளவுக்கு எந்த இதழில் எந்த ஆக்கம் வந்திருக்கிறது என்பதை இவர் கைவிரல் நுனியில் வைத்திருக்கிறார். வாசிப்பது ஒன்று; வாசித்தவற்றை ஆராய்ந்து பார்த்து சிந்திப்பது என்பது வேறு. அந்தவகையில் வாசித்தவற்றை ஆராய்ந்து சிந்தித்து பல தடவைகள் அது பற்றி என்னோடு பேசியிருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் இவர் பத்திரிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று ஒருமுறை சொன்னார். சீர்திருத்த போதனைகளில் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடு இவருக்கு இருந்தபோதும் பத்திரிகையின் அவசியத்தையும், பயன்பாட்டையும் நன்கு உணர்ந்தவர். ஒருசில இறையியல் கருத்து வேறுபாடுகள் நட்புக்கு இடையூறாக இருக்காது என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். பத்திரிகையை வாசித்து வருவதனாலும், அதன் போதனைகளில் ஆர்வம் காட்டுவதனாலும் சில துன்பங்களையும் வாழ்க்கையில் சந்தித்தவர். இருந்தபோதும் தவறாது பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்து வரும் நல்ல மனிதன். வேதம் அறிந்த மனிதர். சத்தியத்தில் இவர் காட்டும் ஆர்வம் இவரைக் கைவிடாது என்பது என் நம்பிக்கை. இவரோடு எனக்கு நல்ல தொடர்பிருக்கிறது. இவருடைய நட்புக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
கருணாநிதி
இன்றும் நல்ல நண்பர். பத்திரிகை வெளிவருவதற்கு முன்பிருந்தே இவரோடு அறிமுகம். பல காலமாக தொடர்பு நீடித்திருந்து வருகிறது. பத்திரிகையின் தாசர் என்று இவரைச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அதன் போதனைகளில் ஒன்றிப்போய் தானும் வாசித்து, மற்றவர்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பல மாறுதல்களை பத்திரிகை நிச்சயம் கொண்டுவந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்காக வெளியிடப்படுவதே இந்தப் பத்திரிகை. சத்தியம் சத்தியமாக விளக்கப்படாதா என்று ஏக்கத்தோடிருப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திருமறைத்தீபம். இவரின் ஆத்மீகத் தாகத்தைத் தீர்த்துவைக்கின்ற ஊழியத்தின் ஒரு சிறு பங்கை பத்திரிகை மூலம் என்னால் வழங்க முடிவதே எனக்கு என்றென்றைக்கும் போதுமானது. இவர் சாதாரணமானவர். நல்ல நேர்மையான விசுவாசி. தாழ்மைக்கு உதாரணம். சத்தியத்தைத் தன்னால் முடிந்தளவுக்கு பல தியாகங்களைச் செய்து மற்றவர்களுக்கு அறிவித்து வருகிறவர். திருமறைத்தீப ஊழியத்திலும், நாம் வெளியிடும் நூல்களிலும் அதிக அக்கறை காட்டுகிறவர். அவற்றை வாசித்து சிந்தித்து செயல்பட்டாலே தமிழ் கிறிஸ்தவம் தலைதூக்கிவிடும் என்று சொல்லுகிறவர். அவரோடு எனக்கிருக்கும் நட்பு ஆழமானது; பெரியது. சத்தியம் உருவாக்கியிருக்கும் நல்ல நட்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
சூரியப்பிரகாசன்
ஒரு போதகர். இளம் வயதில் இறைவனை அடைந்துவிட்டவர். ஆத்தும பாரத்தோடு நல்ல ஊழியத்தைச் செய்து ஆத்துமாக்களை வளர்த்து வந்தவர். இவருடைய ஊழியம் வளர்ந்திருந்தது. மக்களின் அன்பைப் பெற்றவர். பல வருடங்களாக ஸ்ரீ லங்காவில் இவரை எனக்குத் தெரிந்திருந்தது. அண்ணா என்று அன்போடு எப்போது பார்த்தாலும் அழைக்கின்றவர். ‘வேதப்புத்தமும், திருமறைத்தீபமும் போதும் எனக்கு, ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு’ என்று அடிக்கடிச் சொல்லி சக ஊழியர்களை ஊக்கப்படுத்துகிறவர். பெரிதாகப் படிப்பெதுவுமின்றி, ஆங்கில அறிவும் இல்லாமலிருந்தபோதும் சத்திய வாஞ்சையுடன் நேர்மையாக ஊழியம் செய்தவர். தன் மக்களுக்கு திருமறைத்தீபத்தை அறிமுகப்படுத்தி அவர்களை வாசிக்க வைத்திருக்கிறார். திருமறைத்தீபமே அவருடைய சபையாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இன்றைக்கு அவரில்லை; நல்லதோர் இடத்துக்குப் போய்விட்டார். அவருடைய நினைவு எனக்கு அடிக்கடி வராமலில்லை.
நோவா
சாதாரண விவசாயி. வருடக்கணக்காக இவரை எனக்குத் தெரியும். கல்லூரிப் படிப்பு இவருக்கு இல்லை. ஆனால், சிந்திக்கத் தெரிந்தவர். திருமறைத்தீபத்தில் வரும் ஆழ்ந்த ஆத்மீக சத்தியப் போதனைகளை இவர் சாவகாசமாக வாசித்துப் புரிந்துகொள்ளுகிறார். பெரிய வேத சத்தியமொன்றை இவர் இலகுவாக ஒருமுறை விளக்கியதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவரால் எப்படி இந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று வியந்து, ஒருமுறை அவரையே அதுபற்றிக் கேட்டேன். ‘ஐயா, நல்ல எளிமையான தமிழில் புரியும்படியாத்தானே எழுதுறீங்க. அதில் என்ன பிரச்சனையிருக்கு’ என்று பதில் வந்தது. அன்றுதான் முக்கியமானதொரு உண்மையைப் புரிந்துகொண்டேன். கர்த்தரே பேசியதுபோலிருந்தது. நம்மக்களுக்கு சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது பிரச்சனையல்ல. புரியும்படியாக அது எழுத்திலும், பேச்சிலும் இருக்குமானால் அவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளுவார்கள் என்பதை நான் உணர்ந்தேன். இன்றைக்கும் அக்கறையோடு பத்திரிகையை வாசித்து மற்றவர்களிடம் வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். ‘எல்லாப் போதகர்களும் பத்திரிகையை அக்கறையோடு வாசித்தாலே போதும் கிறிஸ்தவம் நம் நாட்டில் நன்றாக இருக்கும்’ என்று அடிக்கடி சொல்லி போதகர்களுடைய இன்றைய நிலையை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டுக்கொள்ளுவார். தான் சந்திக்கும் ஊழியர்களிடம் பத்திரிகையையும், நம் நூல்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். சந்திக்கும் வேளைகளில் தன்னுடைய அனுபவங்களையும் குறைபாடுகளையும் வெளிப்படையாகப் பேசுவார். சுவிசேஷ வாஞ்சை இவருக்கு அதிகமாக இருக்கிறது. அவரோடு பேசினாலே அது ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. தூரத்தில் இருக்கும் இவர் என்னுடைய நினைவுகளில் வராத நாளில்லை. நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்கு துணை செய்வதற்காக திருமறைத்தீபம் வெளிவருவதை நினைக்கும்போது இந்தப் பத்திரிகையை வெளியிடுவதில் இருக்கும் இடர்பாடுகளையெல்லாம் ஒரு நிமிடம் மறந்து நான் சந்தோஷமடைகிறேன்.
காவலன்
கடந்த ஏழெட்டு வருடங்களாக அறிமுகம். பத்திரிகை இவரை நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறது. வாசிப்பதெல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுகிறார். குடும்பத்தில் மனைவி உட்பட எல்லோருக்கும் அவற்றை விளக்கி உதவி செய்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சபையாருக்கும் அந்த சத்தியங்களை விளக்கி வழிநடத்துகிறார். நாம் வெளியிடும் நூல்களை ஆர்வத்தோடும், கவனத்தோடும் வாசித்துத் தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தை வளர்த்துக்கொள்ளுகிறார். இந்த முறையில் சத்தியத்தையும். கிறிஸ்தவ இலக்கியத்தையும் பற்றி வாஞ்சையோடு பேசுகிற எத்தனை பேரை நாம் சந்திக்க முடிகிறது. பத்திரிகையே இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இவரை மறக்க முடியாது. இன்றும் பத்திரிகையிலும் நூல்களிலும் ஆர்வம் காட்டித் தொடர்ந்து வாங்கி வாசிக்கிறார், மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
இயேசுதாசன்
திருமறைத்தீபத்தை அப்பா வாசித்து அறிமுகப்படுத்த அதை ஆர்வத்தோடு வாசித்து வளர்ந்த வாலிபர். இரண்டாம் தலைமுறையாக திருமறைத்தீபம் இவருடைய குடும்பத்திற்கு ஆத்தும உணவை அளித்திருக்கிறது. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தையும், ஆத்மீக வாழ்க்கையையும் பத்திரிகையைப் பயன்படுத்தி வேதத்தைப் படித்து வளர்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இவருடைய அறிமுகம் திருமறைத்தீபத்தின் மூலம் கிடைத்தது. இவருடைய அப்பாவை நான் நேரில் சந்தித்ததில்லை. மகனோடு இன்றைக்கு உறவைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எத்தனை பெரிய உறவுகளை பத்திரிகை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது இதயம் நெகிழாமலில்லை.
செல்வன்
ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகின்ற இந்த சகோதரன் எந்தளவுக்கு திருமறைத்தீபத்தை வாசித்து தன்னை வளர்த்துக்கொண்டு தன்னோடிருக்கும் சபை மக்களுக்கு சத்தியங்களை முடிந்தவரை விளக்கிச் சொல்லி சத்திய ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார் என்பதை எண்ணி ஆண்டவருக்கு இன்றும் நன்றி கூறுகிறேன். எல்லா இதழ்களையும் டெப்லெட்டில் இறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். ஊழியக்காரராக இல்லாமலிருந்தாலும் ஊழியக்காரர்களுக்கு இன்று இருக்கவேண்டிய சத்திய வாஞ்சையும், சீர்த்திருத்த போதனைகளில் வெளிச்சமும் இவருக்கு இருக்கிறது. இதற்கு பத்திரிகை துணைசெய்திருக்கிறது என்பதை நினைத்து நெகிழ்கிறேன். பலவருடங்களாக இவரோடு எனக்குத் தொடர்பிருந்து வருகிறது. அடிக்கடி பேசிக்கொள்ளுகிறோம். எல்லாம் இறையியல் சம்பந்தமானதுதான். வயது வித்தியாசம் எங்களுக்குள் அதிகம் இருந்தாலும் நல்ல இனிய நண்பன்.
அழகன்
மேற்கத்திய நாடொன்றில் குடியேறி வாழ்ந்து வருகிறார். மனைவியோடு இவரும் பத்திரிகையில் நல்ல ஆர்வம் கொண்டு வாசித்து வருகிறார்கள். சீர்திருத்த போதனைகளில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஏதோவொரு விதத்தில் நான் தூபம் போட்டிருக்கிறேன் என்பதை எண்ணி மகிழ்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேல் உறவும், தொடர்பும் இருந்துவருகிறது. இடையில் தூரதேசக் குடியேற்றத்தால் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. மறுபடியும் தொடர்புகொள்ளவும் உறவை நீடித்துக்கொள்ளவும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். பத்திரிகையை டெப்லெட்டில் இறக்கி வைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கெல்லாம் அவர்களுடைய டெப்லெட்டில் இறக்கித் தருகிறார். சீர்திருத்த சத்தியம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ போகக் காரணமாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். மெய்யான நட்புக்கும் அன்புக்கும் இவர் ஓர் அடையாளம். இன்று வேதத்தை விளக்கவும், தேவைப்பட்டால் பிரசங்கிக்கவும் கர்த்தர் இவரைப் பயன்படுத்துகிறார்.
அர்ஜுனன்
பத்திரிகையை அவருக்குத் தெரிந்த ஒரு போதகர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவருடைய இறையியல் தெளிவுக்கு அது உதவியிருக்கிறது. உடனடியாக என்னைத் தொடர்புகொண்டார். சிலவருடங்களுக்கு நேரில் பார்க்காமலேயே இந்த தொடர்பு வளர்ந்து நட்பாக மாறியது. பேசுவதெல்லாம் சத்தியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஒரு முறை நான் ஸ்ரீ லங்கா போயிருந்தபோது நான் வந்திருப்பதறிந்து உடனடியாக சந்திக்க வந்தார். அதுதான் முதல் தடவையான நேரடிச் சந்திப்பு. எத்தனையோ விஷயங்களைப் பற்றி & எல்லாம் சத்தியத்தைப் பற்றியதுதான் & பேசினோம். அன்று வளர்ந்த நட்பு இன்றும் தொடர்கிறது. திருமறைத்தீபத்திலும், நம் நூல்களிலும் அதிக ஆர்வம் காட்டி வாசிப்பதோடு விநியோகமும் செய்து தியாகத்தோடு இலக்கியப்பணியில் தன் பங்கைச் செய்து வருகிறார். இன்று சத்தியத்தின் அடிப்படையில் சீர்திருத்த சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவருடைய அன்புக்கும், நட்புக்கும் பத்திரிகை ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து எப்படி இதயம் நெகிழாமல் இருக்க முடியும்.
இதுவரை நான் குறிப்பிட்டிருப்பவர்களெல்லாம் வாசகர்களில் ஒரு பகுதியினர். இன்னும் எத்தனையோ பேரைப் பற்றி நான் எழுதியிருக்க முடியும். அதற்கும் ஒரு காலம் வரும். இந்த இருபது வருட பத்திரிகை ஊழியம் இப்படி எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி அவர்களோடு ஓர் இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தவிதத்தில் கர்த்தர் திருமறைத்தீபத்தைப் பயன்படுத்தி பலருடைய வாழ்க்கையில் சத்திய விளக்கேற்றி எண்ணையூற்றி ஒளிவீச வைத்து வருவதை அறிந்து மலைக்கிறேன். வாசகர்களாக இல்லாமல் பத்திரிகையோடு தொடர்புள்ள, அதில் அக்கறைகாட்டுகின்ற, அதற்காக ஜெபிக்கின்ற அநேகர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எழுத இடம் போதாது. திருமறைத்தீபம் வேத சத்தியத்தையும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தையும் வெளிப்படுத்தி வரும் பத்திரிகையாக மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் மீட்பின் வரலாற்றில் அவரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கருவியாக அன்பால் கட்டப்பட்ட ஒரு கூட்டத்தையே இணைத்து வைத்திருக்கிறது. சகல மகிமையும் கர்த்தருக்கே.
பரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள்
- சிலபேர் சொல்லுவதுபோல், விசுவாசிகளின் பரிசுத்தம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த முயற்சிகள் எதுவுமில்லாமல் விசுவாசத்தின் மூலம் மட்டும் கிடைக்கிறதா?
பரிசுத்தத்தின் ஆரம்பம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தில் ஆரம்பிக்கிறது என்பதை வேதம் தெரிந்த எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை பரிசுத்தமாகுவதற்கு வழியே இல்லை. அதேவேளை இந்த ஒரு விஷயத்தில் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தோடு விசுவாசியின் தனிப்பட்ட செயல்களும் அவசியம் என்பதை வேதம் நிச்சயமாக விளக்குகிறது. ‘தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்’ (கலா 2:20) என்று எழுதிய பவுலே, ‘என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்’ (என் சரீரத்தை அடக்கி எனக்கு அடிமையாக்குகிறேன்) என்றும் சொல்லியிருக்கிறார். வேதத்தின் வேறொரு இடத்தில் பவுல், ‘நம்மை சுத்திகரித்துக் கொண்டு பூரணப்படுத்தக்கடவோம்’ (2 கொரி 7:1) என்று விளக்கியிருக்கிறார். எபிரெயருக்கு எழுதியவர், ‘ஜாக்கிரதையாயிருப்போம்’ (எபி 4:11) என்றும், ‘பொறுமையோடு ஓடக்கடவோம்’ (எபி 12:1) என்றும் எழுதியிருக்கிறார். [தமிழ் வேதத்தில் (ப.தி.) பின்வரும் வசனங்கள் எழுத்துபூர்வமாக பின்வரும் விதத்தில் இருந்திருக்க வேண்டும். எபி 4:11 ல், ‘நாம் கடினமாய் உழைப்போம்’ என்றும்; எபி 12:1ல், ‘விடாமுயற்சியோடு ஓடக்கடவோம்’ என்றிருந்திருக்க வேண்டும். – ஆர்]
விசுவாசம் நம்மை எப்படி நீதிமானாக்குகிறது என்பதற்கும், அது நம்மை எப்படிப் பரிசுத்தமாக்குகிறது என்பதற்கும் இடையில் வேறுபாடிருப்பதை வேதம் சுட்டிக்காட்டுகிறது. நீதிமானாக்கும் விசுவாசம் கர்த்தரின் கிருபையாக இருந்து கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கவும், அவரில் தங்கியிருக்கவும் செய்கிறது (ரோமர் 4:5). கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவரும் அவரால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆனால் பரிசுத்தமாக்கும் விசுவாசமோ கர்த்தரின் கிருபையாக, கடிகாரத்தை இயக்கும் அச்சானி போன்ற ஸ்பிரிங்காக இருந்து விசுவாசியைப் பரிசுத்தத்தை நோக்கிப் போகச் செய்கிறது. பவுல் சொல்லுவது போல், ‘அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்’ (கலா 5:6). புதிய ஏற்பாட்டில் எந்தப் பகுதியிலும் ‘விசுவாசத்தினால் வரும் பரிசுத்தம்’ (Sanctification by faith) என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்க முடியாது. நியாயப்பிரமாணத்தின் அடிப்படையிலான கிரியையினால் அல்லாமல் விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்றே வேதம் போதிக்கிறது. அதேநேரம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் நாம் பரிசுத்தமாகிறோம் என்றும் வேதத்தின் எந்தப் பகுதியிலும் நாம் வாசிப்பதில்லை. மாறாக யாக்கோபு சொல்லுகிறார், ‘. . . ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்’ (யாக் 2:17).
- சிலர் செய்வதுபோல, மலைப்பிரசங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமாகுதலுக்கான நடைமுறைப் போதனைகளையும் பவுலின் கடிதங்களின் இறுதிப்பகுதிகளில் காணப்படும் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான போதனைகளையும் நாம் அவசியமானதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா?
நல்ல வேத போதனைகளை பெற்றிருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளோடு நல்லுறவைக் கொண்டிருப்பதற்காக ஜெபத்தோடும், தியானத்தோடும் அன்றாடம் இயேசு கிறிஸ்துவிடம் வருவதை வழமையாகக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் பற்றித் தர்க்கம் செய்ய மாட்டார்கள். புதிய ஏற்பாடு இது பற்றிய பொதுவான போதனையைக் கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. உண்மையில் அது இதுபற்றிய அநேக விளக்கங்களைக் கொடுப்பதோடு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் அளிக்கிறது.
நம்முடைய நாவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும், கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, நம்முடைய இயற்கையான விருப்பங்கள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் உறவு, மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு, கணவன், மனைவி, அதிகாரிகள், குடியானோர், உடல்நலக்கேட்டின்போது நம்முடைய நடத்தை, நல்ல சுகத்தோடு இருக்கும்போது நம் நடத்தை ஆகிய இவையனைத்தைப் பற்றியும் வேதம் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கின்றது. பரிசுத்தமாக வாழ்வது என்பது வெறும் கண்ணீர் விடுவதோ ஆதங்கப்படுவதோ, உணர்ச்சி வசப்படுவதோ, நரம்புகள் புல்லரித்துப் போவதோ, சில பிரசங்கிகள் மீது அதீத அபிமானம் கொள்ளுவதோ அல்லது குறிப்பிட்ட ஆவிக்குரிய கூட்டத்தோடு நெருக்கமாக இணைவதோ அல்ல. பவுல் ரோமர் 8:29ல் சொல்லுவதுபோல், ‘தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதாகும்.’ இதை மற்றவர்கள் நம்மில் பார்க்க முடியும்; நம்முடைய குணாதிசயத்திலும், வழமையான நடவடிக்கைகளிலும் காண முடியும்.
- இந்த உலகத்தில் முழுமையான பரிசுத்தத்தை விசுவாசியால் அடைய முடியும் என்று போதிப்பது ஞானமானதா?
பூரணத்துவத்தை இலக்காகக் கொண்டு வாழும்படி வேதம் பல இடங்களில் விசுவாசிகளை வற்புறுத்துகிறது (2 கொரி 13:2). ஆனால், வேதத்தில் ஓரிடத்திலாவது இந்த உலகத்தில் விசுவாசிகள் பாவத்திலிருந்து பூரண விடுதலையை அடைய முடியும் என்றோ, அதை எவராது அடைந்திருக்கிறார்கள் என்றோ நாம் வாசிப்பதில்லை. ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியைவிடப் பரிசுத்தமாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் முழுமையான பூரணத்துவத்தை கிறிஸ்தவ வரலாற்றில் எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் எந்தவொரு சிறந்த கிறிஸ்தவர்களும் அடைந்ததாக அவர்கள் கூறியது கிடையாது. வேத வரலாற்றில் நாம் காணும் சிறந்த கிறிஸ்தவர்களான தாவீது, பவுல், யோவான் போன்றோர் எந்தவிதத் தயக்கமுமில்லாது தங்களில் காணப்படும் பலவீனத்தையும் இருதயத்தில் காணப்படும் பாவத்தையும் குறிப்பிட்டு விளக்கியிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் பாவமற்ற பூரணப்பரிசுத்தத்தை அடைந்திருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுக்கு பாவத்தின் தன்மைபற்றியோ அல்லது கர்த்தரின் பரிசுத்தத்தைப் பற்றியோ அதிகம் தெரியாது என்றே நான் நினைக்கிறேன். இந்தப் போதனை பாரதூரமான மனக்குழப்பமூட்டக்கூடியதால் இதனை நான் அறவே மறுக்கிறேன். இது சிந்திக்கிறவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதோடு அவர்கள் இதைத் தவறானதாகக் கருதுவதால் கர்த்தரை அவர்கள் அறிவதற்கும் இது தடையாயிருந்துவிடுகிறது. இவ்வுலகில் பூரணப் பரிசுத்தத்தை அடைய முடியாதென்பதை உணர்ந்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளில் சிறந்தவர்களுக்கு இந்த மனச்சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. அதேவேளை பலவீனமான விசுவாசிகள் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளவும் இது வழியேற்படுத்திவிடுகிறது.
- சிலர் சொல்லுவதுபோல, ரோமர் 7ம் அதிகாரம் விசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியதல்ல, அது அவிசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியது என்று ஆணித்தரமாக சொல்லுவது ஞானமாகுமா?
பவுலினுடைய காலத்தில் இருந்தே இது பிரச்சனைக்குரியதாக இருந்துவருகிறது. அதேநேரம், சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும், வேதம் கற்ற இன்னும் அநேக கிறிஸ்தவர்களும் பவுல் இந்தப்பகுதியில் கிறிஸ்தவர்களுடைய அனுபவத்தைப் பற்றியே விளக்குவதாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். (ரைல் இந்த இடத்தில் பவுல் தன்னுடைய அனுபவத்தை விளக்குவதாக நம்பி விளக்கவுரை அளிக்கின்ற ஹெல்டேன், ஓவன் உட்பட அநேகருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார்). இத்தகைய பலத்த வாதங்களை முன்னெடுத்து வைக்கும் சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் பெரியவர்களின் கருத்தை உதறித்தள்ளுவது ஞானமற்ற செயல்தான்.
- ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை அது விளக்குகின்ற உண்மைக்கு மாறானவிதத்தில் விளங்கிக்கொள்ளுவது ஞானமானதா?
சந்தேகமில்லாமல் இந்த வார்த்தைப் பிரயோகம் வேதபூர்வமானதுதான். (ரோமர் 8:10; கலா 2:20; எபே 3:17; கொலோ 3:11). சிலர் இந்த வார்த்தைப் பிரயோகம், விசுவாசிகள் செய்கின்ற எதற்கும் அவர்கள் பொறுப்பானவர்களல்ல என்ற பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே சகலத்தையும் செய்கிறார். அது நிச்சயம் உண்மையல்ல! இப்படிச் சொல்லுவது, விசுவாசிகளுக்குள் இருக்கும் கிறிஸ்து அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் மூலமே இருக்கிறார் என்பதை உதாசீனப்படுத்துகிறது. உயிர்த்தெழுந்திருக்கும் நமது பிரதான ஆசாரியரான கிறிஸ்து, அவர் மறுபடியும் வருவதற்கு முன்பாக தற்போது தன்னுடைய பிதாவின் வலது பாகத்தில் இருந்து முக்கியமாக நமக்காகப் பரிந்துரை செய்து வருகிறார். நமது ஆலோசகராக நம்மோடு எப்போதுமிருக்கப் போகிற பரிசுத்த ஆவியானவரே நாம் பரிசுத்தமாகுதலில் தொடரும்படி நம்மைத் தூண்டுகிற விசேஷ கிரியையைச் செய்து வருகிறார். ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வேதபோதனையைச் சிலர் உண்மைக்கு மாறாகத் திரித்து விளக்குவதுபோல், திரித்து விளக்கப்படும் போதனைகளின் மூலமே பாரதூரமான போலிப்போதனைகள் ஆரம்பமாகின்றன.
- சிலர் செய்வதுபோல, மனமாற்றத்தை அர்ப்பணித்தலில் இருந்து (consecration), அதாவது மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கையில் (the higher life) இருந்து பிரித்துப் பார்ப்பது ஞானமானதா?
மனமாற்றமடைந்தவர்களும், பூரணமான அர்ப்பணிப்போடு மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறவர்களுமாக இருவகைக் கிறிஸ்தவர்கள் இருப்பதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. அதாவது மனமாற்றமடைந்த பிறகு, அதிலிருந்து சடுதியாக சட்டென்று இன்னொரு உயர்தர அர்ப்பணிப்புள்ள அனுபவத்தை அடையலாம் என்பதே இந்தக் கருத்து. இது விசுவாசிக்கு இரண்டாம் தடவையாக மனமாற்றம் தேவை என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. இத்தகைய விளக்கத்தைக் கொடுக்கிறவர்கள் மனமாற்றத்தைப் பற்றிய மிகத் தாழ்வான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
வேதம் சுட்டிக்காட்டுகின்ற இருவகை மனிதர்கள் விசுவாசிகளும், அவிசுவாசிகளுமே; ஆவிக்குரிய ஜீவனுள்ளவர்களும், ஆவிக்குரிய ஜீவனற்றவர்களும். இந்த இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பாவமும், கிருபையும் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அளவுகளில் காணப்படும். விசுவாசியைப் பொறுத்தளவில் அவன் படிப்படியாக கிருபையிலும், ஞானத்திலும், ஆவிக்குரிய சிந்தையிலும் வளரவேண்டும். ஆனால், மனமாற்றத்தில் இருந்து சடுதியான சட்டென்று அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைக்குத் தாவிவிடுகிற அனுபவத்தை நான் வேதத்தில் காணவில்லை.
ஒரு மனிதன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையில்லாமல் மனமாற்றத்தை அடைய முடியும் என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கிருபையில் வளர வளர விசுவாசி மேலும் மேலும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை கர்த்தருக்காக வாழ்வான். ஆனால், மறுப்பிறப்பை அனுபவித்தும் ஒருவன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது என்று எவராவது கூறினால் என்னைப் பொறுத்தளவில் அவர்களுக்கு மனமாற்றத்தைப் பற்றிய தவறான எண்ணங்களே இருக்கின்றன என்றுதான் அர்த்தம்.
- பாவத்தை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விசுவாசிகளைப் பார்த்துச் சொல்லுவது ஞானமானதா?
இந்த ‘உன்னை ஒப்புக்கொடு’ என்ற வார்த்தைப் பிரயோகம் புதிய ஏற்பாட்டில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வருகிறது (ரோமர் 6:13-19). ஆங்கில மொழிபெயர்ப்பான KJVல் ‘Yield yourselves’ என்றிருக்கிறது. இந்த வசனங்களில் ‘ஒப்புக்கொடுப்பது’ கிறிஸ்தவனின் கடமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் ‘ஒப்புக்கொடுத்தலை’ இன்னொருவருடைய கரத்தில் நாம் எந்த செயலிலும் ஈடுபடாமல் ஜடத்தைப்போல இருந்து அப்படியே நம்மை அர்ப்பணிப்பது என்ற அர்த்தத்தில் விளக்கவில்லை. மாறாக இந்த வசனங்கள் அதை, இன்னொருவர் நம்மைப் பயன்படுத்த சகல அக்கறையோடும் நம்மை ஒப்புக்கொடுப்பது என்ற அர்த்ததில் காணப்படுகின்றது. (Offer yourselves to God, Rom 6:13, NIV).
வேதத்தில் இருபது முப்பது வசனங்களுக்குமேல் விசுவாசிகள் அமைதியாக ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டும் என்று போதிக்காமல் அவர்கள் எழுந்து நின்று செயல்பட வேண்டும் என்று விளக்குகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒரு போராட்டத்திற்கும், போராளியின் வாழ்க்கைக்கும், மல்யுத்தத்திற்கும் ஒப்பிட்டு விளக்குகின்றது. ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என்று வேதம் வேறு எதற்காக சொல்லுகிறது? (எபே 6:10-18).
சேர முடியாத இரண்டு விஷயங்களை ஒன்று சேர்க்க அநேகர் விடாமுயற்சி செய்து வருவார்கள். நீதிமானாக்குதல் நாம் விசுவாசிக்க வேண்டும் என்று சொல்லுகிறது; விசுவாசிப்பது மட்டுமே இங்கு கடமை. பரிசுத்தமாகுதல் நம்மை ஜாக்கிரதையாக இருக்கவும், ஜெபிக்கவும், போராடவும் சொல்லுகிறது.
இந்த விளக்கங்களை நான் மிகுந்த மனத்தாங்கலுடன் கொடுக்கிறேன். இந்தக் காலத்தில் (ரைல் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில்) விசுவாசிகள் மத்தியில் காணப்படும் ஒருவித மனப்போக்கு எதிர்காலத்தை நினைத்து என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. வேதம் பற்றி அநேகருக்குத் தெளிவான அறிவில்லாமலிருப்பதால் கிறிஸ்தவம் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. பரபரப்பான விஷயங்களில் பேரார்வம் காட்டுவது அதிகரித்துவருகிறது. புதிய குரலையும், புதிய போதனையையும் ஆயிரக்கணக்கில் நாடிப்போய், நாம் கேட்பது உண்மையா என்ற சிந்தனையே இல்லாமல் கேட்டு வருகிறார்கள். கூட்டத்திலும், அழுகையிலும், முடிவில்லாமல் கட்டுப்பாடின்றி எழுகின்ற உணர்ச்சிப் பிரவாகத்திலுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். பிரசங்கி சாதூரியமானவராகவும், உணர்ச்சிவசப்படுகிறவராகவும் இருந்தாலே போதும், அவர் சொல்லுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிடுகிறார்கள்.
விசுவாசிகள் மத்தியில் தனிப்பட்ட பரிசுத்தமாகுதல் பெருமளவுக்கு அதிகரிக்க வேண்டுமென்பதே என்னுடைய அனுதின ஜெபமும், இருதயத்தின் ஆவலுமாய் இருக்கின்றது. அது பெருகவேண்டுமென்று உழைக்கின்ற அனைவரும் வேதபோதனைகளை மட்டும் தெளிவாகப் பின்பற்றி அவற்றைப் பயன்படுத்தி ஒன்று சேர முடியாத போதனைகளை நிதானத்தோடு ஆராய்ந்து அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். ‘நீ தீழ்ப்பானதிலிருந்து (தீங்கானதிலிருந்து) விலையேறப்பட்டதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்’ (எரே 15:19).
பதவிளக்கம்:
நீதிமானாக்குதல் (Justification) – ஒரு மனிதனை நீதிமானாக்குவது என்பது அந்த மனிதன் நீதியானவன் என்று அறிவிப்பதாகும். இது சட்டரீதியிலான ஒரு வார்த்தை. நியாயஸ்தலத்தில் நீதிபதி, ஒருவரைப் பார்த்து உண்மையானவன் என்று கூறி அவரை நீதிமானாக அறிவிக்கிறார். கிறிஸ்து தன்னுடைய மக்களுக்கு செய்திருக்கும் கிரியையின் அடிப்படையில் கர்த்தர் விசுவாசிகளை நீதிமான்களாக்குகிறார். இதில் விசுவாசிக்கு எந்தப் பங்கும் இல்லை.
பரிசுத்தமாகுதல் (Sanctification) – பரிசுத்தமாகுதலென்பது கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் தங்களில் மேலும் மேலும் பரிசுத்தமடையும்படி அவர்களில் செய்கின்ற அடிப்படைக் கிரியை. இதில் விசுவாசிகளுக்கு பங்கு இருக்கிறது. இது தொடர்கின்ற பரிசுத்தம். இந்தக் கிரியை இந்த உலகில் ஒருபோதும் பூரணமடையாமல் பரலோகத்தில் மட்டுமே பூரணமடையும்.
[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் ரைல் தன்னுடைய நூலுக்கு அளித்துள்ள முகவுரையின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார். ஆங்காங்கே எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேதப்பகுதிகளுக்கு தன்னுடைய எழுத்துபூர்வமான மொழியாக்கத்தையும் தந்திருக்கிறார்.
இந்த ஆக்கத்தின் இறுதிப் பத்திகளில் ரைல் தான் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இருந்த நிலை பற்றி அங்கலாய்ப்புடன் விளக்குகிறார். அதற்கும் தற்காலத் தமிழினத்தில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்கள். நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல் போன்ற அடிப்படை வேதசத்தியங்களில் அன்றுபோல இன்றைக்கும் கிறிஸ்தவர்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை முதன்மைப்படுத்தி வேதத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் செழிப்பு உபதேச இயக்கமே பரவலாக எங்கும் காணப்படுகிறது. இந்த இயக்கத்தின் தவறுகளையும், கோளாறுகளையும் இனங்கண்டு அதற்கு விலகி நின்று வேதக்கிறிஸ்தவத்தில் அக்கறை காட்டாமல் சத்திய அறியாமையால் அதற்கு வக்காலத்து வாங்குகிறவர்களே எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். ரைலின் இந்த ஆக்கம் இந்த 21ம் நூற்றாண்டுக்கு எத்தனைப் பொருத்தமானதாக இருக்கின்றது. – ஆசிரியர்]
பரிசுத்தமாகுதல் – சிந்திக்க வேண்டிய சீரான எண்ணங்கள்
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை – எபி 12:14
பரிசுத்தமில்லாமல் இருப்பதால் வரும் அழிவை எண்ணிப்பார்க்க வேண்டும். பரிசுத்தமில்லாமல் இரட்சிப்புக்கு வழியில்லை. மெய்யான பரிசுத்தமில்லாமல் எத்தனை பெரிய, கணக்கற்ற மதக்கிரியைகளைச் செய்தாலும் அவற்றால் எந்தப் பயனுமில்லை. உங்களுடைய விருப்பங்கள் என்ன? உங்களுடைய இருதயம் எதையெல்லாம் நாடுகின்றது? எத்தகைய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுக்கிறீர்கள்? இதெல்லாம் நம்மை ஆராய்ந்து பார்க்க உதவும் கேள்விகள்.
நாம் பரிசுத்தமடைய வேண்டுமானால் நாம் பாவிகள் என்பதை உணர்ந்து கிறிஸ்துவிடம் போய் நம்முடைய அடிப்படைத் தேவையைக் கூறவேண்டும்.
எந்தவிதத்தில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்தோமோ அதேபோல் நாம் அதில் தொடர வேண்டும். கிறிஸ்துவிடம் அடிக்கடி போக வேண்டும். அவர் தலையாயிருக்கின்ற அவருடைய சரீரத்தின் எல்லா அங்கத்தவர்களும் அவரிடத்தில் இருந்துதான் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்தமாகுதலில் தேங்கிப் போயிருக்கிற விசுவாசிகள் பொதுவாகவே கிறிஸ்துவோடு அன்றாடம் இருக்க வேண்டிய அவசிய ஐக்கியத்தை உதாசீனப்படுத்துகிறார்கள்.
நம்முடைய இருதயத்திடம் இருந்து நாம் பெரிய விஷயங்களை இந்த உலகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடாது. இந்தப் பாதையை நாம் பாவிகளாகவே ஆரம்பித்தோம்; அதில் தொடருகிறபோது நம்மைத் தொடர்ந்து பாவிகளாகவே காண்கிறோம். ஆனால், நிச்சயமாகப் புதுப்பிக்கப்பட்ட, மன்னிப்புப்பெற்ற, நீதிமான்களாக்கப்பட்ட பாவிகளாக இறுதிவரை இருப்போம்.
இருந்தபோதும் பரிசுத்தமாகுதலின் உயர்ந்த கட்டத்தை எட்ட நாம் கடினமாக உழைத்துப் போராட வேண்டும். பரிசுத்தமாக இருப்பது சந்தோஷமான வாழ்க்கை. தங்களுடைய வாழ்க்கையை சமாதானத்தோடு வசதியாக வாழ்ந்துவிடுகிறவர்கள் எப்போதும் பரிசுத்தமாகுதலில் ஈடுபடுகிறவர்கள். ‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.’ (சங். 119:165).
[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்க வெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]
நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –
இவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன?
- இரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவாசிகளை வந்தடைகின்றன.
- இவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.
- இவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.
- இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.
- இவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.
இவை எவ்வாறு வேறுபடுகின்றன?
- கிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.
- நீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.
- நீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்!
- நீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.
- நீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.
- கர்த்தருக்கு முன்பாக அவரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.
- பரலோகத்தை அடைவதற்கான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.
- நமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.
இந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.
[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]
நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – மொரிஸ் ரொபட்ஸ்
நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பிரபல்யமாக இருந்த “கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில்” ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
[மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த விளக்கத்தை ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மொரிஸ் ரொபட்ஸ் பல வருடங்களுக்கு முன் தன்னுடைய நியூசிலாந்து வருகையின்போது ஒழுக்க நியதிக் கோட்பாடுகள் பற்றிக் கொடுத்த பிரசங்கங்களில் ஒன்றின் பகுதியாகும். – ஆர்]
சமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்
கடந்த வருடம் எண்பது வயதை எட்டினார் அல்பர்ட் என். மார்டின். ‘போதர்களுக்கெல்லாம் போதகர்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆண்டவர் அவருடைய ஊழியத்தை அவருடைய வாழ்நாளில் உயர்த்தியிருக்கிறார். இத்தகைய பாராட்டை அவர் தானே சூட்டிக்கொள்ளவில்லை; போதகர்கள் அவரை அப்படிக் கணிக்கிறார்கள். இந்த வயதிலும் போதக ஊழியத்திலும், பிரசங்கத்திலும் அவர் பேர் பெற்றவராகத் தொடர்ந்தும் பலராலும் எண்ணப்பட்டு வருகிறார். இதை சமீபத்தில் நான் நேர்முகமாக அனுபவிக்க நேர்ந்தது. முப்பது வருடங்களாக அவரை நான் தெரிந்து வைத்திருந்து, அவருடைய ஊழியத்தினால் பயனடைந்து, அவரோடு நட்பையும், அன்பையும் அனுபவித்திருந்தபோதும் இம்முறை நான் கேட்க நேர்ந்த அவருடைய பிரசங்கம் என் எண்ணத்தில் அவரை இன்னும் ஒருபடி மேலாக உயர்த்தியிருக்கிறது.
அவருடைய வயதின் தன்மையை இப்போது ஓரளவுக்கு நான் அவருடைய நடையில் பார்க்க முடிந்தபோதும் பிரசங்க மேடையில் அவரை நாற்பது வயது நிரம்பிய ஒரு இளைஞனாகத்தான் பார்த்தேன். வயதால் ஏற்படும் சோர்வையோ, தள்ளாமையையோ அங்கே நான் பார்க்கவில்லை. சங்கீதம் 133 அவருடைய பிரசங்கத்தின் கருப்பொருளாக இருந்தது. சகோதரர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையை அவர் அந்த சங்கீதத்தில் காணப்படும் இரண்டு உதாரணங்களான ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்படும் தைலத்திற்கும் மற்றும் எர்மோன் மேலும், சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பிட்டு விளக்கிய விதத்தை அத்தனை அருமையாக நான் அன்றுதான் முதல்தடவைக் கேட்டேன். அன்று அல்பர்ட் என். மார்டினின் பிரசங்கம் அவரை எட்ட முடியாத உயரத்திற்கு என் சிந்தையில் உயர்த்தியது. நாற்பது வயதில் ஆத்துமாக்கள் மத்தியில் பிரசங்க ஊழியத்தில் பேர் பெற்று பிரசங்கத்தைக் கர்த்தருக்காக கடுமையான உழைப்போடு தயாரித்து ஆவியில் தங்கியிருந்து பிரசங்கிக்கும் ஓர் வாலிபப் பிரசங்கியாகத்தான் அவர் அன்று என் கண்ணுக்குத் தென்பட்டார். அந்தளவுக்கு அவருடைய படிப்பறை உழைப்பை நான் அந்தப் பிரசங்கத்தில் பார்க்க முடிந்தது. எபிரெய மொழியில் அந்த வேதப்பகுதியில் காணப்படும் நேரடி அர்த்தத்தை அவர் ஆங்கிலத்தில் எளிமையாக வெளிப்படுத்திய முறையும், சங்கீதக்காரன் பயன்படுத்தியிருக்கும் இரண்டு உதாரணங்களின் உள் அர்த்தத்தை அவர் என் மனக்கண் முன் நிழற்படம்போல் நிறுத்திய அழகும், எத்தகைய ஒற்றுமையையும், உறவையும் சகோதரர்களிடம் கர்த்தர் இருதய தாகத்தோடு எதிர்பார்க்கிறார் என்பதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இருதயத்தில் இறக்கத் துடிக்கின்ற அவருடைய பிரசங்கத் துடிப்பையும் இந்த வயதில் அவரில் பார்த்து அன்று நான் அசந்துவிட்டேன் என்று மட்டுந்தான் சொல்ல வேண்டும். அல்பர்ட் என். மார்டினின் எத்தனையோ பிரசங்கங்களை என் வாழ்நாளில் நான் கேட்டிருந்தபோதும் அந்தப் பிரசங்கத்தில் நான் பார்த்தவையும், கற்றவையும் என்னுடைய வாழ்க்கையில் இறுதிவரையிலும் நிற்காமல் போகாது. இத்தகைய பிரசங்கியை உருவாக்கிய கர்த்தர் எத்தனை பெரியவர்!
பிரசங்க ஊழியத்தில் கர்த்தரால் அழைக்கப்பட்டு ஈடுபட்டு வருகின்ற எல்லோருமே அதில் சமமான வரத்தையும், ஆற்றலையும், ஆவியின் வல்லமையையும் கொண்டிருப்பதில்லை. எல்லாப் பிரசங்கிகளும் சமமான ஆவியின் ஆற்றலைக்கொண்டிருப்பார்கள் என்று நினைப்பது முழுத்தவறு. சிலருக்கு கர்த்தர் கூடிய ஆற்றலைக் கொடுத்து மேலானவிதத்தில் பயன்படுத்தியிருப்பதை வேதத்திலும், சபை வரலாற்றிலும் நாம் வாசிக்கிறோம். தீர்க்கதரிசிகளும், இயேசுவும், பவுலும், பேதுருவும், லூத்தரும், கல்வினும், நொக்ஸும், ஓவனும், பனியனும், எட்வர்ட்ஸும் அத்தகைய பிரசங்கிகளாக இருந்தனர். அந்தவகையில் இந்த நூற்றாண்டில் கர்த்தர் அல்பர்ட் என். மார்டினைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரைப் போல வேறு சிலரையும் நாம் பார்க்காமலில்லை. மற்றப் பிரசங்கிகளால் அவர் பிரசங்க ஊழியத்தில் மேலானவராகக் கருதப்படுகிறார்.
பிரசங்க ஊழியத்தில் சிலர் ஏனையோரைவிட சிறப்பான விதத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டபோதும், பிரசங்கத் தயாரிப்பில் கருத்தோடு, கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தைக் கர்த்தர் எல்லாப் பிரசங்கிகளிடமும் எதிர்பார்க்கிறார். எபிரெய, கிரேக்க மொழிகளில் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, ஆங்கிலத்திலும், தமிழிலும் அவற்றின் அர்த்தத்தைத் தெளிவாக, எளிமையாக விளக்கிப் பிரசங்கித்து அவற்றால் நாம் கற்றுப் பயனடைய வேண்டிய பாடங்களை ஆவியின் வல்லமையோடும், அன்பால் நிரம்பிய கண்டிப்போடும் ஆணித்தரமாக ஆத்துமாக்கள் முன் நிறுத்தவேண்டிய பணி ஒருசில பிரசங்கிகளுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட சிறப்பான அம்சம் அல்ல. அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் நான் மறுபடியும் பார்த்ததும், கற்றதும் அதுதான். பிரசங்கப்பணியை எந்தளவுக்கு உயர்ந்ததாக, தேவபயத்தோடு எதிர்கொள்ள வேண்டியதாக அவர் கருதுகிறார் என்பதற்கு அவருடைய அன்றைய பிரசங்கம் ஓர் உதாரணமாக இருந்தது. தற்காலத் தமிழ் பிரசங்கிகளும், போதகர்களும் இந்தளவுக்கு பிரசங்கத்தைக் கருத்தோடு அணுகாமல் இருப்பது நம்மத்தியில் கிறிஸ்தவம் சிறந்ததாகக் காணப்படாமல் இருப்பற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் எப்படி மறுக்க முடியும்?
பிரசங்கம் ஆவியின் வல்லமையோடு இருக்கவேண்டும் என்பதை ஒத்துக்கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. ஆவியின் வல்லமை என்பது நம்முடைய குரலைப் பெருமளவுக்கு உயர்த்திப் பிரசங்கிப்பதிலோ, பிரசங்க மேடையில் அளவுக்கதிகமான அங்க அசைவுகளைக் கொண்டிருப்பதிலோ தங்கியிருக்கவில்லை; பிரசங்கி நேர்மையோடும், தேவபயத்தோடும், ஆத்தும ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைத்துத் தயாரித்த பிரசங்கத்தை பிரசங்க வேளையில் ஆவியானவர் அவரிலும் ஆத்துமாக்களிலும் இறங்கிப் பயன்படுத்துகிறதையே ஆவியின் வல்லமை என்கிறது வேதம். அத்தகைய ஆவியின் வல்லமையைக் கருத்தோடு உழைத்துத் தயாரித்துப் பிரசங்கிக்கப்படாத பிரசங்கங்களில் துப்புரவாகக் காணமுடியாது. அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் ஆவியானவர் இருந்தார்; அவர் பிரசங்கியையும், ஆத்துமாக்களையும் என்னையும் அசைத்து ஆட்கொண்டார்.
அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கம் 90 நிமிடங்களில் கொடுக்கப்பட்டது. சாதாரணமாக அவர் 50 நிடங்களுக்கு பிரசங்கிப்பார். கூடிய நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக பிரசங்கத்தின் முடிவில் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அப்படி அவர் செய்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஒருவராகிலும் நேரம்போனதாகவே எண்ணவில்லை. இவ்வளவு சீக்கிரம் பிரசங்கம் முடிந்துவிட்டதா என்ற எண்ணம் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அந்தளவுக்கு பிரசங்கத்தில் ஆழமாக நான் உட்பட அனைவரும் பதிந்துபோயிருந்தார்கள். அன்றைய கூட்டம் போதகர்களை மட்டும் கொண்டிருந்த கூட்டமல்ல. சபை மக்களும், வாலிபர்களும், சிறுவர்களும் கூட்டத்தில் இருந்தார்கள். இருந்தபோதும் எதையும் எவரும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு பிரசங்கம் தலைக்கு மேல் போவதாக இருக்கவில்லை. ஆழந்த, நுண்ணிய வேத சத்தியங்களால் பிரசங்கம் நிரம்பியிருந்தபோதும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி இருந்தது. எந்தளவுக்கு இந்தப் பிரசங்கி தன் சபை மக்களை சத்தியத்தில் வளர்த்திருக்கிறார் என்பதற்கு அந்தப் பிரசங்கம் அன்று உதாரணமாக இருந்தது. அப்படி சத்தியத்தில் வளர்க்கப்படாதவர்களுக்கு வேதப் பிரசங்கம் போரடிப்பதில் ஆச்சரியமில்லை. ஆழ்ந்த, நுணுக்கமாக, இறையியல் போதனைகள் அவசியமில்லை என்று இருப்பவர்களுக்கு வேதம் அவசியமில்லை; வேதப் பிரசங்கம் தேவையில்லை. அந்த நோக்கத்தோடு வளரும் கிறிஸ்தவம் மெய்க் கிறிஸ்தவமாக இருக்காது; நீண்ட நாட்களுக்கு அது நிலைக்கப்போவதுமில்லை.
அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் நான் இன்னுமொன்றையும் கவனித்தேன். கடுமையாக உழைத்துத் தயாரித்த அந்தப் பிரசங்கத்தின் உதாரணங்களை அவர் நிச்சயம் தன்னுடைய படிப்பறையில் பல தடவைகள் தனக்குள்ளாகவே சொல்லிப்பார்த்திருக்க வேண்டும். அது என்னுடைய ஊகந்தான். நான் அப்படிச் சொல்லுவதற்குக் காரணமிருக்கிறது. அன்று அவர் தங்குதடையில்லாமல் அந்த உதாரணங்களோடு ஒன்றிப்போய் உணர்ச்சியோடு ஆத்துமாக்கள் கண்ணசையவிடாதபடி சொன்ன முறை அதை எனக்கு உணர்த்தியது. இந்தவிதமாகப் பிரசங்கிக்க ஒரு பிரசங்கி எந்தளவுக்கு தன்னுடைய பிரசங்கப் பொருளிலும், பிரசங்கத்திலும் ஒன்றிப்போயிருந்திருக்க வேண்டும். பிரசங்கிக்கு பிரசங்கம் வெறும் பேச்சுப்பொருளாகவோ, மற்றவர்களுக்காக மட்டும் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. பிரசங்கியின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்ததாக அது எப்போதும் இருக்கவேண்டும். அது முதலில் பிரசங்கிக்காகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு தன்னுடைய பிரசங்கத்தில் தானே பிணைந்து அதில் திளைத்து அனுபவித்த ஒரு பிரசங்கி மட்டுமே அல்பர்ட் என். மார்டின் அன்று பிரசங்கித்ததுபோல் பிரசங்கிக்க முடியும். அந்தவிதத்தில் நான் கேட்டுப் பயன்பட்ட இன்னுமொரு பிரசங்கி டெட் டொனலி. அவரும் ஒரு சிறந்த பிரசங்கியாக இருந்தபோதும் அல்பர்ட் என். மார்டினே தனக்கு பிரசங்கத்தில் முன்மாதிரி என்று தாழ்மையோடு சொல்லுகிறவர் அவர்.
இறுதியாக அன்றைய பிரசங்கத்தில் நான் அனுபவித்த இன்னுமொரு விஷயத்தை விளக்கி இதை முடிக்க விரும்புகிறேன். அன்று கிறிஸ்தவ ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் சங்கீதம் 133 மூலம் அல்பர்ட் என். மார்டின் தன்னுடைய பிரசங்கத்தில் விளக்கிக் காட்டவில்லை. அதற்கு முன்னுதாரணமாக அவர் அன்று பிரசங்க மேடையில் நின்றார். அன்று கூடியிருந்த கூட்டம் அந்த ஒற்றுமையை அவரோடு வாழ்ந்து அனுபவித்து அதற்கு சாட்சியாக இன்றும் நிற்கும் கூட்டம். கிறிஸ்தவ ஒற்றுமை பலருக்கு பேச்சாக மட்டுமே இருக்கிறது. அது வெறும் காலங்குலத் தடிப்புள்ளதாகவே இருக்கிறது. நுனிப்புல் மேய்வது போல் என்று சொல்லுவார்களே அதுபோல் பேருக்கு நம் சரீரத்தின் தோலைக்கூடத் தொடாததொரு ஒற்றுமையையே இன்றைக்கு அநேகர் விரும்புகிறார்கள்; நாடுகிறார்கள். அதுவல்ல கிறிஸ்தவ ஒற்றுமை என்பதை மார்டின் அன்று பிரசங்கத்தில் விளக்கினார். அவர் அதைத் தன் வாழ்க்கையில் நடைமுறையில் தொடர்ந்தும் காட்டி வருகிறார். அந்த ஒற்றுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் அன்று கூடியிருந்த கூட்டமும்.
கடந்த வாரம் என்னுடைய பிரசங்கத்தில் நான் சொன்னேன் – இன்றைக்கு ஒற்றுமை தலையிலிருந்து விழுந்துவிடுகின்ற முடிபோலத் தளர்ந்து, பலவீனமானதாக இருக்கின்றதென்று. இன்று வெறும் சாதாரண கருத்து வேறுபாடுபோதும் ஒற்றுமை எந்தளவுக்கு பலவீனமானதாக இருக்கின்றதென்று கண்டுகொள்ளுவதற்கு. நிச்சயமாக அத்தகைய தன்மைகொண்டதல்ல வேதம் போதிக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை. அது மிகவும் ஆழமானது; அழுத்தமானது; தியாகமுள்ளது; தடிப்புள்ளது. சாதாரண வேறுபாடுகளால் தளர்ந்து போகாதது. அன்பெனும் சங்கிலியால் பிரிக்க முடியாதபடி கட்டப்பட்டது அந்த ஒற்றுமை. அத்தகைய அன்போடு கூடிய ஒற்றுமையை இன்றைக்குப் பலர் விரும்புவதில்லை. ஏன், தெரியுமா? சுயநலந்தான் காரணம். காலங்குளத் தடிப்புள்ள தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையும், கிறிஸ்தவ நம்பிக்கையும், கிறிஸ்தவ ஊழியமும் எங்கே தோலுரிக்கப்பட்டுவிடுமோ என்ற பயந்தான் பலரை இன்றைக்கு ஆழான கிறிஸ்தவ ஒற்றுமையைவிட்டுத் தள்ளி நிற்க வைத்திருக்கிறது. அத்தகைய வாழ்க்கையை எவரும் தன்னுடைய கணவனோடோ மனைவியோடோ வாழமுடியுமா? வாழ்வதுதான் தகுமா? சத்தியத்தின் அடிப்படையில், அன்பைப் பிணைப்பாகக்கொண்டு, நெருக்கமான உறவை நிரந்தரமானதாகக் கொண்டிருக்கும் குறிக்கோளோடு, தியாகங்கள் பல செய்து நிலைநிறுத்தப்படுவதே மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமை (எபேசியர் 4). அத்தகைய கிறிஸ்தவ ஒற்றுமையை நாடாமலும், அதை விரும்பாமலும், அதற்காக உழைக்க மறுப்பவர்களுக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை எதற்கு?
ஒரு மூத்த போதகரின் முதிர்ந்த ஆலோசனைகள்
கடந்த வருட இறுதியில் போதகர்களுக்கான ஓர் ஆவிக்குரிய கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதில் பல்லாண்டுகளாக நான் கலந்துகொண்டிருக்கிறேன். அநேக விதங்களில் எனக்கும் என் நட்புக்குரிய அநேக போதகர்களுக்கும் இது பெருமளவில் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் துணைபுரிந்திருக்கிறது. இந்தக் கூட்டங்களில் முக்கிய அம்சம் போதகர் அல்பர்ட் என். மார்டின் நடத்துகின்ற கேள்வி-பதில் நேரம். இது ஒன்றரை மணி நேரத்துக்கு இரண்டு நாட்களுக்கு நடக்கும். இந்த நேரத்தில் பல போதகர்கள் தங்களுடைய இருதயத்தில் இருந்து வரும், ஊழியத்தில் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகள், இறையியல், வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் பற்றி கேள்விகளை முன்கூட்டியே கொடுப்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு விளக்கங்களை போதகர் மார்டின் அளிப்பார். இது வெறும் கேள்வி பதில் நேரமல்ல. மிகவும் ஆழமான ஆவிக்குரிய, இறையியல் விளக்கங்கள் நடைமுறைக்குத் தகுந்தவிதத்தில் கொடுக்கப்படும் முக்கியமான நேரம். இது ஒருபோதும் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில், தனிப்பட்ட விஷயங்களும், பொதுவில் கலந்துகொள்ளக்கூடாத விஷயங்களும் இதில் விவாதிக்கப்படும். இந்த நேரத்தில்தான் அல்பர்ட் என். மார்டினை அவருடைய சொந்தத் தளத்தில் நாம் பார்த்து வந்திருக்கிறோம் (He is in his element). அதாவது, சொல்லுவதெல்லாம் பதிவு செய்யப்படுகின்றதே என்ற கவலை எதுவும் இல்லாமல், தைரியமாக, தெளிவாக அவருக்கே உரியவிதத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்கிறோம் என்ற பலத்த நம்பிக்கையோடு நண்பர்களுக்கு மத்தியில் இங்குதான் பாஸ்டர் மார்டின் அவராக இருந்து வெளிப்படையாகப் பேசக் கேட்டிருக்கிறேன். இந்த நேரம் போதகர்களுக்கு பொன்னான நேரம். என்னுடைய எத்தனையோ கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கிறது. அல்பர்ட் என். மார்டின் தன்னுடைய விளக்கத்தைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அங்கிருக்கும் ஏனைய மூத்த போதகர்களின் எண்ணங்களையும் கேட்பார். இன்னொரு முக்கிய விஷயமென்னவென்றால் இந்தக் கேள்வி&பதில் நேரத்தை அல்பர்ட் என். மார்டினே செய்ய வேண்டும் என்று ஏனைய போதகர்கள், முக்கியமாக மூத்த போதகர்கள் அவரைக் கேட்டு வந்திருக்கிறார்கள். இதற்கு அவர் மட்டுமே தகுந்தவர் என்பது எல்லோருடைய ஏகோபித்த முடிவாகவும் இருந்து வந்திருக்கிறது. அதில் இன்றுவரை மாற்றங்கள் இல்லை.
இந்தக் கேள்வி நேரத்தில் பாஸ்டர் மார்டின் கேள்விகளை அணுகும் முறை அபாரமானது. சட்டென்று எதற்கும் பதில் தந்துவிடாமல், கேள்வியைப் பல கோணங்களில் ஆராய்ந்து புரிந்துகொண்டு அதற்கான இறையியல் விளக்கங்களைப் படிப்படியாகக் கொடுத்து அதற்குப் பிறகு நடைமுறையில் அதை அணுக வேண்டிய விதத்தையும் அவர் விளக்குவார். ஓர் ஓவியன் தனக்கு முன்னால் இருக்கும், தான் வரைகின்ற ஓவியத்தைப் பல கோணங்களில் தள்ளி நின்று எப்படிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பிறகு தூரிகையில் தகுந்த வர்ணத்தை எடுத்து அந்த ஓவியத்தைத் தீட்டுகிறானோ அதேபோல்தான் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களை அல்பர்ட் என். மார்டின் அணுகியிருக்கிறார். கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதமே அலாதியானது. ஒரு விஞ்ஞானியைப் போல அவர் கேள்விகளை அணுகிப் பதிலளிப்பதை நான் கண்டிருக்கிறேன். ஒரு சட்ட நிபுணனைப்போல அந்தக் கேள்விகளை அலசி ஆராய்ந்து தகுந்த தரமான பதில்களை வேதத்தில் இருந்து விளக்குவதை வருடக்கணக்கில் கண்டிருக்கிறேன். சாணத்தில் தீட்டப்படும் கத்தி கூரடைவதைப்போல அவருடைய ஒவ்வொரு பதில்களும் இருக்கும். இசைஞானியொருவர் மேடையில் வாத்தியக்கருவியை லாவகமாகக் கையாண்டு கூட்டத்தாரை மெய்மறக்கச் செய்வதுபோல் அல்பர்ட் என். மார்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
கேள்விகளுக்கு பதில் தந்து முடிந்தபின் பாஸ்டர் மார்டின் இன்னும் உப கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தவறுவதில்லை. அவற்றிற்கும் அவர் பதில் தருவார். தன் முன் கூடியிருக்கும் சபையார் கருத்துக்களையும் அவர் கேட்கத் தவறுவதில்லை. முக்கியமாக அவருடைய பதில்களிலும், நடந்துகொள்ளும் முறையிலும் தாழ்மை குடிகொண்டிருக்கும். மிக முக்கியமாக தனக்குத் தெரியாததொன்றைத் தெரிந்துகொண்டதுபோல அவர் என்றுமே காட்டிக் கொண்டதில்லை. இந்தத் தடவையும்கூட ஒரு விஷயத்திற்கு அவர் பதிலளித்தபோது தனக்குத் தெரிந்தவரை, கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கும்வரை பதிலளித்த அவர் அதற்கு மேல் கர்த்தர் தனக்கு எதையும் வெளிப்படுத்தவில்லை என்று மிகத் தைரியமாகத் தாழ்மையோடு தெரிவித்தார். தெரியாது என்று பதில் சொல்லுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கி நான் பார்த்ததில்லை. அதை அறியாமையால் அவர் சொல்லுவதில்லை. முதிர்ந்த ஞானியாக வேதம் அதைத் தனக்கு வெளிப்படுத்தவில்லை என்ற தாழ்மையோடு சொல்லுவார். வேதம் வெளிப்படுத்தாத விஷயங்களைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளுவது அவருடைய அகராதியில் என்றுமே இருந்ததில்லை. அதே நேரம் கர்த்தர் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பவற்றை பயமறியாது ஆணித்தரமாக விளக்குவதற்கும் அவர் என்றுமே தயங்கியது கிடையாது. அவருடைய பதில்கள் என்றும் எவரையும் காயப்படுத்தியதில்லை. தனிப்பட்ட விதமாக எவரையும் அவர் தாக்குவதில்லை. அவருடைய பதில்கள் இருதய சுத்தத்துடன் வெளிப்படையாக தைரியத்தோடு வருவதற்குக் காரணம் அவர் அவருடைய நண்பர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருப்பதுதான். உதாரணமாக இந்த வருடம் பக்கத்தில் என்னுடைய சக ஊழிய நண்பர் அமர்ந்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய சபையில் ஒரு காரியத்தை அவர் நடைமுறையில் செய்திருந்தார். அதுபற்றி நான் அவரோடு முதல் நாள் விவாதித்திருந்தேன். இந்த விஷயம் பற்றி ஒன்றுமே தெரியாமல் அன்றைய வினாவிடை நேரத்தில் யாரோ ஒருவர் அந்த விஷயத்துக்கு விளக்கம் கொடுக்கும்படிக் கேட்டிருந்தார். அதற்கு மார்டின் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த விஷயம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை என்று தன்னுடைய கருத்தைத் தெளிவாக விளக்கினார். நான் என் நண்பனைத் திரும்பிப் பார்த்து புன்னகை செய்தேன். பாஸ்டர் மார்ட்டினுக்கு என் நண்பனுடைய சபையில் நடந்ததொன்றும் தெரியாது. இருந்தபோதும் அவர் வேதம் விளக்குவதை எவர் மனதும் புண்படாமல் தெளிவாக விளக்கத் தவறவில்லை. இதற்காக என் நண்பனோ நானோகூட அவரைத் தவறாகக் கணிக்கவில்லை. அவருடைய பதில் எங்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக அந்தக் கேள்வி&பதில் கூட்டங்களில் என் நண்பர்களோடு அமர்ந்து பயன்பட்டிருக்கிறேன் என்று எண்ணும்போது நான் எந்தளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை.
இதுவரை இந்தக் கேள்வி&பதில் நேரத்தைப் பற்றி சொல்லி வந்திருக்கிறேன். இப்போது இந்தக்கூட்டத்தில் அல்பர்ட் என். மார்டின் தந்த ஒரு விளக்கத்தை வாசகர்கள் முன்வைக்க விரும்புகிறேன். அதை எழுத்தில் வடிக்குமுன் அவரை ஒரு வார்த்தை கேட்டுவிடவேண்டுமென்று அப்படிச் செய்ய எனக்கு அனுமதி உண்டா என்று பாஸ்டர் மார்டினை நான் கேட்டபோது அவர், ‘தாராளமாகச் செய்துகொள் நண்பா, உன்னை நான் நம்புகிறேன்’ என்று அவர் பதிலளித்தார். அவரே சொல்லிவிட்டார். அதற்கு மேல் என்ன வேண்டும்?
இந்த வருடக்கூட்டத்தில் பாஸ்டர் மார்டினிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ‘உங்களுடைய வாழ்நாள் அனுபவத்திலிருந்து கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து எத்தகைய ஆலோசனையை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள்?’ என்பது. அதற்கு பாஸ்டர் மார்டின் கீழ்வரும் விளக்கத்தைக் கொடுத்தார்.
- உன்னுடைய வேதாகமத்தில் நல்ல பரிச்சயம் இருக்குமாறு பார்த்துக்கொள். ஒரு கிறிஸ்தவ மனிதனாகிய உனக்குள் அதன் மூலமே கர்த்தர் செல்வாக்கு செலுத்துகிறார் என்பதை உணர்ந்து வேதத்தை அறிந்துகொள். வேதத்தை முறையாக ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக வாசிப்பதை வழக்கமாகக் கொள். இதை ஆங்கிலத்தில் consecutive reading என்று அழைப்பார்கள். அங்குமிங்குமாக எந்தப் பகுதியையாவது வாசிக்காமல் ஆதியாகமத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து அதில் நல்ல தேர்ச்சியடைய வேண்டும். இறையியல் அறிவு பெருகுவதற்கு என்றில்லாமல் உன்னுடைய ஆவிக்குரிய உணவாக அதை எண்ணி வாசிக்க வேண்டும். தியானத்தோடு வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த வகையில் முழு வேதத்தையும் வாசிக்கும்போது நீ வேதமனிதனாக அதில் முழுத்தேர்ச்சியுள்ளவனாவாய். இதைக் கிறிஸ்தவ வாழ்க்கையில் வழமையாகக் கொள்ள வேண்டும்.
- அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16ன்படி வாழக் கற்றுக்கொள். அங்கே பவுல் சொல்லுகிறார், ‘நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.’ அதேபோல் நீயும் எப்போதும் கர்த்தருக்கும் மனிதர்களுக்கும் முன் உன் மனச்சாட்சி உன்னைக் குற்றப்படுத்தாதபடி பார்த்துக்கொள்.
- வேதத்தைக் கற்று இறைபோதனையைப் பெற்றுக்கொள்ள கணினியில் தங்கியிருக்காதே. கணினியை உன்னுடைய முதன்மையான ஊடகமாகப் பயன்படுத்தி இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துவிடு. அதாவது வலைப்பூ இறையியல் அறிஞனாக (Blog theologian) மாறிவிடப் பார்க்காதே. வரலாற்றாலும், திருச்சபையாலும் உறுதிசெய்யப்பட்ட இறையிலறிஞர்களையும், அவர்களுடைய நூல்களையும் நாடிப் போய் இறையியல் போதனையைப் பெற்றுக்கொள்ளப் பார். வலைப்பூவை இன்று எவரும் உருவாக்கலாம்; எதையும் அதில் எழுதலாம். அதற்காக அதில் வருவதெல்லாம் உண்மையும், நன்மையானதுமாகிவிடாது. காலத்தால் ஊர்ஜீதம் செய்யப்பட்ட, திருச்சபை வளர்த்தெடுத்துள்ள இறையியலறிஞர்களின் நூல்களுக்கு எதுவும் ஒப்பாகி விட முடியாது. ஜே. ஐ. பெக்கர், ஜெரி பிரிஜ்ஜஸ் போன்றோரின் இக்கால எழுத்தாளர்களின் நல்ல நூல்களை வாங்கி வாசி.
- ஜெபத்தோடு வாழ்க்கையில் ஆழமான நல்ல நட்பை மற்றவர்களோடு வளர்த்துக்கொள். அத்தகைய நட்பு வளர்க்கப்பட வேண்டியது. மேற்போக்காக எவரோடும் பழகப் பார்க்காதே. தாவீதையும், யோனத்தானையும் எண்ணிப்பார். நல்ல நட்பை வளர்ப்பது மட்டுமல்ல அதைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும். நல்ல நட்பை உதாசினப்படுத்துவதாலேயே இழக்க நேரிடும். மற்றவர்களைத் தெரிந்துகொள்ளவும், அவர்கள் உன்னைத் தெரிந்துகொள்ளவும் இடங்கொடு. அதன் மூலமே நல்ல நட்பை வளர்க்க முடியும்.
ஒரு மூத்த போதகரின் இந்த முதிர்ச்சியான ஆலோசனை உங்களுக்குத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்!
திருமறைத்தீபம் தனது இருபது வருட ஊழியப்பணியை நிறைவு செய்வதை நினைவுகூருமுகமாக பல வாசகர்கள் தங்களுடைய அனுபவங்களை என்னோடும் உங்களோடும் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களில் புதிய வாசகர்களும் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையை வாசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எப்படியெல்லாம் திருமறைத்தீபத்தைக் கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இந்தக் கடிதங்கள் தெளிவாக விளக்குகின்றன. தங்களுடைய உள்ளத்தில் இருப்பதை, உணர்வுபூர்வமாக அனுபவித்தவற்றை அப்படியே எழுதியிருக்கிறார்கள். அவற்றை வாசிக்குப்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய (பத்திரிகைக் குழுவினரின்) இந்த எளிய ஊழியப்பணியை எத்தனை வல்லமையாகப் பயன்படுத்தி ஆவிக்குரிய வளர்ச்சியை அநேகருக்குக் கொடுத்திருக்கிறார்; கொடுத்துவருகிறார் என்பதை உணர்ந்து மலைத்துப் போனேன். கர்த்தருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன். இந்த இலக்கியப்பணியில் அவர் இருக்கிறார்; நடத்துகிறார்; தன் மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை உணராமல் இருக்க முடியாது. பணத்திற்கோ, பகட்டிற்கோ, பெயருக்கோ, பெருமைக்காகவோ அல்லாது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் வேதபூர்வமான திருச்சபை ஊழியங்கள் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சுயநலமற்று செய்யப்பட்டு வருகிறது. இனியும் தங்களுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களுடைய கடிதங்களை ஈ&மெயில் மூலமோ வேறுவகையிலோ எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவற்றை அடுத்து வருகின்ற இதழ்களில் முடிந்தளவுக்கு பிரசுரிக்க முயற்சிக்கிறோம். அன்புடன் – ஆர்.
ஆத்தும தாகந்தீர்க்கும் பத்திரிகை

சாதாரண மனிதர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய அருமையான சத்தியங்களை சமுதாயத்தின் எல்லாத்தரப்பினருக்கும் பயன்படக்கூடிய எளிய நடையில் நம்முடைய இனத்தின் பண்பாட்டுத் தேவைகளுக்கேற்ற விதத்தில் விளக்கி உணர்த்தி வருகிறது திருமறைத்தீபம். பல நாடுகளுக்கும் போய் இருபது வருடகால இலக்கியப் பணியைச் செய்திருக்கும் திருமறைத்தீபம் எந்தளவுக்கு திருச்சபையின் எல்லாத்தரப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும், வாலிபர்களுக்கும் அவசியமானது என்பதை அதன் செல்வமிக்க, நடைமுறைக்குகந்த ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் வேதத்தின் அடிப்படைப் போதனையான அதன் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும், கிறிஸ்துவின் தன்மையையும் சிலுவைத் தியாகத்தையும், மகத்துவமான சுவிசேஷத்தையும், பாவிகளுக்கான இரட்சிப்பையும், மீட்பின் கிரியையில் திருச்சபையின் மையத்தன்மையையும், நடைமுறைக்கேற்ற கிறிஸ்தவ வாழ்கைக்குகந்த போதனைகளையும் வாசகர்கள் உணரவும் ஏற்றுக் கொள்ளவும் திருமறைத்தீபத்தின் மூலம் கர்த்தர் செய்திருக்கும் கிரியை அதை எந்தளவுக்கு அவர் ஆசிர்வதித்திருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது.
திருமறைத்தீபத்தின் நோக்கம் & பவுல் எபேசி 4:15ல் சொல்லுவதுபோல சத்தியத்தை அன்போடு வெளிப்படுத்தி எல்லோரும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரவேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
திருமறைத்தீபத்தின் போதனைகள் & இதன் போதனைகள் வேதம் சார்ந்து அமைந்து வரலாற்றில் எழுந்திருக்கும் வினாவிடைப்போதனைகள், விசுவாச அறிக்கைகள், பியூரிட்டன் எழுத்துக்கள் மற்றும் தற்கால சீர்திருத்த போதகர்களின் ஆக்கங்களை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது.
திருமறைத்தீபத்தினால் வரும் நன்மைகள் – இது விசுவாசிகளுக்கு பரிசுத்தத்தில் வளரத் துணை செய்து, திருச்சபைகளை சத்தியத்தில் வளர்த்து, கேடானவர்களுக்கு கர்த்தரின் எச்சரிக்கையையும் கொடுத்து வருகிறது. எந்தவொரு சபையும், ஆத்துமாவும் வேதம் வெளிப்படுத்தும் சத்தியங்களை அறியாமலும், சபை வரலாறு தெரியாமலும், பியூரிட்டன்களின் எழுத்துக்களில் பரிச்சயம் இல்லாமலும் இருந்து சாக்குப்போக்கு சொல்லிவர வழியில்லை. ஏனெனில், கடந்த இருபது வருடங்களாக 79 இதழ்களில் விலைமதிப்பில்லாத ஆத்மீக சத்தியங்களை போதகர்களுக்கும், சபை மக்களுக்கும் திருமறைத்தீபம் அளித்து வந்திருக்கிறது. எந்தவொரு தமிழ் சபையிலிருக்கும் பத்துப்பேராவது திருமறைத்தீபத்தில் கொடுக்கப்படும் சத்தியங்களை சிந்தித்து வாசித்து, மனப்பூர்வமாக ஏற்று ஊக்கத்தோடு மற்றவர்களுக்கு வழமையாகப் போதித்து வருவார்களானால் தனியொருவனின் பக்திவிருத்தியில் எழுப்புதலும், திருச்சபையில் தேவபயமும் உண்டாகும். இன்னுமொருவிதத்தில் சொல்லப்போனால், தனிமனிதனின் வாழ்க்கையிலும், சபைகளில் சீர்திருத்தமும் உருவாக திருமறைத்தீபம் நிச்சயம் பயன்படும். போதகர்கள் திருமறைத்தீபத்தைப் பயன்படுத்திப் போதித்தும், சபையார் அதைப்பெற்று ஆர்வத்தோடு வாசித்தும் வருவார்களானால் அநேக இடங்களில் ஆவிக்குரிய வல்லமையில்லாதிருந்து வரும் அநேக தமிழ் சபைகள் பெரிதும் சீர்திருந்தும்.
திருமறைத்தீபத்தின் சிறப்பம்சம் – திருமறைத்தீபத்தின் ஆசிரியர் ஆத்துமாக்களுக்கு சத்தியத்தில் தெளிவிருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருப்பதால் பத்திரிகையில் வரவேண்டிய ஆக்கங்களைக் கவனத்தோடு தயாரித்து சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதி வெளியிட்டு வருகிறார். அவர் தற்கால கிறிஸ்தவ எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், நம்முடைய பிதாக்களின் பொன்னான எழுத்துக்களையும் கவனத்தோடு தயாரித்து தமிழில் தந்து வருகிறார். முரண்பாடில்லாத வகையில் சத்தியத்தை சத்தியமாக எழுதுவதும், போதிப்பதும் இன்றைக்குப் பரவலாக எதிர்ப்பைக் கொண்டு வந்தாலும், அதற்காக எல்லோரையும் குளிரவைக்கும் நோக்கத்துடன் எழுதாமல், தான் விசுவாசிப்பதைத் தைரியமாக ஆசிரியர் எழுதி வருகிறார். சத்தியத்தை அவர் சத்தியமாக தெளிவாக மனித பயமின்றி எழுதி வருகிறார். அவருக்கு உண்மையான ஆத்தும தாகமிருப்பதால் சத்தியமறியாதவர்களும், அதை இலகுவாக உடனடியாகப் புரிந்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ந்து அவர்களுக்கு துணைசெய்யும்படி விடாமுயற்சியுடன் எழுதி வருகிறார்.
திருமறைத்தீபத்தால் வரும் ஆசீர்வாதங்கள் – திருமறைத்தீபம் வேதமல்ல. அது ஆவியினால் அருளப்பட்டதுமல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையான, தரமான ஆவிக்குரிய இலக்கியங்கள் அநேகம் இல்லாத நிலையில் திருமறைத்தீபம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள தனி மனிதனுக்கும், திருச்சபைகளுக்கும் அவசியமான ஊடகமாக இருந்து வருகிறது. சுத்தமான சத்தியங்களையும், வேதநடைமுறைகளும் திருச்சபையில் காணப்பட பத்திரிகை பேருதவி செய்யும்.
எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் தமிழ் வாசகர்கள் திருமறைத்தீபத்தைப் பெற்று தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஜெபத்தோடு தவறாது வாசிக்க அவர்களை நான் ஊக்குவிக்கிறேன். நிச்சயம் இதன்மூலம் திருச்சபைக்கு தலையாக இருப்பவர் உயர்த்தப்படுவார்; மகிமை பெறுவார். அநேக தமிழ்ச் சபைகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் சிறந்த ஆவிக்குரிய இலக்கியங்களை வழங்கி வந்துள்ள ஆசிரியருக்கும், அவரோடு இருபது வருடங்களாக இணைந்துழைத்திருப்பவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போதகர் குணசீலன் குஞ்சன்,
கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை,
கோலாலம்பூர், மலேசியா
2003ம் ஆண்டில் இருந்து திருமறைத்தீபத்தை நாங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். பத்திரிகை திருச்சபை வரலாற்றில் எங்களுக்கு நல்லறிவு தந்து, திருச்சபை வாழ்க்கையை எவ்வாறு நிதானத்தோடு நடத்துவது என்று போதித்து எங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையை பெலப்படுத்தி வேதபூர்வமானதாக அது அமைந்திருக்க வழிகாட்டியிருக்கிறது. திருமறைத்தீபத்தைக் கனடாவில் இருக்கும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் விநியோகித்து வருகிறோம். கெரிஸ்மெட்டிக் இயக்க சிந்தனைப் போக்கில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சீர்திருத்த போதனைகளைப் பின்பற்ற பத்திரிகை சிலருக்கு உதவியிருக்கிறது. கிறிஸ்தவ இலக்கியத்துக்கு தன்னுடைய பங்கைச் செய்து வரும் போதகர் பாலாவுக்கு நாம் நன்றிகூறுவதோடு அவருக்கு நீடிய ஜீவனைக்கொடுக்க கர்த்தரிடம் வேண்டுகிறோம். வாழ்த்துக்கள்!
விமல், ஐரா தம்பதியினர்
டொரான்டோ, கனடா
சத்தியத்தை சமாளிக்காத திருமறைத்தீபம்

திருமறைத்தீபம் என்ற காலாண்டு சீர்திருத்த நூல் 20 ஆண்டுகாலமாக தமிழர் மத்தியில் வலம் வர தேவன் பாராட்டிய இரக்கத்திற்காக எம் திரியேக தேவனுக்கும், இதைத் தனது உழைப்பால் எழுதி வெளியிடும் ஆசிரியருக்கும், வெளியீட்டுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நூலைப்பற்றி எழுத நினைத்தால் பக்கங்கள் போதாது. ஆனால் இந்தப் புத்தகத்தின் 20 வருட சேவையை ஒரு கூற்றில் சொல்ல ஆசைப்படுகிறேன். ‘சத்தியத்தை சமாளிக்காமல் சத்தியமாக சாட்சி கொடுக்கும் நூல்.’
நான் இந்தப் புத்தகத்தைக் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் வாசித்து வருகிறேன். வாசிக்கத் தொடங்கியபோது இந்த நூல் எனக்கு spiritual buffet போன்றே தெரிந்தது. உடனடியாகவே ஆவியில் முதிர்ந்தவர்களுக்கும், வாலிபர்களுக்கும் மிகப்பொறுத்தமான ஆக்கங்களை சுமந்து வருகின்ற இதழ் என்பதை அறிந்துகொண்டேன். மேலைத்தேசங்களில் இருந்ததுபோல சீர்திருத்தங்களையும், எழுப்புதல்களையும் எங்களுடைய தமிழினம் அனுபவரீதியாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதன் தாக்கங்கள் சிறு சிறு சீர்திருத்த சபைகளில் இலங்கையில் இருந்து வந்தாலும் அவை மத்தியில் சபைப்பிதாக்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் போன்றோரின் கிறிஸ்தவ விசுவாசங்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள் அரிதாகவே உள்ளனர். இருந்தபோதும் சீர்திருத்தப் போதனைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று எந்த சபையும் சொல்ல முடியாதபடி இந்த நூல் அனைத்துச் சத்தியங்களையும் வெளிப்படுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை போல சபைகள் இருந்து வந்த நிலையில் இந்த இதழ் சக்கரையை எமக்குத் தந்துகொண்டிருந்தது என்பதைத் தெளிவாக உங்களுக்குச் சொல்லும் சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறேன்.
இந்த இதழில் வருகின்ற சத்தியங்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது குடும்பம் மற்றும் சபை வாழ்க்கைக்கும் தேவையான ஆக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. என் வளர்ச்சிக்கும், நான் பணிபுரியும் சபையின் வளர்ச்சிக்கும் இந்த இதழ் காரணமாக இருந்திருக்கிறது என்பதும் உண்மையே. நான் மட்டுமல்ல பலரும் இதழில் வருகின்ற ஆக்கங்களால் வளர்ந்து வருகிறார்கள் என்பதைப் பலரிடம் இருந்து நான் கேள்விப்பட்டதும் உண்டு.
விசேஷமாக நான் ஓர் ஆக்கத்தைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கிறிஸ்துவின் பலியைப் பற்றி எழுதப்பட்ட ஆக்கத்தை (கோபநிவாரண பலி) வாசித்தவுடன் என்னை அறியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டது. ‘நடுநிலையாளரும் கரகாட்டக்காரனும்’, ‘கோபநிவாரண பலி’ ஆகிய இரண்டு ஆக்கங்களும் நம் ஆண்டவர் சிந்திய உன்னத இரத்தத்தின் மகத்துவத்தை ஆங்கிலத்தில் வாசித்து அறிந்துகொள்ள முடியாத மக்களுக்கு தமிழில் விளக்கிப் பேருதவி செய்திருக்கிறது என்று மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்படியான சத்தியங்கள் இதழின் மூலமாக நமது சமுதாயத்துக்கு கிடைத்து வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
திருமறைத்தீபம் இலங்கை, இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனது தனிப்பட்ட விருப்பமும் ஜெபமும் இந்த நூலானது எல்லா சபை மக்களின் கைகளில் கிடைத்து அதன் சத்தியங்களை ஆவியானவர் ஒவ்வொரு இருதயங்களிலும் அசைவாட வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே நாம் இந்த இதழை விநியோகம் செய்து வருகிறோம்.
பல தீய சக்திகளும், புயல்காற்று, மழை போன்ற ஆத்மீகரீதியிலான தொல்லைகளும் இந்தத் தீபத்தை அணைக்க முற்பட்டபோதும் தேவன் தனது காயப்பட்ட கரத்தினால் அதைப் பாதுகாத்து வருகிறார். உண்மையோடும், சத்தியத்தோடும், உறுதியோடும் ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவின் விருப்பு வெறுப்புகளை தெளிந்தவிதத்தில் வரலாற்றில் இருந்தும், வேதத்தில் இருந்தும் வெளிப்படுத்தி வலம் வரும் திருமறைத்தீபம் 20 ஆண்டுகள் அணையாமல் இருந்து ஆவியின் துணையோடு எரிந்துகொண்டு இருக்கிறது. இயேசு மறுபடியும் வரும்வரை இந்தத்தீபம் அணையாமல் இருக்க தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது நமது ஜெபமாக இருக்கவேண்டும்.
தேவன் தாமே இதை எழுதி வெளியிடுகிற ஆசிரியரோடும், இதைப்பிரசுரிக்க உதவுகின்ற எல்லாக் கரங்களோடும் இருந்து இதழை நமது இனத்திற்கு ஆசீர்வாதமாகவும், சீர்திருந்தி வாழுவதற்கு ஏற்ற நூலாகவும், சத்தியத்தைப் பறைசாற்றுகிற நூலாகவும், சுவிசேஷத்தை எடுத்துரைக்கிற இதழாகவும் இருக்க ஆசீர்வதிப்பாராக.
Rev. S. N. பார்த்திபன்,
சீர்திருத்த புரட்டஸ்தாந்து மிஷன், வவுனியா, ஸ்ரீ லங்கா
(Associated with the Continuing Free Church of Scotland)
மொழி தெரியாததால் திருமறைத்தீபத்தை என்னால் வாசிக்க முடியாது. ஆனால், ஆசிரியருக்கு வரும் கடிதங்களின் மூலம் எந்தளவுக்கு இந்த இதழ் அநேகருக்குப் பயனுள்ளதாக இருந்துவருகிறது என்பதை உணர முடிகின்றது. கடிதங்களின் மூலம் மட்டுமல்லாமல் இமெயிலிலும், தொலைபேசி மூலமும் கேள்விகள் பல கேட்டு பதில் தேடி வருகிறவர்களுடைய சத்திய வேட்கையை அறிந்து மகிழ்கிறேன். இவர்களுக்கெல்லாம் திருமறைத்தீபம் ஆவிக்குரிய வெளிச்சம் தந்து கிருபையிலும் கர்த்தருடைய ஞானத்திலும் வளரத் துணை செய்து வருவது கர்த்தரின் பெரிய கிருபை. ஒரே இதழை மாறி மாறி எத்தனையோ பேர் பல இடங்களில் வாசித்து வருகிறார்கள் என்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலம் அறிந்து பேராச்சரியம் அடைந்தேன். எந்தளவுக்கு திருமறைத்தீபம் வாசகர்களுக்கு பயன்பட்டு வருகிறதென்பதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். நிச்சயம் கர்த்தர் இதழைப் பயன்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை. மிகச் சிறிதாக, எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட இதழ் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் இன்று பெரிதாக வளர்ந்து உலகமெங்கும் இருந்து வருகின்ற தமிழ் வாசகர்கள் சத்தியத்தை தங்களுடைய சொந்த மொழியில் அறிந்துகொள்ளும்படிப் பயன்பட்டு வருவதை உணர்ந்து அவருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
கிரான்ட் லிங்கன்
உதவியாளர், சவரின் கிரேஸ் சபை
ஆக்லாந்து, நியூசிலாந்து
சத்திய எழுச்சி ஏற்படுத்தும் இதழ்
திருமறைத்தீபம் 20 ஆண்டுகளைக் கடந்து 21வது ஆண்டைத் தொடங்குவது பெரும் மகிழ்ச்சிக்குரியது. இது போற்றத்தக்க காரியம். இது அநேகருடைய வாழ்வில் சத்திய எழுச்சியை ஏற்படுத்தி, கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மைகளை அறிய வைத்திருக்கிறது என்பது மிகவும் உண்மை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமறைத்தீபத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது வெளிவந்துகொண்டிருக்கிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அந்த வருத்தம் நீங்கும்படி பல பழைய இதழ்கள் கிடைக்கப்பெற்று வாசித்துப் பயனடைந்தேன்.
இப்பொழுதும் திருமறைத்தீபம் கைக்குக் கிடைத்தவுடன் இரண்டு முறையாவது வாசித்துவிடுவேன். முதலில் விளங்கிக்கொள்ளாததை இரண்டாம் முறை விளங்கிக்கொள்வேன். அத்தோடு நான் திருமறைத்தீப இதழை வாசிக்க அறிமுகப்படுத்திய அநேகரோடு போனில் பேசி வெளிவந்த செய்திகளைப் பலருடன் பகிர்ந்துகொள்வேன்.
திருமறைத்தீபத்தில் வெளிவரும் ஆசிரியரின் பல ஆக்கங்களும், கட்டுரைகளும், உண்மைக் கிறிஸ்தவத்தை சரியானபடி அறிந்துகொள்ள செய்திருப்பதோடு, கிறிஸ்தவ சமுதாயத்தில் உள்ள குளறுபடிகள், வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலைமை, போலியான சடங்காச்சார கிறிஸ்தவம் என பலவிதமான விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. பல இறையியல் போதனைகளைப் படித்து நான் தெளிவு பெற்றேன். அதில் ஒன்று கிறிஸ்துவின் மரணம் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே என்பது.
மேலும் 2014 ஏப்ரல் – ஜூன் மாத இதழில் வந்த “சிந்திக்க வேண்டிய இறையியல் பயிற்சி” எனக்கு நல்ல பயனளித்தது. நான் வாசிக்கக் கொடுத்த அநேகரும் அதைப்படித்துப் பயன் பெற்றதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். வேதம் தெரியாமல் போதகனாக இருப்பது எவ்வளவு சரியில்லாதது என்பதை அதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிந்தது.
அது மாத்திரம் அல்ல. திருமறைத்தீபத்தில் வெளிவந்துள்ள பல சீர்திருத்த போதகர்களின் போதனைகள் பெரிய வெளிச்சத்தை எனக்கு தந்திருக்கிறது. அதில் சபையின் முக்கியத்துவம், கர்த்தருடைய நாளின் முக்கியத்துவம், ஆராதனை ஒழுங்கு, குடும்பம், பிள்ளை வளர்ப்பு என்று பல காரியங்களை சொல்லலாம். எனக்கு மாத்திரமல்ல, என்னைப்போல அநேகம் பேர் இப்படிப் பயனடைந்து வருவது குறித்து சந்தோஷத்தோடு ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒருமுறை நான் இரயிலில் பயணம் செய்தபோது திருமறைத்தீப இதழை வாசித்துக்கொண்டு இருந்தேன். அதை பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் அதைக் கொடுங்கள் என்று வாங்கி வாசித்துவிட்டு, நான் இதுவரை இப்படி ஒரு இதழை வாசித்தது இல்லையே என்று சொல்லி அதை எனக்குத் தாருங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். இப்படியெல்லாம் அநேகருக்கு பயனுள்ள சத்தியத்தை எளிமையான முறையில் படித்துப் புரிந்துகொள்ள உதவும் இந்த இதழ் தொடர்ந்து சத்திய வாஞ்சையுள்ளவர்களுக்கு உதவ வேண்டும், தெரியாத பல சத்தியங்களைப் புரிந்துகொள்ள வைக்க உதவும்படியாகத் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். இதன் ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போதகர் த. அண்ணாதுரை,
கிருபை சுவிசேஷ சபை,
வீரியபாளையம், தமிழ்நாடு
ஆத்மீகத் தீனிப்போடும் தீபம்
நாவினிக்கும் தமிழில் இருபதாண்டுகள்
திருமறையின் போதனையும்
திருச்சபையின் சாதனையும்
திரட்டி எமக்களித்திடும்
திருமறைத் தீபமே!
நீ காலண்டு சஞ்சிகையாய்
பூ வாண்டு வந்திடுவாய் . . . நீ
நா இனிக்கும் தமிழினிலே
நா லைந்து (4×5) வயதினையும்
தாண்டிவிட்டாய்!
இவ்வாறாக இருபது வருடங்களை எட்டி நிற்கும் இந்த திருமறைத்தீபம் சஞ்சிகையை இலங்கை வாசகர்களுக்கு அனுப்பிவைக்கின்ற குழுவில் குறைந்தது 14 வருடங்கள் ஈடுபாடுள்ளனவனாய் செயற்பட சந்தர்ப்பம் கிடைத்தமை இறைவன் எனக்களித்த அரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறேன். இதன் பணியின் கனியாகப் பலர் தவறான போதனையிலிருந்து விடுபட்டு மெய் விசுவாசத்தில் வளர்ந்ததையும், விசுவாச வாழ்க்கையின் போராட்டத்திலும் இவ்வுலக நெருக்கத்திலும் சோர்ந்து போயிருந்த விசுவாசிகள் பலரைத் திருமறைத்தீபம் தூக்கி நிறுத்தியதையும், கள்ளப்போதனையில் சிக்கிய பலரது கண்களைத் திறந்ததையும் அவர்கள் கைப்பட எழுதிய மடல்களிலிருந்து வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதன் பயனாக எனது வாழ்க்கை சீர்பெற்றுள்ளது. பலர் தொலைபேசியூடாக அடுத்த திருமறைத்தீபம் எப்போது எமது கைக்கு வரும் என்று ஏங்குவதையும் கேட்டிருக்கிறேன்.
திருமறைத்தீபத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப முயன்ற சிலர் அதிக நாட்கள் தொடர முடியாதபடி துவண்டு போவதையும் குறிப்பிடாதிருக்க முடியாது. இவ்வாறான நெருக்கங்கள் மத்தியிலும் உலகெங்குமுள்ள தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தீபம் தியாக சிந்தையுடன் ஆத்மீகத்தீனி போடுகிறது.
இப்பணியின் பலனாக இன்று தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பல பயனுள்ள நூல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. “இப்பணி தொடர்க, இறை ஆசி பெறுக” என்று அதன் ஆசிரியரையும், அதன் தொடர்ச்சியான வெளியீட்டிற்காக ஜெபிப்போரையும், செலவுகளைத் தாங்குவோரையும் இறைவன் தொடர்ந்து போஷித்துப் பராமரிக்க வேண்டுமென்று வாழ்த்தி ஜெபித்து நிற்கிறேன்.
கிருபை இலக்கிய குழு சார்பாக,
அருட்செல்வன் (கொழும்பு)
அற்புதமான பொக்கிஷம்
திருமறைத்தீபம் – என் வாழ்வில் தேவனுடைய பெரிதான கிருபையால் நான் வாசித்துவருகிற ஓர் அரிய புத்தகம். நான் எது சத்தியம் என்று அறியாமல் எத்தனையோ புத்தகங்களைத் தேடித் திரிந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டு கிடைத்த ஓர் “அற்புதமான பொக்கிஷம்” திருமறைத்தீபம். அதுவரை நான் “சீர்திருத்தம்” என்ற வார்த்தையைகூட கேள்விப்பட்டது கிடையாது. அந்த வருடம் முதல் இன்றுவரை தொடர்ந்து படித்து வருகிற புத்தகம் இது. அப்போது அந்த புத்தகம் அளவில் பெரிதாக வெளிவந்து கொண்டிருந்தது. இப்போது கைக்கு அடக்கமானதாக இருக்கிறது. அந்த நாட்களில் வாசித்துவந்த நூல்களில் இது மட்டும் வித்தியாசமான ஒன்றாகத் தோன்றியது. ஏனெனில், இதில் வேதம் எதைக் கூறுகின்றது, வேதம் எதை எதிர்பார்க்கின்றது என்ற அடிப்படையில் கிறிஸ்தவத்தை எடுத்துரைத்த ஆசிரியரின் நோக்கம் தேவனது கிருபையினால் என்னைக் கவர்ந்தது.
சத்தியம் நடைமுறைக்கு சாத்தியமானதுதான் என்று இந்துக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்குத் திருமறைத்தீபம் புரியவைத்த விதம் சொல்லில் அடங்காதது. வேதத்தில் ஒரு விசுவாசி கற்று அறிய வேண்டிய தேவையான அடிப்படைக் காரியங்களையும், எது சத்தியம், எது அசத்தியம் என்பதைப் பகுத்து அறியவும் மிக பிரயோஜனமான ஒரு புத்தகம் இது.
இப்புத்தகத்தின் ஆசிரியரான போதகர் பாலா அவர்களின் விடாமுயற்சி, கடின உழைப்பு, சத்திய ஆர்வம், ஆத்தும கரிசனை, கருத்துப் பரிமாறல் ஆகிய அனைத்தையும் தாங்கி வரும் கருத்துப்பேழை திருமறைத்தீபம். சிந்திக்க வைக்கும் தலைப்புகள், இறையியல் போதனைகள், வரலாற்று நிகழ்வுகள், இரட்சிப்பின் அடிப்படைப் போதனைகள், கிறிஸ்தவ வினாவிடை போன்றவை மூலம் தனித்தன்மையோடு வேதத்திற்கு நம்மை அழைத்து செல்லும் காலாண்டு நூல் இது.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அவர்களுடைய தாய்மொழியில் வேதம் சார்ந்த புத்தகங்கள் இல்லை என்ற ஏக்கத்தைத் தகர்த்தெரிகிற வகையில் வெளிவரும் நூல் இது. பெயருக்கு ஏற்றாற்போல் திருமறையின் தீபமாகவே தொடர்ந்து பிரகாசித்து வருகிறது இந்நூல். கள்ள உபதேசங்கள், அவை தோன்றிய விதம், அவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவைகளை நாம் எவ்வாறு தவிர்ப்பது போன்ற நடைமுறைப் பயன்பாடுகள் அதிகம் பொதிந்து காணப்படும் நூல் இது. தற்போது உலகம் போய்கொண்டிருக்கும் சூழ்நிலையில் புரிந்துகொள்ளுதலோடு, சிந்தித்துச் சொல்ல வேண்டிய விதத்தில் சுவிசேஷத்தைச் சொல்லி சபைக்கு ஆத்துமாக்களை வழிநடத்த உதவுகிற ஒப்பற்ற அரிய நூல்.
அநேக நல்ல பல நூல்கள் வெளிவர உதவிய நம் தேவனுக்கும் போதகர் ஆர். பாலா மற்றும் அவரது திருச்சபைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம் தேவன் தாமே இன்னும் இந்நூலின் மூலமாக அநேகரை ஆசீர்வதிப்பாராக.
ஏ. கார்த்திக்கேயன்,
கிருபை சபை, மதுரை
சத்திய ஒளி வீசும் தீபம்
திருமறைத்தீப இதழை ஆரம்பத்திலிருந்து பெற்று வாசித்து பயன் அடைந்து வருபவர்களில் நானும் ஒருவன். இவ்விதழை இருபது ஆண்டுகாலமாக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தவழச் செய்த கர்த்தரைப் போற்றுகிறேன். மேலும் இந்த இதழை முறையாகத் தயாரித்து வெளியிட உதவி வரும் கரங்களுக்கு எமது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. வேத சத்தியத்தை அப்படியே போதிப்பதில் இது தவறியதில்லை. அது மட்டுமல்ல, பல வேத அடிப்படையிலான சத்தியங்களை மிகவும், ஆழமாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் வெளியிட்டு வருவதால் வாசிக்கின்றவர்களுக்கு அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆசிரியரின் கடுமையான உழைப்பை இது வெளிப்படுத்துகிறது.
மேலும் இவ்விதழ் சீர்திருத்த போதனைகளை அள்ளித் தருகிறது. சீர்திருத்தவாதிகளையும் அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இன்றைய தமிழ்த்திருச்சபைகளை அழித்துக்கொண்டிருக்கும் போலிச் சத்தியங்களை இந்த இதழ் இனங்காட்டித் தந்து மெய்யாகவே திருமறைத்தீபமாக ஒளிவீசுகிறது. அதைக் கருத்தோடு வாசிப்பவர்கள் நிச்சயம் தங்களை சீர்திருத்திக்கொள்ள முடியும்.
நான் இருக்கும் திருச்சபையில் அவ்வப்போது கிடைக்கின்ற பிரசங்க வாய்ப்புகளைப் பயன்படுத்தி இவ்விதழ் தருகின்ற போதனைகளை அப்படியே என் சபைக்கு நான் கொடுக்கத் தவறியதில்லை. என்னுடைய பிரசங்கங்களுக்கு இவ்விதழ் வலிமை சேர்த்திருக்கிறது. பிரசங்கங்களை எவ்வாறு எளிமையாகக் கொடுப்பது என்பதை இவ்விதழ் மூலம் நான் கற்றுப் பயனடைந்திருக்கிறேன். ‘எது பிரசங்கம்’ என்ற ஆக்கம் என்னையும் என் பிரசங்கத்தையும் உருமாறச் செய்திருக்கிறது. அதன் மூலம் எமது சபையும் பயன் அடைந்து வருகின்றது.
இந்த இதழில் வருகின்ற எல்லா ஆக்கங்களும் பயனுள்ளவை என்றே நான் சொல்வேன். தொடர்ந்து இந்த எழுத்துப் பணிக்காகவும் ஆசிரியருக்காகவும் நானும் எனது சபையிலிருப்பவர்களும் ஜெபித்து வருகிறோம்.
நன்றி,
கண்ணா
உதவியாளர், கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை
கோலாலம்பூர், மலேசியா
என் வாழ்வில் திருமறைத்தீபம்
திருமறைத்தீபத்தைப் பற்றி எழுதுவதானால் நான் எத்தனையோ காரியங்களை எழுத முடியும். நான் ஆவிக்குள் வளர்வதற்கும், கலப்படமில்லாத போதனைகளிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளுவதற்கும் இவ்விதழ் என் வாழ்க்கையில் வழிகாட்டியாய் அமைந்திருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும்போது என்னுடைய குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்துவின் அன்பைத் தெரிந்துகொண்டோம். ஆனால், எனக்குள் இருக்கும் பாவத்தை உணர்ந்து இயேசுவுக்காக வாழவேண்டும் என்ற உணர்வோடு இருந்தபோது வேதத்தைப் பலமுறை வாசித்தபோதும் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்’ (அப் 10:30-31). அக்காலகட்டங்களில் திருமறைத்தீபம் என் கையில் கிடைத்தது. ஆனால், எனக்கோ வாசிக்கும் பழக்கம் குறைவு. இருந்தும் ஏதோவொரு உந்துதலால் இதழை வாசிக்க ஆரம்பித்தேன். நான் இதுவரை கற்றுக்கொண்டிருந்ததெல்லாவற்றையும்விட இதழில் நான் வாசித்த விஷயங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன.
திருச்சபை என்றால் என்ன, சபை அங்கத்துவம் என்றால் என்ன என்பது பற்றியும் மேலும் கிருபையின் போதனைகள், கிறிஸ்தவ கோட்பாடுகள், இரட்சிப்பு, பாவம் இவைகளைப்பற்றிய தொடர்ச்சியான தெளிவான போதனைகளைப் பகுதி பகுதியாக திருமறைத்தீபம் விளக்கிவந்தது. இவற்றைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ச்சியாக வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். வேலை காரணமாக ஒரு சில மாதங்கள் தனிமையில் இருக்க நேரிட்டது. அப்போது வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது. என் வாழ்வில் வேதத்திற்கு அடுத்த இடத்தில் திருமறைத்தீபம் இருக்க ஆரம்பித்தது. இதனால் தேவன் என்னை சத்தியத்தில் நிரப்பினார். கற்றுக்கொண்டவற்றையெல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆனால், என் சொந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழவும் வேலை செய்யவும் கர்த்தர் வழியேற்படுத்தித் தந்தார். கிறிஸ்தவ பண்பாட்டைப்பற்றி ஏற்கனவே படித்து அறிந்துகொண்டிருந்ததால் வெளிநாட்டுக் கலாசாரத்திற்கும் கிறிஸ்தவ பண்பாட்டிற்கும் இடையில் எனக்குள் போராட்டம் ஆரம்பமானது. அங்கே சபை ஐக்கியம் கிடைத்தாலும் சொந்த மொழியில் நல்ல ஆகாரம் கிடைக்கவில்லை. நான் வெளிநாடு சென்ற வேளையில் சிறிது காலம் திருமறைத்தீபம் கிடைக்கவில்லை. மறுபடியும் திருமறைத்தீபத்தைத் தொடர்ந்து வாசிக்கும் வசதி ஏற்பட்டது. அதன் மூலமாய் ஆவிக்குரிய ஆலோசனைகளை மறுபடியும் பெறமுடிந்தது.
இப்படியாக வெளிநாட்டில் வாழ்கிற வேளையில் கிறிஸ்துவை அறிந்தும் பாவத்தில் வீழ்ந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிந்த ஒரு சகோதரனை சந்தித்தேன். அவர் என்னிலும் முதியவர். அவருக்கு தேவனுடைய வார்த்தைகளை எடுத்துக்காட்ட வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளைச் சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்கி திருமறைத்தீபத்தையும் வாசிக்கக் கொடுத்தேன். திருமறைத்தீபத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட காரியங்களைப் பயன்படுத்தி ஞானத்தோடு மற்றவர்களுக்கு துணைபோக தேவன் எனக்கு கிருபை பாராட்டினார். அந்தச் சகோதரன் உயிர்மீட்பு அடையும்படிச் செய்தார். நான் பெற்றுக்கொண்ட கிருபையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற வாஞ்சை எனக்குள் அதிகரித்தது. நான் அந்தளவுக்கு தேறினவனல்ல; ஆனால் வேதத்தில் உள்ளவற்றைத் தொகுத்து தேவன் திருமறைத்தீபத்தின் மூலம் வழங்கி என்னை ஆசீர்வதிக்கிறார். மீண்டும் சொந்த நாட்டுக்குச் சென்று ஆத்துமாக்களை உற்சாகப்படுத்தும்படிச் செய்தார். அநேகர் வியக்கத்தக்கவிதமாக ஞானத்திலும் கிருபையிலும் என்னை வழிநடத்தினார். என்னுடைய திருமணத்திற்குத் தேவையான ஆலோசனைகள், குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை திருமறைத்தீபத்தினூடகப் பெற்றுக்கொண்டேன். வேறு நாட்டில் வாழ்ந்தாலும் இப்படியாய் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் தந்திருக்கும் திருமறைத்தீபத்தை மற்றவர்களும் வாசிக்க வேண்டும்; தேவ அன்பை அவர்களும் ருசிபார்க்க வேண்டும் என்று அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறேன். இந்த விஷயத்திலும் அநேகருக்கு ஆலோசனைகள் தரவும், கேள்விகளுக்கு பதில் கூறவும் தேவன் எனக்கு உதவி வருகிறார். இதற்கெல்லாம் துணையாயிருந்திருக்கும், இருந்து வரும் திருமறைத்தீபம் தன்னுடைய இருபது வருட ஊழியத்தை நிறைவு செய்திருப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.
ஜெயதீஸ்
Paris, France
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் திருமறைத்தீபம்
நான் முதன் முதலாக மட்டக்களப்பில் எனது உறவினர் வீட்டில் உங்களது திருமறைத்தீபம் பத்திரிகையை வாசித்தேன். பல பயனுள்ள விஷயங்களை அதிலிருந்து கற்றுக்கொண்டேன். 2004ம் ஆண்டில் இருந்து அதனை நான் வாசித்து வருகிறேன். தேவனுடைய சபைக்குள் பக்க வழியாகப் பிரவேசிக்கின்ற இடறலான போதனைகளைக் குறித்து நம் இனத்திற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. திருமறைத்தீபத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தக் குறையைத் தேவன் ஆசிரியர் பாலாவின் மூலமாக நிறைவேற்றியுள்ளார் என்பதைக் கண்டுகொண்டேன். இருபது ஆண்டுகளை எட்டிநிற்கும் இவ்விதழ் தொடர்ந்து என் கரங்களை வந்தடையும் என்ற மனநிறைவோடு அதன் பணி தொடர வாழ்த்துகிறேன்.
சின்னப்பு பிரான்ஸிஸ் ஜீவரட்னம்,
யாழ்ப்பாணம். ஸ்ரீ லங்கா.
வாழ்க்கையை மாற்றிய திருமறைத்தீபம்
முதன் முறையாக போதகர் பாலா அவர்களை 1990 ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு 1992ல் பாப்திஸ்து சபைகளால் நடத்தப்பட்ட ஒரு மகாநாட்டில் அவரும் ஒரு பிரசங்கியாராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் பிரசங்கித்த வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரசங்கத்தில் அவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள், “சொன்னபடி செய்யும் சுப்பனாக இருக்க வேண்டும்” என்பது. நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து “அந்நாட்களில் இஸ்ரவேலில் இராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்” என்பதை நம் சமுதாயத்துக்கு ஒப்பிட்டு அன்று அவர் பேசினார். அன்றிலிருந்து அவருடைய போதனைகளைக் கேட்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தேன். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அவருடைய போதனைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஏக்கத்தை நீக்கும்படியாக, 5 வருடங்களுக்குப்பின் திருமறைத்தீபம் வெளிவந்தது. ஆரம்பத்தில் 8 பக்கங்கள் மட்டுமே இருந்திருந்தாலும் முழுவதும் போதனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுவரை கல்வினின் ஐங்கோட்பாடுகள் மட்டுந்தான் சீர்திருத்த கிறிஸ்தவம் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேதத்திலுள்ள போதனைகளில் கல்வினின் ஐங்கோட்பாடுகள் ஒரு சிறுபகுதிதான் என்பதை உணர்ந்து அதிர்ந்து போனேன். அப்போதுதான் 1689 விசுவாச அறிக்கை என்று ஒன்று இருப்பதையே அறிந்துகொண்டேன். அது என்னை மேலும் சிந்திக்க வைத்து தொடர்ந்து சீர்திருத்த போதனைகளைப் படிக்கத் துணை செய்தது. இதற்குத் திருமறைத்தீபம் பேருதவியாக இருந்து வருகிறது.
போதகர் பாலா அவர்கள், தமிழ்நாட்டுப் போதகர்களுக்கு வேதபோதனைகளைக் கற்றுத்தர ஆரம்பித்த இறையியல் வகுப்புகளில் நானும் (போதகனாக இல்லாதிருந்தும்) கலந்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி இன்றுவரை ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். அவ்வகுப்புகளில், இறையியல் போதனைகளோடு, உழைப்பு, நேரம் தவறாதிருத்தல், தனிமனித ஒழுக்கவியல் சம்பந்தமான அனைத்துப் போதனைகளையும் போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியது இருதயத்தை சம்மட்டியால் அடித்ததுபோல் தாக்கியது.
டிஸ்பென்சேஷனலிசத்தைக் குறித்து திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கமே என்னை அந்தத் தவறான போதனையில் விழுந்துவிடும் ஆபத்திலிருந்து விடுவித்தது. அந்தந்த காலகட்டங்களில் காணப்படும் போலிப் போதனைகளைக் கண்டறிந்து, அதுவும் சிலவேளைகளில் அந்தக் கள்ளப்போதனைகள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாகவே அதைக் குறித்த அபாய எச்சரிக்கை திருமறைத்தீபத்தில் வந்து என்னைக் காத்திருக்கிறது.
பல வருடங்களாக விசுவாசியாக இருந்து வருகிறேன் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தபோது “பத்துக்கட்டளைகள்” குறித்த போதனைகள் திருமறைத்தீபத்தில் வெளிவந்து என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி என்னைத் தற்பரிசோதனை செய்துகொள்ள வைத்து ஆண்டவருக்கு விசுவாசமாக வாழ வைத்தது. எனக்கு மட்டுமல்ல இந்தப் புத்தகத்தைப் பிறருக்கும் கொடுக்க அவர்களும் அதே உணர்வு கொண்டிருந்ததை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.
கிறிஸ்தவ கோட்பாடுகள் என்ற தலைப்பில் வினாவிடைப் போதனைகளிலுள்ள போதனைகளை விளக்கி திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. இரண்டு வரிகளிலுள்ள பதிலில் இவ்வளவு சத்தியங்களா என்று எண்ணி வியப்படைந்திருக்கிறேன். தொடர்ந்தும் அவை வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.
பிரசங்கத்தைப் பற்றி திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கங்கள் பிரசங்கத்தின் மகா உன்னதமான தன்மையை எனக்குப் போதித்தது. நான் பிரசங்கியாக இல்லாவிட்டாலும் பிரசங்கம் கேட்கும் விதத்தில் இது அதிகமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதேவேளை மற்றவர்களின் பிரசங்கங்களைக் கேட்கும்போதும் அது ஆவியின் மூலம் வருகிற பிரசங்கம்தானா என்பதைக் கண்டறியவும் அந்த ஆக்கங்கள் பேருதவியாக இருந்தன.
திருமணமாகி பல வருடங்களாகி இருந்தாலும் “தாம்பத்திய உறவில் நெருக்கம்” (அலன் டன்) என்ற தலைப்பில் வந்த ஆக்கங்கள் இடியெனத் தாக்கி என்னுடைய திருமண வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர காரணமாக இருந்திருக்கிறது. அது புத்தகமாக வராதா என்ற என்னுடைய ஏக்கத்தை ஆண்டவர் சீக்கிரமாகவே நிறைவேற்றினார். எனக்கு அறிமுகமானவர்களுக்கு இந்தப் புத்தகத்தைக் குறித்து எடுத்துச் சொல்லியும் வருகிறேன்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்களிடம் சரளமாகப் பேசத் தயங்கிய எனக்கு போதகர் பாலா அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களுந்தான் தைரியத்தைத் தந்து பேச வைத்தது. இதன்மூலம் ஆண்டவருடைய நற்செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.
இவ்விதழ் 20 வருடங்களைக் கடந்து வந்துள்ள இவ்வேளையில், போதகர் பாலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவருடைய மனைவி மற்றும் சபையார் யாவருக்கும் என்னுடைய நன்றிகள்.
அருள் செல்வம்,
நாமக்கல், தமிழ்நாடு
அணையாது எரியும் சத்தியதீபம்
திருமறைத்தீபம் பத்திரிகை 20 வருடங்கள் கடந்து வந்துள்ளது என்று சொல்லுவதைக் காட்டிலும் 20 வருடங்கள் வளர்ந்து வந்துள்ளது என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தமிழர்களுக்குத் தேவையான நல்ல தரமான கிறிஸ்தவப் போதனைகளை முதல் இதழ் தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு இதழிலும் படிக்க முடிகின்றது.
என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் இதன் பங்கு மிகவும் அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னுடைய இளமைப் பருவத்தில் இதை வாசிக்க ஆண்டவர் கிருபை பாராட்டியிருக்கிறார். கள்ளப் போதனைகளையும் தவறானப் போதனைகளையும் தோலுரித்துக்காட்டி நான் சரியான கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர இது துணை செய்திருக்கிறது.
திருமறைத்தீபத்திற்கு நான் பெரிதும் கடமைபட்டுள்ளவன். திருமறைத்தீபத்திலிருந்தே ஓய்வுநாள் கட்டளையின் போதனைகளை நான் அறிந்துகொண்டேன். அதற்கு முன்பு ஓய்வுநாளை எந்தளவுக்கு அலட்சியப்படுத்தியிருக்கிறேன் என்பதை உணர்ந்து பெரிதும் வருந்தினேன். ஒருவேளை திருமறைத்தீபத்தில் ஓய்வுநாள் குறித்த போதனைகள் வராதிருந்திருக்குமானால் கண்ணிருந்தும் குருடனைப் போல்தான் நான் வாழ்ந்து வந்திருப்பேன். ஆண்டவருக்கு நன்றி.
வேத சத்தியங்களை சரியாகவும் நல்ல எளிமையான தமிழிலும் இதில் இடம்பெறுவது சிறப்பு. எனக்குத் தமிழ் மட்டுமே நன்றாகத் தெரியும். எனவே கர்த்தர் எனக்குத் தந்த அவருடைய கிருபையின் சாதனமாகவே நான் திருமறைத்தீபத்தைப் பார்க்கிறேன். ஆகவே வெளிவந்துள்ள அனைத்து இதழ்களையும் ஒன்றுக்கு இரண்டு பிரதிகளாக சேகரித்து அவைகளை பைண்டிங் செய்து வைத்து தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அவைகளை நான் பயன்படுத்தி வருகிறேன்.
1995 ஆம் ஆண்டு அதாவது 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் பிரதியையும் தற்போது 2014 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள பிரதியையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதத்தைப் பற்றியும் (வேதம் மட்டுமே), திருச்சபையைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ள போதனைகள் சற்றும் மாறாமல் பிசகாமல் ஒரே சமன் கோட்டில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறேன். இதுவே திருமறைத்தீபம் இன்றுவரை அணையாமல் சுடர்விட்டு எரிந்து அநேகருக்கு வெளிச்சம் தருகிறவிதமாக இருப்பதற்குக் காரணம் என்பதை நான் உணருகிறேன்.
இவ்வேளையில் போதகர் பாலா அவர்களுக்கும், அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிற அவருடைய சபைமக்களுக்கும், அவருக்கு உதவியாக இருக்கிற பத்திரிகை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.
ஐசக் பிரேம்குமார்,
உதவியாளர், கிருபை சீர்திருத்த திருச்சபை, சென்னை.
தீபத்தால் நான் அடைந்த பலன்கள்
திருமறைத்தீபம் 20 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஏனென்றால், இதனால் நான் அடைந்த பலன்கள் மிகுதி. இதனைக் கர்த்தர் என் வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதனை எண்ணி நான் எப்போதும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.
பெயர் கிறிஸ்தவளாக (Nominal Christian) வாழ்ந்து வந்த என்னுடைய வாலிப வயதில் ஆண்டவர் என்னை இரட்சிப்பின் பாதையில் நடத்தி வேதப்பூர்வமான சத்தியங்களைக் கற்று வளரச் செய்ததில் திருமறைத்தீபத்திற்கு மிக பெரும் இடமுண்டு.
வாசிப்பதில் அதிக நாட்மில்லாமல் வாழ்ந்து வந்த எனக்கு திருமறைத்தீபத்தின் 10 வது ஆண்டு இதழில் வெளிவந்த ‘மோட்சப் பயணம்’ குறித்த ஆக்கங்கள் என்னை வாசிக்கத் தூண்டின. நான் வாசித்த முதல் கிறிஸ்தவ புத்தகம் ‘மோட்சப் பயணம்.’ திருமணமான பிறகும் இன்றுவரை ஒவ்வொரு நாளும் அதில் சில பக்கங்களையாவது வாசிப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்பர்ஜன் மோட்சப் பயணம் புத்தகத்தை 100 முறை வாசித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்னால் முடியுமோ என்னமோ தெரியவில்லை, ஸ்பர்ஜனைவிட ஒரு முறையாவது இந்த புத்தகத்தை அதிகமாக வாசித்து விட வேண்டும் என்கிற விதத்தில் என் ஆவலைத் தூண்டிவிட்டது அந்த ஆக்கம்.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே வந்துள்ள இதழ்களையும் வாசிக்க முற்பட்டபோது அவைகளில் ‘நூல் அறிமுகம்’ என்ற பகுதியின் மூலம் தமிழிலுள்ள நல்ல கிறிஸ்தவ சத்தியங்கள் கொண்ட புத்தகங்களைக் குறித்து நான் அறிந்துகொண்டேன். எனக்கென்று தனியொரு புத்தக அலமாரியை ஏற்படுத்தி அதில் அந்த புத்தகங்களில் ஒவ்வொரு பிரதியை நான் வாங்கி வைத்து இன்றும் வாசித்துப் பயன்பெற்று வருகிறேன்.
திருமறைத்தீபத்தை வாசித்தே திருச்சபை வரலாறு குறித்த போதனைகளை நான் அறிந்து கொண்டேன். பெயர் கிறிஸ்தவளாக வாழ்ந்துவந்ததினால் திருச்சபையை மிகவும் சாதாரணமாக எண்ணியிருந்தேன். சத்தியத்தின் மெய்த்தன்மையைக் காக்க எத்தனை பேர்களின் இரத்தம் சிந்தப்பட்டு, உயிர் தியாகம் செய்யப்பட்டு அந்த அஸ்திபாரத்தின் மேல் திருச்சபை கட்டப்பட்டது என்பதை உணர்ந்து நான் வெட்கப்பட்டேன். நான் வாசித்தவை திருச்சபையின் மதிப்பையும் அவசியத்தையும் பன்மடங்கு என்னில் அதிகரிக்க வைத்தன.
வாசிப்பதில் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல் நல்ல தரமான புத்தகங்களையும் எனக்கு அறிமுகம் செய்து திருச்சபையின் நன்மதிப்பை எனக்கு காட்டி இன்றும் என்னைக் கிறிஸ்துவின் வழியில் நடத்தும் திருமறைத்தீபத்திற்கும் அதன் ஆசிரியர் போதகர் பாலா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதன் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
திருமதி. ரோஸ்லின் ஜேம்ஸ்,
கிருபை சீர்திருத்த திருச்சபை
சென்னை
கவிதை
கலங்கரை விளக்கு
வருடங்கள் உருண்டோடி விட்டன
வாய்க்காலில் பாய்ந்திறங்கும் வயல் நீரைப்போல . . .
இருபது ஆண்டுகளில் எத்தனை அனுபவங்கள்
எண்ணிப் பார்த்தால் வியக்க வைக்கும் வரலாறு
இன்றுபோல் தெரிகிறது அன்றொரு நாள்
நாம் ஆரம்பித்த இந்த அதிசய ஊழியம்
எங்கு போகிறோம் என்றெல்லாம் தெரியாது
இந்தப் பாதைதான் சரியான தென்றுணர்ந்து
எளிமையாய் ஆரம்பித்தது திருமறைத்தீபம்
ஏற்ற இறக்கங்களை சட்டை செய்யாமல்
எத்தனையெத்தனை அனுபவங்கள்தான்
இத்தனை வருடங்கள் கற்றுத் தந்தன
சொல்லி மாளாது சொல்ல ஆரம்பித்தால்
இதற்குத்தான் இதுவரைக் காத்திருந்தே னென்றோரும்
இவ்வினியதமிழ் எங்கு கற்றீரென்று வியந்தோரும்
சத்தியத்தை சத்தியமாய்த் தந்ததற்கு நன்றி நல்கியோரும்
சத்தியத்தைக் கலந்தெழுதென்று பக்குவமாய்ப் பகர்ந்தோரும்
பணிய மறுக்கிறானே என்று பயமுறுத்தப் பார்த்தோரும்
எரித்துவிடவேண்டு மிதையென்று இறுமாப்பு கொண்டோரும்
இருதயம் தொடப்பட்டு மனமிளகி வாழ்த்தியோரும்
உங்களோடுதான் நானென்று நெஞ்சுரத்தோடு நின்றோரும்
சத்தியத்தால் உந்தப்பட்டு சத்தியமாய்வாழ முனைந்தோரும்
பரிசுத்த வாழ்க்கையைப் பக்குவமாய் வாழும்
பாதை அறிந்துகொண்டேன் என்று பதமாய் எழுதியோரும்
ஊழியத்தை ஊழியமாய்ச் செய்ய உதவியதற்கு
உயிருள்ளவரை நன்றி உங்களுக்கென்றோரும்
நினைக்க நினைக்க மலைத்துப் போகுமளவுக்கு
நீங்காமல் நிற்கின்றன நித்தமும் இந்நினைவுகள்
பத்தோடு பதினொன்றாய்ப் பட்டியலில் சேராமல்
சத்தான முத்துக்களை நித்தமும் கோர்த்தெழுதி
சீர்திருத்த வரலாற்றுப் பாதையை முன்வைத்து
தமிழினம் சீர்பெற உழைப்பதையே இலக்காக
இருதயத்தில் தாங்கி இருபது வருடங்கள்
உறங்காது, தளராது, உதைகள்பல பெற்று
விழுந்தாலும் நிமிர்ந்துவிடும் தஞ்சாவூர் பொம்மைபோல்
தியாகங்கள் பலசெய்து திட்டுக்களும் வாங்கி
வாழ்கின்ற காலத்தில் நம்மினம் வளமாக
வளர்கின்ற வாலிபரே எதிர்காலத் தலைமுறையென
சீராக அவர்களுக்கு தேவசித்தத்தைப் போதித்து
கர்த்தரில் மட்டுமே கடைசிவரைத் தங்கி
காலமெல்லாம் அவர்புகழ் கானத்தோடு பாடி
கலங்கரை விளக்காக, தமிழினத்து திருச்சபைகள்
தலையுயர உழைக்கும் மரமாக நிற்கும் திருமறைத்தீபம்
– சுபி
உணர்வாய் உண்மை நிறைவுதனை
வருந்தும் பாரம் வதைத்திட்டால்
வாரீர் இயேசு இரட்சிப்பார்
பொருந்தும் பலியோ காணிக்கைப்
பொருளோ எதுவும் வேண்டாமே
நொருங்கும் மனதைக் கொடுத்துவிடு
நோவு பாரம் நீக்கியுன்
சுருங்கும் வாழ்வை வளமுடனே
சுகிக்க வழியாய் பலமாவார்
வாழத் தகுந்த வாழ்வுதனை
வழியாம் இயேசு விளம்பினதால்
ஆழக் கடலின் முத்தினைப்போல்
ஆண்டவர் தந்த சத்தியத்தை
பாலப் பருவ மனந்திறந்து
பருகி நீயவ் வழிநடந்தால்,
காலன் வரினும் கலக்கமின்றிக்
களிப்போ டமைதி கண்டிடுவாய்
கர்த்தர் இயேசு இரட்சிப்பின்
கலத்தை ஏந்தி அழைக்கின்றார்
முற்றாய் மனதை ஒப்புவித்தால்
முழுதாய் வாழ்வு புதிதாகும்
வற்றா இருளின் காலமிது
வல்ல தேவன் ஒளியாவார்
உற்றால் உந்தன் இரட்சிப்பை
உணர்வாய் உண்மை நிறைவுதனை!
– ஜெயதீஸ்
(Paris, France)