திருமறைத்தீபம் 2020 -ம் ஆண்டு நான்காம் இதழ்
1. வாசகர்களே!
2. திருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்
4. மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்
6. நாகமானைச் சந்தித்த கிருபை – சுபி –
2020 இதழ் 4
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடத்திற்கான மூன்றாவது இதழை கோவிட்-19 வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. வைரஸினால் முழு உலகமுமே பாதிப்படைந்து தொடர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தர் தன் கிருபையால் இதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர எல்லோருடனும் இணைந்து நாமும் ஜெபித்துவருகிறோம்.
இந்த இதழோடு, இதழ் தன் இருபத்தி ஆறு வருடங்களை நிறைவு செய்கிறது. கர்த்தரின் கிருபை இத்தனைக் காலம் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறது. இதழின் வாசகர்கள் தொகை அதிகரித்திருப்பதை இந்த வருடம் நாம் கவனிக்காமலில்லை. புதிய வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்த இதழில், மறைந்த இறையியலறிஞர் ஜே. ஐ. பெக்கரைப்பற்றிய ஆக்கமொன்று வந்திருக்கிறது. அத்தோடு பியூரிட்டன் பெரியவர்களின் ஊழியத்தின் சிறப்பையும், அவர்களுடைய பிரசங்கம் மற்றும் போதகப்பணியின் அருமையையும் பற்றிய ஆக்கத்தையும் நீங்கள் வாசிக்கலாம்.
‘பாவத்தின் பாவம்’ என்ற ரால்ப் வென்னிங் எனும் பியூரிட்டன் பெரியவர் எழுதியுள்ள நூலின் சில அதிகாரங்களை இந்த இதழில் தந்திருக்கிறோம். அதற்கான அறிமுக விளக்கத்தையும் வாசிக்கலாம். இது நூலாக கூடியவிரைவில் வெளிவரும்.
மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் என்ற ஆக்கம் முக்கியமானதொரு இறையியல் விளக்கத்தை அளிக்கிறது. அது சிந்தித்து வாசிக்கவேண்டிய ஓர் ஆக்கம்; தற்காலத்து சுவிசேஷப்பணிக்கு பொருத்தமானதும் அவசியமானதுங்கூட. இம்மியளவு இறையியல் என்ற தலைப்பில் இறையியல் சத்தியங்களைத் துல்லியமாக சுருக்கமாக எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதியை இந்த இதழில் காணலாம். அத்தோடு 2 இராஜாக்களில் நாம் வாசிக்கும் சீரியனான நாகமானைப்பற்றிய ஒரு கவிதையும் வந்திருக்கிறது. சீர்திருத்த இறைபோதனையை வழங்கும் இதழாக இது இருந்தபோதும், இலக்கியத்திற்கு இடமளிக்காமலில்லை. தமிழிலக்கியத்துக்கு வரலாற்றில் கிறிஸ்தவர்கள் அதிகம் பங்காற்றியிருக்கிறார்கள். அதில் அணில்போல் ஒரு சிறு பங்கை நம்மிதழும் செய்துவருகிறது. அதனால்தான் ஆக்கங்கள் அனைத்தையும், நூல்களையுங்கூட நல்ல தமிழில் எழுதுவதை இலட்சியமாகக் கொண்டு செயலாற்றுகிறோம். – ஆர்
திருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்
சமீபத்தில் 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நான் ஒரு செய்தியில் விளக்கவேண்டியிருந்தது. நம் இனத்து கிறிஸ்தவர்களுக்கு அவர்களைப்பற்றி அதிகம் தெரியாமல் இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திருச்சபை வரலாறுபற்றி இதுவரை இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். மூன்றாவது இந்தப் பியூரிட்டன்களைப்பற்றியதாக இருக்கும். அதை எழுதும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். அதை வேகமாக எழுதி வெளியிட கர்த்தரையே நம்பியிருக்கிறேன். அது வெளிவரும்போது நிச்சயம் அநேகருக்கு பலனுள்ளதாக இருக்கும்.
பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நினைக்கும்போது அவர்களுடைய வரலாறு தெரிந்தவர்களுக்கு உடலில் புல்லரிப்பு ஏற்படாமல் இருக்காது. ஒருவருக்குப் புல்லரிப்பை உண்டாக்கும் அளவுக்கு ஆவிக்குரிய வரங்களையும், இறையியல் வளத்தையும், ஆவிக்குரிய அனுபவத்தையும் கொண்டிருந்து பியூரிட்டன் பெரியவர்கள் ஆத்துமாக்களுக்கு போதகப்பணி செய்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் எழுதிக்குவித்திருக்கும் ஆவிக்குரிய இலக்கியங்கள் எண்ணற்றவை. அவர்களுடைய காலம் மெய்யான எழுப்புதலின் காலம்; பரிசுத்த ஆவியானவர் வல்லமையோடு செயல்பட்ட காலம். அத்தகைய எழுப்புதல்கள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்திருக்கவில்லை. அத்தோடு அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்ததைப்போல பரவலாக வேதஅறிவிலும், ஆவிக்குரியவிதத்திலும் ஆத்துமாக்கள் உயர்ந்தநிலையில் இருந்ததை எல்லா எழுப்புதல் காலங்களிலும் வரலாற்றில் நாம் வாசிப்பதில்லை. பியூரிட்டன் போதகர்களைப்போல வேதஞானத்தையும், ஆத்தும அனுபவத்தையும், மேலான கல்வித்தரத்தையும் கொண்டிருந்த பிரசங்கிகள் எல்லாக் காலங்களிலும் இருந்ததில்லை. எத்தனையோவிதங்களில் பியூரிட்டன் பெரியவர்களின் காலப்பகுதி என்னைப்பொறுத்தவரையில் மிகவும் தரமுயர்ந்த காலமாக இருந்திருக்கிறது.
பியூரிட்டன் நூல்கள்
டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்காலத்தில் பியூரிட்டன் பெரியவர்களுடைய எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுவதில் அதிக அக்கறைகாட்டினார். அவருடைய உந்துதலாலேயே பேனர் ஆவ் டுரூத் வெளியீடுகள் அவற்றைக் கண்டுபிடித்து பிரசுரித்து வெளியிட ஆரம்பித்தது. பியூரிட்டன் நூல்களை போதகர்கள் வாசிப்பதற்கு வசதியாக இலண்டனில் அத்தகைய நூலகம் அமைய லொயிட் ஜோன்ஸ் வழிவகுத்தார். அத்தோடு அவர் ஜிம் பெக்கரோடு இணைந்து பியூரிட்டன் கொன்பரன்ஸ் ஒன்றை வருடாந்தம் போதகர்களுக்காக நடத்தி வந்திருந்தார். லொயிட் ஜோன்ஸும் பெக்கரும் பியூரிட்டன்களின் வாழ்க்கையிலும், போதனைகளிலும் அதிக அக்கறைகாட்டி அவர்களைப்பற்றியும், அவர்களுடைய போதனைகளைப்பற்றியும் அதிகம் எழுதியிருக்கிறார்கள்.
மறைந்துவிட்ட சீர்திருத்த பாப்திஸ்து போதகரும், இறையியலறிஞரும் நண்பருமான டாக்டர் ரொபட் மார்டின் பியூரிட்டன்களுடைய நூல்கள்பற்றிய விபரங்களைத் தொகுத்து வெளியிட்டார் (A Guide to the Puritans). இந்தத் தொகுப்பு இன்று அச்சில் இருந்துவரும் பியூரிட்டன் நூல்களைப்பற்றிய தொகுப்பு. 16ம் 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களுடைய எழுத்துக்கள் மட்டுமல்லாமல் அந்தக் காலத்துப் பியூரிட்டன்களின் வழிவந்தவர்களாக அவர் கருதுகிறவர்களுடைய எழுத்துக்களையும் ரொபட் மார்டின் இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார். ஆகவே இந்நூல் 17ம் நூற்றாண்டைக் கடந்தும் போகிறதாக இருக்கிறது. பியூரிட்டன் நூல்களின் விபரங்கள்பற்றிய முடிவான நூலாக இதைக்கருத முடியாது. அதை நூலாசிரியரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.
பியூரிட்டன் எழுத்துக்களிலும், அவர்களுடைய ஊழியத்திலும், வாழ்க்கையிலும் அதிக அக்கறைகாட்டி கடினமாக உழைத்து இந்தத் தொகுப்பை ரொபட் மார்டின் 1997ல் வெளியிட்டார். அவருக்கு பியூரிட்டன் போதனைகளிலும் விசுவாசத்திலும் எந்தளவுக்கு அதீத ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது என்பதை அவருடைய இன்னொரு நூலான, ஓய்வுநாளைப்பற்றிய ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) எனும் நூல் விளக்குகிறதாக இருக்கிறது. பியூரிட்டன்களின் போதனைகளில் நம்பிக்கையும் வைராக்கியமும் இருக்கும் ஒருவரால்தான் ஓய்வுநாளைப்பற்றி அத்தனைத் தெளிவாகவும், ஆழமாகவும், விளக்கமாகவும் பயனுள்ள முறையில் எழுதமுடியும். இன்று ஓய்வுநாளாக ஒரு நாளைக் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தைக்கொண்டிருக்கும் அன்டிநோமியன் கூட்டத்தின் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ரோபட் மார்டின் ஓய்வுநாளைப் பின்பற்றும் விசுவாசிகள் அனைவருக்கும் இந்நூல் மூலம் பேருதவி செய்திருக்கிறார்.
பியூரிட்டன்கள் யார்?
பியூரிட்டன்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலளிப்பது அவசியம். அவர்களைப்பற்றி எல்லோரும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடியாது. பியூரிட்டன்களின் காலமாக 16, 17ம் நூற்றாண்டுகளைக் கருதலாம். 16ம் நூற்றாண்டில் மார்டின் லூத்தர், ஜோன் கல்வின் ஆகியோர் மூலம் கர்த்தரின் திருச்சபை சீர்திருத்தம் நிகழ்ந்தபிறகு அந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் 17ம் நூற்றாண்டில் சீர்திருத்தம் தொடரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு பிரிட்டனில் இங்கிலாந்து திருச்சபையில் போதகர்கள் பணிபுரிந்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து திருச்சபை ஆராதனைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றது. இந்த மாற்றங்களை அநேக சீர்திருத்த போதகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் அது திருச்சபை மறுபடியும் கத்தோலிக்க அராஜகத்தை நோக்கிப் போவதற்கு ஆரம்பமாக இருப்பதாகக் கருதினார்கள். அத்தோடு அவர்களுடைய எதிர்ப்புக்குக் காரணம் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலாக வேதம் பற்றிய முக்கிய கோட்பாட்டுக்கு மாறுபட்டதாக அந்த மாற்றங்கள் இருந்ததுதான். இந்தப் புதிய மாற்றங்களுக்கு எதிர்ப்புக்காட்டிய சீர்திருத்த போதகர்கள், அவை வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஆராதனைத் தத்துவங்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கண்டனர். அவர்கள் வேதத்தின் வழியில் மட்டுமே ஆராதனை அமைய வேண்டும்; அதற்கு வெளியில் போவதோ, வேதம் விளக்கும் ஆராதனை முறைகளோடு எதையும் இணைப்பதோ யெரொபெயாம் வழியில் போய் கர்த்தருக்கு விரோதமான மனித இச்சைகளை மேன்மைப்படுத்தும் சுயஆராதனையிலேயே போய் முடியும் என்று கருதினார்கள். பியூரிட்டன்கள் காலத்திலேயே வேதம் போதிக்கும் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனை முறை’ (The regulative principle of worship) தத்துவம் உருவானது. இதைப் பியூரிட்டன்கள் எழுதி வெளியிட்ட விசுவாச அறிக்கைகள் உள்ளடக்கியிருக்கின்றன. இந்தத் திருச்சபை ஆராதனை முறைகளில் ஏற்பட்ட இறையியல் பிரச்சனையே ‘பியூரிட்டன்’ (தூய்மைவாதி) என்ற பெயர் உருவாவதற்குக் காரணமாக இருந்தது. இப்படியாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆராதனை வழிகளை நிராகரித்து அவற்றை சபையில் பின்பற்ற மறுத்த அத்தனைப் போதகர்களும் திருச்சபையில் இருந்து இங்கிலாந்து சபையாலும், அரசாலும் நீக்கப்பட்டனர். அப்படி நீக்கப்பட்டவர்கள் வேதஅதிகாரத்தையும், திருச்சபையின் தூய்மையையும் வலியுறுத்தியதால் ‘தூய்மைவாதிகள்’ (Puritans – பியூரிட்டன்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டதோடு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; அநேகர் இறக்கவும் நேர்ந்தது. பலர் குடும்பங்களோடு மேபிளவர் என்ற கப்பலிலேறி நாடு கடந்து அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதிக்குப் போய் வாழ்ந்து கர்த்தரின் பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்களே இன்றைய அமெரிக்கா உதயமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள்.
பியூரிட்டன்களின் பிரசங்கமுறை
17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களுடைய போதனைகள், பிரசங்கங்களைப்பற்றி விளக்க விரும்புகிறேன்; முக்கியமாக போதகர்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் இது உதவும்.
பியூரிட்டன் பெரியோர் வாழ்ந்த 17ம் நூற்றாண்டில் விசுவாசிகளின் ஆவிக்குரிய தரமும், வேத அறிவும் இன்றிருப்பதைவிட மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. அன்றைய காலத்தை ஆவிக்குரிய எழுப்புதல் காலம் என்றும் சொல்லலாம். அத்தோடு பியூரிட்டன் பெரியோரின் போதனைகளும் பிரசங்கங்களும் இன்றிருப்பதைவிட வித்தியாசமாக இருந்தன. அவர்கள் வேத அறிவில் ஜாம்பவான்களாக இருந்தனர்; அதில் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். ஜோன் ஓவன், ஜோன் பிளேவல், ரிச்சட் சிப்ஸ், தொமஸ் புரூக்ஸ், தொமஸ் குட்வின் போன்ற பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன். அன்று அவர்கள் வாசிப்பதற்கு நூல்கள் அதிகம் இருக்கவில்லை. இருந்த கொஞ்ச நூல்களைப் பயன்படுத்தி அவர்கள் இறையியல் அறிவைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு வேதத்தில் அவர்கள் நீந்தி மூழ்கி முத்தெடுக்கப் பழகியிருந்தனர். வேதம் அவர்களில் ஊறிப்போயிருந்தது. அதன் அதிகாரத்தில் அவர்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
பியூரிட்டன்கள் வாசித்திருந்த நூல்களைப்பற்றி நினைக்கும்போது, நான் ஒருமுறை பென்சில்வேனியாவில் பிரின்ஸ்டன் கல்லூரிக்குப் போய்வந்தது நினைவுக்கு வருகிறது. பிரின்ஸ்டனில் பட்டம்பெற்றிருந்த ஒருவரே என்னையும் என் நண்பர்களையும் அங்கே அழைத்துச்சென்றார். அதைப்பற்றி இன்னொரு ஆக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். அந்த விஜயத்தில் பியூரிட்டன்கள் வாசித்த நூல்களிருக்கும் நூலகத்துக்கு அழைத்துப்போவதாக அந்த நண்பர் சொன்னார், மிகவும் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் அதைப்பார்க்கப் போனேன். ஒரு சிறுஅறையில் ஒரேயொரு கண்ணாடி செல்பில் இருபது அல்லது இருபத்தைந்து நூல்கள், அதுவும் சிறிய அளவில் தோல் அட்டையில் இருந்தன. அந்த நூல்கள் மட்டுமே பியூரிட்டன்கள் வாசிக்கமுடிந்ததாக இருந்திருக்கின்றன. அவையும், அவர்களிடம் இருந்த எபிரெய, கிரேக்க வேதமொழிபெயர்ப்புகளும், ஒரேயொரு ஆங்கில வேதமொழிபெயர்ப்புமே அவர்கள் பயன்படுத்தியவை. இருந்தபோதும் அத்தனைக்குறைந்தளவு நூல்களைப் பயன்படுத்தி பியூரிட்டன்கள் எழுதிக்குவித்திருக்கும் நூல்களின் தொகைதான் எத்தனையெத்தனை!
பியூரிட்டன்களுடைய பிரசங்கங்களும் போதனைகளும் மிகவும் ஆழமானதாகவும், இறையியல் தரத்தில் அதிஉயர்ந்த நிலையிலும் இருந்தன. வேதம் அவர்களுடைய பிரசங்கங்களில் கடல்போல் விரிந்திருந்தது. வேதவசனங்களில் இருந்து நடைமுறைக்குத் தேவையான இறைபோதனைகளை அவர்கள் கல்லில் இருந்து நாரெடுப்பதுபோல் உருவியெடுக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருந்தனர். பியூரிட்டன் பிரசங்கங்கள் ஆவிக்குரியதாகவும், அவற்றின் இறையியல் போதனைகள் நடைமுறைக்குகந்தவையாகவும், எளிமையானவையாகவும், ஏற்ற இடங்களில் அவசியமானளவுக்கு உதாரணங்களால் நிரம்பியவையாகவும், பக்தியுணர்வையும் ஆவிக்குரிய உணர்வுகளைத் தூண்டுவனவாயும், கேட்கக்கேட்க இன்னும் வேண்டும் என்று ஏங்கவைப்பனவாயும், கர்த்தரை மகிமைப்படுத்தியும், ஆவியானவருடைய வல்லமையோடும் வந்தவையாக இருந்தன. அவற்றைக்கேட்ட ஆத்துமாக்கள் ஆத்தும வளர்ச்சியடைந்து அத்தகைய பிரசங்கங்களுக்காக அலைந்தவையாக இருந்தன. பியூரிட்டன் திருச்சபைகள் அன்று ஆத்மீகத் தரத்திலும், வளர்ச்சியிலும் சிறந்தவையாக இருந்தன.
பியூரிட்டன் பிரசங்கங்களில் கர்த்தருடைய அதிகாரத்தையும், வேத அதிகாரத்தையும் காணாமல் இருக்கமுடியாது. இயேசு பிரசங்கித்தபோது மக்கள் அதில் ‘அதிகாரத்தைக்’ கண்டதுபோல் பியூரிட்டன் திருச்சபை மக்களும் பியூரிட்டன் பிரசங்கங்களில் அதிகாரத்தைக் கண்டனர். இன்றைய பிரசங்கிகள்போல் ஆத்துமாக்களை வசியப்படுத்த அநாவசியமான உலக சிந்தனைகளையும், சுயஆற்றலையும் பியூரிட்டன் பிரசங்கிகள் நம்பியிருக்கவில்லை. அவர்கள் வேதத்தையும், ஆவியின் வல்லமையையும் மட்டுமே நம்பிப் பிரசங்கித்தார்கள். மார்டின் லூத்தரைப்போலவே அவர்கள் மனித பயமில்லாதவர்களாக இருந்தனர்.
பியூரிட்டன்களின் பிரசங்கங்கள் பத்துப் பதினைந்து நிமிட யூடியூப், வட்ஸ்அப் செய்திகளாக இருக்கவில்லை. அவர்களுடைய பிரசங்கங்கள் எத்தனை மணிநேரங்களை அவர்கள் படிப்பறையிலும், ஜெபத்திலும் கழித்திருப்பார்கள் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியவையாக இருந்தன. ஓய்வுநாள் பிரசங்கங்களைத் தவிர பியூரிட்டன்கள் வாரநாளில் விரிவுரைகளை அளித்தனர். அவற்றை அவர்கள் ‘விரிவுரைகள்’ என்றே அழைத்தனர். போதகர்களும், ஆத்துமாக்களும் திரளாகக்கூடி இவற்றைக்கேட்டு அனுபவித்தார்கள். பியூரிட்டன்களுடைய பிரசங்கங்களின் இறுதியில் அவர்கள் கொடுத்திருந்த பயன்பாடுகள் (applications) 3 அல்லது 4 ஆக இல்லாமல், 25, 34, 64 ஆகக்கூட இருந்தன. அந்தப் பயன்பாடுகளை வைத்து நாம் 6 மாதங்களுக்கு பிரசங்கம் செய்துவிடக்கூடிய அளவுக்கு ஆழமான போதனைகளை அவர்கள் தந்திருந்தார்கள். அவர்களுடைய பயன்பாடுகள் பிரசங்கிக்கப்பட்ட பகுதிகள் இருந்து மட்டும் வருபவையாகவும், நேரடியானவையாகவும், இதயத்தைக் குத்திக்கிழிப்பவையாகவும் இருந்தன.
பியூரிட்டன்கள் ஒரு வேத நூலில் இருந்து தொடர்ச்சியாக பலவருடங்களுக்குப் பிரசங்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஜோசப் கெரல் (Joseph Caryl) எனும் பியூரிட்டன், யோபு நூலில் இருந்து 23 வருடங்களுக்கு பிரசங்கங்களை அளித்திருந்தார். அந்த நூல் பல வால்யூம்களாக 1400 பக்கங்களைக் கொண்டிருந்தது. அத்தனை வருடங்களுக்கு ஒரே நூலில் இருந்து பிரசங்கம் செய்ய அவருக்கு யோபுவைப் போன்ற பொறுமை இருந்திருக்க வேண்டும். இவரையும் மீறியிருந்தார் இன்னொரு பியூரிட்டன் பிரசங்கி. அவர் பெயர் வில்லியம் கௌஜ் (William Gouge). இவர் இங்கிலாந்தில் பிளெக்பிரையர்ஸ் என்ற இடத்தில் போதகராக இருந்தார். இவர் எபிரெயர் நூலில் இருந்து 33 வருடங்களுக்கு பிரசங்கம் அளித்திருந்தார். அவை 1000 பிரசங்கங்களாக இருந்தன. இந்நூலில் அவர் செய்த பிரசங்கக் குறிப்புகளின் சுருக்கத்தை மட்டும் அச்சிட்டால் அவை மூன்று வால்யூம்களாக இருக்கும். அந்தளவுக்கு, இத்தனை வருடங்களுக்கு ஒரே நூலில் இருந்து பிரசங்கம் அளிப்பதை இன்றைய பிரசங்கிகள் குருட்டார்வத்தில் வழக்கமாக வைத்திருக்கக்கூடாது. வேத அறிவில் அடிமட்டத்தில் இருக்கும் நம்மினத்து மக்களுக்கு அது பலவித ஆவிக்குரிய ஆபத்துக்களை விளைவித்துவிடும். அத்தோடு அந்தளவுக்கு அத்தனை காலத்துக்கு ஒரு நூலில் இருந்து பிரசங்கிக்கக்கூடிய ஆவிக்குரியவர்களாக, வேதத்தில் ஊறிப்போன ஜாம்பவான்களை இந்தத் தலைமுறையில் எங்கேயும் பார்க்கமுடியாது.
இன்னொரு அருமையான பியூரிட்டன் பிரசங்கியான ஜெரமாயா பரோஸ் (Jeramiah Burroughs) ஓசியாவில் இருந்து கொடுத்த பிரசங்கங்கள் 4 வால்யூம்களாக இருக்கின்றன. வில்லியம் கிரீன்ஹில் (William Greenhill) எசேக்கியேலில் இருந்து கொடுத்த பிரசங்கங்கள் 5 வால்யூம்களாக இருக்கின்றன. தொமஸ் மேன்டன், ஸ்டீபன் சார்நொக், ரொபட் போல்டன் போன்ற வேறு பியூரிட்டன் பிரசங்கிகளும் இந்தவிதத்தில் பல வால்யூம்களை நிரப்புமளவுக்கு பிரசங்கித்திருக்கிறார்கள். மெத்தியூ மீட் (Matthew Mead) என்ற பியூரிட்டனினுடைய 300 பக்க நூல் அப்போஸ்தலர் 26:28 வசனத்தில் இருந்து மட்டுமே கொடுக்கப்பட்ட பல பிரசங்கங்களின் தொகுப்பு. இதேபோல் ஜோன் ஓவனும் பாவத்தை எப்படி அழிப்பது என்பதுபற்றி ரோமர் 8:13ஐ மட்டுமே பிரசங்க வசனமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான பக்கங்களை நிரப்புமளவுக்கு பிரசங்கம் செய்திருக்கிறார்.
பியூரிட்டன்களின் காலத்தில் மக்களுக்கு அதிக நேரமிருந்தது, வேதத்தைக் கரைத்துக்குடித்து அதில் ஊறிப்போயிருக்குமளவுக்கு வேதஞானம் இருந்தது. பியூரிட்டன்களின் ஆழமான, மிகமிக நீளமான, தொடரான பிரசங்கங்களை அதிக நேரத்திற்கு அமர்ந்திருந்து காதால்கேட்டுச் சிந்திக்கும் ஆற்றலுள்ளவர்களாக ஆத்துமாக்கள் அன்று இருந்தனர். அதுவும் அக்காலம் மெய்யான ஆவிக்குரிய எழுப்புதலின் காலமாக, மெய்யான பக்திவிருத்தி பொதுவாகவே பரவலாகக் காணப்பட்ட காலமாக இருந்தது.
நாம் வாழுகின்ற இந்தக்காலத்தில் அத்தகைய ஆழமும், அழுத்தமும் கொண்ட தரமுடைய, நீண்ட சிந்திக்கவேண்டிய போதனைகளைக் கிரகித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆத்மீக அனுபவத்தையும், பக்திவிருத்தியையும், ஆவிக்குரிய தரத்தையும், வேதத்தில் ஆழ்ந்த அறிவையும் நம்மினத்து மக்கள் கொண்டிருக்கவில்லை. பொதுவாக நம்மினத்து மக்களில் பெரும்பாலானோர் மிகமிகக் குறைந்தளவு வேத அறிவையே கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் வேதஅறிவு பிரசங்கிகளுக்கும், ஆத்துமாக்களுக்கும் அடியோடு இல்லாத காலமிது. பயனுள்ள, நல்ல, ஆழமான வேதப்பிரசங்கத்தை ஒருமணி நேரம் கேட்டுச் சிந்தித்துக் கிரகிக்கும் ஆத்மீக ஆற்றலும் நம் காலத்து மக்களுக்கு இல்லை. அவர்களால் 10 அல்லது 12 நிமிடங்கள் கொண்ட உப்புச்சப்பில்லாத, அறைகுறையான வேதவிளக்கத்தை தரும் ஆடியோ, வீடியோ கிளிப்பை வட்ஸ்அப்பிலோ, யூடியூபிலோ கேட்டுச் சகிக்குமளவுக்கு மட்டுமே பொறுமை இருக்கிறது. வாசிக்கும் வழக்கத்தையும், சிந்திக்கும் திறத்தையும் அறவே கொண்டிராமல் இருக்கும் நம்மினத்து மக்களுக்கு பியூரிட்டன் பிரசங்கங்களும், எழுத்துக்களும் புதிராகத்தான் தெரியும்.
உண்மையில் பியூரிட்டன் பெரியவர் ஒருவரின் நூலை அதிலுள்ளபடி இன்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அதைப்புரிந்துகொள்ள நம் மக்கள் கஷ்டப்படுவார்கள். முதலில், அவர்களால் அத்தனை பக்கங்களை வாசிக்க முடியாது, அந்தளவுக்கு துப்பரவாக வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள் நம்மினத்து மக்கள். அவற்றில் காணப்படும் போதனைகள் மட்டுமல்லாது 17ம் நூற்றாண்டுக்கே உரிய எழுத்து நடையும் பிரசங்க முறையும் நம் மக்களை அவற்றின் பக்கமே தலைவைக்க முடியாமல் செய்துவிடும். பியூரிட்டன் பெரியவர்களின் பிரசங்க முறையைப் பின்பற்றி யாராவது இன்று பிரசங்கம் செய்தால் சபையில் ஒருவர் மிஞ்சுவதும் அதிசயந்தான். இதை நான் பியூரிட்டன் பெரியவர்களின் குறைபாடாகவோ அல்லது அவர்களைக் கொச்சைப்படுத்திக் காட்டுவதற்காகவோ சொல்லவில்லை. அவர்களுடைய அருமையான போதனைகளை வாசித்து, உள்ளெடுத்து, சிந்தித்து, ஆராய்ந்து பக்குவமாகப் பிரித்துத்தொகுத்து நம்மினத்து மக்கள் கிரகித்துக்கொள்ளக்கூடிய விதத்தில் கொடுக்க வேண்டியதே இன்றைய பிரசங்கியின் கடமையாக இருக்கின்றது. ஒருவர் சொன்னார், ‘நாம் சிந்தனாவாதிகளைப்போல சிந்திக்கப் பழகியிருக்கவேண்டும்; ஆனால் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பிரசங்கிக்க வேண்டும்’ என்று.
மனித இருதயத்தின் ஆழத்தை அறிந்தவர்கள்
பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளில் இன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். அவர்கள் மனித இருதயத்தை வேறு எந்தக்காலப்பகுதிப் போதகர்களையும்விட ஆழமாக அறிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ (The Doctors of the Souls) என்று அழைக்கப்பட்டார்கள். பியூரிட்டன்களால் மட்டுமே ‘பாவத்தின் பாவம்’ (The Plague of Plagues – ரால்ப் வென்னிங்) என்ற நூலையும், ‘கேடுகளிலெல்லாம் மகாக் கேடு’ (The Evil of All Evils – ஜெரமாயா பரோஸ்), ‘நான்கு நிலைகளில் மனித இருதயம்’ (Human Heart in its Four Fold State – தொமஸ் பொஸ்டன்), ‘சாத்தானின் ஏமாற்றுவழிகளுக்கெதிரான ஆசீர்வாதமான தீர்வுகள்’ (The Precious Remedies Against Satan’s Devices — தொமஸ் புரூக்ஸ்) போன்ற நூல்களையும் எழுத முடிந்தது. அவர்களைப்போல பாவத்தையும், அது மனித இருதயத்தை ஏமாற்றி எந்தெந்த வழிகளில் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலுள்ளது என்பதையும், சாத்தானின் வஞ்சக வழிமுறைகளையும் துல்லியமாக விளக்கிப் பிரசங்கித்தும், எழுதியுமிருந்தவர்கள் வேறு எந்தக் காலப்பகுதியிலும் இருக்கவில்லை. அந்தளவுக்கு ஆழமாக அவர்கள் மனித இருதயத்தின் கேட்டையும் ஏமாற்றுத்தன்மையையும் அறிந்துவைத்திருந்ததால்தான் அவர்களால் மனித உள்ளத்தை தீவிரமாக ஆராய்ந்து அதுபற்றிய மிகவும் ஆழமான, நீண்ட வேத விளக்கங்களை பக்கம் பக்கமாக எழுதித்தர முடிந்தது.
இதை எழுதிக்கொண்டிருக்கிற வேளையில் நான் பியூரிட்டனான தொமஸ் வொட்சனின் நூலான மனந்திரும்புதலைப் பயன்படுத்தி அதுபற்றிய விளக்கங்களை விரிவான முறையில் தந்துகொண்டிருக்கிறேன். அதில் வொட்சன் மனந்திரும்புதலைப்பற்றி மிக ஆழமாக விளக்கியிருக்கிறார். அதைத்தான் அவருடைய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த தொமஸ் பொஸ்டனும் செய்திருக்கிறார். பியூரிட்டன்கள் வழிவந்தவர்கள் இந்தவிதத்தில் மிக ஆழமாக இருதயங்களை ஆராய்ந்து பார்த்து வேதசத்தியங்களை விளக்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மனித இருதயத்தை ஆழமாக அறிந்துவைத்திருந்ததுதான். அந்த இருதயம் பாவத்தினால் எப்படியெல்லாம் ஒருவனை சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும் என்பதை அவர்கள் விளக்கமாக எழுதியிருந்தனர். ஆத்தும வைத்தியர்களான பியூரிட்டன் பெரியவர்கள் இருதயத்தின் வியாதியையும் அது செய்யும் அட்டகாசங்களையும் துல்லியமாக அறிந்துவைத்திருந்து ஆத்துமாக்கள் தங்களைப்பிடித்திருக்கும் வியாதியின் தன்மையை உணரும்படிச் செய்தார்கள். அதைத்தான் சரீர வியாதிக்கு ஒரு டாக்டரும் செய்வார். நோயின் தன்மையையும், அது எப்படியெல்லாம் பரவி சரீரத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பது ஒரு டாக்டருக்குத் தெரியாவிட்டால் அவரால் சரியான வைத்தியம் செய்யமுடியாது. அதுபோல ஆத்தும வைத்தியர்களான பியூரிட்டன்கள் ஆத்துமாவின் நோயை முதலில் ஆழமாக அறிந்து அதை ஆத்துமா புரிந்துகொள்ளும்படி உணரவைத்து, அதற்குப் பின்பே மருந்தை அளிக்கும் முறையைக் கையாண்டார்கள். வொட்சனின் மனந்திரும்புதல் நூலில் அதைக் காணலாம். இதேபோல்தான் நவீன பியூரிட்டன் என்று அழைக்கப்பட்ட டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் 20ம் நூற்றாண்டில் பிரசங்கம் செய்திருந்தார். அதை அவருடைய பிரசங்கங்களை வாசிக்கும்போது கவனிக்கலாம்.
அத்தோடு பியூரிட்டன் பெரியவர்களைப்போல சுயபரிசோதனை செய்துகொள்ளும்படிக் கிறிஸ்தவர்களை வலியுறுத்தியவர்களும் வேறு காலப்பகுதிகளில் இருந்ததில்லை. கிறிஸ்தவர்கள் சுயபரிசோதனை செய்து தாங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி பவுல் அப்போஸ்தலன் எழுதியிருக்கிறார். இதை ஏனைய புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களும், இயேசுவும்கூட வலியுறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய சுயபரிசோதனையை வலியுறுத்தி நவீன கால பிரசங்கிகள் பிரசங்கிப்பதில்லை. இந்த விஷயத்தில் பியூரிட்டன் எழுத்துக்களையும், போதனைகளையும் வாசித்து அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள்.
பியூரிட்டன்கள் அளவுக்கதிகமான சுயஆய்வுக்காரர்களா?
பியூரிட்டன்களைப்பற்றிய ஒரு குற்றச்சாட்டு, அவர்கள் அளவுக்கு அதிகமாக தேவையில்லாதளவுக்கு இருதயத்தைத் துளைத்து ஆராய்ந்து காலத்தைப் போக்கினார்கள் என்பது (introverts). அதைச் செய்வதை விட்டுவிட்டு அவர்கள் கிறிஸ்துவைப் பிரசங்கித்தோ எழுதியோ இருக்கலாமே என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு சரியானதல்ல; பியூரிட்டன்களைப் புரிந்துகொள்ளாததால் உண்டாகும் ஒரு எண்ணந்தான் இது. பியூரிட்டன்களைப்போல கிறிஸ்துவைப்பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் பிரசங்கித்தும் போதித்தும் வந்தவர்கள் இல்லை. அதை ஜோன் ஓவன், தொமஸ் பொஸ்டன், தொமஸ் புரூக்ஸ், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பிளேவல், வில்லியம் பேர்கின்ஸ், ஜெரமாயா பரோஸ், ரிச்சட் பெக்ஸ்டர், கிரிஸ்டோபர் லவ் ஆகியோருடைய எழுத்துக்களில் காணலாம். அதேநேரம் பியூரிட்டன் பெரியவர்கள் பாவத்தைப்பற்றிய சரியான அறிவு இல்லாமல், மனித இருதயத்தின் போக்கைத் துல்லியமாக தெரிந்துகொள்ளாமல் ஒருவன் கிறிஸ்துவை அறியவோ, மேன்மைப்படுத்தவோ முடியாது என்று நம்பினார்கள். இயேசு கிறிஸ்துவாகிய தைலத்தை ஒருவன் நெஞ்சில் அதன் வலிபோகப் பூசவேண்டுமானால், அவனுடைய இருதயம் முதலில் நொருங்கி தன் பாவத்தின் கோரத்தை உணரவேண்டும் என்பதில் பியூரிட்டன்கள் ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான் அகிரிப்பாவைப்பற்றிய மெத்தியூ மீட்டின் நூலும், பாவத்தின் பாவம் என்ற ரால்ப் வென்னிங்கின் நூலும் கிறிஸ்தவ வேஷதாரிகளுக்கு வேம்பு போல கசப்பாக இருக்கும். பாவத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு போலிச்சுவிசேஷமாகிய இனிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பிரசங்கிகள் பியூரிட்டன்கள் பக்கத்திலும் நெருங்கமுடியாது; பியூரிட்டன்களின் தூய்மையான வாழ்க்கையும் போதனைகளும் அவர்களை எரித்துவிடும்.
நான் இப்போது தொமஸ் வொட்சனின் மனந்திரும்புதல் நூலுக்கான விரிவான விளக்கத்தைக் கொடுத்துவருகிறேன். வொட்சன் நான் சொல்லியிருப்பதுபோலத்தான் மனித இருதயத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்து அது எத்தனை மோசமானதாக இருந்து மனிதனை ஏமாற்றிவருகிறது என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறார். அவிசுவாசிகளைக்கூட அவர் ஐந்து பிரிவுகளாகப் பிரித்துக்காட்டி அந்தப் பிரிவைச் சார்ந்தவர்களில் பாவம் அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்கள் நன்றாக இருப்பதுபோல் காட்டி கடவுளிடம் நெருங்கமுடியாதபடி செய்கிறது என்பதை வொட்சன் விளக்கியிருக்கிறார். நவீன காலத்து பிரசங்கிக்கு இது அவசியமற்றதாகத் தோன்றும்; இந்தளவுக்குப் பாவத்தைப்பற்றி விளக்கவேண்டுமா என்று எண்ணலாம். அதற்குக் காரணம் பாவத்தைப்பற்றிய உணர்வே இன்று கிறிஸ்தவர்களிடம் குறைவாகக் காணப்படுவதுதான். புரையோடிப்போன வாழ்க்கையை கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்துவருகிறவர்களைக் கொண்டிருக்கும்போது, திருச்சபை பாவத்தை சட்டைசெய்ய மறுக்கும்போது தொமஸ் வொட்சன் போன்றோரின் நூல்களும், போதனைகளும் கசக்கத்தான் செய்யும்.
பியூரிட்டன்கள் பரிசுத்தமான கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுபற்றி ஆழமாக எழுதிக் குவித்திருந்தார்கள். அவர்களுடைய பிரசங்கங்களில் அது முக்கிய போதனையாகக் காணப்பட்டது. பரிசுத்தத்தின் தேவன் பரிசுத்தத்தையே தன் மக்களிடம் நாடுவதாக அவர்கள் பொறுப்போடு வாழ்ந்து காட்டி ஆத்துமாக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு பாவத்தோடு போராடி அதை அன்றாடம் கிறிஸ்தவர்கள் அழித்து வாழவேண்டுமென்பதை ஒவ்வொரு பியூரிட்டன் பெரியவரும் ஆணித்தரமாகப் பிரசங்கித்தார்கள். இறையியல் அறிஞர்களுக்கெல்லாம் இளவரசனான ஜோன் ஓவனின் எழுத்துக்கள் இதற்கு முக்கியமான உதாரணம். பியூரிட்டன்கள் கர்த்தரின் கட்டளைகளை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ்வில் கிருபையின் மூலம் பின்பற்றி பாவத்தை அழித்து வாழவேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். கிறிஸ்துவை வாழ்க்கையில் மகிமைப்படுத்தி தூய்மையோடு வாழ்வதற்கு கீழ்ப்படிவின் அவசியத்தை உணர்த்தினார்கள். இதற்கு வேறு எந்தவிதமான மாற்றுவழியையும் பியூரிட்டன்கள் அறிந்திருக்கவில்லை. கர்த்தரின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், கிறிஸ்து நமக்குள் இருந்து நம் பாவங்களை சுத்தப்படுத்துவார் அதனால் அவர் மேல் அன்பு செலுத்துவது மட்டுமே நம் பணி என்று விளக்கும் அசட்டு அன்டிநோமியன் போதனைகளையும் வழிமுறைகளையும் பியூரிட்டன்கள் அறிந்திருக்கவில்லை; அவர்களுடைய போதனைகளில் அவற்றிற்கு இடமிருக்கவில்லை.
இந்த இருபத்தியோராவது நூற்றாண்டில் நம்மினத்தில் பிரசங்கிக்கப்பட்டு வருவது கிறிஸ்துவைப்பற்றிய போலிப்போதனை. அப்படிப் போலிப்பிரசங்கமளித்து வருகிறவர்களுக்கு மனித இருதயத்தின் பாவத்தைப்பற்றித் துப்பரவாக எந்த அறிவும் இல்லை. அதனால்தான் பாவத்தைப்பற்றியும், மெய்யான மனந்திரும்புதலைப்பற்றியும் பிரசங்கங்களையும் போதனைகளையும் நம்மினத்தில் இன்றைக்குக் கேட்கவோ வாசிக்கவோ வழியில்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் மாறாக பியூரிட்டன்கள் மனித இருதயத்தை அறிந்துவைத்திருந்து அந்த இருதயத்தைக் குணப்படுத்தத் தேவையான சுவிசேஷ மருந்தை கிறிஸ்துவை மேன்மைப்படுத்திப் பிரசங்கத்தில் கொடுத்திருந்தார்கள்.
பியூரிட்டன்களின் காலம் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு பொற்காலம். பியூரிட்டன்களின் வாழ்க்கையிலும், போதனைகளிலும், பிரசங்கத்திலும் நாம் கவனிப்பது கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையுமே. அத்தகைய ஆசீர்வாதத்தை நம்மினம் காணவேண்டுமானால் கிறிஸ்து அத்தகைய பிரசங்கிகளை எழுப்பி நம்மத்தியில் கிரியை செய்தால் மட்டுமே முடியும். அந்நாள் என்றாவது உதயமாகுமா?
ஒரு சகாப்தம் மறைந்தது (ஜே. ஐ. பெக்கர் 1926-2020)
இந்த வருடம் ஜூலை மாதம் ஒரு சனிக்கிழமை நான் என் வழமையான உடற்பயிற்சிக்கான ஆறு கிலோமீட்டர் ஓட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நண்பரொருவரின் ஈமெயில் ஒன்று ஜிம் பெக்கர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கொண்டுவந்தது. இன்னுமொரு இவென்ஜலிக்கள் இறையியலறிஞர் இறைபதம் அடைந்துவிட்டார். ஜிம் பெக்கர் என்றும், ஜே. ஐ. பெக்கர் என்றும் கிறிஸ்தவ உலகில் பலராலும் அறியப்பட்டிருந்தார் ஜேம்ஸ் பெக்கர். முப்பது வருடங்களுக்கு முன் ஜே. ஐ. பெக்கரின் முக்கிய நூலொன்று எனக்குப் பெரும் பயனளித்தது. இப்போதும் நினைவிருக்கிறது; கர்த்தரின் முன்குறித்தலுக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும் இடையில் முரண்பாடிருக்கிறதா என்ற விஷயத்தில் பெக்கரின் ‘சுவிசேஷ அறிவித்தலும் கர்த்தரின் இறையாண்மையும்’ (Evangelism and the Sovereignty of God) என்ற சிறு நூல் பால் வார்த்ததுபோல் அக்காலத்தில் எனக்கு உதவியது. எத்தனையோபேரை அதை வாசிக்கும்படி ஊக்குவித்திருக்கிறேன்; என் பிரசங்கங்களிலும், போதனைகளிலும் பயன்படுத்தியிருக்கிறேன். பெக்கர் இவை இரண்டிற்கும் முரண்பாடில்லை என்பதை மிக அழகாகவும், வேதபூர்வமாகவும், ஆணித்தரமாகவும் அந்நூலில் விளக்கியிருந்தார். இன்றும் அந்தப் பிரதி என் படிப்பறை நூல்களுக்கு மத்தியில் இருக்கிறது.
ஜே. ஐ. பெக்கர் ஆங்கிலிக்கன் சபைப்பிரிவைச் சேர்ந்தவர்; கடைசிவரை விசுவாசமுள்ள ஆங்கிலிக்கனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். இன்று ஆங்கிலிக்கன் சபைப்பிரிவு லிபரல் வழிகளில் ஊறிப்போய் சத்தியத்தை முழுவதுமாகத் தூக்கி எறிந்துவிட்டிருக்கிறது. அதில் இருக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள இவென்ஜலிக்கள் தலைவர்களில் பெக்கரும் ஒருவராக இருந்தார்.
இவரைப்பற்றி நம் வாசகர்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு மனிதர் பெக்கர். வேதத்தில் நாம் வாசிக்கும் மனிதர்களைப்பற்றி வேதம் மூலம் அறிந்துவைத்திருப்பதுபோல் வேதகாலத்துக்குப் பின்னால் உலகத்தில் வாழ்ந்து கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மனிதர்களைப்பற்றியும் நாம் அறிந்துவைத்திருப்பது அவசியம். அதன்காரணமாகத்தான் கிறிஸ்தவ தலைவர்களின் வாழ்க்கை சரிதங்களை எழுதிவைத்திருக்கிறார்கள். அத்தோடு திருச்சபை வரலாற்றையும் எழுதிவைத்திருக்கிறார்கள். இவற்றை உதாசீனப்படுத்தி வரும் சபைகளும், கிறிஸ்தவர்களும் வாழ்க்கையில் சரீர வளர்ச்சிகாணமுடியாமல் இருந்துவரும் குள்ளர்களைப்போலத்தான் இருக்கமுடியும். நம் வாசகர்கள் அப்படி இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திருமறைத்தீபம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவ விசுவாசமும், பியூரிட்டன் இலக்கிய ஆர்வமும்
பெக்கர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவருடைய முழுப்பெயர் ஜேம்ஸ் இன்னெல் பெக்கர் (James Innell Packer). அவர் ஆங்கிலிக்கன் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய பதினெட்டாம் வயதில் கர்த்தரை விசுவாசித்து மனந்திரும்புதலை அடைந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து தன் படிப்பை அவர் ஆரம்பித்த ஆரம்பகாலத்தில் (1944) இது நிகழ்ந்தது. படிப்பதிலும், சிந்திப்பதிலும் சிரத்தை காட்டிய பெக்கர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கிறிஸ்தவ யூனியனுக்கு ஒருவரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டிருந்த பழங்கால இலக்கியங்களை சரிபார்த்து அவற்றை முறைப்படுத்திவைக்கும் பொறுப்பு பெக்கருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் பெக்கர் ஒரு புத்தகப் பூச்சி என்பது பலருக்கும் பல்கலைக்கழகத்தில் தெரிந்திருந்ததுதான்.
அந்த நூல்களில் 16ம் 17ம் நூற்றாண்டு இலக்கியங்களும் இருந்தன. கர்த்தரின் வழிமுறைகளே விநோதமானவைதானே! அந்த நூல்களைப் பெக்கர் ஆராய்ந்து கொண்டிருந்தபோது 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவனின் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த முழுத்தொகுப்பு ஒன்று அவற்றில் இருந்ததைக் கண்டார். அதுவே பெக்கருக்கு முதல்முதலாக ஓவனின் எழுத்துக்களோடு ஏற்பட்ட அறிமுகம். அந்தத் தொகுப்பைப் பிரித்து அவற்றிற்குள் காணப்பட்ட ஓவனின் ‘சோதனையும் பாவமும்’ பற்றிய வால்யூமையைக் கவனித்தார். அது ஓவனின் தொகுப்புகளில் ஆறாவது வால்யூம். ஆர்வத்தோடு அதை வாசிக்க ஆரம்பித்த பெக்கர் பின்னால் சொல்லியிருக்கிறார், ‘வேறெந்த இறையியலறிஞர்களுடைய எழுத்துக்களையும்விட ஜோன் ஓவனின் எழுத்துக்களுக்கே நான் அதிகம் கடன்பட்டிருக்கிறேன்’ என்று. ஓவனின் எழுத்துக்களின் தொகுப்பில் ‘பாவத்தை அழித்தல்’ (Mortification of Sin) என்ற பகுதி பெக்கரை அதிகம் ஈர்த்தது. அதுவே ஜோன் ஓவனின் எழுத்துக்களில் எல்லாம் தலையானது என்பது பெக்கரின் கருத்து.
மார்டின் லொயிட் ஜோன்ஸோடு தொடர்பு
இந்தவகையிலேயே பெக்கருக்கு 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களின் எழுத்துக்களில் நாட்டம் அதிகமானது. பியூரிட்டன் பெரியோரின் எழுத்துக்களில் அவர் காதல் கொண்டார் என்றே சொல்லலாம். வெகு விரைவிலேயே பெக்கர் வாசிப்பதில் மட்டுமல்லாமல் எழுத்துப்பணியிலும் அக்கறை காட்டினார். அவருடைய முதலாவது ஆக்கம் 1952ல் வெளியானது “The Puritan Treatment of Justification by Faith.” அவர் தன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆரம்பக் கல்வியை 1948ல் முடித்தபிறகு இலண்டனில் இருந்த ஓக் ஹில் இறையியல் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து கிரேக்கத்தையும், இலத்தின் மொழியையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அப்போது பெக்கருக்கு வயது 22. அந்த ஒருவருட காலப்பகுதியிலேயே அவர் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பல் திருச்சபைக்கு ஒவ்வொரு ஞாயிறு மாலை ஆராதனைக்கும் போக ஆரம்பித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் அன்று போதகராக இருந்தவர், இங்கிலாந்தின் பிரபலமான சீர்திருத்த பிரசங்கியாக இருந்த டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். லொயிட் ஜோன்ஸுக்கு அப்போது வயது 50 ஆக இருந்தது. பெக்கர் லொயிட் ஜோன்ஸ்ஸின் பிரசங்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டார்.
இந்த 21ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியத்தைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வழியில்லை; அதுவும் தமிழினத்தில். என்னுடைய வாழ்க்கையில் கிறிஸ்தவ அனுபவத்தை அடைய ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் லொயிட் ஜோன்ஸினுடைய பிரசங்கங்களும் (பழைய ஆடியோ டேப்பில் கேட்டவை), எழுத்துக்களுமே என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. அவருடைய நூல்களில் ஒன்றான “Faith on Trial” அந்தவிதத்தில் எனக்குப் பேருதவி செய்தது. சங்கீதம் 73ன் விளக்கவுரையே அந்தநூல். அந்தக் காலத்தில் கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்தபின் கையில் கிடைத்த அத்தனை லொயிட் ஜோன்ஸின் நூல்களையும் நான் வாசிக்க ஆரம்பித்தேன். இதைச் சொல்லுவதற்குக் காரணம், லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியமும், எழுத்துக்களும் அவருடைய காலத்தில் மட்டுமல்லாது பின்வந்த காலப்பகுதிகளிலும், ஏன் இன்றும்கூட கர்த்தரால் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
லொயிட் ஜோன்ஸின் பிரசங்கத்தைக் கேட்டு இதயம் நெகிழ்ந்த பெக்கர் அதுபற்றி விளக்கியிருக்கிறார். “அவருடைய பிரசங்கம் எனக்கு இலெக்டிரிக் ஷாக் கொடுத்தது போல் இருந்தது” என்றும், “வேறு எந்த மனித ஆசிரியர்களையும்விட அவர்மூலம் நான் அதிகம் பயனடைந்திருக்கிறேன்” என்றும் பெக்கர் எழுதியிருக்கிறார். லொயிட் ஜோன்ஸோடு பெக்கருக்கு அதிகம் பரிச்சயம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களானபோது பியூரிட்டன் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டிருந்த பெக்கர் லொயிட் ஜோன்ஸோடு தன்னுடைய ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதற்காக நாம் ஏன் ஒரு தொடரான ஒரு கூட்டத்தை ஆரம்பித்து பியூரிட்டன் போதனைகளை அளிக்கக்கூடாது என்பது தான் அந்த ஆலோசனை. உடனேயே அவர்கள் இருவரும் “பியூரிட்டன் கொன்பரன்ஸ்” என்ற பெயரில் ஒரு வருடாந்த கூட்டத்தை ஆரம்பித்தனர். அதில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தலைவராகவும், பெக்கர் உப தலைவராகவும் இருந்தனர்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் லொயிட் ஜோன்ஸைப்பற்றிச் சொல்லவேண்டும். லொயிட் ஜோன்ஸினுடைய வாழ்க்கையிலும், பெக்கரின் வாழ்க்கையில் நிகழ்ந்ததுபோலவே பியூரிட்டன் இலக்கியங்களின் அறிமுகம் ஏற்பட்டது. அகஸ்மாத்தாக அவர் கையில் பழங்கால பியூரிட்டன் இலக்கியங்கள் கிடைத்து அவற்றை லொயிட் ஜோன்ஸ் வாசிக்க ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையில் அந்தப் போதனைகள் பெருமாற்றத்தை ஏற்படுத்தின. தன்னுடைய நண்பர் ஒருவரின் நூலகம் முழுவதும் அத்தகைய பழம் இலக்கியங்கள் எவருக்கும் பயன்படாமல் ஒரு சிற்றூரில் நிரம்பியிருந்ததைக்கண்ட லொயிட் ஜோன்ஸ், அவற்றை எல்லோரும் வாசிக்கும்படியான வசதி ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நண்பரை வற்புறுத்தி அந்த நூலகத்தை தலைநகரான இலண்டனின் சில்டர்ன் தெருவின் ஒரு கட்டடத்தில் அமையும்படிச் செய்தார். அது இன்றும் இலண்டனில் வேறொரு இடத்தில் இருந்து வருகிறது. சில்டர்ன் தெருவில் இருந்த அந்த நூலகத்திற்கு நான் இரண்டு தடவை போயிருக்கிறேன். லொயிட் ஜோன்ஸின் ஊக்குவிப்பாலேயே அன்று எவரும் அறியாதபடி இருந்து வந்த 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் இலக்கியங்களை பேனர் ஆப் டுரூத் வெளியீட்டு நிறுவனம் வெளியிட ஆரம்பித்தது. லொயிட் ஜோன்ஸும் பெக்கரும் பியூரிட்டன் இலக்கியங்களில் பேரார்வம் கொண்டு அவற்றைக் கருத்தோடு வாசித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் வாசிக்கச்செய்து தங்களுடைய எழுத்துக்களிலும் பயன்படுத்திக்கொண்டனர்.
திருச்சபைப் பணியும், குடும்பமும்
பெக்கர் அடுத்த மூன்று வருடங்களுக்கு (1952-1954) ஆங்கிலிக்கன் திருச்சபையில் குருவாக இணைவதற்கான படிப்பைத் தொடர்ந்தார். 1953ல் அவர் பெர்மிங்காம் கெதீட்ரலில் மதகுருவாக நியமனம் பெற்றார். அதேவேளை அவர் தன்னுடைய இறையியல் டாக்டர் பட்டத்திற்கான படிப்பையும் தொடர்ந்தார். 1954ல் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவருடைய 400 பக்கங்கள் கொண்ட டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுத் தொகுப்பு பியூரிட்டனான ரிச்சர்ட் பெக்ஸ்டரைப்பற்றி இருந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. 1954ல் பெக்கர் வேல்ஸைச் சேர்ந்த கிட் மல்லட் (Kit Mullett) என்பவரைத் திருமணம் செய்தார். பின்னால் அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்மகனும் பிறந்தார்கள். 1955ல் பெக்கர் பிரிஸ்டல் நகருக்கு குடிபோய் அங்கே டின்டேன் ஹாலில் அடுத்த ஆறுவருடங்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார்.
தொடர்ந்த எழுத்துப்பணி
இந்தக் காலப்பகுதியில் பெக்கர் மேலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு இரு முக்கிய ஆக்கங்களை வெளியிட்டார். முதலாவது அன்று இருந்து வந்த பரிசுத்தமாக்குதல் பற்றிய கெஸ்சிக் போதனைகளுக்கெதிரானது. கெஸ்சிக் போதனைகள் அமெரிக்காவில் உதயமான ஹையர் லைப் போதனைப் பரிசுத்தமாக்குதலை ஒத்தது. பெக்கர் இந்த ஆக்கத்தை இவென்ஜலிக்கள் காலாண்டு பத்திரிகையில் வெளியிட்டார் (Keswick and the Reformed Doctrine of Sanctification). இதில் அவர் கெஸ்சிக் போதனைகளை முழுமுற்றும் பெலேஜியனிசப் போதனைகள் என்று விளக்கியிருந்தார். இது கெஸ்சிக் பரிசுத்தமாக்குதலுக்கு எதிரான மிகவும் கடுமையான விமர்சனம். பெக்கரின் கெஸ்சிக் பற்றிய விமர்சனம் அறிவார்ந்த திறமையான தத்துவார்த்த ரீதியில் எழுதப்பட்டதாக இருந்தது. அன்று அநேக இவென்ஜலிக்கள் வாலிபர்கள் கெஸ்சிக் போதனையில் விழுந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தனர். அதற்கு பெக்கரின் விமர்சனம் தடைபோட்டுத் தடுத்தது. மார்டின் லொயிட் ஜோன்ஸும் ஜிம் பெக்கரும் கெஸ்சிக் விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். அத்தோடு இருவரும் கெஸ்சிக் கூட்டங்களில் ஒருபோதும் பேசியதில்லை. இதற்கும் காரணம் இந்த இருவரும் சீர்திருத்தவாத பியூரிட்டன் பரிசுத்தமாக்குதல் போதனைகளில் ஊறிப்போயிருந்ததுதான்.
பெக்கர் தன்னுடைய முதலாவது நூலை 1958ல் வெளியிட்டார். அதன் பெயர், Fundamentalism and the Word of God, IVP. இந்நூல் வரலாற்றுக் கிறிஸ்தவ நம்பிக்கையான வேதத்தின் அதிகாரத்தைப்பற்றியது. பெக்கரின் எழுத்துக்களில் இது முக்கியமானது. வேதத்தைப்பற்றிய அடிப்படை சத்தியமான அதன் பூரண அதிகாரத்தை பெக்கர் ஆணித்தரமாக இதில் விளக்கியிருந்தார். அன்றைய இவென்ஜலிக்கள் கிறிஸ்தவத்தைத் தூக்கி நிறுத்த இந்நூல் அவசியமாக இருந்தது. இந்நூல் வெளிவந்தபோதே 20,000 பிரதிகள் விற்றது. 1961ல் மறுபடியும் பெக்கர் ஒக்ஸ்போர்டுக்கே போய் அங்கிருந்த லெட்டிமர் ஹவுஸின் நூலகத்தை நிர்வகிப்பராகவும், அதன் வோர்டனாகவும் ஒன்பது வருடங்கள் பணியாற்றினார். அங்கிருந்தபோதே இன்னுமொரு ஆங்கிலிக்கன் இறையியலறிஞரான ஜோன் ஸ்டொட்டோடு இணைந்து அவர் இவென்ஜலிக்கள் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்தார். இது ஆங்கிலிக்கன் திருச்சபைப் பிரிவின் இறையியல் நம்பிக்கைகளை வலிமைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இங்கேயும் பெக்கரின் எழுத்துப்பணி தொடர்ந்தது.
1970ல் பெக்கர் மறுபடியும் பிரிஸ்டலுக்குத் திரும்பி வந்து டின்டேல் ஹாலின் பிரின்ஸிபல் பதவியேற்றார். அடுத்தவருடமே அது புதிய கல்லூரியாக டிரினிடி காலேஜ் என்ற பெயரில் இன்னுமொரு ஆங்கிலிக்கன் போதகரான அலெக்ஸ் மோட்யரை பிரின்ஸிபலாகவும் பெக்கரை அசோஸியேட் பிரின்ஸிபலாகவும் கொண்டு இயங்க ஆரம்பித்தது. இது பெக்கருக்கு இன்னும் அதிகமாக எழுத்துப்பணிகளில் ஈடுபடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.
1973ல் பெக்கரின் மிகமுக்கிய நூலான Knowing God வெளிவந்தது. இதை ஹொடர் அன்ட் ஸ்டௌட்டன் வெளியீட்டாளர்கள் வெளியிட்டனர். இது ஏற்கனவே தொடராக இவென்ஜலிக்கள் மெகசீன் என்ற சிறு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இதன் தொகுப்பே Knowing God என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. வெளிவந்தவுடனேயே இந்நூல் ஒன்றரை மில்லியன் பிரதிகள் விற்பனையாயின. இந்நூல் பற்றி எழுதிய பெக்கர், “திருச்சபை இன்று பலவீனமான நிலையில் இருப்பதற்கு கடவுளைப்பற்றி அறியாமையே முக்கிய காரணமாக இருந்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.
கனடாவில் பணிபுரிய அழைப்பு
இதுவரை இங்கிலாந்தில் இருந்து பணியாற்றிவந்த பெக்கருக்கு கனடாவில் வந்து பணிபுரிய அவருடைய நண்பரொருவரிடமிருந்து அழைப்பு வந்தது. வென்கூவரில் இருந்த ரீஜனட்ஸ் கல்லூரியில் அதன் விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்ற பெக்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. எந்தவித நிர்வாக சம்பந்தமான பணியுமில்லாமல் விரிவுரையாளராக மட்டும் செயல்படும் வசதியிருந்ததால் அதற்கு உடன்பட்டு பெக்கர் குடும்பத்தோடு வென்கூவருக்குப் போனார். அங்கு 1996ம் ஆண்டுவரை பெக்கர் முழுநேர விரிவுரையாளராக பணிபுரிந்து அதற்குப் பிறகு ஓய்வு எடுத்து பகுதிநேர விரிவுரையாளராக கடைசிவரை இருந்தார்.
இறையியல் வல்லுனர்
ஜிம் பெக்கர் அநேக இறையியல் கல்லூரி மேடைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், கிறிஸ்தவ மகாநாடுகளிலும் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். எழுத்தால் அநேகரைக் கவர்ந்தது போலவே அவர் பேச்சும் பலரை ஈர்த்தது. பெக்கர் அதிரடிப் பிரசங்கத்துக்குப் பேர்போனவரல்ல; ஆங்கிலேய பண்பாட்டுக்கு உரிய முறையில் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் அவர் உரையாற்றினார். ஒரே ஒரு முறை நான் நியூசிலாந்தில் பெக்கரை சந்தித்திருக்கிறேன். அது நியூசிலாந்து வேதாகம கல்லூரியில் அவர் உரையாற்ற வந்திருந்தபோது என்று நினைக்கிறேன். உயரமாகவும், மெலிந்த உடற்கட்டும் கொண்டிருந்த பெக்கரோடு சில நிமிடங்கள் மட்டுமே கழித்திருக்கிறேன். பெக்கர் அநேக இறையியல் கமிட்டிகளில் அங்கத்தவராகவும், ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்து வந்தார். தங்களுடைய நூல்களை வெளியிட அவருடைய ஒப்புதல் குறிப்பைப் பெற வராதவர்கள் கிடையாது. அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைவிட அத்தகைய ஒப்புதல் அளித்திருந்த நூல்கள் எண்ணிக்கையில்லாமல் இருந்திருகின்றன. பெக்கர் குறைந்த கால அளவு மட்டுமே ஆங்கிலிக்கன் போதகப் பணியில் இருந்திருக்கிறார். அவருடைய வாழ்நாளில் அதிக காலம் அவர் இங்கிலாந்திலும், கனடாவிலும் இறையியல் கல்லூரிகளிலேயே பணிபுரிந்திருக்கிறார். போதகராக, மேடைப்பேச்சாளராக, விரிவுரையாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராக, இறையியல் கமிட்டிகளில் அங்கத்தவராக என்று பல்வேறு பணிகளைத் தன் வாழ்நாளில் பெக்கர் செய்துவந்திருந்தபோதும் அவர் தன்னை ஒரு இறையியல் வல்லுனராகவே பெரிதும் கருதினார்.
முரண்பாடுகள்
எத்தனை பெரிய ஆவிக்குரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது முரண்பாடுகள் இல்லாமலிருந்திருக்கவில்லை; ஜிம் பெக்கரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஆரம்பத்தில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸோடு இணைந்து பியூரிட்டன் கொன்பரஸ் நடத்துவதில் ஈடுபட்டிருந்த காலத்தில் 1966ல் நடந்த ஒரு தேசிய இவென்ஜலிக்கள் மகாநாட்டில் லொயிட் ஜோன்ஸும், ஜோன் ஸ்டொட்டும் பிரதான பேச்சாளர்களாக இருந்தனர். அந்த மகாநாட்டில் லொயிட் ஜோன்ஸ் இவென்ஜலிக்கள் விசுவாசத்தைக் கொண்டிருந்த அனைவரும் இங்கிலாந்து திருச்சபை போன்ற வேதத்திற்கு முரண்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்த திருச்சபைப் பிரிவுகளில் இருந்து வெளியே வந்து சுயாதீன இவென்ஜலிக்கள் அமைப்புகளோடு இணைய வேண்டும் என்று அறைகூவலிட்டார். அன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஜோன் ஸ்டொட் எவரும் எதிர்பாராத முறையில் லொயிட் ஜோன்ஸ் பேசி முடித்த பிறகு அவருடைய அறைகூவலுக்கு அந்தக் கூட்டத்திலேயே அடியோடு மறுப்புத்தெரிவித்தார். ஜிம் பெக்கர் அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதும் நடந்த நிகழ்ச்சியை மாலையில் தெரிந்துகொண்டார். சக ஆங்கிலிக்கனான ஜோன் ஸ்டொட்டையே அவர் ஆதரித்தார். இதனால் பெரும் பிளவு உண்டானது. 1970 பெக்கர் சக இவென்ஜலிக்கள் ஆங்கிலிக்கன் ஒருவரோடும் இரண்டு ஆங்லோ-கத்தோலிக்கர்களோடும் இணைந்து இவென்ஜலிக்கள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இங்கிலாந்தில் ஒற்றுமையை வலியுறுத்தும் நூலொன்றை வெளியிட்டார். இந்த நூலே லொயிட் ஜோன்ஸ் பெக்கரோடு இருந்த உறவை நிறுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. அத்தோடு லொயிட் ஜோன்ஸ் பெக்கரை இவென்ஜலிக்கள் மெகசீன் கமிட்டியில் இருந்தும், பியூரிட்டன் கொன்பரன்ஸ் நிர்வாகத்தில் இருந்தும் அகற்றினார். அதுமுதல் பியூரிட்டன் கொன்பரன்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் கொன்பரன்ஸ் என்ற புதிய பெயரில் கூட ஆரம்பித்தது. இதற்குப் பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் கொன்பரன்ஸில் பெக்கருக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை.
மார்டின் லொயிட் ஜோன்ஸ் பியூரிட்டன் பெரியவர்களின் ஒத்துழையாமை கொள்கையை (Nonconformist) முக்கியமானதாகக் கருதினார். சீர்திருத்தவாத பியூரிட்டன் கோட்பாடுகளை விசுவாசித்து வருகிற அதேவேளை முரண்பாடான இறையியல் போதனைகளுக்கு இடங்கொடுத்து வரும் கலப்பட திருச்சபைப்பிரிவுகளில் போதகர்களாக இருந்துவருகிறவர்கள் முரண்பட்டு நடப்பதாகக் கருதினார். அன்று அத்தகைய சூழ்நிலை உருவாக ஆரம்பித்து லொயிட் ஜோன்ஸின் ஆதரவாளர்கள் எல்லோரும் அவர் தன்னுடைய ஸ்தானத்தைப் பயன்படுத்தி இவென்ஜலிக்கள் விசுவாசிகள் கலப்பட திருச்சபைப்பிரிவுகளில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற அறைகூவலை விடுக்க அவரை வற்புறுத்தினர். இருந்தபோதும் அத்தகைய அறைகூவல் பலருடைய காதுகளில் விழவில்லை; எதிர்பார்த்த அளவுக்கு அது வெற்றிபெறவில்லை. ஆங்கிலிக்கன் விசுவாசிகளான ஜோன் ஸ்டொட்டும், பெக்கரும் தங்களுடைய திருச்சபைப்பிரிவைவிட்டு விலகத் தயாராக இருக்கவில்லை. இந்த விஷயத்தில் நன்கொன்போர்மிஸ்டான என் ஆதரவு நிச்சயம் லொயிட் ஜோன்ஸுக்குத்தான். இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பத்தி நான்கு வருடங்களுக்குப் பிறகு இன்று அதைத் திரும்பிப்பார்த்து சிந்திக்கிறபோது லொயிட் ஜோன்ஸின் அறைகூவல் சரியானதாகவே படுகிறது. ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவு இன்று அன்றிருந்ததைவிட பலமடங்கு மோசமாகப் போய் லிபரலிசத்தின் இருப்பிடமாக இருந்து வருகிறதை எவரால் மறுக்கமுடியும்.
இதற்குப் பிறகு 1994ல் பெக்கரின் சமயசமரசப் போக்கு (Ecumenism) மேலும் பிரச்சனைகளை உண்டாக்கியது. அவர் சில இவென்ஜெலிக்கள் விசுவாசிகளோடும், ரோமன் கத்தோலிக்கர்களோடும் இணைந்து, இவென்ஜெலிக்கள் விசுவாசிகளும், கத்தோலிக்கர்களும் இணைய வேண்டுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமுகமாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டார். இது அநேக இவென்ஜலிக்கள் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்த அறிக்கை இறையியல் அம்சங்களைத் தெளிவாக விளக்குவதாக இல்லாமல் மேலெழுந்தவாரியாக எழுதப்பட்டதாக இருந்தது. கிறிஸ்தவ விசுவாசத்திற்கு கிறிஸ்து அவசியம் என்ற சுவிசேஷ நம்பிக்கையில் மட்டும் ஒத்துப்போய் ஏனைய இறையியல் நம்பிக்கைகளைப்பற்றி பெரிதுபடுத்தாதவிதத்தில் அந்த அறிக்கை எழுதப்பட்டிருந்தது. சீர்திருத்த இறையியல் அறிஞராக இருந்த ஆர். சி. ஸ்பிரவுல் போன்றவர்களுக்கு பெக்கர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதை நம்பமுடியவில்லை. எந்தளவுக்கு நீதிமானாக்குதல் கோட்பாடு அவசியமானது என்பதில் பெக்கர் முரண்பாடான நிலையை எடுத்தார். அது இறையியல் கோட்பாடுகளில் முக்கியமானது என்பதை அவர் ஒத்துக்கொண்டபோதும் அது அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்த அவர் உடன்படவில்லை. இவென்ஜெலிக்கள்-கத்தோலிக்க ஒத்துழைப்புக்கு நீதிமானாக்குதல்பற்றிய சீர்திருத்தவாத கோட்பாடு தடையாக அமைவதை அவர் விரும்பவில்லை. இது நிகழ்ந்த பிறகு இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதற்கான காரணத்தை பெக்கர் விளக்கியிருந்தார்.
எந்தளவுக்கு ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவு வேதபோதனைகளைவிட்டு விலகிப்போயிருந்தது என்பதை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி 2002ல் கனடாவில் நிகழ்ந்தது. அப்போது கனடாவில் பணிபுரிந்துகொண்டிருந்த பெக்கர் அங்கிருந்த ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் பெரிதாக இருந்த ஒரு திருச்சபைக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்த ஆண்டு வென்கூவர் நகரத்தில் இருந்த ஆங்கிலிக்கன் டயோஸிஸ் ஓரினத் திருமணத்தை வரவேற்று ஆங்கிலிக்கன் பிசப்பொருவர் அத்தகைய திருமணத்தை நடத்தி ஆசீர்வாதம் அளிக்க ஒப்புதல் அளித்தது. இது பெக்கருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அந்த டயோஸிஸில் அங்கத்தவராக இருந்த பெக்கர் வேறுசிலரோடு இணைந்து அதை எதிர்த்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது “சுவிசேஷத்தை மாசுபடுத்தி, வேதத்தின் அதிகாரத்தை நிராகரித்து, சக மனிதர்களுக்கான இரட்சிப்பை சரியச் செய்து, தெய்வீகமான வேத சத்தியங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பணியைச் செய்யவேண்டிய கர்த்தரால் அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு திருச்சபை துரோகம் செய்கிறது” என்று இதுபற்றி பெக்கர் குறிப்பிட்டிருந்தார். கனடாவின் ஆங்கிலிக்கன் பிரிவில் பெரிய சபையாக இருந்த அவர் அங்கத்துவம் வகித்த சபை (St. Johns, Shaughnessy) கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் இருந்து விலகி அர்ஜன்டீனாவில் இருந்த ஒரு ஆங்கிலிக்கன் பிரிவோடு இணைந்தது. அதற்குப் பிறகு பெக்கரும் அவருடையதைப்போன்ற நிலையை எடுத்த ஏனைய ஆங்கிலிக்கன் குருக்களும் கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் இருந்து அதிரடியாக விலக்கப்பட்டனர். விலக்கப்பட்ட எவரும் தொடர்ந்து தங்களுடைய போதகப் பணிகளை கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபைகளில் செய்யமுடியாதபடி அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆர்டினேசனும், அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.
இலக்கியப்பணி
ஜிம் பெக்கரின் எழுத்துக்களின் தொகுப்பு ஒருநாள் நிச்சயம் வெளிவரும். அது இவென்ஜலிக்கள் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பயன் அளிக்கும். பெக்கரின் எழுத்துக்கள் அனைத்தையும் பட்டியலிட்டுத் தருவது என்பது கஷ்டமான செயலென்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு பெருந்தொகையாக அவர் நூல்களை மட்டுமல்லாது, ஆய்வுக்கட்டுரைகளை மெகசீன்களுக்கும், ஜேர்னல்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எழுதியிருக்கிறார். அத்தோடு அவருடைய நூல்கள் பல நாடுகளில் வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது பெக்கரின் எழுத்துக்களைத் தொகுத்துத் தருவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பெக்கர் ஏன் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை (Systematic Theology) எழுதவில்லை என்பது தெரியவில்லை; நிச்சயம் அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு புதிய ஆங்கில வேதமொழிபெயர்ப்புக்கான பொது ஆசிரியராக இருக்கும் பொறுப்பை ஏற்கும்படி அமெரிக்க குரொஸ்வே நூல்கள் (Crossway Books) நிறுவனத்தின் தலைவராக இருந்த டாக்டர் டெனிஷ் லேன் அவரைக் கேட்டுக்கொண்டார். அந்த மொழிபெயர்ப்பு 2001ல் வெளிவந்தது. அதற்கு English Standard Version என்ற பெயரை பெக்கரே சிபாரிசு செய்திருந்தார். கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குத் தான் செய்த பணிகள் அனைத்திலும் இதுவே மிக முக்கியமானது என்று பெக்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் பெக்கரின் நூல்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மூன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். Fundamentalism and the Word of God, Knowing God, Evangelism and the Sovereignty of God என்பவையே அவை. அத்தோடு இன்னொன்றையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது நூலாக அல்லாமல் ஒரு நூலுக்கு அறிமுக உரையாக, கட்டுரையாக வெளிவந்தது. அது Saved by His Precious Blood: Introduction to John Owen’s the Death of Death in the Death Christ (1958) என்பதே. இதை மொழிபெயர்த்து நீண்ட காலத்துக்கு முன் திருமறைத்தீபத்தில் வெளியிட்டிருந்தேன். பியூரிட்டன் இறையியல் அறிஞரான ஜோன் ஓவன் கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் அற்புதத்தைப்பற்றி விளக்கிய நூலுக்கு பெக்கர் இந்த அறிமுகத்தைத் தந்திருந்தார். குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து சிலுவையில் பலியானார் என்ற போதனையை பெக்கர் அருமையாகவும் ஆணித்தரமாகவும் இந்த ஆய்வுரையில் விளக்கியிருந்தார். இதில் ஜிம் பெக்கரின் ஆழ்ந்த நுண்ணிய இறையியல் புலமையைக் காணமுடிகிறது. சில பக்கங்களே இருக்கும் இந்த அறிமுகம் அவருடைய சிந்தனைத் திறனையும், ஆய்வுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு முன்பு இதை ரசித்து வாசித்துப் பயனடைந்திருக்கிறேன். தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலியின் மகத்துவத்தைத் தத்துவார்த்த ரீதியில் பெக்கர் அசைக்கமுடியாத ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து விளக்கி இதன் மூலம் வாசகர்களை வாசிக்கத் தூண்டியிருந்தார். அதை எத்தனையோ பேருக்கு நான் அறிமுகம் செய்து வாசிக்கும்படி சொல்லியிருக்கிறேன்.
ஜிம் பெக்கர் பியூரிட்டன் இலக்கியங்களில் காதல் கொண்டிருந்தார் என்று சொன்னால் அதில் தவறில்லை. அவர் தன்னைப் பியூரிட்டன்களின் வழிவந்தவராகவே கண்டார். பெக்கர் பரிசுத்தமாக வாழ்வதில் அதிக அக்கறைகாட்டி திருச்சபைப் பரிசுத்தத்தை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறார். பியூரிட்டன்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைகளை அவருடைய Quest for Godliness: The Puritan Vision of the Christian Life என்ற நூலில் காணலாம். இது பிரிட்டனில், Among God’s Giants (1990) என்ற தலைப்பில் வெளிவந்தது. ஜே. சி. ரைலின் “பரிசுத்தமாகுதல்” நூலை அவர் அதிகம் விரும்பி தான் அறிமுகப்படுத்தும் நூல்களில் முக்கிய நூலாகக் கருதினார். எவரோடும் இறையியல் ரீதியில் முரண்பட வேண்டிய தருணங்களில் அமைதியோடு நடந்து அது உறவுகளைப் பாதிக்காமல் இருந்துவிடவேண்டும் என்பதில் பெக்கர் அக்கறை காட்டியிருக்கிறார். அமைதியான சுபாவம் கொண்டிருந்த பெக்கர் ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு வெளியில் அநேகரோடு நட்புப் பாராட்டிப் பழகிவந்திருக்கிறார். பெக்கர் தனக்கென தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொள்ளவில்லை; அதை ஒருபோதும் அவர் நாடியதோ விரும்பியதோ இல்லை. அமைதியாக இறையியலறிஞராக, விரிவுரையாளராக இருந்து இறையியல் போதனைகளைத் தருவதையும் எழுதுவதையுமே அவர் விரும்பினார். அவர் லொயிட் ஜோன்ஸைப் போல் நீண்டகாலத்துக்கு சபைப் போதக ஊழியத்தில் இருக்கவில்லை; அவரைப்போல அதிரடிப்பிரசங்கியாகவும் இருக்கவில்லை. இருந்தபோதும் தனக்கேயுரிய பாணியில் தனக்கென ஓர் இடத்தைக் கிறிஸ்தவ உலகில் நிலைநாட்டியிருந்தார் பெக்கர். ஜிம் பெக்கர் பிரிட்டனின் முக்கிய இவென்ஜலிக்கள் தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அவர் நமக்கு விட்டுச் சென்றிருப்பதெல்லாம் அவருடைய எழுத்துக்களும், கிறிஸ்தவனாக பரிசுத்தத்தோடு எப்படி வாழவேண்டும் என்ற உதாரணமுந்தான்.
ஜிம் பெக்கர் லொயிட் ஜோன்ஸைவிட்டுப் பிரிந்தபோது 1970ல் லொயிட் ஜோன்ஸ் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு இருந்தது,
“உங்களை நான் அறிந்திருந்த காலம் முழுவதும் ஈவாக உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சிந்தனைத் திறத்தையும், புத்திக்கூர்மையையும் நான் எந்தளவுக்கு வியந்தேன் என்றும், உங்கள் மீது எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதுவரை வோர்பீல்டினுடைய (Benjamin Warfield) பாரம்பரியத்தைப் பின்பற்றி ஒரு பெரும் இறையியல் படைப்பை நீங்கள் அளித்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், திருச்சபை சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும்படி அழைக்கப்பட்டதாக நீங்கள் உங்களைக் கருத ஆரம்பித்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய அவலமாகவும், திருச்சபையின் இழப்பாகவும் கருதுகிறேன்.”
ஜிம் பெக்கர் லொயிட் ஜோன்ஸை விட்டுப்பிரியாமல் இருந்திருந்தால், இவென்ஜெலிக்கள்-கத்தோலிக்கர் இணைவது பற்றிய சமயசமரசப்போக்கைக் கொண்டிராமல் இருந்திருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். யாருக்குத் தெரியும்? அந்தந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் எத்தனைப் பிரபலமானவராக இருந்தாலும், எத்தனை ஆசீர்வாதம் பெற்றவராக இருந்தாலும், எத்தனை விசுவாசமுள்ளவராக இருந்தாலும் எந்த முக்கிய விஷயத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் அவரையும், வரலாற்றையும், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்காமல் போகாது. இந்த விஷயத்தில் நமக்கு எத்தனை ஞானமும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலும் தேவையாக இருக்கிறது என்பதைத்தான் பெக்கர் விஷயத்தில் நிகழ்ந்தவை காட்டுகின்றன. தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் பெக்கர் தான் விசுவாசமாக இருந்த கிறிஸ்துவுக்காக கனடாவின் ஆங்கிலிக்கன் சபைப்பிரிவில் இருந்து வெளியே வரநேர்ந்தது. அந்தத் தடவை பெக்கர் எடுத்த தீர்மானம் சரியானதே.
இறையியல் பணிகளில் இருந்து ஓய்வு எடுத்தபிறகு பெக்கரின் உடல்நலம் பெரிதும் குறைய ஆரம்பித்தது. பேசுவதும், எழுதுவதும் முதுமையினாலும், உடல்நிலை பாதிப்பாலும் நின்றுபோனது. அவர் ஜூலை மாதம் 17ம் நாள் தன்னுடைய 93 வயதில் தான் நேசித்த கிறிஸ்துவை சென்றடைந்தார். ஒரு சகாப்தம் மறைந்தது.
குறைபாடுகள்
ஜே. ஐ. பெக்கர் ஒரு சிறந்த ஆவிக்குரிய மனிதராக, இவென்ஜலிக்கள் தலைவர்களில் ஒருவராக, நல்ல எழுத்தாளராக, நூலாசிரியராக, இறையியலறிஞராக இருந்தபோதும் அவரோ அவருடைய கிறிஸ்தவ பணிகளோ பூரணமானவையல்ல; உண்மையில் அனைத்து சிறந்த மனிதர்களிலும் அதைத்தான் காணலாம். யானைக்கும் அடிசருக்கும் என்பதுபோல் மோசேயின் வாழ்விலும், தாவீதின் வாழ்விலும், பேதுருவின் வாழ்விலும் குறைபாடுகள் இருந்திருக்கின்றன. மனிதர்களின் குறைபாடுகளும், அவர்கள் விடுகின்ற தவறுகளும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கின்றன. இல்லாவிட்டால் வேதம் எத்தனையோ சிறந்த மனிதர்களின் தவறுகளை நமக்கு விளக்காமலேயே விட்டிருந்திருக்கும். ஜே. ஐ. பெக்கரின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று விஷயங்களில் அவர் எடுத்த தீர்மானங்கள் கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கின்றன; அதுவும் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கின்றன.
(1) நான் ஏற்கனவே விளக்கியிருந்தபடி பெக்கர் திருச்சபை ஐக்கியத்தைப் பொறுத்த விஷயத்தில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸோடு ஒத்துப்போகவில்லை. ஆங்கிலிக்கன் பிரிவாகிய இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகி ஒத்துழையாமைக் கொட்பாட்டைப் பின்பற்றி இவென்ஜெலிக்கள் திருச்சபைகளோடு ஓர் அணியாகக் கூடிப்பணியாற்ற அவர் விரும்பவில்லை. அப்படிக் கூடிப்பணிபுரிந்திருந்தால் அவருடைய எதிர்காலம் உலகத்தைப் பொறுத்தவரையில் சிறந்ததாக இருந்திருக்குமா? இவென்ஜெலிக்கள் பிரிவினரின் ஒற்றுமையும், கிறிஸ்தவ பணியும் வளர்ந்து உயர்ந்து மெய்யான கிறிஸ்தவ திருச்சபை ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்குமா? என்பதற்கெல்லாம் பதில் கர்த்தருக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் தங்களுடைய காலப்பகுதியில் திருச்சபை வரலாற்றில் ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவ தலைவர்களும் முக்கியமான தீர்மானங்களை வாழ்க்கையில் எடுப்பதற்குத் தள்ளப்படுவார்கள். அவ்வேளையில் நாம் எப்படி நடந்துகொள்ளுகிறோம், என்ன தீர்மானத்தை எடுக்கிறோம் என்பது வரலாற்றையே மாற்றி அமைக்கலாம் அல்லது நம்முடைய குறைபாட்டை வெளிப்படுத்தலாம். அந்தவிதத்தில் என்னைப் பொறுத்தவரையில் ஜே. ஐ. பெக்கர் செய்தது தவறுதான்.
பெக்கர் போன்ற டினோமினேஷன் திருச்சபைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அந்த டினோமினேஷன்கள் எத்தனைத் தவறுகளைச் செய்து மோசமான நிலையை அடைந்தபோதும் அவற்றைவிட்டுப் பிரியக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஆனால், பெக்கர் தன் வாழ்நாளின் இறுதிக்காலப்பகுதியில் தானிருந்த கனேடிய ஆங்கிலிக்கன் டினோமினேஷனை விட்டுவிலகி இன்னுமொரு நாட்டு ஆங்கிலிக்கன் டினோமினேஷனோடு இணைய நேர்ந்தது. அப்போதும் அவரால் தன்னுடைய ஆங்கிலிக்கன் கோட்பாடுகளை முற்றாகத் துறக்கமுடியவில்லை.
- கத்தோலிக்கர்களும், இவென்ஜெலிக்கள் திருச்சபைகளும் இணைந்து சுவிசேஷ ஊழியங்களில் செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்காக வரையப்பட்டிருந்த இறுதி அம்சங்களை விளக்கும் பத்திரத்தில் ஜேம்ஸ் பெக்கர் கையெழுத்திட்டிருந்தார். அது இவென்ஜெலிக்கள் திருச்சபைகள் மத்தியிலும், சீர்திருத்தவாத திருச்சபைகள் மத்தியிலும் அன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சீர்திருத்தப் போதகரும், இறையியலறிஞருமான ஆர். சி. ஸ்பிரவுல் பெக்கரின் இந்தச் செயலைத் தன்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று அறிவித்திருந்தார். உண்மையில் அடிப்படை சீர்திருத்த வேதக் கோட்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே ஒருவரால் ரோமன் கத்தோலிக்க மதத்தோடு இணையமுடியும். இரட்சிப்பு, நீதிமானாக்குதல், திருச்சபைபற்றிய போதனைகளில் மாற்றங்களைக் கொண்டுவரலாமல் ஒரு இவென்ஜெலிக்கள் கிறிஸ்தவனால் கத்தோலிக்கத்தோடு ஒத்துப்போக முடியாது. பெக்கரின் முடிவு பெரும் புதிரானது மட்டுமல்ல; அது அவருடைய திருச்சபைபற்றிய நிலைப்பாட்டில் இருந்த குறைபாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. தன்னுடைய செயலுக்காக பெக்கர் பின்னால் தந்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை.
- பிற்காலங்களில் பரிசுத்த ஆவியானவரின் அற்புத வரங்கள்பற்றிய தன்னுடைய கருத்துக்களையும் பெக்கர் மாற்றிக்கொண்டார். அவ்வரங்கள் ஆதிசபைக்காலத்தில் கொடுக்கப்பட்டவையாகவே அவை பற்றிய அவருடைய முடிவு இருந்தது. பிற்காலத்தில், முற்றுமுழுதாக அவை இன்றும் இருப்பதாக சொல்லுமளவுக்கு அவர் போகாவிட்டாலும், கெரிஸ்மெட்டிக் இயக்கத்தை சார்ந்து நிற்பதுபோல் தன் கருத்துக்களை அவர் வெளியிட்டார். அவருடைய நூலொன்றில் (Keep in step with the Spirit) அதுபற்றி பெக்கர் எழுதியிருக்கிறார். பரிசுத்த வாழ்க்கைபற்றிய கெஸ்ஷிக் போதனைகளையும், இவ்வாழ்க்கையில் பூரணபரிசுத்தத்தையும் நிராகரிக்கும் பெக்கர் கருத்துக்கள் இந்நூலில் கெரிஸ்மெட்டிக் இயக்கத்திற்கு சார்பாகவே உள்ளன. இந்நூலின் இரண்டாவது விரிவாக்க வெளியீடு 2005ல் வெளிவந்தது. நூல்வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நியூ கல்வினிசம் என்ற பெயரில் கல்வினிசத்தையும், கெரிஸ்மெட்டிக் இயக்கப் போதனைகளையும் இணைத்து, இரண்டும் இணைந்துவாழமுடியும் என்று சமயசமரசம் கொண்டாடும் புதுப்போக்கு உருவாகியிருக்கிறது. சீர்திருத்தவாத கிறிஸ்தவத்தை கெரிஸ்மெட்டிக் இயக்கத்தோடு இணைத்துப் பார்ப்பது பெருந்தவறு. ஜோன் மெக்காத்தர் ஒருமுறை சொன்னதுபோல், ஒரு கெரிஸ்மெட்டிக் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்று தன்னுடைய பழைய நம்பிக்கைகளை உதறிவிடலாம். ஆனால், ஒரு சீர்திருத்த விசுவாசி கெரிஸ்மெட்டிக் போதனைகளைத் தன்னோடு இணைத்துக்கொள்வது என்பது இருப்பதையும் இழப்பதுபோல்தான்.
நூலறிமுகம்
ரால்ப் வென்னிங் (Ralph Venning, 1622-1674) ஒரு பியூரிட்டன் பெரியவர். ஆங்கிலேய ஒத்துழையாமைவாதப் பிரசங்கிகளில் ஒருவர் (Nonconformist). இங்கிலாந்தில், டெவன்சயர் (Devonshire) என்ற இடத்தில் பிறந்து கேம்பிரிஜ்ஜில் இருந்த இம்மானுவேல் கல்லூரியில் பயின்று பட்டங்களைப்பெற்று, 25 வருடங்கள் சவுத்வேர்க் எனுமிடத்தில் இருந்த சபையில் (St. Olave’s Church in Southwark) போதகராகப் பணியாற்றியவர். 1662ம் ஆண்டில் ஒத்துழையாமைக்கு எதிரான அரச கட்டளையால் திருச்சபைப் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அதற்குப் பிறகும் ஒரு சுயாதீன சபையில் ரொபட் பிரேக் (Robert Bragge) என்பவரோடு பலகாலம் போதகராகப் பணியாற்றியுள்ளார். 1674, மார்ச் 10ம் தேதி அவர் தன்னுடைய 53ம் வயதில் இறைபதமடைந்தார். பன்ஹில் நிலம் (Bunhill Fields) எனுமிடத்தில் அவர் புதைக்கப்பட்டார்.
ரால்ப் வென்னிங் 1669ல் எழுதிய மிகவும் முக்கியமான, அதேநேரம் பிரபலமான நூல் The Plague of Plagues. ‘நோய்களிலெல்லாம் தலையாய நோய்’ என்று இதை எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கலாம். இதற்கு ஒரு உபதலைப்பையும் அவர் தந்திருந்தார். அது The Sinfulness of Sin. அதாவது, ‘பாவத்தின் பாவம்’. பியூரிட்டன் பெரியவர்களைப்போல பாவத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஆராய்ந்து விளக்கியவர்கள் இருக்கமுடியாது. உண்மையில் எல்லாப் பியூரிட்டன் பெரியவர்களுமே அந்தவகையில் பாவத்தை ஆராய்ந்து பிரசங்கித்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் முக்கிய பிரசங்கிகளில் ஒருவரான டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்னுடைய சுவிசேஷத்தை எப்போதுமே பாவத்தில் இருந்து ஆரம்பித்து விளக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாவத்தில் ஆரம்பித்து அதை விளக்காத சுவிசேஷம் அவரைப் பொறுத்தவரையில் சுவிசேஷமே அல்ல. அவர் பியூரிட்டன்களின் எழுத்தில் காதல்கொண்டிருந்து அந்தப் பாணியைத் தன் பிரசங்கத்தில் பின்பற்றியவர்.
இன்று மேலை நாடுகளில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் பாவத்தை விசுவாசிகளும், சபைகளும் உதாசீனப்படுத்தி வருகின்றன. பாவத்தை ஆழமாக ஆராய்ந்து பார்ப்பதிலும், பிரசங்கிப்பதிலும் காலத்தை செலுத்தி ஆத்துமாக்களைத் தொல்லைப்படுத்தக்கூடாது என்ற ஒரு தவறான, ஆபத்தான மயக்கநிலை இன்று நம்மினத்திலும் உலவிவருகிறது. கிறிஸ்துவிடம் ஒருவர் வந்தவுடனேயே அவருடைய பாவத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டதாகவும், இனிக் கிறிஸ்தவ சுதந்திரத்தை சாகும்வரை இன்பமாக அனுபவிக்கவேண்டியதுதான் அவருடைய கடமை என்ற போலிப்போதனை, உண்மையைப்போல திருச்சபைகளைப் பாதித்து ஆத்துமாக்களை மோசம்போக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பாவத்தைப்பற்றிய பிரசங்கங்களை மட்டுமல்லாமல் பாவத்தைப் பாவமாகப் பார்த்து, ஆத்துமாக்கள் அதைச் செய்துவிடுகிறபோது வேதபூர்வமாக அதை அணுகி அதற்குப் பரிகாரம் செய்து ஆத்துமாக்களுக்கு உதவுகிற போதக ஊழியத்தையும் இன்று காணமுடியாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பாவம் இன்று உதாசீனப்படுத்தப்படுவதுதான். அதற்காக பாவத்தைப்பற்றி பிரசங்கிகள் பேசுவதேயில்லை என்று நான் சொல்லவரவில்லை; அவர்கள் பாவத்தைப் பாவமாக வேதம் விளக்குகிறமுறையில் கணித்து விளக்குவதில்லை என்றே சொல்லவருகிறேன்.
பாவத்தை வெறும் மானுட பலவீனமாகவே அநேகர் பொதுவாகக் கணிக்கிறார்கள். அந்த பலவீனம் போக்கப்படுவதற்காக பிரசங்கிகள் கொடுக்கும் மருந்து, உலகத்தைச் சார்ந்த உளவியல் சார்பானதாகவோ அல்லது சமுதாய சீர்திருத்தமாகவோ மட்டுமே இருந்து வருகிறது. இதனால் கிறிஸ்துவின் சுவிசேஷமும் அடியோடு பாதிப்புக்குள்ளாகிறது. பாவம் வெறும் பலவீனமாக மட்டுமே இருக்குமானால் தேவகுமாரன் இந்த உலகுக்கு வந்திருக்கவும், சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. பாவத்தைப் பலவீனமாகப் பார்ப்பது சுவிசேஷத்தைக் கொச்சைப்படுத்துகிறது; கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளிலும், மரணத்திலும் சேற்றைவாரி இறைக்கிறது. என்றுமில்லாதவகையில் இன்று மேலைநாடுகளிலும் கீழைத்தேய நாடுகளிலும் பாவத்தைப்பற்றிய வேதபூர்வமான போதனைகளும் பிரசங்கமும் அவசியமாக இருக்கின்றன. சுவிசேஷம் சுவிசேஷமாகப் பிரசங்கிப்பட வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரின் ஆத்மீக எழுப்புதலைத் திருச்சபையில் காணவேண்டுமானால் பாவத்தைப் பற்றிய போதனைகளும் பிரசங்கங்களும் மறுபடியும் வேதபூர்வமாகக் கொடுக்கப்படுவது அவசியம். பாவத்தைப் பாவமாகப் பார்க்காவிட்டால் சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்பிற்கு வழியில்லை.
ரால்ப் வென்னிங்கினுடைய நூலை இங்கிலாந்தில் இயங்கும் கிருபை வெளியீடுகள் நவீன ஆங்கிலத்தில் மூலத்தை சுருக்கிவெளியிட்டார்கள். இப்படி மூலநூலை சுருக்குவது இலகுவான காரியமல்ல; அதுவும் ஒரு பியூரிட்டன் பெரியவரின் நூலைச் சுருக்குவது கடினமே. மூலத்தின் தன்மையை சுருக்கம் இழந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. நிச்சயமாக இந்தச் சுருக்கம் மூலநூலைப்போல இருக்க வழியில்லை. மூலநூல் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இன்றைய வாசகர்களுக்கு வாசிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமானதாக இருக்கும். இருந்தபோதும் ரால்ப் வென்னிங்கின் மூலநூலின் பயனை தற்கால வாசகர்கள் அடையும்படி ஜோன் ஆப்பில்பீயும், பீட்டர் கிங்கும் அதைச் சுருக்கியளித்திருக்கிறார்கள். இறைபதம் அடைந்துவிட்ட ஜோன் ஆப்பில்பீ எனக்குத் தெரிந்த ஒரு நண்பர். முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் அவருடைய வீட்டில் அவரையும் அவருடைய மனைவியையும் சந்தித்து உணவருந்தியபோது எழுத்துப்பணியிலும், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும்படி மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். உங்களைப்போன்ற ஒருவர்தான் இதைச் செய்யமுடியும் என்ற அவருடைய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் ஆப்பில்பீயின் உந்துதலும் ஜெபமுமே நான் இன்று செய்துவரும் சிறு பணிகளுக்குக்கூட காரணமாக இருந்திருக்கிறது.
பியூரிட்டன் எழுத்துக்கள் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருப்பதையும்விட, இன்னுமொரு பிரச்சனை நம்மினத்து மக்களுக்கு இருக்கிறது. பியூரிட்டன் கால வரலாற்று, இறையியல் பின்னணி நம்மக்களுக்குப் பரிச்சயமில்லாதது. அது தெரியாமல் பியூரிட்டன் எழுத்துக்களின் முழு பலனையும் அடையமுடியாது. அத்தோடு, பியூரிட்டன்களின் இறையியல் கண்ணோட்டம், ஆழ்ந்த நுணுக்கமான அணுகுமுறை, கறைத்துக்குடித்திருக்கும் வேதத்தை அவர்கள் வசனம் வசனமாக விளக்கி இறையியல் சத்தியங்களைத் துல்லியமாக எண்ணற்ற பயன்பாடுகளோடு விளக்குகின்ற தன்மை ஆகியவை அடங்கிய ஆத்மீக ஊழியங்களை அறவே காணமுடியாத நம்மினத்தில் அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அநேகருக்கு இருக்காது. இதற்கும் மேலாக பியூரிட்டன் போதகர்கள் ஆத்தும வைத்தியர்களாக இருந்தனர். அவர்களைப்போல ஆத்துமாக்களை ஆழமாக அறிந்துவைத்திருந்த போதகர்களை வேறுகாலப்பகுதிகளில் காணமுடியாது. மனித இருதயத்தின் மோசமான தன்மையை அவர்கள் துல்லியமாக அறிந்துவைத்திருந்து போதகக் கண்காணிப்பு செய்வதில் மன்னர்களாக இருந்தனர். அதனால்தான் ரால்ப் வென்னிங்கும் மனித இருதயத்தை மாசுபடுத்தி ஆண்டுவரும் பாவத்தை அத்தனைத் தெளிவாகவும், ஆழமாகவும் கல்லில் இருந்து நாருரிப்பதுபோல் ஆராய்ந்து விளக்கியிருக்கிறார். மனித இருதயத்தை ஆழமாக அறிந்திராத போதகர்கள் தேர்ந்த ஆத்தும வைத்தியர்களாக இருக்கமுடியாது என்பதில் பியூரிட்டன்கள் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அத்தோடு பியூரிட்டன்களின் எழுத்துநடையும் இன்றைய எழுத்துக்களைவிட வித்தியாசமானது. எதையும் சுருக்கமாக சொல்லிவிடும் நூல்கள் பரவலாகக் காணப்படும் இக்காலத்தில் சில நூறு பக்கங்களில் ஆழமாக சத்தியத்தை விளக்குகின்றனவாக அவர்களுடைய நூல்கள் இருக்கின்றன. அதனால் எந்தப் பியூரிட்டன் நூலுக்கும், தேர்ந்தவர்களால் எழுதப்பட்ட, தற்கால வாசகர்கள் விளங்கிக்கொள்ளும்படியான ஒரு நல்ல அறிமுக விளக்கம் இன்று அவசியம் தேவை. அத்தகைய அறிமுக விளக்கமில்லாது பியூரிட்டன் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது வாசகர்களுக்கு அதிக பலனளிக்காது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதற்கு உதாரணமாக 19ம் நூற்றாண்டு போதகரான ஜே. சி. ரைலினுடைய ‘பரிசுத்தம்’ என்ற ஆங்கில நூலை எடுத்துக்கொள்ளலாம். அந்த நூலை சிறப்பாக்குவது அதற்கு ஜே. ஐ. பெக்கர் எழுதிய அறிமுக விளக்கம். ரைலின் கால வரலாற்று, இறையியல் பின்னணிபற்றி நன்கு அறிந்திருந்த பெக்கர் எந்த நோக்கத்தில் ரைல் அந்த நூலின் உள்ளடக்கத்தைப் பிரசங்கம் செய்திருந்தார், எழுதி வெளியிட்டார் என்பதை அருமையாக விளக்கியிருந்தார். ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிமுகமே ரைலின் நூலைத் தற்காலத்தில் பிரயோஜனமாக இருக்கப் பேருதவி புரிகிறது. அதேபோலத்தான் ஜே. ஐ. பெக்கர், ஜோன் ஓவனின் ‘பாவத்தை அழித்தல்’ என்ற நூலுக்கான திருத்தப்பதிப்பொன்றுக்கும் அறிமுக விளக்கம் தந்திருந்தார்.
ரால்ப் வென்னிங்கின் நூல் எந்தவிதத்தில் முக்கியமானது? முதலில், அது பாவத்தைப் பாவமாக அடையாளங் கண்டுகொள்ள உதவுகிறது. அதைத்தான் கிறிஸ்தவ சமுதாயம் இன்றைக்கு தவிர்க்க முனைகிறது. ரால்ப் வென்னிங் எந்தவித கூச்சமோ, பயமோ, பெயர் கிடைக்காமல் போய்விடுமே என்ற தவிப்போ இல்லாமல் உள்ளதை உள்ளபடி விளக்கியிருக்கிறார். பாவம் என்றால் என்ன என்று விளக்குவதோடு அவரது நூல் ஆரம்பமாகிறது. பாவத்தை அகோரமான ஆபத்தான பாவம் என்று வர்ணிக்கிறார் ரால்ப் வென்னிங். பாவம் எப்படிச் சம்பவித்தது என்பதில் இருந்து, பாவம் என்றொன்றில்லாவிட்டால் கிறிஸ்தவ இறையியலுக்கே இடமில்லை என்று எந்தெந்த சத்தியங்களையெல்லாம் பாவம் பாதிக்கிறதென்று நூலாசிரியர் விளக்குகிறார். கட்டடம் கட்டுவதற்கு அடித்தளம் எத்தனை உறுதியானதாக இருக்கவேண்டுமோ அந்தளவுக்கு உறுதியான அடித்தளத்தை ஆரம்பத்திலேயே பாவத்தை விளக்குவதில் நாட்டிவிடுகிறார் ஆசிரியர். வென்னிங்கின் நூலில் வேதத்தைத் தவிர வேறெதற்கும் இடமில்லை; சமுதாயத்தையோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளையோ, உளவியலையோ வம்புக்கிழுத்து பாவத்தை நூலளவு மெல்லியதான நம்தோலைக்கூடப் பாதிக்காத சாதாரண கொசுக்கடியாகக் காட்டும் நவீன நயவஞ்சகப் பிரசங்கிகளின் நலினத்தையெல்லாம் அவரில் காணமுடிவதில்லை. பாவத்தைப் பாவமாகப் பார்க்காவிட்டால் அதன் பாவத்தன்மையை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
இரண்டாவதாக, பாவத்தின் கோரத்தன்மையை நூல் தோலுரித்துக் காட்டுகிறது. எந்தளவுக்கு அது கடவுளுக்கெதிரானதாகவும், மனிதனுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறதென்பதை வேதவார்த்தைகளில் இருந்து தெளிவாக ரால்ப் வென்னிங் விளக்கியிருக்கிறார். நம்மில் காணப்படும் சகலவிதமான ஆனந்தங்களுக்கும் முடிவுகட்டியிருப்பது நம்மைப்பிடித்திருக்கும் பாவம் என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார். நம்மைக் கடவுளிடம் இருந்து பிரித்துவைத்திருக்கிறது பாவம் எனும் ஆசிரியர், அத்தகைய பிரிவு மிகவும் பாரதூரமானது என்று விளக்கி, அது நமக்கு இறப்பின்போது நிகழவிருந்த மாபெரும் நன்மைக்கு இடங்கொடாமல் செய்துவிட்டது என்கிறார். அதுமட்டுமல்லாமல், நம்மைத் தீங்குகளுக்கெல்லாம் தலையாய தீங்கான நரகத் தீங்காகிய அனுபவத்தை நித்தியமும் அடையவும் வழிசெய்திருக்கிறது என்கிறார். தற்காலப் பிரசங்கி வாசிப்பதற்குக் கூட அருகில்போகத் துணியாத அற்புதமான வேதவிளக்கங்களைப் பாவத்தைப்பற்றி இந்தப் பகுதியில் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
மூன்றாவதாக, பாவத்தின் பாவத்தன்மையை நாம் உணர்வது எந்தளவுக்கு அவசியம் என்பதை நூல் விளக்குகிறது. இந்தப் பகுதியில் கடவுளில் இருந்து ஆரம்பித்து, கிறிஸ்து, தூதர்கள், படைப்பு, கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாணம், சுவிசேஷம் என்று ஒவ்வொரு சாட்சியாக அநேக சாட்சிகளை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி, கடைசியாக பாவமே பாவத்தின் அலங்கோலத்தையும், அகோரத் தன்மையையும் பற்றி என்ன சாட்சியமளிக்கிறது என்பதையும் நாம் வாசித்தறியும்படிச் செய்கிறார் ரால்ப் வென்னிங். பாவம் எப்படியெல்லாம் தன்னுடைய குணத்தை மறைத்து பொய்யைச் சொல்லி, நம்மை ஏமாற்றி நாம் ஏமாந்துபோகும்படி செய்கிறது என்பதை ரால்ப் வென்னிங் விளக்கும் அருமையை என்ன சொல்வது. இந்தப் பகுதியில் இருந்து இன்னும் எத்தனையோ அருமையான விஷயங்களை உதாரணங்காட்டும் துடிப்பு எழுகிறது. இருந்தாலும் இந்த அறிமுகம், அறிமுகத்துக்குரிய அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையாயிருந்து அதை அடக்கிக்கொள்கிறேன். ஒவ்வொரு பகுதியாக நூலை தியானத்தோடு வாசித்துக்கொண்டு போகிறபோது எந்தக் கிறிஸ்தவனும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது. அவிசுவாசிகளையும், விசுவாசிகளையும் ஒருசேரப்பாதித்து அவர்களுடைய இருதயங்களை அசைத்துவிடும் அருமையான பணியைச் செய்திருக்கிறார் ஆசிரியர். இந்த நூலை வாசித்துப் பயனடைகிற ஆவிக்குரிய வாசகர்கள் நிச்சயம் விரிவான ஆங்கில மூல நூலைப்பெற்று வாசிக்கத் துடிக்காமல் இருக்கமாட்டார்கள் என்பது என் கருத்து.
நான்காவதாக, நமக்கு எதிரியாக பாவம் இருக்கிறதென்பதில் இருந்து நாம் அறிந்துகொள்ளும் உண்மைகளை நூல் நம்முன்வைக்கிறது. நான் அடிக்கடி பிரசங்கத்தில் சொல்லுகிற ஒரு உண்மையோடு ஆசிரியர் இந்தப்பகுதியை ஆரம்பிக்கிறார். பாவத்தைவிட நமக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது எதுவுமில்லை என்பதுதான் அது. அது நம் துன்பங்களைவிடவும், சாத்தானைவிடவும், மரணத்தைவிடவும், ஏன், நரகத்தையும்விட மோசமானது என்கிறார் ஆசிரியர். இந்நான்கையும் ஒன்று சேர்த்தால்கூட பாவம் இவையனைத்தையும்விட பாவ வாழ்க்கை வாழ்கிறவர்களில் ஆபத்தைவிளைவிக்கக்கூடியது என்கிறார் ரால்ப் வென்னிங். இதைச் சொல்லி நிறுத்திவிடாமல், அது ஏன் என்பதற்கான காரணங்களை அடுத்து நம்முன் நிறுத்துகிறார். அதற்குப்பிறகு கடவுளின் பொறுமை எத்தனைப் பெரியது என்பதையும், பாவத்துக்கெதிரான அவருடைய நீதியான நடவடிக்கை எத்தனை சரியானது என்பதையும், அவரளிக்கும் மகத்தான பாவமன்னிப்பு எத்தனைப் பெரியது என்பதையும் விளக்குகிறார் நூலாசிரியர்.
கடைசி அதிகாரமான ஐந்தாம் அதிகாரத்தில் பாவம் நமக்கு எதிரியாக இருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை நம்முன் வைக்கிறார் நூலாசிரியர். பாவம் ஒருபோதும் நமக்கு எந்தவித ஆனந்தத்தையும் அளிக்கமுடியாது, திருப்திப்படுத்த முடியாது என்பதை விளக்கி பாவத்தில் நேரத்தை செலவிடும் காலங்கெல்லாம் இழந்துபோன காலங்கள் எனும் ஆசிரியர், பாவத்தில் இருந்து விடுதலை அளிக்கும் கிறிஸ்துவின் இரட்சிப்பு பற்றிய செய்தி எத்தனை வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கிறது என்று முடிக்கிறார்.
நூலின் இறுதிப்பகுதி மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி பாவத்தில் காலத்தை செலவிடும் அவிசுவாசிகளுக்கான அறிவுரையைத் தருகிறது.
நாம் இன்று காதால் கேட்கமுடியாத ஒரு வார்த்தையாக பாவம் இருந்துவருகிறது. அதை விளக்காத மாயமான் போன்றதொரு போலிச் சுவிசேஷத்தை மக்கள் நாடுகிறார்கள்; அதைக் கைநீட்டிக் கொடுக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பிரசங்கிகளையே நாடெங்கும் காண்கிறோம். இதற்கு மத்தியில் தமிழில் இந்த நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இதழில் நூலின் ஆரம்ப அதிகாரங்கள் வந்திருக்கிறது. வெகுசீக்கிரத்திலேயே நூலை வெளியிடவும் முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கங்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு பேசட்டும்; உங்கள் இருதயங்களைத் தொடட்டும்; குணமாக்கட்டும். அவருக்கே எல்லா மகிமையும்.
அறிமுகம்

கடவுளைத் தவிர்த்துவிட்டு வாழுவதில் ஏன் மனிதர்கள் திருப்தியடைகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்காண, வேதம் “பாவத்தைப்” பற்றி என்னசொல்லுகிறது என்பதை நாம் ஆராயவேண்டியது அவசியம்.
இதை நாம் ஐந்து தலைப்புகளின்கீழ் பார்க்கலாம்.
- பாவம் என்றால் என்ன? (அதிகாரம் 1)
- பாவம் ஏன் மிகவும் கேடானது? (அதிகாரம் 2)
- பாவம் மிகவும் கேடானது என்பதை நாம் எப்படி அறியலாம்? (அதிகாரம் 3)
- பாவத்தின் மெய்யான தீங்கைப்பற்றி நாம் அறியவேண்டியதன் அவசியம் என்ன? (அதிகாரம் 4)
- இக்கேள்விகளின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளுவதென்ன? (அதிகாரம் 5)
இந்தத்தலைப்புகளை விரிவாகப் படிப்பதற்கு முன்பாக, வேதத்தில் விளக்கப்பட்டுள்ள நான்கு அடிப்படையான உண்மைகளை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
முதலாவது, கடவுள் எல்லாவற்றையும் பரிபூரணமாகவும் நல்லதாகவும் படைத்தார். “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31). படைக்கப்பட்ட எதுவும் அதைப் படைத்தவரிடத்தில் எந்தவிதமான தவறையும் காண முடியாது, அல்லது, அவைகளில் எந்தவிதமான குறைபாடும் இருப்பதாகக் குறைசொல்லவும் முடியாது. அப்படியானால், தற்போதைய நிலைக்கு உலகம் எப்படி வந்தது?
இரண்டாவதாக, வேதம் சொல்லுகிறது, கடவுள் படைத்த இரண்டு மகிமையான படைப்புகளான, தேவதூதர்களும், மனிதர்களும், அவர்கள் படைக்கப்பட்ட பரிபூரண நிலையிலிருந்து விழுந்துபோனார்கள் என்று. தேவதூதர்களில் ஒரு கூட்டத்தினர் கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் பரலோகத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் (யூதா 6). அவர்களில் ஒருவனாகிய சாத்தான், முதல் மனிதனும், மனித குலத்தின் பிரதிநிதியுமாகிய ஆதாமை, கடவுளுடைய நேரடியான கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போகும்படிச் செய்தான். அதன்காரணமாக, ஆதாமும் அவன் மனைவியாகிய ஏவாளும், அவர்கள் வாழ்ந்துவந்த ஏதேனிலிருந்து துரத்தப்பட்டார்கள். (ஆதியாகமம் 3)
‘இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் (கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனது) பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் (மனித குலத்தின் பிரதிநிதியாகிய ஆதாமுக்குள்), மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.’ (ரோமர் 5:12)
மூன்றாவதாக, கடவுள், பாவத்தில் வீழ்ந்த தேவதூதர்களுக்கு நித்திய தண்டனையை விதித்தார் (யூதா 6). ஆனால், மனிதகுலத்திற்கோ தம்முடைய மாபெரும் இரக்கத்தைக் காட்டினார். கடவுளுக்கு எதிரான தன்னுடைய கீழ்ப்படியாமையை உணருகிறவர்களுக்கான இரட்சகராக, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, தேவமனிதனாக இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்களின் இடத்தில் இருந்து, பிதாவின் கோரிக்கைகள் அனைத்தையும் தம்முடைய முழுமையான கீழ்ப்படிவின்மூலம் நிறைவேற்றி, தம்மையே பலியாக கொடுத்தார். “பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோத்தேயு 1:15)
இறுதியாக, கடவுளுக்கு எதிரான நம்முடைய கீழ்ப்படியாமையாகிய பாவ நிலையிலிருந்து நம்மை இரட்சிக்க, கடவுள்தாமே செயல்பட வேண்டியதாக இருந்தது. மற்றொருவர் நம்மை இரட்சிக்க வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். ஆகவேதான் இயேசு இந்த உலகத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது? நாம் கீழ்ப்படியாமல் போனதனால், நாம் மனந்திரும்ப வேண்டியிருக்கிறது. மனிதர்களை மனந்திரும்பும்படி அழைக்க, கர்த்தரால் நியமிக்கப்பட்டவராக இயேசு வந்தார். “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (லூக்கா 5:32). ஆகவே, இயேசுவே நம்முடைய இரட்சகர் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். மனிதர்களுக்கு மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொடுக்கவே பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்தில் வந்தார் என்று வேதம் சொல்லுகிறது. நாம் மனந்திரும்ப வேண்டிய நிலையில் இல்லாவிட்டால், அவர் வரவேண்டிய அவசியம் என்ன?
வேதம் போதிக்கின்ற இந்த நான்கு அடிப்படையான உண்மைகளைக் கொண்டு நாம் சிந்தித்துப் பார்த்தால், பாவம் எவ்வளவு கேடானது என்பதையும், அது நம்மில் எத்தகைய கோரமான விளைவுகளை நம்மில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் நாம் அறியலாம். இதை நாம் அறிந்துணர்வது, இதற்கு நேர்எதிராக கடவுளுடைய இரக்கமாகிய கிருபை எவ்வளவு அற்புதமானது என்பதை நாம் காணும்படிச் செய்கிறது. கடவுள் நம்மை மீட்கவேண்டுமானால், அவர் நம்மீது அதிகமான அன்புகொண்டவராக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மை இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து நாடிவரும்படிச் செய்யவேண்டும். இது கடவுளுடைய கட்டளைகள் சரியானது, நல்லது என்று நாம் அறிந்துணரும்படிச் செய்யவேண்டும். அவற்றிற்கு நாம் கீழ்ப்படியாமல் போனதன் காரணமாகவே, கடவுள் தம்முடைய சொந்த குமாரனையே நமக்கான மீட்பராக அனுப்பினார். பாவம், எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாத கடவுளுடைய பரிபூரணமான பரிசுத்தத்திற்கு நேர்எதிரான, நம்மிலுள்ள அருவருப்பான கொடியநோயாக இருக்கிறது.
கடவுளுடைய நியாயப்பிரமாணம் நம்மைக் குற்றப்படுத்தி, நாம் மரணத்திற்கு உரியவர்கள் என்று கண்டனத்திற்குள்ளாக்குகிறபோது, அதை ஏற்படுத்திய கடவுள் நல்லவர் இல்லை என்று நாம் வாதிடமுடியாது. கடவுளிலும் அவருடைய நியாயப்பிரமாணத்திலும் எந்தவிதமான குறைபாடும் இல்லை. கடவுள் பரிபூரணமானவரும் நல்லவருமாவார். அதேபோல் அவருடைய நியாயப்பிரமாணமும் பரிபூரணமானதும் நல்லதுமாகும். நம்முடைய நிலையின் காரணமாகவே கடவுளுடைய நல்ல கட்டளைகள் நம்மைக் கண்டனத்திற்குள்ளாக்குகின்றன. அவற்றைப் பின்பற்றாமல் போனதன் காரணமாக, நாமே இந்தக் கண்டனத்தை நம்மீது வருவித்துக் கொண்டோம். குற்றவாளியான ஒருவன், நீதிபதிக்கு முன்பாக நிற்கிறபோது, தன்னைத் தண்டனைக்குள்ளாக்குவது கொடுமையானது என்று சொல்லலாம். ஆனால் நீதிபதியோ, “இல்லை, நீ சட்டத்தை மீறியதால், நீயே உன்னைத் தண்டனைக்குள்ளாக்கிக்கொண்டாய்” என்று சொல்லுவார். நாம் கீழ்ப்படியாமல் போகாதிருந்தால், நாம் தண்டனைக்குள்ளாக்கப்பட மாட்டோம். “எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும்” (1 தீமோத்தேயு 1:9) விதிக்கப்பட்டது. மனிதன் செய்த தவறே, அதாவது அவனுடைய பாவமே, அவனைக் கண்டனத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
முடிவாக, இது குறித்த சில விளக்கங்கள்:
- கடவுளுடைய நியாயப்பிரமாணம் அனைத்தும் நன்மையானவை. அவை பரிபூரணமானவை, நீதியானவை. நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவை நமக்குப் போதிக்கின்றன.
- கடவுளுடைய கட்டளைகளை மீறுகிறபோது, அவை நீதியானவிதத்தில் நம்மைக் கட்டளையை மீறினவர்களாகவும், பாவிகளாகவும் கண்டனத்திற்குள்ளாக்குகின்றன.
- நியாயப்பிரமாணம், பாவம் செய்தவனையும், பாவத்தையும் கண்டிக்கிறது. கண்டனத்திற்குள்ளான குற்றவாளி அதன்மீது பழிசுமத்தக்கூடாது.
- கடவுளுடைய கிருபை இடைமறைத்து நம்மைக் காப்பாற்றாவிட்டால், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறியதன் காரணமாக நாம் செத்தழிந்திருப்போம்.
- கடவுள் தம்முடைய நல்ல கட்டளைகளைக்கொண்டு பாவியைக் கண்டனத்திற்குள்ளாக்குகிறார். ஆனால், நாம் செய்த பாவமே நம்மை மரணத்திற்குள்ளாக்குகிறது.
- பாவம் மிகவும் வஞ்சனையானது. எப்படியென்றால், நன்மையான நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தி நமக்குக் கேடான முடிவைக் கொண்டுவருகிறது. அதாவது, உணவையே விஷமாக மாற்றுவதுபோல்.
- பாவம் கொடூரமானது, மரணத்திற்குரியது, நமக்கு தீமையே வருவிக்கக்கூடியது என்பதைக் கடவுளுடைய நியாயப்பிரமாணம் நமக்குக் காட்டுகிறது.
இனித் தொடர்ந்து, பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
- பாவம் என்றால் என்ன?
பாவம் செய்வதென்பது நம்முடைய எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாகும். “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.” (1 யோவான் 3:4).
கடவுள், நாம் தீமை செய்வதைத் தவிர்த்துவிட்டு, நன்மையையே செய்யவேண்டும் என்று கோருகிறார். அதற்கு நாம் கீழ்ப்படியாமல் போனால், அது பாவமாகும். நாம் அநேக தவறான செயல்களைச் செய்கிறோமோ, அல்லது கொஞ்சத்தை செய்கிறோமோ, அதுவல்ல விஷயம், கடவுள் நம்மிடம் கோரியுள்ளவற்றைச் செய்யாமற்போகும் எந்தவொரு செயலும் பாவமாகும். “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” (யாக்கோபு 2:10)
“ஆவியின் கனி” என்று வேதம் சொல்லுகிற “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய இவைகளுக்கு எதிராக எந்தவொரு கட்டளையும் இல்லை. ஆனால் மாம்சத்தின் செயலுக்கு எதிராக கட்டளைகள் இருக்கின்றன.
கேடான காரியங்களை நாம் செய்வது மட்டும் பாவமல்ல, நன்மையான காரியங்களைச் செய்யாமலிருப்பதும் பாவமாகும்.
இந்தச் சிந்தனையோடு அடுத்தத் தலைப்பிற்கு நாம் செல்லுவோம்.
- பாவம் ஏன் மிகவும் கேடானது?
கடவுள் பரிசுத்தமானவராகவும் நீதியுள்ளவராகவும் இருப்பதனால், அவருடைய கட்டளைகளும் பரிசுத்தமும் நீதியுமானவைகள். நாம் அவருடைய படைப்புகளாக இருப்பதனால், அவைகள் நம்முடைய நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள். பாவத்தின் கேடானதன்மையை எப்படி நாம் அறியலாமென்றால், இந்தக் கட்டளைகளை நாம் மீறுகிறபோது,
- கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.
- நமக்கு நன்மை தரக்கூடியவைகளுக்கு எதிராகவே நாம் செயல்படுகிறோம்.
கடவுளுடைய கட்டளையை நாம் கைக்கொள்ளாதபோது, நாம் கடவுளை அவமதிக்கிறோம், அத்தோடு, நம்மையே நாம் இழிவுபடுத்திக்கொள்ளுகிறோம். இந்த இரண்டு காரணங்களினால்தான், கடவுளுடைய கட்டளையை மீறுவதை நாம் வெறுக்க வேண்டும். நம்முடைய கீழ்ப்படியாமையின் மூலம் நாம் கடவுளுக்கு எதிராக செயல்படுவதென்பது எவ்வளவு பெரிய தீங்கானது என்பதை இந்த இரண்டினுடைய பின்விளைவுகளை விளக்குவதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இதன் மூலம் கடவுள் பாவத்தை வெறுப்பதைப் போல் நாமும் வெறுக்க இவ்விளக்கங்கள் துணை செய்யும் என்று நம்புகிறேன்.
- நாம் பாவம் செய்கிறபோது கடவுளுக்கு எதிராக செயல்படுகிறோம்.
கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிறவர்களை கடவுளுடைய எதிரிகள் என்றும், கடவுளுக்கு விரோதமானவர்கள் என்றும் (லேவியராகமம் 26:21), கடவுளுக்கு எதிராக கலகம் பண்ணுகிறவர்கள் என்றும் (ஏசாயா 1:2), கடவுளுக்கு எதிராக வழக்காடுகிறவர்கள் என்றும் (ஏசாயா 45:9), கடவுளை எதிர்த்து போரிடுகிறவர்கள் என்றும், அவருடைய நாமத்தை தூஷிக்கிறவர்கள் என்றும், அவர் இருப்பதையே மறுதலிக்கிறவர்கள் என்றும் வேதம் சொல்லுகிறது. “தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்” (சங்கீதம் 53:1). கடவுள் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாமல் வாழுவது கடவுளை விரோதிப்பதாகும்.
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
இதை மேலும் விளக்குகிறேன்.
1.1. பாவம் கடவுளின் தன்மைக்கு எதிரானது
கடவுள் பரிசுத்தமானவராகையால், அவர் சொல்லுவதும் செய்வதுமாகிய அனைத்தும் பரிபூரணமானது. கடவுளுடைய மகிமையின் அடிப்படை தன்மையே அவர் பரிபூரணமானவர் என்பதுதான். பாவத்தைவிட கடவுளுக்கு எதிரானது வேறெதுவும் இருக்கமுடியாது. அது அவருடைய தன்மைக்கே எதிரானது. பாவத்தைப் பார்த்து அவர் பாராமுகமாக இருந்தால், அவர் கடவுளாகவே இருக்க முடியாது. கடவுளைப் பற்றி பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவர் சொல்லியதைக் கவனியுங்கள், “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே” (ஆபகூக் 1:13) என்று சொல்லியிருக்கிறார். கடவுளுடைய பரிசுத்தமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போவதென்பது மிகவும் மோசமான செயல். அவற்றைக் கடவுள் வெறுக்கிறார். அதுவும் அக்கட்டளைகள் அனைத்தும் நம்முடைய நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவைகள். கடவுளுடைய பரிசுத்தத்தில் எந்தத் தீங்கும் இல்லாததுபோல், நம்முடைய பாவத்திலும் எந்த நன்மையும் இல்லை. எல்லா நன்மையின் பரிபூரணமாக கடவுளே இருக்கிறார். அவர் நம்மில் காண்கிற பாவமே நம்மிலுள்ள எல்லா குறைபாடுகளிலும் மிகப் பெரியது.
1.2. பாவம், கடவுளுடைய நாமம் மற்றும் அவருடைய குணாதிசயங்களின் முக்கியத்துவத்தை எதிர்க்கிறது.
பாவமுள்ள சிந்தை, கடவுளை இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் ஏற்பதில்லை. மோசே இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் எகிப்தின் பார்வோனிடத்தில் சென்றபோது, பார்வோன், “கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?” (யாத்திராகமம் 5:2) என்று கேட்டான். அவிசுவாசிகள் கடவுளுடைய ஆளுகையை ஏற்பதில்லை. அவரை சிங்காசனத்திலிருந்து கீழிறக்கவே முயற்சிக்கிறார்கள்.
தேவபக்தியாய் வாழுவதனால் வருகிற ஆவிக்குரிய பலன்களைக் காட்டிலும், இந்த உலக வாழ்வின் இன்பங்களையே பெரிதாகக் கருதி வாழுகிறவர்கள், கடவுள் போதுமானவர் அல்ல என்பதையே குறிப்பால் உணர்த்துகிறார்கள். லூக்கா 15ல் குறிப்பிடப்பட்டிருக்கிற இளைய மகனைப்போல் எங்காவது போய் இருப்பதே எனக்கு நலம் என்று எண்ணுகிறார்கள். கடவுள் போதுமானவராக இருக்கிறார் என்ற உண்மையை மறுத்து, கடவுள் போதுமானவரல்ல என்றே அவிசுவாசியினுடைய பாவமுள்ள சிந்தை சொல்லுகிறது.
கடவுளுடைய நல்ல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற் போவது, அவருடைய நீதிக்கு சவால் விடும் செயலாகும். நீதியும் சத்தியமும் கடவுளுடைய பரிசுத்தத் தன்மையின் அங்கங்கள். கடவுளுடைய நீதியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பது, அவர் நீதியும் நன்மையுமானவர் என்பதையும் மறுப்பதாகும்.
“உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும் அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.” மல்கியா 2:17
கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர். கடவுள் எதையும் அறிந்திருக்கிறதில்லை என்று எண்ணுவது, அவரைப்பற்றிய இந்தச் சத்தியத்தை மறுப்பதாகும். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு எல்லாம் வெளியரங்கமாயிருக்கிறது. (எபிரெயர் 4:13)
கடவுள் தம்முடைய படைப்புகளிடத்தில் மிகவும் தயாளகுணத்துடன் நடந்து வருகிறார். தம்முடைய படைப்புகள் வாழ்வதற்கான விதத்தில் இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் தம்முடைய கிருபையினால் வழங்கி வருகிறார். அவர் நம்மீது காட்டிவருகிற இந்தத் தயவையும் நற்குணத்தையும் மறுப்பது, அவிசுவாசத்தினால் அவரை எதிர்ப்பதாகும்.
இந்த உலக வாழ்வில், கடவுள் கொடுத்திருக்கிற நல்ல காரியங்களைப் பயன்படுத்தி, கடவுளுடைய சித்தத்திற்கு எதிரான காரியங்களைச் செய்வது, அவருடைய கிருபையை கேடானமுறையில் பயன்படுத்துவதாகும். சிலபேர் சொல்லுவார்கள், கடவுள் கிருபையுள்ளவராக இருந்தால், அவருடைய கிருபை, நாம் அதிகமாக பாவம் செய்வதற்கு அனுமதிக்கிறபோதுதான், இன்னும் அற்புதமாக வெளிப்படும் என்கிறார்கள். இப்படிச் சொல்லுவது, கடவுளுடைய கிருபையின் மெய்ப்பொருளைப் புரட்டுவதாகும்.
இந்தவிதமான பாவச்செயல்கள், கடவுளுடைய நீதிக்கு எதிராக சவால்விடும் செயல்களாகும். அவருடைய இரக்கத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். அவருடைய பொறுமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுவதாகும், அவருடைய வல்லமையை நிந்திப்பதாகும், அவருடைய அன்பை அற்பமாக எண்ணும் செயலாகும்.
1.3 பாவம் ஒருபோதும் கடவுளுடைய செயலோடு ஒத்துப்போகாது
கடவுளுடைய செயலோடு பாவம் ஒருபோதும் ஒத்துப்போகாதது, அவருடைய தன்மைக்கு எதிரானது என்பதினால் மட்டுமல்ல, அவருடைய செயல்களுக்கும் எதிரானதாகும். பாவம், கடவுளை எதிர்க்கிறவனாகிய பிசாசினுடைய செயல் என்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்” (1 யோவான் 3:8). உலகம் உண்டாக்கப்பட்டபோது, கடவுள் அனைத்தையும் அழகாகவும், நல்லதாகவும் படைத்தார். ஆனால் ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை, இந்த உலகத்தில் ஏற்பட்ட பிசாசினுடைய தாக்கத்தை நமக்குக் காட்டுகிறது. அதன்காரணமாக, கடவுளை நிராகரிக்கிற எண்ணமும், தன்மையும், மனிதகுலத்தில் ஊடுருவி, கடவுளுடைய பெயரையும், அவருடைய தன்மையையும், இந்த உலகத்தில் தொடர்ச்சியாக மறக்கும்படி செய்கிறது. இந்த நிராகரிப்பின் செயலிலிருந்தே, பாவத்தினுடைய அனைத்து செயல்களும் வெளிவருகிறது – ஒழுங்கற்ற, குழப்பமான, இழிவான, சீர்கெட்ட, கொடூரமான, வியாதி மற்றும் மரணம் ஆகிய நம் அனைவருக்கும் தொல்லைத் தருகின்ற அனைத்தும் வெளிவருகின்றன.
1.4 கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும், அவருடைய சித்தத்தை நிராகரிப்பதுமே பாவமாகும்.
இந்த உலகத்தில் கடவுளை வழிபடுவற்கு எதிராகவும், அவரிடமிருந்தும் அவர் எதிர்பார்க்கிறவைகளிடமிருந்தும் பிரிந்திருப்பதற்கு முயற்சித்து, கடவுளோடு ஐக்கியமாக இருப்பதனால் வரும் பலன்களை நிராகரிக்கும் ஒரு நபருடைய எண்ணத்தின் வெளிப்பாடே பாவமாகும். பாவியாகிய ஒருவன், கடவுள் மீதான தன்னுடைய எதிர்ப்பை, ஆவிக்குரிய வாழ்வின் செயல்களாகிய ஜெபம், பிரசங்கம் மற்றும் பரிசுத்தத்தை எதிர்ப்பதன் மூலம் காட்டுவான். பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றின தாவீது இராஜாவைப்பற்றி சொல்லுகிறபோது, “கடவுளுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன்” (1 சாமுவேல் 13:14) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
1.5 பாவம் கடவுளுடைய சாயலுக்கு எதிரானது
ஆதாமும் ஏவாளும் பரிபூரணமானவர்களாகவும், கடவுளுடைய சாயலின்படியும் உண்டாக்கப்பட்டார்கள். ஆனால் நாம் அந்த நிலையில் இப்போது இருக்கவில்லை. இருள் வெளிச்சத்திற்கு எதிராக இருப்பதுபோல், நரகம் பரலோகத்திற்கு எதிராக இருப்பதுபோல், அசிங்கம் அழகிற்கு எதிராக இருப்பதுபோல், நாமும் நம்முடைய பாவத் தன்மையினால், உருவழிந்து, கடவுளுடைய பரிசுத்தத்திற்கும், நீதிக்கும் எதிரானவர்களாக இருக்கிறோம். “பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டானவன்” (1 யோவான் 3:8) என்று வேதம் சொல்லுகிறது.
1.6 பாவம் கடவுளுடைய மக்களுக்கு எதிரானது
கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக கடவுளிடம் சமாதானம் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பாவத்தன்மைகள் அந்தச் சமாதானத்திற்குத் தடையாகவும், அதை அழிக்கிறதாகவும் இருக்கிறது. கடவுளிடத்தில் நாம் எவ்வளவாக நெருங்குகிறோமோ, அவ்வளவாக பாவம் மிகவும் ஆக்ரோஷமாக அந்த உறவைத் தடுப்பதற்கு முயற்சிக்கிறது, “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலாத்தியர் 5:17). பிசாசு எல்லாரையும் வெறுக்கிறான், குறிப்பாக, தேவனுடைய பிள்ளைகளை வெறுக்கிறான். இருப்பினும், கடவுள் தம்மை விசுவாசிக்கிறவர்களை நேசிப்பதனால், அவன் அவர்களை காயப்படுத்த முடியாது. கடவுள் தம்முடைய மக்களுக்கு நன்மை செய்கிறதனால், அவன் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.
1.7 கடவுளுடைய மகிமையை அழிப்பதே பாவத்தினுடைய இலக்காக இருக்கிறது
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு, நம்முடைய கேடான வழிகளிலிருந்து நாம் மனந்திரும்புகிறபோது, நாம் கடவுளை மகிமைப்படுத்துகிறோம். ஆனால் பாவமோ அதைச் செய்யாதபடி நம்மைத் தடுக்க முயற்சிக்கிறது. நம்முடைய பாவத்தன்மை கடவுளுடைய தன்மைக்கு எதிரான காரியங்களை நம்மில் ஏற்படுத்தி, கடவுளுக்காக வாழுவதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.
1.8 பாவத் தன்மை, கடவுள் இருக்கிறார் என்பதைக் குறித்து சந்தேகம் எழுப்புகிறது
பாவத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறவர்கள், கடவுளை வெறுக்கிறவர்களாகவும், அவர் இருக்கிறார் என்பதை நிராகரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னுடைய எண்ணத்திலும் செயல்களிலுமிருந்து கடவுளைத் தள்ளிவைக்க முயற்சிக்கிறார்கள் (ரோமர் 1:18-32)
மேற்கொண்டு போவதற்கு முன்பதாக, இதுவரை நாம் படித்தவற்றை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த வேதம் போதிக்கிற கடவுளுடைய வார்த்தையைக் கவனித்துக் கேளுங்கள். பாவத்தின் அசிங்கங்களை நீங்கள் எப்படி நேசிக்க முடியும்? ஒரு எதிரியிடமிருந்து தப்பி ஓடுவதைப்போல் பாவத்திடமிருந்து நீங்கள் விலகியோட விரும்பவில்லையா? கடவுள் வெறுப்பதை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்களைப் படைத்தவராகிய கடவுள் விரும்புகிறதை நீங்கள் வெறுக்கிறீர்களா? பாவத்தின் எந்தவொரு செயலும் உங்களுக்கு எந்தவொரு நன்மையையும் தர முடியாது. அது உங்களுக்குத் தீங்கிழைத்து, உங்களை அழிக்கவே செய்யும். உங்களைவிட வலிமைமிக்கவரான கடவுளோடு நீங்கள் எதிர்த்து வாதிடாதீர்கள். அவர் கேடானவர்களை நரகத்தில் தள்ளி அழிக்கும் வல்லமை கொண்டவர்.
மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்
மனந்திரும்பாமல் எவரும் பாவமன்னிப்பை அடையமுடியாது என்கிறது வேதம் (அப்போஸ்தலர் 3:19). மனந்திரும்புதல் என்ற வார்த்தையின் கிரேக்க மூலத்திற்கு அடிப்படை அர்த்தம் ‘மனதில் ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளுவது’ (change of heart) என்பதாகும். இதுவே அடிப்படை அர்த்தமாக இருந்தபோதும், இந்த அர்த்தத்தின் அடிப்படையில் மட்டும் மனந்திரும்புதலை விளங்கிக்கொள்ள முடியாது. இவென்ஜெலிக்கள் கிறிஸ்தவ பிரிவுகளில் பெரும்பாலானோர் இந்த அர்த்தத்தில் மட்டும் மனந்திரும்புதலை விளக்கி, மனந்திரும்புதல் என்பது மனத்தளவில் பழைய வாழ்க்கையைப்பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயேசுவைப்பற்றிய புதிய எண்ணத்தைக் கொண்டிருப்பது என்று விளக்குகிறார்கள். சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie), சேன் ஹொட்ஜஸ் (Zane C Hodges) போன்றோர் இதையே செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே இன்று பெரும்பாலும் சுவிசேஷமும் பிரசங்கிக்கப்படுகிறது. அதனால் மனந்திரும்புதல் என்பது மனிதன் சுயத்தில், பாவநிலையில் மாம்சத்தில் இருந்து இயேசுவைப்பற்றிய தன்னுடைய கருத்தை மனத்தளவில் மாற்றிக்கொள்ளுவது என்று மட்டும் விளக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இவர்களைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதல் மனிதனுடைய கிரியையாகிவிடுகிறது. இதுவே செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிசப் போதனை. இதன்படி மனிதன்தானே சுயமாக மனந்திரும்பி பாவமன்னிப்பை அடையக்கூடியவனாக இருக்கிறான்; பிடிக்காதபோது அதை உதறிவிடக்கூடியவனாகவும் இருக்கிறான். ஆனால், இதுவல்ல மனந்திரும்புதலுக்கு வேதம் தருகின்ற விளக்கம்.
மனந்திரும்புவது மனிதனின் கடமை
மனந்திரும்புவது மனிதனின் கடமை (duty) என்கிறது வேதம். கடவுள் மனிதனுக்காக மனந்திரும்ப முடியாது. அதேவேளை மனந்திரும்புதல் மனிதனின் கிரியை (work) அல்ல. கிரியையின் மூலம் இரட்சிப்பு ஒருபோதும் கிடைக்காது என்கிறது வேதம் (எபேசியர் 2:8-10). கடமைக்கும் கிரியைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது; இரண்டும் ஒன்றல்ல. நாம் சுயத்தில், மாம்சத்தில், பாவநிலையில் இருந்து செய்வது கிரியை; நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நம்முடைய பொறுப்பாக இருப்பது கடமை. மனந்திரும்புதல் அந்தவிதத்தில் நம்முடைய கடமையாக இருக்கிறது.
மறுபிறப்பும் மனந்திரும்புதலும்
மனந்திரும்புதல் மனிதனுடைய கடமையாக இருந்தபோதும், அவனால் பாவநிலையில் சுயமாக மனந்திரும்ப முடியாது. அப்படியானால் மனிதனின் மனந்திரும்புதலுக்கு எது மூலமாக இருக்கிறது? இறையியல் அடிப்படையில் தத்துவார்த்தமாக இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கைத் திரும்பிப் பார்ப்போமானால், மறுபிறப்பே மனிதனின் விசுவாசத்திற்கும், மனந்திரும்புதலுக்கும் அடித்தளமாக இருக்கிறது என்கிறது வேதம் (தீத்து 3:5; 1 யோவான் 3:9; 2 கொரிந்தியர் 5:17; யோவான் 3:5). மனிதன் சுயமாக செய்யும் கிரியையாக இல்லாமல் அவனுக்குப் புறத்தில் இருந்து பரிசுத்தஆவியானவர் அவனுக்குள் கிருபையால் விதைக்கின்ற புதிய ஜீவனாக இருக்கிறது மறுபிறப்பு; அது கடவுள் அவனுக்குள் செய்யும் செயல். விசுவாசமும், மனந்திரும்புதலும் மறுபிறப்பு பெற்றெடுக்கும் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள். இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது; ஆனால் இரண்டும் தனித்தன்மையுடைய கிருபைகள்.
மனந்திரும்புவதால் மன்னிப்பா அல்லது மன்னிக்கப்படுவதால் மனந்திரும்புகிறோமா?
மனந்திரும்புவதால் பாவம் மன்னிக்கப்படுகிறதா? பாவம் மன்னிக்கப்படுவதால் மனந்திரும்புகிறோமா? என்ற கேள்வியை இறையியல் வல்லுனர்கள் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்பது அவசியமா, அநாவசியக்கேள்விகள் என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் இது அநாவசியமான கேள்வியல்ல. இப்படி இறையியல் வல்லுனர்கள் கேட்டிருப்பதற்குக் காரணம் தீவிரமாக சத்தியத்தை ஆராய்ந்து போலிப்போதனைகளை அடையாளங்கண்டு அவற்றில் சிக்கிவிடாமல் இருக்கவும், அவற்றை இனங்காட்டி ஆத்துமாக்களைக் காப்பதற்குமாகத்தான். இதன் காரணமாகத்தான் சபை வரலாற்றில் சத்தியத்தைப் பாதுகாப்பதற்காக வினாவிடைப்போதனைகளும், விசுவாச அறிக்கைகளும் எழுதப்பட்டன. அவை சத்தியத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் ஆழமாகத் தெளிவாக விளக்குபவையாக இருக்கின்றன. சத்தியப்பற்றில்லாதவர்களுக்கும், ஞானம் குறைந்தவர்களுக்கும் இவை சலிப்பூட்டினாலும் மெய்க்கிறிஸ்தவர்களுக்கு இவை பாதுகாப்பு அரண். இறையியல் ரீதியாக அவசியம் நேருகிறபோது ஆழமாகவும் தெளிவாகவும் சிந்திக்க மறுத்தால் போலிப்போதனைகளில் இலகுவாக சிக்கிவிடுவோம். எதையும் மேலெழுந்தவாரியாகப் படிக்கிற வழக்கம் இருக்கிறவர்களுக்கு சத்தியத்தையோ, போலிப்போதனையையோ இனங்கண்டுகொள்ள முடியாது.
வேதம், மனந்திரும்பாமல் பாவமன்னிப்பில்லை என்கிறது. அப்படி விளக்கும் அநேக வசனங்களை வேதத்தில் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 2:38). அதில் எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை. ஆனால், இந்த உண்மையை சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் அவசியம் (necessary) என்கிறது வேதம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மனந்திரும்புதல் இல்லாத இடத்தில் பாவமன்னிப்பைக் காணமுடியாது என்று இதற்கு அர்த்தம். இதனால், ஒருவருடைய மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக அவர் பாவமன்னிப்பை அடைகிறார் என்று அர்த்தமல்ல. ஒன்றின் காரணமாக இன்னொன்று நிகழ்வதற்கும் (cause – மூலம்), ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது (necessity – இன்றியமையாதது) என்று சொல்லுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. மனந்திரும்பாமல் பாவமன்னிப்பில்லை என்பதற்கு அர்த்தம் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாதது, அவசியமானது என்பதுதான்.
மனந்திரும்புதல் பாவமன்னிப்புக்கு இன்றியமையாததாக (necessity) இருந்தபோதும், பாவமன்னிப்புக்கு அது ஆதாரம் அல்ல. நீதிமானாக்குதலே அதற்கு ஆதாரமாக (source or ground) இருக்கிறது. ஒருவன் நீதிமானாகிறபோதே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையைக் கடவுளுக்கு முன் அடைகிறான். அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith alone). நீதிமான் என்ற தகுதியை நமக்களிக்கின்ற கிருபையின் கருவியாக (instrumental means) இருப்பதே விசுவாசம். அதேநேரம் விசுவாசத்திற்கு ஆதாரம் (ground) கிறிஸ்துவின் பலியும் அவர் நிறைவேற்றிய நீதியுமே. விசுவாசத்தின் மூலம் நீதிமானாகிற ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அந்தப் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாததாக இருக்கிறது என்கிறது வேதம். இறையியல் ரீதியாக விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் ஆராய்ந்தால், தத்துவார்த்தமாக மனந்திரும்புதல் விசுவாசத்தில் இருந்து புறப்படுவதாக இருக்கிறது. அதாவது, மனந்திரும்புதல் விசுவாசத்திற்கு முன் நிகழ்வதில்லை; விசுவாசத்தின் பின்வருவதாக இருக்கிறது. இதில் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லை. இந்த உண்மையைத்தான் 19ம் நூற்றாண்டு சீர்திருத்த பிரசங்கியும் போதகருமான ஜோன் கல்ஹூன் (John Colquhoun) தன்னுடைய ‘இவென்ஜலிக்கள் மனந்திரும்புதல்’ என்ற நூலில் இரண்டு அதிகாரங்களில் (6ம், 7ம்) மிகவும் அருமையாகவும், கவனத்தோடும் விளக்கியிருக்கிறார். சிக்கலானதாகத் தெரியும் உண்மையை அவர் அவசியம் காரணமாக நுணுக்கமாக விளக்கியிருக்கிறார். இதே விளக்கத்தை பியூரிட்டன் பெரியவரான தொமஸ் போஸ்டனும் தந்திருக்கிறார். இந்தவிதத்தில் மனந்திரும்புதலை விளங்கிக்கொள்ளுவது அதை மனிதனுடைய மாம்சத்தின் கிரியையாகப் பார்க்கும் தவறைச் செய்யாமலிருக்க உதவும்.
மனந்திரும்பி பாவமன்னிப்பை அடையுங்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியானால் மனந்திரும்புதலுக்கு பின்புதானே பாவமன்னிப்பு வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த சத்தியத்தை மெலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது அப்படித்தான் தெரியும். இதில் சரி, பிழை என்பதற்கு இடமில்லை. இதை இறையியல்ரீதியில் சரியாகப் புரிந்துகொள்ளுவதுதான் அவசியம். மனந்திரும்பாமல் பாவமன்னிப்பை நாம் அடைவதில்லை என்று ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அந்தப் பாவமன்னிப்பு கிறிஸ்துவின் நீதிமானாக்குதலின் மூலம் விசுவாசிக்கு பெறப்பட்டிருக்கிறது. அப்படிக் கிறிஸ்துவால் பெறப்பட்டிருப்பதையே, கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்புவதின் மூலம் ஒருவன் அடைகிறான். அந்தவகையில் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாததாக இருக்கிறது.
கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற எவரும் கிறிஸ்துவிடமிருந்து இரட்சிப்பை உடனடியாக ஒரே தடவை (instantly at once) அடைகிறார்கள். அந்த இரட்சிப்பு, அதோடு தொடர்புடைய அத்தனை ஆசீர்வாதங்களையும் ஒருவருக்குக் கொண்டுவருகிறது. இரட்சிப்பு, பகுதி பகுதியாக, துண்டு துண்டாக வருவதில்லை. இரட்சிப்பை அடைகிறவர்கள் இரட்சிப்பின் சகல ஆசீர்வாதங்களையும் ஒரே நேரத்தில் அடைகிறார்கள். இது அசைக்கமுடியாத, மறுக்க வழியில்லாத சத்தியமாக இருந்தபோதும் பிதாவும், குமாரனும் உன்னதத்தில் தாங்கள் முன்குறித்துத் தெரிந்தெடுத்தவர்களை இரட்சிக்கும் திட்டத்தையும் (The plan of salvation), அந்தத் திட்டத்தின் மூலம் இரட்சிப்புக்குரியவர்கள் அடையும் ஆசீர்வாதங்களை (The blessings of salvation) அவசியத்தின் காரணமாக வேத இறையியல் அடிப்படையில் தத்துவார்த்தமாகப் படிமுறையாகப் பிரித்து ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரே நேரத்தில் ஒருவர் அடைகின்ற இரட்சிப்பில் காணப்படும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களும் ஒன்றிற்குப் பிறகு இன்னொன்று வருகிறது என்பதாகக் காண்கிறோம். அந்த முறையில்தான் அந்தப் படிமுறையின்படி தத்துவரீதியில் மனந்திரும்புதலுக்குப் பிறகு பாவமன்னிப்பு வருகின்றதாக இருக்கிறது.
இம்மியளவு இறையியல்
விசுவாசத்தின் மூலம்
இன்று விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும்விட வேறு எத்தனையோ வழிகளை பாவிகள் கிறிஸ்துவை அடைய சுவிசேஷகர்களும், சபைகளும் காட்டிக்கொண்டிருக்கின்றன. வேறெதெல்லாம் ஒருவனிடம் காணப்பட்டபோதும், அவன் தன் இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை அடையாவிட்டால் அவனுக்கு எந்தவொரு பலனுமில்லை.
பரிசேயத்தனம்
பாவத்திற்கு இடங்கொடுக்காமல் பரிசுத்தமாக வாழ்வதை நடைமுறையில் கொண்டிராதவர்களுடைய ஜெபங்களும், ஆராதனையும் பரிசேயத்தனத்தின் அடையாளங்கள். கிறிஸ்தவன் என்ற பெயரோடு ஒருவன் எத்தனைபேருக்கு சுவிசேஷத்தைச்சொல்லிப் பிரசங்கம் செய்தாலும் அவனுடைய சொந்தவாழ்க்கையும், குடும்பவாழ்க்கையும் சிதழ்பிடித்து சீரழிந்து இருக்குமானால் அவன் இருதயம் கிறிஸ்துவின் கிருபைக்குத் தொலைதூரத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
நீதிமானாக்குதல்
நீதிமானாக்குதல் கிறிஸ்தவத்தின் அடித்தளப்போதனை. அதை வீழ்த்தினால் கிறிஸ்தவம் வீழ்ந்துவிடும். 16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் இதை நிலைநிறுத்தக் கடும்போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. நீதிமானாக்குதல் விசுவாசத்தின் மூலமாகவே கிடைக்கிறது. அதனால்தான் சீர்திருத்தவாதம் இதைவிளக்க ‘விசுவாசம் மட்டுமே’ (Faith alone) எனும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் – நீதிமானாக்குதல் கிரியைகளினாலோ அல்லது வேறு எந்தக் கிருபைகளினாலும் அல்லாமல் விசுவாசத்தினூடாக மட்டுமே கிடைக்கிறது என்பதே (ரோமர் 4; கலாத்தியர் 3:5-14). இருந்தபோதும் இந்த விசுவாசம் ஒருபோதும் தனிமையானதல்ல (Faith is never alone); ஒருவருக்கு கிருபையின் ஈவாக இது கிடைக்கிறபோது இரட்சிப்புக்குரிய ஏனைய கிருபைகள் அனைத்தும் இதோடு இணைந்தே வருகின்றன.
பரிசுத்தமாக்குதல்
பரிசுத்தமாக்குதல் கிருபையின் ஆசீர்வாதங்களில் ஒன்று. கிருபையை அடைந்தவர்கள் விடாமுயற்சியுடன் அதில் ஈடுபடவேண்டியது அவர்களுடைய கடமை. இருந்தபோதும், அது இறுதியில் பரிசுத்த ஆவியானவரின் செயல். அதில் அவரோடு இணைந்து நாம் செயல்படுகிறோம். அதை ஆவியானவர் நம்மில் செய்தபோதும் நம்பங்கில்லாமல் அவர் அதைச் செய்வதில்லை; அவரில்லாமல் நாம் அதைச் செய்வதுமில்லை. அதில் நம் செயல்களையும் மீறி ஆவியானவரின் செயல் நம்மில் நிகழ்கிறது. இவ்விதத்தில் கிருபையை அடைந்தவர்களை இயேசு தம் மகிமைக்காகத் தொடர்ந்து ஆவியினால் பரிசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார் (எபேசியர் 5).
பரிசுத்தவான்களின் விடாமுயற்சி
பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்பது சீர்திருத்த கல்வினிச போதனைகளில் இரட்சிப்பைக்குறித்த முக்கியமான போதனை. இரட்சிப்பை இலவசமாக வழங்கும் கர்த்தர் அந்த இரட்சிப்புக்குரிய கனிகளை வெளிப்படுத்தும்படி நாம் ஆவிக்குரியசெயல்களை விடாமுயற்சியுடன் செய்துவாழ வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அந்தக் கிரியைகளை நாம் கர்த்தரின் துணையோடேயே செய்கிறோம். அவற்றை நாமே செய்கிறோம்; அவற்றைக் கர்த்தர் நம்மில் செய்வதில்லை. அதில் கர்த்தரும் நாமும் இணைந்து செயல்படுகிறோம். அவரில்லாமல் அவற்றை நாம் செய்வதில்லை; அவர் நம்மூடாக நம்மில் செயல்படுகிறார். அவற்றை நாம் 50%, கர்த்தர் 50% என்று பிரித்துச் செய்வதில்லை. அந்தக் கிரியைகள் நம்முடைய கிரியைகள், இருந்தாலும் அந்தக் கிரியைகளின் மூலமே கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார். நம் விடாமுயற்சியல்ல நம்மைப் பாதுகாப்பது; நம் விடாமுயற்சியையும் மீறிக் கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார். நம் விடாமுயற்சி இறுதியில் அவருடைய வல்லமையிலேயே தங்கியிருக்கிறது. இருந்தபோதும் நம் விடாமுயற்சி இல்லாமல் நாம் பரலோகம் போகமுடியாது.
லீகலிசமும், அன்டிநோமியனிசமும்
லீகலிசமும், அன்டிநோமியனிசமும் கிறிஸ்தவத்தின் இரட்டை எதிரிகள். சுவிசேஷக் கிருபையைவிட, கட்டளைகளை மட்டும் பின்பற்றுவதில் குறியாக இருந்து அதன் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைய முயல்கிறது லீகலிசம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைய எந்தக் கட்டளைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்கிறது அன்டிநோமியனிசம். ‘இந்த இரண்டும் வெவ்வேறு தோற்றம் கொண்ட ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்’ என்கிறார் சின்கிளெயர் பேர்கசன் எனும் இறையியலறிஞர். இதில் ஆபத்து என்ன தெரியுமா? இந்த இரண்டும் கிறிஸ்தவனில் ஒரே நேரத்தில் இருந்துவிட முடியும் என்பதுதான். சுவிசேஷ அன்பில்லாமல் எந்தக் கட்டளைகளைப் பின்பற்றினாலும் நீங்கள் ஒரு லீகலிஸ்ட். சுவிசேஷ அன்பிருந்தும் கட்டளைகளை உதறித்தள்ளினால் நீங்கள் ஒரு அன்டிநோமியன். (யோவான் 14:15; 1 யோவான் 5:3; 2:6).
பாவம்
பாவம் பொல்லாதது; மனிதனுக்குள் இருக்கும் மோசமான வியாதி அது. அவனை அது தொட்டுப் பாதித்திராத இடமே இல்லை. பாவத்தைச் செய்வதால் மனிதன் பாவியல்ல; பாவியாக இருப்பதால் அவன் பாவத்தைச் செய்கிறான். பாவத்தை மனிதனின் உருவத்தில் நாம் பார்ப்பதில்லை; அவனுக்குள் வைரஸைப்போல் அது மறைந்திருக்கிறது; அவனுடைய சிந்தனையிலும், பேச்சிலும், செயலிலுமே அது வெளிப்படும். பாவத்தின் பாவத்தைப்போல் கோரமானது எதுவுமில்லை.
நற்கிரியைகள்
நற்கிரியைகளை இயல்பாக மனிதனால் செய்யவழியில்லை; அவற்றிற்கு எதிரானவற்றை மட்டுமே அவன் இயல்பில் செய்வான். பாவியான அவனுடைய கிரியைகள் எவையும் ஒருபோதும் நல்லவையல்ல; கடவுளின் பார்வையில் அவை வெறும் கந்தல்கள் மட்டுமே. மனிதனுடைய கிரியைகள் எதுவும் ஆவிக்குரியவிதத்தில் அவனைப் பரிசுத்தப்படுத்தாது; பரலோகத்துக்கும் அனுப்பாது. சிலுவைப்பலியினால் கிறிஸ்து சம்பாதித்த நீதி மட்டுமே நம்மை நீதிமான்களாக்கும்; நீதியான கிரியைகளையும் செய்யவைக்கும். நற்கிரியைகளைச் செய்துவாழ கிறிஸ்துவில் விசுவாசம் தேவை. அவரை விசுவாசிக்காதவர்கள் நீதிமான்களுமல்ல; நற்கிரியைகளைச் செய்யக்கூடியவர்களுமல்ல.
சிலுவை மரணம்
இரட்சிப்பை அடையப் பாவி தானே வழிகண்டுகொள்ளும் வசதியேற்படுத்த கிறிஸ்து சிலுவையில் மரித்தாரா அல்லது பாவிகளுக்கான இரட்சிப்பை நிறைவேற்ற மரித்தாரா? அதற்கான வசதியை ஏற்படுத்த அவர் மரித்தார் என்கிறது ஆர்மீனியனிசம். இரட்சிப்பை நிறைவேற்ற அவர் மரித்தார் என்கிறது கிருபையின் போதனைகள். முதலாவது, பாவிக்கு இரட்சிப்பில் பங்களித்து கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இரண்டாவது, இரட்சிப்பை இறையாண்மையுள்ள கடவுளின் இலவசமான ஈவாக விளக்குகிறது. முதலாவது, பாவியின் பங்கில்லாமல் கிறிஸ்துவின் மரணத்தால் எந்தப் பலனுமில்லை என்கிறது. இரண்டாவது, கிறிஸ்துவின் மரணத்தைத்தவிர வேறெதுவும் பாவியை இரட்சிக்க முடியாதென்கிறது. ஆர்மீனியனிசம், மனிதனை அவனுடைய இரட்சிப்புக்கு முழுப்பொறுப்பாளியாக்குகிறது. கிருபையின் போதனைகள் மனிதன் தன் இரட்சிப்புக்கு கர்த்தரில் 100% தங்கியிருக்கிறான் என்கிறது. ஆர்மீனியனிசம் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. கிருபையின் போதனைகள் கர்த்தரை மகிமைப்படுத்துகின்றன.
முன்குறித்தல்
விசுவாசத்திற்காக சிலர் முன்குறிக்கப்பட்டிருப்பதை ஏற்கமறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். கர்த்தரால் முன்குறிக்கப்பட்டிருக்கிறவர்கள்தான் விசுவாசத்தை உரியகாலத்தில் அடைகிறார்கள் என்கிறது வேதம். அது இல்லையென்றால் இரட்சிப்பு யாரிடமிருந்து வருகிறது? முன்குறித்தல் இல்லையென்றால் இரட்சிப்பு கடவுளிடமிருந்து வரவில்லை என்றாகிவிடும். அவரிடமிருந்து வராதது இந்த உலகத்தைச் சார்ந்தது; அது நிலைக்காது. மனிதன் விசுவாசத்திற்காக முன்குறிக்கப்படாதிருந்தால் மறுபிறப்பும், விசுவாசமும் மனிதனிலிருந்து பிறந்தவைகளாகிவிடும். பாவியாகிய மனிதனில் பிறக்கும் எதுவும் பாவக்கறைபடிந்தது; பரிசுத்தமற்றது. மனிதகிரியையில் தங்கியிருக்கும் இரட்சிப்பு இந்த மண்ணோடு போய்விடும்; பரலோகத்தில் இருந்து வருவது நித்தியமானது. மனிதரில் சிலர் முன்குறிக்கப்பட்டிருப்பதால்தான் அவர்கள் நிலையான நித்திய இரட்சிப்பை கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் அடைகிறார்கள்.
மனித சித்தம்
பிறப்பில் இருந்தே மனிதன் சுயாதீன சித்தத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் அதன் இயல்புக்கேற்றவிதத்தில் மட்டுமே முழுச்சுதந்திரத்தோடு இயங்கும்; மாறாக இயங்கும் வல்லமை அதற்கில்லை. இயல்பில் பாவியாகிய மனிதன் சகலவித சுதந்திரத்தோடும், விருப்பத்தோடும், ஆர்வத்தோடும், பெலத்தோடும் பாவத்தைச் செய்கிறான். பாவத்தைத்தவிர வேறெதையும் செய்யும் சித்தம் அவனுக்கில்லை. அவனுடைய சித்தமும், கிரியைகள் அனைத்தும் பாவத்தால் கறைபடிந்திருக்கின்றன. பாவக்கறையில்லாத எந்தச் செயலையும் மனிதன் செய்யக்கூடிய நிலையில் இல்லை. எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? சிறுத்தை தன் புள்ளிகளைப் போக்கிக்கொள்ள முடியுமா? மனிதன் தன் சித்தத்தை அதன் இயல்புக்கு மாறாகப் பயன்படுத்த வழியில்லை.
வேதவார்த்தை
வேதவார்த்தையில்லாமல் விசுவாசம் வராது. ‘நான் செய்ததெல்லாம் வார்த்தையைக் கொடுத்தது மட்டுந்தான்’ என்றார் மார்டின் லூத்தர். ஆவியானவர் பயன்படுத்தும் கருவி வார்த்தை. குழாய் இல்லாமல் தண்ணீர் கிடைக்குமா? வார்த்தையால் வராதது வெறும் காகிதக் கப்பல். ஆவியும் வார்த்தையும் இணைந்தே ஆவிக்குரிய விசுவாசத்தை அடையச்செய்கின்றன. வார்த்தை மட்டும் அதைச்செய்வதில்லை; ஆவி மட்டும் அதைத் தருவதில்லை. வார்த்தையில்லாத சுவிசேஷப்பணி வரண்டுபோன பாலைவனம். ஆவியில்லாத பிரசங்கம் அக்கினியில்லாத அடுப்பு.
ஆராதனை
ஆராதனை கர்த்தருக்குரியது; கர்த்தர் கட்டளையிட்டு நாம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டது. அதில் அவருக்கே இறையாண்மையுண்டு; அதை ஆளுகிறார் கர்த்தர். தன் வார்த்தையால் அதை ஆண்டு பாதுகாக்கும் கர்த்தர், வார்த்தையின்படி ஆராதனை செய்யச்சொல்லுகிறார். ஆராதனையின் பகுதிகளை வார்த்தை மட்டுமே விளக்குகிறது; அதில் எதையும் நுழைப்பதும், அகற்றுவதும் சிலை வணக்கம் போன்றது. அவர் கேட்காத ஆராதனை அந்நிய நெருப்பு; கேட்டதைக் கொடுக்க மறுப்பதும் அந்நிய ஆராதனை. அவரைப் போற்றித் துதிக்க மட்டுமே ஆராதனை; நம்மை மகிழ்விக்கும் அனைத்திற்கும் பெயர் மானுடத்துதி. ஆராதனையில் இருக்கவேண்டியது தேவபயமும், தாழ்மையும்; இருக்கக்கூடாதது தன்னலமும், தற்பெருமையும். மொத்தத்தில் கர்த்தர் ஏற்படுத்திய ஆராதனையால் கர்த்தரை மட்டுமே மகிமைப்படுத்தவேண்டும்.
இறையியல்
சத்தியத்திற்கு (Truth) இன்னொரு பெயர் இறையியல் அல்லது இறைபோதனை (Doctrine). இயேசுவுக்கு இன்னொரு பெயர் வார்த்தை (யோவான் 1:1); சத்தியம் (யோவான் 14:6). சத்தியம் உன்னை விடுதலையாக்கும் என்றார் இயேசு (யோவான் 8:32). சத்திய ஞானத்தில் உங்களை உயர்த்தவைக்கின்ற ஆவியைக் கர்த்தர்தர ஜெபிக்கிறேன் என்றார் பவுல் (எபேசியர் 1:18). இறையியல் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை; கிறிஸ்தவத்தின் அடித்தளம் கிறிஸ்தவ இறையியல். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதையும் இறையியலே உறுதிசெய்கிறது. இறையியல் இல்லாமல் சுவிசேஷம் இல்லை; மெய்யான விசுவாசத்திற்கும் இடமில்லை (யோவான் 8:31). இறையியலால் அலங்கரிக்கப்படாத பிரசங்கங்கள் அலங்காரம் செய்யப்பட்ட பிணங்கள்; உப்பில்லாப் பண்டங்கள். சத்தியத்தில் நிரம்பியிராத இருதயங்கள் ஆத்மீகப் பட்டினியை அனுபவிக்கின்றன. உணவில்லாமல் உயிர்வாழ முடியுமா? இறையியல் இல்லாத திருச்சபைகள் வெறும் மயானங்கள்; அங்கே பிணங்களுக்கு மட்டுமே வேலை. இறையியலை உதாசீனப்படுத்துகிறவன் இறைவனையே வேண்டாம் என்கிறான்.
மனிதனும் தெய்வமுமாய்
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தேவனும், மனிதனுமாய் இந்த உலகத்தில் பிறந்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற அது அவசியமாய் இருந்தது. தேவனாக மட்டும் கிறிஸ்து மீட்பின் திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது; மனிதனாக மட்டும் பிறந்தும் அதைச் செய்திருக்க முடியாது. மனிதனின் பாவங்களுக்கு நிவாரணம் காண பாவமற்ற மானுடம் தன்னைப் பலிகொடுக்க வேண்டியிருந்தது. தெய்வீகத்தால் மட்டும் அதைச் செய்திருக்கமுடியாது. தெய்வீகமும் மானுடமும் இணைந்த ஒருவர் தேவை. நித்தியத்தில் இருந்து இயேசு தெய்வீகத்தோடு மட்டுமே தேவகுமாரனாக இருந்தார். அவர் தன் தெய்வீகத்தோடு மானுடத்தை இணைத்துப் பாவமில்லாதவராகப் பிறந்தார்; இயேசு மட்டுமே அப்படிப் பிறந்தவர். கிறிஸ்துவில் தெய்வீகம் மானுடத்தோடு கலக்கவில்லை; இரண்டும் தனித்தன்மையோடிருந்தன. இயேசுவில் இரண்டு நபர்கள் இருக்கவில்லை; அவர் ஒருவராகவே இருந்தார். அவரது தெய்வீகம் மானுடத்தை ஆக்கிரமிக்கவில்லை; இரண்டும் கலக்காமலும், ஒன்றையொன்று பாதிக்காமலும், கிறிஸ்துவில் ஒன்றாக இருந்தன. சபை வரலாற்றில் பல போலிப்போதனைகள் இதைத் தவறாக விளக்கியிருக்கின்றன; விளக்கியும் வருகின்றன. இந்த சத்தியம் கிறிஸ்தவத்தின் உயிர்நாடி.
நாகமானைச் சந்தித்த கிருபை – சுபி –
பணத்தாலும் பொருளாலும்
தன்னதிகார பெலத்தாலும்
மாபெரும் வீரனென்ற
மக்கள் பாராட்டாலும்
எளிதாய்த் தன் நோய்க்கு
எலிசாவிடம் தீர்வுபெற
எண்ணினான் நாகமான்
தாழ்மையை வெறுத்தான்
கிருபையை நிராகரித்தான்
இரட்சிப்பை நிந்தித்தான்
இலவசமாய் வருவதெல்லாம்
தன் தகுதிக்கு ஆகாதென
தட்டியெறிந்தான் நாகமான்
வராது தீர்வு உடல்நோய்க்கு
கிடைக்காது மருந்து இதயவியாதிக்கு
கிருபையை நீ ஏற்கமறுத்தாலென்று
செவ்வினர் சேவகர் அவனிடம்
புத்தியான அவர்கள் பேச்சால்
புத்தி தெளிந்தது நாகமானுக்கு
தாழ்த்தியது கிருபை சீரியனை
நீக்கியது ஆவி தொழுநோயை
இறுமாப்போடு இஸ்ரவேல் வந்து
இளக்காரமாய்ப் பேசியவன்
இஸ்ரவேலின் தேவனைவிட
இல்லைவேறு தேவனுலகில் என்றான்