திருமறைத்தீபம் 2020 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யக்கூடாது
3. தெரிந்துவைத்திருப்பதும் புரிந்துவைத்திருப்பதும்
4. திருமறை போதிக்கும் தூய வாழ்க்கை
5. பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது
7. பக்திக்கு விரோதி பாரம்பரியம்
9. சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
2020 இதழ் 2
வணக்கம் வாசகர்களே! இருபத்தி ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது இதழ். அதிலும் மூன்று மாதங்கள் உருண்டோடிவிட்டன. மறுபடியும் இதழ் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இந்த இதழ் கொஞ்சம் வித்தியாசமாக வெளிவருகிறது. இரண்டு புதிய ஆக்கங்களைத்தவிர, இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பிருந்த இதழ்களில் வெளிவந்துள்ள நல்ல சில ஆக்கங்களைத் தெரிவுசெய்து இந்த இதழில் மறுவெளியீடு செய்திருக்கிறோம். அதற்குக் காரணம் உண்டு.
இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நூற்றுக்கணக்கான புதிய வாசகர்கள் இதழை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நேரடியாக இதழைப் பெறுகிறவர்கள் மட்டுமல்லாமல் இணைய தளத்தில் அதை வாசிக்கிறவர்களும் அநேகர். எல்லோருக்கும் இதழ் தொகுப்புகளை வாங்கக் கூடிய வசதியும் இருக்காது. அதனால், இந்த மறுவெளியீடுகள் அவர்களுக்கும், உங்களுக்கும்கூட பயனளிக்கும்.
நம்மினத்தில் எவரும் எந்த ஆக்கத்தையும் நூலையும் ஒருதடவை மட்டும் வாசிப்பதே வழக்கம். மீண்டும் மீண்டும் ஒரே நூலை வாசிக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது. இதெல்லாம் தகுந்த வாசிப்புப் பயிற்சி இல்லாததனால் வந்திருக்கும் பிரச்சனை. நல்ல நூல்களையும், நல்ல ஆக்கங்களையும் நாம் பல தடவைகள் வாசிப்பது அவசியம். அதுவே என்னுடைய வழக்கம். அது பற்றி இந்த இதழிலும், ஒரு நூலிலும் விளக்கியிருக்கிறேன். அதன் மூலம் வாசிக்கும் விஷயங்கள் ஓடிப்போய்விடாதபடி நம் மனதில் தங்கியிருக்கும். கிறிஸ்தவர்கள் இதைச் செய்வது மிகவும் அவசியம். வேதத்தை ஒரு தடவை வாசிப்பதோடு மட்டுமா நிறுத்திவிடுகிறோம்? ஆகவே இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் மீண்டும் வாசித்து சிந்திக்கவேண்டியவை.
மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கும் ஆக்கங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அவசியத்தையும், திருச்சபை இருக்கவேண்டிய நிலையையும், சத்தியத்தில் வளரவேண்டியதன் அவசியத்தையும், சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிப்படைவதற்கு அவசியமானதொரு அடிப்படை சத்தியத்தையும் விளக்குவதாக இருக்கின்றன.
இதுவரை வெளிவந்திருக்கும் இதழ்களைப்போல இதுவும் உங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் இதைப் பயன்படுத்துவாராக. – ஆர்
அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யக்கூடாது
சகரியா 4:10, ‘அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?’ என்ற வினாவை எழுப்புகிறது. இதற்குக் காரணம் பாபிலோனின் சிறைவாசத்தில் இருந்து திரும்பிவந்தவர்கள் எருசலேம் ஆலயத்தைத் திருத்திக் கட்டவேண்டியதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததுதான். பாழடைந்திருந்த ஆலயத்தையும் அதன் மதிலையும் மீண்டும் கட்டி முடித்து மறுபடியும் நாட்டில் மக்களைக் குடியேற்றுவது என்பது பெரிய காரியம். ஆனால் அதன் ஆரம்பம் அன்று அநேகருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. லேவியரும், ஆசாரியர்களும் இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டபோது அது எல்லோருக்கும் மிகவும் அற்பமானதாகவும், சாதாரணமானதாகவுந்தான் தெரிந்தது. அதை எவரும் பொருட்படுத்தவில்லை. அதுவும் இத்தனைப் பெரிய காரியம் மிகச்சிலரைக் கொண்டே அன்று ஆரம்பமானது. சகரியா சொல்லுகிறார், கண்களுக்குத் தெரியும் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை பண்ணாதீர்கள் என்று.
சபை வரலாற்றில் பெருங்காரியங்கள் எல்லாமே அற்பமான ஆரம்பத்தைத்தான் கொண்டிருந்திருக்கின்றன. இன்று நம்மில் பலர் பெருமையோடு வியந்து நினைவுகூரும் சீர்திருத்த வரலாற்றின் ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. நவீன உலகில் நாம் மலைத்துப்போய் தலைதூக்கிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து உலக நாடுகளின் தலை நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஆரம்பகாலமும் அற்பமானதாகத்தான் இருந்தது. அதுவும் மேபிளவர் கப்பலில் இங்கிலாந்தைவிட்டு வெளியேறிய பியூரிட்டன்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஆதங்கம் மட்டுமே இருதயத்தில் இருந்தது. அவர்கள் கால்பதித்த புதிய தேசத்தில் அவர்களுக்குச் செழிப்பு காத்திருக்கவில்லை; அவர்களின் வரலாற்று ஆரம்பம் அற்பமானதாகத்தான் இருந்தது. அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைச் செய்யக்கூடாது என்கிறார் சகரியா (சகரியா 4:10).
நம் ஊழியங்களும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பெருகவேண்டும், பெரும் பேர் பெறவேண்டும் என்ற ஆசை அநேகருக்கு இருக்கிறது. அவற்றை அடைய என்னென்னவோ செய்துகொண்டிருப்பவர்களை கிறிஸ்தவ உலகு அறியும். அவர்களுக்குச் செழிப்போடு வாழவேண்டுமென்று ஆசை. கர்த்தரின் ஊழியமும், கர்த்தரின் மெய்யூழியர்களும் செழிப்பைக் காணமாட்டார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. செழிப்பை உண்டாக்குவதும், ஒருவருக்குக் கொடுப்பதும் பரிசுத்த ஆவியானவரின் பணி; அதை அவர் தன் சித்தப்படியே செய்கிறார். நாம் அவரை வற்புறுத்திக்கேட்டு அதை அடையமுடியாது. ஜெபித்தும் அதை அடைய முடியாது. அவரே அதை அவருடைய வழிப்படி நமக்குத் தந்தால்தான் உண்டு. கர்த்தரின் ஊழியங்கள் எப்போதும் இந்த உலகில் ஆரம்பத்தில் செழிப்போடு ஆரம்பிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்த்தருக்கு வல்லமையில்லை என்று அர்த்தமல்ல; பரிசுத்த ஆவியானவர் பலமிழந்து போய்விட்டார் என்றும் தவறாக எண்ணக்கூடாது. ஆண்டவர் அப்போஸ்தலர்களை சுவிசேஷம் சொல்ல அனுப்பிவைத்தபோது அவர்களுடைய ஊழியம் சின்னதாகத்தான் ஆரம்பித்தது. இன்னொருவிதத்தில் சொன்னால் அற்பமானதாகத்தான் இருந்தது. கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்பதுபோல் அவர்களுடைய அற்பமான ஆரம்ப ஊழியம் வல்லமையோடுதான் ஆரம்பித்தது. இருந்தாலும் அது சுற்றியிருப்பவர்களினாலும், உலகத்தாலும் அற்பமானதாகத்தான் கருதப்பட்டது.
மீட்பின் வரலாற்றில் சில காலப்பகுதிகளில் கர்த்தர் மக்கள் மத்தியில் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்குகிறார். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டு எலிசாவின் காலம் (2 இராஜாக்கள்) அப்படியிருந்தது. நாம் வாழும் காலம் இன்று அப்படியிருக்கிறது. அதிகளவில் கர்த்தரின் மெய்யான ஊழியத்தையும் வார்த்தைச் செழிப்பையும் நாம் எல்லா இடங்களிலும் காணமுடியாமல் இருக்கிறது. உலகில் சில பகுதிகளில் சில திருச்சபைகளில் அதைக் காணமுடிகிறது. ஆனால், பெரும் செழிப்பையும், எழுப்புதலையும் நாம் இன்று காணவில்லை. அதற்குக் காரணமென்ன? சுவிசேஷம் பலமற்றுப் போய்விட்டதா? கர்த்தரின் கரம் வலிமையற்றுப் போய்விட்டதா? இல்லவேயில்லை! மக்களின் இருதயம் கடினப்பட்டிருக்கிறது. செவித்தினவுள்ளவர்களாக அவர்கள் காதுக்கு இதமாக இருப்பதை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். அவர்கள் இருதயத்தைப் பொய்க்கு விற்றிருக்கிறார்கள். நிதானித்து ஆராய்ந்து சத்தியத்தை மட்டுமே அறிந்துணரும் பக்குவமில்லாதிருக்கிறார்கள். அதனால் கர்த்தர் வார்த்தைப் பஞ்சத்தை உண்டாக்கியிருக்கிறார். ஆசிய நாடுகளையும், இந்தியாவையும் பார்க்கும்போது பெருமளவில் நிகழ்ந்து வரும் சுவிசேஷ ஊழியங்களில் உண்மையில்லை என்பதை உணர்வதற்கு ஒருவர் ராக்கட் விஞ்ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எங்கு திரும்பினாலும் போலிப்பிரசங்கங்களும், செழிப்புபதேசப் போதனைகளும் கொரோனா வைரஸைப்போல செழிப்போடு பரவி வருகின்றன. மெய்யான சுவிசேஷ ஊழியங்கள் அங்குமிங்குமாக அற்பமானதாக இருந்து வருகின்றன. விசுவாசமுள்ள, சத்தியத்தை சத்தியமாக விளக்கிப்போதிக்கும் பக்திவிருத்தியுள்ள, பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாத பிரசங்கிகளும், போதகர்களும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவிதத்திலேயே இருந்து வருகின்றனர். இது ‘அற்பமான ஆரம்பத்தின் காலம்.’ அதாவது இவை சத்தியப் பஞ்சத்திற்கு மத்தியில் சொற்பமாக இருந்து வரும் உண்மை ஊழியங்கள். இருந்தபோதும் இவை மட்டுமே கர்த்தரின் மெய்யான ஊழியங்கள். இவை சொற்பமானவையாக, பெருங்கூட்டத்தைக் கொண்டிராதவையாக இருந்தபோதும் இவை எதிர்காலத்தில் வரப்போகும் ஆத்மீக செழிப்பிற்கு அடையாளங்கள். அதனால்தான் சகரியா, அற்பமான ஆரம்பத்தின் நாட்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்கிறார்.
இத்தகைய அற்பமான ஆரம்பத்தின் காலப்பகுதியில்தான் 1995ல் திருமறைத்தீபம் ஆடம்பரமின்றி வெளிவர ஆரம்பித்தது. அது வெளிவரப்போகிறதென்பதும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுபற்றிய ஹொலிவுட், போலிவுட் முன்னறிவிப்புக்கள் கொடுக்கப்படவில்லை. அற்பமான முறையில் கர்த்தரை நம்பி வெளிவர ஆரம்பித்த காலாண்டிதழ் இன்று 25 வருடங்களைக் கடந்து கர்த்தரின் கிருபையால் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் கர்த்தர் செய்துவருகின்ற ஆத்மீகக் கிரியைகளை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவிருக்கும் ஒரு நினைவுக்கூட்டத்தை பெங்களூர் நகரத்தில் ஜனவரி மாதம் 17ம் தேதி மாலை இதழ் வெளியீட்டாளர்களும், அந்நகரில் இருந்துவருகின்ற கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபையும் நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தை போதகர் முரளி ஜெபத்தோடு ஆரம்பித்து வைத்து உரையாளர்களை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த டாக்டர், போதகர் ஸ்டீபன் பேர்ட் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். திருமறைத்தீப இதழுக்கும் அவருக்கும் நெடுநாள் தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. அதன் பணிக்காக ஜெபித்து வந்திருப்பவர்களில் அவரும் ஒருவர்; அதில் ஒரு சில ஆக்கங்களையும் எழுதியிருக்கிறார்.
அவரைத் தவிர மேலும் ஐந்து பேர் அக்கூட்டத்தில் பேசினார்கள். அதில் மூன்று பேருக்கு இதழின் ஆரம்ப நாளில் இருந்து அதோடு தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. முக்கியமாக அந்த ஐந்து பேர்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமறைத்தீபம் அழிக்கமுடியாத ஆத்மீகத் தாக்கத்தை ஏற்படுத்தித் தன் அச்சைப் பதித்திருக்கிறது. அவர்கள் வெறும் வாசகர்களல்ல; பத்திரிகையினால் வாழ்க்கையில் மாற்றங்களை அடைந்தவர்கள். பத்திரிகையின் பணிகளில் வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறவர்கள். அவர்களுடைய உரையின் சிறப்பைப்பற்றிக் கூறவேண்டுமானால், ஐந்து பேருடைய உரையும் அவர்களுடைய இருதயத்தில் இருந்து வருவதாக இருந்தன. உரை நிகழ்த்தவேண்டுமென்பதற்காக எதையும் சொல்லாமல், இதழினால் தங்களுக்கேற்பட்ட வாழ்க்கை மாற்றத்தை நெஞ்சைத்தொடும் விதத்தில் அவர்கள் சொன்னது சிறப்பான அம்சம். திருமறைத்தீபம் தொடர்ந்து பல்லாண்டு காலத்துக்கும் பணிபுரிய வேண்டும் என்ற அவர்கள் தங்கள் ஆவலைப் பகிர்ந்துகொண்டார்கள். தலைமையுரை நிகழ்த்திய டாக்டர் ஸ்டீபன் பேர்ட் முதல் ஏனைய ஐந்துபேரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களும், எண்ணங்களும் கர்த்தர் இந்த இதழ் மூலம் இந்த அற்பமான ஆரம்பத்தின் காலங்களில் எத்தனைப் பெருஞ்செயல்களைச் செய்துவருகிறார் என்று உணர முடிந்தது. ஒரே நாளில் இருபத்து ஐந்து வருட அனுபவங்களை மனதில் அசைபோட்டுப் பார்க்கிறபோது எவருக்கும் அத்தகைய மலைப்பு ஏற்படத்தான் செய்யும்.
அன்று இதழாசிரியரோடு, இதழ் பணிகளில் ஈடுபட்டிருக்கிற சிலர் அவர்களுடைய உழைப்புக்காகவும், வைராக்கியங்கொண்ட தளராத பணிக்காகவும் கௌரவிக்கப்பட்டார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது கர்த்தரின் மகிமைக்காகவும், தமிழினத்துக் கிறிஸ்தவத்தின் சத்திய விழிப்பிற்காகவும் மட்டும் செயல்பட்டு வருகிற அவர்கள் இவ்வகையில் கௌரவிக்கப்பட்டது அத்தனை வாசகர்களையும் சாரும். இறுதியில் இதழாசிரியர் தனது நன்றியுரையைத் தெரிவித்தார். அதில் தன்னோடு இணைந்து செயல்பட்டு வருகிறவர்களுக்கும், தொடர்ந்து இதழ்மூலம் சத்தியவிழிப்படைந்து வருகின்ற வாசகர்களுக்கும், அருமையாக கூட்டம் நடந்துமுடிய தங்கள் உழைப்பைத் தந்திருந்த பெங்களூர் திருச்சபையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஆடம்பரம் எதுவுமின்றி அமைதியாகவும், அழகாகவும் கூட்டம் அன்று நிறைவுபெற்றது.
கூட்டத்திற்கு தலைமைதாங்கி சுருக்கவுரை நிகழ்த்தியவரின் பேச்சை இங்கே தந்திருக்கிறேன்:
போதகர் ஸ்டீபன் பேர்ட்
டாக்டர், போதகர் ஸ்டீபன் பேர்ட், வட கரலைனா, அமெரிக்கா
‘அற்பமான ஆரம்பத்தின் காலத்தை அசட்டை செய்யாதீர்கள்: ஒரு சிறிய இதழை கர்த்தர் எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார்’
திருமறைத்தீபம் 25 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் வர்ஜீனியாவில், டிரினிடி திருச்சபையில் அங்கத்தவனாக இருந்தபோது, 1995ல், போதகர் பாலாவிடம் இருந்து வந்த ஜெபக்குறிப்பில் இதழின் ஆரம்பத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போதும் நினைவிலிருக்கிறது. இத்தனை காலத்திற்குப் பிறகு எத்தனை ஆயிரம் பேர் இதனை வாசித்து வருகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? ஒவ்வொரு இதழிலும் கொடுக்கப்படும் சத்தியங்கள் இன்னும் எத்தனையோ விதங்களில் மேலும் பலரை அடைந்து வருகின்றது.
போதகர் பாலா இதழின் முதன்மை ஆசிரியராக இருந்து வருகிறார். நான் போதகர் பாலாவை 2005ம் ஆண்டில் சந்தித்தேன். அவரோடு சில தடவை நான் இந்தியா வந்திருக்கிறேன்; இப்போது பெங்களூருக்கு வரமுடிந்திருக்கிறது. 2005ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் போதகர் பாலா என் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் திருமறைத்தீபம் மூலம் கர்த்தர் செய்து வரும் அற்புதமான செயல்களையெல்லாம் நான் இப்போது போதகராக இருந்துவரும் சபையார் கேட்கும் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. போதகர் பாலா சில வேளைகளில் சில ஊழியங்களை ஆரம்பித்திருக்கிறார்; சில சமயங்களில் ஒருசில தொடராமல் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும், திருமறைத்தீபத்தின் பணி நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த இதழின் விசேஷ தன்மை என்ன? இது போதகர்களுக்கும், திருச்சபை ஊழியர்களுக்கும் அவசியமான, தேவையான, தெளிவான வேதபோதனைகளை அளித்து வருகின்றது. அதில் வெளிவருகின்ற ஆக்கங்கள் அனைத்தும் உயர்தரமானவையாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், காலத்துக்குப் பொருத்தமானதாகவும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாகவும் இருந்து வருகின்றன. அதுவும் நம்மத்தியில் வேதபூர்வமான, உயர்தரமான நல்ல நூல்கள் தமிழில்லை; இருந¢தபோதும் திருமறைத்தீபம் அந்தக் குறையை நீக்கி ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படும் தரமான வேதவிளக்கங்களை அளித்துவருகின்றது. அதேநேரம், ஆசிரியர் அருமையான ஆக்கங்களைத் தானே எழுதி வெளியிட்டும் வருகிறார். மேலாக, திருமறைத்தீபம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது!
இத்தகைய தரமான இதழ் நம்மத்தியில் இருப்பதற்குக் காரணமென்ன? போதகர் பாலா தளர்வடையாத உழைப்பாளி; அநேக வருடங்களாக இதழில் அத்தனைப் பணிகளையும் தானே பெரும் உதவிகளெதுவுமின்றி செய்துவந¢திருக்கிறார். சமீப காலமாக அவருக்குத் துணையாக விசுவாசமும், ஊக்கமுமுள்ள ஊழியராக ஜேம்ஸ் இணைந்து பணியாற்றுகிறார். அதேநேரம் இப்பணிக்கு ஒத்துழைப்புக்கொடுத்து பின்பலமாக இருந்து வரும் நியூசிலாந்து சபையையும் மறந்துவிடக்கூடாது.
போதகர் பாலா இதழில் வரும் ஆக்கங்கள் விஷயமாக மிகவும் கவனத்தோடு செயல்படுகிறார். அனைத்து ஆக்கங்களும் வாசகர்களுக்கு அவசியமானதாகவும், நடைமுறைக்கொத்ததாகவும், வாசிப்பதற்கு எளிமையாகவும் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை காட்டுகிறார். இது ஒரு பெரும் ஈவு! தரமான வேதபோதனைகள் மூலம் வாசகர்களின் இருதயமாற்றத்தையே, ஆத்மீக மாற்றத்தையே ஆசிரியர் எதிர்பார்ப்பதால் மிகுந்த சிரத்தையோடு இதழில் வரும் ஆக்கங்களைக் கவனத்தோடு வெளியிட்டு வருகிறார். அத்தகைய மாற்றத்தைப் பலர் அடைந்திருக்கிறார்கள்; அடைந்தும் வருகிறார்கள்.
சத்தியத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. வேத வசனங்களும், தெளிவான வேதபோதனைகளும் அவற்றின் இலக்கை அடையாமல் இருக்காது. போதகர் பாலாவுடன் எனக்கிருக்கும் 15 வருடகால நட்பில் இதற்கான எண்ணற்ற உதாரணங்களை அவரிடம் இருந்து நான் கேட்டறிந்திருக்கிறேன். போதகர்களின் வாழ்க்கை மாறியிருக்கின்றது; திருச்சபைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; சத்தியத்திற்காக திருச்சபைப் பிரிவுகளில் இருந்து விலகி வந்திருக்கிறவர்களும் அநேகர். சிலர் பலவருடங்களாக இதழை வாசித்திருக்கிறார்கள்; சத்தியம் அவர்களில் செயல்பட ஆரம்பிக்குமுன். நாம் சத்தியத்தில் வளர வேண்டியவர்களாக இருக்கிறோம்; எல்லாவற்றையும் ஒரே நாளில் நாம் அடைந்துவிடுவதில்லை. திருமறைத்தீபம் கிறிஸ்தவ வாசகர்களுக்கு வாசித்து, நிதானித்து, சிந்திக்கின்ற வாய்ப்பை அளித்திருக்கின்றது.
இந்த மாலை நேரத்தில் நாம் கிறிஸ்துவில் மிகவும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும். நாம் காணாத வேளைகளிலும் கர்த்தர் தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். சிலவேளைகளில் நாம் தளர்ந்துபோகிறோம்; ஆனால் அதற்கு அவசியமில்லை. எனக்குத் தெரியும், சிலவேளைகளில் இந்த இதழ் பணிகளை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் கவனம் செலுத்தலாமா என்றுகூட போதகர் பாலா எண்ணியிருந்திருப்பார். அவருக்கு வேறு எத்தனையோ பணிகள் இருப்பதோடு உள்ளூரிலும், வேறு நாடுகளிலும் ஊழியப்பணிகள் இருந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும். இருந்தபோதும் இந்த இதழ் பணி கர்த்தரால் தனக்களிக்கப்பட்ட ஊழியப் பொறுப்பு என்பதை அவர் உணர்ந்து அதில் விசுவாசமாக இருக்க உழைத்து வருகிறார்.
என் உரையை நாம் முடிக்கின்ற இவ்வேளை, திருமறைத்தீபம் கர்த்தரால் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதம் என்பதோடு, போதகர் பாலாவுக்கும் நாம் பெருங்கடனாளியாகவும் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒருவர் ஒரு பெரும் சுவிசேஷப் பணியைச் செய்வதற்கு தீர்மானிக்கின்றபோது அவர் அதற்கு அதிக தியாகத்தையும் நேரத்தையும் விலையாகச் செலுத்தவேண்டும். அதன் நல்விளைவுகளை உணரக் காலமெடுக்கும்; அதன் பலன்கள் பெரிதானவை.
நாம் ஆவியில் விதைப்பதெல்லாம் ஆவியில் கனிகொடுக்கும். நாம் அற்பமான ஆரம்பத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது. இந்த மாலை நேரத்தில் கர்த்தரின் ஈவான திருமறைத்தீபத்திற்காகவும் போதகர் பாலாவின் விசுவாமுள்ள பணிகளுக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். திருமறைத்தீபம் தொடர்ந்து வேதத்திற்கு விசுவாசமுள்ளதாக ஒளிவீசட்டும். கர்த்தருக்கே அனைத்து மகிமையும்; அவருடைய இராஜ்ஜியம் விஸ்தரிக்கட்டும். ஆமென்!
தெரிந்துவைத்திருப்பதும் புரிந்துவைத்திருப்பதும்
நம்மினத்தில் வாசிப்பது என்பது குறிஞ்சிப்பூ கிடைப்பதுபோல்தான் என்பதை நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இதனால் வாசிப்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நல்ல நூல்களைக்கூட விலைகொடுத்து வாங்கிப் படிப்பது அநேகருக்குக் கஷ்டமானதாகத் தெரிகிறது. மலிவு விலையில் கொடுத்தாலும் வாங்குகிறவர்கள் மிக அரிது. பணமில்லை என்பது வெறும் சாக்குப்போக்குத்தான். வேறு எத்தனையோ காரியங்களுக்கு அவர்கள் பணத்தை செலவிடத் தவறுவதில்லை. நூல்களை வாங்கப் பணத்தை செலவிட அநேகருக்கு மனதில்லை. அதற்குக் காரணமுண்டு. நூல்களை வாங்கினால் அதை ஒரு தடவை வாசித்தபின் என்ன செய்வது? என்ற எண்ணம் பலருக்கு இருப்பதால் அவர்கள் நூல்கள் பக்கமே போவதில்லை. ஒருதடவை வாசிக்கப்போகிற புத்தகத்தை வாங்க ஏன் பணத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஒரு நல்ல ஆக்கத்தை ஒரு தடவைக்கு மேல் வாசிக்கிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த நிலைமை தொடர்ந்தால் கிறிஸ்தவம் நம்மினத்தில் மிகவும் கீழடைந்த நிலையில் பலவீனமானதாக மட்டுமே இருக்கமுடியும்; அதுவும் கிறிஸ்தவ ஊழியர்கள் அறிவற்றவர்களாக, சிந்திக்கத் தெரியாதவர்களாக, முடமாகவே இருக்கப் போகிறார்கள்.
வாசிப்பு மோசமான நிலையில் இருப்பதற்கு நம்முடைய கல்வி முறை மிகமுக்கியமான காரணம் என்பதை பலதடவைகள் விளக்கியிருக்கிறேன். ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்விமுறையே தொடர்ந்தும் நம்மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுப்பதும், பரீட்சையில் மனப்பாடம் பண்ணியவற்றை அப்படியே பதிலாக ஒப்புவிப்பதுமே தொடர்கிறது. இதனால் சிந்திக்கவும், அறிவு வளரவும் நம் கல்விமுறை துணைபோவதாக இல்லை. வாசிப்பு என்பதே நம் கல்விமுறையில் துப்பரவாக இல்லை; அத்தகைய பயிற்சியளிக்கும் ஒரு கல்லூரியையும் நம்மினத்தில் காணமுடியாது. இதனால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்ன தெரியுமா? இதுபற்றி பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனியுங்கள், ‘இன்றிருக்கும் நம்முடைய கல்வி முறையினால் நூறு பக்கமுள்ள ஒரு நூலை வாசித்து அதன் உள்ளடக்கத்தையும், கருத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களில் அரைவாசிப்பேர் கூட இல்லை. அதுவும் முனைவர் படிப்புப் படித்தவர்களில் பத்தில் ஒருவருக்குக்கூட அந்தத் திறமை இல்லை. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்.’ இது ஜெயமோகன் ஒரு கல்லூரி விழாவில் சொன்னது. வாசிக்கும்போதே கவலையை உண்டாக்குவதாக இருக்கிறது இல்லையா?
அவர் தொடர்ந்து பேசியபோது, ‘இந்தியாவில், தமிழினத்தில் சாதாரணமாகவே எவரும் ஒரு கருதுகோளைப் (concept) புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் ஒரு தகவலைத் (information) தெரிந்துகொள்ள முடிகிறதே தவிர ஒரு கருதுகோளைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. இந்தியாவிலும், நம்மினத்திலும் அறிவியல் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஏறக்குறைய ஐம்பதாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே அறிவியலாளராவதற்கான அடிப்படைத் தகுதியிருக்கிறது. அதற்குக் காரணம் கருதுகோள்களை புரிந்துகொள்ளுவதற்கான பக்குவம் பெரும்பாலானோரிடம் இல்லாததுதான். ஒன்றைத் தெரிந்துவைத்திருப்பதற்கும் புரிந்துவைத்திருப்பதற்கும் வேறுபாடிருக்கிறது. நம் கல்விமுறை எதையும் தெரிந்துவைத்திருக்க மட்டுமே நமக்குத் துணைசெய்கிறது; புரிந்துகொள்வதற்கல்ல’ என்று சொன்னார். இதைத்தான் நான் இந்த இதழ்களில் வாசிப்பு பற்றிய ஆக்கங்களில் சுட்டியிருந்தேன்.
கருதுகோள் என்பது ஒரு ஐடியா. படைப்பு என்பது ஒரு கருதுகோள். மூலபாவம் என்பது ஒரு கருதுகோள். கிருபையின் போதனைகள் என்பது ஒரு கருதுகோள். முன்குறித்தல், தெரிந்துகொள்ளுல், பரிகாரப்பலி, போபநிவாரண பலி ஆகியவை கருதுகோள்கள். இந்தக் கருதுகோள்களைப் புரிந்துகொள்வதில்தான் நம்மவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதை அவர்களால் தகவல்களாகத் அறிந்துவைத்திருக்க முடிகிறது; கிளிப்பிள்ளைபோல் அவற்றை ஒப்புவிக்க முடிகிறது. ஆனால் காரணகாரியங்களோடு அவற்றை அவர்களால் விளக்கமுடியவில்லை. உதாரணத்திற்கு மூலபாவத்தைப்பற்றி உங்களால் என்ன சொல்ல முடியும் என்று ஒருவரைக் கேட்டால், அது ஆதாமின் பாவம் அல்லது ஆரம்பப் பாவம் அல்லது அது எல்லோரையும் கெடுத்திருக்கும் பாவம் என்று மட்டுமே அவர்களுக்கு சொல்லத் தெரிகிறது. அதற்குமேல் எதையும் விளக்கமுடியாமல் தடுமாறுவார்கள். அவர்களுக்கு அதுபற்றி தெரிந்துவைத்திருக்க மட்டுமே முடிந்திருக்கிறது. அந்தக் கான்செப்ட்டை அவர்களால் புரிந்துவைத்திருக்கத் தெரியவில்லை. வெறுமனே ஒன்றைப்பற்றித் தெரிந்துவைத்திருப்பது வெறும் தகவல் மட்டுமே. அதைப் புரிந்துவைத்திருக்கிறவர்களால் மட்டுமே அதுபற்றி அறிவுபூர்வமாக விளக்கமுடியும். அதற்கு எதிர்வினையான வாதத்திற்கும் தர்க்கரீதியில் பதிலளிக்கமுடியும். அந்தப் புரிந்துவைத்திருப்பதற்கு அவசியமான கல்விமுறை நம்மத்தியில் இல்லை. நம் கல்விமுறை தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பயிற்சியை (collecting information) மட்டுமே அளிக்கிறது. அந்தத் தகவல்களையே பரீட்சைகளில் மாணவர்கள் ஒப்புவிக்கிறார்கள். பரீட்சை முடிந்தபின் மறந்துவிடுகிறார்கள். சிந்திக்க வைக்காத நடைமுறைக்குதவாத கல்விமுறை நம்மத்தியில் தொடர்கிறது.
தகவல்களை மட்டுமே சேகரிக்கும் மனப்பான்மை கொண்டிருக்கும் நம்மினம் சிந்திக்கக்கூடிய திறமையில்லாமல் டி.வி. செய்திகளிலும், வட்செப் செய்திகளிலும் மட்டுமே நேரத்தைச் செலுத்தி வருகிறது. கருதுகோள்களைப் புரிந்துகொள்ளக்கூடிய சிந்தனைத் திறன் அதற்கில்லாமல் இருக்கிறது. இந்தப் பலவீனத்தின் விளைவையே நாம் கிறிஸ்தவத்திலும் காண்கிறோம். உப்புச் சப்பற்ற, விலைபோகாத, சிந்தித்துப் பார்க்க அவசியமில்லாத மோகன் சி. லாசரஸ், சாம் செல்லத்துரை போன்றோரின் போலிப் பேச்சுக்களை எப்படி ஆத்துமாக்களால் கேட்டு அவர்களுக்குப் பின்னால் போகமுடிகிறது? அவர்களுக்குச் செய்திகளைக் காரணகாரியங்களுடன் சிந்தித்து வாதாடி நிராகரிக்கக்கூடிய பக்குவமில்லாததால்தான். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வெறும் தகவல்களைச் சிந்திக்காமல் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். தொலைக்காட்சியிலும், செய்திப் பத்திரிகைகளிலும் வரும் அறிவுக்குப் புறம்பான செய்திகளையும் ஆராய்ந்து பார்க்காமல் நம்மவர்கள் நம்பிவிடுவதற்கும் இதுதான் காரணம். நம்மினத்தவர்களின் பிரச்சனை சிந்திக்க மறுப்பதல்ல; சிந்திக்க முடியாமல் (இயலாமல்) இருப்பதுதான்.
நம்மினத்துக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு வேத அறிவில்லாமல் இருப்பதற்கும் இதுவரை நான் விளக்கியிருப்பவைதான் காரணம். அவர்களுக்கு வேத வசனங்களை வாசித்து அது விளக்கும் கருதுகோள்களைப் (concepts) புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய தகவல்களை மட்டுமே அவர்களால் கிரகிக்க முடிகிறது. ஒரு வசனத்தை வாசித்து அந்த வசனம் கொடுக்கும் போதனையை, அந்த வசனம் காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கும் இதுவே காரணம். போதகர்களாக இருப்பவர்களின் நிலையும் இதுதான். அதனால்தான் வெறும் வாக்குத்தத்த வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்லியோ அல்லது சொந்த அனுபவங்களைக் கதையாகச் சொல்லியோ அவர்கள் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் வருடத்தில் பலதடவைகள், கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நம்மினத்துப் போதகர்களுக்காக இறையியல் பயிற்சியளிக்கும் போதனைக்கூடங்களை நடத்தி வருகிறேன். அந்தப் பயிற்சிக்கூடங்களை நான் மேலைத்தேய நாடுகளில் நடத்தக்கூடிய பயிற்சிக்கூடங்கள் அளவுக்கு நடத்த முடியாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் அதில் கலந்துகொள்கிறவர்களில் குறிப்பிடக்கூடிய சிலரைத்தவிர பெரும்பாலானோர் வாசிப்புப் பயிற்சியை ஒருபோதுமே வாழ்க்கையில் கொண்டிராதவர்கள். இருந்தும் அவர்களில் அநேகர் பட்டப்படிப்பு படித்தவர்கள். வாசிப்புப் பயிற்சியில்லாததால் அவர்களின் சிந்தனைத் திறன் வளராமல் குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீர்போல இருந்து வருகிறது. எத்தனையோ தடவை இவர்கள் என்ன போதனையை ஓய்வுநாளில் கொடுத்து வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் கருதுகோள்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுடைய சிந்தனைத் திறன் வளராமல் இருப்பதால்தான்.
கடந்த வருடம் ஆத்மீக ஆலோசனை கேட்டு என்னிடம் வந்த ஒரு வாலிபனுக்கு 150 பக்கமுள்ள ஒரு சிறு நூலை வாசிக்கும்படிச் சொன்னேன். அதற்கு இரண்டு மாத தவனையும் கொடுத்தேன். இரண்டு மாதங்களுக்குப் பின் சந்தித்தபோது நூலை அரைவாசிப் பகுதிகூட வாசிக்காமல் வந்து நின்றான். ஏன் என்று கேட்டால், பல வேலைகள் இருந்தன என்று சாக்குப்போக்குச் சொன்னான். உண்மையில் அவனிடம் அந்தப் பலவீனம் இருந்தது தெரிந்தே நூலை வாசித்துவிட்டு வரும்படிச் சொல்லியிருந்தேன். அவன் என் எண்ணத்தை உறுதிப்படுதியிருந்தான். பெரும்பாலானோர் இப்படி நடந்துகொள்ளுவதற்கு அவர்களுடைய படிப்பின் பலவீனம் பெருங்காரணம். வாசிப்பு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இன்று இல்லாமலிருக்கிறது. இதனால் நேரத்தைப் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து நூலில் கவனம் செலுத்த அவசியமான சுயகட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் எவரிடமும் இல்லை. சுயகட்டுப்பாடில்லாம் வளர்ந்த முறை அவர்கள் தங்களுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்ளுவதற்காக அவர்களைக் குறுக்கு வழியில் போகச்செய்கிறது. உதாரணத்திற்கு, என்னிடம் சிலர் இணையதளத்தில் பொறுக்கியெடுத்த சில ஆக்கங்களையும், வீடியோ செய்திகளையும் அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் எனக்குப் பிறகுதான் தெரியவந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில், அவர்களால் நேரங்கொடுத்து அவற்றை வாசிக்க அல்லது கேட்க முடியவில்லை. இரண்டாவது, அவற்றை வாசித்து அல்லது கேட்டு விளங்கிக்கொள்ளக்கூடிய பக்குவம் அவர்களுக்கு இருக்கவில்லை. அதனால் அந்த வேலையை என்னைச் செய்யவைத்து என் கருத்துக்களை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இது சிரிப்பை ஏற்படுத்தினாலும், மிகவும் வருத்தப்பட வேண்டிய செயல். இப்படிச் செய்பவர்களெல்லாம் இணைய தளத்திலும், வேறு இடங்களிலும் இருந்து உழைப்பில்லாமல் பெற்றவற்றையே தங்களுடைய கல்லூரி, பல்கலைக்கழக பரீட்சைகளில் எழுதியிருப்பார்கள். இந்தப் பலவீனமே இன்றைக்கு நம்மினத்தாரை சிந்தித்து ஆராய்ந்து தெளிவான வேதபூர்வமான முடிவெடுக்கும் பக்குவமில்லாதவர்களாக இருக்க வைத்திருக்கிறது.
இன்று சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மினத்தில் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அது நல்லதுதான். ஆனால் இங்கே ஆபத்துமிருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவம் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரிவுகளைப்போல உணர்ச்சிக்கு மட்டும் தாளம்போட்டு சுகமளிப்பு வித்தைகளைச் செய்து மாய்மாலம் செய்துவரும் கிறிஸ்தவம் அல்ல. அது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது; வேதவழி காட்டுவது. சீர்திருத்த கிறிஸ்தவம் வேதப் பிரசங்கத்திற்கும் வேத போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் நம்மோடு பேசி வழிகாட்டுகிறார் என்று உறுதியாக நம்புகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேதப்பிரசங்கத்தைக் கேட்பதிலும், அதில் நல்லறிவு பெறுவதிலும் அன்றாடம் வளரவேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. வேதத்தைத் தவிர கிருபையின் போதனைகளையும், விசுவாச அறிக்கையையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தி ஆத்துமாக்களை வளர்த்தெடுப்பதில் வைராக்கியம் காட்டுகிறது. சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் பெரியவர்கள் அவர்களுக்குப் பின்வந்துள்ள சீர்திருத்தப் பெரியவர்களின் எழுத்துக்களை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்து வார்த்தையில் ஞானத்திலும், கிருபையிலும் விசுவாசிகள் வளர வழிகாட்டுகிறது. இத்தகைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, அதை வாசித்து, அதன் போதனைகளை சிந்தித்து ஆராய்ந்து விசுவாசித்து நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி வளரும் கிறிஸ்தவமான சீர்திருத்த கிறிஸ்தவம் வாசிப்பையே பழக்கப்படுத்திக்கொள்ளாமல் சிந்திக்க அவசியமான எதற்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காமல், வெறும் தகவல்களை மட்டும் நம்பி ஏற்று ஏமாந்து வாழும் இனத்தில் துளிர்விட்டு, வளர்ந்து, செடியாகி, மரமாகி, கனிகளைத் தந்து செழிப்பது எப்படி சாத்தியமாகும்? அன்றாடம் வாசிப்பதையும், சிந்திப்பதையும், எதையும் புரிந்துகொள்ளுவதையும் கடமையாகக் கொள்ளாமல் இருக்கும் இனத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் வளரத்தான் முடியுமா? வாசிக்கிறவர்களும், சிந்திக்கிறவர்களும், போதனைகளைப் புரிந்துகொள்ளுபவர்களும் வளருவதற்கான உரம்போடப்பட்டு, தண்ணீரூற்றப்பட்டு பதப்படுத்தப்பட்ட சமுதாயம் ஏற்பட்டால் மட்டுமே அது முடியும்! இது பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியம்; வெறும் நூல்களும், வாசிப்பும் செய்துவிட முடியாது என்று யாராவது எகத்தாளமாகக் கேட்கலாம். அதற்கு நானளிக்கும் பதில் என்ன தெரியுமா? சத்திய வார்த்தையைப் பயன்படுத்தி மறுபிறப்பை அளிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்கும், வாசிப்புக்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காத கூட்டத்தின் பக்கத்தில்கூட வரமாட்டார் என்பதுதான். வார்த்தையின் அடிப்படையிலான வாசிப்பில்லாத இனத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் முளைப்பதற்கு வழியே இல்லை. தண்ணீரை உதறித்தள்ளும் நிலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தண்ணீர் தன்னுள் போகமுடியாதபடி தேங்கி நிற்கும் நிலம் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய நிலத்தில் எந்த விவசாயியும் எதையும் விதைக்க மாட்டான்; விதைக்கவும் முடியாது. ஏனெனில் விதைகள் தேங்கி நிற்கும் தண்ணீரில் அழிந்துவிடும். நல்ல நிலத்தில் தண்ணீர் உள்ளே போய் சுற்றியிருக்கும் இடத்தை பதப்படுத்தி போடப்படும் விதை வளர வசதிசெய்யும். அதுபோலத்தான் நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்து, வாசித்தவற்றை சிந்தித்துப் புரிந்துகொள்ளுகிறவர்களும். அவர்களே ஆத்மீக வளர்ச்சியடைகிறார்கள்; அறிவில் வளர்கிறார்கள்; சீர்திருத்த சிந்தனையாளர்களாகிறார்கள்; சமுதாயத்தில் கர்த்தருக்காக சாதிக்கிறார்கள். வாசிப்பில்லாத, சிந்திக்கத் தெரியாத சமுதாயம் வறண்டுபோன பாலைவனம் மட்டுமே.
மேலே நாம் பார்த்து வந்திருக்கும் பலவீனத்தைப் போக்குவதற்கு என்ன வழி? முக்கியமாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்தப் பலவீனம் போக என்ன செய்யவேண்டும்? அதுவும் சீர்திருத்த கிறிஸ்தவ சத்தியத்தின் பாதையில் போக ஆரம்பித்திருப்பவர்கள் செய்யவேண்டியதென்ன?
- வாசிக்கும் பயிற்சியை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.போதகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது தவிர்க்க முடியாத பயிற்சி. இதுவரை எதையும் வாசித்திராவிட்டாலும், அதில்லாமல் ஆத்மீக வாழ்க்கையிலும், நடைமுறையிலும் வளர முடியாது, உயரமுடியாது என்பதை உணர்ந்து, வாசிப்பது அவசியம் என்ற வைராக்கியத்தோடு வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். எத்தனையோ உடல் உபாதைகளுக்கு நாம் மருந்துகளும், வைட்டமின்களும் பயன்படுத்துவதில்லையா? நம் மூளைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைத் தவிர்த்துக்கொள்ள வாசிப்பாகிய மருந்து அவசியம் என்பதை உணருங்கள்; வாசிப்புப் பயிற்சியை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பணமில்லாமல் நூல்கள் வாங்கமுடியாது என்பது உண்மையானாலும், கிறிஸ்தவ வாழ்க்கையில் வளரவும், சிறக்கவும் அவை அவசியம், அவையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையில் பலவீனமாகிவிடுவோம் என்பதை உணர்ந்து பணங்கொடுத்து நூல்களைப் பெற்று வாசிக்கும் பயிற்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
- நல்ல நூல்களை மட்டுமே தேடித் தெரிந்தெடுத்து வாங்கவேண்டும். இதைச் செய்ய நமக்கு உதவி வேண்டும்.நூல்கள் பற்றி அறிந்திருக்காதவர்களால் நல்ல நூல்களைத் தெரிவு செய்யமுடியாது. திருமறைத்தீப இதழ்களை வாசித்து வருகிறவர்களுக்கு அதில் பதில் கிடைத்துவிடும். வாங்குகிற எந்த நூலும், வாசிக்கின்ற எந்த நூலும் ஆத்மீக வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கவேண்டும். மோசமான உணவும், நஞ்சும் நம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்; அதுபோல்தான் மோசமான நூல்களும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
- நல்ல நூல்களை ஒரு தடவைக்கு மேல் பொறுமையோடு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.வாசிப்பதை நீங்கள் வழக்கமாகக் கொள்ளாதவராக இருந்தால் உங்கள் மனம் தேங்கிப்போய் சிந்திக்க முடியாததாகவே இருந்து வந்திருக்கும். அதற்கு சிந்திக்கும்படி பயிற்சியளிக்கவேண்டும். அது உடனடியாக நடந்துவிடாது. அதனால் எந்த நூலையும் நேரமெடுத்து பொறுமையோடு சில தடவைகள் வாசியுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமானதாக இருந்தாலும் போகப்போக இது பழக்கமாகிவிடும். எப்படி நோய் தீருவதற்காக தவறாமல் மாத்திரைகளைப் போட்டுக்கொள்ளுவோமோ அதுபோல இதை நீங்கள் செய்யவேண்டும். வேறு எத்தனையோ விஷயங்கள் இதைச் செய்வதற்கு குறுக்கே வரலாம். இருந்தபோதும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் பயிற்சிக்கு உங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வாசித்த விஷயங்களை மனதில் அசைபோட்டு சிந்தியுங்கள். இது சிந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவும்.வாசிக்கும்போதே முக்கியமான வசனங்கள், பத்திகளைக் குறித்து வைத்துக்கொள்ளுவதும் அவசியம். அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து சிந்திக்கவேண்டும். வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இது பலதடவை நூல்களை வாசித்தால் மட்டுமே முடியும். எதை வாசித்தாலும் அவற்றைப்பற்றித் தீவிரமாக சிந்தித்து, மனதில் அசைபோட்டுப் பார்த்து அவற்றை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று ஆராயவேண்டும். புரிந்துகொள்ளுவதற்கும், தெரிந்து வைத்திருப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்று கவனித்திருக்கிறோம். ஆகவே, வாசித்தவற்றை நீங்களே உங்களுடைய சொந்த வசனத்தில் சுருக்கமாக எழுதிப் பார்க்கவேண்டும். இதைச் செய்யும்போது நூலை ஒரு பக்கம் மூடி வைத்துவிட்டு செய்யவேண்டும். நீங்கள் இப்படி எழுதுகிறபோது உங்களுடைய மனம் சிந்திக்கிறது. அப்படி எழுதியவற்றை மறுபடியும் வாசித்து நூலின் போதனையை, கருதுகோள்களைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். இதற்கு நூலையோ அதன் முக்கியமான பகுதிகளையோ மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். நூலின் முக்கிய கருதுகோளையும், அதை நூலாசிரியர் விளக்கியிருக்கும் முறைகளையும் உங்களால் துல்லியமாக சுருக்கமாக (நூலைத் திறந்து பார்க்காமல்) எழுதிவைத்துக்கொள்ள முடியுமானால் நூலை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதை நீங்கள் முயற்சி செய்து, அவசியமான கடமையாக எண்ணி பொறுப்புணர்வோடு செய்யவேண்டும்.
படித்தவற்றைப் புரிந்துகொள்ளுவதற்கு நீங்கள் இன்னொன்றையும் செய்யலாம். நூலின் முக்கிய கருதுகோளை ஒரு தலைப்பாக எழுதி, அந்தத் தலைப்பின் அடிப்படையில் நூல் விளக்கியிருக்கும் போதனையை நீங்களே ஒரு சிறு கட்டுரையாக எழுதலாம். இதைச் செய்யும்போது நூலைத் திருப்பிப் பார்க்கக்கூடாது. இப்படி எழுதுகிறபோது உங்கள் மனம் வேலை செய்வது மட்டுமல்லாமல், நீங்கள் உங்களுடைய சொந்தத் திறமையைப் பயன்படுத்தி நூலின் போதனையை உங்கள் பாணியில் எழுதிவைத்துக்கொள்ளலாம். அதை முடித்த பிறகு எழுதியதை வாசித்துப் பார்த்து நூலோடு ஒப்பிட்டு நூலின் போதனையை சரிவரப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். இத்தகைய பயிற்சி உங்களுடைய வாசிக்கும் பயிற்சியை வளர்ப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய மனதை அதிகம் உழைக்கவைத்து சிந்திக்கச் செய்யும்.
- நூல்களை வாசித்து அதுபற்றிச் சிந்திக்கின்ற பழக்கமில்லாதவர்களுக்கு இந்தப் பயிற்சியில் வெற்றி அடைவதற்கு சில காலம் எடுக்கும்.சிந்திக்காமல் துருப்பிடித்துப் போயிருக்கும் மனதை சிந்திக்கப்பழக்கப்படுத்துவது என்பது ஓரிரு நாட்களில் நிறைவேறுகிற காரியமல்ல. துருப்பிடித்துப் போயிருக்கும் மனம், துருப்பிடித்திருக்கும் கார் இயந்திரத்தைப்போல உடனடியாக வேலைசெய்ய ஒத்துழைக்காது. இருந்தாலும் பிடிவாதமாக நூல் வாசிப்பில் ஈடுபட்டு மனதிற்கு நீங்கள் வேலை கொடுக்கவேண்டும். துருப்பிடித்து ஓடாமல் இருந்திருக்கும் இயந்திரத்திற்கு எண்ணெய் போட்டு அதை இயங்கச் செய்வதுபோலத்தான் ந¦ங்கள் நூலை வாசிப்பதும், அதன் போதனையைப் புரிந்துகொள்ள ஆழமாக சிந்திப்பதும். எண்ணெய் போடப்பட்டு ஆரம்பத்தில் கரடு முரடான சத்தத்துடன் ஓட ஆரம்பித்திருக்கும் இயந்திரம் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சத்தமில்லாமல் காற்றில் மிதப்பதுபோல ஓடுகிறது இல்லையா? அதுபோல வாசிப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் உங்கள் மனமும் மூளையும் போகப் போக சிந்திக்கும் திறனை அடைந்து எதையும் புரிந்துகொள்ளுகின்ற பக்குவத்தையும் பெறும்.
திருமறை போதிக்கும் தூய வாழ்க்கை
இதழ் 4, 1996
கடந்த பத்தாண்டுகளில் பாதை தவறி பரிசுத்தத்தை இழந்து பாழாய்ப்போன நற்செய்தியாளர்களின் பட்டியல் சிறிதல்ல. பிரதானமாக அமெரிக்காவில் ஜிம் பேக்கர், ஜிம்மி சுவகர்ட் போன்றோர் பணத்தாசையாலும், பெண்ணாசையாலும் அழிவை நாடிச்சென்றதை நாடறியும். அதே வகையில் தமிழ் பேசும் நாடுகளிலும் பலர் இவ்விதமாக சரீர இச்சைகளுக்கு இடம் கொடுத்து சர்வேசுவரனின் ஐக்கியத்தை இழந்து, தேவ ஊழியத்திற்கே இழுக்கைத் தேடித் தந்துள்ளனர். மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி, நிலைகுலைந்து வழுக்கி வீழ்ந்துள்ளனர். ஆனால் சிலர் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறுகள் நேரிடத்தான் செய்யும்; தாவீது தன் வாழ்வில் தவறு செய்யவில்லையா? என்று இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முயலுகின்றனர்.
இவை சாதாரண தவறுகள்தானா? கிறிஸ்தவ வாழ்க்கையில் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுபவர்கள் வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாதவையா? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணத்தான் வேண்டும். அத்தோடு இவ்வாறு வாழ்க்கையில் வழுக்கிவிழுந்தவர்களை நாம் எவ்வாறு நடத்தவேண்டும் என்றும் அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.
தூய வாழ்க்கை
தூய்மையான வாழ்க்கையைக் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டிய அவசியத்தை வேதம் பல இடங்களில் வற்புறுத்துகின்றது. ‘உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருப்பது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்’ (1 பேதுரு 1:15) என்று திருமறை கூறுகின்றது. பவுலும் ‘நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது’, ‘தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்துள்ளார்’ என்றும் (1 தெசலோ. 4:3, 7) கூறுவதைப் பார்க்கிறோம்.
அதேவேளை பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5:19-21 வரை மாம்சத்தின் கிரியைகளை வரிசைக்கிரமமாக அறிக்கையிட்டு இப்படிப்பட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று கூறுகிறார். இதையே எபேசியருக்கு எழுதிய நிருபத்திலும் விளக்கும் பவுல், ‘பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும் கூடாது’ என்கிறார். அதாவது இவைகளின் சாயல்கூட உங்களில் படக்கூடாது என்று போதிக்கிறார். மேலும் ‘விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே’ என்று கூறுகிறார். ஆகவே பரிசுத்த வாழ்க்கை இருக்க வேண்டிய இடத்தில் அசுத்தமானதெதுவும் இருக்க முடியாது என்பது தெளிவு.
கிறிஸ்தவன் பாவம் செய்வானா?
அப்படியானால் கிறிஸ்தவன் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டானா? என்று நீங்கள் கேட்கலாம். சிறு குழந்தை நடக்கப் பழகும்போது விழுந்தெழும்புவது போல் கிறிஸ்தவனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது சில தவறுகளைச் செய்துவிடுவது வழமை. இதற்கான காரணத்தைத்தான் பவுல் ரோமர் 7 ஆம் அதிகாரத்தில் விளக்குகிறார். சிலர் இவ்வேதப் பகுதி கிறிஸ்தவன் அல்லாதவனுடைய அனுபவத்தைப் பற்றிப் பேசுவதாகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் பவுல் தனது சொந்த அனுபவத்தைப்பற்றியே இங்கு விளக்குகிறார்.
இவ்வுலகத்தில் பாவம் இருக்கும் வரையும், பாவம் நமக்குள் இருக்கும் வரையும் பாவம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவது மட்டுமன்றி, அதைச் செய்யத் தூண்டும் இச்சைகளும் நம்மில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் பவுல் கூறுவதுபோல், நமக்குள் வாசமாயிருக்கிற பாவமே நமது இச்சைகளைத் தூண்டுகிறது. யாக்கோபு கூறுவதுபோல், நாம் நமது சுய இச்சைகளினால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறோம், பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது (யாக்கோபு 1:14-15).
அதேவேளை, கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பை அடைந்த பின்பு நம்மீது பாவத்திற்கு இருந்த ஆதிக்கம் அழிக்கப்பட்டிருப்பதால் முன்போல் நாம் பாவத்தை தொடர்ந்து செய்யமாட்டோம். கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பு நாம் பாவத்தின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி வாழ்ந்திருந்தோம். இப்போதோ அக்கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையடைந்திருப்பதோடு ஆவியின் துணையோடு பாவத்தைத் தொடர்ந்து செய்யாமலிருக்கும் வல்லமையும் நமக்குக் கிடைத்திருக்கின்றது. ஆகையால்தான் யோவான் தனது முதலாம் நிருபத்தில் ‘அவரில் நிலைத்திருக்கிற எவனும் (தொடர்ந்து) பாவம் செய்வதில்லை’, ‘தேவனால் பிறந்த எவனும் (தொடர்ந்து) பாவம் செய்யான்’ (1 யோவான் 3:6, 9) என்று கூறுகின்றார். கிறிஸ்துவை நாம் நேசிப்பதால் பாவத்தை இப்போது வெறுக்கிறோம். அதோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதை நாம் தவிர்க்க விரும்புகிறோம். சிலவேளைகளில் பாவத்தை ச்செய்துவிட்டாலும் குற்றவுணர்வினாலும், நம்மை நேசிக்கும் கிறிஸ்துவை அலட்சியப்படுத்திவிட்ட வேதனையாலும், ஆவியைத் துக்கப்படுத்திவிட்டதாலும் கர்த்தரின் மன்னிப்பை நாடி ஓடி வருகிறோம்.
பரிசுத்த வாழ்க்கையைப்பற்றிய தவறான எண்ணங்கள்
பரவசக்குழுவைச் சேர்ந்தவர்களும், வேறுசில கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லாம் சுலபமாக நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் போராட்டமே இருக்கக்கூடாது என்பது இவர்களது முடிவு. கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் சகல பாவங்களிலும் இருந்து நம்மை மன்னித்துவிட்டதால் இனிப் பாவமே நம் வாழ்க்கையில் தலை காட்டாது என்ற விதத்தில் பொருள்கொள்கின்றனர். வேறுசிலர் பாவத்தால் சோதிக்கப்படும்போது தம் இச்சைகளை அடக்கி ஒடுக்கி அவ்விடத்தைவிட்டு ஓட முனையாது வெறுமனே ஜெபத்தின் மூலம் மட்டும் தப்பிக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். பரவசக்குழுவினரில் சிலர் பரிசுத்த ஆவியின் முழுக்கைப் பெறவேண்டும், அந்நிய பாஷையில் பேசவேண்டும், சிரிப்பாவியைப் பெறவேண்டும் என்றெல்லாம் வேதத்தைத் திரித்துப் போதித்து வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இவையே அடையாளங்கள் என்று காட்ட முனைகின்றனர்.
அன்ட்ரூ மரே (Andrew Murray), எப்.பி. மேயர் (F.B. Meyer), வாட்ச்மன் நீ (Watchman Nee) போன்றோரின் போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நமக்குள் வாழும் கிறிஸ்து நமது பாவங்களைப் போக்கிவிடுவார்; நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று எண்ணுகின்றனர். இந்நம்பிக்கைக்கு இவர்கள் சான்றாகக் காட்டும் வேதப்பகுதி கலாத்தியர் 2:20 ஆகும்.
கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
இவ்வேதப்பகுதியை இவர்கள் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பவுல் இவ்வசனத்தில் ‘இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்’ என்று கூறும்போது நாம் கிறிஸ்தவ வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை என்பதாக எண்ணுகிறார்கள். அப்படியானால் பவுல் இதே நிருபத்தில் மாம்சத்தின் வழியில் நாம் தொடர்ந்து நடக்காதிருக்க வேண்டும் என்று போதிப்பதெப்படி? அத்தோடு பவுலின் ஏனைய நிருபங்கள் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பாவத்திற்கெதிரான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று போதிப்பதால் பவுல் முரண்பாடாகப் போதிக்கவில்லை என்று உணர முடிகின்றது.
ஆதி முதல் இருந்து வரும் இன்னுமொரு துர்ப்போதனை, கிறிஸ்து நமக்கு விடுதலை தந்துள்ளதால் நாம் எந்தவிதக் கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டியதில்லை. அன்பு இருந்தால் மட்டும் போதும், நம் பாவங்கள் அன்பாலும் கடவுளின் கிருபையாலும் கரைந்துவிடும் என்பதாகும். இதனை ‘அன்டிநோமியன்’ (Antinomian) போதனை என்று அழைப்பார்கள். இப்போதனை பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எந்தவிதக் கட்டுப்பாடான வாழ்க்கையும் வாழவேண்டிய அவசியமில்லை என்று போதிக்கின்றது. கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடர்ந்து மனந்திரும்ப வேண்டிய அவசியத்தையும் நிராகரிக்கின்றது. ஆகவே ஒருவன் குடிப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும், களியாட்டங்களில் ஈடுபடுவதற்கும் அவனது பரிசுத்த வாழ்க்கைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது இப்போதனையின் முடிவு. ‘கிறிஸ்தவ சுதந்திரம்’ என்ற பெயரில் கிறிஸ்துவை அவமதிக்கும் இத்துர்ப் போதனையும் இன்று பரவலாக உள்ளது.
இத்தகைய தவறான கருத்துக்கள் உலவி வருவதற்குக் காரணம், கிறிஸ்து நம்மை இரட்சித்தபோது நமக்கு என்ன நடந்தது? பாவத்தைப் பற்றி வேதம் என்ன போதிக்கின்றது என்று சரிவரப் புரிந்துகொள்ளாததுதான். இந்நம்பிக்கைகள் கிறிஸ்தவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வற்குத் தடையாக அமைகின்றன.
பாவத்தைத் தவிர்ப்பது எப்படி?
பாவத்தைத் தவிர்ப்பதற்கான வழியைப் போதிக்கும் வேதம் முதலாவதாக நாம் அதைவிட்டு விலகி ஓடவேண்டும் என்று கூறுகிறது.
1 கொரிந்தியர் 6:18 “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”
1 கொரிந்தியர் 10:14 “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்”
1 தீமோத்தேயு 6:11 “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி”
2 தீமோத்தேயு 2:22 “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி”
பாவத்தால் நமது இச்சைகள் தூண்டப்படுகிறபோது யோசேப்புவைப்போல அந்த இடத்தைவிட்டே நாம் ஓடப் பழகவேண்டும். ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதால் இது தானாகவே அவனில் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதம் நம்மைப் பொறுப்பாளியாகக் கருதுகிறது. ஆகவே பரிசுத்த வாழ்க்கை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் கர்த்தரின் துணையோடு எடுத்தாக வேண்டும்.
பாவம் நம்மை சோதிக்கிறபோது அவ்விடத்தைவிட்டு ஓடுவதென்பது இலகுவான காரியமல்ல. அவ்வாறு ஓடுவதற்கேற்ற விதத்தில் நமது சரீரமும் உள்ளமும் பயிற்சி பெற்றிருக்கவேண்டும். பயிற்றுவிக்கப்படாத உள்ளம் இச்சைகளுக்குத் தன்னை இலகுவாக ஒப்புக்கொடுத்துவிடும். யோசேப்பு பாவத்தைவிட்டு விலகி ஓடியதற்குக் காரணம், அவன் தன் உள்ளத்தையும் சரீரத்தையும் கடினப் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்ததுதான். அத்தகைய பயிற்சியில் ஈடுபடாமல் நமது கால்கள் தானாக பாவத்தை விட்டு விலகியோடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பது வேதம் போதிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகும்.
திருமறை நாம் நமது சரீரத்தை இத்தகைய கடினப்பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்தவ வாழ்க்கையை பந்தயச்சாலையில் ஓடுகிறவர்களுக்கும், போர்வீரர்களுக்கும் ஒப்பிடுகிறார் (1 கொரிந்தியர் 9:24-27; 2 கொரிந்தியர் 10:3-6). கிறிஸ்தவ வாழ்க்கை மல்யுத்தப் பயிற்சியுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் அத்தகைய பயிற்சியில் ஈடுபட்டாக வேண்டுமென்பதுதான்.
இத்தகைய பயிற்சிக்கும் போராட்டத்திற்கும் துணையாகவே கடவுள் நமக்குச் சில ஆயுதங்களை வழங்கியுள்ளார். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 6ஆம் அதிகாரத்தில் 13 முதல் 20 வரையும் இத்தகைய ஆயுதங்களின் பட்டியலை நமக்குத் தருகிறார். இவற்றை நாம் அன்றாடம் ஜெபத்தோடு பயன்படுத்த வேண்டும். போராயுதங்களை அணியாமலும், போருக்குத் தயாராகாமலும் எந்தப் போர்வீரனும் இருப்பதில்லை. அதேபோல் பிசாசின் தந்திரங்களுக்குத் தப்பி பாவம் செய்யாமலிருக்க நமது ஆயுதங்களைக் கவனத்தோடும், திறமையாகவும் பயன்படுத்த வேண்டும்.
ஆவியின் பாதையில் நடப்பது எப்படி?
திருமறை நாம் மாம்சத்தின் வழியில் நடக்காமல் ஆவியின் வழியில் நடக்கவேண்டும் என்று போதிக்கின்றது. இதையே பவுல் ரோமர் 8 ஆம் அதிகாரத்தில் விளக்குகிறார். ஆனால் ஆவியின் வழியில் நடப்பது என்பதற்குப் பொருள் என்ன? பலர் ஆவியின் வழியில் நடப்பது என்றால் ஆவியை விசேஷமாக அடைவது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதமோ ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பை அடைகிறபோது ஆவியையும் அடைகிறான் என்று போதிக்கின்றது. ஆவியானவர் ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் குடியிருக்கிறார். அவர் நம்மில் குடியிருப்பதால்தான் நமக்குக் கிறிஸ்துவின் மேல் அன்பு இருக்கின்றது. அவரை வழிபடவேண்டும், அவரது வார்த்தையின்படி நடக்கவேண்டும் என்ற வாஞ்சையும் இருக்கின்றது. ஆவியைப் பெறாதவன் இவ்வாறெல்லாம் எண்ண மாட்டான். ஏனெனில் அவனுள்ளத்தில் பாவம் மட்டுமே செயல்படுகின்றது அவன் பாவத்தின் வழிகளில் மட்டுமே நடப்பான்.
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் இருக்கும் ஆவி நாம் தேவனின் வழிகளில் செல்லத் துணைபுரிகிறார். அதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? கிறிஸ்தவன் தொடர்ந்து கர்த்தரின் வார்த்தையின்படி அவரை மகிமைப்படுத்தும் காரியங்களைத் தன் வாழ்வில் செய்கிறபோது அவனில் ஆவியின் செயலை நாம் பார்க்கிறோம். ஒருவன் மாம்சத்தின் வழியில் போகிறபோது அவனில் ஆவியின் செயற்பாடு இல்லாமலிருப்பதைப் பார்க்கிறோம். இதையே பவுல் ரோமரில், ‘மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்’ (ரோமர் 8:5), ‘தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல’ (ரோமர் 8:9) என்று கூறுகிறார். மேலும், ‘மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்’ (ரோமர் 8:13) என்றும் கூறுகிறார்.
ஆகவே ஆவியின் வழியில் நடப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்குள் இருக்கும் ஆவியை மீண்டும் பெற முயல்வதோ அல்லது நாம் பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆவியை நோக்கிக் காத்திருப்பதோ அல்ல. இதைச் சுருக்கமாக விளக்கும் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், ‘ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கிறபோது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலிப்பியர் 2:12-13) என்று கூறுகிறார். இதன் மூலம் பவுல் விளக்குவதென்னவெனில், எவன் ஒருவன் அதிக பிரயாசத்தோடும், பயத்தோடும் தனது கிறிஸ்தவ வாழ்க்கையை கர்த்தருடைய மகிமைக்காக நடத்துகிறானோ அவனில் மட்டுமே கடவுளுடைய செய்கையையும், அவரது ஆவியின் செயற்பாட்டையும் காண முடியும் என்பதுதான். ஆவியின் வழியில் நடக்க இதைத்தவிர வேறு வழிகளை வேதம் போதிப்பதில்லை.
ஆவியால் நிரப்பப்படுவது எப்படி?
வேதம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவியால் நிரப்பப்படவேண்டும் என்று போதிக்கின்றது. பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறவன் தொடர்ந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான். இதைக் குறித்தும் எத்தனையோ தவறான போதனைகள் உலவி வருகின்றன. ஆவியால் நிரப்பப்படுவது என்றால் என்ன? எபேசியர் 5:18ல் பவுல் நாம் ‘மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்திருக்க’ வேண்டுமென போதிக்கிறார். பவுல் கூறுவதை விளங்கிக்கொள்ள நாம் முழு வசனப் பகுதியையும் வாசித்தல் அவசியம். பதினைந்தாவது வசனத்தில் ஞானமற்றவர்களைப் போல் நடவாது, ஞானமுள்ளவர்களைப் போல் எவ்வாறு நடப்பது என்று இப்பகுதியில் போதிக்கும் பவுல் அப்போதனையின் ஒரு பகுதியாகத்தான் ‘ஆவியால் நிரம்பியிருக்க’ வேண்டுமென்று கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது ஒருவன் ஞானமுள்ளவனாக, காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, மதுவெறியற்று, கர்த்தருடைய சித்தம் இன்னதென அறிந்துகொள்கிறபோது அவன் ஆவியின் நிரம்புதலுக்குட்பட்டிருக்கிறான் என்பது பவுலின் போதனை. மேற்கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டிராதவன் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. இதைவிட்டு இன்று பலர் ஆவியினால் நிரப்பப்படுவதென்பது கிறிஸ்தவ வாழ்வில் அற்புதமாக நிகழும் ஒரு நிகழ்ச்சியெனவும், ஒருவனின் விசுவாசத்தோடும், பரிசுத்த வாழ்க்கையோடும் தொடர்பற்றதொன்றாகவும் கருதி வருகின்றனர். இது பவுலின் போதனைக்கு முரணானது. ஒருமுறை நமக்குள் வந்து குடியிருக்கும் ஆவி நம்மை விட்டு அகலுவதுமில்லை; வந்து போய்க்கொண்டிருப்பதுமில்லை. கிறிஸ்தவனின் பரிசுத்த வாழ்க்கையின் ஓர் அங்கமே அவன் ஆவியால் தொடர்ந்து நிரப்பப்பட்டிருப்பது. இது எல்லாக் கிறிஸ்தவர்களும் தம் வாழ்வில் தொடர்ந்து அனுபவிக்கும் ஒரு அனுபவம். ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட அற்புத அனுபவமல்ல.
ஊழியக்காரர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்
ஆரம்பத்தில் நாம் கூறியது போல பரிசுத்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஊழியக்காரர்களில் பலர் இன்று வழுக்கி விழுவதற்குக் காரணமென்ன? பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு இவர்களால் முடியாவிட்டால் நாம் எப்படி வாழ்வது என்று பலரையும் எண்ணத் தூண்டும் செயல்களுக்குக் காரணம் என்ன?
ஊழியம் செய்பவர்கள் வழுக்கி விழுகின்றபோது நாம் எப்போதுமே கேட்க வேண்டிய முக்கிய கேள்வி அம்மனிதன் உண்மையாகவே தேவனை அறிந்திருக்கிறானா? என்பது தான். ஏனெனில் திருமறையில் மேலான அறிவைக் கொண்டிருந்தும், பல ஆவிக்குரிய வரங்களைப் பெற்றிருந்தும் ஒருவன் தேவனை அறியாமல் இருக்கலாம் (மத்தேயு 7:21-23). வேதத்தில் இதற்குப் பல சாட்சிகள் உண்டு. ஒரு மனிதன் கர்த்தரை அறியாமல் ஊழியத்தை ஒரு தொழிலாக மட்டும் கருதி மற்றவர்களை ஏமாற்றி வரலாம். சபையையும், ஊழியத்தையும் குடும்பச் சொத்தாகக் கருதி வருபவர்கள் மத்தியில் இது சாதாரணமாகவே நிகழும் காரியம். ஆகவே தான் ஊழியம் திருமறைபூர்வமாக அமையும்படிப் பார்த்துக்கொள்வது அவசியம்.
அதுமட்டுமல்லாது பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்திலும், எபேசியருக்கு எழுதிய நிருபத்திலும் பட்டியலிட்டுத் தரும் செயல்கள் (கலாத்தியர் 5:19-21; எபேசியர் 5:3-5) சாதாரண பாவங்களல்ல. எல்லாப் பாவங்களுமே பாவங்களாக இருந்தாலும் சில பாவங்கள் பாரதூரமானவை. அவற்றால் ஒருவன் வாழ்வில் பல பாதிப்புகள் ஏற்படும். அத்தகைய பாவங்களை ஒரு கிறிஸ்தவன் சாதாரணமாக செய்ய முற்பட மாட்டான். அவ்வாறான பாவங்களைத் தன்னைக் கிறிஸ்தவன் என அழைத்துக்கொள்ளும் ஒருவன் செய்திருப்பானெனில், அவற்றை அவன் பல வருடங்கள் ஒருவருக்கும் தெரியாமல் மறைமுகமாக செய்து வந்திருந்தாலன்றி திடீரென செய்ய முடியாது. ஆகவேதான் அவனது கிறிஸ்தவ வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது அவசியம். அவன் உண்மையிலேயே கிறிஸ்தவனாக இருந்து அப்பாவத்தைச் செய்திருந்தால் அதை நிச்சயமாக அவன் பலருக்கும் தெரியாமல் செய்து வந்திருக்கவேண்டும். எனவே அம்மனிதன் அக்கொடிய பாவத்தின் சகல கறைகளிலும், கட்டுக்களிலும் இருந்து அகலும் விதத்தில் அவனுக்குத் துணை புரியவேண்டும்.
அத்தகைய மனிதன் ஒரு ஊழியக்காரனாக இருந்தால் அவ்வூழியத்தின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அவன் முதலில் நீக்கப்பட வேண்டியது அவசியம். இன்று சிலர் வேசித்தனத்தில் ஈடுபட்டுவிட்டு கடவுள் என்னை மன்னித்துவிட்டார் அது போதாதா என்று கூறி வேதத்தைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் மேடை ஏறி விடுகின்றனர். காய்ச்சலுக்கும் கேன்சருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது. பாவத்தில் மோசமானதைச் செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் வெறும் காய்ச்சல்தான் என்று உதறிவிட முடியாது.
அம்மனிதன் அப்பாவத்தைச் செய்வதற்குக் காரணமாக இருந்த வழிகளையெல்லாம் ஆராய்ந்து அவன் அதைத் தொடராதிருக்கும் விதத்தில் அவனுக்குத் துணை செய்யவேண்டும். இது மூன்று வாரத்திலோ அல்லது மூன்று மாதத்திலோ நடந்து முடிந்துவிடக்கூடிய காரியமல்ல. இதற்குப் பல காலமெடுக்கலாம். அதுவரை அவன் ஊழியத்தில் ஈடுபடக்கூடாது. அத்தகைய பாவத்தைச் செய்துவிட்டு ஊழியத்தில் ஈடுபட ஒருவன் முனைந்தால் அதுவே அவன் உண்மையில் மனந்திரும்பவில்லை என்பதற்குச் சான்றாகும். ஊழியத்திற்கான இலக்கணங்கள் இச்செயல்களைக் கொண்டிருக்கின்றன.
இன்று பலர் இவ்வாறு பாவம் செய்துவிட்டு ஊழியத்தைத் தொடர்வதற்குக் காரணம் அவர்களுக்குச் சபைக்கட்டுப்பாடு இல்லாததுதான். தனி நிறுவனங்களை நடத்தி யாருடைய கட்டுப்பாடுமில்லாமல் நடந்ததால்தான் அவர்கள் பாவகரமான காரியங்களில் ஈடுபட நேரிடுகிறது. இத்தகைய செயல்களைச் செய்துள்ள பலர் கிறிஸ்தவ நிறுவனங்களின் தலைவர்களாக இருந்திருப்பதில் வியப்பில்லை.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் சபைக் கட்டுப்பாட்டிற்குத் தம்மை ஒப்புக்கொடுத்து போதகர்களின் துணையோடு தங்களது செயல்களின் முழுப் பாதிப்பையும் உணர்ந்து அவற்றில் இருந்து முழுமையாக விடுபடும் வழிகளைப் பார்க்கவேண்டும். அவனுடைய பாவம் அவனை மட்டுமல்லாமல் அவனது குடும்பம், நிறுவனம் இன்னும் எத்தனையோ பேரையும் பாதித்திருக்கலாம். இவர்கள் எல்லோருமே இவற்றின் பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டியது அவசியம். தாவீதின் உதாரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தாண்டவம் ஆட முயலுவதைப்போலக் கொடுமை வேறில்லை. தாவீது தான் செய்த பாவத்திற்காக வருந்தியது மட்டுமல்லாமல், அதற்கான தேவசிட்சையை ஏற்று, சுயவெறுப்பைக் கடைபிடித்து பலகாலம் வாழ்ந்ததை மறக்கக்கூடாது.
பரிசுத்த வாழ்க்கையைக் கிறிஸ்தவர்கள் ஆவியின் துணையோடு அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேறும்படியாக பிரயாசத்துடன் வாழவேண்டும். பாவ இச்சைகளை அன்றாடம் அடக்கி, ஆவியின் கனிகளைத் தம்மில் வளர்த்துவர வேண்டும். கட்டுப்பாடுகளை வெறுக்காது, சுய வெறுப்பைக் கடைபிடித்து வளரவேண்டும். கிருபையின் சாதனங்களைத் தவறாது பயன்படுத்தி தேவ அன்பில் திளைக்கவேண்டும். கர்த்தருக்கு முன் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்புதலை அன்றாடக் கடமையாகக்கொள்ள வேண்டும். இவற்றின் மூலமே கிறிஸ்து நமக்குத் தந்துள்ள சுதந்திரத்தையும், அவரது அன்பையும் நாம் ருசிபார்க்க முடியும். கட்டுப்பாடற்ற, பாவத்தைப் பற்றிய அக்கறையற்ற வாழ்க்கைக்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் எந்தவிதமான தொடர்புமிருக்க முடியாது.
பாவஉணர்வு மட்டுமே பரலோகம் போக உதவாது
இதழ் 2, 2015
“பாவத்தை உணர்தல் இரட்சிப்புக்கு மிகவும் அவசியமானது, ஆனால் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல” என்று ஜெரமி வோக்கர் “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்ற தன்னுடைய ஆக்கத்தில் எழுதியிருக்கிறார். இது சிலவேளை வாசகர்களை சிந்திக்கும்படி செய்யலாம் அல்லது குழப்பவும் கூடும். அதுபற்றி இந்த ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்தேன். எந்த அடிப்படையில் ஜெரமி வோக்கர் இதைச் சொல்லியிருக்க முடியும்? அவர் கார்டினர் ஸ்பிரிங்கின் (Gardiner Spring) நூலின் ஒரு பகுதியின் சாராம்சத்தின் அடிப்படையில் தன்னுடைய ஆக்கத்தை எழுதியிருப்பதால் நிச்சயம் அவருடைய கருத்தும் இதுவாகத்தான் இருந்திருக்கும். கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை நான் இதற்காக மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். இதே வார்த்தைகளை அவர் தன்நூலில் பயன்படுத்தியிராவிட்டாலும் அதைத்தான் அவரும் விளக்கியிருக்கிறார். இது பாவ உணர்தலைப் பற்றிப் பியூரிட்டன் பெரியவர்கள் அநேகரிடமும் பொதுவாகக் காணப்பட்ட ஒரு விளக்கம்.
பாவத்தை உணர்தல் (Conviction of sin)
உண்மையில் இன்றைக்குப் பாவத்தை விளக்கிப் பிரசங்கிக்கும் பிரசங்கங்கள் அரிது. பாவம், பாவம் என்றே அலரிக்கொண்டிருக்கக் கூடாது. அது ஆத்துமாக்களுக்குச் சங்கடத்தை உண்டாகும்; நெகட்டிவ் பிரசங்கம், ஆத்துமாக்களுக்கு ஆறுதல் தரும் செய்திகளைத்தான் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லி சுவிசேஷத்தில் பாவத்தைப்பற்றிப் பிரசங்கிப்பதையே அநேகர் கைவிட்டுவிட்டிருக்கிறார்கள். நம்மினத்தில் இதுபற்றிய விளக்கமான போதனைகள் கொடுக்கப்படுவதில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனையாக இருக்கிறது பாவம். பாவத்தைப்பற்றிய விளக்கத்தைத் தராத சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷமாக இருக்க முடியாது. அந்தளவுக்கு சுவிசேஷத்தில் இருந்து பிரிக்க முடியாததாக அது இருக்கிறது.
பாவமே மனிதனைக் கடவுளிடம் இருந்து வெகுதூரத்தில் பிரித்து வைத்திருக்கிறது. அந்தப் பாவம் அகலாதவரையில் மனிதனுக்கு விமோசனமில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளி நீங்கும்படியான பாலமாகவே இயேசு இந்த உலகத்துக்கு வந்து பாவம் நீங்குவதற்கு வழியேற்படுத்தினார். பாவத்திற்கு விளக்கம் கொடுக்கும் யோவான், “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறார் (1 யோவான் 3:4). பத்துக்கட்டளைகளையே அவர் நியாயப்பிரமாணம் என்று இனங்காட்டுகின்றார். பத்துக்கட்டளைகள் கர்த்தரின் நீதியைப் பிரதிபலிக்கின்றன. அதற்கு நீதிக் கட்டளைகள் என்றும் பெயர். ஆதாமும், ஏவாளும் அந்தக் கட்டளைகளை மீறியதாலேயே பாவம் சம்பவித்து மனிதகுலமே பாவத்தில் வீழ்ந்தது. பாவியாகிய மனிதன் அன்றாடம் அந்தக் கட்டளைகளை மீறிவாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்தக் கட்டளைகள் போதிக்கும் நீதியான வாழ்க்கையை அவன் இயற்கையாக வாழமுடியாதவனாக, அதற்கான தகுதியைத் தன்னில் கொண்டிராதவனாக இருக்கிறான். பாவத்தில் இருந்து பாவிகளை விடுவிப்பதற்காகவே இயேசு சிலுவையில் மரித்திருக்கிறார்; தன்னையே பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணங்களை (நீதிக்கட்டளைகளுட்பட) அவர் தன்வாழ்வில் பூரணமாக நிறைவேற்றி பாவ விடுதலைக்கும், மனிதனின் இரட்சிப்புக்குமான வழியை ஏற்படுத்தினார்.
மனிதன் இரட்சிப்பை அடைய முதலில் அவன் பாவத்தை உணருவது அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷம் மனிதன் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்கிறது. ‘மனந்திரும்புதல்’ என்பது மனிதன் தான் பாவியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து அதற்குப் புறமுதுகு காட்டுதலைக் குறிக்கிறது. இந்த மனந்திரும்புதலும் கிறிஸ்துவில் விசுவாசமும் இல்லாமல் இரட்சிப்பு எவருக்கும் கிடைக்க வழியில்லை. பாவ உணர்த்தலின்றி மனந்திரும்புதல் ஒருபோதும் நிகழ முடியாது.
பாவ உணர்வும் பரிசுத்த ஆவியும்
மனிதன் தன் ஜென்ம பாவத்தையும் (ஆதாமில் இருந்து தொடர்வது), அதன்காரணமாகத் தான் வாழ்ந்துவரும் பாவ வாழ்க்கையையும் பாவநிலையில் இருந்து தானாக உணர வழியில்லை. அவனில் எந்தவித ஆத்மீக வல்லமையும், அதை அடைவதற்கான வசதிகளும் இல்லாமலிருப்பதனால் புறத்தில் இருந்து அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. ‘இரட்சிப்பு கர்த்தருடையது’ என்ற யோனாவின் வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். முற்றுமுழுதாக இரட்சிப்பைக் கர்த்தரே நிறைவேற்றி இலவசமாக மனிதனுக்கு வழங்குகிறார். அப்படி அவர் வழங்குகின்ற இரட்சிப்பை மனிதன் அடைவதற்கான வழிவகைகளையும் அவரே ஏற்படுத்தியிருக்கிறார். மனிதன் இரட்சிப்பை அடைய சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழ் வருவது அவசியம். அந்த சுவிசேஷத்தைக் கேட்டு அவன் மனந்திரும்ப வழிசெய்கிறவரே பரிசுத்த ஆவியானவர். 1689 விசுவாச அறிக்கை, ‘வார்த்தையும், ஆவியும்’ இணைந்து செயல்படுவதால் மனிதன் மறுபிறப்பு அடைகிறான் என்று 10 வது அதிகாரம் ‘திட்ப உறுதியான அழைப்பு’ என்ற பகுதி விளக்குகிறது. வார்த்தை மனிதனின் இருதயத்தில் பதிய பரிசுத்த ஆவியானவரே வழிசெய்கிறார். இதை இயேசு யோவான் 3ல் நிக்கொதேமுவுக்கு விளக்குகிறார்.
இந்தப் பெரிய காரியத்தைப் பரவலாக உலகம் பூராவும் செய்வதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்தார் (யோவான் 16:7-8). சுவிசேஷத்தைக் கேட்கும் மனிதன் பாவத்தை உணரும்படிச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. சுவிசேஷத்தின் ஓர் அங்கமான நியாயப்பிரமாணம் பிரசங்கிக்கப்பட வேண்டிய நோக்கமே அதைக் கேட்கின்ற மனிதன் தான் பிறப்பிலிருந்தே அதற்கு எதிராக செயல்பட்டு வந்திருப்பதை இருதயத்தில் உணர்ந்து மனந்திரும்பவேண்டுமென்பதற்காகத்தான். நியாயப்பிரமாணத்தை (பத்துக்கட்டளைகளை) மீறுவதே பாவம், அதை மீறுவதைத்தவிர இயற்கையாக மனிதன் வேறெதையும் செய்வதில்லை. ஆகவே, மனிதனுக்கு தான் பாவியாக இருக்கிறேன் என்பதும், கடவுளின் கட்டளைகளை மீறிக்கொண்டிருக்கின்றேன் என்பதும் தெரிந்தாக வேண்டும். மெய்யான சுவிசேஷப் பிரசங்கம் அதை முதலில் உணர்த்தியே மனிதனுக்குக் கிறிஸ்து வழங்கும் இரட்சிப்பை இலவசமாக அளிக்கிறதாக இருக்கிறது. இப்போது தெரிகிறதா, ஏன் பாவத்தைப்பற்றி விளக்காத சுவிசேஷம் சுவிசேஷமாக இருக்கமுடியாதென்று?
மனிதனின் இரட்சிப்புக்குக் கிறிஸ்து மூலம் வழியேற்படுத்தியிருக்கும் இறையாண்மையுள்ள கர்த்தர் பரிசுத்த ஆவியின்மூலம் மனிதன் தன் பாவத்தை உணர வழிசெய்கிறார். இதைத்தான் இயேசு யோவானின் சுவிசேஷ நூலில் விளக்கியிருக்கிறார். அவர் தன் சீடர்களுக்குப் பரிசுத்த ஆவியின் வருகையைப்பற்றி விளக்கி, அவர் வருகிறபோது பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் மனிதனுக்கு உணர்த்துவார் என்று சொன்னார். பரிசுத்த ஆவியானவர் இதைச் சுவிசேஷ செய்தியின் மூலம் பாவியாகிய மனிதனில் செய்கிறார். இந்தவிதமாக அவர் கண்டித்து உணர்த்துகிற கிரியையையே பியூரிட்டன் பெரியவர்கள் ‘மனிதனை ஆவியானவர் தயார்செய்கிற’ (Preparatory work of the Spirit) பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று தங்களுடைய எழுத்துக்களில் விளக்கியிருக்கிறார்கள். வேறு சில இறையியல் வல்லுனர்கள் இதைப் ‘பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியை’ (Common operations of the Spirit) என்று விளக்கியிருக்கிறார்கள். இத்தகைய பாவ உணர்த்தலை பாவிகள் அடையும்போது அவர்கள், பிலாத்தைப்போல ‘இந்த மனிதனில் (இயேசுவில்) நான் எந்தக் குறையையும் காணவில்லை’ என்றும், அகிரிப்பா மன்னனைப்போல, ‘இவனை (பவுல்) இன்னுங்கொஞ்சம் பேசவிட்டால் நானே கிறிஸ்தவனாகி விடுவேன் போலிருக்கிறது’ என்று சொல்லியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது ராஜனைப்போல இருதயம் காயப்பட்டு அடிக்கடி யோவான் ஸ்நானனை சிறையில் சந்தித்து வேதம் கேட்டதுபோலவும், இயேசுவைக் காட்டிக்கொடுத்தபின் அதற்காக வருந்தி அழுத யூதாசைப்போலவும் நடந்துகொள்ளுவார்கள். இதெல்லாம் பரிசுத்த ஆவியானரின் பொதுவான கிரியைகளில் ஒன்று. இதை ஆவியானவர் சுவிசேஷம் கேட்கிறவர்களில் பொதுவாகச் செய்கிறார்.
மெய்யான சுவிசேஷத்தைக் கேட்கிற மனிதன் அதனால் இருதயத்தில் குத்தப்படாமல் நெடுங்காலத்துக்கு இருக்க முடியாது என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவன் என்னதான் எண்ணங்களோடும், நோக்கங்களோடும் இருந்தாலும் அவனுள்ளத்தில் நிச்சயம் சுவிசேஷத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய நிலையைப்பற்றி யோசிக்க வைப்பார் என்கிறார் ஸ்பிரிங். இதற்காக அவன் மாறிவிடப்போகிறான் என்பதில்லை. அது ஆவியானவர் அவனில் செய்யும் இரட்சிப்புக்குரிய கிரியையாகிய மறுபிறப்பையும் அவனுடைய மனந்திரும்புதலையும் பொறுத்தது. பாவத்தைப்பற்றிய உணர்தலையும், குற்றஉணர்வையும் பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷம் கேட்கின்ற அனைவரிலும் பாரபட்சமின்றி செய்கிறார். எல்லோரும் சமமானவிதத்தில் பாவத்தை உணரப்போவதில்லை என்றாலும் எல்லோருக்கும் அந்த உணர்வை சுவிசேஷத்தின் மூலம் ஏதோவொருவிதத்தில் ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இது சுவிசேஷத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பொதுவான பலன். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பரிசுத்த ஆவியின் பொதுவான செயற்பாட்டின் மூலம் பாவ உணர்வை அடைகிறவர்களில் சிலர் பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குக்கூட குற்ற உணர்வையும், ஆழமான மனஉறுத்துதலையும் அனுபவிக்கக்கூடும். அவர்கள் தங்களுடைய பாவத்தின் கோரத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் உணர்ந்து பெரும் கலக்கம் அடைவார்கள். பயமும், நடுக்கமும் அவர்களை வாட்டும¢. அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டால்கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. சபைக்கு வந்து சுவிசேஷ செய்தியைக் கேட்டுவிட்டு குடும்பப் பிரச்சனைகளையும், குடிப்பிரச்சனையையும் சொல்லி ஜெபிக்கும்படியும், உதவும்படியும் கேட்கிறவர்களை நாம் காணவில்லையா? அப்படி சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ இருதயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் பின்பு நம் கண்ணிலும்படாமல் போவதில்லையா? அத்தகைய மனஉறுத்துதலை அடைந்தவர்களைப்பற்றி கிறிஸ்தவ வரலாறு நமக்கு வெளிப்படுத்துகிறது. மார்டின் லொயிட் ஜோன்ஸ் அத்தகைய அனுபவத்தை அடைந்த பலரைத் தன்னுடைய ஊழியத்தில் சந்தித்துள்ளதாகத் தான் எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் பனியனின் மோட்சப் பயணம் நூலின் ஆரம்பப் பகுதிகளில் கிறிஸ்தியான் மனந்திரும்புவதற்கு முன்பு அத்தகைய குற்றஉணர்வினால் நெடு நாட்களுக்குப் பாதிக்கப்பட்டிருந்ததை வாசிக்கிறோம்.
பாவத்தைப் பற்றிய இந்தக் குற்றவுணர்வை மட்டும் நாம் விசுவாசத்திற்கும் இரட்சிப்பிற்கும் அடையாளமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தன்னைப் பெரும் மோசமான பாவியாகக் கருதினாலும் மனந்திரும்பாமலேயே இருந்துவிடலாம் என்கிறார் கார்டினர் ஸ்பிரிங். அவர் தொடர்ந்து, ‘பாவத்தை உணர்தல், பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்புதலைவிட முற்றிலும் வேறுபட்டது’ என்கிறார். இதைத்தான் பெரும்பாலான சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இரட்சிப்பை அடைவதற்கு, பாவ உணர்த்துதலும், குற்றவுணர்வும் மிக மிக அவசியமானபோதும் அது இரட்சிப்போடு இணைந்ததல்ல என்று ஜெரமி வோக்கர் எழுதியிருப்பதற்கும் இதுதான் காரணம். இத்தகைய உணர்வைப் பாவிகளில் பரிசுத்த ஆவியானவர் உண்டாக்குகிறபோதும் அவர்கள் அதைக்கடந்து அடுத்த கட்டமாகிய மனந்திரும்புதலை அடையாதவரை அவர்களுக்கு இரட்சிப்பில்லை. அநேகர் இந்தப் பாவஉணர்த்துதலைப் பெற்றிருந்தும் இரட்சிப்பை அடையாமல் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வேதத்தில் பல ஆதாரங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் சவுல், ஆகாப், யூதாசு, ஏரோது இராஜா, அகிரிப்பா, இயேசுவிடம் வந்த செல்வந்தனும் வாலிபனுமான யூதன் போன்ற பலரை இதற்கு உதாரணங்காட்டலாம். மாயவித்தைக்காரனான சீமோன் இந்தப் பாவ உணர்த்துதல் இருந்தும் இறுதிவரை மனந்திரும்பவில்லை.
சபைக்கு வந்துகொண்டிருக்கிற ஒருவன், ‘எனக்குத் தீய எண்ணங்கள் அடிக்கடி மனதில் தோன்றி என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. இத்தகைய எண்ணங்களால் எனக்குக் குற்றவுணர்வு ஏற்படுகிறது. நான் ஆவிக்குரியவனா, இல்லையா?’ என்று கேட்டால், ‘அத்தகைய குற்றவுணர்வு ஏற்படுவதே நீ ஆவிக்குரியவன், விசுவாசி என்பதற்கு அர்த்தம்’ என்று பல இடங்களில் பொதுவாகவே நம்மினத்தில் போதிக்கப்பட்டு வருவதாக ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இது மிகத் தவறானது. இருதயத்தில் பாவ உணர்த்துதல் தோன்றுவது மட்டும் நாம் விசுவாசி என்பதற்கு அடையாளம் இல்லை. ஆவியானவர் மூலமாகவே அது வந்தாலும், அதைக் கடந்து ஒருவன் போயிருக்கிறானா? பாவத்தை வெறுத்து, அதைவிட்டு விலகி விசுவாசத்தை அடைந்து அதற்குரியவிதத்தில் தொடர்ந்து வாழ்கிறானா? என்றெல்லாம் அறிந்துகொள்ளாமல், குற்றமுள்ள இருதயம் இருக்கிற காரணத்துக்காக ஒருவரை விசுவாசியாகக் கருதுவது இந்த விஷயம் பற்றிய ஞானமில்லாததால் இழைக்கப்படும் பெருந்தவறு.
பாவஉணர்த்துதலையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்துவது பரிசுத்த ஆவியானவராக இருப்பதால் அது இரட்சிப்போடு இணைந்தது என்று பலர் தவறாக நம்மினத்தில் எண்ணிவிடுகிறார்கள். அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் ஆவிக்குரிய அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோவார் என்று நினைக்கிறார்கள். வேதம் அப்படிப் போதிக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே உதாரணங்களைக் காட்டியிருக்கிறேன். பாவஉணர்வை ஆவியானவர் ஒருவரில் சுவிசேஷத்தின் மூலம் ஏற்படுத்துவது எல்லா ஆத்துமாக்களிலும் அவர் செய்யும் பொதுவான கிரியைகளின் ஒருபகுதியே தவிர தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் செய்யும் சிறப்பான கிரியையோடு இணைந்தது அல்ல.
பாவத்தை உணர்தலும் மனந்திரும்புதலும்
இதுவரை பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியையான பாவ உணர்த்துதலையும் அதன் மூலம் மனித இருதயத்தில் குற்ற உணர்வை அவர் உண்டாக்குவதையும் கவனித்திருக்கிறோம். இரட்சிப்பிற்கு இது மிக மிக அவசியமானபோதும் இது மட்டும் இரட்சிப்பை அடைந்ததற்கு அடையாளமில்லை என்றும் பார்த்திருக்கிறோம். இந்தப் பரிசுத்த ஆவியானவரின் பாவ உணர்த்துதல் எப்படி ஒருவருடைய இரட்சிப்பில்போய் முடிகிறது என்பதை ஆராய்வது அவசியம். இதை இறையியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
முதலில், கர்த்தரால் அநாதியிலேயே தெரிந்துகொள்ளப்படாமல் இருக்கும் ஒருவன் பாவஉணர்த்துதலை அடைந்தாலும் இரட்சிப்பை அடையும்படி மனந்திரும்பமாட்டான். வேத இறையியல் அடிப்படையில் அது முழுக்க முழுக்க உண்மை. தன்னுடைய பாவநிலைக்கு முழுப்பொறுப்பாளியாக இருக்கும் அவன் மனந்திரும்ப மறுத்து நிற்பான். சுவிசேஷத்தைக் கேட்டு, அதனால் இருதயம் பாதிக்கப்பட்டிருந்தபோதும், அவனுக்கு உலக இன்பம் பெரிதாகத் தெரிந்து அதில் திளைத்திருப்பதையே நாடிப்போகிறான். இத்தகையவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும், பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியைக்குள் வரும்படியும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். அவருடைய இருதயத்தாகம் கேடானவர்களும் திருந்தி தேவ இராஜ்யத்தை அடையவேண்டும் என்பதுதான். இதற்காகவே அனைவரும் கேட்பதற்காக சுவிசேஷத்தை ஏற்படுத்தி, அதை உலகெங்கும் போகவைக்கும்படியாக இயேசு பரிசுத்த ஆவியானவரை அனுப்பிவைத்தார். மனிதனின் பாவநிலை அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலையை அனுமதிப்பதில்லை. பாவஉணர்த்துதலைப் பெற்றும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் அடையும் நீதியான நித்திய தண்டனைக்கு அவர்களே முழுப்பொறுப்பு.
அதேவேளை, பாவஉணர்த்தலையும், பாவத்திற்கான குற்ற உணர்வையும் அடைந்து, மனந்திரும்புகிறவர்களே மெய்யான கிறிஸ்தவ விசுவாசிகள். மனந்திரும்புதல் என்பது பாவத்தை உணர்வதும், அதற்கான குற்ற உணர்வை இருதயத்தில் கொண்டிருப்பதும் மட்டுமல்ல. அந்தப் பாவஉணர்தலோடு நின்றுவிடாமல் பாவத்தில் இருந்து மீண்டுவாழ அதற்கு விடுதலையளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவை நாடி வருதல் அவசியம்; கிறிஸ்துவைத் தன்னுடைய பாவவிடுதலைக்காக மனந்திரும்பி விசுவாசித்தல் அவசியம். 1689 விசுவாச அறிக்கை 15ம் அதிகாரத்தில் மனந்திரும்புதலைப்பற்றி விளக்குகிறபோது, ‘பரிசுத்த ஆவியின் மூலம் தன்னில் உள்ள பாவத்தின் பலவிதமான கேடுகளை உணருபவன் நற்செய்தியின் கிருபையாகிய இரட்சிக்கும் மனந்திரும்புதல் மூலம் இதை அடைகிறான். அத்தோடு அவன் பாவத்தின் காரணமாக தன்னைத் தாழ்த்தி கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறான். இத்தாழ்மைப்படுத்தல் தேவனுக்கேற்ற துக்கம், பாவத்தில் வெறுப்பு, சுய அருவருப்பு ஆகிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்’ (பத்தி 3) என்று கூறுகிறது.
மனந்திரும்புவதற்கு, முதலில் ஒருவன், தான் நீதியான கர்த்தருக்கு முன் பாவியாக நின்று நித்திய தண்டனையை எதிர்நோக்கி இருப்பதை உணரவேண்டும். பத்துக்கட்டளைகளை நிராகரித்து அவற்றிற்கெதிராக வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்தல் அவசியம். மனந்திரும்புவது என்பது, ஒருவன் தன் பாவத்திற்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல் அதை இருதயத்தில் அடியோடு வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி, அதிலிருந்து விடுபடவழி செய்திருக்கும் பாவநிவாரணியான கிறிஸ்துவை மட்டுமே தேவனாக முழு இருதயத்தோடும் விசுவாசிப்பதாகும். பாவத்தில் இருந்து விடுதலை அடைய பாவஉணர்தலை அடையவேண்டும் என்பதல்ல சுவிசேஷம்; மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசி என்பதே சுவிசேஷம். மனந்திரும்புதலின் ஆரம்பப்படி பாவத்தை உணர்தல்; அது முழுமையான ஆவிக்குரிய மனந்திரும்புதலிலும், இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் விசுவாசிக்கும் விசுவாசத்திலும் போய் முடியவேண்டும்.
இறையியலடிப்படையில் மனந்திரும்புதலும் (கிறிஸ்துவில் வைக்கும்) விசுவாசமுமே இரட்சிப்பை அடைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள். (அப்போஸ்தலர் 20:21, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும்; சாட்சியாக அறிவித்தேன்.) மனந்திரும்புதலா, விசுவாசமா முதலில் எது வரவேண்டும் என்ற விவாதத்தில் பல இறையியலறிஞர்கள் ஈடுபட்டு வந்திருந்திருக்கிறார்கள். 1689 விசுவாச அறிக்கையில் இரட்சிக்கும் விசுவாசம் (14) முதலில் விளக்கப்பட்டு அதற்கு அடுத்த அதிகாரத்தில் மனந்திரும்புதல் (15) விளக்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஜோன் மரே (John Murray) சொல்லுவதுபோல், அதில் எது முதலில் வரவேண்டும் என்பதைவிட அவை இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதை உணர்வதுதான் முக்கியம். ஒன்றில்லாமல் மற்றது இருக்காது. சீர்திருத்த இறையியலறிஞரான சின்கிளேயர் பேர்கசன் (Sinclair Ferguson), இதை அழகாக விளக்கியிருக்கிறார். அதாவது, இரண்டு விசுவாசிகளை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வளர்ப்புமுறை, மனநிலைக்கு ஏற்ப அவர்களுடைய விசுவாசத்தின் வெளிப்பாடு அமைந்திருக்கும் என்கிறார். பெரும் பாவவாழ்க்கை வாழ்ந்து சீரழியாமல் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து இரட்சிப்பை அடைந்திருக்கும் ஒருவன் தான் அடைந்திருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகப்பேசி மகிமைப்படுத்துவான்; அவனுக்குப் பாவஉணர்தல் உண்டாகி மனந்திரும்பியிருந்தபோதும், அவனுடைய பேச்சில் கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசம் பற்றியே அதிகமாக இருக்கும். அதேநேரம் பாவத்தைச் செய்து சீரழிந்து மனந்திரும்பியிருக்கும் ஒருவனில், அவனுடைய மனந்திரும்புதலைப்பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். அவனும் கிறிஸ்துவை விசுவாசித்திருந்தபோதும், கோரமான பாவத்தில் இருந்து அடைந்திருக்கும் விடுதலை அவனுடைய பேச்சிலும், மூச்சிலும் மேலிடம் பெற்றிருக்கும். இதற்காக ஒன்றிருந்து மற்றதில்லை என்பதில்லை. இருவரிலும் மனந்திரும்புதலும், விசுவாசமும் இடம்பெற்றிருக்கிறது (அவை இல்லாமல் அவர்கள் இரட்சிப்பை அடைந்திருக்க முடியாது). அவர்களுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய விடுதலைக்குத் தக்கதாக அது அவர்களில் வெளிப்படுகிறது.
மனந்திரும்புதலை அடைய ஒருவன் எந்தளவுக்கு, எத்தனை ஆழமாகப் பாவஉணர்தலையும், குற்ற உணர்வையும் பெற்றிருக்க வேண்டும்? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறபோது பிரசங்கிகள், ஆத்துமாக்கள் பாவத்தை அறிந்து உணர்வது அவசியம் என்று வலியுறுத்துவார்கள். அதற்கு உதாரணமாக கெட்டகுமாரனின் உவமை மற்றும் ஜோன் நியூட்டன் போன்றோரின் அனுபவங்களையும் விளக்குவார்கள். இதையெல்லாம் கேட்கிறவர்கள் எந்தளவுக்கு நம்மில் பாவஉணர்தலும், குற்ற உணர்வும் இருக்கவேண்டும் என்று சிந்திக்கக்கூடும். அதற்கு பதில் – கிறிஸ்துவில் இரட்சிப்படைய எந்தளவுக்கு அது தேவையோ அந்தளவுக்கு இருக்கவேண்டும். அதைத் தீர்மானிக்கிறவரும், கொடுக்கிறவரும் கர்த்தரே. நீதியுள்ள கர்த்தர்முன், தான் ஒன்றுமில்லாத பிச்சைக்காரனைப்போல நிற்கிறேன் என்றும், அவருடைய நீதிக்கட்டளைகளுக்கெதிராக வாழ்ந்து அவருக்கு எதிரியாக இருந்திருக்கிறேன் என்றும், தன்னுடைய இருதயம் பொல்லாப்புள்ளது என்று உணர்வதும், வருந்துவதும் இங்கே மிக அவசியம். இது எந்தளவுக்கு ஒருவருடைய இருதயத்தைத் தாழ்த்துகிறதென்பது ஒவ்வொரு விசுவாசியையும் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும். இதை ஒருவரில் உண்டாக்குகிற பரிசுத்த ஆவியானவர் அவரவருடைய வாழ்க்கைப் பின்னணி மற்றும் அனுபவங்களுக்கேற்பவே அதைச் செய்கிறார். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரேவித அளவுகோளில்லை. ஜோன் நியூட்டனைப் போலவோ அல்லது பாவஉணர்தலைப் பலமாதங்களுக்கு அனுபவித்து வருந்தி வாடிக் கர்த்தரிடம் சேர்கிற ஒரு மனிதரைப்போலவோ அனுபவங்களைக் கொண்டிராமல் இரட்சிப்பை அடைய முடியாது என்று எண்ணுவது மிகத் தவறு. அத்தகைய ஆழமான, நெடுநாட்களுக்கு நீடித்த அனுபவங்களை எல்லோரும் கொண்டிருப்பார்கள் என்று வேதம் போதிக்கவில்லை; அதை எதிர்பார்க்கவும் கூடாது. பாவத்தை உணர்ந்து, வருந்தி, மனந்திரும்ப வேண்டும் என்பதே வேதபோதனை.
பாவஉணர்த்துதலுக்கும் மனந்திரும்புதலுக்கும் இடையில் கால இடைவெளி இருக்கவேண்டுமா? அத்தகைய இடைவெளி இல்லாத மனந்திரும்புதல் பெலனற்றதா? இல்லை என்பதுதான் இரண்டு வினாக்களுக்கும் பதில். பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தவரையில் இடைவெளி காணப்படலாம். அதுவே எல்லோரிடமும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை; அப்படி இருந்ததுமில்லை. இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கவேண்டிய இடைவெளியைவிட மனந்திரும்புதலின் ஆவிக்குரிய தரமே முக்கியம். மனந்திரும்புதல் மெய்யானதா என்பதிலேயே வேதம் கவனம் செலுத்துகிறது. இயேசுவோடு கல்வாரியில் அறையப்பட்டிருந்த மனந்திரும்பிய கள்வனிடம் பாவஉணர்த்துதலுக்கும், மனந்திரும்புதலுக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படவில்லை. ஆனால் பவுல் அப்போஸ்தலன் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசுவை சந்தித்தபோது அவனுக்குப் பாவஉணர்த்துதல் உண்டாகி பின்பு தமஸ்குவை அடைந்து அனனியா அவன்மீது கரம் வைத்து ஜெபித்தபோதே முழு மனந்திரும்புதலும், விசுவாசமும் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரிடமும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒரேவிதத்தில் அமைந்திருக்கவில்லை. இருந்தபோதும் இருவருடைய விசுவாசமும் முழுமையான மெய்யான விசுவாசமாக இருந்தது.
முடிவாக . . .
பாவத்தை உணர்ந்து அதற்காக வருத்தப்பட்டுவிடுவதால் மட்டும் பரலோகம் போய்விட முடியாது என்று இந்த ஆக்கத்துக்கு ஏன் தலைப்புக் கொடுத்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறதா? மெய்யான மனந்திரும்புதலின் ஓர் அங்கமாக பாவஉணர்வும் அதற்காக வருந்துதலும் இருந்தபோதும், மனந்திரும்புதலை நோக்கி அழைத்துப்போகாத பாவ உணர்தல் மெய்யான மனந்திரும்புதலோடு இணைந்ததல்ல. மெய்யாக மனந்திரும்பியவர்கள் (இரட்சிப்படைந்தவர்கள்), மனந்திரும்பிய பிறகு அதிகமாகவே பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தி, தொடர்ச்சியான திருத்தத்தோடு வாழ்வார்கள். உங்களுடைய பாவ உணர்தலும், குற்றவுணர்வும் எந்தவகையைச் சேர்ந்தது? வாசியுங்கள் மத்தேயு 7:13–27 வரை. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களை சிந்திக்க வைக்கட்டும்.
இதழ் 4, 2004
கிறிஸ்தவ சபைகள் இன்று சபை அமைப்பை அலட்சியப் படுத்தி நடந்து வருகின்றன. பாரம்பரிய சபைகள் (Traditional Churches) சடங்குக்கும் பாரம்பரியத்திற்கும் பலியாகி ரோமன் கத்தோலிக்க மதத்தைப்போல குருமார்களை வைத்துக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய சபை அமைப்பு முறையை வேதத்தில் பார்¢க்க முடியாது. பாரம்பரிய சபைகளுக்கு வெளியில் இருக்கும் பிரிவுகள் தனியாக இயங்கி வரும் சபைகள். இவற்றில் பாப்திஸ்து, சகோதரத்துவ சபைகள், பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளை உள்ளடக்கலாம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளில் பெரும்பாலானவை வேதத்தைக் குழிதோன்டிப் புதைத்து நெடுங்காலமாகிவிட்டது. சபை அமைப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய நிலைமை இன்று. அவர்களில் பலர் தங்களை அப்போஸ்தலர்களாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவர்கள், 20 நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டது கூட தெரியாமல் ஊழியம் செய்து வருகிறார்கள். இப்பட்டியலில் எஞ்சியிருக்கும் பிரிவுகள் பாப்திஸ்துகளும், சகோதரத்துவ சபைகளும்தான்.
சகோதரத்துவ சபைகள் தங்களை சபைகள் என்று அழைத்துக் கொண்டாலும் டிஸ்பென்சேஷனலிசத்தின் பாதிப்பால் சபை அமைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே தங்கள் பணி என்று இருந்து வருகின்றன. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே சபையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். இவர்கள் சபைகளை அமைத்தாலும் அவற்றில் சபை அமைப்பைத் துளியும் பார்க்க முடியாது.
பாப்திஸ்து சபைகள் மத்தியில் பல பிரிவுகள் இருக்கின்றன. முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதால் மட்டுமே நாம் பாப்திஸ்துகள் என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டு இயங்குகின்றவைதான் எண்ணிக்கையில் அதிகம். அதற்குமேல் போய் வேத சத்தியங்களைப் பின்பற்றி நாம் ஏன் பாப்திஸ்துகள் என்ற மெய்யான அறிவோடு வளர்கின்ற சபைகள் தொகையில் குறைவு. இவர்களும் திருச்சபை அமைப்பில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். “என் சபையைக் கட்டுவேன்” என்று சொல்லி இயேசு தன்னுடைய சபையை நிறுவி அதற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துச் சென்றிருக்க இவர்களில் பலர் அவற்றை நிராகரித்து, உதாசீனப்படுத்தி உலகப்பிரகாரமாக, சபை என்ற பெயரில் எதை எதையோ செய்து வருவது எந்தவிதத்தில் கர்த்தருக்குப் பிடித்தமானது என்பது புரியவில்லை. சபை அமைப்பு பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இதற்கு சுயநலம்தான் முக்கிய காரணமே தவிர வேதம் அப்படிப் போதித்திருப்பதால் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரமெடுக்காது.
வேதம் காட்டும் சபை அமைப்பு
முதலில், எந்த ஒரு விசுவாசிகளின் கூட்டமும் விசுவாசிகளான அங்கத்தவர்களைக் கொண்டு சபையாக அமைக்கப்பட வேண்டும். சபை என்று சொன்னால் அந்தச் சபைக்கு மட்டுமே உரிய அங்கத்தவர்கள் அதில் இருப்பார்கள். இவர்கள் தகுந்த முறையில் வேத அடிப்படையில் திருமுழுக்குப் பெற்று அந்தச் சபையின் போதனைகள், நோக்கங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக உரிய முறையில் தெரிவு செய்யப்பட்டு அங்கத்தவர்களாக இருப்பார்கள். அந்தச் சபையின் சட்ட அமைப்பு, விசுவாச அறிக்கை ஆகியவற்றை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஒப்புக்கொடுத்து வாழ்வதாக உறுதி எடுத்தவர்களாகவும் இருப்பார்கள்.
அடுத்ததாக, மூப்பர்களும் (Elders/Pastors), உதவிக்காரர்களும் (Deacons) ஒவ்வொரு சபையாலும் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் சபை அதிகாரிகளாக இருந்து மந்தையை வளர்க்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இதில் மூப்பர்களுடைய (போதகர்கள்) பணி வேதபோதனைகளை அளித்து சபையை ஆத்மீக வழியில் வழிநடத்துவது. இவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து சபையின் அனைத்துக் காரியங்களிலும் சபையை வேத அடிப்படையில் வழிநடத்திச் செல்லவேண்டும். இவர்களுக்குக் கீழ் இருந்து உதவிக்காரர்கள் சபையின் நடைமுறைக் காரியங்களைச் செய்யவேண்டும். உதவிக்காரர்கள் உபதேச ஊழியத்துக்காக அழைக்கப்பட்டவர்களல்ல. அவர்கள் போதகர்களுக்குத் துணையாக இருந்து சபைக் காரியங்களை போதகர்கள் காட்டும் வேதவழிகளின் அடிப்படையில் செய்து வரவேண்டும். இந்த இருபதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டியவர்களுக்கான தகுதிகள் வேதத்தில் தெள்ளத் தெளிவாக 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தமிழில் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன.
இன்று வேதம் தெளிவாக விளக்குகின்ற இந்தச் சபை அமைப்பு முறை தமிழ் சபைகளில் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சபை அமைப்பு என்பதே இல்லாமல், எந்தச் சபைத் தொடர்பும் இல்லாமல் ஒரு தனி மனிதன் எங்காவது ஒரு ஊழியத்தை ஆரம்பித்து சுவிசேஷத்தை சொல்லி சில ஆத்துமாக்களைக் கூட்டி ஒரு வீட்டில் அல்லது தானே கட்டிய ஒரு சிறு கட்டடத்திலோ ‘ஜெப வீடு’ என்ற பெயரில் சபை நடத்தி வருவது தமிழ் நாட்டில் நாம் பார்க்கின்ற ஒரு கிறிஸ்தவ கலாச்சாரம். இதை ஆரம்பித்த மனிதர்¢¢ தன்னைத்தானே போதகனாக அறிவித்துக்கொண்டு சாகும்வரை சபை என்று அழைக்கப்படுகின்ற இந்தக் கூட்டத்திற்கு தலைவனாக இருந்து வருவார். இவரே இதற்கு பிரசிடன்ட். காலம் போகப்போக தன் மனைவியையும், பிள்ளைகளையும் ஊழியத்தில் பிரதிஷ்டை செய்து வைத்து அவர்கள் தனக்குப்பின் இந்தக் கூட்டத்தை நடத்திச் செல்ல வழிவகுத்து வைப்பார். எத்தனை வருடங்களானாலும் இந்த ஜெபவீட்டில் சபை அங்கத்துவத்திற்கோ, அமைப்பிற்கோ அல்லது மூப்பர்கள், உதவியாளர்களுக்கோ இடமிருக்காது. அங்கு ஆராதனைக்கு வருபவர்களுடைய கடமை காணிக்கைகளை தவறாது அள்ளி அளிப்பது மட்டுமாகவே இருக்கும். தமிழினத்தில் இதற்குப் பெயர் தான் திருச்சபை ஊழியம். இதைச் சகோதரத்துவ சபைகளில் இருந்து பாப்திஸ்துகள்வரை அனைவரிடத்திலும் பார்க்கலாம். இவற்றில் ஒரு சில வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் ஒரே ஒரு போதகரையும், சில உதவிக்காரர்களையும் கொண்டிருக்கும். வளர்ச்சி இம்மட்டுந்தான் போகும். இதற்குமேல் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாது. ஒன்றுக்குமேற்பட்ட மூப்பர்கள் இருக்கும் சபைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.
சபைகளில் கமிட்டி நிர்வாகம்
பெரும்பாலான சபைகளில் அங்கிருக்கும் போதகர் வேதம் போதிக்கும¢ மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களை அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப்படையில் அந்தந்த பதவிகளில் சபையைக்கூட்டி நியமிக்காது ஒரு ‘கமிட்டியை’ அமைத்து சபையில் நடைமுறை நிர்வாகத்தைக் கவனிக்கும் வேலையை அவர்களுக்கு அளிப்பார். இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் சிலவேளைகளில் விசுவாசிகளாகக்கூட இருக்கமாட்டார்கள். இவர்கள் முக்கியமாக சபையில் நெடுங்காலம் இருந்து வந்துள்ள குடும்பங்களின் அங்கத்தவர்களாகவோ, போதகருடைய உறவினர்களாகவோ (மனைவி, பிள்ளைகள்), வயதானவர்களாகவோ, சமுதாயத்தில் முக்கிய இடத்தை வகிப்பவர்களாகவோ இருப்பார்கள். இந்தத் ‘தகுதிகளின்’ அடிப்படையிலேயே இவர்கள் ‘கமிட்டி’ அங்கத்தவர்களாக வருவார்கள். போதகருடைய வேலை போதிப்பதாகவும், கமிட்டியின் வேலை சபைக் காணிக்கையை கவனமாக எண்ணி சபைக்காரியங்களுக்குப் போதகர் காட்டும் வழியில் செலவழிப்பதாகவும் இருக்கும். பல இடங்களில் முக்கியமாக பேங்க் அக்கவுன்ட், போதகர் அல்லது அவருடைய மனைவி பெயரில் இருக்கும். இது வெளிநாட்டுப் பணத்தை முடக்க ஒரு வழி. சில இடங்களில் கமிட்டியின் கை ஓங்கிவிடுவதும் உண்டு. பணமென்றால் பிணமும் வாய்திறக்குமல்லவா! பொதுவாக இத்தகைய கமிட்டி அமைப்பில் சபைப் பணம் போதகருடைய குடும்ப நன்மைக்காக பாதுகாக்கப்பட்டு வரும். சபையைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் கணக்கு வழக்கோ, வருமானமோ ஒருநாளும் தெரியவராது. கமிட்டி அங்கத்தவர்கள் போதகருக்குச் சாதகமாக இருப்பவர்களாக கவனமாகத் தெரிந்துகொள்ளப்படுவார்கள். ‘ஒரு மாதிரியாக’ சிந்திக்கிற கமிட்டி அங்கத்தவர்கள் வெகுவிரைவிலேயே கேள்வி முறை இல்லாமல் கமிட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். சபையிலும் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.
சில சபைகளில் இந்தக் கமிட்டியின் கையோங்கி போதகர் ஓரங்கட்டப்படுவதுண்டு. போதகர் வெறும் பேச்சுக்குத்தான் போதகராக இருப்பார். அவர் கமிட்டியின் மனங்கோணாது நடந்துபோகிற வரையில் சபையில் ‘கூலி’ வாங்கிக் கொண்டு போதகராக இருக்கலாம். கமிட்டியைப் பகைத்துக் கொண்டால் அவருக்கு ஆபத்துதான். கமிட்டியின் கோபத்துக்கு ஆளாகி சபையில் இருக்கமுடியாமல் வெளியில் தள்ளப்பட்டு வேறு வேலைகளுக்குப் போகிற போதகர்களும் உண்டு. எந்தளவுக்குப் போதகரின் ஆட்கள் கமிட்டியில் இருக்கிறார்களோ அந்தளவுக்குப் போதகர் கையோங்கி இருக்கும். இந்தக் கமிட்டி அங்கத்தவர்கள் ஆத்மீக அடிப்படையில், வேதத்தகுதிகளை ஆராய்ந்து நியமிக்கப்படாததால் சபையில் வேத அடிப்படையில் எதுவும் நடப்பதற்கு இடமிருக்காது. வேதம் அதிகம் தெரியாதவர்களாகவும், சத்திய வாஞ்சை எள்ளளவும் இல்லாதவர்களாகவும் இந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இதுதான் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான சபை அமைப்பு.
திருந்தி வளர்வது திருச்சபை
இன்று சபை ஊழியங்கள் வேத அடிப்படையில் நடக்க வேண்டுமானால் சபை மக்கள் அறிவீனர்களாகவும், அடிமைகளாகவும் வாழ்வதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். வேதத்திற்கு மதிப்புக் கொடுக்காமல், வேத அடிப்படையில் சபையை அமைக்காமல் கமிட்டி வைத்து சபை என்ற பெயரில் கடை நடத்தி வருவதை அனுமதிக்கக் கூடாது. வேதபோதனைகளுக்கெல்லாம் முரணாக நடப்பவர்களுக்கு நாம் அடங்கி வாழ்வது கர்த்தருக்குப் பிடிக்காதது. அவர்களுக்குக் காணிக்கை கொடுப்பதும் தவறு. அத்தோடு, தேவபயத்தோடு வேத போதனைகளுக்கு உட்பட்டு நடக்காதவர்களுக்குச் சபையில் எந்தப் பதவியையும் அளிப்பதை அனுமதிக்கக்கூடாது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் சபைக்குத் தரிசனம் தந்து ‘பந்தா’ காட்டிவிட்டு போகிறவர்களையெல்லாம் சபையில் எந்தப் பதவியிலும் வைக்கக்கூடாது. குடும்ப வாழ்க்கை சரியில்லாதவர்களையும், வேதபோதனைகளுக்கு அடிபணியாதவர்களையும், சபைக் காரியங்களை பயத்தோடும், வாஞ்சையோடும¢ செய்யத் தவறுகிறவர்களையும் எந்தப்பதவிக்கும் சிபாரிசு செய்யக்கூடாது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு கலாச்சாரம், முகஸ்துதி என்ற பெயரில் மனிதனுக்குத் ‘துதி’பாடி நமக்கேன் தலைவலி என்று இருந்துவிடுகின்ற ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக் காலத்தில் கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்க நேரிடும். சபை என்ற பெயரில் இருக்கும் சாத்தானின் குகைகளில் உங்களுடைய மனைவி, பிள்ளைகள் ஆத்தும வளர்ச்சி அடைய முடியுமா? என்பதை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
நல்ல போதகர்களுக்கும், நல்ல சபைகளுக்கும் நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்தவேண்டும். வேதபோதனைகளின்படி சபை நடத்தத் தவறும் போதகர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை. கூலிக்கு மாறடிக் கிறவர்கள் கர்த்தரின் மெய்யான சேவகர்களாக இருக்க முடியாது. சபை என்ற பெயரை மட்டும் வைத்துக்கொள்ளுவதால் ஒரு அமைப்பு ஒரு நாளும் சபையாகிவிடாது. வேதம் எல்லா இடங்களிலும் அந்த சபையில் ஆட்சி செய்யவேண்டும். வேதபோதனையின்படி சபை சட்ட விதிகளும், சபை அங்கத்துவமும், சபை அமைப்பும், நிர்வாகமும், சபைக் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். வேதத்தை அடிக்கடி பயன்படுத்தி அதன்படி சகலமும் நடைபெறுகிறதா என்று ஆராய்ந்து பார்த்துக்கொள்கிற சபையாக இருக்கவேண்டும். வேதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பலரும் சபை அமைக்கப் புறப்பட்டிருப்பதாலேயே இன்று நம்மால் நல்ல சபைகளைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமாற உங்கள் பங்குக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
இதழ் 4, 2005
பரம்பரியத்திற்கும், சம்பிரதாயங்களுக்கும் மனிதர்கள் கொடுக்கும் மரியாதை தமிழினத்தில் அதிகம். தாத்தா காலத்தில் இருந்து வருகிற வழக்கமென்றும், நூறுவருட பாரம்பரியமென்றும் சொல்லி பாரம்பரியத்தில் இன்பம் காண்பார்கள் நம்மினத்தவர்கள். பாரம்பரியமாக நடந்து வருகிற ஒரு காரியம் நல்லதா? கெட்டதா? என்ற வித்தியாசம் பார்க்காமல் அது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற ஒரு காரியம் என்பதற்காக அதற்கு மரியாதை தந்து சிந்தனையில்லாமல் ஆதரித்து வருகிறது தமிழினம். அதை ஒழித்துவிட்டால் எத்தனையோ நன்மைகள் வருகின்ற வாய்ப்புகள் இருக்கின்றபோதும், அது பாரம்பரியமாக இருந்து வருகிற ஒரே காரணத்துக்காக வரப்போகிற நன்மைகளையும் இழக்கத் தயாராக இருக்கும் கண்மூடித்தனமான வழக்கத்தைப் பின்பற்றுகிறது நமது சமுதாயம். பாரம்பரியத்தோடு சேர்ந்தவைதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும். நம் மக்கள் தொடர்ந்தும் இருட்டில் இருந்து இளைய சமுதாயம் வளர வழியில்லாமல் இருப்பதற்கு இந்தப் பாரம்பரியமும், சடங்குகளும், சம்பிரதாயமும் பெரிய இடையூராக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கு முன்பு நான் புறஜாதிக்காரனாக வாழ்ந்த காலத்தில் சிறு வயதில் எங்களுடைய சாதி வழக்கத்துக்கு மாறாக நான் மீசை வைக்கப்போய் என்னுடைய தகப்பனாருக்கு மாரடைப்பே வந்தது பழைய கதை. ஒன்று நல்லதா? கெட்டதா? அதால் நன்மையுண்டா? கேடு வருமா? என்றெல்லாம் சிந்திக்காமல் பாரம்பரியமாக செய்து வருகிறதை ஒருபோதும் மாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து வருகிறார்கள் நம்மக்கள்.
நல்ல பாரம்பரியங்களைத் தொடர்வதில் என்ன தவறு? என்று யாராவது கேட்கலாம். நல்ல கேள்விதான். கேட்கிறவர்கள் ஒருமுறை கருத்தோடு சிந்தித்துப் பார்த்து நமது பாரம்பரியங்களில் எத்தனை நல்லவை என்பதை பட்டியல் போட்டு யாராவது சொல்லுவார்களா? நமது பாரம்பரியங்களில் நன்மை இருக்கிறதா? என்றாவது நாம் எப்போதாவது சிந்தித்துத்தான் பார்த்திருக்கிறோமா? பாரம்பரியமாக இருந்து வருகிற காரியம் என்ற உடனேயே நாம் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்பதற்கே நடுங்கவல்லவா செய்கிறோம். நல்லவையும், பயனுள்ளவையும் நிலைத்திருக்க வேண்டியது அவசியந்தான். பயனில்லாதவற்றை அவை காலங்காலமாக இருந்துவருகின்றன என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து பின்பற்றுவதில் என்ன நன்மையிருக்கிறது? கர்த்தருடைய வேதத்தோடு சம்பந்தமில்லாத எந்தப் பாரம்பரியமும், அது எவர் மூலமாக வந்திருந்தாலும் கடப்பாறை வைத்து இடித்துத் தள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது கிறிஸ்தவ சமுதாயத்தையே சீரழித்து விடும்; ஜீவனில்லாததாக்கிவிடும்.
கிறிஸ்தவர்களும் பாரம்பரியமும்
கர்த்தரை அறியாதவர்கள் மத்தியில் இருந்து வருகிற இந்தப் பாரம்பரியக் கொடுமை கிறிஸ்தவத்தைப் பாதிக்காமல் இல்லை. தமிழினத்தில் கிறிஸ்தவம் புறஜாதி வழக்கங்களையும், பண்பாட்டையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கொடுமையை நாம் ஏற்கனவே பத்திரிகையில் விளக்கியிருக்கிறோம். கிறிஸ்துவுக்கு அடுக்காத இந்தப் புறஜாதி வழக்கங்களும், பண்பாடும் தொடர்கின்ற கொடுமை போதாதென்று பாரம்பரியம் என்ற பெயரில் யாரோ எப்போதோ ஏற்படுத்தி வைத்துள்ள வழிமுறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி ஆத்மீக விருத்திக்கே வழியற்ற நிலையில் தமிழினத்தின் சபைகள் இருந்து வருகின்றன. ஆத்துமவிருத்தியைவிட இந்தப் பாரம்பரியங்களைத் தொடர்வதிலேயே இந்தச் சபைகள் அதிக அக்கறை காட்டுகின்றன. இந்தச் சபைகள் ஆத்துமவிருத்தியில்லாது, ஜீவனில்லாது இன்றிருப்பதற்கு பாரம்பரியமே பெரிய இடையூராக இருந்து வருகின்றது.
பியூரிட்டன் பெரியவர்களின் காலமான பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், இங்கிலாந்து சபை, ஜோன் ஹூப்பர் (John Hooper) என்ற பியூரிட்டன் பெரியவருக்குத் திருச்சபையில் போதகர் பதவி அளிக்க முன்வந்தது. ஹூப்பர் அதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தார். அத்தோடு, இங்கிலாந்து சபை ஹூப்பருக்கு வேறு சில நிபந்தனைகளையும் விதித்தது. அதாவது போதகர் பதவியில் இருக்கின்றபோது அவர் அதற்கான சில வெளிப்புற சாதனங்களைப் பின்பற்றவேண்டும் என்று இங்கிலாந்து சபை வற்புறுத்தியது. ஹூப்பர் அணிந்துகொள்ள வேண்டிய அங்கி மற்றும் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளே அவை. நம்மவர்கள் சிந்திக்காமலேயே இதற்கெல்லாம் உடனே தலையாட்டி விடுவார்கள். ஆனால், ஹூப்பர் அப்படிச் செய்யவில்லை. அவர் பின்பற்ற வேண்டுமென்று இங்கிலாந்து சபை எதிர்பார்த்த காரியங்களுக்கும் வேதபோதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்ததைக் கவனித்தார். தொடர்பில்லாதது மட்டுமல்ல வேதரீதியில் போதகப் பணியைச் செய்வதற்கு அவை பேரிடையூறு என்பதையும் உணர்ந்தார். அவருக்கு அது வெறும் அங்கிப் பிரச்சினையாகத் தெரியவில்லை. அதனால் ஹூப்பர் அவற்றைப் பின்பற்ற மறுத்தார். திருச்சபையையும், அரசையும் எதிர்த்து சிறைத்தண்டனையையும், மரணத்தையும் வரவேற்றார். பாரம்பரியம் அந்தக் காலத்தில் எந்தளவுக்குத் திருச்சபையைக் கொலைகாரக்கூட்டமாக வைத்திருந்தது என்பதை சபை வரலாற்றை வாசித்தால் தெரிந்துகொள்ளலாம்.
பாரம்பரியத்தைப் பாரம்பரியம் என்பதற்காக ஏற்றுக்கொள்ள மறுத்து வேத போதனைகளின்படி கர்த்தருக்கு மகிமையளிப்பவைகளை மட்டுமே திருச்சபைகள் பின்பற்றவேண்டும் என்ற வைராக்கியத்தோடு உயிரையும் பணயம் வைத்து ஹூப்பர் போன்றவர்கள் உழைத்ததால் தான் இன்றைக்கு நாம் ஓரளவுக்காவது மெய்க்கிறிஸ்தவத்தை தமிழினத்தில் இங்கும் அங்குமாகப் பார்க்க முடிகிறது. இந்தப் பாரம்பரியப் பேய் நம்மை மோசம் செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது சீர்திருத்தப் பெரியவர்கள் 1689 விசுவாச அறிக்கையையும், வழிபாட்டு முறைக்கான கோட்பாடுகளையும் எழுதி வைத்தார்கள். விசுவாச அறிக்கையில் 21, 22 ஆகிய அதிகாரங்கள் மிக முக்கியமானவை. கிறிஸ்தவ சுதந்திரத்தையும், மனச்சாட்சியின் சுதந்திரத்தையும் பற்றியது 21வது அதிகாரம். அந்த அதிகாரத்தில் பின்வரும் வாசகங்களை நமது பெரியோர்கள் எழுதி வைத்தார்கள்: “கடவுள் மட்டுமே மனச்சாட்சியின் ஆண்டவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு எதிரான, அதில் அடங்கியிராத, சாதாரண மனிதர்களின் எந்தப் போதனைகளின் நிர்ப்பந்தத்திற்கும் நாம் உட்படவோ, அவற்றிற்குக் கீழ்ப்படியவோ அவசியமற்று அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் நமது மனச்சாட்சிக்கு அவர் விடுதலை அளித்துள்ளார். அத்தகைய போதனைகளை ஏற்று அந்நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்படுவது மெய்யான மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். மனிதர்கள் சக மனிதர்களை கண்மூடித்தனமாக, கேள்வி முறையற்ற கீழ்ப்படிவிற்கு உட்படுத்த முனைவது நியாயமற்றதும், மெய்யான கிறிஸ்தவ சுதந்திரத்தை அழிக்கும் செயலுமாகும்.”
மேலே நாம் பார்த்த வாசகங்கள் அருமையானவை. சீர்திருத்தவாத பெரியவர்கள் மனிதர்களின் வேதத்திற்கு விரோதமான போக்குகளுக்கும், வழிமுறைகளுக்கும் இடங்கொடுக்காமல் நாம் வாழ்வதற்காக நம்மை எச்சரித்து இந்தப் பொன்னான வாசகங்களை எழுதி வைத்தார்கள். இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இவை கடவுளுக்கும், மற்றவர்களுக்கும் நாம் கீழ்ப்படிவதைத் தடைசெய்யவில்லை. கர்த்தருக்குக் கீழ்ப்படிகிற நாம் அவருடைய வார்த்தையின்படி சபைகளுக்கும், போதகர்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால், இந்த வாசகங்கள் நாம் கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமான அல்லது அவருடைய வார்த்தையோடு தொடர்பில்லாத வெறும் போலிப் பாரம்பரியங்களும், சடங்குகளும், அவை எவர் மூலமாகவும், எங்கிருந்து வந்தாலும் அவற்றிற்கு நாம் கீழ்ப்படியக்கூடாது என்பதையே விளக்குகின்றன. நமது மனச்சாட்சி கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைக்கும் மட்டுமே கட்டுப்பட வேண்டும். அப்படிக் கட்டுப்படுகிறவிதமாக நமது மனச்சாட்சி இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இதை மீறி சபையினுடையதும், பிஷப்புக்களினுடையதும் வேதத் தொடர்பில்லாததும், வேத விரோதமானதுமான நடவடிக்கைகளுக்கு நமது மனச்சாட்சி கீழ்ப்படியக்கூடாது. அப்படிக் கீழ்ப்படிவது நமது கிறிஸ்தவ சுதந்திரத்தை பிசாசுக்கு அடகு வைக்கிற செயலாகும். அது மட்டுமல்லாமல் கர்த்தரை அவமதிக்கின்ற செயலுமாகும். இதையே மேலே நாம் பார்த்த வாசகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்தவ சுதந்திரம் பற்றிய இந்தப் போதனைகளின் அடிப்படையிலேயே அடுத்த அதிகாரம் கர்த்தரின் வழிபாடு பற்றிய போதனைகளையும் தருகிறது.
தமிழ் கிறிஸ்தவர்களைப் பாரம்பரியம் படுத்தும் பாடு
மேலே நாம் பார்த்த வேதபோதனைகளை மீறி இன்றைக்குப் பாரம்பரியத்தைப் பின்பற்றி யாரோ மனிதர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள் என்பதற்காக தமிழ்த் திருச்சபைகளில் போதகப் பணி செய்கிறவர்கள் தங்களை பிஷப்புக்கள் என்று அழைத்துக் கொண்டு, கர்த்தருக்கு விரோதமான கத்தோலிக்க மதகுருக்களைப் போன்ற அங்கிகளை அணிந்துகொண்டு சபைகளில் ஆத்துமாக்களைவிட மிக உயரமான நிலையில் இருந்து பாரம்பரியத்துக்கும், சடங்குகளுக்கும் பணி செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மனந்திரும்புதலையும், இரட்சிப்பின் அனுபவத்தையும் அடையவில்லை என்பது நாடறிந்த உண்மை. மிகுந்திருப்பவர்களுக்கு வேதமே தெரியாது. இவர்கள் அரசரடி இறையியல் (நிந்தனை) கல்லூரியிலும், சென்னை ஹிந்துஸ்தான் வேதாகமக் கல்லூரியிலும், எஸ்றா சற்குணத்தின் சென்னை இறையியல் கல்லூரியிலும், யூனியன் பிபிலிக்கள் செமினரியிலும் இறை நிந்தனைசெய்யக் கற்றுக்கொண்டு பாரம்பரியத் திருச்சபைகளை அலங்கரித்து வருகிறார்கள். (மேற்குறிப்பிட்ட இறையியல் கல்லூரிகள் எல்லாம் வேதத்தை முழுமையாக நம்புவதில்லை.) பிரசங்க ஊழியத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் வெறும் சடங்குகளை மட்டும் சபைகளில் தொடர்ந்து நடத்தி வைத்து இவர்கள் ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கும் கிறிஸ்துவுக்கு எதிரிகளான பரிசேயர்களுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. நவீன பரிசேயர்களான இந்தப் பிஷப்புக்கள் வேதவிரோதிகள். சிந்திக்க மறுத்து இவர்களைப் பின்பற்றி வருகிற எவரும் மெய்விசுவாசிகளாக இருக்க முடியாது.
முழங்காலிட்டு ஜெபிப்பதும், சிலுவைக் குறியிடுவதும், பொறுக்கியெடுத்த சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப உணர்ச்சியே இல்லாது ஜெபம் என்ற பெயரில் சபைகளில் சொல்லுவதும், எதற்கெடுத்தாலும் “ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்” என்று மந்திரம் ஓதுவது போல் அடிக்கடி சொல்லுவதும், ஆல்டரைப் பார்த்து வணங்குவதும், சடங்குபோல் முழு இரவு ஜெபக்கூட்டம் நடத்துவதும், மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிப்பதும், வெள்ளை நிற உடை அணிவதும், லெந்து நாட்களில் உபவாசம் செய்து அக்காலங்களில் மீசை தாடியை சிரைக்காமலும், அசைவ உணவுகளை உண்ணாமலும், பெண்கள் தலையில் பூ வைக்காமலும், இக்காலங்களில் திருமணம் போன்ற வேறு நல்ல காரியங்களைச் செய்யாமலும் இருப்பது போன்ற அநேக சடங்குகள் பாரம்பரியமாக திருச்சபையாரை ஆட்டிப்படைத்து வருகின்றன. குருத்தோலை ஞாயிறு தினத்தில் தென்னை மர ஓலையில் செய்யப்பட்ட சிலுவையொன்றை சபைக்கு வருகிற எல்லோருக்கும் கொடுப்பதும் வழக்கம். அதைப் பெற்றுக்கொள்கிறவர்கள் வீட்டில் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைப்பார்கள். இதன் மூலம் வாழ்க்கையில் நன்மைகள் நிகழும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தஞ்சாவூரில் சி.எஸ்.ஐ. சபைகளில் வருடத்தில் இரண்டு நாட்கள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் திருவிருந்து கொடுத்து வருகிறார்கள் என்று அறிந்தேன். இப்படிச் செய்யும்படி கர்த்தர் வேதத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சடங்காக இந்தச் செயல் பாரம்பரியமாக இங்கே நடந்து வருகின்றது. அத்தோடு பிறந்த பிள்ளைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதோடு அப்பிள்ளைக்கு ஒரு ஞானத்தாயையும், ஞானத் தகப்பனையும் நியமிப்பதும் சடங்காக நம்மத்தியில் இருந்து வருகிறது. இந்த வழக்கம் கர்த்தருக்கு விரோதியான கத்தோலிக்க மதம் ஏற்படுத்திய சடங்கு என்ற அறிவு கொஞ்சமும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்களும், சபைகளும் இவற்றைப் பின்பற்றி வருகின்ற கொடுமையை நம்மினத்தில் தொடர்ந்து பார்க்கிறோம். இதெல்லாம் போதாதென்று குடித்து வெறித்து தன் நிலையை உணராமல் சபைக்கு வருகிறவர்களுக்குத் திருவிருந்து கொடுக்கிற திருகுதாலம் பல சபைகளில் நடந்து வருகின்றது. பாரம்பரிய, பெயர் கிறிஸ்தவ சபைகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
இன்னும் சொல்லப் போனால் சிலுவையை சுமப்பதும், அதை மதித்து ஆராதிப்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகையையும், லெந்து காலத்தையும், உயிர்த்தெழுந்த நாளையும் பெரிதுபடுத்தி அவற்றை விழாபோலக் கொண்டாடுவதும் நம்மினத்தில் சகஜம். இவை சபைகளில் பாரம்பரியமாக நடந்துவருகிற நிகழ்ச்சிகளாக மாறி வெறும் சடங்குகளாக சபைகளை அலங்கரித்து வருகின்றன. சிலுவையை வைத்து அநேகர் செய்து வருகிற கொடுமைக்கு எல்லையே இல்லை. அதற்கு மாலை போட்டு வைப்பதில் இருந்து தோலில் சுமந்து நடப்பதுவரை அநேக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. சிலுவையைத் தோளில் சுமந்து தெருவில் நடப்பதால் ஆத்மீக விருத்தி அடைந்த மனிதன் உலகத்தில் இருந்ததில்லை. அதைச் சுமப்பது ஆத்மீக விருத்திக்கு அடையாளம் என்று கர்த்தர் ஒருபோதும் வேதத்தில் சொன்னதில்லை. மாறாக அப்படி சிலுவையை வழிபடுவது தன்னை இகழ்கின்றதும், நிராகரிக்கின்றதுமான செயலாகவே அவர் கருதுகிறார். பத்துக்கட்டளைகளில் முதல் மூன்றும் மனிதன் சிலுவையை வழிபடுவதைத் தடை செய்கின்றன. பாரம்பரியத்துக்கு அடிமைப்பட்டுப்போன மனிதர்கள் ஆத்தும விருத்தியில்லாமல் இன்று சிலுவையைக் கர்த்தராக வணங்கி வருகிறார்கள்.
பழைய ஏற்பாட்டு யூதர்கள் கர்த்தருக்கு விரோதமாக சிலை ஏற்படுத்தியதும் இதுவும் ஒரேவிதமானதே. மோசே வனாந்தரத்தில் யூதர்களை விஷப்பாம்புகளில் இருந்து காப்பாற்ற ஏற்படுத்திய வெண்கலப் பாம்பை பின்பு இஸ்ரவேலர் கடவுளாகப் பயன்படுத்தி அதற்கு தெய்வீக ஆராதனை செய்து வந்தார்கள். அது பொறுக்காமல் எசேக்கியா தான் அரசனானவுடன் நாட்டில் வழிபாட்டுச் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக முதலில் அந்த வெண்கலப் பாம்பை சிதறும்படி உடைத்தெறிந்தான். இன்று சிலுவை அந்த வெண்கலப் பாம்புபோல் ஆத்துமாக்களுக்குக் கர்த்தராக இருந்து வருகின்ற கொடுமையை கர்த்தர் சகித்துக்கொள்ள மாட்டார்.
இவை மட்டுமா? யாருக்காவது காலில் கையில் அடிபட்டுவிட்டால் உடனே அடிபட்ட இடத்தில் சிலுவைக் குறியிடுவதும், இயேசு கிறிஸ்து என்று எழுதுவதும் பலருடைய வழக்கம். இதனால் காயம் குணமாகும் என்ற போலி நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் தாங்கள் நினைத்த காரியம் கைகூட பல தடவைகள் திரும்பத் திரும்ப ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதுபோல் கிறிஸ்தவர்களிலும் அநேகர் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று எழுதி வருகின்றனர். இரவு படுக்கப்போவதற்கு முன்பு கதவு, ஜன்னல்களில் எல்லாம் சிலுவைக் குறியிடுகிறவர்களும் அதிகம். இப்படிச் செய்தால் வீடு பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் தவறான நம்பிக்கை.
சடங்குகளும், சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் வேறு பலவிதங்களிலும் நம்மக்களை ஆட்டிப்படைத்து மெய்க்கிறிஸ்தவ அனுபவத்தை அவர்கள் வாழ்க்கையில் அடைய முடியாதபடி செய்து வருகின்றன. திருமண வைபவத்தில் தாலியை எல்லோரும் ஆசீர்வாதம் செய்வதற்காக திருமண மண்டபம் முழுவதும் அனுப்பி வைத்தல், தாலியில் சிலுவை வடிவத்தில் டாலர் செய்வது போன்ற சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கையாக வளர்ந்திருக்கின்றன. நாள் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது போன்ற புறஜாதி வழக்கங்களும் கிறிஸ்தவத்தின் பெயரில் நடந்து வருகின்றன. இவை மட்டுமா? பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் ஜெபக்கூட்டம் வைத்து அதைக் கொண்டாடுவது இந்து மதத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கம். திருமணமான பெண்கள் கர்ப்பந்தரித்து ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி விருந்து வைப்பதும் இந்துப் பண்பாட்டில் இருந்து வந்திருக்கிற சடங்கே. குழந்தைக்கு மொட்டையடிப்பது, தாய்மாமன் மடியில் வைத்து அதைச் செய்வது எல்லாம் புறஜாதி வழக்கங்களே. புது வீடு கட்டினால் நிலைக்கதவுகளில் புறஜாதியானைப்போல கோழி இரத்தத்தைப் பூசி, சங்காரக்காரன் நம் வீட்டை ஒன்றும் செய்ய மாட்டான் என்று நம்பி வருகிற போலிக் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.
கிருபையின் சாதனங்கள் சடங்காக மாறிவிடுகின்ற கொடுமை
ஜெபிப்பது விசுவாசிகளுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் கிருபையின் சாதனங்களில் ஒன்று. ஜெபிப்பதன் மூலம் நாம் கர்த்தரோடு பேச முடியும். ஜெபிப்பதற்கு நேரங்காலந் தேவையில்லை. ஜெபத்தை நாம் கருத்தோடு, கர்த்தரின் வார்த்தையின்படி செய்யவேண்டும். நம்முடைய சுயநல நோக்கங்களோடும், கர்த்தரைக் காரியங்கள் செய்ய வைக்கும் எண்ணத்தோடும் தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது. ஜெபங்கேட்கிற தேவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது.
அதேபோல உபவாசம் செய்வது என்பதும் சாதாரணமானதொன்றில்லை. கண்டதற்கும் உபவாசம் செய்யும்படி வேதம் எங்குமே எதிர் பார்க்கவில்லை. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைபாடு இருந்தால் அதைத் தீர்த்துக்கொள்ளவோ அல்லது நம்மை சோதிக்கும் குறிப்பிட்ட பாவத்தை நிறுத்திக்கொள்ளுவதற்காக சரீரத்தை பலவீனப்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டுவரவோ அல்லது சபையில் அதிகாரிகளை தேவ பயத்தோடு கர்த்தரின் பணிக்காக நியமிப்பதற்காகவோதான் உபவாசம் செய்யும்படி கர்த்தர் சொல்லியிருக்கிறார். தொட்டதற்கெல்லாம் நாம் உபவாசம் எடுக்க வேண்டுமென்றோ அல்லது மற்றவர்களை அதைச் செய்யவைக்கவோ வேதம் இடம் தரவில்லை. கூட்டம் கூடி உபவாச ஜெபம் செய்வதால் எழுப்புதலை உண்டாக்கலாம் என்று வேதம் போதிக்கவில்லை. வேதம் போதிக்காத காரியங்களுக்கு நாம் உபவாச ஜெபத்தில் ஈடுபடக்கூடாது.
ஜெபத்தைப் பற்றியும், உபவாசத்தைப் பற்றியும் மேலே நாம் பார்¢த்த உண்மைகளை வேதம் போதிக்க, இன்றைக்கு இவை தவறான முறையில் தமிழினத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உபவாச ஜெபம் என்று எடுத்ததற்கெல்லாம் சபைகளில் ஜெபக்கூட்டம் நடந்து வருகிறது. பாரம்பரிய சபைகளில் இது ஒரு சடங்காக இருந்து வருகிறது. முக்கியமாக லெந்து நாட்களில் இது மிகவும் அதிகம். ஜீவனே இல்லாமல், இரட்சிப் பின் அருமையையே வாழ்க்கையில் அறிந்திராமல், வெறும் பெயர்க் கிறிஸ்தவனாக இருந்து உபவாச ஜெபத்தை ஒரு சடங்குபோல் செய்வதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
சபைத் தொடர்பில்லாமல் தனி ஊழியம் செய்து வருகின்ற மனிதர்கள் எல்லாம் பல (பெந்தகொஸ்தே) சபைகளைக் கூட்டி பல நாட்களுக்கு ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். 15 நாட்கள், 30 நாட்கள் என்று இரவு ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. தமிழினத்தில் ஏதோ எழுப்புதல் நடக்கிறது என்றுகூட எவரும் எண்ணிவிடலாம். ஆனால், இங்கே நடக்கின்ற விஷயமே வேறு. வியாதிகளைத் தீர்க்கிறோம், ஜெபிக்கிறோம் என்று சொல்லி ஊரில் உள்ள, முக்கியமாக உணர்ச்சிவசப்படும் பெண்களைக்கூட்டி இப்படிக் கூட்டத்தை நடத்திவிடுகிறார்கள். வியாதிகளைத் தீர்ப்பதற்கு இயேசுவோ, அப்போஸ்தலர்களோ ஜெபக்கூட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. சத்தியத்துக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காதவர்கள் சடங்காக ஜெபக்கூட்டம் நடத்தினால் கர்த்தர் அசைந்துவிட மாட்டார்.
இந்த இரவு அல்லது முழுநேர உபவாச ஜெபக்கூட்டங்களில் நடக்கின்ற இன்னுமொரு அநியாயம், கூட்டம் நடத்துகிறவர்கள் பல தடவைகள் காணிக்கை எடுப்பதுதான். இந்த ஊழியத்திற்கு, அந்த ஊழியத்திற்கு என்று கூறி பணத்தில் இருந்து நகைநட்டு அத்தனையையும் கூட்டத்துக்கு வருகிறவர்களிடம் இருந்து காணிக்கையாக வற்புறுத்தி வாங்கி விடுகிறார்கள். காணிக்கை எடுக்கும் நேரம் வருகிறபோது அதற்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னுடைய திறமையைக் காட்டி உணர்ச்சிவசமாகப் பேசி ஆத்துமாக்கள் கழுத்தில் இருந்ததைக்கூட, அது தாலி என்ற உணர்வுகூட இல்லாமல் கழட்டிக் கொடுத்துவிட வைத்துவிடுகிறார். இதையெல்லாம் இயேசு செய்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. இதெல்லாம் இயேசு பெயரில் தமிழினத்தில் கிறிஸ்தவக் கூட்டங்களில் நடந்து வருகின்ற அநியாயங்கள்.
மேலே நாம் பார்த்ததெல்லாம் ஆத்மீகக் கூட்டங்கள் என்ற பெயரில் சடங்குபோல் நடந்து வருகின்றன. யாருக்கும் கட்டுப்படாமல் தனி (வியாபார) ஊழியம் நடத்தி வருகின்ற அத்தனை பேரும் இத்தகைய உபவாசக்கூட்டங்களை நடத்தாமல் இருப்பதில்லை. கூட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்க அவர்களின் வங்கிக் கணக்குத் தொகையும் அதிகரிக்கின்றது. இதையெல்லாம் எவரும் எதிர்ப்பதோ, குறை கூறுவதோ கிடையாது. கர்த்தர் பெயரில் நடப்பதால் இதில் தவறிருக்காது என்று எண்ணி அறிவில்லாமல் நடந்துகொள்கிறவர்கள் எண்ணிக்கையே அதிகம். கர்த்தர் நமக்குத் தந்துள்ள கிருபையின் சாதனமான ஜெபம் சில மனிதர்கள் அவருடைய பெயரைப் பயன்படுத்தி பணம் பண்ணுவதற்கு இந்தவிதத்தில் நம்மினத்தில் இன்று உதவி வருகின்றது. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுகிற எத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போகும்.
கிறிஸ்துவும் பாரம்பரியமும்
இயேசு கிறிஸ்து லூக்கா 12ம் அதிகாரத்தில் பாரம்பரியத்தின் சட்டையை உரித்துக் காட்டுகிறார். அப்பகுதியில் அவர் சீடர்களைப் பார்த்து, “நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்கிறார். பரிசேயர்களுடைய மாயமான புளித்தமாவு எது? இப்பகுதியில் 2, 3 ஆகிய வசனங்கள் அதை விளக்குகின்றன. பரிசேயர்கள் உள்ளே கேடான இருதயத்தைக் கொண்டிருந்து வெளிப்புறத்தில் நல்ல பக்திமான்கள் போல் பல்வேறு சடங்குகளையும் செய்து வந்தார்கள். அவர்கள் செய்கின்ற அத்தனையும் ஒரு காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று இயேசு எச்சரிக்கை செய்தார்.
வேத பாதுகாவலர்கள் போலவும், கர்த்தருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் போலவும் யூதர்கள் முன் நடந்து வந்த பரிசேயர்களை இயேசு விரியன் பாம்புக்குட்டிகள் என்று அழைத்தார். ஏன்? பிணத்திற்கு வெள்ளை உடுத்தி வைத்தது போல அவர்களுடைய வாழ்க்கை இருந்ததுதான் அதற்குக் காரணம். வெளிப்புறம் ஆத்மீகத்தில் சிறந்தவர்கள் போல அவர்கள் பல சடங்குகளைத் தவறாது செய்து வந்தாலும், பக்திக்கு ஆதாரமான மனந்திரும்புதலும், இரட்சிப்பும் இல்லாதவர்களாக இருந்தார்கள். சடங்குகளும், பாரம்பரியமுமே அவர்களுக்குப் பரலோக வாழ்க்கையாகத் தெரிந்தது. சடங்குகளாகிய வலையில் அகப்பட்டு அதுவே தஞ்சம் என்று வாழ்ந்தார்கள் பரிசேயர்கள். யூதர்களையும் தங்களைப் போலவே வாழத்தூண்டி வந்தார்கள்.
இயேசு கிறிஸ்து பரிசேயர்களின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் சாடினார். மத்தேயு 5-7 வரையுள்ள மலைப்பிரசங்கத்தில் இயேசு பரிசேயர்களுடையதும், யூத மதத்தலைவர்களுடையதும் போலிப் பாரம்பரிய வாழ்க்கையை இனங்காட்டி அவர்களை, “மாயக்காரர்கள்”, “அஞ்ஞானிகள்”, “விரியன் பாம்புக்குட்டிகள்” என்று அழைத்தார். அவர்களைப்போல இருக்காதீர்கள் என்று மக்களை எச்சரித்தார். இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் முழுவதுமே சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிறைந்து பாரம்பரியமாக இருந்துவந்த சமய மார்க்கத்தை இனங்காட்டிக் கண்டிக்கிறது. குறிப்பாக மத்தேயு 15:1-9 வரையுள்ள வசனங்களில் பாரம்பரியத்துக்கு ஆதரவாக வேதபாரகர்களும், பரிசேயர்களும் பேசியபொழுது, இயேசு கிறிஸ்து அவர்களைப் பார்த்து பாரம்பரியத்தைப் பெரிதுபடுத்தி நீங்கள் தேவனுடைய கற்பனைகளை (பத்துக் கட்டளைகள்) மீறி நடக்கிறீர்கள் என்று குற்றஞ் சாட்டினார். “உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்” என்று கொதித்தார். “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் செல்லியிருக்கிறான்” என்று ஏசாயா காலத்திலும் மக்கள் கர்த்தரை நிராகரித்து பாரம்பரியத்துக்குப் பணிசெய்து வந்ததை சுட்டிக்காட்டி எச்சரித்தார் (மாற்கு 7). இன்று அதே போல கிறிஸ்தவம் என்ற பெயரில் சபைகள்தோறும், வீடுகள்தோறும் இருந்து வரும் போலிச் சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் இயேசு கிறிஸ்துவோடு சம்பந்தமில்லாத அஞ்ஞானிகளின் மார்க்கமே.
அப்போஸ்தலர்களும் பாரம்பரியமும்
ஆதிசபை அப்போஸ்தலர்களும் பாரம்பரியத்திற்கும், சம்பிரதாய, சடங்குகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. மெய்க்கிறிஸ்தவத்தை அவை அழித்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பரிசுத்த ஆவியைப் பணங்கொடுத்து வாங்கி சடங்குபோல் பயன்படுத்த எண்ணிய சீமோனைப் பேதுரு கடுமையாகக் கண்டித்தார் (அப்போஸ்தலர் 8). பழைய ஏற்பாட்டு சடங்குகளையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்தும் கடைப்பிடிக்க முயற்சி செய்தவர்களுக்கு முடிவுகட்ட எருசலேம் கவுன்சில் அப்போஸ்தலர்களாலும், திருச்சபை மூப்பர்களாலும் கூட்டப்பட்டது (அப்போஸ்தலர் 15). பாரம்பரியத்தையும், சடங்கையும் வைத்து கிறிஸ்தவத்திற்கு மாசேற்படுத்த முயன்றவர்களை பவுல் ரோமர், கலாத்தியர், கொலோசெயர் ஆகிய நிருபங்களில் கடுமையாக சாடுகிறார். எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்திலும் அதையே பார்க்கிறோம். உதாரணத்திற்கு பவுல் கொலோசேயர் 2:8 கூறுவதைக் கவனியுங்கள், “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல”. போலிப் பாரம்பரியங்களுக்கு அப்போஸ்தலர்களின் அகராதியில் இடமிருக்கவில்லை.
பாரம்பரியமா? இரட்சிப்பின் அனுபவமா?
சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் மனிதன் ஏற்படுத்தி வைக்கும் போலிப் பாரம்பரியங்களுக்கு எதிராகப் போராடி மெய்க் கிறிஸ்தவத்தை நிலைநாட்டிய போதும், நாளடைவில் வரலாற்றில் மறுபடியும் பிசாசு போலிப் பாரம்பரியங்களுக்கு மனிதனை தலைசாய வைத்தான். மனிதன் ஆத்மீக விருத்தியற்று வாழ பிசாசு பயன்படுத்தும் சாதனங்களே சடங்குகளும், சம்பிரதாயங்களும், போலிப் பாரம்பரியங்களும்.
சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும், பாரம்பரியத்துக்கும் அடிமைப்பட்டிருக்கிறவர்களே! இன்று உங்களுக்கு எது தேவை? இயேசு சொல்லுகிறார், மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இல்லாதவன் பரலோகம் போவதில்லை என்று. பாரம்பரியத்தையும், சடங்குகளையும் வைத்துக்கொண்டு ஒருவரும் பரலோகம் போக முடியாது. நீங்கள் மரிக்கின்றபோது எல்லாச் சடங்குகளுக்கும் உங்களோடு சேர்த்து சங்கூதப்பட்டுவிடும். மெய்யான மனந்திரும்புதலும், இரட்சிப்பின் அனுபவமும் இருக்கின்ற உள்ளத்தில் சடங்குகளுக்கும், சம்பிரதாயத்துக்கும் இடமிருக்காது. ஒருவருடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து மெய்யாகக் குடிபுகுந்துவிட்டால் சடங்குகளுக்கும், பாரம்பரியத்துக்கும் அவருடைய வாழ்க்கையில் அன்றோடு சமாதி கட்டப்பட்டுவிடும்.
தொடர்ந்து சடங்கை நம்பி வாழ்கிறவன் கிறிஸ்துவுக்குப் பிள்ளையல்ல; நரகத்தில் பற்கள் கடிபட அக்கினியில் வேகப் போகிறவன். இந்துப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும், சடங்குகளிலும் இருந்து நமக்கு விடுதலை தர இயேசு இந்த உலகத்துக்கு வந்தார்; கல்வாரியில் மரித்தார்; உயிர்த்தெழுந்தார். அவரை ஆண்டவராக விசுவாசித்து நேசிக்கிறவர்கள் அவர் மரித்த பாவப்பாரம்பரியத்தையும், சடங்குகளையும் தொடர்ந்து பின்பற்றுவார்களா? இயேசு குழிதோண்டிப் புதைத்த கோரப் பாரம்பரியத்தைக் கொண்டாடி மகிழ்வார்களா? பாரம்பரியத்துக்கும், சடங்குகளுக்கும் படையல் நடைபெறும் இடத்திலெல்லாம் பிசாசு ஆளுகிறான் என்பதை நீங்கள் உணரவில்லையா? சம்பிரதாயங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிறிஸ்து தரும் இரட்சிப்பை இழந்து விடாதீர்கள். பரிசுத்த வாழ்க்கை வாழ பாரம்பரியம் ஒருநாளும் உதவ முடியாது. திருச்சபை பக்தியில் உயர பாரம்பரியம் ஏணியாக முடியாது. பாரம்பரியம் பக்திக்கு விரோதி; எதிரி.
யார் சீர்திருத்தவாதி?
இதழ் 3, 1997
மார்டின் லூத்தரும், கல்வினும், ஜோன் நொக்ஸும் இன்று நம்மோடில்லாவிட்டாலும் அவர்கள் ஆரம்பித்து வைத்த பணி இன்னும் முடிந்துவிடவில்லை. இன்றைய சூழ்நிலையில் அவர்களைப் போன்ற சீர்திருத்தவாதிகள் அநேகர் தேவை.
சீர்திருத்தவாதத்தைப் பற்றிய அறிவு இன்று தமிழ் கிறிஸ்தவ உலகில் அரிதாக உள்ளது. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். சீர்திருத்தவாதத்தைப் பின்பற்றி எழுந்த சமயக்குழுக்களும், சபைகளும் இன்று தமிழ்கூறும் நாடுகளில் லிபரல் சபைகளாக மாறியுள்ளன. சீர்திருத்தவாதப் போதனைகளில் அவை நம்பிக்கை இழந்துவிட்டன. சீர்திருத்தவாதம் காலத்திற்குத்தகாத போதனையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சீர்திருத்தவாதிகளைப் போன்ற போதகர்களும், சபைத் தலைவர்களும் தொடர்ந்து இந்நாடுகளில் தோன்றாததுதான். அனல் கக்கும் வேதப் பிரசங்கங்களும், போதனைகளும், பரிசுத்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதகர்களும் குறைவடையும் போது, சமயக்குழுக்களும், சபைகளும் சீர்த்திருத்தப் பாதையைவிட்டு விலகும் நிலை தோன்ற அதிக காலமெடுக்காது.
சீர்திருத்தக் கோட்பாடுகளைத் தொடர்ந்து சபைகளில் போதிக்கத் தவறியதையும் இந்நிலைமைக்குக் காரணமாகக் குறிப்பிடலாம். விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் பயிற்சிகளையும் தூக்கியெறிந்துவிட்டு வேறு வழிகளைச் சபைகள் நாடிச்சென்றது ஆபத்திற்கு வழிகோலியது. கெரிஸ்மெடிக் இயக்கத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, மக்களுக்கு உற்சாக மூட்டும் வழிகளை நாடிச்சென்று சபைகள் நமது மூதாதையர்களின் வழிகளைத் துறந்தனர். இதனால் நமது முன்னோர்களின் பாதை நிராகரிக்கப்பட்டது. இன்று சீர்திருத்தவாதிகள் யார்? என்று கேட்கும் நிலைக்குக் காலத்தால் பின்தள்ளப்பட்டு திசையறியாது தள்ளாடிக் கொண்டிருக்கின்றன அநேக சபைகள்.
சமய சமரசம், புதிய சுவிசேஷக் கோட்பாடு, கெரிஸ்மெட்டிக் குழப்பம், சிரிப்பு மாயம், பென்ஸகோலா எழுப்புதல், இனி வரப்போகும் வேறு பல கள்ளப் போதனைகளிலுமிருந்து நம்மையும் நமது சபைகளையும் காத்துக்கொண்டு, சத்தியத்திற்காக உயிரைத் தந்துழைத்த நமது முன்னோர்களான சீர்திருத்தவாதிகளின் பாதையில் முன்னேறும் வழியெது?
இதற்கு ஒரே வழி, சீர்திருத்தவாதம் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு நாமெல்லோருமே சீர்திருத்தவாதிகளாக மாறுவதுதான். மார்டின் லூத்தரும், கல்வினும், ஜோன் நொக்ஸும் அபூர்வப்பிறவிகளல்ல. அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே. ஆனால், வரலாறு புகழ்ந்து பேசுமளவுக்கு அவர்களை மாற்றியது எதுவெனில், சத்தியத்திற்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த அவர்களுடைய தியாகமனப்பான்மைதான். உண்மையான சீர்திருத்தவாதி தனது நலன்களில் அதிக கவனம் செலுத்தமாட்டான். சத்தியமே அவனுக்கு உயிர்மூச்சு. மார்டின் லூத்தரை நோக்கி கத்தோலிக்க மதகுருக்கள், “நீ எழுதியவைகள் அனைத்தும் தவறு என்று ஒப்புக்கொண்டால் உனக்கு உயிர்ப்பிச்சையளிப்போம், நீ நிம்மதியாக வாழலாம்” என்று கூறிய போது, அவர் அதற்குப் பதிலாக, “எனது மனச்சாட்சி வேதத்திற்குக் கட்டுப்பட்டது, அதற்கு விரோதமாக என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாகக் கூறினார். இத்தகைய உறுதி கொண்ட உள்ளமே அவரை உண்மையான சீர்திருத்தவாதியாக மாற்றியது. மேல் படிப்பிற்காக பிரான்ஸுக்குப் போய்க்கொண்டிருந்த ஜோன் கல்வின், ஜெனீவாவில் இருந்தபோது அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட பெரல், அவரைச் சந்தித்து, “நீர் படித்தது போதும், இந்நாட்டிற்கு உமது உழைப்பு தேவை, சீர்திருத்தவாதம் உம்மை அழைக்கிறது” என்று வலியுறுத்திக் கூறியபோது, பலவீனமான சுபாவமுடையவராக இருந்தபோதும் அவ்வழைப்பைத் தட்டமுடியாத கல்வின் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு களத்தில் இறங்கினார். இந்தத் தியாக மனப்பான்மை அவரைச் சீர்திருத்தவாதியாக்கியது. சீர்திருத்தவாதிகளில் எவரை எடுத்துப் பார்த்தாலும் அவர்களது சொந்தத் திறமையோ, படிப்போ அவர்களைச் சீர்திருத்தவாதிகளாக மாற்றவில்லை, மாறாக கர்த்தரை விசுவாசித்து அவருக்காக எதையும் செய்யத் துணியும் தியாகமே அவர்களை இன்று நாடு போற்றும் மனிதர்களாக மாற்றியுள்ளது.
ஒரு சீர்திருத்தவாதியில் எத்தகைய குணாதிசயங்களைக் காணலாம்? இன்றைய சூழ்நிலை நாமனைவருமே சீர்திருத்தவாதிகளாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்குமானால், நம்மில் காணப்பட வேண்டிய இலக்கணங்கள் யாவை?
- சீர்திருத்தவாதி கர்த்தருடைய வேதத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவனாக இருப்பான்.சீர்திருத்தவாதிகள் அனைவரது வாழ்க்கையிலும் இதனை நாம் பார்க்கலாம். பாரம்பரியங்களுக்கோ, தமது சொந்த அபிப்பிராயங்களுக்கோ மதிப்புக் கொடுக்காமல் கர்த்தருடைய வார்த்தைக்கு மட்டுமே மதிப்பளிப்பவன் சீர்திருத்தவாதி. அதனால்தான் வில்லியம் டின்டேல் கத்தோலிக்க சபை எவ்வளவுதூரம் எதிர்த்தபோதும் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேயாக வேண்டும் என்று தமது உயிரையும் பணயம் வைத்து அதைச் செய்தார். இதே மனப்பான்மையே மார்டின் லூத்தரை ஜெர்மானிய மொழியில் வேதத்தை மொழிபெயர்க்க வைத்து, ஐரோப்பா முழுவதுமே அக்கினிக் கொழுந்தாக சீர்திருத்தத்தைப் பரவச் செய்தது. வேதத்திற்குக் கட்டுப்பட்ட ஒரே காரணத்தால்தான் ஸ்கொட்லாந்து அரசியின் கொடுமைகளுக்குப் பயப்படாமல் ஜோன் நொக்ஸ் ஆவேசத்தோடு தொடர்ந்து பிரசங்கித்து ஸ்கொட்லாந்தில் சீர்திருத்தவாதம் ஏற்படக் காரணமாகவிருந்தார்.
- சீர்திருத்தவாதி சத்தியத்தில் அனுபவ பூர்வமாக வளர்ச்சியடைந்துவரும் மனிதனாக இருப்பான்.அதாவது வெறும் அறிவுக்காக மட்டும் வேதத்தைப் படிக்காமல், அதன் மூலம் தன் வாழ்க்கையில் பரிசுத்தம் ஏற்படவேண்டும் என்று பாடுபடுபவன் சீர்திருத்தவாதி. இன்று கிருபையின் போதனைகளையும், சீர்திருத்தக் கோட்பாடுகளையும் பலர் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ள அதேவேளை, வெறும் அறிவுக்காக மட்டும் அவற்றைப் படிக்கும் ஆபத்தும் கூடவே ஏற்பட்டுள்ளதை உணரவேண்டும். ஏட்டுப் படிப்பு மட்டும் ஒருவரது வாழ்க்கையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திவிடாது. எவ்வளவு படிக்கிறோமோ அந்தளவுக்குத் தாழ்மையுடன்கூடிய பரிசுத்தம் வாழ்வில் காணப்பட வேண்டும். 16, 17 ஆம் நூற்றாண்டு கண்ட சீர்திருத்தவாதிகள் அன்றாடம் கர்த்தருக்குமுன் பரிசுத்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே வேதத்தைப் படித்தனர். ஏனெனில் வேதம் மட்டுமே, பரிசுத்த ஆவியின் வல்லமையால், ஒருவர் வாழ்வில் பரிசுத்தத்தை வளர்க்கக்கூடிய ஒரே நூலாக இருக்கிறது. அமெரிக்காவின் பெரும் பிரசங்கியான ஜொனத்தன் எட்வட்ஸ் அன்றாடம் ஒரு நாட்குறிப்பில் தான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் எழுதி வைத்து அவற்றைத் தவறாது செய்ய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். தாம் படுக்கைக்குப் போகுமுன், கர்த்தருக்குமுன் ஜெபத்தோடு அவற்றை செய்திருக்கிறேனா என்று அன்றாடம் ஆராய்ந்து பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எத்தனை பெரிய பிரசங்கியாகவும், மேதையாகவும் இருந்தபோதும் எட்வட்ஸ் அடக்கத்தோடு அனுபவபூர்வமான பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதில் தவறவில்லை.
- ஒரு சீர்திருத்தவாதி சத்தியத்தின் அடிப்படையில் மட்டும் சபை அமைப்பையும், சபை வளர்ச்சியையும் நாடும் மனிதனாக இருப்பான்.வேதப் போதனைகளில் தெளிவு ஏற்பட்டு, நமது இறையியல் கோட்பாடுகள் வேத அடிப்படையில் சீர்படும்போது அங்கே சீர்திருத்தவாதம் தோன்றுவதைக் காணலாம். ஏனெனில், நமது எல்லா எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் சீராக்கும் ஒரே நூலாக வேதத்தை நாம் அப்போது பார்க்கத் தொடங்குகிறோம். அத்தோடு நமது தவறான போதனைகளைத் திருத்தி, தெளிவான சத்தியத்தை உறுதியாக நம்பி அதை வெளிப்படையாக அறிக்கையிடும் புது பலத்தையும் வேதம் அளிக்கிறது. அதனால் நமது ஆராதனையும், வழிபாட்டு முறைகளும் வேதப் போதனையின்படி சீரடைகின்றன. பாரம்பரிய சடங்காச்சாரங்கள் பகலவனைக் கண்ட பனிபோல் மறைந்தோடிவிடுகின்றன. இதுவே லூத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. ஆகவேதான், தொண்ணூற்று ஐந்து கோட்பாடுகளை வேத அடிப்படையில் வரைந்து கத்தோலிக்க சபைக்கெதிராக அவர் போர்க்கொடி எழுப்பினார். அன்றுமுதல், இதுவரையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல், கிருபையின் மூலம் இரட்சிப்பு, விசுவாசிகளின் ஆசாரியத்துவம் போன்ற போதனைகளை மக்கள் மறுபடியும் கேட்கும் வழி ஏற்பட்டது. ஒரு சீர்திருத்தவாதி தன் வாழ்க்கையிலும், சபையிலும் இத்தகைய மாற்றங்கள் வேதபூர்வமாக ஏற்பட அயராது உழைப்பான்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
இதழ் 2, 2006
“. . . நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32)
இவை இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள். யூதர்களில் பெரும்பாலானோர் இயேசுவைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாயிருந்தன. சத்தியத்தை அறிந்துகொள்ளாதவர்கள் குருடர்களாக மட்டுமே தங்களுடைய வாழ்க்கையில் இருப்பது மட்டுமல்ல அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஆத்மீக விடுதலை சத்தியத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு தெளிவாகவே விளக்கியிருக்கிறார்.
இயேசு வேறு எதையும்விட தன்னுடைய உபதேசத்துக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய உபதேசமே வேதம் முழுவதிலும் அடங்கியிருக்கிறது. அதனால்தான் அவருக்கு “வார்த்தை” என்ற பெயரும் உண்டு. அவருடைய சீஷராக விரும்புகிற எவரும் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் இயேசு. ஆடிப்பாடுவதாலோ, உணர்ச்சிப் பிரவாகத்தால் நாம் விரும்பியதை இயேசுவுக்காக செய்வதாலோ அல்லது பாரம்பரியமாக இருந்துவரும் சடங்குகளைப் பின்பற்றுவதாலோ எவரும் அவருடைய சீஷராக முடியாது. பாரம்பரியத்துக்குப் பாலூட்டி வளர்த்த யூதர்களில் பெரும்பாலானோர் அவருடைய சீஷர்களாக இருக்கவில்லை. அவருடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்பதால் மட்டுமே எவரும் இயேசுவின் சீஷராக முடியும். இதை இன்று தமிழினத்து கிறிஸ்தவம் புரிந்துகொள்ளாமல் தன் மனம்போனபோக்கில் இயேசுவைப் பின்பற்றப் பார்க்கிறது. சபைத்தலைமையிலிருந்து அடிமட்ட விசுவாசிகள்வரை இன்று இதே நிலைமைதான்.
இளம் பங்காளர் திட்டம் என்று ஒன்றை வகுத்து இளம் பிள்ளைகளுக்குக் கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்க வகைசெய்வதாகக் கூறி அநேகரிடம் இயேசுவின் பெயரில் பணம் வாங்கித் தன்னை வளர்த்துக்கொள்கிற ஒரு குடும்ப ஊழியம் தமிழகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பணம் செலுத்தி வந்த ஒரு குடும்பத்தால் அதைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் போனபோது கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியும் முதலுமாக உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர்களுக்குக் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தபிறகே பணம் அனுப்பிவந்த குடும்பத்தின் கண்கள் திறந்தன. இயேசு பெயரில் ஊழியம் செய்கிறவர்கள் இப்படியும் பணத்துக்காக அலைகிறார்களே என்று அந்தக் குடும்பம் வருத்தப்பட்டது. இப்படியெல்லாம் ஊழியத்தின் பெயரால் நம்மினத்தில் அநியாயங்கள் நடந்து வருவதற்கு சத்தியப் பஞ்சமே முக்கிய காரணம்.
“என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் சத்தியத்தை அறிவீர்கள்” என்கிறார் இயேசு. சத்தியத்தைத் தொடர்ந்து படித்து, சிந்தித்து, ஆராய்ந்து வருகிறபோதே அதன் போதனைகள் நமக்குத் தெளிவாகப் புரியவரும். சத்திய வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சத்தியத்தில் வளர முடியாது. வேதத்தை அன்றாடம் ஜெபத்தோடு படிக்காவிட்டால் சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாது. சத்தியத்தை அறிந்துகொண்டால் மட்டுமே போலிப் போதனைகளிடம் இருந்து நாம் தப்பமுடியும். சத்தியம் தெரியாவிட்டால் போலி எது? உண்மை எது? என்று உணர முடியாத மூடர்களாக நாம் இருந்துவிடுவோம். இந்த ஆபத்து ஏற்படாதிருக்க இயேசு தன்னுடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அதில் நிலைத்திருக்கச் சொல்லுகிறார். யூதர்களின் இருதயம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்தப் போதனையைச் சத்தியத்தோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்கிறார் இயேசு கிறிஸ்து. அவர் கூறுகிற விடுதலை ஆத்மீக விடுதலை. பாவத்திலிருந்தும், பாரம்பரியப் பிசாசுகளிடம் இருந்தும், உலக இச்சைகளில் இருந்தும் நமக்குச் சத்தியமே விடுதலை அளிக்கிறது; மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தபிறகு தொடர்ந்து சத்தியத்தில் நாட்டம் காட்டி இயேசுவின் உபதேசங்களைப் படித்து நம்முடைய வாழ்க்கையில் அவற்றை மட்டும் பின்பற்றுகிறபோது இந்த விடுதலையை நாம் அடையலாம். உலகத்தின் போதனையின்படியும், சிந்தனைகளின்படியும் போய்விடாமல் இருக்கவேண்டுமானால் சத்தியத்தை நடைமுறையில் கைக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் சத்தியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தவறை ஒதுக்கி சரியானதைச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதன்மூலமே இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நம்மினத்தைப் பிடித்திருக்கும் பெரும் வியாதி சத்தியப் பஞ்சமே. இதைப் புரிந்துகொள்ளாதவரை நமக்கு விமோசனமில்லை. இதுபுரியாமல், எல்லோர் மேலும் அன்புகாட்ட முயற்சித்தால் கிறிஸ்தவ எழுப்புதல் ஏற்படும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். யூதர்கள்மேலும், பரிசேயர்மேலும், சதுசேயர்மேலும், தம்மை எதிர்த்து அழிக்கமுற்பட்டவர்கள் மேலும் இயேசுவுக்கு அன்பில்லாமலில்லை. அதேநேரம் அவர்களுடைய தவறுகளை அவர் கடுமையாக சாடினார்; வரப்போகும் தண்டனையை அவர்களுக்கு உணர்த்தினார். திருந்தி வாழும்படி நாளும் மன்றாடினார். கிறிஸ்தவன் காட்ட வேண்டிய அன்பு உலகத்தைச்சார்ந்த சுயநலமான அன்பல்ல; சுத்த உள்ளத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டி சத்தியத்தைப் பின்பற்றும்படி ஊக்கமூட்டும் கர்த்தருக்குரிய அன்பு.
சுயநலவாதிகளுக்கு இந்த தேவஅன்பு புரியாது. அவர்கள் உலகத்தைச் சார்ந்த போலி அன்பை நாடுகிறார்கள். தங்களுடைய சொந்தத் தவறுகளை மறைத்தும், தங்களைச் சார்ந்திருப்பவர்களின் தவறுகளைக் கண்டும் காணா மலுமிருந்து பரிசேயர்களைப் போலக் காலத்தைப் போக்க முயற்சிக்கிறார்கள். இயேசுவுக்கு இங்கு இடமில்லை. சத்தியம் மட்டுமே விடுதலையாக்கும்; சத்தியமிருக்கும் இடத்தில் மட்டுமே மெய்யான அன்பிருக்கும்.