திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2021 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி  

3. மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள் 

4. மொழியாக்க வறட்சி

5. பாவத்தின் பாவம் (Sin is Serious – பாகம் 2)

 

வாசகர்களே

 

வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதழ் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். நம் காலத்தில் கண்ணுக்குத் தெரியாத கோவிட்-19 தொடர்ந்து தன் கைவரிசையை உலகெங்கும் காட்டிவரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் தொடரமுடிந்திருக்கிறது. தொடர்ந்தும் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த இதழில் மூன்று ஆக்கங்களை நான் எழுதியிருக்கிறேன். வேதமே நம் எண்ணங்களையும் வாழ்க்கையையும் ஆளவேண்டும்; சமூகமோ அதன் போக்குகளோ அல்ல என்பதை உணர்த்துவது முதலாவது ஆக்கம். என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானது. ஆலயத்துக்குப் போவதோடும், ஜெபிப்பதோடும் மட்டும் இருந்துவிடக்கூடாது கிறிஸ்தவம்; இந்த உலகத்துக் கண்ணோட்டத்திற்குள் சிக்கித்தவிக்காமல் கட்டளைகளைப் பின்பற்றிப் பரிசுத்தமாக வாழ்வதை கிறிஸ்தவன் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். நம்மினத்தில் அது இன்று பரவலாக இல்லாமல் இருக்கிறது. வேதவசனங்களைவிட உலகமே அநேகரில் ஆட்சிசெய்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. அது மாறவேண்டும்.

அடுத்த ஆக்கமான ‘மறுபடியும் அஞ்சரைப்பெட்டியில்’ என்பதில் என் படைப்புலக அனுபவங்களையும், வேறுதுறைகளில் இருக்கும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு, முக்கியமாக வாலிபர்களைச் சிந்திக்குமாறு அறைகூவலிட்டிருக்கிறேன்.

மூன்றாவது ஆக்கமான ‘மொழியாக்க வறட்சி’ பற்றி எப்போதுமே சிந்தித்து வந்திருக்கிறேன். தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிட முடியாது. மொழியாக்கத்தில் உள்ள நுணுக்கமான சிக்கல்களையும், சவால்களையும் இந்த ஆக்கத்தில் விளக்க முனைந்திருக்கிறேன்.

கடைசி ஆக்கம் ரால்ப் வென்னிங் அவர்களின் ‘பாவத்தின் பாவம்‘ என்ற நூலின் ஒரு பகுதியாகும். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் நீங்கள் தொடர்ந்து வளரத்துணைபுரிய வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். – ஆர்

 

 

 

வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி

ஒருமுறை ஜெயகாந்தன் சொன்னார், ‘எழுத்து என் ஜீவன்; ஜீவனமல்ல’ என்று. நான் முழுநேரப் படைப்பாளியல்ல; பணத்திற்காகவும் இலக்கியப்பணியில் ஈடுபடவில்லை. எழுதுகிறவனுக்கும் வயிறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஒரு படைப்பாளி வயிற்றுக்காக இலக்கியம் படைக்கமாட்டான். என் படைப்புகள் பெரும்பாலும் கிறிஸ்தவ வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதற்குக் காரணம் நான் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்தவம் எனக்கு மதமல்ல; என் அடிப்படை நம்பிக்கை, ஜீவன். அதுவே என் பார்வையாக இருக்கிறது. அதற்காக லௌகீக விஷயங்களில் நான் அக்கறை காட்டாமலில்லை. லௌகீகம், ஆவிக்குரியவை என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று நம்புகிறவன் நான். ஆண்டவர் நம்மை உலகத்தைத் துறந்து வாழச்சொல்லவில்லை; உலகத்தில் இருந்து வாழச் சொல்லியிருக்கிறார். நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு அது புரியாமலிருக்கிறது. பெரும்பாலானோர் முக்கியமாக ஊழியத்தில் இருக்கிறவர்கள் வேறு தொழில்களைக் குறைத்து மதிப்பிட்டு அதை ஊழியத்தில் இல்லாதவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று தாங்களே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள். வேதம் நீதியான எல்லாத் தொழில்களையும் புனிதமானதாகக் கருதுகிறது.

அநேகர் இந்த உலகத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரு பகுதியினரைக் காண்கிறேன். ஒரு பகுதியினர் ஆவிக்குரியவை, இந்த உலகத்துக்குரியவை என்று பிரித்துப் பட்டியலிட்டு ஆவிக்குரிய வாழ்க்கையை உலகத்தைத் தவிர்த்து வாழப்பார்க்கிறது. இன்னொரு பகுதியினர், எது ஆவிக்குரியது என்பதில் நல்லறிவின்றி உலகத்தவர்களாக, ஆவிக்குரிய பெயரடையாளத்தோடு மட்டும் இருந்துவருகின்றனர். இரண்டு பகுதியினருமே தவறுசெய்கிறார்கள். முதலாவது, சத்தியமறியாததால் ஏற்படும் தவறு. இரண்டாவது, சத்தியம் வாழ்வில் இல்லாததால் ஏற்படும் தவறு. லௌகீகத்தை நான் வேதக்கண் கொண்டே பார்க்கிறேன். என் லௌகீகக் கண்ணோட்டம் விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தது; வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி. இது உங்களுக்குப் புரிந்தால் சரி.

கிறிஸ்துவை நேசிக்கிறவன் உலகத்தை வெறுக்கமாட்டான்; வெறுக்கவும் முடியாது. அவன் ஒரு துறவி அல்ல. உலகம் தானே தோன்றவில்லை; அதைப் படைத்தவர் கடவுள். அதைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறவரும் அவரே. மனிதனின் பயனுக்காக அவர் உலகத்தைப் படைத்தார்; அவன் அனுபவிப்பதற்காக அதை அவனிடம் கொடுத்தார். அதை எப்படி ஒரு கிறிஸ்தவன் வெறுக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியும்? படைப்பின் தேவன் உலகத்தில் தன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். உலகம் பாவத்தால் கறைபடிந்திருப்பது உண்மைதான்; அதன் மக்கள் பாவத்துக்குப் பலியாகி கடவுளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடவுள் தன் திட்டங்களை உலகத்தில் நிறைவேற்றி தன் வருகையின் நாளில் அதைச் சீர்திருத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். இந்தப் பாவ உலகத்தில் கிறிஸ்துவை நேசித்து, கிறிஸ்தவ வேதக்கண்ணோட்டத்தைக் கொண்டு அனைத்தையும் மதிப்பிட்டுத் தரம்பிரித்து, கடவுளுடைய வார்த்தை வழிநடத்துகிறபடி உலகத்தில் இருக்கும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதே கிறிஸ்தவனின் கடமை. பாவத்தையும், பாவத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் மட்டுமே கிறிஸ்தவன் வெறுக்கவேண்டும்; உலகத்தை வெறுக்கக்கூடாது.

இந்த அணுகுமுறையைத்தான் நான் இலக்கியம் படைப்பதிலும் பயன்படுத்துகிறேன். லௌகீக விஷயங்களைப்பற்றி நான் எழுதுகிறபோது அது வேதக்கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு படைப்பாளி ஜெயமோகன் ஒரு மார்க்ஸிஸ்ட்; பாரம்பரிய மார்க்ஸிஸ்ட் அல்ல. அதில் தன் வசதிக்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் கிறிஸ்தவருமல்ல. அவருடைய உலகக் கண்ணோட்டமும் கிறிஸ்தவ படைப்பாளியான என் உலகக் கண்ணோட்டமும் எதிர்மறையானவை. இலக்கியவாதியாக அவரை நான் மதித்தாலும், இலக்கியம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் எங்களால் ஒத்துப்போகமுடிந்தாலும், ஒத்துப்போக முடியாத விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அதற்குக் காரணம் என் உலகக் கண்ணோட்டமே. பழைய ஏற்பாட்டில் சீரியனான நாகமானுடையதும், எலிசா தீர்க்கதரிசியினுடையதும் உலகக்கண்ணோட்டம் ஆரம்பத்தில் எதிர்மறையாகத்தான் இருந்தன (2 இராஜாக்கள் 5). நாகமான் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்த பிறகே அவர்கள் இருவருடைய உலகக்கண்ணோட்டமும் ஒரே திசையில் செல்ல ஆரம்பித்தன. இது உங்களுக்குப் புரிகிறதா?

உலகத்தில் ஒளியாகவும் உப்பாகவும் இரு

அப்படியானால், மாறுபட்ட உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்து மனிதர்களையும், சமுதாயம் பற்றிய விஷயங்களையும் ஒரு கிறிஸ்தவன் எப்படி அணுகவேண்டும்; அவற்றோடு எந்தவிதத்தில் உறவுகொள்ள வேண்டும்? இயேசு சொன்னார், ‘இந்த உலகத்தில் ஒளியாக இரு’ என்று. அத்தோடு இந்த ‘உலகத்தில் உப்பாக இரு’ என்றும் சொன்னார். இந்த உலகத்தில் நாம் தாமரை இலையில் தண்ணீர்படாமல் இருப்பதுபோல வாழவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை; அப்படி இருப்பதற்கு நாம் துறவறத்தில் ஈடுபடவேண்டும். கிறிஸ்தவன் துறவியாகக்கூடாது.

இந்த உலகத்தில் ஈடுபாட்டோடு நாம் வாழுகிறபோது, கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்படியான சிந்தனையோடு வாழ்ந்து உலகம் நம்மைக் கவனிக்கும்படி ஒளிவீசவேண்டும் என்கிறார் இயேசு. கிறிஸ்துவுக்கு ஒப்பான நம்முடைய குணாதிசயங்களாலும், வாழ்க்கை முறையாலும், முழுப்பானைச்சோற்றையும் உப்பு மாற்றியமைப்பதுபோல் நாமும் சமுதாயத்தில் செல்வாக்குச் செலுத்தவேண்டும் என்கிறார் இயேசு. உலகத்தையொத்து அதன் சிந்தனைகளையும், செயல்களையும் பின்பற்றி வாழ்கிறவன் யூதாசைப்போன்ற இயேசுவுக்குத் துரோகி. தன் கிறிஸ்தவ வேதசிந்தனையாலும், வாழ்க்கையாலும் உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்கிறவன் கிறிஸ்தவ விசுவாசி.

தாராளவாதக் கருத்தியல் போக்குகள்

ஒரு படைப்பாளியாக, இலக்கியவாதியாக கிறிஸ்துவின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும்படியாகத்தான் என்னால் இலக்கியம் படைக்கமுடியும். அதற்கு மாறாக எதையும் செய்யும்போது நான் இந்த சமூகத்தில் ஒருவனாகிவிடுகிறேன். சமூகத்தோடு சம்பந்தமுடைய விஷயங்களையெல்லாம் கிறிஸ்தவ கண்ணோட்டம் இல்லாமல் கணித்து அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகிறவர்களோடு எனக்கு ஒப்புதல் இல்லை. உதாரணத்திற்கு, கருக்கலைப்பை (Abortion) வேதம் கொலை என்கிறது. கருவில் பிறந்து சில மாதங்களானாலும் உயிரோடு இருக்கிறது சிசு. அதைக் கலைப்பது உயிரை அழிப்பதாகும். கடவுளை நம்பாத தாராளவாதக் கருத்தியல் நோக்குடையவர்கள் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமைகொண்டாடி பிள்ளை பிறக்கும் விஷயத்தில் அவர்களுக்கு முழு அதிகாரம் இருக்கவேண்டும் என்றும், அவர்கள் சந்தோஷத்தைக் கெடுக்கும் எதையும் அவர்கள்மேல் திணிக்கக்கூடாது என்றும் கூறி கருக்கலைப்பை ஆதரித்து வாதாடுகிறார்கள். சில நாடுகளில் அதை அனுமதித்து சட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

நியூசிலாந்தில் 20 வாரங்களுக்கு மேற்படாத கருவுற்று இருக்கும் எந்தப் பெண்ணும் டாக்டரிடம் போகாமலேயே கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்று சட்டமிருக்கிறது. உலகத்தில் மோசமான கருக்கலைப்புச் சட்டத்தைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. சமுதாயம் இதை ஆதரிக்கிறதென்பதற்காக கிறிஸ்தவன் இதோடு ஒத்துப்போக முடியாது. கிறிஸ்தவ ஒழுக்கநியதிக் கோட்பாடுகள் (Moral law) இதைக் கொலையாகக் கணிக்கின்றன. வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொலைசெய்யும் கொலைகார சமுதாயம் பாவத்திற்கான தண்டனையை அதிகரித்துக்கொள்ளுகிறது. சுயநலத்தால், தன் வசதிக்காக கருக்கலைப்பில் ஈடுபடுகின்ற எவரும், கிறிஸ்தவனாக இருந்தாலும் கொலைகாரனே.

அதிகம் வயதானவர்களும், கடும் நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் தொடர்ந்து துன்பப்படாமல் இறப்பதற்கு ‘கருணைக் கொலையைச்’ (Mercy killing) சட்டமாக்க முயல்கிறார்கள் அநேக நாடுகளில். நான் வாழும் நாட்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு பொதுவாக்கெடுப்பின் மூலமும் அது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஓரினப் பாலியல் உறவுக்கும், ஓரினத்திருமணத்திற்கும், திருநங்கைகளுக்கும் இதேவகையில்தான் விளக்கங்கொடுத்து தாராளவாதக் கருத்தியல் தொடர்ந்து உரிமைப்போராட்டம் நடத்துகிறது. கிறிஸ்தவ வேதம் இதையெல்லாம் கடவுளுக்கு எதிரான அழிவு மார்க்கமாகக் கணிக்கிறது.

பெண்ணியம்

மேலைத்தேய நாடுகளில் உருவானது ‘பெண்ணியக் கோட்பாடு.’ அதன் 2ம், 3ம் அலைகள் அமெரிக்காவில் வீசியது. இந்தியாவில் பெண்ணியம் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பித்து சுதந்திரப் போராட்ட காலத்தில் மேலும் சூடுபிடித்தது. இன்றும் பெண்களுக்கு உரிமைகோரிப் பெண்ணிய இயக்கங்களும், பெண்ணியவாதிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறார்கள். கீழைத்தேய நாடுகளில் ஆரம்பத்தில் பெண்களின் உரிமைகளுக்கான குரல்கள் எழுந்தனவே தவிர அது மேலைத்தேய ‘பெண்ணியமாக’ இருக்கவில்லை; தாராளவாதக் கருத்தியல் அடிப்படையில் ஆரம்பத்தில் உருவாகவில்லை. கீழைத்தேய நாடுகளில் பெண்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பத்தில் இருந்தே நியாயமான பெண்ணுரிமைகளுக்காக, சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தது.

பாரதி பெண்விடுதலைக்காகப் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார். அதிலெல்லாம் நீதியும், நியாயமும் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் கல்வி வழங்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டில் தென் தமிழகத்துக்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகளே திருநெல்வேலிப் பகுதியில் புறக்கணிக்கப்பட்ட சாதிப்பெண்களுக்கு கல்வித்தளங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுபற்றி இந்துக்கள் அதுவரை நினைத்தும் பார்க்கவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகள் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்காக சமுதாயத்தில் குரல்கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பெண்ணுரிமைக்குரல்கள் ஒருபோதும் குடும்ப உறவில் கைவைக்கவில்லை. ஆண், பெண் வேறுபாட்டை அகற்றும் குரல்களுக்கு அதில் இடமிருக்கவில்லை. நம்மினப்பண்பாடு குடும்ப உறவில் பெண்ணுக்கு இருக்கும் வேறுபட்ட இடத்தை ஒத்துக்கொண்டிருக்கிறது. பெண்ணியக் கோஷங்கள் நம்மினத்தில் திருமணத்திற்கெதிராகப் போராடவில்லை; அதில் சீர்திருத்தத்தையே நாடியது. மேலைநாடுகளில் ஆரம்பித்த பெண்ணியம் அந்நாட்டு அடிப்படை சமூகக் கருத்தியல்களுக்கு எதிரானதாக ஆரம்பித்தது. இன்று பெண்ணியத்துக்கு பொதுவானதொரு விளக்கத்தைக் கொடுக்க முடியாதபடி அது தேசங்களுக்கு தேசம் வேறுபட்ட கோணங்களில் இயங்கி வருகிறது.

பெண்களுக்கான நியாயமான அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆரம்பப் பெண்ணியத்திலிருந்து ‘நவீன பெண்ணியம்’ மாறுபடுகிறது. நவீனப் பெண்ணியம், அரசியல், சமூகம், வர்க்கம் மற்றும் பாலியல் பூச்சுப் பூசப்பட்டு தாராளவாதக் கருத்தியல் போக்குக்கு முற்றிலும் அடிமையானதாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்னெழுந்த ‘நானுந்தான்’ (Me Too) இயக்கம் இந்தத் தாராளவாத ‘நவீனப் பெண்ணியத்தின்’ ஒரு அங்கமே. நவீன பெண்ணியம் கருக்கலைப்புக்காகவும், திருநங்கைகளுக்காகவும், பெண்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினத்திருமணத்திற்காகவும் போராடி வருகிறது. இன்றைய மேலைத்தேய ‘கலாச்சாரச் புரட்சிக்’ (Cultural Revolution) கருத்தியலுக்கு ஏற்ப பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இருக்கும் படைப்பின் வேறுபாட்டை அகற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக அது மாறியிருக்கிறது. உண்மையில் பெண்களின் நியாயமான சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும் எந்த சமூகத்திலும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய கிறிஸ்தவ சபையும், கிறிஸ்தவர்களும் நவீன பெண்ணியத்தோடு ஒருக்காலும் ஒத்துப்போக முடியாது. நவீன பெண்ணியம் பிசாசின் செயல்களின் வெளிப்பாடு.

பெண்ணியம் பற்றியோ அல்லது நவீன பெண்ணியம் பற்றியோ அதிகம் தெரிந்துவைத்திராமல் கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் தாராளவாத பெண்ணியத்தின் அரசியல், சமூகப் பூச்சை நம்மினத்துக் கிறிஸ்தவத்திற்குள் நுழைத்திருக்கிறார்கள். கர்த்தருக்கு பெண்ணியம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று தீர்மானித்து அல்லது அவருடைய வார்த்தைகள் இன்றைய சமூகத்துக்குப் பொருந்தாது என்று தீர்மானித்து, பெண்களைப் பிரசங்கிகளாகவும், போதகர்களாகவும், உதவிக்காரர்களாகவும் சபைகளில் நியமித்து, அவர்களை ஆராதனைக்கூட்டங்களை நடத்தவைப்பது இன்று சர்வசாதாரணமாக நடந்து வரும் கர்த்தருக்கெதிரான அந்நிய ஆராதனை. கர்த்தர் பெண்கள் இந்தக் காரியங்களைச் சபையில் செய்யக்கூடாது என்று தடைவிதித்திருப்பதற்குக் காரணம் பெண் உரிமைகளை அவர் விரும்பாதது அல்ல; அவர் பெண்களுக்கென்று உயர்வான பொறுப்பை அளித்திருப்பதால்தான். திருநங்கைகளுக்காக சபையை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதும் எந்தளவுக்கு தீவிரத் தாராளவாத கருத்தியல் நம்மினத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு உதாரணம்.

பெண்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் அதி உயர்வான இடத்தை ஆதியாகமம் முதலிரண்டு அதிகாரங்கள் விளக்குகின்றன. ஆணையும், பெண்ணையும் வேறுபட்டவிதத்தில் படைத்த கடவுள், வேறுபட்ட பொறுப்புக்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் நியமித்திருக்கிறார். அந்தப் பொறுப்புக்கள் ஆணைப் பெண்ணில் இருந்து பிரித்துக் காட்டுகின்றன. அந்தப் பிரிவு படைப்பின் நியதி. பெண்ணுக்கேயுரிய வேறுபாடான பொறுப்புகள் பெண்ணைத் தாழ்த்தவில்லை; மாறாக அவளை உயர்த்துகின்றன; அவையே அவளுக்கு மகிமை. பெண்ணுக்கு இவை பாதுகாப்பு வளையமிடுகின்றன. இதை மீறுகிறபோது பெண் தன்னையே அழித்துக்கொள்ளுகிறாள். படைப்பின் நியதியில் கைவைப்பதும், மாற்றப்பார்ப்பதும் கர்த்தருடைய அதிகாரத்தை எதிர்க்கும் ஆபத்தான செயல். அதைத்தான் இன்றைய உலக சமூகம் செய்துவருகிறது. தனக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மீறியதால்தான் ஏவாள் தனக்குத் தண்டனையை உண்டாக்கிக்கொண்டாள். அந்தத் தண்டனையின் ஒரு பிரதிபலிப்பே இன்றைய ‘நவீன பெண்ணியம்’ என்பதை உணர்கிறீர்களா?

மொழியும் இனமும்

எனக்கும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு. ஆனால் இனவெறி எனக்கில்லை. இந்த உலகத்தில் ஒரு சாண் அளவு நிலத்துக்காக நான் பிறக்கவில்லை. அதற்காக நான் போராடப் போவதில்லை. அதற்கான போராட்டங்களோடும் ஒத்துப்போகமாட்டேன். என் நிரந்தர வீடு கர்த்தரிருக்கும் இடம். எனக்கு மொழிப்பற்றும் அதிகமாகவே இருக்கிறது; புறமொழிகளை நேசிக்கமுடியாத அளவுக்கல்ல. என் மொழிப்பற்று அதற்கான போராட்டத்தில் என்னை ஈடுபட வைக்காது. என் மொழிப்பற்றை வெளிப்படுத்த நான், ‘நான் தமிழர்’ கட்சியில் இணைய வேண்டிய அவசியமில்லை. என் மொழிப்பற்றுக்கு ‘அரசியல்’ தெரியாது. எல்லா மொழிகளையும் படைத்தவர் கடவுள். எல்லா மொழிகளையும், எல்லா இனங்களையும் நான் நேசிக்கிறேன். இந்த உலகத்தில் இருக்குமளவும் மொழியைப் படைத்தவருக்காகப் பயன்படுத்துவேன். வேதம் அனுமதிக்கின்ற அளவுக்கே இதிலெல்லாம் எனக்குப் பற்றிருக்க முடியும். இதையெல்லாம் மாயையாகக் கருதி நான் இன, மொழித் துறவறத்தை நாடவேண்டியதில்லை. நான் பிறந்திருக்கும் இனமும், மொழியும் என் நன்மைக்காகத் தரப்பட்டவை. அவற்றை ஆனந்தத்தோடு கர்த்தரின் வேதத்தை மீறாதபடி நான் அனுபவிக்கவேண்டும்; அவற்றால் அவரை மகிமைப்படுத்தவேண்டும். இந்த எல்லையை மீறுகிறபோது நான் விசுவாசத்தின் விதிகளை மீறுகிறவனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஒருவனுமாகிவிடுகிறேன்.

தீவிரத் தாராளவாதம் (Ultra liberalism)

இன்று அமெரிக்காவில் எழுந்திருக்கும் கருப்பினத்தவர்களுக்கான உரிமைப்போராட்டம், கிரிட்டிக்கள் ரேஸ் தியரி, பண்பாட்டு அழிப்பு, வரலாற்று நினைவுச்சின்னங்களை அகற்றும் தீவிரவாதம், அன்டீபாவின் மார்க்ஸீய அராஜகம், அரசியல் சாசனத்திற்கும், அரசு நிறுவனங்களுக்கும், காவல்துறைக்கும் எதிரான வன்முறைப் போராட்டம் போன்றவை தொடர்பாகவும் வேதக்கண்ணோட்டத்தில் மட்டுமே என் கருத்துக்கள் இருக்கமுடியும். வேதத்தையும் பத்துக்கட்டளைகளையும் நம்பி விசுவாசிப்பவர்கள் இந்தத் தீவிரத் தாராளவாதக் கருத்தியல் போக்குகளோடு ஒருபோதும் ஒத்துப்போக முடியாது. இவை கடவுளுக்கு எதிரான சமுதாய மனிதனின் தீவிரவாதச் செயல்கள். கடவுளுக்கும், அவருடைய வேதத்திற்கும் எதிரான எவையும் அவருடைய எதிரியிடமிருந்து மட்டுமே உருவாக முடியும்.

சமுதாயமோ, சமுதாயத்தின் ஒரு பகுதியோ ஒரு விஷயத்தை நியாயப்படுத்துகிறது என்பதற்காக கிறிஸ்தவனாக அதோடு என்னால் ஒத்துப்போகமுடியாது. சமுதாயத்தின் பார்வை குறுகியது. மேலைநாடுகளில் ‘வெறுப்புப் பேச்சு’ (Hate speech) என்ற பெயரில் சமுதாயத்தின் சிறுபான்மையினர் பிறரின் கருத்துக்களை அமைதிப்படுத்த முயல்கிறார்கள். சிலநாடுகளில் வெறுப்புப்பேச்சு என்ற பெயரில் அத்தகைய கருத்துக்களைச் சட்டபூர்வமாகத் தடைசெய்ய முனைகிறார்கள். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைப் பொதுமேடைகளிலும், மீடியாக்களிலும் பகிர்ந்துகொள்ளுவதை சமுதாயம் தீவிரத்தோடு எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. இதை இன்று பணமும், செல்வாக்கும்கொண்ட கூகுள், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிரேம் நிறுவனங்கள் அனைத்துமே செய்ய ஆரம்பித்துவிட்டன. இவையெல்லாம் 21ம் நூற்றாண்டின் தலைவலிகள்; பேச்சுச் சுதந்திரத்தை ஒருசாராருக்கு மட்டுமே வழங்க எத்தனிக்கும் தாராளவாதக் கருத்தியல் அடக்குமுறைகள். சூழ்நிலைக்கேற்றவிதத்தில் மாறிக்கொண்டிருக்கும் சமுதாய, இனமாற்றங்கள் நிலையானவையல்ல. சமுதாயம் ஒழுக்கநியதிக்கோட்பாடுகளுக்கு எதிராகக் கருத்துக்கொள்ளும்போது அதற்கெதிராகக் குரல்கொடுப்பதே என் தார்மீக சுதந்திரம்; உரிமை. இந்தப் பார்வையையே சமுதாயம், அரசியல், மதம், யுத்தம், அழகியல்களான கலை, இலக்கியம், இசை போன்ற அனைத்திலும் நான் கொண்டிருக்கிறேன். என் கண்ணோட்டத்தை, கிறிஸ்தவனாக முடிந்தவரை இயேசுவின் கண்ணோட்டமாக வைத்திருப்பதில் நான் கவனத்தோடு இருக்கமுயல்கிறேன்.

பின்நவீனத்துவம் (Post-Modernism)

பின் நவீனத்துவம் பிறந்தது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில். அடிப்படையானவை என்ற பெயரில் இருந்துவந்த அனைத்துக் கட்டமைப்புகளையும் உடைத்து (Deconstruct), அதற்கு வெளியே போய் புதியவைகளை உருவாக்கும் முயற்சி பின்நவீனத்துவம். சமுதாய ஒழுக்கத்தில் இருந்து அழகியல் கலைகள், பொருளாதாரம், கல்வி, அரசியல், கட்டடக் கலை என்று பின்நவீனத்தும் தொடாத இடமில்லை. உங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புகிறீர்களா? அவர்கள் படிப்பது என்ன என்பது தெரியாத, அதைத் தெரிந்துகொள்ள விரும்பாத பெற்றோர்களாக இருந்துவிடாதீர்கள். பின்நவீனத்துவ செடி உங்கள் வீட்டிலேயே கூட வளரலாம்.

சாரு நிவேதிதா ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். தன்னை Transgressive எழுத்தாளர் என்று அழைத்துக்கொள்ளுகிறார். இது பின்நவீனத்துவ வார்த்தை. இதற்கு அர்த்தம், சமுதாய ஒழுக்கக் கட்டமைப்பை உடைத்து அதற்கு வெளியே போய் எழுதுவது. சாருவின் எழுத்துகள் பொதுவாக ஒழுக்கமாகக் கருதப்பட்டு வந்திருக்கும் பாலியல் கட்டமைப்புகளை உடைத்து எழுதும் படைப்புகள். கிறிஸ்தவன் இதோடு அடிப்படையில் முரண்படுகிறான். உண்மையில், பின்நவீனத்துவம் கிறிஸ்தவத்திற்கு எதிர்மறையானது. கிறிஸ்தவம் சமுதாய மனிதனுக்கான கடவுளின் அடிப்படை ஒழுக்கக் கட்டமைப்பை வலியுறுத்துகிறது. அதற்கு வெளியில் போவதற்குப் பெயர் ‘பாவம்.’ பின்நவீனத்துவ சிந்தனைப் பாவத்திற்கு கிறிஸ்தவத்தில் இடமிருக்க முடியாது.

கிறிஸ்தவன் உலகத்தைப் புறக்கணித்து வாழக்கூடாது; உலகத்தில் உப்பாயிருக்கவேண்டும். அதற்கு உலகத்து நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியமாகிறது. அதை அறிந்துவைத்திராமலிருப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று இருப்பது போலாகிவிடும். உலகத்தோடு நாம் ஒத்துப்போகக்கூடாதுதான்; உலகத்தைப் பிரதிபலிக்கக்கூடாது. பின் நவீனத்துவத்தின் சிந்தனைப்போக்குத் தெரியாத கிறிஸ்தவன் அதற்கு விலகியிருந்து வாழ்வதெப்படி? உலகத்தின் தீய சிந்தனைகளைப் புறக்கணித்து வாழவேண்டுமே தவிர உலகம் தெரியாமல் வாழக்கூடாது. தூய வேதம் உலகத்து சிந்தனைகளைச் சரியானவையா, தீயவையா என்பதைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி.

சூழல்வாதம் அல்லது சுற்றுச்சூழலியம் (Environmentalism)

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உயிர்பெற்றது சூழல்வாதம். இதைச் சுற்றுச்சூழலியம் என்றும் அழைக்கலாம். இன்று தாராளவாத கருத்தியல் போக்குக்கொண்ட நாடுகள் அனைத்தும் இதையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர். இயற்கை அவர்களுக்கு தெய்வமாகிவிட்டது. வேறெதற்கும் தராத முக்கியத்துவத்தை இதற்குக் கொடுக்கின்றனர். சூழல்வாதக் கட்சி (Green Party) என் நாட்டில் இந்தப் போக்கையே பின்பற்றுகிறது. இதை ஐரோப்பாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் காணலாம். சூழலைக் காப்பாற்றும் நடவடிக்கைகளைத் துரிதமாக இப்போதே செய்யாவிட்டால் இன்னும் இருபது வருடங்களுக்குள் உலகம் அழிந்துவிடும் என்றளவுக்கு இவர்கள் பேச்சு அமைந்திருக்கிறது. இந்த உலகத்தை நிரந்தரமாகப் பாதுகாப்பதை சூழல்வாதம் குறிக்கோளாகக் கொண்டியங்குகிறது. இந்த இயக்கத்திற்கு எதிராகப் பேசினால் ஆபத்து என்றளவுக்கு உயிர்த்துடிப்போடு இயங்கிவருகிறது.

சூழல்வாதம் எந்தளவுக்கு இளைஞர்களையும் பாதித்திருக்கிறது என்பதற்கு சுவீடனைச் சேர்ந்த, 17 வயதான கிரீட்டா தர்ன்பேர்க் (Greta Thunberg) ஒரு உதாரணம். இளம் வயதினரின் மனதில் தங்கள் கருத்தியலை விதைத்து தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுவதில் சூழல்வாதிகள் மும்முறமாக இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் வந்த ஜேம்ஸ் கெமரனின் அவதார் (Avatar) படம் எந்தளவுக்கு சூழல்வாதம் அழகியல் கலைகள், மீடியாக்கள் மூலமாக முன்னிறுத்தப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். சூழல்வாதத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் சூழல்வாதக் கட்சி தீவிர பின்நவீனத்துவ சமூக முற்போக்குவாதத்தைப் (Social Progressives) பின்பற்றி சமூக மாற்றங்களையும் (radical social engineering) வலியுறுத்தி வருகிறது. LGBTQ வினருக்கு வக்காலத்து வாங்குவது மட்டுமல்ல, அதைச் சமூக ஒழுக்கமாக்குவதில் இந்தக் கட்சி தீவிரம் காட்டுகிறது.

நம்மினத்தினர் மத்தியில் இது பரவாமலில்லை. நதிகளை அநியாயத்துக்கு அணைகளைக்கட்டி வற்றிப்போகச் செய்வதும், காடுகளை அழிப்பதும், சுற்றுச்சூழலைக் குப்பைகளைக் கொட்டி அசிங்கப்படுத்தி தொற்றுநோய்கள் உருவாக இடங்கொடுப்பதும் கீழைத்தேய நாடுகளில் அளவுக்குமீறி நடக்கும் செயல்கள். இன்று இதையெல்லாம் எதிர்த்துக் குரல்கொடுப்பதற்கு சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பலர் கிளம்பியிருக்கிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை; ஒருவிதத்தில் பாராட்ட வேண்டும். இத்தகைய நல்ல நடவடிக்கைகளுக்குப் பின் தாராளவாத கருத்தியல் நோக்குக்கொண்ட சூழல்வாத அரசியல் நுழைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருக்கின்றது. சூழல் பாதுகாப்பு (Conservationist) வேறு, சூழல்வாதம் (Environmentalist) வேறு; இரண்டும் ஒன்றல்ல.

சுற்றுச்சூழலை நாம் கவனத்தோடு பயன்படுத்தவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. உலகத்தைப் படைத்தவர் அதை மனிதன் தன் நன்மைக்காகப் புத்தியோடு பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் (ஆதி 1:26-28; சங் 8:6-8; யாத் 23:10-11). சூழலை அசிங்கப்படுத்துவதும், அலட்சியப்படுத்துவதும் கிறிஸ்தவன் செய்கிற காரியமல்ல. கிறிஸ்தவன் சூழலைப் புறக்கணித்து நடந்துகொள்ளக்கூடாது. சூழல் நம் பயன்பாட்டிற்காகத் தரப்பட்டிருக்கிறது; அதை நாம் வணங்கக் கூடாது. சூழலும் ஆதாம், ஏவாளின் பாவத்தால் (மூலபாவம்) பாதிக்கப்பட்டு விடுதலையை நாடி நிற்கிறது (ரோமர் 8:19-22). படைப்பு ஏதேனில் இருந்ததுபோல் இன்று பூரணமானதாக இல்லை. பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலையும் கிறிஸ்தவன் விசுவாசத்தோடும், புத்தியோடும் கர்த்தரின் மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சூழலை அலட்சியப்படுத்தி, அநாவசிய செயல்களால் அசிங்கப்படுத்தவோ, அழிக்கவோ முயலக்கூடாது. உதாரணத்திற்கு, பணம் பண்ணுவதற்காக கண்மூடித்தனமாகக் காடுகளை அழிப்பது. அது நிலத்தைப் பாதிக்கும்; மழையைப் பாதிக்கும்; நீரூற்றுக்களைப் பாதிக்கும்; ஜீவராசிகளைப் பாதிக்கும்; உணவுச் சுழற்சி வட்டத்தைப் பாதிக்கும். காடுகளை வரைமுறையின்றி அழிப்பதாலேயே இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வருடா வருடம் புகைமூட்டமேற்பட்டு பலருக்கு உடல்நலக்கேடுகளை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் நதிகள் பெருக்கெடுத்தோடி நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கும் இதுவே காரணம். கண்மூடித்தனமாக அணைகளைக் கட்டுவதும் நதிகளை அழிப்பதில் முடியும். தமிழ்நாட்டில் காவிரியைப் பாருங்கள் தெரியும். கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் போகும் வழியில் தண்ணீரே இல்லாமல் பரந்து விரிந்திருக்கும் காவிரியில் அடிமண் இல்லாமல் போகும்வரை மண்ணெடுக்கும் லாரிகள் சாரி சாரியாக நிற்பதைப் பார்த்து மனம் பதைத்திருக்கிறேன். இதேபோல்தான் பொருளாதாரத்துக்கு அவசியமான நிலக்கரி தோண்டுவதிலும், கடலுக்கும் நிலத்துக்கும் கீழிருந்து எண்ணை எடுப்பதிலும் கவனத்தோடு செயல்படுவது அவசியம்.

தாராளவாத கருத்தியல் சூழல்வாதம் கடவுளற்ற சமூகத்தின் உருவாக்கம். மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் இது தலைதூக்கி நிற்கிறது. சூழலை நல்லவழியில் பயன்படுத்துவது ஒன்று; சூழலைக் கடவுளாக நினைத்து பாதுகாக்க முயல்வது இன்னொன்று. இரண்டாவதைக் கிறிஸ்தவம் நிராகரிக்கிறது. சூழல் நமக்கானது; சூழலுக்காக நாமில்லை. நதிகள் மேல் அளவுக்கு மீறி அணைகளைக் கட்டக்கூடாதென்பதை ஏற்றுக்கொள்கிறேன் (மேதா பாட்கரின் நர்மதா நதிப்போராட்டம்); நதிகள் மேல் அணைகளே கட்டக்கூடாது என்பது அதிகப்பிரசங்கித்தனம். காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்; காடுகளை எந்தக்காரணம் கொண்டும், பராமரிப்புக்காகக்கூட அழிக்கவே கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிருகங்களை வதைத்துக் கொடுமைப்படுத்தக் கூடாது (மேனகா காந்தி, புளூகுரொஸ்) என்பதை ஆமோதிக்கிறேன்; மிருகங்களை உணவாகக்கொள்ளக்கூடாது, தாவரவகைகளையே உண்ணவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சூழலை அளவுக்கு மீறி அடிப்படையானதாகக் கணித்து நம் வாழ்வையே சூழலின் நன்மைக்காக மாற்றியமைத்துக் கொள்ளுவது கடவுளில்லாத மனித சிந்தனையின் உருவாக்கம். என் நாட்டு சூழல்வாதக் கட்சி, சூழலைப் பாதுகாக்க எல்லோரும் இனி சைக்கிளில் மட்டுமே பிரயாணம் செய்ய வேண்டும் என்கிறது. இது நடைமுறைக்கே சாத்தியமில்லாத தீவிர சூழல்வாதத்தின் போக்கு.

மனித உரிமைகள் (Human Rights)

இன்று மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள் அது ஆரம்பத்தில் எங்கிருந்து வந்ததென்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. கிறிஸ்தவ சிந்தனையாளர்களே இதற்கு முதன் முதலாக வடிவம் கொடுத்தவர்கள். தனி மனிதனின் உரிமை பற்றி கிறிஸ்தவ வேதம் ஏராளமான விளக்கங்களைத் தருகிறது. தனிமனித உரிமைக்கு ஆதியாகமத்தின் முதலிரண்டு அதிகாரங்களை விடவா எவராவது குரல்கொடுத்துவிட முடியும்? பத்துக்கட்டளைகளை சுருக்கமாக விளக்கிய இயேசு கிறிஸ்து, கடவுளை நேசிப்பதும், சக மனிதர்களை நேசிப்பதுமே அதன் சாராம்சம் என்று விளக்கினார். ‘சக மனிதர்’ என்று எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் தனித்துக் குறிப்பிடவில்லை. அது யாராகவும், எந்த இன, மத, நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்பதே இயேசுவின் விளக்கம். இன்று மனித உரிமைகள் பேசுவோர் ‘சக மனிதர்’ என்பதற்கு அரசியல், வர்க்க, நிறப் பூச்சைப் பூசி உலகத்தைத் திசை திருப்பியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான வில்லியம் வில்பர்போஸ் மனித உரிமைக்காகப் போராடி அடிமை வியாபாரத்திற்கு இங்கிலாந்தில் முற்றுப்புள்ளி வைத்தார். கிறிஸ்தவத்தோடு பின்னிப் பிணைந்தது மனித உரிமைகள். அது தெரியாமல், அதை இன்று சமூக முற்போக்குவாதிகள் (Social Progressives) கடத்தியிருக்கின்றனர். தங்களுக்குச் சொந்தமானதாக அதை மாற்றி, அதற்கு அரசியல், வர்க்கம், நிறம் மற்றும் பாலினப் பூச்சுப் பூசியிருக்கிறார்கள். இவர்கள் அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் முரண்பாடானதாக அதற்கு மாறுபாடான விளக்கமளித்து வருகின்றனர். மனித உரிமைகள் என்றவுடனேயே மார்டின் லூத்தர் கிங்கே பெரும்பாலானோருக்கு மனதில் தோன்றுவார். அந்தளவுக்கு மனித உரிமைகள் சமூக முற்போக்குவாதிகளால் அரசியல், வர்க்க, நிறப்பூச்சு பூசப்பட்டு உலா வருகிறது. தற்கால மனித உரிமைக் கோஷங்கள் தாராளவாதக் கருத்தியல்வாதிகளைப் பின்புலமாகக் கொண்டு இயங்கிவருகின்றன என்பதைக் கிறிஸ்தவர்கள் உணர்தல் அவசியம். மனித உரிமைகள் அவசியம்; அது கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அதற்கும் தாராளவாதக் கருத்தியல் பூச்சுக்கு அடியில் ஒளிந்திருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகச் செயல்படும் தற்கால மனித உரிமைவாதிகளுக்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. கிறிஸ்தவனாக நான் மனித உரிமைகளை மதிக்கிறேன்; அதற்காக எப்போதும் குரல்கொடுப்பேன். தாராளவாத கருத்தியலுக்குக் கீழியங்கும் மனிதநலவாத (Humanist) மனித உரிமைக் கோஷங்களுக்கு நான் எதிரானவன்; அவை பாரபட்சமானவை.

முடிவாக . . .

கிறிஸ்தவர்கள் வேதசத்தியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து உலக விஷயங்களையும் நுணுக்கமாக ஆராயவேண்டும். ஒரு விஷயத்திற்காக சமூகம் சத்தமாகக் குரல் கொடுக்கிறது என்பதற்காக சமூகக் குரல்கள் எல்லாமே சரியானதாகிவிடாது. இந்தச் சமுதாயத்தின் அரசியல், சமூக, வர்க்கப், பாலினக் கோட்பாடுகள் கிறிஸ்தவன் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அல்ல. யோசேப்பும், தானியேலும் தங்கள் காலத்தில் இதையெல்லாம் எதிர்கொண்டு விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாக சத்தியத்தின் பக்கத்தில் மட்டுமே நின்றிருக்கிறார்கள். கிறிஸ்தவம் என்பது வெறும் ஆராதனையையும், ஜெபத்தையும் மட்டும் கொண்டதல்ல; அது படைத்தவரின் உலகத்தைப் படைத்தவரின் மகிமைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய கடமையையும் உள்ளடக்கியது. சத்தியத்துக்குப் புறம்பான உலகத்துச் சிந்தனைகளை அனைத்துக் காரியங்களிலும் தவிர்த்து பச்சோந்தித்தனத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல் வாழ வேண்டியது நம் கடமை. நீங்கள் எப்படிப்பட்ட கிறிஸ்தவராக இருந்து வருகிறீர்கள்? அடுத்த தடவை சமூகத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது உடனடியாக வேதமாகிய மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொள்ளத் தவறாதீர்கள்.

 

 

 

மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள்

 

அஞ்சரைப்பெட்டியைத் திறந்து பார்த்து சில வருடங்களாகி விட்டது. காலங்கள் கடந்துபோக வாழ்க்கையில் நாம் கேட்பதும், வாசிப்பதும், பிறரோடு பழகும் அனுபவத்தில் கிடைப்பதும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எத்தனையோ விஷயங்கள் அவசியமில்லாதவையாகிவிடுகின்றன. அவற்றையெல்லாம் மனமாகிய அஞ்சரைப்பெட்டிக்குள் நாம் சேர்த்து வைப்பதில்லை. மறக்கமுடியாத, அவசியமான பல நிகழ்வுகளையும், செய்திகளையும், உண்மைகளையுந்தான் நாம் அஞ்சரைப்பெட்டிக்குள் வைத்திருப்போம். பசுமாடு தேவையான அளவுக்கு புல்லை வயிற்றில் சேமித்த பிறகு மரத்தடியில் ஆசுவாசமாக அமர்ந்து அதை மறுபடியும் வாய்க்குக்கொண்டுவந்து அசைபோடும். என் அஞ்சரைப்பெட்டியை இன்னொரு தடவை திறந்து பார்த்து அசைபோடும் சமயம் வந்துவிட்டது. நீங்களும் என்னோடு வாருங்களேன்!

படைப்பாளியாக நான்

என் இலக்கியப்பணி தீவிரமாக ஆரம்பமான வருடம் 1995. அதை நான் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை; எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அதுவரை, பத்துவருடங்களாக இருந்ததும் கிடையாது. திரும்பிப் பார்க்கிறபோதுதான் கர்த்தரின் பராமரிப்பு என்னை அதில் இழுத்துவிட்டிருப்பதை உணர்கிறேன். அது காலத்தின் கட்டாயம்; என் வாழ்க்கையில் கடவுளின் திட்டங்களில் ஒன்று. இலக்கிய வாசிப்பும் ஆர்வமும் பத்து வயதில் தொடங்கியது. அன்றிருந்து 20 வருடங்களுக்கு இலக்கியம் வாசித்திருக்கிறேன். அதுபற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன். கிறிஸ்து என்னை ஆட்கொண்டபோது இலக்கியத்தை நான் இழக்கவில்லை; இலட்சியமும், இலக்கும் மட்டுமே மாறின. 1995ல் ஆரம்பமான திருமறைத்தீபம் இப்போது 26 வருடங்களை நிறைவுசெய்துவிட்டது. அதன் ஏழாவது தொகுப்பு (வால்யூம்) அடுத்த வருடம் வெளிவர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதேகால அளவு நான் படைப்பாளியாக இருந்து வந்திருக்கிறேன். இதுவரை அதைப்பற்றி நான் அதிகம் சிந்தித்ததில்லை; அதற்கு நேரமும் இருக்கவில்லை. இப்போது கோவிட் காலமல்லவா? எதையும் அலசிப் பார்ப்பதற்குத்தான் அதிக நேரமிருக்கிறதே. இத்தனை ஆண்டுகளும் என்னோடிருந்து என்னை வழிநடத்தி இலக்கியப்பணியில் தளர்ந்துவிடாமல் ஊக்கத்தோடு ஈடுபட்டுவர கர்த்தர் துணைசெய்திருக்கிறார். நான் படைப்பாளியாக உருவெடுக்கக் காரணமாக இரண்டு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். (படைப்பாளி என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதுகூட இதுதான் முதல்முறை). அவர்களுடைய அடங்காத வற்புறுத்தலே என்னை எழுதவைத்தது. அவர்கள் ஊக்குவித்து இந்தப்பணியில் என்னை இழுத்துவிட்டிருக்காவிட்டால் எழுதவந்திருப்பேனோ தெரியாது; நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். எழுத்துப்பணிக்கு என் இலக்கியப் பின்புலம் என்னைத் தூக்கி நிற்கவைத்திருக்கும் தூண். எனக்கு ஆசான்களாக இருந்து மொழி இலக்கிய ஆர்வமூட்டி வளர்த்துவிட்டிருக்கும் ஒவ்வொருவரையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்; சிரம் தாழ்த்துகிறேன். அவர்களில் இருவர் பின்னால் பிரபலமான தமிழறிஞர்களாக; பேராசிரியர்களாக; கலாநிதிகளாக; படைப்பாளிகளாக நாடறியச் சிறந்தவர்கள். இன்னொருவரை நான் துரோணரைப்போலப் பயன்படுத்திக் கற்றிருக்கிறேன்.

தீவிரமாக எழுத ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. அது பதியப்பட வேண்டியதொன்று. அது 2000களின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். திடீரென அறிமுகமில்லாத ஒருவரிடம் இருந்து எனக்கு இமெயில் வந்தது. நான் வாழும் ஆக்லாந்து நகரில் இருந்து ஏழு மணிநேர கார் பிரயாண தூரத்தில் இருந்த நகரத்தில் இருந்து ஒரு மருத்துவர் அதை எழுதியிருந்தார். அவர் வெள்ளையர். எனக்கு சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி தமிழில் இருந்தால் அனுப்பிவைக்க முடியுமா? என்று கேட்டிருந்தார். வெள்ளையரான அவருக்கு தமிழ் சுவிசேஷ கைப்பிரதி ஏன் என்று ஆர்வங்கொண்டு அதுபற்றி பதிலெழுதிக் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் இருந்து ஒருவர் என்னிடம் ஜுரத்துக்கு மருந்து வாங்க வந்தார். அவருக்கு இயேசுவைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இயேசுபற்றி தமிழில் வாசிக்க ஏதாவது தரமுடியுமா, என்று கேட்டார் என்று சொன்னார். அந்த எழுத்துப்பணியின் ஆரம்பகாலத்தில் நான் சுவிசேஷ செய்திகளை எழுத ஆரம்பிக்கவில்லை. என்னிடம் இருந்த நூல்களைப் புரட்டிப்பார்த்துவிட்டு ‘கிறிஸ்தவ இறையியலுக்கு அறிமுகம்’ என்று நான் எழுதி வெளியிட்டிருந்த கையடக்கமுள்ள சிறுநூலையும், தமிழில் புதிய ஏற்பாட்டு நூலையும் அவருக்கு அனுப்பிவைத்தேன். அத்தோடு என்னை எப்படித் தேடிப்பிடித்தீர்கள், என்றும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எத்தனையோபேரிடம் விசாரித்து இறுதியில் உங்கள் முகவரி எனக்குக் கிடைத்தது என்றார்.

அது நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு இமெயில் வந்தது; அதுவும் எனக்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் இருந்து. அதை எழுதியிருந்தவர், அந்த வெள்ளையரான மருத்துவருக்கு நான் அனுப்பிவைத்திருந்த சிறுநூலைப் பெற்று வாசித்திருந்த மனிதர்; பெயர் அவ்வை நடராஜன் என்று குறிப்பிட்டிருந்தார். அவரைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அவருடைய இமெயில் தெளிவான ஆங்கிலத்தில் முறையான கடித நடையில் இருந்தது. அதில் அந்த மனிதர் தான் வாசித்த நூலில் சந்தித்திருந்த சத்தியத்தைப்பற்றி அல்லாமல், அந்த நூலில் காணப்பட்ட தமிழெழுத்து நடையின் அழகையும், இனிமையையும், வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்த விதத்தையும் இரசித்துப் பாராட்டி எழுதியிருந்தார். காரண காரியங்களோடு நூலின் கருப்பொருள் விளக்கப்பட்டிருந்தவிதத்தின் அருமைபற்றியும், அதன் முடிவுரைபற்றியும் ஒரு பேராசிரியர் தன் முனைவர் பட்டத்துக்கான மாணவனின் ஆய்வாக்கத்தை எப்படி விமர்சிப்பாரோ அந்தக்கோணத்தில் எழுதி என்னை வாழ்த்தியிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல் தான் கூடிய சீக்கிரம் ஆக்லாந்து வரவிருப்பதாகவும், அப்படி வருகிறபோது என்னை எப்படியாவது சந்தித்துப் பேசவேண்டும் என்று என் அனுமதியையும் கேட்டிருந்தார். அதற்கு நான், அப்படி வரும்போது எனக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள் என்று தொலைபேசி எண்ணையும் கொடுத்து பதில் அனுப்பினேன். அந்த இமெயிலை நான் பாதுகாத்து வைக்கத் தவறிவிட்டேன். இதுவரை எத்தனையோ பேர் என் படைப்புகளை வரவேற்று எழுதியிருந்தபோதும் இப்படியொரு அறிவார்ந்த நுணுக்கமான விமர்சனக் கோணத்தில் எதுவும் வந்ததில்லை.

ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த மனிதர் எனக்கு இமெயில் அனுப்பி, தான் ஆக்லாந்தில் இருக்கும் முகவரியைத்தந்து சந்திக்கமுடியுமா என்று கேட்டிருந்தார். அவர் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணோடு தொடர்புகொண்டு நாளையும், நேரத்தையும் கொடுத்தேன். அதன்படி அந்நாளில் அவரிருந்த வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்தேன். கதவைத் தட்டியபோது கதவு திறக்க, தூரத்தில் ஒரு முதியவர் தன் கையில் இளம் நீல நிறத்தில் இருந்த ஒரு சரிகைக்கரையுள்ள பட்டுச் சால்வையை இருகரங்களிலும் தூக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்ததைக் கவனித்தேன். அவர் அருகில் வந்து என்னை உள்ளே அழைத்து, அந்தச் சால்வையை என்மேல் போர்த்தி தன் கரங்களால் என் இரண்டு கைகளையும் பிடித்துக் குலுக்கி கட்டியணைத்து அழைத்துச் சென்று வரவேற்பறையில் அமரச் செய்தார். இதெல்லாம் ஏன், எதற்காக என்று என் மனம் படுவேகமாக கேள்விகளுக்கு மேலாய்க் கேள்விகளை அள்ளியெறிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த முதியவர் தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் பெயர் அவ்வை நடராஜன் என்றும் தான் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றும் ஆரம்பித்து நியூசிலாந்து வந்த நோக்கத்தையும், ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்த அந்த மருத்துவர் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட அனுபவத்தையும் அதன் காரணமாக என் சிறு ஆக்கத்தை வாசித்ததையும் பற்றி விளக்கினார். அதற்குப் பிறகு அவர், ‘ஐயா, நீங்கள் இத்தனை அருமையாக, அழகாக தமிழ் எழுத எங்கு கற்றுக்கொண்டீர்கள்? விளக்குவீர்களா, அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய முனைவர்பட்ட மாணவர்களில் ஒருவர்கூட இத்தனை அழகாகத் தமிழெழுதி நான் கண்டதில்லை’ என்று சொன்னார். அவர் சுத்தமான தமிழில் தெளிவாகப் பேசினார்.

அதற்குப் பிறகு எங்கள் சம்பாஷனை ஒரு மணிநேரம் நீடித்தது. விடைபெற்றுக்கொள்ளும்போது அவர் சென்னையில் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை வரும்போது நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன். அவரிடம் வீட்டு முகவரியையும் கேட்டேன். அதைத் தந்தபோது சொன்னார், ‘நீங்கள் ஆட்டோகாரரிடம் என் பெயரைச்சொன்னாலே போதும். அவர் என் வீட்டிற்கு உங்களை அழைத்துவந்துவிடுவார்’ என்றார். அந்தளவுக்கு பிரபலமானவரா இவர் என்று என் மனம் கேட்டது. அவரைப்பற்றி அந்தவேளையில் எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை; பின்னால்தான் அவருடைய முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். ஒத்துக்கொண்டதுபோல், ஒருமுறை பிரயாணத்தில் தியாகராஜ நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நான் போக, அங்கேயும் இன்னொரு சரிகைச் சால்வையை அவர் என்மீது போர்த்தி தன் மனைவி டாக்டர் ராதா நடராஜனோடு அருமையான மதிய விருந்தையும் அளித்து உபசரித்தார். அதுமட்டுமல்லாமல் அவர், ‘ஐயா, நீங்கள் ஏன் கிறிஸ்தவ வேதத்தை நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடாது, என்னைப் போன்றவர்கள் வாசிப்பதற்கு உதவுமே. இப்போதிருக்கும் வேதத்தமிழ் பழங்காலத்துத் தமிழாக வேதத்தை அறிந்துகொள்ளுவதற்கு தடையாக இருக்கிறதே’ என்றும் சொன்னார். அன்றும் எங்கள் சம்பாஷனை தமிழைப்பற்றியும், கிறிஸ்தவத்தையும் பற்றியும் நீடித்தது. நான் போவதற்கு முன்னால் நீங்கள் சிபாரிசு செய்து நான் போகக்கூடிய ஒரு திருச்சபை இருந்தால் சொல்லுங்கள் என்று அவர் கேட்டதும் என் நினைவுக்கு வருகிறது. அப்படியொரு சபை அன்று எங்கே இருந்தது? அவரிடமும் அவருடைய மனைவியிடமும் விடைபெற்றுக்கொண்டு நானிருந்த ஓட்டலுக்குக் திரும்பினேன்.

இதையெல்லாம் நான் விளக்குவற்கு ஒரு காரணமிருக்கிறது. திருமறைத்தீபத்தின் மைல்கல் கால சிறப்பு விழாக்களைக் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் ஒரே காரணத்திற்காக வாசகர்களோடும், சபைகளோடும் இணைந்து இதுவரை மூன்று தடவை நிகழ்த்தியது தவிர பாராட்டையோ, பட்டங்களையோ நான் படைப்பாளியாய் எதிர்பார்த்தது கிடையாது. என்னுடைய இலக்கியப் பணியில் ஆழ்ந்த அக்கறை காட்டும் நியூசிலாந்தில் வாழும் நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில், ‘உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் கிடைக்கவேண்டும்’ என்றார். நான் சிரித்துக்கொண்டே அது ஏற்கனவே கிடைத்துவிட்டது என்றேன். அவர் ஆச்சரியத்தோடு எப்போது கிடைத்தது, எனக்குச் சொல்லவில்லையே என்றார். மேலே நான் குறிப்பிட்டிருந்த சம்பவத்தை விளக்கி மதிப்புக்குரிய மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் வார்த்தைகள்தான் அந்த டாக்டர் பட்டம் என்றேன். தமிழகத்தின் பிரபலமான ஒரு முதுபெரும் தமிழறிஞர் தன் வாயால் என் படைப்புப்பற்றிச் சொன்ன வார்த்தைகளைவிட வேறு என்ன தேவை? அன்னத்திற்குத் தெரியும் பாலின் அருமை. தமிழை நேசித்து, தமிழ்த்தொண்டாற்றி, தமிழுக்காக வாழும் ஒருவருக்குத்தான் அதன் அருமை புரியும். சொல்ல மறந்துவிட்டேன். முனைவர் அவ்வை நடராஜன் அவர்கள் மிகச்சிறந்த தமிழிஞர், பேச்சாளர். பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர். விரிவுரையாளராகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்திருக்கும் அவர் தமிழக அரசின் பல்வேறு தமிழ்தொடர்பான துறைகளில் இயக்குனராகவும், செயலாளராகவும் எம்ஜியார், கருணாநிதி அரசுகளின் காலத்தில் பணியாற்றியிருக்கிறார். அவருடைய தமிழாற்றலைக்கண்டு வியந்து எம்ஜியாரே அவரை முதன்முதலாக அரசு பணியில் நியமித்தார். இப்போது சென்னை பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவ்வை நடராஜன் இருந்து வருகிறார். பல்வேறு ஆய்வாக்கங்களை அவர் படைத்திருக்கிறார். அவருடைய சொற்பொழிவுகள் நூல்களாகவும் வந்திருக்கின்றன. தமிழைப்போல ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் இந்தத் தமிழறிஞர்.

தரையில் இருந்தாலும் தளர்வில்லை

கோவிட்-19 என்னை வீட்டில் இருக்கவைத்துவிட்டது; ஆறுமாத காலமாக விமானப்பயணம் இல்லை. உண்மையில் அதை நான் மிஸ் பண்ணவில்லை. அதிகம் எழுதவும், பேசவும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. ஏப்ரல் மாதத்தில் இருந்து நாலரை மாதங்களுக்குத் தொடர்ந்து வாரத்தில் ஐந்து தடவை பிரசங்கங்களையும், விரிவுரைகளையும் அளிக்க முடிந்தது. அதுவும் இரவு 11 மணிக்கு ஓய்வுநாளில் கடைசிச் செய்தியை அளித்திருந்தேன். இப்போது கொஞ்சம் குறைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாலரை மாதங்களிலும் நான் அளித்திருந்த பிரசங்கங்களையும், விரிவுரைகளையும் உயர்தரத்தில் தயாரிக்கக்கூடிய நேரத்தையும், வசதியையும் ஆண்டவர் கிருபையாய் அருளியிருந்தார். முக்கியமாக ‘சிக்கலான வேதப்பகுதிகள்’ என்ற தலைப்பில் தெரிந்தெடுத்து நான் விளக்கியிருந்த பகுதிகளை மிகுந்த ஆர்வத்தோடும் ஆவிக்குரிய சந்தோஷத்தோடும் தயாரித்து அளித்திருந்தேன். அந்தளவுக்கு வேதத்தை ஆராய்ந்து படிக்க நேரமிருந்தது. அதுமட்டுமல்லாமல் அப்படி ஆராய்ந்து படிப்பதில் இருக்கும் ஆனந்தமே விவரிக்கமுடியாதது. அதற்குக் காரணம் ஆவியானவர் வழிநடத்தி வெளிப்படுத்துகின்ற சத்தியங்கள்தான். வாசிப்பாகிய நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் அனுபவத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நீச்சலடிப்பதைப் பலர் தீவிர உடற்பயிற்சியாக வைத்திருக்கிறார்கள்; எனக்கு ஓடுவதைப்போல. வாசிப்பாகிய நீச்சலைத் தீவிரமாகக் கொண்டிருப்பது நித்திய வாழ்வுக்கு பிரயோஜனமளிக்கும்.

பிரசங்கங்களையும், விரிவுரைகளையும், படைப்புகளையும் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுபோக ஆவியானவர் உதவியிருக்கிறார். அவருடைய அனுக்கிரகத்தை இந்தக் காலங்களில் அதிகம் அனுபவித்திருக்கிறேன். படித்துப் பிரசங்கம் செய்வதென்பது நம்மினத்துப் பிரசங்கிகளில் அறவேயில்லாதது என்பது ஆத்துமாக்களுக்கே தெரிந்த ஒன்றுதான். வெகுசிலர் மட்டுமே ஆங்காங்கு இதைச் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். படித்து, ஆராய்ந்து சிந்தித்து, ஆவியில் தங்கியிருந்து, ஜெபத்தோடு எழுதித் தயாரித்துப் பிரசங்கம் செய்வதை ஆவியில்லாதவன் செய்கிற காரியமாக கெரிஸ்மெட்டிக் பிரசங்கிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித் தயாரிக்கும் பிரசங்கங்களை மட்டுந்தான் சத்திய ஆவியானவர் பயன்படுத்துகிறார்; வேறெதையும் பயன்படுத்துவதில்லை என்பது அந்த ஞானசூன்யங்களுக்குப் புரியவில்லை. ஆவிக்குரிய அறிவாளிகள் எல்லோருக்குமே ஞானத்தை அள்ளியள்ளி அளிக்கும், படிப்பாளிகளிலெல்லாம் பெரிய படிப்பாளியான பரிசுத்த ஆவியானவர், படித்து ஆராய்ந்து ஞானத்தை அடைய உழைக்கிறவர்களை உதாசீனப்படுத்துவாரா? வேதத்தைப் படித்து ஆராய்ந்து சிந்திக்காமல் இருப்பவர்கள் பக்கத்தில் அவர் வருவாரா?

என் வேதப்படிப்பையும், உழைப்பையும், பிரசங்கங்களையும் இந்தக் காலத்தில் ஆவியானவர் ஆசீர்வதித்திருக்கிறார். ஒன்று தெரியுமா? ஆவியில் தங்கியிருந்து, ஜெபித்து, உழைத்துத் தயாரிக்கும் பிரசங்கங்களைக் கொடுக்கிறபோதுதான் பிரசங்கிக்கு உள்ளுக்குள் ஆவிக்குரிய நம்பிக்கை பதிகிறது; ஆவிக்குரிய உற்சாகம் உண்டாகிறது. மனித பயமில்லாமல், அவனால் அப்போதுதான் பிரசங்கிக்க முடிகிறது. தான் செய்ய வேண்டிய பணியை (உழைத்துத் தயாரிப்பது) முறையாகச் செய்திருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்குள் குற்றவுணர்வில்லாமல் இருந்து ஆவிக்குரிய தைரியத்தோடு பிரசங்கம் செய்யவைக்கிறது; அவனால் ஆத்மீகத் திருப்தியோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும் பிரசங்கிக்க முடிகிறது. ஆவியானவர் அப்படிப்பட்டவனை எப்படி ஆசீர்வதிக்காமல் இருப்பார்? இதற்குக் குறைந்த எதையும் செய்கிறவன் வேதப்பிரசங்கியல்ல.

இக்கோவிட் காலத்தில் ஓரிரு நூல்களை எழுதித் தயாரிக்க ஆண்டவர் வசதிசெய்து தந்தார். அதிகளவு நேரங்கொடுத்து ஆழமாக வாசித்து, ஆராய்ந்து படிக்க விமானப் பயணங்கள் இதற்குமுன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அந்தக்குறை இந்த ஆறுமாதகாலத்தில் இருக்கவில்லை. மனந்திரும்புதல் பற்றி விரிவுரைகளை அளித்து வருவதால் அதுபற்றிய பல நூல்களை வாசிக்கமுடிந்தது. தொமஸ் பொஸ்டன், தொமஸ் வொட்சன், ரால்ப் வென்னிங், ஜோன் கல்கூன், ஜோன் மரே, ஆர். சி. ஸிபிரவுல், சின்கிளெயர் பேர்கசன் என்று பலருடைய நூல்களை வாசித்தேன்; தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றியும் அவர்களுடைய போதக ஊழியத்தின் தன்மை பற்றியும் வாசிக்க முடிந்தது. வாசிக்க வேண்டிய சில நூல்களையும் படிப்பறையில் கண்முன் மேசையில் அடுக்கிவைத்திருக்கிறேன்.

ஊழியப்பணியும், புத்தகக் கடைகளும், இசையும்

இந்தக் காலப்பகுதியில் புதிய வாசகர்களோடு உறவேற்பட்டிருக்கிறது. அவர்களோடு இமெயில் கடிதப் பறிமாற்றம் செய்யமுடிந்திருக்கிறது. சிலருக்கு சுவிசேஷத்தைச் சொல்லவும், அதுபற்றி விளக்கவும் முடிந்திருக்கிறது. கவிதைகள் பக்கம் போய்ப் பலகாலமாயிருந்தது. வாசகர் ஒருவர் அதை நினைவூட்டி மறுபடியும் அதன் பக்கம் போகவைத்திருக்கிறார். அவரும் அவருடைய மனைவியும் இலக்கிய ஆர்வலர்கள்; கவிதைகளை இரசிப்பவர்கள். நேரம்தான் இருக்கிறதே; ஏன் எழுதக்கூடாது? இலக்கிய ஆர்வலர்கள் சுற்றியிருந்தால் அந்த அனுபவம் தரும் சுகமே தனியானது தெரியுமா? இன்று கிறிஸ்தவர்களில் எங்கே பார்க்கமுடிகிறது, இலக்கிய ஆர்வலர்களை? தமிழையே தத்தித்தத்திப் பேசுகிறவர்களாக இருக்கிறபோது தென்னை மர உயரத்தில் இருக்கும் இலக்கியத்தில் அவர்கள் இளநீர் அருந்துவது எப்படி?

கோவிட்-19ஐ கர்த்தர் நிறுத்திவிடத் தொடர்ந்து சபையாக ஜெபிக்கிறோம். இருந்தாலும் இந்தக் கோவிட் வராமல் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பேனா? நிச்சயம் இல்லை. கர்த்தரின் திட்டமே அலாதியானதுதானே. இருந்தாலும், அன்புக்குரியவர்களையும், ஆவிக்குரிய நண்பர்களையும் நேரில் பார்க்க, பேசிப்பழக முடியாமலிருப்பது மனதை நெருடுகிறதுதான். கோவிட்-19ல் வீட்டுக்குள் இருந்து பழகியிருப்பது வெளியில் போகும் ஆர்வத்தை அடியோடு குறைத்துவிட்டது. கோவிட் இல்லாமல் போகும் காலத்தில் வெளியில் போய்ப் பழக ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ! இதுதான் புதிய வழமையோ?

பிரயாணம் செய்யும் காலங்களில் போகும் நாடுகளில் புத்தகக் கடைகளுக்கு விசிட் அடிப்பதை ஓர் அங்கமாக வைத்திருந்திருந்தேன். முக்கியமாக தமிழ் நூல்கள் விற்கும் கடைகளான ஹிங்கின்ஸ்பொட்டம், தி நகரில் உள்ள கிழக்கு, நியூ புக் லேண்ட்ஸ் போன்ற சில கடைகளைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூரிலும் எனக்கு அறிமுகமான ஒரு கடை இருக்கிறது. கோவிட் காலத்தில் என்னென்ன புதிய நூல்கள் வந்திருக்கின்றனவோ தெரியாது. தமிழிலக்கியத்தின் வளத்திலும், வளர்ச்சியிலும் நான் எப்போதுமே ஒரு கண்வைத்திருப்பது வழக்கம். நூல்களை மட்டுமல்லாது, அவை அச்சிடப்பட்டிருக்கும் அழகையும் நான் ரசிக்காமல் இருந்ததில்லை. அச்சுத்தரம் இன்று பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அநேக சிற்றிதழ்களும் இன்றிருக்கின்றன. புத்தகக்கண்காட்சி பற்றியும் வாசித்தேன்; அசூயையாகவும் ஆதங்கமாகவும் இருந்தது. நூல்கள் வாசிக்கும் ஆர்வமிருப்பவர்களுக்குத்தான் தெரியும் நூல்களுக்கு மத்தியில் இருக்கின்ற சுகம்; குழந்தைகளுக்கு மிட்டாய் கடையில் கிடைக்கும் சுகத்தைப்போல. இதையெல்லாந்தான் மிஸ் பண்ணுகிறேன்.

எனக்கு இசையில் எப்போதும் ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தக் கோவிட் காலத்திலும் அதையும் கேட்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது. கிறிஸ்தவ பாடல்கள் என்று மட்டுமில்லாமல் பாடல்களற்ற வாத்திய இசை எனக்கு அதிகம் பிடிக்கும். அநேக காலத்துக்கு முன்பு ரவிசங்கரின் சித்தார் இசைக்கச்சேரியை நேரில் மூன்று மணிநேரம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இன்று அவருடைய இரண்டு மகள்களும் (அனுஷ்கா, நோரா ஜோன்ஸ்) பிரமாதமாக தகப்பனைப் பின்பற்றி இசையில் வளர்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் இளைஞர்கள் பெருமளவில் இசையில் தேர்ச்சிபெற்று முன்னுக்கு வந்திருப்பதைக் கவனிக்கிறேன். அதுவும் பாரம்பரிய செவ்வியல் சங்கீதத்தில் இளம் வயதிலேயே பயிற்சிபெற்று முன்னுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்து வியக்கிறேன். எனக்கு வயலின் இசையில் அலாதி பிரியம். லால்குடி ஜெயராமன் அதில் வித்தகர்; அவரின்றில்லை. டீ. எல். சுப்பிரமணியன் இன்னுமொரு செவ்வியல் இசை வித்தகர். அவருடைய பிள்ளைகள் இளம்வயதில் என்னவாய் இசைமேதைகளாகியிருக்கிறார்கள். அநேக நவீன டிஜிட்டல் இசை வாத்தியக்கருவிகளை இன்று இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். இசைப்பிரியனாக இருந்தாலும் ஒரு வாத்தியத்தையும் நான் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கென்ன, அடுத்தவர்கள் வாசிப்பதைக் கேட்டு மகிழலாந்தானே! என்னடா, இசையில் இவருக்கு எப்படிப் பிரியம் வந்தது? சபையில் அடக்கிவாசிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே என்று எவரோ சொல்லுவது கேட்கிறது. உண்மைதான்! ஆராதனையில் இசைக்கு இருக்கவேண்டிய இடம் வேறு, தனிநபராக ஒருவர் வாழ்க்கையில் இசையை வேறுநேரங்களில் கேட்டு இரசிப்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. இரண்டாவதைப் பற்றித்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன், புரிகிறதா?

எங்கே போகிறது இளைய தலைமுறை?

இதெல்லாம் இன்றைய கிறிஸ்தவ இளைஞர்களைப்பற்றி என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது. அவர்கள் எதில் வளர்ந்திருக்கிறார்கள்; உயர்ந்திருக்கிறார்கள்? என்று கேட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. கிறிஸ்தவ இளைய சமுதாயம் தளர்வான நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். அவர்களுடைய பெற்றோர்களையும், வளர்ப்பு முறையையும் இதற்குக் குறைசொல்லலாம். கிறிஸ்தவ சபைகளும், தலைவர்களும் இதற்கு ஒரு காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது. சரியான வழிநடத்தலோ, முன்மாதிரிகளோ அவர்களுக்கு இல்லை. சரியானவிதத்தில் அவர்களுக்கு வழிகாட்டுதலும், ஊக்குவிப்பும் தேவை.

பணத்திற்காக மட்டும் கல்வி; பணத்திற்காக மட்டும் தொழில்; பணத்திற்காக மட்டும் திருமணம் என்றிருப்பதெல்லாம் என்று மாறுமோ? பணத்தை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு எதையும் அணுகி வாழ்க்கையில் இருக்கவேண்டிய எத்தனையோ அருமையான அழகியல் விஷயங்களில் வறியவர்களாக இருக்கும் கிறிஸ்தவ இளைய சமுதாயத்துக்கு யார் விடுதலை தரப்போகிறார்கள்? சிந்திக்கவும், அறிவுப்பூர்வமாக சுவாரஸ்யத்தோடு கலையைப் பற்றியும், இலக்கியத்தைப்பற்றியும், சமூகத்தைப்பற்றியும், இசையைப்பற்றியும், தமிழைப்பற்றியும், நாட்டைப்பற்றியும் அரைமணி நேரத்துக்கு ஆனந்தத்தோடு பேசி இரசிக்கும் பக்குவமுள்ளவர்களை கிறிஸ்தவர்களில் நான் கண்டதில்லை. ஏன் தமிழிலேயே இருக்கும் மோட்ச பிரயாணம் நூலையோ, நாம் வெளியிடுகிற நூல்களையோகூட வாசித்து மனம்விட்டு அதன் சிறப்புக்களை நுணுக்கமாக சிந்தித்து ஆர்வத்தோடு பத்துநிமிடம் பகிர்ந்துகொள்ளுகிற பக்குவம் அவர்களுக்கு ஏன் இல்லாமலிருக்கிறது? இதை நினைத்துப் பலதடவை நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். இயேசு நமக்களித்திருக்கும் பரலோக வாழ்க்கை வெறும் ஜெபத்தோடு மட்டும் நிற்கிற வாழ்க்கையா? நான் அதை நம்பவில்லை. பணம், வேலை, விலைவாசி, வீட்டுவாடகை, கடன் தொல்லை, மனைவி, பிள்ளைகள் என்று அன்றாட வாழ்க்கைப்போராட்டத்தை இயேசுவுக்குள்ளாக நடத்திவருவது மட்டுமா கிறிஸ்தவம்? நிச்சயமாக இருக்கமுடியாது; வேதம் அப்படிச் சொல்லவில்லையே. புலவனான தாவீது, ஞானியான சாலமோன், வீரனான சிம்சோன், கலைகளிலும், இலக்கியத்திலும், எழுத்திலும் அளவற்ற ஆற்றலோடிருந்த பவுல் என்று அருமையான கிறிஸ்தவர்களை நாம் வேதத்தில் காண்கிறோமே? கவிஞர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் இருந்தார்கள் கிறிஸ்தவ பெரியவர்களான ஜோன் நியூட்டனும், வில்லியம் கவுப்பரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் இலக்கியத்தைபற்றி என்னென்னவெல்லாம் பேசி இரசித்திருப்பார்கள் என்று எண்ணால் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இலக்கியவாதியாகிய ஜோன் பனியனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகிறேன். தமிழகத்துக்கு வந்து கிறிஸ்தவ பணிசெய்த ஜீ. யூ. போப் ஐயரும், கால்டுவெல்லும் தமிழ் கற்று தமிழுக்கு ஆற்றியிருக்கும் பணி எத்தனை எத்தனை. மோட்ச பிரயாணத்தை தன் வழியில் தமிழில் ‘இரட்சணிய யாத்திரிகம்’ எனும் பெயரில் செய்யுள் வடிவில் வடித்துத் தந்திருந்த எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் ஏன் ரசனையில்லாத கிறிஸ்தவர்களாக இருந்து வருகிறோம்?

கிறிஸ்தவனாக சாதித்து வாழ்வதெப்படி என்று இரண்டு செய்திகளை நான் சில வருடங்களுக்கு முன் கொடுத்திருந்தேன். மூன்றாவதைப் பதிவுசெய்ய மறந்துவிட்டார்கள். இரண்டு மட்டுமாவது இப்போது பதிவில் இருக்கிறதே! அந்தமட்டில் சந்தோஷந்தான். அச்செய்திகளில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அழகியலிலும், கலைகளிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும், வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வமோ, ஆற்றலோ இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் வாழ்க்கை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் எந்தவிதத்தில் அவர்களை கிறிஸ்துவுக்கு மகிமையுள்ள வாழ்க்கையை வாழவைக்கப் போகிறது என்று கேட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. படைப்பாளி ஜெயமோகன் இளைஞர்களைத் திரட்டி வருடத்தில் சிலதடவைகள் வாசிப்பிலும், சிந்திப்பதிலும், வாசிப்பவற்றைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதிலும், எழுதுவதிலும் ஊக்குவித்து, பயிற்சிதந்து சிந்திக்கவும் செயல்படவும் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இளைஞர்களை வாசிக்கவும், சிந்திக்கவும் வைக்க அவரெடுக்கும் முயற்சியை நான் பாராட்டுகிறேன். அதற்கு ஆண்டவரை அறியாத அந்த இளைஞர்கூட்டம் ஒத்துழைக்கிறதே. கிறிஸ்தவ இளைஞர்களை இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெட்கப்பட வைக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்குள் தொடர்ந்திருக்கிறது. சமுதாயம் திரும்பிப் பார்க்கிறபடி செய்யப்போகிற கிறிஸ்தவ இளைஞர்கள் தலைமுறை என்று வரப்போகிறதோ?

பழம்பெருமைகளைப்பற்றித் தொடர்ந்து கச்சேரி நடத்திவருவதில் எனக்கு ஆர்வமில்லை. இளம் ஸ்பர்ஜனையும், ஜோன் பனியனையும் எத்தனை காலத்துக்குத்தான் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது? அவர்களுக்கு இளம்வயதில் இருந்த ஆவிக்குரிய ஆர்வம், துடிப்பு, வாசிப்புத் திறன், வேதஞானம், விடாமுயற்சி, உழைப்பு, முதிர்ச்சி, அனுபவம் எல்லாவற்றிற்கும் ஆவியானவர் மட்டும் காரணமென்று நான் நம்பவில்லை. அவர்கள் பொதுவான கிருபையின் கீழ் மானுடத்தில் எந்த ஆற்றலும் இல்லாதவர்களாக, சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் குறைகாணுபவர்களாக வளரவில்லை. ஆவியானவர் அவர்களை அருமையாகப் பயன்படுத்தியபோதும், அவர்களில் இருந்ததை அவர் சிறப்பாக்கியிருக்கிறார்; அவர்களுடைய முயற்சியையும், திறமைகளையும் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுபோயிருக்கிறார்.

நம் இளைஞர்களில் எதைக் காண்கிறோம்? திருச்சபை வாலிபர் கூட்டங்களில் கேலியும், கிண்டலும், வம்பளப்பும், பெரியவர்களை மதித்து நடக்காமல் புரளி பண்ணுபவர்களாகவும் இளைஞர்கள் ஏன் இருந்து வருகிறார்கள்? இளைஞனாக இருந்த காலத்தில், வேதப்படிப்புக்கு வழியில்லாமல் வெறும் கிட்டார் இசை மட்டுமே இருந்துவந்த இடங்களைவிட்டு நான் விலகிப்போயிருக்கிறேன். இசை பிடிக்கவில்லை என்பதற்காகவல்ல; அதற்கும் மேலானதொன்றுக்கு அங்கிடமிருக்கவில்லை என்பதால். உலக இச்சைக்கு இன்றைய இளைஞர்கள் விட்டில் பூச்சிபோல் பலியாகிவிடுகிறார்கள். மாம்சத்தை அவர்கள் மேற்கொள்ளுவதைவிட மாம்சம் அவர்களை ஆளுவதற்குக் காரணம் என்ன? கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டபோதும் கிறிஸ்தவ குணாதிசயங்களும், ஆவியின் கிருபைகளும் அவர்களில் நெருப்பாக எரியாமல் இருப்பதற்கு எது காரணம்? இளைஞர்களில் இல்லாமலிருப்பவற்றிற்கு நம் பண்பாடு ஒரு பெருங்காரணம் என்பதை எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். சீரழிந்த அந்த இந்துப் பண்பாடு சிதைக்கப்பட வேண்டும். அதற்கு இரையாகி அழிந்துவிடாமல் இந்துக்களில்கூட இளைஞர்கள் முன்னுக்கு வந்து நம்மை வியக்கவைக்கிறார்களே! சாக்கடைக்குப் பக்கத்தில் வாழ்கிறவர்கள் சாக்கடை மணத்திற்குப் பழகிப்போய்விடக்கூடாது; ஒன்று, தூரமாய்ப்போய் இருந்துவிடவேண்டும், இல்லாவிட்டால் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இரண்டில் ஒன்றைச் செய்யாமலிருப்பது மனித தன்மைக்கே அழகானதல்ல.

இதை எழுதும்போது இன்னொரு நாட்டில் வாழும் ஒரு இளைஞனின் நினைவு வருகின்றது. என்னோடு தொடர்பு வைத்திருக்கும் நெடுங்காலத் தீவிர திருமறைத்தீப வாசகர் அவர். ஓய்வு நாளில் வேலை செய்வதில்லை என்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததால் வந்த வேலைகள் கைவிட்டுப் போயின. பெரிய படிப்பெதுவும் அவர் படித்திருக்கவில்லை; அதற்குப் பணம் செலவழிக்கக்கூடிய வசதியுள்ள குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை. இளவயதாக இருந்தாலும், வீட்டுப் பிரச்சனைகள் இருந்தபோதும், தளர்ந்துவிடாமல் இரண்டு தொழில்களைச் செய்து மிகுதியான நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறுபதுக்கு மேற்பட்ட முதியவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச்செய்து, முடிந்தவரை சுவிசேஷத்தையும் சொல்லிவருகிறார். இதையெல்லாம் எவரிடமும் கைநீட்டிப் பணம் வாங்காமல் தன் சொந்தச் செலவிலேயே செய்துவருகிறார். இதைப் பகிரங்கப்படுத்திப் பெயர் தேடவும் அவர் விரும்பவில்லை. தடைகளைத் தடங்கலாகப் பார்க்காமல் அவற்றைப் படிக்கற்களாகப் பயன்படுத்தி ஏறிப்போகும் பக்குவத்தை இந்த இளைஞன் கற்றிருக்கிறான். இப்போது ஒரு நல்ல தொழில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக்காலத்தில் இப்படியும் நம்மத்தியில் ஒரு இளைஞனா, என்று கேட்கவைக்கும் இந்த விஷயம் என்னைச் சந்தோஷப்படுத்துகிறது.

மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்;

பாரதியாரின் கவிதையில் சில வரிகள் இவை. பாரதி கிறிஸ்தவனல்ல. இந்த வார்த்தைகளை ஒரு கிறிஸ்தவன் எழுதியிருக்க முடியும். அந்தளவுக்கு இதில் கிறிஸ்தவனால் எதோடும் முரண்பட முடியாது; பாரதியின் தனிப்பட்ட இந்து நம்பிக்கைகளைவிட. பாரதி வீறுகொண்ட கவிஞனாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் அதை எதிர்த்து இளைஞர்களை உசுப்பிவிட்டிருந்தார். இன்று மனதில் உறுதிகொண்ட, வாக்கினில் இனிமை கொண்ட, காரியத்தில் உறுதிகொண்ட, பக்திவிருத்தியில் நாட்டம் கொண்ட கிறிஸ்தவ இளைஞர்கள் திருச்சபைக்கும், நாட்டுக்கும் தேவை. என் எண்ணங்களைக் கொட்டிமுடித்துவிட்டேன்; அஞ்சரைப்பெட்டியை அலசிப் பார்த்தாகிவிட்டது. அதைமூட வேண்டிய நேரமும் வந்துவிட்டது. கூடவந்த உங்களுக்கும் நன்றி. அடுத்த தடவை மறுபடியும் அஞ்சரைப்பெட்டியில் சந்திக்கலாம்.

 

 

மொழியாக்க வறட்சி

என் இலக்கியப்பணியில் மொழியாக்கமும் ஒரு சிறு அங்கம். தற்காலத்தில் நம்மினத்தில் அதிகளவுக்கு அறிமுகமாகாமல் இருந்துவரும் சத்தியங்களை அருமையாக விளக்கியிருப்பவர்களின் நூல்களையோ அல்லது ஆக்கங்களையோ இருந்திருந்து மொழியாக்கம் செய்துவருகிறேன். மொழியாக்கம் சிக்கலானது; சிலம்பாட்டம் போன்றது. சிலம்பு சுற்ற உடல்வலிமை மட்டுமல்லாமல் அதை லாவகமாகச் சுற்றிச் சுழலும் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். சிலம்பு சுற்றுவதில் நளினம் தெரியவேண்டும். கையில் தடி வைத்திருப்பவர்களெல்லாம் சிலம்பாட்டக்காரர்களா என்ன! நெடுங்காலப் பயிற்சி அதற்குத் தேவை. அதுபோலத்தான் மொழியாக்கமும். எழுத்துத்துறையில் காணப்படும் சோகங்களில் இரண்டை நம்முன்வைக்கும் பிரபல பழம் படைப்பாளி அசோகமித்திரன், ஒன்று மொழிபெயர்ப்பது, இரண்டாவது, மொழிபெயர்க்கப்படுவது என்கிறார். அவற்றில் காணப்படும் பிரச்சனைகளை அவர் உணர்ந்திருப்பதாலேயே இப்படி வர்ணித்திருக்கிறார். பொதுவாகவே மொழிபெயர்ப்பு நூல்கள் நம்மொழியில் சிறப்பாக இல்லை என்பதே தேர்ந்த படைப்பாளிகளின் கருத்து.

மொழியாக்கமா, மொழிபெயர்ப்பா, எது சரி. என்னைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒன்றையே குறிக்கும் (Translation) வார்த்தைப் பிரயோகங்கள். இதில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். Transliteration என்பதை ஒலிபெயர்ப்பு என்று குறிப்பிடலாம். அதைத்தான் அது செய்கிறது. வார்த்தையின் ஒலிக்கேற்றபடி மொழிபெயர்ப்பது ஒலிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு வேறு, ஒலிபெயர்ப்பு வேறு. இங்கே மொழியாக்கத்தைப்பற்றி நான் விளக்க முனைகிறேன்.

மொழியாக்கத் திறன்

ஒரு படைப்பை எழுதுவது வேறு; மொழியாக்கம் செய்வது வேறு. இரண்டுக்கும் வேறுபாடிருக்கிறது. நேரடியாக ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கு அவசியமில்லாத திறன் மொழியாக்கம் செய்கிறவனுக்கு இருக்கவேண்டும். எந்தமொழியில் இருந்து மொழியாக்கம் செய்கிறானோ அந்த மொழியிலும், மொழியாக்கம் செய்யப்படுகிற மொழியிலும் அவனுக்குத் தேர்ச்சி இருக்கவேண்டும். மொழிக்கு மொழி உருவகங்கள், உவமைகள், சொல்லாடல்கள் மற்றும் பேச்சுவழக்கு, பண்பாட்டு வேறுபாடுகள் காணப்படும். மொழியாக்கத்தில் திறனுள்ளவர்களுக்கு இவற்றில் தேர்ச்சியிருக்கும். பெயர்பெறுவதற்காகவும், ஆர்வக்கோளாறு காரணமாகவும், பணத்திற்காகவும் மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு இந்தத் திறன் இருக்காது. ஒருமுறை ஓர் ஆங்கில ஆக்கத்தை மொழியாக்கம் செய்துதர ஒருவர் ஒத்துக்கொண்டார். மொழியாக்கத்தை பிஸ்னசாக செய்துவருகிறவர் அவர். அவருடைய திறமையை அறிந்துகொள்ளுவதற்காக ஒரு சிறு ஆக்கத்தை மொழியாக்கம் செய்துதரும்படிக் கேட்டுக்கொண்டேன். பரீட்சைக்காகத்தான் அதைச்செய்யச் சொல்லுகிறேன் என்பதையும் விளக்கியிருந்தேன். நான் எதிர்பார்த்தபடி மொழியாக்கம் இருக்கவில்லை; உண்மையில் அது தமிழில் வாசிப்பதற்கு ஜீவனில்லாததாக, கரடுமுரடானதாக, ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. அந்தப் பரீட்சை மொழியாக்கத்திற்குக்கூட ஏதாவது பணத்தைப்பெற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தளவுக்கு மொழியாக்கம் செய்தவருக்கு மொழியாக்கத் திறன் இருக்கவில்லை.

மூலநூலை ஒருபோதும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கக்கூடாது. அது அசட்டுத்தனமான செயல். மொழிகள் வித்தியாசமானவைகளாக இருப்பதால் மொழியாக்கத்திற்கு அது சரிப்பட்டு வராது. கீழைத்தேய மொழிகள் எல்லாமே பொதுவாக ஒரேவிதமாக ஆரம்பித்து முடியும். அவற்றின் எழுவாய் பயனிலை அமைப்பு ஒரேமாதிரியானவையாக இருக்கும். ஆங்கிலத்தில் இருக்கும் வசனத்தை அது முடியும் இடத்தில் இருந்தே தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். இரண்டும் வித்தியாசமான மொழிகள். வேறுபாடான வசன அமைப்பைக் கொண்டிருக்கும் மொழிகள். ஆங்கில வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் தமிழில் வாசிக்கும்போது, நீண்ட இரயில் தொடரின் முன்னால் இருக்கவேண்டிய என்ஜின் நடுவிலும், கடைசியில் இருக்கவேண்டிய கம்பார்ட்மென்ட் முன்னாலும் இருந்து முரண்பாடானவிதத்தில் இரயில் ஓடுவதுபோலிருக்கும்.

வார்த்தைகளை நேரடியாக மொழிபெயர்க்க முடியாதளவுக்கு மொழிபெயர்க்கப்படும் மொழியில் வார்த்தைகள் உடனடியாக இல்லாமல் போகலாம். மூலவார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வார்த்தையை உருவாக்க நேரிடும். மூலநூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மொழிக்குரிய சொல்லடைவுகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சொல்லடைவுகளை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ‘Don’t beat around the bush’ என்ற ஆங்கிலச் சொல்லடைவு (மரபுமொழி) ‘நேரடியாக விஷயத்துக்கு வா’ என்றே மொழியெர்க்கப்பட வேண்டும். Microsoft translator புதரைச் சுற்றி அடித்துவிடாதீர்கள் என்று சிரிக்கக்கூடியவிதத்தில் இதை மொழிபெயர்க்கிறது. அத்தோடு ஆங்கில மொழிக்குரிய உவமைகள், உவமானங்கள், இலக்கிய நடைப்பிரயோகங்களில் பரிச்சயம் இருக்கவேண்டும்.

Turn from sin என்பதை பாவத்தில் இருந்து திரும்பு என்று மொழியாக்கம் செய்யலாம். இருந்தாலும் அது தெளிவாக ஆங்கிலத்தின் அர்த்தத்தை விளக்குவதாக இல்லை. Turn away from sin என்றே அந்த ஆங்கில வசனம் சொல்லுகிறது. பாவத்திற்கு புறமுதுகு காட்டு என்கிறது ஆங்கில வசனம். அதைப் ‘பாவத்தை விட்டுவிடு’ அல்லது ’பாவத்தை விட்டுவிலகு’ என்று மொழியாக்கம் செய்யலாம். Turn என்பதற்கு ‘திரும்பு’ என்பது அர்த்தமாக இருந்தபோதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதையே பயன்படுத்த முடியாது. ஒருவசனத்தில் அது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்.

லௌகீக உலகில் பதிப்பாளர்கள் மொழியாக்கம் செய்கிறபோது, நூலைத் தொழில் நுணுக்கத்தோடு மூலமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்தபிறகு, மறுபடியும் அதை மொழிபெயர்க்கப்பட்ட மொழியில் இருந்து மூலமொழிக்கு மொழிபெயர்ப்பார்கள். இதன் மூலம் மொழிபெயர்ப்பு சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவுசெய்வார்கள். அதற்குக் குறைந்த எதையும் அவர்கள் செய்வதில்லை. பணத்தைக் கொட்டி நூலை வெளியிடுகிறவர்கள் அது தரமானதாக இருப்பதோடு வாசகர்களை அணுகவேண்டும் என்பதிலும் கவனத்தோடுதான் இருப்பார்கள். ஆர்வக்கோளாறில் மொழிபெயர்க்கிறவர்களிடம் இந்தத் தொழில் நுணுக்கத்தையும், ஜாக்கிரதையையும் காணமுடியாது.

மொழியாக்கம் தரமானதாக இருக்கவேண்டியபோதும் பூரணமானதாக இருப்பது கடினம். இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு ஒன்றைக் கொண்டுவரும்போது மூலநூலின் ஆசிரியரை நூறுவீதம் அதில் காண்பது அரிது. முடிந்தவரை மொழியாக்கம் செய்கிறவர் அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். மூலநூலின் கருத்தையும், ஆசிரியரையும் மொழியாக்கத்தில் பார்க்க முடிந்தால் அது வெற்றியே.

வாசிக்கத் தூண்டும் மொழிநடை . . .

மொழியாக்கம் மூலநூலின் கருத்துக்களைச் சரிவர வெளிப்படுத்துவதாக மட்டும் இருந்துவிடாமல், வாசகனை வாசிக்கத்தூண்டும் மொழிநடையிலும் அமைந்திருக்கவேண்டும். மேலைத்தேய மொழிகள் கீழைத்தேய மொழிகளைவிட வேறுபாடானவை. மொழியாக்கம் மொழிபெயர்க்கப்படுகிற மொழிக்குரிய தற்கால நடையில், வாசகன் ஆர்வத்தோடு வாசிக்கக்கூடிய தன்மையைக் (readablity) கொண்டிருக்கவேண்டும். உள்ளதை உள்ளபடி இன்னொரு மொழியில் மொழிபெயர்த்தாலும், அது வாசிப்பதற்கு எளிதாக, ஆர்வத்தைத் தூண்டுகிற மொழிநடையில் இல்லாவிட்டால் மொழியாக்கத்தினால் முழுப்பயனும் இல்லாமல் போகும். மொழியாக்கம் செய்கிறவருக்கு மொழிபெயர்க்கப்படும் மொழியில் வெறும் பரிச்சயம் மட்டுமல்லாமல் நல்ல தேர்ச்சியும், வளமும், எழுதும் திறமையும் இருக்கவேண்டும்.

மொழியாக்கத்தைப் பற்றி எழுதும் ஜெயமோகன் சொல்லுகிறார், ‘மொழியாக்கம் செய்கிறவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்படுகிற மொழியில் சமகால இலக்கியங்களை வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மொழிபெயர்க்கப்படும் மொழியில் ஒருவருக்கு இலக்கியப்பரிச்சயம் இருக்கவேண்டும். மொழிபெயர்ப்பு அதை வாசிப்பவர்களுக்கு வாசிப்பு இன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பம் தருவதாக இருந்தால் அது வெற்றிகரமான மொழிபெயர்ப்பாக அமையவில்லை என்றே அர்த்தம். அதற்குக் காரணம் மொழியாக்கம் செய்தவருக்கு இலக்கியப் புனைவெழுத்து நடை இல்லாமலிருந்திருப்பதே. ‘அன்றாட மொழியில், சராசரி மொழியில் ஒருநாளும் படைப்புகள் வெளிப்பட முடியாது என்கிறார்’ ஜெயமோகன்.

மொழிபெயர்ப்பாளன் மூலநூலை உள்வாங்கிக்கொள்ளுவது அவசியம். மூலநூலாசிரியரின் நோக்கங்கள், சிந்தனைகள், நுணுக்கங்கள், விருப்ப வெறுப்பு, எழுத்துத் சுவை அனைத்தையும் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்தறிய இந்த உள்வாங்குதல் துணைபுரிகிறது. மூலநூலோடு ஒன்றிப்போயிருக்கும் அனுபவமுள்ளவருக்கே மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். அத்தோடு மொழிபெயர்ப்பாளன் அந்த உள்வாங்குதலைத் தனக்கேயுரிய எழுத்துப்பாணியில் வாசகன் வாசித்தனுபவிக்கும்படி மொழியாக்கப்படைப்பில் ஈடுபட வேண்டும்.

ஒரு நூலை நகலெடுப்பது மொழியாக்கமல்ல. ஆங்கிலத்தில் இருப்பதை வரிவரியாக வாசித்து மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பெயர் மொழியாக்கமல்ல. அது நகலெடுப்பு. நூலாசிரியனைப் புரிந்துகொள்ளாமல், நூலை உள்வாங்கிக்கொள்ளாமல் பலர் இந்தவிதத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறார்கள். மொழியாக்கங்களை வாசிக்கும்போது அது நமக்கு அந்நியமானதாகத் தோற்றமளித்தால் அது நல்ல மொழியாக்கமல்ல. அந்நியத்தோற்றம் அதில் இருப்பதற்குக் காரணம் மொழியாக்கம் செய்தவர் நூலை உள்வாங்கிக்கொள்ளாததும், அதைத் தன் பாணியில் கொண்டுவராததுந்தான். ஆரம்பத்தில் நூலை வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யநேர்ந்தாலும், செய்தபிறகு அதை ஒருபுறம் வைத்துவிட்டு, மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவன் தனக்கேயுரிய எழுத்துவன்மையைப் பயன்படுத்தித் தன் பாணியில் அதை மாற்றவேண்டும். இதைச் செய்யும்போது மொழியாக்கம் செய்கிறவன் ஒருவிதத்தில் மொழியாக்கத்தின் ஆசிரியனாகிவிடுகிறான். மொழிபெயர்ப்பாளன் நிச்சயம் மூலநூலோடு எதையும் சேர்க்கக்கூடாது; குறைக்கவும்கூடாது. அதை மிகைப்படுத்தவும் கூடாது. இருந்தபோதும் அதை வாசகன் சுவைத்தனுபவிக்கும் விதத்தில் மொழியாக்கம் அமையாதபோது அது லட்டை சுவைக்கும்போது அடிக்கடி வாயில் அகப்பட்டு நெருடல் உண்டாக்கும் கற்கண்டுபோலாகிவிடும். மொழியாக்கத்தில் இயல்பான தடங்களற்ற அருவியோட்டம் இருக்கவேண்டும். முதல் மூன்று நான்கு பக்கங்களை வாசிக்குப்போது நெருடலில்லாமல் தொடர்ந்து வாசிக்கத்தூண்டுவதாக இல்லாமலிருக்கும் மொழியாக்கங்களைப் பணம் கொடுத்து வாங்குவது வீண்.

கூகுள் மொழியாக்கக் கருவி இன்று இலகுவாக பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைத் தேடிக்கொள்ள உதவுகிறது. அதைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இருந்தபோதும் அந்த வார்த்தைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தக்கூடிய வார்த்தைகளாக, இலக்கியநடைக்குரிய வார்த்தைகளாக இல்லை. கலைச்சொற்களுக்கு கூகுள் தரும் வார்த்தைகள் டெக்னிக்கலாக பொருத்தமானதாக இருந்தாலும் ஜனரஞ்சகமான வார்த்தைகளாக இருக்காது. வாசகர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் என்ன பயன்? அத்தோடு கூகுலுக்கு இறையியல் வார்த்தைப் பரிச்சயம் இல்லை! அதை மட்டும் நம்பி மொழியாக்கம் செய்யக்கூடாது.

ஒரு நூல் எந்த இலக்கியவகையைச் சேர்ந்ததோ அதற்கேற்ற நடையில் மொழியாக்கம் அமையவேண்டும். புதினத்துக்குத் தேவையான அழகியல் நடையும் வார்த்தைகளும் ஆய்வுக்கட்டுரைக்குத் தேவைப்படாது. ஆய்வுக்கட்டுரைக்கு கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்; அது சுவையானதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதன் உள்ளடக்கமும், ஆய்வுத்திறனும், அதுவிளக்கப்பட்டிருக்கும் முறையுமே அதற்கு இன்றியமையாதவை. கிறிஸ்தவ வேதசத்தியங்களை விளக்கும் நூல்களுக்கு கிறிஸ்தவ சத்தியங்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய தகுந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவேண்டும். ஆங்கிலத்தில் காணப்படும், நுணுக்கமான சத்தியங்களை விளக்கும் எல்லா இறையியல் வார்த்தைகளுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் இன்னும் கிடையாது. சத்தியக்கோளாறு ஏற்பட்டுவிடாதபடியும் நூல் கவனத்தோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். தமிழறிஞராகவும், அதேநேரம் சத்தியத்தில் தேர்ந்தவராகவும் இருக்கின்ற ஒருவரே கிறிஸ்தவ நூல்களை விசுவாசம் கெடாமல் மொழியாக்கம் செய்யமுடியும்.

மேலைநாடுகளில் மொழியாக்கப் பட்டறைகளைத் தேர்ந்த படைப்பாளிகள் நடத்துகிறார்கள். பிரபல வெளியீட்டாளர்கள் மொழியாக்கம் செய்வதற்குத் திறனுள்ள குழுக்களை அமைத்து அதைச் செய்வார்கள். அவர்கள் மொழியாக்கத்திற்கு அவசியமான வார்த்தை ரெஜிஸ்டர்களையும் வைத்திருப்பார்கள். இளம்வயதில் சில மொழியாக்கப் புதினங்களைத் தமிழில் வாசித்திருக்கிறேன். நான் விரும்பி வாசித்த ஒரு புதினம் அலெக்சாண்டர் டூமாஸின் ‘த மவுன்ட் ஒவ் மொன்டி கிரிஸ்டோ.’ இது ஒரு பிரெஞ்சு மொழிப் புதினம். ரசித்து வாசிக்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது. அதேபோலத்தான் டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்.’ இத்தனையிருந்தும் படைப்பாளியான ஜெயமோகன் போன்றோர் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் லௌகீக நூல்களின் தரத்தில் குறைகாண்கிறார்கள்; மொழியாக்கத்தில் தரத்தை எதிர்பார்க்கிறார்கள். கிறிஸ்தவ மொழியாக்க நூல்களை எடுத்துக்கொண்டால் நிலைமை அதைவிடப் பரிதாபந்தான்.

கிறிஸ்தவ மொழியாக்க நூல்கள்

ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதால் அவருக்கு மொழியாக்கத் திறன் இருந்துவிடும் என்று அர்த்தமல்ல. தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழறிஞர்களா என்ன! கிறிஸ்தவ அனுபவத்தை ஒருவர் அடைந்திருந்து, கிறிஸ்தவ வேதம் தெரிந்திருப்பது மட்டுமே மொழியாக்கம் செய்வதற்குத் தேவையான தகுதிகளல்ல. அதற்கும் மேலாக மொழியாக்கத் தொழில்நுணுக்கத் தகைமைகள் ஒருவரில் காணப்படவேண்டும். அத்தோடு இலக்கியப் புனையெழுத்தனுபவமும் இருக்கவேண்டும். இன்று தமிழில் கிறிஸ்தவ நூல்களை மொழியாக்கம் செய்கிற அநேகரில் இந்தத் தகைமை இல்லாமலிருக்கிறது. கிறிஸ்தவ நூல்களை மொழியாக்கம் செய்ய அது தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆவிக்குரிய அனுபவம் மட்டுமே அதற்குப் போதும் என்று கருதுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் எனக்குப் புரிகிறது; ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மொழியாக்கத் தகைமை ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் ஓர் ஆவிக்குரிய ஈவு அல்ல. ஒருவரில் இருக்கும் அத்தகைய தகைமையை ஆவியானவர் இன்னொரு கட்டத்திற்குக் கொண்டுசெல்ல உதவலாம். ஆனால் அந்தத் தகைமை ஆவியானவரிடம் இருந்து வருவதில்லை. அதற்கு ஒருவர் இந்த லௌகீக உலகத்தில் தகுந்த கல்வியையும், மொழியாக்கத் தொழில்நுணுக்க அறிவையும், அனுபவத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

விவிலியத் தமிழ்’

பழைய திருப்புதல் தமிழ் வேத ‘விவிலியத் தமிழைக்’ கிறிஸ்தவர்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் புனிதமானதாகவும், தெய்வீகமானதாகவும் நினைக்கிறவர்கள் தொடர்ந்திருந்து வருகிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் இத்தகைய மடமை இருந்து வருவது ஆச்சரியந்தான். தமிழ் வேதம் நல்ல தமிழில் தரமான மொழிபெயர்ப்பாக இன்று இல்லாமலிருப்பது நம்மக்களைப் பிடித்திருக்கும் ஆவிக்குரிய பஞ்சமாகத்தான் நான் கருதுகிறேன். வேதத் தமிழ் வெறும் வடமொழித் தமிழ். இன்னொருவிதத்தில் சொன்னால் அதில் அந்தக்காலத்து அய்யங்கார் வாடை அப்பட்டமாக அளவுக்குமீறி அடிக்கிறது. உண்மையில் இன்றைய பிராமணர்கள்கூட அத்தகைய தமிழை எழுத்தில் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான வார்த்தைகளுக்கு அகராதிகளில்கூட அர்த்தம் தேடிக்கண்டுபிடிக்கமுடியாது. (இதைக்குறித்து ஏற்கனவே ஒரு ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன்). அந்த மொழியில் கிறிஸ்தவர்கள் பேசுவதோ எழுதுவதோ பின்தங்கிய ஒரு சமுதாயத்திற்கான அடையாளம். அதைக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் கிறிஸ்தவரல்லாதவர்கள்கூட அது புனிதமானதோ என்று எண்ணவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடுகிறது. அந்தத் தமிழில் இன்று கிறிஸ்தவ நூல்கள் வரக்கூடாது; அப்படி வருகிறவற்றை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்க வேண்டும். அவை தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்துகின்றன. தமிழை உயிராகப் பார்த்த பாரதியும், தமிழை அமுதாக வர்ணித்த பாரதிதாசனும் வாழ்ந்திருந்த இனத்தில் இன்று நூல்கள் நல்ல தமிழில் வெளிவருவது அவசியம். மொழியாக்கங்கள் துப்பரவாக ‘விவிலியத் தமிழ்’ வாடையில்லாதவையாக இருக்கவேண்டும்.

பண்பாட்டுச் சிக்கல் . . .

கிறிஸ்தவம் தொடர்பான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் மேலைத்தேய நூல்களில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவற்றைப் படைத்தவர்கள் அங்குள்ள சமுதாயத்தைப் புரிந்துகொண்டு, அந்த சமுதாயத்தின் பிரச்சனைகள், தேவைகளை மனதில்கொண்டு அவற்றைப் படைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, திருமணவாழ்க்கையைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் மேலைத்தேய கிறிஸ்தவ நூல் அங்குள்ள சமுதாய வழக்கத்தை மனதில்கொண்டே எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு படைப்பாளியும் தன் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவன். திருமணம் பற்றிய மேலைத்தேய நூலில் இருக்கும் அடிப்படை வேதசத்தியம் எந்த நாட்டுக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருந்தபோதும், அதன் வாசகர்கள் வாழும் சூழ்நிலையும், பண்பாடும், எண்ணப்போக்கும் முரண்பட்டவையாக இருப்பதால் அந்நூல் நம்மினத்திற்கு பாதிப்பயனையே அளிக்கமுடியும். புலம் பெயர்ந்து வாழுவதும், இணையதளமும் உலகத்தைச் சுருக்கியிருந்தபோதும் நம்மினத்தில் மேலைத்தேய கலாச்சாரத்தையும், சிந்தனையையும் பற்றிய புரிதலும், செல்வாக்கும் அதிகளவுக்கு இல்லாமலேயே இருந்துவருகிறது. மேலைத்தேய நூல்களின் சத்தியங்களை அதன் கலாச்சாரப் பின்னணியில் இருந்து பிரித்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு வாசிக்கவும், சிந்திக்கவும்கூடிய முதிர்ச்சி இன்னும் நம் வாசகர்களுக்குப் பெருமளவில் இல்லாமலிருக்கிறது.

என் நண்பன் அலன் டன்னின் திருமண வாழ்க்கைபற்றிய நூலை (தாம்பத்திய உறவில் நெருக்கம்) நமது சீர்திருத்த வெளியீடுகள் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தது. அருமையான வேதசத்தியத்தை வெளிப்படுத்தும் நூலது. முக்கிய சீர்திருத்தவாத அமெரிக்கப் போதகரும், படைப்பாளியுமான ஒருவர், நாற்பது வருடகாலத்தில் அத்தகைய அருமையான நூலொன்றைத் தான் வாசித்ததில்லை என்று அந்நூலுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கியிருக்கிறார். இருந்தாலும், அத்தகைய ஆவிக்குரிய திருமண உறவை கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்கமுடியாதபடி நம்மினத்துப் பண்பாட்டில் காணப்படும் பெற்றோர் பார்த்து செய்துவைக்கும் திருமண முறையும், இந்துப்பாரம்பரிய ஆணாதிக்கமும், திருமண உறவைப்பற்றிப் பேசவோ, எழுதவோ கூடாத இரகசியமாகக் கணித்து வரும் பண்பாடும், கணவனையும், மனைவியையும் வேதம் எதிர்பார்க்கின்ற உண்மையான, நெருக்கமான அந்நியோன்யத்தோடு வாழமுடியாதபடி தடைசெய்துவருகிறது. நூலை வாசிக்கிறவர்கள் இரகசியமாக நூலின் போதனைகளை ஆமோதித்தபோதும் வெளிப்படையாகப் பேசத்தயங்குவார்கள்; காரணம், பண்பாடுதான். அதுவும் இந்த நூலில் பாலியல் உறவுபற்றி எந்த விளக்கமும் இல்லாதிருந்தபோதும், ஒருசிலருக்கு நூலின் தலைப்பு பிடிக்கவில்லை என்பது சிரிப்புக்கிடமான விஷயம்! அந்தளவுக்கு கர்த்தர் மனிதனின் நன்மைக்காக, அவன் அனுபவித்து ஆனந்தப்படும்படி ஏற்படுத்தியிருக்கும் திருமணவாழ்க்கையைப் பண்பாடு நம்மினத்தில் இரகசியமானதாகக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அந்தக் கேவலம் தொடர்கிறது.

ஒருசில மொழியாக்கங்கள்

சமீபத்தில் 17ம் நூற்றாண்டு ஆங்கில நூலொன்றின் தமிழ்மொழியாக்கத்தை வாசித்தேன். அதன் மூல நூலின் கருப்பொருளில் விரிவுரை கொடுத்துவந்ததால் மொழியாக்கத்தை வாசிக்க நேர்ந்தது. ஆங்கில நூலை இரசித்து வாசித்தளவுக்கு என்னால் தமிழ்மொழியாக்கத்தை ருசிக்க முடியவில்லை. மொழிபெயர்ப்பு வாசகனை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தையெழுப்புமளவுக்குச் சுவையுள்ளதாக இருக்கவில்லை. முதலில், மொழிபெயர்ப்பாளர் ஆங்கில மூலத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆங்கில மூலம் 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்ததும் மொழிபெயர்த்தவருக்கு இடறலாக இருந்திருக்கிறது. இரண்டாவது, சொல்லுக்கு சொல் செய்யப்பட்ட மொழியாக்கமாக அது இருந்தது. மூன்றாவது, தமிழ்நடை கரடுமுரடானதாக இருந்தது. அது தற்காலத் தமிழ்நடையில் இருக்கவில்லை. நான்காவது, நூல் விளக்கும் சத்தியத்தை உள்வாங்கி அதைப் புரிந்துகொண்டு இறையியல் தவறில்லாமல் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஐந்தாவது, 17ம் நூற்றாண்டு ஆங்கிலச் சொற்களுக்கான தகுதியான தமிழ்வார்த்தைகளை மொழியாக்கத்தில் பயன்படுத்தவில்லை. ஆறாவது, கொச்சையான வார்த்தைகளையும், நடையையும் ஆங்காங்கே பயன்படுத்தி வாசகனுக்கு எரிச்சலூட்டுவதாக மொழியாக்கம் இருந்தது. மொத்தத்தில் பணத்தைக்கொடுத்து நூலை வாங்குகிற வாசகனுக்கு மொழியாக்கம் செய்தவர் பாரமாகிவிடுகிறார். அருமையான ஒரு நூல் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறதாகவே என்னால் கருதமுடிந்தது. அந்த மொழியாக்கம் கோபத்தைவிட எனக்கு மிகுந்த மனவருத்ததையே அளித்தது.

தமிழில் வெளியிடப்பட்டிருந்த இறையியல் சொல்லகராதி ஒன்றைக் கையில் கிடைக்கப்பெற்று வாசித்தேன். அதைத் தொகுத்து விளக்கமளித்திருந்தவருக்கு பெரும்பாலான ஆங்கில இறையியல் கலைச்சொற்களுக்கு தமிழ்வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளை நூலில் அப்படியே ஒலிபெயர்ப்பு செய்திருந்தார்கள். இந்த நூலை வெளியிட்டிருந்தது ஒரு இறையியல் கல்லூரி! இது ஒரு மொழியாக்க நூலல்ல. இறையியல் தொடர்பான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு தகுந்த வார்த்தைகள் தமிழில் உருவாக வேண்டியது அவசியம். அது இருமொழிப்புலமையுள்ள கிறிஸ்தவ இறையியலறிஞர்களால் செய்யப்பட வேண்டியது.

தமிழகத்தில் இவெஞ்சலிக்கள் இலக்கிய சேவை பதிப்பகத்தார் (ELS) வெளியிட்டிருக்கும் எச். பி. ராஜ்குமார் என்பவர் எழுதியிருக்கும் மோட்சப்பயணம் நூல் குறிப்பிடத்தகுந்தது. நூலைக் கையிலெடுத்து சில பக்கங்களை வாசிக்கின்றபோதே தொடர்ந்து வாசிக்கலாம் என்ற உணர்வை ஊட்டுகிறது. இதைத்தான் அருவியோட்ட எழுத்துநடை என்று விளக்குகிறேன். ஆங்காங்கே இலக்கணப்பிழைகள் நூலில் இருந்தபோதும், அது புனைவெழுத்து நடையைக் கொண்டிருந்து வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் வாசிக்கும்போது அதில் அந்நியத்தன்மை புலப்படவில்லை. ஆங்கிலப் பெயர்களுக்கு நல்ல தமிழ் வார்த்தைகளை அதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தியான் என்றிருப்பதைக் கிறிஸ்தவன் என்று தற்காலத்துக்குரியதாக மாற்றியிருந்திருக்கலாம். மோட்சப்பயணம் ஒரு புனைவு நூல். அதற்கு புனைவெழுத்து நடையே சரியானது. மொழியாக்கம் செய்தவர் அந்த நடையைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த மொழியாக்கம் குறைபாடுகளே இல்லாத பூரண மொழியாக்கம் அல்ல. இருந்தாலும் நல்ல மொழியாக்கம் என்றுதான் சொல்லுவேன். அதுவும் இறையியல் சத்தியங்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் செய்யப்பட்டிருக்கும், வாசகர்களுக்கு நெருடலேற்படுத்தாத மொழியாக்கம் இது.

மொழியாக்கம் அவசியமானதாக இருக்கிறதென்பதை நாம் மறுக்க முடியாது; அது லௌகீக நூல்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ நூல்களாக இருந்தாலும் சரி. கிறிஸ்தவர்களுக்கு அது அவசியந்தேவை; முக்கியமாக ஆங்கிலந்தெரியாதவர்களாக இருந்து போதக ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு. இருந்தாலும், தரத்திற்கும் எழுத்துநடைக்கும் முக்கியத்துவமளிக்காமல் செய்யப்படும் மொழியாக்கங்களால் பெரிய பயன்கள் இருக்காது. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் காணப்படும் மொழி வறட்சியும், வாசிப்பு வறட்சியும், இறையியல் வறட்சியும், கிறிஸ்தவ அனுபவ வறட்சியும் இப்போதிருக்கும்விதத்திலேயே தொடருமானால் மொழியாக்க வறட்சியும் தொடருவதைத் தவிர வேறுவழியே இல்லை.

 

பாவத்தின் பாவம் (Sin is Serious – பாகம் 2)

  1. நாம் பாவம் செய்கிறபோது, நமக்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.

2.1. பாவம் மனிதர்களாகிய நமக்கு, சரீர ரீதியில் எதிரானது.

நாம் தேவசாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால் (ஆதியாகமம் 1:26), கடவுளுடைய பார்வையில் தீமையான எதுவும், நமக்கு கேட்டையே விளைவிக்கும். நமக்கு உச்சகட்டமான நன்மைதரக்கூடியதொன்று இருக்குமானால், அது கடவுளோடு நாம் நல்லவிதமான ஐக்கியத்தைக் கொண்டிருப்பதுதான். நாம் கைக்கொள்ளும்படி கடவுள் ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள், அவருடைய பரிசுத்தத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துவதாக மட்டுமில்லாமல், அவருடைய படைப்புகளான நம்முடைய நன்மைக்காகவுமே ஏற்படுத்தியிருக்கிறார். பாவம் நமக்கு, இந்த வாழ்க்கையிலும் நம்முடைய மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கையிலும் எந்தவிதத்திலெல்லாம் பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என்பதை நான் விரிவாக விளக்க விரும்புகிறேன்.

அ. பாவம், இந்த உலகத்து வாழ்க்கையில், நம்முடைய சரீரத்தில் தீங்கை ஏற்படுத்தக்கூடியது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கடவுளுடைய கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிகிறவரை, மரணமில்லாத பரிபூரணமான சரீரத்தைக் கொண்டிருந்தார்கள். பாவத்தின் விளைவாகவே மரணம் உண்டானது (ரோமர் 5:12), ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களுடைய சரீரங்கள் மரணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இப்போது எல்லா மனிதர்களுக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 9:27). பாவத்தின் காரணமாக, நம்முடைய சரீரங்கள், மண்ணுக்குத் திரும்பும்படி தண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆ. பாவம், இந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், நம்முடைய மரணத்திற்கு பின் வரக்கூடிய வாழ்க்கையிலும் நம்முடைய ஆத்துமாவுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியது. நம்முடைய சரீரங்களுக்கு உண்டாகும் தீங்கைக் காட்டிலும் நம்முடைய ஆத்துமாவுக்கு உண்டாகும் தீங்கு மிகவும் கேடானதாகும். நம்முடைய சரீரங்கள் ஒரு முறை மட்டுமே வாழ்ந்து, மரணத்தைத் தழுவும். ஆனால் நம்முடைய ஆத்துமாவோ என்றென்றைக்கும் வாழும். இயேசு சொல்லுகிறார்,

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)

நம்முடைய ஆத்துமாவுக்கு எதிராக பாவம் செய்வதைத் தவிர்ப்பதற்காக, நம்முடைய சரீரத்தில் எவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கலாம்.

இந்த இரண்டு குறிப்புகளும், நம்முடைய சரீரப்பிரகாரமான வாழ்க்கையையும் நம்முடைய ஒழுக்கம் சம்பந்தமான வாழ்க்கையையும் பாதிப்பதாக இருப்பதால், இவற்றை மேலும் விரிவாக விளக்கப் போகிறேன்.

உதாரணமாக,

  1. படைப்பில், ஆதாமும் ஏவாளும் பரிபூரணமான வாழ்வியல் சூழலில் வாழ்ந்து வந்தார்கள். அங்கிருந்த அனைத்தும் அவர்களுடைய உடலுக்கு நல்லதாகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவுமே இருந்தன. ஆனால் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பாவம் செய்தபோது, கடவுள் அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டார். அதுவரை அவர்களுக்கு இருந்த, எல்லா நன்மைகளையும் அவர்கள் இழந்தார்கள். அவர்கள் பரதேசிகளைப் போலவும், பிச்சைக்காரர்களைப் போலவும் சபிக்கப்பட்ட இந்த உலகத்தில் வாழவேண்டிய நிலை உருவானது. அவர்கள் உயிர் வாழ்வதற்காக, தங்களுடைய கைகளைப் பயன்படுத்தி, சரீரத்தை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்து உணவருந்த வேண்டியிருந்தது.

கர்த்தராகிய இயேசு, பாவமுள்ள மனிதர்களை மீட்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் வெறுமையாக வந்தார். அவரே எல்லாவற்றிற்கும் ஆண்டவர். இருப்பினும், வீழ்ச்சியடைந்த மனித சாயலில் அவர் வந்ததால், அவர் துன்பம் நிறைந்தவராகவும், ஆதரவற்றவராகவும், தனக்கென்று ஓர் இருப்பிடம்கூட இல்லாதவராகவும் வரவேண்டியிருந்தது (லூக்கா 9:58). இது, நம்முடைய முதல் பெற்றோர் இருந்த, ஏதேனின் மிகப்பெரிய சுதந்திரத்தை, மனித குலம் இழந்திருக்கிறது என்பதையே நமக்குக் காட்டுகிறது. பாவம் நமக்கிருந்த சிறப்பான சுதந்திரத்தை அபகரித்துக் கொண்டது.

  1. பாவம், நாம் பெரிதும் விரும்புகிற, கஷ்டமில்லாத இளைப்பாறுதலான வாழ்வியல் சூழலை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டது. நம்முடைய வேலைகளையெல்லாம் பாடுபட்டு முடித்தாலும், நமக்குக் கிடைப்பது என்னவோ கொஞ்சமே (பிரசங்கி 2:22-23). ஏதேனின் வாழ்க்கை, கடினமில்லாததாக, இனிமையானதாக இருந்தது. ஆனால் இப்போதோ, அது விரக்தியும், வலியும், வியர்வையும் கொண்டதாக இருக்கிறது (ஆதியாகமம் 3:17-19).
  2. பாவம், நமக்கிருந்த சுகத்தையும், மகிழ்ச்சியையும் திருடிக்கொண்டது. நம்முடைய மகிழ்ச்சி பெரும்பாலும் கண்ணீராக மாறிவிடுகிறது. ஏதேனில், ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆசீர்வாதத்தினால், தங்களுக்கான அனைத்தையும் பெற்று, எந்தவிதமான துன்பமும் இல்லாதிருந்தார்கள். ஆனால் இப்போதோ, இனிப்பைச் சாப்பிட்டாலும், அதில் கசப்பும் கலந்தே இருக்கிறது. பெண்களுக்குப் பிள்ளை பெறுதல் மகிழ்ச்சியைத் தந்தாலும், அது அசௌகரியமும் வலியும் கலந்ததாகவே இருக்கிறது.
  3. நோய்க்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கும் தடுப்பாற்றல் கொண்ட மனிதன் ஒருவனும் இல்லை. பாவம் உலகத்தில் பிரவேசிப்பதற்கு முன், உடல்நலக் குறைபாடு என்பது இல்லவே இல்லை. சிறந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டாலும், நல்ல பலன்தரக்கூடிய மருந்துகளை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய சரீரங்களை எவ்வளவுதான் கவனத்துடன் பாதுகாத்துக்கொண்டாலும், “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும், வெறும் மூச்சுக் காற்று மட்டுமே” (சங்கீதம் 39:5). எப்பேர்பட்ட நிலையில் இருந்தாலும், மனிதன் என்பவன் எளிதில் சுக்குநூறாகப் போகக்கூடியவன். ஏனென்றால், பாவம் நம்முடைய உடல்நலத்திற்கு எதிராகச் செயல்படும் கிருமியாக இருக்கிறது.
  4. பாவம் நம்முடைய மனச்சாட்சியை உறுத்துகிறது. நாம் அமைதியான சூழலில் இருக்கிறபோது, எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம் (மருந்து); முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதிமொழிகள் 17:22). ஆகவே பாவம் நம்முடைய மனச்சாட்சியின் அமைதியைக் குலைத்துவிடுகிறது.
  5. பாவம், நம்முடைய சரீரத்தின் பரிபூரண நிலையை உருக்குலைத்துவிட்டது. படைப்பில், இந்த உலகத்தில், உருக்குலைந்த அவலட்சணமான நிலையில் எதுவும் இருக்கவில்லை. “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” (ஆதியாகமம் 1:31). ஆனால் இப்போதோ, நாம் இழந்த அந்த சிறப்பான நிலையை அடைவதற்காக பல்வேறு வழிகளில் முயன்றாலும், எல்லாம் வீணாகப் போகிறது.
  6. பாவம், நம்முடைய சரீரத்திற்கும், ஆத்துமாவுக்கும் இடையே பெரும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. நம்முடைய சரீரத்தின் உணர்ச்சிகள் நம்மை ஒரு பக்கமாக இழுக்கிறது, ஆனால் நம்முடைய ஆத்துமாவோ அதைக்குறித்து நம்மை எச்சரிக்கிறது, இறுதியில் நம்முடைய சிந்தை குழம்பி நிற்கிறது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கீழ்ப்படியாமையின் பாவத்தில் வீழ்வதற்கு முன்பு, எது சரியானது என்பதை அறிந்திருந்தார்கள், சரியானதை நேசித்தார்கள், சரியானதைச் செய்தார்கள். ஆனால் இப்போதோ, நம்முடைய ஆத்துமா பெரும்பாலும் சரீரத்தின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டதாகவே இருக்கிறது.
  7. மனித தன்மையிலுள்ள பாவத்தின் காரணமாகவே, திருமணம் முறிவதும், ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறைகளும் ஏற்பட்டிருக்கிறது. பாவம் சமுதாயத்தின் உடல்நலத்தைக் கெடுத்திருக்கிறது. சபையிலும், நாட்டிலும், பிரிவினைகளை உண்டாக்கி, ஒற்றுமையைக் குலைத்து, அவநம்பிக்கையை ஏற்படுத்தி, உறவுகளை உடைத்திருக்கிறது.
  8. பாவம், நம்முடைய உடல்நலத்தை மட்டும் பாதிக்கவில்லை, நம்முடைய வாழ்நாட்களையும் பாதித்திருக்கிறது. தாயின் கருவறையிலே எத்தனை சிசுக்கள் சாகின்றன. பிறந்த குழந்தைகளும், வளர்ந்த பச்சிளங்குழந்தைகளும் எத்தனையெத்தனை சாகின்றன! ஆயிரக்கணக்கான மனிதர்கள் நோயினால் அன்றாடம் சாகிறார்கள். போர்களிலும், இயற்கை பேரழிவுகளிலும் இன்னும் எத்தனை எத்தனை மனிதர்கள் சாகிறார்கள். உலகத் துவக்கத்தில் வாழ்ந்த மனிதர்களோடு ஒப்பிட்டால், நம்முடைய வாழ்நாட்காலம் எந்தளவுக்குக் குறைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இன்று பிறக்கிற ஒரு குழந்தை, இன்னொரு நாளைக் காணும் என்று சொல்லுவதற்குக்கூட முடியாத நிலை இருக்கிறது.

மேற்சொல்லிய குறிப்புகள் அனைத்தையும் மேலும் விரிவாக விளக்க முடியும். ஆனால் சுருக்கமாக தந்திருக்கிற இந்த விளக்கங்களே, பாவம் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், மனிதனுக்கான நன்மையைக் கெடுக்கிறதாகவே இருகிறது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டப் போதுமானவையாக இருக்கின்றன.

2.2 பாவத்தன்மை, மனிதனுடைய ஒழுக்க நிலையைக் கெடுத்துவிட்டது.

கடவுள் நம்மை தேவதூதர்களுக்குச் சற்று கீழானநிலையில், சிறப்பானவர்களாகப் படைத்தார் (சங்கீதம் 8:5). ஆனால் பாவம், மனித குலத்தின் ஆரம்பச் சிறப்புகளைக் கெடுத்து, இப்போது இருக்கிறபடி நம்மை சாத்தானுக்கு ஏற்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.

அ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய சரீரத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கிறது. நம்முடைய வாயினால் மற்றவர்களைச் சபிக்கிறோம், நம்முடைய வார்த்தைகளினால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம், நம்முடைய கண்களை இச்சைக்குப் பயன்படுத்துகிறோம், நம்முடைய முகத்தில் பெருமையைக் காட்டுகிறோம், நாம் கேட்க வேண்டியவைகளை கேட்க மறுத்து, காதைப் பொத்திக்கொள்ளுகிறோம், நம்முடைய கைகளைக் கொண்டு கேடான காரியங்களைச் செய்கிறோம், நம்முடைய கால்களினால் கேட்டை நடப்பிக்கிறோம். நம்முடைய சரீரத்திலுள்ள எதைக் கொண்டு நாம் பாவம் செய்யவில்லை?

ஆ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய ஆத்துமாவையும் கெடுத்திருக்கிறது. படைப்பில் மனிதன் கடவுளைப்போல் நீதியும், பரிசுத்தமுமுள்ளவனாக இருந்தான். ஆனால் ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறிச் செய்த பாவம், கடவுளுடைய பரிசுத்தத் தன்மையை வெளிப்படுத்திய சிறப்பை மனிதகுலத்தின் மீதிருந்து அகற்றிவிட்டது. படைப்பின்மூலம் கிடைத்த சிறப்புக்களை இழந்ததனால், மனிதகுலம் பரிசுத்த கடவுளால் படைக்கப்பட்டதும், கடவுளுடையவர் களுமானவர்கள் என்ற நிலையில் இனி இல்லை. இயேசுதாமே இதை விளக்கியுமிருக்கிறார், “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” (மத்தேயு 15:19). இவையாவும் நம்முடைய ஆத்துமாவை ஒழுக்கரீதியாக மாசுபடுத்துகின்றன. நம்முடைய ஆத்துமாவில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, நாம் கடவுளிடம் திரும்ப வேண்டும் என்ற கடவுளுடைய நல்ல ஆலோசனையைக் கேட்டு அவருக்குமுன் மனந்திரும்ப முடியாத நிலையில் நம்மை வைத்திருக்கிறது. அத்தோடு, எரேமியா தீர்க்கதரிசியிடம் அன்று மக்கள் சொல்லியது போல், “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடுப்பதில்லை” என்று கடவுளுக்கு எதிராக நடக்க வைத்திருக்கிறது.

எரேமியா 44:16-17

நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

இ. இந்த ஒழுக்கரீதியான சீர்குலைவு, நம்முடைய அறிவையும் பாதித்திருக்கிறது. நம்முடைய அறிவுத்திறனின் காரணமாகவே எந்தவொரு காரியத்தையும் நாம் செய்கிறோம். ஆகவே நம்முடைய அறிவுத்திறனில் குறைவு ஏற்பட்டால், நம்மால் ஞானமுள்ள முடிவுகளை எடுக்க முடியாது. இந்த ஞானக்குறைவு, ஒழுக்கக்கேடுகளுக்கும், வேறு அநேக கேடான செயல்களுக்குமே வழிவகுக்கும். நம்முடைய பாதிப்புற்ற அறிவு, வேதம் சொல்லுவது போல் நம்மை “முட்டாள்களாக்கியிருக்கிறது”. தீமை செய்வதில் நாம் ஞானமுள்ளவர்களாகவும், நன்மை செய்வதில் முட்டாள்களாகவும் இருக்கிறோம். அநேக உதாரணங்களின் மூலம் இது வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

  1. இருட்டில் தடவித் திரிபவர்களைப் போல் நாம் நடந்துகொள்ளுகிறோம். பிரச்சனைகளும் சோதனைகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில், சந்தோஷத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் தேடுகிற நம்முடைய முயற்சிகள், வெறும் நிழலாகவும், வீணான முயற்சிகளாகவுமே முடிகின்றன. இது குறித்து சாலொமோன், அருமையாக சொல்லியிருக்கிறார்,

என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி 12:12-13)

  1. சத்திய ஒளி பிரகாசித்தபோதிலும், நம்முடைய அறிவு பாதிக்கப்பட்டிருப்பதால், அதை நாம் காண முடியாதிருக்கிறது. இந்தச் சத்திய ஒளியைத் தருவதற்காகவே கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் வந்தார், ஆனால் நம்மில் மனமாற்றம் ஏற்படாதவரை, அவர் இந்த உலகத்தின் ஒளி என்று நாம் அறிய முடியாது. படைப்பில், ஆதாமும் ஏவாளும், கடவுளை அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் அவரோடு நேரடியாக பேச முடிந்தது. ஆனால் இப்போதோ, கடவுளைப் பற்றிய சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பதனால், வேதப்பிரசங்கம் அவர்களுக்கு முட்டாள்தனமாக தெரிகிறது (1 கொரிந்தியர் 2:14).
  2. பல தவறான காரியங்களை மனிதர்கள் எளிதில் செய்யக்கூடியவர்களாக இருப்பதே, மனிதனுடைய அறிவுத்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம். கண்பார்வையற்றவர்களே எளிதில் வலையில் சிக்கிக்கொள்ளுவார்கள். பாவத்தினால் உண்டாகிற விளைவுகளை அறிந்தவர்களாக இருந்தால், அதைச் செய்வதற்கு பெரும்பாலும தயங்குகிறவர்களாகவே இருப்பார்கள்.
  3. மனிதர்கள் பரலோகத்தை நோக்கி பயணமாகிறதாகவே பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அறிவுத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதனால், உண்மையில் அவர்கள் நரகத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்வின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள்.
  4. அவிசுவாசிகளால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அறிய முடியாததால், அவர்கள் அவற்றை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களுடைய குறைகளை இயேசுவின் போதனைகள் சுட்டிக்காட்டுவதனால்தான் அவர்கள் இயேசுவின் போதனைகளில் குறைகாணுகிறார்கள். அவர்கள் இயேசுவை அறிந்தவர்களாக இருந்தால், ஒருபோதும் அவரை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.
  5. நாம் எதிர்காலத்தைக் காணமுடியாதிருப்பதனால், நாம் அறியாத ஒன்றிற்காக எந்தவிதத்தில் தயாராவது என்பது பற்றியும் அறியாதிருக்கிறோம். “எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?” பிரசங்கி 8:6-7.
  6. ஒரு நாய்கூட நமக்கு வழிகாட்டலாம் என்று எண்ணுகிற அளவுக்கு நாம் இருப்பதே, நம்முடைய அறிவுத்திறன் குருடாக இருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இருக்கிறது. மனிதன் குருடாக இல்லாமலிருந்தால், நாயை வழிகாட்டியாகப் பயன்படுத்துவானா? மற்றவர்களுடைய ஆலோசனையைப் பெறுவதற்கு எவ்வளவு ஆர்வமும் வேகமும் காட்டுகிறோம். இதுவே நம்முடைய அறிவுத்திறன் குறைபாடுள்ளது என்பதற்கும், நாம் ஆலோசனை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதற்குமான ஆதாரம்.

ஆகவே பாவம், நம்முடைய உடலளவிலும், நம்முடைய ஆத்துமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் முட்டாள்களாகியிருக்கிற அளவுக்கு, பாவம், நம்முடைய அறிவுத்திறனைப் பாதித்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை மூன்று விதங்களில் விளக்கலாம்.

2.3 நம்முடைய அறிவுத்திறன் பாவத்தினால் உருக்குலைக்கப்பட்டுள்ளது.

பாவத்தை வேதம் முட்டாள்தனம் என்கிறது. மனிதன் கர்த்தருக்குப் பயப்படாதவரை, முட்டாளாகவே திரிவான். “ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?” (சங்கீதம் 94:8). கடவுள் நம்மைப் பார்க்கிறவிதத்தில், நம்மை நாம் பார்க்கிறபோதுதான், நாம் மாற வேண்டும் என்பதன் அவசியத்தை நாம் அறிந்துகொள்ளுவோம். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (நீதிமொழிகள் 1:7). இத்தகைய மோசமான முட்டாள்தனத்தை மூன்று வழிகளில் நாம் அறியலாம்.

அ. கடவுளை அனுபவிப்பதற்காகவே நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். பாவம் இந்த உலகத்தில் வருவதற்கு முன்பாக, ஆதாமும் ஏவாளும் கடவுளை அறிகிற சந்தோஷத்தை அனுபவித்தார்கள். ஆனால் மனிதகுலம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதிலிருந்து, கடவுளை அறிவதில் எந்தவிதமான சந்தோஷமும் இல்லையென்றும், கடவுளே இல்லையென்றும் நினைக்கும் முட்டாள்தனத்தை அடைந்துவிட்டது.

நம்முடைய உடலளவிலான தேவைகளுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வாழுகிறவர்களாக இருப்பதில் இருந்து நம்முடைய முட்டாள்தனம் தெரிகின்றது. நம்முடைய சரீர நன்மைக்காகவே நம்முடைய அனைத்து முயற்சிகளும் இருக்குமானால், மனிதத் தன்மையின் மிகமுக்கியமான அம்சமாகிய நம்முடைய ஆத்துமாவை நாம் நிராகரிக்கிறவர்களாக இருக்கிறோம் (பிலிப்பியர் 3:19). நம்முடைய மெய்யான சந்தோஷம், இந்த உலக வாழ்வின் இன்பங்களில் இல்லை என்பதை நிரூபிக்கும் மூன்று அம்சங்களை நான் சுட்ட விரும்புகிறேன்.

  1. ஏதேன் தோட்டத்திலும், அதாவது படைப்புகள் அனைத்தும் பூரணமானதாக இருந்த அந்தவேளையிலும், ஆதாமின் சந்தோஷம், தன்னைச் சுற்றியிருந்தவைகளில் இல்லாமல், அவரைப் படைத்த கடவுளிலேயே இருந்தது. நமக்கு வெளியில் இருப்பவைகளினால், ஒருபோதும் நம்முடைய உள்ளார்ந்த மனதில் சமாதானத்தைத் தரமுடியாது.
  2. நமக்குச் சாதாரணமாகத் தோன்றுகிறவைகள் நமக்கு மெய்யான சந்தோஷத்தைத் தரமுடியாது. நம்மை வியப்பிற்குள்ளாக்குகிறவையே நமக்கு சந்தோஷத்தை தரும். கடவுள் படைத்த அனைத்தையும் நாம் ஆண்டுகொள்ளும்படிக் கொடுத்தாரே தவிர, அவற்றை நாம் வழிபடுவதற்காக அல்ல. நாம் அவரையே வழிபட வேண்டியவர்கள்.
  3. கடவுளுடைய அன்புக்கு மேல், வேறெதுவும் பெரிதான அன்பையும் சந்தோஷத்தையும் நமக்குத் தரமுடியாது. கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனை, நமக்கான இரட்சகராக அனுப்பி, அவரோடு ஒப்புரவாகுவதன் மூலமாக நமக்கு வரும் சந்தோஷத்தைத் தரக்கூடிய கடவுளின் அன்போடு எதையும் நாம் ஒப்பிட முடியாது.

ஆ. எங்கு சந்தோஷம் இருக்கிறது, எப்படி நாம் அதை அடைவது என்ற விஷயத்தில் நாம் அறியாமையுள்ளவர்களாகவே இருக்கிறோம். கடவுள் இருக்கிறார் என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (ரோமர் 1:20), இருந்தும், அவரை அறியாதவனாகவே மனிதன் இருக்கிறான் (யோவான் 4:22; அப்போஸ்தலர் 17:23). பாவம் மனிதனை, தவறான கடவுளை வணங்குகிறவனாகவோ அல்லது கடவுளைத் தவறான வழிகளில் வணங்குகிறவனாகவோ மாற்றியிருக்கிறது.

  1. விக்கிரகங்களை வணங்குவது முட்டாள்தனமானது. சிலர், அவர்களை உருவாக்கிய கடவுளை வழிபடுவதைவிட்டு, அவர்கள் உருவாக்கிய விக்கிரகத்தையே வணங்குவார்கள். சிலர், பிசாசையும் வணங்குவதுண்டு (2 கொரிந்தியர் 4:4).
  2. கடவுளால் கட்டளையிடப்பட்டிருக்கிற வழிபாட்டு முறைகளை விட்டுவிட்டு, தாங்களாக ஏற்படுத்தியிருக்கிற வழிபாட்டு முறைகளைச் செய்வது, மூடநம்பிக்கையின் வெளிப்பாடாகும். அந்தவிதத்தில் வழிபாடு செய்பவர்கள், வழிபாட்டு முறைகளுக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை, வழிபட வேண்டியவருக்குக் கொடுக்கவில்லை. அப்படிச் செய்வது, தவறான கடவுளை வழிபடுவதல்ல, தவறான முறையில் கடவுளை வழிபடுவதாகும். இந்தவிதமான வழிபாட்டு முறைகள், அன்பினால் உண்டாவதில்லை, பயத்தினாலேயே செய்யப்படுகிறது. ஆகவே இதைச் செய்கிறவர்களுக்கு மெய்யான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஒருபோதும் இவை தராது.

இ. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற வழிபாட்டு முறை கட்டளைகளை, நம்முடைய முட்டாள்தனத்தினால் நிராகரிக்கிறவர்களாகவோ அல்லது தவறாகப் பயன்படுத்துகிறவர்களாகவோ இருந்துவிடுகிறோம். நாம் கடவுளை எப்படி வழிபட வேண்டுமென்று அவர் விரும்புவதை வேதம் நமக்குத் தெரிவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் நமக்குத் தம்முடைய சித்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகியிருக்கிறது. அது, அவபக்தியையும், உலக இச்சைகளையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி, இச்சையடக்கமும், நீதியும், தேவபக்தியும் கொண்டவர்களாக இருக்கும்படி நமக்குப் போதிக்கிறது (தீத்து 2:11-12).

மனிதர்கள் சுவிசேஷத்தை எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். கடவுளுடைய கிருபையை பாவம் செய்வதற்கான சாக்குபோக்காக மாற்றியிருக்கிறார்கள். கடவுள் கொடுக்கிற அழைப்பைக் கொஞ்சமும் சிந்தியாமல் நிராகரிக்கிறார்கள். கடவுளுடைய ஞானமுள்ள வார்த்தைகளை, அவருடைய அன்பின் வெளிப்பாடாகப் பார்ப்பதற்கு மாறாக, அவைகள் தங்களுடைய ஆசை மற்றும் விருப்பங்களுக்கு எதிரானது என்றவிதத்தில் பார்க்கிறார்கள். வெளிப்புறமாக கடவுளை ஏற்றிருந்தாலும், தொடர்ந்தும் மனிதர்கள் கடவுளைப் பார்க்கிலும் இந்த உலக இன்பங்களையே பெரிதும் விரும்புகிறார்கள் (2 தீமோத்தேயு 3:4).

மனிதனுடைய முட்டாள்தனத்தை நமக்குக் காட்டும் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

  1. நம்முடைய செயலின் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்தான் பெரும்பாலும் எதையும் செய்துவிடுகிறோம். மிருகங்கள்தான் செயலின் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படும். ஆனால் மனிதர்களோ மிருகங்களைக் காட்டிலும் மேலானவர்களாக உண்டாக்கப்பட்டவர்கள். “அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும்” (உபாகமம் 32:29). “அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே” என்றுதான் பெரும்பாலும் மனிதர்கள் சொல்லுகிறார்கள். முட்டாள்களே இப்படிச் சொல்லுவர்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நாம் அறிந்திருந்தால், நிச்சயமாக மிகவும் கவனத்துடன் நாம் வாழுவோம்.
  2. மனிதர்கள் பாவம் செய்வதை சந்தோஷமாக எண்ணுகிறார்கள். அது அவர்களுடைய அறிவுக்கூர்மையான செயல் என்றும் நினைக்கிறார்கள். “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.” (ரோமர் 1:32).
  3. கடவுளுக்கு ஊழியம் செய்வதென்பது நேரத்தை விரயம் செய்யும் செயல் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் கடவுளுக்கு பயந்திருப்பவனுக்கும் கடவுளுக்கு பயப்படாமல் இருப்பவனுக்குமான வித்தியாசத்தை இந்த வாழ்க்கையின் இறுதியில் தெளிவாகத் தெரிந்துவிடும். அப்போது, கடவுளுக்கு ஊழியம் செய்வது நேர விரயம் அல்ல என்பது வெளிப்படையாகத் தெரியும் (மல்கியா 3:14-18)!
  4. கடவுளிடமிருந்து அநேக நன்மையை நாம் பெற்று அனுபவிக்கிறோம். ஆனால் அவருக்கு “நன்றி சொல்லுவது” அரிதாகவே இருக்கிறது. சிலவேளைகளில் நம்முடைய சுயநலம் மற்றும் கேடான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு கடவுள் கொடுத்திருக்கிற வரங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளுவோம்.

எத்தனை முறை சுவையான உணவை, அனுபவித்துச் சாப்பிட்டும், அதைத் தந்தவருக்கு நன்றி செலுத்தாமல் இருந்திருக்கிறோம்?

  1. கடவுள் நம்மைத் திருத்துகிறபோது, அல்லது அவருடைய பராமரிப்பினால் சில துன்பகரமான சூழலில் நம்மை நடத்துகிறபோது, சிலவேளைகளில் நாம் கோபப்படுகிறோம், சிலவேளையில் நாம் அதைக் குறித்து நொந்துகொள்ளுகிறோம். திருத்தும் நடவடிக்கை இனிமையானதாக இருக்காது, ஆனால் நம்முடைய எதிர்கால நன்மைக்காக, நாம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது அவசியம். கடவுள் நம்முடைய நன்மைக்காக செய்கிறவற்றிற்கு எதிராகப் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது?

பாவம், நாம் பொறுமையுடன் கற்றுக்கொள்ளுகிறவர்களாக இல்லாதபடி, மிகவும் அகந்தை கொண்டவர்களாக நம்மை மாற்றியிருக்கிறது. சிலபேர், கடவுளுடைய வழிகளைக் கற்றிருந்தும், அதைப் பின்பற்றியிருந்தும், பிறகு, மறுபடியுமாக, உலக வழிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இப்படிச் செய்கிறவர்கள் இரட்டிப்பான முட்டாள்கள். ஒரு வியாதியிலிருந்து குணமடைந்த யாராவது, மறுபடியும் தானே போய் அந்த வியாதியை அடைவதற்கு முயலுவானா?

2.4 பாவம் நம்மை மிருகங்களைப் போல் நடக்கும்படித் தரந்தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தேவசாயலில் உண்டாக்கப்பட்டோம் என்ற நம்முடைய படைப்பின் தன்மையை, நம்முடைய தற்போதைய நிலை பொய்த்துப்போகச் செய்திருக்கிறது.

அ. பாவம் மனிதகுலத்தை மிருகங்களைப்போல் நடந்துகொள்ளச் செய்திருக்கிறது. மனிதன் மிருகத்தைப் போன்றவன் என்று குறிப்பிடுகிற அநேக வசனங்கள் வேதத்தில் உண்டு. உதாரணமாக, சங்கீதம் 73:22ல் “நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.” அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும், நம்முடைய ஆத்துமாவைப் பற்றிச் சிந்திப்பதைக் காட்டிலும் நம்முடைய சரீரத்தைப் பற்றி அதிகமாக யோசித்து, நாம் மிருகங்களைப் போல் இருந்துவிடுகிறோம். பாவகரமான மூடத்தனத்தைக் கொண்டிருக்கிறபோது, நாம் பரிசுத்த கடவுளோடு ஐக்கியம் கொண்டிருக்க முடியாது.

ஆ. பாவத்தில் வாழுகிற மனிதன் சில வேளைகளில் மிருகங்களைக் காட்டிலும் கேடானவனாக நடந்துவிடுகிறான். அதாவது, செம்மறியாட்டைப் போலவும் புறாவைப் போலவும் மென்மையாக இல்லாமல், நரியையும், சிங்கத்தையும், கரடியையும் போலக் கொடூரமானவனாக நடந்துவிடுகிறான்.

இ. மனிதனுடைய பாவத்தன்மை, கொடூர மிருகங்களைக் காட்டிலும் மிகவும் கேடானவனாக அவனை மாற்றிவிடுகிறது. மிருகங்கள், அவைகளுக்கென்று இருக்கிற இயற்கை தன்மையின்படியாகவே நடக்கின்றன. அறியாமை என்பது மிருகங்களுக்குக் குறைபாடல்ல, ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல. மிருகங்கள் தங்களுடைய இனத்திற்குள்ளாக, ஒன்றையொன்று அடித்துத் துன்புறுத்திக்கொள்ளுவதைக் காட்டிலும், மிகவும் அதிகமாக மனிதர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக்கொள்ளுகிறோம்.

பொதுவாக மனிதர்களைப் பற்றி விளக்குகிறபோது வேதம் இரண்டு மிருகங்களைக் குறிப்பிடுகிறது – செம்மறியாடு, வெள்ளாடு. அவிசுவாசிகளை வெள்ளாடுகளாகவும், விசுவாசிகளை செம்மறியாடுகளாகவும் காட்டுகிறது. இந்த இரண்டு மிருகங்களுடைய வேறுபட்ட தன்மைகள், விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுடைய வேறுபட்ட தன்மைகளை விளக்குகிறவையாக இருக்கின்றன. பாவம் நம்மில் ஏற்படுத்திய விளைவுகளே நம்மை மிருகங்களைப் போல் நடக்கச் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

2.5 பாவம் மனிதர்களை, கடவுளிடமிருந்து ஒழுக்கரீதியாகவும் ஆவிக்குரிய விதத்திலும் பிரித்திருக்கிறது.

பாவிகள் கடவுளிடமிருந்து தூரத்தில் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது (எபேசியர் 2:3)

அ. கடவுள் நம்மிடமிருந்து விலகியிருக்கிறார். ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் கடவுளிடம் முகமுகமாய்ப் பேச முடிந்தது. ஆனால், அவர்கள் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, அவர்கள் கடவுளிடமிருந்து தங்களை மறைத்துக் கொண்டார்கள். ஒரு விசுவாசியும்கூட, இப்போது கடவுளை தேடுகிறபோது, பூரணமற்ற விதத்திலேயே கடவுளை அறிய முடிகிறது. பாவம் கடவுளை அறிவதற்கான நம்மிலுள்ள திறனைப் பாதித்திருக்கிறது.

ஆ. பாவம் கடவுளிடமிருந்த ஐக்கியத்திலிருந்து மட்டும் நம்மைப் பிரிக்காமல், கடவுளுடைய வாழ்க்கையை அனுபவிப்பதிலிருந்தும் நம்மைப் பிரித்திருக்கிறது. கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நம்முடைய நிலையை மிகவும் பரிதாபகரமானதாக வேதம் காட்டுகிறது. பாவத்தில் மரித்தவர்களாக இருக்கிறோம் என்கிறது (எபேசியர் 2:1).

இ. பாவிகள் கடவுளுடைய அன்பைப் பெறுவதிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். கேடானவர்கள் மீது கடவுள் கோபமாக இருக்கிறார் (சங்கீதம் 7:11).

“குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” (யோவான் 3:36).

ஈ. பாவத்தின் தாக்கம், பாவிகள் கடவுளுடன் நெருங்கியிருக்க முடியாதபடி அவர்களை விலக்கியிருக்கிறது. நாம் ஒருபோதும் கடவுளுடைய பிரசன்னத்திலிருந்து விலகியிருப்பதில்லை, அவருடனான ஐக்கியத்திலிருந்தே விலகியிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாக நாம் கடவுளுடன் ஒப்புரவாகிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு வெளியில், ஒரு மனிதனுடைய பாவத் தன்மை, அவனை கடவுளுடன் நட்புக்கொள்ளுவதிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது.

உ. நம்மிலுள்ள பாவத்தன்மை, நம்மை கடவுளுக்கு விரோதிகளாக்கியிருக்கிறது. கடவுள் கொடுத்த சிறப்புரிமைகளை, ஆதாமும் ஏவாளும் அனுபவித்ததுபோல், நாம் அனுபவிக்க முடியாது. நம்மிலுள்ள பாவத்தை உணர்ந்து, நாம் மனந்திரும்பாவிட்டால், கடவுளிடமிருந்து வரும் எந்தவொரு சிறப்புரிமையையும் ஒருபோதும் நாம் பெறவே முடியாது.

கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையின் தொடர் விளைவுகள் என்ன?

அ. கடவுள் தம்முடைய முகத்தை நமக்கு மறைத்துக்கொள்ளுகிறார். கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர், தன்னுடைய நாட்டு மக்களைப் பார்த்து சொல்லியதைக் கவனியுங்கள்,

“உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசாயா 59:2).

ஆ. கடவுள் அவிசுவாசிகளுடைய ஜெபங்களைக் கேட்பதில்லை. கடவுள் தம்முடைய மக்களுடைய ஜெபங்களைக் கேட்பதில் மகிழ்ச்சிகொள்ளுகிறார். ஆனால் கேடானவர்களுடைய ஜெபம் அவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை. ஏனென்றால், “அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை” (ஓசியா 7:14) என்று சொல்லுகிறார்.

இ. பாவமுள்ள மனிதர்கள் பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். படைப்புகளாகிய நம்முடைய வலிமை, நம்மைப் படைத்த கடவுளோடு மகிழ்ச்சியான ஐக்கியம் கொண்டிருப்பதிலேயே இருக்கிறது.

ஈ. பாவம் செய்வதனால், நாம் கடவுளுக்குப் பயந்து, அவரை நெருங்கிச் சேர வெட்கப்படுகிறவர்களாக இருக்கிறோம். மனிதர்களுடைய குற்றவுணர்வு, அவர்கள் கடவுளிடம் வரமுடியாதபடி அவர்களைப் பயத்திற்குள்ளாக்குகிறது. ஆதாமும் ஏவாளும், பாவம் செய்வதற்கு முன்புவரை கடவுளுடைய பிரசன்னத்தில் கடவுளைப் பார்த்து பயப்படவில்லை. ஆனால் பாவம் செய்தபிறகு, அவரிடமிருந்து பயந்து ஓடினார்கள்.

உ. மனிதர்களுடைய பாவத் தன்மை, அவர்களோடு கடவுள் பேசுகிறார் என்பதை உணருகிறபோது, அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அதைத் தவிர்க்கச் செய்கிறது.

இந்தத் துன்பங்கள் யாவும், கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையின் காரணமாக வருகிறது.

  1. பாவம், நம்முடைய மரணத்திற்குப் பிறகும் அதன் தாக்கத்தை நம்மில் கொண்டிருக்கச் செய்கிறது. அது நித்திய காலமாக நம்மில் தொடருகிறதாக இருக்கிறது.

நம்மிலுள்ள பாவத் தன்மை, இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துமானால், அதாவது, ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துமானால், அதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது நித்திய காலமாக நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாக இருக்கிறது. கடவுளுடைய கிருபை இடையில் செயல்பட்டிராவிட்டால், மனிதர்கள் அனைவரும் நித்திய மரணத்தை நோக்கியே செல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் கடவுளுடைய கிருபையினால், விசுவாசிகள் நித்திய பரலோக வாழ்க்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கடவுள் இந்தவிதமான ஏற்பாடுகளைச் செய்திருப்பதனால், அவரை அநீதியுள்ளவர் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. பாவம் செய்ததனால்தான் கடவுள் மனிதர்களைத் தண்டிக்கிறார். கடவுளுடைய தண்டனை வருகிறதற்கான காரணம், மனிதன் செய்த குற்றமே. ஏனென்றால், எப்படி வாழவேண்டும் என்றும் கடவுளுக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்றும் கடவுள் தெளிவாக தெரியப்படுத்தியிருக்கிறார். எல்லாரும் பாவம் செய்து, தேவமகிமையற்றவர்களாக இருப்பதனால், எல்லா மனிதரும், தேவகோபத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதேவேளையில், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை (மாற்கு 16:16).

பாவியைக் கண்டனத்திற்குள்ளாக்குகிற கடவுளுடைய கோபமே, ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய கோபத்தினால் நித்திய தண்டனையைப் பெறுவதென்பது துக்ககரமானது, எல்லாவகையிலும் துக்ககரமானது, எப்போதும் துக்ககரமானது. ஒரு மனிதனுக்கு இதைவிட கேடானது வேறெதுவும் இருக்க முடியாது. கேடான மனிதர்களைப் பார்த்து இயேசு சொன்னார்,

“சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.” (மத்தேயு 25:41).

இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், கேடான மனிதர்கள், தங்களுக்கான கண்டன வார்த்தைகளைக் கடைசி நாளில் கேட்பார்கள். பாவம் என்பது, கடவுள் நன்மையானது என்று சொல்லுகிறவைகளைச் செய்யாதிருப்பதும், கடவுள் தீமையானது என்று சொல்லுகிறவைகளைச் செய்வதுமேயாகும். ஆகவே, நரகம் என்பது நன்மையை வெறுத்து, தீமையைச் சுமந்து திரியும் பாவிகளுக்கான இடம். நரகம் உண்டு, அங்கு கடவுளின் சாபம் இருக்கிறது, அது ஒரு நித்திய இடம். அங்கு பிசாசும் அவனுடைய தூதர்களும் இருப்பார்கள்.

அ. நரகம் என்பது, கிறிஸ்துவினுடைய இரட்சிப்பிற்கு அந்நியராயிருந்து, இந்த உலகத்தின் நன்மைகளினால் சீர்கெட்டு வாழ்ந்தவர்கள் இருக்கிற இடம். கேடான மனிதர்களை இந்த உலகத்தின் மனிதர்கள் என்று வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 17:14). வேறுவிதமாக சொல்லுவதானால், அவர்கள் இந்த உலகத்தின் நன்மைகளைப் பெற்று அனுபவித்தவர்கள். ஆனால் அவர்கள் அவிசுவாசிகளாகவே வாழ்ந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றால், அது அவர்களுக்கான தற்காலிக சந்தோஷம் மட்டுமே (லூக்கா 16:25). மனந்திரும்பாத பாவி, இந்த உலகத்தின் நன்மையையெல்லாம் அனுபவித்திருந்தாலும், இறுதியில் எல்லாத் தீமையும் இருக்கிற இடமாகிய நரகத்திற்கே செல்லுகிறான். ஆனால் ஒரு விசுவாசி, இந்த உலகத்தில் தீமைகளை அனுபவித்தாலும் (சில நன்மைகளையுங்கூட), இறுதியில் எல்லா நன்மையும் இருக்கிற இடமாகிய பரலோகத்திற்குச் செல்லுகிறான்.

ஆ. பாவிகள் இந்த உலகத்தின் நன்மைகளைப் பெற்றிருக்கிறது மட்டுமல்லாமல், அவற்றின் இன்பங்களில் திளைத்திருக்கிறார்கள். லூக்கா 12வது அதிகாரத்திலுள்ள பணக்காரன், தனக்கு அநேக நன்மைகள் கிடைத்ததனால் மட்டும் சந்தோஷப்படவில்லை, அவைகள் தனக்கு குறைவில்லாத பெரும் மகிழ்ச்சியைத் தருமென்றும் அவன் எதிர்பார்த்தான். இந்த உலகத்தின் சந்தோஷம் நெடுநாட்களுக்கு நம்முடைய இருதயத்தை சந்தோஷத்திற்குள்ளாக வைத்திருக்காது. நரகத்தில், இந்த உலக சந்தோஷங்களின் நினைவுகள் எந்தவிதமான இன்பத்தையும் தராது.

இ. நரகத்தில் கேடானவர்களுக்கு எந்த சமாதானமும் இல்லை. கடவுளைப் பற்றிய தெளிவான அறிவு இருக்கும், ஆனால் மனந்திரும்புவதற்கான வாய்ப்பு இருக்காது.

ஈ. இந்த வாழ்வில், கேடானவர்கள்கூட ஏதோவொரு விதத்தில் பரலோகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் மறு உலகத்தில், அப்படியான அனுமான எதிர்பார்ப்புகூட அவர்களுக்கு இருக்காது.

“துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்” (நீதிமொழிகள் 11:7).

உ. நரகத்திலிருந்து பரலோகத்திற்கு ஒருவராலும் போக முடியாது. கேடான ஒரு மனிதன்கூட பரலோகத்தில் இருக்க மாட்டான், அப்படியே, ஒரு நீதிமான்கூட நரகத்தில் இருக்க மாட்டான்.

ஊ. நரகத்தில் இருப்பவர்கள், கடவுளற்ற சூழலின் துன்பங்களை அனுபவிப்பார்கள். அதாவது, இரக்கமற்ற, அவர்கள்மீது அக்கறை காட்டுகிறவர்கள் யாரும் இல்லாத, எந்தவிதமான எதிர்கால எதிர்பார்ப்பும் இல்லாத சூழலில் இருப்பார்கள். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?” (சங்கீதம் 73:25) என்ற சொல்லும் சங்கீதக்காரன், அதைத் தவிர்த்து வேறு எதுவும், தனக்கு ஒன்றுமில்லாமைக்கு சமன் என்றே தெரிவிக்கிறார்.

நரகம், பரலோகத்தைப் போலவே நித்திய காலமாக இருக்கக் கூடியது. இந்த உலகத்தில் எல்லாம் தொடர்ச்சியாக மாறக்கூடியதாக இருப்பதனால், இந்த உலக வாழ்வு என்றென்றும் இருக்கக் கூடியதல்ல.

செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (பிரசங்கி 9:10)

நரகம் நல்ல இடமாக மாறும் என்பதற்கு எந்தவிதமான சாத்தியமும் இல்லை.

  1. நரகத்தின் நித்திய அழிவு என்பது பகற்கனவல்ல

இதை வாசிக்கிற ஒருவரும் அந்த இடத்திற்குப் போய்விடக் கூடாது என்பதுதான் என்னுடைய ஊக்கமான வேண்டுதலாக இருக்கிறது. இதைக் குறித்து நீங்கள் கேள்விப்படுவதன் மூலமாக, அந்த இடத்திற்கு நீங்கள் போகமலும், அதை அனுபவிக்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை விளக்குகிறேன்.

“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரிந்தியர் 2:9).

இதுவே கடவுளை வெறுக்கிறவர்களைப் பற்றிய உண்மையும்.

அ. தேவபக்தியற்ற மனிதர்கள்கூட “நரகம்” என்ற வார்த்தையைத் தாங்க முடியாத துன்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்கள். இந்த உலக வாழ்வின் அனைத்துத் துன்பங்களையும் ஒன்றுசேர்த்தாலும், நரகத்தின் துன்பத்தோடு ஒப்பிட முடியாது. இயேசு சொல்லுகிறார், நரகத்தின் தண்டனையைக் காட்டிலும், வலது கண் பிடுங்கப்பட்டதும், அல்லது வலது கை துண்டிக்கப்பட்டதுமான நிலை நன்மையைத் தரக்கூடியது என்று (மத்தேயு 5:29-30).

ஆ. சமாதானத்திற்கு எதிரானது பயங்கரம் என்பதுபோலவே பரலோகத்திற்கு எதிரானது நரகம். பாவிகள், பரிசுத்தவான்கள் பெறுகிற மகிமையான வாழ்க்கை இழந்து நரகத்திற்குப் போகிறார்கள். பரிசுத்தவான்கள் விடுவிக்கப்பட்ட துன்பங்களைப் பாவிகள் நரகத்தில் பெறுகிறார்கள்.

இ. நரகத்திற்கு முடிவில்லை. நரகம் என்பது பரிதாபம் காட்டப்படாத தண்டனையும், இரக்கமற்ற துன்பங்களும், உதவியற்ற வருத்தங்களும், ஆறுதலற்ற அழுகுரலும் நிறைந்த இடம்.

ஈ. நரகத்தை விளக்குவதற்கு வேதம் சில உதாரணங்களைப் பயன்படுத்துகிறது:

  • அது வருத்தத்தின் இடம் (2 சாமுவேல் 22:6)
  • இந்த உலகத்தில் ஏற்படுகிற வேதனையைக் காட்டிலும் அதிக வேதனையை ஏற்படுத்தும் இடம் (சங்கீதம் 116:3)
  • அழிவின் இடம் (மத்தேயு 10:28)
  • எரிகிற நெருப்பின் நிலை (மத்தேயு 5:22)
  • முடிவில்லா அழிவுக்கான இடம் (மத்தேயு 23:33)
  • கடும் வாதையின் இடம் (லூக்கா 16:28)
  • நரகம் சிறைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது (மத்தேயு 5:25)
  • முடிவில்லா படுகுழி (வெளிப்படுத்தல் 9:11)
  • எரிகிற சூலை (மத்தேயு 13:41-42)
  • அக்கினிக்கடல் (வெளிப்படுத்தல் 21:8)
  • இருள் சூழ்ந்த இடம் (மத்தேயு 22:13, யூதா 6, 13)
  • நரகம் சாபமும், இரண்டாம் மரணமும், அவமானத்திற்குமான இடம் (தானியேல் 12:2).

உ. நரகத்தில் கடுமையான வேதனையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. நரகத்தில் வேதனை இல்லாத நேரமில்லை, அதிலுள்ள எந்தவொரு நபரும் அவ்வேதனையிலிருந்து தப்ப முடியாது, அவ்வேதனைக்கு முடிவே இல்லை.

மேலும் தொடருவதற்கு முன்பதாக, இதை வாசிக்கிற உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விழைகிறேன்.

  • நீங்கள் தொடர்ந்து அவிசுவாசத்தில் இருக்கக் கூடாது என்பதற்கு இதற்கும் மேலாக வேறெதையும் நான் சொல்ல வேண்டுமா?
  • நரகத்திற்குப் போவதைப் பற்றிக் கொஞ்சம் அமைதலாக நீங்கள் சிந்திக்கக் கூடாதா?

உங்களுடைய ஆத்துமாவுக்காக இதைக் கவனத்துடன் கேளுங்கள், இதுகுறித்து பயம் கொள்ளுங்கள், பாவிகளுக்கான இரட்சகராகிய இயேசுவை நாடிச் செல்லுங்கள்.

ஊ. நரகத்தில் சாத்தானே முதன்மையான வேதனைப்படுத்துகிறவனாக இருப்பான். நம்மைப் போன்ற சக மனிதர்களால் வேதனைப்படுத்தப்படுவதே கொடுமையானதாக இருந்தால், பிசாசினால் வேதனைப்படுத்தப்படுவது எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்?

எ. நரகத்தில் கேடான மனிதர்களுடைய மனச்சாட்சியும்கூட அவர்களை வேதனைக்குள்ளாக்கும். இந்த உலக வாழ்வில், நம்முடைய மனச்சாட்சியின் குரலை நிராகரித்து வாழலாம். ஆனால் நரகத்தில் ஒரு மனிதனுடைய மனச்சாட்சியின் குரலை வேறுபக்கமாக திருப்புகிறதற்கேற்ற சூழல் இருக்காது. தெரிந்தே நிராகரித்த மனச்சாட்சியின் குரலை நரகத்தில் தவிர்க்கவே முடியாது.

ஏ. நரகத்தில் கடவுளுடைய கோபமும் அவர்களை வேதனைக்குள்ளாக்கும். இந்த உலக வாழ்க்கை முழுவதும் கடவுள் மிகவும் பொறுமையுள்ளவராக இருக்கிறார். பல காரியங்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லாமல் இருந்துவிடுகிறார். கோபங்கொள்ளுவதில் அவர் மிகவும் பொறுமையுள்ளவர், அதிகமான இரக்கமுள்ளவர். ஆனால் மறு உலகத்தில், அவருடைய பொறுமை முடிவுக்கு வருகிறது, அவருடைய கோபம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

  1. சிலருக்கு அதிகமான தண்டனை விதிக்கப்படுமா?

அ. நெடுநாட்களாக பாவத்தில் வாழ்ந்து, மனந்திரும்பாமலேயே மரணமடைகிறவர்கள், அவர்களுடைய கீழ்ப்படியாமையுள்ள கேடான வாழ்க்கையின் காலத்திற்கேற்ப தண்டனையைப் பெறுவார்கள்.

ஆ. மனந்திரும்புவதற்கும் விசுவாசிப்பதற்குமான அதிக ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக் கேட்டிருந்தும், கிறிஸ்தவ குடும்பங்களிலும், கிறிஸ்தவ சூழலிலும் வளர்க்கப்பட்டவர்களுமாக இருந்தும், கிறிஸ்துவை நிராகரித்து வாழுவார்களானால், அவர்கள் அதிக தண்டனைக்குரியவர்களாவார்கள். இயேசு அதிகமாக போதித்ததும், அற்புதங்களைச் செய்ததுமான கப்பர்நகூம் ஊர் மக்களை நினைத்துக்கொள்ளுங்கள் (மத்தேயு 11:23).

இ. கடவுளுடைய கட்டளைகளையும், சுவிசேஷத்தின் செய்தியையும் அறிந்திருந்தும், அவற்றைக் கவனத்தோடு சிந்தித்து அவற்றிற்கேற்ப செயல்பட மறுக்கிறவர்கள், அவற்றிற்கேற்ற பெரும் விலை கொடுப்பார்கள் (யாக்கோபு 4:17).

ஈ. மாய்மாலக்காரர்களுக்கு நரகம் மிகவும் மோசமானதாக இருக்கும். தேவபக்திக்கேற்ற விதத்தில் வெளிப்புறமாகக் காட்டிக்கொண்டும், கடவுளைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் அக்கறையற்றவர்களாக வாழுவதென்பது மிகவும் பாவகரமானது.

உ. விசுவாச வீழ்ச்சியடைகிறவர்கள் பெரும் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். இவர்கள் கர்த்தரைப் பின்பற்றியவர்கள், ஆனால் பாதியில் கர்த்தரைவிட்டுத் தூரம்போய், மறுபடியும் மனந்திரும்பாமல் போனவர்கள். இவர்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் இருந்திருந்தாலே, அவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நல்லதாக இருந்திருக்கும்.

ஊ. சுருக்கமாகச் சொல்லுவதென்றால், நரகம் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாத வருத்தமும், தாங்க முடியாத துன்பமும், முடிவில்லா அழிவும் கொண்டது. அங்கு செல்லுகிறவர்கள், “தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை” (வெளிப்படுத்தல் 16:11).

பாவம் எந்தவிதத்தில், இந்த உலக வாழ்வுக்கும், இனி வரும் வாழ்வுக்குமான நன்மைக்கு எதிராக இருக்கிறது என்பதை இதுவரை விளக்கினேன். இதுவரை நீங்கள் வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்கும்படி மிகவும் வேண்டிக் கேட்கிறேன். உங்களுடைய பாவத்தை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் இரட்சிப்பைப் பற்றிய கடவுளுடைய செய்தியை நீங்கள் கேட்டு மனந்திரும்பியிருந்தால், நரகத்தைப் பற்றி படித்ததன் மூலமாக மட்டுமே அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பாவகரமான வழியை நீங்கள் மாற்றிக்கொள்ள மறுத்தால், ஒரேயொரு முடிவு மட்டுமே உண்டு, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் அதற்குக் கீழ்ப்படியாமல் போனதற்கான தண்டனையாக, மரணத்தின் பின், நரகத்தையே முடிவாக அடைவீர்கள்.

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.